பால காண்டம் 31 to 55
அத்தியாயம் 31 (மிதிலைக்கு புறப்படுதல்)
ஏற்றுக் கொண்ட காரியத்தை முடித்த திருப்தியோடு அன்று இரவு ராம லக்ஷ்மணர்கள், சந்தோஷமாக மனம் நிறைந்தவர்களாக கழித்தனர். விடிந்தவுடன் பர்வ, ஆஹ்னிக காரியங்களை செய்து முடித்தபின், விஸ்வாமித்திரர், மற்ற முனிவர்களுடன் இருக்கும் இடத்திற்குச் சென்று வணங்கிச் சொன்னார்கள். தன் தேக காந்தியால் அக்னியை போன்று விளங்கிய முனிவரிடம், மதுரமாக பேசும் இருவரும் –முனிவரே, இதோ, உங்கள் கிங்கரர்களான நாங்கள் தயாராக இருக்கிறோம். என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள். நாங்கள் செய்கிறோம் எனவும், மகரிஷிகள் விச்வாமித்திரரை முன்னிட்டுக் கொண்டு, சொல்லலானார்கள். மிதிலாதிபதியான ஜனகராஜா, தர்மம் அறிந்தவர். அவர் ஒரு யாகம் செய்கிறார். நாங்கள் எல்லோரும் அங்கு போகப் போகிறோம். மனிதர்களில் சிங்கமான, ராமா, நீயும் எங்களுடன் அந்த யாகத்துக்கு வா. அங்கு அதிசயமான ஒரு வில் இருக்கிறது. அதையும் பார்க்கலாம் வா, என்றனர். சபையில் எல்லோரும் காண, தேவர்கள் அவரிடம் கொடுத்த வில். பிரகாசமாக, பலமுடையதாக, கண்ணால் காணவும் பயங்கரமாக இருக்கும், இந்த வில் ஒரு யாகத்தில் அவருக்கு கிடைத்தது.தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, ராக்ஷஸர்களோ இதில் நாணேற்ற சக்தியுடையவர்கள் இல்லை. மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன். இந்த வில்லின் பெருமையைக் கேட்ட அரசர்கள், அதை சோதித்துப் பார்க்க எண்ணி வந்தவர்கள், யாராலும் நாண் ஏற்ற முடியவில்லை. மகா பலசாலியான அரச குமாரர்களும் தோற்றனர். மிதிலா தேசத்து அரசனுடையஉத்தமமான வில்லை நீ பார்க்க வேண்டும். கூடவே யாகமும் நல்ல முறையில் நடக்கும். மிதிலா அரசனான ஜனகன் ஒரு முறை யாகத்தின் முடிவில் இந்த வில்லை (சுனாப4ம் என்ற பெயருடையது) ப்ரும்மாவிடம் யாசித்தான். மற்ற தேவதைகளோடு பூஜிக்கத் தகுந்த தேவதையாக இந்த வில் அவருடைய இல்லத்தில் இன்றளவும் இருக்கிறது.பலவிதமான வாசனைப் பொருட்கள், தூப தீபங்கள், இவற்றால் அர்ச்சிக்கப்பட்டு, மரியாதையாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு சொல்லி முனி கணங்கள் நாங்கள் கிளம்புகிறோம் என்று சொல்லி கிளம்பினர். முனிவரான விஸ்வாமித்திரரும், ரிஷிகளுடனும், காகுத்ஸர்களுடனும் (ராம, லக்ஷ்மணர்களுடனும்) வன தேவதைகளிடம் விடை பெற்றுக் கொண்டு, சித்தாஸ்ரமமே சித்தி அடைவாயாக. உனக்கு மங்களம் உண்டாகட்டும், நாங்கள் கிளம்புகிறோம் என்று சொல்லி வடக்கு நோக்கி செல்ல ஆரம்பித்தனர். கிளம்பிய முனி ஸ்ரேஷ்டிரரை பின் தொடர்ந்து, ப்ரும்ம வாதியான நூறு சிஷ்யர்களும், மான்களும், பக்ஷிகளின் கூட்டமும் பின் தொடர்ந்தன. மகா முனிவரான விச்வாமித்திரரை சித்தாஸ்ரம வாசிகளான இவையும் தொடர்ந்து வந்தன. முனிவர் அவைகளைத் திருப்பி அனுப்பிவிட்டு, சூரியன் மலை வாயில் விழும் வரை காத்திருந்து, தூரத்தில் அத்வானம் வரை அவைகள் செல்வதை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு முனிவர், சோரை நதிக்கரையில் தங்கினார், சூரியன் மறைந்ததும் ஸ்னானம் செய்து, அக்னியை வணங்கி, எல்லோருமாக அமர்ந்தனர். ராமனும், லக்ஷ்மணனும் விச்வாமித்திரர் முன்னால் வந்து எதிரில் அமர்ந்தனர். மகா தேஜஸ்வியான ராமன், விஸ்வாமித்திரரைப் பார்த்து பகவன், இது என்ன ராஜ்யம்? அடர்ந்த வனங்கள் சூழ அமைந்துள்ளதே. இதைப் பற்றிச் சொல்லுங்கள். விரதங்கள் அனுஷ்டித்து, தவ வலிமை மிகுந்த முனிவரும், ராம வாக்யத்தால் தூண்டப்பட்டவராக, ரிஷிகளின் மத்தியில் அந்த தேசத்தின் விசேஷத்தை விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், மிதிலா ப்ரஸ்தானம்என்ற முப்பத்துஒன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 32 குசனாப கன்யா உபாக்யானம் (குச நாபர் மகளின் கதை)
ப்ரும்மாவின் புதல்வர்களுள் ஒருவரான குசன் என்பவர், சிறந்த தபஸ்வியாக இருந்தார். நல்ல ஜனங்கள் அவரை பெரிதும் மதித்தனர். குறைவில்லாத விரத அனுஷ்டானங்கள் செய்து தர்மம் அறிந்தவர் என்று புகழப்பட்டார். நல்ல குலத்தில் தோன்றிய தனக்கு, குணம், ரூபம் இவற்றில் சமமான, விதர்ப தேசத்து பெண்ணிடம் தன்னைப் போலவே நான்கு பிள்ளைகளைப் பெற்றார்.குசாம்பன், குசனாபன், அதூ4ர்த்த ரஜஸ், வசு என்ற நால்வர். நால்வரும் நல்ல புத்திசாலிகளாகவும் உத்சாகம் மிகுந்தவர்களாகவும், உண்மையே பேசுபவர்களாகவும் இருந்தனர். நால்வருமே ராஜ்ய பரிபாலனம் செய்ய விரும்பினர். க்ஷத்திரிய தர்மத்தை விரும்பும் தன் புதல்வர்களைப் பார்த்து குசனும் அனுமதி அளித்தார், ராஜ்ய பாலனம் செய்யுங்கள். தர்மமான வழியில் ஏராளமான புகழ் அடைவீர்கள் என்று வாழ்த்தினார். இதைக் கேட்டு, நால்வரும் ஜனங்களின் சம்மதத்துடன் நகரங்களின் உள்ளே நுழைந்தனர். குசனாபன் மகோதயம் என்ற ஊரையும், வசு என்பவன் கிரிவ்ரஜம் என்ற ஊரையும் நிர்மாணித்தனர். இந்த பூமி வசுவினுடையது. எதிரில் ப்ரகாசமாக தெரிகிற ஐந்து மலைக் குன்றுகள், மாக3தீ3 என்ற நதி,இவை யாவும் பாவனமானவை.நல்ல பூமி, நல்ல விளை நிலம் கொண்டது.முன் காலத்தில் வசுவினால் சமன் படுத்தப்பட்டது.குச நாப4ன் ராஜ ரிஷியாக இருந்தான்.த்4ருதாசீ என்ற பெண்ணிடம் நூறு உத்தமமான பெண்களைப் பெற்றான். நன்கு அலங்கரிக்கப் பட்டவர்களாக, அழகும் யௌவனமும் கூடி, உத்யான பூமிக்குச் சென்று பாடுவதும் ஆடுவதுமாக, வாத்யங்கள் வாசித்தும், நல்ல ஆபரணங்களை விருப்பம் போல அணிந்து மகிழ்ந்தவர்களாகவும் இருந்தனர்.இணையற்ற அழகுடைய அந்த பெண்கள் பூமியில், உத்யானத்தின் மத்தியில், நல்ல இருட்டில் நக்ஷத்திரங்கள் போல பிரகாசித்தனர். நல்ல குணமும், ரூப, யௌவனமும் நிறைந்த இவர்களைப் பார்த்து சர்வாத்மகனான வாயு ஆசைக் கொண்டான். எனக்கு மனைவி ஆகுங்கள் என்று வேண்டினான். நான் உங்களை விரும்புகிறேன். இந்த மனித உடலை விட்டு தெய்வ சரீரம் பெறுவீர்களாக. தீர்காயுள் பெறுவீர்கள். இவ்வாறு தயக்கமின்றி வாயு பேசியதைக் கேட்ட பெண்கள், சிரித்து அலட்சியமாக -சுர ஸ்ரேஷ்டனே, நீ ஜீவ ராசிகளின் உள்ளும் சஞ்சரிப்பவன், உன் ப்ரபாவத்தை நாங்கள் எல்லோருமே அறிவோம். எங்களை ஏன் அவமதிக்கிறாய்? நாங்கள் குசனாபனுடைய பெண்கள். எல்லோருமே சமர்த்தர்கள். தேவர்களில் சிறந்தவனே, உன்னை பதவியிலிருந்து நீக்கவும் எங்களால் முடியும். எங்களுடைய தவ வலிமையை நாங்கள் காத்து வருகிறோம். சத்ய வாதியான தந்தையை அவமதித்து, எங்கள் விருப்பம் போல ஸ்வயம்வரம் செய்து கொள்ளும்படியான கஷ்ட காலம் எங்களுக்கு வரவே வேண்டாம். இதை நாங்கள் விரும்பவும் மாட்டோம்.இது எங்கள் தர்மமும் அல்ல. தந்தை தான் எங்களுக்கு குரு, தெய்வம், பரம், எங்களுக்கு. அவர் யாருக்கு எங்களைத் தருகிறாரோ, அவர் தான் எங்களுக்குப் பதியாவார்.- இவ்வாறு இவர்கள் பேசியதைக் கேட்ட வாயு அடங்கா கோபம் கொண்டான். அவர்கள் எல்லோருடைய சரீரத்திலும் புகுந்து வளைத்து விட்டான். இந்த கன்னிகள் வாயுவினால் வளைக்கப் பட்ட சரீரத்துடன் அரச மாளிகையினுள் சென்றனர். வெட்கம் பிடுங்கித் திங்க, கண்ணீர் நிரம்பிய கண்களுடன், பூமியில் விழுந்து புரண்ட அந்த பெண்கள், தீனர்களாக, அழகிய சரீரம் பலவிதமாக கோணலாக தெரியக் கண்ட ராஜா பர பரப்படைந்து ஏன் இப்படி ஆயிற்று என்று பெண்களைக் கேட்டான். யார் அது தர்மத்தை அவமதிக்கிறவன்? கூனிகளாக உங்களை ஆக்கியவன் யார்? எல்லோரும் நடுங்கிக் கொண்டு பேசாமல் இருக்கிறீர்களே? யார் இந்த கீழ்த் தரமான காரியத்தை செய்தவன், நான் தெரிந்து கொள்ள வேண்டாமா? சொல்லுங்கள் என்ற ராஜா மிக்க வருத்தத்துடன் வாயடைத்து நின்றான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், குசனாப கன்யோபாக்யானம் என்ற முப்பத்திரண்டாவது அத்தியாயம்)
அத்தியாயம் 33 விஸ்வாமித்திர வம்ச வர்ணனை
புத்திமானான குசனாபன் இவ்வாறு வருந்துவதைக் கண்டு அவர் கால்களில் வீழ்ந்து வணங்கி எழுந்த பெண்கள் நடந்ததை விவரித்தனர்.சர்வாத்மகனான வாயு எங்களை மணந்து கொள்ள வந்தான். நிர்பந்தித்தான், அதர்மம் இது. எங்கள் தந்தை இருக்கையில் நாங்களாக தன்னிச்சையாக எதுவும் செய்ய மாட்டோம், என் தந்தையிடம் கேட்டுப் பார், அவர் சம்மதித்து தந்தால் சரி, என்று சொன்னோம்.எங்கள் வார்த்தையை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் கூனியாக ஆக்கி விட்டான், பாபி, என்று சொல்லி அழுதனர்.பரம தார்மிகனான ராஜா அந்த நூறு பெண்களையும் சமாதானப் படுத்தி பொறுமையாக இருங்கள் புத்திரிகளே தற்சமயம் அது தான் செய்யக் கூடியது. நீங்கள் செய்தது மிகப்பெரிய காரியம்.குலத்தின் பெருமையை மனதில் கொண்டு, ஒரே குரலாக வாயுவிடம் எதிர்த்து போராடியிருக்கிறீர்கள்.பெண்ணானலும் சரி, ஆணானாலும் சரி, பொறுமை தான் மிகச் சிறந்த குணம்.பொறுமையே தானம், பொறுமையே சத்யம்.பொறுமையே யாகமும் ஆகும்.என் புத்திரிகளே, பொறுமையே புகழ்தர்மம். உலகத்தை நிலைத்து நிற்க வைப்பதும் இந்த பொறுமைதான்.இப்படி சொல்லி சமாதானம் செய்து விட்டு அரச சபைக்குச் சென்ற அரசன், தன் மந்திரிகளுடன் கலந்து பேசி என்ன செய்வது என்று யோசித்தான். இந்த கால தேச, வர்த்தமானங்களைக் கொண்டு மெற் கொண்டு என்ன செய்வது என்பதை யோசித்துச் சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டான்.அந்த சமயம் சூலி என்ற முனிவர் உக்ரமாக ப்ரும்ம தவம் செய்து கொண்டிருந்தார்.நியமம் தவறாமல் தவம் செய்து கொண்டிருந்த இவரிடம் ஒரு கந்தர்வ ஸ்திரீ வந்து சேர்ந்தாள்.ஊர்மிளையின் பெண் சோமதா என்பவள் தான் அந்த பெண். அவரை வணங்கி பணிவிடைகள் செய்து கொண்டு வந்தாள்.முனிவரும் அவளிடம் மகிழ்ந்து ஒரு நாள். அவளிடம் -பெண்ணே| உன் பணிவிடையால் திருப்தி அடைந்தேன். உனக்கு என்ன வேண்டும் சொல், என்று கேட்க, அவள், சாமர்த்யமாக, தெளிவான வார்த்தைகளில் தன் விருப்பத்தை தெரிவித்தாள். -முனிவரே| ப்ரும்ம தேஜசுடன் கூடிய புத்திரனைவிரும்புகிறேன். எனக்கு பதியும் இல்லை.யாருக்கும் நான் மனைவியும் இல்லை. ப்ரும்ம சக்தியினால் எனக்கு புத்திரனைக் கொடுங்கள் என்று யாசிக்க, முனிவரும் அவ்வாறே முனிவரும் சந்தோஷமாக அவளுக்கு புத்திரனைக் கொடுத்தார். ப்ரும்ம தத்தன் என்ற பெயருடன், சூலியின் மானஸ புத்திரனாக அவதரித்தான்.சோமதாவின் அந்த பிள்ளை, காம்பினி என்ற ஊரில்,தேவலோகத்தில் தேவராஜன் போல லக்ஷ்மீகரமாக இருந்து வந்தான். குசனாபன் இந்த ப்ரும்ம தத்தனுக்கு தன் நூறு பெண்களையும் விவாகம் செய்து கொடுக்க நிச்சயித்தான். அந்தராத்மா சுத்தமாக, அந்த ப்ரும்மதத்த ரிஷியை அழைத்து வந்து தன் நூறு பெண்களையும் வரிசையாக கன்யா தானம் செய்தான்.வரிசையாக ஒவ்வொருவராக பாணிக் கிரஹணம் செய்யச் செய்ய,தேவ பிதாவான ப்ரும்மாவுக்கு சமமான அவர் தொட்ட மாத்திரத்தில் கூனித் தன்மை நீங்கிஜ்வரமும் விலக, அழகிய சரீரத்துடன் பழைய படி ஆகி விட்டனர்.தன் புத்திரிகளை பழையபடி பார்த்த அரசன் மகிழ்ந்தான்.அவர்களை விவாகம் முடிந்து, ப்ரும்மதத்தருடன் உபாத்யாய கணங்களுடன் அனுப்பி வைத்தான். சோமதாவும் தன் புத்திரன் இந்த பெண்களை மணந்து கொண்டதன் மூலம் நியாயமாக நடந்து கொண்டதாக எண்ணி மகிழ்ந்தாள். மருமகளை வரவேற்று, உச்சி முகர்ந்து மகிழ்ந்தாள்.குசனாபனையும், வாழ்த்தினாள்.
(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்தி நாலாயிரம் பாடல்தொகுப்பில்,பால கண்டத்தில் ப்ரும்ம தத்த விவாகம் என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.
அத்தியாயம் 34 விஸ்வாமித்திர வம்ச வர்ணனை
ப்ரும்ம தத்தர் விவாகம் முடிந்து சென்ற பின், புத்திரன் இல்லாத குசனாபன் புத்திரனை வேண்டி புத்ரேஷ்டிம் என்ற யாகத்தை செய்தான். யாகம் நடந்து கொண்டு இருக்கும் பொழுதே, ப்ரும்ம குமாரனான குசன் மிகவும் மகிழ்ச்சியுடன் -உன்னைப் போலவே புகழ் வாய்ந்த புத்திரனைப் பெறுவாய், உலகில் சாஸ்வதமான கீர்த்தியையும், கா3தி4ம்-விரும்பியதை அடைவாய் என்று ஆசிர்வதித்து, குசனாபனை விட்டு ஆகாயமார்கமாக ப்ரும்மலோகம் சென்று விட்டார். காலம் சென்ற பின், கா3தி4 என்ற பெயருடனேயே ஒரு புத்திரன் பிறந்தான். காகுத்ஸா, அவர் தான் என் தந்தை. பரம தார்மிகர். குச வம்சத்தில் பிறந்ததால் கௌசிகன் ஆனேன் என்று நிறுத்தினார் முனிவர். எனக்கு மூத்த சகோதரி, சத்யவதி நல்ல குணவதி. த்4ருதாசிக்கு பிறந்தவள். அவள் கணவனைத் தொடர்ந்து ஸ்வர்க லோகம் சென்றாள். கௌசிகீ என்ற மகா நதியாக வந்தாள்.இமயமலையை அடைந்து அங்கிருந்து அழகிய, பாவனமான, திவ்ய தீர்த்தமாக பெருகி வந்தாள்.உலகின் நன்மைக்காக என் சகோதரி பிரவகித்து வருகிறாள். அதனாலேயே நான் இமயமலை அருகிலேயே அதிகம் வசிக்கிறேன்.கௌசிகீ என்ற என் சகோதரியிடம் எனக்கு பாசம் அதிகம். நியமங்கள் காரணமாக அவளை விட்டு சித்தாஸ்ரமம் வந்தவன் உன் சக்தியால் இப்போது சித்தனானேன்.இது தான் என் குலத்தின் கதை. இந்த தேசத்தின் விசேஷம் பற்றிக் கேட்டாயே, பாதி இரவு ஆகிவிட்டது.கதை சொல்லி சொல்லி நேரம் போனதே தெரியவில்லை. இப்போது தூங்கு.பாதி வழியில் உனக்கு சிரமம் இருக்கக் கூடாது.மங்களம் உண்டாகட்டும். மிருக, பக்ஷிகள் அடங்கி திரும்பிச் சென்று விட்டன. பக்ஷிகள் சப்தமேயில்லை. மரங்களும் அமைதியாக இருக்கின்றன. தமோ குணமான இருட்டினால் நாலு திக்குகளும் சூழப்படுள்ளன. மெதுவாக சந்த்யா இருட்டிலிருந்து விடுபடுவாள். கண்களைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும், நக்ஷத்திர, தாரா, க3க3னம்இவை ஜோதியினால் ஒளி பெற்று விளங்கும். சீதாம்சுவான சந்திரன், உலகின் தமஸை அகற்ற உதிக்கப் போகிறான்.தன் பிரபையால் உலகத்தார் மனதை சந்தோஷப்படுத்திக் கொண்டு வருவான்.ஆங்காங்கு இரவில் சஞ்சரிக்கும் யக்ஷர்களும், ராக்ஷஸக் கூட்டங்களும், பயங்கரமான பிணம் தின்னும் கூட்டத்தினர் மட்டும் இந்த இரவிலும் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லி நிறுத்தினார். சாது4, சாது4 என்று மற்ற முனிவர்கள் அவரைக் கொண்டாடினார்கள். குசிகர்களுடைய இந்த வம்சம் தர்ம வழியில் வந்தது. ப்ரும்மாவுக்கு சமமான பலம் உடையவர்கள், இந்த வம்சத்து உத்தமமான மனிதர்கள். அதிலும் விசேஷமாக தாங்கள், சிறந்த தவ வலிமையுடைய விஸ்வாமித்திரர்.பெரும் புகழ் உடையவர்கள் ஆவீர்கள். சிறந்த நதியான கௌசிகியும், உங்கள் வம்சத்தில் உதித்து, குலத்தை விளங்க செய்து வருகிறாள். பேசிக் கொண்டேயிருந்த முனிவர் தூங்கி விட்டார். சந்திரன் அஸ்தமித்தது போல இருந்தது. சிறிது ஆச்சர்யம் அடைந்த ராமரும் லக்ஷ்மணனுடன், முனிவரை புகழ்ந்து பேசியபடி தூங்கச் சென்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், விஸ்வாமித்திர வம்ச வர்ணனை என்ற முப்பத்து நான்காவது அத்தியாயம்)
அத்தியாயம் 35 உமா கங்கா விருத்தாந்த ஸம்க்ஷேபம்
(உமா, கங்கையின் கதைகளின் சுருக்கம்)
மீதி இரவை அந்த சோணா நதிக்கரையில் கழித்துவிட்டு, மகரிஷிகளுடன் விடியற்காலையில் எழுந்த விஸ்வாமித்திரர் சொன்னார். –ராமா, நன்றாக விடிந்து விட்டது. பூர்வா சந்தியும் வந்து விட்டது. எழுந்திரு, எழுந்திரு. உனக்கு மங்களம் உண்டாகட்டும். வா, கிளம்பி மேலே செல்ல தயாராகு. என்றார். அதைக் கேட்டு ராமர் எழுந்து, பர்வ காலத்துக்கான, ஆஹ்னிக- தினசரி செய்ய வேண்டிய காரியங்களை, செய்துவிட்டு, கிளம்பத் தயாராகி முனிவரிடம் சென்றார். இந்த சோணா நதி மிக ஆழமாக இருக்கிறது. ஜலம் நன்றாக இருந்தாலும், மண் நிறைந்திருக்கிறது. இதை எப்படி கடந்து செல்வோம் என, முனிவர் பதில் சொன்னார்.இதோ ஒரு வழி தெரிகிறது பார். இதில் தான் மகரிஷிகள் செல்வார்கள். இதில் போகலாம் வா, என்றார். வெகு தூரம் நடந்து, பாதி நாள் கழிந்த நிலையில், ஜாஹ்ணவி என்று அழைக்கப்படும், நதிகளில் ஸ்ரேஷ்டமான, முனி ஜனங்களால் வணங்கப்படும் கங்கையைக் கண்டார்கள். அதன் கரையில்எல்லோரும் தங்க இடம் பிடித்து அமர்ந்தனர். பின் ஸ்னானம் செய்து, பித்ரு தேவதைகளுக்கு தர்ப்பணம் முதலியவற்றைச் செய்து, அக்னி ஹோத்ரம் என்ற ஹோமத்தை செய்து, உத்தமமான ஹவிஸை சாப்பிட்டு,சந்தோஷமான மனதுடன், ஜாஹ்ணவி கரையில் அமர்ந்தனர். விச்வாமித்திரரை சுற்றி அமர்ந்தனர். ராமர் அவரிடம் கேட்டார். பகவன், கங்கை என்றும், த்ரிபத2கா3 என்றும் பெயர் கொண்ட கங்கை நதி மூன்று உலகங்களையும் கடந்து எப்படி நத3, நதீ3 பதிஎன்று அழைக்கப்படும் கடலை அடைகிறாள்? விஸ்வாமித்திரர் கங்கையின் பிறப்பையும், வளர்ந்ததையும் விவரமாக சொல்லலானார். சைலேந்திரன் என்றும் ஹிமவான் என்றும் சொல்லப்படும் மலையரசன், தா4துக்கள் நிறைந்த உருவம் உடையவன். அவனுக்கு இரண்டு பெண்கள். மிக அழகு வாய்ந்தவர்கள். சுமத்4யமா என்ற மனைவியிடம் பிறந்தவள் மேரு து3ஹிதா. மற்றொரு மனதிற்கு ரம்யமான மனைவிமேனா. இவளிடம் கங்கை முத்தவளாக, இளையவளாக உமா என்று இரண்டு பெண்கள். ராகவா, இந்த மூத்தவளான கங்கையை த்ரிபத2கா3 என்ற நதியை தேவர்கள் தேவ கார்யம் நடக்க வேண்டும் என்பதற்காக சைலேந்திரனிடம் வேண்டினர். இமவானும்தன் இஷ்டப்படி சஞ்சரிக்கக் கூடிய, லோக பாவனியான கங்கையை, மூவுலகின் நன்மைக்காக கொடுத்தான். மகிழ்ச்சியுடன் தேவர்கள், இமவானின் மூத்த மகளான கங்கையை அழைத்துச் சென்றனர். மற்றொரு பெண்ணான உமா, உக்ரமான தவம் செய்தாள். மிகவும் கடினமான விரதங்களை ஏற்று தவம் செய்தாள். இளைய மகளான இவளை, உக்ரமான தவம் செய்து உலகமே போற்றும் ருத்ரனுக்கு மணம் செய்து கொடுத்தார். ராகவா, இருவருமே இமவானின் பெண்கள். சைலேந்திரனின் மகள் கங்கா, பாவனமான நதியாக சுர லோகம் போய், த்ரிபத2கா3வாக ( மூன்று வழியுடையவளாக- ஆகாயம், பூமி, பாதாளம் மூன்றிலும் பிரவகிப்பவளாதலால் த்ரிபத2கா3) பாவனமான ஜலத்தை தாங்கிச் செல்பவளாக இருக்கிறாள்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், உமா, கங்கா விருத்தாந்த ஸம்க்ஷேபம் என்ற முப்பத்து ஐந்தாவது அத்தியாயம்)
அத்தியாயம் 36உமா மாகாத்ம்யம்.
ராம லக்ஷ்மணர்கள் இருவரும், முனிவர் சொன்ன கதையைக் கேட்டு, மேலும் வினவினார்கள். முனி புங்கவரே, சைலராஜனின் மூத்த மகளைப் பற்றி சொல்லுங்கள். விவரமாக சொல்லுங்கள். தேவ, மானுஷ உலக சம்பவங்கள் உங்களுக்கு விவரமாகத் தெரிந்திருக்கிறது. என்ன காரணத்தினால்,லோக பாவனியான கங்கா மூன்று பகுதியாக ஓடுகிறாள். பிரவாகமாக பாய்கிறாள். நதிகளில் உயர்ந்த கங்கா, ஏன் த்ரிபத2கா3 என்று பெயர் பெற்றாள். எந்த விதமான செயல்களில் சம்பந்தப்பட்டிருக்கிறாள். இவ்வாறு காகுத்ஸன் கேட்ட பொழுது, விஸ்வாமித்திர முனிவர், முழு கதையையும், ரிஷிகள் மத்தியில் சொல்ல ஆரம்பித்தார். ராமா, முன்பு ஒரு காலத்தில், சிதிகண்டனான மகாதேவன் தேவியுடன், நூறு வருஷம் வாழ்ந்தும், ஒரு மகன் பிறக்கவில்லை. தேவர்கள் கவலை கொண்டு, பிதாமகரான ப்ரும்மாவையும் அழைத்துக் கொண்டு, மகாதேவனிடம் சென்றனர். மகாதேவா, தேவர்களுக்கெல்லாம் தலைவனே, உலகத்தின் நன்மையை எண்ணி வேண்டியதை செய்பவனே, கருணை செய். உங்கள் தேஜஸை பூமி தாங்காது. ப்ரும்ம தேஜஸோடு கூடிய தாங்கள் தேவியுடன், தவம் செய்யுங்கள்.பூவுலகின் நன்மைக்காக உங்கள் இருவரின் சக்தியைத் இணைத்து தாங்குவாயாக. இந்த உலகை காப்பாற்றுங்கள்.தேவர்களின் வாரத்தையைக் கேட்டு, சர்வ லோக மகேஸ்வரன், அப்படியே என்று சொல்லி, சற்று யோசித்து, திரும்பவும் சொன்னார். உமையுடன் கூட நானும், இந்த சக்தியைத் தாங்குகிறேன். தேவர்களும், இந்த பூமியும் நலம் பெறட்டும். ஆனால், வறண்ட இந்த பூமியில், ஒப்பில்லாத என் சக்தியைத் தாங்கப் போவது யார் ? தேவர்களே, நிச்சயம் செய்து கொள்ளுங்கள். உடனே தேவர்கள், கூடிப் பேசி, ரிஷபத்வஜனான பகவானிடம் சொன்னார்கள். பூமி தாங்குவாள் என்றனர். மலை, காடு இவற்றை தன்னுள் கொண்டுள்ள பூமியில், அவரது சக்தியை விட, அது பூமியைச் சூழ்ந்தது. தேவர்களும், கந்தர்வர்களும், அக்னியை வேண்டி, பெருமானுடைய சக்தியில், நீயும், வாயுவுமாக சேர்ந்து கொள்ளுங்கள். அது அக்னியும் சேர்ந்து வெண் பர்வதமாக தோற்றமளித்தது. சரவணம் என்ற தெய்வீகமான பொய்கை, அக்னியும், ஆதித்யனும், சேர்ந்து பாவனமாக கார்த்திகன் உதித்தான். இதன் பின், உமாவையும், மகாதேவனையும், தேவர்கள் வணங்கித் துதித்தார்கள்.சைல சுதா கோபத்துடன், கையில் ஜலத்தை எடுத்து, எனக்கு பிரியமில்லாததைச் செய்த நீங்கள், அதன் பலனை அடைந்தே ஆக வேண்டும், என்று சபித்து விட்டாள். புத்திரனை விரும்பிய என்னைத் தடுத்தீர்களே உங்கள் மனைவிகளிடம், புத்திரர்களைப் பெற மாட்டீர்கள், உங்கள் மனைவிகள், பிரஜைகள் இல்லாமல் போகட்டும், என்று சபித்தவள், பூமியைப் பார்த்து, அவனே,(பூமிக்குப் பெயர்) பலருக்கு மனைவியாவாய் என்றும் சபித்தாள்.புத்திரனைப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சியை நீங்களும் அடைய மாட்டீர்கள் என்று சொல்லி விட்டு, வருணனின் திசையில் சென்றாள். மகேஸ்வரனும், உமையுடன், இமய மலைச் சாரலில் தவம் செய்யலானார். இது உமையின் கதை. கங்கையின் பிரபாவம், சொல்கிறேன் கேள், என்றார்.
இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பாலகாண்டத்தில், உமா மாகாத்ம்யம், என்ற முப்fபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 37 குமாரோத்பத்தி(குமரன் என்ற முருகன் பிறப்பு)
மகாதேவன் தவம் செய்துகொண்டிருக்கும் பொழுது, ரிஷி கணங்கள் சேனாபதியை விரும்பியவர்களாக, பிதாமகரை சென்றடைந்தனர். அக்னி முதலான தேவர்கள் அவரிடம்வேண்டிக் கொண்டனர். -நமக்கு, முன்பு பகவான் சேனாபதியைக் கொடுத்தார். ஆனால், நமது வைரிகளை அடக்கக்கூடிய சேனாபதி இதுவரை பிறக்கவில்லை. அவரோ இமய மலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். உமையுடன் கூட விசேஷமான தவம் செய்து கொண்டிருக்கிறார். உலகின் நன்மைக்காக இதன் பிறகு செய்ய வேண்டிய காரியம் என்ன? என்பதை யோசிப்போம். தாங்கள் தான் எல்லாம் அறிந்தவர். சொல்லுங்கள். என்ன செய்யலாம்? தேவர்களின் வார்த்தையைக் கேட்டு, சர்வலோக பிதாமகரான ப்ரும்மா அவர்களை சமாதானப் படுத்தி, மதுரமாக சொல்லலானார். – சைல புத்திரி உங்களை சபித்தது, தன் பத்னிகளிடம் புத்திர ப்ராப்தி அடைய மாட்டீர்கள் என்று, அது சத்யமானதே. சந்தேகமே இல்லை. இதோ ஆகாயத்தில் இருக்கும் கங்கை, இவளிடத்தில் அக்னி மகனை பிறக்கச் செய்வான். தேவர்களின் சேனாபதியான, சத்ருக்களை நாசம் செய்யும் வீரனை பிறக்கச் செய்வான். மூத்தவளான சைல சுதா அந்த மகனைக் கொண்டு வருவாள். உமா தேவிக்கும் அது உகந்ததாகவே இருக்கும். இதைக் கேட்டு தேவர்கள் கைலாச மலைக்குச் சென்று, தாது நிறைந்த அந்த இடத்தில் அக்னியை புத்திரனை வேண்டி நியமித்தனர். தேவ கார்யம் இது நீதான் செய்ய வேண்டும், மகா சக்தியை சைல புத்திரியான கங்கையில் விடு.தேவதைகளின் சொல்படி கங்கையை அடைந்து, அக்னி தேவன் கர்பத்தை நீ தரிப்பாயாக என்று சொல்லி, அவளிடம் தர, அந்த கர்ப்பம் துண்டு துண்டாக சிதறியது. அதை சேர்த்து அணத்தவாறு இருந்த கங்கையை அக்னி தேவன் அபிஷேகம் செய்தான். அதன் காரணமாக நீர் பிரவாகம் பெருக, கங்கையின் கிளை நதிகள் பூர்ணமாக நிரம்பி வழிய, என்னால் தாங்க முடியவில்லை என்று கங்கை சொல்லவும், மற்ற தேவர்கள், ஹிமவானின் அடிவாரத்தில் கர்ப்பத்தை கவனமாக வை என்று உபதேசித்தனர். மிகவும் அதிகமாக சூரியனுடைய ப்ரகாசத்துடன் தகிக்கும் கர்ப்பத்தை அவள் தன் கிளை நதி பிரவாகங்களின் விட்டாள். விட்டவுடனேயே, நெருப்பில் புடமான தங்கம் போன்ற ஒளியுடன், காஞ்சனம் பூமியை வந்தடைந்தது. தாம்பிரமும், கார்ஷ்னாயசம் (ஒரு வகைஇரும்பு), என்ற தாதுவும் பூமியை வந்தடைந்தன. இந்த தீக்ஷ்ணத்தாலேயே, த்ரபுசீகம் என்ற தாதுவும் தோன்றியது. இந்த தாதுக்கள் பூமியில் விழுந்து பலவிதமாக வளர்ந்தன. தேஜசுடன் கூடிய அந்த கர்ப்பத்தை வைத்த மாத்திரத்திலேயே, மலையும் மலை சார்ந்த இடமும் செக்கச் செவேலென்று, பொன்னிறமாக ஆயின. ஜாத ரூபம் என்று அன்று முதல் பெயர் வழங்கலாயிற்று.நெருப்புக்கு சமமான நிறம் உடைய சுவர்ணம் அது தான். புல், மரம், கொடி, புதர் எல்லாமே பொன் நிறமாயிற்று. இவ்வாறு தோன்றிய குமாரனை, மருத்கணங்கள் இந்திரனோடு கலந்து ஆலோசித்து பால் புகட்ட, க்ருத்திகா ஸ்த்ரீகளை நியமித்தனர். பிறந்தவுடன், அவர்களும் உத்தமமான சமயத்தில், பால் புகட்டினர். இவன் எங்கள் அனைவருக்கும் புத்திரனாவான் என்றனர். தேவர்கள் அவனை கார்த்திகேயன் என்ற அழைத்தனர். இந்த புத்திரன் மூவுலகும் போற்றும்புகழ்பெறுவான், இதில் சந்தேகமேயில்லை என்று தேவர்கள் வாழ்த்தினர். கர்ப்பத்தை தாங்கும் போதே சிதைந்து (ஸ்கன்னம்) போனதால் ஸ்கந்தன் என்றும் அழைத்தனர். அக்னி போன்றே பிரகாசித்த அந்த குழந்தையைக் குளிப்பாட்டி லக்ஷ்மீகரமாக விளங்கிய ஸ்கந்தனைக் கொண்டாடினார்கள். க்ருத்திகா ஸ்த்ரீகள் பாலை புகட்டவும், ஆறு முகனாகத் தோன்றி அந்த பாலைப் பருகினான் கார்த்திகேயன். ஒரு நாள் பாலைக் குடித்தவுடனேயே, சுகுமாரனான சரீரம் உடையவனாக ஆகி, தை3த்ய சைன்யத்தை கூட்டத்தோடு தன் வீர்யத்தால் அழித்தான்.தேவ சேனாபதியான அவனை, நிர்மலமான குணம் உள்ளவனை அக்னி முதலானதேவர்கள், தேவ சேனாபதியாக அபிஷேகம் செய்தனர். இதுதான் கங்கையின் விஸ்தாரமான கதை. குமார சம்பவம் என்ற இந்த சரித்திரமும் தன்ய: பாவனமானது, புண்யமானது. உலகில் எந்த மனிதன் கார்த்திகேய பக்தனாக விளங்குகிறானோ, அவன் ஆயுளையும், புத்ர பௌத்திரர்களோடு, ஸ்கந்த சாலோக்யம் என்ற பதவியையும் அடைவார்கள்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், குமாரோத்பத்தி என்ற முப்பத்துஏழாவது அத்தியாயம்)
அத்தியாயம் 38சகர புத்ர ஜனனம் (சகர புத்திரன் பிறப்பு)
இந்த கதையை கௌசிகர் ராமருக்குச் சொல்லி, சற்றுப் பொறுத்து மதுரமான வார்த்தைகளால் திரும்பவும் காகுத்ஸனான ராமரிடம் சொல்ல ஆரம்பித்தார்அயோத்யாவில் சூரனான ஒரு அரசன் இருந்தான். சகரன் என்ற பெயருடையவன். சந்ததியில்லாத அவன் ஒரு புத்திரனை வேண்டி இருந்தான். வைதர்ப தேசத்து ராஜகுமாரிகேசினீ என்பவள் அவனுடைய முதல் தர்ம பத்தினி. தர்மத்தில் சிந்தனையுடையவள். சத்யமே பேசும் உயர்ந்த குணம் உடையவள். அரிஷ்டனேமி என்பவளின் மகள். மிக அழகிய ரூபம் உடையவள். சகரனின் இரண்டாவது மனைவி சுமதி நல்ல புத்தியும், அறிவும் உடையவள். இவர்கள் இருவருடன், இமய மலைச் சாரலுக்குச் சென்று, ப்ருகு ப்ரஸ்ரவன கிரியில் இருந்து சகர ராஜன் தவம் செய்யலானான். நூறு வருஷங்கள் நிறைந்தபின், தவத்தால் ஆராதிக்கப்பட்ட ப்ருகு முனிவர், சகரனுக்கு வரம் அளித்தார். உனக்கு சிறந்த புத்திர பாக்கியம் கிடைக்கப் போகிறது. உலகில் அளவில்லாத புகழையும், பெருமையையும் அடைவாய் என்று ஆசிர்வதித்தார். -உன் பத்னிகளின் ஒருவள் வம்சத்தை விளங்கச் செய்யும் ஒரு மகனைப் பெறுவாள். மற்றவள் ஆறாயிரம் மகன்களைப் பெறுவாள் –இவ்வாறு சொல்லும் முனிவரை ராஜகுமாரிகள் வணங்கி,எங்களுக்குள் யாருக்கு வம்சகரமான பிள்ளை பிறப்பான், யாருக்கு பல புத்திரர்கள் பிறப்பார்கள், இதை விவரமாக சொல்லுங்கள்.உங்கள் வாக்கு பொய்யாகாது. என்று கேட்டனர். பரம தார்மீகரான ப்ருகு,நீங்களே இஷ்டம் போல் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.ஒரே ஒரு வம்சம் விளங்க வைக்கும் பிள்ளையா, அல்லது பலசாலியான,கீர்த்தியும்,உத்சாகமும்உள்ளபல பிள்ளைகளா? யாருக்கு எது வேண்டும்? வரம் கேளுங்கள் எனவும், கேசினீ, அரசர் முன்னிலையில் வம்சம் விளங்கச் செய்யும் ஒரு புத்திரனை வேண்டினாள். சுமதி ஆறாயிரம் பிள்ளைகளை வேண்டினாள். அவள் சுபர்ணனின் சகோதரி.மகா உத்சாகமும், கீர்த்தியும் நிறைந்த பிள்ளைகளை வரமாக வேண்டினாள்.முனிவரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து அரசன் மகிழ்ச்சியுடன் பத்னிகளுடன் ஊர் போய் சேர்ந்தான். சுமதிக்குப் பிறந்தது கர்பத்தின் துண்டங்களாக இருந்தன. இதனின்று ஆறாயிரம் பிள்ளைகள் தோன்றினர். நெய் நிரம்பிய குடங்களில் தாத்ரி எனப்படும் வைத்யம் அறிந்த தாதிகள் அவற்றை பராமரித்து வந்தனர். நாளடைவில் அவர்களும் வளர்ந்து பெரியவர்களாகி யௌவனம் அடைந்தனர். வெகு நாட்களுக்குப் பின், ரூபமும் இளமையும் கூடிய குமாரர்களாக சகரனுக்கு ஆறாயிரம் குழந்தைகள் ஆயின.சகரனுடைய மூத்த பிள்ளை, கேசினியின் மகனான அசமஞ்சன், குழந்தைகளைப் பிடித்து சரயூ நதியில் போட்டு சிரிப்பான். அவர்கள் அலறுவதையும், மூழ்குவதையும் பார்த்து ரசிப்பான். இந்த கொமூடுரத்தைத் தாங்க முடியாமல், ஊர்ஜனங்களின் நன்மைக்காக இந்த பிள்ளையை நாடு கடத்தி விட்டான் அரசன். இந்த அசமஞ்சனின் பிள்ளை அம்சுமான் என்பவன், வீரனாக, எல்லோருக்கும் பிடித்தவனாக, பிரியமாக பேசுபவனாக, எல்லோரையும் அணைத்துக் கொண்டு போகும் குணசாலியாக வளர்ந்தான். காலம் செல்லச் செல்ல சகரனுக்கு யாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. இவ்வாறு நிச்சயம் செய்தவுடன், உபாத்யாயர்களையும், மற்றவர்களையும் அழைத்து யாக காரியத்தை ஆரம்பித்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், சகர புத்ர ஜனனம்என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயம்)
அத்தியாயம் 39 ப்ருது2வீ விதா3ரனம் (பூமியைத் தோண்டுதல்)
இந்த கதை முடிந்தவுடன், ரகு நந்தனான ராமன், முனிவரிடம் இந்த கதையை இன்னும் விஸ்தாரமாக சொல்லும்படிக் கேட்டான். ப்ரும்மன், என் முன்னோர்கள் இந்த யாகத்தை எப்படிச் செய்தார்கள். இதைக் கேட்டு முனிவர் சிரித்துக் கொண்டே தொடர்ந்தார். சகரன் என்ற மகாத்மாவின் கதையை விவரமாகவே சொல்கிறேன், கேள் என்று ஆரம்பித்தார். சங்கரரின் மாமனார் ஹிமவான் மலைகளுக்கு அரசனாக விளங்கினான். ஒரு முறை விந்த்ய மலையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இந்த தேசம் யாகம் செய்ய சிறந்த இடம் என்று புருஷோத்தமன், சகரன் இருவருக்கிடையில் -இரு மலைகளிடையில்- யாகம் செய்ய விரும்பினான். சகரனின் விருப்பப்படி பேரனான அம்சுமான், அந்த மலையில் யாகத்தை ஆரம்பிக்கவும், இந்திரன் ராக்ஷஸ உரு எடுத்து வந்து யாக குதிரையை அபகரித்துச் சென்றான். இந்த யாகக் குதிரையை அபகரித்துச் செல்வதைப் பார்த்து உபாத்யாயர்கள் அரசனிடம் வந்து தெரிவித்தனர். இந்த மலையில் யாகக் குதிரையை யாரோ வேகமாக கடத்திச் செல்கிறார்கள்.காகுத்ஸா, கடத்திச் செல்பவனை கொன்று விடு, யாக குதிரையை மீட்டு வா, இந்த யாகம் தடைப் பட்டால் நம் எல்லோருக்கும் துன்பம் விளையும். ராஜன், எப்படி யாகம் இடையூறு இல்லாமல் முடியுமோ அந்த விதத்தில் நீ உடனே செயல் படு என்று உபாத்யாயர்கள் அரசனிடம் கூறினர். அந்த சபையில் பார்த்திபனான சகரன், ஆறாயிரம் பிள்ளைகளைப் பார்த்துச் சொன்னான். புத்திரர்களே, இந்த ராக்ஷஸன் சென்ற வழி எது என்று தெரியவில்லை. மந்திரங்கள் ஓதி, பவித்ரமாக மகாபா4கர்களான அறிஞர்கள், இந்த பெரிய யாகத்தை செய்ய ஆரம்பித்து விட்டனர். உங்களுக்கு நன்மையுண்டாகட்டும். புத்திரர்களே, உடனே சென்று யாக குதிரையைத் தேடிக் கொண்டு வாருங்கள். சமுத்திரம்மாலையாக சூழ்ந்த இந்த பூமி முழுவதும் தேடுங்கள். ஒவ்வொரு யோஜனை தூரத்தையும் புத்திரர்களே, விஸ்தாரமாக நன்கு அலசித் தேடுங்கள். குதிரையைக் காணும் வரை பூமியைக் குடைந்து செல்லுங்கள். குதிரையைக் கவர்ந்தவனை என் ஆணைப்படி தேடிச் செல்லும் நீங்கள், குதிரையைக் கண்டு வரும் வரை, பேரன்களோடு தீக்ஷை ஏற்றுக் கொண்ட நான் உபாத்யாயர்களோடு இங்கேயே இருப்பேன்.மங்களம் உண்டாகட்டும், சென்று வாருங்கள் என்று சொல்லி அனுப்பினான். அவர்களும் சந்தோஷமாக, தந்தை சொல்லை மேற் கொண்டு, மகீதலம் வரை சென்றனர். உலகம் முழுவதும் தேடி, பலசாலிகளான அவர்கள், குதிரையைக் காணப் பெறாமல் ஒவ்வொரு யோஜனை தூரத்தையும் அலசித் தேடியும் காணாத நிலையில், பூமியை பிளக்க ஆரம்பித்தனர். வஜ்ர ஸ்பர்சம் போன்ற கூர்மையான நகத்தாலும், சூலங்கள் கொண்டும், கல்லால் ஆன ஹலம் என்ற ஆயுதத்தாலும், பூமியைக் குடைந்தனர். வசுமதியான பூமி, பயங்கரமான இந்த ஆயுதங்களால் தாக்கப் படவும் அழ ஆரம்பித்தாள். பலவிதமான நாகங்கள் வதைப் பட்டன. அசுரர்கள் அழிந்தனர். ராகவா, இந்த ராக்ஷஸர்களிலும் சத்வ குணம் உடையவர்கள் ஓலமிட ஆரம்பித்தனர். ஆறாயிரம் யோஜனை தூரம் பூமியைக் குடைந்து, உத்தமமான ரஸாதலம் சென்று, பர்வதங்கள் நிறைந்த ஜம்பூத்வீபத்தை அரச குமாரர்கள் குடைந்தபடி எல்லா இடங்களிலும் திரிந்தார்கள். பின்னர் தேவர்களும் கந்தர்வர்களும், அசுரர்களும், நாகங்களுடன் கூடியவர்களும், மனம் வருந்தி ப்ரும்மாவிடம் சென்றனர். பகவன், பூமியை சகர புத்திரர்கள் தோண்டி நாசம் செய்கிறார்கள். ஜலத்தில் வசிக்கும் பல பிராணிகள் இதனால் வருந்துகின்றன. இவன் தான் எங்கள் யாக குதிரையைத் திருடியவன், இவன் தான், இவன் தான் என்று ஒவ்வொருவரையும் சகர புத்திரர்கள் வதைக்கின்றனர், என்றார்கள்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ப்ருத்வீ விதாரணம் என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயம்)
அத்தியாயம் 40 கபில தர்ஸனம் (கபிலரைக் காணுதல்)
தேவர்கள் முறையீட்டைக் கேட்டு ப்ரும்மா அவர்களை நோக்கினார். பயந்து நடுங்கியபடி, யமன் வாசல் வரை சென்று வந்தவர்கள் போல இருந்த அவர்களைக் கண்டு -இந்த பூமி முழுவதும் வாசுதேவனுடையது. மாதவனுடைய மகிஷி இவள். அந்த பிரபுவான பகவான் (காபிலம்) கபிலனுடைய உருவம் எடுத்து பூமியை தாங்குவான். எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய கோபம் கொண்ட கண் பார்வையிலேயே, அரச குமாரர்கள் மடிவார்கள் –என்றும் சொன்னார். பூமியையும், சனாதனனான பகவான் அதன் சுய ரூபத்திற்கு கொண்டு வந்து விடுவான், அல்பஆயுள் கொண்ட சகர புத்திரர்கள் சீக்கிரமே அழிவார்கள். முப்பத்து மூன்று கோடி தேவர்களும் பிதாமகரின் விளக்கத்தால் மிக்க சந்தோஷம் அடைந்தவர்களாக, நிம்மதியாக வந்தபடியேசென்றனர். பூமியை பிளந்து வழி அமைத்த படியே பிரதக்ஷிணமாக சுற்றி சுற்றி பூமியை தோண்டியதில் சகர புத்திரர்கள் களைப்படைந்தனர். சாகரர்கள் எல்லோருமாக தந்தையை அடைந்துஉலகம் பூராவும் சுற்றிப் பார்த்தோம். நடுவில் இடைப்பட்ட நல்ல ஜந்துக்கள் கூட அடி பட்டன. தேவ, தானவ, ராக்ஷஸ, பிசாச, உரக, பன்னக- என்று எல்லோரையும் தேடியாயிற்று.அஸ்வத்தைக் கவர்ந்து சென்றவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. என்ன செய்வோம். தகப்பனாரே, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். புத்தி பூர்வமாக யோசித்து ஒரு வழி சொல்லுங்கள். தன் மகன்களின் இந்த வார்த்தையைக் கேட்டு சகரன் கோபம் கொண்டான். கோபத்துடனேயே -திரும்பச் சென்று தேடுங்கள். இதுவரை தேடாத இடங்களிலும் தேடுங்கள். தோண்டுங்கள். குதிரையைக் கடத்தியவனைப் பிடித்துக் கொண்டு காரியம் ஆனவர்களாக திரும்பி வாருங்கள்.- வேறு வழியின்றி அவர்கள் திரும்பச் சென்று பூமியில் வழிகள் செய்து கொண்டு, ரசாதலம் சென்று தேடினர். பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் திக்கஜங்களைக் கண்டனர். மிகப் பெரிய பர்வதம் போன்றயானைகள், பூமியைத் தலையால் தாங்கிக் கொண்டு நின்றன. காகுத்ஸா, சற்று ஓய்வெடுக்கும் விதமாக இந்த கஜங்கள் மலைகளில் தலையைச் சாய்த்து நின்றாலோ, உரசினாலோ, பூ கம்பம் உண்டாகும். அந்த யானைகளை சகர புத்திரர்கள் பிரதக்ஷிணம் செய்து வணங்கி, அவர்களுக்கு மரியாதை செய்து விட்டு, இன்னமும் குடைந்து கொண்டு சென்றனர்.முதலில் கிழக்குத் திசையில் தோண்டி எடுத்து, விரூபாக்ஷன் என்ற யானையைக் கண்டு, பின் தென் திசை நோக்கி சென்றனர். தக்ஷிண திசையிலும் மகா கஜத்தைக் கண்டனர். மிகப் பெரிய பர்வதம் போன்ற உருவத்துடன் , மகா பத்மம் என்ற மகாத்மாவான திக் பாலகர்களான யானைகள். தலையினால் பூமியைத் தாங்கி வரும் அவைகள், ஆச்சர்யம் அடைந்தன. அதையும் பிரதக்ஷிணம் செய்து வணங்கி, சகர புத்திரர்கள் மேற்கு திசையில் தேட ஆரம்பித்தார்கள். மேற்கு திசையிலும் அகலமான மலை போன்ற சௌமனஸம் என்ற திக் கஜத்தைப் பார்த்து, அதையும்வணங்கி பிரதக்ஷிணம் செய்து, குசலம் விசாரித்து, தோண்டியபடியே ஹிமவான் இருக்கும் வடக்குத் திசை வந்து சேர்ந்தனர். வடக்குத் திசையில் ரகுஸ்ரேஷ்டனே, அவர்கள் பனி மூடிய இடத்தில், வெள்ளை வெளேரென்ற பத்ரம் என்ற பெயருடைய திக்கஜம் தன் சுபமான சரீரத்தால் பூமியைத் தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். இதையும் கொண்டாடி, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து ஆறாயிரம் சகர புத்திரர்களும் திரும்பவும் வசுதா தலத்தை அடைந்தனர். முதலில் வட திசையில், பயங்கர வேகமும் பலமும் உடைய அவர்கள் பூமியை பிளக்கும் எண்ணத்துடன் ரோஷத்தோடு ஓங்கி ஒரு போடு போட்டனர். சனாதனனான வாசுதேவன் கபிலனாக அங்கு இருப்பதைக் கண்டனர். அருகிலேயே, யாக குதிரையும் நடமாடிக் கொண்டிருந்தது. ஒரே மகிழ்ச்சி. ரகு நந்தனா, அவர்கள் எல்லோரும் இந்த கபிலனை குதிரையைக் கடத்திச் சென்றவனாக நினைத்து, க்ரோதத்தால் சிவந்த கண்களுடையவர்களாக கனித்ர (தோண்டும் ஆயுதம்) லாங்கல (மண்ணை வாரும் ஆயுதம்) இவைகளை கையில் வைத்துக் கொண்டிருந்தவர்கள், பலவிதமான மரங்கள், கற்கள், உடைந்த மரக் கிளைகள் இவற்றைக் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்கள், கோபத்தோடு அவரை நோக்கி ஓடி வந்தார்கள். திஷ்ட, திஷ்ட நில், நில் என்றும் கத்தினர். எங்கள் குதிரையை நீ தான் கடத்தி வந்திருக்கிறாய். நாங்கள் சகர குமாரர்கள். எங்களை யார் என்று அறிய மாட்டாய். என்று இவர்கள் கத்தியதைக் கேட்டு கபிலன், ரோஷத்தோடு ஹுங்காரம் செய்தார். அளவில்லா பலமுள்ள கபிலனால், மகாத்மாவினால், காகுத்ஸா, சகரபுத்திரர்கள் பஸ்மமானார்கள்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், கபில தரிசனம்என்றநாற்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 41ஸகர யக்ஞ சமாப்தி
வெகு நாட்கள் ஆகியும் புத்திரர்கள் திரும்பி வராததைக் கண்டு ஸகரன் பேரனைக் கூப்பிட்டார். தனக்கு இணையான தேஜஸும், அறிவுக் கூர்மையும், நல்ல கல்வியும் உடையவனான அவனிடம் -குதிரையைக் கடத்திச் சென்றவனைத் தேடிச் சென்று, உன் பெற்றோர்களையும் தேடிப் பார்த்து வா. உள்ளும் புறமும் நல்ல வீரர்கள், சத்வமான நல்ல குணங்களை உடையவர்கள், அவர்களைத் திருப்பி அழைத்து வா. கத்தி, கார்முகம் முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொள். வணக்கத்துக்கு உரியவர்களை வணங்கியும், இடையூறு செய்பவர்களை அழித்தும், சித்தார்த்தனாக, என் யாகத்தின் முடிவைக் காண திரும்பி வா. – இவ்வாறு சகரன் புத்தி சொல்லி பேரனை அனுப்பி வைத்தான். வில்லையும், வாளையும் ஏந்தியவனாக, அதிக பழக்கமில்லாத அவன் சென்றான். பூமியின் அடியில் தந்தையர்களால் குடையப் பட்ட வழியில் சென்று அரசன் சொன்னபடியே, தேவ தானவ, ராக்ஷஸர்களாலும், பிசாச, உரக, பன்னக எனும் மற்றவைகளாலும் வணங்கப் பட்ட திக்கஜங்களைக் கண்டான். அவைகளை வணங்கி, பிரதக்ஷிணம் செய்து, குசலம் விசாரித்து, தன் தந்தையைப் பற்றியும், குதிரையைக் கடத்தியவனைப் பற்றியும் விசாரித்தான். திக் கஜங்கள் பதில் சொல்லின. -அம்சுமான் என்ற அசமஞ்சன் பிள்ளையே, உன் காரியம் நிறைவேறும். யாகக் குதிரையை சீக்கிரமே காண்பாய். -இதைக் கேட்டு ஒவ்வொரு திக்கிலும் இருந்த திக்கஜங்களை விசாரித்தவாறே சென்றான். அந்த திக் பாலகர்களான யானைகளும், விஷயமறிந்து, அழகான வாக்கியங்களையும், தேர்ந்தெடுத்த வார்த்தைகளோடு அழகாக பேசின. அவனை குதிரையோடு வருவாய் என்று வாழ்த்தி வழி அனுப்பின. மேலும் சென்று பித்ருக்கள் பஸ்மமாக கிடந்த இடத்தை அடைந்தான். அவர்கள் இறந்து பஸ்மமானதை அறிந்து ஓ வென்று அழுதான். துக்கம் தாளாமல் இங்கும் அங்கும் பார்க்க, யாக குதிரை சஞ்சரித்துக் கொண்டு இருப்பதையும் கண்டு, பித்ருக்களுக்கு ஜலக்ரியை செய்ய வேண்டி, ஜலம் இருக்கும் இடம் தேடினான். பல இடங்களிலும் தேடி கண்களுக்கு ஜலம் இருக்கும் இடம் புலப்படாத நிலையில், பறவைகளின் அரசனான சுபர்ணனைக் கண்டான். தன் தந்தையரின் மாமனான, பறவையரசனான சுபர்னனைப் பார்த்ததும், மகா பலசாலியான வைனதேயம் என்ற அந்த பறவைகள் அரசன், தானும் அம்சுமானைத் தெரிந்து கொண்டு -வருந்தாதே குழந்தாய், மனிதர்களுள் சார்தூலம் போன்ற பலசாலியே, இந்த வதம் உலக சம்மதமானதே. அளவில்லாத பலம் கொண்ட கபிலனால் இவர்கள் பஸ்மமாக்கப் பட்டார்கள். இவர்களுக்கு லௌகிகமான (உலகில் உள்ள)தண்ணீரைக் கொண்டு ஜலக்ரியை செய்ய முடியாது. பித்ரு கார்யங்கள் செய்ய முடியாது.ஹிமவானுடைய மூத்த மகளான கங்கை, அவளைக் கொண்டு உன் பித்ருக்களுக்கு கடன்களைச் செய். பஸ்மமாக செய்யப் பட்ட இவர்களை, உலகத்தை பவித்திரமாக்கும் கங்கை நல்ல கதியடையச் செய்வாள். அவளுடைய லோக காந்தியுடைய கங்கையின் நீரால் அலம்பப்பட்டு, இந்த ஆறாயிரம் சகர புத்திரர்களும் ஸ்வர்கம் செல்வார்கள். தேவ லோகத்திலிருந்து கங்கையைக் கொண்டு வா. பூமிக்கு கங்கையை கொண்டு வர முடியுமானால், கங்கையை இறக்கி கொண்டு வர சக்தி இருக்குமானால், இதோ இந்த குதிரையையும் பிடித்துக் கொண்டு சென்று வா. புருஷர்களில் ரிஷபம் போன்றவனே, பாட்டனாரின் யாகத்தையும் பூர்த்தி செய்து வை.- என்றான். சுபர்ணனின் வார்த்தையைக் கேட்டு அதி வீரனான அம்சுமான், அவசரமாக குதிரையைப் பற்றி இழுத்துக் கொண்டு, திரும்பி வந்தான். தீக்ஷையில் இருந்த அரசனைக் கண்டு நடந்தவற்றைச் சொல்லி, சௌபர்ணன் சொன்னதையும் சொல்லி, கோரமான வ்ருத்தாந்தங்கள், இவ்வாறு நடந்தது என்பதையும் சொல்லி, அம்சுமான் விவரிக்க, அரசன் முறைப்படி யாகத்தை முடித்து, தன் ஊரை அடைந்தான்.யாகத்தை முடித்த மகிழ்ச்சி எதுவும் இன்றி அரசன்,கங்கையைக் கொண்டு வருவதில் எதுவும் நிச்சயமாக செய்ய முடியாத நிலையில் இருந்தான். வெகு காலம் எதுவும் தீர்மானமாக செய்ய முடியாமல், முன்னூறு வருஷங்கள் ஆண்ட பின் தேவ லோகம் சென்றான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ஸகர யக்ஞ சமாப்திஎன்ற நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம்)
அத்தியாயம் 42ப4கீ3ரத2 வரப்ரதா3னம் (பகீரதனுக்கு வரம் அளித்தல்)
சகர அரசன் காலம் சென்றபின், ப்ரஜைகள் நல்ல தார்மீகனான அம்சுமானை அரசனாக்கத் தீர்மானித்தனர். ரகு நந்தனா, அந்த அம்சுமான் மிக நல்ல அரசனாக இருந்தான். அவனுடைய மகன் திலீபன் என்ற பெயர் பெற்ற அரசன். அவனிடத்தில் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு புண்யமான ஹிமயமலை சிகரத்தில் பயங்கரமாக தவம் செய்யலானான். இரண்டு, மூன்றுஆயிர வருஷங்கள் கடந்தன.மிகப் பெரிய அரசன், தபோவனத்திலேயே காலம் சென்றான். திலீபன் தன்முன்னோர்கள் வதம் செய்யப்பட்டதை அறிந்து துக்கம் அடைந்தாலும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். எப்படி கங்கையை பூமிக்கு கொண்டு வருவது? எப்படிஅவர்களுக்கு நீர்க்கடன் செய்வது? இவர்களை எப்படி கரையேற்றுவேன் என்று கவலை கொண்டான். இது போல தினமும் கவலைப் பட்டுக் கொண்டிருந்த அவனுக்கு ப4கீரத2ன் என்ற மகன், பரம தார்மீகனான பிள்ளை பிறந்தான். திலீபன் பல விதமாக யாகங்கள் செய்தான். முன்னூறு ஆயிரவருஷங்கள் இருந்து ஆட்சி செய்தபின் அவர்களை உத்தாரணம் செய்வது பற்றி எதுவும் நிச்சயம் செய்ய முடியாமலேயே வியாதியினால் இறந்தான். தன் புண்ய கர்மாக்களின் பலனாக இந்திர லோகம் போய் சேர்ந்தான்.பகீரதன் ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைக்கப்பட்டான். ராஜ ரிஷியாக பரம தார்மீகனாக இருந்த பகீரதன், சந்ததியில்லாமல் புத்திரனை விரும்பியும், கங்கையைக் கொண்டு வரவும் என்ன செய்யலாம் என்று மந்திரி சபையைக் கூட்டி ஆலோசித்தான். மந்திரிகளிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு கங்கையைக் கொண்டு வருவதே குறியாக தவம் செய்யலானான். கோ3கர்ணம் என்ற இடத்தில் கடுமையாக தவம் செய்தான். இந்திரியங்களை அடக்கியவனாக, கைகளை மேலே தூக்கியவாறு, ஐந்து அக்னிகளுக்கு நடுவில் இருந்து மாதம் ஒருமுறை ஆகாரம் ஏற்றுக் கொள்பவனாக ஆயிரம் வருஷம் கழிந்தது. இந்த தவத்தால் மகிழ்ந்த ப்ரஜாபதியான ப்ரும்மா, தேவர்களின் தலைவன், தேவர்கள் கூட்டத்தோடு வந்து தவம் செய்யும் பகீரதனிடம் மகாபாஹோ, உன் தவத்தால் திருப்தியடைந்தேன். என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். மூவுலகுக்கும் பிதாமகரான அவரை, கை கூப்பி வணங்கியவாறு பகீரதன் உங்களுக்கு என் தவத்தினால் திருப்தி உண்டாயிற்று என்றால், தவத்திற்கு பலன் உண்டு என்றால், சகரனுடைய பிள்ளைகள் என் கையால் நீரை பருகட்டும்.கங்கையின் ஜலத்தில் அவர்கள் பஸ்மத்தை நனைத்தால் தான் அவர்கள் ஸ்வர்கம் செல்ல முடியும். என் தந்தைக்குத் தந்தை நல்ல கதி அடையவும், என் குலம் விளங்கவும் புத்திரனைக் கொடுங்கள். இக்ஷ்வாகு வம்சம் நசித்துப் போகாமல் இருக்க வரம் கொடுங்கள். என்று வேண்டினான். சர்வலோக பிதாமகரான ப்ரும்மா, சுபமான, மதுரமான வார்த்தைகளால் பதில் அளித்தார். உன் மனோரதம் சிறந்தது. மகா ரதியான பகீரதனே, அப்படியே ஆகட்டும். இக்ஷ்வாகு குலம் வளரட்டும். ஹிமவானின் மூத்த மகளான கங்கையைத் தாங்க சிவ பெருமானைப் பிரார்த்தனை செய். அவர் தான் அவளைத் தாங்கக் கூடியவர்.பூமி அவள் வேகத்தைத் தாங்காது. சூல பாணியான அவரைத்தவிர வேறு யாராலும் வேகமாக வரும் கங்கையைத் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு சொல்லி மருத் கணங்கள் புடை சூழ ப்ரும்மா திரும்பிச் சென்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், பகீரத வரப் பிரதானம்என்றநாற்பத்து இரண்டாவது அத்தியாயம்)
அத்தியாயம் 43 கங்கா அவதரணம் (கங்கை இறங்கி வருதல்)
தேவ தேவர் திரும்பிச் சென்றபின், கால் கட்டை விரலால் பூமியைத் தொட்டபடி நின்று கொண்டு (கால் கட்டை விரல் பலத்தில் நின்று கொண்டு) பூமியில் ஒரு ஆண்டு உபாசனை செய்தான். புஜங்களை உயரத் தூக்கியபடி, ஆதாரம் எதுவும் இல்லாமல், வாயுவே பக்ஷணமாக கொண்டு, வேறு புகலிடம் இல்லாதவனாக அசையாமல், ஸ்தா2ணுவைப் போல நின்று இரவும் பகலும் எதிரிகளை நாசம் செய்ய சக்தி வாய்ந்த அந்த அரசன், தவம் செய்தான். வருஷம் முடிந்த சமயம் எல்லா உலகும் வணங்கி நிற்க, பசுபதி ப்ரத்யக்ஷமானார். -உன் தவத்தினால் மகிழ்ந்தேன் அரசனே, உனக்குப் பிரியமானதைச் செய்கிறேன். சைல ராஜ சுதாவான கங்கையை என் தலையில் தாங்கிக் கொள்கிறேன். – என்றார். பின், ஹிமவானின் மூத்த மகள், மிகப் பெரிய உருவம் எடுத்து தாங்க முடியாத வேகத்தோடு, ஆகாயத்திலிருந்து சிவ பெருமானின் தலையில் விழுந்தவள், அவருடைய முடியில் காணாமல் போனாள். அந்த தேவி மனதில் நினைத்தது வேறு.தாங்க முடியாத வேகம் உடைய கங்கை நான். சிவபெருமானையும் அடித்துக் கொண்டு பாதாளம் செல்வேன் என்று எண்ணியதைப் புரிந்து கொண்டு, அவளுடைய கர்வம் அடங்கத்தான் சிவ பெருமான் கோபம் கொண்டு அவள் புத்தியை மாற்ற நினைத்தார் முக்கண்ணனான பெருமான். புண்யமான ருத்ரனுடைய தலையில் விழுந்த பாவனமான கங்கை, ஜடா மண்டல பள்ளங்கள் குகைகள் போல, இமயமலையைப்போலவே இருக்க, பலவிதமாக முயற்சி செய்தும் பூமியை வந்தடைய முடியவில்லை. ஜடா மண்டலத்தில் சுற்றி சுற்றி வந்தவள் செய்வதறியாது, வெளியில் வரவும் முடியாது திகைத்தாள். பல நூறு வருஷங்கள் இவ்வாறு பிரமையுடன் சுழன்று கொண்டிருந்தாள். திரும்பவும் பகீரதன் தவம் செய்தான். ரகு நந்தனா, அவனைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சிஅடைந்த சிவ பெருமான் பி3ந்து3 சரம் நோக்கி கங்கையை விட்டார். அவ்வாறு விடப் படும் போது ஏழு கிளைகள் தோன்றின. பிரவாகங்கள் தோன்றின. ஹ்லாதினீ, பாவனீ, நளினீ, இவை மூன்றும் கிழக்கு நோக்கிச் சென்றார்கள். சிவ ஜலமாக சுபமாக பிரவகித்துச் சென்றார்கள். சுச, சீதா, சிந்து, மகா நதிகளாக இவைகள் மேற்குத் திசையில் பிரவகித்துச் சென்றன. அலக நந்தா என்று புகழ்பெற்ற, உலக பாவனியான ஏழாவது நதி பகீரதனை நோக்கி பிரவாகமாக வந்தது.பகீரதனும் திவ்யமான தேரை எடுத்துக் கொண்டு முன் செல்ல, கங்கை அவனைத் தொடர்ந்து சென்றது. ஆகாயத்தில் இருந்து, சங்கரர் தலையிலிருந்து பூமி வந்தவள், பயங்கரமான சப்தத்துடன் நீரை வாரியிறைத்தவாறு வந்தாள். மீன், ஆமை இவைகள் கூட்டமாகவும், சிம்சுமார கணங்களும், கங்கையுடன் கூடவே விழும்போது கூடவே வந்து அழகாக விழுந்தன. அப்பொழுது தேவ, ரிஷி, கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்த கணங்கள், ஆகாயத்திலிருந்து பூமிக்குச் செல்லும் கங்கை போவதைப் பார்த்தவாறு இருந்தனர். ஒரு ஊர் போன்ற பெரிய பெரிய விமானங்களிலும், குதிரை, யானைகளிலும் ஏறி, படகுகளில் ஏறிக் கொண்டும் தேவதைகள் அங்கு வந்து சேர்ந்தனர். கங்கை பூமியில் விழுவதுமிக அத்புதமான காட்சியாக இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த தேவ கணங்கள், கண் கொட்டாமல் பார்த்தனர், ஆபரணங்களின் ஒளியினால், சுர கணங்கள் கூடவே வரும்போது தெறித்த ஒளியினால், நூறு சூரியர்கள் பிரகாசமாக ஆகாயத்தில் உதயமானதை போலத் தெரிந்தது. சஞ்சலமான, சிம்சுமார கணங்கள், மீன்கள் இவை ஆகாயத்திலிருந்து விழும் மின்னல் போல விளங்கின. வெண்மையான தண்ணீரால் நனைந்து, பல விதமாக ஆயிரக் கணக்காக பிரதி பலிக்கும் ஹம்ஸங்கள், நீல வானத்தில் வெண் மேகங்கள் மிதப்பது போலத் தெரிந்தன. சில சமயம் வேகமாக வருகிறாள். சில சமயம் வளைந்து வளைந்து வருகிறாள். மிக வினயமாக ஒரு சமயம், ஒரு சமயம் மிக அத்புதமாகத் தெரிவாள். சில சமயம் மிக மெதுவாக நடந்து செல்வது போல, நீர் நீரினாலேயே அடி பட்டது போல, அடிக்கடி மேல் பாதையாகச் சென்று தடாலென்று விழுவதும், சங்கரருடைய தலையிலிருந்து விழுந்தது, பூமியில் திரும்ப விழுவது போலவும், அந்த நீரே நிர்மலமாக, கல்மஷமின்றித் தோன்றியது.பூமியில் வசித்தவர்கள், தேவ, ரிஷி, கந்தர்வர்கள், –ப4வாங்க3 பதிதம் தோயம் பவித்திரம்–சிவ பெருமானின் சரீரத்திலிருந்து விழுந்த ஜலம் என்பதாலேயே பவித்திரமானது என்று கைகளால் தொட்டுப் பார்த்து, தலையில் தெளித்துக் கொண்டனர். ஆகாயத்திலிருந்து பூமிக்கு, சாப வசத்தால் விழுந்தவர்கள், அபிஷேகம் செய்து கஷ்டம் தீரப் பெற்றனர். கங்கை நீரால், பவித்திரமான ஜலத்தால் பாபம் நீங்கப் பெற்றவர்களாக திரும்பவும் ஸ்வர்கம் அடைந்து தங்கள் தங்கள் உலகங்களை அடைந்தனர். உலகமே இந்த தண்ணீரைக் கண்டு மகிழ்ந்தது.கங்கையில் முழுக்காட்டப் பெற்று கல்மஷங்கள் நீங்கியவர்களாக மகிழ்ச்சியடைந்தனர்.பகீரதன் இவர்களைக் கண்டு ரசித்தபடி, முன்னால் திவ்ய ரதத்தில் செல்ல, கங்கை பின் தொடர்ந்து பிரவாகமாகச் சென்றாள். தேவர்களும், ரிஷி கணங்களும், தை3த்ய தா3னவ ராக்ஷஸர்களும், க3ந்த4ர்வ யக்ஷர்களும், கின்னர மகோரக3ங்களூம், எல்லா அப்ஸர ஸ்த்ரீகளும் ப4கீரத2னைத் தொடர்ந்து செல்லும் கங்கையையைத் தொடர்ந்து சென்றனர். மிகவும் சந்தோஷமாக, ஜலத்தில் வாழும் ஜீவ ராசிகளும், எங்கு பகீரத ராஜா இருக்கிறானோ, அங்கு புகழ் வாய்ந்த கங்கா இருப்பாள், நதிகளில் ஸ்ரேஷ்டமானவள், எல்லா பாபங்களையும் அழிப்பவள், இவ்வாறு கொண்டாட, கங்கையின் பிரவாகத்துக்கு ஏற்ப, அதைக் கண்டவர்களின் உற்சாகமும் கரை புரண்டோட, பின் தொடர்ந்து செல்லும் போது, ஜஹ்னோ என்ற ரிஷி யாகம் செய்து கொண்டிருக்கும் யாக சாலையில் யாகம் செய்யும் யக்ஞ வாடம் என்ற இடத்தை கங்கை அடித்துக் கொண்டு சென்று விட்டாள். ராகவா| இதை கங்கையின் அலட்சியம் என்று கோபித்துக் கொண்ட முனிவர், கங்கையின் பரம அத்புதமான நீரை முழுவதுமாக குடித்து விட்டார். பின்னால் வந்த தேவர்களும், கந்தர்வர்களும்ரிஷிகளும், ஆச்சர்யத்தில் திகைத்து நின்று விட்டனர். பின், பகீரதன் ஜஹ்னூ முனிவரை பலவிதமாக பூஜித்து, உத்தமமான அந்த ரிஷியிடம், கங்கையை தன் பெண்ணாக ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டினான். அதனால்சந்தோஷமடைந்த முனிவர், தன் காதுகளிலிருந்து அவளை வெளியே விட்டார். அதனால் ஜஹ்னு சுதா என்று கங்கை அழைக்கப் படுகிறாள். ஜாஹ்னவீ என்று பெயர் பெற்றாள். திரும்பவும் பகீரதனின் ரதத்தைத் தொடர்ந்து செல்லலானாள். ஸாக3ரத்தைச் (ஸாக3ரம்-ஸமுத்திரம்) சென்றடைந்தாள். ரசாதலம் சென்று தான் வந்த காரியம் பலன் பெற, பகீரதனும் ராஜ ரிஷியாக, தன் முயற்சியினால் கங்கையைக் கொண்டு வந்து, பஸ்மமாக ஆனாலும் மனதில் வருந்திய படி இருந்த தன் பாட்டனார்களை அவர்களின் பஸ்ம ராசியில் கங்கா ஜலத்தை பெருகச் செய்து, பாவங்கள் கரைந்தவர்களாக, ஸ்வர்க லோகத்தை அடையச் செய்தான். ரகோத்தமா, இதுதான் கங்கை கதை.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், கங்காவதரணம் என்றநாற்பத்து மூன்றாவது அத்தியாயம்)
அத்தியாயம் 44 ஸாக3ரோத்3தா4ரம் (ஸக3ர புத்திரர்களை கரையேற்றுதல்)
பகீரத ராஜா கங்கையைத் தொடர்ந்து சென்று, பூமியின் அடியில் அவர்கள் பஸ்மமாக இருந்த இடத்தைத் தேடிச் சென்றான். கங்கையின் நீரில் அந்த பஸ்மம் நனைந்தவுடனேயே, சர்வ லோக பிரபுவான ப்ரும்மா, ராஜாவிடம் – ஹே நர சார்தூல, ஸகரனுடைய ஆறாயிரம் பிள்ளைகள் இன்று பவ ஸாகரத்தைத் தாண்டி, தேவர்கள் போல தேவலோகத்தை அடைந்தனர். ஸாகர ஜலம் உலகில் இருக்கும்வரை, ஸகரனுடைய புத்திரர்கள் ஸ்வர்க லோகத்தில் இருப்பார்கள். உனக்கு இவள் மூத்த மகளாக இருப்பாள். உன்னைச் சார்ந்து இவள் பெயர் பெற்று புகழோடு விளங்குவாள். க3ங்கா3, த்ரிபத2கா3, பா4கீரதி2 என்ற பெயர்களுடன் மூன்று மார்கமாக இவளை த்யானிக்க முடியும் என்பதால் த்ரிபதகா. உன் பட்டனார்களுக்கு தற்சமயம்,அரசனே, பித்ரு காரியங்கள் செய்வாயாக.உன் பிரதிக்ஞையை முடி. ராஜன், உன் முன்னோர்கள் பலசாலிகளாகவும், புகழ் வாய்ந்தவர்களாக இருந்தும் கூட, இந்தக் காரியத்தை செய்ய முடியவில்லை. அம்சுமான் கூட கங்கையை ப்ரார்த்தித்தான். ஆனாலும் பிரதிக்ஞையை முடிக்க முடியவில்லை. எனக்கு சமமான பலம் கொண்டஉன் தந்தை திலீபன்,ராஜ ரிஷி,குணவான், க்ஷத்திரிய தர்மத்தை கடை பிடித்தவன், என்று இவ்வளவு இருந்தாலும், கங்கையைப் பிரார்தித்தானே தவிர, கொண்டு வர சக்தியில்லை. அதை நீ சாதித்துக் காட்டியிருக்கிறாய். பிரதிக்ஞையை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறாய். எல்லோருக்கும் சம்மதமான பெரும் புகழை உலகில் அடைந்திருக்கிறாய். கங்கையை ஆகாயத்திலிருந்து கொண்டு வந்து தர்மத்தின் சிறந்த பலனையும் பெற்றவனாக ஆகிறாய்.உன் பாட்டனார் சாம்பலில் கங்கை நீரை பிரவாகமாக விழச் செய். நல்லவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த கங்கை நதி நீர், புண்யமானது, சுத்தமானது. உனக்கு மங்களம் உண்டாகட்டும் – என்று சொல்லி ப்ரும்மா தன் உலகம் சென்றார். ராஜரிஷியான பகீரதனும், நீர்க் கடன்களை முடித்து விட்டு, சாகரர்களுக்குச் செய்ய வேண்டிய க்ரியைகளை விதி முறைப் படி செய்து முடித்து விட்டு, தன் ஊருக்கு போய் சேர்ந்தான். தன் விருப்பம் நிறைவேறிய திருப்தியோடு அரசை ஆண்டு வந்தான். அவனை அரசனாக பெற்று உலகம் மகிழ்ந்தது. நிறைந்த மன அமைதியோடு வாழ்ந்தான். ராமா, இது தான் கங்கையின் விஸ்தாரமான கதை. நீ கேட்டபடியே சொன்னேன். இதோ சந்த்யா காலமும் நெருங்கி விட்டது. உனக்கு மங்களம் உண்டாகட்டும்.கங்காவதரணம் என்ற இந்த சுபமான கதையை க்ஷத்திரியர்களுக்கும், மற்றவர்களுக்கும்யார் சொல்லுகிறார்களோ, அவர்களும் இந்த தன்யமான புகழையும் , ஆயுளையும், புத்திர செல்வத்தையும், ஸ்வர்க பதவியையும் தரும் சரித்திரத்தைக் கேட்கிறார்களோ அவர்களூம், விரும்பியவற்றை அடைவார்கள். இதனால் பித்ருக்கள் சந்தோஷமடைகிறார்கள். தேவதைகள் மகிழ்ச்சியடைகிறார்கள். கேட்பவர்கள் யாரானாலும், பாபங்கள் அகல, ஆயுளும் கீர்த்தியும் கிடைக்கப் பெறுவார்கள்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், சாக3ரோத்4தா4ரோஎன்றநாற்பத்து நான்காவது அத்தியாயம்)
அத்தியாயம் 45 அம்ருதோத்பத்தி(அம்ருதம் தோன்றுதல்)
லக்ஷ்மணனும், ராமனும், விஸ்வாமித்திரர் சொன்ன கதையைக் கேட்டு மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர்.-நீங்கள் சொன்ன இந்த கதை மிகவும் அத்புதமாக இருக்கிறது. கங்கையைக் கொண்டு வந்ததும், சமுத்திரத்தை நிரப்பியதும், புண்யமான இந்த கதையைக் கேட்டு இரவு எங்களுக்கு ஒரு க்ஷணம் போல சென்று விட்டது. – என்றனர். திரும்பத் திரும்ப இந்த கதையைப் பற்றி பேசிக் கொண்டும் நினைத்துக் கொண்டும் சகோதரர்கள் இருவரும் இரவைக் கழித்தனர். விடியற்காலை தன் நித்ய கர்மாக்களை முடித்துக் கொண்டு ராமர் விஸ்வாமித்திரரிடம் சொன்னார்.-இரவு நல்ல விதமாக சென்றது.நிறையத் தெரிந்து கொண்டோம். இப்போது புண்யமான த்ரிபதகா நதியான கங்கையைக் கடந்து செல்வோம்.நீங்கள் வந்திருப்பதை அறிந்து இதோ படகும் சீக்கிரமாக வந்து விட்டது. இங்குள்ள முனிவர்கள் சௌகர்யமாக பிரயாணம் செய்ய வசதியாக உள்ளது இந்த படகு.-இவ்வாறு ராகவன் சொல்லவும், ரிஷியும் மற்ற முனிவர்களுடன் படகில் ஏறிக் கிளம்பினார்.வடக்கு நோக்கி படகை செலுத்த ஆரம்பித்தனர். ரிஷி கணங்களை வழி அனுப்பி விட்டு, கங்கைக் கரையில் இறங்கி நடந்து விசாலமான ஒரு ஊரைக் கண்டனர். ஸ்வர்கத்திற்கு சமமான அந்த ஊரில், ராம லக்ஷ்மணர்களுடன் ரம்யமான காட்சிகளைப் பார்த்துக் கொண்டே, நடந்தனர். அப்போது ராமர் கேட்டார். இது யாருடைய ஊர்? விசாலமான இந்த ஊரைப் பார்த்து குதூகலம் உண்டாகிறது.இதை ஆளும் ராஜ வம்சம் எது? முனிவரே, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்.இதை விவரமாகச் சொல்லுங்கள்.பழமையான விசாலமான அந்த ஊரின் கதையைச்சொல்ல முனிவர் ஆயத்தமானார்.ராமா, கேள். இந்திரனுடைய கதை, நான் கேட்டபடி சொல்கிறேன்.இந்த தேசத்தில் முன்பு க்ருதயுகத்தில், திதியின் புத்திரர்கள், மிக பலசாலிகளாக இருந்தனர். அதிதியின் புத்திரர்கள், மகாபாகர்களாக, வீரர்களாக, நல்ல தர்ம சிந்தனை உள்ளவர்களாக இருந்தனர். இப்படியிருக்கையில், மனிதர்களுள் புலி போன்றவனே, ராமா, இவர்களுக்கு ஒரு ஆசை வந்தது. முதுமை வராமலும், மரணம் இன்றியும், வியாதி அண்டாமலும் இருக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இவ்வாறு யோசித்து யோசித்து, ஒரு எண்ணம் அவர்கள் மனதில் உருப்பெற்றது.ஸாகரத்தைக் கடைந்து ரஸம் எடுத்து கிடைத்தால் சாப்பிட்டு பார்க்கலாமே.இந்த எண்ணத்தை உடனே செயல் படுத்த முனைந்தனர். வாசுகியை கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் கொண்டு பாற் கடலைக் கடைய ஆரம்பித்தனர். ஆயிரம் வருஷங்கள் கடைந்த பின் ஆயுர்வேதமே உருக் கொண்டது போல ஒரு மனிதன், கையில் கமண்டலுவும், தண்டமும் கொண்டு, மிகத் தார்மீகனாகத் தோன்றினான்.இந்த தன்வந்திரிக்கு முன், நீரைக் கடைவதால் உண்டான ரஸத்தில் இருந்து அப்ஸர (அப்பு-தண்ணீர், ரஸ மாற்றிப் போட்டால்ஸர, அப்ஸர) ஸ்த்ரீகள் உண்டாயினர். ஆறு கோடி உத்தமமான ஸ்த்ரீகள் இப்படித் தோன்றினர்.இவர்களுக்கு பரிசாரிக (வேலையாட்கள்) என்று கணக்கில்லாமல் கூட்டம் கூட்டமாக வரவும், தேவர்களும், தானவர்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. யாருமே ஏற்றுக் கொள்ளாததால், தங்கள் தனித் தன்மையை இழந்து சாதாரண ஸ்த்ரீகள் போல் ஆனார்கள். வருணனுடைய மகளான வாருணீ, இதிலிருந்துஉண்டானவள் தன்னை ஏற்றுக் கொள்ளும் கணவனைத் தேடினாள். திதியின் புத்திரர்கள் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. குற்றமற்ற அவளை அதிதியின் புத்திரர்கள் ஏற்றுக் கொண்டனர். இதன் பின் அசுரர்கள் தை3த்யர்கள் என்றும், சுரர்கள் அதிதி புத்திரர்கள் என்றும் ஆயிற்று. வாருணி கிடைத்ததிலிருந்து சுரர்கள் மனம் மகிழ்ந்தவர்களாகவும், திருப்தியுடையவர்களாகவும் ஆனார்கள். உச்சைஸ்ரவஸ் என்ற சிறந்த குதிரையும், கௌஸ்துபம் என்ற மணி ரத்னமும் அந்த சமயம் தோன்றின. நரஸ்ரேஷ்ட, அதன் பின் அமுதமும் தோன்றியது. இந்த அமுதத்தை பெற சண்டையும், அதன் பலனாகமிகப் பெரிய குலநாசமும் உண்டாயிற்று.அதி3தி புத்திரர்கள், தி3தி புத்திரர்களை அடித்தனர். ஒரே இடத்தில் அசுரர்கள் ராக்ஷஸர்களோடு வந்து சேர்ந்தனர். மூவுலகையும் கலக்கியபடி யுத்தம் நடந்தது. எல்லாமே அழிந்து போய்விடும் என்ற நிலையில் விஷ்ணு வந்தார். மகா பலசாலியான அவர், மாயாமயமான மோகினீ ரூபத்தை எடுத்துக் கொண்டு, அமுதத்தை அபகரித்துச் சென்று விட்டார். ப்ரப4விஷ்ணுவான விஷ்ணுவை எதிர்த்து நின்றவர்கள் நசுக்கப் பட்டனர். ப்ரத்யக்ஷமாய், புருஷோத்தமனான விஷ்ணுவைக் கண்டு கொண்ட வீரர்களான அதிதி புத்திரர்கள், திதி புத்திரர்களைக் கொன்று குவித்தனர்.தைத்யர்களுக்கும், ஆதித்யர்களுக்கும் நடந்த கோரமான யுத்தத்தில், திதி புத்திரர்களை அழித்து, ராஜ்யத்தையும் அடைந்து புரந்திரனான இந்திரன், ரிஷி கணங்களுடனும், சாரணர்களுடனும் கூடி மகிழ்ச்சியோடு ஆண்டு வந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், அம்ருதோத்பத்திஎன்றநாற்பத்துஐந்தாவது அத்தியாயம்)
அத்தியாயம் 46 தி3தி கர்ப்ப பேதம் (திதியின் கர்ப்பத்தை அழித்தல்)
தன் புத்திரர்கள் கொல்லப் பட்டதால் திதி மிகவும் துக்கம் அடைந்தாள். கணவனான மாரீசனை வேண்டிக் கொண்டாள்.என் பிள்ளைகள் அனைவரையும் இழந்து விட்டேன். உன் புத்திரர்கள் தான் அவர்களைக் கொன்றனர்.அதனால் இந்திரனைக் கொல்லக் கூடிய ஒரு பிள்ளையை வேண்டுகிறேன். நீண்ட நாளானாலும் தவம் செய்து நான் ஒரு பிள்ளையைப்பெற வேண்டும் அவன் இந்திரனைக் கொல்ல வேண்டும். எனக்கு இப்படி ஒரு பிள்ளை பிறக்க அனுக்ரஹம் செய்யுங்கள். இவ்வாறு அவள் சொன்னதைக் கேட்டு மரீசி புத்திரரான கஸ்யபரும் அப்படியே ஆகட்டும் என்று அனுக்ரஹிக்க அவளும் கர்ப்பம் தரித்தாள். சுசியாக தவம் செய்வாயாக என்று சொல்லி ஆயிரம் வருஷ முடிவில் நீ -சக்ர ஹந்தாரம்- (இந்திரனைக் கொல்லக் கூடிய ) பிள்ளையைப் பெறுவாய். ஆனால் இந்த ஆயிரம் வருஷமும் நீ தவ நிலை கெடாமல், நியமம் தவறாமல், விரதங்களை அனுஷ்டித்து வரவேண்டும். அப்பொழுது என் மகனை, மூவுலகுக்கும் நாயகனாக இருக்கக்கூடிய, இந்திரனை ஜயிக்கக்கூடியபிள்ளையைப்பெறுவாய்என்று சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்து சமாதானம் செய்து மங்களம் உண்டாகுக என்று ஆசிர்வதித்து தான் தவம் செய்ய கிளம்பி விட்டார். அவர் வெளியே சென்றதும், திதியும் குசப்லவம் என்ற இடத்திற்குச் சென்று மகிழ்ச்சியுடன் தவம் செய்ய ஆரம்பித்தாள். உக்ரமாக அவள் தவம் செய்து கொண்டிருந்த காலத்தில், நல்ல குணவான் போல இந்திரன் வந்து தவம் செய்யும் அவளுக்கு பணிவிடைகள் செய்து வந்தான். அக்னி, தர்ப்பை, விறகு, ஜலம், பழங்கள், கிழங்குகள் இவற்றைக் கொண்டு வந்து தந்தான். இது தவிர தேவையானதைக் கேட்டதும் கொண்டு வந்து தந்தான். அவள் சிரமம் தீர பல விதமாக உபசாரம் செய்தான். ஆயிரம் வருஷங்கள் முடிய பத்து நாட்களே இருக்கும் பொழுது, திதி அவனிடம் சொன்னாள்.தவம் செய்தபடியே ஆயிரம் வருஷங்கள் ஓடி விட்டன. சில நாட்களே பாக்கி. நீ உன் சகோதரனைக் காண்பாய். ஜயத்தை விரும்பும் அவனை,உன் காரணமாகவே தாங்குகிறேன். மூவுலகும் வெற்றி கொள்ளப் போகும் என் புத்திரர்களுடன் கூட கவலையின்றி அனுபவித்து இருப்பாய்.நான் யாசித்தவுடன் மகாத்மாவான உன் தகப்பனார், ஆயிரம் வருஷ முடிவில் எனக்கு பிள்ளை பிறக்கும் என்று வரம் தந்தார். இவ்வாறு இந்திரனிடம் சொன்ன திதி, மத்யான்ன வேளையில், நித்திரை கண்களைச் சுழற்ற, பாதங்களில் தலை படும் படி, தூங்கி விட்டாள். பாதத்தில் தலை பட தூங்கும் அவளை, சுசி-ஆசாரம், ஆசாரத்திலிருந்து வழுவியவளாகக் கண்டு இந்திரன் சிரித்தான். மகிழ்ந்தான். சரீர விவரத்தில் நுழைந்து கர்ப்பத்தை ஏழாக துண்டித்தான். வஜ்ரத்தால் அடித்து துண்டாக்கப் பட்டவுடன் கர்ப்பத்திலிருந்த குழந்தை அழுதது. உடனே திதி விழித்துக் கொண்டாள். அழாதே, அழாதே என்று இந்திரன் கர்ப்பத்தைப் பார்த்துச் சொன்னான்.சொல்லிக்கொண்டே மேலும் அழும் திதி கர்ப்பத்தை அடித்தான். கொல்லாதே, கொல்லாதே என்று திதி கூக்குரலிட, தாயின் வார்த்தைக்கு மதிப்பு தருபவனாக இந்திரன் நிறுத்தினான். தானும் கீழே குதித்தான். வஜ்ரத்தை கையில் வைத்தபடியே, கை கூப்பியபடி, திதியிடம் இந்திரன் சொன்னான். அசுசியாகத் தூங்கினாய் தேவி, நான் அந்த சமயத்தை பயன் படுத்திக் கொண்டு, யுத்தத்தில் இந்திரனைக் கொல்லக் கூடிய புத்திரன் என்று நீ வரம் கேட்டு, பெற போகும் பிள்ளையைக் கலைத்தேன். அதனால் என்னை மன்னித்து விடு என்றான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில்,திதி கர்ப்ப பேதம் என்றநாற்பத்துஆறாவது அத்தியாயம்)
அத்தியாயம் 47 விசாலா கமனம்.
தன் கர்ப்பம் ஏழாக துண்டிக்கப்பட்டதை அறிந்து திதி மிகவும் துக்கம் அடைந்தாள். எதிர்க்க முடியாத வீரனான ஸஹஸ்ராக்ஷனைபார்த்து குரல் தழதழக்க கூறினாள். என் தவற்றினால், கர்ப்பத்திலிருந்த என் குழந்தை ஏழாக துண்டிக்கப்பட்டது. எதிரி பலசாலியாக இருந்தால் ஆரம்பத்திலேயே அழிப்பது உன் வழக்கம். அதனால், இதில் உன்னையும் குற்றம் சொல்லவில்லை. என் கர்பம் வீணாகக் கூடாது. அதனால் ஒன்று செய். வாயுவின் ஏழு வகைகளிலும் ஸ்தான பாலகர்களாக இவர்கள் இருக்கட்டும். காற்றை வாகனமாக கொண்டு உலகில் ஸஞ்சரிக்கட்டும். மாருதர்கள் என்ற பெயருடனும், திவ்யமான ரூபத்துடனும் இந்த என் பிள்ளைகள் பெயர் பெற்று விளங்கட்டும். ப்ரும்ம லோகம் போகட்டும். இந்திர லோகமும் போகட்டும். திவ்ய வாயு என்ற புகழுடன் உன் சாஸனப்படி திசைகளை பாலிக்கட்டும். என் குழந்தைகள், தேவர்களாக சஞ்சரிப்பார்கள். மாருதர்கள் என்று புகழ் பெறட்டும். ஸஹஸ்ராக்ஷனான புரந்தரன் இதைக் கேட்டு, கை கூப்பியவாறு, திதியிடம் சொன்னான். நீங்கள் சொன்னபடியே இவை நடக்கும் தாயே, சந்தேகமேயில்லை, உன் பிள்ளைகள் தேவர்களாக சஞ்சரிப்பார்கள். இவ்வாறு அவர்களுக்கு உறுதி சொல்லி தபோ வனத்தில் தாய் தந்தையர்களை விட்டு விட்டு த்ரித்வம் என்று சொல்லப்படும் ஊருக்குச் சென்றான் என்பதாக நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். காகுத்ஸா |இந்த தேசம் தான் அது. முன்பு இந்திரன் வசித்த இடம்.அலம்புஸா என்ற ஸ்திரீயிடம், பிறந்த விசாலன் என்று அரசன் இங்கு இருந்து இதை நிர்மாணித்ததால், விசாலா என்று பெயர் பெற்றது. இந்த விசாலனுடைய மகன் ஹேம சந்திரன் என்பவன், அவனுக்குப் பிறகு சுசந்திரன், சுசந்திரன் மகன் துர்ம்ராஸ்வன், அவன் மகன், ஸ்ருஞ்சயன், அவன் பிள்ளை ஸஹதேவன். ஸஹதேவன் நல்ல பிரதாபம் உடையவன். இவன் மகன் தான் தார்மிகனான குஸாஸ்வன். குஸாஸ்வனுக்கு ஸோமதத்தன் என்ற பிள்ளை. ஸோமதத்தனின் மகன் காகுத்ஸன் என்று புகழ் பெற்று விளங்கினான். அவன் பிள்ளை தான் தற் சமயம் இந்த புரியை ஆளும் சுமதி என்ற அரசன். இக்ஷ்வாகுவின் பிரஸாதத்தால், இந்த வைசாலிகா நகரைச் சேர்ந்த அரசர்கள் நல்ல தர்ம சிந்தனையோடு, தீர்காயுசுடன், வீரர்களாக, மகாத்மாக்களாக இருக்கிறார்கள். இன்று இரவு இங்கு சுகமாக இருந்து விட்டு, நாளைக் காலை நாம் ஜனக ராஜாவை சந்திப்போம். சுமதியும், விஸ்வாமித்திரர் வந்திருப்பதையறிந்து, எதிர் கொண்டு அழைக்க வந்து சேர்ந்தான். விஸ்வாமித்திர முனிவரிடம், உபாத்யாயர்களுடனும், பந்துக்களுடனும், தக்க மரியாதை சன்மானங்கள் செய்து, கை கூப்பியவாறு, குசலம் விசாரித்தார். தன்யனானேன். உங்கள் அனுக்ரஹம் கிடைத்தது. முனிவர் வந்த விஷயம் அறிந்து வந்த எனக்கு தரிசனமும் கிடைத்தது. என் பாக்கியம் என்று சொன்னான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பாலகாண்டத்தில், விசாலாகமனம், என்ற நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 48 சக்ர அஹல்யா சாபம் (இந்திரன் அகல்யை, இவர்களை சபித்தல்)
ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த பின், சுமதி என்ற அந்த அரசன் விஸ்வாமித்திர முனிவரிடம் -இந்த குமாரர்கள், உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும், தேவர்களுக்கு சமமான பராக்ரமம் உடையவர்களாக, யானயும் சிங்கமும் நடப்பது போல நடையும், வீரர்களாக, சார்தூலம், ரிஷபம் போன்ற காம்பீர்யம் உடையவர்களாக, பத்3மபத்ரம் போன்ற விசாலமான கண்களையுடையவர்களாக, கத்தியும், வில்லும், அம்புராத்தூணியும் ஏந்தி, அஸ்வினி குமாரர்கள் போன்ற அழகுடையவர்களாக, இப்பொழுது தான் இளமையடைந்தவர்களாகத் தெரிகிறார்கள்.தேவ லோகத்திலிருந்து அமரர்கள் யதேச்சையாக பூமிக்கு வந்தவர்கள் போல, நடந்து இந்த இடம் வந்து சேர்ந்திருக்கிறார்கள். ஏன்? என்ன காரியம்? முனிவரே, இந்த தேசமே இவர்கள் வரவால் அழகு பெறுகிறது. ஆகாயத்தை சந்திர சூரியர்கள் அலங்கரிப்பதுபோல, இந்த பூமி இவர்களால் பிரகாசம் பெறுகிறது.பிரமாண, இங்கித, நடை இவைகளினால், ஒருவருக்கொருவர் சமமாக இருக்கிறார்கள். இவ்வளவு சிரமமான வழியில் நடந்து இங்கு வந்திருக்கிறார்கள். நரஸ்ரேஷ்டர்களான இவர்கள் என்ன காரியத்திற்காக இந்த கஷ்டத்தை மேற்க் கொண்டுள்ளனர்? நல்ல ஆயுதங்களும் ஏந்தி, வீரர்களாகத் தோற்றம் தருகிறார்கள், முனிவரே விவரமாக சொல்லுங்கள்- என்றார். அரசன் சுமதி இவ்வாறு கேட்டவுடன், விஸ்வாமித்திர முனிவர் பதில் சொன்னார். நடந்தபடி அப்படியே சொன்னார். அயோத்தி அரசனின் குமாரர்கள், ராஜா தசரதனின் மைந்தர்கள், என்னுடைய யாகம் பூர்த்தி அடைவதற்காக ராம, லக்ஷ்மணர்களான இவர்கள் வந்தார்கள். இதைக் கேட்டு அரசன் மிக மகிழ்ந்தான். எனக்கு இன்று அதிதியாக தசரத குமாரர்கள் வந்திருக்கிறார்கள். ரொம்ப விசேஷம் என்று மகிழ்ந்து அவர்களுக்கு உபசாரங்கள், சத்காரங்கள் செய்து கொண்டாடினான். மகா பலசாலிகள் என்று இருவரையும் வாழ்த்தினான். இப்படி அரசனின் தனிப் பட்ட உயர்ந்த அதிதி சத்காரத்தை பெற்ற இரு ராஜ குமாரர்களும் அன்று இரவு அங்கேயே தூங்கி மறு நாள் மிதிலையை நோக்கி புறப்பட்டார்கள். முனிவர்கள் மிதிலையைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தார்கள். சாது, சாது, நன்று, நன்று என்று மிதிலையைப் பார்த்து பார்த்து ஆனந்தித்தார்கள். மிதிலையின் வெளியே அசிரமத்தைக் கண்டு ராமர், பழமையானதும், ஜன சஞ்சாரம் அற்றதுமான அழகாக இருந்த உபவனத்தைக் கண்டு முனிவரிடம்ஏயாரோ பெரியவர்கள் அசிரமம் போலத் தெரிகிறது. ஆனால் இங்கு முனிவர்கள் யாருமே இல்லையே. ப்ரும்மன், இது முன்னால் யாருடைய ஆசிரமமாக இருந்தது? – எனவும், அழகிய வாக்கு உடைய முனிவரும், இந்த கேள்விக்குத் தக்க பதில் சொல்ல ஆரம்பித்தார்.–ஹந்த- (பரிதாபத்தை வெளிப்படுத்த உபயோகிக்கும் சொல்) சொல்லுகிறேன் கேள், ராகவாஸ்ரீ முழுவதும் விவரமாக கேள். ஏன் இந்த ஆசிரமம், மகாத்மாவான ஒருவரால், கோபத்துடன் சபிக்கப் பட்டது என்பதைக் கேள். இது கௌதமர் என்ற முனிவரின் ஆசிரமாக இருந்தது. தேவர்களும் கண்டு மயங்கும்படி மிக நன்றாக பராமரிக்கப் பட்டு வந்தது. அகல்யாவுடன் இங்கு வசித்து தவம் செய்து வந்தார் முனிவர். பல வருஷங்கள் கழிந்தன. சசீபதியான இந்திரன் ஒரு நாள், முனிவர் வெகு தூரம் போய் இருந்தபோது, முனி வேஷத்துடன் வந்து அகல்யாவிடம் -பெண்ணே, அகாலமானாலும் வா- என்றழைத்தான். முனிவேஷத்தில் வந்திருப்பவன் ஸஹஸ்ராக்ஷன் என்று அறிந்திருந்தும், வந்திருப்பவன் தேவ ராஜன் என்ற குதூகலத்தினால் இணங்கினாள். சிறிது நேரம் சங்கமித்து இருந்த பின், சீக்கிரம் போ, தன்னையும், என்னையும் எப்பொழுதும் காப்பாற்றுவாயாக என்று சொல்லி அவசரப்படுத்தினாள். சிரித்துக் கொண்டே இந்திரன் அகல்யையிடம் –அழகியே- நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன், இதோ போகிறேன்- என்று சொல்லி வேகமாக அந்த குடிசையிலிருந்து பர பரப்புடன் வெளியேறினான். வாயிலிலேயே கௌதமரைச் சந்தித்து விட்டான்.தேவ, தானவர்கள் சேர்ந்து கூட செய்ய முடியாத அளவு தவம் செய்து ஆன்ம பலம் பெற்ற அந்த முனிவரை, அப்பொழுது தான் ஸ்நானம் செய்து நனைந்த ஆடைகளுடன், அக்னி ஜ்வாலை கொழுந்து விட்டு எரிவது போல தேஜஸுடன் கூடிய முனிவரை, கையில், குசமும், சமித்தும் வைத்திருந்த முனிவரைக் கண்டு தேவராஜன் நடு நடுங்கி, முகம் வெளியேறினான். முனி வேஷம் தரித்திருந்த சஹஸ்ராக்ஷனைப் பார்தது துர் நடத்தையுள்ள அவனை, நன்னடத்தையே உருவாக இருந்த முனிவர் கோபத்துடன் சபித்து விட்டார். என் வேஷம் போட்டுக் கொண்டு, செய்யக் கூடாத காரியத்தை செய்திருக்கிறாய். இனி என்றுமே இந்த செயலை செய்ய முடியாதபடி பயனற்றவனாக ஆவாய் என்றார். கௌதமர் இவ்வாறு சபித்தவுடன், இந்திரனுடைய ஆண் உறுப்புகள் கீழே விழுந்தன. அவனை இவ்வாறு சபித்த முனிவர் அகல்யையையும் சபித்தார். பல ஆயிரம் வருஷங்கள் இங்கு வசிப்பாய். வாயுவை சாப்பிட்டுக் கொண்டு, ஆகாரமின்றி தவம் செய்து கொண்டு இந்த தூசியில் கிடப்பாய். யார்கண்ணிலும் படாமல் இந்த ஆசிரமத்தில் வசிப்பாய். தசரதன் மகனான ராமர் இந்த கோரமான வனத்தில் அடியெடுத்து வைக்கும் பொழுது, பாவம் நீங்கியவளாக ஆவாய். கெட்ட நடத்தையுடையவளே, லோபமும், மோகமும் நீங்கி என்று அவனுக்கு அதிதி சத்காரம் செய்கிறாயோ, அன்று என் எதிரில் சுய உருவை அடைவாய்- இவ்வாறு தவறான வழியில் சென்ற அவளிடம் கத்தி விட்டு, சித்த சாரணர்கள் வந்துவணங்கும் பெருமை பெற்றிருந்த இந்த ஆசிரமத்தை விட்டு, இமய மலை சாரலுக்குச் சென்று தவம் செய்ய ஆரம்பித்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், சக்ர அஹல்யா சாபோ என்ற நாற்பத்து எட்டாவது அத்தியாயம்)
அத்தியாயம் 49 அஹல்யா சாப மோக்ஷம் (அகல்யை சாபத்திலிருந்து விடுபடுதல்)
இவ்வாறு உபயோகமற்றவனாக ஆன இந்திரன், அக்னி முதலிய தேவ கணங்களிடம் சென்றான். பயத்தால் வெளிறிய முகத்துடன், கூட்டமாக ரிஷிகள், சாரணர்கள் நிரம்பிய சபையில்,கௌதம முனிவர் தவம் செய்வதை இடையூறு செய்ததால் மகாத்மா கோபம் கொண்டு என்னையும் இவ்வாறு சபித்து, அவளையும் நிராகரித்து விட்டார். சாபம் கொடுத்ததால் அவரது தவ வலிமையில் பெரும் பகுதி என்னால் அழிக்கப் பட்டது. இதுவும் தேவ காரியம் தானே. என்னை மறுபடியும் பழையபடி செய்ய வேண்டும் என்று ரிஷி கணங்களையும், சாரணர்களுடன், சிறந்த தேவர்கள் நிறைந்த சபையில் கேட்டான். அவர்கள் பித்ரு தேவதைகளை சென்றடைந்து, இதற்குப் பரிகாரம் என்ன என்று ஆலோசித்தனர். மருத்கணங்களும் உடன் வர அக்னியை வேண்டினர். நடந்ததைக் கேட்டு, -முதலில் யோசியாமல் மோகத்தினால் ரிஷி பத்னியை கெடுத்துவிட்டு, இந்த இந்திரன் முனி சாபத்தினால் அந்த க்ஷணமே தன் ஆண்மையை இழந்த பின் இப்பொழுது தேவர்களை கோபித்துக் கொள்கிறான்.இதோ இந்த மேஷம் முழுவதுமாக இருக்கிறது. இந்திரனுக்கு இல்லை. இதனுடைய ஆண் குறியை எடுத்து இந்திரனுக்கு பொருத்தி விடுங்கள். இந்த மேஷத்தை பலனில்லாமல் செய்வதையும் ஈ.டு செய்வோம்.அதற்கு தகுந்த நஷ்ட ஈ.டு செய்யுங்கள்- என்று அக்னி சொல்ல பித்ரு தேவதைகள் அவ்வாறே செய்து, அன்றிலிருந்து வேறு பிரயோஜனம் அற்ற மேஷத்தை எதோ விதத்தில் உபயோகம் உள்ளதாகச் செய்ய வேண்டும் என்பதற்காகஅதை சாப்பிடுகிறார்கள். அது கிடக்கட்டும், நீ வா ராமா, இந்த ஆசிரமம் புண்யகாரியங்கள் செய்த கௌதமருடையது. அகல்யாவை விமோசனம் செய். சுபாவமாக நல்லவளான அவள் இங்கு தேவ ரூபமாக மறைந்து நிற்கிறாள். லக்ஷ்மணனுடன் ராமரும், விஸ்வாமித்திரர் சொன்னதைக் கேட்டு, அவரை பின்தொடர்ந்து ஆசிரமத்தில் நுழைந்தனர். தேவ, அசுரர்களுக்கும் தென்படாமல், தவத்தினால் வெளிப்பட்ட சோபையுடன் விளங்கிய அவளைக் கண்டனர்.ப்ரும்மாவே, ப்ரயத்னத்துடன் ச்ருஷ்டி செய்தது போன்ற தெய்வீக அழகுடையவளை, மாயமோ எனும் படியான தோற்றமும், பனித் துளிகளால் மறைக்கப் பட்ட பூர்ண சந்திரனோ, எனும் படியும், கொழுந்து விட்டெரியும் அக்னி புகையினால் மறைக்கப்பட்டுள்ளதோ எனும் படியும், பாதி ஆகாயத்தில் எட்ட முடியாத தகிக்கும் சூரிய பிரபையைப் போலவும், யாராலும் காண முடியுயாதபடி கௌதமர் சாபம் அவளை மறைத்து இருந்தது, ராமரைக் கண்டதும் விலகியது. மகானான முனி சாபத்தால், உலகில் மட்டுமல்ல, மூவுலகிலும் அவளை யாரும் காண முடியவில்லை. சாபத்தின்முடிவு வந்ததால் அவர்கள் கண்களுக்குத் தென் பட்டாள். ராகவர்கள் இருவரும் அவள் பாதத்தில் விழுந்து வணங்கினர். கௌதம வசனத்தை நினைவு வைத்துக் கொண்டு அவர்கள் இருவரையும்வரவேற்று பாத்யம் அர்க்யம் கொடுத்து அதிதி சத்காரம் செய்தாள். காகுத்ஸர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.தேவ துந்துபி வாத்யங்களோடு புஷ்ப வ்ருஷ்டியும் உண்டாயிற்று. கந்தர்வ அப்ஸர ஸ்த்ரீகளும் வெகுவாக உத்சாகத்துடன் கொண்டாடினர். சாது, சாது என்று தேவதைகள் அவளை வாழ்த்தினர். தவ பலத்தினால் சுத்தமானவளை கௌதமரும் ஏற்றுக் கொண்டார். ராமரை வரவேற்று, விசேஷமாக உபசரித்தார். இதன் பின் மிதிலைக்குச் சென்றார்கள்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில்,அஹல்யா சாப மோக்ஷம் என்ற நாற்பத்து ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 50ஜனக சமாக3மம்(ஜனகரை சந்தித்தல்)
இதன் பின் முதலில் வடக்கு நோக்கி சிறிது தூரம் சென்ற பின், விஸ்வாமித்திரர், ராம, லக்ஷ்மணர்களுடன் யக்ஞ வாடம் வந்து சேர்ந்தார். ராமர், விஸ்வாமித்திரரைப் பார்த்து-சாத்வீகமான யக்ஞ சம்ருத்தி, யாகத்தின் நிறைந்த தன்மை, இந்த ஜனகருடைய யாக சாலையில் விளங்குகிறது.பல தேசங்களிலிருந்தும்ஆயிரக் கணக்கானவர்கள் வந்திருக்கிறார்கள். பல ப்ராம்மணர்கள், வேதத்தை அத்யயனம் செய்தவர்கள், வந்திருப்பதும் தெரிகிறது. பல வண்டிச் சக்கர சுவடுகள், யக்ஞ வாடிகள் இருக்கும் இடம் நோக்கித் தென் படுகின்றன., இங்கு நாம் எங்கு இருக்கப் போகிறோம்? நமக்கு இருக்க இடம் தேடலாம்- என்றார்.ஆங்காங்கு நீர் நிலைகளுடன் அமைக்கப்பட்டிருந்த அந்த தேசத்தினுள் மூவரும் நுழைந்தனர். இதற்குள், விஸ்வாமித்திரர் வந்திருப்பதை அறிந்து அரசன் புரோஹிதரான சதானந்தரையும் உடன் அழைத்துக் கொண்டு முனிவரை வரவேற்க வந்து சேர்ந்தார். எதிர் கொண்டு சென்று வினயத்துடன், மகாத்மாவான ஜனக ராஜா தானேரித்விக்-வேதம் அறிந்தவர். அவசரமாக அர்க்யத்தை எடுத்துக் கொண்டு விஸ்வாமித்திரருக்கு மந்திரங்கள் சொல்லி, கையில் கொடுத்தார். ஜனகருடைய இந்த உபசாரத்தை ஏற்று, அரசனை குசலம் விசாரித்து, யக்ஞம் நல்ல படியாக நடக்கிறதா என்றும் விசாரித்தார். அவரும், முனியை அதே போல குசலம் விசாரித்து, உபாத்யாயர்களுடனும், புரோஹிதர்களையும் வரிசையாக அறிமுகப் படுத்தினார். மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்களும் முனிவரை வரவேற்றனர். பிறகு, ராஜா ஜனகர் முனிவரை, கை கூப்பியவாறு வேண்டினான்.இதோ ஆசனத்தில் தாங்கள் அமருங்கள். இந்த முனி புங்கவர்களும் அமரட்டும். ஜனகருடைய வார்த்தையைக் கேட்டு முனிவர் அமர்ந்தார். ஜனகருடைய புரோஹிதர்களும், மந்திரிகளும், உசிதமான ஆசனங்களில் எதிரில் அமர்ந்தனர். பின் அரசன் விஸ்வாமித்திரரைப் பார்த்துசொன்னார். –இன்று என்னுடைய யாக சாலை பாக்கியம் செய்தது,. தேவதைகளின் கிருபையால் தங்கள் தரிசனத்தால், எனக்கு யாகத்தின் பலனே கிடைத்து விட்டது. த4ன்யனானேன். அனுக்ரஹம் பெற்றேன். நீங்கள் முனிவர் கூட்டத்தோடு யாக சாலைக்கு வந்தது மிகப் பெரிய அனுக்ரஹம். இன்னம் பன்னிரண்டு நாள் மீதம் இருப்பதாக பெரியவர்கள் சொல்கிறார்கள். யாகத்தில் பங்கு கொள்பவர்களை கௌசிகரே, நீங்கள் வந்து பார்க்க வேண்டும். –முகம் மலர, முனிவரிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தவர் மேலும் கேட்டார். இந்த குமாரர்கள், உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். தேவர்களுக்கு சமமான பராக்ரமம் உடையவர்கள், யானையையும், சிங்கத்தையும் போன்ற நடையழகு உடையவர்கள், சார்தூல, ரிஷபம் போன்ற கம்பீரமும், பத்ம பத்ரம் போன்ற விசாலமான கண்களும், கத்தியும் வில்லும், தோளில் அம்புறாத்தூணியுமாக, அஸ்வினி குமாரர்கள் போல சிறந்த ரூபமும், இப்பொழுதுதான் இளமையை அடைந்தது போன்றத் தோற்றமும், அமரர்கள், தேவலோகத்திலிருந்து யதேச்சையாக பூமிக்கு வந்தவர்கள் போலவும் நடந்து இங்கு வந்தது என்ன காரணத்திற்காகவோ?யாருடைய குழந்தைகள்? நல்ல ஆயுதங்களையும் வைத்திருக்கிறார்கள். இவர்கள் ஆகாயத்தை சந்திர, சூரியர்கள் அலங்கரிப்பதுபோல இந்த பூமியை அலங்கரிக்க வந்துள்ளார்கள். ஒருவருக்கொருவர் சமமான பிரமாண, இங்கித நடையுடை பாவனை உள்ளவர்கள். இந்த கரடு முரடான சிரமமான பாதையில் நடந்து வந்திருக்கிறார்களே, எங்களுடைய குலத்தையே ரக்ஷிக்க இங்கு வந்திருக்கிறார்களோ. காகபக்ஷம் (தலை அலங்காரம்) தரித்துள்ள இந்த சிறுவர்களை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். – என்றார். அவருடைய ஆர்வத்தை அறிந்து விஸ்வாமித்திரரும், சொல்ல ஆரம்பித்தார். தசரத ராஜாவின் குழந்தைகள். என்று ஆரம்பித்து, சித்தாஸ்ரமத்தில் வசித்ததையும், ராக்ஷஸ வதம் செய்ததையும், விசால நகரத்தைக் கண்டதும், அகல்யையைப் பார்த்து கௌதமரைச் சந்தித்ததையும், மகா தனுஷ் பற்றி கேள்விப் பட்டு, அதைக் கண்டு தெரிந்து கொள்ளூம் பொருட்டு மிதிலை வந்ததையும் ஜனகருக்கு விவரமாக சொல்லி நிறுத்தினார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ஜனக சமாக3மோ என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 51 விஸ்வாமித்திரர் விருத்தாந்தம் (விஸ்வாமித்திரரின் கதை)
விஸ்வாமித்திரருடைய வார்த்தைகளைக் கேட்டு சதானந்தர் மிகவும் மகிழ்ந்தார். உடல் புல்லரிக்க வணங்கி நின்ற அவர் கௌதம முனிவரின் மூத்த மகன். மகா தேஜஸ்வியும், தவ வலிமையும் கொண்டவர். ராமரைப் பார்த்தே ஆச்சர்யம் அடைந்தார். ராஜகுமாரர்களை சுகமான ஆசனங்களில் அமரச் செய்த பின், விஸ்வாமித்திரரிடம் பேச்சைத் தொடர்ந்தார். புகழ் வாய்ந்த என் தாயார், பல நாட்களாக தவம் அனுபவித்து வருகிறாளே, அவளை இந்த ராஜ குமாரர்களுக்கு காட்டினீர்களா? முனி புங்கவரே,என் தாயார் எப்படி இருக்கிறாள்? காட்டில் இருந்தாலும், கிடைத்த பொருட்களைக் கொண்டு,சரீரம் உடைய அனைவருமே போற்றி புகழத் தகுந்த இந்த ராஜ குமாரர்களுக்கு செய்ய வேண்டிய அதிதி சத்காரங்களைச் செய்தாளா? முன் நடந்தது, நடந்தபடி ராமருக்குத் தெரிவிக்கப்பட்டதா? விதியினால் நடந்த தவறு,என் தாய் மேல் அனாவசியமாக குற்றம் சுமத்தப் பட்டது.என் தாய், தந்தை கௌதமருடன் இணைந்தாளா? ராம தரிசனத்திற்குப் பிறகு சாப விமோசனம் கிடைத்திருக்க வேண்டுமே? என் தந்தை கௌதமர் ராமரை சரியாக உபசரித்தாரா? அவருடைய மரியாதையை ஏற்றுக் கொண்டு தானே இங்கு வந்திருக்கிறீர்கள்? ராமன் வணங்கிய பொழுது, சாந்தமாக (கௌதம முனிவரான) என் தந்தை ஆசிர்வதித்தாரா?வார்த்தைகளை தெளிவாக அறிந்தவரும், அதை பயன்படுத்துவதில் சமர்த்தருமான விஸ்வாமித்திரர் பதில் சொன்னார். எதுவுமே விடவில்லை முனிவரே, (சதானந்தரே) நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். பா4ர்க3வருடன் ரேணுகா சேர்ந்தது போல் உன் தாயும் தந்தையும் சேர்ந்து விட்டனர். இதைக் கேட்டு சமாதானமடைந்த சதானந்தர், ராமரைப் பார்த்துச் சொன்னார். – உன் வரவு நல்வரவாகுக. நீ வந்ததே என் பாக்கியம். நர ஸ்ரேஷ்டனே, ராமா, நீ விஸ்வாமித்திரரை தொடர்ந்து வந்ததே விசேஷம். இந்த மகரிஷி தோல்வியே அறியாதவர். நினைத்துக் கூட பார்க்க முடியாத பல செயல்களைச் செய்தவர். ப்ரும்ம ரிஷி பட்டத்தை தன் முயற்சியால், தவ வலிமையால் பெற்றவர். இவரை அடைந்தவர்கள், தங்கள் விருப்பம் நிறைவேறாமல் போனதில்லை. உன்னை விட இந்த உலகில் பாக்கியசாலி வேறு யார் உண்டு? மகா தபஸ்வியான குசிக புத்திரர், உன்னை பாதுகாக்க இருக்கும் பொழுது, கவலையே இல்லை. இவருடைய பலம் என்ன என்பதை நான் சொல்கிறேன். என்ன நடந்தது என்று விவரமாக சொல்கிறேன் கேள். வெகு நாட்களாக இவர் அரசராக இருந்தார். சத்ருக்களை அழித்து, தர்மம் அறிந்தவரான இவர், கல்வியை கசடறக் கற்றுத் தேர்ந்தவராக, பிரஜைகள் நன்மையிலேயே கருத்துடையவராக இருந்தார்.பிரஜாபதியின் பிள்ளை குசன் என்பவர் அரசனாக இருந்தார். அவன் மகன் குசனாபன், தார்மீகனாக இருந்தார்குசனாபருடைய மகன் கா3தி4 என்று புகழ் பெற்றவர். கா3தி4யின் பிள்ளை தான் இந்த விஸ்வாமித்திரர் என்ற மகா முனி.விஸ்வாமித்திரர் ராஜ்யத்தை அடைந்து நியாயமாக ஆட்சி செய்து வந்தார். பல வருஷங்கள் அரசராக இருந்தார். ஒரு சமயம் இவர் சேனையையும்அழைத்துக்கொண்டு உலகை சுற்றி வரக் கிளம்பினார். நகரங்களையும் பல ராஜ்யங்களையும், நதிகளையும், மலைகளையும் கடந்து பல ஆசிரமங்களை தரிசித்துக் கொண்டு, வசிஷ்டருடைய ஆசிரமம் வந்து சேர்ந்தார். இந்த ஆசிரமம் பல விதமான மரங்கள் அடர்ந்து, பல விதமான மிருகங்களும், சித்தர்கள், சாரணர்கள் நடமாடும் இடமாகவும் இருந்தது.தேவர்கள், தானவர்கள், கந்தர்வ கின்னரர்கள், இவர்களால் அலங்காரமாக விளங்கியது.தவம் செய்வதில் கவனமாக அக்னியை பிரதி தினம் உபாசிப்பவர்கள் நிறைந்திருந்தது. இவர்களில் அனேகர் சித்தியடைந்த தபஸ்விகள். சிலர் நீர் மட்டுமே உணவாக கொள்பவர்கள். சிலர் வாயு மட்டுமே. சிலர் வாடிய இலை தழைகளை மட்டுமே உண்பவர். சிலர் பழங்களையும், கிழங்குகளையும் மட்டுமே ஆகாரமாக கொண்டனர். இப்படி கோபத்தை வென்றவர்களாகவும், இந்திரியங்களை வென்றவர்களாகவும், ரிஷிகள், ஜப ஹோம, பராயணம் செய்பவர் என்று பலரும் க்ருஹஸ்தாஸ்ரமத்தில் இருந்து கடமைகள் முடிந்து, வான ப்ரஸ்த ஆசிரமத்தில் இருந்தவர்களும் நிரம்பி கல கலவென்றிருந்தது. சாஷாத் ப்ரும்ம லோகமோ என்று வியக்கும்படி வசிஷ்டருடைய ஆசிரமம் இருந்தது. இதை, எப்பொழுதும் , எதிலும்வெற்றியே என்று இதுவரைவாழ்ந்து வந்திருந்த விஸ்வாமித்திரர், தன் மனதில் குறித்துக் கொண்டார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், விஸ்வாமித்திர விருத்தாந்தம்என்றஐம்பத்து ஓராவது அத்யாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 52 வசிஷ்டாதித்யம் (வசிஷ்டர் செய்த விருந்துபசாரம்)
வசிஷ்டரைக் கண்டதும் விஸ்வாமித்திரர் மிகவும் மகிழ்ச்சியோடு, ஜப தபங்கள் நிறைந்தவசிஷ்டரை விதிப்படி வணங்கி நிற்க, வசிஷ்டர்ஸ்வாகதம் என்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று, ஆஸனத்தில் அமரச் செய்த பின், வசிஷ்ட முனிவர், பழம், கிழங்கு வகைகள் கொடுத்து உபசரித்தார். சிறந்த அரசனான விஸ்வாமித்திரர், அவைகளை ஏற்றுக் கொண்டு, அக்னி ஹோத்திரம் செய்யும் சிஷ்யர்கள் சூழ நின்றிருந்த முனிவரிடம் குசலம் விசாரித்தார். மற்றும் அங்குள்ள மற்றவர்கள் நலமும் விசாரிக்க, வசிஷ்டரும் எல்லா இடத்திலும் நலமே என்று சொல்லி, ஆசனத்தில் சௌகர்யமாக அமர்ந்தபின் அரசனிடம், வசிஷ்டர் விசாரித்தார். ராஜன், நீ நலமா?தர்ம வழியில் ஜனங்களை திருப்தி செய்தபடி ராஜ்யத்தை ஆண்டு வருகிறாயா? நீ தர்மம் அறிந்தவன். ராஜ நீதி அறிந்தவன். அதனால் உன் ராஜ்யம் நியாயமாகத் தான் ஆளப்படும். வேலைக்காரர்கள் நிறைய இருக்கிறார்களா? உன் ஆணைப்படி நடக்கிறார்களா? சத்ருக்களை அழிப்பதில் சமர்த்தனே, எதிரிகளை அழித்து, எல்லோரையும் ஜெயித்து வந்தாயா? குற்றமற்றவனே, உன் புத்ர, பௌத்திரர்கள் நலமா? உன் சைன்யம், பொக்கிஷம், மித்திரர்கள், இவை நலமா? எல்லோரும் நலமே என்று அரசனும் பதில் அளித்தான். இருவரும் சந்தோஷமாக வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரம் மற்ற விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த பின், வசிஷ்ட முனிவர், அரசனைப் பார்த்து, சேனையுடன் கூட, எல்லோருக்கும் நான் ஆதித்யம், விருந்தோம்பலை செய்ய விரும்புகிறேன்.ஏதோ என்னால் முடிந்த அளவு, ஏற்றுக் கொள்ள வேண்டும். நீ அளவில்லாத பலம் உடையவன். நான் செய்யும் இந்த விருந்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ராஜன், நீ தேடிச் சென்று, அழைத்து வந்து உபசரிக்க வேண்டிய நல்ல அதிதி. இவ்வாறு அவர் சிரித்துக் கொண்டே சொல்லவும், விஸ்வாமித்திரரும், நீங்கள் இவ்வளவு தூரம் சொன்னதிலேயே ஆதித்யம் ஆகி விட்டது. ஆசிரமத்தில் உள்ள பழ, கிழங்குகளைக் கொண்டு உபசரித்தீர்கள். அதுவே போதும். பாத்3யம், ஆசமனீயம், உங்கள் தரிசனம் இவையே கிடைக்கப் பெறாதது கிடைத்ததே பாக்கியம். சிறந்த ஞானியே, உங்களைத் தேடி வந்து பூஜிக்க வேண்டியிருக்க, நீங்கள் உபசாரம் செய்து என்னை கௌரவப் படுத்தி இருக்கிறீர்கள். வணக்கம். நாங்கள் கிளம்புகிறோம். நண்பர்களாக, நட்பின் கண்ணோட்டத்தோடு, நான் சொல்வதை தவறாகக் கொள்ளாமல், அனுமதி தாருங்கள். இவ்வாறு சொன்ன அரசனை வசிஷ்டர் திரும்பவும் விருந்துக்கு அழைத்தார். தர்மாத்மாவான அவர், மேலும் மேலும் சொல்லி, வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார். சரி என்று சொல்லி விஸ்வாமித்திரரும் சம்மதித்தார். உங்கள் இஷ்டப் படியே ஆகட்டும் என்றார். உடனே வசிஷ்டர், சப3லே, வா, என்று அழைத்தார். (சப3லா என்ற பசு) இதோ நான் சொல்வதை கேள். பலத்துடன் (படையுடன் வந்திருக்கும், சுயமாக பலம் மிகுந்த என்று இரண்டு விதமாக பொருள்) வந்திருக்கும் இந்த அரசருக்கு, இவர் ராஜ ரிஷி , இவருக்கு விருந்து செய்து வைக்க ஆசைப் படுகிறேன். நல்ல ஆகாரம், நல்ல ருசியாக இருக்கும் படி செய். யாருக்கு எது, எப்படி பிடிக்குமோ, அதே போல அறு சுவை உணவு ஏற்பாடு செய். எனக்காக காமதேனுவான நீ ஏராளமாக ஏற்பாடு செய். நல்ல ரஸம், அன்னம், பானம், லேஹ்யம் சுவைத்து சாப்பிடும் வகைகள், இவற்றுடன் நிறைய அன்னமும் தயார் செய். சீக்கிரம்- என்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், வசிஷ்டாதித்யம் என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 53சப3லா நிஷ்க்ரய:
(சபலாவை தான் (விலை கொடுத்து) வாங்கிக் கொள்வதாக சொல்லுதல்)
சத்ருக்களை ஜயிக்கும் சக்தியுடைய ராமனே, வசிஷ்டர் இவ்வாறு சொன்னவுடன், காமதேனுவான சபலா, யாருக்கு எப்படி வேண்டுமோ, அது போல ஆகாராதிகளை கொண்டு வந்தது. கரும்பு, தேன், பொரி, மைரேயம் என்ற உயர்ந்த ரக தானிய வகைகள், குடிக்க பல வகையான பானங்கள், கடித்து சுவைத்து சாப்பிடக் கூடிய பலகார வகைகள், குறைவில்லாமல் சூடான சாதம்,இதன் அளவு மலையளவு கொட்டிக் கிடக்க, வடைகள், பல வித கலந்த சாத வகைகள், அறுசுவையோடு கூடிய பல விதமான ருசி மிகுந்த ரசங்கள், வர்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், பக்ஷணங்கள் ஆயிரக்கணக்காக இவை எல்லாம் மிகவும்திருப்தி வரும் வரை உண்டு களிக்கும் படி சைன்யம் கவனிக்கப்பட்டது. விஸ்வாமித்திர ராஜாவும் வயிறார உண்டவராக திருப்தியானார். அந்த:புர ஜனங்களோடு கூடிய ராஜா, பிராம்மண, புரோஹிதர்கள், மந்திரிகள், மந்திரிகளின் உதவியாளர்கள், வேலைக்காரர்கள் எல்லோருமே கௌரவிக்கப் பட்டனர். மிகவும் சந்தோஷமாக வசிஷ்டரிடம் சொன்னார். – ப்ரும்மன், நான் உங்களை உபசரிக்க வேண்டியது இருக்க, நீங்கள் என்னையும் என்னை சார்ந்தவர்களையும் மிகச் சிறப்பாக உபசரித்து விட்டீர்கள். அழகாக பேசுபவரே, நானும் என் விருப்பத்தை சொல்கிறேன். நூறாயிரம் பசுக்களை எடுத்துக் கொண்டு சப3லையை எனக்குத் தாருங்கள். ராஜ்யத்தில் எங்கே ரத்னம் இருந்தாலும், அது அரசனுக்கே உரியது. அது போல இந்த சப3லா ரத்னம் போன்றே விசேஷமானது, அதனால் அரசனான என்னிடம்ஒப்படையுங்கள் என்றார்.வசிஷ்டர் பதில் சொன்னார். ராஜன், நூறாயிரம் என்ன? நூறு கோடி கொடுத்தாலும் நான் சபலையைத் தர முடியாது. த4னமோ, வெள்ளியோ கொடுத்தாலும் முடியாது. இவளை நான் த்யாகம் செய்வது முறையல்ல. எதிரிகளை நாசம் செய்யும் பலம் பொருந்திய அரசனாக நீ இருந்த போதிலும், என்னிடமிருந்து இதைப் பிரிப்பது இயலாது. தன் மானம் உள்ளவனுக்கு கீர்த்தி போல இந்த சபலா என்னுடனேயே இருக்க வேண்டியவள். இவளிடம் ஹவ்யம் (நெய்), கவ்யம் (பித்ருக்களுக்கு தரப்படும் உணவு), ப்ராண யாத்ரா (உயிர் வாழத் தேவையான ஆதாரம்) இவை அடங்கியுள்ளது. அக்னிஹோத்ரம், பலி, ஹோமம் இவற்றையும், ஸ்வஹாகார, வஷட்கார, என்ற வித்யைகளும், இன்னும் பல விதமான வித்தைகளும் அடங்கியுள்ளன. சந்தேகமே இல்லை. என்னுடைய ஸர்வஸ்வம் (உடல், பொருள், ஆவி உள்ளிட்ட சகலமும்). சத்யமாக, எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கக்கூடியது இது தான். இது போன்ற பல காரணங்களால் சபலையை நான் தர முடியாது. வசிஷ்டர் இவ்வாறு சொல்லவும், விஸ்வாமித்திரர், திரும்பவும் தான் சொன்னதையே சொன்னார். தங்க முகப்படம் பூட்டிய, சுவர்ண அங்குசங்களுடன், அலங்கரிக்கப்பட்ட நாலாயிரம் யானைகள் தருகிறேன். பல வர்ணங்களில், வயது வித்யாசங்களில் உள்ள கோடிப் பசுக்களைத் தருகிறேன்.சபலையை எனக்குத் தாருங்கள். கேட்ட அளவு தங்கமோ, ரத்னங்களோ, அவ்வளவும் தருகிறேன். சபலையை எனக்குத் தாருங்கள். இவ்வளவு சொல்லியும் வசிஷ்டர் தர மாட்டேன், எப்படியும் தர மாட்டேன், ராஜன், இது தான் எனக்கு ரத்னம், இது தான் எனக்கு தனம், இது தான் எனக்கு எல்லாமே. இது தான் என் வாழ்வே. பௌர்ணமியோ,அமாவாஸ்யையோ, யக்ஞம், கிடைத்த தக்ஷிணைகள் எல்லாமே இது தான் ராஜன். பலவிதமான செயல்களும் இது தான். பேசிப் பயன் என்ன? சபலையைத் தர மாட்டேன்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், சபலா நிஷ்க்ரய:என்றஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 54பப்லவாதி ஸ்ருஷ்டி (பப்லவர்களை உற்பத்தி செய்தல்)
காமதேனுவான சப3லையை, வசிஷ்ட முனிவர் தர மறுத்த பின், சப3லையை பலவந்தமாக விஸ்வாமித்திரர் இழுத்துச் செல்ல ஆரம்பித்தார். அரசனால் இழுத்துச் செல்லப் பட்ட சப3லை, வருத்ததுடன் மனதில் அழுதது.இந்த அரச சேவகர்கள் என்னை அபகரித்துக் கொண்டு போகும் போதும், வசிஷ்டர் ஏன் பேசாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்?இதனால் நான் வருந்துவது அவருக்குத் தெரியாதா?மகாத்மாவான அவருக்குத் தெரியாதா? நான் என்ன தவறு செய்தேன்? தார்மீகரான முனிவர், குற்றமற்ற என்னை, அவருக்கு இஷ்டமான என்னை, அதுவும் நானும் பக்தியுடன் அவருடன் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, கை விட்டு விட்டாரா? திரும்பத் திரும்ப பெரு மூச்சு விட்டுக் கொண்டு, இது போன்ற சிந்தனைகள் அலைக்கழிக்க, நூற்றுக் கணக்கான அந்த சேவகர்களை கீழே தள்ளி, வாயு வேகமாக ஓடி வந்து, மகாத்மாவான வசிஷ்டரை அடைந்தது. பலமாக அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் வசிஷ்டர் முன் நின்று கொண்டு, மேக துந்துபிக்கு இணையான குரலில், இவ்வாறு சொன்னது. ப்ரும்மாவின் புத்திரனே, என்னை ஏன் கை விட்டாய்? உங்கள் வசம் உள்ள என்னை இந்த அரச சேவகர்கள் இழுத்துக் கொண்டு போகிறார்களே, எனவும், ப்ரும்ம ரிஷி, தன் சகோதரி போன்றவளை, துக்கத்துடன் ஹ்ருதயம் பிளந்து விடும் போல அழுபவளை, சமாதானப் படுத்தும் விதமாக சொன்னார். -நான் உன்னை கை விட மாட்டேன். சப3லே, நீ எந்தத் தவறும் செய்யவும் இல்லை. இந்த ராஜா பலசாலி. என்னிடமிருந்து உன்னை பலவந்தமாக இழுத்துச் சென்று விட நினைக்கிறான். என் பலத்துக்கு சமமான பலம் எதுவுமே இல்லை. விசேஷமாக இந்த அரசனின் பலம், இன்றுள்ளது, ஒன்றுமேயில்லை. பூமியை ஆளும் அரசன், க்ஷத்திரியன், பலசாலியான ராஜா, இதோ இந்த அக்ஷௌஹணி சேனை, யானை, குதிரை, ரதம் இவை நிறைந்தது, த்வஜத்துடன் கூடிய நடந்து செல்லும் வீரர்களும் உடன் வர, இவன் என்னை விட பலவானாக எண்ணுகிறான். -விசிஷ்டர் இவ்வாறு சொல்லவும் சப3லா, வினயமாக, எல்லையில்லாத பெருமை கொண்ட வசிஷ்டரிடம் –ப்ரும்மன், க்ஷத்திரிய பலம் ஒரு பலமா? ப்ரும்ம பலத்துக்கு முன் நிற்கவே முடியாத பலம் அது. திவ்யமான ப்ரும்ம பலம், க்ஷத்திரிய பலத்தை விட மிகவும் அதிகம் சக்தி வாய்ந்தது என்று தான் நான் கேள்விப் பட்டு இருக்கிறேன். உங்கள் பலம் அப்ரமேயம் (அளவிட முடியாதது). உங்களை விட விஸ்வாமித்திரர் அதிக பலமுடையவர் என்பது சரியல்ல. மகா வீரனாக இருக்கலாம். உங்களுடைய தேஜஸ் நெருங்கமுடியாதது. என்னை உங்கள் ப்ரும்ம பலத்தை சூழ்ந்து நின்று பாதுகாக்கச் செய்யுங்கள். துராத்மாவான அரசனின் கர்வத்தை நான் அடக்குகிறேன். – இவ்வாறு அவள் சொல்லவும், வசிஷ்டர்ஸ்ருஷ்டி செய்து கொள். எதிரியை அடக்கத் தேவையான பலத்தை உண்டாக்கிக் கொள் எனவும், சுரபி4 (காம தேனு) யான சபலா ஸ்ருஷ்டி செய்து கொண்டாள். அவளுடைய முகத்திலிருந்து வெளிப்பட்ட –ஹும்- என்ற ஓசையிலேயே, நூற்றுக் கணக்கான பப்ளவர்கள் உண்டானார்கள். இவர்கள், விஸ்வாமித்திரர் பார்த்துக் கொண்டு நிற்கையிலேயே, அவருடைய பலத்தை முழுவதுமாக அழித்தது. தன் சேனை அழிந்ததைக் கண்ட விஸ்வாமித்திரர், கோபத்தால் தகிக்கும் கண்களையுடையவராக, பப்லவாதிகளோடு சண்டையிடலானார். பலவிதமான அஸ்திர பிரயோகங்களை செய்து பப்லவாதிகளை அடித்தார். உடனே சபலா, யவன, மிச்ரர்கள், சகர்கள் என்ற கூட்டத்தை ஸ்ருஷ்டி செய்தது. பூமி யவன மிச்ர கூட்டத்தாலும், சகர்கள் என்ற கூட்டத்தாலும் நிறைந்தது. மகா பலம் பொருந்திய இந்த வீரர்கள், கூர்மையான கத்தி, பொன்னிறமான ஆடைகள்,இவற்றுடன் போரிட வந்தனர். நெருப்பினால் சுடுவது போன்ற பல திவ்ய அஸ்திரங்களை விஸ்வாமித்திரர் விடவும், யவன, காம்போஜ, பப்லவாதிகள் மிகவும் வருந்தினர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில்,பப்லவாதி ஸ்ருஷ்டி என்ற ஐம்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 55விஸ்வாமித்திர தனுர்வேதாதிகம்
(விஸ்வாமித்திரரின் வில் வித்தை முதலியன)
விஸ்வாமித்திரரின் அஸ்திரங்களினால், சபலையால் ஸ்ருஷ்டி செய்யப்பட்ட படை வீரர்கள் கஷ்டப்படுவதைக் கண்டு வசிஷ்டர், சபலையை மேலும் வேண்டிய அளவு ஸ்ருஷ்டி செய்து கொள்ளச் சொன்னார். அந்த பசுவின் ஹும்காரத்தினால் மேலும் பல காம்போஜர்கள், சூரியனின் தேஜஸுக்கு சமமான ஒளியுடையவர்களாகத் தோன்றினர். ஆயுதம் தாங்கிய ஊதஸ் என்பவர்கள், பர்பரா: என்ற தேசத்து சகர்கள், ரோமங்களில் இருந்து மிலேச்சர்கள், ஹாரிதர்கள், கிராதர்கள், இவ்வளவும் க்ஷண நேரத்தில் வந்து சேர்ந்து விஸ்வாமித்திரரை எதிர்த்தனர். பதாதி, ரத, கஜ, துரக என்ற நால்வகைப் படைகளுடன், விஸ்வாமித்திரரின் சேனை அழிந்தது. தங்கள் படை (பலம்) வசிஷ்ட பலத்தால் அழிந்தது கண்டு விஸ்வாமித்திரரின் நூறு புத்திரர்கள், வேகமாக ஓடி வந்து ஜபித்துக் கொண்டிருந்த வசிஷ்டரைத் தாக்கினார்கள்.தன் ஹும்காரத்தினாலேயே அவர்களைத் தகித்து விட்டார் முனிவர்.விஸ்வாமித்திரரின் பிள்ளைகள் தங்கள் நால் வித சேனைகளோடுநிமிஷ நேரத்தில் பஸ்மமாக ஆனார்கள்.தன் புத்திரர்கள் பஸ்மமாக ஆனதையும், சேனை பெரும்பாலும் அழிந்ததையும் கண்டு, வெட்கமடைந்த விஸ்வாமித்திரர்,சிந்தனை வசப்பட்டவராக ஆனார். வேகம் இழந்த சமுத்திரம் போலும், பல்லை இழந்த பாம்பு போலவும், சூரியன் சோபை இழந்தது போலும் திடீரெனத் தன் சக்தியனைத்தும் இழந்தவரானார். இறக்கையிழந்த பறவை போல தன் புத்திரர்களை இழந்த அரசர், கர்வம் அழிந்து உற்சாகம் இழந்தவராக, மிகவும் வேதனையை அடைந்தார். ஒரு புத்திரனிடம் ராஜ்யத்தை ஒப்புவித்து விட்டு நீ ஆண்டு வா, க்ஷத்திரிய தர்மம் தவறாமல் பாலனம் செய் என்று சொல்லி, தான் வனம் சென்றார். கின்னரர்கள், உரகர்கள், நிறைந்த ஹிமய மலைக்கே சென்று மகா தேவனைக் குறித்து தவம் செய்யலானார். கடுமையான தவம் செய்தார். சில காலம் சென்றபின்,ரிஷபத்தை த்வஜத்தில் உடைய மகா தேவன் ப்ரசன்னமாகி, விஸ்வாமித்திரருக்கு வரம் தந்தார். எதற்காக தவம் செய்கிறாய் ராஜன், உனக்கு எது தேவை? எதை உத்தேசித்து தவம் செய்கிறாய்? நான் வரம் தர வந்துள்ளேன். உனக்கு வேண்டியதைக் கேள். என்று சொல்ல விஸ்வாமித்திரர், மகாதேவனை வணங்கித் -தாங்கள் என்னிடத்தில் தயை உள்ளவர்களானால் தனுர்வித்தை அதனுடைய அங்கங்கள் பூரணமாக எனக்கு சொல்லித் தாருங்கள். அங்க, உபாங்கங்களோடு கூடிய உபனிஷத் ரஹஸ்யங்கள் எல்லாமே தாருங்கள். தேவர்களிடம் உள்ள அஸ்திரங்கள், தானவர்களிடம் உள்ளவை, கந்தர்வ, யக்ஷ, ராக்ஷஸர்களிடம் உள்ளவை யாவும் எனக்கு கிடைக்க வேண்டும். உங்களுடைய க்ருபையால் நான் விரும்பியது கிடைக்க வேண்டும்.- என்றார். அப்படியே ஆகட்டும் என்று தேவ தேவனான மகாதேவன் சொல்லி மறைந்தார். இவ்வாறு திவ்யாஸ்திரங்கள் கிடைக்கப் பெற்ற ராஜரிஷியான விஸ்வாமித்திரர் மகா பலத்துடன், மகா கர்வியுமானார். பருவ கால சமுத்திரம் போல வளர்ந்து வந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் அழிந்தார் என்றே நினைத்தார். ஆஸ்ரமத்திற்கு வந்து தன் வசம் இருந்த அஸ்திரங்களை விட ஆரம்பித்தார். அந்த அஸ்திர பலத்தால் வசிஷ்டரது தபோ வனம் அழிந்தது. எரிந்து கொண்டு விழுந்த விஸ்வாமித்திரரது அஸ்திரங்களைக் கண்டு பயந்து சிஷ்ய ஜனங்களும், முனிவர்களும், நாலா புறமும் சிதறி ஓடினர். வசிஷ்டருடைய ஆசிரமம் சூன்யமாக ஆயிற்று. மிருகங்கள், பக்ஷிகள், பயந்து அலறி ஓடின. வசிஷ்டர் பயப்படாதே, பயப்படாதே என்று சொல்ல, சொல்ல ஒரு முஹுர்த்த நேரத்தில், ஆசிரமம் நி:சப்தமாக, ஆளரவமின்றி ஆகி விட்டது. கா3தே4யனை (கா3தி4 பிள்ளை) இதோ அழிக்கிறேன் என்று வசிஷ்டர் கிளம்பினார். அல்ப ஜந்துக்களை சூரியன் நாசம் செய்வது போல, என்று சொல்லிக் கொண்டே வந்தவர், எதிரே விச்வாமித்திரரைப் பார்த்து கோபத்துடன் பேசலானார்.வெகு காலமாக இருந்த என் ஆசிரமத்தை ஏன் அழித்தாய்? துராசாரனே, மூடனே, அதனால் இனி நீ இருக்க மாட்டாய் என்று சொல்லி காலாக்னி போல, மற்றொரு யம தண்டத்தை போல இருந்த தன் தண்டத்தை முன் நிறுத்தி வைத்துக் கொண்டு நின்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், விஸ்வாமித்திர த4னுர்வேதா3தி4கோ என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)