பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் அயோத்யா காண்டம் 101 -119

பிப்ரவரி 25, 2014

அத்தியாயம் 101 (178) பித்ரு தி3ஷ்டாந்த ஸ்ரவணம் (தந்தை மறைந்ததை சொல்லுதல்)

 

ராமனது விளக்கத்தைக் கேட்டபின் ப4ரதன் பதிலிருத்தான். தர்மம் இல்லாத என்னிடம் ராஜ தர்மம் என்ன பயனைத் தரப் போகிறது. சாஸ்வதமான தர்மம், நம்மிடம் இருந்து வந்தது, மூத்தவன் இருக்க, இளையவனுக்கு முடி சூட்டுவது இல்லை என்று ஒரு தர்மம், அதை காப்போம். இதோ கூட்டமாக வந்துள்ள என்னுடன் அயோத்தி திரும்பி போகலாம் வாருங்கள். இந்த குலத்திற்கும், எங்களுக்கும் க்ஷேமம் உண்டாகும்படி முடி சூட்டிக் கொள்ளுங்கள். ராஜாவை தேவனாகச் சொல்வார்கள். என் வரையில் தேவத்வம், ராஜாவிடம் இருப்பதாக நம்புகிறேன். ஏனெனில், எந்த அரசனிடம் அமானுஷ்யமான தர்மார்த்தத்துடன் கூடிய நெறி முறைகள் விளங்கியதோ, யாகங்கள் செய்து, நல்லவர்கள் வழியில் சென்றாரோ, அந்த ராஜா, நான் கேகய ராஜ்யத்திலும், நீங்கள் வனத்திலும் இருக்கும் பொழுது பரம பதத்தை அடைந்து விட்டார். நீங்கள் லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் வனம் சென்ற மாத்திரத்திலேயே, துக்கமும் சோகமும் தாங்காமல் மறைந்து விட்டார்.  புருஷவ்யாக்ரனே, எழுந்திருங்கள்.  தந்தைக்கான நீர்க் கடன்களைச் செய்யுங்கள். நானும், இந்த சத்ருக்னனும் ஏற்கனவே செய்து விட்டோம். பித்ரு லோகத்தில், அன்புடன் கொடுக்கப் பட்டவையே அழிவில்லாமல் இருக்கும் என்று சொல்வார்கள். தாங்களோ, தந்தைக்கு பிரியமானவர். உங்களையே நினைத்து, உங்களையே காண விரும்பியவராக, உங்களிடத்தில் வைத்த மனதுடன் புத்தியை வேறெங்கும் செலுத்தாதவராக, உங்களைப் பிரிந்து, உங்களையெண்ணி வருந்தி வருந்தி, உங்களையே இடைவிடாது மனதில் தியானம் செய்தவராக, உங்கள் தந்தை அஸ்தமித்தார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பித்ரு திஷ்டாந்த கதனம்  என்ற நூற்று ஓராவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  102 (179) நிவாப தானம் (நீர்க் கடன் செய்தல்)

 

பரதன் உணர்ச்சி பொங்க சொல்லிய, தன் தந்தையின் மரணச் செய்தியை அறிந்த ராமர் சொல்லொணா துன்பம் அடைந்தார்.  வார்த்தையே வஜ்ரமாக தேவராஜனான இந்திரன் யுத்தத்தில் செலுத்திய வஜ்ராயுதம் போல், மனதுக்கு பிடிக்காத இந்த செய்தியை செவியில் கேட்டார். பூத்துக்குலுங்கும் மரத்தைக் கோடாலியால் (பரசுவினால்) வெட்டியது போல தடாலென்று பூமியில் விழுந்தார்.  பூமியில் விழுந்து கிடக்கும் ராமனை, நதிக்கரையில் அயர்ந்து உறங்கும் யானையை தூக்குவது போல தூக்கினார்கள். சகோதரர்கள், அதே அளவு துக்கத்தினால் பாதிக்கப் பட்டவர்களாக இருந்தும், வைதேஹியும் அழ, தண்ணீர்  தெளித்து மூர்ச்சை  தெளிவித்தனர். நினைவு திரும்ப வரப் பெற்றவுடன் கண்ணீர் பெருக, ஏதோ நிறைய பேச விரும்புவது போல ஆரம்பித்தார். பரதன் வாயினால், தந்தை ஸ்வர்கம் அடைந்த செய்தியைக் கேட்டு பதில் சொன்னார். அயோத்தியில், தந்தை இல்லாமல் என்ன செய்வோம். ராஜாக்களில் சிறந்தவரான அவர் இன்றி அயோத்தியில் யார் ராஜ்ய பாலனம் செய்ய முடியும்.  அந்த மகானுக்கு மகனாக பிறந்தும் என்னால் என்ன பயன்? என்னைப் பிரிந்த துக்கத்தால் இறந்தார். என் கையால் சம்ஸ்காரமும் நான் செய்யவில்லை. பரதா, நீ கொடுத்து வைத்தவன்.  நீயும் சத்ருக்னனுமாக அவரது இறுதிக் காரியங்களைச் செய்தீர்கள். தலைமையில்லாத, சக்ரவர்த்தி இல்லாத அயோத்தியில் வன வாசம் முடிந்த பிறகு கூட நான் நுழைய விரும்ப மாட்டேன்.  வனவாசம் முடிந்து நான் அயோத்தி திரும்பும் பொழுது, தந்தை இல்லாமல் யார் என்னை வரவேற்பார்கள். தந்தை பரலோகம் சென்றபின், அயோத்தியில் என்ன இருக்கிறது. முன்பு, என்னை சமாதானப் படுத்தும் வகையில் அவர் சொன்ன வார்த்தைகளை நினைத்து பார்க்கிறேன். அந்த வாக்யங்கள் இன்னமும் என் காதுக ளி ல் கேட்பது போல இருக்கிறது. இவ்வாறு பரதனிடம் சொல்லிவிட்டு, தன் மனைவியிடம் சொன்னார். பூரண சந்திரன் போன்ற அழகிய முகத்தையுடைய சீதையைப் பார்த்து சொன்னார் . சீதே, உன் மாமனார் மறைந்து விட்டார். லக்ஷ்மணா, நம் தந்தையை இழந்தோம். பரதன் மிகவும் துக்ககரமான விஷயத்தைச் சொல்லியிருக்கிறான். ப்ருதிவீபதி ஸ்வர்கம் அடைந்த செய்தி தான் அது. எல்லோர் கண்களிலும் கண்ணீர் பெருகியது. நால்வரும் தந்தையை நினைத்து வருந்தினர். பரத சத்ருக்னர் இருவருமாக ராம லக்ஷ்மணர்களை சமாதானப்படுத்தி, தந்தைக்கு நீர் கடன் செய்ய வேண்டினர். கணவனை நிமிர்ந்து பார்க்கமுடியாதபடி கண்களை நீர் மறைக்க, சீதையும் தன் மாமனாரை நினைத்து வருந்தினாள். அவளை சமாதானப் படுத்தி, ராமர் லக்ஷ்மணனைப் பார்த்து சொன்னார். லக்ஷ்மணா, இங்குதீ புண்ணாக்கு, மரவுரி இவற்றைக் கொண்டு வா.  தந்தையின் நீர்க்கடனைச் செய்யப் போகிறேன் சீதை முன்னால் செல்லட்டும்.  நீ கூடவே போ.  நான் பின்னாலேயே வருகிறேன். இந்த வழி அவ்வளவு நன்றாக  இல்லை. என்று சொல்லியவாறு கிளம்பிய ராமரை, சுமந்திரர் பின் தொடர்ந்தார். உயர்ந்த உள்ளம் படைத்தவரும், செயலிலும் சொல்லிலும் எப்பொழுதும் இனிமையாக, மிருதுவாக இருப்பவரும், செய்ய வேண்டியதை அறிந்தவரும், எளிமை, தயை, சாந்தம் எனும் நற்குணங்களுக்கு இருப்பிடமாக விளங்கியவருமான சுமந்திரர் அவர்களை சமாதானப் படுத்தியபடி பேசிக் கொண்டே உடன் சென்றார்.  மந்தாகினி நதியை அடைந்து அவர்கள் சுலபமாக ஸ்னானம் செய்ய உதவினார். அந்த புண்ய தீர்த்தம் அழகிய கரையும், கரையில் பூத்துக் குலுங்கும் மரங்களுமாக கண் கொள்ளா காட்சியாக இருந்தது. வேகமாக சுழல்களோடு அடித்துக் கொண்டு செல்லும் பிரவாகம், சுத்தமாக கசடு ஏதுமின்றி, நிர்மலமாக இருந்தது.  அந்த ஜலத்தை கையால் எடுத்து விட்டு தந்தையே, இந்த நீர் உங்களுக்காக என்று சொல்லி விட்டனர்.  ராஜ குமாரர்கள், ஜலத்தை கைகளுக்குள் ஏந்தி, அஞ்சலி செய்தபடி, தென் திசையை நோக்கி அழுதபடி சொன்னார்கள். ராஜ சார்தூலன் என்று புகழ் பெற்ற அரசனே, உனக்கு இந்த தூய்மையான அழிவில்லாத ஜலம் உரித்தாகுக. பித்ரு லோகம் சென்றடைந்த உங்களுக்கு என்னால் தரப்பட்ட இந்த ஜலம் சேரட்டும். மந்தாகினி நதிக் கரையிலேயே ராகவன், தந்தைக்காக நிவாபம் எனப்படும் நீத்தார் கடனைச் செய்தார். சகோதரர்களுடன் கூட தர்ப்பையை வைத்து அதன் மேல் இங்குதீ பழத்தின் பிண்ணாக்கு, இலந்தையுடன் கூட வைத்து, மிகவும் வருத்தத்துடன் சொன்னார். மகாராஜா, இதைச் சாப்பிடுங்கள். பிரியமுடன் சாப்பிடுங்கள். இது தான் தற்சமயம் எங்கள் உணவு. எந்த அன்னத்தினால் மனிதன் உருவாகிறானோ, அந்த அன்னம் தான் அவனுக்கு தேவதைகள். பின் அதே வழியில் திரும்ப நதிக்கரையை அடைந்து . சற்று ஏறி, மணல் பரப்படி கடந்து, சமமான பூமியை அடைந்தனர். பின் பர்ணசாலை வாசல் வரை நடந்து வந்த பின் பரத, சத்ருக்னர்களை தன் இரு புஜங்களாலும் அனைத்துக் கொண்டார். இவர்களின் அழுகைக் குரல்  மலை மேல் பட்டு எதிரொலித்தது. சகோதரர்களுடன் வைதேஹி குரலும் சேர்ந்து சிங்கங்கள் நடனமாடுவது போல இருந்தது. இதைக் கேட்டு பரதனின் படை வீரர்கள் பயந்தனர். உரத்த குரலில் அழுகை சத்தம் கேட்கிறதே, நிச்சயம் பரதன் ராமனைக் கண்டு கொண்டு விட்டான். தந்தை இறந்த செய்தி கேட்டு எல்லோருமாக புலம்பும் சத்தம் இது என்று  தெளிந்தனர்.  உடனே தாங்கள் நின்ற இடத்தை விட்டு, ஒரே முகமாக சப்தம் வந்த திசையை நோக்கிப் புறப்பட்டனர். தானே அலங்காரமாக விளங்கும் குதிரைகளில் சிலர்,

யானைகளில் சிலர். ரதத்தில் ஏறி சிலர். சுகுமாரர்களான சிலர் இது போல வர, மற்றவர்கள் நடந்தே செல்லலாயினர். இப்பொழுது தானே ராமன்  நம்மை விட்டுப் பிரிந்தான், சில நாட்களாகத் தானே என்று எண்ணாமல், வெகு நாட்களாக பிரிந்தவனை காணப் போவது போல ஆவலுடன் ஓட்டமும் நடையுமாக சென்றனர். சகோதரர்கள் நால்வருமாக இருப்பதைக் காணவும், பலவித வாகனங்களில் காலடியோசை பெரும் இரைச்சலாக கேட்க, சென்றனர். மேகங்கள் மோதிக் கொள்ளும்பொழுது கேட்கும் இடியோசையை ஒத்திருந்தது. குட்டி யானைகள் கூட சாவகாசமாக நடந்த பெண் யானைகள் பயந்தன. வேகமாக வேறு காட்டிற்கு சென்றன. வராஹ, ஒனாய் கூட்டங்கள், காட்டு எருமைகள், சர்ப்ப, வானரங்கள், புலி, கோகர்ண பசுக்கள் பயந்து சிறு மான்களுடன் கூட ஓடின.  ரதங்களுடன் ஹம்சங்கள், காரண்டவம் போன்ற பறவைகள், அதே போல ஆண் கோகிலங்கள், க்ரௌஞ்ச இவை தடுமாறி பல

திக்குகளிலும் ஒன்றாக பறந்தன. ஆகாயமே பக்ஷிகள் நிரம்பியிருந்தது. அதுவும் மனிதர் கூட்டமாக நடமாடும் பூமியும் ஏக காலத்தில்ல் பரபரப்பாக விளங்கியது.  புல் விரிப்பில் அமர்ந்திருந்த ராகவனை திடீரெனக் கண்டனர். கைகேயியையும் கூடவே மந்தரையையும் தூற்றிக் கொண்டு ராமனை நோக்கி முன்னேறி சென்று, கண்ணீர் பெருக நின்றனர். அந்த ஜனங்களை ராமர் தந்தையைப் போலவும் தாயைப் போலவும் அனைத்து ஆறுதல் சொன்னார். சிலர் வணங்கினர். ஒத்த வயதுடைய நண்பர்கள், சுற்றத்தார், பந்துக்கள் அவர்கள் தகுதிக் கேற்ப அருகில் சென்று வணங்கியோ, வாழ்த்தியோ சென்றார்கள். இவர்களின் ஓலம் ஆகாயத்தை அடைந்து மிருதங்க கோஷம் போல எங்கும் பரவியது..

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பித்ரு தி3ஷ்டாந்த கத2னம்   என்ற நூற்று இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 103 (180) மாத்ரு தரிசனம் (தாய்மார்களை சந்தித்தல்)

 

ராஜ பத்னிகளான கௌசல்யை, சுமித்ரா, கைகேயியை வசிஷ்டர் அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். ராமன் இருக்குமிடம் நோக்கி மெதுவாக நடந்து மந்தாகினி நதிக்கரையை அடைந்தனர். ராம லக்ஷ்மணர்கள் உபயோகிக்கும் தீர்த்தத்தைக் கண்டனர். கௌசல்யா அதைக் கண்டதும், கண்ணீருடன் வாடிய முகத்துடன், சுமித்திரையிடம் சொன்னாள். மற்ற ராஜ பத்னிகளும் இருந்தனர். அனாதைகள் போல வனத்தில் தீர்த்தத்தை பருகி வாழ்கின்றனர். இதையும் உன் மகன் லக்ஷ்மணன் என் மகனுக்காக சோம்பலில்லாமல் கொண்டு வந்து கொடுக்கிறான். எவ்வளவு மோசமான காரியமானாலும் உன் மகன் முனுமுனுக்காமல் சகோதரனுக்காக செய்கிறான். செல்வம் இல்லையே என்று யோசிப்பதில்லை. க்லேசங்களை (உடல் வருத்தங்களை) பொருட்படுத்துவதே இல்லை.  அவன் கூட இன்று தன் வான ப்ரஸ்த தர்மத்தில் ஈ.டுபட்டிருப்பதை விடட்டும். (நகரம் திரும்பட்டும்). இவ்வாறு பேசிக் கொண்டே, தென் திசையில் புல்தரையில் வைக்கப் பட்டிருந்த இங்குதீ பிண்ணாக்கு தந்தைக்காக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். ராமர் தன் தந்தைக்காக வைத்திருந்த பிண்டங்களைப் பார்த்து மற்ற எல்லா தசரத பத்னிகளுக்கும் கௌசல்யை காட்டினாள்.  இதோ ரகு4 குல, இக்ஷ்வாகு குல நந்தனனாக இருந்த சக்ரவர்த்திக்கு மகன் கொடுத்த பித்ரு பிண்டம். வகையாக செய்திருக்கிறான் பாருங்கள். தேவர்களுக்கு சமமாக வாழ்ந்த அரசனுக்கு இது உகந்ததாக இல்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு இந்த போஜனம் ஒத்ததாக இல்லை என்று நான் எண்ணுகிறேன். இதை விட வேறு துக்கம் என்ன வேண்டும்? ராமன், சக்ரவர்த்தி குமாரன் தந்தைக்கு இங்குதீ3 புண்ணாக்கை படைக்கிறான் என்றால் அதையும் வசுதா4தி4பனாக இருந்த அரசன் ஏற்றுக்கொள்கிறார். இதை பார்த்தும் என் ஹ்ருதயம் வெடிக்காமல் இருக்கிறதே. நாம் கேள்விப் பட்டது சத்யமாக ஆகிவிட்டது. உலக வழக்கில் சொல்வதுண்டு. எந்த அன்னத்தால் மனிதன் உண்டாகிறானோ, அந்த அன்னம் அவனுக்கு தேவதையாக ஆகிறது. இப்படிச் சொல்லி வருந்தும் கௌசல்யையை மற்ற சக்களத்திகள் சமாதானப் படுத்தி அழைத்துச் சென்றனர். ஆசிரமத்தில் ராமனைக் கண்டனர். ஸ்வர்க லோகத்திலிருந்து ஏதோ அமரன் இறங்கி வந்தது போல இருந்தான் அவன். எல்லா போகங்களையும் துறந்து விட்ட ராமனைப் பார்த்து தாய்மார்கள் வருந்திக் கண்ணீர்  பெருக்கினர். சோகத்தால் இளைத்து இருந்த ராமன் எழுந்து வந்து அவர்களை  கால்களில் வீழ்ந்து வணங்கினான்.  அவர்கள், கைகளால், ம்ருதுவான ஸ்பர்சத்தால் அவன் முதுகில் மண்ணைத் தட்டி விட்டனர்.  ராமன் வணங்கியபின் சௌமித்ரியும் வந்து எல்லோரையும் வணங்கினான். அவனைக் கண்டும் தாய்மார்கள் துக்கம் அடைந்தனர். ராமனை போலவே இவனையும் ஆசிர்வதித்தனர். தசரத ராஜாவுக்கு பிறந்த பிள்ளை, சுபமான லக்ஷணங்களையுடைய லக்ஷ்மணன் என்றனர். சீதையும் வந்து அவர்கள் பாதங்களைத் தொட்டு வணங்கினாள். மாமனார் மறைந்த துக்கத்தினால் கண்ணீர் பெருக அவர்கள் முன் நின்றாள். அவளை அணைத்து தாய்மார்கள் வன வாசத்தால் இளைத்து தீனமாக இருந்தவளைப் பார்த்து கௌசல்யை சொன்னாள் விதே3ஹ ராஜாவின் மகள். தசரத2 அரசனின் மருமகள். ராம பத்னி. இவ்வளவு இருந்தும்,  ஜன நடமாட்டம் இல்லாத  இந்த வனத்தில் இப்படி கஷ்டப் படும்படி ஆனதே.   சூரியனின் வெப்பத்தால் தகிக்கப் பட்ட பத்மம் போலவும் உத்பல புஷ்பம் வாடியது போலவும், தங்கத்தை வெள்ளியில் முக்கி எடுத்தாற்போல, சந்திரனை மேகங்கள் மறைத்தாற்போல, உன் முகத்தைப் பார்த்து எனக்கு துக்கம் பொங்குகிறது. அரணிக் கட்டையில் உருவாகும் அக்னி போல இந்த கவலை என்னை அரித்தெடுக்கிறது. இவ்வாறு வருத்தத்துடன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே ராகவன் வந்து வசிஷ்டரை வணங்கி விட்டு அவ்விடம் வந்தான். அக்னிக்கு சமமான புரோஹிதரை ப்ருஹஸ்பதியை இந்திரன் எனும் அமரர்கள் தலைவன் போல பாதங்களைப் பற்றிக் கொண்டு வணங்கி எழுந்து அருகிலேயே அமர்ந்தான். கடைசியில் மந்திரிகளுடனும், ஊர் பிரமுகர்களுடனும் படைத் தலைவர்களுடனும் தர்மத்தை அறிந்த பெரியவர்களுடனும் தர்மவானான பரதன் அண்ணன் அருகில் வந்து அமர்ந்தான். உட்கார்ந்த உடனேயே, தபஸ்வி வேஷத்தில் இருக்கும் அண்ணனைப் பார்த்து லக்ஷ்மீகரமாக விளங்கும் பரதன் மகேந்திரன், பிரஜாபதியைப் பார்த்து கேட்பது போல கூப்பிய கரங்களுடன் பேசலானான். இந்த பரதன் ராமரை வணங்கி மரியாதையுடன் என்ன, எப்படிச் சொல்லப் போகிறான் என்றறிய அங்குள்ள மக்கள் உற்சாகமிக்கவர்களாக இருந்தனர். ராமன், சத்யத்தில் அசையாத நம்பிக்கையுடையவன், லக்ஷ்மணன் மகானுபாவன், பரதன் தார்மிகன், மூவரும் மூன்று அக்னி போல விளங்குகின்றனர். நண்பர்களும் சுற்றத்தாரும், பந்துக்களும் சூழ அமர்ந்திருக்கிறார்கள், சபையினரின் நடுவே மூன்று விதமான அக்னி ஜ்வலிப்பது போல.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் மாத்ரு தரிசனம்   என்ற நூற்று மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 104 (181) ராம ப4ரத சம்வாத3: (ராம, பரத, சம்பாஷனைகள்)

 

லக்ஷ்மணன் உடன் இருக்க, ராமர், பரதனைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தாயே, சொல், கேட்கிறேன் என்று அனுமதி அ ளி த்துச் சொன்னார். எதற்காக ஜடா முடி தரித்து இந்த தேசம்  வந்தாய்?  ராஜ்யத்தை விட்டு இவ்வளவு தூரம் மான் தோல் உடுத்து வந்திருக்கிறாய். விவரமாகச் சொல், எனவும், கைகேயி புத்ரன், கூப்பிய கைகளுடன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான். அண்ணலே, தந்தை புத்ர சோகத்தால் தவித்தவராக ஸ்வர்கம் போய் விட்டார். பத்னியால், என் தாய் கைகேயியால் வேண்டப் பட்டு, பெரும் பாபத்தைச் செய்து தனக்கும், எனக்கும் அபகீர்த்தியை உண்டு பண்ணி விட்டார். என் தாய் நினைத்தபடி ராஜ்ய சுகத்தை அனுபவிக்கவும் முடியவில்லை. விதவையாக ஆனது தான் பலன்.  இதனாலும் துக்கம் அவளை வாட்டுகிறது. அவள் கோரமான கதியைத் தான் அடையப் போகிறாள், என் தாயான கைகேயி.  அதனால், இப்பொழுது உன் அடிமையாக கேட்கும் என்னிடம் தயை செய்ய வேண்டும். இன்றே முடி சூட்டிக் கொள். இந்திரன் போல, ராஜ்யத்தை ஏற்றுக் கொள். நம் தாய்மார்கள், கணவனை இழந்தவர்கள், இந்த பிரஜைகள், இதையே வேண்டி நீ இருக்குமிடம் தேடி வந்திருக்கிறார்கள். கருணை காட்டு. நம் குல வழக்கப் படி பரம்பரையாக நடந்து வந்த வழக்கம் தான். அதனால் தர்ம முறையிலேயே ராஜ்யத்தை ஏற்றுக் கொள். உன் உற்றாரையும் சுற்றத்தாரையும் மகிழ்விப்பாய். உன்னை நாயகனாக அடைந்து பூமி நாதனை அடைந்தவளாக ஆகட்டும். நிர்மலமான சந்திரனை, சரத்கால ரஜனி (இரவு)  அடைவது போல ராஜ்யத்தை ஏற்றுக் கொள். மந்திரிகளுடன் கூட, தலையால் வணங்கி நாங்கள் வேண்டிக் கொள்வது இதுதான். எங்களிடம் கருணை காட்டு. உன் சகோதரன், சிஷ்யன், அடிமை என்று என்னிடம் கருணை காட்டு. இந்த இயற்கையின் எல்லைக் கோடு வரை பரவியுள்ள தந்தை வழி ராஜ்யத்தை அவர் பூஜித்து பாதுகாத்ததை, நீ ஏற்றுக் கொள்ள மறுக்க முடியாது. திரும்பவும் ராமரை முறைப்படி பாதங்களில் வீழ்ந்து வணங்கி பரதன் நின்றான். மதம் பிடித்த யானை போல திரும்ப திரும்ப பெருமூச்சு விடும் பரதனை அணைத்தபடி ராமர் பதில் சொன்னார். நல்ல குலத்தில் பிறந்து சத்வ குணம் நிறைந்து தேஜஸ்வியாக விரதங்களை அனுஷ்டிக்கும் என் போன்ற ஜனங்கள், ராஜ்யத்திற்காக எப்படி தவறு செய்ய முடியும்? உன்னிடத்தில் ஒரு இழை அளவு கூட நான் குற்றம் காணவில்லை. வீரனே, உன் தாயையும் நீ சிறு பிள்ளைத் தனமாக தூஷிக்கக் கூடாது. பத்னியிடமும், புத்திரர்களிடமும் எப்பொழுதும் பெரியவரான குடும்பத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.  உலகில் நம்மை எப்படி அறிவார்கள்? சாதுவான ஜனங்கள் நம்மை இன்னாரின் புதல்வர்கள், சிஷ்யர்கள் என்று அடையாளம் காட்டுவர். இதை நீயும் அறிவாய்.  என்னை காட்டில் மரவுரி தரித்து இரு என்று சொல்லவோ, ராஜ்யத்தில் அமர்ந்து பாலனம் செய் என்று சொல்லவோ தசரத மகாராஜா அதிகாரம் உடையவரே.  தர்மம் அறிந்த தந்தையிடம் எவ்வளவு கௌரவம் நம் மனதில் உண்டோ, அதே அளவு தாய்மார்களிடமும்  இருக்க வேண்டும். இவர்கள் இருவருமாக வனம் போ என்று சொன்னபின், தாய் தந்தை இருவராலும் கட்டளையிடப் பட்ட பின், நான் வேறு விதமாக என்னதான் செய்ய முடியும்?  அயோத்தி ராஜ்யம், உலக புகழ் பெற்றது, உன்னை அடைய வேண்டும், தண்டகாரண்யத்தில், மரவுரி தரித்து நான் வசிக்க வேண்டும், எல்லோர் முன்னிலையிலும் இவ்வாறு பாகப் பிரிவினை செய்து விட்டு, தசரத ராஜா கட்டளையிட்டு விட்டு ஸ்வர்கம் சென்று விட்டார். தந்தை கொடுத்த பாகத்தை நீ அனுபவிப்பதில் தவறு எதுவுமில்லை. நீ அனுபவிக்கத்தான் வேண்டும். தந்தை எனக்கு அளித்த பதினான்கு வருஷ வன வாசத்தை நானும் அனுபவித்தே தீருவேன். என் தந்தை சொன்னபடி, அறிஞர்களில் மூத்தவர், மகானானவர், அவர் சொன்னதை செய்வதில் தான் எனக்கு நன்மை இருப்பதாக நம்புகிறேன். இதைத் தவிர சர்வலோக ஈஸ்வரன் என்ற பதவியையும் விரும்ப மாட்டேன்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராம ப4ரத சம்வாதோ3 என்ற நூற்று நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

 

அத்தியாயம்  105 (182)  ராம வாக்யம்

 

இந்த சகோதரர்கள் உற்றாரும், சுற்றாரும் சூழ அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையிலேயே, இரவு மெதுவாக நகர்ந்து பொழுது விடிந்தது.  மந்தாகினி நதிக் கரையில் ஜப தபங்களை முடித்துக் கொண்டு,  திரும்ப ராமனிடம் வந்து அனைவரும் அமர்ந்தனர்.  என்ன பேசுவது என்று அறியாமல் எல்லோருமே மௌனமாக இருந்தனர். பரதன் தான் அந்த மௌனத்தைக் கலைத்து பேச ஆரம்பித்தான். என் தாய் சமாதானமாகி விட்டாள். எனக்கு கொடுக்கப் பட்ட ராஜ்யம் இது. இதை நான் உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள் என்று வேண்டினான். மிகப் பெரிய ராஜ்யம் இது. வேகமாக ஜலம் வரும் பொழுது சேதுவும் உடைந்தால் அடக்க முடியாமல் போவது போல நான் ஒருவன் இந்த பெரும் அரசைக்  கட்டி ஆள்வது கடினம். கோவேறு கழுதையின் மேல் அமர்ந்து ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு போகும் காகம் போல எனக்கு உன்னைத் தொடர்ந்து வரவும் சக்தியில்லை. நீயே தான் கதி. எவன் மற்றவர்களை அண்டி வாழ்கிறானோ, அவன் வாழ்க்கை சிக்கலில்லாமல் போகும்.  ஆனால் மற்றவர்களை வாழ வைப்பது கஷ்டம்., மனிதன் விதை போட்டு வளர்த்து மரமாக்குகிறான். அதே மரம் நன்கு வளர்ந்த பின், சிறிய மனிதன் ஏற முடியாதபடி வளர்ந்து நிற்கிறது. பூத்து காய்த்து, பழுக்கும் சமயங்க ளி ல் அந்த மரத்தின் பலனை அவன் அனுபவிக்க முடியாமல் கூட போகும்.  இந்த பலனை எண்ணித்தான் மரத்தை நட்டான் எனினும், மனிதனின் சக்தி அவ்வளவு தான். இது ஒரு உவமையே. நீயே இதன் பொருளை அறிந்து கொள்.  எங்களுக்கு நீ தகுந்த தலைவன். வேலையாட்களான எங்களை நீ கட்டளையிட்டு பாலிக்கவில்லையெனில், வரிசையாக அணி வகுத்து நிற்கும் இந்த சேனையை மகாராஜாவாக  நீ முன்னின்று நடத்திச் செல். தகிக்கும் சூரியனைப் போல ராஜ்யத்தில் நீ இருக்க, உன்னை பின் தொடர்ந்து வரும் யானைகள் நடனமாடட்டும். அந்த:புர ஸ்த்ரீகள் மனம் மகிழட்டும்.

 

இதைக் கேட்டு, சரியாக சொன்னதாக பரதனை வாழ்த்தி விட்டு, ஊர் ஜனங்கள் திரும்பவும் ராமனை யாசித்தனர். பரதன் வருத்தத்துடன், புலம்புவதைக் கேட்ட ராமர், அவனை சமாதானப் படுத்தும் விதமாகச் சொன்னார். விதி என்பது நம் கையில் இல்லை. இதை இஷ்டப் படி வளைக்க முடியாது. இந்த மனிதன் விதியின் எதிரில் அதிகாரம் செய்ய முடியாது. இதோ, ஒன்று, இதோ மற்றொன்று என்று நம்மை க்ருதாந்தன் எனும் விதி இழுத்துக் கொண்டே போகிறது. உலகில் எல்லாமே, ஒரு முடிவைக் கொண்டதே. சேர்த்து வைத்த நிறைய செல்வமும் ஒரு நாள் விழும். சேர்க்கைகளும் பிரிவில் தான் முடியும். வாழ்க்கை மரணத்தை முடிவாகக் கொண்டது. பழுத்த பழங்கள் பழுத்து விழுவதில் பயம் இல்லை. அதே போல மனிதனுக்கும் மரணத்தைத் தவிர, வேறு எதிலும் பயமில்லை. நல்ல அஸ்திவாரத்தோடு கட்டப் பட்ட மாளிகையும் எப்படி ஒரு நாள் (ஜீர்ணமாக) பழுது பட்டு இடி பாடுகளுடன் காட்சி தருமோ, அதே போல வயது ஏற, ஏற, முதுமை மனிதனை அலைக் கழிக்கிறது. இரவு, முடிந்து விடிந்தபின், அந்த இரவு திரும்ப வருவதில்லை. யமுனை நிறைந்து இருந்தாலும், உப்பு நீரைக் கொண்ட சமுத்திரத்தைத் தான் போய் சேருகிறது. நீர் நிலைகளில் ஜலம் வேணிற் காலத்தில் வற்றுவது போல,  ஜீவன்களின் ஆயுளும், பகலும், இரவும் நகர, நகர, குறைந்து கொண்டே போகிறது.  தன் ஆத்மாவைப் பற்றி கவலைப் படு.   மற்ற கவலைகள் எதற்கு? நின்றாலும், நடந்தாலும், ஆயுள் குறைந்து கொண்டே போகிறது. ம்ருத்யுவுடனேயே வாழ்கிறோம். ம்ருத்யுவுடன் கூடவே வெளி யேறிச் செல்கிறோம். வெகு தூரம் அத்வானத்தில் சென்றாலும் ம்ருத்யு உடன் வருகிறான். உடலில் சுருக்கங்கள் வந்து விட்டன.  தலை மயிர் வெளுத்துப் போகிறது. முதுமை வந்த பின், உடல் தளர்ந்த நிலையில் மனிதன் என்ன தான் செய்ய முடியும்? சூரியன் உதித்தவுடன், மகிழ்ச்சி கூத்தாடுகிறார்கள். அஸ்தமித்தவுடன் மகிழ்ச்சியடைகிறார்கள். இடையில் தன் ஆயுள் குறைந்து போனதை மனிதன் உணருவதேயில்லை.  ருதுக்கள் மாற, மாற மனிதனின் கால கதியும் கூடவே க்ஷயம் ஆகிறது. பெரும் கடலில், கட்டை மேல் கட்டை போட்டுத் தாண்ட முடியும் என்று நினைப்பது போலத்தான் இந்த சம்சாரக் கடலைத் தாண்டுவதும்.  இப்படித்தான் மனைவியும் புத்திரர்களும், தாயாதிகளும், செல்வமும் சேர்ந்து ஓடச் செய்கின்றன. ஒரு நாள் இவை எல்லாமே இல்லாது போகும். ஜீவன் இந்த  பா4வத்தை உணராததால் தான் ஒருவன் இறந்தால் வருத்தமடைகிறான். இது அறிவுடமையாகாது. சேர்ந்து நடந்து செல்பவர்கள், ஒருவன் வழியில் நின்று நீங்கள் போய்க் கொண்டே இருங்கள், நான் பின்னால் வருகிறேன் என்று சொல்வது போல, நம் முன்னோர்கள், தந்தை, பாட்டனார் அவருக்கும் முன்னால் பலர் சென்ற வழி இன்றும் உள்ளது.  அதை அடைந்து ஏன் வருத்தப் பட வேண்டும்? வேறு வழி எதுவும் இல்லாதபோது வயது ஏறும் பொழுது, வேகமாக வரும் நதியைத்  திருப்ப  முடியாதது போல எதையும் தடுத்து நிறுத்த முடியாது. தன் ஆத்மாவுக்கு எது சுகமோ அதைச் செய்ய வேண்டும். பிரஜைகள் சுகமாக இருக்கச் செய்வது அரசன் கடமை என்று சொல்வார்கள்.  தர்மாத்மாவாக, சுபமான யாகங்களைச் செய்து, நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, பாபங்கள் அகல, நம் தந்தை சக்ரவர்த்தியும் இருந்து ஸ்வர்கம் சென்றார். தன் கீழ் வேலை செய்பவர்களையும் பிரஜைகளையும் சரிவர பாலித்து வந்ததால், நிறைய பொருள் தானம் செய்தும் நம் தந்தை தேவலோகம் சென்றார். பலவிதமான யாகங்களைப் பார்த்தும், ஏராளமான போகங்களையும் அனுபவித்து, உத்தமமான ஆயுசையும் வாழ்ந்து நம் தந்தை ஸ்வர்கம் சென்றார். நீண்ட ஆயுளோடு, நன்றாக அனுபவித்து மகிழ்ந்தபின் தான் அவர் காலம் முடிந்தது என்பதால் நாம் நம் தந்தையை எண்ணி வருந்த வேண்டியது இல்லை. உபயோகித்து பழசாகிப் போன மனித உடலைத் தியாகம் செய்து விட்டு, தெய்வ சம்பத்தை அடைந்து விட்டார். ப்ரும்ம லோகத்தில் சஞ்சரிக்கும் நிலையை அடைந்து விட்டார்.  அறிவு உடையவன் இவர் விஷயத்தில் வருத்தப் படவே தேவையில்லை. எந்த நிலைமையானாலும், தைரியமும், புத்தியும் உள்ளவன், கட்டுப் பாட்டுடன் துக்கத்தைத் தாங்கிக் கொண்டு, அழுது புலம்புவதை விட்டு, கடமையில் கண்ணாக இருக்க வேண்டும். அதனால் நீ ஸ்வஸ்த2னாக இரு. (சுகமாக இரு) துக்கத்தை விடு. அயோத்தி மா நகரில் வசி. தந்தையினால் நியமிக்கப் பட்டவன் ஆதலால் அந்த நகரில் இருந்து ராஜ்ய பாலனம் செய். நானும் உன்னால் நியமிக்கப் பட்டவனாக என் இடத்தில் இருந்து தந்தையின் கட்டளையை நிறைவேற்றுகிறேன். அவருடைய கட்டளையை மீறி நடப்பது என்னால் முடியாது. அது நியாயமும் அல்ல. அவர் நமக்குத் தந்தை, நம் பந்து, அவர் சொல்லைக் கேட்பது தான் உனக்கும் நியாயம். அவர் சொன்ன வன வாசத்தை மேற் கொண்டு, அவர் சொன்ன சொல்லை நான் காப்பேன். செய்து காட்டுவேன், பரலோகத்தை விரும்பும்  யாரானாலும், தார்மீகனாக கருணை உடையவனாக குருவை மதித்து நடப்பவனாக இருக்க வேண்டும். ஸ்வபாவமாக உள்ள உன் ஆத்மாவின் தூண்டுதலின் படி நடந்து வா, நரர்களில் ரிஷபம் போன்றவனே, பரதா, நம் தந்தை தசரதனுடைய சுபமான நடவடிக்கைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதே வழியில் செல்வாய். இவ்வாறு தந்தையின் கட்டளையை ஏற்று, கீழ் படியத்தான் வேண்டும் என்று இளையவனான பரதனுக்கு அறிவுரை சொல்லி, பலவிதமாக எடுத்துக் காட்டி நிறுத்தினார், ராமர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராம வாக்யம் என்ற நூற்று ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 106 (183) பரத வசனம் (பரதனின் பதில்)

 

இவ்வாறு பொருள் பொதிந்த வார்த்தைகளைச் சொல்லி ராமன் நிறுத்தியதும், பரதன் பதில் சொல்லலானான். உன்னைப் போல் இந்த உலகில் வேறு யார் இருக்க முடியும்? அரிந்த3மா, உன்னை துக்கம் வதைக்காது. சந்தோஷம் உன்னை பாதிக்காது.  முதியவர்களுக்கும் நீ சம்மதமானவன். ஆனால்  அவர்களையும் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கிறாய்.  உயிருடன் உள்ளதோ, இல்லாததோ, நல்லதோ, கெட்டதோ எதிலும் சமமாக பார்க்கும் புத்தி உள்ளவன், எவனோ, அவனை எந்த விஷயம் தான் பாதித்து வருந்தச் செய்யும்.  அரசகுமாரனாக இருந்தும் நீ தொலை நோக்குடைய முனிவர்களுக்கு சமமானவன்.  இது போல சாதாரண துக்கங்கள் உன்னை பாதிக்காது. தேவர்களுக்கு சமமானவன் நீ.  மகான். சத்ய சந்தன். எல்லாம் அறிந்தவன். தீர்க தரிசி. புத்திமான் கூட.  அதனால் ராகவா, இவ்வளவு  குணங்கள் உடைய உன்னை, நடப்பதையும் நடக்காததையும் உணரும் குசலம் படைத்தவனை, தாங்க முடியாத துக்கமும் வருத்தாது. பிறகு, பரதன் தொடர்ந்தான். நான் ஊரில் இல்லாதபொழுது, என் தாய் காரணமாக செய்தது. அவளுடைய அறியாமையால் செய்தது. யாருக்கும் சம்மதமுமில்லை. அதை பொறுத்தருள வேண்டுகிறேன். நானும் தர்ம பந்தத்தில் கட்டுண்டவன் தான். அதனால் தான் இவளைக் கொல்லாமல் விட்டு வைத்திருக்கிறேன்.  வேறு யாராவது இந்த இடத்தில் இருந்தால், தண்டனைக்கு உள்ளாகி இருப்பார்கள். இந்த பாப காரியங்களின் பலனாக தண்டனை கொடுத்து இருப்பேன். தசரதன் பிள்ளையாக பிறந்த யார் தான், அதர்மம் என்று அறிந்து, இது போல ஒரு அருவருப்பான காரியத்தைச் செய்வார்கள். குருவும் தந்தையுமான அவர் வயது முதிர்ந்து மறைந்தும் விட்டார். தந்தையை தெய்வமாக நினைக்கிறோம். அவரை இந்த சமயம் குற்றம் சொல்ல மாட்டேன்.  யார் தான் தர்மமும் இல்லை, அர்த்தமும் இல்லை என்ற இந்த செயலில் மனமுவந்து ஈடுபடுவார்கள்? தன் மனைவிக்கு பிரியமானதை செய்வதாக எண்ணி தர்மம் அறிந்தவன், தர்மத்தை கடைபிடிப்பவன் எவனும் இது போன்ற செயலை செய்ய மாட்டான். ஆனால், காலம் முடியும் தறுவாயில் மனிதனின் புத்தி பேதலித்துப் போகும் என்பார்கள். அரசன் இவ்வாறு செய்ததால் இந்த உலக வழக்கு உண்மையே என்று ஆகிறது. நல்லதை நினைத்து ஆரம்பித்து, க்ரோதமும், மோஹமும் சாஹஸமும் அவரை திசை திருப்ப, தந்தை செய்ததை சரி செய்யுங்கள். தந்தை தவறு செய்தால் அதை மகன் திருத்துவது நல்லது தான். அவன் தான் மகன். விபரீதமாக, வேறு விதமாக செய்ததையும் திருத்தி நல்வழிப்படுத்தும் மகனாக நீங்கள் இருங்கள். தந்தை செய்த தவற்றை திருத்துங்கள்.  உலகில் வீரர்கள் தூற்றும் இந்த செயலால் பாதிக்கப் பட்ட எங்கள் எல்லோரையும், கைகேயியை, என்னை, தந்தையை, நண்பர்களை, பந்துக்களை, ஊர் ஜனங்களை, மற்றும் எல்லோரையும் காப்பாற்றுங்கள். நீங்கள் தான் இந்த சமயம் காப்பாற்ற முடியும். காடு எங்கே? க்ஷத்திரிய தர்மம் எங்கே? இந்த ஜடை எங்கே? ராஜ்ய பரிபாலனம் தலைமேற் கொள்வது எங்கே? இது போல எதிர்மறையான பொறுப்பை  நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. க்ஷத்திரியனுடைய முதற் கடமை முடி சூடிக்கொள்ளுதல். இதனால் பிரஜா பாலனம் செய்வது சாத்தியம் ஆகும்.  ப்ரத்யக்ஷமாக உள்ள இந்த தர்மத்தை விட்டு, சந்தேகத்துக்கு இடமான பொருந்தாத அனிச்சயமான தர்மத்தை க்ஷத்திரிய தர்மத்திற்கு புறம்பானதை ஏன் மேற் கொள்ள வேண்டும்.  உடல் உழைப்பு மிகுந்த தர்மம் தான் அனுஷ்டிக்க வேண்டும் என்று தாங்கள் விரும்பினால், தர்மத்துடன் நான்கு வர்ணத்தார்களையும் பாலித்து, உடல் வருந்த உழைத்தவர்கள் ஆவீர்கள். நான்கு ஆஸ்ரமங்களுள் க்ருஹஸ்தாஸ்ரமம் விசேஷமாக சொல்லப் படுகிறது.  தர்மம் அறிந்தவர்கள் சொல்லும் இதை எப்படி தாங்கள் துறக்கலாம்?  கேள்வி ஞானத்தாலும், என் நிலையாலும் (அந்தஸ்து), பிறப்பாலும் உங்கள் எதிரில் நான் பாலனாவேன். நீங்கள் இருக்கும் பொழுது நான் எப்படி ராஜ்யம் ஆளுவேன்? புத்தி குணங்களில் உங்களை விடக் குறைவானவன், அந்தஸ்து என்று எடுத்துக் கொண்டால் உங்களுக்கு தாழ்ந்தவன், நீங்கள் பாலனாக கருதும் அளவு இளையவன், நான் ஆளும் தகுதி பெற்றவனாக எப்படி ஆவேன். எனக்கு கட்டளையிடுங்கள். உங்கள் தர்மத்தை பாலியுங்கள். நீங்கள் இல்லாமல் இருக்க எனக்கு முடியாது. இந்த ராஜ்யம், தந்தையுடையது. அப்பழுக்கின்றி முழுவதுமாக நீங்கள் முடி சூட்டிக் கொண்டு, பாலனம் செய்யுங்கள். இங்கு வந்துள்ள சுற்றத்தார், உற்றார் முன்னிலையிலேயே, பிரஜைகள் கூட  இருக்க, உங்கள் ராஜ்யாபிஷேகம் நடை பெறட்டும். ருத்விக்குகள், வசிஷ்டர் முதலானோர், மந்திரங்கள் அறிந்தவர்கள், இவர்கள் கையால் அபிஷேகம் செய்து வைக்கப் பட்டவராக, எங்களுடன் அயோத்தி திரும்பி வாருங்கள். தன் தவ வலிமையால் மூவுலகையும் ஜயித்து, மருத் கணங்களோடு வாஸவன் போல மூன்று விதமான கடன்களை கழித்தவனாக, எதிரிகளை நெருப்பைச் கட்டிக் கொள்ளச் செய்து, நண்பர்களை நன்கு உபசரித்து, வேண்டியதைக் கொடுத்து இங்கு நீயே ஆட்சி செய்வாய். என்னையும் சேர்த்து ஆட்சி செய். அண்ணலே, இன்று உங்கள் முடி சூட்டு விழாவைப் பார்த்து நம் அன்பர்கள் மகிழ்ச்சியடையட்டும். எதிரிகள் பயந்தவர்களாக பத்து திக்குகளிலும் ஓடட்டும். என் தாயின் ஆக்ரோஷத்தை மறந்து, புருஷர்ஷபனே,

(புருஷர்களில் ரிஷபம் போன்றவனே) நம் தந்தையையும் இந்த கொடும் பழியிலிருந்து காப்பாற்று.  தலை வணங்கி கேட்கிறேன். என்னிடம் தயை செய்வாயாக. மகேஸ்வரன், தன் கீழ் உள்ள பூதங்களிடம் தயை செய்வது போல செய்.  இவ்வளவு சொல்லியும் இவற்றை மறுத்து, வனம் தான் செல்வாயானால், நானும் வனம் வருகிறேன். இப்படி திட்ட வட்டமாக பரதன் சொன்னவுடன் ராமர் என்ன பதில் சொல்வதென்று திகைத்தார். பரதனை உடன் அழைத்துப் போவதும் முடியாது, தான் தன் தந்தையின் கட்டளையை மீறவும் முடியாது. ராகவனிடத்தில் இப்படி ஒரு அத்புதமான திகைப்பைப் பார்த்து கூடியிருந்த ஜனங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கூடவே துக்கமும் அடைந்தனர். அயோத்யா வரவில்லையே என்று துக்கம். தன் கொள்கையில் உறுதியாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி, அவனை நிகமம், வேதம் அறிந்த ரித்விக்குகளும், படைத்தலைவர்களும், கண்களில் நீர் மல்க தாய் மார்களும், இப்படிப் பேசிய பரதனைப் பாராட்டினர். ராமனைத் திரும்பவும் வேண்டினர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத வசனம் என்ற நூற்று  ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 107 (184) ராம ப்ரதி வசனம் (ராமனின்  பதில்)

 

திரும்பவும் அப்படியே பேசும் பரதனைப் பார்த்து, ராமர் பதில் சொன்னார். லக்ஷ்மணன் முன் பிறந்த அண்ணல், தாயாதிகளின் மத்தியில், அவர்களால் வெகுவாக கௌரவிக்கப் பட்டவராக பதில் சொல்ல முனைந்தார்.  நீ சொன்னது, தசரத அரசனுக்கும், கைகேயிக்கும் பிறந்த அரச குமாரன் என்ற நிலைக்கு மிகப் பொருத்தமானதே. ராஜ வம்சத்தில் தோன்றிய உனக்கு அது தான் அழகு. முன்னால் நம் தந்தை உன் தாயாரை மணந்து கொண்டு உன் தாய் வழி பாட்டனாருக்கு,  ராஜ்யத்தை உத்தமமான தக்ஷிணையாக வாக்களித்தார். (திருமண அன்பளிப்பு) தேவாசுர யுத்தம் வந்ததும் அந்த யுத்த சமயத்தில் உன் தாய் செய்த சேவையில் மகிழ்ந்து வரங்கள் அளித்தார். அதை நினைவு படுத்தி உன் தாய் இரண்டு வரங்களை இப்பொழுது யாசித்துப் பெற்றுக் கொண்டாள். உனக்கு ராஜ்யமும், எனக்கு நாடு கடத்தலும். அதை அப்படியே சக்ரவர்த்தியான ராஜா சம்மதித்து வரங்கள் கொடுத்தார். அதனால் தந்தை என்னை இங்கு இரு என்று நியமித்து விட்டார். பரதா, பதினான்கு வருஷங்கள் வன வாசம் என்று  நியமித்து விட்டார். அதனால் நான் இந்த ஜன சஞ்சாரமற்ற காட்டிற்கு வந்தேன். லக்ஷ்மணன் என்னைத் தொடர்ந்து வந்தான். சீதையும் உடன் வர,  தந்தை சொல்லை காப்பாற்றியாகி விட்டது. நீயும் அதே போல அப்படி அப்படியே உள்ளதை ஏற்றுக் கொண்டு, தந்தையை சத்யவாதியாக்கு.  சீக்கிரமே முடி சூட்டிக்கொள். தந்தையை கடனிலிருந்து விடுவித்து, அவரை காப்பாற்று. என் பொருட்டு இதை செய்.  தாயாரையும் மகிழ்ச்சி கொள்ளச் செய். ஒரு பழைய நாட்டு வழக்கு கேட்டிருக்கிறோம். க3யையில் யாகம் செய்து, க3யையில் பித்ரு கர்மாக்கள் செய்து, (புத்) என்ற நரகத்திலிருந்து தந்தையரை விடுவிக்கிறார்கள் என்பதாலேயே மகனுக்கு புத்திரன் என்று பெயர்.  (பும்னாம்னோ நரகாத் த்ராயதே இதி) எப்பொழுதும் தந்தையை காப்பது மகன் கடமையே.  பல குழந்தைகளை பெற வேண்டும், எல்லோரையும் குணவான்களாக, கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாக ஆக்க வேண்டும். இப்படி பல பேர் இருந்தால் ஒருவனாவது க3யை போவான். இவ்வாறு ராஜ ரிஷிகள் எல்லோரும் எதிர் பார்த்தனர். அதனால் இப்பொழுது உனக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தில், தசரத ராஜனை நரகம் போகாமல் காப்பாற்று. அயோத்யா திரும்பி போ. பிரஜைகளை சந்தோஷமாக வைத்திரு, சத்ருக்னன் உடன் இருக்க, மற்ற பிராம்மணர்கள் உதவியோடு ராஜ்யத்தை ஆளுவாய். நான் சீக்கிரமே, தாமதிக்காமல் தண்ட காரண்யம் போகின்றேன். எங்கள் இருவருடனும், வைதேஹியும் வருவாள். நீ அரசன் பரதா, மனிதர்களுக்கு அரசனாக இரு. நானும் காட்டில் இருக்கும் காட்டு மிருகங்களுக்கும், மற்ற ஜீவன்களுக்கும் அரசனாக இருக்கிறேன்.  நீயும் சந்தோஷமாக அயோத்தி மா நகர் போ. நானும் மகிழ்ச்சியுடன் தண்டகா வனம் போகிறேன். உன் தலையை அரசு எனும் குடை வெய்யிலிலிருந்து காத்து குளிர்ச்சி தரட்டும். நானும் மர நிழல்களில் வசித்து, அந்த அதிசயமான சுகத்தை அனுபவிக்கிறேன். சத்ருக்னன், நல்ல புத்திசாலி. அவன் உனக்கு சகாயமாக இருப்பான். எனக்கு சௌமித்திரி, என்னுடைய முதல் நண்பன் என்று பெயர் பெற்றவன். நாம் நல்வருமாக தசரத ராஜாவை சத்யசந்தனாகச் செய்வோம். கவலைப் படாதே.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராம பிரதி வசனம் என்ற நூற்று ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 108 (185) ஜாபா3லி வாக்யம் (ஜாபாலி என்ற முனிவர் பேசுதல்)

 

பரதன் சொல்வதும், ராமன் மறுத்து சமாதானம் செய்வதுமாக இருந்த சமயம், அங்கிருந்த ஜாபாலி முனிவர், பிராம்மணோத்தமர், ராமனிடம் தர்மத்திற்கு விரோதமான ஒரு அபிப்பிராயத்தைச் சொன்னார். ராகவா, உன் எண்ணம் அர்த்த சாஸ்திரத்துக்கு பொருந்தாதது. சாதாரண ஜனங்களைப் போல் நீ ஏன் இப்படி யோசிக்கிறாய்?  யார், யாருக்கு பந்து, யாருக்கு யாரிடத்தில் என்ன காரியம், எவனால், எவனுக்கு நன்மை அல்லது தீமை, ஒருவனாக பிறக்கும் ஜீவன் ஒன்றாகவே மறைகிறது. தாய் தந்தை என்று மயங்குவது கூட ராமா, உன்மத்தன் என்று தான் சொல்ல வேண்டும். யாரும், யாருக்கும் சொந்தமில்லை. வேறு கிராமம் போய் ஒருவன் சில காலம் வசித்து விட்டு, வேறு இடத்துக்கு புறப்பட்டுச் செல்வது போல, அந்த இடத்தை விட்டு, மறு நாளே காலி செய்து கொண்டு கிளம்புவது இல்லையா? அது போலத்தான் மனிதர்களுக்கு தாய், தந்தை, வீடு, செல்வம் எல்லாம். நாம் இருக்க ஓர் இடம், அவ்வளவு தான். காகுத்ஸா, இதில் அதிக முக்யத்வம் கொடுத்து நல்லவர்கள் மயங்குவதில்லை. தந்தை வழியில் வந்த ராஜ்யத்தைத் துறந்து, மிகவும் கடினமான சிக்கல் நிறைந்த உபயோகமில்லாத வழியை ஏன் ஏற்றுக் கொள்ள விரும்புகிறாய். செல்வம் நிறைந்த அயோத்தி மா நகரில் முடி சூட்டிக் கொள்.  இந்த நகரம் என்ற பெண் உன்னை நாயகனாக அடையத் தவம் இருக்கிறாள். ராஜ போகங்களை அனுபவித்துக் கொண்டு ராஜ குமாரா, நீ அயோத்தியில் சுகமாக இரு. தேவலோகத்தில் இந்திரன் இருப்பது போல இரு. தசரதன் உனக்கு எந்த உறவும் இல்லை. நீயும் அவருக்கு எந்த வித பந்துவும் இல்லை. அவர் ஒரு அரசர். நீ வேறு ஒரு அரசன். பிரஜைகளுக்கு தந்தை வித்து மாத்ரமே. தாயுடன் கலந்து புருஷனாக பிறக்கிறது. இப்பொழுது அந்த அரசன் போன இடம் நீயும் போக வேண்டியானே. இது தான் இயற்கை. மனிதனின் கதி இதுவே தான் என்று இருக்கும் பொழுது நீ ஏன் வீணாக கவலைப் படுகிறாய்.  அர்த்தம், தர்மம் இது இரண்டையும் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன். மற்றவைகளை நினைப்பதில்லை. பித்ரு, தைவம் என்று எட்டு விதமாக ஜனங்கள் யோசிக்கும் பொழுது அன்னம் உபத்ரவம் செய்வதைப் பார். இறந்தபின் நீ என்ன சாப்பிடுவாய்? இங்கு அனுபவித்து விட்டு வேறு சரீரம் போகும் பொழுது உனக்கு சிரார்தம் செய்வார்கள். அது பத்யமாக இருக்காது. சில மேதாவிகளால் செய்யப் பட்ட க்ரந்தங்கள், முறைகள் இவை. யாகம் செய், தானம் கொடு,  தீக்ஷை எடுத்துக் கொள். தவம் செய். உடலை வருத்து, தியாகம் செய் என்றெல்லாம் சொல்வார்கள். இந்த உலகைத் தவிர, வேறு எதுவும் இல்லை என்று புத்தியில் கொள். ப்ரத்யக்ஷம் எதுவோ அதை மட்டுமே நம்பு. பரோக்ஷமானது எதுவோ (கண்ணுக்குத் தெரியாதது) அதை விடு. உலகில் நல்லவர்களை முன்னிட்டுக் கொண்டு நிதர்சனமான உண்மைகளை மட்டுமே ஏற்றுக் கொள். இப்பொழுது பரதன் மகிழ்ச்சியுடன் தரும் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ஜாபா3லி வாக்யம் என்ற நூற்று   எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 109 (186) சத்ய ப்ரசம்ஸா (சத்யத்தின் உயர்வு )

 

ஜாபா3லியின் வாதத்தைக் கேட்டு, தர்ம சிந்தனை உள்ளவர்களிலும் ஸ்ரேஷ்டனான ராமன், அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் பதில் சொன்னார். பெரியவரே, எனக்கு பிரியமாக இருக்க வேண்டும் என்று இப்படி ஒரு வாதம் செய்துள்ளீர்கள்.  நல்லது போல தோன்றும் கெடுதல், கார்யமே இல்லாத காரியம், வெளித்தோற்றம் ஒன்று, உட்பொருள் எதிர்மறையாக இருக்கும் இந்த வார்த்தைகளால் பலன் ஒன்றும் இல்லை. மரியாதையை விட்ட மனிதன், கெடுதலான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவன் நல்ல மதிப்பை பெறுவதுமில்லை, நல்லவர்கள் அவனது இரட்டை வேடத்தை உணர்ந்து கொள்வார்கள்.  குலத்தில் பிறந்தவனோ இல்லாதவனோ, வீர புருஷனாக தன்னை நினப்பவன், ஒருவனது நடத்தை தான் அவன், நல்லொழுக்கம் உள்ளவனா இல்லையா என்பதை உலகிற்கு காட்டுகிறது. பெருந்தன்மை உடையவனைப் போல, சிறு புத்தி உள்ளவன், ஒழுக்கத்தை விட்டு நல்லொழுக்கம் உள்ளவன் போலவும் குறிக்கோளே இல்லாதவன் உயர்ந்த குறிக்கோள் உள்ளவன் போலவும், சீலமே இல்லாதவன் சீலவான் போலவும் அதர்மத்தை தர்மம் போல, இந்த உலகில் ஜனங்களை குழப்பக் கூடிய விஷயங்களை நாம் ஏற்றுக் கொண்டால், விதி முறை இல்லாத செயல்களால், நல்லதை விடுத்து நடந்து கொள்வோமேயானால், புத்தியுள்ள எவன் தான் கார்யா கார்யம் எது என்பதை அறிந்தவன், என்னை பெரிதாக நினைப்பான்? உலகோர் தூற்றும் கெட்ட நடவடிக்கையுள்ள ஜனங்களோடு நானும் ஒருவன் ஆவேன். என் குணம் என்றும் நன்னடத்தை என்றும் எதைச் சொல்வேன். ஸ்வர்கம் செல்ல என்னிடம் நல்ல செயல் எது இருக்கும்? என் ப்ரதிக்ஞையை விட்டு நிகழ் கால சுகத்தை மட்டும் நினைத்து நான் செயல் பட்டால் பின்னால் அது கெடுதலையே தரும். ஆசையினால் அலைக்கழிக்கப் பட்டு அலைபவர் இந்த உலகம் முழுவதும் இருக்கிறார்கள் ஆனால் நன்னடத்தையுள்ள அரசன் இருந்தால், பிரஜைகளும் அந்த நன்னடத்தையை பின்பற்றுவார்கள்.  சத்யம், சத்யமே தான் மற்றும் கருணை இவை காலம் காலமாக ராஜாவின் குணம் என்று சொல்லப் பட்டு வந்திருக்கிறது. அதனால் சத்யத்தை அடிப்படையாகக் கொண்ட ராஜ்யம், சத்யமாக உலகில் நிலைத்து நிற்கும். ரிஷிகளும், தேவர்களும், சத்யத்தை தான் போற்றினர். இந்த உலகில் சத்யவாதிகள் குறைந்து கொண்டே வருகிறார்கள். சர்ப்பத்தைக் கண்டால் நடுங்கி விலகுவது போல அசத்யத்தைக் கண்டு அருவருத்து விலக்க வேண்டும். தர்மம் முதல் சத்யம். மற்ற எல்லா குணங்களுக்கும் அடிப்படையானது. சத்யம் தான் கடவுள். சத்யத்தில் மற்ற எல்லா நன்மைகளும் அடக்கம். சத்யத்தில் தான் பத்மாவான லக்ஷ்மி வசிக்கிறாள். எல்லாமே சத்யத்தை சார்ந்து தான் இருக்கிறது. அதனால் சத்யத்தை மிஞ்சி வேறு எதுவுமே இல்லை. தானம், யக்ஞம் செய்தல், ஹோமம் செய்தது தவம் செய்வதும், உடலை வருத்தி செய்யும் விரதங்களும் வேதங்கள், எல்லாமே சத்யத்தின் அடிப்படையில் அமைந்தவை. அதனால் சத்யத்தை நாம் அனுஷ்டிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒருவன் உலகை ஆள்கிறான். ஒருவனே குலத்தைக் காக்கிறான். ஒருவன் நரகத்தில் உழலுகிறான். ஒருவன் ஸ்வர்கம் செல்கிறான். அதனால் நான் தந்தையின் சொல்லை ஏன் கேட்காமல் இருக்க வேண்டும்? என் தந்தை வாக்குத் தவறாதவர். அவர் சத்யத்தை நான் நிலை நிறுத்த வேண்டும். லோபத்தினாலோ, மோகத்தினாலோ, அறியாமையினாலோ, தாமஸ குணம் நிரம்பி சூழ்ந்து இருப்பதாலோ, என் தந்தையின் சத்யம் எனும் பாலத்தை உடைத்தவனாக ஆவேன். இது போல அசத்ய சந்தனாக, ஸ்திர புத்தி இல்லாதவனை தேவர்களோ பித்ருக்களோ ஏற்றுக் கொள்வதில்லை என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இந்த தர்மம் திருப்பி அடிக்கக் கூடியது.  தர்மம் தான் சத்யம் என்றும், அழியாதது என்றும் நான் நினைக்கிறேன். மற்றவை வெறும் சுமை என்று நல்லவர்கள் நீக்கி விட்டார்கள். க்ஷத்திரிய தர்மத்தை நான் விட்டேன். தர்மம் நிறைந்தது போன்ற அதர்மமான ராஜ தந்திரம் எனக்கு வேண்டாம். சிறு புத்தியுள்ள, வன்முறையாளர்களும், லோபத்தினாலும் பாபம் செய்பவர்கள் அனுஷ்டிக்கும் ராஜ தந்திரம் எனக்கு வேண்டாம். சரீரத்தால், பாபத்தை செய்கிறார்கள்.  மனதால் திட்டமிடுகிறார்கள். வாயால் பொய் பேசுகிறார்கள். இந்த மூன்றுமே பாதகம். பூமி, கீர்த்தி, புகழ், லக்ஷ்மி இவை சத்யமுள்ள மனிதனையே நாடுகின்றன. சத்யம் இருக்கும் இடத்தில் தான் இவை விளங்குகின்றன. அதனால் சத்யத்தையே கடை பிடிப்போம். சிறு பிள்ளைத் தனமாக என்னை மட்டமாக விவரிக்கும் வழி இது. நீங்கள் என்னை செய்யச் சொல்லும் இந்த செயல். யுக்தி பூர்வமான வாக்கியங்களால் நீங்கள் சொன்னது, எனக்கு நன்மையைச் செய்யாது. நான் எப்படி குருவிடம் வன வாசம் போகிறேன் என்று சத்யம் செய்து விட்டு, பரதனிடம், குருவான தந்தை சொன்னதை மீறி நடப்பேன். குருவின் சன்னதியில் நான் ஸ்திரமான புத்தியுடன் தான் பிரதிக்ஞை செய்தேன். அப்போது கைகேயியும் மிகவும் மகிழ்ந்தாள். ஆகார நியமங்களோடு, ஒழுக்கத்தோடு, இந்த வன வாசத்தை முடிப்பேன். பழம், காய் கறிகளை உண்டு, பித்ருக்களையும், தேவதைகளையும் பூஜித்துக் கொண்டு, திருப்தியாக பஞ்ச வர்கனாக நான் உலக யாத்திரையை நடத்துவேன். நிர்தனனாக இருந்தாலும், சிரத்தையாக செய்யக் கூடியது எது, எதை தவிர்க்க வேண்டும் என்ற சிந்தனையோடு, இந்த கர்ம பூமியில் பிறந்த நாம் கர்மாவை  செய்ய வேண்டியது மிக அவசியம். அதிலும்  சுபமானதை செய்வோமானால், அக்னியும், வாயுவும், சோமனும் அதன் பலனில் பங்கு பெறுவார்கள்.  நூறு யாகங்களைச் செய்து தேவராஜன் ஸ்வர்கம் சென்றான். உக்ரமான தவத்தை மேற் கொண்டு மகரிஷிகள் தேவலோகம் செல்கின்றனர்.  உக்ரமான தேஜஸை உடைய அந்த முனிவரின், நாஸ்திக வாதத்தை பொறுக்க முடியாத  அரச குமரன், அவர் வாதத்தை நிந்திக்கும் விதமாக பேசலானான். மூவுலகிலும் நல்லவர்கள் என்றால் சத்யம், தர்மம், பராக்ரமம், பூத தயை, பிரியமாக பேசுதல், என்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. இது தான் நாம் கடை பிடிக்க வேண்டிய நியதியும் ஆகும். இவ்வாறு பிராம்மணர்கள் எல்லோருமாக ஏகமனதாகச் சொன்னார்கள்.  தர்ம வழியில் நடப்பவன், உலகில் எப்படியும் விரும்பியதை அடைகிறான். கோணல் புத்தியுடன்  நாஸ்திகம் பேசும் உங்களை அருகில் சேர்த்துக் கொண்ட என் தந்தையைச் சொல்ல வேண்டும். நாஸ்திக வாதம் தர்ம வழியிலிருந்து விலகிப் போகச் செய்யும். திருடனை எப்படி அண்ட விடாமல் ஜாக்கிரதையாக இருப்போமோ, அப்படித்தான் இந்த நாஸ்திக வாதம் பேசும் அறிஞர்களையும் அண்ட விடாமல் தள்ளியே இருக்க வேண்டும். பிரஜைகள் சந்தேகப்பட வேண்டியவர்களுள், இந்த நாஸ்திகர்களான, புத்திமான்கள் முதல் இடம் பெருகிறார்கள். ஜாபாலி முனிவரே, உங்களுக்கு முன்னாலும், பின்னாலும் பலர் சுபமான பல காரியங்களைச் செய்தனர்.  ஹோமங்கள் செய்தும், புண்ய கர்மாக்களைச் செய்தும் இக பர சௌக்யங்களை அடைந்தார்கள். தானம் செய்வதில் பிரதானமாக இருந்து தேஜஸுடன் தர்மத்தில் சிந்தனையுடைய சத்புருஷர்கள், ஹிம்சையை வெறுத்து, குற்றமற்றவர்களாக உலகில் வாழ்கின்றனர்.  இவர்கள் பூஜிக்கத் தகுந்தவர்கள். முக்கியமான முனிவர்கள். இவ்வாறு கோபத்துடன் பேசும் ராமனைப் பார்த்து அந்த பிராம்மணர், சமாதானப் படுத்தி  நயமாகப் பேசி, ஆஸ்திகத்தை ஆதரித்துப் பேசலானார். நான் நாஸ்திக வாதம் பேசவில்லை, நான் நாஸ்திகனும் இல்லை. வேறு யாரும் இங்கு நாஸ்திக வழியில் செல்பவர்களும் இல்லை. காலத்தை அனுசரித்து நாஸ்திகம் பேசினேன். ஆனால் திரும்பவும் ஆஸ்திக மதத்தைப் பேசி திரும்பிவிட்டேன். உன்னை உன் நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று என் மனதில் தோன்றியதைச் சொன்னேன். சில சமயங்களில் எதிர்மறையாக பேசியும் ஒரு நல்ல செயலை நடக்கச் செய்ய வேண்டியுள்ளது. அது தான் காரணம் என்றார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சத்ய ப்ரசம்ஸா என்ற நூற்று  ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 110 (187) இக்ஷ்வாகு வம்ச கீர்த்தனம் (இக்ஷ்வாகு வம்சத்தைப் பற்றி சொல்லுதல்)

 

ராமர் கோபத்தில் இருப்பதாக நினைத்து வசிஷ்டரும், சமாதானம் செய்ய முனைந்தார். ஜாபாலி உலக வழக்கு தெரிந்தவர். உன்னை உன் பிடிவாதத்திலிருந்து மாற்றி திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசையினால் இப்படி பேசியிருக்கிறார். உலகுக்கெல்லாம் நாயகனே, இந்த உலகம் தோன்றிய வரலாற்றைச் சொல்கிறேன் கேள். பூவுலகம் எங்கு நிர்மாணிக்கப்பட்டதோ, அந்த இடம் முழுவதும் ஜலமாக இருந்தது. எங்கும் தண்ணீரே தான். அப்பொழுது ஸ்வயம்பூவாக (தானே தோன்றியவர்) ப்ரும்மா தோன்றினார். அவருடன் தேவதைகளும் தோன்றினார்கள். அப்பொழுது அவர் வராக உருவம் எடுத்து பூமியை அடிமட்டத்திலிருந்து மேலே கொண்டு வந்தார். உலகம் பூராவும் சிருஷ்டி செய்தார். இதில் சமர்த்தர்களான அவருடைய பிள்ளைகளும் உதவி செய்தனர். ஆகாயம் வரை பரந்து கிடந்த தேஜஸுடன் சாஸ்வதமான நித்ய, அழிவில்லாத ப்ரும்ம ஸ்வரூபம் நிற்க, அவரிடமிருந்து மரீசி தோன்றினார். மரீசியிடமிருந்து காச்யபர் மகனாக பிறந்தார். காஸ்யபருக்கு விவஸ்வான் என்று பிள்ளை. விவஸ்வானுக்கு மனு என்ற மகன் பிறந்தான். அவன் தான் பிரஜாபதி என்று அழைக்கப் படும் முதல் இக்ஷ்வாகு அரசனின் தந்தை. இந்த விசாலமான பூமி முதலில் மனுவினால் இக்ஷ்வாகுவுக்கு கொடுக்கப் பட்டது. அவன் அயோத்தியை தலை நகராகக் கொண்டு ஆண்ட முதல் இக்ஷ்வாகு அரசன். இக்ஷ்வாகுவுக்கு குக்ஷி என்று ஒரு பிள்ளை. குக்ஷிக்கு மகனாக விகுக்ஷி பிறந்தான். விகுக்ஷிக்கு பா3ணன் என்ற பராக்ரம சாலியான மகன் பிறந்தான். பா3ணனுக்கு அனரண்யன் என்ற புகழ் வாய்ந்த மகன். இவன் காலத்தில், நல்ல மழை பொழிந்து வந்ததால் துர்பிக்ஷம் எனும் வறட்சியே தோன்றியதில்லை. அனரண்யன் அரசனாக இருந்த வரை திருடன் என்ற சொல்லே கிடையாது.  இவனுக்குப் பிறகு ப்ருது2 என்ற அரசன் வந்தான். அந்த ப்ருது2வுக்குப் பிள்ளையாக த்ரிசங்கு தோன்றினான். அவன் சத்யவாதி. தன் சரீரத்துடன் ஸ்வர்கம் சென்றான். இந்த த்ரிசங்குவின் மகன் தான் புகழ் வாய்ந்த து3ந்து3மாரன்.  து3ந்து3மாரனுக்கு மகா பலசாலியான யுவனாஸ்வன் என்ற மகன் பிறந்தான். யுவனாஸ்வனுக்கு மகனாக மாந்தா4தா என்று ஒருவன் பிறந்தான். மாந்தா4தாவுக்கு சுசந்தி4 என்று ஒரு மகன். சுசந்தி4க்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் த்4ருவ சந்தி4, மற்றவன் ப்ரசேனஜித். தேஜஸ்வியான துருவசந்திக்கு பரதன் என்று மகன். பரதனுக்கு நெடிய உருவம் கொண்ட அஸிதன் பிறந்தான். இந்த அரசர்களுக்கு சத்ருக்களும் தோன்றினர். ஹைஹயர்கள், தாள ஜங்கர்கள், சூரர்களான சசிபிந்து எனும் இனத்தவர்கள், இவர்கள் ஒரு முறை சூழ்ந்து கொண்டு யுத்தத்தில் அரசனை புற முதுகிட்டு ஓடச்செய்தனர். அவருக்கு இரண்டு மனைவியர் என்று கேள்வி.  ஒருவள், மற்றவள் கர்ப்பத்தை கலைக்க அவளுக்கு விஷத்தைக் கொடுத்து விட்டாள். காளிந்தீ என்ற அந்த பெண், இமயமலையை அடைந்து, தவம் செய்து கொண்டிருந்த பா4ர்கவரான ஸ்யவனர் என்ற முனிவரை அடைந்து வணங்கி. தன் புத்ரன் க்ஷேமமாக இருக்க வேண்டினாள். அவரும் தேவி உனக்கு உலகில் பெரும் புகழை அடையப் போகும் மகன் பிறப்பான் என்று ஆசிர்வதித்து அனுப்பினார். தார்மிகனான, நல்ல சீலம் உள்ளவனாக, உன் வம்சத்தை விளங்கச் செய்பவனாக இருப்பான். முனிவரை பிரதக்ஷிணம் செய்து அவரை வணங்கி, வீட்டிற்கு வந்து தாமரை தளம் போன்ற பெரிய கண்களுடன், பத்3மகர்ப4னுக்கு சமமான தேஜஸுடன் புத்ரனை ஈன்றெடுத்தாள். சபத்னி (சக்களத்தி),  கர்பத்தை அழிக்க விஷம் கொடுத்தும் அந்த விஷத்துடனேயே பிறந்ததால், சக3ரன் என்று அழைக்கப் பட்டான். (க3ரம்-விஷம்) இந்த சக3ரன் தான் சமுத்திரத்தைத் தோண்டினான்.   இவனுக்கு ஒரு மகன் பிறந்தான். பிரஜைகள் நடுங்கும்படி இருந்த அசமஞ்சன் என்ற மகன், அவன்  உயிருடன் இருக்கும் பொழுதே, தந்தையால் கைவிடப்பட்டான் என்று கேள்வி.  பாப கர்மாவைச் செய்தான் என்பதால் தண்டனையாக இப்படிச் செய்தான். இந்த அசமஞ்சனுக்கு பிறந்த அம்சுமான், நல்ல வீரன். அம்சுமானுக்கு திலீபனும், திலீபனுக்கு ப4கீ3ரதனும் பிறந்தனர். பகீரதன் பிள்ளை  ககுத்ஸன். அதன் பின் வந்தவர்கள்  காகுத்ஸர்கள் என்று சொல்லப் படும் அளவு பிரஸித்தமாக இருந்தான். ககுத்சனுடைய பிள்ளை ரகு4. அதனால் ராகவர்கள் என்றும் அழைக்கப் பட்டனர். ரகுவின் பிள்ளை தேஜஸ்வியான கல்மாஷபாத3ன். சௌதா3சன் என்றும் அழைக்கப் பட்டான். இவனுக்கு சங்க2ணன் என்று மகன். இவனும் வீரனே. இருந்தும் சைன்யத்தோடு அழிந்தான். இவன் மகன் சுதர்ஸனன் சூரன் எனப்பட்டான். அவன் அழகும் பிரஸித்தம்.   சுதர்சனனுக்கு அக்னி வர்ணன், இவனுக்கு சீக்4ரகன் (வேகமாக செல்பவன்), இவனுக்கு மரு, மருவிற்கு ப்ரசுக்ருகனன். இவன் மகன் தான் பெரும் புகழ் பெற்ற அம்ப3ரீஷன். அம்பரீஷனுக்கு நகுஷன் மகனாக பிறந்தான். இவன் சத்ய விக்ரமன். இவனுக்கு பரம தார்மிகனான  நாபா4கன் என்ற பிள்ளை. இவனுக்கு இரண்டு பிள்ளைகள், அஜன், சுவ்ரதன் என்ற பெயர்  பெற்றவர்கள். அஜனுக்கு பிறந்தவன் தான் தசரத ராஜா. உலகம் முழுவதையும் வென்று பரிபாலித்து வந்தான். இவனுக்கு முதல்வனாக பிறந்து ராமன் என்று பெயர் பெற்று, தாசரதியாக விளங்குகிறாய். சொத்துக்கு உரிமையுள்ளவன். அதனால் உன் ராஜ்யத்தை ஏற்றுக் கொள். ஜனங்களை பாதுகாத்து வா. இக்ஷ்வாகு வம்சத்தில் எப்பொழுதும் முன் பிறந்தவனே அரசாளும் தகுதி பெற்றவனாக இருந்து வந்திருக்கிறான். இளையவன் முடி சூடுவது, மூத்தவன் இருக்க, என்பது இந்த வம்சத்தில் இது வரை கிடையாது. இந்த ராகவ குலத்தின் பழமையான தர்மம் இது.  இதை அழித்து விடாதே. உன் தந்தை, பெரும் புகழுடன் இந்த ராஜ்யத்தை பரிபாலித்து வந்தது போலவே, நீயும் செல்வம் மிகுந்த இந்த நாட்டை ஆள வேண்டும். இதை ஏற்றுக் கொள் என்றார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் இக்ஷ்வாகு வம்ச கீர்த்தனம் என்ற நூற்று பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 111(188) ப4ரதானுசாஸனம் (பரதன் வாதம்)

 

வசிஷ்டர், ராஜ புரோஹிதர். அவர் ராமரிடம் இவ்வாறு விவரமாக சொல்லி வேண்டிக் கொண்ட பின், மேலும் சொன்னார்.  இந்த உலகில் பிறந்தவர்களுக்கு மூன்று பேர் குரு. தாய் தந்தைக்குப் பின் குருவாக ஆசார்யன் என்று சொல்வார்கள். ராகவா, தந்தை பிறக்கச் செய்கிறார் என்றால்  ஆசார்யர் புத்தியை வளர்க்கிறார். அதனால் ஆசார்யனும் குருவாகிறார். உன் தந்தைக்கு ஆசார்யனாக இருந்தவன் நான். இப்பொழுது உனக்கும் ஆசார்யன். நல்வழி சொல்லும் என் வார்த்தையை தட்டாதே. இதோ இவர்கள் உங்கள் ராஜ சபையில் அங்கத்தினர்கள். அணிவகுத்து நிற்கும் படைத் தலைவர்கள். பிராம்மணர்கள், இவர்களிடம்  இதுவரை மதிப்பு கொடுத்து நடந்து வந்தவன் நீ. நேர் வழியை தட்டாதே. வயது முதிர்ந்த தாயை அலட்சியம் செய்யாதே. இவள் சொல்வதைக் கேட்டாலும் சரி. யாசிக்கும் பரதனுக்கு அருள் செய்.  சத்ய பராயணனாக இருந்து கொண்டு,  உனக்கு நீயே  அநீதியை செய்வதாக ஆகும். இவ்வாறு குரு மதுரமாக சொல்லவும், ராமர் பதில் சொன்னார். தாய் தந்தை, தனயனிடம் எந்த முறையில் நடந்து கொள்கிறார்களோ, அதே போலத்தான் தனயனும் தன் தாய் தந்தையரிடம் திருப்பிச் செய்ய வேண்டும்.  தன் சக்திக்கேற்றபடி, தருவதாலும், உடைகள் வாங்கிக்கொடுத்து வசதியாக வாழச் செய்து, நித்யம் பிரியமாகப் பேசி, வளர்த்து வருகிறார்கள். அப்படியிருக்க என் தந்தை தசரத ராஜா. அவர்  எனக்கு இட்ட கட்டளை பொய்யாகக் கூடாது. இவ்வாறு ராமர் சொல்லவும், பரதன் சுமந்திரனைப் பார்த்து, இங்கு தரையில், புற்களைப் பரப்பி வை சாரதே, அண்ணலான ராமன் என்னிடம் தயை கொள்ளும் வரையில் நான் ஆகாரமின்றி, தரித்திரனான பிராம்மணனைப் போல, இந்த குடிலின் வாசலில் படுத்துக் கிடப்பேன்.  ராமன் திரும்பி வரும் வரையிலும், இங்கேயே அவனைப் பார்த்துக் கொண்டு கிடப்பேன் என்று சொல்லி புல் படுக்கையில் அமர்ந்து விட்டான். ராஜரிஷிக்கு சமமான ராமன் அப்பொழுது பரதனைப் பார்த்து பரதா, நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? இது பிராம்மணர்கள் கடை பிடிக்க வேண்டிய வழி. தலையில் மகுடம் சூடியவர்களுக்கு இப்படி வடக்கிருந்து (புல் தரையில் அமர்ந்து, உயிர் போகும் வரை  வடக்கு நோக்கி இருத்தல்) உயிர் விடுவது அழகல்ல. எழுந்திரு, நர சார்தூலா, இந்த கடுமையான விரதத்தை மேற் கொள்ள வேண்டாம்.  ராகவா, சீக்கிரமாக அயோத்தி திரும்பி போ.  உட்கார்ந்த நிலையிலேயே பரதன் திரும்பி ஊர் ஜனங்களைப்  பார்த்து நீங்கள் அண்ணலை கட்டளையிட்டு சொல்லாமல் சும்மா இருக்கிறீர்கள் என்று சொல்ல, அவர்கள், காகுத்ஸனை நாங்கள் அறிவோம், அவன் சொல்வது சரிதான், என்று ஊர் ஜனபத, ஜனங்கள் ஒட்டு மொத்தமாக பதில் சொன்னார்கள். இவனும் (ராமனும்), தந்தை சொல்படி செய்கிறான். அவனால் அதை மீற முடியாது. அதனால் நாங்களும் நிர்பந்தமாக ராமனை திரும்பி வரும்படிச் சொல்ல அசக்தர்களாக இருக்கிறோம்.  இதைக் கேட்டு ராமர், பரதனைப் பார்த்து, இதைப் பார். இவர்கள், நண்பர்கள், பந்துக்கள். இவர்கள் சொல்வதைக் கேள். இவர்களும் தர்மம் அறிந்தவர்கள். நியாயமாகத் தான் சொல்கிறார்கள். இவர்கள் சொல்வதையும், நான் சொன்னது இரண்டையும் சேர்த்து யோசித்துப் பார். முதலில் எழுந்திரு. என்னையும் தொடு, உடன் ஜலத்தையும் தொடு. பரதன் உடனே எழுந்திருந்து ஜலத்தை தொட்டுக் கொண்டு சொன்னான்.  என் ராஜ சபை அங்கத்தினர்களே, படைத் தலைவர்களே, மந்திரிகளே, கேளுங்கள். நான் தந்தையிடம் ராஜ்யத்தை யாசிக்கவில்லை. தாய் சொல்வதைக் கேட்டு பணிய மாட்டேன். பரம தார்மிகனான அண்ணன் ராமன் சொல்லையும் கேட்க மாட்டேன். தந்தை சொல்படி வனத்தில் வசித்து தான் ஆக வேண்டும் என்றால், பதினான்கு வருஷம் நான் காட்டில் வசிக்கிறேன்.  சகோதரனின் இந்த வார்த்தையைக் கேட்டு திகைத்த ராமன், ஒரு நிமிஷம் செய்வதறியாது நின்றார். பின், கூட்டத்தைப் பார்த்து என் தந்தை உயிருடன் இருக்கும்பொழுது செய்த ஏற்பாட்டை நான் மீற முடியாது. பரதனாலும் மாற்ற முடியாது. வனவாசம் பிடிக்காமல் இதில் வெறுத்து நான் தந்தையை ஏமாற்றுவது நியாயமல்ல. கைகேயியும் என் தந்தையுமாக சொன்னது சொன்னது தான்.  பரதன் பொறுமையின் எல்லையில் இருப்பவன் என்பதையும் நான் அறிவேன்.  இதில் எல்லோருக்கும்  நன்மை  ஏதெனில், நான் வன வாசத்திலிருந்து திரும்பி வந்து, தர்மசீலனான பரதனுடன் சேர்ந்து இந்த தேசத்து அரசனாக ஆவேன். அரசன் கைகேயியுடன் சேர்ந்து இட்ட கட்டளை. நான் அதன் படி நடக்கிறேன். இதை செய்ய விடாமல் தடுத்து, மகா ராஜாவை பொய்யனாக ஆக்காதீர்கள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரதானுசாஸனம் என்ற நூற்று பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 112 (189) பாது3கா ப்ரதா3னம் (பாதுகையைத் தருதல்)

 

அந்த இரண்டு ஒப்பிலா சகோதரர்களின் வாக்கு வாதத்தைக் கேட்டு, மகரிஷிகள் நம்ப முடியாமல் திகைத்து நின்றனர். ரிஷி கணங்கள், உள்ளும் புறமும், ஹிதத்தையே விரும்புபவர்கள், சித்தர்கள், மகரிஷிகள், இந்த இரண்டு சகோதரர்களையும் வாழ்த்தினர். தர்மத்தில் சிறந்த இந்த இருவரையும் மகன்களாக பெற்றவர் புண்யவான். பாக்யசாலி. நாங்கள் இருவருடைய வாதத்தையும் ஏற்றுக் கொள்கிறோம். பத்து தலை ராவணனின் வதம் ஆக வேண்டும் என்ற எண்ணம் அடி மனதில் தலை தூக்க, அவர்கள் பரதனைப் பார்த்து உபதேசித்தனர். நற்குடியில் பிறந்தவனே, புத்திமான்களில் சிறந்தவனே, நன்னடத்தை உடையவனே, சிறந்த கீர்த்தி உடையவனே, பரதா, ராமரது வாதத்தை ஏற்றுக் கொள். தந்தையின் கட்டளை என்று அறிந்து கொள்.  இவன் தந்தையை வாக்குத் தவறாமல் காப்பதோடு, தானும் வாக்கு தவறாதவன் என்று புகழ் வளர இருக்கட்டும். கைகேயியிக்கு, வாக்குத் தவறாமல் இருந்ததால் தான் ராஜா ஸ்வர்கம் சென்றார். இவ்வாறு சொல்லிவிட்டு, கந்தர்வர்களும், மகரிஷிகளும், ராஜ ரிஷிகளும் தங்கள் தங்கள் இருப்பிடம் சென்றனர். தன் கட்சியைப் பேசிய மகரிஷிகளை பூஜித்து ராமர் முகம் மலர மகிழ்ச்சியுடன் சொல்லலானார். அதே வார்த்தைகளைக் கேட்டு பரதன் உடல் குறுக, கூப்பிய கைகளுடன் ராமனைப் பார்த்து இவ்வாறு வேண்டினான். ராஜ தர்மத்தை ஆலோசித்து, குல தர்மத்தையும் மனதில் கொண்டு, நானும் என் தாயுமாக யாசிப்பதை நீங்கள் செய்து தான் ஆக வேண்டும். நான் ஒருவனாக இந்த பெரிய ராஜ்யத்தை ஆள சாமர்த்யம் இல்லாதவன். ஊர் ஜனங்களையும், ஜனபத பிரமுகர்களையும் கவனித்து சந்தோஷமாக வைத்திருக்க எனக்கு சக்தியில்லை.  நமது தாயாதிகள், படை வீரர்கள், நண்பர்கள், சுற்றத்தார், யாவரும் உங்களையே நாயகனாக அடைய விரும்பி இருந்தார்கள். வயலில் வேலை செய்பவர்கள், விவசாயிகள், மழையை வரவேற்பது போல உங்களை விரும்பி வரவேற்றனர். இந்த ராஜ்யத்தை அடைந்து ஸ்தாபனம் செய். நீ தான் இதற்கு சக்தியுடையவன் என்று சொல்லிக் கொண்டே ராமன் கால்களில் விழுந்தான். அவனை வாரியணைத்து மடியில் இருத்துக் கொண்டு ராமர் ம்ருதுவாகச் சொன்னார். இப்பொழுது நீ சொன்னது உன் வினயத்தைக் காட்டுகிறது.   இது உனக்கு இயல்பாக வந்த குணம். நீ ராஜ்யத்தை பரிபாலிப்பதில் சமர்த்தன் தான் சந்தேகமே இல்லை. மந்திரிகளிடமும், சுற்றத்தாரிடமும், புத்திசாலிகளான மந்திரிகளிடமும் எல்லா விஷயங்களையும் கலந்து ஆலோசித்து, பெரிய காரியங்களைக் கூட செய்ய சக்தி உடையவன் தான். சந்திரனிடமிருந்து ஒளி  விலகினாலும், ஹிமவான், ஹிமம் (பனியை) உதிர்த்து விட்டாலும், சமுத்திரம் கரையைத் தாண்டி வந்தாலும் வரலாம், நான் தந்தைக்கு கொடுத்த வாக்கை மீற மாட்டேன். காமத்தினாலோ, லோபத்தினாலோ, உன் தாய் உனக்காக இதை செய்திருக்கிறாள். இதை மனதில் வைத்துக் கொண்டு வருத்தப் படாதே. தாயிடம் தாயாகவே மதித்து நடந்து கொள். இவ்வாறு சொல்லும் கௌசல்யை மகனைப் பார்த்து, பரதன் சொன்னான். தேஜஸால் சூரியனைப் போலவும், வளர்பிறை சந்திரன் போலவும் விளங்கிய ராமனைப் பார்த்து யாசித்தான். அண்ணலே,  இந்த பாதுகையில் ஏறி நில்லுங்கள். தங்கத்தால் அலங்கரிக்கப் பட்ட இந்த பாதுகைகள் தான் இனி எல்லா லோகத்திற்கும் யோக க்ஷேமங்களை நிர்வகிக்கப் போகின்றன. ராமரும் அவ்வாறே பாதுகையின் மேல் ஏறி நின்று, கழட்டிக் கொடுத்தார். மகாத்மாவான பரதன்  அந்த பாதுகைகளை தலையால் வணங்கி ராமனிடம் சொன்னான். பதினான்கு வருஷம் நானும் ஜடா முடி தரித்து, பழம் காய் கறிகளை உண்டு, வாழ்ந்து வருவேன். ராகவா, நீ திரும்பி வருவதை எதிர்பார்த்து, நகரத்தின் வெளியிலேயே இருப்பேன். தங்கள் பாதுகைகளில் ராஜ பாரத்தை ஒப்புவிக்க ராஜ்யத்தை நிர்வகிக்கிறேன். பதினான்கு வருஷம் முடிந்த அதே நாளில், ரகோ4த்தமா, உங்களைக் காணாவிடில் நான் அக்னியில் ப்ராயோபவேசம் செய்வேன். இது உறுதி அப்படியே ஆகட்டும் என்று சொல்லி ராமனும் பரதனை ஆதரவாக அணைத்து, சத்ருக்னனையும் அணைத்துக் கொண்டு பரதனிடம் சொன்னார். தாயாரான கைகேயியை கவனித்துக் கொள். அவளிடம் ஆத்திரப் படாதே. என் பேரில், சீதை பேரில் ஆணை. பரதா இதை மீறாதே. இவ்வாறு சொல்லி

கண்களில் நீர் மல்க சகோதரர்களை விடுவித்தார். அந்த பாதுகைகளை பரதன் அலங்கரித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, ராகவனையும் பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்தான். பின், முறைப்படி குரு ஜனங்களையும், மந்திரிகளையும், பிரஜைகளையும், சகோதரர்களையும் விடை கொடுத்து அனுப்பினான் ராமன், தன் கொள்கையில் இமயமலை போல அசையா பிடிப்புள்ள வீரன். துக்கம் தொண்டையை அடைக்க தாய்மார்கள் விடை பெறக் கூட சக்தியில்லாதவர்கள் ஆனார்கள். ராமர், தானே தாய்மார்களை வணங்கி விடை கொடுத்து விட்டு தன் குடிலுக்குள் சென்று விட்டார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பாது3கா ப்ரதா3னம் என்ற நூற்று பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)s

 

அத்தியாயம் 113 (190) பாது3கா க்3ரஹணம் (பாதுகையை ஏற்றுக் கொள்ளுதல்)

 

அந்த பாதுகைகளை தலையால் தாங்கியவனாக, மகிழ்ச்சியுடன் பரதன், சத்ருக்னனுடன் ரதத்தில் ஏறினான். வசிஷ்டரும், வாம தேவரும், ஜாபாலியும், த்ருடவ்ரதனான (உறுதியான கொள்கையுடையவனான) பரதனுக்கு முன்னால் சென்றனர். மற்ற மந்திரிகளும் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு செல்வோரும் சென்றனர்.  கிழக்கு முகமாக நடந்து மந்தாகினியை அடைந்தனர். சித்ர கூட மலையை பிரதக்ஷிணமாக கடந்து சென்றார்கள். அந்த பெரிய மலையில் பல விதமான தாதுக்கள், ஆயிரக் கணக்காக இருக்கக் கண்டனர். அழகிய பல இடங்களையும் கண்டு ரசித்தவாறு சைன்யத்துடன் பரதன் சென்றான். பரத்வாஜரின் ஆசிரமத்தை சற்றுத் தொலைவிலிருந்து கண்டு கொண்ட பரதன், அந்த ஆசிரமத்தை அடைந்து அவரை பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். சந்தோஷம் அடைந்த பரத்வாஜர் சொன்னார். குல நந்தனா, உன் வேலை முடிந்ததா?  ராமனைக் கண்டாயா?  என்று கேட்டார். சகோதர பாசம் மிகுந்த பரதன் அவரது கேள்விக்குப் பதில் சொன்னான். நானும் குருவுமாக மிகவும் வேண்டிக் கொண்ட பின்னும், வசிஷ்டரிடம் ராகவன், தந்தையின் வாக்கைத் தான் காப்பாற்றுவேன்,  தீர்மானமாக பதினான்கு வருஷங்கள் காட்டில் வசிப்பதாக தந்தைக்கு கொடுத்த வாக்கை மீற மாட்டேன். இவ்வாறு சொல்லவும் வசிஷ்டர் சொன்னார்.  சொல்லும் பொருளும் அறிந்தவர், அழகாக வார்த்தைகளை கோர்த்து நயமாகச் சொன்னார்.  இந்த தங்கத்தால் அலங்கரிக்கப் பட்ட பாதுகைகளைக் கொடு. இவை உன் சார்பில் அயோத்தியாவின் யோக க்ஷேமங்களை நிர்வகிக்கும், என்றார். வசிஷ்டர் இவ்வாறு சொல்லவும், ராகவன் கிழக்கு முகமாக நின்று பாதுகையின் மேல் ஏறி நின்று, என் ராஜ்யத்திற்கு கொடுத்தார். ராமன் விடை கொடுத்து அனுப்பியதால் திரும்ப அயோத்யா நகரம் செல்கிறேன். சுபமான பாதுகைகளை எடுத்துக் கொண்டு செல்கிறேன்.  பரதன் சொல்லி முடித்தவுடன், பரத்வாஜர், மிகவும் மகிழ்ந்து, அதை விடவும் சுபமான செய்தியைச் சொன்னார். இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ராமனுடைய சீலத்தையும், நடத்தையையும் பார்க்கும் பொழுது.  உனக்குப் பெரியவன், நீ அவன் வழிப்படி நடந்து கொள். கீழ் நோக்கி பாயும் நீரைப் போல நெடிதுயர்ந்த தோள்களை உடைய அந்த ராமன், தன் தந்தையின் வாக்கை காப்பாற்ற, நீ தர்மத்தை அறிந்தவனாக, தர்மத்தையே கடை பிடிப்பவனாக-இப்படி இரண்டு புதல்வர்களைப் பெற்ற தசரதன் பாக்யவான்.  இவ்வாறு பரத்வாஜர் சொல்லி ஆசிர்வதித்தபின், அவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு பரதன், அவரை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்த பின் தன் வழி நடந்தான். வாகனங்களிலும், சக்கர வண்டிகளிலும், குதிரைகள் யானைகளும் கொண்ட சேனை, அணி வகுத்து விஸ்தீர்ணமாக பரதனைப் பின் தொடர்ந்து சென்றது. அலைகள் நிறைந்த யமுனை நதியைக் கடந்து, சுபமான ஜலத்தையுடைய கங்கையைக் கண்டனர். அந்த புண்ய நதியை, பந்துக்களோடு கடந்து சென்று, பரதன் ச்ருங்கிபேர புரம் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தான். ச்ருங்கிபேர புரத்திலிருந்து அயோத்தியைக் கண்டான். தந்தையும், தமையனும் இல்லாத அயோத்தி மாநகரத்தைக் கண்டு பரதன்,  சுமந்திரரைப் பார்த்து சொன்னான். சாரதே, அயோத்தியைப் பார். தூங்கி வழிகிறது. எந்த வித கோலாகலமோ சப்தமோ, ஆனந்தமோ அழகோ இல்லாமல் வாடித் தெரிகிறது என்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பாது3கா க்3ரஹணம் என்ற நூற்று பதிமூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 114 (191) அயோத்யா ப்ரவேச: (அயோத்தியில் நுழைதல்)

 

ரதங்களின் கம்பீரமான, இனிய நாதம் மேலெழ, பரதன் அயோத்தியில் பிரவேசித்தான். பூனைகளும், யானைகளும் (சோம்பேறித்தனமாக) நடமாடிக் கொண்டிருக்க,

மனிதர்களும், யானைகளுடன் (சோம்பலுடன்) உற்சாகமின்றித் தெரிந்தனர். இருட்டு சூழ்ந்து ஒளி யில்லாத இரவு நேரம் போலவும், ராகு சத்ருவின் பிரியமான மனைவி,  லக்ஷ்மீகரமாக இருந்தவளை, புதிதாக முளைத்த கிரஹத்தினால் பீடிக்கப் பட்ட ரோஹிணையைப் போலவும், காற்றினால் வற்றிய ஜலத்தையுடைய நீர் நிலை போலவும் வெய்யிலில் வாடும் பறவை போலவும், மலையிலிருந்து விழும்  சிறிய அருவி, வற்றி, மெல்லிய கோடாக விழுவது போலவும், யாக குண்டத்திலிருந்து அக்னி புகையின்றி வருவது போலவும்,  ஹவிஸ் போடப்படும் பொழுது மட்டும் கீற்றாகத் தோன்றி மறைவது போலவும் கவசத்தில் அடிபட்டு கலைந்தது போலவும், அடிபட்ட யானை, ரத த்வஜம் இவை போலவும், பெரும் போரில் தோற்றுத் திரும்பிய படைபோலவும், நுரையுடனும், பெரும் இரைச்சலோடும் சமுத்திரத்தில் உண்டான அலைகள், அமைதியான காற்றினால் அடக்கப் பட்டு, சத்தம் இன்றி அடிப்பது போலவும், தகுதியான யாகம் செய்பவர்கள் விட்டுச் சென்ற பின், வேதியில் அமைதி காப்பது போலவும், ஆண் பசு விட்டுச் சென்று விட்டதால், வருந்தும் பெண் பசு, வாட்டத்துடன் பசுக்கள் கூட்டத்தில் இருந்தும் புத்தம் புதிய புல்லை மேய உற்சாகமின்றி நிற்பது போலவும், ஒளி வீசும் மணிகள், நளினமாக, அதே சமயம் உத்தமமான பிரகாசத்துடன் கூடிய மணிகளை, ஜாதி அறிந்து கோத்தவைகளை, நீக்கி விட்ட முத்து மாலை போலவும், புண்யம் குறைந்ததால் அவசரமாக தன் இடத்திலிருந்து வெளி யேறிய பூமியைப் போலவும், ஆகாயத்திலிருந்து நழுவி விழுந்த நக்ஷத்திரம் தன் பிரகாசத்தை இழந்தது போலவும், வஸந்த கால முடிவில், பூக்கள் நிறைந்து, வண்டுகள் மொய்க்க விளங்கிய காட்டுக் கொடி, காட்டுத் தீயினால் வாடி வதங்கி இருந்தது போலவும், வேத கோஷங்கள் இன்றி, கடை வீதிகளின் கோலாகலம் இன்றி, சந்திரனும், நக்ஷத்திரங்களும் மறைக்கப் பட்ட நிலையில், மேகங்கள் சூழ்ந்த ஆகாயம் போலவும், பல விதமான மது வகைகள் நிரம்பி இருக்கும் இடங்கள், பான பூமி எனப்படும் குடிக்கும் இடங்கள், குடிப்பவர்கள் விட்டுச் சென்றதால், தன் களையிழந்து கிடப்பது போலவும், தண்ணீர் பந்தல்கள் பாத்திரங்கள் உடைந்து உபயோகித்து தீர்ந்த தண்ணீர் பின் நிரப்பப் படாமல் கிடப்பது போலவும், வில்லின் நாண், அதன் இடத்திலிருந்து விடுபட்டு பூமியில் விழுந்து கிடப்பது போலவும், இவை ஒருசமயம் வெகுவேகமாக செல்லக் கூடிய அம்புகளுடன், அம்பு நிறைந்த தூணிகளுடனும், கயிறுகளுடனும் இருந்தவையே, குதிரை மேல் சவாரி செய்தபடி, சுமந்து வந்து கொண்டிருந்த பாத்திரங்களை தடாலென்று கை நழுவி கீழே போட்டது போலவும், துர்பலமான குழந்தைகளைப் போலவும், நீர் வற்றி, மீன்களும், ஆமைகளும் நிரம்பி, கரைகள் இடிபட்டுக் கிடக்கும் கிணறுகள் போலவும், உத்பல புஷ்பங்களை பறித்துப் போட்டது போலவும், சந்தோஷம் இல்லாத மனிதன் தன் உடலில் வாசனை திரவியங்களைக் கொண்டு பூசிக் கொள்ள மறுப்பது போலவும், சோகத்தின் வெப்பத்தினால் துவண்டு போய் அலங்காரங்களை விலக்கிய உடல் போலவும், மழைக் காலத்தில் ஆகாயத்தில் தோன்றிய சூரியனுடைய வெளிச்சத்தை, கரு மேகங்கள் சூழ்ந்து மூடிக் கொண்டது போலவும், ரதத்தில் இருந்த ஸ்ரீமானான தசரத குமாரன், பரதன் சாரதி சுமந்திரனைப் பார்த்துச் சொன்னான். சிறந்த ரதத்தை ஓட்டிச் செல்லும் சாரதியே, ஏன் இன்று கம்பீரமான பாடல் ஒலிகள் கேட்கவில்லை.? எப்பொழுதும் அயோத்தியில், கீதங்களும், வாத்ய இசை ஒலிகளும், சப்தம் நிறைந்திருக்குமே. பூ மாலைகளின் மணமும். மத்த கஜங்களின் முகத்திலிருந்து வரும் நெடியும் காணப் படவில்லையே.  காற்றில் அகரு வாசனை மிதந்து வருமே. வாகனங்கள் போகும் கோஷமும்,

குதிரைகளின் கனைக்கும் இனிய ஓசையும் கேட்க வில்லையே. ராமர் விட்டுச் சென்றபின், இந்த நகரத்தில் மதம் பிடித்த யானையின் பிளிறலும், ரதங்கள் ஓடும் ஓசையும் கூட நின்று விட்டன போலும். இவை எதுவுமே கேட்கவில்லையே.  இளம் பெண்கள் சந்தனம், அகரு போன்ற வாசனை திரவியங்களை தெளித்து புத்தம் புதிய மாலைகளை, ராமன் விட்டுச் சென்றபின் அணிவதே இல்லை போலும். வித விதமான ஆடை ஆபரணம் அணிந்து ஜனங்கள் யாத்திரை போவதும் நின்று விட்டதா? உற்சவங்கள் எதுவுமே இல்லையே. ராமன் விட்டுப் போனதால், ஏற்பட்ட சோகமே இந்த ஊரில் இன்றும் சூழ்ந்து நிற்கிறதோ. என் சகோதரன் கூடவே இந்த நகரத்தின் சோபையும் போய் விட்டதா. இது அயோத்தி போலவே இல்லை. என் சகோதரன் எப்பொழுது திரும்பி வந்து மிகப் பெரும் விழா போல வந்து அயோத்தியில் மகிழ்ச்சியைத் திரும்பக் கொண்டு வரப் போகிறானோ. கோடை மழை போல அது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். நன்றாக அலங்கரித்துக் கொண்டு இளம் பெண்களும், நிமிர்ந்து நடக்கும் ஆண்களும், அயோத்தியின் பெரும் வீதிகளில் நடந்து, நிறைந்து, கண் கொள்ளா காட்சியாக அப்பொழுது தான் விளங்கும். இவ்வாறு பலவிதமாக புலம்பிக் கொண்டே தந்தையின் வாசஸ்தலமான பவனம் வந்து சேர்ந்தான். சிங்கம் விட்டுச் சென்ற குகை போல, நரேந்திரனான தசரதன் இல்லாத வீடு, வெறிச்சென்றிருந்தது.  சூரியனின் வெளிச்சமே வராத நாள் போல ஒளி யின்றி இருந்த அந்த:புரம் மற்ற இடங்கள் இவற்றைப் பார்த்து பரதன் துக்கத்துடன் கண்ணீர் பெருக்கினான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் அயோத்யா பிரவேசோ என்ற நூற்று பதிநான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 115 (192) நந்தி3க்3ராம வாச: (நந்திகிராமத்தில் வசித்தல்)

 

தாய்மார்களை வீட்டில் விட்டு விட்டு, பரதன் தன் குரு ஜனங்களைப் பார்த்துச் சொன்னான். நான் நந்தி கிராமம் செல்கிறேன். உங்கள் அனைவரிடமும் விடை பெற்றுக் கொள்கிறேன். ராமன் இல்லாமல் இங்கு இருப்பதை விட, அங்கு வசிப்பது மேலாகும். தந்தையும் மேலுலகம் சென்று, தமையனான ராமனும் வனத்தில் இருக்கும்பொழுது நான் அவர் திரும்பி வருவதை எதிர் பார்த்து காத்திருக்கிறேன். உண்மையில் அவர் தான் ராஜா. புரோஹிதரான வசிஷ்டரும், மற்ற மந்திரிகளும் பரதன் சொன்னதைக் கேட்டு, பரதா, நீ சொல்வது சரியே. உன் நிலைக்கு பொருத்தமானதே. நாங்களும் உன்னை சிலாகிக்கிறோம். உன் சகோதர பாசம் தெரிந்ததே. அப்படியிருக்க நீ இங்கு இருக்க விரும்பாததில் வியப்பில்லை.  மந்திரிகளும் ஒத்துக் கொண்டு அனுமதி தந்தபின், சுமந்திரரைப் பார்த்து ரதத்தை ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டு, தாயார் அனைவரையும் வணங்கி எழுந்து வந்து ரதத்தில் ஏறினான். சத்ருக்னனும் அவனைத் தொடர்ந்து ரதத்தில் ஏறினான். இருவரும் மந்திரிகள் புடை சூழ, கிளம்பினர். முன்னால் வசிஷ்டர் முதலான பிராம்மணர்கள் சென்றனர். கிழக்கு முகமாகச் சென்று  நந்திகிராமம் என்ற இடத்தை அடைந்தனர். சொல்லாமலேயே படை வீரர்களும், யானை, குதிரை, ரதங்களும் பரதனை பின் தொடர்ந்தன. ஊர் ஜனங்களும் பரதன் பின்னால் சென்றனர். பாதுகையை தலையில் தாங்கியவாறு சகோதர பாசம் மிகுந்த பரதன், பரிவாரங்களோடு நந்தி கிராமம் சென்றடைந்தான். நந்தி கிராமம் சென்றடைந்தவுடன் குரு ஜனங்களைப்  பார்த்து பரதன் இந்த ராஜ்யம் என் தமையனால் பாதுகாத்து வைத்துக் கொள்ளச் சொல்லி (ந்யாசமாக) தரப் பட்டுள்ளது.  இந்த தங்கத்தால் அலங்கரிக்கப் பட்ட பாதுகைகளே நாட்டின் க்ஷேமத்தை  நிர்வகிக்கப் போகின்றன. பாதுகையை நல்ல ஆசனத்தில் மரியாதையுடன் வைத்து விட்டு பரதன் ஊர் ஜனங்களிடமும் சொன்னான். இந்த பாதுகைகள் அண்ணலின் பாதங்கள். இதற்கு சீக்கிரம் குடை விரியுங்கள். சாமரம் வீசுங்கள். என் தமையனின் தர்மம் இந்த பாதுகையில் நிலை நிறுத்தப் பட்டுள்ளது. நம் மீது உள்ள கருணையால் அவர் என்னிடம்  இதை (சன் ந்யாசமாக- அடைக்கலப் பொருள்) பாதுகாகாத்து வைக்கச் சொல்லி தந்திருக்கிறார். அவர் திரும்பி வரும்  வரை இதை பாதுகாப்பேன். ராமர் வந்தவுடன், அவர் பாதங்களில் சேர்த்து விட்டு, பாதுகையுடன் கூடிய அவர் பாதங்களை கண்டு மகிழ்வேன். அது வரை இது என் பொறுப்பில், எனக்கு சகாயமாக விளங்கும்.  ராஜ்ய பாரத்தை இந்த பாதுகைகளில் சமர்ப்பித்து நான் என் முன்னோர்கள் ஆண்ட வகையில் ராஜ்யத்தை ஆளுவேன். இதை விட நான்கு பங்கு மகிழ்ச்சி ஏற்படக் கூடிய நாள், என்றைக்கு அண்ணல் ராமன் திரும்பி வந்து முடி சூட்டிக்கொண்டு, ஜனங்கள் உற்சாகமாக ஆரவாரிக்க ராஜ்ய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாரோ, அதுவே ஆகும். அன்று என் மகிழ்ச்சியும், புகழும் சொல்லத் தரமாக இருக்காது.  இவ்வாறு பலவாறு புலம்பியவாறு பரதன் நந்திகிராமத்தில், பாதுகையின் ராஜ்யத்தை ஸ்தாபித்தான். மந்திரி வர்கங்கள், ஆமோதித்து உடன் இருந்தனர். பிரபுவான பரதன், ஜடை முடி தரித்து முனி வேஷத்தையே ஏற்றுக் கொண்டு, நந்தி கிராமத்தில் வசித்தான். வீரனான அவனை சார்ந்து சைன்யமும் அங்கேயே இருந்தது. ராமர் வரவை எதிர் நோக்கி காத்திருக்கலாயினர். பிரதிக்ஞையை மனதில் இறுத்தி தனக்கு அவர் இட்ட கட்டளையை சரிவர செய்து வருபவனாக., பாதுகைக்கு அபிஷேகம் செய்து வைத்து, நந்தி கிராமத்தில் வசித்தான். ராஜ மரியாதைகளான சத்ர சாமரங்கள் பாதுகைக்கே செய்யப் பட்டன. தானே இவற்றை செய்தான். ராஜ்ய சாஸனத்தை முதலில் பாதுகையிடம் விண்ணப்பித்துக் கொள்வான். அதன் பின் அதன் ஆளுமைக்குட்பட்டு, ராஜ்யத்தை பரிபாலித்தான். எந்த வேலையானாலும் பரிசுப் பொருட்கள், மற்றவை வந்து சேர்ந்தாலும் முதலில் பாதுகைக்கு சமர்ப்பித்துவிட்டு, பின் செய்ய வேண்டியதை பரதன் தானே செய்து வந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் நந்தி கிராம நிவாஸோ என்ற நூற்று பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 116 (193) க2ர விப்ரகரண கத2னம்  (க2ர என்ற அரக்கனின் தொல்லைப் பற்றி சொல்லுதல்)

 

பரதன் திரும்பிச்  சென்ற பின், தபோவனத்தில் ராமர், தபஸ்வி ஜனங்களுடைய சுக துக்கங்களைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். சித்ர கூடத்துக்கு முன்னால் இருந்த தவம் செய்யும் முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்து வந்தவர்கள், ராமரிடம் வந்து ஏதோ சொல்ல விரும்பியவர்களாகத் தெரிந்தனர். கண்களாலும், புருவங்களாலும் சமிக்ஞை செய்து கொண்டு, ராமரை நம்பவும் முடியாமல் தங்களுக்குள் மெதுவாக முனு முனுக்கும் குரலில் பேசிக் கொண்டார்கள்.  இவர்களுடைய ஆவல் ததும்பும் முகங்களைப் பார்த்து தன்னிடம் ஏதோ அவ நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதையும் அறிந்து, ராமர், அவர்கள் தலைவர் போலத் தோன்றிய ரிஷியிடம் கை கூப்பி வணங்கியவாறு பின் வருமாறு சொன்னார்.

ப4கவன், என்னிடம் என்ன தவறு என்று தபஸ்வி ஜனங்கள் பேசத் தயங்குகிறார்கள். என் நடத்தையில் உங்களுக்கு என்ன சந்தேகம்? என்னிடமோ, என் தம்பி லக்ஷ்மணனிடமோ, கவனக் குறைவினால் ஏதாவது உங்கள் வழக்கத்துக்கு மாறாக செய்யப் பட்டதா? வணங்கத் தக்க உங்களிடம், என் மனைவி சீதை தான் தவறாக நடந்து கொண்டாளா? எனக்கு பணிவிடை செய்வதில் அவள் என்றும் குறைவு வைத்ததில்லையே என்றார். அந்த ரிஷி, தவம் செய்து நரைத்த முடியும், அதை விட முதிர்ந்த அனுபவமும் உடையவர், அழுது விடுவாரோ என்ற குரலில், ராமரைப்  பார்த்துச் சொன்னார்.  ஜீவன்களிடம் தயை உடைய ராமனே, கல்யாண குணங்கள் நிரம்பிய உன் பத்னி, தான் செய்ய வேண்டியவற்றை செவ்வனே செய்தாள். ஒரு குறையும் இல்லை. தபஸ்விகளிடம், முக்கியமாக அவள் சரியாகத்தான் செய்தாள். தபஸ்விகள் உன்னிடம் தான் எதோ கேட்க விரும்புகின்றனர்.  ராக்ஷஸர்கள் தொல்லை தருவதைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ராவணனின் இளைய சகோதரன் க2ரன்   என்ற பெயருடைய ராக்ஷஸன் இங்கு வசிக்கிறான். ஜனஸ்தானத்திலிருந்து தபஸ்வி ஜனங்கள் அனைவரையும் துரத்தியடித்து, கர்வம் கொண்டவனாக, பூவுலகை ஜயித்தவனாக, கொடுங்கோலனாக, மனிதர்களை அழிக்கும் யமனாக பாபி, எதற்கும் தயங்காதவனாக, குழந்தாய், உன்னையும் விட மாட்டான். நீ அமைதியாக இருந்தாலும் பொறுக்க மாட்டான். நீ இந்த ஆசிரமத்திற்கு வந்ததிலிருந்து ராக்ஷஸர்கள் இங்குள்ள முனிவர்களைத் துன்புறுத்துகின்றனர். பயங்கரமாக, க்ரூரமாக, நடுங்கச் செய்யும் கோர ரூபங்களைக் காட்டி எங்களை பயமுறுத்துகின்றனர். பல விதமான உருவங்கள் எடுத்துக் கொண்டு தாறு மாறாக ரூபங்களுடன் எதிரில் வருகின்றனர். அசுத்தங்களையும், தபஸ்விகள் தொடக் கூட விரும்பாத பொருட்களை அவர்கள் மேல் எறிகின்றனர். சிலரை உடனே கொல்கின்றனர். சிலரை மாயா ஜாலத்துடன் எதிரில் தெரியாமல் நின்று அடிக்கின்றனர். சிறு பிள்ளைத்தனமாக, மூடர்கள், தபஸ்விகளை அவர்கள் ஆசிரமத்திலிருந்து அவர்கள் அறியாமல் தூக்கிச் சென்று மகிழ்கிறார்கள்.  யாகக் கரண்டிகளை வீசி எறிகிறார்கள். பாத்திரங்களைப் போட்டு உடைக்கின்றனர். அக்னியை அணைக்கின்றனர். யாகம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே கலசங்களை கவிழ்த்து விடுகின்றனர்.  துராத்மாக்களான அவர்களால் துன்புறுத்தப் பட்ட, தாங்க மாட்டாமல் பலர் ஆசிரமத்தை துறந்து ஓடி விட்டனர். என்னையும் வேறு இடம் செல்ல இன்று வெகுவாக தூண்டுகின்றனர். அதையே தான் இந்த ராக்ஷஸர்களும் விரும்புகிறார்கள். சரீரத்தில் படும் படி துன்புறுத்தினால் நாங்களாக ஆசிரமத்தை விட்டு ஓடி விடுவோம் என்று எதிர்பார்த்து தான் அந்த ராக்ஷஸர்களும் ஹிம்சை செய்கிறார்கள். பழமையான ஆசிரமம் இது. அருகிலேயே நல்ல பழ. மூலங்களைக் கொண்ட காடு. கூட்டங்களாக வெகு நாட்களாக வசித்து வருகிறோம். அந்த க2ரன் உன்னிடமும் ஏதாவது தவறுதலாக நடந்து கொள்வான். நாங்கள் கிளம்புகிறோம். எங்களுடனேயே கிளம்பி வா. மனைவியுடன் கூட நீ இருக்கும்பொழுது சந்தேகம் வருவது இயல்பே. சக்திமானாக இருந்தாலும் இந்த இடம் நல்லவர்கள் வசிக்கத் தகுந்தது அல்ல. இவ்வாறு சொன்ன தபஸ்வியைப் பார்த்து, ராஜ குமாரனான ராமன் உடனே பதில் தகுந்தபடி சொல்ல முடியாமல் தவித்தான். அவர்களை உடனே எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் திகைத்தான். ராகவனை வாழ்த்தி விடை பெற்றுக் கொண்டு குலபதியான அந்த ரிஷி தன் இனத்தாருடன் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார். குலபதியான அந்த ரிஷியை வணங்கி, ராமரும் அவர்களுக்கு சமாதானமாக பேசி அந்த தேசத்தை விட்டுப் போகாமல் இருக்கச் சொல்லி, அவர்களும் சம்மதித்தனர், மன சமாதானம் அடைந்தனர். அவர்கள் மகிழ்ச்சியாக ஆசிர்வாதம் செய்து உபதேசங்கள் செய்தனர். இதன் பின் ராமரும் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார். ரிஷி ஜனங்கள் மகிழ்ச்சியுடன் இல்லாத அந்த ஆசிரமத்தில் க்ஷணம் கூட இருக்கப் பிடிக்காமல் ராமனும் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டார். அந்த தபஸ்விகளும் ராமனைத் தொடர்ந்து சென்றனர். பழமையான ஆசாரங்களை திடமாக கடை பிடித்து நடந்து வந்த அந்த தபஸ்விகள், ராகவனையே எப்பொழுதும் பின் பற்றுபவர்களாக ஆனார்கள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் க2ர விப்ரகரண கத2னம் என்ற நூற்று பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 117 (194) சீதா பாதிவ்ரத்ய ப்ரசம்ஸா

 

தபஸ்விகள் விட்டுச் சென்ற பின், ராமர் யோசித்தார். அங்கு தானும் வசிப்பது சரியல்ல என்று எண்ணினார்.  இங்கு பரதன் வந்து நம்மை பார்த்தான். தாய்மார்களும் வந்தனர். திரும்பத் திரும்ப அவர்களைச் சந்தித்த நினைவு தொடர்ந்து வரும். ஊர் ஜனங்களும் வந்து பார்த்தனர்.  பரதனுடன் வந்த படை வீரர்களும், குதிரைகளும், யானைகளும் மலம் கழித்தும் அந்த இடத்தை மிகவும் அதிகமாக நாசமாக்கி விட்டனர். அதனால் வேறு இடம் செல்வோம் என்று தீர்மானித்த ராகவன், லக்ஷ்மணனுடன் சீதையும் தொடர புறப்பட்டார். அத்ரி மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்து அவரை வணங்கினார். தன் புத்திரர்களைக் கண்டது போல மகிழ்ச்சியுடன் அவரும் ராமர், லக்ஷ்மணன், சீதை இவர்களை வரவேற்றார்.  தானே அதிதி சத்காரம் செய்ய கட்டளையிட்டு  விட்டு வந்து எல்லா வசதிகளும் குறைவற செய்து தர முனைந்தார். லக்ஷ்மணனையும், சீதையையும் உபசரித்தார். வயது முதிர்ந்த தன் மனைவியை அழைத்து, தர்மம் அறிந்தவரான அந்த முனிவர், உலக நன்மைக்காக பாடு படும் புண்யாத்மாவான அத்ரி மகரிஷி அனசூயையிடம், வைதேஹியை அழைத்துச் செல்ல பணித்தார்.  சிறந்த தபஸ்வியும், பண்புடையவளுமான அனசூயை என்ற அந்த மூதாட்டியை ராமனுக்கு பரிச்சயம் செய்து வைத்தார். உலகம் ஒரு சமயம் மழை இல்லாமல் பத்து ஆயிரம்  வருஷங்கள் தகித்துக் கொண்டிருந்த பொழுது இவள் உக்ரமான தவம் செய்து நியமங்களை கடை பிடித்து பத்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்தாள். பழங்களையும், உணவுக்கான வகைகளையும் சிருஷ்டித்தாள். கங்கையை வரவழைத்து பெருகச் செய்தாள். அந்த அனசூயை விரத ஸ்னானம் செய்து தடைகளை நீக்கினாள். தேவ கார்யத்திற்காக ஓர் இரவு பத்து இரவுகளாக நீடிக்கும்படி செய்தாள். இவள் உனக்கு தாய்க்கு சமமானவள். மாசற்றவனே ராமா, உலகமே வணங்கத்தக்க இந்த மூதாட்டியை கோபமே  இல்லாதவள் என்று புகழ் பெற்ற இவளை வைதேஹி தெரிந்து கொள்ளட்டும். தன் செயல்களாலேயே இவள் உலகில் அனசூயா என்று புகழ் பெற்றாள். இவ்வாறு ரிஷி சொன்னவுடன் அப்படியே ஆகட்டும் என்று ராமர் சீதையைப் பார்த்து ராஜகுமாரி, இந்த ரிஷி சொன்னதைக் கேட்டாய் அல்லவா? நம் நன்மைக்காகத்தான்  சொல்கிறார்.  சீக்கிரம் தபஸ்வினியான அனசூயையுடன் போ. இதைக் கேட்டவுடன் சீதையும் அத்ரி பத்னியை பின் தொடர்ந்து சென்றாள். வயது முதிர்ந்து, உடல் தளர்ந்து, தலை நரைத்து இருந்த அந்த மூதாட்டியை, பெருங்காற்றில் வாழை மரம் ஆடுவது போல நடுங்கும் தேகமுடையவளை, பதிவிரதை என்று புகழ் பெற்ற அனசூயையை வணங்கி தன் பெயர் சொல்லி அபிவாதனம் செய்தாள். கை கூப்பி வணங்கியவளாக அந்த மூதாட்டியிடம் குசலம் உடல் நலம் விசாரித்தாள். அவளும் சீதையைப் பார்த்து சந்தோஷத்துடன் சீதே, நல்ல காலம், நீ தர்மம் அறிந்தவளாக, அதன் வழியில் நடக்கிறாய். பா4க்யசாலி. ப3ந்து4 ஜனங்களை விட்டு, செல்வ செழிப்பையும், சௌகர்யங்களையும் துறந்து, பா4மினீ,  காட்டில் வசிக்க வந்த ராமனை பின் தொடர்ந்து வந்திருக்கிறாய். நகரத்தில் இருந்தாலும் சரி, வனத்தில் இருந்தாலும், சுபமான செல்வத்துடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எந்த பெண்ணுக்கு  கணவனே பிரியமானவனோ, அந்த பெண்கள் மிக நல்ல கதியடைவார்கள். நற்குடியில் பிறந்த பெண்களுக்கு கணவன் எப்படி இருந்தாலும், கெட்ட நடத்தை உடையவனேயானாலும், காமாதுரனாக இருந்தாலும், செல்வம் இழந்தவனாக இருந்தாலும், கணவனே தெய்வமாகும்.  இதைவிட சிறந்த வேறொரு உறவை நான் கண்டதில்லை. அழிவில்லாத தவம் செய்து பெரும் பலனுக்கு இணையான தர்மம் இது. அசத்தான பெண்கள் இதன் பெருமைகளை அறியாமல் குறை கூறுவர். காம வசமாக கணவனை தெய்வமாக கொண்டாடத் தெரியாத ஸ்த்ரீகள், பெரும் அபகீர்த்தியையும், தர்மத்தை விட்டு விலகி நாசத்தையும் அடைவர். மைதிலி, அந்த ஸ்த்ரீகள் செய்யக் கூடாததை செய்து மீள முடியாமல் தவிப்பர்.  உன் போன்ற குணம் உள்ள பெண்கள், உலக வழக்கை அறிந்து தர்மம் செய்வதன் பலனாக ஸ்வர்கத்தில் சஞ்சரிப்பர்.  நீ இவ்வாறு  பதியைத் தொடர்ந்து வந்து பதிவ்ரதா         ஸ்த்ரீகளின் நடத்தையை அனுசரித்து கணவனின் தர்மத்துக்கு உதவியாக விளங்கி சஹதர்மசாரிணீயாக அந்த பதத்துக்கு பொருளாக விளங்குவாயாக. இதன் பயனாக பெரும் புகழையும், தர்மத்தையும் அடைவாய்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சீதா பாதிவ்ரத்ய ப்ரசம்ஸனம் என்ற நூற்று பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 118 (195) தி3வ்யாலங்கார க்3ரஹணம் (உயர்ந்த ஆபரணங்களை பெற்றுக் கொள்ளுதல்)

 

தானும் அசூயை இல்லாதவள், (சீதை) அனசூயா என்ற அந்த மூதாட்டியை பூஜித்து பதில் சொன்னாள்.  சிறந்த பண்புடைய தங்கள் இவ்வாறு சொல்வதில் ஆச்சர்யம் இல்லை. இதை நானும் அறிவேன். பெண்களுக்கு கணவன் தான் குரு. என் கணவன் இன்று செல்வம் இன்றி இருந்தாலும், வித்தியாசமின்றி நான் உபசாரம் செய்து பணிவிடைகள் செய்து வருவது தான் முறை என்பதையும் அறிவேன். மேலும் என் கணவன் சிலாக்யமான குணங்களை உடையவன். தயையும் கருணையும் உடையவன். புலனடக்கமும், அசையாத அன்பும் உடையவன்.  தர்மாத்மா. தாய் போலும், தந்தை போலும் பாசத்தைக் காட்டுபவன். கௌசல்யை தன் தாயார் என்பதால் அவளிடம் எப்படி பரிவுடன் நடந்து கொள்வாரோ, அதே போல அரசனின் மற்ற பத்னிகளிடமும் பரிவும் அன்பும் கொண்டவர். அரசன் ஒரே ஒரு முறை பார்த்த ஸ்த்ரீ தான் என்றாலும், அவளையும் தாயாகவே பாவிக்கும் குணம், அரசனிடத்தில் உள்ள வாதல்யத்தால்,  இவரிடம் தானாக அமைந்து விட்டது. இந்த பயங்கரமான ஜன நடமாட்டமில்லாத, காட்டிற்கு வந்தபின் கூட என் மாமனார் எனக்கு போதித்தது மனதில் நினைவு இருக்கிறது. பாணிக்ரஹணம் செய்து விவாகம் நடந்த சமயம், அக்னி சாக்ஷியாக என் தாயார் எனக்கு புத்தி சொன்ன வாக்யமும் மனதில் பதிந்திருக்கிறது. அந்த வாக்யங்களையே, தாயே, தர்மசாரிணி, தங்களை சந்தித்ததில் திரும்ப புதியதாக சொல்லியிருக்கிறீர்கள். நற்குல பெண்டிருக்கு பதிக்கு சேவை செய்வதை விட பெரிய தர்மம் இல்லை என்பதை வலியுறுத்தி சொன்னீர்கள். பதிக்கு பணிவிடை செய்து சாவித்திரி ஸ்வர்கம் சென்றாள். அதே போல பதி சுசுருஷை பணிவிடை செய்தே தாங்களும் தெய்வத் தன்மை பெற்று விளங்குகிறீர்கள். தேவ லோகம் சென்றாலும் பதி தான் தேவதை. சந்திரனை விட்டுப் பிரிந்து ரோஹிணியைக் காணவே முடிவதில்லை.  இது போலத்தான் சிறந்த பெண்கள் தங்கள் கணவனிடத்தில் அசையாத அன்பும் பரிவும் கொண்டு, தங்கள் புண்ய கர்மாவின் பலனாக தேவலோகத்தில் சிறந்து விளங்குகின்றனர்.  இப்படி சொன்ன சீதையை, அனசூயா மகிழ்ச்சியுடன் அணைத்து உச்சி முகர்ந்து கொண்டாடினாள்.  பல விதமான நியமங்கள், விரதங்களை அனுஷ்டித்து சேர்த்த தவ பலம் எனக்கு நிறைய உண்டு மென்னகை புரிபவளே, சீதே, அவை அனைத்தையும் உனக்கு கொடுக்கிறேன். உன் சொல், நீ பேசுவது இவை  என் மனதிற்கு உகந்ததாகவும், பிடித்தும் இருக்கிறது. உன்னிடத்தில் எனக்கு அன்பும் பெருகுகிறது. என்ன வேண்டும் சொல்? இதற்கு பதிலாக மெல்ல புன்னகைத்தபடி, சீதை (க்ருதம்-செய்தாகிவிட்டது) நீங்கள் நிறைய கொடுத்தாயிற்றே என்றாள்.  தவ வலிமைகளை உடைய அனசூயாவைப் பார்த்து. இதனால் அன்பும் அவளிடம் ஒட்டுதலும் அதிகமாக, அந்த மூதாட்டி,சீதே, உனக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் தரும் விதமாக என்ன செய்வேன் என்று யோசித்து, இதோ இந்த தெய்வீகமான மாலை, வஸ்திரங்கள், ஆபரணங்கள், அங்க ராகம் எனப்படும் உடலில் பூசிக் கொள்ளும் பொருட்களையும், அலங்கார பொருட்களாக அனுலேபனம் எனும் வாசனை திரவியங்களையும், கொடுத்தாள். இவை மிக உயர்ந்தவை சீதா, உன் உடலை அழகு செய்யட்டும். இவை நித்யம் மங்களகரமாக விளங்கட்டும். இந்த அங்க ராகங்களை பூசிக் கொண்டு, உன் கணவனை லக்ஷ்மி தேவி, விஷ்ணுவை மகிழ்விப்பது போல மகிழ்விப்பாய்.  அந்த அலங்கார பொருட்கள், வஸ்திரம், ஆபரணங்கள், மாலை இவற்றை சீதை மிகவும் அன்புடன் வாங்கிக் கொண்டாள்.  கைகளை கூப்பி தவத்தில் சிறந்த அந்த மூதாட்டியை வணங்கினாள். அவளை அருகில் அமர்த்திக் கொண்டு அனசூயா கேட்டாள். இந்த ராமனை, ஸ்வயம் வரத்தில் அடைந்ததாகச் சொன்னார்களே, மைதிலி, அந்த சம்பவத்தை விவரமாகச் சொல்லு என்றாள். ஒன்று விடாமல் எல்லா விவரங்களையும் விஸ்தாரமாகச் சொல் என்று வினவ, சீதை சொல்லலானாள். என் தந்தை மிதி2லாதிபன், சிறந்த நீதிமான், ஜனகன் என்று பெயர். க்ஷத்திரிய தர்மத்தை அறிந்து நியாயமாக நாட்டை ஆண்டு வந்தார், வருகிறார். அவரது ஏர் கலப்பையில் பூமியில் நான் கிடைத்தேன். பூமியை பிளந்து கொண்டு அவருக்கு மகளாகத் தோன்றினேன். என்னைக் கண்டு அவர் ஆச்சர்யம் அடைந்தார்.  மண் மூடிக் கிடந்த என் உடலைக் கண்டு ஆனந்தமும், ஆச்சர்யமும் ஒன்று சேர, தனக்கு குழந்தையில்லாத காரணத்தால் என்னை அன்போடு அனைத்து, தானே எனக்கு இவள் மகள் என்று சொல்லி என்னிடத்தில் பாசம் வைத்தார். இதே சமயம் ஆகாச வாணியும் இந்த மனித குழந்தை, அரசனே, இவள் உன் மகளேயாவாள் என்று சொல்லியது. இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த மிதிலையரசனான என் தந்தை, என்னை அடைந்ததால், மேலும் பல செழிப்புகளையும், வளர்ச்சியையும், நிறைவும் அடைந்தார். தன் மூத்த ராணியிடம் என்னைக் கொடுக்க, அவளும் என்னிடத்தில் தாய்ப் பாசத்தை பொழிந்தாள்.  கல்யாண வயதை நெருங்கி விட்ட என்னைப் பார்த்து என் தந்தை பெரும் சிந்தனைக்குள்ளானார்.  பணத்தை இழந்த தரித்திரன் போல ஆனார். இந்திரனுக்கு சமமான பலம் உடையவனானாலும், பெண்ணின் தந்தை என்றால், உலகில் தனக்கு சமமானவர்-    களிடமும் வார்த்தை வாங்க வேண்டியிருக்கிறது. அதுபோல ஜனங்கள், தன்னிடம் ஏசும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று உணர்ந்து, சிந்தனை எனும் சமுத்திரத்தில் மூழ்கினார். கரையேற துடுப்பு கிடைக்காதவராக தவித்தார். அயோனிஜாவான எனக்கு தகுந்த பதியை எங்கு தேடுவேன் என்று கவலைப் பட்டார். இவ்வாறு யோசித்து, என் மகளுக்கு ஸ்வயம் வரம் ஏற்பாடு செய்வேன் என்று தீர்மானித்தார். பெரும் யாகத்தில் வருணன் ஒரு சமயம் கொடுத்த உயர்ந்த வில்லும், அம்புகளை வைக்கும் தூணியும் அம்புகளும்  இருந்தன. அதை மனிதர்களால் அசைக்க முடியாது. அதன் பேரில் உள்ள மரியாதை காரணமாக அதை தொட்டு வளைத்து நாணேற்ற, மற்ற அரச குமாரர்கள் ஸ்வப்னத்திலும் நினைத்து கூட பார்த்ததில்லை. அந்த வில்லை சத்யவாதியான என் தந்தை, அந்த வில்லை வைத்து, எல்லோர் முன்னிலையிலும், எல்லா அரசர்களையும் வரவழைத்து, அவர்களிடம் சொன்னார். இந்த வில்லை நாணேற்றி, அம்பு பூட்ட தயாராக யார் செய்கிறார்களோ, அந்த மனிதனுக்குத் தான் என் மகள் மனைவியாவாள். இதில் சந்தேகமே இல்லை என்றார். அந்த மலையை நிகர்த்த வில்லைப் பார்த்து மலைத்து கௌரவமாக வணங்கி மற்ற அரசர்கள் நகர்ந்து விட்டனர். அதை தொட்டு தூக்க கூட திராணியில்லாதவர்கள். பல நாட்கள் சென்றபின், இந்த தேஜஸ்வியான ராகவன், விஸ்வாமித்திரர் கூட யாகத்தை காண வந்தான். சத்ய பராக்ரமனான ராமனும், லக்ஷ்மணன் என்ற சகோதரன் உடன் வர வந்து சேர்ந்தான். விஸ்வாமித்திரரை என் தந்தை பூஜை செய்து வரவேற்றார்.  அவர் தான் சொன்னார். இவ்விருவரும் தசரத குமாரர்கள், வில்லைக் காண விரும்புகிறார்கள் என்றார். ராஜ குமாரனுக்கு தெய்வீகமான வில்லைக்காட்டு எனச் சொல்லவும் அந்த வில் கொண்டு வரப் பட்டது. நிமிஷ நேரத்தில் அந்த வில்லைத் தூக்கி நாணேற்ற தயாராக நிறுத்தி, நாண் கயிற்றை இழுக்கவும், வில் படீரென்று மத்ய பாகத்தில் உடைந்தது. கற்கள் விழுந்தது போல அந்த சப்தமே பெரும் சத்தமாக இருந்தது. அங்கேயே என் தந்தை என்னை ராமனுக்காக என்று ஜல பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு கொடுக்க முனைந்தார்.  என்னை அப்படி கொடுத்தபொழுது ராமன் வாங்கிக் கொள்ளவில்லை. அயோத்தியாபதியான தன் தந்தையின் சம்மதமின்றி ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.  உடனே மாமனார் தசரதருக்கு சொல்லியனுப்பி, அவரும் வந்ததும் முறைப்படி என்னை என் தந்தை ராமனுக்கு கன்யாதானம் செய்து கொடுத்தார்.  என் தங்கை ஊர்மிளை, பார்க்க அழகாக இருப்பாள், சாது, அவளை லக்ஷ்மணனுக்கு மனைவியாக என் தந்தை கொடுத்தார். இப்படித்தான் ஸ்வயம்வரத்தில் நான் கன்யா தானமாக கொடுக்கப் பட்டேன். அன்றிலிருந்து வீர்யம் உடையவர்களில் சிறந்த என் பதியிடம் நான் அனுராகம் உடையவளாக இருந்து வருகிறேன்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் திவ்யாலங்கார க்ரஹணம்  என்ற நூற்று பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 119 (196) தண்டகாரணய பிரவேச:  (தண்ட காரண்யத்தில் நுழைதல்)

 

இந்த கதையைக் கேட்டு, அனசூயா, மைதிலியை கைகளால் அணைத்துக் கொண்டு, தலையில் முத்தமிட்டு,  தெளிவான பதங்கள், அக்ஷரங்களோடு பேசினாய், மதுரமாக இருந்தது. ஸ்வயம் வரத்தில் நடந்ததை நேரில் காண்பது போல கேட்டேன். மதுரமாக பேசுபவளே, உன் ஸ்வயம்வர கதையை நீயே சொல்லக் கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  அஸ்தமித்து விட்டது. இரவு வந்து கொண்டிருக்கிறது. நாள் முழுவதும் ஆகாரத்திற்காக சுற்றித் திரிந்த பறவைகள், தங்கள் கூடுகளுக்கு திரும்பும் சத்தம் கேட்கிறது. இரவு நித்திரைக்கு அவை ஆயத்தமாகின்றன. இதோ முனிவர்கள் ஸ்னானம் செய்து ஈரமான மரவுரிகளுடன், கலசங்களை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ரிஷிகள் அக்னியை வளர்த்து செய்யும் ஹோம புகை, புறா உடலின் நிறத்தில் காற்றில் அலைக்கழிக்கப் பட்டுத் தெரிகின்றன. மரங்களில் இலைகள் உதிர்ந்து மிகக் குறைவான இலைகளே இருக்கின்றன. தனியான இந்த இடத்திலும் திசைகள் தெரியவில்லை. இரவில் நடமாடும் சில ஜந்துக்கள் எதிரில் நடமாடுகின்றன. இதோ இவை இந்த தபோவனத்து மிருகங்கள். வேதி நீரை குடிக்கின்றன.  நக்ஷத்திரங்கள் அலங்கரிக்க, சீதே, இதோ பார் இரவு ராணி வந்து விட்டாள். கிரணங்கள் சுற்றி வட்டமாக இருக்க, ஆகாயத்தில் சந்திரனும் பவனி வரக் கிளம்பி விட்டான். கிளம்பு, ராமனின் உடன் செல்லும் பத்னியே, விடை கொடுக்கிறேன். போய் வா. மதுரமாக நீ சொன்ன கதை இன்னமும் என் காதில் ஒலிக்கிறது. அதனால் மகிழ்ச்சியடைகிறேன். என் எதிரிலேயே நகைகளைப் போட்டுக் கொள்.  அலங்காரம் செய்து கொள். குழந்தாய், திவ்யமான இந்த ஆபரணங்களை பூட்டிக் கொண்டு அழகாக தெரிவாய். அதைக் காண எனக்கு ஆவல் மேலிடுகிறது. அவ்வாறே அலங்கரித்துக் கொண்டு தேவதையைப் போல சீதை அனசூயாவை வணங்கி விடை பெற்றுக் கொண்டு ராமன் இருப்பிடம் சென்றாள். சர்வாலங்கார பூஷிதையாக தன் எதிரில் வந்த சீதையைப் பார்த்து ராகவன் ஆச்சர்யத்துடன் ஏறிட்டான். அன்புடன் தனக்கு அவற்றைக் கொடுத்த அனசூயைப் பற்றி சீதை, அங்கு நடந்த அனைத்தையும் விவரமாகச் சொன்னாள். அன்புடன் அவள் கொடுத்த வஸ்திரம், ஆபரணங்கள், மாலை இவற்றைக் காட்டினாள். ராமன் மகிழ்ச்சியடைந்தது போலவே, லக்ஷ்மணனும் மகிழ்ச்சியடைந்தான்.  மனிதர்களுக்கு கிடைக்க முடியாத அந்த மரியாதையை அவளுக்கு கிடைத்ததை எண்ணி பெருமை கொண்டான். அந்த இரவு அங்கேயே சித்தர்களான தபஸ்விகளுடன் கழித்தனர். அந்த இரவு விடிந்ததும், அக்னிஹோத்ர கர்மாக்களைச் செய்து விட்டு, அந்த தபஸ்விக ளி டம், சித்தர்களிடமும், வனத்தில் மட்டும் தென்படும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினர். அவர்கள், அந்த வனத்தில் ராக்ஷஸர்களின் சஞ்சாரம் உண்டு என்றும் கவனமாக இருக்கும்படியும், எச்சரித்து அனுப்பினர். இந்த ராக்ஷஸர்கள் மனிதர்களை  உண்பவர்கள். பல விதமான ரூபங்களில் திரிபவர்கள், சில பயங்கர காட்டு மிருகங்களும் ரத்தத்தைக் குடிக்கும் குணம் உள்ளவை. சில மிருகங்கள் அடித்து போட்டதையோ, மயங்கி கிடப்பதையோ உண்பவர்கள். மற்றும் சில தபஸ்விகளை தர்ம வழியில் செல்பவர்களை அடித்து தின்கின்றன. இந்த வனத்தில் அவைகளிடம் கவனமாக தவிர்த்து செல்வாய். ராகவா, இதுதான் மகரிஷிகள் செல்லும் வழி. வழியில் பழங்கள் சேகரித்துக் கொள்ளுங்கள், இந்த வனத்தைக் கடந்து செல்ல உனக்கு பலமும் சக்தியும் கிடைக்கட்டும். இவ்வாறு அஞ்சலி செய்து தபஸ்விகள், பிராம்மணர்கள் ஸ்வஸ்தி மங்களம் சொல்லி வாழ்த்தி அனுப்ப, பரந்தபனான ராமன், மனைவியுடன் அந்த வனத்தில், லக்ஷ்மணனுடன் கூட பிரவேசித்தான். அது சூரிய மண்டலத்தில் இருந்து ஆகாயத்தில் சூரியன் பிரவேசிப்பது போல இருந்தது. 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தண்டகாரண்ய பிரவேசோ என்ற நூற்று பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

ஸ்ரீமத் ராமாயணத்தில் அயோத்யா காண்டம் நிறைவுற்றது.

 

 

 

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக