முன்னுரை
முன்னுரை
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் மூழ்கி எழுந்து முத்துக் குளளத்தவர்கள் பலர் இருக்க, இது என்ன ஆசை என்று தோன்றலாம். விரிபோணி வர்ணம் எம்.எஸ். பாடுவதைக் கேட்ட பின்னும் மற்றவர் பாடி கேட்க வேண்டாம் தான். அதனால் விடுகிறோமா. நம் வீட்டு குழந்தை ஆ…அ..அ என்று ஆரம்பித்தால் நாம் ரசிப்பது தனி தான். பல நாட்களாக ரசித்த பல விஷயங்கள் மொழி காரணமாக புரியாமல் ரசிக்க முடியாமல் போனவர்களுடன் என் ரசனையை பகிர்ந்து கொள்வது தான் இந்த முயற்சியின் பயன், காரணம் எல்லாமே. முடிந்த வரை, வார்த்தைக்கு வார்த்தை, தமிழாக்கியிருக்கிறேன். பல இடங்களளல் சம்ஸ்க்ருத மொழிக்கு சிறப்பான சொற்றொடர்கள், உதாரணமாக, மைதிலீம் ஜனகாத்மஜாம், லக்ஷ்மிசம்பன்னோ லக்ஷ்மண, வாக்ய கோவிதஈ ஹனுமான், என்று அவர்கள் குணங்களை சேர்த்தே சொல்லும் வழக்கு, தமிழில் மிகையாக படலாம். வரவர்ணினி, அனவத்யாங்கா-நல்ல நிறமுடையவள், கொடி போன்ற உடலுடையவள், சிற்றிடையாள் என்ற சொற்கள் திரும்பத் திரும்ப எதற்கு என்றும் தோன்றலாம். படிக்க உறுத்தல் இல்லாத வகையில் இந்த பெயர் உரிச்சொற்கள், வரும்படி முயற்சி செய்திருக்கிறேன். இயற்கையை வர்ணிக்கும் பொழுது முனிவர், தனி ஆவர்த்தனமே வாசித்திருக்கிறார். வனத்தை (வனம்-நீர், காடு என்று இரு பொருள்). கண்ட உடனேயே, கவிக்கு உற்சாகம் கரை புரண்டோடும் போலும். வர்ணனை தான். இந்த வர்ணனைகளைப் படித்து விட்டு, நீர் நிலைகளுக்குச் செல்லலாம்.
பகீரதன் கங்கையை அழைத்துச் செல்லும் பொழுது, நினைத்த காரியத்தை சாதித்த பகீரதன், முன்னால் யானை மேல், நிச்சிந்தையாக போக, தாரை தம்பட்டங்களோடு பின்னால் வரும் மற்ற ஜனங்களையும் நம்மால் கண்ணெதிரில் உருவகப் படுத்தி காண முடியும்.
அகல்யா சரித்திரத்தில் விஸ்வாமித்திரர், அபலையான ஒரு பெண்ணிற்காக இரங்குவதும், தன் உணர்வை சிறுவனான ராமனிடம் பிரதிபலிக்கச் செய்வதும், பெரியவரான, அனுபவம் மிக்க ஒருவரின் இயல்பை மிக அழகாக வௌவௌப்படுத்தும். அந்த பாத்திரம் இப்படித் தான் இருக்க முடியும் என்று நம்மிடம் அவர் பேரில் மரியாதையை தோற்றுவிக்கிறது.
பரதன், ஊராரையும் அழைத்துக் கொண்டு ராமனை திரும்ப அழைத்து வருகிறேன் என்று கிளம்பும் பொழுது, ராஜா பரதன் செல்ல சாலைகள் போடுவதும், வழிகளளல் கிணறுகள் வெட்டுவதும், இருந்த மரங்களை அப்புறப்படுத்துவதும், புது மரங்களை நடுவதும், இந்த ஏற்பாடுகள் ரசிக்கத் தகுந்தனவை என்பதோடு, என்ன ஒரு முன் யோசனை, முன் ஏற்பாடுகள் என்று வியக்கவே தோன்றுகிறது.
சித்ர கூட மலையில் வாஸ்து சாஸ்திரப்படி குடிசையை அமைத்துக் கொண்டு, ராமர் தானே மகிழ்ந்து வனவாசம் வந்ததும் நல்லதாயிற்று, உன்னுடன் இந்த இடங்களை காண்பதே மகிழ்ச்சி தருகிறது, என்று சீதையிடம் சொன்னவர், கூட்டமாக பரதன் வந்து யானை குதிரைகள் நடமாடி, சாணமும், அழுக்கும் அந்த இடத்தையே நாசமாக்கிவிட்டதையும் சீதையிடம் சொல்கிறார். இந்த இடத்தை விட்டு போகலாம் என்று முடிவு செய்வதை ரசிக்கலாம்.
மாரீசன் அலறியவுடன், பயந்து திரும்பி வரும் அந்த அவசரத்திலும், குடும்பத் தலைவன் அடுத்த வேளைக்கான உணவு பிரச்னையை நினைப்பது போல, ராமர், சிறிய மிருகங்கள் இரண்டு மூன்று என்று பிடித்துக் கொண்டு திரும்புவதை மறக்காமல் எழுதிய கவியை பாராட்டலாம்.
சிறை இருந்த காலத்திலும், உடன் காவல் இருந்த ராக்ஷஸிகளையே தன் உற்ற தோழிகளாகிக் கொண்டு விட்டாள் ஜனகன் மகள். அப்படித் தோழியான த்ரிஜடையின் மகள், சரமா, அப்பொழுது தான் தன் வாசஸ்தலமான தாமரை மலரை விட்டு இறங்கிய ஸ்ரீ – லக்ஷ்மி தேவி போல நின்ற சீதையை எதிரில் கண்டு மலைப்பதை உணர்ந்து ரசிக்கலாம்.
இதைப் போன்ற பல சிறிய விஷயங்கள், கவியின் எழுத்தில் சித்ரமாக தீட்டப்பட்டிருப்பதை நீங்களும் கண்டு பிடிக்கலாம்.
இந்த நிகழ்ச்சிகள் இந்த எழுத்தில் மனதை தொடவில்லையெனில், மூல பாடத்தை அதன் மூலமான சம்ஸ்க்ருத மொழியையே கற்றுக் கொண்டு என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம். அந்த அளவில் தூண்டுதல் ஏற்படுமானால், அதுவே பெரும் பலனே.
– ஜானகி கிருஷ்ணன் -.