பொருளடக்கத்திற்கு தாவுக

சுந்தர காண்டம் 21 to 30

பிப்ரவரி 22, 2014

 

அத்தியாயம் 21 (359) ராவண த்ருணீகரணம் (ராவணனை துச்சமாக எண்ணுதல்)

 

ரௌத்ரன் எனப்படும் ராக்ஷஸன் வாயிலிருந்து வந்த சொற்களைக் கேட்டு சீதா, மெதுவாக தீன ஸ்வரத்துடன் பதில் சொன்னாள்.  ஏற்கனவே உடலும் உள்ளமும் நொந்து போய் வாடி இருந்தவள், நடுங்கும் குரலில் அழுகையை அடக்கியபடி பேசினாள்.  சதா தன் கணவனையே எண்ணி உருகியவள், தனக்கும் ராவணனுக்கும் இடையில் ஒரு புல்லை கிள்ளிப் போட்டு, மெதுவாக சிரித்து பதில் சொன்னாள்.  நிவர்த்தய மனோ மத்த:- என்னிடமிருந்து உன் புத்தியை மாற்றிக் கொள்.  அல்லது என்னிடம் செலுத்தும் இந்த கவனத்தை மாற்றி உன் உற்றாரிடம் வைத்துக் கொள்.  என்னை நீ இப்படி வேண்டுவதே சரியல்ல. நல்ல சித்திகளை, பாப கர்மாக்களையே செய்பவன் விரும்பினால் எப்படி கிடைக்கும்? செய்யக் கூடாததை நான் செய்ய மாட்டேன்.  ஏக பத்னி நான். நல்லவர்கள் தூற்றும் எதையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.  மகத்தான புண்ய குலத்தில் பிறந்தேன். அதைவிட மகத்தான குலத்தில் வந்து சேர்ந்தவள் நான்.  இதை சொல்லி விட்டு வைதேஹி, ராவணனை அலட்சியம் செய்யும் விதமாக திரும்பி நின்று கொண்டு மேலும் சொன்னாள்.  நான் பர பார்யா, அதாவது பிறன் மனைவி. உனக்கு பட்ட மகிஷி ஆக முடியாது.  தவிர நான் சதி, என் கணவனையே எக்காலும் பின் பற்றுபவள். சாது தர்மம், தர்மத்தில் எது சிறந்தது என்று எண்ணிப் பார். நல்லவர்கள் சொல்வதைக் கேள். உனக்கு உன் மனைவிகள் எப்படி உயர்வோ, அதே போல மாற்றான் மனைவியையும் மதிக்கக் கற்றுக் கொள்.  நிசாசரனே, உன்னையே உவமானமாக எடுத்துக் கொள். உன் மனைவிகளிடம் சந்தோஷமாக இரு. தன் பத்னிகளிடம் திருப்தியுறாமல் சபலமாக பிறன் மனைவியை நாடுபவனை, புத்தியில்லாதவன், செய்முறை அறியாதவன் என்று உலகம் தூற்றும். சென்ற இடத்தும் அவமானமே மிஞ்சும். இங்கு நல்லவர்களோ அறிஞர்களோ இல்லையா? அல்லது நல்லவர்களை நீ மதிப்பதில்லையா? அதனால் தான் உனக்கு இந்த விபரீத புத்தி, ஆசாரம் எதுவும் இல்லாமல், அதர்மம் மனதில் தோன்றியிருக்கிறது.  விஷயம் அறிந்த அறிஞர்கள் பத்2யமாக சொல்வதை, நீ கவனமாக கேட்பது போல கேட்டு விட்டு செய்யாமல் விடுகிறாய் போலும். அல்லது ராக்ஷஸர்களை ஒருவர் மீதியில்லாமல் அழிக்கத் துணிந்து விட்டாயா?  செழிப்பாக நிறைவாக இருந்த ராஜ்யங்களும், நகரங்களும், அரசன் அநியாயத்தில் மனதை செலுத்துபவனாக, தன் ஆத்மாவை உணராதவனாக இருந்தால், முழுவதுமாக நசித்து விடுவதைக் கண் கூடாக கண்டிருக்கிறோம்.  ரத்னங்களின் சமூமூகமே இங்குதான் உள்ளதோ எனும்படி செல்வ செழிப்பைக் கொண்டுள்ள லங்கா நகரமும் இதே கதியைத் தான் அடையப் போகிறது.  உன்னை அரசனாகப் பெற்றதால் தான் இந்த துர்கதியை அடைந்தது என்று தீர்க்க தரிசிகள் சொல்லப் போகிறார்கள். நீ ஒருவனே தான் காரணமாக, உன் செயலால் நாசம் அடைவதைக் காணப் போகிறாய்.  பாப கர்மாவைச் செய்தவன் நாசம் அடைந்தால், ஜீவ ராசிகள் கொண்டாடும். லங்கையின் நாசத்தால், தங்கள்  சுக வாழ்க்கையை இழந்த ஜனங்கள் உன்னைத் தான் ஏசப் போகிறார்கள். நல்ல வேளை ரௌத்திரன் அழிந்தான் என்பார்கள். உன் வீழ்ச்சியை மகிழ்ந்து கொண்டாடுவார்கள். என்னை செல்வத்தைக் காட்டியோ, ராஜ்யத்தை காட்டியோ, மயங்கச் செய்ய முடியாது.  பாஸ்கரனுடன் செல்லும் ஒளிப் பிரபையைப் போல நான் ராமனிடமிருந்து பிரிக்க முடியாதவள். லோக நாதனான ராமனின் தோள்களைச் சார்ந்தவள்.  வேறு யாரையும் மனதாலும் நினையேன்.  அந்த வசுதாதிபதியின் பட்ட மகிஷி. விரத ஸ்நானம் செய்த விப்ரன், தன்னை உணர்ந்த ப்ராம்மணனுக்கு அவன் கற்ற வித்தை உடன் வருவது போல. சாது ராவணா, ராமனுடன் என்னை சேர்த்து வை.  என் துக்கத்தை உணர்ந்து கொள். க3ஜாதிபனை பெண் யானை தொடருவது போல ராமனைத் தொடர்ந்து வனம் வந்தேன்.  அந்த ராமனை நண்பனாகச் செய்து கொள். தகுதி வாய்ந்த நீங்கள் இருவரும் மித்திரர்களாக இருப்பது தான் உசிதம்.  வதம் செய்வதை ராமன் எப்பொழுதுமே விரும்பியதில்லை.  நீ மித்திரன் ஆனால்,  சரணாகத வத்ஸலன், உன்னை தண்டிக்க மாட்டான். தர்மம் அறிந்தவன், புருஷ ரிஷபன், அவனுடன் உனக்கு நட்பு மலரட்டும்.  நீ உயிருடன் வாழ விரும்பினால், இதைச் செய்.  சரணாகத வத்ஸலனான, அவனை நீயும் மனம் மகிழும்படி செய். என்னையும் அவனிடம் ஒப்படைத்து விடு. இப்படி செய்தால் தான் உனக்கு மங்களம் உண்டாகும்.  ராவணா,  இப்படி செய்யாமல் இருந்தால் நீ ராமன் கையால் வதம் செய்யப் படுவாய், நிச்சயம். கொடுமையான வஜ்ரத்தையும் தடுத்து விடலாம். அந்தகனையும் வெகு நேரம் அருகில் வராமல் தடுத்து விடலாம். ஆனால் உன்னைப் போன்ற கொடூரமானவனை, ராமன் கோபத்துடன் எதிர்த்து வந்து நின்றால்,  விடவே மாட்டான்.  ராமனுடைய வில்லின் பெரும் சப்தத்தை வெகு சீக்கிரத்தில் கேட்கப் போகிறாய்.  சதக்ரதுவான  இந்திரன் எய்த அசனி என்ற ஆயுதம் போன்று கோஷம் செய்யும்.  வாயைப் பிளந்து கொண்டு நெருப்பை உமிழும் நாகங்கள் போன்ற ஆயுதங்கள், பா3ணங்கள் சுபர்ணன் என்ற கருடனின் வேகத்தில் வந்து விழப் போகின்றன.  இவைகளில் ராம, லக்ஷ்மண அடையாளங்கள் பொறிக்கப் பட்டிருக்கும்.  இந்த ஊரில் ராக்ஷஸர்கள் ஒருவர் விடாமல் நாசம் செய்வது போல வந்து விழும். கற்கள் விழுவது போல இடைவிடாது, மழையாக பொழியும்.  அந்த ராம கருடன், ராக்ஷஸேந்திர மகா சர்ப்பங்களை க்ஷண நேரத்தில் அழித்து விடுவான்.  அவன் வில்லிலிருந்து வெளிப்படும் அம்புகள்,  பாம்புகள் போல சீறிக் கொண்டு என்னை உன்னிடமிருந்து விடுவித்து விடும். கருடன் சர்ப்பங்களை பாய்ந்து வந்து தூக்கிச் செல்வது போல ராக்ஷஸர்களை இனம் கண்டு அழித்து விடும்.  சந்தேகமே இல்லை.  என் கணவன் சீக்கிரமே என்னை உன்னிடமிருந்து விடுவித்து விடுவான்.  எதிரிகளை தகிக்க வல்ல பராக்ரமம் உடையவன்.     அசுரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு கிடந்த செல்வத்தை, த்ரிவிக்ரமனாக வந்து விஷ்ணு காப்பாற்றியது போல, என்னை காத்து விடுவான். அந்த ஜனஸ்தானத்தில், ராக்ஷஸர்கள் போரில் அழிந்தபின், சக்தியில்லாத நீ, இந்த அநாகரீகமான செயலை செய்திருக்கிறாய். ராக்ஷஸனே, அந்த நரசிம்மம் போன்ற இருவரும் இல்லாத சமயம் ஆசிரமத்தினுள் வந்து திருட்டுத் தனமாக இந்த செயலை செய்தாய்.  இருவரும் உன் கண்ணில் படாமல் விலகியிருந்த சமயம் என்னை கவர்ந்து வந்தாய். அவர்கள் இருந்து நிழல் உன் மேல் பட்டிருந்தால் கூட, அவர்கள் நெடி உன் மேல் பட்டிருந்தால் கூட, அவர்கள் முன் நிற்க முடியாமல் ஓடியிருப்பாய்.  நாய்க் கூட்டம் சிறுத்தையை கண்டால் ஓடுவது போல அவர்கள் இருவரும் கண் முன் எதிரில் இருந்தால், விருத்திரன் இந்திரன் மூலம் ஒரு கையை இழந்தது போல, நிச்சயம் என் நாதன் லக்ஷ்மணன் உதவியோடு, சூரியன் சிறிய குட்டையில் நீரை வற்றச செய்வது போல உன் உயிரை வற்றச் செய்திருப்பான். அவன் சரங்கள் நீ குபேரனுடைய மலையில் சென்று மறைந்தாலும், அல்லது அவன் வீட்டில் மறைந்திருந்தாலும், தொடர்ந்து வரும். வருண ராஜனுடைய சபையில் அடைக்கலம் கேட்டு ஒளிந்திருந்தாலும், ராம பாணங்களுக்கு தப்ப முடியாது.  முற்றிய பெரிய மரம், அசனி என்ற இந்திரனின் ஆயுதத்தால் அடிபட்டு விழுவதைப் போல வீழ்வாய்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பஎடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ராவண த்ருணீகரணம் என்ற இருபத்தோராவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 22 (360) மாசத்3வயாவதி4கரணம் (இரண்டு மாதங்களே என்று கெடு வைத்தல்)

 

சீதையின் கடுமையான வார்த்தைகளைக் கேட்டு, ராக்ஷஸாதிபன் கொதித்தெழுந்தான்.  பிரியமாக காட்சி தருகிறாய், அப்ரியமாக பேசுகிறாய்.  சாந்தமாக பேசி எவ்வளவுக்கெவ்வளவு பெண்களை வசம் செய்ய முடியுமோ, அவ்வளவு பிரியமாக பேசியும் அவமானப் படுவதும் உண்டு.  உன்னிடத்தில் எனக்கு ஏற்பட்டுள்ள காமம் என் கோபத்தை அடக்கி வைத்திருக்கிறது.  நல்ல சாரதி, தவறான வழியில் செல்லும் குதிரைகளை அடக்குவது போல.  காமமும் மனுஷ்யனுக்கு வாமமாகவே இருக்கிறது. (வாமம்-விபரீதம்).  யாரிடம் ஒருவன் அல்லது ஒருவளுக்கு காமம் அன்பு தோன்றுகிறதோ, அந்த நபரிடத்தில் தான் அனுக்ரோசம், ஸ்னேகம் இவை உண்டாகின்றன. (அனுக்ரோசம்-தாக்ஷண்யம், பரிவு) அதனால் தான், வரானனே, உன்னை வதம் செய்யாமல் விட்டிருக்கிறேன். அனாவசியமாக, நாட்டை விட்டு துரத்தப்பட்டவனிடம் அன்பு வைத்திருக்கிறாய். அவனை மனதில் எண்ணியபடி நீ என்னை ஏசினாயே, அதற்காகவே உன்னை வதம் செய்ய வேண்டும். கடுமையாக என்னிடம் நீ பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் வதம் தான் தண்டனையாக இருந்திருக்கும். மைதிலி, மிகவும் துணிச்சலுடன் பயங்கரமான வார்த்தைகளை சொன்னாய், என்று சொல்லியவன், கோபத்தால் சிவந்த கண்களுடன் சற்று நிறுத்தியவன், திரும்பவும் அவளைப் பார்த்து வரவர்ணினி, உனக்கு இரண்டு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் என் மனைவியாக என் படுக்கையறை வருவாய். அதன் பின்னும் என்னை ப4ர்த்தாவாக ஏற்கா விட்டால், உன்னை என் காலை உணவாக கொள்வேன். துண்டு துண்டாக வெட்டி விடுவார்கள்.  ராக்ஷஸேந்திரன் இப்படி கடுமையாக அதட்டி ஜானகியை பயமுறுத்துவதை அருகில் இருந்து பார்த்த, உடன் வந்த கன்யா ஸ்த்ரீகள், தேவ, கந்தர்வ ஸ்த்ரீகள், வருந்தினர். தங்கள் பெரிய கண்களால் ஜாடை காட்டி சிலர், உதடுகளை சுழித்து சிலர், முடிந்தவரை முகத்தாலும், கண்களாலும் அவளை சமாதானப் படுத்த முயன்றனர்.  இதனால் கிடைத்த ஆறுதலால் தான் போலும், பயத்தை உதறித் தள்ளி சீதா தைரியமாக ராவணனைப் பார்த்து பதில் சொன்னாள். தன் குல பெருமை விளங்கும் படியும், தன் நடத்தையை நிலை நிறுத்தவும், தன் நன்மைக்காகவும், பேசினாள்.  உன்னைச் சார்ந்தவர்கள் யாருமே நீ அனாவசியமாக அழிவதை விரும்பவில்லை.  ஆயினும் உன்னை தடுக்காமல் இருந்தார்களே. அது ஏன்? நல்லவர்கள் தூற்றும் இச்செயலை செய்யவிடாமல் அறிவுறுத்தி இருக்கலாமே.  இந்திரனுடைய மனைவி சசி போல நான் தர்மாத்மாவான ராமனுடைய தர்ம பத்னி.  உன்னைத் தவிர வேறு யாரும் என்னை மனதால் கூட தவறாக நினைத்ததில்லை. ராக்ஷஸாத4மனே, அளவில்லா தேஜஸுடைய ராமபத்னி நான். என்னிடம் நீ பிதற்றிய கடுமையான சொற்களுக்கு பரிகாரம் எங்கு போய் தேடுவாய். தலை நிமிர்ந்து நடக்கும் மாதங்கமும், (பெரிய ஆண் யானையும்) முயல் குட்டியும் ஒன்றாக காட்டில் இருக்கலாம், ஆனால் இரண்டும் ஒன்றாகுமா? அந்த யானை போன்றவன் என் ராமன். நீ முயல் குட்டி. நீசனே, இக்ஷ்வாகு நாதனை குறை சொல்ல நீ வெட்கப் படவில்லையே. அவன் எதிரில் நீ நின்றதே இல்லையே.  என்னை தவறாக பார்க்கும் இந்த க்ரூரமான இரு கண்களும், விரூபமாக க்ருஷ்ண பிங்களமாக (கருமையும் மஞ்சளுமாக) இருக்கும் இந்த கண்கள் தெறித்து விழவில்லையே. தசரத ராஜாவுடைய மருமகள், தர்மாத்மாவான ராமனுடைய பத்னி, என்னைப் பார்த்து இப்படி அநாகரீகமாகப் பேசும் உன் நாக்கு ஏன் துண்டித்து விழவில்லை. ராமனிடமிருந்து எனக்கு அனுமதி கிடைக்காததாலும், தவ விரதத்தை நான் மேற்கொண்டிருப்பதாலும் தஸக்ரீவா, உன்னை பஸ்மமாக்காமல் விடுகிறேன். என் தேஜஸால், உன்னை தகித்திருக்க முடியும். ராமனிடமிருந்து பிரித்து என்னை தூக்கி வர உன்னால் முடிந்திருக்காது.  விதி தான் உன் நாசத்திற்கு உன் செயல்  மூலமாகவே வழி வகுத்திருக்கிறது. சந்தேகமே இல்லை. சூரன், த4னத3 சகோதரன், ஏராளமான படை பலங்கள் உடையவன் நீ ஏன் இப்படி ராமனை ஏமாற்றி அவன் தா3ரத்தை திருட துணிந்தாய்.  சீதை பேசப் பேச ராவணன் பொறுமையிழந்தான். மேலும் கொதித்தெழுந்தான். கண்களை சுழட்டி கோபத்துடன், ஜானகியைப் பார்த்து விழித்தான். க்ரூரமான கண்களும், கரு மேகம் போன்ற உடலும், மகா புஜங்களும், தலைகளும், சிங்கங்கள் போல நடை போடும் மான், நாக்கு நுனி சிவக்க, அம்ருத மத2னத்தின் போது மந்த3ர மலையைச் சுற்றி கயிறாக கட்டப்பட்ட பாம்பு சீறியது போல இரண்டு புஜங்களும் துடிக்க, மந்தர மலையே சிகரங்களோடு எதிரில் நிற்பது போல நின்றான். இளம் சூரியனின் நிறத்தில் இருந்த குண்டலங்கள் ஆடின. சிவந்த அசோக புஷ்பங்கள் மலை மேல் மரங்கள் ஆடும் பொழுது தெரிவது போல இருந்தன.  வசந்தனே உருவம் எடுத்து வந்தாற் போல வந்தவன், கல்ப விருக்ஷம் போல உருவமும், மயான பூமியில் இருக்கும் பொம்மைக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரங்களே, அதன் தோற்றத்தை மேலும் பயங்கரமாக காட்டுவது போல எதிரில் நின்றவன், கண்கள் சிவக்க தகித்துவிடுபவன் போல மைதிலியைப் பார்த்தான். அவன் மூச்சுக் காற்று நாகங்கள் சீறுவது போல வேகமாக வந்தது. அர்த்தஹீனன் (செல்வமில்லாதவன்), நியாயமே இல்லாதவன், அவனை அனுசரித்து அவனுடன் வாழ விரும்புகிறாயே.  உன்னை இன்றே நான் நாசம் செய்வேன். சந்த்யா காலத்தை சூரியன் தன் ஒளியால் இல்லாமல் போகச் செய்வது போல, என்றவன், மற்ற ஜனங்களைப் பார்த்து கட்டளையிட்டான். ராக்ஷஸிகளே, என்ன செய்வீர்களோ, ஜானகியை என்னை ஏற்றுக் கொள்ளும்படி செய்யுங்கள்.  சீக்கிரம், அவள் தானாக மசிய மாட்டாள். சாம, தா3ன, பே43ம் முதலியவற்றாலும், பிரதிலோம, அனுலோம என்ற முறைகளிலும், தேவையானால் த3ண்டமும் உபயோகியுங்கள், அவளை திசை திருப்புங்கள். அவள் மனதில் என்னை ஏற்றுக் கொள்ளும்படி செய்யுங்கள்.  இப்படி திரும்ப திரும்பச் சொல்லி காமத்தோடு இப்பொழுது கோபமும் சேர்ந்து கொள்ள நின்றவனை, தா4ன்யமாலினி என்ற அவன் மகிஷி, அணைத்து சமாதானம் செய்து எங்களுடன் இன்பத்தை அனுபவி, மகாராஜா. சீதையிடம் என்ன வைத்திருக்கிறது.  வர்ணமும் இல்லை, உருவமும் இல்லை, மனித பெண். ராக்ஷஸேஸ்வரா, இவளுக்கு திவ்யமான போக போக்யங்கள் கொடுப்பினை இல்லை போலும். தங்கள் புஜ பலத்தால் பெற்ற பல போக போக்யங்களை இந்திரன் தானே மனமுவந்து அளித்தவை, இவற்றை, தங்களை விரும்பாதவளுடன் பூர்ணமாக அனுபவிக்க முடியாது. சரீரம் தகிக்கும். விரும்பி உங்களுடன் இன்பங்களை பகிர்ந்து கொள்ள விழையும் ஸ்த்ரீகளே உங்களுக்கு உத்தமமான மன நிறைவை சந்தோஷத்தைக் கொடுப்பாள். அன்பும் இது போன்ற உறவில் தான் பெருகும். அந்த பலசாலியான அரசன், இப்படி ராக்ஷஸ ராஜ மகிஷிகள் சொல்லி கவனத்தை திருப்பி அழைத்துச் செல்ல, உடன் சென்றான்.  சிரித்துக் கொண்டு அவர்களுடன் சென்றான்.  தேவ கந்தர்வ பெண்களும், நாகர்களும் அவனை நாலா புறமும் சூழ்ந்தபடி மாளிகைக்குள் பிரவேசித்தனர்.  தர்ம சிந்தனை மிக்க சீதையை அழ விட்டு, பயமுறுத்தி நடுங்கச் செய்து துன்புறுத்தியதோடு தன் எண்ணம் நிறைவேறாத போதிலும், காமனின் ஆதிக்கத்தில் தன் க்ருஹம் வந்து சேர்ந்தான்.

  

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், மாஸத்3வயாதி4கரணம் என்ற இருபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 23 (361) ராக்ஷஸி ப்ரரோசனம் (ராக்ஷஸிகள் பயமுறுத்துதல்)

 

மைதிலியிடம் இவ்வாறு கடுமையாக பேசி விட்டு ராக்ஷஸ ராஜன் மற்ற பெண்டிருடன் அந்த இடத்தை விட்டு அகன்றான். ராவணன் அந்த:புரம் திரும்பி சென்ற பின், பயங்கர உருவம் கொண்ட ராக்ஷஸிகள் மைதிலியை வார்த்தைகளால் துன்புறுத்த ஆரம்பித்தனர். கோபத்துடன் இரைந்தனர். புலஸ்திய குலத் தோன்றல் எங்கள் மன்னன். த3சக்3ரீவன் என்று பெயர் பெற்றவன். அவனுக்கு மனைவியாவதை சீதே, நீ பெருமையாக அல்லவா எண்ண வேண்டும். ஏன் மறுக்கிறாய்? என்றனர். ஏகஜடா என்ற ராக்ஷஸி கண்களை உருட்டியபடி சீதையை பெயர் சொல்லி அழைத்து, ஆறு பிரஜாபதிகளில் நான்காவது ப்ரஜாபதி ப்ரும்மாவின் மானஸ புத்திரன், புலஸ்தியர் என்று பெயர் பெற்றார். புலஸ்தியருடைய மகன் விஸ்ரவஸ் என்ற பெயருடன் பிரஜாபதிக்கு சமமான தேஜஸுடன் இருந்தான். விசாலாக்ஷி, அவன் மகன் இந்த ராவணன்.  சத்ரு ராவணன் (எதிரிகளை கலங்கடிக்க வல்லவன்). ராக்ஷஸேந்திரன். இவனுக்கு மனைவியாவதில் உனக்கு என்ன தயக்கம். நான் சொல்வதைக் கேள். யோசிக்காதே. இதன் பின் ஹரி ஜடா என்ற ராக்ஷஸி, பூனை போன்ற தன் கண்களை உருட்டி விழித்தபடி, புத்தி  சொல்ல வந்தாள்.  எந்த ராவணன் முப்பத்து மூன்று தேவர்களையும் ஜயித்து, தேவராஜனையும் ஜயித்து, வெற்றி வீரனாக இருக்கிறானோ, அவனுக்கு நீ தகுதியான மனைவியாக இருப்பாய். ஏன் மறுக்கிறாய்? இதன் பின் ப்ரக4ஸா என்ற ராக்ஷஸி, பெரும் கோபம் கொண்டவள் போல சீதையை கடும் சொற்களால் நிந்தித்தபடி வந்தாள். வீரத்தில் சிறந்தவன், சூரன். புறமுதுகு காட்டாதவன், பலசாலி, இவனுக்கு மனைவியாவதில் உனக்கு என்ன கஷ்டம்? பிரியமான பல ராக்ஷஸிகளை விட்டு பலவானான எங்கள் அரசன் உன்னை நாடுகிறான். மற்ற ராணிகள் அனைவருமே நல்ல பாக்யசாலிகள். அவர்களை விட உன்னை உயர்வாக எண்ணுகிறான். அப்படியிருக்க, நீ ஏன் மறுக்கிறாய்? பலவிதமான ரத்னங்களுடன் ஸ்திரீ ரத்னமாக ராவணன் அந்த:புரத்து ஸ்திரீகள் இருக்கிறார்கள். விகடா என்ற ராக்ஷஸி, வந்தாள். அடிக்கடி நாக, கந்தர்வ, தானவர்களுடன் போரிட்டு, வென்று, வாகை சூடி வந்தவன் ராவணன். அவனாக உன் அருகில் வந்து வேண்டுகிறான். சர்வசம்ருத்34னான நிறைந்த செல்வ செழிப்பையுடைய மகாத்மாவான ராவணனுக்கு பார்யா ஆவதில் உனக்கு என்ன கஷ்டம்? அத4மே மட்டமானவள் நீ. உடனே துன்முகீ என்ற ராக்ஷஸி வந்தாள்.  மரியாதை காரணமாக எந்த ராவணனிடம் சூரியன் தகிப்பதில்லையோ,  மாருதன் பயந்து கோபமாக வீசுவதில்லையோ,  கருவிழியாளே, அந்த ராவணனுக்கு இணங்க நீ ஏன் மறுக்கிறாய்? எவனிடத்தில் பயந்து மரங்கள் அவன் அருகில் சென்றால், புஷ்பங்களை உதிரச் செய்யுமோ, மலைகள் குடி நீரையும், மேகங்கள் அவன் மனம் கோணாமல் மழையையும் பொழியுமோ,  அந்த ராக்ஷஸ ராஜன், ராஜ ராஜன், பாமினி, ஏன் அவனுக்கு மனைவியாவதில் விருப்பம் இல்லாமல் இருக்கிறாய்? நீ சொன்னவைகளும் சரியே. தத்துவங்களைச் சொன்னாய். இருந்தாலும் தற்சமயம் நாங்கள் சொல்வதைக் கேள். இல்லையெனில் உயிருடன் இருக்க மாட்டாய்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ராக்ஷஸி ப்ரரோசனம் என்ற இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 24 (362 ) ராக்ஷஸீ நிர்ப4ர்த்ஸனம் (ராக்ஷஸிகள் பயமுறுத்துதல்.)

 

இதன் பின் ராக்ஷஸிகள் ஒன்று சேர்ந்து சீதையை அதட்ட ஆரம்பித்து விட்டனர். சீதே, நீ ஏன் அந்த:புரத்தில் வசிக்க விரும்பவில்லை. மனோகரமாக இருக்கும். விலை உயர்ந்த சயனங்கள் அலங்கரிக்கும். எந்த ஜீவனானாலும் இதில் வசிக்கவே விரும்புவர். உனக்கு ஏன் மனம் ஒப்பவில்லை. மானுஷி, மனிதனையே பர்த்தாவாக உயர்வாக எண்ணுகிறாய். ராமனிடத்திலிருந்து உன் மனதை திருப்பிக் கொள். இனி அவனிடம் நீ செல்வது என்பது நடக்கவே முடியாது. மூவுலக செல்வத்தை அனுபவிக்கும் ராவணன், ராக்ஷஸேஸ்வரன், இவனை மணந்து கொள். எல்லா சுகங்களையும் அனுபவிப்பாய்.  மனிதனான ராமனையே நினைத்து உருகுவதன் காரணம் நீ மனித பெண்ணாக இருப்பதால் தான். சோபனே, ராஜ்யத்திலிருந்து நீக்கப் பட்டவன், தன் செயலில் வெற்றி பெறாதவன், விக்லவம்- மனம் கலங்கி இருப்பவன்,  மாசற்றவளே, நீ அவனிடம் இன்னமும் என்ன எதிர் பார்த்து காத்திருக்கிறாய்? எனவும், பத்மம் போன்ற கண்கள் குளமாக, கண்ணீருடன் பதில் சொன்னாள்.  நீங்கள் அனைவரும் கூடி இவ்வளவு சொல்கிறீர்களே, அது தவறு என்று தான் எனக்கு படுகிறது. மனித ஸ்திரீ ராக்ஷஸனுக்கு மனைவியாக முடியாது. நீங்கள் எல்லோரும், சேர்ந்து என்னை சாப்பிட்டு விடுங்கள். நான் உங்கள் அறிவுரையை ஏற்க மாட்டேன். தீனனோ, ராஜ்ய ஹீனனோ, என் பர்த்தா எனக்கு குரு, உயர்வு. அவனை நான் நித்யம் அனுசரித்து வந்திருக்கிறேன். சுவர்ச்சலா சூரியன் பின் செல்வது போல, இந்திரனை தொடர்ந்து சசி எப்பொழுதும் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருப்பது போல, வசிஷ்டரை அருந்ததி போலவும்,  ரோஹிணி சந்திரனை சார்ந்து இருப்பது போலவும், அகஸ்தியரை லோபா முத்திரை போலவும், ஸ்யவனரை சுகன்யா போலவும், சத்யவானை சாவித்திரி தொடர்ந்து சென்றது போலவும், மதி கபிலனை, சௌதா3ஸனை மத3யந்தி போலவும், சக3ரனை கேசினி போலவும், த3மயந்தி நைஷத4னைப் போலவும் நான் என் பதியை சார்ந்தே இருப்பவள். இந்த பதி விரதைகளின் வரிசையில் நானும் ஒருவள். அதனால் இக்ஷ்வாகு வம்ச நாதனான ராமனை பதியாக அடைந்தவள், அவனையே அனுசரித்து நடப்பவள்.  சீதையின் விளக்கத்தைக் கேட்ட பின் ராக்ஷஸிகளின் கோபம் பன் மடங்காகியது.  ராவணன் கட்டளையை செயல் படுத்த வேண்டிய கட்டாயமும் இருந்தது.  எதுவும் செய்ய முடியாமல் ஹனுமான் சிம்சுபா மரத்தில் மறைந்து இருந்தபடி, சீதையை இவர்கள் ஆளுக்கு ஆள் அதட்டி உருட்டி பயமுறுத்துவதை கேட்டுக் கொண்டு வாளா இருந்தான். ராக்ஷஸிகள் அழும் சீதையைச் சுற்றி அமர்ந்தனர்.  கூரான ப்ரலம்ப3ம் எனும் ஆயுதம், நாக்கை அறுத்து விடக் கூடியது, ப்ரஹஸ்தங்கள் இவற்றை கையில் வைத்துக் கொண்டு அவளை என்ன செய்யலாம் என்று தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். இவள் ராவண ராஜாவுக்கு மனைவியாகத் தகுதியானவள் இல்லை. இவ்வாறு ஒருவள் சொல்ல மற்றவர்களும் மேலும் அவளை கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள்.  கண்களை துடைத்தபடி, ஹனுமான் இருந்த சிம்சுபா  மரத்தடிக்கே வந்து சேர்ந்தாள்.  அந்த மரத்தடியிலேயே நின்றாள்.  சுற்றி நின்ற ராக்ஷஸிகள் தங்கள் கடமையைச் செய்தனர்.  வினதா என்ற ராக்ஷஸி, சீதே, போதும். இதுவரை உன் கணவனிடம் விஸ்வாஸமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாய். நிறுத்திக் கொள். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் துன்பம் தான். மனித இயல்பு, அவர்கள் தர்மம் இது என்று சொன்னாய்.  சந்தோஷம். மைதிலி, இப்பொழுது நான் சொல்வதும் உன் நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்.  ராவணனை பர்த்தாவாக ஏற்றுக் கொள்.  உலகில் எல்லா ராக்ஷஸர்களுக்கும் தலைவன். இந்திரனுக்கு சமமான வீரமும், ஆற்றலும் உள்ளவன். நல்ல ரூபமும், தாக்ஷிண்யமும் உள்ளவன். த்யாக சீலன். காணவும் இனிய தோற்றம் உடையவன். மனிதன், க்ருபணன் (கஞ்சன்) செல்வம் எதுவும் இல்லாதவன், அந்த ராமனை விட்டு விட்டு, இந்த ராவணனை மணந்து கொள்.  வைதேஹி, திவ்யமான அங்க ராகங்களை பூசிக் கொண்டு, ஆபரணங்களை அணிந்து, இன்றிலிருந்து எல்லா உலகுக்கும் அரசியாக, தலைவியாக, ஈ.ஸ்வரியாக இரு.  அக்னிக்கு ஸ்வாஹா எப்படியோ, இந்திரனுக்கு சசி எப்படியோ, அது போல பெருமைகளைப் பெறுவாய்.  ராமனுடன் என்ன வைத்திருக்கிறது.  இதோ, அவன் ஆயுள் முடியப் போகிறது. நான் சொல்வதைக் கேள். முஹுர்த்த நேரத்துக்குள், நீ ஏற்றுக் கொண்டு வழிக்கு வராவிட்டால், நாங்கள் எல்லோருமாக உன்னை உடனே சாப்பிட்டு விடுவோம்.  இதன் பின் விகடா என்ற ராக்ஷஸி, தன் அளவுக்கு மிஞ்சிய பெரிய ஸ்தனங்களுடன் அருகில் வந்தாள். முஷ்டியை உயர்த்தி கர்ஜித்தாள். மைதிலி, நீ எவ்வளவு கடுமையாக ராவணனை விமர்சித்தாய்.  அவனுக்கு பிடிக்காத வார்த்தைகளைச் சொன்னாய். அணைத்தையும் ராவணன் உன்னிடம் உள்ள அன்பால் பொறுத்துக் கொண்டான். தாக்ஷிண்யம் மிக்கவன். துர்மதி நீ. அவன் உன்னிடம் இவ்வளவு ம்ருதுவாக கருணையோடு வேண்டும் பொழுது உதாசீனப் படுத்துகிறாய்.  எங்கள் வார்த்தையை கேட்கவா போகிறாய்.  விதி உன்னை ஆட்டுவிக்கிறது.  மற்றவர்கள் நினைத்து பார்க்க முடியாத பெரும் சாகரத்தை கடந்து உன்னை அழைத்து வந்திருக்கிறான்.  எந்த அன்னியனும் கால் வைக்க முடியாத காவல் மிகுந்த ராவணனின் அந்த:புரத்தில், உனக்கு இடம்        அளித்திருக்கிறான்.  ராக்ஷஸர்கள் சுற்றிலும் காவல் காக்கிறார்கள். நாங்களும் உன்னை பாதுகாக்கவே இங்கு இருக்கிறோம். இங்கிருந்து சாக்ஷாத் புரந்தரனான இந்திரனே வந்தாலும், உன்னை விடுவித்து அழைத்துச் செல்ல முடியாது. மைதிலி, நாங்கள் உன் நன்மைக்குத் தான் சொல்கிறோம். நாங்கள் சொல்வதைக் கேள். போதும் கண்ணீர் பெருக்கியது. அனர்த்தத்தைத் தரும் இந்த துயரை விடு. இப்படி தினமும் இளைத்து துரும்பாவதை நிறுத்து.  ராமனையே எண்ணி உருகாதே. மனதில் மகிழ்ச்சியையும், அன்பையும் நிரப்பிக் கொள். சீதே, ராக்ஷஸ ராஜன், அவனை மணந்து கொண்டு ஆனந்தமாக இரு. பயந்த சுபாவம் உடையவளே, உனக்கே தெரியும். ஸ்த்ரீகளுக்கு யௌவனம் நிலையானது அல்ல.  இதோ, திரும்பி பார்க்கும் முன் மாறி விடும். இந்த இளமை உன்னை விட்டு போகும் முன், நல்ல சுகங்களை அனுபவிப்பாய். உத்யானங்கள், அழகிய நந்த வனங்கள், மலைகள், மலைசாரல்களில் அமைந்த உத்யான வனங்கள் இவற்றில் ராக்ஷஸ ராஜனுடன் சந்தோஷமாக சஞ்சரித்து அனுபவிப்பாய். மதி3ரேக்ஷணே ஸ்ரீ (மயக்கும் விழியாளே) ஏழாயிரம் ஸ்த்ரீகள் உனக்கு ஏவல் செய்ய தயாராக இருக்கிறார்கள். ராவணனை ப4ர்த்தாவாக ஏற்றுக் கொள். ராவணன் ராக்ஷஸ குலத்துக்கே ப4ர்த்தா-தலைவன். நீ மறுத்தால், மைதிலி, உன் ஹ்ருதயத்தை பெயர்த்து எடுத்து விழுங்கி விடுவேன். நான் சொன்னபடி செய்யாவிட்டால், இது தான் வழி. இதன் பின் சண்டோதரி என்ற ராக்ஷஸி வந்தாள். கையில் இருந்த பெரிய சூலத்தை விளையாட்டாக சுழற்றிக் கொண்டே வந்தாள். இந்த மான் விழியாளை, சற்று பயந்தாலே நடுங்கும் மார்பகங்களை உடையவளை, ராவணன் கவர்ந்து கொண்டு வந்த பொழுதே என் மசக்கை (சாப்பிடும் ஆசை-சாதாரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவது) அதிகமாகியது.  இவள் முதுகு தண்டோடு சேர்த்து ஹ்ருதயத்தையும் தலையையும் சாப்பிட வேண்டும் என்று எனக்கு அடக்க முடியாத ஆசை, என்றாள். ப்ரக4ஸா என்பவள், ஏன் யோசிக்க வேண்டும், இவள் கழுத்தை நெறித்து விடுவோம். ராவணனிடம் அந்த மானுட பெண் மரித்து விட்டாள் என்று சொல்வோம். அரசன், சரி சாப்பிடுங்கள் என்றுதான் சொல்லப் போகிறான். ஏன் தயங்குகிறோம். எனவும், அஜா முகி என்பவள், இவளை சமமாக துண்டம் போட்டு எல்லோருமாக விழுங்கி விடுவோம். விவாதமே எனக்கு பிடிக்கவில்லை. இவளுடன் பருக பானங்கள் கொண்டு வாருங்கள், லேகியங்கள், ஊறுகாய்கள் நிறைய வந்து சேரட்டும். சூர்ப்பணகா என்பவள், இதை ஆமோதித்தாள். அஜாமுகி சொல்வது போல செய்வோம். மது, கள் வகையறாக்களும் நிறைய வரவழைப்போம். எல்லா துக்கத்தையும் அது போக்கும். மானுஷ மாமிசத்தை சாப்பிட்டு கள்ளுண்டு, நிகும்பிளா என்ற நடனம் ஆடுவோம். இப்படி ஆளுக்கு ஆள் பேசவும், தைரியம் இழந்த சீதா, தேவ லோக பெண் போன்றவள், அழுதாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ரா:க்ஷஸி நிர்ப4ர்த்ஸனம் என்ற இருபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

 

 

அத்தியாயம் 25 (363) சீதா நிர்வேத3: (சீதையின் துக்கம்)

 

இப்படி இவர்கள், தலைக்குத் தலை கடுமையாக பேசவும், ஜனகாத்மஜா, பொறுக்க முடியாமல் அழுதாள்.  பயத்துடன், குரல் தழ தழக்க வேண்டினாள். மனித பெண், ராக்ஷஸனுக்கு மனைவியாக முடியாது. என்னை உங்கள் விருப்பம் போல விழுங்கி விடுங்கள். ஆனால், நீங்கள் சொல்வதை நான் கேட்க மாட்டேன். அந்த     ராக்ஷஸிகளின் மத்தியில், ராவணன் அதட்டி நிர்பந்தித்ததைவிட அதிகமாக வேதனைப் பட்டாள்.  நடுக்கத்தில் தன் உடலின் உள்ளேயே புகுந்து விடுபவள் போல, உடலை குறுக்கி கொண்டாள். வனத்தில், தன் இனத்தை விட்டுப் பிரிந்த மான் குட்டி, ஓனாய்கள் துரத்த நடுங்குவது போல நடுங்கினாள்.  அந்த சிம்சுபா விருக்ஷத்தின் பெரிய மரக் கிளையை பிடித்தபடி, மனதில் துயரோடு, தன் பர்த்தாவை எண்ணினாள்.  கண்களிலிருந்து நீர் பெருகி மார்பை நனைத்தது.  இந்த சோகத்துக்கு முடிவே இல்லையா என்று எண்ணினாள். தன் கேசமே வளைந்து சர்ப்பம் போல இருப்பதைக் கண்டாள். பெருமூச்சு விட்டபடி, ஹா ராம, ஹா லக்ஷ்மணா, என்று துக்கத்துடன் அரற்றினாள். என் மாமியார் கௌசல்யே, ஹா சுமித்ரே, என்றும் அழுதாள். உலகில் சொல்வார்கள்- அகாலத்தில் ம்ருத்யு வராது என்று.  ஸ்த்ரீயோ, புருஷனோ, ஜீவித காலம் நம் கையில் இல்லை என்று சொல்வார்கள். அது உண்மை தான். நான் ராமனை விட்டுப் பிரிந்து, இந்த ராக்ஷஸிகளின் இடையில் இவர்களின் அதட்டலையும் உருட்டலையும் கேட்டுக் கொண்டு இன்னமும் உயிர் தரித்து இருக்கிறேனே, இதுவே பிரமாணம் என்று எண்ணிக் கொண்டாள். அல்ப புண்யா நான். நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.  அனாதை போல சாகப் போகிறேன்.  சமுத்திர மத்தியில், நிரம்பிய படகு, வேகமாக வீசும் காற்றில் அலை பாய்ந்து தள்ளாடுவது போல என் வாழ்க்கையும் ஊன்று கோல் இல்லாமல் போய் விட்டது. கணவனை கண்ணாலும் காணாமல், இப்படி இந்த ராக்ஷஸிகளின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேனே. இதை விட துக்கம்  வேறு என்ன வேண்டும்? ஆற்றின்  நீர் கரையை அரித்துக் கொண்டு போவது போல திடுமென வெள்ளமாக வந்த இந்த சம்பவங்கள் என் வாழ்க்கையை நாசம் செய்து விட்டனவே. பத்ம பலாசம் போன்ற கண்களையுடையவனை, சிம்மம் போல வீர நடை போடுபவனை, பிரியமாக பேசுபவனை, செய் நன்றி மறவாதவனை, என் நாதனை கண்ணால் காண்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். கடுமையான விஷத்தை  அருந்தியவன் முடிவு நிச்சயம் ஆவது போல, ராமனை விட்டுப் பிரிந்த என் முடிவும் இதோ நெருங்கி விட்டது போலும். ஜன்மாந்திரத்தில் நான் என்ன பாபம் செய்தேனோ, இப்படி தாங்க முடியாத கோரமான துக்கம் வந்து வாய்த்திருக்கிறது. உயிரை விடத்தான் நினைக்கிறேன். இந்த ராக்ஷஸிகளின் காவலை விட மரணம் மேலானது.  ராமனைப் பற்றி எதுவுமே தெரியவும் இல்லை. இந்த மனித பிறவியே தி4க்-கஷ்டம். பரவஸ்யதாம்- அடிமையாக இருப்பது, மற்றவர்களை அண்டி இருப்பது, அதைவிட தி4க்-கஷ்டம். தன் இஷ்டம் போல உயிர் விடக் கூட முடியாத ஒரு நிலை என்று சொல்லிக் கொண்டாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சீதா நிர்வேத3: என்ற இருபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 26 (364) ப்ராணத்யாக3 சம்ப்ரதாரணம் (உயிரை விடத் துணிதல்)

 

தரையை பார்த்தபடி உன்மத்தம் பிடித்தவள் போல, மதுவுண்டு மயங்கியது போல, ப்4ராந்த- எதையோ கண்டு பயந்தவள் போல புலம்பினாள். கண்ணீர் பெருகி ஓடியது. பூமியில் அமர்ந்து விட்டாள். சிறு குழந்தை போல தேம்பினாள். ராகவனிடமிருந்து, ராக்ஷஸன் பலாத்காரமாக நான் அழ அழ அழைத்து வந்தான். இந்த ராக்ஷஸிகளின் மத்தியில், இவர்களின் பயமுறுத்தலை கேட்டுக் கொண்டு நான் எத்தனை நாள் உயிர் வாழ முடியும்? என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. பூஷணங்களோ. செல்வமோ எனக்கு எதற்கு? மகாரதியான ராமனை விட்டுப் பிரிந்து இந்த ராக்ஷஸிகளின் மத்தியில் இப்படி உயிர் வாழ்கின்றேனே. என் மனம் (ஹ்ருதயம்) கல்லால் ஆனதோ? அல்லது நரை திரை இல்லாத அமரத் தன்மையை அடைந்து விட்டேனா.  எந்த வித உணர்ச்சியும் பாதிக்காத ஜடமாக ஆகி விட்டேனா? என் ஹ்ருதயம் இந்த துக்கத்தில் சிதறி போகவில்லையே. தி4க். கஷ்டம். நான் ஒரு பண்பில்லாத கோழை. ராமனைப் போன்ற ஒரு மகானைப் பிரிந்தும் ஒரு முஹுர்த்த நேரம் கூட உயிர் வாழ்வது முடியாது என்று இல்லாமல் பாப ஜீவிதா- என் வாழ்க்கையே வீண்- பாபமானது.   இன்னமும் உயிருடன் இருக்கிறேன். எனக்கு உயிர் வாழ்வதில் சிரத்தையும் என்ன இருக்கிறது? சுகங்கள் தான், எனக்கு எதற்கு? என் பிரியமான ப4ர்த்தா, சாகரத்தை எல்லையாக கொண்ட பூமியின் நாயகன், எப்பொழுதும் பிரியமாகவே பேசுபவன்.  நீங்கள் என்னை துண்டாடி, புசித்து மகிழுங்கள். இதோ என் சரீரத்தை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். இந்த துக்கத்தை தாங்கிக் கொண்டு வெகு நாட்கள் நான் வாழவும் விரும்பவில்லை. இருக்கவும் மாட்டேன். என்னதான் நீங்கள் சொன்னாலும், என் இடது காலால் கூட எந்த நிசாசரனையும் தொட மாட்டேன். ராவணன் இப்படி நீசத் தனமான செயலை செய்தவன், அவனை ஏன் நான் மனதால் வரிக்கப் போகிறேன். என் குலப் பெருமையை அவன் அறியான். தன் குலத்தையும் பற்றி அறியான். அதனால் தான் தன் கொடூரமான குணத்தால், என்னை யாசிப்பதே தவறு என்று உணராமல் யாசிக்கிறான்.  என்னை நீங்கள் துண்டு துண்டாக சீவினாலும் கை கால்களை உடைத்து போட்டாலும், நெருப்பில் பொசுக்கினாலும், ராவணனுக்கு இணங்க மாட்டேன். அனாவசியமாக புலம்புவானேன். ராமன் தான் என் பர்த்தா. புகழ் பெற்ற அறிஞன், செய்நன்றி மறவாதவன், தயவு தாக்ஷண்யம் உடையவன். ராகவன், நன்னடத்தை உடையவன், என் பாக்ய குறைவால் இப்பொழுது ஏனோ வரவில்லை.  ஜனஸ்தான போரில் பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்களை ஒருவனாக அழித்தவன். ஏன் என்னிடம் பராமுகமாக இருக்கிறான். இந்த அல்ப வீர்யனான ராக்ஷஸன் வந்து என்னை தடுத்து விட்டான். யுத்தம் என்று வந்தால், இந்த ராக்ஷஸன் என் ராமனுக்கு தூசுக்கு சமானம். எதிர்த்து நின்றால், இவன் அழிவான்.  விராதனை அரண்யத்தில் அழித்தானே அது போல. அவன் ஏன் என்னிடம் பராமுகமாக இருக்கிறான்? ஒரு வேளை சமுத்திரம் இடையில் லங்கையை எளிதில் நெருங்க முடியாதபடி, சூழ்ந்து நிற்பதால் தான் வரவில்லையோ. இல்லையெனில், ராகவ பாணங்களுக்கு தடையாக அதன் வேகத்தை தாங்கும் சக்தி உள்ள வஸ்துவும் உலகில் உண்டா?  என்ன காரணமோ, ராக்ஷஸன் தன் பிரிய பத்னியை கவர்ந்து கொண்டு போனான் என்று அறிந்தும், த்ருட பராக்ரமனான ராமன் எந்த வித முயற்சியும் எடுக்காமல், தேடாமல் இருக்கிறான்.  ஒரு வேளை, நான் இங்கு இருப்பதே அவர்களுக்குத் தெரியாதோ. அது தான் சந்தேகமாகவே இருக்கிறது. லக்ஷ்மணன் தமையன் என் கணவன். இதைப் பொறுப்பானா? என்னை ராவணன் கடத்திச் சென்றான் என்ற விஷயம் அறிந்த ஜடாயுவும் போரில் வீழ்ந்தான். ராவணனுடன் எனக்காக அந்த ஜடாயு வீராவேசத்துடன் போரிட்டதும், இந்த ராவணன் அந்த முதிய ஜடாயுவை அடித்து நொறுக்கி விட்டானே.  வேறு யார் ராம, லக்ஷ்மணர்களுக்கு நான் இங்கிருப்பதை தெரிவிக்க முடியும் ? ஆஹா, வயது முதிர்ந்த நிலையிலும், ஜடாயு ராவணனுடன் சரிக்கு சரியாக சண்டையிட்டாரே. என்னை காப்பாற்ற, பெரும் முயற்சி செய்தார். எனக்காக இந்த அல்பனுடன் போரிட்டு விழுந்தார். ராகவனுக்கு மட்டும் நான் இங்கு இருப்பது தெரிய வந்தால், உலகில் ராக்ஷஸர்களே இல்லாமல் செய்து விடுவான். அராக்ஷஸ உலகமாக செய்து விடுவான். இந்த லங்கா புரியை த்வம்சம் செய்து விடுவான். பெரும் சாகரத்தை வற்றச் செய்து விடுவான். ராவணனுக்கு கீர்த்தீ என்று ஒரு பொருள் இருந்தால், அதையும் தரை மட்டமாக ஆக்கி விடுவான். அதன் பின் வீட்டுக்கு வீடு, ராக்ஷஸிகள் நான் இப்பொழுது அழுவது போலவே அழுது கொண்டிருப்பார்கள். சந்தேகமே இல்லை. லக்ஷ்மணனுடன் ராமன், ராவணனின் லங்கையை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறானோ? அவர்கள் கண்ணில் பட்ட பின் சத்ரு பக்ஷத்தில் இருப்பவன், முஹுர்த்த நேரம் கூட உயிர் தரித்து இருக்க மாட்டார்கள்.       சிதைகளிலிருந்து எழும் புகை வழியை மறைக்க, ஆகாயத்தை கழுகு வட்டமிட, சீக்கிரமே லங்கா ஸ்மசானம் போல ஆகப் போகிறது. என் மனோ ரதம்- ராமனை சென்றடைவது சீக்கிரமே நிறைவேறும் என்று தோன்றுகிறது.  உங்கள் அனைவருக்கும் கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது போலும். தற்சமயம் லங்கையில் காணப் படும் அசுபமான சகுனங்கள், கூடிய சீக்கிரமே லங்காவின் தேஜஸ் அழியும் என்று தெரிவிக்கின்றன. ராக்ஷஸாத4மனான ராவணன், தன் பாப கர்மாவின் பலனாக நாசம் அடையும் பொழுது, இதுவரை யாராலும் எளிதில் நுழைய முடியாத பாதுகாவலுடன் இருக்கும் இந்த லங்கா நகரமும் தன் ஸ்திர தன்மையை இழந்து விடும்.  நல்ல நிலைமையில் இருக்கும் ஸ்த்ரீ எதிர்பாராமல் கணவனை இழந்து கைம்பெண்ணாக தவிப்பது போல தவிக்கும்.  புண்யோத்ஸவங்கள் இன்றி, கணவனை இழந்த பெண் போலவே உற்சாகம் இன்றி இருக்கப் போகிறாள். நிச்சயம், சீக்கிரமே ராக்ஷஸ பெண்கள் வீடுகள் தோறும் கதறி அழுவதை கேட்கத் தான் போகிறேன். ஒரே இருட்டு சூழ, ராக்ஷஸ வீரர்கள் போரில் விழுந்து மாள, ராம பாணங்கள் சரமாரியாக விழுந்து லங்கையை பொசுக்கப் போகிறது. இவ்வளவும், என் நாதன் ராமன், சூரன், நான் லங்கையில் இருப்பதை அறிந்து வந்தால் தானே நடக்கும். இந்த துஷ்டன் ராவணன் என் வாழ்க்கைக்கும் கெடு வைத்திருக்கிறானே. அந்த காலமும் இதோ முடிந்து விடும். அதன் பின் என் மரணம் தான் நிச்சயம். இந்த நிசாசரர்கள் எது வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்.  செய்யக் கூடாதது இது, இதை செய்யலாம் என்ற பாகு பாடெல்லாம் இவர்களுக்கு இல்லையே.  தோன்றியபடி செயல் படுவார்கள்.  அதர்மம் தலை தூக்கி நின்றால், வினாசம் தான். அதுவும் உடனே விளையும் என்பது இந்த ராக்ஷஸர்களுக்கு தெரியவில்லையே. கண்டதை சாப்பிடுபவர்கள், பிணம் தின்னிகள், இவர்கள் தர்மத்தை எங்கே கண்டார்கள். காலை உணவாக என்னை ஒரு நாள் விழுங்கி விடுவார்கள். நான் என்ன செய்வேன்?  என் ப்ராண நாதனை அன்றி வேறு எதுவும் தெரிந்து கொள்ளவில்லையே.  ரக்தாந்த நயனம், கண் நுனியில் சிவந்து காணும் ராமனின் விழிகள் இடும் கட்டளைதான் எனக்கு வழிகாட்டி. அது இல்லாமல் என்ன செய்வேன்? யாராவது எனக்கு துளி விஷம் தர மாட்டார்களா? அப்படி தரக் கூடியவர்கள் இங்கு இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. சீக்கிரம் தனியாக, என் பதி உடன் இல்லாமல் நான் வைவஸ்வத தேவனை (யமனை) காணப் போகிறேன். நான் என்ன ஆனேன் என்பதே லக்ஷ்மணன் தமையனான என் பதிக்கு தெரியாமலே போகப் போகிறது. யார் சொல்வார்கள்? அப்படித் தெரிந்தால் உலகில் என்னை தேடாமலாவது இருப்பார்கள். அந்த வீரனும் என் காரணமாக துக்கத்துடன் உயிரை விடுவான். இந்த உலகில் உடலை தியாகம் செய்து விட்டு தேவலோகம் போவான். தேவர்கள் த4ன்யர்கள். ஸக3ந்த4ர்வர்கள், சித்34ர்கள், பரம ரிஷிகள் இவர்களும் பாக்கிய சாலிகள். இவர்கள் என் நாதனை காணப் போகிறார்கள். ராஜீவ லோசனான என் பதியைக் காண்பார்கள். என்னால் ராமனுக்குத் தான் என்ன உபயோகம்? நான் பார்யையாக இருந்து தர்மமோ, அர்த்த காமமோ எதுவுமே ராமனுக்கு கிடைக்கவில்லை. கண் எதிரில் இருக்கும் வரை தான் ப்ரீதி, அன்பு பெருகும். கண் மறைவானால் அன்பும் குறையத் தான் செய்யும்.  ஆனால், நன்றி மறந்தவர்கள் மறப்பார்கள். என் ராமன் அப்படியல்ல. என்னிடம் குணம் என்று எதுவுமே இல்லையா? இந்த நிலை வரக் காரணம் என் பாக்யம் (விணைப் பயன்) தானா ? எதனால் நான் என் பதியை விட்டுப் பிரிந்து இப்படி ஒரு துக்கத்தை அனுபவிக்கிறேன்? தெரியவில்லையே? இந்த கஷ்டத்தை விட என் உயிர் போவதே மேல். மாசற்ற நடத்தையுடையவன், சூரன், சத்ருக்களை கண்ட மாத்திரத்தில் ஓடச் செய்பவன் என்று இவ்வளவு பெருமைகள் உடையவனான என் நாதனை விட்டு விலகியபின் என் வாழ்க்கையில் என்ன இருக்கிறது? அல்லது சகோதரர்கள் இருவரும் சஸ்திரங்களையும் துறந்து, பழம் காய் கறிகளை உண்டு கொண்டு, வன வாசிகளாக, தபஸ்விகளாக மாறி விட்டார்களா? அல்லது, இந்த ராக்ஷஸ ராஜன் தந்திரமாக அவர்களையும் கொன்று விட்டானா? சகோதரர்கள், ராம லக்ஷ்மணர்கள் இருவரையுமே அவன் அழித்து விட்டானா? அப்படியிருந்தால் நான் உயிர் வாழ்ந்து தான் என்ன சாதிக்கப் போகிறேன்? என் உயிரை மாய்த்துக் கொள்வது தான் சரி. ம்ருத்யுவும் உடனே வந்து விடுகிறதா? இப்படி என் மனம் தத்தளித்து வாடும் பொழுதும் ம்ருத்யு அருகில் வருவதாக இல்லையே. ஜிதாத்மா- தங்களையே வெற்றி கொண்ட மனப் பக்குவம் மிக்க அறிவாளிகள், எவர்களுக்கு பிரியம், அப்ரியம் என்று எதுவும் இல்லையோ, அப்படிப் பட்ட புலனடக்கிய ஞானிகளே த4ன்யர்கள். பாக்யம் செய்தவர்கள். பிரியத்தினாலேயே துக்கம் வருகிறது. பிரியம் இல்லாமல் போனாலும் அதிக பயம். இந்த இரண்டிலும் இருந்து விடுபட்ட ஞானிகளுக்கு நமஸ்காரம். அவர்களே மகான்கள். அன்பையே தந்த ராமனை விட்டுப் பிரிந்த எனக்கு, மரணத்தை விட வேறு புகலிடம் ஏது? இந்த பாபி ராவணன் வசம் மாட்டிக் கொண்ட நான் என் உயிரை விடுகிறேன். அது தான் சரி.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ப்ராணத்யாக சம்ப்ரதாரணம் என்ற இருபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 27 (365)  த்ரிஜடா ஸ்வப்ன: (திரிஜடையின் கனவு)

 

இதைக் கேட்ட ராக்ஷஸிகள் ஆத்திரம் மிகுந்து, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். சிலர் ராவணனிடம் செய்தி சொல்ல விரைந்தனர். சிலர் அவள் அருகில் வந்து மேலும் கடுமையாக பேசலானார்கள். அனர்த்தமான உபதேசங்களைத் தொடர்ந்தனர். சீதே, அனார்யே, பாபி, நீயே உன் நாசத்தை தேடிக் கொண்டு விட்டாய்.  அழிந்து போக தீர்மானித்து விட்டாய். நாங்கள் ராக்ஷஸிகள். மனித மாமிசத்தை விரும்பி உண்போம் என்றனர்.  மேலும் அதட்டி அவளை பயமுறுத்திக் கொண்டிருந்தவர்களை, அப்பொழுது தான் எழுந்து வந்த வயதான மூதாட்டியான த்ரிஜடை தடுத்தாள்.  அறிவிலிகளே, உங்களுக்குள் ஒருவரையொருவர் கடித்து தின்று கொள்ளுங்கள். இந்த சீதையை விட்டு விடுங்கள். இவளை யார் என்று நினைத்து வாய்க்கு வந்தபடி ஏசுகிறீர்கள்? ஜனகருடைய பிரியமான புத்ரி. தசரத ராஜாவின் மருமகள். இன்று நான் ஒரு கனவு கண்டேன். மகா பயங்கரம். மயிர்க் கூச்செரியும் வண்ணம், நிஜமாக நடப்பது போல. இவள் கணவன் வெற்றி பெறுவது போலவும், நம் ராக்ஷஸ குலமே இல்லையென்று ஆனது போலவும் கனவு.  த்ரிஜடா இவ்வாறு சொல்லவும், அந்த ராக்ஷஸிகள், தங்கள் ஆத்திரம் சற்று குறைய, பயந்த குரலில் என்ன கனவு? என்ன பயங்கரமாக கண்டாய்? இரவில் கண்ட ஸ்வப்னம் இன்னமும் நினைவு இருக்கிறதா? என்றனர். த்ரிஜடா சொல்ல ஆரம்பித்தாள். யானையின் தந்தத்தால் ஆன ஒரு பல்லக்கு. அதில் இவள் கணவர் ஆகாயத்தில், ஆயிரம் ஹம்சங்கள் தூக்கி வர பவனி வந்தார். வெண் பட்டாடைகளும், மாலைகளும் அணிந்து, லக்ஷ்மணன் தொடர, வந்து கொண்டிருந்தார். அதே கனவில் சீதையும் வெண் பட்டுடுத்தி வருவதைக் கண்டேன். ஒரு  வெள்ளி மலை, சமுத்திரம் சூழ நின்றிருந்தது. பாஸ்கரனுடன் பிரபா இசைந்து நடப்பது போல ராமனுடன் இணைந்து நடந்து வந்தாள்.  நான்கு தந்தங்கள் கொண்ட பெரிய யானை, மலை அசைந்து வருவது போல வர,  ராகவன், லக்ஷ்மணனுடன்  அதில் ஏறி வருவது போலக் கண்டேன். அந்த இரு மனிதர்களும் சார்தூலம் போன்ற நடையுடன், தங்கள் தேக காந்தி நாலா புறமும் பரவ, வெண் பட்டாடைகளும் மாலைகளும் பிரகாசமாகத் தெரிய, ஜானகியை நோக்கி வந்தனர். ஆகாயத்தில் தெரிந்த யானை முன் இந்த ஜானகி கணவன் கை கொடுக்க அதைப் பற்றிக் கொண்டு ஏறி யானையின் மேல் கணவன் தோள் மீது சாய்ந்தவளாக இருக்கக் கண்டேன். இதன் பின் கமல லோசனையான இவள் தன் கணவன் மடியிலிருந்து இறங்கி, சந்திர சூரியர்களை கைகளால் துடைப்பது போலக் கண்டேன். குமாரர்கள் யானை மேல் வீற்றிருக்க, அந்த யானை லங்கையின் மேல் அந்தரிக்ஷத்தில் நின்றது.  திடுமென உயர்ந்த ரிஷப வாகனம் வந்தது. எட்டு வெண் நிற  ரிஷபங்கள் பூட்டிய வாகனத்தில் காகுத்ஸன் சீதையுடன் வந்தான். சற்று நேரம் சென்றபின், லக்ஷ்மணனும் வந்து சேர, மூவரும் புஷ்பக விமானத்தில் ஏறினர். சூரியனுக்கு இணையான காந்தியுடைய புஷ்பக விமானத்தில் இரு சகோதரர்களும் வெண் பட்டாடையுடுத்தி வடக்கு திசை நோக்கி பிரயாணம் செய்யலாயினர். சராசரங்களும், பூமியும் உடன் சென்றன. இப்படி ஒரு கனவு. இதில் நான் ராமனை பகவான் விஷ்ணுவுக்கு சமமான பராக்ரமத்துடன் விளங்கக் கண்டேன். சகோதரன் லக்ஷ்மணனுடனும், மனைவி சீதையுடனும் நின்றான். ராகவன் சாமான்யமான மனிதன் அல்ல. சராசரங்களுக்கும் நாதன். அசுரர்களோ, சுரர்களோ யாராலும் ஜெயிக்க முடியாத சக்தி படைத்தவன். பாப ஜனங்களுக்கு ஸ்வர்கம் கிடைப்பது அரிது, என்பது போல ராக்ஷஸர்களோ, மற்றவர்களோ ராமனுடன் போரிட்டு வெற்றி பெறுவது இயலாத காரியமே. அதே சமயத்தில் ராவணனையும் கண்டேன்.  பூமியில் எண்ணெயில் மூழ்கி இருந்தான். சிவப்பு வஸ்திரமும், கரவீர புஷ்பங்களால் ஆன மாலையும், மதுவை குடித்து மயங்கிய நிலையில் இருந்தான். புஷ்பக விமானத்திலிருந்து ராவணன் கீழே விழுந்து விட்டான். ஸ்த்ரீ ஜனங்கள் அவனைத் தூக்கிச் செல்ல முடியாமல் இழுத்துச் செல்வது கண்டேன். அவன் உடையும் கரு நீலமாக இருந்தது. தலை மழிக்கப் பட்டு காட்சி தந்தது.  சிவந்த மாலையும், அங்க ராகமும் உடலை சிவப்பாக காட்ட, கோவேறு கழுதைகள் பூட்டிய ரதத்தில் போவது போல கனவு கண்டேன். உன்மத்தம் பிடித்தவன் போல சிரித்துக் கொண்டும், நடனம் ஆடிக் கொண்டும் ஏதோ தைலத்தை குடித்துக் கொண்டிருந்தான்.  கழுதை மேல் ஏறி தென் திசை நோக்கிச் சென்றான். திடுமென பயந்தவனாக கழுதையிலிருந்து பூமியில் விழுந்தான். சடாரென எழுந்து பித்து பிடித்தவன் போல புலம்பினான். பயத்தில் உளறிக் கொட்டினான். தான் தோன்றியாக நடந்து, அழுக்கும் சேறும் மண்டிய இடத்தில், தாங்க முடியாத துர்க3ந்த4மும்,  அருவருப்பாக அழுக்கும் நிரம்பிய இடத்தில் போய் நின்றான்.  ஒரு ஸ்த்ரீ அவளும் சிவந்த ஆடைகளை அணிந்து வந்தாள். அவனை கழுத்தில் கட்டி, யமபுரி உள்ள திசையில் இழுத்துச் சென்றாள். அவளைப் பார்த்தாலும் கருத்த சரீரமும், கசங்கிய ஆடையும், அருவருப்பாக இருந்தது.  இதன் பின் கும்ப4கர்ணனைக் கண்டேன். ராவணனுடைய புத்திரர்கள் அனைவரும் தலையில் கேசம் இன்றி, தைலத்தை பூசிக் கொண்டு நின்றனர். வராகத்தில் த3சக்3ரீவன், சிசுமாரத்தில் இந்திரஜித், ஒட்டகத்தில் கும்ப4கர்ணன், தென் திசை நோக்கிச் சென்றனர். ஒரே ஒருவன் மட்டும் வெண் கொற்றக் குடையோடு நின்றான். விபீ4ஷணன் தான் அது. வெண்ணிற மாலைகளும், ஆடைகளும் அணிந்தவனாக, சுகந்தமான வாசனை திரவியங்களைப் பூசிக் கொண்டு சங்க2, து3ந்து3பி4 கோஷங்களும், நாட்டியம், கீதம் இவற்றின் ஒலியும் சேர, அலங்கரித்துக் கொண்டவனாக, ஒரு மலை போல உயர்ந்த மேகம் போல கறுத்த, நான்கு தந்தங்கள் உடைய யானை மேல் ஏறி பவனி வந்தான். விபீஷணன் கூட அவனது மந்திரிகள் நால்வர், வந்தனர். ஊர் ஜனங்களும் சந்தோஷமாக கீத வாத்யங்களை முழங்கி ஆரவாரிக்க கண்டேன். இந்த லங்கா நகரமும், குதிரைகளும், ரதங்களும், யானைகளும் நிறைந்து அழகாக ரம்யமாக காட்சியளித்தது.  ராவணன் பாலித்த லங்கா நகரம் கோபுரங்கள் இடிந்து விழ, தோரணங்கள் சிதற, சாகரத்தில் விழுவதையும் கண்டேன்.  ஏதோ ஒரு ராம தூதனால் எரிக்கப் பட்டதாக லங்கா நகரம் தென்பட்டது.  ராக்ஷஸ ஸ்த்ரீகள் குடித்து விட்டு ஆடிக் கொண்டு பலமாக சிரித்துக் கொண்டும், லங்கை எரிந்து பஸ்மமாக கிடந்த இடத்தில் காணப் பட்டனர்.  கும்ப4கர்ணன் முதலானோர் கால் வைத்த இடத்தில் சாணி குளமாக இருந்தது. சீக்கிரம் நகர்ந்து போங்கள். சீதையைக் கண்டு பிடித்து விட்ட ராகவன், அவளைச் சூழ்ந்து துன்புறுத்திய உங்களை சும்மா விட மாட்டான்.  வனவாசத்தில் உடன் அனுகூலமாக வந்த தன் பிரிய மனைவியை இம்சித்தீர்கள் என்று தெரிந்தால் பெரும் கோபம் கொள்வான். அதனால் சமாதானமாக பேசுங்கள்.  நாம் அனைவரும் சேர்ந்து வைதேஹியிடம் வேண்டிக் கொள்வோம். அது தான் சரி என்று எனக்குத் தோன்றுகிறது. இது போல ஒரு கனவு, துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நபரைப் பற்றி வந்தால், அந்த நபர் எல்லா கஷ்டங்க  ளிலிருந்தும் சீக்கிரமே விடுபட்டு மேன்மையடைவர் என்பது கண்கூடு. இதுவரை நீங்கள் அதட்டி இம்சித்திருந்தால் கூட இப்பொழுது பணிவாக வேண்டிக் கொள்ளுங்கள். ஏன் யோசிக்கிறீர்கள், ராக்ஷஸர்களுக்கு ராமனிடம் தான் பெரும் பயம். ஆபத்து காத்திருக்கிறது. இந்த மைதிலி, ஜனகாத்மஜா, வணங்கியவர்களுக்கு உடனே அனுக்ரஹம் செய்பவள். இவள் ஒருவளே போதும். நம் ராக்ஷஸ குலத்தையே காப்பாற்ற. இந்த விசாலாக்ஷியான தேவிக்கு நாம் சிறிதளவும் தீங்கு செய்யக் கூடாது. உடலில் காயப் படுத்துவதோ, மிக சூக்ஷ்மமாக கூட செய்வது நமக்கு நல்லதல்ல. இவள் நிழலை தீங்கு செய்தால் கூட நமக்கு பெரும் ஆபத்தே விளையும். இந்த தேவியை எந்த விதமாகவும் துன்புறுத்தி பணிய செய்ய முடியாது. இவள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவள்.  இந்த வைதேஹி மூலம் அர்த்த சித்தி அடைவோம். நம் ராக்ஷஸேந்திரனின் விநாசமும், ராகவனின் வெற்றியும் இவள் நிமித்தமாக நிகழப் போகின்றன. இதைக் கேட்டு மகிழ்ந்து, இவளுடைய பத்ம பத்ரம் போன்ற கண்கள் துடிக்கின்றன பாருங்கள். இதைக் கேட்டு சற்றே ஆறுதல் அடைந்த வைதேஹியின் இடது புஜம் துடித்தது. அகஸ்மாத்தாக, பெண் யானையின் துதிக்கை போன்ற இடது துடையும் துடித்தது. உடலில் நடுக்கம் தோன்றி, ராகவன் எதிரில் நிற்பது போன்ற தோற்றத்தை, உணர்வை ஏற்படுத்தியது. மரத்தின் கிளைக  ளில் இருந்த பக்ஷிகள் உல்லாசமாக நன்மை வருகிறது என்று சொல்வது போல கூவின. அவளை சமாதானப் படுத்தவே வந்தது போல, திரும்ப திரும்ப நல்ல சகுனங்கள் சுபமாகவே வந்தன. இதை முழுவதும் கேட்டபின், தன் பர்த்தா விஜயனாக, வெற்றி பெற்றவனாக வருவான் என்ற நம்பிக்கை மனதில் துளிர் விட, அவள் சற்றே வெட்கமும், மகிழ்ச்சியும் சேர, அப்படியே நடக்கட்டும். அப்படி நடந்தால் நான் உங்களை வணங்குகிறேன், என்றாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் த்ரிஜடா ஸ்வப்னோ என்ற இருபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 28 (366) உத்3ப3ந்த4ன வ்யவஸாய: (தானே கழுத்தில் சுறுக்கை மாட்டிக் கொள்ள முயற்சி செய்தல்)

 

திரும்பவும் ராக்ஷஸேந்திரனுடன் நடந்த சம்பாஷனைகளை நினைத்து பார்த்த சீதா, நடுங்கினாள். வனத்தில் க3ஜராஜனின் சிறு பெண் யானை, சிங்கம் ஒன்று தாக்க தயாராக எதிர் நிற்பது கண்டு நடுங்குவது போல நடுங்கினாள். ராக்ஷஸிகளின் நடுவில் சுபாவமாகவே பயந்த சுபாவமுடையவள், ராவணனின் சொற்களால் மிகவும் பாதிக்கப் பட்டவளாக மேலும் பயம் அதிகமாக உடல் உதற, நடுக் காட்டில் ஜன நடமாட்டமே இல்லாத இடத்தில் தனியாக விடப்பட்ட சிறு பெண் போல அழுதாள். உலகத்தில் ஒரு வழக்கு உண்டு. காலம் கனியாமல் மரணம் கூட சம்பவிப்பது இல்லை என்று. அது மிகவும் சத்யமே. நல்லவர்களின் வாக்கு பொய்யாகாது.  உதாரணம் நானே. இந்த ராக்ஷஸிகளின் அதட்டல்களையும், பயமுறுத்துதல்களையும் சகித்துக் கொண்டு இன்னமும் உயிர் வாழ்கிறேனே, அதுவே பிரமாணம்.  என் ஹ்ருதயம் மிகவும் ஸ்திரமானது போலும். சுக சம்பத்துகளை விட்டு விலகி,  நினைத்து பார்க்க முடியாத இந்த துன்ப சூழ்நிலையிலும் என் ஹ்ருதயம் ஆயிரம் துகள்களாக வெடித்துச் சிதறவில்லையே. மலையின் சிகரத்தை வஜ்ரம் தாக்கினால் துண்டு துண்டாகிப் போவது போல ஆகியிருக்க வேண்டாமா? இதில் என் தோஷம் எதுவும் இல்லை தான். இந்த விரும்பத் தகாத காட்சிகளைக் கண்டு சகித்துக் கொண்டு இருப்பதாலேயே, வதம் செய்யப் பட வேண்டியவள் தான் நான். த்3விஜன்- ப்ராம்மணன், த்3விஜன் அல்லாதவனுக்கு மந்த்ரோபதேசம் செய்ய மறுப்பது போல, நான் இவனுடைய விருப்பத்திற்கு சற்றும் இணங்கேன்.  மனதால் கூட நினைக்க மாட்டேன். இந்த கொடியவனான ராக்ஷஸன், சீக்கிரமே ஆயுதங்கள் கொண்டு என் சரீரத்தை துண்டாடப் போகிறான்.  லோக நாதனான என் நாதன் வந்து சேரா விட்டால் இது தான் நடக்கும். க3ர்ப்ப4த்தில் உள்ள ஜந்துவை அறுவை சிகித்ஸை மூலம் அழிப்பது போல, நான் செயலற்று, வருவதை எதிர் கொள்ளத்தான் வேண்டும். ஹா,

கஷ்டம்.  இரண்டு மாதங்கள் இதோ ஓடி விடப் போகின்றன. வதம் என்று தீர்ப்பு   அளித்த பின், சிறையில் அடைக்கப் பட்ட திருடன், தண்டனை அளிக்கப் படும் நாள் நெருங்க, நெருங்க இதோ இன்று இரவின் முடிவில் தண்டனை நிறைவேற்றப்படும் என்ற நிலையில் எப்படி இருப்பான், அதே நிலையில் தான் நானும் இருக்கின்றேன். ஹா ராமா, ஹா சுமித்ரே, ஹா ராம மாதா, என் ஜனனீ (தாய்) இதோ நான் இப்படி ஒரு ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறேனே, அல்ப பா4க்3யாவாக, நடுக்கடலில் மூமூழ்கும் படகில் இருப்பவள் போல தத்தளிக்கிறேனே, என் வாழ்க்கை படகு மூழ்கும் நிலையில் காற்றும் தள்ளி அலைக்கழிக்க தவிக்கிறேனே, என்ன செய்வேன்? புள்ளி மான், மிருகம் போல வேஷம் போட்டுக் கொண்டு வந்த ஏதோ ஒரு ஜீவன், வேகமாக வந்து மனுஜேந்திர புத்திரர்களான என் பந்துக்களை இழுத்துச் சென்று விட்டது.  என் காரணமாக இருவரும் அந்த முகம் அறியாத ஜீவனின் கையில் என்ன பாடு பட்டார்களோ? சிங்கமும் ரிஷபமும் இடி தாக்கி வருந்தியது போல வருந்தினார்களோ? நிச்சயமாக என் போதாத காலம் தான் மிருக ரூபத்தை எடுத்து வந்து என்னை ஆசை காட்டியிருக்கிறது. அதே சமயம் என் பாக்யம் மிகவும் மோசமாக இருந்ததோ, முட்டாள் தனமாக, அறிவிலியாக அதனால் தான் என் கணவனை நான் வற்புறுத்தி விரட்டினேனோ.  அதோடு நில்லாது, சகோதரனான ராமானுஜன் (லக்ஷ்மணனையும்) துரத்தினேனோ?. ஹா ராமா, சத்ய விரதனே, தீர்க்க பா3ஹோ, ஹா பூர்ண சந்திரன் போன்ற முகம் உடையவனே, ஹா ஜீவ லோகத்திற்கே ஹிதமானவன், பிரியமானவன், இன்னும் நான் இங்கு வதம் செய்யப் படப் போகிறேன் என்பதை தெரிந்து கொள்ள -வில்லையா?. வேறு யாரையும் தெய்வமாக எண்ணாமல், பதியே தெய்வம் என்று உன்னையே எண்ணி, பொறுமையாக விரதங்கள் அனுஷ்டித்து, பூமியில் படுத்து உறங்கி தர்மத்தையே எண்ணி வாழ்ந்து வரும் என் பதிவிரதா தர்மம் எனக்கு ஒரு வித பயனையும் தரவில்லையே.  நன்றி மறந்த மனிதனுக்கு செய்த உதவிகள் அவனால் உடனே மறக்கப்பட்டு விடுவது போல. தர்மம் என்று நாம் நம்புவது எல்லாம் வெறும் மோகம் தானா? ஏக பத்னி என்பதற்கு அர்த்தமே இல்லையா? உன்னைக் காணாமல் வருந்தி நான் வாடுவது உடல் இளைத்து தவிப்பது வீண் தானா? உன்னைத் திரும்ப அடையும் நம்பிக்கையே நான் இழந்து கொண்டிருக்கிறேன். தந்தையின் கட்டளையை நியமத்துடன் முடித்து விட்டு வனத்திலிருந்து திரும்பிப் போய் உன் விரதங்கள் உயர்வாக பேசப் பட, எந்த விதமான பயமோ, தயக்கமோ இன்றி க்ருதார்த்தனாக பல ஸ்த்ரீகளை மணந்து கொண்டு சந்தோஷமாக இருப்பாய். ராமா, நான் தான் உன்னிடம் வைத்த அன்பினால், தவம், விரதம் என்று பொய்யான மோகங்களை நம்பி, என் விநாசம் நிச்சயம் என்று அறிந்தும், இவைகளையே தொடர்ந்து செய்து கொண்டு, இதோ உயிரை விடப் போகிறேன். என் பாக்யம் அவ்வளவு அல்பமாக போய் விட்டது. அந்த நான், என் வாழ்க்கையைத் தியாகம் செய்யப் போகிறேன். விஷம் குடித்தோ, கூர்மையான ஆயுதத்தாலோ, நான் உயிர்த் தியாகம் செய்ய முனைந்து விட்டேன். ஆனால், இங்கு எனக்கு விஷம் தருவார் யாருமில்லையே.  ராக்ஷஸர்களின் வீட்டில் ஆயுதங்கள் எங்கு இருக்கின்றன, தெரியவில்லையே. என்று இவ்வாறு தேவி பெரிதும் புலம்பி அழுதாள். ராமனையே தன் உடல், பொருள், ஆவி என்று சர்வாத்மாவாலும் நினைத்து உருகி, கண்கள் நீரை பெருக்க, உடல் நடுங்க, பூத்துக் குலுங்கும் அந்த உத்தமமான மரத்தடிக்கே வந்தாள். வெகு நேரம் யோசித்து, தன் கூந்தலையே எடுத்து இதனால் நான் என் கழுத்தில் சுருக்கை மாட்டிக் கொண்டு சீக்கிரமே யமன் உலகை அடைவேன் என்று தீர்மானித்தாள். இப்படிச் சொல்லி, மரத்தின் ஒரு கிளையைப் பற்றி அருகில் கொண்டு வந்து தன் கூந்தலையே அதில் மாட்டலானாள். ராமனையும், லக்ஷ்மணனையும், தன் குலத்தையும் நினைத்து பார்த்தவள், தன் உடலில் பல சுப நிமித்தங்கள் தோன்றுவதை உணர்ந்தாள். முன்பும் இதே போன்று சுப நிமித்தங்கள் நன்மையைச் செய்தன என்றும் மனதில் நினைவுக்கு வர, அவை அவளுக்கு தைரியம் அளிப்பதாக இருந்தன.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் உத்33ந்த4ன வ்யவஸாயோ என்ற இருபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 29 (367)  சுப4 நிமித்தானி (சுப நிமித்தங்கள்)

 

மனம் நொந்து, வேதனையில் உடலும் உள்ளமும் களைத்து போய்  வருந்தும், தீனமாக புலம்பும் சீதையை சுப நிமித்தங்கள் வந்து தைரியம் தரலாயின. செல்வத்திற்கு அதிபதியான, லக்ஷ்மி தேவி, தானே ஒரு ஏழையை, அண்டி பிழைப்பவனை உயர்த்துவது என்று தீர்மானித்து அவன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது போல தாங்களாகவே வந்தன. அராள பக்ஷ்மம்- இடது கண் இமைகள், சுபமானதும், கறுத்து விசாலமானதுமான இமைகள் துடித்தன. மீன் தட்டி விட்டுப் போன சிவந்த தாமரை மலரைப் போல ஆடியது.  அகன்ற புஜமும், வெகு நாட்களாக சந்தன பூச்சு போன்ற உபசாரங்கள் ஏதுமின்றி,  உத்தமமான மனிதனான ராமனால் அணைக்கப் பட்டவை, அவனுடைய ஸ்பரிசத்திற்காக காத்துக் கொண்டு இருக்கும் இடது புஜம், துடித்தது.  யானை துதிக்கை போன்றதும், இரட்டையாக சேர்ந்து நடந்து வருவது போல தோற்றம் தரும் இரு துடைகளிலும் இடது துடை துடித்தது.  இதோ ராமன் எதிரில் நிற்கிறான் என்பது போல மன ஆறுதலை        அளித்தது.  ஹேமம் போன்ற வர்ணமும் சிறிதளவு ரஜஸ், சிவப்பும் கலந்த கண்களும், வரிசையாக தெரிந்த பற்களும் கொண்ட அவள் உடல் லேசாக நடுங்கியது. இது போன்று இன்னும் சில நிமித்தங்கள் முன்பு பலமுறை பெரியவர்கள் நன்மை தரும் என்று சொல்லிக் கேட்டிருந்த நிமித்தங்களைக் கண்டு, காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, ஏதோ ஒரு இடத்தில் விழுந்து கவனிப்பாரற்று கிடந்த பீஜம், விதை, மழை வந்து உயிர் கொடுக்க, உற்சாகத்துடன் முளைப்பது போல, நம்பிக்கை அவள் மனதில் துளிர் விட்டது.  ராகுவின் பிடியிலிருந்து விடுபட்ட சந்திரன் போல முகத்தில் பிரகாசம் தெரிந்தது.  பி3ம்ப பழம் போன்ற உதடுகளும், அராள பக்ஷங்கள்- இமைகளும், அடர்ந்த இமை மயிர்களும், புன்னகையுடன் வெண்மையான பற்கள், வெளியில் தெரிய தன் வேதனையை மறந்தவள் போல இருந்தாள். ஜ்வரம் விட்டவள் போலவும், தன் உடல் ஆயாசம் நீங்கியவள் போலவும் மகிழ்ச்சி தோன்றி முகத்தின் நிறம் தெளிவு அடைய சோபையுடன் விளங்கினாள். இரவில் சீதாம்சு எனும் சந்திரன் உதித்தவுடன், பிரகாசம் பரவுவது போல இருந்தது. 

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சுப4 நிமித்தானி என்ற இருபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 30 (368) ஹனுமத் க்ருத்யா க்ருத்ய விசிந்தனம்(என்ன செய்வது என்று ஹனுமான் யோசித்தல்

 

இவையனைத்தையும் ஒன்று விடாமல் தான் இருந்த இடத்தில் வசதியாக அமர்ந்தபடியே ஹனுமன் கேட்டான். சீதையின், த்ரிஜடையின் வார்த்தைகள், ராக்ஷஸிகளின் அதட்டல், எல்லாமே தெளிவாக அவன் காதில் விழுந்தன. நந்தன வனத்தில் தேவதையைப் போல தனித்து இருந்த தேவியைப் பார்த்து, மனதில் பலவித கவலைகள் சூழ்ந்தன. எந்த தேவியை ஆயிரக் கணக்காக, இருபதாயிரம் குழுக்களாக உலகம் முழுவதும் பல திக்குகளிலும் வானரங்கள் தேடுகின்றனவோ, அந்த தேவியை நான் அடைந்து விட்டேன். சத்ருவின் சக்தியை ஆழம் காணச் செல்லும் ஒற்றனான நான் மறைந்து ஒளிந்து சஞ்சரித்துக் கொண்டு, நான் காண வந்த தேவியைக் கண்டு கொண்டேன். இந்த ராக்ஷஸர்களின் விசேஷமான நகரமும் என்னால் காணப் பட்டது. சுற்றிப் பார்க்கப் பட்டது. ராக்ஷஸாதிபனின் பிரபாவமும் அறிந்து கொண்டேன். இப்பொழுது பதியைக்காணத் தவிக்கும் இந்த தேவியை, அப்ரமேயனான (ஒப்பிட முடியாத ப்ராக்ரமம் உடைய) ராமனின் மனைவியை சமாதானம் செய்வதும் மிக அவசியம்.  இவள் பதி, எந்த ஜீவனானலும் தயையே காட்டுபவன். பூர்ண சந்திரன் போன்ற முகமுடைய இவளை நான் சமாதானப் படுத்துகிறேன். இது வரை கண்டறியாத சோகமும், மனக் கஷ்டமும் இவளை வாட்டுகின்றன.  என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள்.  இவளை சமதானம் செய்யாமல் நான் திரும்பி விட்டால் அதுவே பெரிய தவறாகும்.  நான் சென்ற பின் எந்த விதமான சகாயமும் இல்லாத நிலையில், உயிரை விட்டு விடக் கூடும்.  ராஜகுமாரி  ஜானகியைப் பற்றி  ராமன் விசாரித்தால் அவளைப் பற்றி என்ன சொல்வேன்? மனைவியைக் காணத் துடித்துக் கொண்டிருக்கும் கணவனிடம் ஏதாவது விஷயமாக சொல்ல வேண்டாமா? இந்த ராக்ஷஸிகளின் எதிரில் என்னால் வெளிப்படையாக எதுவும் பேசவும் முடியாது. என்ன செய்வேன்? தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறேனே? இன்று இரவு முடியும் முன் ஏதாவது செய்து இவளை சமாதானப் படுத்தி தைரியம் அளித்து,  உயிர் விடும் எண்ணத்தை மாற்றியாக வேண்டும்.  ராமனும், என் சீதா என்ன சொன்னாள் என்று கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே. இவளிடம் பேச்சுக் கொடுக்காமல் திரும்பி போய் என்ன பதில் சொல்வேன்?  நான் இங்கிருந்து அவசரமாக திரும்பிப் போய், கண்டேன் சீதையை, ஆனால் அவளிடம் எதுவும் பேசவில்லை என்று சொன்னால், கண்களாலேயே என்னை தகித்து விடுவான். என் எஜமானன் சுக்ரீவனையும், ராமன் கோபம் காரணமாக ஆத்திரம் கொள்ளச் செய்தவனாக ஆவேன்.  சைன்யத்துடன் இங்கு வருவதும் வ்யர்த்தமாக ஆகும். இங்குள்ள ராக்ஷஸிகளிடையில் ஏதாவது இடைவெளி, கிடைத்தால் நுழைந்து கொண்டு என் காரியத்தை சாதிக்கத் தான் வேண்டும். இவள் தாபம் மிக அதிகம்.  பொறுமையாக நான் மெதுவாகத் தான் சமாதானம் செய்ய வேண்டும். சிறிய உருவத்தில் இருக்கும் வானரம் நான். மனிதன் போல சம்ஸ்க்ருதமான பாஷையில் பேசுகிறேன். த்3விஜாதிகளைப் போல ஸம்ஸ்க்ருதத்தில் பேசினால் ராவணன் என்று எண்ணி என்னிடம் பேச பயப்படுவாள். அதுவும் வானரம் எப்படி இவ்வளவு தெளிவாக, தவறின்றி பேசுகிறது என்று சந்தேகம் கொள்வாள்.  மனித மொழியில் தான் பேசியாக வேண்டும். பொருள் பொதிந்த வார்த்தைகளை நுட்பமாக புரிந்து கொள்ளும்படி பேசியாக வேண்டும். வேறு எந்த வழியிலும் இவளை சமாதானம் செய்ய முடியாது. என் ரூபத்தையும், பேச்சையும் கேட்டு, ராக்ஷஸர்களின் ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று என்று தள்ளிவிடக் கூடும். பயந்து கூச்சல் இட்டால் வேறு வினையே வேண்டாம். ராவணன் தான் இஷ்டம் போல் உருவம் எடுக்க வல்லவன். இந்த வானர ரூபத்தில் வந்திருக்கிறான் என்று தான் நினைப்பான். அவளுக்கு என்னைத் தெரியாதே. பலமாக சத்தம் போட்டு அழைத்தால் ராக்ஷஸிகள், பலவிதமான ஆயுதங்களோடு வந்து கூடி விடுவார்கள். யமனே வந்தது போல ஆகும்.  எல்லோருமாக என்னை கீழே தள்ளி வதம் செய்யலாமா,  உயிருடன் பிடிப்போமா என்று யோசிப்பார்கள். நான் கிளைக்கு கிளை தாவி ஓடினால் துரத்துவார்கள். பெரும் கிளைகளை நான் அனாயாசமாக தாண்டினாலே பயந்து, ராக்ஷஸர்களையும் உதவிக்கு கூப்பிட்டுக் கொள்வார்கள். ராக்ஷஸேந்திரனுடைய மாளிகையில் நியமிக்கப் பட்டுள்ள காவல் வீரர்களான ராக்ஷஸர்கள் கையில், சூலம் சக்தி,  ந்ருஸிம்ஸம், என்று வித விதமான ஆயுதங்கள் இருக்கும்.  இவர்கள் அலறுவதைக் கேட்டு அவர்களும் வேகமாக பாய்ந்து வந்து என்னை பிடிக்க என் மேல் வந்து விழுவார்கள்.  இவர்கள் கூட்டமாக வழியை மறித்துக் கொண்டு நிற்கும் பொழுது நான் கடலை கடந்து செல்வதும் முடியாத காரியம். அப்படி நான் கிளம்பினாலும் தொடர்ந்து வந்து அவர்கள் பிடித்தாலும் பிடித்து விடுவார்கள். அவர்களில் வேகமாக தாண்டக் கூடியவர்கள் இருக்கலாம். என்னை பிடித்துக் கொண்டு போனால் என்னை இம்சிப்பார்கள். என் காரணமாக ஜனகாத்மஜாவை இம்சித்தாலும், சொல்வதற்கில்லை. என் காரியமே கெட்டுப் போகும். ராம, சுக்ரீவர்களிடம் நான் வாக்கு கொடுத்து விட்டு வந்ததெல்லாம் வியர்த்தமேயாகும். என் உத்தேசமே நஷ்டமாகி, ராக்ஷஸர்கள் நடுவில் நானும் அகப்பட்டுக் கொண்டாலோ, தப்பித்து சாகரத்தில் விழுந்தாலோ, ரகசியமாக காவல் வைக்கப் பட்டுள்ள ஜானகியை, ராமனுக்கு தெரிவிக்கக் கூடியவர் வேறு யாருமே இங்கு இல்லையே.  என்னால் எதுவுமே தீர்மானிக்க முடியவில்லையே.  வானரம் தான் என்றாலும், என்னைக் கொன்று விட்டால், இந்த தூரத்தை கடந்து வரக் கூடிய வேறு எவரும் சுக்ரீவனின் சேனையில் இல்லை என்பது நிச்சயம். நூறு யோஜனை தூரம் தாண்டி வரக் கூடியவர்கள் வேறு யார்? ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்களை கொல்ல எனக்கு சக்தியிருக்கிறது. ஆனால் அப்படி யுத்தம் செய்தபடி சமுத்திரத்தின் அக்கரைக்குச் செல்வது சரியாகாது.  யுத்தம் என்று வந்தால், வெற்றி தோல்வி எதுவானாலும், வரலாம். இப்படி ஒரு இக்கட்டான, சந்தேகத்துக் கிடமான விஷயத்தில் நாமாக சென்று மாட்டிக் கொள்வானேன். அறிவுள்ளவன் எவன் தான் இப்படி சந்தேகமான காரியத்தில் பிரவேசிப்பான். நிச்சயமாக வெற்றி தரும் மற்ற வழிகள் இருக்கத் தான் வேண்டும். அந்த வழியில் சிந்திக்கிறேன். நான் இந்த வைதேஹியிடம் பேசாமல் சென்றால், இவள் பிராணத்யாகம் செய்வதும் நிச்சயம். அது மிகப் பெரிய தோஷம், தவறாக முடியும். அதனால் பேசித் தான் ஆக வேண்டும். தேச காலங்களை அனுசரித்து நடக்காத தூதன், தான் வந்த காரியத்தையே கெடுத்தவன் ஆவான். சூரியோதயத்தில் இருட்டு கண்ணுக்கு தெரியாமல் போவது போல, அல்லது இருட்டு தொலைந்து போவது போல, (மறைந்து) தன் காரியத்தையே தொலைத்து விட்டு குழப்பமான மன நிலையில் தூதன் தவிப்பான்.  வேறு விதமாக யோசனையும் தோன்றவில்லை. ஒன்றை விட்டு மற்றொரு காரியத்தில் கவனம் செலுத்துவது எப்படி முறையாகும்?  எனக்கு இடப்பட்ட கட்டளையை மீறி, நான் புது யுக்தியை செயல் படுத்த நினைப்பது சரிதானா?  தன்னை அறிஞனாக நினைத்துக் கொண்டு, தன் இஷ்டம் போல நடக்கும் தூதன், காரியத்தை கெடுக்கிறான். நான் செய்ய வேண்டியது, நான் வந்த காரியமும் கெடக் கூடாது, இதனால் புது இடையூறும் எதுவும் தோன்றக் கூடாது. நான் சமுத்திரத்தைக் கடந்து வந்ததும் வீணாகக் கூடாது.  என்ன விதமாக பேசினால், அவள் கேட்பாள்? கேட்டு பதறாமல் இருப்பாள் என்று பலவிதமாக யோசித்து ஹனுமான், புத்திமான் என்று சொல்லப் படும் ஹனுமான் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டான். தன் ப3ந்து4வான ராமனைப் பற்றிச் சொன்னால், இவள் காது கொடுத்துக் கேட்பாள். நேரடியாக ராமனைப் பற்றிச் சொன்னால் ஒரு வேளை பதறலாம். அதனால் இக்ஷ்வாகு வம்சத்திலிருந்து ஆரம்பித்து அந்த குலத்தில் சிறந்தவனான ராமனைப் பற்றிச் சொல்கிறேன். சுபமான வார்த்தைகளை தர்ம பரமான கதைகளைச் சொல்லி மதுரமான குரலில் இவள் கேட்கும் படி சொல்கிறேன். இவள் காதில் யதேச்சையாக விழுவது போல பேசுகிறேன்.  பூமியின் நாயகனான ராமனின் மனைவி, அவளை எந்த விதத்தில் தன் பக்கம் கவனத்தை திருப்பச் செய்ய முடியும் என்று யோசித்து, ஹனுமான் மரத்தின்கிளைக  ளில் தன்னை மறைத்துக் கொண்டு மதுரமாக பாடலானான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமத் க்ருத்யாக்ருத்ய விசிந்தனம் என்ற முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக