ஸ்ரீமத் ராமாயணம் ஆரண்ய காண்டம் 51 – 75
அத்தியாயம் 51 (247) ஜடாயு ராவண யுத்தம்
ஜடாயு இவ்வாறு நியாயமாக பேசியதைக் கேட்டு, ராவணனின் இருபது கண்களும் கோபத்தால் சிவந்தன. அக்னி போல தகிக்கலாயின. பொன்னாலான குண்டலங்கள் ஆட, சிவந்த கண்களுடன், ராக்ஷஸ ராஜன், கழுகு அரசனை எதிர்த்தான். இருவருக்கும் இடையில் அந்த வனத்தில் பெரும் யுத்தம் மூண்டது. காற்று அலைக்கழிக்க இரண்டு மேகங்கள் முட்டிக் கொள்வது போல இருந்தது. கழுகு ராஜ, ராக்ஷஸ ராஜனுக்கிடையில் நடந்த சண்டை அத்புதமாக, மகா பர்வதங்கள் ஒரு காலத்தில் இறக்கைகளுடன் இருந்ததை நினைவூட்டின. கூர்மையான பாணங்களை போட்டு, கழுகு அரசனை மகாபலசாலியான ராவணன் சரங்களை மழையாக பொழிந்து அடித்தான். அந்த சர ஜாலங்களை இறக்கையுடைய கழுகு அரசன் வாங்கி எதிர்த்து அடித்தான். தன் கூர்மையான நகங்களாலும், பற்களாலும், கால்களாலும் அவன் உடலில் காயங்களை உண்டு பண்ணினான். க்ரோதம் பொங்க ராவணன் பத்து திக்குகளிலும் செல்லும் ம்ருத்யு த3ண்டம் போன்ற கோரமான பாணங்களை எதிரியைக் கொன்று விடும் என்ணத்துடன் பிரயோகித்தான். அந்த பாணங்கள் குறி தவறாமல் முழுவதுமாக வில்லிலிருந்து புறப்பட்டவை, கழுகரசனை, கூர்மையான நுனிப் பகுதிகளால் குத்திக் கிழித்தன. அந்த ராக்ஷஸனின் ரதத்தில் ஜானகியை ஒரு முறைப் பார்த்து விட்டு, அவனுடைய பாணங்களை லட்சியம் செய்யாமல் ஜடாயு ராவணனை திரும்ப அடித்தான். முத்துக்களும், மணிகளும் கட்டி அலங்கரிக்கப் பட்டிருந்த வில்லையும், அம்பையும், தன் கால்களால் பக்ஷிராஜன் உடைத்தான். கோபத்தால் செய்வதறியாது ராவணன் மற்றொரு வில்லை உடனே எடுத்துக் கொண்டான். நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக பாணங்களை விட்டான். நான்கு புறமும் அந்த பாணங்கள் சூழ்ந்து கொள்ள, கூண்டில் அடைபட்ட பக்ஷி போல ஜடாயு திணறினான். இறக்கைகளால் அந்த சரங்களை நகர்த்திக் கொண்டு, தன் கால்களால் ராவணனுடைய பெரிய வில்லை உடைத்தான். ராவணன் விட்ட அக்னிக்கு சமமாக பிரகாசிக்கும் பா3ணங்களை ஜடாயு தன் இறக்கைகளாலேயே தடுத்து நிறுத்தி விட்டான். பல விதமான ராவணனுடைய பா3ணங்களை வேகமாக இஷ்டப்படி செல்லும், நெருப்பு போன்ற பா3ணங்களையும் தடுத்து, அலங்கரிக்கப் பட்ட அவனது ரதத்தையும் கீழே தள்ளினான். பூரண சந்திரன் போன்று இருந்த குடையையும், சாமரத்தையும் இடித்து தள்ளினான். வேகமாக அதிலிருந்த சாரதியுடன் கீழே தள்ளினான். சாரதி ஜடாயுவின் கூர்மையான அலகினால் குத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு விழுந்தான். ஜடாயு திரும்ப திரும்பத் தாக்கியதில், வில்லும் அம்பும் உடைந்து விழ, ரதத்தையும் இழந்து, அஸ்வமும், சாரதியும் இறந்து போக, தனித்து விடப் பட்ட ராவணன் சீதையை மடியில் இருத்திக் கொண்டு பூமியில் விழுந்தான். வாகனம் உடைந்து பூமியில் விழுந்த ராவணனைப் பார்த்து சகல ஜீவன்களும், கழுகரசனை சாது, சாது என்று பாராட்டின. வயதான காரணத்தால் களைத்துப் போன ஜடாயுவைப் பார்த்த ராவணன் திரும்ப உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, சீதையுடன் குதித்து எழுந்தான். ஜனகன் மகளை விடாமல் தூக்கிக் கொண்டு ஓடும் ராவணனை கழுகரசன் விடாமல் தொடர்ந்து சென்று தாக்கியது. அவனைத் தடுத்து, ஜடாயு, ஏ, ராவணா, வஜ்ரம் போன்ற பாணம் உடையவன் ராமன். அவன் மனைவியை அபகரித்துக் கொண்டு போய், அல்ப புத்தி உடையவனே, ராக்ஷஸர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாய். ப3ந்து4க்கள், சுற்றத்தார், மந்திரிகள், பரிவாரங்களோடு சேர்ந்து தாகம் கொண்டவன் தண்ணீர் என்று நினைத்து விஷம் குடித்தது போல அழிவாய். பக்க விளைவுகளை அறியாமல், வேலை செய்வதில் சாமர்த்தியமும் இல்லாமல், செயலில் இறங்கியவர்கள், இதோ நீ அழியப் போவதைப் போலத்தான் அழிவார்கள். கால பாசம் உன்னை இறுக்குகிறது. நீ எப்படி இதிலிருந்து விடுபட்டு பிழைத்திருக்கப் போகிறாய்? தூண்டிலில் அகப்பட்டுக் கொண்ட நீர் வாழ் ஜந்து, அதில் மாட்டியிருக்கும் மாமிசத்திற்கு ஆசைப் பட்டு, தூண்டிலில் வந்து விழுவதைப் போல, தன் உயிரை இழக்கப் போகிறாய். ராம, லஷ்மணர்கள் கையில் மாட்டிக் கொள்ளப் போகிறாய். காகுத்ஸர்கள் இருவருமே எளிதில் ஜயிக்க முடியாதவர்கள். ஆசிரமத்தை தாக்கி போர் புரிந்திருந்தாலும் கூட பொறுத்துக் கொள்வார்கள் ராகவ குல வீரர்கள் இருவரும். உலகில் எல்லோரும் நிந்திக்ககூடிய செயலை செய்திருக்கிறாயே திருடன் போல. இது வீரர்களுக்கு அழகல்ல. தன் வீர்யத்தில் நம்பிக்கை உள்ளவன் செய்யும் செயலும் அல்ல. வீரனாக இருந்தால், நேருக்கு நேர் நின்று சண்டை போடு. முஹுர்த்த நேரம் நில் ராவணா, உன் சகோதரன் கரன் விழுந்தது போல நீயும் அடிபட்டு விழப் போகிறாய். தன் வாழ் நாள் முடியும் நேரத்தில் இப்படித் தான் செய்வார்கள். தங்கள் விநாசத்தை எதிர்கொண்டு அழைப்பது போல. அதர்மமான காரியத்தை செய்ய முனைந்திருக்கிறாய். பாபம் உன்னை கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்து விடு படுவாய். லோகாதி4பதியான ஸ்வயம்பூ4 பகவான் கூட என்ன செய்து உன்னை விடுவிக்க முடியும். இப்படி சொல்லிக் கொண்டே கழுகரசன் தசக்ரீவனுடைய முதுகில் தடாலென்று விழுந்தது. அவனை பிடித்து தன் கூர்மையான நகங்களால் கிழித்தது. யானையின் மேல் ஏறி மாவுத்தன், துஷ்ட யானையை அடக்குவது போல தன் நகங்களால் அவனை குத்தி குத்தி துன்புறுத்தியது. அவன் கேசத்தை கலைத்தது. தன் நகமும், இறக்கையும், முகமுமே ஆயுதமாக திரும்பத் திரும்ப ராவணனை சித்ர வதை செய்தது. இப்படி கழுகு அரசனால் துன்புறுத்தப் பட்ட ராவணன் உதடுகள் துடிக்க, நடுங்கிக் கொண்டே கோபத்துடன், இடது கையால் வைதேஹியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, தன் புறங்கையால் ஜடாயுவை ஓங்கி அடித்தான். ஜடாயு தன் அலகினால் ஒவ்வொரு இடது புஜத்தையும் கடித்து குதறியது. வெட்டுண்ட புஜங்கள் கீழே விழ, உடனே வேறு புஜங்கள் தோன்றின. விஷ ஜ்வாலை வீசும் புற்றிலிருந்து பாம்புகள் புறப்படுவது போல உடனுக்குடன் புது புஜங்கள் முளைத்து வந்தன. கோபத்துடன் சீதையை கீழே விட்டு, முஷ்டிகளாலும், கால்களாலும் க்3ருத்4fர ராஜனை அடித்தான். சமான பலமுள்ள இருவரும் முஹுர்த்த நேரம் விடாமல் சண்டை செய்தனர். ராக்ஷஸ முக்யனுக்கும், பக்ஷிகளில் ஸ்ரேஷ்டமான ஜடாயுவுக்கும் நடந்த சண்டையில், ராமனுக்காக பரிந்து கொண்டு போராடும் கழுகு அரசனை ராவணன் கத்தியை எடுத்து இறக்கைகளை, பக்கங்களை , கால்களை என்று வரிசையாக வெட்டி விட்டான். க்ரூரமாக செய்யத் தயங்காத ராவணன் இப்படி செய்தவுடன், கழுகரசன் தடாலென்று பூமியில் விழுந்தது. எந்த நேரமும் உயிர் போகலாம் என்ற நிலையில் பூமியில் கிடந்த ஜடாயுவைப் பார்த்து, ரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்து, நெருங்கிய பந்து அடிபட்டதைப் பார்த்து கதறிக் கொண்டு ஜனகர் மகள் அருகில் வந்தாள். ஜடாயு தரையில் கிடப்பதை ராவணனும் பார்த்தான். நீல மேகம் போன்ற பெரிய உருவம், வெண்மையான மார்பு பிரதேசங்களை உடையதும், நல்ல வீரனும் ஆன ஜடாயு, அடங்கி விட்ட நெருப்புக் குழம்பு போல கிடந்தது. ராவணன் வேகத்துக்கு ஈ.டு கொடுக்க முடியாமல், பூமியில் விழுந்து கிடந்த அந்த பக்ஷியை சந்திர வதனம் உடைய சீதை அணைத்துக் கொண்டு அழுதாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஜடாயு ராவண யுத்தம் என்ற ஐம்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 52 (248) சீதா விக்ரோச: (சீதையின் அலறல்)
மரணதறுவாயில் கழுகு அரசன், ராக4வனின் ஆசிரமத்திற்கு அருகில் விழுந்து துடித்துக் கொண்டு கிடப்பதை ராவணன் பார்த்தான். அவனால் அடித்து வீழ்த்தப் பட்ட ஜடாயுவைக் கண்டு மைதிலி அழுதாள். ஜடாயுவை அணைத்துக் கொண்டு அரற்றினாள். துக்கத்துடன் புலம்பினாள். நிமித்தம், லக்ஷணம், ஸ்வப்னம், சகுனி பக்ஷிகளின் கூக்குரல் (இவை வரப்போவதை தெரிவிக்கும் சகுனங்கள்) சுக, துக்கம் இந்த சமயங்களில் எதிர்மறையாகத் தெரிகிறது. துக்கம் வரும் சமயங்களில் நிமித்தம் முதலானவைகளை கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறோம். ராமா, உனக்கு நிச்சயம் இங்கு நான் படும் கஷ்டங்கள் தெரிந்திருக்காது. மிருகங்களும், பக்ஷிகளும் நிச்சயம் எனக்காக காகுத்ஸனை நோக்கி ஓடும். இந்த ஜடாயு, கருணையால் என்னைக் காப்பாற்ற வந்தார். என்னுடைய துரதிருஷ்டத்தினால் அடிபட்டு பூமியில் விழுந்து கிடக்கிறார். காகுத்ஸா, என்னைக் காப்பாற்று, என்று வராங்கனா (அழகிய அங்கங்களையுடையவள்) சீதை, வேண்டிக் கொண்டு அழுதாள். பயத்துடன் ஆடைகளும் ஆபரணங்களும் நிலை குலைய, அநாதை போல அழும் அவளை நோக்கி ராக்ஷஸாதிபன் ஓடி வந்தான். கொடியைப் போல மரங்களை அணைத்துக் கொண்டு நின்ற அவளை, விடு, விடு என்று கத்திக் கொண்டு ராவணன் துரத்திக் கொண்டு போனான். ராமா, ராமா, என்று ராமன் இல்லாத வனத்தில் அலறும் அவளை காலனுக்கு சமமான கொடியவனான ராவணன், தன் காலம் இதனால் சமீபத்து வருவதை அறியாதவனாக அவள் கேசத்தை பிடித்து பலவந்தமாக இழுத்துக் கொண்டு போனான். மரியாதையோ, பண்போ இல்லாத இந்த செயலைப் பார்த்து, அண்ட சராசரங்களும், இருட்டில் மூழ்கியது போல ஆயிற்று. காற்று வீசவில்லை. சூரியன் ஒளியிழந்து காணப் பட்டான். சீதை அபகரிக்கப் பட்டதை தன் திவ்ய கண்களால் கண்டு கொண்ட பிதாமகர் ப்ரும்மா, காரியம் ஆயிற்று என்றார். தேவகார்யம் ஆன மகிழ்ச்சி ஒரு புறமும், சீதையின் கஷ்டத்தைக் காண சகியாமல் வருந்தியவர்களாகவும் பரம ரிஷிகள் தவித்தார்கள். தண்ட காரண்ய வாசிகள், யதேச்சையாக, தானாகவே, ராவணனுடைய விநாசம், அவள் மூலமாக ஏற்படப் போகிறது என்று பேசிக் கொண்டார்கள். அவள் கடத்திச் செல்லப் படுவதை வருத்தத்துடன் பார்த்தபடி நின்றார்கள். ராமா, ராமா என்றும் லக்ஷ்மணா என்றும் அவள் கதறுவதை பொருட்படுத்தாமல் அவளைத் தூக்கிக் கொண்டு ஆகாய மார்கமாக ராவணன் சென்றான். சிவந்த ஆடையும், ஆபரணங்களும் அணிந்திருந்த ராஜகுமாரி மேகத்தின் இடையில் மின்னலைப் போல தெரிந்தாள். அவளுடைய பீதாம்பரம் வேகமாக செல்லும் பொழுது காற்றில் பறக்க, ராவணன் என்ற மலை தீப்பற்றிக் கோண்டது போல இருந்தது. அவளுடைய சுபமான ஆபரணங்கள், தாம்ரங்களும், சுரபி என்பவைகளும், பத்ம பத்ரம் என்ற ஆபரணமும் ராவணனைக் காயப் படுத்தின. பொன்னிறமாகத் தெரிந்த அவளுடைய பட்டு வஸ்திரம், ஆகாயமே தாம்ர வர்ணமாக இருப்பது போல காட்சியளித்தது. முகம் வாடிக் கிடந்தது. ராமன் அருகில் இல்லாததால், சந்திரன் உதித்தவுடன் பிடுங்கி எறியப் பட்ட தாமரை மலராக அவள் வாட்டம் தெரிந்தது. அழகிய நெற்றியும், கேசமும், தாமரையின் மகரந்தத்தைப் போன்ற நிறமும், வெண்மையான விமலமான பல் வரிசையும், அவளுக்கு அழகை தந்து கொண்டிருந்தவை, அழுது கண்ணீர் வடிந்து கறையாக, சந்திர வதனமாக இருந்தவள், ராவணன் கடத்திச் செல்லும் பொழுது, பகலில் உதித்த சந்திரனாக இருந்தாள். முகம் வாடியிருந்தும், கருத்த ராவணனை, தன் இயல்பான தங்கத்தையொத்த நிறத்தால், பொன்னாலான ஒட்டியாணம் போல அலங்கரித்தாள் (வெள்ளி தான் நீல வர்ணத்துக்கு அலங்காரம், பொன்னாலான என்பதால், அலங்கரிக்கவில்லை என்றும் பொருள் கொள்ளலாம்). ஜனகன் மகளான சீதை செந்தாமரை போன்ற சோபையுடையவள். ராவணனை மின்னல் மேகத்தை ஒளி பெறச் செய்வது போல. தன் பிரகாசமான ஆபரணங்களால் ஒளி பெறச் செய்தாள். ஆபரணங்கள் உரசுவதால் ஏற்பட்ட சத்தம், மேகம் சபலம் கொண்டு கோஷம் இடுவது போல ஒலித்தது. சீதையின் தலையில் சூடியிருந்த உத்தமமான மலர்கள் சிதைந்து பூமியில் விழுந்தன. அந்த புஷ்பக் குவியல், ராவணன் செல்லும் வேகத்தில் அடிபட்டு திரும்ப அவனிடமே வந்தன. வைஸ்ரவணன் தம்பியான ராவணனை இந்த புஷ்பங்கள் கோடாக தொடர்ந்து சென்றன. உன்னதமான மேரு மலையை நக்ஷத்திர மாலை நெருங்கி செல்வது போல இருந்தது. சீதையின் கால்களிலிருந்து ரத்னம் இழைத்த நூபுரம் கழண்டு விழுந்தது. இனிமையான நாதத்துடன் அது மின்னல் விழுவது போல விழுந்தது. பெரிய தீப்பந்தம் போல தன் தேஜஸால் ஜ்வலிக்கும் சீதையை ஆகாய மார்கமாக தூக்கிக் கொண்டு வேகமாக சென்றான். நக்ஷத்திரங்கள் சிதறி தெறித்து விழுவது போல, அக்னி வர்ணமான பூஷணங்கள் சிதறி விழுந்தன. கழுத்திலிருந்த முத்து மாலை கங்கை கீழே இறங்கி வருவது போல நழுவி விழுந்தது. பலவிதமான பக்ஷிகள் நிறைந்த மரங்கள், ராவணனின் வேகத்தால், எதிர்காற்று பலமாக வீச பறவைகள் ஒரு முகமாக பறந்து திரும்ப மரத்தை அடைந்தது பயப்படாதே, என்று சீதையைப் பார்த்து சொல்வது போல இருந்தது. கமல புஷ்பத்தை பறித்தபின், நீரில் தங்கி விட்ட தாமரை நாளமும், மீன் முதலிய ஜலத்தில் வாழும் ஜீவன்களும் பெருமூச்சு விட்டபடி பிரிய சகியை விட்டுப் பிரிந்தது போல வைதேஹிக்காக இரங்கின. சீதையின் நிழலைத் தொடர்ந்து வருவது போல, சிங்கம் வ்யாக்4ரம், புலி, மிருகங்கள், பக்ஷிகள், ரோஷத்துடன் ஓடி வந்தன. நீர் வீழ்ச்சிகள் கண்கள் நீரைப் பொழிவது போல பொழிய, மலைச் சிகரங்கள் கைகளாக கடத்திச் செல்லப் படும் சீதையை நோக்கி கைகளை உயரத் தூக்கி புலம்புவது போல மலைகள் தெரிந்தன. சீதை அபகரித்துக் கொண்டு போகப் படுவதை பார்த்தும் தடுக்க இயலாத சூரியன் ஒளியின்றி முகம் வெளுத்து, சோபை குன்றியவனாக இருந்தான். தர்மமே இல்லை, எங்கே சத்யம்? எங்கே கருணை? அஹிம்சை எங்கே? எங்கே ராவணன் ராமனின் மனைவியை கடத்திக் கோண்டு போகிறானோ, அங்கு இந்த நல்ல குணங்கள் எப்படி இருக்க முடியும்? என்று எல்லா ஜீவராசிகளும் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டு, அங்கலாய்த்தன. இளம் மான் குட்டிகள் அழுதன. வன தேவதைகள் பார்த்து பார்த்து, கண்ணீர் பெருகும் நயனங்களோடு உடல் வியர்த்து வடிய நின்றார்கள். இப்படி ஒரு துக்கத்தை யடைந்த சீதை கதறி அழுவதைப் பார்த்து, அப்பொழுதும் இனிய குரலில், ஹா ராமா, ஹா லக்ஷ்மணா என்று கதறுவதை பூமியை திரும்பத் திரும்ப நோக்கியபடி செல்லும் வைதேஹியை, கலைந்த கேசமும், கலங்கிய ஆடைகளுமாக தன் ஆத்ம விநாசத்தின் பொருட்டு, தன் அழிவிற்காகவே தசக்ரீவன் தூக்கிக் கொண்டு போனான். அழகிய பல் வரிசையுடையவள், மென்மையாக நகைப்பவள் என்று புகழப் பெறும் மைதிலி, ப3ந்து4 ஜனங்கள் யாரும் அருகில் இல்லாமல், ராம லக்ஷ்மணர் இருவரையும் காணாதவளாக, பெரும் பயத்தால் பீடிக்கப் பட்டு. நிறம் இழந்து பொலிவிழந்து போனாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதா விக்ரோசோ என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 53 (249) ராவண ப4ர்த்ஸனம் (ராவணனை திட்டுதல்)
ஆகாயத்தில் எழும்பி நின்று பறந்து செல்லும் ராவணனைப் பார்த்து, துக்கத்தில் ஆழ்ந்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாலும், ரோஷத்தாலும், அழுததாலும் சிவந்த கண்களுடைய மைதிலி, ஜனகன் மகள், பயங்கரமான பெரிய கண்களையுடைய ராக்ஷஸனைப் பார்த்துச் சொன்னாள். ராவணா, இந்த காரியம் செய்கிறாயே, வெட்கமாக இல்லை. தனியாக இருப்பதையறிந்து என்னை திருடிக் கொண்டு ஓடுகிறாயே. நீதானா, மிருக ரூபமாக வந்து என் கணவனை வெகு தூரம் செல்ல வைத்தது? திட்டமிட்டு தான் செய்திருக்கிறாய், சந்தேகமில்லை. என்னை காப்பாற்ற முனைந்த கழுகு அரசனான ஜடாயுவையும் கொன்று விட்டாய். வயதான கழுகு அரசன், என் மாமனாரின் சினேகிதன். ராக்ஷஸாத4மா, உன் வீர்யம் மிகவும் அழகுதான். தன் பெயரைச் சொல்லி யுத்த கோஷம் செய்து, யுத்தம் செய்து என்னை நீ வெற்றி கொள்ளவில்லை. இது போன்ற மட்டமான செயலை செய்து விட்டு, வெட்கமாக இல்லையா? ஸ்த்ரீ ஹரணம் என்பதே மட்டமான செயல். அதிலும் பிறன் மனைவி என்றால், கணவன் இல்லாத பொழுது கடத்தி வருவது இன்னமும் மட்டமானது. உலகம் உள்ளளவும் உன்னுடைய நீசமான இந்த செயலை உலகில் நிந்திப்பார்கள். அதர்மமானது, கொடுமையானது, நீ ஏதோ பெரிய குலத்தவன் என்று சொல்லிக் கொள்கிறாயே.திக் தே வீர்யம்- உன்னுடைய வீரம் அவ்வளவுதானா, (தி4க் என்ற சொல் நிந்தனையை குறிக்கும்). உன் வீரம் வீண், செல்வ சம்பத்துடையவன் என்று சொல்லிக் கொண்டாயே, உன் குலத்தைச் சொல்லி பெருமை பேசினாயே, தி4க் தே சாரித்ரம்- உன் நடத்தையும் அவ்வளவுதானா (தூ – என்று சொல்லி நிந்திப்பது போல தி4க் என்ற சொல்.) இது போன்ற நடத்தையுடையவன் நாசமாக போக. என்ன செய்ய முடியும்? இப்படி வேகமாக ஓடுகிறாயே. ஒரு முஹுர்த்தம் நின்று பார். உயிருடன் திரும்ப மாட்டாய். அந்த இரு ராஜ குமாரர்களின் கண்களில் பட்ட பின், சைன்யத்தோடு வந்தால் கூட முஹுர்த்த நேரம் கூட தாக்கு பிடிக்க மாட்டாய். சரங்களை கோத்து அவர்கள் உன் மேல் விட்டால் அதை ஸ்பரிசிக்க கூட உன்னால் முடியாது. காட்டுத் தீயில் சிக்கிய பறவை போல ஆவாய். உன் நன்மையை நினைத்து என்னை விட்டு விடு. ராவணா, என்னை பலவந்தமாக தூக்கிப் போகிறாயே, இதையறிந்து என் பதி, சகோதரனுடன் வந்து, உன்னை அழித்து விடுவான். என்னை விட்டு விடு. இல்லாவிடில் நீயே உன் அழிவைத் தேடிக் கொண்டவன் ஆவாய். இப்படி கஷ்டப் பட்டு என்னைத் தூக்கி போகிறாயே, இந்த உழைப்பும் வீணாகும். சந்திரனைப் போன்ற என் கணவனை பார்க்காத நான், சத்ரு வசத்தில் இருந்து வெகு நேரம் உயிருடன் இருக்க மாட்டேன். இதில் உனக்குத்தான் என்ன நன்மை, லாபம் என்று எதிர்பார்க்கிறாய் ? மரணம் நெருங்கி வந்தால் ஜீவன்கள் விபரீதமாக எதையாவது செய்கின்றன. முக்தியடைய என்ன செய்ய வேண்டுமோ அது பிடிக்காமல் போகிறது. இன்றே உன் கழுத்தில் கால பாசம் விழுந்து இறுக்குவதைக் காண்கிறேன். பயப் பட வேண்டிய இடத்தில் பயப்படாமல் இருக்கிறாயே, த3சானனா, பூமியில் மரங்களை தங்க மயமாக பார்க்கிறாய். வைதரணீம் என்ற பயங்கர நதியை (யம புரிக்கு ஜீவன் போகும் பொழுது காணும் நதி ரத்தம் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவதையும், அசிபத்ர வனம் (கத்திகளே இலைகளாக இருப்பது போல) என்பதையும் சீக்கிரமே காணப் போகிறாய். பொன்னிறமான புஷ்பங்களையும், வைடூரியம் போன்ற சோபையும் உடைய சால்மலியைக் காணப் போகிறாய். கூர்மையான இரும்பு ஊசி போன்ற முட்கள் உடையது- அதையும் காணப் போகிறாய். (இதுவும் மரணத்திற்கு பின் ஜீவனுடைய யாத்திரையில் காணப்படுவதாகச் சொல்லப் படுகிறது). மகாத்மாவான ராமனிடம் இப்படி தவற்றை செய்து விட்டு நீண்ட நாள் உயிருடன் இருக்க மாட்டாய். விஷத்தைக் குடித்தவன் போல் ஆவாய். தவிர்க்க முடியாத கால பாசத்தால் கட்டப் பட்டிருக்கிறாய், ராவணா, யாரைப் போய் சரணடைவாய். சகோதரன் கூட இல்லாமல், தனி ஆளாக, நிமிஷ நேரத்தில் ஆயிரக்கணக்கான ராக்ஷஸர்களை அழித்தவன் ராமன். இப்பொழுது அவனது பிரிய மனைவியை அபகரித்துக் கொண்டு செல்லும் உன்னை, கூர்மையான பா3ணங்களால் அடிக்க மாட்டான் என்று எப்படி நினைக்கிறாய். இவ்வாறு, இன்னும் பலவிதமாக கடுமையாக திட்டிக் கொண்டே வந்தாள். பயத்தாலும், சோகத்தாலும் களைப்படைந்தாள். வருத்தத்திலும் நிறைய பேசிக் கொண்டே, கருணையாக வேண்டிக் கொண்டும் வந்த சீதையை சற்றும் இரக்கமின்றி ராவணன் துக்கிக் கொண்டு போனபடி இருந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராவண ப4ர்த்ஸனம் என்ற ஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 54 (250) லங்கா ப்ராபணம் (லங்கையில் கொண்டு சேர்த்தல்)
சீதையின் வார்த்தைகள் எதையும் ராவணன் கேட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ரதம் ஆகாய மார்கமாக சென்று கொண்டிருந்தது. வருத்தத்தோடு கீழே நோக்கிய சீதை, மலையின் உச்சியில் ஐந்து வானரங்களைப் பார்த்தாள். அவர்கள் நடுவில் தான் உடுத்தியிருந்த பொன்னிறமான பட்டு வஸ்திரத்தில் சுபமான ஆபரணங்களை வைத்து கீழே போட்டாள். ராமன் தேடி வந்தால் இதை பார்க்கட்டும், அல்லது இவர்கள் சொல்லக் கூடும் என்று மனதில் எண்ணிக் கொண்டாள். தன் பரபரப்பில் ராவணன் இதை கவனிக்கவில்லை. விசாலாக்ஷியான சீதையை, பிங்கா3க்ஷன் எனும்படி சிவந்த நிறக் கண்களுடைய ராவணன் கண்களை இமை காப்பது போல எடுத்துச் செல்வதையும், அவள் கதறுவதையும் அந்த வானரங்கள் கண்டனர். பம்பை நதியைக் கடந்து லங்கையை நோக்கிச் சென்றான் ராவணன். வைதேஹியை பிடித்துக் கொண்டு, அவள் அழ, அழ மிகவும் மகிழ்ச்சியோடு ஊர் நோக்கிச் சென்றான். தன் ம்ருத்யுவைத் தானே எதிர் கொண்டு அழைப்பது போலவும், மகா விஷமுடைய கூரிய பல்லுடைய பெண் பாம்பை விளையாட்டாகச் சீண்டியது போலவும், தூக்கிக் கொண்டு வனங்களையும், நதிகளையும், மலைகளையும், சமுத்திரத்தையும் ஆகாய மார்கமாக கடந்து சென்றான். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல வேகமாக, முதலைகளும், திமிங்கிலம் இவை வசிக்கும், அழிவில்லாத, குறைவு இல்லாத வருணாலயம் என்ற நதிகளின் சரண்யனான சாகரத்தைக் கடந்து செல்லும் பொழுது, திகைத்த சமுத்திரத்தில் மீன்களும், பெரிய பாம்புகளும் கூட அசைவற்று நின்று விட்டன. வைதேஹியை தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்து வருணாலயமான சாகரமும் ஸ்தம்பித்தது. அப்பொழுது அசரீரி வாக்கு ஆகாயத்தில் கேட்டது. சித்தர்களும், சாரணர்களும் பேசிக் கொண்டனர். இது தான் உன் முடிவு த3சக்ரீவா, என்பதாக. துவண்டு போன சீதையை தூக்கிக் கொண்டு தன் ஊரில் பிரவேசித்தான், ராவணன். சீதையை மடியில் வைத்துக் கொண்டு ராஜ மார்கமாக பல அறைகள் கொண்ட தன் மாளிகையை சென்றடைந்தான். மயன், மாயாவை பிடித்தது போல சீதையை ராவணன் பிடித்துக் கொண்டான். கோரமான ரூபம் கொண்ட பிசாசிகளை காவல் வைத்தான். இவளுக்கு சம்மதமில்லாத ஸ்த்ரீயோ, புருஷனோ இவள் அருகில் வர விடாதீர்கள். முத்துக்கள், மணிகள், தங்க நகைகள், வஸ்திரங்கள், ஆபரணங்கள் என்று இவள் எதை விரும்பினாலும் உடனே கொடுங்கள். இது என் கட்டளை. வைதேஹியிடம் யாரும் கடுமையாக பேசக் கூடாது. அவளுக்கு பிடிக்காத விஷயங்களை பேசக்கூடாது. தெரிந்தோ, தெரியாமலோ இந்த கட்டளைகளை மீறினால் அவனுக்கு தன் உயிரின் மேல் விருப்பமில்லை என்றாகும். மரண தண்டனைதான். இவ்வாறு ராக்ஷசிகளுக்கு கட்டளையிட்டு, அந்த:புரத்திலிருந்து வெளியே வந்து என்ன செய்யலாம் என்று யோசித்தான். மகா வீர்யவான்களான எட்டு ராக்ஷஸர்களைக் கண்டான். தான் பெற்றுள்ள வரதானங்கள் தந்த பலத்தினால், மோகம் புத்தியை மறைக்க, தன் பலம், வீரம் இவற்றை தானே, புகழ்ந்து பேசியபடி, கட்டளையிட்டான். எஎல்லா ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு உடனே முன்பு க2ரன் இருந்த இடம் செல்லுங்கள். ஜனஸ்தானத்தில் இப்பொழுது ராக்ஷஸர்களே இல்லை. அங்கு தூரத்தில் இருந்து கொண்டு கடுமையாக, பயத்தை உண்டு பண்ணுங்கள். என் பெரும் படை ஜனஸ்தானத்தில் இருந்தது. அதை கரன், தூஷணனோடு ராமன் அழித்து விட்டான். அதனால் எனக்கு ராமனிடம் பயங்கர விரோதம். கோபமும் கூட. இந்த விரோதத்தை காப்பாற்றியாக வேண்டும். அந்த எதிரியை கொல்லாமல் எனக்கு தூக்கம் வராது. அதனால் இந்த கோபத்தையும், விரோதத்தையும் அவனிடம் எப்படியாவது காட்ட வேண்டும். க2ர, தூ3ஷணாதிகளை கொன்றவனை, கொன்று நான் பழி வாங்குவேன். ராமனைக் காயப் படுத்துவேன். செல்வம் இல்லாதவனுக்கு செல்வம் போல (?) ஜனஸ்தானத்தில் இருந்து கொண்டு நீங்கள் ராமன் என்ன செய்கிறான் என்பதை கண்காணிக்க வேண்டும். எல்லா நிசாசரர்களும் வெளியில் தெரியாதவாறு நடமாடுங்கள். எப்பொழுது ராமனை கொல்ல சந்தர்பம் கிடைக்கிறது என்பதிலேயே கவனம் வைத்திருங்கள். யுத்தம் என்று வந்தால் உங்கள் சக்தியையும், பலத்தையும், நான் அறிவேன். அதனால் தான் இந்த ஜனஸ்தானத்தில் உங்களை நியமிக்கிறேன். ராவணனுக்கு பிரியமான வார்த்தைகளைச் சொல்லி அவனை வணங்கி விடை பெற்றுக் கொண்டு லங்கா நகரத்தை விட்டு எல்லோரும் ஒன்றாக, ஜனஸ்தானத்தை நோக்கி தங்கள் உருவம் தெரியாதவாறு மாயையால் மறைத்துக் கொண்டு சென்றனர். இதன் பின் சீதை இருக்கும் இடம் சென்று, ராமனிடத்தில் தனக்கு உள்ள விரோதத்தை, தன் அறியாமையால் பெருமையும் மகிழ்ச்சியும் பொங்க, பறைசாற்றிக் கொண்டான், ராக்ஷஸாதிபனான ராவணன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் லங்கா ப்ராபணம் என்ற ஐம்பத்து நாலாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 55 (251) சீதா விலோப4னோத்3யம: (சீதையை ஆசை காட்டும் முயற்சி)
மகா பலசாலிகளான எட்டு ராக்ஷஸர்களை அழைத்து, ஜனஸ்தானத்தில் மறைந்திருந்து காவல் காக்குமாறு ராவணன் பணித்தான். பயங்கரமான தோற்றம் கொண்ட அவர்களை நியமித்து விட்டு, தன் அறியாமையால் நல்ல ஏற்பாடு செய்து விட்டதாக திருப்தியடைந்தான். வைதேஹியையே நினைத்துக் கொண்டு தன் மாளிகையினுள் சென்றான். வேகமாக தன் க்ருஹத்தில் நுழைந்து ராக்ஷஸிகள் சூழ இருந்த சீதையைக் கண்டான். கண்களில் நீர் மல்க, பெரும் காற்றில் அலைக்கழிக்கப் படும் படகைப் போல நடுங்கி கொண்டு, முகம் வாடியிருந்த சீதையைக் கண்டான். தன் கூட்டத்திலிருந்து தவறி வெளியே வந்து விட்ட பெண் மான் குட்டி, நாய்கள் சூழ்ந்து நின்றால், திடுக்கிட்டு தவிப்பது போல நின்றாள். தலை கவிழ்ந்து தரையையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம், ராவணன் பலவந்தமாக தன் மாளிகையைச் சுற்றிக் காட்டினான். அவளுடைய மன நிலையைப் பற்றி அவன் சற்றும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. தேவர்களின் மாளிகையைப் போல, விமானங்களும், பிரகாரங்களும் கூடிய ஆயிரக் கணக்கான ஸ்த்ரீகள் வசிக்கும் அரச மாளிகை. பக்ஷிகள் பலவிதமாக வளர்க்கப் பட்டன. ரத்னங்கள் இழைத்து செய்யப் பட்ட தூண்கள். சில குளிர்ச்சியானவை, சில உஷ்ணத்தைக் கொடுக்க கூடியதாய், சில ஸ்படிகத்தால் செய்யப்பட்டவை, மற்றும் சில வெள்ளியினாலானவை. பல தூண்களில் வைர வைமூடுரியங்கள் பதிக்கப் பட்டு கண்களை கூசச் செய்தன. திவ்யமான துந்துபி முழங்கியது. பத்தரை மாற்றுத் தங்கத்தால் தோரணங்கள் கட்டப் பட்டிருந்தன. விசித்ரமான வேலை பாடுகளுடன் கூடிய மாடிப் படிகள். அவளுடன் அதில் ஏறிய ராவணன் அழகிய ஜன்னல்களைக் காட்டினான். வெள்ளியால் செய்யப் பட்டு, பொன் கயிற்றினால் வலைகள் வேயப் பட்டிருந்தன. சுதா4மஹி என்ற விசித்ரமான பூமியையும் த3சக்3ரீவன் தன் வீட்டிலிருந்தபடியே சீதைக்கு காட்டினான். அவள் சோகத்தை சற்றும் உணராமல், தன் போக்கில் மகிழ்ச்சியுடன், தீர்கமான குளங்களையும், நாலா புறமும் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த புஷ்கரிணியையும் ராவணன் சீதைக்கு காட்டினான். ஒரு இடம் விடாமல் அவளுக்கு சுற்றி காண்பித்து விட்டு, சீதையை ஆசை காட்டுவதாக எண்ணிக் கொண்டு தற்பெருமை பேசினான். சீதே, எப்பொழுதும் அரிய பெரிய காரியங்களைச் செய்யும் ராக்ஷஸ வீரர்கள் என்னிடம் இருக்கிறார்கள். என் ஒவ்வொரு காரியத்திற்கும், ஆயிரம் பேர் என்ற கணக்கில் ராக்ஷஸர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த ராஜ தந்திரமும் இனி உனக்கு அடங்கியே இருக்கும். என் வாழ்க்கையும், உயிரும் இனி நீயே. விசாலாக்ஷி, நீ தான் என் உயிருக்கும் மேலானவள். ஆயிரக் கணக்கான ஸ்த்ரீகள் என்னால் மணந்து கொள்ளப் பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நீ தலைவியாக இரு. என் மனைவியாக சம்மதிப்பாய். சீதே, பிரியமானவளே, என் வார்த்தைகளை நல்லெண்ணத்தோடு பார். என்னிடம் பிரியம் கொள். என்னை விரும்பு. வேறு விதமாக யோசிக்காதே. தவிக்கும் என்னிடம் கருணை காட்டு. நாலா புறமும் சமுத்திரம் சூழ்ந்த இந்த லங்கா புரத்தை, நூறு யோஜனை தூரம் பரவியுள்ள இந்த ராஜ்யத்தை, இந்திரனுடைய ஆட்களோ, சுராசுரர்களோ, தேவர்களோ, யக்ஷர்களோ, கந்தர்வர்களோ, ரிஷிகளோ யாரும் வந்து முற்றுகையிட முடியாது. எனக்கு சமமான வீரன் இந்த உலகில் இதுவரை நான் கண்டதில்லை. ராஜ்யத்திலிருந்து விரட்டப் பட்டு, கால் நடையாக, தீனமாக, தபஸ்வியாக வாழும் ராமனுடன் என்ன செய்யப் போகிறாய்? மனிதன், அல்பமான தேஜஸ் உடையவன். சீதே, என்னையே ஏற்றுக் கொள். உனக்கு சமமான கணவனாக நான் இருப்பேன். இளமை அழியக் கூடியது. பயப்படாதே. இங்கு என்னுடன் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டு இரு. ராகவனை கண்ணால் காண வேண்டும் என்ற எண்ணம் கூட உனக்கு வேண்டாம். வரானனே, அழகிய முகம் உடையவளே, மனதால் கூட இங்கு வர நினைப்பது யாருக்கும் சாத்தியமில்லை. மனக்கோட்டை கட்ட கூட முடியாது. வாயுவை ஆகாயத்தில் கயிற்றைக் கொண்டு கட்ட முடியுமா? கொழுந்து விட்டெரியும் அக்னியின் தூய ஜ்வாலையை கைகளால் பிடிக்க முடியுமா? மூன்று உலகிலும் அப்படி ஒருவனை இது வரை நான் கண்டதில்லை. சோப4னே, என் கையிலிருந்து பாதுகாப்புடன் இருக்கும் உன்னை யாராலும் தன் பலத்தால் கடத்திக் கொண்டு போக முடியாது. லங்கை என்ற பெரிய ராஜ்யம், இதை நீயே ஆண்டு கொள். உன் கட்டளைப் படி நடக்க என் கீழ் உள்ள எல்லோருக்கும், ராக்ஷஸர்கள், தேவர்கள் எல்லோருமே கடமைப் பட்டுள்ளனர். அபிஷேக நீர் உன் பேரில் பட்டால் கூட உன்னை கஷ்டப் படுத்தும். அவ்வளவு கோமளமானவள் நீ. அதனால் நீயும் மகிழ்ந்திருந்து என்னையும் மகிழ்விப்பாய். இதுவரை தீ வினையின் பயனாக, வன வாசத்தில் அனுபவித்த கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்தன. இனி, நல் வினை பயன்களை அனுபவிப்பாய். இங்கு வாசனை மிகுந்த மலர் மாலைகள் நிறைய இருக்கின்றன. வித விதமான ஆபரணங்கள் உள்ளன. இவைகளை என்னுடன் சேர்ந்து அனுபவிப்பாய். என் சகோதரன் வைஸ்ரவணனுடைய புஷ்பகம் என்ற விமானம் சூரியனுக்கு சமமானது. பிரகாசமானது,. அதையும் பலவந்தமாக நான் கொண்டு வந்தேன். விசாலமானது, அழகானது. மனோ வேகத்தில் செல்லக் கூடியது. அதில் அமர்ந்து சீதே, என்னுடன் உலகமெல்லாம் சுற்றுவாய். வரானனே, பத்மம் போன்ற உன் முகத்தில், சோகமும் வருத்தமும் பொருத்தமாக இல்லை. இவ்வாறு சொல்லிக்கொண்டே போகும் ராவணனை, தன் வஸ்திரத்தால் முகத்தை துடைத்த படி, இப்படி ஒரு அவஸ்தை வந்து சேர்ந்ததே என்று எண்ணி சிந்தனையோடு நின்றவளிடம் பாபாத்மா, ராவணன் மேலும் தன் பெருமையை பறை சாற்றிக் கெண்டான். வைதேஹி, வெட்கம் வேண்டாம். இதில் தர்மம் அழிகிறது என்று நினைக்காதே. எனக்கு உன்னிடம் ஏற்பட்டுள்ள இந்த ஈடுபாடும் தெய்வ சங்கல்பமே. அதனால் தானே உன்னை பலாத்காரமாக இவ்வளவு தூரம் அழைத்து வந்தேன். இதோ என் தலையால் உன் பாதங்களில் வணங்குகிறேன். கருணை காட்டு. சீக்கிரம் என்னிடம் இரங்கி அருள் செய். உன் வசத்தில், உனக்கு தாஸன் ஆனேன். இந்த வெறும் வார்த்தைகள், தவிக்கும் ராவணன் சொல்பவை. ராவணன் எப்பொழுதும், இதுவரை எந்த பெண்ணிடமும் தலை வணங்கி நின்றதில்லை. இவ்வாறு சொல்லி தசக்ரீவன், மைதிலியை, ஜனகன் மகளை, தன் அறியாமையால் தன் வசம் ஆனதாகவே நினைத்தான், தன் பொருந்தாதாத காமத்தால் காலனுக்கு தானே அழைப்பு விடுத்தவனாக ஆனான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதா விலோப4னோத்3யம: என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 56 (252) வத்ஸராவதி4கரணம் (ஒரு வருஷ கால கெடு வைத்தல்)
ராவணன் இவ்வளவு சொன்ன போதிலும், பயப்படாத வைதேஹி, தன் வருத்தத்தின் மத்தியிலும், வெளிவான சிந்தனையுடன், ஒரு புல்லை இடையில் வைத்து ராவணனுக்கு பதில் சொன்னாள். ராஜா தசரதன் அசைக்க முடியாத தர்ம சேதுவாக இருந்தார். சத்ய சந்தன் என்று புகழ் பெற்றார். அவர் மகன் ராக4வன். ராமன் என்று பெயர் கொண்டவன். மூவுலகிலும் பெயர் பெற்ற வீரன். நீண்ட புஜமும், விசாலமான கண்களும் உடையவன். அவன் என் பதி. எனக்கு தெய்வமே அவன் தான். இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன். சிம்மம் போன்ற தோள்வலியுடையவன். பெரும் புகழுக்குடையவன். லக்ஷ்மணன் என்ற சகோதரன் உடன் இருக்க, உன் உயிரை வாங்கி விடுவான். அவன் கண் முன்னால் என்னை நீ பலவந்தமாக அழைத்து வந்திருந்தால், ஜனஸ்தானத்திலேயே உன்னையும் மீளாத் தூக்கத்தில் ஆழ்த்தியிருப்பான். நீ சொல்லும் இதோ இந்த ராக்ஷஸர்கள், கோர ரூபமும், எல்லையில்லா பலமும் உடையவர்கள் என்றாயே, ராகவனுக்கு முன்னால் இவர்கள் பல்லைப் பிடுங்கிய பாம்பைப் போல ஆவார்கள். கருடனைக் கண்ட பாம்பு போல நடுங்குவார்கள். அவனுடைய வில்லிலிருந்து புறப்படும் அம்புகள், பொன்னிறமான அலங்கார வேலைப் பாடுகள் கொண்டவை. இவர்கள் சரீரத்தை துளைத்து விடும். வேகமாக அடித்துக் கொண்டு வரும் அலைகள், கடல் கரையில் செயலற்றுப் போவது போல ஆவார்கள். அசுரர்களும், சுரர்களும் உன்னை வதைக்க முடியாது என்று வரம் பெற்றிருக்கிறாய் ராவணா, இந்த ராமனிடம் வைரத்தை வளர்த்துக் கொண்டு இப்பொழுது நீ உயிர் வாழ்வதே அரிது என்றாகி விட்டது. அல்ப காலமே ஜீவித்திருக்கப் போகும் உனக்கு ராமன் தான் காலனாக வரப் போகிறான். யாகஸ்தம்பத்தில் கட்டப் பட்ட பசுவைப் போல உன் வாழ் நாள் முடியும் நேரம் நெருங்கி விட்டது. உன்னை கோபத்துடன் ராமன் பார்த்தாலே போதும், ருத்ரன் கண் பார்வையில் மன்மதன் சாம்பலாக ஆனது போல ஆவாய். சந்திரனை பூமியில் தள்ளுவானோ, சமுத்திரத்தை வற்றச் செய்வானோ, எதையோ செய்து சீதையை விடுவித்து விடுவான். நீ தான் உன் வாழ் நாளையும் தீர்த்துக் கொண்டு விட்டாய். லக்ஷ்மீகரமான செல்வத்தையும் அழித்துக் கொண்டு விட்டாய். உன் இந்திரியங்கள் வீணாகும். உன் செல்வாக்கை இழப்பாய். உன் காரணமாக லங்கா வைதவ்யம் அடையப் போகிறாளா? (வைதவ்யம் அடைந்து லங்கா ஜீவித்திருக்க மாட்டாள் என்பது ஒரு உரை, உன் காரணமாக நாதன் இன்றி வைதவ்யம் அடைவாள் என்பதும் ஒரு உரை) நீ செய்துள்ள இந்த பாப காரியம் நல்லதுக்கு இல்லை. எந்த ஒரு காரியம் நீ செய்திருக்கிறாயோ, தனியாக இருந்த என்னை கணவன் அருகிலிருந்து பிரித்து அழைத்து வந்திருக்கிறாயே, அது நல்லதுக்கு இல்லை. என் கணவரின் தம்பி, என் கொழுந்தன், தேவர்களுக்கு சமமான தேஜஸ் உடையவன். பயம் என்பதே அறியாமல் சூன்யமான தண்டகாவனத்தில் வசிக்கிறான். அவன் உன் கர்வத்தை, வீர்யத்தை உடல் பலத்தால் வந்த அகம்பாவத்தை, உன் உடலிலிருந்து அகற்றிவிடுவான். யுத்தத்தில் சரங்களை மழையாக பொழியும் பொழுது, இவை உன்னை விட்டுத் தானே விலகி விடும். காலனின் வசமான மனிதர்கள், தங்களுடைய அழிவைத் தானே தேடிக்கொள்ளும் விதமாக விபரீதமான காரியங்களில் பிரவேசிக்கிறார்கள். என்னை நிர்பந்தித்து அழைத்து வந்து உன் அழிவு நெருங்கி விட்டதை நீயே உணர்ந்து கொள். உனக்கு மட்டுமல்ல, உன்னைச் சார்ந்த ராக்ஷஸர்கள், அந்த:புரம் எல்லாமே தங்கள் முடிவை நெருங்கி விட்டதாக தெரிந்து கொள். யாகத்தின் மத்தியில் வைக்கப் பட்டு பிராம்மணர்கள் வேத மந்திரம் சொல்லி ப்ராண ப்ரதிஷ்டை முதலியவை செய்த, பாவனமான இடத்தை ஒரு சண்டாளன் வந்து அவமரியாதை செய்வது முடியாது. அதே போல தர்மமே கொள்கையாக உடைய ராமனின் தர்ம பத்தினி. பதி விரதை நான். நீ என்னை தொடக் கூட முடியாது. ராக்ஷஸாதமா, நீ பாபி. ராஜ ஹம்ஸத்துடன் தாமரைக் காட்டில் எப்பொழுதும் விளையாடி மகிழும் பெண் ஹம்ஸம், வான் கோழியை ஏன் ஏறிட்டுப் பார்க்கப் போகிறது? இந்த சரீரம் ஒரு பொருட்டே இல்லை. இதைக் கட்டுவாயோ, அல்லது சாப்பிடுவாயோ, இந்த சரீரத்தை பாதுகாத்து எனக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை. இந்த சரீரமோ, என் வாழ் நாளோ இரண்டுமே எனக்குத் தேவையில்லை. பூமியில் நான் நிந்தைக்கு ஆளாகி வாழவும் விரும்பவில்லை. கோபத்துடன் கடுமையாக பேசிய வைதேஹி, இதற்கு மேல் ராவணனிடம் எதுவும் பேசவில்லை. சீதையின் பதிலைக் கேட்டு அவள் வார்த்தைகளின் கடுமை மயிர் கூச்சலைத் தோற்றுவிக்க, ராவணன் எல்லையில்லா ஆத்திரம் அடைந்தான். பயமுறுத்தலானான். மைதிலி, கேள். பன்னிரண்டு மாதங்கள் அவகாசம் தருகிறேன். இந்த கால கெடுவிற்குள் நீயாக என் வசம் ஆகாவிடில், அழகாக சிரிப்பவளே, என் சமையல்காரர் காலை ஆகாரத்திற்கு உன்னை கண்ட துண்டமாக வெட்டி விடுவார். ஜாக்கிரதை என்றான். அதே கோபத்துடன் ராக்ஷஸிகளைப் பார்த்து கட்டளையிட்டான். மாமிசத்தையும், ரத்தத்தையும் விரும்பி சாப்பிடும் ராக்ஷஸிகளே, இந்த பெண்ணுக்கு நல்ல விதமாக புத்தி சொல்லி என் வசமாகச் செய்யுங்கள். இவளுடைய கர்வத்தை அடக்குங்கள். ராவணன் சொன்னவுடனேயே, கோரமான அந்த ராக்ஷஸிகளின் கூட்டம், அவனை வணங்கி, மைதிலியை சுற்றிக் கொண்டனர். இவர்களை நியமித்து விட்டு, பூமி அதிர நடந்து ராவணன், அசோக வனத்தின் மத்தியில் இவளை கொண்டு செல்லுங்கள். அங்கு இவளை ஜாக்கிரதையாக காப்பாற்றி வாருங்கள். எப்பொழுதும் இவளைச் சுற்றி காவல் இருங்கள். காட்டு யானைக் குட்டியை மெதுவாக வழிக்கு கொண்டு வருவது போல. சில சமயம் பயமுறுத்தி, சில சமயம் நயமாக பேசி இவளை நம் பக்கம் வரும்படி செய்யுங்கள் என்றான். கட்டளையை சிரமேற்கொண்டு, ராக்ஷஸிகள் சீதையை அழைத்துக் கொண்டு அசோக வனம் சென்றனர். எந்த பருவமானாலும், பலவிதமான பூக்களும், பழங்களும் நிறைந்து விளங்கும் மரங்கள் உடைய, யானைகள் எப்பொழுதும் மதம் பிடித்து திரியும் யானைக் கூட்டங்களும் உள்ள அந்த அசோக வனத்தின் அழகை ரசிக்கும் நிலையில் சீதை இல்லை. ராக்ஷஸிகள் நாலா புறமும் சூழ்ந்து நிற்க, புலிக் கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்ட மான் குட்டி போல இருந்தாள். பெரும் சோகத்தில் ஆழ்ந்த ஜனகன் மகளான மைதிலி, கயிற்றால் கட்டப் பட்ட பெண் மான் போல, தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாமல், தவித்தாள். விரூபமான கண்களையுடைய ராக்ஷஸிகளால் பெரிதும் பயமுறுத்தப் பட்ட மைதிலிக்கு அமைதி கிடைக்கவேயில்லை. எப்பொழுதும் தன் கணவனையே நினைத்து, தான் தெய்வமாக நினைக்கும் ராமனின் தியானத்திலேயே, வேறு எது பற்றிய நினைவும் இல்லாதவளாக, தன் சோகமும் பயமுமே துணையாக, அந்த அசோக வனத்தில் இருந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் வத்ஸராவதி4கரணம் என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 57 (253) ராம ப்ரத்யாக3மனம் (ராமன் திரும்பி வருதல்)
மிருக ரூபத்தில் வந்தது ராக்ஷஸன், விருப்பம் போல ரூபம் எடுக்க வல்ல மாரீசன் தான் என்பது தெரிந்தவுடன், அவனை வீழ்த்தி விட்டு, அவசரமாக தான் வந்த வழியே திரும்பினான் ராமன். வேகமாக மைதிலியைக் காண ஓடிவரும் அவனை, பின்னாலிருந்து கோவேறு கழுதைகள் (க2ர) கோரமாக கத்தியபடி தொடர்ந்தன. அந்த குரலின் பொருளையறிந்து, பயங்கரமான கெடுதல் வருவதை அறிவிக்கும் நிமித்தம் அது என்பதால், மனம் சஞ்சலமாக, வைதேஹி எப்படி இருக்கிறாளோ என்று கவலை கொண்டான். அது அசுபமான நிமித்தம், வரப் போகும் கெடுதலை சொல்வதாகும் என்று நினைத்தபடி வேகமாக நடந்தான். மனம் வைதேஹியை நினைத்தது. சௌக்யமாக இருக்கிறாளோ இல்லையோ, ராக்ஷஸர்கள் சாப்பிட்டு விட்டார்களா? இந்த மாரீசன் என் குரலில் அலறியது ஏன்? இதைக் கேட்டு லக்ஷ்மணன் என்ன நினைத்தானோ ? சௌமித்ரி இந்தக் குரலைக் கேட்டிருந்தால், மைதிலியை அங்கேயே விட்டு, அல்லது அவளே அனுப்பியோ என்னை தேடிக் கொண்டு வரக் கூடும். ராக்ஷஸர்கள் சேர்ந்து சீதையின் வதத்தை தான் விரும்பினார்களா? பொன் மானாக வந்து ஏமாற்றி, என்னை ஆசிரமத்திலிருந்து இவ்வளவு தூரம் இழுத்து வந்து மாரீசன் அம்பு துளைக்கப் பட்டு மாண்டான். ஹா லக்ஷ்மணா, நான் செத்தேன் என்று என் குரலில் கத்தினான். அவர்கள் இருவரும் க்ஷேமமாக இருக்கிறார்களோ இல்லையோ. நான் இல்லாத வனத்தில் என்ன நடக்கிறதோ, இந்த ஜனஸ்தானம் காரணமாகத் தான் ராக்ஷஸர்களுடன் விரோதமே வந்தது. இங்கு தெரியும் நிமித்தங்கள் பலவும் கோரமானவை. ஏதோ கெடுதல் நேரப் போவதைத் தான் தெரிவிக்கின்றன. இப்படி யோசித்துக் கொண்டே வேகமாக நடந்த ராமன், திரும்பவும் கோ3மாயு கத்தவும் (ஒரு வகை கழுதை) அதைக் கேட்டு மேலும் கவலை கொண்டான். மிருக ரூபம் எடுத்து தன்னை ஏமாற்றி அந்த இடத்தை விட்டு விலகச் செய்த ராக்ஷஸனின் செயலுக்குப் பின் ஏதோ பயங்கரமாக நடக்கப் போகிறது என்று சந்தேகம் வலுப் பெற்றது. ஜனஸ்தானத்தை நோக்கி ராமன் வேகமாக நடந்தான். ஏற்கனவே கலங்கியிருந்த ராமனை பக்ஷிகளும் அலறுவது போல கூச்சலிட்டுக் கொண்டு இடது புறமாக வந்தன. இந்த நிமித்தங்கள் மிகவும் பயங்கரமாக ஏதோ நடந்திருப்பதைத் தான் சொல்லுகின்றன என்று தெரிந்து கொண்ட ராமன், எட்டி நடை போட்டு வேகமாக ஆஸ்ரமத்தை நோக்கிச் சென்றான். சீதையையும், லக்ஷ்மணனையும் நினைத்த படியே, ஓடி வந்து ஜனஸ்தானம் வந்து சேர்ந்தான். அப்பொழுது முகம் வெளிறி, ஓடி வரும் லக்ஷ்மணனைக் கண்டான். சற்று தூரத்திலேயே லக்ஷ்மணனைக் கண்டு வருந்தியவனாக, ராமனும், அதைவிட அதிகமாக வருத்தத்தை முகத்தில் தேக்கியபடி லக்ஷ்மணனும், சந்தித்தனர். ஓடி வந்த ராமனும், பதறிக் கொண்டு வந்த லக்ஷ்மணனும் ஒருவரையொருவர் சந்தித்தவுடன், சகோதரனைப் பார்த்து, ராக்ஷஸர்கள் நடமாடும் இடத்தில் சீதையை தனியே விட்டு வந்து விட்டாயே, என்று சொல்லியபடியே ராமர், அவனது இடது கரத்தை பிடித்தபடி நிற்காமல் தொடர்ந்து ஓடலானார். மிகவும் துக்கத்துடன், ஆனால் மதுரமாக லக்ஷ்மணனிடம் சொன்னார். லக்ஷ்மணா, அஹோ கஷ்டம். அவளை தனியே விட்டு வந்து விட்டாயே, சௌக்யமாக இருப்பாளா? எனக்கு சந்தேகமே இல்லை. வீரனே, ஜனகர் மகள் நிச்சயம் காணாமல் போயிருப்பாள் அல்லது, சாப்பிடப் பட்டிருப்பாள். காட்டில் திரியும் ராக்ஷஸர்கள் அவளை சும்மா விட மாட்டார்கள். இது வரை ஏகமாக அசுபமான நிமித்தங்களையே கண்டு வருகிறேன். உயிரோடு சீதையைக் காண்போமா, லக்ஷ்மணா, ஜனகர் மகளை அருகில் சென்று காண்போமா. கோ3மாயு பயங்கரமாக அலறியது. மிருகங்கள், பக்ஷிகள் எல்லாமே ஒரே திசையில் நோக்கி கத்துகின்றன. ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப் போகிறது என்று தெரியப் படுத்துகின்றன. ராஜ குமாரி நலமாக இருப்பாளா, லக்ஷ்மணா , வா போகலாம். இந்த ராக்ஷஸனின் வேலை. மிருக உருவத்துடன் என்னை ஆசை காட்டி, இவ்வளவு தூரம் இழுத்து வந்து எப்படியோ சிரமப் பட்டு அதைக் கொன்றால், மிருகத்தின் இடத்தில் அந்த ராக்ஷஸன் இறக்கும் தறுவாயில் இருந்தான். என் மனம் சஞ்சலப் படுகிறது. இடது கண் துடிக்கிறது. லக்ஷ்மணா, சந்தேகமே இல்லை. சீதையை யாரோ தூக்கிச் சென்று விட்டார்களோ, இறந்தே போய் விட்டாளோ. இறக்கும் தறுவாயில் இருக்கிறாளோ. என் உள் மனதில் ஏதோ விபரீதம் என்றே தோன்றுகிறது என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராம ப்ரத்யாக3மனம்
என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 58 (254) அனிமித்த தரிசனம் (தீய சகுனங்களையே காணுதல்)
லக்ஷ்மணன் எதுவும் பேசாமல், தீனமாக இருப்பதையும், எதிரில் வைதேஹி வராததையும் வைத்து, ராமர் பதட்டமடைந்தார். லக்ஷ்மணா, தண்டகாரன்யம் போகிறேன் என்று சொன்ன உடனேயே என்னைத் தொடர்ந்து வந்தாளே, அந்த வைதேஹி எங்கே? அவளை விட்டு விட்டு நீ இங்கே வந்திருக்கிறாயே. ராஜ்யத்திலிருந்து துரத்தப் பட்டு, தீனமாக தண்டகாரன்யம் வந்த என்னை, எனக்கு சகாயமாக வந்தவள் எங்கே? கொடியிடையாள் எங்கே? எவளைப் பிரிந்து நான் முஹுர்த்தம் கூட உயிர் தரித்து இருக்க மாட்டேனோ, அந்த என் உயிருக்குயிரான சீதை எங்கே? தேவ குலத்து பெண்களுக்கு இணையான என் சீதை எங்கே? அவள் இல்லாமல் எனக்கு, தேவராஜன் என்றோ, பூமியில் பெரிய அரசன் என்றோ பதவிகள் தேவையில்லை. அப்படிப் பட்ட ஜனகன் மகள் எங்கே? என் உயிருக்குயிரான வைதேஹி இன்னமும் உயிருடன் இருக்கிறாளா? இல்லையா, காட்டிற்கு நாடு கடத்தப் பட்டு வந்தது கூட பயனில்லாமல் போகுமா? சௌமித்ரே, சீதை காரணமாக நானும் இறந்து, நீ தனியாக அயோத்தி திரும்பிச் செல். கைகேயி திருப்தியாக ஆவாள். அவள் மன விருப்பம் நிறைவேறியவளாக மகிழ்ச்சியடைவாள். மகனையும், ராஜ்யத்தையும் இழந்து தபஸ்வினியான என் தாய் கௌசல்யா, கைகேயிக்கு ஏவின வேலை செய்யும் பரிசாரிகையாக நிற்கப் போகிறாளா? வைதேஹி உயிருடன் இருந்தால் நான் ஆசிரமம் வருகிறேன். (சுவ்ருதா, விருத்தா யதி- சுவ்ருத்தா, நன்னடத்தையுள்ளவள், வ்ருத்தா, போய் விட்டாள், யதி, என்றால்) அவள் உயிருடன் இல்லையெனில், லக்ஷ்மணா, நானும் உயிரை விடுவேன். ஆசிரமம் வந்தால், சிரித்தபடி, சீதை எதிர்ப்படவில்லையெனில், லக்ஷ்மணா, நான் உயிரை விடுவேன். சொல்லு, வைதேஹி உயிருடன் இருக்கிறாளா, இல்லையா? ராக்ஷஸர்கள் தின்று தீர்த்து விட்டார்களா? நீ அது தான் ஓடி வந்தாயா? சுகுமாரி, பா3லா, எதிலும் துக்கத்தைக் காண மாட்டாள். என் பிரிவினால் வைதேஹி என்ன விதமாக மனத் துயர் அடைந்தாளோ? அந்த ராக்ஷஸன் என் குரலில் லக்ஷ்மணா என்று பெருங்குரலில் கத்திய பொழுது நீயே பயந்து விட்டாய். என் குரல் போலவே இருந்த அந்த ஓலத்தைக் கேட்டு சீதையும் பயந்து என்னைத் தேட உன்னை அனுப்பியிருப்பாள். என்னை சீக்கிரமாக பார்க்கும் ஆவலோடு நீயும் போ என்று அனுப்பியிருக்கிறாள். எப்படி பார்த்தாலும் சீதையை தனியாக தவிக்க விட்டு வந்தது சரியல்ல. கஷ்டம், ராக்ஷஸர்களின் கொடிய வஞ்சனை. பழி வாங்க அவர்களுக்கு இடம் கொடுத்தாற் போல ஆயிற்று. க2ரனை வதம் செய்ததால், ராக்ஷஸர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சீதையை அடித்து தின்றிருப்பார்கள். சந்தேகமே இல்லை. அஹோ, இப்படி ஒரு கஷ்டமா? நான் என்ன செய்வேன்? இப்படி சோகத்தில் மூழ்கி செய்வதறியாது நிற்கும் படியான நிலையும் வந்ததே? நமக்கு இப்படி ஒரு சோதனை வர வேண்டுமா? இவ்வாறு சீதையை நினைத்து வருந்திக் கொண்டே, ராகவன் ஜனஸ்தானம் வந்து சேர்ந்தார். வேகமாக லக்ஷ்மணனும் உடன் வந்தான். துயரமே உருவாக, பசியாலும், தாகத்தாலும் ஓடி வந்த சிரமத்தாலும், பெருமூச்சு விட்டுக் கொண்டு, முகம் வாடி, முகம் வெளிறிக் கிடக்கும் சகோதரனை எதுவும் நிந்திக்கவும் தோன்றாமல் (ஏன் தனியாக விட்டு வந்தாய் என்று) தங்கள் இருப்பிடத்தை வந்தடைந்தவர்கள், அது சூன்யமாக இருக்கக் கண்டார்கள். தங்கள் ஆசிரமத்தில் நுழைந்து, உள்ளே தாங்கள் நடமாடும் இடங்களில் அவளைக் காணாமல், வாசஸ்தலம் அழியாமல் இருக்கிறது என்று ஒரு புறம் நிம்மதியும், சீதை எங்கே என்ற கவலையும் ஒன்றாக அவர்களுக்கு ஏற்பட்டது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் அனிமித்த தரிசனம் என்ற ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 59 (255) லக்ஷ்மணாக3மன விக3ர்ஹணம்
(லக்ஷ்மணன் ஓடி வந்ததை குற்றமாகச் சொல்லுதல்)
ஆசிரமத்தின் உள்ளூம் புறமும் தேடிப் பார்த்த ரகு நந்தனன், சௌமித்திரியைப் பார்த்து மிகுந்த துக்கத்துடன் இப்படி கேட்டான். எஎன்ன காரணம்? சௌமித்ரே, எதற்காக சீதையை தனியே விட்டு நீ என்னைத் தேட வந்தாய்? உன்னை நம்பி, உன் பொறுப்பில் தானே விட்டுச் சென்றேன். நீ ஓடி வருவதைக் கண்டதுமே, என் மனதில் ஏதோ பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று பட்டது. அது உண்மையாக ஆகி விட்டது. என் இடது கண்ணும் புஜமும் ஹ்ருதயமும் துடிக்கிறது. சீதை இல்லாமல் நீ தனியே வருவதை வெகு தூரத்திலிருந்து பார்த்த பொழுதே எனக்கு திக்கென்றிருந்தது. ராமன் மேலும் மேலும் பேசப் பேச, லக்ஷ்மணன், துயரத்துடன், ஏற்கனவே கவலையுடன் இருக்கும் ராமனிடம் பதில் சொன்னான். நானாக வரவில்லை. அவளை விட்டு, அவள் தான் உக்ரமாக பேசி என்னை விரட்டினாள். உங்களைத் தேட அனுப்பினாள். நீங்கள் தான் ஹா லக்ஷ்மணா, ஹா சீதே, என்று அலறினீர்கள். காப்பாற்று என்று கத்தினீர்கள். அதைக் கேட்டு மைதிலி பித்து பிடித்தவள் போல் ஆகி விட்டாள். துயரம் நிரம்பிய அந்த ஓலம் காதில் விழுந்தவுடன், மைதிலி பொறுக்க மாட்டாமல், அதை விட துக்கத்துடன் காப்பாற்று என்று அலறியதைக் கேட்டு துடி துடித்துப் போனாள். பயத்துடன் அழுது கொண்டே, உங்கள் மேல் உள்ள ஸ்னேகத்தால் என்னை போ, போ என்று விரட்டினாள். திரும்பத் திரும்ப நீ போய் பார் என்று என்னை விரட்டிய போதும் நான் அசையவில்லை. உங்கள் மேல் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக பேசினேன். ராமனை பயமுறுத்தும் ராக்ஷஸன் எவன் இருக்கிறான்? பயப்படாதே, இது வேறு யாரோ அலறும் சத்தம் என்று சொன்னேன். திட்டினாள். நீசமாக பேசினாள். உங்களிடம் எப்படிச் சொல்வேன். மூன்று உலகுகளையும் காப்பாற்றக் கூடியவன், த்ராஹி (காப்பாற்று) என்று கேட்பானா? சோப4னே, ஏதோ காரணத்திற்காக என்ன நினைத்தோ இந்த ராக்ஷஸன் தான் இந்த குரலை எடுத்துக் கொண்டு த்ராஹி, த்ராஹி என்று சொல்கிறான். என்னை வரவழைக்கக் கூட இருக்கலாம். கவலைப் படாதே, பொறு என்று சொன்னேன். லக்ஷ்மணா, என்னை காப்பாற்று என்ற குரல் அபஸ்வரமாக கேட்கிறது. அதனால் கவலையை விடு. சாதாரண பெண்கள் போல நீ கவலைப் படலாமா? மூன்று உலகிலும் ராமனை எதிர்த்து நிற்கக் கூடிய மனிதன் இதுவரை தோன்றியதுமில்லை, இனித் தோன்றப் போவதும் இல்லை. யுத்தத்தில் ராமனாவது, தோற்பதாவது. இந்திரனே, தன் பரிவாரங்களோடு தேவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு வந்தால் கூட ராமனை ஜயிக்க முடியாது. இவ்வளவு சொல்லியும் வைதேஹி, துக்கத்தாலும், மோகத்தாலும் தன்னை மறந்தவளாக எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கண்களில் நீர் பெருக என்னிடம் பல கொடூரமான வார்த்தைகளைச் சொன்னாள். பாபி, என்னிடம் உனக்கு ஏதோ கெட்ட எண்ணம் இருக்கிறது. சகோதரன் இறந்து விட்டால் என்னை அடையலாம் என்று நினைக்கிறாயா? அது நடக்காது. அல்லது பரதன் தன் ஒற்றன் போல உன்னைத் தொடர்ந்து அனுப்பி இருக்கிறானா? இவ்வளவு அலறியும் ராமனை காப்பாற்ற நீ கிளம்ப மறுக்கிறாய். கூடவே மறைந்து இருந்து நல்லவன் போல நடிக்கும் சத்ரு நீ. எனக்காகத் தான் காட்டில் அண்ணனைத் தொடர்ந்து வந்தாயோ. யாரோ உன்னை ஏவியிருக்கிறார்கள். அதனால் தான் இப்பொழுது ராமனைக் காப்பாற்றத் தயங்குகிறாய். இவ்வாறு வைதேஹி சொல்லவும், பரபரப்புடன், சிவந்த கண்களுடன் கோபத்தில் என் உதடுகள் துடிக்க, நான் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தேன். இப்படிச் சொல்லிய சௌமித்திரியைப் பார்த்து துக்கத்தில் தன் நிலை மறந்தவராக, ராமர் திரும்பவும் சொன்னார். நீ செய்தது தவறு லக்ஷ்மணா, அவளை விட்டு நீ ஓடி வந்தது தவறு தான். ராக்ஷஸர்களை நான் எப்படியும் சமாளிப்பேன் என்று தெரிந்தும், மைதிலி ஏதோ கோபமாக சொன்னாள் என்பதற்காக அவளை தனியே விட்டு விலகி வந்தேன் என்று சொல்கிறாயே. இது எனக்கு சரியாகப் படவில்லை. கோபத்தில் அவள் பிதற்றினால், நீ அதற்கு மேல் கோபம் கொண்டு, யோசிக்காமல் என் கட்டளையை நிறைவேற்றாமல் தவறு செய்திருக்கிறாய். இது எனக்கு சந்தோஷம் தருவதாகவோ, சம்மதமாகவோ இல்லை. இதோ பார், இந்த ராக்ஷஸன் விழுந்து கிடக்கிறான். இவன் தான் பொய்யாக, மான் ரூபம் எடுத்து ஆசிரம வாயிலில் சஞ்சரித்திருக்கிறான். என்னை அந்த இடத்தை விட்டு விலக்கவே இப்படி செய்து ஏமாற்றியிருக்கிறான். வில்லை இழுத்து, நாணை பூட்டி, சலீலம் என்ற பாணத்தால் சுலபமாக நான் அவனை அடித்தேன். மிருக ரூபத்தை விட்டு, வித்யாசமான குரலில் அலறிக் கொண்டு விழுந்தான். இடுப்பில் ஆபரணங்களோடு ராக்ஷஸனாக ஆகி விட்டான். என் அம்பு பட்டு துளைத்த பின் தான் வெகு தூரம் கேட்கும் விதமாக என் குரலில் அலறி ஓலமிட்டான். இதைக் கேட்டு நீ ஓடி வந்து விட்டாய், தனியாக சீதையை விட்டு விட்டு.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் லக்ஷ்மணாக3மன விக3ர்ஹணம் என்ற ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 60 (256) ராமோன்மாத3: (ராமன் பித்து பிடித்தவன் போல் ஆதல்)
ராமனின் இடது கண் துடித்துக் கொண்டேயிருந்தது. என்ன தடுத்தும் நிற்பதாக இல்லை. இடது கண்ணின் பாதி துடித்துக் கொண்டேயிருந்தது அவனை மிகவும் வாட்டியது. உடல் பூராவும் வியர்த்து ஆறாக பெருகியது. திரும்பத் திரும்ப அசுபமான நிமித்தங்களே வரக் கண்டு சீதை க்ஷேமமாக இருப்பாளா என்ற சந்தேகம் பெருமளவில் மனதில் வியாபித்தது. இருவரும் வேகமாக நடந்து அவளைக் காணும் ஆவலோடு தங்கள் இருப்பிடம் சென்றடைந்தனர். அது சூன்யமாக இருக்கக் கண்டு துணுக்குற்றார். துக்கம் தொண்டையை அடைத்தது. ஆங்காங்கு குடிசைகளைப் பார்த்துக் கொண்டே சீதையைத் தேடியவாறு நடந்தனர். பர்ணசாலைக்குள்ளும் இல்லை, பனிக் காலத்து தாமரை போல, லக்ஷ்மி விலகிய பர்ணசாலை சூன்யமாக தெரிந்தது. மரங்கள் அழுவது போல, பூக்கள் வாடி, அமைதியாக இருந்த பக்ஷிகளுடன், ஓசையின்றி நடமாடிய மிருகங்களுமாக அசாதாரண அமைதி நிலவியது. லக்ஷ்மியே அகன்ற பிறகு நமக்கு என்ன வேலை என்பது போல வனதேவதைகள் காட்டை விட்டுச் சென்று விட்டது போல காட்சியளித்தது வனம். அஜினம் எனும் ஆசனமும் குசத்தால் ஆன ஆசனமும் இறைந்து கிடந்தது. பாய் விரிக்கப் பட்டிருந்தது. சூன்யமான இருப்பிடத்தைக் கண்டு புலம்ப ஆரம்பித்தார். உள்ளும் புறமும் திரும்பத் திரும்பத் தேடியபின், யாரோ தூக்கிச் சென்று விட்டார்களா, உயிர் பிரிந்திருக்குமோ, தொலைந்து போனாளோ, யாராவது சாப்பிட்டு தீர்த்திருப்பார்களோ, ஒளிந்து கொண்டாளோ, அல்லது காட்டிற்குள் தானும் என்னைத் தேட கிளம்பி விட்டாளோ, பூவோ, பழமோ சேகரித்துக் கொண்டு வரச் சென்றிருப்பாளோ, தாமரை மலரைப் பறிக்க அல்லது தண்ணீர் கொண்டு வர நதிக் கரைக்குச் சென்றிருப்பாளோ? வனம் முழுவதும் சல்லடையாகத் தேடியும் பிரியமான மனைவியைக் காணவில்லை. கண் சிவந்து, உன்மத்தம் பிடித்தவன் போலானார். மரத்திற்கு மரம் ஓடிப் போய் தேடினார். நதிக்கு நதி ஓடிப் பார்த்தார். மலை குகைகளில், ஒரு இடம் விடாமல் தேடியும் சீதையைக் காணாமல் ராமர் துயரக் கடலில் மூழ்கினார். கதம்ப புஷ்பத்தை விரும்பி உன்னிடம் வருவாளே, கதம்ப மரமே நீ கண்டாயா? பில்வ மரமே, மஞ்சள் நிற பட்டாடையுடுத்து, இளம் தளிர்களை பறிக்க வருவாளே, என் பிரிய மனைவி அவள், பில்வம் போன்ற ஸ்தனங்களையுடையவள், அவளை நீ கண்டாயா? அர்ஜுன மரமே நீதான் சொல். அர்ஜுன மரத்தை அவளுக்கு பிடிக்கும். ஜனகர் மகள் உயிருடன் இருக்கிறாளா, இல்லையா அதையாவது சொல். அவள் பயந்த சுபாவம் உடையவள். ககுப மரமே, நீ மைதிலியை நன்றாக அறிவாய். நாங்கள் இருவருமாக உன் அடியில் நிறைய பேசியிருக்கிறோம். அவளை நீ நன்கு அறிவாயே. இளம் தளிர்களும், புஷ்பங்களுமாக சோபையுடன் விளங்குவாயே, வண்டுகள் மொய்க்கும் மரங்களில் சிறந்தவனே, நீ பார்த்தாயா? திலக மரமே, நீ கண்டாயா? சோகத்தை தீர்க்கும் அசோக மரமே, என்னையும் என் துயரை நீக்கி உன் பெயருடையவனாக ஆக்குவாயா? சீக்கிரம் சொல், என் பிரியை எங்கே. தாள மரமே நீ தான் சொல்லேன். உன் பழங்களைப் பார்த்தால் அவள் ஸ்தனம் நினைவு வருகிறது. என்னிடத்தில் கருணையிருந்தால் அழகிய ஸ்தனங்கள் உடைய என் மனைவியைக் கண்டு சொல்லேன். ஜம்பூ3 நீதான் பார்த்தாயா? என் மனைவியை பார்த்திருந்தால் யோசிக்காமல் சொல்லு. கர்ணிகார மரமே புஷ்பங்களுடன் நிறைந்து அழகாக விளங்குகிறாயே, என் சாதுவான மனைவியை எங்காவது கண்டாயா? சூத, வேம்பு, பலா, மாகா4 சால, குரவான், த4வான், மாதுளம், அஸனான் என்ற மரத்தடிகளிலும் சென்று புலம்பியவாறு ராமன் சீதையைத் தேடினான். ப3குள மரங்களையும், புன்னக, சம்பக, கேதகி புதர்களையும் விசாரித்துக் கொண்டு பித்து பிடித்தவன்போல அலைந்தான். மிருக3மே (மான் குட்டியே) உன் சாயலில் கண்களையுடையவள், உன் கூட்டத்தினரை அடையாளம் கண்டு கொள்வது போல அவளைக் கண்டு பிடித்துச் சொல்லேன். யானையே, நீயும் தான் பார்த்தாயானால், எனக்குச் சொல்லு. அவள் கால்கள் உன் தும்பிக்கை போல இருக்கும். நீ அவளைப் பார்த்திருக்கிறாய். உனக்குத் தெரியுமே, எங்காவது தென்பட்டால் சொல்லு. சந்திரன் போன்ற முகத்தையுடைய என் பத்னியை, புலியே, நீ கண்டாயா? பயப்படாமல் சொல்லு. எங்கே வெகு தூரம் போய் விட்டாய், சீதே, எனக்கு பிரியமானவள் நீ, என்னை துன்புறுத்தலாமா? மரங்களில் மறைந்து கொண்டு ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய். நில், நில், என்னிடம் கருணை கொள். விளையாட்டாக பேசாமல் இருக்கிறாயா? போதும் விளையாட்டு. வெளியில் வா. உன் உடையை வைத்தே உன்னை கண்டு கொள்வேன். வெகு தூரம் ஓடாதே. ஆ, இங்கு நிச்சயம் இல்லை. இருந்தால், என்னைக் காணத் துடித்தவள், இவ்வளவு நேரம் அலட்சியமாக இருக்க மாட்டாள். ராக்ஷஸர்கள் நிச்சயம் அவளைத் தின்று தீர்த்து விட்டார்கள். என்னை விட்டுப் பிரிந்தவளை அடித்து பங்கு போட்டுக் கொண்டு சாப்பிட்டு இருப்பார்கள். அழகிய குண்டலங்களோடு கூடிய முகமும், எடுப்பான நாசியும், பல் வரிசையும், இவர்கள் கையில் அகப்பட்டு சின்னா பின்னமாகி இருக்கும். சம்ப3கம் போன்ற கழுத்தை பிடித்து நெருக்கியிருப்பார்களோ. கோமளமானவள், அழ, அழ, சுபமான கழுத்தை நெரித்து சாப்பிட்டு இருப்பார்களோ? கையில் உள்ள ஆபரணங்களோடு இளம் துளிர் போன்ற மெதுவான கைகளோடு, புஜத்தோடு நடுங்கிக்கொண்டு இருந்தபடி கடித்து தின்றிருப்பார்கள். அந்த ராக்ஷஸர்களுக்கு தின்பண்டமாக ஆக்கத்தான் நான் உன்னை விட்டு விலகிச் சென்றேனோ. இவ்வளவு ப3ந்து4க்கள், சுற்றத்தார் உள்ள உன்னை அனாதையாக விட்டுச் சென்று ராக்ஷஸர்களுக்கு கொடுத்து விட்டேனா? ஹா லக்ஷ்மணா, உன் கண்ணுக்கு எங்காவது தென் படுகிறாளா? ஹா சீதே, ஹா பிரியே, எங்கு போனாய்? என்று திரும்பத் திரும்ப புலம்பிக் கொண்டு ராமன், வனத்தில் இங்கும் அங்குமாக ஓடி ஓடி களைத்தான். சில சமயம் வேகமாக ஓடிச் சென்று பார்த்தான். சில சமயம் பலமாக கத்தி அழைத்து, வலுவிழந்தான். பித்து பிடித்தவன் போல் ஆனான். காந்தாவான மனைவியைத் தேடித் தேடித் திரிந்தான். காடுகளையும், நதிகளையும், மலை பிரதேசங்களையும், மரங்கள் அடர்ந்த கானனங்களையும், சுற்றிச் சுற்றி வந்தான். அந்த பெரிய வனம் முழுவதும் சல்லடை போட்டு சலித்தது போல தேடியும், மைதிலியைக் காணாமல், தன் நம்பிக்கையை இழந்தவனாக, திரும்பவும் முயற்சி செய்வோம் என்று கிளம்பினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராமோன்மாதோ என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 61 (257) சீதான்வேஷணம் (சீதையைத் தேடிச் செல்லுதல்)
ஆசிரம பதம் சூன்யமாகவும், ஆசனங்கள் கலைந்த நிலையில் தாறுமாறாக கிடப்பதையும், சீதை காணாமல் போய் இருப்பதையும் கண்டு புஜங்களை பிடித்துக் கொண்டு ஓவென்று அலறினான், ராமன். லக்ஷ்மணா, சீதை எங்கே? எந்த இடம் போய் இருப்பாள்? யார் தூக்கிச் சென்றிருப்பார்கள்? தின்று தீர்த்திருப்பார்களோ? யார்? மரங்களில் ஒளிந்து கொண்டு, என் தவிப்பைப் பார்த்து சிரிக்க காத்திருந்தால், சீதே, போதும் விளையாட்டு. சிரித்தது போதும், உடனே வா. என் எதிரில் வா. மான் குட்டிகளோடு விளையாடி பொழுது போக்குகிறாயோ, நான் தேடி வந்து விடுவேன் என்று நம்பிக்கையா? போதும், உன்னைத் தேடி அலைந்து கண்களில் நீர் மல்கத் தவிக்கிறேன், என்னுடன் விளையாடலாம் , வா. லக்ஷ்மணா, நான் எப்படி உயிர் வாழ்வேன்? சீதையின்றி வாழ்க்கையை நினைத்து பார்க்கவே முடியவில்லையே. உயிரை விட்டு தான் என்ன செய்வேன்? பரலோகம் போனால் அப்பா தசரதர் இருப்பார். பிரதிக்ஞை செய்து என் வசனத்தைக் காப்பாற்ற வனம் அனுப்பினேன், வன வாச காலத்தை முடிக்காமல் என்னெதிரில் எப்படி வந்தாய் என்று கேட்பார். பண்பு இல்லாதவன், காமத்தில் மூழ்கியவன், பொய் சொல்லுபவன் என்று எல்லோர் எதிரிலும் நிச்சயம் சொல்வார். தன் வசத்தில் இல்லாமல், சோகத்தில் மூழ்கி, என் மனோரதமும் நிறைவேறாமல் தவிக்கும் என்னை விட்டு, நேர்மையில்லாத மனிதனை விட்டு கீர்த்தி விலகிப் போவதைப் போல எங்கே போனாய்? அழகிய இடையுடைய அழகியே, என்னை விட்டுப் போகாதே. உன் பிரிவைத் தாங்க முடியவில்லை. உயிரே போனாலும் போய் விடும். என்று புலம்பிக் கொண்டே பல இடங்களிலும் தேடியும் சீதையைக் காண முடியவில்லை. பெரும் சேற்றில் அகப்பட்டுக் கொண்ட யானையைப் போல துயரத்தில் மூழ்கி பரிதவிக்கும் ராமனைப் பார்த்து, லக்ஷ்மணன், அவனை தேற்றும் பொருட்டு ஆறுதல் சொன்னான். ராமா, நல்ல புத்திசாலியான நீயே இப்படி வருந்தலாமா? நானும் வருகிறேன், இருவருமாக தேடுவோம், வா. மலை குகைகளில் தேடுவோம். இந்த மலையில் குகைகளும் நிறைய இருக்கின்றன. வா, ஏதோ ஒன்றில் நுழைந்து வெளி வரத் தெரியாமல் சீதை தவிக்கிறாளோ என்னவோ. வனங்களில் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறாளோ, மலர்ந்த புஷ்பங்களைப் பார்த்து தாமரை குளக் கரையில் நிற்கிறாளோ, நம்மை சற்று பயமுறுத்த ஒளிந்து கொண்டிருக்கிறாளோ, புல்லை சேகரிக்கவோ, ஸ்னானம் செய்யவோ நதிக்கரைக்கு போய் இருக்கிறாளோ, தேடலாம் வாருங்கள். எதுவானாலும் மனதை திடப் படுத்திக் கொள்ளுங்கள். சோகம் புத்தியை மழுங்கச் செய்யும். அதற்கு இடம் தரக் கூடாது. ஸ்னேகமாக, பரிவும் பாசமுமாக, லக்ஷ்மணன் இப்படிச் சொன்னதைக் கேட்டு, ராமன் சற்றுத் வெளிந்து லக்ஷ்மணனுடன் காடுகளில் தேடலானான். காடுகளையும், மலைகளையும், நதிகளையும், சிறிய குளங்களையும் பார்த்து தேடியவாறு நடந்தனர். தசரத குமாரர்கள், இவ்வாறு சீதையைக் காணாமல் அந்த மலையின் சாரல்களிலும், உச்சியில் சிகரத்திலும், குகைகளிலும் நுழைந்து பார்த்தனர். இந்த மலையில் சீதை இல்லை, லக்ஷ்மணா, எனவும், லக்ஷ்மணனும் மனம் உடைந்து போனான். தண்டகாரண்யம் முழுவதும் தேடி களைத்த ராமனைப் பார்த்து அவன் வருத்தம் அதிகரித்தது. ஒளி விடும் தேஜஸை உடைய வீரன், வாடி துவண்டு இருப்பதைக் கண்டு, கண்டிப்பாக உனக்கு சீதை கிடைப்பாள், நல்லறிவு உடையவனே, ஜனகன் மகள் சீதையை நீ நிச்சயம் திரும்ப பெறுவாய். எப்படி மகா பாஹுவான விஷ்ணு, பலியை கட்டி வைத்து பூமியை அடைந்தாரோ, அவ்வாறு நீயும் சீதையை அடைவாய். அன்பினால், சமாதானப் படுத்தும் லக்ஷ்மணனைப் பார்த்து, துயரத்தில் வார்த்தை எழும்பாமல், தீனமான குரலில் ராமன் லக்ஷ்மணா, வனம் முழுவதும் நன்றாக தேடி விட்டோம். தாமரை மலர்ந்து தண்ணீரை மூடியிருக்கும் குளக்கரைகளிலும் தேடினோம். இந்த மலையும், மலை குகையையும் நன்றாக அலசி பார்த்தாயிற்று. என் உயிருக்குயிரான வைதேஹியைக் காணவில்லை. இவ்வாறு புலம்பிய ராமன் சீதையை தூக்கிக் கொண்டு போய் இருப்பார்களோ என்ற எண்ணம் தலை தூக்க திகைத்தான். இந்த எண்ணம் மனதை வாட்ட, தீனமாக, முஹுர்த்த நேரம் செய்வதறியாது நின்றான். புத்தியும், நினைவும் மங்கியது. உடலில் எல்லா அங்கங்களும் விழுந்து விட்டாற் போல களைப்பும் மேலிட, இதிலிருந்து விடுபடுவது எப்படி என்று யோசிக்கக் கூட முடியாத படி உடலும் உள்ளமும் களைத்தவனாக தரையில் அமர்ந்தான். கண்ணீர் பெருக, தொண்டையடைக்க, ஹா பிரியே, என்று பலமுறை அழுதான். ஒரே ப3ந்து4வாக அருகில் இருந்த லக்ஷ்மணன், தன்னால் ஆன மட்டும் ஏதோ சமாதானமாகச் சொன்னது அவன் காதில் விழவில்லை. உதடுகள் அசைவதை மட்டுமே கண்கள் கண்டன.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதான்வேஷணம் என்ற அறுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 62 (258) ராக4வ விலாப: (ராகவனின் அழுகை)
கமல லோசனன், மஹாபா3ஹு என்றும் புகழப் படும் ராமன், சீதையை காணாமல், தன் உன்மத்த நிலையில், எதிரே அவளைக் கண்டது போலவும், எழுந்து அருகில் சென்றால் மறைந்து விடுவது போலவும் உருவெளித் தோற்றங்களை கண்டு பரிதவித்தான். புஷ்பங்கள் உனக்கு பிடிக்கும். அதனால் அசோக மரத்தடியில் பூப் பறித்துக் கொண்டிருக்கிறாயோ என்று அருகில் சென்றால், அந்த மரமே உன்னை நினவூட்டுகிறது. நீ இல்லை. வாழை மரத்தின் அருகில் சென்றால் கதலி மரம் உன் உடல் அமைப்பை நினவு படுத்துகிறது. உன் மணம் என் நாசியில் நிறைந்திருக்கிறது. கர்ணிகார வனத்தில் சென்றால் நீ உல்லாசமாக சிரிப்பது போல அந்த புஷ்பங்கள் மலர்ந்து தெரிகின்றன. இது என்ன பரிகாசம்? எதற்கு என்னை வருத்துகிறாய்? இந்த ஆசிரமத்தில் இப்படி ஓஹோ வென்று சிரிக்கலாமா? வாஸ்தவம் தான். உனக்கு பரிகாசம் செய்யப் பிடிக்கும் தான். எனக்கும் அது தெரியும். சீக்கிரம் வா, என் பிரிய மனைவியே, இந்த குடிசை சூன்யமாகத் தெரிகிறது. லக்ஷ்மணா, இவ்வளவு புலம்பியும் சீதை வரவில்லையே. எப்படி வருவாள்? ராக்ஷஸர்கள் நிச்சயம் தின்று தீர்த்திருப்பார்கள். அல்லது கடத்திச் சென்றிருப்பார்கள். இந்த மிருகங்களைப் பார். கண்களில் நீர் நிரம்ப நிற்கின்றன.
இதனால் வைதேஹி ராக்ஷஸர்களின் ஆகாரமாக ஆகி விட்டாளோ என்ற கவலை அதிகமாகிறது. ஹா வர வர்ணினி, எங்கே போனாய்? எப்படி இருக்கிறாய்? ஹா கைகேயி, சகாமா ப4வ- இப்பொழுது திருப்தியா, இதைத் தானே விரும்பினாய். சீதையுடன் கிளம்பிச் சென்றவன், அவளைத் தொலைத்து விட்டு வந்து நிற்கிறான் என்று சந்தோஷப் படு. எப்படி சூன்யமான அந்த:புரத்தில் பிரவேசிப்பேன். வீர்யமும் இல்லை, தயையும் இல்லை இந்த ராமனுக்கு என்று உலகம் பேசும். சீதா இல்லாமல், வன வாசம் முடிந்து மிதிலா அரசன் ஜனகன் வந்து குசலம் விசாரிக்க வந்தால், அவர் முகத்தை எப்படி ஏறிட்டுப் பார்ப்பேன்? அவள் இல்லாமல் நான் திரும்பிச் சென்றால், விதேஹ ராஜாவிடம் அவருடைய செல்வ மகள் தொலைந்து போனாள் என்று சொல்வேனா? அவர் மகளிடம் அளவில்லாத பாசம் உள்ளவர். எப்படித் தாங்குவார். நிச்சயம் பைத்தியமாக ஆவார். பரதன் ஆண்டு வரும் நகரத்துள் நான் நிச்சயம் பிரவேசிக்க மாட்டேன். லக்ஷ்மணா, என்னை இந்த வனத்திலேயே தனியாக விட்டு, நீ திரும்பி போ. அயோத்தி திரும்பி போ. அயோத்தி சுபமான நகரம் தான். சீதையின்றி சுவர்கம் கூடத்தான் எனக்கு சூன்யமாக தெரியும். ப4ரதனை இறுக அணைத்து நான் சொன்னதாகச் சொல். ராமன் உன்னை பூமியை ஆள அனுமதி கொடுத்திருக்கிறான் என்று சொல். தாயார்கள், சுமித்திரையையும், கைகேயியையும், கௌசல்யாவையும் முறைப்படி வணங்கி என் கட்டளைப்படி மூவரையும் நீ நன்றாக காப்பாற்று. சத்ருவை அழிக்கும் வல்லமை உடையவனே, சீதை காணாமல் போனதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டியது உன் கடமை. அழகிய கேசம் உடைய மனைவியைப் பிரிந்து பரிதவிக்கும் ராமன், தன் பலம் அனைத்தும் இழந்தது போல தீனமாக புலம்புவதை கேட்டு, சீதையை வனம் அழைத்து வந்து பத்திரமாக காப்பாற்ற தவறி விட்டோமே என்று லக்ஷ்மணனும் மிகவும் வருத்தம் அடைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராக4வ விலாபோ என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 63 (259) துக்கானு சிந்தனம் (துக்க நினைவுகள்)
ராஜகுமாரன், உயிருக்குயிரான மனைவியை பிரிந்த சோகத்தில், தானும் வருந்தி, சகோதரனையும் வருத்தி, எல்லையில்லா மனத் துயரத்தில் ஆழ்ந்தான். மோகம் புத்தியை மழுங்கசெய்து விடும். அதனால் தான் போலும், தான் வருந்துவதால் லக்ஷ்மணனையும் வருத்துகிறோம் என்பதை உணராமல் தன்னுள் மூழ்கி கிடந்தான். அழுகையும், நீண்ட பெருமூச்சுமாக, சாதாரண ஜனங்கள் இப்படி ஒரு நிலையில் எப்படி நடந்து கொள்வார்களோ, அதே போல, தன் மகத்தான துக்கத்தை லக்ஷ்மணனிடம் சொல்லிக் கொண்டான். லக்ஷ்மணா, என்னைப் போல துரதிர்ஷ்டம் பிடித்தவர்கள் இந்த உலகத்திலேயே யாரும் இருக்க மாட்டார்கள். அடுத்தடுத்து மாற்றி மாற்றி ஏதோ ஒரு துன்பம் என் ஹ்ருதயத்தை பிளக்கிறது. முன் ஜன்மத்தில் நான், தான் தோன்றித் தனமாக, பல பாப காரியங்களை அடிக்கடி செய்திருக்கிறேன் போலும். அதன் பலன் இப்பொழுது தெரிகிறது. அடுத்தடுத்து துக்கமே காண்கிறேன். ராஜ்யம் கை விட்டுப் போயிற்று. பந்து ஜனங்களைப் பிரிந்து வந்தேன். தந்தை மாண்டார். தாயாரை விட்டு விலகியது, லக்ஷ்மணா, திரும்ப நினைத்து பார்க்கும் பொழுது ஒவ்வொரு துக்கமும் அடி மேல் அடியாக என்னை தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. இந்த துயரங்கள் வனம் வந்து சூன்யமான வனத்தில் வாழ்ந்ததில் என் உடலை வருத்துவது நின்று போயிற்று. இப்பொழுது சீதையைப் பிரிந்ததால் மறுபடியும் இவை கிளைத்து எழுந்து என் மனதை வாட்டுகிறது. கட்டையில் உள்ள நெருப்பு திடுமென பற்றிக் கொண்டாற் போல. நிச்சயம், உன் அண்ணி, ராக்ஷஸன் பலவந்தமாக தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் போகும் பொழுது, பயந்து சுஸ்வரமாக பேசும் இயல்பு உடையவள், அபஸ்வரமாக அலறியிருப்பாள். எப்பொழுதும் சந்தனம் பூசி சிவந்த ஸ்தனங்கள், எந்த சேற்றில் மாட்டிக் கொண்டு தவிக்கிறதோ? ராகு பீடித்த சந்திரன் போல அவள் முகம் அடர்ந்த கேசத்துடன் ராக்ஷஸன் பிடியில் எப்படி இருந்திருக்கும்? என் பிரிய மனைவியின் கழுத்தில் எப்பொழுதும் அழகாக விளங்கிய ஹாரங்கள், ராக்ஷஸன் பிடியில், கழுத்தை நெரித்து, ரத்தத்தை குடித்த பொழுது, எப்படி தவித்திருக்கும்? நான் இல்லாத சமயம் காட்டில் ராக்ஷஸர்களால் பிடித்து இழுக்கப் பட்டிருந்தால், நிச்சயம் பெண் மான் குட்டி அலறுவது போல காப்பாற்று என்று அலறியிருப்பாள். நீண்ட விழிகள் தீனமாக, கத்தியிருப்பாள். என்னுடன் கூட முன்பு ஒரு சமயம் இந்த கல் பலகையில் அமர்ந்திருந்தாள். அழகாக சிரித்துக் கொண்டு உன்னை பரிகாசம் செய்து கொண்டிருந்தாள். உன்னுடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாள். இந்த கோதா3வரி நதிக்கு கூட தனியாக போக மாட்டாள். பயம். இந்த நதிக் கரைக்கு போகவும் பிடிக்கும். திரும்பத் திரும்ப கோதாவரி நதிக் கரைக்கு போவோமா? என்பாள். அவளே பத்3மா, பத்3மம் போன்ற முகம் உடையவள், பத்3மத்தைப் போன்று விசாலமான கண்களையுடையவள், பத்3மங்களைப் பறித்துக் கொண்டு வர என்னை வேண்டுவாள். அப்படி மலர்களைப் பறிக்க கூட நான் இல்லாமல் போக மாட்டாள். பூக்கள் நிறைந்த மரங்களைக் கொண்ட இந்த வனம், இங்கும் தனியாக போக பயம். பூக்கள் வேண்டும் என்றால், நானும் உடன் வந்தால் தான் போய் பறிப்பாள். ஏ ஆதி3த்யா, உலகில் நடப்பது, நல்லது, கெட்டது எல்லாம் நீ அறிவாய். சத்யமோ, அசத்யமோ எந்த செயலானாலும் நீ சாக்ஷி, என் பிரிய மனைவி எங்கே? எங்கு போனாள்? யாராவது அபகரித்துக் கொண்டு போனார்களா? சொல். எப்பொழுதும் துக்கத்தில் மூழ்கியே இருக்க வேண்டியவன் தானா நான்? இந்த உலகில், மற்றும் உள்ள உலகங்களிலும் நடப்பவைகளை நீ உடனுக்குடனே அறிவாய். ஏ வாயுவே, நீ தான் சொல். குண சாலினி, என் மனைவி, எனக்கு பிரியமானவள், அவள் கடத்திச் செல்லப் பட்டாளா? இறந்தே போனாளா? எங்காவது வழி தெரியாமல் திணறுகிறாளா? இவ்வாறு துயரத்துடன் அழும் ராமனை, நினைவு தடுமாறி மூர்ச்சை நிலையை அடைந்தவனை சௌமித்ரி, மிகவும் சமாதானப் படுத்தி, நியாயமானதும், அந்த சமயத்துக்கு ஏற்றவாறும் ஆறுதல் சொல்லித் தேற்றினான். அண்ணலே, இந்த துயரத்தை விடுங்கள். தைரியமாக இருங்கள். உற்சாகத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். அவளைத் தேடுவதில் மும்முரமாக ஈ.டுபடுவோம். மிகவும் கடுமையான சோதனைகளிலும், மனிதனுக்கு இடை விடாத முயற்சியும், உற்சாகமும் தான் கை கொடுக்கும். ரகு வம்ச வர்தனனைப் பார்த்து சௌமித்ரி பலவாறாக தைரியம் அளித்து நடக்க வேண்டியதைக் கவனிப்போம் என்று சொல்லவும், சற்றே ஆறுதல் அடைந்தாலும், மறுபடியும் துக்கம் மனதை ஆக்ரமிக்க தைரியத்தை இழந்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் துக்கானு சிந்தனம் என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 64 (260) ராம க்ரோத4: (ராமனின் கோபம்)
தீனமான குரலில் பரிதாபமாக லக்ஷ்மணனுக்கு பதில் சொன்னார், ராமர். சீக்கிரம் கோதாவரி நதிக் கரைக்கு போய், சீதா அங்கு தாமரை மலர்களைப் பறிக்கப் போனாளா என்று பார். லக்ஷ்மணனும் உடனே கோதாவரி நதிக் கரைக்கு ஓடிச் சென்று பார்த்தான். திரும்ப வந்து அங்கு காணவில்லை, பலமாக கூப்பிட்டு பார்த்தேன், பதிலும் இல்லை என்றான். எங்கு தான் போயிருப்பாள்? அருகில் இருந்தாலே, என் துன்பங்களை அகற்றுபவள் எங்கு போயிருக்கக் கூடும் என்றும் எனக்குத் தெரியவில்லை என்றவர், சற்றுப் பொறுத்து தானே கோதாவரி நதிக் கரைக்கு சென்று பார்த்தார். சீதே, எங்கே இருக்கிறாய்? என்று பலமாக கத்தினார். சகல ஜீவ ஜந்துக்களும், வதம் செய்யப் பட வேண்டிய ராக்ஷஸன் அபகரித்துக் கொண்டு போனதை அறிந்திருந்தும் ராமனிடம் சொல்லவில்லை. கோ3தா3வரியிடம், மற்ற பூ4தங்கள், இவனுடைய உயிருக்குயிரான மனைவி, சொல்லேன், என்ற போதும் வாயடைத்து இருந்தாள். ராமனே திரும்பத் திரும்ப கேட்ட பொழுதும் சொல்லாமல் இருந்து விட்டாள். ராக்ஷஸ ராஜனின் பயங்கர ரூபம், தான் கண்ட அவனது பயங்கர செயல்கள், துராத்மாவான அவனிடம் பயந்து, கோ3தா3வரி வைதேஹியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. நதிகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக எதுவும் சொல்லாததால், ராமன் லக்ஷ்மணனைப் பார்த்து லக்ஷ்மணா, இந்த கோ3தா3வரி எதுவும் சொல்ல மறுக்கிறாள். என்ன செய்யலாம். திரும்பச் சென்று ஜனகரிடம் என்ன சொல்வேன்? வைதேஹியின் தாய் வந்து விசாரித்தால் என்ன பதில் சொல்வேன்? ராஜ்யத்தை இழந்து காட்டில், காட்டு வாசிகள் போல வசிக்கப் போகிறேன் என்று அறிந்தும் பின் தொடர்ந்து வந்தாள். அந்த பெரிய இழப்பு கூட எனக்குத் தெரியாதபடி இந்த காட்டில் என் மனதில் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்தாள். பந்துக்கள், தாயாதிகள், என்னை கை விட்ட சமயம், உடன் இருந்த ராஜகுமாரி, இப்பொழுது அவள் இல்லாமல் நான் இரவுகளை தூங்காமல் விழித்துக் கொண்டே கழிக்கப் போகிறேன். நீண்ட இரவுகள் என்னை வதைக்கப் போகின்றன. மந்தா3கினி நதி, இந்த ஜனஸ்தானம், ப்ரஸ்ரவன மலை, இவைகளை திரும்பவும் சுற்றித் தேடப் போகிறேன். ஒரு வேளை அவள் கிடைப்பாளோ. இந்த மிருகங்கள் என்னை திரும்பத் திரும்ப பார்க்கின்றன. ஏதோ சொல்ல விரும்புகின்றன. ஜாடையாக என்ன சொல்ல ஆசைப் படுகின்றன, புரிகிறதா, பார். அவைகளின் அருகில் சென்று ராமன் தழ தழத்த குரலில் சீதை எங்கே போனாள் என்று வினவினான்? ராமன் இவ்வாறு கேட்கவும் பரபரப்புடன் எழுந்திருந்து அந்த மிருகங்கள், தென் திசையை நோக்கி ஆகாயத்தைப் பார்ப்பதும், அந்த திசையில் தான் சீதையை கடத்திக் கொண்டு போனான் என்பதை தங்கள் முக, பாவ, உடல் அசைவுகளால் தெரியப் படுத்த முயன்றன. அந்த திசையில் ஓடிக் காட்டின. திரும்ப நராதி4பனான ராமனைப் பார்த்தவாறு ஓடின. இப்படி பூமியையும் மார்க3த்தையும் தங்களால் இயன்ற வரை மாற்றி மாற்றிக் காட்டவும் லக்ஷ்மணன் கவனமாக பார்த்து, தென் திசையில் தேடுங்கள் என்று மிருகங்களின் பா4வம், செயல்கள் உணர்த்துவதாக உணர்ந்து கொண்டான். அவைகளின் அசைவுகளையும், சொல்ல முயலும் சொற்களையும் லக்ஷ்மணன் பொறுமையாக முழுவதுமாக கேட்டு, முடிவாக சகோதரனிடம் தான் புரிந்து கொண்டதைச் சொன்னான். அண்ணா, சீதை எங்கே என்று நீ கேட்டவுடன் இவை பரபரப்புடன் எழுந்தன. பூமியைக் காட்டி, தென் திசையையும் ஓடிக் காட்டுகின்றன. நைருதி திசையான தென் திசையில் சென்று பார்ப்போம். சீதை திரும்ப வந்து கொண்டிருந்தாலும் வழியில் பார்ப்போம் என, சரி என்று காகுத்ஸனும் புறப்பட்டான். பூமியை பார்த்தபடியே, லக்ஷ்மணன் கூடச் சென்றான். அன்யோன்யமாக பேசிக் கொண்டே சென்ற சகோதரர்கள் இருவருமாக பூமியில் விழுந்து கிடந்த புஷ்பங்களைப் பார்த்தனர். கோடு போட்டது போல இருந்த பூக் குவியலைக் கண்டு ராமன், லக்ஷ்மணனை அழைத்து காட்டினான். லக்ஷ்மணா, இதோ பார், இந்த புஷ்பங்களை நான் அறிவேன். நான் தான் காட்டில் பறித்துக் கொடுத்தேன். இவைகளை தொடுத்து வைதேஹி தலையில் சூட்டிக் கொண்டாள். எனக்காக சூரியனும் வாயுவும், பூமியும், இந்த புஷ்பங்களை என் நன்மைக்காக எனக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த புஷ்பங்களை பாதுகாத்து வருகின்றன. லக்ஷ்மணனிடம் இதைச் சொன்னபின், ப்ரஸ்ரவன மலையை சுற்றி இருந்த மலை சிகரங்களைப் பார்த்துக் கேட்டான். மலையரசனே, சர்வாங்க சுந்தரியான என் மனைவியைக் கண்டாயா? உன் மலைச் சாரல்களில் என்னுடன் நிறைய நடந்து சஞ்சரித்திருக்கிறாளே, என்று சிங்கம் கோபத்துடன் ஒரு சிறிய மிருகத்தை அதட்டுவது போல கேட்டான். பர்வதமே பொன்னிறமான அந்த தங்கத்தை (தங்கம் பொன்றவளை) உடனே என் எதிரில் கொண்டு வந்து காட்டு. இல்லையேல், என் அம்பில் வில்லைப் பூட்டி உன்னை தூள் தூளாக்குகிறேன், பார். இவ்வாறு ராகவன் சொன்ன பின்னும், குகைகளில் ப்ரதித்வனி- எதிரொலி மூலம் தான் காட்ட விரும்புவதாக தெரியப் படுத்திய போதிலும், மலையரசனால் சீதையை நேரில் காட்ட இயலவில்லை. இந்த மலையும் சரி, நதியும் சரி, ஏதோ தெரிந்து கொண்டே நமக்கு சொல்ல மறுக்கின்றன, இதோ என் பா3ணங்களால் தகித்து சாம்பலாக்குகிறேன் என்று சொல்லியபடியே, பூமியை எதேச்சையாக பார்த்த ராமனின் கண்களில், ராக்ஷஸனின் காலடி தடங்கள் தென்பட்டன. ராமன் வருவானோ என்று இங்கும் அங்குமாக ஓடிய சீதையின் காலடி அடையாளங்களையும் கண்டு கொண்டான். ராக்ஷஸன் காலடி அதைத் தொடர்ந்து தென்பட்டது, ராக்ஷஸன் அவளைத் துரத்திக் கொண்டு வந்ததை தெரிவிப்பது போல இருந்தது. அதை கூர்ந்து கவனித்து, சீதையின் பின்னால் ராக்ஷஸனின் காலடி அடையாளங்களைத் தொடர்ந்து கொண்டே போன பொழுது, உடைந்த வில்லும், தூணியும், சுக்கு நூறாக உடைந்த ரதமும் தென்பட்டன. படபடப்புடன், ஹ்ருதயம் துடிக்க ராமர் லக்ஷ்மணனிடம் சொன்னார். பார் லக்ஷ்மணாஸ்ரீ சீதையின் ஆபரணங்களிலிருந்து சிதறிய தங்கத் துகள்கள், இந்த பூமியில் இரைந்து கிடப்பதைப் பார். லக்ஷ்மணாஸ்ரீ இந்த இடத்தில் ராக்ஷஸர்கள் அவளைத் துண்டாடி தின்று தீர்த்திருக்கிறார்கள். அவள் காரணமாக இருவர் சண்டையிட்டிருக்கிறார்கள். தங்களுக்குள் பங்கு பிரிப்பதில் சண்டை வந்ததோ என்னவோ, கோரமான யுத்தம் நடந்திருக்கிறது. ராக்ஷஸர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். முத்து மாலைகள் கட்டி, தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டு உடைந்து கிடக்கும் ரதம் யாருடையதாக இருக்கும் ? பெரிய வில். நல்ல சூரனாகவோ, வீரனாகவோ அல்லது ராக்ஷஸர்களில் சிறந்த வீரனோ? வைடூரியம் இழைத்து, இளம் சூரியனைப் போல இருக்கும் இந்த தங்கத்தாலான கவசம் யாருடையதாக இருக்கும். பிடுங்கி பூமியில் எறியப்பட்டு கிடக்கிறதே, குடை, நூறு கம்பிகளுடன், திவ்யமான மாலைகளால் சோபையுற அலங்காரமாக இருந்திருக்க வேண்டும். அதன் தண்டத்தை உடைத்து, பூமியில் நன்றாக வீசி எறிந்திருக்கிறார்கள். இதோ இரண்டு பிசாச வதனமும் (த்ருஷ்டிக்காக கட்டப் பட்டிருந்தவை) கழுதை முகமும் பொன்னால் செதுக்க பட்டுள்ள ரதத்தின் ஒரு முன் பாகம், இதிலிருந்து ரதம் மிகப் பெரியதாகவும், விசாலமாகவும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. யாருடைய ரதம்? கொழுந்து விட்டெரியும் தீ ஜ்வாலை போன்ற த்வஜங்கள், இவை யுத்தத்தில் ஏற்றப் பட்டு வரும் சமர த்வஜங்கள். கிழிந்து, உடைந்து கிடக்கிறது. யாருடைய யுத்த வாகனமாக இருக்கும்? ரதத்தில் கட்டப் படும் தூணி- அம்புகளை வைக்க பயன் படும் பை போன்றது, அக்ஷ மாத்ரா, கூரிய அம்புகள், அக்னி போன்ற உரையுடன், யாருடைய அம்புகள் இப்படி அடிக்கப் பெற்று, இரைந்து கிடக்கின்றன. கோரமாக தாக்கக்கூடிய அம்புகள் இவை. சரங்கள் நிரம்பிய தூணி இதோ சிதிலமாகி உடைந்து கிடக்கிறது. லக்ஷ்மணா, இதோ பார். யாருடைய சாரதியோ, அடிபட்டு மரணமடைந்திருக்கிறான். இவன் கையில் சாட்டையும், கத்தியும் இருப்பதை பார். மணி குண்டலங்கள் தரித்து சாமரம் வீசுபவர்கள் இருவரும் யாருக்கு சாமரம் வீசிக் கொண்டு வந்தனரோ அடிபட்டு உயிர் இழந்து பூமியில் கிடக்கின்றனர். இதோ வெளிவாகத் தெரியும் பாதம் ஏதோ ஒரு ராக்ஷஸனுடையது. இந்த காலடியைப் பார்த்து என் வைரம் நூறு மடங்காகிறது. என் உயிரைக் குடிக்க வந்த காலனா? யார் அவன்? கோரமான ஹ்ருதயம் உடைய சில ராக்ஷஸர்கள், தன் இஷ்டம் போல செய்யக் கூடியவர்கள் சீதையைக் கவர்ந்து சென்றதோடு, தங்களுக்குள் சண்டை வேறு போட்டிருக்கிறார்கள், இவர்கள் சீதையை என்ன செய்திருப்பார்கள். கவர்ந்து சென்ற பின், கொன்று போட்டிருப்பார்களோ, முழுவதுமாக வாயில் போட்டு விழுங்கி விட்டார்களோ, பாவம் தபஸ்வினி, அவள் அனுஷ்டித்த தர்மம் அவளைக் காப்பாற்றவில்லையே. மகா வனத்தில் அவளை அபகரித்துக் கொண்டு போகும் பொழுதும், கூறு போட்டு ராக்ஷஸர்கள் தின்ற போதும் தர்மம் அவளைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா? லக்ஷ்மணா, இந்த உலகில் யார் என்னுடன்விரோதம் பாராட்டுபவர் இருக்கிறார்கள்? அவ்வளவு தைரியம் யாருக்கு இருக்கும்? உலகில் சூரனாக இருந்து, செயற்கரிய செய்ய வல்லவனாக இருந்தால் கூட கருணையுடன் தன் பலத்தை பிரயோகம் செய்யாமல் இருப்பவனை, அக்ஞானத்தால் அவமதிக்கிறார்கள். உலகில் உள்ளோர் என்னை கருணையுடன் அன்பைக் காட்டி, உலகின் நன்மையை நினைத்து, ம்ருதுவாக சாந்தமாக இருந்தால், வீரமில்லாதவன், கோழை என்று மதிக்கிறார்கள். மூவுலகிலும் உள்ள வீரர்கள், தேவர்கள் பார்வையில் என்னை ஆசிரயித்த குணங்களே தோஷங்களாகத் தெரிகின்றன போலும். இன்றே ராக்ஷஸர்களை ஒட்டு மொத்தமாக இல்லாமல் செய்ய என்னால் முடியும். சந்திரனின் ஒளியையும் தன்னுள் அடக்கி உதிக்கும் சூரியனைப் போன்றவன் நான். என் தேஜஸை உள்ளடக்கி நான் குணங்களை வெளியில் தெரியும்படி நடந்து வருகிறேன். என்னை விரோதித்துக் கொண்டு யக்ஷர்களோ, கந்தர்வர்களோ, பிசாச, ராக்ஷஸர்களோ, கின்னரர்களோ, மனுஷ்யர்களோ சுகமாக இருக்க மாட்டார்கள். லக்ஷ்மணா, என் அஸ்திரங்கள் இதோ ஆகாயத்தை நிரப்பப் போவதைப் பார். மூவுலகிலும் சஞ்சரிப்பவர்களை கீழே தள்ளுகிறேன் பார். க்ரஹ கணங்கள் சுற்றுவது தடைப் பட்டு நிற்கப் போகின்றன. நிசாகரனான சந்திரனின் முகமே தெரியாதபடி மறைத்து விடுகிறேன். தொலைந்து நஷ்டமாகிப் போன காற்று, நெருப்பு, மருத் கணங்கள், பாஸ்கர த்யுதி (சூரிய ஒளி) இவைகளைச் சேர்த்து என் ஒரே பாணத்தால் அடிக்கிறேன். மலை சிகரத்தை வைத்து மத்தாக்கி கடைகிறேன். சமுத்திர ஜலத்தை வற்றச் செய்கிறேன். மரங்களும், கொடிகளும், புதர்களும் சூழ்ந்த வனத்தை த்வம்சம் செய்கிறேன். சாகரம் நாசமாக போக பாணம் செலுத்துகிறேன். மூவுலகையும், கால தர்மத்தை நான் கையிலெடுத்துக் கொண்டு ஆட்டி வைக்கிறேன். ஈஸ்வரர்கள் என்று தன்னைச் சொல்லிக் கொள்பவர்கள், என் சீதையை குசலமாக திருப்பித் தராவிடில், இது தான் நடக்கும். சௌமித்ரே, என் விக்ரமத்தை இந்த முஹுர்த்தத்தில் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். சர்வ பூதங்களும் ஆகாயத்தில் குதிக்கப் போவதில்லை. என் வில்லின் நாணிலிருந்து புறப்பட்ட பாணங்கள் ஜாலங்களாக நிரந்தரமாக வந்து கொண்டேயிருக்கும். நாராசமான அந்த பாணங்களால் அடிபட்டு பயந்து நடுங்கும் மிருகங்களும், பக்ஷிகளும் எல்லா வித இயற்கையின் மரியாதைகளும் மீறி உலகம் கொந்தளிக்கப் போகிறது. பார், லக்ஷ்மணா, என் காது வரை இழுத்த வில்லின் நாண், எதிர்க்க முடியாத அம்புகளை விடுத்து ஜீவ லோகத்தையே உண்டு, இல்லையென்று ஆக்கப் போகிறது. மைதிலியின் காரணமாக உலகமே பிசாசங்கள் இன்றி, ராக்ஷஸர்கள் ஒட்டு மொத்தமாக அழித்து விடுகிறேன். ஒருவர் கூட மீதி இல்லாமல் செய்கிறேன். கோபத்துடன் நான் விடும் சரங்களைக் கண்டு தேவர்கள் நடுங்கட்டும். இன்று என் கோபத்தினால் வெகு தூரம் செல்லும் என் பாணங்களால் தேவ, தானவ, யக்ஷ, இந்த ராக்ஷஸர்களின் உலகமும் கிழித்து, துண்டாக, சிதிலமாக்கப் படும். என் அம்புகளைக் கொண்டு இவர்கள் தங்கள் மரியாதையை இழந்தவர்களாக ஆகப் போகிறார்கள். இந்த ஈஸ்வரர்கள் என் சீதையை இறந்தவளாகவோ, கடத்தப் பட்டவளாகவோ என்னிடம் ஒப்படைத்தாலும் நான் ஏற்க மாட்டேன். என்னிடம் இது வரை இருந்ததுபோலவே என் பிரிய மனைவியை திருப்பித் தர வேண்டும். அதுவரை ஓய மாட்டேன். சராசரங்களையும், உலகம் அனைத்தையும் நாசம் செய்வேன். என் சீதையைக் காணும் வரை என் பாணங்களின் பிரயோகம் தொடரும். இப்படிச் சொல்லி உதடுகள் துடிக்க, ரோஷத்தால் சிவந்த கண்களுடன், வல்கலை உடையை அணிந்து கொண்டு, ஜடையை முடிந்து கொண்டான். முன்பு த்ரிபுரத்தை எரிக்க வந்த ருத்ரனை நினைவூட்டுவதாக இருந்தது. தீக்ஷ்ண புத்தியுடைய ராமனின் அந்த தோற்றம், கண்டவர் நடுங்கும் வண்ணம் இருந்தது. லக்ஷ்மணன் கையிலிருந்து வில்லை வாங்கி ஆலகால விஷம் போன்ற தன் பாணங்களைத் தொடுத்து வில்லில் வைத்து விட்டான். யுகாந்தாக்னி போல கோபம் கொப்புளிக்க பின் வருமாறு சூளுரைத்தான். நரை, ம்ருத்யு, காலம், விதி இவற்றை எப்படி மீற முடியாதோ, அதே போல நான் க்ரோத வசத்தில் இருக்கும் பொழுது உலகத்தார் என்னைத் தடுக்க முடியாது. அழகிய பல் வரிசையுடைய, மாசற்ற என் மனைவியை என் எதிரில் உடனே கொண்டு வந்து நிறுத்தாவிடில், தேவ, கந்தர்வ, மனுஷ்ய, பன்னகம் நிறைந்த இந்த உலகத்தை, மலைகளோடு மாற்றிக் காட்டுகிறேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராமக்ரோதோ4 என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 65 (261) க்ரோத4 சம்ஹார பிரார்த்தனை
(கோபத்தை அடக்கிக் கொள்ள பிரார்த்தித்தல்)
சீதா கடத்திச் செல்லப் பட்டாள் என்பது தெரிந்து அடக்க மாட்டாத வேதனையும், கோபமும் கொண்ட ராமன் தவிப்பதையும், லோகத்தையே இல்லாமல் செய்து விடத் துணிந்து விட்டதையும், தன் வில்லில் வைத்த கண்ணோடு, வேகமாக பரவி அழிக்க வல்ல நெருப்பு போல, பெருமூச்சு விடுவதையும், ஹரன் போல உலகம் முழுவதும் எரித்து விடும் கோபத்துடன், யுக முடிவை தன்னிடம் வைத்திருக்கும் ஹரனே உருவெடுத்து வந்து விட்டாற்போல நிற்கும் தோற்றத்தையும், இதுவரை கண்டறியாத ருத்ர ரூபம், இதைக் கண்டு லக்ஷ்மணன் கை கூப்பி வணங்கியவாறு, வாடிய முகத்தோடு வேண்டினான். அண்ணலே, முன்பு ம்ருதுவாக, கண்யமாக, உலக ஜீவ ராசிகள் அனைத்துக்கும் நன்மையே விரும்பி இருந்தவர், இப்பொழுது கோபத்தின் வசமாகி, இயற்கையையே மாற்றத் துணிந்து விட்டது சரியல்ல. சந்திரனிடத்தில் லக்ஷ்மீகரமான ஒளி,, சூரியனிடத்தில் பிரபா, வாயுவிடம் சென்று கொண்டே இருக்கும் தன்மை, பூமிக்கு பொறுமை இவைகள் சாஸ்வதமானவை. ஒருவனுடைய அபராதம் காரணமாக உலகையே அழிக்கத் துணிகிறீர்கள். இந்த யுத்த ரதம் யாருடையது ? யார் உடைத்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், என்ன காரணத்திற்காக, ஆயுதத்துடன் வந்து, பரிவாரத்தோடு வந்தவன் யார்? குதிரையின் குளம்பு அழுந்தி அடையாளம் இட்ட இடங்களில் ரத்தக் கறை தெரிகிறது. ராஜகுமாரனே, இந்த இடத்தில் இப்பொழுது தான் யுத்தம் நடந்து முடிந்திருக்கிறது. ஒரே ஆள் தான் அடித்திருக்கிறான், இருவர் இல்லை. வாக்கு வன்மை உடையவனே, பெரும் படையோடு வந்ததாகவும் தெரியவில்லை. ஒரே ஒருவனுடைய துஷ்டத்தனம். இதன் பொருட்டு உலகையே அழிக்க முயலாதீர்கள். கையில் உள்ள ஆயுதத்தை முறையாக பயன் படுத்துபவன், அவசியமான சமயத்தில், மற்றபடி சாந்தமாக, ம்ருதுவாக இருக்க வேண்டியவர்கள், அரசர்கள். எப்பொழுதும் எல்லா ஜீவ ராசிகளுக்கும் அபயம் அளித்து வரும் தாங்கள். யார் தான், உங்கள் மனைவியை நாசம் செய்து, அப்படி நாசம் செய்தால் தனக்கு நல்லது என்று நினைப்பான்? நதிகளோ, சாகரமோ, மலைகளோ, தேவ கந்தர்வர்களோ, யாருமே உங்களுக்கு பிரியமில்லாததைச் செய்யத் துணிய மாட்டார்கள். தீக்ஷை எடுத்துக் கொண்ட ப்ரதம ரிஷியை, மற்ற சாதுக்கள் எதிர்த்து எதுவும் செய்யத் துணிய மாட்டார்கள். யார் சீதையை கடத்திச் சென்றான் என்பதை ஆராய்ந்து பார்ப்போம். நீங்கள் செய்ய வேண்டியது அது தான். அவனை கண்டு பிடியுங்கள். நானும் வில்லேந்தி உடன் வர, பரம ரிஷிகள் உதவியோடு, சமுத்திரத்தையும், கலக்கிப் பார்ப்போம். மலைகளையும், வனங்களையும், பலவிதமான குகைகளையும், ஆழமான நதிகளையும் தாமரைக் குளங்களையும், தேவ கந்தர்வ உலகங்களையும் தேடுவோம். பொறுமையாக நிதானமாக தேடுவோம். உங்கள் மனைவியைக் கடத்திச் சென்றவனை அடையும் வரை, மூவுலக நாயகர்களும், சீதையை தானாகவே கொண்டு வந்து தங்கள் முன் நிறுத்தாவிடில், கோஸல நாட்டுத் தலைவனே, அதன் பின் சமயம் வந்து விட்டது என்று மற்றதைச் செய்யலாம். தன் சீலத்தால், வினயமாக, சமாதானமாக சீதையை திரும்பப் பெறாவிடில், நரேந்திரா, உங்கள் கூர்மையான பாணங்கள், இந்திரனுடைய வஜ்ரத்திற்கு சற்றும் குறைந்ததல்ல, அதைக் கொண்டு இந்த செயலில் இறங்குவோம்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க்ரோத4 சம்ஹார பிரார்த்தனை என்ற அறுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 66 (262) ஔசித்ய ப்ரபோ3த4னம் (உசிதமான செயலை நினைவு படுத்துதல்)
அனாதை போல புலம்பினார். மீளாத் துயரில் மூழ்கி விட்டதாக தானே எண்ணிக் கொண்டு, செயலற்று நின்றார். பெரும் மோகம் ஆட்கொள்ள, புத்தியும் ஸ்தம்பித்த நிலையில் கிடந்த ராமனை லக்ஷ்மணன் தேற்றினான். கால்களை பிடித்து விட்டபடியே, செய்ய வேண்டியதைப் பற்றி அறிவுறுத்தினான். சமாதானமாக பேச்சுக் கொடுத்தான். பெரும் தவப் பயனாக, கணக்கில்லா நற் செயல்களின் விளைவாக, அமரர்களுக்கு அம்ருதம் கிடைத்தது போல, தசரதனுக்கு கிடைக்கப் பெற்றவன் நீ. உன் குணங்களையே எண்ணி, எண்ணி, உன் பிரிவினால் மஹீபதியான (பூமியின் நாயகன்) ராஜா மேலுலகம் சென்றார். தெய்வத்தன்மையை அடைந்தார் என்று ப4ரதன் சொல்லிக் கேட்டோம். காற்று வீசி மேலே படுவது போல ஸ்பரிசம் போல க்ஷண நேரத்தில் பல செயல்கள் நடந்து விடுகின்றன. பிராணிகளில் ஆபத்து இல்லாமல் யார் வாழ்ந்திருக்கிறார்கள் ? அதனால் சமாதானப் படுத்திக் கொள் காகுத்ஸா. இப்பொழுது வந்துள்ள துக்கத்தை நீ சகித்துக் கொண்டு மேற் கொண்டு செய்ய வேண்டியதை யோசியாமல், உணர்ச்சி வசப் படுவாயானால், ப்ராக்ருதனான சாதாரண நகர ஜனங்கள், சகிப்புத் தன்மையோ, திறமையோ மிக அல்பமாக உள்ள ஜனங்கள் என்ன ஆவார்கள். இந்த துக்கத்தில், உலகங்களை தகித்து விட்டாயானால், கஷ்டப் படுவது நம் பிரஜைகளே. நரவ்யாக்4ர, உன்னையே சரணமாக நினைத்திருக்கும் ஜனங்கள், யாரைப் போய் வேண்டுவார்கள். அவர்கள் கஷ்டங்களுக்கு நிவ்ருத்தி ஏது? லோக ஸ்வபாவம் இது. நகுஷனின் மகனான யயாதி இந்திரனுக்கு சமமான பதவியை அடைந்தான். வினயம் அவனை விட்டு அகன்றது. கர்வம் கொண்டான். அழிந்தான். நம் குலகுருவான வசிஷ்டர், புரோஹிதர் ஒரே நாளில் நூறு குழந்தைகளைப் பெற்றார். அப்படியே அழியவும் அழிந்தார்கள். உலகமே வணங்கும் ஜகஜ்ஜனனீ, அவளும் ஒரு முறை சலனம் அடைந்தாள் என்று பார்க்கிறோம். கோஸலேஸ்வரா, எந்த இரு தர்மம் உலகின் கண்களைப் போன்றவை, எதில் அனைத்தும் அடங்கியுள்ளதோ, ஆதித்யனும், சந்திரனும் கூட, மகா பலசாலிகள், கிரஹணம் எனும் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். தேகம் எடுத்த ஜீவன்கள், மிகப் பெரிய வீரனாக இருந்தாலும், தேவர்களே ஆனாலும், புருஷர்ஷப, (புருஷர்களில் ரிஷபம் போன்றவன்) தெய்வம் அல்லது விதி எனும் நியதியிலிருந்து தப்ப முடியாது. நியாயம், அநியாயம் என்பது இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கும் உண்டு. இவ்வாறு கேள்விப் பட்டிருக்கிறோம். இந்த நியதியை தவிர்க்க முடியாது. அதனால் நீ வீணாக கவலைப் படாதே. சீதை நஷ்டமாக, மறைந்தே போயிருந்தாலும், யாரோ கடத்திக் கொண்டே போயிருந்தாலும், சாதாரண ஜனங்கள் போல நீ வருந்தி புலம்பத் தேவையில்லை. சத்யத்தைக் காணும், எப்பொழுதும் வெளிவான புத்தியையுடைய உன் போன்றவர்கள், எதற்குமே கலங்க மாட்டார்கள். ராமா, மிகப் பெரிய கஷ்ட காலத்திலும் நிராசை அடைய மாட்டார்கள். புத்தியை உபயோகித்து தத்வம் என்ன என்று ஆராய்ந்து பார். மகா அறிவாளிகள் சுபம் எது, அசுபம் எது என்று தெரிந்தவர்கள் நடப்பதை பகுத்தறிந்து கொள்கிறார்கள். எதிலும் குண தோஷங்களை பிரித்து பார்க்காமல் நிச்சயமில்லாத செயல்கள் செய்பவர்களுக்கு இஷ்டப் பட்ட பலன் கிடைக்காது. நீயே தான் ராமா, முன்பு பலமுறை எனக்கு உபதேசித்திருக்கிறாய். உனக்கு யார் புதிதாக சொல்லித்தர முடியும். நீயே சாக்ஷாத் ப்ருஹஸ்பதி ஆவாய். தேவர்களாலும் புரிந்து கொள்ள முடியாத புத்தியுள்ளவன் நீ. துயரத்தால், அடங்கி கிடக்கும் உன் அறிவைத் தட்டி எழுப்புகிறேன். தெய்வீகமானாலும் சரி, மானுஷமானாலும் சரி, உன் பராக்ரமத்தை அறிந்து இக்ஷ்வாகு குலத்தின் பலம் பொருந்திய காளை போன்றவனே, எதிரிகளை வதைக்கும் முயற்சியில் இறங்குவாய். சர்வ நாசம் செய்து ஆகப் போவது என்ன? பாபியான உன் எதிரி யார் என்று தெரிந்து கொண்டு யுத்தத்தில் இறங்குவாயாக.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஔசித்ய ப்ரபோ3த4னம் என்ற அறுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 67 (263) க்3ருத்ர ராஜ த3ரிசனம் (கழுகு அரசனைக் காணுதல்)
