அத்யாயம் – 10
த்யானம் – புடமிட்ட சொக்கத் தங்கம் போன்ற நிறத்தினள், ரவி, சந்திரன், அக்னி முறையே மூன்று கண்களாக உடையவள், வில், அம்புகளுடன், அங்குசம், பாசம், சூலம் இவைகளைத் தன் அழகிய புஜங்களில் தரித்தவள்.
பிறை சந்திரனுடன் சிவ சக்தி ரூபமானவள், காமேஸ்வரி, இவளை என் ஹ்ருதயத்தில் பூஜிக்கிறேன்.
ரிஷி சொன்னார் –
நிசும்பன் மாண்டதைக் கேள்விப்பட்ட சும்பன், வருந்தினான். உயிருக்கு உயிரானவன். தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபமாக வெளிப்பட்டது. தேவியைப் பார்த்துக் கத்தினான். துஷ்டே, கர்வப் பட வேண்டாம். மற்றவர்கள் பலத்தில் யுத்தம் செய்கிறாய். இதில் என்ன பெருமை உனக்கு. அனாவசியமாக கர்வப் படாதே.
தேவி சொன்னாள்.
நான் ஒருவளே தான். என்னுடைய விபூதி, ஆற்றல் பலவாக காட்சி அளிக்கும். நானே பலவாகவும் இருப்பேன். என்னிடம் அனைத்தையும் இணைத்துக் கொண்டு ஒருவளாக நிற்கிறேன். நீயும் ஸ்திரமாக நில்.
ரிஷி சொன்னார் – அதன் பின் யுத்தம் மூண்டது. தேவிக்கும், சும்பனுக்கும். தேவர்களும் அசுரர்களும் பார்த்துக் கொண்டு நின்றனர். பயங்கரமான யுத்தம். கூர்மையான சரங்கள் மழையாக பொழிந்தது. சஸ்திரங்கள், அஸ்திரங்கள், எல்லாமே புதுமையானவை, பயங்கரமானவையே. சர்வ லோகமும் நடுங்கும்படி, கோரமான யுத்தம் திரும்ப நடந்தது. நூற்றுக் கணக்கான திவ்யாஸ்திரங்களை அம்பிகை பிரயோகித்தாள். அவைகளை தைத்யேந்திரன் பிளந்தான். அதை எதிர்க்கும் செயலை திறமையாக செய்தபடி இருந்தாள் தேவி. திவ்யாஸ்திரங்களை அவன் பிரயோகித்தால், மாகேஸ்வரி தேவியும் ஹுங்காரத்தினாலேயே அவைகளை எதிர்த்தாள். அனாயாசமாக அவனை செயலிழக்கச் செய்தாள். தேவியை நாலாபுமும் சூழ்ந்து கவசம் போல மறைக்கும் படி நூற்றுக்கணக்கான சரங்களை விட்டான் அசுரன். அவனுடைய வில்லையே தன் சரங்களால் உடைத்து விட்டாள் தேவி. வில்லே முறிந்தது. தைத்ய ராஜன் சக்தியை கையில் எடுத்தான். அதையும் சக்ரத்தால் தேவி முறித்தாள். பின் வாளை எடுத்தான். சதசந்திரன் என்பது அதன் பெயர். பாதி சந்திரன் வடிவில் உள்ள அதை எடுத்துக் கொண்டு தேவியை நோக்கி ஓடி வந்தான். அவன் அப்படி ஓடும் பொழுதே வாளை முறித்தாள் சண்டிகா. தன் வில்லில் கூர்மையான அம்புகளை கோர்த்து, எதிரியினுடைய இளம் சூரியன் போல பிரகாசமாக இருந்த தோள் கவசத்தை அழித்தாள். குதிரை விழுந்தது. தைத்ய ராஜா, வில்லும் முறிந்து, சாரதியும் இன்றி முத்கரம் என்ற கோரமான அஸ்திரத்தை எடுத்தான். எப்படியும் தேவியை வதம் செய்வது என்று ஓடி வந்தான். அதையும் தன் கூர்மையான அம்புகளால் தேவி முறித்தாள். அப்படியும் முஷ்டியால் அடிக்க வந்தான். புறங்கையால் தேவி அதை தள்ளிவிட, அந்த கை பலத்தை தாங்காமல் பூமியில் விழுந்தான். விழுந்தவன் உடனே எழுந்து நின்றான். எழுந்தவன், தேவியைப் பற்றியபடி, வானத்தில் எழும்பி நின்றான். ஆதாரம் எதுவுமில்லாமல், அந்தரிக்ஷத்தில் நின்றபடி, அவனுடன் யுத்தத்தை தொடர்ந்து செய்தாள் சண்டிகா தேவி. சண்டிகாவும், அசுர ராஜனும் இப்படி வான வெளியில் சண்டையிட்டதைப் பார்த்து சித்த முனிவர்கள் முதல் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். அதே நிலையில் யுத்தம் தொடர்ந்தது. அசுரனை கீழே தள்ளி, சுழற்றி அடித்து பூமியில் வீசினாள். அப்படி விழுந்தவன் திரும்பவும் முஷ்டியை மடக்கிக் கொண்டு தேவியை தாக்க வந்தான். அந்த சர்வ தைத்ய ராஜனை சூலத்தால் மார்பில் அடித்து உயிரற்றவனாக பூமியில் விழச் செய்தாள் அம்பிகை. விழுந்த வேகத்தில், சமுத்திரங்கள், தீவுகள், மலைகள், கொண்ட பூமி முழுவதும் ஆடியது. உலகம் துராத்மா வதம் செய்யப் பட்டான் என்று அறிந்து பிரஸன்னமாகியது. தன் இயல்பான நிலைக்குத் திரும்பியது. மேகங்கள் விழுந்து, கெட்ட சகுனங்களான அக்னி பொறிகள் முதலியவற்றால் கலங்கியிருந்த வானம் நிர்மலமாக ஆயிற்று. நதிகள், சமுத்திரம் முதலியவை இயல்பாக ஆயின. தேவ கணங்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கந்தர்வர்கள் மெல்ல பாடலாயினர். அப்ஸர கணங்கள் நடனமாடின. மற்றவர்கள் வாத்யங்களை இசைத்தனர். காற்று புனிதமாக வீசியது. திவாகரனின் ஒளி சுத்தமாக இருந்தது. அக்னிகள் சாந்தமாக ஜொலித்தன. திக்குகளiல் எழுந்த நாதமும் சாந்தமாக ஆயின.