ஸ்ரீமத் ராமாயணம் சுந்தர காண்டம்
அத்தியாயம் 1 (339) சாகர லங்க4ணம் (கடலை கடத்தல்)
தத:-இதன் பின், சாரணர்கள் புழங்கும் பாதையில், சத்ருக்களை ஒடுக்கும் வீரனான ஹனுமான், சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, ராவணன் அவளை அழைத்துச் சென்றதாக அறிந்த தென் திசையில் செல்லத் தயாரானான். மிகவும் கடினமான காரியம். ஒப்பில்லாத சாகஸம். இந்த செயலை செய்யத் துணிந்த வானரன் தலையைத் தூக்கி, கழுத்தை சாய்த்து, பசுக்களின் தலைவனான காளை போல நின்றான். வைமூடுரியம் போல ஜ்வலித்த பசும் புற் தரைகளுக்கிடையில் நீர் பள பளக்க இருந்த பூமியில் தீரனும் மகா பலசாலியுமான ஹனுமான் நடந்தான். பறவைகள் பயந்து சிறகடித்து பறக்கலாயின. மரங்கள் ஆடின. பல மிருகங்கள் கீழே விழுந்தன. பெரிய கேசரி (சிங்கம்) நெடிதுயர்ந்து நிற்பது போல நின்றான். வெண்மையும் கருப்பும், நீலமும் சிவப்பும், மஞ்சளுமாக இலைகள் பல வர்ணங்க ளில் தென்பட்டன. இயல்பான நிறங்களில் தா4து பொருட்கள் அலங்காரமாகத் தெரிந்தன. யக்ஷ கின்னர, தேவர்களுக்கு இணையான க3ந்த4ர்வர்கள், பன்னகர்கள் தங்கள் விருப்பம் போல உருவம் எடுக்க வல்லவர்கள், சூழ்ந்து நிற்க, அவர்கள் பரிவாரமும் உடன் நின்றனர். நாகங்கள் நிறைந்த அந்த சிறப்பான மலையின் உச்சியில், நீர் நிலையில் யானை நிற்பது போல தனித்து தெரிந்தான். இதன் பின் அவன், சூரியனுக்கு, மகேந்திரனுக்கு, வாயுவுக்கு, ப்ரும்மாவுக்கு, மற்றும் பஞ்ச பூதங்கள், இவர்களுக்கு அஞ்சலி செய்து வணங்கி விட்டு தன் யாத்திரையைத் தொடர தீர்மானித்தான். கிழக்கு நோக்கி நின்று, தன்னை ஈ.ன்ற வாயுவுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, தென் திசையில் செல்லத் தயாராக வளர ஆரம்பித்தான். மற்ற வானரங்கள் கீழே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தன. இதற்குள் தன் பிரயாணத்தை மனதினுள் ஒருவிதமாக திட்டமிட்டுக் கொண்டு விட்ட வகையில், ராம காரியம் நிறைவேறும் பொருட்டு, மலையின் மேல் சமுத்திரம் பொங்கி எழுவது போல எழுந்தான். அளவிட முடியாத, ஒப்பிட முடியாத பெரிய சரீரம். கடலைக் கடந்து செல்லவும் துணிந்த உயரிய எண்ணம். அரிய செயலைச் செய்யத் துணிந்தவன் தன் புஜங்களால் மலையை தடவிக் கொடுத்தும், கால்களால் உதைத்தும் அந்த மலையை ஒரு ஆட்டு ஆட்டி விட்டது போலவும், தானே அசைந்து கொடுத்ததோ எனும் படி அந்த மரங்கள், தங்கள் நுனியிலிருந்து புஷ்பங்களை உதிர்த்தன. கைகளாலும், கால்களாலும் ஹனுமான் மலையின் திடத்தை சோதனை செய்வது போல தட்டிப் பார்த்தது போலவும், மலையும் தன் ஒப்புதலை தந்தது போலவும் அந்த காட்சி அமைந்தது. மலை முழுவதும் அந்த புஷ்பங்களின் சிதறல் அர்ச்சனை செய்யப் பட்டது போல கண் கொள்ளா காட்சியாக இருந்தது. மலர்களின் மணம் பரவியது. மதம் கொண்ட மத்த கஜத்தின் முகத்தில் துளிர்க்கும் வியர்வைபோல மலையின் மேலிருந்து நீர் வடிந்தது. ஹனுமானின் கால்கள் அழுந்த பிடித்ததால், பலமாக யானைப் பாகன் மிதிப்பதால் துன்புறுவது போல மகேந்திர பர்வதம் துன்புற்றது. பித்தளை, பொன், வெள்ளி, கரும் பொன் (இரும்பு) இவை மலையிலிருந்து சிதறின. விசாலமான சுமன:சிலம் எனும் பாறையும் கீழே விழுந்து சிதறியது. கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நடுவில் புகைந்து எழும் புகை மூட்டம் போல தெரிந்தது. மலையே, ஹனுமானின் பாதத்தால் உதைக்கப் பட்ட சமயம், மலை குகையிலிருந்த மிருகங்களும் பாதிக்கப் பெற்றன. வித விதமான குரலில் கூக்குரலிட்டன. இந்த பெரும் மலையில் வசித்த ஏராளமான ஜீவ ஜந்துக்கள் ஏக காலத்தில் எழுப்பிய ஒலி, அலை அலையாக பரவி உலகம் முழுவதும் எல்லா திசைகளிலும், உப வனங்களிலும் எதிரொலித்தன. பளீரென்று நிமிர்ந்த தலையுடன், நாகங்கள், ஒளி வீசும் தங்கள் படங்களுடன் நிமிர்ந்து நின்றன. விஷத்தைக் கக்கின. அகப்பட்ட பாறைகளை பல்லால் கடித்து உமிழ்ந்தன. இப்படி கடிபட்ட பாறைகள் சில உடைந்து சிதறின. சில பள பளவென மின்னின. கோபம் கொண்டு விஷமுடைய பற்களால் கடிக்கப் பெற்ற பாறைகள், நெருப்பு பற்றிக் கொண்டது போல தோற்றமளித்தன. அந்த மலையில் உற்பத்தியாகும் ஆயிரக் கணக்கான மூலிகைகள், அவற்றில் பல பாம்பு விஷத்தை அடக்கும் சக்தியுடையவை, இருந்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. பயனற்றுப் போயின. தபஸ்வி ஜனங்கள், ஏதோ பூத கணங்கள் வந்து மலையை பிளக்கின்றனவோ என்று ஐயுற்றனர். வித்யாதர கணங்கள் தங்கள் ஸ்திரீகளுடன் பயந்து அலறியபடி மலையை விட்டு வெளியேற முயற்சி செய்யலாயினர். பான பூமியில் (கள் குடிக்கும் இடம்) வண்ண மயமான பாத்திரங்களில் மதுவை அருந்திக் கொண்டு இருந்தவர்கள், விலையுயர்ந்த அந்த பாத்திரங்களை, கரண்டிகளை, லேகியங்கள், ஊருகாய்கள், பக்ஷணங்கள், மாமிசங்கள் இன்னும் பல உணவு வகைகளையும், பழமை வாய்ந்த தோல் வாள், பொன்னாலான கரண்டிகள், இவைகளை கையில் வைத்தபடி, கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த வஸ்திரங்களுடன், சிவந்த மாலைகளையும் அணிந்து, அங்க ராகங்களை பூசி மகிழும் இயல்புடையவர்கள், சிவந்த மஞ்சள் நிற கண்கள் உடையவர்கள், என்ன நடக்கிறது என்று பார்க்க ஆகாயத்தில் வந்து நின்றார்கள். ஹாரங்கள், நூபுரங்கள், இடுப்பு ஒட்டியாணம் என்று பலவிதமான ஆபரணங்களுடனும் வளைய வந்த ஸ்த்ரீகள், ஆச்சர்யத்துடன், தங்கள் கணவன்மாரோடு சேர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க வந்து நின்றனர். மகா வித்யையை அறிந்து கொண்டு கடை பிடித்து வந்த வித்யாதர மகரிஷிகள், தங்கள் மனைவிமாருடன், ஆகாயத்தில் வந்து நின்று, மலையை நோக்கினர். தவ வலிமை மிக்க ரிஷிகள், சாரணர்கள், சித்தர்கள் என்று ஆகாயத்தில் குழுமியிருந்தோர் பேசும் பேச்சுக்களைக் கேட்டனர். விமலமான ஆகாயத்தில் முனிவர்களின் பேச்சுக் குரல் ஓங்கி ஒலித்தது. இதோ இந்த ஹனுமான் தானே பர்வதாகாரமாக நிற்கிறான். மகா வேகத்துடன் கடலைத் தாண்டத் தயாராக நிற்கிறான். மகரங்கள் நிறைந்த இந்த கடலைத் தாண்ட ஆயத்தம் செய்வது தான் இவ்வளவு பர பரப்புக்கு காரணம். இந்த அரிய செயலை ராமனுக்காகவும், தன் தலைவனான வானர ராஜனின் பொருட்டும் செய்யத் துணிந்திருக்கிறான். எளிதில் கடக்க முடியாத இந்த கடலின் அக்கரையைத் தொட்டுவிட துடிக்கிறான், என்றிவ்வாறு ரிஷிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதை வித்யாதரர்கள் கேட்டனர். ஒப்புவமை இல்லாத வானர வீரன் மலையின் மேல் நிற்பதைக் கண்டனர். அந்த மலையின் மேல் மற்றொரு மலை குலுங்கி ஆடியது போல ஒரு உலுக்கலில் தன் பெரிய உடலின் ரோமங்கள் சிதறி விழச் செய்தான், ஹனுமான். மகா மேகம் போல கர்ஜித்து, திக்குகளை அதிரச் செய்தான். சாட்டையை விசிறி அடித்தது போல சுழற்றவும், சுருட்டி வைக்கப் பட்டிருந்த ரோமங்கள் அடர்ந்த வால், பக்ஷி ராஜனான கருடனின் கால்களில் சிக்கிய பெரு நாகம் போல நீண்டது. நாகத்தை கவ்விக் கொண்டு வேகமாக செல்லும் பக்ஷிராஜனின் வாயிலிருந்து தொங்கும் நாகம் போல அந்த வால் நீண்டு தொங்கியது. புஜங்கள் இரண்டையும் விரித்து, பரிக4ம் என்ற ஆயுதத்தைப் போல நீண்ட கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டான். (பரிக4ம்-கதவுக்கு தடுப்பாக உபயோகிக்கும் மரக் கட்டை). கால்களைக் குறுக்கிக் கொண்டான். தன் புஜங்களையும் கழுத்தையும் சுருக்கிக் கொண்டு, தலையை நிமிர்த்தி, தன் உடலில் தேஜஸ், ஆற்றல் இவற்றை நிரப்பிக் கொள்வது போல நிமிஷ நேரம் நின்றான். கண்களை இடுக்கி வெகு தூரம் வரை தான் செல்ல வேண்டிய பாதையை நோட்டம் விட்டு கணித்துக் கொண்டவனாக, தன் ஹ்ருதயத்தில் பிராணனை நிலை நிறுத்தி, மூச்சை அடக்கி, யோக சாதனையை செய்தான். ஆகாயத்தை பார்த்தபடி, கால்களை திடமாக ஊன்றி அந்த கபிகுஞ்சரன், காதுகளை மடக்கியபடி வேகமாகத் தாவி, ஆகாய மார்கத்தில் நுழைந்தான். கீழே நின்ற வானரங்களைப் பார்த்து, எப்படி ராகவன் கையிலிருந்து, பாணங்கள் சீறிக் கொண்டு பாயுமோ, அதே போல வேகத்துடன் நானும் போகிறேன். ராவணன் பாலித்து வரும் லங்கா நகரை நோக்கிச் செல்கிறேன். ஜனகாத்மஜாவை அந்த லங்கா நகரில் நான் காணவில்லையெனில், இதே வேகத்தோடு தேவர்கள் வசிக்கும் தேவ லோகம் செல்வேன். த்ரிதிவம் எனும் தேவலோகத்திலும் சீதையைக் காணவில்லையெனில், என் சிரமம் வீணாகாமல், ராக்ஷஸ ராஜனான ராவணனை கட்டி இழுத்துக் கொண்டு வருவேன். நிச்சயமாக என் காரியம் வெற்றியாகி, சீதையோடுதான் வருவேன். ராவணனையும் சேர்த்து, லங்கா நகரையே பெயர்த்து கொண்டு வந்தாலும் வருவேன். இவ்வாறு வானரோத்தமனான ஹனுமான் மற்ற வானரங்களைப் பார்த்து சூளுரைத்து விட்டு, மேலும் தாமதியாமல் சட்டென்று தாவி, ஆகாயத்தில் குதித்தான். தானே சுபர்ணம் எனும் கருடன் என்று நினைத்துக் கொண்டான். வேகமாக அந்த வானர வீரன் தாவி குதித்த பொழுது, மலையிலிருந்த மரங்கள், வேரோடு சாய்ந்து எதிரில் விழுந்தன. பூக்கள் நிறைந்து, வண்டுகள் மதுவை குடித்து மயங்கி ரீங்காரம் செய்தபடி இருந்த அந்த மரங்களைத் தன் கால்களின் வேகத்தில் தள்ளிக் கொண்டே சென்றான். கால் (துடை) வேகத்துக்கு ஈ.டு கொடுக்க முடியாமல் மரங்கள் சற்று தூரம் தொடர்ந்து சென்றபின் விழுந்தன.வெகு தூரம் செல்லக் கிளம்பிய நெருங்கிய உறவினர்களை, வழியனுப்பச் செல்பவர் போல உடன் சென்று வழியனுப்பியதோ, பெரிய சால மரங்கள், கால்களை உதைத்து ஹனுமான் கிளம்பிய வேகத்தில், அரசனை எப்பொழுதும் பின் தொடர்ந்து செல்லும் பாதுகாவலர்கள் போல சென்றனவோ, எனும்படி இருந்தது. நுனியில் புஷ்பங்களுடன் கூடிய மரங்களின் கிளைகள், ஹனுமானை பின் தொடர்ந்து செல்வதைப் பார்க்க, பர்வதாகாரமான பெரிய உருவமும், இந்த புஷ்பங்களும் வித்யாசமாக மகா அத்புதமாக தெரிந்தன ஈ.ரப்பசையுடன், ஜீவனுடன் இருந்த மரங்களே உப்பு நீரில் விழுந்தனவே, என்ன காரணம்? மகேந்திர மலையிடம் பயமா? மலையை விட்டு நகர்ந்ததால் கோபிக்கக் கூடும் என்ற எண்ணமா? அதை விட சமுத்திரத்தில் விழுவது மேல் என்று விழுந்தனவா. இளம் தளிர்களும், மொட்டுகளும், மலர்களுமாக ஹனுமானின் மேலும் விழுந்து, மகேந்திர மலையில் மின் மினி பூச்சிகள் வட்டமிடுவது போல, பர்வதாகாரமான சரீரத்தை மறைத்தன. கை கால்களை உதறியதும் அந்த புஷ்பங்கள் கீழே விழுவதைக் காண, நண்பர்கள் வழியனுப்பி விட்டுத் திரும்பியதைப் போல இருந்தது. வாயு உடனே துணை போவது போல இப்படிச் சிதறிய புஷ்பங்களை கீழே நீரில் கொண்டு சேர்த்தது. மேகத்தின் இடையில் மின்னல் தெறித்தாற்போல இந்த புஷ்பங்கள் பல வண்ணங்களில் வானர வீரனின் உடலில் கிடந்தன. இப்பொழுது திடுமென சமுத்திரத்தில் விழுந்து, நக்ஷத்திரக் கூட்டங்களுடன் ஆகாயமே தெரிவது போல சமுத்திரத்தின் மேற்பரப்பில் பரவித் தெரிந்தன. வீசி எறிவது போல தன் புஜங்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி, நின்ற பொழுது இரு பெரும் நாகங்கள் திடுமென சீறி நின்றது போல இருந்தன. தாகம் எடுத்தவன் நீரைக் கண்டது போல, கடல் நீரை விழுங்குவது போல பார்த்தான். அதே போல நிமிர்ந்து ஆகாயத்தையும் கண்களால் அளந்தான். வாயு மார்கத்தில் மின்னல் பரவுவது போல நின்ற ஹனுமானின் கண்கள், மலையின் மேல் கொழுந்து விட்டெரியும் நெருப்பு ஜ்வாலையை ஒத்திருந்தது. நீள் வட்டமான மஞ்சள் நிறக் கண்கள், அணுவிலும், ப்ருஹத்திலும் பிரகாசமாகத் தெரியும் சந்திர சூரியர்களை ஒத்திருந்தது. மூக்கின் நிறம் மட்டும் தனித்து தாமிர வர்ணமாகத் தெரிந்தது, சந்த்யா கால சூரிய மண்டலம் போல. வேகமாக கிளம்பிய சமயம் சுருண்டு கிடந்த வால் மேல் நோக்கி எழும்பியது இந்திரன் தன் த்வஜத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டு போவதைப் போல இருந்தது. வெண்மையான பற்களையுடைய ஹனுமான், உடலைச் சுற்றி வாலுடன், பாஸ்கரனைச் சுற்றி ஒளி வட்டம் அமைந்தது போல இருந்தான். மலைப் பிளவுகளில் தாமிர தாது தெரிவது போல முதுகுத் தண்டின் கீழ் சிவந்து காணப்பட்டது. வானர சிம்மத்தின் கட்கத்தில் அமுக்கப் பட்ட காற்று, அதன் வேகத்தில் மேகம் போல கர்ஜித்தது. நெருப்புப் பொரி பறப்பது போல ஆகாயத்தில் திடுமென ஒரு தோற்றம் எழவும், யாரோ மத்தாப்பு கொளுத்துவது போல இருந்தது. பறக்கும் பட்டம் போல வானரம் ஆகாயத்தில் அந்தரத்தில் நின்றான். வளர்ந்து பெரிதாகிக் கொண்டு போகும் யானை ஒன்று கயிற்றின் பலத்தில் நிற்பது போல இருந்தது. மேலே பறந்த வானரத்தின் நிழல் கீழே சாகர ஜலத்தில் விழ, படகு போவது போல நிழலின் தோற்றம் சமுத்திரத்தின் மேல் மட்டத்தில் தெரிந்தது. எந்த எந்த திசையில் மாருதன் வேகமாக போகிறானோ, அந்த அந்த இடத்தில் ஜலம் கலக்கப் பட்டு கொந்த ளித்தது. மலைச் சிகரம் போன்ற தன் மார்பு பிரதேசத்தால் சாகரத்தின் அலைகளை முட்டித் தள்ளிக் கொண்டும், கைகளால் அலைகளை அடித்துக் கொண்டும் ஹனுமான் முன்னேறினான். மேலே மேகத்திலிருந்து வந்த காற்றும், கபி கிளப்பிய காற்றும் சேர்ந்து சமுத்திரத்தின் அலகளை கொந்தளிக்கச் செய்தது. சாகரமே நடுங்குவது போல இருந்தது. பெரிய பெரிய அலைகளை கைகளால் தள்ளிக் கொண்டே சென்றான். ஒரு சமயம் ஹனுமான் குனிந்த தலையுடன், அலைகளை எண்ணிக் கொண்டே செல்வது போல இருந்தது. சரத் கால ஆகாயம் போல கடல் காட்சியளித்தது. ஹனுமனால் கிளப்பப் பட்ட நீர்த்திவலைகள் மேகமாக திரண்டு நிற்க, கீழே சமுத்திரத்தின் பரப்பு ஆகாயமோ எனும்படி இருந்தது. திமிங்கிலங்கள், மீன்கள், கூர்மங்கள், நக்ரம், முதலைகள், முதலியவை பரபரப்புடன் இங்கும் அங்குமாக அலைந்தன. சரீரம் உடைய மனிதர்கள், திடுமென வஸ்திரத்தை யாரோ பறித்தால் பரபரப்படைவது போல, திடுமென ஆகாயத்தில் தோன்றி கடலைத் தாண்டும் பெரிய உருவத்தை இதுவரை கண்டறியாத கடல் வாழ் ஜந்துக்கள், பதறின. நாகங்கள், சுபர்ணன், கருடன் என்று ஹனுமானை பார்த்து நடுங்கின. வானர சிம்மத்தின் நிழலே, பத்து யோஜனை விஸ்தீர்ணமும், முப்பது யோஜனை நீளமும், அதுவே கண்டறியாத புதுமையாக இருந்தது. வெண்மையான மேகங்களை கரு மேகம் தொடர்வது போல, வானரத்தை அதன் நிழல் தொடர்ந்து ஜல பரப்பில் விரிந்து தெரிந்தது. எந்த விதமான பிடிமானமோ, ஆதாரமோ இல்லாமல், வாயு மார்கத்தில், தானே ஏற்றுக் கொண்ட ப்ரும்மாண்டமான சரீரத்துடன் வாயு புத்திரன், மகா தேஜஸுடன், கவர்ச்சியுடன் இருந்தான். மலைக்கு இறக்கை முளைத்து விட்டது போல், வேகம் எடுத்துச் சென்ற திசைகளில் பெரும் கடல் த்3ரோணஎ அளவு, (படி என்பதுபோல அளக்கும் அளவு), ஆயிற்று. கூட்டம் கூட்டமாக பறக்கும் பறவைகளின் நடுவில் பக்ஷிராஜனாகத் தெரிந்தான். மாருதன் போலவே அவன் மகனும் மேகங்களை வருத்திக் கொண்டே சென்றான். ஆகாயத்தை துளைத்துக் கொண்டு செல்வது போல மேல் நோக்கி ஒரு சமயம், திரும்ப கீழே விழுந்து விடுவது போல மறு நிமிடம் என்று, தெரிவதும் மறைவதுமாக சந்திரமா போல இருந்தான். வெண்மை, அருண நிறம், நீலம், மஞ்சள் என்று பல வர்ணங்களிலும் விளங்கும் ஆகாயம், கபி இழுக்க, இழுக்க, உடன் வருவது போல வளைந்து கொடுத்ததோ. தேவ, கந்தர்வ, சாரணர்கள், இதற்குள், ஹனுமான் லங்கையை அடைய பெரும் கடலைத் தாவித் தாண்டி கடக்க ஆரம்பித்திருக்கிறான் என்று தெரிந்து, புஷ்பமாரி பொழிந்தனர். வேகமாக செல்பவனை வாழ்த்தினர். சூரியன் அவனை சுடவில்லை. வாயு அவனை நகர்த்தி அலைக்கழிக்கவில்லை. ராம காரியம் நல்ல விதமாக நிறைவேற, வாழ்த்தி அனுப்பினார்கள். ஆகாய மார்கமாக துணிந்து புறப்பட்ட அனுமனை, ரிஷிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வழியனுப்பினர். தேவ, கந்தர்வர்கள், புகழ் பாடினர். நாகர்கள், மகிழ்ந்தனர். யக்ஷ, ராக்ஷஸர்கள், பலவிதமான பறவைகள், ஆகாயத்தில் நிமிர்ந்து பார்த்து, கடலைத் தாண்டும் பெரிய வானரம் களைப்பின்றி செல்வதைக் கண்டனர். இப்படி வானர வீரன் ஆகாயத்தை மறைத்துக் கொண்டு செல்லும் பொழுது, சாகர ராஜன், இக்ஷ்வாகு குலத்திற்கு பந்தம் உடையவன், யோசிக்கலானான். ஹனுமானுக்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமே, எதுவும் செய்யாமல் விட்டால், எல்லோரிடமும் பொல்லாப்பு வரும். நான் இக்ஷ்வாகு குல அரசனால் சகரனால் வளர்க்கப் பட்டவன். இவன் இக்ஷ்வாகு குல மந்திரி. இவன் வருந்தாமலிருக்க வேண்டும். இவன் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, செல்ல நான் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும். சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, பயணத்தை தொடர்ந்தால், புத்துணர்ச்சி பெற்றவனாக, ஆவான். இப்படி எண்ணி, சமுத்திர ஜலத்தில் மறைந்து இருந்த மைனாகம் என்றும், ஹிரண்ய நாப4 என்றும் அழைக்கப் பட்ட மலையை அழைத்தான். இந்திரனால் விரட்டப் பட்டு கடலில் மூமூழ்கி இருந்த மலை. நக3 சத்தமா, (மலைகளுள் சிறந்தவனே,) பாதாளத்தின் வாயிலை மறைத்துக் கொண்டு நிற்கிறாய். மேலும், கீழும், பக்க வாட்டிலும் நகர உனக்கு சக்தியுள்ளது. அதனால் உனக்கு ஒரு வேலை தருகிறேன். எழுந்திரு. இதோ பார். இந்த வானர வீரன் ஹனுமான், ராம காரியமாக கிளம்பி இருக்கிறான். ஆகாய மார்கமாக வந்து கொண்டிருக்கிறான். இதோ அருகில் வந்து விடுவான். எனக்கு இக்ஷ்வாகு குலத்தின் அரசர்களிடம் நன்றிக் கடன் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் உனக்கும் இக்ஷ்வாகு குலத்தினர் மரியாதைக் குரியவர்கள். உனக்கு நன்மை செய்தவர்கள். அதனால் ஒரு காரியம் செய். செய்ய வேண்டிய கடமையை செய்யாது விட்டால், நல்லவர்கள் கூட கோபம் கொள்வார்கள். இந்த நீருக்கு வெளியில் தெரியும்படி நின்று கொள். உன் மேல் முஹுர்த்த நேரம் இந்த வானர வீரன் நின்று சிரம பரிகாரம் செய்து கொள்ளட்டும். காகுத்ஸனுடைய நல்ல குணம், அவனுடைய தயை, அவனுக்கு நேர்ந்த கஷ்டம், சீதை காணாமல் போனது. இந்த வானரம் ராம காரியமாக கிளம்பியிருக்கிறான், பயணத்தின் சிரமம் இவற்றை நினைத்து, நீ எழுந்திரு. இதைக் கேட்டு, ஹிரண்யனாபனான மைனாகம் நீருக்குள்ளிருந்து புறப்பட்டு மேலே வந்து, ஹனுமானை வரவேற்க தயாராகியது. மலையின் மேல் இருந்த மலை நிறைந்த மரங்களும், பழ மரங்களும் வெளியே தெரியலாயிற்று. சமுத்திர ஜலத்தை கிழித்துக் கொண்டு மேல் எழும்பிய மைனாக மலை மேகங்களை பிளந்து கொண்டு, கடுமையான கிரணங்களுடன் தி3வாகரன் (பகலவன்) உதித்தது போல இருந்தான். சாகரத்தின் கட்டளைப்படி, நாலா புறமும் ஜலம் சூழ்ந்த அந்த பிரதேசத்தில், கால் ஊன்ற தன் தலையையே கொடுக்கத் தயாராக இருப்பது போல, தன் சிகரத்தை மட்டும் வெளியே தெரியும் படி வைத்து நின்று கொண்டான். கின்னரர்களும், மகா உரகங்களும் (நாகங்கள்) வசிப்பதும், உதய சூரியன் போன்ற பிரகாசத்துடன், மேகத்தை தொட்டு விடும் உயரத்துடன், காஞ்சன மயமான சிகரங்கள் திடுமெனெ நீர்ப் பரப்பில், தெரியலாயின. ஹிரண்யனாபன் என்ற பெயருக்கு ஏற்ப, பொன் நிறமான அந்த சிகரங்கள் ஆகாயத்தையே பொன் நிறமாக்கின. நூறு ஆதித்யர்கள் ஒரே சமயத்தில் உதித்த பிரமையை உண்டு பண்ணியது. எதிர்பாராமல் தன் எதிரில் வந்து நின்ற, இந்த மலையை ஹனுமான் ஏதோ இது ஒரு தடை என்றே எண்ணினான். விக்னம், இதை கடந்து செல்ல வேண்டும் என்று மகா வேகமாக தன் மார்பினால் அதை தள்ளிக் கொண்டு சென்றான். தந்தையான மாருதி, மேகங்களை நெட்டித் தள்ளுவது போல. தன்னைத் தள்ளியதிலிருந்தே மகா கபியின் வேகத்தை புரிந்து கொண்ட மைனாகம், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான். ஆகாயத்தில் நின்ற வீரனைப் பார்த்து, மலையுச்சியில் தானும் மனித உருவம் எடுத்துக் கொண்டு நின்றபடி வானரோத்தமா, அரிய செயலைச் செய்கிறாய். சற்று என் சிகரத்தில் தங்கி சிரம பரிகாரம் செய்து கொள். ராகவனுடைய குலத்தில் பிறந்தவர்களால் தான் இந்த சமுத்திரம் உண்டானது. அதனால் சாகரன், ராம காரியத்திற்காக செல்லும் உனக்கு உபசாரம் செய்ய விரும்புகிறான். ஒருவன் செய்த உதவிக்கு பிரதி உதவி செய்தே ஆக வேண்டும். இது பழமையான தர்மம். அதனால் சாகர ராஜன் உனக்கு சேவை செய்து, ராகவ குலத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விழைகிறான். என்னை அனுப்பியிருக்கிறான். மிகவும் மரியாதையுடனும் சிரத்தையுடனும், என்னை உனக்கு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்து கொள்ள இடம் தரும்படி சொல்லியனுப்பினான். நூறு யோஜனை தூரம் கடலைத் தாண்டும் முயற்சியில், வானர ராஜன் இறங்கியிருக்கிறான். உன் சாரலில் தங்கி இளைப்பாறிச் செல்லட்டும் என்றான். அதனால் ஹரிசார்தூ3லா, சற்று நில். இதோ, காய்கறி பழ வகைகள். இவைகளைப் புசித்து, சிரம பரிகாரம் செய்து கொண்டு நாளை செல்வாய். வானரனே, எங்களுக்கும் உன்னுடன் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. மூன்று உலகிலும் தேடினாலும் உன்னைப் போல வானரங்களை காண்பது அரிது. மாருதாத்மஜா, நீ பூஜிக்கத் தகுந்த அதிதி. சாதாரணமாகவே, அதிதி என்று யார் வந்தாலும் உபசரிக்க வேண்டியது சாதாரண தர்மம். அதிலும், உன் போன்றவர்களை அதிதியாக பெறுவதே பாக்கியம். கபிகுஞ்சரா, நீயோ மாருதனின் புதல்வன். அவனைப் போலவே ஆற்றலும், வேகமும் உடையவன். உன்னை நான் உபசரித்தால் உன் தந்தையை உபசரித்தது போலாகும். இப்படி நான் உன்னை உபசரிக்க விரும்புவதன் காரணம் சொல்கிறேன் கேள். முன்பு க்ருத யுகத்தில் மலைகள் இறக்கைகளுடன் இருந்தன. நாலா திசைகளிலும் அவை சென்றன. கருடனோ, காற்றோ, எனும்படி வேகமாக சென்றன. இப்படி இவர்கள் செல்லும் பொழுது தேவர்களும், ரிஷிகளும், மற்ற ஜீவராசிகளும் பயந்து நடுங்கின. எந்த நிமிடமும் விழலாம் என்ற சந்தேகம். இதனால் சஹஸ்ராக்ஷன் கோபம் கொண்டான். தன் வஜ்ராயுதத்தை எடுத்து கிடைத்த இடத்தில் பர்வதங்களின் இறக்கையை வெட்டி எறிந்தான். என்னை நோக்கி வஜ்ராயுதத்தை தூக்கிக் கொண்டு வந்த சமயம், உன் தந்தையான வாயுவினால் தள்ளப்பட்டு இந்த உப்புக் கடலினுள் போடப் பட்டேன். என் இறக்கைகளோடு உன் தந்தையினால் ரக்ஷிக்கப் பெற்றேன். அதனால் உன்னை உபசரிக்கிறேன். நீ என்னால் உபசரிக்கப் பட வேண்டியவனே. நமக்குள் உள்ள இந்த சம்பந்தமும் குறிப்பிடத் தக்கதே. ஆகையால், சாகரத்தில், என்னுடைய இந்த விருந்தோம்பலை, உபசாரத்தை ஏற்று, இந்த சிகரத்தில் சிரம பரிகாரம் செய்து கொள். உன்னைக் கண்டதில் மிக மகிழ்ச்சியடைகிறேன். என்று இவ்வாறு மைனாக பர்வதம் சொல்வதைக் கேட்ட ஹனுமான், பர்வதமே, நீ பேசியதிலேயே ஆதித்யம் (விருந்தோம்பல்) ஆகி விட்டது. நானும் மகிழ்ச்சியடைந்தேன். தவறாக எண்ண வேண்டாம். வீணாக கவலைப் படாதே. என் காரியம் அவசரமானது. இதோ, பொழுதும் சாய்ந்து கொண்டிருக்கிறது. நான் பிரதிக்ஞை செய்து இருக்கிறேன். வழியில் எங்கும் தங்கக் கூடாது என்பது என் விரதம், என்று சொல்லி கைகளால் மலையைத் தள்ளி விட்டு, சிரித்துக் கொண்டே ஆகாயத்தில் ஏறி தன் பயணத்தைத் தொடர்ந்தான். பர்வதமும், சாகரமும், மதிப்பும் மரியாதையுமாக ஏறிட்டு நோக்கி, ஆசிகளும் வழங்க, இன்னும் வேகமாக மேல் நோக்கிச் சென்று, தன் தந்தையின் மார்கத்தில், விமலமான வானத்தில் பயணித்தான். மேலே இருந்தபடி மலையைக் கண்டு, தன் போக்கில் வேகமாக செல்லலானான். இது ஹனுமானின் இரண்டாவது அரிய செயல். இதை சுரர்களும், சித்தர்களும் வியந்து பாராட்டினர். தேவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். மற்றும் அங்கு இருந்த அனைவரும் இந்த செயலால் வியப்பு எய்தினர். சஹஸ்ராக்ஷன், தானே குரல் தழ தழக்க, ஹிரண்யனாபன் எனும் மைனாக மலையை பாராட்டினான். உன் உபசாரம் செய்யும் இந்த உயரிய நோக்கமே பாராட்டுக்குரியதே. நான் உனக்கு அபயம் அளிக்கிறேன். இப்படியே இரு சௌம்யனே,. ஹனுமானுக்கு நீ உதவி செய்தாய். அரிய செயலைச் செய்யத் துணிந்த வீரனுக்கு இதுவும் ஒரு உதவியே. பயப்பட வேண்டிய இந்த நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடக்கத் துணிந்திருக்கிறான். ராமனுடைய நன்மைக்காக, தசரத மகனின் காரியமாக இந்த வானரம் இந்த பெரும் செயலைச் செய்யக் கிளம்பியிருக்கும்பொழுது, நாமும் நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டியது அவசியமே. உன் செயலால் நான் உன்னிடமும் திருப்தியடைந்தேன். இப்படி சஹஸ்ராக்ஷனும் பாராட்ட, மைனாக பர்வதம் பெரும் சந்தோஷம் அடைந்தது. உபரியாக பெற்ற வரதானம், இதனால் மலை திரும்ப கடலினுள் மூழ்காமல், அப்படியே நின்றது. ஒரு முஹுர்த்த நேரம், எந்த வித தடங்கலும் இன்றி, ஹனுமான் தன் பயணத்தை தொடர்ந்தான். அச்சமயம் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், சுரஸா என்ற நாக மாதாவை அணுகி, ஒரு திட்டத்தை செயல் படுத்த அவள் உதவியைக் கோரினர். இந்த வாதாத்மஜன், ஸ்ரீமான், சாகரத்துக்கு மேல் பறக்கிறான். ஹனுமான் என்ற பெயருடைய வானரம். நீ முஹுர்த்த நேரம் அவனுக்கு தடை உண்டு பண்ணுவாய். பர்வதம் போன்ற உருவமும், கோரமான ராக்ஷஸ ரூபத்தை எடுத்துக் கொண்டு, கூர்மையான பற்களும், மஞ்சள் நிறக் கண்களும், அகலமாக திறந்த வாயுடன் அவன் முன் நின்று தடுக்கப் பார். அவன் பலத்தை எடை போட விரும்புகிறோம். பராக்ரமம் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம் என்றனர். உன்னை உபாயத்தால் வெற்றி கொள்வான் அல்லது வாட்டமடைவான் என்றனர். அவளும் சம்மதித்து, தேவர்களின் விருப்பத்துக்கு இணங்க சமுத்திர மத்தியில் பயங்கரமான ராக்ஷஸ உருவத்தை எடுத்துக் கொண்டு, கண்டவர் நடுங்கும்படியான தோற்றத்துடன், தாவித் தாண்டிச் செல்லும் ஹனுமானை நாலாபுறமும், சுற்றி வளைத்தபடி கொக்கரித்தாள். வானரர்ஷப4, எனக்கு ஆகாரமாக வந்து சேர்ந்தாய். விதி தான் உன்னை எனக்கு கொண்டு வந்து தந்திருக்கிறது. நான் உன்னை சாப்பிடப் போகிறேன். என் வாயில் நுழை எனவும், பணிவுடன் ஹனுமான் சொன்னான். ராமன் என்ற ராஜகுமாரன், தசரத ராஜாவின் மைந்தன், தண்டகாவனம் வந்தான். சகோதரன் லக்ஷ்மணனுடனும், மனைவி சீதையுடனும் வசித்து வந்தான். வேறு ஏதோ காரணமாக ராக்ஷஸர்களுடன் விரோதம். அதை வைத்து அவன் மனைவி சீதையை ராவணன் அபகரித்தான். அவளிடம் நான் ராமனின் ஆணைப்படி தூது செல்கிறேன். விஷயவாஸினி, நீயும் ராமகாரியத்திற்கு சகாயம் செய். அல்லது நான் போய் சீதையைக் கண்டு ராமனிடம் சொல்லி, என் கடமையை முடித்தவுடன் நானே உன் வாயில் வந்து விழுகிறேன். இது சத்யம். நான் பிரதிக்ஞை செய்கிறேன். வார்த்தை மீற மாட்டேன். இதைக் கேட்டு நாகமாதா, வானரத்தின் பலத்தை எடை போடும் உத்தேசத்துடன் என் வாயில் விழுந்து புறப்பட்டுச் செல்வாய். வானரமே, இன்றே, இப்பொழுதே. எனக்கு இப்படி ஒரு வரம் ப்ரும்மா கொடுத்திருக்கிறார். என்று சொல்லியபடி வேகமாக வளர்ந்து தன் வாயை பூதாகாரமாக விரித்து அவன் முன் நின்றாள். ஹனுமானும் ஆத்திரத்துடன், சரி, என்னை தாங்கும் அளவு உன் வாயை அகலமாக விரித்துக் கொள், என்றான். சுரஸா பத்து யோஜனை தூரம் விஸ்தாரமாக தன் வாயை திறக்கவும், ஹனுமான் தானும் அதே அளவு பெரிதாக வளர்ந்தான். மேகம் போல எதிரில் நின்றவனைப் பார்த்து சுரஸா மேலும் வளர்ந்து இருபது யோஜனை தூரம் பெரிதாக வாயைத் திறந்தாள். வாயு புத்திரன் அவள் மேலும் மேலும் வளருவதை பார்த்துக் கொண்டே இருந்தவன், சட்டென்று தன் உருவத்தை குறுக்கி, மகா மேகம் போல இருந்தவன், கட்டை விரல் மாத்திரமாகத் ஆகி, அவள் வாயில் புகுந்து, கிழித்துக்கொண்டு வெளியே வந்து அந்தரிக்ஷத்தில் நின்றவன் தா3க்ஷாயணி, நமஸ்காரம். உன் வாயில் புகுந்து வெளி வந்து விட்டேன். நான் வைதேஹியைத் தேடி போகிறேன். உன் வரமும் சத்யமாயிற்று. ராகு முகத்திலிருந்து விடுபட்ட சந்திரன் போல வெளியே வந்து நின்ற ஹனுமானை, தன் சுய உருவில் சுரஸா வாழ்த்தினாள். ஹரிஸ்ரேஷ்ட, சௌம்யனே, சௌகர்யமாக போய் வா. வைதேஹியை அழைத்துக் கொண்டு வந்து ராகவனோடு சேர்த்து வை. இந்த மூன்றாவது அரிய செயலைப் பார்த்து உலகமே வியந்தது. சாது, சாது என்று ஜீவ ஜந்துக்கள் அனைத்தும் புகழ்ந்தன. கருடன் போன்ற வேகத்துடன் ஹனுமான் வான வெளியில் திரும்பவும் பறக்கலானான். பக்ஷிகளும், நீர்த் திவலைகளும் ஒன்றாக பறந்தன. சந்திர சூரியர்கள் பாதையில் ஹனுமான் கண்ட காட்சிகள் புதுமையானவை. நடந்து செல்லும் ஐராவதம் சிம்மம், யானை, சார்தூலம், பறவைகள், பாம்புகள் இவற்றின் உருவ அமைப்பில் வாகனங்களில் செல்பவர், விமானங்களில் செல்பவர், வஜ்ரம் அடித்தது போல வெப்பம் தாக்கும் முக்யமான பாதை, ஸ்வர்கம் செல்லும் அளவு புண்யம் செய்த மகாத்மாக்கள் வசிக்கும் அல்லது நடமாடும் பாதை, சித்ரபானு வணங்கும், (ஹவ்யவாஹண-ஹவ்யம் எனும் தேவர்களின் உணவை எடுத்துச் செல்லும் அக்னியின் பாதை,) க்3ரஹ, நக்ஷத்திர, சந்திர, சூரிய, தாரகைகள் நிறைந்ததும், மகரிஷிகள், கந்தர்வ, நாக, யக்ஷர்கள் சூழ்ந்திருப்பதும், விஸ்வாவசு வசிக்கும் விசாலமான, விமலமான இடம், தேவராஜனின் யானை கம்பீரமாக நடக்கும் சுபமான சந்திர, சூரிய பாதை (மார்கம்) இதைத் தாண்டி ப்ரும்மாவால் நிர்மாணிக்கப்பட்ட மங்களமான வாயு மார்கத்தில் ஹனுமான் நுழைந்தான். வித்யாதர கணங்கள் சிறப்பாக பூஜைகள் செய்து கொண்டிருந்தனர். கருடன் போல பறந்தான். தன் தந்தையைப் போல மேகங்களை கிழித்து சீறிக் கொண்டு சென்றான். வானத்தில் வண்ணங்கள் மாறி மாறி காட்சியளித்தன. சில சமயம் அக3ருவின் புகை போன்ற நிறத்திலும், சிவப்பு, மஞ்சள், வெண்மை என்றும் மாறி, மாறி கபியின் வேகத்தில் மேகம் நகர, வானத்தின் நிறம் தெரிந்தது. மேலே ஏறியும், இறங்கியும் சென்ற ஹனுமான், மழைக்கால சந்திரன் போல சில சமயம் மறைந்தும், சில சமயம் வெளிப்பட்டும், கீழேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்குத் தெரிந்தான். எங்கும் மாருதாத்மஜனே நிறைந்து இருந்தான். பார்க்கும் இடம் எல்லாம், இதோ, இதோ எனும்படி நீளமான இறக்கையுடன் ஒரு பர்வத ராஜன் ஏறி இறங்கி வானத்தில் விளையாடுவது போல தோற்றமளித்தான். இப்படி நிச்சைந்தையாக பறந்து கொண்டிருந்த ஹனுமானைப் பார்த்து சிம்ஹிகா என்ற ராக்ஷஸி, தன் மனதில் நினைத்தாள். இஷ்டம் போல வளரக் கூடியவள், பெரிதாக வளர்ந்து வெகு நாட்களுக்குப் பின் இன்று நான் திருப்தியாக சாப்பிடப் போகிறேன் என்று எண்ணிக் கொண்டாள். ஏதோ ஒரு மிகப் பெரிய ஜீவன் வேகமாக வருகிறது. என் பசியைத் தீர்க்கத்தான் வருகிறது போலும் என்று நினைத்தாள். இப்படி எண்ணிக் கொண்டே ஹனுமானின் நிழலை இறுக்கிப் பிடித்தாள். தன் நிழல் பிடிக்கப் பட்டு கதியில் தடை உண்டாவதைக் கண்டு வானரம் யோசித்தது. என் பராக்ரமத்தில் திடீரென இது என்ன தடை? எதிர்க் காற்றினால் தாக்கப் பட்டு அலை பாயும் கப்பல் போல என் வேகத்தை ஏதோ சக்தி எதிர்த்து தடுக்கிறதே. குறுக்காக, மேலே கீழே என்று எல்லா திசைகளிலும் பார்வையை ஓட விட்ட வானர வீரன், ஏதோ ஒரு பெரிய ஜீவன் உப்புக் கடலின் பரப்பில் தெரிவதைக் கண்டான். கோரமாக, காணத்தகாத உருவமும், அதன் இருப்பிடமும், வானர ராஜன் சுக்ரீவன் சொன்னது சரிதான். நிழலைப் பிடித்து இழுக்கும் ராக்ஷஸ ஜாதியைச் சார்ந்தது தான் இது. சிம்ஹிகா என்று சுக்ரீவன் சொன்னது இவளைத்தான் என்று நொடியில் புரிந்து கொண்டவன், மழைக் கால மேகம் போல தன் உருவத்தை மேலும் பெருக்கிக் கொண்டான். கீழேயிருந்து ராக்ஷஸியும், அந்த வளர்ச்சிக்கு ஏற்ப. தன் வாயையும் அகல பிளந்து கொண்டாள். பாதாளம் வரை ஆக்ரமித்துக் கொண்டாற் போல நின்றாள். இடி இடிப்பது போல சிரித்தாள். வானரத்தை நெருங்கி வந்தாள். அவளது பெரிய உருவத்தையும், பிளந்த வாயையும் வைத்து அவள் உடலின் மற்ற பாகங்களை ஊகித்துக் கொண்ட ஹனுமான், திடுமென தன் உடலை குறுக்கிக் கொண்டு அவள் வாயினுள் நுழைந்தவன், தன் நகத்தால் அவள் மர்மஸ்தானத்தை கிழித்து அவளை வீழ்த்தி விட்டு மனோ வேகத்தில் வெளியே வந்தான். சித்த சாரணர்கள், அவள் வாயில் நுழைந்தவனைக் கண்டு கவலையுடன் காத்திருந்தனர். தீர்மானமாக, அதே சமயத்தில் தாக்ஷிண்யத்தோடு உதறி தள்ளி விட்டு, வான வெளியில் திரும்பவும் தன் பெரிய சரீரத்துடன் பயணத்தைத் தொடங்கினான். அவள் தடாலென்று உப்புக் கடலில் விழுந்தாள். ஸ்வயம்பூவான ப்ரும்மாவே, அவள் முடிவுக்கு ஹனுமானை பயன் படுத்திக் கொண்டிருந்தார் போலும். ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஜீவ ராசிகள், அனுமனின் கையால் கிழிபட்டு கீழே விழுந்த அவளைப் பார்த்து வானரேந்திரனை வாழ்த்தினர். சாது சாது என்றனர். இன்று நீ மிகப் பெரிய காரியம் சாதித்திருக்கிறாய். இந்த பெரிய ஜீவன் உன் கையால் வதம் செய்யப்பட்டு மடிந்தது அரிய செயல். மேலும் எதுவும் தடையின்றி நீ உன் காரியத்தை முடிக்க வாழ்த்துகிறோம். ஸ்ம்ருதி, த்ருதி, மதி, தா3க்ஷ்யம்- நல்ல ஞாபக சக்தி, திடமான கொள்கை, புத்தி, சாமர்த்யம் இந்த நான்கு குணங்களும் உன்னிடம் பொருந்தியிருப்பது தான் இப்படி நீ வெற்றி வீரனாக செயல்படக் காரணம், இந்த நான்கு குணங்கள் கொண்டவன் யாரும் தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் பின் வாங்குவதில்லை. இவர்கள் இவ்வாறு மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ்த்தி வழியனுப்பவும், தன்னம்பிக்கையுடன், பன்னகம் எனும் பாம்பைத் தின்னும் கருடன் போல வான வெளியில் தாவிக் கிளம்பினான். வெகு தூரம் பிரயாணம் செய்து நூறு யோஜனை தூரத்தில் முடிவில் அடர்ந்து இருந்த வனத்தைக் கண்டான். தன் வேகத்தை குறைக்காமலேயே, மரங்களும், பலவிதமான தாவரங்களும் நிறைந்து இருந்த அந்த அழகிய வளமான பிரதேசத்தை கண்ணுற்றான். சாகா ம்ருகம், மரக் கிளைகளில் வாழும் விலங்கு இனம் எனும் வானர ஜாதியைச் சேர்ந்த ஹனுமான் அந்த அழகிய தீவைக் கண்டான். மலய மலை, உபவனங்கள் இவற்றைக் கண்டான். சாகரத்தை, சாகரத்தின் கரையை, கரையில் வளரும் விசேஷமான மரங்களை சாகரத்தின் பத்னிகள் எனும் நதிகளின் முகத்வாரத்தையும் கண்டபடி இறங்கினான். தன் உருவை, மகா மேகம் போல வானத்தின் பரவியிருந்த பெரும் உருவத்தை ராக்ஷஸர்கள் பார்த்தால் சந்தேகம் கொள்வர். அல்லது ஆவலுடன் என்னை கூர்ந்து கவனிப்பர். குதூகலத்துடன் யார் இது என்று விவரம் அறிய முயலுவர். தேவையில்லாமல் சங்கடங்கள் வரலாம். என்று எண்ணி. உடனே தன் உருவத்தை குறுக்கிக் கொண்டு, மேலும் சிறியதாக ஆக்கிக் கொண்டு, பலி சக்ரவர்த்தியின் வீர்யத்தை அடக்க வந்த ஹரி மூன்று அடிக்குள் உலகத்தை அளந்தது போல, வாமனனாக நின்றான். பலவிதமான ரூபங்களை எடுத்தும் அழகு குன்றாமல் நின்றவன், சமுத்திர தீரத்தில் வேறு யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத கார்யாகாரியம் அதன் பலன்கள் இவற்றை ஆராய்ந்து தன் உருவை நிர்ணயித்துக் கொண்டான். அதன் பின் அந்த பெரிய மலையில் சிகரத்தில் இருந்து குதித்து கீழே இறங்கினான். கேதக, உத்துங்க, நாரிகேள என்று பலவிதமான மரங்களைக் கண்டான். இந்த மரங்களின் வளர்ச்சியே அசாதாரணமாக இருந்தது. இலங்கையை அடைந்து மலையுச்சியில் இருந்து சமுத்திரத்தை நோக்கினான். அருகில் தென்பட்ட பக்ஷிகளையும், மிருகங்களையும் பயமுறுத்தியபடி, மலையின் மேல் சஞ்சரித்தான். தானவர்களும், பன்னகர்களும், நிரம்பிய அந்த சாகரத்தை தன் பலத்தால் தாண்டி, தாவி குதித்து, மீன்களும் மகரங்களும் நிரம்பிய கடலைக் கடந்து பெருங்கடலின் கரையில் நின்று, அமராவதி போல இருந்த இலங்கை நகரை ஏறிட்டு நோக்கினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், சாகர லங்க4ணம் என்ற முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்)