சுந்தர காண்டம் 60 to 68
அத்தியாயம் 60 (399) அங்கத3 ஜாம்ப3வத் சம்வாத3: (அங்கதனும் ஜாம்பவானும் உரையாடுதல்)
ஹனுமான் சொன்னதை முழுவதையும் கேட்டபின், வாலி புத்திரன் அங்கதன் சொன்னான். தேவியைக் கண்டு கொண்ட பின், வானரர்களான நாம், அவள் இல்லாமல் ராம லக்ஷ்மணர்களை சந்திப்பது சரியாகாது என்று நான் நினைக்கிறேன். தேவியைக் கண்டோம், அழைத்து வரவில்லை என்று சொல்வோமா. இவ்வளவு பலசாலிகள் என்று பெருமை பேசிக் கொள்கிறோம். வெறும் வாய் வார்த்தையாக ராமனிடம் போய் சீதையைக் கண்டோம், என்று மட்டும் சொல்லி விட்டு வருவோமா. எனக்கு யுக்தமாக படவில்லை. நமக்கு பராக்ரமத்திலும், தாவிச் செல்வதிலும் இணையாக வேறு யார் உளர் ? அமரர்களும், தைத்யர்களும் கூட ஹரி சத்தமா, நமக்கு சமமாக யாரும் இல்லை. தற்சமயம் ஹனுமான் அவர்கள் கர்வத்தை அடக்கி விட்டு வந்ததிலிருந்தே நமது ஆற்றல் தெரியவில்லையா? யோசிப்பானேன். ஜானகியை அழைத்துக் கொண்டே ராமனிடம் செல்வோம். ராம லக்ஷ்மணர்களுக்கு மத்தியில் சீதையை வைப்போம். மற்ற வானரங்களை இதில் ஈ.டு படுத்த வேண்டாம். அனாவசியம். நாமே போவோம். ராக்ஷஸ வீரர்களை வதைப்போம். நமது சங்கல்பம் பூர்த்தியாகி ராம லக்ஷ்மணர்களையும் சுக்ரீவனையும் காணச் செல்வோம். இப்படி அங்கதன் சூளுரைக்கவும், முதியவரான ஜாம்ப3வான், பொருள் பொதிந்த ஒரு வார்த்தை சொன்னார். மகா கபே, நீ சொல்வது சரியல்ல. நமக்கு இடப்பட்ட கட்டளை அவளைத் தேடிக் கொண்டு வரும் வரை தான். எங்கு இருக்கிறாள்? உயிருடன் இருக்கிறாளா என்று கண்டு பிடிப்பது தான் நமக்கு தரப் பட்ட வேலை. கபி ராஜனான சுக்ரீவனும் அழைத்து வரச் சொல்லவில்லை, ராமனும் சொல்லவில்லை. ஏதோ ஒரு விதத்தில் சீதையை ராவணனிடமிருந்து கைப்பற்றிக் கொண்டு வந்து சேர்ப்பதை ராகவனும் விரும்ப மாட்டான். ராகவன் தன் குலப் பெருமையை நிலை நாட்ட தானே தான் தன் சத்ருவை எதிர் கொள்வான். சுக்ரீவ ராஜா ப்ரதிக்ஞை செய்திருக்கிறான். வானரர்கள் மத்தியில் அவர்கள் செய்த ப்ரதிக்ஞையை மீறக் கூடாது. வீண் முயற்சியே. யாருக்குமே இதில் மன நிறைவு உண்டாகாது. நாம் அனாவசியமாக நமது வீரத்தை காட்டியதாக ஆகும். அதனால் நாம் கிளம்புவோம். ராம லக்ஷ்மணர்களும், சுக்ரீவனும் இருக்கும் இடம் செல்வோம். நாம் இதுவரை சாதித்ததைச் சொல்வோம். ராஜ புத்ரா, நீ சொல்லும் வழி எனக்கு சரியாகப் படவில்லை. நாம் நமது எண்ணத்தை ஏன் இதில் புகுத்த வேண்டும் ? ராமனிடம் சொல்வோம். அவன் சொல்வதைச் செய்வோம். அதில் தான் நமது காரிய சித்தி அடங்கி இருக்கிறது.
(இதுவரை வஎல்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் அங்கத ஜாம்பவத் ஸம்வாதோ என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 61 (400) மது4வன ப்ரவேச: (மது வனத்தில் நுழைதல்)
ஜாம்பவான் சொன்னதை வானரங்கள் ஏற்றுக் கொண்டன. அங்கதன் முதலானோரும் ஹனுமானும் சந்தோஷமாக புறப்பட்டனர். ஹனுமானை முன்னிட்டுக் கொண்டு மகேந்திர மலையை விட்டு வானரங்கள் தாவிக் குதித்து இறங்கின. ஒவ்வொருவரும் மதம் கொண்ட யானை போவது போல பெருத்த சரீரமும், பெரும் பலமும் கொண்டவர்கள். பெரிய மேகம் ஆகாயத்தை மறைப்பதைப் போல மறைத்துக் கொண்டு சென்றனர். கண்களாலேயே அடிக்கடி ஹனுமானைப் பார்த்தபடி நடந்தனர். கண் பார்வையில் அவனை தூக்கிச் செல்வதாக இருந்தது. ராகவனின் காரியத்தை முடித்துக் கொடுத்து நல்ல பெயரை சம்பாதிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தாண்டவமாடியது. ராமனிடம் பிரியமான செய்தியைச் சொல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தாண்டவமாடியது. அதுவும் தவிர, பின்னாலேயே யுத்தம் வரும், யுத்தம் செய்ய ஆவலுடையவர்களாக, குதித்து, குதித்து வழி நடந்தனர். இந்திரனின் நந்தன வனத்துக்குச் சமமான ஒரு வனம். மரங்களும் கொடிகளும் அடர்ந்து காணப்பட்டது. மது வனம் என்று சுக்ரீவனால் பாலிக்கப் பட்டது. எல்லா ஜீவன்களுக்கும் பிடித்தமானது. கடந்து செல்லக் கூட தயக்கம் தரக் கூடிய மது வனம். அதை ததி முகன் என்ற வானர வீரன், சதா ரக்ஷித்துக் கொண்டிருந்தான். சுக்ரீவனுடைய மாமா. இந்த வனம் வந்து சேர்ந்த வானரங்கள் அடக்க முடியாத ஆவலுடன், அங்கதனை யாசிக்க ஆரம்பித்தனர். வானர ராஜனுக்கு மிகவும் பிடித்தமான வனம் என்பதனாலேயே மற்றவர்கள் நெருங்காமல் இருந்த வனம். அங்கதன் அவர்கள் விருப்பத்துக்கு இணங்கி பெரியவர்களான ஜாம்பவான் முதலியவர்களை மதுவை அருந்த அனுமதித்தான். நாட்டியமாடியபடி, வானரங்கள் துள்ளிக் குதித்து வனத்தில் விருப்பம் போல் சாப்பிடத் துவங்கினர். ஆரவாரத்துடன் தங்கள் விருப்பம் போல குதித்தனர். சில பாடின. சில வணக்கம் தெரிவித்து ஆடின. சில உரக்க சிரித்தன. சில கீழே குதித்து மகிழ்ந்தன. தாவிக் குதித்து புலம்பின. தங்களுக்குள் ஒருவரையொருவர் குசலம் விசாரித்தபடி சென்றன. ரகசியம் பேசுவது போல சில பேசிக் கொண்டன. ஏதோ சொல்லி மகிழ்ந்து சிரித்தன. மரத்துக்கு மரம் சில தாவின. மரத்தின் நுனியிலிருந்து பூமியில் குதித்து விளையாடின. மற்றும் சில பூமியிலிருந்து வேகமாக எழும்பி மரத்தின் கிளையை அடைந்தன. பாடிக் கொண்டிருந்த சில வானரங்களை சில வானரங்கள் சிரித்துக் கொண்டே நெருங்கின. சிரிக்கும் வானரங்களை பொய்யான அழுகையுடன் சில எதிர் கொண்டன. அழும் சிலரை கை கூப்பி வணங்கி காரணம் கேட்பது போல சில நாடகம் ஆடின இவர்களை ஓவென்று அலறிக் கொண்டு சிலர் நெருங்கினர். ஒரே குழப்பம். கபி சைன்யம் இன்னது தான் செய்வது என்று இல்லாமல், தங்கள் இஷ்டப் படி மனதில் தோன்றியபடி நடந்து கொண்டன. மதுவைக் குடித்துக் கொண்டாடின. யாருமே அங்கு மதம் பிடித்து கர்வம் இன்றி இருக்கவில்லை. திருப்தியடையாதவர்களும் இல்லை. மரங்களை உடைத்து, புஷ்பங்களும் இளம் துளிர்களுமாக கீழே விழுந்து கிடந்த கிளைகளையும், வனத்தில் மிச்சமில்லாமல் மதுவைக் குடித்து தீர்ப்பதையும் பார்த்து காவல் காத்த ததி4 முகன் ஓடி வந்தான். கோபத்துடன் அவர்களைத் தடுத்தான். பெரிய உருவம் கொண்ட சில அவனை திரும்பிப் பார்த்து மிரட்டின. வனத்தைக் காக்கும் தன் கடமையை எண்ணி பதறிய ததி4 முகன் அவர்களை மேலும் நாசம் செய்யாமல் தடுக்க முனைந்தான். சிலரைத் திட்டினான். கடுமையான வார்த்தை சொன்னான். சிலரை கைகளால் அடித்துத் தடுத்தான். எதுவும் பலனில்லை. மகிழ்ச்சியுடன் ஆட்டம் போட்ட வானரங்கள் ஒன்று சேர்ந்து ததிமுகனை எதுவும் செய்ய விடாமல் தடுத்து விட்டன. பயம் விட்டுப் போன நிலையில் வானரங்கள் எதையும் காது கொண்டு கேட்பதாக இல்லை. மேலும் கலஹம் செய்ததைக் கண்டு ததி முகன் திகைத்தான். அருமையாக பாதுகாக்கப் பட்ட மது வனம், அவர்கள் நகத்தால் கீறி, பற்களால் கடித்து, கால்களால் மிதித்து, உண்டு இல்லையென்று ஆக்கினார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் மது4வன ப்ரவேசோ என்ற அறுபத்து ஓராவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 62 (401) ததி4 முக கிலீகார: (ததி முகனை வம்பு செய்தல்)
இவர்களைப் பார்த்து ஹனுமான், வானரர்களே, தயக்கம் இன்றி நீங்கள் மதுவை அருந்துங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன். வழி நடையில் களைத்த உங்களை நான் பாதுகாக்கிறேன் . இதைக் கேட்டு அங்கதனும் ஆமோதிக்க, வானரங்கள் ஓவென்ற இரைச்சலுடன் துள்ளி குதித்தன. அங்கதன் சொன்னான். ஹனுமான் சொல்வதை நான் கேட்டே ஆக வேண்டும். நம் வேலையை செய்து முடித்துக் கொண்டு வந்து நம்மை காப்பாற்றியிருக்கிறான். செய்யக் கூடாதது ஏதாவது அவன் கேட்டால் கூட நாம் செய்யக் கடமை பட்டிருக்கிறோம். அப்படியிருக்க, இது என்ன பெரிய காரியம். சாது, சாது என்று வானரங்கள், அங்கதனை கொண்டாடி, நதி வேகத்தில் வேகமாக ஓடி மது வனத்தினுள் புகுந்தனர். காவல் வீரர்கள் தடுத்ததை சற்றும் பொருட்படுத்தாமல், உள்ளே நுழைந்தனர். மைதிலியின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து விட்டோம் என்று மகிழ்ச்சியுடன் மதுவைக் குடித்தன. எதிரில் வந்த வன பாலர்களை சாமர்த்யமாக தடுத்து இடையில் புகுந்து உள்ளே சென்றனர். த்3ரோணம் (படி போல ஒரு அளவு) அளவு மதுவை கைகளால் ஏந்தி குடித்தனர். சிலர் சேர்ந்து குடித்தனர். ஒரு சிலர் அதிகமாக குடித்து துப்பினர். கையில் இருந்த மதுவை சிலர் மற்றவர் மேல் வீசினர். ஒரு சிலர் மிக அதிகமாக மதுவைக் குடித்து மயங்கி மரத்தினடியில் தரையில் படுத்தனர். சிலர் உறங்கினர். உன்மத்தம் பிடித்தவர்களாக, மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டு ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளிக் கொண்டும், கால் தடுக்கி விழுந்து கொண்டும், சிலர் சீட்டியடிக்க, சிலர் ஆனந்த கூத்தாடின. பல வானரங்கள் பூமியில் விழுந்து தூங்கி வழிந்தனர். ஒருவரையொருவர் சீண்டி மகிழ்ந்தனர். அர்த்தமில்லாமல் பிதற்றி, ஹோவென்று சிரித்து மகிழ்ந்தனர். ததி4 முகன் அனுப்பிய காவல் வீரர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மதுவனத்தின் அருகிலேயே அவர்கள் நெருங்காமல் தடுத்து நிறுத்தப் பட்டிருந்தனர். சிலரை முழங்கால்களால் தட்டி விட்டனர். சிலரை தள்ளி விட்டனர். தப்பியது புண்ணியம் என்று ஓடி, காவல் வீரர்கள் ததி4 முகனிடம் தெரிவித்தனர். அவர்களை சமாதானப் படுத்தி ததி முகன், அவர்களையும் அழைத்துக் கொண்டு தானே மதுவனம் சென்றான். ததிமுகன் தானே வருவதைக் கண்டு மதுவனத்தின் காவலர்கள் தைரியம் வரப் பெற்று வேகமாக ஓடின. சில பாறைகளை எடுத்தி வீசின. வேகமாக வந்து மரக் கிளைகளை கையில் வைத்துக் கொண்டு அடித்தன. மதுவனத்தை அழிப்பதை தடுத்தேயாக வேண்டும் என்று தங்கள் எஜமானனின் கட்டளையை உறுதியாக கொண்டு தங்கள் சக்தியைக் காட்டலாயினர். மரக் கிளைகளையும், பாறைகளையும் கையில் வைத்துக் கொண்டு, மரங்களில் ஏறி நின்றும், பூமியில் நின்றும், தடுக்கப் பார்த்தன. இப்படி ததிமுகன் ஆயிரக் கணக்கான தன் வீரர்களுடன் தங்களை தடுக்க வருவதையறிந்து அங்கதனும், ஹனுமானும் நேருக்கு நேர் ததிமுகனை எதிர் கொள்ள வந்தனர். அங்கதன் பெரியவர் என்றும் பாராமல் ததிமுகனை ஓங்கி அடித்து விட்டான். மதாந்தமாக இருந்ததும் ஒரு காரணம். மதிப்புக்குரிய பெரியவர், உறவினன் என்பது உறைக்கவில்லை. கிழே தள்ளி கை கால்களில் காயம் படச் செய்து, மூர்ச்சையாக்கினான். சற்றுப் பொறுத்து தானே சமாளித்துக் கொண்டு எழுந்த ராஜ மாதுலன் (அரசனின் மாமா) கையில் தண்டத்தை வைத்துக் கொண்டு மதுவனத்தை நாசம் செய்த வானரங்களைத் தடுத்தான். எதுவும் பயனில்லை. எப்படியோ எந்த கூட்டதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வெளி வந்து தன் காவல் வீரர்களை தனியாக அழைத்துச் சென்று ஆலோசனை செய்தான். இவர்கள் இங்கு இப்படியே இருக்கட்டும். நாம் செல்வோம். நமது தலைவன் சுக்ரீவனிடம் செல்வோம். ராமனுடன் அவன் தங்கியிருக்கும் இடம் செல்வோம். அரசனான சுக்ரீவனிடம் அங்கதன் செய்த அட்மூடுழியத்தைச் சொல்வோம். அவன் எளிதில் கோபம் கொள்ளக் கூடியவன். இதைக்கேட்டு உடனே தகுந்த நடவடிக்கைகள் எடுப்பான். சுக்ரீவனுக்கு இது மிகவும் பிரியமான மது வனம். தந்தை பாட்டனார் வழி வந்தது. தேவர்கள் கூட இதனுள் நுழைய முடியாது. இந்த வானரங்கள் தங்கள் வாழ்வின் முடிவை நெருங்கி விட்டார்கள் போலும். மதுவை குடிக்க சபலம் கொண்டு வனத்தினுள் நுழைந்து விட்டனர். நிச்சயம் இதைக் கேட்டால் சுக்ரீவன், இவர்களை அடித்து நொறுக்கி விடுவான். அரசன் கட்டளையை மீறும் இவர்கள் தண்டனைக் குரியவர்களே. கோபம் கொண்ட சுக்ரீவன், நம் காரியத்தை செய்து விடுவான். என்று சொன்ன ததிமுகன், அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு வானத்தில் எழும்பி, நிமிஷ நேரத்தில் சூரியப் புத்திரனான சுக்ரீவன், ராம லக்ஷ்மணர்களுடன் தங்கியிருந்த இடத்தை அடைந்து விட்டான். சமவெளியான ஒரு இடத்தில் ஆகாயத்திலிருந்து குதித்தனர். குதித்து, தன் வீரர்கள் புடை சூழ வாடிய முகத்துடன், கூப்பிய கரங்களுடன் சுக்ரீவன் கால்களில் விழுந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ததி4 முக கிலீகார: என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 63 (402) சுக்3ரீவ ஹர்ஷ: (சுக்ரீவன் மகிழ்ச்சி)
தலை கீழாக வந்து விழுந்த ததிமுகனைப் பார்த்து, என்னவோ, ஏதோ என்று பயந்த சுக்ரீவன், அவனை நெருங்கி எழுந்திரு, எழுந்திரு, ஏன் என் கால்களில் விழுகிறாய்? உனக்கு அபயம் அளிக்கிறேன். எதுவானாலும் சொல், என்றான். சுக்ரீவன் இப்படி நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசவும், ததிமுகன் எழுந்திருந்து நடந்ததை விவரித்தான். ராஜன், ருக்ஷராஜன் இருந்த பொழுதும் சரி, வாலி அரசனாக இருந்த பொழுதும் சரி, தற்சமயம் தாங்கள் அரசனாக இருக்கும் பொழுதும் மதுவனத்தில் இது போல ஒரு அட்மூடுழியம் நடந்ததில்லை. இந்த வானரங்கள் வந்து வனத்தை நாசம் செய்து விட்டன. மது முழுவதையும் குடித்து தீர்த்து விட்டன. வனத்தின் காவல் வீரர்களையும் தாக்கி கீழே தள்ளி விட்டனர். மீதி வைக்காமல் மதுவை குடித்தும், கொட்டியும் தீர்த்து விட்டன. காவல் காப்பவர் அதட்டினால், சற்று தள்ளி நின்று குடிக்கின்றன. தடுத்தால் முகத்தை சுழித்து அழகு காட்டுகின்றன. கும்மாளம் போடுகின்றன. குடித்து, கண் சிவந்து என் வீரர்களை விரட்டியடிக்கின்றன. கைகளால் சிலரை அடித்து, சிலரை முழங்கால்களால் இடித்து தள்ளி, சிலருக்கு தேவமார்கம் (மரணம்-யம லோகம்) காட்டுகிறோம் என்று சொல்லி செம்மையாக உதைத்து விட்டன. சுக்ரீவா, நீ அரசனாக இருக்கும்பொழுது இப்படி நடக்கலாமா? மது4வனம் ஒரு இடம் விடாமல் பாழாகி விட்டது. மது4 முழுவதும் ஒரு துளி விடாமல் தீர்க்கப் பட்டு விட்டது. சுக்ரீவனிடம் ததிமுகன் இவ்விவரங்களை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே லக்ஷ்மணனும் அருகில் வந்து விசாரித்தான். என்ன விஷயம் ராஜன், ஏன் இந்த வனத்தின் காவலர்கள் இங்கு வந்து முறையிடுகின்றனர்? துக்கத்துடன் பேசுகின்றனர்? சுக்ரீவன் லக்ஷ்மணனிடம் நடந்ததை தெரிவித்தான். ஆர்ய லக்ஷ்மணா, இந்த ததி4முகன் மது வனத்தைக் காப்பவன். அங்கதன் முதலான வானரங்கள் வந்து மதுவை குடித்து தீர்த்து விட்டனராம். தென் திசையில் தேடி விட்டு திரும்பி வந்தவர்கள். தங்கள் கடமையை செய்து முடிக்காமல் இப்படி அட்டகாசமாக ஒரு செயலை செய்ய முடியாது. திரும்பி வந்தவுடனேயே மது வனத்தை த்வம்சம் செய்திருக்கிறார்கள். வனம் முழுவதும் மிதிக்கப் பட்டு நாசமாகி விட்டதாம். மீதியில்லாமல் மதுவை குடித்து விட்டன என்று ததிமுகன் புலம்புகிறான். இதைப் பார்க்க இந்த வானரங்கள் தாங்கள் சென்ற காரியத்தில் வெற்றியுடன் திரும்பியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. தேவியை கண்டு கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. வேறு யார் இதை செய்திருக்க முடியும்? ஹனுமான் தான் கண்டு பிடித்திருப்பான், ஹனுமானைத் தவிர வேறு யாராலும் இந்த அரிய செயலை செய்திருக்க முடியாது. ஹனுமானிடம் தான் இப்படி ஒரு இடை விடாத முயற்சி, வீர்யம் நாம் அறிந்திருக்கிறோம். ஜாம்பவான் வழிகாட்டி, அங்கதன் தலைமையில் சென்ற வானரங்களில் ஹனுமானும் பிரதானமாக இருந்தான். இவர்களின் முயற்சி வேறு விதமாக எப்படி இருக்க முடியும்? நிச்சயம் காரியத்தை சாதித்துக் கொண்டு தான் வந்திருக்கிறார்கள். ததி முகா? அங்கதன் முதலானோர் மதுவனத்தை த்வம்சம் செய்து விட்டார்கள் என்று சொன்னாய் அல்லவா? மதுரமான இந்த செய்தி சொல்ல இதோ ததி முகன் வந்திருக்கிறான். வனத்தைக் காப்பவன். இவர்கள் ஆட்களையும் சேர்த்து இடித்து தள்ளி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். லக்ஷ்மணா, இந்த அடாவடி செயலுக்குப் பின் உள்ள தத்துவத்தை ஊகித்துப் பார். கண்டுகொள்ளப் பட்டவள் சீதை. இது தான் உண்மை. சௌமித்ரே, புரிகிறதா? ததிமுகா, வானரங்கள் இஷ்டம் போல் மதுவை அருந்தட்டும். வீரனே, அவர்கள் சென்ற காரியத்தை வெற்றிகரமாக முடித்து விட்டிருப்பார்கள். தோல்வியுற்றவர்களால் கொண்டாட முடியாது. அதனால் ததி முகா, அது அவர்களுக்கு பரிசாகத் தந்தேன். கவலைப் படாதே, வா. விவரம் அறிந்த ராம லக்ஷ்மணர்களும் இதை ஊகித்துக் கொண்டதால், பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். சுக்ரீவனும் ததிமுகனும் மாறி மாறி நடந்ததைச் சொன்னார்கள். சுக்ரீவன் திரும்பவும் ததிமுகனைப் பார்த்து ததிமுகா நான் மகிழ்ச்சியடைகிறேன். பெரிய அரிய செயலை செய்து முடித்துக் கொண்டு வந்தவர்களின் இந்த சிறிய அத்து மீறலை நாம் பொறுப்போம். சீக்கிரமே ஹனுமான் முதலிய வானர சிங்கங்களைக் காண விரும்புகிறேன். ராகவர்களும் ஆவலாக சீதையைக் கண்டு கொள்ள என்ன ப்ரயத்னங்களை எப்படி செய்தார்கள் என்ற விவரங்களைக் கேட்க விரும்புகிறார்கள். ராஜ குமாரர்களும் சுக்ரீவனும் மிகவும் மகிழ்ச்சியோடு ஹனுமானை எதிர் நோக்கி இருந்தார்கள். ராகவன் தன் கைகளில் சீதையைக் கொண்டு வந்து சேர்த்து விட்டதாகவே எண்ணி புளகாங்கிதம் அடைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சுக்ரீவ ஹர்ஷோ என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 64 (403) ஹனுமதா3த்யாக3மனம் (ஹனுமான் முதலானோர் வந்து சேருதல்)
சுக்ரீவன் சொன்னதைக் கேட்டு சமாதானம் அடைந்த ததிமுகன் தன் ஆட்களோடு, வந்தது போலவே ஆகாய மார்கமாக கிளம்பினான். ராம லக்ஷ்மணர்களையும், சுக்ரீவனையும் வணங்கி விடைபெற்றுக் கொண்டான். வந்தது போலவே வேகமாக சென்றான். மதுவனத்தில் நுழைந்து மதுவை குடித்து மயங்கி, சோர்வுற்று இருந்த வானரங்களில் சில, குடலை புரட்டி எடுக்க உண்டதை உமிழ்ந்து கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்தபடி அங்கதனிடம் சென்று மகிழ்ச்சியுடன் சௌம்யனே, கோபம் கொள்ளாதே. நாங்கள் அறியாமல் தடுத்தோம். என்னுடன் காவல் வேலையில் ஈ.டு பட்டவர்களும் உங்களை மதுவைக் குடிக்க விடாமல் தடுத்தனர். அது அவர்கள் கடமை. தாங்கள் யுவராஜா. வானர தலைவன். இந்த வனமும் தங்களுடையதே. நாங்கள் அறியாமல் தடுத்ததை மன்னிக்க வேண்டுகிறேன். எப்படி உங்கள் தந்தை வானரங்களின் தலைவனாக இருந்தானோ அதே போலத்தான் சுக்ரீவனும், தாங்களும். வேறு விதமாக எப்படி இருக்க முடியும்? நான் போய் சுக்ரீவனிடம் விவரங்களைச் சொன்னேன். மாசற்றவனே, நீங்கள் அனைவரும் இங்கு வந்ததும், மதுவைக் குடிப்பதையும் கேட்டவன், கோபம் கொள்ளவில்லை. மிகவும் மகிழ்ந்தான். வனம் அழிந்தது என்று கேட்க மகிழ்ச்சியா? ஆச்சர்யம் தான். மேலும் சுக்ரீவன் அவர்களைச் சீக்கிரம் அனுப்பு என்றும் சொன்னான். இதைக் கேட்டு அங்கதன்,ராம லக்ஷ்மணர்களும் இங்கு நடந்தவைகளைக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாம் இனியும் தாமதிக்கக் கூடாது. வேண்டிய அளவு மதுவைக் குடித்து சிரம பரிகாரமும் செய்து கொண்டாயிற்று. வானரங்களே, புறப்படுங்கள். சுக்ரீவனிடம் செல்வோம். சொல்லுங்கள். நீங்கள் எல்லோரும் என்ன சொல்கிறீர்களோ அதைத் தான் நான் செய்யப் போகிறேன். உங்களிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டேன். நீங்கள் சொல்வதைச் செய்வேன் என்றான். நான் யுவராஜா தான். ஆனாலும் உங்களை அதிகாரம் செய்ய எனக்கு அருகதை இல்லை. கடமையை முடித்து கொடுத்த உங்களை அதட்டி அதிகாரம் செய்ய எனக்கு மனம் வரவில்லை. அது தகாது. அங்கதன் சொன்னதைக் கேட்டு அவனது உயர்ந்த எண்ணமும், பரந்த மனப் பான்மையும் புரிந்து கொண்ட வானரங்கள் ஆரவாரம் செய்தனர். ராஜன், யார் இப்படிச் சொல்வார்கள்? ராஜாவாக இருப்பவன் பணிவாக பேசுவது அரிது. செல்வத்தால் மதம் கொண்டு, நானே எல்லாம் என்று தான் நினைப்பார்கள். பேசுவார்கள். உனக்கு இந்தப் பேச்சு தகுதியானதே, உன்னால் தான் இப்படி பேசமுடியும். உன் குலம், பணிவு, நீ நன்றாக மேலும் மேலும் உயர்வடைவாய் என்பதைக் காட்டுகிறது. இதோ க்ஷண நேரத்தில் நாமும் அங்கு செல்வோம். சுக்ரீவனைக் கண்டு விவரங்களைத் தெரிவிப்போம். ஹரிஸ்ரேஷ்டனே, கட்டளையிடு. உன் தலைமையில் தான் அடிக்கு அடி நாம் முன்னேறி, காரியத்தை சாதித்திருக்கிறோம். இது சத்யம் என்றன. இதைக் கேட்டு அங்கதனும் சரி, கிளம்புவோம் என்று சொல்லி பூமியிலிருந்து தாவி எழும்பினான். அவனைத் தொடர்ந்து மற்ற வானரங்களும் தாவி குதித்து கிளம்பினர். ஆகாயத்தை மறைத்தபடி, ஏதோ யந்திரத்தின் உதவியோடு பெரியமலையை தூக்கி ஆகாயத்தில் நிறுத்தியது போல இருந்தது அந்த காட்சி. பெரும் ஆரவாரத்தோடு வானவெளியை தங்கள் கூச்சலால் நிரப்பின. காற்றில் அலைக்கழிக்கப் பட்ட மேகங்கள் மோதிக் கொண்டது போல இருந்தது. சுக்ரீவனோ, இன்னமும் அங்கதன் வரவில்லையே என்று தவிப்புடன் காத்திருந்தான். ராமனை ஆஸ்வாசப் படுத்தினான். ஆறுதல் கொள்வாய் ராமா. சீதையை கண்டு கொண்டார்கள், சந்தேகமேயில்லை. அவர்களுக்கு நான் கொடுத்த கால கெடு முடிந்த பிறகு இங்கு வரவே தயங்குவார்கள். போன காரியம் பலித்து விட்டது என்ற தைரியம் தான் அவர்களை இங்கு வரச் செய்திருக்கிறது. காரியமும் நடக்காமல், காலமும் கடந்து என் முன் வர அவர்களுக்கு துணிவு இல்லை. யுவராஜன் அங்கதன் நல்ல புத்திசாலி. வானர வீரர்களை நன்றாக நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தவன். அப்படி வேறு வழியின்றி காரியமும் நடக்காமல் திரும்பியிருந்தால், முகம் வாடி, தீனனாக வந்திருப்பான். பயத்தால் மிரளும் கண்களும், துவண்ட மனமுமாக வந்து நிற்பான். என் தந்தை, பாட்டனார் வழி வந்த மது வனம். மிகவும் கவனமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. இதில் நுழைந்து அட்டகாசம் செய்ய துணிவு எப்படி வரும்? கௌசல்யை பெற்ற மகனே, கௌசல்யையின் செல்வனே, ஆறுதல் கொள்வாய். தேவியைக் கண்டு கொண்டு விட்டார்கள். அதுவும் ஹனுமான் தான் கண்டிருப்பான். மற்ற யாராலும் சாதிக்க முடியாததை அனுமன் சாதிக்க வல்லவன். சந்தேகமேயில்லை. ஹனுமானிடத்தில் தான் புத்தியும், ஆற்றலும், செய்து முடிக்கும் திடமும் உண்டு. உற்சாகமும், உழைப்பும், சூரியனைப் போன்ற தேஜஸும் அவனிடம் உள்ளது. ஜாம்பவான் அறிவுரை சொல்ல, அங்கதன் நடத்திச் சென்ற சைன்யத்தில், ஹனுமான் பிரதானமாக இருந்தான். அவர்களின் முயற்சி வீணாகாது. கவலையை விடு. அமித விக்ரமா, தற்சமயம் நன்மை நம்மை எதிர் நோக்கி வர இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, கிளு கிளுவென்று சத்தம் கேட்டது. ஹனுமானின் வெற்றியை தங்கள் வெற்றியாக பாவித்து, அங்கதன் முதலான அனைத்து வானரங்களும் வான வெளியை நிரப்பிய வெற்றி ஆரவாரம் ஜய கோஷம் கேட்டது. கிஷ்கிந்தைக்கு அவர்கள் வந்ததே காரிய சித்தியை சொன்னது போலத்தான். நீண்ட வால்களை ஆட்டியபடி வந்த வானரங்கள், கைகளை கூப்பி அஞ்சலி செய்தபடி ராமனைக் காண முண்டியடித்துக் கொண்டு வந்தன. அங்கதனையும் ஹனுமானையும் முன்னால் செலுத்தியபடி மகிழ்ச்சி நிறைந்த முகங்களோடு வந்து சுக்ரீவனையும், ராமனையும் காலில் விழுந்து வணங்கின. பவனாத்மஜன் தான் இந்த செயலை செய்திருப்பான் என்ற சுக்ரீவனின் நம்பிக்கை பலித்தது. லக்ஷ்மணனும் பெருமிதம் அடைந்தான். ராகவனும் மன ஆறுதலை தன் கண்களாலேயே தெரிவிப்பவர் போல ஹனுமானை நோக்கினார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமதா3த்யாக3மனம் என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 65 (404) சூடாமணி ப்ரதா3னம் (சூடாமணியைத் தருதல்)
ப்ரஸ்ரவன மலையில் ராம லக்ஷ்மணர்களையும், சுக்ரீவனையும் வணங்கி யுவராஜாவான அங்கதன் தலைமையில் வானரங்கள் அடக்கமாக நின்றன. பின் ஒரே குரலில் சீதையைப் பற்றி சொல்லலானார்கள். ராவணனின் அந்த:புரத்தில் சிறை இருப்பதையும், ராக்ஷஸிகளின் அதட்டல், மிரட்டல்களையும், ராமனிடத்தில் அவள் அன்பையும் இதுவரை தெரிந்தவரை சொன்னார்கள். ராமர் இதைக் கேட்டு, வைதேஹி நலமாக இருப்பதை தெரிந்து கொண்டார். சீதை எங்கிருக்கிறாள்? என்னைப் பற்றி என்ன நினைக்கிறாள். வானரமே, இன்னமும் வைதேஹியைப் பற்றி நிறையச் சொல்லு. இதைக் கேட்டு வானரங்கள் ஹனுமானைத் தூண்டின. முன்னால் வா என்று சொல்ல, ஹனுமான் முன் வந்து சீதை இருந்த திசையை நோக்கி வணங்கி விட்டு ஆரம்பித்தான். நூறு யோஜனை தூரம் சமுத்திரத்தை தாண்டி, நான் லங்கையை அடைந்தேன். ஜானகியைத் தேடிக் கொண்டு லங்கையில் சுற்றித் திரிந்தேன். தென் திசையில் சமுத்திரத்தின் தென் கரையில் இருக்கும் நகரம் லங்கை. ராவணனின் ராஜ தானி. அவனது அந்தபுரத்தில் சதியான சீதையைக் கண்டேன். தன்னையே உங்களிடம் அர்ப்பணித்தவளாக, ராமா, தன் மனோரதம் யாவுமே ராமனாக இருப்பவளைக் கண்டேன். ராக்ஷஸிகள் மத்தியில் அடிக்கடி அவர்கள் மிரட்டுவதையும், அதட்டுவதையும் பொறுத்துக் கொண்டு இருந்தாள். அந்த ப்ரமதா3 வனம் கோரமான ராக்ஷஸிகளால் ரக்ஷிக்கப் படுகிறது. மிகவும் வேதனையோடு வாழ்கிறாள். தங்கள் துக்கத்தையும் ஊகித்துக் கொண்டு மேலும் வருந்துகிறாள். சிறை வைக்கப் பட்டிருக்கிறாள். ராக்ஷஸிகளின் மத்தியில், தானாக எதுவும் செய்ய இயலாத நிலையில், உயிரை தரித்துக் கொண்டிருப்பதே, பெரிய விஷயம். ஒற்றைப் பின்னலுடன், உங்களையே நினைத்து வாடுகிறாள். பனியில் அடிபட்ட தாமரை போல நிறம் வெளுத்து, தரையில் உறங்குகிறாள். ராவணனை மனதாலும் நினைக்க விரும்பாமல், தன் முடிவைத் தேடிக் கொள்ள தீர்மானித்து விட்டாள். தேவியை எப்படியோ கண்டு பிடித்து விட்டேன். உன் நினைவாகவே இருப்பவளைக் கண்டு கொண்டேன். மெதுவாக இக்ஷ்வாகு வம்ச கீர்த்தியை நான் பாடவும், கேட்டவள் மனதில் நம்பிக்கை துளிர் விட்டது. இதன் பின் அவளுடன் பேச்சுக் கொடுத்தேன். எல்லா விஷயங்களும் சொன்னேன். ராம சுக்ரீவ சக்யம் பற்றி கேட்டு மிகவும் மகிழ்ந்தாள். தன் நியமங்களை விடாது அனுஷ்டிக்கிறாள். உங்களிடம் பக்தியும் அளவிட முடியாது. இப்படி ஜனக நந்தினியை (மகா பாகா) பாக்யவசமாக நான் கண்டு கொண்டேன். உக்ரமான தவத்தில் ஈ.டுபட்டவளை, தங்களிடம் கொண்ட பக்தியால் தான் உயிருடன் இருக்கிறாள். அடையாளம் கொடுத்தாள். சித்ரகூடத்தில் இருக்கும் சமயம் நடந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தச் சொன்னாள். அதை முழுவதும் சொல், என்றாள். மிகவும் ப்ரயத்னத்தோடு காப்பாற்றி வந்திருக்கிறேன், இதைக் கொடு என்று தன் மடியில் முடிந்து வைத்திருந்த சூடாமணியைக் கொடுத்தாள். சுக்ரீவன் கேட்டுக் கொண்டு அருகில் நின்றிருந்தான். இதோ இந்த சூடாமணியை கொடுத்தாள். மேலும், மன:சிலா என்று ஒரு கல். அதிலிருந்து திலகத்தை எடுத்து என் கன்னங்களில் இட்டு விட்டீர்கள். என் திலகம் கலைந்து கிடந்த சமயம், நீங்கள் விளையாட்டும், கேளிக்கையுமாக செய்ததை நினைவு படுத்திக் கொள்ளுங்கள் என்றாள். இந்த வாரிசம்பவன்- நீரில் தோன்றும் மணியை எடுத்து பார்க்கும் போதெல்லாம், உங்களையே நேரில் காணுவது போல மகிழ்ச்சியடைகிறேன். ஒரு மாதம் தான், உயிருடன் இருப்பேன். தசரதாத்மஜா, அதற்கு மேல் இந்த ராக்ஷஸ கூட்டத்தின் நடுவில் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று சொல்லச் சொன்னாள். மான் விழியாளான சீதா உடல் இளைத்து நிறம் வெளிறி, ராவணனின் அந்த:புரத்தில் சிறை வைக்கப் பட்டு இருக்கிறாள், ராகவா, நடந்ததைச் சொல்லி விட்டேன். உடனே சாகர ஜலத்தைத் தாண்டிச் செல்ல ஏற்பாடுகள் செய்யுங்கள். ராஜ குமாரர்கள் இருவரும் இதைக் கேட்டு ஆறுதல் அடைந்தனர். அபிக்ஞானம்- அடையாளமாகத் தந்த சூடாமணியை ராகவனிடம் கொடுத்து நடந்தது அனைத்தையும் முதலிலிருந்து கடைசி வரை விவரமாக ஹனுமான் அவர்களுக்குச் சொன்னான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சூடாமணி ப்ரதா3னம் என்ற அறுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 66 (405) சீதா பா4ஷித ப்ரச்ன: (சீதை சொன்னதைச் சொல் என்று கேட்டல்)
மணியை மார்போடணைத்து ராமர் கண் கலங்கினார். லக்ஷ்மணனும் அந்த அடையாளத்தைத் தெரிந்து கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டான். ராகவனுக்கு இதன் மூலம் நினைவுகள் பின் நோக்கிச் சென்று வேதனையால் முகம் வாடியது. கண்க ளில் கண்ணீர் நிரம்பியது அதனூடே சுக்ரீவனைப் பார்த்து சுக்ரீவா, பசு மாடு தன் கன்றைக் கண்டதும் தானாகவே பால் சுரக்கும். வாத்ஸல்யம் பொங்க பாலூட்டும். அதைப் போல இந்த மணியைக் கண்டதும் என் மனதில் வாத்ஸல்யம் பெருகுகிறது. வைதேஹிக்கு அவள் (அல்லது என்) மாமனார் கொடுத்தது. மண மேடையில் இதை தலையில் அணிந்திருந்தது மிகவும் அழகாக இருந்தது. இது நீரில் தோன்றியது. நல்ல ஜனங்கள் பூஜிக்கக் கூடியது. இந்திரன் யாக முடிவில் மனம் மகிழ்ந்து கொடுத்தது. இதைக் கண்டு என் தந்தையை நேரில் கண்டது போல உணருகிறேன். வைதேஹியின் தந்தை விதேஹ ராஜாவையும் நினைத்து பார்க்கிறேன். இன்று போல இருக்கிறது. இது என் பிரியாவான சீதையின் தலையில் அழகு சேர்க்கும். இன்று இதைக் கண்டு அவளையே கிடைக்கப் பெற்றவன் போல மகிழ்ச்சியடைகிறேன். என்ன சொன்னாள்? சீதா, வைதேஹி திரும்பத் திரும்பச் சொல். தாகம் எடுத்தவனுக்கு நீர் வார்ப்பது போல உன் வார்த்தைகள் என்ற அமுதத்தை இடை விடாது என் தாகம் தணியக் கொடு. இதை விட வேறு துக்கம் என்ன இருக்க முடியும்? நீரில் தோன்றிய இந்த மணியை கையில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறேன். சௌமித்ரே, வைதேஹி வரவில்லையே. வைதேஹிஸ்ரீ நீ வெகு நாட்கள் உயிருடன் இருப்பாய். ஒரு மாத காலம் உயிருடன் இருப்பேன் என்று சொல்லியனுப்பியிருக்கிறாயே. நான் ஒரு க்ஷணம் கூட இருக்க மாட்டேன் போலத் தவிக்கிறேனே. கருவிழியாளை விட்டுப் பிரிந்த துக்கம் மேலும் அதிகமாக என்னை வாட்டுகிறது. சௌமித்ரே, என்னையும் அந்த இடத்துக்கு அழைத்துக் கொண்டு போ. என் பிரியமான மனைவி இருக்கும் இடம் இந்த க்ஷணமே செல்வோம். அவள் இருப்பிடம் தெரிந்தபின், எனக்கு நிலை கொள்ளவில்லையே. என் ப்ரியா பயந்த சுபாவம் கொண்டவள். ராக்ஷஸிகளின் மத்தியில் எப்படி இருக்கிறாள்? சாதாரண ஜனங்கள் கண்டாலே அச்சுறுத்தும் தோற்றம் கொண்டவர்கள் ராக்ஷஸ இனத்தினர். சரத் காலத்தில் இருட்டிலிருந்து வெளி வந்தால் கூட சந்திரன், மேகம் மறைத்தால் மங்கித் தெரிவது போல அவள் முகமும் ராக்ஷஸர்கள் மறைக்க சோபையின்றித் தெரியுமோ. ஹனுமன், என் சீதா என்ன சொன்னாள்? முழுவதும் சொல். வியாதிக்காரனுக்கு ஔஷதம் போல உன் சொல் தான் எனக்கு தற்சமயம் மருந்து. மது4ரா, மது4ரமாக பேசுபவள் என் பா4மினி, அழகிய பெண், என்னை விட்டுப் பிரிந்து அவள் எப்படி இருக்கிறாள்? என்ன சொன்னாள்? ஹனுமன், எனக்கு விவரமாகச் சொல் என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சீதா பா4ஷித ப்ரச்னோ என்ற அறுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 67 (406) சீதா பா4ஷிதானுவசனம் (சீதை சொன்னதை விடாமல் அப்படியே சொல்லுதல்)
ராகவன் இவ்வாறு சொல்லவும், சீதையுடன் தான் செய்த சம்பாஷனையை அப்படியே ராமனிடம் விவரித்தான், ஹனுமான். புருஷர்ஷபா4 இது தான் ஜானகி சொன்னது, கேளுங்கள். ஒரு அடையாளம் சொன்னாள். முன்பு சித்ர கூடத்தில் நடந்த ஒரு சம்பவம். தங்களுடன் சீதையும் சுகமான நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், ஜானகி முதலில் கண் விழித்தாள். திடுமென ஒரு காகம் எங்கிருந்தோ வந்து அவளை ஸ்தனங்களுக்கு மத்தியில் கொத்தி துன்புறுத்தியது. ஜானகியின் மடியில் தலை வைத்து நீங்கள் தூங்கும் பொழுது திரும்பவும் இந்த காகம் வந்து துன்புறுத்தியது, திரும்பத் திரும்ப வந்து உடலில் கொத்தி புண்ணாக்கியது. ரத்தம் பெருகி, உங்கள் மேல் விழவும், உறக்கம் கலைந்து எழுந்து விட்டீர்கள். தேவி, வாயவ்யமான காகம், விரட்ட விட்ட திரும்ப வந்து கொத்துவதை உங்களிடம் சொன்னாள். அவள் உடலில் ரத்தம் வர, துன்புறுத்தியதைக் கண்டு மகா கோபம் கொண்டீர்கள். ஆலகால விஷம் பெருகுவது போல கோபம் பெருகியது. பெருமூமூச்சு விட்டபடி நீங்கள் சொன்னீர்கள். ஏஇது யார்? உன் ஸ்தனங்களின் மத்தியில் நகத்தால் கீறி ரத்தம் வர துன்புறுத்தியது? யாரது? ஐந்து தலை நாகத்தோடு, அதன் ரோஷத்தோடு விளையாடுவது? சுற்று முற்றும் பார்த்த உங்கள் கண்க ளில் காகம் பட்டது. அவளையே உறுத்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தது. அதன் நகங்களில் இப்பொழுது தான் கொத்தி புண்ணாக்கிய இடத்திலிருந்து பெருகிய ரத்தமும் காணப்பட்டது. இந்திரனின் புத்ரன் இல்லையா அவன்? காகம் பறவை இனம். உடனே காற்று வேகத்தில் பறந்து விட்டான். உலகம் சுற்றுபவன். உங்கள் கோபம் கட்டுக் கடங்காமல் போயிற்று. கண்களாலேயே அவனை எரிப்பது போல பார்த்து, கோபத்துடன் தண்டிக்க நினைத்தீர்கள். படுக்கையிலிருந்து தர்ப்பை புல் ஒன்றை எடுத்து, ப்ரும்மாஸ்திர மந்த்ரம் சொல்லி காகத்தை அடிக்க பிரயோகித்து விட்டீர்கள். காலாக்னி போல அது எரிந்து கொண்டு காகத்தைச் சென்ற இடமெல்லாம் துரத்தியது. தந்தையிடம் அடைக்கலம் கேட்டு போனவனை, தந்தையான இந்திரன் கை விட்டான். சுரர்களிடம், மகரிஷிகள் என்று எல்லோரிடமும் சென்று காப்பாற்றச் சொல்லி வேண்டினான். யாருமே ராம பாணம் துரத்தும் நிலையில் அவனைக் காப்பாற்ற முன்வரவில்லை. மூவுலகிலும் யாரும் தன்னை காப்பாற்ற இல்லை என்று தெரிந்தவுடன் தங்களிடமே திரும்பி வந்தான். பயந்து நடுங்கியபடி தங்கள் சரணங்களில் வந்து வீழ்ந்தான். சரணம் என்று காலில் விழுந்தவனை, மேலும் தண்டிக்க மனமின்றி, அவனுக்கு அடைக்கலம் கொடுத்தீர்கள். வதம் செய்யப் பட வேண்டியவன் தான், இருந்தும் காப்பாற்றினீர்கள். அஸ்திரம் பயனின்றி போக முடியாது என்பதால் அவனது வலது கண்ணை மட்டும் அழித்தீர்கள். ராமா, அந்த காகம் உங்களை வணங்கி ராஜா தசரதனுக்கும் வணக்கம் சொல்லி விடை பெற்றுச் சென்றது. அதை தன் இருப்பிடம் செல்ல அனுமதித்தீர்கள். இப்படி அஸ்திரம் அறிந்தவன், சீலமும் ஆற்றலும் உடையவனாக இருந்தும், இந்த ராக்ஷஸர்களின் பேரில் உங்கள் அஸ்திரத்தை ஏன் இன்னமும் பிரயோகிக்காமல் இருக்கிறீர்கள். நாகர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, மருத் கணங்களோ, இவர்கள் அனைவரும் சேர்ந்து நின்றாலும் கூட ரண களத்தில் ராமனை எதிர்த்து நின்று ஜயிக்க முடியாது. அப்படிப் பட்ட வீரன், அவன் மனதில் எனக்காக சிறிதளவாவது பாதிப்பு, தயவு இருக்குமானால், சீக்கிரமே, கூர்மையான பாணங்களால் யுத்தத்தில் ராவணனை வதம் செய்யட்டும். அவனது சகோதரனிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பரந்தபனான லக்ஷ்மணன் தான் வந்து யுத்தம் செய்து ராவணனை வீழ்த்தி என்னை மீட்கட்டும். ஏன் தான் நரவரன், மனிதருள் மாணிக்கம் என்று போற்றப் படும் ராமன் என்னை காப்பாற்ற வரவில்லையோ. இருவரும் நல்ல சக்தி வாய்ந்த வீரர்களே. வாயுவும் அக்னியும் போல தேஜஸ் உடையவர்கள். ஏனோ என்னை புறக்கணித்து இருக்கிறார்கள். நான் செய்த விணைப்பயன் தானோ. ஏதோ ஒரு பாவத்தை நிறைய செய்திருக்கிறேனோ. சந்தேகமேயில்லை. என் வினைதான் என்னை இப்பொழுது வாட்டுகிறது. இல்லாவிடில் சுரர்கள் கூட எதிர் நிற்க முடியாது என்ற அந்த பலசாலிகள், என்னிடம் ஏன் பாராமுகமாக இருக்க வேண்டும்? கண்களில் நீர் பெருக, வைதேஹி இவ்வாறு சொல்லவும் நான் தேவியிடம் ஆறுதலாக பதில் சொன்னேன். தேவி, உங்களைப் பிரிந்து ராகவன் மிகவும் வருந்துகிறான். தங்கள் பேரில் சத்யம், பராமுகமாக இல்லை. முகம் வாடி உங்கள் நினைவில் தவித்துக் கொண்டு தான் இருக்கிறான். அவனுடைய துன்பத்தைப் பார்த்து லக்ஷ்மணனும் தவிக்கிறான். எப்படியோ, இதோ தங்களைக் கண்டு கொண்டேன். இனி கவலைப் பட ஏதுமில்லை. நான் போய் சேர்ந்து விவரங்கள் சொல்ல ஆகும் நேரம் தான். தேவி, பொறுத்துக் கொள். இந்த முஹுர்த்தத்தில் இருந்து நீங்கள் இதுவரை அனுபவித்த வேதனை, துக்கங்களிலிரூந்து விடுபடுவீர்கள். அந்த ராஜ புத்திரர்கள் இருவரும் நர சார்தூலர்கள். அவர்களும் இதே போல வேதனையோடு தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. தங்களைக் காண ஆவலுடன் பரபரப்போடு இருக்கிறார்கள். விவரம் தெரிந்தவுடன், லங்கையையே கொளுத்தி விடுவார்கள். ரௌத்ரமான யுத்தம் வரப் போகிறது. உற்றார், உறவினரோடு சேர்த்து ராவணனை அழித்து தங்களை அழைத்துக் கொண்டு ராகவன் தன் ஊர் செல்வான். இது சத்யமாக நடக்கத்தான் போகிறது. மாசற்றவளே, எந்த அடையாளத்தைக் காட்டினால் ராமன் உடனே புரிந்து கொள்வானோ, அதைக் கொடு. எதைக் கண்டால், அவன் மனதில் அன்பும், ஆனந்தமும் தோன்றுமோ, அதைக் கொடு. நாலாபுறமும் பார்த்து விட்டு மணியை தன் கேசத்தில் அணியும் உத்தமமான இந்த மணியை, தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்திருந்ததை எடுத்துக் கொடுத்தாள். ரகு வீரனே, தங்களிடம் காட்டுவதற்காக அந்த மணி ரத்னத்தை பெற்றுக் கொண்டு அவளை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, திரும்ப வரத்தான் கிளம்பினேன். நான் திரும்பிச் செல்ல தயாராக ஆவதை பார்த்துக் கொண்டே இருந்த தேவி, கண்களில், நீர் வடிய, வளர்ந்து பெருகிய என் உருவத்தைக் கண்டு மேலும் சொன்னாள். என்னுடைய பயணம் நலமாக இருக்க வாழ்த்தியபின், மேலும் சொன்னாள். ஹனுமன், அந்த இருவரும், ராம லக்ஷ்மணர்கள் சிங்கங்கள் போன்றவர்கள். சுக்ரீவனையும், அவன் மந்திரிகளையும் சேர்த்து எல்லோரிடமும் நான் நலம் விசாரித்ததாகச் சொல். இதன் பின் என்னைப் பார்த்து, மகா கபே, நீ அதிர்ஷ்டம் செய்தவன். ஏன் தெரியுமா? கமல லோசனான ராமனை நீ காணப் போகிறாய். என் மைத்துனனான லக்ஷ்மணனை, இளையவனையும் காணப் போகிறாய். மகா பாக்யசாலி நீ. யஸஸ்வியான நீண்ட கைகளையுடைய லக்ஷ்மணனையும் நேரில் காணப் போகிறாய். இப்படி சீதை சொல்லவும், நான் பதில் சொன்னேன். தேவி, என் முதுகில் ஏறிக் கொள். ஜனக நந்தினி, சீக்கிரம். நான் அவர்களிடம் உங்களை கொண்டு சேர்க்கிறேன். சுக்ரீவனுடனும் லக்ஷ்மணனுடம் இருக்கும் ராமனைக் காட்டுகிறேன். கருவிழியாளே, உன் கணவரை உனக்கு காட்டுகிறேன். தேவி சொன்னாள். மகா கபியே, வானரமே, இது தர்மம் அல்ல. நான் என் வசத்தில் இருக்கும் பொழுது உன் முதுகில் ஏறி வந்தால் அது தர்மம் அல்ல. ஹரி புங்கவா, முன்பு ராவணன் என்னைத் தூக்கியபொழுது உடலால் அவனைத் தொடும்படி ஆயிற்று என்றால், அது என் வசத்தில் இல்லை. என்ன செய்வேன்? என் போதாத காலம், விதி என்னை ஆட்டுவித்தது. நீ போய் வா, ஹரி சார்தூலா, அந்த ராஜ குமாரர்கள் இருக்கும் இடத்துக்கு சீக்கிரம் போ. இப்படி விடை கொடுத்தவள். திரும்பவும் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். ஹனுமன், என்ன செய்தால் அந்த ராமன், என்னை இந்த துன்பக் கடலில் இருந்து மீட்பானோ, அது போல செய், பேசு. இங்கு நான் படும் வேதனையின் தீவிரம் ராமனுக்கு புரியும்படி சொல். இந்த ராக்ஷஸிகள் என்னை அதட்டி மிரட்டுவதை, அவன் உணரும்படி சொல். ராமனுடைய சமீபம் சீக்கிரம் போய் சேருவாய். உன் வழிப் பிரயாணம் நலமாக இருக்கட்டும். சௌகர்யமாக போய் வா. ஆர்ய, இது தான் சீதா தேவி என்னிடம் பேசிய வார்த்தைகள். துக்கம் தொண்டையை அடைக்க, நாத்தழ தழக்க, என்னிடம் சொல்லி அனுப்பிய செய்தி இவை. சீதை நலமாக இருக்கிறாள். என்ன செய்ய வேண்டுமோ, தீர்மானித்துக் கொள்ளுங்கள், என்றான் ஹனுமான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சீதா பா4ஷிதானுவசனம் என்ற அறுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 68 (407) ஹனுமத் சமாஸ்வாஸ வசனானுவாத3: (ஹனுமான், திரும்ப தேவிக்கு கூறிய சமாதானம்)
தேவி மிகவும் வருத்தத்துடன் என்னிடம் சொன்னதைக் கேட்டு நான் பரபரப்பு அடைந்தேன். தங்களிடம் உள்ள ஸ்னேகத்தாலும், நரவ்யாக்ர, நட்பினாலும் நான் தேவியை சமாதானம் செய்வது மிகவும் அவசியம் என்று நினைத்தேன் இது போல விவரமாக தாசரதியிடம் சொல், என்ன சொன்னால் ராமன், இந்த ராவணனை நாசம் செய்து என்னை மீட்பானோ, அது போல கவனமாக பேசு. முடிந்தால், வீரனே, இங்கு ஒரு நாள் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து விட்டு நாளைக் கிளம்பு. நீ அருகில் இருக்கிறாய் என்பதே எனக்கு ஆறுதலாக இருக்கும். சற்று நேரம் இந்த சூழ் நிலையின் இறுக்கத்தை மறந்து நிம்மதியாக இருப்பேன் என்றாள். நீ இப்பொழுது கிளம்பி திரும்பி வரும் வரை கூட நான் உயிருடன் இருப்பேனா, அதுவே சந்தேகம் என்றாள். இப்பொழுது உங்களைக் காணாமலும் நான் தவிப்பேன். இப்படி எதை எடுத்தாலும் சந்தேகம் உருக்கொண்டு என் முன்னால் நிற்பது போல இருக்கிறது. எதிர் பாராமல் அடுத்தடுத்து வந்த தீமைகள் என் மன உறுதியைக் குலைத்து விட்டன. போலும். எதிலும் நான் ஆபத்தையே பார்க்கிறேன். ஹரீஸ்வரா, உங்களுக்கு உதவி செய்ய நிறைய வார சேனை, கரடி சேனை இருப்பதாக சொன்னாய். இந்த கடக்க முடியாத சமுத்திரத்தைக் கடந்து எப்படி வருவார்கள்? ராம லக்ஷ்மணர்களுடன், வானர சைன்யமும் கடந்து வந்தாக வேண்டுமே, இந்த உலகிலேயே மூன்று பேருக்குத் தான் அந்த சக்தி உண்டு. வைனதேயனுக்கு, வாயுவுக்கு, இப்பொழுது உனக்கு. அதனால் இந்த கடினமான காரியத்தை நிறைவேற்ற என்ன செய்வாய்? உனக்குத் தெரிந்திருக்கும். நீ செயல் வீரன். இருந்தும் கேட்கிறேன். இந்த செயலை செய்து முடிக்க நீ ஒருவனே போதும் தான். உன் புகழும் பலமும் வளரட்டும். இப்படி ஒரு படையுடன் வந்து ராவணனை வதம் செய்து ராமன் வெற்றி வீரனான என்னை மீட்டு தன் ஊருக்கு அழைத்துச் செல்வானேயானால், அது தான் புகழைத் தரும். அவனுக்கு பெருமை சேர்க்கும். எப்படி என்னை, ராமனிடம் கொண்ட பயத்தால், உபாயம் செய்து ராவணன் கவர்ந்து வந்தானோ, அதே போல ராகவனும் செய்யக் கூடாது. படையுடன் வந்து லங்கையை ஒரு கலக்கு கலக்கி, என்னை மீட்டு அழைத்துச் செல்வானேயானால் அது அவனுக்கு பெருமை சேர்க்கும். அவன் தகுதிக்கு ஈ.டாகும். அதனால் ஹனுமன், அந்த மகாத்மாவின் வீரம் எடுபட, தகுதியான அனுரூபமான வார்த்தைகளைச் சொல்லி அவனை ஊக்குவிப்பாய், யுத்தம் என்று வந்தால் அவன் சூரனே. அவன் சூரத்தனம் வெளிப்படும் வகையில் நீ பேசு. அவனை உற்சாகம் கொள்ளச் செய். வீறு கொண்டு எழுந்து போருக்கு கிளம்பச் செய். நான் தேவியின் உட்கிடக்கையை புரிந்து கொண்டேன். அவளுக்கு ஆறுதல் கிடைக்கும் விதமாகவே பதில் சொன்னேன். தேவி, வானர, ருக்ஷ சைன்யத்தில் தலைவன் சுக்ரீவன். வானர வீரன். நல்ல ஆற்றலுடையவன். உன் விஷயமாக தீர்மானமாக இருக்கிறான். அவனிடம் மகா பலம் பொருந்திய செயல் திறனும் ஆற்றலும் உடைய வீரர்களே பலர் இருக்கின்றனர். ஹரி ராஜன் (வானர அரசன்) அவன் முகக் குறிப்பிலிருந்தே, அவன் ஆணையை புரிந்து கொண்டு செயல் படுத்த வீரர்கள் சித்தமாக இருக்கிறார்கள். இவர்கள் எப்படி வேண்டுமானாலும் சஞ்சரிப்பார்கள். மேல் நோக்கி, கீழ் நோக்கி, பக்க வாட்டில் என்று அவர்கள் கதி செல்லும். என்ன கடினமான காரியமானாலும் சோர்வடைய மாட்டார்கள். உடலும், உள்ளமும் உறுதியாக உள்ளவர்கள். எல்லையற்ற பலம் கொண்டவர்கள். தங்கள் பலத்தை காட்டுவதற்காகவே, இந்த வானர வீரர்கள் பல முறை பூமியைச் சுற்றி பிரதக்ஷிணம் செய்து வந்திருக்கிறார்கள். வாயு மார்கத்தில் உலகைச் சுற்றியிருக்கிறார்கள். எனக்கு சமமாகவோ, என்னை விட அதிக பலசாலிகளாகவோ தான் சுக்ரீவ சைன்யத்தில் உண்டு. என்னை விடத் தாழ்ந்தவன் சுக்ரீவனின் சேனையில் கிடையாது. நானே வந்து விட்டேன். மற்றவர்கள் வர என்ன தடை. சிறந்த வீரர்களை தூதுவனாக அனுப்ப மாட்டார்கள். சற்று அடுத்த நிலையில் உள்ளவர்களைத் தான் அனுப்புவார்கள். அதனால் தேவி, இந்த கவலை வேண்டாம். ஒரு தாவலில் வானர வீரர்கள் லங்கை வந்து சேர்ந்து விடுவார்கள். அப்பொழுது தான் உதயமான சந்திர சூரியர்கள் போன்ற ராஜ குமாரர்கள் இருவரும் என் முதுகில் ஏறி உன் அருகில் வந்து சேர்ந்து விடுவார்கள். இருவருமே நர சிங்கங்கள். தேவி, எதிரியைக் கொல்லும் சக்தி வாய்ந்த சிங்கம் போன்றவர்கள். சீக்கிரமே அந்த ராகவ சிம்மத்தைக் காணத் தான் போகிறாய். கையில் வில்லுடன் லக்ஷ்மணன், லங்கா வாயிலில் வந்து நிற்பதையும் காணத்தான் போகிறாய். எங்கள் வானர வீரர்கள், சிம்மமும், சார்தூலமும் போன்ற வீரர்கள், நகங்களும், பற்களுமே ஆவர்கள் ஆயுதம். கஜராஜன் போல ஒவ்வொருவரும் உருவத்திலும், பலத்திலும் சிறந்தவர்கள். சீக்கிரமே இவர்கள் கூட்டமாக வந்து சேருவதைக் காணத்தான் போகிறீர்கள். லங்கையின் மலைச் சாரல்கள் இந்த வீரர்களால் நிறையப் போகிறது. இந்த வானரங்கள் போடும் கூச்சலைக் கேட்கத் தான் போகிறீர்கள். வனவாசம் முடிந்து, வெற்றி வீரனாக ராமனுடன் அயோத்தி சென்று ராகவனை ராஜ்யாபிஷேகத்தில், முடி சூட்டிக் கொண்டவனாகக் காண்பீர்கள். இப்படி நான் சொல்லி சோர்வடையாமல், உற்சாகமாக பேசி, அவளுக்கு பிடித்த வகையில் சுபமான, நல் வார்த்தைகளைச் சொல்லி விடை பெற்றேன். அவளும் உற்சாகம் அடைந்தாள். தாங்கள் வருந்துவதாக சொன்ன பொழுது அவளும் வருத்தம் அடைந்தாள். என்னால் முடிந்தவரை உற்சாகமாகவே பேசி அவள் மனதுக்கு சாந்தி கிடைக்கச் செய்தேன். என்றான் ஹனுமான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனூமத் சமாஸ்வாச வசனானுவாத3: என்ற அறுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டம் நிறைவுற்றது.)