பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் அயோத்யா காண்டம் 81 – 100

பிப்ரவரி 25, 2014

அத்தியாயம் 81 (158) சபா4ஸ்தாபனம் (சபையை கூட்டுதல்)

 

பரம்பரை பெருமையைச் சொல்லிப் பாடுபவர்களும், கவிஞர்களும் பரதனைப் போற்றி, சிறப்பாக அமைக்கப் பெற்ற கவிதைகளால், மங்களகரமான  துதிகளைப் பாடினர். சங்குகளை ஊதியும், உச்ச ஸ்வரத்தில் வாத்யங்களை இசைத்தும், யாமங்களில் வாசிக்கப் படும் துந்துபி எனும் வாத்தியத்தையும், முழங்கினர். அந்த சத்தம் ஆகாயத்தை நிரப்பியது. இது ஏற்கனவே நைந்து போய் இருந்த பரதனின் மனதை மேலும் வாட்டியது.  அந்த கோஷத்தை கேட்டு கண் விழித்து எழுந்தவன், நான் அரசன் இல்லை என்று கத்தினான். சத்ருக்னனைப் பார்த்து, பார், சத்ருக்னா, கைகேயியின் வேலையை. இதையெல்லாம் என் மேல் சுமத்தி விட்டு, தசரத ராஜா ஸ்வர்கம் சென்று விட்டார். தர்ம ராஜனான அவரது தர்மத்தை ஆதாரமாக கொண்ட ராஜ்ய லக்ஷ்மி, மிகக் குறைவான ஜலத்தில் ஆடும் படகு போல இருக்கிறாள். நமது சிறந்த தலைவனும் வனம் சென்று விட்டான். இந்த என் தாயார், தர்மத்தை விட்டு விலகி, தானாக ராகவனை அனுப்பி வைத்தாள். இவ்வாறு பரதன் புலம்ப, தொடர்ந்து ஸ்த்ரீ ஜனங்களும், மற்றவர்களும் கண்ணீர் விட, அந்த சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைக்கும் விதமாக வசிஷ்டர் வந்து சேர்ந்தார். இக்ஷ்வாகு நாதனுடைய சபையில் அவர் பிரவேசித்தார். தங்கமயமான அழகிய மணி, ரத்னங்கள் நிறைந்ததுமான சபையில், சுத4ர்மாவைப் போன்ற தர்மாத்மா, தன் கூட்டத்துடன் வந்து சேர்ந்தார். தன் ஆசனத்தில் அமர்ந்து தூதர்களுக்கு கட்டளையிட்டார். பிராம்மணர்களையும், க்ஷத்திரியர்களையும், வைஸ்யர்களையும், மந்திரி வர்கங்களையும், சிறு கூட்டங்களுக்கு அதிபர்களையும், எல்லோரையும் அழைத்து வாருங்கள். நமது தினசரி வேலையை செய்ய வேண்டும். சத்ருக்னன், பரதன் இரு ராஜ குமாரர்களையும்,  யுதாஜித், சுமந்திரன், மற்றும் அங்கு நலம் விரும்பும் யார் இருந்தாலும் அழைத்து வாருங்கள். அப்பொழுது ஒரே கல கலப்பாக, ரதத்திலும், குதிரை மேல் ஏறியும், யானையில் வருபவர்களுமாக ஜனங்களின் வருகையால், பெரும் கோஷம் எழுந்தது. பரதன் வருவதைப் பார்த்து சதக்ரது என்று புகழப் படும் இந்திரனோ, தசரத ராஜாவே தானோ, என ஜனங்கள் ஐயமுற்றனர். ஆரவாரத்துடன் பரதனை வரவேற்றனர். மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறினர். தசரதனின் மகன் கலந்து கொண்ட அந்த சபை, தசரத ராஜா உயிருடன் இருந்த பொழுது முன்பு எப்படி இருந்ததோ, அதே போல விளங்கியது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சபா4ஸ்தாபனம் என்ற எண்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 82(159) சேனா ப்ரஸ்தாபனம் (சேனையைக் கிளப்புதல்)

 

மகானான வசிஷ்டர் தலைமையில் கூடியிருந்த அந்த சபையில் புத்தி சம்பன்னனான பரதன் சுற்றிலும் பார்த்தான். தகுதிக்கேற்ப அவரவர்கள் ஆசனங்க ளி ல் அமரவும், வந்திருந்தவர்களில் விலையுயர்ந்த வஸ்திரங்கள், அங்க ராகம் முதலியவற்றால் அந்த சபை அழகுற அமைந்திருந்தது.  வித்வான்கள் நிறைந்த அழகான அந்த சபை, பனிக்காலம் முடியும் நேரம், மேகம் இல்லாத இரவில், பூர்ண சந்திரன் பிரகாசிப்பது போல இருந்தது.  பிரஜைகள் அனைவரையும் எதிரில் கண்டு, தர்மம் அறிந்த புரோஹிதரான வசிஷ்டர், பரதனைப் பார்த்து மெதுவாகச் சொன்னார். குழந்தாய், தசரத ராஜா ஸ்வர்கம் சென்று விட்டார். த4ன, தா4ன்யம் நிறைந்த இந்த விசாலமான ப்ருதுவியை (பூமியை) உனக்கு கொடுத்து விட்டு, தன் கடமையை செய்து விட்டுச் சென்றார்.  ராமனும் அதே தர்ம வழியில் வந்தவன், தந்தை சொல்லை மீறாமல், சசி, ஜ்யோத்ஸ்னாவை (சந்திரன், ஒளி யை) பின் பற்றுவது போல வனம் சென்றான். தந்தையாலும், சகோதரனாலும் உனக்குத் தரப் பட்ட இந்த ராஜ்யம், இடையூறு இன்றி முழுவதுமாக சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு அனுபவிப்பாய்.  மந்திரிகள் அனைவரும் மகிழ சீக்கிரமே முடி சூட்டிக் கொள். கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், எல்லையைக் கடந்து சமுத்திர பிரதேசங்களிலிருந்தும் ரத்னங்களை உனக்கு கொண்டு வரட்டும்.  இதைக் கேட்டு பரதன் மனதுள் ராமனை தியானித்தபடி தன் எண்ணத்தை சொல்லலானான். சபா மத்தியில் தொண்டையடைக்க, கண்களில் நீர் பெருக, புரோஹிதரைப் பார்த்து  ப்ரும்மசர்ய விரதத்தை பூண்டு ஒழுங்காக இருப்பவனும், வித்யாவை முழுவதுமாக கற்றவனும், தர்மத்தில் ஈ.டுபாடும் உடையவன் ராஜ்யத்தை அபகரிக்க நான் யார்? தசரத அரசனுக்கு மகனாக பிறந்தவன். ராஜ்யத்துக்கு ஆசைப் பட்டு அபகரித்தாவது ஆள வேண்டும் என்று நினைப்பானா? ராஜ்யமும் நானும், ராமனுக்கு அதீ4னமானவர்கள். வசிஷ்டரே, இங்கு தர்மத்தைச் சொல்லுங்கள். தி3லீபன், நகுஷனுக்கு சமமானவன், மூத்தவன், ஸ்ரேஷ்டன், தர்மாத்மா, காகுத்ஸன், அவன் தான் ராஜ்யத்தை ஆளத் தகுதியுடையவன். தசரதன் தன் தந்தையிடமிருந்து பெற்றது போல.  இந்த பெருந்தன்மையில்லாத செயலை செய்வேனேயானால், பரலோகத்திலும் பெருமை சேர்க்காத, ஸ்வர்கம் செல்லும் தகுதியைத் தராத பாபத்தை செய்வேனேயானால், இக்ஷ்வாகு வம்சத்தில் நான் குலத்தைக் கெடுக்கும் கோடாலியாவேன். என் தாய் விரும்பினாள். எனக்கு அது கூட சம்மதமில்லை. இங்கு இருந்து கொண்டு எங்கோ எட்டாத தூரத்தில் வனத்தில் திரியும் ராமனை கை கூப்பி  வணங்குகிறேன். ராமனையே நான் பின் தொடர்ந்து செல்வேன். அவன் தேவலோகத்துக்கு கூட அரசனாக இருக்கக் கூடிய தகுதி பெற்றவன். மூவுலகையும் ஆளும் பேறு பெற்றவன்.  இந்த வார்த்தைகளைக் கேட்டு, சபையினர், நியாயமானதே என்று எண்ணி, ஆனந்த கண்ணீர் விட்டனர். ராமனையும் நினைத்து பார்த்தனர். பரதன் தொடர்ந்தான். ஒருக்கால் ராமனை திரும்பி வரச் சொல்லி என் முயற்சியில் நான் வெற்றி பெறா விட்டால், நான் வனத்திலேயே வசிப்பேன். ஆர்ய தமையனாரும், லக்ஷ்மணனும் எப்படி வசிக்கிறார்களோ, அதே போல.  எல்லா விதமான உபாயங்களையும் கையாண்டு பார்ப்பேன். அவரைத் திரும்ப அழைத்து வரும் முயற்சியை தொடர்ந்து செய்வேன். பெரியவர்களே, சாதுக்களே, குணவான்களே, உங்கள் முன் என்னுடைய எண்ணத்தைச் சொல்லி விட்டேன். வேலைக்காரர்கள், மார்கத்தை திருத்தியமைக்கும் வல்லமை வாய்ந்த அனைவரையும் நான் முன் கூட்டியே அனுப்பி விட்டேன். அவர்களுடன் யாத்திரை போவோம் என்று என் விருப்பம். அருகிலிருந்த சுமந்திரனைப் பார்த்து திட்டமிடுவதில் வல்லவரான அவரிடம் என் கட்டளைப் படி, சுமந்திரரே, சீக்கிரம் உடனே கிளம்பி யாத்திரைக்கு ஏற்பாடுகள் செய்யுங்கள்.  சீக்கிரம். படை பலமும் அழைத்து வாருங்கள்.  இவ்வாறு பரதன் சொன்னதும், சுமந்திரரும் மகிழ்ச்சியுடன் அந்த கட்டளையை  நிறைவேற்ற புறப்பட்டார். பிரஜைகளும் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். படைத் தலைவர்கள், படையைச் சேர்ந்தவர்களும், இதைக் கேட்டு, ராமனை திரும்பி அழைத்துவர சேனையைக் கொண்டு வரத்  தயாரானார்கள். படை வீரர்களின் பத்னிகள், தங்கள் தங்கள் கணவன்மாரை யாத்திரையில் கலந்து கொள்ளச் சொல்லி அவசரப் படுத்தினார்கள். அவர்கள் குதிரைகள், ரதங்கள் என்று வேகமாகச் செல்லக் கூடிய எந்த வாகனமானாலும், சரி என்று படை வீரர்களை படைத் தலைவர்கள் கிளப்பினார்கள். படை தயாரானதையறிந்து பரதன், குரு சந்நிதியில் என் ரதத்தையும் ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்ல, அவ்வாறே சுமந்திரர், உயர்ந்த ரக குதிரைகள் பூட்டி, நல்ல ரதத்தைக் கொண்டு வந்தார். தன் எண்ணத்தில் உறுதியாக இருந்த அந்த ராகவன், சத்யத்தில் நாட்டம் கொண்டவனாக, மகாரண்யம் சென்ற தமையனை எண்ணி, சுமந்திரரிடம் சொன்னான். சுமந்திரரே, சிக்கிரம் ஆகட்டும். உலகின் நன்மைக்காக, ராமனை வேண்டப் போகிறேன். படையையும், படைத் தலைவர்களையும் கூட்டிக் கொண்டு வனம் சென்று,  ராமனை திரும்ப அழைத்து வரப் போகிறேன் எனவும், சுமந்திரர், பிரஜைகளையும், பிரமுகர்களையும், படைத்தலைவர்களையும், நண்பர்களையும் கூட்டி, கிளம்பத் தயார் செய்தார். ஒவ்வொரு குலத்திலிருந்தும், பிராம்மணர்களும், அரசனைச் சார்ந்தவர்களும், கிடைத்த ஒட்டகம், குதிரை, கோவேறு கழுதை, யானை, குதிரைகளில் என்று  ஏறிக் கிளம்பினர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சேனா ப்ரஸ்தாபனம் என்ற எண்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 83 (160) ப4ரத வன ப்ரஸ்தா2னம் (பரதன் வனம் புறப்படுதல்)

 

விடியற்காலையில் எழுந்து பரதன் உத்தமமான ரதத்தில் ஏறி புறப்பட்டான். ராமனை காணும் ஆவலுடன் மந்திரிகளும், புரோஹிதர்களும் முன் சென்றனர். அவர்களும் சிறந்த குதிரைகள் பூட்டிய, சூரியனுடைய ரதத்துக்கு ஒப்பான வாகனங்களில் ஏறி புறப்பட்டனர். இக்ஷ்வாகு குல நந்தனான பரதனைப் பின் தொடர்ந்து, இளம் யானைகள் ஆயிரக் கணக்கில் சென்றன. அதுவும் ஒரு வழக்கம். பலவித ஆயுதங்களை ஏந்திய வில்லாளிகள், அறுபதாயிரம் ரதங்களில் உடன் சென்றனர். அந்த புகழ் வாய்ந்த ராஜகுமாரனை நூறாயிரம் குதிரைகளில் ஏறித் தொடர்ந்தனர். சத்ய சந்தனும் ஜிதேந்திரியனுமான பரதனை பின் பற்றிச் சென்றனர்.  கௌசல்யா, சுமித்ரா, கைகேயி மூவருமே, ராமனைத் திரும்பி அழைத்து வருவதில் மகிழ்ச்சியடைந்து, உத்தமமான வாகனங்களில் ஏறிச் சென்றனர். ராமனை, லக்ஷ்மணனோடு காணப் போகிறோம் என்று மகிழ்ச்சியோடு தங்களுக்குள் கதை பேசிக் கொண்டு சென்றனர். உலகில் துக்கமே இல்லாதபடி நாசம் செய்து விடுபவன், மேக வண்ண ஸ்யாமளன், மகா பாஹு, ஸ்திரமான புத்தியுள்ளவன், த்ருடமான விரதம் உடையவன் என்று ராமனை புகழ்ந்து பேசி, அவனை எப்பொழுது காண்போம் என்றும், நம்மைக் கண்டதும் ராமன் என்ன செய்வான்? நம் துக்கம் அகலும்.  சூரியன் உதித்த உடனேயே உலகை வியாபித்து இருந்த இருட்டு மறைவது போல நமது துன்பங்கள் மறைந்து விடும் என்று ஊர் ஜனங்கள் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர். ஒருவரையொருவர் குசலம் விசாரித்து, ஆலிங்கணம் செய்து கொண்டும், உடன் சென்றனர். இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவித்த பலரும், நிகமங்களையறிந்த அறிஞர்களும், ராமனைக் காணச் சென்றனர். நகைகள் செய்பவர், தந்தங்களில் வேலை செய்பவர், செங்கல் வைத்து பூசி தளம் போடுபவர், வாசனை திரவியங்கள் தயாரிப்பவர், தங்க நகை செய்யும் ஆசாரிகள்,

கம்பளி  நெய்பவர், ஸ்னானம் செய்விப்பவர், எண்ணெய் தேய்த்து விடுபவர், வைத்யர்கள், தூபங்களை போடுபவர், மது பானம் விற்பவர், துணி துவைக்கும் வண்ணான், நெசவாளிகள், பறையடிப்பவர்கள், கூத்து நடத்தும் கலைஞர்கள், பெண்களுடன் சென்ற கைவர்த்தகர்கள், வேதம் அறிந்த பிராம்மணர்கள், மாட்டு

வண்டிகளில் பரதனைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கில் சென்றனர். நல்ல ஆடை, அணிகளுடன் வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு பரதனைத் தொடர்ந்தனர். போர் வீரர்களுடன்  கூடிய படை, சகோதர பாசம் மிகுந்த கைகேயி மகனை, அவன் தன் சகோதரனை திரும்ப அழைத்து வரச் செல்லும்பொழுது உடன் வருவதில் மகிழ்ச்சியுடன் தொடர்ந்தனர்.  அவர்கள் அத்வானமான இடங்களைக் கடந்து பல தூரம் சென்று, ரதங்கள், குதிரை, யானைகள் இவற்றில் ஏறி சிருங்கிபேர புரம் நோக்கிச் செல்லும் வழியில் கங்கைக் கரையை அடைந்தனர்.   குகன், ராமனின் நண்பன், அங்கு தன் சுற்றத்தோடு, வசிக்கிறான். நல்ல வீரன். சற்றும் குறைவின்றி தன் பிரஜைகளை கவனமாக பாலித்து வருபவன். சக்ரவாக பக்ஷிகள் அலங்கரிக்கும் கங்கைக் கரையை அடைந்து, பரதனோடு சேனையும் கூடாரமிட்டுத் தங்கியது. தன் சேனை வீரர்களைப் பார்த்து சுத்தமான கங்கை நதியையும் கண்டு, பரதன் மந்திரிகளைப் பார்த்து உத்தரவிட்டான். இஷ்டப் படி சேனை வீரர்களை இங்கு தங்க விடுங்கள். ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை இந்த நதியைக் கடந்து செல்வோம்.  ஸ்வர்கம் சென்ற தந்தைக்கு இந்த நதி ஜலத்தில் தர்ப்பணம் செய்ய நினைக்கிறேன். எனவும், அப்படியே ஆகட்டும் என்று சொல்லி மந்திரிகளும் சேர்ந்து தனித் தனியாக தங்கும் ஏற்பாடுகளை கவனிக்கலாயினர்.  கங்கையில் இறங்கி அந்த மகா நதிக் கரையில் அணி வகுத்து நின்ற சேனையை கண் பார்த்தாலும், பரதனின் மனம் ராமனை திரும்ப அழைத்து வரும் எண்ணத்திலேயே சுழன்றது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ப4ரத வன ப்ரஸ்தானம் என்ற எண்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 84 (161) குகாக3மனம் (குகன் வருதல்)

 

கங்கை நதிக் கரையில், கொடிகளை பறக்க விட்டுக் கொண்டு அணி வகுத்து நின்ற சேனையைக் கண்டதும், குகன், தன் சுற்றத்தாரை அவசரமாக அழைத்து தன் கவலையை விவரித்தான். மிகப் பெரிய சேனை, சமுத்திரம் போல விரிந்து கிடக்கிறது. மனதால் கூட யோசித்து இதன் அளவை மதிப்பிட முடியவில்லை. இந்த து3ர்பு3த்3தி44ரதன், தானே வந்து விட்டானா? கோவிதா3ர த்வஜம் ரதத்தில் தெரிகிறது. பெரிய கொடி. நம்மை கட்டிப் போடுவானா, வதைப்பானா, தெரியவில்லை. தசரத ராமன், அப்பா காட்டிற்கு விரட்டினார் என்று, லக்ஷ்மி சம்பன்னனாக வந்தான். அந்த அரசனுக்கு கிடைக்காத நல்ல நிலைமையில் இருப்பதையறிந்து, கைகேயி புத்திரனான பரதன் கொல்ல வந்து விட்டான் போலும்.  ராமன் எனக்கு இப்பொழுது யஜமானர். நண்பனும் கூட. அவனுடைய சுக துக்கம் என்னுடையது.  நீங்கள் எல்லோரும் கங்கைக் கரையில் தயாராக நில்லுங்கள். கங்கையில் கலக்கும் நதிக்கருகில் செம்படவர்கள் எல்லோரும் சேர்ந்து நில்லுங்கள்.  நதியை பாதுகாக்க வேண்டும். மாமிசம், பழ, மூலங்கள் தயாராக வைத்துக் கொண்டு காவல் இருங்கள்.  ஜாலங்களை வைத்துக் கொள்ளுங்கள். நூற்றுக் கணக்கான படகுகளும், ஐந்நூறு கூட இருக்கட்டும், நூறு நூறு மரக்கலங்கள், இவற்றுடன் தயாராக நில்லுங்கள். பரதன் ராமனிடத்தில் நல்லெண்ணத்துடன் வந்திருந்தால், சேனை பத்திரமாக இந்த நதியைக் கடக்கும். என்று சொல்லி,  மீன்களும், மாமிசமும், மது வகைகளும்,  பரிசுப் பொருட்களாக எடுத்துக் கொண்டு பரதனை நோக்கி குகன் சென்றான். அவன் வருவதைப் பார்த்து சுமந்திரன், வினயமாக பரதனிடம் சொன்னான். இதோ, தாயாதிகள் ஆயிரம் பேருடன், ஸ்தபதி பரிவாரங்களுடன் வருகிறானே, தண்டகாரண்யத்தில் வயதான, ஆனால் ஆரோக்யமானவன். உன் சகோதரனுக்கு நண்பன். அதனால் பரதன் வேடர் தலைவன் குகனை சந்திக்கத் தயாராக இருக்கட்டும். இவனுக்குத் தான் இப்பொழுது ராம, லக்ஷ்மணாதிகள் எங்கிருக்கிறார்கள் என்று தெரிந்திருக்கும். இதைக் கேட்ட பரதன், சுமந்திரனைப் பார்த்து சீக்கிரம் குகன் என்னைக் காண வரட்டும் என்றான். அனுமதி கிடைத்தவுடன், தன் பரிவாரம் சூழ வந்திருந்த குகன் மகிழ்ச்சியுடன் பரதனை வந்து கண்டான்.  இந்த தேசம் மரங்கள் அடர்ந்தது. இந்த தாசர்கள் இருப்பிடத்தில் வசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். வேடர்கள்  சம்பாதித்து வரும் பழ வகைகள், கிழங்குகள், ஈரமான, உலர்ந்த  மாமிசம் மற்றும் காட்டு சாமான்கள், எல்லாமே இருக்கின்றன. சேனை வீரர்கள் உணவு கொண்டபின், இன்று இரவு இங்கு தங்குவீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்குத் தேவையான பொருட்களை எங்களிடம் பெற்றுக் கொண்டு நாளை  சைன்யத்தோடு செல்வீர்கள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் குகாகமனம் என்ற எண்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 85 (161) குஹ சமாகம: (குஹன் வந்து சந்தித்தல்)

 

குகன் சொன்னதைக் கேட்ட பரதன் பொருள் பொதிந்த, காரண கார்யங்களை விளக்குவதாக பதில் சொன்னான். என் குருவான ராமனின் சகா என்பது உறுதியாகி விட்டது.  எப்படியெனின், இவ்வளவு பெரிய சேனையை நீ ஒருவனாகவே ஆதித்யம், விருந்தோம்பல், செய்வதாக ஏற்றுக் கொள்கிறாய். இதன் பின் பரதன் பரத்வாஜாஸ்ரமம் போகும் வழியை வினவினான். குகனே, எந்த வழியில் நாங்கள் பரத்வாஜாஸ்ரமம் செல்வோம்? கங்கை இந்த இடத்தில் ஆழமாக கடப்பதற்கு அரியதாகத் தெரிகிறது. ராஜ குமாரன் இவ்வாறு சொல்லவும் அவன் புத்தியை வியந்தவாறு காட்டில் திரியும் குகன், (அல்லது அந்த இடத்தின் தன்மையை அறிந்த குகன்) பதில் சொன்னான். செம்படவர்கள் அவர்களுடன் செல்வார்கள். கையில் வில்லேந்தி பொறுப்புடன் நடத்தி செல்வர். நான் உன்னுடன் வருகிறேன். இந்த பெரிய சேனையைக் கண்டு எனக்கு சந்தேகம் வருகிறது. நீ ராமனைக் காண விரும்பும் உத்தேசம் என்ன? அவனுக்கு கெடுதலாக இல்லையே? ஆகாயத்தைப் போல நிர்மலமான பரதன் இதைக் கேட்டு மிருதுவான வார்த்தைகளால் பதில் சொன்னான். அது போல ஒரு காலம் வரவே வேண்டாம். நீ என்னை சந்தேகிக்கலாகாது. ராகவன், என் மூத்த சகோதரன். தந்தைக்கு சமமானவன்.  வன வாசம் என்று வந்து விட்டவனை திருப்பி அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். சத்யமாக சொல்கிறேன் குகா, வேறு விதமாக எண்ணாதே.  பரதன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சி நிறைந்தவனாக, முகம் மலர்ந்து, த4ன்யன் நீ. நீ பாக்யசாலி. உலகில் உனக்கு சமமாக மற்றொருவரைக் காண்பது அரிது. யத்னமில்லாமல் தானாக வந்த ராஜ்யத்தை நீ ஏற்க மறுக்கிறாய். உன் புகழ் சாஸ்வதமாக உலகமெங்கும் பரவி விளங்கட்டும். நீ கஷ்டப் பட்டு ராமனை திருப்பி அழைத்துச் செல்ல நினைக்கிறாய்.  இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சூரியனின்  ஒளி  மறைந்து இருள் சூழ ஆரம்பித்தது, குகனுடன் தானும் சென்று சேனையை நல்ல படியாக தங்க ஏற்பாடுகள் செய்த பின், சத்ருக்னன் படுக்கச் சென்றான். பரதன் மனதில் வேதனை நிரம்பியிருந்தது.  நியாயமாக நடந்து கொண்டு, குறை சொல்ல முடியாதபடி கவனமாக இருந்தும் இப்படி  ஒரு பழிச் சொல் வந்து சேர்ந்ததே என்று வருந்தினான். உள்ளூர நெருப்பாக சுட்டது. காட்டுத் தீயில் தகிக்கப் பட்ட  மரத்தின், மறைந்திருக்கும் அக்னி போல, அவனை வாட்டி எடுத்தது, உடல் வியர்த்து வடிந்தது. சூரியனின் கிரணங்கள் பட்டு இமவான், சிறு பனித்துளிகளை வெளியிடுவது போல இருந்தது. கைகேயி மகனை துக்கமே மலையாக நால்புறமும் சூழ்ந்ததோ எனும்படி, இந்த மலைக்கு த்யானமே கற்கள், அதில் அவன் மூச்சுக் காற்றே  தாதுக்கள், தைன்யம்- தீன பாவமே மரங்கள், சோக ஆயாசம்  சிகரங்கள். மோகம் அனந்த சத்வங்கள். சந்தாபமே மருந்து, மூங்கில்கள், வெளிக் காட்டிக்கொள்ள முடியாதபடி ஹ்ருதயத்திலேயே ஜ்வரமாக தங்கி விட்ட மனக் கலக்கம்,பெருமூச்சுகளில் வெளிப்படுவதைத் தவிர நினைவு இழக்கச் செய்தது. ரிஷபம் தன் கூட்டத்திலேயே அடிபட்டது போல நர ரிஷபமான அவனும் மன அமைதியை அடையவில்லை. இதை உணர்ந்த குகன், தானே தமையனைப் பற்றிச் சொல்லி சமாதானப் படுத்தினான்  

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் குஹ சமாகமோ என்ற எண்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 86 (162) குக வாக்யம் (குகனின் மறுமொழி)

 

காடுகளில் வசிக்கும் குகன், பரதனிடம் தான் கண்ட லக்ஷ்மணனின் நல்ல குணத்தை வியந்து பாராட்டினான். சிறந்த வில், அம்பு இவைகளை ஏந்தி சகோதரனை பாதுகாக்க தூங்காமல் விழித்திருந்து, கவனமாக இருந்த லக்ஷ்மணனிடம் நான் சொன்னேன். குழந்தாய், இதோ படுக்கை தயாராக இருக்கிறது. சுகமாக இதில் படுத்து தூங்குவாய். ராகவ நந்தனா, இங்குள்ள ஜனங்கள் இது போன்ற கரடு முரடான வாழ்க்கை முறைக்கு பழக்கப் பட்டவர்கள். நீங்கள் சுகமாக வாழ்ந்தவர்கள். தர்மாத்மாவே, உன் தமையனை காவல் காக்க நாங்கள் விழித்திருப்போம். எனக்கும் உலகில் ராமனை விட பிரியமாக எதுவும் இல்லை. இதில் நீ கவலைப் படாதே.  சத்யமாக சொல்கிறேன். இந்த ராமனுடைய கருணையால் உலகம் பெரும் புகழையும், தர்மத்தையும், அர்த்தத்தை (பொருளையும்) அடையும் என்று நான் நம்புகிறேன். எதிர்பார்க்கிறேன்.  அந்த நான், பிரிய சகாவான ராமனை தூங்கும் பொழுது சீதையுடன் கூட ரக்ஷிக்கிறேன்.  நான் கையில் வில்லேந்தி, என் சுற்றத்தாரும் உடன் இருக்க எல்லோருமாக காவல் இருக்கிறோம். இந்த காட்டில் நான் அறியாத நடமாடும் ஜீவன் எதுவும் இல்லை. என்னிடம் யுத்தம் என்று வந்தால், நால்வகைப் படையும், எதிர்த்து நிற்க பலமும் உண்டு.  இவ்வாறு சொல்லியும் லக்ஷ்மணனை சம்மத்திக்க வைக்க முடியவில்லை. எங்கள் வார்த்தையில் உண்மை இருப்பதை உணர்ந்தான். இருந்தும், சீதையும் உடன் இருக்க தசரத புத்திரன் தரையில் தூங்கும் பொழுது, எனக்கு தூக்கம் எப்படி வரும்? உயிர் வாழ்வதோ, சுகங்களோ எனக்கு பெரியதாகத் தெரியவில்லை. குகனே, எவன் யுத்தத்தில் தேவாசுரர்களை எதிர்த்து நின்று ஜயிக்க சக்தி உடையவனோ, அவனை,  மனைவியுடன் புல் தரையில் படுத்துறங்குவதைப் பார்.  மிகப் பெரிய யாகங்கள் செய்து, தவம் செய்து பெற்ற பிள்ளை, முக்கியமான மகன் (முக்கியமானவன் என்பது ராஜ்யத்தின் வாரிசு என்ற பொருளில்) ராஜ லக்ஷணங்கள் பொருந்தியவன், இவனை நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, தசரத ராஜா அதிக நாள் இருக்க மாட்டார். அவரது இறுதிக் கடன்களை செய்ய வேண்டி வரும். ரம்யமானதும், நான்கு முகம் கொண்ட வீடுகளும், விசேஷமாகப் பிரிக்கப் பட்ட பெரும் வீதிகளும், மாளிகைகளும் வீடுகளும் நிரம்பியதுமான, புஷ்டியாக ஜனங்கள் வளைய வருவதும், ஓய்வு எடுக்க என்று உத்யான வனங்கள் நிறைந்ததுமான அயோத்தி நகரத்தில், சமாஜ உத்ஸவங்கள் நடக்கும் பொழுது, மிகவும் உத்ஸாகமாக ராஜ தானியில் என் தந்தை கலந்து கொள்வார். பிரதிக்ஞையை சத்யமாக்கி, நாங்கள் சௌக்யமாக திரும்பி வந்து, அவருடன் சுகமாக நகருக்குள் நுழைவோமா என்று இருக்கிறது. இப்படி வருந்தி பேசிக் கொண்டே நின்று கொண்டே ராஜ குமாரன், இரவு பூரா கழித்தான். விடிந்ததும் இருவருமாக ஜடையை தரித்துக் கொண்டு இந்த கங்கைக் கரையை சுகமாகத் தாண்டிச் செல்ல நான் உதவி செய்தேன். மரவுரியை ஆடையாக உடுத்திக் கொண்டு ஜடா முடியுடன் யானைக் கூட்டம் போல பலமும் பராக்ரமமும் உடைய இருவரும்,  சீதையை உடன் அழைத்துக் கொண்டு,  சிறந்த வில் அம்பு கத்தி இவைகளுடன், அவளை பாதுகாப்பதிலேயே கவனமாக இருவரும் சென்றனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான மத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் குக வாக்யம் என்ற எண்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 87 (164) ராம சயனாதி ப்ரச்ன: (ராமன் படுத்துறங்கிய இடம் முதலியவற்றை பரதன் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல்)

 

குகனுடைய வர்ணனையைக் கேட்டு பரதன் அந்த காட்சியை மனதில் நினைத்துப் பார்த்து வருந்தினான். பரதனும், சுகுமாரன் நெடிய உருவம் உடையவன், சிங்கம் போன்ற தோள்களும், நீண்ட கைகளும். புண்டரீகம் (தாமரை போன்ற) விசாலமான கண்களும் உடைய இளஞன். ஒரு முஹுர்த்த காலம் தன்னை ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு, மனம் வாட, ஹ்ருதயத்தில் அடிபட்ட பறவை கீழே விழுவது போல விழுந்தான். அருகிலிருந்த சத்ருக்னன், அவனைத் தாங்கி அணைத்துக் கொண்டு வாய் விட்டு அழுதான்.  உபவாசத்தினால் இளைத்து இருந்த தாய்மார்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் இருவரும் கதறியழுவதைப் பார்த்து மனம் வருந்தினர். கௌசல்யை வந்து பரதனை அணைத்து சமாதானம் செய்தாள். தபஸ்வினி, தாய்ப் பசு கன்றை முகத்தால் வருடிக் கொடுப்பது போல அன்புடன் வினவினாள். மகனே, உன் உடல் இப்படி சுடுகிறதே, வியாதி ஒன்றும் இல்லையே. இன்று ராஜ குலம் உன்னை சார்ந்து இருக்கிறது. புத்திரனே, உன்னைப்  பார்த்து நான் உயிர் வாழ்கிறேன். ராமன், சகோதரனுடன் சென்ற பின், எனக்கு புகலிடம் நீயே.  தசரத ராஜாவும் மறைந்த பின், நீ ஒருவன் தான் எங்களுக்கு நாதன், காப்பாற்றக் கூடியவன். லக்ஷ்மணன் ஏதாவது அப்ரியமாக சொல்லி கேள்விப் பட்டாயா? அல்லது என் மகன் ஏதாவது சொன்னானா? தன் ஒரே மகனை வனத்துக்கு அனுப்பிவிட்டு தவிக்கும் கௌசல்யையைப் பார்த்து சமாதானப் படுத்தி பரதன் தன்னை சமாளித்துக் கொண்டு குகனிடம் சொன்னான். குகனே, என் தமையன் எங்கு வசித்தான்? இரவு எங்கு இருந்தான்? சீதை எங்கே, லக்ஷ்மணன் எங்கே படுத்தனர். என்ன சாப்பிட்டு எங்கு தூங்கினர். குகனே எனக்கு அந்த இடத்தைக் காட்டு எனவும், வேடர் தலைவனான குகன் சந்தோஷமாக விவரித்தான். அதிதியாக வந்தவன் என் மனதுக்குகந்தவன் என்று நான் அவனுக்கு ஹிதமான அன்னம், பதார்த்தங்கள், பலவகைப் பழங்கள், ராமனுக்கு சாப்பிட என்று கொண்டு வந்தேன். அவை அனைத்தையும் திருப்பி அனுப்பி விட்டான். ஏற்றுக் கொள்ளவில்லை. க்ஷத்திரிய தர்மம் என்று சொன்னான். நாங்கள் கொடுக்கத்தான் வேண்டும், யாரிடமும் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது, சினேகிதனே என்று சொல்லி எங்கள் ஆதித்யத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  லக்ஷ்மணன் கொண்டு வந்த தண்ணீரைக் குடித்து விட்டு சீதையுடன் உபவாசம் இருந்தான். மீதி ஜலத்தைக் குடித்து விட்டு லக்ஷ்மணனும் எதையும் தொடவில்லை. மூவருமாக சேர்ந்து வாய் வார்த்தையாக சந்த்யா வந்தனம் செய்தனர்.  சௌமித்ரி தானே புல் முதலியவற்றைக் கொண்டு வந்து படுக்கை தயார்  செய்தான். தாங்களே தயாரித்த அந்த விரிப்பில் சீதையுடன் ராமன் அமர்ந்தான். இருவரின் பாதங்களையும் அலம்பி லக்ஷ்மணன் சென்றான். இதோ இங்குதீ மரம். இதோ அந்த புல் படுக்கை. இதன்மேல் தான் இரவு ராமனும், சீதையும் தூங்கினர். அவர்களைச் சுற்றி வந்தபடி, முதுகில் தூணியைக் கட்டிக் கொண்டு அதில் எல்லா அம்புகளையும் வைத்து, தன் வில்லை எடுத்துக் கொண்டு, தயாராக இருந்த நிலையில், லக்ஷ்மணன் இரவு பூரா விழித்திருந்தான். நானும் என்னிடம் உள்ள மிகச் சிறந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு நின்றபடி இருந்தேன். எங்கு லக்ஷ்மணன் இருந்தானோ, அதே இடத்தில் தூங்காமல், என் சுற்றத்தாரும் உடன் இருந்தனர். தயாராக வில், அம்பு, கத்தி சகிதம் இந்திரன் போன்றவனை, காப்பாற்ற காவல் காத்தோம்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராம சயனாதி ப்ரச்னோ என்ற எண்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 88 (165) சய்யானுவீக்ஷணம் (படுக்கையைக் காணுதல்)

 

குகன் விவரித்ததைக் கேட்டு, பரதன் அந்த இங்குதீ மரத்தடிக்குச் சென்று ராமனுடைய படுக்கையாக இருந்த இடத்தைக் கண்டான். தாய்மார்களிடம் அந்த இடத்தைக் காட்டி, இது தான் மகாத்மாவான ராமன் படுத்த படுக்கையறை, இந்த இடத்தில் தான் வசித்தான் என்று காட்டினான். பெரும் பழமை வாய்ந்த குலத்தில் பிறந்து ராகவன் இப்படி கட்டாந்தரையில் தூங்குவது உசிதம் இல்லை. உயர் வகை கம்பளிகள் விரித்த படுக்கையில் படுத்து பழக்கமானவன், எப்படித்தான் இங்கு தூங்கினானோ,

மாளிகையின் மேல் விமானங்கள் கூரைகள், தங்கத்தாலும், வெள்ளி யாலும் இழைத்திருக்க, உயர் ரக விரிப்புகள் விரித்திருக்க, பூக்கள் இரைத்திருக்க, சந்தனம் அகரு போன்ற வாசனைத் திரவியங்கள்  தெளித்து, மேகம் போன்ற வெண்மை பிரகாசிக்க, கிளிகள் கொஞ்ச உயர்ந்த மாளிகைகளில், குளிர்ச்சியும் நறுமணமும் ஓங்கி இருக்க, சுவர்களில் தங்கத் தகடுகள், இழைத்திருக்க, மேரு மலைக்கு சமமான உயர்ந்த  இடங்களில் வசித்து விட்டு, கீதங்களும், வாத்யங்களும் முழங்க, உயர்ந்த ஆபரணங்கள் உரசுவதால் ஏற்படும் இனிமையான ஒலியும் சேர, மிருதங்க வாத்யங்கள் முழங்க, தினமும் எழுப்பப் பட்டவன். பாடுபவர்களும், துதி சொல்பவர்களும் துதி பாடி, கவிதை பாடுபவர்களும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, கீதங்களை தயார் செய்து பாடி, பரந்தபனை (அளவில்லாத பராக்ரமம் உடையவனை) எழுப்புவர். இந்த உலகை நம்பவே கூடாது. எதுவுமே சத்யமாக, சாஸ்வதமாகத் தெரியவில்லை எனக்கு. ஸ்வப்னமோ என்று என் மனம் குழம்புகிறது. தசரத ராஜாவின் மகன், தரையில் உறங்கும் காலம் வருமானால், விதேஹ ராஜாவின் மகள், இனிமையான தோற்றம் உடையவள், பிரியமானவள், தசரதன் மருமகள், அவளும் தரையில் உறங்கினாள் என்றால் எதுதான் சாஸ்வதம். இந்த படுக்கை என் சகோதரனுடையது. தானியங்களை அடித்து எடுத்தபின் மிகுந்த வைக்கல், உடலை உறுத்தும். சீதை ஆபரணங்களை அணிந்தபடியே தூங்கியிருக்கிறாள் என்று நினைக்கிறேன். ஆங்காங்கே தங்கத் துகள்கள் தெரிகின்றன. உத்தரீயத்தை இங்குதான் உலர்த்தியிருக்க வேண்டும். நூலிழைகள் தெரிகின்றன. கணவனுடன் இருந்ததால், சுகமான படுக்கை என்று அவன் ஏற்றுக் கொண்ட பின், தனக்கு சுகமாக இல்லை என்று சொல்லியிருக்க மாட்டாள். உணர்ந்தே இருக்க மாட்டாள்.  ஹா, நான் கொடும் சித்தமுடையவன். என் காரணமாக ராகவன் மனைவியுடன் அனாதை போல உறங்க நேர்ந்தது. சக்ரவர்த்தி குலத்தில் பிறந்தவன், சர்வ லோகத்துக்கும் சுகத்தையளிக்க வல்லவன், எல்லோருக்கும் பிரியமானவன். ராஜ்யத்தை தியாகம் செய்து உத்தமமான சௌக்யமான வாழ்க்கையைத் துறந்து பூமியில் எப்படித் தூங்கினானோ.  இந்தீவர, நிலோத்பல புஷ்பம் போன்றவன். சிவந்த கண்களுடன் பிரியமாக காட்சி தருபவன். சுகத்திற்கு தகுதியுடையவன். கஷ்டப்பட வேண்டிய தேவையே இல்லாது வளர்ந்தவன், பூமியில் படுத்து உறங்குகிறான். லக்ஷ்மணன் பாக்யசாலி. கஷ்டமான காலத்திலும் ராகவனைத் தொடர்ந்து செல்கிறான்.  வைதேஹி பாராட்டப் பட வேண்டியவள். பதியைத் தொடர்ந்து வந்து விட்டாள். நாம் தான், அந்த மகாத்மாவைப் பிரிந்து கண்டனத்துக்கு உள்ளானோம்.  இந்த பூமி சூன்யமாகத் தெரிகிறது. தசரதனும் மறைந்து. ராமனும் வனம் சென்றபின், யாருமே மனதால் கூட வசுந்தராவை (பூமியை) வேண்டுவதில்லை.  புஜ பலத்தால் பாதுகாக்கப் பட்டிருந்தும், கோட்டையின்றி,  பழக்கப்படாத குதிரைகளும், யானைகளுமாக, ராஜதானியை கவனிக்காமல், படை வீரர்களை சந்தோஷமாக வைத்திருக்காத, சரியான  பாதுகாவலும் இல்லாத  நாட்டை எதிரிகள் கூட மதிப்பதில்லை.  விஷம் கலந்து வைக்கப் பட்ட உணவுப் பண்டம் சீண்டுவாரின்றி இருப்பது போல. இன்றிலிருந்து நானும் தரையில் தான் படுத்துறங்குவேன். புல் இருந்தாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி. பழங்கள் காய் வகைகளை உண்பவனாக ஜடை முடி தரித்து உலவுவேன். அவன் காரணமாக மீதி காலத்தை வனத்தில் கழிப்பேன். ராமனுடைய ப்ரதிக்ஞையிலிருந்து அவனை விடுவித்து, அதை நான் பூர்த்தி செய்வேன். அதனால் அவன் செய்த பிரதிக்ஞையும் நிறைவேறும். அண்ணனுக்காக நான் வனத்தில் வசிக்கும் பொழுது சத்ருக்னன் என்னுடன் இருப்பான். லக்ஷ்மணன் கூட அண்ணன் அயோத்தியை ஆளுவார். பிராம்மணர்கள், ராமனுக்கு அயோத்தியில் முடி சூட்டுவார்கள்.  தேவதைகள், என்னுடைய இந்த எண்ணத்தை பூர்த்தி செய்யட்டும். தலையால் வணங்கி நான் வேண்டிக் கொள்கிறேன். இதன் பின்பும், ராமனுடைய அனுக்ரஹம் கிடைக்கவில்லையெனில், நானும் காட்டிலேயே வசிப்பேன். வெகு நாள் என்னை கவனியாது இருக்க முடியாதல்லவா.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சய்யானுவீக்ஷணம் என்ற எண்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம்  89 (166) கங்கா தரணம் (கங்கை நதியைக் கடத்தல்)

 

இரவு அந்த கங்கைக் கரையிலேயே கழித்து விட்டு, விடியற்காலையில், ராகவனான பரதன் எழுந்து, சத்ருக்னனை எழுப்பினான். சத்ருக்னா, எழுந்திரு. வேடர் தலைவன் குகனை சீக்கிரம் அழைத்து வா. நமது சேனையை கங்கை நதியை கடக்க வைக்க வேண்டும்.  சத்ருக்னனும் நான் தூங்கவில்லை, நானும் அண்ணன் இருவரையும் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்றான்.  இதற்குள் குகனே அங்கு வந்து சேர்ந்து விட்டான். காகுத்ஸா, இரவு நதி தீரத்தில் எப்படி இருந்தது. சுகமாக இருந்ததா? சைன்யத்தினர் சௌக்யமா? குகனது ஸ்னேகமான வார்த்தைகளைக் கேட்டு, பரதன் சொன்னான். ராஜன், சுகமாக இருந்தோம். நன்றாக கௌரவிக்கப் பட்டோம். உன் செம்படவர்களுக்கு ஆணையிட்டு சேனையை அக்கரை சேர்த்து விடு. இதைக் கேட்டு குகனும் வேகமாக செயல் பட்டான். திரும்ப தன் நகரம் சென்று, உற்றார் உறவினரிடம் சொன்னான். எழுந்திருங்கள். விழித்துக் கொண்டு படகுகளை இழுங்கள், உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். பரதனின் சேனையை கங்கையைக் கடக்கச் செய்ய வேண்டும். அரசனின்  கட்டளை என்பதால், அனைவரும் அவசரமாக எழுந்து நூற்றுக் கணக்கான, படகுகளை தயார் செய்தனர். நல்ல  அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்  ஸ்வஸ்திக் அடையாளமிட்ட படகுகளை பெரிய கடிகாரம் வைக்கப்பெற்று, கொடிகள் கட்டி, அழகு பெற அமைத்த, சிறந்த படகுகளைக் கொண்டு வந்தனர். அதில் ஒரு ஸ்வஸ்திக் அடையாளமிட்ட வெண்ணிற கம்பளம் சுற்றப் பட்ட, நந்தி போன்று கோஷமிடும் சுபமான படகை குகன் தானே ஓட்டி வந்தான். அதில் பரத சத்ருக்னரோடு கௌசல்யா, சுமித்திரா, மற்ற அரச பத்னிகளும் அமர்ந்தனர். புரோஹிதரும், அவருக்கு முன்னால் மற்ற குரு ஜனங்கள், பிராம்மணர்களும், பின்னால் அரச பத்னிகளும், மேலும் படகை செலுத்துபவர்களும் அமர்ந்தனர். இவர்களுக்கு இருப்பிடம் தயார் செய்யுங்கள். தீர்த்தத்தில் ஸ்னானம் செய்யுங்கள். பாத்திரங்களை கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் ஒரே கூச்சலாக ஆயிற்று. செம்படவர்கள் படகுகளைத் தாங்களே ஓட்டினர். படகில் ஏறிய கூட்டத்தை சமாளித்து வேகமாக ஓட்டினர். சில பெண்கள் நிரம்பியதாக, சில குதிரைகளை ஏற்றிக்கொண்டு, சில பெரும் தனத்தையுடைய பெட்டிகளைச் சுமந்து கொண்டு சென்றன. அக்கரை சேர்ந்து இந்த ஜனங்களை இறக்கி விட்டு திரும்பி வந்து, திரும்ப சென்று செம்படவ பந்துக்களால் கங்கை நீரில் கோலமிட்டது போல ஆயிற்று. யானைகளின் மேல் ஏறி சவாரி செய்யத் தெரிந்தவர்கள், யானை மேலேறி நதியைக் கடந்தார்கள். அதைக் காண, மலைக் குன்றுகள், கொடியுடன் அசைந்து அசைந்து நகருவது போல இருந்தது.  சிலர் படகில் ஏறினர். சிலர் தள்ளும் கட்டு மரங்களில் கடந்தனர், ஒரு சிலர் குடத்தை கட்டிக் கொண்டு மிதந்தனர், மற்றும் சிலர் கைகளால் அடித்து நீந்தி சென்றனர். த்வஜத்தை உடைய சேனை செம்படவர்களால் தங்களாகவே கடந்து செல்லப்பட்டு, மைத்ரம் என்ற முஹுர்த்தத்தில் பிரயாக வனம் சென்றடைந்தனர். சேனையை ஆஸ்வாசப் படுத்தி அவரவர் விருப்பப்படி வசதிகள் செய்து விட்டு பரத்வாஜ முனிவரைக் காண, வேதம் அறிந்தவர்களை முன்னிட்டுக் கொண்டு பரதன் சென்றான். பரதன் பிராம்மணருடைய ஆசிரமத்தை அடைந்து, தேவ புரோஹிதரின் அழகிய குடிலைக் கண்டான். மரங்களால் சூழப் பெற்றதும், மிகப் பெரிய வனம், அதில் பரத்வாஜ முனிவரின் வாசஸ்தலத்தைக் கண்டான்.

 

(இதுவரை வால்மிகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து   நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கங்கா தரணம் என்ற எண்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 90 (167) பரத்வாஜாஸ்ரம நிவாஸ: பரத்வாஜாஸ்ரமத்தில் வசித்தல்)

 

சற்று தொலைவிலிருந்த பரத்வாஜாஸ்ரமத்தைப் பார்த்து விட்ட ராஜகுமாரன் பரதன், கூட வந்த படை வீரர்களை அங்கேயே நிறுத்தி விட்டு, மந்திரிகளுடன் நடந்தே சென்றான்.  தன் ஆயுதங்களையும் கூட வந்தவர்களிடம் கொடுத்து விட்டு, உடுத்தியிருந்த பட்டாடையுடனே குடும்ப புரோஹிதரின் பின் சென்றான். மந்திரிகளையும் வாசலில் நிறுத்தி விட்டு, தான் மட்டும் புரோஹிதருடன் உள்ளே பரத்வாஜரை தரிசிக்கச் சென்றான். வசிஷ்டரை பார்த்த மாத்திரத்தில், மகா தபஸ்வியான பரத்வாஜர், தன் ஆசனத்திலிருந்து விரைவாக எழுந்து வந்து சிஷ்யர்களை அர்க்யம் கொண்டு வரச் சொல்லி, பணித்தபடி வந்தார். பரதன் வணங்கி நின்றான். வசிஷ்டரை வரவேற்று, இது யார் என்று வினவ, அவர் பரதன் என்று அறிமுகப் படுத்தினார்.  அவர்களுக்கு அர்க்யம், குடிக்க நீர் கொடுத்தபின், பழங்கள் கொண்டு வந்து கொடுத்து உபசரித்தார். வரிசை கிரமமாக ஒவ்வொருவரையும் குசலம் விசாரித்தார். தசரத ராஜா மறைந்தது கேள்விப் பட்டு, துக்கம் விசாரித்தார். அயோத்தி மாநகரில், படையில், பொக்கிஷத்தில்

நண்பர்களிடம், மந்திரிகளிடம் எல்லாம் நலமா என்று விசாரித்தார். வசிஷ்டரும், பரதனும் அதே போல பரத்வாஜ முனிவரிடம் குசலம் விசாரித்தனர்.  சரீரம், அக்னி, மரங்கள், சிஷ்யர்கள், மிருக, பக்ஷிகள் என்று ஒவ்வொன்றாக குசலம் விசாரித்தனர். எல்லாம் நலமே என்று பதில் சொன்னபின், ராகவனிடம் ஸ்னேகமாக வினவினார். பரதா, இங்கு வரக் காரணம் என்ன? நீ ராஜ்யத்தை ஆளுவதில் மும்முரமாக இருக்க வேண்டிய சமயம், எனக்கு விவரமாக சொல்லு. எனக்கு குழப்பமாக இருக்கிறது. தனக்கு சத்ருவானவனை மட்டுமே வதைக்க கூடியவன் கௌசல்யை பெற்ற மகன்.  கௌசலானந்த வர்தன:, கௌசல்யையின் ஆனந்தத்தை பெருக்குபவன் என்று பெயர் பெற்றவன், சகோதரனுடன், மனைவி சகிதமாக வெகு நாட்களுக்கு நாட்டை விட்டு அனுப்பப் பெற்றான். உன் தந்தை தன் பத்னி சொன்னாள் என்று என்ன நினத்தோ, பதினான்கு வருஷங்கள் வனத்தில் இரு என்று கட்டளையிட்டார். நீ அவனுக்கு எதுவும் கெடுதல் செய்ய நினைத்து வரவில்லையே? ராஜ்யத்திற்கு இடையூறு வரக் கூடாது என்று ராமனுக்கும், அவன் தம்பி லக்ஷ்மணனுக்கும் எதிராக, எதுவும் செய்ய நினைத்து சேனையுடன் வந்திருக்கிறாயா? என்று கேட்டார். வார்த்தை வெளி வராமல், கண்களில் நீர் பெருக துக்கம் தொண்டையை அடைக்க, ப4கவன், நீங்களும் இப்படிச் சொல்லலாமா? நான் என்ன செய்வேன்? கஷ்டம். என் பேரில் குற்றம் சாட்டும்படி ஆயிற்று. என்னை வருத்தாதீர்கள். இதில் எனக்கு சம்மதமில்லை. என் தாய், நான் இல்லாத போது செய்த ஏற்பாடு. இது எனக்கு உடன் பாடும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை. அந்த வார்த்தையை நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். நான் ராமனை திரும்ப அயோத்யா அழைத்து போகவும், பாதங்களில் விழுந்து வணங்கி, ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டவுமே நடந்து வந்தேன். இப்பொழுது என்னை புரிந்து கொண்டு அனுக்ரஹிக்க வேண்டும்.  சொல்லுங்கள். ராமனை இப்பொழுது எங்கு காண  முடியும் ? வசிஷ்டர் முதலான ரித்விக்குகளும் அப்படியே யாசித்தனர். இதன் பின் பரத்வாஜர் சொன்னார். பரதா, இது நீ பிறந்த ராஜ குலத்தின் பெருமைக்கு ஏற்றதே. ராகவ வம்சத்தில் பிறந்தவன், குருவை வணங்குவதிலும், அடக்கமும், சாதுக்களை மதித்து நடப்பதிலும், அதிசயமில்லை.  எனக்கும் அப்படித்தான் மனதில் பட்டது. இருந்தாலும் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளவே உன்னைக் கேட்டேன். உன்னை நான் கேட்டதாலேயே உன் புகழும், பெயரும் மேலும் மேலும் வளரும். ராமன், லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் இருக்கும் இடம் நான் அறிவேன். இந்த உன் சகோதரன் சித்ரகூடம் என்ற பெரிய மலையில் வசிக்கிறான். நாளை போகலாம். இன்று உன் மந்திரிகளுடன் இங்கேயே இரு. இவர்கள் தாங்கள் சௌகர்யம் போல இருக்கட்டும் என்றார்.   சரி என்று ஒத்துக் கொண்டு மனதில் நம்பிக்கை தோன்ற, ராஜ குமாரனான பரதன், ஆசிரமத்தில் இரவு தங்க சம்மதித்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத்வாஜாஸ்ரம நிவாசோ  என்ற தொன்னூறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 91 (168) பரத்வாஜாதித்யம் (பரத்வாஜர் செய்த விருந்து உபசாரம்)

 

அங்கு தங்குவதாக தீர்மானித்து விட்ட பரதனைப் பார்த்து முனிவர்  விருந்துண்ண அழைத்தார். அதற்கு பரதன், நீங்கள் அர்க்4யம், பாத்3யம் கொடுத்ததே விருந்து தானே. வனத்தில் கிடைப்பதை வைத்து நீங்கள் கொடுத்ததே பெரிது என்றான். சிரித்துக் கொண்டே பரத்வாஜர், அன்புடன் பழகுகிறாய், அழகாக பேசுகிறாய். உன்னை அறிந்து கொண்ட பின், ஏதாவது கொடுத்து உன்னை சந்தோஷப் படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. உன் சேனை வீரர்களுக்கும் போஜனம் செய்து வைக்கிறேன்., மனுஜாதிபா, அரசனே,  என் அன்பையும் உனக்கு தெரிவிக்க வேண்டும். ஏன் தூரத்திலேயே சேனையை நிறுத்தி விட்டு இங்கு வந்தாய்? ஏன் கூடவே அழைத்து வரவில்லை என்று கேட்க, பரதன் பவ்யமாக கை கூப்பியவனாக பதில் சொன்னான். தபோத4னரே, ப4கவன், உங்களிடத்தில் பயம். அதனால் தான் சைன்யத்துடன் வரவில்லை. அரசனோ, அரச குமாரனோ எப்பொழுதும் தபஸ்விகளிடம், அவர்கள் விஷயத்தில் தலையிடாமல் விலகியே இருக்க வேண்டும். குதிரைகள், அத்துடன் மனிதர்கள், மதம் பிடித்த உயர் ஜாதி யானைகள், பூமியை மறைத்துக் கொண்டு பெருமளவில் வருகின்றன. அவைகள் இங்குள்ள மரங்களை, ஜலத்தை, பூமியை ஆஸ்ரமத்து குடிசைகள் இவற்றை நாசம் செய்து விடக்கூடாதே என்று நான் மட்டும் வந்தேன். ரிஷி, அவர்களையும் அழைத்து வா என்று கட்டளையிடவும், பரதன் சேனையை வரவழைத்தான். முனிவரும் அக்னி சாலையில் பிரவேசித்து, தண்ணீரை குடித்து, சுத்தம் செய்து விருந்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய விஸ்வகர்மாவை வரவழைத்தார். விஸ்வகர்மாவையும், த்வஷ்டாவையும் அழைக்கிறேன். விருந்து ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். ஏற்பாடு செய்யுங்கள். மூன்று லோகபாலர்களையும் அழைக்கிறேன்.  இந்திரன் முன்னிட்ட  தேவர்களையும் அழைக்கிறேன். விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.  கிழக்கு முகமாக பாயும் நதிகளும், மேற்கு முகமாக பாயும் நதிகளும் இன்று பூமியிலும், அந்தரிக்ஷத்திலும் வந்து சேரட்டும். மற்றவைகள் மைரேயம் என்ற மதுவை சுரக்கட்டும்.  மற்றவை கரும்பு ரஸம் போல இனிக்கும் சுத்தமான ஜலம் உடையதாக இருக்கட்டும். குளுமையாக இருக்கட்டும். தேவ கந்தர்வர்களையும், ஹாஹா ஹு ஹு என்னும், விஸ்வாவசுக்களையும், அதே போல அப்சர ஸ்த்ரீகளையும், கந்தர்வர்களையும் எல்லோரையும் அழைக்கிறேன். துதா3சீம், விஸ்வாசீம், மித்ரகேசி, அலம்பு3சா, நாக3 த3ந்தா, ஹேமா, ஹேமாத்3ரியில் இருப்பவர்களையும், இந்திரனுக்கு பணிவிடை செய்பவர்களையும் பிரும்மாவையும், அவனைச் சார்ந்த பெண்கள் எல்லோரையும், தும்புருவுடன் கூட அழைக்கிறேன். தங்கள் கூட்டத்தாருடன் வந்து சேரட்டும்.  வனத்தை திவ்யமாக ஆக்குங்கள். ஆடை ஆபரணங்களை பத்ரங்களைக் கொண்டு செய்வியுங்கள். பழங்களைக் கொண்டு திவ்யமான பெண்களை உண்டாக்குங்கள். குபேரனுடைய செல்வம் இங்கு வந்து சேரட்டும். இங்கு பகவான் சோமன் அன்னத்தை வடிக்கட்டும். ப4க்ஷ்யம், போ4ஜ்யம், சோஷ்யம், லேஹ்யம் மேலும் பலவிதமான விசித்திரமான உணவு வகைகள், மரங்களிலிருந்து விழும் பூக்களைக் கொண்டு மாலைகளையும், மது வகைகளும், குடி வகைகளும், மாமிசங்களும் பலவிதமாக, இவ்வாறு சமாதியில் இருந்தபடி, தன் நிலையில்லா தேஜஸால், கல்வி, ஸ்வரத்துடன் கூட தன் தவ வலிமையால் முனிவர்  கட்டளையிட்டார். கிழக்கு முகமாக நின்று கை கூப்பி அஞ்சலி செய்தபடி, மனதால் த்யானம் செய்த மாத்திரத்தில், தனித் தனியாக எல்லா தேவதைகளும் வந்து சேர்ந்தனர்.

 

மலயம், து3ர்த4ரம், என்ற காற்று, வியர்வையை அகற்றும் விதமாக சுகமாக உடலை ஸ்பரித்துக் கொண்டு மங்கள கரமாக, ஸ்னேகமாகவும் வீசியது. மேகங்கள் திவ்யமான பூக்களை மழையாக பொழிந்தன. திவ்யமான துந்துபி கோஷம் திசைகளில் எல்லாம் பரவியது. உத்தமமான குழல்கள் ஊதின, அப்ஸர  ஸ்த்ரீகள், நடனம் ஆடினர்.   கந்தர்வர்கள் பாடினர். வீணையிலிருந்து சுஸ்வரமாக கானம் ஒலித்தது. அந்த நாதம் ஆகாயத்தையும், பூமியையும் பிராணிகளின் செவிகளையும் நிறைத்தது. சஞ்சாரங்கள் நிறைந்து ம்ருதுவாக, சமமாக, தாளக் கட்டுடன் கூடியதாக இருந்தது.  செவிக்கு இதமாக இருந்த அந்த நாதம் நின்றதும், பரதனின் சைன்யம் விஸ்வகர்மாவின் ஏற்பாட்டைக் கண்டனர்.

 

ஐந்து யோஜனை தூரம், பூமி சமதளமாக ஆக்கப்பட்டிருந்தது. பசுமையான பலவகை மரங்களின்  நிழல் மறைத்திருந்தது. நீல வைமூடுரியம் போன்ற, வில்வ மரங்களும், கபித்த மரங்களும் (நாவல்), பனஸ (பலா) மரங்களும், பீஜ பூரகம் (விளாம்பழம்) ஆமலகம் (நெல்லி) இருந்தன. தவிர சூதா (மா) பழங்கள் நிரம்பியதுமாக வனம் திவ்யமாக அனுபவிக்கத் தக்கதாக இருந்தது. வடக்கிலிருந்து வந்த நதி, இரு

கரைகளிலும் மரங்கள் வளர்ந்து செழிப்பாக இருக்க, பெருகி ஓடியது. அழகிய நான்மாடக் கூடங்களும், யானைக் கட்டும் இடங்களும், குதிரை  லாயங்களும், அழகிய மாளிகைகளும், வீடுகளும், தோரணங்கள் கட்டப் பெற்று, மங்களகரமாக விளங்குவதாக, வெண் மணலும், வெண் மேகம் போல அரச மாளிகையும், அதிலும் அழகிய மலர் மாலைகள் தோரணமாக கட்டப் பெற்றிருக்க, வாசனைத் திரவியங்களைத்  தெளி த்து,   ஓய்வு எடுத்துக் கொள்ள உயர்ந்த சயனாசனங்களும், விசேஷமான அறுசுவை உண்டியும், நல்ல வஸ்திரங்களும், எல்லாவிதமான அன்ன வகைகளும், சமைத்து வைக்கப் பட்டு, நிர்மலமான வெண்ணிற பாத்திரங்கள், அழகிய ஆசனங்கள், லக்ஷ்மீகரமாக விளங்கிய விரிப்புகளுடன் கூடிய படுக்கைகள், என்று தயாராக இருந்த மாளிகையினுள், மகரிஷி அனுமதியுடன் பரதன் நுழைந்தான். கைகேயி புத்திரனான பரதன் அந்த வீட்டில், ரத்னங்கள் நிறைந்த மாளிகையில் நுழைந்தவுடன், மற்ற மந்திரிகள், புரோஹிதர்களுடன் நுழைந்தனர். அந்த மாளிகையைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். அங்கு ராஜாவுக்கான ஆசனமும், சத்ர சாமரங்களும் இருந்தன. மந்திரிகளுடன் கூட பரதன் அரசனாகவே விளங்கினான். ராமனுக்காக அந்த ஆசனத்தை வணங்கி, சத்ர சாமரங்களை வீசி விட்டு,  பரதன் மந்திரியின் ஆசனத்தில் அமர்ந்தான். அவரவர் தகுதிக் கேற்ப மந்திரிகள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்தனர். சேனாபதிகளும், அதன் பின் அரசன் ஆணையை செயல் படுத்தும் உத்யோகஸ்தர்களும் அமர்ந்தனர்.

 

பிறகு அங்கு பரத்வாஜரின் ஆணைப் படி, நதிகள் (பாயஸ கர்தமா- கெட்டியான திரவமாக, பாயஸம் நதியாகவே பிரவகித்தது) தோன்றின. அந்த நதிகளின் இரு கரைகளும் வெண் மணல் இட்டு பூசப் பெற்றிருந்தன. பரத்வாஜரின் பிரசாதத்தில் தங்கும் இடங்களும் சிறப்பாக இருந்தன. ஒரு முஹுர்த்த நேரத்தில், திவ்யமான ஆபரண அலங்காரங்களுடன் இருபதாயிரம் ஸ்த்ரீகள், ப்ரும்மாவால் அனுப்பப் பட்டு வந்து சேர்ந்தார்கள். தங்க, மணி, முத்து, பவளம் இவைகளால் அழகுற விளங்கினர். இருபதாயிரம் பெண்களை குபேரன் அனுப்பி வைத்தான். அவர்கள் எந்த புருஷனைத் தொட்டாலும் அவன் பைத்தியம் பிடித்தவன் போல ஆனான். நந்தனம் எனும் இடத்திலிருந்து இருபதினாயிரம் அப்ஸரஸ்த்ரீகள் வந்தனர். சூரியனுக்கு சமமான பிரபையும், நாரதர், தும்புருவுக்கு இணயாக பாடக் கூடிய கந்தர்வ அரசர்கள் பரதனின் முன்னால் நின்று பாடினர். அலம்பு3ஸா, மிஸ்ரகேசி, புண்டரீகா, மற்றும் வாமனா, இவர்கள் பரத்வாஜருடைய ஆணையால் பரதனுக்கு முன்னால் நடனமாடினர். அவர் தவ வலிமையினால் தேவர்களின் மாலைகளும், சைத்ர வன மாலைகளும், பிரயாக க்ஷேத்திரத்தில் தென் பட்டன.

 

பி3ல்பா, மாதங்கி3கா, காம்ஸ்ய க்3ராஹா, விபீ4தகா, அஸ்வத்தா2, நர்த்தகா: – என்ற இவர்களும் பரத்வாஜரின் கட்டளைப் படி வந்து சேர்ந்தார்கள். அதன் பின் சரளதாளா:. திலகா, கந்த மாலகா: என்ற வகையினர், கூனிகளாகவும், வாமனர்களாகவும் குற்றேவல் செய்ய வந்து சேர்ந்தனர். சிம்சுபா, ஆமலகீ, ஜம்பூ தவிர காட்டு கொடி வகைகள் பெண் வேடம் தரித்து பரத்வாஜரின் ஆசிரமத்தில் வந்து நின்றனர். மதுவோ, மது கலந்த நீரோ குடியுங்கள். பசித்தால் பாயஸம் குடியுங்கள். விரும்பிய அளவு மாமிசங்கள் பக்குவம் செய்யப் பட்டவை, எது வேண்டுமானாலும் வேண்டிய அளவு சாப்பிடுங்கள். எண்ணெய் முதலியவை கொண்டு தேய்த்து, நதி தீரங்களில் ஸ்னானம் செய்து வைக்கப் பட்டார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழெட்டுப் பெண்கள் பணிவிடை செய்தனர். அழகிய கண்களுடைய அவர்கள் அன்யோன்யமாக நடந்து கெஎண்டனர்.  குதிரைகள், யானைகள், கோவேறு  கழுதைகள், ஒட்டகங்கள், தவிர, சுரபியின் குழந்தைகளான பசுக்கள், வாகனத்தில் பூட்டபட்டவை இவைகளுக்கு திருப்தியாகும் படி உணவு காட்டி, வழக்கம் போல சாப்பிடச் செய்து, கரும்புகளையும், தேன் பொரி இவற்றையும் கொடுத்தனர். இக்ஷ்வாகு குலத்தின் படை வீரர்கள், பலசாலிகள், இந்த வாகனங்களை ஓட்டுபவர்கள், மதோன்மத்தர்களாக (நல்ல ஆகாரம், குடி இவற்றால் தன்னை மறந்தவர்களாக) ஆனார்கள்.  குதிரை வீரன் குதிரையை கவனிக்கவில்லை. யானையை பிடித்துச் செல்பவன் யானையை கவனிக்கவில்லை. வேண்டியதை வேண்டும் அளவு பெற்றவர்களாக ரக்த சந்தனத்தை பூசிக் கொண்டு, அப்ஸர ஸ்த்ரீகளுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழித்த படை வீரர்கள், அயோத்யாவும் போக வேண்டாம், தண்டகா வனமும் செல்ல வேண்டாம், பரதன் குசலமாக இருக்கட்டும், ராமனும் குசலமாக இருக்கட்டும், என்றனர்.

 

தரைப் படை வீரர்கள், யானை, குதிரைகளைக் கட்டி அடக்கி வைப்பவர்கள், இதுவரை காணாத சுகத்தைக் கண்டவர்களாக, ஆயிரக் கணக்கானவர்கள் மகிழ்ச்சியாக பொழுதைப் போக்கினர். பரதனை பின் தொடர்ந்து வந்தவர்கள், இது தான் ஸ்வர்கம் என்றனர். நடனம் ஆடினர் சிலர். சிலர் சிரித்தனர்.  சிலர் பாடினர். மாலையை அணிந்து கொண்டு முன்னும் பின்னுமாக ஓடினர். அமுதத்திற்கு சமமான அந்த அன்னத்தை உண்ட பின், திவ்யமான பதார்த்தங்களைக் கண்டு ஆவலுடன்  சாப்பிடலாயினர். சேனையின் அடி மட்டத்திலிருந்து அனைவரும், மிகவும் திருப்தி அடைந்தவர்களாக ஆடைகள் கசங்கியது தெரியாமல் மகிழ்ந்து இருந்தனர். யானைகளும் கோவேறு கழுதைகளும், ஒட்டகங்களும், பசுக்களும், குதிரைகளும், மற்ற மிருக பக்ஷிகளும் நிறைந்து இருந்தன. நல்ல வெண்ணிற ஆடையில்லாதவன் அங்கு தென்படவில்லை. பசியுடையவனாகவோ, முகம் வாடியவனாகவோ யாரும் தென் படவில்லை. தலை நரைத்தவர் கூட தென் படவில்லை. நல்ல நெய் (வாராள – ஒரு அளவு, படி என்பது போல) குடம் குடமாக, ஒரு புறம். பழங்களை பக்குவப் படுத்தி கலந்தவை, வடைகள், வாசனையும், ரஸமும் நிறைய, இவற்றை அன்னத்துடன் கலந்து, த்வஜம் போல் புஷ்பங்களால் அலங்கரித்து தட்டு நிறைய வௌளை வெளேரென்று அன்னம், இதை பார்த்து வியந்து நின்றார்கள். வனத்தின் அருகில் ஒரு இடத்தில் கிணறு என்று சொல்லும்படியான பாத்திரத்தில் பாயஸம் நிரம்பி இருந்தது. வேண்டியதை வேண்டும் போது கொடுக்கும் பசுக்கள், மரங்கள்  தேனை சொரிந்தன. மயக்கும் மதுவகைகள் கிணறுகளாக நிரம்பி இருக்க, மாமிச வகைகளுக்கும் குறைவில்லை. கொதிக்கும் பாத்திரங்களில்  (மார்க, மயூரா, கௌக்குட என்று தூரத்தை அளக்கும் அளவுகள்- ஒரு மார்க என்பது 8 மைல்) தூரம், தட்டுகள் ஆயிரக் கணக்காக வைக்கப் பட்டிருந்தன. கோடிக் கணக்கில் தங்கமாக ஜொலிக்கும், பாத்திரங்கள், தட்டுகள், கும்பம் போன்றவை, தயிர் நிரம்பிய சிறிய குடங்கள், இளம் காராம் பசுவின் பாலால் தயாரிக்கப் பட்டது, மனதை ஈர்க்கும் வாசனையும், சில வெண்மையாக, சில பழுப்பு நிறமாக பாயஸங்கள், சர்க்கரை சேர்த்து கல்கம், சூர்ணம், கஷாயம் என்ற வகை மருந்துகளும், வித விதமான ஸ்நான சாமான்கள் நதிக் கரைகளில், பாத்திரங்களில் வைக்கப் பட்டிருந்ததை ஜனங்கள்  கண்டனர்.  பல் தேய்க்கவும், வாய் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ளவும், பல் பொடிகள், வெண்ணிறமாகவும், சந்தன நிறத்திலும், குளிக்க உபயோகிக்கும் கல்கம் (கெட்டியாக நீர் பட்டால் கரையும் படி) கண்ணாடிகள் முகம் பார்க்க, வஸ்திரங்கள் கணக்கில்லாமல், ஜோடி ஜோடியாக காலணிகள், ஆயிரக் கணக்கில் கண் மை வகைகள், பலவிதமான மனதைக் கவரும் படுக்கை வகைகள், ஆஸனங்கள், குதிரைகளுக்கும் மற்ற வாகனம் இழுக்கும் மிருகங்களுக்கும் குடிக்கத் தண்ணீர், பான வகைகள், உத்பலம், தாமரை நிறைந்த குளங்கள், அமிழ்ந்து குளிக்கவும், நீந்தி விளையாடவும், ஆகாசம்  போல நிர்மலமான தண்ணீர் நிறைந்து குளங்கள் நீல மணி போல நிறமுடைய புல் தரைகள், பசுக்கள் மேய அங்கு கண்டனர். ஆச்சர்யம், ஸ்வப்னமோ என்ற பிரமை இவை அந்த ஜனங்களை ஆட்கொண்டன. மகரிஷி இப்படி ஒரு கண்ணுக்கு விருந்தையும் பரதனுக்காக படைத்து விட்டார். தேவர்கள் நந்தன வனத்தில் உலவுவது போல சுற்றி வந்தனர். அந்த ரம்யமான இடத்தில் இரவு நகர்ந்தது.. அந்த நதிகளும், கந்தர்வர்களும், உயர் குலப் பெண்களும் பரத்வாஜரிடம் விடை பெற்றுச் சென்றனர்.

 

மதுவைக் குடித்து மயங்கி கிடந்த ஜனங்கள், திவ்யமான வாசனை திரவியங்களைப் பூசிக் கொண்டவர்களாக, வித விதமான அழகிய மாலைகளைத் தரித்துக் கொண்டவர்களாக கிடந்த மனிதர்கள் தான் மிஞ்சினர்.

 

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத்வாஜாதித்யம் என்ற தொன்னூற்று  ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 92 (169) பரதவாஜாமந்த்ரணம் (பரத்வாஜரிடம் விடை பெறுதல்)

 

இப்படியாக இரவைக் கழித்து விட்டு, பரத்வாஜர் கொடுத்த விருந்தினால் மிகவும் திருப்தியடைந்தவர்களாக,  அவரிடம் விடை பெறச் சென்றான். அக்னி ஹோத்ரத்தை செய்து முடித்துவிட்டு, முனிவர் அப்பொழுது தான் எழுந்து வந்தார்.  அன்புடன் பரதனிடம் விசாரித்தார். இரவு சுகமாக தூங்கினீர்களா? கூட வந்த பரிவாரங்கள் திருப்தியடைந்தனரா? பரதன் அவர் காலடியில் விழுந்து வணங்கினான். ஆஸ்ரமத்திலிருந்து கிளம்பி விட்ட முனிவரைத் தொடர்ந்து நடந்து வந்தவன், இரவு நன்றாகத் தூங்கினோம் ஸ்வாமி, என் படையைச் சேர்ந்த மற்றவர்களும் கூட நன்றாக சாப்பிட்டுத் தூங்கினார்கள். என் மந்திரி முதலியவர்களும், திருப்தியாக இருக்கிறார்கள், அவர்கள் தேவைகள் எல்லாம் நன்றாக பூர்த்தி செய்யப்பட்டன. எங்கள் களைப்பு, பசி நீங்கியது. நல்ல விதமாக இடம் கிடைத்து, நன்றாகத் தூங்கியதால் இப்பொழுது எல்லோரும் காலாற நடந்து வரத் தயாராக இருக்கிறார்கள். உங்களிடம் விடை பெற்றுக் கொள்கிறேன், மகரிஷியே, சமீபத்தில் புறப்பட்டுப் போனவன் சகோதரன், என்று நட்போடு என்னைப் பாருங்கள். அவனுடைய ஆஸ்ரமம் எங்கு இருக்கிறது. எப்படி போக வேண்டும் என்பதை விவரமாகச் சொல்லுங்கள். தன் சகோதரனைக் காண மிகவும் ஆவலோடு இருந்த பரதனைப் பார்த்து பரத்வாஜர் சொன்னார். ஜன நடமாட்டம்  இல்லாத வனத்தில் 3.5 யோசனை தூரத்தில் சித்ரகூடம் என்று ஒரு மலை.  அழகிய மலைச் சாரலும், காடுகளும் நிரம்பியது. அதனுடைய வட பகுதியில், மந்தாகினி நதி ஓடுகிறது. இந்த நதி கண்ணுக்குத் தெரியாத விதமாக, கரையில் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதையடுத்த காடும் மரங்கள் நிரம்பியது. அந்த நதியைக் கடந்த உடன் வருவது சித்ரகூட மலை. அங்கு பர்ணசாலை கட்டிக் கொண்டு இருவரும் வசிக்கிறனர். தென் திசையில், அல்லது தென் கிழக்கில் கஜ, குதிரைகள் பூட்டிய ரதங்களையும், வாகனங்களையும் நிறுத்தி வைத்து விட்டு ராகவனைக் காணப் போ. ராஜக் குல பெண்கள், வாகனங்களை விட்டு இறங்கி முனிவரை சூழ்ந்து நின்று கொண்டனர். சுமித்திரை கை பிடித்து அழைத்து வர, கௌசல்யையும் அங்கு வந்து சேர்ந்தாள். தன் இஷ்டமும் பூர்த்தியாகாமல், உலக நிந்தைக்கும் ஆளான கைகேயியும் சற்று வெட்கத்துடன் வந்து வணங்கி நின்றாள். மகாமுனிவரை பிரதக்ஷிணம் செய்து பரதனுக்கு தள்ளியே நின்றனர். பரதனைப் பார்த்து முனிவர், உன் தாயார்களை தெரிந்துகொள்ள வேண்டும், அறிமுகப் படுத்தி வை எனவும், பகவன், இதோ நிற்கிறாளே, முகவாட்டத்தோடு, உடல் இளைத்து உருமாறி நிற்கிறாளே,  தேவதை போன்ற ராஜ மகிஷி இவள் தான், சிம்மம் போன்ற நடையும், பராக்ரமமும் உடைய, ராமனைப் பெற்ற மகராசி. அதிதி மகனைப் பெற்றது போல பெற்ற மாதரசி. இவள் இடது புறம், ம்ருதுவாக பேசும் குணம் உடையவள் அரசனின் மத்ய ராணி.  இவளும் துக்கத்தால் வாடி காணப் படுகிறாள். காட்டு நடுவில் பூக்களும் இலையும் உதிர்ந்த நிலையில் உள்ள கர்ணிகார மரம் போல இருக்கிறாள். தேவர்களுக்கு இணையான இரு புத்திரர்களுக்குத் தாய். வீரர்களான லக்ஷ்மண, சத்ருக்னர்கள் இவள் பிள்ளைகள்.  எவள் காரணமாக மனிதர்களுள் புலியாக போற்றப் பட்ட இருவரின் வாழ்வும் நாசமானதோ, புத்திரனைப் பிரிந்து ராஜா தசரதர் ஸ்வர்கம் சென்றாரோ, க்ரோதமும் அறியாமையும், ஐஸ்வர்யத்தில் பற்றும், பிடிவாதமும் உடையவள், இவள் தான் என் தாய் என்று தெரிந்து கொள்ளுங்கள். பாபத்தைச் செய்யத் துணிந்து விட்ட கொடியவள்.

இவளிடத்திலிருந்து தான் என் கஷ்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன. இவ்வாறு சொல்லி நாத்தழதழக்க பரதன் நிறுத்தினான். கோபம் கொண்ட நாகம் போல பெருமூச்சு விட்டான். பரதன் சொன்னதைக் கேட்டு, புத்திமானான பரத்வாஜர், அர்த்தம் செறிந்த இவ்வார்த்தைகளைச் சொன்னார். பரதா, கைகேயியை தூஷிக்காதே. அவளை துஷ்டையாக எண்ணாதே. ராம ப்ரவ்ராஜனம் (ராமனை நாட்டை விட்டு வெளியேற்றியது) என்ற இந்த செய்கை, சுகத்திற்கு ஆதாரமாக, நன்மையை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்று அறிவாய். தேவர்களுக்கும், ராக்ஷஸர்களுக்கும், விஷயம் அறிந்த முனிவர்களுக்கும் இந்த ராமனது செய்கையால் (வெளி ஸ்ரீ நடப்பால்) ஹிதமே நடக்கும் என்றார்.

 

முனிவரை வணங்கி பிரதக்ஷிணம் செய்து விடை பெற்றுக் கொண்டு, பரதன் சைன்யத்தைக் கிளம்புங்கள் என்று உத்தரவிட்டான். குதிரைகளை ரதங்களில் பூட்டி, பலவிதமான ஜனங்கள், பலவிதமான வாகனங்களில் ஏறி, புறப்பட்டனர். இளம் யானைக் குட்டிகள், யானைகள் தங்க அம்பாரியுடனும்,  கொடியுடனும்,  கோடை முடிவில் மேகம் போல கர்ஜித்துக்கொண்டு கிளம்பின. பெரியவையும், சிறியவையுமான பல வாகனங்கள், கிளம்பின. கால் நடையாக மற்றும் பலரும் தொடர்ந்தனர். கௌசல்யை போன்றவர்களும், ராமனைக் காணப் போகிறோம் என்ற ஆவலுடன் வாகனங்களில் ஏறிக் கொண்டனர். சூரிய சந்திரன் போன்ற ஒளி யுடைய சிவிகையில், பரதனும் அமர்ந்து தன் பரிவாரங்களோடு புறப்பட்டான். அந்த பெரும் கூட்டமான சேனை, தென் திசை நோக்கி யானைகளும், பக்ஷிகளும் நிறைந்த வனப் பிரதேசத்தைக் கடந்து கங்கையின் அக்கரையில், கி3ரிகளையும், நதிகளையும் மகிழ்ச்சியுடன் கடந்து  காட்டு மிருக பக்ஷிகளை பயமுறுத்தியபடி அரசனது குதிரை வீரர்கள், அந்த பெரும் வனத்தினுள்ளே சென்றனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத்வாஜாமந்த்ரணம் என்ற தொன்னூற்று இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 93 (170) சித்ரகூட வனப் ப்ரேக்ஷணம் (சித்ரக் கூட மலையைக் காணுதல்)

 

கொடிகள் பறக்க செல்லும், ரத, கஜ துரக சேனையுடன், ஒவ்வொரு படைத் தலைவனும் தன் கீழ் உள்ள படைவீரர்களை மேற்பார்வை பார்த்தவாறு செல்வதை வனவாசிகளான கரடிகள், மான்கள், மற்றும்  பல மிருகங்களும் பார்த்தன.

மலைகளிலும், நதிகளிலும் இவை அணி வகுத்துச் செல்வதைக் கண்டன. தசரதன் மைந்தனான பரதனும் மகிழ்ச்சியுடன் கிளம்பினான். தர்மாத்மாவான இவனை நான்கு புறமும் ஆரவாரத்துடன் சேனை வீரர்கள் சூழ்ந்து கொண்டனர். சமுத்திரம் போல அடுத்தடுத்து பெருகிவரும் சேனை, மழைக் காலத்தில் ஜலம் பூமியை மூழ்கடிப்பதைப் போல தரையே தெரியாமல் செய்தது. யானைக் கூட்டம், குதிரைகள் கூட்டம் வீரர்கள் சூழ்ந்து நிற்க, சில சமயம் பரதனைக் காணவே முடியாதபடி இருந்தது.  வெகு தூரம் சென்றபின் வாகனங்கள் களைத்துப் போய் தடுமாறுவதைப் பார்த்து மந்திரிகளுள் சிறந்தவரான வசிஷ்டரைப் பார்த்துச் சொன்னான், பரதன். இந்த இடத்தைப் பார்க்கும் பொழுது நாம் கேள்விப் பட்ட வரையில் பரத்வாஜர் சொன்ன இடத்திற்குத் தான் வந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இது தான் சித்ர கூட மலையாக இருக்க வேண்டும். இது தான் மந்தாகினி நதி.  இதோ தூரத்தில் அடர்ந்த நீல நிறக் காடு தெரிகிறது. சித்ர கூட மலையின் மலைச் சாரல்கள் ரம்யமாகத் தெரிகின்றன. தற்சமயம் என் யானைகள் அதை நாசம் செய்கின்றன. இந்த மரங்கள் மலை அடிவாரத்தில் பூத்துக் குலுங்குகின்றன.  சூரியன் மறைந்த சமயம், மேகங்கள் நுனியில் நீர்த்துளிகளைத் தாங்கி நிற்பதைப் போல தோன்றுகிறது.  சத்ருக்னா, பார் இந்த தேசத்தில் கின்னரர்கள் சஞ்சரிக்கின்றனர். சமுத்திரத்தில் முதலைகள் இருப்பது போல வனத்தில் மிருகங்கள் எதிரில் திரிகின்றன. பார்.   வாயு வேகத்தில் ஓடும் இந்த மான் குட்டிகள், காற்றில் கொண்டு செல்லப் படும் சரத் கால மேகங்கள் வானில் தெரிவது போல இருக்கின்றன. இந்த மரங்கள் பூக்களைத் தலையில்  சொரிந்து தள்ளுகின்றன.  வனத்தின் பயங்கரத்தை நீக்கி விட்டால், அயோத்யா நகரம், அதன்  ஜனங்கள் நிறைந்து இருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது.  காலடியில் கிளம்பிய புழுதி, ஆகாயத்தைத் தொடுவது போல கிளம்புகிறது. இதைக் காற்று உடனே தள்ளிக் கொண்டு போகிறது, ஏதோ, எனக்கு நன்மை செய்ய விரும்புவது போல.  ரதங்கள் குதிரைகள் பூட்டப் பெற்று நல்ல சாரதிகளால் ஓட்டப் படுபவை சத்ருக்னா, காட்டில் ஓடுவதை சீக்கிரம் பார்.  மயில்கள், கண்ணுக்கு விருந்தாக பயந்து ஓடுவதைப் பார்.  பக்ஷிகளுக்கும் இருப்பிடமான இந்த மலை மிகவும் மனோகரமாக எனக்குத் தெரிகிறது. தபஸ்விகள் வசிக்கும் இந்த இடம், நிச்சயமாக ஸ்வர்கத்திற்கு இட்டுச் செல்லும் வழியே ஆகும். ஆண் மான்கள், பெண் மான்களுடன் இணைந்து  ஏராளமான குட்டி மான்களுடன் வனத்தில் பூக்களை அலங்காரமாகத் தொடுத்து வைத்தது போல தெரிகின்றன. சேனைகளை படை வீரர்களை, கானகத்தில் ராம லக்ஷ்மணர்கள் தங்கியிருக்கும் இடத்தை தேடச் சொல்லுங்கள். பரதனுடைய உத்தரவைக் கேட்டு, ஆயுதம் ஏந்திய வீரர்கள், வனத்தின் உள் பக்கம் தேடச் சென்றனர். ஓர் இடத்தில் எழும்பிய புகையைக் கண்டனர். புகை மூட்டத்தைக் கண்டு பரதனிடம் சொன்னார்கள். அமானுஷ்யமான இந்த இடத்தில் அக்னியைக் காண்பது சாத்தியமில்லை. அதனால் நிச்சயம் ராம லக்ஷ்மணர்கள் பர்ணசாலை அருகில் தான் இருக்க வேண்டும்.  தவிர, ராமனைப் போன்ற வேறு ஒருவர் இருக்க முடியாது. அதனால் சகோதரர்கள் இருவரும் தபஸ்விகளாக இங்கு தான் இருக்கிறார்கள். அவர்கள் வார்த்தையைக்  கேட்டு, சத்ருக்களை அழிக்கக் கூடிய பலம் பொருந்திய பரதன், சைன்யத்தைப் பார்த்து, நீங்கள் இங்கேயே நில்லுங்கள். இதற்கு மேல் வர வேண்டாம். நானே போகிறேன். சுமந்திரர், குரு வசிஷ்டர் உடன் வரட்டும். உடனே படை வீரர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். பரதன் புகை மூட்டம் கிளம்பிய இடத்திலேயே தன் பார்வையைப் பதித்து நின்றான். பரதனால் நிறுத்தி வைக்கப் பட்ட வீரர்களும் புகை மூட்டத்தைக் கண்டு, இதோ ராமனைக் காணப் போகிறோம் என்று மகிழ்ச்சி அடைந்தனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சித்ரகூட வன ப்ரேக்ஷணம்  என்ற தொன்னூற்று மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம்  94 (171) சித்ரகூட வர்ணனை (சித்ரகூட மலையின் வர்ணனை)

 

வெகு காலமாக ஆனது போல சித்ர கூட வாசியான ராமன், வைதேஹியின் மனம் ஆனந்தமடையவும், தனக்கும் ஒரு மாறுதலடையவும் சித்ர கூட மலையை அவளுக்குச் சுற்றிக் காட்டினார்.  இந்திரன் சசிக்கு காட்டுவது போல, அமரனுக்கு இணையான அவர், சீதைக்கு மலைப் பிரதேசங்களை காட்டினார். பத்ரே, ராஜ்யத்தை விட்டு வந்தது,  உற்றாரை பிரிந்து வந்தது இவை கூட இந்த அழகிய மலைச் சாரலைக் கண்ட பின் என் மனத்தை உறுத்துவதில்லை.  எவ்வளவு பறவைகள் பார். இந்த மலை தன் சிகரங்களால் ஆகாயத்தை தொட முயற்சி செய்வது போல இல்லை. இந்த மலை விசேஷமான தா4துக்களை உள்ளடக்கி இருக்கிறது. சில இடங்களில் வெள்ளி  போல பள பளக்கிறது. சில இடங்கள் ரத்தச் சிவப்பாகத் தெரிகிறது. மஞ்சள் பூசியது போல சில இடங்கள் விளங்குகின்றன. சில இடங்களில் உயர்ந்த மணி கணங்கள் போல ஒளி  வீசுகிறது. அர்க்க புஷ்பம் (எருக்கம்பூ) தாழம்பூ, சில ஜ்யோதி ரஸம் என்ற புஷ்பம், இந்த மலையரசனுடைய தேகத்தைப் பிரகாசிக்கச் செய்கின்றன.  ஏற்கனவே தா4துக்கள் நிறைந்தது. பலவிதமான மான் கூட்டமும், பலவிதமான மரங்களும் நிறைந்து துஷ்டத்தனம் என்பதே இல்லாததாக நிர்மலமாக இந்த மலைப் பிரதேசம் விளங்குகிறது. பறவை இனங்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதைப் பார். மா, நாவல், மஞ்சள் சால விருக்ஷம், சிவந்த புஷ்பங்களுடைய லோத்ர மரங்கள், பியால, பலா, த4வ  அன்கோ2ல  பணிந்து நிற்கும் தினிச மரங்கள், வில்வ, திந்து3க, மூங்கில் மரங்கள், காசிமரி, அரிஷ்டவர, மதூ4க, திலக, இலந்தை, நெல்லி, வேம்பு, வேத்ர, தன்வன பீ4ஜகம் என்ற வகை மரங்கள், பூத்துக் குலுங்குவதாக, பழங்கள் நிரம்பியதாக, நிழல் தரும், அழகாக எல்லாமாக இரைந்து கிடப்பதைப் போல வளர்ந்து இந்த மலையின் அழகை கூட்டுகிறது. மலையின் சாரல்களில் வளர்ந்து நிற்கும் இவைகளைப் பார். பிரமிப்பு ஊட்டும் அழகு இது. ஜோடி ஜோடியாக கின்னரர்கள், தங்கள் இஷ்டப் படி விளையாடி மகிழ்கின்றனர். கிளைகளில் கட்டப் பட்டுள்ள வாள்களையும், விசேஷமான ஆடைகளையும் பார். வித்யாதர ஸ்திரீகள், விளையாடும் இடம் போல இந்த இடம் தோன்றுகிறது.  ஒரு பெரிய யானை, மத ஜலம் முகத்தில் பெருக, நிற்பது போல இந்த மலையும் ஆங்காங்கு விழும் அருவிகள்,  சிறு நீர் வீழ்ச்சிகள், நடு நடுவே தெரியும் நீர் நிலைகள் இவற்றுடன் தெரிகிறது. யார் தான் பலவிதமான புஷ்பங்களின் மணத்தை ஏந்தி வீசும் காற்றை ரஸிக்காமல் இருப்பார்கள்.  நாசிகளுக்கு இவை விருந்தானால், குகைகளுக்குள் நுழைந்து வரும் காற்றின் தனித் தன்மை கொண்ட நாதம் காதுகளுக்கு விருந்தாகிறது. நீயும் உடன் இருந்தால், பல சரத் ருதுக்களை இங்கேயே கழிக்க நான் தயார். லக்ஷ்மணனும் இருந்து விட்டால் எந்த வித சோகமும் என்னை பாதிக்காது.  பா4மினீ,  இந்த இடத்தின் அழகில் என் மனதை பறி கொடுத்து விட்டேன். பழ வகைகளும், பூக்களும் நிறைந்த பலவித பக்ஷிகளின் கூக்குரலோடு விசித்திரமான சிகரங்களையுடைய இந்த மலைக்கு ஈடு ஏது? இந்த வன வாசத்தால் எனக்கு இரண்டு லாபம். ஒன்று தந்தையின் வாக்கு பொய்யாகாமல் பரதனுக்கு பிரியமாக நடந்து கொண்டது. இரண்டாவது, வைதே3ஹி, இந்த சித்ர கூட மலையின் அழகை உன்னுடன் சேர்ந்து ரஸிப்பது.  நீ உடன் இருப்பது.  நீ என்னுடன் சேர்ந்து, மனம் வாக்கு காயங்களால் பலவிதமான பாவங்களை உணர்ந்து ரஸிக்கிறாய்.  இதையே தான் அம்ருதம் என்று சொல்வார்களோ. ராஜ ரிஷிகளான பலர் அரசு பதவியை விட  இந்த அனுபவத்தை தான் உயர்வாக சொல்லியிருக்கிறார்கள். வன வாசம் சென்ற என் மூதாதையர்கள் இந்த அனுபவத்தை உணர்ந்து இருக்க வேண்டும்.  மலையின் கற்கள் கூட அழகு. அகலமாக நூற்றுக் கணக்காக காணப் படுகின்றன. பலவித வர்ணங்களில் நீலம், மஞ்சள், வெண்மை, இளம் சிவப்பு நிறக் கற்கள். இரவில் பார்க்கும் பொழுது அக்னி ஜ்வாலை போல தெரிகின்றன. ஆயிரக்கணக்கான மூலிகைகள், அவைகளின் பிரகாசத்தாலேயே இனம் கண்டு கொள்ளலாம் எனும் படி ஒளி  வீசுகின்றன. சில இடங்களில் வழுக்குகின்றன. சில இடங்கள் உத்யான வனம் போல, சில ஒற்றைக் கல்லாகத் தெரிகிறது, இந்த மலையின் விசேஷம் இது. பூமியை பிளந்து சித்ரகூட மலையை செருகி வைத்தது போல இருக்கிறது. சித்ரகூடத்தின் மத்யபிரதேசம் இது. நாலா திசைகளிலும் சுப4மாகவே தெரிகிறது. புன்னாக3, சதகர, பூர்ஜ இலைகள் பூமியை மூடி காமிகளுக்கு இயற்கையாக படுக்கை விரித்து வைத்திருப்பது போல இந்த புல் தரை  இருப்பதைப் பார்.  கமல புஷ்பத்தின் மகரந்தம் ம்ருதுவாக இரைந்து கிடப்பதைப் பார். காமிகளுக்கு பலவித பழங்கள், செல்வம் நிறைந்த இந்த சித்ர கூட மலை வட பிரதேசத்து மலைகளையும் மிஞ்சி விட்டது. பலவிதமான நீர் நிலைகளும், பழங்களும், மூலங்களும் இதிலும் நிறைந்துள்ளன. சீதே, உன்னோடும், லக்ஷ்மணனுடனும் இங்கு வசிக்கும் காலத்தை ரஸித்தபடி குலதர்மத்தை வளர்க்கும் விதமாக, நல்லவர்களின் வழியில், என் நியமங்களை தவறாமல் செய்தபடி  கழிப்பேன்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சித்ரகூட வர்ணனா என்ற தொன்னூற்று  நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 95(172) மந்தா3கினி வர்ணனை

 

மலைகளைக் கடந்து நடந்து வந்த ராமனும், சீதையும் மந்தாகினி நதியைக் கண்டனர்.   அந்த அழகிய நதியை சீதைக்கு காட்டிய ராமர் அவளிடம் சொன்னார். சந்திரன் போன்ற அழகிய முகமுடைய விதேஹ ராஜ குமாரியிடம் இந்த காட்சிகளைக் காட்டி விவரித்தார். விசித்ரமான மணலையுடைய அந்த நதியில் ஹம்சங்களும், ஸாரஸ பக்ஷிகளும் விளையாடின. ஆங்காங்கு தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின. பலவிதமான, நதிக் கரையில் வளரும் மரங்கள், பழங்களுடனும், பூக்களுடனும் அழகுற விளங்கின. மான் கூட்டமாக வந்து நீரைப் பருகி அதைக் கலங்கச் செய்திருந்தன. அழகிய இந்த தீர்த்தம் என் மனதில் ஆசையை உண்டு பண்ணுகிறது. ப்ரியே, சீதே, இந்த நதியில் ஜடை முடி தரித்து வல்கலை மரவுரி தரித்தவர்களாக ரிஷிகள் ஸ்னானம் செய்வர். கைகளை உயரத் தூக்கியவர்களாக, சூரிய நமஸ்காரம் செய்வர். இந்த முனிகள் தங்கள் விரதங்களை அனுஷ்டிப்பதில் மிகவும் தீவிரமானவர்கள். விசாலாக்ஷி, காற்று இதன் சிகரங்களில் மோதி திரும்பும் போது இந்த மலைச் சிகரங்கள் நடனமாடுவது போல தோற்றமளிக்கின்றன. மரங்களிலிருந்து இலைகளும், புஷ்பங்களும் விழுந்து நதியை மூடி மறைக்கின்றன. சில இடங்களில் தண்ணீர் ரத்னம் போல்  தெளி வாக, சில இடங்களில் மண் கலங்கலாக, சில இடங்களில் சித்தர்கள் நிரம்பியும், இந்த மந்தாகினி நதியைப் பார்.  நீரில் விழுந்த புஷ்பம் குவியலாக காற்றில் நகர்ந்து செல்வது,  ஜல மத்தியில் படகு செல்வது போல இல்லை. இந்தப் பறவைகளைப் பார். கீச் கீசென்று மழலை பேசும் இவை, கூவிக் கொண்டே மலை மேல் ஏறுவது போல போவதைப் பார்.  இந்த சித்ரகூட மலை, மந்தாகினி நதி இவைகளைப் பார்த்து நகர வனத்தை விட இதுவே மேல் என்று நினைக்கிறேன். உன் அருகாமையும் இருப்பதால். குற்றமற்ற சித்தர்கள், தவமே தனமாக உடையவர்கள், தமம், சமம் என்னும் நற்குணங்களையுடைய சித்தர்கள், புழங்கும் இந்த  ஜலத்தில் என்னுடன் நீயும் இறங்கி விளையாடி மகிழ்வாய்.  இந்த மந்தாகினி நதியை சகியாக எண்ணி மகிழ்ச்சியுடன் நீரில் இறங்கு.  தாமரை மலர்களை மூழ்கச் செய்யும் குளங்களையும் பார். பாமினி, ஊர் ஜனங்களைப் போல் இந்த மதம் பிடித்த யானைகளையும், அயோத்தி தான் இந்த பர்வதம் என்றும் நினைத்துக் கொள். இந்த மந்தாகினி நதியை சரயூ நதியாக பார். தர்மாத்மாவான லக்ஷ்மணன் என் ஆணைப் படி நடக்கச் சித்தமாக இருக்கிறான். நீயும் எனக்கு அனுகூலமாக இருக்கிறாய். இதுவே போதும். என் மனம் நிறைந்து இருக்கிறது. மூன்று வித யாகங்களை செய்தபடி தேன் பழம் இவற்றையே ஆகாரமாகக் கொண்டு, அயோத்தியும் வேண்டாம், ராஜ்யமும் வேண்டாம் நீ அருகில் இருக்கும் இதுவே போதும். நான் சந்தோஷமாக இருப்பேன். இந்த ரம்யமான ஜலத்தில் யானைக் கூட்டங்கள் வந்து கொட்டமடிக்கின்றன. இந்த ஜலத்தைக் குடிக்க யானை, சிங்கம், வானரங்கள் எல்லாமே வருகின்றன. பூக்கும் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன.  அதுவே அலங்காரமாகத் தெரிகிறது. இங்கு வருபவன் யாரானாலும், களைப்பு நீங்கி சுகமாக இருப்பான் என்பதில் சந்தேகமில்லை.  நதியை இப்படி ரசித்து மனைவியுடன் சேர்ந்து அனுபவித்து விட்டு, கண் மை போல கருத்து அடர்ந்து இருந்த சித்ர கூட மலைச் சாரல்களில் உலாவினான், ராமன், ரகு வம்சத்தை விளங்கச் செய்ய வந்த ராஜ குமாரன்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் மந்தா3கினி வர்ணனா என்ற தொன்னூற்று ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 96 ( 173) லக்ஷ்மணக்ரோத4: (லக்ஷ்மணனின் கோபம்)

 

மைதிலிக்கு இயற்கையின் சௌந்தர்யத்தை சுற்றிக் காட்டி விட்டு, ஓரிடத்தில் அமர்ந்து மாமிசங்களைக் கொடுத்து அவளை மகிழ்விக்கலானார்.  இதோ பார், இது மேத்யம். இது ருசியாக உள்ளது. இது அக்னியில் நன்றாக வெந்திருக்கிறது என்று சொல்லிச் சொல்லி பார்த்து பார்த்து சீதைக்கு உபசரித்துக் கொடுத்தார்.  இவ்வாறு இவர்கள் இங்கு அமர்ந்திருந்த பொழுது, சைன்யத்தின் சப்தமும், புழுதியும் ஆகாயத்தை நிறைத்தன. இந்த பெரும் சத்தத்தைக் கேட்டு நடுங்கிய பறவைகள், நால் திசைகளிலும் பறந்தன. சைன்யத்தினால் உண்டான இந்த சப்தத்தை ராகவன் கேட்டான். ஓடி வரும் படைத் தலைவர்களையும் கண்டான். நாற்புறமும் ஓடும் வீரர்களையும், அதனால் எழுந்த ஆரவாரத்தையும் கேட்டு,  லக்ஷ்மணனைக் கூப்பிட்டு ராமர் விசாரித்தார். சுமித்ரை பெற்ற நற்செல்வமே, லக்ஷ்மணா, இந்த பயங்கர சப்தத்தைக் கேட்டாயா?. கம்பீரமாக, இரைச்சலாக வரும் இந்த சத்தம் எதனால் இருக்கும்? காட்டில் யானைகள் சிங்க கூட்டங்களுக்கு பயந்து அலறி ஓடுகின்றனவா? எருமைகளே பயந்து அலறும் சத்தமா? திடுமென சிங்கம் வந்து தாக்கியதால் மான் கூட்டம் உயிருக்குப் பயந்து ஓடுகின்றனவா. ஏதாவது அரசனோ, அரசகுமாரனோ வேட்டையாட வந்திருக்கிறார்களா? அவர்களுடைய நாய்கள் குரைக்கும் சத்தமா? சௌமித்ரே, தெரிந்து கொண்டு வா. இந்த மலையில் நடமாடுவது கஷ்டம். பறவைகள் கூட தடுமாறக் கூடிய அளவு அடர்ந்த காட்டுப் பிரதேசம். எல்லா விவரங்களும் தெரிந்து கொண்டு வா. உடனே லக்ஷ்மணன் அவசரமாக அருகில் இருந்த சால மரத்தில் ஏறி எல்லா திக்குகளிலும் பார்வையை செலுத்தியபடி கிழக்கு திசையில் நோக்கினான். அங்கு பெரும் சேனையைக்  கண்டான். ரத, கஜ, துரக, பதாதி என்ற நால் வகை சேனைகளும் முன்னேறி வரக் கண்டான். குதிரைகள் யானகள் நிறைந்த ரதங்கள், கொடிகள் மேலே பறக்க, போர்க் கால சேனையாக நினைத்து ராமரிடம் சொன்னான். அக்னியை அணைத்து வையுங்கள் அண்ணா, சீதையை பாதுகாப்பாக குகைக்குள் இருக்கச் சொல்லுங்கள். உங்கள் வில்லையும், அம்பையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். கவசத்தை எடுத்து அணிந்து கொள்ளுங்கள். யார் படை என்று நினைக்கிறாய் என்று  ராமன் வினவ, நன்றாக பார்த்து விட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி ஊன்றி கவனித்த லக்ஷ்மணன், கண்களாலேயே எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டு, கண்களில் அனல் பறக்க ரோஷத்துடன்  பல்லைக் கடித்தபடி சொன்னான். ராஜ்யம் கையில் கிடைத்து முடி சூட்டிக் கொண்டவுடன், இடையூறு இன்றி ராஜ்யம் பூராவும் ஆள விரும்பி, கைகேயி புத்திரனான பரதன் தான் நம்மைக் கொல்ல வந்து கொண்டிருக்கிறான். இந்த மிகப் பெரிய சேனையுடன்,  லக்ஷ்மீகரமாக கோவிதா3ரக் கொடியை உடையது, உயர்ந்த மேல் பாகம் கொண்ட ரதங்கள் தெரிகின்றன. இதோ இஷ்டம் போல் குதிரைகளில் ஏறிக் கொண்டு வேகமாக வரும் வீரர்கள், இதோ சந்தோஷமாக யானைகளை நடத்திக் கொண்டு வரும் மாவுத்தர்கள், வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் இருவரும் வில்லேந்தி மலையடிவாரம் செல்வோம். அல்லது இங்கேயே நிற்போம். தயாராக, ஆயுதங்களை கையில் ஏந்தியபடி. இந்த கோவிதார த்வஜத்தையுடையவன் இன்று நம் வசம் வந்து சேருவான். இதோ பரதனை பார்க்கப் போகிறோம். எவன் காரணமாக இந்த வன வாச துக்கத்தை நீ அடந்தாயோ, சீதையும், நானும். சாஸ்வதமான ராஜ்யம் தானாக உன்னை வந்து அடைய வேண்டியது, எதனால் பறிக்கப் பட்டதோ, அந்த காரணமான பரதன் வந்து கொண்டிருக்கிறான். இவன் சத்ரு. இவனை வதைக்கத் தான் வேண்டும். பரதனை வதம் செய்வதில் எந்த தோஷமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. முதலில் கெடுதல் செய்தவனை வதைப்பதில் எந்த தோஷமுமில்லை.  பரதன் தர்மத்தின் விதியையும் மீறியவன். இவனை நான் வதைத்தபின் நீ ராஜ்யத்தை அடைந்து ஆட்சி செய்வாய். ராஜ்யத்தை அடைய பேராசைக் கொண்ட கைகேயி இன்று புத்திரனை இழந்து தவிக்கட்டும். மரத்தை யானை நடுவில் முறித்தது போல பரதனை நான் யுத்தத்தில் அடித்து வீழ்த்துவதைப் பார்த்து வருந்தட்டும் இந்த கைகேயியையும் அவள் சுற்றத்தார், பந்துக்களோடு அழித்து விடுகிறேன். இந்த பூமிக்கு ஏற்பட்ட களங்கம் விலகட்டும். இன்று இந்த கோபமும், நமக்கு ஏற்பட்ட அவமரியாதையும் விலகச் செய்கிறேன். அறைக்குள் நெருப்பு போல இந்த சைன்யம் அழியச் செய்கிறேன். இன்று இந்த சித்ரகூட மலைச் சாரலில் உள்ள காடுகளில், கூர்மையான பாணங்களால் சத்ரு சரீரங்களை பிளந்து ரத்தம் ஆறாக பெருக்கெடுத்து ஓடச் செய்கிறேன். என்னுடைய சரங்கள் (அம்பு) தைத்து யானைகளும் குதிரைகளும் மார்பு பிளந்து விழ, மனித உடல்களையும் சேர்த்து நாய்கள் மொய்க்கட்டும். பெரும் யுத்தத்தில், என்னுடைய வில்லும், அம்பும் பொய்த்ததே இல்லை. சைன்யத்தோடு இந்த பரதனை வீழ்த்துவேன், சந்தேகமே இல்லை என்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் லக்ஷ்மணக் க்ரோதோ என்ற தொன்னூற்று ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 97 (174) பரத குண ப்ரசம்சா (பரதனின் குணத்தை மெச்சுதல்)

 

கோபத்துடன் யுத்தம் செய்ய தயாராக கிளம்பி விட்ட லக்ஷ்மணனைப் பார்த்து அவனை சமாதானப் படுத்தும் விதமாக ராமர் சொல்ல ஆரம்பித்தார். இப்பொழுது வில், அம்பு இவற்றால் என்ன பயன்? கவசங்களும் எதற்காக? பரதன் தானே வந்திருக்கும்பொழுது, லக்ஷ்மணா, யோசித்துப் பார். அப்பாவிடம் சத்யம் செய்து வனம் வந்து விட்டு, பின்னாலேயே பரதனைக் கொன்று ராஜ்யத்தை அபகரித்து என்ன செய்வேன்? அபவாதம் தான் மிஞ்சும். இது என்ன நியாயம்.? எந்த ஒரு செல்வம் நம் பந்துக்களுக்கோ, நண்பர்களுக்கோ நஷ்டத்தைத் தருமானால், அது எனக்கு வேண்டாம். விஷம் கலந்த உணவு பண்டத்தை நிராகரிப்பது போல இதையும் நிராகரிப்பேன். தர்மம், அர்த்தம், காமம் இவற்றை உங்கள் பொருட்டு நான் ஏற்றுக் கொள்வேன். இது சத்யம். சகோதரர்களை சேர்த்து வைத்துக் கொள்ளவும், அவர்கள் நன்மைக்காகவும் லக்ஷ்மணா, நான் ராஜ்யத்தையும் விரும்பினேன். அதைக் காக்க ஆயுதம் எடுப்பேன். சாகரத்தை ஆடையாக உடைய இந்த பூமி எனக்கு அடைய முடியாதது அல்ல. அதர்ம வழியில் இந்திர பதவி கிடைத்தாலும் வேண்டாம். பரதனும், நீயும், சத்ருக்னனும் இல்லாமல் எனக்கு ஒரு சுகம் உண்டானால் அதை அக்னி பஸ்மமாக்கட்டும். நான் என்ன நினைக்கிறேன் என்றால், பரதன் அயோத்தியிலிருந்து என் உயிருக்கும் மேலான சகோதர பாசம் நிறைந்தவன், குல தர்மத்தை மனதில் கொண்டு இங்கு வந்திருக்கிறான். இப்பொழுது தான் கேள்விப் பட்டிருக்கிறான். நீயும், நானும்  ஜடா முடி தரித்து ஜானகியுடன் வனம் வந்துள்ளோம் என்று அறிந்து, ஸ்னேகத்துடன் காண வருகிறான். அவன் உள்ளம் முழுவதும் நம்மிடம் அன்பும், உடல் நம்மை பிரிந்த சோகத்தால் வாடியும், நம்மைக் காண வருகிறானே அன்றி வேறு எதுவும் விரும்பியவனாக எனக்குத் தெரியவில்லை. தாய் கைகேயியிடம் கடுமையாக பேசி வாதிட்டு, தந்தையை சம்மதிக்கச் செய்து, ராஜ்யத்தை எனக்கு கொடுக்க வருகிறான். இப்பொழுதுதான் சமயம் கிடைத்து பரதன் நம்மைக் காண வருகிறான். மனதால் கூட நமக்கு கெடுதலை நினைக்க மாட்டான். எப்பொழுதாவது, பரதன் உனக்கு பிரியமில்லாததை செய்திருக்கிறானா?   இப்படி ஒரு பயம் பரதனிடத்தில் உண்டாகக் காரணம் என்ன? ஏன் சந்தேகம்? பரதனைப் பற்றி கடுமையாக பேசாதே. அவனைத் தூற்றாதே. பரதனை தவறாக விமரிசித்து நீ பேசினால் நானும் அதை ஒத்துக் கொண்டு கடுமையாகப் பேசினதாக ஆகும். என்ன ஆபத்து வந்தாலும், புத்திரர்கள், தந்தையைக் கொல்வது என்ன நியாயம்?   அல்லது தன் (ரத்தமான) ப்ராணனான சகோதரனை மற்றொரு சகோதரனே கொல்வதும் என்ன நியாயம்? ராஜ்யத்தின் காரணமாகத் தான் நீ இவ்வளவு பேசினாய் என்றால், பரதனைக் கண்டதும் நான் சொல்கிறேன், ராஜ்யத்தை இவனுக்கு கொடு என்று.  நான் பரதனிடம் ராஜ்யத்தை லக்ஷ்மணனுக்கு கொடு என்று சொன்ன மாத்திரத்தில் லக்ஷ்மணா, உடனே சரி என்று தான் சொல்வான்.  இவ்வாறு தர்ம சீலனான ராமன் தனது நன்மைக்காக சொல்வதைக் கேட்டு லக்ஷ்மணன், வெட்கத்தால், தன் சரீரத்திற்குள்ளேயே நுழைந்தது போல ஆனான். வெட்கத்துடன், லக்ஷ்மணன் பதில் சொன்னான். அல்லது தந்தையே உன்னைக் காண வருகிறார் போலும் –  வெட்கத்துடன் உடல் குறுக நிற்கும் லக்ஷ்மணனைப் பார்த்து ராமர் நீ சொல்வது சரிதான். பெரியவர் தான் நம்மைக் காண வருகிறார். அல்லது, நாம் இருவரும் சுகமாக இருந்து பழகியவர்கள், இங்கு என்ன சிரமப் படுகிறோமோ என்று  வீட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்ல வந்திருக்கலாம் அல்லது மிக கோமளமான சீதை, கொண்டாடி வளர்க்கப் பட்டவள், அவளை மட்டுமாவது திரும்ப அழைத்துச் செல்லலாம் என்று வந்திருக்கலாம். இதோ தெரிகிறது பார், வேகமாக ஓடும், நல்ல ஜாதிக் குதிரைகள், பார்க்கவும் அழகாகவும் இளம் வயது குதிரைகள், காற்று வேகத்தில் பறக்கக் கூடிய உத்தமமான குதிரைகள், இதன் உடல் பாரத்தால் பூமியே நடுங்குகிறது, அப்படிப் பட்ட  சத்ருஞ்சயன் என்ற யானை இதுவும் வயது முதிர்ந்த நம் தந்தையின் உடமைகள். வெண் குடையை காணவில்லை. உலகிலேயே மிகச் சிறந்ததாகச் சொல்லப் பட்டு மரியாதை செய்யப் படும் வெண் குடை இல்லாதது கவலையாக இருக்கிறது. மரத்திலிருந்து இறங்கு லக்ஷ்மணா, நான் சொல்வது போல செய். ராமர் இவ்வாறு சொல்லவும், சால மரத்தின் உச்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மணன் இறங்கி வந்தான். ராமன் அருகில் நின்று கொண்டு சேனை வரும் திசையில் பார்வையைச் செலுத்தினான். இங்கு பரதன் தன் வீரர்களுக்கு ஆர்பாட்டம் எதுவும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டு, எதிரில் மலையின் அடிவாரத்தில் சேனையை நிறுத்தி இருக்கச் செய்தான்.  பாதி இக்ஷ்வாகு சேனை, பர்வதத்தின் யோசனை தூரம் அடைத்து நிற்க, பக்கத்தில் குதிரைகளும், யானைகளும், ரதங்களும் நிறுத்தப் பட்டன. இந்த சேனை கர்வத்தை விட்டு, அடக்கமாக ரகு நந்தனனை மகிழ்விக்க, நீதி மானான பரதன் நடத்திச் செல்கிறான் என்பதற்கேற்ப,  கட்டுப் பாடுடன் விளங்கியது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத குண ப்ரசம்ஸா என்ற தொன்னூற்று ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 98 (175) ராமான்வேஷணம் (ராமனைத் தேடுதல்)

 

சேனையை அணிவகுத்து நிறுத்தி வைத்து விட்டு, தான் கால் நடையாக சென்று காகுத்ஸனைக் காண விரும்புவதாக குரு ஜனங்களிடம் சொன்ன பரதன், சத்ருக்னனைக் கூப்பிட்டுச் சொன்னான். இந்த காடு முழுவதும் சீக்கிரம் தேட ஏற்பாடு செய். இந்தக் காட்டில் வசிக்கும் ஜனங்கள் உதவியோடு, வேடர்கள் உதவியோடும், நன்றாகத் தேடு. ஆயிரக் கணக்கான தன் உறவினர்களுடன் குகன் வில்லையும் அம்பையும் ஏந்திக் கோண்டு ராமனைத் தேடிச் செல்லும் நம்முடன் வரட்டும். மந்திரிகள், குரு ஜனங்கள், ஊர் ஜனங்கள், பிராம்மணர்கள் எல்லோரும் சூழ்ந்து வர, காடு முழுதும் கால் நடையாகச் சென்று அலசுவேன். ராமனையோ, லக்ஷ்மணனையோ, சீதையையோ பார்க்காதவரை எனக்கு அமைதி கிடைக்காது. சந்திரனை ஒத்த அந்த அழகிய முகத்தை காணாத வரை என் சகோதரனின், தாமரை இதழை ஒத்தக் கண்களைக் காணாத  வரை எனக்கு சாந்தியில்லை. என் சகோதரனின் பாதங்களில் வீழ்ந்து தலையால் வணங்காதவரை என் உள்ளத்திற்கு அமைதியில்லை. ராஜ்யத்திற்கு உரிமையுடையவனான ராமன் தன் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாதவரை,  தந்தை,பாட்டன் வழி வந்த ராஜ்யத்தை ஏற்று முடி சூட்டிக் கொள்ளாத வரை என் உள்ளத்திற்கு நிம்மதியில்லை. சௌமித்ரி பாக்யசாலி. அவன் தான் தினமும் ராஜீவாக்ஷணான ராமனின் முகத்தைப் பார்க்கிறான். நிர்மலமான சந்திரனை ஒத்த முகத்தை தரிசிக்கிறான். ஜனகன் மகளான வைதேஹியும் புண்யம் செய்தவள். சாகரத்தை எல்லையாக கொண்ட பூமியை ஆளும் பர்த்தாவை பின்  தொடர்ந்து செல்கிறாள்.  இந்த சித்ரகூட மலையும், புண்ணியம் செய்தது. மலைகளுக்கு அரசன் போன்ற இந்த மலை. ஏனெனில்  நந்த3னத்தில் குபேரன் வசிப்பது போல இதில் காகுத்ஸன் வசிக்கிறான்.  இந்த நுழைய முடியாத காடும் புண்ணியம் செய்தது. காட்டு யானைகளுக்கு இருப்பிடமாக இருந்தது, இப்பொழுது வில்லாளிகளுள் சிறந்த

வில்லாளியான ராமனுக்கு இடம் தந்துள்ளது. இவ்வாறு சொல்லிக் கொண்டே பரதன் நடந்தே வனத்தினுள் சென்றான். பூத்துக்குலுங்கும் மரங்கள் அடர்ந்த வழியாகவே நடந்து, பூக்கள் நிரம்பிய அதே சால மரத்தை வந்தடைந்தனர். அங்கிருந்தபடியே ராமர் ஆசிரமத்திலிருந்து எழும் புகை மூட்டத்தைக் கண்டான். அதைக் கண்டதும் பரதன் ஆனந்த பரவசம் அடைந்தான். சமுத்திரத்தைக் கடந்து சென்று விட்டவன் போல. இதோ ராமன் இருக்கும் இடம் கண்டு பிடித்து விட்டேன் என்று மகிழ்ந்தான். புண்ய ஜனங்கள் வந்து போகும், ராமருடைய ஆசிரமத்தை, சித்ரகூட மலையில் கண்டு கொண்ட பரதன், குகனை உடன் அழைத்துக் கொண்டு வேகமாக செல்ல, அவன் சேனை தொடர்ந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராமான்வேஷணம் என்ற தொன்னூற்று எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம்  99 (176) ராம சமாக3ம: (ராமரை சந்தித்தல்)

 

சேனையைப் பார்த்து செய்ய வேண்டியதை சொல்லி விட்டு, உற்சாகமாக பரதன் சத்ருக்னனையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றான்.  வசிஷ்ட முனிவரிடம், தாய்மார்களை பார்த்து சீக்கிரம் அழைத்து வாருங்கள் என்று சொல்லி விட்டு தான் முன்னே சென்றான்.  சுமந்திரரும் சத்ருக்னனை சற்று தொலைவிலிருந்தபடியே பின் தொடர்ந்தார். அவருக்கும் பரதனை போலவே, ராமனைக் காணும் ஆவல் மிகுந்திருந்தது. போய்க் கொண்டே பரதன் தபஸ்விகள் தங்கியிருக்கும் பர்ண சாலையையும் குடிசையையும் கண்டான். பர்ணசாலை வாசலில் வெட்டி வைக்கப் பட்டிருந்த விறகுகளையும், பறித்து வைக்கப் பட்டிருந்த புஷ்பங்களையும் கண்டனர். ஆசிரமத்தில் நுழையப் போன சமயம் ராமனுடையதும், லக்ஷ்மணனுடையதுமான அடையாள சின்னங்களைக் கண்டனர்.  தர்ப்பைகளும், சிறிய சிறிய கட்டாக நிறைய கட்டி வைக்கப் பட்டிருந்தன. ஒரு புறம் பசு எருமை சாணி குவிக்கப் பெற்று வரட்டிகள் தட்டப் பட்டு இருந்தன. இதை பார்த்து பரதன், சத்ருக்னன், மந்திரிகளைப் பார்த்து, பரத்வாஜர் சொன்ன இடம் வந்து சேர்ந்து விட்டோம் போலத் தெரிகிறது. மந்தாகினி நதியும் அதிக தூரத்தில் இல்லை. இதோ அருகில் வந்து விட்டதாக அறிகிறேன். உயரத்தில் உலர்த்தப் பட்ட மரவுரி ஆடை லக்ஷ்மணனால் கட்டப் பட்டிருக்க வேண்டும். வழி தவறி விடக் கூடாது என்பதற்காக, அகாலத்தில் வரும் பொழுது அடையாளமாக இருக்க  இப்படிச் செய்திருக்கிறான். இதோ பெரிய தந்தங்களையுடைய யானைகள், வேகமாக நடை போட்டுக் கொண்டு மலையடிவாரத்தில் அன்யோன்யமாக பிளிறும் சத்தம் கேட்கிறது.   வனத்தில் வசிக்கும் முனிவர்கள் எப்பொழுதும் பாதுகாத்து வரும் அக்னி புகை, கரும் நிறமாக தெரிகிறது. மகரிஷியைப் போன்ற ராகவனை, புருஷவ்யாக்ரன் என்று புகழ் பெற்றவனை, குருவின் சம்ஸ்காரத்தை தொடர்து செய்பவனை இன்று இங்கு காணப் போகிறேன்.  இன்னும் சற்று நேரம் நடந்தபின் (ஒரு முஹுர்த்தம்) மந்தாகினீ நதியை அடைந்தவுடன், உடன் வந்தவர்களிடம் பின் வருமாறு சொன்னான். வீராசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்ய உரிமை பெற்றவன், இந்திரன் போன்றவன் இந்த ஜன சஞ்சாரமில்லாத காட்டில் வசிக்கிறான் என்று கண்டும் நான் உயிருடன் இருக்கிறேனே, என்னால் தான் இந்த கஷ்டம் வந்தது. லோக நாயகனாக விளங்க வேண்டியவன் எல்லா சுகங்களையும் தியாகம் செய்து வனத்தில் வசிக்க வந்துள்ளான். இன்று அவன் கால்களில் விழுந்து சமாதானம் செய்யப் போகிறேன். இப்படி புலம்பிக் கொண்டே அந்த பர்ண சாலையை,  ரம்யமாக அமைக்கப் பட்டு சால, தால, அஸ்வ கர்ண இலைகள் நிறைய வைத்துக் கட்டப் பட்டிருந்ததைக் கண்டனர். விசாலமாக, புற்கள் நிரம்பி இருந்த விஸ்தீர்ணமான பகுதியைக் கண்டனர். யாக சாலையின் நடுவில் வேதி போல, ஒரு இடம். ராமனுடைய வாசஸ்தலத்தில் கிழக்கு மேற்காக கட்டப் பட்டு, விசாலமாக அக்னி பிழம்பு ஜ்வலிக்க இருக்கக் கண்டான். கூட்டமாக வரும் மிருகங்கள் எளிதில் நுழைய முடியாதபடி சிங்க குகை போலவும், தோலால் ஆன கவசம் வேலைப் பாடு செய்யப் பெற்று, தங்கத்தின் துளி  தெளிக்கப் பெற்றது போல,  ரக்த பிந்துக்களையுடைய மான் தோல்  ஆசனங்கள். இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கு சமமான சரங்களை தாங்கி நிற்கும் தூணிகள்,  தங்க முலாம் பூசப் பெற்றது போன்ற சத்ருக்களை வதைக்கும் சூரிய கிரணங்கள் போல ஒளி  வீசும் அம்புகள். அதன் தூணியில் வைக்கப் பெற்று இருந்ததையும், ஸர்ப்பங்கள் நிற்பது போல கூர்மையான முகம் உடைய வெண்ணிறத்தில் உரைகளுடன் கூடிய கத்திகள் ஒருபுறம், இவற்றையும் கண்டனர். குருவை ஒரு முறை பார்த்து விட்டு பரதன் குடிசையின் உள்ளே நோக்கினான். ஜடா முடி தரித்து அமர்ந்து இருக்கும் ராமனைக் கண்டான். க்ருஷ்ணாஜினம் என்ற மான் தோல் ஆசனத்தில் மரவுரி ஆடையில் ராமனைக் கண்டான். அக்னியால் சூழப் பெற்றவன் போல் பிரகாசிக்கும் அண்ணலைக் கண்டான். சிங்கம் போன்ற உயர்ந்த தோள்களும், நீண்ட கைகளும், தாமரை மலரைப் போன்ற கண்களும், சாகரம் வரையிலான பூமிக்கு நாயகனான தர்ம சீலனை, ப்ரும்மா போன்று அமர்ந்திருக்கும் ராமனைக் கண்டான்.  புல்லை விரித்து போட்டு, தரையில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மணனையும், சீதையையும் கண்டான். அவனைக் கண்டதும் பரதன் ஒரே ஓட்டமாக ஓடி, வாய் வார்த்தை வராமல், தைரியத்தை இழந்தவனாக,   துக்கத்துடன் அழ ஆரம்பித்தான். அழுகையினூடே சொன்னான். எவனை, சபையில் பிரஜைகள் வந்து வணங்கி உபசரிக்கத் தகுந்தவனோ, அவன் எனக்கு முன் காட்டு மிருகங்கள் சூழ நிற்கிறான். ஆயிரக் கணக்கான ஆடை ஆபரணங்களுடன் முன்பு வாழ்ந்தவன் இப்பொழுது க்ருஷ்ணாஜினம் தரித்து தர்மத்தை நடத்திக் காட்டும் விதமாக வாழ்ந்து வருகிறான்.  எந்த தலையில் வித விதமாக புஷ்பங்கள் சூடி மகிழ்ந்தானோ, அதில் ஜடா முடி தெரிகிறது. எவன் யாகம் செய்தால், தேவையான பொருட்கள் குவித்து வைக்கப் படுமோ, அவன் தன் உடல் உழைப்பால் பொருட்களைச் சேர்த்து தர்மத்தை நிலை நிறுத்துகிறான். சந்தனம் பூசப் பெற்று விளங்கும் அண்ணலின் சரீரம் இப்பொழுது மண்ணில் நடமாடி அழுக்காகத் தெரிகிறது. எப்படி பொறுத்துக் கொள்கிறாரோ. சுகத்தில் திளைக்க வேண்டிய ராமன், என் பொருட்டு இந்த கஷ்டங்களை அனுபவிக்கிறார்.  என் வாழ்க்கையே வீண். உலகோர் தூற்றும் படியான கொடியவன் நான். இவ்வாறு புலம்பிக் கொண்டு வியர்வை முகத்தில் வழிய, ராமனது பாதம் கைகளுக்கு எட்டும் முன்பே பூமியில் விழுந்தான். துக்கத்தால் பீடிக்கப் பட்ட பரதன், ஆர்யே, என்று தீனமாக ஒரு வார்த்தை பேசியதோடு சரி. மேற் கொண்டு எதுவும் பேச முடியாமல் தேம்பினான். கண்ணீர் பெருக, தொண்டையடைக்க விம்மல் தான் வந்ததேயன்றி, ஒரு வார்த்தை கூட எழும்பவில்லை. சத்ருக்னனும் ராம பாதத்தில் விழுந்து வணங்கினான். அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்ட ராமனது கண்களிலும் நீர் பெருகியது. இதற்குள் சுமந்திரரும், குகனும் வந்து சேர்ந்தனர். ஆகாயத்தில், சூரியனும், சந்திரனும், சுக்ர ப்ருஹஸ்பதிகளும் சேர்ந்து இருந்ததைப் போல இருந்தது. பெரும் யானை பூட்டிய ரதத்தில் படைத்தலைவர்களாக விளங்கக் கூடிய உரிமை பெற்ற அச்சகோதரர்கள், ராஜ குமாரர்கள், பெரும் வனத்தில்  காட்டு ஜனங்கள் இடையே நிற்பதைக் கண்டு மகிழ்ச்சியின்றி, அனைவரும் கண்களில் நீர் பெருக நின்றனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராம சமாகம: என்ற தொன்னூற்று ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம்  100 (177) கச்சித் சர்க: (கேள்விகள்)

 

ஜடா முடி தரித்து, உடல் இளைத்து, கூப்பிய கைகளுடன் தரையில் வீழ்ந்து வணங்கிய பரதனை, யுக முடிவில்  சூரியனைக் கண்டது போல ராமர் கண்டார். அவனை வாரியெடுத்து, அணைத்து, உச்சி முகர்ந்து அருகில் அமர்த்திக் கொண்டபின், வினவினார். தந்தை எப்படி இருக்கிறார்? நீ ஏன் வனம் வந்தாய்? அவர் உயிரோடு இருக்கும் பொழுது நீ காட்டிற்கு வருவது சரியல்ல. வெகு தூரத்திலிருந்து வந்திருக்கிறாய். பல நாட்கள் கழித்து உன்னைப் பார்க்கிறேன். நுழையமுடியாத இந்த அரண்யத்தில்  எதற்காக வந்தாய்? நீ இங்கு வருவதற்கு தந்தை அனுமதித்தாரா? அவருக்குத் தெரியுமா? தீனனாக, தந்தை பரலோகம் சென்று விடவில்லையே? பாலன் நீ, உன் கையிலிருந்து ராஜ்யம் நழுவி விட்டதா? தந்தைக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை முறையாக செய்து வருகிறாயா? ராஜா தசரதன் நலமாக இருக்கிறாரா? சத்ய சந்தன் அவர். ராஜ சூய, அஸ்வமேத யாகங்களை தர்ம விதிப்படி செய்தவர். தர்ம சிந்தனையுள்ள நல்ல சக்தி வாய்ந்தவர் நம் தந்தை. அவர் பிராம்மணர்களையும். வித்வான்களையும், இக்ஷ்வாகு குல உபாத்யாயர்களை வழக்கம் போல் உபசரிக்கிறாரா? தாய்மார்களான கௌசல்யை, சுமித்ரா, (நல்ல ப்ரஜையைப் பெற்றவள்), இவர்களும், சுகத்தையே விரும்பும் கைகேயியும் நலமா?  கைகேயி மகிழ்ச்சியுடன் இருக்கிறாளா? புரோஹிதரை மரியாதையுடன் நடத்துகிறாயா? அவர் வினயமும், நற்குல பிறப்பும், கல்வி கேள்விகளில் சிறந்தவரும், அசூயையற்றவரும், வருவதை முன் கூட்டியே சொல்லும் சக்தி படைத்தவரும் ஆவார். அக்னி காரியங்களில், நல்ல புத்திமான்களாகவும், விதி முறைகளை அறிந்தவர்களுமாக நியமித்து வைத்திருக்கிறாயா? ஒரு சிலர் தான் இதுவரை  ஹோமம் செய்ததையும், இனி செய்ய வேண்டியதையும் அறிந்திருப்பார்கள். தேவர்களையும் பித்ருக்களையும் பூஜிக்கிறாயா? தந்தைக்கு சமமான வயது முதிர்ந்த வேலையாட்களை மரியாதையுடன் நடத்துகிறாயா? வைத்யர்களையும், பிராம்மணர்களையும் கௌரவிக்கிறாயா? நல்ல வில்லாளியான உபாத்யாயரை மதித்து நடக்கிறாயா? அவர் வில், அம்பு இவற்றை அறிந்திருப்பதோடு அர்த்த சாஸ்திரத்திலும் நிபுணர். மந்திரிகளை நியமித்து விட்டாயா? மந்திரிகள் எப்பொழுதும் நமக்கு சமமானவர்களாக இருக்க வேண்டும். சூரர்களாகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், இந்திரிய அடக்கம் உடையவராகவும், நல்ல குலத்தில் பிறந்தவர்களாக, இங்கிதம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். வெற்றியின் அடிப்படையாக மந்த்ராலோசனை செய்ய வேண்டியது முக்கியம்.  சாஸ்திரங்களில் நிபுணத்வம் உள்ள, மந்திரிகளுடன், மந்த்ராலோசனை முறைகளை அறிந்த மந்திரிகளுடன் இந்த மந்த்ராலோசனை செய்ய வேண்டும். ஒரே ஒருவருடன் ஆலோசனை செய்வதும் கூடாது. அதே போல எண்ணிக்கை மிக அதிகமாகவும் கூடாது. நீ செய்யும் மந்த்ராலோசனை நாட்டை விட்டு வெளி  ஆட்களுக்குத் தெரிவதில்லையே. பாதுகாத்து வைத்துக் கொள்கிறாயா? சிறியதாக ஆரம்பித்து பெருக வாழும் முறைகளை அர்த்த சாஸ்திரப் படி சீக்கிரம் ஆரம்பித்து செய்கிறாயா? அனாவசிய தாமதம் செய்யாமல் இருக்கிறாயா? மற்ற அரசர்கள் நீ செய்ததையும், செய்து கொண்டிருப்பதையும் மட்டுமே அறிந்து  கொள்ளும்படி இருக்க வேண்டும். நீ செய்யப் போவதை அவர்களுக்குத் தெரியாமல் வைத்திருப்பது தான் சாமர்த்தியம். அப்படி  செய்கிறாயா? மந்த்ராலோசனை செய்ததை தர்க்கம், யுக்தி இவற்றால், நல்லதல்ல என்று தெரிய வந்தால், புரிந்து கொள்கிறாயா? உன் மந்திரிகள் ஒத்துக் கொள்கிறார்களா? ஆயிரக் கணக்கான மூர்க்கர்களை விட, ஒரு பண்டிதன் உயர்வு என்று ஏற்றுக் கொள்கிறாயா? பண்டிதனை அலட்சியம் செய்தால் பொருளாதாரத் தட்டுப் பாடு வரும் பொழுது, பெரும் ஆபத்து வந்து சேரும். ஒரே ஒரு மந்திரி, சூரனாகவும், மேதாவியாக, சாமர்த்தியம் உடையவனாக, நல்ல தீர்க தரிசனம் உடையவனாக இருந்தால், அரசனுக்கும், அரச குமாரன் அல்லது குடும்பத்துக்கும் பெரும் செல்வத்தை ஈட்டித் தருவான். வேலையாட்களை நியமிக்கும்பொழுது, கவனமாக நியமிக்க வேண்டும். முக்கியமான பெரியவர்களிடம், திறமை மிகுந்த வேலையாட்கள், மத்தியமாக உள்ளவர்களுக்கு, அதே போல  நடுத்தரமான ஆட்கள், கீழ் மட்ட அதிகாரிகளுக்கு இதை விட திறமை குறைந்த ஆட்கள் என்று  நியமித்து வைத்திருக்கிறாயா? அமாத்யர்கள், தர்மார்த்த காம எனும் லௌகீக விஷயங்களிலும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தந்தை, பாட்டனாருக்கு சமமானவர்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்கள், இவர்களை தகுதியறிந்து தகுதியான பதவியில் வைத்து போற்றுகிறாயா? கைகேயி புத்திரனே, நீ கொடுக்கும் தண்டனை அதிகம் என்று பிரஜைகள் நினைக்கும்படி தண்டிக்கிறாயா? நீ அளிக்கும் தண்டனை நியாயமானதே என்று மந்திரிகள் ஆமோதிக்கிறார்களா?  யாகம் செய்பவர்கள் உன்னை அலட்சியம் செய்யாமல் இருக்கிறார்களா? ஸ்த்ரீகள் தீவிரமாக பிரதிபலனை எதிர்பார்க்கும், காமியாக நினைக்காமல் இருக்கிறார்களா? வைத்யர் உபாயங்களில் வல்லவராக இருப்பதும், வேலையாட்கள் முனுமுனுப்பதும், சூரனாக இருப்பவன் பணத்தாசை பிடித்தவனாக இருந்தாலும் இவர்களை ஒடுக்க வேண்டும்.  இவர்களால் அரசனும் மாட்டிக் கொள்வான். சேனாபதியாக யாரை நியமித்தாய்? சேனாபதி எப்பொழுதும் கர்வம் உடையவனாக, சூரனாக, புத்தியுடையவனாக, எளிதில் அசைக்க முடியாத காம்பீர்யம் உடையவனாக, ஒழுக்கம் உடையவனாக, நல்ல குடும்பத்தில் பிறந்தவனாக, ராஜ குடும்பத்தில் அன்பும் ஈ.டுபாடும் உடையவனாக இருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் விட, காரிய சாமர்த்தியம், ஆற்றல் உடையவனாகவும் இருக்க வேண்டும். பலவானான முக்ய போர் வீரர்கள், அவர்களுடைய திறமையைக் காட்டி, செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள்- இவர்களை சன்மானம் கொடுத்து, மதிப்புடன் மரியாதைகள் செய்கிறாயா? சேனையில் உள்ள வீரர்களுக்கு உணவும், ஊதியமும்  சரியான சமயத்தில் தருகிறாயா? இதில் தாமதம் செய்வது இல்லையே. இந்த விஷயத்தில் தாமதம் செய்தால், அதாவது உணவும்,  ஊதியமும் உரிய காலத்தில் தராமல் வைத்தால் படை வீரர்கள் எஜமானனிடம் கோபித்துக் கொள்வார்கள். தூஷிப்பார்கள். இதனால் ஏற்படும் அனர்த்தமும் மிக அதிகம். நம் குலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உன்னிடம் அன்புடன் இருக்கிறார்களா? எல்லோருமாகச் சேர்ந்து உன் பொருட்டு உயிர் விடத் தயாராக இருக்கிறார்களா? ஜனபதத்தைச் சேர்ந்த, ஊர்

ஜனங்களிடமிருந்து ஒருவனை, வித்வானாகவும், மிருதுவான சுபாவம் உள்ளவனாக, இரக்கம் உள்ளவனாகவும், ஆற்றல் உடையவனாகவும்  உள்ளதை உள்ளபடி சொல்பவனாகவும், ஒருவனை பொறுக்கி எடுத்து, தூதனாக நியமித்துக் கொண்டாயா? அவன் பண்டிதனாக இருப்பதும் அவசியம். சாரணர்களைக் கொண்டு பதினெட்டுப்

பிரிவுகளில் தன் பக்ஷத்தில் பத்தும், ஐந்துமாக மூன்று மூன்று  நபர்களாக குழுக்களைப் பிரித்து வைத்து உளவு பார்த்துக் கொள்கிறாயா? தீர்த்தங்களை அறிந்து கொள்கிறாயா.

 

எதிரிகளை அழிக்கும் திறன் படைத்தவனே, பரதா, தப்பி ஓடியவர்களையும், உன் நன்மையில் ஈ.டுபாடு இல்லாத வெளியேறிய பின் திரும்பி வந்தவர்களையும், பலமற்றவர்கள் என்று அலட்சியமாக இருந்து விடாதே. லௌகிகத்தில் தேர்ச்சி பெற்ற பிராம்மணர்களையும் நீ மதித்து நடத்துகிறாயா? இவர்கள் அனர்த்தத்தை தடை செய்வதில் வல்லவர்களாக இருக்கலாம், தங்களை அறிஞனாக எண்ணிக்கொள்ளும் சிறு பிள்ளைத் தனம் உள்ளவர்களாக இருக்கலாம். இவர்களிடத்திலும் ஒரு கண் வைத்திருப்பது நல்லது. முக்கியமான தர்ம சாஸ்திரங்கள், இருக்கும்பொழுது, இவற்றை அறியாமல், பிரதி பிம்பம் போன்ற நிழலைக் கண்டு கொண்டு அர்த்தமின்றி, பிதற்றுவார்கள். அயோத்தி மா நகரம் எப்படியிருக்கிறது? நம் தந்தை முன்னோர்கள் காலத்திலிருந்து வீரர்கள் இங்கு வசித்து வந்திருக்கின்றனர். இதன் பெயர் விளங்க, நல்ல காவல் மிகுந்த வாசலும், யானை, குதிரை பூட்டிய ரதங்கள் நிறைந்து, பிராம்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைஸ்யர்கள் தம் தம் செயலில் கவனமாக எப்பொழுதும் இருக்க, ஆயிரக் கணக்கான புலனடக்கமும், உற்சாகமும் உடைய பெரியவர்கள் நிறைந்திருக்க, விசாலமானதும், பல விதமான மாளிகைகளும், வைத்ய ஜனங்கள் நிறைந்ததுமான அயோத்தியை அப்படியே காப்பாற்றி வருகிறாயா? இது எப்பொழுதும் கோலாகலமாக இருக்கும் நகரம். நம் ஜனபதத்து ஜனங்கள் சுகமாக இருக்கிறார்களா? நூற்றுக் கணக்கான தங்கும் மடங்களும், அதில் தங்கும் முறை தவறாத ஜன சமூகமும், தேவாலயங்களும், தண்ணீர் பந்தல்களும், ஆங்காங்கு குளங்களும் அலங்கரிக்க, மகிழ்ச்சியுடன் ஆண்களும், பெண்களுமாக வளைய வர, சமாஜோத்சவங்கள் கொண்டாடி, எல்லையை பாதுகாத்து வைத்து, பசுக்கள் உடையதும், வன்முறை எதுவுமின்றி, நாய்கள் இன்றி ரம்யமாக, பயத்தை விட்டொழித்தவர்களாக, ஆங்காங்கு குகைகளுடன், பாபியான எவருமே இல்லாமல் என் முன்னோர்களால்  பாலித்து வரப் பட்ட ஜனபதத்திலும், விசாலமான புற நகரத்திலும் ஜனங்கள் சுகமாக இருக்கிறார்களா?

 

உனக்கு கீழ் வேலை செய்யும், வயலில் வேலை செய்யும் விவசாயிகள், பசுக்களை மேய்த்து வாழ்க்கையை நடத்தும் இடையர்கள், இவர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகுகிறாயா? இவர்களால் உலகத்தார் பயன் அடைகின்றனர். இவர்களை ஒற்றர்களைக் வைத்து கஷ்ட நஷ்டங்களை அறிந்து காப்பாற்றுகிறாயா? விஷய வாசனை -யுடையவர்களையும், அரசன் காப்பாற்ற வேண்டியது அவன் கடமையே. பெண்களை சமாதானமாக, பாதுகாப்பாக வைத்திருக்கிறாயா? இவர்களை அலட்சியப் படுத்தவும் கூடாது. ரகசியங்களை இவர்களிடம் பேசவும் கூடாது. ரகஸியமாக பேசாதே. மரங்கள் அடர்ந்த காடுகள் உள்ளனவா? க3ணிகா ஸ்திரீகளையும், குதிரை யானைகளையும் சரிவர காப்பாற்றுகிறாயா? ராஜ மார்கத்தில் முன் பகலில் ஜனங்களை  நேரில் காண்கிறாயா?  உன் செயல்கள் பூர்த்தியாகின்றனவா? சந்தேகமில்லாமல் ப்ரத்யக்ஷமாக வைத்துக் கொண்டிருக்கிறாயா? செய்ததையே  திரும்பச் செய்ய நேருகிறதா? எல்லா கோட்டைகளும், தன தான்யம், குடி நீர், ஆயுதங்கள் யந்த்ரங்கள் நிரம்பியுள்ளனவா?  வில்லாளிகளும், சில்பிகளும், அங்கு இருக்கிறார்களா? உனக்கு வரும்படி நிறைய இருக்கிறதா? செலவு குறைவாக செய்கிறாயா? உன் பொக்கிஷ தனம் எப்பொழுதுமே, சரியான பாத்ரமின்றி (தகுதியற்றவர்கள்) கொடுக்கப் படுவது இல்லையே? உன் செலவு தேவதைகளுக்கும், பித்ருக்களுக்கும், பிராம்மணர்களுக்கும், மித்திரர்களுக்கும், பயன் படுவதாகவே இருக்க வேண்டும். தவறுதலாக கூட விசாரிக்காமல், நிரபராதியாக ஒருவனைப் பிடித்து தண்டிக்காமல் இருக்கிறாயா? கண்ணால் பார்க்காதவரை, சுத்தமான ஆத்மா, பெரியவர் என்று சமூகத்தில் பிரஸித்தமான ஒருவரை, திருட்டுக் குற்றம் சுமத்தினாலும், விசாரிக்காமல் நம்பாதே. கண்ணால் பார்த்தும், சரியான காரணங்களால் நிரூபிக்கப் பட்ட பின்பும், பண ஆசையால் பிடி பட்ட திருடனை விசாரித்து  தெளிந்த பின்னும் விட்டு விடவில்லையே. உன் மந்திரிகள், கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக, தனவானான  ஒருவன் ஏதோ காரணத்தால் நொடித்துப் போய் இருக்கும் பொழுது, பற்றின்றி விசாரிக்கிறார்களா?  தவறாக குற்றம் சுமத்தப் பட்டு தண்டிக்கப் படும் குற்றவாளிகள் மேல் விழும் அஸ்திரங்கள் நம் குலத்தில் பிறக்கும் குழந்தைகளையும், வீடுகளில் பசுக்களையும் தாக்கி அழித்து விடும். ஆட்சியை நியாயமாக செய்யும் பக்ஷத்தில், முதியவர்களையும், குழந்தைகளையும், முக்கியமான வைத்யர்களையும், தானம் கொடுத்தும், மனம் வாக்கு இவற்றால் போற்றி வைத்திருக்கிறாயா? குரு ஜனங்களையும், முதியவர்களையும், தபஸ்விகளையும், தேவதைகள் அதிதிகளையும், மடாதிபதிகளையும், மற்றும் சித்தர்கள், அல்லது செயற்கரியவை செய்து காட்டியவர்களையும், பிராம்மணர்களையும், நமஸ்கரிக்கிறாயா? சில சமயம் பொருளைக் கொண்டு தர்மம், சில சமயம் தர்மத்தைக் கொண்டு பொருள், இரண்டுமே சில சமயம் பிரியத்தை விரும்பும் காமத்தினால் பாதிக்கப் படாமல் பார்த்துக்கொள்கிறாயா?  ஜயசீலனே, பரதா, காலம் அறிந்து தர்மம், காமம் , அர்த்தம், மூன்றையுமே அதனதன்  சமயத்தில் அனுபவிக்கிறாயா? ஊர், ஜனபத ஜனங்களுடன், பிராம்மணர்களும், சர்வ சாஸ்திரங்களையும் அறிந்த அறிஞர்கள், ஆசிர்வதித்திருக்கிறார்களா?  ராஜ தோஷம் என்பது பதினான்கு உண்டு. அவையாவன: நாஸ்திக வாதம், பொய், க்ரோதம், அலட்சியம், தாமதம் செய்தல், கண்டும் காணாமல் இருத்தல், க்ஞானிகளுக்கும் சோம்பேறித்தனம், பஞ்ச விருத்தி (மகா பாதகங்களான ஐந்து) பண விஷயத்தில் ஒரே ஒரு எண்ணம், அர்த்தம் அறியாதவர்களுடன் ஆலோசித்தல், தீர்மானித்த விஷயத்தை ஆரம்பிக்காமல், கால தாமதம் செய்து நீடித்தல், மந்த்ராலோசனையை காப்பாற்றி வைக்காது வெளியில் தெரிய விடுதல், சுபமானவற்றை பிரயோகிக்காமல் இருத்தல், எப்பொழுதும் எதிர்த்து பேசுதல், இந்த தோஷங்களை தவிர்த்து வருகிறாயா?  வித்யா மூன்று வகைப் படும். 1) பத்து, ஐந்து, நான்கு விதமாக பிரிக்கப் பட்டது. (2) ஏழு ஏழாக பிரிக்கப் பட்டது (3) எட்டு வர்கமாக, மூன்று வர்கமாக பிரிக்கப் பட்டது, எனவாகும். தெய்வீக, மானுஷ, என்று ஆறு குணங்கள், புலனடக்கம், இவைகளுடன் இருபது வகை இயற்கை மண்டலம், யாத்திரை, தண்டனை அளித்தல், த்வியோனி, சந்தி விக்ரஹம் என்ற ராஜ தந்திரங்களை அறிவாயா? நீ, நான்கு, மூன்று பேர்கள் கொண்ட குழுக்களோடு தனித் தனியாக, எல்லோரையும் சேர்த்து, அதிலேயே, ஒரு விஷயத்திலேயே மூழ்கியவருடன் தனியாக, என்று மந்திரிகளுடன் ஆலோசனை செய்கிறாயா? நீ வேதம் கற்றது பயனுடையதாக இருகின்றனவா? உன் மனைவிகளிடம் நல்ல முறையில் பயன் பெறுகிறாயா? நீ கேட்டறிந்த கல்வி கேள்விகள் கை கொடுக்கின்றனவா?  இப்படி நான் சொன்னபடியே, உன் புத்தியும், ஆயுசையும், புகழையும் வளர்க்கும் தர்ம, காம, அர்த்தங்கள் இணைந்து செயல்படுவதாக இருந்து,  நம் தந்தை, நம் முன்னோர்கள் கடை பிடித்த நெறிகளையே கடை பிடித்து வருகிறாயா? அதே சுபமான நன்னெறியை பின் பற்றி வருகிறாயா? ருசியான ஆகாரத்தை தனியாக சாப்பிடுவது இல்லையே? உனக்கு நன்மையை விரும்பும் நண்பர்களுக்கும் நிறைய கொடுத்து சந்தோஷமாக வைத்திருக்கிறாயா? ராஜா என்பவன் தர்ம நெறியில் நின்று பிரஜைகளைப் பாலிப்பதோடு, சமயத்தில் பிரஜைகளுக்கு தண்டனை கொடுப்பவனாகவும், பூமியை இடையூறு இன்றி அடைந்து வித்வானாக ஆண்டு வந்தால், இங்கிருந்து போகும் பொழுது, ஸ்வர்கத்தை அடைகிறான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கச்சித் ஸர்கோ என்ற நூறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக