பொருளடக்கத்திற்கு தாவுக

அத்யாயம் – 9

பிப்ரவரி 24, 2014

 

 த்யானம் –  ப3ந்தூ4க காஞ்சனம் போன்றவள், அழகிய அக்ஷ மாலை, பாசம், இரண்டு அங்குசங்கள் தரித்தவள், வரம் தருபவளாக, தன் புஜங்களே தண்டமாக,  ஈசனின் பாதி பாகமாக, மூன்று கண்களுடன், பிறை சந்திரனைச் சூடியவளாக, உள்ள தேவியை வணங்குகிறேன்.

அரசன் சொன்னான் – பகவன்!  இந்த கதையே விசித்ரமாக இருக்கிறது. ரக்த பீஜ வதம் பற்றிய தேவியின் சரித்திரத்தை விவரமாக சொன்னீர்கள். மேலும் கேட்க விரும்புகிறேன். ரக்த பீஜன் இறந்த பிறகு சும்பன் என்ன செய்தான் ? இருவரும் மகா கோபம் கொண்டிருப்பார்களே.

ரிஷி சொன்னார். ஆமாம். ரக்த பீஜன் இறந்தான் என்று கேட்டு சும்பனும் நிசம்பனும் மிக்க கோபம் அடைந்தனர். அவனோடு ஏராளமான அசுர வீர்ர்களும் மாண்டனரே. தங்கள் சைன்யம் கண் முன்னாலே அழிந்ததைக் கண்டு எதுவும் செய்ய முடியாமல் இருப்பதா? அதனால் கோபம் பன் மடங்காயிற்று. நிசும்பன் தன் படையுடன் ஓடினான். தேவியை அழித்து விட்டுத் தான் மறு வேலை என்பது போல, பல்லைக் கடித்தபடி, அவள் முன்னால், பின்னால், பக்கங்களில், அசுரர்கள் சூழ்ந்து கொண்டனர். தேவியை மற்ற மாத்ரு கணங்களுடன் கொல்வதே ஒரே குறியாக வந்து சேர்ந்தான். அதன் பின் தேவிக்கும், சும்ப நிசம்பர்களுக்கும் கடுமையான போர் மூண்டது. மேகத்திலிருந்து மழை பொழிவதைப் போல இரு தரப்பிலும் அஸ்திரங்கள், ஆயுதங்கள் விழுந்தன. அசுரனுடைய ஆயுதங்களை சண்டிகா தன் கை அம்பினால் தடுத்தாள். அவள் உடலிலேயே அசுரர்கள் இருவரும் அடித்தனர். நிசும்பன் ஒரு கூர்மையான வாளை, சர்ம என்பதையும் எடுத்து, சிங்கத்தின் தலையில் அடித்தான். தேவியின் உத்தமமான வாகனம் அது. அதை தாக்கியதை பொறுக்காத தேவி, க்ஷிப்ரம் என்ற கத்தியைக் கொண்டு நிசும்பனின் சர்மத்தை (கவசம்)கிழித்தாள். அஷ்டசந்த்ர என்ற அந்த கவசம் கிழிபட்டவுடன், கூடவே வாளும் விழவும், அவன் சக்தியை பிரயோகித்தான். அதையும் தன் சக்ரத்தால் தேவி தடுத்தாள். கோபம் தலைக்கேற நிசும்பன் சூலத்தை வீசினான். வேகமாக வந்த சூலத்தை தேவி தன் முஷ்டியாலேயே தவிடு பொடியாக்கினாள். உடனே க3தையை எடுத்து சுழற்றி தேவியின் மேல் வீசினான். அதை தேவி தன் திரிசூலத்தால் எதிர் கொண்டாள். அசுரனின் க3தை பஸ்மமாகி விட்டது. பின் பரசுவை எடுத்துக் கொண்டு வந்த அசுரனை, பாணங்களால் அடித்து கீழே விழச் செய்தாள். பீம பராக்ரமன் – மிகுந்த பலமுடையவன் என்று பெயர் பெற்ற நிசும்பன் பூமியில் விழுந்ததைப் பார்த்த சும்பன் அளவில்லா கோபம் கொண்டான். அம்பிகையை அழித்தே தீருவது என்று ஓடி வந்தான்.

உயரமான ரதத்தில் நின்றபடி பயங்கர ஆயுதங்களுடன், எட்டு புஜங்களோடு வானளாவி நின்றான். அவன் வருவதைப் பார்த்து தேவி, தன் சங்கத்தை ஊதினாள். வில்லின் நாணை விரல்களால் நிமிண்டி நாதம் வரச் செய்தாள். அதுவே தாங்க முடியாத பேரிரைச்சலாக இருந்தது. அது போதாதென்று தேவி தன் மணியையும் அடித்து ஆகாயத்தில் அதன் ஒலி அலைகளே நிரம்பச் செய்தாள். சமஸ்த தைத்ய சேனைகளும் இந்த சத்தங்களைக் கேட்டே தங்கள் தேஜஸை இழந்தவர்கள் போலானார்கள். உடனே சிங்கமும் தன் பங்குக்கு மகா நாதத்தை எழுப்பியது. மதம் கொண்ட யானைகள் கூட நடுங்கின. அதே போல பத்து திக்குகளிலும் எதிரொலிக்க பிளிறியது. காளி முன்னால் வந்து அதேபோல பூமிக்கும் வானத்துக்குமாக கேட்க கை தட்டினாள். இவளின் கை தட்டல் ஒலியில் இதற்கு முன் எழுந்த சத்தங்கள் ஒன்றுமில்லாமல் ஆயிற்று. சிவ தூதி அட்டகாசம் செய்தாள். சிவம் என்றால் மங்களம். அதுவோ தற்சமயம் அசிவமாக இருந்தது.   இந்த சப்தங்களாலேயே அசுரர்கள் வெகுவாக பாதிக்கப் பட்டு வெகுண்டனர். சும்பனின் கோபம் அளவு கடந்தது. அதே சமயம் தேவியும் துராத்மன், நில் நில் என்று கூவினாள். உடனே வானத்திலிருந்து தேவர்கள்  ஜய ஜய என்றனர். சும்பன் பிரயோகித்த சக்தி நெருப்பைக் கக்கி கொண்டு பயங்கரமாக வரும் பொழுதே, அதை மஹா உல்கா என்ற ஆயுதத்தால் அடக்கினாள் தேவி. சும்பன் தானும் சிங்கநாதம் செய்து மூவுலகையும் கலக்கினான். அரசனே! அவனுடைய கோரமான சப்தம் இதுவரை ஜய சப்தமாகத் தானே இருந்து வந்திருக்கிறது. சும்பனின் சரங்களை தேவியும், அவள் திருப்பி அடித்த சரங்களை சும்பனும் மாறி மாறி தடுத்து வீழ்த்தினர். நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக சரங்கள். அதன் பின் சண்டிகா தன் சூலத்தால் அசுரனை அடித்தாள். அடிபட்டவன் மூர்ச்சையாகி  பூமியில் விழுந்தான். உடனே நிசும்பன் வந்து, சரங்களால் போரைத் தொடர்ந்தான். காளியை, சிங்கத்தை அடித்தான்.  அதன் பின் தன் புஜங்களை ஆயிரக் கணக்காக பெருக்கி கொண்டான். திதியின் மகன் தைத்யன் (அசுரன்) தன் சக்ரத்தை எடுத்து, தேவியை பலம் கொண்ட மட்டும் அடித்தான். இதன் பின் மிகக்  கொடிய துன்பங்களையும் தீர்ப்பவளான பகவதி துர்கா, அந்த சக்ரங்களை நொறுக்கினாள். தன் அம்புகளாலும், ஆயுதங்களாலும் அடித்து தூளாக்கினாள். பின் நிசும்பன் க3தையை எடுத்துக் கொண்டு, அசுர படை தொடர வந்தான். அவன் அருகில் வரு முன்னே தன் கூரான வாளினால் அந்த க3தையை முறித்து விட்டாள் தேவி. உடனே அவன் சூலத்தை எடுத்துக் கொண்டான். கையில் சூலத்துடன் ஓடி வரும் அந்த நிசும்பனை மார்பில் படும் படி தன் கை சூலத்தால் ஓங்கி அடித்தாள் தேவி. அவன் சூலம் நொறுங்கியது. அவன் இதயத்திலிருந்து வெளி வந்த ஒரு புருஷ உருவம், அதே போல மகா பலசாலியாக, மகா வீர்யவானாக,  திஷ்ட திஷ்ட நில் நில் என்று கத்தியது. அப்படி வெளி வந்த உருவத்தைப் பார்த்து தேவி பலமாக சிரித்தாள். தன் வாளால் அதன் தலையை வெட்டினாள். அதுவும் பூமியில் விழுந்தது. உடனே சிங்கம் உக்ரமாக கர்ஜித்தது. தன் பற்களால் அசுரர்களை தலை வேறு, உடல் வேறு என்று ஆக்கியது. காளியும் சிவ தூதியும் மீதி இருந்தவர்களை நாசம் செய்ய, கௌமாரியின் கையில் இருந்த சக்தியால் பலர் மாண்டனர். ப்ரும்மாணீ மந்திரம் ஜபித்து தெளித்த நீரினால் சிலர் அழிந்தனர். மாகேஸ்வரியின் திரிசூலத்தால், பின்னமாகி கீழே விழுந்தவர் பலர், வராஹியின் கொம்பினால் அடிபட்டு சிலர் பொடிப் பொடியானார்கள்.   வைஷ்ணவியின் சக்ரத்தால், தானவர்கள் துண்டு துண்டானார்கள். ஐந்த்ரியின் கை வஜ்ரத்தால் பலர் அழிந்தனர். பெரும் காற்றினால் அலைக்கழிக்கப் பட்டு ஒரு சிலர் அழிந்தார்கள். பலர் காளி, சிவதூதி இவர்களால் விழுங்கப்பட்டனர்.

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக