பொருளடக்கத்திற்கு தாவுக

சுந்தர காண்டம் 12 to 20

பிப்ரவரி 22, 2014

 

அத்தியாயம் 12 (350)  ஹனுமத் விஷாத: (ஹனுமானின் கவலை)

 

அந்த பவனத்தின் மத்தியில், லதா க்ருஹங்கள், சித்ர க்ருஹங்கள், நிசா க்ருஹங்கள் என்று மற்ற இடங்களிலும் சீதையைக் காணும் ஆவலுடன் அலைந்தான். ரகு நந்தனனின் பிரியமான மனைவியைத் தேட என்று வந்தவன், அவளைக் காணாமல் ஒருவேளை சீதை உயிர் தரித்து இல்லையோ, இவ்வளவு தேடியும் என் கண்ணில் படவில்லையே என்று எண்ணினான். ராக்ஷஸ ராஜாவான ராவணன் துஷ்டன்.  நற்குடியில் பிறந்தவள், தன் சீலத்தை ரக்ஷித்துக் கொள்ளத் தான் நினைத்திருப்பாள். அவனுக்கு இணங்கி இருக்க மாட்டாள்.  அதனால் அவனே கொன்று போட்டிருக்கலாம். ராவணன் அரண்மனையில் ஏராளமான ராக்ஷஸிகள், ரூபமில்லாமல், பெரிய முகமும், கோணலான அங்கங்களும், குணம் என்பதும் ராக்ஷஸ இயல்பாகவே இருக்கக் கண்டு பயந்து ஜனகாத்மஜா உயிரை விட்டு விட்டாளோ. சீதையைக் காணாமல் திரும்பப் போய், காலமும் கடந்து தாமதமாக சுக்ரீவன் முன்னால் போய் எப்படி நிற்பது ? அவனும் கோபத்துடன், கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். அந்த:புரம் முழுவதும் தேடியாயிற்றே.  ராவணன் மனைவிகளையும் தேடிப் பார்த்தாயிற்று.  சீதையை மட்டும் காணவில்லை. என் சிரமம் முழுவதும் வீணாயிற்று. திரும்பிப் போனால் வானரங்கள் என்னைப் பார்த்து என்ன சொல்வார்கள்? வீரனே, அங்கு போய் என்ன செய்தாய்? அதை எங்களுக்குச் சொல்லு என்று கேட்பார்கள். சீதையைக் காணாமல் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?  நிச்சயம், அனைவரும் ப்ராயோபவேசம் தான் செய்வார்கள். சுக்ரீவன் கொடுத்த கால கெடு, தாண்டியாயிற்று.  முதியவரான ஜாம்ப3வான், யுவராஜா அங்கதன் இருவரும் என்னை உற்சாகப் படுத்தி அனுப்பி வைத்தார்களே. இப்பொழுது என்ன சொல்வார்களோ. வானரங்கள் நான் சமுத்திரத்தைக் கடந்து வந்து, வந்த காரியம் ஆகாமல் திரும்பிப் போனால், என்ன நினைப்பார்கள்? நம்பிக்கை இழக்காமல் இருப்பது ஒரு பெரிய செல்வம். நம்பிக்கைதான் சுகத்தைத் தரும் (அனிர்வேதம்-நம்பிக்கையிழக்காமல் இருத்தல்)  நம்பிக்கைதான் மனிதர்களை காரியங்களில் செலுத்துகிறது.  உயிருள்ள எல்லா ஜந்துக்களும், அவரவர் செய்யும் காரியங்களில் சாதனை புரிய இந்த நம்பிக்கைதான் உறுதுணையாக இருக்கிறது. அதனால் நான் நம்பிக்கையை இழக்காமல் தேடுகிறேன். இது வரை தேடாத இடங்க  ளில் தேடுகிறேன். ராவணனின் இந்த பரந்த தேசத்தில், நான் இதுவரை காணாத இடங்கள் பல இருக்கின்றன. அங்கு தேடுவேன். பான சாலா எனும் மது அருந்தும் இடங்களில் தேடி விட்டேன். புஷ்ப க்ருஹங்களிலும் தேடி விட்டேன். சித்ர சாலா, க்ரீடா க்ருஹம் (விளையாடும் இடம்) இவற்றை நன்றாகப் பார்த்து விட்டேன். விமானங்களில் (மேல் மாடிகளில்) வழிகளில், என்று பல இடங்களிலும் தேடி விட்டேன் என்று மனதில் சொல்லிக் கொண்டே தொடர்ந்து தன் தேடலைத் துவங்கினான். தாவி ஏறியும், குதித்தும், ஓடியும், சைத்ய க்ருஹம் (பெரிய மடம்) பூமி க்ருஹம், க்ருஹாதிக்ருஹகம் என்னும் கட்டிடங்களில் நின்று கவனித்து தேடி விட்டு மேலும் நடந்து சென்றான். கதவுகளை திறந்தும், தாழ்ப்பாள்களை விலக்கியும், உள்ளே நுழைந்தும், கீழே குதித்தும், தாவி ஏறியும் ஒரு இடம் விடாமல் தேடினான். நான்கு அங்குல இடம் கூட விடவில்லை. ராவணனின் அந்த:புரத்தில் ஹனுமான் பாதம் படாத இடமே இல்லை எனும்படி சுற்றித் தேடியாயிற்று. பிராகாரங்கள், இடைப்பட்ட வீதிகள், யாக சாலைகள், மடங்கள் என்று தேடினான். வெட்ட வெளிகள், புஷ்கரிணிகள், எல்லா இடமும் தேடியாயிற்று.  வித விதமான ராக்ஷஸிகளை விரூபமாக, கோணலான அங்கங்களோடு பார்த்து விட்டான். ஹனுமான் அந்த இடத்தில் ஒப்புவமை இல்லாத அழகுடைய வித்யாதர ஸ்த்ரீகளைக் கண்டான், ஜனகாத்மஜாவை மட்டும் காணவில்லை.  அழகிய நாக கன்னிகளை, பூர்ண சந்திரன் போன்ற முகம் உடையவர்களைக் கண்டான். ராகவ நந்தினியை மட்டும் காணவில்லை. நாக கன்னிகளை பலவந்தமாக ராக்ஷஸ ராஜன் கவர்ந்து கொண்டு வந்து சேர்த்திருந்ததைக் கண்டான். சிறுத்த இடையுடைய சீதையைக் காணவில்லை, மற்ற ஸ்த்ரீகள், உத்தமமான அங்க லக்ஷணங்களுடன் இருந்தவர்களைக் கண்டான்.  ஜனக நந்தினியை மட்டும் காணவில்லை. மாருதாத்மஜன் திரும்பவும் கவலைக் குள்ளானான். இந்த வானரங்கள் பெரு முயற்சியோடு கடற்கரை வந்து சேர்ந்ததும், தான் தாவிக் குதித்து கடலைத் தாண்டியதும் வீண் தானா?  அந்த விமானத்திலிருந்து  மெதுவாக யோஜனையுடன் இறங்கியவன் மிகுந்த மன வருத்தத்துடன் தளர்ந்து போனான். 

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ஹனுமத் விஷாதோ என்ற பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 13 (351) ஹனுமன்னிர்வேத: (ஹனுமானின் நிராசை)

 

விமானத்திலிருந்து கிழே இறங்கி பிராகாரத்தை அடைந்த ஹனுமான், வேகமாக மற்றொரு முறை மேகத்தில் மின்னல் தோன்றுவது போல க்ஷண நேரத்தில் ராவணனின் அந்த:புரத்தை நோட்டம் விட்டு விட்டு, ஜானகியைக் காணாமல் தனக்குள் சொல்லிக் கொண்டான். நன்றாக லங்கையை அலசி தேடியாயிற்று.   ராமனுடைய  பிரிய மனைவியைக் காணவில்லை. சர்வாங்க சோபனா-உடல் வாகு-இவளுடைய ஒவ்வொரு அங்கமும் அழகு என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  வைதேஹி, சீதை என்று அழைக்கப்படுபவளை எல்லா இடங்களிலும் தேடியாயிற்று. நதிகள், சமவெளிகள், நதிக்கரைகள், மலைகள், வனாந்தரங்கள் என்று சுற்றித்  திரிந்து தேடியாயிற்று. பூமி முழுவதும் அலசி விட்டேன். ஜானகியைக் காணவில்லை. சம்பாதி சொன்னபடி சீதை ராவணன் இருப்பிடத்தில் தான் இருக்க வேண்டும்.  சீதா, வைதேஹி, மைதிலி, ஜனகாத்மஜா -இந்த ராவணனுடைய கடுமையான நடவடிக்கைகளைத் தாங்குவாளா? தன்னால் சமாளிக்க முடியாமல், ராக்ஷஸன் அபகரித்துச் செல்லும் பொழுதே சாகரத்தில் விழுந்து விட்டாளோ அல்லது ராக்ஷஸன் ராம பாணத்தை எண்ணி பயந்து அவளை கீழே தள்ளி விட்டானோ. சித்தர்களின் வழி எனும் ஆகாய மார்கத்தில் செல்லும் சமயம் ஆழமான சாகரத்தைப் பார்த்து மயங்கி விழுந்து விட்டாளோ? வேகமாக செல்லும் ராவணன் பிடி அழுத்தியதை தாங்க முடியாமல் உயிரை விட்டு விட்டாளோ? மேலே மேலே ரதம் செல்லும் பொழுது மூச்சு முட்டி சாகரத்தில் விழுந்து விட்டிருப்பாள் அல்லது ராவணனுக்குத்தான் அகோர பசியாயிற்றே. தன் சீலத்தை காத்துக் கொள்பவள், அவன் விருப்பத்துக்கு இணங்காததால், விழுங்கி விட்டானோ?  அடடா, பந்துக்கள் யாரும் அருகில் இல்லாமல் தபஸ்வினி,  ராவணனுக்கு இரையாகி இருப்பாளோ, அல்லது ராவணன் பத்னிகள் இவளையே தவறாக எண்ணி விழுங்கி விட்டார்களா? சம்பூர்ணமான சந்திரன் போன்றவனும், பத்ம பத்ரம் போன்ற கண்கள் உடையவனுமான ராமனையே எண்ணியிருப்பவள் இவ்வளவு மோசமான முடிவையா அடைவாள்? ஹா லக்ஷ்மணா, ஹா ராமா, ஹா அயோத்யே, என்று மைதிலி அலறினாளே, அவள் தானாகவே தான் உயிரை விட்டிருப்பாள்.  அல்லது ராவணன் க்ருஹத்தில் கூண்டில் அடைபட்ட கிளி போல அடைத்து வைக்கப் பட்டிருப்பாள்.   ஜனகனுடைய மகள், ராமபத்னி, புகழ் வாய்ந்த சீதா, இவள் இடையழகு பிரஸித்தம்.  உத்பல பத்ரா இவள், எந்த காரணம் கொண்டும் ராவணனுக்கு இணங்கி இருக்க மாட்டாள். தானாக மறைந்தாளா, மறைக்கப் பட்டாளா, உயிரை இழந்தாளா?  ஜனகாத்மஜாவைக் காணவில்லை -யென்று ராமனிடம் சொல்வதும் எளிதல்ல.  சொன்னாலும் தவறு, சொல்லாமல் மறைத்தாலும் தவறு. இப்பொழுது என்ன செய்வது? மிகவும் தர்ம சங்கடமான நிலையில் இருக்கிறேன். இப்படி வந்த காரியம் முடியாமல், அடுத்து என்ன செய்வது? என்று ஹனுமான் குழம்பினான். ராக்ஷஸ ராஜனின் இருப்பிடம் வரை வந்து விட்டு, ஜானகியைக் காணாமல் திரும்பிப் போனால் என் ஆற்றல் என்ன ஆவது? (புருஷார்த்தம்) எனக்கு என்ன மதிப்பு இருக்கும் ? நான் சாகரத்தை கடந்து வந்ததும் வீண் என்று ஆகும்.  லங்கையில் நுழைந்து இந்த ராக்ஷஸர்களைக் கண்டு திரும்பிப் போய் சீதையைக் காணவில்லை என்று சொன்னால் சுக்ரீவன் என்ன சொல்வான் ? மற்ற வானரங்கள் என்ன நினைப்பார்கள் ? கிஷ்கிந்தை வந்த ராம லக்ஷ்மணர்கள், தசரத குமாரர்கள், நான் திரும்பிப் போய் சீதையைக் காணவில்லை என்று இந்த செய்தியைச் சொன்னால் காகுத்ஸன் உயிரை விட்டு விடுவான். இந்த செய்தி அவ்வளவு கடுமையானது.  பயங்கரமானது. அவன் இந்திரியங்களை தகிக்கச் செய்து விடும். சீதாவின் காரணமாக உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருப்பவன் இறந்தால், சகோதரனிடம் உயிரையே வைத்திருக்கும் லக்ஷ்மணனும் உடனே மடிவான். இந்த இரு சகோதரர்களும் இறந்து விட்டனர் என்று தெரிந்தால், பரதனும் உயிருடன் இருக்க மாட்டான். பரதன் மடிந்தால், சத்ருக்னனும் இருக்க மாட்டான். புத்திரர்கள் இறந்தார்கள் என்று கேட்டால் தாயார்மார் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்.  கௌசல்யா, சுமித்ரா, கைகேயி- மூவருமே நிச்சயமாக பிழைத்து இருக்க மாட்டார்கள். சுக்ரீவன், வானர ராஜன், செய் நன்றி மறவாதவன், சொன்ன சொல்லை காப்பாற்றுபவன், ராமன் இப்படி அகால மரணம் அடைந்தால், தானும் மரிப்பான். ருமாவும் இந்த செய்தி கேட்டால், மனம் வாடி, பதியை இழந்த துக்கத்தில் மடிவாள். ஏற்கனவே வாலி இறந்ததால் துக்கத்துடன் வாழும் தாரை, அரசனான சுக்ரீவன் மடிந்தான் என்று கேட்டால் தானும் உயிர் வாழ மாட்டாள். மாதா, பிதா இன்றி, சுக்ரீவனும் அகால மரணம் அடைந்தால் குமாரன் அங்கதன் எப்படித் தாங்குவான் ? தலைவர்களின் இந்த முடிவைக் கண்டால் வானரங்கள் சாதாரண பிரஜைகள் என்ன செய்வார்கள்? கூட்டம் கூட்டமாக பாறைகளில் மோதிக் கொண்டும், முஷ்டியால் அடித்துக் கொண்டும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வர்.  வானர ராஜன், சில சமயம் சாந்தமாக, சில சமயம் தானம் நிறைய கொடுத்து, சில சமயம் தட்டிக் கொடுத்து பாராட்டி, என்று பிரஜைகளை நன்றாக கவனித்துக் கொள்பவன். இப்படி அவன் ஆட்சியில்  கவலையற்று இருந்தவர்கள், உயிரை விடுவதையே விரும்புவார்கள். வனங்களிலும், மலைகளிலும், மலைச்ரல்களிலும் இனி பழையபடி விளையாட்டும், குதூகலமுமாக வானரங்களைக் காண முடியாது.  மனைவி மக்களுடன், மந்திரிகள் தலைவனின் கஷ்டத்தால், தாங்களும் மனம் ஒடிந்து போனவர்களாக மலையுச்சியில் இருந்து கீழே விழுந்தோ, விஷமோ, சுருக்கு கயிறோ, ஏதோ ஒன்று இவர்கள் தங்களை முடித்துக் கொள்ள சாதனமாக பயன் படுத்திக் கொள்வர்.  உபவாசம் இருந்தோ, சஸ்திரங்களை பயன் படுத்தியோ வானரங்கள் அழியும்.  நான் திரும்பிச் சென்று விஷயத்தைச் சொன்னால், இதன் விளைவு மிகவும் கோரமாக இருக்கும் என்று நம்புகிறேன். இக்ஷ்வாகு குலமும் நாசமாகும். வானரர்களின் குலமும் நாசமாகும். நான் இங்கிருந்து கிஷ்கிந்தைக்கு திரும்பப் போவதில்லை. மைதிலி இல்லாமல் சுக்ரீவனை எதிர்கொள்ள எனக்கு தைரியமில்லை.  நான் போகாதவரை, அவ்விரு ராஜ குமாரர்களும் என் வரவை எதிர் பார்த்து நம்பிக்கையுடன்  உயிர் தரித்தாவது இருப்பர். வானரங்களும் என் வரவை எதிர்பார்த்து காத்திருப்பர். நியமத்துடன், கையளவு, வாய் கொண்ட அளவு என்று உண்டு, நான் மரத்தடியில், வான ப்ரஸ்தனாக வாழ்வேன்.  ஜனகாத்மஜாவை காணும் வரை இந்த கடற்கரையில், பலவிதமான பழங்களும், காய்கறிகளும் நிறைந்த இடத்திலும், அரணியைக் கடைந்து நெருப்பு மூட்டிக் கொள்வேன். அதில் பிரவேசித்து அல்லது உட்கார்ந்தபடியே யோக சாதனையில் உயிரை விடுவேன். காகங்களும், நாய்களும் என் உடலை சாப்பிடுவார்கள். இது தான் மகரிஷிகள் தங்கள் அந்திம பயணத்தை மேற்கொள்ளும் வழியாகும். அதை விட மேல், தண்ணீரில் பிரவேசிப்பது. ஜானகியைக் காணவில்லையெனில் இது தான் என் செயலாகும். இந்த முடிவு தான் நற்குடியில் பிறந்தோன் மேற்கொள்ள வேண்டியதாகும். சுப4கா3– பா4க்யத்தைத் தருவது.  கீர்த்தியைத் தரும் மாலை, புகழையுடையது.  வெகு நாட்கள் நான் சீதையைக் காணாமல் தபஸ்வியாக திரிந்தாலும் திரிவேன். மரங்களின் அடியில் நியமத்துடன் வாழ்ந்தாலும் வாழ்வேன். சீதையைக் காணாமல் திரும்பி போக மாட்டேன். நான் போய் சீதையைக் காணவில்லை என்று சொன்னால் தான் அனர்த்தம் சம்பவிக்கும். அங்கதன் முதலானோர் உயிரை விட காரணமாவேன். ஆனால், வினாசத்தில் தோஷங்கள் தான் அதிகம். அழிவில் நன்மை ஏது? உயிருடன் இருந்தால் நன்மையைக் காண வாய்ப்புண்டு. அதனால் நான் உயிரை விடப் போவதில்லை. இருந்து ஏதாவது செய்ய முடியுமா என்பதில் கவனம் செலுத்தப் போகிறேன்.  இவ்வாறு பலவிதமாக நினைத்து மனதுக்குள் தன் துக்கத்தை அடக்கிக் கொண்டான். திரும்பவும் தைரியத்தை சேகரித்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு நிச்சயம் நல்ல செய்தியோடு தான் திரும்ப வேண்டும் என்ற உறுதியுடன், ராவணனை வத4ம் செய்தாவது என் ஆற்றலை காட்டத்தான் வேண்டும்.  மகா பலசாலி, தசக்ரீவன், இவனை வதம் செய்தால், சீதையை அபகரித்தானே அதற்கு பழி வாங்கியதாக ஒரு சமாதானமாவது கிடைக்கும். அல்லது இவனையும் அலாக்காக தூக்கிக் கொண்டு, சமுத்திரத்திற்கு மேல் உயர உயர பறந்து ராமரிடம் உபகாரமாக (அன்பளிப்பாக) கொடுத்து விடுகிறேன்.  பசுபதியிடம் பசுக்களை ஒப்படைப்பது போல, இப்படி ஒரு முடிவுக்கு வந்தவன், மேற்கொண்டு என்ன செய்வது என்று திட்டமிடலானான். இந்த லங்கையில் திரும்ப திரும்ப சுற்றி வந்து, ஜனகாத்மஜாவை காணும் வரை ஓய மாட்டேன்.  சம்பாதி சொன்னதிலிருந்து, இங்கு தான் இருக்க வேண்டும். இங்கு ஆசார நியமங்களோடு வசிப்பேன்.  ராமரிடம் சென்று சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொன்னால், தன் மனைவியைக் காணாத துக்கம் அதிகமாக எல்லா வானரங்களையும் ஒட்டு மொத்தமாக தகித்து விடுவார். என் காரணமாக  மற்ற வானரங்கள் அழியாமல் காப்பேன். இந்த அசோக வனம், பெரிய மரங்களோடு அடர்ந்து காணப்படுகிறதே, இதை இன்னும் நான் தேடவில்லை. உள்ளே சென்று பார்க்கிறேன். வசுக்கள், ருத்ர, ஆதித்யர்கள், அஸ்வினி குமாரர்கள், மருத் இவர்களை வணங்கி விட்டு செல்கிறேன். நான் இங்கு நுழைவது ராக்ஷஸர்களுக்கு துன்பத்தை வளர்ப்பதாக இருக்கட்டும். இந்த ராக்ஷஸர்கள் அனைவரையும் வென்று, இக்ஷ்வாகு குல நந்தினியான சீதையை ராமருக்கு கொடுப்பேன். தபஸ்வி ஜனங்களுக்கு சித்தியை தருவது போல தன் புலன்களையடக்கி த்யானத்தில் ஆழ்ந்தான். முஹுர்த்த நேரம் ஆழ்ந்து தியானம் செய்து விட்டு எழுந்தான். ராமருக்கு என் வணக்கங்கள், அல்லது லக்ஷ்மணனையும் சேர்த்து ராமருக்கு என் வணக்கங்கள். ஜனகாத்மஜாவான தேவிக்கும் என் நமஸ்காரம். ருத்ர, இந்திர, யம, அனில மற்றும்  சூரிய சந்திரர்கள், மருத் கணங்களுக்கு, என் நமஸ்காரம். என்று இவ்வாறு தேவதைகள் எல்லோருக்கும் தன் வணக்கத்தை தெரிவித்து சுக்ரீவனையும் நினைத்து வனங்கினான்.  நான்கு திசைகளிலும் பார்த்து கைகூப்பி வணங்கி விட்டு, அசோக வனம் இருந்த திக்கில் தன் மனதால் முதலில் போனான். அடுத்து யோசிக்கலானான், என்ன செய்யலாம்?  நிச்சயம் இந்த வனமும் ராக்ஷஸர்கள் காவலில், எண்ணற்ற காவல் வீரர்களுடன் தான் இருக்கப் போகிறது. அசோக வனிகா, எல்லா விதமான ஸம்ஸ்காரமும் (செப்பனிடுதல், மேன்மை படுத்துதல்) செய்யப் பட்டு விளங்கும். இங்குள்ள காவலர் மரங்களைக் கூட கண் காணிப்பர். சர்வாத்மாவான பகவான் வாயுவே, இங்கு அழித்து விடும் தன் சக்தியைக் காட்டுவதில்லை. மந்தமாக வீசுகிறான். அவரும் (வாயு பகவானும்) நானும் எங்களை அடக்கிக் கொண்டிருக்கிறோம்.  ராம காரியத்திற்காக நான் ஆத்மார்த்தமாக இறங்கி இருக்கிறேன். வாயுவோ, ராவணனுக்காக.  எனக்கு சித்தர்கள், ரிஷி கணங்கள் காரிய சித்தியைத் தரட்டும்.  ஸ்வயம்பூவான ப்ரும்மாவும், தேவர்களும் என் காரியத்தில் உதவி செய்யட்டும். அக்னியும் வாயுவும், புரூஹுதனும் வஜ்ரத்தை தரிக்கும் இந்திரனும் சித்தியைத் தரட்டும். பாசஹஸ்தனான வருணனும், சோம, ஆதித்யர்களும் , அஸ்வினி குமாரர்களும், மருதனும் மற்ற தேவதைகள் அனைவரும் எனக்கு சித்தியை, காரியம் நிறைவேற அருள் செய்யுங்கள். ஜீவ ஜந்துக்களுக்கெல்லாம் பிரபுவான பரமாத்மாவும் என் காரியத்தில் எனக்கு துணையாக இருங்கள், கண்ணுக்கு தெரியாமல் வழியில் நிற்கும் தேவதைகள் யாவரும் எனக்கு இந்த சமயத்தில் உதவியாக இருங்கள். (ஆர்யா ) மதிப்புக்குரிய சீதா தேவி ப்ரஸன்ன தாராதிபன் (சந்திரன்) போன்று இருப்பாளாம். வெண்மையான பற்களும், மென்னகையோடு, பத்ம பலாசம் போன்ற கண்கள் உடையவளாம். அவளை நான் காண வேண்டும். நீசமான செயலை செய்து இந்த ராவணன் அலங்காரமாக வேஷம் தரித்து, அபலையாக தனித்து இருந்தவளை கவர்ந்து கொண்டு வந்து விட்டான். அவள் எப்பொழுது என் கண்ணில் படுவாளோ? என்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ஹனுமன்னிர்வேதோ என்ற பதிமூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

அத்தியாயம் 14 (352) அசோக வனிகா விசய: (அசோக வனத்தில் தேடுதல்)

 

முஹுர்த்த நேரம் தியானத்தில் ஆழ்ந்து, சீதையை மனதில் நினைத்தபடி, அந்த ப்ராகாரத்தில் இறங்கி, மாளிகையிலிருந்து வெளியேற குதித்து இறங்கினான்.  வசந்த கால ஆரம்பம். மரங்களின் நுனியில் புஷ்பங்கள் தெரிந்தன. பல விதமான மரங்களைக் கண்டான். சால, அசோக, ப4வ்ய, சம்பக, புஷ்பங்கள் மலர்ந்து இருந்தன.  உத்தாலக, நாக வ்ருக்ஷங்கள், சூத, கபிமுக இவைகளும், மாமரங்கள் வனமாக அடர்ந்து, நூற்றுக் கணக்கான கொடிகள் சூழ இருக்கக் கண்டான்.  வில்லிருந்து புறப்பட்ட நாராசம் போல மரங்கள் அடர்ந்த அந்த தோட்டத்தை நோக்கிச் சென்றான். விசித்ரமான அந்த தோட்டத்தில் பறவைகள் கூக்குரலிட,  வெள்ளியும், தங்கமும் போல உயர் ரக மரங்கள் நிறைந்து இருந்த அந்த தோட்டத்தைக் கண்டான். மிருகங்களும் கூட்டமாக வளைய வந்தன. பறவைகளும் நிறைய, முன் கண்டறியாத விசித்ரமான இனங்களாக இருக்கக் கண்டான். மரங்கள் பூத்து குலுங்குபவையாக, பழ வகைகள் நிறைந்தனவாக இருக்கக் கண்டான்.  கோகிலங்கள், ப்4ருங்க3ராஜ எனும் பக்ஷிகள், இவை மதுவுண்டு நித்ய வாசம் செய்யும் பழ, பூ மரங்கள்.  தோகை விரித்தாடும் மயில் கூட்டங்களும், மற்றும் பல மிருகங்கள், பக்ஷிகள் இவைகளை ரசித்தபடி சென்றான். கண்கள் மட்டும் ராஜபுத்ரியை, மாசற்ற மாணிக்கம் போன்றவளை, தேடியபடி இருந்தன. சுகமாக தூங்கிக் கொண்டிருந்த பக்ஷிகளை தன் நடமாட்டத்தால் எழுப்பி விட்ட வானரம், தூக்கம் கலைந்து சால மரத்திலிருந்து குபீரென்று பறக்கும் பறவைகளை, பல வர்ணங்களில் இருக்கக் கண்டு குதூகலித்தான்.  இந்த பறவைகள் ஏக காலத்தில் அமர்ந்தும், பறந்தும் மரங்களை உலுக்கியதன் பலனாக குவியலாக புஷ்பங்கள் கீழே விழுந்தன. மாருதன் மேலும் நிறைய புஷ்பங்கள் விழுந்து அவனை மூடியது.  அந்த பூமியே அழகிய பெண் அலங்காரம் செய்து கொண்டாற்போல தோன்றியது. அசோக வனத்தின் மத்தியில் திடுமென ஒரு மலை புஷ்ப மயமாக விளங்கியது. அந்த மரங்களை உலுக்கியபடி வேகமாக ஹனுமான் தாவி குதித்த பொழுது மரங்கள் மேலும் புஷ்பங்களை உதிர்த்தன. பத்ரங்களும், புஷ்பங்களும் இல்லாத மரங்கள், ஆடையின்றி நிற்கும் தூர்த்தர்கள் போல விளங்கின. தோல்வியுற்றவன் ஆபரணங்களையும், வஸ்திரங்களையும் இழந்து நிற்பது போல நின்றன. நாலா திக்குகளிலும் தாவி குதிக்கும், அந்த கபியை பார்த்து லங்கா வாசிகள், அடர்ந்து இருக்கும் வனம் வானரங்களுக்கு பிடித்தமானது, வஸந்த காலத்தின் இயல்பு என்று எண்ணினர்.  வேகமாக தாவும் ஹனுமான் மரங்களை உலுக்கினான். அந்த வேகத்தில் இலைகளும் பூக்களும் உதிர வெறும் கிளைகளாக மட்டும் நின்ற மரங்களை விட்டு பறவைகள் வேகமாக பறந்தன. நகர முடியாத காரணத்தால் மாருதனிடம் பட்ட அடிக்கு திருப்பி கொடுக்க முடியாமல் மரம் நிற்பதாக தோன்றியது. தலை கேசம் திடுமென குறைந்ததால் யுவதிகளின் முகம் வாடுவது போல நிறம் வெளிறி, போவது போல அந்த மரங்களைப் பார்த்த ஹனுமான் எண்ணிக் கொண்டான். வால், கை கால்களால் மிதிக்கப் பட்ட மரங்கள்.  அசோக வனிகா என்ற அந்த பெண்ணின் கதி, உடைந்த மரங்களுடன் காணும் பொழுது, வாலை சுழற்றி அடித்ததாலும், கால் கைகளால் மிதித்து த்வம்சம் செய்ததாலும், நகங்களால் கீரியும், பற்களால் கடித்தும் உதடுகளை  குதறியது போல ஆயிற்று.  கொடிகள் வானரத்தின் கைக  ளில் சின்னா பின்னமாயின. மழைகாலத்தில் மேகங்களை மாருதன் தள்ளிக் கொண்டு போய் அலைக்கழிப்பது போல இருந்தது.  பல ஆகிருதிகளில் வடிவங்களில் இருந்த கிணறுகள், நீர் நிறைந்து காணப்பட்டவை, படிக்கட்டுகள், அழகாக அமைக்கப் பெற்று முத்தும் பவழமும் போல மணல் படிந்து ஸ்படிக மணிகள் இடையில் பதித்தது போல கரையில் இருந்த மாமரங்களாலும் அழகு பெற்று காட்சி தந்தன. மலர்ந்த தாமரைகள், உத்பலங்கள், சக்ரவாக பறவைகள் இவையும் கண்ணுக்கு விருந்தாக காட்சி அளித்தன. ஹம்ஸ, சாரஸ பக்ஷிகளும் நாதம் செய்ய நத்யூக எனும் பக்ஷிகள் நிறைய காணப்பட்டன. இவைகளின் கூக்குரல் வித்தியாசமாக கேட்டது. ஹனுமானும் தீர்கமான மரங்கள் அடர்ந்த வனத்தினுள் நதிகள் பிரவகித்ததால் அம்ருதம் போன்று தண்ணீர் சுவை மிகுந்து இருப்பதைக் கண்டான். அந்த நதியும் கரைகளுக்கு தேவையான பாதுகாப்புச் சுவர்களுடன் இருக்கக் கண்டான்.  நதியின் கரைகள் செப்பனிடப்பட்டு நேர்த்தியாக காணப்பட்டன. நூற்றுக் கணக்கான கொடிகள், சந்தான புஷ்பங்கள், பலவிதமான புதர்கள், இவைகளின் நடு நடுவில் கரவீரம், இதையடுத்து பெரிய மேகம் போல் நின்ற பெரிய மலை.  பல குகைகளும் பாறைகளும் நிறைந்து காணப்பட்டது.  அந்த பர்வதமும் ரம்யமாக இருப்பதைக் கண்டான்.  பிரியமான கணவரின் மடியிலிருந்து இறங்கும் மனைவியைப் போன்று அதன் மடியிலிருந்து இறங்கும்  நதியைக் கண்டான்.  ஜலத்தின் பரப்பில் விழுந்து ஆடிய மரங்களின் நுனிகள், கோபம் கொண்டு வெளியேறும் ஸ்த்ரீயை பிரிய பந்துக்கள் தடுப்பது போல இருந்தது.  இதனால் சமாதானமாகி திரும்பும் பெண்ணைப் போல தண்ணீர் எதிர்த்து வருவதைக் கண்டான். காந்தனிடம் கோபம் தீர்ந்து ப்ரஸன்னமாக திரும்பி வந்து விட்ட மனைவியைப் போல இருந்தது.  அருகிலேயே பத்3மங்கள், பலவிதமான பறவைகள் சூழ இருந்ததை மாருதாத்மஜன் கண்டான். செயற்கையான குளம். நீண்ட தூரம் பரவியிருந்தது.  நீர் நிரம்பி குளுமையாக இருந்தது. மணியாக பள பளத்த படிக்கட்டும், அடிமணல் முத்தும் பழமும் போலவும் காணப்பட்டது. அதே போல விஸ்வகர்மா முனைந்து ஏற்படுத்திய சித்ர கானனம்.  அதில் பலவித மிருகங்களும், வீடுகளும் அலங்காரமாக அமைக்கப் பட்டிருந்தன. அதில் இருந்த சில மரங்கள் வானரத்துக்கு பரிச்சயமானவை. புன்னாகம், சப்தபர்ணம், சம்பக, உத்தாலக மரங்கள். இடையில் யாகசாலை.  வீடுகள். குடைகள்.  மேற்கூரையோடு அமைக்கப் பட்ட சிறு வீடுகள். பலவிதமான கொடிகள் வளர்ந்து அலங்காரமாக இலைகளால் கூரையை மறைக்க இதனிடையில் சிம்சுபா மரத்தைக் கண்டான்.  சிம்சுபா (குங்கும பூ என்பர் சிலர்)  மரத்தைச் சுற்றி வேதிகா அமைக்கப் பட்டிருந்தது. (மேடை போடப்பட்டிருந்தது).  பூமியும் இடையில் பள்ளங்கள் அமைத்து பாறைகளை வைத்தும், சிவந்த நிற இலைகளை கொண்ட மரங்களும், தீ நாக்கு போல ஜ்வலித்தபடி இருக்க கண்டான். இந்த மரங்களின் நடுவில் நானும்,  திவாகரன் மேருவை பிரபையால் அலங்கரிப்பது போல, இந்த மரங்களின் காந்தியில் காஞ்சனமாக காட்சியளிக்கிறேனோ என்றும் எண்ணினான்.  காற்று இதமாக வீச, இந்த காஞ்சனமான இலைகள் அசைவது அருமையான காட்சியாக இருந்தது. இந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த கின்கிணி மணிகள் ஓசை செய்வதும் புதுமையாக இருந்தது.  இதை ரசித்து விட்டு, இளம் துளிர்களும் மொட்டுக்களுமாக இருந்த சிம்சுபா மரத்தில் ஏறினான். இதோ வைதேஹியைக் காண்பேன். அவளும் ராமனைக் காண ஆவலுடன் இருப்பாள். இங்குதான் ஏதாவது ஒரு இடத்தில் யதேச்சையாகத் தென்படுவாள். துக்கத்தால் வாடியிருப்பாளாக இருக்கும்.  இந்த அசோக வனிகா, மிகவும் ரம்யமாக காண்கிறது. சம்பக, சந்தன, வகுள மரங்கள் அலங்கரிக்கின்றன. இதோ இந்த தாமரை குளமும் ரம்யமாக இருக்கிறது. இதிலும் பறவைகள் இருக்கின்றன. இந்த குளத்திற்கு நிச்சயம் வருவாள்.  ராம மகிஷி ராகவனுக்கு பிரியமான சதி, வனத்தில் சஞ்சாரம் செய்வதில் ஆசையுள்ளவள், நிச்சயம் வருவாள்.  இந்த வனத்தில் நிம்மதியைத் தேடி ராமணை எண்ணி எண்ணி இளைத்த உடலோடு இந்த வனத்தில் நடந்து ஆறுதல் பெறுவாள். மான் விழியாள், வனத்தைப் பற்றிய விவரங்களை அறிந்தவள், வனவாசத்தில் ராமனுடன் மகிழ்ச்சியாக இருந்தவள்.  அதனால் பரிச்சயமான இடமாக நினைத்து வருவாள்.  நித்யம் இங்கு வந்து சஞ்சரிப்பாளாக இருக்கும்.  வனத்தில் இருக்கும் மிருக பக்ஷிகளை முன் ராமனுடன் இருந்த போது மிகவும் ரசித்து, உடன் வைத்துக் கொண்டு வளர்த்தவள் ஜனகர் மகள்.   ராமனுடைய மனதுக்குகந்த மனைவி, சதி.  சந்த்யா கால ஜபங்களை செய்ய என்றாவது நிச்சயம் வருவாள். இந்த நதியின் தெளிவான ஜலத்தில் சந்த்யா கால ஜபம் செய்ய இந்த நதிக்கரைக்கு வருவாள். சுபமாகத் தெரியும் நதிக்கரை அவளை கண்டிப்பாக ஈ.ர்க்கும். இந்த அசோக வனிகா (சிறிய தோட்டம்) அவள் வசிக்க ஏற்றதாகவே உள்ளது.  ராமன் மனைவி, பார்த்திபனின் மனைவி, உயிருடன் இருந்தால், சந்திரனைப் போன்ற முகமுடையவள், அவசியம் சுபமான ஜலத்துடன் கூடிய இந்த இடத்துக்கு வருவாள். இப்படி எண்ணிய ஹனுமான், ராஜகுமாரியான சீதையை எதிர்பார்த்து காத்திருந்தான். இலைகளின் நடுவில் தன்னை மறைத்துக் கொண்டு நாலா திக்குகளிலும் பார்வையை ஓட விட்டான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், அசோக வனிகா விசயோ என்ற பதினான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 15 (353)  சீதோபலம்ப4: (சீதையை காணுதல்)

 

தான் இருந்த இடத்திலிருந்து  சுற்றும் முற்றும் ஊன்றி கவனித்தான்  ஹனுமான். சந்தான கலா எனும் மரங்கள் சூழ்ந்திருந்தன. எங்கும் அலங்காரமும் திவ்யமான வாசனையும் வீசியபடி இருந்தது.  இந்திரனுடைய நந்தன வனத்துக்கு இணையாக இருந்தது.  மிருக, பக்ஷிகளுக்கு இடையில் அழகான வீடுகளும், கோகிலம் கூவும் இனிமையான குரலுமாக, பொன்னிற தாமரை, உத்பலங்கள் மலர்ந்த கிணறுகள், குளங்களுமாக, ஆங்காங்கு அமருவதற்கு ஆசனங்கள் போடப்பெற்று, பூமி க்ருஹம் (சிறிய கூரை வேய்ந்த இடங்கள்) இவைகளுடன் எல்லா பருவ காலங்களிலும் பழுக்கும் மரங்களும், செடிகளுமாக மிக அழகாக காட்சி அளித்தது.  அசோக புஷ்பங்கள் மலர்ந்து சூரியோதயம் ஆகி விட்டதோ என்று பிரமிக்க வைத்தது.  இலையே தெரியாதபடி புஷ்பங்கள்.  பறவைகள் அந்த மரங்களைச் சுற்றி சுற்றி வந்தன. அசோக புஷ்பங்கள் சோகத்தை நீக்கும், துக்கத்தை நாசம் செய்யும். இவை குவியலாக தரையில் பரவி இருந்தன. கிளைகளில் பாரமாக பூத்துக் குலுங்கிய புஷ்பங்களால் பூமியை தொடுவது போல வளைந்த கிளைகளுடன் கர்ணிகார மரங்களும் கிம்சுக மரங்களும் காணப்பட்டன. இந்த புஷ்பங்களே போதும், இந்த இடத்துக்கு ஒளி கூட்ட என்று ஹனுமான் நினைத்தான். புன்னாக மரங்களூம், சப்தபர்ண மரங்களும், சம்பக, உத்தாலக மரங்களும், அடிபாகம் அகன்று பெரிய மரங்கள், நிறைய இருந்தன.  இவைகளிலும் புஷ்பங்கள். சில பொன் நிறமானவை. சில அக்னி நாக்கு போல சிவந்தவை. நீலாஞ்சனம் போல சில என்று ஆயிரக்கணக்கான அசோக மரங்கள், புஷ்பங்கள். நந்தனம், சைத்ர ரதம் இவைகளுக்கு சமமாக (இந்திரனுடையவனம் நந்தனம்.)  சித்ரமான சைத்ர ரதம் எனும் வனம். இதுவும் தேவ லோகத்து வனமே.  மிகவும் பெரிய தோட்டம். நினைத்து பார்க்க முடியாதபடி அழகாக லக்ஷ்மீகரமாக விளங்கியது. புஷ்ப ஜ்யோதி, தாரா கணங்களுடன் தெரியும் ஆகாசம் போல இருந்தது.  இது இரண்டாவது ஆகாசம் என்று சொல்வது போல. நூற்றுக் கணக்கான வித விதமான சித்ர புஷ்ப ரத்னங்களும் ரத்னாகரம் என்று அழைக்கப் படும் ஐந்தாவது சாகரம் போல இருந்தது.  எல்லா வித ருது-பருவ காலங்களிலும் பூக்கும் மலர்களுடன் அந்த மரங்களே மணம் வீச, மிருகங்களும், பக்ஷிகளும் பல விதமாக சப்தம் இட, மனோரமமான புண்ய கந்தம், பலவிதமாக நாசியைத் தாக்க, வாசனைக்கு பெயர் போன மலையான கந்த மாதன மலையின், மற்றொரு பிரதி பிம்பமோ, இரண்டாவது கந்தமாதன பர்வதமோ எனும் படி விளங்கியது. இந்த அசோக வனத்தில் தாவரங்களைப் பார்த்து ரசித்து வந்த ஹனுமான் சற்று தூரத்தில் தூண்களுடன் கூடிய ஒரு மடம் இருப்பதைக் கண்டான். ஆயிரக்கணக்கான தூண்களுடன் கைலாஸ மலை போல வெண்மையாக, வனத்தின் மத்தியில் இருக்கக் கண்டான். பவழத்தின் நிறத்தில் அதன் படிக்கட்டுகள், மேடை புடமிட்ட தங்கம் போல ஜ்வலித்தது. கண்களை கூசச் செய்தது.  அதன் செல்வ செழிப்பு கண்டவுடன் மனதில் உரைத்தது.  உயர்ந்து வானத்தை தொடுவது போன்ற மேல் மாடியும், அந்நேரத்தில் விமலமாக இருந்தது,  சுற்றியிருந்த ராக்ஷஸிகளால் மாசு படிந்தது போல காணப்பட்டது.  சுக்ல பக்ஷ ஆரம்பத்தில், சந்திர ரேகாவை காண்பது போல உபவாசம் இருந்து இளைத்த தேகத்தோடு, பெருமூச்சு விடும் ஒரு ஸ்த்ரீயைக் கண்டான்.  மெதுவாக கவனிக்க, கவனிக்க தெரிந்த அழகிய உருவம். கவர்ந்திழுக்கும் பிரபையுடன் இருந்தவளை, அக்னியின் ஜ்வாலை புகையினால் மறைக்கப்பட்டது போல மங்கலாக தெரிந்தவளை, கசங்கி இருந்த உத்தமமான மஞ்சள் நிற வஸ்திரத்துடன், அலங்காரம் ஏதுமின்றி, சேற்றில் செந்தாமரை போன்றவளை, வெட்கத்துடன், துக்கமும் சேர வாட்டமாகத் தெரிந்தவளை, தபஸ்வினியான ஒரு ஸ்த்ரீயை, மங்கிய சோபையுடன், அங்கார க்ரஹம் பீடித்த ரோஹிணி நக்ஷத்திரம் போல இருந்தவளை, சாப்பிடாததால் இளைத்தவளை, கண்களில் நீர் பெருக நின்றவளை, கண்ணீர் நிறைந்த கண்களுடன், த்யானத்தில் ஆழ்ந்திருந்தவளை, வேதனையே முகத்தில் பிரதானமாகத் தெரிய பல நாட்களாக வருந்தியவளை, தனக்கு பிரியமான பந்துக்கள் யாரும் அருகில் இல்லாமல் ராக்ஷஸி கூட்டம் சூழ இருந்தவளை, தன் இனத்தாரை விட்டுப் பிரிந்த மான் குட்டி, நாய்களின் இடையில் அகப்பட்டுக் கொண்டதைப் போல, துடை வரை நீண்டிருந்த கேசத்தை ஒற்றை பின்னலாக தொங்க விட்டவளாக, கறுத்த மேகம் பொழியும் பொழுது, வன ராணியான பெரிய மரத்திலிருந்து பூமியைத் தொடும் நீர் தாரை போல, (பின்னல் தொங்க) சுகமாக இருக்க வேண்டியவள், இப்படி துக்கத்தில் தகிக்கப் படுகிறாள், கஷ்டங்களை அறிந்திராதவள், விசாலா, மாசு படிந்த ஆடைகளுடன், மங்கலாக காட்சிய  ளித்தவளைக் கண்டு ஹனுமான் சீதையாகத் தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தான். சூழ்நிலையும் மற்ற காரணங்களைக் கொண்டும், ராக்ஷஸனால் வேடம் தரித்து ஏமாற்றி கவர்ந்து கொண்டு வரப்பட்டவள் இவள் தான் என்று தீர்மானித்தான். அந்த சமயம் நாங்கள் பார்த்த பொழுது இருந்தது போலவே இருக்கிறாள். பூர்ண சந்திரன் போன்ற முகமும், பெருத்த ஸ்தனங்களும், திசைகளை தன் பிரபையால் இருள் நீங்கச் செய்தவளுமான கறுத்த கேசமும், பிம்ப பழம்  போன்ற உதடுகளும், சிறுத்த இடையும், நேர்த்தியான உடல் வாகும், பத்ம பலாசம் போன்ற கண்களும் உடைய, மன்மதனுக்கு ரதி போல ராகவனுக்கு தர்ம பத்னியாக இருந்தவளை, பூர்ண சந்திரனின் ஒளி போல உலகத்தாருக்கு விருப்பமானவளை, தபஸ்வினியாக, விரதங்களை அனுஷ்டித்து வருபவளாக, தரையில் அமர்ந்து இருந்தவளை, பயந்து நடுங்குவது மூச்சு விடுவதிலேயே தெரிய பெருமூச்சு விடுபவளை, புஜகேந்திரனான (நாக ராஜனின்) மனைவி போன்ற நீண்ட கேசம் உடையவளை, சோகத்தில் மூழ்கியதால் வெளிப்படையாகத் தெரியாத சோபையோடு இருந்தவளை, அக்னியின் நாக்கு, புகை மூடிக் கிடப்பது போல இருந்த அவளை, ஸ்மிருதி (வேதம்) மறைந்து கிடப்பது போலவும், நிறைவு, செல்வ செழிப்பு தாழ்வையடைந்தது போலவும், சிரத்தை (கவனம்) சிதறியது போலவும், நம்பிக்கை பொய்த்தது போலவும், சித்திகள் கூடவே நிபந்தனைகளோடு வந்தது போலவும், கலுஷமான புத்தி போலவும், எதிர்பாராத அபவாதம் வந்து இது வரை சேமித்த புகழை அடித்துச் சென்றது போல, ராமரை விட்டுப் பிரிந்ததால் வேதனை படுபவளை, ராவணனின் வற்புறுத்துதலால் உடல் வாடியவளை, அபலையானவளை, மான் குட்டி போன்றவளை, இங்கும் அங்கும் மருட்சியுடன் நோக்குபவளை, கண்ணீர் நிறைந்து கிடப்பதால் கறுத்த இமைகளுடன், பிரஸன்னமில்லாத முகமும், அடிக்கடி பெருமூச்சு விடுபவளை, நல்ல அலங்காரம் செய்து கொள்ள வசதியுள்ளவள், அலங்காரங்களை தவிர்த்தவளாக, சேறு பூசிய செந்தாமரை போன்றவளை, நக்ஷத்திர ராஜனான சந்திரனை கார் மேகங்கள் மறைத்தது போல, தன் ஒளி குன்றித் தெரிந்தவளை, ஹனுமான் திரும்பத் திரும்ப பார்த்து சீதை தானா என்ற யோஜனையும், அவளே தான் என்ற முடிவும் மாறி மாறி வரக் கண்டான். திரும்ப திரும்ப பயிற்சி இல்லாத வித்தை சிதிலமாகிப் போவது போல, அலங்காரம் இல்லாத சீதையை அறிந்து கொண்டு துக்கமே அடைந்தான்.  சரியானபடி (இலக்கணம், வழக்கு தவறிய) சொல்லப்படாத வார்த்தையின் அர்த்தமே மாறிப் போவது போல அவளைப் பார்த்து மாசற்ற ராஜ குமாரி, இவளாகத்தான் இருக்கும் என்று மற்ற காரணங்களைக் கொண்டு தானே தர்க்கம் செய்து கொண்டு தீர்மானித்தான். ராமன் சொன்ன அடையாளங்கள், வைதேஹியைப் பற்றிச் சொன்ன சொற்கள், இந்த பெண்ணின் உடலமைப்புடன் பொருந்துவதைக் கண்டான். உடலில்  அணிந்திருந்து கீழே வீசிய ஆபரணங்கள் அவளுடையதாகத் தான் இருக்க வேண்டும் என்றும் ஊகித்துக் கொண்டான். காதுகளில் குண்டலம் அணிந்த அடையாளமும், நாய் பல் என்ற ஆபரணமும், கைகளில் மணி முத்து இவை பதித்த  கங்கணங்களும், வெகு நாட்களாக கவனிக்கப் படாததால் ஒளி மங்கிக் கிடந்தன. இவைகளைத் தான் ராமன் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறான் என்று நினைத்தான். அவள் ஆபரணங்களை களைந்து வஸ்திரத்தில் கட்டி வீசிய பின், மீதியிருந்த ஆபரணங்கள் இவையாகத் தான் இருக்க வேண்டும். மஞ்சள் நிற ஆடை இது தான். பொன் நிற கரையுடன் கூடியது. நழுவி விழுந்த உத்தரீயம், ஆகாயத்தில் பறந்ததை வானரங்கள் கண்டனர். பூஷணங்கள் பூமியில் சிதறியதையும் கண்டனர். இவள் தான் அவைகளை சப்தமிட பலம் கொண்ட மட்டும் வீசி எறிந்தாள். வெகு நாட்களாக அணிந்திருப்பதால் இந்த வஸ்திரம் கசங்கிப் போய் இருக்கிறது. ஆயினும் வர்ணம் மாறவில்லை. இவள் தான் ராமனுடைய பிரியமான மகிஷி.  இவள் காணாமல் போனாலும் அந்த ராமன் மனதை விட்டு அகலாமல் இருந்து வருகிறாள். இவளை எண்ணித் தான் ராமன் நான்கு விதமாக தவிக்கிறான். காருண்யம், ஆன்ருசம்ஸம், சோகம், மதனந்- கருணை, பரிவு, சோகம், மதனன் – ஆசை.   சாதாரணமாக ஏதோ ஒரு ஸ்த்ரீ பலவந்தமாக கவர்ந்து செல்லப் பட்டாள் என்று கேட்டால் தோன்றும் கருணை, பொதுவானது.  நம்மை அண்டி இருப்பவள், நாம் காப்பாற்ற கடமைப் பட்டிருக்கிறோம் என்பதால் தோன்றும் பரிவு,  தன் பத்னி என்பதால் பிரிய ஜன விரகத்தால் தோன்றும் வருத்தம், பிரியா என்பதால், தன் மனதுக்கிசைந்த காதலி என்பதால் துயரம், தவிப்பு இவைகளை ராமன் ஒன்று சேர அனுபவிக்கிறான்.  இந்த தேவியின் உருவம், அங்க லாவண்யங்கள் ராமனுடைய உடலமைப்பு, இவற்றுடன் சரியாக பொருந்தும். இந்த தேவியின் மனம் ராமனிடத்திலும், ராமனுடைய மனம் இவளிடத்திலும் இருக்கிறது.  அதனால் தான் இவளும், தர்மாத்வான ராமனும் முஹுர்த்த நேரம் கூட தாங்க முடியாத இந்த துக்கத்திலும் உயிருடன் இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் ராமன் நிலை தான் கொடியது.  அவன் தான் அதிகமாக பாதிக்கப் பட்டவன்.  இந்த தேவியைப் பிரிவது சாதாரண கஷ்டமா? தன் துயரத்தையும் வெளிக் காட்டாது இருக்க முடிகிறதே, அதுவே பெரிய காரியம். சிரம சாத்யமான காரியம். இவ்வாறு சீதையைக் கண்டு கொண்ட மகிழ்ச்சியில், ஹனுமான் தனக்குள் சொல்லிக் கொண்டான்.  ராமனை பாராட்டி பேசியவன், மனதால் ராமனிடம் சென்று விட்டான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், சீதோபாலம்போ4 என்ற பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 16 (354)  ஹனுமத் பரிதாப: (ஹனுமான் பரிதாபப் படுதல்)

 

பாராட்டுக்குரிய அவ்விருவரையும், ராமனையும், சீதையையும் மனதினுள் பாராட்டி விட்டு ஹனுமான் திரும்பவும் கவலைக்குள்ளானான். ஹனுமானின் கண்கள் கலங்கின. தன்னை அடக்க மாட்டாமல் வாய் விட்டு அரற்றினான். தேஜஸ்வியான ஹனுமான் மூஹுர்த்த நேரம் தியானத்தில் ஆழ்ந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான். ராமனின் மதிப்புக்குரியவள், லக்ஷ்மணனும் பெரும் மதிப்பு வைத்து மரியாதையாக போற்றி பாதுகாக்க இருந்தவள், அந்த சீதை இப்பொழுது துக்கத்தை அடைந்தாள் என்றால் காலம் தான் கொடுமையானது, விதி தான் வல்லது.   அதை எதிர்த்து யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது.  ராமனுடைய கஷ்டங்களை உணர்ந்தவள், லக்ஷ்மணனுக்கும் அனுசரணையாக நடப்பவள், இப்பொழுதும் தன் பிரச்னையை பெரிதாக நினைக்கவில்லையோ என்று தோன்றுகிறது.  பெரும் ஜலம் வந்தாலும் கங்கை கலங்காது இருப்பது போல கலங்காமல் இருக்கிறாள்.  சமமான வயது, நடவடிக்கை, சமமான குல பிறப்பு, வளர்ந்த விதம், ராமனுக்கு இவள் தான் ஏற்ற பத்னி.  அதே போல இவளுக்கும் ராமன் தான் ஏற்ற பதி.  புத்தம் புது சொக்கத் தங்கம் போல இருந்தவளை, உலகத்தாருக்கு பிடித்த லக்ஷ்மிதேவி போன்று இருந்தவளைப் பார்த்து ஹனுமான் ராமனையே அதிகமாக நினைத்தான். தன் மனதால் அவனை சென்றடைந்தான். அஹோ, இந்த விசாலாக்ஷியின் காரணமாக மகா பலசாலியான வாலி வதம் செய்யப் பட்டான்.  ராவணனுக்கு இனையான வீரனான கப3ந்த4னும் கொல்லப் பட்டான். விராத4 ராக்ஷஸனும், பயங்கரமான பலம் கொண்ட ராக்ஷஸனே. அவனையும் யுத்தத்தில் வெற்றி கொண்டான்.  சப4ரன் என்ற அசுரனை இந்திரன் மாய்த்தது போல, ராமன் வனத்தில் சஞ்சரிக்கும் சமயம் இந்த விராதனை போரில் மாய்த்தான்.  ஜனஸ்தானத்தில் பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்களின் சேனை சின்னா பின்னமாக்கப் பட்டது. ராமனுடைய சரங்கள் அக்னியின் நாக்குகள் போல பாய்ந்து சென்றன.  போரில் க2ரன், மடிந்தான். த்ரிசிரஸை தோல்வியை தழுவச் செய்து வீழ்த்தினான். மகா தேஜஸ் வாய்ந்தவன் என்று புகழ் பெற்ற தூஷணனும் மடிந்தான். ராமன் லாகவமாக தன்னை உணர்ந்து, தனியனாக இம்முவரையும் வதைத்தான்.  வாலியினால் பாலிக்கப் பட்ட ராஜ்யம் சுக்ரீவனுக்கு எட்டாத, கிடைக்க முடியாத சொத்து.  இந்த ராமனால், சுக்ரீவனுக்கு கிடைத்தது.  அதுவும் இந்த தேவி நிமித்தமாகத் தான்.  ஸ்ரீமானான நத3 நதீ3பதி எனும் சாகரத்தை நான் கடந்து வந்தேன். இந்த விசாலாக்ஷியின் பொருட்டு இந்த நகரத்தையும் நான் அலசி ஆராய்ந்து பார்த்து விட்டேன். இந்த ராமன் சமுத்திரத்தை எல்லையாகக் கொண்ட இந்த நிலத்தையே இவள் பொருட்டு அடியோடு மாற்றிக் காட்டினாலும் கூட, சரியே என்று சொல்வேன் மூவுலக ராஜ்யமா, சீதையா என்று கேட்டால், மூவுலக ராஜ்யம் சீதையின் ஒரு கலைக்கு ஈ.டாகாது என்று சொல்வேன். இவள் தர்ம சீலனான ஜனக ராஜாவின் மகள். பர்த்தாவிடம் திடமாக அன்பு கொண்டவள். ஹல (கலப்பை) நுனியில் பூமியைத் தோண்டும் பொழுது பூமியிலிருந்து தோன்றியவள். பத்மங்களின் மகரந்த துகள் போல, வயல் மண் மூடிக் கிடந்தாள்.  சீலம் மிக்க ஆர்யனான யுக யுகமாக மாறாத உயர்ந்த குணங்களுடைய  விக்ராந்தனான தசரத ராஜாவின் மருமகள். தர்மம் அறிந்தவன், செய் நன்றி மறவாதவன் என்று ராமன் புகழ் பெற்றவன். அவனுக்கு இவள் பிரியமான மனைவி. இப்பொழுது இந்த         ராக்ஷஸிகளின் வசமாகி இருக்கிறாள். எல்லா போகங்களையும் விட்டு கணவனிடம் உள்ள அன்பு காரணமாக கஷ்டங்களைப் பற்றி நினைக்காமல், வனம் வந்தாள். கிடைத்த பழம், காய் கறிகளிலேயே மனம் மகிழ்ந்து கணவனுக்கு பணிவிடை செய்வதிலேயே மன நிறைவு பெற்றாள். வனமோ, ராஜ பவனமோ, சமமாக பாவித்து, அன்புடன் இருந்தாள். கனகம் போன்ற நிறத்தினாள், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் மென்னகையுடன் விளங்குபவள், இந்த யாதனையை- பெரும் கஷ்டம், பொறுத்துக் கொண்டிருக்கிறாள், அனர்த்தங்களை சகித்துக் கொண்டிருக்கிறாள்.  விதி இவளுக்கு அனுகூலமாக இல்லாதது காரணமாக இருக்கலாம், மன உறுதியுடன் அதை பொருட்டாக மதிக்காமல் இருப்பது தான் இவள் சிறப்போ.  சீலம் நிறைந்த இவளைக் காணத்தான் ராகவன் துடித்துக் கொண்டிருக்கிறான். ராவணன் இடையில் வந்து கவர்ந்து கொண்டு போய் விட்டான். தாகம் கொண்டவன் நீர் நிலையைத் தேடி அலைவது போல அவன் அலைந்து கொண்டிருக்கிறான். இந்த தேவியைத் திரும்ப பெற துடித்துக் கொண்டிருக்கிறான்.  ராஜ்யத்தை இழந்த அரசன் திரும்ப ராஜ்யத்தைப் பெற்றது போல இவளைத் திரும்ப பெற்றால் நிச்சயம் பெரு மகிழ்ச்சி அடைவான்.  இந்த தேவியும், உலகியல் சௌக்யங்களை தியாகம் செய்து விட்டு, பந்து ஜனங்களும் அருகில் இல்லாத நிலையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, ராமனோடு இணையலாம் என்ற ஒரே ஆசையில் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள்.  இவள் இந்த ராக்ஷஸிகள் கூட்டத்தையும் கண்களால் காணவில்லை, மலர்ந்து கிடக்கும் இந்த மரங்களையும், வனத்தையும் காணவில்லை. மனதை ஒருமைப் படுத்தி ஒரே தியானமாக ராமனையே கண்டு கொண்டிருக்கிறாள். ப4ர்த்தா என்பவன் ஸ்த்ரீகளுக்கு மற்ற ஆபரணங்களை விட மேலான ஆபரணம்.  அவனை விட்டுப் பிரிந்த நிலையில், எந்த ஆபரணங்களையும் அணியத் தகுதி இருந்தும், அணிவதில்லை.  ராமன் செய்வது தான் இதனினும் கடுமயான தவம். இவளைப் பிரிந்து இன்னமும் உயிர் வாழ்கிறானே. இந்த துக்கத்தில் தான் கரைந்து போகாமல் இருக்கிறானே. கறுத்த குழலுடைய இவளை, சதபத்ரம் போன்ற கண்களை, சுகமாக இருக்க வேண்டியவள், இப்படி துக்கத்தைத் தாங்கிக் கொண்டு இருக்கிறாளே என்று என் மனமே வருந்துகிறது. பூமியைப் போன்று பொறுமையுடையவள், புஷ்கரம் எனும் தாமரை மலரைப் போன்ற கண்களையுடையவள், ராம, லக்ஷ்மணர்கள்,  கண்களை இமை காப்பது போல காத்து வந்தனர்.  அவளை, தற்சமயம், கோணலான கண்களுடன் ராக்ஷஸிகள் மரத்தடியில் சிறை வைத்து காவல் காக்கின்றனர்.  பனி பெய்த தாமரை மலர் போல சோபை குன்றித் தெரிகிறாள்.  அடுத்தடுத்து வந்த கஷ்டங்களால் நொந்து போய் இருக்கிறாள்.  தன் துணையை விட்டுப் பிரிந்த சக்ரவாக பக்ஷி  போல இருக்கிறாள்.  ஜனக சுதா எப்படிப் பட்ட கஷ்டமான நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறாள்.  இவளுடைய வேதனையில் தானும் பங்கேற்பது போல அசோக மரங்கள் புஷ்பங்களின் பாரத்தால் வளைந்து நிற்கின்றன. அதுவே இவள் வேதனையைக் கிளறுகிறது. பனி விலகி சந்திரனும் மறையத் தொடங்கி விட்டான். இதோ சற்று நேரத்தில் ஆயிரம் கிரணங்களுடன் சூரியன் உதயமாகி விடும்.  இப்படி பலவும் எண்ணி, இவள் சீதை தான் என்ற நம்பிக்கையுடன், மரத்தின் மேலேயே அமர்ந்து காத்திருந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ஹனுமத் பரிதாபோ என்ற பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 17 (355)  ராக்ஷஸி பரிவார: (ராக்ஷஸிகளின் காவலில் இருத்தல்)

 

ஸ்வயம் (தன் இயல்பிலேயே) நிர்மலமான ஹம்ஸம், குமுத மலை மண்டிக் கிடந்த நீலமான ஜலத்தில் மிதப்பது போல சந்திரனும் நிர்மலமான ஆகாயத்தில் மிதந்து கொண்டு செல்வது போல இருந்தது.  ஹனுமான் லங்கையில் ப்ரவேசித்த சமயம் சந்த்ரோத3யம் ஆனது (ப்ரஜகா3ம நப4ச்சந்த்ரோ). (சந்த்ரோபி சாசிவ்யம் இவ அஸ்ய குர்வன், தாராகணைர் விராஜ மான:) சந்திரனும் உதவி செய்வது போல தன் தாரா கணங்களுடன் தோன்றினான்.  ராவண க்ருஹத்தில் தேடிய பொழுது பாதி ராத்திரி. (மத்யம் க3தமம்சுமந்தம்) நடு வானில் சந்திரன் இருந்த சமயம்.  தற்சமயம் இரவின் அந்திம நேரத்தில் இருந்த பொழுது அசோக வனத்தில் பிரவேசித்தான் என்பது.  திலகரின் உரை,  மாறுபட்டது.  முதல் நாள் இரவின் முடிவில் அசோக வனத்தில் ப்ரவேசித்தவன் நாள் முழுதும் ராக்ஷஸிக  ளின் கண்ணில் படாமல் மறைந்திருந்து, மறு நாள், சந்த்ரோதயம் ஆகும் வரை ஹனுமான் சந்திரன் வரவை எதிர் நோக்கி இருந்ததாக)

 

ஹனுமானுக்கு உதவி செய்யவே வந்தது போல நிர்மலமான பிரபையுடன், குளுமையான தன் கிரணங்களால் பவனாத்மஜனை வருடிக் கொடுப்பது போல இருந்தது.  இதன் பின் ஹனுமான் பூர்ண சந்திரன் போன்ற முகமுடைய சீதையைக் கண்டான், அதிகமான பாரத்தை வைத்தவுடன், படகு தள்ளாடுவது போல தாங்க முடியாத துயரத்தை தாங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டான். வைதேஹியையே பார்த்துக் கொண்டிருந்த ஹனுமானின் பார்வை சற்று தள்ளி இருந்த          ராக்ஷஸிகளின் மேல் விழுந்தது.  கோரமான காட்சி அது. ஒரு கண், ஒற்றைக் காது என்று சிலர், பெரிய காது உடையவள், காதே இல்லாதவள், சங்கு போன்ற காதுடையவள், தலை மேல் மூமூக்குடையவள், பெருத்த சரீரம், உடல் பெரியது, தலை சிறியது என்று இருப்பவள், தலை கேசம் குச்சி குச்சியாக நிற்க ஒருவள், மற்றவள் கேசமே கம்பளமாக, நீளமான காது, நீளமான நெற்றி,  நீளமான வயிறு, நீண்ட ஸ்தனங்கள் என்றும், நீண்ட உதடுகள், சுருங்கிய உதடுகள், வாய்நீளமாக, முழங்கால் நீண்டதாக என்றும், குள்ளம் உயரம், கூனல், அங்க ஹீனம், வாமனம், கறுத்த சரீரம், வெந்து போன முகம், மஞ்சள் நிற கண்கள், கோணலான முகம் என்றும் குரூபிகளாக, மஞ்சள் நிறத்தவர்களாக, கறுத்த, முகமே கடு கடுவென, கலஹம் செய்யும் குணத்தினராக, என்றும், இருந்த ராக்ஷஸிகளின் உருவங்களைக் கண்டான். இவர்கள் கையில் கருப்பு இரும்பாலான ஆயுதங்கள், மகா சூலம், கூடம், உத்3கரம் இவைகள் வேறு. வராக, மிருக, சார்தூல, மகிஷ, அஜ, குள்ள நரி- இவைகளைப் போன்ற முகம், க3ஜம் ஒட்டகம் போன்ற பாதங்கள். மற்றும் சிலருக்கு தலையின் அமைப்பே வித்தியாசமாக, ஒரு கை, ஒரு பாதம் என்றும், கர கர்ணம், அஸ்வ கர்ணம், கோ கர்ணம், யானை கர்ணம் வானரத்தின் கர்ணம் என்று சிலர், மூக்கே இல்லாமல் சிலர், பெரிய மூக்குடன் குறுக்காக வளர்ந்த மூக்கு, விக்ருதமான மூக்கு என்று சிலர், நெற்றியில் அமைந்த மூக்கு சிலருக்கு, யானை கால், பெருத்த கால், பசு மாடு போன்ற கால்கள், நீண்ட கழுத்தும், சிறுத்த வயிறுமாக சிலர், வாயும் கண்ணும் மட்டும் பிரதானமாக தெரிய சிலர், நீண்ட நாக்கும், நகமுமாக தெரிய சிலர், ஆட்டின் முகமும், யானை முகம், பசு முகம்,  பன்றி முகம், குதிரை ஒட்டகம், கோவேறு கழுதையின் முகம், சூலமும், உத்கரமும் கைக  ளில் ஏந்தியவர்கள், க்ரோதமும், கலஹம் செய்யும் குணமும் அருவருப்பான முகமும், கேசம் எங்கோ பறக்க, ராக்ஷஸிகள்- எப்பொழுதும் மதுவும் மாமிசமுமாக, அருந்திக் கொண்டு, எதையாவது புசித்துக் கொண்டும், மாமிசத்திலிருந்து வடியும் ரத்தம், இவர்கள் உடலிலும் கறையாக இருப்பதையும் பொருட்படுத்தாமல், காண அருவருப்பில், உடல் கூச, ஹனுமான் கண்டான். மாசற்ற தேவியான சீதை அமர்ந்திருந்த மரத்தைச் சுற்றி இவர்களும் அமர்ந்திருந்தனர்.  இவர்களுக்கு இடையில் தன் உடலை, கேசத்தைப் பற்றி எந்த விதமான அக்கறையும் இல்லாமல் தூசு படிய இருந்தவளைக் கண்டான்.  புண்யம் தீர்ந்தவுடன், பூமியில் வந்து விழுந்த நக்ஷத்திரமோ என தன் சரித்திரமே துணையாக, பர்த்தாவைக் கண்டே பல நாட்களாகி விட்ட நிலையில், அந்த துக்கத்தில், உத்தமமான பூஷணங்களை அணிந்திருந்தவள், இப்பொழுது எதுவும் இல்லாமல், பர்த்தாவின் வாத்ஸல்யம் அன்பே பரி பூர்ணமாக, பந்துக்கள் யாரும் அருகில் இல்லாமல் ராக்ஷஸாதிபதியின் ஆதிக்கத்தில் உள்ளவர்களே சூழ்ந்திருக்க, தன் கூட்டத்திலிருந்து பிரித்து அழைத்து வந்து சிங்கங்களோடு கட்டி வைக்கப் பட்ட பசு கன்று போல, மேகத்தின் நுனியில் தெரியும் சந்திர ரேகா போல சரத் கால வனத்தில் மேகம் சூழ இருந்தவளை, ஒடிந்து விழுந்து விடுவது போன்ற தேகத்துடன், தொடாமலே இருந்ததால் கொடி போன்றவள், இன்னமும் தன் பர்த்தாவையே எண்ணி, ராக்ஷஸனுக்கு ஏவல் செய்த இந்த ராக்ஷஸிகளுடன் ஒட்டாமலே இருந்தவளை அசோக வனத்தில் சோகமே உருவாக, சோக சாகரத்தில் மூழ்கியவளாக, க்ரஹங்களுடன் விளங்கும் ரோஹிணி நக்ஷத்திரம் போன்று,  மலர்கள் இல்லாத கொடி போன்றவளைக் கண்டான்.  ஹனுமான் உடலில் தூசு படிந்ததைக் கூட அகற்றாமல், எந்த வித செயற்கை அலங்காரமும் இன்றியே, சேற்றில் இருக்கும் செந்தாமரைத் தண்டு போல தெரிந்தும் தெரியாமலும் இருப்பது போல  சோபை குன்றி இருந்தாள். மலினமான வஸ்திரத்தில் இருந்த பாமினியான சீதை, மான் குட்டியை துஷ்ட மிருகங்கள் சூழ்ந்து கொண்டு இருந்ததைப் போல இருந்தவளைக் கண்டான். அந்த தேவி இப்பொழுது தீனமான முகத்தோடு இருக்கிறாள். கணவனுடன் இருந்த பொழுது அவன் தேஜஸால் தீனம் என்பதையே அறியாமல் இருந்தவள், தற்சமயம் தன் சீலமே தன்னை காக்க, கரு விழிகளையுடைய சீதையை ஹனுமான் கண்டான். மான் குட்டி போன்ற மருண்ட விழிகளையுடையவள் என்று அலங்காரமாக பேசப்பட்டவள், இப்பொழுது பெண் மான் போலவே பயந்து நடுங்கியபடி மருண்ட விழிகளுடன் இருப்பதைக் கண்டான். எதிரில் வெறுமையாக பார்த்த படி இருந்தாள்.  இளம் துளிர்களுடன் கூடிய மரம் அவள் விட்ட உஷ்ணமான பெருமூச்சில் எரிந்து விடுமோ என்று தோன்றியது.  சோகமே கடலாக, இவள் துக்கமே அலைகளாக எழுந்து அடங்குவதும் திரும்ப எழுவதுமாக இருந்ததாக கற்பனை செய்து கொண்டான் ஹனுமான்.  தன் இயற்கையான அங்க அவயவங்களின் சீரான அமைப்பால், எந்த வித ஆபரணமும் இன்றியே அழகுடன் தெரிந்தவளை பொறுமையே உருவெடுத்து வந்தவளைக் கண்டு, மைதிலியைக் கண்டு கொண்டோம் என்று பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைந்தான்.  கண்களில் ஆனந்த கண்ணீர் மல்கியது.  ராகவனுக்கு நமஸ்காரம் செய்தான். ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் வணக்கம் செலுத்திய ஹனுமான், சீதையைக் கண்ட சந்தோஷத்தில் ஒரு சுற்று பருத்தவனாக ஆனான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ராக்ஷஸீ பரிதாபோ என்ற பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

அத்தியாயம் 18 (356)  ராவணாக3மனம் (ராவணன் வருகை)

 

வைதேஹியைப் பற்றி மனதில் எண்ணியபடி பூவும் பழமுமாக இருந்த மரங்களையும், வனத்தையும் சுற்றிப் பார்த்த ஹனுமான், இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என்று, காத்திருந்தான்.  ஆறு அங்கங்களுடன் வேதங்களை அறிந்தவர்கள், யாக யக்ஞங்கள் செய்பவர்கள், அந்த விடியற்காலையில், வேத கோஷங்கள் செய்வதைக் கேட்டான்.  ப்ரும்ம ராக்ஷஸர்கள் அந்த இளம் காலை நேரத்தில் அனுஷ்டானங்களை செய்யவும் ஆரம்பித்து விட்டிருந்தனர். செவிக்கு இனிமையாக மங்கள வாத்யங்கள் ஒலிக்க, தசக்ரீவன் விழித்துக் கொண்டான். வழக்கம் போல விடியற்காலை உறக்கம் கலைந்து எழுந்தவன், உடனே வைதேஹியை நினைத்துக் கொண்டவனாக மாலைகளும் ஆபரணங்களும் நிலை குலைய எழுந்தான். பிரதாபம் உடைய ராஜா, ராக்ஷஸேந்திரன் அவளிடம் மிகுந்த ஈ.டுபாடு கொண்டவனாக, காம வசம் ஆனான். அவளிடம் தனக்கு ஏற்பட்ட காமத்தை மறைத்துக் கொள்ள அவன் முயலவும் இல்லை, முடியவும் இல்லை.  உத்தமமான ஆபரணங்கள் அணிந்து தன் செல்வ செழிப்பை பறை சாற்றியபடி இருந்தவன், பல மரங்கள் பூத்து குலுங்கியபடி இருந்த, ஏராளமான புஷ்கரிணிகளும், பலவிதமான புஷ்பங்கள் மலர்ந்து அழகுற அமைந்து இருக்க, எப்பொழுதும் மதம் கொண்ட பறவைகள், அத்புதமான விசித்ரமான, ஈ.ஹாம்ருகம் (வளர்ப்பு மான்கள்) பலவிதமாக சூழ்ந்திருக்க, கண்களுக்கு விருந்தாக, வீதிகளில் மணியும் காஞ்சனமும் கொண்டு தோரணங்கள் தொங்க, அதன் வழியே நடந்து, அசோக வனிகா (சிறிய தோட்டம்) வந்து சேர்ந்தான். பல விதமான வளர்ப்பு மிருகங்கள் நிறைந்த வனம். பழங்கள் கீழே விழுந்து கிடந்தன. நூறு பேர் மட்டும் ஸ்த்ரீகள் அவனைத் தொடர்ந்து வந்தனர். தேவ கந்தர்வ பெண்மணிகள் மகேந்திரனைத் தொடர்ந்து செல்வது போல, புலஸ்திய வம்சத்தினனான ராவணனைத் தொடர்ந்து சென்றனர். ஒரு சிலர் தங்கத்தினாலான விளக்குகளை ஏந்தி வந்தனர்.  வால வ்யஜனங்களை(தாம்பூலம்)  ஒரு சிலர், தால மரத்தின் விசிறிகளை (பனை) ஒரு சிலர் வீசிக் கோண்டு வந்தனர். தங்க பாத்திரங்களில் ஜலம், குடி நீர் இவற்றுடன் சிலர். இவர்கள் முன்னால் சென்றனர். அலங்காரமாக மயில் முதலிய பறவைகளின் தோகைகளை சிலர் ஏந்திக் கொண்டு பின்னால் சென்றனர். ராவணனின் மனைவிகள், உத்தமமான ஸ்த்ரீகள். இவர்களும் தூக்கமும், மதுவுண்ட மயக்கமும் கண்களில் தெரிய நடந்தனர். மது வகைகள் கொண்ட பாத்திரத்தை சிலர் அக்கறையுடன் தூக்கிக் கொண்டு வந்தனர்.  கார் மேகத்தை மின்னல் தொடருவது போல, இந்த பத்னிகள் கணவனைத் தொடர்ந்து வந்தனர்.  தூக்கத்திலிருந்து எழுந்து வந்ததால், கேசம் கலைந்து நகைகள் முன்னும் பின்னுமாக விலகி இருக்க, ஆடைகளை சரி செய்தபடி அவன் நடைக்கு ஈ.டு கொடுத்து நடந்தனர்.  வியர்வை வடியும் முகத்தோடு, ராஜ ஹம்ஸம் போன்ற வெண் கொற்றக் குடையை உயர்த்தி பிடித்தபடி பின்னால் சிலர் வந்தனர். மதுவும் தூக்கமும் உடலை தள்ளாடச் செய்ததையும் பொருட்படுத்தாமல் நடந்தனர். ராவணன் கிட்டத் தட்ட ஓடிக் கொண்டிருந்தான். அவனிடம் உள்ள அன்பினாலும், காமத்தாலும், பிரியமான அந்த மனைவிகள், உடன் நடந்தனர். இந்த பெண்களின் கணவன், மகா பலசாலி என்று பெயர் பெற்றவன், காமம் கண்களை மறைக்க, சீதையிடமே மனதை லயிக்க விட்டவனாக, மெதுவாக மதுவின் ஆதிக்கத்தில் நடையின் வேகம் குறைய தள்ளாடியபடி சென்றான். பிறகு, இடையில் அணியும் ஆபரணங்கள் (காஞ்சி, மேகலை) நூபுரங்கள் இவைகள் உராய்வதால் எழுந்த ஒலி இவைகளை மரத்தின் மேல் இருந்த வானரம் கேட்டான். செயற்கரியன செய்து புகழ் பெற்ற அந்த வீரனை நினைத்துக் கூட பார்க்க முடியாத பலமும் பௌருஷமும் உடைய ராக்ஷஸ ராஜனை,  வாயில் கதவின் அருகில் வந்து நிற்பதைக் கண்டான், மாருதாத்மஜன். அனேக சிறிய தீபங்கள் ஒரே சமயத்தில் எரிந்ததாலும், க3ந்த4, தைலம் இவைகளைக் கொண்டு ஏற்றிய தீபங்களை ஏந்தி வந்தவர் முன்னால் சென்றதாலும் தெளிவாகத் தெரிந்த ராவணனைக் கண்டான்.  காமமும் (தர்ப்பம்-கர்வம் அல்லது திமிர்) தர்ப்பமும் உருக் கொண்டது போல, தாமிரம் போல சிவந்த கண்களுடன், எதிரில் கரும்பு வில்லை கீழே வைத்து விட்டு வந்து நிற்கும் கந்த3ர்ப்பனை-மன்மதனை போல நின்றவனைக் கண்டான்.  கடலைக் கடைந்ததால் வரும் நுரை போன்ற தூய்மையான வெண் பட்டாடை, உயர்ந்த மேல் வஸ்திரம், நழுவியதை  கைகளால் சரி செய்து கொண்டு வருபவனைக் கண்டான். மரத்தின் இலைகளால் தன்னை மேலும் மறைத்துக் கொண்டு அருகில் வந்தவனை கூர்ந்து கவனிக்கலானான். அப்படி கவனித்த பொழுது கபிகுஞ்சரனான ஹனுமான், ராவணனின் பத்னிகளையும் கவனித்தான். ரூப யௌவன சம்பன்னர்களாக, நற்குடியில் பிறந்த உத்தமமான ஸ்த்ரீகள் சூழ வந்த ராஜா,  மிருகங்களையும், பறவைகளையும் தவிர, முழுவதும் பெண்களே நிறைந்த அந்த வனத்தில் நுழைந்தான். சங்கு போன்ற கழுத்துடையவன், மகா பலசாலி, விசித்திரமான ஆபரணங்களை அணிந்தவன், விஸ்ரவஸின் புத்திரன், ராக்ஷஸாதிபன், ராவணன் அவன் தான் என்று ஊகித்துக் கொண்டான். தாரா கணங்களோடு சந்திரன் தெரிவது போல, உத்தம ஸ்த்ரீகளோடு வந்து கொண்டிருந்தான். தேஜஸே உருவானவனைக் கண்டான் மகா கபியான ஹனுமான்.  இவனைத் தான் முன்பு மாளிகையில் உறங்கும் சமயம் பார்த்தோம் என்று நினைவு படுத்திக் கொண்டான். ஹனுமான் தன் ஆவலையும் அடக்கிக் கொண்டு, மேலும் இலை கிளைகளில் நன்றாக மறைத்துக் கொண்டு, மூச்சு விடக் கூட தயங்கியபடி நின்றான். அந்த ராவணனோ, கறுத்த குழலும், அழகிய வடிவும், நெருங்கிய ஸ்தனங்களுமாக கருவிழிகளோடு இருந்த சீதையை நெருங்கினான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ராவணாக3மனம் என்ற பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 19 (357) க்ருஸ்ர க3த சீதோபமா (இளைத்த சீதைக்கு சில உவமைகள்)

 

அதே சமயத்தில் ராஜபுத்ரியான சீதா, ரூப யௌவன சம்பன்னனாக சர்வாலங்கார பூஷிதனாக வந்து நின்ற ராவணனைக் கண்டாள். ராக்ஷஸாதிபனைப் பார்த்து நடுங்கினாள். பெரும் காற்றில் வாழை மரம் நடுங்குவது போல நடுங்கினாள். தன் கைகளாலும் புஜங்களாலும் உடலை மூடியபடி முழங்கால்களில் முகத்தை பதித்து அழ ஆரம்பித்தாள். ராக்ஷஸிகளின் கூட்டம் காவல் காத்து வந்த வைதேஹியை, தான் பயணம் செய்த படகு நீரில் மூழ்கி விட்டது போல வருந்தி அழுபவளாகக் கண்டான் ராவணன்.  எந்த வித விரிப்பும் இன்றி பூமியில் அமர்ந்திருந்தவளைக் கண்டான், விரதம் அனுஷ்டிபவர்கள் போல.  மரத்திலிருந்து ஒடிந்து விழுந்த கிளை போன்று இருந்தவளை, மாசு படிந்த உடலும், கேசமும் எல்லா விதமான அலங்காரங்களும் செய்து கொள்ள வசதியும் தகுதியும் இருந்தும், அக்கறை இல்லாமல், தாமரைத் தண்டு சேற்றில் தெரிந்தும், தெரியாமலும் இருப்பது போல அவள் சோபையும் முழுவதுமாக தெரியாமல் தூசு படிந்து கிடப்பதைக் கண்டான். தன் மனோ ரதத்தில் ராஜ ஹம்ஸம் போன்ற ராகவனின் அருகில் செல்ல, சங்கல்பமே குதிரைகள் பூட்டிய ரதமாக (மனோ ரதமாக)  கொண்டு ராமன் அருகில் செல்பவள் போல இருந்தாள். த்யானமும், சோகமுமாக, தன் உடலை வருத்திக் கொண்டு இருந்தவளை, இந்த துயரின் முடிவு எது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவளை ராமனிடமே அனுராகம் மிகுந்தவளாக, பன்னகேந்திர(பாம்புக  ளின் அரசன்) வது4 (மனைவி)  போல தன்னைச் சுற்றி சுழற்றிக் கொண்டு அமர்ந்திருந்தவளை தூ3ம்ரகேது க்3ரஹம் வந்து சூழ்ந்து ரோஹிணி நக்ஷத்திரத்தை மறைத்துக் கொண்டு நிற்பது போல, தார்மீகமான நல்ல குலத்தில் பிறந்தவள், ஆசாரமும், நன்னடத்தையுமே உயர்வாக போற்றும் குடி பிறப்புடையவளை, துஷ்டர்கள் குலத்தில் பிறந்து திரும்பவும் ஸம்ஸ்காரங்கள் செய்யப் பெற்று மேன்மையடைந்த ஜீவன் போன்றவளை, எதிர்பாராத அபவாதம் வந்து இதுவரை சேமித்த கீர்த்தியை தள்ளி விடுவது போல, திரும்ப திரும்ப பயிற்சி இல்லாததால், கற்ற வித்தை சிதிலமாகிப் போவது போல,பெரும் புகழ் மாசு படிந்தாற்போல, கௌரவத்துடன் காப்பாற்றாத ஸ்ரத்3தா4 போல, (ஒருமைப்பாடு) நல்ல அறிவு, குறைந்து கொண்டே போய் அழியும் தறுவாயில் இருப்பது போல, நம்பிக்கை பொய்த்தது போல, நம்பியிருந்தவனை ஏமாற்றியது போல, கட்டளையை மீறியது மட்டுமல்லாது விபரீதமாக செய்தது போல, காலத்தில் திசைகள் ஒளிமயமாக தெரிவது போல பூஜையை நடுவில் தடுத்தது போல, மலர்ந்த தாமரை மலரை மிதித்தது போல, சூரர்கள் அனைவரும் மடிந்து விட்ட சேனை போல, இருள் மண்டிக் கிடந்த இடத்தில் ஏற்றிய விளக்கு அனைந்தது போல,  நதியின் நீர் வற்றியது போல, யாக சாலை பராமரிக்காமல் விட்டது போல, நீறு பூத்து கிடக்கும் நெருப்பின் ஜ்வாலை போல, பௌர்ணமி இரவு, ராகு பிடித்த சந்திர மண்டலத்தோடு காணப்படுவது போல, இலைகளுடன் பறிக்கப் பட்ட தாமரை மலரோ, பயமுறுத்தி பறக்கச் செய்த பறவைக் கூட்டமோ, யானை இறங்கி தன் துதிக்கையால் கலக்கி விட்ட தாமரைக் குளமோ எனவும், பதியைப் பிரிந்த சோகத்தால் வற்றிய நீரோடை போல, உயர்ந்ததான அங்க சுத்தி இல்லாத பெண் போல, க்ருஷ்ண பக்ஷத்து நிசா, இரவு போல, சுகுமாரியும், வடிவமைப்பு கொண்ட அங்கங்களுடன் ரத்னக்கள் இழைத்த க்ருஹத்தில் வசிக்கத் தகுதி வாய்ந்தவளும், வெய்யிலில் வீசியெறியப் பட்ட தாமரைத்தண்டு போல க3ஜராஜனின் வதூ4 (பத்னி) ஒன்றை பிடித்து வந்து கம்பத்தில் கட்டி வைத்து விட்டு, மாவுத்தன் க3ஜ ராஜாவை அழைத்து சென்று விட்டாற்போல அல்லது க3ஜ ராஜாவை விட்டு பிரித்து அழைத்து வந்து கம்பத்தில் கட்டி வைத்த பெண் யானை போல, ஒற்றைப் பின்னலே அழகாகத் தொங்க, இயல்பான அழகுடன் மழை நாளில் அடர்ந்து வளர்ந்த மரத்தின் கறுத்த      இலைகளில் இருந்து பூமியைத் தொடும் நீர் தாரை போல இருந்த கேசம், உபவாச த்தாலும், சோகத்தாலும், த்யானம் செய்வதாலும், பயத்தாலும், மாறி மாறி அலைக்கழிக்கப் பட்டு, இளைத்து, தீனமாக, மிகக் குறைவான ஆகாரம் உட்கொண்டு தவமே, த4னமாக எதையும் யாசிக்காமல் துக்கத்தால் வருந்தி, தேவதையைப் போல, த3சக்3ரீவனின் (பராபவம்-தோல்வி) அடக்குவதை ராமனிடம் அஞ்சலி செய்தவர்களாக தேவர்கள் வேண்டிய சமயம் இருந்தது போல, மாசற்றவள், இங்கும் அங்குமாக நோக்கியபடி அழுது சிவந்த கண்களை இமைகள் மறைக்க, ராமனையே நினத்து மைதிலி வருந்தியபடி இருந்த சமயம் ,ராவணன் ஆசை காட்டலானான். தன் வதத்தை தானே எதிர் கொண்டழைப்பான் போல.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், க்ருஸ்ர கத சீதோபமா என்ற பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 20 (358) ப்ரணய பிரார்த்த2னா (தனக்கு இணங்கச் சொல்லி வற்புறுத்துதல்)

 

தபஸ்வினியாக, ஆனந்தமே இன்றி, தீனமாக அமர்ந்திருந்தவளை பதிவிரதையான ஸ்த்ரீ என்று அறிந்திருந்தும்,  சாமர்த்யமாக பேசி, மதுரமான வார்த்தைகளால் தன் வசம் ஆகச் செய்ய ராவணன் முனைந்தான்.  யானையின் தும்பிக்கை போன்ற துடைகளை உடையவளே, என்னைப் பார்த்து ஸ்தனங்களை மூடிக் கொள்கிறாயே. உன்னை நான் பார்த்து விடுவேனோ என்று பயப்படுகிறாயா?  நீ ஏன் என்னை ஒதுக்குகிறாய்? விசாலாக்ஷி, நான் உன்னை விரும்புகிறேன். பிரியே, என்னை உயர்வாக எண்ணுவாய்.  என்னிடத்தில் பயமா? அது தேவையில்லையே.  மனதில் தோன்றும் பயத்தை விலக்கி என்னைப் பார்.  சர்வாங்க சுந்தரியே, சர்வ லோக மனோகரியே, இப்படி எந்த மனித பிறவியும் இருந்ததில்லை.  தன்னிஷ்டம் போல உருவம் எடுக்க வல்ல ராக்ஷஸர்களிடமும் இருந்ததில்லை.  என்னிடத்தில் பயப்படாதே. இது எங்கள் ராக்ஷஸ குலத்திற்கு ஸ்வதர்மம் தான். பர ஸ்த்ரீயிடம் உறவு கொள்வதோ, பலவந்தமாக அபகரித்துக் கொண்டு வருவதோ, எப்பொழுதும் எங்கள் இனத்தில் சம்மதமே.  சந்தேகமே இல்லை. நீ விரும்பாதவரை உன்னை நான் தொடமாட்டேன்.  மைதிலி, நீயும் என்னிடம் காமத்துடன் என்னிடம் அன்பு கொண்டு மகிழ்ச்சியாக இரு.  தேவி, பயமே வேண்டாம். என்னிடம் நம்பிக்கை கொள், பிரியே, இது போல சோகத்தில் மூழ்கி அலட்டிக் கொள்ளாதே.  உடலை வாட்டிக் கொள்ளாதே.  என்னுடன் ப்ரணயமாக, உல்லாசமாக இரு. நீயும் சம்மதித்து மனப் பூர்வமாக என்னுடன் இருந்து அனுபவிப்பாய்.  ஒற்றை பின்னலுடன் தரையில் படுத்து, த்யானமும், மலினமான வஸ்திரமும், உபவாசமும் தேவையில்லாத இடத்தில் பிரயோகிக்கிறாய்.  இவை உனக்கு ஏற்றவை இல்லை தேவி, விசித்திரமான மாலைகள், சந்தனமும் அகருவும் மணக்க, வித விதமான ஆடைகள், அணிகலன்களுடன் உயர் வகை பானங்கள், சயனங்கள், படுக்கைகள், அமரும் ஆசனங்கள், இவற்றுடன் கீதமும், நாட்யமும், வாத்யமும், இவை அனைத்தையும் என்னுடன் இருந்து நீயும் அடைவாய்.  மைதிலி, இப்படி ஒரு உயர்ந்த வாழ்க்கை இன்பம் உனக்காக காத்திருக்கிறது.  நீ ஸ்த்ரீ ரத்னம். இப்படி உடலை வாட்டாதே. உடலில் பூஷணங்களை அணிந்து கொள். கட்டான உடலமைப்பு உள்ள நீ, என்னை அடைந்து எப்படி எந்த வித அலங்கார சாதனமும் இன்றி இருக்கலாம்.  இதோ பார். யௌவனம் பூர்ணமாக உன்னிடத்தில் மலர்ந்து இருக்கும் நேரம் இது.  இதை ஏன் வீணாக்குகிறாய். இந்த யௌவனம் கடந்து விட்டால், திரும்ப வராது.  வேகமாக செல்லும் நதி ஜலம் போல வடிந்து விடும்.  உன்னை படைத்து விட்டு, விஸ்வ ஸ்ருஷ்டிகாரனான ப்ரும்மா, ஜீவன்களுக்கு ரூபத்தை கொடுப்பவன், ஓய்ந்து விட்டான் போலும்.  (உன்னைப் போல மற்றொன்றை செய்யவில்லை அல்லது கவனமாக உன்னை வடிவமைத்ததில் களைத்து விட்டான்).  உனக்கு சமமாக மற்றொரு பிறவி இந்த உலகிலேயே இல்லை. சுப43ர்சனே, உன்னை எதிரில் கண்டவன் ப்ரும்மாவே சாக்ஷாத்தாக ஆனாலும், வியந்து திரும்பி பார்க்காமல் எப்படி போவான்?  உன் ரூபம் எவரையும் கவர்ந்து இழுக்க வல்லது என்பதில் சந்தேகமேயில்லை.  சீதாம் (குளிர்ந்த நிலா) போன்ற முகத்தவளே, உன் சரீரத்தின் அங்கங்கள் எதைக் கண்டாலும் அதிலேயே என் கண்கள் நிலை குத்தி நின்று விடுகின்றன.  மைதிலி, என் மனைவியாக ஆவாய். என் பார்யாவாக இருந்து என் மோகத்தைத் தணிப்பாய்.  பல உத்தம ஸ்த்ரீகள் என் அந்த:புரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நீ தலைவியாக இருப்பாய். என் பிரதான ராணியாக இருப்பாய்.  உலகங்களில் பல இடங்களிலிருந்து எந்த ரத்னங்களை பலவந்தமாக கவர்ந்து கொண்டு வந்தேனோ, அவையனைத்தையும், மற்றும் என்னிடம் உள்ள யாவையும், நானுமே உனக்குத்தான். பல நகரங்கள் மாலை போல அமைந்துள்ள பல ராஜ்யங்களை  ஜெயித்தேன். அவைகளை உன் பொருட்டு ஜனகருக்கு கொடுக்கிறேன். விலாஸினீ, இந்த உலகில் எனக்கு சமமாக அல்லது என்னை எதிர்க்கக் கூடிய பலசாலியாக, மற்றொரு வீரனை நான் கண்டதில்லை.  யுத்தம் என்று வந்தால் என் அப்பழுக்கற்ற வீர  விளையாட்டுகளைக் காண்பாய்.  அடிக்கடி போர் செய்து எதிரி அரசர்களின் த்வஜங்களை அடித்து நொறுக்கி -யிருக்கிறேன். என் எதிரில் நிற்க சுராசுரர்களும் திராணியற்று ஓடியிருக்கிறார்கள்.  இன்று நீ மனம் ஒப்பி உத்தமமான அலங்காரங்களைச் செய்து கொள்.  நன்றாக அலங்கரித்துக் கொண்டு மனதில் மகிழ்ச்சியோடு இங்குள்ள போகங்களை மனதார அனுபவி. நன்றாக சாப்பிடு. பானங்களை பருகு. ரமித்துக் கொண்டு இரு. யாருக்கு என்ன கொடுக்க விரும்புகிறாயோ, தாராளமாக கொடு.  பூமியோ, தனங்களோ, எது வேண்டுமானாலும் கொடு. என்னிடத்தில் நம்பிக்கையோடு, ரமித்துக் கொண்டு, ஆசையுடன் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இரு. தைரியமாக, மற்றவர்களை அதட்டி அதிகாரம் செய்து கொண்டு இருப்பாய். என்னுடைய பிரபாவத்தால், என்னுடன் நீ வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு உல்லாசமாக வாழ்ந்து உன் பந்துக்களையும் உல்லாசமாக இருக்கச் செய்.  என் செல்வ செழிப்பை நன்றாகப் பார். ப4த்ரே, என் புகழ் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள். மரவுரி அணிந்து வனத்தில் அலையும் ராமனிடத்தில் என்ன இன்பத்தைக் காண்பாய்.  வனகோ3சரம்-காட்டில் திரிபவன், வெற்றி வாய்ப்பை இழந்தவன், விரதம் அனுஷ்டிப்பவன், பூமியில் புல்லை விரித்து படுக்கையாக அதில் உறங்குபவன், உயிருடன் இருக்கிறானோ இல்லையோ தெரியவில்லை, அதுவே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. வைதேஹி, உன்னைக் காணக் கூட ராமன் வரப்போவதில்லை. உன்னால் ராமனைக் கண்ணால் கூட காண முடியப் போவதில்லை. கருத்த மேகங்கள் அடர்ந்து சந்திர கிரணங்களை மறைத்து வைப்பது போல நீயும் மறைந்து இருக்கிறாய். என் கையிலிருந்து ராமன் உன்னை மீட்கவே முடியாது. ஹிரண்யகசிபு, இந்திரன் வசமாகி விட்ட கீர்த்தியை திரும்ப பெற முடியாதது போல.  சாருஸ்மிதே, (அழகாக சிரிப்பவளே) சாருததி, அழகிய பற்களையுடையவளே, சாரு நேத்ரே, அழகிய கண்களையுடையவளே, விலாஸினி, உல்லாசமாக வளைய வரும் தகுதி பெற்றவளே. என் மனதை கவருகிறாய்.  சுபர்ணன் நாகத்தை கவருவதைப் போல. இளம் பெண் நீ, இப்படி கசங்கிய ஆடையும், அலங்காரம் எதுவும் இன்றி இருந்தாலும், உன்னைப் பார்த்த என் கண்களுக்கு என் மனைவிகள் யாருமே ஏற்கவில்லை.  அவர்களிடம் தாம்பத்யமும் எனக்கு ருசிக்கவில்லை. அந்த:புரத்தில் வசிக்கும் என் பத்னிகள், நல்ல அழகும் குடி பிறப்பும் வாய்ந்த உத்தம ஸ்த்ரீகள், இவர்கள் அனைவரிடமும் நீ ஆளுமையோடு, அதிகாரம் செய்து அருள்வாய். கறுத்த குழலுடையவளே, என்னிடம் உள்ளவர்கள், மூவுலகிலும் சிறப்பு வாய்ந்த பெண்கள்.  ஸ்ரீ- லக்ஷ்மியை, அப்ஸர ஸ்த்ரீகள் பணிவிடை செய்வது போல உனக்கு பணிவிடை செய்து குற்றேவல் செய்வார்கள்.  அழகிய புருவம் உடையவளே, வைஸ்ரவனிடத்தில் என்ன ரத்னங்கள் செல்வங்கள் உள்ளனவோ, அவைகளையும் அவனுக்கு அதீனமான உலகங்களையும் என்னையும் உன் இஷ்டம் போல அனுபவித்து மகிழ்வாய்.  உன் சௌகர்யம் போல சுகமாக இரு. தேவி, ராமன் தவத்திலும், பலத்திலும், விக்ரமத்திலும், செல்வத்திலும் எனக்கு சமமானவன் அல்ல. தேஜஸும், யஸசும் (புகழும்) எனக்கு உள்ளது போல அவனிடம் கிடையாது.  லலனே, என்னுடன் உல்லாசமாக இருப்பாய். என்னுடன் சேர்ந்து பானங்களை அருந்து, விளையாடு.  ரம்யமான விஷயங்களை அனுபவி.  போகங்களை இந்த செல்வ செழிப்பை உனதாக்கிக் கொண்டு அனுபவி.  இந்த மேதினியையே உனக்குத் தருகிறேன். உன் இஷ்டம் போல சந்தோஷமாக இரு.  உன்னுடன் சேர்ந்து உன் பந்துக்களும் சந்தோஷமாக இந்த செல்வங்களை அனுபவிக்கட்டும்.  இங்குள்ள கானனங்கள், மலர்ந்து மணம் வீசும் மரங்கள் அடர்ந்தவை. ப்ரமரங்கள் பாடும். சமுத்திரக் கரைகளில் இந்த கானனங்களில், விமலமான கனக ஹாரங்களை அணிந்து அழகு செய்து கொண்டு என்னுடன் விளையாடி மகிழ்வாய், பயப்படாதே.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ப்ரணய ப்ரார்த்த2னா என்ற இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக