பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் ஆரண்ய காண்டம் 1 – 25

பிப்ரவரி 25, 2014

  ஸ்ரீமத் ராமாயணம்

ஆரண்ய காண்டம்

அத்தியாயம் 1 (197) மகரிஷி சங்க3: (மகரிஷிகளை சந்தித்தல்) 3

அத்தியாயம் 2 (198) விராத4 சம்ரோத4: (விராதன் செய்த இடையூறு) 5

அத்தியாயம் 3 (199) விராத4 ப்ராஹார: (விராதனை அடித்தல்) 7

அத்தியாயம் 4 (200) விராத4 நிக3ளனம் (விராதன் முடிவு) 8

அத்தியாயம் 5 (201) ஸரப4ங்க3 ப்3ரும்மலோக ப்ரஸ்தா2னம்… 10

அத்தியாயம் 6(202) ரக்ஷோ வத4 ப்ரதிக்ஞானம்… 12

அத்தியாயம் 7 (203) சுதீக்ஷ்ணாஸ்ரமம் (சுதீக்ஷ்ணருடைய ஆசிரமம்) 14

அத்தியாயம் 8 (204) சுதீக்ஷ்ணாப்4யனுக்ஞா (சுதீக்ஷ்ணரிடம் விடை  பெறுதல்) 15

அத்தியாயம் 9 (205) சீதா த4ர்மாவேத3னம் (சீதை தர்மத்தைச் சொல்லுதல்) 16

அத்தியாயம் 10 (206) ரக்ஷோ வத4 சமர்த்தனம்… 18

அத்தியாயம் 11 (207) அகஸ்தியாஸ்ரம: (அகஸ்தியரின் ஆசிரமம்) 20

அத்தியாயம் 12 (208) அகஸ்திய தரிசனம்… 25

அத்தியாயம் 13 (209) பஞ்சவடீ கமனம் (பஞ்சவடிக்குச் செல்லுதல்) 27

அத்தியாயம் 14 (210) ஜடாயு சங்கமம் (ஜடாயுவை சந்தித்தல்) 29

அத்தியாயம் 15 (211) பஞ்சவடீ பர்ணசாலா (பஞ்சவடியில் குடிலை அமைத்தல்) 30

அத்தியாயம் 16 (212) ஹேமந்த வர்ணனம் (முன் பனிக் கால வர்ணனை) 32

அத்தியாயம் 17 (213)  சூர்ப்பணகா பா4வாவிஷ்கரணம் (சூர்ப்பணகாவின் மன நிலை) 34

அத்தியாயம் 18 (214) சூர்ப்பணகா விரூபணம்… 35

அத்தியாயம் 19 (215) க2ர க்ரோத4: (கரனின் க்ரோதம்) 37

அத்தியாயம் 20(216)  சதுர்த3ஸ ரக்ஷோ வத4: (பதினான்கு ராக்ஷஸ வதம்) 39

அத்தியாயம் 21 (217) க2ர சந்தூ3ஷணம் (கரனை தூஷித்தல்) 40

அத்தியாயம் 22 (218) க2ர சன்னாஹ: (கரன் போருக்கு அறை கூவுதல்) 41

அத்தியாயம் 23 (219) உத்பாத தரிசனம் (கெட்ட சகுனம் தோன்றுதல்) 43

அத்தியாயம் 24 (220) ராம, க2ர, ப3ல சன்னிகர்ஷ: 45

அத்தியாயம் 25 (221) க2ர சைன்யாவமர்த3: (கர சைன்யத்தை வீழ்த்துதல்). 47

அத்தியாயம் 26 (222) தூ3ஷணாதி வத4ம் (தூஷணன் முதலானோர் வதம்) 49

அத்தியாயம் 27 (223) த்ரிசிரோ வத4: (திரிசிரஸின் வதம்) 50

அத்தியாயம் 28 (224) க2ர ராம சம்ஹார: (கரனும் ராமனும் போரிடுதல்) 52

அத்தியாயம் 29 (225) க2ர க3தா4 பே43னம் (கரனுடைய கதையை உடைத்தல்) 53

அத்தியாயம் 30 (226)க2ர சம்ஹார: (கரனை சம்ஹாரம் செய்தல்) 55

அத்தியாயம் 31 (226) ராவண க2ர விருத்தோபலம்ப: 57

அத்தியாயம் 32 (228) சூர்ப்பணகோத்3யம: (சூர்ப்பணகையின் முயற்சி) 60

அத்தியாயம் 33 (229)ராவண நிந்தா3(ராவணனை நிந்தித்தல்) 61

அத்தியாயம் 34 (230) சீதா ஹரணோபதேச: 63

அத்தியாயம் 35 (231) மாரீசாஸ்ரம புனர் கமனம் (மாரீச ஆசிரமத்திற்கு திரும்பவும் செல்லுதல்) 65

அத்தியாயம் 36 232)சஹாயைஷணா (உதவி செய்யவேண்டுதல்) 67

அத்தியாயம் 37 (233) அப்ரிய பத்2ய வசனம்… 69

அத்தியாயம் 38 (234) ராமாஸ்திர மகிமா (ராமனின் பாணங்களின் மகிமை) 71

அத்தியாயம் 39 (235) சாகாயகரணாப்யுபகம: (உதவி செய்ய  மறுத்தல்) 73

அத்தியாயம் 40 (236) மாயா ம்ருக3 ரூப பரிக்3ரஹ நிர்ப3ந்த4:.. 74

அத்தியாயம் 41 (237) ராவண நிந்தா3 (ராவணனை நிந்தித்தல்) 76

அத்தியாயம் 42 (238) ஸ்வர்ண ம்ருக3 ப்ரேக்ஷணம் (பொன் மானை அனுப்புதல்) 77

அத்தியாயம் 43 (239) லக்ஷ்மண சங்கா2 ப்ரதி சமாதானம்… 79

அத்தியாயம் 44 (240) மாரீச வஞ்சனா (மாரீசனின் வஞ்சனை) 82

அத்தியாயம் 45 (241) சீதா பாருஷ்யம் (சீதை கடுமையாக பேசுதல்) 84

அத்தியாயம் 46 (242) ராவண பி4க்ஷூ சத்கார: 86

அத்தியாயம் 47 (243) ராவணாதி4க்ஷேப: (ராவணனை நிந்தித்தல்) 88

அத்தியாயம் 48 (244) ராவண விகத்த2னம் (ராவணனை நிந்தித்தல்) 91

அத்தியாயம் 49 (245) சீதாபஹரணம் (சீதையை அபகரித்தல்) 93

அத்தியாயம் 50 (246) ஜடாயுரபி4யோக: (ஜடாயு எதிர்த்து போராடுதல்) 95

அத்தியாயம் 51 (247) ஜடாயு ராவண யுத்தம்… 97

அத்தியாயம் 52 (248) சீதா விக்ரோச: (சீதையின் அலறல்) 99

அத்தியாயம் 53 (249) ராவண ப4ர்த்ஸனம் (ராவணனை திட்டுதல்) 102

அத்தியாயம் 54 (250) லங்கா ப்ராபணம் (லங்கையில் கொண்டு சேர்த்தல்) 103

அத்தியாயம் 55 (251) சீதா விலோப4னோத்3யம: (சீதையை ஆசை காட்டும் முயற்சி) 105

அத்தியாயம் 56 (252) வத்ஸராவதி4கரணம் (ஒரு வருஷ கால  கெடு வைத்தல்) 107

அத்தியாயம் 57 (253) ராம ப்ரத்யாக3மனம் (ராமன் திரும்பி வருதல்) 109

அத்தியாயம் 58 (254) அனிமித்த தரிசனம் (தீய சகுனங்களையே காணுதல்) 111

அத்தியாயம் 59 (255) லக்ஷ்மணாக3மன விக3ர்ஹணம்… 112

அத்தியாயம் 60 (256) ராமோன்மாத3: (ராமன் பித்து பிடித்தவன் போல் ஆதல்) 114

அத்தியாயம் 61 (257) சீதான்வேஷணம் (சீதையைத் தேடிச் செல்லுதல்) 116

அத்தியாயம் 62 (258) ராக4வ விலாப: (ராகவனின் அழுகை) 118

அத்தியாயம் 63 (259) துக்கானு சிந்தனம் (துக்க நினைவுகள்) 119

அத்தியாயம் 64 (260) ராம க்ரோத4: (ராமனின் கோபம்) 120

அத்தியாயம் 65 (261) க்ரோத4 சம்ஹார பிரார்த்தனை……. 125

அத்தியாயம் 66 (262) ஔசித்ய ப்ரபோ34னம் (உசிதமான செயலை நினைவு படுத்துதல்) 126

அத்தியாயம் 67 (263) க்3ருத்ர ராஜ த3ரிசனம் (கழுகு அரசனைக் காணுதல்) 127

அத்தியாயம் 68 (264) ஜடாயு சம்ஸ்கார: (ஜடாயுவின் அந்திமக் கிரியைகள்) 129

அத்தியாயம் 69 (265) கப3ந்த4 க்3ராஹ: (கபந்தனால் பிடிக்கப் படுதல்) 131

அத்தியாயம் 70 (266) கப3ந்த4 பா3ஹுச்சே2த:3 (கபந்தனின் கைகளை வெட்டுதல்) 134

அத்தியாயம் 71 (267) கப3ந்த4 சாபாக்2யானம் (கபந்தன் தன் சாபத்தை விவரித்தல்) 135

அத்தியாயம் 72 (268) சீதாதி43மோபாய: (சீதையை அடைய உபாயம் சொல்லுதல்) 137

அத்தியாயம் 73 (269) ருஸ்யமூக மார்க3 கத2னம்… 139

அத்தியாயம் 74 (270) சப3ரீ ஸ்வர்க3 ப்ராப்தி (சபரி சுவர்கம் செல்லுதல்) 141

அத்தியாயம் 75 (271) பம்பா தரிசனம்… 143

 

அத்தியாயம் 1 (197) மகரிஷி சங்க3: (மகரிஷிகளை சந்தித்தல்)

 

ஆத்மாவான் என்று புகழப் படும் ராமன், தண்டகாரண்யத்துள் பிரவேசித்து, எளிதில் நாசம் செய்ய முடியாதபடி இருந்த ஆசிரம மண்டலங்களைக் கண்டான். குசம் என்ற தர்ப்பை புல் விரிக்கப் பட்டு, ப்ரும்ம லக்ஷணங்களுடன் கூடிய அவை ஆகாயத்தில் சூரிய மண்டலம் பிரகாசமாக விளங்குவது போல இருந்தன. எல்லா ஜீவ ஜந்துக்களுக்கும் சரணாலயமாக இருந்தன. விசாலமான முற்றங்களுடன், பலவிதமான மிருகங்கள் பக்ஷி வகைகள் வளைய வரும் இடமாக இருந்தன. அப்ஸர கணங்கள் வணங்கும் இடமாகவும் அவர்கள் ஆடிப் பாடும் இடமாகவும் விளங்கின. விசாலமான அக்னி வளர்க்கும் இடமும், கரண்டி, பாத்திரங்கள் மான் தோல் ஆசனங்கள், புல், தர்ப்பம், சமித்து (அரச மரத்து கிளை உலர்ந்தது) ஜலம் நிரம்பிய கலசங்களும், பழங்களும், கிழங்கு வகைகளும் நிறைந்திருந்தன.  காட்டு மரங்கள் மிகப் பெரிய மரங்கள், பாவனமான மரங்கள், இவைகளும், ருசியான பழங்கள் நிறைந்த மரங்களும் தென்பட்டன. பலி, ஹோமம் இவற்றை இடைவிடாது செய்து பாவனமான அந்த இடத்தில் வேத கோஷம் இடைவிடாது கேட்டது. காட்டுப் புஷ்பங்கள் இரைந்து கிடந்தன. பத்மங்கள் லக்ஷ்மீகரமாக விளங்கின. ம்ருதுவான கருப்பு மான் தோல் ஆசனங்களும், இந்த மான்களும் பழம், காய் கிழங்குகளையே உண்ணும் சாக பக்ஷிணிகளாக இருந்தன. சூர்ய, வைஸ்வானர ஒளியுடன்,   ப்ரும்ம வித்தையை அறிந்த மகான்களான ப்ராம்மணர்கள்,பாவனமான ஆகார நியமங்களை அனுஷ்டித்தவர்களாக இடையறாது ப்ரும்ம கோஷம் செய்ததாலும், வேத கோஷங்களாலும் ப்ரும்மாவின் இருப்பிடமோ என்று சந்தேகம் கொள்ளும் வகையில், பழம் பெரும் முனிவர்கள், பெரும் தவ வலிமையுடைய ரிஷிகள், அந்த இடத்தை அலங்கரித்தனர். இந்த தபஸ்விகளின் ஆசிரமங்கள் இருந்த மண்டலத்தைப் பார்த்து ராமர் அருகில் சென்றார். மகிழ்ச்சியுடன் சீதையும் தொடர்ந்து சென்றாள். இவர்கள் வருவதைப் பார்த்து,  உதித்து எழுந்த சந்திரனோ என்ற ஐயத்துடன், தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்த முனிவர்கள், லக்ஷ்மணனைப் பார்த்து, சீதையையும் நோக்கி மங்கள ஆசிர்வாதங்களை பொழிபவர்களாக, அவர்களை வரவேற்றார்கள். அந்த வனவாசிகள், ராமருடைய லக்ஷ்மீகரமான ரூபத்தையும், சுகுமாரமான தேகத்தையும், அலங்காரத்தையும் கண்டு அதிசயித்தனர். கண் கொட்டாமல் (இமை என்று ஒரு அவயவம் இருப்பதையே மறந்தவர்களாக) ஆச்சர்யத்துடன் அம்மூவரையும் பார்த்தபடி நின்றனர்.  எல்லா ஜீவ ஜந்துக்களுக்கும் நன்மை செய்வதையே விரதமாகக் கொண்ட ராமனை, அதிதியாக பர்ணசாலைக்குள் அழைத்துச் சென்றனர். நெருப்புக்கு இணையான தவ வலிமையுடைய அந்த முனிவர்கள், முறைப்படி அதிதி சத்காரம் செய்தபின், தண்ணீர் கொண்டு வந்து தந்தனர். ஆசிரமத்து பொருட்களான பழங்கள், கிழங்கு வகைகள் இவற்றை சாப்பிடக் கொடுத்து தர்மம் அறிந்தவர்களான அவர்கள் கை கூப்பி வணங்கியபடி வினவினர்.  இந்த ஆசிரமத்து ஜனங்களுக்கு, அவர்களை காப்பாற்றும் தார்மீக பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் அரசன், தண்டனை கொடுக்க உரிமையுடையவன் என்பதால் குரு ஆகிறான்.  எங்களால் பூஜிக்கப் பட வேண்டிய, மதித்து மரியாதை செலுத்தவேண்டிய பெருமை உடையவனாக ஆகிறான். அவனே எங்களுக்கு சரண்யமும் ஆவான். (ஆபத்து என்று வந்தால் புகலிடம்)  ராக4வா, இந்திரனுடைய செல்வத்தில் நான்கில் ஒரு பங்கு இங்கு உலகில் பிரஜைகளால் காப்பாற்றப் படுகிறது. அதனாலேயே பூமியின் போகங்களை அரசர்கள் அனுபவிக்கிறார்கள். உலகம் வணங்கும் தகுதி, தவிர போக விலாசங்களையும் அடைகிறார்கள். அதனால் நாங்கள் உங்கள் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். உங்களைச் சார்ந்து வாழ்பவர்கள். நகரத்தில் இருந்தாலும், வனத்தில் இருந்தாலும் நீ எங்கள் அரசன். எங்கள் சமூகத்தின் தலைவன். நாங்கள் ஆயுதங்களை தியாகம் செய்தவர்கள். எங்களில் பலரும் கோபத்தை ஜயித்து, புலனடக்கம் செய்து ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். தவமே செல்வமாக உடைய எங்களை, கர்ப்பத்தில் சிசுவை காப்பது போல காக்க வேண்டியது அரசன் கடமையாகும். இவ்வாறு சொல்லி,   ராமனுடன்  லக்ஷ்மணனையும் உபசரித்து, காட்டில் கிடைக்கும் பழங்களையும், காய், கிழங்கு வகைகளையும் கொண்டு பலவிதமான ஆகாரங்கள், பூக்கள் என்று கொடுத்து உபசரித்தனர். தங்கள் தலைவனாக ராமனை ஏற்றுக் கொண்டபின், வைஸ்வானர (அக்னி) போன்ற தேஜஸ் உடைய அந்த தபஸ்விகளும், சித்தர்களும் முறையாக வந்து ராமனை பூஜித்தனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் மகரிஷி சங்கோ3 என்ற முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 2 (198) விராத4 சம்ரோத4: (விராதன் செய்த இடையூறு)

 

தபஸ்விகளின் ஆதித்யத்தை (விருந்தோம்பலை) ஏற்றுக் கொண்ட ராமன், விடிந்தவுடன் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு மேலும், காட்டின் உள் பக்கமாகச் சென்றான். பலவிதமான மிருகங்கள் கூட்டம் கூட்டமாகத் திரிந்தன. ஓநாய்களும், சிறுத்தை புலிகளும் வாசம் செய்த காடு. ஆங்காங்கு விழுந்து கிடந்த மரங்களும், கொடி புதர்களுமாக ஜலம் எங்கு என்பதே தெரியாமல், பூமி மூடிக் கிடந்தது. ஆந்தைகளும், ஜில்லிகா என்ற பறவைக் கூட்டங்களும் இரைச்சல் இட்டன. லக்ஷ்மணன் பின்னால் வர, ராமன் நடுக் காட்டைக் கண்டான். கோரமான மிருகங்கள் நடுவில் தெரிய, காட்டு மத்தியில் காகுத்ஸன், ஒரு மலையின் சிகரத்தைப் போன்ற பெரிய மனித உருவத்தைக் கண்டான். பெரும் சத்தம் காட்டையே கலக்கியது.  கம்பீரமான கண்களும், பெரிய வாயும், கோணலான பெரிய வயிறும், பயங்கரமாக, அருவருப்புத் தரக் கூடிய குரூபமாக நெடிதுயர்ந்த கோர உருவத்தை, புலித்தோலை உடுத்துக் கொண்டு, பாதி ஆடையில் ரத்தம் சொட்ட, எந்த ஜீவ ஜந்துவையும் பயமுறுத்தும் வகையில், வாயைப் பிளந்து கொண்டு வரும் யமனைப் போல, மூன்று சிங்கங்கள், நான்கு புலிகள், இரண்டு காளை மாடுகள், புள்ளி மான்கள் பத்து, பெரிய கொம்பு நிணம் சொட்டும் பெரிய  யானைத்தலை, இவைகளை தன் சூலத்தில் மாட்டிக் கொண்டு, பெரும் குரலில் கூச்சலிட்டுக் கொண்டு, ராமனையும் லக்ஷ்மணனையும் பின் சீதையையும் பார்த்து கோபமாக ஓடி வந்தான். அந்தகனான காலன் (யமன்) ஜனங்களைப் பார்த்து ஓடி வருவது போல வந்தான். பூமியை  கிடு கிடுக்கச் செய்யும் பெரும் குரலில் ஓலமிட்டுக் கொண்டு, வைதேஹியைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்துச் சொன்னான். ஜடா முடி தரித்த நீங்கள், க்ஷீணமான வாழ்க்கை வாழ்பவர்கள். மனைவியுடன் கூட தண்டகாரண்யம் வந்திருக்கிறீர்கள். கையில் வில், அம்பு, கத்தி வேறு. இது என்ன தபஸ்வி வாழ்க்கை. உடன் பெண்ணையும் வைத்துக் கொண்டு.  அத4ர்ம சாரிகள் நீங்கள், பாபிகள். யார் நீங்கள்? முனிவர்களின் பெயரைக் கெடுக்க வந்துள்ளீர்கள். நான் இந்த காட்டில் திரியும் விராத4ன் என்ற ராக்ஷஸன். என் கையில் ஆயுதம் இருக்கிறது. ரிஷி மாமிசத்தை சாப்பிட்டு காலம் கழிப்பவன். இந்த பெண் அழகாக இருக்கிறாள். எனக்கு மனைவியாக இருப்பாள். பாபிகளான உங்கள் இருவரின் ரத்தத்தையும் குடிக்கத் தான் போகிறேன். இவ்வாறு துராத்மாவான விராத4ன், அகங்காரத்துடன் பேசிக் கொண்டே போனான். இதைக் கேட்டு ஜனகர் மகள் நடுங்கி விட்டாள். பெருங்காற்றில் வாழை மரம் நடுங்குவது போல நடுங்கினாள். விராத4னின் மடியில் இருந்த அவளைப் பார்த்து ராக4வன், லக்ஷ்மணனிடம் முகத்தில் வாட்டத்துடன் நின்றவனிடம், இதோ பார் லக்ஷ்மணா, நரேந்திரனான ஜனகருடைய மகள், என் மனைவி, இவ்வளவு சுபமான நடத்தையுடையவள்,  இவளை விராத4ன் தூக்கி வைத்துக் கொண்டு நிற்பதைப் பார். மிகவும் செல்லமாக சுகமாக வளர்க்கப் பட்டவள். புகழ் வாய்ந்த ராஜ குமாரி. நம்மிடம் கைகேயி எதை எதிர் பார்த்து வனம் அனுப்பினாளோ, இன்று இதோ அவள் இஷ்டம் பூர்த்தியாகப் போகிறது. தீர்க4 தரிசினி. அவள் தொலை நோக்கு உடையவள். புத்திரனுக்கு ராஜ்யத்தை கொடு என்று கேட்டு, நிறுத்திக் கொள்ளாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்பை  செலுத்தி வந்த என்னை காட்டுக்குப் போ என்று துரத்தினாளே. அவளுடைய உள் மனதின் எண்ணம் இதோ தெரிகிறது. என் மத்யமாம்பாவான சிற்றன்னை, இன்று தன் இஷ்டம் பூர்த்தியானதைக் கண்டு ஆனந்திக்கப் போகிறாள். மாற்றான் வைதேஹியை தொட்டு தூக்கியிருக்கிறானே, இந்த துக்கம் மற்ற துக்கங்களை தூக்கியடித்து விட்டது.  சௌமித்திரி, தந்தை இறந்ததோ, என் ராஜ்யம் கையிலிருந்து நழுவியதோ, இந்த துக்கத்திற்கு முன் ஒன்றுமேயில்லை. இவ்வாறு கண்ணீர் பெருக்கி வருந்தும் காகுத்ஸனைப் பார்த்து லக்ஷ்மணன் கோபத்துடன், தடுக்கப் பட்ட பெரும் நாகத்தைப் போல சீறிக் கொண்டு சொன்னான். இந்திரனுக்கு சமமான நாயகன் நீ. அநாதை போல இப்பொழுது ஏன் வருந்துகிறாய்? நான் இருக்கிறேன். நீ சொல்வதை செய்ய.  இதோ பார். என் சரத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் அம்புகள் அந்த ராக்ஷஸனின் உயிரைப் போக்கி, அவனுடைய ரத்தத்தால் பூமியை நனைக்கும்.  ராஜ்யத்தை விரும்புகிறான் ப4ரதன் என்று எண்ணி நான் கொண்ட கோபம், அதை விராத4னிடத்தில் இப்பொழுது பிரயோகிக்கிறேன். வஜ்ராயுதத்தை தாங்கும் இந்திரன் மலையின் மேல் வஜ்ராயுதத்தைப் பிரயோகித்தது போல பிரயோகிக்கிறேன். என் தோள் வலியால், வேகமாக செல்லும் இந்த வில்லிலிருந்து புறப்படும் அம்பு அந்த ராக்ஷஸனின் பெரிய ப்ரும்மாண்டமான மார்பை துளைக்கட்டும். உடலிலிருந்து உயிரை பறிக்கட்டும். பூமியில் தாறு மாறாக அவன் உடல் விழுந்து கிடக்கட்டும்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் விராத4 சம்ரோதோ4 என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 3 (199) விராத4 ப்ராஹார: (விராதனை அடித்தல்)

 

வனத்தையே ஒரு கலக்கு கலக்கும்படியான பெருங்குரலில் விராத4ன் மேலும் சொல்லலானான். உங்களைத்தான் கேட்கிறேன். யார் நீங்கள்? எங்கு போகிறீர்கள்? கண்கள் சிவக்க இருந்த ராக்ஷஸனை ராமர் பார்த்தார்.  இக்ஷ்வாகு குல நாதனான தன்னை அறியாமல் யாரென்று வினவும் ராக்ஷஸனைப் பார்த்து பதில் சொன்னார். நாங்கள் க்ஷத்திரியர்கள். நன்னடத்தை உடையவர்கள். காட்டில் தென்படுகிறோமே என்று  யோசிக்கிறாயா? உன்னைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறோம். யார் நீ?  இந்த தண்டகா வனத்தில் ஏன் சஞ்சரிக்கிறாய்?  இதற்கு பதிலாக ராமனைப் பார்த்து விராத4ன் சொன்னான். சரி, சொல்கிறேன். ராக4வா, நானும் ஒரு அரசன் தான்.  ஜவன் என்பவர் மகன். என் தாயார் சதஹ்ரதா3. பூமியில் உள்ள ராக்ஷஸர்கள் என்னை விராத4ன் என்பர். ப்ரும்மாவைக் குறித்து நான் செய்த தவத்தின் பலனாய் எந்த சஸ்திரத்தாலும் கொல்ல முடியாத வரம் எனக்கு கிடைத்தது.  இந்த உலகில் என்னை சிதைக்கவும் முடியாது.  அழிக்கவும் முடியாது.  இந்த பெண்ணை விட்டு விட்டு எதையும் எதிர்பார்க்காமல் வந்த வழியே வேகமாக ஓடிப் போங்கள்.  நான் உங்களை உயிருடன் விடமாட்டேன். கண்கள் கோபத்தினால் சிவக்க பெருத்த உருவத்தோடு நின்றிருந்த விராத4னிடம் ராமர் திரும்பவும் அவனைப் பார்த்து, புத்தியில் பாபத்தை சுமந்து கொண்டு திரிபவனே, நீசனே, தி4க் த்வாம், நாசமாவாய். நீ நிச்சயமாக ம்ருத்யுவை வலிய அழைக்கிறாய்.  நான் உயிருடன் இருக்கும் வரையில், நீ எங்கும் போக முடியாது. நில். யுத்தத்தில் நீ வேண்டியதை அடைவாய். ராமர் உடனே வில்லை தயாராக வைத்து அம்பை பூட்டி, வேகமாக செலுத்தி ராக்ஷஸனை அடித்தார். வில்லில் நாணில் ஏழு அம்புகளை பூட்டி ஏக காலத்தில் விட்டார். க3ருடனைப் போலவும், வாயுவைப் போலவும் வேகமாக செல்லக் கூடிய தங்க மயமான அம்புகள் சீறிப் பாய்ந்தன. அவை விராத4னுடைய உடலைத் துளைத்து, ரத்தம் சொட்ட சொட்ட பூமியில் விழுந்தன. இவ்வாறு அடி பட்ட விராத4ன் வைதே3ஹியை பூமியில் விட்டு விட்டு, சூலத்தை தூக்கி பிடித்தவாறு, ராம, லக்ஷ்மணர்களை நோக்கி கோபத்துடன் ஓடினான்.  இந்திரனுடைய கொடியைப் போன்ற தன் சூலத்தை ஏந்தியபடி, பெருங் குரலெடுத்து கத்தியபடி காலனே ஓடி வருவது போல ஓடினான். அவர்களும் கூர்மையான ஆயுதங்களை விராத4னின் உடலில் படும்படி விட்டனர். அவன் பலமாக சிரித்தபடி மகா ரௌத்ரனாக, ஹுங்காரம் செய்தான்.  உடலை சிலிர்த்த மாத்திரத்தில் அஸ்திரங்கள் அவன் உடலிலிருந்து கீழே விழுந்தன.  வரம் பெற்றிருந்த காரணத்தால்,  ராக்ஷஸனின் உடலில் தைத்த அம்புகள், உயிரைத் தொட்டும் அவனை அழிக்கவில்லை. விராதன் சூலத்தை தூக்கிக் கொண்டு ராகவனை நோக்கி ஓடினான்.  அந்த சூலம், வஜ்ராயுதத்தை போன்று, ஆகாயத்தில் எரியும் நெருப்புத் துண்டம் போல ஒளிர்ந்ததை இரண்டு அம்புகளால் ராமர் துண்டித்து விழச் செய்தார்.  மேரு மலையிலிருந்து துண்டு மலை உருண்டு விழுவதைப் போல அந்த சூலம் சின்னா பின்னமாகி ராமருடைய அம்பினால் துளைக்கப் பட்டதாக, ராக்ஷஸன் கையிலிருந்து விழுந்தது. உடனே இருவரும் கத்திகள் இரண்டை எடுத்துக் கொண்டு க்ருஷ்ண சர்ப்பம் போல இருந்த கத்திகளால், வேகமாக விழுந்து கொண்டிருந்தவனை பலமாக அடித்தனர். அடிபட்ட நிலையிலேயே இருவரையும்  கைகளால் தூக்கிக் கொண்டு கிளம்பினான். ராமர் அவன் அபிப்பிராயத்தை உணர்ந்து கொண்டு லக்ஷ்மணனிடம், இதே வழிதான் நாமும் போக வேண்டும். நம்மை தூக்கிக் கொண்டு போகிறபடி போகட்டும். பேசாமல் இரு என்று சொல்லி ராக்ஷஸன் மேற் கொண்டு என்ன செய்யப் போகிறான் என்பதைக் கவனித்தார். இரு சிறுவர்களைத் தூக்குவது போல ராம லக்ஷ்மணர்களை தோளில் ஏற்றி வைத்துக் கொண்டு ராக்ஷஸன் பலமாக கத்தியபடி வனத்தை நோக்கிச் சென்றான். பெரும் மேகம் போல அடர்ந்து இருண்டிருந்த வனத்தின் உள்புறம், பலவிதமான மரங்கள் அடர்ந்து இருந்த பகுதிக்குச் சென்றான்.  அந்த இடத்தில் பலவிதமாக பக்ஷிகள், நூற்றுக் கணக்காக விசித்திரமாக இருந்தன. குள்ள நரிகளும் காட்டு யானைகளும் மற்ற மிருகங்களும் நிறைந்திருந்தன.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் விராத4 ப்ரஹாரோ என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 4 (200) விராத4 நிக3ளனம் (விராதன் முடிவு)

 

ராம லக்ஷ்மணர்களை விராதன் தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்து சீதை பலமாக அலறினாள். கைகளை வீசி பலமாக கத்தினாள். இதோ, தசரதன் மகன் ராமன், சுபாவமாகவே நற்குணங்கள் நிரம்பியவன், ஒழுக்கத்தில் சிறந்தவன், கோர ரூபமுடைய ராக்ஷஸனால், லக்ஷ்மணனையும் சேர்த்து அபகரித்துக் கொண்டு போகப் படுகிறான்.  என்னை ஓநாய்கள் சாப்பிட்டு விடும். சிறுத்தைகள், யானைகள் அடித்து போட்டாலும் போடும். ராக்ஷஸோத்தமா, என்னை பிடித்துக் கொண்டு போ. காகுத்ஸர்களை விட்டு விடு. உனக்கு நமஸ்காரம். அவளுடைய கூக்குரலைக் கேட்டு ராம லக்ஷ்மணர்கள், அந்த ராக்ஷஸனை உடனே வதம் செய்வது தான் சரி என்று தீர்மானித்தனர். உடனே சௌமித்திரி, அந்த ரௌத்திரனின் இடது கையை வெட்டினான். ராமர் வலது கையை வேகமாகத் துண்டித்தார். கைகள் வெட்டப் பட்டவுடன், அந்த ராக்ஷஸன் பெரும் வேகத்துடன் பூமியில் விழுந்தான். மலையின் மேல் வஜ்ரத்தால் அடித்து துண்டாக்கியது போல பெரிய சரீரம் பூமியில் விழுந்தது. முஷ்டிகளாலும், முழங்காலாலும், பாத3ங்களாலும் அந்த ராக்ஷஸனைத் துன்புறுத்தி பெரும் முயற்சியுடன் அவனை தரையில் கிடத்தினார்கள். பல அம்புகளால் துளைக்கப் பட்டும், கத்தியினால் அடி வாங்கியும், பூமியில் கூழாக ஆன போதும், உயிர் துறக்கவில்லை. பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தான்.  அப்படியும், மலை போல் அசையாமல், அஸ்திர சஸ்திரங்களின் தாக்குதலாலும் உயிர் பிரியாமல் இருந்த சரீரத்தைப் பார்த்து ராமர் அவன் பயத்தை போக்கும் விதமாக லக்ஷ்மணனிடம் சொன்னார். புருஷவ்யாக்4ரனே, இவன் தவ வலிமையுடையவன். அதனால் தான் அஸ்திர சஸ்திரங்களால் இவனை வெற்றி கொள்ள முடியவில்லை. பள்ளம் தோண்டி புதைத்து விடுவோம். பெரும் யானையைப் போன்ற சரீரத்துடன் இந்த காட்டில் ருத்3ரன் போல திரிகிற இவனை புதைக்க பெரிய பள்ளம் தோண்டுவோம். விராதனுடைய கழுத்தில் தன் பாதத்தை வைத்து அழுத்தியபடி நின்ற ராமர், லக்ஷ்மணனை பெரும் பள்ளத்தை தோண்டச் சொன்னார். இதைக் கேட்டு, விராதன் ராமரைப் பார்த்து பிரயாசையுடன் கஷ்டப் பட்டுக் கொண்டு பின் வருமாறு சொன்னான் இந்திரனுக்கு சமமான பலசாலிகளான உங்களால் நான் தோற்கடிக்கப் பட்டேன். என் கண்ணை மறைத்த மோகத்தால் நான் உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. கௌசல்யைக்குப் பிறந்த புத்திர செல்வம் நீ, ராமன் என்று இப்பொழுது அறிந்து கொண்டேன். லக்ஷ்மணனையும் சீதையையும் தெரிந்து கொண்டேன். இந்த கோரமான ராக்ஷஸ உருவத்தை நான் சாபத்தால் பெற்றேன்.  தும்பு3ரு என்ற க3ந்த4ர்வன் நான். வைஸ்ரவனால் சபிக்கப் பட்டேன்.  அவரை பலவிதமாக வேண்டிக் கொண்டபொழுது, சாப விமோசனம் என்ன என்று அவரே சொன்னார். எப்பொழுது தசரத குமாரன் ராமன் யுத்தத்தில் உன்னை அடித்து வீழ்த்துகிறாரோ, அப்பொழுது சுயரூபம் அடைந்து நீ ஸ்வர்கம் செல்வாய் என்றார்.  இவ்வாறு ரம்பா4விடம் மையல்கொண்டு, அவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்ய நான் தவறிய பொழுது, வைஸ்வானர ராஜா கோபத்துடன் சொல்லியிருந்தார். அந்த பயங்கரமான சாபத்திலிருந்து உன்னருளால் விடுபட்டேன். ராமா, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். நான் என் இருப்பிடம் செல்கிறேன். இதோ, சற்று தூரத்தில், பிரதாபம் மிகுந்த சரப4ங்க3ர் என்ற முனிவர் வசிக்கிறார். சூரியனை நேரில் கண்டாற்போல தேஜஸால் பிரகாசிக்கும் அவர் கால் யோசனை தூரத்திலேயே இருக்கிறார். சீக்கிரம் அவர் இருக்கும் இடம் செல்லுங்கள். உங்களுக்கு அவர் பல நன்மைகளைச் செய்வார். இதோ இந்த பள்ளத்தில் என்னைப் போட்டு விட்டு, நீங்கள் சௌக்யமாக போய் வாருங்கள். குணம் இழந்த ராக்ஷஸர்களை இப்படித் தான் செய்ய வேண்டும். இது போல பள்ளத்தில் போட்டு இறக்கும் ராக்ஷஸர்களும் நல்ல கதியடைவார்கள். இவ்வாறு காகுத்ஸனைப் பார்த்து சொல்லி விட்டு, தன் அம்புகள் துளைத்த சரீரத்தை விட்டு ஸ்வர்கம் சென்றவனைப் போலவே ஆனான். மண் வெட்டியை எடுத்து லக்ஷ்மணன், விராத4ன் சரீரம் கிடந்த இடத்தின் அருகிலேயே,  பள்ளம் தோண்டினான். பெரிய குரலில் கத்தும் குணமுடைய ராக்ஷஸனை அந்த பள்ளத்தில் தள்ளினர்.  அந்த பள்ளத்தில் தள்ளி,,  தங்கள் அஸ்திர சஸ்திரங்களால் அவன் மரணம் அடையமாட்டான் என்பதால், பள்ளத்தில் கிடந்த ராக்ஷஸனை அதனுள்ளேயே வதம் செய்தனர்.  ராமனுடைய கையால் அடிபடுவதை வியாஜமாகக் கொண்டு விராதன் தானே தன் உயிரை விட்டான்.  காட்டில் சுற்றிக் கொண்டிருந்த அவன் சற்று முன் ராமரிடம் சொல்லியிருந்தான். எந்த ஆயுதங்களாலும் எனக்கு மரணம் கிடையாது என்று வரம் பெற்று இருந்ததை விவரித்திருந்தான். அதனால் ராமர், அந்த பெரிய சரீரத்தை பள்ளத்தினுள் வேகமாகத் தள்ளினார். அந்த சத்தம் வானத்தில் எதிரொலித்தது. மிகவும் பிரயாசையுடன் இருவருமாக விராதனை பள்ளத்தில் தள்ளி, பயம் நீங்கியவர்களாக மகிழ்ச்சியடைந்தனர். பிறகு அவர்கள் இருவருமாக சீதையை தேடிச் சென்று அவளையும் அழைத்துக் கொண்டு மகாவனத்தினுள் நுழைந்தனர்.  ஆகாயத்தில் சூரியனும் சந்திரனும் ஒன்றாக காட்சியளிப்பது போல விளங்கினர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் விராத4  நிக3ளனம் என்ற நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 5 (201) ஸரப4ங்க3 ப்3ரும்மலோக ப்ரஸ்தா2னம்

(சரபங்கர் ப்ரும்மலோகம் செல்லுதல்)

 

பயங்கரமான பலம் பொருந்திய ராக்ஷஸனை வதைத்தபின், சீதையை அணைத்து ஆறுதல் சொல்லியபடி,  வீரனான ராமன் லக்ஷ்மணனைப் பார்த்துச் சொன்னார்.  இந்த காட்டு வழி சிக்கலானது. நாமும் இந்த காட்டில் பழகியவர்கள் அல்ல. சீக்கிரமாக தபோத4னரான ஸரப4ங்க3ரின் ஆசிரமத்தை சென்றடைவோம். என்று சொல்லி வேகமாக ஸரப4ங்க3ரின் ஆசிரமத்தை தேடிக் கொண்டு சென்றனர்.  அங்கு,  தவ வலிமையால் தேவர்களுக்கு இணையான பிரபாவம் கொண்டிருந்த முனிவரின் அருகில் அத்புதமான ஒரு காட்சியைக் கண்டனர். சூரியனோ, வைஸ்வானரோ எனும்படி பிரகாசமான சரீரத்துடன் தேவர்களின் ரதத்திலிருந்து இறங்கி பூமியில் கால் படாமல் நடந்த இந்தி3ரனைக் கண்டனர்.  அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்து, மகாத்மாக்களால் பூஜிக்கப் பட்ட இந்தி3ரன் ஏறி வந்த ரதத்தை அருகில் நின்று பார்த்தனர். யானைகளும் குதிரைகளும் பூட்டிய ரதம் ஆகாயமார்கமாகச் சென்றது. இளம் சூரியன் போல ஜ்வலித்தது. வெண் மேகம் போலவும், சந்திர மண்டலம் போலவும் விமலமான குடையை மாலைகள் சூட்டி  அலங்காரம் செய்திருந்தனர். தங்கப் பூண் போட்ட தண்டங்களில் சாமரங்கள் தென்பட்டன. அழகிய பெண்கள், தலையசைத்து கேட்டுக் கொண்டிருக்க, க3ந்த4ர்வ, அமர, சித்34ர்கள், மகரிஷிகள் ஆகாயத்தில் இருந்த தே3வராஜனான இந்திரனை அழகிய பாடல்களால் ஸ்தோத்திரம் செய்தனர்.  ஸரப4ங்க3ருடன் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து ராமர் லக்ஷ்மணரிடம் நூறு யாகம் செய்ததால் சதக்ரது என்று பெயர் பெற்ற இந்திரன் போல தெரிகிறது. ஆகாயத்தில் இவன் ரதம் தெரிகிறது பார் என்று சுட்டிக் காட்டினர். லக்ஷ்மீகரமான அத்புதமான இந்த ரதத்தைப் பார். இந்த புரூஹுதனுடைய குதிரைகள் இந்திரனுடையது என்று கேள்விப் பட்டிருக்கிறோம்.   ஆகாயத்தில் நிற்கும் இந்த குதிரைகள், ரதத்தை சுற்றி நிற்கும் வீரர்கள், வாளேந்தி நிற்கும் இளம் வீரர்கள், குண்டலங்கள் தரித்து நூற்றுக் கணக்காக நிற்கிறார்கள். சிவந்த ஆடையணிந்து நல்ல உடல் வாகு உடையவர்களாக, புலியைப் போல பாயத் தயாராக இருப்பவர்கள், யாராலும் எளிதில் எதிர்த்து நிற்க முடியாத வலிமையுடையவர்கள். எல்லோருமே கழுத்தில் மாலையணிந்து பிரகாசமாக இருக்கிறார்கள். உருவத்தைப் பார்த்தால் இருபத்தைந்து வயதுக்குள் இருப்பதாகத் தெரிகிறது. சௌமித்திரி, இது தேவர்களின் நிரந்தரமான வயது. இவர்கள் பார்க்க லக்ஷணமாகவும், வீரர்களாகவும் தெரிகிறார்கள். லக்ஷ்மணா, நீ சீதையுடன் இங்கேயே நில். நான் சென்று  இவ்வளவு அழகிய ரதத்தில்  வருவது யார் என்று தெரிந்து கொண்டு வருகிறேன்.  லக்ஷ்மணனை அங்கேயே நிற்கச் சொல்லி பணித்து விட்டு ராமர் தான் தனியாக ஸரப4ங்க3ர் ஆசிரமம் சென்றார். ராமர் வருவதைப் பார்த்த சசீபதியான இந்திரன், ஸரப4ங்க3ரிடம் விடைபெற்றுக் கொண்டு, உடன் வந்த தேவர்களிடம் சொன்னான். இதோ வந்து கொண்டிருக்கும் ராமன், என்னைத் தெரிந்து கொண்டு பேசும் முன் கிளம்பி விடுங்கள். இப்பொழுது என்னை பார்க்க வேண்டாம். தன் காரியம் முடிந்து ஜெயித்தபின் நான் சீக்கிரமே காணப் போகிறேன். மிகவும் கஷ்டமான காரியங்களை இவன் இன்னும் செய்ய வேண்டியது இருக்கிறது. அந்த வேலைகளை முடித்து விட்டுத் தான் என்னை காண வேண்டும். தபஸ்வியான ஸரப4ங்க3ரை மரியாதை செய்து வணங்கி விடை பெற்றுக் கொண்டு தன் குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி மறைந்தான். தன் பரிவாரத்தோடு இந்திரன் கிளம்பிச் சென்றபின், ராமர் அக்னி ஹோத்ரம் செய்ய ஆரம்பித்து விட்ட ஸரப4ங்க3 முனிவரைக் கண்டான். அவர் பாதத்தில் வணங்கி, சீதையும், லக்ஷ்மணனும் உடன் வணங்க, அவர் சொன்னபின் ஓரிடத்தில் அமர்ந்தனர். முனிவர் அவர்களை உணவருந்த அழைத்தார். அப்பொழுது இந்திரன் வரவைப் பற்றி ராமர் விசாரித்தார். ஸரப4ங்க3ரும் விவரமாகச் சொன்னார்.  ராமா, இந்த இந்திரன் எனக்கு வரம் அளித்து ப்ரும்ம லோகம் அழைத்துச் செல்ல வந்தான். சாதாரணமாக மற்றவர்களுக்கு கிடைக்க முடியாத பல பலன்களை நான் உக்ரமான தவத்தால் கிடைக்கப் பெற்றுள்ளேன். நீ அருகில் இருப்பதையறிந்து பிரியமான அதிதியாக உன்னை வரவேற்று உபசரிக்காமல் ப்ரும்ம லோகம் போகவும் எனக்கு விருப்பம் இல்லை. தேவர்கள் வசிக்கும் தேவலோகத்துக்கு, உன்னைக் கண்டு,  பேசி, கூட இருந்தபின் போய்க் கொள்கிறேன். நான் தவப் பயனாய் பெற்ற புண்ய லோகங்கள், அழிவில்லாத பல உள்ளன. இதோ, அந்த ப்ரும்ம மயமான தேவலோகத்தைச்  சேர்ந்த என் தவப் பயன்களை ஏற்றுக் கொள். இவ்வாறு சரபங்க ரிஷி சொன்னதும், சாஸ்திரங்களையறிந்த வீரனான ராமன் பதில் சொன்னான். மகா முனியே, இவையனைத்தையும் நானே சம்பாதித்துக் கொள்வேன். இப்பொழுது இந்த வனத்தில் நாங்கள் வசிக்க ஒரு இடம் வேண்டும் அதைத் தான் வேண்டுகிறேன். இந்திரனுக்கு சமமான  பலமுடைய ராமன் இவ்வாறு யாசிக்கவும்,  ஸரப4ங்க3ர் இங்கு அருகில் சுதீக்ஷ்ணர் என்ற தார்மீகரான முனிவர் இருக்கிறார்.  அவர் உங்களுக்கு இருக்க வசதிகள் செய்து தருவார்.  அவர் இருக்கும் இடமும்  மிகவும் சுத்தமான அழகிய இடம். அவரிடம் போய் கேட்டால், அழகான வனப் பிரதேசத்தில் உங்களுக்கு இருப்பிட வசதிகள் செய்து கொடுப்பார். இதோ இந்த மந்தா3கினி நதியின் எதிர்புறமாகச் செல்லுங்கள். ஆங்காங்கு புஷ்பங்களால் ஆன படகுகள் கிடைக்கும். அதில் செல்லுங்கள். இதுதான் வழி.   நரவ்யாக்4ரனே, ராமா, இப்பொழுது ஒரு முஹுர்த்தம் இங்கு இரு. என்னைப் பார். பாம்பு சட்டையை உரிப்பது போல நான் இந்த நைந்து போன சரீரத்தை த்யாகம் செய்யும் வரை இரு. இவ்வாறு சொல்லிக் கொண்டே, மந்திரங்களை அறிந்த சரபங்கர், மகா தேஜஸ்வியான ஸரபங்கர் ஆஜ்யம் என்ற நெய் விட்டு ஹோமம் வளர்த்து  அக்னியில் பிரவேசித்து விட்டார்.  அவருடைய ரோமங்களையும் கேசத்தையும் கூட அக்னி எரித்து பஸ்மமாக்கி விட்டது.  தோலும், எலும்புகளும் மக்கி மடிந்து ரத்தம் தோய்ந்த மாமிசம் எதுவும் மீதியில்லை.  ராமர், லக்ஷ்மணர், சீதை மூவரும் ஆச்சர்யத்துடன் ஸ்தம்பித்து நின்றனர்.  செய்வதறியாது இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த அக்னியிலிருந்து அக்னி போலவே தேஜஸ் நிறைந்த குமாரன் தோன்றினான். அந்த நெருப்பு மூட்டத்திலிருந்து வெளி வந்த ஸரபங்கர் தெளிவாகவே தெரிந்தார். இடைவிடாது  அக்னிஹோத்ரம் செய்யும் மேதாவிகள் அடையும் லோகமான ப்ரும்ம லோகம் சென்றார். தேவர்களுக்கு கூட எளிதில் கிடைக்க முடியாத அந்த பாக்யம், நற்செயல்களைச் செய்த பெரியவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாகும். ப்ரும்மாவும் அவரைப் பார்த்து ஸ்வாக3தம் சொல்லி வரவேற்றார்.  தன் புண்ய கர்மாவினால் ப்ரும்மாவின் ப4வனம் சென்றடைந்த மகரிஷியைப் பார்த்து பிதாமகரான ப்ரும்மாவும் மகிழ்ந்தார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஸரப4ங்க3 ப்ரும்மலோக ப்ரஸ்தா2னம் என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 6(202) ரக்ஷோ வத4 ப்ரதிக்ஞானம்

(ராக்ஷஸர்களை வதம் செய்வதாக வாக்கு தருதல்)

 

ஸரபங்கர் இவ்வாறு ஸ்வர்கம் சென்றதும்,  முனிவர்கள் அனைவரும் அங்கு கூடி விட்டனர். மகா தேஜஸ்வியான ராமனை வந்தடைந்தார்கள். வைகா2னஸமென்ற அக்னியை உடையவர்கள், மரவுரி தரித்தவர்கள், கானல் நீரை குடிப்பவர்கள் கற்களை உடைப்பவர்கள், வெறும் இலையை ஆகாரமாக கொண்ட தபஸ்விகள், தன் பற்களால் தானியங்களை அரைப்பவர்கள், நீரில் மூழ்கி தவம் செய்பவர், தூக்கத்தைத் துறந்தவர்கள், ஆகாயத்தை நோக்கித் தவம் செய்பவர், அல்லது ஆகாயத்தை குறித்து ஆராய்ச்சி செய்பவர்கள், என்று பலர். சில முனிவர்களுக்கு தண்ணீரே ஆகாரம். ஒரு சிலர் காற்றையே உண்டனர்.  வெறும் பூமியில் சிலர் படுப்பவர்கள், சிலர் ஆகாயத்தை நிலையமாக உடையவர். கைகளை உயரத் தூக்கியபடி நிற்பவர் சிலர்.  மிகவும் சாதுவானவர்கள்.  ஈர ஆடையே அணிபவர்கள். ஜபம் செய்து கொண்டே இருப்பவர். அனவரதமும் தவம் செய்பவர். பஞ்ச தபம் எனும் தவத்தைச் செய்தவர். என்று இவ்வாறு முனிவர்கள் எல்லோருமே ப்ரும்ம தேஜஸுடன் கூடியவர்கள், த்ருடமான யோகமும் சமாதியும் அறிந்தவர்கள், பலரும்  ஸரபங்க ஆசிரமத்தில் ராமனைக் காண வந்து சேர்ந்தனர்.  ரிஷி முனிவர்களின் கூட்டம் ஒரே குரலில் தர்மம் அறிந்து நடப்பவர்களிலும் ஸ்ரேஷ்டனான ராமனைப் பார்த்து சொன்னார்கள். ராமா,  நீ இக்ஷ்வாகு குலத்தின் இந்த பிரதேசங்களுக்கும்  பிரதானமான நாதன், தலைவன்.  மகாரதியே, தேவர்களுக்கு இந்திரன் போல மூன்று உலகிலும் உன் வீர்யத்தாலும், புகழாலும் கொண்டாடப் படுபவன். தந்தை சொல்லைக் காக்க என்று எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையை உலகம் அறியும். உன்னிடத்தில் சத்யமும், தர்மமும் ஏராளமாக உள்ளன. மகானான உன்னையடைந்து தர்மத்தை அறிந்திருப்பதோடு, அதை பாலிப்பதிலும் ஈ.டுபாடு உடையவன் என்பதால் உன்னை யாசித்து வேண்டிக் கொள்கிறோம்.  பொறுத்துக் கொள்வாயாக. எந்த அரசன், பிரஜைகளிடம் ஆறில் ஒரு பங்கை வரி என்று வசூலித்துக் கொண்டு, அவர்களை புத்திரர்களை காப்பது போல காக்காமல் விடுகிறானோ, அவனை அதர்மம் சூழ்ந்து கொள்ளும். தன் உயிரை விட மேலாக கருதும் புத்திரர்களைப் போல பிரஜைகளை எண்ணி, ரக்ஷிக்க அரசன் கடமைப் பட்டுள்ளான். இவ்வாறு செய்து விஷய வாசனைகள் எனப்படும் இகத்தின் சுகங்களை அனுபவிக்கிறான். பல வருஷங்கள் நிலைத்து நிற்கும்  கீர்த்தியையும் அடைகிறான். ப்ரும்மாவின் சமமான ஸ்தானத்தை அடைந்து அங்கும் புகழோடு வாழ்கிறான். பழங்கள், காய் கிழங்குகளை உண்டு, முனிவர்கள் செய்யும் தவப் பயனில் நான்கில் ஒரு பாகம் அரசனை சென்றடைகிறது, அந்த அரசன் பிரஜைகளை தர்ம வழியில் ரக்ஷித்துக் கொண்டிருப்பானேயானால்.  ப்ராம்மணர்கள் நிறைந்த, பெரும்பாலும் வான ப்ரஸ்த ஆசிரமத்தை அடைந்துள்ள மகான்கள், நீ எங்கள் தலைவனாக இருக்கும் பொழுதே, அநாதைகள் போல ராக்ஷஸர்களால் இம்சிக்கப் படுகிறார்கள். இதோ வந்து பார்.  தவம் செய்யும் முனிவர்களின் சரீரங்களைப் பார். பல ராக்ஷஸர்கள் பலமுறை அடித்து துன்புறுத்தியிருப்பதைப் பார்.  பம்பா நதி தீரத்திலிருந்து, மந்தாகினி வரை, சித்ர கூடத்தில் இருப்பவர்களையும் கசக்கி பிழிகிறார்கள்.  இதை பொறுக்க மாட்டாமல் தான், வந்தோம். கொடும் செயல்களைச் செய்யும் ராக்ஷஸர்கள், கோரமாக இந்த வனத்தில் செய்யும் அட்மூடுழியங்களுக்கு ஒரு முடிவு வேண்டும்.  அதனால் தான் உன்னை சரண்யனாக எண்ணி சரணடைகிறோம். இரவில் சஞ்சரிக்கும் இந்த ராக்ஷஸர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்று ராமா|. இந்த பூமியில் உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கதி இல்லை.  அரசகுமாரனே, எங்கள் எல்லோரையும் அவர்கள் பிடியிலிருந்து காப்பாற்று.  இதைக் கேட்டு காகுத்ஸன், எல்லா தபஸ்விகளும் முனிவர்களும் அடங்கிய கூட்டத்தைப் பார்த்து பதில் சொன்னார். தாங்கள் இவ்விதம் என்னிடம் கெஞ்சும் விதமாக சொல்லக் கூடாது. ஆணையிடுங்கள். நான் என் சொந்த காரியத்திற்காக வனம் வந்தேன்.  தந்தையின் கட்டளைப் படி யதேச்சையாக நான் வனம் வந்திருந்தாலும், உங்களுடைய இந்த ராக்ஷஸ தொல்லையை நீக்கவும், கடமைப் பட்டுள்ளேன். உங்கள் கஷ்டமும் தீருமானால், என் வன வாசமும் பயனுடையதாக ஆகும்.  தபஸ்விகளுடைய சத்ருக்களை யுத்தத்தில் ஜயிக்க விரும்புகிறேன். என் சகோதரன் வலிமையையும் என் வலிமையையும் இங்குள்ள தபஸ்விகள் அறிந்து கொள்ளட்டும். இவ்வாறு முனிவர்களுக்கு அபயம் அளித்து, சகோதரன் லக்ஷ்மணன், மனைவி சீதையுடன் சுதக்ஷ்ணர் ஆசிரமத்தை அடைந்தார்.  தபஸ்விகள் நிறைந்து அந்த இடம் காணப் பட்டது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ரக்ஷோ வத4 ப்ரதிக்ஞானம் என்ற ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 7 (203) சுதீக்ஷ்ணாஸ்ரமம் (சுதீக்ஷ்ணருடைய ஆசிரமம்)

 

ராமர் சகோதருடனும் சீதையுடனும் அந்த பிராம்மண கூட்டத்துடனும் சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார். சிறிது தூரம் அத்வானமாக இருந்த இடத்தைக் கடந்து பெருகி ஓடும் நதிகளைக் கடந்து, பெரும் மேகம் போன்று உயர்ந்து இருந்த ஒரு பெரிய மலையைக் கண்டனர். பலவிதமான மரங்கள் நிறைந்து அடர்ந்திருந்த காட்டுப் பகுதியில் இக்ஷ்வாகு ராஜ குமாரர்கள் சீதையுடன் நுழைந்தனர்.  அந்த அச்சுறுத்தும் காட்டில், பூத்துக் குலுங்கும் மரங்களையும், கனி மரங்களையும் கண்டனர்.  நடந்து நடந்து இவைகளை கடந்து சென்றபடி ஆசிரமத்தை அடைந்தனர்.  மரவுரி ஆடைகள் வரிசையாக தொங்க விடப்பட்டிருந்ததை வைத்து அதை முனிவரின் ஆசிரமம் என்று ஊகித்துக் கொண்டனர். அங்கு அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த சுதீக்ஷ்ண முனிவரின் ஜடை முடிகள், மண் மூடிக் கிடந்தன.  அவரை முறைப் படி ராமர் வணங்கினார். தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். ப43வன், நான் ராமன். தங்களைக் காண வந்திருக்கிறேன், மகரிஷியே, சத்ய விக்ரமனே, என்னிடம் பேசுங்கள்.  அவரும் கண் திறந்து பார்த்து ராமனைத் தெரிந்து கொண்டு, ஆலிங்கனம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு சொன்னார். ராமா, உன் வரவு நல் வரவு ஆகுக. உனக்கு ஸ்வாகதம். நீ இந்த ஆசிரமத்திற்கு வந்ததால், இந்த ஆசிரமம் நாயகனை அடைந்தது போல ஆயிற்று.  உன் வரவால் இந்த இடம் பாவனமாயிற்று.  பாக்யம் பெற்றது.  இந்த பூமியில் உடலை தியாகம் செய்து விட்டு தேவலோகம் செல்ல வேண்டியவன் நான், உன் வரவை எதிர்பார்த்து தான்  சரீரத்தை தரித்து காத்திருந்தேன். சித்ர கூடத்திலிருந்து வந்தவர்கள் மூலமாக நீ அரசைத் துறந்தாய் என்று கேள்விப் பட்டேன். காகுத்ஸா, தேவராஜனான இந்திரன் இங்கு வந்தான். என் புண்ய கர்மாக்களின் பலனாக எல்லா லோகமும் எனக்கு வசமானதாகச் சொன்னான். இப்படி தவ வலிமையால் ஜயித்த தேவ ரிஷிகள் நிறைந்த இடங்களில் நீ மனைவியுடனும், சகோதரனுடனும் மகிழ்ச்சியாக இரு.   உக்ரமான தவம் செய்து வலிமை மிகுந்த அந்த முனிஸ்ரேஷ்டரைப் பார்த்து, சத்யமே பேசும் அவரிடம் ராமன், ப்ரும்மாவைப் பார்த்து இந்திரன் பேசுவது போல பேசினார். மகா முனிவரே,  உலகங்களை நானே வெற்றி கொள்வேன். தற்சமயம் எனக்கு இருக்க இடம் வேண்டும் என்று தங்களை நாடி வந்தேன். நீங்கள் எல்லா ஜீவ ஜந்துக்களிடமும் இரக்கம் உள்ளவர். எல்லாம் அறிந்தவர் என்று கௌதமரான மகான் சரபங்கர் சொல்லி உங்களை நாடி வந்தேன்.  இதைக் கேட்டு மகிழ்ச்சியுடன், உலகெல்லாம் பரவிய கீர்த்தியுடைய அந்த முனிவர், இந்த ஆசிரமத்திலேயே சந்தோஷமாக இருங்கள்.  இங்கு எல்லா வசதிகளும் உள்ளன. மகரிஷிகள் வந்து போய் கொண்டிருப்பார்கள். இந்த ஆசிரமத்திற்கு வரும் மிருகங்களும் யாரையும் துன்புறுத்தாமல் சுற்றி விட்டு பயமின்றி பார்ப்பவர் மனதை கவர்ந்து தன் இஷ்டப் படி விளையாடி விட்டு திரும்ப போய் விடும். இது தவிர இங்கு வேறு எந்த விதமான இடையூறும் இருக்காது.  மகரிஷி இவ்வாறு சொல்லவும் லக்ஷ்மணன் முன் பிறந்தவனான ராமன், தன் வில்லையும் அம்பையும் சுட்டிக் காட்டி, அப்படி வந்தாலும் மிருகங்களை நான் விரட்டிக் கொள்கிறேன். இந்த ஆசிரமத்தில் வெகு நாட்கள் இருக்க மாட்டோம் என்று நினைக்கிறேன் என்றார்.   இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, பொழுது சாய்ந்து இரவு வருவதன் அறிகுறியாக, மேற்கில் சூரியன் மலை வாயிலில் விழுந்தான். அழகிய அந்த சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தில், சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் தங்கினார். சுதீக்ஷ்ணர் தானே முனி ஜனங்களின் ஆகாரமான அன்னம் அளித்து  உபசரித்தார்.  சந்த்யா காலம் மறைந்து இருள் சூழ்ந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சுதீக்ஷ்ணாஸ்ரமோ என்ற ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 8 (204) சுதீக்ஷ்ணாப்4யனுக்ஞா (சுதீக்ஷ்ணரிடம் விடை  பெறுதல்)

 

சுதீக்ஷ்ணரின் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு அந்த இரவை அவருடைய ஆசிரமத்தில் கழித்தபின், விடிந்தவுடன், ராமர் சௌமித்திரியுடன் எழுந்திருந்து, சீதையுடன் உத்பல புஷ்பங்களின் மணம் வீசும் குளிர்ந்த நீரில் காலைக் கடன்களை முடித்துக்  கொண்டு, அக்னியையும், தேவர்களையும் பூஜை செய்து விடியற்காலை சூரியனை வணங்கி, தபஸ்விகளுக்கு சரணமாக இருந்த வனத்தில்,  உதய சூரியனைக் கண்டு மனம் நிர்மலமாக, தெளிந்த உள்ளத்துடன் சுதீக்ஷ்ணரை தரிசிக்கச் சென்றார்கள்.  அவரை வணங்கி, ராகவன், மெதுவாக பகவன், உங்கள் கிருபையால்  இரவு நன்றாகத் தூங்கினோம். நாங்கள் வணங்கி உபசாரம் செய்ய வேண்டியிருக்க, நீங்கள் எங்களை நன்றாக உபசரித்தீர்கள். விடை பெற்றுக் கொள்கிறோம். முனிவர்கள் அவசரப் படுத்துகின்றனர். இந்த ஆசிரம மண்டலம் முழுவதும் சுற்றிப் பார்க்க விரும்புகிறோம். புண்ய கர்மாக்களை செய்து வரும் முனிவர்களின் ஆசிரமத்தை தரிசித்து வருகிறோம். தண்ட காரண்ய வாசிகளான உங்களிடம் இந்த முனிவர்களுடன், நாங்களும் கூட விடை பெறுகிறோம்.  இவர்கள் நித்யம் தர்ம கர்மாக்களைச் செய்பவர்கள். தவம் செய்து மென்மையான குணம் வந்து சேரப் பெற்றவர்கள்.  கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் போன்று தூய்மையானவர்கள்.  சூரியன் தன் கிரணங்களால் தகிக்க ஆரம்பிக்கும் முன் (குழந்தை இல்லாதவன் தவறான வழியில் லக்ஷ்மியை கிடைக்கப் பெற்று, செல்வத்தை செய்வதறியாது திகைப்பது போல) நாங்கள் கிளம்பிச் செல்ல விரும்புகிறோம் என்று சொல்லி முனிவரின் பாதத்தில் வணங்கி நின்றனர். 

 

சௌமித்ரியும், சீதையும் முறையே முனிவரை வணங்கினர். பாதத்தில் வணங்கிய சகோதரர்கள் இருவரையும் எழுப்பி மார்புற அணைத்துக் கொண்டு மிகவும் அன்புடன்,  பரிவுடன் விடை கொடுத்தார் முனிவர். பத்ரமாக போய் வாருங்கள். நிழல் போல் பின் தொடர்ந்து வந்துள்ள சீதையோடும், சௌமித்ரியுடனும் நலமாக போய் வா. தண்டகாரண்ய முனிவர்களின் அழகிய ரம்யமான ஆசிரமங்களையும் பார்.  தவமே குறியாக உள்ள இந்த சுத்தமான ஆத்மாக்களுடைய இருப்பிடமான இங்கு ஏராளமான பழங்கள், காய் கனி வகைகள் கிடைக்கின்றன. வனத்தில் மலர் சொரியும் மரங்களும் நிறைய உள்ளன.  கூட்டம் கூட்டமாக வரும் மிருகங்களும் சாந்தமானவையே. பிரஸன்னமான நீரை உடைய குளங்களும், மலர்ந்த தாமரை மலர்களுடன் தாமரைக் குளங்களும், வாத்துகள் நிரம்பிய நீர் நிலைகளும், சிறு குளங்களும், கண்ணுக்கு ரம்யமாக விளங்குவதைக் காண்பீர்கள்.  மயில்கள் ஆடுவதைக் காணலாம். சௌமித்ரே, குழந்தாய், நீயும் சௌக்யமாக போய் வா. இந்த ஆசிரமத்திற்கு திரும்பவும் வாருங்கள் என்றார். அப்படியே ஆகட்டும் என்று சொல்லி காகுத்ஸன், லக்ஷ்மணனுடன் முனிவரை பிரதக்ஷிணம் செய்து வணங்கி, கிளம்பத் தயாரானான். மங்களகரமான வில்லையும், தூணியையும், கத்திகளையும் அந்த சகோதரர்களுக்கு விசாலாக்ஷியான சீதை எடுத்துக் கொடுத்தாள்.  அவைகளை உடலில் அணிந்து கொண்டு, கத்தியையும் வில்லையும் கையில் எடுத்துக் கொண்டு, அவ்விருவரும் சீதையுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.  மான்கள். அழகிய வடிவம் கொண்டவர்கள்,  தங்கள் தேஜஸால் பிரகாசமாக விளங்கியவர்கள்,  ரகுவம்ச ராஜ குமாரர்கள், சீதையுடன் வழி நடந்து செல்லலாயினர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சுதீக்ஷ்ணாப்4யனுக்ஞா என்ற  எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

 

 

அத்தியாயம் 9 (205) சீதா த4ர்மாவேத3னம் (சீதை தர்மத்தைச் சொல்லுதல்)

 

சுதீக்ஷ்ணரிடம் விடை பெற்றுக் கிளம்பிய ராமனிடம் மனதைக் கவரும் இனிமையான வார்த்தைகளால் சீதை தன் மனதில் பட்டதைச் சொன்னாள். மிகவும் சூக்ஷ்மமாக மிகப் பெரிய அதர்மம் வந்து சேர்ந்து விடுகிறது. நாமே ஆசையினால் செய்யும் ஒரு காரியத்தால் அனர்த்தம் வருவதை கொஞ்சம் கவனமாக இருந்து தவிர்க்க முடியும்.  ஆசையினால் வரும் மூன்று அனர்த்தங்கள் சாதாரணமாக சொல்வதுண்டு. மித்யா வாக்யம்-பொய் பேசுதல், இதுவே பெரிய குற்றம். மற்ற இரண்டும் இன்னும் பெரிய குற்றம். பரதாராபிகமனம்- பிறன் மனையை நாடுதல், மாற்றான் மனைவியை நாடுதல், வினா வைரம் ச ரௌத்3ரதா- காரணமின்றி ஒருவரிடம் ரௌத்ரம் கோபம் கொள்ளுதல். ராகவா, இதில் பொய் பேசுவது என்பது உங்களிடம் இருந்ததில்லை. இனியும் இருக்காது. தர்மத்தையே அழிக்கக் கூடிய பரஸ்த்ரீ க3மனம், மாற்றான் மனைவியை விரும்புவது என்பதும் உங்களிடம் இருந்ததும் இல்லை, இனியும் இருக்காது. மனிதர்களுள் இந்திரன் போன்றவனே, உங்கள் மனதில் இப்படியொரு எண்ணம் கூட வராது என்பது நிச்சயம். அரசகுமாரனே, தன் மனைவியிடமே ஈ.டுபாடு உடையவன் நீங்கள் என்பதை நான் அறிவேன். எப்போதும் இப்படியே இருப்பீர்கள்.  தர்மத்தில் விருப்பமுள்ளவன், சத்ய சந்தன், தந்தை சொல்லை மீறாதவன் என்றெல்லாம் பெயர் பெற்றுள்ள உங்களிடம் சத்யமும் தர்மமும் நிலைத்து நிற்கின்றன. இந்திரியங்கள் உங்கள் வசத்தில் இருக்கின்றன. புலனடக்கம் உள்ளவர்கள் சத்யத்தையும், தர்மத்தையும் காப்பது எளிதே.  மூன்றாவதான இந்த மற்ற பிராணிகளை ஹிம்ஸை செய்வது என்பதை மோகத்தால் இப்பொழுது செய்ய முனைகிறீர்கள். யாரிடமும் வைரம், விரோதம் இல்லாத பொழுது, தண்டகாரண்ய வாசிகளுக்கு பிரதிக்ஞை செய்து கொடுத்திருக்கிறீர்கள்.  ரிஷிகளை காப்பதற்காக ராக்ஷஸர்களை வதைப்பேன் என்பதாக. இவர்களாலேயே இந்த வனம் தண்டகா வனம் என்று பெயர் பெற்றுள்ளது வில் அம்புகளை எடுத்துக் கொண்டு சகோதரனோடு கிளம்பி விட்டீர்கள்.  இப்படி கிளம்பிய உங்களைப் பார்த்து எனக்கு கவலையுண்டாகிறது.  உங்களை முற்றிலும் அறிந்தவள்  என்பதால், உங்கள் நடவடிக்கைகளை வைத்து யோசித்துப் பார்க்கும்பொழுது, இந்த செயல் நல்லதல்ல, நன்மையைத் தராது என்று தோன்றுகிறது.  இந்த தண்டகாவனம் போவதே எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்றும் சொல்கிறேன் கேளுங்கள். கையில் வில்லும் அம்பும் ஏந்தி நீங்கள் சகோதரனோடு வனத்தில் செல்கிறீர்கள். காட்டில் திரியும் உங்களைப் பார்த்து யாராவது அம்பை எடுத்து அடிக்கலாம். நெருப்புக்கு எரி பொருள் கிடைத்தாற் போல் க்ஷத்திரியர்களுக்கு, அருகில் பலசாலியான எதிரி அகப்பட்டால்  பலம் ஏகமாக வளர்ந்து விடும். வேகம் வந்து விடும். முன்பு ஒரு காலத்தில் ஒரு முனிவர் இருந்தார். சத்யவாதி. ஒழுக்கமும் தவ வலிமையும் உடையவர். எதோ ஒரு பாவனமான வனத்தில் இருந்தார். மிருகங்களும் பக்ஷிகளும் நிரம்பிய இடம். அவருடைய தவத்திற்கு இடையூறு செய்யும் பொருட்டு வேட ரூபம் தரித்து இந்திரன் அங்கு வந்து சேர்ந்தான். கையில் கத்தியோடு அந்த ஆசிரமம் வந்து சேர்ந்தான். அந்த தபஸ்வியிடம் கத்தியை கொடுத்து, பாதுகாப்பாக வைத்திருக்கும்படியும் தான் வந்து வாங்கிக் கொள்வதாகவும்  சொல்லிச் சென்றான். பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலையில் அந்த கத்தியை வனத்தில் நடமாடும் பொழுதெல்லாம் தன் கையிலேயே வைத்துக் கொண்டு அந்த முனிவர் அதை பாதுகாப்பதில் கவனமாக இருந்தார். இந்த ஆயுதம் சதா கையில் இருந்ததாலேயே தவத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடு குறைந்து, ரௌத்ர புத்தி வந்து சேர்ந்தது.  மெள்ள மெள்ள வெறி ஏறி அனாவசியமாக ரௌத்ர வ்ருத்தியை மேற் கொண்டு, நரகம் சென்றார். இது முன்னொரு சமயம் நடந்த கதை. ஆயுதம் அருகிலேயே இருந்ததால் குணம் மாற அந்த ஆயுதமே காரணமாக ஆயிற்று.  அக்னி அருகில் இருப்பது போல் தான் ஆயுதம் தரிப்பதும். உங்களிடம் உள்ள அபிமானத்தினாலும், ஸ்னேகத்தாலும் நினைவு படுத்துகிறேன். உபதேசம் செய்யவில்லை. த4னுஷை ஏந்தி இந்த தவற்றை நீங்கள் ஒருபொழுதும் செய்யக்கூடாது. தண்டகா வனத்தை ஆஸ்ரயித்து இருக்கும் ராக்ஷஸர்களை ஒரு விரோதமும் இன்றி வதம் செய்யக் கூடாது. அவர்கள் எந்த வித அபராதமும் செய்யாத பொழுது, அந்த ஜனங்களை கொல்வதை நான் விரும்பவில்லை. வீரர்களான க்ஷத்திரியர்கள், வனத்தில் நிம்மதியாக வசிப்பவர்களை கஷ்டப் படும் பொழுது காப்பாற்ற வேண்டும் என்பது வரை தான் கடமை. சஸ்த்ரம் எங்கே, வனவாஸம் எங்கே. (ரௌத்ரம்) கடும் கோபம் கொண்டு அடிப்பது எங்கே. தவம் செய்யும் எளிமை எங்கே, நம்மை சூழ்ந்திருக்கும் இந்த தேச தர்மத்தைக் காப்பாற்றுவோம். அண்ணலே, சஸ்த்ரம் எனும் ஆயுதத்தை ஏந்துவதால் புத்தி கலங்கித்தான் போகிறது. திரும்ப அயோத்தி சென்ற பின் க்ஷத்திரிய தர்மத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு காப்பாற்றுவீர்கள். அது என் மாமனார், மாமியாருக்கும் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். ராஜ்யத்தைத் துறந்து பற்றில்லாத முனிவராக வாழ்வது என்று எப்பொழுது தீர்மானம் செய்து வனம் வந்தீர்களோ, அதை முழுவதுமாக நிறைவேற்றுவோம்.  தர்மத்திலிருந்து அர்த்தம் பிறக்கிறது. தர்மத்தினால் சுகம் கிடைக்கும். தர்மத்திலிருந்து சர்வமும் கிடைக்கிறது. இந்த உலகமே  தர்ம சாரமாகும். நியமங்களை கடை பிடித்து தன்னை வருத்திக் கொண்டாலும், விடாது முயற்சியுடன் தர்மத்தை காப்பவன் நிபுணனாவான். சுகத்திலிருந்து சுகம் பெற முடியாது. நித்யம் சுசியாக, சுத்தமாக இருந்து தவ வழியில் செல்லுங்கள்.  சௌம்ய, இவை எல்லாமே நீங்கள் அறிந்தது தான். இருந்தும், பெண்களுக்கே உரிய சபல புத்தியால் இவ்வளவு சொன்னேன்.  இல்லையெனில் உங்களுக்கு த4ர்மோபதேசம் செய்ய யாருக்கு அருகதை இருக்கிறது?  நன்கு யோசித்து, தம்பியுடன் கலந்தாலோசித்து எப்படித் தோன்றுகிறதோ, செய்யுங்கள். சீக்கிரம் ஆகட்டும்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில்  சீதா த4ர்மாவேத3னம் என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 10 (206) ரக்ஷோ வத4 சமர்த்தனம்

(ராக்ஷஸர்களை வதம் செய்வதை நியாயப் படுத்துதல்)

 

தன் கணவனிடம் கொண்ட அன்பினால், சீதை இவ்வளவு தூரம் விவரமாக விவாதித்ததைக் கேட்டுக் கொண்டிருந்த ராமன், மைதிலிக்குப் பதில் சொன்னான். தேவி, ஹிதமானதைச் சொன்னாய். இது உன் சினேகத்தை காட்டுகிறது. அது சரியே. ஜனகர் மகளே, உன் குலத்திற்கு உகந்ததாயும், தர்மம் அறிந்தவள் என்பதைக் காட்டும் வகையிலும் உன் சொற்கள் அமைந்திருந்தன. நான் வேறு என்ன சொல்லப் போகிறேன். நீயே சொன்னாய். க்ஷத்திரியர்கள் ஆயுதம் தரிப்பதன் நோக்கம் என்ன என்றால், எங்கும் காப்பாற்று என்று வருந்தி எழுப்பும் குரல் கேட்கக் கூடாது என்பதே. சீதே, தண்டகாரண்ய வாசிகளான முனிவர்கள், தங்கள் விரதங்களை அனுஷ்டிப்பதில் தீவிரமாக இருப்பவர்கள். கஷ்டம் தாங்காமல் தாங்களாகவே என்னை சரணடைந்தார்கள். இந்த வனத்தில் தங்கள் வழியில் யாரையும் அண்டாமல் வசிக்கும் பொழுதும், கனி, காய், கிழங்குகளை உண்டு யாரையும் துன்புறுத்தாமல் காலத்தை கழிக்கும் பொழுதும், இந்த ராக்ஷஸர்களின் கொடிய செயல்களின் பலனாக சுகமாக இருக்க முடியவில்லை. அந்தந்த காலத்திற்கு ஏற்ப தங்கள் விரதங்களை பாலனம் செய்து வருகிறார்கள். நர மாமிசம் தின்னும் ராக்ஷஸர்கள் இவர்களைத் தின்று தீர்க்கிறார்கள். இப்படி ராக்ஷஸர்கள் வாயில் அகப்பட்டுக் கொண்ட முனிவர்கள், மற்ற பிராம்மணர்களைப் பார்த்து என்னை சரணடையும்படி சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் சொன்னதைக் கேட்ட பின்பும் வாளாவிருக்க முடியாமல் நானாக இவ்வாறு சொன்னேன். மன்னிக்க வேண்டும் பெரியவர்களே, எனக்கு இது அவமானம். வெட்கம் தரும் விஷயம், ஏனெனில், நான் வந்து உங்களை விசாரித்து தேவையானதை செய்து கொடுப்பது என் கடமையாக இருக்க நீங்களே வேண்டிக் கொண்டு என்னிடம் வரும்படி ஆயிற்று. அவர்கள் முன்னிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? என்று  கேட்டேன். அவர்கள் எல்லோரும் சேர்ந்து பதில் அளித்தனர். பல விதமான ரூபம் எடுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்த ராக்ஷஸர்கள், இந்த தண்டகாரண்யத்தில் எங்களைத் துன்புறுத்துகிறார்கள். நீ தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். பர்வ காலங்களில் நாங்கள் ஹோமம் செய்யும் பொழுது வந்து விடுகிறார்கள். அடிக்கிறார்கள். திரும்ப அடிக்க எங்களால் முடியவில்லை. மாமிசத்தை ஆகாரமாக கொண்ட அவர்கள் பலம் எங்களுக்கு இல்லை. தவம் செய்யும் இந்த தபஸ்விகளை இவர்கள் பிடியிலிருந்து தப்புவிக்க வழி தேடிக் கொண்டிருந்த எங்களுக்கு நீதான் கதி. புகலிடம்.  எங்கள்  தவ வலிமையால் அவர்களை கொல்ல முடியும். அதற்கு நாங்கள் சமர்த்தர்களே. ஆனால் பல காலமாக தவம் செய்து சேர்த்த தவ பலன்கள் நஷ்டமாகும். சிலர் அவர்கள் வாயில் உணவாக அகப் பட்டுக் கொள்வதைப் பார்த்து சாபங்கள் கூட கொடுத்திருக்கிறோம். தவம் செய்வது மிகக் கடினம். இதில் வரும் இடையூறுகளும் மிக அதிகம். இப்படி கஷ்டப் பட்டு தவம் செய்வது, இப்படி சாபங்கள் கொடுத்து வீணாகிறது. விரயமாகிறது.  அதனால் எங்களை காப்பாற்று. உன் சகோதரனையும் உதவிக்கு அழைத்துக் கொள். உங்களையே நாயகனாக ஏற்றுக் கொள்கிறோம். என்றனர் அந்த அப்பாவி தபஸ்விகள்.  ஜனகர் மகளே, இவ்வாறு வருந்தி புலம்பும் ரிஷி, முனிவர்களின் நிலையைப் பார்த்து இரங்கி கருணை மேலிட நான் வாக்கு கொடுத்து விட்டேன். ஒரு முறை வாக்கு கொடுத்து விட்டால் உயிரே போவதானாலும் மீற மாட்டேன். முனிவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பது என் கடமையாகிறது. நான் என் உயிரை விட்டாலும் விடுவேன். உன்னையும், லக்ஷ்மணனையும் தியாகம் செய்தாலும் செய்வேன். கொடுத்த வாக்கை மீற மாட்டேன். அதுவும் அப்பாவிகளான ரிஷி முனிவர்களிடம் செய்வதாக சொல்லி விட்டு, இப்பொழுது மாற்ற முடியாது. அவர்கள் சொல்லாமலே செய்ய வேண்டியவன் நான். அவர்களே வந்து வேண்டிக் கொண்ட பின், சத்யமும் செய்து கொடுத்த பின் எப்படி மீறுவேன்? என்னிடத்தில் உள்ள அன்பினாலும், பரிவினாலும் நீ இவ்வாறு பேசினாய், வைதேஹி, நான் மகிழ்ச்சியடைந்தேன். தவறாக நீ எதுவும் சொல்லவில்லை. நீ பிறந்த குலத்திற்கும், புகுந்த வீட்டிற்கும் ஏற்ற விதமாகத் தான் யோசனை சொன்னாய். என்னுடன் கூட தர்மத்தை கடை பிடிக்க வந்த சஹ தர்ம சாரிணீ நீ. என் உயிரை விட பிரியமானவள்.  இவ்வாறு மிதிலா ராஜ குமாரிக்கு பதில் சொல்லி விட்டு, பிரியமான மனைவியுடனும், வில்லேந்தி உடன் வந்த சகோதரனுடனும் ரம்யமான தபோ வனத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினான். 

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ரக்ஷோ வத4 சமர்த்தனம் என்ற பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 11 (207) அகஸ்தியாஸ்ரம: (அகஸ்தியரின் ஆசிரமம்)

 

ராமன் முன்னால் சென்றான். நடுவில் சீதை. பின்னால் கையில் வில்லுடன் லக்ஷ்மணன் பின் தொடர்ந்தான். பலவிதமான மலைச்சாரல்களையும் வனங்களையும் பார்த்துக் கொண்டே பல நதிகளைக் கடந்து அழகிய இயற்கை காட்சிகளை தரிசித்தவாறு சென்றனர். சாரஸ பக்ஷிகளும், சக்ரவாகங்களும் நதி மணலில் சஞ்சரிக்கும் பக்ஷிகளும், தாமரை மலர் மலர்ந்து நிறைந்த தடாகங்களும், நீரில் வாழும் பறவைகளும், கம்புகளில் கட்டப் பட்ட புள்ளி மான்களும், மதம் பிடித்த யானைகளும், காட்டு எருமைகளும், வராகங்களும், மரங்களுக்கு எதிரிகளான யானைகளும் என்று காட்டில் பல காட்சிகளைக் கண்டு ரசித்தவாறு சென்றனர். அத்வானத்தில் வெகு தூரம் நடந்து சென்றபின் மாலை வெய்யில் நீளமாக நிழலைத் தந்த நேரம் ஒரு தடாகத்தைக் கண்டனர். அழகிய தாமரைக் குளம். இரண்டு யானைக் குட்டிகள் அலங்காரமாக நிறுத்தப் பட்டிருந்தன. சாரஸம், ஹம்ஸம், காத3ம்ப4ம் என்ற நீர் வாழ் பறவைகள் நிறைந்திருந்தது. அந்த குளத்தின் நீர் பிரஸன்னமாக இருந்தது. எங்கிருந்தோ வாத்ய கோஷங்களும், பாடும் சத்தமும் கேட்டது. ஆனால் நேரில் யாரும் தென்படவில்லை.  ராமனும், லக்ஷ்மணனும்  ஆவல் மேலிட த4ர்மப்4ருதர் என்ற முனிவரை இது பற்றிக் கேட்டனர்.  அத்புதமான சங்கீதம் கேட்கிறது. எங்கிருந்து வருகிறது? யார் பாடுகிறார்கள்? விவரமாகச் சொல்லுங்கள்,  இதில் ரஹஸ்யம் ஏதுமில்லையே, சொல்லலாம் என்றால் சொல்லுங்கள் எனவும், முனிவர் அந்த குளத்தின் பிரபாவத்தை விவரமாக சொல்ல ஆரம்பித்தார். இது வெகு காலமாக பஞ்சாப்ஸரஸ் என்ற பெயருடன் இருந்து வருகிறது. மாண்ட கர்ணி என்ற முனிவரால் நிர்மாணிக்கப் பட்டது. மாண்ட கர்ணி என்ற மகா முனி, வெகுகாலம் கடுமையான தவம் செய்தார். பத்தாயிரம் வருஷம்  காற்றையே ஆகாரமாகக் கொண்டு நீரில் மூழ்கியவாறு தவம் செய்தார். இதனால் அக்னியும் மற்ற தேவர்களும் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். வாட்டத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். இந்த முனிவர் நம்மில் ஒருவராக வர எண்ணுகிறார். அதனால் நம்மில் ஒருவர் பாதிக்கப்படுவோம். மூவுலகிலும் இருந்த தேவ்ர்கள், தங்கள் பதவி பறி போகுமோ என்ற பயத்தினால் பீடிக்கப் பட்டவர்களாக இவருடைய தவத்தைக் கலைக்க இடையூறு செய்வது என்று தீர்மானித்து, எல்லோருமாக ஒரு திட்டம் வகுத்தனர். மின்னலைப் போன்ற அழகிய தோற்றம் உடைய ஐந்து அப்ஸர ஸ்த்ரீகளுடன் தன் தவத்தின் உச்ச நிலையில் இருந்த முனிவர் இருக்கும் இடம் வந்தனர். தேவர்கள் தங்கள் காரிய சித்திக்காக முனிவரை மதனனின் வசத்தில் விழச் செய்தனர். இந்த ஐந்து அப்ஸர ஸ்த்ரீகளும் முனிவரின் பத்னிகளாக ஆனார்கள். இந்த குளத்தின் அடியில் அவர்களுக்காக வீட்டைக் கட்டினார்.  இங்கு அந்த ஐந்து அப்ஸர ஸ்த்ரீகளும் சுகமாக வசித்தபடி, யௌவனத்தைப் பெற்ற முனிவருடன் சந்தோஷமாக இருந்து அவரையும் மகிழ்வித்தனர். இவ்வாறு விளையாடும் அவர்களின் பாட்டு சத்தம் தான் கேட்கிறது. அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்களின் குலுங்கும் சத்தமும் ஊடே கேட்பது ஆச்சர்யம் என்று முனிவர் சொல்ல, ராகவனும் அவ்வாறே ஆச்சர்யம்  தான் என்று ஆமோதித்து, அதோடு அந்த விஷயத்தை விட்டு விட்டு, சற்று தொலைவில் நோக்கினார். ஒரு ஆசிரமம் தென்பட்டது. குசம் என்ற தர்ப்பை புல் போட்டு வேயப் பட்டு, ப்ரும்ம தேஜஸுடன் கூடிய ஆசிரம மண்டலம் (ப்ராம்மணர்கள் வசிக்கத் தகுந்த ஏற்பாடுகளுடன் கூடிய) தெரியவும், சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் உள்ளே நுழைந்தனர். அங்குள்ள முனிவர்கள் எல்லோரும் உற்சாகமாக வரவேற்று உபசரிக்க பெரும் புகழ் பெற்ற மகானான ராமன் அங்கு வசித்தார். மகரிஷிகள் இருப்பிடத்தில் வரிசைக் கிரமமாக ஒவ்வொருவர்  இருப்பிடத்திற்கும் சென்று அவர்கள் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு தங்கினார்கள்.  ஏற்கனவே தன் முயற்சியாலும், பயிற்சியாலும் பல நல்ல அஸ்திரங்களை அறிந்திருந்தவர் தான் என்றாலும், அந்த தபஸ்விகளிடம் வசிக்கும்பொழுது மேலும் பலவற்றை தெரிந்து கொண்டார்.  சில இடங்களில் பத்து நாட்கள், சில இடங்களில் மாதக் கணக்கில், சில இடங்களில் வருஷம் பூராவுமாக வசித்தனர்.  சில இடங்களில் நான்கு மாதங்கள், சில இடங்களில் ஐந்து, ஆறு மாதங்கள், சில இடங்களில் ஒன்றரை மாதம் என்றும், மூன்று மாதம் ஓரிடத்தில், மற்றொரு இடத்தில் எட்டு மாதம் என்றும் சுகமாக வசித்து வந்தனர். இவ்வாறு அந்த முனிவர்களின் ஆசிரமத்தில் வசிக்கும்பொழுது காலமும் அனுகூலமாக சுழல, பத்து வருஷம் பூர்த்தியாயிற்று. சுற்றிச் சுற்றி சீதையுடன் திரும்பவும் சுதீக்ஷ்ணரின் ஆசிரமம் வந்து சேர்ந்தனர். இங்கும் முனி ஜனங்கள் வந்து உபசரிக்க, சிறிது காலம் அங்கேயே இருந்தார்.  இந்த ஆசிரமத்தில் இருந்த பொழுது ஒரு நாள்  முனிவரைப் பார்த்து, பகவன், இந்த அரண்யத்தில் பகவான் அகஸ்தியர் வசிக்கிறாரென்று கேள்விப் பட்டேன். அவர் பெரிய மகான். அறிஞர். தவ வலிமையுடையவர் என்றும் அறிந்தோம். அவர் ஆசிரமம் எங்கு இருக்கிறது? நான், சகோதரன் லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் அவரை வணங்கி ஆசீர்வாதம் பெற விரும்புகிறேன் எப்படி போக வேண்டும் ? அவருக்கு நானே பணிவிடை செய்து அந்த முனிஸ்ரேஷ்டருடன் சிறிது காலம் இருக்க வேண்டும் என்ற ஆவல் என் மனதில் மேலோங்கி நிற்கிறது என்று சொல்ல,  சுதீக்ஷ்ணர் பதில் சொன்னார். தசரத குமாரன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, மகிழ்ச்சியுடன் சுதீக்ஷ்ணர்,  நானே இதைப் பற்றி உங்களிடம் சொல்ல இருந்தேன். அகஸ்தியர் ஆசிரமத்திற்கு லக்ஷ்மணனுடன் போய் தரிசித்து விட்டு வாருங்கள் என்று அனுப்ப இருந்தேன். சீதையுடனும் அந்த ஆசிரமத்திற்கு போய் வாருங்கள். நீங்களே சொன்னது நல்லதாயிற்று. அகஸ்தியர் இருப்பிடத்தை வெளிவாகச் சொல்லுகிறேன். இந்த ஆசிரமத்திலிருந்து ஒரு யோஜனை தூரம், அதன் பின் நான்கு யோஜனை தூரம் தென் திசையில் சென்றால், சகோதரன் அகஸ்தியருடைய ஆசிரமம் வந்து சேரும். சமவெளியான பிரதேசத்தில் உள்ள வனம். பிப்பல மரம் நிறைந்தது.  பலவிதமான புஷ்பங்கள் உடைய மரங்களும், பக்ஷிகள் இடை விடாமல் சத்தம் போடும் இனிமையான இடம். சுத்தமான பிரஸன்னமான ஜலமும், பாவனமான நீர் நிலைகளும், தாமரைத் தடாகங்களும் நிறைந்தது. ஹம்ஸங்களும், காரண்டவ பக்ஷிகளும், சக்ர வாகங்களும் அழகூட்டும். அங்கு ஒரு நாள் இருந்து விட்டு மறு நாள் காலை கிளம்புங்கள். தென் திசையில் மேலும் சென்றால் அடர்ந்த காட்டின் ஒரு புறமாக யோஜனை தூரம் சென்றால், அகஸ்திய ஆசிரமம் வரும். ரம்யமான காடு. நிறைய மரங்களுடன் அடர்ந்து இருக்கும்.  அகஸ்தியரை தரிசிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால் இன்றே புறப்படுங்கள். இவ்வாறு முனிவர் சொல்லவும், சகோதரனுடன் அவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு  சீதையுடன் புறப்பட்டார். பெரும் மலைகளையும், அழகிய காடுகளையும் பார்த்துக் கொண்டே நடந்தனர். வழியில் தென்பட்ட குளங்களையும், நதிகளையும் கடந்து, சுதீக்ஷ்ணர் சொன்னபடியே வழியை மனதில் கொண்டு நிதானமாகச் சென்றனர்.  உற்சாகமாக இருந்த  ராமன் லக்ஷ்மணனிடம் சொன்னார். லக்ஷ்மணா,  இது தான் அந்த மகா முனிவருடைய ஆசிரமமாக இருக்க வேண்டும்.  சுதீக்ஷ்ணருடைய சகோதரன், புண்ய கர்மாக்களை செய்து வருபவர் என்று தெரிகிறது.  வழியில் ஆயிரக் கணக்கான மரங்களைப் பார்த்தோமே, அவையனைத்தும் கனிகளின் பாரத்தால் வளைந்து தொங்கினவே, கவனித்தாயா? முதிர்ந்த திப்பிலி பழங்களின் வாசனை இந்த வனத்தில் எழுகிறது. அதைக் காற்று அடித்துச் சென்று, திடீரென்று கசப்பு மேலிடும் வாசனை மூக்கைத் துளைக்கிறது. ஆங்காங்கு விறகு கட்டைகள் சேமித்து வைக்கப் பட்டிருக்கின்றன. தர்ப்பைப் புல் வெட்டப் பட்டு வைடூரியம் போல பிரகாசிக்கிறது. இதோ வனத்தின் நடுவில் உள்ள கருமேகம் போல ஆஸ்ரம நெருப்பின் புகை மலை சிகரம் போலத் தெரிகிறது. ஆசிரம வாசிகள் வீடுகளில் அடுப்பு எரியும் புகை தெரிகிறது. பல தீர்த்தங்களில் ஸ்னானம் செய்து விட்டு பிராம்மணர்கள் தாங்களே பறித்து  வந்த புஷ்பங்களைக் கொண்டு பூஜைகள் செய்கின்றனர். சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தில் இருந்த பொழுது நாம் கேள்விப் பட்டோமே, அவருடைய சகோதரன் ஆசிரமம் எப்படி இருக்கும் என்று அவர் விவரித்தாரே, அதே போல இருப்பதால் இது தான் நாம் தேடி வந்த அகஸ்தியரின் ஆசிரமமாக இருக்க வேண்டும். மரணத்தையும் இழுத்து பிடித்துக் கொண்டு உலக நன்மைக்காக இவர் செய்த ஒரு காரியம் நாலா திக்குகளிலும் உள்ளவர்களும் இவரை சரணடையச் செய்து விட்டது. 

 

ஒரு சமயம் வாதாபி, இல்வலன் என்று இருவர் இங்கு வசித்து வந்தனர்.  சகோதரர்கள். இருவரும் பிராம்மணர்களைக் கொன்று குவிக்கும் க்ரூரமான புத்தியுடையவர்கள். நல்ல பலம் பொருந்திய அசுரர்கள். இல்வலன் தன்னை ஒரு பிராம்மணன் போல அலங்கரித்துக் கொண்டு, சம்ஸ்க்ருத பாஷையில் பேசிக் கொண்டு, தங்கள் வீட்டில் ஸ்ரார்த4ம் என்றும் அதனால் சாப்பிட வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டும், பிராம்மணர்களை அழைத்து வருவான். தன் தம்பியையே மேஷமாக்கி,  நன்றாக சமைத்து சிரார்த்34 விதிப் படி பரிமாறுவான். கொடும் புத்தியுடையவன்.  அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், பெருங் குரலில், வாதாபி வா என்று அழைப்பான். மேஷம் எனும் ஆட்டு உருவத்தில் இருந்த வாதாபி, ஆடு போலவே கத்திக் கொண்டு அந்த பிராம்மணர்களின் சரீரங்களை பிளந்து  கொண்டு வெளியே வருவான். இவ்வாறு விரும்பிய வடிவம் எடுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்த அந்த சகோதரர்கள், பல ஆயிரம் பிராம்மணர்களை அழித்தனர். இதே விதமாக அகஸ்தியரை ஒரு முறை சாப்பிட அழைத்தனர். ஸ்ரார்த4த்தில் நன்றாக உணவை அனுபவித்து சாப்பிட்டு விட்டார்.  ஸ்ரார்தம் முடிந்தவுடன், கைகளில் நீர் விட்டு, சகோதரனை வெளியில் வா என்று இல்வலன் அழைத்தான். அவன் நோக்கத்தை அறிந்து கொண்ட அகஸ்தியர் பலமாக சிரித்து, எப்படி வெளியே வருவான், அவன் தான் ஜீரணமாகி விட்டானே என்றார்.  உன் சகோதரன், ஆடு ரூபத்தில் சமைக்கப் பட்டு என்னால் சாப்பிடப் பட்டவன் யம லோகத்தை அடைந்து விட்டானே என்று சொல்லவும்,  அந்த அரக்கன் அகஸ்தியரை அடித்து துன்புறுத்த ஆரம்பித்தான். தன் சகோதரன் இறந்த செய்தியை அவனால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. அக்னிக்கு சமமான தவ வலிமை உடைய அகஸ்தியர் அவனை தன் கண்களாலேயே சுட்டெரித்தார், அந்த முனிவரின் ஆசிரமம் இது. சுற்றிலும் குளங்கள், மரங்கள் அடர்ந்த காடுகள் என்று அழகாக அமைந்துள்ளது. பிராம்மணர்களிடம் கொண்ட பற்றினால் அவர் ஒருமுறை இப்படி செய்ய வேண்டியதாயிற்று.  இப்படி பேசிக் கொண்டே சௌமித்திரியுடன் நடந்து சென்று கொண்டிருக்கையிலேயே சூரியன் மலை வாயில் விழுந்தான். ஸந்த்யா காலம் வந்தது. மாலை நேர ஜப தபங்களை சகோதரன் கூட செய்து விட்டு ஆசிரமத்தை சென்றடைந்தனர். அகஸ்தியரின் சகோதரனான ஒரு ரிஷியைக் கண்டு வணங்கி நின்றனர். அவரும் ராமரை அடையாளம் கண்டு கொண்டு நன்கு உபசரித்தார்.  அன்று இரவு கனி, காய், கிழங்கு வகைகளை ஆகாரமாகக் கொண்டு அங்கேயே வசித்தனர்.  அன்று இரவு நகர்ந்து விடிந்தவுடன், அகஸ்திய சகோதரனான அந்த ரிஷியிடம்  விடை பெற்றுக் கொண்டனர். ப4கவன், வணங்குகிறோம். இரவு நிம்மதியாக தூங்கினோம். உங்களிடம் விடை பெற்றுக் கொள்கிறோம். உங்கள் தமையனாரும் குருவுமான அகஸ்தியரைக் காணச் செல்கிறோம் என அவரும் சரி போய் வாருங்கள் என்று  விடை கொடுத்து அனுப்பினார். ரகுநந்தனனும், அவர் சொன்ன வழியை பின்பற்றிச் சென்று வழியில் கானகத்தையும் கண்டு ரசித்தபடி சென்றனர்.  நீவாரம், பனஸம் (பலா) தாலான் (தேக்கு) ஸ்தினிசான், வஞ்சுலான், தவான், சிரவில்வம், மதூகான், பில்வலானி, தந்துகானி, என்ற மரங்கள், சில பூ மரங்கள், சில மலர்க் கொடிகள் சூழப் பெற்றவை என்று நூற்றுக் கணக்கான மரங்களைக் கண்டனர். யானையின் கைகளால் ஒடிக்கப் பட்டவை, வானரங்கள் வாழ்பவை, மதம் பிடித்த ஆந்தைக் கூட்டங்கள், நிறைந்தவை, அந்த மரங்களில் வசித்த பல நூறு பறவைகள் சேர்ந்து ஒருங்கே கூக்குரலிட்டன. அப்பொழுது அருகில் இருந்த லக்ஷ்மணனைப் பார்த்து, ராஜீவ லோசனன் என்று புகழ் பெற்ற அகன்ற கண்களையுடைய ராமர், பின் தங்கி தொடர்ந்து வந்த சகோதரனைப் பார்த்துச் சொன்னார். லக்ஷ்மணா, ஈரமான இலைகளுடன் கூடிய இந்த செடி கொடிகள், சாந்தமான மிருகங்களும், பக்ஷிகளும் வளைய வருவது, இவை ஆத்ம ஞானியான ரிஷியின் ஆசிரமம் வெகு தூரத்திலில்லை என்பதைத் தெரிவிக்கின்றன. தன் செயலால் அகஸ்தியர் என்ற பெயர் பெற்ற மகா முனி அவர். களைத்து வருபவர்களின் களைப்பை போக்கி ஆறுதல் தரும் விதமாக அவரது ஆசிரமம் தென் படுகிறது.  யாக சாலையின் அக்னியில் நெய் வார்த்து ஹோமம் செய்ததால் உண்டாகும் புகை ஆசிரமத்தை சூழ்ந்து தெரிகிறது. வல்கலை எனும் மரவுரி ஆடைகள் உலர்த்தப் பட்டிருப்பது மாலையாக தெரிகிறது. மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தாலும் அமைதியாக இருக்கின்றன. பலவிதமான பக்ஷிகளின் இரைச்சல் தான் இனிய நாதமாக கேட்கிறது. உலகுக்கெல்லாம்  நன்மையை செய்ய விரும்பி, ம்ருத்யுவையே கட்டி நிறுத்தி வைத்து தக்ஷிண திசைக்கு சரணம் அளித்தவர். புண்ய கர்மாக்கள் செய்து பாவனமான அகஸ்தியரின் ஆசிரமம் இது. எவருடைய பிரபாவத்தால் ராக்ஷஸர்கள் இந்த தென் திசையை பயந்தபடி பார்க்கிறார்களோ, உள்ளே நுழைய தயங்கி, வீண் முயற்சி என்று பின் வாங்கி விடுவார்களோ, அந்த அகஸ்தியர் இந்த திசையை தனதாக்கிக் கொண்டு விட்டார்.   அன்று முதல் இங்குள்ள மாமிச பக்ஷிகளான மிருகங்கள் கூட (வைரம்) விரோதம் இன்றி மிகவும் சாந்தமாகி விட்டன. மகானான இவர் இந்த திசைக்கு வந்த பின் இந்த த3க்ஷிண திசையே பிரத3க்ஷிணா ஆகி விட்டது. (பிரதக்ஷிணா-நல்லவர்கள் நாடி வரும் இடம்.) மூன்று உலகிலும் பெயர் பெற்று விளங்குகிறது.  அன்று முதல் கொடுங்காரியம் செய்யும் க்ரூரர்கள் இங்கு கால் வைப்பதே அரிதாகி விட்டது. சூரியனின் கதியை தடுக்கும் எண்ணத்துடன் வளர்ந்து கொண்டே வந்த விந்த்ய மலை, இவருடைய கட்டளைக்குப் பணிந்து வளர்ந்து கொண்டே போகும் தன் எண்ணத்தை கை விட்டது. தீர்காயுள் உடைய அகஸ்திய பெருமானுடைய, தன் செயல்களால் உலகில் புகழை நிலை நாட்டிக் கொண்ட அகஸ்தியருடைய ஆசிரமம் இது. கல்வியிற் சிறந்த வினயம் உடைய மகான்கள் தினம் வந்து சேவித்துச் செல்லும் இடம். நல்லவர்களுடைய ஹிதத்தில் எப்பொழுதும் நாட்டமுடையவர். அதனால் உலகத்தினர் தினம் இவரை அண்டி தங்கள் குறை தீரப் பெறுகின்றனர்.  தன்னிடம் வந்தவர்களுக்கு பல நன்மைகளை செய்பவர். அந்த மகா முனிவரை நான் வணங்கி பூஜை (மரியாதை) செய்யப் போகிறேன். மீதி வன வாசத்தை நான் இந்த இடத்திலேயே கழிக்கப் போகிறேன். பிரபோ4ஸ்ரீ (பிரபோ4 என்று லக்ஷ்மணனை விளித்துச் சொன்னதாகவும், பிரபோ4: என்று அகஸ்தியரை குறித்துச் சொன்னதாகவும் பாட பேதம். கோவிந்தராஜருடைய விளக்கம்ஈ சுஸ்ரூஷை செய்வதில் நிபுணனான, சகோதர வாத்ஸல்யம் மிகுந்த லக்ஷ்மணனை ப்ரபோ4 என்று  ராமன் அழைப்பது பக்த பராதீ4னனான ராமப4த்ரனின் சாமர்த்யமான பேச்சு எனலாம். இதுவும் சரியே.  இதே போல மற்றொரு இடத்தில் ராமர் வியந்து சொல்லும் பொழுது -ப்ரீதோஸ்மி தே மஹத்கர்ம த்வயா க்ருதமிதம் ப்ரபோ4 – உன்னுடைய இந்த மிக அரிய செயலால் மிகவும் சந்தோஷம் அடைந்தேன் என்று அதிசயித்துச் சொல்லும் பொழுது ப்ரபோ4 என்று வார்த்தை பிரயோகம். அத்- 28 ஸ்லோகம்)  இங்கு தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், மிகவும் பெருமை வாய்ந்த ரிஷிகள், தன் ஆகாரத்தை கட்டுப் படுத்திக் கொண்டுள்ள அகஸ்தியரை எப்பொழுதும் வந்து உபசரிக்கின்றனர். இங்கு பொய் சொல்பவன் உயிருடன் வாழவே முடியாது. க்ரூரனாக இருந்தாலும் கெட்ட குணங்கள் உடையவனோ, கொலை செய்யும் கொடியவனோ, காமத்தில் மூழ்கியவனோ, இங்கு வாழவே முடியாது. இந்த முனிவரின் ப்ரபாவம் அப்படி.  இங்குள்ள தேவர்களும் யக்ஷர்களும் யானைகளும் பாம்புகளும், பக்ஷிகளும் கூட ஆகார நியமத்தை மேற் கொண்டு தர்மத்தை மதித்து நடப்பவர்களாக இருக்கிறார்கள். இங்கு இருந்து சித்தியடைந்த மகாத்மாக்கள் சூரியனுக்குச் சமமான ஒளியுடைய விமானங்களில், தங்கள் தேகத்தைத் துறந்து புது தேகம் பெற்று, பெறும் தவ வலிமை மிக்க ரிஷிகளாக ஸ்வர்கம் சென்றுள்ளனர்.  யக்ஷ தன்மையோ, அமரத் தன்மையோ பலவிதமான ராஜ்யங்களோ, இங்குள்ள தேவதைகள், இங்கு வந்து வணங்கும் ஜீவர்களுக்குத் தருகின்றனர். சௌமித்ரே, ஆசிரம வாசலை அடைந்து விட்டோம். நீ முன்னால் பிரவேசி. நான் சீதையுடன் வந்துள்ளதைச் சொல்லு.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் அகஸ்தியாஸ்ரமோ என்ற பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 12 (208) அகஸ்திய தரிசனம்

 

ஆசிரமத்திற்குள் நுழைந்த லக்ஷ்மணன், அகஸ்திய சிஷ்யனைப் பார்த்துச் சொன்னான்.  ராகவனுடைய இளைய சகோதரன் நான். ராஜா தசரதன் என்பவர் எங்கள் தந்தை. அவருடைய பலசாலியான மகன் ராமன், தன் மனைவி சீதையுடன் முனிவரை தரிசிக்க வந்துள்ளான். என் பெயர் லக்ஷ்மணன். அவன் தம்பி, அவனுக்கு அனுகூலமானவன், பக்தன், அவனுக்கு ஹிதமானவன். ஒருவேளை நீங்கள் எங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். எங்கள் தந்தையின் கட்டளைப் படி நாங்கள் மூவரும் இந்த அடர்ந்த கானகத்துள் வந்து சேர்ந்திருக்கிறோம். நாங்கள் மூவருமாக பகவான் அகஸ்தியரை தரிசிக்க விரும்புகிறோம். அவரிடம் நாங்கள் வந்திருப்பதை தெரிவியுங்கள்.  லக்ஷ்மணனுடைய இந்த வார்த்தையைக் கேட்ட அந்த தபஸ்வி, இதோ என்று சொல்லி, அக்னி ஹோத்ரம் செய்து கொண்டிருந்த முனிவரை அணுகி, விஷயம் சொல்ல விரைந்தான். தவ வலிமையால் பெற்ற தேஜஸுடன், அருகில் நெருங்கவே தயங்கச் செய்யும் மதிப்பு மிக்க அந்த முனி ஸ்ரேஷ்டரை, அவர் இருக்கும் இடம் சென்று கை கூப்பி அஞ்சலி செய்து ராமன் வருகையைத் தெரிவித்தான். அருகில் அமர்த்திக் கொண்டு வினவிய அகஸ்திய முனிவரிடம், லக்ஷ்மணன் சொன்னபடியே வரிக்கு வரி சொன்னான். இவர்கள் தசரத குமாரர்கள். ராமனும், லக்ஷ்மணனும். ராமன் தன் மனைவி சீதையுடன், மூவருமாக  வனம் வந்துள்ளனர்.  பராக்ரமம் உடைய இந்த இரு ராஜ குமாரர்களும் தங்களை தரிசிக்கும் ஆவலுடன் வந்துள்ளனர். இதற்கு மேல் என்ன செய்வது என்பதை கட்டளையிடுங்கள  என்று சிஷ்யன் சொல்லி நிறுத்தினான். ராமன் வந்திருக்கிறான், வாயிலில் நிற்கிறான், வைதேஹியும் உடன் இருக்கிறாள் என்று அறிந்து, முனிவர் அதிர்ஷ்ட வசமாக வெகு காலத்திற்குப் பிறகு இன்று என்னைக் காண வந்துள்ளான். இவர்கள் வரவேண்டுமே என்று நான் மனதில் ஆசைப் பட்டேன். போ, ராமனை, மனைவியுடனும், லக்ஷ்மணனுடனும் எல்லா மரியாதைகளையும் குறைவின்றி செய்து என் அருகில் அழைத்து வா. இது வரை ஏன் அழைத்து வரவில்லை என்று முனிவர் அனுமதித்து கட்டளையிடவும், வணங்கி எழுந்த சிஷ்யன், இதோ என்று சொல்லிச் சென்றான்.  தர்மம் அறிந்தவரும், மகானுமான அகஸ்திய முனிவரின் கட்டளையை சிரமேற் கொண்டு விரைந்தான். பரபரப்புடன் வெளியே வந்து அந்த சிஷ்யன் லக்ஷ்மணனிடம் சொன்னான். ராமர் எங்கே? முனிவரை தரிசிக்க வரட்டும். சீக்கிரம் வாருங்கள். லக்ஷ்மணன் கூடவே ஆசிரம வாயில் வரை சென்ற சிஷ்யன், காகுத்ஸனான ராமனையும், ஜனகர் மகளான சீதையையும் தரிசித்தான். அந்த சிஷ்யன் அகஸ்தியர் சொன்ன செய்திகளை தெரிவித்து, மரியாதையுடன், தகுந்த உபசாரங்கள் செய்து, ஆசிரமத்துள் சீதையுடன் கூட ராம லக்ஷ்மணர்களை அழைத்துச் சென்றான்.  ஏராளமான மான்கள் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த ஆசிரமத்தைக் கண்டு, உள்ளே, ப்3ரும்மஸ்தலம், அக்னி ஸ்தலம், விஷ்ணுவின் ஸ்தலம், மகேந்திர ஸ்தலம், வைவஸ்வதனுடைய ஸ்தலம் என்றும், சோமஸ்தலம், பக4ஸ்தலம், குபே3ரஸ்தலம் என்பதையும், தா4து, விதா4து ஸ்தலம், வாயுவின் ஸ்தலம், அனந்தன் எனப்படும் நாகராஜனுடைய ஸ்தலம், அதே போல காயத்ரியின் வசுக்களின் ஸ்தானம், பாச ஹஸ்தனான வருணனின் ஸ்தானம், கார்த்திகேயனுடைய ஸ்தானம், தர்மஸ்தானம் என்பதையும் கண்டனர். சிஷ்யர்கள் சூழ, முனிவரும் எதிர் கொண்டழைக்க வந்து விட்டார். தன் தேஜஸால் பிரகாசித்த முனிவரை ராமர் கண்டு கொண்டார். லக்ஷ்மணனைப் பார்த்து லக்ஷ்மணாஸ்ரீ பார். அதோ மகா முனிவர் அகஸ்தியர் வருகிறார். தவ வலிமையால் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக தெரிவதைக் கொண்டு இவர் தான் அகஸ்தியர் என்று ஊகிக்கிறேன். இவ்வாறு சொல்லிக் கொண்டே சூரிய கிரணங்களைப் போல பிரகாசமான அகஸ்திய முனிவரை நெருங்கி அவர் பாதங்களை கைகளால் பிடித்தபடி, விழுந்து வணங்கி, அபி4வாதனம் சொல்லி, கை கூப்பியவாறு  நின்றார். சீதையும் லக்ஷ்மணனும் அதே போல வணங்கி நின்றனர். ராமரை கைகளைப் பற்றி வரவேற்று, ஜலம் கொடுத்து, ஆசனம் அளித்து உபசரித்தபின், குசலப் ப்ரச்னங்கள் விசாரித்து, உட்காருங்கள் என்று ஆசனங்களில் அமரச் செய்தார். அக்னி ஹோத்ரம் செய்து முடித்து, அதிதிகளுக்கு அர்க்யம் அளித்து, அதிதி பூஜை செய்து, வானப்ரஸ்த தர்மத்திற்கு ஏற்றபடி அவர்களுக்கு போஜனம் அளித்தார். அவர் முதலில் அமர்ந்தபின்,. ராமர் அமர்ந்தார். தர்மம் அறிந்தவன், கூப்பிய கைகளுடன் இருப்பதைப் பார்த்து, காகுத்ஸா, அக்னி ஹோத்ரம் செய்து, அர்க்யம் அளித்து தான் அதிதி பூஜையை ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிடில் தபஸ்வி, சாக்ஷியே எதிரியானது போல, பர லோகத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். எல்லா உலகத்திலும் மகாரதியான அரசன் தர்மத்தை நடத்திச் செல்பவன்.  பூஜிக்கப் பட வேண்டியவன். அதிலும் நீ பிரியமான அதிதி. கௌரவிக்கப் பட வேண்டியவன், தானே வந்து சேர்ந்திருக்கிறாய் என்று சொல்லி புஷ்பங்களையும், கனி காய் கிழங்குகளையும், ராகவனுக்குக் கொடுத்தார். தன் மனம் திருப்தியடையும் வரை இவ்வாறு உபசாரம் செய்த பின், இதோ பார், தெய்வீகமான பெரிய வில். தங்கம், வைரம் முதலிய ரத்னங்களால் அலங்கரிக்கப் பட்டது. வைஷ்ணவ வில் இது. புருஷ வ்யாக்4ரா, விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப் பட்டது. அமோகமான சூரியனுக்கு இணையான ப்ரும்ம தத்தம் (ப்ரும்மாவினால் தரப் பட்டது) அம்பு இதோ. இதுவும் உத்தமமானதே. எடுக்க எடுக்க குறையாத அம்புகளையுடைய இந்த தூணி, இதை எனக்கு மகேந்திரன் கொடுத்தான்.  இதிலுள்ள அம்புகள் நெருப்பு போல ஜ்வலிக்கும். சிறந்த வெள்ளியினால் உறையிட்ட இந்த கத்தியைப் பார். பொன்னால் அலங்கரிக்கப் பட்டது. இந்த வில்லினால் யுத்தத்தில் ராக்ஷஸர்களை வதைத்து, அக்னி போல ஜ்வலிக்கும் லக்ஷ்மியை அடைவாய். (ஆஜஹார-கவர்ந்து கொள்.)  முன்பு விஷ்ணு, தேவர்கள் செல்வமான லக்ஷ்மியை அடைந்தது போல. அதே வில், அதே தூணிகள் இரண்டும், அம்புகள். வாள்கள் இவையும் இரட்டையாக, இவைகளை மானத, (சம்மானம் செய்பவன்) உன் வெற்றிக்காக (திரும்ப) பெற்றுக் கொள். வஜ்ர தரனான இந்திரன் வஜ்ரத்தை திரும்ப பெற்றது போல பெற்றுக் கொள்.  இவ்வாறு சொல்லி, சிறந்த ஆயுதங்களை அந்த மகான் ராமனுக்கு கொடுத்து விட்டு, மேலும் சொல்லுவார்.       

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் அகஸ்திய தரிசனம் என்ற  பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 13 (209) பஞ்சவடீ கமனம் (பஞ்சவடிக்குச் செல்லுதல்)

 

ராமா, மிகவும் மகிழ்ச்சி. லக்ஷ்மணா, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் இருவரும். சீதையையும் அழைத்துக் கொண்டு என்னை வணங்க வந்தது பெரும் மகிழ்ச்சி.  நடந்து வந்த களைப்பு உங்கள் முகத்தில் தெரிகிறது. ஜனகர் மகள் வாட்டமாக இருக்கிறாள். சுகுமாரி இந்த பெண். மிகவும் சுகமாக வாழ்ந்தவள், வளர்ந்தவள்.  இந்த கஷ்டங்களுக்குப் பழக்கம் இல்லாதவள். ஏதோ விட்ட குறை என்பது போல வனம் வந்திருக்கிறாள். பர்த்தாவிடம் அவளுக்கு உள்ள அன்பினால் தூண்டப் பட்டு இப்படி கூட வந்திருக்கிறாள். இவளை சந்தோஷமாக வைத்துக் கொள்.  உன்னுடன் வனம் வந்ததே அதிகம். மிகவும் கடினமான காரியம். சாதாரண பெண்கள் சுபாவமாக வளமான காலத்தில் செல்வ சுக போகங்களை கணவனுடன் அனுபவித்து விட்டு, கஷ்ட காலத்தில் கை விட்டுச் சென்று விடுவர்.  சமுத்திரத்தின் சல சலப்பும், ஆயுதங்களின் கூர்மையும், கருடன், வாயு இவர்களின் வேகத்தையும் கொண்டவர்கள் பெண்கள். இதோ உன் மனைவி இந்த தோஷங்கள் எதுவும் இல்லாதவள். மிக சிலாக்கியமானவள். இவளைப் பார்த்து அனுசரிக்கலாம்.  தேவி அருந்ததி போல தூய்மையானவள். உங்கள் வரவால்  இந்த தேசமே புகழ் பெற்றது. சௌமித்திரியுடன் நீ வந்தது இந்த தேசத்திற்கே பெரிய ஆபரணம் கிடைத்ததுபோல சிறப்பு பெற்றது.  இந்த இடத்தில் எதிரிகளை அழிக்கக் கூடிய பலசாலியான நீ வைதேஹியுடன் வசிப்பாய்.  இவ்வாறு முனிவர் வாழ்த்தி அனுப்பவும், ராமரும் அஞ்சலியுடன் மகானான அந்த முனிவரைப் பார்த்து சொல்லலானார். முனிபுங்கவரே, உங்கள் தேஜஸ் நெருப்பைவிட மேலானது. உங்கள் அனுக்ரஹம் கிடைக்க நான் புண்யம் செய்தவன் ஆவேன்.  வரங்கள் தரும் முனி புங்கவரே, உங்கள் ஆசிர்வாதம் கிடைக்கப் பெற்ற நாங்கள், நான், சௌமித்ரி, சீதை மூவரும் இங்கேயே வசிக்கிறோம். ஆயினும், குறிப்பாக ஒரு இடம் சொல்லுங்கள். தண்ணீர் வசதியுடன் அடர்ந்த காட்டுப் பிரதேசமாக, எந்த இடத்தில் நான் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டால் சுகமாக இருக்க முடியுமோ, அப்படி ஒரு இடத்தைக் காட்டுங்கள். ராமனின் வார்த்தையைக் கேட்டு ஒரு நிமிஷம் யோசித்து விட்டு தீரனான அந்த முனிவர் சொன்னார். குழந்தாய், இங்கிருந்து இரண்டு  யோஜனை தூரத்தில், கனிவகைகளும், காய் கிழங்குகளும்  நிறைந்த  வனம், அதைச் சார்ந்த நீர் நிலைகளும் உள்ள ஒரு இடம், நிறைய மிருகங்களும் நிறைந்தது, பஞ்சவடீ என்று பெயர் பெற்றது.  அந்த இடத்தில் சௌமித்திரியுடன் ஆசிரமம் கட்டிக் கொள். தந்தையின் கட்டளையை அவர் சொன்னபடியே நிறைவேற்றுபவனாக அந்த இடத்தில் சந்தோஷமாக இருப்பாயாக. தசரத ராஜா உனக்கு கொடுத்திருந்த பதினான்கு வருஷ கெடு பெரும்பாலும் ஆகி விட்டது.  இன்னும் கொஞ்ச காலம் தான் மீதியிருக்கிறது.  உன் பிரதிக்ஞையை நிறைவேற்றி, வன வாசம் முடிந்து ராஜ்யத்தை அடைவாய். உன் தந்தை பாக்கியம் செய்தவர். ரகுநந்தனா, யயாதியைப் போல் மகனால் சிறப்பு பெற்றார். மூத்தவனான உன்னால் அவர் கடை தேறினார்.  இந்த விருத்தாந்தங்களையும் நான் அறிவேன். மாசற்றவனே, உன் தந்தை என் நண்பர். என் தவ வலிமையாலும் சில விஷயங்களை அறிந்து கொண்டேன். உன் மனதில் ஓடும் எண்ணமும் என் தவ வலிமையால் நான் உணர்ந்து  கொண்டு விட்டேன். இங்கு என்னுடன் இருக்கலாம் என்று சொன்னவன், ஏன் பஞ்சவடிக்குப் போகச் சொல்கிறான் என்று யோசிக்கிறாய் அல்லவா? அது மிக அழகான இடம். அங்கு மைதிலி மகிழ்ச்சியோடு இருப்பாள். இங்கிருந்து அதிக தூரமும் இல்லை. மிகவும் ஸ்லாகிக்கத் தகுந்த இடம். (பாராட்டுக்குரிய) அருகில் கோதாவரி நதி. மைதிலி அங்கு மகிழ்ச்சியோடு இருப்பாள். கனி, காய் வகைகள் நிறைய கிடைக்கும். பறவைகள் கூடும் இடம். இதெல்லாம் மைதிலி ரசிப்பாள். நீ மனைவியுடன் இருப்பவன். அவளை காப்பாற்றும் சக்தியும் உடையவன். ரசிக்கும்படியான பல இடங்களும். புண்ய தீர்த்தங்களும் உள்ள இடம் அது. அதனால் தான் அந்த இடத்தை உனக்கு சிபாரிசு செய்கிறேன். தவிர, இங்கு இருந்து முனிவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சூழ்ந்து கொள்வார்கள். அவர்களுடன் உனக்கு சரியாக இருக்கும். இதோ தெரிகிறது பார். பெரிய காடு. பூக்களை நாடி வரும் வண்டுகள் நிறைந்தது. இங்கிருந்து வடக்குத் திசையில் சென்று ஆல மரத்தை சென்றடைவாய். (ந்யக்4ரோத4ம்) அதன் அருகில், மலைக்கும் அருகில் இருக்கும்படியாக இடத்தை தேர்ந்தெடுத்து  ஆசிரமத்தைக் கட்டிக் கொள்.  மலயடிவாரத்தில் நித்யம் பூக்களுடன் பூத்து குலுங்கும் மரங்கள்  நிறைந்த இடம் பஞ்சவடீ என்றே பெயர் பெற்றது. இவ்வாறு அகஸ்தியர் சொல்லவும், சௌமித்திரியுடன் அகஸ்தியரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினர்.  முனிவர் தன் பாதத்தில் விழுந்து வணங்கியவர்களை  ஆசிர்வதித்து அனுப்பினார்.  சீதையுடன் மூவருமாக பஞ்சவடி நோக்கிச் சென்றார்கள். கையில் வில்லுடன், ராஜ குமாரர்கள் இருவரும், தூணி நிறைய அம்புகளுடன், சண்டை என்றால் பயப்படாத வீரர்கள், மகரிஷி சொன்ன வழியில் பஞ்சவடியை நோக்கி ஒன்றாக நடந்தார்கள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் பஞ்சவடீ கமனம் என்ற பதின்மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 14 (210) ஜடாயு சங்கமம் (ஜடாயுவை சந்தித்தல்)

 

பஞ்சவடியை சென்றடைந்த அவர்கள், சுற்றிப்  பார்த்துக் கொண்டு வருகையில் மிகப் பெரிய உருவத்துடன், கழுகரசனைக் கண்டார்கள். நல்ல பராக்ரமம் உடையதாக முதல் பார்வையிலேயே அறிந்து கொண்டனர். அந்த பக்ஷியை, ராம லக்ஷ்மணர்கள் ஏதோ ராக்ஷஸ ஜாதியைச் சேர்ந்தது என்று எண்ணி யார் நீ? என்று வினவினர். ஆல மரத்தில் இருந்த அந்த பெரிய உருவம் கொண்ட பக்ஷி இவர்களைப் பார்த்து அன்புடன் பரிவு மேலிட அரவணைப்பது போன்ற மதுரமான குரலில் பதில் அளித்தது.  குழந்தாய், உன் தந்தையின் நண்பன் நான், என்னைத் தெரியவில்லையா? என்றது.  தந்தையின் நண்பன் என்று தெரிந்ததும், ராகவன், மனம் சமாதானமாகி தகுந்த மரியாதைகள் செய்து வணங்கியபின், அவரைப் பற்றி விசாரித்தான். குலம், பெயர், இவற்றைக் கேட்டான். ராமனுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக அந்த கழுகரசன், தன்னைப் பற்றியும், தன் குலம் இவற்றை விவரமாக சொல்லலானான். மகாபாஹோ, முன் காலத்தில் ப்ரஜாபதிகள் என்று சிலர் இருந்தனர். இவர்களைப் பற்றி முதலிலிருந்து சொல்கிறேன். முதல்வன் கர்த3மன். விக்ரீதன் என்பவன் அடுத்தவன். சேஷன், சம்சரையன் என்று பல புத்திரர்கள் உடைய புகழ் வாய்ந்தவர்கள். இவர்களுக்குப் பிறகு ஸ்தா2ணு, மரீசி, அத்ரி, க்ரது என்ற பலசாலிகள். புலஸ்தியன், ஆங்கி3ரஸ, எனப்படுபவர்கள், ப்ரசேதஸ், புலஹன் என்றும், தக்ஷன், விவஸ்வான், அரிஷ்டனேமி என்றும், ராகவா, ஐந்தாவது வரிசையில் கஸ்யபன், மகா தேஜா என்றும் இருந்தனர். இவர்களில் த3க்ஷன் ப்ரஜாபதி என்று பெயர் பெற்றான்.  ஆறாவதாக பெண்கள்.  கீர்த்தி வாய்ந்த காஸ்யபர், இவர்களில் அழகிய எட்டு பெண்களை தனதாக்கிக் கொண்டார்.  அதி3தி, தி3தி, த3னு, காலிகா , தாம்ரா, க்ரோதவசா, மனு, அனலா என்பவர்கள். இவர்களிடம் காஸ்யபர், மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தி, எனக்கு சமமான புதல்வர்களை உலகெங்கும் புகழும் விதமாக பெறுவீர்கள் என்று அனுக்ரஹித்தார்.  அதி3தி  மனம் இசைந்து அவருடன் வாழ்ந்தாள். தி3தியும் காலிகாவும், மற்றவர்களும் இஷ்டமில்லாமல் அவருடன் வாழ்ந்தனர். அதிதியிடம் முப்பத்து மூன்று தேவதைகள் பிறந்தனர். ஆதி3த்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், அஸ்வினி குமாரர்கள் இவர்கள் அதிதி பெற்ற பிள்ளைகள். தி3தி தை3த்யர்களை பெற்றாள். இவர்களும் நல்ல புகழ் வாய்ந்தவர்கள். காடுகளும், கடலும் சூழ்ந்த பூமி அவர்கள் வசம் இருந்தது. த3னுவின் மகன் அஸ்வக்3fரீவன். நரகன் என்பவனையும், காலகன் என்பவனையும் காலிகா பெற்றாள். க்ரௌஞ்சி, பா4சி, ச்யேனி, சுகி, த்ருத ராஷ்டிரி  என்று  ஐந்து பெண்களை தாம்ரா என்பவள் பெற்றாள்.  இந்த பெண்களும் உலக புகழ் பெற்றனர். த்ருத ராஷ்டிரி என்ற மனைவி, ஹம்ஸங்களையும், கல ஹம்ஸங்களையும், சக்ரவாகங்களையும் பெற்றாள். இவையும் நல்ல முறையில் வளர்ந்தன. சுகீ, நதா என்ற பெண்னை பெற்றாள். நதாவுக்கு வினதா என்று ஒரு மகள். க்ரோதவசா என்பவள் பத்து பெண்களைப் பெற்றாள். ம்ருகீ3, ம்ருக3 மந்தா3, ஹரி, ப4த்ரமதா3, மாதங்கீ3, சார்தூ3லி, ஸ்வேதா, சுரபி4 என்றும், நல்ல லக்ஷணங்களுடன் கூடிய சுரஸா, கத்3ருகா என்ற இருவரையும் பெற்றாள்.  ம்ருகங்கள், பெண் ம்ருகங்களிடம் தங்கள் வம்ச வ்ருத்தியை செய்தன. பிள்ளகளை பெற்றன. ருக்ஷர்கள் ம்ருக3 மந்தா3விடமும், ஸ்ருமர, சமர எனப்படும் வகை ஜீவன்களையும், ஹரி என்பவர் ஹர்யாவிடம் வானரங்களையும், உண்டு பண்னினார்கள்.  ப4த்3ரமதா3 என்பவள் இராவதி என்ற மகளைப் பெற்றாள். அவளிடம் ஐராவதம் என்ற புகழ் வாய்ந்த யானைகள் தோன்றின. மாதங்கர், மாதங்கியிடம் தன் புத்திரர்களைப் பெற்றார். கோ3லாங்கூ4லம், சார்தூ3லி, வ்யாக்4ரம் இவைகளைப் பெற்றார். ஸ்வேதா என்பவள் திக்கஜங்களை புத்திரர்களாக பெற்றாள். சுரபிக்கு இரண்டு பெண்கள். ரோஹிணி என்றும் க3ந்த4ர்வீ என்றும் புகழ் பெற்ற இருவர்.  ரோஹிணீ பசுக்களை ஈன்றாள். க3ந்த4ர்வீ குதிரைகளை மக்களாகப் பெற்றாள். சுரஸா என்பவள் நாகங்களை புத்திரர்களாகப் பெற்றாள். கத்3fரு என்பவள் பாம்புகளுக்கு தாயானாள். புண்யத்தின் பலனாக எல்லா மர வகைகளையும் அனலா பெற்றாள். கத்3ரு என்பவள், பூமியைத் தாங்கும் ஆயிரம் தலையுடைய நாகத்தை ஈன்றாள். வினதாவுக்கு இரண்டு புத்திரர்கள். க3ருடன், அருணன் என்று இருவர். இந்த இருவரில் நான் அருணனுக்கு பிறந்தவன். சம்பாதி என்று எனக்கு மூத்தவன். என் பெயர் ஜடாயு என்று அறிந்து கொள்வாயாக. ஸ்யேனி புத்திரன் நான். நீ விரும்பினால், நீங்கள் இங்கு இருக்கும் பொழுது உங்களுக்கு  உதவியாக இருக்கிறேன். இந்த அடர்ந்த காடு மிகவும் பயங்கரமானது. மிருகங்களும், ராக்ஷஸர்களும் வளைய வரும் இடம்.  நீயும் லக்ஷ்மணனுமாக வெளியே போகும் காலங்களில், குழந்தாய், நான் சீதையை பாதுகாத்து வருவேன்.  ஜடாயுவை யார் என்று அறிந்து கொண்ட ராமர், அவரை வணங்கி மார்புறத் தழுவி மகிழ்ந்தார். என் தந்தையின் நண்பன், தந்தையை நேரில் கண்டது போல இருக்கிறீர்கள் என்று சொல்லி திரும்பத் திரும்ப ஜடாயுவிடம் தன் கதையை சொல்லச் சொல்லி கேட்டார். சீதையை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, மகா பலசாலியான ஜடாயு உடன் வர, லக்ஷ்மணனும் ராமனுமாக பஞ்சவடியை அடைந்தனர்,  எதிரிகளை விட்டில் பூச்சியை அழிப்பது போல அழிக்கும் வல்லமை உடையவர்கள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஜடாயு சங்க3மம் என்ற பதினான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 15 (211) பஞ்சவடீ பர்ணசாலா (பஞ்சவடியில் குடிலை அமைத்தல்)

 

பலவிதமான யானைகளும் மிருகங்களும் நிறைந்திருந்த வனத்தின் நடுவில் பஞ்சவடியை அடைந்தவுடன், ராமர் லக்ஷ்மணனிடம் சொன்னார். லக்ஷ்மணா, முனிவர் சொன்ன இடம் வந்து விட்டோம் என்று நினைக்கிறேன். மரங்கள் பூத்துக் குலுங்க ரம்யமாக இருக்கும் இந்த இடம் தான் பஞ்சவடீ பிரதேசமாக இருக்க வேண்டும். நீ தான் இப்பொழுது கானகத்தை நன்றாக அளந்து வைத்திருக்கும் நிபுணனாக ஆகி விட்டாயே. எல்லா இடங்களிலும் நன்றாக கவனித்துப் பார். எந்த இடத்தில் ஆசிரமம் அமைத்தால் வசதியாக இருக்கும். எந்த இடத்தில் சீதை சந்தோஷமாக இருப்பாள். நீயும், நானும் சௌக்யமாக இருக்க முடியும் என்று தேடிப் பார். அருகில் ஜல வசதி இருக்க வேண்டும். ஏதாவது குளமோ, ஆறோ தென்படுகிறதா பார். வனத்தில், அழகான இடமும், நல்ல  தண்ணீர்  இரண்டும் இணைந்து இருந்து விட்டால் மிகவும் நல்லது. அருகில் குசம் எனும் புல் இருக்க வேண்டும்.  சமித்துகள் சேகரிக்க அரச மரங்கள் இருப்பதாக,  குடிநீர் சுத்தமாக கிடைப்பதாக உள்ள இடத்தில் குடிலைக்  கட்டு எனவும்,  சீதையும் உடன் இருக்க, காகுத்ஸனிடம் மரியாதையுடன் பதில் சொன்னான். எகாகுத்ஸஸ்ரீ நான் உன் தாஸன். ஆகவே, நீயே உசிதமான இடத்தை தேர்ந்தெடுத்து இந்த இடத்தில் பர்ணசாலையை கட்டு என்று சொல், செய்கிறேன்எ என்றான். மகாத்மாவான லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்டு ராமனும் சம்மதித்து, பலவிதமாக அவனுடன் விவாதித்து, தகுந்த இடத்தை நிச்சயம் செய்தான்.  ஆசிரமத்தை அழகுற அமைப்பதில் சிறந்தவனான சௌமித்திரியின் கைகளை தன் கைகளில் வைத்துக் கொண்டு ராமர்  சொல்லுவார். இந்த இடம் சமமாக இருக்கிறது, சௌமித்ரி, பலவிதமான புஷ்பங்களுடன் மரங்கள் அடர்ந்து இருக்கின்றன.  இந்த இடத்தில் சௌகர்யம்  போல் ஆசிரமத்தைக் கட்டு என்றார். இதோ அருகிலேயே, சூரியனைப் போலவே பிரகாசிக்கும் தாமரை மலர்கள் வாசனை வீசும், தாமரைக் குளம். அதில்  நீரை மறைத்த வண்ணம் பூக்கள் பூத்திருக்கின்றன.  நிபுணரான அகஸ்தியர் வர்ணித்தபடியே, இதோ கோதாவரி மிக அழகாகத் தெரிகிறாள். கரைகளில் அடர்ந்த மரங்கள் மலர்களைச் சொரிகின்றன.  ஹம்ஸங்களும், காரண்டவ பக்ஷிகளும், சக்ரவாகங்களும் அதன் அழகை மிகைப் படுத்திக் காட்டுகின்றன.  வெகு தூரம் என்றும் இல்லை, அருகில் என்றும் இல்லாத இடத்தில் மிருகங்கள் கூட்டம் கூட்டமாகத் தெரிகின்றன. மலையின் நடுவில் குகைகள் நிறைய இருக்கின்றன. இந்த இடங்களில் மயில்கள் கூவி எதிரொலிக்கின்றன. ரம்யமாகத் தெரியும் இந்த மலைச் சாரலில் மரங்கள் சூழ்ந்து பூத்துக் குலுங்குவது கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது.  நிறைய தா4துப் பொருட்கள், சில இடங்களில் வெண்மையாக, சில இடங்களில் தாம்ர வர்ணமாக, ஆங்காங்கு பொன்னிறமாகவும், ஜன்னல்கள் போல தெரிகின்றன.  சால, தால, தமால, கர்ஜூர, பனஸ, ஆம்ர, நீவார, சதினீச, புன்னாக மரங்கள் சோபையை அதிகரிக்க, சூத, அசோக, திலக, சம்பக, கேதக போன்ற புஷ்பங்கள் கொத்து கொத்தாக, செடிகளிலும், கொடிகளிலும், புதர்களிலும், அந்தந்த மரங்களைச் சுற்றி படர்ந்து இருக்கின்றன.  சந்தன மரங்களும், ஸ்யந்தன மரங்களும், வேப்ப மரங்களும். பல, விகுசை என்ற மரங்களும், த4வ, அஸ்வ கர்ண, கதி3ர, சமீ, கிம்சுக, பாடல மரங்களும் காணப் படுகின்றன. இந்த அடர்ந்த வனம் புண்யமானது. பக்ஷிகளும், பறவைகளும், பலவித மிருகங்களும் வசிக்கும் இந்த இடத்தில் இவைகளோடு வசிப்போம் லக்ஷ்மணா. இவ்வாறு ராமர் சொன்னவுடன், எதிரிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த வீரனான லக்ஷ்மணன், வெகு விரைவில் சகோதரனுக்காக ஆசிரமத்தைக் கட்டி முடித்தான். மிக விசாலமான பர்ணசாலை, மண் தரையை சமன் செய்து, நல்ல தூண்களை நட்டு, மூங்கில்களை கொண்டு கூரை வேய்ந்து, சமீ என்ற விருக்ஷத்தின் (அக்3னிக3ர்ப4-நெருப்பை உள்ளடக்கியது),  இலைகளை மேலே போட்டு, த்ருடமான கயிறு கொண்டு கட்டி, குசம், காசம், சரம் என்ற புற்களைக் கொண்டு நன்கு மூடி நிழல் தரும்படி செய்து சமதளமாக்கி, ராகவனுடைய நிவாஸஸ்தானம் பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சிறப்பாக செய்து முடித்தான்.  மகானான லக்ஷ்மணன் கோதாவரி நதிக்குச் சென்று தானும் ஸ்நானம் செய்து விட்டு, தாமரைப் பூக்களைப் பறித்துக் கொண்டு திரும்பி வந்தான். பின் புஷ்ப ப3லி கொடுத்து, சாந்தி கர்மாக்களை முறைப் படி செய்தபின், ராமரை அழைத்து வந்து,  தான் கட்டிய ஆசிரமத்தைக் காட்டினான். அதை சீதையுடன் கண்டு களித்த ராமர், கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த ஆசிரமத்தை வியந்து, பர்ணசாலையை சுற்றி பார்த்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் தன் சகோதரனை அணைத்துக் கொண்டு, மிகவும் சினேகத்துடனும், உள்ளார்ந்த அன்புடனும் சொன்னார்.  ப்ரபோ4 (ராமர் லக்ஷ்மணனை ப்ரபோ என்று அழைப்பது இது இரண்டாவது தடவை) நீ செய்த இந்த செயல் மிகவும் அத்புதமானது. உனக்கு நிறைய தர வேண்டும் என்று நினைத்தாலும், என்னால் தற்போதைக்கு இந்த ஆலிங்கனம் தான் தர முடிந்தது. பா4வம் உணர்ந்து, தர்மம் அறிந்து, செய் நன்றி மறவாமல் நீ புத்ரனாக இங்கு இருக்கும் பொழுது நம் தந்தை மறைந்த உணர்வே தோன்றவில்லை. அவர் இடத்தை இட்டு நிரப்ப நீ இருக்கிறாய். லக்ஷ்மி வர்த4னனான லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொல்லி, அந்த தேசத்தில் சுகமாக வசிக்க ஆரம்பித்தான். சில காலம் ஸ்வர்க3த்தின் அமராவதியில் தே3வர்கள் கவலையின்றி இருப்பது போல லக்ஷ்மணனுடனும் சீதையுடனும் வசித்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் பஞ்சவடீ பர்ண சாலா என்ற  பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 16 (212) ஹேமந்த வர்ணனம் (முன் பனிக் கால வர்ணனை)

 

ராக4வன் அந்த இடத்தில் சுகமாக வசித்துக் கொண்டு இருக்கையிலேயே சரத் ருது மறைந்து ஹேமந்த ருது ஆரம்பித்தது. ஹேமந்த ருது (முன் பனிக்காலம்) சாதாரணமாக அனைவருக்கும் பிடித்தமானதே. ஒரு நாள் இரவு இன்னும் முழுதும் பிரியாத விடியற்காலையில் ரகு நந்தனன் கோதாவரியில் ஸ்நானம் செய்யச் சென்றான். சீதையுடன் அண்ணல் முன் செல்ல, கையில் கலசத்துடன், வினயமாக லக்ஷ்மணன் பின் தொடர்ந்து சென்றான்.  நடந்து கொண்டே ராமரிடம் – பிரியமாக பேசும் வீரனே, இந்த பருவம் உனக்கு மிகவும் பிடித்தமானது. ஹேமந்த ருது ஆரம்பித்து விட்டது. இதனால் சுபமான வருஷம் அலங்கரித்தது போல ஆகிறது. உலகமே மூடு பனி சூழ்ந்திருக்க, பூமி தான்யங்கள் நிறைந்து காண்கிறது. ஜலம் அனுபவிக்க சுகமாக, அக்னி மிகவும் வேண்டியவனாகவும் இருக்கும் காலம்.  புது அயன காலத்தில், அதாவது சூரியனின் கதி மாறும் காலத்தில் பித்ரு தேவதைகளை பூஜித்து, கல்மஷம் இல்லாத நல்ல மனிதர்கள், ஜனபதங்களில் உள்ளவர்கள், திருப்தியாக, வீடுகளில் பொருள்களை சேமித்து வைத்து விட்டு, யாத்திரை செல்லக் கிளம்புவர்.  சூரியன் அந்தகனான யமனுடைய திசையான தென் திசையில் தன் ஒளியைப் பரப்பிக் கொண்டு செல்வதால், உத்தரா திசை, வடதிசை ஒளியிழந்து காணப் படுகிறாள். (திலகம் இல்லாத ஸ்த்ரீ போல). இயற்கை பனியை போர்த்திக் கொண்டு நிற்க, சூரியன் வெகு தூரத்தில் கைக்கு எட்டாமல் சஞ்சரிக்கும் போது, தன் பெயர் பொருத்தம் வெளிப்பட ஹிமவான் என்ற மலை (ஹிமம்-பனி) ஹிம வானாகவே தெரிகிறான். உன் சகோதரன் ப4ரதன் ஸ்வர்கத்தையும் ஜயித்து விட்டான். வனத்தில் இருந்த போதிலும், தாபஸ விருத்தியை மேற் கொண்டுள்ள பொழுதும், ராமனையே  பின் பற்றி வருகிறான். இளைய சந்ததியினர் தந்தையை கொள்வதில்லை. தாயை ஒத்து இருப்பர் என்பது உலக வழக்கு. பரதன் அதை மாற்றி விட்டான். ராஜா தசரதன், கணவனாக அமைந்து, பரதன் போல பிள்ளையை பெற்றவள் கைகேயி, எப்படி அவ்வளவு க்ரூரமாக பேசினாள்? இவ்வாறு  ஸ்னேகமாக லக்ஷ்மணன் சொல்லி வரும் பொழுது, தாயாரை குற்றம் சொல்வது போல சொன்ன இந்த வார்த்தையை கூட பொறுக்க மாட்டாதவராக ராமர் சொன்னார்.  மத்யம அம்மாவை நீ இப்படி குறை சொல்லக் கூடாது. லக்ஷ்மணா, அதே இக்ஷ்வாகு  வம்ச நாதனான பரதனைப் பற்றிப் பேசு.  என் மனம் வன வாசத்தில் நிச்சலனமாக இருக்கிறது.  த்ருடமாக இருக்கிறது. இருந்தும் சில சமயங்களில் வருத்தம் மேலிடுகிறது.  பரதனின் ஸ்னேகம், அவனுடைய பிரியமான மதுரமான வாக்யங்களை நினைத்துப் பார்க்கிறேன். மனதை தொடும் அம்ருத மயமான இனிய சொற்களை நினைத்து பார்க்கிறேன். அவனை எப்பொழுது காணப் போகிறோம் என்றும், சத்ருக்4னனும் நீயும் நானும், பரதனுடன் சேர்ந்து இருக்கப் போகிறோம் என்றும் பரிதவிக்கிறேன். இவ்வாறு பேசிக் கொண்டே கோதாவரியை அடைந்தனர். அங்கு காகுத்ஸன், தன் மனைவி சீதையுடனும், சகோதரனுடனும் ஸ்நானம் செய்து முடித்தான். பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும் தர்ப்பணம் செய்து விட்டு தண்ணீர் விட்டு விட்டு, சூரியனை ஸ்தோத்திரம் செய்தனர். தேவதைகள் கூடி இருந்தனர். சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் ஸ்னானம் செய்து முடித்த நிலையில் நின்ற ராமனைப் பார்க்க, அபிஷேகம் ஆன ருத்ர பகவான், உமையுடனும், நந்தியுடனும் (சில பாடங்களில் விஷ்ணுவுடனும்) நிற்பது போல இருந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஹேமந்த வர்ணனம் என்ற பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 17 (213)  சூர்ப்பணகா பா4வாவிஷ்கரணம் (சூர்ப்பணகாவின் மன நிலை)

 

ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, ராம, லக்ஷ்மணர்கள் சீதையுடன் அந்த கோதாவரி கரையிலிருந்து தங்கள் ஆசிரமத்திற்குத் திரும்பினர். ஆசிரமத்தையைடைந்து ராகவன் லக்ஷ்மணனோடு அந்த பருவத்தின் தினசரி கடன்களை முடித்துக் கொண்டு, பர்ண சாலையை அடைந்தனர். மகரிஷிகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் உபசாரம் செய்ததை ஏற்றுக் கொண்டு, லக்ஷ்மணனுடன் பலவிதமான நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அந்த பர்ண சாலையில் சீதையுடன் அமர்ந்திருந்த காட்சி, சித்ரா நக்ஷத்திரத்தோடு சந்திரன் இருப்பது போல இருந்தது.  இவ்வாறு அமர்ந்து கதைகளில் மனதை செலுத்தி சந்தோஷமாக இருந்த பொழுது எதேச்சையாக ஒரு ராக்ஷஸி வந்து சேர்ந்தாள்.  அவள் சூர்ப்பணகா என்ற பத்து தலை ராவணனின் சகோதரி.  இங்கு வந்து தேவ குமாரன் போல விளங்கிய ராமனைக் கண்டாள். சிங்கம் போன்று உயர்ந்த தோள்களும், நீண்ட கைகளும், பத்3ம பத்ரம் போன்ற கண்களும், ஆஜானுபாஹுவாக நெடிதுயர்ந்த சரீரமும், பிரகாசமான முகத்தோடு, மிகவும் கண்ணுக்கு ரம்யமாக விளங்கியவனை, ஜடா மண்டலத்தோடு, யானையை போன்று நடப்பவனை, சுகுமாரனை, நல்ல குணங்களின் இருப்பிடமாக ராஜ குமாரனுக்குரிய அடையாளங்களோடு, ராமனை, இந்தீ3வரம் போல ச்யாமளனை, கந்த3ர்ப்பனுக்கு இணையான அழகனை, இந்திரனோ எனும்படி கம்பீரமாக இருந்த ராமனைப் பார்த்து சூர்ப்பணகா காம வசம் அடைந்தாள். சுமுகனை, துர்முகீ, சிறுத்த இடையுடைய ராமனை, பெரு வயிறு உடையவள், விசாலமான கண்களை உடையவனை, விரூபமான கண்கள் உடையவள், அழகிய  கேசம் உடையவனை, தாம்ர வர்ணத்தில் குத்திட்டு நிற்கும் தலை மயிரை உடையவள், கண்டவுடன் ப்ரீதியை உண்டாக்கும் ராமனின் ரூபத்துக்கு எதிரில் விரூபமான அவள்,  சுஸ்வரமாக பேசும் ராமன் முன், பை4ரவ ஸ்வரா, கடும் குரலுடையவள், தருணம், இளைஞனான ராமனை, தா3ருணா- பயங்கரமான வடிவத்தினள், வயதானவள், தா3க்ஷிண்யமே உருவானவனை, (த3க்ஷிணம்) எப்பொழுதும் நேர்மையானவனை, எப்பொழுதும் தவறான காரியங்களையே செய்பவள், நியாயமான நடத்தை உடையவனை, மிகவும் கெட்ட நடத்தையுடையவள், பிரியமான ராமனை, அப்ரியமான சரீர வாகையுடைய,  ரோமம் மண்டிய உடலையுடைய சூர்ப்பணகா பேசினாள். ஜடையுடன், தபஸ்வி போன்ற வேஷத்தில், மனைவியுடன், கையில் வில்லும் அம்பும் ஏந்தி, ராக்ஷஸர்கள் வசிக்கும் இந்த தேசத்துக்கு எப்படி வந்து சேர்ந்தாய்? இங்கு வந்து என்ன காரியம் சாதிக்கப் போகிறாய்?  உண்மையைச் சொல். இப்படி ராக்ஷஸி சூர்ப்பணகை கேட்ட பொழுதும், பரந்தாமனான ராமன், தன் நேர்மையான குணமே தெரியும்படி, விவரமாக சொல்ல ஆரம்பித்தான். எப்பொழுதுமே உண்மையில்லாததை பேசுவது ராமனுக்கு உகந்தது அல்லவே. விசேஷமாக ஆசிரமத்தில் ஸ்த்ரீ ஜனங்கள் நடுவில் ஏன் பொய் பேசப் போகிறான். விவரமாகச் சொன்னான்.

 

3சரத2ன் என்று ஒரு அரசன் இருந்தான். மூன்று உலகிலும் தன் விக்ரமத்தால் பெயர் பெற்றவன். நான் அவனுடைய மூத்த மகன். ராமன் என்று அழைப்பார்கள். இதோ இவன் என் தம்பி லக்ஷ்மணன். என்னைத் தொடர்ந்து வந்தவன். இவள் என் மனைவி. வைதே3ஹி என்று புகழ் பெற்றவள்.  தாய் தந்தை இருவரும் சேர்ந்து யோசித்து கட்டளையிட்டதால், தர்மத்தை நிலை நிறுத்த இந்த கானனத்தில் வசிக்க வ்ந்தேன். உன்னைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன்.  யார் நீ? யாருடைய மகள்? உன்னைப் பார்த்தால் ராக்ஷஸியாகத் தெரியவில்லை. இங்கு என்ன காரணத்திற்காக வந்திருக்கிறாய்? உண்மையைச் சொல்லு. இதைக் கேட்டு ராக்ஷஸி பதில் சொன்னாள்.  காமனின் வசத்தில் இருந்தவள், தன்னைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொண்டாள். ராமா, சொல்கிறேன் கேள். உண்மைதான் சொல்கிறேன். நான் என் விருப்பப்படி ரூபம் எடுத்துக் கொள்ள வல்லவளான சூர்ப்பணகை.  ராக்ஷஸி. இந்த அரண்யத்தில் தனியாக நடமாடுகிறேன். இது ஒரு பயங்கரமான வனம். என் சகோதரன் ராவணன் , நல்ல பலசாலியான ராக்ஷஸ ராஜா. வீரன். பெயர் பெற்ற விஸ்ரவசின் புத்திரன். நீ கூட கேள்வி பட்டிருக்கலாம். எப்பொழுதும் தூங்கும் குணமுடைய கும்பகர்ணன் இரண்டாமவன். விபீ4ஷணன் தர்மாத்மா. இவனுக்கு ராக்ஷஸர்களுக்கு இயல்பான குணம், நடத்தை கிடையாது. க2ர, தூ3ஷணன் என்று சகோதரர்கள், யுத்தத்தில் பெரும் புகழ் வாய்ந்தவர்கள், அவர்களைக் காண வந்தேன். ராமா, முன் பின் பார்த்திராததால் உன்னைக் கண்டதும் நின்றேன். என் மனதில் உன்னை ப4ர்த்தாவாக வரித்து விட்டேன்.  புருஷோத்தமனான நீ தான் எனக்கு கணவன்.  ராமா, நான் நிறைய ப3லம், பராக்ரமம் உடையவள். இஷ்டப் படி நடமாடுவேன். சீதையுடன் என்ன செய்யப் போகிறாய்? எனக்கு கணவனாகி வெகு காலம் வாழ்வாய்.  இவள் உருவமும், ரூபமும் உனக்கு ஏற்றதாக இல்லை. நான் தான் உனக்கு அனுரூபமாக இருப்பவள். மனைவி என்ற எண்ணத்தோடு என்னைப் பார். இதோ இவளை, ரூபமில்லாத, அசத்து, விரூபமான, வயிற்று பாகமே இல்லாத (சிற்றிடையாளான) இந்த மனுஷியை, உன் சகோதரனுடன் சேர்த்து விழுங்கி விடுகிறேன். பிறகு மலைச் சாரல்களிலும், வனங்களிலும், பல விதமான அழகிய காட்சிகளைக் கண்டு ரசித்துக் கொண்டு என்னுடன் த3ண்டகா வனத்தில் சஞ்சரிப்பாய்.  இவ்வாறு பேசும் அவளைப் பார்த்து காகுத்ஸன் நகைத்தான். சொற்களை அளந்து பேசுவதில் வல்லவனான ராமன் பேச ஆரம்பித்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகா பா4வாவிஷ்கரணம் என்ற பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 18 (214) சூர்ப்பணகா விரூபணம்

(சூர்ப்பணகாவை அங்க34ங்க3ம் செய்தல்)

 

காம பாசத்தில் சிக்குண்ட சூர்ப்பணகையைப் பார்த்து ராமர், தெளிவான, ம்ருதுவான வார்த்தைகளை சிரித்துக் கொண்டே சொன்னார். இதோ இருப்பவள் என் மனைவி. நான் திருமணம் ஆனவன். மனைவியிடத்தில் பிரியம் உள்ளவன்.  உன் போன்ற பெண்கள் சக்களத்தியோடு வாழ்தல் கடினம். என் தம்பி இவன். பார்வைக்கு அழகாக இருப்பதோடு நல்ல சீலம் உடையவன். ஸ்ரீமான். மனைவி அருகில் இல்லை. லக்ஷ்மணன் என்ற பெயருடைய வீரன். இளைஞன். அழகிய தோற்றமும் உடையவன். இவனுக்குத்தான் மனைவி வேண்டும். அபூர்வமான உனக்கு இவன் ப4ர்த்தாவாக இருப்பது தான் பொருத்தமாக இருக்கும். என் சகோதரனை வேண்டிக் கொள். விசாலாக்ஷி, சக்களத்தியின்றி மேரு மலையை சூரிய ஒளி தழுவுவது போல தழுவிக் கொள்.  இவ்வாறு ராமன் சொல்லவும் காமத்தால் செய்வதறியாது திகைத்தவள், உடனே ராமனை விட்டு லக்ஷ்மணனை பிடித்துக் கொண்டாள். இந்த உன் உருவத்துக்கு நான் ஏற்றவளே. நல்ல நிறமுடையவள் நான். என்னுடன் சுகமாக தண்டகாவனத்தில் சுற்றுவாயாக. ராக்ஷஸி இப்படிச் சொன்னதும், சூர்ப்பணகையைப் பார்த்து மெதுவாக சிரித்து வார்த்தைகளை அளந்து பேசினான். எப்படி நீ ஒரு தாஸனுக்கு மனைவியாகி தாஸியாக இருக்க எண்ணுகிறாய்? நான் என் சகோதரனின் கீழ், அவன் சொல்படி நடப்பவன். தன்னிச்சையாக எதுவும் செய்யாதவன். கமலம் போன்ற நிறம் உடையவளே, சம்ருத்தியான அர்த்தம் (பொருள்) உடையவனை, சித்3தா4ர்த்தா (தன் விருப்பம் நிறைவேறியவளாக) வாக, நீ சென்றடைவாய். அவனுக்கு மனைவியாக இரு. அண்ணல் ராமனை வேண்டி அவனுக்கு மனைவியாக போ. இதோ இருக்கும் சீதையை, நீ சொல்வது போல, ரூபமில்லாத, அசத்தான, கோரமான, வயிற்றுப் பகுதியே இல்லாத, வயது முதிர்ந்த மனைவியை விட்டு உன்னை ஏற்றுக் கொள்வான். இது போன்ற உன் விசேஷமான ரூப லாவண்யங்களைப் பார்த்து யார் தான், மானுஷ ஸ்த்ரீயை விரும்புவர். இது போல லக்ஷ்மணனும் நிராகரிக்க, கொடூரமானவள், இந்த சொல்லை உண்மையென்றே நம்பினாள்.  பரிகாசம் என்று உணர்ந்து கொள்ளவில்லை. பர்ணசாலைக்குள் நுழைந்து விட்ட ராமனை சீதையுடன் இருந்தவனைப் பார்த்து,  காமம் தலைக்கேற, இந்த விரூபமான, கராளமான (பயங்கரமான), வயிறு இல்லாத கிழவியை, மனைவியாக வைத்துக் கொண்டு என்னை உயர்வாக எண்ண மறுக்கிறாய். இன்று இதோ இவளை சாப்பிட்டு விடுகிறேன். நீ பார்த்துக் கொண்டே இரு. மானுடப் பெண் எனக்கு ஒரு பொருட்டல்ல.  நீ என்னுடன் சஞ்சரிப்பாய்.  சக்களத்தியை ஒழித்துக் கட்டி விட்டு நானும் சந்தோஷமாக உன்னுடன் வருவேன்.  இவ்வாறு சொல்லிக் கொண்டே மான் விழி கொண்ட சீதையை, நெருப்புத் துண்டம் போன்ற கண்களுடன் சூர்ப்பணகா மிகக் கோபத்துடன் அருகில் ஓடி பிடிக்க முயன்றாள்.  பெரிய நெருப்பு கோளம் ரோஹிணியை பிடிக்க ஓடுவது போல ஓடினாள். யமனின் பாசக்கயிறு போன்ற அவளை, மிக பலத்துடன் விழுபவளைத் தடுத்து ராமர், லக்ஷ்மணனிடம் சொன்னார். லக்ஷ்மணா, நாகரீகமற்ற, க்ரூரமான, பண்பற்றவர்களிடம் பரிகாசம் செய்வது வீண். சௌமித்ரே, இதோ பார் சீதையை. உயிரை கையில் பிடித்துக் கொண்டு, பயத்தால் நடுங்கி கொண்டு நிற்கிறாள்.  இந்த கோரமான ரூபமுடைய அநாகரீகமான பெண்மணியின் உருவத்தை சிதைத்து விட்டு, விட்டு விடு என்றார். ராமர் சொன்னபடியே, லக்ஷ்மணன், ராமர் பார்த்துக் கொண்டு நிற்கையிலேயே, கோபத்துடன் தூக்கி, வாளினால் அவள் கர்ணங்களையும் (காதுகளையும்), மூக்கையும் அரிந்தான். ரத்தம் சொட்ட இன்னும் கோரமாக, விரூபம் செய்யப் பட்டவளாக பெருங்குரலில் கூக்குரலிட்டாள்.  மழைக் கால மேகம் இடி இடிப்பது போல் இருந்தது. ஏற்கனவே விரூபா. கொட்டும் ரத்தத்தை கைகளால் மூடிக் கொண்டு மகா வனத்தினுள் ஓடினாள். ராக்ஷஸர்களுடன் கூட்டமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்த க2ரன் சபையில் நுழைந்து மேலேயிருந்து ஏதோ கல் விழுவது போல விழுந்தாள்.  தரையில் தடாலென்று விழுந்தவள், பயத்துடன், மனைவியுடன் காட்டுக்கு வந்துள்ள ராம, லக்ஷ்மணர்களைப் பற்றி விவரித்தாள்.  தன் ரூபத்தை சிதைத்ததையும் சொன்னாள். க2ரன் சகோதரி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகா விரூபணம் என்ற பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 19 (215) க2ர க்ரோத4: (கரனின் க்ரோதம்)

 

ரத்தம் சொட்ட வந்து விழுந்தது தன் சகோதரி தான் என்று அறிந்து கொள்ளவே க2ரனுக்கு சற்று நேரம் பிடித்தது.  பின் அவளை விசாரித்தான். எழுந்திரு,. விஷயத்தைச் சொல். இந்த பட படப்பை அடக்கிக் கொண்டு,  நடந்ததைச் சொல் என்றான்  தெளிவாகச் சொல். யார் உன்னை விரூபம் செய்தது, யார் அவன்?  க்ருஷ்ண சர்ப்பத்தின் மேல் கால் வைத்தவன்.  ஆலகால விஷம் போன்ற என்னிடம் வாலாட்டுபவன் யார்? விளையாட்டாக, விரல் நுனியில் அவனை நாசமாக்குவேன். யார் அவன்? என்னை நெருங்கி விளையாடுகிறான்.  கால பாசத்தை கழுத்தில் இறுக்கிக் கொள்கிறோம் என்று கூட அறியாமல் மோகத்தில் ஆழ்ந்து இருக்கிறான். யார் உன்னை இன்று எதிர்த்து, விஷத்தைக் குடித்திருக்கிறான்.  தன்னிஷ்டப்படி உருவம் எடுத்துக் கொண்டு தன்னிச்சையாக திரிபவளான உன்னை யார் சீண்டியது? இந்த நிலைக்கு உன்னைக் கொண்டு வந்தவன் யார்? அவன் அந்தகனை எதிர் கொண்டழைத்தவன் ஆவான்.  உன் பலமும் விக்ரமமும் அவன் அறியவில்லை.  தேவ, கந்தர்வ, பூதங்கள், ரிஷிகள் மகாத்மாக்கள் இவர்களில் யார் உன்னை ரூபம் சிதையச் செய்தது. யார் அந்த மகா வீரன்? இந்த உலகில் எனக்கு பிடிக்காததைச் செய்யக் கூடிய யாரையுமே நான் கண்டதில்லை. பாக சாஸனன், ஸஹஸ்ராக்ஷன் என்று அழைக்கப் படும் தேவர்கள் தலைவனான இந்திரனையன்றி வேறு யார் இந்த துணிச்சல் பெற்றது. இன்று அவன் உயிரை எடுக்கிறேன். உயிரை போக்கும் வல்லமையுடைய என் அம்புகளால் ஸாரஸ பக்ஷி தண்ணீரில் உள்ள பாலை பிரித்து குடிப்பது போல, என் குறி தவறாத பாணங்களால் அவன் உயிரை பறிப்பேன். என் சரத்தால் அடிபட்டு விழுபவன் உடலில் இருந்து வெளிப்படும், நிண நீரும், ரத்தமும் பூமியை சகதியாக்கப் போகிறது. எவனுடைய உடல் என்னால் யுத்தத்தில் அடிக்கப் பட்டு விழுகிறதோ, அதை கழுகுகள் உணவாகக் கொள்ளப் போகின்றன. யார் என் கையில் அகப்பட்டுக் கொண்டானோ, அந்த துரதிருஷ்ட சாலியை தேவர்களோ, கந்தர்வர்களோ, பிசாசங்களோ, ராக்ஷஸர்களோ கூட காப்பாற்ற முடியாது. மெதுவாக நினைவு திரும்பியவுடன் என்னிடம் சொல். எந்த துர்வினீதன் உன் உருவத்தை சிதைத்தான்.  வனத்தில் நீ, உன் இஷ்டப்படி சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பொழுது உன்னை எதிர்த்து தோற்கடித்தவன் யார்? இவ்வாறு சகோதரன் பரிவுடன் வினவியதும், சூர்ப்பணகா கண்களில் நீர் பெருக பதில் சொன்னாள். இளைஞர்கள். அழகிய உருவம் உடையவர்கள். சுகுமாரமான தேகம் ஆயினும் மகா ப3லம் பொருந்தியவர்கள். புண்டரீகாக்ஷர்கள், விசாலமான கண்களையுடையவர்கள். மரவுரி வல்கலை தரித்து இருக்கின்றனர். கனிகளையும், காய் கறிகளையும் மட்டுமே சாப்பிட்டு சாந்தமானவர்கள். தவம் செய்யும் முனிவர்கள். தர்ம வழியில் செல்பவர்கள். தசரதனுடைய குமாரர்களாம் இருவரும்.  சகோதரர்கள். ராம, லக்ஷ்மண என்று பெயர் படைத்தவர்கள். கந்தர்வ ராஜன் போல கம்பீரமான ஆகிருதியுடையவர்கள். அரச குமாரர்கள் என்பதற்கான உடல் அடையாளங்கள் தெரிகிறது. தேவர்களா, மனிதர்களா என்று இனம் பிரித்து என்னால் கண்டு கொள்ள முடியவில்லை. இளம் வயது பெண்ணொருத்தி, அழகிய உருவம் உடையவள், எல்லா வித ஆபரணங்களும் அணிந்தவள், இவர்களுக்கு மத்தியில் இருக்கக் கண்டேன். அவர்கள் இருவரையும் ஏமாற்றி அந்த பெண்ணை கைப் பற்றி வரப் போனேன்.  இந்த கதியடைந்தேன். ஏதோ அனாதை, போக்கிடம் இல்லாத பாமரப் பெண் போல ஆனேன். அவளுடையது, அந்த இரு வீரர்களுடையதும், இவர்களை சண்டையில் வென்று ரத்தத்தை நிண நீரோடு குடிக்க விரும்புகிறேன். இது என்னுடைய முதல் விருப்பம். அண்ணா,  நீ இதை நிறைவேற்ற வேண்டும். சண்டை முடிவில் அவ்விருவரும் விழுந்து கிடக்கச் செய். மூவரின் ரத்தமும் நான் குடிக்கும்படியாக அவர்களை போரில் வீழ்த்து. சூர்ப்பணகா அரற்றியதைக் கேட்டு பொறுக்க மாட்டாத கரன், பதினான்கு மகா பல சேனையை ஆணையிட்டான். யமனுக்கு சமமான ராக்ஷஸர்களுக்கு கட்டளையிட்டான். இரண்டு மனிதர்கள். கையில் ஆயுதம் தாங்கியவர்கள். பயங்கரமான தண்டகா வனத்தினுள் நுழைந்துள்ளனர். கூடவே ஒரு பெண் வேறு.  அவர்களை வென்று அந்த பெண்னையும் கொன்று வாருங்கள். அவர்களின் ரத்தத்தை என் சகோதரி குடிப்பாள். ராக்ஷஸர்களே, இது என் சகோதரியின் ஆசை. சீக்கிரம் போங்கள். அவர்கள் இருவரையும் கொன்று வாருங்கள். உங்கள் பலம் முழுவதும் பிரயோகித்து, நன்றாக அடித்துக் கொண்டு வாருங்கள்.  உங்கள் கையில் அடி வாங்கித் தவிக்கும் அவர்களைப் பார்த்து மகிழ்ந்து இவள் அவர்கள் ரத்தத்தைக் குடிப்பாள்.  பதினான்கு ராக்ஷஸ வீரர்களும் இவ்வாறு கட்டளையிடப் பெற்று, அங்கு சென்றார்கள். பெரும் மேகம் காற்றினால் அலைக்கழிக்கப் படுவது போல அங்கு போனவுடன், உக்கிரமான தேஜஸையுடைய ராமனை, தீக்ஷ்ணமான ஆயுதங்களால் அடித்தும் ராக்ஷஸர்கள், எளிதில் அடைய முடியாதவனை, ராமனை துன்புறுத்த முடியவில்லை.  காட்டு யானைகள் தானாக தோன்றி வளர்ந்து வரும் காட்டுத் தீயிடம் எதுவும் செய்ய இயலாமல் தவிப்பது போல அருகில் செல்ல முடியாமல் தவித்தார்கள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ரக்ரோதோ4 என்ற  பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 20(216)  சதுர்த3ஸ ரக்ஷோ வத4: (பதினான்கு ராக்ஷஸ வதம்)

 

சூர்ப்பணகா ராகவனின் ஆசிரமம் வந்து ராக்ஷஸர்களுக்கு சகோதரர்களையும், சீதையையும் காட்டினாள். அவர்களும் பர்ணசாலையில் அமர்ந்திருக்கும் ராமனைக் கண்டனர். உடன் லக்ஷ்மணனும், சீதையும் அமர்ந்திருந்தனர்.  அருகில் வந்து நின்ற ராக்ஷஸியையும், ராக்ஷஸர்களையும் பார்த்து, ராமர் லக்ஷ்மணனிடம் சொன்னார்.  முஹுர்த்த காலம் சீதையை காப்பாற்றிக் கொண்டு இங்கேயே இரு. இவளுடைய உறவினர்களையும் சேர்த்து அழிக்கிறேன். தானே வந்து விழுந்த பூச்சிகளைப் போல நஷ்டமடையப் போகிறார்கள்.  லக்ஷ்மணனும் சரியென்று ஆமோதித்து, ராமர் யோசித்து தான் சொல்லியிருப்பார் என்ற நம்பிக்கையுடன் அங்கேயே நின்றான். பெரும் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு ராமர் புறப்பட்டார்.  தயாரானவுடன் ராக்ஷஸர்களைப் பார்த்து  எதசரத ராஜாவுடைய பிள்ளைகள் நாங்கள். ராம, லக்ஷ்மணர்கள். கடக்க முடியாத இந்த தண்டகா வனத்தினுள் சீதையுடன் வந்து சேர்ந்தோம். கனிவகைகளையும், காய் கிழங்குகளையும் உண்டு சாந்தமாக தர்மத்தை அனுசரித்துச் செல்லும் தவம் செய்யும் தபஸ்விகள்.  இப்படி தண்டகாரண்யத்தில் வசிக்கும் எங்களை, எதற்காக உபத்ரவம் செய்கிறீர்கள்?  ரிஷிகளின் வேண்டுகோளின் படி ஆயுதங்களை ஏந்தி வந்துள்ளேன். பாபாத்மாக்களான உங்களைக் கொல்லவே, தவறான நடத்தையுடைய உங்களை, பெரும் யுத்தம் செய்தாவது அழிக்க எண்ணம் கொண்டுள்ளேன். என் எதிரில் இப்படியே நின்று கொண்டிருந்தால், சந்தோஷமாக திரும்பி போக முடியாது. உயிர் மேல் ஆசை இருந்தால், உடனே திரும்பி போங்கள்.  ராமர் சொன்னதைக் கேட்டு, பதினான்கு ராக்ஷஸர்களும் பெரும் கோபம் கொண்டு சூலங்களை ஏந்திக் கொண்டு முன்னால் வந்தார்கள். பிராம்மணர்களை அடிப்பதே தொழிலாக கொண்டவர்கள், பதில் சொன்னார்கள், மகாத்மாவான கரன், எங்கள் தலைவன்.  அவனுக்கு கோபத்தை உண்டு பண்ணிவிட்டு,  நீ தான் இப்பொழுது உயிர் இழக்கப் போகிறாய். இதோ இன்று நாங்கள் உன்னை அடித்து வீழ்த்துகிறோம் பார். நீ தனி ஆள். நாங்கள் இவ்வளவு பேர் எதிரில், யுத்தம் செய்ய முனைந்து நிற்கும் பொழுது நீ என்ன செய்வாய்? யுத்தம் செய்வது எங்கே? நிற்கவே முடியாது. வா, வா, முதலில் கை முஷ்டிகளால் நாங்கள் அடித்தாலே, உன் கை வில், அம்புகள் பறந்து போகும். கூடவே நீயும் உயிரிழப்பாய்.  பதினான்கு ராக்ஷஸர்களும், இப்படி பேசிக் கொண்டே, கோபத்துடன் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு வெறி கொண்டவர்களாக ராமனை நோக்கி ஓடி வந்தனர்.  வேகமாக ஓடி வந்த அந்த ராக்ஷஸர்களின் பின்னால், பரிக4ம், பட்டிசம் எனும் ஆயுதங்களையும், சூலங்களையும், ஏந்தியபடி வீரர்கள் வந்தனர். பயங்கரமான தங்க முலாம் பூசிய, மிகவும் சக்தி வாய்ந்ததுமான ஆயுதங்களை ராமன் பேரின் ஏவினர்.  ராமனோ, அந்த பதினான்கு சூலங்களையும், தன் அம்பினால் எதிர்த்து அவர்கள் பேரிலேயே விழும்படி செய்தான்.  பெரும் வீரர்களான அவர்களும் சளைக்காமல், நாராசம் எனும் ஆயுதத்தை எடுத்து பதினான்கு பேரும் ஒன்றாக ராமன் பேரில் பிரயோகித்தனர்.  அதை பிடித்து வில்லை தயார் செய்து கொண்டு ராக்ஷஸர்களை லட்சியமாக உத்தேசித்து, இந்திரன் வஜ்ராயுதத்தை பிரயோகித்தது போல பிரயோகித்தான். தங்க நிறமான அம்புகள், கூர்மையான ஜ்வலிக்கும் அலங்காரங்களுடன் கூடியதுமான அம்புகளை குறி பார்த்து எய்ய, அவை ராக்ஷஸர்களின் மார்பை பிளந்து ரத்தத்தில் தோய்ந்தவைகளாக கீழே விழுந்தன.  எறும்பு புற்றிலிருந்து பாம்புகள் வெளி வருவது போல இருந்தது. வேரற்ற மரங்களாக, ஒடிந்து விழுந்த மரங்களைப் போல அவர்கள், சரிந்தனர்.  உயிர் பிரிந்த நிலையில் துண்டான உடல்கள் ரத்தத்தில் தோய்ந்த சரீரமும் கீழே விழுந்தன. இவர்கள் இப்படி தோற்று விழுவதைக் கண்ட ராக்ஷஸி கோபத்துடன் செய்வதறியாது பயந்து பயங்கரமாக சத்தமிட்டுக் கொண்டு ஓடினாள்.  பெரும் குரலில் ஓலமிட்டுக் கொண்டு வேகமாக சென்ற சூர்ப்பணகா திரும்பவும் கரனிடம் சென்று எதுவும் சொல்லத் தெரியாமல் தரையில் விழுந்தாள். சகோதரன் அருகில் துக்கத்துடன், கண்கள் நீரை பெருக்க, முகம் வாடி, அவனிடம் நடந்தது அனைத்தையும் விவரமாக சொன்னாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சதுர் த3ஸ ரக்ஷோ வதோ4  என்ற இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 21 (217) க2ர சந்தூ3ஷணம் (கரனை தூஷித்தல்)

 

மறுபடியும் வந்து கீழே விழுந்த சூர்ப்பணகையைப் பார்த்து, க2ரன் சற்று கோபத்துடன் அழுத்தம் திருத்தமாக நீ வந்ததே அனர்த்தம் விளைவிக்கத்தான் என்று கடிந்து கொண்டான். எதற்காக மறுபடியும் அழுகிறாய்? உனக்காக சூரர்களான ராக்ஷஸர்களை பொறுக்கி எடுத்து அனுப்பினேனே போதாதா. இவர்கள் எப்பொழுதும் என் பக்தர்கள். என் நன்மையில் நாட்டம்  கொண்டவர்கள், பிரியமானவர்கள். இவர்கள் தான் மற்றவர்களை கொன்று ரத்தத்தை குடிப்பார்களே அன்றி மற்றவர்கள் இவர்களை வீழ்த்தியதே இல்லை. என் வார்த்தையை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள். எதற்காக ஹா, ஹா என்று அலறுகிறாய்.  சர்ப்பம் போல் பூமியில் கிடந்து நெளிகிறாய்.  நாதனாக நான் இருக்கும் பொழுதே அனாதை போல அழுகிறாய். எழுந்திரு, எழுந்திரு, மனக்லேசத்தை விடு, பயப்படாதே,  என்று க2ரன் சமாதானப் படுத்தவும், கண்களைத் துடைத்துக் கொண்டு காதுகளையும் மூக்கையும் இழந்து ரத்தம் சொட்ட நான் இருக்கிறேன், வலியை பொறுத்துக் கொண்டு நிற்கிறேன்,  நீ சமாதானம் சொல்கிறாய். நீ பதினான்கு ராக்ஷஸர்களை அனுப்பினாயே, அவர்கள், லக்ஷ்மணணோடு ராமனை அழிக்கச் சென்றனர்.  இதனால் நீ சந்தோஷம் அடைவாய் என்று தானே சென்றார்கள். சூலமும், பட்டசமும் ஏந்தி கடுமையாக போர் புரிய எண்ணி வந்தவர்களை அந்த ராமன், ஒட்டு மொத்தமாக எல்லோரையும் அழித்து விட்டான். அவனுடைய அம்புகள் மர்மத்தை பிளக்கும்  சக்தி வாய்ந்தவை போலும். ஒரு க்ஷண நேரத்தில் ராம பா3ணம் பட்டு அவர்கள் விழுந்ததைக் கண்டு நான் பயந்து ஓடி வந்தேன். திரும்பவும் உன்னையே சரணடைகிறேன்.  நாலா புறமும் பயம் சூழ்ந்து நிற்கிறது. ராக்ஷஸ ராஜனே, நான் மிகவும் மனம் நொந்து வாடி இருக்கிறேன். பெரும் சோக சாகரத்தில் மூழ்கி இருக்கும் என்னைக் காப்பாற்று . இந்த சமுத்திரத்தில் வருத்தம் என்ற முதலைகள் வாழ்கின்றன. பரித்ராஸம், மிக அதிகமான பயம் என்றவை அலைகளாக அடித்துக் கொண்டே இருக்கின்றன. ராமனுடைய கூரிய அம்பினால் இவர்கள் அடிபட்டு வீழ்ந்தார்கள். பிசிதாஸனர்களான ராக்ஷஸர்கள் விட்டில் பூச்சிகளாக விழுந்தனர்.  உன் வீரர்களிடம், ராக்ஷஸர்களிடம், என்னிடம் சிறிதாவது அனுக்ரோஸம் (தயை) இருக்குமானால், ராமனிடம் சண்டையிட தேஜஸும், சக்தியும் உனக்கு இருப்பதாக எண்ணினால், ராக்ஷஸர்களுக்கு முள்ளாக, இடைஞ்சலாக வந்து வாய்த்த இந்த ஜனஸ்தான வாசியை அழிப்பாய்.  இன்று ராமனை, என் எதிரியை அழிக்கவில்லையென்றால், உங்கள் முன்னிலையில் உயிரை விடுவேன். நீ ராமனோடு யுத்தம் செய்ய  சென்றால், நிற்க கூட முடியாது என்று என் மனதில் படுகிறது. உன் படை பலம் உனக்கு பக்க பலமாக இருந்தாலும் கூட,  யுத்தத்தில் நீ சூரனாக இருந்தாலும், உன் பலம் கல்பிதமானது, ஆரோபிதமானது என்றே நான் என்ணுகிறேன். உண்மையில் நீ வீரனே அல்ல.  மனிதர்களான அவ்விருவரையும் நீ கொல்லாவிட்டால், கொல்ல முடியாவிட்டால், ராமனிடத்தில் நின்று நேருக்கு நேர் யுத்தம் செய்ய சக்தி இல்லையென்றால், தண்டகாரண்ய ராஜ்யம் எதற்கு? இதை அழி.  அல்ப வீரியன் நீ. உனக்கு  சக்தியும் இல்லை. ஜனஸ்தானத்திலிருந்து உடனே உன் பந்துக்களைக் கூட்டிக் கொண்டு வெளியேறு.  ராமனுடைய தேஜஸ் உன்னைச் சூழ்ந்தால் உடனே நாசமடைவாய்.   தசரத குமாரனான ராமனோ, தேஜஸ் நிரம்பியவன்.  அவன் தம்பியும் சுத்த வீரன். அவன் தான் என் உருவத்தை சிதைத்தான். பெருத்த வயிறுடைய அந்த ராக்ஷஸி இவ்வாறு புலம்பி, அழுது புரண்டு, கைகளால் வயிற்றில் அடித்துக் கொண்டு பெருங்குரலில் ஓலமிட்டாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ர சந்தூ3ஷணம் என்ற இருபத்தோராவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 22 (218) க2ர சன்னாஹ: (கரன் போருக்கு அறை கூவுதல்)

 

ராக்ஷஸர்களுக்கு மத்தியில் தன்னை இவ்வாறு ஏசும் சூர்ப்பணகையைப் பார்த்து கரன், இன்னும் கடுமையாக பதில் சொன்னான். உன்னை அவமானம் செய்திருக்கிறார்கள். அதனாலேயே நான் அளவில்லாத கோபமும் அடைந்துள்ளேன்.  உப்புக் கடல் ஆரவாரித்து நிற்பது போல என் படையுடன் நான் சென்றால் அவனால் எதிர்த்து க்ஷணம் கூட நிற்க முடியாது.  ராமனை ஒரு பொருட்டாகவே நான் எண்ணவில்லை. மனிதன், க்ஷீணமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவன்.  தன்னுடைய துஷ்டத்தனமான காரியங்களின் பலனாக இன்று உயிரை விடப் போகிறான். கண்ணீரை துடைத்துக் கொள். இந்த பட படப்பையும் அடக்கிக் கொள். ராமனை அவன் சகோதரனுடன் சேர்த்து இன்று யம லோகம் அனுப்புகிறேன்.  இன்று நான் அடித்து வீழ்த்தி மந்த ப்ராணனாக இருக்கும் பொழுது, உஷ்ணமான அவன் ரத்தத்தை நீ குடித்துக்கொள்.  இதைக் கேட்டு ராக்ஷஸி, மனம் மகிழ்ந்தாள். மூர்க்கத்தனத்தால் தன் சகோதரனை புகழ்ந்து பேச ஆரம்பித்தாள். முதலில் கோபத்தை கிளறி விட்டு, இப்பொழுது புகழ்ந்து பேசவும், க2ரன் சமாதானமாகி தன் சேனாபதியான தூ3ஷணனை கூப்பிட்டு ஆணையிட்டான். பதினான்கு ஆயிரம் சேனை வீரர்கள், நான் நினைத்ததை செய்து முடிக்கும் திறனுடையவர்களாய், வேகமாக நின்று உறுதியுடன் போர் புரியக் கூடிய வீரர்கள், புற முதுகு  காட்டி  ஓடாத வீரர்கள், நீல மேகம் போன்ற வர்ணம் உடைய, கோரமான ரூபமும், கோரமான செயல்களுக்கு அஞ்சாதவர்களாக,  உலகில் ஹிம்சையே விளையாட்டாகக் கொண்டவர்கள். உக்ரமான தேஜஸையுடைய பலசாலிகள். சார்தூலம் போல கர்வம் கொண்ட பெரும் வாயையுடைய மகா சக்தி வாய்ந்த, f பொறுப்பாக எந்த வேலையானாலும் செய்து முடிக்கக்கூடிய ராக்ஷஸர்களை தேர்ந்தெடுத்து படையை தயார் செய். என் ரதத்தை தயார் செய்யுங்கள். வில்லையும், அம்புகளையும் ஏற்பாடு செய். பலவிதமான அம்புகள், விசித்ரமான வாட்கள், சக்தி ஆயுதங்கள், கூர்மையான ஆயுதங்கள், இவைகளுடன்  ராக்ஷஸர்களின் சேனைக்கு முன்  ரதத்தில் சென்று  சேனையை நடத்திச் செல்லப் போகிறேன்.  துர்விநீதனான ராமனை வதம் செய்ய ரணத்தைப் பற்றிய விவரம் அறிந்த நான் முன்னால் இருப்பது தான் சரி.  இவ்வாறு கரன் சொல்லவும், சூரியனின் நிறத்தில் இருந்த ரதத்தை, கவனமாக தேர்ந்தெடுத்த நல்ல இளம்  குதிரைகளை பூட்டி, தூ3ஷணன் கொண்டு வந்து நிறுத்தினான்.  அந்த ரதம் மேரு மலையைப் போல உயர்ந்து இருந்தது. புடமிட்ட தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. இடைஞ்சல் இல்லாத சக்கரம், வைடூரியம் இழைத்து, தங்கத்தில் செய்யப் பட்டது. மீன், புஷ்பங்கள், மரங்கள், மலை,  சந்திரன், சூரியன், மங்களமான பக்ஷி கூட்டங்கள், நக்ஷத்திரங்கள் இவை சித்திரங்களாக அலங்கரித்தன. கொடியும், கிங்கிணி என ஒலிக்கும் மணிகளும் கட்டப் பட்டது. நல்ல குதிரைகள் பூட்டிய அந்த ரதத்தில் கர்வத்தோடு ஏறி அமர்ந்தான் க2ரன். பெரும் பலம் படைத்த ராக்ஷஸர்கள், அவன் ரதத்தில் ஏறி அமர்ந்தவுடன், பரிவாரத்தோடு இருவரையும் (கரனையும், தூஷணனையும்) தொடர்ந்து செல்லலாயினர்.  தன் ரதத்தில் நின்று எல்லா ராக்ஷஸர்களையும், கோரமான ஆயுதங்களோடும், கொடியுடன் நின்றவர்களை கிளம்புங்கள் என்று கட்டளையிட்டான். ஜனஸ்தானத்திலிருந்து அந்த பெரும் படை ஆரவாரமாக கிளம்பியது. முத்கரம், பட்டசம், சூலம், கூர்மையான பரஸ்வதம், வாட்கள், சக்கரங்கள், கையில் வைத்துக் கொள்ளும் தோமரங்கள், சக்தி ஆயுதம், கோரமான பரிக4ம் எனும் ஆயுதம், நிறைய அம்புகள், க3தை4கள், கத்தி, முஸலங்கள், வஜ்ரங்கள், பார்க்கவே பயுங்கரமாகத் தெரியும் பல ஆயுதங்கள் இவற்றை எடுத்துக் கொண்டு, பயங்கர உருவம் உடைய ராக்ஷஸர்கள் பதினாயிரம் வீரர்கள், கரனின் எண்ணத்தை நிறைவேற்றும் உறுதியோடு ஜனஸ்தானத்திலிருந்து கிளம்பினார்கள். பெரும் விக்ரமம் கொண்ட வீரர்கள், போட்டியிட்டுக் கொண்டு முன்னேறுவதைப்  பார்த்தபடி,  கரனுடைய ரதமும் சென்றது. அவன் அனுமதி பெற்று சாரதி, பொன்னிறமான இளம் குதிரைகளைத் தட்டி ஓடச் செய்தான். ரதம் வேகம் எடுத்தது. நான்கு திக்குகளிலும் இந்த ஓசை நிறைந்தது. கோபம் பெருகி வர, கரன், கடுமையான குரல் உடையவன், எதிரியை வதைக்க, யமனைப் போல வேகமாக  போகச் செய்தான்.  பெருத்த குரலில் கோஷமிட்டான். மேகம் கற்களை பொழிகிறதோ எனும்படி பெருத்த கூக்குரலுடன் அவன் படை புறப்பட்டது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ர சன்னாஹோ என்ற இருபத்திரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

 

 

அத்தியாயம் 23 (219) உத்பாத தரிசனம் (கெட்ட சகுனம் தோன்றுதல்)

 

ஜனஸ்தானத்திலிருந்து கரன் சென்றவுடன், அமங்களமான சிவந்த நீர் மழையாகப் பொழிந்தது. ரதத்தில் பூட்டப் பட்டிருந்த மகா வேகமாக செல்லக் கூடிய குதிரைகள், கீழே விழுந்தன.  யதேச்சையாக ராஜ மார்கத்தில் அலங்காரமாக வைக்கப் பட்டிருந்த புஷ்பங்கள் சம தளத்தில் விழுந்தன. திடுமென கரும் சிவப்பாக ஒரு வட்டம் சூரியனைச் சுற்றி தெரிந்தது. ஒரு பெரும் கழுகு, ஹேம தண்டத்தில் பொருத்தப் பட்டிருந்த கொடியை தட்டி விட்டுச் சென்றது.  மாமிசம் தின்னும் பல வித மிருகங்கள், ஜனஸ்தானத்தின் அருகில் வந்து தமது கரகரப்பான தொனிகளில் சத்தமிட்டன.  விடிந்த சமயம் கிழக்கில் பைரவ நாதம் செய்து கொண்டு யாத்திரை செய்பவர்களுக்கு அசுபமான குள்ள நரிகள் பெருங்குரலில் ஓலமிட்டன. தனித் தனியாக மலை போன்ற மேகங்கள், சிவந்த நீரை ஏந்திக் கொண்டு பவனி வர, ஆகாசம் காகங்களால் நிறைந்து அநாகாசம் ஆக்கியது (ஆகாசம் தெரியாமல் செய்தது).  ரோமாஞ்சனம் உண்டு பண்ணக் கூடிய  கறுமை நிறத்துடன் அவை திசைகளை மறைத்தன.  ராஜதானியை மறைத்தன. ரத்தத்தில் தோய்ந்தது போல வர்ணத்தில் ஸந்த்யா காலம் விளங்கியது. யுத்தத்திற்காக விரைந்து கொண்டிருந்த கரனை நோக்கி பறவைகள், சத்தமிட்டன. பயத்தை வெளிப் படுத்தும் வகையில் கங்க –   கழுகுகள் கத்தின. எப்பொழுதும் நல்ல சகுனமாக கருதப் படாத குள்ள நரிகள் நிறைய தென் பட்டன. அதுவே கோரமான தரிசனமாக இருந்தது.  சூரியாஸ்தமன சமயத்தில் சில கபந்த உருவங்கள், வாயிலிருந்து தீ பறக்க நடமாடின. காலம் இல்லாத காலத்தில் பெரிய கிரஹணம் வந்து சூரியனைப் பிடித்தாற் போல இருந்தது.  காற்று வேகமாக அடித்தது. சூரியனில் ஒளியே இல்லை. ராத்திரி இன்னும் வராமலேயே நக்ஷத்திரங்கள் மின் மினி பூச்சி போல மின்னின. பறவைகளும், மீன்களும் அடங்கி இருக்க தாமரை மலர்கள் இன்றி உலர்ந்த சேறு தான் மீந்திருந்தது. அந்த க்ஷணத்தில் மரங்கள் பூவோ, பழமோ இன்றி இருந்தன. காற்று இல்லாமலேயே மண் வாரியடித்தது. சாரிகா: என்ற பக்ஷிகள் கீச் கீசென்று கத்தின. ஆந்தைகள் தொப்பென்று விழுந்தன. மலை, வனம், காடு சார்ந்த பூமி ஆடியது. ரதத்தில் இருந்த க2ரன் சமாளித்துக் கொண்டது நர்த்தனம் ஆடுவது போல இருக்க அவனது இடது புஜம் துடித்தது.  அவன் குரலும் தடுமாறியது. பார்வையும் குன்றியது. நெற்றி புடைத்துக் கொண்டது போல இருந்தது.  இந்த அபசகுனங்களைப் பார்த்து மனம் தளர்ந்த ராக்ஷஸ வீரர்களைப் பார்த்து க2ரன் உற்சாகமூட்டுவது போல சிரித்துக் கொண்டே, இந்த துர் நிமித்தங்களைக் கண்டு பயப்பட மாட்டேன், நல்ல வீர்யம் உடையவன், அல்ப வீரம் உடையவனைப் பார்த்து அலட்சியமாக நகைத்துக் கொண்டு போவது போல இந்த விஷயங்களுக்கு நான் அதிக முக்யத்துவம் தரவில்ல. ஆகாயத்தில் உள்ள நக்ஷத்திரங்களைக் கூட கூர்மையான பாணங்களால் வீழ்த்தி விடுவேன். ம்ருத்யுவையும், மரண தர்மம் என்பதுடன் சேர்த்து விடுவேன். தன் பலத்தில் கர்வம் கொண்டுள்ள ராக4வனை அழிக்காமல், அவன் சகோதரனுக்கும் பாடம் கற்பிக்காமல், கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொண்டு, யுத்தம் செய்யாமல் திரும்புவது என்பது நடக்காது.  அவர்கள் ரத்தத்தை குடித்து என் சகோதரி திருப்தியாகட்டும். அவளுக்காகத் தான் ராம, லக்ஷ்மணர்களுடன் விரோதமே வந்தது.  யுத்தத்தில் பராஜயம், தோல்வி என்பது நான் அறியாதது. உங்களுக்கு எதிரில் நான் சொல்வது பொய்யல்ல.  மதம் பிடித்த ஐராவதத்தில் போகும் தேவ ராஜனான இந்திரனையும், கையில் வஜ்ரம் வைத்துக் கொண்டு எதிர் பட்டால் கூட யுத்தம் செய்து அவனை  கொல்வேன்.  இந்த அல்ப மனிதர்கள் எந்த மூலை? அந்த ராக்ஷஸ சேனை க2ரன் கர்ஜித்ததைக் கேட்டு பெரும் மகிழ்ச்சியடைந்தது. ம்ருத்யு பாசம் அவர்களை கட்டிப் போட இருக்கும்பொழுது அவர்கள் வேறு  என்ன செய்வார்கள்? யுத்தத்தைக் காண பலரும் வந்து சேர்ந்தனர். ரிஷிகள், தேவ கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், மற்றும் பலரும் வந்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பசுக்களும் பிராம்மணர்களுக்கும் ஸ்வஸ்தி. நல்லது நடக்கட்டும். உலகில் உள்ள நல்லவர்கள் அனைவருக்கும் ஸ்வஸ்தி. ராக4வன் ஜயிக்கட்டும். யுத்தத்தில் சக்ரதரன் எப்படி எல்லா அசுரர்களையும் அழித்தானோ, அவ்வாறே, பௌலஸ்தியர்களை, இரவில் நடமாடும் இந்த ராக்ஷஸர்களை அழிக்கட்டும். இன்னும் பலவிதமாகப் பேசிக் கொண்டு பரம ரிஷிகளாக உள்ளவர்களும் ஆவல் மேலிட,  பார்க்கலானார்கள். அங்கு விமானங்களில் அமர்ந்த தேவர்கள், ராக்ஷஸர்களுடைய பெரிய சேனையைக் கண்டனர்.  இவர்கள் ஆயுள் முடியப் போகிறது என்று எண்ணினர். ரதத்தில் ஏறி கரன் வேகத்துடன் உக்ரமாக வெளிப் பட்டான். அந்த ராக்ஷஸனைப் பார்த்து மற்ற ராக்ஷஸர்களும் கிளம்பினர். கரனைச் சூழ்ந்தபடி மகா பலசாலிகளான பன்னிரண்டு ராக்ஷஸர்கள், ஸ்யேனகாமி, ப்ருது2க்3ரீவோ, யக்ஞ சத்ரு, விஹங்க3ம:, துர்ஜயன், கரவீராக்ஷன், பருஷன், கால கார்முகன், மேக4 மாலி, மகா மாலி, சர்ப்பாஸயோ, ருதிராசனன் என்ற ராக்ஷஸ வீரர்கள், கரனுக்கு பாதுகாவலாகச் சென்றனர். மகா கபாலன், ஸ்தூலாக்ஷன், ப்ரமாதீ,3 த்ரிசிரஸ், என்ற நால்வரும், தூ3ஷணனைத் தொடர்ந்தனர். அந்த சேனை பயங்கரமான செயல் திறனோடு, யுத்தத்தில் விருப்பதோடு, மகா பலசாலியான ராக்ஷஸ சேனை, அந்த ராஜ குமாரர்களை, திடுமென நெருங்கின, கிரகங்களின் மாலை சந்திர சூரியர்களை நெருக்குவது போல. 

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் உத்பாத த3ரிசனம் என்ற இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 24 (220) ராம, க2ர, ப3ல சன்னிகர்ஷ:

(ராமனுடைய, கரனுடைய பல பரீக்ஷை)

 

பராக்ரமம் உடைய க2ரன், ராமனுடைய ஆசிரமத்தை நோக்கி வந்த பொழுது அதே துர் நிமித்தங்களை ராமனும் கண்டான். அந்த துர் நிமித்தங்கள், மயிர் சிலிர்க்கச் செய்வதாயும், மகா கோரமாகவும் இருந்ததால், பிரஜைகளுக்கு கெடுதல் என்று உணர்ந்த ராமன் லக்ஷ்மணனிடம் சொன்னான். லக்ஷ்மணா, இந்த நிமித்தங்களைப் பார். எல்லா ஜீவன்களுக்கும் கெடுதலை செய்பவை. ராக்ஷஸர்களை அழிக்கத் தோன்றியவை. கர்த34ம் போல, சிவந்த மேகங்கள் ஆகாயத்தில் சஞ்சரிக்கின்றன. ரத்த தாரையை பெருக்கிக் கொண்டு, கடும் குரல் உடைய பக்ஷிகளின் கூக்குரல் கேட்கிறது.  அஸ்திரங்களில் புகை,  எழும்புகிறது. யுத்தம் என்று வந்தால் விருப்பத்தோடு யுத்தம் செய்யும் என் தங்க நிற அம்புகளில் அவை படிகின்றன. இங்கு  கூவும் பக்ஷிகளும், வனத்தில் சஞ்சரிக்கும் மிருகங்களின் சப்தமும், நமக்கு பயம் வரப் போவதை தெரிவிக்கின்றன.  உயிருடன் இருப்பது கூட சந்தேகமே. பெரும் யுத்தம் வரப் போகிறது சந்தேகமே இல்லை. என் புஜம் திரும்பத் திரும்பத் துடிக்கிறது. நமக்கு ஜயம் அருகில் இருக்கிறது. சூரனே, எதிரிகளுக்குத் தான் தோல்வி.  உன் முகம் ஒளியுடன் ப்ரஸன்னமாகத் தெரிகிறது. லக்ஷ்மணா, யுத்தம் செய்ய புறப்பட்டவர்களின் முகம் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆயுள் முடிந்து விடுமோ என்று பயப் படுபவர்கள் முகம் தான் ஒளியிழந்து காணப் படும்.  ராக்ஷஸர்கள் செய்யும் அட்டகாசமான சப்தம் பெரிய சப்தமாக கேட்கிறது. பே4ரியை அவர்கள் கொமூடுரமாக அடித்து நொறுக்குகிறார்கள். அதனால் சத்தம் காதை பிளக்கிறது. சுகத்தை விரும்பியவன், அனாக3த விதா3னம், (சங்கீத பரிபாஷை) அடங்கிய குரலில் இருக்க வேண்டும்.  ஆபத்து என்று சந்தேகப் படுபவர்கள் தான் கெடுதலை எதிர்பார்த்து அதிகமாக சப்தம் செய்கின்றனர். அதனால் கையில் வில்லையும் அம்பையும் தயாராக வைத்துக் கொண்டு, வைதேஹியையும் அழைத்துக் கொண்டு குகைக்குள் இரு.  இதை எதிர்த்து எதுவும் சொல்லாதே. என் பாதங்கள் மேல் ஆணை. சீக்கிரம் போ. குழந்தாய்,  தாமதிக்காதே. நீ சூரன், பலவான், இவர்கள் கொல்லப் படவேண்டியவர்கள், சந்தேகமே இல்லை.  நான் தனியாக இந்த நிசாசரர்களை எல்லோரையும் அழிக்க விரும்புகிறேன். இவ்வாறு ராமர் சொல்லவும், சீதையை அழைத்துக் கொண்டு எளிதில் நுழைய முடியாத அந்த குகைக்குள், கையில் வில்லையும் அம்பையும் ஏந்தி, எந்த நிலைக்கும் தயாராக நுழைந்தான்.  லக்ஷ்மணன் குகைக்குள் நுழைந்த பின், அப்பாடா, என்று ராமர்  நிம்மதியுடன், தன் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டார். அக்னிக்கு சமமாக இருந்த அந்த கவசத்தை அணிந்து, ராமர், புகையில்லாத அக்னி ஜ்வாலை போல இருந்தார். வில்லை எடுத்துக் கொண்டு, மகா பலம் வாய்ந்த அம்புகளையும் எடுத்துக் கொண்டு எட்டு திக்கும் கேட்கும்படி, தன் வில்லில் நாதத்தை உண்டாக்கினார். பிறகு, தேவர்களும், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள் யாவரும் யுத்தத்தைக் காணும் ஆவலோடு வந்து சேர்ந்தனர். ரிஷிகளும், மகாத்மாக்களும்  உலகில் ப்ரும்ம ரிஷிக்கு சமமானவர்களும்,  புண்ய கர்மாக்களை செய்தவர்களும் ஒன்று கூடி தங்களுக்குள் பேசிக் கொண்டனர். உலகில் உள்ள பசுக்களும், ப்ராம்மணர்களும் க்ஷேமமாக இருக்கட்டும்.  அவர்களுக்கு ஸ்வஸ்தி. நன்மையுண்டாகட்டும். ராகவன் யுத்தத்தில் ஜயிக்கட்டும். சக்ரதாரியான பகவான் முன்பு, அசுரர்களையெல்லாம் வென்றது போல  இந்த புலஸ்தியர்களை, நிசாசரர்களை யுத்தத்தில் தோற்கடிக்கட்டும்.  இவ்வாறு ஆசிர்வதித்து, தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு மேலும் கவலையுடன் பேசிக் கொண்டனர். பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்கள், பயங்கரமான செயலுடையவர்கள் ஒரு புறம், மறு புறம் தர்மாத்மா ராமன் மட்டுமே தனியாக.  யுத்தம் எப்படி நடக்கப் போகிறது? என்று ராஜ ரிஷிகளும் சித்தர்கள் கணங்களோடு கூட, பிராம்மணோத்தமர்கள், ஆவல் மேலிட அங்கு வந்து சேர்ந்தனர்.  தேவர்களும், விமானங்களில் அமர்ந்தபடி வந்தனர். யுத்த களத்தில் முன்னிலையில் நிற்கும் ராமனை, தேஜஸே உருவாக நின்றவனைப் பார்த்து, உலகில் உள்ள சகல ஜீவ ராசிகளும் பயந்து நடுங்கின. செயற்கரிய செய்ய முனைந்த ராமனது உருவம் சொல்லில் அடங்காத தன்மையாக இருந்தது. கோபத்துடன் பினாகத்தை எடுத்துக் கொண்டு நிற்கும், ருத்ரனைப் போல இருக்கிறான் என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட தேவ, கந்தர்வ, சாரணர்களின் எதிரில் கம்பீரமான கோஷமும், கோரமான ஆயுத த்வஜமும், அதிசயமாக ராக்ஷஸர்களின் எதிரில் தோன்றியது.  அந்த வனத்தில் அதன் பின் சிம்ம நாதம் செய்யும் கோஷங்களும், ஒருவரையொருவர் தாக்குவதும், வில்லிலிருந்து புறப்படும் அம்புகளின் ஒலியும், இடி முழக்கம் போன்ற ஆரவாரமும், துந்துபி நாதமும், ஒருவரையொருவர் குத்தும் சத்தமும், கலந்து ஒரே கூச்சலாக கேட்டது.  அந்த சத்தத்தால் காட்டில் சஞ்சரிக்கும் நாய்கள் திரும்பி பார்க்காமல் சத்தம் இல்லாத இடத்தை நோக்கி ஓடின. அந்த சேனை ராமனை நெருங்கியது. சாகரம் போல கம்பீரமாக பலவித ஆயுதங்களை சுழற்றி அடித்தபடி நான்கு புறங்களிலும், ரண பண்டிதனான ராமன் சுழன்று சுழன்று போரிட்டான். எதிரில் நின்ற க2ரனுடைய சைன்யத்தைப் பார்த்தான். பெரிய வில்லை எடுத்து, தூணியிலிருந்து அம்புகளை எடுத்து, கோபத்தை வரவழைத்துக் கொண்டு, ராக்ஷஸர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற உத்தேசத்துடன் யுகாந்த அக்னி போல ஜ்வலித்துக் கொண்டு சண்டையிட்ட ராமனைக் காணவே கண் கூசியது எனலாம்.  கோபத்துடன் சண்டையிடும் அவனைக் கண்டு தேஜஸே உருக் கொண்டது போல இருந்த ராமனைக் கண்டு பயந்து வன தேவதைகள், ஓடின. இந்த கோபமான ராமனுடைய உருவம் அந்த சமயத்தில் த3க்ஷ யக்ஞத்தை அழிக்க வந்த பினாகியை ஒத்திருந்தது.  அந்த ஆயுதங்கள், ஆபரணங்கள், த்வஜங்கள் இவைகள் அக்னி போலத் தெரிய, ராக்ஷஸ சைன்யம், சூரியோதயத்தில் இருட்டு காணாமல் போவது போல ஆயிற்று.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராம, க2ர, ப3ல சன்னிகர்ஷோ என்ற இருபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 25 (221) க2ர சைன்யாவமர்த3: (கர சைன்யத்தை வீழ்த்துதல்).

 

எதிரியை ஒழித்துக் கட்டுவது என்ற தீர்மானத்துடன் கையில் வில்லேந்தி நின்ற ராமனை, க2ரன் தன் பரிவாரத்தோடு ஆசிரம வாயிலில் சந்தித்தான். கையில் வில்லும் அம்பும் ஏந்தி நிற்கும் ராமனைப் பார்த்து க2ரன் தன் சாரதியிடம் நெருங்கிச் செல்ல உத்தரவிட்டான். அவன் ஆணைப்படி, சாரதியும் குதிரைகளை தட்டி விரட்டினான். தனி ஆளாக, ராமன் வில்லுடன் நின்ற இடத்திற்கு வந்தனர். க2ரனின், பாதுகாப்பிற்காக உடன் வந்த ராக்ஷஸர்கள், பெருங்குரலில் எக்காளமிட்டு, சிரித்து நடனமாடினர். இந்த ராக்ஷஸர்கள் மத்தியில் நக்ஷத்திரங்களுக்கு இடையில் லோஹிதாங்கன் உதித்தது போல க2ரன் இருந்தான். ஆயிரக் கணக்கான அம்புகளை ராமன் பேரில் எய்து விட்டு, கரன் பெருங்குரலில் முழக்கமிட்டான்.  பயங்கரமான வில்லை ஏந்தி நின்ற ராமனை எல்லா ராக்ஷஸர்களூமாக சூழ்ந்து கொண்டு பல விதமான சஸ்திரங்களை அவன் பேரில் விட்டனர்.  முத்3கரம், பட்டிசம், சூலம், ப்ராஸம், க2ட்க3ம், பரஸ்வதம், இவற்றை ராக்ஷஸர்கள் ரோஷத்துடன் ராமன் பேரில் பிரயோகித்தனர்.  ராமனை நோக்கி ரதத்திலும், குதிரையிலுமாக சென்றனர்.  ராமனை யுத்தத்தில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு பர்வதம் போன்ற யானைகளில் வந்தனர். இந்த ராக்ஷஸர்கள் தங்கள் பலம் முழுவதும் பிரயோகித்து அம்புகளை மழையாக பொழிந்தனர். மலையுச்சியில் வர்ஷிக்கும் மேக கூட்டம் போல இவர்கள் நடுவில் ராமன், நாலாபுறமும் சூழப் பெற்று நின்றான். இவர்கள் எல்லோருமாக விட்ட அஸ்த்ர, சஸ்த்ரங்களை ராமன் பிடித்து வைத்துக் கொண்டான். அது நதிகளை சாகரம் தன்னுள் ஏற்றுக் கொண்டது போல இருந்தது. இவ்வளவு அடி பட்டும் ராமன் கலங்கவில்லை. வஜ்ரம் மகா மலையை அசைக்க முடியாதது போல. அந்த கூர்மையான ஆயுதங்கள் பட்டு உடல் பூறாக ரத்த விளாறாக ஆகியது. ஸந்த்யா காலத்து மேகங்கள் சூரியனை சூழ்ந்து இருப்பது போல ஆனான். தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும் கவலை கொண்டனர்.  ஒருவன், ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்களால் சூழப் பட்டு நிற்பதைக் கண்டு செய்வதறியாது கலங்கினார்கள். அப்பொழுது ராமன் கோபத்துடன் தன் அம்புகளை வரிசைப் படுத்திக் கொண்டு நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக பா3ணங்களை விட ஆரம்பித்தான். கால தண்டம் போன்ற அவை, எதிர்த்து நிற்க முடியாத சக்தியுடையவை, தடுக்க முடியாத பேராற்றல் உடையவை. விளையாட்டாக ராமன் இந்த பாணங்களை சத்ரு சைன்யத்தின் மேல் விடவும், ராக்ஷஸர்களின் உயிரை எடுத்துக் கொண்டு சென்றன.  காலனின் பாசம் போல ராக்ஷஸ தேகங்களை பிளந்து கொண்டு, அந்த சரங்கள், ரத்தம் தோய்ந்து அந்தரிக்ஷத்தில் அக்னி ஜ்வாலை போல விளங்கின. கணக்கிலடங்காத ராம பாணங்கள்,  வில்லிலிருந்து புறப்பட்டன. மிக உக்ரமாக ராக்ஷஸர்களின் உயிரை வாங்கும் விதமாக, த்வஜங்களை அடித்து தள்ளி, வில்களை உடைத்து, வர்மங்களையும், தலைகளையும் வீழ்த்திக் கொண்டு சென்றது.  ஆபரணம் அணிந்த கைகள் தனியாக தெறித்து விழுந்தன.  யானையின் தும்பிக்கைப் போன்ற துடைகள் தனியாக விழுந்தன. நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் சின்னா பின்னமானார்கள். குதிரைகள் சாரதியோடு ரதத்தோடு அடிபட்டு விழுந்தன. யானைகள், யானைப் பாகர்கள், அதன் மேல் அமர்ந்த வீரர்களுடனே அடிபட்டு விழுந்தன. ராமனின் அம்புகள் துளைத்தன, உடைத்தன, கால் படை வீரர்களை தாக்கி யமனுக்கு விருந்தினனாக அனுப்பின. இவ்வாறு அடிபட்டு, வீழ்ந்த ராக்ஷஸ வீரர்கள் பெருங்குரலில் அழுதனர். வலி தாங்காமல் அரற்றினர். அந்த வீரர்கள் கூர்மையான பாணங்களால் அடிக்கப் பெற்று தவித்தனர். ராமன் சளைக்காமல் போராடினான். சில வீரர்கள், பெரும் பலம் படைத்தவர்கள், சூரர்கள், சூலங்களையும், வாட்களையும், பரஸ்வதங்களையும் எடுத்துக் கொண்டு ராமனை நோக்கிச் சென்றனர். அருகில் சென்றதும் பயந்து ஆயுதங்களை கீழே போட்டனர். அந்த ஆயுதங்களை தன் அம்புகளால் தன் பக்கம் வரவழைத்துக் கொண்டு அவைகளாலேயே பலரை அடித்து நொறுக்கினான். பலர் தலையிழந்து விழுந்தனர். உலகில், பெரும் காற்றில் அடிபட்டு விழும் மரங்களைப் போல விழுந்தனர். மீதியிருந்த கலங்கிய ராக்ஷஸர்கள், கரனை நோக்கி ஓடினர். அவனிடமே அப4யம் என்று சரணடைந்தனர். அவர்களை ஒன்று சேர்த்து, சமாதானம் செய்து, தூ3ஷணன் காகுத்ஸனை நோக்கி ஓடி வந்தான். ருத்3ரனை நோக்கி யமன் வருவது போல திரும்பி அனுப்பப் பெற்ற பலரும், தூஷணன் கொடுத்த தைரியத்தால், ராமனை நோக்கி ஓடி வந்தனர்.  சால, தால, மரங்கள், கற்கள் இவற்றை ஆயுதமாக வீசினர்.  சூலம், அம்பு இவற்றை கையில் வைத்துக் கொண்டு, பெரும் பலம் உடைய ராக்ஷஸர்கள், சரங்களையும், சஸ்திரங்களையும் மழையாகப் பொழிந்தனர். மலைகளை பிடுங்கி எறிந்தனர். சிலர் கற்களை சரமாரியாக எறிந்தனர். யுத்தம் பயங்கரமாக இருந்தது. ரோமாஞ்சனம் உண்டு பண்ணும்படி அத்புதமாக இருந்தது.  ராமருடைய யுத்தம் மகா பயங்கரம் என்றால், ராக்ஷஸர்களும் சளைக்கவில்லை. எல்லோருமாக சேர்ந்து ராமனை அடிக்க ஓடி வந்தனர். அவர்களையும், நான்கு திக்குகளையும் பார்த்து விட்டு, சரங்களை மழையாக பொழியும் ராக்ஷஸர்களின் மேல் ராமன் காந்தர்வ அஸ்திரத்தைப் பிரயோகம் செய்தான். வில்லிலிருந்து அம்புகள் ஆயிரக் கணக்காக கிளம்பின. பத்து திக்குகளையும் ராம பா3ணம் நிறைத்தது. ராக்ஷஸர்கள், இந்த அம்புகளை விடுபவனையும் காண முடியவில்லை. வில்லில் இருந்து விடுபடும் சரங்களை, அம்புகளையும் காணவில்லை. அடிபட்டு விழும் ராக்ஷஸர்களைத் தான் கண்டனர்.  திவாகரனை மறைத்து சரங்கள் அந்தகாரத்தை உண்டு பண்ணி விட்டன.  ஆகாய மண்டலமே ராம பாணங்களால் நிறைந்து விட்டதோ என்று இருந்தது. ராமன், அந்த சரங்களை அனாயாசமாக விட்டுக் கொண்டிருந்தான். ஒரே சமயத்தில் அம்புகளும், ராக்ஷஸர்களும் பூமியில் விழ. ஆங்காங்கு பூமி பிளந்தது போல ஆயிற்று.  ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள், அடிபட்டவர்கள், கீழே விழுந்தவர்கள், கை கால் துண்டாடப் பட்டவர்கள், இரண்டாக கிழிக்கப் பெற்றவர்கள், ஆங்காங்கே காணப் பட்டனர். சரீரத்தின் பல பாகங்களும் துண்டித்து தனித் தனியாக கிடந்தன. குதிரைகளும் யானைகளும் ரதங்கள் உடைந்தும், சாமரங்களும், த்வஜங்களும், வ்யஜனங்களும் இரைந்தும்  கிடந்தன.  ராமனுடைய பாணத்தால் அடிபட்ட விசித்திரமான சூலம், பட்டிசம் இவைகளும், யுத்தத்தில் அடிபட்டவர்களூமாக பூமியே பயங்கரமாகத் தெரிந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ரசைன்யாவமர்தோ3 என்ற இருபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக