ஸ்ரீமத் ராமாயணம் அயோத்யா காண்டம் 1 – 19
ஸ்ரீமத் ராமாயணம்
அயோத்யா காண்டம்
அத்தியாயம் 1 (78) ராம அபிஷேக வ்யவஸாய: (ராமனின் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள்.) 6
அத்தியாயம் 2 (79) பரிஷத3னுமோத3னம் (சபையினர் அனுமதித்தல்) 9
அத்தியாயம் 3 (80) புத்ரானு ஸாஸனம் (மகனுக்கு அறிவுரை) 11
அத்தியாயம் 4 (81) மாத்ராசீ பரிக்ரஹ (தாயின் ஆசிர்வதம் பெறுதல்) 14
அத்தியாயம் 5 (82) வ்ரத சர்யா விதானம் (விரதங்களை ஏற்று நடத்துதல்) 16
அத்தியாயம் 6 (83) பௌரோத்ஸேக|| (ஊர் ஜனங்களின் மகிழ்ச்சி) 17
அத்தியாயம் 7 மந்த2ரா பரிதே3வனம்… 19
அத்தியாயம் 8 (85) மந்தரோபஜாப: (மந்தரையின் தவறான அறிவுரை) 21
அத்தியாயம் 9 ராம ப்ரவாசனோபாய சிந்தா (ராமனை நாடு கடத்தும் யோசனை) 23
அத்தியாயம் 10 (87) கைகேயி அனுனய|| (கைகேயியை சம்மதிக்கச் செய்தல்) 26
அத்தியாயம் 11 (88) வரத்3வய நிர்ப4ந்த||(தனக்கு தந்த இரண்டு வரங்களையும் தரும்படி நிர்பந்தித்தல்) 28
அத்தியாயம் 12 (89) கைகேயி நிவர்த்தன பிரயாஸ|| (கைகேயியை திருத்த முயற்சி) 30
அத்தியாயம் 13 (90) தசரத விலாப (தசரதன் புலம்புதல்) 35
அத்தியாயம் 14 (91) கைகேயி உபாலம்ப: (கைகேயி நிந்தனை செய்தல்) 37
அத்தியாயம் 15 (92) சுமந்திர ப்ரேஷணம் (சுமந்திரரை அனுப்புதல்) 40
அத்தியாயம் 16 (93) ராம ப்ரஸ்தா2னம் ( ராமர் கிளம்புதல்) 42
அத்தியாயம் 17 (94) ராமாக3மனம் (ராமன் வருகை) 44
அத்தியாயம் 18 (95) வனவாஸ நிதேஸ: (வனம் செல்ல ஆணையிடுதல்) 45
அத்தியாயம் 19 (96) ராம ப்ரதிக்ஞை (ராமன் சத்தியம் செய்தல்) 48
அத்தியாயம் 20 (97) கௌசல்யாக்ரந்த: (கௌசல்யை புலம்புதல்) 50
அத்தியாயம் 21 (98) கௌசல்யா லக்ஷ்மண ப்ரதிபோ3த4னம். (கௌசல்யை, லக்ஷ்மணன் இவர்களுக்கு விளக்கிச் சொல்லுதல்) 52
அத்தியாயம் 22 (99) தை3வ ப்ராப3ல்யம்… 55
அத்தியாயாம் 23 (100) லக்ஷ்மணக்ரோத4: (லக்ஷ்மணணின் கோபம்) 57
அத்தியாயம் 24 (101) கௌசல்யார்த்தி சமாஸ்வாசனம் (வருந்தும் கௌசல்யையை சமாதானம் செய்தல்) 59
அத்தியாயம் 25 (102) மாத்ரு ஸ்வஸ்த்யயனம் (தாயார் ஆசிர்வதித்தல்) 61
அத்தியாயம் 26 சீதா ப்ரத்யவஸ்தா2பனம்… 64
அத்தியாயம் 27 பதிவ்ரதாத்யவசாயோ (பதிவிரதம்-இதன் உயர்வு) 65
அத்தியாயம் 28 (105) வன துக்க ப்ரதி போதனம் (வனத்தின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லுதல்) 67
அத்தியாயம் 29 (106) வனானுக3மன யாஞ்சா நிர்ப3ந்த4:(வனம் செல்ல தானும் வருவதாக நிர்பந்தித்தல்) 68
அத்தியாயம் 30(108) வனகமனாப்யுபபத்தி: (தொடர்ந்து வனம் செல்ல முனைதல்) 69
அத்தியாயம் 31(109) லக்ஷ்மண வனானுகமனாக்ஞா….. 71
அத்தியாயம் 32 (109) வித்த விஸ்ரானனம் (செல்வத்தை தானம் செய்தல்) 73
அத்தியாயம் 33 (110) பௌர வாக்யம் (ஊர் ஜனங்களின் பேச்சு) 75
அத்தியாயம் 34 தசரத சமாஸ்வாதனம் (தசரதரை சமாதானம் செய்தல்) 77
அத்தியாயம் 35 சுமந்திர கர்ஹணம். (சுமந்திரர் நிந்தித்தல்) 80
அத்தியாயம் 36 (113) சித்3தா4ர்த்த ப்ரதி போதனம்(சித்தார்த்தர் என்ற முனிவர் நியாயத்தைச் சொல்லுதல்) 81
அத்தியாயம் 37 (114) சீர பரிக்ரஹ நிமித்த வசிஷ்ட கோப:(மரவுரியை அணிந்து கொள்ள வற்புத்தவும், வசிஷ்டர் கோபித்தல்) 83
அத்தியாயம் 38(115) ஜனாக்ரோசம் (ஜனங்களின் ஆவேசம்) 85
அத்தியாயம் 39 (116) வனாகமனாப்ருச்சா (வனம் செல்ல விடை பெறுதல்) 86
அத்தியாயம் 40(117) பௌராத்யனுவ்ரஜ்யா (ஊர் ஜனங்கள் உடன் வருதல்) 88
அத்தியாயம் 41 (118) நகர சம்க்ஷோப: (நகரத்தாரின் மனக் குமுறல்) 90
அத்தியாயம் 42 (119) தசரதாக்ரந்த: (தசரதன் அழுகை) 92
அத்தியாயம் 43 (120) கௌசல்யா பரிதேவனம் (கௌசல்யா வருந்துதல்) 93
அத்தியாயம் 44 (121) சுமித்ராஸ்வாசனம் (சுமித்திரை சமாதானம் செய்தல்) 94
அத்தியாயம் 45 பௌர யாசனம் (ஊர் ஜனங்களின் வேண்டு கோள்.) 96
அத்தியாயம் 46 (123) பௌர மோஹனம் (ஊர் ஜனங்களின் கவனத்தை திசை திருப்புதல்) 98
அத்தியாயம் 47 (124) பௌர நிர்வ்ருத்தி (ஊர் ஜனங்கள் திரும்புதல்) 99
அத்தியாயம் 48(125) பௌராங்கனா விலாப: (ஊர் பெண்களின் புலம்பல்) 100
அத்தியாயம் 49 (126) ஜனபதாக்ரோச: (ஊர் ஜனங்களின் புலம்பல்) 102
அத்தியாயம் 50 (127) குஹ சங்கமம் (குகனை சந்தித்தல்) 103
அத்தியாயம் 51(128) குஹ லக்ஷ்மண ஜாக3ரணம்… 106
அத்தியாயம் 52 (129) கங்கா தரணம் (கங்கையை கடத்தல்) 107
அத்தியாயம் 53 (130) ராம சம்க்ஷோப4: (ராமனின் மன வருத்தம்) 111
அத்தியாயம் 54 பரத்3வாஜாஸ்ரம க3மனம் (பரத்வாஜரின் ஆஸ்ரமத்தை அடைதல்) 113
அத்தியாயம் 55 (132) யமுனா தரணம் (யமுனையைக் கடத்தல்) 115
அத்தியாயம் 56(133) சித்ர கூட நிவாஸ: (சித்ர கூடத்தில் வசித்தல்) 117
அத்தியாயம் 57(134) சுமந்த்ரோபாவர்த்தனம் (சுமந்திரர் திரும்பி வருதல்) 119
அத்தியாயம் 58 (135) ராம சந்தேசாக்யானம் (ராமனது செய்தியை விவரித்தல்) 120
அத்தியாயம் 59 (136) தசரத விலாப: (தசரதனின் புலம்பல்) 122
அத்தியாயம் 60(137) கௌசல்யா சமாஸ்வாசனம். 124
அத்தியாயம் 61(138) கௌசல்யோபாலம்ப: (கௌசல்யையின் புலம்பல்). 125
அத்தியாயம் 62(139) கௌசல்யா ப்ரசாதனம் (கௌசல்யையை சமாதானப் படுத்துதல்) 126
அத்தியாயம் 63(140) ரிஷி குமாரவதா4க்2யானம் (ரிஷி குமரனை கொன்ற வரலாறு) 127
அத்தியாயம் 64 (141) தசரத2 தி3ஷ்டாந்த: ( தசரத மரணம் ) 130
அத்தியாயம் 65 (142) அந்த:புராக்ரந்த: (அரசனின் மனைவி, மக்கள் வருந்துதல்) 133
அத்தியாயம் 66 (143) தைல த்3ரோண்யத்சயனம்(எண்ணெய் நிறைந்த பாத்திரத்தில் உடலை பத்திரப் படுத்துதல்) 134
அத்தியாயம் 67 (143) அராஜக து3ரவஸ்தா2 வர்ணனம் (அரசன் இல்லாமை-அதன் காரணமாக வரக்கூடிய துன்பங்கள்) 135
அத்தியாயம் 68 145) தூ3த:ப்ரேஷணம் (தூதர்களை அனுப்புதல்) 137
அத்தியாயம் 69 (146) ப4ரத து3ஸ்வப்ன: (பரதன் கண்ட கெட்ட கனவு) 138
அத்தியாயம் 70 (147) ப4ரத ப்ரஸ்தா2னம் (பரதன் புறப்படுதல்) 139
அத்தியாயம் 71 (148) அயோத்யா கமனம் (அயோத்யா வருகை) 140
அத்தியாயம் 72 (149) பரத சந்தாப: (பரதனின் பரிதவிப்பு) 143
அத்தியாயம் 73 (150) கைகேயி விகர்ஷணம் (கைகேயியை குறை சொல்லுதல்) 145
அத்தியாயம் 74 (151) கைகேயி ஆக்ரோச: (கைகேயியின் ஆக்ரோஷம்) 146
அத்தியாயம் 75 (152) பரத சபதம் (பரதன் சூளுரைத்தல்) 148
அத்தியாயம் 76 (153) தசரத ஔர்த்3வ தே3ஹிகம் (தசரதரின் இறுதிக் கடன்கள்) 151
அத்தியாயம் 77 (155) பரத சத்ருக்ன விலாப: (பரதனும், சத்ருக்னனும் வருந்துதல்) 152
அத்தியாயம் 78 (155) குப்3ஜா விக்ஷேப: (குப்ஜையை தண்டித்தல்) 153
அத்தியாயம் 79 (156) சசிவ ப்ரார்த்த2னா ப்ரதிஷேத4:.. 154
அத்தியாயம் 80 (157) மார்க சம்ஸ்கார: (பாதை போடுதல்) 155
அத்தியாயம் 81 (158) சபா4ஸ்தாபனம் (சபையை கூட்டுதல்) 156
அத்தியாயம் 82(159) சேனா ப்ரஸ்தாபனம் (சேனையைக் கிளப்புதல்) 157
அத்தியாயம் 83 (160) ப4ரத வன ப்ரஸ்தா2னம் (பரதன் வனம் புறப்படுதல்) 159
அத்தியாயம் 84 (161) குகாக3மனம் (குகன் வருதல்) 160
அத்தியாயம் 85 (161) குஹ சமாகம: (குஹன் வந்து சந்தித்தல்) 161
அத்தியாயம் 86 (162) குக வாக்யம் (குகனின் மறுமொழி) 162
அத்தியாயம் 87 (164) ராம சயனாதி ப்ரச்ன: (ராமன் படுத்துறங்கிய இடம் முதலியவற்றை பரதன் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல்) 163
அத்தியாயம் 88 (165) சய்யானுவீக்ஷணம் (படுக்கையைக் காணுதல்) 164
அத்தியாயம் 89 (166) கங்கா தரணம் (கங்கை நதியைக் கடத்தல்) 166
அத்தியாயம் 90 (167) பரத்வாஜாஸ்ரம நிவாஸ: பரத்வாஜாஸ்ரமத்தில் வசித்தல்) 167
அத்தியாயம் 91 (168) பரத்வாஜாதித்யம் (பரத்வாஜர் செய்த விருந்து உபசாரம்) 168
அத்தியாயம் 92 (169) பரதவாஜாமந்த்ரணம் (பரத்வாஜரிடம் விடை பெறுதல்) 172
அத்தியாயம் 93 (170) சித்ரகூட வனப் ப்ரேக்ஷணம் (சித்ரக் கூட மலையைக் காணுதல்) 174
அத்தியாயம் 94 (171) சித்ரகூட வர்ணனை (சித்ரகூட மலையின் வர்ணனை) 175
அத்தியாயம் 95(172) மந்தா3கினி வர்ணனை……. 177
அத்தியாயம் 96 ( 173) லக்ஷ்மணக்ரோத4: (லக்ஷ்மணனின் கோபம்) 178
அத்தியாயம் 97 (174) பரத குண ப்ரசம்சா (பரதனின் குணத்தை மெச்சுதல்) 179
அத்தியாயம் 98 (175) ராமான்வேஷணம் (ராமனைத் தேடுதல்) 181
அத்தியாயம் 99 (176) ராம சமாக3ம: (ராமரை சந்தித்தல்) 182
அத்தியாயம் 100 (177) கச்சித் சர்க: (கேள்விகள்) 184
அத்தியாயம் 101 (178) பித்ரு தி3ஷ்டாந்த ஸ்ரவணம் (தந்தை மறைந்ததை சொல்லுதல்) 188
அத்தியாயம் 102 (179) நிவாப தானம் (நீர்க் கடன் செய்தல்) 189
அத்தியாயம் 103 (180) மாத்ரு தரிசனம் (தாய்மார்களை சந்தித்தல்) 191
அத்தியாயம் 104 (181) ராம ப4ரத சம்வாத3: (ராம, பரத, சம்பாஷனைகள்) 192
அத்தியாயம் 105 (182) ராம வாக்யம்… 194
அத்தியாயம் 106 (183) பரத வசனம் (பரதனின் பதில்) 196
அத்தியாயம் 107 (184) ராம ப்ரதி வசனம் (ராமனின் பதில்) 198
அத்தியாயம் 108 (185) ஜாபா3லி வாக்யம் (ஜாபாலி என்ற முனிவர் பேசுதல்) 199
அத்தியாயம் 109 (186) சத்ய ப்ரசம்ஸா (சத்யத்தின் உயர்வு ) 200
அத்தியாயம் 110 (187) இக்ஷ்வாகு வம்ச கீர்த்தனம் (இக்ஷ்வாகு வம்சத்தைப் பற்றி சொல்லுதல்) 202
அத்தியாயம் 111(188) ப4ரதானுசாஸனம் (பரதன் வாதம்) 204
அத்தியாயம் 112 (189) பாது3கா ப்ரதா3னம் (பாதுகையைத் தருதல்) 205
அத்தியாயம் 113 (190) பாது3கா க்3ரஹணம் (பாதுகையை ஏற்றுக் கொள்ளுதல்) 207
அத்தியாயம் 114 (191) அயோத்யா ப்ரவேச: (அயோத்தியில் நுழைதல்) 208
அத்தியாயம் 115 (192) நந்தி3க்3ராம வாச: (நந்திகிராமத்தில் வசித்தல்) 210
அத்தியாயம் 116 (193) க2ர விப்ரகரண கத2னம் (க2ர என்ற அரக்கனின் தொல்லைப் பற்றி சொல்லுதல்) 211
அத்தியாயம் 117 (194) சீதா பாதிவ்ரத்ய ப்ரசம்ஸா…… 212
அத்தியாயம் 118 (195) தி3வ்யாலங்கார க்3ரஹணம் (உயர்ந்த ஆபரணங்களை பெற்றுக் கொள்ளுதல்) 214
அத்தியாயம் 119 (196) தண்டகாரணய பிரவேச: (தண்ட காரண்யத்தில் நுழைதல்) 216
ஸ்ரீமத் ராமாயணத்தில் அயோத்யா காண்டம் நிறைவுற்றது. 217
அத்தியாயம் 1 (78) ராம அபிஷேக வ்யவஸாய: (ராமனின் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள்.)
மாமன் வீட்டிற்கு புறப்பட்ட பரதன், நித்ய சத்ருக்4னன் (எப்பொழுதும் சத்ருக்களை அழிப்பவன்) ஆக விளங்கிய தன் சகோதரன் சத்ருக்னனையும் உடன் அழைத்துச் சென்றான். மிகுந்த மரியாதையுடனும், உபசாரங்களுடன் அரச குமாரன் அங்கு வசித்து வந்தான். அஸ்வபதி என்ற பெயருடைய அவன் மாமனால் மிகுந்த புத்திர வாஞ்சையுடன் கொண்டாடப்பட்டாலும், தன் இஷ்டம் போல இருக்க முடிந்தாலும், வயதான தந்தையை அடிக்கடி நினைத்துக் கொள்வான். அதே போல தசரத ராஜாவும், அருகில் இல்லாத இந்த பிள்ளைகள் இருவரையும் அடிக்கடி நினைவு கூர்ந்தார். இந்த இருவரும் மகேந்திரனுக்கும், வருணனுக்கும் இணையானவர்கள் என்று சொல்லி மகிழ்வார். என் சரீரத்திலிருந்து வெளிப்பட்ட நான்கு கைகள் போன்றவர்கள் என் நான்கு பிள்ளைகளும் என்று சொல்வார். ஆயினும் ராமன் ஒரு படி உயர்ந்து நின்றான். உலகத்து ஜீவராசிகளுக்கு ப்ரும்மா போல, சிறந்த குணவானான ராமன், நல்ல தேஜஸ்வியாகவும், மனதை கவரும் இனிய இயல்பாலும் அதிக பிரியமானவன் ஆனான். ராவணனுடைய வதத்தை விரும்பிய தேவர்கள் வேண்டிக் கொண்டபடி, சனாதனனான விஷ்ணு அல்லவா மனித உருவில் அவதரித்திருக்கிறான்? இந்த மகனைப் பெற்றதால் கௌசல்யை போற்றப் பெற்றாள். இந்திரனைப் பெற்ற அதிதி எப்படி சிறந்த மகனைப் பெற்றவள் என்று பெருமையடைந்தாளோ, அதே போல பெருமை கௌசல்யையும் பெற்றாள். ராமனோ, வீர்யமும் நல்ல ரூபமும் இருந்தும் அசூயை இல்லாதவன். தசரதனுக்கு சமமான குணங்கள் உடையவன். அரசகுமாரன். பூமியில் உவமை என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவு குணமுள்ளவன். எப்பொழுதும் சாந்தமாக இருப்பான். ம்ருதுவாக பேசுவான். முதலில் பேசுபவன். கடினமாக யாராவது அவனிடம் பேச முயன்றாலும் பதில் சொல்ல மாட்டான். ஏதோ விதத்தில் செய்த சிறிதளவு உபகாரத்தையும் திருப்தியுடன் நினைவில் வைத்துக் கொள்பவன். ஆத்மவான், அதாவது பெருந்தன்மையும் தன்னம்பிக்கையும் ஒரு சேர படைத்தவன். மற்றவர்கள் தனக்கு செய்த அபகாரங்கள் நூற்றுக் கணக்கில் இருந்தாலும் மறந்து விடுவான். ஒழுக்கத்தில் சிறந்த பெரியவர்கள், சிறந்த அறிஞர்கள், வயதில் மூத்தவர்கள், நல்ல குணவான்கள், இவர்களிடம், அஸ்த்ர யோக விஷயங்களைப் பற்றியோ, மற்ற விஷயங்களையோ பேசிக் கொண்டிருப்பான். புத்திமான். இனிமையாக பேசுபவன். முதலில் பேசுபவன். ப்ரியமாக பேசுபவன். வீர்யவான். தன்னுடைய மகத்தான வீர்யத்தில் தானே ஆச்சர்யம் அடையாதவன். பொய் பேசவே மாட்டான். வித்வான், வயதானவர்களை மதித்து நடப்பவன். ப்ரஜைகளிடம் சுபாவமாகவே அன்பும், ஈ.டுபாடும் உடையவன். ப்ரஜைகளை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும் தன் கடமை என்று நினைப்பவன். கருணை உடையவன், கோபத்தை ஜயித்தவன். ப்ராம்மணர்களைப் பூஜிப்பவன். தீனர்களிடம் இரக்கம் உள்ளவன். தர்மம் அறிந்தவன். எப்பொழுதும் தன்னடக்கம் உடையவன். சுத்தமாக இருப்பவன். தன் குலத்திற்கேற்ற கொள்கையுடையவன். தன்னுடைய க்ஷத்திரிய தர்மத்தை வெகுவாக மதிப்பவன். தன் தர்மத்தை அனுஷ்டிப்பதால் உண்டான கீர்த்தியாலும், இந்த கீர்த்தியே ஸ்வர்கம் என்று எண்ணுபவன். ஸ்ரேயஸ் இல்லாத, நன்மை இல்லாத காரியங்களில் இவனுக்கு நாட்டமே கிடையாது. அனாவசியமான பயனற்ற விஷயங்களைப் பேசுவதில் ருசி கிடையாது. வாசஸ்பதி போல சரிக்கு சரி பதில் சொல்லும் சிறந்த பேச்சாளன். நோய் நொடியற்ற திட காத்திரமான சரீரம் உடைய இளைஞன். தேச காலம் அறிந்தவன். இது போன்ற குணங்களையுடைய ராஜ குமாரன், தன் குண விசேஷத்தால் அரசனுக்கு, வெளியே நடமாடும் தன் பிராணனே போல பிரியமானான்.
நல்ல விதமாக கல்வி கற்றுத் தேர்ந்தான். எல்லா அங்கங்களுடனும் வேதத்தை முழுமையாக பாராயணம் செய்தான். வில் அம்பு வித்தையில் தந்தையை விடச் சிறந்தவனானான். பரதனுக்கு முன் பிறந்தவன், கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் என்று மற்றவர் சொல்லும் படி இருந்தான். நல்லவன், நேர்மை சத்யம் இந்த குணங்களுக்கு இருப்பிடம் என்றும், நல்ல நினைவாற்றலும், ப்ரதிபா எனப்படும் பெருந்தன்மையுடையவன் என்றும் பெயர் பெற்றான். முதியவர்களளடம் வினயமாகவும், கல்வி கற்ற பிராம்மணர்களளடம் மரியாதையாகவும் நடந்து கொண்டான். அவர்களளடம் தர்மார்த்த காமங்களை விவாதித்து தெரிந்துகொண்டான். லௌகிகத்திலும் தேர்ந்தவன். சமயம் போல நடந்து கொண்டான். சரஸ்வதி கடாக்ஷம் பூர்ணமாக அவனுக்கு கிடைத்திருந்தது.
நெடிதுயர்ந்த ஆக்ருதி (உடலமைப்பு) மரியாதையை தோற்றுவித்தது. மந்திரிகளிடம் ரகஸியமாக விஷயம் தெரிந்து கொள்ள உதவியாளர்களை நியமித்து வைத்திருந்தான். மோகம், க்ரோதம், ஹர்ஷம் (சந்தோஷம்) த்யாகம், சங்க்ரஹம் (அடக்குதல்) இந்த குணங்களை சமயத்தில் வெளிப்படுத்தவும், அடக்கவும் அறிந்திருந்தான். ஸ்திரப்ரக்ஞன் – திடமான அறிவு உடையவன். தன் கொள்கைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டான். தவறான வார்த்தைகளே இவன் வாயிலிருந்து வராது. புகழ் மொழிகள் இவன் தலைக்கு ஏறுவதில்லை. தன்னுடையதும், பிறருடையதுமான குறை நிறைகளை துல்லியமாக உணர்ந்தவன். சாஸ்திர ஞானம் உள்ளவன், செய் நன்றி மறவாதவன். மனிதர்களை எடை போடுவதில் வல்லவன். கண்டிப்பதிலும், அனுக்ரஹம் செய்வதிலும் நியாயப் படி நடப்பவன். சத்யத்தைக் கடை பிடிப்பதிலும், நல்லவர்களை ஏற்றுக் கொள்வதிலும், விடுவதிலும், இடம், பொருள் அறிந்தவன். தண்டிப்பதிலும் அதே போல கண்டிப்பாக இருப்பவன். வருவாய்த் துறையில் உபாயங்களை உணர்ந்தவன். செலவினங்களை உணர்ந்து செய்பவன். சாஸ்திர சமூகங்களில் மேன்மையான ஸ்தானம் வகிப்பவன். பலவிதமான, வித்தியாசமான நீதி முறைகளையும் தெரிந்து வைத்திருப்பவன். சோம்பல் அற்றவன். அர்த்த தர்மங்களை கடை பிடித்து சுகமாக இருப்பவன். பொருளாதார கொள்கைகளை அறிந்தவர்களிடம் சீராக பதவிகளை பிரித்துக் கொடுத்து, தகுதி அறிந்து பதவிகளை கொடுத்து, தன் மேற் பார்வையில் வைத்துக் கொண்டான். குதிரைகள் யானைகள் இவை மேல் ஏறி சவாரி செய்யவும் , அவற்றை அடக்கவும் கற்றவன். அதனால் அதி ரதன் என்ற பெயருக்கும் தகுதியானவனே. தனுர் வேத முறைகளை கற்றுத் தேர்ந்து, தானே முன்னின்று சேனையை நடத்தி செல்லக் கூடியவன். அணி வகுத்து படைகளை போருக்கு ஆயத்தமாக்கவும் அறிந்திருந்தான். சுரர்களோ, அசுரர்களோ, அல்லது சேர்ந்தோ வந்து தாக்கினால் கூட யுத்தத்தில் அசைக்க முடியாத பலம் உள்ளவன். அசூயை இல்லாதவன். கோபத்தை வென்றவன், கர்வமோ, தற்பெருமையோ அண்ட முடியாதவன். எந்த ஒரு ஜீவ ராசியையும் அவமதிக்க மாட்டான். எந்த கொள்கையுமின்றி காலத்தின் போக்கில் போவது இவனிடம் கிடையாது. பிரஜைகளின் அன்புக்கு இந்த அரச குமாரன் பாத்திரமானது இந்த குணங்களால் தான் எனலாம். பூமா தேவிக்கு இணையான இவனுடைய பொறுமை மூன்று உலகிலும் பேசப் பட்டது. புத்தியில் ப்ருஹஸ்பதி போலவும், வீரத்தில் இந்திரன் போலவும் இருந்த இவனை தந்தை மிகவும் விரும்பியதில் வியப்பில்லை. ஜனங்களை கவர்ந்திழுக்கும் உயர்ந்த குணங்களையுடைய ராமன், சுயமாகவே கிரணங்களுடன் பிரகாசிக்கும் சூரியன் போலவே விளங்கினான். நன்னடத்தையும், பராக்ரமமும் இணைந்து விளங்கும் ராஜ குமாரனை லோக பாலன் எனப்படும் அளவு, தனக்கு நாதனாக வேண்டும் என்று பூமியும் விரும்பினாள். ஒப்புவமை இல்லாத தன் மகனைக் கண்டு தசரத ராஜா, சிந்தனை வயப்பட்டார். வயதான அந்த அரசரின் மனதில் ஒரு குதூகலமான எண்ணம் தோன்றியது. அன்பின் காரணமாக, தான் உயிருடன் இருக்கும் பொழுதே, இவனை அரசனாக்கிப் பார்க்க வேண்டும், அது முடியுமா என்று ஆசை மனதில் தோன்றியது. இவனை நினைக்கும் பொழுதே என் மனதில் பாசம் பொங்குகிறது. அரசு முடி தரித்தவனாக காண ஆசைப் பட்டதில் வியப்பில்லை. எல்லா உயிர்களிடமும் கருணை உடையவன். மேன் மேலும் அபிவிருத்தி செய்வதில் கருத்து உடையவன். என்னை விட பிரஜைகளுக்கு பிரியமானவன். கனத்த மேகங்கள் போல உலகத்தாருக்கு நன்மைகளை பொழிபவன். வீர்யத்தில் யமனையும் (தர்ம ராஜாவையும்) இந்திரனையும் ஒத்தவன். நல்ல புத்தி கூர்மையில், ப்ருகஸ்பதிக்கு சமமானவன். த்ருதி என்று சொல்லப்படும் அசையாத கொள்கையுடையவன். இதில் அசையாத மலை போன்றவன். (மஹீதரன் – மலை) என்னை விட பலவிதத்திலும் மேன்மை பொருந்தியவன். இந்த பூமியை முழுவதுமாக என் மகன் அடைந்து ஆளுவதை, இந்த வயதான காலத்தில் கண் குளிரக் கண்ட பின்னரே ஸ்வர்கம் செல்ல வேண்டும். இது போன்ற பல எண்ணங்கள் அரசன் மனதில் தோன்றின. காரணம், மற்ற அரசர்களிடம் காண முடியாத, அளவில்லாத சிறந்த குணங்களுடைய மகனைக் காணும் தோறும், வலுப் பெற்ற இந்த எண்ணத்தை, தன் மந்திரிகளிடமும், தகுதி படைத்த பெரியவர்களிடமும், சுபமான வாழ்த்துக்களைக் கூறும் தன் நலம் விரும்பிகளான ஊர் மக்களிடமும் சொல்லி, அவர்கள் அனுமதியும் பெற்றான். ராமனை யுவராஜாவாக நியமிப்பது என்று தசரத ராஜா முடிவெடுத்தார். இதற்கிடையில் தன் சரீரத்தில் நரையைக் கண்டார். மேதாவியான அரசன், ஆகாயத்திலும், அந்தரிக்ஷத்திலும், பூமியிலும் பயங்கரமான உத்பாதங்களை விளைவிக்கக்கூடிய சகுனங்களையும் கண்டார். தன் துக்கத்தை நீக்கக் கூடிய பூர்ண சந்திரன் போன்ற ராமன், ஜனங்களுக்கும் பிரியமானவனாக இருந்ததையும் அறிந்தார். தனக்கும், பிரஜைகளுக்கும் ஸ்ரேயஸைத் தரக் கூடியதும், பிரியத்தினாலும், இது தான் தக்க காலம் என்று உணர்ந்து, வேகமாக செயல் பட்டார் முக்கியமான பூபதிகள் (அரசர்கள்), சிறிய ஜனபத தலைவர்கள், ஊர் பிரமுகர்கள் இவர்களை வரவழைத்தார். அவர்களுக்கு தகுதியான வெகுமதிகள் கொடுத்து கௌரவித்தார். ஜனங்கள் தாங்களும் நன்றாக அலங்கரித்துக் கொண்டு இந்த நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்கள். இந்த அவசரத்தில், கேகய ராஜாவையும், ஜனக ராஜாவையும் அழைக்கவில்லை, பின்னால் பிரியமான செய்தி கேட்டு மகிழ்வார்கள் என்று எண்ணிக் கொண்டார். எதிரிகளை அடக்கும் வல்லமை வாய்ந்த தங்கள் அரசன் முடி சூட்டி அமர்ந்திருந்த சபையில் மற்ற அரசர்கள் நுழைந்தார்கள். தசரத ராஜா சொல்லப் போவதை எதிர் பார்த்து காத்திருந்தனர். சுற்றிலும் இருந்த ஜனபதங்களிலிருந்தும், சிற்றுர்களிலிருந்தும் வந்து சேர்ந்த ஜனங்களும் , அழைக்கப்பட்ட அரசர்களும் சூழ, தசரத ராஜா அமர்ந்திருந்த காட்சி, மற்ற அமரர்களின் நடுவில் தலைவனாக சஹஸ்ராக்ஷன் அமர்ந்திருப்பதை ஒத்திருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தின், ராமாபிஷேக வ்யவஸாய|| என்ற முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 2 (79) பரிஷத3னுமோத3னம் (சபையினர் அனுமதித்தல்)
பூமியின் நாயகனான தசரத ராஜா, சபையினரை வரவேற்று, இதமாக, தெளிவான வார்த்தைகளால், தான் எடுத்த முடிவையும், அதை நியாயப் படுத்தும் விதமாகவும் பேசினார். தனது கனத்த கம்பீரமான குரலில், இனிய நாத அலைகள் எதிரொலிக்க, மேகத்தின் ஒலிக்கு சமமான ஸ்வரத்தில் பேசினார். அரச லக்ஷணங்கள் நிரம்பிய அவரது குரலும், பேச்சும் அவையினரை கவர்ந்திழுத்தது. நான் சொல்லப் போகும் விஷயம் நீங்கள் யாவரும் அறிந்ததே. ஒரு மகனைப் போல அன்புடன் என் முன்னோர்கள் இந்த ராஜ்யத்தை பரி பாலித்து வந்தார்கள். நானும் அதே வழியில் உத்தமமான முறையில் ராஜ்ய பாலனம் செய்து வந்துள்ளேன். என் முன்னோர்கள் போலவே, நாட்டின் நன்மையே முதல் கடமையாக எண்ணி நடந்து வந்துள்ளேன். விழிப்புடன் இருந்து மேலும் மேலும் ஸ்ரேயஸை பெறும் வகையில் இந்த நாட்டை ஆண்டு வந்தேன். வெண் குடையின் கீழ் பல வருஷங்களாக வசித்து, இதே சிந்தனையில் நரை கண்டது. சரீரமும் வலுவிழந்தது. களைத்த இந்த உடலுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறேன். இந்த ராஜ்ய பாரத்தைத் தாங்க இந்திரியங்களை அடக்காதவர்களால் முடியாது. தர்மமே, கனத்த த்வஜமாக தோளில் தங்கியிருந்தது. அந்த ராஜ்ய பாரத்தை இறக்கி வைக்க விரும்புகிறேன். பிரஜைகளின் நன்மைக்காக ராமனை ராஜ்யத்தில் ஸ்தாபனம் செய்து விட்டு நான் ஓய்வு பெறுகிறேன். இங்கு கூடியுள்ள அனைவரையும் வேண்டிக் கொண்டு பிராம்மண ஸ்ரேஷ்டர்களையும் பிரார்த்திக்கிறேன். என் வாரிசுகளில் மூத்தவனான என் மகன் ராமன், என் போலவே உத்தம குணங்களை உடையவன். இந்திரனுக்கு சமமான வீர்யம் உடையவன். எதிரிகளை நாசம் செய்யக் கூடியவன். புஷ்ய நக்ஷத்திரத்தில் சந்திரன் போல சிறந்த தர்ம புத்தியுடன் கூடியவன். இவனை மகிழ்ச்சியுடன் யுவ ராஜாவாக நியமிக்கிறேன். லக்ஷ்மணனுக்கு முன் பிறந்த இவன் லக்ஷ்மி கடாக்ஷம் மிக்கவன். அரசனாக இருக்கத் தகுதி உடையவன். மூவுலகும் இவனால் நாயகனை பெற்றதாக மகிழ்ச்சியடையும். மங்களகரமான இந்த பூமியை ஆளும் பொறுப்பில் இவனை நியமித்து விடுவதால், என் மன பாரம் நீங்கியவனாக நான் நிம்மதியடைவேன். நான் நன்கு யோசித்து தான் இந்த முடிவை எடுத்தேன். நீங்களும் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். மாறுபட்ட கருத்துக்களையும் சொல்லுங்கள். இது என் முடிவு என்றாலும் மற்ற கருத்துக்களையும் நாம் ஆராய்வோம். ஏனெனில் எதுவுமே விவரமாக அலசி விவாதிப்பதில் நன்மையுண்டு என்று பேசிய அரசனைப் பார்த்து மற்ற அரசர்கள் ஆரவாரம் செய்தார்கள். மழை மேகத்தைக் கண்டு மயில்கள் ஆடுவது போல ஆடினார்கள். அந்த சபையின் ஆரவார ஒலி வானளாவ எழுந்தது. பூமியே ஆட்டம் கண்டு விடுமோ என்று ஐயம் எழச் செய்தது. அன்பும், ஆனந்தமுமாக வாழ்த்தொலிகள் எழுந்தன. தர்மார்த்தங்களை அறிந்த தங்கள் அரசன் சொன்னதை ஏற்றுக் கொண்ட எல்லோரும், உள்ளுர் பிரமுகர்கள், பிராம்மணர்கள், பிரஜைகள், வந்திருந்த மற்ற அரசர்கள் எல்லோரும் கலந்து ஆலோசித்து தங்கள் முடிவை அரசனுக்கு தெரிவித்தார்கள்.
பல ஆயிரம் வருஷங்களாக ராஜ்ய பரிபாலனம் செய்து முதிர்ந்த அரசரே| தாங்கள் சொன்னபடி ராமனை யுவராஜாவாக அபிஷேகம் செய்து வையுங்கள். ரகுவீரனான அந்த மகா பலசாலியை குடையுடன் பெரிய யானை மேல் பவனி வருவதைக் காண விரும்புகிறோம். இவ்வாறு ஒருமித்து சொல்லவும், அறிந்திருந்தும் அவர்கள் வாய் மொழியாக கேட்க விரும்பிய அரசன், என் சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் ராமனை அரசனாக்க விழைகிறீர்கள். அரசர்களே| நான் தர்ம வழியில் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டு வரும் பொழுதே அப்படி என் மகனை ஆவலுடன் எதிர் பார்க்க என்ன காரணம் என்று வினவினான். புர ஜனங்களும், மற்றவர்களும் பதில் சொன்னார்கள். உன் மகனிடத்தில் பல விதமான கல்யாண குணங்கள் இருக்கின்றன. புத்திசாலியான உன் மகன் தேவர்களுக்கு சமமானவன். எங்களுக்கு பிடித்த அவனது குணங்களை வரிசைப் படுத்தி சொல்கிறோம். தன் குணங்களால் இவன் இந்திரனுக்கும் மேலானவன். சத்யம் தர்மம் இவற்றில் முழுமையாக நம்பிக்கையுள்ளவன். இக்ஷ்வாகு அரசர்களிலும் இவனுக்கு தனித்த இடம் உண்டு. சத்புருஷன் என்று இவனைத் தான் சொல்ல வேண்டும். செல்வமும், தர்மமும் இவனிடத்தில் தோன்றியவையே. சந்திரனைப் போல பிரஜைகளுக்கு சுகத்தைக் கொடுப்பவன். பொறுமையில் பூமிக்கு சமமானவன். புத்தியில் ப்ருஹஸ்பதிக்கு ஒப்பானவன். வீர்யத்தில் சசீபதியான இந்திரனே ஆவான். சத்யவாதி. ஒழுக்கத்தில் சிறந்தவன். தர்மங்கள் அனைத்தையும் அறிந்தவன். பொறாமையற்றவன். தானும் சாந்தமாக இருந்து எதிராளியையும் அமைதியாக்கக் கூடியவன். தன்னடக்கம் உடையவன். செய்நன்றி மறவாதவன். பெருந்தன்மையும், மென்மையான ஸ்வபாவமும் ஒரு பக்கம் இருந்தாலும், திடமான கொள்கையும் உடையவன். பணிவும், அடக்கமும், அசூயை இல்லாத நேர்மையும், சாதாரண ஜனங்களிடம் கூட உண்மையே பேசும் தன்மையும் உடையவன். கல்வி கேள்விகளில் சிறந்த முதிய பிராம்மணர்களிடம் மரியாதையுடன் வணங்கி சேவை செய்பவன். இங்கு இவனுடைய புகழும், கீர்த்தியும் எல்லையற்று பரவியுள்ளது. தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ, யுத்தத்தில் அவன் முன் நிற்க இயலாது. வேதத்தை அதன் அங்கங்களோடு முறைப்படி கற்றவன். வித்யாவ்ரதன் எனும் பெயருக்குரியவன் இவனே. காந்தர்வ வித்தை எனப்படும் சங்கீதமும் அறிந்தவன். பரதனுக்கு முன் பிறந்த இந்த ராமன் நண்பர்களுக்கு சாதுவானவன். அதனால் தீனன் என்று பொருளன்று. நல்ல புத்திசாலி. நிபுணர்களான பெரியவர்களும், தர்மார்த்தங்களை விவாதிக்க கூடிய நிபுணர்களும் கூட இவனிடம் பணிவாகவே நடந்து கொள்வர். சௌமித்திரியுடன் எந்த ஒரு நகரத்திலோ, கிராமத்திலோ கலகத்தை அடக்க என்று செல்பவன் வெற்றியடையாமல் திரும்பியதில்லை. அப்படி வரும் பொழுது யானையில் வீற்றிருப்பவன், குடி ஜனங்களை குசலம் விசாரிக்காமல் போக மாட்டான். நகரத்து ஜனங்களை தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக நினைப்பவன். எங்களிடம் பேசும் பொழுது தந்தை மகனிடம் பேசுவது போல இருக்கும். உங்கள் குழந்தைகள், மனைவிமார்கள், அக்னி காரியங்கள், வேலை செய்யும் ஆட்கள், சிஷ்ய கணங்கள், உங்களைச் சார்ந்த மற்றவர்கள் என்று ஒருவர் விடாமல் விசாரிப்பான். ஜனங்களில் யாருமே கஷ்டப் பட்டால் பொறுக்க மாட்டான். மிகவும் வருந்துவான். ஊர்க் கேளிக்கைகளிலும், உத்ஸவங்களிலும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வான், சத்யமே பேசுபவன். வயதானவர்களையும் மதித்து பேசுவான். புன்னகையுடன், தானே முன்னால் பேச்சுக் கொடுப்பான். எல்லா விதத்திலும் தர்மத்தையே சார்ந்து இருப்பவன். நல்லவைகளை இணைத்து வைப்பான். நல்ல பேச்சுத் திறமையுடையவன். இந்த கலையில் அவன் வாசஸ்பதியே தான். அழகிய புருவமும், நீண்ட தாமரை போன்ற நயனங்களும், சாக்ஷாத் விஷ்ணு தானே வந்திறங்கியதைப் போன்ற தோற்றமும் உடையவன். இந்த ராமன் உலகுக்கெல்லாம் அபி4 ராமன். சௌர்ய, வீர்ய பராக்ரமங்களால் ஜனங்கள் மதிப்பைப் பெற்றவன். பிரஜைகளை பரி பாலனம் செய்வதில் ஈடுபாடு உடையவன். எந்த விதத்திலும் அதிக ஆசையோ, இந்திரியங்கள் கட்டுக் கடங்காமல் போவதோ இவனிடம் கிடையாது. மூவுலகையும் சர்வ சாதாரணமாக ஆளும் தகுதியுடையவன். இந்த பூமி எம்மாத்திரம்? இவனுடைய கோபமோ, தயையோ காரணமின்றி வெளிப்படாது. அபராதம் செய்து தண்டனைக்குள்ளானவர்களை தண்டிப்பதில் தயக்கம் காட்ட மாட்டான். அதே போல நிரபராதிகளை கோபிக்க மாட்டான். தான் ஆனந்தம் அடைந்தான் என்றால், சுற்றியுள்ளவர்களுக்கு பெரும் தனம் கொடுத்து மகிழ்வான். பல பேர் அரசர்களாக, சாந்த குணம் உடையவர்களாக, தங்கள் பிரஜைகளின் அன்புக்கு பாத்திரமானவர்களாக இருக்கலாம். ஆனால்
அவர்களின் மத்தியிலும் ராமன் க்ரஹங்களுடன் பிரகாசிக்கும் சூரியன் போல் ஒளி வீசுகிறான். இவ்வளவு நல்ல குணங்களைக் கொண்ட ராமனை பூமியே தனக்கு நாயகனாக வர விரும்பினாள். அதிர்ஷ்டவசமாக, ராக4வா, (தசரதன்) உன் மகன் இவ்வளவு சிறப்புகளுடன் பிறந்திருக்கிறான், காஸ்யபருக்கு கிடைத்தது போல. அவனுக்கு, பலம், ஆரோக்யம், ஆயுஷ், தனம் இவற்றை எல்லா ஜனங்களும் இந்த நகரத்திலும், புற நகர், கிராமப் பகுதிகளிலிருந்து வந்திருப்பவர்களும் ஆசிர்வதிக்கின்றனர். உள்ளும் புறமும், இவர்கள் கூடி எல்லா தேவதைகளையும் வணங்குகின்றனர். ராமனுடைய நலனை விரும்பி யாசிக்கின்றனர். அவர்கள் வேண்டுதல் உன் தயவால் நிறைவேறட்டும். இந்தீவர ஸ்யாமள வர்ணனான ராமனை, எல்லா சத்ருக்களையும் அடக்குபவனை, யுவ ராஜாவாக நாங்கள் காண வேண்டும். உன்னுடைய உத்தமமான மகன், யுவராஜாவாக வலம் வருவதைக் கண் குளிரக் காண வேண்டும். வரதனான (வரம் அருளும் சக்தி பெற்றவன்) எங்கள் நன்மைக்காகவும், உலக க்ஷேமத்திற்காகவும், தேவாதி தேவன் போன்ற உன் மகனை சந்தோஷமாக முடி சூட்டுவாய் என்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தின், பரிஷத3னுமோத3னம் என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 3 (80) புத்ரானு ஸாஸனம் (மகனுக்கு அறிவுரை)
கூப்பிய கரங்களோடு ஏக மனதாக அனைவரும் வேண்டிக் கொள்ளவும், அரசன் அப்படியே என்று ஏற்றுக் கொண்டான். அவர்களிடம் இதமாகவும், பிரியமாகவும் பேசலானான். ஆஹா, நான் சிறந்த பாக்யவான். மிகவும் சந்தோஷம், அளவில்லாத பெருமை பெற்றேன். என் மகனை நீங்கள் அனைவரும் யுவராஜாவாகக் காண விழைகிறீர்கள் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. பின் பிராம்மணர்களை நோக்கி, வசிஷ்டரையும், வாமதேவரையும், அவர்களைச் சார்ந்த மற்ற ரிஷிகளையும் ராமனது யுவராஜா அபிஷேகத்திற்கான (முடி சூட்டுதல்) ஏற்பாடுகளை செய்யச் சொல்லுங்கள். இந்த சைத்ர மாதம், ஸ்ரீமான். லக்ஷ்மீகரமானது, புண்யமான காலம். வனங்களில் புஷ்பங்கள் நிறைந்திருக்கும். இதை அரசர் சொல்லி முடித்தது தான் தாமதம் ஜனங்களிடம் மகிழ்ச்சி ஆரவாரம் பெருமளவு எழுந்தது. அந்த ஓசை மெதுவாக குறைந்து அடங்கியபின், அரசர் முனிவர் பெருமானான வசிஷ்டரிடம்f தானே பேசினார். முடி சூட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை நீங்களே முன்னின்று செய்யுங்கள். உங்கள் ஆணையின் படி மற்றவர்கள் ராமனின் முடி சூட்டு விழாவிற்கு தேவையான காரியங்களை ஆரம்பிக்கட்டும். இதைக் கேட்டு வசிஷ்டரும், அரசன் முன் பணிவாக கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்த அதிகாரிகளை அவரவர் தகுதிக் கேற்ப வேலைகளைச் செய்யப் பணித்தார். பல பொருட்களை சேகரித்து வருமாறு கட்டளையிட்டார். சுவர்ணம், (தங்கம்), ரத்னங்கள், பலிகள், பலவிதமான மருந்து பச்சிலைகள், வெண்மையான முத்து போன்ற நெல் பொரி, தனித் தனியாக தேன், நெய், பலவிதமான வாசனைப் பொருட்கள், ஆயுதம் நிரப்பிய ரதங்கள், நான்கு விதமான படை வீரர்கள். சுபமான லக்ஷணங்கள் கொண்ட யானைகள், வெண் சாமரங்கள், வெண் நிற குடைகள், கொடிகள், அக்னி வளர்க்க கும்பங்கள், நூறு தங்க குடங்கள், அழகிய கொம்புகளுடைய அல்லது கொம்புகளுக்கு தங்க முலாம் பூசப் பட்ட காளைகள், புலித்தோல், இவை நாளைக் காலையில் அரச சபையில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்றார். இதைத் தவிர, வேறு பொருட்கள் தேவையானாலும் கொண்டு வந்து வையுங்கள். நகரம் முழுவதும், அந்த:புர வாசல்கள், சந்தன மாலைகளால் அலங்கரிக்கப் படட்டும். த்ருஷ்டியை விலக்கும் தூபங்கள் காட்டுங்கள். நல்ல அன்னம், சுவையான தயிர், பால் முதலியவற்றுடன், அவரவர் விருப்பப்படி ஆயிரக் கணக்கான பிராம்மணர்களுக்கு விருந்து தயாராகட்டும். இந்த முக்கியமான பிராம்மணர்களை நன்கு கௌரவித்து காலையில் நெய், தயிர், பொரிகள், தக்ஷிணைகள், இவை நிறையக் கொடுங்கள். சூரியன் உதித்த உடனேயே நாளைக் காலை மங்கள கீதம் பாட ஆரம்பிக்க வேண்டும். பிராம்மணர்களுக்கு அழைப்பு விடுங்கள். நாளை அவர்கள் வரும் பொழுது ஆசனங்கள் தயாராக இருக்கட்டும். ராஜ மார்கத்தை நீர் தெளித்து, கொடிகள் கட்டுங்கள். தாள வாத்யங்கள் முழங்கட்டும்.
பெண்கள் நன்கு அலங்கரித்துக் கொண்டு வீதிகளில் நடமாடட்டும். இவர்களை அரச மாளிகைகளில் அடுத்த அறைகளில் தங்கச் செய்யுங்கள். கோவில்களிலும்,
மடங்களிலும் நல்ல சாப்பாடும், தக்ஷிணையும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். நல்ல மாலைகளை விற்பவர்களை தனித் தனியாக நிற்கச் செய்யுங்கள். தீர்கமான வாளை இடையில் அணிந்துள்ள வீரர்கள், தயாராக, மகாராஜாவின் வீட்டு முன் வாயிலில் கூடட்டும். விடியற் காலையிலேயே இவைகள் சரிவர நிறைவேற்றப் படுகிறதா என்பதையும் கண்காணித்து விட்டு அரசரிடம் வந்து, தாங்கள் செய்த ஏற்பாடுகளை விவரித்தனர். வசிஷ்டரும் வாமதேவரும் முன் நின்று பொறுப்புடன் ஏற்பாடுகளை செய்ததைக் கண்டு அரசன் தன் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். பின், சுமந்திரனை அழைத்து, ராமனை அழைத்து வா என்று பணித்தார். சீக்கிரம் அழைத்து வா எனவே, சுமந்திரரும் ஆகட்டும் என்று சொல்லி விரைவாக ரதத்தில் சென்றார்.
ரதம் ஓட்டும் சாரதிகளில் சிறந்தவர் சுமந்திரர். தான் சென்ற ரதத்திலேயே ராமனை அழைத்து வந்தார். அப்பொழுது அங்கு இருந்த வேத வித்துக்களையும், மந்திரிகளையும் தசரத ராஜா அமரச் செய்தார். கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் இருந்து வந்திருந்த அரசர்கள், பூமி பாலர்கள், ம்லேச்சர் எனும் வெளி நாட்டினர், ஆர்யர்கள், மற்றும் காடு மலை பிரதேசங்களில் தலைவர்களாக விளங்குபவர்கள், இவர்கள் அரசனைச் சூழ்ந்து அமர்ந்தனர். இவர்கள் மத்தியில் தசரத ராஜா வீற்றிருந்ததைக் காண, இந்திரன் மருத் கணங்கள் மத்தியில் இருந்தது போல விளங்கியது. மாளிகையில் அமர்ந்தபடியே ரதத்தில் வரும் தன் மகனைக் கண்டார். கந்தர்வ ராஜனைப் போன்ற அழகும், உலகில் பிரஸித்தி பெற்ற பௌருஷமும், தீர்கமான புஜங்களும், திடமான உடலும், மதம் பிடித்த யானை நடப்பது போல நடையழகும், சந்திர காந்தம் போன்ற முக அழகும், ராமனை, மிகவும் பிரியமாக தோற்றம் தருபவனாகக் கண்டார். தன் ரூபத்தாலும், உதார குணத்தாலும், புருஷர்களின் கண்களையும், மனதையும் அபகரிப்பவனாக, வெய்யிலில் வாடிய பயிர்கள் மழையைக் கண்டு ஆவலுடன் வரவேற்பது போல, அரசன் வைத்த விழி வாங்காமல் ராமனைக் கண்டார். உத்தமமான அந்த ரதத்திலிருந்து சுமந்திரர் கை கொடுத்து ராமனை இறங்கச் செய்து தந்தையின் அருகில் அழைத்துச் சென்றார். கூப்பிய கரங்களுடன் வழியில் இருந்தவர்களுக்கு வணக்கம் சொல்லியபடியே ராமன் பின் தொடர்ந்தான். கைலாஸ மலை சிகரமோ எனும் படி உயர்ந்து அழகு வாய்ந்த அந்த மாளிகையின் வாசற்படிகளில் சுமந்திரருடன் ராமனும் ஏறினான். அரசனைக் கண்டு வணங்கி தன் பெயர் சொல்லி பாதங்களில் வணங்கினான். அவனது கூப்பிய கரங்களைப் பற்றி தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டார். பிரியமான மகனை ஆரத் தழுவிக் கொண்டார். புதிதாக கொண்டுவரப் பட்ட, அழகான மணி காஞ்சனம் இவைகளால் அலங்கரிக்கப் பட்ட வராசனத்தைக் காட்டி ராமனை அதில் அமரச் சொன்ன ராஜா தசரதன், அதில் அமர்ந்த தன் மகன் மிகவும் கம்பீரமாக, பிரகாசமாகத் தெரிவதை ரசித்தார். உதய காலத்தில் மேரு மலையை அழகுறச் செய்யும் சூரியனோ எனும் படி பிரகாசமாக இருந்த ராமனால் அந்த சபையே ஒளி கூடியது. விமலமான கிரஹங்களையும், நக்ஷத்திரங்களையும் கொண்ட சரத் கால ஆகாயம், சரத் கால சந்திரனின் உதயத்தால், கண் கொள்ளா காட்சியாக விளங்குவது போல அந்த சபை ராமனின் வரவால் பெருமை பெற்றது. தன் மகனைக் காணக் காண அரசனின் பெருமிதம் வளர்ந்தது. தானே நன்கு அலங்கரித்துக் கொண்டு கண்ணாடி மாளிகையில் நிற்பது போல மகிழ்ந்தார். சிறந்த மகனைப் பெற்றதால் சிறப்புற்ற பலருள் ஒருவனான தசரத ராஜா, தேவேந்திரனைப் பார்த்து காஸ்யபர் சொன்னது போல சொன்னார். ராமா, எனக்கு சமமான பத்னியும், மூத்தவளுமான ராணியிடம் பிறந்தவன் நீ. தகுதி வாய்ந்த என் புத்திரர்கள் நால்வரிலும், எனக்குப் பிரியமானவன் நீயே. தவிர, உன் குணத்தால் நீயும் இங்குள்ள பிரஜைகளை மகிழ்வித்து வந்திருக்கிறாய். அதனால் நாளை புஷ்ய நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில் உன்னை யுவ ராஜாவாக நியமிக்க விரும்புகிறேன். ஏற்றுக் கொள். இயல்பாகவே நீ நற்குணங்கள் நிரம்பியவன். வினயம் உடையவன். இருந்தும் என் மகன் என்ற வாத்ஸல்யத்தால், உனக்கு சில விஷயங்கள் சொல்கிறேன். உன் நன்மைக்காக இவற்றைக் கேள். நீ எப்பொழுதும் போல பணிவாக இரு. தன்னடக்கம் கொள். காம க்ரோதங்களால் ஏற்படும் கஷ்டங்களை தவிர். நேரடியாகவும், மறை முகமாகவும், மந்திரி முதலான எல்லோரையும் பிரஜைகளையும் சந்தோஷமாக வைத்திரு. பசுக்கள் நிறைந்த கொட்டில்களையும், ஆயுத கிடங்குகளையும் எப்பொழுதும் நிரம்பி இருக்குமாறு வைத்துக் கொள். தானும் மகிழ்ச்சியாக இருந்து பிரஜைகளையும் சந்தோஷமாக வைத்திருப்பவன் தான் நல்ல அரசன். அமுதம் கிடைக்கப் பெற்ற தேவர்கள் போல நண்பர்கள் அவனைக் கொண்டாடுவர். அதனால் நீயாக உன் வழியை நியமமாக வகுத்துக் கொண்டு அதன் வழி நடப்பாயாக. இதனிடையில், ராமனின் நண்பர்களில் சிலர் ஓடி வந்து, கௌசல்யைக்கு விஷயம் தெரிவித்தனர். அந்த ஸ்த்ரீ ரத்னம், செய்தி சொல்ல வந்த நண்பர்களுக்கு, தங்கம், ரத்னங்கள், பசுக்கள், மற்றும் பல விதமான பரிசுப் பொருட்களை, பிரியமான செய்தி சொன்ன காரணத்திற்காக கொடுத்தாள். இங்கு அரசனை வணங்கி ராமன், ரதத்தில் ஏறி, ஜனங்கள் கூட்டமாக ஆரவாரத்துடன் பின் தொடர, தன் மாளிகைக்குச் சென்றான். அந்த நகர ஜனங்கள், அரசனின் அறிவிப்பைக் கேட்டு, வெகு நாட்களாக எதிர்பார்த்த லாபம் உடனே கிடைத்தாற் போல மகிழ்ச்சியுடன், அரசனிடம் விடை பெற்று தங்கள் வீடுகள் சென்று தேவர்களை அர்ச்சனை செய்யலானார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தின், புத்ரானுசாஸனம் என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 4 (81) மாத்ராசீ பரிக்ரஹ (தாயின் ஆசிர்வதம் பெறுதல்)
ராமன் விடை பெற்று சென்ற பின், கூடியிருந்த மந்திரிகளிடமும், முக்கியமான பிரஜைகளிடமும் கலந்து ஆலோசித்து, அரசன், நாளை புஷ்ய நக்ஷத்திரம். நாளையே என் மகன் முடி சூட வேண்டும். தாமரை இதழ் போன்ற அழகிய கண்களையுடைய என் மகன் நாளை யுவ ராஜாவாக ஆவான் என்று எண்ணி மகிழ்ந்தவனாக, உள் அறைக்குச் சென்றான். சாரதியான சுமந்திரனைக் கூப்பிட்டு, ராமனை இப்பொழுதே அழைத்து வா, என்று பணித்தான். சுமந்திரர் உடனே திரும்பவும் ராமனுடைய பவனத்திற்கு ரதத்தில் விரைந்தார். வாயில் காப்போன் வந்து, திரும்ப சுமந்திரர் வந்திருக்கிறார், அரசர் அழைக்கிறாராம் என்று சொல்லக் கேட்ட ராமனின் மனதில் கவலை தோன்றியது. அவசரமாக சுமந்திரரை எதிர்கொண்டு ராமர், எதற்காக திரும்ப அழைக்கிறார், விவரமாக சொல் என்றார். சுமந்திரர், ராஜா உன்னை பார்க்க விரும்புகிறார். உன் இஷ்டம். வருவதோ, இல்லை வேறு விதமாக எண்ணினாலும் சரி, நான் போய் சொல்கிறேன் என்றார். சுமந்திரர் இவ்வாறு சொல்லவும், விரைவில் தயாராகி, அரச மாளிகைக்கு அவரை சந்திக்கச் சென்றான். ராமன் மாளிகை வாசலில் வந்து விட்டான் என்று அறிந்ததுமே, அரசர் அவனை உள்ளே அழைத்து வருமாறு பணித்தார். தூரத்திலேயே தந்தையைக் கண்டு அவரை வணங்கியபடியே ராமன் வேகமாக வந்தான். காலில் விழுந்து வணங்கியவனை ஆரத் தழுவி, அருகில் ஆசனத்தில் அமரச் செய்த பின், ராஜா பேச ஆரம்பித்தார். – ராமா, எனக்கு வயதாகி விட்டது. வேண்டிய அளவு சுகங்களையும் போகங்களையும் அனுபவித்தாயிற்று. நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, நூற்றுக் கணக்கான யாகங்களும், அன்ன தானமும், செய்த பின் நீ பிறந்தாய். அதனாலேயே நீ எனக்கு மிகவும் பிரியமானவன். இன்று நீ ஈடு இணையில்லாமல் உயர்ந்து நிற்கிறாய். என் இஷ்டப் படி தானங்கள் கொடுத்தேன். வேண்டிய அளவு சுகங்களை அனுபவித்தேன். தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், பிராம்மணர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து வந்துள்ளேன். உனக்கு முடி சூட்டுவதைத் தவிர எனக்கு வேறு கடமைகள் எதுவும் பாக்கியில்லை. அதனால் நான் சொல்லும் சில அறிவுரைகளை கவனமாக கேள். அதன் படி நடப்பாயாக. இன்று பிரஜைகள் எல்லோரும் உன்னை அரசனாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதனால் நாளை யுவராஜாவாக உனக்கு முடி சூட்டுகிறேன். தவிர, மகனே, இன்று அசுபமான கனவுகளைக் காண்கிறேன். பயங்கரமான கனவுகள். ஆகாயத்திலிருந்து கற்களும், நெருப்பைக் கக்கும் நக்ஷத்திரங்களும் வந்து விழுவதைக் கண்டேன். பல வேறு கிரஹங்கள் என்னை சூழ்ந்து கொண்டன. அவை செய்த சப்தங்கள் தெளிவாக இல்லை. ஆனால் பயங்கரமாக இருந்தது. சூரியன், அங்காரகன், ராகு இவர்களின் இது போன்ற நிமித்தங்களைக் காண நேர்ந்தால், அரசன் மடிவான் என்று சொல்கிறார்கள். அல்லது கோரமான ஏதோ ஆபத்து வரும் என்றார்கள். அதனால், என் புத்தி மழுங்குவதற்கு முன், ராமா, நீ முடி சூட்டிக்கொள். மனித புத்தி சஞ்சலமானது, தெரிந்ததே. இன்று சந்த்ரோதயம் ஆகி விட்டது. புஷ்யத்திற்கு முன்பான புனர்வசு. நாளை புஷ்ய யோகம் நன்மை பயக்கும் என்று சோதிடர்கள் சொல்கிறார்கள். என் மனம் என்னை விரைவில் செய் என்று துரத்துகிறது. அதனால் நாளை புஷ்ய நக்ஷத்திரத்தில் முடி சூட்டிக் கொள். யுவராஜாவாக நானே அபிஷேகம் செய்து வைக்கிறேன். தவ வலிமை உடையவனே, இன்று இரவு மனைவியுடன், தர்ப்பாஸனத்தில் (தர்ப்பை என்ற புல்லால் ஆன ஆசனம்) அமர்ந்து உபவாசங்கள், விரதங்கள் இவற்றை செய். உனக்கு ஏராளமான நண்பர்கள். அவர்கள் கூட இருந்து ரக்ஷிக்கட்டும். இது போன்ற நற்காரியங்களுக்கு தடைகளும் நிறைய வரும். பரதன் ஊரில் இல்லை. அவன் வருமுன் உன் முடி சூட்டு விழா நடந்து விட வேண்டும் என்று என் மனம் சொல்கிறது. பரதன் நல்லவன் தான். நல்லவர்கள் மத்தியில் தான் இருக்கிறான். மூத்த சகோதரனான உன்னிடம் அன்பும் பணிவும் கொண்டவன் தான். அவனுடைய தன்னம்பிக்கையும், நல்ல எண்ணமும் தெரிந்ததே. ஆயினும் மனித மனம் ஸ்திரமில்லாதது என்று எனக்குத் தோன்றுகிறது. தர்மத்தில் ஈ.டுபாடு உடையவர்கள், நடந்தேறிய ஒரு செயலை கெடுக்க முன் வர மாட்டார்கள். இவ்வாறு பலவும் பேசிய பின், அவரிடம் விடை பெற்று கிளம்பு முன், மறுபடியும் நாளை முடிசூட்டு விழாவிற்கு வந்து சேர் என்று தசரதன் மகனிடம் சொன்னார். அரசர் சொன்னதை மனதில் அசை போட்டவாறு தன் மாளிகைக்கு கிளம்பிய ராமன், திடுமென தாயை நினத்தவனாக, கௌசல்யை மாளிகையை சென்றடைந்தான். அங்கு யோகினி போல, வெண் பட்டுடுத்தி, நியமத்துடன், தேவதைகளை வேண்டியபடி பூஜையறையில் தாயைக் கண்டான். லக்ஷ்மணனும், சுமித்ரையும் அங்கு ஏற்கனவே வந்திருந்தனர். சீதையும் வரவழைக்கப் பட்டாள். மறு நாள் நடக்க இருக்கும் முடி சூட்டு வைபவத்தைப் பற்றி பேசியபடி எல்லோருமாக கௌசல்யையின் இல்லத்தில் இருந்தனர். நாளைக்கு புஷ்ய நக்ஷத்திரத்தில் ராமனுக்கு முடி சூட்டு விழா என்று மனம் கொள்ளா ஆனந்தத்துடன், ப்ராணாயாமம் செய்து ஜனார்தனனை த்யானம் செய்தபடி இருந்த தாயைக் கண்டான். அம்மா, தந்தையால் ப்ரஜா பாலனம் செய்யும்படி நியமிக்கப் பட்டிருக்கிறேன். தந்தையின் கட்டளைப்படி நாளை முடி சூட்டு விழா நடக்க இருக்கிறது. இந்த இரவு நானும் சீதையும் உபவாசம் இருக்கவேண்டும். உபாத்யாயர்களும், வேதங்கள் அறிந்த பண்டிதர்கள் அவர் அருகில் இருந்த சமயம் தான் இவ்வாறு சொன்னார். அம்மா, எனக்கும் வைதேஹிக்கும் எல்லா மங்களங்களும் கிடைக்கும்படி நீயும் என்ன செய்ய வேண்டுமோ அவைகளை குறைவறச் செய். இதைக் கேட்டு கௌசல்யை, கண்களில் நீர் பெருக, வெகு நாளாக எதிர்பார்த்து காத்திருந்தது கிடைத்தது போன்ற மகிழ்ச்சியுடன், வாழ்த்தினாள். வத்ஸ, ராம, குழந்தாய், நீன்ட நாள் வாழ்வாயாக. உனக்கு இடையூறு செய்பவர்கள் அழிந்தார்கள். இந்த ராஜ்ய லக்ஷ்மியை அடைந்து தாயாதிகளையும், என்னையும், சுமித்திரையையும் ஆனந்தமாக இருக்கச் செய். மகனே, மங்களகரமான நக்ஷத்திரத்தில் என் வயிற்றில் பிறந்தாய். அதனாலேயே, உன் தந்தை சத்புத்திரனைப் பெற்ற பெருமையை அடைந்தார். தாமரை மலர் போன்ற கண்களையுடைய மஹா விஷ்ணுவிடம் நான் பொறுமையாக வேண்டிக் கொண்டு வந்தேன். அதனால் தானோ என்னவோ, இக்ஷ்வாகு ராஜ்யஸ்ரீ உன்னை வந்தடைகிறாள். இவ்வாறு தாயார் சொன்னதைக் கேட்டு, அருகில் மிகவும் பணிவாக நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, லக்ஷ்மணா, நீயும் என்னுடன் கூட இந்த பூமியை ஆட்சி செய். என்னுடைய இரண்டாவது அந்தராத்மா போன்ற உன்னையும் இந்த ராஜ்யஸ்ரீ வந்து அடைந்துள்ளாள். சௌமித்ரே, இந்த ராஜ்யத்தை அடைவதால் கிடைக்கும் பலவிதமான போகங்களையும் அனுபவிப்பாய். உயிர்வாழ்வதையும், இந்த ராஜ்யத்தையும் உனக்காகவே ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறு லக்ஷ்மணனிடம் சொல்லி விட்டு தாயார்களை வணங்கி, அனுமதி பெற்று சீதையையும் அழைத்துக் கொண்டு தன் மாளிகை சென்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தின், மாத்ராசீ பரிக்ரஹ என்ற நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 5 (82) வ்ரத சர்யா விதானம் (விரதங்களை ஏற்று நடத்துதல்)
நாளை நடக்க இருக்கும் முடி சூட்டு விழாவைப் பற்றி மகனிடம் விவரமாக பேசிய பின், தசரத ராஜா, வசிஷ்டரை அழைத்து தபோதனரே, நீங்கள் முன்னின்று ராமனுக்கு விரதங்களை அனுஷ்டிக்கச் சொல்லிக் கொடுங்கள். ராஜ்யத்தை அடையும் முன், மனைவியோடு அவன் விரதங்களை பூர்ணமாக அனுஷ்டிக்க வேண்டும். அது அவன் நன்மைக்கே என்பதை சொல்லுங்கள். வேத சாஸ்திரங்களில் சிறந்த அறிஞரான அவரும், அப்படியே என்று சொல்லி தானே ராமனது மாளிகைக்குச் சென்றார். விரத முறைகளை நினைவு படுத்திக் கொண்டவராக, ப்ராம்மம் என்ற ரதத்தில் ஏறி , வெண் மேகம் போன்ற ராம பவனத்தில் மூன்றாவது அங்கணம் வரை ரதத்திலேயே சென்றார். அவர் வந்து விட்டதையறிந்து பர பரப்புடன் வேகமாக வந்து எதிர்கொண்டழைத்த ராமர், கௌரவம் மிகுந்த குருவான அவரை, தன் மாளிகைக்குள் வரவேற்றபடி, கை கொடுத்து ரதத்திலிருந்து இறங்க உதவி செய்தார். அந்த பரபரப்பை ரசித்தபடி, இறங்கிய குரு வசிஷ்டர், இயல்பாக பேசியபடி, பிரியமாக அவனும் சந்தோஷமாகும் படி பேசிக் கொண்டே வந்தார். உன் தந்தை உன்னிடம் மிகவும் ப்ரஸன்னமாக இருக்கிறார், ராமா, யுவராஜ பதவியை அடையப் போகிறாய். இன்று நீயும், சீதையுமாக விரதங்களை மந்திர பூர்வமாக அனுஷ்டியுங்கள். நாளைக் காலை நகுஷன் யயாதியை அரசனாக்கியது போல, உன் தந்தை தசரத ராஜா உனக்கு முடி சூட்டி, யுவ ராஜாவாக ஆக்கப் போகிறார். இதன் பின் வசிஷ்டர் முறைப் படி மந்திரங்கள் சொல்லி, சீதையுடன் உபவாச விரதங்களை அனுஷ்டிக்கச் செய்தார். பிறகு, ராமரும், அரசரின் குருவான அவரை முறைப்படி பூஜித்து, மரியாதைகள் செய்தார். குருவும் விடைபெற்று, ராமனின் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். பிரியமாக பேசும் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு, உள்ளே சென்றார். அன்று ராம பவனம், உற்றாரும், உறவினரும், நண்பர்களும் குதூகலமாக, ஆண்களும் பெண்களுமாக கல கலப்பாக விளங்கியது.
அந்த மாளிகையிலிருந்து வெளி வந்த குரு வசிஷ்டர், மதம் பிடித்த யானைக் கூட்டம், மலர் நிறைந்த குளத்தில் குழுமியதைப் போல, வழி முழுவதும் ஜனங்கள் கூட்டம் கூட்டமாக ராம பவனத்தை நோக்கி வருவதும், போவதுமாக, இருப்பதைக் கண்டார். குதூகலமான அந்த ஜன நெரிசலில், ரதத்தை ஓட்டிச் செல்வதே பெரும் ப்ரயத்னமாக இருந்தது. ஜன சமுத்திரம் அலை அலையாக மோதியது. அவர்களின் மகிழ்ச்சி நிறைந்த ஆரவார இரைச்சலும் அலை ஓசையை விட அதிகமாகவே இருந்தது. ராஜ மார்கங்கள் ஜன சமுத்திரமாகவே ஆயிற்று. வீதிகளில் நீர்
தெளிக்கப்பட்டு, வாசனை நிறைந்த மலர் மாலைகளால் தோரணங்கள் கட்டப் பெற்று, அயோத்யா நகரமே, வீடு தோறும் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டதாக ஆயிற்று. முடி சூட்டு விழாவைக் காண ஸ்த்ரீ பாலர் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை, சூரிய உதயத்தை எதிர் நோக்கி காத்திருந்தனர். அயோத்தியின் இந்த மகோத்ஸவத்தைக் கொண்டாட உற்சாகத்துடன் அலங்கரித்துக் கொண்ட ஜனங்கள், ராஜ வீதிகளில் நடமாடுவதைப் பார்த்தவாறு வசிஷ்டர், ஆங்காங்கு இருந்த
ஜனங்களின் மத்தியில் வழி வகுத்துக் கொண்டு மிக மெதுவாக வெளியேறினார். அரசமாளிகையை வந்தடைந்தார். இந்திரனை குருவான ப்ருஹஸ்பதி சென்று கண்டதைப் போல தசரத ராஜாவின் இருப்பிடம் சென்றார். அவர் திரும்பி வந்து விட்டதையறிந்து ராஜாவும் தானே நேரில் வந்து விசாரித்தார். விரதானுஷ்டானம் முதலியவைகளை செய்வித்து விட்டதாக வசிஷ்டர் வாயால் கேட்ட அரசனின் மனம் நிம்மதி அடைந்தது. வசிஷ்டர் வந்தவுடன் அரசனுடன் ஆலோசனைகளில் இருந்த மற்ற அரசர்களும், பிரமுகர்களும் எழுந்து நின்றனர். குருவின் அனுமதியுடன் அவர்களை விடை கொடுத்து அனுப்பி விட்டு, அரசன் அந்த:புரம் சென்றார். சிங்கம் ஒன்று மலைக் குகைக்குள் நுழைவது போல இருந்தது அந்த காட்சி. இந்திரன் மாளிகை போல இருந்த அந்த மாளிகையின் அந்த:புரம், பெண்கள் பலர் சூழ்ந்திருக்க, பார்த்திபனான அரசன் நக்ஷத்திர கூட்டத்தினுள் சந்திரன் நுழைவது போல நுழைந்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தின், வ்ரத சர்யா விதானம் என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 6 (83) பௌரோத்ஸேக|| (ஊர் ஜனங்களின் மகிழ்ச்சி)
புரோஹிதர் சென்ற பின் ராமர், விசாலாக்ஷியான சீதையுடன், (விசாலமான கண்களை உடையவள்) மனதை அடக்கி பகவான் நாராயணனை த்யானம் செய்து, பூஜை செய்தார். ஹவிஸ் நிறைந்த பாத்திரத்தை தலையில் தாங்கி வந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பில் ஆகுதியாக தேவதைகளுக்கு சமர்ப்பித்தார். மீதியிருந்த ஹவிஸை, தானும் தன் பிரிய மனைவியும் பிரஸாதமாக உண்ட பின், தர்ப்பைகளால் செய்யப் பட்ட படுக்கையில் படுத்தார். மஹா விஷ்ணுவை, மஹா லக்ஷ்மியுடன் த்யானம் செய்தவராகவே உறங்கினார். பாதி இரவில் எழுந்திருந்து, வீட்டை அலங்கரிக்க ஆரம்பித்தார். துயில் எழுப்பப் பாடும் பாடல்களின் இனிய நாதத்தைக் கேட்டபடி, பூர்வா சந்த்யா வந்தனம் செய்தார். ஜபங்களைச் செய்த பின், வெண் பட்டு உடுத்தி, மதுசூதனனை வணங்கி வழிபட்டு பூஜைகள் செய்தார். பின் வந்திருந்த பிராம்மணர்களோடு பேசிக் கொண்டு இருந்தார். புண்ய தினமான அன்று அயோத்தியில் இனிமையான கம்பீரமான நாதங்கள் நிரம்பின. தாள வாத்யங்களும் அதற்கு இனையான தந்தி வாத்யங்களும் முழங்கின. ராமரும் சீதையும் இரவு உபவாசம் இருந்த விஷயத்தைப் பற்றி மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். விடிந்தால் முடி சூட்டு விழா என்பதால் ஊர் ஜனங்கள் வீதிகளை அலங்கரிக்க ஆரம்பித்தனர். கோவில்களின் மேலும், உயர்ந்த மாளிகைகளின் மேலும், நான்கு வீதிகள் கூடும் இடத்திலும், தெருக்களிலும், மடங்களிலும், வியாபார ஸ்தலங்களிலும், கடை வீதிகளிலும், தனித் தனி கடைகளிலும், குடும்பஸ்தர்கள் வீடுகளிலும், பிரமுகர்களின் பவனங்களிலும், பெரிய
மாளிகைகளிலும், எல்லா சபைகளிலும், ஆங்காங்கு தென் பட்ட மரங்களிலும் கொடிகள் கட்டப் பெற்றன. பல விதமான சித்திரங்களுடன் பதாகா எனப்படும், கொடிகளும் இடை இடையே இருந்தன. பாடிக் கொண்டு வரும் பாடகர்களும், ஆடிக் கொண்டு வரும் நட நர்த்தகர்களும், மனதுக்கும் செவிக்கும் இனிய வார்த்தைகளை ஜனங்கள் கேட்டனர் தங்களுக்குள் ராமனது முடிசூட்டு விழாவை கதையாக பேசிக் கொண்டனர். இந்த ராம அபிஷேக உத்ஸவ சமயத்தில், வீடுகள், வாசல்கள், மைதானங்களிலும், விளையாடும் சிறுவர் சிறுமியர் கூட இதையே பேசினர். ஊர் ஜனங்களே ராஜ மார்கத்தை பூ மாலைகளால் அலங்கரித்து, வாசனை திரவியங்கள் தெளித்து ராமன் முடி சூட்டு விழாவிற்காக தயார் செய்து விட்டனர். இரவு வந்தால் வெளிச்சம் வேண்டும் என்பதற்காக ஆங்காங்கு தீபங்களுடன் கம்பங்கள் நடப்பட்டன. சந்துகளிலும், இடை இடையே இருந்த சிறு வீதிகளிலும் கூட இந்த கம்பங்கள் நடப் பெற்றன. இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்தபடி, ராமனது முடி சூட்டு விழாவைக் காண ஜனங்கள் காத்திருந்தனர். நாலு பேர் கூடினால் தசரத ராஜாவை புகழ்ந்து பேசினார்கள். அஹோ, இந்த இக்ஷ்வாகு குல ராஜா, மகாத்மா. தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து ராமனுக்கு முடி சூட்ட முன் வந்தானே. நாம் எல்லோருமே அதிர்ஷ்டம் செய்தவர்கள் ஆவோம். ராமன் நமக்கு அரசனாக வருவது நம் நல் வினைப் பயனே. இது போல அரசன் அமைவது அரிது. வித்வானாகவும், தர்மாத்மாகவும் இருப்பவன். சகோதரர்களிடமும் பாசம் மிக்கவன். எப்படி சகோதரர்களிடம் வாஞ்சையுடன் இருக்கிறானே அதே போல நம்மிடமும் பாசத்துடன் இருப்பான். தசரத ராஜா நீமூடுழி வாழட்டும். அவர் தயவால் தானே நாம் ராமனை முடி சூடியவனாக காணப் போகிறோம். இவ்வாறு பலவாறு பேசிக் கொண்டு, தொலை தூரத்து ஜன பதங்களிலிருந்தும் ஜனங்கள் கூட்டமாக ராம பட்டாபிஷேக வைபவத்தைக் காண வந்து சேர்ந்தனர், அயோத்தி நகரம் நிரம்பி வழிந்தது. வேகமாக அடிக்கும் அலைகளால் சமுத்திர ஓசை அதிகரிப்பது போல இந்த ஜன சமுத்திரமும் ஆரவாரித்தது. இந்திரனே பொறாமைப் படும் படியான அந்த நகரம், அலை மோதும் ஜனங்களும், அவர்களின் ஆரவாரமும் சேர, சமுத்திரங்களையும், கடல்களையும் தன்னிடத்தில் கொண்ட ஆழ்கடல் போல இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தின், பௌரோத்சேக: என்ற ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 7 மந்த2ரா பரிதே3வனம்
எங்கேயோ பிறந்து, கைகேயியுடன் கூட வசித்து வந்தவள், குடும்பத்தில் பரம்பரையாக ஊழியம் செய்து வரும் தாசி, எதேச்சையாக, சந்திரனுக்கு சமமாக ஒளி வீசும் அந்த பிரகாரத்தில் ஏறி வந்தாள். (ஞாதி தாசி- குடும்பத்து பழைய தாசி, தாய் தந்தையரை அறியாதவள். கேகய ராஜா, தனத்தோடு அனுப்பி வைத்த, ஊழியம் செய்ய வந்த வேலைக்காரி. வால்மீகி முனிவர் இவளை அதிகமாக வர்ணிக்காமல் விட்டதே, இந்த சந்தர்பத்தில் ரஸ போஷகமாக உள்ளது என்பது பெரியவர்கள் கருத்து). ராஜமார்கம் பூராவும் நீர் தெளிக்கப்பட்டு, பூக்களால் அலங்கரித்து இருப்பதை அந்த மாளிகையின் பிராகாரத்திலிருந்து பார்த்தாள். எங்கு நோக்கினும் தோரணங்களும், மலர் மாலைகளும், த்வஜங்களும், ஜனங்கள் அனைவரும் தலைக்கு ஸ்னானம் செய்து, சந்தன நீரை வாரி இறைத்த வண்ணம் செல்வதைக் கண்டாள். பூ மாலைகளும், மோதகங்களும் ஏந்தி, பிராம்மணோத்தமர்கள், கோவில்களில் பூஜை செய்வதைக் கண்டாள். கோவில் வாசல்கள் சுபமாக, வெண்ணிறமாக அலங்கரிக்கப் பட்டு, மங்கள வாத்யங்கள் முழங்கக் கண்டாள். ஜனங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ப்ரும்ம கோஷம் கேட்டது. உயர்ந்த குதிரைகளும், யானைகளும், பசுக் கூட்டங்களும் கூட மகிழ்ச்சியாகத் தெரிந்தன. ஊர் ஜனங்கள் பக்கம் பக்கமாக கொடிகளையும், தோரணங்களையும் கட்டுவதில் முனைந்திருந்தனர். இவ்வளவு கோலாகலமாக அயோத்யாவைப் பார்த்து மந்த2ரா ஆச்சர்யம் அடைந்தாள். மகிழ்ச்சியால் மலர்ந்த கண்களுடன், வெண் பட்டினால் அலங்கரித்துக் கொண்டு அருகில் வந்த ஒரு தா4த்ரி (வேலைக்காரி, பொதுவாக தாம்பூலம் கொண்டு செல்பவர்கள்) பெண்ணை அழைத்து விசாரித்தாள். நிறைய பொருள் வைத்துக் கொண்டு ராம மாதா, எதற்காக எல்லோருக்கும் தனம், பொருள் இவற்றை மகிழ்ச்சியோடு தானம் செய்கிறாள்? என்று வினவினாள். இந்த ஜனங்கள் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்? இவர்கள் இப்படி சந்தோஷப்படும் படி அரசன் என்ன செய்தான்? அந்த தா4த்ரி மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு, நல்ல விஷயம் சொல்லும் ஆவலுடன் ராமனுக்கு ராஜ்ய கிடைக்கப் போவதைத் தெரிவித்தாள். நாளை புஷ்ய நக்ஷத்திரத்தில், கோபமே இல்லாத ராமனை, ராகவனை யுவராஜாவாக, ராஜா தசரதர் முடி சூட்டப் போகிறார். மாசில்லாத ராமனை யுவராஜாவாக காணப் போகிறோம்.
தாத்ரியின் வார்த்தையைக் கேட்டு அந்த கூனி, பொறுக்க மாட்டாத கோபமும் தாபமுமாக, கைலாச சிகரம் போன்ற அந்த மாளிகையிலிருந்து வேகமாக கீழே இறங்கி வந்தாள். எதிலும் பாபத்தையே காணும் மந்தரா என்ற அந்த கூனி, அடக்க மாட்டாத கோபத்துடன், கைகேயியின் மாளிகையின் உள்ளே புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த கைகேயியை எழுப்பி விஷயத்தை சொன்னாள். மூடே,(முட்டாளே) எழுந்திரு. ஏன் தூங்குகிறாய். உன்னை நோக்கி பயங்கரமான ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. உன்னை சூழ்ந்து நிற்கும் ஆபத்தையறியாமல், தன்னை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இப்படி இருக்கிறாய். உள்ளத்தில் உனக்கு கெடுதலை எண்ணிக் கொண்டு, வெளியில் பிரியமானவன் போலத் தெரியும் உன் கணவனை நம்பிக் கொண்டிருக்கிறாய். வெய்யில் நாளில் நதிகளின் ஊற்றுகள் வற்றுவது போல உன் சௌபாக்கியம் அழியப் போகிறது. இவ்வாறு கடும் வார்த்தைகளைக் கேட்ட கைகேயி, கூனியினால் பெரும் சங்கடத்துக்குள்ளானாள். கூனியைப் பார்த்துக் கேட்டாள். மந்தரையே, ஏதாவது அசுபமாக நடந்து விட்டதா? உன் முகம் வாடியிருக்கிறது. மிகவும் துக்கத்தோடு காணப் படுகிறாய். என்ன விஷயம்? மதுரமாக கேட்ட கைகேயியிடம் மகா கோபத்துடன், தன் முகத்தை இன்னமும் வருத்தமாக வைத்துக் கொண்டு, அவளுடைய நன்மையை விரும்புபவள் போலவும், ராகவனுக்கு எதிராக, சொல்ல ஆரம்பித்தாள். உன் நாச காலம் ஆரம்பித்து விட்டது போலும். பெரிய ஆபத்து வந்துள்ளது. தசரத ராஜா ராமனுக்கு முடி சூட்டப் போகிறார். யுவ ராஜாவாக. அதனால், உன் நன்மையையே விரும்பும் என்னை துக்கமும் சோகமும் அலைக் கழிக்கின்றன. ஆழமான பயம் என்ற குளத்தில் முழுகியவள் போலவும், நெருப்பினால் சுடப்பட்டவள் போலவும், உன்னைத் தேடி வந்தேன். உன் துக்கம் என் துக்கம் அல்லவா? உனக்கு ஏதாவது கெடுதல் என்றால், நான் உன்னை விட அதிக துக்கம் அடைவேன். உன் வளர்ச்சியில் தான் என் வளர்ச்சியும். இதில் சந்தேகமேயில்லை. அரச குலத்தில் பிறந்தவள் நீ, சக்ரவர்த்தியான அரசனின் மகிஷி. ராஜ தர்மத்தின் சூக்ஷ்மத்தை இன்னமும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். தர்மத்தை பேசுகிறானே, துஷ்டனாக நடந்து கொள்கிறான் உன் கணவன். பெருந்தன்மையாக பேசுகிறான். உள்ளுக்குள் பயங்கரமானவன். சுத்தமான மனம் உள்ளவள் நீ. அவனுடைய கெட்ட எண்ணத்தை தெரிந்து கொள்ளவில்லை. ஒன்றும் இல்லாத கௌசல்யையை செல்வம் கொழிக்கச் செய்யப் போகிறான் உன் கணவன். துஷ்டாத்மா, பரதனை உன் பந்துக்களிடம் அனுப்பி விட்டு, நாளை ராமனை இடையூறின்றி, முடி சூட்டி வைக்கப் பார்க்கிறான். சத்ருவோ, சர்ப்பமோ எதிர்ப்பட்டால் என்ன செய்வாயோ, அது போல ராஜா தசரதரிடம் நீ நடந்து கொள்ள வேண்டும். சுகமாக இருக்க வேண்டியவள் நீ. பொய்யான சமாதான வார்த்தைகளால், உன்னை ஏமாற்றி விட்டு, ராமனை ராஜ்யத்தில் நிலை நிறுத்தப் பார்க்கிறானே. நீ பந்துக்களுடன் அழிந்ததாகவே நினைத்துக் கொள். இப்போதும் மோசம் இல்லை. கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் உனக்கு நன்மையைத் தேடிக்கொள். சீக்கிரம். உன் மகனையும் என்னையும் காப்பாற்று. எதுவும் புரியாதது போல விழிக்கிறாயே. மந்தரையின் வார்த்தைகளைக் கேட்டு படுக்கையிலிருந்து எழுந்து வந்த கைகேயி, சுபமான முக விலாஸம் உடையவளான கைகேயி, மிகவும் சந்தோஷமாக சரத்கால சந்திர கிரணம் போல ஆச்சர்யம் அடைந்தவளாக, ஒரு ஆபரணத்தை கூனிக்கு கொடுத்தாள். அவளைப் பார்த்து எனக்கு மிகவும் பிரியமான விஷயத்தை சொல்லியிருக்கிறாய், மந்தரா, மிகவும் சந்தோஷம். உனக்கு வேறு என்ன வேண்டும் கேள், ராமனோ, பரதனோ, இருவரில் நான் வித்தியாசமே கண்டதில்லை. அதனால் அரசன் ராமனுக்கு முடி சூட்டுவதில் நான் சந்தோஷமே அடைகிறேன். இதை விட பிரியமான விஷயம் இருக்க முடியுமா? நல்ல வார்த்தை சொன்னாய். என்ன வேண்டுமோ கேள் தருகிறேன். இந்த நல்ல செய்தியை எனக்கு சொன்ன உனக்கு வேண்டியதை தருவேன் என்றாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் மந்த2ரா பரிதே3வனம் என்ற ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 8 (85) மந்தரோபஜாப: (மந்தரையின் தவறான அறிவுரை)
மந்தரை அவளை அசூஜையுடன் பார்த்துக் கொண்டு, கோபமும் துக்கமும் பொங்க அவள் கொடுத்த ஆபரணத்தையும் வீசி விட்டு, மேலும் தன் கருத்தை அவள் மேல் உரையேற்றினாள். ஏ அசட்டுப் பெண்ணே | வேண்டாத இடத்தில் இது என்ன குதூகலம் ? சோக சாகரத்தில் மூழ்கி கொண்டிருக்கிறாய். அதை அறியாமல் சந்தோஷம் என்கிறாயே. உன்னைப் பார்த்து சிரிக்கத் தான் தோன்றுகிறது. துக்கமே அறியாத நல்ல பெண் நீ. வருத்தப் பட வேண்டிய விஷயத்திலும் மகிழ்ச்சியடைகிறாய். எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது. புத்தியில்லாமல் இப்படி பேசுகிறாயே. உனக்கு எப்படி புரிய வைப்பேன்? சக்களத்தி புத்திரன் மேன்மையடைகிறான் என்றால் உன் பகைவன் மேன்மையடைகிறான். அது உனக்கு ம்ருத்யுவுக்கு சமம் இல்லையா? பரதனிடத்தில் தான் ராஜ்ய விஷயத்தில் ராமனுக்கும் பயம். அது தான் நான் கவலைப் படுகிறேன். பயந்தவர்களிடம் தான் பயம் தோன்றும். லக்ஷ்மணன் நல்லவன். ராமனே சகலமும் என்று இருப்பவன். அதே போல சத்ருக்னன் பரதனைச் சார்ந்து இருக்கிறான். மற்ற இருவர்களும் பரதனுக்கும் இளையவர்களே. ராமனுக்கு அடுத்துப் பிறந்தவன் பரதனே. அதனால் ராஜ்யத்திற்கு உரிமை கொண்டாட, ராமனுக்கு போட்டியாக வரக் கூடியவன் பரதன் தான் என்பதால், உன் மகனை நினைத்து நான் வருந்துகிறேன். க்ஷத்திரிய தர்மத்தை கவனித்து பார்த்தால், அரசர்கள் புத்திசாலிகளாக இருப்பதோடு, பாபம் செய்வதில் அஞ்சாதவர்களாகவும் இருப்பார்கள். அதனால் உன் மகன் பரதன் ராமனிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கௌசல்யை அதிர்ஷ்டசாலி. அவள் பிள்ளை முடி சூடப் போகிறான். நாளைக் காலை புஷ்ய நக்ஷத்திரத்தில் அவனுக்கு முடி சூட்டு விழாவை பிராம்மணோத்தமர்கள் கூடி கோலாகலமாக நடத்தி வைப்பார்கள். வசுமதியை (பூமியை) அடைந்து ராஜாவாக சந்தோஷமாக இருக்கும் பொழுது, நீ கூப்பிய கரங்களுடன், ராஜ மாதாவான கௌசல்யைக்கு குற்றேவல் செய்ய வேண்டியிருக்கும். எங்களுடன் கூட அவளுக்கு கைங்கர்யம் செய்ய தொடர்ந்து வருவாய். உன் மகன் ராமன் இட்ட வேலையை செய்யட்டும். ராமன் சம்பந்தப் பட்ட பெண்கள் மகா சந்தோஷமாக ஆவார்கள். உன் மருமகள், பரதனுக்கு ஏற்பட்ட தாழ்வினால் முகம் வாடி இருப்பாள். இவ்வளவு சொல்லிய மந்தரையை அலட்சியப் படுத்தி கைகேயி, ராமனுடைய குணங்களையே புகழ்ந்து பேசினாள். அரசனுடைய மூத்த மகன். தர்மம் அறிந்தவன். குரு ஜனங்களுக்கு பிரியமானவன். செய் நன்றி மறவாதவன். வாக்கு மீறாதவன். சத்யவாதி. ஒழுக்கம் தவறாதவன். அதனால் யுவராஜா பதவிக்கு ஏற்றவனே. அவன் தீர்காயுஸாக இருக்கட்டும். சகோதரர்களையும் தன் கீழ் வேலை பார்க்கும் மற்றவர்களையும் தந்தைக்கு சமமாக இருந்து பாதுகாப்பான். இந்த ராமனுக்கு அபிஷேகம் என்று கேட்டு ஏன் வருந்துகிறாய்? கூனியே | தந்தை பாட்டன் வழி வந்த ராஜ்யத்தை ராமனுக்கு பிறகு, நூறு வருஷமானாலும் பரதன் அடையத் தான் போகிறான். மந்தரையே, நல்ல காலம் பிறந்திருக்கிறது. நெருப்பினால் சுட்டது போல அவஸ்தை படுகிறாய். பல மங்களங்கள் வர இருக்கின்றன, ஏன் வருந்துகிறாய்? எனக்கு பரதன் எப்படி பிரியமானவனோ, அதை விட அதிகமாக ராமனும் பிரியமானவனே. கௌசல்யையை விட அதிகமாக என்னிடம் அன்புடன் பணிவிடைகள் செய்து வருகிறான். ராமனுக்கு ராஜ்யம் என்றால் அது பரதனுக்கும் தான். தன்னைப் போலவே சகோதரர்களையும் ராமன் மதிக்கத் தெரிந்தவன். கைகேயியின் இந்த வார்த்தைகளை கேட்டு, மந்தரை பெருமூச்சு விட்டாள். அதிக துக்கத்துடன் தன் எண்ணத்தை வலியுறுத்தி கைகேயியிடம் பேசினாள். உன் அறியாமையால், இந்த செயலில் உள்ள அனர்த்தத்தை உணராமல் பிதற்றுகிறாய். உன்னையே நீ தெரிந்து கொள்ளவில்லையே. சோகமும் துக்கமும் சூழ்ந்து நிற்கிறது. சோக சாகரத்தில் மூழ்கி கொண்டிருக்கிறாய். அதையும் தெரிந்து கொள்ளவில்லை. ராகவனான ராமன் அரசனானால், அவனுக்குப் பின் அவன் மகன் அரசனாவான். அவனுக்கு பின் அவன் மகன். ராஜ வம்சம் இப்படித்தான் போகும். பரதன் பரிகாசத்துக்கு ஆளாவான். அரசனுடைய புத்திரர்கள் எல்லோருமே அரசனாக முடியுமா? அதனால் மூத்த மகன் தான் ராஜ்யத்துக்கு என்று ராஜ தர்மம் அறிந்த பெரியவர்கள் தீர்மானித்து இருக்கிறார்கள். அழகியே | மற்றவர்கள் என்ன குணவானாக இருந்தாலும், மூத்த மகன் தான் பட்டத்துக்கு உரியவன். அவன் மூலம் ராஜ வம்சம் தொடரும். அதனால் உன் மகன் எதுவும் கிடைக்காமல், அனாதையாக நிற்பான். ராஜ வம்சமோ, சுகமோ எதுவுமே அவனுக்கு இனி கிடையாது. நான் உனக்கு புத்தி சொல்லத் தான் வந்தேன். நீ என்னையும் அறிந்து கொள்ளாமல் ஏசுகிறாய். சக்களத்தியின் நல்ல காலம், நீ எனக்கு வரங்கள் தருவதாக சொல்கிறாய். பார்த்துக் கொண்டே இரு. இடையூறு இன்றி ராஜ்யம் கைக்கு வந்ததும் ராமன் பரதனை நாடு கடத்தி விடுவான். அதோடு நிறுத்துகிறானோ, உலகத்தை விட்டே துரத்துகிறானோ. குழந்தை என்று பரதனை மாமன் வீட்டுக்கு நீயே அனுப்பி வைத்திருக்கிறாய். அருகில் இருந்தால் தான் பாசம் இருக்கும். மரம், செடி, கொடிகள் கூட எதிரில் இருக்கும் பொழுது தான் பாசம் ஏற்படும். பரதன் மட்டுமல்லாமல் சத்ருக்னனையும் அனுப்பி வைத்திருக்கிறாய். இவனாவது பரதனுக்கு பரிந்து பேசுவான். லக்ஷ்மணன் ராமனுக்கு கூடவே இருப்பது போல பரதனுக்கு சத்ருக்னன். லக்ஷ்மணனை ராமன் பாதுகாத்துக் கொள்வான். அஸ்வினி குமாரர்கள் போல இவர்கள் இருவரின் ஒற்றுமை தெரிந்ததே. அதனால் லக்ஷ்மணனிடத்தில் ராமனுக்கு பயம் இல்லை. ஆனால் பரதனிடத்தில் அப்படி இருக்க மாட்டான். சந்தேகம் இல்லாமல் பரதனை அடக்கி ஆளத்தான் முனைவான். அதனால் தேவி, இந்த ராஜமாளிகையை விட்டு உன் மகன் வனத்திற்கு போகட்டும். இதில் தான் உனக்கும் நன்மை. எனக்கும் சரியென்று தோன்றுகிறது. உன்னைச் சார்ந்தவர்களும் க்ஷேமமாக இருப்பார்கள். அல்லது, இதே ராஜ்யத்தை பரதன் அரசனிடமிருந்தே பெற்றால், தர்ம வழியில் அரசனே கொடுத்து விட்டாலும், ராமன் உடன் பிறந்த சத்ருவாக ஆவான். உன் மகன் சுகமாக இருக்கப் பிறந்தவன். செல்வம் நிறைந்து வளமாக இருந்து விட்டு, செல்வமழிந்து எப்படி மற்றவர்களை அண்டி இருக்கப் போகிறாய்? யானைக் கூட்டத்தை சிங்கம் துரத்துவது போல, உன் மகனை ராமன் துரத்தப் போகிறான். உன் மகனை காப்பாற்று. செல்வச் செழிப்பில், கர்வத்தோடு, ராம மாதாவை பல முறை இகழ்ந்து பேசி, நடந்து கொண்டிருக்கிறாய். சக்களத்தியான அவள், இப்பொழுது விரோதம் பாராட்ட மாட்டாள் என்பது என்ன நிச்சயம். ராமன் எப்பொழுது சமுத்திரம் முதல் மலையடிவாரம் வரை உள்ள இந்த ராஜ்யத்தை அடைகிறானோ, அப்பொழுதே நீ அசுபமான அவமானத்தையும், தீனம் (தாழ்வையும்) பரதனோடு சேர்ந்து அனுபவிக்கப் போகிறாய். பா4மினி | ராமன் ராஜ்யத்தை அடைந்தால், பரதன் இருக்கும் இடம் தெரியாமல் போவான். அதனால் யோசித்துக் கொள். தன் மகனுக்கு ராஜ்யமும், மற்றவனுக்கு நாடு கடத்தலும் இன்றே யோசித்து செயல் படுத்து.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், மந்தரோப ஜாபம் என்ற எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 9 ராம ப்ரவாசனோபாய சிந்தா (ராமனை நாடு கடத்தும் யோசனை)
மந்தரை இவ்வாறு தூண்டி விடவும், கைகேயி கோபம் அடைந்தாள். கண்கள் சிவக்க பெருமூச்சு விட்டுக் கொண்டு மந்தரையைப் பார்த்து சொல்லலானாள். இன்று, ராமனை உடனே காட்டுக்கு போகும்படி செய்வேன். யுவராஜ்யத்தில் சீக்கிரமே பரதனை முடி சூட்ட வைப்பேன். மந்தரே, கொஞ்சம் யோசித்து சொல்லேன். என்ன உபாயம் செய்து இந்த எண்ணத்தை செயல் படுத்துவது. ராஜ்யம் பரதனுக்குத்தான் கிடைக்க வேண்டும். ஒரு போதும் அது ராமன் கைக்குப் போய் சேர விடக் கூடாது. பாபத்தையே காணும் குணமுடைய மந்தரை மகிழ்ந்தாள். ராமனுக்கு கெடுதலை விரும்புபவளாக, கைகேயியிக்கு புத்தி சொன்னாள். கைகேயி, பயப்படாதே. நான் உன் மகன் யுவராஜாவாக முடி சூட வழி சொல்கிறேன். உனக்கு நிஜமாகவே நினைவு இல்லையா? இல்லை தெரிந்திருந்தும் தெரியாதது போல பேசுகிறாயா? உன் மனதில் உள்ளதையே நான் சொல்லி கேட்க வேண்டும் என்று பார்க்கிறாயோ. அல்லது நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றாலும் நான் சொல்கிறேன் கேள். கேட்டு விட்டு மேற் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். இதைக் கேட்டு தன் படுக்கையிலிருந்து ஓரளவு எழுந்து அமர்ந்தவளாக, தானாக அமர்ந்துவிட்ட மந்தரையைப் பார்த்து கேட்டாள். மந்தரா சொல்லு. என்ன உபாயம் செய்யலாம். ராமனுக்கு ராஜ்யம் போகக் கூடாது. என் பரதனுக்குத் தான் ராஜ்யம். பாப தர்சினியான மந்தரை, ராமனுக்கு கெடுதலையே எண்ணும் மந்திரை, கூனி, உபாயத்தைச் சொன்னாள்.
முன்பு ஒரு சமயம், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை மூண்டது. ராஜரிஷிகளுடன் கூட உன்னையும் அழைத்துக் கொண்டு, ராஜா இந்திரனுக்கு உதவி செய்யச் சென்றான். தண்டகா வனத்தை நோக்கித் தென் திசையில் –திமித்வஜன்- (மீன் கொடியை உடையவன்) என்ற அசுரனுடைய வைஜயந்தம் என்ற புகழ் பெற்ற ஊரை நோக்கிச் சென்றான். அந்த மாயையில் வல்ல சம்பாசுரன், இந்திரனுக்கு சமமாக போரிட்டான். அவனை ஜயிக்க இந்திரனால் முடியவில்லை. அந்த யுத்தத்தில் அடிபட்டு ரணமான ஜனங்களை, இரவில் தூங்கும் பொழுது,
படகுகளில் வந்து ராக்ஷஸர்கள் கொன்று விட்டுச் சென்றனர். அந்த யுத்தத்தில் தசரத ராஜா, அசகாய சூரனாக போரிட்டான். அந்த அசுரர்களின் பாணங்களால் சல்லடையாகத் துளைக்கப்பட்டான். நினைவிழந்து கிடந்தவனை, போர்க் களத்திலிருந்து அகற்றிக் கொண்டு வந்து நீ பணிவிடை செய்து உயிர் ஊட்டினாய். அதனால் மகிழ்ந்த அவன் இரண்டு வரங்கள், உனக்கு கொடுத்தான். தேவையான பொழுது வாங்கிக் கொள்கிறேன் என்று நீ அதை அப்பொழுது உடனே வாங்கிக் கொள்ளவில்லை. அரசனும் சம்மதித்து தேவையான பொழுது கேள் என்று சொன்னான். எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறாயா? நீயே தான் என்னிடம் இவ்விவரங்களை சொல்லி இருக்கிறாய். இந்த சம்பவத்தை நீ என்னிடம் சொன்னதை, உன்னிடத்தில் என் சினேகம் காரணமாக நான் மனதில் வைத்துக் கொண்டு இருந்திருக்கிறேன். ராமன் முடி சூட்டு வைபவங்களை நிறுத்து. அதே மூச்சில் ராமனை பதினான்கு வருஷம் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேள். பதினான்கு வருஷ காலம் ராமன் நாட்டை விட்டு வனங்களில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் சமயம், ப்ரஜைகள் பரதனிடம் அன்புடையவர்கள் ஆகி விடுவார்கள். அசைக்க முடியாதபடி பரதன் ராஜ்யத்தில் ஸ்திரமாகி விடுவான். அஸ்வபதியின் மகளே, மிகுந்த கோபம் கொண்டவள் போல கோப க்ருஹம் சென்று பூமியில் அழுக்கு வஸ்திரங்களை உடுத்திக் கொண்டவளாக படுத்துக் கொள். அரசன் வந்தால் ஏறிட்டும் பார்க்காதே. பேச்சும் கொடுக்காதே. அரசனைக் கண்டவுடன் மிகுந்த துக்கத்துடன் பலமாக அழு. உன் கணவனுக்கு நீ மிகவும் பிரியமானவள். அதில் சந்தேகமேயில்லை. உனக்காக அந்த அரசன் நெருப்பில் கூட குதிக்கக் கூடியவன். உன்னை கோபத்துடன் காணச் சகிக்க மாட்டான். உனக்கு கோபம் வரும் என்றால் அந்த செயலையே செய்யாதவன் அவன். உன்னை சமாதானப் படுத்த அரசன் தன் உயிரையே தியாகம் செய்ய தயங்க மாட்டான். அந்த சக்ரவர்த்தியான அரசன், உன் வார்த்தையை மீறி எதுவும் செய்யத் துணிய மாட்டான் என்பது நிச்சயம். மந்த புத்தியால், உன் கணவனிடம் உனக்கு உள்ள செல்வாக்கை உணராமல் இருக்கிறாய். ராஜா தசரதன், மணி, முத்து, தங்க, ரத்னங்கள், பல விதமாக கொடுத்து உன்னை சமாதானப் படுத்த முயலுவான். அவைகளை ஏறிட்டும் பார்க்காதே. சம்பாசுர யுத்தத்தில் உனக்கு கொடுத்த வரங்களை நினைவு படுத்து. இந்த பொருட்கள் விலை உயர்ந்ததானாலும் உன் கவனத்தை அவற்றில் செலுத்தாதே. ராகவன் (தசரதன்) தானே முன் வந்து இந்த வரங்களைத் தருவதாகச் சொன்னவுடன், ஒரு வரத்தால் ராமனுக்கு பதினான்கு வருஷம் வனவாசம் என்று கேட்டு வாங்கிக் கொள். பரதனை அரசன், உலக நாயகனாக ஆக்கட்டும். பதினான்கு வருஷம் நாட்டை விட்டு ராமன் வெளியில் இருக்கும் பொழுது, உன் மகன் த்ருடமாகவும், தன்னை முழுவதும் ஸ்திரப் படுத்திக் கொண்டவனாகவும் ஆகி விடுவான். ராமனை நாடு கடத்தும் வரத்தை முதலில் கேள். அதில் தான் உன் மகனுக்கு எல்லா விதமான செல்வமும் கிடைக்க வழி இருக்கிறது. இவ்வாறு நாட்டை விட்டு விரட்டினால் ராமன், (அராமன் ஆகி விடுவான்) இல்லாமல் போய் விடுவான். உன் பரதனும் (அமித்திரன்) மித்திரன் இல்லாதவனை அழித்தவனாக, அரசனாக ஆள்வான். ராமன் திரும்பி வரும் காலத்திற்குள், உன் மகன் தன்னை ஸ்திரமாக ஸ்தாபித்துக் கொண்டவனாக, அசைக்க முடியாத பலவானாக ஆகி விடுவான். தன் நண்பர்கள் மூலம் ஜனங்களை தன் வயப் படுத்திக் கொண்டு, நல்ல அரசன் என்று பெயர் பெற்று விடுவான். உனக்கு நேரம் ஆகிறது. அரசன் வரும் நேரம் ஆகி விட்டது. ராமனுக்கு முடி சூட்டுவதிலிருந்து உன் பக்கம் திருப்பிக் கொள்.
அனர்த்தம் என்று உணராமல், தனக்கு நன்மை என்று எண்ணி கைகேயி, கூனியின் வார்த்தைகளை அப்படியே மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டவளாக, தவறான வழியில் மகிழ்ச்சியோடு செல்லும் சிறு குழந்தை போல மகிழ்ச்சியுடன் கூனியிடம் மந்தரை, உலகில் உள்ள கூனிகளில் நீ மிகவும் புத்திசாலி தான். உன் அறிவுரையை மீற மாட்டேன். எனக்கு ஹிதத்தை நினைப்பவள் நீ ஒருத்தி தான். நீ சொல்லாமல் அரசன் செய்ய நினைத்த காரியத்தை நான் புரிந்து கொண்டிருக்க மாட்டேன். கோணலான சரீர அமைப்புக் கொண்ட கூனிகள் பயங்கரமாக இருப்பார்கள். ஆனால் நீ, தாமரை மலர் காற்றில் ஆடுவது போல இருக்கிறாய். என்ன, தோள் உயர்ந்து விட்டதால், சரீரத்தின் முன் பாகம் உள்ளடங்கி விட்டது. மற்றபடி குறுகிய இடையும், அகன்ற ஜகன பிரதேசமும், நிறைந்த மார்பகமும், விமலமான சந்திரன் போன்ற முகமும், எனக்கு முன்னால் வெண் பட்டு அணிந்து செல்லும் பொழுது ராஜ ஹம்ஸம் போல விளங்குகிறாய். சம்பாசுர யுத்தத்தில் அசுர ராஜனிடத்தில் ஆயிரக்கணக்காக மாயா யுத்தம் செய்தவை உன் முதுகு கூனலில் மறைந்து விட்டன போலும். பலவிதமான (மதி) அபிப்பிராயங்கள், க்ஷத்திர வித்தைகள், மாயைகள் இந்த உயர்ந்து நிற்கும் கூனலுக்குள் நிரம்பி இருக்கின்றன. இந்த தங்க மாலையை எடுத்துவிட்டு, ராமனும் காட்டுக்குப் போய், பரதனும் முடி சூட்டிக்கொண்ட பின், நல்ல சொக்கத் தங்கத்தால், உன் கூனல் முழுவதும் கவசமிடுகிறேன். முகத்தில் சுபமான ஜாத ரூபம் என்ற தங்கத்தால் திலகம் இடுவேன். பலவிதமான மங்கள ஆபரணங்களை அணிவிக்கிறேன். மந்தரையே, நல்ல வஸ்திரங்கள் அணிந்து தேவதை போல சஞ்சரிப்பாய். சந்திரனைக் கூப்பிடுவது போல உன் முகத்தால், எதிர்க்கும் ஜனங்களை வசை பாடிக் கொண்டு நீ அரச மாளிகையில் வளைய வருவாய். நீ எனக்கு எப்போதும் ஏவல் செய்வது போல, உனக்கு ஏவல் செய்ய கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று கேட்க, கூனிகளையே நியமிக்கிறேன். கைகேயி இவ்வாறு புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, இடை மறித்து கூனி சொன்னாள். தண்ணீர் வடிந்த பின் அணை கட்டி என்ன பயன்? படுக்கையில் படுத்திருப்பதை விட்டு எழுந்திரு. கல்யாணீ, அரசன் வரும் நேரமாகி விட்டது. அவனை எதிர் கொள்ள தயார் ஆவாய். தன் சௌபாக்ய மதம், கர்வமாக தலைக்கேற, கூனியுடன் சென்ற கைகேயி, கோபாகாரம் எனப்படும் கோபம் வந்தால் தங்கும் மாளிகை சென்றடைந்தாள். பல மதிப்புள்ள முத்து மாலைகளையும், உயர்ந்த ஆபரணங்களையும் களைந்து வீசி விட்டு, கூனியின் வார்த்தைகளில் மயங்கி, ஹேமோபமா (தங்கம் போன்றவள்- இதற்கு உரை சொல்லும் பொழுது – சரீரத்தால் மட்டும் பொன்னிறம் உடையவள் அல்ல. மனதாலும் சொக்கத் தங்கம் போன்றவள். அதனாலேயே கூனியின் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுக்கும்படி ஆயிற்று, என்கிறார்கள்) தரையில் படுத்தாள். இங்கேயே கிடந்து நான் இறந்து போனாலும் அரசனுக்குத் தெரியப் படுத்து. ராமன் வனம் சென்று, பரதன் முடி சூடும் வரை, எனக்கு இந்த ரத்னங்களாலோ, ஆபரணங்களோ ஒரு பயனும் இல்லை. ஆகாரமும் தேவையில்லை. ராமன் முடி சூடினால், அது என் வாழ்க்கையின் முடிவுக்கு வழி வகுத்ததாகும். இதன் பின்னும் கூனி அங்கேயே இருந்து, அந்த அரச குமாரியின் மனதைக் கலைக்கும்படி ராமனுக்கு விரோதமாக பேசிக் கொண்டே இருந்தாள். இனிமையான அந்த வார்த்தைகளின் விபரீதத்தை உணராமல் கைகேயி கேட்டுக் கொண்டிருந்தாள். ராமன் அரசனுக்கு எப்படி மகனோ அதே போலத்தான் பரதனும் மகனே. அதனால் நீ முயற்சி செய்து பரதனுக்கு முடி சூடச் சொல்வதில், தவறு எதுவுமில்லை. தயங்காமல் அரசனிடம் உனக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறுவாய். இப்படி திரும்பத் திரும்ப கூனி கூரிய அம்புகள் போன்ற தன் வார்த்தைகளால், குத்திக் கிளறுவது போல தன் கட்சியை வலுப் படுத்தும் வகையில் பேசப் பேச, கைகேயிக்கும் உஷ்ணம் ஏறியது. என் உயிர் போனாலும் விட மாட்டேன். ராமன் வனம் போனால் தான் என் மகன் தன் இஷ்டம் பூர்த்தியானவனாக ஆவான். எனக்கு இந்த உயர்ந்த ஆசனங்களோ, மாலைகளோ, சந்தனம் பூசிக் கொள்வதோ, கண் மை போன்ற அழகு சாதனங்களோ, ஆகாரமோ, பானமோ எதுவுமே வேண்டாம். எனக்கு எதுவுமே வேண்டாம். ராமன் வனம் புகாத வரை, எனக்கு என் உயிரும் ஒரு பொருட்டே அல்ல. பறந்து கொண்டிருக்கும் பறவை ஒன்று திடுமென விழுந்தாற் போல கைகேயி ஆபரணங்கள் எதுவுமில்லாமல் தரையில் படுத்து புரண்டவளாக, தானே வளர்த்துக் கொண்ட ஆங்காரத்தீயில் மூழ்கியவளாக, முகத்தில் கருமை படர, உத்தமமான சுபமான மாலைகளையும் கலைந்து, ஆகாயம் நக்ஷத்திரங்கள் இல்லாமல் இருப்பது போல ஒளி யிழந்து காணப் பட்டாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், ராம ப்ரவாஸனோபாய சிந்தா என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 10 (87) கைகேயி அனுனய|| (கைகேயியை சம்மதிக்கச் செய்தல்)
கெட்ட எண்ணம் கொண்ட மந்தரை சொல்லிக் கொடுத்தபடி, கைகேயி, ஒரு சிறு குழந்தை அடிபட்டு, மயங்கி கிடப்பது போல பூமியில் கிடந்தாள். தான் செய்ய வேண்டியது என்ன என்று மந்தரையுடன் கலந்து பேசி தீர்மானித்துக் கொண்டு தன் செயலில் எள்ளளவும் சந்தேகம் இல்லாதவளாக (நன்மைக்காகவே என்ற எண்ணத்துடன்) பெருமூச்சு விட்டுக் கொண்டு, நாக கன்னிகை போல மந்தரையின் வார்த்தைக்கு கட்டுபட்டு ஆடிக் கொண்டிருந்தாள். ஒரு முஹுர்த்த நேரம் தனக்குள் யோசித்து முடிவு செய்து கொண்டு தன் தோழியாகி விட்ட மந்தரையிடம் விவரித்தாள்.
செல்வத்தையே குறியாக கொண்ட மந்தரை மகிழ்ந்தாள். முகத்தை சுருக்கிக் கொண்டு, திவ்யமான ஆபரணங்களையும், முத்து மாலைகளையும், விசித்ரமான மற்ற ஆபரணங்களையும் கழற்றி கீழே வைத்தாள். ஆகாயத்தை நக்ஷத்திரங்கள் அலங்கரிப்பது போல அவை அந்த தரையை அலங்கரித்தன. அந்த க்ரோத க்ருஹத்தில் அழுக்கு வஸ்திரத்தை உடுத்திக் கொண்டு, ஒரு பக்கமாக தலையை இறுக்க முடிந்து கொண்டு, விதியின் கை பொம்மையாக கிடந்தாள். இங்கு, மகாராஜா, ராமனின் முடி சூட்டு விழாவிற்காக, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு, அனுமதி கொடுத்து அனுப்ப வேண்டியவர்களை அனுப்பி விட்டு மாளிகையின் உள்ளே நுழைந்தார். மனதினுள், ராமனுக்கு முடி சூட்டு வைபவத்தையே திரும்ப திரும்ப அசை போட்டபடி, பிரியமான மனைவியிடம், பிரியமான விஷயத்தை தானே சொல்ல விரும்பி, அந்தஃபுரத்தில் கைகேயியின் இருப்பிடம் நோக்கி நடந்தார். வெண் மேகம் சூழ்ந்த ஆகாயத்தில், சந்திரனை ராகு பிடிக்க காத்திருப்பது போல, கிளிகளும், மயில்களும் க்ரௌஞ்ச பக்ஷிகளும், ஹம்ஸங்களும் வளர்க்கப் பட்டு வரும் அந்த மா ளி கையினுள் நுழைந்தார். வாத்யங்களின் ஓசை நிறைந்திருந்தது. குப்ஜா எனும் கூனிகளும், சிறு உருவம் உடைய (வாமன) பெண்களும் நடமாடிக் கொண்டிருந்தனர். (ஏவல் செய்பவர்கள்) லதா க்ருஹங்களும், சித்ர சாலைகளும், சம்பக, அசோக மரங்கள் நிறைந்து அழகு சேர்க்கும் விதமாக, அழகிய வெள்ளி, தங்க தகடுகள் வேயப் பெற்ற முன்னறைகள். சுற்றிலும், எப்பொழுதும் மலரும் மலர்களைக் கொண்ட நந்தவனம். அழகிய ஆசனங்களுடன் தோட்டங்கள். அன்னம், பானம், பலகாரங்கள் பலவிதமாக தயார் செய்யப் பட்டு, யார் எப்பொழுது வந்தாலும், நன்கு உபசரிக்கப் பட்டு வயிராற உண்டு மகிழ்ந்து செல்லும்படியாக இருந்த அறைகளும், தேவர்களுக்கு சமமாக அலங்கரித்துக் கொள்ள ஆபரணங்களுமாக இருந்த அறைகளைக் கடந்து தசரத ராஜா, தன் அறைக்கு வந்தார். மகாராணியான கைகேயியை அங்கு காணாமல் திகைத்தார். உத்தமமான சயனம் (படுக்கை) கேட்பாரின்றி கிடக்க, மிகவும் வேட்கையுடன் வந்திருந்த அரசன் காம வசம் ஆனார். அங்குள்ளோரை விசாரித்தார். இதற்கு முன் ராணி இந்த நேரத்தில் எங்கும் சென்றதில்லையே. அரசனின் வருகையை எதிர் நோக்கியே இருப்பவள் இன்று எங்கு சென்றாள்? ஒரு போதும் அரசன் அந்த மாளிகையை சூன்யமாகக் கண்டதில்லை. கைகேயியைப் பற்றி விசாரிக்கவும், ஒரு காவல் பணிப் பெண் நடுங்கிக் கொண்டு, கை கூப்பியபடி, தேவனே, தேவி, மிகவும் கோபித்துக் கொண்டு கோபாக்ரஹம் சென்று விட்டாள் என்றாள்.
இந்த செய்தியை நம்பவும் முடியாமல், சஞ்சலமடைந்த மனதுடன், குழப்பத்துடன் க்ரோதாகாரம் எனும் மாளிகையை அடைந்த அரசன், தரையில் விழுந்து கிடந்த தேவியைக் கண்டார். கண்டதும், அரசனின் மனம் நெருப்பினால் சுட்டது போல வாடியது. துக்கம் பொங்க, அந்த வயது முதிர்ந்த அரசர், இள வயதினளான மனைவியை, உயிருக்கும் மேலாக நேசிக்கும் தன் பத்னியை, கல்மஷம் சற்றும் இல்லாதவன், பாபமே உருவாக தரையில் கிடந்த மனைவியைக் கண்டு உருகினார். பிடுங்கி எறியப் பட்ட கொடியைப் போலவும், தேவலோகத்திலிருந்து கீழே விழுந்த தேவதா ஸ்த்ரீயைப் போலவும் அடிபட்ட சிறு குழந்தை போலவும், கால் தடுக்கி விழுந்து விட்ட அப்ஸர ஸ்த்ரீயோ எனும் படி, அழகிய மாலை நழுவி விழுந்தது போலவும், மான் குட்டி ஒன்று தன்னைக் காத்துக் கொள்ள போராடுவது போலவும், வேடனால் விஷம் தோய்ந்த அம்பினால் அடிக்கப் பட்ட யானைக் குட்டி போலவும் கிடந்தவளை பெரிய யானை தடவிக்கொடுப்பது போல, அரசன் மிகவும் வாத்ஸல்யத்துடன் தொட்டார். மனதில் பலவிதமான கவலைகளுடன், பயத்துடனும், காமமும் அலைக்கழிக்க, அவளை அணைத்து சமாதான படுத்திய படி சொன்னார். தாமரை மலரின் இதழைப் போன்ற கண்களையுடைய அந்த பெண்ணிடம் மனதை பறி கொடுத்த கணவனாக, அவளிடம் பரிவுடன் விசாரித்தார். தேவி, இது போல கோபம் கொண்டு நான் கண்டதேயில்லையே. யார் உன்னை அவமானப் படுத்தியது? யார் உன்னை ஏவியிருக்கிறார்கள். என் மனம் துக்கம் அடையும் படி இந்த பூமியில் படுத்து, நான் உயிருடன் இருக்கையில் புழுதியில் படுத்து, ஏன் இந்த கோலம்? என் சித்தத்தை அலைக்கழிக்கிறாய். பஞ்ச பூதங்களால் ஆட்டுவிக்கப் படும் சேதனனைப் போல, நான் தவிக்கிறேன். என் சபையில் நல்ல வைத்யர்கள் இருக்கிறார்கள். என்னிடம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். என்ன வியாதி உன்னை வருத்துகிறது சொல், பாமினி, உன்னை உடனே நல்ல முறையில் குணப்படுத்தி விடுவார்கள். யாருக்கு என்ன செய்தால் உனக்கு மன சமாதானம் ஆகும் சொல். உடனே செய்கிறேன். யார் உனக்கு இஷ்டமில்லாததைச் செய்தார்கள்? சொல், அவர்களை தண்டிக்கிறேன். இதோ இப்பொழுதே சொல், யாருக்கு நல்லது, யாருக்கு கெடுதல் செய்ய வேண்டும் சொல். அழாதே, தாயே, அழாதே. வருந்தாதே. தேவி உன்னை வருத்திக் கொள்ளாதே. நீ கட்டளையிட்டால் எது வேண்டுமானாலும் செய்வேன். கொல்லத் தகாதவனைக் கொல்ல வேண்டுமா? கொலை தண்டனை பெற்றவனை விடுவிக்க வேண்டுமா? சொல். தரித்திரனை தனவானாக செய்ய வேண்டுமா? பணம் படைத்தவனை செல்லாக் காசு இல்லாதவனாக ஆக்க வேண்டுமா? நானும், என்னைச் சார்ந்த அனைத்துமே உன் வசத்தில் தானே உள்ளன. நீ சொல்லி எதையும் நான் மறுத்ததில்லையே. என் உயிரைக் கொடுக்கவும் சித்தமாக இருக்கிறேன். சொல். உன் மனதில் என்ன இருக்கிறது என்பதைச் சொல். என் பலம் நீ அறிந்ததே. சந்தேகம் கொள்ள வேண்டாம். நான் செய்துள்ள நற்காரியங்களின் பேரில் சபதமிட்டுச் சொல்கிறேன். என் பூமி விசாலமானது. சூரியனின் சக்கரம் சுழன்று முழு சுற்று வரும் வரை வியாபித்துள்ளது. கிழக்கு திசையினர், (த்ராவிடாஃ என்றும் பாடம்) சிந்து சௌவீர தேசத்தவர், தக்ஷிண தேசத்தினர், சௌராஷ்டிர தேசத்தினர், வங்க, அங்க, மகத, மத்ஸ்யர்கள் நிறைந்த காசி, கோசல தேசத்தவர், இங்கும் எங்கும் உற்பத்தியான பெரும் செல்வம், தன தான்ய, கால் நடைகள், இவைகளில் எது வேண்டுமானாலும் கேள், கைகேயி, எது உன் மனதிற்கு இசைந்ததோ, அதை தர நான் சித்தமாக இருக்கிறேன். இப்படி ஆயாசமாக ஏன் இருக்கிறாய்? எழுந்திரு, எழுந்திரு, பயப்படாதே. சோபனே, உண்மையைச் சொல். ஏன் பயப்படுகிறாய்? என்ன காரணம் என்று சொல், உடனே நான் நிவர்த்திக்கிறேன். சூரியனைக் கண்ட பனித்துளி போல உன் கஷ்டங்களை விலக்குகிறேன். இவ்வளவு சொன்ன பின் சமாதானம் அடைந்தவளாக, தான் சொல்லப் போகும் விஷயம், அரசனுக்கு அப்ரியம்- பிடிக்காமல் போகலாம் என்று தெரிந்திருந்தும், கணவனை மேலும் துன்புறுத்தும் விதமாக பேச முற்பட்டாள்.
இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், கைகேயி அனுனயஃ என்ற பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 11 (88) வரத்3வய நிர்ப4ந்த||(தனக்கு தந்த இரண்டு வரங்களையும் தரும்படி நிர்பந்தித்தல்)
மன்மதனுடைய கூரிய பாணங்களால் துளைக்கப் பட்டவனாக தன்னிடம் வந்து வேண்டும் அரசனிடம் கைகேயி கடுமையாக பேசினாள். யாரும் என்னை விட்டு போகவும் இல்லை. யாரும் என்னை அவமானப் படுத்தவும் இல்லை. எனக்கு ஒரு விருப்பம் உள்ளது. அதை தங்கள் மூமூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறேன். செய்வேன் என்று முதலில் பிரதிக்ஞை செய்து கொடுங்கள். பின் என் விருப்பதைச் சொல்கிறேன். இதைக் கேட்டு அரசன் சிரித்தான். அவளைப் பார்த்து பரிவுடன் தலையை கைகளில் தாங்கி, உச்சி முகர்ந்து, தரையில் அமர்ந்திருந்தவளிடம் அசடே, உனக்குத் தெரியாதா? உன்னை விட எனக்கு பிரியமானவர்கள், மனிதர்களுள் புலி போன்ற ஒரே மனிதனான என் ராமனைத் தவிர வேறு யார் உண்டு? மகாத்மாவான, ராகவர்களுள் முக்யமான, யாராலும் வெல்ல முடியாத பராக்ரமம் உடைய ராமன் பெயரில் சபதமிடுகிறேன். என் வாழ்க்கை யாரால் பயனுள்ளதாக ஆயிற்றோ, அந்த ராமன் பெயரால் சபதமிடுகிறேன். நீ சொல். உன் மனதில் உள்ளதைச் சொல். எந்த ராமனை முஹுர்த்த நேரம் காணாவிடில் தவித்துப் போவேனோ, உயிரையே இழந்து விட்டவன் போல வாட்டமடைவேனோ, அந்த ராமன் பேரில் சபதமிடுகிறேன். நீ சொல்வதை கண்டிப்பாக செய்வேன். மற்ற பிள்ளைகள், நான் எல்லோரையும் சேர்த்து ஒருவனை வேண்டு என்றால் எந்த ராமனை வேண்டுவேனோ, அவன் பேரில் சபதமிடுகிறேன். கைகேயி நீ விரும்புவதைத் தருவேன். என் உடலிலிருந்து ஹ்ருதயத்தை பிரித்து தர வேண்டுமானாலும் கேள். இதையெல்லாம் யோசித்து எது வேண்டும் என்று சொல். என் பலம் உனக்குத் தெரிந்ததே. என்னை சந்தேகப்படாதே. என் புண்யங்கள் அனைத்தின் பேரிலும் சபதமிட்டுச் சொல்கிறேன். நீ வேண்டுவதைத் தருவேன். இதையே எதிர் நோக்கி இருந்த கைகேயி, தன் வழிக்கு அவன் வந்து விட்டதை உணர்ந்து, சந்தோஷத்துடன் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினாள். அரசனுடைய சமாதானமான பதிலால், தன் இஷ்டம் நிறைவேறும் என்று நினைத்தவளாக, நம்பிக்கையோடு கடுமையான தன் விருப்பத்தை சொன்னாள். மகா பயங்கரமான, அந்தகனே வந்து நின்றது போன்ற கடுமையான சொற்கள் அவள் வாயிலிருந்து வெளிப்பட்டன. எனக்கு வரங்களைத் தருவதாக வரிசையாக சபதமிட்டு சொன்னாயே, அதை அக்னி முதல் முப்பத்து முக்கோடி தேவர்களும் கேட்கட்டும். சந்திரன், ஆதித்யன், ஆகாசமும், ராத்திரி, பகல் , திசைகளும், லோகங்களும், பூமியும், கந்தர்வ ராக்ஷஸ கூட்டங்களும், இரவில் சஞ்சரிக்கும் ஜீவன்களும்,
வீடுகளில் உள்ள குல தெய்வங்களும், மற்றும் உள்ள ஜீவ ஜந்துக்கள், பஞ்ச பூதங்களும் அறியட்டும். நீ பேசியதை, உன் சொல்லை கேட்கட்டும். தேவதைகளே, இந்த அரசன், சத்ய சந்தன், மகா தேஜஸ் உடையவன், தர்மம் அறிந்தவன், சுய கட்டுப்பாடு உடையவன், இந்த ராஜா எனக்கு வரம் கொடுத்திருக்கிறார். கேளுங்கள். ப்ருஹஸ்பதியைக் குறித்து சபதமிட்டு பின் சொல்லலானாள். உணர்ச்சி வசமானதில், வரத்தைக் கொடுத்து விட்ட அரசனைப் பார்த்து அரசனே, நினைவு படுத்திக் கொள். முன்பு ஒரு சமயம் தேவாசுரர்களுக்கு இடையில் நடந்த யுத்தத்தில், சத்ருக்கள் உங்களைத் தாக்கி, உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த உங்களை நான் காப்பாற்றியிருக்கிறேன். மிகவும் ஜாக்ரதையாக பாதுகாத்து தேற்றியிருக்கிறேன். அப்பொழுது எனக்கு வரம் தருவதாக சொன்னீர்கள். அந்த இரண்டு வரங்களையும் உடனே ஏற்றுக் கொள்ளாமல் உங்களிடமே விட்டு வைத்தேன். இப்பொழுது அந்த வரங்களை வேண்டுகிறேன். எனக்குத் தருவதாக வாக்களித்த வரங்களைத் தான் வேண்டுகிறேன். மறுத்தால், எனக்கு தாங்கள் செய்யும் மிகப் பெரிய அவமானமாக கருதி உயிரை விடுவேன். இப்படி வார்த்தைகளாலேயே கைகேயி அரசனை அலைக்கழித்து தன் வசம் ஆக்கிக் கொண்டாள். தானே வலையில் விழுந்த மான் போல ஆனான் அரசன். வரம் தருபவனான தசரத ராஜா, செய்வதறியாது மயங்கி நின்றிருந்த சமயம், கைகேயி, வஞ்சகமான தன் எண்ணத்தை நயமாக விவரித்தாள். மஹீபதே, அந்த சமயம் நீங்கள் வாக்களித்த இரண்டு வரங்களையும் இப்பொழுது பெற்றுக் கொள்கிறேன். ராகவனான ராமனுக்கு முடி சூட்டு விழா, அபிஷேகம் என்று செய்யப் பட்டுள்ள இந்த ஏற்பாடுகளைக் கொண்டு என் பரதனுக்கு ராஜ்யாபிஷேகம் நடக்கட்டும். மிகவும் மகிழ்ந்து இரண்டாவது வரம் தந்தீர்களே, தேவாசுர யுத்த சமயம், அதையும் கேட்கும் காலம் வந்து விட்டது. ஒன்பதும் ஐந்துமாக வருஷங்கள் தண்டகா வனத்தில் வல்கலையும், ஜடையும் தரித்து ராமன் தபஸ்வியாக ஆகட்டும். என் பரதன் எந்த வித தடையுமின்றி இந்த யுவ ராஜா பதவியை அனுபவிக்க வேண்டும். நீங்கள் கொடுத்த வரத்தை தான் கேட்கிறேன். இது தான் என் ஆசை. இன்றே ராமன், வனம் புறப்பட்டுச் செல்வதை நான் காண வேண்டும். அரசனே, நீங்கள் சத்ய சந்தனான ராஜ ராஜாவாக ஆகுங்கள். உங்கள் குலத்தையும் சீலத்தையும், வாழ்க்கையையும் ரக்ஷித்துக் கொள்ளுங்கள். தபோதனர்கள் ஒரே இடத்தில் வசிப்பதை உத்தமமாக கருத மாட்டார்கள். அதே போல வாக்குத் தவறுவதும் அவர்களுக்கு அழகல்ல.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், வரத்3வய நிர்பந்தஃ என்ற பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 12 (89) கைகேயி நிவர்த்தன பிரயாஸ|| (கைகேயியை திருத்த முயற்சி)
கைகேயியின் இந்த கடும் வார்த்தைகளைக் கேட்டு அரசன் நிலை குலைந்து போனான். ஒரு முஹுர்த்த காலம் தவித்தான். எனக்கு புத்தி பேதலித்து விட்டதா? கனவு காண்கிறேனா? எந்த துர்க்3ரஹமாவது என்னை பிடித்து ஆட்டுவிக்கிறதா? மனதின் உபத்ரவமா? இப்படி பலவும் எண்ணி அரசன் மறுகினான். கைகேயியின் வார்த்தைகளால் அடிபட்டு நினைவிழந்தவன், நினைவு திரும்பியதும், கொடூரமான பெண் புலியை எதிரில் கண்ட மான் குட்டி போலானான். கடும் விஷம் கொண்ட நாகம் மந்திரத்தால் கட்டுபடுத்தப் பட்டு செய்வதறியாது திகைப்பது போல திகைத்து நின்றான். மிகவும் கோபமும், தாபமுமாக, (அஹோ| திக்|) என்று தன்னைத் தானே நொந்து கொண்டவனாக, மறுபடியும் நினைவிழந்தான். சோகம் அவனை தள்ளி விட்டது. வெகு நேரம் சென்ற பின் திரும்பவும் நினைவு வந்ததும், வருத்தத்துடன், கண்களால் அவளை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டு, கோபத்துடன் கைகேயியிடம் சொன்னான். இந்த குலத்தைக் கெடுக்க வந்த துஷ்ட சாரித்ரே | கொடூரமானவளே | ராமன் உனக்கு என்ன கெடுதல் செய்தான்? நான் தான் என்ன கெடுதல் செய்தேன்? எப்பொழுதும் தன் தாயாருக்கு சமமாக உன்னை எண்ணி மரியாதை கொடுத்து வந்திருக்கிறான். அவனுக்கு ஒரு அனர்த்தம் செய்ய, இப்படி பிடிவாதம் கொண்டு நிற்கிறாயே. என்னை நானே அழித்துக் கொள்ளத்தான் இந்த மாளிகைக்குள் வரவழைத்தாயோ? கடும் விஷம் கொண்ட பாம்பு நீ என்று அறியாமல் போனேன். உலகம் பூராவும் ராமனின் குணங்களை பாராட்டுகிறது. எந்த அபராதத்தை உத்தேசித்து, என் உயிருக்குயிரான மகனை வெளி யேற்றுவேன். கௌசல்யையை விட்டாலும், சுமித்திரையை விட்டாலும், ராஜ்ய லக்ஷ்மியை விட்டாலும், என் உயிரையே விட்டாலும் விடுவேன். தந்தையிடம் பற்று மிக்க ராமனை நான் தியாகம் செய்ய மாட்டேன். என் மூத்த மகனைக் காணும் போதெல்லாம் என் மனதில் அன்பு பிரவாகம் எடுத்து ஓடும். அவனைக் காணாத பொழுது என் உணர்வையே இழந்தது போலாவேன். உலகமே சூரியன் இல்லாது ஸ்தம்பித்து நிற்கட்டும். பயிர்கள் ஜலமில்லாமல் வாடட்டும். ராமன் இல்லாமல் என் உடலில் உயிர் தரிக்காது. பாபம் செய்யத் துணிந்தவளே| இந்த பாப காரியத்தை செய்யும் எண்ணத்தை விட்டு விடு. உன் கால்களில் தலை வைத்து வணங்க வேண்டுமானாலும் வணங்குகிறேன். கருணை காட்டு. பாபியே| இது போன்ற கொடிய எண்ணம் உனக்கு ஏன் வந்தது? என்னை பரீக்ஷை செய்து பார்க்கிறாயா? பரதனிடத்தில் எனக்கு அன்பு உண்டா என்று சோதித்து பார்க்கிறாயா? ராமனை புகழ்ந்து பேசியது உனக்கு பிடிக்கவில்லையா? எப்படியும் அவன் என் மூத்த மகன். தர்மம் அறிந்தவன். ஸ்ரீமானான அவன் என்னை விட தர்மத்தில் சிறந்தவன். அதைக் கேட்டு என்னை வருத்துகிறாயா? சூன்யமான இந்த மாளிகையில் நுழைந்திருக்கிறாய். இங்குள்ள துர்தேவதைகள் உன்னை பிடித்துக் கொண்டு விட்டதோ? எப்பொழுதும் நயமாக பேசுபவளே, இப்படி ஒரு அநியாயமான வார்த்தை உன் வாயில் இக்ஷ்வாகு குலத்திற்கு வந்து சேர்ந்த உன்னால் எப்படி சொல்ல முடிகிறது. தவறாகவோ, சொல்லக் கூடாததையோ நான் எப்பொழுதும் உன்னிடம் பேசியதில்லையே. உனக்கு ராமன் பரதனுக்கும் மேல் என்று நீயே பலமுறை கதை கதையாக சொல்லியிருக்கிறாய். அந்த தர்மாத்மாவை வனம் போகச் சொல்ல எப்படி துணிந்தாய்? அதுவும் ஒன்பது வருஷம், பின்னுமொரு ஐந்து வருஷம் என்று கேட்கிறாயே. தர்மத்தில் மனம் ஒன்றி இருக்கும் ராமன் மிகவும் சுகுமாரன், அவனை எப்படி பயங்கரமான வனத்தில் வாசம் செய்ய அனுப்புவேன். நீ தான் எப்படி துணிந்து கேட்கிறாய். உனக்கு சேவை செய்யும் ராமனை அபிராமனான ராமனை, அழகிய சுபமான கண்களை உடையவளே | எதற்காக இந்த வனவாசம். பரதனை விட அதிகமாக ராமன் தானே உனக்கு பணிவிடைகள் செய்து வந்திருக்கிறான். அதனால் பரதன் அருகில் இல்லாததை கூட உணரவில்லையே. நீ சொன்னதை உடனே செய்தும், உனக்கு மரியாதையும், கௌரவமும் அளித்து, பணிவிடைகளையும் குறைவில்லாமல் செய்து வந்திருக்கிறான். அவனிடம் என்ன துவேஷம். மனித ருஷபன் என்று சொல்லும்படி கம்பீரமான ராமனைத் தவிர வேறு யாரால் இப்படி நடந்து கொள்ள முடியும்? இவ்வளவு ஆயிரக் கணக்கான ஸ்த்ரீகள், பரிசாரிகைகள் நடமாடும் இடத்திலும், ராமனை இகழ்ந்து அபவாதமாக ஒரு சொல் சொல்ல அவன் இடம் அளித்ததில்லை. சுத்தமான மனதோடு எல்லா ஜீவன்களையும் சமாதானப் படுத்திக் கொண்டு, விஷயத்தில் ஈ.டுபட்டவர்களையும் பிரியமான வார்த்தைகளால் திருத்துகிறான். சத்யத்தால் உலகங்களை ஜயித்தவன். தீனர்களான ஏழைகளை தானம் கொடுத்து வசப்படுத்திக் கொள்கிறான். குரு ஜனங்களை தன் பணிவிடையால் வசப் படுத்திக் கொள்கிறான். யுத்தத்தில் சத்ருக்களை தன் பராக்ரமத்தால் ஜயிக்கிறான். ராகவனிடத்தில் என்ன இல்லை? சத்யம், தானம், தவம், த்யாகம், நட்பு, ஒழுக்கம், காருண்யம், நேர்மை, வித்யா, குருவிடம் பணிந்து இருத்தல் இவையனைத்தும் ராகவனிடத்தில் உள்ளன.
தேவர்களுக்கு சமமானவன், நேர்மையே உருவானவன், மகரிஷிகளுக்கு சமமான தேஜஸ் உடையவன். இந்த ராமனிடத்தில் எப்படி பாபத்தை செய்ய நினைக்கிறாய். மற்றவர்கள் அவனிடம் கடுமையாக, வன்மையாக பேசியதைக் கூட மறந்து விடுவான். தான் எப்பொழுதும் பிரியமாகவே பேசுவான். அவனிடத்தில் எப்படி சொல்லுவேன். உனக்காக, உன்னை திருப்தி படுத்த அவனிடம் இவ்வளவு தகாத வார்த்தைகளை சொல்ல எனக்கு நா எழ வேண்டுமே? அவனை விட்டால் எனக்கு வேறு கதியே இல்லையே. பொறுமை யாரிடத்தில் குடியிருக்கிறதோ, தவமும், த்யாகமும், சத்யமும், தர்மமும், செய் நன்றியும், ஜீவ ஜந்துக்களை சிறிதளவும் ஹிம்ஸை செய்யாத குணமும், உடைய ராமன் தானே எனக்கு கதி. கைகேயி, வயது முதிர்ந்து என் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கருணை காட்டு. தீனனாக செய்வதறியாமல் நிற்கும் என்னிடம் கருணை காட்டு. சமுத்திரம் சூழ்ந்த இந்த பூமியில் என்னவெல்லாம் தர முடியுமோ, அவ்வளவையும் உனக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த கோபத்தை விடு. கை கூப்பி வணங்குகிறேன். பாதங்களில் விழுகிறேன். ராமனுக்கு சரணம் அளி. என்னை அதர்மம் தொடராமல் இருக்கட்டும். இவ்வாறு புலம்பும் அரசனைப் பார்த்து கைகேயி மேலும் கடும் கோபமே கொண்டாள். அதிக ஆத்திரத்துடன் முன்னிலும் கடுமையாக பேசினாள். எனக்கு இரண்டு வரங்களைக் கொடுத்து விட்டு இப்பொழுது மறுக்கிறாயே, அரசனே| உன்னை உலகில் தார்மிகனாக ஏற்றுக் கொள்வார்களா? ராஜரிஷிகள் கூடும் சபையில் கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள் ? யார் தயவால் இன்று நான் உயிருடன் இருக்கிறேனோ, சமயத்தில் என்னைக் காப்பாற்றினாளோ அந்த கைகேயியிக்கு துரோகம் செய்து விட்டேன் என்று சொல்லுங்கள். அரச குலத்துக்கே இப்பொழுது ஒரு களங்கமாக ஆகிவிட்டீர்கள், அரசனே. இதோ வரம் கொடுத்து விட்டு, பின்னாலேயே வேறு ஏதேதோ பேசுகிறீர்கள். சிபி சக்ரவர்த்தி, புறாவுக்காக கழுகுக்கு தன் மாமிசத்தையே கொடுத்தான். அலர்க்கன் உத்தமமான கண்களை தானம் செய்து விட்டு நல்ல கதியை அடைந்தான். சமுத்திரம் சத்யத்திற்கு கட்டுப் பட்டு தன் எல்லையை மீறுவதில்லை. உங்களுடைய கெட்ட எண்ணம் எனக்குத் தெரிகிறது. தர்மத்தை விட்டு ராமனுக்கு முடி சூட்டிவிட்டு, கௌசல்யையோடு சுகமாக இருக்க விரும்புகிறாய். தர்மமோ, அதர்மமோ, சத்யமோ, அசத்யமோ, எதுவானாலும் சரி. இப்பொழுது என்னிடம் வாக்கு கொடுத்தது தான். இதில் மாற்றமே இல்லை. ஏராளமாக விஷம் குடித்து உன் எதிரிலேயே சாவேன். ராமனுக்கு முடி சூட்டி அரசனாக்க நினைத்தாயானால், மற்றவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டு ராம மாதா நிற்பதை பார்க்க நான் உயிருடன் இருக்க மாட்டேன். அதைக் காண்பதை விட எனக்கு மரணமே மேல். ராமனை காட்டுக்கு அனுப்பாதவரை எனக்கு நிம்மதியில்லை. மகிழ்ச்சி இல்லை. என் பேரிலும், பரதன் பேரிலும் சபதமிட்டு இதைச் சொல்வேன். கைகேயி இவ்வாறு சொல்லி நிறுத்தினாள். அழுது கொண்டிருந்த அரசனை அவள் சட்டை செய்யவும் இல்லை, பேச்சு கொடுக்கவும் இல்லை. கடுமையான இந்த வார்த்தைகளைக் கேட்டு அரசன் கலங்கினான்.
ராமனுக்கு வனவாசம், பரதனுக்கு ஐஸ்வர்யம் இதையே திரும்ப திரும்பச் சொல்லும் கைகேயியிடம் பேசவும் மனம் வரவில்லை. இந்திரியங்கள் நிலை குலைய ஒரு நிமிஷம் இருந்தான். இதுவரை பிரியமாக இருந்தவள், எப்படி இவ்வளவு கடும் சொற்களை சொல்பவளாக ஆனாள் என்று யோசிப்பது போல அவளை நிமிர்ந்து பார்த்தான். எப்பொழுதும் அவளைக் காணும் பொழுது ஏற்படும் சுகானுபவம் ஏற்படவில்லை. வஜ்ரம் போல அவளது வார்த்தைகள் ஹ்ருதயத்தை பிளந்தன. தான் செய்த சபதங்களையும் அதன் பின் விளைவுகளையும் நினைத்து ராமா என்று அழைத்தபடி வேரோடு சாய்ந்த மரம் போல கீழே விழுந்தான். உன்மத்தன் போல, மிகுந்த கஷ்டத்தில் இருப்பவனைப் போல, தன் தேஜஸை இழந்த மகா நாகம் – பெரிய யானை – போல விழுந்தான். பூமியில் கிடந்த அரசன் தீனமான குரலில் கைகேயியிடம் பேசினான். என்றுமில்லாமல் இந்த பொருளாசை எப்படி வந்தது? இதன் பலன் அனர்த்தம், தான் என்பது தெரியவில்லையா. ஏதோ பூத பிசாசுகளால் பீடிக்கப் பட்டவள் போல வெட்கமின்றி பேசுகிறாய். இப்படி ஒரு துர்குணம் கொண்டவள் என்பது எனக்கு முன்னால் தெரியாமல் போய் விட்டதே. குழந்தை போல வெகுளியாக இருந்தாய். இப்பொழுது விபரீதமாக உணருகிறேன். யாரிடம் உனக்கு பயம்? ஏன் இந்த விதமாக வரம் கேட்கிறாய். பரதன் அரியணையில் அமரவும், ராமன் வனம் போகவும் விரும்புகிறாய். எதற்கு இந்த விபரீத ஆசை. உலகத்துக்கும், பரதனுக்கும், உன் கணவனான எனக்கும் நன்மை விரும்புவாயானால், இந்த விபரீத ஆசையை விடு. கொலைக்கும் அஞ்சாத துர்குணம் கொண்டவளே. பாபத்தை சங்கல்பம் செய்து கொண்டு, அல்பமாக பேசுகிறாயே. என்னிடமோ ராமனிடமோ உனக்கு என்ன கஷ்டம், ஏன் இப்படி கெடுதல் செய்ய நினைக்கிறாய்? நீயாக நினைத்துக் கொண்டால் கூட நாங்கள் அதற்கு இடம் கொடுத்ததில்லையே. எப்படியோ ராமனை விரட்டி விட்டாலும் கூட பரதன் ராஜ்யத்தை ஆள முடியாது. ராமனை விடவும் அதிக தர்ம சிந்தனை உடையவன். வனம் போ என்று நான் சொன்னால், கேட்கும் ராமனது முகம் எப்படி வாடும். அதை நான் எப்படி சகிப்பேன். சந்திரனை கிரகங்களால் மறைத்தால் போல அவன் முகம் வாடுமோ? நான் என் நண்பர்களுடன் கூடி எடுத்த முடிவை இப்பொழுது மாற்றிக் கொண்டால், எல்லா திக்குகளிலும் இருந்து வந்துள்ள அரசர்கள் என்ன செய்வார்கள் ? இந்த இக்ஷ்வாகு ராஜன், வெகுகாலமாக ஆட்சி செய்தான், இப்பொழுது சிறு பிள்ளைத்தனமாக இப்படி ஒரு செயலை செய்கிறானே என்று தூற்ற மாட்டார்களா ? பல ஞானிகள், பெரியவர்கள் வந்து விசாரிப்பார்களே, என்ன சொல்வேன்? அவர்களிடம், கைகேயி பிடிவாதம் பிடித்தாள், அதனால் உத்தமமான என் மூத்த பிள்ளையை காட்டுக்கு விரட்டி விட்டேன் என்று சொல்வேனா? சத்யம் என்று இதைச் சொன்னால் மற்றது அசத்யமாகும். கௌசல்யையிடம் போய் உன் மகனை காட்டுக்கு அனுப்பி விட்டேன் என்று சொல்ல எனக்கு எப்படி தைரியம் வரும். இப்படி ஒரு பாபத்தை செய்யச் சொல்கிறாயே. கௌசல்யை தாஸி போலவும், சினேகிதி போலவும், என் மனைவியாகவும், சகோதரி போலவும், சமயங்களில் தாயார் போலவும் என்னிடம் நடந்து கொண்டிருக்கிறாள். எப்பொழுதும் என்னிடம் பிரியமாகவே பேசுவாள். அவளுக்கும் புத்திரனிடத்தில் அளவில்லாத அன்பு உண்டு. எப்பொழுதும் நன்மையையே நாடுபவள். இருந்தும், அவளை என் மரியாதைக்கும், மதிப்புக்கும் உரியவளாக இருந்தும், உன் காரணமாக அவளை அலட்சியப் படுத்தினேன். உனக்கு நான் வாரி வாரி செய்ததையெல்லாம் நினைத்தால் என் மனம் கொதிக்கிறது. கெடுதலை தரும் பதார்த்தங்களோடு அன்னத்தை உட்கொண்ட ஒருவன், வியாதியினால் தவிப்பது போல ராமனுக்கு கொடுத்ததை மாற்றி விட்டேன், இன்று காட்டுக்கு போகிறான் என்று அவளிடம் எப்படி சொல்வேன். இதை எல்லாம் பார்த்து சுமித்ரா நடுங்குவாள். என் அருகில் வரவே பயப்படுவாள். என்னை எப்படி நம்புவாள்? வைதேஹி என்ன நினைப்பாள்? இரண்டு விரும்பத்தகாத விஷயங்களை அவளிடம் சொன்னால் என்னை அற்பன் என்று நினைப்பாள். நானும் காலகதியடைந்து, ராமனும் வனத்துக்கு போய் விட்டால், வைதேஹி எப்படி காலம் கழிப்பாள்? இமயமலைச் சாரலில், கின்னரனான கணவனைப் பிரிந்த கின்னரி போல அழும் மைதிலியை காண நேர்ந்தால் நான் உயிர் வாழவே மாட்டேன். நீ விதவையாகி உன் புத்திரனோடு ராஜ்யத்தை அனுபவி. சதி என்று உன்னை நினைத்திருந்தேன். அசதி என்று இப்பொழுது தான் புரிகிறது. அளவுக்கு மீறி மதுவைக் குடித்தவன், விஷக் கன்னிகையை அழகி என்று நினைத்தது போல மோகம் என் கண்களை மறைத்து விட்டது. பொய்யான சமாதான வார்த்தைகள் பேசி என்னை சமாதான படுத்த முயலாதே. கீதத்தைக் கேட்டு மயங்கி வந்த மானை அடிப்பது போல அடித்து விட்டாய். பண்புள்ளவன் என்று நினைத்த பிராம்மணன், கள்ளுண்டால் பெரியவர்கள் ஒதுங்குவார்கள். தெருவில் அவனைக் கண்டால் விலகி நடப்பார்கள். இவன் புத்ரனையே விலை பேசி விட்டானே என்று என்னை திட்டுவார்கள். ஆ, இது என்ன துக்கம்? இது என்ன கஷ்டம். வார்த்தைகளே இல்லையே, உன்னைத் திட்ட. எப்பொழுதோ செய்த ஒரு அசுபமான காரியத்தின் பலன் இப்பொழுது வந்து தாக்குகிறது. பாபியான நீ என்னை காப்பாற்றியிருக்கவே வேண்டாம். அறியாமல் என் கழுத்தை இறுக்கும் கயிறாக வந்து சேர்ந்தாய். நீ எனக்கு ம்ருத்யு என்று அறியாமல் உன்னுடன் ரமித்தேன், தொடக் கூடாத க்ருஷ்ண சர்ப்பத்தை ஒரு சிறுவன் ரசசியமாக கைக்குள் பாதுகாத்து வைத்திருப்பதைப் போல உன்னை ரக்ஷித்தேன். தசரத ராஜா அறிவிலி, காமாத்மா. ஸ்த்ரீ (மனைவி) சொன்னாள் என்று புத்திரனை காட்டுக்கு அனுப்பி விட்டான் என்று என்னைத் தூற்றுவார்கள். விரதங்களையும் ப்ரும்மசர்யத்தையும் அனுசரிக்கும் பெரியவர்கள் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். என் மகன் என்னை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேச மாட்டான். வனம் போ என்று நான் சொன்னால், அப்படியே ஆகட்டும் என்று கிளம்பி விடுவான். நான் சொல்லி, அவன் எதிர்த்து பேசினாலும் எனக்கு சம்மதமே. ஆனால், அவன் அவ்வாறு செய்ய மாட்டான். அவன் நேர்மையே உருவானவன். சுத்தமான மனோ பாவம் உடையவன். என் மனதில் தற்சமயம் தோன்றும் இந்த எண்ணத்தை நினைத்து கூட பார்க்க மாட்டான். எல்லோரிடமும் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு, ராமனை வனத்துக்கு அனுப்பிய பின், சுலபமாக ம்ருத்யு என்னை அழைத்துச் செல்ல வந்து விடுவான். மனிதருள் மாணிக்கமான ராமனை வனத்துக்கு அனுப்பி விட்டு, நானும் காலகதியை அடைந்தபின், என் இஷ்ட ஜனங்களிடம் நீ எப்படி நடந்து கொள்வாயோ. என்னவெல்லாம் கொடுமைகள் செய்வாயோ. கௌசல்யா என்னையும் புத்திரனான ராமனையும் பிரிந்து எப்படி வாழ்வாள்? நிச்சயம் அவள் என்னை பின் தொடருவாள். கௌசல்யா, சுமித்திரா, என் மூன்று குழைந்தைகள் எல்லோரையும் அழித்து விட்டு, கைகேயி, நீ சுகமாக இரு. நானும் ராமனுமாக உருவாக்கி வைத்த இந்த இக்ஷ்வாகு ராஜ்யத்தை சின்னா பின்னமாக்கப் போகிறாய். இந்த ராம வன வாசம் பரதனுக்கு சம்மதமாக இருப்பின் அவன் எனக்கு மரணத்திற்கு பின் செய்யும் பித்ரு கடன்களை செய்ய வேண்டாம். ஹா, பண்பற்றவளே, எனக்கு சத்ருவாக வந்து வாய்த்தாயே. நீ விரும்பியதை அடைந்து, சுகமாக இரு. நானும், என் பிரியமான மகனான ராமனும் இல்லாமல் , விதவையாக உன் மகனோடு ராஜ்யத்தை ஆளப் போகிறாய் போலும். உன்னை அரசகுமாரி என்று எண்ணி என் மாளிகையில் இடம் கொடுத்தேன். அபவாதமும் அகீர்த்தியும் தான் எனக்கு மிஞ்சும் போல் இருக்கிறது. மிகப் பெரிய தவற்றை செய்தவனை கண்ட இடத்தில் அவமானப் படுத்துவதைப் போல நானும் அவமானம் செய்யப் படுவேன். அலட்சியம் செய்யப் படுவேன். ராஜகுமாரனாக, பிரபுவாக இருந்து என் குழந்தை ராமன், யானை மேலும் குதிரையிலும், ரதத்திலுமாக பவனி வந்தவன், நடந்து நடந்து எப்படியெல்லாம் கஷ்டப் படப் போகிறானோ. காதுகளில் குண்டலம் அணிந்த சேவகர்கள், நான் நான் என்று போட்டி போட்டுக் கொண்டு ராமனுக்கு ஆகார வகைகளையும், பானங்களையும் பரிமாறுவார்கள். அவனுக்காகவே புது பது வகைகளை தயார் செய்வார்கள். இப்பொழுது வனத்தில் என்ன சாப்பிடுவான்? கசப்பும் புளிப்புமாக காட்டில் கிடைத்ததை புசித்து என் மகன் காலத்தை கழிக்க போகிறான். மிகச் சிறந்த வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் அணிந்து என் மகன் சுகமாக வசித்தவன், காஷாய உடையும், ஜடையுமாக தரையில் படுப்பானா? எப்படி இவ்வளவு கொடுமையாக உன்னால் சிந்திக்க முடிந்தது. ராமனை வனத்துக்கு அனுப்பு, பரதனுக்கு முடி சூடு. இதுவே தான். பெண்களே இப்படித்தான். சுய நலக்காரர்கள். திக். எல்லா ஸ்த்ரீகளையும் சொல்லவில்லை, பரதனைப் பெற்றவளான இவள் மட்டும்தான். அனர்த்தமே உருவானவளே, கொலைக்கும் அஞ்சாத கொடியவளே, என்னை வருத்தவே வந்து சேர்ந்தாயே. நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்? எப்பொழுதும், எங்கும் நன்மையையே காணும் ராமன் தான் உனக்கு என்ன கெடுதல் செய்தான்? அவனிடத்தில் என்ன குறை கண்டாய்? தந்தை மார் பிள்ளைகளைத் தியாகம் செய்வதுண்டு. பத்னிகள் கணவன்மாரை விட்டுப் பிரிவது உண்டு. ஆனால் ராமனைத் துறந்தால், ஜனங்கள் தூற்றுவார்கள். உலகமே உன்னையும் என்னையும் பார்த்து கோபிக்கும். விசேஷமாக அலங்கரித்துக் கொண்டு என் மகன், யானை மேல் தேவ குமாரன் போல வருவதைப் பார்த்து எவ்வளவு மகிழ்ந்திருக்கிறேன். என் வயதே குறைந்து விட்டது போல குதூகலித்திருக்கிறேன். சூரியன் இன்றி உலகம் இயங்கலாம். இந்திரன் மழை பெய்யாமல் இருக்கலாம். ஆனால், ராமன் வெளியேறுவதை பார்த்த பின் என் உணர்வுகள் செயல் பட மாட்டா. நாசத்தை கொண்டு வந்த உன்னை, என் சத்ருவை, எனக்கு பாதகமே செய்யும் ம்ருத்யு போன்றவளை இந்த வீட்டில் குடி வைத்தேனே. பல சமயம் மடியில் இருத்தி அன்பாக பேசி இருக்கிறேனே. விஷ நாகம் போன்ற உன்னுடன் சல்லாபித்து இருந்ததன் விளைவு தான் இந்த சர்வ நாசம் போலும். உன்னாலேயே நான் அழிகிறேன். மோகமே என்னை வீழ்த்தி விட்டது. எங்கள் மூவரையும் விட்டு, நான் ராமன், லக்ஷ்மணன் இல்லாத ராஜ்யத்தை உன் மகன் உன்னோடு மட்டும் அனுபவிக்கட்டும். இந்த ஊர், ராஜ்யம், மலை சூழ்ந்த பரந்த பூமி எல்லாவற்றையும் என் எதிரிகளுடன் கூட உல்லாசமாக இருந்து அனுபவி. கொலைகாரி, இவ்வளவு தீர்மானமாக நிதானமாக பேசுகிறாயே, உன் நாக்கு நூறு நூறு துண்டுகளாக தெறித்து விழட்டும். இது போல வன்மையாக பேசக் கூட ராமனுக்கு வராது. இது போன்ற துஷ்டத்தனமான வார்த்தைகளை அவன் அறிய மாட்டான். நீயும் அவனுடன் இனிமையாகத் தானே பேசிக் கொண்டிருந்தாய். திடீரென்று அவனிடத்தில் என்ன குற்றம் கண்டாய். ராமன் சொல் எல்லோருக்கும், எப்பொழுதும் சம்மதமாக இருக்கும். மிகப் பெரிய கவலை உன்னை வாட்டட்டும், பெரிய கஷ்டங்களை அனுபவிப்பாய். நஷ்டம் வந்து வருந்துவாய். பல ஆயிரம் துண்டுகளாக கிழிக்கப் பட்டு பூமியில் விழுவாய். கேகய ராஜ்யத்திற்கே களங்கத்தை உண்டு பண்ணி விட்ட பெண்ணே உன் சொல்லை நான் கேட்கப் போவதில்லை. எனக்கு சிறிதும் நன்மையில்லாத இந்த விஷயத்தை நான் ஏன் செய்ய வேண்டும்? கூர்மையான கத்தி போன்றவள் நீ. பிரியமாக பேசுவது போல பேசி, என் குலத்தையே நாசம் செய்யும் உன் எண்ணத்தை உள்ளடக்கி நல்லவள் போல நடந்து வந்திருக்கிறாய். என் மனதை கட்டி வதைக்கும் உன்னை காணவே எனக்கு பிடிக்கவில்லை. உயிருடன் இருக்கவும் விட மாட்டேன். எனக்கு வாழ்வே இல்லையென்றாகி விட்டது. பின் சுகம் ஏது? என் மகனைப் பிரிந்து எனக்கு என்ன சௌக்யங்கள் வேண்டியிருக்கிறது. எனக்கு துரோகம் செய்யும் தேவி, உன் கால்களில் விழுந்து வேண்டுகிறேன். அனாதை போல அந்த சக்ரவர்த்தியான தசரத ராஜா கைகேயியின் கால்களில் விழுந்தார். ஹ்ருதயத்தில் அடி வாங்கியவனாக, பெரும் வியாதிக்காரன் சங்கடப் படுவது போல தவித்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், கைகேயி நிவர்த்தன ப்ரயாஸோ என்ற பன்னிரெண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 13 (90) தசரத விலாப (தசரதன் புலம்புதல்)
புண்யங்கள் தீர்ந்தவுடன் தேவலோகத்திலிருந்து கீழே பூமியில் விழுந்த யயாதியைப் போல தசரத ராஜா, கிடந்தார். தரையில் படுத்தறியாத இக்ஷ்வாகு ராஜா, பெண்களை வணங்கி அறியாத தசரத ராஜா, தன் தகுதிக்கு ஏற்காத இவ்விரு செயல்களையும் கைகேயி முன் செய்தார். கைகேயி மேலும் கடுமையானாள். பயம் அவளை விட்டு அகன்றது. தன் எண்ணம் ஈடேறாதது ஒன்றே அவள் மனதில் நிறைந்தது. அனர்த்தமே உருவானவள் போலானாள். திரும்பவும் அந்த வரங்களைப் பற்றியே பேசினாள். கடுமையான விரதங்களை அனுஷ்டித்தவர், சத்யவாதி என்றெல்லாம் பெயர் பெற்ற மகா ராஜா இப்பொழுது பிதற்றுகிறீர்கள். என்னுடைய இந்த வரங்களை எவ்வாறு தரப் போகிறீர்கள் என்று கேட்க, சற்று நேரம் பேசாது இருந்த அரசன் பதில் சொன்னார். மனிதருள் மாணிக்கமான ராமனும் வனம் சென்று, நானும் இறந்த பின், ஹா, பண்பற்ற என் விரோதியே, இஷ்டம் போல இரு. ஸ்வர்க்கம் போனால் கூட தேவர்கள் ராமனைப் பற்றி என்னிடம் குசலம் விசாரிப்பார்கள். என்ன செய்வேன்? கைகேயியின் இஷ்டத்தை நிறைவேற்றுவதற்காக, ராமனை காட்டுக்கு அனுப்பி விட்டேன். இது சத்யமா? மற்றது சத்யமா? எதை ஏற்றுக் கொண்டாலும் மற்றது பொய்யாகும். புத்ரனே இல்லாமல் இருந்தேன். பலவித சிரமங்களுக்குப் பிறகு, ராமன் பிறந்தான். நீண்ட கைகளுடனும், சூரனாகவும் பிறந்தான். அவனைப் பிரிந்து எப்படி இருப்பேன். நல்ல கல்வி கற்றவன். கோபத்தை அடக்கியவன். பொறுமையே உருவாக இருப்பவன். கமல பத்ரம் போன்ற கண்களையுடைய ராமனை எப்படி நான் வெளி யேறச் சொல்வேன். இந்தீவரம் போன்ற ஸ்யாமள நிறத்தினன், பலம் பொருந்திய தீர்கமான புஜங்களையுடையவன், பார்த்தவுடனேயே மனதை வசீகரிக்கும் குணமுடைய அபிராமனான ராமனை தண்டகா வனம் போ என்று எப்படித் தான் துரத்துவேனோ. துக்கம் என்றால் என்ன என்றே அறியாதபடி வளர்த்தேன். சுக போகங்களிலேயே வளர்த்து விட்டு, இப்படி துக்கத்தில் மூழ்கடிப்பேனா. புத்திமான் ராமன். இந்த துக்கத்தை அவனுக்கு தராமலே என் காலம் முடிந்து விட்டால் நன்றாக இருக்குமே. ராமனும் சுகமாகவே இருப்பான். கொலைகாரி, பாபத்தை சங்கல்பம் செய்து கொண்டவளே, எனக்கு பிரியமில்லாததை ஏன் செய்யச் சொல்கிறாய். சத்ய ப்ராக்ரமனான ராமனுக்கு, என் பிரியமான ராமனுக்கு, ஏன் துன்பம் விழைவிக்கிறாய். அளவில்லாத கெட்ட பெயரும், அவமானமும் தான் எனக்கு வந்து சேரும், என்று அழும் தசரத ராஜாவைப் பார்த்து சூரியனும் வருந்தியது போல இரவு சூழ்ந்தது. மூன்று யாமங்களும் அந்த அரசனின் புலம்பலைக் கேட்டவாறே கழிந்தது. ஆகாயத்தில் கண்களை பதித்தபடி படுத்திருந்த அரசன், நிசியே, நக்ஷத்திரங்கள் அலங்கரிக்க இந்த இரவு நீடிக்கட்டும். விடியவே வேண்டாமே என்று வேண்டிக் கொண்டான். என்னிடத்தில் தயை காட்டுங்கள். இதோ நான் கை கூப்பி வணங்குகிறேன். அல்லது சீக்கிரம் விடியட்டும். இந்த கொலைகாரியை காணக் கூட எனக்கு பிடிக்கவில்லை. இவளால் தானே இவ்வளவு துக்கமும் என்றவன், திரும்பவும் கைகேயியை யாசிக்க ஆரம்பித்தான். வயதானவன் தீ3னன், இதுவரை உனக்கு நல்லதையே செய்து வந்தவன் என்ற முறையில் கொஞ்சம் கருணை காட்டு கைகேயி. அரசன் என்று யோசித்துப் பார். சூன்யத்தில் இதை நான் சொல்லவில்லையே. பெண்ணே, இரக்கம் கொள். நீ கொடுத்து ராஜ்யத்தை ராமன் அடையட்டும். நீயாக ராமனுக்கு அரசு முடியைக் கொடுத்து விட்டால், அளவில்லாத பெரும் புகழ் அடைவாய். எனக்கும், ராமனுக்கும், கைகேயி, பரதனுக்கும் மற்ற பெரியவர்களுக்கும் இது தான் இஷ்டமாக இருக்கும். அழகான கண்களும் முகத்தையும் உடைய பெண்ணே, நல்ல பெண்ணல்லவா, என்றெல்லாம் கெஞ்ச ஆரம்பித்தான். சுத்தமான மனதுடன், கண்களில் நீர் நிரம்பி வழிய அரசன் வேண்டிக் கொண்டதைக் கேட்டும், கைகேயி பதிலேதும் சொல்லவில்லை. கண்கள் சிவந்து, பரிதாபமாக தெரிந்த அரசன், கைகேயியின் கொடுமை நிறைந்த உள்ளத்தை பாதிக்கவில்லை. மனைவியின் இந்த அலட்சியத்தால், அரசன் மனம் நொந்து மூர்ச்சையானார். புத்ரனை நாடு கடத்துவதா என்ற எண்ணமே அவரை நினைவிழக்கச் செய்தது. சரிந்து பூமியில் விழுந்தார். மற்றவர்கள் உறங்க, அரசன் பரிதவிக்க, இரவும் கழிந்தது. எழுப்ப வந்த சேவகர்களை சைகையால் தடுத்து மறுத்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், தசரத விலாபம் என்ற பதிமூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 14 (91) கைகேயி உபாலம்ப: (கைகேயி நிந்தனை செய்தல்)
பூமியில் நினைவிழந்து படுத்துக் கிடந்த தசரத ராஜவைப் பார்த்து, ஏற்கனவே புத்திரனைப் பிரியப் போகும் துக்கத்தால் வாடி இருந்தவரை, சற்றும் லட்சியம் செய்யாமல் மேலும் நிஷ்டூரமாக கைகேயி சாடினாள். ஏதோ பாபம் செய்து விட்டவனைப் போல பூமியில் தூங்குகிறீர்கள். நான் சொன்னதைக் கேட்டு வருந்த என்ன அவசியம் ? ஆசனத்தில் அமருங்கள். சத்யமே பெரிய தர்மம் என்று சொல்வார்கள். தர்மம் அறிந்த யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். தர்ம மார்கத்தில் தான் நானும் உங்களை சத்யத்தை அனுஷ்டித்து நடக்கச் சொன்னேன். அரசனான சிபி சக்ரவர்த்தி, கழுகுக்கு தன் சரீரத்தை தருவதாக ஒப்புக் கொண்டு அவ்வாறே கொடுத்தான். அதனால் நல்ல கதியை அடைந்தான். வேத பாடங்களில் சிறந்த ஒரு பிராம்மணனுக்கு தேஜஸ்வியான அலர்க்கன் என்ற ராஜா, அவன் யாசித்த பொழுது சற்றும் மனம் கலங்காமல் தன் கண்களை எடுத்துக் கொடுத்து விட்டான். நதிகளின் அரசனான சமுத்திரம் தன்னளவில், சிறிதேயானாலும், மரியாதையையும், சத்யத்தையும் கை கொண்டு, தன் அலைகளை அடக்கி, எல்லையை மீறாமல் பார்த்துக் கொள்கிறது. சத்யம் தான் ப்ரும்மா. சத்யத்தில் தர்மங்கள் அத்தனையும் அடங்கும். சத்யம் தான் குறைவில்லாத வேதங்கள். சத்யத்தினால் தான் பரகதியை அடைகிறோம். தர்மத்தில் ஈடுபாடுடையவன் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால், சத்யத்தைக் கடை பிடி. தாங்களாக கொடுத்த வரம் தான். அது எனக்கு பயனுள்ளதாக ஆகட்டும். தர்மம் தான் என்று நம்பிக்கையோடு, நான் சொல்வதைக் கேட்டு, ராமனை நாடு கடத்து. நான் இதை கட்டாயமாகத் தான் சொல்கிறேன். மூன்று முறை சொல்கிறேன். இது தான் சமயம். இன்று நான் சொல்லியபடி நீங்கள் கேட்கவில்லையெனில் உங்கள் எதிரிலேயே உயிர் விடுவேன். சற்றும் கூச்சமில்லாமல் கைகேயி இவ்வாறு சொல்லவும், இந்திரனால் பலிக்காக கட்டப் பட்ட ஆடு போல, தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் திணறினான் அரசன். முகம் வெளிறி புத்தி பேதலித்தவன் போலானான். இரண்டு சக்கரங்களுக்கிடையில் மாட்டிக் கொண்ட து4ரி (ஏர்க்கால்) ஆனான். சக்தியில்லாத கண்களால் பார்ப்பது போல கைகேயியைப் பார்த்து, கஷ்டத்துடன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, சொன்னான். உன்னைக் கை பிடித்த பொழுது மந்திரம் சொல்லி, பாபியே, அக்னியில் நீரை விட்டேனே, அதை இப்பொழுதே விட்டு விட்டேன். உன்னையும் உன் புத்திரனையும் இந்த நிமிஷமே தியாகம் செய்து விட்டேன். ராத்திரி முடிந்து விட்டது. சூரியன் உதிக்கும் சமயம். அபிஷேக ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பவர்கள், என்னை துரிதப் படுத்துவார்கள். முடி சூட்டு விழாவிற்காக கொண்டு வரப்பட்ட பொருட்களைக் கொண்டே ராமன் எனக்கு நீர்க்கடன்களை செய்யட்டும். நீயும் உன் மகனும் எனக்கு நீர்க் கடன்களை செய்ய வேண்டாம். அமங்களமான செயலை செய்பவளே, ராமனின் யுவராஜ அபிஷேகத்தை நான் காண விடாமல் செய்து விட்டாய். தலை குனிந்த நிலையில், குற்றவாளி போல ராமனை சந்திக்க எனக்கு திராணியில்லை என்று தசரத ராஜா புலம்பிக்கொண்டு இரவைக் கழித்தார். பொழுதும் விடிந்தது. பின்னும் கைகேயி வெந்த புண்ணில் வேல் சொருகுவது போல மேலும் கடுமையாக பேசினாள். (அவளையே அங்க3ருஜோபமம்- உடலில் தோன்றிய புண் போன்றவள் என்று கவி சொல்கிறார். உதற முடியாத துன்பம் என்ற பொருளில்) கைகேயியின் பேச்சில் அனல் தெறித்தது. ஆத்திரத்துடன் கத்தினாள். என்ன பேச்சு பேசுகிறீர்கள். இங்கு ராமனை வரவழையுங்கள். ராஜ்யத்தில் என் புத்திரனை அமர்த்தி விட்டு, ராமனை நாடு கடத்திய பின் தான் இந்த செயல் பூர்த்தியாகும். எனக்கு இடையூறு இல்லாமல் செய்து விட்டு என்ன செய்வீர்களோ, செய்யுங்கள் என்றாள். உயர் ஜாதி குதிரை சாட்டையால் அடிவாங்கியது போல உடல் சிலிர்த்து எழ, அரசன் துணுக்குற்று கைகேயியிடம் சொன்னான். தர்ம பாசத்தினால் கட்டுப்பட்டேன். என் புத்தி நஷ்டமாகி விட்டது. தார்மிகனான என் மூத்த மகனைக் காண விரும்புகிறேன். சூரியன் உதித்தவுடன், நக்ஷத்திர யோகங்கள் சேர்ந்து முஹுர்த்தம் சமீபிக்கவும், நற்குணம் நிறைந்த வசிஷ்டர், தன் சிஷ்யர்கள் சூழ வந்து சேர்ந்தார். அவரை தகுந்த உபசாரங்கள் செய்து வரவேற்றனர். நீர் தெளித்து நன்கு சுத்தம் செய்யப் பட்ட வீதிகளையும், அலங்காரமாக கொடிகள் கட்டி தொங்கவிட்டும், மலர்களாலும் மற்ற பொருட்களாலும் தோரணங்கள் கட்டியும், மாலைகள் அழகுற மாட்டியும் ஊர் ஜனங்கள் மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வளைய வருவதைப் பார்த்தார். ஜனங்கள் நிரம்பி வழியும் கடை வீதிகளைப் பார்த்தவாறே நடந்தார். ராகவனின் மகோத்ஸவத்திற்காக வந்து கூடியிருந்த ஜனங்களால் நகரம் நிரம்பி வழிந்தது. மகிழ்ச்சியுடன் ராகவனை எதிர்நோக்கி காத்திருந்த ஜனங்கள் அந்த நகரையே இந்திரபுரியாக ஆக்கி விட்டார்கள். எங்கும் சந்தனம், அகரு, தூபங்கள் இவற்றின் வாசனை நிறைந்தது. ஜனபதங்களிலிருந்து வந்து கூடிய ஜனங்களும், பிராம்மணர்களும், யாக விதிகளை அறிந்த அறிஞர்கள், பலவிதமான கலைஞர்கள், மற்றும் பலரும் சதஸை நிறைத்தனர். இந்த சதஸை பார்த்துக் கொண்டே வசிஷ்டர், அந்த ஜனங்களிடம் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக் கொண்டார். மிகவும் மகிழ்ச்சியடைந்த வசிஷ்டர், ரிஷி கணங்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, சுமந்திரர் வெளி யேறுவதைப் பார்த்தார்.
அரசனின் சிறந்த சாரதியும், பிரியமாக பேசுபவருமான மந்திரி சுமந்திரரிடம், வசிஷ்டர், நான் வந்து விட்டேன் என்று அரசனுக்கு தெரிவி என்று சொல்லி அனுப்பினார். இதோ, கங்கை நீர் நிரம்பிய குடங்கள், சமுத்திரங்களில் இருந்து காஞ்சனம், ஔது3ம்பரம், ப4த்ரபீடம் இவை அபிஷேகத்திற்காக கொண்டு வரப் பட்டன. எல்லாவிதமான பீ3ஜங்களும், வாசனைத் திரவியங்களும், பலவிதமான ரத்னங்களும், பால், தயிர் நெய், பொரி, தர்ப்பங்கள், நல்ல தூய்மையான நீர், எட்டு கன்னிகைகள், சிறந்த யானைகள், நான்கு குதிரைகள் பூட்டிய ரதம், உத்தமமான தனுஷ், வாகனம் ஓட்டுபவரோடு கூட, குடை, சந்திரன் போல
குளிர்ச்சி தருவதாக வெண் சாமரங்கள், தங்க மயமான ப்ருங்காரம், உயர்ந்த திமில்களில் தங்க முலாம் பூசப் பட்ட கவசங்களோடு காளைகள், நான்கு பற்களையுடைய கேஸரி, (சிங்கம்) மகா பலம் பொருந்திய உத்தமமான குதிரை, புலி போன்ற அமைப்புடைய சிங்காஸனம், சமித்துக்களும், அக்னியும், வாத்யம் வாசிக்கும் கோஷ்டிகளும், நன்கு அலங்கரித்துக் கொண்ட வேசிகள், ஆசார்யர்கள், ப்ராம்மணர்கள், பசுக்கள், புண்யமான ம்ருக, பக்ஷிகள், ஊர் ஜனங்கள், ஸ்ரேஷ்டமானவர்கள், பாண்டித்யம் மிக்க நிகமம் என்ற வேத முறைகளை அறிந்த நைகமா: கூட்டம் கூட்டமாக இன்னும் பலர், மிகவும் ஆவலோடு, பிரியமாக பேசிக் கொண்டு, வருபவர்கள், மற்ற தேச அரசர்களுடன் ராமனின் அபிஷேகத்தைக் காண நிற்கிறார்கள். சூரியோதயம் ஆகி, பகல் பொழுது ஆரம்பித்து விட்டது. அரசனை துரிதப் படுத்து. நல்ல யோகங்கள், நக்ஷத்திரங்கள் கூடிய சுபமான வேளையில் ராமன் ராஜ்யத்தை ஏற்கட்டும். இவ்வாறு சொன்ன வசிஷ்டரை வணங்கி, சாரதியான சுமந்திரன் மாளிகையினுள் நுழைந்தார். அவரை யாரும் தடுக்கவில்லை.
அரசன் அருகில் சென்ற பின்பும், அரசனின் நிலையை அறியாமல் வழக்கம் போல துதி பாட ஆரம்பித்தார். எப்பொழுதும் போல கை கூப்பி, அரசனை துதி செய்யும் பாடல்களை ஆரம்பித்தார். சூரியன் உதித்தவுடன் சமுத்திரம் எப்படி ஆரவாரிக்கிறதோ, உங்கள் பிரஜைகளான எங்களை தானும் சந்தோஷமாக இருந்து எங்களையும் சந்தோஷமாக பாலிப்பாயாக. இந்த நேரத்தில் மாதலி என்ற இந்திர சாரதி இந்திரனை இப்படித்தான் துயிலெழுப்புவான். அதே போல துயிலெழுப்புகிறேன். வேதங்கள் அதன் அங்கங்களோடு தானே தோன்றிய பிரபுவான ப்ரும்மாவை இப்படித்தான் துயிலெழுப்பும்., அது போல துயிலெழுப்புகிறேன். சூரியன் சந்திரனுடன் கூட சுபமான பூமியை தன் விடியலால் துயிலெழுப்புகிறானோ, அது போல அரசனை நான் துயிலெழுப்புகிறேன். அரசனே, எழுந்திருங்கள். மங்களங்கள் உண்டாகட்டும். மேரு மலையில் திவாகரன், (சூரியன்) பிரகாசிப்பது போல ஒளி வீசிக் கொண்டு, ராஜ சார்தூலா, எழுந்திரு சூரியனும் சந்திரனும், காகுத்ஸா, சிவனும் வைஸ்ரவனும், வருணனும், அக்னி, இந்திரனும், உங்களுக்கு வெற்றியைத் தரட்டும். ப4கவதியான இரவு அகன்று, சுபமாக பகல் பொழுது வந்து விட்டது. ராஜ சார்தூலா, எழுந்திரு. தினசரி கடமைகளைச் செய்வாயாக. ராமனின் அபிஷேக வேளை நெருங்கி விட்டது. ஊர் ஜனங்கள், புர ஜனங்கள், ஜனபத , சிற்றுர் ஜனங்கள் சிறந்த நைகமர்களுடனும், வசிஷ்டர் தானே ப்ராம்மணர்களோடும் வந்து நிற்கிறார். ராஜன் | சீக்கிரம் ராமனுடைய முடி சூட்டு விழாவை ஆரம்பித்து வையுங்கள். அரசன் தென்படாவிட்டால், ராஜ்யம் காவல் காக்கும் தலைவன் இல்லாத பசுக்கள் போலவும், நாயகன் இல்லாத சேனை போலவும், சந்திரன் இல்லாத இரவு போலவும், பசுக்கள் காளையின்றி இருப்பது போலவும், இருக்கும். இவ்வாறு சாந்தமாக, பொருள் பொதிந்த பாடல்களால் சுமந்திரர் துதி பாடிக் கொண்டே போகவும், மஹீபதியான அரசன் அவரை அழைத்து, தீனமாக சோகத்தால் சிவந்த கண்களுடன் தடுத்தார்.. சுமந்திரா, உன் வார்த்தைகளால் ஏற்கனவே நொந்து போய் இருக்கும் நான் மேலும் வருந்துகிறேன். மகாராஜாவை பார்த்து திடுக்கிட்ட சுமந்திரர், தான் இருந்த இடத்திலிருந்து வெளி வந்து கேள்விக் குறி முகத்தில் தெரிய வணங்கி நின்றார். தானே எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்த அரசரை முந்திக் கொண்டு கைகேயி, தானே பேசலானாள். சுமந்திரரே, அரசர் இரவு பூராவும் தூங்காமல் விழித்திருந்து இப்பொழுது தான் தூங்கினார். அதனால் நீ சீக்கிரம் போய் ராமனை அழைத்து வா. புகழ் வாய்ந்த அரச குமாரனை உடனே அழைத்து வா, யோசிக்காதே. என்றாள். ஏதோ நல்லது தான் என்று எண்ணி, மனதுள் மகிழ்ந்தவராக, அரச கட்டளையை ஏற்று சுமந்திரர், வேகமாக வெளி யேறினார். கைகேயி அவரசரப் படுத்திய விதம் கவலையை தோற்றுவித்தது நினைக்க நினைக்க ஏதோ இயல்பாக இல்லாதது போல மனதில் பட்டதை தானே சமாதானமும் செய்து கொண்டார். ராமன் அபிஷேகம் செய்து கொள்ள இங்கு வரப் போவது நியாயம் தானே. இந்த கவலையை ராமனைக் காணும் ஆவல் துரத்தியடிக்க, வேகமாக சென்றார்.
அந்த:புர வாசலில் இருந்து ஆரம்பித்து, சமுத்திரம் போல திரண்டிருந்த ஜனங்களைத் தாண்டி, மாளிகை வாசலை அடைந்தார். வாசலில் திரண்டிருந்த அரசர்களையும், வாயில் வரை வந்துள்ள பிரமுகர்களையும், பல பெரிய தனவந்தர்களையும் கவனித்த படி அவசரமாக வெளி யேறினார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், கைகேயி உபாலம்போ என்ற பதிநாலாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 15 (92) சுமந்திர ப்ரேஷணம் (சுமந்திரரை அனுப்புதல்)
இரவு முடிய காத்திருந்தது போல, ராஜ புரோஹிதர்கள், வேதங்களை கரை கண்ட பிராம்மணோத்தமர்கள், ராஜ சபைக்கு கிளம்பினார்கள். முக்கிய அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், நிகமத்தில் கரை கண்டவர்கள், ராமனுக்கு முடி சூடும் வைபவம் என்ற மகிழ்ச்சியுடன், சூரியன் உதித்து புஷ்ய நக்ஷத்திரம் கூடிய சுப தினம் ஆரம்பமானவுடனேயே கர்க்கடக லக்னத்தில் கர்கடகன் வரவும், சந்திரன் இருக்கும் சமயம், ராமனுக்கு அபிஷேகம் என்று சபையின் தூண்களாக வர்ணிக்கப்படும், ப்ராம்மணர்கள் தங்களுக்குள் பேசி தீர்மானித்துக் கொண்டு செயல் பட்டனர். தங்க குடங்களில் ஜலம் நிரப்பி, பத்ர பீடம் நன்கு அலங்கரிக்கப் பட்டது. ரதத்தில் நல்ல ஆசனங்கள் போடப் பட்டது. புலித் தோலால் ஒளி வீச அலங்கரிக்கப் பட்டது. கங்கையும் யமுனையும் கூடும் சங்கம க்ஷேத்ரத்திலிருந்து ஜலம் கொண்டு வந்து, மேலும் பல புண்ய நதிகளிலிருந்தும், புண்யமான குளங்கள், கிணறுகள், சிறு நதிகள் இவைகளிலிருந்தும் ஜலம் கொண்டு வரப் பட்டன. கிழக்கு நோக்கி பிரவகிக்கும் நதிகள், மேல் நோக்கி பாயும் சில நதிகள், குறுக்காக பாயும் நதிகள் இவைகளிலிருந்தும் ஜலம் கொண்டு வரப் பட்டன. சமுத்திரங்கள் அனைத்திலிருந்தும் ஜலம் வந்து சேர்ந்தது. பொரி நிரம்பிய கலசங்கள், மூடப்பட்ட கலசங்களில் பாலில் செய்யப் பட்ட பதார்த்தங்கள், பொன்னாலும் வெள்ளியிலுமான கலசங்கள், புண்ய தீர்த்தங்கள் நிறைந்து பத்மமும் உத்பலமும் சேர்ந்தது போல விளங்கின. பாலில் செய்த சாமான்கள், தயிர், நெய், பொரி, தர்பங்கள், நல்ல பரிசுத்தமான நீர், எல்லா விதமான ஆபரணங்களையும் அணிந்து கொண்டு, நல்ல நடத்தையுள்ள வேஸ்யா ஸ்த்ரீகள், தங்கத்தால் செய்யப் பட்டு, ரத்னங்கள் இழைத்து செய்யப் பட்ட சாமரங்கள் ராமனுக்காக காத்திருந்தன. சந்திர மண்டலம் போல வெண்மையான குடை, அபிஷேகத்திற்காக தயார் செய்யப் பட்டுள்ளது. வெண் குதிரையும், வெண்மையான ரிஷபமும் தயார் நிலையில் உள்ளன. அரச குலத்து யானை அலங்காரமாக நிற்க, அதைக் கடந்து சுமந்திரன் போனார். எட்டு கன்னிகைகள், மங்கள வஸ்துக்களை ஏந்தி, எல்லா வித ஆபரணங்களும் ஏந்தி எதிர் கொள்ள, பல விதமான வாத்யங்களை வாசிப்பவர்களும், பாடுபவர்களும், இக்ஷ்வாகு குல ராஜாவுக்கு அபிஷேகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அரசன் தானே அறிவித்தபடி, அபிஷேகம் என்று ஒருவரையொருவர் முந்தியபடி எல்லோரும் அங்கு குழுமியிருந்தனர். அரசனைக் காணவில்லையே, சூரியன் உதித்து நேரமாகிறதே என்றும், யுவ ராஜ அபிஷேகத்திற்காக ராமன் தயாராகி விட்டான் என்றும், தங்களுக்குள் பேசிக் கொண்டதைக் கேட்டு, கூடியிருந்த பெரிய ராஜ்யங்களை ஆளும் மதிப்பு மிக்க அரசர்களையும், சிற்றரசர்களையும் பார்த்து, சுமந்திரர், மகாராஜா ராமனை அழைக்கிறார். அழைத்து போக நான் வந்திருக்கிறேன் என்றார். சீக்கிரம் அழைத்து வரச் சொல்லி உத்தரவு. உங்கள் அனைவருக்கும் மகாராஜா பூஜ்யர். ராமனுக்கும் அப்படியே. இப்படிச் சொல்லிக் கொண்டே அந்த:புரம் வாசல் வரை வந்து விட்டார், எப்பொழுதும் நிறைந்து இருக்கும் அந்த மாளிகையில் நுழைந்தார். நரேந்திரனான அரசனது படுக்கையறை வந்து நின்றார். சுபமான ஆசிகள் சொல்லி ராக4வனை வாழ்த்தினார். வணங்கினார். காகுத்ஸ, சந்திர சூரியர்களும், சிவனும், வைஸ்ரவனும், வருணனும், அக்னியும், இந்திரனும் உனக்கு வெற்றியை அளிக்கட்டும். பகவதி ராத்திரி அகன்று பகல் விடிந்து விட்டது. ந்ருபசார்தூல, எழுந்திரு. மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வாயாக. ப்ராம்மணர்களும், சேனைத் தலைவர்களும், நைகமர்களும் வந்து விட்டனர். உன்னை தரிசனம் செய்ய காத்திருக்கின்றனர். ராகவா, துயிலெழுவாயாக. மந்திரங்கள் அறிந்த சுமந்திரர் இப்படி துதி பாடி எழுப்பவும், அரசன் விழித்தெழுந்து, ராமனை அழைத்து வரும்படி இவள் சொன்னாளே, ஏன் இன்னும் அழைத்து வரவில்லை என்று சுமந்திரரை துரிதப் படுத்தினார். ராஜ ஆணையை ஏற்று சுமந்திரர், தன் மனதினுள் நல்லதையே நினைத்தபடி ராம
மாளிகையை வந்தடைந்தார்.
வழி முழுவதும் ராமனை புகழ்ந்து பாடும் பாடல்களை கேட்டபடி, அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ரசித்தபடி, கைலாஸ சிகரம் போலிருந்த
ராம மாளிகை வந்து சேர்ந்தார். இந்திரன் மாளிகை போல இருந்தது ராம மாளிகை. மிகப் பெரிய தாழ்ப்பாள்களும், நூற்றுக் கணக்கான முற்றங்கள், (விதர்தீ3: -பால்கனிகள், அல்லது திறந்தவெளி ) மற்றும் பல இடங்களிலும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. தங்க நிறமாக, பிரகாசமாக, மணிகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப் பட்டு விளங்கின. மேக மண்டலம் நிறைந்த சரத் கால ஆகாயம் போல, மேரு மலையின் ஒளி வீசும் குகையோ எனும் படியும், இருந்த மாளிகை. சிறந்த மணி, புஷ்பங்கள் அலங்கரிக்க, முத்துக்களும், மணிகளும் ஒளி வீச, சந்தன, அகரு வாசனைகள் நிறைந்திருக்க, மனதைக் கவரும் நல்ல சுகந்தமான வாசனை இழுக்க, சாரஸ பக்ஷிகளும், மயில்களும் கூவிக் கொண்டு அழகூட்ட, பயிற்றுவிக்கப் பட்ட ஓனாய்கள் காவல் காக்க, அழகிய சுவர்கள் பார்ப்பவர்கள் கண்களையும் மனதையும் கவர்ந்து இழுக்க, குபேர பவனமோ எனும்படி, ஒளி மிகுந்ததாக, ராம பவனத்தை சுமந்திரர் பார்த்தார். மகேந்திரனுக்கு இணையான
மாளிகை இது என்று எண்ணியபடி, அருகில் நெருங்கவும், அங்கு கூடியிருந்த மக்கள் கை கூப்பி வரவேற்றனர். ராமனுக்கு முடி சூட்டு விழா என்று முக மலர்ச்சியோடு வளைய வரும் ஜனபத மக்கள். ராஜ குலத்து ஜனங்களும் ஊடே அலங்கரித்து கொண்டு வந்து சேர்ந்தனர். இவற்றை ரசித்தபடி மகா த4னம் எனும் ராம மாளிகையின் வாசலை வந்தடைந்தார். உடல் புல்லரிக்க உள்ளே நுழைந்தார். மான்களும் மயில்களும் நடமாடும் கர்ப்ப க்ருஹம். தகுதி வாய்ந்த இந்திரன்
மாளிகை போல நிர்மாணிக்கும் பொழுதே அலங்காரமாக அமைக்கப் பட்டிருந்த அறை வாசல்கள். ராமனுக்கு பிரியமான பல ஜனங்களை பரிச்சயமான முகங்களை கண்டு மகிழ்ந்தபடி சுத்தாந்தபுரத்தை நோக்கி சென்றார். வாகனத்தை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு உள்ளே வந்த ஜனங்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதையும், அனைவரும் விரும்பி எதிர்பார்த்து இருந்த மங்கள நாள் வந்து விட்டது என்று தெரிவிப்பது போல இருந்த கோலாகலத்தையும் கண்டபடி உள் அறையை அடைந்தார். ராமனுடைய பட்டத்து யானை, மிகப் பெரிய மேகத்தின் பகுதி போல நின்றிருந்தது. யானைப் பாகன் அங்குசத்தோடு நின்றிருந்தான். குதிரைகள் பூட்டிய அலங்கார ரதங்கள், யானை மேல் வந்த அமைச்சர்கள், பிரமுகர்கள், நூற்றுக் கணக்கான தொழில் வல்லவர்கள், இவர்களைக் கடந்தும் , கூடவே நடந்தும் சம்ருத்3த4மான (நிறைவான) அந்த:புரத்தை அடைந்தார். விமானங்களோடு, மேகமோ, மலைச் சிகரமோ என்று வியக்கும் படி இருந்த மாளிகையின் உள்ளே, யாராலும் தடுக்கப் படாமல், ரத்னங்கள் நிறைந்த சமுத்திரத்தில் திமிங்கிலம் நுழைவது போல நுழைந்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், சுமந்திர ப்ரேஷணம் என்ற பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 16 (93) ராம ப்ரஸ்தா2னம் ( ராமர் கிளம்புதல்)
தசரத ராஜாவின் மந்திரிகளுள் ஒருவரான சுமந்திரன், அறிவாளி என்று மதிக்கப்பட்டவர். புராணங்களை அறிந்தவர் என்பதாலும் ஜனங்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. அவர் ஜனங்களை விலக்கிக் கொண்டு, தடுப்புகளைத் தாண்டி முன்னேறினார். குண்டலங்கள் அணிந்த, ஆயுதங்கள் தரித்த காவல் வீரர்கள், ஏகாக்ர சித்தத்துடன் காவல் காத்து வந்தனர். ஒரு புறம் காஷாயம் தரித்து, கைகளில் தடியுடன் நின்றிருந்த கிழவர்கள், அதைத் தவிர அறை வாசலில் மூன்று தலைவர்கள் என்று காவல் ஏற்பாடுகள் திருப்தி கரமாக இருப்பதை கவனித்தபடி சென்றார். சுமந்திரனைக் கண்டதும் அவர்கள் தங்கள் ஆசனத்திலிருந்து பர பரப்பாக எழுந்திருந்தனர். அவர்கள் அனைவருமே ராமனுக்கு நன்மையை விரும்புபவர்கள். தங்கள் பொறுப்பில் செம்மையாக செயல் படுபவர்கள் ஆதலால் சுமந்திரர் அவர்களிடம் பணிவாக சீக்கிரம் ராமரிடம் சுமந்திரனான நான் வந்திருப்பதை தெரிவியுங்கள் என்றார். அவர்களும் அவசரமாக சென்று பத்னியுடன் இருந்த ராமரிடம் விஷயத்தைச் சொன்னார்கள். தந்தையின் அந்தரங்க தோழனும் சாரதியுமான சுமந்திரர் வந்திருக்கிறார் என்று கேள்விப் பட்டதும், அவரை அந்த அறைக்குள்ளேயே அழைத்து வர செய்தார். வைஸ்ரவன் போல அலங்கரித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் ராமனை, தங்கத்தாலான கட்டிலில், (வராஹ ரத்தம் போன்ற -உயர் ரக சந்தனம் என்பது இப்படி வர்ணிக்கப்படுகிறது) சிவந்த சுத்தமான சந்தனத்தை பூசிக் கொண்டு, அருகில் சாமரத்தால் வீசிக் கொண்டு சீதை நிற்க, சித்ரா நக்ஷத்திரம் சந்திரனோடு இருப்பது போல ஒளி வீசும், தன் சரீரத்தின் இயல்பான காந்தியோடு விளங்கும் ராமனை சுமந்திரர் கண்டு வணங்கினார். சாரதியாக துதி பாடி, வணங்கினார். பின், பணிவாக குசலம் விசாரித்தபடி, தான் வந்த காரியத்தை சொல்ல தயாரானார். வினயம் அறிந்தவன், என்று அரசனால் கௌரவிக்கப்பட்டவர் அவர். விஹார சயனாசனத்தில் தற்சமயம் அமர்ந்திருக்கும் ராமரிடம் கௌசல்யா சுப்ரஜா ராமா, ராஜா உன்னை பார்க்க விரும்புகிறார். மகிஷியான கைகேயியுடன் இருக்கிறார். சீக்கிரம் அழைத்து வரச் சொல்லி உத்தரவு. போகலாம், வாருங்கள் என்றார். உற்சாகமான மன நிலையில் இருந்த ராமர், இதைக் கேட்டு சீதையிடம் தேவி தேவனும்,தேவியும் (ராஜாவும், கைகேயியும்) அபிஷேகம் சம்பந்தமாக என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். மதி3ரேக்ஷணே, கைகேயி, சுத3க்ஷிணா – நல்ல பரிவும், அன்பும் உடையவள். என் நலத்தை விரும்புவள். தாயான அவளுடன் இருந்து, தந்தை தசரத ராஜா, தூது அனுப்பியிருக்கிறார். கைகேயி ஏதோ ஒரு அபிப்பிராயத்தை நினைவு படுத்தி இருப்பாள். அதைச் சொல்ல தகுதியான தூதன் இவரே என்று அனுப்பியிருப்பார்கள். பிரியமான பட்ட மகிஷியுடன் இருந்தபடி, அங்குள்ள சபை எப்படியோ அதற்கு தகுந்த தூதன், ஹா நேரமாகிறதே, நான் போய் மகாராஜாவைப் பார்க்கிறேன். மகாராஜா நினைத்ததை உடனே செய்து முடிப்பவர். இன்றே என்னை யுவராஜாவாக முடி சூட துரிதப் படுத்துகிறார், போலும். நீ உன் பரிவாரங்களோடு ஓய்வு எடுத்துக் கொள். பதியினால் சம்மானிக்கப் பட்ட சீதை, வாசல் வரை வந்து வழியனுப்பினாள். மங்களா சாஸனம் செய்தாள். ப்ராம்மணர்கள் சூழ, ராஜ சூய யாகங்கள் செய்து புனிதமான அரசு பதவியில் இன்று ராஜா, இந்திரன் போல உலகை நடத்திச் செல்ல யுவராஜாவாக நியமிக்கப் போகிறார். தீக்ஷை எடுத்து, விரதங்கள் அனுசரித்து, உயர்ந்த வஸ்திரங்கள் தரித்து, சுத்தமாக தூயவனாக, குரங்க சாரங்க பாணியாக உங்களைக் காண விரும்புகிறேன். கிழக்கில் வஜ்ர தரனான இந்திரன் உங்களை ரக்ஷிக்கட்டும். தக்ஷிண திசையில் யமன் காவலாக இருக்கட்டும். மேற்கில் வருணன் பாதுகாக்கட்டும். தனாதிகாரியான குபேரன் உத்தர திசையில் காக்கட்டும். பிறகு சீதையிடம் விடை பெற்றுக் கொண்டு, கௌதுக மங்களங்களை ஏற்றுக் கொண்டு, சுமந்திரனுடன் மாளிகையை விட்டு வெளியே வந்தார். மலை குகையில் வாழும் சிங்கம் புறப்பட்டது போல இருந்தது. வழியில் லக்ஷ்மணன் வந்து சேர்ந்து கொள்ள, மற்ற நண்பர்களைக் கண்டு சற்று நின்று, பேசி, குசலம் விசாரிப்பதும், வரவேற்பதுமாக நடந்தபடி மலை போல் இருந்த தன் ரதத்தில் ஏறினான். ராஜ நந்தனனான ராமன், ராஜத ரதத்தில் ஏறினான். (ராஜத- வெள்ளி) கண்களை கூசச் செய்யும் மணிகளாலும், புஷ்பங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்த ரதம், உத்தமமான குதிரைகள், ஒவ்வொன்றும் யானைக் குட்டி போல பெருத்த குதிரைகள் பூட்டப் பட்டிருந்தது. வேகத்தில் இந்திரனுடைய ரதத்துக்கு இணையானது. திடுமென மழை பெய்தாற் போல ஆரவாரம் எழ, ஆகாயத்தில் சந்திரன் உதித்தாற் போல பவனி வந்தான். லக்ஷ்மணன், சத்ர சாமரங்களை ஏந்தியவனாக உடன் ஏறினான். லக்ஷ்மணனும் பின்னால் வசதியாக அமர்ந்த பின் ரதம் கிளம்பியது. கல கல வென சப்தம் ஜனக் கூட்டதிலிருந்து எழுந்தது. தங்கள் முன்னால் ராமன் கிளம்பிச் செல்வதைக் கண்டு வாழ்த்தி ஆரவாரம் செய்தது. ராமனுடைய ரதத்தை பின் தொடர்ந்து, உயர் ஜாதி குதிரைகள் மேலும், யானைகள் மேலும், படைகள் புறப்பட்டன. முன்னால் சேவகர்கள், வில்லும் வாளும் ஏந்தி விறைப்புடன் சென்றனர். சந்தனம் முதலிய வாசனை திரவியங்களை தெளித்தபடி சிலர் சென்றனர். பாடகர்கள் பாடுவதும், வாத்ய கோஷமும் ஒன்றாக எழுந்தன. வழியில் சில சூரர்கள், சிம்ம நாதம் செய்தனர். ஸ்த்ரீகள் வழியிலிருந்த
மாளிகைகளின் வெளி வாராந்தாக்களில் நின்றபடி புஷ்பங்களை வாரி இரைத்தனர். எதிர் பட்டவர்கள் யாவரும் ராமனை வணங்கிச் சென்றனர். சிலர் வீடுகளிலிருந்தும், தரையில் நிற்பவர்கள் வாய் வார்த்தையாகவும் வணங்கினர். மாத்ரு நந்தனா, தாயாருக்கு பிரியமானவனே, உன் தாய் கௌசல்யா வாழ்க. மகிழ்ச்சியுடன் நீடுழி வாழ்க. மணமான ஸ்த்ரீகள் அனைவரிலும் சீதை உயர்ந்து நிற்கிறாள். ராமனுக்கு உகந்த பெண் அவளே என்று பெண்கள் சீதையைக் கொண்டாடினார்கள். இந்த தேவி முன் ஜன்மத்தில் நிறைய தவம் செய்திருக்க வேண்டும். சந்திரனை ரோஹிணி அடைந்ததைப் போல ராமனைக் கணவனாக அடைந்திருக்கிறாள். இவ்வாறு மாளிகைகளின் உச்சியில் நின்றபடி பெண்கள் பேசிக் கொண்டனர். தன்னைக் குறித்த இந்த வார்த்தைகளை ரதத்தில் சென்று கொண்டிருந்த ராமனும் கேட்டான். புர ஜனங்கள் மகிழ்ச்சியுடன் வெளி ப்படையாக பேசிக் கொண்டதை கேட்டு மகிழ்ந்தான். தசரத ராஜாவின் தயவால் இவன் நமக்கு அரசனாக ஆகப் போகிறான். ராஜ்ய லக்ஷ்மியை அடையப் போகிறான். நமக்கும் இதில் நன்மையே. வெகு நாட்கள் இந்த ராஜ்யத்தை பரிபாலிக்கட்டும். நன்மைகள் பெருகட்டும். யாருக்குமே இவனிடத்தில் அபிப்பிராய பேதம் கிடையாது. இவனை வெறுப்பவர் யாருமில்லை. ராஜ்யத்தில் ராகவன் அமர்ந்திருக்கும் வரை யாருக்கும் எந்த துன்பமும் வராது. இப்படி ஊர் ஜனங்கள் ஒருபுறம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, பாடுபவர்கள், ஆடுபவர்கள், ஸ்வஸ்தி வசனம் சொல்பவர்கள், கட்டியம் கூறிக் கொண்டு முன் செல்பவர்கள், என்ற கூட்டமும், அதற்கும் முன்னால் குதிரைகளும், யானைகளும் செய்த சத்தம் இதையும் தாண்டிக் கேட்க, தேர்ந்த வாத்யக்காரர்கள், மங்கள வாத்யம் இசைத்துக் கொண்டு வர, வைஸ்ரவனன் போல சென்றான். அந்த பெரிய வீதி முழுவதும், யானைக் குட்டிகளும், பெரிய ரதத்தை இழுக்கும் குதிரைகளும், சமுத்திரம் போல ஜனக் கூட்டமும் தொடர்ந்து வந்த நிலையிலும், அந்த பெரிய கடை வீதிக ளி ல், ரத்னங்களும் மற்றவையும், மும்முரமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்த அழகிய காட்சியையும் ராமன் கண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், ராம ப்ரஸ்தானம் என்ற பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 17 (94) ராமாக3மனம் (ராமன் வருகை)
பிரதான வீதிகளில் ரதம் சென்றது. வீதி கொள்ளாமல் ஜனத்திரள். வீதிகளில் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டிருந்ததையும், தோரணங்களால் அழகுற அலங்கரிக்கப் பட்டிருந்ததையும், ஜனங்கள் உற்சாகமாக உடன் வந்ததையும் பார்த்தபடி, நிறைந்த மனத்தினனாக ராமன் சென்றான். ஜனங்கள் உத்தமமான பட்டாடைகள் அணிந்து, ஸ்பாடிக, முத்து மாலைகளையும் அணிந்து, உயர்ந்த வாசனை திரவியங்களை தங்கள் உடலிலும் பூசிக் கொண்டு வந்திருந்தனர். வழியில் தென்பட்ட கடைகளில் இனிப்பு வகைகளும், மற்றும் பல விதமான தின்பண்டங்களும் நிறைந்திருந்தன. அந்த பகல் வேளையில் தேவராஜனின் இந்திரனின் நகரம் போல இருந்தது அயோத்தி மா நகரம். பெரியவர்கள் ஆசிர்வதித்து அளித்த அன்பளிப்புகளை, தயிர், அக்ஷதை, பொரி, அகரு சந்தனங்கள், தூபங்கள், பலவிதமான மாலைகள் இவற்றை பெற்றுக் கொண்டும், அவர்களுக்கு பதில் மரியாதை செலுத்திய வண்ணம், உடன் வந்த நண்பர்களுடன் இடையிடையே பேசிக் கொண்டும் ராமனின் ஊர்வலம் தொடர்ந்தது. பலர், இன்று முடி சூட்டிக் கொண்டு, நீயும், பாட்டனார், முப்பாட்டனார் காலத்திலிருந்து வந்த நல்ல வழக்கங்களை அனுசரிப்பாயாக என்று வாழ்த்தினர். முதியவர்கள் பலர், உன் தந்தை காலத்திலும், அதற்கும் முன்னும் நாங்கள் மதிப்பும் மரியாதையும் பெற்று வாழ்ந்தோம், அது தொடரட்டும் என்று வாழ்த்தினர். ராமன் அரசனானால் இதை விட அதிகமான மதிப்பும், மரியாதையும் பெறுவோம், சந்தேகமேயில்லை என்று தங்களுக்குள் பேசிக் கொள்வதும் ராமன் காதில் விழுந்தது. இதை விட பரமார்த்தம் வேறு என்ன வேண்டும், முடி சூட்டிக் கொண்டு ராமன் இந்த வழியாக வருவதைக் காண காத்திருப்போம் என்றனர் சிலர். இவ்வாறு நண்பர்களும், மற்றவர்களும் தன்னைப் பற்றி உயர்வாக பேசுவதைக் கேட்டுக் கொண்டே ராமன் அந்த பிரதான வீதியில் சென்றான். தங்களை கடந்து சென்ற பின்னும் ஜனங்கள் ராமனிடம் வைத்த கண்களையும், மனதையும் திரும்பப் பெறாதவர்கள் போல பார்த்துக் கொண்டே நின்றனர். அந்த இடத்தை விட்டு நகர கூட முயற்சிக்கவில்லை போல இருந்தது. எவன் ராமனை பார்க்கவில்லையோ, எவனை ராமன் பார்க்கவில்லையோ, அவன் உள்ளமே அவனைச் சாடும், உலகத்திலேயே நிந்தைக்குள்ளாகும் துரதிருஷ்டசாலி அவன் ஒருவனே ஆவான். எந்த வர்ணத்தாராயினும், ராமன் அவர்களிடம் கருணை காட்டி பேசுவான். நான்கு விதமான வயதினரிடமும், அந்தந்த வயதுக்குரிய முறையில் உரையாடுவான். நான்கு மார்கங்களிலும் இருந்த தெய்வ சன்னிதிகளையும், பெரிய கோவில்களையும் ராமன் பிரதக்ஷிணமாக கடந்து சென்றான். அரச குலம் வசித்த வீதியில் நுழைந்த ரதம், மேக மண்டலம் போல உயர்ந்த கூட கோபுரங்களோடு இருந்த மாளிகைகளை, கைலாஸ சிகரமோ எனும்படி உயரமான விமானங்களும், ஆகாயத்தை தொட்டு விடும் போல இருந்த மாளிகை, வெண்மையாக பூசப் பெற்றிருந்த வீடுகளையும் கடந்து, அதை அடுத்து பூமிக்கு ஒரு விளக்காக அமைந்த தசரத அரசனின் மாளிகை, இந்திர பவனம் போல தெரிந்த தந்தையின் மாளிகையினுள் நுழைந்தான். தன் தேக காந்தியே தன்னை யார் என்று காட்டிக் கொடுக்கும் படி, குதிரையில் அமர்ந்து மூன்று அறைகளைக் கடந்தான். அடுத்த இரண்டு அறைகளை நடந்து சென்று, மற்றவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி விட்டு தான் மட்டுமாக சுத்தாந்த:புரம் அடைந்தான். சமுத்திரம் சந்திரோதயத்தை எதிர் நோக்கி இருப்பதைப் போல ஜனங்கள் ராமன் திரும்பி வருவதை எதிர்பார்த்து, அறையினுள் நுழைந்த ராமனின் பின்னால் காத்திருந்தனர். தங்களுக்குள் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், ராமாக3மனம் என்ற பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) (ஸ்லோகங்கள் – 22).
அத்தியாயம் 18 (95) வனவாஸ நிதேஸ: (வனம் செல்ல ஆணையிடுதல்)
தந்தையின் அறையில் நுழைந்த ராமன் தீனமான முகத்துடன் அமர்ந்திருந்த தந்தையை, பின், அருகில் அமர்ந்திருந்த கைகேயியையும் கண்டான். முதலில் தந்தையையும், பின் தாயான கைகேயியையும் வணங்கினான். கண்களில் நீர் நிறைந்து வழிய ராமா என்று அழைத்து விட்டு, தசரத ராஜா, தீனனாக அதற்கு மேல் பேச முடியாதவராக, நிமிர்ந்து பார்க்கவும் திராணியில்லாதவராக, தலை குனிந்து தவித்தபடி இருந்ததைக் கண்டான். இது வரைக் கண்டிராத இந்த கோலம், பயத்தை அளிக்கும் உடல் நிலை, இவற்றைக் கண்டு, ராமன் பாம்பை மிதித்தவன் போல பதறினான். இந்திரியங்கள் நிலை குலைந்து, சோகத்தாலும், தாபத்தாலும் வாடும், மேல் மூச்சு வாங்க மனம் கலங்கி இருந்த மகா ராஜாவை, கலங்கிய மனமும் புத்தியும் வெளிப்படையாகத் தெரிய, அலை வீசும் பெருங்கடல் வற்றியது போலவும், சூரியன் மறைக்கப் பட்டது போலவும், ஒரு ரிஷி தன் மார்கத்திலிருந்து விலகி பொய் சொன்னது போலவும், நினைத்துக் கூட பார்க்க முடியாத சோகத்துள் மூழ்கி கிடக்கும் தந்தையைக் கண்டு, ராமனின் மனமும், பர்வ காலங்களில் கொந்தளிக்கும் சமுத்திரம் போல சஞ்சலம் அடைந்தது. தந்தையின் நலத்தையே எண்ணும் ராமன் நினத்தான். இன்றைக்கு என்றும் போல எதிர் கொண்டழைக்கவில்லையே. அன்புடன் அணைத்து கொஞ்சவில்லையே. கோபமாக இருந்தாலும் என்னைக் கண்டதும் சாந்தமாகி விடுவாரே. இன்று என்னைக் கண்டதும் அதிக வாட்டம் அடைய என்ன காரணம்? சக்தியை முழுதும் இழந்தவன் போல தீனனாக முகம் வாடி இருக்கிறாரே. இவ்வாறு எண்ணி, கைகேயி இருந்த பக்கம் திரும்பி, அவளை வணங்கி, என் அறியாமையினால் நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? என்று வினவினான். என்னிடம் கோபமா? எப்பொழுதும் வாத்ஸல்யம் ததும்ப பேசுபவர், இன்று என்னைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரியவில்லையே. கலங்கிய கண்களும், வெளிறிய முகமும் , உடல் சக்தியற்றவரைப் போலவும் இவரைக் கண்டதே இல்லையே. என்னிடம் ஏன் பேசவில்லை? ஏதோ ஒன்று இவர் மனதையும் உடலையும் பாதித்திருக்கிறது. ஏதோ சந்தாபம், சீதளம் இவரை வாட்டுகிறது. எப்பொழுதும் சுகமாக இருப்பது துர்லபம் தானே. நீங்கள் தான் கொஞ்சம் சமாதானம் செய்யுங்கள். பிரியமான தோற்றம் கொண்ட பரதனிடத்திலோ, மகா புத்திசாலியான சத்ருக்னனிடத்திலோ, என் தாய்மார்கள் விஷயத்திலோ நான் வருத்தம் அடையும் படி நடந்து கொண்டு விட்டேனா? தந்தை சொல்லை மீறினேனா? அரசன் என்னிடம் கோபம் கொண்டால் முஹுர்த்தம் கூட நான் உயிருடன் இருக்க மாட்டேன். தான் உருவாக காரணமாக இருந்த, ப்ரத்யக்ஷ தெய்வம் போன்ற பெற்றோரிடம் மனிதன் எப்படி உதாசீனமாக நடந்து கொள்ள முடியும்? அபிமானம் காரணமாக ஏதாவது கடுமையாக சொல்லி, நீங்கள் கோபித்துக் கொண்டு அதனால் மன வாட்டம் அடைந்தாரா? நான் சிரத்தையோடு கேட்கிறேன், பதில் சொல்லுங்கள் தேவி. என்ன காரணத்தினால், என் தந்தை என்றுமில்லாத முக வாட்டத்துடன் இருக்கிறார். இவ்வாறு மகாத்மாவான ராமன் கேட்டதும், கைகேயி பதில் சொன்னாள். தயக்கமோ வருத்தமோ இன்றி பேசினாள். சற்றும் லஜ்ஜையில்லாமல், தன் காரியமே குறியாக ராமனிடம் சொன்னாள். ராமா, அரசனுக்கு கோபம் இல்லை. எந்த விதமான வருத்தமும் இல்லை. இவர் மனதில் ஒன்று இருக்கிறது. உன்னிடத்தில் வெளிப் படையாக பேசத் தயங்குகிறார். உன்னிடத்தில் பயப்படுகிறார். பிரியமான மகன் நீ. உனக்கு அப்ரியமான, விரும்பத் தகாத விஷயத்தைச் சொல்ல இவருக்கு நா எழும்பவில்லை. அதனால் இவர் சொல்லி கேட்டதை நான் சொல்கிறேன். நீ கண்டிப்பாக செய்ய வேண்டும். முன்பொரு சமயம் என்னிடம் மிகவும் மகிழ்ந்து வரங்கள் கொடுத்தார். இப்பொழுது பாமரன் போல அந்த செயலுக்காக வருந்துகிறார். தருகிறேன் என்று எனக்கு வரங்களைக் கொடுத்து விட்டு, இப்பொழுது தயங்குகிறார். பத்து திக்குகளிலும் பரவிய பெரிய சாம்ராஜ்யத்தை ஆளும் மகா ராஜா இவர். தண்ணீர் வடிந்த பிறகு சேதுவைக் கட்ட முயலுவது போல இருக்கிறது இவர் செயல். ராமா, அரசனாக இருப்பவன் எப்பொழுதும் சத்யத்தை விடக் கூடாது. இது எல்லோரும் அறிந்ததே. தர்மத்திற்கு ஆதாரமே இது தான். ராஜா சொல்வது, சுபமானாலும், அசுபமானாலும், நீ செய்வாயா? அப்படியானால் நான் முதலில் இருந்து நடந்ததை திரும்பச் சொல்கிறேன். அரசன் சொல்வது உனக்கு பிடிக்காமல் போனாலும் எதிர்க்காமல் இருந்தால் நான் சொல்கிறேன். இவர் தானாக சொல்ல மாட்டார். இவ்வாறு அரசன் முன்னாலேயே கைகேயி சொல்லவும், ராமன் மிகவும் வருந்தினான். அஹோ | திக், கஷ்டமே. தேவி, என்னைப் பார்த்து இப்படி பேசுகிறாயே, ராஜாவின் கட்டளை என்றால் நான் நெருப்பில் கூட குதிப்பேன் என்பது தெரியாததா? கொடிய விஷமானாலும் சாப்பிடுவேன். சமுத்திரத்தில் மூழ்கச் சொன்னாலும் செய்வேன். தந்தை எனக்கு குரு, அரசன். என் நலத்தையே விரும்பும் அன்புடையவர். அவர் சொல்லி மறுப்பேனா? அதனால், தேவி, நீ சொல்லு. ராஜாவின் மனதில் என்ன விருப்பம் உள்ளது? நான் கண்டிப்பாக செய்வேன். இதோ பிரதிக்ஞை செய்கிறேன். ராமன் எப்பொழுதும் இரண்டு வார்த்தை பேச மாட்டான். இப்படி நேர்மையே உருவாக நின்றவனிடம், பண்பற்ற கைகேயி, மென்மையாக உண்மையையே எப்பொழுதும் பேசும் ராமனிடத்தில், கொடுமையான வார்த்தைகளை சொன்னாள்.
முன்பு, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடந்த பொழுது, உன் தந்தை எனக்கு இரண்டு வரங்கள் கொடுத்தார். ராகவா, நான் அவரை காப்பாற்றியதால் சந்தோஷமாக இரண்டு வரங்கள் கொடுத்தார். மிகப் பெரிய அந்த யுத்தத்தில், அம்பு தைக்கப் பட்டு, உயிருக்கு மன்றாடிய அவரை நான் பிழைக்கச் செய்தேன். அந்த வரத்தைக் கொண்டு நான் பரதனுக்கு ராஜ்யத்தை யாசித்தேன். நீ தண்டகாவனம் செல்ல வேண்டும் என்றும் கேட்டேன். உன் தந்தையை சொன்ன சொல் மீறாதவன், சத்யப்ரதிக்ஞன் என்ற நற்பெயர் கெடாதவாறு செய்ய, நீயும் அதே போல வாக்கு மீறாதவன் என்ற பெயரை காப்பாற்றிக் கொள். இதோ நான் சொல்வதைக் கேள். அரசன் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்று. ஒன்பது வருஷம், பின்னும் ஐந்து வருஷம் நீ காட்டில் வசிக்க வேண்டும். பரதன் முடி சூட வேண்டும். உனக்கு முடி சூட்டுவதற்காக செய்துள்ள இதே ஏற்பாடுகள், ஆயத்தங்களைக் கொண்டே பரதன் முடி சூடுவான். ஏழு, ஏழு வருஷங்கள், தண்டகாரண்யத்தில் வசிப்பாயாக. இந்த பதவியை தியாகம் செய்து விட்டு, ஜடை முடி தரித்தவனாக, வனம் செல். பரதன் இந்த கோஸல புரத்தை ஆளட்டும். பலவிதமான ரத்னங்கள் நிறைந்ததும், குதிரைகளும் யானைகளும் நிறைந்த இந்த பூமியை பரதன் அடைவான். கருணையால், அரசன் தானே இதை உன்னிடம் சொல்லத் தயங்குகிறார். உன்னை நிமிர்ந்து பார்க்கவும் இயலாமல் தலை குனிந்து சோகத்துடன் இருக்கிறார். ரகு நந்தனா, அரசனது இந்த கட்டளையை நிறைவேற்று. நராதிபனான உன் தந்தையை சத்யம் என்ற பெரிய சக்தியினால், காப்பாற்று. இவ்வளவு கடுமையான வார்த்தையை கைகேயி சொல்லக் கேட்டும் ராமன் மனதில் வருத்தம் தோன்றவில்லை. அரசனோ, தன் மகனுக்கு வந்துள்ள மிகப் பெரிய கஷ்டத்தை நினைத்து அளவிட முடியாத தாபத்திற்கு ஆளானான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், வன வாஸ நிதேஸோ என்ற பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) (ஸ்லோகங்கள் – 41).
அத்தியாயம் 19 (96) ராம ப்ரதிக்ஞை (ராமன் சத்தியம் செய்தல்)
இந்த கடும் வார்த்தையை கைகேயி சொல்லக் கேட்டும் ராமன் மனம் கலங்கவில்லை. கைகேயியிடம் அப்படியே ஆகட்டும். வனத்தில் வசிக்க இதோ கிளம்புகிறேன். ஜடை முடி தரித்து அரசனின் ஆணையை சிரமேற்கொண்டு கிளம்புகிறேன். ஆனால் ஒரு விஷயம் தெரிய வேண்டும். ஏன் என் தந்தை வழக்கம் போல என்னைக் கண்டதும் மகிழ்ந்து வரவேற்கவில்லை? கோபிக்க வேண்டாம் தேவி. உன் எதிரில் சொல்கிறேன், நான் போகிறேன். நீ சந்தோஷமாக இரு. வல்கலையும், ஜடை முடியும் தரித்து நான் வனம் போகிறேன். என் தந்தை எப்பொழுதும் என் நலம் நாடுபவர், எனக்கு குரு. செய் நன்றி மறவாதவர். மேலும் அரசன். அவர் கட்டளையிட்டு, நான் அதை செய்யாமல் போவேனா? அவர் ஏன் நம்பிக்கையோடு கவலையற்று என்னிடம் தானே சொல்லவில்லை. ஏதோ ஒரு விஷயம் நம்ப முடியாமல் என் மனதை வாட்டுகிறது. ராஜா ஏன் தானே என்னிடம் சொல்லக் கூடாது. பரதனுக்கு அபிஷேகம் செய்யப் போவதாக ராஜாவே என்னிடம் சொல்லியிருக்கலாம். முன்னாலேயே கோடி காட்டியிருந்தால் நான் சீதையையோ, ராஜ்யத்தையோ, உயிரையோ, இஷ்ட ஜனங்களையோ, செல்வத்தையோ, சந்தோஷமாக பரதனுக்கு கொடுத்திருப்பேன். மனிதருள் இந்திரன் போன்ற என் தந்தை தானே உங்களுக்கு கொடுத்த வாக்கையும், அதை தான் காப்பாற்ற இருப்பதையும் என்னிடம் சொல்லியிருக்கலாம். இப்பொழுது லஜ்ஜையினால் முகம் கவிழ்ந்து இருக்கும் அவரை சமாதானப் படுத்துங்கள். சக்ரவர்த்தியாக இருந்து கொண்டு பூமியை நோக்கி முகம் கவிழ்ந்து கண்ணீர் விடுகிறார். தூதர்கள் வேகமாக செல்லும் குதிரைகளில் செல்லட்டும். ராஜாவின் கட்டளை என்று இன்றே பரதனை அழைத்து வரட்டும். உடனே நானும் தண்டகாரண்யம் இதோ போகிறேன், வேகமாக. பதினான்கு வருஷம் வனத்தில் வசிக்க வேண்டும் என்ற தந்தையின் வார்த்தையை யோசிக்காமல் ஏற்றுக் கொள்கிறேன். ராமனின் இந்த பதிலைக் கேட்டு கைகேயி மகிழ்ந்தாள். அவனை சீக்கிரம் அனுப்புவதே குறியாக, முகம் மலர இருந்தவள், ராமனை துரிதப் படுத்தினாள். அவ்வாறே ஆகட்டும், வேகமான குதிரைகளில் ஏறி தூதர்கள் செல்வார்கள். ஜனங்கள் பரதனை மாமன் வீட்டிலிருந்து அழைத்து வரச் செல்வார்கள். நீ உற்சாகமாக கிளம்பியவன் தாமதம் செய்வது சரியல்ல. ராமா, நீ இங்கிருந்து சீக்கிரம் வனம் செல். லஜ்ஜையினால் ராஜா தானாக உன்னிடம் பேச முற்படவில்லை. இதனால் உனக்கு மனத் தாங்கல் இருக்கலாம். அதை லட்சியம் செய்யாதே. அவசரமாக நீ எதுவரை இந்த ராஜ்யத்தை விட்டு, ஊரை விட்டு நீ வனம் போகவில்லையோ அதுவரை ராஜா, உன் தந்தை ஸ்னானம் செய்ய மாட்டார், சாப்பிடவும் மாட்டார். இதைக் கேட்டு -திக்- கஷ்டமே என்று சொல்லியபடி ராஜா மூர்ச்சையாகி தங்கத்தாலான அந்த கட்டிலிலிருந்து கீழே விழுந்தார். அவரைத் தூக்கி படுக்கையில் கிடத்தினான். கைகேயியின் கடுமையான வார்த்தைகள் வேகமாக செல்லும் உயர் ஜாதி குதிரை கசையடி பட்டது போல துடிக்கச் செய்தது. பண்பற்ற கைகேயி துரிதபடுத்துவது எதற்காக? அவளைப் பார்த்து சற்று காட்டமாகவே செல்வத்தின் பின் செல்லும் அல்பன் நான் அல்ல தேவி. உன் ராஜ்யத்தில் தங்கி என்னுடையதாக ஆக்கிக் கொள்ள மாட்டேன். என்னை ரிஷிகளுக்கு சமமாக எண்ணுவாய். தர்மம், தர்மம் ஒன்றேயே பின் பற்றுபவன். இங்கு இதோ, இவருக்கு சிறிதளவாவது பிரியமாக செய்ய முடியுமானால், என் உயிரைக் கூட மதியாமல் கண்டிப்பாக செய்பவன் நான், இதை தெரிந்து கொள். என் தந்தைக்கு பணிவிடை செய்வதைக் காட்டிலும் மகத்தான தர்மாசரணம், தர்மத்தை கடை பிடித்தல் என்பது வேறு எதுவுமே இல்லை. அந்த முறையில் உன் வசனத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த பெரியவர் தானே சொல்லாவிட்டலும் கூட, உடன் இருந்து நீ சொல்வதை மதித்து, நான் ஜனங்கள் இல்லாத அடர்ந்த காட்டில் பதினான்கு வருஷம் வசிப்பேன். என்னிடத்தில் நல்ல குணம் இருப்பதாக நீ நினைக்கவில்லை கைகேயி. நான் மிகவும் மதிப்பு வைத்திருந்த அரச மகிஷியான நீ அரசனிடம் சொன்னாயே, அது மிகக் கொடியது. என் தாயை வணங்கி விடை பெறும் வரை, சீதையிடம் விஷயத்தைச் சொல்லி சமாதானம் செய்யும் வரை அவகாசம் கொடு. இன்றே தண்டகாவனம் போகிறேன். பரதன் ராஜ்யத்தை ஆளட்டும். நீ என்ன செய்கிறாயோ, அது தான் பெரிய தர்மம், பழமையான தர்மம் என்ற ராமனின் வார்த்தைகள் கேட்டுக் கொண்டிருந்த தசரத ராஜாவின் நெஞ்சில் தைத்தன. பெருங்குரலில் அழ ஆரம்பித்தார், எதுவுமே பேசவோ, சொல்லவோ அவரால் முடியவில்லை. நினைவிழந்த தந்தையின் சரனங்களில் வணங்கி விட்டு, பட்டென்று வெளியேறினான். வெளியே,தன் நண்பர்களைக் கண்டான். மகா கோபத்துடன் கண்களில் நீர் வழிய லக்ஷ்மணன் ராமனை பின் தொடர்ந்தான். அபிஷேகத்திற்காக வைத்திருந்த கலசங்களை வலம் வந்து வணங்கி விட்டு, கண்களை எடுக்காமலே, சுற்றிலும் பார்வையை செலுத்தாமல், ராமன் வேகமாக சென்றான். மிகப் பெரிய ராஜ்ய லக்ஷ்மி தன்னை விட்டு விலகியது கூட ராமனுக்கு வருத்தத்தை தரவில்லை, பூமியை தியாகம் செய்து விட்டு வனம் செல்லும் உறுதி பூண்டவன் மனம் சற்றும் தளரவில்லை. பரிஜனங்கள் அளித்த சுபமான குடையையும், சாமரங்களையும் தடுத்து விட்டு, தன் ஜனங்களையும் விலக்கி விட்டு, ரதத்தையும், ஊர் ஜனங்களையும் தவிர்த்து, கால் நடையாகவே, வேகமாக தாயாரின் மாளிகையினுள் நுழைந்தான். இந்திரியங்களை கட்டுப் படுத்தி, தன் உணர்ச்சிகளை சற்றும் வெளிக் காட்டாமல், மனதில் பொங்கும் துக்கத்தையும், கோபத்தையும் அடக்கி விரும்பத் தகாத செய்தியை தாயிடம் சொல்ல தயாரானான். உற்றார்கள், சுற்றத்தார் அவன் முகக் குறிப்பிலிருந்து எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. சத்யவாதி, ஸ்ரீமான், அவன் தன் சந்தோஷத்தை வெளிக் காட்டாமல் இருப்பது உசிதமே என்று எண்ணினர், சரத் சந்திரன் தன் தேஜஸை வெளிப் படுத்திக் கொள்வதில்லையே என்று நினைத்தனர். எல்லா ஜனங்களையும் மதுரமான வார்த்தைகளால் விசாரித்து விட்டு, தாயின் சமீபம் சென்றான். குணங்களால் அவனுக்கு சமமான லக்ஷ்மணனும் அதே போல பின் தொடர்ந்தான். மிகவும் கோலாகலமாக, வெளிப்படையாக மகிழ்ச்சி தெரிய நடமாடிய ஜனங்கள் நிறைந்து இருந்த மாளிகையில், தன்னை கண்டு, நண்பர்களும், மற்றவர்களும் எதையும் தெரிந்து கொண்டு விட முடியாத படி முகத்தில் எந்த வித சலனமும் காட்டாது இருந்தான்.
இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், ராம ப்ரதிக்ஞா என்ற பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) (ஸ்லோகங்கள் – 40).
இதற்கு மேலுள்ள அயோத்யா காண்டத்தின்
மொழி பெயர்ப்பு கொடக்க முடியுமா?
நன்றி
Parvathy Subramanian