பொருளடக்கத்திற்கு தாவுக

சுந்தர காண்டம் 2 to 5

பிப்ரவரி 22, 2014

 

அத்தியாயம் 2 (340) நிசாக3ம ப்ரதீக்ஷா (இரவு வர காத்திருத்தல்)

 

கடக்க முடியாது என்று நினைத்த கடலையே கடந்து வந்து விட்ட ஹனுமான், த்ரிகூட மலையில் அமைந்திருந்த லங்கா நகரை நிதானமாக ஊன்றி கவனித்தான்.  கால்களில்  ஒட்டியிருந்த புஷ்பங்களை உதற, அது குவியலாக அவனுக்கே புஷ்பங்களால் அபிஷேகம் செய்து வைத்தது போல மறைத்தது. நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடந்து வந்த பின்னும், வானர வீரன் களைப்பாகத் தெரியவில்லை. நூறு யோஜனை தூரம் தாண்டி விட்டேன். இன்னும் எல்லையில்லாமல் பரந்து இருந்தாலும் தாண்டுவேன்,  இது நிச்சயிக்கப் பட்ட நூறு யோஜனை தூரம் தானே என்று மனதில் எண்ணிக் கொண்டான். வீரர்களுள் சிறந்த வீரன்.  தாண்டி குதிக்கும் வானர இனத்திலும் முதன்மையானவன். அவன் ஒருவனால் தான் சமுத்திரத்தை கடந்து லங்கையை அடைய முடிந்தது என்பதில் சந்தேகமில்லை.  அந்த மலையில் நின்றபடி வனங்களையும், உப வனங்களையும் கண்டான். பசும் புற்தரை, கரு நீல வர்ணத்தில், மணம் வீசும் புஷ்பங்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்து தெரிந்தன. மலை என்பதே தெரியாதபடி நெருங்கி வளர்ந்திருந்த மரங்கள், இவைகளைப் பார்த்தபடி ஹனுமான் மேலும் நடந்தான். மலையின் உச்சியில், லங்கா நகரம் தெரிந்தது,  மரங்களில் பல பரிச்சயமானவை. சால, கர்ணிகார, கர்ஜூர, மரங்கள் புஷ்பித்திருந்தன. ப்ரியாவான், முசுலிந்தான் என்பவையும், குடஜம், கேதகம், ப்ரயங்கா4ன் என்பவையும்  மணம் நிறைந்தவை.  நீப, சப்தச்சத, அஸன, கோவிதா3ர, கரவீர எனும் மரங்களும் பூத்துக் குலுங்கின. புஷ்ப பாரத்தினால் இவை வளைந்து தொங்கின. சில மரங்களில் இப்பொழுது தான் மொட்டு கட்ட ஆரம்பித்திருந்தன. காற்றில் அசைந்தாடும் கிளைகளும், கிளைக்கு கிளை பறவை கூடுகளுமாக,  காண ரம்யமாகத் தெரிந்தன.  ஆங்காங்கு இருந்த கிணறுகளில், குளங்களில், பத்ம, உத்பலங்கள் மலர்ந்து காணப் பட்டன.    இவைகளில் ஹம்ஸங்களும், காரண்டவ பக்ஷிகளும் விளையாடின. பலவிதமான நீர் நிலைகள், விளையாட்டு மைதானங்கள் காணப்பட்டன.  ராவணன் பாலித்து வந்த லங்கா நகரத்தில் எந்த பருவமானாலும் பழுக்கக் கூடிய பழ மரங்கள், சந்ததம் எனும் இனம், பலவித மரங்களூம் அடர்த்தியாக இருக்க, உத்யான வனங்கள் மனதைக் கவரும் வண்ணம் இருந்ததை மாருதாத்மஜன் கவனித்து மனதில் வியந்து கொண்டான்.  சீதையை கவர்ந்து கொண்டு வந்த பின் காவல் மேலும் பலப் படுத்தப் பட்டிருப்பதை ஊகித்துக் கொண்டான்.  ஊரெங்கும் ராக்ஷஸர்கள், காவல் வீரர்கள் நடமாடுவதைக் கண்டான்.  மிக அதிகமான எண்ணிக்கையில் இந்த வீரர்கள், பெரிய வில்லும் ஆயுதங்களும் தாங்கி சுறு சுறுப்பாக நடை போட்டனர்.  மகாபுரி-பெரிய நகரமாக லங்கா நகரம் இருந்தது.  பிரகாரங்கள் பொன்னால் இழைத்து செய்யப் பட்ட வேலைப் பாடுகளுடன் காணப்பட்டன.   மலை போல் நிமிர்ந்து நின்றன. சரத் கால சந்திரன் போல பிரகாசமாக விளங்கின. வெண் நிற பூச்சுகளுடன், உயர்ந்த  மாளிகைகள், பால்கனிகள்  இருந்தன. நூற்றுக் கணக்கான மாடங்கள், கொடிகளும் கம்பங்களும் காஞ்சனமயமான தோரணங்களும் செல்வ செழிப்பை பறை சாற்ற,  தேவ லோகத்து நகரம் போல, பலவிதமான அலங்காரங்களுடன் அந்த நகரை  ஹனுமான் கண்டான். வெண் நிற மாளிகைகள், வரிசையாக அந்த மலை உச்சியில் வரிசையாகத் தெரிந்தன. ஆகாயத்தில் நிர்மாணிக்கப்பட்டது போல அந்த பவனங்கள் தனித்து தெரிந்தன. விஸ்வகர்மாவினால் கட்டப் பட்டு, ராவணன் பரி பாலித்து வந்த நகரம்.  ஆகாயத்தில் தாவிச் செல்வது போல, ஊஞ்சல் ஆடுவது போல அந்த நகரம் மிகச் சிறப்பாக விளங்கியது.  அந்த நகரமே ஒரு பெண் போல, உருண்டு திரண்ட ஜகனங்களும், (பிரகாரங்கள்), ஏராளமான காடுகளும், நீர் நிலைகளூம் அம்பரமாக (ஆடையாக), நூற்றுக் கணக்கான சூலங்கள் கேசங்களாக (கேசமாக), அட்டாலிகா – மாட மாளிகைகள்,  மனதில் உருவகப்படுத்திக் கொண்டு உடனுக்குடன் விஸ்வகர்மா கட்டியது போல இருந்தது. வடக்கு வாயிலை அடைந்து ஹனுமான் யோஜித்தான். (பெண்ணாக பாவித்து மிகவும் சிரத்தையுடன் கட்டியதாக) கைலாஸ நிலயம் போலவும், வானத்தை தொட்டு விடுவது போலவும், உத்தமமான பவனங்கள். போ4கவதி நகரம் முழுவதும் நாகங்கள் மண்டிக் கிடப்பது போல, ராக்ஷஸர்கள் கோரமான முகத்துடன் கணக்கில்லாமல் இருந்தனர்.  ஆலகால விஷம் உள்ள குகையைப் போல ராக்ஷஸர்கள், நீண்ட பற்களும், சூலம், பட்டிசம் இவைகளை கையில் ஏந்தியும், பொறுக்கி எடுத்த வீரர்களாக காவலுக்கு நியமிக்கப் பட்டிருந்தவர்களைத் தவிரவும் நிறைய காணப்பட்டனர். இந்த லங்கா நகரையும், சமுத்திரத்தையும் பார்த்து, ஹனுமான் நமது எதிரி சாதாரணமானவன் அல்ல என்று நினைத்தான். இங்கு வந்தால் கூட நமது வானரப் படையினர் எதையும் சாதிக்க முடியப் போவதில்லை.  எந்த தேவர்கள் வந்தாலும் யுத்தம் செய்து இந்த லங்கா நகரை ஜயிப்பது கடினம். முடியாது எனலாம். இந்த லங்கையின் கோட்டைகள் கூட  அசாதாரணமானவையே.  ராவணன் ரக்ஷித்து வரும் இந்த நகரம் வந்தும் ராகவன் தான் என்ன செய்யப் போகிறான்? இந்த ராக்ஷஸர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையும் எடுபடாது. தா3னமோ, பே43மோ பலனளிக்கப் போவதில்லை. யுத்தம் செய்வதோ, கேட்கவே வேண்டாம். இந்த நான்கு முறைகள் தான் நமக்குத் தெரிந்தது.  வாலி புத்திரனுக்கும், நீலனுக்கும், எங்கள் அரசனான சுக்ரீவனுக்கும் தெரிந்த ராஜ தந்திரம் இது தான்.  சாம, தான பேத, தண்டம் என்ற  நான்கு வழிகள், இது இருக்கட்டும், நாம் வந்த காரியத்தை கவனிப்போம். வைதேஹி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.  ஜனகாத்மஜாவை எங்கு, எப்படிக் காண்போம். ராமனுடைய காரிய சித்திக்காக மனதினுள் தியானம் செய்தவனாக, மலையின் மேல் முஹுர்த்த நேரம் ஹனுமான் நின்றான். இந்த ரூபத்தோடு என்னால் லங்கா நகரினுள் போக முடியாது.  க்ரூரமான, பலசாலிகளான காவல் வீரர்கள் போகும் இடமெல்லாம் எதிர்ப்படுவார்கள். உக்ரமாக தண்டிக்கக் கூடியவர்கள். கண்டால் விட மாட்டார்கள். இவர்கள் கண்ணில் படாமல், ஜானகியைத் தேடியாக வேண்டும். தெரிந்தும் தெரியாமலுமான ஒரு உருவம் எடுத்துக் கொண்டு லங்கையில் இரவில் நுழைந்தால், என் காரியத்தை ஒழுங்காக செய்ய முடியலாம். திரும்ப திரும்ப லங்கையின் காவல் ஏற்பாடுகளையும், தேவர்கள் கூட எளிதில் நுழைய முடியாதபடி லாகவமாக பாதுகாப்பாக கட்டப் பட்டிருந்த லங்கா நகரையும் காண நிராசையே நிறைந்தது. என்ன உபாயம் செய்வேன்? எப்படி ஜனகாத்மஜாவை காண்பேன்? என்ற கவலை சூழ்ந்தது.  ராக்ஷஸேந்திரன் கண்ணில் படாமல், ராம காரியத்தை செய்ய வேண்டுமே. துராத்மாவான ராவணன் கண்டால், ராம காரியமே நாசமாகிப் போகும்.  நான் ஒருவனாக ஜனகாத்மஜா என்ற ஒருவளைத் தேடி , நான் மட்டுமாக அவளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.  அருகில் யாரும் இல்லாத சமயம் யாரும்  காணாதவாறு அவளிடம் நான் வந்திருப்பதையும் தெரிவிக்க வேண்டும்.  யார் யாரையோ பார்க்கிறேனே,  இதில் நான் தேடி வந்தவள் எங்கு இருக்கிறாள்? தேச காலங்கள் விரோதமாக இருந்தால், சாமர்த்தியம் இல்லாத தூதன் காரியத்தையே கெடுத்து விடுவான். சூரியோதயம் ஆனவுடன் இருட்டு மறைவது போல, வந்த காரியமே மறந்து விடும். அல்லது கெட்டு விடும். தன்னை பண்டிதனாக நினைக்கும் தூதன் தாங்கள் வந்த காரியத்தையே கெடுத்து விடுவர். எதை எதையோ சம்பந்தமில்லாமல் யோஜித்து செயல் படுவதும் சரியல்ல. சிரமப்பட்டு கடலைக் கடந்து வந்ததும் வீணாகக் கூடாது.  காரியமும் கெடாமல் நானும் பத்திரமாக திரும்பச் செல்ல வேண்டும். என்னை இந்த ராக்ஷஸர்கள் கண்டு கொண்டால், அவ்வளவு தான், ராமனுடைய உத்தேசமும் நிறைவேறாது.  நாம் எண்ணியிருப்பது ராவணனின் முடிவு.  இந்த ராக்ஷஸர்கள் அறியாமல் எங்கும் தங்குவது கூட சாத்தியமில்லை என்று தோன்றுகிறதே. ராக்ஷஸ ரூபமே எடுத்துக் கொள்வோமா? அல்லது வேறு எந்த ரூபம் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க உதவும்?  காற்று கூட இங்கு தன்னிச்சையாக வீசுவதில்லை என்று தோன்றுகிறதே. பலசாலிகளான இந்த ராக்ஷஸர்கள் கூர்மையான அறிவும் கொண்டவர்களாகத் தெரிகிறது. நான் இந்த சுய ரூபத்தில் நின்றால், பிடிபடுவது நிச்சயம். என் எஜமானனின் காரியமும் அதோ கதி தான், இருட்டிய பின் என் உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு வானரமாகவே, லங்கையின் உள்ளே பிரவேசிப்பேன். எல்லா வீடுகளிலும் தேடி ஜனகாத்மஜாவை கண்டு பிடிப்பேன். சூரியன் அஸ்தமனம் ஆவதை எதிர் நோக்கி ஹனுமான் காத்திருந்தான். வைதேஹியை காணும் ஆவலுடன் காத்திருந்தான். மிகவும் சிறிய வானரமாக சூரியன் அஸ்தமிக்கும் பிரதோஷ காலத்தில், வேகமாக தாவி குதித்து, மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்த பெரிய வீதிகளையுடைய லங்கா நகரினுள் பிரவேசித்தான். அந்த நேரத்தில் லங்கா ரம்யமாக இருந்தது. மாளிகைகள் தொடுத்து வைத்தாற்போல வரிசையாகத் தெரிந்தன. கந்தர்வ நகரம் போல இருந்தது.  ஜன்னல்களும், வலைகள் பொருத்தப் பட்டதும் தங்கமே போலும்.  ஏழு மாடி, எட்டு மாடி கட்டிடங்களாக இருக்க, ஹனுமான் எண்ணி பார்த்துக் கொண்டான். தரை ஸ்படிகத்தால் அல்லது மணிகளால் (கார்த்தஸ்வர) அலங்கரிக்கப் பட்டிருந்தது.  வைடூரியமும், முத்துக்களும் வீடுகளுக்கு அலங்காரமாக வேலைப் பாடுகள் செய்ய பயன் படுத்தப் பட்டிருந்தன.  தரைகள் மிக அழகாகத் தெரிந்தன. தோரணங்கள் விசித்ரமாக இருந்தன. ராக்ஷஸர்களின் வீடுகள் இப்படி பலவிதமாக செல்வ செழிப்பை பறை சாற்றும் விதமாக லங்கையின் அழகையே தூக்கி காட்டின.  நினைத்துக் கூட பார்க்க முடியாத அத்புதமான காட்சி. ஒரே சமயத்தில் சந்தோஷமும், நிராசையும் மனதில் குடி கொண்டன.  வைதேஹியைக் காண வேண்டுமே என்ற தாபமும் அதிகரித்தது.  வெண் நிற பூச்சுகளுடன், விமானங்களும் வரிசையாக அதன் மேல் பொன் நிறத் தோரணங்கள், விலை மதிக்க முடியாத பொன்னாலான வலை பொருத்தப் பட்ட ஜன்னல்கள், ராவணனின் ஆளுமையில், தானே கவனமாக ரக்ஷித்து வந்த இலங்கை நகரை, இலங்கை எனும் ஸ்திரீயை,  கண்டான். சந்திரனும் தன் பங்குக்கு உதவி செய்ய எண்ணியது போல ஒளி வீசிக் கொண்டு தாரா கணங்கள் புடை சூழ வந்து சேர்ந்தான்.  அவன் கிரணங்கள் ஆயிரக் கணக்காக ஒளியைச் சிதறியபடி தெரிந்தன. அந்த ஒளியில் சங்கு போல, பால் போல, தாமரைத் தண்டு போல குளுமையும், பிரகாசமும் பூமியில் நிறைந்தன. பெரிய குளத்தில் நிதானமாகச் செல்லும் ஹம்ஸம் போல நீல வானில் சந்திரன் பவனி வருவதை ஹனுமான் கண்டான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், நிசாக3ம ப்ரதீக்ஷா என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

 

 

அத்தியாயம் 3 (341) லங்காதி4 தே3வதா விஜய: (லங்கையின் காவல் தேவதையை ஜயித்தல்)

 

உயரமான சிகரங்களை உடைய அந்த மலை மேல், தொங்கும் பெரிய கார் மேகம் போல இருந்த மாருதாத்மஜனான ஹனுமான், தன் உருவை தேவைக்கேற்ப  மாற்றிக் கொண்டு, இரவில் அந்நகரில் பிரவேசித்தான்.  அழகிய கானனங்களும் நீர் நிலைகளும் இருந்த ராவணனின் நகரம். மாளிகைகள் ஒவ்வொன்றும் சரத் கால சந்திரன் போல பிரகாசமாக இருந்தன. கடல் காற்று சுகமாக வீச, ஊரின் உள்ளே ஜனங்கள் ஆரவாரமாக இருப்பதும், கடலின் கோஷம் போலவே கேட்டது. நல்ல வீரர்கள் காவலில், அமரர் தலை நகரமான அமராவதி போலவே பாதுகாப்பாக இருந்த நகரம். வாயிலில் அழகிய வெண்ணிற தோரணங்கள் தொங்க, ரஸிக்கத் தகுந்த முறையில் அலங்கரிக்கப் பட்டிருந்த மாளிகைகள். சுபமான போ4கவதீ நகரம், (புஜகம்) நாகங்கள் நிறைந்து இருப்பது போல ஒரு க்ஷணம் தோன்றியது. எங்கும் பளீரென்ற வெளிச்சம் தரும் விளக்குகள். இதமாக வீசிய காற்றில் அமராவதியில் இருப்பது போன்ற பிரமையைத் தரும் ராவணனின் ராஜதாணி.  உயர்ந்த பத்தரை மாற்றுத் தங்கம் எங்கும் சாதாரணமாக காணப்பட்டது. பிராகாரங்கள், கிண்கிணி மணி கட்டிய சாளரங்கள், இது காற்றில் அசைய ஏற்படும் இனிமையான ஒலி, கொடிகள் கட்டப் பட்டு அலங்காரமாக இருந்த பிரதான சாலையில் வந்து நின்ற ஹனுமான் தன்னையுமறியாமல் மகிழ்ச்சியை அடைந்தான். ஆச்சர்யம்  மனதில் நிறைந்தது. அந்த நகரை திரும்பி பார்த்த இடமெல்லாம் செல்வ செழிப்பே கண்களை நிறைத்தது.  ஜாம்பூனதம் எனும் உயர்ந்த பொன்னும், வைடூரியம் முதலிய மணிகளும் கொண்டு யாக சாலைகள் நிறுவப் பட்டிருந்தன. வஜ்ரமும் ஸ்படிகமும் இழைத்து புடமிட்ட தங்கத்தாலும், நிர்மலமான  வெள்ளியினாலும் (வெண்மை நிறத்தில்) அலங்கரிக்கப் பட்டு, வைடூரியம் பதித்த தளமும், படிக்கட்டுகளும், ஸ்படிக துகள்கள் இடை இடையே தூவப் பெற்று, ஆகாயத்தை தொடும் உயரத்துடன், ஆங்காங்கு இருந்த நீர்   நிலைகளில் க்ரௌஞ்ச, ப3ர்ஹிண பக்ஷிகள் குதூகலமாக இரைச்சலிட தூர்ய வாத்யங்கள் இசைக்கப் பட அதன் நாதமும் இசைந்து வர, எங்கும் எதிரொலித்த இனிய கோஷமுமாக லங்கையை ஹனுமான் கண்டான்.  நகரின் அழகைக் கண்டு மெய் மறந்து ஹனுமான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான்.  வேறு யாரும் இந்த நகரத்தை தாக்கவோ, ஆக்ரமித்து தனதாக்கிக் கொள்வதோ முடியாது. குமுத, அங்கதன் முதலானோர், சுஷேணன் போன்ற மகா வீரர்களான கபி (வானரம்), மைந்த த்விவிதர்கள், விவஸ்வதன் மகன், குச பர்வண வானரத்திற்கும், ருக்ஷன், கேது மாலன், நான் இவ்வளவு பேரும் சேர்ந்து பாடு பட வேண்டும்.  ராகவனுடைய பராக்ரமும், லக்ஷ்மணன் விக்ரமும், ஹனுமான் ஒருமுறை மனதினுள் நினைத்து பாராட்டிக் கொண்டான்.  அழகிய ஸ்த்ரீ போல அலங்கரிக்கப் பட்டிருப்பதாக அந்த நகர் தோற்றமளித்தத்து. ரத்னங்கள் ஆடையாக, கோஷ்டாகாரங்கள், யந்த்ராகாரங்கள், ஸ்தனங்கள் போல பருத்து இருப்பதாக நினைத்துக் கொண்டான். விளக்குகள் இருட்டை விரட்டியடித்தன. ஒவ்வொரு வீடும் ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது,  ராக்ஷஸேந்திரனுடைய நகரீ- மிக அழகு என்று சிலாகித்தான். இப்படி யோசித்துக் கொண்டே தன் சுய ரூபத்தில் நகரின் உள்ளே நுழைவதை, லங்கா நகரை காத்து வந்த லங்கா நகரீ என்ற ஸ்த்ரீ கண்டு கொண்டாள். உடனே எழுந்து வந்தாள்.  அவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். யார் நீ? என்ன காரியமாக இங்கு வந்தாய்? வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ? உயிருடன் இருக்க ஆசையில்லையா? உடனே சொல், என்றாள்.  வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது.  ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்,  காவல் காக்கிறார்கள். எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்.  என்னை கேள்வி கேட்கும் நீ யார் ? ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே?  கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார்?  லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள். நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன்.  இன்று உன்  முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். ஸ்த்ரீ ரூபம்,  ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான்  எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். இந்த லங்கா நகரீ பிராகாரங்களுடன், தோரணங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. அதனால் இதை பார்க்க வந்தேன். குதூகலத்துடன் இந்த நகரை சுற்றி பார்க்க வந்தேன்.  வனங்களும், உப வனங்களும், லங்கையின் கானனங்களும், பெரிய மாளிகைகளும், என்னுள் ஆவலை தூண்டி விட்டன என்றான். இதை நம்பாமல் லங்கா நகரீ என்ற அந்த ராக்ஷஸி அதட்டினாள். வானரமே,  என் அனுமதியின்றி நீ எதையும் பார்க்க முடியாது. ஹனுமான் சற்றும் தயங்காமல், பத்ரே, இந்த நகரை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி போய் விடுகிறேன். அனுமதி கொடு என்று பணிவாக வேண்டினான். உடனே ராக்ஷஸி, தன் கைதலத்தால் ஓங்கி ஒரு அறை விட்டாள். எதிர்பாராத இந்த அடியால் ஹனுமான் திகைத்து வாய் விட்டு அலறி விட்டான். தாங்க முடியாத கோபத்துடன், இடது கை விரல்களை மடக்கி முஷ்டியால், அவளை திருப்பி அடித்தான். ஸ்த்ரீ என்பது மனதில் தயக்கத்தை உண்டாக்கியது. அதிக கோபம் வராமல் அடக்கிக் கொண்டான். அந்த நிசாசரீ, இந்த அடியையே தங்க முடியாமல், உடல் சோர விழுந்தாள். கீழே விழுந்தவளைப் பார்த்து ஹனுமான், பாவம், ஸ்த்ரீ தானே என்று தயவுடன் அருகில் சென்றான். மிகவும் வேதனையோடு குரல் தழ தழக்க, அந்த லங்கா நகர காவல் தேவதை, தன் கர்வம் அழிந்தவளாக, வானர வீரனைப் பார்த்து, ஹரி சத்தமா, தயவு செய். காப்பாற்று.  சுமஹா பா3ஹோ- பெரிய கைகளுடன், ஆற்றல் மிகுந்தவனாக தெரிகிறாய்.  காலத்தை அனுசரித்து ஜீவராசிகள் நடமாடுகின்றன. நான் லங்கா நகரீ.  நீ என்னை ஜயித்து விட்டாய். இதன் பலனை சொல்கிறேன், கேள்.  முன்பு ஒரு சமயம், ஸ்வயம்பூ தானாக எனக்கு ஒரு வரம் கொடுத்தார்., எப்பொழுது ஒரு வானரம், தன் பலத்தால், உன்னை வெற்றி கொள்கிறானோ, அப்பொழுது இந்த ராக்ஷஸர்களுக்கு ஆபத்து என்று நினைத்துக் கொள். அந்த சமயம் வந்து விட்டதாக அறிகிறேன். வானரமே, உன்னை நான் கண்ட இந்த நிமிஷம், ராக்ஷஸர்களின் விநாசம் ஆரம்பம்.  ஸ்வயம்பூ சொன்னது தவறாது. ஆபத்து காலம் தான் நெருங்கி விட்டது. சீதை காரணமாக, ராவண ராஜா தவறு இழைத்து விட்டான். எல்லா ராக்ஷஸர்களையும் ஆபத்து சூழ்ந்து கொண்டு விட்டது. சரி, போய் வா, வானரோத்தமா, ராவணன் கவனமாக பாலித்து வரும் நகரத்தினுள் நுழைந்து சுற்றிப் பார்த்து விட்டு வா, என்ன செய்ய வேண்டுமோ, செய். ஜனகாத்மஜாவை தேடி வந்திருக்கிறாயா? உள்ளே போய் நன்றாக தேடிப் பார். இந்த லங்கா நகரியும் சாபத்துக்கு ஆளானவளே. ஹரீஸ்வரா, போ. போய் உன் காரியத்தைப் பார். சௌகரியம் போல போ, என்று அனுமதித்தாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், லங்காதி4 தே3வதா விஜயோ என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 4 (342) லங்கா புரி பிரவேச: (லங்கா நகரில் நுழைதல்)

 

இரவின் முன் பகுதியில், கபி குஞ்சரன், குறுக்கு வழியில் லங்கா நகரத்தினுள் நுழைந்தான். தன் பலத்தால் லங்கா நகரீ  என்ற க்ஷேத்ர தேவதையை (ஊர்க் காவல் தேவதை) வீழ்த்தி விட்டு நகரத்தின் பிராகாரத்தை அடைந்தான். இடது பாதத்தை, சத்ருக்களின் தலையில் வைப்பதாக எண்ணிக் கொண்டு, முன் வைத்தபடி நுழைந்தான். பூக்கள் உதிர்ந்து கிடக்க, பிரதான (தெருவை,) வீதியை அந்த இரவில் பார்வையால் அளந்தான்.   தூர்ய வாத்ய கோஷங்களும், ஜனங்க  ளின் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக பேசும் சப்தங்களும், கலந்து அந்த வீதியை நிறைத்திருந்ததைக் கண்டான்.  மாளிகைகள் அழகாக காட்சியளித்தன. வீடுகளுக்கு நுழை வாசல் கதவுகளும், வஜ்ராங்குசம் போல பலமாக போடப் பட்டிருந்தன.  மேகக் கூட்டங்கள் வானத்தை நிறைத்திருப்பதைப் போல தெரிந்தன. வெண்மையான வான வெளியில், சித்திரங்கள் வரைந்தது போல வெண் நிற பூச்சுகளில், பத்மம், ஸ்வஸ்திகம் என்று வேலைப் பாடுகள் செய்யப் பட்டிருந்தன. கபி ராஜனான சுக்ரீவனின் நலனை விரும்பும், வானர வீரனான ஹனுமான், நெடிதுயர்ந்த       மாளிகைகளுக்கு இடையில் நின்றபடி இந்த காட்சிகளை ரசித்து மகிழ்ந்தான்.  அடிக்கடி, மனதினுள் தான் வந்திருப்பது ராம காரியத்திற்காக என்றும் நினைவு படுத்திக் கொண்டான். வீட்டுக்கு வீடு தாவி குதித்து தேடினான்.  பலவிதமான அமைப்புகளுடன் வீடுகள்.  மூன்று ஸ்தாயியிலும் சுஸ்வரமாக ஸங்கீதம் கேட்டது.  தேவ லோகத்து அப்ஸர ஸ்த்ரீகள் போல இங்கும் பல பெண்கள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர்.  கால் கொலுசுகள் அசைவதாலும், இடுப்பு ஒட்டியாண மணிகள் அசைந்தும் எழுப்பிய ஒலிகளைக் கேட்டான். மாடிப்படிகளில் ஏறுவதும் இறங்குவதும் துல்லியமாக கேட்டது. ஆங்காங்கு தோள் தட்டி போட்டிக்கு அழைக்கும் குரலும்,  வெற்றி பெற்றவர்கள் எக்காளம் இடுவதும் கேட்டது.  ராக்ஷஸர்களின் வீடுகளில் மந்திர கோஷமும், ஜபம் செய்வதும்  கேட்டது. ஸ்வாத்யாயம் எனும் வேத பாராயணம் செய்வதில் ஈ.டுபட்ட ராக்ஷஸர்கள் பலரையும் ஹனுமான் கண்டான். சில ராக்ஷஸர்கள் உரத்த குரலில் ராவணனை ஸ்தோத்திரம் செய்து கொண்டிருந்தனர். இடையிடையே காவல் வீரர்களையும் கண்டான். குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த அவர்களில் பலர், ராஜ வீதியை அடைத்துக் கொண்டு இருந்தனர்.  இடையிடையில் ராக்ஷஸர்களில் துப்பறியும், வேவு பார்க்கும் படையினரும் கலந்து நடமாடுவதை ஊகித்தான். சிலர் ஜடா முடியுடன், சிலர் தலையை மழித்துக் கொண்டவர்களாக, பசு, மான் தோல் ஆடைகளை அணிந்தவர்களாக. கையில் தர்ப்பை கட்டாக ஏந்தி அக்னி குண்டலங்களுடன், நித்ய கர்மானுஷ்டானங்களை செய்பவர்களாக கண்டான். கூடம், உத்33ரம் என்ற ஆயுதங்களும், த3ண்டாயுதமும் வைத்துக் கொண்டு, ஏகாக்ஷ- ஒரு கண்ணுடையவர்கள், ஒரு காது உடையவர்கள், பெருத்த வயிறு உடையவர்கள்,  ஸ்தனங்கள் நீண்டு தொங்கும் சிலர், பெரிய கட்டை (கதவு தாழ்ப்பாள்) போன்ற கைகளுடையவர்கள். விசித்ரமான பள பளக்கும் கவசங்களை அணிந்தவர், இப்படி சிலர்.  பெரும்பாலோர்,  அதிக ஸ்தூலமும் இல்லாமல், அதிக க்ருசம் (மெலிந்த சரீரமும்) இல்லாமல் இருந்தனர்.  காண கொடூரமாக, வாயும் முகமும் வெந்தது போன்ற தோற்றத்துடன் குள்ளர்கள்,  சமமில்லாத உடல் அமைப்பு கொண்டவர்கள், சிலர்.    வில்லேந்தியவர்கள், வாளேந்தியவர்கள், சதக்4னீ, முஸலம் இவற்றை ஆயுதமாக ஏந்தியவர்கள், அதிக ஸ்தூலமோ, அதிக க்ருசமோ- மிக அதிக உயரமோ, மிகச் சிறிய உருவமோ, மிகவும் வெளுத்த சரீரமோ, அதிக கறுப்போ, முதுகு கூணல் உடையவர்களோ,  வாமனர்களோ, ரூபம் இன்றி இருந்தவர்களும் மிகக் குறைவே.  அழகிய சரீரமும், கட்டான தேகம் உடையவர்களுமே  கொடிகளையும், த்வஜ ஸ்தம்பங்களையும் கையில் வைத்திருந்தனர்.  சக்தி, வ்ருஷ என்ற ஆயுதங்களையும், பட்டிச, அசனி இவைகளையும், க்ஷேபணி, பாசம் இவைகளையும், கையில் ஏந்தி தனித் தனி கூட்டமாக நடந்து செல்பவர்களையும் கண்டான்.   உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவர்களாக, மாலைகளும் ஹாரங்களும் அணிந்து, அங்க ராகம் பூசிக் கொண்டும், பலவித வேஷங்கள் கலந்து தெரிய வேகமாக நடைபோடும் காவல் வீரர்கள். தீக்ஷ்ணமான சூலங்கள் ஏந்தியவர்கள், வஜ்ரத்தையும் ஏந்திய நூறாயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் மத்தியில் வானரம் தன்னை மறைத்துக் கொண்டு நடப்பதே சிரமமாக, மறைந்து மறைந்து ராவணனின் அந்த:புரம் இருந்த மாளிகையை வந்தடைந்தான்.  அந்த க்ருஹத்தை சற்று நேரம் பார்த்தபடி நின்றான். மகா ஹாடகம் விலையுயர்ந்த பத்தரை மாற்றுத் தங்கம், இதில் தோரணங்கள் கட்டப் பட்டிருந்தன.  மலையின் உச்சியில், ராக்ஷஸேந்திரனின் புகழை பரப்பிக் கொண்டு, அரண்மணை கம்பீரமாகத் தெரிந்தது தாமரைத் தண்டு போன்ற குளுமையும், வெண்மையுமான சுவர்கள், நாலா புறமும் ஓடிய ப்ராகாரங்களுடன், தேவலோகம். போன்ற திவ்யமான அமைப்புடன், இனிய நாதம் கேட்க, குதிரைகள் கனைக்கும் சத்தமும் ஊடே கேட்க, ஆபரணங்கள் உராய்வதால் உண்டான சப்தமும் இடையிடையே கேட்டது.  ரதங்கள், மற்ற வாகனங்கள், விமானங்கள், யானை, குதிரைகள், சுபமான நான்கு தந்தங்கள் உடைய பட்டத்து யானைகள், இந்த யானைகளே வெண் மேகம் போல காட்சிய  ளித்தன.  நுழை வாயில் மிக நேர்த்தியாக ரசனையுடன் அலங்கரிக்கப் பட்டிருந்தது.   மதம் கொண்டு உல்லாசமாகத் தெரிந்த வளர்ப்பு மிருகங்களும், பக்ஷிகளும் வாசலில் காணப் பட்டன. இவை உட்பட காவல் வீரர்கள் பத்திரமாக பாது காத்தனர்.  ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் வந்து போய் கொண்டிருந்தனர். இந்த கோலாகலத்துக்கு இடையிலும், வானரம் ராவணன் மாளிகையில் யாரும் அறியாமல் நுழைந்து விட்டது.  பொன்னாலான தூண்களுடன் நடு முற்றமும், விலையுயர்ந்த முத்துக்களும், மணிகளும் பதித்த உட்பகுதி, பரார்க்4ய, கால, அகரு, சந்தனம் இவை மணம் பரப்ப, ராவணனின் அந்த:புரத்தில் பிரவேசித்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், லங்கா புரி ப்ரவேச: என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 5 (343)  ப4வன விசய: (வீடுகளில் தேடுதல்)

 

தீ4மாந்- புத்திசாலியான ஹனுமான் சுற்று முற்றும் பார்த்து, தான் தேட வேண்டிய இடங்களை மனதில் குறித்துக் கொள்ள தானும் உதவி செய்ய விழைந்தது போல,  சந்திரன் உதயம் ஆனான்.  ஒளியை உமிழ்ந்து கொண்டு சந்திரன் வானில் மத்தியில், பசுக்களின் கூட்டத்தில், மதம் பிடித்த ரிஷபம் தன்னிச்சையாக நடப்பது போல மிதந்துகொண்டு செல்வதைக் கண்டான்.  குளிர்ந்த கிரணங்களைக் கொண்டவன். உலகில் உள்ளவர்களின் பாபங்களை போக்குபவன், பெருங்கடலையும் ஆட்டுவிப்பவன், எல்லா ஜீவ ராசிகளையும் பிரகாசிக்கச் செய்பவன், வானத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தான்.  எந்த லக்ஷ்மி உலகில் (மந்தரஸ்தா) மந்தர மலையில் இருக்கிறாளோ, ப்ரதோஷ காலங்களில் சாகரஸ்தா- சாகரங்களில் இருக்கிறாளோ, நீர் நிலை என்றால் புஷ்கரத்தில் விளங்குகிறாளோ, அவள் அந்த நிசாகரன் எனும் சந்திரனிடத்தில் குடி கொண்டாள்.  ஹம்ஸம் ஒன்று  வெள்ளியினாலான கூண்டில் இருப்பது போலவும், சிங்கம் ஒன்று மந்தர மலையின் குகையில் இருப்பது போலவும், வீரன் ஒருவன் பெருமிதத்துடன் யானை மேல் அமர்ந்திருப்பது போலவும், சந்திரன் அந்த வானத்தில் இருந்தபடி பிரகாசித்தான். (ககுத்- காளையின் முதுகில் இருக்கும் திமில்,  ககுத்மான், திமில் உடைய காளை) கூர்மையான கொம்புகளையுடைய காளை போலவும், ஸ்வேத மகா மலை, உயர்ந்த சிகரத்துடன் இருப்பது போலவும், யானை தந்தத்துக்கு தங்க முலாம் பூசியது போலவும், சந்திரனும் பரிபூர்ண கலைகளோடு பிரகாசித்தான்.  குளிர்ந்த நீரின் பனித்துளிகள் சேறாக (ஒன்று சேர), கடலில் பெரும் முதலைகள் அசைந்து நீரைக் கலக்குவதால் சேறு படியாமல் நீர் தெளிவாகத் தெரிவது போலவும், பிரகாசமான லக்ஷ்மி ஆசிரயித்ததால், நிர்மலமான சரீரத்துடன் (அங்கங்களுடன்) பகவான் சசாங்கன் (விராஜ) பரிசுத்தமாகத் தெரிந்தான். ம்ருகேந்திரன் எனும் சிங்கம் சிலாதலம் பாறையை அடைந்து சுகமாக படுப்பது போலவும், பெரும் அரண்யத்தை அடைந்த மகா க3ஜம் மன நிறைவு கொள்வது போலவும், நரேந்திரன் ராஜ்யத்தையடைந்து திருப்தியடைவது போலவும், சந்திரன் தன் பிரகாசத்தை வீசிக் கொண்டு சந்தோஷமாக உலவுவது போல் பவனி வந்தான். பிரகாசமான சந்த்ரோதயத்தால் தோஷங்கள் நீங்கப் பெற்று, வளர்ந்து வரும் ராக்ஷஸர்களின் பலம் மட்டுமே தோஷமாக, பெண்களின் மனதில் தோன்றும்  சித்ர தோஷ:-ஆசைகள், நப்பாசைகள் (பெண்கள் என்றால்) மட்டுமே இருக்க, ஸ்வர்க பிரகாசமாக பகவான் ப்ரதோஷன் காட்சி தந்தான். தந்தி வாத்யங்கள் காதுக்கு இனிமையாக கேட்டன. தங்கள் கணவன்மார்களை அணைத்துக் கொண்டு ஸ்த்ரீகள் படுத்துறங்கினர். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களும், தங்கள் க்ரூர கர்மாக்களை செய்ய வெளிப்பட்டனர். அதுவே அவர்களின் அத்புதமான விளையாட்டு போலும். கபியின் கண்களுக்கு வீர லக்ஷ்மி தாண்டவமாடுவதாக தெரிந்தது.  மதம் கொண்டு கர்வத்துடன் ஏராளமாக கலந்து கிடந்த யானை குதிரைகள், ரதங்கள், பத்ராஸனங்கள், வீடு தோறும் காணப்பட்டன. ஒருவருக்கொருவர் சவால் விட்டு அறை கூவி போருக்கு (போட்டிக்கு) அழைத்தனர். நீண்ட கைகளால் குஸ்தி மல்யுத்தம் செய்தனர். வாயால் சுய பிரதாபங்களைப் பேசிக் கொண்டனர்.  விளையாட்டாக ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டனர். ராக்ஷஸர்கள் மோதிக் கொண்டும், தங்கள் பத்னிகளிடம் உறவாடிக் கொண்டும், அழகிய சித்ரங்களை வரைந்து கொண்டும், வாள் முதலியவைகளை வீசிக் கொண்டும் திரிந்தனர். சிலர் மனைவிகளுடன் பேசி பொழுதைக் கழித்தனர். மற்றும் சிலர் தூங்கினர். சிலர் சிரித்தனர். கோபம் கொண்டு சிலர் பெருமூச்சு விட்டனர். பெரும் யானைகள்       பிளிறுவது போலவும், நல்லவர்கள், சத்தான ஜனங்களை மதித்து போற்றுவது போலவும், வீரர்கள் பெருமூச்சு விடுவது போலவும், குளத்து நீரில் நாகங்கள் சீறுவது போலவும், புத்தியே பிரதானமாக உடையவர்களையும், ரசித்து மகிழும் ரசிகர்களையும், (ரஸனையே – ரசிப்பதே பிரதானமாக) சிரத்தையுடன் செயல் படுபவர்களையும், உலகில் மேன்மையாக வாழ ஆசை கொண்டவர்களும் பலவிதமாக ராக்ஷஸர்களைக் கண்டான். இப்படி இவர்களைப் பார்த்து ஹனுமான் மகிழ்ச்சியடைந்தான். நல்ல ரூபம் உடையவர்கள், குணம் நிறைந்தவர்கள், தன்னைப் போலவே உயர்ந்த கொள்கையுடையவர்களும், பலர் இருக்க, ஒரு சிலர் இதற்கு நேர் எதிராக, எதிரான குணங்களுடன் இருப்பதையும் கண்டான். சுவிசுத்34 பாவம்- மிக உயர்ந்த மனோபாவம்- மிக உயர்ந்த மன நிலை கொண்டவர்கள், அவர்களுக்கு இணையான பத்னிகள் கிடைக்கப் பெற்ற பாக்கியசாலிகள்,  தங்கள் பிரியமான மனைவியிடமும், பானங்களிலும் ஈ.டுபாடு கொண்டவர்கள், தாரா கணங்கள் போல நல்ல பிரபாவம் உடையவர்கள் இவர்களைக் கண்டான். செல்வ செழிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. இரவு நேரமானதால், லஜ்ஜையுடன் தங்கள் ரமணனுடன் மறைந்து தெரிந்த ஸ்த்ரீகள்.  சிலர் பெண்களிடம் தங்களை மறந்து ஈ.டுபட்டு இருந்தனர். பறவைகள் புஷ்பங்களில் மறைந்து கிடந்தன. (வார்த்தைகள் அழகுக்காக கோர்த்து எடுக்கப் பட்ட ஸ்லோகங்கள்-அதன் மூலத்தில் உள்ள அழகு படித்து தான் புரிந்து கொள்ள வேண்டும்).  இரவில் மதனனின் ஆதிக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது. சிலர் மாளிகையின் வெளி வாசலில் அமர்ந்திருந்தனர். தங்கள் பிரியமான கணவன்/ மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டு, நெருங்கி அமர்ந்து சரசமாக இருந்தனர். தர்ம பத்னி, பர்த்தாவின் அணைப்பில்,  நியாயமாக இயல்பாக மதனனின் வசமாக இன்பமாக இருப்பதைக் கண்டான். அந்த ஸ்த்ரீகளில் பல வர்ணத்தினரும் இருந்தனர். பொன் நிறத்தில், எரியும் ஜ்வாலை போல, சிலர் சந்திரனின் களங்கம் போன்ற நிறத்தினர், எந்த நிறமானாலும், தங்கள் காந்தனுக்கு பிரியமான, ரசிக்கத் தகுந்த வர்ணமே எனும்படி இருந்தனர்.  பொதுவாக, பெண்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் பெற்றவர்களாகவே, கொண்டவனிடம் அன்பும், ஆதரவும் உடையவர்களாகவும் இருக்கக் கண்டான். அவர்கள் முகங்களோ, சந்திரனுடைய பிரகாசமாகவும், கண்களின் இமை, இவையே நேத்ர மாலாவாக, ஆபரணங்களின் மாலையாக கூட்டமாகத் தெரிந்தன.  அந்த இடத்தில் ராஜ குலத்தில் தோன்றியவளும், கொடி மலர்ந்தது போல சரீரத்தை உடையவளுமாக தான் அறிந்திருந்த, ப்ரும்மா மனதில் நினைத்து உருவம் கொடுத்தது போன்றவளுமான பெண்மணியை மட்டும் காணவில்லை.  சனாதனமான தர்ம வழியில் நிற்பவளை, ராமனின் மனதில் வசிப்பவளை, அவனையே காம வசமாகி துன்புறச் செய்தவளை, உயர்ந்த ஸ்த்ரீகளிலும் உயர்ந்த ஸ்த்ரீயானவளை, கணவனின் மனதுக்கினியாளை மட்டும் காணவில்லை.  வனத்தில் தோகை விரித்தாடும் மயில் போன்றாளை, வரிசையாக, நீண்டு வளர்ந்திருந்த இமைகள் பட படக்க சிவந்து போகும் மென்மையான இயல்புடையவளை மட்டும் காணவில்லை.  தெளிவாகத் தெரியாத சந்திரனின் கிரணங்களோ, தங்கத்தால் ஆன எழுத்துக்கள் (சித்திரம்) புழுதி படிந்து கிடக்கிறதோ, அம்புகள் ஓயாமல் பயன் படுத்தி நுனி மழுங்கிப் போயினவோ, மேகங்களின் வரிசை காற்றில் அலைக்கழிக்கப்பட்டதோ, எனும்படி இருந்த சீதையைக் காணவில்லை. சொல்லின் செல்வனான ராமனுடைய பத்னியை, சீதையைக் காணாமல், துக்கம் மேலிட, வெகு நேரம் ஹனுமான் மந்தமாக செய்வதறியாது நின்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ப4வன விசயோ என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக