விபத்து உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து இங்கு குடியேறி வசிக்கும் மக்களுக்குஅமெரிக்க
விபத்து
உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து இங்கு குடியேறி வசிக்கும் மக்களுக்கு
அமெரிக்க நாட்டின் பல ஈர்ப்புகளில் ஒன்று அதன் அகலமான வசதியான சாலைகள்.
கார் ஓட்டுவது ஒரு கலை – ரோடு நன்றாக இருந்து, கூட்டமும் இல்லாவிட்டால் பறக்கத் தோன்றும். வேகம் எடுக்கலாம். இந்த ஊரில் சிக்னல் சட்டங்களை மதிக்காமல் போக முடியாது. கைகேயி திரும்பத் திரும்ப ராஜா தசரதனிடம் சொல்வாள் – சமுத்திரம் சத்யத்திற்கு கட்டுப் பட்டு கரையை தாண்டி வராமல் இருக்கிறதே – என்று. அது போல ராஜாவும் சத்யத்திற்கு கட்டுப் பட்டு அவள் இஷ்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது அவள் உத்தேசமாக இருந்தது. ( கடல் திடுமென ஊருக்குள் போய் பார்க்கலாமே என்று ஆசைப் பட்டால் என்ன ஆகும்? நடு நாடான அயோத்தியில் இருந்தவள்- சுனாமி பார்த்திருக்க மாட்டாள் ) இங்கே கார் ஓட்டுபவர்களும் அது போல சத்யத்திற்கு – சட்ட விதிகளுக்கு கட்டுப் பட்டு தாங்களாகவே ஒழுங்காக நின்று கவனித்து ஓட்டுவதாக நான் நினைப்பேன். ஏனெனில் வழியில் போலீஸ் அதிகாரியோ, வழி காட்டி நடு ரோடில் நிற்கும் கான்ஸ்டபிள்களோ காண முடியவில்லை. ரெட் சிக்னல் தாண்டிப் போனால் என்னாகும்? ரேடர் கண்காணிப்பதை வைத்து வீட்டுக்கே டிராபிக் போலீஸ் டிக்கெட் என்கிறார்கள் – ஒரு பெரும் தொகை அபராதம் கட்டச் சொல்லி கடிதம் – வருமாம். வாரக் கடைசி, அதிலும் டிவியில் புட் பால் அல்லது ஏதோ ஒரு பால் மாட்ச் வந்து கொண்டிருந்தால் தெருவெல்லாம் காலி. ஆறு, எட்டு சக்கரங்களுடன் நீளமாக ட்ரக் வண்டிகள் ஊர்ந்து கொண்டிருக்கும். அப்படி ஒரு சனிக்கிழமையன்று நாங்கள் வந்து கொண்டிருந்த பொழுது, சற்றுத் தொலைவிலிருந்தே என் மருமகள் ஏதோ ஆக்ஸிடெண்ட் என்றாள். எப்படித் தெரியும் என்று கேட்டேன். தூரத்தில் ஒரு போலீஸ் வண்டியில் சுழல் விளக்கு நீலமும் சிவப்புமாக பளீரென்று ஒளியை வாரியிறைத்துக் கொண்டிருந்தது. அருகில் சென்ற பின் தான் தெரிந்தது – நான்கு கார்கள் – முதல் வண்டியின் டயர்கள் புஸ் – மற்றது பக்க கண்ணாடிகள் உடைந்து, அடுத்த காரின் முன் கண்ணாடிகள், நாலாவது மேல் பகுதி நசுங்கி – ஒரு வாகன ஓட்டியின் தவறு மூன்று கார்கள் பின்னால் வந்தவை ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு விட்டன போலும். யார் என்ன என்று தெரியவில்லை. நாங்கள் வந்து விட்டோம். ஒரே சீராக ஓடும் வண்டிகளிடையே ஓட்டுவது சுலபம் என்று நினைத்திருந்தேன்.
நெடு நாட்களுக்கு முன் இந்தியாவில் ஒரு சாதாரண நகரம் – ஔரங்காபாத் – தொழிற்சாலைகள் அங்கு அதிகமாக இருப்பதால் நாட்டின் பல பகுதியிலிருந்தும் மக்கள் உள்ள வளர்ந்து வரும் நகரம். ஒரு பகுதியில் நவீன வீடுகளும் மற்றொரு பகுதியில் பழைய சந்துகள் போன்ற நெருக்கமான தெருக்களும். இவை ஊரின் நடுவில் ஒன்றையொன்று இணைப்பது போல இருக்கும். ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு போக வேண்டுமானால் இந்த குறுகிய சந்தில் நுழையாமல் போக முடியாது. கார் ஓட்டுபவருக்கு சவால் விடுவது போல குறுக்கே மனிதர்கள், மாடுகள், சைக்கிளை வளைத்து வளைத்து ஓட்டும் சிறுவர்கள், ரேடா என்ற கை வண்டி- இதன் அகலம் தெருவில் பாதியை அடைக்கும் – தவிர நாய் பூனைகள்-தெருவின் அகலமும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது – நடுவில் ஒரு வீட்டின் காம்பௌண்டு சுவர் நீட்டிக் கொண்டிருக்கும் – அல்லது ஒரு மரத்தின் வேர் தடுக்கும் – அதன் வழியே காரை ஓட்டிக் கொண்டிருந்த சமயம் – ஓட்டக் கூட இல்லை – மெதுவாக நகர்த்திக் கொண்டிருந்த சமயம் – அவ்வளவு தான் அந்த தெருவில் முடியும் – ஒரு கை வண்டி நிறைய சாமான்களுடன் ஒரு வியாபாரி எதிர்ப் பட்டான்- காரின் கதவை இறக்கி அவனிடம் – ஹிந்தியில் – நான் போகட்டுமா என்று கேட்டதும் – சிரித்துக் கொண்டே- ஹாங் மாய்ஜி என்று வண்டியை நகர்த்திக் கொண்டு வழி விட்டான் – யாருடைய போதாத காலமோ, அவன் வண்டியை நிறுத்திய வீட்டிற்குள்ளிருந்து ஸ்கூட்டரில் ஒருவர் வேகமாக வந்தார் – க்ஷண நேரம் – கை வண்டி நிறைய சாமான் – அவனால் அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து திருப்ப முடியவில்லை- இந்த பக்கம் அவன் சம்மதித்து நகர்ந்ததால் கிளப்பிய கார்- மூன்று வாகன ஓட்டிகளும் முயன்றும் அவன் வண்டியை காப்பாற்ற முடியாமல் – சாமான்கள் சிதற – கிளப்பிய கார் சற்று தூரம் சென்ற பிறகே பிரேக் பிடிக்க, அதற்குள் கூடி விட்ட மக்கள் ஆளாளுக்கு ஒன்று சொல்ல – கார் ஓட்டியவரின் பெயரில் தான் அத்தனைத் தப்பும் என்பது போல பேச- அடி படவில்லை- சாமான் தான் நஷ்டம் என்று தெரிந்ததும் –
இறங்கி வந்தால் அடி தடியே ஆனாலும் ஆகும் என்பதால் – வருத்தமாக இருந்தாலும் – வண்டிக்காரனின் நஷ்டம் மனதை உறுத்தினாலும் நிறுத்தாமல் காரை செலுத்த வேண்டி வந்தது. அடுத்த முறை அதே தெருவில் தானே வர வேண்டும் – இதே கை வண்டிக் காரன் இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்ளவோ- நஷ்ட ஈடு கொடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டோம். சிரித்துக் கொண்டே வழி விட்டவனின் முகம் கண் முன்னால் நின்றது.
இந்த கஷ்டங்கள் எதுவும் இல்லாமல் ஓட்டும் பொழுது ஏன் விபத்து நேர வேண்டும். இதை தூக்கியடித்தது இன்று செய்தித் தாளில் வந்த செய்தி. ஓரு வசதியான பெரிய வண்டி. 9 பயணிகள் செல்லக் கூடிய சொகுசு வண்டி. 9 பயணிகள், ஒரு டிரைவர். நடுவில் கண்ணாடி தடுப்பு பயணிகளுக்கும் டிரைவருக்கும் இடையே- பொதுவாக உல்லாச பிரயாணிகள் அல்லது குடும்பமாக – நண்பர்களுடன் போகும் பொழுது பேசிக் கொண்டே போகலாம் – என்பதால் – வண்டிக்குள் அலறும் பாட்டுச் சத்தம் – இதில் 9 பெண்கள் அனைவரும் ஒரே இடத்தில் பணி புரியும் சினேகிதிகள் – ஒருவருக்கொருவர் சகோதரிகளுக்கு மேல் பழகியவர்கள் – அவர்களில் ஒருவளுக்கு சமீபத்தில் திருமணம் ஆயிற்றாம் – அதைக் கொண்டாட ஏற்பாடு செய்து, நல்ல உடைகளுடனும் பரிசுப் பொருட்களுடனும் பயணித்துக் கொண்டிருந்தனராம். தோழி கள், பேச்சும் விளையாட்டுமாக அதுவும் தங்களுக்குள் ஒருத்தியின் மண நாளைக் கொண்டாடப் போகும் பொழுது உற்சாகத்திற்கு கேட்பானேன். திடுமென வண்டிக்குள் புகை தெரியவும் கண்ணாடித் தடுப்பை.தட்டி ஸ்மோக் ஸ்மோக் என்று ஒரு பெண் அலறியிருக்கிறாள். ஸ்மோக் என்றதும் அவள் வண்டிக்குள் சிகெரெட் பிடிக்கலாமா என்று கேட்கிறாள் என்று டிரைவர் நினைத்து இன்னும் இரண்டு நிமிஷ தூரம் தான் – போய்ச் சேர்ந்து பிடிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். ஒருவருக் கொருவர் பேசுவது புரியாமல் அலறும் பாட்டு சத்தம். அதற்குள் தீ அதிகமாக கண்ணாடித் தடுப்பைத் தாண்டி ஒரு பெண் வெளியேற முயன்ற பின் தான் டிரைவருக்குத் தெரிந்ததாம். அடுத்தடுத்து நான்கு பெண்கள் வெளியேறுவதற்குள் வண்டிக்குள் தீ வேகமாக பரவி விட்டதாம். டிரைவர் கதவை திறந்து வெளியே வந்து அவர்களுக்கு உதவி செய்யவும், உதவிக்கு 911 கூப்பிட போன் எடுத்து கை உதற – பதை பதைத்து – நின்ற நேரத்தில் கார் முழுவதும் கருகி விட்டதாம் – சாலையில் பயணித்த பலரும் ஓடி வந்து உதவிய பின்னும் 5 பெண்கள் அகாலமாக வண்டிக்குள்ளேயே கருகியதை தடுக்க முடியவில்லையாம். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
இதைப் படித்த பின் வெகு நேரம் மனம் வருந்தியது.
கார் கதவை திறந்து கொண்டு இறங்க முடியவில்லையா, ஏன் முன் பக்கமாக வெளியே வர முயன்றனர் என்பது தெரியவில்லை. லிமௌசின் எனும் இத்தகைய காரில் எளிதில் தீ விபத்தை உண்டாக்கும் விதத்தில் உள்ள சில பொருட்கள்: அதிகப் படியான போ:ம் பதித்த சீட்டுகள், அதிகமான வினைல், மரம் பயன் படுத்தப் பட்டிருப்பது, என்று சொல்கிறார்கள். மேலும் மேலும் பத்திரிகையாளர்கள் விசாரிக்கவும் மிகுந்த மன வருத்தத்துடன் பதில் அளித்த டிரைவர், தன்னைச் சேர்த்து ஐந்து பேர் பிழைக்கவும் மற்ற ஐந்து பேர் உயிரிழக்கவும் நேர்ந்ததை சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார். வண்டி சாம்பலாக போனது போனது தான்.