நம்பிக்கை
ஒரே தெருவுக்குள் அல்லது அடுக்கு மாடி வீடானால் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பர். பழகியபின் நமக்கு சொந்தம் என்று மனதில் நெருக்கம் தோன்றும். இதுவே சென்னை வந்தால் தன் சொந்த கிராமத்து மக்கள் யாரையாவது பார்த்தால் இந்த சொந்தம் தொற்றிக் கொள்ளும். டில்லி வரை போனால் தமிழ் நாட்டுக்காரர் நமக்கு சொந்தமாக ஆவர். நாட்டை விட்டு வந்த இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த யாரானாலும் உடனே ‘தேசி’ என்று நெருக்கம் வரும். புது வீடு வாங்கி குடி வந்தவுடன் அக்கம் பக்கம் யார் என்று பார்த்தால் , சீனா, வியட்னாம், தாய்வான், ஜப்பான் என்று வரிசையாக அறிமுகம் ஆனார்கள். இவர்கள் மொழி நம்மால் அனுமானிக்கவே முடியாது. ஆனாலும் ஏதோ ஒரு நெருக்கம். அடுத்த வீட்டுக் காரர் வியட்னாமைச் சேர்ந்தவர். எங்களை கண்டு மகிழ்ச்சியுடன் சொன்னார் – இந்த தெரு முழுவதும் நாம் தான் – அதாவது இந்தியா, சீனா , ஜப்பான் என்று உலகத்தின் தென் கிழக்கு தேசத்தவர் தான். எங்களுக்கு வீட்டை விற்றவரும் அதே நாட்டைச் சேர்ந்தவர் தான். அவர்கள் வணங்கும் புத்த பிரான் பிறந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலா? ஜயதேவரின் அஷ்டபதிக்கு பிறகு தான் பகவானின் ஒன்பதாவது அவதாரமாக புத்தரைச் சொல்வதாக அறிகிறோம். இந்த புத்தர் அவர்களது பரம்பரையில் 21 வது தலைமுறையாவார் என்றும், ராமாயணத்து ஜாபாலி முனிவர் தான் முதல் என்றும் ஒரு நம்பிக்கை இருப்பதாக (தெய்வத்தின் குரல் – ரா.கணபதி எழுதியது) மகா ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்கள். தாபம் அதிகமானால் மழை வந்தே தீரும் என்ற இயற்கை நியதிக்கு ஏற்ப, மக்களிடையே குழப்பமும், கஷ்டங்களும் அதிகமாகி தாங்க முடியாத அளவு இருந்த சமயம் மென்மையான குணமும், கொள்கைகளுமாக புத்தர் பிரான் வந்தார். அரச போகத்தை துறந்து வெளியேறிய அவரிடம் மக்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவரை பின் பற்றினால் நமக்கு நன்மை கிடைக்கும் என்று பொது மக்கள் நினைத்தனர். ஆனாலும் கீழை நாடுகளில் பரவியது போல நமது நாட்டில் புத்த மதம் வேறூன்றவில்லை என்பது தெளிவு.
நமக்கு புத்த பிரான் என்று ஒட்டுதலும் இல்லை மறுப்பும் இல்லை – இருந்தாலும் கோவில் கட்டி வணங்கும் அளவு தெய்வமாக நினைக்கும் ஈடுபாடும் இல்லையே. நம் நாட்டு நவராத்திரி சமயம் மண் கோபுரம் கட்டி பொம்மைகள் வைத்து அலங்கரிப்பது போல ஒரு அமைப்பு வீட்டுத் தோட்டத்தின் ஒரு மூலையில் வைத்துள்ளனர். அதில் புத்தர் அமர்ந்து தியானம் செய்யும் கோலத்தில், நடந்து மலையில் ஏறுவது போல மற்றும் சில பொம்மைகள்- ஒரு மெர்மைட் எனும் – பாதி பெண் பாதி மீன் உருவமாக ஒன்று-அதில் நீர் அருவியாக கொட்டுவது போல ஒரு அமைப்பு – மாதக் கணக்கில் பூட்டி இருந்த வீடு – பராமரிப்பு இல்லாததால் அழுக்காக கிடந்தது. ஒரு நாள் ஆங்காங்கு கிடந்த ஒயர்களைத் திரட்டி தெரிந்தவரை இணைத்து பார்த்ததில் மலையருவியும், விளக்குகளும் கண்களைக் கவர்ந்தன – ஆனால் அதற்கான மின்சார செலவும், தண்ணீர் செலவும் நமக்கு கட்டுபடியாகுமா என்று நினைக்க வைத்தது. முன் இருந்தவர்களுக்கும் இதே தானே – அப்படியும் பயன் படுத்தி வந்தார்கள் என்றால் புத்த பிரானிடம் அவர்களுக்கு இருந்திருக்க கூடிய நம்பிக்கை அல்லது பக்தி என்று தானே ஆகிறது. இதே மலையுச்சியில் கேதார்நாத்தில் உள்ளது போன்ற அமைப்பை வைத்து விட்டால் ( பீமன் தேடி வந்த சமயம் சிவ பெருமான் மலை வடிவில் மறைந்திருந்ததாகவும், பீமன் கைக்கு கிடைத்த பகுதியை வெடுக்கென்று பெயர்த்து எடுத்ததில் முக்கோண வடிவில் பாறையாக வந்த பாறையையே பிரதிஷ்டை செய்ததாகவும் தல வரலாறு) நமக்கும் செலவாகத் தெரியாது. மற்ற சிலைகள் நமது ரிஷிகளாவர். மற்ற யானை, சிங்கம், மான் போன்றவை எல்லா காடுகளிலும் உள்ளது போல – “மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் சுக துக்கயோ: ‘ இத்துடன் நம்பிக்கையையும் சேர்த்துக் கொள்ளலாம்.