சுந்தர காண்டம் 6 to 11
அத்தியாயம் 6 (344) ராவண க்ருஹாவேக்ஷணம் (ராவணனின் வீட்டைக் காணுதல்)
வெகு நேரம் அந்த விமானத்தில் அமர்ந்தபடி யோசித்தான். பின் லாகவமாக கீழே குதித்து இறங்கி தன் தேடலைத் தொடர்ந்தான். லக்ஷ்மீவான் (இங்கு ஹனுமான்), இதன் பின் சுற்றித் திரிந்து ராக்ஷஸேந்திரனின் வீட்டையடைந்தான். சூரியனுடைய நிறத்தில் பிரகாசமான ப்ராகாரங்கள், நான்கு திசைகளிலும் இருந்தன. மகத்தான வனத்தை சிங்கங்கள் காவல் காப்பதைப் போல தேர்ந்த ராக்ஷஸர்கள் காவல் வேலையை பொறுப்பாக செய்து வந்தனர். நன்றாக ஊன்றி கவனித்தபடி ஹனுமான் கவனமாக முன்னேறிச் சென்றான். வெள்ளியினால் சித்திரங்கள் வரையப் பெற்று, பொன்னால் அலங்கரிக்கப் பட்டத் தோரணங்கள் தென்பட்டன. அழகிய நுழை வாயில். அதில் பலவிதமான அறைகள். கஜங்கள் வாசலில் சிரம பரிகாரம் செய்து கொண்டிருந்தன. ஏற்கனவே சிரம பரிகாரம் செய்தவர்கள் போல காவலர்கள் துடிப்புடன் நின்றனர். சற்றும் களைப்பேயறியாத குதிரைகள், ரதங்களை ஒட்டத் தயாராக நின்றன. சிங்கம், புலி, முதலியவைகளிலிருந்து காப்பாற்றும், பல் போன்ற அமைப்பும், தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப் பட்டிருந்தது. கோஷமிட்டுக் கொண்டு, ரதத்தில் சென்ற வண்ணம் ராக்ஷஸர்கள், ஊர்க் காவல் வேலையை செய்தனர். ஏராளமான ரத்னங்கள் காணப் பட்டன. விலையுயர்ந்த பாத்திரங்கள், ரதங்கள், ஆசனங்கள் எல்லாமே, மகாரதியான ராவணனுக்கு ஏற்ப இருந்தன. வளர்ப்பு மிருகங்களும், பக்ஷிகளும் கணக்கிலடங்காமல் இருந்தன. இவை கண்ணுக்கு விருந்தாக இருந்தன. வினயத்துடன் ஏவல் வேலை செய்யும் வேலைக் காரர்களும், காவல் வீரர்களான ராக்ஷஸர்களும் கருத்துடன் பாதுகாக்கும் வேலையை செய்தனர். அழகிய ஸ்த்ரீகள், பல முக்கியமான வேலைகளில் நியமிக்கப் பட்டு நிறைய தென்பட்டனர். யாவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பெண்களின் கலகலப்பான பேச்சும், சிரிப்பும் சமுத்திரத்தின் ஓசையை நினைவு படுத்தியது. ராஜ க்ருஹம் என்பதற்கான எல்லா வித காட்சிகளும் நிறைந்து இருந்த அந்த அரண்மனை, பல விதமான அறிஞர்கள், பல துறைகளிலும் முன் நிற்பவர்களுக்கு இருப்பிடமாக விளங்கியது. சிங்கங்கள் பெரிய வனத்தில் நிறைந்து இருப்பது போல, பேரி, ம்ருதங்கம் இவைகளின் நாதமும், சங்கம் ஒலிக்கும் ஒலியும், தினமும் பூஜை விரதங்களை செய்து வரும் ராக்ஷஸர்களும் ராவணன் பாலித்த லங்கா நகரில் நிறைய இருந்தனர். நித்ய பூஜை, பர்வ காலங்களில் விசேஷ பூஜைகள் என்று செய்தனர். கடல் போன்ற பெரிய மாளிகை. கடல் போன்ற அமைதியுடனும், கம்பீரத்துடனும், ராவணனின் மாளிகை, கடலைப் போன்றே உயர்ந்த ரத்னங்களை தன்னுள் கொண்டு அவன் மகான் தான் என்று சொல்வது போல இருந்தது. க3ஜ, அஸ்வ, ரதம்-யானை, குதிரை பூட்டிய ரதம், இவை பெருமளவில் காணப்பட்டன. இவை கூட லங்கைக்கு ஆபரணமே என்று ஹனுமான் எண்ணினான். ராவணன் அருகில் அவர் அறியாமல் தேடிக் கொண்டு சென்றான். வீட்டுக்கு வீடு உத்யானங்கள், மாளிகைகள் என்று சற்றும் பயப்படாமல் தாவி குதித்து தேடிச் சென்றான். ப்ரஹஸ்தனுடைய மாளிகை என்பதை தெரிந்து கொண்டு வீட்டினுள் இறங்கிச் சென்றான். அங்கிருந்து அடுத்த மாளிகை மஹா பார்ஸ்வ னுடையது. பெரிய மேகம் போன்ற விசாலமான மாளிகை கும்ப4கர்ணனுடையது. அடுத்து விபீ4ஷணன் மாளிகையை நோக்கித் தாவி குதித்துச் சென்றான். அடுத்து மகோத3ரன் வீடு. விரூபாக்ஷன் வீடு. அதையும் அடுத்து வித்4யுத்ஜிஹ்வன், வித்4யுன்மாலி என்ற ராக்ஷஸர்களின் வீடுகள். அடுத்து இறங்கிய இடம் வஜ்ரதம்ஷ்டிரன் என்ற ராக்ஷஸன் வீடு. சுக, சாரணர்களின் மாளிகைகளைக் கடந்து இந்திரஜித்தின் வீட்டை அடைந்தான். அடுத்து ஜம்பு3மாலி, சுமாலி வீடுகள். ரஸ்மிகேது சூர்யகேது என்றவர்களின் ப4வனங்களைத் தாண்டி வஜ்ரகாயன் வீட்டில் குதித்தான். தூ3ம்ராக்ஷன் வீடு வந்து சேர்ந்தான், ஹனுமான், வித்4யுத்ரூபன், கனன், விகனன் என்ற ராக்ஷஸர்களின் வீடுகளைத் தாண்டி, சுகனாசன், வக்ரன், சடன், விகடன், ஹ்ரஸ்வ கர்ணன், தம்ஷ்டிரன், ரோமசன் என்ற ராக்ஷஸர்களின் வீடுகளில் தேடினான். யுத்தம் என்றால் மதம் கொள்ளும் யுத்3தோ4ன்மத்தன், த்4வஜக்3ரீவன், வித்4யுத்ஜிஹ்வேந்திரன், ஜிஹ்வா என்ற ராக்ஷஸர்கள், ஹஸ்திகன், கராளன், பிசாசன், சோணிதாக்ஷன், இவர்கள் வீடுகள் வரிசையாக இருந்தன. மாருதாத்மஜன், இந்த வீடுகளையும் அதன் செல்வ செழிப்பையும் பார்த்து வியந்து பாராட்டியபடி ஒவ்வொரு வீடாக கடந்து சென்று ராக்ஷஸ ராஜனின் மாளிகை சென்றடைந்தான். ராவணனின் வீட்டு வாசலில் ஏராளமான ராக்ஷஸிகள், கோணல் மாணலுமான உருவங்களில், ஆகிருதிகளில் சூழ்ந்து இருக்கக் கண்டான். இவர்களும் கையில் ஆயுதம் ஏந்தியவர்களாக இருக்கக் கண்டான். சூலம், உத்3க3ரம், சக்தி, தோமரம், குல்மங்கள் என்ற ஆயுதங்கள் தாங்கிய வீராங்கனைகள். ராஸாதிபனின் மாளிகையில் இருந்த ராக்ஷஸர்கள், பெருத்த உருவமும், நானா விதமான ஆயுதங்களை எந்த க்ஷணமும் எய்யக் கூடியவர்களாக, இருந்தனர். சிவந்த, வெண்மையான, வெளிர் நிற, பசுமையான வேகமாக செல்லக் கூடிய, நல்ல குலத்தில் தோன்றிய, ரூப லாவண்யம் உடைய யானைகள், ஐராவதம் போன்ற ஆகிருதியுடன், இவைகளை சிலர் பயிற்றுவித்துக் கொண்டிருந்ததையும் கண்டான். எதிரி சைன்யத்தை அடியோடு நாசம் செய்யக் கூடிய பலம் மிகுந்த யானைகள். மேகம் போல சஞ்சரிக்கும், மலைகளின் மேல் மழை பொழிவது போலவே மதஜலம் பெருக்கும், மேகம் இடி இடிப்பது போலவே கர்ஜிக்கும், யுத்தம் என்று வந்தால் எதிரில் யாராலும் தாக்கு பிடிக்க முடியாத அளவு பலம் மிகுந்தவை. இது போல ஆயிரம் யானைப்படை, யானைகள் முகத்தில் தங்க முகப் படாம் மாட்டி அலங்கரித்திருந்தனர். அந்த ராக்ஷஸ ராஜனின் வீட்டில் பல்லக்குகள் பலவிதமாக இருக்கக் கண்டான். மாருதி புதல்வனான மகா கபி, மேலும் உள்ளே சென்று, இளம் சூரியனின் வண்ணத்தில் பொன்னால் வலை யமைத்து செய்யப்பட்ட சாளரங்களும், லதாக்ருஹம், சித்ர க்ருஹம், சித்ரசாலா க்ருஹம் என்ற இடங்களையும் தாண்டி க்ரீடாக்ருஹம் என்ற விளையாடும் இடம், தாரு- கள் குடிக்கும் இடம், காமனின் க்ருஹகம், தேவர்களின் க்ருஹகம் -சிறிய வீடு, இவைகளையும் பார்த்துக் கொண்டே ராக்ஷஸேந்திரனின் மாளிகையைக் கண்டான். அந்த உத்தமமான ப4வனம், மந்தர கிரி போலவும் இருந்தது. மயூரங்கள் வசிக்கும் இடமாகவும் இருந்தது. கொடிக்கம்பும், உச்சியில் கொடியுமாக நின்றிருந்தது. இந்த மாளிகையில் பலவிதமான ரத்னங்கள் நிறைந்திருந்தன. செல்வத்தின் பல அங்கங்களும் தாராளமாக நிறைந்து காணப்பட்டன.
