பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் ஆரண்ய காண்டம் 21 – 50

பிப்ரவரி 25, 2014

அத்தியாயம் 26 (222) தூ3ஷணாதி வத4ம் (தூஷணன் முதலானோர் வதம்)

 

தன் சைன்யம் நாசமாவதைப் பார்த்த தூஷணன். மிக அதிக சாகஸம் உடைய தன் ஐந்து ராக்ஷஸர்களிடம் சண்டையிட ஆணையிட்டான். அவர்களும் சூலங்களாலும், பட்டிசங்களாலும், வாட்களாலும், கற்களை வர்ஷித்தும், மரங்களாலும்,  தங்கள் சரங்களாலும் இடைவிடாது சண்டையிட்டனர். கற்களும், மரங்களும் மழையாக பொழிவதைக் கண்ட ராமன் அவைகளை தன் பாணங்களால் இழுத்து தன் பக்கம் ஆக்கிக் கொண்டான். அவை யார் மேல் விழுந்திருந்தாலும் அவர்கள் உயிர்  இழந்திருப்பார்கள்.  கண் மூடி கண் திறப்பதற்குள் இந்த செயல் நடந்து விட, ராமன் அவர்களை  கொல்ல பெரும் கோபத்தை வரவழைத்துக் கொண்டான்.  கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போன்ற தன் அம்புகளால் தூஷணனையும் சேர்த்து அடித்தான். சேனாபதியான தூ3ஷணன் சத்ரு தூ3ஷணன் என்று பெயர் பெற்றவன். தானும் பெரும் கற்கள் போன்ற பாணங்களால் ராமனை அடித்தான்.  ராமன் தன் ஆயுதத்தால் அவன் வில்லை பிளந்தான்.  நான்கு குதிரைகளையும் ஒரே அடியில் வீழ்த்தினான். குதிரைகளையடித்து அர்த்த சந்திரன் போல சாரதியையும் வீழ்த்தி ராக்ஷஸனை மார்பில் மூன்றாக பிளந்தது.  சாரதி, குதிரை, ரதம், தன் வில் எல்லாம் ஒரே சமயத்தில் நாசமாக, அவனும் ஒரு மலைச் சிகரத்தை எடுத்துக் கொண்டு ராமன் மேல் வீசினான். இவ்வாறு யுத்தம் செய்யும் தூ3ஷணனின் இரு புஜங்களும் இற்று விழும்படி ராமன் பாணத்தை எய்தான். அவன் சரீரமும் பூமியில் விழுந்தது.  இரண்டு த3ந்தங்களையும் இழந்த தன் மானம் மிகுந்த மகா க3ஜத்தைப் போல விழுந்து கிடக்கும் தூஷணனைப் பார்த்து சாது சாது என்று எல்லா ஜீவராசிகளும் ராமனை பாராட்டின.  இதற்குள், மூன்று சேனைத் தலைவர்கள், ராமனை நோக்கி வேகமாக ஓடி வந்தார்கள். கால பாசத்தால் கட்டுண்டவர்களாக மகா கபாலன், ஸ்தூ2லாக்ஷன், ப்ரமாதீ3 என்ற பலசாலி மூவரும் வந்தனர். மகா கபாலன் என்பவன், மிகப் பெரிய சூலத்தை ஏந்தி வந்தான். ஸ்தூ2லாக்ஷன் பட்டிசம் எனும் ஆயுதத்தையும், ப்ரமாதி3 பரஸ்வதம் எனும் ஆயுதத்தையும் கையில் எடுத்து வந்தனர். தன் வீட்டிற்கு வந்த அதிதிகளை வரவேற்பதைப் போல தன் கூர்மையான பாணங்களால் அந்த ஆயுதங்களை ராமன் எதிர் கொண்டு கைப் பற்றினான்.  மகா கபாலனுடைய தலை ஒரு அம்பினால் துண்டித்து விழுந்தது. பல அம்புகளைக் கொண்டு ப்ரமாதி3யை பலமிழக்கச் செய்தான். அவன் பெரிய மரத்தின் கிளை போல கீழே சாய்ந்தான். ஸ்தூ2லாக்ஷனுடைய கண்களை கூர்மையான அம்புகளால் நிரப்பினான்.  தூ3ஷணனின் உதவிக்கு வந்த ஐந்து ராக்ஷஸர்களையும் கோபம் கொண்டு பா3ண வர்ஷத்தினால் யமலோகத்துக்கு அனுப்பினான். தூ3ஷணன் சேனையோடு அழிந்தான் என்று கேள்விப் பட்ட க2ரன், மகா பலசாலியான தன் சேனைத் தலைவர்களுக்கு ஆணயிட்டான். சாதாரண மனிதனான ராமனுடன் யுத்தம் செய்து இந்த தூ3ஷணன் மகத்தான சேனையுடன் அழிந்தான். எல்லா விதமான சஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு யுத்தம் செய்ய வாருங்கள் ராக்ஷஸர்களே, என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு ராமனை எதிர்த்து போரிடச் சென்றான். ஸ்யேனகாமி, ப்ருது2க்3ரீவோ, யக்ஞ சத்ரு, விஹங்க3ம:, து3ர்ஜய:, கரவீராக்ஷ:, பருஷன், கால கார்முகன், மேக4 மாலி, மகா மாலி, சர்ப்பாஸயோ, ருதி4ராசனன், என்ற பன்னிரண்டு படைத் தலைவர்கள், சைன்யத்துடன் கூட ராமனை நோக்கி முன்னேறினர்.  கூடவே தீவிரமான ஆயுதங்களையும் விட்டனர். அந்த சைன்யத்தின் அம்புகளைக் கொண்டே, நெருப்பின் ஜ்வாலை போல பள பளக்கும் அம்புகளைக் கொண்டு அந்த ராக்ஷஸர்களை அடித்து வீழ்த்தினான். வஜ்ரத்தால் அடிபட்ட பெரிய மரங்கள் போல அவர்கள் கீழே விழுந்தார்கள்.  நூறு ராக்ஷஸர்களை ராமர் நூற்று ஒரு கர்ணி என்ற ஆயுதத்தால்  அடித்தார். ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தை ஆயிரத்தால் அடித்தார்.  இதனால் ஆயுதங்களை இழந்து, உடலும் சின்னா பின்னமாகி ராக்ஷஸர்கள் பூமியில் விழுந்தனர். அவர்களுடைய தலையின் கேசம் யுத்தத்தில் விழுந்தவர்களின் ரத்தம் தோய்ந்த தலைகள் பூமியில் சிதறிக் கிடந்தன.  இந்த கோரமான யுத்தம் க்ஷண நேரத்தில் முடிந்து வனம் ராக்ஷஸர்களே இல்லாமல் ஆயிற்று. பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்களின் உடல் தான் மீதியாக கிடந்தன. ராமன் ஒருவனாக பதா3தியாக (தன் கால்களில்) நின்று, தனி மனிதனாக க2ரன் ஒருவன் தவிர மற்ற அனைவரையும் மாய்த்தான். த்ரிசிரஸ் என ஒரு ராக்ஷஸனும், க2ரனும் தான் ராமனுக்கு எதிரி பக்ஷத்தில் இருந்தனர். தன் படை பலம் முழுவதும் ராமன் கையில் மாண்டு போனதைப் பார்த்து க2ரன் ரதத்தில் ஏறி இந்திரனைப் போல ராமனை  எதிர்த்து வந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் தூ3ஷணாதி வதோ4 என்ற இருபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 27 (223) த்ரிசிரோ வத4: (திரிசிரஸின் வதம்)

 

க2ரன் வேகமாக செல்லும் பொழுது, சேனாபதியான த்ரிசிரஸ், அவனை தடுத்து, நான் போகிறேன் முதலில், அனாவசிய சாகஸம் வேண்டாம் என்று சொல்லி இதோ பார், ராமனை யுத்தத்தில் வீழ்த்திக் காட்டுகிறேன் என்று கர்வத்தோடு மேலும் தற்பெருமை பேசலானான்.  நான் சொல்வது சத்யமே. ஆயுதத்தை ராமனை வதம் செய்யும் விதமாக உபயோகிக்கிறேன். எல்லா ராக்ஷஸர்களையும் அழித்த அவனை வதம் செய்யாமல் விடக் கூடாது. இன்று யுத்தத்தில் நானா, ராமனா என்று பார்த்து விடலாம், யார் ம்ருத்யு வசம் அடைகிறார்கள் என்று பார். ஒரு முஹுர்த்த நேரம் இந்த ரண களத்திலிருந்து விலகி பார்வையாளனாக இருந்து பார்.  நான் ராமனை வீழ்த்தினால் சந்தோஷமாக ஜனஸ்தானம் திரும்பி போவாய்.  அல்லது நான் இறந்தால் ராமனுடன் சண்டை செய்யப் போவாய். இவ்வாறு த்ரிசிரஸ் சொல்லவும், க2ரன், சரி போய் யுத்தம் செய் என்று சொல்லியனுப்பினான். த்ரிசிரஸ் குதிரை பூட்டிய ரதத்தில் இருந்த படியே ராமனை எதிர்த்துச் சென்றான். ஒரு மலைக்கு மூன்று சிகரம் முளைத்தாற்போல இருந்தான் த்ரிசிரஸ்.  மகா மேகம்போல சரங்களை வர்ஷித்தான், அதற்கு சமமாக தானும் கோஷமிட்டான். வேகமாக வந்து கொண்டிருந்த த்ரிசிரஸ் என்ற ராக்ஷஸனைப் பார்த்து ராமன், கூர்மையான அம்புகளை எடுத்து வில்லில் வைத்து குறி பார்த்துக் கொண்டான். ராமனுக்கும் த்ரிசிரஸHக்கும் நடுவில் பயங்கரமான யுத்தம் மூண்டது. சிங்கமும் யானையும் சண்டையிடுவது போல இருந்தது.  த்ரிசிரஸின் பாணம் ராமனின் நெற்றியில் பட்டது. மூன்று முறை இவ்வாறு படவும், ராமர் கோபத்துடன் த்ரிசிரஸிடம், அஹோ, விக்ரமனான இவன் சூரன். ராக்ஷஸனுக்கு இப்படி ஒரு பலமா? பூக்களைப் போடுவது போல என் நெற்றியில் அடித்து விட்டான். இதோ, என் அம்பையும் அனுபவித்துப் பார். என்று சொல்லி ஆலகால விஷம் போல கூர்மையான அம்புகளை எய்து, அவன் வயிற்றுப் பகுதியில் பதினாறு முறை விட்டார். நான்கு முறை குதிரையில் ஏறி பவனி செல்லும்பொழுது அடித்தார். நான்கு பாணங்கள் குதிரையை வீழ்த்தின. எட்டு பாணங்கள் ரதத்தில் இருந்த வீரனை கீழே தள்ளின. அவனுடைய த்வஜத்தையும் ராமர் கீழே தள்ளினார். ரதமும் இன்றி கீழே நின்ற அவனையும், சாரதியையும் சரியாக மார்பில், படும்படி அடித்தார். அவன் ஜடமாக ஆனான். மிகவும் கோபத்துடன் மூன்று பாணங்களால் அவன் மூன்று தலையும் தெறித்து விழும்படி, செய்தார். அவன் ரத்தம் கக்கிக் கொண்டு பூமியில் விழுந்தான். கரனுடைய பக்ஷ ராக்ஷஸர்கள், பலரும் இவ்வாறு அடிபட்டு விழுந்தனர். புலி துரத்திய மிருகங்கள் போல ஓடி மறைந்தனர்.  இவ்வாறு ஓடியவர்களை கரன் தடுத்து நிறுத்தி, தானே ராமனை எதிர்கொண்டு போரிடச் சென்றான். ராகு சந்திரனை பிடிக்கப் போவது போல சென்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் த்ரிசிர வதோ4 என்ற இருபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 28 (224) க2ர ராம சம்ஹார: (கரனும் ராமனும் போரிடுதல்)

 

ரண களத்தில் தூ3ஷணன் விழுந்ததையும், த்ரிசிரஸ் மாண்டதையும் கண்ட க2ரனுக்கு ராமனிடத்தில் பயம் தோன்றியது. எதிர்க்க முடியாத ராக்ஷஸ சைன்யம் அழிந்தது. த்ரிசிரஸHம், தூ3ஷணனும் ஒரே அம்பில் மாண்டனர். ராக்ஷஸர்களில் மீதி இருந்தவர்களும்  சண்டையிட மனமின்றி இருப்பதைப் பார்த்த க2ரன், தானே ஆலகால விஷம் போன்ற பாணங்களை ராமன் பேரில் எய்தான். வில்லின் நாணை சுண்டி நாதம் வரச் செய்து, தன் பயிற்சி பெற்ற அஸ்திரங்களை காட்டி, தன் ரதத்தில் இருந்தபடியே யுத்த பூமியைச் சுற்றி  வந்தான். எல்லா திக்குகளிலும் தன் பாணங்களை செலுத்தி பார்த்துக் கொண்டான்.  ராமரும் தன் வில்லை நிறுத்தி அம்புகளை பூட்டிக் கொண்டு தயாரானார். தீப்பொறி பறப்பது போல் எதிர்த்து அடிக்க முடியாத அம்புகளை பிரயோகம் செய்தார். ஆகாயம் துளி கூட இடம் இன்றி, மழை மேகம் பொழிவது போல, ராமனும் கரனும் விட்ட பாணங்கள் ஆகாயத்தையே மறைத்து எங்கும் அம்பு மயமாகத் தெரிந்தன.  இந்த சர ஜாலம் மறைக்க, சூரியன் இருப்பதே கூட தெரியவில்லை.  ஒருவரையொருவர் வதைக்கும் உத்தேத்துடன் போரிடும் சமயம், ஒரு முறை கூர்மையான பாணத்தால் க2ரன், ராமனை அடித்தான். கையில் வில்லுடன் ரத்த்தில் ஏறி வரும் க2ரன், பாசக்  கயிற்றுடன் வரும் யம ராஜனை ஒத்திருந்தான், ராமன் களைத்து இருப்பதாக க2ரன் நினைத்தான். சிங்கம் போல வீறு நடை போடுபவன், அதே போல வீர்யம் உடையவன், ஏதோ சிறு மிருகத்தைக் கண்டு மிருக ராஜா லக்ஷியம் செய்யாது போவது போல அலட்சியமாக இருந்தான். பிரகாசமான ரதத்தில் சூரியனுக்கு போட்டியாக வந்த க2ரன், ராமனைப் பார்த்து விட்டில் பூச்சிகள், நெருப்பை நெருங்குவது போல நெருங்கினான். தன் கை முஷ்டியில் வில்லை பிடித்திருக்கும் இடத்தில் அம்புகளைப் போட்டு வில்லை முறித்தான். திரும்பவும் ஏழு சரங்களை எடுத்து, இந்திரனுடைய  வஜ்ராயுதத்திற்கு சமமான பாணங்களை கோபத்துடன் க2ரன் விட்டான். க2ரனுடைய இந்த அம்புகள் தாக்கி ராமனுடைய கவசம் கீழே விழுந்தது. மேலும் ஆயிரக் கணக்கான பாணங்களை போட்டு அடித்து விட்டு, ராக்ஷஸன் பெருங்குரலில் எக்காளமிட்டான். அந்த ஆயுதங்கள் உடல் பூரா தைத்து காயம் பட்ட நிலையிலும் ராமன், புகையில்லாத நெருப்பு போல ஜ்வலித்தான்.  கம்பீரமான யுத்த நாதம் செய்து, ராமன் எதிரியை முடிவு கட்டும் பொருட்டு, தன் பெரும் வில்லை தயார் செய்து கொண்டு, மகானான வைஷ்ணவ வில்லை எடுத்து, மகரிஷி கொடுத்த வில்லையும், பாணங்களையும் எடுத்துக் கொண்டு, க2ரனை நோக்கி ஓடினான்.  பொன்னொளி வீசும் அந்த பாணங்களைக் கொண்டு முதலில் ராமன் க2ரன்  ரதத்திலிருந்து த்வஜத்தை  கீழே விழச் செய்தான்.  பொன்னிறமான அந்த த்வஜம் பல துண்டுகளாக சிதறி விழுந்தது.  க2ரனும் நான்கு பாணங்களால் ராமனது உடலில் மர்ம ஸ்தானங்களில் படும் படி விட்டான். க2ரனின் வில்லிலிருந்து புறப்பட்ட பல பாணங்கள் பட்டு ராமனது உடலும், ரத்தத்தில் தோய்ந்தது.  வில்லை எடுத்து ஆறு பாணங்களை குறி பார்த்து அடித்தார்.  தலையை ஒரு பாணம் கொய்தது. இரண்டு பாணங்கள் புஜங்களை வெட்டித் தள்ள, மூன்று அர்த்த சந்திர வடிவிலான பாணங்கள் மார்பில் அடித்தன.  அதன் பிறகு மகா தேஜஸ்வியான ராமன், சூரியனுக்கு ஒப்பான நாராசமான பதின் மூன்று சரங்களை ராக்ஷஸனைக் கொல்ல  ஏவினார்.  இதில் ஒரு ஜோடி நான்கு குதிரைகளையும், ஆறு தலையையும், கரனுடைய ரத சாரதியையும் வீழ்த்த, மூன்று மூன்று தலையின் கேசத்தையும், இரண்டு கண்களையும் அடித்தன. பன்னிரண்டாவது பாணம் அம்போடு வில்லை கீழே தள்ளியது.  பதிமூன்றாவது பாணத்தை சிரித்துக் கொண்டே, இந்திரன் போன்ற கரன் பேரில் எய்தார். தன் வில்லும் ஒடிந்து விழ, குதிரைகள், ரதம் எல்லாம் இழந்து, சாரதியும் இறந்து போன பின்னும் க2ரன் க3தை4யை கையில் எடுத்துக் கொண்டு தரையில் நின்றான். இந்த அரிய செயலைக் கண்டு மகாரதியான ராமனை பாராட்டி, தேவர்களும், மகரிஷிகளும், மிகவும் மகிழ்ந்து கை கூப்பி வணங்கினர்.  விமானத்திலிருந்த  பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் ஆரவாரித்தனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ர ராம சம்ப்ரஹார: என்ற இருபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 29 (225) க2ர க3தா4 பே43னம் (கரனுடைய கதையை உடைத்தல்)

 

ரதத்தை இழந்த பின் க3தை4யை தூக்கிக் கொண்டு வந்த கரனை மிருதுவாக ஆரம்பித்து கடுமையாக சாடினார். யானை, குதிரை, ரதங்களோடு  பெரும் பலம் உடன் இருக்கும் பொழுது பயங்கரமாக யுத்தம் செய்தாய். உலகில் எல்லோரும் ஆச்சர்யப் படும் படி சண்டையிட்டாய். உலகில் பாபம் செய்யும் கொடியவன் தண்டிக்கப் பட வேண்டியவனே. மூன்று உலகுக்கும் நாயகனானாலும் இதில் மாற்றம் இல்லை. க்ஷணதா3சர (ராக்ஷஸ) லோக விருத்34மான- விரோதமான, காரியத்தைச் செய்யும், கடுமையானவனை உலகம்  தண்டிக்கிறது.  துஷ்ட சர்ப்பம் வீட்டுக்குள் வந்தால் அடிப்பது போல.  லோப4த்தினால் பாபத்தை செய்பவர்கள், காமத்தினால் செய்பவர்கள், தான் செய்வது பாபம் என்று அறியாத பொழுது தன் நிலை இழந்து முடிவை அடைகிறார்கள். ப்3ராம்மணி என்ற சிறு ஜந்து, நகத்தை விழுங்கினாற் போல (ப்ராம்மணி- க்ஷுத்ர ஜந்து, மிகச் சிறிய ஜீவன்.  கரகா3– விரல் நகம்) தர்ம வழியில் தவம் செய்து கொண்டு தண்டகா வனத்தில் வசிக்கும் தபஸ்விகளைக்  கொன்று என்ன பலம் கிடைக்கும் என்று எதிர் பார்த்தாய், ராக்ஷஸனே, உலகில் ஜனங்கள் விரும்பாத செயல்களைச் செய்து, க்ரூரமாக பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் வெகு காலம் சந்தோஷமாக வாழ மாட்டார்கள். வேர் அறுபட்ட மரம் போல விழுவார்கள். பாபத்தின் பலனை எந்த ஜீவனானாலும் அனுபவித்தே தீர வேண்டும்.  காலம் வரும் பொழுது, தால விருக்ஷத்தின் புஷ்பம் போல வெகு சீக்கிரத்தில் அதன் பலனை அடைகிறார்கள்.  பாப கர்மத்திற்கு பலன் கை மேல் கிடைத்து விடுகிறது. விஷம் கலந்த அன்னம் உண்டது போல. ராக்ஷஸனே, நான் அரசனால் நியமிக்கப் பட்டிருக்கிறேன்.  கோரமான பாபத்தை செய்பவர்களை, உலகில் விரும்பத் தகாததை செய்பவர்களை தண்டிக்கும்படி,  உயிரை வாங்கும்படி எனக்கு கட்டளை. ராக்ஷஸனே, இன்று தான் என்னால் விடப்பட்ட சரங்கள் உன் உடலை கிழித்து கீழே தள்ளப் போகின்றன. எறும்பு புற்றை பாம்புகள் அழிப்பது போல. இந்த தண்டகாரண்யத்தில் நீ தின்று தீர்த்த தபஸ்விகளின் எண்ணிக்கையில், நீயும் உன் படை வீரர்களோடு போய் சேருவாய். ரிஷிகள் இன்று நீ, என் பாணங்களால் அடிபட்டு விழுவதை பார்க்கட்டும்.  நரகத்தில் இருக்கும் உன்னை விமானத்தில் இருந்த படி பார்க்கட்டும். இவர்கள் முன்னால் உன்னால் ஹிம்சிக்கப் பட்டவர்கள் அல்லவா. உன்னால் முடிந்தவரை முயன்று பார். பனங்காயைத் தள்ளுவது போல இன்று உன் தலையை உருட்டுவேன். இவ்வாறு  ராமன் சொல்லவும், கோபத்தால் கண்கள் சிவக்க சிரித்துக் கொண்டே கரன் பதில் சொன்னான். என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் பிதற்றினான். தசரத குமாரா, ப்ராக்ருதமான, ராக்ஷஸர்களைக் கொன்று விட்டு தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறாய். இப்படி புகழ்ந்து சொல்லிக் கொள்ள உனக்கு என்ன தகுதி இருக்கிறது? விக்ரமும் பலமும் உள்ள நரோத்தமர்கள், தங்களைப் பற்றி, கர்வத்தோடு பேசிக் கொள்ள மாட்டார்கள். ப்ராக்ருதர்கள், நாகரீகம் அறியாத கிராம வாசிகள், எதையும் செய்யாமல், க்ஷத்திரிய குலத்துக்கே களங்கம் விளைவிப்பவர்கள், அர்த்தம் இல்லாமல் பிதற்றுவார்கள்.  இப்பொழுது ராமா, நீ பிதற்றுவது போல. தன் குலத்தின் பெருமை விளங்க எவன் யுத்தத்தில் ஈடுபடுகிறானோ, அவன் வெறும் பேச்சு பேச மாட்டான். ம்ருத்யு எதிரில் நிற்கும் பொழுது தானே தன்னை புகழ்ந்து பேசிக் கொள்வது லகு4த்வம். கையால் ஆகாத தன்மை தான் வெளிப் படும்.  செயல் அறியாதவன் தான் பேசுவான். பொன்னிறமான குசாக்னி, எரியும் போது தங்கமாக தெரியும், அது போல.  இங்கு நான் க3தை4யுடன் நிற்பது உன் கண்களுக்குத் தெரியவில்லை.  பூமியில் கால் பதித்து இருந்தாலும், மலை பலவித தாதுக்களுடன்  நிற்கும் பொழுது அசைக்க முடிவதில்லை. அது போல என்னை அசைக்க முடியாது. உன் உயிரைக் குடிக்க என் க3தையே போதுமானது. மூன்று உலகிலும் பாசத்தை ஏந்திய யமனுக்கு சமமானவன் நான். இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால், உன்னிடத்தில் பேசி நேரத்தை வீணாக்குவானேன். இதோ சூரியன் அஸ்தமனம் ஆகி விடும்  யுத்தத்திற்கு இடைஞ்சலாக. சூரியன் அஸ்தமித்த பிறகு யுத்தம் செய்யக் கூடாது.  பதினாலாயிரம் ராக்ஷஸர்களை நீ கொன்றிருக்கிறாய். உன்னைக் கொன்று அவர்கள் கண்ணீரை துடைப்பேன். இவ்வாறு சொல்லிக் கொண்டே பெரும் கோபத்துடன் க3தை4யை தூக்கி ராமனை அடித்தான். சூடான கல் போல இருந்த அந்த க3தை4 கரன் கையிலிருந்து விடுபட்டு, மரங்களையும், புதர்களையும் பஸ்மமாக்கிக் கொண்டு, அவன் அருகிலேயே வந்து சேர்ந்தது. ம்ருத்யு பாசம் போன்று வேகமாக வந்து விழும் அந்த க3தை4யை ராமன் தன் பாணத்தினால் அந்தரிக்ஷத்திலேயே பல துண்டுகளாக சிதறிப் போகும்படி செய்தான்.  ராம பாணத்தால் சிதறுண்டு போன அந்த க3தை4, மந்த்ர ஔஷதி பலத்தினால் அடக்கப் பட்ட பாம்பைப் போல விழச் செய்யப் பட்டது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ர க3தா4 பேதனம் என்ற இருபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 30 (226)க2ர சம்ஹார: (கரனை சம்ஹாரம் செய்தல்)

 

தர்ம வத்ஸலனான ராமன், அந்த க3தை4யை ஒடித்து விட்டு, சிரித்துக் கொண்டே, பரபரப்படைந்த க2ரனிடம் இவ்வாறு சொன்னார். ராக்ஷஸனே, இதோ உன் பலத்தை காண்பித்து விட்டாய். அத4மனே, என்னை விட பல மடங்கு சக்தி குறைந்தவன். வீணாக கர்ஜிக்கிறாய். இதோ பார் உன் க3தை4. என் பாணத்தால் துளைக்கப் பட்டு சிதறி பூமியில் கிடக்கிறது. உன் பெயரைச் சொல்லி கர்வப் பட்டுக் கொண்டாயே. உன்னிடத்தில், எதிரியை கொல்லும் க3தை4 இருப்பதாக சொல்லிக் கொண்டாய்.  நீ சொன்னாயே, இறந்து பட்ட ராக்ஷஸர்களின் கண்ணீரைத் துடைப்பேன் என்று, கர்வமாக பேசினாயே, அந்த வார்த்தையையும், அல்ப குணம் கொண்ட உன் தாழ்ந்த போலியான நடத்தையையும், ராக்ஷஸனின் உயிரையும் சேர்த்து எடுக்கிறேன். க3ருடன் அம்ருதத்தை எடுத்தது போல. இன்று உன் தலை வேறான உடலிலிருந்து நிண நீர் பெருகப் போகிறது. நுரையாக பெருகி வரும். அதோடு என் பாணத்தால் துளைக்கப் பட்டு பெருகும் ரத்தமும் சேர்ந்து பூமி குடிக்கட்டும். உடல் பூராக, மண் ஒட்டிகொண்டிருக்க, புஜங்கள் இரண்டையும் இழந்தவனாக பூமியை அணத்துக் கொண்டு தூங்கு. கிடைக்க முடியாத ஸ்த்ரீயை அடைந்தது போல தூங்கு. நீ மீளாத தூக்கத்தில்  ஆழ்ந்தபின், ராக்ஷஸாத4மனே, இந்த தண்டகாரண்யம், புகல் இல்லாதவர்களின் புகலிடமாக ஆகப் போகிறது. என் பாணங்கள் ஜனஸ்தானத்தை ஹதம் செய்தபின், ராக்ஷஸனே, முனிவர்கள் இந்த காடுகளில் பயமில்லாமல் சஞ்சரிப்பார்கள்.  ராக்ஷஸிகள், எப்பொழுதும் மற்றவர்களை பயமுறுத்துபவர்கள், இன்று முகம் வாடி, தங்கள் பந்துக்களை இழந்தவர்களாக, கண்களில் நீர் மல்க, தாங்களே பயந்து நிற்கப் போகிறார்கள்.  சோக ரஸம் என்றால் என்ன   என்று அறிந்து கொள்ளப் போகிறார்கள்.  உனக்கு அனுரூபமான பத்னிகள், நீ அவர்களுக்கு இது போல ஒரு கணவன். நீ இப்படி கொடியவனாக, அல்பனாக, நித்யம் ப்ராம்மணர்களுக்கு இடைஞ்சலாக இருந்து வந்ததால், முனிவர்கள் உன்னை நினைத்து பயந்து கொண்டே ஹோமத்தில் ஹவிஸைப் போடுவார்கள். இப்படி ராமன் பேசிக் கொண்டே போன போது க2ரன், இடை மறித்து, தன் கடுமையான குரலில், குற்றம் சொல்லலானான்.  ஆஹா, ரொம்ப த்3ருடமாக பயப் பட வேண்டிய இடத்திலும் பயப்படாமல், அலட்சியம் காட்டுகிறாய். எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாது என்பதை, மரணத்தின் வாயில் விழுந்தவர்கள் உணருவதில்லை.  கால பாசத்தில் கட்டுப் படுகிறார்கள். இந்திரியங்களை அடக்காதவர்கள், செய்ய வேண்டியது எது, செய்யக் கூடாதது எது என்றும் அறிவதில்லை. ராமனைப் பார்த்து தன் புருவத்தை நெரித்துக் கொண்டு, அருகில் இருந்த மகா சால மரத்தைக் கண்டான் க2ரன். அதை பல்லைக் கடித்துக் கொண்டு வேரோடு பிடுங்கி, ராமன் பேரில், இதோ நீ அழிந்தாய் என்று சொல்லிக் கொண்டே வீசினான். மேலேயிருந்து விழும் அந்த மரத்தை தன் பாணங்களால் சிதைத்து, ராமன் கோபத்தை வரவழைத்துக் கொண்டான். இனி க2ரனை உயிருடன் விடுவதில்லை, கொன்றே ஆக வேண்டும் என்று தீர்மானித்து, உடலில் வியர்வை  ஆறாக பெருக கண்கள் சிவக்க, பல ஆயிரம் பாணங்களால் கரனைப் பிளந்தான். ப்ரஸ்ரவன மலையில் அருவி நீர் வீழ்ச்சியாக கொட்டுவது போல க2ரன் உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. எதுவும் செய்ய இயலாதபடி செயலிழந்து போன க2ரன், மதம் பிடித்தவன் போல், ராமனை நோக்கி ஓடி வந்தான். தன் பாணத்தால் அடிபட்டு கிழே வேகமாக விழும் கரனின் உடல் தன் மேல் படாதவாறு விலகி,  நெருப்பு போன்ற ஒரு சரத்தை யுத்தத்தில் கரனை வதம் செய்வதற்காகவே, மற்றொரு ப்ரும்ம தண்டம் போன்ற அஸ்திரத்தை ராமன் பிரயோகித்தான்.  இது தேவ ராஜனான இந்திரனால் ராமனுக்கு கொடுக்கப் பட்டது. ராமனின் வில்லிலிருந்து புறப்பட்ட இந்த அஸ்திரம் க2ரனின் மார்பில் பட்டது.  இந்த அஸ்திரத்தின் சூட்டைத் தாள மாட்டாமல், க2ரன் பூமியில் விழுந்தான்.  ஸ்வேதாரண்யம் என்ற இடத்தில் (திருவெண்காடு) அந்தகன் விழுந்தது போல கீழே விழுந்தான். விருத்ராசுரன், வஜ்ரத்தால் அடிபட்டது போல பேஃன என்பவனால் நமுசி அடிபட்டது போலவும், இந்திரனின் அசனி என்ற ஆயுதத்தால் அடிபட்டவன் போல விழுந்தான்.  அச்சமயம் ராஜ ரிஷிகளும், மகரிஷிகளும் எல்லோருமாக வந்து ராமனை வாழ்த்தி சந்தோஷமாக சொன்னார்கள். மகாபா4க, (நல்ல அதிருஷ்டம் உடையவனே)  ராமா, இந்த காரணத்திற்காகத் தான் இந்திரன் சரபங்கரின் ஆசிரமத்திற்கு வந்தான். இந்த தேசத்திற்கு முனிவர்களால் வரவழைக்கப் பட்டாய். (ஏதோ ஒரு காரணம் சொல்லி)  இந்த க்ரூரமான ராக்ஷஸர்களை வதம் செய்யவே வந்தது போல இங்கு வந்து சேர்ந்தாய்.  எங்கள் கஷ்டத்தை நீக்கி விட்டாய்.  தசரத குமாரனே, இனி ரிஷிகள் சுகமாக தங்கள் தவத்தை செய்வார்கள். தண்டகா வனத்தில் இனி உபத்ரவம் எதுவும் இராது. இதற்க்கிடையில், தேவர்கள், சாரணர்களுடன் வந்து சேர்ந்தார்கள். துந்துபி முழங்க, புஷ்பங்களை மழையாக பொழிந்தார்கள். ஆச்சர்யம் கொண்டவர்களாக பிரமித்தபடி ராமனை சந்தோஷமாக வாழ்த்தினர். அரை முஹுர்த்தத்திற்கு சற்றே அதிகமான நேரத்தில் ராமன் கூர்மையான பாணங்களால் பதினாலாயிரம் ராக்ஷஸர்களை, பயங்கரமான செயல்களை தயங்காமல் செய்ய வல்லவர்களை, க2ர, தூ3ஷண ராக்ஷஸர்களையும், மற்ற ராக்ஷஸர்களையும் பெரும் யுத்தத்தில் மாய்த்து விட்டான். அஹோ, எவ்வளவு பெரிய காரியம். ராமன் விளையாட்டாக செய்து விட்டான். அஹோ, வீர்யம், அஹோ தா3க்ஷ்யம் (புத்திசாலித் தனம்) விஷ்ணுவைப் போலத் தெரிகிறான். இவ்வாறு பேசிக் கொண்டே தேவர்கள் தங்கள் இருப்பிடம் சென்றார்கள். இதற்குள் வீரனான லக்ஷ்மணன் சீதையுடன் மலை குகையிலிருந்து வெளி வந்து ஆசிரமத்தை அடைந்தான். ராமனோ வெற்றி வீரனாக, மகரிஷிகள் வாழ்த்த, ஆசிரமத்தில் நுழைந்தான். லக்ஷ்மணனும் உடனே வந்து ராமனை விசாரித்தான். சத்ருக்களை அழித்த அந்த வீரனை, மகரிஷிக்கு நன்மையை செய்தவனைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சீதை ஆலிங்கனம் செய்து கொண்டாள்.  ராக்ஷஸ கணங்கள் அழிந்ததோடு, ராமனையும்  நலமாக கண்டதில் அவள் மகிழ்ச்சியடைந்தாள். மகரிஷிகள் ராக்ஷஸர்களை கூட்டத்தோடு அழித்ததைப் பாராட்டி பேசி, சந்தோஷமாக வாழ்த்த, தன் கணவனை பெருமிதத்தோடு ஜனகன் மகள் திரும்பவும் தழுவிக் கொண்டாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ர ஸம்ஹாரோ என்ற முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 31 (226) ராவண க2ர விருத்தோபலம்ப:

(ராவணனிடம் கரன் பற்றிய விவரம் சொல்லப் படுதல்)

 

ஜனஸ்தானத்திலிருந்து அகம்பனன் என்ற ராக்ஷஸன், ராவணனிடம் விஷயம் சொல்ல, வேகமாக ஒடி லங்கையை சென்றடைந்தான்.  ராஜன், ஜனஸ்தானத்திலிருந்த பல ராக்ஷஸர்கள் கொல்லப் பட்டார்கள். க2ரனும் வீழ்ந்தான். எப்படியோ நான் தப்பி வந்தேன் என்றான். இதைக் கேட்டு ராவணன் கண் சிவக்க, கண்களாலேயே எரித்து விடுபவன் போல பார்த்துக் கொண்டு அவனை மேலும் விசாரித்தான். யார் அவன்? அழகான ஜனஸ்தானத்தை ஏன் அழித்தான்? யார் அவன்? மூவுலகிலும் இடம் இல்லாமல் தவிக்கப் போகிறான்.  எனக்கு பிடிக்காததை செய்து விட்டு, இந்திரனேயானாலும் சுகமாக இருக்க முடியாது. வைஸ்ரவனும், யமனும், ஏன் விஷ்ணுவே கூட சுகமாக இருக்க முடிந்ததில்லை. காலனுக்கும் நான் காலன். நெருப்பையும் சுட்டு பொசுக்குவேன். ம்ருத்யுவை, மரண தர்மத்தோடு இணைத்து வைப்பேன். எனக்கு கோபம் வந்தால் அக்னியையும், சூரியனையும் கூட தகிப்பேன். காற்றை அதன் வேகத்தை தடுத்து நிறுத்த என்னால் முடியும். இவ்வாறு கோபத்துடன் பேசும் த3சக்3ரீவனைப் பார்த்து அகம்பனன் நடுங்கிக் கொண்டு கை கூப்பி அஞ்சலி செய்தவனாக பதில் சொன்னான்.  பயத்துடன் நாக்குழற,  ராவணனிடம் அபயம் யாசித்தான்.  ராக்ஷஸர்களில் சிறந்தவனான ராவணன் அவனுக்கு அபயம் அளித்து சமாதானப் படுத்தவும், அகம்பனன் நடுக்கம் குறைந்து பேசலானான். த3சரத2 குமாரன், சிங்கம் போல கர்ஜிக்கிறான். சிங்கத்திற்கு சமமான பலம் உடையவன். ராமன் என்று பெயர். அகன்ற மார்பும், நீண்ட புஜங்களுமுடையவன்.  வீரன். மிகப் புகழ் வாய்ந்தவன். ஸ்ரீமான். அளவில்லாத விக்ரமம் உடையவன். தூ3ஷணன், க2ரன் இவர்களையும் சேர்த்து, ஜனஸ்தானம் அழிந்தது. இதைகேட்டு, ராவணன், நாக ராஜன் போல பெருமூ<மூச்சு விட்டுக் கொண்டு, அகம்பனா, அந்த ராமன் ஜனஸ்தானம் எப்படி வந்தான்?  இந்திரனோடு எல்லா அமரர்களையும் அழைத்துக் கொண்டு வந்தானா? அகம்பனன் பதில் சொன்னான்.  ராமனுடைய பலத்தையும், விக்ரமத்தையும் விவரமாக சொன்னான்.  ராமன் என்று பெயருடையவன். மிகுந்த தேஜஸ்வி. வில்லேந்தியவர்களுள் சிறந்தவன் அவனே. திவ்யாஸ்திரங்கள் பல அவனிடம் உள்ளன.  யுத்தம் என்று வந்தால் இந்திரனுக்கு சமமாக போர் செய்ய வல்லவன். அவனுக்கு அனுரூபமான ஒரு சகோதரன். லக்ஷ்மணன் என்று பெயர். அவனும் நல்ல பலசாலி. சிவந்த கண்களும், துந்துபி முழங்குவது போல முழங்கும் குரலும் உடையவன். இளையவன்.  சந்திரன் போன்ற முகக் காந்தியுடையவன். இவர்கள் இருவரும் சேர்ந்தால், நெருப்பும், காற்றும் சேர்ந்தாற்போல ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பர்.  ராஜ குமாரனான ஸ்ரீமான் ராமனால் ஜனஸ்தானம் அழிந்தது.  தேவர்கள் யாரும் இல்லை.  சந்தேகமே இல்லை. ராமன் கையிலிருந்து புறப்பட்ட பாணங்கள், பொன்னிறமானவை.  ஐந்து முகம் கொண்ட நாகங்கள் போல ராக்ஷஸர்களை விழுங்கி விட்டது. ராக்ஷஸர்கள் பயந்து கொண்டு எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் ராமனே எதிரில் நிற்கக் கண்டார்கள். இவ்வாறு ஜனஸ்தானம் முழுவதும் அவனால் நாசமாக்கப் பட்டது.  அகம்பனனின் வார்த்தையைக் கேட்டு ராவணன், இப்பொழுதே ஜனஸ்தானம் போய் ராம லக்ஷ்மணர்களை அழிக்கிறேன் என்று கிளம்பினான்.  அகம்பனன் தொடர்ந்தான். ராஜன், கேள். ராமனுடைய பலத்தையும், பௌருஷத்தையும் பற்றி இன்னமும் கேள். கோபம் கொண்ட ராமனை எதிர்க்க இயலாது. விக்ரமத்தால் பெரும் புகழ் எய்தியவன். சுபர்ணா நதியின் வேகத்தை தன் பாணங்களால் தடுத்து நிறுத்தக் கூடியவன்.  தாரா, க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள் இவற்றோடு சேர்த்து ஆகாயத்தை வளைக்க கூடியவன். இந்த ராமன் மூழ்கிக் கொண்டிருக்கும் பூமியை தூக்கி நிறுத்தக் கூடியவன். சமுத்திரத்தின் அலைகளை தடுத்து, பிளந்து பூமியில் உலகனைத்தையும் மூழ்கச் செய்யக் கூடியவன். சமுத்திரத்தின் வேகத்தையும், காற்றே ஆனாலும், அதன் வேகத்தையும் தன் கரங்களால் தடுக்கக் கூடியவன்.  உலகங்கள் அனைத்தையும் அழித்து விட்டு திரும்ப ஸ்ருஷ்டிக்கக் கூடியவன்.  அவ்வளவு விக்ரமமும், பெரும் புகழும் உடையவன்.  அந்த ராமனை நீ யுத்தத்தில் ஜயிக்க முடியாது. மற்ற ராக்ஷஸர்களும் ஜயிக்க முடியாது. பாபியான ஜனங்களுக்கு ஸ்வர்கம் கிடைக்காதது போல உனக்கு அவனை ஜயிக்க முடியாது. எல்லா தேவர்களும், அசுரர்களும் சேர்ந்தாலும் அவனை வதம் செய்ய முடியாது என்று தோன்றுகிறது. ஒரு உபாயம் உண்டு, கவனமாக கேள். அவனுடைய மனைவி, உலகிலேயே உத்தமமான ஸ்த்ரீ.  சீதை என்று பெயர். அழகிய இடை உடையவள். சமமான அங்கங்களை உடையவள். ஸ்யாமா. ஸ்த்ரீ ரத்னம் அவளே. மேலும் ரத்னங்களாலான ஆபரணங்களை அணிந்திருக்கிறாள். தெய்வ மகளோ, கந்தர்வ ஸ்த்ரீயோ அப்ஸரமகளோ, ராக்ஷஸ குலப் பெண்ணோ, அவளுக்கு சமமாக ஆக மாட்டார்கள். மனிதர்களில் எங்கு இருக்கப் போகிறார்கள்? அந்த மனைவியை நீ கடத்திச் செல். வஞ்சனையினால் மகா வனத்திலிருந்து தூக்கிச் செல். அவளைப் பிரிந்து, அவளிடம் உயிரை வைத்துள்ள ராமன் உயிரை விட்டு விடுவான். சற்று யோசித்து விட்டு, ராக்ஷஸாதிபன், மகான் என்று பெயர் பெற்றவன், அகம்பனனின் சூழ்ச்சியை ஏற்றுக் கொண்டான்.  பின் அவனிடம் நல்லது, நாளை போகிறேன். நான் தனியாக சாரதியோடு போகிறேன். வைதேஹியை அழைத்து வருவேன். சந்தோஷமாக என்னுடைய பெரிய ஊருக்கு அழைத்து வந்து விடுகிறேன் என்றான். 

 

மனதில் களங்கத்தோடு, ராவணன், ஆதி3த்யனுக்கு சமமான ரதத்தில் ஏறி, நாலு திக்குகளும் பிரகாசிக்க கிளம்பினான். நக்ஷத்திரங்கள் சஞ்சரிக்கும் ஆகாயத்தில் மேகங்கள் நடுவில் பிரகாசமாகத் தெரிந்தது. தாடகையின் மகனான மாரீசனுடைய ஆசிரமம் போய்ச் சேர்ந்தான். மாரீசன் மனிதர்கள் உணவு வகைகளை, ப4க்ஷ்யம், போ4ஜ்யம் என்று வித விதமாக உபசரித்தான். தானே ஆசனம் அளித்து, குடிக்க ஜலம் கொடுத்து  பொருள் பொதிந்த சொற்களால் குசலம் விசாரித்தான். ராக்ஷஸேஸ்வரா, உலகுக்கெல்லம் அரசனே, எல்லாம்  சௌக்யமாக, குசலமாக இருக்கின்றனவா? வேகமாக இங்கு வந்தது என்ன காரியமாக இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை.  இவ்வாறு மாரீசன் சொல்லவும், மகா தேஜஸ்வியான ராவணன் யோசித்து கவனமாக பின் வருமாறு சொன்னான். நான் மிகவும் கவனமாக காப்பாற்றி வந்த ஜனஸ்தானத்தை ராமன் அழித்து விட்டான். யுத்தத்தில் நெருங்க முடியாத அந்த இடம் முழுவதும் நாசமாகி விட்டது. அதனால் அவன் மனைவியை அபகரிக்க நீ எனக்கு உதவி செய்.  இதைக் கேட்டு திடுக்கிட்ட மாரீசன் பதில் சொன்னான். யார் உனக்கு மித்ர ரூபத்தில் சத்ருவாக, சீதையைப் பற்றிச் சொன்னார்கள்? நீ நன்றாக இருப்பதை பொறுக்காத சிலர் உன் ஊரில் இருக்கிறார்கள். யார் உனக்கு சீதையை இங்கு அழைத்து வா என்று சொன்னது? அதைச் சொல். ராக்ஷஸ லோகத்தின் குலப் பெருமையை யார் உடைக்க விரும்புகிறார்கள்? இந்த விஷயத்தில் உன்னை உற்சாகப் படுத்துபவன் எவனானாலும் அவன் உனக்கு சத்ருவே. ஆலகால விஷம் உடைய கொடிய பாம்பின் வாயிலிருந்து பல்லை பிடுங்கச் சொல்லி உனக்கு உபதேசம் செய்தது யார்? இது போல ஒரு தவறான வழியை போதித்தது யார்? சுகமாக தூங்கிக் கொண்டிருந்த உன்னை யாரோ தலையில் இடறி இருக்கிறார்கள். ராகவன் என்ற யானை, உயர் ஜாதி யானை. புகழ் பெற்ற வம்சத்தில் வந்தவன் என்பது ஒன்று, தன் தேஜஸால் பிரஸித்தி பெற்றவன் என்பது ஒன்று இவை இரண்டுமே அந்த யானைக்கு இரண்டு தந்தந்தங்கள் என்று வைத்துக் கொள். அதை எதிர்த்து சீண்டுவது புத்திசாலித் தனம் ஆகாது.  இந்த ராமனை நரசிங்கனாகப் பார்.  ரண பூமியில் முடிவான சந்தியில் நிற்பவன்.  ராக்ஷஸர்களை மிருகங்களாக அழித்து விடும் பலம் உள்ளவன். இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கும் அந்த சிங்கத்தை எழுப்புவது உசிதமல்ல. கூர்மையான கத்தி போன்ற பற்களையுடையது சிங்கம் என்றால் இவன் பாணங்கள் (கூர்மையான அம்புகள்) நிரம்பிய தூணியுடையவன்.  வில்லே திமிங்கிலமாக,  புஜவேகமே சேறாக, சரங்களே அலைகளுடைய சமுத்திரமாக, மிகப் பெரிய ரண பூமியே வெள்ளமாக உள்ள ராம பாதாளம் என்பது மிக கோரமானது, அதில் குதித்து தாண்ட முயலுகிறாய். ராக்ஷஸ ராஜனே, இது சரியல்ல. லங்கேஸ்வரா, மன்னித்துக் கொள். சந்தோஷமாக லங்கை போய் சேர். உள்ளதைக் கொண்டு பிரஸன்னமாக இரு. உன் மனைவிகளுடன் ரமித்துக் கொண்டு இரு. ராமன் வனத்தில் தன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கட்டும். இவ்வாறு மாரீசன் விவரமாக சொல்லவும், ராவணன் தன் ஊரான லங்கைக்கு திரும்பிச் சென்றான். உத்தமமான தன் வீட்டினுள் நுழைந்தான். 

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராவண க2ர விருத்தோபலம்ப: என்ற முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 32 (228) சூர்ப்பணகோத்3யம: (சூர்ப்பணகையின் முயற்சி)

 

இதற்கிடையில், சூர்ப்பணகா தன்னைச் சார்ந்த க2ரன், தூ3ஷணன், த்ரிசிரஸ், மற்றும் பதினாலாயிரம் ராக்ஷஸர்கள் ஒருவர் பின் ஒருவராக, ராமன் ஒருவன் எதிரில் நிற்க முடியாமல் மடிந்து விழுந்ததை நம்ப முடியாமல், திகைத்தவள், பெரும் குரலெடுத்து அழலானாள். பலசாலிகள், செயற்கரிய செயல்களை எவ்வளவோ பயங்கரமான செயல்களையும் செய்து புகழ் பெற்றவர்கள், இவர்களை யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் போரில் வீழ்த்திய ராமனை நினைத்தபடி, தாங்க முடியாத மன வருத்தத்துடன் லங்கேஸ்வரனான ராவணனைக் காணச் சென்றாள்.  மகா தேஜஸுடன், விமானத்தின் முன்னால், மந்திரிகள் சூழ அமர்ந்திருந்த ராவணனை தூரத்திலிருந்தே கண்டு கொண்டாள். இந்திரன் மருத் கணங்கள் சூழ அமர்ந்திருப்பது போல இருந்தது  அந்த காட்சி.  பொன்னாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். யாக குண்டத்தில் ஆஹுதி செய்தவுடன் குபீரென்று எழும் பொன்னிறமான தீயின் ஜ்வாலை போல இருந்தான்.  தேவ, கந்தர்வ, மற்ற  ஜீவன்கள், யாராலும் ஜயிக்க முடியாத மகா வீரம் உடையவன். சூரன், காலனுடைய மற்றொரு முகம்  போன்றவன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், வஜ்ரத்தால் அடிபட்ட தழும்புகளை உடலில் பெருமையுடன் தாங்கியவன்.  ஐராவதத்தின் தந்தங்கள் குத்தி கிழித்த மார்பில் ஆறிய புண் வடுக்களை உடையவன். எங்கும் காணுதற்கரியதான இருபது புஜங்களும்,  பத்து தலைகளும் கண் கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது.  ராஜ லக்ஷணங்கள் உடைய வீரன். அகன்ற மார்பும், அழகிய வைடூரிய நிற தேக காந்தியும், பொன்னாலான குண்டலங்களும், நிமிர்ந்த தோளும், வெண்மையான பல் வரிசையும், பெரிய முகமும், பர்வதம் போன்ற சரீரமும் உடையவன். விஷ்ணுவின் சக்ரத்தால் பட்ட அடிகளும், பல நூறு முறை தேவர்களுடன் சண்டையிட்டதில் மற்ற சஸ்திரங்கள் பட்டு அடி வாங்கியவன். உடல் பூராவுமே இந்த தேவர்களிடம் பட்ட அடிகளின் அடையாளங்கள் தென் பட இருப்பவன். குறுக்க அல்லது குறைக்க முடியாத சமுத்திரத்தைக் கூட வற்றச் செய்பவன். வேகமாக செயல்படுபவன். பர்வதேந்திரனை அசைத்தவன். சுரர்கள் எனும் தேவர்களை துன்புறுத்தியவன். தர்மங்களை கை விட்டவன். பிறன் மனைவியை அபகரிக்கும் குணம் உள்ளவன்.  திவ்யாஸ்திரங்கள் அனைத்தையும் அறிந்தவன். எப்பொழுதும் யாகங்களை தடை செய்பவன். போ4கவதீ என்ற ஊரையடைந்து அங்கு வாசுகியை தோற்கடித்தான்.  தக்ஷகனை தோற்கடித்து, அவனுடைய பிரியமான மனைவியை கவர்ந்து கொண்டு வந்தவன்.  கைலாஸ பர்வதம் சென்று நர வாகனன் எனும் குபேரனை ஜயித்து அவனுடைய புஷ்பக விமானத்தைக் கவர்ந்து கொண்டு வந்தவன். விரும்பிய இடத்திற்கு கொண்டு செல்லக் கூடியது இந்த விமானம்.  சைத்ர ரதம் எனும் வனத்தையும், நளினமான நந்தன வனத்தையும் அழித்து விட்டவன்.  இவை தேவர்களுடைய உத்யான வனங்கள். இவன் க்ரோதத்துக்கு ஆளாயின. சந்திரனும், சூரியனும் உதிக்கும் பொழுது, மிகுந்த பராக்ரமம் உடையவைகளான இவைகளையே தன் கைகளால் அலட்சியமாக தட்டி விடும் அளவுக்கு மலை போன்ற உயரமான உடல் வாகுடையவன்.  பத்தாயிரம் வருஷங்கள் வனத்தில் இருந்து தவம் செய்து, முன்பொரு சமயம்  ப்ரும்மாவை (ஸ்வயம்பூ) குறித்து யாகம் செய்து தன் தலைகளையே ஆகுதி செய்தவன். தே3வ, தா3னவ, க3ந்த4ர்வ, பிசாசங்கள், பறவைகள், (இறக்கை கொண்டு பறப்பவை அனைத்திடமும்) பாம்புகள் (ஊர்வன) இவைகளிடமிருந்து தனக்கு அப4யம் கிடைக்கப் பெற்றவன்.  யுத்தத்தில் மனிதர்கள் அன்றி வேறு யாராலும் மரணம் கூடாது என்று ப்ராம்மணோத்தமர்களைக் கொண்டு மந்திரங்கள் சொல்லி புண்யமான யாகம் செய்தவன்.  ஹவிஸைப் பெற வந்த சந்திரனை அடித்தவன். விரும்பிச் செய்யும் யாகங்களை அழித்து, க்ரூரமாக ப்ரும்மாவையே அடித்தவன். துஷ்டன். துஷ்ட நடத்தையுள்ளவன். கடுமையானவன். தயையே இல்லாதவன். ப்ரஜைகளுக்கு எது ஹிதமானதோ, அதை செய்யாமல் வேண்டுமென்றே, எதிராக செய்பவன். அதில்  தான் அவனுக்கு சந்தோஷம்.  எல்லா உலகிலும் உள்ள எல்லா ஜீவராசிகளும் பயந்து நடுங்கும்படியான ராவணனை, தன் சகோதரனை அவள் மகா பலசாலியாக மட்டுமே கண்டாள்.  திவ்யமான ஆடை ஆபரணங்களை அணிந்து, அழகிய மாலைகளை அணிந்து அழகுற, நல்ல ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்த அவனை, கால காலனுக்கு உவமையாக சொல்லும் விதமாக, புலஸ்திய குல நந்தனாக, ராக்ஷஸேந்திரனாக, மகா அதிர்ஷ்ட சாலியான ராவணனை,  சத்ருக்களை கண்ட மாத்திரத்தில் அழிப்பவனை, மந்திரிகள் சூழ இருக்கும்பொழுது, நெருங்கி, பயத்தால் நடுங்கியபடி ராக்ஷஸி, சூர்ப்பணகா பேசலானாள். சிவந்து விசாலமான கண்களையுடைய அவனைப் பார்த்து, மகாத்மாவான (லக்ஷ்மணனால்) கோரமாக்கப் பட்ட முகத்தையுடையவள்,  இதுவரை பயம் என்பதே தெரியாமல் வனத்தில் திரிந்து கொண்டிருந்தவள், பயமும் மோகமும் அலைக்கழிக்க, பயங்கரமான செய்தியை  ராவணனிடம் தெரிவித்தாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகோத்3யமோ என்ற முப்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)s

 

 

 

 

அத்தியாயம் 33 (229)ராவண நிந்தா3(ராவணனை நிந்தித்தல்)

 

மிக பரிதாப நிலையில் இருந்த சூர்ப்பணகா, லோக ராவணனான (உலகையே துன்புறுத்தக் கூடிய) ராவணன் மந்திரிகள் சூழ இருக்கும் பொழுது கடுமையான வார்த்தைகளால் நிந்தித்தாள்.  கேட்பார் யாருமின்றி  தன்னிஷ்டப் படி காமத்திலும், போகத்திலும் மூழ்கி, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மதா3ந்தமாக, தனக்கு சமமாக ஆமாம் போடும் ஜனங்களுடன் தன்னை மறந்து இருக்கிறாயே. கிராம்ய சுகங்களில் ஈடுபட்டு, தன் சுக போகத்தில் ஆழ்ந்து இருக்கும் அரசனை, ஸ்மசான அக்னி போல பிரஜைகள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள்.  தானே செயல்களை முனைந்து செய்யாத அரசன், அந்த செயல்கள் அழியும் பொழுது அதனுடன் தானும் அழிகிறான். அவன் ராஜ்யமும் அழியும். எளிதில், காணக் கிடைக்காத,  தகாத காரியங்களைச் செய்யும் தன் ஸ்வாதீனத்தில் இல்லாத அரசனை ஜனங்கள் தவிர்க்கிறார்கள். யானை, தூரத்திலிருந்தே நதியின் சேறான பாகத்தை அறிந்து கொண்டு அருகில் போவதே இல்லை. விஷய போகங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளத் தெரியாத அரசர்கள், மேன்மையை அடைய வழியில்லை. சமுத்திரத்தில் விழுந்த மலைகளைப் போல் அதே ஸ்திதியில் இருக்க வேண்டியது தான். தன்னை சார்ந்தவர்களையும் அடக்கி, நீ தேவ கந்தர்வ, தானவர்களால் கூட செய்ய முடியாதவைகளை செய்து காட்டியவன்.  சபலனான ராஜாவாக எப்பொழுது ஆனாய்?  ராக்ஷஸா, நீ இன்னும் குழந்தை குணமும் புத்தி இல்லாதவனாகவும் இருக்கிறாய்.  தெரிந்து கொள்ள வேண்டியதை சரிவர தெரிந்து கொள்ளாதவன் எப்படி அரசனாக இருக்கிறாய்? எந்த அரசனுக்கு ஒற்றர்களும், பொக்கிஷமும், நீதியும் தன் வசத்தில் இல்லையோ, அரசனே, அந்த அரசர்கள், சாதாரண நாட்டு ஜனங்களுக்குச் சமமாக ஆகிறார்கள்.  அதனால் தான் சக்ரவர்த்திகள் வெகு தூரத்தில் நடக்கும் செய்திகளையும், நடப்புகளையும் ஒற்றர்கள் மூலம் பார்க்கின்றனர், தெரிந்து கொள்ளுகின்றனர். அதனால்  தூரதர்ஸ:- தொலை நோக்குடையவர்கள் என்று சொல்லப் படுகின்றனர்.  நீ ஒற்றனையே நியமிக்கவில்லை என்று நினைக்கிறேன். விஷயம் அறியாத மந்திரிகள் உன்னை சூழ்ந்து நிற்கின்றனர். உன் பந்துக்கள் ஜனஸ்தானத்தில் அழிந்ததே இன்னும் உனக்குத் தெரியவில்லை.  மாபெரும் வீரர்களான பதினாலாயிரம் ராக்ஷஸர்களும், ஒரு ராமனால் அழிக்கப் பட்டார்கள். கரனும் தூஷணனும் மாண்டனர். ரிஷிகளுக்கு அபயம் கொடுத்திருக்கிறான் ராமன்.  தண்டகா வனத்தில் வசிப்பவர்கள் க்ஷேமமாக இருக்கிறார்கள்.  செயற்கரிய செய்யும் ராமனால் தண்டகா வனம் த்வம்சம் செய்யப் பட்டுள்ளது.  ராவணா, நீ லோபி,  தன் ஆதீனத்தில் இல்லை.  அபரிமிதமான செல்வமும், அதிகாரமும் உன்னிடம் கர்வத்தை (மதம்) தான் உண்டு பண்ணியிருக்கின்றன.  உன் விஷய போக, நாட்டத்தால், வெளியில் உண்டாகியுள்ள பயத்தை உணரவில்லை.  கடுமையாக நடந்து கொள்பவனை, அல்பமாக கொடுப்பவனை,  மதா3ந்தமானவனை, கர்வம் கொண்டு பிடிவாதம் கொண்ட அரசனை கஷ்டகாலங்களில் ஜனங்கள் பின் பற்றுவதில்லை. அபிமானமும், எளிதில் நெருங்க முடியாத தன்மையும், தன்னலமே பெரிதாக நினைக்கும் குணமும் உள்ள அரசனை, அவசியம் இன்றி கோபித்துக் கொள்பவனை, அரசனேயானாலும், ஜனங்கள் தாங்களே கொன்று விடுவர்.  அது போன்ற சமயங்களில் அவர்கள் நீ சொல்வதை கேட்க  மாட்டார்கள்.  இடும் கட்டளைகளை செய்ய மாட்டார்கள். பயமுறுத்தினாலும், பயப்பட மாட்டார்கள்.  ராஜ்யத்திலிருந்து பதவி இழந்தவன், சீக்கிரமே, புல்லுக்கு சமமாக அல்பமாக எண்ணப் படுவான். காய்ந்த விறகு கட்டைகள் கூட பயன்படும். உடைந்த பானைத் துண்டுகள்  கூட உபயோகமாகும், புழுதி கூட உபயோகமாகும். ஆனால், பூமியை ஆண்ட அரசர்கள் தன் நிலையில் இருந்து விழுந்தவர்கள், ஒரு காரியத்திற்கும் உபயோகம் ஆக மாட்டார்கள்.  அனுபவித்த பழைய ஆடையோ, மாலையோ, வாடி வீணானால் எப்படியோ, அப்படித் தான் ராஜ்யத்திலிருந்து விழுந்த அரசனும். தனிப்பட்ட முறையில் சமர்த்தனாக இருந்தாலும் ஒரு வித பயனும் இல்லாதவனாக கருதப் படுவான். தன் நிலையில் எப்பொழுதும் விழிப்புடன், எல்லா விஷயங்களையும் அறிந்தவனாகவும், புலனடக்கம் உடையவனாகவும், செய் நன்றி மறவாதவனாகவும், தர்ம சீலம் உடையவனாகவும், உள்ள அரசனே நிலைத்து நிற்பான். தன் புற கண்களை மூடிக் கொண்டிருந்தாலும், நீதி கண்களால் விழித்திருப்பவன்.  வெளிவாக வெளிப்படும் க்ரோதமும், வெளிவும் உடைய அரசன் தான் ஜனங்களால் பூஜிக்கப் படுகிறான்.  ராவணா, நீயோ இந்த குணங்கள் எதுவும் இல்லாதவன். துர்புத்தி, உனக்கு ராக்ஷஸர்கள் ஒன்றாக மறைந்தது கூடத் பெரிய விஷயமாகத் தெரியவில்லை.  மற்றவர்களை அவமதிப்பவன், விஷயமே குறியாக இருப்பவன், தேச, கால வர்த்தமானங்களை புரிந்து கொள்ளாதவன், தகாத புத்தியுடையவன், குண தோஷங்களை பிரித்து அறிந்து கொள்ள முடியாதவன்,  சீக்கிரமே அழிவான். நீயும் அழிவாய். இவ்வாறு தன் குற்றங்களை விவரித்துச் சொல்லக் கேட்ட ராக்ஷஸ ராஜா, செல்வமும், கர்வமும், பலமும் நிரம்பப் பெற்றவன், வெகு நேரம் யோசனையில்  ஆழ்ந்திருந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராவண நிந்தா3 என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 34 (230) சீதா ஹரணோபதேச:

(சீதையை கடத்திச் செல்ல யோசனை சொல்லுதல்)

 

இப்படி கடுமையாக விமரிசிக்கும்  சகோதரி சூர்ப்பணகையை, தன் மந்திரிகள் மத்தியில் இருந்த ராவணன், கோபத்துடன் விசாரித்தான்.  யாரது ராமன்? என்ன வீர்யம் அவனுக்கு? எப்படி இருப்பான்? பராக்ரமம் என்ன? எதற்காக தண்டகாவனம் வந்தான்? நுழையவே முடியாத இந்த பெருங் காட்டில் அவனுக்கு என்ன வேலை? அவனிடம் என்ன புது ஆயுதம் இருக்கிறது? எதைக் கொண்டு க2ர, தூ3ஷணர்களை அடித்தான்? த்ரிசிரஸையும் மற்ற ராக்ஷஸர்களையும் எதனால் அடித்தான்? இவ்வாறு ராக்ஷஸேந்திரன் கேட்கவும், ஆத்திரம் தலைக்கேற, ராக்ஷஸி சூர்ப்பணகா ராமனை வர்ணிக்க ஆரம்பித்தாள்.  உள்ளபடி விவரித்தாள். -நீண்ட கைகளும், அகன்ற மார்பும் உடையவன்.  வல்கலையும் மரவுரியும் தரித்தவன். கந்தர்ப்பனுக்கு சமமான தேக காந்தியுடையவன். ராமன், தசரதன் மகன். இந்திரனுடைய வில்லுக்கு சமமான வில்லை வைத்திருக்கிறான். பொன்னிறமான பள பளக்கும் அம்புகளை, மகா விஷம் கொண்ட சர்ப்பங்கள் போன்ற பாணங்களை, அதில் வைத்து இழுத்து விடுகிறான். அவன் சரத்தை கையில் எடுத்ததையோ, விட்டதையோ, தன் வில்லை வளைத்ததையோ, யுத்தம் நடக்கும் பொழுது எவராலும் காண முடியவில்லை.  மழையாக பொழிந்த பாணங்களையும், அடிபட்டு விழுந்த ராக்ஷஸர்களையும் தான் கண்டோம். இந்திரன் செய்தானே, உத்தமமான பயிரை, கல்லை மழையாக பொழிந்து அழித்தான்.  நெடிதுயர்ந்த உருவம் கொண்ட ராக்ஷஸர்களை, பதினான்கு ஆயிரம்  வீரர்களை, கால் நடையாக வந்த இவன் அழித்தான். அரை முஹுர்த்த நேரத்திற்கு சற்றே அதிகமான நேரத்தில், க2ரன், தூ3ஷணனுடன் அழிந்தான். ரிஷிகளுக்கு அபயம் அளித்திருக்கிறானாம். தண்டகா வன வாசிகள் இனி க்ஷேமமாக இருப்பார்கள். நான் எப்படியோ தப்பி வந்தேன். அவமானம் செய்யப் பட்டேன். ஸ்த்ரீ வதம் கூடாது என்று நினைத்தோ என்னவோ, ராமன் என்னை கொல்லாமல் விட்டான். அவனுக்கு ஒரு சகோதரன். குண, சீல, விக்ரமம் எனும் குணங்களில் இவனை ஒத்தவன். இவன் ராமனிடம் மிகுந்த அன்பும், பக்தியும் உடையவன். லக்ஷ்மணன் என்ற பெயருடைய வீர்யவான். நல்ல கோபம் கொண்டவன். அடங்கிய கோபம் அவனுடையது.  எதிலும் வெற்றியேயன்றி, தோல்வியே காணாதவன்.  பலசாலி, ராமனுடைய வலது கை போன்றவன். நித்யம் உடன் இருப்பவன். அவன் (ராமன்) உயிர் வெளியே நடமாடுவது போல அவனுடன் ஒன்றியவன். அவனுக்கு அனுசரணையாக இருப்பதே அவன் கொள்கை, குறிக்கோள் எல்லாம்.  இந்த ராமனுக்கு, பூரண சந்திரன் போன்ற அழகிய முகமும், விசாலமான கண்களும் உடைய ஒரு மனைவி. தர்ம பத்தினி. இவனிடம் மிகுந்த பிரியம் உள்ளவள். அவனுடைய நன்மையே எண்ணி செயல் படுபவள். அவள் கேசம் அழகியது, நாசி அழகியது, கால் பகுதிகள் அழகியவை. அழகே உருவானவள். இந்த வன பிரதேசத்தில், புகழ் பெற்று விளங்குகிறாள்.  வனதேவதை போல கொண்டாடப் படுகிறாள். மற்றொரு லக்ஷ்மி தேவி போல விளங்குகிறாள். பத்தரை மாற்றுத் தங்கம் போல நிறத்தினள். சிவந்து கவிழ்ந்த விரல் நகம் சுபமாக தெரிகிறது. பெயர் சீதை. சிறுத்த அழகிய இடையுடையவள். வைதேஹி மிகவும் லக்ஷணமாக இருக்கிறாள். எந்த தேவ குலப் பெண்ணும், கந்தர்வி, யக்ஷியோ, கின்னரியோ, இது போல ஒரு பெண்ணை நான் இது வரை கண்டதில்லை.  யாருக்கு சீதை மனைவியாக இருந்து, மகிழ்ச்சியோடு அணைத்துக் கொள்கிறாளோ, அவன் உலகில் எதையும் வெற்றி கொள்வான். அவன் வாழ்க்கை பலனுடையதாகும். உலகில் இந்திரனை விட மேலான பதம் அடைவான். சுசீலா அவள், நல்ல சீலமுடையவள். பார்த்தவர்களை உடனே பிரமிக்கச் செய்யும்படியான  உடல் வாகுடையவள்.  உலகில் ஈடு இணையில்லாத அழகி இவள் தான்.  உனக்கு அவள் அனுரூபமான பத்னியாவாள். நீ தான் அவளுக்கு ஏற்ற பதி.  ஒவ்வொரு அங்கத்திலும் அழகு சொட்டும் அவளை உனக்கு மனைவியாக கொண்டு வர நான் முயற்சி செய்தேன். மயக்கும் முக அழகுடையவளை உனக்காக கவர்ந்து வர  முயற்சி செய்தேன். அந்த சமயம் தான் இப்படி விரூபம் ஆக்கப் பட்டேன். லக்ஷ்மணன், தன் பெரிய கைகளால் என்னை இப்படி செய்து விட்டான். ஒரு முறை அந்த பூரண சந்திரன் போன்ற முகமுடைய சீதையை, நீ கண்டாயானால், மன்மதனுடைய பாணங்கள் உன்னை குத்திக் கிழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தவிக்கப் போகிறாய். அவளை மனைவியாக கொள்ளும் எண்ணம்  இருந்தால் உடனே கிளம்பு.  சீக்கிரம்.  உன் வலது பாதம் வெற்றி நடை போட தயாராகட்டும்.  ராக்ஷஸ ராஜனே, ஆசிரமத்தில் வசிக்கும் அந்த ராமனை வதம் செய்து, ராக்ஷஸர்களுக்கு பிரியமானதை செய்வாய். அந்த கொடியவனை, உன் கூர்மையான பாணங்களால் பிளந்து, மகா ரதியான லக்ஷ்மணனையும் அழித்து நாதனை இழந்த சீதையை நீ அபகரித்துக் கொண்டு வா. (ராமனை உயிருடன் பிடித்து எனக்கு கொடு என்று கம்ப ராமாயணம்) ராக்ஷஸேஸ்வரா, உடனே யோசிக்காமல் செயலில் இறங்கு.  நான் சொல்வதை செவி மடுத்துக் கேள். ராவணா, உன் சக்தியை அறிந்து கொண்டு, அபலையான சீதையை  ஜனஸ்தானத்திலிருந்து கவர்ந்து கொண்டு வா.  கொடி போன்ற மெல்லிய உடலுடையவளை உனக்கு மனைவியாக ஆக்கிக் கொள்.

யாராலும் எதிர்க்க முடியாதபடி பாணங்களைத் தொடுத்து, ஜனஸ்தான ராக்ஷஸர்களை ராமன் அழித்ததை, க2ரன் இறந்து பட்டதையும் தூ3ஷணன் மாண்டதையும் நினைத்து பார்.  யோசித்து பார்.  அடுத்து செய்ய வேண்டியதை உன் மனதில் பட்டபடி செய்.  நீயே தீர்மாணித்துக் கொள்.-

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதா ஹரணோபதேசோ என்ற முப்பத்து நாலாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 35 (231) மாரீசாஸ்ரம புனர் கமனம் (மாரீச ஆசிரமத்திற்கு திரும்பவும் செல்லுதல்)

 

சீதையைப் பற்றிய சூர்ப்பணகையின் வர்ணனைகள், ராவணன் உடல் ரோமங்களை குத்திட்டு நிற்கச் செய்தன. மந்திரிகளை அவசரமாக அனுப்பி விட்டு, என்ன செய்வது என்று யோசித்தான். பல விதமாக யோசித்து, தோஷங்களையும் குணங்களையும், தன் பலம், எதிரி பலம் இவைகளையும் யோசித்து, இப்படிச் செய்யலாம் என்று தானே நிச்சயம் செய்து கொண்டு, ஸ்திர புத்தியுடன் வாகனங்கள் இருக்கும் இடம் சென்றான். மறைந்து ரகசியமாக யான சாலை எனும் வாகனங்கள் இருக்கும் இடம் அடைந்த ராவணன் சாரதியைக் கூப்பிட்டு, ரதத்தை ஏற்பாடு செய் என்று ஆணையிட்டான். அப்படியே, சாரதியும் உடனே ரதத்தை ஆயத்தமாக கொண்டு வந்து நிறுத்தினான். ரத்னங்களால் அலங்கரிக்கப் பட்ட, விருப்பபடி செலுத்தக் கூடிய, பொன் ரதத்தை, த்ருஷ்டிக்காக, அவலக்ஷணமான பிசாச முகங்கள் தங்க ஆபரணங்கள் அணிந்தது போன்ற முகப்பு வேலைகளுடன், மேக நாதம் போல முழங்கும் குபேரனுடைய தம்பியான ராவணன் சமுத்திரக் கரையை அடைந்தான்.  வெண் கொற்றக் குடையும், சாமரங்களும், த3சானனன் தானே வைடூரிய நிறத்தில் ப்ரகாசமாகவும், பத்தரை மாற்றுத் தங்கத்திலானான குண்டலங்களும், இருபது புஜங்களும், பத்து தலைகளும், காணுதற்கரிய உடல் வாகும், எண்ணியதை சொல்லும் முன் செய்யத் தயாராக நின்ற பரிவாரமும், அவன் சோபையை அதிகரித்தன.  தேவர்களின் விரோதி, முனி ஜனங்களை கண்ட மாத்திரத்தில் கொல்பவன், பெரிய மலையரசன், பத்து தலைகளுடன் நிற்பது போல தோற்றத்தினன்,  அதிசயமான தன் ரதத்தில் ஏறி நின்றான். மனதில் எண்ணிய மாத்திரத்தில் கொண்டு சேர்க்கும் அந்த ரதம், மேகத்திற்கு மின்னல் போல், அவனுக்கு அனுரூபமாகத் தெரிந்தது. (மேக மண்டலம் ஆகாயத்தில், மின்னல் சூழ தெரிவது போல இருந்தான்.) வீர்யவானான ராவணன், காடுகளுடன் கூடிய மலை பிரதேசங்களை கடந்து சென்றான். சாகரம் எல்லைக் கோடு போல தெரிவதை ரசித்தான்.  நெருக்கமாக, பலவித பூக்களும், பழங்களும் உடைய மரங்கள் தெரிய, அருகில், மங்களகரமான, குளிர்ந்த நீரையுடைய நதிகள் பிரவகித்துச் செல்வதைக் கண்டான். பத்மங்கள் பூத்த தடாகங்கள் ஆங்காங்கு தெரிந்தன. விசாலமான ஆசிரம பதங்கள், வேள்விக்கான இடங்களுடன் அலங்காரமாக தெரிய, வாழைத் தோட்டங்கள், தென்னை மரங்கள் சோபையூட்ட, சால, தால, தமால மரங்களில், புஷ்பங்கள் மண்டிக்  கிடந்தன.  இவை அடுத்தடுத்து வளர்ந்து அடர்ந்து காணப்பட்டன. மிகவும் கடினமான ஆகார நியமங்களை கை கொண்டு வசித்த பரம ரிஷிகள் வளைய வரும் இடங்களை கண்டவாறு ஆகாய மார்கத்தில் சென்றான்.  நாக3ர்கள், சுபர்ணர்கள், க3ந்த4ர்வர்கள், கின்னரர்கள் என்ற ஆயிரக் கணக்கானவர்கள்,  வைகானஸர்கள், தும்ர, வாலகில்யர்கள், மரீசிபர்கள் என்ற, காமத்தை வென்ற சித்தர்களும் சாரணர்களும், அந்த இடத்துக்கே சோபையூட்டினர். அப்ஸர ஸ்த்ரீகள் திவ்யாபரணங்களையும், மாலைகளையும் அணிந்து, திவ்யமான ரூபம் உடையவர்களாக, க்ரீடா, ரதி-இவைகளின் விதி முறைகளை அறிந்தவர்களாக, ஆயிரக் கணக்காக சஞ்சரிக்க கண்டான். தெய்வ மகளிர், தேவர்களின் பத்னிகள், ஸ்ரீமதிகள் உபாசிக்கும் இடமாக இருந்ததை. தேவ, தானவ கூட்டங்கள், ஆசைகளைத் துறந்தவர்களாக சஞ்சரித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.  ஹம்ஸ, க்ரௌஞ்ச பக்ஷிகள், சாரஸ பக்ஷிகள் நாதம் செய்ய வைதூர்யம் போல் பிரகாசமாக விளங்கிய நீண்ட சமவெளிகளை, அழகிய மனதை கவரும் வண்ணம், சமுத்திரம் என்று நினைக்கும்படி பெரியதான, வெண்மையான, விசாலமான திவ்ய மலைகளுடன், தாள வாத்யங்களும், நாதம் நிறைந்த கீத சப்தங்களுடனும் விளங்கிய விமானங்களை (வீடுகளின் மேல்  தளம்) கண்டபடி சென்றான். தவ வலிமையால் மூவுலகையும் வெற்றி கொண்டவர்கள் தேவையை உணர்ந்து உபசாரம் செய்ய கந்தர்வர்களும், அப்ஸர ஸ்த்ரீகளும் சுற்றி வரக் கண்டான், குபேரன் தம்பியான ராவணன். நாசிக்கு இதமான வாசனை வீசும் சந்தன மரக் காடுகளைத் தாண்டி, ஆயிரக் கணக்கான மரங்கள் நிறைந்த சந்தன வனங்களை கண்டபடி சென்றான். அகருவை முக்யமாக கொண்ட வனங்கள், உபவனங்கள், தக்கோலம் எனும் ஜாதியின் பழங்கள், மிகுந்த வாசனையுடையவை, இவைகளை கண்டான். தமாலபுஷ்பம் நிறைந்த மரங்கள், குல்மா மரங்கள், மரீச மரங்கள், இவைகளிலிருந்து விழுந்து கிடக்கும் புஷ்பங்கள் கரையருகில் குவிந்து கிடக்க, சங்கங்கள் பெருமளவில் கிடக்க, பவழக் கூட்டங்கள் பொன்னிறமான மலைகள், (அல்லது பவழம் பொன் மலை போல குவிந்து கிடந்தது) ப்ரஸன்னமான குதூகலத்தை விளைவிக்கும்,  மனதை கவரும் அருவிகள், வெள்ளித் தகடாக  பிரவகித்ததைக் கண்டான்.  தன, தான்யம் நிறைந்த ஸ்த்ரீ ரத்னங்கள் வளைய வர,  யானைகளும், குதிரைகளும், ரதங்களும் கூட்டமாக தெரிந்த நகரங்களை பார்த்தபடி சென்றான். சமமாக எங்கும் பசுமையாக, ம்ருதுவாக வருடிக் கொடுக்கும் காற்றுடன் கூடிய சிந்து ராஜனுடைய எல்லையில்லாத, தேவலோகத்துக்கு இணையான தேசத்தைக் கண்டான். அங்கு அடர்ந்து கறுத்தும், மேகம் போல் தெரிந்த ந்யக்ரோத மரத்தின் கீழ் நிறைய ரிஷிகள் இருக்கக் கண்டான். கண் எதிரில் அதன் கிளைகள் நூறு யோசனை தூரம் நீண்டு, மிகப் பேரிய உருவம் உடைய யானையையும், ஆமையின் எலும்புகளையும், சாப்பிடுவதற்காக, கருடன், இதன் கிளைகளில் கொண்டு வந்து வைத்துக்  கொண்டது.  திடுமென பக்ஷிராஜன் கொண்டு வந்து வைத்த பாரத்தால், இலைகள் நிறைந்த கிளை ஒன்று சட சடவென்று முறிந்தது.  அந்த மரத்தடியில் மஹரிஷிகள், பலர் இருந்தனர். வைகானஸர்கள், மாஹா, வாலகில்யா: மரீசிபா:, ஆஜா, மற்றும் தூரா: என்பவர்கள். அவர்கள் மேல் விழுந்து விடாமல் அந்த உடைந்து போன பெரிய கிளையை தூக்கிக் கொண்டு வேகமாக அந்த இடைத்தை விட்டு அகன்றது. தச யோசனை நீண்டிருந்த கிளையை ஒரு பக்கம், யானையையும், ஆமையையும் ஒரு பக்கம் என்று தூக்கிக் கொண்டு பறந்தது. வெகு தூரம் சென்று மாமிசத்தை சாப்பிட்டு விட்டு, அந்த மரக்கிளையை வைத்து சிறு மிருகங்களை பயமுறுத்தி விளையாடி விட்டு சந்தோஷத்துடன் சென்றது.  மகரிஷிகளும் ஆபத்தின்றி தப்பித்தார்கள். இந்த மகிழ்ச்சியில் உற்சாகம் பெற்று மேலும் சாகஸம் செய்ய எண்ணி, இரண்டு மடங்கு விக்ரமத்துடன் மகேந்திரன் வீட்டிற்கு சென்று, இரும்பு கம்பிகளை உடைத்து, ரத்னமயமான க்ருஹத்துக்குள் நுழைந்து இடித்து தள்ளிக் கொண்டு உள்ளே போய், ரகசியமாக அம்ருதத்தை கைபற்றிக் கொண்டு வந்தது. அந்த மகரிஷி கணங்கள் வழக்கமாக அமரும், சுபர்ணன் அடையாளம் செய்து வைத்திருந்த, சுப4த்ரம் என்ற பெயருடைய ந்யக்4ரோத3 மரத்தை குபேரன் சகோதரனான ராவணன் கண்டான். சமுத்திர கரையை அடைந்து நதிகள் அரசனான சமுத்திரத்தைக் கடந்து, ஏகாந்தத்தில் இருந்த காட்டின் நடுவில், அழகிய ஆசிரமத்தைக் கண்டான். அங்கு க்ருஷ்ணாஜினம் தரித்து ஜடா முடியுடன், வல்கலை தரித்து, ஆகார நியமங்களுடன் வசித்த மாரீசன் என்ற ராக்ஷஸனைக் கண்டான். ராவணன் அங்கு வந்து சேர்ந்தவுடன், அந்த மாரீச ராக்ஷஸன், விதி முறைப் படி உபசரித்து, அமானுஷ்யமான எல்லா வித தேவைகளையும் தானே முன்னின்று பூர்த்தி செய்து போஜனம் ஜலம் கொடுத்து, குசலம் விசாரித்தான். லங்கா ராஜ்யத்தின் அரசனே, எல்லாம் நலமாக இருக்கின்றனவா? என்ன காரியமாக இவ்வளவு சீக்கிரம் இங்கு திரும்பி வந்திருக்கிறாய்? இவ்வாறு மாரிசன் சொன்னவுடன் ராவணன் மெதுவாக யோசித்து பின்வருமாறு சொன்னான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் மாரீசாஸ்ரம புனர்க3மனம் என்ற முப்பத்தைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 36 232)சஹாயைஷணா (உதவி செய்யவேண்டுதல்)

 

மாரீசா, கேள். நான் சொல்வதைக் கேள். மிகுந்த மனக் கஷ்டத்தில் இருக்கிறேன். என் மனக் கஷ்டம் தீர நீ தான் வழி சொல்ல வேண்டும். உனக்குத் தெரியும். என் சகோதரன் க2ரன் ஜனஸ்தானத்தில் இருந்தான். தூ3ஷணனும் என் சகோதரி சூர்ப்பணகா, த்ரிசிரஸ் எல்லோரும் இருந்தனர். மற்றும் ஏராளமான ராக்ஷஸ வீரர்கள், குறி தவறாமல் அடிக்கக்கூடிய வில் வீரர்கள் இருந்தனர். என் கட்டளைப்படி இந்த ராக்ஷஸர்கள், முனிவர்களை அவர்கள் செய்யும் தர்ம காரியங்களை செய்ய விடாமல் தடுத்து வந்தனர். பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்கள், கரன் சொல்வதை சிரமேற் கொண்டு செய்து வந்தவர்கள், இப்பொழுது ஜனஸ்தானத்தில் இல்லை. ராமனுடன் யுத்தம் செய்யச் சென்றார்கள்.  கரனை முன்னிட்ட ராக்ஷஸர்கள், எல்லா விதமான தாக்குதல்களையும் செய்ய வல்லவர்கள். கோபம் கொண்ட ராமனால் ரணத்தின் முன் நின்று ஒரு வார்த்தை கூட கடுமையாக பேசாமல், தன் வில் அம்புகளால் செய்து காட்டி விட்டான். உக்ர தேஜஸ் உடைய பதினாலாயிரம் ராக்ஷஸர்களை கால் நடையாக வந்த மனிதன், கூர்மையான பாணங்களால் அடித்து வீழ்த்தி விட்டான். க2ரனும் யுத்தத்தில் மாண்டான். தூ3ஷணனும் மாண்டான். திரிசிரஸும் யுத்தத்தில் அழிந்தான். இப்பொழுது தண்டகா வனம் பயமில்லாமல் போய் விட்டது. தந்தையால் மனைவியோடு விரட்டப் ப்ட்டவன், க்ஷீண ஜீவனம் செய்பவன், க்ஷத்திரிய குலத்திற்கு கேடாக வந்தவன், இந்த பெரும் சைன்யத்துக்கு யமனாக வந்து சேர்ந்தான். சீலம் இல்லாதவன், கடுமையானவன், பொல்லாதவன், மூர்க்கன், லோபி4, புலனடக்கம் இல்லாதவன், தன் தர்மத்தை விட்டவன், அதர்மமே உருவானவன். ஜனங்களுக்கு, உயிர்களை ஹிம்சை செய்வதையே கொள்கையாக உடையவன், எந்த விதமான விரோதமும் இல்லாமல், நல்ல எண்ணம் இல்லாத, அவனால் வேண்டுமென்றே என் சகோதரி காது, மூக்கு அறுபட்டு விரூபமாக ஆக்கப் பட்டாள். அவன் மனைவி, தேவ லோக பெண் போல இருப்பவளை ஜனஸ்தானத்திலிருந்து கொண்டு வரப் போகிறேன். என் முயற்சியில் நீ சகாயமாக இரு. உதவியாக இரு. மகா பலசாலியான நீ அருகில் இருந்தால் சகோதரர்களுடன் தேவர்களே வந்து  நின்றாலும் நான் கவலைப் பட மாட்டேன். அதனால் எனக்கு உதவியாக இரு. நீ சமர்த்தன் ராக்ஷஸா.  உனக்கு சமமாக வீர்யமோ, கர்வமோ, யுத்தத்தில் சாமர்த்யமோ, வேறு யாரிடமும் இல்லை. உனக்குத் தான் உபாயம் சொல்லத் தெரியும்.  மகா சூரன் நீ.  மாயா பிரயோகங்களை நன்றாக அறிந்து வைத்திருக்கிறாய். இதற்காகத்தான் நான் உன்னிடம் வந்தேன், நிசாசரா. என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்., கேள். என் சொல்படி எனக்கு வேண்டிய உதவியைச் செய். நீ பொன்னிறமான மானாக உருவம் எடுத்துக் கொண்டு, வெள்ளியின் நிறத்தில் புள்ளிகள் உள்ள பொன் மானாக, அந்த ராமனுடைய ஆசிரமத்தில் சீதையின் கண்ணில் படும்படி சஞ்சரி.  மிருக ரூபியாக உள்ள உன்னைப் பார்த்து சீதா மோகம் கொள்வாள். நிச்சயம் இதை பிடித்துத் தாருங்கள் என்று ராமனையும், லக்ஷ்மணனையும் வேண்டுவாள். அவர்கள் இருவரும் அந்த இடத்தை விட்டகன்றதும், நான் சுகமாக, சௌகர்யப்படி ஒரு தொந்தரவும் இல்லாமல் அபகரிப்பேன். ராகு சந்திர பிரபையை கிரஹிப்பது போல. அதன் பின் மனைவியை இழந்ததால் வாடி வருந்தும் ராமனை சுலபமாக கொல்வேன். என் மன விருப்பம் நிறைவேறிய திருப்தியோடு அவளை அடைவேன் என்றான். இந்த கதையைக் கேட்டு மாரீசனின் முகம் சுருங்கியது. மிகவும் பயந்தவனாக ஆனான். உதடுகளை ஈரமாக்கிக் கொண்டு, கண் கொட்ட மறந்தது போல இடுங்கிய கண்களோடு, இறந்தவன் போல வருத்தத்துடன் ராவணனை ஏறிட்டுப் பார்த்தான். மகா வனத்தில் ராமனுடைய பராக்ரமத்தை அறிந்தவன், பயமும், வருத்தமும் மனதை அலைக்கழிக்க, ராவணனைப் பார்த்து கை கூப்பி வணங்கியவனாக நல்லதைச் சொல்லலானான். அவனுக்கு ஹிதமானதை. அதுவே தனக்கும் ஹிதமானது என்று உணர்ந்து விவரமாக சொன்னான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஸஹாயைஷணா என்ற முப்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 37 (233) அப்ரிய பத்2ய வசனம்

(நன்மை தரக்கூடிய ஆனால் பிடித்தமில்லாத விஷயத்தை சொல்லுதல்)

 

ராக்ஷஸேந்திரன் சொன்னதைக் கேட்டு மலைத்த மாரீசன், பதில் சொல்ல வார்த்தை எழாமல் தவித்தான். பிறகு மிக கவனமாக, தான் சொல்வதில் எதுவும் தவறாகி விடக் கூடாதே என்று பயத்துடன்,  ராஜன், எப்பொழுதும் பிரியமாக பேசக் கூடிய ஜனங்கள் சுலபமாக கிடைப்பார்கள். பிரியமல்லாதது ஆனால் ஹிதமானது என்ற உபதேசத்தை செய்பவர்களும் குறைவு, அப்படி செய்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் அதை விடக் குறைவு. நீயே ராமனை குணங்கள் இல்லாதவனாக நினைக்கவில்லை. மகேந்திர, வருணன் இவர்களுக்கு சமமாக எண்ண வேண்டிய மகா வீர்யவானாகத் தான் நீயும் அறிந்திருக்கிறாய். அப்படி உனக்கு சொல்லாத ஒற்றன் சபல புத்தியுள்வனே ஆவான். ராக்ஷஸேஸ்வரா, உலகில் ராக்ஷஸர்கள் சௌக்யமாக இருக்க வேண்டுமா?  ராமன் கோபம் கொண்டு உலகில் ராக்ஷஸர்களே இல்லாமல் செய்ய வேண்டுமா? உன் ஆயுள் முடிவதற்காகவே ஜனகன் மகளாக சீதை தோன்றினாளா?  சீதையை காரணமாக காட்டி மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொண்டு அழைக்கப் பார்க்கிறாய்.  உன்னை நாயகனாக கொண்ட லங்கா நகரமும், ராஜ்யமும் ராக்ஷஸர்களுடன் சேர்ந்து கட்டுப் பாடின்றி காமுகனாக திரியும் உன்னால் முழுவதுமாக அழியப் போகிறதா? வேண்டாம். யாரோ உனக்கு தவறாக சொல்லி கொடுத்திருக்கிறார்கள். இது காமுகனான, சீலமில்லாதவன் செய்யும் செயல்.  பாபத்தை செய்யத் துணிந்து வந்திருக்கிறாயே, வேண்டாம்.  அரசன் மதி கெட்டுபோனால், அவன் ராஜ்யமும் அவனுடனேயே அழியும். ராமனை அவன் தந்தை கைவிடவும் இல்லை,  துரத்தவும் இல்லை.  மரியாதை இல்லாமல் அவன் ஒரு போதும் நடந்து கொண்டதும் இல்லை. அவன் லோபியும் அல்ல, சீலம் இல்லாதவனும் அல்ல. அவனை க்ஷத்திரிய குலத்துக்கு கேடாக வந்தவன் என்று சொல்வதும் நியாயமே இல்லை.  கௌசல்யானந்தவர்த4னன், அவன். தர்ம குணங்கள் இல்லாதவன் என்று எப்படி சொல்கிறாய்? அவன் கொடியவனும் அல்ல, எந்த ஜீவனுக்கும் ஹிதமில்லாததை செய்பவனும் இல்லை. கைகேயியினால் ஏமாற்றப் பட்ட தந்தையைக் கண்டு சத்யவாதி என்ற தந்தையின் பெயருக்கு களங்கம் வரக் கூடாது என்றும், செய்கிறேன் என்று சொன்ன தந்தையின் வாக்கை காப்பாற்றும் பொருட்டும் காட்டுக்கு வந்தான். தந்தை தசரதனுக்கும், தாயான கைகேயிக்கும் பிரியமானதை செய்ய ராஜ்யத்தைத் துறந்து, போகங்களைத் துறந்து தண்டகா வனம் வந்துள்ளான். ராமன் கொடூரமானவனும் அல்ல. அவித்வானும் இல்லை. புலனடக்கம் இல்லாதவன் இல்லை. பொய்யாக, தவறாக கேள்விப் பட்டிருக்கிறாய். நீ இவ்வாறு பேசுவது தகாது. ராமன் தர்மமே உருவானவன். சாது. சத்ய பராக்ரமன். எல்லா உலகுக்கும் அரசன். தேவர்களுக்கு இந்திரன் போன்றவன்.  தன் தேஜஸால் வைதேஹியை ரக்ஷித்து வருகிறான். சூரியனுடைய ஒளியை பிடுங்கி வருவேன் என்று சொல்வது போல வைதேஹியை அபகரித்து வருவேன் என்று சொல்கிறாய். ராமனே திடுமென பற்றிக் கொண்ட நெருப்பு என்று வைத்துக் கொண்டால், அவனுடைய வில்லும்  அம்பும் எரி பொருளாகும். தாங்க முடியாத பாணங்கள் கொழுந்து விட்டெரியும் தீ ஜ்வாலையாகும். இதில் தானாக போய் விழ முயற்சிக்காதே. நீயாக போய் ராஜ்யம், சுகம், உயிர் எல்லாவற்றையும்  துறந்து, இப்பொழுது வாழும் இஷ்டமான வாழ்க்கையையும், நாசமாக்கிக் கொள்வாய். ராமன் தானே காலனாக நிற்க, அவன் வில் பெரிய வாயை திறந்து கொண்டு காத்திருக்க, அதிலிருந்து புறப்படும் சரங்கள் தீ ஜ்வாலையாக சுட, தாங்க முடியாத வீரத்தோடு, சத்ருக்களை அழிக்கும் அவன் பராக்ரமத்தை எதிர்த்து நிற்க முடியாமல், திணறுவாய். அவன் வில்லே கையில் எமனுடைய பாசக்கயிறு போல இருக்கும். இதை அறியாமல் நீயாக அவன் எதிரில் போய் நின்று உன் அழிவைத் தேடிக் கொள்ளாதே. ஜனகன் மகளுடைய தேஜஸும் உன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாதது.  ஒப்பிட்டு சொல்ல முடியாதது.  நரசிங்கமான ராமனுடையவள். சிங்கம் போன்ற அவன் தோள்களை ஆசிரயித்தவள். தன் உயிரை விட மேலாக ராமன் அவளை நினைக்கிறான். மனைவி, நித்யமும் அவனைத் தொடர்ந்து, அனுசரித்து செல்லும் பிரியமான பத்னி. மிதிலா நகரத்து செல்வ மகளான அவளை யாரும் அசைக்க முடியாது.  நெருப்பின் ஜ்வாலை போன்றவள். அழகிய இடையுடையவள். ராக்ஷஸாதி4பா,  எதற்காக இந்த வீண் முயற்சி? அவனை நீ யுத்தத்தில் எதிர் கொண்டால் அது தான் உன் வாழ்வின் முடிவு என்று எண்ணிக்கொள். உன் வாழ்க்கையோ, சுகமோ, ராஜ்யமோ எதுவுமே உனக்கு அரிய பொருளாகிவிடும். இன்னும் நிறைய நாள் உயிருடன் இருந்து அனுபவிக்க எண்ணம் இருந்தால், ராமனோடு மோதாதே. அவனுக்கு எதிராக எதுவும் செய்யாதே. எல்லா மந்திரிகளுடனும், விபீஷணனுடனும் கலந்து ஆலோசி. தர்மம் அறிந்த உன் மந்திரி வர்க்கங்களையும் கேட்டு நிச்சயம் செய்து கொள். குண, தோஷங்களையும், பலா பலன்களையும் பிரித்து ஆராய்ந்து பார்த்து உன் சக்தியையும் ஒப்பிட்டபின், எது ஹிதம், எது ஹிதமில்லாதது என்று எது நன்மை தரும், எது கெடுதல் என்பதை தீர்மானித்துக் கொண்டு காரியத்தில் இறங்கு. என் மனதில் பட்டதை சொல்கிறேன். கோஸல ராஜ குமாரனுடன் யுத்தம் செய்வது உன் சக்திக்கு அப்பாற்பட்டது.  நிசாசர அரசனே, என் அறிவுரையைக் கேட்டுக் கொள். இந்த காரியம் நீ செய்யாதே. உனக்கு நல்லதல்ல.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் அப்ரியபத்2ய வசனம் என்ற முப்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 38 (234) ராமாஸ்திர மகிமா (ராமனின் பாணங்களின் மகிமை)

 

ஒரு சமயம் நான் காடுகளில் திரியும் பொழுது, ஆயிரம் யானை பலம் உடையவனாக, தன் வீர்யத்தில் கர்வமும் உடையவனாக பெரிய மலை போல இருந்தேன். நீல மேகம் போன்ற நிறமும்,  பத்தரை மாற்றுத் தங்கத்தாலான குண்டலங்களும், வில்லும், ஆயுதங்களும் ஏந்தி உலகத்தில் எல்லோரும் பயப்படும் வண்ணம் தண்டகாரண்யத்தில் அலைந்து திரிந்தேன். ரிஷி மாமிசம் தான் ஆகாரம்.  விஸ்வாமித்திரர் என்ற மகா முனிவர் என்னிடம் பயந்து தானே போய் தசரத ராஜாவிடம் வேண்டிக் கொண்டார்.  நரேஸ்வரா, மாரீசன் மிகவும் பயங்கரமானவன். என்னால் அவனை சமாளிக்க முடியவில்லை. இந்த ராமன் தான் எங்களை காப்பாற்ற முடியும். அவனை என்னுடன் அனுப்பு, எனவும், தசரத ராஜா, முனிவரே, என் மகன் பா3லன்.  பன்னிரண்டு வயது குழந்தை.  இன்னும் அஸ்திர சஸ்திரங்களை அறியாதவன். வேண்டுமானால் சைன்யத்துடன் நான் வருகிறேன். உங்கள் சத்ருக்களை நாசம் செய்கிறேன். ராஜா இவ்வாறு சொல்லவும், முனிவர் சொல்லுவார். அந்த ராக்ஷஸனை எதிர்க்க, ராமன் அன்றி வேறு யாராலும் முடியாது.  நீ தேவர்களைக் கூட யுத்தத்தில் காப்பாற்றியது அறிந்ததே. நீ செய்த மகத்தான காரியங்களை மூவுலகும் அறியும். ஆனாலும் உன் பெரிய சைன்யம் இங்கேயே இருக்கட்டும்.  இவன்  பா3லனேயானாலும் அந்த மாரீசனை அடக்க சாமர்த்தியம் உள்ளவன்.  ராமனை அழைத்துக் கொண்டு போகிறேன், உனக்கு மங்களம் உண்டாகட்டும். ராஜன், ராமனைத் தா என்று கேட்டு முனிவர் ராமனை  மிகவும் மகிழ்ச்சியோடு தன் ஆசிரமத்திற்கு அழைத்து சென்று விட்டார்.  பின்னர் தண்டகாரண்யத்தில் யாகம் செய்ய தீக்ஷை ஏற்றுக் கொண்ட முனிவருக்கு பாதுகாவலாக, தன் வில்லை தயாராக வைத்துக் கொண்டு ராமன் நாலா புறமும் காவல் காத்தபடி கவனமாக நின்றான். சூது வாது அறியாத ஸ்ரீமான், பத்ம பத்ரம் போன்ற கண்களையுடையவன். காக பக்ஷம் எனும் முன் குடுமி வைத்துக் கொண்டு சிறுவன், கையில் வில்லும், அடர்ந்த கேசமும், பொன் மாலைகள் மார்பில் புறள, தன் தேஜஸால் தண்டகாரண்யத்தையே பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்தான். இளம் சந்திரன் உதித்தது போல இருந்தான், ராமன்.  வரங்கள் பெற்றதால் என் பலத்தில் அபார கர்வம் கொண்டிருந்த நான் அலட்சியமாக அந்த ஆசிரமம் சென்றடைந்தேன்.என் குண்டலங்கள் பத்தரை மாற்றுத் தங்கத்தாலானது. அதன் ஒளி என் நீல மேகம் போன்ற பெரும் தேகத்தில் பட்டு சிதறும்.  நான் உள்ளே நுழைந்ததைக் கண்ட உடனே, அவசரமாக ஆயுதத்தை எடுத்து தயாராக இருந்த வில்லில் பூட்டி என் மேல் பிரயோகம் செய்தான். பரபரப்புடன் அவன் பிரயோகம் செய்த பாணங்களை, அவனுடைய மகிமை தெரியாமல், பா3லன் இவன் என்று எண்ணி லட்சியம் செய்யாமல் நான் விஸ்வாமித்திரருடைய யாக வேதி3யை நோக்கி ஓடினேன். எதிரிகளை ஒழிப்பதில் வல்லவனான ராகவன் என் மேல் கூர்மையான அம்பால் அடித்தான். அந்த அம்பு என்னை சத யோஜனை தூரம் தள்ளி, சமுத்திரத்தில் கொண்டு தள்ளியது. என்னை அவன் அப்பொழுது கொல்ல விரும்பவில்லை. வீரனான அவனால் நான் காப்பாற்றப் பட்டேன். அவனுடைய சர வேகத்தால் தள்ளப் பட்டு, எதுவும் செய்ய இயலாமல் ஆழமான சமுத்திரத்தில் போய் விழுந்தேன். வெகு நேரம் கழித்து நினைவு வந்து, நான் லங்கைக்கு திரும்பிச் சென்றேன். இவ்வாறு அவனால் உயிர் போகாமல் தப்பி பிழைத்தேன். அந்த சமயம் ராமன் சிறுவன். அஸ்த்ர  சஸ்திரங்களை அறியாதவன். அப்பொழுதே அவன் குறி தவறாமல் அடித்தான். அதனால் தான் உன்னை தடுக்கிறேன். ராமனுடன் விரோதம் வைத்துக் கொள்ளாதே. மீறி செய்தால், விளைவு பயங்கரமாக இருக்கும்.  ராக்ஷஸ ராஜனே, விளையாட்டு, ரதி என்று மூழ்கியிருக்கும் ராக்ஷஸர்களுக்கும், சமாஜ உற்சவங்கள் செய்து கொண்டிருக்கும்  லங்கா வாசிகளுக்கும், அனர்த்தம், கேடுதான், ராவணா, அவர்களும் வருந்துவார்கள். அழகிய மாட, மாளிகைகள் நிரம்பி, பல விதமான ரத்னங்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்ட லங்கா நகரம் மைதி2லி காரணமாக அழியப் போகிறது. தாங்கள் சுயமாக பாபம் செய்யாத போதும், அப்பழுக்கின்றி இருப்பவர்களும் கூட பாபிகளின் சங்கத்தால், மற்றவர்களின் பாபம் காரணமாக அழிவை அடைகின்றனர். பாம்புகள் ஆக்ரமித்திருக்கும் நீர் நிலையில் மீன்கள் கஷ்டப் படுவது போல. திவ்யமான சந்தன பூச்சுகளுடன், திவ்யமான ஆபரணங்கள் அணிந்து உல்லாசமாக இருக்கும் ராக்ஷஸர்கள் உன் காரணமாக அடிபட்டு பூமியில் விழுவதை பார்ப்பாய்.. மனைவியை இழந்தவர்கள், மனைவியையும் உடன் அழைத்துச் செல்பவர்கள் என்று, ராக்ஷஸர்கள் பத்து திக்குகளிலும் பயந்து ஓடும் ராக்ஷஸர்கள், யுத்தத்தில் மாண்டவர்கள் போக மீந்தவர்கள், சரணம் இன்றி, அலை பாய்வதைக் காணப் போகிறாய். பாணங்கள் ஏக காலத்தில் வந்து விழுந்து, நெருப்பு  ஜ்வாலையாக பற்றிக் கொண்டு எரிய, லங்கையை வெகு சீக்கிரத்தில் காணப் போகிறாய், சந்தேகமே இல்லை. பிறன் மனைவியை தீண்டுவது போன்ற பாபம் வேறு எதுவும் இல்லை. உன்னால் மணந்து கொள்ளப் பட்ட பெண்களே ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள். உன் மனைவியிடம் சுகமாக இரு. உன் குலத்தைக் காப்பாற்று. உனக்கு இஷ்டமான உயிரையும், செல்வ செழிப்பையும் ராஜ்யத்தையும் காப்பாற்று.  அழகிய களத்ரங்களையும் (மனைவிகளையும்) மித்திரர்கள், பந்துக்கள், சுற்றத்தாரை வெகு காலம் அனுபவிக்க விரும்பினால், ராமனுடன் விரோதம் பாராட்டாதே. உன் நலனை விரும்பும் நல்ல நண்பன் நான். நான் சொல்வதைக் கேட்காமல் சீதையை பலவந்தமாக அபகரிப்பாயானால், உன் பலம் க்ஷீணமாகும். ராமனுடைய சரங்களால் அடிபட்டவனாக உயிரை இழப்பாய். பந்துக்களை யமனிடம் நீயே அழைத்துச் செல்பவனாக இருப்பாய்.

 

இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராமாஸ்திர மகிமா என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 39 (235) சாகாயகரணாப்யுபகம: (உதவி செய்ய  மறுத்தல்)

 

எப்படியோ அந்த சண்டையில் அவனிடமிருந்து தப்பித்தவன், இன்னமும் அதை நினைத்தாலே நடுங்கிக்  கொண்டிருக்கிறேன்.  நீயும் கேள். என்ன நடந்தது என்று சொல்கிறேன், பதில் பேசாதே, இடை மறிக்காதே.  சிலர் எனக்கு ஆறுதல் சொல்லி  தைரியமூட்டினர். சிலர் மனக்லேசத்தை நீக்கி திரும்ப தண்டகாரன்யம் வரை உடன் வந்தனர். அதிலும் முக்யமாக இருவர் அளித்த உற்சாகத்தில் நான் உண்மை நிலையை மறந்தேன். மிருக ரூபத்தில் தண்டகாரன்யத்தில் சஞ்சரித்தேன். நீண்ட நாக்கும், பெரிய உடலும், கூரிய பற்களுமாக மகா பலசாலியாக மாமிசம் தின்னும் மகா ம்ருகமாக சுற்றி வந்தேன். தவம் செய்யும் முனிவர்களை பயமுறுத்திக் கொண்டு, அக்னி ஹோத்ரம் நடக்கும் இடங்களிலும், மடங்களிலும், மரத்தடிகளிலும், அலைந்தேன். அவர்களை அடித்து, ரத்தத்தைக் குடித்துக் கொண்டு, மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டு திரிந்தேன். ரிஷி மாமிசங்களைத் தின்று க்ரூரமாக வனத்தில் வசிக்கும் ஜீவன்களை பயமுறுத்திக் கொண்டு, தண்டகா வனம் முழுவதும் பயமின்றி  நடமாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது தபஸ்வியாக ராமனைக் கண்டேன். மகா பாக்யசாலியான வைதேஹியையும், மகா ரதியான லக்ஷ்மணனையும் கண்டேன். ஆகார நியமங்களோடு தவம் செய்பவனாக கண்டேன். உலகிலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாக, தவம் செய்யும் அவனை, அலட்சியமாக, தபஸ்வி தானே என்று எண்ணி, பழைய வைரத்தை மனதில் வைத்துக் கொண்டு கூர்மையான கொம்புகளால் முட்டுவது போல ஓடினேன். அவனோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல் மூன்று பாணங்களை விட்டான்.  பெரிய வில்லை இழுத்து விட்ட அந்த கூர்மையான பாணங்கள் கருட  வேகத்தில், காற்று வேகத்தில் பாய்ந்து வந்தன. வஜ்ரம் போன்றவை, சத்ருக்களை அழித்தே தீரும் என்பது போல  பயங்கரமானவை, எங்கள் ரத்தத்தை  குடிக்க வந்தது போல எங்களைத் துரத்தின. இந்த பா3ணங்களின் தன்மையை முன்பே அறிந்திருந்தும் நான் அறிவிலியாக,  ராமனை எதிர் கொண்டு போனதை நினைத்து பயந்து நடுங்கலானேன். என் கூட்டாளிகள் இருவரும் அந்த க்ஷணத்திலேயே மாண்டு விழுந்தனர்.  எப்படியோ உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்தேன், இங்கு ஒளிந்து கொண்டிருக்கிறேன், தவம் செய்யும் சாக்கில்.  தபஸ்வியாக ஆகி விட்டேன். மரங்கள் ஒவ்வொன்றிலும் ராமனை பார்க்கிறேன். வல்கலை மரவுரி தரித்து கையில் வில்லுடன் ராமன் நிற்பது யமன் பாசக் கயிறு ஏந்தி நிற்பது போலத் தெரிகிறது. ஆயிரக்கணக்கான ராமர்களைப் பார்க்கிறேன். ராவணா, இந்த காடே எனக்கு ராம மயமாகத் தெரிகிறது. ராக்ஷஸாதிபா, உன்னைத் தவிர, மற்ற எல்லாமே எனக்கு ராமனாக காட்சியளிக்கிறது. கனவில் ராமனைக் கண்டால் அலறி அடித்துக் கொண்டு விழித்துக் கொள்கிறேன். ராவணா, ரகாரத்தில் ஆரம்பிக்கும் பெயர்கள் எல்லாமே எனக்கு ராமனாகத் தெரிகிறது. பயத்தில் நடுங்கும் எனக்கு ரதம் என்றாலோ, ரத்னம் என்றாலோ கூட பயம் உண்டாகிறது. அவனுடைய பிரபாவத்தை அறிந்தவன் நான் சொல்கிறேன், கேள். ராமனுடன் விரோதம் வைத்துக் கொள்ளாதே. ரகு4 நந்தனன், ப3லியையும், நமுசியையும் கூட கொல்வான். என்ன வேண்டுமானாலும் செய்து கொள். என்னை மன்னித்து விடு. ராமனுடன் யுத்தம் செய்வதானாலும் செய்து கொள். என்னைத் திரும்பவும் பார்க்க விரும்பினால், ராமன் பேச்சை எடுக்காதே. எவ்வளவோ சாதுக்கள், கிரமமாக தர்மத்தை அனுஷ்டித்தவர்கள் கூட, மற்றவர்களின் அபராதத்தால், தன் பரிவாரங்களோடு அழிந்து காணாமல் போய் இருக்கிறார்கள். இதோ, நானும், உன் தவற்றால் அழியப் போகிறேன். நிசாசரா, உனக்கு விருப்பம் போல செய்து கொள். உனக்கு நன்மையைச் சொல்லி நான் திருத்த முடியும் என்று தோன்றவில்லை. ராமனோ, மகா தேஜஸ்வி. மகா ப3லமுடையவன். அவன் ராக்ஷஸ லோகத்துக்கு யமனாக ஆகி விடக் கூடாதே என்பது தான் என் கவலை. சூர்ப்பணகா சொல்லி, கரன் ஜனஸ்தானம் சென்றானே, அவன் கதி என்ன ஆயிற்று. அழிந்தான். ராமனுடைய துல்யமான வில் வித்தைக்கு முன்னால் நிற்க முடியாது. இப்பொழுது சொல்லு, ராமன் செய்த தவறு என்ன? இந்த வார்த்தையை ப3ந்து4 என்ற நல்லெண்ணத்தில் சொல்கிறேன். இதை ஏற்றுக் கொள்ளாவிடில் ப3ந்து4க்களோடு உயிரை விடுவாய். ராமனுடைய பாணங்களை எதிர்க்க முடியாமல் அடி பட்டு வீழ்வாய், இது நிச்சயம்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சகாய-அப்4யனுகமோ என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 40 (236) மாயா ம்ருக3 ரூப பரிக்3ரஹ நிர்ப3ந்த4:

(மாய மான் ரூபத்தை எடுத்துக் கொள்ள நிர்பந்தித்தல்)

 

மாரீசன் சொன்ன யுக்தமான வார்த்தைகளை கேட்டுக் கொண்டாலும் அதன்படி நடக்க ராவணன் தயாராக இல்லை. இறக்கும் தறுவாயில் உள்ள ஜீவன் மருந்தை ஏற்றுக் கொள்ளாதது போல. பத்2யமாகவும், ஹிதமாகவும் மாரீசன் நண்பனாக சொன்ன ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளாத ராக்ஷஸாதி4பன், காலனால் தூண்டப் பட்டவன் போல கடுமையாக பதில் சொன்னான். உப்பு மண்ணில் விதை விதைத்தாற் போல இந்த வார்த்தைகள் என் மனதில் பதியவில்லை. உன் வார்த்தைகள் பலனற்றவை. மாரீசனே, பொருத்தமில்லாத ஆலோசனைகள் சொல்கிறாய். நீ சொல்வதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. என்னை யாராலும் அசைக்க முடியாது. பாப சீலனான, மூர்க்கனான, அதிலும் மனிதனான ராமனுக்கு முன்னால் நின்று நான் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவன் கரனைக் கொன்றவன். ப3ந்துக்களையும், ராஜ்யத்தையும், தாயையும்,  தந்தையையும் விட்டு பெண் பிள்ளையின் வார்த்தையைக் கேட்டு, ஒற்றையடிப் பாதையில் வனம் வந்திருக்கிறான். அவனுடைய உயிருக்கும் மேலான சீதையை உன் முன்னாலேயே அபகரிக்கத்தான் வேண்டும். இது என் மனதில் நிச்சயம் செய்யப் பட்ட விஷயம். மாரீசா, இதை மாற்ற முடியாது. இந்திரனோடு, தேவர்கள் எல்லோரும் வந்தாலும், சுராசுரர்கள் வந்து நின்றாலும், என் முடிவில் மாற்றம் இல்லை. இதில் தோ3ஷமோ, குணமோ உன்னைக் கேட்டால் நீ சொன்னால் போதுமானது. இந்த காரியத்தில் அபா4யமோ, உபாயமோ நான் என் மந்திரிகளிடம் கேட்டு விசாரித்துக் கொள்கிறேன். அரசனிடம் கை கூப்பி வேலை செய்பவர்கள், தன் நிலை மறந்து விடக் கூடாது.  அவனுக்கு ப்ரதிகூலம் இல்லாத சொல்லை, ம்ருது3வாக, ஹிதமாக, சுப4மாக சொல்ல வேண்டும்.  உபசாரத்தோடு மரியாதையாக பேச வேண்டியவர்கள், பூமியை ஆளும் அரசர்கள். நிந்திப்பது போன்ற ஆலோசனையை ஹிதம் என்று நினைத்து சொன்னாலும், கௌரவம் இல்லாத அந்த சொல், கௌரவத்தோடு பேசப் பட வேண்டிய அரசனுக்கு உகந்ததாக இருப்பதில்லை. அரசர்கள் பராக்ரமம் உடையவர்கள்.  ஐந்து விதமான முகங்களைத் தரிக்கிறார்கள். அக்னியின், இந்திரனின், சோமனின், யமனின், வருணனின் முகங்கள் இவை. தாங்க முடியாத தகிக்கும் உஷ்ணத்தையும், விக்ரமத்தையும், சந்திரன் போன்ற குளுமையான தயவையும், தண்டனையளிக்கும் தன்மையும், ப்ரஸன்னமான தன்மையும் ஒன்று சேர, அரசன் தாங்குகிறான். க்ஷணதா3சர, (ராக்ஷஸா) அதனால் எந்த நிலையிலும் பார்த்திபர்கள் எனும் அரசர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை பூஜிக்க வேண்டியதும் பிரஜைகளின் கடமை. உனக்கு தர்மம் தெரியவில்லை. மோகம் உன் புத்தியை மறைக்கிறது. தேடி வந்த என்னிடம் இது போல கடுமையான வார்த்தைகளைப் பேசுகிறாய். குண, தோஷங்களை நான் கேட்கும் பொழுது சொல். என் சக்தியைப் பற்றி உனக்கு தெரியாதா? இப்பொழுது சொல், பலசாலியே,  இந்த பெரிய காரியத்தில் நீ உதவி செய்தாக வேண்டும். என் கட்டளைப் படி செய்ய வேண்டியது என்ன என்று சொல்கிறேன் கேள்.  சுவர்ண மயமான மான் ரூபம் எடுத்து, வெள்ளியின் நிறத்தில் புள்ளிகள் உடைய புள்ளி, மானாக, அந்த ராமனின் ஆசிரமத்தில் சீதையின் முன்னால் நடமாடு.  வைதேஹியை ஆசை காட்டி வெகு தூரம் செல். மாயா ம்ருகமான உன்னைப் பார்த்து, ஆச்சர்யம் அடைந்து பொன்னிறமான இந்த மானைக் கொண்டு வாருங்கள் என்று  உடனே வைதேஹி ராமனைக் கேட்பாள். ராமன் கிளம்பியதும் வெகு தூரம் அவனை இழுத்துச் செல். ஹா சீதே, ஹா லக்ஷ்மணா, என்று ராமன் குரலில் கத்து. இதைக் கேட்டு ராமன் இருக்கும் இடத்திற்கு சீதை லக்ஷ்மணனையும் அனுப்புவாள். ராமன் குரலைக் கேட்ட பரபரப்பில் லக்ஷ்மணனும் ஓடி வருவான்.   காகுத்ஸனும் முன்னால் போக, லக்ஷ்மணனும் தொடர்ந்து ஓடிய பின்,  நான் வைதே3ஹியை அபகரிப்பேன். சஹஸ்ராக்ஷன், ஆயிரம் கண்களுடைய இந்திரன், சசியை அபகரித்தது போல அபகரிப்பேன். இந்த காரியத்தை செய்து விட்டு உன் இஷ்டம் போல எங்கு வேண்டுமானாலும் போ. ராக்ஷஸா, ராஜ்யத்தில் பாதியைத் தருகிறேன். மாரீசா, இது உன் அதிர்ஷ்டமே. சௌம்யனே, போ. இந்த காரியத்தை நல்ல முறையில் செய்ய (சிவம்) நல்ல மார்கம் இதுவே. நான் உன்னை ரதத்தில் தொடர்ந்து வருவேன். தண்டகாரன்யத்தில் யுத்தம் இல்லாமல் ராமனை வஞ்சித்து, சீதையை அடைந்து, லங்கைக்கு திரும்பிச் செல்வேன். உன்னுடன் என் காரியம் நிறைவேறிய திருப்தியோடு. இதை நீ செய்ய மறுத்தால், மாரீசா, இதோ, இப்பொழுதே, உன்னைக் கொல்வேன். பலாத்காரமாக நான் சொன்னதை நீ செய்தே ஆக வேண்டும். அரசனை எதிர்த்து நிற்பவன் எப்பொழுதும் சுகத்தை அடைவதில்லை. அவனை நெருங்கி உன் உயிருக்கு ஆபத்து என்று பயந்தால், என்னால் அடிக்கப் பட்டு உனக்கு மரணம் நிச்சயம். அதனால்  யோசித்துப் பார். இது இரண்டிலும் எது உனக்கு உகந்ததோ, அந்த மரணத்தை தேர்ந்தெடுத்துக் கொள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் மாயா ம்ருக3 ரூப பரிக்3ரஹ நிர்ப3ந்தோ4 என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 41 (237) ராவண நிந்தா3 (ராவணனை நிந்தித்தல்)

 

அரசனாக இருந்து ராவணன் இப்படி கட்டளையிட்ட பின், பயமின்றி ராக்ஷஸாதிபனை மாரீசன் நிந்தித்தான். கடுமையான வார்த்தைகளால் சாடினான். எந்த பாபி உனக்கு விநாசத்தை  இப்படி உபதேசித்தானோ. புத்திரனோடும், ராஜ்யத்தோடும், மந்திரிகளுடனும் ஒட்டு மொத்தமாக அழிவாய். நீ சுகமாக இருப்பதை யாரோ விரும்பவில்லை, அதனால் தான் இப்படி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த ம்ருத்யு த்வாரம்- மரணத்தின் வாசலை உனக்கு காட்டியது யார்? சில ராக்ஷஸர்கள், உனக்கு சத்ருக்களாக இருந்து, உன்னால் அடக்கி ஒடுக்கப் பட்டவர்கள், பலவானான ஒருவருடன் உன்னை மோத விட்டு நாசம் செய்ய திட்டமிட்டு, நீ அழிவதைக் காண விரும்புகிறார்கள் போலும். யாரோ ஒரு அல்பன், நீ உன் செயலாலேயே நாசமாக வேண்டும் என்ற உத்தேசத்துடன் உன்னை இப்படி தூண்டி விட்டிருக்கிறான். ராவணா, உன் மந்திரிகள்,  வதைக்கப்பட வேண்டிய இந்த துஷ்டர்களை அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்களே. மகா பள்ளத்தில் விழ இருக்கும் உன்னை தடுக்காமல் இருக்கிறார்களே.  நல்ல மந்திரிகள், காம வசமாகி தறி கெட்டுச் செல்லும் அரசனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை உடையவர்கள். ஆனால் அந்த நல்ல மந்திரிகள் தடுத்தும் கேளாமல் நீ வந்திருக்கிறாயோ.  தர்மம் அர்த்தம், காமம், புகழ் இவைகளை வெற்றி வீரனே, அரசனுடைய தயவால் தான் மந்திரிகள் பலன் பெறுகிறார்கள். இவை விபரீதமாக போகும் பொழுது எல்லாமே வீணாகிறது. தலைவனின் குணக் கேடால் இவர்களும் எதிராக பலன்களைப் பெறுகிறார்கள். மற்ற ஜனங்கள் தர்மமும், புகழும், ராஜனை அடிப்படையாக கொண்டது. அதனால் எந்த நிலையிலும் அரசனைக் காப்பாற்றியே ஆக வேண்டும். கடுமையான சொற்களால் ராஜ்யத்தை ஆள முடியாது. நிசாசரனே, ப்ரதிகூலமாக நடந்து கொள்வதாலும், வினயம் இல்லாத போதும் ராஜ்யம் ஆள்வது முடியாது. உன் மந்திரிகள் உன்னுடைய கடுமையான ஆக்ஞைகளுக்கு பணிந்து போகிறார்கள். தவறு என்று அறிந்தும் உன்னோடு அவர்களூம் இதனால் பாதிக்கப் படுவார்கள். ஓட்டத் தெரியாத சாரதியின் கையில்  வேகமாக செல்லும் ரதத்தை கொடுத்து, வழியும் நேராக இல்லாமல் போனால், அவன் செய்வதறியாது திகைப்பதைப் போல, ரதத்தை விழச் செய்வது போல ஆகும். எவ்வளவோ சாது ஜனங்கள், உலகில் யுக்தமாக தர்மத்தையே அனுஷ்டித்து வருபர்கள், மற்றவர்கள் தவற்றால் நாசம் அடைந்துள்ளனர். பிரதி கூலமான எஜமானனால் சுற்றார், உற்றாரோடு அழிந்திருக்கிறார்கள்.  இந்த முறையில் பிரஜைகளை நீ ரக்ஷிப்பாயானால், அவர்கள் மாட்டு சாணத்தில் மறைத்து வைத்திருக்கும் ஏலக்காய் போல தங்கள் சக்தியை இழப்பார்கள்.  முன்னேற வழியின்றி அமுக்கப்பட்டவர்களாக யாருக்கும் உதவியின்றி மடிவார்கள்.  ராவணா, இந்த ராக்ஷஸர்களுக்கு அரசனாக வந்து வாய்த்தாயே. அதனாலேயே ராக்ஷஸர்களின் அழிவு நிச்சயம். துர்புத்தியுடையவனே, புலனடக்கம் இல்லாத, கெட்ட குணங்கள் அனைத்துக்கும் இருப்பிடமானவனே, கடைசியாக காகம் உட்கார பனங்காய் விழுந்த கதையாக இந்த காரியம் என் தலையில் வந்து விழுந்ததே. என் செய்வேன். இன்றைய தினத்தை நினைத்து நீ நிச்சயம் வருந்தப் போகிறாய். சைன்யத்தோடு அழியும் பொழுது நீ நினத்துக் கொள்வாய். என்னை கொன்று விட்டு,  உடனே ராமன், என்னைத் தூண்டி விட்டது யார் என்று பார்த்து உன்னையும் கொல்லப் போகிறான். எதிரியின் கையால் மரணமடைகிறேன். அதில் என் ஜன்ம சாபல்யம் ஆகும்  ராமனை பார்த்த மாத்திரத்திலேயே நான் அழிந்தேன் என்று கொள். சீதையை அபகரித்துக் கொண்டு போய், நீயும் பந்துக்களோடு அழிந்ததாகவே கொள்.  சீதையை ஆசிரமத்திலிருந்து நீ அழைத்துக் கொண்டு வந்து விட்டால் நீயும் இருக்க மாட்டாய், நானும் இருக்க மாட்டேன். லங்கையும் இருக்காது. ராக்ஷஸர்களும் இருக்க மாட்டார்கள். உன் நன்மைக்காக  உன்னை தடுக்கும் என்னை கோபித்துக் கொண்டு இவ்வளவு நிந்திக்கிறாய் ராக்ஷஸா. ஆயுள் முடியும் தறுவாயில் உள்ளவன், நண்பர்கள் சொல்லும் ஹிதமான உப தேசங்களைக் கேட்காமல், மேலுலகம் செல்லும் நேரம் வாய்த்து விட்டவர்கள் இப்படித் தான் செய்வார்கள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராவண நிந்தா என்ற நாற்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 42 (238) ஸ்வர்ண ம்ருக3 ப்ரேக்ஷணம் (பொன் மானை அனுப்புதல்)

 

ராவணனைப் பார்த்து  இவ்வாறு சொல்லிவிட்டு, தீனமாக போவோம் என்று சொன்னான்.  ராக்ஷஸ ராஜனிடம் பயம்.  என்னைப் பார்த்து விட்டால் ராமன் நிச்சயமாக ஆயுதத்தை எடுப்பான்.  வில்லும், அம்புகளும் எப்பொழுதும் அவன் கையிலேயே இருக்கும். அதன் பிறகு எனக்கு வாழ்வே இல்லை. ராமனை எதிர்த்து யாரும் உயிருடன் திரும்பியதில்லை. நீ தான் எதிர்த்து நிற்கிறாய். யம தண்டம் உன்னை துரத்துகிறது. நீ இவ்வளவு துராத்மாவாக இருக்கும் பொழுது நான் என்ன செய்வது? என்ன சொல்லி என்ன பலன்? இதோ போகிறேன். மகனே, உனக்கு மங்களம். நிசாசரனே, உனக்கு மங்களம்.  ராவணன் இந்த வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தான். மாரீசனை ஆரத் தழுவிக் கொண்டு, உன் போன்ற வீரர்களுக்கு இது தான் அழகு. என் வழியில் என்னைப் போல் பேசினாய். இந்த நிமிஷத்திலிருந்து நான் உன்னிடம் கொண்ட கோபமும் தீர்ந்தது. இதோ ரத்னங்களால் அலங்கரிக்கப் பட்ட இந்த ரதத்தில் ஏறிக் கொள். என் கூட வந்து என் ரதத்தில் வந்து வைதேஹிக்கு ஆசை காட்டி விட்டு உன் இஷ்டம் போல செல்வாய்.  சூன்யமான இந்த  ஆசிரமத்திலிருந்து வேகமாக சீதையை அழைத்துக் கொண்டு வந்து விடுவேன். விமானம் போன்ற அந்த ரதத்தில் ராவணனும் மாரீசனும் ஏறிக் கொண்டு சீக்கிரமாக அந்த ஆசிரம பிரதேசத்தை விட்டுப் புறப்பட்டனர். அதே போல நகரங்களையும், வனங்களையும் பார்த்துக் கொண்டு, மலைகளையும், நதிகளையும் கடந்து, பல ராஷ்டிரங்களையும் நகரங்களையும் கடந்து தண்டகா வனத்தை, ராகவனுடைய ஆசிரமம் இருக்கும் இடத்தை அடைந்தனர். ராக்ஷஸர்கள் தலைவனான ராவணன் மாரீசனுடன் ஆசிரமத்தைக் கண்டான். அந்த காஞ்சன மயமான ரதத்திலிருந்து இறங்கி, மாரீசன் கைகளைப் பிடித்துக் கொண்டு ராவணன், இதோ ராகவனின் ஆசிரமம் வாழை மரங்கள் சூழத் தெரிகிறது. நண்பனே சீக்கிரம் நான் சொன்னபடி செய், நமது காரியம் நிறைவேறும் படி செய்.  என்றான். மாரீசனும், மிருக ரூபம் எடுத்துக் கொண்டு ராமனது ஆசிரம வாசலில் நடமாடினான். மிகவும் அத்புதமான காட்சியாக அது இருந்தது.  மணிகள் நிரம்பிய கொம்பும், நுனியில் சந்திரன் போல வெண்மையும், கறுப்புமான முக அமைப்பு, சிவந்த பத்3மமோ, உத்பலமோ எனும் முகம், இந்திர நீல உத்பல புஷ்பம் போல காதுகள், சிறிது வளைந்து நிமிர்ந்த கழுத்து,  இந்திர நீல வண்ண இலை போன்ற உதடுகள், முல்லை புஷ்பம் போன்ற வஜ்ரத்துக்கு இணயாக இறுகிய வயிறு, ஒளி வீசும் தேனீக்கள் போல புள்ளிகள் உடைய பக்கங்கள், தாமரையின் மகரந்தம் போன்ற அழகும், வைடூரியத்துக்கு நிகரான பாத குளம்புகளும், உடலும், முட்டிகளுமாக, மிக அழகாக சேர்ந்தாற் போல அமைந்த உடல் வாகும், இந்திரனுடைய ஆயுத  நிறத்தில் வாலும் மேல் நோக்கித் தெரிய, மனதைக்  கவரும் அழகிய வர்ணமுடையதாய், பலவிதமான ரத்னங்கள் பதித்திருக்க, ஒரு க்ஷணத்தில் ராக்ஷஸன் பரம சோபனமான அழகிய மானாக ஆனான். ராமனின் ஆசிரமத்தையும் சேர்த்து அந்த வனத்தையே ஒளி மயமாக ஆக்கிக் கொண்டு, காட்சிக்கு இனிய, மனதை கவரும் தோற்றத்துடன் ரூபத்துடன் அந்த ராக்ஷஸன் வைதேஹியை ஆசை காட்டி இழுப்பதற்காக, பல விதமான தாதுக்கள் மண்டிய மலைகளில் சஞ்சரித்தபடி, புல் வெளிகளில் நடந்து நூற்றுக்கணக்கான புள்ளிகளால் விசித்ரமாக ஆகி காட்சிக்கு இனியவனாக, மரங்களின் இலைகளை கடித்தும் தின்று கொண்டும் சஞ்சரித்தான்.  அழகிய ஆனால் வாசனையில்லாத கர்ணிகார புஷ்பங்கள் பூத்துக் குலுங்க நின்ற மரங்களும், வாழை எனும் கதலி மரங்களும் நிரம்பிய வீட்டின் முன் நின்று  சீதையின் கண்ணில் பட வேண்டும் என்றே  அந்த மான் மெதுவாக நடை போட்டது. தாமரை மலர் போன்ற அழகிய பின் புறம் கொண்ட அந்த மான் ராமனது ஆசிரம வாயிலில் நடந்தது. சுகமாக தன் போக்கில் நடந்து செல்வது போல சற்று தூரம் தள்ளிப் போய் பின் திரும்பி வந்து, ஒரு முஹுர்த்தம் வேகமாக போவது போல போய் திரும்பி வந்தது.  பூமியில் உருண்டு விளையாடுவது போல விளையாடி அமர்ந்து கொண்டது. ஆசிரம வாசல் வழியாக மான் கூட்டங்கள் சென்றன. அவைகளுடன் தானும் நடந்து சென்று சற்று தூரம் சென்ற பின் திரும்பி வந்தது.  சீதையைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் அல்லது சீதை தன்னைக் காண வேண்டும் என்ற எண்ணத்துடன்,  மிருக ரூபம் எடுத்த ராக்ஷஸன் தவிப்போடு காத்திருந்தான். அழகிய வட்டங்களாக அமைந்த அந்த ஆசிரம மண்டலத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது.  காட்டில் வசிக்கும் மற்ற மிருகங்கள், அருகில் வந்து முகர்ந்து பார்த்து பத்து திக்குகளிலும் ஓடின. அருகில் வந்த மிருகங்களை தன் சுபாவப்படி அடித்து சாப்பிடத் தோன்றிய எண்ணத்தையும் அடக்கிக் கொண்டு அவைகளை தொட்டு பார்த்ததோடு நிறுத்திக் கொண்டான். இந்த சமயம் விசாலாக்ஷியான வைதேஹி பூக்களை பறிக்கும் உத்தேசத்தோடு, மரங்கள் இருக்கும் இடம் வந்து சேர்ந்தாள். கர்ணிகார புஷ்பங்களையும், அசோக, சூத, புஷ்பங்களையும், மதுவுண்டது போல மயக்கும் விழிகளையுடைய சீதை , பறித்தபடி மெல்ல நடந்து சென்றாள். அந்த காட்டின் சூழ் நிலைக்கு சற்றும் பொருந்தாத ரத்னமயமான மானைக் கண்டாள். முத்துக்களும், மணிகளும் விசித்ரமாக அலங்கரிக்க, அழகிய பற்களும் உதடுகளும் கொண்டு, உடலில் பரவியிருந்த மயிர்கால்களும் அழகிய தாதுக்களால் ஆனது போல இருக்கக் கண்டாள்.  இதைக் கண்ட ஆச்சர்யத்தால் விரிந்த கண்களுடன், அதை சினேகமாக பார்த்தாள். பலவிதமான ரத்னங்கள் நிறைந்த மான் ரூபத்தை இது வரை கண்டதில்லை என்பதால். மாயா மான் ரூபம் கொண்ட ராக்ஷஸனும் அவள் கவனத்தை தன் பால் ஈர்ப்பதற்காகவே, அந்த வனத்தையே ஒளி மயமாக ஆக்கிக் கொண்டு சஞ்சரித்தது. அதிசயமான இந்த மானைக் கண்டு சீதை ஆச்சர்யம் அடைந்தாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஸ்வர்ண மிருக ப்ரேக்ஷணம்  என்ற நாற்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 43 (239) லக்ஷ்மண சங்கா2 ப்ரதி சமாதானம்

(லக்ஷ்மணனின் சந்தேகத்தைக் கேட்டு சமாதானம் செய்தல்)

 

பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த சீதை அதைப் பார்த்து மகிழ்ந்தாள். பொன்னிறத்தில், வெள்ளியிலான புள்ளிகளுடன், இரு பக்கமும் அழகாகத் தெரிய அதிசயத்துடன் பார்த்தாள்.  பொற் கொடி அசைந்தாடுவது போல் இருந்த அவள், ஆச்சர்யத்தால் விரிந்த கண்களுடன் கணவனை அழைத்தாள் லக்ஷ்மணனையும் ஆயுதத்தோடு வரும்படி சொன்னாள். அவள் கூப்பிட்டதால் அருகில் வந்த ராம, லக்ஷ்மணர்கள் இருவருமே அந்த பொன் மானைக் கண்டனர். சுற்று முற்றும் பார்த்த லக்ஷ்மணன் சந்தேகம் கொண்டு ராமனிடம் சொன்னான். இது அதே மாரீச ராக்ஷஸன் தான். மிருக ரூபத்தில் வந்திருக்கிறான். ஆவலோடு வேட்டையாட வரும் அரச குலத்தினரை ஏமாற்ற இப்படி மாயா உருவம் எடுத்துக் கொண்டு ஏமாந்தவர்களை கொல்வான். அவனுக்கு தெரிந்த மாயா ஜாலம் இது. விரும்பியபடி உருவத்தை மாற்றிக் கொள்ள வல்லவன். மாயாவி என்பது தெரிந்தது தானே.  பொன் மான் உருவம் எடுத்து வந்திருக்கிறான். இயற்கையில் இப்படி ஒரு மான் ஸ்ருஷ்டியே கிடையாது. லோகநாதா, இது மாயை தான் சந்தேகமேயில்லை. சௌமித்திரி சொல்வதில் கவனம் செலுத்தாமல், சீதை அந்த அழகிய மானின் விசித்ரமான தோலில் மனதை செலுத்தி மென் நகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். தன் கணவனிடம் சொன்னாள். ஆர்ய புத்ர, இந்த மான் மிகவும் அழகாக என் மனதை கவருகிறது. இதைக் கொண்டு வாருங்கள். நமக்கு விளையாட்டுப் பொருளாக இருக்கும். இந்த ஆசிரமத்தில் பலவிதமான மான்கள் அழகிய காட்சி தரும் விதமாக சஞ்சரிக்கின்றன. ஸ்ருமரா,. சமரா எனும் வகை மான்கள் நிறைய இருக்கின்றன. கரடிகள், புள்ளி மான்கள், வானரங்கள், கின்னரங்கள் இவை பலவிதமான விசித்ரமான உருவங்களுடன் சஞ்சரிக்கின்றன. இது போன்ற மானை இது வரை நாம் கண்டதில்லை. இதன் அழகு வித்தியாசமாக இருக்கிறது. பலவிதமான வர்ணங்களில் வித விதமாக புள்ளிகளும், ரத்னம் போல புள்ளிகளுமாக சேர்ந்து தெரிகிறது. இந்த வனப் பிரதேசத்துக்கே இதனால் சோபை உண்டாகியிருக்கிறது. ஆஹா என்ன அழகு, என்ன லாகவம், என்ன களை என் மனதை இந்த மான் தன் அத்புதமான ரூபத்தால் மயக்குகிறது. இதை பிடிக்கப் போய், உயிருடன் பிடித்து விட்டால் ஆச்சர்யம் தான், நமக்கு ஆனந்தமாக இருக்கும். வன வாசம் முடிந்து திரும்ப ஊர் போகும் பொழுது அந்த:புரத்துக்கு அலங்காரமாக இருக்கும். ஆர்ய புத்ராஸ்ரீ பரதனுக்கும், என் மாமியார்களுக்கும் இதைக் காட்டினால் நிச்சயம் சந்தோஷப் படுவார்கள். அதிசயமான உபகார பொருளாக இருக்கும். உயிருடன் பிடிக்க முடியாமற் போனால், இதனுடைய தோலை அழகாக தனியாக எடுத்து வைத்துக் கொள்வோம். இதைக் கொன்ற பின், பொன்னிறமான இதன் தோலை தரை விரிப்பாக பயன் படுத்துவேன். இதை பிடிப்பது கஷ்டமாக இருக்கும் என்று தோன்றுகிறது.  இதைப் பார்த்து எனக்கு தோன்றும் ஆசையே நூதனமாக இருக்கிறது. அடக்க முடியாத இந்த ஆவல் பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படுவது இல்லை. இதன் அத்புதமான சரீரத்தால் எனக்கு தோன்றிய வினோதம் தான் இந்த ஆசைக்கு காரணமோ என்று  நினைக்கிறேன்.  பொன்னாலான ரோமக் கால்கள், மணிகள் பதித்த கொம்பும், சந்திரன் போன்ற அழகும், இப்படி சீதை சொல்வதையும் கேட்டு, அந்த மானையும் பார்த்த ராமனின் உள்ளத்திலும் குதூகலம் தொற்றிக் கொண்டது.  தானே, அதன் ரூபத்தால் கவரப் பட்டவனாக, சீதையின் தூண்டுதலும் சேர, ராமன் மகிழ்ச்சியுடன் லக்ஷ்மணனிடம் சொன்னான். இதோ பார் லக்ஷ்மணா, வைதேஹி இந்த மானை மிகவும் ஆசைப் படுகிறாள். பார், இது போல கண்களைக் கவரும் வண்ணம் மான்கள் இருக்காது. இந்த வனத்திலும் , நந்தவனங்களிலும், சைத்ர ரத பிரதேசங்களிலும் கூட, பூமியிலேயே வேறு எங்கும் இது போன்ற, இதற்கு சமமான மான் வகை இருந்ததாக கேட்டதேயில்லை. குறுக்கும் நெடுக்குமாக, பொன் வர்ணத்தில், அக்னிக்கு சமமான கோடுகள் பிரகாசமாக காண்கின்றன.  அந்த கோடுகளே ஒளி மயமாக இருப்பதாகக் கூட தோற்றமளிக்கிறது.  கனகம் போன்ற புள்ளிகள் சோபையளிக்கின்றன. இது ஹுங்காரம் செய்யும் போது வெளியில் நீட்டிக் கொண்டு தெரியும் நாக்கு, மேகத்திலிருந்து சமுத்திரம் கொட்டுவது போல இருக்கிறது. மரகதக் கல்லால் ஆன பாத்திரம் போன்ற முகம்.  சங்கமும் முத்தும் போன்ற வயிற்றுப் பிரதேசம், யாருக்குத்தான் இதைப் பார்த்து மனதில் ஆசை வராது. ஒளி வீசும் இந்த வர்ணத்தையும், ரத்னங்கள் ஒன்று சேர்ந்ததைப் போன்ற வனப்பையும் பார்த்து ஆச்சர்யம் ஏற்படாது? பெரிய வனங்களில் அரசர்கள், மாமிசத்திற்காகவோ, அல்லது விளையாட்டாகவோ, வேட்டையாடி மிருகங்களை கொல்வார்கள். வனங்களில் செல்வத்தைத் தேடிச் செல்வார்கள். பலவிதமான தாதுப் பொருட்களையும், மணி ரத்னம் சுவர்ணம் போன்ற விலையுயர்ந்த பொருட்களைத் தேடிச் செல்வார்கள். இது அரசர்கள் குணம். பணத்தை குவித்து, மேலும் சேர்த்து குவித்துக் கொண்டே போக வேண்டும்.  மனதில் நினைத்ததை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்வது என்று ஒரு குணம். சுக்ரன் செய்தானே அது போல்.  எதோ ஒரு பொருளை நாடிச் செல்பவன், செல்லும் மார்கம் தவறாக இருந்தாலும், அதிக ஆசையுடன் அந்த பொருளைத் தேடுகிறான் என்றாலும் கூட, அர்த்த சாஸ்திரம் அறிந்தவர்கள், அந்த இலக்கையும் அடைய வேண்டிய ஒன்றாகவே சொல்கிறார்கள். இந்த மான் ரத்னத்தை மிகவும் அதிசயமான இதன் தோலை மைதிலி விரும்புகிறாள். இதில் என்னுடன் சேர்ந்து அமர ஆசைப் படுகிறாள். காதலி, பிரியகி, ப்ரவேணி, சாவிகி என்ற மான் வகைகளின் தோல்கள் இதன் ஸ்பரிசத்திற்கு சமமாக இருக்காது என்று நினைக்கிறேன். தவிர, ஆகாய மார்கத்தில் சஞ்சரிக்கும் தெய்வீகமான மிருகங்களின் வகையைச் சேர்ந்ததாக கூட இருக்கலாம். தாரா ம்ருக, மஹீ ம்ருக என்று இவைகளைச் சொல்வார்கள். அல்லது நீ சொல்வது போல, லக்ஷ்மணா, ராக்ஷஸனின் மாயையாக இருந்தால், இதை கட்டாயம் வதம் செய்தே ஆக வேண்டும். இந்த மாரீசன் கொடியவன். இவன் வனத்தில் வசிக்கும் முனி புங்கவர்களைத் துன்புறுத்தி வந்தான். பல ராஜ வம்சத்தினரை அரசர்களை தூக்கிக் கொண்டு போய் வேட்டையாடி இருக்கிறான். கொன்று குவித்திருக்கிறான். அதனாலேயும் இந்த ராக்ஷஸனை வதம் செய்தே ஆக வேண்டும். இதற்கு முன்னால் வாதாபி என்ற ராக்ஷஸன், தபஸ்விகளை ஏமாற்றி, வயிற்றில் இருந்து கொண்டு பிராம்மணர்களை கொன்று வந்தான். அஸ்வதரீ, தன் கர்பத்தைக் கொல்வது போல, ஒரு சமயம் லோபத்தினால், அகஸ்திய மகா முனிவரை, அவருடைய உண்மையான தேஜஸை அறியாமல் சாப்பிட முயன்றான். அவனுடைய எண்ணத்தை தெரிந்து கொண்ட அகஸ்திய முனிவர் சிரித்துக் கொண்டே, வாதாபியிடம் சொன்னார்.  வாதாபி, கணக்கில்லாத தபஸ்விகளை நீ ஏமாற்றி கவளீகரம் செய்தாய் அல்லவா,  இப்பொழுது நீயும் என்னால் செரிக்கப் பட்டு விட்டாய் என்றார். அந்த வாதாபியைப் போல் இவனும் உலகில் முனிவர்களை ஏமாற்றுபவனாக இருக்க விடக் கூடாது. என்னைப் போன்றவர்களை புலனடக்கமும், தர்மத்தில் புத்தியும் உள்ளவர்களை அலட்சியமாக நினக்க விடக் கூடாது, வாதாபியை அகஸ்தியர் அழித்தது போல நான் இந்த மாரீச ராக்ஷஸனை அழிக்கிறேன். இங்கு நீ கவனமாக நில். தயாரான நிலையில் மைதிலியை காப்பாற்றிக் கொண்டு நிற்பாயாக. ரகுனந்தனா, இப்பொழுது என்ன செய்வது? நான் இதைக் கொல்வேன். அல்லது பிடித்து வருவேன். நான் போய் இந்த மிருகத்தை கொண்டு வரும் வரையில், இதன் தோலில் ஆசை வைத்த மைதிலியை கவனமாக பார்த்துக் கொள். இந்த விசேஷமான தோல் காரணமாகவே இன்று இந்த மிருகம் அழியப் போகிறது.  நீ சற்றும் சளைக்காமல், இந்த ஆசிரமத்தில் சீதையை கண் காணித்துக் கொண்டு இரு. ஒரு அம்பினால் இந்த புள்ளி மானை அடித்துக் கொன்று இதன் தோலையும் எடுத்துக் கொண்டு சீக்கிரம் வந்து விடுவேன். லக்ஷ்மணா, மிக பலசாலியான பக்ஷி ராஜாவான ஜடாயு நம்மிடம் பரிவோடு சொன்ன புத்திமதியை நினைவு வைத்துக் கொள். எல்லா விதத்திலும் சந்தேகம் கொண்டு கண் இமைக்காமல் மைதிலியை பாதுகாப்பாய். ஒவ்வொரு க்ஷணமும் ஆபத்து  வரும், வரலாம் என்று நினைவு வைத்துக் கொள் என்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் லக்ஷ்மண சங்கா2 ப்ரதி சமாதானம் என்ற நாற்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)s

 

அத்தியாயம் 44 (240) மாரீச வஞ்சனா (மாரீசனின் வஞ்சனை)

 

ரகு நந்தனனான ராமன், சகோதரனுக்கு இப்படி கட்டளையிட்டு, ஜாக்கிரதையாக இருக்கும் படி சொல்லிவிட்டு, வாளை இடையில் செருகிக் கொண்டான்.  உருக்கிய பொன் நிறத்தில் ஒளி வீசும் வாள் அது. தன் அலங்காரங்களுள் ஒன்றாகி விட்ட, மூன்றாக வளைந்த வில்லையும், முதுகில் இரண்டு அம்புகளையும் எடுத்து கட்டிக் கொண்டு கிளம்பினான். வஞ்சனை செய்ய வந்த மாரீசன், ராஜ குமாரன் தன் வலையில் விழுந்ததை பார்த்து பயந்து ஒரு சமயம் மறைந்தான். சற்று பொறுத்து கண்ணெதிரில் தோன்றினான். மிருகம் இருக்கும் இடத்தை நோக்கி இடையில் கட்டிய வாளும், கையில் வில்லும் அம்புமாக, தொடர்ந்து ஓடினான் ராமன். இதோ எதிரில் தெரிகிற உருவம் பளிச்சென்று தெரிய ஓடிச் சென்று அருகில் போக, போக, மேலும் மேலும் ஓட வைத்தபடி, அம்பு பட்டு விழுந்தது போல ஆசைக் காட்டி, சில சமயம் பரபரப்புடன் பயந்தது போல, சில சமயம் ஆகாயத்தை தொடுவது போல எம்பி குதித்து, சில சமயம் கண்களுக்கு தெரியும்படி, சில சமயம் மறைந்து சில சமயம் வனப்பிரதேசத்தில் இங்கும் அங்குமாக ஓடி அலைக்கழித்தது. ஆகாயமே துண்டாகி விழுந்ததோ, சரத் கால சந்திரன் போல் ஒரு சமயம், முஹுர்த்த நேரத்தில் வெகு தூரம் சென்று பிரகாசமாகத் தெரிந்தது. இதோ, இதோ என்று ராமனை வெகு தூரம் அழைத்துச் சென்று விட்டது. ஆசிரமத்திலிருந்து வெகு தூரம், மான் உருவம் எடுத்த மாரீசன் ராமனை இழுத்துச் சென்றான். இது போல ஆட்டம் காட்டியதைக் கண்டு, கோபம் கொண்டு, ஒரு மரத்தின் நிழலில் பசுமையான இடத்தில் சற்று நின்றான். உயிரோடு பிடிக்க வேண்டும் என்ற ஆசையால், அடிக்காமல் இருந்த அவனை சுற்று தூரத்தில் தென் பட்ட மான் பைத்தியமாக்கியது. மிருக ரூபத்தில் இருந்த நிசாசரன் சற்று தூரத்தில் மற்ற காட்டு மிருகங்களோடு மிருகமாக போவது போலத் தெரிந்தது. அதை பிடிக்க விரும்பி ராமன், திரும்பவும் பின் தொடர்ந்து ஓடினான். அந்த க்ஷணமே பயத்துடன் மறைந்து கொண்டது. மறுபடியும் சற்று தூரத்தில் அடர்ந்து இருந்த மரத்தடியிலிருந்த வெளிப் பட்டது. அப்பொழுது அதைப் பார்த்த தேஜஸ்வியான ராமன், இனி இதை கொல்ல வேண்டியது தான் என்று தீர்மானித்தவனாக, திரும்பவும் அம்பை தொடுத்து கோபத்துடன் ராமன் எய்ய தயாரானான். எதிரிகளுக்கு பயங்கரமான, சூரிய கிரணங்கள் போல  ஒளி விடும் பாணத்தை தொடுத்து, த்ருடமான வில்லில் வைத்து, பலமாக இழுத்து அந்த மிருகத்தைப் பார்த்து அடித்தான். பெருமூச்சு விடும் நாகத்தைப் போல அந்த அம்பு சீறிக் கொண்டு பாய்ந்தது. தீப் பிழம்பு போன்ற அந்த ப்ரும்மாவினால் செய்யப் பட்ட அஸ்திரத்தை விட்டான். உத்தமமான அந்த அஸ்திரம், மிருக ரூபத்தைக் குத்தி பிளந்து கொண்டு, நிஜ ரூபத்தை அடைந்து விட்ட மாரீசனுடைய ஹ்ருதயத்தை பிளந்து அவனை வீழ்த்தியது.  நிமிஷ நேரம் அவன் துடிதுடித்து சரத்தினால் அடிபட்டவனாக, கீழே விழுந்தான். இன்னும் அல்ப நேரமே ஜீவித்திருக்கப் போகும் மாரீசன், பெருங்குரலில் கத்திக் கொண்டு இறக்கும் தறுவாயில் தன் செயற்கையான மிருக உருவத்தை கை விட்டான். ராவணனுடைய வார்த்தையை நினைவு வைத்துக் கொண்டு, எதை சொன்னால் லக்ஷ்மணன் சூன்யமான ஆசிரமத்தில் சீதையை தனியே விட்டு இங்கே வருவான், அந்த சமயம் ராவணன் அவளைக் கடத்திச் செல்வது சுலபமாகும் என்ற விஷயங்களை மனதில் வைத்தவனாக, அதற்கான நேரம் வந்து விட்டதை உணர்ந்து, ராகவனைப் போன்ற குரலில், ஹா சீதே, ஹா லக்ஷ்மணா, என்று ஓலமிட்டான். தன் மர்மஸ்தானத்தில் பட்ட அடியின் வேதனையை தாங்க மாட்டாதவனாக, ராக்ஷஸ உருவத்துடன், தன் மிகப் பெரிய உடலை விட்டு மேலுலகம் சென்றான். அப்பொழுது விசித்ரமான இடையலங்காரமும், சர்வாபரண பூஷிதனாக, தங்க மாலைகளை அணிந்தவனாக, பெரும் பற்களையுடைய ராக்ஷஸனாக, அம்புகள் துளைக்கப் பட்ட அவன் உடல் பூமியில் விழுந்தது. பூமியில்  விழுந்த, கோரமான ராக்ஷஸ உடல் ரத்தத்தில் மிதப்பதைப் பார்த்து, ராமன், மனதால் லக்ஷ்மணனும், சீதையும் இருக்கும் இடம் சென்றான். லக்ஷ்மணனின் எச்சரிக்கையை  நினைவு படுத்திக் கொண்டான்.  மாரீசனின் மாயையே இது. முன்னாலேயே எச்சரித்தான். அப்படியே நடந்து விட்டது. இந்த மாரீசன் என் கையால் அடிபட்டு மாண்டான். ஆனால், ஹா சீதே, ஹா லக்ஷ்மணா என்று ஏன் கத்தினான்? இந்த கூக்குரலைக் கேட்டு சீதை என்ன நினைப்பாள்? எப்படி இருப்பாள்? லக்ஷ்மணன் என்ன நிலையில் இருக்கிறானோ? இப்படி தர்மாத்மாவான ராமன் நினைக்க, மாரீசனை வீழ்த்தியதால் மகிழ்ந்து மயிர்க் கூச்சல் எடுத்த நிலையில் ஒரு நிமிஷம் இருந்தவன், பெரும் கவலைக் குள்ளானான்.  கவலையில் பயமும் இருந்தது. தீவிரமாக பயம் மனதை ஆட்கொள்ள, மிருக ரூபமான ராக்ஷஸனைக் கொன்று, அவன் கூக்குரலைக் கேட்டதால் உண்டான பயம் மனதை அரிக்க, ஏதோ சில புள்ளி மான்களை ஆகாரத்திற்காக அடித்து எடுத்துக் கொண்டு, ஜனஸ்தானத்தை நோக்கி வேகமாக ஓடினான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் மாரீச வஞ்சனா என்ற நாற்பத்து நாலாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 45 (241) சீதா பாருஷ்யம் (சீதை கடுமையாக பேசுதல்)

 

கணவனின் அடிபட்ட வேதனை நிறைந்த குரலைக் கேட்ட சீதை, லக்ஷ்மணனிடம் போய்,  பதட்டத்துடன், ராகவன் என்ன ஆனான் என்று பார்த்து வா என்று சொன்னாள்.  லக்ஷ்மணா, மிகவும் வேதனையோடு ஒலிக்கும் இந்த குரல்  கேட்டு என் உயிர் என் வசத்தில் இல்லை. நடுக்காட்டில் பரிதாபமாக அலறும் உன் சகோதரனைக் காப்பாற்றுவாய், சீக்கிரம் ஓடிப் போய் பார். எந்த பாணத்தால் அடிபட்டாரோ, ராக்ஷஸர்களின் வசம் அகப்பட்டுக் கொண்டு, சிங்கத்தின் வாயில் அகப்பட்டுக் கொண்ட காளைக் கன்றாக தவிக்கிறாரோ, என்று புலம்பினாள்.  தமையனின் கட்டளையை மனதில் கொண்டு லக்ஷ்மணன் உடனே கிளம்பவில்லை.  ஜனகன் மகள் கோபம் கொண்டு மேலும் சொன்னாள். சௌமித்ரே, மித்ர ரூபத்தில் வந்த சத்ரு நீ. இப்பொழுது தவிக்கும் நிலையிலும், அண்ணனைக் காப்பாற்ற நீ போகத் தயாராக இல்லை. ராமன் அழியட்டும் என்று நினைக்கிறாயா? என்னை அடையலாம் என்று எண்ணமா? என்னிடம் கொண்ட சபலத்தினால் தான் ராகவனைத் தொடர்ந்து போக மறுக்கிறாயா? அவருக்கு ஏற்பட்ட கஷ்டம் உனக்கு உகந்ததாக இருக்கிறதா? சகோதரனிடம் அன்பு என்று எதுவும் இல்லையா? மகா தேஜஸ்வி ராமன். உடனே ஓடிப் போய் அவனுக்கு உதவி செய்ய வேண்டியதிருக்க ஏன் மலைத்து நிற்கிறாய்? நான் என்ன செய்வேன்? இது போல சங்கடம் வரும், அந்த சமயம் என்னை அடையலாம் என்ற எண்ணத்துடன் தான் உடன் வந்தாயா? கண்களில் நீர் ஆறாகப் பெருக இப்படி புலம்பும் சீதையை லக்ஷ்மணன் சமாதானப் படுத்த முயன்றான்.  மான் குட்டி போல நடுங்கிக் கொண்டிருந்த சீதையைப் பார்த்து வைதே3ஹி, உன் கணவன் சாமான்யமானவன் இல்லை. பன்னக3, அசுர, க3ந்த4ர்வ, தே3வ, மானுஷ, ராக்ஷஸர்கள், இவர்களில் யாராலும் அவரை வெல்ல முடியாது. தேவி, இந்த தேவர்களில், மனிதர்களில், கந்தர்வர்களில், பக்ஷிகளில், ராக்ஷஸர்களில், பிசாச, கின்னரர்களில், மிருகங்களில், பயங்கரமான தா3னவர்களிடமும் அண்ணலை எதிர்த்து போரிடும் வலிமை உள்ளவன் எவனும் இல்லை.  யாராலும் ராமனை யுத்தத்தில் வெல்ல முடியாது. வதைத்து விடுவானோ என்று பயப்படாதே. கவலையை விடு. ராமன் அருகில் இல்லாத சமயம், உன்னைத் தனியே வனத்தில் விட்டுப் போக முடியாது, அதனால் தான் நான் யோசிக்கிறேன். அவனுடைய பலம் அசாதாரணமானது. தானே சமாளித்துக் கொள்வான்.  மூன்று உலகிலும் யாராலும் ராமனை ஜெயிக்க முடியாது. அதனால் மனதை தளர விடாதே. கவலையை விடு. அந்த விசித்ரமான மிருகத்தை அடித்து விட்டு உன் கணவன் இதோ வந்து விடுவான். இந்த சப்தம் எப்படியோ  ராமனின் குரலை ஒத்திருக்கிறது. ஏதோ செயற்கையாகத் தெரிகிறது. இதிலும் ஏதோ மாயையே. அந்த ராக்ஷஸன் மாயா ஜாலங்களில் வல்லவன். உன்னை என்னிடம் ஒப்படைத்து  பாதுகாக்கச் சொல்லி விட்டு ராமன் சென்றான். என்னிடம் கொடுக்கப் பட்ட அடைக்கலப் பொருள் நீ.  உன்னை ரக்ஷிக்க வேண்டியது என் கடமை. அதனால் உன்னை தனியே விட்டு போவது முடியாது. இங்குள்ள நிசாசரர்களுடன் நாம் விரோதத்தை வளர்த்துக் கொண்டு விட்டோம். க2ரனை அழித்ததிலிருந்து ஜனஸ்தானத்தில் நம் நிலைமை கவலைக் கிடமாக ஆகி விட்டது.  வனத்தில் திரியும் ராக்ஷஸர்கள் வித விதமாக சப்தம் செய்வார்கள். கத்துவார்கள். ஹிம்சையையே விளையாட்டாக கொண்டவர்கள் இவர்கள். அதனால் கவலைப் படாதே என்று லக்ஷ்மணன் சொன்னது சீதைக்கு சமாதானமாக இல்லை. கோபத்தில் கண்கள் சிவந்தது.  சத்யவாதியான லக்ஷ்மணனிடம், யாரைப் பார்த்து என்ன பேசுகிறோம் என்பதை உணராமல் கடுமையாக தாக்கிப் பேசலானாள். அனார்ய, பண்பில்லாதவனே, கருணை இல்லையா உனக்கு? கொடியவன் நீ, குலத்தை கெடுக்க வந்தவன். ராமனுடைய கஷ்டம் உனக்கு பிரியமாக இருக்கிறதா? ஏதோ கஷ்டத்தில் ராமன் அகப்பட்டுக் கொண்டு அலறும் பொழுது நீ மெதுவாக பேசிக் கொண்டிருக்கிறாய். சக்களத்திகளிடம் பிறந்த குழந்தைகள் ஒருவருக்கொருவர் இவ்வாறு இருப்பது ஆச்சர்யம் இல்லை.  உன்னைப் போன்ற, மனதில் ஒன்று, வெளியில் ஒன்று என்று செய்யும் கெட்ட எண்ணம் கொண்டவர்கள், எதற்காக ராமனுடன் தொடர்ந்து வனம் வந்தாய்?  ஒவ்வொரு அடியையும் தொடர்ந்து வந்தது எனக்காகவா?  அல்லது பரதன் உன்னை ஒற்றனாக  தொடர்ந்து போக அனுப்பினானா? அப்படி இருந்தால் அது நடக்காது சௌமித்ரே, நீயோ ப4ரதனோ இப்படி ஒரு எண்ணம் கொண்டிருந்தால் அது நடக்கவே நடக்காது. நான் எப்படி நீல மேக4 ஸ்யாமளனாக, பத்3ம பத்ரம் போன்ற கண்களும் உடையவனை கணவனாக அடைந்து அனுபவித்த பின், வேறு பாமர ஜனங்களை மனதாலும் நினைப்பேன் என்று நம்புகிறாய்? உன் எதிரில் உயிரை விடுவேன். சௌமித்ரே சந்தேகமே இல்லை.  ராமனை விட்டு ஒரு க்ஷணம் கூட பூமியில் வாழ மாட்டேன்.   நாராசமான, கொடுமையான இந்த வார்த்தையைக் கேட்டு, கை கூப்பியபடி லக்ஷ்மணன்,  தன்னை வென்றவன் ஆனதால் எதிர்த்து பதிலேதும் கோபத்துடன் சொல்லாமல், தவிர்த்தான். பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன், வைதேஹி, நீ எனக்கு தெய்வத்துக்கு சமமானவள். இது போன்ற தகாத சொற்களை பெண்கள் பேசுவது அதிசயமல்ல. பெண்களின் சுபாவமே இது தான்.  உலகில் உள்ள சாதாரண, மனிதப் பெண்கள் பேசும் பேச்சு. தர்மத்தை கை விட்ட, சபல புத்தியுள்ள பெண்கள், இருவருக்குள் பேதபாவத்தை உண்டு பண்ணி, சண்டை மூட்டி விடுவார்கள். இது போன்ற அல்ப பேச்சைக் கேட்க எனக்கு சக்தியில்லை. ஜனகன் மகளே, வைதேஹி, என் இரண்டு காதுகளிலும் கொதிக்கும் நாராசம் போன்ற இந்த வார்த்தைகளை கொட்டி விட்டாய்.  என்னை சுடுகிறது.  இந்த வனத்தில் சஞ்சரிக்கும் தேவதைகளே, கேளுங்கள், நன்றாக கேளுங்கள். நியாயமாக பேசும், நல்லதை சொன்ன என்னிடம் இவள் பேசும் பேச்சைக் கேளுங்கள். தி4க், த்வாம்- நீ நாசமாக போ.  என்னை இப்படி சந்தேகிக்கிறாயே, துஷ்ட ஸ்வபாவம் கொண்ட ஸ்த்ரீத்வம் உன்னை பேச வைக்கிறது. குருவான ராமன் கட்டளையை மேற் கொண்டு உனக்கு காவலாக இங்கு நிற்கும் என்னைப் பார்த்து என்னவெல்லாம் சொல்லிவிட்டாய். காகுத்ஸன் இருக்கும் இடம் செல்கிறேன். நீ சௌக்யமாக இரு. அழகிய வதனம் உடையவளே, உனக்கு மங்களம். விசாலாக்ஷி  உன்னை எல்லா வன தேவதைகளும் காப்பாற்றட்டும். கோ4ரமான நிமித்தங்கள் தெரிகின்றன. திரும்ப வந்து உன்னை ராமனோடு காண்பேனா? இன்னமும் அழுது கொண்டிருந்த மைதிலி மேலும் சொன்னாள். கோ3தா3வரியில் போய் விழுகிறேன்.  ராமன் இல்லாமல் நான் இருக்க மாட்டேன். லக்ஷ்மணா கழுத்தில் சுருக்கு மாட்டிக் கொள்வேன். அல்லது விஷம் சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன். நெருப்பில் விழுவேன்.  ராமனை பிரிந்த என் பாதம் கூட பிற புருஷன் மேல் பட விட மாட்டேன் என்று வயிற்றில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். மனக் கலக்கம் கொண்டு, வேதனையோடு அழும் அவளை, சௌமித்ரி ஒரு நிமிஷம் பார்த்து,  விசாலமான கண்கள்  குளமாக நின்றவளைப் பார்த்து சமாதானம் சொன்னான்.  அவனைப் பார்த்து சீதை பதில் ஏதும் சொல்லவில்லை. இதன் பின் சீதையை வணங்கி, செய்வதறியாமல், அவளைத் திரும்பத் திரும்ப பார்த்தபடி ராமன் இருக்கும் இடம் சென்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதா பாருஷ்யம் என்ற நாற்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 46 (242) ராவண பி4க்ஷூ சத்கார:

 

சீதையின் கடுமையான  வார்த்தைகளால் மிகவும் பாதிக்கப் பட்ட லக்ஷ்மணன், ராமனை நினைத்து மனதில் வேண்டிக் கொண்டபடி தேடக் கிளம்பினான். இந்த இடைவெளிக்காக காத்திருந்த ராவணன் உடனே பரிவ்ராஜக (சன்யாசி) ரூபம் எடுத்துக் கொண்டு சீதையை அணுகினான். ம்ருதுவான காஷாய வஸ்திரம் தரித்து தலை முடியை சிகையாக கட்டி, குடையும் காலில் செருப்பும் இடது கையில் தண்டமும், கமண்டலமும் கொண்டு, நல்ல சன்யாசியைப் போல வைதேஹியை நெருங்கினான்.  சகோதரர்கள் இருவரும் இல்லாத வனத்தில் அவளை, சந்திர சூரியர்கள் இல்லாத சந்த்3யா காலம் போல, மகா தபஸ்வினியாக புகழ் வாய்ந்தவளை, ராம பத்தினியை, இளம் பெண்ணாக,  கண்டான்.  சந்திரன் விட்டுச் சென்ற ரோஹிணி போல இருந்தவளை பயங்கரமான கிரகம் பிடிப்பது போல அருகில் சென்றான். அவனுடைய உக்ரமான தேஜஸை அறிந்த ஜனஸ்தானத்து மரங்கள் கூட அசையவில்லை. காற்றும் ஸ்தம்பித்து நின்றது. வேகமாக விழும் மலை அருவிகள் கூட சிவந்த கண்களுடன் அவன் பார்ப்பதைக் கண்டு, மெதுவாக போக ஆரம்பித்தன. கோதாவரி நதி பயத்துடன் மெள்ள சென்றது. ராமன் இல்லாத சமயம் வந்த த3சக்3ரீவனைப் பார்த்து மிரண்டன.  பிக்ஷூ ரூபத்துடன் ராவணன் வைதேஹி இருக்கும் இடம் சென்றான். கணவனை நினைத்து கவலையுடன் இருக்கும் அவளை பவ்யமே அறியாதவன், மிக பவ்யமாக நெருங்கினான்.  சனி பகவான் சித்ரா நக்ஷத்திரத்தை அணுகுவது போல அணுகினான். பாபி, புல் மூடிய கிணறு போன்றவன், ராம பத்னியை பார்த்தபடி நின்றான். அழகிய பல் வரிசையுடைய சுபமான சீதையை பூர்ண சந்திரன் போன்ற முகமுடையவளைக் கண்டான். சோகத்துடன் கண்ணீர் பெருக்கியபடி பர்ண சாலையில் அமர்ந்து இருந்தவளைக் கண்டான்.  பத்3ம பத்ரம் போன்ற கண்களுடையவளை, மஞ்சள் நிற வெண் பட்டாடை அணிந்தவளை, மனதுள் மகிழ்ச்சியோடு நிசாசரன் அருகில் சென்றான்.  மன்மத பாணங்களால்  துளைக்கப் பட்டவன், வாயால் ப்ரும்ம கோ4ஷம், வேத மந்திரங்களை உச்சரித்தபடி மரியாதையுடன் பேசலானான். ராக்ஷஸாதி4பன், உலகில் உத்தமமான அந்த ஸ்த்ரீயை லக்ஷ்மி தேவி பத்மாஸனத்தை விட்டு வந்தது போல  இருப்பவளை ராவணன் புகழ்ந்து பேச ஆரம்பித்தான். காஞ்சனம் போன்ற நிறமுடையவளே, நீ யார்? மஞ்சள் நிற பொன்னிற பட்டாடை அணிந்தவளே, கமல புஷ்ப மாலையணிந்து சாக்ஷாத் லக்ஷ்மி தேவி போலவே இருக்கிறாயே, ஹ்ரீ:., ஸ்ரீ:, கீர்த்தி என்ற பாவனமான தேவியின் ரூபமோ, அப்ஸர ஸ்த்ரீயோ, லக்ஷ்மி தேவியே வந்து உதித்திருக்கிறாயோ, பாவனமான முகச் சாயல் உடையவளே, தன்னிஷ்டம் போல நடப்பவளே, செல்வ செழிப்போ, ரதியோ உனக்கு இரண்டும் சமமே. உன் கேசம் கறுத்து, சமமாக, மென்மையாக இருக்க, வெண்மை ஒளி வீசும் பல் வரிசை, ஓரத்தில் சிவப்பும், கறுப்பு தாரகையும் உடையதாக விசாலமான விமலமான கண்கள்,  விசாலமான ஜகனம், யானை தந்தம் போன்ற துடைகள், உன் அங்கங்கள் குறுகியும், சேர்ந்தும் இருக்க வேண்டிய முறையில் உள்ளன.  பெரிய மேல் நோக்கிய தால பழங்கள் போன்ற ஸ்தனங்கள்,  மணி மாலைகள் மட்டுமே ஆபரணமாக உடையன. அழகாக சிரிப்பவளே,, அழகிய பற்களுடையவளே,, அழகிய கண்கள் உடையவளே, உல்லாசமான உடல் காந்தியுடையவளே, என் மனதை கொள்ளை கொள்கிறாய். காந்தா, நதி வெள்ளத்தால் கரை அடித்துக் கொண்டு போவது போல என் மனம் தவிக்கிறது.  கைக்குள் அடங்கும் இடையுடையவளே, அழகிய கேசமும், கூடியிருக்கும் ஸ்தனமும் உள்ளவளே, நீ தேவ லோக பெண்ணா? கந்தர்வியா? யக்ஷ குலத்துப் பெண்ணா? கின்னரியா? இந்த ரூப சௌந்தர்யம் இந்த வர்க பெண்களிடம் கூட நான் கண்டதில்லையே. பூமியில் உன்னைத் தவிர வேறு யாருமே இவ்வளவு அழகாகத் தெரிந்ததில்லையே.  முதல் தரமான ரூப சௌந்தர்யம், சுகுமாரி, இளம் வயது பெண் நீ. இந்த காட்டில் ஏன் வாசம் செய்கிறாய். என் புத்தி குழம்புகிறது. இந்த இடம் பயங்கரமான கோர ரூபமுடைய ராக்ஷஸர்களின் வாசஸ்தலம்.  நீ இங்கு வசிப்பது நல்லதல்ல. பாதுகாப்புடையதும் அல்ல. அழகிய மாட மாளிகைகள், நகரங்களும், உபவனங்களும், நல்ல வாசனையுடைய புஷ்பங்கள் நிறைந்த உத்யான வனங்கள் இவை தான் நீ நடந்து செல்லும் பாக்யத்தைப் பெறத் தகுந்தவை. உன்னைச் சார்ந்த ஆபரணங்கள் விசேஷமானவை. உயர்தர ஆகாரம்,  உயர்ந்த வஸ்த்ரங்கள் இவை உன்னால் சோபை பெறும். உன் கணவனும் நல்ல தகுதியுடையவனாக இருப்பான் என்று நினைக்கிறேன். நீ யார்? ருத்ர கூட்டங்களோ, மருத்கணங்களோ, வசுக்களோ இவர்களில், யார், உன்னை, இவ்வளவு அழகிய முகத்தையுடையவள், எங்கள் குலத்தவள் என்று சொல்லி பெருமைப் படுவர். நீ ஏதோ தெய்வ மங்கையாக எனக்குத் தோன்றுகிறாய். இந்த இடத்திற்கு தே3வர்கள் வருவதில்லை. க3ந்த4ர்வர்களோ, கின்னரர்களோ வருவதில்லை. இது ராக்ஷஸர்கள் வசிக்கும் இடம். நீ எப்படி இங்கு வந்தாய்? இங்கு இருப்பவை எல்லாம் வானரங்கள். கிளைக்கு கிளைத் தாவும் வானரங்கள், சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், கரடிக் கூட்டங்கள், எருமை மாடுகள், இவைகளைக் கண்டு நீ பயப் படுவதில்லையா? இவைகளின் நடுவில் நீ எப்படி இருக்கிறாய்? மதம் பிடித்த யானைகள் கோரமாக சத்தமிட்டுக் கொண்டு வேகமாக ஓடும்.  பார்க்கவே பயமாக இருக்கும், நீ எப்படி பயப்படாமல் இந்த மகாரண்யத்தில் தனியாக இருக்கிறாய்? யார்? யாருடைய மகள்? அல்லது மனைவி? ஏன்? என்ன காரணமாக தண்டகா வனம் வந்து தனியாக நடமாடுகிறாய், கல்யாணி, இந்த இடம் ராக்ஷஸர்கள் பயங்கரமாக நடமாடும் இடம் ஆயிற்றே. இப்படி துராத்மாவான ராவணன் புகழ்ந்து பேசக் கேட்ட மைதிலி,  ராவணன் என்று அறியாமல், பிராம்மண வேஷத்தில் வந்தவனை அப்படியே நினைத்து, அதிதிகளுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்தாள்.  முதலில் தண்ணீர் கொடுத்து,  வரவேற்று ஆசனம் கொண்டு வந்து போட்டு, போதும் என்றவுடன் சௌம்யமாக தெரிந்த அவனைப் பார்த்து பேசலானாள்.  கையில் பாத்ரமும், காவியுடையும், பொருத்தமாக அணிந்து, பிராம்மண வேஷத்தில், வேறு விதமாக சந்தேகப் பட இடமின்றி, இருந்தவனை அப்படியே பிராம்மணணாக எண்ணி, வரவேற்றாள்.   இதோ ப்ருசீ (புல்லால் ஆன ஆசனம்), பிராம்மணரே, இதோ பாத்யம், ஏற்றுக் கொள்ளுங்கள். வனத்தில் விளந்த உத்தமமான ஆகாரம் இதோ. இதை சாப்பிடுங்கள். இவ்வாறு  நரேந்திரனான ராமன் மனைவி, களங்கமில்லாமல் முழு மனதுடன் வரவேற்கவும், அவளை நன்றாக உன்னித்து பார்த்து, அவளை பலவந்தமாக கடத்திச் செல்வதை மனதில் உறுதி செய்து கொண்டு, தன்னை தானே வதம் செய்து கொள்ளும் விதமாக ராவணன் திட்டமிடலானான். மிருகத்தை வேட்டையாடச் சென்ற பதியும், தொடர்ந்து தான் அனுப்பிய லக்ஷ்மணனும் கண்ணுக்கு எட்டும் வரையில் தெரியாத நிலையில் அவர்களை எதிர் நோக்கி பார்வையை செலுத்திய மைதிலிக்கு எதிரே, இருந்ததெல்லாம் பெரும் காடு, பசுமையாக, கரிய அடர்ந்த மரங்களுமாக அந்தகாரம் மட்டுமே.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில்  ராவண பிக்ஷூ சத்காரோ என்ற நாற்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 47 (243) ராவணாதி4க்ஷேப: (ராவணனை நிந்தித்தல்)

 

துறவியின் வேடத்தில் வந்த ராவணன், ஏதோ பொதுவாக விசாரிப்பது போல விசாரிக்கவும், அவனது வேடத்தை உண்மையாக நம்பிய வைதேஹி தன்னைப் பற்றிச் சொன்னாள்.  பிராம்மணன், மேலும் அதிதி, எதுவும் சொல்லாவிட்டால் என்னை சபிக்கக் கூடும் என்று எண்ணி ஒரு முஹுர்த்தம் யோசித்து விட்டு சீதா பதில் சொன்னாள். ஜனகருடைய மகள் நான். மிதிலா ராஜ்யத்தின் அரசன் ஜனகன் என் தந்தை. என் பெயர் சீதை. ராமனுடைய பிரியமான மனைவி. இக்ஷ்வாகு அரசர்களின் வீட்டில் வசித்து வந்தோம். மானுஷமான போ4கங்களை அனுபவித்தவாறு பன்னிரண்டு வருஷங்கள், எல்லா விதமான சௌகர்யங்களும், தேவைகளும் குறைவின்றி அனுபவித்தோம். பதின்மூன்றாவது வருஷம் ராஜா, என் பிரபுவை வரவழைத்து ராஜ்யாபிஷேகம் செய்வதாக, மந்திரிகளுடன் சேர்ந்து தீர்மானம் செய்து ராமனுக்கு முடிசூட்டு விழா ஏற்பாடாயிற்று.  ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த பொழுது, கைகேயி என்ற ராஜாவின் மனைவி, வரம் வேண்டினாள். அவள் கேட்ட வரத்தை வாக்கு கொடுத்திருந்த என் மாமனார் கொடுத்ததை மதித்து எங்களுக்கு வனவாசமும், பரதனுக்கு அபிஷேகமும் என்று ஏற்றுக் கொண்டோம். இவை இரண்டையும் தான் தேவி கைகேயி தன் பர்த்தாவிடம் யாசித்தாள். சத்ய சந்தனான ராஜா, ந்ருபோத்தமன் என்று அரசர்களுள் சிறந்தவன் என்று பெயர் பெற்றவன் சற்று யோசிக்கவும் நான் சாப்பிட மாட்டேன், தூங்க மாட்டேன், நீர் குடிக்க மாட்டேன், ராமனுக்கு அபிஷேகம் என்றால் அதுதான் என் வாழ்வின் முடிவாகும் என்று நச்சரித்து, அவள் பிடிவாதம் பிடித்த பொழுது மாமனார் அவளைக் கெஞ்சி பார்த்தார். பலவிதமாக சமாதானம் செய்தார். அவள் கேட்கவில்லை. என் கணவருக்கு அப்பொழுது இருபத்தைந்து வயது, எனக்கு பதினெட்டு வயது. என் கணவர் மகா தேஜஸ்வி, உலகில் ராமன் என்று பெயர் பெற்றவன், குணவான், சத்யவான், ஒழுக்கம் நிறைந்தவன், விசாலமான கண்களும், நீண்ட புஜங்களும் உடையவன்.  எல்லா ஜீவன்களுக்கும் நன்மை செய்வதையே விரதமாக கொண்டவன். என் மாமனாரான தசரத ராஜா,  என் கணவருக்கு முடி சூட்டவில்லை. முதல் நாள் சொன்னபடி அபிஷேகம் என்று நினைத்து, தந்தையின் அறைக்கு வந்தவனை,  என் கணவரைப் பார்த்து கைகேயி அதட்டலாகச் சொன்னாள்.- உன் தந்தை கட்டளை நான் சொல்கிறேன் கேள், ராகவா. பரதனுக்கு இந்த ராஜ்யத்தை, இடையூறு இல்லாமல் முழுவதுமாகத் தர வேண்டும். அதனால் நீ காட்டில் ஒன்பது, ஐந்து வருஷங்கள் வசிக்க வேண்டும். காட்டுக்கு உடனே கிளம்பிப் போ, காகுத்ஸா. உன் தந்தையின் வாக்கை சத்யமாக செய்- என்றாள். அப்படியே ஆகட்டும் என்று கைகேயியிடம் சொல்லி விட்டு சிறிதும், பயமோ தயக்கமோ இன்றி என் கணவர் த்ருடமான கொள்கையுடையவர், உடனே கிளம்பி விட்டார். கொடுக்கவேண்டும், யாரிடமும் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது, சத்யம் தான் பேச வேண்டும், பொய் பேசக் கூடாது, பிராம்மணா, இது தான் ராமனுடைய உத்தமமான தர்மம். விரதம். இதை எப்பொழுதும் கடை பிடித்து வருபவன் ராமன். இவருடைய சகோதரன், தாயார் வேறு, சிறிய தாயார் மகன், லக்ஷ்மணன், என்று மகா வீர்யவான்.  சமர், யுத்தம் என்று வந்தால் எதிரியைத் தொலைக்காமல் விடமாட்டான். அவனும் உதவியாக ராமனுடன் வந்தான். அவனும் புருஷவ்யாக்4ரன் என்று பெயர் பெற்றவன். ராமனைப் போலவே த்ருடமான கொள்கைகளையுடையவன். தர்மத்தையே செய்பவன். தனுஷையும் எடுத்துக் கொண்டு ராமனை உடனே பின் தொடர்ந்து காட்டுக்கு வந்து விட்டான்.  நானும் வந்தேன்.  ஜடை முடி தரித்து, தாபஸ வேஷத்தில், என்னுடன் கூட சகோதரனும் உடன் வர, தண்டகாரன்யம் வந்து சேர்ந்தான், ராமன்.  நித்யம் தர்மத்தை செய்து வருகிறான். புலனடக்கம் கொண்டு தவம் செய்து வருகிறான். இப்படித்தான், கைகேயியின் காரணமாக மூவரும் இந்த காட்டிற்கு வந்து சேர்ந்தோம். இந்த கம்பீரமான காட்டில் அலைந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம். முஹுர்த்த நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இங்கேயே வசிக்கலாம். இதோ என் கணவர் வந்து விடுவார். காட்டில் கிடைப்பதை நிறைய எடுத்துக் கொண்டு, சேகரித்துக் கொண்டு வருவார். ருரூ என்று ஒரு வகை மான், கோதா, பன்றிகள் இவற்றைக் கொன்று நிறைய மாமிசம் எடுத்துக் கொண்டு வருவார். சரி, இப்பொழுது நீங்கள் யார்? பெயர், குலம், கோத்ரம் இவற்றைச்  சொல்லுங்கள்.  பிராம்மணனே, தனியாக எதற்கு தண்டகாரன்யத்தில் திரிகிறீர்கள். இவ்வாறு ராம பத்தினி கேட்கவும் மகா பலசாலியான ராக்ஷஸாதிபன், ராவணன் கடுமையாக பதில் சொன்னான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் அடங்கிய இந்த உலகத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் ராக்ஷஸ கணங்களின் நாயகன் நான் சீதே, நான் தான் ராவணன். உன்னை பொன்னிறமாக, பட்டாடையில் கண்டதிலிருந்து என் மனைவிகளிடம் எனக்கு ருசியே இல்லாமல் போய் விட்டது.  மாசற்றவளே, இங்கும் அங்குமாக அபகரித்துக் கொண்டு வந்த பல உத்தம ஸ்த்ரீகளின் கூட்டத்தில், நீ தலைமையாக, பட்ட மகிஷியாக எனக்கு விளங்குவாய். சமுத்திரத்தின் மத்தியில் மிகப் பெரிய நகரம் லங்கா என்ற என்னுடைய தலை நகரம். மலையின் உச்சியில் அமைந்துள்ளது. நாலா புறமும் சமுத்திரம் சூழ்ந்துள்ளது. சீதே, அங்கு என்னுடன் காடுகளில் சந்தோஷமாக சுற்றுவாயாக. இந்த வனவாசம் உனக்கு பிடித்தமாக இருக்காது. நிச்சயம். என் மனைவியாக ஆனால் ஆயிரக்கணக்கான தாஸிகள், சர்வாலங்கார பூஷிதையாக, சீதே, உனக்கு பணிவிடை செய்வார்கள். இவ்வாறு ராவணன் சொல்லக் கேட்டதும், ஜனகன் மகள் அடங்கா கோபம் கொண்டாள். கொடி போன்ற வளைந்து அழகிய தோற்றம் கொண்ட சீதை, அவனை சற்றும் லட்சியம் செய்யாமல், ராக்ஷஸன் என்றும் பயப் படாமல் பதில் சொன்னாள்.  மிகப் பெரிய மலையைப் போல அசைக்க முடியாத பலம் உடையவன் என் கணவன். மகேந்திரனுக்கு இணையானவன். பெரும் கடல் போல் வற்றாத தன்மை, யாராலும் அவனை குறைத்து மதிப்பிட முடியாத செம்மையுடைய ராமன் என் கணவன். நான் எப்பொழுதும் ராமனைச் சார்ந்தே இருப்பவள். எல்லா லக்ஷணங்களும் உடையவன். ந்யக்4ரோத மரம் போல, அடர்ந்த ஆல மரம் போல, அடைக்கலம் என்று வந்தோரை காப்பாற்றுபவனாக, அடியார்கள் கூட்டமாக  சூழ்ந்துள்ளவன். சத்ய சந்தன், மகா பாக்யசாலி. என் கணவன் ராமன்.  நான் அந்த ராமனை எப்பொழுதும் சார்ந்தவள். நீண்ட கைகளும், அகன்ற மார்பும், சிங்கம் போல வீறு கொண்ட நடையும், ந்ருசிங்கமான, அந்த ராமனுக்கு மனைவி நான். எப்பொழுதும் அவனிடமே இருப்பவள். பூர்ண சந்திரன் போன்ற முகமுடையவன் ராமன். ராஜாவின் வாத்ஸல்யம் மிக்க மகன். புலனடக்கம் உடைய தனித் தன்மை கொண்டவன், புகழ் வாய்ந்தவன், மகாத்மா அவன். அந்த ராமனின் பத்னி, அவனையே சார்ந்து இருப்பவள்.  நீ ஒரு அல்ப குள்ள நரி. பெண் சிங்கமான என்னை விரும்புகிறாயா? எளிதில் அடைய முடியாதவள் நான். என்னைத் தொட உன்னால்  முடியாது. சூரியனின் பிரபையைப் போன்ற காந்தியுடையவள் நான். துரதிர்ஷ்டம் பிடித்தவனே, சம்பக மரக்கட்டைகளை நிறையக் காணப் போகிறாய் (அடி வாங்க போகிறாய்) ராமனுடைய  பிரிய மகிஷியை விரும்புகிறாயோ, மிருக சத்ருவான சிங்கம்  பசித்திருக்கும்பொழுது எதிரில் நின்றவன் போல்  ஆவாய்.  ஆல கால விஷம் கொண்ட பாம்பின் பல்லை பிடுங்க முயற்சிக்கிறாய். மந்தர மலையை கைகளால் தூக்கிச் செல்ல முயற்சிக்கிறாய். கால கூட விஷத்தை குடித்து விட்டு சௌக்யமாக போக விரும்புகிறாய்.  கண்களை ஊசியால் குத்திக் கொள்கிறாய்.  கூர்மையான கத்தியை நாக்கால் நெருடிப் பார்க்கிறாய்.  ராமனுடைய பிரியமான மனைவியை அடைய வேண்டுமோ, அது எப்படித் தெரியுமா, கழுத்தில் பெரிய கல்லைக் கட்டிக் கொண்டு சமுத்திரத்தை கடக்க முயலுவது போல.  சூரிய சந்திரன் இரண்டையும் கைகளில் தூக்கிக் கொள்ள செய்யும் முயற்சி போலத் தான் இதுவும்.  ராமனுடைய பிரிய பார்யாவான என்னை பலாத்காரமாக அழைத்துச் செல்ல நினைக்கிறாயா.  கொழுந்து விட்டெரியும் நெருப்பை, உடுத்திக் கொண்டிருக்கும் வஸ்த்ரத்தில் முடிந்து கொள்ள நினைப்பது போல இருக்கிறது.  ராமனிடம் கல்யாண குணங்களோடு இணைந்து இருக்கும் மனைவியை கடத்த முயற்சிக்கிறாய்.  இரும்பினால் ஆன சூலங்களின் மேல் நடமாட விரும்புவது போல இருக்கிறது. ராமனுக்கு சமமான மனைவியை அடைய விரும்புகிறாயோ, காட்டில் சிங்கத்திற்கும், ஓநாய்க்கும் என்ன வித்தியாசமோ,  சமுத்திரத்திற்கும், சிறிய ஓடைக்கும் என்ன இடை வெளியோ, சுத்தமான வீரனுக்கும்  கள்ளைக் குடிப்பவனுக்கும் என்ன வித்தியாசமோ அந்த இடைவெளி, ராமனுக்கும்  உனக்கும். தங்கத்திற்கும், கண்ணடி, இரும்புக்கும் என்ன தார தம்யமோ, சந்தனத்திற்கும், சேற்றிற்கும் என்ன இடைவெளியோ, யானைக்கும், பூனைக்கும் என்ன சம்பந்தமோ, அது போலத் தான் தா3சரதி2க்கும், உனக்கும் உள்ள தகுதி.   காக்கைக்கும், வைனதேயனான க3ருடனுக்கும் என்ன இடைவெளியோ, வான் கோழிக்கும், மயிலுக்கும் என்ன இடைவெளியோ, சாரஸ, கழுதைக்கிடையில் என்ன இடை வெளியோ, அது தான் தாஸரதிக்கும், உனக்கும் உள்ள சம்பந்தம்.  சஹஸ்ராக்ஷனுடைய வில்லுக்கு சமமான பிரபாவம் உடைய, கூர்மையான பாணங்களுடையது ராமனுடைய வில்.  இதையும் மீறி  நீ என்னை அபகரித்துக் கொண்டு போனாலும் நான் உனக்கு பணிய மாட்டேன். மக்ஷிகா என்ற கொசு, வஜ்ரத்தின் எதிரில் என்ன செய்ய முடியும்? ரஜனீசரன் (இரவில் சஞ்சரிப்பவர்கள்) என்று பெயர் பெற்ற ராக்ஷஸனிடம் இவ்வளவு பேசி விட்டு, களங்கமில்லாத த்ருடமான குரலில் பேசிக் கொண்டே வந்தவள், உடல் நடுக்கமுற,  காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட வாழை மரம் போல துவண்டு போனாள். காலனுக்கு சமானவனான ராக்ஷஸன், நடுங்கிக் கொண்டிருக்கும் சீதையைப் பார்த்து, அவளை மேலும் பயமுறுத்தும் எண்ணத்தோடு. தன் குலம், ப3லம், வேலை, பெயர் எல்லாவற்றையும் பெருமையாக சொல்லிக் கொண்டான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில்  ராவணாதி4க்ஷேபோ என்ற நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 48 (244) ராவண விகத்த2னம் (ராவணனை நிந்தித்தல்)

 

சீதையின் கடுமையான பதிலைக்  கேட்டுக் கொண்டேயிருந்த, ராவணன் பொறுமையிழந்தான்.  புருவத்தை சுருக்கிக் கொண்டு,  ராவணன் தன்னைப் பற்றி மேலும் சொன்னான். வரவர்ணினீ, (சிறந்த வண்ணமுடையவளே) நான் வைஸ்ரவனின் தம்பி. மாற்றாந்தாய்   மகன், ராவணன் என்ற பெயர் கொண்டவன்.  உனக்கு மங்களம் உண்டாகட்டும். (ப4த்3ரம் தே என்பது பேசும் பொழுது சொல்லும் ஒரு வழக்கு சொல், வாழ்த்து போல) நான் தசக்ரீவன், பத்து தலையுடையவன். மிகுந்த பிரபாவம் உடையவன். எந்த ராவணனைக் கண்டு தே3வர்களும், க3ந்த4ர்வர்களும், பிசாச, பக்ஷிகள், பாம்புகள் என்று உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் பயந்து, யமனே நேரில் வந்தாற்போல் நடுங்குகிறார்களோ, அந்த ராவணன் நான்.  மாற்றாந்தாயின் மகனான வைஸ்ரவணோடு வேறொரு காரணத்திற்காக சண்டை வந்தது.  இருவரும் கோபத்துடன் த்வந்த யுத்தம் செய்தோம். அதில் அவனை என் விக்ரமத்தால் ஜெயித்தேன். இதனால் பயந்து செல்வ செழிப்பில் இருந்த என் அண்ணன் பயத்தால் நடுங்கி ஊரைவிட்டே ஓடி விட்டான்.  நர வாகனன் என்று பெயர் பெற்ற அவன் கைலாஸ மலையில் இருக்கிறான். இஷ்டப் படி செல்லக் கூடிய புஷ்பக விமானம் அவனுடையது, அதை என் பலத்தாலேயே கவர்ந்து கொண்டேன். அதில் ஏறி நான் ஆகாயத்தில் சஞ்சரிப்பேன். மைதிலி, கோபம் கொண்டால் என் முகத்தைப் பார்க்கவே பயப்படுவார்கள். மகா ரதிகள், தேவர்கள், இந்திரனை உள்ளிட்ட தேவர்கள் நடுங்குவார்கள். நான் நிற்குமிடத்தில் வாயு தயங்கி கொண்டே வீசுவான். கடுமையான வெப்பம் கொண்ட சூரியனின் கிரணங்களையும், அவன் குளுமையாக ஆக்கிக் கொள்வான்.  மரங்களின் இலை அசையாது, நதியில்  நீர்  நிலைத்து நின்று விடும்.  எங்கெங்கு நான் நிற்கிறேனோ, நடக்கிறேனோ, அங்கு இயற்கை கூட ஸ்தம்பித்து நிற்கும். சமுத்திரத்தின் அக்கரையில் சுபமான லங்கா என்ற நகரம் இந்திரனுடைய அமராவதி போல இருக்கும்.  ராக்ஷஸர்கள்  நிறைந்தது. வெண்மையான ஒளி வீசும் பிராகாரங்கள் கூடியது. ஒவ்வொரு அறையும் தங்கத்தாலானது. வைடூரியத்தால் தோரணங்கள் கட்டப் பட்டு இருக்கும். யானை, குதிரை, ரதங்கள் விடாமல் ஓடிக் கொண்டிருக்கும்.  தாள வாத்யங்களும், மற்ற இன்னிசை வாத்யங்களும் சதா முழங்கிக் கொண்டிருக்கும். உத்யானங்கள் எந்த பருவம் ஆனாலும், அதன் புஷ்பங்களோ, பழங்களோ நிறைந்தே விளங்கும். எல்லா பருவங்களிலும் வேண்டியது கிடைக்கும். சீதே, அங்கு நீ என்னுடன் வசித்தால், ராஜ குமாரி, பிறகு நீ மனித இனத்தையே மறந்து விடுவாய். திவ்யமான போகங்களை அனுபவித்து பழகி விட்டால், வர வர்ணினி,, இதோ உயிர் போய் விடும் என்ற நிலையில் இருக்கும் ராமனை நினைத்து கூட பார்க்க மாட்டாய். த3சரத2 ராஜா தனக்கு பிரியமான புத்திரனை அரசு கட்டிலில் ஏற்றி விட்டு, மூத்த மகன் வீர்யம் குறைந்தவன் என்று காட்டிற்கு அனுப்பி விட்டான். அந்த ராமனை நீ நினத்தும் பார்க்க வேண்டாம். புத்தியில்லாத, ராஜ்யத்தை விட்டு நீக்கப் பட்ட ராமனோடு உனக்கு என்ன வேலை? தபஸ்வி வேஷம் போட்டுக் கொண்டு தவம் செய்யும் ராமனிடம், விசாலா உனக்கு என்ன வைத்திருக்கிறது? உலகில் உள்ள எல்லா ராக்ஷஸர்களுக்கும் தலைவன், தானே வந்து யாசிப்பவனை அடை. மத3னனின்  சரங்களால் துளைக்கப் பட்டு தவிக்கும் அவனை நீ திருப்பியனுப்புதல் சரியாகாது. என்னை திருப்பியனுப்பினால் மிகவும் கஷ்டப் படுவாய், புரூரவனை ஊர்வசி காலால் மிதித்து அவமதித்த பின் கஷ்டப் பட்டது போல படுவாய்.   யுத்தம் என்று வந்தால், அந்த மனிதன், ராமன், என் விரலுக்கு சமமாக ஆக மாட்டான். உன் பாக்யம் நான் வந்து நிற்கிறேன்.  வரவர்ணினி, என்னை ஏற்றுக் கொள்.   இவ்வாறு ராவணன் சொல்லக் கேட்ட சீதா கோபத்துடன், முகம் சிவக்க, ராக்ஷஸாதிபனை நிந்திக்கலானாள். வைஸ்ரவரனை சகோதரனாகப் பெற்றவன், எல்லா ஜீவன்களாலும் நமஸ்கரிக்கப் படும் குபேரனுக்கு உடன் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டு இப்படி அதமமான செயலை செய்ய எப்படி முனைகிறாய்.  ராவணா, ராக்ஷஸர்கள் அனைவரும் நிச்சயம் நாசமாகப் போகிறார்கள். இவர்களுக்கு நீ துஷ்டராஜா, துர்புத்தி, புலனடக்கம் இல்லாதவன். இந்திரன் சசியை அபகரித்த பின் உயிர் வாழ்ந்தான்.  ஆனால் ராம பத்னியான என்னை அபகரித்தபின் உனக்கு வாழ்வே இருக்காது. நீ இந்திரனுடைய கையிலிருந்து சசியை அபகரித்து வேண்டுமானால் பலகாலம் உயிர் வாழ்வாயாக இருக்கும். அம்ருதம் அருந்தியிருந்தால் கூட, என் போன்றவர்களை தூஷித்தால், நீ நல்ல கதியடைய மாட்டாய்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராவண விகத்த2னம் என்ற நாற்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 49 (245) சீதாபஹரணம் (சீதையை அபகரித்தல்)

 

சீதையின் பேச்சைக் கேட்டு, பிரதாபம் உடையவனான ராவணன், கை மேல் கை வைத்துக் கொண்டு பெரும் உருவம் எடுத்துக் கொண்டான். திரும்பவும் மைதிலியிடம் யோசித்து கவனமாக சொன்னான். பைத்தியம் பிடித்தவள் போல நீ என் வீர்ய பராக்ரமங்களை சரியாக கேட்டுக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நான் ஆகாயத்தில் நின்று கொண்டு பூமியை என் புஜங்களில் தாங்குவேன். சமுத்திரத்தை குடித்து தீர்ப்பேன். யமனுடன் நேருக்கு நேர் நின்று சண்டையிடுவேன், ஜயிப்பேன்.  கூர்மையான சரங்களைக் கொண்டு சூரியனைத் தாக்குவேன். பூமியை பிளக்க வேண்டுமா, பிளந்து காட்டுவேன்.  பித்து பிடித்தவளே, இஷ்டப் படி ரூபம் எடுக்க வல்ல என்னைப் பார். பதியாக பார். இவ்வாறு சொன்ன ராவணனின் கண்கள் நெருப்புத் துண்டம் போல ஆயின.  கோபத்தால் கண்கள் இரண்டும் சிவந்து போயின.  சௌம்யமான பிக்ஷூ ரூபத்தை விட்டு, ராவணன் தன் சுய ரூபத்தை எடுத்துக் கொண்டான். காலனைப் போல இருந்தான். வைஸ்ரவனன் சகோதரனான ராவணன்.   பத்தரை மாற்றுத் தங்கத்தாலான நகைகள் அணிந்தவன், சிவந்த கண்களுடன், மகா ஆங்காரத்துடன், நீல மேகம் போன்ற உடலும், பத்து தலைகளும், இருபது கைகளுமாக க்ஷணதா3சரன் என்ற ராக்ஷஸன் காட்சி கொடுத்தான்.  பரிவ்ராஜக சரீரத்தை விட்டு பெரும் உடலுடன் சுய ரூபத்தையடைந்தவன்,  கோபத்தால் சிவந்த கண்களுக்கு இணையாக சிவந்த ஆடைகளை அணிந்திருந்தான்.  கறுத்த குழலுடைய மைதிலியைப் பார்த்து, மூன்று உலகிலும் புகழ் பெற்ற ஒருவனை கணவனாக அடைய விரும்பினால், என்னை ஏற்றுக் கொள். அழகியே, நான் தான் உனக்கு ஏற்ற கணவன். என்னை ஏற்றுக் கொள். நான் தான் உனக்கு பொருத்தமான கணவனாக வெகு காலம் இருப்பேன்.  உனக்கு பிடிக்காததை ஒருகாலும் செய்ய மாட்டேன். பத்ரே, மனித ஜன்மம் என்ற நிலையை விட்டு, என் நிலையில் இருந்து பார். ராஜ்யத்திலிருந்து நீக்கப் பட்டவன், காரியம் ஈடேறாதவன், ராமன்.  அவனது ஆயுட் காலம் எல்லைக்குட்பட்டதே.  என்ன குணம் என்று அவனை இப்படி அன்புடன் ஈடுபாட்டுடன் பார்க்கிறாய்.  மூடே, பண்டித மாநினீ, முட்டாளே, உன்னை பண்டிதையாக நினைத்துக் கொண்டிருக்கிறாய். எவன், ஸ்த்ரீ வார்த்தையைக் கேட்டு, யானைகள் உலவும் இடத்தில் வசிக்க வந்திருக்கிறானோ, புத்தியில்லாதவன், அவனை ஏன் நினைத்து உருகுகிறாய், என்று இப்படி சொல்லிக் கொண்டே, தானும் பிரியமாக பேசும், பிரியமாக பேசியே கேட்டு வந்தவளான  மைதிலியின் அருகில் வந்து காமத்தால் அறிவிழந்த, துஷ்டாத்மா ராவணன் சீதையை பிடித்து இழுத்தான். ஆகாயத்தில் பு34ன், ரோஹிணியை அபகரித்தது போல.  இடது கையால் சீதையின் தலை மயிரை பிடித்துக் கொண்டு, கால்களில் மற்றொரு கையினால் பிடித்து தூக்கினான், ம்ருத்யுவை போலவே இருந்த அவனைக் கண்டு, பெரிய புஜங்களும், கூரிய பற்களும் கொண்டு, பெரிய மலை போன்ற உடலும் கொண்டவனைக் கண்டு பயந்து நடுங்கி வனதேவதைகள் ஓடின. திவ்யமான கர அடையாளமிட்ட கரடு முரடான ரதம், மாயா சக்தியால் திடுமென அங்கு தோன்றியது. ஹேம வர்ணமான உடலுடன் ராவணனின் ரதம் வந்து சேரவும், அவளை கெட்ட வார்த்தைகளால் திட்டி பயமுறுத்திக் கொண்டே, ராவணன் சீதையை பலவந்தமாக தன் மடியில் இருத்திக் கொண்டு ரதத்தில் ஏறினான்.  ராவணனால் வலுக் கட்டாயமாக ரதத்தில் ஏற்றப் பட்ட சீதை பெரிய குரலில் அலறினாள். ராமா, என்று துக்கத்துடன் அரற்றினாள். வனத்தில் வெகு தூரம் சென்று விட்ட ராமனை கூவியழைத்தாள். காமம் என்பதே இல்லாத அவளை காமாதுரனான ராவணன் ஆகாய மார்கமாக கடத்திக் கொண்டு போனான். புத்தி பேதலித்தவன் போலும், மகா கஷ்டத்தில் சிக்கியவன் போலும், சென்றான். சீதை அலறினாள். கத்தினாள். ஹா லக்ஷ்மணா, மகா பா3ஹோ, குரு வார்த்தையை தட்டாதவனே, அதர்மமாக என்னை கடத்திக் கொண்டு போகிறானே, தெரியவில்லையா, நீ அறிய மாட்டாய்.  ராக்ஷஸன் என்னை கடத்திக் கொண்டு போகிறான். வாழ்க்கையில் சுகம், அர்த்தம் இவற்றை,  தர்மத்தை நிலை நாட்ட என்று தியாகம் செய்து விட்டு வந்த ராக4வா, அதர்மமாக என்னை ராவணன் கடத்திச் செல்வதை அறிய மாட்டாயா.   அவினீதர்கள், வணக்கம் இல்லாத கொடியவர்களை பணிய வைப்பாய் என்று பெயர் பெற்றவனே, இதோ இப்படி பாபம் செய்யும் இவனை தண்டிக்க ஏன் வராமல் இருக்கிறாய்?  அடங்காத க்ரூரமான ஜனங்கள் தங்கள் கொடும் செயலின் பலனை உடனே அனுபவிப்பார்கள் என்று சொல்வார்களே, இந்த துஷ்டனுக்கு அந்த நீதி இல்லையா? அஹோ, கஷ்டம். காலமும் துணை போகிறதா இவனுக்கு. பயிர்களுக்கு சேறு போல.  காலத்தினால் (யமனால்) புத்தியை இழந்தவன் இப்படி ஒரு காரியம் செய்கிறானே. இது உன் வாழ்வை குடிக்கும் க்ரூரமான செயல். ராமனிடத்தில் இனி நீ கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறாய். ஹந்த, கஷ்டம். கைகேயி, சகாமா- தன் இஷ்டம் நிறைவேறியவளாக, தன் பந்துக்களுடன் திருப்தியாக இருக்கட்டும்.  புகழ் வாய்ந்த ராமனுடைய தர்ம பத்னி, நான் இப்படி கடத்தப் படுகிறேனே, கர்ணிகார மரங்களே, பூக்கள் சொரிய நிற்கிறீர்களே, உங்களை அழைக்கிறேன். ஜனஸ்தானத்து மரங்களே, சீக்கிரம் ராமனுக்கு சொல்லுங்கள். ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு போகிறான் என்று தெரிவியுங்கள். மால்யவானின் சிகரமே, உன்னை வணங்குகிறேன். மலையே, சீக்கிரம் ராமனுக்கு தெரிவியுங்கள். ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு போகிறான் என்று. ஹம்ஸ, காரண்டவ பக்ஷிகள் மிதக்கும் கோதாவரியே, நதியே, சீக்கிரம் ராமனிடம் சொல்லு.  சீதையை ராவணன் தூக்கிக் கொண்டு போகிறான் என்பதை.  பலவிதமான மரங்களிலும் வசிக்கும் வனதேவதைகளே, உங்களை நமஸ்கரிக்கிறேன். என் கணவனிடம் நான் அபகரிக்கப் பட்டதை சொல்லுங்கள். இங்கு என்ன என்ன சத்வ, ஜந்துக்கள் உண்டோ, வசிக்கின்றனவோ, அனைத்தையும் சரணடைகிறேன், என் கணவரிடம் நான் கடத்தப் பட்டதை சொல்லுங்கள். உன் உயிருக்கும் மேலான பிரிய மனைவியை ராவணன் தூக்கிச் சென்றான் என்று சொல்லுங்கள். தன் வசத்தில் இல்லாத சீதையை ராவணன் பலவந்தமாக தூக்கிச் சென்றதை தெரியப் படுத்துங்கள். இப்பொழுது கூட இந்த விஷயம் தெரிந்தால், மகா பலசாலியான ராமன், வைவஸ்வதன் தூக்கி கொண்டு  போயிருந்தால் கூட திரும்ப அழைத்து வந்து விடுவான். இவ்வாறு கருணை மேலிட புலம்பிக் கொண்டே மரத்தின் மேலிருந்த கழுகு ராஜனைக் கண்டாள். அதை பார்த்து ராவணனின் வசத்தில் இருந்தவள், துக்கம் தொண்டையை அடைக்க, குரல் எடுத்து அழைத்தாள். ஜடாயோ, இதோ பார். அனாதை போல என்னை கடத்திக் கோண்டு போகிறானே, அண்ணலே, இந்த பாபி ராக்ஷஸன், என்னைத் தூக்கிக் கொண்டு போகிறானே, நீங்கள் இவனை தடுக்க முடியாது, க்ரூரன் இவன், துர்மதி, ஆயுதம் வைத்திருக்கிறான், பல நகரங்களை ஜயித்தவனாம், சக்தியுடையவன். ராமனிடம் நடந்ததை நடந்தபடி சொல்லுங்கள். என்னை ராவணன் அபகரித்துக் கொண்டு செல்வதைச் சொல்லுங்கள், லக்ஷ்மணனிடம் உள்ளபடி விவரமாக சொல்லுங்கள்  என்றாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதாபஹரணம் என்ற நாற்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 50 (246) ஜடாயுரபி4யோக: (ஜடாயு எதிர்த்து போராடுதல்)

 

தூங்கிக் கொண்டிருந்த ஜடாயு, இந்த அலறலைக் கேட்டான். உடனே எழுந்தவன்,  ராவணனையும், சீதையையும் கண்டான்.  மலயுச்சியிலிருந்து பக்ஷிராஜன், கூர்மையான மூக்கை, அலகை உடையவன், மரத்தின் மேலிருந்து சுபமான ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னான். பின், ஏ, தசக்ரீவா, இந்த நீசமான, நிந்திக்கத்தகுந்த செயலை நீ செய்யக் கூடாது. நீ சத்ய சந்தனாக இருந்து, முன்னால் தர்ம வழியில் பிரஸித்தியைப் பெற்றவன். சகோதரா, இந்த நீசத் தனம் செய்யாதே. நான் ஜடாயு என்ற பெயர் கொண்ட கழுகரசன்.  நானும் பலசாலியே. மகேந்திரனும் வருணனுக்கும் இணையாக எல்லா உலகுக்கும் ராஜா,  ராமன், தசரதகுமாரன். எல்லா ஜீவ ஜந்துக்களுக்கும் நன்மையே செய்பவன். அந்த லோகநாதனுடைய தர்ம பத்தினி இவள். சீதை என்று பெயர் பெற்றவள். இவளையா கடத்திச் செல்லப் பார்க்கிறாய். தர்மத்தில் நிற்கும் ஒரு அரசன் எப்படி பிறன் மனைவியைத் தொடலாம். ராஜ தா3ரா என்றால் இன்னும் விசேஷமாக காப்பாற்றப் பட வேண்டும். பலசாலியே, இந்த எண்ணத்தை விடு. பிறன் மனைவியைத் தீண்டுதல் என்பது மகா நீசமான செயல். இது போல செயல்களை மற்றவர்கள் நிந்திக்கும்படியான செயல்களைச் செய்யாதே. எப்படி உனக்கு உன் மனைவிகளோ, அதே போல மற்றவர்கள் மனைவிகளும் ரக்ஷிக்கப் பட வேண்டியவர்களே. தர்மமோ, அர்த்தமோ, காமமோ, சாஸ்திர சம்மதமில்லாதவற்றை அரச குலத்தினர் அனுஷ்டிப்பது இல்லை.  பௌலஸ்த்ய அரசனே, ராஜா என்பவன், தானே தர்ம ஸ்வரூபமாகவும், காமனாகவும், செல்வத்தின் உத்தமமான நிதியும் ஆகிறான். ராஜாவை மூலமாகக் கொண்டே தர்மம் சுபமோ, பாபமோ, மற்ற பிரஜைகளிடம் தோன்றுகிறது.  பாப ஸ்வபாவமும், சபலமும் கொண்ட நீ எப்படி ராக்ஷஸ ராஜனாக ஆனாய்? துஷ்டத்தனம் செய்பவன் கையில் விமானம் போல, இவை உன்னிடம் எப்படி வந்தன.  ஒருவனுடைய இயல்பை மாற்ற முடியாது தான். துஷ்டாத்மாக்களை வெகு காலம் நன்மைகள் ஆசிரயித்து இருப்பதில்லை, நகரத்தில் இருந்த போதும் சரி, இப்பொழுதும் சரி, தர்மாத்வான ராமன் யாருக்கும் தீங்கு இழைத்ததில்லை. நீ ஏன் அவனுக்கு தீங்கு செய்ய விழைகிறாய்? ஒரு வேளை சூர்ப்பணகா2 காரணமாக, ஜனஸ்தானத்திலிருந்து க2ரன் ராமன் கைகளில் இறந்தானே என்றா? ராமனின் அம்புகள் துல்லியமாக செயல் படுபவை, அவைகள் பட்டு க2ரன் இறந்தானே என்றா? அதில் ராமனது தவறு என்ன? அத்து மீறி அவன் என்ன செய்தான்? அதற்காக அவன் மனைவியை நீ கடத்திச் செல்கிறாயா? சீக்கிரம் விடு வைதே3ஹியை.  விருத்திரனை இந்திராசனி அடித்தது போல என் கண்களாலேயே தகிக்கும் முன் அவளை விடு. ஆலகால விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை மடியில் வஸ்திரத்தில் கட்டிக் கொண்டு, புரியாமல் விழிக்கிறாய். கழுத்தில் விழுந்து கிடக்கும் கால பாசத்தைக் காணாமல் ஏமாறுகிறாய். எந்த பாரத்தை வகிக்க முடியுமோ, அதைத் தான் தூக்க வேண்டும். பாரம் தூக்குபவனை கீழே தள்ளுவதாக இருக்க கூடாது. எந்த அன்னத்தை புசிக்கிறானோ, அந்த அன்னம் அவனால் ஜீரணம் செய்யப் படுவதாக, அந்த அளவே இருக்க வேண்டும். அவனை வியாதியில்லாமல் வைக்கக் கூடிய அளவுதான் அன்னத்தை புசிக்க வேண்டும். எந்த காரியத்தைச் செய்வதால் தர்மமோ, கீர்த்தியோ, புகழோ எதுவும் கிடைக்காது, வெறும் சரீர சிரமம் மட்டும் தான் என்ற செயலை ஏன் செய்ய வேண்டும். ராவணா, ஆறாயிரம் வருஷங்கள் ஆனவன் நான். தந்தை பாட்டனார் வழி வந்த  ராஜ்யத்தை நியாயமாக ஆண்டு வந்த பின், வயது முதிர்ந்த கிழவனாக உன் முன் நிற்கிறேன். நீ இளைஞன். வில்லும், அம்பும் வைத்திருக்கிறாய். கவசம் அணிந்து ரதத்தில் நிற்கிறாய், இருந்தும் வைதே3ஹியை கடத்திக் கொண்டு குசலமாக நீ போய் சேர மாட்டாய். என் கண் முன்னாலேயே வைதே3ஹியை பலவந்தமாக நீ கடத்திக் கொண்டு போக முடியாது. காரணங்களும், நியாயங்களும் நிறைந்த அழியாத, வேத கீதத்தைப் போல.  சூரனாக இருந்தால் முஹுர்த்த நேரம் நில், ராவணா, என்னுடன் சண்டையிடு.  முன்பு க2ரனை பூமியில் தள்ளியது போல உன்னையும் பூமியில் தலை குப்புற விழச் செய்வேன். அடிக்கடி சண்டையில் ராமன் தை3த்ய தா3னவர்களை வதைத்து கீழே தள்ளியிருக்கிறான். வல்கலை மரவுரி தரித்த ராமன் சீக்கிரமே வந்து உன்னை அழிக்கப் போகிறான். நான் என்ன செய்ய முடியும்? ராஜ குமாரர்கள் வெகு தூரம் சென்றுள்ளார்கள். அவர்கள் முன்னால் நடுங்கிக் கொண்டு சீக்கிரமே நாசமடையப் போகிறாய், நிசாசரனே.  நான் உயிருடன் இருக்கும் வரையில், இவளை நீ அழைத்துச் செல்ல விட மாட்டேன். சுபமானவள் சீதா. கமல பத்ரம் போன்ற கண்களுடைய ராமனின் மனைவி. பிரியமான மகிஷி. அந்த மகாத்மாவுக்கு பிரியமானதை நான் செய்து தான் ஆகவேண்டும். உயிரைக் கொடுத்தாவது, ராமனுக்கும் அவன் தந்தை த3சரத2னுக்கும் நான் கடமைப் பட்டவன். நில். நில், ராவணா, த3சக்3ரீவா, ஒரு முஹுர்த்த நேரத்தில் பார், உனக்கு அதிதி பூஜை யுத்தமாகத் தருகிறேன். உயிருள்ளவரை போராடுவேன். நிசாசர, மரத்திலிருந்து பழம் விழுவது போல உன்னை ரதத்திலிருந்து விழச் செய்கிறேன்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஜடாயுரபி4யோகோ என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக