பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் அயோத்யா காண்டம் 20 – 40

பிப்ரவரி 25, 2014

அத்தியாயம்  20 (97) கௌசல்யாக்ரந்த:  (கௌசல்யை புலம்புதல்)

கை கூப்பியபடி ராமன் வெளி யேறியதும், பெண்களின் அந்த:புரத்தில் வருந்தி புலம்பும் ஒலி கேட்டது. யாரும் சொல்லாமலேயே தந்தைக்கும், அந்த:புர பெண்களுக்கும் வேண்டியதை செய்பவன் ராமன். நமக்கு அவன் தான் சரணம் என்றிருக்க, அவன் ஊரை விட்டு போகிறான். கௌசல்யையிடம் தாய் என்று எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளானோ, அதே போல நம்மிடமும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளான். கோபமே அறியாதவன். எதிராளி  கோபமாக இருந்தால் கூட சமாதானமாக பேசக் கூடியவன். இன்று வனத்திற்கு ஏகுகிறான். நமது ராஜாவிற்குத் தான் புத்தி இல்லை. பூமியை ஆளும் அரசனாம். ஜீவலோகத்திற்கே யார் கதியோ, அவனை தியாகம் செய்கிறான். என்று தசரத மகிஷிகள், கன்றை இழந்த பசுக்கள் போல கதறினார்கள். மகா ராஜா ஏற்கனவே புத்திர சோகத்தால் தவித்துக் கொண்டு இருந்தவர், அந்த:புரத்திலிருந்து அழுகை குரல் கேட்கவும் தன் ஆசனத்தில் இருப்புக் கொள்ளாமல் தவித்தார்.

ராமரோ, தீர்மானமாக, தன் சகோதரனுடன் கூட தன் தாயின் அறையை அடைந்தார். வயதான ஒருவர், மிகவும் பூஜிக்கத் தக்கவராக மாளிகையின் வாசலில் கண்டார். இவர் அமர்ந்திருக்க, மற்றவர்கள் பலர் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். ராமரைக் கண்டவுடன் அவர்கள் அவசரமாக எழுந்து ஜய கோஷம் செய்தனர். ஆசிர்வாதங்கள் செய்தனர். முதல் அறையைக் கடந்து இரண்டாவது அறையில், வேத வித்துக்களான பிராம்மணர்களைக் கண்டார். பல முறை தசரத ராஜாவினால் சம்மானம் செய்யப் பட்ட வயது முதிர்ந்த பலரைக் கண்டார். அவர்களை வணங்கி விடை பெற்றுக் கொண்டு மூன்றாவது அறைக்குச் சென்றார். ஸ்த்ரீகள், குழந்தைகளும் பெரியவர்களுமாக, அறை வாயிலை காக்கும் பணியில் இருந்தனர். அவர்களும் மகிழ்ச்சியுடன் ராமரை வாழ்த்தி வழி விட்டனர். ஒரு சிலர் ராம மாதாவிடம் செய்தி சொல்லச் சென்றனர். இரவு பூராவும் சிரத்தையுடன் விரதமிருந்து, கௌசல்யா விடிந்தவுடன் தன் மகனின் நலனுக்காக, பகவான் விஷ்ணுவைக் குறித்து பூஜைகள் செய்து கொண்டிருந்தாள். அவள் எப்பொழுதுமே விரதங்கள், பூஜைகள் செய்பவள், வெண் பட்டு உடுத்தி, மந்திரங்கள் சொல்லி, அக்னியில் மங்களகரமாக யாகம் செய்து கொண்டிருந்தாள். சுபமான அந்த தாயாரின் அந்த:புரத்தில் நுழைந்த ராமர் அக்னியில் ஹோமம் செய்து கொண்டிருந்த தாயாரைக் கண்டார். தேவ கார்யம் என்று அங்கு சேகரிக்கப் பட்டு வைத்திருந்த பொருட்களைக் கண்டார். தயிர் அக்ஷதை, நெய், மோதகங்கள், ஹவிஸ், பொரிகள், மாலைகள், வெண்ணிறமான மாலைகள், பாயஸம், க்ருதம், சமித்து, பூர்ண கும்பங்கள், இவைகளை ரகுனந்தனன் பார்த்தான். விரத யோகங்களினால் இளைத்து இருந்த தூய பட்டாடை உடுத்தியிருப்பவளை, தேவதைகளுக்கு நைவேத்யங்களை சமர்ப்பித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தான். மகனைப் பார்த்தவுடன், ஆவலுடன், தாயன்பு மேலிட மகிழ்ச்சியுடன் அருகில் வந்தாள். வந்து கொண்டிருந்த தாயாரை முன்னால் சென்று கைகளைப் பிடித்து எதிர் கொண்டார். மகனை அணைத்து உச்சி முகர்ந்து, தன் மகனான ராகவனிடம், எளிதில் ஜயிக்க முடியாத வீரனைப் பார்த்து, புத்ர வாத்ஸல்யத்தோடு கௌசல்யா ஹிதமான வார்த்தைகளை சொல்லலானாள். உசிதமான குலத்தில் பிறந்த நீ, வயதான முதியவர்களின், தர்மசீலர்களான, மகாத்மாக்களிடம்  இருந்து ஆயுசையும், கீர்த்தியையும், தர்மத்தையும் அடைவாயாக. தந்தையான அரசன் வாக்கு தவறாமல் சத்யப்ரதிக்ஞனாக இருக்கும்படி பார்த்துக் கொள். இன்றே உன்னை யுவராஜாவாக முடி சூட்டப் போகிறார் உன் தந்தை, இவ்வாறு சொல்லிக் கொண்டே அவள் அளித்த ஆஸனத்தை ஏற்றுக் கொண்டு, சாப்பிட அழைத்தவுடன், கைகளைப் பற்றிக் கொண்டு ராமர் சொன்னார். சுபாவமாக வினயம் உடையவர், தாயாரிடம் மதிப்புடையவர், வணங்கி தண்டகாரண்யம் செல்லத் தயாராக வந்தவர், மெதுவாக பேசலானார். தேவி, உனக்குத் தெரியாது. மிகப் பெரிய பயம், ஆபத்து வந்துள்ளது. இதை உனக்கும் வைதேஹிக்கும், லக்ஷ்மணனுக்கும் துக்கம் தரக் கூடியதை நான் சொல்லப் போகிறேன். இந்த ஆசனம் எனக்கு எதற்கு? நான்தான் தண்டகாரண்யம் போகப் போகிறேனே. தர்பாஸனத்தில் அமரும்படியான காலம் எனக்கு வந்திருக்கிறது. ஜன நடமாட்டமில்லாத வனத்தில் பதினான்கு வருஷம் வசிக்கப் போகிறேன். பழங்களையும், வேர்களையும் தின்று கொண்டு, முனிவர்கள் போல மாமிசத்தைத் துறந்து இருக்கப்போகிறேன். அரசன் பரதனுக்கு ராஜ்யத்தைக் கொடுக்கப் போகிறார். என்னை தபஸ்வியாக தண்டகாரண்யம் போகச் சொல்கிறார். ஆறும் எட்டுமாக, பதினான்கு வருஷங்கள், காட்டில் கழிக்கப் போகிறேன். காட்டு ஜனங்களோடு, மிருகங்களோடு மிருகமாக வாழப் போகிறேன். இதைக் கேட்டு கௌசல்யா தேவி, கோடாலியால் சால விருக்ஷத்தை வெட்டிச் சாய்த்தது போலவும், தேவ லோகத்திலிருந்து எதோ தேவதை கீழே விழுந்தது போலவும் தரையில் சாய்ந்தாள். இந்த துக்கத்தை தாங்க முடியாத அவளை, தன் தாயை நினைவு இழந்தவளை தூக்கி நிறுத்தினார். கைகளால் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார். எதிர்பாராத இந்த துக்கத்தால் தடுமாறியபடி, லக்ஷ்மணனும் கேட்டுக் கொண்டிருக்க, ராமரிடம் சொன்னாள்.  எனக்குப் பிள்ளையாக பிறக்காமல் இருந்திருந்தால், குழந்தையில்லை என்ற ஒரே குறையாக போய் இருந்திருக்கும். இந்த துக்கத்தைக் காண நேர்ந்திருக்காது. மலடி என்ற ஒரே துக்கம் தான் இருந்திருக்கும். பதியின் செல்வாக்கினால், நான் எந்த விதமான சுகமோ, நல்லதையோ காணவில்லை. பிள்ளையிடம் நல்லதை அனுபவிப்போமென்று சமாதானப் படுத்திக் கொண்டேன். ராமா, மனதை பிளக்கும் பல பிடிக்காத வார்த்தைகளை, சபத்னிகளிடம்,  நான் பெரியவளாக இருந்தும், என்னை விட சிறியவர்களிடம் கேட்டேன். இதை விட பெண்களுக்கு தாழ்வு வேறு என்ன வேண்டும். என் சோகமும், புலம்பலும் முடிவே இல்லாதது. உன்னை முன்னிட்டு இருந்தும் கூட இப்படி என்னை புறக்கணித்து விட்டார்களே, நீயும் வெளியில் போய் விட்டால், என் கதி என்ன? கைகேயியின் பரிவாரங்கள், சமமானவர்களோ, இன்னும் கீழ் நிலையில் உள்ளவர்களோ, இதுவரை எனக்குப் பணிந்து, நான் சொன்னதைக் கேட்டு நடந்தவர்கள் கூட, இனி கைகேயி புத்ரனை எண்ணி என்னிடம் பேசக் கூட மாட்டார்கள். எப்போதும் கோபம், கைகேயியிக்கு, என்னை என்னதான் சொல்ல மாட்டாள்? அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே எனக்கு சக்தியில்லை. மகனே, பத்து, ஏழு வருஷங்கள் நீ வெளியில் இருக்கும்பொழுது சபத்னிகளின் ஏளனம் என்னால் தாங்க முடியாது. உன் முகத்தையும் பார்க்காமல் நான் எப்படி வாழ்வேன். பரிதாபப் படும் நிலையில், ஒரு பரிதாபமான வாழ்க்கை வாழ வேண்டியிருக்கும். என் ஹ்ருதயம் மிகவும் கடினமானது. அதனால்தான், இந்த விஷயம் கேட்டும் வெடிக்காமல் இருக்கிறது. அழுது ஓலமிடும்  மிருகத்தை, சிங்கம் அன்றே தின்று தீர்த்து விடுவது போல, இன்றே யமன் வந்து என் வாழ்க்கையை முடித்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இதயத்தை இரும்பால் செய்து விட்டான். அதனால் தான் அது தூளாகிப் போகவில்லை. இந்த துக்கத்தில் கூட சரீரம் குலையவில்லை. காலமில்லாமல் மரணம் வருவதில்லை என்பது நிஜம்தான். உப்பு நிறைந்த உவர் நிலத்தில் விதை போட்டது போல என் மகனின் நலனுக்காக நான் செய்த விரதங்களும், தானங்களும், புலனடக்கி நான் நியமம் இருந்ததும், தவம் செய்ததும், பலனற்றுப் போயினவே. கன்றைப் பிரிந்த பசுவைப் போல துடிக்கிறேன். ஏதோ ஒரு வழியில் மரணம் சம்பவிக்கும் என்றால், இந்த பெரிய துக்கத்தினால் பீடிக்கப் பட்டு, வாடியவளாய் இன்றே போகிறேன். சந்திரனைப் போன்ற முகக் காந்தியுடைய என் மகனைக் காணாமல், இந்த வாழ்வே வீண். நானும் உன் கூடவே வனம் வருகிறேன்.  கன்றைத் தொடர்ந்து பசுக்கள் போவதில்லயா? அது போல.  ராகவனைப் பார்க்கப் பார்க்க துக்கம் மேலிட, தாங்க முடியாமல் தவித்தாள் கௌசல்யை. கின்னரி தன் மகனைக் கட்டுண்ட நிலையில் கண்டது போல அவள் துக்கம் பெருகலாயிற்று.

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நான்கு ஆயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா கண்டத்தில், கௌசல்யாக்ரந்தோ, என்ற இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  21 (98)  கௌசல்யா லக்ஷ்மண ப்ரதிபோ34ம். (கௌசல்யை, லக்ஷ்மணன் இவர்களுக்கு விளக்கிச் சொல்லுதல்)

ராம மாதா இவ்வாறு புலம்புவதைக் காண சகியாத லக்ஷ்மணன் சொல்வான். எனக்கும் இது சம்மதமில்லை, தாயே, பெண் வார்த்தையைக் கேட்டு, ராஜ்ய லக்ஷ்மியை உதறி விட்டு ராமர் வனம் போவது எனக்கும் சம்மதமில்லை. வயதானதால் அரசருக்கு புத்தி விபரீதமாகி விட்டது. விஷய வாசனை இன்னமும் அவரை அலைக் கழிக்கிறது. மன்மதன் வசம் இருந்த கிழவரான அரசர் என்ன தான் சொல்ல மாட்டார்.  தூண்டி விடப் பட்டவராக பேசி இருக்கிறார்.  வனத்திற்கு அனுப்பும்படி ராமர்தான் என்ன தவறு செய்தார். அவரிடம் என்ன தோஷம் இருக்கிறது என்று ராஜ்யத்தை விட்டு வனத்திற்கு போகும்படி விரட்ட வேண்டும்? உலகத்தில், எதிரில் தான் என்று இல்லை, தனிமையில், மறைமுகமாக கூட, எந்த ஒரு மனிதனும், தன் மித்திரனோ, அறியாதவனோ,  ஆயினும் இந்த ராமனிடத்தில் குறை சொல்ல மாட்டார்கள். தேவர்களுக்கு சமமானவன். நேர்மையானவன். அமைதியானவன். எதிரியானால் கூட வாத்சல்யத்தோடு பார்க்கும் அளவு வசீகரமானவன். தர்மத்தைக் காக்கிறேன் என்று எவரும் புத்திரனை தண்டிக்க மாட்டார்கள். அரசனுக்கு பால்யம் திரும்பி இருக்கிறது. அதனால் தான் இந்த வார்த்தையை பேசியிருக்கிறார். ராஜாவுக்கு சாதாரண மற்ற பிள்ளைகள் போல் இருந்தால், யார் தான் இந்த வார்த்தையைக் கேட்டு வனம் போக சம்மதிப்பார்கள். அரசன் இவ்வாறு பேசும்பொழுது, ராமா, நீ என் துணையுடன் ராஜ்யத்தை உன் வசமாக்கிக் கொள். நான் கையில் வில்லேந்தி பாதுகாவலாக உன் அருகில் இருக்கும்பொழுது, யார் உன்னை என்ன செய்ய முடியும். யமனைப் போல நான் நிற்கிறேன். பரதன் பக்ஷத்தில் இருந்து யார் வந்து எதிர்த்தாலும், இந்த அயோத்தி பூராவும் மனித நடமாட்டமே இல்லாது செய்து விடுகிறேன். என் கூர்மையான அம்பால், எதிர்க்கும் எல்லோரையுமே, அழித்து விடுகிறேன். சாதுவாக (ம்ருதுவாக) இருப்பவன் தான் மேன் மேலும் தலை குனியும்படி ஆகிறது. நம் தந்தை கைகேயியினால் தூண்டப்பட்டு துஷ்டனாகி விட்டார். நமக்கு சத்ருவானார். செல்வோம், வதைப்போம். செய்யும் காரியத்தின் பலாபலன்களை அறியாமல், மூடத்தனமாக நடக்கும்  ஒருவர் பெரியவரானாலும், தந்தையே ஆனாலும், அடக்கி ஒடுக்குவது தான் முறை. எந்த பலத்தில், உனக்கு கொடுத்த ராஜ்யத்தை, பரதனுக்கு தூக்கி கொடுக்கிறார்? என்ன காரணம் சொல்கிறார் இந்த செயலுக்கு, எதிரிகளை அழிக்கும் ஆற்றல் படைத்தவனே, உன்னுடனும், என்னுடனும் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டு, ராஜ்ய லக்ஷ்மியை பரதனுக்கு கொடுக்க சக்தி ஏது? பரதனிடத்தில் எனக்கு பிரியம் உண்டு தான். சத்தியத்தின் பேரிலும் எனக்கு பிரியமான இந்த தனுசின் பேரிலும் ஆணையிடுகிறேன், தேவி, கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயில் ராமன் பிரவேசிக்க முற்பட்டால், அவனுக்கு முன்னால் நான் அந்த நெருப்பில் விழுந்து விட்டிருப்பேன் இதை நம்புங்கள் தாயே. உதிக்கும் சூரியன் இருளை விலக்குவது போல என் வீர்யத்தால் உன் துக்கத்தை அகற்றுவேன். தேவி, தாங்கள், என் வீரத்தைப் பாருங்கள். ராமனும் பார்க்கட்டும் கைகேயியின் மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் மகாராஜாவைக் கொல்லுவேன். வயது முதிர்ந்த நிலைக்கு பொருந்தாத பா3லனைப் போல சஞ்சலமாக இருக்கும் பரிதாபத்துக்குரிய என் தந்தையை மாய்ப்பேன். இதுபோல லக்ஷ்மணன் பேசுவதைக் கேட்ட கௌசல்யா, ராமனைப் பார்த்து, துக்கம் இவனை இப்படி பேச செய்கிறது. கேட்டாயா, உனக்கு பிடித்தமானால் மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய், என்றாள். என் சக்களத்தி அதர்மமாக சொன்னதைக் கேட்டு, என்னை தவிக்க விட்டு நீ வனம் போக வேண்டாம். போகாதே. நீயும் தர்மம் அறிந்தவனே.  தர்மம் தான் மேலானது என்று எண்ணி, தர்ம வழியில் நடக்க விரும்பினால், இங்கிருந்து எனக்கு பணிவிடைகள் செய்வாய். அதுவும் உத்தமமான தர்மமே. தன் வீட்டில் நியமத்துடன் வசித்துக் கொண்டு, தாயாருக்கு சேவை செய்தவாறு காஸ்யபர் தேவ லோகம் சென்றார். அரசனை மதிப்புடன் எப்படி மரியாதையாக நினைக்கிறாயோ, அப்படியே தான் நானும். நான் உன்னை அனுமதிக்க மாட்டேன் வனம் போக கூடாது. உன்னை பிரிந்து வாழ்வில் எனக்கு எதுவுமே இல்லை. உன் கூட வந்து புல்லைத் தின்று கூட சந்தோஷமாக இருப்பேன். என்னை தவிக்கவிட்டு, பிடிவாதமாக நீ வனம் போவாயேயானால். நான் ப்ராயோபவேசம் செய்கிறேன். உயிர் வாழ்வதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. சமுத்திரம், நதிகளின் அரசனாக இருந்து கொண்டு, ப்ரும்மஹத்தி தோஷத்தை அடைந்தது போல என் மரணத்தின் பலனும் உன்னைச் சாரும். இவ்வாறு அழுது புலம்பும் தாயைப் பார்த்து தர்மாத்மாவான ராமன், பதில் சொன்னார்.  தாயே, தந்தையின் கட்டளையை மீற எனக்கு சக்தியில்லை. உன்னை வணங்குகிறேன், ஆனாலும் வனம்  செல்லத்தான் வேண்டும். கண்டு என்ற முனிவர், பசு வதை கூடாது என்று அறிந்திருந்தும், விரதத்தை மேற் கொண்டிருந்த தந்தை சொன்னார் என்பதற்காக பசுவை வதைத்தார். நமது குலத்தில் முன்னோர்கள் பிதாவான சகரரின் ஆணைப் படி பூமியைத் தோண்டிக் கொண்டு சென்றவர்கள், வதம் செய்யப் பட்டனர். ஜாமதக்னியான பரசுராமர் ரேணுகா என்ற தன் தாயை, காட்டில் தந்தை சொன்னார் என்பதற்காக பரசு எனும் கோடாலியால் வீழ்த்தினார்.  இது போல பல தேவர்களுக்கு சமமான வீரர்களால் செய்யப் பட்டது. இதனால் தந்தையின் வார்த்தையை குறைவற கடைபிடிப்பேன். நான் ஒருவன் மட்டும் தான்  தந்தை சொல்லை மீறாமல் நடப்பவன் என்று எண்ணாதே. இதோ நான் சொன்ன எல்லோருமே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று தான் வாழ்ந்திருக்கிறார்கள். நான் புதிதாக இது தார்மீகம் என்று பிரதிகூலமாக நடக்கவில்லை. முன்னோர்கள் சரி என்று சொன்ன, நேர் வழியைத் தான் பின் பற்றுகிறேன். இதை நான் செய்தே ஆகவேண்டும். உலகில் இதற்கு மாற்று இல்லை. பிதாவின் சொல்லைக் கேட்டு அதன் படி நடப்பதில் இழப்பு எதுவும் இல்லை. இவ்வாறு சொல்லி விட்டு, லக்ஷ்மணனிடம் சொன்னார். சொல்லின் செல்வரான ராமன்,  வில்லின் வீரனான லக்ஷ்மணனிடம் சொன்னார். லக்ஷ்மணா,  நீ என்னிடம் வைத்திருக்கும் அன்பை  நான் அறிவேன். எதிர்க்க முடியாத உன் ஆற்றலையும், சக்தியையும் நான் அறிவேன். சுபமான லக்ஷணங்களை உடையவனே, என் தாயின் துக்கம் அளவிடமுடியாதது. தர்மத்திற்கும், பொறுமைக்கும் பொருள் அறியாமல், இவற்றின் உண்மை தத்துவத்தை அறியாமல் வீணாக செயல் படக் கூடாது. உலகில் தர்மம் தான் சிறந்தது. சத்யத்தில் தர்மம் நிலைத்துள்ளது. தந்தை வசனம் என்பதும் உண்மையான தர்மம். உத்தமமானதே. தந்தைக்கு உறுதியளித்து விட்டு, தாயின் பொருட்டோ, பிராம்மணனின் பொருட்டோ அதை மாற்றக் கூடாது.

தர்மத்தைக் கடை பிடிப்பவன் வாக்கு தவறக் கூடாது. அதனால் தந்தையுடைய கட்டளையை மீற முடியாது. தந்தையின் உத்திரவுப் படி தான் கைகேயி என்னிடம் பேசினாள். அதனால் இந்த பண்பாடற்ற எண்ணத்தை, க்ஷத்ர தர்மம் என்று நீ நம்புவதை விடு. என் புத்திமதியை அனுசரித்து நட. தீவிரமாக யோசிக்காதே. லக்ஷ்மணனுக்கு அண்ணனாக ராமன் சினேகமாக தம்பியைப் பார்த்து சொல்லிவிட்டு, திரும்பவும் கௌசல்யையைப் பார்த்து, கை கூப்பியவனாக, தலையாலும் வணங்கி, அனுமதி கொடுங்கள் தாயே, இதோ வனம் செல்லத் தயாராகி விட்டேன். என் உயிரின் மேல் ஆணை. எனக்கு மங்களா சாஸனம் செய்து வழியனுப்புங்கள். என் பிரதிக்ஞையை முடித்து நான் திரும்பி வருவேன். யயாதி போல, ராஜரிஷி, தேவலோகத்தை விட்டு திரும்பி வந்தது போல வருவேன். கவலை படாதே. வருத்தத்தை மனதினுள் அடக்கிக் கொள்ளுங்கள். தந்தை சொல்லை நிறைவேற்றிவிட்டு, நான் இங்கு தான் வருவேன். நீயும், நானும், வைதேஹியும், லக்ஷ்மணனும், சுமித்திரையும் தந்தை சொன்னதைக் கேட்டுத் தான் ஆக வேண்டும். இது தான் காலம் காலமாக வந்துள்ள தர்மம்.  தாயே, இந்த ஏற்பாடுகளை நிறுத்துங்கள். துக்கத்தை அடக்கிக் கொண்டு, நான் வனவாசம் செல்வதை மனதில் ஒப்புக் கொள்ளுங்கள். இது தான் தர்மம் என்று எண்ணி சமாதானம் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு மகன் தீர்மானமாக சிறிதும் தடுமாற்றமின்றி  நியாயப் படுத்தி சொன்னவுடன், இறந்தவன் திரும்பி வந்தது போல, தேவி ராமனை திரும்பவும் நன்றாக பார்த்து விட்டு தொடர்ந்தாள். உனக்கு தந்தை எப்படியோ, அப்படித்தானே நானும். ஸ்வதர்மமும்  அது தான், உறவும் அது தான். நான் உன்னை அனுமதிக்க மாட்டேன். என்னை விட்டு போகாதே. நீ இல்லாமல் நான் வாழ்ந்து தான் என்ன பயன்? அமுதமே கிடைத்தாலும் என்ன பயன்? இந்த உலகம் முழுவதும் தடுத்தாலும், உன்னுடன், உன்  சன்னிதானத்தில் முஹுர்த்த காலம் இருப்பதையே நான் பெரிதாக நினைப்பேன். தீப் பந்தங்கள் கொண்டு விரட்டப் பட்ட யானை (மகா கஜம்) அத்வானத்தை அடைந்தது போல, மறுபடியும் தாயின் புலம்பல் அதிகரித்தது. இதைக் கண்டு தாயின் கருணையை எண்ணிய ராமன், தன் நினைவையே இழந்து விட்டது போல இருந்த தாயாரையும், தாங்க முடியாத கோபத்துடன் இருந்த லக்ஷ்மணனையும் பார்த்து, இந்த சமயத்தில் தான் ஒருவனே சொல்லக் கூடும் என்பது போன்ற வார்த்தைகளைச் சொன்னான். தர்மத்தில் வழியில் தீவிரமாக செல்பவன், தார்மீகமான சொல்லும் அவன் சொல்வதில் தான் சிறப்பு. லக்ஷ்மணா, உன் பக்தியையும் பராக்ரமத்தையும் நான் அறிவேன். என் அபிப்பிராயம் என்ன என்று தெரிந்து கொள்ளாமல் நீயும்,  தாயாருடன் சேர்ந்து கொண்டு என்னை மேலும் துன்பத்தில் ஆழ்த்துகிறாய்.  ஜீவ லோகத்தில், தர்மத்தை அனுசரிப்பதன் பலன்களாக, தர்மம், அர்த்தம், காமம் என்று மூன்றுமே சொல்லப் பட்டிருக்கின்றன. சந்தேகமில்லாமல் இந்த மூன்றும் எனக்கு கிடைக்கும்., தாயும் மகனுமாக, மனைவி தன் வசத்தில் இருப்பது போல இவை என் வசம் இருக்கின்றன. மூன்றுமே இல்லாத போது தர்மத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும். அர்த்தமே குறியாக இருப்பவனை மற்றவர்கள் வெறுப்பார்கள். காமாத்மாவாக இருப்பவனும் புகழ் அடைய மாட்டான். குரு, அரசன், அதற்கும் மேல் தந்தை, வயது முதிர்ந்தவன், கோபத்தினாலோ, அதிக மகிழ்ச்சியாலோ, அல்லது காம வசமாகவோ, ஏதோ ஒன்றைச் செய்ய கட்டளையிடுகிறார் என்றால், நேர்மையான புத்தி, நடவடிக்கையுள்ளவன் எவன் தான் இதில் தர்மத்தை உணர்ந்து நடக்க மாட்டான்? அதனால் தான் நான் தந்தையின் வாக்கை மீறிச் செல்ல மாட்டேன். இந்த பிரதிக்ஞையை முழுவதுமாக எப்படி சொன்னாரோ, அதே போல செய்யாமல் என்னால் இருக்க முடியாது, அவர் நம் இருவருக்கும் தந்தை, குரு ஸ்தானத்தில் இருப்பவர். தேவிக்கும் கணவன். ஒரே கதி எனும் நிலையில் இருப்பவர். அது தான் தர்மம். அவர் உயிருடன் இருக்கும் பொழுது, தர்மராஜாவான அவரை விட்டு, என்னுடன் வருகிறேன் என்று சொல்கிறாயே, இது நடக்குமா? முடியுமா ஏதோ விதவையான ஒரு பெண் மகனுடன் வருகிறேன் என்று சொல்வது போல, இது சரியில்லை. அதனால் தாயே, எனக்கு அனுமதி கொடுங்கள். எனக்கு ஸ்வஸ்தி மங்களங்களை செய்யுங்கள். இந்த வனவாச காலம் முடிந்து திரும்பி வருவேன். யயாதி வந்தது போல.  கேவலம் இந்த ராஜ்யத்திற்காக, என் புகழ், என் தனித் தன்மையை,  பின்னால் மிகவும் சிறப்பாக வளரக் கூடியதை, தள்ளி  விட்டு, இப்படி அதர்மமாக வரும் ராஜ்யத்தை அடைவதை அவசியமற்றதாக, இரண்டாம் பக்ஷமாக நினைக்கிறேன். என் புகழ் மேன் மேலும் வளர வேண்டும். நாம் வாழும் நாள் மிகக் குறைவானதே. தாயாரை இப்படி சமாதானப் படுத்தி விட்டு, தம்பியை அடக்கி, தனக்கு சம்மதமான தர்ம ரகஸ்யத்தை தம்பிக்கு உபதேசம் செய்து சமாதானம் செய்து, மனதில் தாயை பிரதக்ஷிணம் செய்தான்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், கௌசல்யா, லக்ஷ்மண பிரதி போ3த4னம் என்ற இருபத்தொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  22 (99)  தை3 ப்ராப3ல்யம்

மகா ஆத்திரத்தில் கண்கள் சிவக்க, பாம்பின் அரசன் மூச்சு விடுவது போல சீறிக் கொண்டு,  அதனாலேயே  தீனனாக தெரிந்த சௌமித்திரியை அணுகி ராமர்,  சமாதானப் படுத்த முயன்றார். நண்பனும், பிரியமான சகோதரனுமான லக்ஷ்மணன், ரோஷத்தின் எல்லையில், கோபமே உருவாக நின்றிருந்தவனை,  அருகில் சென்று, சத்வமான தன் தீர்மானத்தை சற்றும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயத்தில் சௌமித்திரியின் தவற்றை, அவன் அவமானம் என்று நினைப்பதை மாற்றும் வகையில்,  தெளிவாக விளக்கிச் சொன்னார். தைரியம் எது என்பதை அவனுக்கு எடுத்துச் சொன்னார், தன் மகிழ்ச்சியை அவன் உணரும் வகையில் மெதுவாக சாந்தப் படுத்தி தன் வழிக்கு கொண்டு வர முயன்றார். இன்று எனக்கு அபிஷேகம், முடி சூட்டு விழா என்று  ஏற்பாடுகள் செய்திருந்தது, தானாகவே  நிறுத்தப் படட்டும். நீ என் தாயாரை கவனித்துக் கொள். என் பிரிவை அவள் தாங்க மாட்டாள். தவிக்கும் அவளை நீதான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சௌமித்திரி,  அவள் எந்த காரணத்தைக் கொண்டும் துன்பப் படுவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதுவரை, தெரிந்தோ, தெரியாமலோ, தந்தைக்கும், தாய்மார்களுக்கும், சிறிதளவு கூட பிடிக்காததைச் செய்ததாக நினைவு இல்லை. நம் தந்தை, எப்பொழுதும் சத்யனாக சத்ய பராக்ரமனாக இருந்து வந்திருக்கிறார். தர்மத்திற்கும், வினைப் பயனுக்கும் பயப்படுகிறவர். தன் வினை தன்னைச் சுடும் என்பதில் நம்பிக்கை உள்ளவர். அவர் பயமின்றி இருக்கட்டும்.  ஒரு சமயம் பின்னால் யோசித்துப் பார்க்கும் பொழுது, அவருக்கும் இந்த காரியம் தர்மம் அல்ல என்று தோன்றலாம். அதனால் மனதில் தாபம் கொண்டால் அது என்னையும் பாதிக்கும். இந்த அபிஷேக ஏற்பாடுகளை நிறுத்தி விட்டு, எல்லோருக்கும் சம்மதமாக, சினேக பாவத்துடன், இன்றே வனம் போக விரும்புகிறேன். எனது வெளியேறுதலால், சந்தோஷமாக, மகன் பரதனுக்கு இடையூறின்றி முடி சூடட்டும்.  நான் மரவுரி, ஜடாமுடி தரித்து வனம் சென்ற பின் தான் கைகேயியின் மனம் சாந்த மடையும். அதனால் காலம் தாழ்த்தாமல் கிளம்புகிறேன். என் புத்தி ஸ்திரமாக என் வசத்தில் உள்ளது. இதில் கலக்கம் தோன்றும் முன் கிளம்புகிறேன். இந்த மன நிலையை கலைக்காமல் கிளம்புகிறேன். நான் நாட்டைத் துறந்து இருக்கும் காலத்தில் கவனமாக இரு. இப்பொழுக்து நாம் கொடுத்துவிட்ட ராஜ்யத்தை திருப்பித் தரும் பொழுது, கைகேயியின் கண்ணோட்டம்  எப்படி இருக்குமோ, என்னை துன்புறுத்த எண்ணும் இந்த எண்ணம், விதியா, காலனுடையதா, எதேச்சையாக நேர்ந்ததா தெரியவில்லை. உனக்குத் தெரியும் லக்ஷ்மணா, நான் தாயார்களுக்குள் வித்தியாசமாகவே நடந்து கொண்டதில்லை. விசேஷமாக, அவளிடமும், அவள் மகனிடமும் நான் சிறிதளவும் வேற்றுமை பாராட்டியதில்லை. இந்த அபிஷேகத்தை நிறுத்தவும், நான் நாட்டை விட்டுச் செல்லவும், கடும் வார்த்தைகளால் அவளால் சாடப் பட்டேன் என்றால் அது விதியின் காரியமே. ராஜ குமாரியாக இருந்து சற்றும் குணமற்ற பாமர ஸ்த்ரீயைப் போல கணவன் எதிரிலேயே, சுய நினைவோடு இருந்தும் நான் வருந்தும் படி பேசினாள். இது நினைத்து பார்க்க முடியாத விதி தான் எனக்கும் அவளுக்கும் இடையே ஒரு தடுப்பு விழுந்து விட்டது. மனிதர்கள் உற்சாகமாக யுத்தம் செய்யப் புறப்படச் செய்வதும் இந்த விதி தான். அதே செயலை வேறு விதமாக செய்யலாமே என்பது தோன்றுவதே இல்லை. இதுவும் விதி தான். சுக துக்கத்திலும், பயத்திலும், க்ரோதத்திலும், லாபத்திலும், நஷ்டத்திலும், இருப்பதும் இல்லாததும் அது அது அப்படி அப்படியே இருப்பதும் கூட விதி தான். உக்ரமாக தவம் செய்யும் ரிஷிகள் கூட விதியினால் தூண்டப் பெற்று, தங்கள் நியமங்களை விட்டு, காமம் க்ரோதம் இவற்றிற்கு ஆளாவதைக் காண்கிறோம். இது சற்றும் யோசிக்காமல் எதேச்சையாக நேர்ந்ததே. ஆரம்பித்து விட்டதை திரும்ப பழைய நிலைக்குக் கொண்டு செல்ல அந்த விதியாலும் முடியாது. இது போல தத்வ விஷயங்களை நினைவில் கொண்டு உன் மனதைக் கட்டுப் படுத்திக்கொள். என் அபிஷேகம் தடைப் பட்டது கூட என் மனதில் தாபத்தை வருத்தத்தை உண்டு பண்ணவில்லை. அதனால் நீயும் வருத்தமடையாமல் இருந்து, என்னுடன் கூட இந்த முடி சூட்டு விழாவினை சீக்கிரம் நிறுத்தப் பார். இந்த ஜலம் நிரம்பிய கலசங்களினாலேயே நான் தபஸ்வியாக விரதம் எடுத்துக் கொள்ளூம் விரதஸ்னானம் நடக்கட்டும். அல்லது, எனக்கு எதற்கு இந்த ராஜ்ய திரவியங்கள். நானாக ஜலம் கொண்டு வந்து என் விரத ஸ்னானத்தை செய்து கொள்கிறேன். லக்ஷ்மி கை விட்டுப் போனதற்காக வருந்தாதே லக்ஷ்மணா, ராஜ்யம் ஆனாலும் சரி, வனவாசம் ஆனாலும் சரி, நல்லதிற்குத்தான் ஆரம்பம் என்று நினை. லக்ஷ்மணா,  இந்த காரியம் தடைப் பட்டதில் சிற்றன்னையையும் ஒரேயடியாக தூஷிக்க வேண்டாம். விதி வசத்தால் தான் அவளும் இஷ்டமில்லாததை பேசியிருக்கிறாள். விதியில் ப்ரபாவம் அப்படிப் பட்டது.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், தை3வ ப்ராப3ல்யம் என்ற இருபத்திரண்டாவது அத்தியாயம்.)

அத்தியாயாம் 23 (100) லக்ஷ்மணக்ரோத4: (லக்ஷ்மணணின் கோபம்)

இவ்வாறு ராமர் சொல்லி வரும் பொழுது, தலை குனிந்த வண்ணம் கேட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மணன், துக்கம், சந்தோஷம் இரண்டிற்கும் மத்தியிலான நிலையில் இருந்தான். புருவங்களுக்கு மத்தியில், நெற்றியைச் சுருக்கி, தன் வளையில் அடைபட்ட, கோபம் வெளிப்பட இருக்கும் மகா சர்ப்பம் போல பெருமூச்சு விட்டான். அவன் கண்களும், புருவங்களும் கோபம் கொண்ட சிங்கத்தின் முகம் போல இருந்தது. தும்பை விட்டு வாலை பிடித்தது போல, கழுத்தை சாய்த்து வேறு பக்கம் பார்த்துக் கொண்டு, ராமனிடம் சொன்னான். தவறான இடத்தில் இவ்வளவு கோலாகலங்களும் நடந்திருக்கிறது. சந்தேகம் இல்லாமல் உங்களை நம்பிக்கொண்டிருக்கும் ஜனங்களிடம் பரபரப்படையாமல்  எப்படித்தான் பேசுகிறீர்களோ? தர்மத்தின் விரிவுரைகள் மிகவும் சிக்கலானவை. தர்மாத்மாவே, ஏன் இதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் ? உங்களை விட்டு மற்றவர்க்கு அபிஷேகம் என்ற இந்த செயல் உலகில் எதிர்ப்புக்கு உள்ளாகும். என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் புத்தியில் புதியதாகத் தோன்றியுள்ள இந்த மனோ பாவம், அது தர்மம் என்றே வைத்துக் கொண்டாலும் எனக்குப் பிடிக்கவில்லை.  நான் ஒப்புக் கொள்ளும் படியாக இல்லை. தந்தையிடம் உள்ள பாசத்தால் ஏமாறுகிறீர்கள். நீங்கள் சக்தியிருந்தும், எதிர்த்து போராடாமல் கைகேயியின் வசத்தில் விழுந்த அரசனின் செயலை நியாயப்படுத்துகிறீர்கள். அதர்மம் என்று உலகத்தார் தூஷிக்கும் செயலை, துரோகம் இல்லை என்று எடுத்துக் கொண்டு விட்டீர்கள். எனக்கு துக்கம் தான். தர்மம், தர்மம் என்று சொல்வது கூட தேவையற்றது தான். நீங்கள் சொல்லும் இந்த தர்ம உபதேசம் உலகத்தாருக்கு பிடிக்கவே பிடிக்காது. பெற்றோர் என்று பெயர் வைத்துக் கொண்டு, நன்மையல்லாததை தன் மகனுக்கு செய்யத் துணிந்தவர்கள் சத்ருக்களே. தங்கள் இச்சைப்படி, காமத்தில் மூழ்கியிருப்பவர்கள், மனதாலும் மற்றவர்களுக்கு நல்லதை செய்வார்கள் என்று எப்படி எதிர் பார்க்கலாம். இப்படிப்பட்ட சுயநலம் மிக்கவர்களிடம் உங்கள் தர்ம நியாயம் எடுபடாது. தெய்வம், விதி என்றே வைத்துக் கொண்டாலும், எனக்கு அது உகந்ததாக இல்லை. தள்ளுபடி செய்ய வேண்டியதே ஆகும். உடல் வலிவற்றவன், வீர்யமில்லாதவன், தெய்வம், விதி  என்று கையாலாகாமல் விட்டிருக்கலாம்.  ஆனால், வீரர்கள், தன்னம்பிக்கை உடையவர்கள், தெய்வத்தையோ விதியையோ நம்புவதில்லை. விதியை மதியால் வெல்லலாம். மனித யத்தினத்தால் விதியை மாற்ற வல்லமையுடையவர்கள், தன் பொருளை இழந்து வருந்தி இருப்பதில்லை. இன்றே நாமும் பார்ப்போமே. மனிதனுடைய பராக்ரமத்தையும், விதியின் வலிமையையும் பார்ப்போமே.  இன்றே விதியா, மனித முயற்சியா, இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம். என் புஜ பலத்தால் விதியை வீழ்த்துவதை ஜனங்கள் காண்பார்கள். விதியினால் தடுக்கப்பட்ட தங்கள் ராஜ்யாபிஷேகம், என் புஜ பலத்தால் நடக்கட்டும். மதம் பிடித்து ஓடும் உக்ரமான மிகப் பெரிய யானையை அங்குசத்தால் அடக்க முடியாதது போல விதியை நான் என் பலத்தால் திருப்பி விடுகிறேன். லோக பாலர்கள் அனைவரும் வந்தாலும், மூவுலக நாயகர்கள் வந்தாலும், இன்று ராமனுடைய முடி சூடும் வைபவத்தை தடுத்து நிறுத்த முடியாது. தந்தை எம்மாத்திரம்? எவர் உனக்கு வனவாசம் என்று விதித்தார்களோ, அவர்கள், பதினான்கு வருஷம் வனத்தில் வசிக்கட்டும். அப்படி அவருடைய ஆசையை வெட்டி முறிப்பேன். எவள் உன் அரசுரிமையை பறித்து, தன் மகனுக்கு கொடுக்க விரும்புகிறாளோ, அவளையும் வீழ்த்துவேன். என் பலத்திற்கு முன் விதி என்ன செய்யும்? உக்ரமான என் பௌருஷம் அவர்களுக்கு துக்கத்தை தரும்படி வெளிப்படப் போகிறது. ஆயிரம் வருஷங்கள் நீங்கள் ராஜ்யத்தை பரிபாலனம் செய்தபின், தங்கள் குமாரர்களிடம் ராஜ்யத்தை ஒப்புவித்து விட்டு நீங்கள் வனம் செல்லலாம். புத்திரர்களை ராஜ்யத்தில் ஸ்தாபித்து விட்டு ராஜ ரிஷிகளாக, முன் காலத்தில் பெரியவர்கள் வனம் சென்றார்கள். ராமா, நால்வராக நாம் இருக்கும் பொழுது, ராஜ்யம் பிளவு படும் என்று பயந்து ராஜ்யத்தை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டினால், இதோ பிரதிக்ஞை செய்கிறேன். நாங்கள் மற்ற மூவரும் பங்கு கேட்க மாட்டோம். உங்கள் ஆட்சிக்கு உட்பட்ட ராஜ்யத்தை நாங்கள் பாலனம் செய்வோம். அலைகள் சமுத்திரத்தைக் காப்பது போல.  அதனால் மங்கள வஸ்துக்களால் அபிஷேகம் செய்யப் பெறுவாயாக. கவலையற்று இருங்கள். நான் ஒருவனே எதிர்க்கும் வீரர்களை நாசம் செய்யப் போதும். இந்த கைகள் அழகுக்காக இல்லை. இந்த வில் எனக்கு ஆபரணமும் இல்லை. நம்முடைய சரங்களும், ஸ்தம்பங்க ளி ல் கயிறு கட்ட, கொடி கட்ட என்று ஏற்பட்டவை அல்ல. அமித்திரர்களான சத்ருக்களை அழக்கவே இவைகளை சுமந்து செல்கிறேன். எனக்கு சத்ரு என்று தோன்றுபவர்கள், மேலும், மேலும் வளர்ந்து வருவதும், எனக்கு சம்மதமாக இல்லை.  மின்னல் போன்று ஒளி விடும் என் வாளின் தாக்குதலால் சத்ருவைப் பிடித்து, இந்திரனாக இருந்தாலும், துண்டு துண்டாக வெட்டுவேன். யானைகளும், குதிரைகளும், ரதங்களும், துண்டிக்கப்பட்ட தலைகள், கை கால்கள், என்று குவிந்து ஆகாயம் சஞ்சாரம் செய்ய இயலாததாக செய்வேன். என் கத்தியின் சுழற்ச்சியைக் கண்டு, மின்னலுடன் மேகம் விழுந்ததோ, எரியும் மலைகள் விழுந்தனவோ, என்று ஜனங்கள் எண்ணச் செய்வேன். என் கத்தியின் சுழற்ச்சியும், எதிரி விழுவதும் ஒன்றாக இருக்கும்படி செய்வேன். கோதாங்குலி எனும் ஆயுதத்தைக் கட்டிக் கொண்டு, கையில் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு நான் கிளம்பினால், எவன் புருஷன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு எதிரில் வருவான் பார்க்கலாம். பலருக்கு மத்தியில் நான், ஒருவனாக, ஒரே அம்பினால் பலரை அடித்து தள்ளுவேன். பாணங்களை வர்ஷித்து அரசன், குதிரை, யானைகள், இவற்றை மர்மத்தில் அடித்து வீழ்த்துவேன்.  நான் கற்றுக் கொண்ட அஸ்திரங்களின் பிரபாவத்தை இன்று காணலாம். மகாராஜாவான  தசரதனை இறக்கி விட்டு, அந்த ஸ்தானத்தில், தங்களை  நிலை நிறுத்துவேன். பிரபோ |  சந்தனம் பூசப் பெற்று கேயூர கங்கணங்களை அணிந்த இந்த கைகள், பூமியை விடுவிக்கவும், நண்பர்களைக் காக்கவும், தகுதியானவையே. இந்த புஜங்கள் தங்கள் வேலையைச் செய்யும். உங்கள் முடி சூட்டு விழாவை தடுக்க வந்தவர்களை தடுத்து நிறுத்தி விடும். நீங்களே சொல்லுங்கள்.  இன்று யாரை வெற்றி கொண்டு வர வேண்டும்? உங்களுடைய சத்ருவை, அவன் புகழ், நண்பர்கள் கூட்டத்தோடு அழித்

து வரவா? இந்த பூமி தங்கள் வசம் ஆகும் விதமாக எனக்கு கட்டளை இடுங்கள். நான் தங்கள் தாஸன். கிங்கரன்.  (ஏவியதை செய்பவன்.) ராக4வ வம்ச வர்த4னான ராமன், லக்ஷ்மணனை பல முறை அணைத்து, கண்ணீரைத் துடைத்து சமாதானம் செய்து, தந்தையின் வழியில் நிற்பவன் நான், அதை புரிந்து கொள், சௌம்யனே,  இது தான் நேர் வழி என்று சொன்னார்.

இது வரை வால்மகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், லக்ஷ்மணக்ரோத4|| என்ற இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின், தமிழாக்கம். (ஸ்லோகங்கள்-42).

அத்தியாயம் 24 (101) கௌசல்யார்த்தி சமாஸ்வாசனம் (வருந்தும் கௌசல்யையை சமாதானம் செய்தல்)

தன் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதில் உறுதியாக நிற்கும் மகனைக் கண்டு, கண்களில் நீர் பொங்க, தாயான கௌசல்யா, தர்மத்திற்கு அனுகூலமானதை சொன்னாள். இது வரை காணாத துக்கம் வந்து சேர்ந்திருக்கிறது. தர்மாத்மாவாக, பிரியமாக பேசுபவனாகவே நான் அறிந்திருந்த தசரத ராஜ குமாரன், எனக்கு பிறந்த மகன், உஞ்ச விருத்தி செய்து வாழப் போகிறான் இவனுடைய வேலைக் காரர்களும், தாச விருத்தி செய்யும் குற்றேவல் செய்பவர்களும்  ம்ருஷ்ட்டான்னம்.- நிறைந்த உணவே சாப்பிடுவார்கள். இவன் அவர்களுக்கெல்லாம்  நாதனாக இருந்தவன் காட்டில் கிழங்குகளை சாப்பிட்டு உயிர் வாழ நேர்ந்து விட்டதே. இதைக் கேட்டு யார்தான் சகிப்பார்கள். பயப்படாமல் இருக்க முடியுமா? யாரானாலுல் பயப்படத்தான் செய்வார்கள். குணவானான இந்த மகனையே ராஜா கடத்துகிறார் என்றால், மற்றவர்களின் கதி என்ன? உலகில் பலவானாக இருப்பவன், விதி தான். அவன் தான் எல்லா உயிர்களையும் நடத்திச் செல்கிறான், தன் இஷ்டப்படி. உலகில் மற்ற ஜனங்களுக்கு எல்லாம் அபிராமனாக இருந்த நீ, காட்டுக்கு விரட்டப் படுகிறாய். பனிக்காலம் முடிந்து உலர்ந்த புல்லை வெய்யில் எரிப்பது போல இந்த துக்கம் என்னை எரிக்கப் போகிறது. உன்னை, என் மகனைக் கானாத துக்கமே காற்றாக, அழுது புலம்புவதே சமிதாக, அழும் பொழுது விடும் கண்ணீரே ஆஹுதியாக, கவலையும் கண்ணீரும் பெரும் புகையாக, நீ திரும்பி வரும் நாளை எண்ணி வருந்தி பெருமூச்சு விட்டு, ஆயாசமாகி, அதில் உண்டாகும் சோகமே அக்னியாக, மிகப் பெரியதாக ஆகி என்னை கண்டிப்பாக அழிக்கப் போகிறது.  உலர்ந்த புல் சித்திரை மாத வெய்யிலில் எரிவது போல.  பசு மாடு கூட தன் கன்றைத் தொடர்ந்து சென்று விடும். நான் உன்கூட வருகிறேனே,மகனே, நீ போகுமிடம் எல்லாம் தொடர்ந்து வருகிறேன். இவ்வாறு மிகவும் துக்கத்துடன் அரற்றும் தாயிடம் ராமர் சொன்னார். ஏற்கனவே, ராஜா கைகேயியினால் வஞ்சிக்கப் பட்டு இருக்கிறார். நானும் வனம் சென்றபின், நீயும் கவனிக்கவில்லையென்றால், நிச்சயம் உயிருடன் இருக்க மாட்டார். பெண்களுக்கு கணவனை துறந்து செல்வதைப் போல பெரிய பாபம் வேறு கிடையாது. இந்த பாபத்தை நீ மனதாலும் செய்யக் கூடாது. என் தந்தை உயிருடன் இருக்கும்பொழுது நீ அவருக்கு பணிவிடைகள் செய். அதுதான் சனாதன தர்மம்.  இவ்வாறு ராமன் சொன்னவுடன், கௌசல்யா ராமன் சொல்வதில் நியாயம் இருப்பதை உணர்ந்து, சரி என்று ஒத்துக் கொண்டாள். ராமர் மேலும் சொன்னார். 

தாயே, எனக்கும் உங்களுக்கும் தந்தை சொல் மதிக்கத்தகுந்தது. அரசன் உனக்கு குரு, கணவன், ஸ்ரேஷ்டன், எல்லோருக்கும் தலைவன். இதோ, இந்த ஒன்பதும், ஐந்துமான வருஷங்கள், பெருங்காட்டில் கழித்து விட்டு வந்து விடுகிறேன். வந்து நீ சொல்வதைக் கேட்டு இருக்கிறேன்.  இவ்வாறு பிரியமான மகன் சொல்லவும், கண்களில் நீர் குளம் கட்ட, புத்ர பாசத்தால் மிகவும் வருந்தியவளாக, இருக்கலாம், மகனே, சபத்னிகளின் மத்தியில் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. என்னையும் அழைத்துச் செல், ஏதோ காட்டு மிருகம் கூட வருவது போல வருகிறேன்.  இதைக் கேட்டு, கண்களில் நீர் மல்க, தாயின் கண்ணீரைத் துடைத்து, தந்தையை விட்டு என்னுடன் வருவதில் தான் உனக்கு இஷ்டம் என்றால், உயிருடன் இருக்கும் வரை  ஸ்த்ரீகள் கணவனை தெய்வமாக நினைக்க வேண்டும் என்று சொல்லப் படுவது என்ன ஆகும். உங்களுக்கும் எனக்கும் பிரபுவாக ராஜா இருக்கிறார். லோக நாதனாக அரசன் இருக்கும்பொழுது, நாமும் அனாதைகள் அல்ல. பரதனும் நல்லவன் தான். தர்மாத்மா. எல்லோரிடமும் பிரியமாக பேசுபவன். அவன் தங்களை நிச்சயம் நல்ல முறையில் பாதுகாப்பான். அனுசரணையாக இருப்பான். நான் வெளியேறியதும், மகாராஜா புத்ர சோகத்தால் தடுமாறிப் போகாமல், அதனால் சிரமங்களை அனுபவிக்காமல் இருக்கும் வகையில், நீங்கள் அவருக்கு உதவியாக இருங்கள். இந்த துக்கம் தாங்க முடியாதது. இது அவரை பாதிக்காமல் இருக்க வேண்டும். வயது முதிர்ந்த அரசனுக்கு இதமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக்கொள்ளுங்கள். விரதம், உபவாசம் இவைகளில் ஈ.டுபட்டு, உத்தமமான காரியங்களை செய்து வரும் தாங்கள், பதியை அனுசரிக்காமல் போனால் அது எப்படி நன்மை பயக்கும். கணவனுக்கு பணிவிடை செய்தே பெண்கள் ஸ்வர்கம் செல்ல முடியும். அவள் தேவ பூஜை கூட செய்யாமலும், நமஸ்காரம் கூட செய்யாமலும் இருந்தாலும், கணவனின் நலனையே மனதில் கொண்டு, அவனுக்கு பணிவிடைகள் மட்டுமே குறைவற செய்து வந்தாலே, நல்ல கதி அடைவாள் என்று நமது வேதங்களும், ஸ்ம்ருதிகளும் சொல்கின்றன. அக்னி காரியங்களை செய். மணம் மிகுந்த புஷ்பங்களால் தேவதைகளை பூஜை செய். நல்ல விரதமுடைய பிராம்மணர்களை உபசரி. இவ்வாறு நான் திரும்பி வருவதை எதிர்பார்த்து நாட்களை கழிப்பாயாக. ஆகார நியமங்களையும், மற்ற கட்டுப் பாடுகளையும் கொண்டு, கணவனின் பணிவிடையில் மனதை செலுத்தி வந்தாயானால், நானும் வந்தபின் நல்கதி அடைவாய். உன் விருப்பங்கள் பூர்த்தியாகும்.  இவ்வாறு ராமர்  சொல்லவும், கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, ராமா நீ தீர்மானம் செய்து விட்டாய். உன்னை தடுத்து நிறுத்த எனக்கு சக்தியில்லை. காலத்தை வெல்ல முடியாது. ஏகாக்ர புத்தியுடன் போய் வா மகனே,  நீ திரும்பி வந்தபின் என் துக்கங்கள் அகன்று விடும். நல்லொழுக்கம் உடையவனே, உன் கடமை முடிந்து, திரும்பி வந்து, தந்தை பட்ட கடனைத் தீர்த்தபின்,  நானும்  சந்தோஷமாக இருப்பேன். விதியின் விளையாட்டு இது, உலகில் எப்பொழுதும் இதை நம்மால் மாற்ற முடியாதது. இதோ, நானே என் வார்த்தைகளால் ஆசிர்வதிக்கிறேன். மகாபாஹோ, இப்பொழுது போய், க்ஷேமமாக திரும்பி வா. எதிரில் நின்று அழகான வார்த்தைகளால் பேசி என்னை மகிழ்விப்பாய். இதோ, அந்த நாள் வந்து விடும். நீ வனவாசத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்து விடுவாய். உன்னை ஜடா முடிகளுடன், மரவுரியை அணிந்தவனாக பார்க்கிறேன். வனவாசத்தில் ராமர் உறுதியாக இருப்பதைக் கண்டு, தன்னை கட்டுப் படுத்திக்கொண்டு தேவியான கௌசல்யை, ராமனுக்கு சுபமான வார்த்தைகளால் ஸ்வஸ்தி மங்களங்கள் செய்தாள். (வழியனுப்பும் முறையில், ஆசிர்வாதங்கள் செய்து, காப்பு செய்தல்).

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், கௌசல்யார்த்தி சமாஸ்வாசனம்  என்ற இருபத்து நான்காவது அத்தியாயம்.)

அத்தியாயம் 25 (102) மாத்ரு ஸ்வஸ்த்யயனம் (தாயார் ஆசிர்வதித்தல்)

தன் வாட்டத்தை மறைத்துக் கொண்டு சுத்தமான ஜலத்தை எடுத்துக் கொண்டு தாயார் கௌசல்யா, ராமனுக்கு ஸ்வஸ்தி மங்களங்களை செய்தாள். என்னால் உன்னை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் போய் வா மகனே, ரகுகுல ஸ்ரேஷ்டனே, சீக்கிரமே திரும்பி வா. நல்லவர்களின் வழியில், மேன்மேலும் வளர்ச்சியடைவாய். எந்த தர்மத்தை நீ முழு நம்பிக்கையோடு, நியமத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளாயோ, அந்த தர்மம் உன்னை காக்கட்டும். ராக4வ சார்தூ3லா அந்த தர்மம் உன்னை பாலிக்கட்டும்.

மாளிகைகளிலும்,கோவில்களிலும், எந்த தெய்வங்களை வணங்குகிறாயோ, அவை காட்டில் மகரிஷிகள் கூட உன்னை நன்றாக காப்பாற்றட்டும். விஸ்வாமித்திர முனிவர் உனக்கு கொடுத்த திவ்யாஸ்திரங்கள், அதன் குணம் ஒன்று சேர, சதா உன்னை காக்கட்டும். தந்தைக்கு செய்த பணிவிடைகள், தாயாருக்கு செய்தவை, சத்யத்தை நிலை நிறுத்தி வரும் அவை உன்னை காக்கட்டும். நீடுழி வாழ்வாயாக.

சமித்து, குசம், பவித்ரம், வேத்யங்கள், ஆலயங்கள், பிராம்மணர்களுடைய யாக பூமிகள், மலைகள், மரங்கள்,  சிறிய நீர் நிலைகள், பறவைகளும், ஊர்வனவும், சிங்கங்களும் உன்னை ரக்ஷிக்கட்டும்.  நரோத்தமா, உனக்கு ஸ்வஸ்தி. உலகில் சாதனை புரிந்தவர்களான  மகரிஷிகளும் நன்மையை செய்யட்டும். ஸ்ருஷ்டிகர்த்தவான  தா4தா   ப்ரும்மா உனக்கு நன்மையை செய்யட்டும். சூரியனும், ப43 (சூரியனின் 12 நிலைகளில் ஒன்றின் பெயர்) அர்யம (சூரியன்), உனக்கு நன்மை செய்யட்டும்.  வாசவன் முதலான லோக பாலர்கள், ருதுக்கள், பக்ஷங்கள், மாசங்கள், சம்வத்சரங்கள் (வருஷங்கள்), இரவுகள், பகல்கள், முஹுர்த்தங்கள், எல்லாம் உனக்கு எப்பவும் நன்மையே செய்யட்டும்.  ஸ்ம்ருதி, த்4ருதி, த4ர்மம் (நினவுஆற்றல், தன்னம்பிக்கை, நீதி) இவை மகனே, உன்னை காக்கட்டும்.

பகவான் ஸ்கந்தனும், சோமதேவனும், ப்ருஹஸ்பதியும், சப்த ரிஷிகளும், நாரதரும் எப்பொழுதும் உன்னை ரக்ஷிக்கட்டும். திசைகளும், திசை நாயகர்களும் – இவைகளை எப்பொழுதும் நான் வணங்கி வந்திருக்கிறேன். இவை வனத்தில் உன்னை எப்பொழுதும் ரக்ஷிக்கட்டும். எல்லா மலைகளும், சமுத்திரங்களும், ராஜாவான வருணனும், ஆகாயம், வானம், பூமி, நதிகள் இவை அனைத்தும், நக்ஷத்திரங்கள் யாவும், க்ரஹங்களும், அவைகளின் தேவதைகளும், இரவு பகலாக, ஸந்த்யா காலங்களிலும், வனத்தில் சஞ்சரிக்கும் உன்னை பாதுகாக்கட்டும். ஆறு புண்யமான பருவங்களும், மாதங்களும், வருஷங்களும், கலைகளும், காஷ்டா: (கால அளவு- 1/30 ஒரு கலை.  கலை என்பது ஒரு நிமிஷம், 48 வினாடிகள்) இவை உன்னை ஆசிர்வதிக்கட்டும். முனி வேஷம் தரித்து அடர்ந்த காடுகளில் திரியும் பொழுது ஆதித்யர்களும், அரக்கர்களும், உனக்கு சுகத்தை தருபவர்களாக இருக்கட்டும்.

ராக்ஷஸர்களிடமும், பிசாசுகளிடமும், பயங்கரமான க்ரூர கர்மாக்களைச் செய்யும் க்ரவ்யாதிகளிடமும் (மாமிச ப4க்ஷிணிகள்), மகனே, உனக்கு பயம் ஏற்படாமல் இருக்கட்டும். பெரிய யானைகளும், சிங்கங்களும், புலிகளும், கரடிகளும், பற்களையுடைய எருமைகளும், கொம்புகளையுடைய பயங்கர மிருகங்களும் உன்னை வருத்தாமல் இருக்கட்டும். மகனே, மனித மாமிசம் சாப்பிடும் மற்றும் ஜீவ ஜந்துக்கள், உன்னை துன்புறுத்தாமல் இருக்கட்டும். 

இங்கு நான் பூஜித்து வந்த ஆகமங்கள், உனக்கு நன்மையை செய்யட்டும் மகனே. உன் பராக்ரமங்கள் சித்தியடையட்டும்.  சர்வ சம்பத்தியும் அடைந்து ஸ்வஸ்திமானாக சென்று வா. மறுபடியும் வாழ்த்துகிறேன் – அரசர்களிடமும், பார்த்திவர்களிடமும், எல்லா தேவர்களிடமும், உனக்கு இடையூறு செய்யும் மற்றவர்களிடமிருந்தும் நன்மை உண்டாகட்டும். சுக்ரனும், சோமனும், சூரியனும், த4னத3னும், யமனும் கூட உன்னை காப்பாற்றட்டும். த3ண்டகாரண்ய வாசிகளால் ராமா, பூஜிக்கப்பட்டவர்களாக, அக்னியும், வாயுவும், ஹோம புகையும், ரிஷி ஜனங்களின் வாயினால் ஓதப் படும் மந்திரங்களும், ரகுனந்தனா, நீ ஸ்னானம் செய்யும் பொழுது காக்கட்டும். சர்வ உலகுக்கும் பிரபுவான ப்ரும்மா, ஜீவன்களுக்கு காரணமானவன், ரிஷிகள், மீதியுள்ள தேவர்கள் யாவரும் காட்டில் வசிக்கும் உன்னை காக்கட்டும். இவ்வாறு சொல்லி மாலைகளாலும், கந்தம் முதலிய பூஜா த்ரவியங்களாலும் தேவதைகளை அனுரூபமான ஸ்தோத்திரங்களால் துதித்து, பூஜைகள் செய்து, கண்கள் கலங்க, பிராம்மணர்களைக் கொண்டு அக்னியில் ஹோமமும் முறைப்படிசெய்து, ராமனுக்கு மங்களம் உண்டாக வேண்டிக் கொண்டாள். நெய், வெண்மையான மாலைகள், சமித்துக்கள், வெண்ணெய் இவைகளைத் தருவித்து, உபாத்யாயர்களைக் கொண்டு விதிப் படி ஹோமம் செய்யச் சொன்னாள். அவரும், உடல் நலம் காக்கவும், சாந்தியும் பெற ஹோமங்கள் செய்தார் ஹோமம் செய்த மீதியினால் வெளியில் பலிகள் செய்தார்.  தேன், தயிர், அக்ஷதைகள்,இவைகளைக் கொண்டு பிராம்மணர்கள் ஸ்வஸ்தி வசனம் சொல்லி ஆசிர்வதித்தனர். வனத்தில் ராமர் மங்களமாக இருக்க ஸ்வஸ்தி வாசகங்களைச் சொன்னார்கள். அந்த பிராம்மணர்களுக்கு, யசஸ்வினியான. ராம மாதா வேண்டிய அளவு தக்ஷிணைகள் கொடுத்தாள். பின் ராமனைப் பார்த்து சொன்னாள்.

எல்லா தேவதைகளும் வணங்கும் இந்திரனுக்கு, வ்ருத்திராசுரனைக் கொன்ற போது எந்த மங்களம் உண்டாயிற்றோ, அது உனக்கும் உண்டாகட்டும். சுபர்ணா என்ற நாகராஜனுக்கு வினதா என்ற கருடன், அமுதத்தை வேண்டிய பொழுது என்ன மங்களா சாஸனம் செய்தாளோ அது  உனக்கும் உண்டாகட்டும். அம்ருதம் உண்டான பொழுது, வஜ்ர தரனான இந்திரனால், தைத்யர்கள் அடிக்கப் பட்டபொழுது, அதிதி என்ன மங்களா சாஸனம் செய்தாளோ அது உனக்கும் உண்டாகட்டும். அளவில்லாத பராக்ரமனான விஷ்ணு, மூன்று அடிகளால் உலகை அளந்தபொழுது, என்ன மங்களம் உண்டாயிற்றோ, ராமா, அது உனக்கும் உண்டாகட்டும்.

ருதுக்களும், சாகரங்களும், தீவுகளும், வேதங்களும், லோகங்களும், திசைகளும், மகாபாஹோ, உனக்கு மங்களங்களைத் தரட்டும். சுப மங்களங்கள் உண்டாகட்டும்.  என்று இவ்வாறு சொல்லி தலையில் பூஜை செய்து மிகுதியான புஷ்பங்களைப் போட்டு, கந்தங்களையும் இட்டு விட்டு, ராமனுக்கு, விசல்யகரணீம் என்ற ஔஷதியையும் ரக்ஷையாகக் கட்டி விட்டு, மந்திரங்கள் சொல்லி ஜபமும் செய்தாள். துக்கத்தில் மூழ்கி இருந்தாலும், தன்னை மகிழ்ச்சியாக காட்டிக் கொண்டு, வெறும் வார்த்தைகளால், பாவம் இல்லாமல், (மன விருப்பம் இல்லாமல்), சொன்னாள். உச்சி முகர்ந்து, அணைத்துக் கொண்டு, ராமா, சித்தார்த்தனாக (உன் எண்ணம் நிறைவேறியவனாக,) போய் வா மகனே,, சுகமாக போய் வா. ஆரோக்யமாக, உன் இஷ்டங்களை பூர்த்தி செய்து கொண்டு, திரும்பி அயோத்தி வந்த உன்னை, நலமாக காண்கிறேன்.  குழந்தாய், ராஜ வம்ச வழியில் ஸ்திரமாக இருந்துகொண்டு, என் துக்கங்கள் விலகி மகிழ்ச்சியில் பூரித்த முகத்தோடு, காட்டிலிருந்து வந்தவனை, உன்னை வரவேற்கிறேன். பூரண சந்திரன் உதித்தது  போல நீ திரும்பி வருவதை பார்க்கிறேன். வனவாசம் முடிந்து இங்கு வந்து பத்ராசனத்தில் அமர்ந்து, தந்தைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றியவனாக, திரும்ப உன்னை பார்க்கிறேன். மங்களங்கள் கூடியிருக்க, வனவாசம் முடிந்து இங்கு வந்து, மருமகளையும், என்னையும், தினமும் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வாய்.  எங்கள் இஷ்டங்களை பூர்த்தி செய்வாய். போய் வா. என்னால் பூஜிக்கப் பட்ட தேவ கணங்கள், சிவன் முதலானோர், மகரிஷிகள், பூத, மகாசுர, நாகங்கள், வனத்திற்கு புறப்பட்டு விட்ட உனக்கு நிச்சயமாக ஹிதங்களையே செய்யட்டும். ராகவா, என்று இவ்வாறு கண்ணீர் பெருகும் விழிகளோடு, மங்களா சாஸனங்களை விதி முறைப்படி முடித்து, ராகவனை பிரதக்ஷிணம் செய்து, திரும்பத்  திரும்ப அணைத்துக் கொண்டாள். தாயால் இவ்வாறு பிரதக்ஷிணம் செய்யப்பட்ட ராகவன்,  தாயாரின் சரணங்களைப் பற்றி, திரும்பத்  திரும்ப வணங்கி, தன் இயல்பான தேக காந்தி இன்னும் அதிகமாக பிரகாசிக்க, சீதையின் இருப்பிடம் சென்றான்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், மாத்ரு ஸ்வஸ்த்யயனம் என்ற இருபத்து ஐந்தாவது அத்தியாயம்.)

அத்தியாயம் 26  சீதா ப்ரத்யவஸ்தா2பனம்

கௌசல்யையை வணங்கி, தன் கொள்கையில் ஸ்திரமாக, வனம் செல்ல விடை பெற்றுக் கொண்டு, ராஜ மார்கம் வழியாக செல்லும் பொழுது, ஜனங்கள் நிறைந்து இருந்த அந்த வீதியில், ஒவ்வொருவரும் ராமனைப் பார்த்து, மனம் கலங்கினர். அவன் குணங்களை எண்ணி தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இவையனைத்தையும் இதுவரை வைதேஹி அறிந்திருக்கவில்லை. அவள் மனதில் இன்னமும் முடி சூட்டு விழா நடந்து கொண்டிருப்பதாகவே எண்ணியிருந்தாள். மனதில் மகிழ்ச்சியோடு தெய்வ காரியங்களை தானே செய்து விட்டு, ராஜ குல வழக்கப்படி, ராமன் திரும்பி வருவதை எதிர் நோக்கி காத்திருந்தாள். ராமர் தன் மாளிகையில் நுழைந்த பொழுது, நன்கு அலங்கரிக்கப்பட்டு, உற்றாரும், சுற்றாரும், கோலாகலமாக நிறைந்திருந்த வீட்டில், சற்று லஜ்ஜையுடன் தலை குனிந்தவாறு சென்றார். எழுந்து வந்த சீதா, கண்களில் நீர் வடிய, மனதின் வருத்தம் முகத்தில் தெரிய, கவலையால் வாடிய இந்திரியங்களுடன் ராமனைப் பார்த்து திடுக்கிட்டாள். அவளைப் பார்த்ததும் ராமர், தன் மனதை வாட்டிய துக்கத்தை அதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவராக, உடைந்து போனார். முகம் வாடி, தாங்க மாட்டாத சோகத்துடன், ப்ரபோ, இது என்ன என்று வினவினாள். இன்று ப்3ருஹஸ்பதி வம்சத்தில் வந்தவர்கள், புஷ்ய நக்ஷத்திரம் என்றார்களே, ப்ராம்மணர்கள் அனைவரும் இன்று நல்ல நாள் என்று நிச்சயித்தார்களே, ஏன் இப்படி முகம் வாடி வருத்தம் தோய்ந்தவராக இருக்கிறீர்கள்? உங்களுடைய அழகிய முகம், நீரில் தோன்றும் நுரை போன்ற வெண்ணிற குடை, அதன் பல நூறு பரிதிகளால் அலங்கரிக்கப் பட வில்லையே. குடை எங்கே? சந்திரனோ, ஹம்சமோ எனும்படியான, குளிர்ந்த சாமரங்கள் வீசப் படவில்லை. வாக்கு வன்மை நிறைந்த பாடகர்கள் சந்தோஷமாக துதிப்பார்களே, நரர்ஷபா4 (மனிதருள் ரிஷபம் போன்று கம்பீரமானவனே), அவர்களும் தென்படவில்லையே. பாடுபவர்களும், ஆடுபவர்களும் காணப் படவில்லை. பாலில் செய்யப்பட்ட த்ரவ்யங்களோ, தயிரோ கொண்டு, வேதத்தில் கரை கண்ட ப்ராம்மணர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட தங்களை ஆசிர்வதிக்க காணோம். பிரமுகர்களோ, சாதாரண ஜனங்களோ, உங்களைத் தொடர்ந்து வரக் காணோம். நான்கு வர்கத்தவர்களும் சேர்ந்த ஊர் ஜனங்கள் எங்கே? உயர் ஜாதி குதிரைகள் பூட்டிய,, தங்க மயமாக அலங்கரிக்கப்பட்ட புஷ்ய ரதம் எங்கே? உங்களுக்கு முன்னால் செல்ல வேண்டுமே? முன்னால் யானையும் இல்லை. க்ருஷ்ண பக்ஷ மேகம் போலவும், சிறிய மலைக் குன்று போலவும் யானைகள் தொடர்ந்து வருமே. பத்ராசனத்தை அலங்கரிக்கப் போகும் வீர புருஷனை கௌரவிக்கும் வகையிலான  எதையுமே காணவில்லையே. அபிஷேகம் என்று தீர்மானித்து அலங்கரிக்கப் பட்டதே, இப்பொழுது என்ன ஆயிற்று? ப்ரபோ, இது போன்ற நிலையில் தங்களை நான் கண்டதே இல்லையே. சந்தோஷமாகவும் இல்லையே? இவ்வாறு தொடர்ந்து கேள்விகளை அடுக்கும் மனைவியைப் பார்த்து ராமர் சொன்னர். 

சீதே, என் மதிப்புக்குரிய தந்தை என்னை நாடு கடத்தி, வனத்திற்கு அனுப்புகிறார். நல்ல குலத்தில் பிறந்து, தர்மம் அறிந்தவளே, அந்த தர்மத்தை பின் பற்றும் நெறி உள்ளவளே, கேள்,   இன்று  எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரமாக கேள். என் தந்தையான தசரத ராஜா, வாக்குத் தவறாதவர். அவர் ஒருமுறை சிற்றன்னை கைகேயியிக்கு இரண்டு வரங்கள் கொடுத்தார். அவள், இன்று, எனக்கு முடி சூட்டு விழா என்று அரசர் நிச்சயித்து, ஏற்பாடுகளைச் செய்தபின்,  சற்றும் எதிர்பார்க்காத விதமாக, என்னை பதினான்கு ஆண்டுகள் வனத்தில் வசிக்க சொல்லியும், பரதனை ராஜ்யத்தில் அமர்த்தவும், வரமாக பெற்று, இருவரும் அவ்விதமே முடிவு செய்து விட்டனர். இது தர்மத்திற்கும் ஒவ்வாதது. விதியின் தூண்டுதல் என்று தான்  சொல்லவேண்டும். நான் இதோ ஜன சஞ்சாரமற்ற வனத்திற்கு போகுமுன், உன்னிடம் விடைபெற வந்தேன். பரதனுக்கு எதிரில் என்னை எப்பொழுதும் புகழ்ந்து பேசாதே. எதையும் அவனிடம் விசேஷமாக எதிர்பார்க்காதே.  ஜாக்கிரதையாக அனுசரித்து அவனிடம் நடந்து கொள். புராதனமான  இந்த அரசு மகாராஜாவால் பரதனுக்குத் தரப் பட்டுள்ளது. அதனால் அவன் இப்பொழுது அரசன். அதனால் அரசனுக்குரிய மரியாதைகளை அவனுக்குத் தர மறக்காதே. நான் அரசனுடைய வாக்கை கடை பிடித்து, இன்றே வனத்திற்கு போகிறேன். மனஸ்வினீ, (புத்திசாலி, தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கும் குணம்) நீ கலங்காதே. மாசற்றவளே, நான் வனம் சென்றபின், விரதங்களை அனுசரித்துக் கொண்டு காலத்தை கழிப்பாய். விடியற்காலை எழுந்து தேவ பூஜைகளைச் செய்தபின், என் தந்தையான மகாராஜா தசரதனை வணங்கி வா. என் பிரிவினால் வாடும் என் தாய் கௌசல்யா, வயது முதிர்ந்தவள், தர்மத்தை நினைத்து நீ அவளுக்கு மரியாதைகள் செய். மற்ற தாய்மார்களும், வணங்கத் தக்கவர்களே. ஸ்னேகத்திலும், அன்பிலும், வசதியிலும் மூவரும் எனக்கு சமமே. பரத சத்ருக்னர்கள் எனக்கு உயிருக்குயிரானவர்கள். அவர்களை சகோதரன் அல்லது மகனுக்கு சமமாக எண்ணி நடந்து கொள். பரதனுக்கு இஷ்டமில்லாததை எப்பொழுதும் செய்யாதே. அவன் அரசன். நம் தேசத்திற்கும், குலத்திற்கும் பிரபு. நாம் நல்லபடி அவர்களை மதித்து, சீலத்துடன், பெரு முயற்சிகளுடனும் அரசனுக்கு சேவை செய்தால் தான், அரசன் நம்மிடம் மகிழ்ச்சியடைவான். மாறினால் பலனும் விபரீதமாகும். தன் வயிற்றில் பிறந்த புத்திரர்களையே தியாகம் செய்கின்றனர். தன் புத்திரர்கள் தனக்கு ஒத்துப் போகவில்லையெனில், வெளி ஜனங்களை சமர்த்தர்களாக இருப்பவர்களை ஏற்றுக் கொள்வார்கள். அதனால், கல்யாணி நீ இங்கு அனுசரித்து நடந்து கொள். சத்ய விரதம் என்று அப்படியே ஏற்றுக் கொள். யோசிக்காதே. எப்படியோ இங்கேயே இருந்து நாட்களை கழிப்பாய். நான் அடர்ந்த கானனம் போகிறேன். ப்ரியே நீ இங்குதான் இருந்தாக வேண்டும். பா4மினீ எதுவும் தவறாக நடந்து விடாமல் கவனமாக இரு.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், சீதா ப்ரத்யவஸ்தா2பனம் என்ற இருபத்து ஆறாவது அத்தியாயம்.)

அத்தியாயம் 27 பதிவ்ரதாத்யவசாயோ (பதிவிரதம்இதன் உயர்வு)

இவ்வாறு ராகவன் சொல்லி நிறுத்தியதும், பிரியமான மனைவியான சீதை, சற்று கோபத்துடன் பதில் சொன்னாள். இது என்ன பேச்சு ராமா, சுலபமாக சொல்கிறீர்கள். அல்லது கிண்டலா? ஆர்யபுத்ரா, தாயோ, தந்தையோ, சகோதரனோ, புத்திரனோ, மருமளும், தன் தன் பாக்யத்தை அனுபவிக்கிறார்கள். பர்த்தாவான கணவனின் பாக்யத்தை பத்னி, மட்டும் தான் அடைகிறாள். நல்லதோ, கெட்டதோ, அதனால் பத்னி என்ற முறையில் நானும் வனத்தில் வசிக்க வேண்டும் என்பது சொல்லாமலே விதிக்கப் பட்டதாக ஆகிறது. பெண்களுக்கு கணவன் ஒருவன் தான் கதி.  தந்தையோ, மகனோ தானோ கூட இல்லை, தாயும் இல்லை, சினேகிதிகளும் இல்லை. இன்றே நீங்கள் வனத்துக்கு புறப்படுவது நிச்சயமானால், நான் முன்னே செல்வேன். வழியில் முட்களையும், புற்களையும்  அகற்றி வழியமைத்துக் கொடுப்பவளாக செல்வேன். கோபத்தையும், பொறாமையையும் விட்டு விட்டு, குடித்து விட்டு மீதி வைத்த தண்ணீர் போல என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அதில் பாபமும் இல்லை. வீட்டு வாசல் வரை விமானங்கள் மூலம் வந்தாலும், ஆகாய கதியாக வந்தாலும், எந்த நிலையிலும், கணவனின் அடிச் சுவடு சிறந்தது. என் தாயாராலும், தந்தையாலும் நான் இந்த முறையில் எண்ணும்படிதான் வளர்க்கப் பட்டிருக்கிறேன். புதிதாக இந்த சமயம் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. ஜன நடமாட்டமில்லாத கடினமான வழி நடந்து, வனத்திற்கு பல விதமான மிருகங்கள் நிறைந்ததும், புலி, ஓனாய்கள் இருந்தாலும், தந்தை வீட்டில் நிச்சிந்தையாக இருந்தது போலவே சுகமாகவே இருப்பேன். மூவுலகையும் பற்றி எனக்கு கவலையில்லை. என் கவலையெல்லாம் என் கணவனை சுற்றியதே. நியமத்துடன் ப்ரும்மசாரிணியாக, உங்களுக்கு பணிவிடைகள் செய்து கொண்டு வனத்திலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.  யாராக இருந்தாலும், வனத்தில் ரக்ஷிக்க உங்களால் முடியும். என்னை பாதுகாப்பது என்ன கஷ்டம். இன்றே உங்களுடன் வனம் செல்வேன், சந்தேகமேயில்லை. இந்த முடிவிலிருந்து என்னை மாற்ற முடியாது. பழங்களோ, கிழங்குகளோ என்னாலும் இவைகளே ஆகாரமாக இருக்க முடியும். கூட இருப்பதால் நீங்கள் சிரமமாக உணரும்படி செய்ய மாட்டேன். உங்களுக்கு முன்னால் செல்வேன். நீங்கள் உண்டபின் உண்பேன்.  நதிகளையும், மலைகளையும் தோட்டங்களையும், காடுகளையும் நான் பயமின்றி ரசித்து மகிழ்வேன். நீங்கள் நாதனாக உடன் வரும்பொழுது நான் ஏன் பயப்படப் போகிறேன்.  ஹம்சங்கள், காரண்ட பக்ஷிகள் நிறைந்ததும், தாமரை மலர்கள் பூத்து குலுங்குவதுமான தடாகங்களை உங்களுடன் சேர்ந்து நடந்து பார்த்து மகிழ ஆசைப் படுகிறேன். இது போன்ற நீர் நிலைகளில் விரதங்கள் மேற்கொண்டு, ஸ்னானங்கள் செய்வோம். நீங்கள் உடன் இருக்கும்பொழுது இது போல ஆயிரம் வருஷம் ஆனாலும் நான் இருக்கத் தயார்.  அதுவன்றி ஸ்வர்கமே ஆனாலும், தனியாக இருக்க மாட்டேன். மிருகங்கள் நிறைந்ததும், குரங்குகளும், யானைகளும் நிறைந்ததுமான அடர்ந்த வனத்திலும் தந்தை வீட்டில் இருந்ததைப் போலவே சந்தோஷமாக இருப்பேன். உங்கள் பாதச் சுவட்டைத் தொடர்ந்து நடந்து வருவேன். உங்களையே சார்ந்து, வேறு எண்ணமின்றி, இருந்து வந்திருப்பவள் நான். என்னை உடன் அழைத்துச் செல்லாமல் இங்கே விட்டுப் போவதானால் எனக்கு மரணம் தான் கதி.  நான் வருவது உங்களுக்கு பாரமாக இருக்காது. என்னை உடன் அழைத்துச் செல்லுங்கள். இவ்வளவு சொல்லியும், தர்மத்தை விரும்பும் சீதையை அழைத்துச் செல்ல ராகவனுக்கு மனம் வரவில்லை. வனத்தில் மிகப் பெரிய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லி சமாதானம் செய்கிறான்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், பதி வ்ரதாத்யவசாயோ என்ற இருபத்து ஏழாவது அத்தியாயம்.)

அத்தியாயம் 28 (105) வன துக்க ப்ரதி போதனம் (வனத்தின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லுதல்)

இவ்வாறு நியாயமாக சொல்லும் தர்ம பத்னியைப் பார்த்து வனத்தில் கஷ்டப்படுவாளே என்று எண்ணி, ராமர் உடன் அழைத்துச் செல்ல விரும்பவில்லை. கண்களில் நீர் நிரம்ப, கெஞ்சும் மனைவியை தடுத்து நிறுத்தவே நினைத்தார். சீதே, பெரிய குடும்பத்தில் பிறந்தவள் நீ. இங்கேயே இருந்து தர்மத்தை அனுசரித்து நடந்து வந்தால், என் மனதிற்கு நிம்மதியாக இருக்கும். நான் சொல்வதைக் கேள்.  அதில் தான் நன்மை. காட்டில் வாசம் செய்வது மிகவும் கஷ்டமானது என்று புரிந்து கொள். காட்டில் வாசம் செய்யலாம் என்ற எண்ணம் உனக்கு ஏன் வந்தது? பல கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.  உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்.  நான் அறிந்தவரை வனத்தில் சுகம் என்பதே கிடையாது. கஷ்டம்தான். மலை அருவிகள் கொட்டும்

இடங்களில் குகைகளில் இடம் பார்த்து வசித்தோமானால் சிங்கங்களின் பயங்கரமான கர்ஜனைகளைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். சூன்யமான இடத்தில் இடையூறு இன்றி விளையாடும் மிருகங்கள் நம்மைக் கண்டால் அருகில் வரும். அதுவும் கஷ்டம்தான். நதிகளில் முதலைகள் இருக்கும். சேறாகி கிடக்கும். கடப்பது கடினம். மதம் பிடித்த யானைகள் உலவும். அதனாலும் வனம் கஷ்டம்தான். வழியெல்லாம் கொடிகளும், முள் செடிகளும் நிறைந்து, பூச்சிகளும், கிணற்றுத் தவளைகளும் கத்தும், கிணற்றில் நீர் வற்றியிருக்கும். தாண்டிச் செல்வதும் கஷ்டம். அதனால் வன வாசம் கஷ்டம் தான். வெடித்துக் கிடக்கும் பூமிகளில், தரையில் படுக்க வேண்டும். இலை தழைகளைப் போட்டு கரடு முரடான தரையில் எப்படித் தூங்குவது? அதனால் தான் சொல்கிறேன். வனவாசம் கஷ்டம் தான். பகலோ, இரவோ, மரங்களிலிருந்து தானாக விழுந்தவைகளைக் கொண்டு பசியாற வேண்டும்.  சீதே, உனக்கு எதற்கு இந்த கஷ்டம். உபவாசங்கள் வேறு. வல்கலை, மரவுரி தரித்துக் கொண்டு, நாங்கள் ஜடையும் முடியுமாக இருப்போம். உனக்கு பார்க்கவே கஷ்டமாக இருக்கும். இதில், வந்த அதிதிகளை கவனிக்க வேண்டும். பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும், விதி முறைப் படி பூஜைகள் செய்ய வேண்டும். தினமும் மூன்று முறை ஸ்னானம் செய்ய வேண்டும். அப்படித்தான் நியமம். அதனாலும் வன வாசம் கஷ்டம் தான். தானே பறித்து வந்த புஷ்பங்களைக் கொண்டு நித்ய பூஜைகளையும் செய்ய வேண்டும். வேதியமைத்து, தொன்று தொட்டு வந்த விதி முறைப் படி இவைகளை செய்து வர வேண்டும்.  இதுவும் வன வாசத்தில் கஷ்டம். கிடைத்தைக் கொண்டு திருப்தியாக வேண்டும். ஆகாரமோ, வனத்தில் கிடைத்தது தான். அதனாலும் வனவாசம் கஷ்டமே. காற்றும் அதிகமாக இருக்கும். பசியோடு பயங்கரமாக பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். வனம் வந்து இந்த கஷ்டங்களை நீயும் ஏன் அனுபவிக்க வேண்டும்? ஊர்வன, பலவிதமாக நிறைய இருக்கும். தன் இஷ்டத்திற்கு பூமியில் நடமாடும். அதை பார்த்து பயப் படுவாய். சில நதிகளில் இருக்கும்.  சில நதிக் கரைகளில். சில வழிகளில் சுருண்டு கிடக்கும். அதனாலும் வனவாசம் கஷ்டம். சிறிய பூச்சிகள், தேள், புழு பூச்சிகள், கடிக்கும் கொசு போன்றவை, இவையும் உன்னை பாதிக்கும். முள் நிறைந்த மரங்கள், குசம் என்ற புல் உறுத்தும். வனத்தில் வளைந்து, கிளைகளோடு  மரங்கள், இடையில் புகுந்து செல்ல கஷ்டமாக இருக்கும். உடல் வருத்தமும் நிறைய இருக்கும். பயமும் பலவிதமாக இருக்கும். காட்டில் வசிப்பது ஒரு வாசமா? க்ரோதமோ, லோபமோ இன்றி தபசில் மனதை செலுத்த வேண்டும். பயப்படும்படியாக இருந்தால் கூட பயப்படக் கூடாது. அதனால் வனவாசத்தில் துக்கம் தான் அதிகம். அதனால் நீ வனத்திற்கு வர வேண்டாம். யோசித்து பார்க்க பார்க்க, வனவாசத்தில் கஷ்டங்களைத் தான் நான் உணருகிறேன்.  ராமர் இவ்வளவு சொல்லி மறுத்தும், சீதை, அதை எற்றுக் கொள்ள மனமில்லாமல், துக்கத்துடன் திரும்பவும் கெஞ்சும் குரலில் சொன்னாள்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், வன துக்க ப்ரதி போதனம்  என்ற இருபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  29 (106)  வனானுக3மன யாஞ்சா நிர்ப3ந்த4😦வனம் செல்ல தானும் வருவதாக நிர்பந்தித்தல்)

ராமனது இந்த வார்த்தைகளைக் கேட்டு மிகவும் துக்கமடைந்த சீதா, கண்களில் நீர் பெருக, வேண்டலானாள். உங்களிடம் எனக்கு உள்ள ஸ்னேகத்தை முன்னிட்டு பார்க்கையில், இதுவரை நீங்கள் சொன்ன எதுவுமே குறையென்று எனக்குத் தோன்றவில்லை. இவைகளையும் நிறைவாகவே எடுத்துக் கொள்கிறேன். மான்களோ, சிங்கங்களோ, யானைகளோ, புலிகளோ, சரபங்களோ, சமர, உமரங்களோ மற்றும் காட்டில் திரியும் ஜந்துக்கள் இது வரை உங்களைக் கண்டதேயில்லை என்பதால் அவையும் உங்களைக் கண்டு பயப்படும்.  பயம் எல்லோருக்கும் பொதுவானதே. என்னைச் சார்ந்த பெரியவர்கள் கட்டளையிட்டு சொல்லியிருக்கிறார்கள். உங்கள் கூடவே எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று. உங்களைப் பிரிய நேரிட்டால் அதை விட உயிர் விடுவதே மேல்.  உங்கள் அருகில் இருக்கும்பொழுது, என்னை யார் என்ன செய்ய முடியும்? தேவர்கள் தலைவனான இந்திரன் கூட என்னை எதுவும் செய்ய முடியாது. பதியில்லாமல் இருக்கும் பெண் தான் சக்தியற்றவளாகிறாள். இது தவிர பிராம்மணர்கள் சொல்லியும் கேட்டிருக்கிறேன். தாய் வீட்டில் இருக்கும்பொழுது, இவள் வனத்தில் வசிப்பாள் என்று சொல்லியிருக்கிறார்கள். லக்ஷணிகளும், பிராம்மணர்களும் இப்படிச் சொல்வதைக் கேட்டு, வனவாசம் எப்படி இருக்கும் என்று நான் உற்சாகமாக கேட்டிருக்கிறேன். எனக்கு வனவாசம், தனியாக வந்து சேராமல், தங்களுடன் போகக் கிடைத்ததே அதிகம். என் வாழ்க்கையில் வனம் செல்ல நேரிடும் என்று சொன்ன பெரியவர்கள் சொல்லும் பொய்யாகாமல் நான் உங்களுடன் சேர்ந்து வருவேன். தோள் வலி இல்லாத ஜனங்களுக்கு வனவாச கஷ்டங்கள் பெரியதாக தெரியலாம். நான் சிறு பெண்ணாக இருந்த பொழுதே, தாயை பார்க்க வந்த ஒரு பிக்ஷிணி, சன்யாசினி, தவம் செய்து வந்த சாது, வன வாசத்தைப் பற்றி நிறையச் சொன்னாள். அதனாலும் நான் வனத்தைக் காண விரும்புகிறேன். இப்பொழுது உங்களுடன் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதோ நான் தயாராகி விடுவேன். சூரன் நீங்கள். உங்களுக்கு பணிவிடைகள் செய்து கொண்டு உடன் வருவதில் எனக்கு மகிழ்ச்சியே. களங்கமில்லாத சுத்தமான மனதுடையவரே, நானும் எந்த குறையுமின்றி அன்புடன் கணவனைத் தொடர்ந்து செல்ல அனுமதியளியுங்கள்.  எனக்கு தெய்வமே என் கணவன் தான். வேதம் அறிந்த பிராம்மணர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். மரணத்திலும் உங்களுடன் இருப்பது தான் எனக்கு நன்மை தரும். இந்த உலகில், தந்தையால் தாரை வார்க்கப்பட்டு கொடுக்கப்படும் பெண், அவள் காலாந்தரமான மரணத்திலும் அந்த கணவனுடன் இருப்பாள். என்ன காரணம்? ஏன் பதிவிரதையான என்னை, உங்கள் மனைவி, உங்கள் சுக துக்கத்தில் பங்கு பெறும் என்னை அழைத்துச் செல்வதில் இவ்வளவு தயக்கம்? இவ்வளவு சொல்லியும் என்னை உடன் அழைத்துச் செல்ல மறுத்தால், நான் விஷமோ, ஜலமோ, அக்னியோ என் மரணத்துக்கு வழியாக தேர்ந்தெடுத்துக் கொள்வேன். இவ்வளவு சொல்லியும், கெஞ்சியும், ராமர் அவளை அழைத்துச் செல்ல சம்மதிக்கவில்லை. இதையறிந்து கவலை கொண்ட சீதையின் கண்களிலிருந்து பெருகிய நீர் பூமியை நனைக்க, கோபம் கொண்ட பத்னியை ராகவன் சமாதானம் செய்ய முனைந்தார். 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், வனானுக3மன யாஞ்சா நிர்ப3ந்த4: என்ற இருபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 30(108) வனகமனாப்யுபபத்தி: (தொடர்ந்து வனம் செல்ல முனைதல்)

பல விதமாக கணவனால் சாமாதானப் படுத்தப் பட்டும் சீதை தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.  உரிமையினாலும், அன்பினாலும் கணவனிடம் கேலியாகச் சொன்னாள். என் தந்தை மிதிலாதிபர், உங்களைப் பற்றி என்ன நினைப்பார். மாப்பிள்ளை என்று ஏற்றுக் கொண்டோமே, புருஷ வேஷத்தில் ஸ்த்ரீயோ என்று நினைக்க மாட்டாரா. ராமா, உலகமே பொய் சொல்கிறதா? அல்லது தெரியாமல் சொல்கிறதா? ராமன் பெரிய தேஜஸ்வீ என்றும், சூரியன் போல பிரகாசிக்கிறான் என்றும் சொல்வதெல்லாம் வெறும் வார்த்தை தானா?  என்ன காரியம் செய்து விட்டோம் என்று இப்பொழுது இவ்வளவு மன வாட்டம்?  யாரிடம் பயம்? வேறு யாரையும் எண்ணிக் கூட பார்க்காமல் நீங்களே கதி என்று இருக்கும் என்னை இங்கேயே விட்டு விட்டு போக விரும்புகிறீர்கள்.  த்3யுமத்சேனன் மகனான சத்ய வந்தனை தொடர்ந்து சென்ற சாவித்திரியாக என்னைப் பாருங்கள். உங்கள் வசத்தில் இருப்பவளாக பாருங்கள். மனதால் கூட நான் பர புருஷர்களை நான் கண்டதில்லை. உங்களைத் தவிர யாரையும் நினைத்தது கூட இல்லை. ஏதோ, சாதாரண குல தூஷணியாக உள்ள ஸ்த்ரீ போல என்னை நினைத்து பேசுகிறீர்கள். சிறு வயதிலிருந்து உடன் வசித்து வருபவள், தன் மனைவி, சதி இவ்வளவும் தெரிந்தும், கூத்தாடி போல தன் மனைவியை பிறன் பொறுப்பில் விட்டுச் செல்லத் துணிகிறீர்கள். யாருக்கு நன்மை என்று என்னை இங்கேயே தங்கச் சொல்கிறீர்களோ, யார்  தடுக்கிறார்களோ, அவர்களுக்கு குற்றேவல் செய்து கொண்டு நீங்கள் இருங்கள். என்னை வற்புறுத்த வேண்டாம். என்னை உடன் அழைத்துச் செல்லாமல் வனம் போக முடியாது. தவமோ, அரண்யமோ, சுவர்கமாகவே இருந்தாலும் கூட உங்களருகில் இருக்கும்பொழுது, எனக்கு வழி நடை களைப்போ, வேறு சிரமமோ உண்டாகாது.  உங்களுடன் இருக்கும்பொழுது, குசத்தால் (ஒருவகை புல்) ஆன படுக்கையும் எனக்கு அரண்மனையின் இந்த விஹார சயனமாகவே இருக்கும். கூர்மையான முட்களைக் கொண்ட மரங்கள், பஞ்சு அடைத்த மெத்தையோ, புலித்தோலால் ஆனதோ என்பது போல எனக்கு சுகம் தருபவையாகவே இருக்கும். பெருங்காற்றில் தூசி என் உடலை மூடினால், அதுவே சந்தனம் பூசியதாக எண்ணி மகிழ்வேன். குசத்தால் ஆன படுக்கையில் காடுகளில், நதிக்கரைகளில்  படுக்கும்பொழுது,  அதைவிட சுகமாக வேறு என்ன இருக்க முடியும் என்று நினைத்துக் கொள்வேன். பத்ரம், பலம், மூலம் ( இலை, பழம், கிழங்குகள்,) இவைகளை நீங்களே சம்பாதித்துக் கொண்டு  வந்து தரும்பொழுது, கொஞ்சமாகவோ, நிறையவோ, அது எனக்கு அமுதமாக இருக்கும். தந்தையையோ, தாயையோ என் வீட்டையோ நினைத்து கூட பார்க்க மாட்டேன். புஷ்பங்களை ரசித்து, பழங்களை சாப்பிட்டுக் கொண்டு இருக்க பழகிக் கொள்வேன்.  ஒருபோதும் உங்களுக்கு பாரமாக இருக்க மாட்டேன். என் காரணமாக உங்களுக்கு வருத்தமோ, சோகமோ வர இடம் கொடுக்க மாட்டேன். உங்களுடன் கூட இருப்பது தான் எனக்கு ஸ்வர்கம், நீங்கள் இல்லாத இடம் எனக்கு நரகம் தான். இதைப் புரிந்து கொண்டு மிகவும் பிரியமாக, என்னுடன் வனம் செல்வாய். ராமா, இவ்வளவு சொல்லியும், என்னை இங்கு விட்டுச் சென்றால், இன்றே விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வேன். எதிரிகளின் வசம் ஆக மாட்டேன். நீங்கள் என்னைவிட்டுச் சென்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை. அதைவிட மரணமே மேல். இந்த துக்கத்தை ஒரு முஹுர்த்தம் கூட சகிக்க மாட்டேன் என்று நான் சொல்லும்பொழுது, பத்து, மூன்று, இன்னம் ஓன்று என்று பதினான்கு வருஷங்கள் நான் எப்படி இருப்பேன்? என்று கதறி அழலானாள். கணவனைக் கட்டிக் கொண்டு அரற்றலானாள். இதுவரை கண்களில் நீர் விட நேர்ந்ததே இல்லை.  அரணிக் கட்டையில் அக்னி போல வெகு காலமாக சேர்ந்து இருந்த கண்ணீர் பிரவாகமாக ஓடலாயிற்று. பெண் யானை அங்குசத்தால் குத்தப் பட்டது போல, ராமனது சொல் அவளைத் தாக்கியது. தாமரை மலரிலிருந்து நீர் சொட்டுவது போல அவள் முகத்திலிருந்து ஸ்படிகம் போன்ற கண்ணீர் வடிந்தது. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் சந்திரன் போன்ற அவள் முகம், பெரிய கண்கள் வாட, அப்பொழுதுதான் நீரிலிருந்து பறித்து வெளியே எறியப் பட்ட தாமரையை ஒத்திருந்தது.  தன்னினைவு இழந்தவள் போல துக்கமடைந்த அவளை, தன் கைகளால் அணைத்துக் கொண்டு சமாதானம் செய்வது போல ராமர் சொன்னார். தேவி, நீ துக்கம் அடைவாய் என்றால் எனக்கு ஸ்வர்கம் கூட தேவையில்லை. எனக்கு யாரிடமும் எப்பொழுதும் பயம் இருந்ததில்லை. உன்னைக் காக்க எனக்கு சாமர்த்யம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. உன் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளவே கேட்டேன். என் கூட வனவாசத்திற்கு என்றே ஸ்ருஷ்டிக்கப் பட்டிருக்கிறாய். தன் மானம் உள்ளவனுக்கு கீர்த்தி போல நீ எப்பொழுதும் என்னுடன் இணைந்தே இருப்பாய். உன்னைப் பிரிந்து இருக்க என்னாலும் முடியாது. யானைத் தும்பிக்கை போன்ற கால்களை உடையவளே, முன் காலத்திலிருந்து பெரியவர்கள் அனுசரித்து வந்துள்ள தர்மம், அதை நான் அனுசரித்துச் செல்வேன். சூரியனை சுவர்சலா போல நீயும் என்னைத் தொடர்ந்து வா. வனத்திற்கு நானாகவா போகிறேன்? தந்தையின் வாக்கு என்னை நடத்திச் செல்கிறது. தந்தையின் வாக்கு சத்யத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை மீறி நான் உயிர் வாழக் கூட விரும்ப மாட்டேன். நம் வசமான தாய், தந்தை, குருவை விட்டு பராதீனமான தெய்வங்களை பலவிதமாக ஆராதனை செய்வது கூட முறையல்ல. எந்த மூன்றும், மூன்று உலகிலும் பவித்திரமானதோ, இதைப் போல வேறு இல்லை என்பதாலேயே கொண்டாடப் பட்டு ஆராதிக்கப் படுகிறது. சத்யம், தானங்கள், யக்ஞம், நிறைய தக்ஷிணை கொடுத்தல், இவை யாவும் தந்தைக்கு இதமான பணிவிடைக்கு முன் ஒன்றும் இல்லை. குருவான தந்தையை அனுசரித்து நடப்பவனுக்கு, சுவர்கமோ, தன தான்யமோ, வித்யா, புத்திரர்கள், மற்ற சுகங்கள் எதுவுமே துர்லபம் இல்லை. தேவ கந்தர்வ, கோ லோகங்களையும், ப்ரும்ம லோகங்களையும், மனிதர்கள், தந்தை தாய் சொல்லைக் கேட்டு நடப்பவர்கள் அடைகிறார்கள். அதனால் என் தந்தை எப்படி கட்டளையிடுகிறாரோ, அதைப் பின் பற்றி நடக்க விரும்புகிறேன். அது தான் சனாதன தர்மம். அதனால் இப்பொழுதே தீர்மானித்து விட்டேன். உன்னையும் தண்டகா வனம் அழைத்துச் செல்கிறேன். நீயும் என் கூட வசிக்கிறேன் என்று உறுதியோடு சொல்கிறாய்.  நீ என்னுடன் வனத்திற்கு வர என்றே ஸ்ருஷ்டிக்கப் பட்டிருக்கிறாய் போலும்.  மதிரேக்ஷனே, என்னைத் தொடர்ந்து வனம் வருவாய். உன்னை பீரு, பயந்தவள் என்று நினைத்தேன். என் உடன் நடந்து வந்து எனக்கு சஹ தர்மினியாக இரு. என் குலத்திற்கும், உன் குலத்திற்கும் நீ எடுத்துக் கொண்டுள்ள இந்த முடிவு இசைந்ததே. மிகவும் நன்மை பயக்கும், சோபனமான என் செயல்களில் என்னைத் தொடர்ந்து வா.  வனவாசத்திற்கு வேண்டிய காரியங்களை செய்ய ஆரம்பி. இப்பொழுது உன்னைத் துறந்து ஸ்வர்கம் கூட போக மாட்டேன்.  ப்ராம்மணர்களுக்கு ரத்னங்களும், யாசிப்பவர்களுக்கு போஜனமும், கொடு. யாருக்கு எது வேண்டுமானாலும் கொடு. சீக்கிரம் ஆகட்டும். பூஷணங்களோ, விலையுயர்ந்த நல்ல ஆடைகளோ, மற்றவைகளும், அழகாக இருக்கிறது என்பதற்காக சேர்த்து வைத்த பொருட்களும், விளையாட என்று சேர்த்து வைத்த பொருட்களையும், படுக்கைகளையும் வாகனங்களையும், மற்றவைகளையும் உன் வேலைக்கார, சேவகர்களுக்கு கொடுத்து விடு. அதன் பின் சீதை சந்தோஷமாக அவ்வாறே தன் பொருட்களை தானம் செய்ய ஆரம்பித்தாள். தான் உடன் வருவது, கணவனுக்கு சம்மதமே என்று அறிந்த பின் மிகவும் மகிழ்ச்சியாக, மனம் நிறைந்தவளாக, தர்மம் அறிந்த பலருக்கும் தானம் செய்தாள்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், வனகமனாப்யுபபத்தி: என்ற முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)s

அத்தியாயம்  31(109)  லக்ஷ்மண வனானுகமனாக்ஞா 

(லக்ஷ்மணனும் உடன் வர சம்மதித்தல்)

இந்த உரையாடல் நடக்கும் சமயமே வந்து விட்ட லக்ஷ்மணன், துக்கத்தை அடக்க மாட்டாதவனாக, கண்க ளி ல் நீர் வழிய சகோதரன் கால்களைப் பிடித்துக் கொண்டு, சீதையையும் ராமனையும் ஒன்றாக பார்த்தவாறு சொன்னான். இருவரும் சேர்ந்து வனம் போவது என்று தீர்மானித்து விட்டதால், நானும் கையில் வில்லேந்தி உங்கள் முன்னால் செல்வேன்.  என்னுடன் கூட பல பெரிய காடுகளில் பக்ஷிகளும், மிருகங்களும் எதிரில் வர, பயமின்றி சஞ்சரிப்பீர்கள்.  தேவ லோகம் முழுவதும் தருவதானாலும் எனக்கு வேண்டாம். அமரத்வம் தருவதானாலும் தேவையில்லை. உலகிலேயே ஐஸ்வர்யம் கிடைக்கும் என்றாலும், நீ இல்லாமல் எனக்கு எதுவுமே வேண்டாம். லக்ஷ்மணன் இவ்வாறு தீர்மானமாக வனவாசத்திற்கு உடன் வருவேன் என்று சொல்லவும் அவனை கைகளால் அனைத்தவாறு ராமர், அவனை தடுத்து நிறுத்தும் உத்தேசத்துடன் சொல்ல ஆரம்பித்தார். லக்ஷ்மணன் பதிலிறுத்தான் முன்னாலேயே நீங்கள் எனக்கு அனுமதி கொடுத்தாயிற்றே. இப்பொழுது நான் சொல்லும்பொழுது ஏன் தடுக்கிறீர்கள். இது எனக்கு சந்தேகத்தை உண்டாக்குகிறது எனவும், ராமர் தனக்கு முன்னால் வனம் செல்ல துணிந்துவிட்ட வீரன் லக்ஷ்மணன் இப்பொழுது கை கூப்பி யாசிப்பதைப் பார்த்து, ஹே. வீரா, நீ தர்மத்தில் ஈடுபாடுடையவன். எப்பொழுதும் நல்வழியில் செல்பவன். எனக்கு சினேகிதனும், பிரியமான சகோதரனும், உயிருக்குயிரானவனும் நீயே.  சௌமித்ரே, இப்பொழுது நீயும் எங்களுடன் வனம் வந்து விட்டால், கௌசல்யை, சுமித்ரை இவர்களை யார் பார்த்துக் கொள்வார்கள். வேண்டுவதை மழையாக வர்ஷிக்கும் நம் தந்தை இப்பொழுது காம பாசத்தில் கட்டுண்டு கிடக்கிறார். சக்ரவர்த்தியாக இருந்தும், மகா தேஜஸ்வியாக இருந்தும் அவரால் தற்சமயம் தன் இஷ்டப்படி எதுவும் செய்ய முடியாது. இன்னிலையில் அஸ்வபதியின் குமாரியான கைகேயி, ராஜ்யம் கைக்கு வந்து விட்ட நிலையில், சக்களத்திகளுக்கு ஏன் நன்மை செய்யப்போகிறாள். அவர்கள் வருத்தத்தை அவள் எப்படி உணருவாள்? பரதனும் ராஜ்யத்தை அடைந்து, கைகேயியின் பக்கமே இருப்பான். கௌசல்யாவையும், சுமித்ரையையும் நினைக்க கூட அவனுக்கு நேரம் இராது. அந்த கௌசல்யாவை, நீயாகவோ, ராஜாவின் அனுக்ரஹம் மூலமோ, நீ காப்பாற்றி வா. இதுதான் எனக்கு சரியென்று படுகிறது. அதன் படி நட. இதில் என்னிடம் நீ கொண்டுள்ள பக்தியும் வெளிப்படும். குருவான தாய்க்கு பணிவிடை செய்து நீயும் நல்ல கதியடைவாய். தாயாரை நாம் எல்லோருமாக உதாசீனம் செய்து விட்டு போவதும் நல்லதல்ல. ராமர் இவ்வாறு சிக்கல்களை எடுத்துச் சொன்னவுடன், சொல்லின் செல்வரும், அழகாக பேசத் தெரிந்தவருமான லக்ஷ்மணர் பதில் சொன்னார். உங்கள் தேஜசை அறிந்த பரதன், உங்கள் தேஜஸாலேயே, தாய்மார்களை மதித்து பூஜிப்பான். இதில் சந்தேகமே இல்லை. என்ன காரணத்திலாவது மனம் மாறி பரதன், கர்வம் கொண்டு ராஜ்யத்தை சரியாக நிர்வகிக்கவில்லையென்றால், துர்மதியான அவனை நான் க்ரூரன் என்று வதமே செய்து விடுவேன். சந்தேகமே இல்லை.  மூவுலகும் அவன் கட்சியில் இருந்தாலும் சரி. ஆனால், அந்த கௌசல்யா, என்னைப் போல ஆயிரம் பேர்களை சமாளிக்கத் தெரிந்தவள். மதிப்பு மிக்க அவளுக்கு ஆயிரம் கிராமங்கள் உபஜீவனமாக கிடைத்துள்ளனவே, அதில் அவள் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, என் தாயாரையும் போஷித்து வருவாள். என் போன்றவர்களையே பொறுப்பு ஏற்றுக் கொண்டு காப்பாற்ற சக்தியுடையவள் அவள். என்னை ஏற்றுக் கொள். நானும் உடன் வருவேன். இதில் அதர்மம் எதுவும் இல்லை, எனக்கும் திருப்தியாக இருக்கும். உன் காரியமும் ஆகும். வில்லையும் அம்பையும் ஏந்தி, க2னித்ரத்தையும், மண் வெட்டியையும் எடுத்துக் கொண்டு உன் முன்னால் வழி காட்டிக் கொண்டு செல்வேன். உங்களுக்கு பழங்களையும், கிழங்குகளையும் கொண்டு வந்து கொடுப்பேன். வேறு காட்டு சாமான்கள், ஆகாரத்திற்கு ஏற்றதாக இருந்தால், தாபஸர்கள் சாப்பிடக் கூடியதாக கொண்டு வந்து தருவேன்.  மலைச் சாரல்களில் நீங்கள் வைதேஹியுடன் ஆனந்தமாக இருங்கள். நீங்கள் தூங்கும்பொழுதும் விழித்திருந்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன். இவ்வாறு லக்ஷ்மணன் சொல்லவும், மிகவும் மகிழ்ந்து போன ராமர், இந்த சொல்லினாலேயே நெகிழ்ந்து போனவராக, சரி வா. உன் இஷ்ட மித்திர பந்துக்களிடம் விடை பெற்றுக் கொண்டு வா என்று சொன்னார். இரண்டு வில்கள், வருணன் அரசனுக்கு கொடுத்தது,  ஜனகருடைய யக்ஞத்தில் இரண்டு வில்கள், இவைகளையும், துளைக்க முடியாத கவசங்கள் இரண்டையும், குறைவில்லாமல் அம்பு நிறைந்தே இருக்கும் அம்புறாத்தூணிகள் இரண்டையும், தங்க கவசம் போட்ட, சூரியனுக்கு சமமான ஒளி யுடைய இரண்டு வாட்களையும், இவைகளை பூஜித்து ஆசார்யரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளன, இந்த ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, லக்ஷ்மணா, சீக்கிரம் வா. அவனும் தன் நண்பர்களிடம் விடை பெற்று, வனவாசத்திற்கு செல்வது என்று தீர்மானித்தவனாக, ஆசார்யரின் க்ருஹம் சென்று, ஆயுதங்களை எடுத்துக் கொண்டான்.  திவ்யமான அந்த ஆயுதங்களை, மாலைகள் அணிவித்து கௌரவமாக வைக்கப்பட்டிருந்தது. இவைகளை எடுத்துக் கொண்டு வந்து ராமரிடம் காட்டினான். ராமரும், அவைகளை சரி பார்த்து, சரியான சமயத்தில் வந்து சேர்ந்தாய் லக்ஷ்மணா என்று பாராட்டி, நான் என்னுடைய செல்வங்களை. பொருளை, ப்ராம்மணர்களுக்கும், தபஸ்விகளுக்கும் கொடுக்க விரும்புகிறேன். நியும் உடன் இரு. நமது குரு ஜனங்களிடம் த்ருட பக்தி கொண்ட பலர் இங்கு இருக்கின்றனர். அவர்களுக்கும், மேலும் மற்ற எல்லா அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களூக்கும் கொடுக்க விரும்புகிறேன். லக்ஷ்மணா, நீ சீக்கிரம் சென்று, வசிஷ்ட புத்திரனான சுயக்ஞன், என்ற பெரியவரை அழைத்து வா. இவர் ப்ராம்மணோத்தமர். எல்லாவற்றையும் சிஷ்டர்களான ப்ராம்மணர்களுக்கு கொடுத்து விட்டு, நாம் வனம் செல்வோம்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் லக்ஷ்மண வனானுகமன ஆக்ஞா என்ற முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 32 (109) வித்த விஸ்ரானனம் (செல்வத்தை தானம் செய்தல்)

தமையனின் கட்டளையை ஏற்று, லக்ஷ்மணன் வேகமாக சென்று, சுயக்ஞருடைய க்ருஹத்தில் நுழைந்தான். அக்னியே குடி புகுந்தது போன்ற தேஜஸ் உடைய அவரை வணங்கி லக்ஷ்மணன், சகே2 உடனே வந்து பார். வேண்டாததை செய்பவர்களால் வீடு எப்படி ஆகியிருக்கிறது, வந்து பார். எனவும், அவரும் விரைவில் ஸந்த்யா ஜபங்களை முடித்துக் கொண்டு, சௌமித்திரியுடன் புறப்பட்டார். ராமனுக்கு என்று 

அளிக்கப்பட்டிருந்த அழகிய மாளிகையை அடைந்தார். வேதம் அறிந்தவரான அவரை சீதையுடன், கை கூப்பி வரவேற்றார் ராமர். தவ ஒளியால் அக்னி போன்று பிரகாசித்த சுயக்ஞரை பின் தொடர்ந்தனர். சரீரத்தில் அணியும், தங்கமயமான அணிகலன்களையும், குண்டலங்களையும், தங்கத்தில் கோர்த்த மணி வகைகளையும், கேயூரங்கள், வலயங்கள், மற்றும் பலவிதமான ரத்னங்கள், இவைகளை ராமரும் சீதையுமாக அவருக்கு அளித்து மரியாதைகள் செய்தனர்.  இவை தவிர, சீதை ப்ரத்யேகமாக, தன்னுடைய மாலை, ஹேம சூத்ரம், அவருடைய பத்னிக்கு கொடுத்தாள். வனம் செல்வதால் தன்னுடைய ஒட்டியானத்தையும், (மேகலா) அவருடைய மனைவிக்கு என்று சொல்லி  கொடுத்தாள். இவை தவிர, பலவிதமான நகைகள், சுபமான கேயூரங்கள் இவற்றையும், சீதை சொல்லி ராமர் அவரிடம் கொடுத்தார். கட்டில், உட்காரும் ஆசனங்கள், பலவித ரத்னங்கள் இழைத்து செய்யப்பட்டவை, இவைகளையும், வைதேஹி சொல்லி அவரிடம் ஒப்படைத்தான். என் தாய் மாமன் கொடுத்த சத்ருஞ்ஜயோ என்ற யானை அதையும் மற்ற நூறு யானைகளுடன் உங்களுக்குத் தருகிறேன் என்று சொல்லி அவைகளையும் கொடுத்தான். மூவருக்கும் ஆசிகள் அளித்து அவைகளை சுயக்ஞர் பெற்றுக் கொண்டார். பிறகு, ராமர் பிரியமாக பேசும் சகோதரனான சௌமித்திரியைப் பார்த்து, ப்ரும்மா, தேவபதியிடம் பேசுவது போல சொன்னார். அகஸ்தியரையும், கௌசிகரையும், அழைத்து ரத்னங்களைக் கொடு. ப்ரம்மணோத்தமர்களான இவ்விருவருக்கும், பயிர்களுக்கு நீர்  தெளிப்பது போல நூற்றுக் கணக்கான பசுக்களையும் தானமாக கொடு.  தங்கம், வெள்ளி, மணி, நிறைய தனம் இவற்றை கொடு. கௌசல்யையும், சுமித்திரையையும் இவர்கள் பக்தியுடன் பரி பாலிப்பார்கள். தைதிரீய ஆசார்யர், அவரை அழைத்து, வாகனங்களும், வேலை செய்யும் தாசிகளும் கொடு. வேத வித்தானவர் இவர். நல்ல பட்டு வஸ்திரங்களை அவர் திருப்தியடையும் வரை கொடு. ரதம் ஓட்டும் சாரதிகள், பெரியவர்கள், உன் வயதொத்தவர்கள், வெகு நாளாக இங்கு இருப்பவர்கள், யாவருக்கும் நிறைய மணிகள், வஸ்திரங்கள், பொருள்இவற்றை திருப்தி அடையும்படி கொடு. கடுகாலாபா: என்று அழைக்கப் படும்,  வைசம்பாயனர் வழி வந்த, வேதம் கற்கும் மாணவர்களுக்கும், மற்ற பசுகா:, தண்டமானவா: என்றும் அழைக்கப்படும் மாணவர்கள், இவர்களுக்கும் நிறைய கொடு. எப்பொழுதும் தங்கள் அத்யயனத்திலேயே இவர்கள் கவனமாக இருப்பதால், வேறு எதுவும் செய்வதில்லை. ருசியாக சமைக்கும் சமையற்காரர்கள், சுமார் எண்பது பேர் இருப்பார்கள், அவர்களுக்கு ரத்னம் நிறைந்த பாத்திரங்கள் கொடு. இருநூறு பத்ரகர்கள்,(சமையல் வேலையில் உதவி செய்பவர்கள்)  இவர்களுக்கு நல்ல அரிசியும், ஆயிரம் பசுக்களையும் கொடு. கௌசல்யையை சுற்றி நிற்கும் மேகலீ என்ற தாசிகளுக்கு, ஒவ்வொருவருக்கும், ஆயிரம் பேருக்கும், நிறைய கொடு. அதனால் என்னிடம் அன்புள்ள தாயார் கௌசல்யை மகிழ்வாள். இதோ நிற்கும் ப்ராம்மணர்களுக்கும் கொடு. இவ்வாறு சொன்னவுடன், லக்ஷ்மணன் தானே அந்த ப்ராம்மணர்களுக்கு பொருளை குபேரனைப் போல கொடுத்தான். கண்களில் நீர் மல்க நின்றிருந்த அவர்கள், இவர்களையே அண்டியிருந்தவர்கள், செய்வதறியாது நிற்பதைக் கண்டு, மேலும் மேலும், அவர்களுக்குத் தனித் தனியாக பார்த்து த்ரவ்யங்களைக் கொடுத்தான், ராமன். பின் அவர்களைப்  பார்த்து, லக்ஷ்மணனுடைய இந்த வீட்டையும், என் வீட்டையும் நாங்கள் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள். இதைக் கேட்டு அந்த உபஜீவிகள், துக்கமடைந்ததைக் கண்டு, த4னாத்யக்ஷனைக் கூப்பிட்டு, மேலும் தனம் கொண்டு வரச் சொல்லி அவர்களுக்கு கொடுத்தார்.  கண் கொள்ளா காட்சியாக அந்த த4னம் குவிந்து கிடந்தது.  லக்ஷ்மணனும், புருஷவ்யாக்ரம் என்று போற்றப்படும் ராமனுமாக, அந்த தனத்தை தாங்களே கைகளால் எடுத்து, ஏழை ப்ராம்மணர்கள், குழந்தைகள், வயதானவர்கள், மற்ற எளியவர்களுக்கு தாராளமாக கொடுத்தார்கள்.  அங்கு பிங்கள கார்க்யன், த்ரிஜடா என்ற ப்ராம்மணர், தினமும் உஞ்ச வ்ருத்தியால் பிழைப்பவர் ஒருவர் இருந்தார்.  வயதான அவருக்கு இளம் மனைவி, குழந்தைகள் இருந்தனர்.  தரித்திரத்தால் கஷ்டப்பட்டு அலுத்தவளாக, அவரைப் பார்த்து, மனைவியான பெண், இந்த மண்னைத் தோண்டும் கரண்டி, கூடை இவற்றை வைத்துவிட்டு, ராமரை போய் தரிசனம் செய் என்று சொல்லியனுப்பினாள். ஏதாவது தானம் பெற்று வரச் சொல்லி அனுப்பினாள். அவரும் ராமரைக் காண வந்தார். ப்ருகு, ஆங்கிரஸ் போன்ற முனிவர்களுக்கு சமமான தேஜஸ் உடைய அவரை, கூட்டத்தில் ஐந்தாவது அறை வரை யாரும் தடுக்கவில்லை. ராஜ குமாரர்களை அடைந்து அவர் மெல்லிய குரலில் சொன்னார். நான் தனம் இல்லாதவன், நிறைய புத்திரர்கள், தினமும் வனத்தில் உஞ்ச வ்ருத்தி செய்து பிழைக்கிறேன். என்னை கொஞ்சம் கவனியுங்கள். என்fறு கெஞ்சலாக கேட்கவும், ராமர் சற்று பரிகாசம் கலந்த குரலில், ஆயிரக்கணக்கான பசுக்களில் ஒன்று கூட மீதியில்லையே, சரி பரவாயில்லை, தண்டத்தை வீசி எவ்வளவு தூரம் வீசுகிறீர்களோ, அவ்வளவும் உங்களுக்கே என்று சொன்னார். முனிவர், இடுப்புத் துணியை வரிந்து கட்டிக் கொண்டு, கம்பை தன் முழு பலத்துடனும், பிராணனும் (சக்தியும்) உபயோகித்து வீசினார். அவர் கையிலிருந்து விடுபட்ட தண்டம், சரயுவைத் தாண்டிப் போய், விழுந்தது. பல ஆயிரம் பசுக்களும், ரிஷபங்களும், இருந்த இடத்தில் அது விழுந்தது, அவரை அணைத்துக் கொண்டு ராமர், சரயூ நதிக் கரையிலிருந்து பசுக்களை, இடையர்களைக் கொண்டு ரிஷியின் ஆசிரமத்திற்கு ஓட்டிச் செல்லச் செய்தார். பிறகு அவரை சமாதானப் படுத்தி, கோபம் கொள்ள வேண்டாம், இது ஒரு பரிகாசம் தான் விளயாட்டுதான் என்று சொல்லி அனுப்பினார். இன்னமும் வேண்டுமானாலும் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். தன் மனைவியுடன் வந்து த்ரிஜடா என்ற அந்த முனிவர், பசுக்களைப் பெற்றுக் கொண்டு, புகழ், பலம், அன்பு இவற்றை குறைவற பெறுவாயாக என்று ஆசிகள் வழங்கிச் சென்றார். தர்மத்தாலும், பலத்தாலும் சம்பாதிக்கப் பட்ட அந்த செல்வத்தை, மேலும் நண்பர்களுக்கு பலகாலமாக பேசிப் பழகி வந்த நண்பர்களுக்கு கொடுத்தார். அங்கு இருந்தவர்களில், தகுதிக்கேற்ப கௌரவித்து, தானம் பெறாத பிராம்மணனோ, நண்பரோ, வேலையாட்களோ, தவிர, தரித்திரர்களோ, பிக்ஷை வாங்கி பிழைக்கும் நிலையில் ஏழைகளோ இல்லை எனும்படி ராமர் தன் வசம் இருந்த அனைத்தையும் கொடுத்து விட்டார்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் வித்த விஸ்ரானனம் என்ற முப்பத்து இரண்டாவது அத்தியாயம்.)

அத்தியாயம் 33 (110) பௌர வாக்யம் (ஊர் ஜனங்களின் பேச்சு)

வைதேஹியுடன் சேர்ந்து ப்ராம்மணர்களுக்கு தனம் முழுவதும் நிறைய நிறைய கொடுத்து விட்டு, ராகவர்கள் இருவரும் சீதையுடன் தந்தையைக் காணச் சென்றனர்.  யாராலும் எதிர்க்க முடியாத ஆயுதங்களை மாலைகளால் அலங்கரித்து எடுத்துக் கொண்டு, மாளிகையின் விமான சிகரங்களில் ஏறி நின்று ஜனக் கூட்டத்தைப் பார்த்தனர். அந்த ஜன சமுத்திரத்தின் இடையில் ரதத்தை ஓட்டிச் செல்வது இயலாது. அந்த மாளிகையிலிருந்து இறங்கி நடந்து செல்லும் ராகவனை, சகோதரனும், மனைவியும் உடன் வரக் கண்ட ஜனங்கள், சோகத்தால் பீடிக்கப் பட்டவர்களாக பலவிதமாக பேசலானார்கள். எவன் கிளம்பிச் செல்லும்பொழுது சதுரங்க சேனையும் பின் தொடருமோ, அவனை சீதையுடன் கூட தனியாக லக்ஷ்மணன் மட்டும் தான் பின் தொடருகிறான். ஐஸ்வர்யத்தை அனுபவித்து உணர்ந்தவன், தர்மாத்மாவான தந்தையின் வாக்கு பொய்யாகக் கூடாது என்பதற்காக, வனம் செல்கிறான். எந்த சீதையை பஞ்ச பூதங்களும் கூட கண்டதில்லை, ஆகாசம் கண்டதில்லை எனும்படியாக பாதுகாப்பாக வாழ்ந்த சீதை இன்று ஊர் ஜனங்கள் காண பூமியில் நடந்து செல்கிறாள்.  சிவந்த சந்தனத்தை உபயோகிக்கும் சீதை, பலவிதமான வாசனை திரவியங்களால் அழகு படுத்திக் கொள்பவள், இந்த மழையிலும், குளிரிலும், வெய்யிலிலும் எப்படி இருக்கப் போகிறாள். சீக்கிரமே அவள் வர்ணமிழந்து, அழகு குறைந்து வாடி விடுவாள். இன்றாவது தசரதர் நேர்மையாக உணர்ந்து பேசுகிறாரோ பார்க்கலாம். பிரியமான புத்திரன் ராமன், அவனை நாடு கடத்த அவர் விரும்ப மாட்டார். குணமே இல்லாத புத்திரனேயானாலும், இவ்வாறு வீட்டை விட்டுத் துரத்த யாருக்குத் தான் மனம் வரும். இந்த மகனோ, தன் நன்னடத்தையால் உலகை வென்றவன். எல்லோரிடமும் கருணையும், அனுசரணையும் உடையவனாகத் தான் கேட்டிருக்கிறோம். இவனுடைய அடக்கமும், பொறுமையும் அவனுக்கு சோபையூட்டும் குணங்களே. குணங்கள் என்று சொல்லப்படும் ஆறும் உடையவன். அதனால் அவன் நாட்டை விட்டுச் செல்கிறான் என்று ஜனங்கள் தவித்தார்கள். நீர் நிலையை அண்டியிருக்கும் நீர் வாழ் ஜந்துக்கள், வெய்யில் காலத்தில் வருந்துவதைப் போல வருந்தினர். மகா காந்தி பொருந்திய, தர்மத்தின் ஸாரமோ எனும்படி இருக்கும் இவன் தான் இந்த ஜன சமூகத்தின் ஆணி வேர். ஆணி வேரில் அடி பட்டால் புஷ்பங்களும், பழங்களும் உடைய மரம் என்ன ஆகும்?  நமது அரசனின் இந்த ராஜ்யம் முழுவதும் உள்ள ஜனங்கள் இப்பொழுது பீடிக்கப் பட்டிருக்கிறார்கள். ராமன் தான் ஆணிவேர் என்றால், மற்ற ஜனங்கள் இந்த மரத்தின் இலைகள், புஷ்பங்கள், பழங்கள் ஆவார்கள். நாமும் லக்ஷ்மணனைப் போல, பத்னியுடனும், பந்துக்களுடனும் ராமன் போகும் வழியில் அவன் அடியைப் பின் பற்றி செல்வோம். நமது உத்யான வனங்களோ, க்ஷேத்திரங்கள், வீடுகள் இவைகளைத் தியாகம் செய்து விட்டு நாமும் ராமனுடன் சமமான சுக துக்கங்களை அனுபவிப்பவர்களாக செல்வோம். தார்மீகனான ராமனால் நமக்கு நன்மையே. நமது பொக்கிஷங்களை முழுவதுமாக எடுத்துக் கொண்டு, வீடுகள் உருக் குலைந்து போக, தன தான்யங்களை யாரோ கொண்டு செல்ல, சாரமாக உள்ள எல்லாவற்றையும் நாம் உடன் கொண்டு செல்ல, புழுதி மூடிய, தேவதைகள் விலகிச் சென்று விட, எலிகள் இங்கும் அங்குமாக ஓட, வளைகள் தோன்றி, எங்கும் தண்ணீரோ, அடுப்பு எரியும் புகையோ இல்லாத நிலையில், பெருக்கி சுத்தம் செய்வதும் இல்லாமல், பலி கர்மாவோ,  யாகங்களோ, மந்திர ஜபமோ, ஹோம கார்யங்களோ இல்லாமல் போக, காலம் கெட்டதால் உடைந்து விழுந்த பாத்திரம் பண்டங்களும் மட்டும் கிடக்க, நம்மால் தியாகம் செய்யப் பட்ட வீடுகளை கைகேயி கட்டி ஆளட்டும். ராமன் செல்லும் வனம் நமக்கு நகரம் ஆகட்டும். நம்மால் கை விடப்பட்ட இந்த நகரம் வனமாகும். வனத்தில், பல் உடைய மிருகங்களும், மலை வாழ் மாமிச பக்ஷிணிகள் நம்மைக் கண்டு பயந்து, யானைகளும், சிங்கங்களும், மற்ற காட்டு மிருகங்களும் வனத்தை விட்டு ஓடிப் போகும். அவை நாம் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பட்டும். அவை தியாகம் செய்த இடத்தில் நாம் புதிதாக வசிக்க ஏற்பாடுகள் செய்து கொள்வோம். புல் மண்டி, மாமிசம் உண்ணும் மிருகங்கள் நிரம்பி, ஓனாய்களும், மான்களும் பக்ஷிகளும் நிரம்பிய நகரத்தை கைகேயி, தன் புத்திரனுடனும், இஷ்ட மித்திர பந்துக்களுடனும் ஆண்டு அனுபவிக்கட்டும். கவலையின்றி ராமனுடன் வனத்தில் வசிப்போம். என்று இவ்விதமாக பலவாறு ஜனங்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டதை ராகவனும் கேட்டான். இதைக் கேட்டு அவன் மனம் வாடியது. கைலாச சிகரம் போன்ற தந்தையின் மாளிகையை சற்று தூரத்தில் இருந்தே கண்டான். மதம் பிடித்த யானை போல பராக்ரமம் உடைய அந்த ராமன், தந்தை வீட்டில் நுழைகையில் வாசலில் நின்றிருந்த வீரன் வணங்கினான். அவனைக் கடந்து செல்லவும் சுமந்திரன் பரிதாபமாக நின்றிருந்ததைக் கண்டான். தனக்கு பிரியமானவர்கள் வர மாட்டார்களா என்று எதிர் நோக்கியிருந்த தன் தந்தையை, கவலையில் மூழ்கியிருந்தவரைப் பார்க்க, சற்றும் வாட்டம் இல்லாதவனாக, முக மலர்ச்சியோடு காணச் சென்றான்.  தந்தையின் ஆணையை விதி முறைப் படி கேட்டு,  செய்ய விரும்பியவனாக, ராமன் உள்ளே சென்றான். சுமந்திரனைப் பார்த்து நின்றான். மகா ராஜாவுக்கு காவலாக நிற்பது போல நின்றிருந்த சுமந்திரனைப் பார்த்து, எந்த தந்தையின் கட்டளையை சிரமேற் கொண்டு வனம் செல்ல தீர்மானித்து கிளம்பி நின்றானோ, அவரிடம், சுமந்திரனை அனுப்பி, நான் வந்திருப்பதாக அரசனிடம் சொல் என்று சொல்லியனுப்பினான்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌர வாக்யம் என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  34 தசரத சமாஸ்வாதனம் (தசரதரை சமாதானம் செய்தல்)

தனக்குவமை இல்லாத பெருந்தகையான ராமன், ஸ்யாமள வர்ணமும், கமலம் போன்ற திருவிழிகளும் உடைய தசரத குமரன், வாயிலில் நின்ற சுமந்தரிரிடம், தந்தையிடம் நான் வந்திருப்பதாகச் சொல் என்று சொல்லவும், ஏற்கனவே முகம் வாடி நின்றிருந்த சுமந்திரர், வேகமாக சென்று ராஜா தசரதனைக் கண்டார். பெருமூச்சு விட்டபடி,வெளிறி போன சூரியன் போலவும், நெருப்பு சாம்பல் மூடிக் கிடப்பது போலவும், நீர் வற்றிய குளம் போலவும் பொலிவிழந்த அரசனைக் கண்டார். ராமனையே எண்ணி வருந்தும்  கவலை சூழ்ந்த மனத்தினனாக இருந்த அரசன் நிமிர்ந்து பார்க்கவும், சுமந்திரர் கைக்கூப்பியவாறு, அரசனை ஜெய கோஷங்களால் வாழ்த்தியபின், பயத்தினால் வார்த்தைகள் தடுமாற, மெதுவாக கஷ்டப் பட்டு சொன்னான். பூபதியே, உங்கள் மகன், புருஷவ்யாக்ரன் என்று போற்றப் படுபவன், உங்களைக் காண வாசலில் நிற்கிறான். ப்ராம்மணர்களுக்கு தனத்தை தானம் செய்து விட்டான். மற்ற அனைத்தையும்  அவனை சார்ந்து வாழ்ந்த வேலையாட்கள் மற்றும் அனைவருக்கும் கொடுத்து விட்டான். உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். அந்த ராமன் உங்களை தரிசிக்கட்டும். தன் நண்பர்களிடமும்  விடை பெற்றுக் கொண்டு, உங்களைக் காண வந்துள்ளான். மகாரண்யம் செல்லத் தயாராகிவிட்ட அவனை மகாராஜா பார்க்க வேண்டும். அரசனுக்குரிய குணங்கள் அனைத்தும் நிரம்பியவன், சூரியன் தன் கிரணங்களுடன் பிரகாசிப்பது போன்ற தேஜஸ்வி, சத்யவாதியான தர்மாத்மா, சமுத்திரம் போன்ற கம்பீரம் உடையவன், வாசலில் நிற்கிறான். தங்களைக் காண அனுமதி வேண்டி நிற்கிறான். இவ்வாறு சொன்ன சுமந்திரனைப் பார்த்து, தசரத ராஜா, களங்கமில்லாத ஆகாசம் போன்றவர், பதில் சொன்னார்.

சுமந்திரா, அழைத்து வா. என் மனைவிகளையும், என் பக்கம் உள்ள மற்றவர்களையும் அழைத்து வா. என் மனைவிமார் சூழ்ந்திருக்க ராமனை பார்க்க விரும்புகிறேன். சுமந்திரர் அந்த:புரம் சென்று, பெண்களிடம் மகாராஜா உங்களை அழைக்கிறார் விரைந்து வாருங்கள் என்று சொல்லி முடிக்குமுன் அந்த ஸ்த்ரீகள், அரசனின் கட்டளை என்பதால், விரைந்து அரச மாளிகையை அடைந்தனர். எழுனூரில் பாதியான, முன்னூற்று ஐம்பது பத்னிகளும், கௌசல்யையை சூழ்ந்து கொண்டு சென்றார்கள். மனைவிகள் வந்து விட்டார்கள் என்பதை நிமிர்ந்து பார்த்து விட்டு, சுமந்திரரைப் பார்த்து சுமந்திரா, என் மகனை அழைத்து வா என்றார். அந்த சாரதி, ராமனையும், லக்ஷ்மணனையும், சீதையையும் அழைத்துக் கொண்டு வந்து அரசனின் சமீபத்தில் விட்டான். தொலைவிலிருந்தே கை கூப்பியபடி வரும் தன் மகனைப் பார்த்து அரசன், துக்கம் தாங்காமல் ஆசனத்திலிருந்து விழுந்தான். அவனை சூழ்ந்து ஸ்த்ரீ ஜனங்கள் இருந்தனர். ராமனைக் கண்டதும் அவனை நோக்கி வேகமாக ஓடி வந்தான். அவனை நெருங்கும் முன்பே கீழே விழுந்தான்.  துக்கம் தாளாமல் மூர்ச்சையானான். ராமனும் லக்ஷ்மணனும் வேகமாக வந்து அரசனை தாங்கிக் கொண்டனர்.  துக்கத்தாலும், சோகத்தாலும், அரசன் நினைவு இழந்ததைக் கண்டு ஆயிரக் கணக்கான ஸ்த்ரீ 

ஜனங்களின் கூக்குரல் ஏக காலத்தில் எழுந்தது. அரண்மனை இந்த ஓலத்தால் நிறைந்தது. ஹா, ஹா, ராமா, என்று கூடவே எழுந்த ஆரவாரத்துக்கிடையில் ராமனும் லக்ஷ்மணனுமாக சீதையின் உதவியோடு ராஜாவை படுக்கையில் கிடத்தினர். ஒரு முஹுர்த்த நேரத்திற்கு பிறகு நினைவு திரும்பி எழுந்த அரசனிடம்,  சோகமோ, மோகமோ தன்னை எந்த விதத்திலும் பாதிக்காத மன நிலையை வெளிப்படுத்தும் விதமாக,  தெளிவான குரலில் கை கூப்பியவராக சொன்னார். மகாராஜா, விடை பெற்றுக் கொள்கிறேன். எங்கள் அனைவருக்கும் நீங்கள் தான் தலைவர். தண்டகாரண்யம் செல்ல தயாராகி விட்ட எங்களை சௌக்யமாக இருந்து நல்ல முறையில் பாருங்கள். லக்ஷ்மணனுக்கும் அனுமதி கொடுங்கள். சீதையும் என்னுடன் வருகிறாள். இவர்கள் இருவரையும் பல காரணங்கள் சொல்லி நான் தடுத்தும் இவர்கள் கேட்கவில்லை. தங்களை சமாளித்துக் கொண்டு எங்கள் மூவரையும் குசலமாக போய் வர அனுமதியுங்கள். ப்ரஜாபதி, தன் ஆத்மஜர்கள் எனப்படும் குழந்தைகளை அனுப்பியது போல, லக்ஷ்மணன், நான், சீதை எங்கள் மூவருக்கும் விடை கொடுங்கள். வனவாசத்திற்குத் தயாராக கிளம்பி நிற்கும் மகனைப் பார்த்து ராஜா சொன்னார் ராகவா,  கைகேயிக்கு கொடுத்த வரத்தால் நான் கட்டுப் பட்டேன். என்னை ஒடுக்கி விட்டு, நீயே அயோத்யா அரசனாக இரு. இதைக் கேட்டு ராமர், சொல்லின் செல்வர், தர்மமே தன் உயிராக மதிப்பவர், வணக்கத்தோடு பதில் சொன்னார். நீங்கள் இன்னும் பல வருஷங்கள்  பூபதியாக இருந்து அரசாளுங்கள். நான் காட்டில் வசிக்கிறேன். உங்களை பொய்யனாக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. ஒன்பதும் ஐந்துமாக வருஷங்கள் காட்டில் வசித்த பின், பிரதிக்ஞையை முடித்துக் கொண்டு, அரசனே உங்கள் காலடியில் இருப்பேன். அழுது அரற்றிக் கொண்டு, சத்ய பாசத்தால் கட்டுப் பட்டவனாக, கைகேயியின் தூண்டுதலின் பேரில் வனம் செல்ல பணித்து விட்டு, இப்பொழுது ராஜா சொல்வார் -ஸ்ரேயஸ் பெற வாழ்த்துகிறேன். (ஸ்ரேயஸ்-மேன் மேலும் புகழ் அடைதல்) க்ஷேமமாக திரும்பி வர வாழ்த்துகிறேன். போய் வா , மகனே, சத்ருக்களை வென்று,  போகும் பாதையில்  பயமோ இடையூறோ இன்றி போய் வா. உன்னை தடுத்து நிறுத்த எனக்கு சக்தியில்லை. நீ சத்யாத்மா. குழந்தாய், உன் மனம் தர்மத்தில் தோய்ந்தது. ரகு நந்தனா, என் புத்தியில் உன்னைத் தடுக்க சக்தியில்லை. இன்று இரவு, மகனே போகாதே. ஒரு நாள் நான் உன்னை பார்த்தே நன்மையடைவேன். தாயாரையும், என்னையும் பார்த்துக் கொண்டு இந்த இரவு இங்கேயே இரு. உன் இஷ்டங்களை பூர்த்தி செய்து கொண்டு, விடியற்காலையில் புறப்படுவாய். ராகவா, நீ செய்வது மிகவும்  கடினமான காரியம். எனக்கு பிரியமானது என்று எண்ணி, நான் சொன்னதன் பொருட்டு, இஷ்ட ஜனங்களை விட்டு வனம் செல்கிறாய். இது எனக்கு இஷ்டம் இல்லை ராமா. சத்யமாக சொல்கிறேன். ராகவா, மறைந்து நிற்கும் அக்னி போல பெண்ணினால் விஷமமாக ஏமாற்றப் பட்டேன். எனக்கு செய்யப் பட்ட இந்த வஞ்சனையை நீ ஏற்று, என்னைக் காப்பாற்ற முயலுகிறாய். வாழ்வை குலைக்க வந்த இந்த கைகேயியினால் தூண்டப் பட்டேன். என்னுடைய மூத்த மகனாக இருந்து நீ இப்பொழுது, என்னை வாக்குத் தவறாமல் காப்பாற்றுவதற்காக செய்வதும் ஆச்சர்யமில்லை. – தந்தையின் இந்த தீனமான வார்த்தைகளைக் கேட்டு, லக்ஷ்மணனை அருகில் வைத்துக் கொண்டு,  ராமன் -இன்று வரை இல்லாதது நாளை என்ன புதிதாக வந்துவிடப் போகிறது, இன்றே கிளம்புவது தான் எல்லாவிதத்திலும் நல்லது. நான் துறந்த இந்த பூமியை ராஷ்டிரத்தோடும், ஜனங்களுடனும், தன தான்யம் நிறைந்ததுமாக பரதனுக்கு கொடுங்கள். வனம் செல்லத் துணிந்த என் மனம் இனி மாறாது.  கைகேயியிக்கு நீங்கள் மகிழ்ச்சியோடு, திருப்தியாக கொடுத்த வரங்களை முழுவதுமாக கொடுங்கள். வாக்குத் தவறாதவர் என்ற உங்கள் பெயர் நிலைத்திருக்கட்டும். உங்கள் கட்டளையை, நீங்கள் சொன்ன விதமாகவே பாலனம் செய்து பதினான்கு வருஷங்கள், காட்டில் காட்டு ஜனங்களோடும், மிருகங்களுடனும் கழிக்கிறேன்.  இன்னும் விமரிசித்துப் பேசிக்கொண்டு இருப்பானேன். பரதனுக்கு ராஜ்யத்தைக் கொடுங்கள். எப்பொழுதும் நான் ராஜ்யத்தை விரும்பியதில்லை. தன் சுகத்தையும் பெரிதாக நினைத்ததில்லை.  உங்கள் கட்டளையை நிறைவேற்றுவதே எனக்கு விருப்பம். அதனால் துக்கத்தை விடுங்கள்.- கண்களில் நீர் நிரம்பியவராகவே இருக்க வேண்டாம். நதிகளின் அரசனான சமுத்திரம், எப்பொழுதும் என்ன தான் வந்தாலும், கடக்க முடியாததாகவே இருக்கும். வற்றிச் சுருங்காது.  எனக்கு ராஜ்யத்தில் விருப்பமில்லை. சுகத்திலும் ஈ.டுபாடு இல்லை. இங்கு இருக்கும் எல்லா காமங்களிலும் விருப்பம் இல்லை. சுவர்கம் கூட, ஏன் உயிர் வாழ்வதையுமே நான் பெரிதாக மதிக்கவில்லை. உங்களை வாக்குத் தவறாத சத்யவானாக பார்க்க விரும்புகிறேன். உங்களை யாரும் பொய்யன் என்று சொல்லி விடக் கூடாது. ப்ரத்யக்ஷமாக உள்ள உங்கள் நற்செயல்களாலும், சத்யத்தாலும் சபதமிடுகிறேன். இங்கு இனி ஒரு க்ஷணம் கூட என்னால் இருக்க முடியாது. ப்ரபோ, நீங்களும் வருந்த வேண்டாம். எனக்கும் எந்த வித ஏமாற்றமும் இல்லை. கைகேயி என்னிடம் வனம் போ என்று வேண்டினாள். நானும் போகிறேன் என்று சொன்னேன். அதை, அந்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.  தேவா, இதை எண்ணி மனம் கலங்க வேண்டாம். நாங்கள் காட்டில் சந்தோஷமாக இருப்போம். அமைதியான மான்கள் சூழ்ந்திருக்க, பலவிதமான  பக்ஷிகள் பாட, நாங்கள் மகிழ்ச்சியாகவே இருப்போம். தேவதைகள் ஆனாலும் தந்தை தெய்வமாக மதிக்கத் தகுந்தவர். அதனால் தெய்வ வாக்காகவே மதித்து தந்தை சொல்லை ஏற்றுக் கொள்கிறேன். இந்த தாபத்தை விடுங்கள். பதினான்கு வருஷங்கள் கழிந்தபின் திரும்பி வந்த என்னை காண்பீர்கள்.  கண்ணீர் விடும் இந்த ஜனங்களை அடக்கி சமாதானம் செய்ய வேண்டிய நீங்களே ஏன் இவ்வளவு வருந்துகிறீர்கள். இந்த ஊர், ராஜ்யம், பூமி எல்லாவற்றையும் பரதனுக்கு கொடுங்கள். நான் உங்கள் கட்டளையை ஏற்று வனம் செல்கிறேன். நீண்ட நாட்கள் வனத்தில் இருக்க கிளம்புகிறேன். நான் துறந்து செல்லும் இந்த பூமியை, மலை பிரதேசங்களையும், காடுகளையும், சுபமான எல்லை வரை பரதனுக்கு சாஸனம் செய்து கொடுங்கள். நீங்கள் சொன்னபடியே நடக்கட்டும். பார்த்திபனே, என் மனம் சற்றும் சஞ்சலமாகவில்லை. மிகப் பெரிய போக போக்யங்களில் எனக்கு ஈ.டுபாடும் இல்லை. எனக்கு பிரியமானதிலும் இப்பொழுது பற்று சற்றும் இல்லை. சிஷ்டர்கள் என்று சொல்லப்படும் குணவான்கள் சம்மதிக்கும் வகையில் நான் தங்கள் கட்டளையை ஏற்று, நடக்கிறேன். என் பொருட்டு கவலையை விடுங்கள். உங்களை வாக்கு தவறச் செய்து இந்த ராஜ்யமோ, மற்ற போகங்களோ, சீதையோ, என் உயிரோ, எதுவானாலும் என்னிடம் வைத்துக் கொள்ள நான் விரும்ப மாட்டேன்.  உங்களைப் போலவே நானும்  சத்யத்தை பெரிதாக மதிக்கிறவன். கிடைத்த பழம், கிழங்குகளை உண்டு, மலைகளைப் பார்த்துக் கொண்டு, நதிகளையும், அருவிகளையும் கண்டு களித்தவாறு வனத்தில் நாங்கள் நாட்களை கழிப்போம். இதுவரை காணாத அபூர்வமான மரங்களை சீதாவுக்கு காட்டுவேன். நீங்கள் கவலையை விடுங்கள். இவ்வாறு சோகத்தாலும், குற்ற உணர்ச்சியிலும் தடுமாறிய அரசனுக்கு ஆறுதல் சொல்லியும், மகனை கட்டியனைத்தவர், வேறு எதையும் உணரவில்லை. அரசனின் மனைவி கைகேயியைத் தவிர, மற்ற அனைவரும்  அழுது அரற்றினர். எங்கும் ஹா, ஹா என்ற சப்தம் நிறைந்தது. சுமந்திரர் கூட தாங்க மாட்டாமல் நினைவு இழந்தார்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தசரத சமாஸ்வாசனம் என்ற முப்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 35  சுமந்திர கர்ஹணம். (சுமந்திரர் நிந்தித்தல்)

தசரதனுடைய ரத சாரதியும், உற்ற நண்பருமான சுமந்திரர், இந்த சூழ் நிலையின் இறுக்கத்தை தாங்க மாட்டாதவராக, கைகளை முஷ்டியால் குத்திக் கொண்டு, பல்லைக் கடித்தவாறு, கண்களின் சிவப்பில் தன் கோபம் தெரிய, பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றிருந்தவர், திடீரென்று, அரசனின் மனதை படித்தவர் போல், கைகேயி நடுங்கும்படி சரமாரியாக, கடும் சொற்களால் அவளைத் தாக்க ஆரம்பித்தார். வேகமாக வந்து விழுந்த வார்த்தை எனும் பாணங்கள், கைகேயியின் உள்ளத்தை குத்தி கிழிக்கலாயின. கைகேயி, உன்னால் கணவனே தூக்கியெறியப் பட்டான். உன் கணவன் ஏதோ சாதாரணமானவனும் அல்ல. உலக மக்களையும், ஸ்தாவர ஜங்கம எனும் சராசரங்களையும் பாலிக்கும் அரசன். இதை விட செய்யக் கூடாத விஷயம் என்று ஒன்று இருக்கவே முடியாது. பதியை நாசம் செய்தவள் நீ. குலத்தையும் நாசம் செய்தவளாக ஆகப் போகிறாய். நம் ராஜா, மகேந்திரன் போல ஜயிக்க முடியாதவராக இருந்தார். அசைக்க முடியாத மலை போல ஸ்திரமாக இருந்தார். பெரும் கடல் போல வற்றாது, குறைவற்று இருந்தார். அவரையே வாட்டி எடுத்து விட்டாய்.  உனக்கு வரம் கொடுத்த பதி என்பதற்காகவா, இவ்வளவு அவமதிப்பு செய்கிறாய்? பெண்களுக்கு கோடி புத்திரர்களை விட கணவனது இஷ்டமே உயர்ந்தது என்று சொல்வார்கள். புத்திரர்கள் வயது வந்த பின், அரசன் காலம் ஆனபின் ராஜ்யத்தை அடைவார்கள் இது தான் இக்ஷ்வாகு குல தர்மம். இதையே அழிக்க முற்பட்டு விட்டாய். பரதன் அரசனாகட்டும். உலகை ஆளட்டும். நாங்கள் எங்கு ராமன் இருக்கிறானோ, அங்கு செல்கிறோம். உன் விஷயத்தில், எந்த ப்ராம்மணனும் இங்கு வசிக்க விரும்பவில்லை.  மரியாதை அறியாத நீ, அப்படி ஒரு காரியம் செய்ய நினைக்கிறாய். உன் நடவடிக்கையால், பூமி பிளந்து போகவில்லையே என்று கூட ஆச்சர்யமாக இருக்கிறது ராமனை காட்டுக்குப் போ என்று சொன்ன நாக்கு துண்டித்து விழவில்லை. மாமரத்தை வெட்டி விட்டு, எலுமிச்சை மரத்தை நட்டானாம். அதை பால் வார்த்து வளர்த்தும் இனிப்பாக இல்லையே என்றானாம். உன் பிறவி அப்படி என்று எண்ணுகிறேன். தாயைப் போலவே இருக்கிறாய். முன்னால் நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். உன் தந்தைக்கு யாரோ உத்தமமான வரம் தந்திருந்தார்கள். எந்த ஜந்துவானாலும் அதன் பாஷையை உன் தந்தை புரிந்து கொள்வார். அதனால் குறுக்காக பறந்து செல்லும் பூச்சிகளின் பாஷையையும் அவர் புரிந்து கொண்டார். இரண்டு மின்மினி பூச்சிகளின் படுக்கையறை சம்பாஷணையைக் கேட்டு ஒரு முறை தானே சிரித்துக் கொண்டார். உன் தாயார் கோபம் கொண்டு எதற்காக சிரித்தீர்கள் என்று கேட்டாள். தந்தை சொன்னார் தேவி, இந்த ரகஸ்யத்தை உனக்கு சொன்னால், உடனே என் மரணம் சம்பவிக்கும். சந்தேகமே இல்லை. உன் தாயார், கேகயனிடம் சொன்னாள் எதுவானாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். உயிருடன் இரு, இல்லாவிட்டால் போ, என்னை பரிகஸிக்கிறாய் என்றாள். உன் தந்தை தனக்கு இந்த வரம் கொடுத்தவரிடம் சென்று நடந்ததைச் சொன்னான். வரம் அளித்த சாது சொன்னார். இந்த ரகஸ்யத்தை வெளியிட்டால் மரணம் நிச்சயம். அதனால் சொல்லாதே. என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். அவள் பிடிவாதம் பிடித்தால் பிடிக்கட்டும். கண்டு கொள்ளாதே என்று சொல்லி அனுப்பி விட்டார். உன் தந்தையும் மனம் தேறி, உன் தாயாரை அடக்கி, பல காலம் குபேரன் போல வாழ்ந்தார். அதே போல நீயும் அரசனை ஆட்டுவிக்கிறாய். உலகத்தில் ஒரு வழக்கு உண்டு. தந்தையைப் போல பிள்ளைகள், தாயைப் போல பெண்கள் என்று.  தாயின் குணம் மகளை அடைகிறது என்பது உண்மை தான். சக்ரவர்த்தி சொன்னதை அப்படியே எடுத்துக் கொள்ளாதே. கணவனின் விருப்பம் அறிந்து நட.  தேவராஜன் போல உள்ள உன் கணவன், உலகையே பாலிப்பவன், அதர்மத்தைச் செய்யும் படி தூண்டாதே. உனக்கு ப்ரதிக்ஞை செய்ததை மீற மாட்டார். தேவி, தசரத ராஜா, ஸ்ரீமான், மூத்தவர்,  அள்ளிக் கொடுக்கும் வள்ளல், தன் கடமையுணர்ந்து செயல் படுபவர். தன் தர்மத்தைக் காப்பாற்றி வருபவர். உலகை காக்கும் தகுதி உடையவர்.  நீயே சொல்லிவிடு. ராமனுக்கே முடி சூட்டி வையுங்கள் என்று .  ராமன் வனம் சென்றால், அவமானம் தான் உனக்கு மிஞ்சும்.  ராகவன் தனக்குரிய ராஜ்யத்தை அடையட்டும். நீ கவலையற்று இருக்கலாம். அவனையன்றி வேறு யாரும் இந்த ஊரில் வசிக்க முடியாது, வசிக்கக்  கூடாது. ராமனிடம் பொறுப்பை ஒப்படைத்த பின், இது வரை முன்னோர்கள் செய்து வந்தபடி தசரத ராஜா, தன் முதுமையில் வனம் செல்வார்.  இது போல, சமாதானமாகவும், கடுமையாகவும் சுமந்திரர், வினயமாக, வணங்கியபடி சொன்னார். இதை கேட்டு அந்த ராணி சிறிதளவும் அசைந்து கொடுக்கவுமில்லை. அவள் முகபாவம் சற்றும் மாறவும் இல்லை. 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சுமந்திர கர்ஹணம் என்ற முப்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 36 (113) சித்3தா4ர்த்த ப்ரதி போதனம்(சித்தார்த்தர் என்ற முனிவர் நியாயத்தைச் சொல்லுதல்)

இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த தசரத ராஜா, தன் ப்ரதிக்ஞை காரணமாக தன்னையும் மீறி நடந்தவைகளால் மிகவும் பீடிக்கப் பட்டு வருந்தினான். சாரதியான சுமந்திரனைப் பார்த்து, நாத்தழதழக்க, கண்களில் நீர் பெருக சொன்னார். சுமந்திரா, ரத்னங்கள் நிறைந்த பெட்டிகளும், நாலுவித சேனையும் ராமனைத் தொடர்ந்து செல்லும்படி செய். சீக்கிரம் ஏற்பாடு செய். பாடகர்களும், அழகிய பெண்களும், வியாபாரிகளும், பெரும் தனவந்தர்களும், குமாரனுடைய சேனையை அலங்கரிக்கட்டும். இவனிடம் ஏவல் செய்யும் வேலைக்காரர்களில் யாரையெல்லாம் வீர்யத்தால் இவனுக்கு பிடிக்குமோ, அவர்களுக்கும் நிறைய பணம் கொடுத்து இவனுடன் அனுப்பி வை. முக்யமான ஆயுதங்கள், நகரத்தார், வண்டிகள் காகுத்ஸனின் பின் செல்லட்டும். வனத்தில் வேட்டையாடுபவர்கள் அதிகமாக இருப்பார்களே. பலவிதமான மான்களை வேட்டையாடி, யானகளையும் கண்டு ரசித்தபடி, காட்டில் கிடைக்கும் தேன் முதலியவற்றை உண்டு, பலவிதமான நதிகளையும் கண்டு மகிழ்ந்து ராமன் ராஜ்யத்தை மறந்து இருக்கட்டும். ஜன நடமாட்டமில்லாத வனத்தில் ராமன் சஞ்சரிக்கப் போகிறானே, என்னுடைய தான்ய கோசமும், தன கோசமும் (கோசம்-சேமித்து வைத்திருப்பது) அவனுடன் செல்லட்டும். புண்யமான இடங்களில் யாகம் முதலியவை செய்து, நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, ரிஷிகளுடன் சம்பாஷித்தபடி, சுகமாக வனத்தில் வசிப்பான். பரதனும் நல்லவன் தான். அவன் அயோத்தியை பாலிக்கட்டும். எல்லாவிதமான சுக, சௌகர்யத்திற்கான பொருட்களும் ராமனுக்கு கிடக்கும்படி செய்யுங்கள்.  இவ்வாறு காகுத்ஸன் (தசரதன்) சொன்னவுடன் கைகேயியிக்கு பயம் வந்து விட்டது. முகம் சுருங்கியது. குரல் கரகரத்தது. அரசனைப் பார்த்து ராஜ்யத்தில் எல்லா ஜனங்களையும் அனுப்பிவிட்டு, கள்ளைக் குடித்து விட்டு வெறும் மண் பானையை விட்டுச் செல்வது போல், சூன்யமான ராஜ்யத்தை பரதன் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்றாள். வெட்கம் இன்றி கைகேயி பேசுவதைக் கேட்டு தசரதர், கடுமையாகப் பேசுபவளைப் பார்த்துச் சொன்னார். அனார்யே,  (பண்பற்றவளே) என் கழுத்தில் பாரத்தை ஏற்றி விட்டு, நான் சுமையைத் தாங்கி நிற்கும் பொழுது மேலும் ஏன் அடிக்கிறாய்? புதிதாக இன்னும் என்ன செய்ய ஆரம்பித்திருக்கிறாய்? முன்னால் விட்டுப் போயிற்றோ, சொல்ல. கோபத்துடன் அரசன் கத்தவும், கைகேயி இரண்டு பங்கு கோபத்துடன் பதிலுக்கு இரைந்தாள். உங்கள் குடும்ப வழக்கம் தான். சகரன் தன் மூத்த பிள்ளையை அடக்கினான். அசமஞ்சன் என்ற மகனைத் தண்டித்தான். அது போல இவனும் போகட்டும்.-திக்- என்று அரசன் தலையில் அடித்துக் கொண்டான். சுற்றியிருந்தோர் இந்த பேச்சினால் வெட்கித் தலை குனிந்தனர். கைகேயி எதையும் லக்ஷ்யம் செய்யவில்லை. அங்கு இருந்த சித்தார்த்தர் என்ற பெரியவர், தன்னுடைய  நன்னடத்தையால் பெரிதும் மதிக்கப் பட்டு, அரசனுக்கு உறுதுனையாக இருந்தவர், ராஜாவுக்குப் பரிந்து  கைகேயியிடம் சொன்னார்.  அசமஞ்சன் வழியில் பார்த்த சிறு குழந்தைகளை பிடித்து சரயுவில் போட்டு அவர்கள் தவிப்பதைக் கண்டு  மகிழ்ந்தான். அதைப் பார்த்து நகர் ஜனங்கள் கோபித்துக் கொண்டு அரசனிடம் முறையிட்டார்கள். அசமஞ்சன் அல்லது நாங்கள். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அரசனே என்று சொல்லவும் அரசன், எதைக் கண்டு இப்படி பயம்? என்று கேட்க, ஊர் ஜனங்கள் உன் புத்தியில்லாத மகன், எங்கள் குழந்தைகளை வைத்து விளையாடுகிறான். மூடன், எங்கள் குழந்தைகளை சரயுவில் மூழ்கடித்து, அவர்கள் கதறுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான். பெரும் கஷ்டத்தை நாங்கள் அனுபவிக்கிறோம் என்றனர்.  பிரஜைகளின் நன்மைக்காக, அவர்களுக்கு துன்பம் செய்யும் தன் மகனைத் தியாகம் செய்தான். அவனை ஒரு வாகனத்தில் ஏற்றி, அவசரமாக, மனைவியுடனும் சில முக்கியஸ்தர்களுடனும், உயிருள்ள வரை ஊருக்குள் வரக் கூடாது என்று கட்டளையிட்டார். அவன் பிக்ஷை ஓடு ஏந்தி ஊரெல்லாம் அலைந்தான். பாப கர்மத்தை செய்த பலனை அனுபவித்தான். தார்மிகனான ராஜா, சகரன், இப்படித்தான் தன் பிள்ளையைத் தியாகம் செய்தான். ராமன் என்ன பாபம் செய்தான்? எதற்காக இந்த தண்டனை? ராகவனிடத்தில் எந்த விதமான குணக் குறைவையும் நாங்கள் காணவில்லை. இவனிடத்தில் குறை என்பதே இல்லை. முயலை அடையாளமாக கொண்ட சந்திரன் போல, தேவி, நீ ராமனிடத்தில் ஏதேனும் குறை கண்டாயா? என்ன குற்றம் செய்தான் என்று நாடு கடத்தப் படுகிறான்? துஷ்டன் அல்லாதவனை, நல் வழியில் நிற்பவனை, தியாகம் செய்வதும்  தர்மத்திற்கு விரோதமே.  இது இந்திரனுடைய தேஜஸைக் கூட அழிக்கக் கூடியது. அதனால் போதும் தேவி, ராஜ்ய லக்ஷ்மியை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டாய். சாதாரணமாக ஜனங்கள் காப்பாற்றப் படுவதைப் போலவே இவனும் பாலிக்கப் பட வேண்டியவனே. இல்லயேல் உனக்குத் தான் அவமானம்.  சித்தார்த்தர் சொன்னதைக் கேட்டு அரசர், களைத்தவனாக, குரலும் சோகத்தால் நடுங்க கைகேயியிடம் சொன்னார்.  இவர் சொல்வதும் உனக்கு ஏற்காது, கைகேயி. பாபம் செய்யத் துணிந்து விட்டாய். எனக்கோ, என் ஜனங்களுக்கோ இதமானது உனக்குப் பிடிக்காதது தான். நல்ல வழியிலிருந்து விலகிப் போகும் நீ, அந்த வழியில் செல்லும் க்ருபணர்கள்-அல்பர்கள், போலத் தானே நடந்து கொள்வாய். நான் ராமனை பின் தொடர்ந்து போகிறேன். இந்த ராஜ்யமோ, தனமோ, சுகமோ எனக்கு எதற்கு? ராஜா பரதனுடன் நீ ஏகாந்தமாக, தன்னந்தனியாக ராஜ்ய சுகத்தை அனுபவி. 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சித்3தா4ர்த ப்ரதி போதனம் என்ற முப்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 37 (114)  சீர பரிக்ரஹ நிமித்த வசிஷ்ட கோப:(மரவுரியை அணிந்து கொள்ள வற்புத்தவும், வசிஷ்டர் கோபித்தல்)

மந்திரியும், சாரதியுமான சுமந்திரர் வார்த்தையையும், பின் தொடர்ந்த சம்பாஷனைகளையும் கேட்டு ராமர் தசரதரிடம் வினயமாக சொன்னார். தந்தையே, போகத்தை விட்ட எனக்கு, வனத்தில் காட்டு ஜனங்கள், மிருகங்களோடு வசிக்கத் துணிந்து விட்ட எனக்கு, உற்றார், சுற்றாரைத் துறந்து செல்லும் எனக்கு, இந்த பொருட்களால் என்ன லாபம்? யானையைக் கொடுத்து விட்டு அங்குசத்திற்கு போராடுபவன் போல இருக்கிறது நீங்கள் சொல்வது. உத்தமமான யானையே கை விட்டுப் போன பின் அந்த கயிற்றில் அவ்வளவு மோகமா? நல்லவர்களுள் ஸ்ரேஷ்டனே, எனக்கு கொடியேந்தி வரும் நால் வகை சேனையால் என்ன பயன்? எனக்கு வேண்டியதை நான் தெரிந்து கொள்கிறேன். இப்பொழுது மரவுரி கொண்டு வந்து தந்தால் போதும். மண்ணை தோண்டும் கரண்டியும், கூடையும் இரண்டாக கொண்டு வந்து தாருங்கள். பதினான்கு வருஷம் காட்டில் வசிக்க இவை வேண்டும். அந்த கூட்டத்தில், லஜ்ஜையின்றி, கைகேயி தானே மரவுரியைக் கொண்டு வந்து தந்து, இதை உடுத்திக் கொள் என்றாள். தன் உயர்ந்த வஸ்திரங்களை களைந்து விட்டு ராகவன் மரவுரியைத் தரித்தான், ரிஷி ஜனங்களைப் போல். ராமன் அணிந்தது போலவே லக்ஷ்மணனும் மரவுரியை அணிந்து கொண்டான். பட்டு ஆடை உடுத்தியிருந்த சீதை, பெண் மான் வலையில் அகப்பட்டுக் கொண்டது போல கண்களில் பயம் தெரிய விழித்தாள்.  கைகேயி கொடுத்த மரவுரியை கைகளில் ஏந்தியபடி, கண்களை நீர் மறைக்க, கந்தர்வ ராஜன் போன்று இருந்த தன் பதியை நோக்கினாள். அதை திருப்பி திருப்பி பார்த்து, முனி பத்னிகள், எப்படித்தான் இதை ஆடையாக அணிகிறார்களோ, என்றாள். ஒரு மரவுரியை கழுத்தில் வைத்துக் கொண்டு மறு நுனியை எப்படி, என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாட, அவளுக்கே வெட்கமாகி விட்டது. இதையறிந்த ராமர் வேகமாக அவள் அருகில் வந்து, பட்டாடையின் மேலேயே, தானே மரவுரியை அணிவித்தார். ராமனின் இந்த செய்கையைக் கண்டு அந்த:புரத்து ஜனங்கள் கண்களில் கண்ணீர் பெருகியது. தன் தேக காந்தியால் கம்பீரமாக நின்ற ராமனிடம், குழந்தாய், இவளுக்கு வனவாசம் ஏற்றதில்லை. நீதான் பித்ரு வாக்ய பரிபாலனம் என்ற காரணம் காட்டி வனம் போகிறாய். எங்களுக்கு ஆறுதலாக இவள் இங்கேயே இருக்கட்டும் என்றனர். மகனே, லக்ஷ்மணன் உனக்குத் துணையாக வருவான். அவனுடன் வனம் செல்வாயாக. தாபஸ ஸ்த்ரீ போல காட்டில் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு இந்த சிறு பெண்ணை தவிக்க விடாதே. நாங்கள் யாசிப்பதைக் கொடு புத்ரா, சீதை இங்கேயே இருக்கட்டும். தர்மம் என்று நீ தான் இருக்க ஒப்ப மாட்டாய் என்றனர். ஸ்த்ரீகளின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே , தசரதன் மைந்தன், தன் மனைவிக்கும் தன்னைப் போலவே மரவுரியை அணிவித்து விட்டான். சீதையும் மரவுரி தரித்ததைக் கண்டு குல குருவான வசிஷ்டர் கைகேயியைத் தடுத்து, கோபத்துடன் சொன்னார். அதிக பிரசங்கியே, புத்தியில்லாதவளே, கைகேயி, குலத்தைக் கெடுக்க வந்தாயா? அரசனை ஏமாற்றி விட்டு நீ மட்டும் என்னவாக வாழப் போகிறாய்? சீலம் இழந்தவளே, சீதை வனம் போகத் தேவையில்லை. ராமனை தொடர்ந்து சீதை போவதாகச் சொல்வது இயற்கையே. அவள் பிறப்புக்கு அது தான் அழகு. மனைவி தன் ஆத்மா போன்றவள். ராமனுக்கு சீதை தன் ஆத்மா போல என்பதால் அவளை விட்டுப் பிரிந்து இவனும், ராமனை விட்டுப் பிரிந்து சீதையும் இருக்க மாட்டார்கள். நாமும் பின் தொடர்ந்து செல்வோம். இந்த நகரமே உடன் வரட்டும். வாயில் காப்பவர்களும், குடும்பத்தோடு வரட்டும்.  இந்த நகரம், ராஷ்டிரமும், சபையோரும், ராமனுடன் உடன் வசிப்போம். அவ்வளவு ஏன்? பரதனும், சத்ருக்னனும் நமக்கு முன்னால் மரவுரி தரித்து, மூத்தவனான ராமனைத் தொடர்ந்து வனம் செல்வது நிச்சயம். பிறகு சூன்யமான இந்த நகரை,  மரங்களோடு மரமாக நின்று  நீயே அனுபவிப்பாய். கைகேயீ, பிரஜைகளின் விருப்பத்துக்கு மாறாக நீ சொல்வதை அவர்கள் ஏன் கேட்க வேண்டும்? எங்கு ராமன் பூபதியாக இல்லயோ, அந்த இடம் ராஜ்யமாகவே இருக்கப் போவதில்லை. ஆனால் ராமர் இருக்கும் இடமான வனம் ராஷ்டிரமாக ஆகி விடும். தந்தை விரும்பிக் கொடுக்காத அரசை பரதன் தான் ஆளுவானா? அதுவும் சந்தேகமே.  சக்ரவர்த்திக்கு உன்னிடம் பிறந்த புதல்வன் ஆனாலும், நீ பூமிக்கும் ஆகாயத்துக்குமாக குதித்தாலும், பித்ரு வம்சத்தின் சரித்திரத்தை அறிந்தவன், வேறு விதமாக எதுவும் செய்ய மாட்டான். புத்திரனே வெறுக்கும்படி, ஒரு காரியம் செய்திருக்கிறாய். இந்த உலகத்திலேயே ராமனைத் தொடர்ந்து போகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. கைகேயி இன்றே நீ பார்க்க போகிறாய். பசுக்களும், யானைகளும், மான்களும், பறவைகளும் ராமன் போகும் பொழுது கூடவே கிளம்பிச் செல்வதைக் காணப் போகிறாய். நகர முடியாமல் மரங்கள் அந்த திசையை நோக்கி நிற்பதைக் காண்பாய். அதனால் நல்ல ஆபரணங்களை மருமகளாகிய சீதைக்கு கொடு. இந்த மரவுரி வேண்டாம். இந்தப் பெண்ணுக்கு மரவுரியைத் தருவது சற்றும் பொருந்தாது என்று வசிஷ்டர் தடுத்தார். கேகய ராஜ புத்ரி, ஒரு ராமனை வனம் போகச் சொன்னாய். நல்ல ஆபரணங்கள் பூண்டவளாக இவள் அரண்யத்தில் ராமனுடன் வசிக்கட்டும். இவளும் ராஜ புத்ரியே. அதனால் வாகனங்களும், பரிசாரகர்களும், சூழ்ந்து வர இவள் செல்லட்டும். உனக்கு வரம் கொடுக்கப்பட்ட போது இந்த விஷயம் சொல்லப் படவில்லை. அதனால் எல்லா வஸ்திரங்களையும் இவள் எடுத்துச் செல்வதில் தடையேதுமில்லை. ப்ராம்மணோத்தமரான வசிஷ்டர், அரசரின் பெருமைக்கும் மதிப்புக்கும் சற்றும் குறையாத மதிப்பும் மரியாதையும் பெற்றவர், இவ்வாறு சொன்னபோது, சீதையின் முக பாவத்தில் ஏதும் மாற்றமில்லை. அவள் கணவனின் முகக் குறிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சீர பரிக்ரஹ நிமித்த வசிஷ்ட கோபம் என்ற முப்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  38(115)  ஜனாக்ரோசம்  (ஜனங்களின் ஆவேசம்)

இவ்வளவு பேர் அவளைத் தாங்க இருக்கும்பொழுது, அனாதை போல சீதை மரவுரியை அணிய வேண்டி வந்துள்ளதே என்று ஜனங்கள் பலவிதமாக ஆவேசம் அடைந்தனர். தசரத ராஜாவை, -தி4க்- -தி4க்- என்று சிலர் திட்டினர். இவர்களுடைய இந்த செய்கையால், அரசன் இன்னும் அதிகமாக கலக்கமடைந்தான். தர்மத்திலோ, புகழிலோ, தான் உயிர் வாழ்வதிலும் கூட சிரத்தையை இழந்தான். இக்ஷ்வாகு வம்சத்து ராஜா, தன் மனைவி கைகேயியைப் பார்த்து, உஷ்ணமாக பெருமூச்சு விட்டபடி சொன்னான். கைகேயி, குசம் என்ற புல்லால் ஆன இந்த ஆடையுடன் சீதை வனம் போக வேண்டாம். சுகுமாரி, இதுவரை சுக, போகங்களிலேயே வளர்ந்த குழந்தை. என் குரு சொன்னது போல இவள் வனவாசத்திற்கு ஏற்றவள் அல்லள். என் குரு நாதர் சொன்னது மிகவும் சரியானதே. ராஜாதி ராஜன் மகள், தபஸ்வினியாக வனம் செல்ல யாருக்கு என்ன அபராதம் செய்தாள்? இவளை மரவுரி தரித்து, ஜனங்கள் மத்தியில் சன்யாசினி போல நிற்க வைத்து விட்டாயே. இது நான் கொடுத்த வாக்கில் இல்லை. நான் அது போல பிரதிக்ஞை செய்யவும் இல்லை. மரவுரியைத் தவிர்த்து,  நல்ல ஆடைகளை ஜனக நந்தினிக்கு கொடு. அவள் ஆடையாபரணங்களுடன் சௌக்யமாக வனம் செல்லட்டும். நான் வாழவே தகுதியற்றவன். இப்படி ஒரு அபத்தமான பிரதிக்ஞையை முறைப் படி வேறு செய்திருக்கிறேனே. உனக்கு குழந்தை பருவத்திலேயே இது கை வந்த கலை. அதனால் தான் மூங்கில் தன் புஷ்பங்களையே எரிப்பது போல  என்னை வதைக்கிறாய். ராமன் உனக்கு என்ன குற்றம் செய்தான்? அவனிடம் உனக்கு விரோதம் என்றாலும், வைதேஹி என்ன செய்தாள்? பெண் மான் போன்ற அலையும் கண்களையுடையவள், ம்ருதுவான சுபாவம் உள்ளவள், சாது, உனக்கு என்ன அபகாரம் செய்தாள்? கைகேயி, அவள் ஜனக ராஜாவின் மகள். நினைவிருக்கட்டும். பாபியே, ராமனை வனத்துக்கு அனுப்புகிறாயே, அது போதாதா? ஏன் இன்னும் அல்பமாக நீ செய்த பாதகங்கள் போதாது என்பது போல மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே போகிறாய். நீ சொல்வதைக் கேட்டு, நான் பிரதிக்ஞை செய்தது, இன்று தனக்கு யுவராஜா அபிஷேகம் என்று வந்த ராமனிடம் சொன்னாயே, அதுவரை தான். அதற்கு மேல் வற்புறுத்தாதே. மைதிலியையும் மரவுரி தரித்தவளாக காண விரும்புகிறாயே,  என்று இவ்வாறு ராஜா புலம்பி, தன் சோகத்துக்கு வடிகால் கிடைக்காமல் திணறினார். இதே புத்ர சோகத்தால் பீடிக்கப் பட்டவராக, கஷ்டம் தாளாமல் கீழே விழுந்தார். இவ்வாறு தந்தையைக் கண்ட ராமன், வன வாசத்திற்குத் தயாராக கிளம்பியவன், வாய் பேச முடியாமல் அமர்ந்திருக்கும் தந்தையிடம் சொன்னான். தந்தையே, இதோ என் தாய் கௌசல்யா இருக்கிறாள். புகழ் வாய்ந்த ஸ்த்ரீ ரத்னம் இவள். வயது முதிர்ந்த நிலையிலும், சிறிதும் தன் கடமைகளில் குறை வைத்தவள் அல்ல. இன்னிலையிலும் அவள் உங்களைக் குற்றம் சொல்லவில்லை.  நானும் விட்டுச் சென்ற பின், சோக சாகரத்தில் மூழ்கி கிடப்பாள்.  புத்ர சோகம் இவளை அரித்து எடுக்காமல், நீங்கள் இவளை நல்ல முறையில், பாதுகாத்து  மரியாதையுடன் காப்பாற்ற வேண்டியவர் ஆவீர்.  என்னையே நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவள் இப்பொழுது உங்களுக்காக தபஸ்வினியாக வாழ வேண்டும். தந்தையே,  நான் வனம் சென்றபின், புத்திரனை விட்டு பிரிந்து வாழும் என் தாயை, நான் காட்டில் திரியும் பொழுது அதே வருத்தத்தில் யமலோகம் சென்று விடாதபடி பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ஜனாக்ரோசோ என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  39 (116) வனாகமனாப்ருச்சா (வனம் செல்ல விடை பெறுதல்)

முனி வேஷத்தில் இருந்த ராமனின் வார்த்தைகளைக் கேட்டு, மனைவிகள் சூழ இருந்த அரசன் கலங்கினான். ராகவனை நிமிர்ந்து பார்க்கவும் முடியாதவனாக தவித்தான். நேருக்கு நேர் பார்த்து பதில் சொல்ல முடியாதபடி  மனம் வருந்தினான். ஒரு முஹுர்த்த நேரம் நினைவே இல்லாதவனாக துக்கத்துடன் அழுதான். ராமனையே மனதில் வைத்துக் கொண்டு, பலவிதமாக சிந்தித்தான். நிச்சயம், எதோ ஒரு சமயம் நான் பல பேரை பிரித்திருக்கிறேன். அதன் பலன் தான் இப்பொழுது அனுபவிக்கிறேன். பிராணிகளை வதைத்தேனோ, அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறேன். இந்த கைகேயியிடம் அவஸ்தைப் படுவதை விட நான் ம்ருத்யுவை வரவேற்கிறேன். என் எதிரில் நெருப்பு உருவம் கொண்டது போல நிற்கிறாளே,  நல்ல உயர்ந்த வஸ்திரங்களைக் களைந்து என் மகன் முனிவர்கள் போல கரடு முரடான மரவுரியைத் தரிக்கச் செய்து விட்டாளே, இவ்வளவு பேர் இந்த ஒரு கைகேயி காரணமாக வருந்துகிறார்கள். சுய நலமே பெரிதாக நினைக்கும் இவளிடம் சேர்ந்து நான் இந்த பெரிய தவறை செய்து விட்டேனே என்று சொன்ன அரசன், கண்களில் நீர் நிறைந்து பார்வையை மறைக்க, ராமா என்று ஒரு முறை அழைத்தான். பின் எதுவும் பேச சக்தியற்றவனாக ஆனான்.  ஒரு முஹுர்த்த நேரத்தில் நினைவு திரும்பி, சுமந்திரனைப் பார்த்துக் கண்கள் இன்னமும் நிரம்பியிருக்க, சுமந்திரா, பட்டத்து யானை பூட்டிய ரதத்தையும், உயர் ஜாதி, குதிரைகளையும் கொண்டு வந்து இவனை ஜனபதங்களைத் தாண்டி விட்டு விட்டு வா. இதுதான் நல்ல குணமுடைய குணவான்களுக்கு கிடைக்கும் பலன் போலும். தாயும் தந்தையுமே, இப்படி ஒரு குணவானான புத்திரனை காட்டுக்கு அனுப்புகிறார்களே, என்றான். ராஜாவின் கட்டளைப் படி, சுமந்திரன் சீக்கிரம் சென்று அலங்கரிக்கப் பட்ட குதிரைகளுடன் கூடிய ரதத்தைக் கொண்டு வந்தான். பொன்னால் வேயப் பட்டிருந்த அந்த ரதத்தை சாரதி ராஜ குமாரனுக்காக கொண்டு வந்து வணங்கி நின்றவனாக, குதிரைகள் பூட்டிய ரதம் தயாராகி விட்டது என்றான். தசரதன் உடனே, பொக்கிஷ விஷயங்களை கவனித்துக் கொண்டிருந்த தனாதிகாரியை அழைத்து, ஆடை ஆபரணங்களும், உயர்ந்த அணிகலன்களும், இவ்வளவு வருஷங்கள் வரும்படியாக  வைதேஹிக்காக சீக்கிரம் கொண்டு வா, என்று உத்தரவிட்டார். உடனே அவரும், பொக்கிஷ அறைக்குச் சென்று அவர் சொன்னபடியே, தேவையானவற்றைக் கொண்டு வந்து சீதைக்கு கொடுத்தார். நல்ல குலத்தில் பிறந்த அவள், மங்களமான அந்த ஆபரணங்களை தன் உடலில் அணிந்து கொண்டாள். அந்த விசித்திரமான அணிகலன்களை பூண்டு அந்த இடத்தையே பிரகாசமாக்கியது போல விளங்கினாள். சூரியன் உதிக்கும் பொழுது ஆகாயம் அதன் பிரபையால் அழகுறுவது போல இருந்தது. இதன் பின் சீதை தன் மாமனாரின் பாதங்க ளி ல் வணங்கி எழுந்தாள். அவளை அணைத்து, உச்சி முகர்ந்து ஆசிர்வதித்து மாமனாரான தசரதர் சொல்லுவார். உலகில் ஒரு வழக்கு உண்டு. பெண்கள் கணவன் நல்ல நிலைமையில் இருக்கும் வரை பிரியமாக இருந்து விட்டு, அவனுடைய கஷ்ட காலத்தில் அவனுக்கு உறு துனையாக இருக்க மாட்டார்கள் என்பதாக. அது அசத்யம். உண்மையல்ல என்று இப்பொழுது நான் உணருகிறேன். இது பெண்களின் சுபாவம் என்று சொல்வார்கள். கணவனிடம் சுகத்தை அனுபவித்து விட்டு, அல்பமான ஒரு ஆபத்து என்றவுடன், துக்கப் படுவார்கள். விலகி போய் விடுவார்கள். பொய்யே சீலமாக ஹ்ருதயம் இல்லாத கடின சித்தர்களாகவே பெண்கள் வர்ணிக்கப் படுகிறார்கள். யுவதிகள் க்ஷண சித்தர்கள். குலமோ, வித்தையோ, கொடுத்தையோ, சேர்த்து வைக்கப் பட்டதையோ பெண்ணின் மனதை மகிழ்விக்கப் போதுமானதல்ல. ஒரு சமயம், போல மற்றொரு சமயம் இருக்க மாட்டார்கள். சாத்4வீ எனும் நல்ல குணமுடைய பெண்களானால், தன் குலப் பெருமையை நிலை நாட்டும் விதமாக, சத்யத்திலும், தர்மத்திலும் ஈ.டுபாடு கொண்ட  ஸ்த்ரீகளுக்கு கணவனே விசேஷமாக பூஜிக்கத் தகுந்தவன் ஆகிறான். அதனால் நீ, நாட்டை விட்டுத் துரத்தப் பட்ட என் மகனை அவமதித்து விடாதே. செல்வந்தனோ, செல்வத்தை இழந்தவனோ, கணவன் என்பதால் இவன் தான் உனக்கு தேவதைகளுக்கு சமமானவன். இந்த வார்த்தைகளின் பொருள் உணர்ந்து சீதை மாமனாரின் எதிரில் நின்று வணங்கியவளாக பதில் சொன்னாள். பெரியவரான தாங்கள் சொன்னபடி எல்லாவற்றையும் செய்கிறேன். கட்டளையாக ஏற்றுக் கொள்கிறேன். கணவனை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் அறிவேன். பலர் சொல்லியும் கேட்டு இருக்கிறேன். அசத்தான சிலருடன் என்னையும் சேர்த்து எண்ணாதீர்கள். தர்மத்தை விட்டு நான் விலக மாட்டேன். சந்திரனிடமிருந்து ஒளி  விலகாதது போல. தந்திகள் இல்லாத வீணையை வாசிக்க இயலாது. சக்கரம் இல்லாத ரதம் தெருவில் ஓட முடியாது. அது போல நூறு குழந்தைகள் இருந்தாலும் பதியில்லாமல் பெண் சுகத்தை அடைய மாட்டாள். தந்தை தருவது ஓரளவு என்றால், தாய் தருவதும் ஓரளவே. மகனிடமும் ஓரளவே எதிர் பார்க்கலாம். அளவில்லாமல் தருபவன் கணவன் மட்டுமே. அவனை ஏன் பூஜிக்கக் கூடாது?  நல்ல கேள்வி ஞானமும், தர்மத்தை அறிந்தவளும், உயர் குலத்தில் பிறந்தவளுமான சீதை பெரியவரே, பெண்களுக்கு கணவன் தான் தெய்வம், இதில் ஏன் சந்தேகப் படுகிறீர்கள் என்றாள். அவள் வார்த்தை மனத்தை தொட, மகிழ்ச்சியடைந்த கௌசல்யா,  துக்கமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு அவஸ்தையில் கண்களில் நீர் பெருக நின்றாள். மற்ற  பெண்கள் மத்தியிலும் பெரு மதிப்பு பெற்றிருந்த அவளை காலில் விழுந்து வணங்கி ராமரும் சொன்னார். தாயே, அதிகமாக வருந்தாதே, வருத்திக் கொள்ளாதே. உன் துக்கத்தில் என் தந்தையை மறந்து விடாதே. வனவாசம் சீக்கிரமே முடிந்து விடும். நீ தூங்கி எழுந்திருப்பதற்குள், ஒன்பது வருஷங்களும் ஐந்துமாக வருஷங்களை ஓட்டி விட்டு, என் சுற்றார், உற்றார் சூழ, உன்னை வந்து பார்ப்பேன்.   ஜனனியான தன் தாயாரிடம் இவ்வாறு வணங்கி விடை பெற்றபின், முன்னூற்று ஐம்பது பேரிடமும், தாயார் ஸ்தானத்தில் இருந்தவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டார். அவர்களும் வருத்தத்துடன் நின்றிருக்க, ராமர் சொன்னார். – கூடவே இருந்த உரிமையாலும், தெரியாமலும் ஏதாவது சொல்லியிருந்தாலும், பொருட்படுத்தாமல் எனக்கு விடை கொடுங்கள் – ராகவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஏக காலத்தில் எல்லோருமாக ஏதோ சொல்ல க்ரௌஞ்ச பக்ஷிகள், ஏக காலத்தில் கூக்குரல் இட்டது போல இருந்தது. மனிதர்களுக்கு இந்திரன் போன்ற தலைவனான தசரத ராஜாவின் மனைவிகள், ராமனுக்கு ஆசிர்வாதம் செய்ய, முன்பு தசரத ராஜாவின் பவனம் எப்படி பணவம், முரசம் போன்ற வாத்யங்கள் முழங்க கோலாகலமாக இருந்ததோ, அந்த ராஜ பவனம் அழுது அரற்றும் பரிதாபமான ஓலங்கள் நிறைந்து துக்கத்தில் மூழ்கியதாக காட்சியளித்தது.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் வன கமனாப்ருச்சா என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 40(117) பௌராத்யனுவ்ரஜ்யா (ஊர் ஜனங்கள் உடன் வருதல்)

பிறகு ராமனும் லக்ஷ்மணனும், சீதையும் தசரத ராஜாவை வலம் வந்து வணங்கி, விடை பெற்றுக் கொண்டு ராம மாதாவிடம் வந்தனர். லக்ஷ்மணனும் கௌசல்யையை வணங்கி விட்டு சுமித்திரையிடம் வந்தான். வணங்கிய மகனை தூக்கி அணைத்து, உச்சி முகர்ந்து, கண்கள் குளமாக இருந்தாலும், மகனின் நன்மையை உத்தேசித்து தன்னை அடக்கிக் கொண்டு, அவனுக்கு ஒரு செய்தி சொன்னாள். –மகனே, நீ வனவாசத்திற்கு என்றே பிறந்தவன். சகோதரனுடன் போகும் பொழுது ராமனிடத்தில் தவறு எதுவும் செய்து விடாதே. உனக்கு சுற்றாரும், உற்றாரும் அவனே. கஷ்டத்தில் இருந்தாலும், சுக போகத்தில் திளைத்தாலும், ராமன் தான் உனக்கு கதி. இது உலகில் நல்லவர்களின் தர்மம். முன் பிறந்தோனை குருவாக எண்ணி, அவனுக்கு அடங்கி இருப்பது இந்த குலத்திற்கே உரிய பெருமை.  மிகப் பழமையான இந்த தர்மத்தை நீ கடை பிடிப்பதும் உசிதமே.  தானம், யாகங்களில் தீக்ஷை எடுத்துக் கொள்வது, போரில் உயிர் விடுவது இவை தான் நம் குல தர்மம். – பிரியமான ராகவன் கிளம்பத் தயாராக இருந்ததைக் கண்டு சுமித்ரா மகனை துரிதப் படுத்தினாள். – மகனே போய் வா. ராமனை தசரதனாக நினை. என்னை ஜனகாத்மஜாவான சீதையாக நினைத்துக் கொள். வனத்தையே அயோத்தியாக நினைப்பாய். சௌக்யமாக போய் வா, மகனே – என்று விடை கொடுத்தாள். இந்திரனுக்கு சாரதியாக மாதலி அமைந்தது போல, தசரத ராஜாவுக்கு சாரதியான சுமந்திரன் வினயமாக, ராமனிடம் வந்து, புகழ் வாய்ந்த ராஜ குமாரா, ரதத்தில் ஏறுவாய்.  நீ சொல்லும் இடத்தில் உன்னை சீக்கிரம்  கொண்டு சேர்க்கிறேன்.  என்றான். பதினான்கு வருஷங்கள் நீ காட்டில் வசித்தாக வேண்டும். அவைகளை வரிசைப் படுத்தி வைத்துக் கொள். தேவியினால் கட்டளையிடப் பட்டு இருக்கிறாய்.  சூரியனுடைய பிரகாசத்துக்கு இணையாக இருந்த அந்த ரதத்தில் மகிழ்ச்சியுடன் சீதை ஏறி அமர்ந்தாள். மாமனார் கொடுத்த ஆடை ஆபரணங்களை அணிந்து கணவனைப் பின் தொடர்ந்து செல்லும் மருமளுக்கு வனவாச காலத்தில் போதுமான அளவு இருக்கும்படி நிறைய கொடுத்திருந்தார். அதே போல ஆயுதங்களையும், சகோதரர்களுக்கு கவசங்களையும், ரதத்தின் மேல் வைத்து, தங்கத்தால் கவசமிடப் பட்டிருந்த அக்னி போல ஜ்வலித்துக் கொண்டிருந்த ரதத்தில் சகோதரர்கள் இருவரும் விரைவாகத் துள்ளி  குதித்து ஏறி அமர்ந்தனர். சீதையுடன் மூவரும் அமர்ந்த பின், திரும்பி பார்த்து சுமந்திரர், தயாராக இருந்த குதிரைகளை வாயு வேகத்தில் செல்லக் கூடியவைகளை  செலுத்தலானார்.  மகாரண்யம் கிளம்பி விட்ட ராமனைக் கண்டு நகரமே மயக்கத்தில் ஆழ்ந்தது.  மதம் பிடித்த யானையின் பிளிறல்களுக்கு சமமாக ஜனங்களின் கூக்குரலும் சேர்ந்து கொள்ள, குதிரைகளின் கனைப்பும் சேர்ந்து ஊரில் பெரும் ஓசை எழுந்தது. வெய்யிலில் வாடியவன் நீரைக் கண்டு ஓடுவது போல ஊரில் இருந்த சிறு குழந்தை முதல் வயதான மூத்தவர்கள் வரை எல்லோரும் ராமனை பின் தொடர்ந்து ஓடினர். பக்கங்களிலும், பின்னாலும், எதிரிலுமாக கண்களில் நீர் பெருக ஓடி வந்த ஜனங்கள், பெருங்குரலில் சொன்னார்கள். சாரதியே, குதிரைகளின் கடிவாளத்தை இழுத்துப் பிடி. மெதுவாக போ. ராமனுடைய முகத்தைப்  பார்க்கிறோம். இனி எங்களுக்கு தரிசனம் கிடைப்பது மிக துர்லபமே. ராம மாதாவின் ஹ்ருதயம் நிச்சயம் இரும்பால் ஆனது. தேவன் போல் தன் கர்பத்தில் பிறந்தவனை வனம் போவது கண்டும், பிளக்கவில்லையே. வைதேஹி புண்ணியம் செய்தவள். நிழல் போல கணவனை விடாமல் தொடர்ந்து செல்கிறாள். தர்மத்தில் திளைத்தவள். மேரு மலையை சூரிய பிரகாசம் விடாதது போல, இவள் கணவனை விடாமல் தொடர்ந்து செல்கிறாள். ஆகா, லக்ஷ்மணன் பாக்கியம் செய்தவன்.  பிரியமாக பேசும் ராமனுடன் உடன் செல்கிறான். அவனுக்கு பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்றான். லக்ஷ்மணா, இது உனக்கு பெரிய சித்தி. உன் மகத்தான முன்னேற்றத்திற்கு முதல் படி. இதுவே உன்னை சுவர்கத்திற்கு அழைத்துச் செல்லும் வழி. ஏன் என்றால், நீ ராமனை அனுசரித்து கூடவே செல்கிறாய். இவ்வாறு சொன்னவர்கள், வடியும் கண்ணீரைத் தடுத்து நிறுத்த இயலாமல், தங்களுக்கு பிரியமான இக்ஷ்வாகு நந்தனன் போகும் பொழுது பின்னாலேயே சென்றனர். இங்கு, அரசன் பத்னிகள் சூழ, தீனர்களாக அவர்களும் அழுது புலம்பிக் கொண்டிருக்க, ராமனை பார்க்கிறேன் என்று அறையை விட்டு வெளியே வந்தான். பெரிய யானை கட்டப்பட்டு கிடக்கும் பொழுது, மற்ற சிறிய யானைகள் சூழ்ந்து கொண்டு பிளிருவது போல, தன் முன்னால் பெண்கள் ஓ வென்று குரல் எடுத்து அழுவதைக் கண்டான். காகுத்ஸன், ராஜாவான தசரதன், இப்பொழுது தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்தவன், ஸ்தம்பித்து நின்று விட்டான்.  காலம் வரும் பொழுது பூரண சந்திரனும் கிரஹங்களால் மூமூடப் படுவது போல, நின்றான்.  நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்த ஆத்மாவான ராமன், சுமந்திரரைப் பார்த்து சீக்கிரம் போ என்று துரிதப் படுத்தினான். சுமந்திரனை ராமன் யாஹி, யாஹி,  போ, போ என்று சொல்லவும், ஜனங்கள், திஷ்ட, திஷ்ட, நில், நில் என்று  தடுக்கவும், இரண்டையும் செய்ய முடியாதவனாக சுமந்திரர் வழியில் நின்றார். ஊர் ஜனங்கள் கண்ணீருடன் உடன் நடக்க, ராமன் செல்லும் பொழுது கீழே விழுந்தவர்கள், பூமியின் மண்ணை மறைத்தார்கள். அழுது, கண்ணீர் பெருக, ஹா, ஹா என்று ஓலமிட்டுக் கொண்டு ராகவனின் புறப்பாடு நகரத்தவர்களுக்கு பெரும் துக்கத்தைத் தருவதாக இருந்தது.  இப்படி ஊர் ஜனங்கள் வருந்துவதைக் கண்டு தசரத ராஜா வெட்டிய மரம் போல சாய்ந்தான். ராமரின் பின்னால் கல கல சப்தம் உண்டாயிற்று. மகாராஜா மிகவும் துக்கத்துடன் வருந்துவதைக் கண்டு சிலர் ராமா, என்று அலற, சிலர் ராம மாதா என்று குரல் கொடுக்க, அந்த:புரம் அல்லோல கல்லோலப் பட்டது. ராமனோ, வருத்தத்தினால் புத்தி கலங்கிய அரசனும், தாயாரும் பின் தொடர்ந்து வருவதைப் பார்த்தும்,  தாய்மார்கள் குழந்தையை கயிற்றால் கட்டி வைப்பது போல, தர்ம பாசத்தால் கட்டுண்டவன், செய்வதறியாது திகைத்தான்.  நல்ல வாகனங்களில் செல்லும் தகுதி பெற்றவர்கள், நடந்து வருகிறார்கள். பலவிதமான சுகங்களுக்கு அருகதை பெற்றவர்கள், துக்கத்தையே அறியாதவர்கள், துக்கப் படுவதை கண்டு சகிக்க மாட்டாமல் சாரதியைப் பார்த்து யாஹி, யாஹி, போ என்று கட்டளையிட்டான். கொட்டிலை நோக்கி ஓடி வரும் கன்றைப் பார்த்து வாத்சல்யம் மிகுந்த தாய் பசு கன்றை நோக்கி ஓடிவருவது போல ராம மாதா ஓடி  வந்தாள். கௌசல்யை அழுது கொண்டே, ஹா ராமா, லக்ஷ்மணா, ஹா சீதே, என்று அரற்றிக் கொண்டே ரதத்தின் பின் தொடர்ந்து ஓடி வருவதை திரும்பிப் பார்த்தான்  ராமன். ராஜா தசரதர் திஷ்ட, நில் என்று கத்தினார். யாஹி, போ, என்று ராமன் சொன்னான். சக்கரத்தின் இடையில் அகப்பட்டுக் கொண்டது போல சுமந்திரன் திணறினான். நாளைத் திட்டினாலும், எனக்கு கேட்கவில்லை என்று சொல்லிக் கொள். இந்த துக்கத்தை நீடித்துக் கொண்டே போவதும் பாபம் என்று ராமன் சுமந்திரனிடம் சொல்லவும், 

ஜனங்களிடம் சொல்லி விட்டு நடந்து கொண்டிருந்த குதிரைகளைத் தட்டிக் கொடுத்து  வேகமாக போகச் செய்தான். சில ஜனங்கள் ராமனை வலம் வந்து திரும்பி சென்றனர். மனதாலும், கண்ணிர் பெருக்காலும் அவனை பிரிந்து செல்ல முடியாதவர்கள் ஆனார்கள். திரும்பி வர வேண்டும் என்று விரும்பும் உறவினரை வெகு தூரம் அனுயாத்திரை செய்யக் கூடாது என்று மந்திரிகள் அரசனிடம் சொன்னார்கள். அவர்களுடைய ஏற்கத் தகுந்த அறிவுரையை ஏற்று, உடல் வியர்வையால் தெப்பமாக, பார்க்கவே கஷ்டமாக இருந்த வருத்தம் தோய்ந்த முகத்தினனாக, தன் மனைவி மார்களுடன் தசரத ராஜா, மகனை பார்த்தவாறே நின்று விட்டார். 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌராத்யனுவ்ரஜ்யா என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

விடாமல் தொடர்ந்து செல்கிறாள். தர்மத்தில் திளைத்தவள். மேரு மலையை சூரிய பிரகாசம் விடாதது போல, இவள் கணவனை விடாமல் தொடர்ந்து செல்கிறாள். ஆகா, லக்ஷ்மணன் பாக்கியம் செய்தவன்.  பிரியமாக பேசும் ராமனுடன் உடன் செல்கிறான். அவனுக்கு பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்றான். லக்ஷ்மணா, இது உனக்கு பெரிய சித்தி. உன் மகத்தான முன்னேற்றத்திற்கு முதல் படி. இதுவே உன்னை சுவர்கத்திற்கு அழைத்துச் செல்லும் வழி. ஏன் என்றால், நீ ராமனை அனுசரித்து கூடவே செல்கிறாய். இவ்வாறு சொன்னவர்கள், வடியும் கண்ணீரைத் தடுத்து நிறுத்த இயலாமல், தங்களுக்கு பிரியமான இக்ஷ்வாகு நந்தனன் போகும் பொழுது பின்னாலேயே சென்றனர். இங்கு, அரசன் பத்னிகள் சூழ, தீனர்களாக அவர்களும் அழுது புலம்பிக் கொண்டிருக்க, ராமனை பார்க்கிறேன் என்று அறையை விட்டு வெளியே வந்தான். பெரிய யானை கட்டப்பட்டு கிடக்கும் பொழுது, மற்ற சிறிய யானைகள் சூழ்ந்து கொண்டு பிளிருவது போல, தன் முன்னால் பெண்கள் ஓ வென்று குரல் எடுத்து அழுவதைக் கண்டான். காகுத்ஸன், ராஜாவான தசரதன், இப்பொழுது தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்தவன், ஸ்தம்பித்து நின்று விட்டான்.  காலம் வரும் பொழுது பூரண சந்திரனும் கிரஹங்களால் மூமூடப் படுவது போல, நின்றான்.  நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்த ஆத்மாவான ராமன், சுமந்திரரைப் பார்த்து சீக்கிரம் போ என்று துரிதப் படுத்தினான். சுமந்திரனை ராமன் யாஹி, யாஹி,  போ, போ என்று சொல்லவும், ஜனங்கள், திஷ்ட, திஷ்ட, நில், நில் என்று  தடுக்கவும், இரண்டையும் செய்ய முடியாதவனாக சுமந்திரர் வழியில் நின்றார். ஊர் ஜனங்கள் கண்ணீருடன் உடன் நடக்க, ராமன் செல்லும் பொழுது கீழே விழுந்தவர்கள், பூமியின் மண்ணை மறைத்தார்கள். அழுது, கண்ணீர் பெருக, ஹா, ஹா என்று ஓலமிட்டுக் கொண்டு ராகவனின் புறப்பாடு நகரத்தவர்களுக்கு பெரும் துக்கத்தைத் தருவதாக இருந்தது.  இப்படி ஊர் ஜனங்கள் வருந்துவதைக் கண்டு தசரத ராஜா வெட்டிய மரம் போல சாய்ந்தான். ராமரின் பின்னால் கல கல சப்தம் உண்டாயிற்று. மகாராஜா மிகவும் துக்கத்துடன் வருந்துவதைக் கண்டு சிலர் ராமா, என்று அலற, சிலர் ராம மாதா என்று குரல் கொடுக்க, அந்த:புரம் அல்லோல கல்லோலப் பட்டது. ராமனோ, வருத்தத்தினால் புத்தி கலங்கிய அரசனும், தாயாரும் பின் தொடர்ந்து வருவதைப் பார்த்தும்,  தாய்மார்கள் குழந்தையை கயிற்றால் கட்டி வைப்பது போல, தர்ம பாசத்தால் கட்டுண்டவன், செய்வதறியாது திகைத்தான்.  நல்ல வாகனங்களில் செல்லும் தகுதி பெற்றவர்கள், நடந்து வருகிறார்கள். பலவிதமான சுகங்களுக்கு அருகதை பெற்றவர்கள், துக்கத்தையே அறியாதவர்கள், துக்கப் படுவதை கண்டு சகிக்க மாட்டாமல் சாரதியைப் பார்த்து யாஹி, யாஹி, போ என்று கட்டளையிட்டான். கொட்டிலை நோக்கி ஓடி வரும் கன்றைப் பார்த்து வாத்சல்யம் மிகுந்த தாய் பசு கன்றை நோக்கி ஓடிவருவது போல ராம மாதா ஓடி  வந்தாள். கௌசல்யை அழுது கொண்டே, ஹா ராமா, லக்ஷ்மணா, ஹா சீதே, என்று அரற்றிக் கொண்டே ரதத்தின் பின் தொடர்ந்து ஓடி வருவதை திரும்பிப் பார்த்தான்  ராமன். ராஜா தசரதர் திஷ்ட, நில் என்று கத்தினார். யாஹி, போ, என்று ராமன் சொன்னான். சக்கரத்தின் இடையில் அகப்பட்டுக் கொண்டது போல சுமந்திரன் திணறினான். நாளைத் திட்டினாலும், எனக்கு கேட்கவில்லை என்று சொல்லிக் கொள். இந்த துக்கத்தை நீடித்துக் கொண்டே போவதும் பாபம் என்று ராமன் சுமந்திரனிடம் சொல்லவும்,

ஜனங்களிடம் சொல்லி விட்டு நடந்து கொண்டிருந்த குதிரைகளைத் தட்டிக் கொடுத்து  வேகமாக போகச் செய்தான். சில ஜனங்கள் ராமனை வலம் வந்து திரும்பி சென்றனர். மனதாலும், கண்ணிர் பெருக்காலும் அவனை பிரிந்து செல்ல முடியாதவர்கள் ஆனார்கள். திரும்பி வர வேண்டும் என்று விரும்பும் உறவினரை வெகு தூரம் அனுயாத்திரை செய்யக் கூடாது என்று மந்திரிகள் அரசனிடம் சொன்னார்கள். அவர்களுடைய ஏற்கத் தகுந்த அறிவுரையை ஏற்று, உடல் வியர்வையால் தெப்பமாக, பார்க்கவே கஷ்டமாக இருந்த வருத்தம் தோய்ந்த முகத்தினனாக, தன் மனைவி மார்களுடன் தசரத ராஜா, மகனை பார்த்தவாறே நின்று விட்டார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌராத்யனுவ்ரஜ்யா என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

From → Uncategorized

2 பின்னூட்டங்கள்
  1. vksudhar's avatar
  2. Vignesh Kannan's avatar
    Vignesh Kannan permalink

    Dear Sir,

    The content of ஸ்ரீமத் ராமாயணம் அயோத்யா காண்டம் 20 – 40 are not full. Kindly please give us the all the sargas content from 20 to 40. Thank you…

பின்னூட்டமொன்றை இடுக