முன் பிறந்தவனாக இருந்தாலும், லக்ஷ்மணன் சொன்னவுடன், சாரக்3ராஹி (சாரமான விஷயத்தை உடனே புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்பவன்) எதிலும் உட்பொருளை கிரகித்துக் கொள்ளும் குணமுடைய ராமர், லக்ஷ்மணனின் கூற்றில் இருந்த நியாயத்தை உணர்ந்து கொண்டார். மிகவும் பயங்கரமாக வெடித்த தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, வில்லை கீழே வைத்து விட்டு லக்ஷ்மணனைப் பார்த்து போவோம் வா என்றார். வத்ஸா (குழந்தாய்) என்று அழைத்து எங்கு போகலாம்? என்ன உபாயம் செய்தால் சீதையைக் காண்போம், யோசித்துச் சொல். இவ்வாறு தன் துயரை அடக்கிக் கொண்டு சுய நிலைக்கு மீண்டு விட்ட ராமனின் அமைதியான கேள்விக்கு, லக்ஷ்மணன் பதில் சொன்னான். இதே ஜனஸ்தானத்தில் தான் தேட வேண்டும். பலவிதமான மரங்கள் அடர்ந்தது. ராக்ஷஸர்கள் நடமாடும் இடம். இங்கு பல மலை குகைகளும், ஆழமான பள்ளங்களும் இருக்கின்றன. குகைகளும் பலவிதமாக பயங்கரமாக உள்ளன. அவைகளும் பல வித மிருகங்கள் வசிக்கும் இடமாக பயன் படுத்தப் பட்டு வருபவை. சில கின்னரர்களுக்கு இது வாசஸ்தலமாகும். கந்தர்வர்கள் சிலரும் இவற்றை தங்கள் வாசஸ்தலமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் உடன் வர இந்த இடங்களை முதலில் தேடுவோம். உன் போன்ற புத்தியுடைய, மகாத்மாவான சிறந்த மனிதர்கள், ஆபத்து வந்த சமயம், கலங்குவதில்லை. காற்றடித்தால், லட்சியம் செய்யாது இருக்கும் மலையைப் போல திடமாக இருப்பார்கள். இவ்வாறு பேசிக் கொண்டே வனத்தை சுற்றி வந்து தேடினார்கள். கோபமாக இருந்த ராமன், வில்லை வளைத்து தயாராக நின்றவன், சமாதானமாகி தேடுகையில் மலை போன்ற உருவமும், மகா பாக்யசாலியான உத்தமமான பறவை அரசன் ஜடாயு, ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டான் ப்ரும்மாண்டமான அந்த சரீரத்தைப் பார்த்து, இந்த பக்ஷி ராஜனா சீதையைத் தின்றிருப்பான்? இப்படி கழுகு அரசனாக வேடம் பூண்டு ஏதோ ராக்ஷஸன் தான் வனத்தில் அலைகிறான் போலும். விசாலாக்ஷியான சீதையைத் தின்று விட்டு சௌக்யமாக இருக்கிறது. இதை என் கோரமான பாணங்களால் அடிக்கட்டுமா? இவ்வாறு பேசிக் கொண்டே பக்ஷியை மெதுவாக நெருங்கினார்கள். சமுத்திரம் வரையிலான பூமியை நடுங்கச் செய்து அசைத்து விடக் கூடிய வில்லும், அம்புகளும் கையில் தயாராக இருந்தன. அவனைப் பார்த்து தீனமாக, வாயில் நுரை தள்ள, ரத்தம் பெருக, தசரத குமாரனைப் பார்த்து பக்ஷி பேசியது. யாரை ஔஷதி போல தேடிக் கொண்டு வருகிறாயோ, அந்த தேவியையும், என் உயிரையும் ராவணன் அபகரித்தான். உன்னைப் பிரிந்து, லக்ஷ்மணனும் அருகில் இல்லாத பொழுது, ராகவா, பலசாலியான ராவணன் அவளை கவர்ந்து கொண்டு செல்வதை நான் பார்த்தேன். சீதையைக் காப்பாற்ற நான் ராவணனுடன் யுத்தம் செய்து அவனை வீழ்த்தினேன். அவன் ரதம், குடை இவைகளை அடித்து நொறுக்கி, பூமியில் விழச் செய்தேன். இதோ அவன் வில்தான் உடைந்து கிடக்கிறது. இதோ அவன் விட்ட அம்புகள். இதோ யுத்த ரதம் என்னால் சின்னா பின்னமாகப் பட்டது. என் இறக்கைகளாலேயே அடித்து தள்ளினேன், அவன் தான் சாரதி. பூமியில் விழுந்தான். களைப்படைந்த என் இறக்கைகளை வாளால் வெட்டித் தள்ளி, ராவணன் சீதையை எடுத்துக் கொண்டு ஆகாய மார்கத்தில் போனான். ஏற்கனவே ராக்ஷஸன் அடித்து விட்ட என்னை நீயும் உன் பாணங்களைக் கொண்டு வதைக்காதே. யார் என்று அறிந்து கொண்டதும், கண்களில் நீர் மல்க, ராமன் சீதையின் நிலை கேட்டு இரண்டு மடங்காகி விட்ட தன் துயரமும் தாபமும் வெளிப்பட, ஜடாயுவின் வாக்யத்தைக் கேட்டு, பெரிய வில்லை கீழே வைத்து விட்டு ஜடாயுவை அணைத்துக் கொண்டு கதறினான். லக்ஷ்மணனும் ஜடாயுவை பரிவுடன் அணைத்துக் கொண்டு, நடந்ததை தன் உள்ளத்தில் திரும்ப நினைத்து பார்த்துக் கொண்டான். கஷ்டப் பட்டு மூச்சு விடும் ஜடாயுவைப் பார்த்து, ராமனின் துயரம் பன் மடங்காகியது. லக்ஷ்மணா, ராஜ்யத்தை இழந்து, வனத்தில் வசித்து, சீதையை இழந்து, இந்த பக்ஷிராஜனும் நமக்காக அடிபட்டு உயிரை துறக்கும் நிலையில் இருக்கிறான், என் துரதிர்ஷ்டம், (அலம்-போதும், போதும்,) நெருப்பையே சுட்டு விடும் போல் இருக்கிறதே. பெரிய கடல் நிரம்பியிருப்பதைக் கூட இன்று நீந்தி கடந்து விடுவேன். ஆனால் என் போதாத காலம், நதிகளின் அரசனான சமுத்திரம் வற்றி விடாமல் இருக்க வேண்டும். சராசரங்களிலும் என்னை விட அபாக்யசாலி யாருமே இருக்க முடியாது. இல்லையெனில், சொல்லி முடியாத இந்த பெரும் துக்கம் எனக்கு ஏன் வந்து வாய்க்கிறது? நரைத்த தலையுடன், வயது முதிர்ந்த கழுகு அரசன், நம் தந்தைக்கு பிரியமான சகா-தோழன். என் பாக்யத்தின் கோளாறினால், அடிபட்டு பூமியில் விழுந்து கிடக்கிறார். இவ்வாறு பலவும் சொல்லி லக்ஷ்மணனுடன், தந்தையை தொடுவது போல ஸ்னேகத்துடன் ஜடாயுவை அணைத்துக் கோண்டான். இறக்கைகள் வெட்டப் பட்டு, ரத்தத்தில் தோய்ந்து கிடந்த க்3ருத்4ர ராஜனை, மைதிலி எங்கே? என் உயிருக்கு சமமான மைதிலி எங்கே என்று கேட்கையிலேயே மயங்கி விழுந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க்3ருத்4ர ராஜ தரிசனம் என்ற அறுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 68 (264) ஜடாயு சம்ஸ்கார: (ஜடாயுவின் அந்திமக் கிரியைகள்)
மித்ரனுக்கு சமமான சௌமித்திரியிடம், ரௌத்ரனான ராக்ஷஸன், ஜடாயுவை அடித்து வீழ்த்தியிருப்பதைக் குறித்து அங்கலாய்த்துக் கொண்டான். லக்ஷ்மணா, என் பொருட்டு, முயற்சி செய்து இந்த பக்ஷி யுத்தத்தில் அருமையான உயிரை விட்டிருக்கிறது. இந்த ராக்ஷஸனால் அடிக்கப் பட்டு வீழ்ந்திருக்கிறது. உடல் பூராவும் நிறைய காயங்கள் பட்டிருக்கின்றன. மிகவும் துன்பப் பட்டிருக்க வேண்டும். ஏதோ, உயிர் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. குரலே எழும்பாமல், சிதிலமாகிக் கிடக்கிறது. ஜடாயோ, உங்களால் முடியுமானால், ஏதாவது பேச முடியுமானால், சீதை என்ன ஆனாள் சொல்லுங்கள். ஏன் உங்களை இப்படி வதம் செய்தான் சொல்லுங்கள். சீதையை ஏன் அபகரித்துக் கொண்டு போனான் என்று சொல்லுங்கள்? ராவணனுக்கு நான் செய்த அபராதம் என்ன? எதைக் கண்டு என் பிரிய மனைவியை கடத்திக் கொண்டு போனான். ராவணன் பிடியில் சந்திரனுக்கு சமமான சீதையின் முகம் எப்படி இருந்தது. பக்ஷி ராஜனே, சீதை அந்த சமயம் என்ன சொன்னாள்? அவள் பேசிய சொற்களை அப்படியே சொல்லுங்கள். அந்த ராக்ஷஸன் எப்படிப் பட்டவன்? அவன் பலம் என்ன? என்ன வேலை? அவன் வீடு எங்கே? தந்தையே, தயவு செய்து சொல்லுங்கள். என்றார். அனாதை போல அழும் ராமரை திரும்பி பார்த்து ஜடாயு வாய் குழற, விவரமாக சொல்லியது. துராத்மாவான ராவணன் அவளைக் கடத்திச் சென்றான். மாயையில் வல்லவன். ஒரேயடியாக காற்று வீசும் துர்தினம் அன்று. குழப்பமாக சண்டையிட்டோம். களைத்து சற்று ஓய்ந்த நேரத்தில் என் இறக்கைகளை வெட்டி வீழ்த்தி, அந்த ராக்ஷஸன் சீதையைத் தூக்கிக் கொண்டு போனான். தென் திசையில் சென்றான். ராகவா, என் பிராணன் பிரியும் தறுவாயில் இருக்கிறது. பார்வை மழுங்குகிறது. மரங்கள் பொன்னிறமாக, வாசனைத் தைலம் தடவிய தலை கேசத்தோடு காண்கிறேன். ராவணன், சீதையை தூக்கிக் கொண்டு எந்த முஹுர்த்தத்தில் சென்றானோ, அந்த சமயம் தொலைந்த பொருளை எஜமானன் திரும்பப் பெறுகிறான். விந்தோ என்ற முஹுர்த்தம், காகுத்ஸா அவனுக்குத் தெரிந்திருக்காது. உன் பிரியையான ஜானகியை அபகரித்துக் கொண்டு ராக்ஷஸேஸ்வரனான ராவணன், தூண்டில் புழுவிற்கு ஆசைப் பட்டு மாட்டிக்கோண்ட மீன் போல சீக்கிரமே நாசமடைவான். கவலைப் படாதே. சீக்கிரமே அந்த ராக்ஷஸனை யுத்தத்தில் கொன்று விட்டு சீதையுடன் மகிழ்ச்சியாக இருப்பாய். ராமனுடன் பேசும் பொழுதே, வாயிலிருந்து ரத்தமும், நிணமுமாக வழிந்தது. விஸ்ரவஸின் மகன், வைஸ்ரவனான குபேரன் சகோதரன் என்று சொல்லி முடிக்கு முன்பே இறந்து விழுந்தது. சொல்லுங்கள், சொல்லுங்கள் என்று வேண்டியபடி, கூப்பிய கைகளுடன் ராமன் எதிரில் நிற்கையிலேயே, ஜடாயு பிராணன் பிரிந்தது. ஜடாயுவின் பிராணன் கழுகு உடலை விட்டு ஆகாயத்தில் சென்றது. தலை பூமியில் விழ, கைகளை விரித்தபடி தன் உடலை கீழே தள்ளி, இறந்த உடலாக மிஞ்சியது. உயிர் போன ஜடாயு உடலைப் பார்த்து சிவந்த கண்களையும் பார்த்து ராமர் மேலும் துக்கத்துடன் சௌமித்ரியிடம் சொன்னார். ராக்ஷஸர்கள் வாசஸ்தலமான இந்த தண்டகாரண்யத்தில், பல காலம் சௌக்யமாக வாழ்ந்து வந்த கழுகு அரசன், சிதிலமாகி விட்டான். பலகாலம் வாழ்ந்தவன். வயது முதிர்ந்த பக்ஷிராஜன் அடிபட்டு, இறந்து கீழே விழுந்து கிடக்கிறார். காலத்தை வெல்ல யாராலும் முடியாது. எனக்கு உபகாரம் செய்ய வந்த பக்ஷி ராஜன், லக்ஷ்மணா, எனக்காக உயிரை விட்டிருக்கிறார். தந்தை, பாட்டனார் காலத்திலிருந்தே குடும்ப நண்பன். சீதையை அபகரித்துச் செல்லும் ராவணனை எதிர்த்து நின்ற சமயம், பலசாலியான ராவணன் அடிக்கப் பெற்று, என் காரணமாக உயிரை இழந்திருக்கிறார். பறவை உடலில் இருந்தும் தர்மத்தை அனுஷ்டித்து வந்துள்ள சூரனாகவும், அபயம் அளிக்கும் குணம் கொண்டதுமாக வாழ்ந்த பக்ஷிராஜனின் வாழ்க்கை, தர்மசாரிகளாக சாதுக்கள் எங்கும் நிறைந்துள்ளனர் என்பதையே காட்டுகிறது. என் பொருட்டு பக்ஷிராஜன் உயிரை விட்டது, சீதை அபகரிக்கப் பட்டதை விட அதிகமாக என்னை வாட்டுகிறது. ராஜா தசரதன் எப்படியோ, அப்படியே இந்த பக்ஷிராஜனும், மதிக்கத் தகுந்தவர். பூஜிக்கப் பட வேண்டியவர். சௌமித்ரே, கட்டைகளை அடுக்கு. நான் நெருப்பை கடைகிறேன். என் பொருட்டு உயிரை விட்ட பக்ஷிராஜனுக்கு அந்திம சம்ஸ்காரங்களை நான் செய்கிறேன். பக்ஷிகளின் நாதனுக்கு நல்ல கதி கிடைக்கச் செய்கிறேன். ரௌத்ரமான ராக்ஷஸனால் கொல்லப் பட்டவன் நல்ல கதியடைய நான் இந்த சிதைக்கு நெருப்பு மூட்டுகிறேன். எந்த கதி, யாகம் செய்பவர்களுக்கு மட்டுமே உரியதோ, எந்த கதி நித்யம் அக்னி ஹோத்ரம் செய்யும் தர்ம சீலர்களுக்கு உரியதோ, யுத்தத்தில் புற முதுகு காட்டாதவர்களுக்கு என்ன கதியோ, பூமியை தானம் செய்பவர்களுக்கு என்ன கதியோ, என்னால் அனுமதிக்கப் பெற்று தந்தையே, உத்தமமான லோகங்களுக்குச் செல்லுங்கள். க்ருத்ர ராஜ, நல்ல பண்புள்ளவரே, என்னால் சம்ஸ்காரம் செய்யப் பட்டவராக மேலுலகம் செல்லுங்கள் இவ்வாறு சொல்லி, பக்ஷி ராஜனுடைய சிதைக்கு ராமன் நெருப்பை வைத்தான். தன் பந்து (உறவினன்) இறந்தால் துக்கிப்பது போல துக்கத்துடன் ராமன் இதைச் செய்தான். சௌமித்திரியுடன் வனம் சென்று மரணம் அடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை ஒன்று விடாமல் அந்த பக்ஷிக்குச் செய்தான். பின் கோதாவரி நதிக்குச் சென்று, பக்ஷிக்கு நீர்க் கடன்களைச் செய்தான். சாஸ்திரங்களில் சொல்லியுள்ள படி இறந்த பக்ஷி ராஜனுக்கு, தாங்கள் ஸ்நானம் செய்து நீர்க் கடன்களைச் செய்தனர். அந்த பக்ஷி ராஜன் மிகவும் கஷ்டமான செயலைச் செய்து யுத்தத்தில் வீழ்த்தப் பட்டான். மகரிஷிகளுக்கு சமமான அந்திம கிரியைகள் செய்யப் பெற்று, சுபமான புண்ய கதியை அடைந்தான். பக்ஷி ராஜனுடைய காரியங்கள் ஆன பின், திடமான புத்தியுடன் சீதையைத் தேடுவதில் தீவிரமாக யோசனை செய்த படி, விஷ்ணுவும், வாஸவனும் போல இருவரும் புறப்பட்டனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஜடாயு சம்ஸ்காரோ என்ற அறுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 69 (265) கப3ந்த4 க்3ராஹ: (கபந்தனால் பிடிக்கப் படுதல்)
ஜடாயுவின் அந்திம கிரியைகள் செய்து முடித்த பின், ராம, லக்ஷ்மணர்கள் புறப்பட்டனர். வனத்தில் சீதையைத் தேடியபடி, மேற்கு நோக்கி நடந்தனர். பின் தெற்கு நோக்கிச் சென்று, கைகளில் வில், அம்பு, கத்தி இவைகளை சுமந்தவர்களாக இக்ஷ்வாகு குல ராஜ குமாரர்கள் சளைக்காமல் நடந்தனர். பயங்கரமான காடுகள், மரங்களும், புதர்களுமாக அடர்ந்து தெரிந்த காடுகள், பல விதமான கொடிகள் சூழ்ந்து வேலியாக தடுக்க, நுழைய முடியாதபடி இருந்த அடர்ந்த காட்டினுள்ளும் வழியை ஏற்படுத்திக் கொண்டு நுழைந்தனர். தென் திசையை இலக்காகக் கொண்டு, தாங்களே வழி அமைத்துக் கொண்டு வேகமாகச் சென்றனர். மிகப் பெரிய அந்த பெரிய காட்டை கடந்து சென்று கொண்டிருந்தனர். ஜனஸ்தானத்திலிருந்து மூன்று கோசம் (ஆறு மைல்) நடந்த பின், நல்ல தேஜஸ் உடைய இருவரும் க்ரௌஞ்சாரன்யம் என்ற காட்டை அடைந்தனர். அந்த காடு பலவிதமாக மேக மண்டலம் சூழ சந்தோஷமாக இருப்பது போலத் தெரிந்தது. சுபமான புஷ்பங்கள் பல வர்ணங்களிலும், மணம் வீசும் விதம் விதமான வகைகள் நிறைந்து, மிருகங்களும் பக்ஷிகளும் வளைய வர, வைதேஹியைத் தேடிக் கொண்டு சென்ற இருவரும், இவற்றை ரசித்தவாறு சென்றனர். ஆங்காங்கு அமர்ந்து மூன்று கோஸ தூரம் கிழக்கு முகமாகச் சென்றனர். சீதையின் நிலை உள்ளத்தை வாட்டினாலும் தொடர்ந்து நடந்தனர். க்ரௌஞ்ச அரண்யம் முடிந்து மதங்கா3ஸ்ரமம் நெருங்கும் சமயம், இந்த வனமும் பெரிய பெரிய மிருகங்கள் நிறைந்திருக்கக் கண்டனர். பக்ஷிகள், மற்றும் பலவித ஜீவ ஜந்துக்களும் நிறைய இருந்தன. மரங்கள் கிளைகள் நிறைந்து அடர்ந்து காணப் பட்டன. தசரத ராஜ குமாரர்கள், ஒரு குகையைக் கண்டனர். பாதாளம் வரை செல்வது போல அழகாக ஒரே இருட்டாக இருந்ததைக் கண்டனர். அந்த குகையில் சற்று தூரத்தில் மிகப் பெரிய உருவம் உடைய ராக்ஷஸியை இருவரும் கண்டனர். அவள் முகமே கோணலாக, அசாதாரணமாக இருந்தது. சாதாரண அல்ப ஜந்துக்கள். அவளைக் காணவே பயப்படுவர். அருவருப்பைத் தரும், கோரமான காட்சியாக இருந்தாள். நீளமான வயிறும், கூர்மையான பற்களும், கறுப்பும், தோல் தடித்து விகாரமாகத் தெரிய பெரிய பெரிய மிருகங்களையும் அடித்து தின்பவளாக, தலை கேசம் அவிழ்ந்து தொங்க, நளினம் சற்றும் இல்லாத அவளைப் பார்த்து ராம, லக்ஷ்மணர் இருவரும் திகைத்து நோக்கினர். சகோதரர்கள் இருவருமாக நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, முன்னால் சென்று கொண்டிருந்த லக்ஷ்மணனைப் பிடித்து வா, வா, நாம் சந்தோஷமாக அனுபவிக்கலாம் என்று அவன் கையைப் பிடித்து இழுக்கலானாள். சௌமித்ரியை அணைத்துக் கொண்டு, நான் அயோ முகி என்ற பெயருடையவள். உன் அதிர்ஷ்டம் எனக்கு உன்னைப் பிடித்து விட்டது. மீதி உள்ள வாழ் நாட்களை நீ என்னுடன் இந்த மலைச் சாரல்களிலும், வனத்திலும் சுற்றி விளையாடி கழிப்பாயாக. இவ்வாறு அவள் சொல்லவும், கோபத்துடன் லக்ஷ்மணன், அவளுடைய காதுகளையும், மூக்கு, ஸ்தனங்களையும் வெட்டினான். காதும், மூக்கும் அறுபட்டதும், விகாரமான குரலில் கத்திக் கொண்டு அந்த ராக்ஷஸி, வேகமாக ஓடி விட்டாள். பயம் தரும் மிகப் பெரிய உருவத்துடன் அவள் ஓடுவதைக் கண்டு, மேலும் அடர்ந்த காட்டினுள் நுழைந்தவர்களாக, எதிரிகளை கண்டால் அடிக்கவும் தங்களை காத்துக் கொள்ளவும் தயாராக, சாவதானமாக, கவனமாக நடந்தனர். லக்ஷ்மணன் ராமனைப் பார்த்து என் தோள் துடிக்கிறது. ஏதோ கெடுதல் வரும் என்று தோன்றுகிறது. பலவிதமான அனிஷ்டமான நிமித்தங்களை காண்கிறேன். அதனால் அண்ணலே, தயாராக இருங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். எனக்கே இந்த துர்நிமித்தங்கள்,உடனே ஏதோ ஒரு கெடுதல் நம்மை நெருங்குவதை உணர்த்துவதாக தெரிகிறது. மகா தேஜஸ்வி, சத்வ குணம் உடையவன் , சீலமுடையவன், தானே ஒழுக்கத்தில் சிறந்து விளங்குபவன், என்று சொல்லப் படும் லக்ஷ்மணனே பயந்து இவ்வாறு சொல்லவும், ராமனும் ஏற்றுக் கொண்டான். லக்ஷ்மணன் மேலும், விவரித்தான். வஞ்சுளகம் எனும் இந்த பக்ஷி மிக கொடுமையானது. நமக்கு யுத்தத்தில் விஜயம் தான் என்று சொல்கிறது. இருவரும் கவனமாக தேடிக் கொண்டே போகும் பொழுது, ஏதோ சட, சடவென்று முறியும் சத்தம் கேட்டது. இந்திரன் ஆகாயத்தை நொறுக்கிப் போட்டாற் போல பயங்கர இடி சத்தம். ஆகாயம் பூராவும் இந்த ஓசையே நிறைந்திருந்தது. இருவரும் கைகளை கோத்துக் கொண்டு என்ன சத்தம் என்று அறிய முற்பட்டபொழுது, ஒரு பெரிய ராக்ஷஸன் மிகப் பெரிய வயிற்றுடன் எதிர்ப்பட்டான். மிகப் பெரிதாக வளர்ந்த உருவம். தலையோ, முகமோ இன்றி, வயிற்றினுள் தெரிந்த முகத்துடன், மயிர்க்கால்களே, கத்திகள் போல கூர்மையாக குத்திட்டு நிற்க, மரங்கள் வளர்ந்து நிற்கும் , நீல மேகம் போன்ற உடல். ரௌத்ரமான இடி முழக்கம் போன்ற குரல். வயிற்றில் தெரிந்த முகம், அதில், பெரிய இமைகள், நீளமும் அகலமுமாக, மஞ்சள் நிறத்துடன், மார்பில் ஒற்றைக் கண், பெரும் பற்களுடன் கூடிய நாக்கும், வாயும், மகா கோரமான கரடி, சிங்கம், மான், யானை என்று கிடைத்ததை விழுங்கும் இரண்டு புஜங்கள் யோஜனை தூரம் நீண்டு, கைக்கு கிடைத்த எல்லாவிதமான கரடி, பக்ஷி கணங்கள், மிருகங்கள் என்று ஆகர்ஷித்து இழுத்து, கூட்டமாக மான்களையும் விடாது துரத்தி பிடிக்கும் புஜங்கள், இவைகளை க்ரோச தூரத்தில் இருக்கும் பொழுதே பார்த்து விட்டனர். இந்த இரு சகோதரர்கள் நிற்பதைப் பார்த்து பயந்து ஓடி வரும் மிருகங்கள், காப்பாற்ற வேண்டி சூழ்ந்து கொண்டன. இவைகளையும் அந்த புஜங்கள் விடாமல் பற்றிக் கொண்டன. அங்கிருந்தே கப3ந்த உருவத்தை நீண்ட புஜத்துடன் கூடியதை, கொடுமையான பெரிய உருவத்தைக் கண்டனர். பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அந்த கபந்தனின் புஜங்கள், சகோதரர்கள் இருவரையும் வளைத்து சுழற்றிக் கொண்டு இழுத்துச் செல்லலாயின. அந்த மகா பலசாலியின் ஆக்ரமிப்புக்கு எதிரில், கையில் வில்லும், அம்பும், கத்தியும் சுமந்து கொண்டு வந்த, ஸ்திரமான எதையும் தாங்கும் உடல் வாகு கொண்ட வீரர்களே அந்த பெரிய புஜங்களின் இழுப்புக்கு இழுபட்டு செல்லலாயினர். தைரியசாலியும், சூரனுமான ராகவன் கவலைப்படவில்லை. குழந்தை பருவத்திலிருந்தே, தான் தனியாக எதையும் செய்யாமல் ராமனை சார்ந்தே வாழ்ந்து பழகிய லக்ஷ்மணன் கவலைப் பட்டான். வருத்தத்துடன் ராமனிடம் ராகவா, இந்த ராக்ஷஸனிடம் போய் அகப்பட்டுக் கொண்டோமே. நாம் வீரர்களாக இருந்து என்ன பயன்? நான் ஒருவன் கட்டுண்டது போதும். நீ உன்னை விடுவித்துக் கொள். இந்த பூதத்துக்கு என்னை பலியாக கொடுத்து விட்டு, நீ ஓடி விடு. சீக்கிரமே வைதேஹியை கண்டு கொள்வாய் என்று எனக்குத் தோன்றுகிறது. திரும்பச் சென்று தந்தை பாட்டனார் வழி வந்த ராஜ்யத்தை அடைவாய். ராஜ்யத்தில் அமர்ந்தாலும் என்னை எப்பொழுதும் நினைவு வைத்துக் கொள். இவ்வாறு லக்ஷ்மணன் சொல்லவும் ராமன் பதில் சொன்னான். வீரனே, பயப்படாதே. உன் போல் பலசாலிகள், இப்படி பயப் படக் கூடாது. கவலைப்படக் கூடாது. இதற்குள், க்ரூரனான கபந்தன், இடி முழக்கம் போன்ற குரலில், சகோதரர்கள் இருவரையும் பார்த்து வினவினான். யார் நீங்கள்? இருவருமாக, ருஷபம் போன்ற தோள்களும், பெரிய கத்தியும், வில், அம்பும், வைத்துக் கொண்டு இந்த ஜன சஞ்சாரமில்லாத காட்டில், இந்த பயங்கரமான தேசத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். தெய்வ வசமாக என் கண்ணில் பட்டீர்கள். என்ன காரியமாக இங்கு வந்துள்ளீர்கள் சொல்லுங்கள். இந்த தேசம் வந்து, நான் பசியோடு இருக்கும் நேரம், கையில் பா3ணம், கத்தி, வில் என்று வைத்துக் கொண்டிருந்தாலும், என் வாய் வரை வந்து உயிருடன் திரும்பிச் செல்வது என்பது நடக்காது. கபந்தன் பேசிக் கொண்டு இருக்கையிலேயே, ராமன், லக்ஷ்மணனிடம், கஷ்டப் பட்டு நடந்து வந்து, அதை விட கொடிய நிலையை அடைந்து, சீதையை பிரிந்து, அவளையும் திரும்பப் பெறாமல், இப்படி ஒரு விபரீதத்தில் மாட்டிக் கொள்ளவா. விதி மிகக் கொடியது லக்ஷ்மணா. விதியின் வலிமை தான் உன்னையும், என்னையும் இந்த பாடு படுத்துகிறது. விதியின் முன் எதுவுமே லட்சியமில்லை. சூரனோ, பலசாலியோ, அஸ்த்ர ஸஸ்திரங்கள் அறிந்தவனோ, போரில் தோல்வியே கண்டறியாத வீரனோ, காலத்தின் முன் வருந்தத்தான் செய்கிறார்கள். மணற்பாங்கான, நதிக்கரை போல. லக்ஷ்மணனிடம் இப்படிச் சொன்னாலும், திடமான புத்தியும், சத்ய விக்ரமும் உடைய பிரதாபவானான தசரத குமரன், ராமன், நல்ல பலசாலியான லக்ஷ்மணனை ஸ்திரமாக நிற்கச் சொல்லி, தானும் ஸ்திரமாக அசைக்க முடியாதபடி நின்று கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் கப3ந்த4 க்3ராஹோ என்ற அறுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 70 (266) கப3ந்த4 பா3ஹுச்சே2த:3 (கபந்தனின் கைகளை வெட்டுதல்)
சகோதரர்கள் இருவரும் தன் புஜமான பாசத்தில் கட்டுண்டு நிற்பதைப் பார்த்து கப3ந்த4ன் கேட்டான். பசித்திருக்கும் என்னைப் பார்த்து ஏன் நிற்கிறீர்கள், க்ஷத்திரிய குமாரர்களே, தெய்வமாக உங்களை எனக்கு ஆகாரமாக அனுப்பி வைத்திருக்கிறது. இதைக் கேட்டு தன் துயரத்திலிருந்து சமாளித்துக் கொண்டு விட்ட லக்ஷ்மணன், தன்னை ஸ்திரப் படுத்திக் கொண்டு அந்த சமயத்துக்கு உகந்ததான செயலை செய்ய தீர்மானித்தான். ராக4வா, இந்த ராக்ஷஸன் உன்னையும், என்னையும் வெகு வேகமாக இழுக்கிறான். அதனால் கத்தியினால் இவன் கைகளை வெட்டி விடுவோம். இந்த ராக்ஷஸன் உருவத்திலும் பெரியவன், செயலும் அப்படியே இருக்கும். இவன் பலம் இவனது புஜமே. உலகை ஜயித்தது போல நம்மையும் கொல்ல விரும்புகிறான். தவற்றைச் செய்யும் வீணர்களை வதம் செய்வது அரசர்களுடைய கடமையே. யாகத்தின் நடுவில் கொண்டு வரப் பட்ட யாக பசு போல. இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ராக்ஷஸன் கோபம் கொண்டு தன் வாயை இன்னும் பெரிதாக்கிக் கொண்டு அவர்களை விழுங்கத் தயாரானான். உடனே ராக4வர்கள், இருவரும் கத்தியை எடுத்து அவனுடைய உடலின் பாகமான புஜங்களை வெட்டி எறிந்தனர். வலது கையை ராமன் வேகமாக தன் வாளினால் வெட்ட, இடது புஜத்தை லக்ஷ்மணன் வெட்டி எறிந்தான். கைகளை இழந்த அந்த பெரிய கைகளுக்குடையவன் ஓவென்று அலறிக் கொண்டு விழுந்தான் . ஆகாயத்தையும், பூமியையும், திக்குகளையும் அந்த ஓசையால் கலங்கடித்துக் கொண்டு, மேகம் போல விழுந்தான். கைகளில் வெட்டப் பட்ட இடத்திலிருந்து ரத்தம் பெருகும் நிலையிலும், அந்த தா3னவன், நீங்கள் இருவரும் யார்? என்று வினவினான். இவ்வாறு கேட்ட தா3னவனுக்கு லக்ஷ்மணன் பதில் அளித்தான். இவன் இக்ஷ்வாகு குல தா3யாதி3யான ராமன் என்று உலகில் பெயர் பெற்றவன். இவனுடைய இளைய சகோதரன் நான் என்பதை தெரிந்துகொள். என் பெயர் லக்ஷ்மணன். தாயாரின் குறுக்கீட்டினால், ராமன் வனத்துக்கு கடத்தப் பட்டான். என்னுடனும், தன் மனைவியுடனும், நடந்தே வனத்தில் சுற்றிக் கொண்டு வந்தான். ஜன சஞ்சாரம் இல்லாத காட்டில் வசிக்கும் பொழுது இவன் மனைவி ராக்ஷஸனால் அபகரித்துச் செல்லப் பட்டாள். அவளைத் தேடிக் கொண்டு நாங்கள் இங்கு வந்தோம். நீ யார்? எதற்காக கபந்த உருவத்துடன் காட்டில் கிடக்கிறாய்? முகம், வாய், வயிற்றில் இருக்க, முழங்கால் உடைந்து அமர்ந்து இருக்கிறாய். லக்ஷ்மணன் இவ்வாறு கேட்கவும் கப3ந்த4ன் மகிழ்ந்தான். இந்திரனின் சொல்லை நினைவு கூர்ந்தவனாக, உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களுக்கு ஸ்வாகதம். அதிர்ஷ்டவசமாக உங்கள் இருவரையும் கண்டேன். அதிர்ஷ்டவசமாக, உங்கள் கைகளால் என் நீண்ட புஜம் வெட்டப் பட்டது. எனக்கு இந்த விகாரமான உருவம் வந்தது எப்படி என்பதை விவரமாகச் சொல்கிறேன். கேளுங்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் கப3ந்த4 பா3ஹுச்சே2தோ என்ற எழுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 71 (267) கப3ந்த4 சாபாக்2யானம் (கபந்தன் தன் சாபத்தை விவரித்தல்)
ராமா, முன்னொரு காலத்தில், நானும் மகா பலசாலியாக, மிக அழகிய உருவத்துடன் இருந்தேன். என் சரீர அழகு மூன்று உலகிலும் புகழப் பெற்றது. சூரியனும், சோமனும், வருணனும், இந்திரனும் எப்படி உடல் அழகால் போற்றப் பெற்றனரோ, அதற்கு இணையான உடல் வாகு எனக்கும் இருந்தது. என் அழகு எனக்கு கர்வத்தை கொடுத்தது. உலகில் மற்றவரை துச்சமாக நினக்கச் செய்தது. வனத்திற்கு வரும் ரிஷிகளை அவ்வப்பொழுது பயமுறுத்துவேன். ஸ்தூல சிரஸ் என்ற ரிஷி இந்த என் வழக்கத்தால் ஒரு முறை கோபம் கொண்டார். காட்டு ஜீவராசிகளை இந்த ரூபத்தால் வந்த கர்வத்தால் பயமுறுத்துவதைப் பார்த்துக் கொண்டே இருந்தார். கோரமான சாபம் கொடுக்கும் வல்லமையுடைய அவர் ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் இது போலவே கோரமான ரூபம் உனக்கு வந்து சேரட்டும். எல்லோரும் கண்டு அருவருப்பு அடையட்டும். இவ்வாறு சாபமிடவும் வருந்தி நான் அவரை கெஞ்சினேன். இந்த சாபத்துக்கு விமோசனம் என்ன? என்று கேட்கவும் அவரும் ராமன் வனத்துக்கு வந்து உன் சரீரத்தை தகனம் செய்யும் பொழுது விடுபடுவாய். அப்பொழுது உன் அழகிய உருவத்தை பெறுவாய், உன் சுயமான லக்ஷ்மீகரத்தை அடைவாய் என்றார். த3னு என்பவருடைய மகன் நான். லக்ஷ்மணா இது தவிர, இந்திரனுடைய கோபத்துக்கும் ஆளானேன். மிகவும் கடினமான தவம் செய்து ப்ரும்மாவை சந்தோஷப் படுத்தினேன். எனக்கு தீ3ர்கா4யுசு என்று அவர் வரம் தந்தார். இதில் எனக்கு மேலும் அலட்சியம் கூடியது. எனக்கு தீ3ர்கா4யுஸ் கிடைத்திருக்கும் பொழுது இந்திரன் தான் என்னை என்ன செய்ய முடியும் என்று கர்வத்தோடு சண்டையிட இந்திரனை அழைத்தேன். நூறு பிரிவுடைய வஜ்ராயுதத்தால், அவன் கையால் அடிபட்டேன். என் தொடைகளும், முகமும் சரீரத்தினுள் போய் விட்டன. இந்த உருவமும் வேண்டாம், என்னைக் கொன்று விடு என்று இந்திரனை நான் கெஞ்சினேன். அதனால் யமனிடத்தில் என்னை கொண்டு நிறுத்தினான். பிதாமகருடைய வரம் சத்யமானது. அதை மீற முடியாது உனக்கு தீர்கமான ஆயுள் அவர் கொடுத்திருக்கிறாரே, என்று யம ராஜா யோசித்தார். ஆகாரம் இல்லாமல், இந்த உருவத்துடன் நான் எப்படி ஜீவித்து இருப்பேன் என்று நான் அழவும், வஜ்ரத்தால் அடிபட்டு என் தொடைகளும், வயிற்றுக்குள் போக, தலையும் கழுத்திற்குள் விழுந்து விட்ட நிலையில், நீண்ட நாள் வாழ்வது எப்படி என்று கேட்கவும், இந்திரன் என் கைகளை நூறு யோஜனை தூரம் நீளூம்படி செய்தான். என் வயிற்றில் நீண்ட பற்களைக் கொடுத்தான். அதனால் என் நீண்ட கைகளால் வனத்தில் சஞ்சரிக்கும் மிருகங்களை இழுத்து, நேரடியாக வயிற்றுக்குள் போட்டுக் கொண்டு வெறுப்பின் உச்சியில், சிங்கமோ, யானையோ, புலியோ எதுவானாலும் விழுங்கி விடுகிறேன். இந்திரனும் இதையே சொன்னான். எப்பொழுது ராமன், லக்ஷ்மணன் கூட வந்து யுத்தத்தில் உன் புஜங்களை வெட்டுகிறானோ, அப்பொழுது ஸ்வர்கம் போவாய் என்றான். இந்த உடலுடன், ராஜ லக்ஷணம் நிரம்பிய ராமா, வனத்தில் கிடைத்ததை வாய் அருகில் கொண்டு வரும் பொழுது என்ன என்று பார்க்கிறேன். எது கிடைத்தாலும் சரி என்று வாழ்ந்து வருவதே, ஒரு நாள் ராமன் வருவான் என்ற ஆசையில் தான். இவ்வளவு நாள் இந்த நம்பிக்கையில் தான் காலம் கழித்தேன். என் தேகம் கீழே விழுந்து கிடக்கும் சிரமத்தையும் பொறுத்துக் கொண்டேன். அந்த ராமன் நீ தானா? உனக்கு மங்களம். ராகவா, நான் வேறு யாராலும் கொல்லப் பட முடியாதபடி மகரிஷி வரம் கொடுத்திருக்கிறார். நரர்ஷபா, மனிதருள் சிறந்தவனே, நான் உனக்கு என் மதியினால் உதவி செய்கிறேன். உங்கள் இருவருக்கும் நண்பனாக இருக்கிறேன். என்னை அக்னியில் சம்ஸ்காரம் செய்யுங்கள். தயவு செய்து என் சாப விமோசனத்துக்கு வழி செய்யுங்கள் என்று த3னுவின் மகன் வேண்டிக் கொள்ளவும், லக்ஷ்மணன் கேட்டுக் கொண்டு நிற்கையிலேயே தானே பதில் சொன்னான், ராமன். என் மனைவி சீதா, யசஸ்வினி, ராவணனால் அபகரிக்கப் பட்டாள். நான், சகோதரன், லக்ஷ்மணனுடன் ஜனஸ்தானத்திலிருந்து சற்று தூரம் விலகி சென்ற பொழுது, யாரும் இல்லாத சமயம், இந்த காரியம் நடந்திருக்கிறது. அவன் பெயர் மட்டும் தான் தெரியும். அந்த ராக்ஷஸ உருவத்தை கூட நான் கண்டதில்லை. எங்கு வசிக்கிறான் என்பதோ, அவனுடைய பிரபா4வமோ, எங்கள் இருவருக்கும் தெரியாது. துயரம் அழுத்த, அனாதை போல நாங்கள் அவளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். இந்த உபகாரம் நாங்கள் செய்கிறோம். இதே போல இதற்கு சமமான காருண்யம் எங்களளடமும் இருக்கட்டும். யானைகள் அவ்வப்பொழுது உடைத்து போட்ட மரக் கிளைகளை கொண்டு வந்து, உலர்ந்த கட்டைகளை அடுக்கி உன்னை எரிக்கிறோம். நாளைக் காலை விடிந்தவுடன், நல்ல நேரத்தில் செய்கிறோம். நீ சொல், யார் எப்படி அபகரித்துக் கொண்டு போனார்கள், தெரியுமா? ஏதாவது தெரிந்தால் சொல். விஷயமாக ஏதாவது நீ சொன்னால், அதுவே எங்களுக்கு பரம உபகாரமாக இருக்கும். ராமர் கேட்கவும், குசலமாக ஆன த3னு மகன் பதில் சொன்னான். எனக்கு தெய்வீகமான அறிவும் இல்லை. மைதி2லியையும் எனக்குத் தெரியாது. யார் அவளை அறிவார்களோ, அவளைப் பற்றிச் சொல்கிறேன். என்னை எரித்து நான் என் ரூபத்தை அடைந்த பின் சொல்கிறேன். ப்ரபோ, எரித்து விடாதவரை எனக்கு சக்தியில்லை. எதுவுமே அறியும் திறனும் இந்த சரீரத்தில் இருக்கும் வரை எனக்கு இல்லை. சாபத்தின் காரணமாக என் புத்தியும் வேலை செய்யவில்லை. ராக4வா அதனால் உன் சீதையை அபகரித்த ராக்ஷஸனை, மகா பலசாலியாக இருக்க வேண்டும் அந்த ராக்ஷஸன், என்னால் தானாக வரவழைத்துக் கொண்ட இந்த கோர ரூபம் இது. இந்த என்னை சூரியன் மலை வாயில் களைத்து விழுமுன் ஒரு பள்ளத்தில் போட்டு, முறைப்படி எரித்து விடு. பள்ளத்தில் போட்டு, விதி முறைப் படி நீ சம்ஸ்காரங்கள் செய்தால், ராமா, அந்த ராக்ஷஸனை அறிந்த ஒருவரைப் பற்றி உனக்குச் சொல்வேன். அவனுடன் நட்பு கொள். அசாதாரண வீரன் அவன். உன்னுடன் சந்தோஷமாக நட்பு கொள்வான். மூன்று உலகிலும் அவன் அறியாதது எதுவும் இல்லை எனலாம். வேறு ஏதோ காரணத்திற்காக உலகங்களை சுற்றி இருக்கிறான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் கப3ந்த4 சாபாக்2யானம் என்ற எழுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 72 (268) சீதாதி4க3மோபாய: (சீதையை அடைய உபாயம் சொல்லுதல்)
இவ்வாறு கபந்தன் சொன்னதைக் கேட்டு, வீரர்களான ராஜகுமாரர்கள் இருவரும், மலையில் ஒரு பள்ளத்தை கண்டறிந்து நெருப்பு மூட்டினர். லக்ஷ்மணன் பெரும் நெருப்பு துண்டங்களையெடுத்து கபந்தனின் சிதைக்கு தீ மூட்டினான். வெறும் மாமிசபிண்டம், மலை மேல் கிடப்பது போல இருந்த கபந்தனுடைய சரீரத்தை அதன் கொழுப்பின் காரணமாக நெருப்பு மிக மெதுவாகவே எரிக்க முடிந்தது. திடீரென்று அவசரமாக சிதையை விட்டு புகையில்லாத அக்னி போல வெளிக்கிளம்பி, அப்பழுக்கில்லாத தூய உடையும், திவ்ய மாலைகளும் அணிந்தவனாக சிதையின் அக்னியில், விமலமான ஆகாயத்தில் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டு, ஒவ்வொரு அங்கத்திலும் உரிய ஆபரணங்களோடு, மிகவும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தபடி வெளி வந்தான். ஹம்ஸங்கள் பூட்டிய திவ்யமான விமானத்தில் ஏறி நின்றபடி, பத்து திக்குகளையும் தன் பிரகாசத்தால் வெளிச்சமாக்கிக் கொண்டு, அந்தரிக்ஷத்தில் நின்றபடி, கபந்தன் ராமனிடம் சொன்னான். ராக4வா கேள். எந்த விதமாக சீதையை சீக்கிரம் அடைய முடியும் என்பதைச் சொல்கிறேன். ராமா, *ஆறு விதமான யுக்திகள். இதனுள் எல்லாவிதமான முயற்சிகளும் அடக்கம். தசை முடியும் சமயம், தசா பாகத்தால் சேவிக்கப் படுகின்றன. தசாபாகம் வந்தடையும் சமயம் பலம் குன்றி இருப்பர். இந்த நிலையில் நீ லக்ஷ்மணனுடன் இருக்கிறாய். இதன் காரணமாக உனக்கு மனைவியை பிரியும் நிலை வந்தது. இதனால் அவஸ்யம் நீ ஒரு நண்பனைப் பெற வேண்டும். நண்பர்களுக்காக நீ உயிரைக் கொடுப்பவன் என்பது தெரிந்ததே. இந்த நட்பை நீ செய்தால் தான் சித்தியடைய முடியும். பலவாறு யோசித்த பின் என் மனதில் தோன்றுவதை சொல்கிறேன், கேள். (* இருந்து ஜோதிட விஷயங்கள்) ராமா, சுக்ரீவன் என்று ஒரு வானரன். இந்திரனின் மகனான வாலியின் சகோதரன். இந்த சகோதரனால் விரட்டப் பட்டான். பம்பா வரை நீண்டிருக்கும் ருஸ்ய மூக மலையில் வசிக்கிறான். சுய கௌரவம் மிகுந்தவன். நான்கு வானரங்கள் மட்டுமே அவனுடன் இருக்கின்றன. நல்ல பலசாலி. தேஜஸ் உடையவன். அளவில்லாத சக்தியுடையவன். சத்ய சந்தன். வினயமுடையவன். மகான், நல்ல புத்திசாலி. பொறுமை அடக்கம் உடையவன். வானரேந்திரன். இப்படி இருந்தும் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடையவன். மகா பலமும் பராக்ரமமும் உடையவன் என்று புகழ் பெற்றவன். இவ்வளவு குணங்கள் இருந்தும், சகோதரனால் ராஜ்யத்தின் காரணமாக நாட்டை விட்டுத் துரத்தப் பட்டான். அவன் உனக்கு மித்ரனாவான். சீதையை தேடிக் கண்டு பிடிப்பதில் சகாயமாக இருப்பான். ஹே ராமா, துக்கத்தை விடு. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொள். நடக்க வேண்டியது, விதி, நடந்து விட்டது. இப்பொழுது வேறு விதமாக மாற்ற நம்மால் முடியாது. இக்ஷ்வாகு குல நாதனே, விதியை மாற்ற முடியாது. சீக்கிரமாக இங்கிருந்து கிளம்பு. ராமா| பலசாலியான சுக்ரீவனை சந்தித்து அவனை உன் நண்பனாக ஏற்றுக் கொள். இன்றே, இப்பொழுதே போய், ராமா, சந்திரன் பிரகாசமாக இருக்கும் இந்த சமயத்திலேயே போய் செயல் படுங்கள். வானரர்களின் தலைவன், வானரமே என்று மட்டமாக எண்ண வேண்டாம். செய் நன்றி மறவாதவன். சகாயம் செய்யத் தயாராக இருப்பவன். இஷ்டம் போல் உருவம் எடுக்கவும் வல்லவன். வீர்யம் உடையவன். நீங்கள் அவன் செய்ய விரும்பும் காரியத்தை முடித்து தர சக்தியுடையவர்களே. அவன் தேவை நிறைவேறினாலும், இல்லாவிட்டாலும், உங்கள் காரியத்தை அவன் முடித்து கொடுப்பான். மனதில் சந்தேகத்துடன் நிம்மதியில்லாமல் ருக்ஷரஜஸ: புத்ர: -ருக்ஷரஜஸ் என்ற வானரத்தின் மகன் சுக்3ரீவன், பம்பா நதிக் கரையில் அலைந்து கொண்டிருக்கிறான். பாஸ்கரனின் சொந்த மகன், வாலியினால் துரத்தப் பட்டவன், ஆயுதங்களை தயாராக எடுத்துக் கொண்டு சீக்கிரமாக ருஸ்யமூக மலை சென்று, அந்த வானரத்தை, சந்திரன் சாட்சியாக சக்யம் செய்து கொள். வனசாரி, வனத்தில் திரியும் ஜாதி என்று யோசிக்காதே. குரங்குகளில் ஸ்ரேஷ்டன். ஒவ்வொரு ஸ்தானத்தையும், நர மாமிசம் புசிக்கும் ராக்ஷஸர்களின் நடமாட்டத்தையும் அறிந்தவன். தன் புத்தி கூர்மையால் துல்யமாக தெரிந்து கொண்டுள்ளான். ராக4வா, உலகத்தில் அவன் அறியாத இடமே இல்லை எனலாம். ஆயிரம் கிரணங்களோடு சூரியன் பிரகாசமாக உள்ள அளவும், அவன் நதிகளையும், பெரிய மலைகள், மலை குகைகள், பள்ளங்கள் இவற்றில் தேடி, வானரர்களோடு கூட, உன் பத்னியை கண்டு பிடித்துக் கொடுப்பான். பெரிய உருவம் உடைய வானரங்களை பல திக்குகளிலும் அனுப்புவான். உன் பத்னியும் உன்னைப் பிரிந்து வருந்திக் கொண்டிருப்பாள். ராவணனின் இடத்தில் நிர்மலமாக அவள் இருப்பதை தெரிந்து சொல்வான். மேரு மலையின் சிகரத்தில் இருந்தாலும், மாசற்றவளான உன் பத்னி பாதாளத்தில் இருந்தாலும், வானர ஸ்ரேஷ்டன் ராக்ஷஸர்களை அடித்து உன் பிரியையான வைதேஹியை திருப்ப கொண்டு வந்து சேர்ப்பான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில சீதாதி4க2ம உபாயோ என்ற எழுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 73 (269) ருஸ்யமூக மார்க3 கத2னம்
(ருஸ்யமூக மலைக்கு போகும் வழியை சொல்லுதல்)
ராமனுக்கு சீதையைத் தேட வழியை காட்டி விட்டு, விஷயம் அறிந்த கப3ந்த4ன் மேலும் சொன்னான். ராமா, இதோ நல்ல வழி. இங்கு மரங்கள் பூத்து குலுங்குகின்றன. கிழக்கு பக்கத்தில் வெய்யில் குறைந்த சமயம் மனோ ரஞ்சகமாக இருக்கும். ஜம்பூ3, பிரியால, பனஸ, ப்லக்ஷ, ந்யக்4ரோத, திந்து3க, அஸ்வத்த2, கர்ணிகார, சூத போன்ற பல மரங்கள், த3ன்வனா, நாக3, திலக, நக்தமாலகா, நீலாசோக, கத3ம்ப, கரவீர என்ற புஷ்பங்கள் உடைய மரங்கள், (சிவந்த மலர்களையுடைய) அக்னி முக்ய, அசோக மரங்கள் பாரிபத்ர மரம்,- இவைகளில் ஏறி அல்லது உங்கள் பலத்தால் கீழே தள்ளி, பழங்களை சாப்பிட்டபடி நடந்து செல்லுங்கள். இதைக் கடந்தால் வரும் வனத்தில் மரங்கள், சிறப்பாக பூக்களை பிரதானமாக உடையவை, பூத்துக் குலுங்கும். கண்ணுக்கு விருந்தாக மலர்களை சொரியும். குரவக மரங்கள் வடக்கில் உள்ளதை போலவே விளங்கும். எல்லா விதமான பழ மரங்களும், தேனீக்கள் கூடு கட்டி, மதுவைச் சிந்தும் மரங்கள் நிறைந்த காடு. சைத்ர ரதம் என்ற தேவ லோக வனத்தைப் போல. இதிலும் எல்லா பருவங்களிலும், கனி வகைகள் கிடைக்கும். பழங்களின் பாரத்தால், மரங்கள் வளைந்து, பெரிய கிளைகளோடு, அடர்ந்து இருக்கும். மேகமோ, பர்வதமோ எனும்படி பெரிய பெரிய மரங்கள். அவைகளில் ஏறியோ, கிளைகளை உடைத்து பூமியில் தள்ளியோ, சௌகர்யம் போல அம்ருதம் போன்ற அந்த பழங்களை லக்ஷ்மணன் உனக்கு கொண்டு வந்து கொடுப்பான். வனத்திலிருந்து வனம், மலையிலிருந்து மற்றொரு மலை, பலவிதமான சமவெளி, பிரதேசங்கள், இவைகளைக் கடந்து, அழகிய நீர்நிலையான பம்பா என்ற பெயருடைய இடத்தை சென்றடைவீர்கள். கற்கள் எதுவும் இன்றி, அசையாமல், சமமான தீர்த்தம். இதன் உற்பத்தி ஸ்தானம் எது என்பதே தெரியாதது ஒரு சிறப்பு. மலையிருந்து வந்ததும் அல்ல. அப்படி ஒரு அழகிய குளம் போன்றது. ராமா, அதில் தோன்றிய வண்டல் மண்ணின் காரணமாக அதில் விளையும் கமலங்களும், உத்பல புஷ்பங்களும் மிக அருமையாக இருக்கும். நிறைய பூத்திருக்கும். அங்கு ஹம்ஸங்கள், ப்லவா:, க்ரௌஞ்ச, குரரா: என்ற பக்ஷிகள், இனிமையான நாதத்துடன் கூக்குரலிடும். இவை யாவும் பம்பா நதி ஜலத்தில் மட்டுமே தென்படுபவை. யாருமே இதுவரை, அவைகளை அடித்து துன்புறுத்தியோ, வேட்டையாடியதோ இல்லை என்பதால், மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. நெய் சேர்த்து செய்த பிண்டங்கள் போல ஸ்தூலமாக இருக்கும் அந்த பக்ஷிகளை சாப்பிடுங்கள். வளைந்த அலகையுடைய சிவந்த நரம்புகளுடையவை. பம்பை நதியில் உன் அம்புகளால், மீன்களைப் பிடித்து, நாக்கு, இறக்கையின்றி, கொழுத்த, முட்களையுடையவற்றை, இரும்பில் சுட்டு, உனக்கு பக்தியுடன் லக்ஷ்மணன் கொண்டு வந்து கொடுப்பான். புஷ்பங்கள் நிறைந்த பம்பா நதிக் கரையில், இந்த மீன்களைச் சாப்பிடும் பொழுது, பத்மங்களின் மணம், குளிர்ந்த காற்று, ஆரோக்யமான அனுபவிக்கக்கூடிய குளிர்ச்சியுடன் வீச, உயர் ரக வெள்ளியினாலானதோ, ஸ்படிகமோ எனும்படி, தூய்மையான மீன்களை, கணக்கில்லாமல் இருப்பதை, எப்பொழுதும் நிறைந்து இருப்பவற்றை பிடித்து, இந்த லக்ஷ்மணன் புஷ்கர இலையில் வைத்துக் கொடுப்பான். ஸ்தூலமான, மலை குகைகளில் வசிக்கும், வனத்தில் சஞ்சரிக்கும் இயல்புடைய வானரங்களை, மாலை வேளைகளில் சுற்றிப் பார்த்து தெரிந்து கொண்டு லக்ஷ்மணன், ராமா, உனக்கு காட்டுவான். இந்த வானரங்கள், பெரிய காளைகள் போல பெருத்த உடலும், நல்ல ரூபமும் உடையவை. நடனமாடும். தண்ணீர் குடிக்க வரும் வானரங்களை, ராமா, பம்பையில் காண்பதே ஒரு காட்சி. காட்டு பூ மாலைகளை அணிந்திருக்கும், இவைகளையும், மாலை வேளைகளில் சுற்றி வரும் பொழுது லக்ஷ்மணன் காட்டுவான். (விடபிமால்ய எனும் வகை பூ மாலை). பம்பாவின் குளிர்ந்த நீரையும் பார்த்து உன் துயரம் அகலும். திலகா, நக்தமாலகா என்ற புஷ்பங்கள் நிறைய பூத்திருக்கும். உத்பலங்களும் கணக்கில்லாமல் மலர்ந்து கிடக்கும். தாமரை மலர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், எங்கும் கண்களுக்கு விருந்தாக மலர்ந்து கிடப்பதைக் காணலாம். அவைகளை எப்பொழுதும் எந்த மனிதனும் வளர்க்கவும் இல்லை. யாரும் பறிப்பதும் இல்லை. அந்த மால்யங்கள் (கொத்தாக பூத்தவை) வாடுவதும் இல்லை, சுருங்குவதும் இல்லை. மதங்க3 முனிவரின் சிஷ்யர்கள், அங்கு இருந்தனர். ஒற்றுமையாக வாழ்ந்தனர். கட்டுப் பாட்டோடு இருந்தனர். குருவிற்காக காட்டிலிருந்து சாமான்களை பாரமாக தூக்கி வரும் பொழுது அவர்கள் சரீரத்திலிருந்து பெருகிய வியர்வைத் துளிகள் பூமியில் விழுந்தன. அவைகள் பூக்களாக மலர்ந்தன. முனிவரின் தவ வலிமையால். தவம் செய்யும் முனி குமாரர்களின் வியர்வையில் முளைத்த பூக்கள் எப்பொழுதும் வாடாமல் இருக்கின்றன. அவர்களுக்கு ஏவல் செய்து கொண்டிருந்த ஸ்ரமணி என்ற தபஸ்வினி, சப3ரீ என்ற பெயருடையவள், நீண்ட ஆயுசையுடையவள். இன்னமும் அங்கு இருக்கிறாள். உன்னைப்பார்த்து எல்லா தேவர்களும் வணங்கும் உன்னை வணங்கி ஸ்வர்க லோகம் போகப் போகிறாள். பம்பா நதியின் மேற்கு கரையில் அமைந்துள்ள ஆசிரமத்தைப் பார்த்து, பாதுகாப்பாக அமைந்துள்ள இடத்தை அடைவாய். அந்த மலையிலும், வனத்திலும் நிறைய பாம்புகள் உண்டு. ஆனால், அந்த ஆசிரமத்திற்குள் அவை நுழைவதில்லை. அந்த மதங்க3 ரிஷியின் பெயரால் அந்த வனமும் மதங்க வனம் என்றே அழைக்கப் படுகிறது. தேவ லோகத்து நந்தனத்துக்கு சமமான அந்த வனத்தில் பலவிதமான பறவைகள் பறக்கும் இனிய ஓசையில் நீ சந்தோஷமாக ரசித்து இருப்பாய். கவலைகளிலிருந்து உனக்கு ஒரு மாறுதலாக இருக்கும். சுதுக்காரோஹணம் என்ற பெயரையுடைய கல் பலகை இருக்கிறது- மிகவும் சிரமப் பட்டு மேலே ஏற வேண்டிய இடம் என்பது இதன் பொருள். ருஸ்ய மூகத்திற்கும், பம்பா நதிக்கும் எதிரில், பூக்கள் நிரம்பிய மரங்கள் நிறைந்த இடத்தில், முன் காலத்தில் ப்ரும்மாதானே நிர்மாணித்தது. அதை குட்டி யானைகள் (அல்லது நாகங்கள். நாகம்- யானை, நாகம் இரு பொருளும் இருந்தாலும், இங்கு யானை) ரக்ஷித்து வருகின்றன. மலையின் உச்சியில் உள்ள இந்த படுக்கையில் படுத்து யார் என்ன கனவு கண்டாலும் கனவில் காணும் செல்வத்தை விழித்தவுடன் அடைவான். ஆனால் எதேனும் கெட்ட எண்ணத்தோடு அந்த கல்லில் ஏறினால், அங்கேயே ராக்ஷஸர்கள், தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அடித்து விடுவார்கள். இந்த குட்டி யானைகள், மதங்க வனத்தில் விளையாடி, ஆரவாரமாக பிளிறிக் கொண்டு வளைய வரும், கும்மாளம் இடும் சத்தம் கேட்கும். ஒவ்வொன்றும் நீல மேகம் போன்ற உருவமும், நிறமும் உடையவை. தனித் தனியாகவும், கூட்டமாகவும் குளத்தில் இறங்கி நீரில் முழ்கி, குளித்து விட்டு சந்தோஷமாக செல்லும். தன்னிச்சையாக செல்லும் இவைகளையும், கரடிகளையும், நீல நிறத்தில் கோமளமாக விளங்கும் ருரூன் என்ற வகை மான்களையும் கண்டு மகிழ்வாய். இந்த காட்சியே மனதில் நிராசை என்பதே தோன்ற விடாமல் உற்சாகத்தை அளிக்க வல்லவை. ராமா, அந்த மலையில் ஒரு அழகான குகை இருக்கிறது. அதன் வாயிலிலும் ஒரு கல் மறைவாக இருக்கும், உள்ளே நுழைவது மிகக் கடினம். அந்த குகையின் முன் வாசலில் பெரிய குளிர்ந்த நீரையுடைய நீர் நிலை ஒன்று உள்ளது. பலவிதமான பழங்கள், கனி காய் வகைகள், மிருகங்களும் நிறைய கிடைக்கும் இடம் அது. அங்கு தான் சுக்3ரீவன் நான்கு வானரங்களுடன் வசிக்கிறான். சில சமயம் மலை உச்சியில் போய் நிற்பான். இவ்வளவு விவரங்கள் சொல்லி விட்டு, கப3ந்த4ன் அந்த இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு மாலையணிந்து சூரியனின் வர்ணத்துக்கு இணையாக ஆகாயத்தில் நின்றான். நீ போய் வா, நாங்களும் கிளம்புகிறோம் என்று சொல்லி, ஆகாயத்தில் நிற்கும் மகா பாக்3யசாலியான கப3ந்த4னுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு, கிளம்பினர். போய் வாருங்கள். உங்கள் காரியம் நிறைவேறட்டும் என்று அவனும் வாழ்த்தி அனுப்பினான். மிகவும் மகிழ்ச்சியோடு அவர்கள் அனுமதி பெற்று கப3ந்த4ன் கிளம்பி விட்டான். தன் சுய ரூபத்தையடைந்து கப3ந்த4ன் பாஸ்கரனுக்கு சமமான காந்தியுடையவனாக ஆகாயத்தில் நின்றபடி, ராமனைப் பார்த்து திரும்பவும், -நட்பு கொள்- என்று சொன்னான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ருஸ்யமூக மார்க3 கத2னம் என்ற எழுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 74 (270) சப3ரீ ஸ்வர்க3 ப்ராப்தி (சபரி சுவர்கம் செல்லுதல்)
அரசகுமாரர்கள் இருவரும், கப3ந்த4ன் காட்டிய வழியிலேயே பம்பா செல்ல கிழக்கு முகமாக புறப்பட்டனர். ராம, லக்ஷ்மணர்கள் இருவரும் அந்த மலையில் இருந்த அனேக சிறிய பழ மரங்களை பார்த்தபடி நடந்தனர். சுக்ரீவனைக் காணும் உத்தேசத்துடன் ராம லக்ஷ்மணர்கள் நடந்தனர்.
ஆங்காங்கு ஓய்வெடுத்துக் கொண்டு பம்பாவின் மேற்கு கரையை அடைந்தனர். பம்பா என்ற அந்த புஷ்கரிணியின் மேற்கு கரையில் சபரியின் அழகிய ஆசிரமத்தைக் கண்டனர். அந்த ஆசிரமம், மிகவும் அழகாக கண் கவர் மலர்களுடன் கூடிய மரங்களும், செடி கொடிகளுமாக, ரசிக்கும் படி இருந்தது. அவர்களைக் கண்டவுடன் சபரி கூப்பிய கரங்களுடன் வந்து ராமரின் பாதங்களில் விழுந்து வணங்கி வரவேற்றாள். லக்ஷ்மணனையும் அதே போல் உபசாரமாக வரவேற்றாள். பாத்3யம் ஆசமனீயம் என்று முறைப் படி அதிதிகளுக்கு தர வேண்டியவைகளைத் தந்தாள். தவம் செய்ய விரதங்களை ஏற்று நடத்தி வரும் ஸ்ரமணீ (தவம் செய்யும் பெண்மணி), மதங்க சிஷ்யையான சபரியை ராமரும் நலம் விசாரித்தார். உன் தவம் இடையூறு இல்லாமல் நடக்கிறதா? கோபத்தையும், ஆகாரத்தையும் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறாயா? தபோத4னே, உன் நியமங்கள் சரிவர நடத்திச் செல்ல முடிகிறதா? உன் மனதிற்கு சுகம், நிம்மதி கிடைத்ததா? நன்றாக பேசுபவளே, நீ செய்த கு3ரு சுஸ்ரூஷை பணிவிடை பயனுள்ளதாக உள்ளதா? சித்3த4ர்களுக்கு இணையான அந்த தபஸ்வினி, வயது முதிர்ந்த சப3ரீ ராமன் அருகில் வந்து பதில் சொன்னாள். இன்று தவம் செய்ததின் பலன் கிடைத்தது. உன் தரிசனம் கிடைத்தது, என் தவப் பயனே. இன்று நான் செய்த தவங்கள் பூர்த்தியாயின. என் கு3ருவுக்கு நான் செய்த பணிவிடைகளும் வீணாகவில்லை. நன்றாக அவர்களை பூஜித்த பலன் கிடைத்து விட்டது. என் ஜீவனும் பயன் பெற்றது. ஸ்வர்கம் செல்வேன் என்பதும் நிச்சயம் ஆயிற்று. தேவர்களில் சிறந்தவனே, உன்னை பூஜை செய்து உன் கடாக்ஷம் பெற்று நான் புனிதமானேன். அரிந்த3மா, (எதிரிகளை அழிப்பவனே) அக்ஷயமான லோகங்களை சென்றடைவேன். உன் பிரசாதம் கிடைத்தபின் எனக்கு எட்டாதது எது? நீ சித்ர கூடம் வந்தபோதே, சில மகரிஷிகள் தர்மம் அறிந்த மகா பாக்ய சாலிகளான சிலர் விமானத்தில் இங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு நான் பணிவிடை செய்து வந்தேன். உன் ராமன் இங்கு வருவான், அவன் வருகையால் இந்த ஆசிரமம் பாவனமாக ஆகும் என்று சொன்னார்கள். என்னைப் பார்த்து, நீ சௌமித்ரியுடன் வரும் அதிதியை உபசரித்து வரவேற்று, தேவைகளை கேட்டறிந்து பணிவிடை செய். அவர்களை கண்ணால் காணும் பாக்கியம் பெறுவாய். அதன் பலனாக அக்ஷயமான லோகங்களை அடைவாய் என்று ஆசிர்வதித்துச் சென்றனர். நானும் அன்றிலிருந்து காட்டில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை சேகரித்து வருகிறேன். இந்த பம்பையின் கரைகளில் விளைவதை உனக்காக சேகரித்து வைத்துள்ளேன். சப3ரீ இவ்வாறு சொல்லவும், ராமன் த3னுவின் மகனான கபந்தனின் சொல்படி, வெளியில் சென்றறியாத அவள் சக்தியை தெரிந்து கொள்ள விரும்பி, அவளை நோக்கி உன் பிரபாவம் பற்றி த3னு சொன்னான். ப்ரத்யக்ஷமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன், சம்மதமானால் சொல் எனவும், சபரீ அந்த வனத்தை இருவருக்கும் காட்டினாள். இதோ பார், மேக வனம் போல அடர்ந்து பக்ஷிகளும், மிருகங்களும் நிறைந்த இந்த இடத்தைப் பார். இதை மதங்க வனம் என்றே அழைத்தனர். இந்த மகா வனத்தில் என் குரு ஜனங்கள், மகாத்மாக்களாக வாழ்ந்தனர். மந்திரங்கள் சொல்லி சாஸ்திர விதிப்படி ஹோமங்கள் செய்தனர். இது தான் விசேஷமான வேதி. இதில் தான் நல்ல தவம் செய்து முதிர்ந்த நிலையில் நடுங்கும் கரங்களோடு இந்த யாக சாலையில் புஷ்பங்களைக் கொண்டு யாகம் செய்தனர். அவர்களின் தவ வலிமையைப் பார். இன்றும் கூட இந்த வேதியின் பிரபாவத்தால் நான்கு திக்குகளிலும் லக்ஷ்மீகரமாக விளங்குகிறது இந்த ஆசிரமம். உபவாசம் இருந்து உடல் வருத்தி தவம் செய்து வந்தவர்கள், நடக்க கூட முடியாமல் போன சமயம் நினைத்த மாத்திரத்தில் ஏழு சமுத்திரங்களும் இங்கு வந்து சேர்ந்தன என்பதைப் பார். ஸ்நானம் செய்தபின் தங்கள் வல்கலைகளை இங்கு உலர்த்துவர். இன்றும் இங்குள்ள மரங்கள் வாடுவதில்லை. தேவ கார்யங்களை செய்பவர்கள், இந்த மரத்தின் பூக்களையும் பழங்களையும் உபயோகிப்பர். அதனால் இந்த பூக்களும், தளிர்களும் எப்பொழுதும் வாடாத தன்மையைப் பெற்றுள்ளன. இந்த வனம் முழுவதையும் பார்த்து விட்டாய். கேட்க வேண்டியதை கேட்டும் தெரிந்து கொண்டு விட்டாய். அதனால் இப்பொழுது உன் அனுமதியுடன் இந்த சரீரத்தை தியாகம் செய்ய விரும்புகிறேன். என் குருஜனங்கள், மகாத்மாக்கள் சென்ற உலகம் போய் அவர்கள் அருகிலேயே இருக்க விரும்புகிறேன். அந்த முனிவர்களின் ஆசிரமத்தில் நான் பரிசாரிணியாக ஏவல் செய்யும் வேலைக் காரியாக இருந்தேன் என்றாள். தர்மம் நிறைந்த அவளது கோரிக்கையை சிலாகித்த ராகவன், லக்ஷ்மணனுடன் அவளை ஆசிர்வதித்து சப3ரீ, உன் விரதம் நான் அறிவேன். என்னையும் பக்தியுடன் உபசரித்தாய். உன் இஷ்டப்படி செய்வாய். சுகமாக போய் வா, என்றார். வல்கலை மரவுரி உடுத்து நடுங்கும் கரங்களோடு அந்த முதியவள், அந்த நிமிஷத்தில் தன் ஜீர்ணமான சரீரத்தை தியாகம் செய்தாள். ராமனது அனுமதி பெற்று, தன்னை நெருப்பில், ஆகுதி செய்து அந்த நெருப்பின் பிரகாசத்துக்கு சமமான பிரகாசமுடன் ஸ்வர்கம் சென்றாள். திவ்யமான ஆபரணங்களுடனும், திவ்யமான மாலைகளை அணிந்தவளாக, திவ்யமான அங்க ராகங்கள் பூசியவளாக, உயர்ந்த ஆடைகளுடன், கண்ணுக்கு இனியவளாக காட்சி தந்தாள். மின்னல் போல் அந்த இடமே அவள் பிரகாசத்தால் பிரகாசமாகியது. எங்கு அவளுடைய குரு ஜனங்கள், மகரிஷிகள் நடமாடுகின்றனரோ, அந்த புண்யஸ்தலத்துக்கு, சபரீ ஸ்ரீ தன் ஆத்ம சமாதியால் சென்றடைந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சப3ரீ ஸ்வர்க3 பிராப்தி என்ற எழுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 75 (271) பம்பா தரிசனம்
தன் ஆத்ம பலத்தால் சபரீ திவ்ய லோகங்களைச் சென்றடைந்ததும், சகோதரன் லக்ஷ்மணனுடன் ராமன் யோசனையில் ஆழந்தான். அந்த மகாத்மாக்களின் பிரபாவத்தை நினைத்து, ஒரே முனைப்புடன் உலக நன்மையையே நினைத்து செயல் பட்டவர்கள் அவர்கள், மகான்கள் என்று நினைத்தபடி உடன் வந்த லக்ஷ்மணனிடம் பேச்சுக் கொடுத்தான். இந்த ஆசிரமத்தை பார்த்து விட்டோம். மகான்கள் இருந்த இடம். பல ஆச்சர்யங்கள் தெரிகின்றன. மானும் புலியும் ஒன்றையொன்று நம்பிக்கையோடு இணைந்து வாழ்கின்றன. பல வித பக்ஷிகளின் சரணாலயமாக இது விளங்குகிறது. ஏழு சமுத்திரங்களின் ஜலமும், இந்த தீர்த்தத்தில் வந்து கலந்திருக்கிறது. விதி முறைப்படி நீந்தார் கடனும் செய்கிறார்கள். நாமும் நம் முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்து விட்டோம். அசுபங்கள் நீங்கி, கல்யாணம் (நன்மை) எதிரில் தெரிவது போல இருக்கிறது. இந்த எண்ணம் என் மனதில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது. என் ஹ்ருதயத்தில் சுபமான காலம் வந்து விட்டது என்று தோன்றுகிறது. அதனால் வா, போகலாம். கண்ணுக்கு இனியதான காட்சி தரும் பம்பாவை கடந்து செல்வோம். ருஸ்யமூக பர்வதம் எங்கே என்று பார்ப்போம். அதிக தூரத்தில் இல்லை என்று நம்புகிறேன். சூரிய புத்திரனான சுக்3ரீவன் அங்குதான் வசிப்பதாகச் சொன்னார்கள். தர்மாத்வான அவன், வாலியிடம் பயந்து எப்பொழுதும் நான்கு வானரங்களோடு ஆபத்தை எதிர் நோக்கியே நடுங்கிக் கொண்டு இருப்பதாக அறிந்தோம். வேகமாக அந்த இடம் போய் சேருவோம். வானர வீரனான சுக்3ரீவனைக் காண்போம். இப்பொழுது சீதையைத் தேடுவது அவன் பொறுப்பில் தானே இருக்கிறது. தீ4ரனான ராமனே இப்படிச் சொன்னதைக் கேட்டு லக்ஷ்மணனும், எனக்கும் பரபரப்பாகத் தான் இருக்கிறது. சீக்கிரமாக சென்று வானர வீரனை காண்போம். என, இருவரும் அந்த ஆசிரமத்தை விட்டு வெளி வந்தனர். நீர் நிறைந்து பாவனமாக இருந்த பம்பா புஷ்கரிணியைக் கண்டனர். நாலாபுறத்திலும் மரங்கள் அடர்ந்து கொடிகளும், பத்மங்களும், வாசனை மிகுந்த தாமிர நிறத்தில் பத்மங்கள், வெண் தாமரைகள், மற்றும் பல புஷ்பங்கள் மண்டிக் கிடந்த நீர் நிலையைக் கண்டனர். பல வர்ணங்கள் கொண்ட கம்பளம் வேலை பாடு மிக்க விரிப்பு போல நீலமான குவலய மலர்கள் மலர்ந்து மற்றும் பல வர்ண பூக்களும் இரைந்து கிடக்க அத்புதமான காட்சியாக இருந்தது. தூரத்திலிருந்தே அந்த நீர் நிலையைக் கண்ட ராமன், நெருங்கி வந்து மதங்க சரஸ் என்ற குளத்தில் நீராடினான். அரவிந்த3, உத்பல, பத்மங்கள் என்று பூக்களின் மணம் நாசியை நிறைத்தது. மாமரங்கள் பூக்கும் காலம் ஆதலால், ப4ர்ஹிண (தோகையுடைய பக்ஷி) குயில்கள் கூவ, திலக, பீ4ஜ பூரம், த4வம், சக்ர என்ற மரங்கள் பூக்கள் நிறைந்திருக்க, தவிர பூக்களுடன் கூடிய கரவீரம், புன்னாக இந்த மரங்களும் மாலதி, மல்லிகை பூக்கள் நிறைந்த புதர்கள், பண்டீரம், நிசுலம், என்ற தாவர வகைகள், அசோகம், சப்தபர்ணம், கேதகீ என்ற தாழம்பூ, நிறைய மொட்டுக்களுடன் கூடிய பலவிதமான மரங்கள், ஒவ்வொரு மரமும், தன்னை கவனமாக அலங்கரித்துக் கொண்ட ஸ்த்ரீ போல காணக் கிடைக்காத சௌந்தர்யத்தோடு விளங்கின. பெரிய பெரிய மரங்கள் எல்லாமே, பூக்கள் நிறைந்தவை. எங்கும் கோயஷ்டி, அர்ஜுனகம், சதபத்ரம், கீரகம் மற்றும் பல பக்ஷிகள் இனிமையாக கத்திக் கொண்டிருந்தன. ராகவர்கள் இருவரும் சேர்ந்து மேலே சென்றபடி இருந்தனர். பக்ஷிகள் நிறைந்த குளத்தையும், வனத்தையும் கண்டு களித்தபடி, நடந்து பம்பா வந்து சேர்ந்தனர். சுபமான குளிர்ந்த நீரையுடைய சமுத்திரம் போன்ற புஷ்கரிணீ. அங்கு இருந்த பக்ஷிகள் கூட மகிழ்ச்சியாகத் தென்பட்டன. பாதப மரங்கள் அழகூட்டின, பலவிதமான மரங்கள், பலவிதமான குளங்கள் இவைகளைக் காண, காண தன் மனைவியை நினைத்து ராமன், காமனால் துன்புறுத்தப் பட்டவனாக ஆனான். உபவனங்களில் பூக்களைக் கண்டும், சால, சம்பகங்கள் சோபையுடன் விளங்க, பக்ஷிகள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து இருப்பதைக் காணவே லக்ஷ்மீகரமான, சொல்லி விளக்க முடியாத ப்ரபையுடன் இருந்தது. தண்ணீர் ஸ்படிகம் போல் தெளிந்து நிரம்பி இருந்தது. மென்மையான மணல் தெரிந்தது. தாமரை மலர்களின் மணம் வீசும் அந்த பம்பா என்ற புஷ்கரிணியைத் திரும்பவும் பார்த்து, சத்ய விக்ரமனான ராமன், லக்ஷ்மணனைப் பார்த்து சொன்னார். இதன் கரையில் தான் முன் சொன்ன தா4துக்கள் நிறைந்த ருஸ்யமூக பர்வதம் இருப்பதாக கேள்விப்பட்டோம். ருக்ஷ ரஜஸ் என்ற (ஹரி குரங்கின் மகனான சுக்3ரீவன் என்ற மகா வீர்யவான் வசிக்கிறான் என்று கேள்விப் பட்டோம். லக்ஷ்மணா, நரர்ஷபா, அந்த சுக்3ரீவனை தேடிப் போ. ராஜ்யத்தை இழந்து, சீதையிடம் அபரிமிதமான ஆசக்தி (அன்பு) வைத்து வாழ்ந்து வந்த நான் அவள் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வேன். பிரிவின் துயரால் பாதிக்கப் பட்ட ராமன், வேறு எந்த சிந்தனையும் இன்றி, தனக்காகவே (ராமனுக்காகவே) வாழ்ந்து வரும் லக்ஷ்மணனைப் பார்த்து, தன் வருத்தத்தை அடக்கிக் கொண்டார். மனோஹரமான, நளினமான பம்பா பிரதேசத்தில் நுழைந்தனர். சோகமும், வருத்தமும் நடத்திச் செல்ல, மனம் வருந்தியபடி வழி நடந்தனர். வெகு தூரம் வளைந்து வளைந்து சென்ற வழியில் நடந்து எதிர்ப்பட்ட சமவெளியைக் கடந்து பம்பாவைக் கண்டனர். சுபமாக விளங்கிய காடும், அனேக, பலவிதமாக பக்ஷிகளின் கூடுகள் தென் பட இருந்த இடத்தைக் கண்டனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் பம்பா தரிசனம் என்ற எழுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
ஸ்ரீமத் ராமாயணத்தில் ஆரண்ய காண்டம் நிறைவுற்றது.