அத்யாயம் – 12
அத்யாயம் – 12
த்யானம் – மின்னல் போன்ற ஒளiயுடையவள், ம்ருக ராஜாவான சிங்கத்தின் மேல் விளங்குபவள், பயங்கரமானவள். கன்யா, கரவால, கேட, இவைகளை கையிலேந்தி பாதுகாவலாக நிற்பவள். கைகளில் சக்ர, க3தை, அஸி, கத்தி, கே2ட, விசிகம், வில், நாண், அம்பு, தர்ஜனீம், என்ற ஆயுதங்களை, இவைகளுடன் அக்னி ரூபமாக சந்திரனையும் தரித்தவளான, துர்கையை, முக்கண்ணாளை வணங்குகிறேன்.
தேவி சொன்னாள். இது போன்ற ஸ்தோத்திரங்களால், என்னை நித்யம் எவர், ஒருமைப்பாட்டுடன் துதிக்கிறார்களோ, அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தையும் நாசம் செய்வேன். சந்தேகமேயில்லை.
மது கைடபர்களை நாசம் செய்தது, மகிஷாசுரனை வதைத்தது, சும்ப நிசும்ப வதம், இவைகளை புகழ்ந்து பாடப் போகிறார்கள். அஷ்டமியிலோ, சதுர்தசியிலோ, உத்தமமான என் மாகாத்ம்யத்தை, மனம் ஒருமைப் பட்டு யார் பக்தியுடன் கேட்கிறார்களோ, அவர்களுக்கு துஷ்க்ருதம் என்று எதுவும் இல்லை. துஷ்கர்மாவினால் வரும் ஆபத்தும் வராது. அவர்களுக்கு தரித்திரம் வராது. இஷ்ட ஜனங்கள் பிரிவு கிடையாது. சத்ருக்களிடம் பயம் கிடையாது. திருடனிடமோ, ராஜாவிடமோ பயம் கிடையாது. சஸ்திரங்கள், நெருப்பு, தண்ணீரில் மூழ்குதல், போன்றவை எப்பொழுதும் நடக்காது. அதனால் இந்த என்னுடைய மாகாத்ம்யத்தை, படியுங்கள். மனம் ஒன்றி படியுங்கள். பக்தியுடன் கேளுங்கள். அதுவே நன்மை பயக்கும். மகாமாரி தோன்றுவதால் ஏற்படும் உபாதைகள் அனைத்தையும், அது தவிர, பலவிதமான இயற்கை சீற்றங்களையும் என் மாகாத்ம்யம் அடங்கச் செய்து விடும். எந்த வீடுகளiல் நித்யம் இந்த மாகாத்ம்யம் கவனமாக படிக்கப் படுகிறதோ, அங்கு என் சாந்நித்யம் நிச்சயம் இருக்கும். எப்பொழுதும் இருக்கும்படி செய்வேன். பலி கொடுக்கும் பொழுது, பூஜைகளில், அக்னி காரியங்களில், மகா உத்ஸவங்களில், எல்லா இடங்களிலும் என் சரித்திரத்தை உச்சரித்தும், மற்றவர்களை கேட்கச் செய்தும் வர வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ, பலி, பூஜைகளை இப்படி செய்து விட்டாலும், அக்னி ஹோமம் செய்வதை எதிர்நோக்கி இருப்பேன். சரத்காலத்தில், வருஷாந்திர மகா பூஜை செய்யப்படுகிறதே, அதில் என்னுடைய இந்த மகாத்ம்யத்தைக் கேட்டு, பக்தியுடன் வணங்குபவர்கள் என் தயையினால், எல்லா விதமான துன்பங்களிலிருந்தும் விடு பட்டவர்களாக, த4ன, தா3ன்ய, புத்ரன் முதலானோர்களுடன் மனிதர்கள் சொக்யமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ப்ராம்மணர்கள் பூஜித்தால் நல்ல மதியைத் தருவேன். காடுகளிலோ, வனாந்தரங்களிலோ, காட்டுத்தீ சூழ்ந்தாலோ, திருடர்கள் சூழ்ந்தாலோ, சூன்யமான இடத்தில், சத்ருக்கள் பிடித்துக் கொண்டாலோ, சிங்கம், புலி, போன்றவை காட்டில் தாக்கினாலும், காட்டு யானைகள் தாக்கினாலும், அரசன், கோபித்து வதம் செய்ய ஆணையிட்டாலோ, சிறை செல்ல நேர்ந்தாலும், காற்றும் மழையும் வருத்தினாலும், பெரும் கடலில் கப்பலில் அலை பாய்ந்தாலும், கீழே விழுந்தாலும், மிக பயங்கரமான யுத்தத்தில், சஸ்திரங்களால் அடிபட்டாலும், எந்த விதமான துன்பமானாலும் மன வேதனை வாட்டினாலும் என் இந்த சரித்திரத்தை நினைத்தாலே மனிதர்கள் சங்கடத்திலிருந்து விடு படுவார்கள். என் பிரபாவத்தால், சிங்கம் முதலியவை, திருடர்கள், வைரிகள், இந்த என் சரித்திரத்தைக் கேட்டு, அப்படி ஸ்மரிப்பவர்களை வருத்தாமல், வெகு தூரத்திலிருந்தே ஓட்டம் பிடிப்பார்கள்.
ரிஷி சொன்னார் – சண்டிகா இவ்வாறு சொல்லி விட்டு, தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மறைந்து விட்டாள். சண்ட விக்ரமா – அரிதான செயல் திறம் உடையவள், இந்த தேவி. தேவர்கள், முன் போல் தங்கள் உரிமைகள் கிடைக்கப் பெற்று, இனி யக்ஞ பாகமும் நமக்கே என்ற திருப்தியோடு, மன மகிழ்ச்சியுடன் சென்றார்கள். எதிரிகள் என்று வந்தவர்கள் யாரும் இப்பொழுது இல்லையே. தேவ விரோதிகளான சும்பனும், நிசும்பனும், தேவி கையால் யுத்தத்தில் அடி பட்டதால், பாதாளம் சென்றனர். உக்ரமான, ஒப்புவமை இல்லாத விக்ரமம் உடைய தேவியின் எதிரில் நின்று போரிட்டுத் தோற்றாலும் அழியாமல் பாதாளம் சென்றனர். உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லமை வாய்ந்த தேவியின் மகிமை இது. இவ்வாறு பகவதியான தேவி, திரும்பத் திரும்ப நித்யாவாக ஜகத்தை பரிபாலிக்கிறாள். அவள் தான் இந்த உலகை மோகத்தில் ஆழ்த்துகிறாள். அவளே உலகை ஸ்ருஷ்டியும் செய்கிறாள். வேண்டுபவர்கள், யாசித்தால், நல்ல ஞானத்தையும் தருகிறாள். ப்ரஸன்னமானால் நிறைந்த செல்வத்தைத் தருகிறாள். அவள் தான் உலகத்தை வியாபித்து நிற்கிறாள். ப்ரும்மாண்டத்தை நிறைத்து இருப்பவளும் அவள் தான். அரசனே, மகா காளியினால், மகா காலத்தில், மகா மாரி ஸ்வரூபத்துடன், அவளே சமயங்களில், மகா மாரி, அவளே தான் பிறப்பில்லாதவளாக, ஸ்ருஷ்டித் தொழிலையும் செய்கிறாள், ஜீவன்களின் ஸ்திதி எனும் வாழ்க்கைக்கு அவளே பொறுப்பு. சனாதனியான அவளே சமயங்களில் காலனாகவும் விளங்குவாள்.
அரசர்களின் பவ (நிறைவான நல்ல) ஆட்சி காலத்தில் வீடுகளiல் விருத்தியைத் தரும் லக்ஷ்மியாக இருக்கிறாள். அவளே அபாவ காலத்தில், அலக்ஷ்மியாக விநாசத்திற்கும் காரணமாக இருக்கிறாள். புஷ்பம், தூபம், கந்தம் முதலியவைகளால் பூஜித்து, துதியும் செய்தால், மனம் மகிழ்ந்து, செல்வம், புத்ரர்கள், நல்ல மதி, தர்மத்தில் கதியும், சுபமான மற்ற எல்லா செல்வங்களையும் அருளுவாள்.