பூ4த பதியான மகா தேவன் போல தீரனாக தன் கர்மாக்களின் அந்தத்தை, எல்லையை தொட்டுவிட்டவன் போல இருந்தான், ராவணன். ரத்னங்கள் பாதுகாத்து சேமித்து வைக்கப் பட்டு, பரிபாலித்தும் வைக்கப் பட்டிருந்தது. ராவணன் தேஜஸ் நகரம் முழுவதும் பரவியிருந்தது. அதனாலேயே செல்வங்கள் மேலும் பெருமை பெற்றுத் திகழ்ந்தது. தன் கிரணங்களால் பிரகாசத்தைப் பெற்று ரஸ்மிமான் என்று பெயர் பெற்ற சூர்ய தேவன் போல, கட்டில்களோ, ஆசனங்களோ எல்லாமே பொன்னால் ஆனவையே. வீட்டு உபயோகத்துக்கான பாத்திரங்கள், பண்டங்கள் கூட பெரும்பாலும், வெள்ளியும் தங்கமுமே. குபேர பவனம் போலவே மணிகளால் ஆன பாத்திரங்களும், மது அருந்தும் பொருட்களும் காணப்பட்டன. மனோ ரம்யமாக, எந்த வித இடையூறும் இன்றி குபேரன் பவனம் போலவே ராவணன் வீடு இருந்தது. நூபுரங்களும், காஞ்சி (இடையில் அணியும் ஒட்டியானம்) இவைகள் உராய்வதால் ஏற்படும் ஓசை, ம்ருதங்க தாள, கோஷங்களோடு கலந்து காதில் விழுந்தன. ஆயிரக் கணக்கான வீடுகள் அவரவர் ஸ்த்ரீ ஜனங்கள் நிரம்பி (நூறு பெண்கள்) கல கலவென பேச, நல்ல முறையில் கட்டப் பட்டிருந்த அறைகளுடன் கூடிய மாளிகையில் ஹனுமான் நுழைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ராவண க்ருஹாவேக்ஷணம் என்ற ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 7 (345) புஷ்பக தரிசனம் (புஷ்பக விமானத்தைக் காணுதல்)
(இந்த அத்தியாயமும் பல பொருள் படும் வார்த்தைகளும், எதுகை, மோனை அழகும், காவிய லக்ஷணங்களான பல விசேஷங்களையும் கொண்டது.)
வைடூரியமும், சுவர்ணமும் ஜாலமாக (வலையாக) விரிந்து கிடந்த வீடுகளின் ஜாலத்தை (கூட்டத்தைக்) கண்டான் ஹனுமான். மழைக் காலத்தில் மேகங்கள் மின்னலால் கட்டப்பட்டு ஜாலமாக தெரிவது போலவும், விஹங்க ஜாலம், பறவைகளின் கூட்டங்கள் (மேகங்களின் கூட்டம் இரண்டும் ஆகாயத்தில் திரிவன) இருந்த வீடுகள். வீடுகளில் பலவிதமான சாலா: கொட்டகைகள். அவைகளில் பிரதானமானவை சங்கம், வாள் முதலியவை வைக்கும் ஆயுத சாலை. மனோஹரமாக இருந்ததோடு, விசாலமானது. உடன் மலை போல் நின்றிருந்த வீடுகளில் சந்திரனின் கிரணங்கள் படிவதையும் கண்டான். (சந்த்ரசாலா:) வீடுகளில் பலவிதமான செல்வங்கள் நிரம்பி இருந்தன. தேவாசுரர்கள் கூட பிரமித்து நிற்கும் படியான செல்வ செழிப்பு. கவனமாக தோஷங்களைத் தவிர்த்து கட்டப் பட்டவை மிகுந்த முயற்சியோடு ஒன்று சேர்த்து, மயன் சாக்ஷாத் தானே நின்று நிர்மாணித்தது. பூ உலகில் வேறெங்கும் காண முடியாத அரிய பல சிறப்புகளை உடையது அந்த லங்காபதியின் வீடுகள். விமானத்தின் முன் நின்றவன் அதை, மேகம் தானோ என்று சந்தேகித்தான். ஆனால் மனோகரமாக, காஞ்சன வர்ணத்தில் இருந்ததால், கவனித்துப் பார்த்ததில் ராக்ஷஸ ராஜனின் புஷ்பக விமானம் என்று தெரிந்தது. அவனுக்கு தகுந்த அவன் பலத்துக்கு ஏற்ற க்ருஹோத்தமம். சொல்லி முடியாத அழகான வீடு. பூ உலகில் இறங்கி வந்த சுவர்கம் போல விரிந்து படர்ந்து கிடந்தது. பலவிதமான ரத்னங்களுடன் லக்ஷ்மி தேவியே வந்து நிரம்பியது போல லக்ஷ்மீ கடாக்ஷம், லக்ஷ்மீ விலாசம் நிறைந்தது. பலவிதமான மரங்களின் புஷ்பங்கள் குவியலாக அதன்மேல் தூவப் பட்டிருந்தது. (இயற்கையாகவே) மலையுச்சியில், காற்றில் வரும் தூசி படர்ந்து இருப்பதைப் போல விமானத்தின் மேல் பாகத்தை மறைத்தது. வீட்டின் மேல் மாடியில் விமானம். ஆகாயத்தில் லக்ஷ்மி தேவியுடன் கை கோத்துக் கொண்டது போல தனிச் சிறப்புடன் விளங்கியது. மேகங்களுக்கு இடையில் மின்னல் தோன்றி மறைவது போல, அர்ச்சித்து விட்டு செல்வது போல, பெண்களின் கூட்டம் கோலாகலமாகத் தெரிய, ஹம்ஸங்களின் கூட்டம் மனதை கவர்ந்து இழுத்துச் செல்வது போலவும் இருந்தது. மலையின் உச்சி பலவிதமான தாதுப் பொருட்கள் மண்டிக் கிடப்பது போலவும், வானம் கிரகங்களும், சந்திரனுமாக காட்சி தருவது போலவும், அந்த விமானம் பல ரத்னங்கள் இழைக்கப் பட்டு இருந்ததைக் காண, மேகத்துடன் ஒப்பிடுவது சரியே என்று எண்ண வைத்தது. பூமியில் பர்வத பாறைகள் நிரம்பிக் காணப்படுகின்றன. இந்த பாறைகள் மரங்களின் அடர்த்தியில் மறைகின்றன. மரங்களோ, புஷ்பங்களின் அடியில் தங்களை மறைத்துக் கொள்கின்றன. புஷ்பங்களில் மண்டிக் கிடக்கும் மகரந்தத் தூள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு பிரதானமாகத் தெரிந்தன. வீடுகள், தூய்மையான வெண் நிற பூச்சுகள் பூசப் பெற்றிருந்தன. புஷ்கரங்கள் நல்ல பத்மங்கள் அடர்ந்து தெரிந்தன. அந்த பத்மங்கள் மகரந்ததூள் நிரம்பிக் கிடந்தன. இதே போல வனம் முழுவதும் விசித்திரமான காட்சிகள் பல கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தன. இந்த புஷ்பங்கள் நிறைந்த புஷ்கரங்கள் அழகு என்றால், ரத்னங்க ளின் பிரபையில் பள பளக்கும் வீடுகள் அதைவிட அழகு, அதையும் புஷ்பக விமானம் தூக்கி அடித்தது. விஹாரங்கள்-ஆகாயத்தில் பறக்கும் அந்த விமானம் வைடூரிய மயமாக இருந்தது. வெள்ளி, பவழம் இவைகளுக்கு இடையில், பறக்கும் விஹங்கா: பறவைகள் போல, எல்லா வித செல்வங்களும் (வசு-செல்வம், ரத்னம்) நிறைந்த புஜங்க-பாம்புகள், சித்ர விசித்ரமாக இருப்பது போலவும், ஜாதிக்கு ஏற்ப குதிரைகள் சுபமான அங்கங்களுடன் இருப்பது போலவும், விஹங்கமான-ஆகாயத்தில் சஞ்சரிக்கும் புஷ்பக விமானம் காணப்பட்டது. பக்ஷங்களில் பவழமும், தங்கமும் கொண்டு வரைய பெற்றிருந்த சித்திரங்கள், விளையாட்டாக விரித்து வைத்த பெரிய இறக்கைகள், சாக்ஷாத் காமனுடைய பக்ஷங்கள் போல பிரகாசமாகத் தெரிந்தன. இதன் காரணமாக மற்ற சாதாரண பறவைகள், சுமுகமாக, சுபக்ஷமாக இருந்தன. சுஹஸ்தா:- சுபமான கைகளையுடைய யானைகள், நீரில் இறங்கி, உத்பல, பத்ம புஷ்பங்களை வேரோடு பிடுங்கி வைத்துக் கொண்டு நின்றன. லக்ஷ்மி தேவியே சுஹஸ்தாவாக ஆக்கப் பட்டாள். பத்மங்களை கையில் வைத்துக் கொண்டு நிற்பதால் (யானைகள் பத்மங்களை பறித்து வைத்துக் கொண்டு நிற்பது போல நின்றதால்- யானைக்கு சுஹஸ்தா என்று ஒரு பெயர், லக்ஷ்மிக்கும் பொருந்தும்-சுபமான கைகளையுடையவள் என்றும் கொள்ளலாம்) இப்படி அந்த வீட்டைப் பார்த்து பிரமிப்பும் ஆச்சர்யமுமாக,. சோபனம்-அழகு என்று நினைத்தவனாக, ஹிமய மலையின் சாரலில் உள்ள மலைச் சாரல் போன்று நெடிதுயர்ந்து இருந்த மாளிகையை, மலையின் அழகிய குகைகள் போல உட்புறம் அறைகளை உடையதாய் இருந்ததை திரும்பி பார்த்தபடி நடந்தான். இவ்வளவு இருந்தும் மனதில் துக்கம் பொங்கியது. ஜனகாத்மஜாவை காணவில்லை. தன் எஜமானன் சொல்லியனுப்பியபடி வேகமாக செயல் பட முடியவில்லையே என்ற ஆதங்கமும் நிறைந்தது. கண்ணும் கருத்துமாக தான் போகும் இடங்களிலெல்லாம், ஜனக சுதா-சீதையைத் தேடி அலைந்தவன், அவளைக் காணாததால், மனம் சோர்ந்து நின்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், புஷ்பக தரிசனம் என்ற ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 8 (346) புஷ்பகானு வர்ணனம் (மேலும் புஷ்பக விமானத்தை வர்ணித்தல்)
மாளிகையின் நடுவில் அலங்காரமாக நிறுத்தப் பட்டிருந்த புஷ்பக விமானத்தை பவனாத்மஜன் திரும்பவும் பார்த்தான். புடமிட்ட தங்கத்தால் வலைகள் அமைக்கப் பெற்ற சாளரங்களுடன் இருந்த புஷ்பக விமானம் ஒப்புவமை சொல்ல முடியாத அழகுடன் விளங்கியது. செய் நேர்த்தியும், தானே அதை செய்து முடித்து விட்டு விஸ்வகர்மா சாது, சாது என்று தன்னையே பாராட்டிக் கொண்டிருப்பார் போலும். ஆதித்ய மார்கத்தில் ஒரு தடை, அல்லது களங்கம் போல, ஆகாய மார்கத்தில் செல்லக் கூடியது. அந்த விமானத்தைச் செலுத்த எந்த விதமான பிரயத்னமும் செய்ய வேண்டாம். அதில் இருந்த ரத்னங்கள் அனைத்தும் விலை மதிக்க முடியாத உயர்ந்த மணிகளே. தேவர்களும் அதைப் போன்ற விசேஷ விமானத்தை தங்களிடம் வைத்திருக்கவில்லை. மகா விசேஷமாக அல்லாமல் அதன் எந்த பாகமும் சாதாரணமானது அல்ல. தவம் செய்து வலிமை பெற்று சம்பாதித்தது, மனதில் நினத்த மாத்திரத்தில் கொண்டு செல்லக் கூடியது. பல இடங்களிலிருந்தும் பொறுக்கி எடுத்த உயர்ந்த பொருட்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டது. அந்தந்த இடங்களுக்கு இணையான விசேஷமான காட்சிகளைத் தன்னுள் கொண்டது. மாருதனுக்கு இணையாக வேகமாகச் செல்லக் கூடியது. மகாத்மாக்கள், புண்ய கர்மாக்களைச் செய்தவர்கள், யஸஸ்வியான செல்வந்தர்களும், முதலில் வணங்கத் தக்கது. விசேஷமாக அமைந்தது. விசித்ரமான அமைப்பும், உள்ளே பல அறைகளைக் கொண்டது. மனதைக் கவரும் சரத் கால சந்திரன் போல நிர்மலமானது. மலை சிகரம் போல தனித்து தெரிவது. இதை குண்டலங்கள் அணிந்து சோபையுடன் கூடிய முகத்தினராக ராக்ஷஸர்கள் செலுத்தினர். ஆகாய மார்கமாக செல்லும் சக்தி வாய்ந்த நிசாசரர்கள் தாங்கினர். நல்ல வேகம் உடைய பூத கணங்கள் ஆயிரக் கணக்கில் இதன் சேவைக்கு தயாராக நின்றனர். வசந்த மாத புஷ்பங்களை மலரச் செய்யும் சந்திரன் போல அழகிய காட்சி தரும், வசந்த மாதத்தை விட அதிகமாக மனதில் ஆவலைத் தூண்ட வல்லது, இப்படிப்பட்ட புஷ்பக விமானத்தை, வானரோத்தமனான ஹனுமான் கண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், புஷ்பகானு வர்ணனம் என்ற எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 9 (347) ஸங்குலாந்த:புரம் (அலங்கோலமான அந்த:புரம்)
நீண்ட கண்களையுடைய சீதையைத் தேடிச் சென்ற ஹனுமான், நீண்ட கூடங்களை தன்னுள் அடக்கிய ராவண மகாராஜாவின் மாளிகையின் உள்ளே நாலாபுறமும் சுற்றித் திரிந்தான். லங்கையின் அழகிய மாளிகைகளுக்குள் இது முதன்மையானது என்று சொல்லும் படியான கம்பீரமும், அரை யோஜனை விஸ்தீர்ணமும், யோஜனை தூரம் நீளம் கொண்டதுமான அது ராக்ஷஸேந்திரனுடைய ப்ரத்யேகமான உத்தமமான மாளிகை. இங்கு சீதையைத் தேடிச் சென்ற ஹனுமானும் லக்ஷ்மீவான். நான்கு தந்தங்கள் கொண்ட யானைகள். இரண்டு பற்களைக் கொண்டவை, மூன்று பற்களையுடையவை, அல்லது கொம்புகள் உடையவை என்று பலவிதமாக இடைவெளி விடாமல் காவலுக்கு நின்றன. ராக்ஷஸிகள், ராவணனுடைய பத்னிகள், அபகரித்துக் கொண்டு வரப் பட்டவர்கள், ராஜ குமாரிகள் என்று பலரும் நிரம்பி இருந்தனர். நக்ரம், முதலை, மகர- நண்டுகள், மீன்கள் என்று கடல் வாழ் பிராணிகள் நிறைந்து வாயு வேகத்தில் சஞ்சரிக்கும் பன்னகங்கள், இவைகளுடன் அமைதியாக இருக்கும் சாகரம் போல இருந்தது. வைஸ்ரவனத்தில் எந்த லக்ஷ்மீ வாஸம் செய்கிறாளோ, எந்த லக்ஷ்மீ ஹரி வாகனமான கருடனிடத்தில் காணப்படுவாளோ, அவள் ராவண க்ருஹத்தில் நிரந்தரமாக வாஸம் செய்கிறாள். குபேர ராஜாவிடமும், யமனுடைய, வருணனுடைய வீடுகளில் எந்த லக்ஷ்மீ கடாக்ஷம் நிறைந்து இருக்குமோ, அதற்கு சமமாக அல்லது அதைவிட அதிகமாகவே ராவண க்ருஹத்தில் லக்ஷ்மீ கடாக்ஷத்தை (செல்வ செழிப்பை) காண முடிந்தது. இந்த மாளிகையின் நடுவில் மற்றொரு கட்டிடம் மிகவும் நேர்த்தியாக விளங்கியது. இதுவும் கற்பனைக்கெட்டாத வனப்புடன் காணப்பட்டது. ப்ரும்மாவுக்காக விஸ்வகர்மா தயாரித்து கொடுத்த புஷ்பக விமானம். மிக உயர்ந்த ரத்னங்களும், மணிகளும் இழைத்துச் செய்யப் பட்டது. இதை பெரும் தவம் செய்து குபேரன் பிதாமகரிடமிருந்து கிடைக்கப் பெற்றான். குபேரனை தன் பலத்தால் வெற்றி கொண்டு இந்த விமானத்தை ராவணன் கவர்ந்து வந்து விட்டான். தனதாக்கிக் கொண்டு விட்டான். கல்வெட்டுகளில் மிருக, பக்ஷிகளின் உருவங்கள் கார்த்தஸ்வர, ஹிரண்யம் (இரண்டுமே தங்கத்தின் மறு பெயர்களே) இவைகளால் அழகாக, சிறப்பாக அமைக்கப் பட்ட தூண்கள். இவைகள் தங்கள் அமைப்பின் விசேஷத்தால் பள பளவென மின்னின. பிரகாசமாகத் தெரிந்தன. மேரு மந்தர மலைகளுக்கு இணையாக,ஆகாயத்தை தொடும் உயரம். சுபமான அறைகள் பல இருந்தன. அக்னியோ, சூரிய ஒளியோ எனும்படி பிரகாசமாக விஸ்வகர்மா தயாரித்து கொடுத்த அழகிய யாகசாலை. அதன் படிக்கட்டுகளும் பொன்னாலானவையே. சாளரங்கள் வலைகள் பொன்னால் போடப்பட்டு, ஸ்படிகங்களும் பயன் படுத்தப் பட்டிருந்தன. நீல கற்கள், இந்திர நீலம், மகா நீலம் போன்ற உயர்ந்த மணிகள் அந்த யாக சாலையை அலங்கரிக்க பயன் பட்டிருந்தன. விசித்திரமான முத்துக்கள், விலையுயர்ந்த மணிகள், விலை மதிக்க முடியாத முக்தா-முத்துக்கள் போல தரை பள பளத்தது. சிவந்த சந்தனம் அக்னியின் ஜ்வாலை போல மிக உயர்ந்த ரகம் ஆனதால் வாசனை கமகமத்தது. இளம் சூரியன் போல காணப்பட்டது. இந்த திவ்யமான புஷ்பக விமானத்தில் ஹனுமான் ஏறினான். அங்கு இருந்தபடி பய (பால்), அன்னம், பானங்கள் இவற்றின் திவ்யமான வாசனையை நுகர்ந்தான். ரூபம் எடுத்து வந்த வாயுவைப் போலவே நின்று ஆழ்ந்து மூச்சு விட்டு அந்த மணத்தை அனுபவித்தான். க3ந்த4ம்- பரிச்சயமான அந்த மணத்திலிருந்து நெருங்கிய பந்துவை கண்டு கொண்டாற் பொல மகிழ்ந்து ரசித்தான். இங்கு வா என்று அழைப்பது போல இருந்தது. ராவணன் இங்கு தான் இருக்கிறான் வா, என்று அழைப்பது போல அந்த திக்கை நோக்கிச் சென்றான். ராவணனுக்கு பிடித்தமான அந்த கூடத்தைக் கண்டான். உத்தமமான ஸ்த்ரீயை மனைவியாகக் கொண்டவன் ராவணன். இந்த இடத்தையும் காந்தாவுக்கு இணையாக விருப்பத்துடன் பாதுகாத்து வைத்திருந்தான். படிக்கட்டுகள் மணிகள் இழைத்து கட்டப்பட்டிருந்தது. சாளரங்க ளில் பொன்னால் வலை வேய பட்டிருந்தது . தரை ஸ்படிகத்தால் ஆனது. அதில் பல சிற்பங்கள் தெரியும்படி, ஸ்படிக பரப்பின் அடியில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முத்துக்களும், பவழங்களும் வெள்ளி, தங்கம் இவை கொண்டு செய்யப்பட்ட சித்ர வேலைகள் கொண்ட மணிஸ்தம்பங்களூம் நிறைய காணப்பட்டன. சமமாக, நேராக, மிக உயரமாக, பார்த்தவுடன் எதிரில், அலங்கரிக்கப் பட்டு நின்றன. ஸ்தம்பங்களும் பக்ஷங்களுடன் இதோ, வானத்தை தொட்டு விடுவோம் என்பது போல உயரமாக காணப்பட்டன. அகன்ற அடிப்பாகம், பூமியில் அதை நிலை நிறுத்திக் கொண்டு, நிற்பது போல தோன்றியது. ராஷ்டிரங்களும், க்ருஹங்களும் வரிசையாக இருந்தாலும் தாங்கும் பூமியின் குணம், பறந்து விடாமல், அந்த தூண்களை அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தது போலும். குதூகலமாக பறவைகள் நாதம் செய்தன. அகரு முதலிய தூபங்களின் நறுமணம் அந்த இடம் முழுவதும் வியாபித்து இருந்தது ஹம்ஸம் போன்ற வெண்மையான, புஷ்பங்கள் சித்தரிக்கப் பட்டு, மனதுக்கு இதமான வர்ணங்களில், மகிழ்ச்சியை வளர்க்கும் விதமாகவும், நல்ல பிரபையுடன் கூடியதுமான விரிப்புகள், சிறப்பாக விரிக்கப் பட்டு, ராக்ஷஸாதிபதி வசிக்கத் தகுந்ததாக செய்யப்பட்டிருந்தது. இந்த இடமே சோகத்தை நாசம் செய்து புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது. சாக்ஷாத் ஸ்ரீயே, லக்ஷ்மி தேவியே ஜீவனுடன் வசிப்பதாக தோன்றியது. ஐந்து இந்திரியங்களுக்கும் விருந்தாக, ஐந்து விதமான உத்தமமான பொருட்கள் சேகரித்து, தாய் போல பரிவுடன் உபசரிக்கத் தயாராக இருந்தன. இப்படி ராவணனால் பாலிக்கப் பட்ட நகரம், ஸ்வர்கம் இது தானோ, தேவலோகமோ, இந்திரனுடைய புரி-நகரமோ, என்று எண்ணினான் ஹனுமான், இவ்வளவு சாதனைகள் செய்துள்ள ராவணனும் நிறைய சித்திகள் பெற்றிருக்க வேண்டும் என்றும் நினைத்தான். ஆழ்ந்த சிந்தனையுடன் அக்னியின் ஜ்வாலை போன்று பள பளத்த காஞ்சனங்களை பார்த்தபடி இருந்தான். தூர்த்தர்களை மஹா தூர்த்தர்கள் தோற்கடித்தது போல என்று எண்ணிக் கொண்டான். ராவணனுடைய தேஜஸாலும், ஆபரணங்களின் ஒளியாலும், இவைகள் கொழுந்து விட்டெரிவது போல தோற்றம் அளிக்கின்றன போலும். இதன் பின் பலவிதமான வர்ணங்களில் உயர்ந்த ஆபரணங்களை அணிந்து, (அமரும்) ஆசனங்களில் வந்தமர்ந்த அரண்மனை ஸ்த்ரீகளைக் கண்டான். அந்த ஸ்த்ரீகளின் வேஷ பூஷணங்களும் ரசிக்கத் தகுந்ததாக இருந்தது. அர்த்த ராத்திரியில், பானம், நித்ரா இவைகளில் தன்னை மறந்தவர்களாக இருந்தனர். ஆயிரக் கணக்கான உத்தம ஸ்த்ரீ லக்ஷணங்களை -யுடைய பெண்கள், சிலர் விளையாடி களைத்து, பலவந்தமாக தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இதனால் இவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களும் சத்தமிடாது உறங்குவதுபோல கிடந்தன. பத்மவனம் அருகில் இருந்ததாலும், ஹம்ஸங்களும் ப்ரமரங்களும் கூட சத்தமிடாது இருந்தன. இவர்களுடைய மூடிய கண்களையும், சற்றே வெளியில் தெரிந்த பற்களையும் பார்த்து ஹனுமான், இந்த பெண்களின் முகங்களும் பத்மங்கள் போலவே இருப்பதாக எண்ணினான். நல்ல குல பெண்கள். இரவு நேரத்தில் பத்மங்கள் எப்படி மலர்ந்து இருக்க முடியும், இவை அனவரதமும் மலர்ந்து கிடக்கும் ஜாதி போலும், அதனால் ப்ரமரங்கள் ஆறுகால்களுடையவை, எப்பொழுதும் மதம் கொண்டவைகளாகவே இருக்கும் என்று சிந்தனையை ஓட விட்டான். குணத்தாலும் இவர்கள் நீரில் தோன்றி மலரும் பத்மங்களைப் போன்றே இருக்க வேண்டும், அந்த கூடமே இந்த பத்மங்களின் மணத்தால் நிறைந்தது. சரத் கால இரவில் வானம் நிர்மலமாக இருப்பது போல தாரா கணங்கள் ஒளி வீச இருக்கும் சந்திரனைப் போல, இந்த ராக்ஷஸ ராஜனும், இப்படி அழகிய ஸ்த்ரீகளுடன் தனித்து பிரகாசமாக தெரிகிறான் என்று ஹனுமான் எண்ணினான். ஆகாயத்திலிருந்து புண்யம் தீர்ந்தவுடன் விழும் தாரகைகள் போல இந்த பெண்களும் ஒரு சமயம் ராவணனுடன் இருந்திருப்பார்கள். சுபமான லக்ஷணங்களுடைய இந்த ஸ்த்ரீ கணங்களும், ப்ரபை, வர்ணம், சாயல் இவற்றால், தெளிவாகத் தெரிந்த அழகுடன் காணப்பட்டனர். அங்கங்களில் அனிந்திருந்த ஆபரணங்கள் நழுவி விழ, மது பானத்தால் மயங்கி தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். சிலரின் திலகம் கலைந்து கிடந்தது. சிலரின் நூபுரம் கழண்டு கிடந்தது. பக்கத்தில் நழுவி விழுந்த ஹாரம், முக்தாஹாரம் கவனிப்பாரின்றி கிடந்தது. கலைந்த ஆடையும், கேசங்களுமாக சிலர் வாயை பிளந்து கொண்டு தூங்கும் சமயம் பற்கள் பளீரென்று தெரிந்தன. சிலர் குழந்தை போல சுருண்டு கிடந்தனர். குண்டலங்கள் இன்றி சிலர், பூ மாலை நடுவில் அறுந்து தொங்கிக் கொண்டிருக்க, யானை மிதித்த கொடி போல பெரும் வனத்தில் இரைந்து கிடக்கும் மலர்கள் போல கிடந்தனர். சந்திர கிரணம் போன்ற விலையுயர்ந்த மணி மாலைகளை அணிந்தவர்கள் சிலர் படுத்துக் கிடக்கும் பொழுது இந்த மாலை அவர்கள் மார்பில் ஒரு ஹம்ஸம் ஏறி அமர்ந்து தானும் தூங்குவது போல காட்சியளித்தது. வைடூரிய மாலை அணிந்தவர்கள் மார்பில் இருந்தது காதம்ப பக்ஷிகளாக இருக்கலாம். தங்கத்தால் ஆன சூத்ரம், சிலரது மார்பில் சக்ரவாகமாக இருக்கலாம். இதனால் ஹம்ஸ, காரண்டவ, சக்ரவாக பக்ஷிகள் நடமாடும் பெருகி ஓடும் நதியைப் போல இவர்கள் இருப்பதாகக் கொண்டால், இவர்கள் உடலின் அங்கங்கள், நதிக்கடியில் தெரியும் மணலாகும். கின்கிணி ஜாலம் எழுப்பும் நாதமும் சேர, ஹேம வர்ணத்தில் பெரிய தாமரை பூத்தது போன்ற முகமும், பா4வமே முதலைகளாக, புகழே கரையாக, நதி தூங்குவது போல அந்த ஸ்த்ரீ கணங்கள் கூட்டத்தைப் பார்த்து ஹனுமான் கற்பனையை ஓட விட்டு ரசித்தான். மிருதுவான ஸ்தனங்களில் பூஷணங்கள் ப்4ரமரங்களாக தோன்றின. மூச்சுக் காற்றில் நடுங்கிய இந்த ப்ரமரங்கள் மேலும் முயற்சி செய்து முகத்தைச் சுற்றி பறந்தன. காதில் குண்டலங்கள் ஆடி ஓசை படுத்த, இயல்பாகவே நல்ல மணமுடைய வதனத்தினர், சுவாசக் காற்றில் இந்த மணம் வெளி வந்து பரவி, ராவணனை தட்டி எழுப்பி, அவனை கிறங்கச் செய்வது போல ஹனுமான் கற்பனை செய்து கொண்டான். (குண்டல ஓசை கட்டியம் கூற சுவாச காற்று மணத்தை எடுத்துச் செல்கிறது) அருகில் இருந்த சபத்னி முகத்தையே சில பெண்கள் முகர்ந்தும், முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியதையும் பார்க்க, இவர்கள் ராவணனிடத்தில் மிகுந்த ஈ.டுபாடு உள்ளவர்களே என்று ஹனுமான் எண்ணினான். தங்கள் அளவில் ஸ்வதந்திரம் இல்லாததால் சபத்னிகளிடம் பிரியமாகவே நடந்து கொண்டனர். ஒருவரையொருவர் கைகளை கோத்தபடி, படுத்துக் கிடந்தனர். அடுத்தவர் மார்பில், தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தாள் ஒருவள். மற்றவள் புஜங்களில் , மடியில் என்று தோன்றியபடி தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். ஸ்த்ரீகளின் மாலை போலவே அந்த கூடத்தில் உள்ள பெண்கள் வரிசையாக கோர்த்து வைத்த மலர் மாலை போல தெரிந்தது. மாலை போல இருந்த அந்த பெண்களின் புஜங்கள், தலையில் சூடியிருந்த மலர்களின் மணம் காற்றில் இசைந்து வர, முகத்தில் தாக்கியது. ராவணனுடைய ஸ்த்ரீ வனம் இது. நல்ல குலத்தில் பிறந்தவர்களும், ஆபரணங்கள் அணிந்து சோபையுடன் காணப்பட்டவர்களுமான இந்த ஸ்த்ரீகள் ராஜ ரிஷி, பித்ரு, தை3த்ய, க3ந்த4ர்வ குலங்களில் பிறந்தவர்கள். ராக்ஷஸ ஸ்த்ரீகளூம் சிலர். ராவணன் பார்வையில் பட்டவர்கள், காமத்துடன் வந்து சேர்ந்தவர்கள், யுத்தம் செய்யும் வெறியுடன் போர் புரியச் சென்று வென்று வரும் பொழுது கைப்பற்றிக் கொண்டு வந்தவர்கள், அப்படி இருந்தும் இந்த பெண்கள் -குணத்தினால் கவரப்பட்டு வரவில்லையெனினும்- பர புருஷனிடம் மனதை செலுத்துபவர்களாக இல்லை. ராவணனை பதியாக எண்ணி, அவனிடமே தங்களை அர்ப்பணித்த -வர்களாகவே தெரிந்தார்கள். ஜனகாத்மஜாவைத் தவிர. நல்ல குலம் இன்றியோ, அழகின்றியோ, தாக்ஷிண்யம் இல்லாமலோ, பெருந்தன்மையில்லாமலோ, உபசாரம் செய்வதும், தகுந்த இடத்தில் உபசாரம் பெறுவதுமான குணங்கள் இல்லாமலோ யாரும் அந்த ராவணனுக்கு மனைவியாக இல்லை. தவிர, யாருமே, செல்வத்தாலும், வீரத்தாலோ, ஆற்றலிலோ குறைந்தவர்களும் இல்லை. இவை அனைத்துக்கும் மேலாக, பர்த்தாவான ராவணனிடம் அன்பு கொண்டவர்களாகவும் இருந்தனர். இப்படி ஒரு கூட்டமே ராவணனின் தர்ம பத்னியாக, அவன் மனைவியாக இருக்குமானால், இந்த ராக்ஷஸன் பாக்கியசாலிதான் என்று வானர வீரனான ஹனுமான் எண்ணினான். மேலும் இவர்கள் அனைவரையும் விட்டு ராவணனின் மனம் சீதையை நாட வேண்டும் என்றால், நிச்சயம் சீதை குணத்தால் மேம்பட்டவளே. அதனால் தான் இவ்வளவு கஷ்டமான, கீழ்த்தரமான செயலை செய்தாவது அவளை அடைய நினைத்திருக்கிறான் இந்த ராவணன் என்றும் எண்ணினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ஸங்குலாந்த:புரம் என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 10 (348) மந்தோ3த3ரி தரிசனம் (மந்தோதரியைக் காணுதல்)
இதன் பின் ஸ்படிகத்தால் செய்யப் பெற்று, ரத்னங்கள் இழைத்து அலங்கரிக்கப் பட்டிருந்த திவ்யமான சயனாஸனம்- படுக்கையை ஹனுமான் கண்டான். பெரும் செல்வ செழிப்போடு, மகா ராஜாவுக்கு ஏற்ற, உயர்ந்த பொன், வைமூடுரியம் இவற்றால் சித்ர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு அழகிய ஆசனங்களுடன், விரிப்புகளுடன் கூடிய அந்த அறையில் முகப்பு வாயிலில் வெண் கொற்றக் குடை இருந்தது. சித்திரபா4னுவுக்கு சமமான ஒளியுடன் அசோக மாலை அணிவிக்கப் பட்டு, பரமாஸனம்- சிம்மாசனம், அமர வாகாக இருந்தது, கையில் வால, வ்யஜனம் இவற்றை வீசிக் கொண்டிருந்தனர். தூபமும், மணம் வீசும் வாசனை திரவியங்களும் அறையை சூழ்ந்திருந்தன. உயர் ரக மான் தோல்கள் தரை விரிப்புகளாக பயன் படுத்தப் பட்டிருந்தன. வர மாலைகளின் ஒளியால் அந்த சூழ்நிலையே பிரகாசமாகத் தெரிந்தது. அதில் மிகப் பெரிய குண்டலங்கள், சிவந்த கண்களும், நீண்ட கைகளும், வெண் பட்டாடையும், சிவந்த சந்தனம் பூசப் பெற்ற சரீரமும், சாயங்கால நேரத்தில், அந்தி வானில் தெரியும் மகா மேகம், மின்னலுடன் இருப்பது போல ஆபரணங்கள் அந்த கார் மேகம் போன்ற பெருத்த உடலில் ஒளி வீச, நல்ல ரூபமும், கண்டவர் விரும்பும் அழகிய தோற்றமும், மரங்களும் கொடிகளும் அடர்ந்து கிடக்க தூங்கும் மந்தர மலை போலவும், இரவு கேளிக்கைகளில் ஈ.டுபட்டு களைத்து, ராக்ஷஸ ஸ்த்ரீகளின் மணாளனாக, ராக்ஷஸர்கள் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்து வணங்கும் அரசனாக, மதுவுண்டு மயங்கி, உறங்கி கிடப்பதைக் கண்டான். அழகிய படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ராக்ஷஸ ராஜன், நாகராஜன் போல பெருமூச்சு விடுவதைக் கண்டு பயந்தது போல சற்று ஒதுங்கி நின்றான். சற்று தள்ளி இருந்த யாகசாலையில் ஏறி நின்று வசதியாக ராக்ஷஸ ராஜனை கவனித்துப் பார்த்த ஹனுமான், பெண் யானை நுழைந்த ப்ரஸ்ரவன மலை போல, ராக்ஷஸன் உறங்கும் படுக்கையும் சோபை பெற்றது போல இருந்ததாக நினைத்தான். பக்கங்களில் கிடந்த ராவணனின் புஜங்கள் இந்திரனின் த்வஜம் போல இருந்தன. ஐராவதத்தின் தந்தத்தால் உரசி காயம் பட்டதும், வஜ்ராயுதம் தாக்கி அதன் முனையால் அடையாளம் இட்டதுமான அகன்ற மார்பில், விஷ்ணு சக்கிரத்தால் அடிபட்ட அடையாளமும் தெரிந்தன. பெருத்த, பலம் கொண்ட, சமமான இரு புஜங்கள், நல்ல லக்ஷணங்களுடன் நகங்களும், கட்டை விரலும், விரல்கள் லக்ஷண சாஸ்திரத்துக் கேற்ப இணைந்தும், இரண்டு பரிகம் போன்று நீண்ட யானையின் தும்பிக்கைக்கு இணையாக உறுதியான கைகள், சயனத்தின் பக்கங்களில் தொங்கும் கை, ஐந்து தலை நாகம் போல தொங்கியது. முயல் ரத்தம் போல சிவப்பான சந்தனம் பூசப் பெற்று, மணம் வீசியது. உத்தம ஸ்த்ரீகள் விரும்பி மோகம் கொள்ளத்தக்க உடல் வாகு. உத்தமமான வாசனைப் பொருட்கள் உபயோகித்திருப்பது தெரிந்தது. யக்ஷ, பன்னக, கந்தர்வ, தேவ தானவர்களை வருத்தி எடுத்தவன். அந்த ராவணனுடைய (இரு) கைகளையும் தூங்கும் சமயம் படுக்கையில் கிடந்ததைக் கண்டு ஹனுமான், மந்தர மலையில் உள்ளே தூங்கும் பெரிய நாகம் ரோஷத்துடன், தன்னை அடக்கிக் கொண்டிருப்பது போல என்று நினைத்தான். புஜங்களின் முழு நீளமும் தெரிய, மந்தர மலையின் உயர்ந்த சிகரமோ என்று ஹனுமான் எண்ணினான். சூத, புன்னாக, சுரபி. வகுல இவைகள் ஒன்று சேர்ந்து ம்ருஷ்டான்ன ரஸ மணமும் கலந்து வர, பானங்களின் கந்தமும் சேர, அந்த ராக்ஷஸ சிம்மத்தின் மூச்சுக் காற்றில், இவை அந்த வீட்டையே நிரப்புவது போல பரவி இருந்தது. விசேஷமான முத்துக்கள் இழைத்து பொன்னில் செய்யப் பட்ட குண்டலங்கள் முகத்தில் பட்டு ஒளியைச் சிதறியது. மகுடத்தின் பிரகாசமும் முகத்தில் தெறித்தது. அகன்ற மார்பில் சந்தனமும், ஹாரங்களும் விளங்கின. வெண் பட்டாடையில் சிவப்பு கரையுடன் அரையில் வஸ்திரமும் மஞ்சள் நிற மேல் வஸ்திரமும், முழு உளுந்தின் வண்ண உடலில் பளீரென்று தெரிய, பு4ஜங்கம் போல மூச்சு விடும், கங்கை கரையில் தூங்கும் குஞ்சரம் போல இருந்தவனைக் கண்டான். நான்கு தங்கத்தாலான விளக்குகள் நால் திசையையும் ஒளி மயமாக ஆக்கின. அந்த தீப ஒளி, மின்னல் மேகத்தின் இடையில் தெரிவது போல ராக்ஷஸ ராஜனின் உடலில் பட்டு விலகியது. மற்றும் சில ராக்ஷஸ ராஜனின் மகிஷிகள் பாதத்தின் அருகில் இருந்தன. அவர்கள் ராவணனின் ப்ரத்யேக அன்புக்கு பாத்திரமானவர்கள் போலும். சசி-சந்திரன், போன்ற முகமும், அழகிய குண்டலமும், வாடாத மலர் மாலைகளும் தரித்து இருந்ததை ஹனுமான் கண்டான். இந்த பெண் மணிகளும் நாட்யம், வாத்யம், கீதம் இவற்றில் தேர்ந்தவர்கள். இவர்கள் படுக்காமல் அமர்ந்து இருப்பதைக் கண்டான். வைர, வைடூரியங்கள் மின்ன நகைகள் அணிந்து குண்டலங்களும், அங்கதங்களும், சந்திரனுக்கு நிகரான முகத்தில் சுபமான லலித குண்டலங்களின் ஒளி பட்டுச் சிதற, தாரா கணம் சூழ்ந்த ஆகாயம் போல இருந்தது. மதுவும், கேளிக்கை விளையாட்டுகளாலும் களைத்து, அந்த பெண்கள், ராஜமகிஷிகள் கிடைத்த இடத்தில் படுத்துறங்கினர். அங்கராகத்தைக் கூட அழிக்காமல் ஒரு நாட்டியம் ஆடும் பெண், உடல் சோர தூங்கிக் கொண்டிருந்தாள். வீணையை அணைத்தபடியே ஒருவள் நதி வேகத்தில் அடித்துச் செல்லப்படும் பொழுது தாமரைத் தண்டை பற்றிக் கொண்டு தப்ப முயலுவது போல, மற்றவள், இடுப்பில் இடுக்கிக் கொண்டிருந்த மட்டுகம் என்ற தாள வாத்யத்துடனேயே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். இளம் குழந்தையை அணைத்துக் கொண்டிருப்பதைப் போல வாத்ஸல்யத்துடன் காணப்பட்டாள். மற்றும் ஒருவள், குழலை அணைத்துக் கொண்டு, வெகு நாட்களுக்குப் பிறகு கணவனை அடைந்தது போல மகிழ்ச்சி முகத்தில் தெரிய தூங்கினாள். விபஞ்சீ என்ற வீணையை அணைத்துக் கொண்டு உறங்குபவளைப் பார்த்தால், விபஞ்சியை தன் பர்த்தாவாக காந்தனாக எண்ணிக் கொண்டு விட்டவள் போல இருந்தது. மற்றொருவருடைய மிருதங்கம் ம்ருதுவாகப் பெரியதாக இருந்தது. அதை மதுவுண்ட மயக்கத்தில் என்ன நினைத்துக் கொண்டாளோ, அன்புடன் அணைத்தபடி உறங்கினாள். அதே போல மற்றொருவள், அருகில் இருந்த பணவம் என்ற வாத்யத்தை தன் கைகளால் இடுக்கிக் கொண்டிருந்தாள், டிண்டிமம் என்ற வாத்யத்தை தன் மகன் என்று நினைத்தோ, ஆடம்பரம் என்ற வாத்யத்தின் பகுதி, மனிதனுடைய புஜம் என்று சொல்லும்படி இருந்ததை, அணைத்துக் கொண்டு மதுவுண்ட மயக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவள், என்ன நினைத்தாளோ, காசி என்ற வாத்யம் புஷ்ப மாலை போல இருந்தது, இதை தன் மார்பில் வைத்துக் கொண்டவள், என்ன நினைத்து இருந்தாளோ, தன்னைப் போலவே மற்றொருவளை அணைத்துக் கொண்டிருந்தவள் என்று பலரும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இப்படி சித்ர, விசித்ரமாக தெரிந்த பெண்களின் மத்தியில் தனித்து தெரிந்த ஒருவள், ஹனுமானின் கவனத்தைக் கவர்ந்தாள். படுக்கையில் படுத்தபடி இருந்த அவள் ரூப சம்பன்னமாக, மிக அழகியாகத் தெரிந்தாள். ஆபரணங்கள் அவளுக்கு அழகூட்டின. முத்தும் மணியும் கொண்ட அவள் பூஷணங்கள், அந்த மாளிகையையே பிரகாசமாக்கியது. கௌரீ, பொன் நிறத்தாள், ராவணனுக்கு பிரியமான மனைவி, அந்த:புரத்தின் தலைவி, அழகிய உடலமைப்பு கொண்டவள். இவளைப் பார்த்து வானரம் சீதை என்றே தீர்மானித்து விட்டது. ரூப, யௌவன சம்பத்து ஒத்து போனதால், சந்தேகமே கொள்ளவில்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் தன் தோளைத் தட்டிக் கொண்டான். தன் வாலை எடுத்து முத்தமிட்டான். மகிழ்ந்தான். மெதுவான குரலில் சீட்டியடித்தான். நடந்து சென்று திரும்பி வந்தான். தூண்களில் ஏறி தடாலென்று குதித்தான். தன் இயல்பான வானர குணத்தை வெளிப்படுத்தினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், மந்தோ3த3ரி தரிசனம் என்ற பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 11 (349) பான பூமி விசய: (பான பூமியில் தேடுதல்)
திடுமென ஏதோ நினைவு வர, ஹனுமான் சற்று நிதானமாக யோசிக்கலானான். சீதை என்று நினைத்தோமே என்று தன்னையே கடிந்து கொண்டான். ராமனை விட்டுப் பிரிந்த சீதை இப்படி தூங்குவாளா? சாப்பிடவும், அலங்காரம் செய்து கொள்ளவும், பான வகைகளை அருந்தவும், இப்படி உறக்கம் கொள்ளவும் அவள் எப்படி ஒப்புவாள்? தேவ ராஜனேயானாலும், அன்ய புருஷனோடு எப்படி கட்டிலில் படுப்பாள். ராமனுக்கு சமமாக வேறு யார் இருக்க முடியும்? மூவுலகிலும் காணக் கிடைக்காது என்பது நிச்சயம். இது வேறு யாரோ என்று நிச்சயித்து பான பூமியை விட்டு இறங்கி நடந்தான். விளையாடிக் களைத்தவர்கள், பாடி ஆடி களைத்தவர்கள், மதுவினால் மயக்கம் அடைந்தவர்கள், முரஜம், ம்ருதங்கம், இவைகளுடன், தரையில், படிகளில் என்று அமர்ந்திருந்தவர்கள், விரிப்புகளின்மேல் அமர்ந்திருந்தவர்கள் இப்படி ஆயிரக் கணக்கான பெண்கள், சர்வாலங்கார பூஷிதைகளாக விளங்கக் கண்டான். ரூபம், சாமர்த்யமான பேச்சு வார்த்தைகள், கீதங்களை முறையாக பாடுதல், தேச காலம் அறிந்து தெளிவாக எதிரில் உள்ளவர் புரிந்து கொள்ளும்படியான சம்பாஷனைகள், இவற்றை ஹனுமான் கண்டான். ரத, உப ரத எனும் பான வகைகள் இருந்தன. மற்ற இடத்திலும் இதே போல அழகிய பெண்கள் பலர் ஆயிரக் கணக்காக உறங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டான். இவர்கள் மத்தியில் ராக்ஷஸேஸ்வரன், பசுக்களின் மந்தையில், பசுக்களுக்கிடையில் காளை போல நிற்பதைக் கண்டான். பெரிய ஆண் யானை, பெண் யானைகள் சூழ, அரண்யத்தில் சஞ்சரிப்பது போல இருக்கக் கண்டான். ராவணனுடைய பான பூமியில் எல்லா விதமான சுக சௌக்யங்களும் இருந்தன என்பதையும் குறித்துக் கொண்டான். மிருகங்களுக்கு, மகிஷங்களுக்கு வராகங்களுக்கு என்று மாமிச ஆகாரம் வைக்கப் பட்டிருந்தது. பெரிய பெரிய இரும்பு பாத்திரங்களில் பாதி சாப்பிட்ட மயூரங்களையும், கோழிகளையும் கண்டான். க்ரகரம் எனும் பக்ஷிகள், சித்து எனும் பக்ஷிகள், சகோரங்கள் இவைகளும் பாதி உண்ட அன்னத்துடன் கிடந்தன. லேஹ்யம், உச்சாவம்-ஊறுகாய்கள்- பானங்கள்-குடி நீர், முதலியன, வித விதமான ஆகாரங்கள், நெல்லிக்காய், உப்பு, இன்னும் ஆறு விதமான ருசிகளுடன் உண்டும், குடித்தும் களித்து இறைத்த உணவு வகைகளும், பழங்களும், பூமியில் சிதறி கிடந்தது கூட அழகாகவே இருந்தது. ஆங்காங்கு விரிக்கப் பட்டிருந்த படுக்கைகளில், பான பூமி நெருப்பின்றி எரிவது போல தோற்றமளித்தது. மாமிசங்கள் பலவிதமாக தயார் செய்யப் பட்டு ப்ரஸன்னமாக பலவித குடி நீர், பழ ரஸங்கள், தேவர்களோ, தேவர்களுக்கு இணையானவர்களோ பரிமாற, சர்க்கரைப் பாகு, தேனின் பாகு, புஷ்பத்தின் ரஸம், பழங்களின் ரஸம் இவைகளில் வாசனைக்காக சேர்க்கப் பட்ட பொடிகள் இவற்றுடன் தனித் தனியாக இருப்பதைக் கண்டான். அந்த இடத்தின் சோபை சொல்லத் தரமன்று. ஹிரண்மயமான பாத்திரங்கள், ஸ்படிகத்தால் ஆனவை தங்கத்தால் ஆன பாத்திரங்கள், கரண்டிகள் இவற்றுடன் கூட, வெள்ளியினாலான கும்பங்களில், பொன் மயமான கும்பங்களில் உயர்தர மது வகைகள் சேகரித்து வைக்கப் பட்டிருந்ததைக் கண்டான். பாத்திரங்களும், பண்டங்களும் கூட மணிகள் பதித்த தங்கத்தால் ஆனவையே. சிலவற்றில் குடிக்கப் படாமல் மீதி வைக்கப் பட்டிருந்தன. சிலவற்றில் பாதி குடிக்கப் பெற்று, சில முழுவதுமாக குடித்து தீர்க்கப்பட்டிருந்தன. இதே போல அன்னம் மீதி வைக்கப் பட்டும், கரண்டிகளில் மீதமிருந்தவை, பாத்திரங்களில் பாதி என்று இரைந்து கிடந்தன. சில இடங்களில் பழங்கள், காய்கறி வகைகள் கிடந்தன. இந்த பெண்கள் படுக்கும் இடத்தில் வெண்மையான விரிப்புகளே பெரும்பாலும் தென்பட்டன. ஆழ்ந்த உறக்கத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அடுத்து உறங்கும் பெண்ணின் வஸ்திரத்தை எடுத்து போர்த்திக் கொண்டு கூட தூங்கினர். இவர்களின் மூமூச்சுக் காற்று பட்டே, மாலைகளும், வஸ்திரங்களும் மெதுவாக, மெதுவான காற்றில் அசைந்தாடுவது போல ஆடின. க3ந்த4 வாஹனன் என்ற மாருதனுக்கு (மணத்தை எடுத்துச் செல்பவன், பரப்புபவன்) சந்தனத்தின் குளுமையான மணம், மது ரஸம், மாலைகள், வித விதமான தூபங்கள் இவற்றின் மணங்களை எடுத்துச் செல்ல வேண்டியதாயிற்று. இந்த மணங்களின் கலவை மூச்சையடைத்தது. பலவிதமான பெண்களை ராவணனின் அந்த:புரத்தில் கண்டும், ஜானகியை மட்டும் காணவில்லை. திரும்பவும் அந்த பெண்கள் இருந்த திசையில் நோக்கிய ஹனுமான், பெரும் கவலைக் குள்ளானான். இது தர்மம் அல்லவே. பர தா3ர தரிசனம், அதுவும் தூங்கும் சமயம் அவர்கள் அறியாமல் கவனிப்பது தவறாயிற்றே. இது எனக்கு மிக அதிகமான தர்ம சங்கடத்தை உண்டு பண்ணுகிறதே. என் மனதில் வேறு எந்த விதமான எண்ணமும் இல்லாமல் தான் பார்க்கிறேன். என் கடமையை செய்ய வந்த இடத்தில் மன தூய்மையோடு தான் பார்க்கிறேன். ராவணனின் ஸ்த்ரீகள் சலனமின்றி உறங்கும் பொழுது, மனதில் களங்கம் இன்றி காரியமே கவனமாகத் தான் தேடுகிறேன். இந்திரியங்கள் தறி கெட்டு ஓடவும் மனமே காரணம். அதை அடக்கி நேர் வழியில் செலுத்துவதும் மனமே. இந்த வரையில் நான் பரி சுத்தமான மனதோடு என் தேடல் என்ற செயலைத் தான் குறைவற செய்கிறேன். வைதேஹியை வேறு எங்கே தேடுவேன்? ஸ்த்ரீயை ஸ்த்ரீகள் இருக்கும் இடத்தில் தான் தேட முடியும். எந்த விதமான ஜீவனோ, அது அந்த ஜீவன்களின் கூட்டத்தோடு தான் இருக்கும். பெண்ணை காணோம் என்றால் மான்கள் கூட்டத்தில் தேட முடியுமா? அதனால் நான் சுத்தமான மனதோடு தேடியது சரியே. ராவணனின் அந்த:புரம் முழுவதும் தேடி விட்டேன். ஜானகியை காணவில்லையே. தேவ கந்தர்வ கன்னிகள், நாக கன்னிகள் இவர்களை கண்ட வீரனான, ஹனுமான், ஜானகியை மட்டும் காணாமல் தவித்தான். மற்ற ஸ்த்ரீகளும் நல்ல குலத்தில் பிறந்த உயர் குணங்கள் நிரம்பியவர்களாகவே தோற்றமளித்தனர். திரும்பிச் செல்ல தீர்மானித்து ஹனுமான் யோசித்தான். திரும்பவும் பான பூமியையே தேடுவோமா, அதைத் தாண்டி வெளியில் செல்வோமா என்று யோசித்தபடி அந்த இடத்தை விட்டகன்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், பான பூமி விசயோ என்ற பதினோறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)