3 வது அத்யாயம்
த்யானம் – ஆயிரம் சூரியன்கள் ஏககாலத்தில் உதித்தது போல பிரகாசமானவள், அருண நிறத்தாள், பட்டாடை உடுத்தி தலையில் பூ மாலையை சூடியவள். குங்குமம் அப்பிய ஸ்தனங்களும், ஜப மாலையும் அபீதி, வித்யா என்ற உயர்ந்த அறிவுகளை, கல்வியே உருவகமாக விளங்கிய கைத் தாமரைகளில் தாங்கியவள், முக்கண்ணும், அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற பிரகாசமான வதன அழகும் உடைய தேவியை, கிரீடத்தில் பிறை சந்திரனை சூடியவளான தேவியை வணங்குகிறேன்.
ரிஷி சொன்னார் (1)
மகா அசுரன் தன் சைன்யம் அடி பட்டு மொத்தமாக அழிந்ததைக் கண்டான்.
சிக்ஷு என்ற சேனைத் தலைவன் கோபத்துடன் அம்பிகையுடன் யுத்தம் செய்ய முனைந்தான். அம்பிகையின் மேல் அம்புகளை வர்ஷித்தான். கார் மேகம் மேரு மலையின் உச்சியில் நீரால் அபிஷேகம் செய்வது போல இருந்தது. அவனை, விளையாட்டாகவே தேவி, தலையையும், கைகளையும் துண்டித்து, அவன் குதிரைகளையும் வீழ்த்தினாள். குதிரைகளை நடத்திச் சென்றவர்களும் மாண்டனர். வில் பொடிப் பொடியாகியது. கொடி அறுந்து விழுந்தது. வேகமாக வந்து விழுந்த அம்புகள், அவன் உடலை சல்லடையாக்கியது. தன் வில் ஒடிந்து, ரதம் வீழ்ந்து, குதிரையும் போய், அதை ஓட்டியவர்களும் அழிந்ததைக் கண்ட அந்த வீரன், கையில் கத்தியுடன் தேவியை நோக்கி ஓடி வந்தான். சிங்கத்தை அடித்து விட்டு, தேவியின் இடது புஜத்தை குறி பார்த்து அடிக்க வந்தான். அதற்குள் தேவியின் வாள் அவன் புஜங்களை வெட்டி வீழ்த்தி விட்டது. அப்படியும் சூலத்தால் தேவியைத் தாக்க வந்தான். ஆகாயத்திலிருந்து சூரிய தேவனே இறங்கி வந்தாற் போல் ஒளி வீசிக் கொண்டு அந்த சூலம் வந்தது. தேவியும் தன் சூலத்தால் பதிலடி கொடுத்து அந்த மகா அசுரன் தூள் தூளாக சிதறச் செய்தாள். மகிஷனுடைய முக்யமான படைத் தலைவர்களுள் ஒருவன், மாண்டதும், தேவர்களைத் துன்புறுத்துவதே தொழிலாகக் கொண்ட மகிஷனின் படை வீரர்களில் ஒருவனான சாமரன் என்பவன் யானை மேல் ஏறி அங்கு வந்தான். இவன் சக்தியை பிரயோகிக்கவும், தேவி, உடனே அவசரமாக ஹுங்காரம் செய்து, அந்த சக்தியை அடக்கி பூமியில் விழச்செய்தாள். சக்தி உடைந்து கீழே விழுந்ததைக் கண்ட சாமரன், தன் சூலத்தை எடுத்துக் கொண்டான். தேவி அவனது ஆயுதங்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்து விட்டாள். அதன் பின் தேவியின் படை வீரன் சிம்ஹன் என்பவன் வந்து த்வந்த யுத்தம் செய்யவும் அவனை தலை வேறு, உடல் வேறு, என்று ஆக்கி விட அவன் மாண்டான். திரும்பவும் உத3க்4ரன் என்பவன் போர் முனைக்கு வந்தான். இவனை அழிக்க தேவி, மரங்களையும், கற்களையுமே ஆயுதமாக கொண்டாள். அதன் பின் வந்த கராளன், தேவியின் கைகளால், முஷ்டி, புறங்கை இவைகளால் அடி பட்டே மாண்டான். மேலும் மகிஷனுடைய படை வீர்ர்கள் வந்து கொண்டே இருப்பதைப் பார்த்து, க3தையை சுழற்றி அடித்தாள். பா4ஷ்கலன் என்பவன் மாண்டான். பிந்திபாலம் மற்றும் பாணங்களால் தாமரம், அந்தகன், உக்ராஸ்யம், உக்ர வீர்யம், மகா ஹனு என்பவர்களையும் வதைத்தாள். முக்கண்ணனுடைய திரிசூலத்தை கையில் எடுத்தவள், பி3டாலன், துர்தரன், துர்முகன், மற்றும் மீதமிருந்த பலரை யம லோகத்துக்கு அனுப்பி வைத்தாள். இவ்வாறு தன் சேனை வீரர்கள் நாசமாக, படை க்ஷீணமாவதைக் கண்டு மகிஷாசுரன் தானே மாகிஷமான (எருமை மாடு) ரூபத்துடன் தேவியை எதிர்த்து பயமுறுத்தியபடி வந்தான். ஒரு சிலரை அடித்தும், மற்றும் சிலரை தன் குளம்புகள் அதிர நடந்த நடையாலும், வாலை விசிறி அடித்து ஒரு சிலரை, கொம்புகளால் முட்டி கிழித்தும் வேகமாக வந்தான். அந்த வேகமே, சிலரை அலறச் செய்தது என்றால், சுற்றிச் சுற்றி வந்து உரத்த குரலில் கத்தியதில் சிலர் பயந்து ஓடினர். மூச்சுக்காற்றே பலரை பூமியில் விழச் செய்தது. கூட்டத்தின் இடையில் புகுந்து அந்த அசுரன் ஓடினான். தேவியின் சிம்ஹத்தை கொல்ல வந்த பொழுது தேவி கோபமடைந்தாள். அந்த அசுரனும் மகா வீரன். கோபத்துடன் தன் குளம்புகளால் பூமி அதிர நடந்த பொழுது, கொம்புகளால் மலைச் சிகரங்களை ஆட்டி விழச் செய்ததோடு, உரத்த குரலில் சப்தம் செய்தான். அவன் வேகமாக நடந்ததில் பூமி அதிர்ந்தது. வாலினால் அடித்து சமுத்திரத்தை கலக்கினான். மேகத்தை தன் கொம்புகளால் கிழித்து துண்டு துண்டாக்கினான். அவனுடைய மூச்சுக்காற்றாலேயே மலைகள், ஆகாயத்தில் விசிறி எறியப்பட்டன. இனி தாமதிக்க கூடாது என்று எண்ணிய தேவி பாசத்தை வீசி அவனைக் கட்டினாள். பாசத்தால் கட்டிய உடனேயே மாகிஷ எருமை மாட்டு உருவம் மறைந்து விட்டது. சிங்க முகமாக மாறியது. அந்த தலையை துண்டித்தவுடன், மனித உருவமாக கையில் வாளுடன் நின்றான். அந்த மனித உருவத்தை தேவி பல அம்புகளைப் போட்டு வதம் செய்தாள். அந்த உருவம் கையில் வாளுடனேயே மகா கஜமாயிற்று. கைகளால் மகா சிங்கமான அவனைப் பிடித்து வாளுடன் கையைத் துண்டித்தாள். அந்த மகா அசுரன் திரும்பவும் மாகிஷ உருவத்தை அடைந்தான். பழையபடி மூவுலகையும் துன்புறுத்த ஆரம்பித்தான். ஜகன்மாதா உத்தமமான பானத்தைக் குடித்து விட்டு பலமாக சிரித்தாள். கண்கள் சிவந்து விட்டன. அசுரனும் தன் பலம், வீர்யம், மதம் வெளிப்பட கொம்புகளால் மரங்களை வீழ்த்தி சண்டிகா பேரில் வீசினான். அப்படி வந்த மரங்கள் தன் அருகில் வருமுன் தன் கை சரங்களால் பொடிப் பொடியாக்கினாள் தேவி. மதுவினால் சிவந்த கண்களும், வாயுமாக அவனைப் பார்த்து சொன்னாள்.
தேவி சொன்னாள். (37)
மூடனே, நன்றாக கத்து. நான் மதுவை குடித்துவிட்டு வருகிறேன். இதோ பார், என் கையால் வதமாகப் போகிறாய். அதைக் கண்டு தேவர்கள் இதை விட உரக்கச் சிரிக்கப் போகிறார்கள்.
ரிஷி சொன்னார் (39)
இப்படி சொன்னவள், அந்த மகிஷத்தின் மேல் ஏறி நின்று கால்களால் கழுத்தில், சூலத்தால் உடலில் அடித்தாள். அவனும் அசைய முடியாத அந்த நிலையிலும், தன் முகத்தைத் தூக்கி பாதி நடந்த நிலையிலேயே, தேவியின் கையால் வதைபட்டவனாக, நின்று விட்டான். மீதி இருந்த அவனது இயக்கமும், தேவி வாளால் அவன் சிரத்தை துண்டித்ததும் நின்றது. உடனே சைன்யங்களின் ஹா ஹா என்ற ஆரவாரம் எழுந்தது. தைத்ய சைன்யம் நாசமடைந்தது. தேவதா கணங்கள் மகிழ்ச்சியுடன் தேவியைத் துதித்தனர். மகரிஷிகளும், மற்றவர்களும் சேர்ந்து துதி செய்தனர். கந்தர்வர்கள் பாடலாயினர். அப்சர கணங்கள் நடனமாடினர். (44)