பொருளடக்கத்திற்கு தாவுக

அத்யாயம் – 8

பிப்ரவரி 24, 2014

 

த்யானம் – அருண வர்ணத்தினாள், கருணைத் ததும்பும் கண்கள், கைகளில் பாசம், அங்குசம், பாணம், வில் முதலியவைகளோடு, அணிமாதி சக்திகள் சூழ நிற்பவளான ப4வானியை போற்றுகிறேன்.

ரிஷி சொன்னார்

சண்டனும் அழிந்தான். முண்டனும் வீழ்ந்தான்.  மிகப் பெரிய சைன்யம்  என்று பெருமிதத்துடன் வந்த அசுரேஸ்வரன் ஒடுக்கப்பட்டான். சும்பன் தன் கோபத்தை அடக்க மாட்டாமல் தவித்தான். பிரதாப மிக்கவன், தோற்று அறியாதவன், கோபம் கண்களை மறைத்தது. தன் வீரர்களை அழைத்துக் கட்டளையிட்டான். 68 ஆயிரம் வீரர்கள் கொண்ட நம் படை புறப்படட்டும். எண்ணற்ற வீரர்கள், அசுர குலங்கள், தூம்ரனுடையவை கிளம்பட்டும். காலகா என்பவர்கள், தௌர்ஹ்ருதா என்பவர்கள்,  மௌர்யா என்பவர்கள், காளகேயர்கள், அசுரர்கள், யுத்தம் செய்ய தயாராக வரட்டும். இப்படி கட்டளைகளை பிறப்பித்து விட்டு அசுரத் தலைவன் தானும் படையோடு கிளம்பினான். பயங்கரமான வீர சேனையோடு அவன் வருவதை தேவி பார்த்தாள். தானும் ஜய கோஷம் செய்தாள். வானத்தையும் பூமியையும் இணைத்து,  நாதத்தாலேயே நிரப்பியது போல அந்த ஜய கோஷம் ஓங்கி கேட்டது. கூடவே சிங்கமும் கர்ஜித்தது. அம்பிகையின் மணி சத்தமும் உடன் கேட்டது. வில்லை விரல்களால் மீட்டிய சப்தம்,  இனிமையாக திக்கெல்லாம் நிறைத்தது. தன் பெரிய வாயைத் திறந்தபடி காளியும் வந்தாள், பயங்கரமாக கத்தியபடி. இந்த சத்தங்களைக் கேட்டே அசுர சைன்யம் நாலா புறமும் சூழ்ந்தது போல உணர்ந்தார்கள். தேவி, சிங்கம், காளி, யுத்தம் செய்ய ஆவலுடன் பரிவாரங்கள். அரசனே, இதற்கிடையில் தேவ விரோதிகளின் அழிவுக்கு என்றே வந்தது போல விதி (ப்ரம்மா) – அமர – தேவர்களில் அதி வீர்ய பலம் உடைவர்களின், ப்ரம்மாவின், குஹனுடைய, விஷ்ணுவுடைய, மற்ற இந்திரன் முதலானோர் சக்திகள் அவர்கள் சரீரத்திலிருந்து வெளி வந்து, சண்டிகாவை வந்து அடைந்தன. எந்த தேவதையின் ரூபம் எப்படியோ, என்ன பூஷணம், வாகனமோ, அதே போல அந்த சக்திகள், அசுரர்களுடன் மோத தயாராக வந்து விட்டன. ஹம்ஸம் பூட்டிய விமானத்தின் மேல், அக்ஷ சூத்ரமும் கமண்டலுவுமாக, ப்ரும்மாவின் சக்தி வந்தாள், ப்ரம்மாணீ என்ற பெயருடன். மாகேஸ்வரி ரிஷப வாகனத்தில், உயர்ந்த  திரிசூலத்துடன், பெரும் நாகங்கள் உடலைச் சுற்றி நிற்க, பிறை சந்திரன் அலங்கரிக்க, வந்தாள். குஹ ரூபிணியாக கௌமாரி, சக்தியை கையில் ஏந்தி, மயில் வாகனத்தில், போர் செய்ய தயாராக வந்தாள். அதே போல் வைஷ்ணவி, கருடன் பேரில், சங்க2, சக்ர, க3தா4, சார்ங்க4, க2ட்க3 ஹஸ்தாவாக வந்து சேர்ந்தாள். ஹரியினுடைய யக்ஞ வாராஹ ரூபத்தை ஏற்று, ஒப்பில்லாத வராஹ ரூபத்தோடு, வாராஹி என்ற சக்தி வந்து சேர்ந்தாள். நாரசிம்ஹியாக, ந்ருசிம்ஹனுக்கு சமமான உடலுடன் வந்தவள் தன் அட்டகாச சிரிப்பால், நக்ஷத்திர கூட்டமே ஆகாயத்திலிருந்து கீழே விழுந்து விடுமோ எனும் படி இருந்தாள். ஐந்த்ரி,  இந்திரனுடைய வஜ்ரத்தை ஏந்தியவளாக, யானை மேல் ஏறி வந்தாள், நூறு கண்களுடன் இந்திரன் போலவே இருந்தாள். ஈசானன் தேவ சக்தி சூழ, சீக்கிரம் இந்த அசுர கூட்டத்தை அழிக்கலாம் என்று சண்டிகையிடம் சொன்னார். இப்படி தேவ சரீரங்களிலிருந்து, வெளி வந்த சக்திகளுடன் சண்டிகா தேவி அதி உக்ரமாக, சிவா என்ற உருவில் வந்தவள்,  அபராஜிதா – தோல்வியே அறியாத மகா சக்தியாக நின்றாள்.  பின், தூ4ம்ர ஜடிலன் என்ற தூதனிடம் சொன்னாள். தானவர்கள் அளவுக்கதிகமான கர்வத்துடன் வளைய வருகிறார்கள். இவனுடன் மற்ற தைத்யர்களும் போரிட என்று வந்து நிற்கின்றனர்.  ஹே தூதனே, நீ போய்  சும்ப நிசும்பர்களிடம் இந்த செய்தியைச் சொல். மூவுலகையும் இந்திரனிடம் ஒப்படைத்து விடு. தேவர்கள் நிர்பயமாக வாழட்டும். நீங்கள் உங்கள் இருப்பிடமான பாதாளம் போங்கள். உயிருடன் வாழ விரும்பினால் இது தான் வழி. உடல் பலம் இருப்பதால் கர்வம் கொண்டு நீங்கள் யுத்தப் பிரியர்களாக வந்தால் வாருங்கள். என் படையினர் திருப்தியடையட்டும். சிவ பெருமானின்  சக்தியே தான்,  தேவியால் நியமிக்கப்பட்டவளாக தானே  தூது செல்ல கிளம்பியதால் சிவ தூதி என்றே உலகில் போற்றப் படுகிறாள்.

மகா அசுரன், தேவியின் செய்தியை சிவ சக்தி சொல்லக் கேட்டான். கோபம் தான் பொங்கி வந்தது. வேகமாக காத்யாயனி இருக்கும் இடம் வந்தான். அதற்கு முன்பே அவன் படை வீரர்கள், தேவியின் மேல் படையெடுத்து, சரங்கள்,  சக்தி, இஷ்டி, வ்ருஷ்டி இவைகளுடன் வந்து, தேவியைத் தாக்கினர்.  யுத்தப் பிரியர்கள் அசுரர்கள் என்பது தெரிந்தது தானே. அப்படி மேலே வந்து விழுந்த பாணங்களை, சூலம், சக்தி, பரஸ்வதங்களை விளையாட்டாகவே உடைத்து எறிந்தாள் தேவி. தேவியின் படையின் முன்னால் நின்றாள் காளி.  சூலங்கள் பட்டு வருந்தியவர்களை மேலும் உடலோடு ஒட்டியிருந்த வாளுடன் அடித்து ஓட ஓட விரட்டினாள். சுற்றி சுற்றி வந்தாள். கமண்டலு தண்ணீரை அவர்கள் மேல் வீசி, அவர்கள் தேஜஸ், வீர்யம் இழக்கச் செய்தாள். ஓடுகிறவர்களை ப்ராம்மணீ அவர்களின்  ஓஜஸ் என்ற சக்தியைப் பறித்தாள். மாகேஸ்வரி திரிசூலத்தால், வைஷ்ணவி சக்ரத்தால், கௌமாரி சக்தியினால், தைத்யர்களை வதைத்தனர். ஐந்த்ரி குலிசத்தை வீசி நூற்றுக் கணக்கான தைத்ய தானவர்களை, நிலை குலைய செய்து வீழ்த்தினாள். அவர்கள் ரத்தம் பெருக பூமியில் கிடந்தனர். துண்டம் என்ற ஆயுதத்தால் அடிபட்டு விழுந்தவர்கள், சக்ரத்தால் தாக்கப் பட்டவர்கள், நகங்களால் கிழி பட்டவர்கள் போக மீதி உள்ளவர்களை நாரசிம்ஹி என்ற சக்தி விழுங்கி விட்டாள். தன் அட்டகாச குரலால், திக்குகளை எல்லாம் நடுங்கச் செய்தபடி, யுத்த பூமியில் சஞ்சரித்தாள். இப்படி மாத்ரு கணம் (தேவர்களiன் சக்தி) கோபத்துடன் மகா அசுரர்களை தடுமாறச் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து, தேவ விரோதிகள் வேறு விதமான யுக்திகளை கையாண்டார்கள். ரக்த பீஜன் என்ற மகா அசுரன் வந்தான். மாத்ரு கணங்களின் தாக்குதலால் சிதறிப் போன சேனையை ஒன்று கூட்டி, போரைத் தொடர்ந்தான்.  இவனுடைய சரீரத்திலிருந்து ஒரு துளி ரத்தம் பூமியில் விழுந்தாலும் அதிலிருந்து அவனைப் போலவே உடலும், பலமும் கொண்ட வீரர்கள் புதிதாக முளைத்தனர். இவனைப் போலவே கையில் க3தை, இவர்கள் சேர்ந்து இந்திர சக்தியை எதிர்த்தனர். ஐந்த்ரீ தன் வஜ்ரத்தால் ரக்த பீஜனை அடித்தாள்.  அவனுடைய உடலிலிருந்து ரத்தம் ஆறாக பெருகி ஓடியது. அந்த ரத்த துளிகளில் இருந்து போர் வீரர்கள், அவனுடைய ரூபம், பராக்ரமம் இவற்றோடு, வந்தனர். ரத்தம் கீழே விழ விழ ஒவ்வொரு துளியிலும், ரக்தபீஜனைப் போன்ற வீரர்கள், போர்களத்தில் நிறைந்தனர். மாத்ருக்களுக்கு சமமாக உக்ரமான ஆயுதங்களை பலவிதமாக வீசினர். திரும்பவும் வஜ்ரத்தால் அடிபட்டு ரக்த பீஜனின் தலை கீழே விழுந்தது. அதிலிருந்தும் ரத்தம் பெருகவும் ஆயிரக் கணக்கான அசுர உருவங்கள் தோன்றின. உடனே வைஷ்ணவி தன் சக்ரத்தால் அவர்களை அடித்தாள். ஐந்த்ரீ கதையைக் கொண்டு அவர்களை அடித்தாள். வைஷ்ணவியின் சக்ரத்தால்  பின்னமான சரீரங்கள்  ஆயிரக் கணக்காக பூமியை நிறைத்தன. ஒவ்வொரு உருவமும், ரக்த பீஜனைப் போலவே, உடல் அமைப்பில், அதே அளவு பலம் என்று  கணக்கில்லா சரீரத்துடன் அந்த ஒரு அசுரனே கதையால் தனித் தனியாக தேவர்களை அடித்தான்.

ரக்த பீஜனை அடித்தாலோ, சக்தியாலோ, சூலத்தாலோ அடித்து பூமியில் தள்ளினாலும், அவன் ரத்த துளி விழுந்த இடத்தில் எல்லாம் புதிதாக நூற்றுக் கணக்கான அசுரர்கள் எழுந்து நின்றனர். இப்படித் தோன்றியவர்களே உலகம் முழுவதும் நிறைந்தது. இதைக் கண்டு மன சோர்வும், பயமும், தேவர்களை ஆட்கொண்டன.  இதைப் பார்த்த தேவி, சண்டிகா, காளியைப் பார்த்துச் சொன்னாள். சாமுண்டே, உன் வாயைத் திற. முடிந்த அளவு பெரிதாக்கிக் கொள். என் ஆயுதத்தால் நான் ரக்த பீஜனை அடித்து, அவன் ரத்தம் பூமியில் விழுமுன் நீ குடித்து விடு. அவன் உண்டாக்கிய வீரர்களை விழுங்கிக் கொண்டே வா. அப்பொழுது தான் இவன் உடலில் ரத்தம் தீரும்.  உன்னால் தின்று தீர்க்கப் பட்டவர்கள், திரும்ப உயிர் பெற முடியாது. இப்படி சொல்லி விட்டு தேவி, சூலத்தால் அவனை அடித்தாள். காளி தன் வாயால் அவன் ரத்தம் கீழே சிந்தாமல் ஏந்திக் கொண்டு விட்டாள். அவனும் தன் கை க3தையால், சண்டிகாவை அடித்தான். அந்த அடி அம்பிகைக்கு எந்த ஹானியையும் செய்யவில்லை. அடி பட்ட வேதனை கூட இல்லை. தேவி அடிக்க அடிக்க, அசுரனின் உடலில் ரத்தம் பெருக பெருக, காளி அவை கீழே சிந்த விடாமல், தன் வாயினுள் போகும் படி செய்து விட்டாள். இப்படி ரத்தம் முழுவதும் இறைத்த பிறகு, சூலத்தாலும், வஜ்ரத்தாலும் அடித்து, ரக்த பீஜனை, பாணங்களாலும், வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களாலும் வதைத்தாள். ஏற்கனவே சாமுண்டா அவன் ரத்தம் முழுவதையும் இறைத்து விட்டாளே. ஆகவே அவன் மாண்டு பூமியில் விழுந்தான். தேவர்கள் அசுரன் அழிந்ததைக் கண்டு மகிழ்ந்தனர். ஆடிப் பாடிக் கொண்டாடினர். அவர்கள் மாத்ரு கணங்கள்  வெற்றி பெற்றதால் மகிழ்ந்தனர்.

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக