பொருளடக்கத்திற்கு தாவுக

அத்யாயம்-2

பிப்ரவரி 23, 2014

 

த்யானம் – அக்ஷமாலை, பரசு (கோடாலி) , க3தை4, இக்ஷு, குலிஸம், பத்மம், த4னுஷ், த3ண்டம், அம்புறாத் தூணீ, சக்தி, அஸி என்ற வாள், மான் தோல், தாமரைப் பூ, சூலம், பாசம், சுத3ர்ஸனம் இவ்வளவும் இவள் ஆயுதங்களே.  சைரிப4 மர்தி3னி இவள்.  பிரஸன்னமாக தாமரை மலரில் வசிப்பவளான மகாலக்ஷ்மி என்ற தேவியை வணங்குகிறேன்.

முன் ஒரு காலத்தில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் கடும் யுத்தம் தோன்றியது. இந்திரன் தலைமையில் தேவர்கள், மகிஷன் தலைமையில் அசுரர்கள்.  மகா பலம் பொருந்திய அசுரர்கள் தேவர்களைத் தோற்கடித்தனர். தேவர்கள் அனைவரையும் ஜயித்த மகிஷன், தானே இந்திரனானான். தோற்ற தேவர்கள், பிரஜாபதி என்றும், பத்மயோனி என்றும் அழைக்கப்படும் ப்ரும்மாவின் தலைமையில், பகவான் விஷ்ணுவும், ஈசனும் இருக்குமிடம் சென்றனர். இருவரிடமும் நடந்ததைச் சொன்னார்கள் மகிஷாசுரனால் தேவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைச் விஸ்தாரமாக சொன்னார்கள். சூரியன், இந்திர, அக்னி, வாயு, சந்திரன், யமன், வருணன், மற்றும் பலருடைய அதிகாரங்களைக் கைப்பற்றி தான் ஒருவனே ஆட்டிப் படைக்கிறான். அந்த தேவ கணங்கள் சுவர்கத்திலிருந்து விரட்டப்பட்டு பூமிக்கு வந்தனர். மனிதர்கள் போல நடமாடுகின்றனர். மகிஷன் மிகவும் பொல்லாதவன். தேவ விரோதி. அட்டகாசம் செய்கிறான். உங்களை சரணமடைகிறோம். அவனை அடக்கி எங்களைக் காக்க வேண்டுகிறோம்.

மதுசூதனன் தேவர்கள் சொன்னதை பொறுமையாக கேட்டார். ஈசனும் கேட்டார். இருவரும் மகிஷனிடம் கோபம் கொண்டதில், புருவம் நெரிய, முகம் சிவக்க ஆனார்கள். சக்ரதாரியான விஷ்ணுவின் கோபம் கொண்ட முகத்திலிருந்து, மகத்தான தேஜஸ் வெளி வந்தது. அத்துடன், சங்கரனுடைய, ப்ரும்மாவுடைய தேஜஸும் கலந்தது.  மற்ற தேவர்கள், இந்திரன் முதலானோர், சக்தியும் அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்டு, அத்துடன் ஐக்யமாயின. இந்த சக்திகளின் சேர்க்கை கொழுந்து விட்டு எரியும் எரிமலை போல, பிரகாஸமாகத் தெரிந்தது. அனைவரும் இந்த ஜோதி ஸ்வரூபத்தை திகைத்தபடி பார்த்தனர். திசைகளை சூழ்ந்து பரவி நின்ற பெருந்தீ.   அந்த சக்திக்கு உவமானமாக எதைச் சொல்ல முடியும். அனைத்து தேவர்களின் உடல்களிலிருந்து வெளிப்பட்ட சக்தி சமூகம். கண் எதிரில் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அது ஒரு பெண் உருக் கொண்டது. மூவுலகையும் வியாபித்து தன் ஒளியால் பிரகாசமாக்கியபடி நின்றது. அதில் சம்பு4வின் தேஜஸ் அந்த பெண்ணின் முகமாகியது.                                          

யமனுடைய தேஜஸ் கேசமாகியது. விஷ்ணுவின் தேஜஸ் புஜங்களாயின. சந்திரனுடைய தேஜஸ் இரண்டு ஸ்தனங்களாயின. இந்திரனின் தேஜஸ் இடுப்பு பாகமாயிற்று. வருணனின் தேஜஸ் துடைகளாக, ப்ருஷ்ட பாகமாக ஆயின. ப்ரும்மாவின் தேஜஸ் கால்களாயின. சூரியனின் தேஜஸ் கால் விரல்களாயின. வசுக்களின் தேஜஸ் கை விரல்களாயின. குபேரனின் தேஜஸ் மூக்காக, ப்ரஜாபதியின் தேஜஸ் பற்களாக, அக்னியின் தேஜஸ் மூன்று கண்களாயின.  ஸந்த்யா காலங்களின் தேஜஸ் புருவங்களாக, வாயுவின் தேஜஸ் காதுகளாக, மற்ற தேவர்களின் சக்திகளும் சேர்ந்து சிவா என்ற புதிய சக்தி பிறந்தது. சமஸ்த தேவர்களின் தேஜஸும், சக்தியும் சேர்ந்த கலவையாக தோன்றிய அவளைப் பார்த்து, தேவர்கள், மகிழ்ந்தனர். இதுவரை மகிஷனால் பட்ட துன்பங்களை மறந்தனர். பினாக பாணியான சிவன், தன் சூலத்திலிருந்து பிரித்து எடுத்து ஒரு சூலத்தை தந்தார். பகவான் கிருஷ்ணன், தன் சக்ரத்திலிருந்து புது சக்ரத்தை உருவாக்கி கொடுத்தார். வருணன் சங்கத்தையும், அக்னி சக்தி என்ற ஆயுதத்தையும், தந்தனர். வாயு வில்லையும் பாணங்கள் நிரம்பிய துaணியையும்  தந்தான். இந்திரன் வஜ்ரத்தை குலிசம் என்ற ஆயுதத்தால் பிளந்து தந்தான். மேலும், ஆயிரம் கண்கள் உடைய அவன், ஐராவத யாணையின் கழுத்தில் கட்டியிருந்த மணிகளைத் தந்தான். கால தண்டத்திலிருந்து புதிய தண்டம் உண்டாக்கி யமன் தந்தான். சமுத்திர ராஜன் பாசத்தை தந்தான். பிரஜாபதி  ப்ரும்மா  அக்ஷமாலையையும், கமண்டலுவையும் கொடுத்தார். திவாகரன், அவளுடைய ரோமக் கால்களில், தன் ஒளிக் கதிர்களை சமர்ப்பித்தான். காலன் வாளைத் தந்தான். நிர்மலமான தோற்றம் வர தோல் பகுதிகளை பளபளக்கச் செய்தான். பாற்கடலில் தோன்றிய என்றும் வாடாத, தூய்மையான மாலையை, ஆடைகள், சூடாமணிகள், குண்டலங்கள், கை கடகங்கள், பிறை சந்திரனையும், அதே போல வெண்மையான கேயூரங்கள், புஜங்களில் தரிக்க என்றும், அதே போல உத்தமமான வெண்மையான நூபுரங்கள், எல்லா விரல்களிலும் பொருத்தமான ரத்னங்கள் பதித்த மோதிரங்கள் என்று ஆபரணங்களை விஸ்வகர்மா கொடுத்தார். அத்துடன் பரசு (கோடாலி) என்ற ஆயுதத்தையும் கொடுத்தார். உடைக்க முடியாத பல அஸ்திரங்கள்,  த3ம்ஸனம் (அடக்குவது-அதற்கான ஆயுதம்), வாடாத மலர் மாலைகள், தலையில் தரித்துக் கொள்ள, என்று சமுத்திரம் கொடுத்தது. அதன் அழகு கண்களைப் பறித்தது. ஹிமவான் சிம்ஹ வாகனத்தையும், பலவிதமான ரத்னங்களையும் கொடுத்தார். த4னாதிபனான குபேரன், பான பாத்ரம் – என்றும் குறையாத மது நிறைந்த பாத்திரத்தை தந்தான்.  நாகங்களின் தலைவனான நாகேசன், மகாமணிகள் பிரகாசித்த நாக ஹாரத்தைத் தந்தான். பூமியைத் தாங்கும் மகா நாகங்கள் அவை. மற்ற தேவர்களும், பூ4ஷணங்கள், ஆயுதங்கள் என்று தேவியிடம் சமர்ப்பித்தனர். இப்படியாக, அனைத்து தேவர்களின் அன்பும், மதிப்பும் கிடைக்கப் பெற்ற தேவி,  தான் செய்ய வேண்டிய செயலின் ஆரம்பமாக, சங்கநாதம் எழுப்பினாள். மகத்தான இந்த ஒலி மேலும் மேலும்  பயங்கரமாக பரவியது. அதைவிட பயங்கரமாக அதன் எதிரொலி கேட்டது.

ஆகாயம் முழுவதையும் நிரப்பிய பயங்கரமான நாதம். உலகம் முழுவதும் நடுங்கியது. சமுத்திரம் கலங்கியது. பூமி ஆடியது. கூடவே மரங்கள், மலைகள் ஆடின.  அதையும் மீறி தேவர்களின் ஜய சப்தம் வானளாவியது. மிகுந்த சந்தோஷத்துடன் சிம்ஹ வாஹிணியான தேவியை வரவேற்று போற்றினர். தேவர்களின் எதிரிகள், திடுமென எழுந்த இந்த கோலாகலத்தைக் கண்டு திகைத்தனர். தங்கள் படை வீர்ர்களை கிளப்பி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்குத் தயாராக கிளம்பினர். மகிஷாசுரன், ஆ, இது என்ன?  என்று கோபத்துடன் இரைந்தான். சற்று முன் கேட்ட நாதத்தை குறி வைத்து ஓடினான். அவனைச் சார்ந்த அசுரர்கள் உடன் ஓடினர். தேவியைக் கண்டான். மூவுலகிலும் பரவிய ஒளி மயமாக நின்றவளைக் கண்டான். தன் பாதங்களில் பூமி வணங்கி நிற்க, கிரீடத்தால் வானத்தை தொடுபவளாக, பாதாளம் வரை நீண்டிருந்த வில், அம்பு, இவைகளுடன், வில்லின் நாண் எழுப்பிய தொனி திசை எங்கும் பரவ நின்றவளைக் கண்டான். ஆயிரம் புஜங்கள், திசைகளை ஆக்ரமித்திருந்தன. அதன் பின் இந்த தேவியும் தேவ விரோதிகளான அசுரர்களுடன் போர் புரிய தயாரானாள். பலவிதமான அஸ்த்ர ஸஸ்த்ரங்களை பிரயோகித்தாள். அஸ்த்ரங்களின் உரசலால் தோன்றிய ஒளி எட்டெட்டு திக்குகளிலும் பரவியது. மகிஷாசுர சேனையிலிருந்து சேனைத் தலைவன் சிக்ஷ என்ற மகாசுரன் சதுரங்க பலத்துடன் வந்தான். அமரர்களுடன் போரைத் துவக்கினான்.  பன்னிரெண்டாயிரம் ரதங்களுடன் உதக்ரன் என்ற மகாசுரன் வந்தான். ஆயிரமாயிரம் வீரர்களுடன் மகாஹனு- பெரிய திமிலையுடையவன் வந்தான். 55 ஆயிரம் வீர்ர்களுடன் அஸிலோமா என்ற மகாசுரன் வந்தான். இரு நூறாயிரம் வீரர்களுடன் பாஷ்கலோ என்பவன் யுத்தம் செய்ய வந்தான். யானைகள், குதிரைகள், ஆயிரக் கணக்காக சூழ்ந்து நின்று கொண்டன. கோடிக்கணக்கான ரதங்கள். பி3டாலன் என்பவனும் தன் படையோடு வந்து சேர்ந்து கொண்டான். இவன் ரதங்கள் வேறு தனியாக வந்து சேர்ந்து கொண்டன. இவைகளில், யானை பூட்டியவை, குதிரை பூட்டியவை என்று வரிசை வரிசையாக வந்தபடி இருந்தன. மகிஷாசுரனும் குதிரைகள் பூட்டிய ரதத்தில் வந்து சேர்ந்தான். அவன் கையிலும் தோமரங்கள், பிந்தி பாலங்கள், சக்திகள், முஸலங்கள் என்ற ஆயுதங்கள், தேவியுடன் போரிட இவை போதாது என்று நினைத்தோ, வாட்கள், பரசு, பட்டிஸங்கள் என்ற ஆயுதங்களையும் தாங்கி வந்தான். ஒரு சிலர் சக்தியைச் செலுத்தினர். ஒரு சிலர் பாசங்களை வீசினர். தேவியை இடை விடாது வாட்களால் அடித்தனர். அவளை கொல்லும் எண்ணத்துடன் முன்னேறி வந்தவர்களை தேவி பார்த்தாள். அவர்களுடைய அஸ்த்ர ஸஸ்த்ரங்களுக்கு சரியான பதிலடி கொடுத்தாள். விளையாட்டாகவே, தன் அஸ்த்ரங்களை மழையாக பொழிந்தபடி, ஏறிட்டு நோக்கினாள். தேவர்களும், ரிஷிகளும் இடைவிடாது ஸ்தோத்திரம் செய்யலானார்கள். ஈஸ்வரி பல அஸ்த்திரங்களை அசுரர்கள் தேகங்களில் பட வீசினாள். தேவியின் வாகனமான சிங்கம், காடுகளில் காட்டுத் தீ பரவுவது போல, தன் பிடறி மயிரை சிலிர்த்தபடி, நடந்தது. ரணகளத்தில் அம்பிகை விட்ட பெரு மூச்சுகளே, உடனுக்குடன், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பூத கணங்களாக மாறின. அவர்களும், பரசுகளையும், பிந்தி பாலங்களையும் கத்தி, பட்டிசங்களையும் கொண்டு அசுர சேனையை நாசம் செய்தன.     இவர்களையும் பின் நின்று இயக்கியது தேவியின் சக்தியேயன்றோ.. இந்த பூத கணங்களில் சிலர் சங்கத்தை ஊதினர். சிலர் மிருதங்கத்தை வாசித்தனர். சிலர் படகங்களை வாசித்தனர். யுத்தமே மகோத்ஸவமாக, அவர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. அதன் பின் தேவி, திரி சூலத்தால், க3தை4யினால், சக்தி இவைகளை மழையாக பொழிந்து, மகாசுரர்களை நூற்றுக் கணக்கானவர்களை வதைத்தாள்.  மற்றவர்கள் வீழ்ந்தனர். அவளுடைய க4ண்டா  மணியின் நாதத்தாலேயே, பயந்து அலறி முர்ச்சையடைந்தவர்கள் பலர். அப்படி விழுந்தவர்களை பாசத்தால் கட்டி, மற்றவர்களைத் தேடிப் போனபடி இருந்தாள். கத்தி பட்ட மாத்திரத்தில் ஒரு சிலர் இரண்டாக பிளந்து விழுந்தனர். ஒரு சிலரை க3தையால் ஒதுக்கித் தள்ளiயதாலேயே பூமியில் விழுந்தனர். விழுந்து கிடந்தவர்களின் உடலிலிருந்து ரத்தம் பெருகியது. முஸலத்தால், சூலத்தால் அடி வாங்கியவர்கள், சிதறி துண்டு துண்டாக விழுந்தனர். யுத்த பூமியில் இடை விடாது பட்ட அடியால் மாண்டவர் பலர். த்ரிதஸா  என்று அழைக்கப்படும் தேவர்களை வாட்டி வதைத்தவர்களில் பலர்,  தங்கள் பிராணனை கழுகுக்கு இரையாக்கினர். பலருக்கு புஜங்கள் இற்று விழுந்தன. சிலருக்கு கழுத்து துண்டிக்கப்பட்டது. தலைகள் கீழே விழுந்தன, இடையில் அடி பட்டவர்கள், இரண்டு துண்டானார்கள். மகா அசுரர்களiல் மீதி இருந்தவர்கள், ஒரு கண், ஒரு கால் உடையவர்களாக தவித்தனர்.  தேவியின் ஆயுதங்களால் அடி பட்டு தலை கீழை விழுந்த பின்னும் கப3ந்த உருவங்கள் யுத்தம் செய்ய வந்தனர். தேவியின் கையிலிருந்த உயர்ந்த ஆயுதங்கள் கூட அவர்களின் மனோ பலத்தை குறைக்கவில்லை.  துரிய லயம் இவற்றுடன் நாட்டியமாடினர் சிலர். இந்த கபந்த உருவங்கள் தேவியை நில், நில் என்று கத்தியபடி துரத்தினர். தலையில்லாத இவைகளின் கைகளில் தூக்கிப் பிடித்த வாளும், சக்தி, இஷ்டி போன்ற ஆயுதங்கள் வேறு. வசுந்தரா என்ற பூமி கீழே விழுந்த யானைகள், குதிரைகள், உடைந்த ரதங்கள் ஆகியவைகளால் நிறைந்தது. ரணகளத்தில் கால் வைக்க இடமில்லை.  மாபெரும் யுத்தம் மேலும் தொடரவும், வற்றிக் கிடந்த மகா நதிகள் பெருக்கெடுத்து ஓடின.   அசுர சைன்ய மத்தியில், அசுர, யானை. குதிரை சடலங்களுக்கிடையில் பிரவகித்து ஓடியது. க்ஷண நேரத்தில் அந்த மகா சைன்யம் மிச்சமின்றி தேவியால் அழிக்கப்பட்டது. அக்னி, உலரந்த புல், கட்டைகளை எரிப்பது போல. தேவியின் வாகனமான சிங்கமும், பிடறியை சிலிர்த்து, பெரும் கர்ஜனை செய்தபடி ரணகளத்தில், நடமாடியதைப் பார்க்க அசுர உடல்களில் உயிர் மீதம் உள்ளதா என்று தேடுவது போல இருந்தது. தேவியின் கணங்களும் –வீரர்களும்-  பயங்கரமாக யுத்தம் செய்ததை கொண்டாடி தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக