பொருளடக்கத்திற்கு தாவுக

 நான் கண்ட ஊர் -வாங்குவர் -கானடா அழகான ஊர். மலையின்

ஏப்ரல் 30, 2013

 நான் கண்ட ஊர்

-வாங்குவர் -கானடா

அழகான ஊர். மலையின் சாரலில் கவனமாக உருவாக்கப் பட்டது. மூன்று புறம் மலைத் தொடர் – குதிரைக்கு அடிக்கும் லாடம் போல – இவை இணையும் இடத்தில் கடல் – தூரத்தில் தெரியும். காலை உதய சூரியன் பட்டு தக தகக்கும் கட்டிடங்கள். அதே போல மறையும் மாலை வெய்யில் வர்ண ஜாலங்களை இறைக்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். .

பசுமை போர்த்தியது போல மலைச் சாரல் கண்ணுக்கு குளிச்சியாக காணப்படுவதும் மழையில் நணைந்து சுத்தமாக நீல வண்ண பெருமானாக காட்சி தருவதும் பச்சை மா மலை மேனி என்று பாடத் தூண்டினால்,

அடுக்கடுக்காக சிகரங்கள் மேல் பகுதி மட்டும் வெண்மையாக பனிப் பொழிவில் உறைந்த பனியுடன் பாரதியின் வெள்ளிப் பனி மலையை நினைவுறுத்தும். மாலை நான்கு மணிக்கே மறையத் துவங்கும் சூரியன். அடுத்த அரை மணி நேரத்தில் ஊர் முழுவதும் வண்ண விளக்குகள் ஜகஜ் ஜோதியாக பிரகாசிக்கும். தூரத்து மலையில் வரிசையாக வண்ண விளக்குகள் – திருவண்ணாமலை தீபத்தை நினைவுறுத்தும். அண்ணா மலையானை நினைத்து கன்னத்தில் போட்டுக்கொள்ளத் தோன்றும். ஒன்றன் பின் ஒன்றாக இருக்கும் மலை சிகரங்களில் மின் விளக்குகள் பனி முடிய நிலையில் குளிர் நிலவாகத் தோன்றும்.  இந்த அழகுகளை வர்ணிக்க கவியாகவோ, திரையில் வடித்தெடுக்க ஓவியனாகவோ இல்லையே என்று மிகவும் குறையாக இருக்கும்.

ஊருக்குள் மரங்கள் உண்டு.  தென்னை, மா, வாழை என்று கண்களுக்கு பழகியவை இல்லை. கூம்பு கூம்பாக நெடிய, உயரமான மரங்கள். பைன் எனப்படும் ஊசியிலை மரங்கள். ஒரே சீராக யாருக்கும் இடையூறு இல்லாமல் – சாலையோரங்களில், வீடுகளைச் சுற்றி மட்டுமே காணப்படும். கிளைகள் இல்லை – அதனால் பறவைகள் கூடு கட்டுவதும் இல்லை. பழ மரங்கள் ஊருக்குள் இல்லை போலும். பனிக் கால ஆரம்பம் – அதனால் இலைகள் பழுத்த இலைகள் தங்க நிறமாக உதிரத் தயாராக உள்ளன. நடு நடுவில் உயர்ந்த பல மாடிக் கட்டிடங்கள் – 30 க்கும் மேல் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் 17 வது மாடி எங்கள் வீடு. ஜன்னலில் இருந்து வீடுகளின் கூரைகளே தெரியும். உள்ளே யார் வசிக்கிறார்கள் ? தெரிந்து கொள்ள நேரமும் இல்லை அவர்களுக்கும் நம்மைத் தெரிந்து கொள்ள ஆவல் இல்லை. தொலை தூரத்திலிருந்து சம்பாதிக்க  என்றே வந்தவர்கள், நாளடைவில் இங்கேயே ஸ்திரமாக தங்கி விட்டவர்களும் தங்களுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு இருக்கிறார்கள். சென்னையிலேயே அடுத்த வீட்டுக்காரரைத் தெரியாதவர்கள் எவ்வளவு பேர்? ஒரு பக்கம் உலகம் சுருங்கி விட்டது என்பவர்கள் அடுத்த வீட்டை தொலை தூரமாக காண்பதை என்ன சொல்ல.

டிஸம்பர் மாதம் கொள்ளை அழகாக காட்சியளித்த இளம் சூரியன் திடுமென ஒளி குறைந்து பனிப் போர்வைக்குள் மறைந்து கொண்டது போல இருந்தது. சிறு தூறலாக கொட்டிய பனி, வலுத்து கட்டிகளாக வீசியடிக்கவும் கண் முன்னே வீடுகள் மறைந்தன. குவியல் குவியலாக பனிக் கட்டி மலைகள் – வெள்ளை வெளேரென்று வீட்டுக் கூரைகள் – கார்களின் மேல் பாகம் முழுவதும் பனி நிறைந்து கண்களை கூச வைத்தது. நேரம் என்ன என்று அனுமானம் செய்ய முடியவில்லை. விடியற்காலை போலவும் இருந்தது. ஒரு ஆள் துரட்டியுடன் வந்து நடை பாதைகளை மட்டும் நடக்க வசதியாக பனியை சுரண்டி எடுத்து வழியமைத்தான். யார் வெளியே வரப் போகிறார்கள் என்று நினைத்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது  – அவரவர் வேலை நிமித்தமோ, அன்றாட தேவைகளுக்கு கடை கண்ணிகளுக்கு செல்பவரும் நீள் கோட்டும், தலைக் குல்லாயும், கையில் குடையுமாக கிளம்பி விட்டனர். ஒரு சிவப்பு வண்டி வந்து தெருக்களை ஓரளவு சுத்தம் செய்து கொண்டிருந்தது. வண்டி பனியில் சிக்கிக் கொண்டால் உதவி செய்வது அவர்கள் கடமையாம். அன்றைய தினமும் மற்ற நாட்களைப் போலவே கடமையில் கண்ணாயிருப்பவர்கள் செய்து கொண்டிருக்க, இந்த பனிக் குவியலும், குளிரும் பழக்கம் இல்லாதவர்கள் வீட்டோடு இருந்திருப்பர் எங்களைப் போல. பனிமழை நின்றது. திறந்த வெளியனைத்திலும் வெண்மையான தளம் போட்டது போல இருந்தாலும் காலை வைத்தால் வழுக்கும் என்று அதற்கான முள் வைத்த ஷூ அணிந்து கொண்டு ஜனங்கள் ஐஸ் விளையாட்டு விளையாடவும் அரம்பித்தனர். ஐஸ் கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொண்டும் அதில் பொம்மைகள் செய்யவும் முனைந்தனர். குழந்தைகள் கூட இந்த விளையாட்டில் ஈடு பட்டிருப்பதைக் காண நமக்குத் தான் அடடா என்று இருந்தது. கடற்கரையில் நம் ஊரில் கோபுரம் கட்டுவது போல. எங்கள் வீட்டு இரண்டு வயது குழந்தைக்கு ஒருவர் சிறு பிளாஸ்டிக் வாளியும் ஷொவெல் எனப்படும் .மண் அள்ளும் கரண்டியும் பரிசாக கொடுத்திருந்தார். எதற்கு என்று புரியவில்லை பொருத்தம் இல்லாதது போலத் தோன்றியது இந்த குழந்தைகள் ஷவல் என்ற கரண்டியால் ஐஸ் – பனி மண் போல இருந்ததை வாளியில் நிரப்பி கெட்டித்து அப்படியே கவிழ்த்துக் கொட்டியதும் கோபுரத்தில் பாதி உருவாகியது – அதன் மேல் இரண்டு குச்சிகள், அதற்கும் மேல் உருண்டையாக பனிக்கட்டித் தூளை கெட்டித்து வைத்தால் ஸ்னோ மனிதன் உருவாகி விட்டான். குச்சிகள் கைகள். மீதியை கற்பனைக்கு ஏற்றபடி நிரப்பி மற்ற அலங்காரங்கள் செய்து முடித்தனர். இந்த விளையாட்டுக்காகத் தான் வாளி பரிசு

போலும்.

மறு நாள் காலையில் வீடுகளின் மேல், மரங்களில் எங்கும் வெண்மை –பனி முடிய கூரைகள். மரங்களின் இலைகளே தெரியாமல் பனி அப்பியிருந்தது. பகல் ஏற ஏற வெய்யிலில் பிரதிபலித்த அந்த காட்சியை விவரித்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை. முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒளிச் சிதறுவது போல என்று வேண்டுமானால் சொன்னால் புரியுமோ என்னவோ. அருகில் இருந்த பார்க்கில் குழந்தைகள் ஸ்னோ மனிதனுக்கு கழுத்தில் ஸ்கார்ப் – தலைக் குல்லாய்- குச்சி கைகளுக்கு கையுறை அணிவித்திருந்தனர். திடுமென காட்சி மாறியது – சிறு தூறலாய் ஆரம்பித்தது பெரு மழையாக வலுத்தது. அடடா வெளியில் போனவர்கள் குடை எடுத்துக் கொண்டு போனார்களோ என்ற சந்தேகம் வந்தது. எந்த உத்தேசமும் இல்லாமல் ஜன்னல் வழியே பார்வையைத் திருப்பினால் ஸ்னோ மனிதன் கரைந்து வழிந்து கொண்டிருந்தான். குவியலாக சேர்த்து வைத்திருந்த பனித் துகள்கள் மழை நீரோடு கலந்து மறைந்தே போயின. சற்று தூரத்தில் ஒரு சின்னஞ்சிறு ரோஸ் குடையும், நீல நிற பெரிய குடையும் நகர்ந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட தரையோடு தெரிந்த ரோஸ் குடை. ஒரு குழந்தை தன் தாயாருடன் நடந்து போய்க் கொண்டிருந்தான் போலும். இருவர் கைகளிலும் குடை. சிறுவன் கையில் ரோஸ் கலர் சின்ன குடை. அவனைத் தூக்கிக் கொள்ள முடியாமல் அந்த தாயின் கையில் சுமை. நாலடி எடுத்து வைப்பதும் திரும்ப குழந்தையுடன் பேச்சுக் கொடுப்பதுமாக நடந்து கொண்டிருந்தாள். இந்த மழையில் ஏன் இந்த குழந்தையுடன் நடக்கிறாள் என்ற எண்ணிய நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ரோஸ் கலர் குடை பின்னாலேயே என் பார்வையும். பத்து நிமிஷங்கள் நடந்திருப்பார்கள். அடுத்த திருப்பத்தில் அவர்கள் தலை மறையும் வரை பார்த்தவள், நம் ஊரானால் மழைக்கு ஒதுங்கி நின்று விட்டு போவோம் என்று நினைத்தபடி நிமிர்ந்து பார்த்தால், குட்டி ரோஸ் குடையும், பெரிய நீலக் குடையும் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.   குளிர், வெய்யில், மழை என்று எந்த வேலை நிற்கும். இறங்கி நடந்து பார் , பழகி விடும் என்று எங்கேயோ கேட்ட ஞாபகம்.

வீட்டுக்குள் வளைய வந்து அலுத்த நாங்கள் இருவரும் சற்று காலார நடக்க  கிளம்பினோம். முகத்தில் கண் மட்டுமே தெரியும்படி குல்லாவும் கோட்டும் – அருகில் நெருங்கும் வரை அனைவரும் ஒன்றே. உலக நாடுகளின் அனைத்து மொழிகளும் பேசுபவர்கள். வாய் பேசாமல் வியாபாரம் முடித்து வெளியில் வரலாம். எதிர் பட்ட முகங்களில் இந்திய முகத்தை தேடினோம். முதல் கேள்வி இந்தியாவா? அடுத்தது எந்த ஊர் அல்லது மானிலம். வட மானிலத்தார் எனில் ஓரளவு ஹிந்தி உதவும். ஓரளவு தான். ஒரு ஓரியா தம்பதி எங்களைப் போலவே வெளியில் நடை பழக வந்தர்கள் போலும். அவர்களுடன் சம்பாஷிக்க மொழி தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்த ஹிந்தி கூட அவர்களுக்குத் தெரியாதாம், இங்கலீஷ் புரியும். பேச வராது. ஐம்பதைக் கடந்தவர்களுக்கு இந்த பிரச்னை .சாதாரணம். இதுவே தெலுங்கு கன்னட மலையாளமானால் ஒற்றை வார்த்தைகள் மற்றும் கை ஜாடை தான்.

பல இடங்களிலும் புலம் பெயர்ந்து வந்தவர்களே பெரும்பாலானவர். பொதுவான குல வழக்கமோ, மத நம்பிக்கைகளோ இணக்காத நிலையில் அடிப்படைத் தேவைகள் தான் பொதுவானவை. காய்கறிகளும், அரிசி பருப்பு, கோதுமை என்ற சமையலுக்குத் தேவையான பொருட்களும், பால் பழங்கள் – இவைகளை வாங்கும் கடைகள் தான் புது முகங்களை காணும் இடம். அழகான பூங்காக்கள் – அகலமான சாலைகள், போக்குவரத்து வசதிகள், கண்ணை பறிக்கும் சுத்தம் இவை தான் உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்களை ஈர்க்கின்றன. தொழில் அல்லது ஏதோ ஸ்தாபனத்தில் வேலை என்று உள்ளவர்கள் அனுபவம் வேறாக இருக்கலாம். சுற்றுலா வந்தவர்களின் அனுபவமும் வேறாக இருக்கும். அவர்களைக் கவரவே பல விதமான ஏற்பாடுகள் உள்ளனவே. இவை இரண்டிலும் சேராமல் ஓரு சில மாதங்கள் மகனுடன் இருக்கலாம் என்று வந்த எங்களைப் போன்றவர்கள் அனுபவம் வேறு. வீட்டு வேலைகளுக்கு உதவி கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் மணிக் கணக்கு – ஒரு மணி நேரம் வேலை செய்தால் இவ்வளவு என்று சம்பளம் கொடுத்து  கட்டுபடியாகாது. வாசலில் கூவி விற்கும் காய்காரனோ, விடியு முன் பால் சப்ளை பண்ணும் பால்காரரோ, பேப்பர் போடுபவரோ ஒரு முகமும் கண்ணில் படாதது வந்த புதிதில் வியப்பாக இருந்தது.  தாங்களே முன் யோசனையுடன் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளா விட்டால் எழுந்தவுடன் காப்பி கிடைக்காது.

நெடு நாட்களுக்கு முன் ஒரு செல்வந்தர் இருந்தார். . அவருக்கு நான்கு குமாரர்கள். படிப்பு முடிந்து அவரவர்கள் தன் காலில் நிற்கும் நிலை வந்தது.  தந்தையின் நிழலில் சுகமாக வாழ்க்கை அமைந்திருக்கும். ஆனால் அவர்கள் விருப்பம் வேறாக இருந்தது. குலத் தொழிலில் மனம் செல்லவில்லை. தாங்கள் அரசனாக வேண்டும் என்ற விருப்பத்தை தந்தையிடம் சொன்னார்கள். அவரும் தயங்கினாலும் பின் சம்மதித்து வெறும் கட்டந்தரையான இடங்களைத் தேர்ந்தெடுத்து இந்த நிலங்களை வளப் படுத்தி அரசாளுங்கள் என்று சொல்லி சில உபதேசங்களும், செய்து ஆசிர்வதித்தார். இது நம் ராமாயணத்தில் வரும் விஸ்வாமித்திரர் அரசரான கதை.  இதே போல பல நாடுகளில் இருந்தும் புது இடத்தில் அரசாள நினைத்து வந்து ஜன நடமாட்டமில்லாத இடங்களில் குடியிருப்புகளை அமைத்தார்களோ – அவர்கள் அனைவருக்கும் பின் அவர்களின் சந்ததியர் ஸ்வாதீனமாக இங்கு குடியேற வந்தார்களோ எனும்படி உலகின் பல பாகத்தில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.

Vancouver ‘வாங்கோவர்’ என்று உலகில் பிரசித்தி பெற்ற அழகிய நகரத்தின் புறநகர் பகுதியான பர்னபி எனும் இடம் இது. வளர்ந்து வரும் நகரம். சென்னையும் செங்கல்பட்டும் போல என்று சொல்லலாம். பிரிட்டிஷ் கொலம்பியா என்றும் அழைக்கப் படும் வாங்கோவரில் இந்திய மக்கள் நிறைய வசிப்பதாக அறிந்தோம்.

வந்தவர்களை வாழ வைக்கும் இடம் தான் இது. தகுதியான வேலை கிடைத்ததோ

இல்லையோ யாரும் திரும்பி போவதில்லை. ஒரு நாள் மின் இணைப்புகளை சரி பார்க்க வந்தவர் ஒரு டாக்டர். ஈரான் நாட்டை சேர்ந்தவர். உடனடியாக மருத்துவராக வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற் படிப்பு அல்லது ஏதோ ஒரு தகுதியை பெறும் வரை இந்த வேலை செய்கிறாராம். மற்றொரு பெண்மணி பொறி இயல் படித்தவர்.. பிறந்து வளர்ந்து, படித்து முடித்த பின் இரு பெண் குழந்தகளுடன் குடும்பத்தோடு எந்த தைரியத்தில் வந்தார்? வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை – படித்தது தாய் மொழியில் – ஆங்கிலம் தெரியாது- முதல் காரியமாக மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம். அது வரை – ஏதோ ஒரு பிடிமானம் குடும்பம் நடத்த தேவை – நல்ல நிறமும் வாட்ட சாட்டமாகவும்  இருந்த அந்த பெண்ணை வேறு சந்தர்பத்தில் பார்த்திருந்தால் ஏதோ உயர் அதிகாரியாக எண்ணி இருப்போம்.  டாக்ஸி ஓட்டுபவர் இந்தியர் கணிசமாக உள்ளனர். பெரும்பாலும் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்தவர்கள். முகத்திலேயே தென் இந்தியர் என்று எழுதி இருப்பது போல நாங்கள் ஏறிய உடனேயே பேச்சுக் கொடுப்பார்கள். ஒரு சிலருக்கு பிடித்து வசதியாக இருப்பர்.

இந்திய ராணுவத்தில் பணி புரிந்து 20 ஆண்டுகள் சேவை செய்த பின் ஓய்வு பெற்று வெளி நாடு என்ற ஒரே காரணத்துக்காக வந்தவராம் – தகுந்த வேலை கிடைக்கும் வரை செய்வது வாடகை கார் ஓட்டுவது என்றார் ஒருவர். வட இந்தியரான அவருக்கு தமிழும் தெரிந்திருந்தது. ராணுவத்தில் தமிழர்களுடன் இருந்தாராம்.

தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் கிடைத்த வசதிகளோடு வாழ்வது ஏன் இவர்களுக்கு உவப்பாக இல்லை என்று புரியத்தான் இல்லை. நல்ல வேலை, சம்பாத்தியம் என்று வந்திருந்தாலும் – என்றோ ஒரு நாள்  நிறைய சம்பாதித்து தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்பி போவார்கள். மண் வளமும் நீர் வளமும் உலகின் முற்போக்கான அறிவியல் சாதனங்கள், படிக்க வசதி, பல விதத்திலும் வாழ்வின் முன்னேற்றங்களுக்கு வசதியும், மின்சாரம் உற்பத்தியும், உள்ள இந்நாட்டில் சுய வளர்ச்சிக்கு வாய்ப்புகள் அதிகம். ஜனத்தொகை குறைவு. எனவே வாழ்க்கை வசதிகள் அதிகம். பொறுத்திருந்தால் நல்ல காலம் வரும் என்று நம்பலாம்.

உள்ளூர் வாசிகள் யார் என்பது? அனைவருமே இந்த கண்டத்திற்கு வாழ்க்கை வளம் தேடி வந்தவர்களே – முன்னால் வந்தவர்கள், அடுத்து வந்தவர்கள் என்பது தான்

பாகு பாடு –  நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தவர் பல தலை முறைகளைக் கண்டவர்கள் உள்ளனர். கேரளா, இலங்கை தமிழர் சேர்ந்து கோவில் கட்டியுள்ளனர். அதில் தமிழ் நாட்டு அர்ச்சகரும் உள்ளார். பாரத நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்தவர்கள் தங்கள் வழக்கப் படி கோவில்கள் கட்டியுள்ளதாக சொன்னார்கள்.  புடவை அணிந்தவர்கள் குஜராத்தி என்று பொதுவாக பிரசித்தம். இந்த இரண்டு மாநிலத்தவர்கள் தான் முதலில் வந்த இந்தியர் போலும்.

32 தளங்களோடு நவீன வசதிகளுடன் சமீபத்தில் கட்டப் பட்ட அடுக்கு மாடி- இதில் உடன் வாழும் மற்ற ஐந்து வீட்டார்களைக் கண்ணால் கூட காண முடியவில்லை.

அதற்கும் ஒரு வாய்ப்பு தருவது போல ஒரு நாள் தீ எச்சரிக்கை மணி ஒலித்தது. இந்த எச்சரிக்கை மணி ஒலித்தால் உடனே அனைவரும் கீழிறங்கி கட்டிடத்திற்கு வெளியே போய் விட வேண்டும் என்பது ரூல். நாங்களும் தயார் ஆனோம். இரவு, குளிர் வேறு எனவே உல்லன் சட்டைகள், கோட்டு தொப்பி சகிதம் வெளியேறினோம். லிஃப்ட் வேலை செய்யவில்லை. செய்யாது. தீ விபத்து போன்ற சமயங்களில் மாடிப் படிகளில் செல்லவும் என்று அறிவிப்பு லிஃப்டின் வெளியில் எழுதியிருக்கும். படிகளில் தான் இறங்க வேண்டும். நிமிஷ நேரத்தில் அனைவரும் கட்டிடத்தின் வெளியே நின்றோம். பக்கத்து வீட்டுக்காரர் வலிய வந்து பேசினார். அதற்கு அடுத்த சீன தேசத்து தாயும் மகளும் விசாரித்தனர். மற்றொரு சிறு பெண் – சமீபத்தில் மணமாகி வந்திருக்க வேண்டும் – உலகின் தென் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் என்று தோன்றியது. பேச வில்லை – மொழி பிரச்னையோ என்னவோ- முகத்தில் பயம் அப்பியிருந்தது. சரி, இங்கிலீஷ் தான் புரியாதே, தமிழிலேயே, பிரச்னையை சொன்னேன் – ஒன்றிரண்டு வார்த்தைகள், ஃபயர், நோ லிஃப்ட் மற்றும் சைகையை புரிந்து கொண்டாள் – கூடவே இருந்தாள். சற்று நேரத்தில் எச்சரிக்கை மணி நின்று விட்டது – ஏதோ சிறிய கோளாறு சரி செய்து விட்டனர் போலும். இதற்கே மூன்று ஃபயர் எஞ்சின்கள் – சுழல் விளக்குகள் கண்களைப் பறிக்க, அபாய மணி ஒளிர

விவரம் தெரியும் வரை உள்ளூற பயம். அதிலும் ஒரு நன்மை. ஃபயர் இஞ்சின்கள் அக்கம் பக்கத்து மனிதர்களைக் காட்டி கொடுத்து விட்டு நகர்ந்தது.

கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வசிக்கும் அடுக்கு மாடி கட்டிடத்தில் தனியாக வாழ நேரிட்டால் எப்படி இருக்கும்? இதோ கடல் பரந்து விரிந்து அலைகளுடன் நீரின் ஓசை ஓ வென்று கேட்கிறது – குடிக்க முடியுமா? எங்கள் வீட்டின் நேர் எதிர் அடுக்கு மாடி கட்டிடத்தில் இதே போல 17 அல்லது 18 வது மாடியில் – இடையில் சற்றே அகலமான பார்க் – இரு கட்டிடங்களுக்கும் பொதுவானது – வசித்தவரை தினம் பார்க்க நேரும் போது என் மனதில் அனுதாபம் தோன்றும். காரணம் அவர் மட்டுமே அந்த வீட்டில். துணைக்கு டி வி ஓடிக் கொண்டிருக்கும். காலையில் நான் எழும் நேரத்திலேயே அந்த வீட்டிலும் விளக்கு எரியும். டிவி ஓடிக் கொண்டிருக்கும். அந்த மனிதரின் முகம் கூட நான் பார்த்ததில்லை. கோட்டு அணிந்த உயரமான நடு வயது மனிதர் என்ற வரை தான் தெரியும். ஒரு நாள் போல அவர் மாடி பால்கனியில் வந்து நிற்பார், உள்ளே போவதும் வருவதுமாக காலை நேரத்தில் சற்று நேரம் கண்ணில் படுவார். அதற்கு மேல் நான் வேடிக்கை பார்க்க முடியாது. மாலையில் திரும்ப அதே போல டிவி பிண்ணனியில் ஓடிக் கொண்டிருக்க இவர் பால்கனியில் நிற்பார். இருட்டும் வரை.  இவர் மட்டும் என் கண்ணில் படக் காரணம் மற்ற வீடுகளின் நடமாட்டமே தெரியாத படி கதவுகள் – அனைத்தும் கண்ணாடி சுவர்களே-திரைச் சீலைகள் மறைத்திருக்கும். இவர் தென்படுவதால் மனிதர்கள் வசிக்கும் இடம் தான் என்று உணர்த்துவது போல என்று நினைப்பேன்.  பாவம், தனிமை மிக கொடுமை. ஒரு நாள் ஒரு பஞ்சாபி பெண்மணியை வழியில் சந்தித்தோம். கணவர் குழந்தைகளுடன் வசித்தவர், மகளும், மகனும் மணமாகி அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று போனபின், கணவனும் மனைவியுமாக இருந்தனர். கணவர் ஒரு விபத்தில் மறைந்த பின் தனியாக இருக்கிறார். இந்தியாவிலிருந்து வெளி வந்த பின் அங்கும் ஒட்டு உறவு இல்லாமல் போய் விட்டது. நம் நாட்டிலும் தனியாக வாழும் முதியவர்கள் இருக்கிறார்களே. எங்களைக் கண்டதும் அருகில் வந்தார். அவரும் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்.  நான் அனுதாப்பட்டது இந்த பெண்மணியைப் பார்த்து தான் என்பது தெரிய வந்த பொழுது ஆச்சர்யமாக இருந்தது. கடல் கடந்து வந்தாலும் பிறந்த வீட்டு உறவு இது தான் போலும்.  ஓரளவு உடல் நலம் உள்ளவரை, அவர்களுக்கு அக்கம் பக்கம் பேச முடியும். கடைகளுக்கு போனால் நாலு பேரை பார்த்து பேசலாம். அதன் பின் என்ன செய்வார்?

தாய் நாட்டிற்கும் இந்த ஊருக்கும் நேரம் வித்தியாசம் 13 மணி 40 நிமிஷங்கள். கையில் கட்டியிருந்த கை கடிகாரத்தில் அதே நேரம் காலை மாலை என்ற வித்தியாசத்தில் புரிந்து கொள்வோம். 12 மணி நேரம் சுலபமாக இருக்க, மீதி ஒரு மணி நாற்பது நிமிஷம் சற்று குழப்பும். என்ன பிரமாதம் என்று தோன்றும். வீட்டில் ஒரு கடிகாரத்தை நேரம் மாற்றி வைத்து அவ்வப் பொழுது கழித்தோ, கூட்டியோ தெரிந்து கொள் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

கடிகாரம் என்று ஒன்று வீட்டில் பக்கம் பக்கமாக இருந்தது ஒரு காலம். இப்பொழுது அவரவர்கள் கைகளில் உள்ள செல் போன், ஐ பாட் இவை தான்  நேரத்தை காட்டும் கடிகாரம், தேதி காட்டும் காலண்டர் எல்லாமே. அதில் ஒரு சௌகரியம் – சூரியன் உதிப்பதும், மறைவதும் இரவு பகலை அறிய மட்டுமே – அலுவலகங்கள், பள்ளிகள் வேலை நேரம் கடிகாரத்தை அனுசரித்தே. விடியும் நேரம் ஏழரை மணி என்றால் மாலை நாலரைக்கே இருட்டி விடும்.  காலை எட்டரைக்கு போய் சேர வேண்டும் என்றால், இருட்டிலேயே கிளம்ப வேண்டியது தான். வருவதும் அதே போல் நன்றாக இருட்டிய பின் தான் – இந்த வித்தியாசம் பழக சற்று சிரமமாக இருந்தது. இருட்டி சற்று நேரத்தில் மனதில் வெகு நேரமாகி விட்டது போல தோன்றும். காலை பழக்கம் காரணமாக 5 மணிக்கு விழிப்பு வந்து, வெளியில் எட்டிப் பார்த்தால் நடு இரவு போல இருக்கும். ஆயினும் அதற்கு மேல் படுக்கையில் படுக்க மனம் வராமல் எழுந்து விடுவோம்.

வசந்த காலம் வந்தால் ஊரே மலர்களால் அலங்கரித்தது போல இருக்குமாம். பகல்

பொழுது நீண்டு மாலை வெய்யில் நீண்டு 9 மணி வரை வெளிச்சமாக இருக்குமாம். பார்க்குகளிலும், வீதிகளிலும் ஜனங்கள் நடமாட்டமும், கோலாகலமாக இருக்குமாம். -அதையெல்லாம் பார்க்க அடுத்த விசிட் அடிக்கலாம். (இப்போதைக்கு கிளம்புகிறோம் தாய் மண்ணைப் பார்க்க.)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக