learning Hindi
அறுபதுகளில் ~நடந்த போராட்டங்கள் அனேகமாக மறந்த நிலையில் திரும்ப கிளறப் படுகிறது. அந்த சமயம் ஏராளமான தென்னிந்தியர்கள் மத்ய அரசில் வேலை கிடைத்து டில்லி சென்றனர். சுதந்திர இந்தியாவின் அரசில் வேலை செய்வதை பெருமையாக எண்ணி சென்றவர்கள் முதலில் எதிர் கொண்டது மொழி பிரச்னையே. தமிழ் தவிர ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் எளிதாக இந்த பரீக்ஷைகளில் தேறி 36 முதல் 38 மணி நேரம் ரயில் பிரயாணம் செய்த களைப்போடு அலுவலகத்தில் நுழைந்தால் ‘நீட்டோலை வாசியா நின்றான் நன்மரம்’ என்ற ஔவையாரின் வாக்குப் படி நன் மரமாகவே நின்றார்கள். இது பாதிக்கப் பட்ட பல இளைஞர்களின் கதை. ஒரு சில ஆண்டுகளில் இந்த இளைஞர்கள் ஓரளவு மொழியைத் தெரிந்து கொண்டாலும் அதை பேசும் இடங்களில் பரிகசிக்கப்பட்டனர். ஏனெனில் புத்தகத்தில் படித்த இந்தி கை கொடுக்கவில்லை. பேசும் மொழி வேறு. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்தவர்கள் இலக்கணம் அல்லது பிராந்திய முறைகளை அறிந்து பேசாததில் வியப்பில்லை.
64 ல் நான் டில்லி சென்றதும் அக்கம் பக்கம் பேச முடியாமல் திணறியதும் நினைவு வருகிறது விருப்பப் பாடமாக இருந்த இந்தியை விரும்பாமல் படித்து ஏதோ பாஸ் ஆனால் போதும் என்று இருந்ததில் இந்தி பேச வரவில்லை. அதிலும் இந்தியின் ஆண் பால், பெண் பால் பிரயோகம் ரொம்பவே உதைத்தது. வரிசையாக எழுதி வைத்துக் கொண்டு மனப் பாடம் செய்வது தான் வழி. எழுத்து தான் தெரியுமே, புஸ்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு நாமே படிக்கலாம் என்றால் வருகிறதா?
பால் வாங்கி வரும் பையன் பையை ஆட்டிக் கொண்டே வந்தான் கூட அவன் தோஸ்த் – அவன் கையில் ஒரு பால் பாட்டில். ( அந்த நாட்களில் பால் பாட்டிலைக் கொடுத்து புது பால் நிரம்பிய பாட்டிலை வாங்க வேண்டும் ) தூத் நஹி மிலா – என்றான் எங்கள் வீட்டு வேலைக்காரன் – அடுத்தவன் தன் பாட்டிலைக் காட்டி – தனக்கு கிடைத்ததை – முஜே ஏக் பௌதல் மிலீ – என்றான். தூத் ஆண் பால். அது வரும் பாட்டில் பெண் பால். இதை நான் கற்றுக் கொண்டதும் இந்த சிறுவர்களிடம் தான்.
பக்கத்து வீட்டு ஏழு வயது சிறுமியிடம் கற்றுக் கொண்டது. உன் அண்ணாவின் ஃப்ரண்டு – இதை இந்தியில் ‘ முன்னா – (சிறுவனைக் குறிக்கும் வழக்குச் சொல்) கா ப்ரண்ட் ஆயா – என்றேன். யார் என்று கேட்டுக் கொண்டவள், ஓ உஸ்கி ஃப்ரண்ட்- ஆயி தீ – கேள் ஃப்ரண்ட் – அண்ணாவின் ஃப்ரண்ட் – உடைய என்ற ஆறாம் வேற்றுமை விகுதி ‘வின்’ என்பது அண்ணாவுடன் தானே சேரும் – அவனுடைய பெண் சினேகிதி என்பதால் ‘கி’ அண்ணாவுடனேயே சொல்லி விட வேண்டும் போலும். – தமிழிலும் சரி, சம்ஸ்க்ருதத்திலும் சரி ஆறாவது வேற்றுமை உருபு – ராமஸ்ய – ராமனுடைய – பின்னால் வருவது சினேகிதனோ, சினேகிதியோ இதன் பொறுப்பு அல்ல – இந்த கா கே கி – வேற்றுமை உருபுகளால் பட்ட பாடு.- சமயத்துக்கு நினைவு வராது –
காடி (பஸ்) நஹி ஆயி ? கப் ஆயகி – இதை தெரிந்து கொள்ளவே பல நாட்கள் பிடித்தன. இது கூட பரவாயில்லை – பசி –பூக்- வருவானா வருவாளா? பயம் – டர், தூக்கம் – நீந்த் இவைகளுக்கெல்லாம் கூட இந்த பிரச்னை உண்டு.
பின்னால் என் மகனுக்கு கதை சொல்லும் பொழுது ஒரு முறை ராஜ குமாரி தூங்கிய பொழுது … என்ற இடத்தில் நிறுத்தி விட்டு வாசல் கதவை யாரோ தட்டுகிறார்கள் என்று போனேன். திரும்பி வந்து தொடர்ந்து சொல்ல – எங்க விட்டேன் என்று கேட்டேன் – ராஜ குமாரிக்கு ஆங்க் லக் கயி – அப்புறம் என்ன ஆச்சு? இந்த ஆங்க் லக் கயி – கண்கள் செருகி தூக்கம் வந்து விட்டது – எந்த புஸ்தகத்திலும் இருக்காது – நடைமுறையில் இது போன்ற வழக்கச் சொற்களை இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களால் மட்டுமே பேச முடியும்.