பொருளடக்கத்திற்கு தாவுக

அத்யாயம் – 7

பிப்ரவரி 24, 2014

 

அத்யாயம்  – 7

த்யானம் – ரத்ன பீடத்தில்,   தன் வளர்ப்பு கிளியுடன் அது தன் இனிமையான குரலில் ஏதோ சொல்வதை கேட்டபடி, அமர்ந்து இருக்கிறாள் தேவி. ஸ்யாமளமான வர்ணம். தாமரை மலரில் காலை வைத்திருக்கிறாள். பிறை சந்திரனை தலையில் சூடியிருக்கிறாள். வல்லகி என்ற வீணையை வாசித்தபடி, வெண் தாமரை மலர்களால் ஆன ஹாரம் அலங்கரிக்க, சிவந்த வஸ்திரங்களையும், அழகாக அமைந்த ஆடைகளை (சோளி) அணிந்தவளான மாதங்கியை, சங்க பாத்திரத்தில் மதுரமான மதுவை வைத்து குடிப்பதால்,  மதுவின் மயக்கத்தில் இருப்பவளும், வேலைப்பாடமைந்த ஆசனத்தில் இருப்பவளாக, தியானம் செய்கிறேன்.

ரிஷி சொல்கிறார். சண்ட, முண்டர்களுடன் வந்த வீரர்களுக்கு கடுமையான ஆணை பிறந்தது. சதுரங்க பலத்துடன், உயர்த்தி பிடித்த ஆயுதங்களுடன் நெருங்கி வந்தனர். மெய் சிலிர்க்க தேவியைக் கண்டனர். கண்களை கூசச் செய்யும் தங்க மயமான மலைச் சிகரம். அதில் தன் வாகனமான சிங்கத்தில் அமர்ந்தவளாக, அந்த பிரதேசம் முழுவதும் பரவி அவளாகவே நிற்பவளைக் கண்டனர். அருகில் போகத் தானே வேண்டும் என்று பெரும் பிரயாசையுடன் முன்னேறி வந்தனர். அருகில் போனவர்கள், அவள் கையில் இருந்த வில், அம்பு, வாளை வைக்கும் உரைகள், இவைகளாலேயே கவரப்பட்டனர். திடுமென இப்படி வந்த எதிரிகளைப் பார்த்து, தேவி, அம்பிகா பெரும் கோபம் கொண்டாள். கோபத்தில் அவள் முகம் மை போல் ஆயிற்று. அவளுடைய புருவ நெரிசலில், நெற்றியிலிருந்து, பரபரப்பாக, கருமையான வதனத்துடன், பயங்கரமான காளி வெளி வந்தாள். அவள் கையிலும் வாள், பாசம். விசித்திரமான வாள். அதை உடலில் ஆபரணமாக மாட்டிக் கொண்டிருந்தாள். மனித தலையால் ஆன கபால மாலை வேறு. அலங்காரமாக த்3வீபி (யானை) தோலால் ஆன உடையை அணிந்து,  ரத்தத்தை உறையச் செய்யும் பயங்கரமான – பைரவியாக, விசாலமான முகம், நீண்டு தொங்கிய நாக்கு பயத்தை தந்தது. கண்கள் செக்கச் சிவக்க, எக்காளம் இட்டு ஓங்கி உரைத்தது, நாலு திக்குகளiலும் எதிரொலித்தது. வேகமாக குதித்து வந்தாள். அந்த வேகத்திலேயே மகா அசுரர்கள் என்று பெயர் பெற்ற அசுர வீரர்கள் அழிந்தனர். தேவ விரோதிகளான அவர்களுடைய சைன்யத்தை விழுங்கி விட்டது அவளுடைய படைகள். சிலருடைய கையில், பார்ஷ்ணீ என்ற ஆயுதம். சிலர் கையில் அங்குசம். பெரிய மணிகளை யுத்த களத்தில் பயன் படுத்த தயாராக உள்ளவர்கள் சேர்ந்து ஒரு முகமாக, யானைகளை அடித்துத் தீர்த்தனர். அதே போல யோத்3தா4 என்ற குதிரை வீரர்களை குதிரையுடன், ரதத்தில் வந்தவர்களை சாரதியுடன் கூட, வாயில் போட்டு பற்களால் கடித்து காணவே பயங்கரமாக தின்று தீர்த்தனர். ஒருவன் தலை கேசத்தை பிடித்து, மற்றவனை கழுத்தில் கை வைத்தும், மூன்றாமவனை பாதங்களால் உதைத்தும், ஒருவரோடொருவர் முட்டச் செய்தும், போரிட்டனர். அவர்கள் கைகளிலிருந்து விழுந்த சஸ்திரங்கள், மகா அஸ்திரங்களை எடுத்துக் கொண்டு, அசுரத் தலைவர்களைத் தாக்கினர். அசுர படை, பொறுக்கி எடுத்த வீரர்கள் கொண்டது, எதிர்த்து நிற்க முடியாமல் தவித்தது.  மீதி இருந்த வீரர்களை நையப் புடைத்தனர். வாளினால் ஒரு சிலர் காயமடைந்து விழுந்தனர் என்றால் ஒரு சிலர் வாளால் அடிக்கப் பட்டனர். அசுரர்கள் ஒட்டு மொத்தமாக நாசம் அடைந்தனர். பெரும் பாலோர், பற்களால் கடிபட்டு சித்ரவதை அடைந்த அசுரர்களின் படை க்ஷண நேரத்தில் வீழ்ந்தது. அதைப் பார்த்து சண்டன் ஓடி வந்தான். பயங்கரமான தோற்றத்துடன் நின்ற காளியின் மேல் தன் கை வில்லில் பாணங்களை கோர்த்து மழையாக பொழிந்தான்.  மகா அசுரன் தான். ஆனால் யுத்த பூமியில் கண்கள் சிவக்க நின்றவளும் சாமான்யமானவள் இல்லையே. அவளை சக்ரங்களால் மூடி மறைப்பது  போல நிரப்பினான். கீழே விழுந்த ஆயிரக்கணக்கான சக்ரங்களால் அவளுடைய முகம் மறைந்ததைக் காண, நீர் நிறைந்த கார் மேகத்தை, சூரியனுடைய பிம்பங்கள் சூழ்ந்து மறைப்பது போல இருந்தது.    அந்த சமயம் அட்டகாசமாக சிரித்த காளி, பைரவ நாதினீ – (பயங்கரமாக நாதம் செய்தவள்) என்றே பெயர் பெற்றாள். அவள் வாயைத் திறந்த பொழுது உள்ளேயிருந்த பற்கள் பளீரென ஒளி வீசியது. சண்டனைத் துரத்தியபடி, ஓங்கிய வாளுடன் சென்றவள், அவன் கேசத்தைப் பிடித்து நிறுத்தி வாளினால் தலையைத் துண்டித்தாள். சண்டன் விழுந்ததைப் பார்த்து, முண்டன் ஓடி வந்தான். அவனையும் அதே வாளால் வீழ்த்தி பூமியில் விழச் செய்தாள். மீதியிருந்த சைன்யம், சண்டன் விழுந்ததையும் பின்னாலேயே முண்டனும் வந்து அடிபட்டு விழ, பயந்து ஓட்டம் பிடித்தது. காளி, அந்த சண்ட, முண்ட என்ற இருவரின் தலைகளையும் எடுத்துக் கொண்டு சண்டிகா தேவியிடம் வந்தாள். பெரும் பசுக்களாக இருந்த சண்ட முண்டர்களை இன்று அழித்து விட்டேன். யுத்த யக்ஞத்தில் சும்ப நிசும்பர்களை நீயே கொல்வாய் என்றாள்.

ரிஷி சொன்னார். காளி, மகா அசுரர்களான சண்ட முண்டர்களiன் தலையைக் கொய்து கொண்டு வந்ததைப் பார்த்து, பாராட்டி மென்மையாக வாழ்த்தினாள், சண்டிகா தேவி. சண்டனையும், முண்டனையும் கொண்டு வந்து என்னிடம் சமர்ப்பித்தாயே, அதனால், உலகில் சாமுண்டா என்று பெரும் புகழ் பெறுவாய் என்றாள்.

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக