ஸ்ரீமத் ராமாயணம் அயோத்யா காண்டம் 61 -80
அத்தியாயம் 61(138) கௌசல்யோபாலம்ப: (கௌசல்யையின் புலம்பல்).
ராமன் வனம் சென்றபின் ஒரு நாள், கௌசல்யை தன் மன அழுத்தம் தாங்க மாட்டாமல் கணவனிடம் சொன்னாள். மூன்று உலகிலும் உங்கள் புகழ் பரவியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும், என் மகன் ராகவன் கருணை மிகுந்தவன், பிரியமாக பேசுபவன், கேட்டதை உடனே தரும் குணவான். சீதையுடன் இரு ராஜ குமாரர்களும் வனத்தில் எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறார்களோ. சிறு பெண். உஷ்ணத்தையும்,
குளிரையும் எப்படித் தாங்குகிறாளோ. வடை பாயஸத்தோடு அறுசுவை உண்டியை சுவைத்து பழகியவள், காட்டில் கிடைக்கும் ருசியற்ற உணவை சாப்பிட்டு எப்படி
சமாளிக்கிறாளோ. எப்பொழுதும், கீதங்களையும் வாத்ய கோஷங்களையும் கேட்டு மகிழ்வாள். கொடிய காட்டு மிருகங்களின் சத்தத்தைக் கேட்டு சகித்துக் கொண்டு இருக்கிறாள். என் மகன் எங்கு தூங்குகிறானோ, அவன் தோளை சாய்த்து படுக்கும் இடம் எப்படி இருக்கிறதோ. தாமரை வண்ணன், நல்ல கேசம் உடையவன், அவன் மூச்சுக் காற்றே பத்மம் போன்ற வாசனையுடையது. எப்பொழுது காண்பேனோ. என் மனம் வஜ்ரத்தால் ஆனது போலும். மகனைக் காணாமல் ஆயிரம் துகள்களாக பிளக்கவில்லையே. என் பந்துக்களை காட்டுக்கு விரட்டி விட்டீர்களே, என்ன கருணை. சுகமாக இருக்க வேண்டியவர்கள் காட்டில் அலைகிறார்கள். பதினைந்தாவது வருஷம் திரும்பி வரும் சமயம் ராஜ்யத்தையும் கோசத்தையும் (பொக்கிஷம்) பரதன் தருவானா? சிரார்த கார்யத்தில் சிலர் தன் பந்துக்களையே சாப்பிட வைப்பார்கள். காரியம் ஆனபின் பிராம்மணர்களை அழைப்பார்கள். வித்வான்களாகவும், குணவான்களும் இப்படி பின்னால் தருவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தேவ லோகத்து அமிர்தமானாலும் அவர்களுக்கு அது ஏற்கத் தக்கது இல்லை. பிராம்மணர்களேயானாலும், ஒருவர் சாப்பிட்டபின் மிகுந்ததை, ஏற்க மாட்டார்கள். ஏற்பதும் தகாது. ரிஷபம் உடைந்த கொம்புடன் இருந்தால் ஏற்கத் தகாது போல. மகா ராஜனே, கனிஷ்டனான இளயவன் அனுபவித்த ராஜ்யத்தை பெரியவனான சகோதரன் ஏன் ஏற்றுக் கொள்வான்? மறுக்காமல் இருப்பானா? மற்றவன் கொண்டு வந்த உணவை புலி தின்னாது, இவன் நரவ்யாக்ரன். இவனும் மற்றவர் சொத்தை தொட மாட்டான். ஹவிஸ், ஆஜ்யம், யாகத்தில் சமர்ப்பிக்கும் நைவேத்யம், (கபாலம் அல்லது பாத்திரத்தில் விசேஷமாக தயார் செய்யப் படுவது-புரோடஸ:) காதிர என்ற வகை மரத்தில் செய்த யூபஸ்தம்பங்கள், குசம், – இவைகளை ஒரு யாமம் ஆனபின் திரும்ப யாகத்தில் உபயோகிப்பது இல்லை. இந்த விதமான அவமதிப்பை ராமன் ஏற்றுக் கொள்ள மாட்டான். மதுவின் சாரத்தை எடுத்து விட்டு தருவது போலவும், சோம ரஸம் இல்லாமல் அல்லது வீணாகி விட்ட யாகத்தை போல இந்த ராஜ்யம் அவனுக்கு உகந்தது அல்ல. பலசாலிகளான சிறுத்தை புலி, வாலதி எனும் மிருகம் சீண்டினால் பொறுக்காதது போல இந்த அவமரியாதையை பொறுக்க மாட்டான். பெரும் யுத்தத்துக்கு பயப் பட மாட்டான். அத4ர்மம் என்பதால் இப்பொழுது சண்டைக்கு வரவில்லை. உலகில் த4ர்மம் தழைக்கப் பாடு படுபவன். இவன் பலம் அறியாததா? யுகா3ந்தகன் போல ஜீவன்களையும் சாகரத்தையுமே எரிக்க வல்ல மகாவீர்யம் உடையவன். மகா பலம் பொருந்தியவன். ஜலத்தில் தோன்றும் ஜீவன்கள் தன் குழந்தைகளையே அழிப்பது போல தன் தந்தையாலேயே அழிக்கப்பட்டான். சிங்கத்துக்கு சமமான பலம் உடைய இந்த வீரன், வ்ருஷபா4க்ஷன், நரஸ்ரேஷ்டன். பழமையான சாஸ்திரம் பிராம்மணர்கள் ஆசரித்து வருவது, நீங்கள் அறிந்ததே, இருந்தும் நீங்களே புத்ரனை நாடு கடத்திய பின் (சத்யத்திற்கு பங்கம் வரக் கூடாது என்று புத்திரனை வெளி யேற்றியது சாஸ்திர சம்மதம் என்று நினைத்தால்), எனக்கு யார் கதி. பெண்களுக்கு கணவன் தான் கதி, அவனுக்குப் பின் மகன். மூன்றாவது தாயாதிகள். நான்காவது கதி கிடையாது. எனக்கு நீங்களும் ஆதரவு இல்லை. ராமனையும் வனத்துக்கு அனுப்பியாயிற்று. இப்படி முழுவதுமாக வதைத்த பின் காட்டுக்குப் போகவும் நான் விரும்பவில்லை. உங்களால் இந்த ராஜ்யம் அழிந்தது. ராஷ்டிரங்கள் அழிந்தன. அதன் ஆத்மா அழிந்தது. மந்திரிகள் நாசம் ஆயினர். புத்திரனுடன் கூட நானும் நாசமானேன். உங்கள் மனைவியும், மகனும் தான் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். இவ்வாறு கடும் சொற்களால் தாக்கப் பட்ட அரசன் மிகவும் வருத்தத்துடன் மூர்ச்சையடைந்தான். பிறகு தெளிந்து தான் செய்த ஒரு தவற்றை நினைத்துக் கொண்டு சொல்லலானான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கௌசல்யா உபாலம்போ என்ற அறுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 62(139) கௌசல்யா ப்ரசாதனம் (கௌசல்யையை சமாதானப் படுத்துதல்)
ராம மாதா மிகவும் கோபத்துடனும், தாபத்துடனும் அரசனிடம் கடுமையாக பேசவும், அவர் வருத்தத்துடன் நினைவுகளில் மூழ்கினார். மூர்ச்சையடைவது, திரும்ப நினைவு வருவதுமாக சிறிது நேரம் சென்றது. அருகில் கௌசல்யையைப் பார்த்து, தான் செய்த தவற்றை திரும்பவும் ஒருமுறை மனதில் நினைத்து பார்த்துக் கொண்டார். முன் ஒரு சமயம் அறியாமல் சப்3த3வேதி3 என்ற பா3ணத்தால் தான் செய்ததையும், தற்சமயம் ராமன் பிரிவையும் இணைத்து இரு பக்கமும் துன்பம் அடைந்தார். இந்த சோகத்தின் நடுவில் கௌசல்யையிடம் சொன்னார். கௌசல்யே, உன்னை வேண்டிக்கொள்கிறேன். என்னை மன்னித்து விடு. கை கூப்பி வணங்குகிறேன். வெளி மனிதர்களிடம் கூட நீ வாத்ஸல்யம் காட்டுபவள். கருணை மிக்கவள். நிர்குணனாக இருந்தாலும், கணவன் பெண்களுக்கு ப்ரத்யக்ஷ தைவதம் என்று தர்மம் அறிந்தவர்கள் சொல்வார்கள். நீ தர்மம் அறிந்தவள்.உலக வழக்கு அறிந்தவள். நீ துக்கத்தில் இருந்தால் கூட இது போல பிரியமற்ற வார்த்தைகளைப் பேசுவது தகாது. ராஜா இப்படி தீனமாக வேண்டவும், கௌசல்யையின் கண்களில் மடை திறந்தது போல நீர் பெருகியது. அரசனின் கூப்பிய கைகளைப் பிடித்து தன் தலையில் பதித்துக் கொண்டவளாக பதட்டத்துடன், கோர்வையாக பேசக் கூட முடியாமல் பதில் சொன்னாள். மன்னித்துக் கொள்ளுங்கள், ஸ்வாமி, கால்களில் விழுகிறேன். கணவனால் கைவிடப் பட்டவள், என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் இரண்டு உலகங்களிலும் அவள் நல்ல கதியை அடைய முடியாது. சத்யவாதி, தர்மவாதி என்று உங்களை அறிவேன். புத்ர சோகம் கண்ணை மறைக்க ஏதோ சொல்லி விட்டேன். சோகத்தில் மூழ்கினால், தைரியம் போகும். கேள்வியும் கல்வியும் அழியும், எல்லாவற்றையும் பொசுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதைப் போன்ற வேறொரு சக்தி கிடையாது. சத்ருவின் கையில் அடி வாங்கினால் கூட பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், சூக்ஷ்மமான வேதனையையும் பொறுத்துக் கொள்ள முடியாது. ராமன் வன வாசம் சென்று இன்று ஐந்து இரவுகள் ஆகி விட்டன. ஐந்து வருஷம் போல இது என்னை வாட்டி எடுக்கிறது. அவனையே நினைத்து, வேதனை என்னை உருக்குகிறது. வேகமாக நதி ஜலம் வந்து சமுத்திரத்தையே கலக்குவது போல இவ்வாறு கௌசல்யை சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே, வெளிச்சம் குறைந்தது. சூரியன் மறைய, மெதுவாக இருள் சூழ்ந்தது. கௌசல்யை இவ்வாறு சமாதானமாக பேசிய பின், அரசனும் சற்று மனம் தெளி ந்து உறக்கத்தில் ஆழ்ந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கௌசல்யா ப்ரசாதனம் என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 63(140) ரிஷி குமாரவதா4க்2யானம் (ரிஷி குமரனை கொன்ற வரலாறு)
ஒரு முஹுர்த்த நேரம் சென்றது. அரசன் விழித்துக் கொண்டான். சிந்தனை அவன் மனதை வியாபித்தது. இந்திரனுக்கு சமமான தேஜஸ் உடையவன். ராம, லக்ஷ்மணர்கள் அகன்றதால் இருட்டு சூரியனை மறைப்பது போல, வேதனை அவன் மனதில் வியாபித்தது. கௌசல்யை பேசியதையும், தான் செய்த ஒரு தவற்றையும் நினைத்துக் கொண்டான். ராமன் வனம் சென்ற ஆறாவது இரவு, திடுமென நினைவு வந்தது போல கௌசல்யையிடம் சொல்ல ஆரம்பித்தான். கௌசல்யே, நாம் எது செய்கிறோமோ, சுப4மோ, அசுப4மோ அதையே தான் நாமும் அனுபவிக்கிறோம். தன் கர்மா தான் தனது சுக துக்கத்திற்கு காரணம். அர்த்த லாபம், நிறைவோ, குறைவோ, நம் கர்மத்தின் பலன். இதில் தோஷம் சொல்பவனை அறியாதவன் என்றுதான் சொல்வார்கள். மாமரத்தை வெட்டி விட்டு, பலாச மரத்திற்கு ஜலம் வார்த்து வளர்த்தால் பலன் என்னவாக இருக்கும்? அது போல ராமன் வளர்ந்து பலன் தரும் சமயம் அவனை தியாகம் செய்து விட்டு தவிக்கிறேன். என் துர்மதி. ஒரு சமயம் சப்தத்தைக் கேட்டு, குமாரனாக இருந்த பொழுது, கையில் வில்லேந்தி சப்3fத3வேதி3 என்ற பா3ணத்தைக் கொண்டு நான் மிகப் பெரிய தவற்றைச் செய்தேன். அது இப்பொழுது என்னை குதறியெடுக்க வந்து சேர்ந்திருக்கிறது. இந்த துக்கம் நானே வருவித்துக் கொண்டது. விளையாட்டாக, சிறுவன் விஷம் அருந்தியது போல, ஏதோ ஒருவன் பலாச மரத்தில் நாட்டமுடையவனாக இருந்திருக்கலாம். அது போல நானும் சப்த வேதி என்ற இந்த பாணத்தை எய்தினேன்.
தேவி, நமது திருமணத்திற்கு முன்பு நான் யுவ ராஜாவாக ஆனேன். மழைக் காலம் வந்தது. என் மனம் உற்சாகத்தில் திளைத்தது. ஒரு நாள் பூமியில் வாழும் ஜீவ ஜந்துக்களுக்கு பிராண ரஸம் போன்ற தன் கிரணங்களால் வேண்டுமளவு பருக செய்து உயிரூட்டிய பின், சூரியன் மேற்கு வாயிலில் விழும் நேரம். திடுமென உஷ்ணம் குறைந்து மேகங்கள் சில்லென்று தோன்றின. அந்த சமயம் ஓநாய்களும், சாரஸங்களும், ப3ர்ஹிணம் என்ற மயில் இனமும், கூடுகளை நோக்கிச் சென்றன. மரங்கள் ஒரு பக்கமாக ஸ்நானம் செய்தது போல நனைந்திருந்தன. மழைக் காற்றினால் விழுந்த இறக்கைகளுடன் பறவைகள், மரங்களை வந்தடைந்தன. விழுந்த ஜலத்தால், துளையிடப் பெற்ற இலைகளும், அடிக்கடி விழும் மழைத்துளிகளால் மதம் பிடித்த மான் முகத்தில் தோன்றும் வியர்வை முத்துக்களைப் போல மலை அழகாக விளங்கியது. வெண்மை நிற அருவிகள், மலையின் இடுக்களிலிருந்து வெளி வருவதைப் பார்க்க, விபூதி பூசிய பாம்புகள் புற்றிலிருந்து வருவது போல இருந்தன. இயற்கையின் அழகு இவ்வளவு சுகமாக இருந்த சமயம், வில்லும் அம்பையும் ஏந்தி ரதத்தில் ஏறி, உடற் பயிற்சி செய்ய விரும்பி, சரயூ நதிக் கரையை அடைந்தேன். நீரை அருந்த மகிஷமோ, யானையோ இரவு நேரத்தில் வனத்துக்கு வரும்.
காட்டு நாயோ ஏதோ ஒன்று வந்தால் அடித்து வீழ்த்தும் எண்ணம் கொண்டு காத்திருந்தேன். கையில் அம்பு பூட்டிய வில்லுடன், தனிமையில் ஒரு காட்டு மிருகத்தை அடித்தபின், இன்னொரு கொடிய மிருகம் வரும் என்று காத்திருந்தேன். அந்த கும்மிருட்டில், திடீரென கும்பத்தை நிரப்புவது போல சத்தம் கேட்டது. கண் தெரியவில்லை. சத்தம் மட்டும் கேட்டது. ஏதோ யானை பிளிறுவது போல இருந்தது. உடனே, ஆலகால விஷம் போலவும், நெருப்புத் துண்டம் போலவும் தகிக்கும் என் அம்பை, சத்தம் வந்த திக்கை நோக்கி பெரிய காட்டு யானையை குறி வைப்பதான எண்ணத்துடன் விட்டேன். ஹா ஹா என்ற அலறல் கேட்டது. பா3ணத்தால் மர்மத்தில் அடிபட்ட மனிதக் குரல். என்னைப் போல தபஸ்வி பேரிலும் அம்பை விடுபவர்கள் இருக்கிறார்களா? இருட்டு நேரத்தில் தண்ணீர் எடுக்கத்தானே வந்தேன். அம்பால் அடிக்க நான் யாருக்கு என்ன அபராதம் செய்தேன்? என்னைப் போன்ற ரிஷிகள், த3ண்டம் எடுப்பதில்லை என்று சபதம் செய்தவர்கள், (அடிக்கக் கூடாது, அஹிம்சை விரதம் பூண்டவர்கள்) காட்டில் காட்டு ஜீவன்களுடன் காலத்தை கழிப்பவர்கள், எங்களை ஆயுதத்தால் அடித்துக் கொல்வது என்ன நியாயம்.? ஜடா முடி தரித்து வல்கலை மரவுரி ஆடையணிந்து திரிகிறோம். என்னால் யாருக்கும் ஒரு துன்பமும் நேர்ந்ததில்லையே. என்னைக் கொல்லும் அளவு யாருக்கு என்ன அபராதம் செய்தேன். உபயோகமில்லாத இந்த வதம், அனர்த்தம் தான் விளையும். இதை யாரும் சரி என்று சொல்ல மாட்டார்கள். என்ன சொல்லி என்ன பயன்? என் காலம் முடியும் நேரம் இது. என்னை வதம் செய்து என் பெற்றோரை பரிதவிக்க விட்டானே, அது தான் வருத்தம். முதியவர்களான என் பெற்றோர்கள், நான் இவ்வளவு நாளாக பாதுகாத்து வந்தேன். என் மரணத்திற்கு பிறகு எப்படி வாழ்வார்கள்?. இருவரும் வயதானவர்கள். நான் இப்படி பா3ணத்தால் அடிபட்டு கிடக்கிறேன், விவரம் அறியாத சிறுவனால், நாங்கள் மூவரும் அழிந்தோம். வேதனை மிகுந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, என் கையிலிருந்து அம்பும் வில்லும் நழுவி விழுந்தது. அப்பொழுது நான் எந்த திசையிலிருந்து இந்த தீனமான அழுகுரல் கேட்கிறது என்பதை கவனித்து, அந்த திக்கில் சென்றேன். என் மனம் சொல்லொனா துயரத்தில் மூழ்கியது. சரயு நதிக் கரையில் அடிபட்டு வீழ்ந்து கிடந்த தபஸ்வியைக் கண்டேன். ஜடா முடி விரிந்து கிடந்தது. ஜலம் நிறைந்த குடம் கவிழ்ந்து கிடந்தது. மண்ணில் விழுந்து உடலெல்லாம் சேறு. அம்பால் அடிபட்டு கீழே விழுந்து கிடக்கிறான். என்னைப் பார்த்தான். பயந்து நடுங்கிக் கொண்டு நிற்கும் என்னைப் பார்த்து கண்களாலேயே எரித்து விடுபவன் போல பார்த்து கோபமாக கேட்டான். ராஜன், இந்த காட்டில் வசிக்கும் நான் உனக்கு என்ன அபராதம் செய்தேன்? என் பெற்றோர்களுக்கு குடிக்க தண்ணீர் எடுக்கத் தானே வந்தேன். என்னை ஏன் அடித்தாய்? ஒரே பாணத்தால் என் மர்மத்தில் அடித்து விட்டாய். என் தந்தையும் தாயும், இருவரும் கண் தெரியாதவர்கள். தாகத்தால் தவிக்கிறார்கள். நான் வருவதை எதிர் நோக்கி காத்திருப்பார்கள். உடல் பலமில்லாமல் என்னையே நம்பியிருப்பவர்கள். இந்த கஷ்டத்தை எப்படி தாங்கப் போகிறார்கள். தவம் செய்வதனால் ஒரு பயனும் இல்லை. கல்வி கேள்விகளாலும் ஒரு பயனும் இல்லை. இதோ என் தந்தை நான் விழுந்து கிடப்பதை அறிய மாட்டாரே. தெரிந்தும் தான் என்ன செய்வார்? சக்தியும் இல்லை, பராக்ரமமும் இல்லை. விபத்தில் மாட்டிக் கொண்டு, சக்தியின்றி கிடக்கும் யானையை மற்ற யானைகள் காப்பது போல நீயே போ. போய் என் பெற்றோரிடம் சொல்லு. கோபம் கொண்ட நெருப்பு வனத்தையே அழிப்பது போல அவர்கள் உன்னை தகிக்காமல் இருக்கட்டும். இதோ இந்த ஒற்றையடிப் பாதை என் தந்தையின் ஆசிரமம் போகும். முதலில் அவரை வணங்கி திருப்தி படுத்து. கோபித்துக் கொண்டு உன்னை சபிக்காதபடி நடந்து கொள். முதலில் இந்த அம்பை எடு. மர்மத்தில் பட்டது வலிக்கிறது. மெதுவாக நதிக்கரையிலேயே வளர்ந்த மரங்கள், வேரோடு பிடுங்கப் பட்டால் கரையையே அழிப்பது போல அந்த அம்பு அவன் உடலில் மர்மதானத்தில் தைத்தது, வலி தாங்க முடியாமல் அவஸ்தைப் படுகிறான். அந்த அம்பை எடுத்தால் உயிர் போய் விடும். அதனால் அம்பை பிடுங்கி எடுக்க நான் யோசித்தேன். அவன் துக்கத்துடனும், வேதனையுடனும் தவிக்க நானும் பல மடங்கு துக்கம் அடைந்தேன். என் பரிதாப நிலையை முனிகுமாரன் அறிந்து கொண்டான். மிகவும் கஷ்டப் பட்டு உடல் நிறம் மாறி விட்ட நிலயிலும், பாதி பிராணன் போன நிலையிலும் சோகத்தை விட்டு, தைரியமாக என்னைப் பார்த்து சொன்னான். ராஜன், ப்ரும்ம ஹத்தி தோஷம் வரும் என்று பயப்படாதே. அந்த கவலையை விடு. நான் ப்ராம்மணன் அல்ல. வைச்யனுக்கு, சூத்ர ஸ்த்ரீயிடம் பிறந்தவன். இவ்வாறு பா3ணம் தைத்த உடலுடன் கஷ்டப் பட்டு சொல்லி முடித்தவன் நடுங்கும் உடலோடு பூமியில் சாய்ந்தான். அந்த பா3ணத்தை எடுத்து நான் அவன் சிரமப் படாமல் உயிர் விடும்படி செய்தேன். என்னைப் பார்த்தபடியே உயிர் விட்டான். பாதி உடல் ஜலத்தில். பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த அவனது உடல் அருகில் பத்ரே, நான் மிகவும் வேதனையுடன் அமர்ந்திருந்தேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ரிஷி குமார வதா4க்2யானம் என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 64 (141) தசரத2 தி3ஷ்டாந்த: ( தசரத மரணம் )
தசரத ராஜா, அழுது கொண்டே கௌசல்யையிடம் அந்த மகரிஷியின் மரணத்தைப் பற்றி, தான் செய்த வதத்தை விவரமாகச் சொன்னார். அறியாமல் இவ்வளவு பெரிய பாபத்தை செய்துவிட்டு யோசிக்கலானேன். இதை எப்படி சரி செய்வது? குடத்தை நிரப்பிக்கொண்டு முனிகுமாரன் சொன்ன வழியிலேயே நடந்து ஆசிரமத்தை அடைந்தேன். வயது முதிர்ந்து, கண்களும் தெரியாத நிலையில் அவனது பெற்றோரைக் கண்டேன். பக்ஷிகள், இறக்கைகள் இழந்தது போல நின்றிருந்த இருவரையும் கண்டேன். உட்கார்ந்தபடி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த இருவரையும் பார்த்து இவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தவனாக என்ன சொல்வார்களோ என்ற பயத்துடன் சோகமும் வேதனையும் ஒரு புறம் வாட்ட, மறுபுறம் பயம் அரித்தெடுக்க, ஆசிரமத்தில் நுழைந்தேன். என் பாத அடி சத்தம் கேட்டு என்ன குழந்தாய், தண்ணீரில் விளையாடிவிட்டு வருகிறாயா, உன் தாயாருக்கு தொண்டை வறண்டு போகிறது. சீக்கிரம் வா. உன் தாயாரோ, நானோ ஏதாவது உனக்கு வருத்தம் தர பேசியிருந்தாலும், மனதில் வைத்துக் கொள்ளாதே, மகனேஸ்ரீ இப்பொழுது நீதான் எங்களுக்கு கதி. எங்கள் கண்களும் நீயே, உன் மூலம் தான் உலகையே காண்கிறோம். எங்கள் உயிர் உன் கையில். குழந்தாய், ஏன் பேசாமல் இருக்கிறாய். அந்த முனிக்கு கூட கேட்கமுடியாத நைந்த குரலில் பயந்து நடுங்கிய குரலில் நான் சொன்னேன். மனம் வாக்கு காயம் இவற்றால் வாக்கில் பலத்தைக் கொண்டு வந்து, புத்ர சோகத்தால் என்ன செய்வாரோ என்று நடுங்கினேன். நான் தங்கள் புத்திரன் அல்ல. தசரதன் என்ற க்ஷத்திரியன். என் செயலால், நல்ல மனிதர்கள் தூற்றும் ஒரு துக்கத்தை அடைந்தேன். ப4கவன், கையில் வில்லுடன் நான் சரயூ நதிக்கரை வந்தேன். காட்டு நாய்போல எதையாவது அடிக்கலாம், நீர் குடிக்க வரும் யானையை அடிக்கலாம் என்று காத்திருந்தேன். அப்பொழுது குடத்தில் நீர் நிரப்பும் சப்தம் கேட்டது. யானைதான் என்று நினைத்து பாணத்தை விட்டேன். போய்ப் பார்த்தால் என் அம்பினால் அடிபட்டு, மர்மத்தில் துளைத்த உடம்புடன் பாதி பிராணன் போய், பூமியில் விழுந்து கிடந்த தபஸ்வியைக் கண்டேன். அவன் சொன்னதன் பேரில், வலி தாங்காமல் துடித்தவனைக் காப்பாற்ற பாணத்தை வேகமாக எடுத்தேன். பாணத்தை எடுத்த வேகத்திலேயே அவன் உயிர் பிரிந்தது. நீங்கள் பெற்றோர்கள். கண் தெரியாதவர்கள் என்று அவன் சொன்னான். என் அறியாமையாலும், அவசரத்தாலும், உங்கள் பிள்ளை என் கையால் மடிந்தான். இப்பொழுது என்ன செய்யலாம் என்று தாங்களே சொல்லுங்கள் என்று சொன்னேன். என் வார்த்தையின் கொடுமை அவர் மனதில் உறைத்து உடனே எதுவும் சொல்லக்கூட முடியாமல் முனிவர் திகைத்தார். கை கூப்பி நடுங்கியபடி நின்று கொண்டிருந்த என்னிடம் கண்களில் நீர்பெருகி ஆறாக ஓட நாத்தழதழக்க சொன்னார். ராஜன், இந்த அசுப செய்தியை நீயே வந்து என்னிடம் சொல்லாமல் இருந்திருந்தால், உன் தலை ஆயிரம் சுக்கல்களாக வெடிக்கச் செய்திருப்பேன். க்ஷத்திரியன் செய்யும் வதம், அதுவும் வான ப்ரஸ்த சமயத்தில் விசேஷமாக, தெரிந்து செய்தால் தன் ஸ்தானத்திலிருந்து இறக்கிவிடக் கூடிய சக்தியுடையதே. இதற்கு வஜ்ரதாரியான இந்திரனும் விலக்கல்ல. தவம் செய்யும் முனிவரை தெரிந்து சஸ்திர பிரயோகம் செய்தால், எய்தவன் தலை ஏழாக சிதறும். ப்ரும்மவாதிகளின் சக்தி அப்படிப் பட்டது. உனக்கு தெரியாமல் செய்த அபராதம் ஆனதால் பிழைத்தாய். இங்கு இக்ஷ்வாகு குல ராஜ்யத்தில் நீ யார்? எங்களை எங்கள் மகன் இறந்து கிடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல் அரசனே, அவனை பார்க்க விரும்புகிறோம். மான் தோல் ஆடை சிதிலமாகியிருக்க, ரத்தத்தில் நனைந்த உடலை, தர்மராஜன் போன்றவனை, நினைவு இன்றி தரையில் கிடப்பவனை தர்மராஜன் வசம் ஆகி விட்டவனை, எங்கள் மகனைக் காண வேண்டும். நான் ஒருவனாக அவ்விருவரையும் அழைத்துச் சென்று, அவர்கள் மகன் உடலை தொடச் செய்து காட்டினேன். மகனின் உடலில் விழுந்து புரண்டு அரற்றினர். அந்த தந்தை பரிதாபமாக மகனிடம் என்னுடன் பேச மாட்டாயா? நான் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டாயா? ஏன் தரையில் விழுந்து கிடக்கிறாய், மகனே, என் மேல் கோபமா. என்னைப் பார், இதோ உன் தாயாரைப் பார். ஏன் எங்களைத் தழுவிக் கொள்ளவில்லை? மகனே ஏதாவது இனிமையாகப் பேசுவாயே, பேசு. யாரிடம் போய் இந்த அர்த்த ராத்திரியில் என் மன வருத்தத்தை சொல்லிக் கொள்வேன். அதீ4னமான-மூப்பின் காரணமாக வலுவின்றி உள்ள- என்னை, மதுரமாக சாஸ்திர விஷயமோ, வேறு விஷயமோ, நான் சந்த்யா வந்தனம் செய்து ஸ்னானம் செய்த பின், அக்னி ஹோத்ராதிகள் செய்து சொல்வதைக் கேட்கப் போகிறார்கள். புத்திரனை இழந்து விட்ட எனக்கு யார் கதி? யார் எனக்கு கந்த மூல பழங்களைக் கொண்டு வந்து தருவார்கள். உபசரித்து சாப்பிடச் செய்வாயே? நானொரு வேலைக்கும் உதவாதவன். இதோ இவளைப் பார். கண்ணும் தெரியாமல் வயதும் முதிர்ந்து, தபஸ்வினியான இவளையும் நான் எப்படி காப்பாற்றுவேன்? நில் மகனே. யம சத3னம் போகாதே. நாளை எங்கள் இருவருடன் செல்வாயாக. நாங்கள் இருவரும் இந்த துக்கத்தை தாங்க மாட்டோம். சீக்கிரமே உன்னைக் காண யம சத3னம் வந்து சேருவோம். அங்கு வைவஸ்வதனைப் பார்த்து கேட்பேன். தர்ம ராஜனே, சற்றுப் பொறு. நாங்கள் பெற்றோர். நாங்கள் கேட்கும் வரம் தர வேண்டும். எங்களுக்கு அபயம் தருவது உன் பொறுப்பு. மகனே, நீ பாபமே அறியாதவன். மேலும் பாபமான செயலால் உயிரை இழந்தவன். அதனால் யுத்தத்தில் வீரர்கள் சென்றடையும் சத்ய லோகத்தை அடைவாய். எந்த கதியை சக3ரனும், சைப்4யனும், தி3லீபனும், ஜனமேஜயனும், நகுஷனும், து3ந்து3மாரனும் அடைந்தார்களோ, அந்த கதியை அடைவாய் மகனே. எல்லா சாதுக்களுக்கும், அத்தியயனம் செய்பவர்களுக்கும் தவம் செய்பவர்களுக்கும், பூமியை தானம் செய்தவர்களுக்கும், அக்னி ஹோத்ரம் செய்தவர்களுக்கும், ஏக பத்னி விரதனானவனுக்கும், ஆயிரம் பசுக்களை தானம் செய்தவருக்கும் குரு சேவையில் திளைத்தவர்களுக்கும் தன் தேகத்தை ந்யாசம் செய்ய வல்லமை பெற்ற யோகிகளுக்கும் என்ன கதியோ அந்த கதியை அடைவாய். நம் குலத்தில் பிறந்தவன், தவறான கதியை அடையமாட்டான். என் பந்து, நீயும் அதே கதியை அடைவாய். இவ்வாறு வேதனையோடு புலம்பினார். மனைவியுடன் சேர்ந்து மகனுக்கு நீர்க்கடன் செலுத்த முயன்றார். அந்த முனி புத்திரனும், தன் நற் செயல்களால் சம்பாதித்த புண்யங்கள் உடன் வர, திவ்ய ரூபம் பெற்றவனாக ஸ்வர்கம் சென்றான். இந்திரனுக்கு சமமான நிலை பெற்றான். முதியோர்கள் இந்திரனுடன் நேரில் பேசினர். ஒரு முஹுர்த்தம் அவர்களை சமாதானப் படுத்தி இந்திரன். நீங்களும் கூடிய சீக்கிரத்தில் என் உலகம் வந்து சேருவீர்கள். உங்களுக்கு நான் பணிவிடை செய்யக் கடமை பட்டவனாவேன். என்றான். இவ்வாறு சொல்லி முனி குமாரன், திவ்யமான விமானத்தில் ஏறிச் சென்றான். மகனுக்கான இறுதிக் கடன்களை மனைவியுடன் செய்து முடித்து விட்டு, வாய் மூடி மௌனியாக நின்றிருந்த என்னைப் பார்த்து சொன்னார். ராஜனே, இன்றே என்னையும் கொன்று விடு. எனக்கு மரணத்தைப் பற்றிய பயம் இல்லை. ஒரு அம்பை எய்து என் மகனைக் கொன்று, என்னை அனாதையாக்கி விட்டாய். நீ அறியாமல் செய்து விட்ட செயல் தான் என்றாலும் நான் உன்னை சபிக்கிறேன். நீயும் இந்த தாங்க முடியாத துக்கத்தை அனுபவிப்பாய். நான் தற்சமயம் அனுபவிக்கும் புத்ர சோகத்தை நீயும் அனுபவிப்பாய். இதே போல புத்ர சோகம் தான் உனக்கு யமனாகும். அறியாமல் க்ஷத்திரியனான நீ, முனி குமாரனைக் கொன்றாய் என்பதால் ப்ரும்மஹத்தி தோஷத்திலிருந்து பிழைத்தாய். உனக்கும் என்னைப் போல ஒரு கஷ்டம் வரும். என்று என்னை சபித்து, வெகு நேரம் துக்கமும் வேதனையும் பொங்க அழுது கொண்டிருந்தார். பின் சிதையை மூட்டி இருவரும் நெருப்பில் விழுந்து உயிர் விட்டனர். இந்த தகாத செயல் இப்பொழுது ஞாபகம் வருகிறது. சிறுவனாக இருந்த பொழுது சப்தவேதியை பயன் படுத்தும் ஆசையினால் நான் செய்த தவறு, நான் இப்பொழுது அனுபவிக்கிறேன். சாப்பிட்ட அன்னம் காரணமாக வியாதி பிடித்தது போல. அதனால் ப4த்3ரே, இப்பொழுது அந்த சமயம் வந்து விட்டது. இன்று நான் புத்ர சோகத்தால் உயிர் விடப் போகிறேன். என் கண்களால் உன்னைப் பார்க்க இயலவில்லை. கௌசல்யா, என்னை நன்றாகத் தொடு. இப்படிச் சொல்லி அழுத வண்ணம் பயமும் வாட்ட, மனைவியிடம் சொன்னான். யமனிடம் சென்றவர்கள் பார்க்க முடிவதில்லை. என்னை ஒரு வேளை ராமன் தொட்டால், தனமும் யுவராஜ்யமும் அவனுக்கு கிடைத்தால் நான் பிழைத்தாலும் பிழைப்பேன். ராமனுக்கு நான் செய்த அபசாரத்திற்கு எனக்கு இது வேண்டும். கெட்டவனாக இருந்தாலும், புத்திரனை யாராவது தியாகம் செய்வார்களா? நாடு கடத்தப்பட்ட எந்த மகன் தான் தந்தையை நிந்திக்காமல் இருப்பான்? என் கண்களால் உன்னை பார்க்க முடியவில்லை. நினைவும் மழுங்குகிறது. வைவஸ்வதனுடைய தூதர்கள் என்னை அவசரப் படுத்துகிறார்கள். இதை விட துக்கமானது கௌசல்யே, என் அந்திம காலத்தில் சத்ய பராக்ரமனான, தர்மம் அறிந்தவனான, ராமனை பார்க்காமல் போகிறேன். ஈ.டு இணையில்லாத என் மகனைக் காணாமல், என் உயிர் போகப் போகிறது. நீர் குமிழியை சூரியன் உலர்த்தி விடுவது போல. அந்த மனிதர்கள் தான் தேவர்கள் – எவர், அழகிய குண்டலம் அணிந்த ராமன் முகத்தை காண்கிறார்களோ, பதினைந்தாவது வருஷம் திரும்பி வரும் ராமனை, தாமரை இதழ் போன்ற கண்களுடையவனை, அழகிய புருவமும், பற்களும், சுந்தரமான நாஸிகமும், பார்க்க கொடுத்து வைத்தவர்கள். அந்த முகத்தைப் பார்த்தவர்களே பாக்கிய சாலிகள். நக்ஷத்திரங்களின் நாயகனான சந்திரன் போன்ற முகம் உடையவன், வன வாசத்தை முடித்துக் கொண்டு அயோத்தி திரும்பி வருவான். யாருடைய பாக்கியத்தில் சுகம் எழுதப் பட்டிருக்கிறதோ, அவர்களே ராமனைக் காண்பர். வழியில் சுக்ரனைக் கண்டது போல. கௌசல்யே, என் மன பிராந்தி என் இதயத்தை வருத்துகிறது. எதுவுமே தெரியவில்லை. சப்தமோ, ஸ்பரிசமோ, ரசமோ, எந்த இந்திரியமும் மன நிம்மதியில்லாத போது வேலை செய்வதில்லை. எண்ணெய் தீர்ந்த விளக்கின் திரிபோல. இது என் ஆத்மாவை தாக்கும் வேதனை, என்னோடேயே தான் மடிய வேண்டும். நதியின் வேகம் கரைகளை அரித்துக் கொண்டு செல்வது போல,. ஹா, ராக4வா, மகா பா3ஹோ, ஹா, என் ஆயாசத்தை நீக்குபவனே, ஹா, தந்தைக்கு பிரியமானவனே, மகனே, எங்கு இருக்கிறாய்? ஹா கௌசல்யே, இதோ நான் போகிறேன். தபஸ்வினியான சுமித்ரே, இதோ நான் போகிறேன். ஹா கொடியவளே, குலத்தைக் கெடுக்க வந்த கைகேயி, இவ்வாறு சொல்லிக் கொண்டு ராம மாதாவும், சுமித்ரைக்கும் எதிரில் அரசன் கால கதியடைந்தான். பேசிக்கொண்டே, பிரியமான மகனின் பிரிவால் வருந்தி பாதி ராத்திரியில் தாங்க முடியாத மன வேதனையுடன் அரசன் இறந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தசரத2 தி3ஷ்டாந்தோ என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 65 (142) அந்த:புராக்ரந்த: (அரசனின் மனைவி, மக்கள் வருந்துதல்)
அந்த இரவு நகர்ந்து மறுநாள் விடியற்காலை. வாழ்த்து பாடி துயிலெழுப்பும் பாடகர்களும், வாத்யம் வாசிப்பவர்களும் அரசனது மாளிகையில் வந்து கூடினர். சாரதிகள், நல்ல சம்ஸ்காரம் படைத்த பாடகர்கள், ஸ்ருதி சுத்தமாக பாடுபவர்கள் துதி பாடுபவர்கள், தனித் தனியாக பாடவும், சொல்லவும் ஆரம்பித்தனர். ராஜாவை துதி பாடி, மிக உயர்ந்த ஆசிகளை வழங்கிய வண்ணம் பாடியது அந்த மாளிகையின் விஸ்தீர்ணமான அறைகளில் எதிரொலித்தது. அவர்கள் துதி பாடிக் கொண்டிருக்கும் பொழுதே, சிலர் தாள வாத்யங்களை வாசித்தனர். இந்த சப்தத்தில் பறவைகளும் விழித்துக் கொண்டு ஓசையிடலாயின. கிளைகளில் இருந்தும், கூண்டுகளிலிருந்தும் அரசர் குலத்தினரின் வளர்ப்பு பறவைகளும் கீச் கீச்சென்று ஓசைப் படுத்தின. வீணையின் சுபமான நாதம் காற்றில் மிதந்தது. ஆசிகள் வழங்கும் விதமாக அமைந்திருந்த பாடல்கள், அந்த மாளிகையை நிரப்பியது. பின் நல்ல செய்தி சொல்பவர்கள், சில தேர்ந்த கலைஞர்கள், பெண்கள் போல அலங்கரித்துக் கொண்டவர்கள், வந்து சேர்ந்தனர். காலத்தில் முறைப் படி ஸ்னானம் செய்விக்க, ஹரி சந்தனம் கலந்த ஜலத்தை தங்க குடங்களில் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர். பல கன்னிகைகள், மங்களமான ஆசனங்களையும் உணவு பதார்த்தங்களையும் கொண்டு வந்து வைத்தனர். எல்லா லக்ஷணங்களும் பொருந்தியதாகவும், விதி முறைப்படி அர்ச்சனை செய்ததும், நல்ல குணமுடைய லக்ஷ்மீகரமான பரிசுப் பொருட்கள் வந்து சேர்ந்தன. சூரியோதயம் ஆனது தான் தாமதம், எல்லாமே தயாராக இருந்தன. ஏதாவது விட்டுப் போயிற்றா, எல்லாம் சரியாக வந்து சேர்ந்ததா? என்று சோதித்து பார்க்கப் பட்டது. கோசல ராஜாவின் சயன க்ருஹத்திற்கு அருகில் இருந்தவர்கள், அந்த:புரத்து ஸ்த்ரீகள் வந்து கணவனை எழுப்ப வந்தனர். வினயமாகவும் நயமாகவும் சொல்லியும் பலனில்லாமல் போகவே, படுக்கையை மெதுவாக தொட்டுப் பார்த்து எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அந்த பெண்கள் ஸ்வப்னாவஸ்தையா என்று புரியாமல் அசைத்துப் பார்த்து உயிர் இருக்கிறதா என்று சந்தேகம் வரவும், உடல் வியர்க்க திகைத்தனர். எதிர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட நாணல் புல் போல தவித்தனர். ஸ்த்ரீகள் அரசனைக் கண்டு சந்தேகப் பட்டுப் பார்த்து, நாம் எதை நினைத்து பயப்பட்டோமோ, அது நடந்தே விட்டது என்று நிச்சயித்து, கௌசல்யையையும் சுமித்திரையையும் தேடிப் போக, இருவரும் அயர்ந்து தூங்கியவர்கள் எழுந்திருக்கவில்லை. அவர்கள் முகத்திலும் இருட்டு மூடியதுபோல சற்றும் ஒளி இல்லை. கௌசல்யா, பின் அரசன், பின் சுமித்திரா என்று மாறி மாறி பார்த்து இவர்கள் இருவரும் தூங்குகிறார்கள், அரசன் தூக்கத்திலேயே உயிர் பிரிந்து விட்டது என்பதையும் தீர்மானமாக ஊகித்துக் கொண்டனர். தன் கூட்டத்தை விட்டு விலகி வந்த பெண் யானை தீனமாக அலறுவது போல, அந்த ஸ்த்ரீகள், தீனமாக அழ ஆரம்பித்தனர். இவர்களது அழு குரலால் திடுமென விழிப்பு கொடுக்கவும், கௌசல்யாவும், சுமித்திராவும் தூக்கத்தை விட்டு எழுந்தனர். இருவரும் அரசனைக் கண்டும், தொட்டு உணர்ந்தும், ஹா நாதா என்று அலறி பூமியில் விழுந்தனர். ஆகாயத்திலிருந்து நழுவி விழுந்த நக்ஷத்திரத்தைப் போல கோசலேந்திரன் மகள் துடித்தாள். கௌசல்யை பூமியில் விழுந்ததைக் கண்டதும் அரசன் சாந்தியடைந்ததை உறுதி செய்து கொண்ட மற்ற ஸ்த்ரீகள் அழ ஆரம்பித்தனர். இவர்களது ஓலம் பலமாகி அந்த:புரத்தை தாண்டி மாளிகை முழுவதும் பரவலாயிற்று. நிமிஷ நேரத்தில், அரசனது மாளிகை பயமும், வருத்தமும் தெரிய அழும் ஓலக் குரலே எங்கும் நிறைந்ததாயிற்று. தசரத ராஜாவின் பத்னிகள், அரசன் இறந்து போனதால் அனாதைகள் போல ஆனார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் அந்த:புராக்ரந்தோ என்ற அறுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 66 (143) தைல த்3ரோண்யத்சயனம்(எண்ணெய் நிறைந்த பாத்திரத்தில் உடலை பத்திரப் படுத்துதல்)
அடங்கிய அக்னி ஜ்வாலை போலவும், நீர் வற்றிய சமுத்திரம் போலவும், சூரியன் ஒளி இழந்தது போலவும் ஸ்வர்கம் சேர்ந்த அரசனின் உடலைப் பார்த்து கௌசல்யை
கண்களில் நீர் மல்க, வேதனை வாட்ட, அரசன் தலையை தாங்கியபடி கைகேயியிடம் சொன்னாள். கைகேயீ, உன் இஷ்டம் பூர்த்தியாயிற்றா? இடையூறு இல்லாமல் ராஜ்யத்தை அனுபவி. அரசனை விட்டு, கொடியவளே, துஷ்டத்தனம் செய்தாயே. என்னைப் பிரிந்து ராமன் போனான். இதோ பதியும் போய்ச் சேர்ந்தார். நான் உயிர் வாழ்வது என்பது இயலாத காரியம். கைகேயியைத் தவிர, அவளுக்குத்தான் தர்ம நியாயமே கிடையாது, மற்ற ஸ்த்ரீகள் யார் தான் கணவன் இன்றி உயிருடன் வாழ விரும்புவர். லோபியானவன் சாப்பாட்டின் பக்குவம் அறிய மாட்டான். கைகேயி கூனியின் காரணமாக ராகவ குலத்தையே அழித்து விட்டாள். அரசனும் தகாத இடத்தில் வாக்கு கொடுத்து ராமனை காட்டுக்கு அனுப்பினான், சீதையோடு. ஜனக ராஜாவும் என்னைப் போல இப்பொழுது தவித்துக் கொண்டிருப்பார். நான் இப்பொழுது அனாதையாக கணவனையும் இழந்தவளாக தவிப்பதை ராமன் அறிய மாட்டான். விதேஹ ராஜாவின் மகள், கஷ்டமே அறியாதவள், காட்டில் என்ன செய்கிறாளோ. இரவில், மிருக பக்ஷிகள் கோரமாக கத்தும் பொழுது, பயந்து ராமனிடம் சரணடைவாள். விதேஹ ராஜாவும் அவளைப் பிரிந்த துயரத்தில் உயிர் விடுவாரோ? இந்த சரீரத்தோடு நானும் அக்னியில் விழுந்து உயிர் துறந்தால் என்ன? தாதிகள் வந்து அவளை அரசனின் உடலை விட்டு பிரித்து அழைத்து சென்றனர்.
மந்திரிகள் வந்து அரசனது உடலை தைலம் நிறைந்த பாத்திரங்களில் வைத்து மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி யோசித்தனர். புத்திரர்கள் இல்லாமல் அரசனது அந்திமக் கிரியைகளை செய்வது முடியாது என்பதால், சரீரத்தை பாதுகாத்து வைக்க முனைந்தனர். நிஜமாகவே அரசன் இறந்தான் என்பதை நம்பவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் அந்த:புரத்து ஸ்த்ரீகள், சுற்றி நின்று துக்கத்துடன் வாய் பொத்தி நின்றனர். ஏற்கனவே பிரியமாக பேசும் ராமன் எங்களை விட்டு போய் விட்டான். நீயும் எங்களை தவிக்க விட்டுப் போகிறாயே, கைகேயியின் கெட்ட எண்ணத்தால் நாங்கள் ராமனை பிரிய நேர்ந்தது. இப்பொழுது அவளுடன் எப்படி நிம்மதியாக வாழப் போகிறோம். என்று அரற்றினர். ராமனையும், லக்ஷ்மணனையும், சீதையையுமே பெரிதாக நினைக்காத கைகேயிக்கு வேறு யார் தான் உயர்வாக இருக்கப் போகிறார்கள். இப்படியே பகல் கழிந்து இரவும் வந்தது. கூடியிருந்தவர்களும் மற்றவர்களும், புத்திரனில்லாமல் இறுதி கடன் செய்ய வேண்டாம் என்று தீர்மானித்ததால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் அரசனை அதே நிலையில் பாதுகாத்து வைத்தனர். நகரமே சோகத்தில் மூழ்கியது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தைல த்3ரோண்யத்சயனம் என்ற அறுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 67 (143) அராஜக து3ரவஸ்தா2 வர்ணனம் (அரசன் இல்லாமை-அதன் காரணமாக வரக்கூடிய துன்பங்கள்)
அன்று இரவு அயோத்யாவில், எங்கும் ஆனந்தம் இல்லாத, வருத்தம் தோய்ந்த முகங்களே காணப் பட்டன, தீன ஸ்வரங்களே கேட்டன. பொழுது விடிந்தது. ராஜ சபையினர் கூடினர். மார்க்கண்டேயர், மௌத்3க3ல்யர், வாம தே3வர், காச்யபர், காத்யாயனர், கௌ3தமர், ஜாபா3லி போன்ற பெரும் புகழ் பெற்ற பிராம்மணர்களும், மந்திரிகளும் தனித் தனியாக பேசினர். ச்ரேஷ்டமான ராஜ புரோஹிதரான வசிஷ்டர் தலைமையில் ஆலோசனைகள் செய்தனர். நூறு வருஷம் ஆனது போல நமக்கு இந்த ஒரு இரவு நகர்ந்தது. இந்த அரசன் ஸ்வர்கம் சென்று விட்டான். ராமனும் வனம் சென்று விட்டான். லக்ஷ்மணனும் ராமனுடன் கூடவே சென்றான். ப4ரத, சத்ருக்4னர்கள் இருவரும் மாமன் வீடு சென்றுள்ளனர். தாய் வழி பாட்டனார் வீட்டில் வசிக்கின்றனர். இக்ஷ்வாகு குலத்துக்கு இப்பொழுதே யாரையாவது அரசனாக நியமித்து விடுவோம். அரசன் இல்லாத நாடு வினாசத்தை அடையும். அரசன் இல்லாத நாட்டில், பெரும் சத்தத்துடன் மேகம் இடி இடித்து திவ்யமான நீரைப் பொழிவதில்லை. அரசன் இல்லாத நாட்டில், விதைகள் நன்றாக முளப்பதில்லை.
அரசன் இல்லாத நாட்டில், பெண்களோ, மனைவியோ, மக்களோ வசத்தில் இருப்பதில்லை. செல்வமும் இல்லை, மனைவியும் இல்லை. இது மிகவும் துரதிர்ஷ்டம். அரசன் இல்லாத ஊரில் எது தான் சத்யம்? அராஜகமான நாட்டில், சபைக்கு பெரியவர்கள் வர மாட்டார்கள். சந்தோஷமாக உத்யான வனங்களுக்கும், அழகிய புஷ்கரங்களுக்கும் செல்ல மாட்டார்கள். பிராம்மணர்கள் யக்ஞ சீலர்களாக இருக்க மாட்டார்கள். விரதங்களை அனுஷ்டித்து சாந்தமாக யாகங்களை செய்ய மாட்டார்கள். மகா யக்ஞங்களைச் செய்யும் எஜமானர்களும், பிராம்மணர்களுக்கு நிறைய தக்ஷிணை கொடுக்க மாட்டார்கள். செல்வந்தர்களாக இருக்க மாட்டார்கள். சந்தோஷமாக நட, நர்த்தகர்கள், உத்ஸவங்களிலும், சமாஜங்களிலும், கூட மாட்டார்கள். வேலை செய்பவர்கள், தங்கள் கடமையை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். கதைகளைப் பேசி மனம் நிறைந்து சிரித்து மகிழ மாட்டார்கள். குமாரிகள் தங்க நகைகளை அணிந்து மாலை வேளைகளில் உத்யானங்களில் விளையாடச் செல்ல மாட்டார்கள். காதலிகளுடனும், மனைவிகளுடனும் உல்லாசமாக வெளியிடங்களுக்குச் செல்ல மாட்டார்கள். வேகமாக செல்லும் ரதங்களில் ஏறி காட்டுப் பிரதேசங்களுக்கு உல்லாசமாக பயணம் செய்ய மாட்டார்கள். தனவந்தர்கள், கதவுகளைத் திறந்து வைத்தபடி நிம்மதியாக தூங்க மாட்டார்கள். க்ருஷி, பசு வளர்ப்பவர்களும், கதவை சாத்தி பூட்டி, கவலையடைவர். ராஜ மார்க்கங்களில் யானைகள், அறுபதுக்கும் மேல் வயதானவைகள், கிழ யானைகள் தான் திரியும். எப்பொழுதும், சரங்களை வைத்து பயிற்சி செய்வதும், பூமி அதிர உடற்பயிற்சி செய்யும் கோஷமும் கேட்காது. வியாபாரிகள் வண்டி நிறைய பொருட்களை ஏற்றிக் கொண்டு க்ஷேமமாக போய் வர மாட்டார்கள். முனிவர்கள், சாயங்காலம் தன்னடக்கத்துடன், ஒற்றையாக போக மாட்டார்கள். அரசன் இல்லாத நாட்டில் யோக க்ஷேமம் இராது. சேனைகள் எதிர் படையை ஜயிக்க சக்தியுள்ளதாக இருக்காது. உயர் ஜாதி குதிரைகள் பூட்டிய
வாகனங்களில் ஜனங்கள் பரபரப்புடன் செல்பவராக மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டார்கள். ரதங்கள் போட்டி போட்டுக் கொண்டு வீதியை நிறைக்காது. ஜனங்கள் சாஸ்திரம் தெரிந்தவர்களாக ஒருவருடன் ஒருவர் சாஸ்திர விஷயங்களைப் பேசிக் கொண்டு வனங்களிலும் உப வனங்களிலும் காலம் கழிக்க மாட்டார்கள். ஜனங்கள் மாலைகளையும், பூக்களையும், மோதகங்களையும் ஏந்தி தேவதைகளை அர்ச்சிக்கும் பொருட்டு வெளியில் செல்ல மாட்டார்கள். சந்தனம், அகரு போன்ற வாசனைப் பொருட்களை பூசிக் கொண்டு ராஜ குமாரர்கள், வசந்த காலத்து மரங்கள் போல அலங்காரமாக வளைய வர மாட்டார்கள். நதிகள் ஜலம் இல்லாதது போலவும், புல் பூண்டு இல்லாத வனம் போலவும், கோபாலன் (பசுக்களை மேய்ப்பவன்) இல்லாத பசுக் கூட்டம் போலவும், அரசன் இல்லாத நாடு ஆகும். ரதத்தின் த்வஜமாகவும், நெருப்பின் புகையாகவும், க்ஞானத்தில் ப்ரக்ஞானமாகவும், இருந்த நமது அரசன் தெய்வத் தன்மை அடைந்து விட்டான். அரசன் இல்லாத நாட்டில், எதுவும் யாருடையதுமாக நிச்சயமாக இருக்காது. மீன்களைப் போல ஜனங்கள் பரஸ்பரம் சாப்பிடுவார்கள். மரியாதைகள் இன்றி, நாஸ்திகர்களாக, சந்தேகங்கள் நிரம்பியவர்களாக ராஜ தண்டம் பெற்று வருந்துபவர்களாக இருப்பார்கள். சரீரத்தில் கண் பார்க்கும் சக்தியோடு எப்பொழுதும் முக்கியமாக விளங்குவது போல ராஷ்டிரத்தின் சத்ய தர்மத்திற்கு நரேந்திரன் ஆவான். ராஜா, சத்யம், ராஜா தான் தர்மம். குல ஜனங்களுக்கு குலம். ராஜா, மாதா, பிதா, ராஜாதான் மற்ற மனிதர்களுக்கு நன்மை செய்பவனும் ஆவான். நல்ல அரசனின் நான்னடைத்தையினால் யமன், வைஸ்ரவனன், இந்திரன், வருணன், இவர்கள் அனைவரிலும் அரசன் சிறப்பு பெறுகிறான். அரசன் இல்லாத நிலை இருட்டு போல. இதில் எதுவும் தெளிவாகத் தெரியாது. உலகில் அரசன் இல்லையெனில் நியாயமாக பிரித்துக் கொண்டு வாழ மாட்டார்கள். இப்பொழுது அரசன் உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சொல்லைக் காப்பாற்ற நாம் கடமைப் பட்டிருக்கிறோம். எப்படி அலைகள், சமுத்திரத்தை மீறிச் செல்லாதோ, அது போல. பிராம்மணர்கள், நடந்ததை வைத்துக் கொண்டு யோசித்து, ஆலோசித்து, இக்ஷ்வாகு குலத்தின் இளைய மைந்தனை ராஜ்யத்தில் முடி சூட்டி அமர்த்துவோம் என்று முடிவு செய்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் அராஜக து3ரவஸ்தா வர்ணனம் என்ற அறுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 68 145) தூ3த:ப்ரேஷணம் (தூதர்களை அனுப்புதல்)
இதைக் கேட்டு வசிஷ்டர் பதில் சொன்னார். மித்திரர்களும், மந்திரிகளும் சபையில் கூடியிருந்தனர். ராஜ்யம் ப4ரதனுக்கு தரப்பட்டுள்ளது. அவன் மாமன் வீட்டில் இருக்கிறான். சத்ருக்4னனும் சகோதரனுடன் அங்கு இருக்கிறான். அதனால் வேகமாக செல்லும் குதிரைகளைப் பூட்டி ரதத்தில் தூதர்கள் செல்லட்டும். இரண்டு சகோதரர்களையும் அழைத்து வரட்டும். சபையினரும் அவ்வாறே செய்வோம் என்று ஆமோதித்தனர். சித்3தா4ர்த்தா, விஜயா, ஜயந்தா, அசோகா, நந்த3னா, என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேனோ அதைப் போலவே செய்யுங்கள். வேகமாக செல்லும் குதிரைகளில் ஏறி ராஜ க்3ருஹம் செல்லுங்கள். உங்கள் உணர்ச்சிகளை வெளிக் காட்டிக் கொள்ளாமல், என் கட்டளை என்று ப4ரதனிடம் சொல்ல வேண்டும். புரோஹிதர் குசலம் விசாரித்தார் என்று சொல்லுங்கள். மற்ற மந்திரிகளும் அவ்வாறே விசாரித்ததாகச் சொல்லுங்கள். ஏதோ வேலை இருப்பதால் உங்களை அவசரமாக வரச் சொன்னார் என்று சொல்லுங்கள். அவனிடம் ராமன் வனம் சென்றது பற்றியோ, அரசன் இறந்தது பற்றியோ சொல்ல வேண்டாம். ராக4வ குலத்துக்கு வந்துள்ள இந்த கஷ்டங்களைச் சொல்ல வேண்டாம். பட்டு வஸ்திரங்களையும், பூ4ஷணங்களையும், உயர்ந்த பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு பரதனுக்கும் கேகய ராஜனுக்கும் கொடுங்கள். வழிக்கு வேண்டிய ஆகாரங்களை மூட்டையாகக் கட்டிக் கொடுத்தபின், தூதர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். கேகய நாட்டிற்கு அவர்கள், உயர் ஜாதி குதிரைகளில் ஏறி புறப்பட்டனர். வசிஷ்டரிடம் அனுமதி பெற்று தூதர்கள் விரைவாக செல்லலாயினர். பிரலம்பத்தின் வடக்கு நோக்கிச் சென்று, மாலினி நதியைக் கடந்து சென்றனர். ஹாஸ்தின புரத்தில், கங்கையைக் கடந்து சென்று, கிழக்கு முகமாக சென்றனர். பாஞ்சால தேசத்தை அடைந்து மத்தியில் குரு, ஜாங்க3லம் என்ற இடங்களையும் கடந்து சென்றனர். குளங்களையும், நீர் நிரம்பிய நதிகளையும், சுத்தமான நீருடைய நீர் நிலைகளையும் பார்த்துக் கொண்டே காரியத்தின் அவசரத்தை உணர்ந்து தூதர்கள் வேகமாகச் சென்றனர். சர த3ண்டம் என்ற இடத்தில், ஜனங்கள் நிறைந்திருப்பதை பார்த்துக் கொண்டே, சுத்தமான ஜலமும், பலவிதமான பறவைகள் வசிப்பதுமான ஒரு நதியைக் கடந்து நிகூல மரம் என்ற இடத்தை அடைந்து மேலும் சென்றனர். குலிங்கா3ம் என்ற ஊரை அடைந்தனர். இக்ஷுமதி என்ற நதி, தந்தையர் பாட்டனார் காலத்திலிருந்தே புண்ய நதி என்று பெயர் பெற்றது- அதையும் கடந்து சென்றனர். வேத பாரங்கதர்களாக இருந்த பிராம்மனோத்தமர்கள் வசித்த பா3ஹ்வீகாள் என்ற இடத்தையும், சுதா4மானம் என்ற மலையையும் கடந்து, விஷ்ணு க்ஷேத்திரமாக இருந்த இடத்தையும், விபாசம், சால்மலீ என்ற ஊர்களையும் கடந்து, பல நதிகளையும், கிணறுகளையும், சிறியதும் பெரியதுமான குளங்கள், சிங்கம் புலி நடமாடும் காடுகள் என்று ஓய்வு ஒழிச்சலின்றி, ராஜ கார்யம், அரச கட்டளை என்பதால் நிற்காமல் பிரயாணம் செய்து, வழி கரடு முரடாக இருந்ததையும், குதிரைகள் களைத்தையும் பொருட்படுத்தாமல், கி3ரி வ்ரஜம் என்ற கேகய ராஜ்யத்தின் பகுதியான ஊரையடைந்தனர். ஏழாவது நாள் கேகய ராஜதானியை அடைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தூ3த ப்ரேஷணம் என்ற அறுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 69 (146) ப4ரத து3ஸ்வப்ன: (பரதன் கண்ட கெட்ட கனவு)
தூதர்கள் அந்த நகரத்தில் நுழைந்த அதே இரவு பரதன் ஒரு கெட்ட கனவைக் கண்டான். ராஜாதி ராஜனுடைய மகன், அந்த கெட்ட கனவைக் கண்டு மிகவும் பரிதவித்தான். நண்பர்கள், பிரியமாக பேசுபவர்கள், அவனுடைய தாபத்தைக் கண்டு வினோதமாக பேசியும், கதையளந்தும், அவன் மனத்துயரை மாற்ற முயன்றனர். சிலர் வாத்யங்கள் வாசித்தும், சாந்தமாக உரையாடியும், நாட்டியமாடியும் காட்டினர். நாடகமாக நடித்துக் காட்டினர் சிலர். ஹாஸ்யமாக பலவாறாக பேசிக் காட்டி மகிழ்வித்தனர். அப்படி இருந்தும், கூட்டமாக வயதொத்த நண்பர்கள், பல முயற்சி செய்து சிரிக்க வைக்க முயன்றும், பரதன் மனம் சமாதானம் ஆகவில்லை. கூட்டத்தில் ஒரு நண்பன், ஏன் இந்த விளையாட்டுகளில் உன் மனம் செல்லவில்லை? சந்தோஷமாக இல்லையே என்று வினவினான். அவனுக்கு பரதன் பதில் சொன்னான். கேள். என்ன காரணத்தினாலோ என் மனம் அலை பாய்கிறது. எதுவும் என்னை மகிழ்விக்கவில்லை. இப்படி தீனனாக ஆனேன் என்று சொல்ல ஆரம்பித்தான். ஸ்வப்னத்தில் என் தந்தையைக் கண்டேன். ஒரே அழுக்காக, தலையை விரித்துக் கொண்டு, மலையுச்சியிலிருந்து விழுவது போலக் கண்டேன். விழுந்த இடம் ஒரே அழுக்கு, சாணி நிரம்பிய பள்ளம். அதிலிருந்து வெளி வர நீந்திக் கொண்டிருந்தார். ஏதோ அடிக்கடி சிரிப்பது போலவும் இருந்தது. கைகளை குவித்து தண்ணீர் குடிப்பது போல இருந்தது. பார்த்தால் எண்ணெய். எள் அன்னம் சாப்பிட்டு விட்டு, திரும்பத் திரும்ப தலை கீழாக எண்ணெயில் மூழ்கியவராக, உடலெங்கும் எண்ணெய் பூசிக் கொண்டவராகவும் கண்டேன். ஸ்வப்னத்தில் சமுத்திரம் வற்றிக் கிடக்கிறது. சந்திரன் பூமியில் விழுந்து கிடக்கிறான். பூமியை ஏதோ வாட்டுகிறது. இருட்டு சூழ்ந்து கிடக்கிறது. பட்டத்து யானையின் தந்தம் உடைந்து காணப்பட்டது. கொழுந்து விட்டெரிந்த நெருப்பு திடுமென அணைந்தது. பூமி கீழிறங்கி இருந்தது, மரங்கள் பலவும் வாடி சுருங்கி இருந்தன. மலைகளை, புகை மண்டியதாக அடிபட்டதாகக் கண்டேன். கரும் நிறமுடைய பெண்கள் அரசனைச் சுற்றி, கரு நிற ஆடையணிந்து, அரசன் கறுத்த ஆசனத்தில் அமர்ந்திருக்க சிரிக்கின்றனர். சிவந்த மாலையணிந்து வேகமாக உடல் பூராவும் ஏதோ பூசிக் கொண்டு தென் திசை நோக்கிச் சென்றார். ராக்ஷஸி ஒருவள், கோரமான முகம் உடையவள், அரசனைப் பிடிப்பது போல ஓடுகிறாள். இந்த பயங்கரமான ஸ்வப்னம் இன்று கண்டேன். நானோ, ராமனோ, லக்ஷ்மணனோ இறக்கப் போகிறோம். கர என்ற கோவேறு கழுதை பூட்டிய வண்டியில் போவது போல எந்த மனிதன் கனவில் காண்கிறானோ, அந்த மனிதன் சீக்கிரமே மரணமடைவான். இதனால் தான் நான் வருத்தமாக இருக்கிறேன். அது தான் உங்களுக்கு சமமாக கேளிக்கைகளில் ஈ.டுபட முடியவில்லை. என் உடலும் உள்ளமும் சரியாக இல்லை. பயப்படும் இடம் எதுவும் இல்லாமலே, பயத்தை உதற முடியவில்லை. என் நா வறளுகிறது. என் நிழலைக் கண்டே நடுங்குகிறேன். காரணம் தெரியாமல் பதட்டம் தோன்றுகிறது. இவ்வாறு தான் கண்ட கெட்ட கனவை விவரித்து விட்டு, மற்றவர்கள் சமாதானமாக என்ன சொல்லியும் பயம் நீங்காதவனாக பரதன் தவித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ப4ரத து3ஸ்வப்னோ என்ற அறுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 70 (147) ப4ரத ப்ரஸ்தா2னம் (பரதன் புறப்படுதல்)
பரதன் தன் அனுபவத்தை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே தூதர்கள், குதிரைகள் களைத்து மூச்சிரைக்க, சாதாரணமாக உள்ளே நுழைய முடியாத பாதுகாவல் நிறைந்த நகரத்துள் வந்து சேர்ந்தனர். அரசனைக் கண்டு வணங்கினர். ராஜகுமாரனால் நன்கு கவனித்து உபசரிக்கப் பட்டனர். பின் பரதனிடம் சொன்னார்கள். புரோஹிதர் உங்களை குசலம் விசாரித்தார். மற்ற மந்திரிகளும் விசாரித்தனர். ஏதோ ஒரு முக்கியமான காரியம் இருப்பதால் அவசரமாக வரும்படி சொன்னார். இதோ விலையுயர்ந்த வஸ்திரங்களும், ஆபரணங்களும் உங்கள் பாட்டனாருக்காக கொண்டு வந்தோம். இவற்றை அவருக்கு கொடுங்கள். இதில் இருக்கும் இருபது கோடியில், பத்து கோடியை மாமனுக்கு கொடுத்த பின் மீதியை ஆப்த நண்பர்களுக்கு கொடுங்கள். வந்த தூதர்களுக்கு தேவையானவற்றை பார்த்து செய்த பின், ப4ரதன் கேட்டான் என் தந்தை சௌக்யமா? தசரத2 ராஜா நலமா? ராமன், லக்ஷ்மணன் ஆரோக்யமாக இருக்கிறார்களா? ராம மாதா எனக்கும் மாதா, பெரியவள், தர்மமே பராயணமாக இருப்பவள், எதிலும் தர்மத்தைக் காண்பவள், அந்த கௌசல்யா சௌக்யமா? லக்ஷ்மணன் மாதா சுமித்திரா நலமா? சத்ருக்னன் தாயார், மத்4யமாம்பா அவள். நலமாக இருக்கிறார்களா? எப்பொழுதும் தன் சுய நலமே பெரியதாக நினைப்பவள், பிடிவாதக்காரி, கோபம் உடையவள், தன்னை புத்திசாலியாக நினைத்துக் கொள்பவள், என் தாயார் கைகேயி, ஆரோக்யமாக இருக்கிறாளா? எனக்கு என்ன சொல்லியனுப்பினாள்? இவ்வாறு பரதன் சரமாரியாக கேட்கவும், கவனமாக வார்த்தைகளை எண்ணி பதில் சொன்னார்கள். யாருடைய குசலம் நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களோ அவர்கள் யாவரும் குசலமாக இருக்கிறார்கள். பத்3மாவான, லக்ஷ்மீ தேவி உங்களை விரும்புகிறாள். உங்களை வரவேற்க காத்து நிற்கிறாள் எனவும், சீக்கிரம் ரதத்தை தயார் செய்து கொண்டு கிளம்புங்கள். நான் போய் மகாராஜாவான கேகய அரசனிடம் அனுமதி பெற்று வருகிறேன். தூதர்கள் அவசரப் படுத்துகிறார்கள் என்று சொல்லி வருகிறேன் என்று சொன்னபடி தன் தாய் வழி பாட்டனாரிடம் அனுமதி கேட்கச் சென்றான். ராஜன், தூதர்கள் வந்திருக்கிறார்கள். நான் என் தந்தையிடம் செல்கிறேன். என்னை நீங்கள் திரும்ப ஸ்மரிக்கும் பொழுது, (பார்க்க விரும்பும் பொழுது) வந்து சேருவேன். என்றான். ராகவனை உச்சி முகர்ந்து, தழுவிக் கொண்டு, தாத்தா கேகய ராஜா, குழந்தாய், போய் வா. நான் அனுமதி கொடுத்து வழியனுப்ப ஏற்பாடு செய்கிறேன். கைகேயி சுப்ரஜா உன் தாயிடமும் தந்தையிடமும் நான் குசலம் விசாரித்ததாகச் சொல்லு. புரோஹிதரையும் மற்ற வித்வான்களையும் நான் விசாரித்ததாகச் சொல்லு. சிறந்த வில்லாளிகளான ராமனையும், லக்ஷ்மணனையும் நான் விசாரித்ததாகச் சொல்லு., அவனுக்கு உத்தமமான யானை, சித்ர விசித்திரமான கம்பளங்கள், ஆசனங்களில் விரிக்க விரிப்புகள், என்று கைகேயி மகனுக்கு இன்னும் பல பொருட்களையும், நிறைய தனமும் அளித்தான். தங்க நாணயங்கள் இரண்டு இரண்டு ஆயிரம், பதினாறு நூறு குதிரைகள், இவைகளையும் உடன் அனுப்பி, ஏராளமான பொருளையும் கொடுத்து, கைகேயி புத்திரனை அரசனான கேகய ராஜன் வழியனுப்பினான். உடன் செல்ல சேவகர்களையும், குணமுடைய நம்பிக்கைக்கு உகந்தவர்களை, அமாத்யர்கள் சிபாரிசின் பேரில் அஸ்வபதி தேர்ந்தெடுத்து அனுப்பினான். ஐராவதம் போன்ற அழகுடைய யானைகளையும், கோவேறு கழுதை போன்ற சீக்கிரம் போகக் கூடிய மிருகங்களையும், மாமன் கொடுத்து அதற்கு மேலும் தனமும் கொடுத்தான். அந்த:புரத்தில் வளர்க்கப் பட்ட நன்கு வளர்ந்து புலிக்கு சமமான வீர்யம் கொண்ட மிகப் பெரிய உருவமும், பெரிய பற்களையும் உடைய வளர்ப்பு நாய்களையும் உபாயனமாக (அன்பளிப்பு) கொடுத்தான். கேகய ராஜா கொடுத்த தனம் முதலியவற்றால் கைகேயி மகனான பரதன் மகிழ்ச்சி அடையவில்லை. அவசரமாக ஊர் போய் சேர வேண்டும் என்று அவன் மனம் தவித்தது. தூதர்கள் அவசரம் என்று சொன்னதும், ஸ்வப்னத்தின் நினைவும் அவனை அலைக்கழித்தன. ஜனங்களும் யானைகளும், அஸ்வங்களும் நிறைந்த தன் மாளிகையிலிருந்து கிளம்பி ராஜ மார்கத்தை வந்தடைந்தான். சற்று நடந்து அந்த:புரத்தையடைந்தான். நேராக, தாய்வழி பாட்டி இருந்த அறையை அடைந்து, யுதாஜித் என்ற மாமனிடமும், பாட்டியிடமும் விடை பெற்றுக் கொண்டு ரதத்தில் சத்ருக்னனுடன் ஏறிக் கொண்டான். ரதங்களை மண்டல சக்ரங்களையும் பூட்டி, ஒட்டகம், குதிரை, கோவேறு கழுதைகளில் வேலையாட்கள் பரதனைப் பின் தொடர்ந்தனர். நாற்புறமும் பாதுகாவலர்கள் வர, பெரியவரின் மந்திரி வர்கங்கள் உடன் வர, சத்ருவே இல்லாத சத்ருக்னனை ரதத்தில் உடன் அமரச் செய்தபடி, இந்திர லோகத்திலிருந்து சித்3த4ர்கள், கிளம்புவது போல கிளம்பினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத ப்ரஸ்தானம் என்ற எழுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 71 (148) அயோத்யா கமனம் (அயோத்யா வருகை)
ராஜ க்ருஹத்திலிருந்து கிழக்காக புறப்பட்டு, சுதா3மம் என்ற நதியைக் கண்டனர். கரை கண்ணுக்குத் தெரியாத வகையில் அகலமாக, மனதை சந்தோஷிக்கச் செய்யும் சுத்தமான ஜலமும் அலைகளுடன் கூடிய தனித் தனி கிளை நதிகளுடனும் அந்த நதி மிக அழகாக இருந்தது. அதையடுத்து சதத்3ருமம், எலாதா3னே என்ற நதிகளைக் கடந்து அபர பர்ப4டான், என்ற மலையை அடைந்தார்கள். மலையை மிகவும் ரசித்து பார்த்தவாறு, சைத்ர ரதம் என்ற வனத்தை நோக்கி பிரயாணப் பட்டார்கள். சரஸ்வதியையும், கங்கையையும் எதிர் கொண்டனர். வடக்கில், மத்ஸ்ய தேசத்தினரின் பாருண்டம் என்ற வனத்தில், வீரனான பரதன் நுழைந்தான். குலிங்க3ம் என்ற வேகமான நதியையும், ஹ்லாதி3னி என்ற, சுற்றிலும் மலை சூழ்ந்த நதியையும் கடந்து யமுனையை அடைந்து தன் படை பலங்களுக்கு ஓய்வு கொடுத்தான். அங்கு ஸ்னானம் செய்து உடல் குளிர, களைத்துப் போன குதிரைகளை அவிழ்த்து விட்டு, சற்று மேய விட்டு, சிறிது நேரம் தங்கி சாப்பிட்டு, ஜலத்தை எடுத்துக் கொண்டு, மேலே கிளம்பினர். அனபீ4ஷனன் என்ற ஒருவனால் பாதுகாக்கப் பட்ட அரண்யத்தை, ப4த்ரமான வாகனத்தில் இருந்தபடி ப4த்3ரனான ப4ரதன், மாருதன் ஆகாயத்தை தாண்டுவது போல வேகமாக கடந்தான். கடக்க முடியாத பா4கீரதியையும், அம்சுதா3னம் என்ற மகா நதியையும், ராகவன் கடந்து ப்ராக்வடம் என்று அச்சமயம் புகழ் பெற்றிருந்த மரத்தடியை அடைந்தான். அங்கு கங்கையைக் கடந்து குபு3கோ3ஷ்டிகா என்ற இடத்தை அடைந்தனர். சேனைகளோடு த4ர்ம வர்த4னம் என்ற இடத்தை அடைந்தனர். தக்ஷிணாவர்தமாக போய், ஜம்பூ ப்ரஸ்தம் போய் சேர்ந்தனர். வரூதம் என்ற அழகிய கிராமத்துக்கு போய் சேர்ந்தான் தசரத குமாரனான பரதன். அங்கு ஒரு அழகிய வனத்தைக் கண்டு அதில் வாசம் செய்து விட்டு கிழக்கு முகமாக கிளம்பினர். உஜ்ஜிஹா என்பவளின் உத்யானம் விசேஷமான மரங்களுடன் பிரியமாக வளர்க்கப் பட்டிருப்பதைக் கண்டனர். சால மரங்கள் நிறைந்த அந்த இடத்தில்,மற்றவர்களிடமிருந்து விடை பெற்று குதிரைகளை வேகமாக செலுத்திக் கொண்டு பரதன் முன்னால் சென்றான். (இந்த இடத்தில், பரதன் சந்தேகப் பட்டு கேள்வி மேல் கேள்வியாக கேட்க, சாரதி பதில் சொல்ல வேண்டியிருக்கும். பரதனுக்கு பதில் சொல்ல சாரதி தயாராகும் முன், அதிவேகமான குதிரைகளில் பரதன் சென்று விடுகிறான் என்று நடந்ததை அப்படியே வர்ணிப்பதில் சமர்த்தரான கவி, சாரதி மட்டுமல்ல, ரஸிகர்களான வாசகர்களுக்கும் பதிலை எதிர் பாராமல் இருக்க, பரதன் வேகமான குதிரைகளில் ஏறி தனி வழி சென்றான் என்று சொல்லியிருப்பது ரஸிக்கத் தக்கது என்பது உரை-
யாசிரியர்களின் கருத்து. அரசமாளிகை வரை அசுப4ங்களைப் பார்த்து, ஒவ்வொரு இடத்தைக் கடக்கும் பொழுதும், பரதன் கேள்வி கேட்டால் சாரதி என்ன பதில் சொல்வான்?)
சர்வ தீர்த்தம் என்ற இடத்தில் தங்கி உத்தானிகா என்ற நதியைக் கடந்து மேலும் பல மலைப் பிரதேசத்து நதிகளைக் கடந்து சில சமயம் காட்டு குதிரைகளின் மேல், சில சமயம் யானையின் மேல் ஏறி, கு3டிகாம் என்ற இடத்தை தாண்டினர். சிகதாவதீம் என்ற சிவந்த நீருடைய நதியை படகின் மூலம் கடந்தனர். ஏக சாலம் என்னும் இடத்தில் ஸ்தா2ணுமதியையும், வினதா என்ற இடத்தில் கோ3மதி நதியையும், களிங்க நகரத்தில் சால வனத்தைக் கண்டு பரதன் வேகமாக பிரயாணம் செய்தான். வாகனம் மிகவும் களைப்படைந்து போனது., அந்த இரவு வனத்தில் கழித்தபின், அருணோதய சமயத்தில் மனுவால் நிர்மாணிக்கப் பட்ட அயோத்திமா நகரைக் கண்டனர். ஏழு நாட்களாக வழியில் தூங்காமல் பிரயாணம் செய்து வந்த பரதன் அந்த அயோத்தி நகரை எதிரில் தெரியக் கண்டு சாரதியிடம் சொன்னான். சாரதியே, புண்யமான உத்யானங்களையுடைய பகழ் பெற்ற அயோத்தி நகர் வெகு தூரத்தில் இல்லை. வெண் மண்ணால் கட்டப்பட்ட
மாளிகைகள் தூரத்திலிருந்தே தெரிகிறது. குணம் நிறைந்த யக்ஞம் செய்யும் பிராம்மணர்கள், வேதங்களில் கரை கண்டவர்கள், நிறைந்த தனமுடைய செல்வந்தர்களாகவும் இருக்கும்படி ராஜரிஷியான என் தந்தை பார்த்துக் கொண்டார். ஊர் நெருங்கி விட்டது என்பது அதன் விசேஷமான சப்தங்களால் தெரிகிறது. ஆணும் பெண்ணுமாக போகும் பொழுது பேசிக் கொண்டு போவதை கேட்கிறேன். எப்பொழுதும் உத்யான வனங்கள் மாலை நேரங்களில் விளையாடி களைத்த ஜனங்களும், ஓடிப் பழகும் ஜனங்களுமாக பிரகாசமாகத்தான் கண்டிருக்கிறேன். இன்று ஆசையுடன் விளையாட வருபவர்கள் யாருமில்லாமல் அழுது வடிகிறது. சாரதியே, நகரமே காட்டுப் பிரதேசமாகத் தெரிகிறது. இங்கு யாருமே வாகனங்களில் போவது தெரியவில்லை. யானைகளின் மேல் ஏறியோ, குதிரைகளில் ஏறிப் போவோரும், வருவோருமாக எப்படி முன்பு ஊரில் ஜன நடமாட்டம் நிறைந்து இருக்குமோ, பூத்துக் குலுங்கும் உத்யானவனங்கள் ஜனங்களின் உல்லாசத்துக்காக இருந்தனவோ, அவைகளில் இன்று ஆனந்தமே இல்லாதது போல காண்கிறேன். மிருகங்களும் பக்ஷிகளும், மதம் பிடித்து எழுப்பும் ஓசைகளும் கேட்கவில்லை. கீழே விழுந்து கிடக்கும் இலைகளைப் பார்த்தால், மரங்களும் ஓவென்று குரலெடுத்து அழுவது போல இருக்கிறது. மதுரமான குரலில் பாடும் பறவைகளைக் காணவில்லை. சந்தன, அகரு வாசனைகளைக் கொண்ட புகையை ஏந்திக் கொண்டு வரும் காற்றும் இன்று நகரின் அருகிலேயே வரவில்லையா? பேரி, மிருதங்க, வீணா இவைகளின் நாதம் போட்டியிட்டுக் கொண்டு கேட்குமே, அதுவும் இல்லை. பாபமானதும், விரும்பத் தகாததுமாக காட்சிகளையே நிறையக் காண்கிறேன். நிமித்தங்களும் நன்றாக இல்லை. அதனால் என் மனம் நடுங்குகிறது. சாரதியே, என் பந்துக்கள் நலமாக இருக்கிறார்களா? ஏதோ கெடுதல் என்று என் உள் மனம் சொல்கிறது. இவ்வாறு வாடிய மனத்தினனாக, உடலும் களைத்து, நடுங்கும் இந்திரியங்களுடையவனாக, இக்ஷ்வாகு குலத்தினரால் பாலிக்கப் பட்ட அயோத்தி நகரில் பிரவேசித்தான். வைஜயந்தீ என்ற பெயர் பெற்ற வாசல் வழியே நுழைந்தான். வாசல் காப்பவர்கள் எழுந்து, விஜய கோஷம் செய்ய அவர்கள் கூடவே சென்றான். மனம் பூரா சிந்தனை வியாபித்து இருந்தாலும், அஸ்வபதியின் சாரதி மிகவும் களைத்து இருப்பதைக் கண்டு விசாரித்தான். ஏன் என்னை வேகமாக அழைத்து வந்தீர்கள்? காரணம் இல்லாமல் இராது. ஏதோ அசுபம் என்று தோன்றுகிறது. என் தைரியமும் என்னை விட்டு விலகுகிறது. இதற்கு முன் பெரிய மகாராஜா இறந்தால் ஊரும் மற்றவைகளும் எப்படி இருக்கும் என்று கேள்விப் பட்டுள்ளேனோ, அதே போல காண்கிறேன். வாசல்கள் பெருக்கி சுத்தமாக வைக்கப் படவில்லை. கற்கள் இரைந்து கரடு முரடாக கிடக்கின்றன. வாசல் கதவுகள் அலங்கரிக்கப் படவில்லை. லக்ஷ்மீகரமாக இல்லை. பலி கர்மமோ, தூப தீபங்களோ இல்லை. ஒளி யிழந்த ஜனங்கள். குடும்பத்தோடு யாரையுமே காணவில்லை. குடும்பஸ்தர்கள் வசிக்கும் இடத்திலும் களையே இல்லை. தேவதைகள் உறையும் கோவில்களில் கூட்டமில்லை. பழைய மாலையை கழட்டி, அபிஷேக ஆராதனைகள் செய்யப் படவில்லை. அதனால் மாலைகள் விற்கும் கடைகளும் இல்லை. வணிகர்களும் முன் போல இல்லை. வியாபாரம் செய்வதில் சிறிதும் சிரத்தையின்றி, த்யானத்தில் இருப்பது போல இருக்கிறார்கள். பக்ஷி கணங்கள் கூட தீனமாக இளைத்துக் காண்கின்றன. எதிரில் வரும் ஸ்திரீ புருஷர்கள், ஏதோ வாட்டமாகவே தென் படுகிறார்கள். இவ்வாறு வினவிக் கொண்டே பரதன், அரச மாளிகையை அடைந்தான். சூன்யமான உள் வீதிகளையும், கதவுகளிலும் தாழ்ப்பாள்களிலும் புழுதி மண்டி கிடப்பதையும், இந்திரன் புரிபோல பிரகாசமான நகரம் வாடியிருப்பதையும் கண்டு மனதை வாட்டும் பல விஷயங்களைக் கண்டதால் சந்தேகமும் பயமும் வர, ஒன்றும் பேசாமல் தந்தையின் மாளிகையினுள் நுழைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் அயோத்யா கமனம் என்ற எழுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 72 (149) பரத சந்தாப: (பரதனின் பரிதவிப்பு)
தந்தையின் மாளிகையில் அவரைக் காணாமல் பரதன் தாயின் மாளிகையில் அவளைக் காணச் சென்றான். வெளியூர் சென்றிருந்த மகன் திரும்பி வந்து விட்டதையறிந்து கைகேயி, தங்க மயமான ஆஸனத்தை விட்டு குதித்து எழுந்தாள். தன் வீடும் லக்ஷ்மீ களையின்றி இருப்பதைக் கண்டும், தாயின் பாதங்களில் விழுந்து வணங்கினான். மகனை உச்சி முகர்ந்து, அணைத்துக் கொண்டு, அருகில் அமரச் செய்து கேட்கலானாள். பாட்டனாரின் வீட்டை விட்டுக் கிளம்பி எவ்வளவு நாளாயிற்று? வேகமாக ரதத்தில் வந்தது, பயணம் சிரமமாக இருந்ததா? உன் மாமனான யுதாஜித் சௌக்யமா? வெளி யூரில் இருந்து இவ்வளவு நாள் இருந்து விட்டு வந்திருக்கிறாய். என்னிடம் விவரமாக சொல்லு. எப்படியிருந்தது? இவ்வாறு பிரியமாக கைகேயி கேட்டவுடன், அரச குமாரன் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தான். இன்று ஏழு இரவு ஆகிறது. நான் ஆர்யகரான பாட்டனார் வீட்டை விட்டு கிளம்பி. உன் தந்தை, என் பாட்டனார், மாமன் எல்லோரும் நலமே. எனக்கு நிறைய பணமும், ரத்னங்களும் கொடுத்தார். கூட வந்தவர்கள் களைத்து விட்டனர். அதனால் முன்னால் வந்தேன். ராஜாவின் கட்டளையை எடுத்துக் கொண்டு வந்த தூதர்கள், அவசரப் படுத்தியதால் வேகமாக வந்தேன். இப்பொழுது நான் கேட்பதற்கு, அம்மா, நீ பதில் சொல்ல வேண்டும். இந்த தங்க மயமான படுக்கை சூன்யமாக இருக்கிறது. மற்ற இக்ஷ்வாகு ஜனங்களும் மகிழ்ச்சியாக தென்படவில்லை. இங்கு, அம்மாவின் மாளிகையில் அரசர் நிறைந்து இருப்பார். அவரைக் காண விரும்பித் தான் வந்தேன். ஆனால் அவரைக் காணவில்லை. நான் தந்தையின் கால்களில் வணங்க விரும்புகிறேன். எங்கு இருக்கிறார் சொல்லு? பெரிய தாயாரான கௌசல்யை வீட்டில் இருக்கிறாரா? அவனுக்கு பதில் பிரியமாக சொல்வதாக நினைத்து, கைகேயி, பயங்கரமான அப்பிரியமான விஷயத்தைச் சொன்னாள். ராஜ்ய லோபத்தால் புத்தி மழுங்கியவளாக விஷயம் அறியாத அவனுக்கு நடந்த விஷயம் சொல்ல முனைந்தாள். எல்லா ஜீவராசிகளுக்கும் என்ன கதியோ, அதை உன் தந்தையும் அடைந்தார். மகாத்மாவான ராஜா, தேஜஸ்வி, நிறைய யாகம் செய்தவர். நல்ல கதியை அடைந்தார். இந்த வார்த்தைகளைக் கேட்டு நல்ல தர்ம புத்தி உள்ளவனும், நியாயமானவனும், ஒழுக்கத்தில் சிறந்தவனுமான பரதன் தந்தையின் மரணம் என்ற செய்தியைக் கேட்டு, மிகவும் வருந்தி, பூமியில் விழுந்து புரண்டான். ஹா என்று தீனமாக அலறினான். தந்தையை நினைத்து அழுதான். தந்தையின் இந்த படுக்கை எப்பொழுதும் எனக்கு பிடிக்கும். மேகம் விலகிய ஆகாயத்தில் சந்திரனைப் போல் இந்த படுக்கையில் அவர் அமர்ந்திருப்பது அழகாக இருக்கும். சந்திரன் இல்லாத ஆகாயம் போலவும், திடுமென வற்றி விட்ட சமுத்திரம் போலவும் இந்த அறை விளங்குகிறது. கண்ணீர் விட்டுக் கொண்டு, தொண்டை வரள, துணியால் முகத்தை மூடிக் கொண்டு அழுதான். இவ்வாறு வருந்தும் அவனை, தேவன் போல இருந்தவனை, பரசுவால் வெட்டி சாய்த்த சால மரம் போல விழுந்து கிடந்தவனை, யானை போன்று கம்பீரமானவனை, சூரிய சந்திரர்கள் போல பிரகாசமானவனை, பூமியிலிருந்து எழுப்பி, சோகத்தால் தவிப்பவனிடம் சொன்னாள். எஎழுந்திரு, மகனே, எழுந்திரு. ராஜ குமாரனே, புகழ் வாய்ந்த உன் போன்றவர்கள் இப்படி வருந்தி அழக் கூடாது. சூரியனுடைய ஒளி போல உன் புத்தி. தான யக்ஞம் இவைகளை செய்ய அருகதை பெற்றவர்களை சீலமும், ஸ்ருதியும், வசனமும் பின் தொடர்ந்து செல்லும். வெகு நேரம் அழுத பின், தரையில் புரண்டு பலவிதமாக துக்கம் வாட்ட தாயிடம் சொன்னான். ராமனுக்கு முடி சூட்டுகிறாரோ, அல்லது பெரிய யாகம் எதையாவது ஆரம்பித்து செய்கிறாரோ என்று எண்ணி நான் வந்தேன் சந்தோஷமாக. இங்கு எல்லாமே விபரீதமாக இருக்கிறது. என் தந்தையை இனி பார்க்க முடியாது. என்னிடம் பிரியமுள்ளவரை இனி நான் எப்பொழுதுமே காண மாட்டேனா? எதனால் தந்தை மறைந்தார்? என்ன வியாதி? நான் வரும் முன் மறைந்து விட்டாரே. ராமன் முதலானோர் பாக்யசாலிகள். தந்தையின் அந்திம கார்யங்களை செய்ய கொடுத்து வைத்தவர்கள். நான் வந்ததை இன்னமும் ராமன் அறியவில்லை போலும். வந்து உடனே என்னை உச்சி முகர்ந்து, அன்புடன் அணைத்துக் கொள்வான். சுகமான ஸ்பரிசம் உடைய அந்த கைகள் எப்பொழுதும் நேர்மையானவற்றையே செய்பவை. அவை எங்கே? அந்த கைகளால் புழுதி படிந்த என் தேகத்தை தடவிக் கொடுப்பானே. எந்த ராமன் எனக்கு சகோதரனோ, அவனே எனக்கு தந்தை, பந்து. அவனுக்கே நான் தாஸன். அவனுக்கு சீக்கிரம் சொல்லியனுப்புங்கள், அம்மா நான் வந்து விட்டதை தெரியப் படுத்துங்கள். தந்தைக்கு பின் ஜ்யேஷ்ட சகோதரன் தான் தந்தைக்கு சமமாக வணங்கத் தக்கவன். அது தான் தர்மம். இனி நமக்கு எல்லாம் ராமன் தான் கதி. அவன் பாதத்தில் வணங்குவேன். த்ருட பாராக்ரமம் உடையவன். சத்ய சந்தன். தர்மம் அறிந்ததோடு, அதன் வழியில் பிறழாமல் நிற்பவன். என் தந்தை கடைசியாக என்ன சொன்னார்? அதைச் சொல்லுங்கள். கைகேயி பதிலுரைத்தாள். ராமா என்று அலறிக் கொண்டு, ஹா சீதே, ஹா லக்ஷ்மணா என்று அழுதார். அழுது கொண்டே பரலோகம் சென்றார். நல்ல கதி அடைந்திருப்பார். இது தான் அவரது கடைசி வார்த்தை, மகா கஜம், (பெரிய யானை) கயிற்றால் கட்டுண்டது போல, காலத்தின் தர்மம் அதனால் கட்டுண்டார். திரும்பி வரும் ராமனையும் சீதையையும், லக்ஷ்மணனையும் காண்பவர்கள் பாக்கியசாலிகள். இதைக் கேட்டு மற்றொரு கெடுதலான விஷயம் இருக்குமோ என்று பயம் தாக்க, முகம் வருத்தத்தைக் காட்ட, தாயாரிடம் பரதன் வினவினான். கௌசல்யையை மகிழ்விக்க வந்த தர்மாத்மா இப்பொழுது எங்கே? லக்ஷ்மணனுடனும் சீதையுடனும் எங்கே சென்றான்?
இவ்வாறு கேட்டவுடன் முழு விவரமும் நடந்தபடி விவரமாக சொல்ல ஆரம்பித்தாள் கைகேயி. மகனே, அந்த ராஜ குமாரன் வல்கலை மரவுரி உடுத்திக் கொண்டு பெரும் காடான தண்ட காரண்யம் போய் விட்டான். லக்ஷ்மணனும் சீதையும் அவனைத் தொடர்ந்து சென்று விட்டனர். இதைக் கேட்டு பரதன் பயந்தான். சகோதரனது ஒழுக்கத்தில் சந்தேகம் கொண்டவனாக, தன் வம்சத்து பாரம்பரியம் தெரிந்தவன் தான் ஆனாலும் ஒருவித பயம் தோன்ற, மேலும் கேட்டான். ராமன் என்ன தவறு செய்தான்? பிராம்மணனுடைய தனத்தை அபகரித்தானா? பணக்காரனோ, தரித்திரனோ, பாபம் செய்யாதவனைத் தண்டித்தானா? பரதா3ரம் என்ற பிறன் மனையை நாடினானா? எந்த தவற்றுக்காக சிறு குழந்தையைக் கொல்லும் கொடிய செயலை செய்பவனைப் போல, நாடு கடத்தப் பட்டான்? அந்த தாயார், தன் சபல புத்தியினால், ஸ்த்ரீ சுபாவத்தாலும், விவரமாக சொன்னாள். தன்னை பண்டிதையாக எண்ணி மகிழும் குணமுள்ளவள் ஆனதால் தன் பெருமை சொல்லலானாள். நல்ல புத்திசாலியான ராமன் எந்த பிராம்மண செல்வத்தையும் திருடவில்லை. எவரையும் பணக்காரரோ, ஏழையோ, பாபம் செய்யாத நிரபராதியை தண்டிக்கவில்லை. பிறன் மனைவியை ராமன் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான். நான் தான் மகனே, ராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்று அறிந்ததும், உன் தந்தையை யாசித்தேன். உனக்கு ராஜ்யம், ராமனுக்கு வன வாஸம் என்று. உன் தந்தை சரி என்று அவ்வாறே செய்ய ஒப்புக் கொண்டார். ராமனையும், சகோதரன் லக்ஷ்மணன், சீதையுடன் வனத்திற்கு அனுப்பி விட்டார். அவ்வாறு அவர்கள் சென்றபின், சக்ரவர்த்தி புத்திர சோகம் தாங்காமல் மேல் உலகம் சென்று விட்டார். நீ இப்பொழுது மகா ராஜா பதவியை ஏற்றுக் கொள். உனக்காகத் தான் நான் இவ்வளவும் செய்தேன். சோகமோ, சந்தாபமோ இன்றி தைரியமாக இருப்பாய் மகனே. உன் வசத்தில் இந்த நகரம், இந்த நாயகன் இல்லாத ராஜ்யமும் இப்பொழுது இருக்கிறது. அதனால் மகனே, சீக்கிரம் வசிஷ்டர் முதலான பிராம்மணோத்தமர்களுடன் விதி முறை அறிந்தவர்களைக் கொண்டு சாஸ்திர விதிப் படி உனக்கு கிடைத்துள்ள ராஜ்யத்தில் முடி சூட்டிக் கொள்ள ஏற்பாடு செய் என்றாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ப4ரத சந்தாபோ என்ற எழுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 73 (150) கைகேயி விகர்ஷணம் (கைகேயியை குறை சொல்லுதல்)
தந்தை இறந்ததையும், சகோதரர்கள் நாடு கடத்தப் பட்டதையும் கேட்டு, பரதன் துக்கத்தில் மூழ்கினான். துடித்துப் போனான். எனக்கு இந்த ராஜ்யம் கிடைத்து என்ன பயன்? தந்தையை இழந்து, தந்தைக்கு சமமான சகோதரனையும் இழந்து வருந்தும் எனக்கு மேலும் துக்கத்தைத் தருகிறாய். காயத்தின் மேல் உப்பு நீர் தெளி த்தாற் போல. அரசனை உயிரிழக்கச் செய்து, ராமனை தபஸ்வியாக்கி இந்த குலத்தை இல்லையென்றாக்க, கால ராத்திரி போல வந்து சேர்ந்தாய். நெருப்பு என்று அறியாமல் என் தந்தை உன்னை மடியில் கட்டிக் கொண்டார். உன்னால் தான் இவ்வளவு விரைவில் என் தந்தை ம்ருத்யுவை அடைந்தார். குலத்தைக் கெடுக்க வந்தவளே, இந்த குலத்தில் மோகத்தின் வசத்தால் சுகம் மறைந்தது. அபகரிக்கப் பட்டது சத்ய சந்தன் என்று பெரும் புகழ் பெற்று வாழ்ந்த தசரத ராஜா, என் தந்தை, உன்னை அடைந்து , தாங்கொணா துக்கத்தை தாங்கும்படி ஆயிற்று. தர்ம வத்ஸலனான என் தந்தையை நாசம் செய்து விட்டாய். எப்படித்தான் ராமனை விரட்டினாயோ, எப்படித்தான் அவனும் வனம் சென்றானோ. கௌசல்யாவும் சுமித்திராவும் புத்ர சோகத்தால் பீடிக்கப் பட்டு வாழ்கிறார்களோ, இல்லையோ, உன்னைத் தாயாக அடைந்த நான் வாழ்வது தான் எப்படி? ஆர்யனான (பெரியவன்) ராமனும் உன்னிடம் தன் சொந்த தாய் போலத்தானே நடந்து கொண்டான். பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையறிந்தவன், தர்மாத்மா. அதே போல மூத்தவளான கௌசல்யா, தீர்க தர்சினி, உன்னிடத்தில் சகோதரி போல நடந்து கொண்டு வந்திருக்கிறாள். அவள் மகனை, பிறவியிலேயே மகானான ராமனை மரவுரி, வல்கலை உடுத்தி காட்டுக்கு அனுப்பி விட்டு கவலையில்லாமல் எப்படி இருக்கிறாய்? எதிலும் குற்றம் காணாமல் சூரனான ராமன், க்ருதாத்மா என்று புகழ் பெற்றவனை என்ன காரணம் சொல்லி வனத்துக்கு அனுப்பினாய்? உன் லோபத்தில், நீ ராகவனை சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் ராஜ்யம் காரணமாக இந்த அனர்த்தத்தை செய்திருக்கிறாய். நான் ராம லக்ஷ்மணர்கள் இருவரையும், புருஷ வ்யாக்ர என்று பெயர் பெற்ற இருவரையும் காணாமல் எந்த சக்தியில் ராஜ்யத்தைக் காப்பாற்ற முடியும். மகா பலவானான அரசனே, ராமனின் பலத்தையறிந்து அவனை ஆஸ்ரயித்து இருந்தார். மேரு மலை தன் சாரலில் உள்ள வனத்தை ஆஸ்ரயித்து இருப்பது போல. அந்த நான், பெரும் பாரமான இத ராஜ்யத்தை, இளம் காளைக் கன்றின் தோளில் கனமான கலப்பையை வைப்பது போல, ராஜ்யத்தைப் பெற்று எப்படி நிர்வகிப்பேன்? என்ன சாமர்த்தியம் இருக்கிறது எனக்கு? அப்படியே எனக்கு சக்தி இருந்தாலும், சந்தர்ப்ப வசத்தாலும், புத்தி பலத்தாலும் என்னால் சமாளிக்க முடிந்தாலும் நீ ஜயிக்க விடமாட்டேன். கைகேயி, புத்திரனையே அடிப்பவள் நீ. ராமனுக்கு உன்னிடத்தில் எப்பொழுதும் தாயார் என்ற மரியாதை இல்லாமல் இருந்திருந்தால், பாபத்தை செய்யத் துணிந்த உன்னை தியாகம் செய்வதால் நான் எந்த வித வருத்தமோ, நஷ்டமோ, அடைய மாட்டேன். இப்படி ஒரு புத்தி உனக்கு எப்படித்தான் வந்ததோ? நல்ல சரித்திரம் உள்ள குலத்திலிருந்து மாறுபட்டு விழுந்தாய். நம் முன்னோர்களையும் கெட்ட பெயர் பெறும்படி செய்து விட்டாய். இந்த குலத்தின் முறை, மூத்தவர்களையே ராஜ்யத்தில் அமர்த்துவது என்பது. மற்ற சகோதரர்கள் அவனைச் சுற்றி ஒற்றுமையாக பணி செய்வார்கள். நீ ராஜ தர்மத்தையும் நினைத்துப் பார்க்கவில்லை. சாஸ்வதமான அரச குடும்பத்து கதி விதிகளையும் அறிய மாட்டாய். எப்பொழுதும் அரசர்கள் மூத்த மகனைத் தான் தனக்கு பின் பட்டத்துகு உரியவனாக நினைப்பார்கள். விசேஷமாக இக்ஷ்வாகு குலத்தில் அது தான் முறை. தர்மத்தை ரக்ஷிப்பது ஒன்றே குறியாக இருப்பவர்கள். அது தான் குலத்திற்கு அழகு என்று தர்மத்தை சார்ந்து நடப்பவர்கள். குலத்தின் சரித்திரம் (பெருமை) இப்பொழுது உன்னால் வீழ்ந்தது. உன் குலத்திலும் முன்னோர்கள் மகான்களாக இருந்திருக்கிறார்கள். உனக்கு மட்டும் ஏன் இந்த மட்டமான புத்தி எங்கிருந்து வந்தது? உன் இஷ்டத்தின்படி நான் நிச்சயம் செய்ய மாட்டேன். என் வாழ்க்கையே நாசமாகும் படி இப்படி ஒரு செயலை துணிந்து செய்திருக்கிறாய். உனக்கு பிடிக்காத காரியத்தையே செய்யப் போகிறேன். காட்டிலிருந்து ராமனை திரும்ப அழைத்து வரப் போகிறேன். அவனுக்கு நான் தாஸனாக இருந்து சலனமில்லாமல் ஊழியம் செய்வேன். என்று இவ்வாறு பரதன் ராமனை பிரியமான வார்த்தைகளால் புகழ்ந்து, சோகத்தில் மூழ்கி இருந்த போதும், குகையில் இருக்கும் சிங்கம் கர்ஜிப்பது போல கர்ஜித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கைகேயி விகர்ஷணம் என்ற எழுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 74 (151) கைகேயி ஆக்ரோச: (கைகேயியின் ஆக்ரோஷம்)
தாயாரை இவ்விதம் குறை சொல்லி விட்டு, மகா கோபத்துடன் பரதன் திரும்பவும் சொன்னான். கைகேயி, கொடியவளே, துஷ்டத்தனமாக செய்திருக்கிறாயே, ராஜ்யத்திலிருந்து விலகி, நானும் உன்னை கை விட்டேன், அழுது கொண்டு தனியாக இரு. உனக்கு ராஜா என்ன கெடுதல் செய்தார். ராமன் தான் என்ன கெடுதல் செய்தான்? இவர்கள் இருவரில் ஒருவருக்கு ம்ருத்யுவும், மற்றவருக்கு நாட்டை விட்டு போகும்படியும் சமமான துன்பம் கிடைக்க செய்து விட்டாய். சிசு வதம் செய்வது போல மகா பாபம் செய்திருக்கிறாய். இந்த குலத்தின் நாசத்திற்கு காரணமாக ஆனாய். கைகேயி, நீ நரகத்திற்குத் தான் போவாய். என் தந்தையை சென்றடைய மாட்டாய் (இறந்த பின்) இப்படி ஒரு கோரமான பாப காரியத்தை செய்திருக்கிறாய். உலகம் அனைத்தும் விரும்புகிற ஒன்றை நாசம் செய்து விட்டு எனக்கு பயத்தை உண்டு பண்ணியிருக்கிறாய். உன் காரணமாக என் தந்தை மறைந்தார். ராமனும் வனம் சென்றான். உன்னால் எனக்கு அபகீர்த்தி தான் ஏற்பட்டது. மாத்ரு ரூபத்தில், எனக்கு சத்ருவாக வந்தவளே, கொடியவளே, ராஜ்யத்தில் காமம் கொண்டவளே, உன்னுடன் நான் பேசப் போவது இல்லை. பதியைக் கொன்றவள் நீ. கௌசல்யாவும், சுமித்திராவும் மற்றுமுள்ள என் தாயார்களும் குலத்தை தூஷிக்க வந்த உன்னால் மகத்தான துன்பத்தை அடைந்தார்கள். ராஜா அஸ்வபதி தர்ம ராஜாவுக்கு சமமானவன். புத்திசாலி. நீ அவருக்கு பிறந்த மகளே அல்ல. ராக்ஷஸி. குலத்தைக் கெடுக்க அங்கு வந்து பிறந்திருக்கிறாய். நித்யம் சத்ய பராயணனான ராமன் காட்டுக்கு போக நேர்ந்தது. அதே துக்கத்தில் தந்தையும் தேவலோகம் சென்றார். தந்தையை இழக்கச் செய்த பின் எனக்கு ராஜ்யம் வாங்கித் தந்ததாகச் சொல்கிறாயே, அது பாப கர்மத்தின் பலன் இல்லையா? இதனால் எனக்கு என்ன புகழ் இருக்கும்? கௌசல்யாவுக்கு இப்படி ஒரு பிரிவைத் தந்ததால் உனக்கு என்ன ஆதாயம்? அழிவை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறாய். உனக்குத் தெரியாததா? கௌசல்யா வயிற்றில் பிறந்தவன் மூத்தவன். தந்தைக்கு சமமானவன். சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் பிறப்பவன் தான் புத்திரன். ஹ்ருதயத்திலிருந்தும் உண்டாகிறான். அதனால் தான் தாயாருக்கு பிரியதமன். பந்துக்களுக்கும் பிரியமானவன். ஒரு சமயம் தர்மம் அறிந்தவர்கள், தேவர்களுக்கு சம்மதமன சுரபியை தாங்கிக் கொண்டு வந்து பூமியில் அவள் புத்திரர்கள் நினைவு இழந்து கிடந்தவர்களைக் காண்பித்தனர். அவள் புத்திர சோகத்தால் வருந்தி கண்ணீர் பெருக்கினாள். அவளுடைய கண்ணீர் கீழே இருந்து கிளம்பிச் சென்ற தேவராஜனின் உடலில் விழுந்தன. சூக்ஷ்மமாக சுரபியின் வாசனையுடன் இந்திரனும் தன் உடலில் விழுந்த சுரபியின் கண்ணீரை, புனிதமான வாசனையால் கண்டு கொண்டான். மதிப்பு மிக்க சுரபியைத் தேடி இந்திரனும், அவள் ஆகாயத்தில் நின்று தீனமாக அழுவதைக் கண்டான். அதைக் கண்டு பரிதாபப்பட்டு ஆறுதல் சொல்லும் விதமாக, சுரபியே, உனக்கு என்ன பயம்? எங்களிடத்தில் உனக்கு ஒரு குறையும் இல்லையே, எதனால் காரணம் இன்றி அழுகிறாய்? சுரபி பதில் சொன்னாள். சாந்தம் பாபம். (இது ஒரு பேச்சு வழக்கு. அமங்களமாக ஏதாவது காதில் பட்டால் உடனே சொல்வது) அமராதிபனே,
உங்களில் யாரும் எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. என் புத்திரர்கள் இருவரும் தவறான வழியில் சென்று பூமியில் புதைந்து போனார்கள். அதை எண்ணித் தான் வருந்துகிறேன். இவ்விருவரும் இளைத்து, தீனமாக, சூரியனுடைய கிரணங்களால் தகிக்கப் பட்டவர்களாக கிடக்கிறார்கள். என் சரீரத்திலிருந்து உண்டானவர்கள். துன்பத்தில் இருக்கிறார்கள். பாரம் அழுத்த வேதனை படுகிறார்கள். அவர்களைக் கண்டு என் உள்ளம் நடுங்குகிறது. புத்திரனுக்கு சமமாக பிரியமானவர்கள் வேறு யார் இருக்கிறார்கள். என்றாள். எவளுக்கு ஆயிரக்கணக்கான புத்திரர்கள், உலகெங்கும் வியாபித்து இருக்கிறார்களோ, அவள் கஷ்டத்தில் இருந்த இரண்டு புத்திரர்களுக்காக அழுகிறாள். இதைக் கண்டு இந்திரனும் புத்திரனுக்கு மேலான வேறு எதுவும் இல்லையென்று உணர்ந்து கொண்டான். எப்பொழுதும் ஈ.டு இணையில்லாத நடத்தையுடையவளும், உலகை தாரணம் செய்யும் விருப்பமும், லஷ்மி கடாக்ஷம் உள்ளவளும் இயல்பிலேயே பிறருக்கு உதவி செய்பவளுமான கௌசல்யா, ஒரே மகனான ராமனும் உடன் இல்லாமல் எப்படி இருப்பாள்? ஒரே மகனையுடைய சாத்வீ, அவள் மகனை பிரித்த பாவம் உனக்கு. அதனால் நீ எப்பொழுதும் இவ்வுலகிலும், பர லோகத்திலும் துக்கத்தை அனுபவிப்பாய். நான் இதற்கு மாற்று செய்யப் போகிறேன். சந்தேகமில்லாமல், இந்த சகோதரனுக்கும், தந்தைக்கும், இழந்த கீர்த்தியை நிலை நாட்டுவேன். திரும்ப அழைத்து வந்து கௌசல்யையின் பக்க பலமான ராமனை ராஜ்யத்தில் நியமித்து விட்டு, நானே வனம் செல்வேன். ஊர் ஜனங்கள் கண்ணீருக்கிடையில் என்னை நிந்திக்கும்படி நான் இருக்க மாட்டேன். நீ என்ன வேண்டுமானாலும் செய். அக்னியில் பிரவேசம் செய்வாயோ, தண்டகா வனம் தான் போவாயோ, கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டு மாய்வாயோ, வேறு வழி என்ன? ராமனிடம் பூமியை ஒப்படைத்து விட்டு நான் திருப்தியாக, கல்மஷம் நீங்கியவனாக ஆவேன். அங்குசத்தால் அடி பட்ட காட்டு யானை கோபம் கொண்டு பெருமூச்சு விடுவது போல கண்கள் சிவக்க, ஆடை சீர் குலைய, ஆபரணங்களைக் களைந்தவனாக பூமியில் விழுந்தான், ராஜ குமாரனான பரதன். இந்திரனுடைய கொடி, உத்ஸவம் முடிந்த அல்லது பாதிக்கப் பட்டதால் விழுந்து கிடப்பது போல கிடந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கைகேயி ஆக்ரோஷோ என்ற எழுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 75 (152) பரத சபதம் (பரதன் சூளுரைத்தல்)
வெகு நேரம் கழித்து சுய நினைவு அடைந்த பரதன் தீனமாக தாயாரைப் பார்த்து மந்திரிகளுக்கு எதிரிலேயே அவளைக் குற்றம் சாட்டிப் பேசினான். எனக்கு ராஜ்யம் வேண்டாம். உன்னைத் தாயாராக நினைக்கவும் இல்லை. அபிஷேகம் என்பதை நான் அறியேன். சத்ருக்னனுடன் நான் தேசத்தில் இல்லாத பொழுது அரசனால் கொடுக்கப் பட்டது. மகாத்மாவான ராமன் வனம் சென்றதையும் நான் அறியேன். கூடவே சௌமித்திரியும், சீதையும் சென்றதையும் நான் இங்கு வந்து தான் தெரிந்து கொண்டேன். இவ்வாறு உரத்த குரலில் அலறும் பரதனின் குரலைக் கேட்டு, கௌசல்யை, சுமித்திரையிடம் சொன்னாள். கைகேயி பிள்ளை வந்து விட்டதாகத் தெரிகிறது. நான் அவனை பார்க்க வேண்டும், பரதன் தீர்க தரிசனம் உள்ளவன். முகம் வாடி, மலினமாக இருந்தாலும், உடல் நடுங்க மெதுவாக நடந்து பரதன் இருக்குமிடம் செல்ல புறப்பட்டாள். பரதனோ, ராமனுடைய தம்பி, சத்ருக்னனுடன் அவளைத் தேடி அவள் இருக்கும் இடம் வந்து விட்டான். இருவரும் அவள் பாதங்களில் வணங்கி அணைத்துக் கொண்டனர். துக்கத்தால் வருந்தியவளை சமாதானம் செய்ய முற்பட்டனர். அவர்கள் இருவரையும் அழுது கொண்டு நிற்பவர்களைப் பார்த்து, கௌசல்யா தானும் அடக்க முடியாமல் கண்ணீரைப் பெருக்கினாள். பின் பரதனிடம் இதோ, ராஜ்யத்தை விரும்பிய உனக்கு இடையூறு இன்றி ராஜ்யம் தயாராக இருக்கிறது. கைகேயி அவசரமாக, வாங்கி வைத்திருக்கிறாள். என் மகனை மரவுரி கட்டி காட்டுக்கு அனுப்பி வைத்தது தான் கொடிய செயல். அவனிடத்தில் என்ன குறை கண்டாளோ. எதிலும் க்ரூரமாக காண்பவள், கைகேயி. என்னையும் அவள் சீக்கிரமே நாடு கடத்தினால் நல்லது. ஹிரண்ய நாபனான என் மகன் எங்கு இருக்கிறானோ, அதே வனத்திற்கு நானும் செல்வேன். அல்லது நானே, சுமித்திரையுடன் கூட அக்னி ஹோத்ரத்தையும் எடுத்துக் கொண்டு ராமன் இருக்கும் இடம் செல்வேன். அல்லது நீயே என்னை அந்த இடத்திற்கு அழைத்து சென்று விடு. என் புத்திரர்கள் அங்கு தவம் செய்கிறார்கள். இந்த தன தான்யம் நிறைந்த விஸ்தீர்ணமான பூமி, யானை குதிரை, ரதங்கள் நிறைந்தது ராஜ்யம் உனக்கு என்று ஆகி விட்டது. குத்தலாக இது போல பல வாக்கியங்களை அவள் சொல்ல, பரதன் காயத்தின் மேல் ஊசியால் குத்தியது போல துடித்துப் போனான். அவள் காலில் விழுந்தான். மனம் அலை பாய, பெரிதாக அழுதான். சற்று நேரம் அழுது நினைவு இழந்தவன், பின் ஸ்திரப் படுத்திக் கொண்டு சொன்னான். கை கூப்பியவனாக கௌசல்யையைப் பார்த்து பேசலானான். ஆர்யே, எதுவும் அறியாத என்னை எப்படித் திட்டுகிறாய்? நான் கவடு அறியாதவன். ராகவனிடத்தில் நான் கொண்டுள்ள அளவற்ற அன்பையும், ஸ்திரமான மரியாதையையும் நீ அறிவாய். தமையனான ராமன் வனம் சென்றது எனக்கு சம்மதமாக இருந்திருப்பின், கொடியவனான எனக்கு சாஸ்திரங்களை பின் பற்றும் புத்தி இல்லாது போகட்டும். தமையனான ராமன் வனம் சென்றது எனக்கு முன்பே தெரிந்திருந்து நான் சம்மதித்து இருந்தால், எப்பொழுதும் சத்ய சந்தன், நல்லவர்களுள் ஸ்ரேஷ்டன் என்ற நற்பெயர்கள் எல்லாம் வராது போகட்டும்.
(மனம் கொண்டு வனம் போக்கி இருப்பேனேயானால் – எனக்குத் தெரிந்து, என் அனுமதியுடன் என் தமையன் வனம் சென்று இருப்பானேயானால்- இந்த சபதம் ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் சேர்த்துக் கொள்ளவும்)
பாபிகள் செல்லும் இடம் வாய்க்கட்டும். சூரியனை நோக்கி சிறுநீர் கழிப்பவனோ, தூங்கும் பசுவை உதைப்பவனோ பெறும் பாபம் வந்து சேரட்டும்.
ஏராளமான வேலைகளை வாங்கிக் கொண்டு அதர்மமாக பொருளைக் கொடுக்காமல் ஏமாற்றினால் என்ன பாபமோ, அதுவும்
புத்திரர்களைப் போல எண்ணி ராஜ்யத்தை பாலனம் செய்யும் அரசனுக்கு துரோகம் செய்பவன் என்ன பாபத்தை அடைவானோ, அதுவும்,
தன் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு, தங்களை பரிபாலிக்கும் அரசனுக்கு என்று எடுத்து வைக்காத பிரஜைகளின் பாபமும்,
சூக்ஷ்மமான சாஸ்திரார்த்தங்களை உபதேசிக்கும் குரு மிகவும் முயற்சி எடுத்து சொல்லித் தரும் பொழுது, துஷ்டனான சிஷ்யன் அதை நாசம் செய்தால் என்ன பாபமோ, அதுவும்,
தபஸ்விகளிடம் பாடம் கேட்டு, யாகத்தில் யக்ஞ தக்ஷிணையை கொடுக்காமல் ஏய்க்கும் மனிதர்களுடைய பாபம் எதுவோ, அதுவும் என்னை வந்து சேரட்டும்.
யானை, குதிரை , ரதம் இவைகளுடன் சஸ்திரங்கள் வைத்து யுத்தம் செய்யும் பொழுது, நல்லவர்களுடைய தர்மம் எதுவோ அதுவும் என்னை வந்தடையாமல் போகட்டும்.
சூரியன் சந்திரனுக்கு சமமான தேஜஸை உடையவன், ராஜ்யத்தில் அமரும் பொழுது, அதைக் காண முடியாமல் போகட்டும்.
தயை இல்லாதவன் எவன், பெரியவர்கள் இருக்கும் பொழுது அவர்களை மதியாமல் நல்ல பாயஸத்தை தனியாக சாப்பிடுகிறானோ, அவன் அடையும் பாபமும்,
பசு மாட்டை காலால் உதைப்பவனும், பெரியவர்களை தானே வேதனைப் பட வைப்பவனும், நண்பனுக்கு துரோகம் செய்பவனும், என்ன பாபத்தை அடைவார்களோ, அதுவும்,
நம்பிக்கையோடு, தங்களுக்குள் பேசிக் கொண்ட ரகஸியத்தை, எவன் வெளியில் விவரித்து சொல்கிறானோ, அவன் அடையும் பாபமும்,
செய் நன்றி மறந்தவனும், எதுவுமே நன்மை செய்யாதானும், வெட்கம் இல்லாதவனும், உலகில் வெறுக்கத் தகுந்த நடவடிக்கை உடையவனும் அடையும் பாபமும்,
புத்திரர்கள், மனைவிமார், வேலைக்காரர்கள், இவர்களுடன் சேர்ந்து தன் வீட்டில் வசிப்பவன், அவர்களை விட்டு தான் மட்டும் வயிறு நிறைய சாப்பிட்டால் என்ன பாபமோ, அதுவும், என்னை வந்து சேரட்டும்.
தனக்கு நிகரான மனைவியை அடையாமல், குழந்தை பேறு இல்லாமல் அழியட்டும். தர்மமான செயலின் பலனை அடையாமல் போகட்டும்.
தன் பத்னிகளிடம் தன் வம்சத்தை காணாது போகட்டும்.
துக்கத்துடனேயே தன் ஆயுசு முழுவதும் இந்த செல்வம் கிடைக்காமலே போகட்டும்.
அரசனை, ஸ்த்ரீகளை குழந்தைகளை , வயதானவர்களை வதைப்பதில் என்ன பாபம் வருமோ, தன்னிடம் வேலை செய்பவனை தியாகம் செய்வதில் என்ன பாபம் உண்டோ, அதுவும்,
யுத்தத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது, சத்ரு பக்ஷமும் பயங்கரமாக இருக்கும் பொழுது, களத்தை விட்டு ஓடுபவனை வதைத்தால் அடையும் பாபம் எதுவோ, அதுவும்,
கபாலத்தை ஏந்தி, மரவுரி, வல்கலை தரித்தவனாக, உன்மத்தனாக பிக்ஷை கேட்டு உலகை சுற்றி வரட்டும், என் சம்மதத்தோடு தமையனார் வனம் போய் இருந்தால்.
மதுவில் மயங்கி கிடக்கும் பெண்களிடமும், சூதாட்டக் காயிலும் மயங்கி கிடக்கட்டும். காமக் க்ரோதங்கள் அவனை வாட்டட்டும்.
தர்மத்தில் மனம் போகாமல், அதர்மத்தையே சேவிக்கட்டும்.
அவன் செய்யும் தர்மமும், சரியான பாத்திரம் (தேவையுள்ள மனிதன்) இல்லாது போகட்டும்.
சேர்த்து வைத்த தனம், பலவிதமான பொருட்கள், ஆயிரக் கணக்கானவைகளை திருடன் கொள்ளையடித்துக் கொண்டுபோகட்டும்.
இரண்டு சந்த்யா காலங்களிலும் தூங்குபவனுக்கு என்ன பாபம் சொல்லப் பட்டிருக்கிறதோ, அதுவும்,
அக்னியை கொடுப்பதால் என்ன பாபமோ, குருவின் படுக்கையில் படுப்பதால் என்ன பாபமோ, மித்ர துரோகிக்கு என்ன பாபமோ, அதுவும் வந்து சேரட்டும்.
தேவதைகளுக்கும், பித்ருக்களுக்கும், பெற்றோருக்கும், பணிவிடை செய்யாமலே போகட்டும்.
நல்லவர்களின் உலகத்திலிருந்து, நல்ல புகழிலிருந்து, சேர்த்து வைத்துள்ள நற் கர்மாக்களின் பலன்களிலிருந்தும், இன்றே, இப்பொழுதே தள்ளப் பட்டு விழட்டும்.
தாயாருக்கு பணிவிடை செய்யாமல், (தீர்க பாஹுவும்) நீண்ட கைகளும், அகன்ற மார்பும், அனர்த்தமான செயல்களுக்கு பயன் படட்டும்.
நிறைய குழந்தைகளுடன், தரித்திரனாக, ஜ்வரம் வியாதி இவற்றால் பீடிக்கப் பட்டவனாக, எப்பொழுதும் க்லேசத்துடனேயே காலத்தைக் கழிக்கட்டும்
நம்பிக்கை வைத்தவர்கள், தீனர்கள், யோகிகள், யாசிக்கும் பொழுது ஏளனம் செய்பவன் அடையும் பாபமும், வந்து சேரட்டும்.
மாயையில் எப்பொழுதும் ரமிக்கட்டும். கடும் சொல் உடையவனாக, கஞ்சனாக, சுத்தம் இல்லாதவனாக, அரசனிடம் பயந்தவனாக, அதர்மாத்மாவாக இருக்கட்டும்.
ருது ஸ்னானம் செய்து வீட்டில் காத்திருக்கும் மனைவியை அலட்சியம் செய்யும் துராத்மா அடையும் பாபமும்,
தர்ம பத்னியை விட்டு, வெளியில் (பர தாரா) பிறன் மனையை நாடும், நியாயமான வழியைத் துறந்த மூடர்கள் அடையும் பாபமும்,
புத்திரர்களை பறி கொடுத்த பிராம்மணன், எந்த கெட்ட காரியத்தின் பலனாக இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறானோ, அந்த பாபமும்,
குடிநீரை தூஷிப்பதால் உண்டாகும் பாபமும், விஷத்தைக் கொடுப்பதால் வரும் பாபம், இவை என்னை வந்து சேரட்டும்.
கலுஷமான புத்தியுடையவன், பிராம்மணன் பூஜை செய்ய முனையும் பொழுது தடுப்பவன், பசு மாட்டை பலவந்தமாக பால் கறப்பவன் இவர்கள் அடையும் பாவ கதியை நானும் அடைவேன், என் அனுமதியுடன், எனக்குத் தெரிந்து என் சகோதரன் வனம் போய் இருந்தால்.
தாகத்துடன் தவிக்கும் பொழுது, தாமதமாக தண்ணீர் கொடுப்பவன், பக்தியுடன் விவாதிப்பவர்கள், தங்கள், தங்கள் மார்கத்தை எண்ணி செயல் படுபவர்கள், இதில் தவறான எண்ணத்தை புகுத்துபவன் என்ன பாபத்தை அடைவானோ, அது என்னையும் வந்து சேரட்டும். மேற் சொன்ன பாவ பலன் அனைத்தும் என்னை சேரும், நான் மட்டும் மனதறிந்து ராமனை வனம் செல்ல அனுமதித்திருந்தால் என்று பரதன் சபதம் செய்தான். இவ்வாறு கடினமான சபதங்களை மேற் கொண்ட, பரதன், கௌசல்யையின் தவறான எண்ணத்தை நீக்கி தன் நிலையை விளக்க மிகவும் கஷ்டப் பட்டு தவித்தான். அதைக் கண்ட கௌசல்யை சொன்னாள் மகனே, என் துக்கம் இன்னும் அதிகமாகிறது. நீ இப்படி சபதம் செய்தது எனக்கு உயிரே போவது போல இருக்கிறது. சுபமான லக்ஷணங்கள் உடையவன் நீ. நல்ல காலமாக உன் புத்தி சபலமடையவில்லை. தர்மத்தில் நிலை பெற்று இருக்கிறது. குழந்தாய், சத்ய ப்ரதிக்ஞை செய்யும் நீயும் நல்லவர்களின் லோகம் சென்றடைவாய். இவ்வாறு சொல்லி, பரதனை அணைத்து மார்புற தழுவி, சமாதானம் செய்தாள். சகோதர வாஞ்சையுடைய அவனை சந்தேகித்தோமே என்றோ மிகவும் வேதனையுடன் அழலானாள். இவ்வாறு மகாத்மாவான பரதன், தன் பக்க நியாயங்களைச் சொல்லியும், அழுதும் அன்று இரவு ஒருவரையொருவர் சமாதானம் செய்வதிலேயே கழிந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத சபதோ என்ற எழுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 76 (153) தசரத ஔர்த்3வ தே3ஹிகம் (தசரதரின் இறுதிக் கடன்கள்)
இவ்வாறு பரதன் வருந்தி புலம்பிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு ரிஷி ச்ரேஷ்டரான வசிஷ்டர் வந்து சேர்ந்தார். வாக்கு வன்மை கொண்ட அவர், நிலைமையை உடனே புரிந்து கொண்டு பரதனுக்கு ஆறுதலாகப் பேசினார். ராஜ குமாரனே, உனக்கு மங்களம். சோகத்தை விடு. பகழ் வாய்ந்த மகா ராஜாவுக்கு காலம் வந்து விட்டது. நீ மேற் கொண்டு செய்ய வேண்டியதை கவனி. வசிஷ்டர் சொன்னதைக் கேட்டு, பரதன் சற்றுத் தெளிந்தான். தர்ம முறைப்படி இறுதிக் கடன்களைச் செய்தான். தைலப் பாத்திரத்திலிருந்து எடுத்து பூமியில் வைத்து, உடல் முழுவதும் மஞ்சள் வர்ணமாகி தூங்குவது போல கிடந்த மகா ராஜாவை, பலவிதமான ரத்னங்கள் இழைத்த படுக்கையில் கிடத்தினர். மகாராஜாவின் உடலைக் கண்டு பரதன் மிகவும் வருந்தினான். நான் வெளியூர் போனவன் திரும்பி வருமுன் என்ன அவசரம் மகாராஜாவே. ராமனையும், லக்ஷ்மணனையும் நாடு கடத்தி விட்டு, இங்கு தவிக்கும் ஜனங்களை விட்டு எங்கு போகப் போகிறீர்கள், மகா ராஜா. புருஷ சிம்ஹமான ராமனையும் இழந்து தவிக்கிறார்கள், இந்த பூமி நீங்கள் இல்லாமல் நன்றாகவே இல்லை. ராமனும் வனம் சென்றபின், யோக க்ஷேமம் அறிந்து, இந்த பூமியின் தேவைகளை அறிந்து செய்து கொண்டிருந்த நீங்களும் போன பின் இந்த ராஜ்ய லக்ஷ்மி நாதனை இழந்தவள் போல இருக்கிறாள். சந்திரன் இல்லாத இரவு போல எனக்குத் தோன்றுகிறாள். இவ்வாறு அழுது புலம்பும் பரதனை, வசிஷ்டர் அழைத்து, சக்ரவர்த்தியின் இறுதிக் கடன்களை செய்யப் பணித்தார். அவைகளை குறைவில்லாமல் செய் என்று வசிஷ்டர் சொல்லவும், பரதனும் ரித்விக், புரோஹிதர்கள், ஆசார்யர்கள், இவர்களுடன் வேகமாக செயல் பட்டான். நரேந்திரனுடைய அக்ன்யகாரத்திலிருந்து (ஹோமம் செய்ய என்று தனியாக வளர்க்கும் அக்னி வைக்கும் இடம்) அக்னியைக் கொண்டு வந்து, யாகம் செய்பவர்கள், வேதம் அறிந்தவர்களுடன் முறைப்படி க்ருத்யங்களைச் செய்தான். பல்லக்கில் ஏற்றி, தங்கமும், நல்ல ஆடைகளும், பலவிதமான பொரிகளை இறைத்துக் கொண்டு ஜனங்கள் முன் சென்றனர். சந்தனம், அகரு, மெல்லிய பத்மம், தேவதாரு இவற்றைக் கொண்டு சிதையை அமைத்தனர். சிதையின் மத்தியில் வைத்து நெருப்பு மூட்டி, ஜபங்களைச் செய்தனர். ரிக் வேதம் அறிந்தவர்கள் சொல்லி முடித்தவுடன், சாம வேதிகள் சாம வேதத்தைப் பாடினர். பல்லக்குகளிலும், வாகனங்களிலும், தகுதிக்கேற்ப அவரது மனைவிகள் நகரத்தில் இருந்து வந்தனர். அங்கு வயதானவர்கள் சூழ்ந்திருக்க, அக்னி சயனம் என்ற யக்ஞத்தை செய்தனர். கௌசல்யை முதலிய அரசனது மனைவியர், சரயூ நதிக்கு வாகனங்களில் சென்று நதியில் ஸ்னானம் செய்தனர். பரதனுடன், தசரத அரசனின் பத்னிகளும் மந்திரி புரோஹிதர்களும் செய்ய வேண்டிய க்ருத்யங்களை செய்து விட்டு ஊர் திரும்பினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தசரத ஔர்த்3வ தே3ஹிகம் என்ற எழுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 77 (155) பரத சத்ருக்ன விலாப: (பரதனும், சத்ருக்னனும் வருந்துதல்)
பத்து நாட்கள் ஆனதும் சுத்தம் செய்து கொண்டு அரச குமாரன் ச்ரார்த்த கர்மாவைச் செய்தான். பிராம்மணர்களுக்கு ரத்னம் தனம் அன்னம் இவற்றை நிறையக் கொடுத்தான். கம்பளங்கள், வெண்மையாகவும், நூற்றுக்கணக்கான பசுக்களும், தாச, தாசிகளும், வாகனங்கள், வீடுகள், முதலியவற்றையும் பிராம்மணர்களுக்கு தந்தையின் இறுதிக் கால காரியங்களைச் செய்யும் பொழுது தானமாகக் கொடுத்தான். பின் விடியற்காலையில், பதின் மூன்றாவது நாள், பரதன் வருத்தம் தாங்கமாட்டாமல் அழுதான். தொண்டையடைக்க, சிதா மூலத்தில் தந்தையிடம் சொன்னான். சகோதரன் ராமனிடம் எங்களை ஒப்படைத்து விட்டுச் சென்றீர்கள். அந்த ராமனும் காட்டுக்கு போகவும், சூன்யமாக, நான் தனித்து விடப்பட்டேன். நீங்களும் கை விட்டு விட்டீர்கள். புத்திரனையும் வனத்துக்கு அனுப்பி விட்டு தவிக்கிறாளே, அந்த கௌசல்யா, அவளையும் தவிக்கவிட்டு எங்கு சென்றீர்கள் பிரபோ, தந்தையின் நிர்வாண மிச்சத்தை பார்த்து மிகவும் வருந்தி, பூமியில் விழுந்தான். மந்திரி வர்கங்கள் வந்து யாயாதியை ரிஷிகள் சூழ்ந்து கொண்டது போல அவனை சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். சத்ருக்னனும் மறைந்த அரசனது குணங்களைச் சொல்லி புகழ்ந்தான். மந்தரா பிரபாவத்தால், கைகேயி என்ற முதலை கலக்கி, வர தானம் என்ற ரூபத்தில் சோக சாகரம் வந்து சேர்ந்தது. தந்தையே, சுகுமாரனான பாலன், பரதனை விட்டுப் போக எப்படி மனம் வந்தது. சாப்பிடும், குடிக்கும் பொருட்களிலும், வஸ்த்திரங்கள், ஆபரணங்கள், முதலியவை எங்களுக்காக நீங்கள் கவனமாக செய்தது போல வேறு யார் செய்வார்கள்? பூமி பிளக்க வேண்டிய சமயத்தில் பிளப்பதில்லை. தர்மக்ஞனான நீங்கள் போன பொழுது பூமி ஏன் பிளக்கவில்லை. சகோதரனும், தந்தையும் இன்றி இக்ஷ்வாகு குலம் நசித்து விட்டது. அயோத்தியில் நுழையவே மாட்டோம், தபோவனம் செல்வோம் என்ற இருவரையும் பார்த்து வசிஷ்டர் அங்கு வந்தார். (வித்3யாம் சர்வாமபி அஸௌ வேத3 இதி வைத்ய:) வைத்யரான வசிஷ்டர் அருகில் வந்து பரதனை எழுப்பி, உன் தந்தை மறைந்து இன்று பதின்மூன்று நாட்கள் ஆகி விட்டன. அஸ்தி மட்டுமே பாக்கி என்ற நிலையில், நீ ஏன் புலம்பி வருந்துகிறாய். மூன்று இரட்டைகள் (உணவும், நீரும், சோகமும், மோகமும், ஜரா ம்ருத்யு,) இவை ஜீவன்களிடத்தில் மாறுபாடின்றி கலந்தவை. இயற்கை நியதி இது. இதை நாம் தடுக்க முடியாது. இதை நினைத்து நினைத்து நீ வருந்துவது சரியல்ல. சுமந்திரனும் வந்து சத்ருக்னனை எழுப்பி, சமாதானப் படுத்தி, தத்வம் அறிந்தவர் ஆதலால், உலகில் ஜீவன்களின் நிலையாமையையும், பற்றிச் சொன்னார். இருவரும், தனித் தனி இந்திர த்வஜம் மழை நீரில் நனைந்து கிடப்பதைப் போல கிடந்தவர்கள், மந்திரிகள் அவசரப் படுத்தியதன் பேரில், கண்களைத் துடைத்துக் கொண்டு, சிவந்த கண்களுடன் மேற் கொண்டு காரியங்களை கவனிக்க எழுந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், ப4ரத சத்ருக்4ன விலாபோ என்ற, எழுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்).
அத்தியாயம் 78 (155) குப்3ஜா விக்ஷேப: (குப்ஜையை தண்டித்தல்)
லக்ஷ்மணன் சகோதரன் சத்ருக்னன், பரதனை சமாதானப் படுத்தினான். எல்லா ஜீவன்களுக்கும் இதே கதிதான் எனும் பொழுது, தன் தந்தை என்பதால் துக்கம் அதிகமாவது இயற்கையே. ஆயினும் சோகத்தை விடு. சத்வ குணம் நிறைந்த ராமன், பத்னியுடன் வனம் சென்றான். பலவான், வீர்யம் நிறைந்தவன் லக்ஷ்மணன், ஏன் வாளா இருந்தான். தந்தையை அடக்கியாவது ஏன் ராமனை விடுவிக்கவில்லை. வருமுன் காத்தலே அழகு. நியாய அநியாயங்களை உணர்ந்த அரசரே, பெண்ணின் வசமாகி தவறான வழியில் செல்லும் பொழுது, ராஜாவை திருத்த ஏன் முயற்சிக்கவில்லை என்று சத்ருக்னன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, வாசலில் கூனி சர்வாபரண பூஷிதையாகத் தென்பட்டாள். ஒட்டியாணம், வித விதமான மற்ற சுபமான ஆபரணங்கள் அணிந்து, பெண் குரங்கு கயிற்றால் கட்டப் பட்டது போல விளங்கினாள். வாயில் காப்போர், கருணையற்ற அவளைக் கண்டு, பிடித்து வந்து சத்ருக்னனிடம் ஒப்படைத்தனர். எவள் காரணமாக, ராமன் வனம் போகவும், தந்தை இயற்கை எய்தவும் நேர்ந்ததோ, அந்த கொடியவள் இவள் தான், உன் இஷ்டம் போல தண்டனை கொடு என்று சொன்னார்கள். அந்த:புர வேலைக் காரர்களிடம், இவள் செய்த கொடும் காரியத்தின் பலனை அனுபவிக்கட்டும். சகீ ஜனங்களுடன் வந்த அவளை பலமாக பிடிக்கவும், கூட வந்த பெண்கள் ஓடி விட்டனர். கூனியின் ஓலம் அந்த மாளிகையை நிறைத்தது. அவளுடன் வந்த பெண்கள், நாம் அழிந்தோம், இவளுடன் இருந்தால் நமக்கும் அதோ கதி தான், கருணையும், தயையும் உடைய கௌசல்யையை சரண் அடைவோம் என்று அவளிடம் ஓடினர். கோபத்தால் கண் சிவக்க, சத்ருக்களை தபிக்கக் கூடிய சத்ருக்னன் தரையில் விழுந்து அழும் கூனியை இழுத்தான். அப்பொழுது அவளுடைய பலவிதமான நகைகள், பூமியில் இறைந்தன. சரத் கால ஆகாயம் போல அந்த அறை விளங்கியது. இறைந்து கிடந்த ஆபரணங்கள் நக்ஷத்திரங்களாக ஜொலிக்க, ப3லவானான சத்ருக்னன் அவளை இறுக பிடித்தபடி, கைகேயியை குறை சொல்லவும், கைகேயி பயந்து மகனிடம் வந்தாள். அதைக் கண்டு பரதன், விடு, ஸ்த்ரீகளை வதைக்கக் கூடாது. நான் கூட என் தாய் என்று பார்க்காமல் கைகேயியை கொன்று போட்டிருப்பேன். ராமன் மாத்ரு கா4தகன் என்று (தாயை கொன்றவன்) கோபிப்பானே என்பதால் விட்டேன். தார்மிகனான ராமன் இச்செயலை ஏற்க மாட்டான். கூனியை அடித்து என்ன பயன், ராமனுக்கு அதுவும் சம்மதமாக இராது. போகட்டும் என்று கூனியை விட்டார்கள். அவள் கைகேயியை சரணடைந்தாள். கைகேயி அவளை சமாதானப் படுத்தி, அடிபட்டு விழுந்த க்ரௌஞ்ச பக்ஷியை பார்ப்பது போல பார்த்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் குப்3ஜா விக்ஷேபோ என்ற எழுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 79 (156) சசிவ ப்ரார்த்த2னா ப்ரதிஷேத4:
பதினான்காம் நாள் விடிந்ததும், ராஜ்ய அதிகாரிகள் வந்து பரதனை சந்தித்தனர். எங்களுக்கு குருவுக்கு குருவாக இருந்த தசரத ராஜா ஸ்வர்கம் சென்று விட்டான். ராமனை லக்ஷ்மணனுடன் நாடு கடத்தி விட்டார். அதனால் நீ தான் ராஜா. இப்பொழுது எங்களுக்கு அரசனாக ஆவாய். ராஜ குமாரனே, நியாயமாக ராஜ்யத்தை ஆண்டு புகழ் பெறுவாய். அதில் ஒரு தவறும் இல்லை. அபிஷேக ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொண்டு ராகவா, உன் சுற்றாரும், அரசு பணிகளில் வரிசையாக உள்ளவர்களும் காத்திருக்கின்றனர். அழியாத, தந்தை, பாட்டனார் வழி வந்த இந்த ராஜ்யத்தை ஏற்றுக் கொள். உன்னை முடி சூட்டிக் கொண்டு எங்களையும் காப்பாய். அபிஷேகத்திற்காக வைக்கப் பட்டிருந்த பாத்திரங்கள், மற்ற சாமான்கள், எல்லாவற்றையும் ஒரு முறை பிரதக்ஷிணமாக பார்த்து விட்டு, பரதன் அவர்களைப் பார்த்துச் சொன்னான். மூத்தவன் ராஜ்யத்தை ஆளுவது தான் உசிதம். நம் குல வழக்கமும் அதுதான். பெரியவர்கள் நீங்கள் இப்படி என்னிடம் சொல்வது சரியன்று. எங்களுக்கு முன் பிறந்தவனான ராமன் தான் அரசனாவான். நான் வனம் சென்று ஒன்பது, பின் ஐந்து வருஷங்கள் கழிப்பேன். சதுரங்க சேனையோடு படை தயாராகட்டும். வனத்திலிருந்து ராமனை திரும்ப அழைத்து வருவேன். அபிஷேகத்திற்கான இந்த ஏற்பாடுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டே செல்வேன். ராமன் இருக்கும் இடத்தை தேடியறிந்து அங்கேயே முடி சூட்டி அழைத்து வருவோம். அவனை முன்னிருத்தி, யாக சாலையிலிருந்து அக்னியைக் கொண்டு வருவது போல வருவோம். சுயநலம் மிகுந்த என் தாயின் எண்ணம் பூர்த்தியாக விட மாட்டேன். நான் கொடிய வனத்தில் வசிப்பேன். ராமன் ராஜாவாக ஆவான். சில்பிகளைக் கொண்டு பாதைகள் போடப் படட்டும். நேர் வழிகளும், குறுக்கு வழிகளும் போடுங்கள். துர்க (கோட்டை) விஷயம் அறிந்தவர்களும், காவல்காரர்களும் உடன் வரட்டும். இவ்வாறு ராமனைப் பற்றி சொல்லும் ராஜ குமாரனைக் கண்டு ஜனங்கள் எல்லோருமாக மங்களமான வாக்யங்களைச் சொல்லி வாழ்த்தினர். இவ்வாறு பேசும் உன்னிடம் பத்மாவான லக்ஷ்மி தேவி நிலைத்திருக்கட்டும். நீ ஜ்யேஷ்டன் என்று ராமனுக்கு ராஜ்யத்தை தர விரும்புகிறாய். உத்தமமான எண்ணம் இது. இந்த சம்பாஷனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் விட்டனர். மந்திரிகளும், பரிஷத் அங்கத்தினர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். சில்பி வர்கங்களை அழைத்து பாதைகள் போட, ஜனங்களை நியமித்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சசிவ மந்த்ரனா ப்ரதிஷேத4: எழுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 80 (157) மார்க சம்ஸ்கார: (பாதை போடுதல்)
இதன் பின் பூமியின் தன்மையை அறிந்த அறிஞர்களும், தச்சர்களும் தன் வேலைகளில் சூரர்களான தோண்டுபவர்களும், யந்திரங்கள் அமைப்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும், ஸ்தபதிகளும், யந்திர விதிகளையறிந்த புருஷர்களும், மர வேலை செய்பவர்களும், மரத்தைப் பற்றிய விவரம் அறிந்த அறிஞர்களும், கிணறு வெட்டுபவர்களும், மூங்கில் கொண்டு வேலை செய்பவர்களும், நன்றாக பார்க்கக் கூடியவர்கள் முன் செல்ல, பின்னால் சென்றனர். இந்த வேலையின் உத்தேசம் அனைவருக்கும் உத்ஸாகம் அளித்தது. ஏராளமான ஜனங்கள் கூட்டமாகச் சென்றது, பர்வ காலத்தில் சமுத்திரம் ஆரவாரிப்பது போல, ஆரவாரம் மிகுந்திருந்தது. பாதையமைக்கும் துறையில் நிபுணர்கள் பலவிதமான உபகரணங்கள் எடுத்துக் கொண்டு முன்னால் சென்றார்கள். கொடிகள், வல்லி, புதர்கள், கற்கள், இவற்றை அகற்றி பாதையமைக்க வழியில் பல மரங்களை வெட்டினர். மரங்கள் இல்லாத இடங்களில் சிலர் மரங்களை நட்டனர். சிலர் குடாரங்களாலும் (மண் வெட்டி), அறுமுகம் கொண்ட கருவிகளாலும், கூர்மையான ஆயுதங்களால் வெட்டியும், வேலைகளை செய்து கொண்டிருக்க, வேறு சிலர் வாசனை மிகுந்த புற்களைச் சுற்றிய தூண்களை நியமித்தனர். பலமாக வெட்டி அகழிகளை உண்டாக்கினர். சில சமவெளி களை நிறுவினர். ஒரு சிலர், கிணறுகளை மண் அடித்து தூர்த்து விட்டு வேறு இடத்தில் ஆழமாகத் தோண்டினர். வேறு சிலர் பாதைகளை சமமாக்கினர். கட்ட வேண்டியவற்றை கட்டியும், தோண்ட வேண்டியவற்றைத் தோண்டியும், உடைக்க வேண்டியவற்றை உடைத்தும், அந்தந்த தேசத்து மனிதர்களும் உதவி செய்ய, ஏராளமான நீர் பெருகி வழிய, பலவித வடிவங்களில், சாகரமோ எனும் படி பல நீர் நிலைகளை ஜலமில்லாத வறண்ட பிரதேசங்களிலும், தோன்றும் படி உத்தமமான குளங்களை வெட்டினர். அவற்றைச் சுற்றி யாக சாலைகள் அமைத்தனர். செங்கற்கள் பதித்த தளங்களும், பூக்கள் நிறைந்த மரங்களும், மதம் பிடித்தது போல இரைச்சலிடும் பறவைக் கூட்டங்களும், கொடிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்ததுமாக, சந்தனம் கலந்த நீர் தெளிக்கப்பட்டு, பலவிதமான புஷ்பங்களால் அலங்கரித்து தேவர்களின் பாதை போல, சேனை செல்லும் பாதையை அழகாக அமைத்தனர். தேவைக்கு ஏற்ப, வழியில் கட்டளையிட்டு வேலை வாங்கக்கூடியவர்களை நியமித்து, ரமணீயமான தேசங்களிலிருந்து கொண்டு வந்து பயிரிட்டு வளர்த்து, பலவிதமான ருசியுடைய பழங்களையும் உடைய நிவாஸஸ்தலம் மகாத்மாவான பரதனுக்காக ஏற்பாடு செய்யப் பட்டது. அதையும் முஹுர்த்த நேரத்தில் அலங்கரித்து வைத்தனர். பெரும் அகல பாதைகளை நல்ல முறையில் நிர்மாணித்தனர். அவை நிறைய மண் நிறைந்து காணப் பட்டாலும், இருபுறமும் நீர் செல்ல வழியோடு (பரிகா2) அமைந்திருந்தன. முக்கிய வீதிகளில் இந்திர நீல பதுமைகளும், வரிசையாக மாளிகைகளும், வியாபாரம் செய்ய கடைவீதிகளும், கொடிகளை அழகுற கட்டி பறக்க விட்டபடி அமைத்தனர். பால்கனிகளும், ஆகாயத்தை தொடும் விமானங்களும், முகப்புவாயில் தோரணங்களும், இந்திர புரிபோலவே அமைத்தனர். ஜாஹ்னவியை கொண்டு வந்து பலவித மரங்கள் உடைய காட்டையும், நிர்மலமான குளிர்ந்த தண்ணீர் குடிக்கவும், பெரிய மீன்களையுடையதும், சந்திரனும் தாரா கணங்களும் நிறைந்து ஆகாயம் போல இரவில் அழகாக தெரிவது போல நரேந்திரனுடைய மார்கம், க்ரமமாக சில்பிகளால் நிர்மாணிக்கப் பட்டு அதே போல அழகாகத் தெரிந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் மார்க சம்ஸ்காரோ என்ற எண்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)