4 வது அத்யாயம்
(தேவர்கள் செய்யும் துதி-
த்யானம் – கார் மேகம் போன்ற வர்ணத்தினாள். கடாக்ஷத்தாலேயே எதிரி படையை கலங்கச் செய்பவள். தலையில் இளம் பிறையைச் சூடியவள். சங்கம், சக்ரம்,வாள், திரிசூலம் இவைகளை ஏந்தியவளாக, முக்கண்ணுடன், சிங்கத்தின் தோளில் வருபவள், மூவுலகையும் தன் தேஜஸால் நிரப்புவள், அப்படிப்பட்ட துர்கா தேவியை, ஜயா என்ற பெயருடையவளை, தேவதைகள் சூழ நிற்பவளை, தங்கள் விருப்பங்கள் நிறைவேறி, பல சித்திகளை அடைந்துள்ள யோகிகளுடன் தியானம் செய்ய வேண்டும்.
ரிஷி சொன்னார் (1)
2. பலசாலி என்று உலகை ஆட்டி வைத்த மகிஷனை வீழ்த்தி, வெற்றி வாகை சூடி நின்ற தேவியை இந்திரன் முதலான தேவர்கள் வாழ்த்தி தோத்திரம் செய்தனர். தலை வணங்கி மரியாதையுடன், மகிழ்ச்சி நிறைந்த குரலில், உடல் புல்லரிக்க வார்த்தைகளால் துதித்தனர்.
3. ஜகதாத்ம சக்தியோடு, தேவ கணங்களiன் சக்திகளை ஒட்டு மொத்தமாக ஏற்றுக் கொண்டு எந்த தேவி, செயற்கரிய செயலைச் செய்தாளோ, அந்த தேவியை அகில உலகில் தேவர்களும், மகரிஷிகளும் போற்ற நின்றவளை, நாங்கள் பக்தியுடன் தொழுகிறோம். எங்களுக்கு ஜயத்தை அருளுவாயாக.
4. எவளுடைய பிரபாவத்தை பகவான் அனந்தனோ, ப்ரும்மாவோ, ஹுரனோ கூட விவரித்துச் சொல்ல முடியாதோ, அந்த சண்டிகா, உலகம் முழுவதும் காக்கவும், அசுபங்களை நாசம் செய்யவும் முன் வரட்டும்.
5. எந்த தேவி, தானே நற்காரியங்களை செய்பவர்களின் ப4வனங்களில், இருக்கிறாளோ, பாபாத்மாக்களின் கிருஹத்தில் அவளே அலக்ஷ்மியாக இருக்கிறாள். நல்ல ஞானிகளின் ஹ்ருதயத்தில் அவளே, புத்தியாக இருக்கிறாள். நல்லவர்களுடைய ச்ரத்தாவாக – (மரியாதை, கட்டுப்பாடு என்ற குணங்களாக,), நற்குடி பிறந்தவர்களிடம், லஜ்ஜை என்ற குணமாக விளங்குகிறாளோ அந்த தேவியை வணங்குகிறோம். தேவி, உலகை காப்பாயாக.
6. உன் உருவத்தை நான் வர்ணிக்கப் போமோ – கற்பனைக்கும் எட்டாத ஒன்று அது. உன் அதிசயமான வீரத்தை வர்ணிக்க முடியுமா ? பயங்கரமான அசுரனையே அழித்தவள் நீ. யுத்தத்தில் நீ செய்த சாகஸங்கள் – அத்புதமான அந்த சாகஸங்களை நான் வர்ணிக்கவா – தேவி! அசுரர்கள் மட்டுமல்ல, தேவர்களே திகைத்து நின்றார்களே.
7. .உலக முழுவதற்கும் காரணமானவள் நீ. மூன்று குணங்களை உடையவள். குணத்தில் குறை உடையவர்கள் உன்னை அறிய முடியாது. ஹரி ஹரனுக்கும் அப்பாற்பட்டவள். நீயே அனைவருக்கும் ஆசிரயமானவள். பாதுகாப்பு அளிப்பவள். இந்த உலகம் உன் அம்சமாகத் தோன்றியது தானே. ஆத்யா – முதல்வளான நீ பரமா ப்ரக்ருதி என்று என்றும் அழியாமல் இருப்பவள்.
8. யாகங்களில் அவளையே முதல்வளாக போற்றிப் பாடுங்கள். அதில் அவள் திருப்தி அடைவாள். நீயே ஸ்வாஹாவாக இருக்கிறாய். பித்ரு கணங்களுக்கு திருப்தி உன்னாலேயே கிடைக்கிறது. அதனால் ஜனங்கள் உன்னை ஸ்வதா4 என்று சொல்கின்றனர்.
9. எந்த தேவி முக்தியளிக்க வல்லவளோ, அந்த தேவி கணக்கில்லாத விரதங்களை தானும் அனுசரிப்பவள். அவளை மோக்ஷத்தை வேண்டும் முனிவர்களும் துதிக்கிறார்கள். அவர்களோ, இந்திரிய நிக்ரஹம் செய்து, தத்வ விசாரம் செய்து, மனம் கனிந்து, தங்களிடம் உள்ள குறைகளை அடியோடு நீக்கியவர்கள். அவர்கள் வேண்டும் பொழுது பகவதியான வித்3யாவாக நிற்கிறாய் தேவி! பரா வித்யையும் நீயே தானே தேவி.
10. சப்த வடிவானவள் நீயே. விமலமான அர்க்யத்தை ஏற்கும் முனிவர்களிடம் குடி கொண்டவள். நல்ல ரம்யமான பாடல்கள், பதங்கள், என்று பாடுபவர்களின் எதிரில் தோன்றுகிறாய் தேவி. நீயே மூன்று வேத ஸ்வரூபமாக காட்சி தருகிறாய். ப4க3வதி, ப4வன் – சிவ பெருமானுடைய பா4வனையாக, வார்த்தையாக விளங்குகிறாய். நீயே உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் படும் பெரும் துன்பங்களை நீக்குபவளுமாக இருக்கிறாய் தேவி.
11. நீயே தான் மேதா4 எனும் புத்தி கூர்மை. அகில சாஸ்திரங்களையும் முழுமையாக அறிந்தவள். எளiதில் நெருங்க முடியாத துர்கையும் நீயே. கடக்க முடியாத ப4வ சாகரத்தை கடக்க உதவும் படகாக வருகிறாய். ஸ்ரீயும் நீ தானே. கைடபாரி எனும் விஷ்ணுவின் ஹ்ருதயத்தில் வசிப்பவளும் நீயே. கௌரியும் நீயே. பிறை சந்திரனை தலையில் சூடிய சிவபெருமானிடத்தில் மனத்தை அசையாமல் வைத்திருப்பவளும் நீயே.
12. மந்த சிரிப்புடன் கூடிய உன் முகம், அமலமான பூர்ண சந்திரன் போல உள்ளது. உத்தமமான தங்கத்தின் வசீகரிக்கும் நிறம். மிக அத்புதம். கோபத்துடன் பார்த்த பொழுது கூட மகிஷன், உன்னைக் கண்டவுடன், அந்த அவசரத்திலும் கூட உன் முகத்தின் காந்தியால் திகைத்து நின்று விட்டான். கோபத்துடன் புருவம் நெரிய இருந்த பொழுதிலும், அப்பொழுது தான் உதித்த சந்திரனின் ஒளியுடன் இருந்ததைக் கண்டவுடனேயே மகிஷனுடைய பிராணன் போய் விட்டது போலும். ஆச்சர்யம் தான். யார் தான் அந்தகனான யமன் கோபத்துடன் எதிரில் நிற்கும் பொழுது உயிர் வாழ ஆசைப் பட முடியும்.
13. தேவி ! தயை செய். நீ ப4வனுடைய பிரிய மனைவி. கோபம் கொண்டால், அந்த க்ஷணமே குலத்தோடு அழிக்க வல்லவள். இப்பொழுது தான் அதை உணருகிறோம். எப்படி என்றால் இந்த மகிஷனுடைய படை பலம், அளவில்லாதது என்று நினைத்ததை, நீ ஒருவளாக செயலிழக்கச் செய்து விட்டாயே.
14. அதே சமயம், தேவி, நீ யாரிடம் ப்ரஸன்னமாக இருக்கிறாயோ, அவர்களே த4ன்யர்கள். அவர்களே. நிறைய குழந்தைகளுடன், மனைவி, வேலைக்காரர்களுடன் மேன்மையாக வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தான் புகழ் தானே வந்து சேருகிறது. ஊருக்குள் கௌரவமாக வாழ்கிறார்கள். எல்லா வித செல்வங்களும் அவர்களை அடைவதில் பெருமை கொள்கின்றன. அவர்களும் தர்ம பரமாகவே இருப்பதால் எந்த வித துன்பமும் அவர்களை நெருங்குவதில்லை.
15. அவர்களே சுக்ருதி -தர்மங்களை முறையாக செய்பவன் என்று பெயர் பெறுகிறார்கள். தினந்தோறும் நற் காரியங்களை செய்து அதன் பலனாக சுவர்கம் போகிறார்கள். இதுவும் உன் அருளால் தானே ஸாத்யமாகிறது.
16. அதனால் தான் துர்கே தேவி, உன்னை நினைத்த மாத்திரத்தில், ஜீவ ஜந்துக்கள் பயம் என்பதிலிருந்து விடுபடுகிறார்கள். ஆரோக்யமானவர்கள் நினைத்தால், நல்ல சுபமான புத்தியைத் தருகிறாய். தரித்திரம், துக்கம், பயம் இவைகளை அழிப்பவள் உன்னையன்றி வேறு யார் ? அனைவருக்கும் ஏதாவது உபகாரமாக செய்ய நினைப்பவள் நீ. உன் சித்தமே கருணையில் தோய்ந்தது தானே.
17. இவர்களை வதைத்தாலே உலகம் நன்மை பெறும். இவர்கள் நரகத்தில் வெகு நாட்கள் பாப பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும். யுத்த களத்தில் மரணமடைந்ததால் தேவ லோகம் செல்லட்டும். இப்படி நினைத்து தான், உனக்கு கெடுதலை செய்பவர்களையும் வதைக்கிறாயோ தேவி.
18. இல்லாவிடில் கண் பார்வையிலேயே ப4ஸ்மமாக செய்து இருக்கலாமே. எதற்காக எதிரி என்று நிற்க வைத்து ஆயுதங்களை பிரயோகம் செய்தாய்.? எதிரிகளானாலும் உன் சஸ்திரங்களால் பாபம் தொலைந்து, தெளிந்து, நல்ல உலகங்களை சென்றடையட்டும் என்று நினைத்தாயோ. அதி சாத்4வி – மிக ஸாதுவான குணம் உள்ளவள் நீ. உன் மனம் இப்படித்தான் நினைக்கும். இதில் ஆச்சர்யம் என்ன?
19. இவர்களுக்கும் அருள நினைத்தாய் போலும். வாட்கள் ஒன்றொடொன்று உரசும் ஒலி, சூலத்தின் நுனியின் பிரகாஸம் இவைகளால் அசுரர்களின் பார்வையை உன் பக்கம் இழுத்தாய். தானாக வந்து தரிசனம் செய்யத் தெரியாத அவர்களை உன் பிறை சந்திரனைக் காட்டி உன் முகத்தை காணச் செய்தாயா.
20. தவறான வழியில் செல்கிறார்களே, இவர்களை நல் வழியில் திசை திருப்ப வேண்டும் என்று உன் சீலமான ரூபத்தை, மற்ற ஜனங்களுக்கு கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒப்புவமையற்ற உன் முகத்தை, தேவ பராக்ரமங்களை அழித்தவர்களையும் அழிக்க வல்ல வீர்யத்தைக் காட்டி உன் வசப்படுத்திக் கொண்டாய். எதிரிகளுக்கும் அருளும் இந்த தயை உன் இயல்பேயன்றோ.
21. உன் பராக்ரமத்துக்கோ, உன் ரூபத்துக்கோ யாரை உனக்கு சமமான உவமையாக சொல்ல முடியும். எதிரிகளை பயந்து நடுங்கச் செய்யும் உன் உள்ளத்தில் தயையே நிரம்பி இருக்கிறது என்பது தெரியாமல் யுத்தத்தின் கடுமையை மட்டும் கண்டவர்களும் பின்னால் தெரிந்து கொண்டனர். மூவுலகிலும் நீ தான் வரம் அருளுபவள் என்பதை உணர்ந்து கொண்டனர்.
22. எதிரிகளை அழித்ததால், மூவுலகமும் காப்பாற்றப் பட்டது. யுத்த களத்தில் முன் நின்று, அவர்களை வதைத்து, அதனாலேயே, அசுரர்களும் நல்ல கதியை அடைந்தனர். எங்களுக்கும் மதம் கொண்ட அசுரர்கள் என்ற பயம் நீங்கியது. தேவி, உன்னை வணங்குகிறோம்.
23. தேவி , எங்களை சூலத்தால் காப்பாய். வாள் முனையில் காப்பாய். அம்பிகே, உன் மணிகளின் நாதமே எங்களைக் காக்கட்டும். வில், அம்புகளiன் உரசல் சத்தம் காக்கட்டும்.
24. அம்பிகே, கிழக்கு திசையில் காப்பாற்று. சண்டிகே, மேற்கில், தெற்கிலும் உன் கை சூலத்தை சுழற்றி (காப்பாய்) ஈஸ்வரி, வடக்கிலும் காப்பாய்.
25. சௌம்யமான ரூபங்கள் யாவையோ, அவைகளைக் கொண்டு, உலகில் சஞ்சரிக்கும் பல அத்யந்த கோரமான ரூபங்கள், அவைகளிடமிருந்து உலகை, எங்களை காப்பாய்.
26. வாள், சூலம், கதை மற்றும் உன் அஸ்திரங்கள் என்னவெல்லாம் உண்டோ, உன் கோமளமான கைகளுடன் உறவாடும் ஆயுதங்கள் யாவையோ, அவைகளைக் கொண்டு எங்களை ரக்ஷiப்பாய்.
ரிஷி சொன்னார். (28)
இப்படி திவ்யமான ஸ்தோத்திரங்களால் துதித்து, நந்தன வனத்தின் மலர்களால் அர்ச்சனை செய்து, வாசனை திரவியங்களை உபசாரமாக அளித்து, தூப தீபங்களுடன் ஸமஸ்த தேவர்களும் வேண்டிக் கொண்டவுடன், தயை நிறைந்த தேவி, அவர்களைப் பார்த்து, சுமுகியாக ப்ரஸன்னமாக சொன்னாள்.
தேவி சொன்னாள் (32)
தேவர்களே, வேண்டும் வரங்களைக் கேளுங்கள்.
தேவர்கள் சொன்னார்கள்.
பகவதி, நீயே எல்லாமே கொடுத்து விட்டாய். எதுவுமே மீதியில்லை கேட்க. இந்த அசுரனை அழித்ததே பரம உபகாரம். இன்னமும் வரம் தருவதானால், மகேஸ்வரி, நாங்கள் உன்னை நினைக்கும் பொழுதெல்லாம் எங்களுடைய பெரிய பெரிய ஆபத்துகளை களைந்து அருளுவாய். எந்த மனிதர்கள், இந்த ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ, அவர்களுக்கு நிறைந்த செல்வத்தை, விப4வம்-நிறைவான வாழ்வை, த4ன, தா3ராதி ஸம்பத்துக்களை விருத்தியாக்குவாய். எப்பொழுதும் பிரஸன்னமாக எங்களையும் பாலிப்பாய். இது தான் நாங்கள் வேண்டுவது.
ரிஷி சொன்னார் (38)
அப்படியே ஆகட்டும் என்று சொல்லி தேவி மறைந்தாள். தங்களுக்காவும், உலகுக்காகவும் தேவர்கள் வேண்டியதை மகிழ்ச்சியுடன் அருளினாள்.
அரசனே, இது தான் தேவி தோன்றிய கதை. தேவ சரீரங்களிலிருந்து சக்தியை ஏற்று, மூவுலகமும் உய்ய வேன்டும் என்பதற்காக அவதரித்தாள். பின் ஒரு சமயம், சும்ப, நிசும்பர்கள் என்ற அசுரர்கள் தோன்றிய பொழுது, கௌரியாக, திரும்ப அவதரித்தாள். தேவர்களுக்கு நன்மை உண்டாகவும், உலகம் உய்யவும் அவதரித்த இந்த கதையையும் சொல்கிறேன் கேள், என்றார்.
Reblogged this on Janakikrishnan's Blog.