ஸ்ரீமத் ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 1 – 20
ஸ்ரீமத் ராமாயணம்
கிஷ்கிந்தா காண்டம்
அத்தியாயம் 1 (272) ராம விப்ரலம்பா4வேச: (பிரிவுத் துயர் தாங்காமல் ராமர் புலம்புதல்) 4
அத்தியாயம் 2 (273) சுக்ரீவ மந்த்ர: (சுக்ரீவன் மந்த்ராலோசனை) 11
அத்தியாயம் 3 (274) ஹனூமத் ப்ரேஷணம் (ஹனுமானை அனுப்புதல்) 13
அத்தியாயம் 4 (275) சுக்3ரீவ சமீப க3மனம் (சுக்ரீவன் அருகில் செல்லுதல்) 15
அத்தியாயம் 5 (276) சுக்3ரீவ சக்2யம் (சுக்ரீவன் நட்பு) 17
அத்தியாயம் 6 (277) பூ4ஷண ப்ரத்யபி4க்ஞானம் (ஆபரணங்களை அடையாளம் கண்டு கொள்ளுதல்) 19
அத்தியாயம் 7 (278) ராம சமாஸ்வாஸனம் (ராமனை சமாதானப் படுத்துதல்) 21
அத்தியாயம் 8 (279) வாலி வத4 ப்ரதிக்ஞா (வாலியை வதம் செய்ய பிரதிக்ஞை செய்தல்) 22
அத்தியாயம் 9 (280) வைர விருத்தாந்தானுக்ரம:(விரோதம் வளர்ந்த விவரம், வரிசைக்ரமமாக) 25
அத்தியாயம் 10 (281) ராஜ்ய நிர்வாஸக் கத2னம் (ராஜ்யத்தை விட்டே வெளியேற உத்தரவிடுதல்) 26
அத்தியாயம் 11 (282) வாலி வதா4விஷ்கரணம் (வாலியை வதம் செய்ய தீர்மானித்தல்) 28
அத்தியாயம் 12 (283) சுக்ரீவ ப்ரத்யய தானம் (சுக்ரீவனுக்கு நம்பிக்கை அளித்தல்) 33
அத்தியாயம் 14 (285) சுக்ரீவ கர்ஜனம் (சுக்ரீவன் கர்ஜனை செய்தல்) 37
அத்தியாயம் 15 (286) தாரா ஹிதோக்தி: (தாரை ஹிதமாக சொல்லுதல்) 38
அத்தியாயம் 16 (187) வாலி சம்ஹார: (வாலி வதம்) 40
அத்தியாயம் 17 (287) ராமாதி4க்ஷேப: (ராமனை குறை கூறுதல்) 42
அத்தியாயம் 18 (289) வாலி வத4 சமர்த்தனம் (வாலி வதத்தை நியாயப் படுத்துதல்) 46
அத்தியாயம் 19 (290) தாராக3மனம் (தாரை வருதல்) 50
அத்தியாயம் 20 (291) தாரா விலாப: (தாரையின் புலம்பல்) 51
அத்தியாயம் 21 (292) ஹனுமதா3ஸ்வாஸனம் (ஹனுமான் ஆறுதல் சொல்லுதல்) 53
அத்தியாயம் 22 (293) வால்யனுசாஸனம் (வாலி தீர்மானித்து ஆணையிடுதல்) 54
அத்தியாயம் 23 (295) அங்க3தா3பி4வாத3னம் (அங்கதன் வணங்குதல்) 56
அத்தியாயம் 24 (295) சுக்ரீவ தாராஸ்வாஸனம் (சுக்ரீவன் தாரையை சமாதானப் படுத்துதல்) 57
அத்தியாயம் 25 (296) வாலி சம்ஸ்காரம் (வாலியின் இறுதிக் கடன்களை நிறைவேற்றுதல்) 61
அத்தியாயம் 26 (297) சுக்3ரீவாபி4ஷேக: (சுக்ரீவனுக்கு முடி சூடுதல்) 63
அத்தியாயம் 27 (298) மால்யவன்னிவாஸ: (மால்யவானில் வசித்தல்) 65
அத்தியாயம் 28 (299) ப்ராவ்ருட் ஜ்ரும்பணம் (மழைக் கால இடி ஓசை) 68
அத்தியாயம் 29 (300) ஹனுமத் ப்ரதி போ3த4னம் (ஹனுமான் நினைவு படுத்துதல்) 73
அத்தியாயம் 30 (301) சரத்3 வர்ணனம் (சரத் கால வர்ணனை) 75
அத்தியாயம் 31 (302) லக்ஷ்மணக்ரோத4: (லக்ஷ்மணனின் கோபம்) 82
அத்தியாயம் 32 (303) ஹனூமத் மந்த்ர: (ஹனுமான் அறிவுரை சொல்லுதல்) 85
அத்தியாயம் 33 (304) தாரா சாந்த்வ வசனம் (தாரை சமாதானம் செய்தல்) 86
அத்தியாயம் 34 (305) சுக்ரீவ தர்ஜனம் (சுக்ரீவனை மிரட்டுதல்) 90
அத்தியாயம் 35 (306) தாரா சமாதானம்… 91
அத்தியாயம் 36 (307) சுக்ரீவ லக்ஷ்மணானுரோத: (சுக்ரீவன், லக்ஷ்மணனுக்கு விளக்கிச் சொல்லுதல்) 93
அத்தியாயம் 37 (308) கபி சேனா சமாத்யயனம் (வானர சேனையை திரட்டுதல்) 94
அத்தியாயம் 38 (309) ராம சமீப க3மனம் (ராமன் அருகில் செல்லுதல்) 96
அத்தியாயம் 39(310) சேனா நிவேச: (சேனையை தயார் செய்தல்) 98
அத்தியாயம் 40 (311) ப்ராசீ ப்ரேஷணம் (கிழக்கில் தேட அனுப்புதல்) 100
அத்தியாயம் 41 (312) தக்ஷிணா ப்ரேஷணம் (தென் திசையில் அனுப்புதல்) 104
அத்தியாயம் 42 (313) ப்ரதீசீ ப்ரேஷணம் (மேற்கு நோக்கி அனுப்புதல்) 106
அத்தியாயம் 43 (314) உதீசீ ப்ரேஷணம் (வடக்கு நோக்கி அனுப்புதல்) 109
அத்தியாயம் 44 (315) ஹனூமத் சந்தேச: (ஹனுமானிடம் செய்தி சொல்லியனுப்புதல்) 113
அத்தியாயம் 45 (316) வானர ப3ல ப்ரதிஷ்டா (வானர படை புறப்படுதல்) 114
அத்தியாயம் 46 (317) பூ4 மண்டல ப்ரமண கத2னம் (உலகை சுற்றியதை விவரித்தல்) 115
அத்தியாயம் 47 (318) கபிசேனா ப்ரத்யாக3ம: (வானர படைகள் திரும்பி வருதல்) 116
அத்தியாயம் 48 (319) கண்டு வனாதி விசய: (கண்டு முனிவரின் வனத்தில் தேடுதல்) 117
அத்தியாயம் 49 (320) ரஜத பர்வத விசய: ( வெள்ளி மலையில் தேடுதல்) 118
அத்தியாயம் 50 (321) ருக்ஷ பி3ல ப்ரவேச: (பள்ளத்தினுள் நுழைதல்) 119
அத்தியாயம் 51 (322) ஸ்வயம்ப்ரபா4தித்யம் (ஸ்வயம்ப்ரபா விருந்து உபசாரம் செய்தல்) 121
அத்தியாயம் 52 (323) பி3ல ப்ரவேச காரண கத2னம் (பள்ளத்தினுள் நுழைந்த காரணத்தைச் சொல்லுதல்) 123
அத்தியாயம் 53 (324) அங்கதாதி நிர்வேத: (அங்கதன் முதலானோர் கவலை) 124
அத்தியாயம் 54 (325) ஹனுமத்பேதனம் (ஹனுமான் அறிவுரை) 126
அத்தியாயம் 55 (326) ப்ராயோபவேச: (வடக்கிருத்தல்) 127
அத்தியாயம் 56 (327) சம்பாதி ப்ரஸ்ன: (சம்பாதி வினவுதல்).. 128
அத்தியாயம் 57 (328) ஜடாயு தி3ஷ்ட கத2னம் (ஜடாயு மறைந்ததை தெரிவித்தல்) 129
அத்தியாயம் 58 (329) சீதா ப்ரவ்ருத்யுபாலம்ப: (சீதையின் நிலையை கண்டறிந்து சொல்லுதல்) 131
அத்தியாயம் 59 (330) சுபார்ஸ்வ வசனானுவாத3:(சுபார்ஸ்வன் சொன்னதை திருப்பிச் சொல்லுதல்) 133
அத்தியாயம் 60 (331) சம்பாதி புராவ்ருத்த கத2னம் (சம்பாதி முன் நடந்ததைச் சொல்லுதல்) 134
அத்தியாயம் 61 (332) சூர்யானுக3மநாக்2யானம் (சூரியனை தொடர்ந்து சென்றது) 136
அத்தியாயம் 62 (333) நிசாகர ப4விஷ்யாக்2யானம் (நிசாகரன் என்ற முனிவர் இனி நடக்கப் போவதைச் சொல்லுதல்.) 137
அத்தியாயம் 63 (334) சம்பாதி பக்ஷ ப்ரரோஹ: (சம்பாதியின் இறக்கைகள் வளருதல்) 138
அத்தியாயம் 64 (335) சமுத்திர லங்க4ண மந்த்ரணம். (சமுத்திரத்தை கடக்க யோசனை செய்தல்) 139
அத்தியாயம் 65 (336) ப3லேயத்தாவிஷ்கரணம் (அவரவர் சக்தியை சொல்லுதல்) 140
அத்தியாயம் 66 (337) ஹனுமத் ப3ல சந்துக்ஷனம். அனுமனுக்கு அவன் பலத்தை நினைவுறுத்துதல்… 142
அத்தியாயம் 67 (337) லங்க4னாவஷ்டம்ப: கடலைத் தாண்டும் முயற்சி.. 144
அத்தியாயம் 1 (272) ராம விப்ரலம்பா4வேச: (பிரிவுத் துயர் தாங்காமல் ராமர் புலம்புதல்)
பத்மமும், உத்பல புஷ்பங்களும் நிறைந்த பம்பா புஷ்கரிணியை அடைந்த ராமர் தன்னையறியாமல், துயரம் மேலிட லக்ஷ்மணனிடம் சொன்னார். அந்த புஷ்கரிணியைக் கண்டவுடன் முதலில் சந்தோஷத்தில் அவருடைய இந்திரியங்கள் மகிழ்ந்தன. பின் அதுவே காமத்தை கிளப்பி மனைவியை நினைக்கச் செய்தது. வைடூரியம் போல விமலமான நீரையுடைய இந்த புஷ்கரிணியின் அழகைப் பார். பத்மமும், உத்பலமும் மலர்ந்து அழகாகத் தெரிகின்றன. சுற்றிலும் வித விதமான மரங்கள். என் துயரம் என்னை வாட்டி எடுக்கிறது. இங்கு மரங்களைப் பார். பெரிய மலைகள், சிகரங்களுடன் இருப்பது போல கிளைகளைப் பரப்பிக் கொண்டு நிற்கின்றன. அழகான காடு இது. என்னுடைய இந்த மன நிலையிலும் கூட என்னால் இதை ரசிக்க முடிகிறது. ப4ரதனுடைய துக்கமும், வைதேஹியை பிரிந்ததும் என் மனதை வாட்டவே செய்கின்றன. பலவிதமான புஷ்பங்களுடன், குளிர்ந்த நீரும், மங்களமான காட்சியாக விளங்குகிறது. தாமரை மலர்கள் நீரை மறைத்து பூத்திருக்கின்றன. அதுவே, அதற்கு சோபையளிப்பதாக இருக்கிறது. சர்ப்பங்கள், விஷ நாகங்கள் ஒரு பக்கம், மிருகங்களும் பக்ஷிகளும் ஒரு பக்கம், மிக அதிகமாக நீலமும் பச்சையும் கலந்த நிறமாகத் தெரிகிறது. மரங்களின் பல வர்ணங்களிலான புஷ்பங்கள் கம்பளமாக விரிந்து கிடக்கிறது. புஷ்பத்தின் பாரம் தாங்காமல் நுனிகள் வளைந்து கொடுக்க, அதைச் சுற்றிப் படர்ந்திருந்த கொடிகளிலும் புஷ்பங்கள் மலர்ந்து கிடக்கின்றன. சுகமான இந்த காற்று மன்மதனின் காலம் இது என்பதை நினைவு படுத்துகின்றது. இந்த மாதமே க3ந்த4ம் (மணம்) நிறைந்தது. க3ந்த4வான், சுரபி என்று அழைக்கப்படும் இந்த காலத்தில் பூக்களும், பழங்களும் மரங்களில் நிறைந்திருப்பது இயற்கையே. மழையை பொழியும் மேகத்தை போல இந்த மரங்கள் புஷ்பங்களை வர்ஷிப்பதைப் பார். மலைச் சாரலிலும், அழகிய பல வித மரங்கள், காற்றில் அசைந்து, அசைய, அசைய அவற்றிலிருந்து புஷ்பங்கள் பூமியில் விழுந்து பூமியை அலங்கரிக்கின்றன. இந்த காற்றும், விழுந்த, இன்னும் மரத்தில் ஒட்டிக்கொண்டு விழப்பார்க்கும் புஷ்பங்கள் இவைகளை சீண்டி விளையாடுவது போல இருக்கிறது. யானைகள் தங்கள் இஷ்டம் போல் கிளைகளை உடைத்து ஒடித்து போட, அதன் புஷ்பங்களில் இருந்து கிளம்பும் தேனீக்கள், காற்று தயங்கி நின்ற இடங்களை இட்டு நிரப்புவது போல பாடும் தொனி கேட்கிறது. கோகிலங்கள் வெறி பிடித்தது போல விடாமல் பாடும் இனிய நாதம் கேட்டு, மரங்கள் கூட நடனம் ஆடுவது போல, மரங்கள் ஆட, மலையில் குகையிலிருந்து நுழைந்து புறப்பட்ட காற்று, அனுகீதம், உடன் பாடுவது போல இசைந்து ஒலிக்கிறது. வேகமாக அடிக்கும் காற்று சில சமயம் மரங்களின் நுனிக் கிளைகளை உடைத்து தள்ள, வரிசையாக நின்ற மரங்களுக்கு தொடுத்து வைத்த மாலையைப் போல அந்த உடைந்த கிளைகள் தெரிகின்றன. சந்தனத்தின் குளிர்ச்சியுடன் மேலே படும் பொழுது சுகமாக இருக்கும் காற்று, தன்னுடன் வாசனைகளையும் சுமந்து கொண்டு வந்து வருடிக்கொடுத்து, சிரம பரிகாரம் செய்து கொள்ள உதவுவது போல இருக்கிறது. இந்த காற்றினால் கிளைகள் உடைபட்டு விழ, நிற்கும் மரங்களிடம் அதில் இருந்த தேனீக்கள், கூட்டிலிருந்து வெளிப் படும் தேனீக்கள் முறையிடுவது போல ரீங்காரம் செய்கின்றன. மலைச் சாரலில் அழகிய மனோகரமான புஷ்பங்களுடன் மலைகளின் சிகரங்கள் போல் தோற்றம் தருகின்றன. மலைச் சிகரங்களே புஷ்பங்களால் மூடிக் கிடக்க, காற்றில் அசைந்து சஞ்சலமாக, தேனீக்களின் இனிய ரீங்காரம் சேர்ந்து மரங்களே பாடுவது போல கேட்கிறது. இந்த கர்ணிகார புஷ்பங்களைப் பார். எதிரில் வந்து நிற்பது போல தெரிகிறது. பொன் அணிகளை அணிந்து, மஞ்சள் பட்டாடை உடுத்தி யாரோ நிற்பது போல தோற்றம், மனதை மயக்குகிறது. இது வசந்த காலம் சௌமித்ரே, அதனால் பறவைகள் குதூகலமாக நாதம் செய்கின்றன. இந்த சமயம் நான் சீதையை விட்டு விலகி இருப்பது என்ன துரதிருஷ்டம். மன்மதன் தான் இந்த குயிலை அனுப்பி, துயரத்தில் ஆழ்ந்த என்னை மேலும் வாட்ட, குதூகலமாக பெரும் குரலில் ஆரவாரமாக பாடி என்னை அழைக்க அனுப்பியிருக்கிறான். போட்டிக்கு இதோ பார், தா3த்யூஹகோ என்ற பக்ஷி, இந்த அழகிய காட்டு அருவியில், நீர் வீழ்ச்சியில் லக்ஷ்மணா, மன்மதனின் ஏவலால் பெரும் குரலில் சப்தமிட்டு என்னை மேலும் வருந்தச் செய்கிறது. இந்த பறவையின் கூக்குரலைக் கேட்டு ஆசிரமத்தில் இருக்கும் பொழுது, பிரியா (சீதை) என்னை கூப்பிட்டு பரபரப்புடன் காட்டினாள். விசித்ரமான பறவைகள். எவ்வளவு விதமான குரல். சப்தமிடும் விதங்கள். மரங்களில், புதர்களில், கொடிகளிலிருந்து தடாலென்று விழுவது போல பறக்கின்றன. பறவைகள் தங்கள் இனத்தை தவிர மற்ற பறவைகளோடு போவது இல்லை. வ்யூஹம் அமைத்துக் கொண்டு யுத்தம் செய்யப் போகும் மனிதர்களின் ஒழுங்கு இந்த பறவைகள் தங்கள் இனம் சேர்ந்து ஒரே ஒழுங்காக போவதில், பறப்பதில் பார். இதில் சந்தோஷமாக பறக்கின்றன. ப்4ருங்க3 ராஜா, எனப்படும் வண்டுகள் ரீங்காரம் செய்வது மதுரமான நாதமாக இருக்கிறது. இந்த குலத்தில் பிரஸித்தமான சகுனம் எனும் பக்ஷி கூட்டம், தா3த்யூஹம், பும்சகோகிலம், இவைகளுடன் சேர்ந்து இந்தமரத்தில் ஏகமாக கூச்சலிடுகின்றன. என் மனதில் அனங்கனை கிளப்பி விடுகின்றன. அசோக, ஸ்தபக, அங்கார மரங்களில் இவைகளின் ஆரவாரம், இளம் தளிர் தாம்ர வர்ணங்களில் வெகுவாக முளைத்து வஸந்த காலம் என் மனதை நெருப்பாக சுடுகிறது. கூர்மையான பார்வையுடைய (இமைகளின் மயிர் அடர்ந்து சூக்ஷ்மமாக தெரிய) அழகிய கேசம், ம்ருதுவாக பேசும் என் மனைவியைக் காணாமல் நான் உயிருடன் இருந்து தான் என்ன பிரயோசனம்? என் பிரியமான மனைவிக்கு மிகவும் பிடித்த கானனம் இது. இந்த காலத்தில் அவளுடன் வந்திருந்தால், இந்த கோகிலங்கள் நிறைந்த எல்லையில்லாத காட்டில் குதூகலமாக உடன் வந்திருப்பாள். வஸந்த காலத்தின் குணம், மன்மதனை தூண்டி விட்டு ஆயாசப் படுத்துவது. இதுவே என்னை சுட்டுப் பொசுக்கப் போகிறது. அவளைக் காணாமல் இந்த அழகிய மரங்களை காணும் போது, அருகில் வைதேஹியைக் காணாமல் என் மனதில் துயரம் மண்டுகிறது. என்னைக் கண்டு வசந்தனும் (பருவ காலம்) இணைத்து வைப்பதே அவன் தொழிலாக இருக்க, மான் குட்டி போல மருளும் விழிகளையுடைய என் மனைவியை நினைவு படுத்தி, சிந்தனையும், சோகமும் பலமாக இழுக்க, மேலும் தாபமடையச் செய்கிறான். இந்த சுகமான காற்று சித்ர மாதக் காற்று எப்படி இப்படி க்ரூரமாக ஆயிற்று. எங்கு பார்த்தாலும் மயில்கள் கூட்டமாக ஆடுவதைப் பார். தங்கள் (பக்ஷங்கள்) இறக்கைகள் காற்றில் தூக்கிக் கொள்ள, ஸ்படிகம் போன்ற க3வாக்ஷம், புள்ளிகளுடைய பெண் மயிலுடன், பெண் மயில்கள் சூழ ஆடுகின்றனவே, தங்கள் மகிழ்ச்ச்சியில் மதம் பிடித்து தன்னை மறந்து இருக்கின்றன. என் மனக் கிளர்ச்சியை அதிகமாக்குகின்றன. இதோ பார், லக்ஷ்மணா, ஆடும் ஆண் மயிலைப் பார்த்து பெண் மயில் உடன் ஆடுகிறது. தானும் பதியான மயிலை பின்பற்றி, மலைச் சாரல்களில் சுற்றுகிறது. அவளை மனதில் கொண்டு, மயூரம் (ஆண் மயிலும்) மெதுவாக ஓடுகிறது. சில சமயம் பின் தொடருகிறது. இறக்கைகளை விரித்துக் கொண்டு, பரிகசிப்பது போல ஓடுகிறது. இந்த மயிலுக்கு நிச்சயம் பிரியையான பெண் மயிலை அரண்யத்தில் ராக்ஷஸன் தூக்கிக் கொண்டு போகவில்லை. அதனால் தன் மனைவியுடன், இந்த அழகிய மலைச் சாரலில் நடனமாடுகிறது. எனக்கோ, அவள் இல்லாமல் இந்த புஷ்ப மாசம் தாங்க முடியாத துக்கத்தைத் தருகிறது. திர்யக் யோனி எனப்படும் இந்த பக்ஷிகளிடம் கூட அன்பும் அரவணைப்பும் மிகுந்து இருப்பதைப் பார். லக்ஷ்மணா, பெண்மயில்கள் ஆதுரத்துடன் தன் துணையை தொடர்ந்து போவதைப் பார். இப்படித் தான் பரபரப்பு வந்தால், ஏதாவது புது விஷயம் சொல்ல வேண்டுமானால் ஜானகி தொடர்ந்து ஓடி வருவாள். இப்படி தூக்கிச் செல்லப் படாவிட்டால், நம்முடன் குதூகலமாக வந்து கொண்டிருப்பாள். இதோ பார், லக்ஷ்மணா, இவ்வளவு புஷ்பங்கள், இவை எனக்கு பயன் படாமல் போகின்றன. (சிசிர ருது) குளிர் காலம் முடியும் தறுவாயில் புஷ்பங்கள் பாரமாக நிறைந்து இருக்கும் உபவனங்கள், அழகிய மனதைக் கவரும் மலர்கள், மரங்களுக்கு லக்ஷ்மீகரமான களையைக் கொடுத்தபடி, வண்டுகளுடன் பயமின்றி, அல்லது பயன் படுத்தப் படாமல் பூமியில் இரைகின்றன. ஏன், இந்த பறவைகள் கூட்டமாக குரல் எழுப்புகின்றன? ஒருவரையொருவர் அழைக்கின்றனர் போலும். இரைச்சலாக இiருந்தாலும் இவை என் மனதில் கிளர்ச்சியை உண்டு பண்ணுகின்றன. என் ப்ரியா இருக்கும் இடத்திலும் இதே போல வஸந்த காலம், உல்லாசமாக இருந்தால், அவளும் என்னை நினைத்து வருந்திக் கொண்டிருப்பாள். நிச்சயம் அவள் இருக்கும் இடத்தில் வஸந்தன் அருகில் போகக் கூட மாட்டான். பத்மம் போன்ற நேத்ரங்களை உடையவள், என்னை விட்டு எப்படி இருப்பாள்? மற்றவர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தால் என்ன செய்வாள்? இந்த வஸந்தனும் அங்கு போய் அவளை வருத்துவானோ. சியாமா, ம்ருதுவாக பேசுவாள், தாங்க மாட்டாமல் உயிரையே விட்டு விடுவாள். லக்ஷ்மணா, என் மனதில் புதிதாக இப்பொழுது ஒரு பயம் தோன்றுகிறது. அவள், துயரை தாங்கும் சக்தியுடையவள் இல்லை அதனால், என்னைப் பிரிந்த துக்கம் தாளாமல் நிச்சயம் அவள் உயிரை துறப்பதையே விரும்புவாளாக இருக்கும். அவள் உள்ளம் என்னிடத்தும், என் மனம் அவளிடத்தும் ஸ்திரமாக உள்ளது. பனித்துளியைத் தாங்கியபடி புஷ்பங்களை அடித்துத் தள்ளிக் கொண்டு சுகமாக மேலே படும் காற்று எனக்கு, அவளையே நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் பொழுது நெருப்பாக சுடுகிறது. சீதையுடன் இருந்தபொழுது எப்பொழுதும் மென்மையாக சுகமாக வீசிய காற்று, இப்பொழுது அவள் இல்லாமல் இவ்வளவு கடுமையாக எப்படி ஆயிற்று? இதோ இந்த பக்ஷி ஆகாயத்தில் இருந்து அப்பொழுதும் சத்தமிட்டது. இப்பொழுது அதே காகம், மரத்தில் இருந்தபடி சந்தோஷமாக ஆடுகிறது. (ஆகாயத்தில் இருந்து காகம் கடுமையாக கரைவது அனிஷ்டத்தைச் சொல்லும் சூசகம். அதே காகம் மரத்தில் அமர்ந்து கத்தியபடி ஆடுவது சுப சூசகம். இரண்டுமே முன்பு, பிரிவை குறித்தது, இப்பொழுது நன்மையே, இருவரும் சேருவர் என்பதைக் குறிப்பதாக பாவம்) இந்த பக்ஷி வைதேஹீயின் வாயிற்காப்போனாக இருந்தது. இப்பொழுது என்னை அவளிடம் அழைத்துச் செல்லப் போகிறது போலும். லக்ஷ்மணா, கேட்டாயா? மரத்தில் வசிக்கும் எல்லா பக்ஷிகளுமாக கூக்குரலிடுகின்றன. இந்த திலக மஞ்சரி என்ற புஷ்பம் காற்றில் அசைந்து கீழே விழுந்தது. இந்த வண்டைப் பார். அதனிடம் போய் கொஞ்சுவது போல பேசுகிறது (ரீங்காரம் செய்கிறது). மது அருந்து மயங்கிகிடக்கும் மாது போல அந்த திலக மஞ்சரி அசையாமல் கிடக்கிறது. அந்த அசோகம், காமத்தின் வசமானவர்கள் சோக வர்தனனாக (வளர்ப்பவனாக) செயல் படுகிறது. இளம் தளிர்கள், என்னைப் பார்த்து பயமுறுத்துவது போல இருக்கின்றன. சூத, மரங்களைப் பார் (மா) சிவந்த புஷ்பங்களால் அங்க ராகம் பூசிக் கொண்ட மனிதர்கள் போல பரபரப்புடன் விளங்குகின்றன. சௌமித்ரே, இதோ பார். இந்த பம்பா நதிக் கரையில், கின்னரர்கள் இங்குமங்குமாக நடமாடுகின்றனர். எங்கும் சுபமான மணம் வீசும் தாமரை மலர்களைப் பார். ஜலத்தில் இளம் சூரியன் பிரஸன்னமாக, தாமரையும் நீலோத்பலமும் மலர, ஹம்ஸ, காரண்டவ பக்ஷிகள் நிறைந்து, சௌகந்திகமாக, மணம் நிறைந்தவளாகத் தெரிகிறாள். மலர்ந்த தாமரைகளில் அமரும் வண்டுகள் மகரந்தத்தை சிதறச்செய்வதால், பங்கஜங்கள் நிறைந்து சோபையுடன் விளங்குகிறது. சக்ரவாகங்களும் காணப் படுகின்றன. நித்யம் திரும்பி வனம் செல்லும் மிருகங்கள், மான் கூட்டமும், யானைகளும் தண்ணிர் குடிக்க வருகின்றன. சுத்தமான ஜலத்தில் காற்று வீசி அலைகளைக் கிளப்பினாலும், பங்கஜங்கள் ஜலத்தால் அடிபட்டாலும் அழகாகத் தெரிகின்றன. பத்ம பத்ரம் போன்ற விசாலமான கண்களுடைய எப்பொழுதும் பிரியமான என் பங்கஜமான வைதேஹியை விட்டுப் பிரிந்து வாழ்க்கையே வெறுத்து விட்டது. இது என்ன வேலை? காமன் செய்யும் விஷமம். அருகில் இல்லாமல் போன பிரிய மனைவியை நினவு படுத்தி என்னை வருந்தச் செய்கிறது. கல்யாணி, அதைவிட கல்யாணமாக (சுபமாக) பேசுபவள், காமனே வந்தாலும் நான் பொறுத்துக் கொள்வேன். இந்த வஸந்த காலம், புஷ்பங்கள் நிறைந்த மரங்களைக் கொண்டு என்னை துன்புறுத்தாமல் இருந்தால். அவளுடன் இருக்கும் பொழுது மிகவும் ரமணீயமாக இருந்தது. எல்லாமே அவள் இல்லாமல் எதிர்மறையாகத் தெரிகிறது. பத்மங்களையும், கோச, பலாசங்களையும் கண் தான் பார்க்கிறது. மனம் உடனே இவை சீதையின் நேத்ரம் போல, இவை கேசம் போல என்று எடை போடுகிறது. மனோகரமாக வாயு, மரங்களின் இடையில் புகுந்து, பத்மங்களின் மகரந்த வாசனையை தாங்கி வரும் பொழுது, சீதையின், மூச்சுக் காற்று தானோ என்று நினைக்கிறேன். சௌமித்ரே, பம்பாவின் தென் திசையில், மலைச் சாரலில் பார். கர்ணிகார புஷ்பம், பூத்துக் குலுங்கும் அந்த கிளையைப் பார். எவ்வளவு சோபனமாகத் தெரிகிறது. இந்த மலை, மிக அதிகமாக தாது பொருட்களை உள்ளடக்கி இருக்கிறது. அதனால் காற்று வேகத்தில் இதிலிருந்து வெளிப்படும் புழுதியும், விசித்ரமாக இருக்கிறது. எப்பொழுதும் இலையை மறைத்து புஷ்பங்களோடு இருக்கும் மரங்கள் இந்த இடத்தின் விசேஷம் போலும். கிம்சுக புஷ்பங்கள் விளக்கு போட்டது போல பிரகாசமாகத் தெரிகிறது. பம்பா கரையில் வளரும் இந்த மரங்கள் தேனீக்களின் கூட்டில் இருந்து வழியும், தேன் மணம் உடையதாக, மாலதியும், மல்லிகை கொடியும் சுற்றிக் கொண்டு படர்ந்து வளர, கரவீர(அரளி) புஷ்பங்களும், தாழம்பூ (கேதகி) சிந்து3வார, வாசந்தி புஷ்பங்களும் மலர்ந்து தெரிகின்றன. மாதவி வாசனை நிரம்பிய முல்லை புதர்கள், எங்கும் காணப்படுகின்றன. சிரிபில்வம், மதூ4கம், வஞ்சுளா, வகுலா, சம்பகா, திலகா நாக வ்ருக்ஷம், இவைகளும் பூத்திருக்கின்றன. (நீபா) வேம்பு, வரணா, கர்ஜூரா இவைகளும் புஷ்பித்திருக்கின்றன. பத்மங்கள் கண்களை கவரும் வண்ணம் மலர்ந்திருக்கின்ற பார். நீல அசோகமும் மலர்ந்துள்ளது. லோத்ரா என்ற வகை மலையின் அடிவாரத்தில் சிங்கத்தின் கேசம் போல சிங்க கேசர பிஞ்சரம் எனும் வகை, அங்கோலம், குரண்டம், பூர்ணகம், பாரிபத்ரகம், சூதா:, பாடலய:, கோவிதார மரங்கள், இவைகளிலும் புஷ்பங்கள் தென்படுகின்றன. மலை சாரலில் முசுலிந்தான், அர்ஜுன மரங்களும் காணப்படுகின்றன. கேதகா, உத்தாளகா, சிரீஷம், சிம்சுபா, இவை, த4வ, சால்மலீ, கிம்சுகா தவிர, சிவந்த குரவக மரங்கள். தினிசா, நக்தமாலா, சந்தன, ஸ்பந்தன மரங்கள். ஹிந்தாலா:, திலகா, நாக வ்ருக்ஷம், இவைகளிலும் புஷ்பங்கள். இந்த புஷ்பங்கள் நுனியில் தெரிய, சுற்றிப் படர்ந்திருக்கும் கொடிகளிலும் புஷ்பங்கள் பூத்து தெரிகின்றன. பம்பையின் இந்த அழகிய பலா மரங்களைப் பார், லக்ஷ்மணா, காற்றில் உடைப் பட்டு விழுந்த கிளைகளுடன் நிமிர்ந்து நிற்கும் இந்த மரங்களை, மதா3ந்த4மான திமிருடன் ஸ்திரீகள் ஆண் மகனை கட்டிப் பிடிப்பது போல கொடிகள் அவைகளின் மேல் படர்ந்து கிடக்கின்றன. இந்த காற்று திருப்தியடையாமல், மரத்துக்கு மரம், மலையிலிருந்து மலைக்குத் தாவி, வனத்திலிருந்து மற்றொரு வனம் சென்று, ஒரே ரசத்தில் அலுத்ததாலோ, பல விதமாக வாசனைகளை அனுபவிக்கும் ஆசையோடு வளைய வருகிறது. சில மரங்களில் பூக்கள் முழுவதுமாக மலர்ந்து தேன் சொட்ட இருக்கிறது. சில இப்பொழுது தான் மொட்டு கட்டியிருக்கிறது. ஸ்யாம வர்ணமாக தெரிகிறது. மதுகரன் எனும் தேனீ, இது மிக அதிக ருசி, இது ஸ்வாது, இது நன்கு மலர்ந்த பூ என்று தன் ரீங்காரத்தில் தானே திளைத்து மகிழ்ந்தவாறு பூக்களை வட்டமிடுகின்றன. ஒரு பூவின் உள்ளே நுழைந்து திடுமென வெளிஸ்ரீ வந்து, பரபரப்போடு மற்றொரு இடம் செல்கிறது. தேனை விரும்பி இந்த வண்டுகள் பம்பாவில் உள்ள மரங்களைச் சுற்றி கூடு கட்டி வாழ்கின்றன. இதோ பார், பூக்கள் தானே கீழே விழுந்த அழகிய படுக்கையை விரித்து வைத்தாற்போல சுகமாக இருக்கிறது. இந்த மலைச் சாரல் முழுவதும் சிவப்பும் மஞ்சளுமாக புஷ்பங்களின் குவியல், நிரம்பி மலையின் வர்ணமே இது தானோ எனும் படி இருக்கிறது. பனிக் காலம் முடியும் பொழுது லக்ஷ்மணாஸ்ரீ மலர்கள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை சொரிகின்றன. அதனால் தான் இது புஷ்ப மாசம் என்று சொல்லப் படுகிறது. ஒருவரையொருவர் கூவி அழைத்துக் கொள்வது போல ஒவ்வொரு மரத்திலும், தேனீ வண்டுகள் கூட்டம். வித விதமான ரீங்காரத்வனியுடன் பேசிக் கொள்வது போலத் தெரிகிறது. இந்த காரண்டவ பக்ஷி, சாதாரணமாக தண்ணீரில் இருக்கும்,. இப்பொழுது சுபமான நீரை விட்டு வெளி வந்து தன் கூட்டாளிகளோடு சந்தோஷமாக இருக்கிறது. மந்தாகினியின் கரையிலும் இது போல மனோகரமான காட்சிகள் இருந்தன. சில இடங்கள் உலகில் புகழ் பெற்றவை. தன் சிறப்பினால் மனோ ரம்யமாக இருப்பவை. சாத்வியான வைதேஹி இதைப் பார்த்தால், இங்கேயே இருக்கும்படி நேர்ந்தால், இந்திர லோகமும் வேண்டாம், அயோத்தியும் வேண்டாம். அவற்றைக் கூட நான் விரும்ப மாட்டேன். அவளுடன் இந்த புல்வெளியில் அழகிய இடங்களில் மகிழ்ச்சியாக இருப்பேன். எந்த சிந்தனையும் என்னை வாட்டாது. இந்த காட்டில் மனைவி இல்லாமல் வரக் கூடாது. இந்த மலைச் சாரலும், புஷ்பங்கள் நிறைந்த மரங்களும், மனதை கிறங்க அடிக்கின்றன. புஷ்கரிணியின் குளிர்ந்த சுகமான ஜலத்தைப் பார். சக்ரவாகங்களும், காரண்டவ பக்ஷிகளும், மிதக்கின்றன. ப்லவ, க்ரௌஞ்ச பக்ஷிகளைப் பார். வராஹ மிருகங்களும் வந்து நீரைக் குடிக்கின்றன. இந்த பக்ஷிகள் ஆரவாரமாக கூச்சலிட்டுக் கொண்டு இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பக்ஷிகள் குதூகலம் எனக்கும் தொற்றிக் கொள்கிறது. அருகில் சீதை இல்லாததை மிகவும் உணருகிறேன். ச்யாமா, சந்திரன் போன்ற முகம் உடையவள், என் பிரியை அவளை நினைத்து ஏங்க செய்கிறது. இந்த மலைச் சாரலில் மிருகங்களைப் பார். எல்லாம் ஜோடி ஜோடியாக சுற்றுகின்றன. இந்த மான்கள் பெண் மான்களோடு இணைந்து செல்லும் பொழுது குட்டி மான்களின் சாயலை உடைய வைதேஹியை நம்மிடமிருந்து பிரித்து விட்டதே, விதி என்று மனம் வருந்துகிறது. யானைகளைப் பார். மதம் பிடித்தது போல தன் கூட்டத்தோடு தான் சஞ்சரிக்கிறது. இந்த அழகிய மலைச் சாரல் பந்து மித்திரர்களோடு அனுபவிக்க வேண்டிய இடம். தனித்து விடப்பட்ட நம் இருவரையும் நினைத்து இதுவும் என் வருத்தத்தைக் கிளறுகிறது. என் காந்தாவான, சீதையைப் பார்த்தால் தான் எனக்கு நிம்மதி. அவளுடன் திரும்ப இணைந்து வாழ்வேனா? லக்ஷ்மணா, வைதேஹி இங்கு இருந்து இந்த பம்பாவின் சுகமான தென்றலை அனுபவித்துக் கொண்டு இருக்கக் கூடாதா? பத்மத்தின் வாசனையுடன் மங்களகரமான துக்கத்தை அகற்றும், சுகத்தைக் கொடுக்கும் இந்த பம்பாவின் உபவன காற்றை அனுபவிக்க வசதியுள்ளவர்கள் பாக்யசாலிகள். பத்ம, பலாசம், போன்ற கண்களையுடைய ஸ்யாமா, என்னை விட்டுப் பிரிந்து எப்படி உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறாள்? ஜனகன் மகள், என்னுடன் இல்லை. திரும்பச் சென்று சத்ய வாதியான அந்த அரசனிடம் என்ன பதில் சொல்லுவேன்? ஜனங்கள் மத்தியில் சீதை எப்படி இருக்கிறாள் என்று குசலம் விசாரித்தால், நான் எந்த முகத்தோடு அவரை ஏறிட்டுப் பார்ப்பேன். மந்த புத்தி நான். என்னை என் தந்தை காட்டுக்கு அனுப்பினால், என் கூட தொடர்ந்து வருவேன் என்று வந்தவள், நல்லது நினைத்து சீதை என்னுடன் வந்தவள், இப்பொழுது எங்கு எப்படி இருக்கிறாளோ. அவளைப் பிரிந்து இன்னும் உயிருடன் இருக்கிறேனே, லக்ஷ்மணா, எப்படிப்பட்ட கொடியவன் நான். ராஜ்யத்தை இழந்த பொழுது என்னை தேற்றியவள் யாரோ, மனம் தடுமாறியபொழுது பாதுகாப்பாக இருந்தவள் யாரோ, அவளுடைய அழகிய கண்களையும், முகத்தையும் பார்க்க என் மனம் துடிக்கிறது. மெதுவாக புன்னகையுடன், ஹாஸ்யமாக பேசும், மதுரமாக ஹிதத்தைச் சொல்லும் அவள் வார்த்தைகளை எப்பொழுது கேட்பேன்? வன வாசம் என்ற நிலையையே எளிதாக்கி, என் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இருந்தவள், வனத்தில் என்னுடன் சம்பாஷித்தே மகிழ்ந்தாள். அயோத்தி போய் கௌசல்யையிடம் என்ன சொல்வேன்? மனஸ்வினி என் தாய். எங்கே என் மருமகள்? என்று கேட்கும் பொழுது நான் என்ன சொல்வேன்? லக்ஷ்மணா, நீ போ. போய் பரதனைப் பார்த்து சகோதர வாத்ஸல்யம் உடைய அவனை சமாதானப் படுத்து. நான் ஜனகன் மகளைக் காணாமல் உயிருடன் இருக்க மாட்டேன். ராமன் புலம்பிக் கொண்டே போகவும், லக்ஷ்மணன் சற்று யோசித்து, ஆறுதல் சொன்னான். மகாத்மாவான லக்ஷ்மணன், ராமா, உன்னை ஆஸ்வாஸப்படுத்திக் கொள். உனக்கு மங்களம். கவலைப் படாதே, புருஷோத்தமன் நீ. உன்னைப் போன்றவர்கள், மனதில் இப்படி சஞ்சலத்துக்கு இடம் கொடுக்கலாகாது. ப்ரிய ஜன விரஹம் துக்கம் தான். அதிக பற்றுதல் கூடாது என்று சொல்வது இதை எண்ணித் தான். அதி ஸ்னேஹ: (-அதிக பற்றுதல், அதிக எண்ணெய். இரண்டு விதமாக பொருள். அதிக எண்ணெய் இருந்தால் திரி ஈரமாக இருந்தாலும் எரிகிறது. அதி ஸ்னேக பரிஷ்வங்கம்- அதிக ஸ்னேகத்தை அணைத்து இருத்தல்) பாதாளம் வரை போவோமே, இன்னமும் தாண்டிப் போக வேண்டுமா, போவோம். எப்படியும் ராவணனின் இருப்பிடத்தைக் கண்டு பிடிப்போம். அந்த ராக்ஷஸன் தன் பாப கர்மாவின் பலனை அனுபவித்தே தீருவான். நமது தேடுதலின் தீவிரம் தாங்காமல் அவன் சீதையை விட்டு விடுவான். அல்லது தான் மரணம் அடைவான். திரும்ப தி3தியின் கர்ப்பத்தையே சென்றடைந்தாலும், சீதையுடன் அங்கும் அவனைத் துரத்தி சீதையை மீட்டு வருவோம். சீதையைத் தர மறுத்தால் அவனை வதம் செய்வோம். அண்ணலே, உங்கள் சிந்தனை ஆரோக்யமானதாக இருக்கட்டும். பயமும் வருத்தமும் உங்கள் மனதில் இடம் பெறலாகாது. முயற்சி செய்பவனுக்குத் தான் பலன் கிடைக்கும். உற்சாகம் தான் பலம் தரும். அண்ணலே, உற்சாகமின்றி, முயற்சியின்றி எதுவும் சாத்யமாகாது. உற்சாகம் உள்ளவனுக்கு உலகில் கிடைக்காதது எதுவும் இல்லை எந்த வேலையானாலும் உற்சாகம் உள்ளவர்கள் வருத்தம் அடைவதில்லை. இதே உற்சாகத்துடன் போராடி நாம் ஜானகியை மீட்போம். சாதாரண மனிதன் போல புலம்புவதை விடுங்கள். துயரத்திலிருந்து மீண்டு வாருங்கள். -கத2ம் மஹாத்மானம் க்ருதாத்மானம் ஆத்மானம் நாவபு3த்4யசே- நீங்கள் மகாத்மா, செயல் வீரன், இருந்தும் உங்களை நீங்களே இப்படி அறிந்து கொள்ளாமல் ஏன் வீணாக வருந்துகிறீர்கள். அக்ஞானம் உங்கள் குணமே அல்ல. உங்களை உணர்ந்து, எழுந்திருங்கள் என்று லக்ஷ்மணன் தட்டி எழுப்பவும், ராமர் தன் மோக வலையிலிருந்து விடுபட்டவராக, தைரியத்தை வரவழைத்துக் கொண்டார். சொல்ல முடியாத பராக்ரமம் உடைய ராமர் தன் மன வருத்தத்தை, அதைர்யத்தை தூர எறிந்து விட்டு, தன் இயல்பான கம்பீரத்தை அடைந்தார். தன் சகோதரன், லக்ஷ்மணனுடன் மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்ய முனைந்தார். புத்துணர்ச்சி பெற்றவராக, பம்பாவின் அழகிய மரங்களையும், அருவிகளையும், குகைகளையும் புத்துணர்வோடு திரும்ப பார்த்து விட்டு, கிளம்பி விட்டார். மத்த மாதங்கம் போல. மதம் கொண்ட யானை போல நடப்பவர், சற்றும் சிதறாத மனவுறுதி உடையவராக பழைய கம்பீரத்துடன் நடக்கும் தன் தமையனை லக்ஷ்மணன் பின் தொடர்ந்தான். தர்மத்துடனும், பலத்துடனும் பாதுகாப்பவனாக, கவனமாக பின் சென்றான். ருஸ்ய மூக மலையில் அருகில் நடந்து சென்ற அவர்கள், மிகவும் அத்புதமாக காணவே கண்ணுக்கரிய காட்சியனராகத் தெரிந்தனர். அங்கு, சாகா2மிருகம், எனும் குரங்கு அரசன் பயத்தால் நடுங்கினான். செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றான். பயத்தால் மனம் கனக்க, மந்தமாக நடக்கும் யானையைப் போல கம்பீரமாக நடந்து வரும் அவ்விருவரையும் பார்த்து, அந்த வானரம் பெரும் கவலையும், சிந்தனையும் அலைக்கழிக்க கவலையுடன் நோக்கிய வண்ணம் இருந்தான். புண்யமான அந்த ஆசிரமத்தை ராம, லக்ஷ்மணர்கள் அடைந்தனர். வானரங்கள் வசிக்கும் இடம், சுகம் தருவதாக, குளிர்ச்சியாக இருக்க கண்டு வியந்தனர். ஆனால் அந்த வானரங்கள் பயந்து நடுங்குவதைக் கண்டு, நிதானமாக, இருவரும் நெருங்கிச் சென்றனர். பலசாலிகளாக தங்கள் தோற்றமே அவர்கள் பயத்துக்கு காரணம் என்பதை அறியாதவர்களாக.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ராம விப்ரலம்பா4வேச: என்ற முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 2 (273) சுக்ரீவ மந்த்ர: (சுக்ரீவன் மந்த்ராலோசனை)
தங்கள் குடி பிறப்பாலும், குணத்தாலும் உயர்வடைந்தவர்கள், மகாத்மாக்கள் என தகுதி பெற்ற சகோதரர்கள் இருவரும் கையில் உயர் தர ஆயுதங்களை ஏந்தி, வருவதைக் கண்ட சுக்3ரீவன் கவலை கொண்டான். தோற்றமே அவர்களை சிறந்த வீரர்களாக காட்டியது. மனம் கலங்க, நாலா திக்குகளிலும் பார்த்து, ஒரு இடத்தில் தனியாக போய் நின்று கொண்டான். மகா பலசாலிகள் இவர்கள் என்று மனதில் எண்ணிக் கொண்டவன் பெரும் பீதியுடன், தன்னை கட்டுப் படுத்திக் கொள்ள இயலாதவனாக, வருந்தினான். அவர்கள் நடையின் கம்பீரத்தையும், லாகவத்தையும் விமரிசனம் செய்தவனாக, தன் கூட்டாளிகளுடன் கவலையுடன் வானர அரசன், தன் மந்திரிகளைக் கூட்டி ராம லக்ஷ்மணர்களைச் சுட்டிக் காட்டி மந்த்ராலோசனை செய்தான். தான் வர முடியாத இந்த இடத்திற்கு வாலி அனுப்பித்தான், வல்கலை, மரவுரி தரித்து தேடிக் கொண்டு இவர்கள் வந்திருக்கிறார்கள். வேஷதாரிகள் இவர்கள் என்பது நிச்சயம் என்றான். சுக்3ரீவனின் மந்திரிகள் வில்லேந்திய அந்த வீரர்களைப் பார்த்து அந்த மலையடிவாரத்திலிருந்த வேறொரு சிகரத்திற்கு சென்று விட்டனர். அவசரமாக சேனைத் தலைவர்கள், பிரதம தலைவரை கலந்தாலோசிக்க, எல்லா வானரங்களுமாக சுற்றி நின்று கொண்டன. தனித் தனியாகவும், கூட்டமாகவும் குதித்துக் கொண்டு, மலைக்கு மலை தாவியபடி, அந்த வேகத்தில் மலையின் சிகரங்களை ஆட்டம் காணச் செய்தபடி கடைசியில் எல்லாமாக ஓர் இடத்தில் கூடின. அணுக முடியாத இடத்தில் இருந்த மரக் கிளைகளை ஒடித்து போட்டன. ஒரே குழப்பமாக மலை பூரா சுற்றிச் சுற்றி வந்தன. மான்களையும், பூனைகளையும், சிறுத்தைகளையும் பயமுறுத்தியபடி சென்றன. சுக்3ரீவனின் மந்திரிகள் மலையின் ஓரிடத்தில் வந்து சேர்ந்த பின், வானர ராஜனைச் சுற்றி கை கூப்பியபடி நின்றன. வாலியின் விஷமமாக இருக்கும் என்ற சந்தேகத்துடன் பயந்து நடுங்கும் சுக்3ரீவனைப் பார்த்து, வாக்கிய கோவிதன், சொல்லின் செல்வன் என்றுபெயர் பெற்ற ஹனுமான் சொன்னான் பயப்படாதே – (இதுதான் ஸ்ரீமத் ராமாயணத்தில், அனுமனின் முதல் வார்த்தை) இந்த பரபரப்பை விடு. வாலியிடம் கொண்ட பயம் மிக அதிகமாக உன்னை பாதிக்கிறது. இந்த மலையில் வாலி பயம் கிடையாது. வானர ராஜனே, வாலி உன்னை துரத்தியடித்தான் என்பதால் நீ மனம் கலங்கி இருக்கிறாய். வாலியை பார்க்கவே கொடூரமாக இருக்குமே, அந்த கொடூரமான முகத்துடன் நான் யாரையும் இங்கு காணவில்லையே. உன் பாப செயலால் நீ அனுபவித்த துக்கம் நான் அறிந்ததே. ஆனால் இங்கு இப்பொழுது துஷ்டாத்மாவான வாலியும் இல்லை, நீ பயப்பட எந்த விதமான காரணமும் இல்லை. உன் வானர புத்தி, கிளைக்கு கிளை தாவும் குரங்கு புத்தி, உன்னை காட்டிக் கொடுக்கிறது பார். அல்ப புத்தியினால் உன்னை நீ ஸ்திரபடுத்திக் கொள்ள முடியாமல் திணறுகிறாய். புத்தியையும் நுண்ணறிவையும் உபயோகித்து, இங்கிதங்களைத் தெரிந்து கொண்டு மேற்கொண்டு செயல் படுவாயாக. புத்தியை தொலைத்த அரசன் பிரஜைகளை காப்பது எப்படி? ஹனுமானின் இந்த கனிவான வார்த்தைகளைக் கேட்டு அதைவிடவும் மென்மையாக ஹனுமானிடம் விவரித்தான்.
நீண்ட கைகளும், விசாலமான கண்களும் உடையவர்கள். கையில் வில், அம்பு, கத்தி வைத்திருக்கிறார்கள். பார்க்க தேவ குமாரர்கள் போல இருக்கிறார்கள். அந்த கம்பீரத்தைப் பார்த்து யார் தான் பயப் பட மாட்டார்கள். சிறந்த மனிதர்களாகத் தெரிகிறார்கள். வாலி அனுப்பி, வந்திருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகம். அரசர்களுக்கு பலவிதமான நண்பர்கள் இருக்கலாம். அதனால் என் பயம் வீணல்ல. எதிரியானாலும், மனித வேஷம் கொண்டு ரகஸியமாக வந்திருக்கலாம்.. நம்பக் கூடாதவர்களை நம்பி விட்டால், மர்ம ஸ்தானங்களில் அடி படுவோம். இது போல காரியங்களில் வாலி மேதாவி. சந்தேகமேயில்லை. அரசர்கள் நான்கும் அறிந்து வைத்திருக்க வேண்டும். பல விஷயங்களை கவனமாக ஆராய்ந்து, எதிரியை அமுக்க வேண்டும். அந்த செயலை சாதாரண ஜனங்களைக் கொண்டே முடிப்பதும் உண்டு. அதனால் நீ சாதாரண பிரஜை போல, மட்டமான ஆடைகளுடன், கீழ் மட்ட பிரஜை போல மனித உருவில் போ. அவர்கள் யார் என்று அறிந்து வா. வானரமே, அவர்கள் நடையுடைபாவனைகள், சேஷ்டைகள், ரூபம், பேச்சு இவற்றை நன்றாக கவனித்து பார். சந்தோஷமாக இருந்தார்கள் என்றால், அவர்களின் உள் நோக்கம் என்ன? என்று தெரிந்து கொண்டு வா. புகழ்ந்து பேசி, விஸ்வாஸம் ஏற்படும்படி செய்து நீ விஷயங்களை கிரகித்துக் கொள். என்னை நோக்கி நின்று கொண்டு கேள்வி கேள், வானரனே. அந்த வீரர்கள் வில்லும் அம்புமாக காட்டுக்குள் நுழைய என்ன அவசியம்? என்று கேள். அவர்கள் நோக்கத்தில் எதுவும் கள்ளம் இல்லை, சுத்தமான ஆத்மாக்கள் தான் என்றால், நீ இதற்குள் தெரிந்து கொண்டு விடுவாய். குதித்து ஓடும் வானரமே, அவர்கள் பேசும் பேச்சைக் கொண்டு ஊகித்துக் கொள். நல்லவர்களா, கெட்டவர்களா என்பது சற்று பேச்சுக் கொடுத்தாலே தெரிந்து விடும். இவ்வாறு கபி ராஜன் ஆணையிட, மாருதனின் மகனான ஹனுமான், ராம, லக்ஷ்மணர்கள், தங்கி இருந்த இடம் போக தீர்மானித்தான். மிகவும் பயந்து சமாதானம் செய்தாலும் அடங்காமல் நடுங்கிக் கொண்டிருந்த வானர ராஜன் சொன்னதை செயல் படுத்த ஹனுமான், அப்படியே ஆகட்டும் என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான். ராமனும், அவனை விட பலசாலியான, லக்ஷ்மணனும் இருந்த திசை நோக்கி மஹானுபாவனான ஹனுமான் சென்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்3ரீவ மந்த்ர: என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 3 (274) ஹனூமத் ப்ரேஷணம் (ஹனுமானை அனுப்புதல்)
சுக்ரீவனின் வேண்டுகோளின்படி, ஹனுமான் ருஸ்ய மூக மலையிலிருந்து தாவி குதித்து ராகவர்கள் இருக்கும் இடம் செல்ல முனைந்தான். தன் வானர ரூபத்தை விட்டு, மாருதன் புதல்வன், பிக்ஷு ரூபத்தை எடுத்துக் கொண்டான். (சட2 பு3த்3தி4தயா கபி:- நம்ப முடியாத வாலியின் புத்தி, காட்டில் ஒளிந்து கொண்டிருக்கும் வானரங்களை அழிக்க வீரர்களை, வேஷம் போட்டு அனுப்பி வைத்திருக்கிறான், அவர்களை நாமும் பிக்ஷு ரூபத்தில் ஏமாற்றுவோம் என்ற எண்ணம்).பிறகு அந்த ஹனுமான் மெதுவாக, இதமாக பேசியபடி, மிகவும் வினயமாக ராகவர்களை, வணங்கி அவர்களை புகழ்ந்து பேசியபடி சம்பாஷனையை ஆரம்பித்தான். அவர்களை முறைப்படி உபசரித்து, மாருதாத்மஜன், கேட்க வேண்டிய கேள்வியை தன் மனதில் கோர்வைப் படுத்திக் கொண்டு, மிக மெதுவாக கேட்டான். சத்ய பராக்ரமர்களைப் பார்த்து ராஜரிஷிகளோ, தேவர்களோ எனும் படி கம்பீரமாக தோற்றம் தருகிறீர்கள், ஆனால் தபஸ்விகளாக விரதம் ஏற்றுக் கொண்டவர்களாகவும் காட்சி தருகிறீர்கள். இருவரும் நல்ல நிறமுடையவர்கள். இந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்? இங்குள்ள வனசாரிகளான, வானரங்கள், உங்களைப் பார்த்து பயந்து நடுங்கி ஓடுகின்றனவே. இவை மட்டுமல்ல, மற்ற காட்டு மிருகங்களும் உங்களைக் கண்டு பயப்படுகின்றன. எதிரில் தெரியும் பம்பா கரையின் மரங்களைப் பார்த்து பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டே வருகிறீர்கள். இந்த நதியும், இதன் சுபமான ஜலமும் உங்கள் வரவால் சோபை பெற்றுத் தெரிகின்றன. தைரியமும், நல்ல வர்ணத்துடன் பிரகாசிக்கும் உடல் வாகும் உடைய நீங்கள் யார்? பொருந்தாத வல்கலை ஆடையை இடையில் உடுத்தி இருக்கிறீர்கள். உங்கள் புஜ பலத்தைப் பார்த்தும், நீங்கள் பெருமூச்சு விடுவதையும் கண்டு இங்குள்ள பிரஜைகள் வருந்துகிறார்கள். பார்த்தால் சிங்கத்துக்கு சமமான பலம், உருவம் உடையவர்களாகத் தெரிகிறீர்கள். கையில் இந்திரனுடைய வில்லுக்கு சமமான வில். எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள் தான் சந்தேகமில்லை. லக்ஷ்மீகரமான ரூபம் உங்கள் இருவருக்கும், ஸ்ரேஷ்டமான ருஷபம் – காளை போல பராக்ரமம் உடையவர்கள். யானையின் துதிக்கை போல உங்கள் புஜம், ஆனால் நல்ல தேஜஸ் உடைய மனிதர்கள். உங்கள் தேஜஸால் இந்த மலையே உயிர் பெற்றது போல பிரகாசிக்கிறது. ஏதோ ராஜ்யத்தின் அதிபதியாக இருக்க வேண்டியவர்கள், தேவர்களைப் போல இருக்கிறீர்கள். இந்த தேசம் எப்படி வந்து சேர்ந்தீர்கள். வீரர்களே, தாமரை இதழ் போன்ற கண்களையுடையவர்களே, ஜடையும் முடியும் தரித்தவர்கள், ஒருவருக்கொருவர், இணையாக உள்ளவர்கள், தேவலோகத்திலிருந்து இறங்கி வந்து விட்டீர்களா? யதேச்சையாக பூமிக்கு வந்து விட்ட சந்திர சூரியர்களோ, விசாலமான மார்பும், வீரம் தெரிய நிற்கும் தேவகுமாரர்கள், மனித ரூபத்தில் வந்து விட்டீர்களோ? சிங்கத்தின் தோள் வலிமையும், மகா உத்ஸாகமும், உயர்ந்த காளையின் மதமும் சேர்ந்தது போல, அடக்க முடியாத பலமும், உருண்டு திரண்ட புஜங்கள் இரும்பாலான தூண்கள் போல திண்ணெண்றிருக்க, ஒவ்வொரு அங்கத்திலும் ஆபரணங்கள் தரிக்க வேண்டியவர்கள், ஏன் எந்த விதமான ஆபரணமுமின்றி வந்துள்ளீர்கள். நீங்கள் இருவரும் இந்த உலகையே ரக்ஷிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். விந்த்ய மேரு மலை ஒரு எல்லையாகவும், சமுத்திரம் சூழ்ந்ததுமான இந்த பூமி, உங்கள் ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கலாம். இந்த இரு வில்லும் மிக நன்றாக நேர்த்தியாக வேலைப் பாடுடன் கூடியதாக இருக்கிறது. பொன்னாலான இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்றுத் தெரிகின்றன. தூணிகளும் அழகாக இருக்கின்றன. அம்பு நிறைந்து சுபமாக காட்சி தருகின்றன. உயிரைக் குடிக்கும் பாம்புகள் சீறிப் பாய்ந்து வருவது போல கூர்மையான அம்புகள். புடமிட்ட தங்கத்தால் அலங்காரம் செய்யப் பட்டவை. இந்த கத்திகளும் அப்படியே. இவ்வளவு நான் பேசியும் நீங்கள் இருவரும் ஏன் பதில் சொல்ல வில்லை. சுக்3ரீவன் என்று ஒரு வானர சேனைத் தலைவன். தர்மாத்மா. வீரன் தான். இருந்தும் சகோதரனால் கை விடப் பட்டு, துக்கத்தோடு, இந்த உலகில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் அனுப்பித்தான் நான் வந்தேன். அவன் அரசன். அவனுடைய முக்யமான படைவீரர்கள், நால்வர் உடன் வந்தோம், அவர்களுள் நானும் ஒருவன், என் பெயர் ஹனுமான். உங்கள் இருவருடனும் சுக்ரீவன் நட்பு கொள்ள விரும்புகிறான். நான் அவனுடைய மந்திரி என்று அறிந்து கொள்வீர்களாக. பவனாத்மஜன், அதாவது வாயுவின் மகன். சுக்ரீவன் வேண்டிக் கொண்டதால், பிக்ஷு ரூபத்தை எடுத்துக் கொண்டு வந்தேன். என் இஷ்டப் படி உருவம் எடுக்க என்னால் முடியும், ருஸ்ய மூக மலையிலிருந்து இங்கு வந்து சேர்ந்தேன். இவ்வாறு சொல்லி ஹனுமான் வீரர்களான ராம லக்ஷ்மணர்களைப் பார்த்தபடி நின்றான். வாக்கு வன்மை உடையவன், சொல்லின் பொருளை அறிந்து அழகாக பேசக்கூடியவன். ஆனாலும் மேற் கொண்டு எதுவும் சொல்லாமல் நின்றபடி இருந்தான். இவ்வாறு அவன் சொல்லி முடித்ததும், ராமர் லக்ஷ்மணனிடம் சொன்னார். அருகில் நின்ற சகோதரனைப் பார்த்து, முக மலர்ச்சியோடு, மகாத்மா சுக்3ரீவன் என்ற வானர ராஜனுடைய மந்திரி இவன். அவன் சொல்லியனுப்பி என்னிடம் வந்திருக்கிறான். சுக்ரீவனின் மந்திரி என்று வந்திருக்கிற வானரத்திடம் நீயே பேசு, லக்ஷ்மணா எதிரிகளை போரில் அடக்க வல்லமை மிக்க வீரனே, ஸ்னேகத்துடன் மதுரமாக இவனிடம் பேசு. இவனும் வாக்கு வன்மையுடையவனாக தெரிகிறான். ரிக் வேதத்தை முழுவதும் கற்றவன் அல்லாமல், யஜுர் வேதத்தை முறைப்படி மனனம் செய்தவன் அல்லாமல், சாம வேதத்தில் விற்பன்னனாக இல்லாதவன் எவனும் இவ்வாறு பேச முடியாது. வ்யாகரணம் எனும் இலக்கண சாஸ்திரத்தை இவன் முழுமையாக கற்றுத் தேர்ந்திருக்கிறான். நிறைய பேசினாலும் இவன் சொல்லில் அபசப்தம், தவறான சொல் எதுவும் இல்லை. இவன் கண்களிலோ, நெற்றியிலோ, முகத்திலோ, உடலிலோ எந்த விதமான சுருக்கமோ, சேஷ்டையோ இல்லை. விஸ்தாரமாகவும் இல்லை. அதிக சம்க்ஷேபமாகவும் – சுருக்கமாகவும் இல்லை. மிக விளம்பமாகவும் இல்லை. துரித காலத்திலும் இல்லை. நாபியிலிருந்து கண்டம் வழியாக இவன் குரல், மத்யம ஸ்ருதியில் இருந்தது. சம்ஸ்காரங்களை அறிந்தவன். வேகமாகவோ, மிக மெதுவாகவோ இன்றி, மனதைக் கவரும் வண்ணம், வார்த்தைகளை உச்சரிக்கிறான். மூன்று ஸ்தானங்களிலும் விளங்கிய இவனுடைய சிறப்பான வாக்கினால் யார் தான் கவரப் பட மாட்டார்கள். எதிரியாக இருந்து முயற்சி செய்தால் கூட இவனுடைய வாக்கு வன்மையை பாராட்டாமல் இருக்க முடியாது. எந்த அரசனுக்கு இது போல தூதன் இருக்கிறானோ, அனக, (மாசற்றவனே) அவன் செயல்கள், ஏன் வெற்றி பெறாமல் போகும்? இவ்வாறு குண நலன்களையுடைய காரியத்தை நிறைவேற்றி வைக்கக் கூடிய தூதர்கள் யாரிடம் இருக்கின்றனரோ, அவர்கள் நிச்சயம் எல்லா செயல்களையும் குறைவற செய்யப் பெறுவார்கள். இந்த தூதர்களின் வாக் வன்மையே போதுமானது. இவ்வாறு சொல்லவும் சௌமித்ரி சுக்ரீவனின் மந்திரியான வானரத்தைப் பார்த்து பதில் சொன்னான். லக்ஷ்மணன், தானும் வாக்கு வன்மையுடையவன். சொல்லும் பொருளும் தெரிந்து பேசக் கூடியவன். வந்தவனான ஹனுமானும் அதே போல வாக்கு வன்மையும், சொல்லும் பொருளும் அறிந்தவன். இப்படியிருக்கும் பொழுது, லக்ஷ்மணன் பவனாத்மஜனைப் பார்த்து கவனமாக பதில் சொன்னான். சுக்ரீவன் என்ற மகாத்மாவின் குணங்கள் எங்களுக்குத் தெரிந்ததே. குதித்து ஓடும் வானரர்களின் தலைவனாக உள்ள சுக்ரீவனைத் தான் நாங்களும் தேடி வந்தோம். சுக்ரீவன் கட்டளைப் படி என்று நீ சொல்வதை நாங்கள் ஏற்கிறோம். உன் வார்த்தையின் பேரில் செய்கிறோம். நிபுணனான லக்ஷ்மணனின் பதிலைக் கேட்டு, மிகவும் மகிழ்ந்த வாயு புத்திரனான கபி (வானரம்) அவர்களுடன் நட்பு தான் வெற்றிக்கு வழி வகுக்கக் கூடும் என்பதை உணர்ந்தவனாக, தன் எஜமானனிடம் சென்று சக்யம் என்ற நட்பை செய்து கொள்ளத் தூண்ட தீர்மானித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமத் ப்ரேஷணம் என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 4 (275) சுக்3ரீவ சமீப க3மனம் (சுக்ரீவன் அருகில் செல்லுதல்)
இதன் பின் சுக்ரீவன் சொன்னதை செய்து விட்டோம் என்ற திருப்தியோடு, ஹனுமான் திரும்ப தங்கள் சம்பாஷனையை நினைத்து பார்த்து மனதினுள் மகிழ்ந்தவனாக, மனதால் சுக்ரீவனை சென்றடைந்தான். சுக்ரீவனுக்கு ராஜ்யம் கிடைத்து விடப் போகிறது. அவன் செய்யச் சொன்ன செயலை செய்து முடித்து விட்டேன் என்ற எண்ணங்கள் மனதில் தோன்றவும், ராமன் வந்து விட்டான், சுக்ரீவனுக்கு இனி ராஜ்யம் கிடைப்பது உறுதி என்ற நம்பிக்கையும் மனதில் வலுப் பெற்றது. மேலும் தொடர்ந்து விசாரிக்கலானான். நீங்கள் என்ன காரணத்திற்காக இந்த பம்பா கரை வந்து சேர்ந்தீர்கள்.? இதன் கரையில் பயங்கரமான காடு உள்ளதே. அதில் பலவிதமான விஷப் பாம்புகள், மிருகங்கள் நிறைந்து இருக்குமே, சகோதரனுடன் இங்கு வந்த காரியம் என்ன? என்றான். இதற்கும், ராமனின் சைகையை அடுத்து, லக்ஷ்மணனே பதில் சொன்னான். ராஜா தசரதன் என்று புகழ் பெற்ற, தர்மத்தில் சிறந்த அரசன் இருந்தார். நான்கு வர்ணத்தாரையும் விதிப் படி காப்பாற்றி வந்தார். இவரும் யாரையும் பகைத்துக் கொள்ளவில்லை, யாரும் இவரிடம் பகை கொள்ளவும் இல்லை. எல்லோருக்கும் எல்லா ஜீவ ராசிகளுக்கும் மற்றொரு பிதாமகர் (ப்ரும்மா) போல இருந்தார். அக்னிஹோத்ரம் முதலிய யக்ஞங்களை சாஸ்திரோக்தமான முறைப் படி செய்து வந்தார். த3க்ஷிணையும் நிறைய கொடுப்பார். அவருடைய மூத்த மகன் இவன். ராமன் என்று ஊரில் பிரஸித்தி பெற்றவன். உலகில் அனைவருக்கும் அபயம் அளிக்கக் கூடியவன். தன் தந்தை சொல்லை காப்பாற்ற முனைந்தவன். தசரதன் புத்திரர்களில் இவன் வீரன், குணத்தில் சிறந்தவன். ராஜ லக்ஷணங்கள் உடையவன். ராஜ சம்பத்து இவனைத் தேடி வந்தது. ஆயினும், ராஜ்யத்தை இழக்க நேரிட்டது. வனத்திற்கு அனுப்பப் பட்டான். என்னுடன், இங்கு வந்தான். சீதை என்று இவன் மனைவி. அவளும், நாளின் முடிவில் சூரியனின் பிரபை போல இவனைத் தொடர்ந்து வந்தாள். நான் இவனுடைய இளைய சகோதரன். நன்றி மறவாத, அறிவு நிறைந்த இந்த ராமனின் இளையவன். லக்ஷ்மணன் என்பது என் பெயர். இந்த ராமன், சுகமாக வாழ வேண்டியவன். மகான். சிறந்ததையே அனுபவிக்க வேண்டியவன். உலகில் எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஹிதத்தையே நினைப்பவன். இவன் ஐஸ்வர்யத்தை இழந்து வனம் வந்து வசிக்கலானான். அப்பொழுது இவனுடைய இளம் மனைவியை ராக்ஷஸன் அபகரித்துச் சென்று விட்டான். நாங்கள் இருவரும் அருகில் இல்லாத சமயம், விரும்பிய வண்ணம் உருவம் எடுக்க வல்ல ராக்ஷஸன், அவன் யார்? எதற்காக இவன் மனைவியை கடத்திக் கொண்டு சென்றான் என்பது எதுவும் தெரியவில்லை. த3னு என்று திதியின் புத்திரன். சாபத்தால் ராக்ஷஸ உருவம் அடைந்தவன். அவன் தான் சொன்னான். சுக்3ரீவன் வானர ஸ்ரேஷ்டன். சமர்த்தன். அவன் உன் மனைவியைக் கடத்திச் சென்றவனை அறிவான். நானும், ராமனும் சுக்3ரீவனை சரணம் அடைகிறோம். இந்த ராமன், ஏராளமான த4னம், செல்வங்களை தானம் செய்து அளவில்லா புகழ் பெற்றவன். உலக நாயகனாக ஒரு சமயம் இருந்தவன். இப்பொழுது சுக்3ரீவனை தலவனாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறான். இவனுடைய தந்தை முன் ஒரு சமயம், தர்ம வத்ஸலனாக, எல்லோருக்கும் அபயம் அளிப்பவனாக இருந்தான். அவன் மகனான இவனும் சரணம் அளிப்பவனாக விளங்கியவன், இன்று சுக்3ரீவனை சரணடைகிறான். சர்வ லோகத்திற்கும் தர்மாத்மாவாக இருந்து சரண்யனாக இருந்து, (காப்பாறுபவனாக இருந்து) எனக்கு கு3ருவான ராமன், இன்று சுக்3ரீவனை சரணம் அடைகிறான். இவனுடைய தயவில் பிரஜைகள் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்தனர். அந்த ராமன் இன்று வானர ராஜனின் தயவை வேண்டுகிறான். குணங்களில் ஒப்பற்றவன். உலகில் உள்ள அரசர்கள் அனைவரும் இவனை கௌரவித்து, ஏன், தந்தை தசரதனே இவன் குணங்களால் கவரப் பட்டு, கௌரவமாக நடத்தி வந்தான். அந்த தசரத அரசனின் மூத்த மகன் மூவுலகிலும் பிரஸித்தி பெற்றவன். வானரேந்திரனான சுக்3ரீவனை சரணடைகிறான். துயரத்தில் மூழ்கி வருத்தத்துடன் சரணம் அடையும் ராமனுக்கு வானர சேனைத் தலைவனான சுக்3ரீவன் தயை செய்து உதவி செய்ய முன் வர வேண்டும். இவ்வாறு சொல்லும் பொழுதே, லக்ஷ்மணன் கண்களில் நீர் மல்கியது. ஹனுமான் இதைக் கவனித்து, தானும் அதே போல, கவனமாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளால், பதில் சொன்னான். இது போல, புத்தி நிறைந்த, க்ரோதத்தை ஜயித்த, புலனடக்கம் உள்ள வீரர்கள், என் வானர ராஜனால் நிச்சயம் காணப்பட வேண்டும். அதிர்ஷ்ட வசமாக நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். அவனும் ராஜ்யத்தை இழந்தவன். வாலியிடம் விரோதம் கொண்டுள்ளான். மனைவியை அபகரித்துக் கொண்டு சகோதரன் வாலியினால் துரத்தப் பட்டான். சூரிய புத்திரன் அவன். உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்வான். நம்முடன் சேர்ந்து சுக்ரீவனும் சீதையை தேட உதவி செய்வான். என்று சொன்ன ஹனுமான், லக்ஷ்மணனைப் பார்த்து மிக மென்மையாக, போவோமா? சுக்3ரீவன் இருக்கும் இடம் செல்வோமா? என்று கேட்டான். ஹனுமானின் வேண்டுகோளை கேட்டு லக்ஷ்மணன் ராமனைப் பார்த்து இந்த வானரம், வாயு புத்திரன், இவன் மிகவும் மகிழ்ச்சியோடு சொல்கிறான். இவன் எந்த காரியத்திற்காக வந்தானோ, அதை செய்து விட்டான். தானே வந்து விட்டான். நம் காரியமும் நிறைவேறும். ராக4வா பிரஸன்னமான முகத்தோடு, ஸ்பஷ்டமான வார்த்தைகளோடு, தெளிவாக சந்தோஷமாக பேசுகிறான். பொய்யாக இருக்காது. தீ4ரன் இவன். வாயு புத்திரன் தவறாக பேசமாட்டான். பிறகு வாயு புத்திரன் ஹனுமான், பிக்ஷு ரூபத்தை விட்டு, அந்த வீரர்களை தோளில் தூக்கிக் கொண்டு, சுக்3ரீவன் சமீபம் சென்றான். வாயு புத்திரனான அந்த வானரம், சுய ரூபத்தில், வானரங்களில் சிறந்தவன், மதியூகம் மிகுந்தவன் என்று பெரும் புகழ் வாய்ந்தவன், தன் காரியம் நிறைவேறிய மகிழ்ச்சியோடு, கால்களில் தன் பராக்ரமம் தெரிய லாகவமாக, ராஜ குமாரர்களை அழைத்துச் சென்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்3ரீவ சமீப க3மனம் என்ற நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 5 (276) சுக்3ரீவ சக்2யம் (சுக்ரீவன் நட்பு)
சுக்ரீவன் இருக்கும் மலையை நோக்கி, ருஸ்யமூகத்திலிருந்து ஹனுமான் சென்று, சுக்ரீவனிடம் ராம, லக்ஷ்மணர்கள் வந்துள்ள செய்தியைச் சொன்னான். இது தான் ராமன். திடமான விக்ரமம் உடையவன். வந்து விட்டான். இது லக்ஷ்மணன், அவன் சகோதரன். சத்ய ப்ராக்ரமன். இவர்கள் இக்ஷ்வாகு குலத்தவர். தசரத குமாரர்கள். தந்தை சொல்லை காப்பாற்ற வேண்டி வனம் வந்துள்ளனர். ராஜ சூயம், அஸ்வமேதம் என்று பல யாகங்களையும் செய்து, பலரையும் சந்தோஷமாக இருக்கச் செய்தவன். நிறைய தக்ஷிணை கொடுத்து பசுக்களும், நூறு, ஆயிரம், என்று கொடுத்து தவத்தினாலும், சத்ய வாக்கினாலும், பூமியை நன்றாக ஆண்டு வந்தவன், தசரத ராஜா. ஒரு பெண்ணின் தலையீடு காரணமாக அவன் மகனான இந்த ராமன், காட்டில் வசிக்க வந்து விட்டான். நியமங்களோடு காட்டில் வசித்து வரும் பொழுது, ராவணன் இவன் மனைவியை கவர்ந்து சென்று விட்டான். அவன், இப்பொழுது உன் உதவியை நாடுகிறான். உன்னுடன் இந்த சகோதரர்கள் இருவரும் நட்பு கொள்ள விழைகின்றனர். இருவரும் மிகுந்த மதிப்புக்குரியவர்கள். நம் பூஜைக்கு உரியவர்கள். இவர்களிடம் நட்பு கொள். இவர்களை உபசரி. ஹனுமானின் வார்த்தைகளைக் கேட்டு சுக்ரீவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ராகவர்களைப் பார்த்த உடன் மனதில் தோன்றிய பயம் நீங்கியது. தன் நடுக்கம் நீங்கப் பெற்றவனாக, தானும் மனித உருவம் எடுத்துக் கொண்டு, கண்ணுக்கு இனியவனாக, ப்ரீதியுடன் ராகவனிடம் பேசலானான். தாங்கள் தர்ம சீலர்கள். பலசாலிகள். இருந்தும் எல்லோரிடமும் அன்புடையவர்கள். வாயு புத்திரன், உள்ளது உள்ளபடி என்னிடம் விவரமாகச் சொன்னான். உங்கள் குணங்களைச் சொன்னான். அதுவே எனக்கு பெரிய உபகாரம், கௌரவம், லாபம் எல்லாமே. ப்ரபோ, நீங்கள் வானரமான என்னுடன் நட்பு கொள்ள விரும்புவதாகச் சொன்னான். அப்படி என்றால், என்னிடம் நட்பு கொள்வது உங்களுக்கு உகந்ததாக இருக்குமேயானால், இதோ நான் கை கொடுக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். (பா3ஹுரேஷ ப்ரசாரித:-இதோ என் கை நீட்டப் பட்டு விட்டது) உங்கள் கையினால் என் கையை பற்றிக்கொள்ளுங்கள். நட்பின் இலக்கணத்தை கடை பிடிப்போம். நிச்சயம். சுக்ரீவன் இவ்வாறு நட்புடன் பேசவும், ராமனும் மனம் மகிழ்ந்து அவன் கரத்தைப் பற்றிக் கொண்டான். மனப் பூர்வமாக ஸ்னேகத்தைக் காட்டும் அவனை அணைத்துக் கொண்டான். அப்பொழுது ஹனுமான் தன் பிக்ஷு ரூபத்தை விட்டு சுய ரூபத்தில் இருந்தான். கட்டைகளைக் கொண்டு வந்து நெருப்பை மூட்டினான். கொழுந்து விட்டெரியும் அக்னியை புஷ்பங்களால் பூஜித்து, சத்காரங்கள் செய்து, அடக்கத்துடன் அவர்கள் நடுவில் கொண்டு வந்து வைத்தான். இருவரும் அக்னியை வலம் வந்தனர். சுக்ரீவனும், ராகவனும் நட்பு எனும் உறவை ஏற்றுக் கொண்டனர். இருவரும் பிரியத்துடன் ஒருவரையொருவர் விரும்பியவர்களாக ஆனார்கள். வானரம் (ஹரி), ராகவர்கள், ராம, லக்ஷ்மணர்கள், ஒருவரையொருவர் பார்த்து பேசி திருப்தியடைந்தனர். நீ என் தோழனாகி விட்டாய். இனி, துக்கம், சுகம் நம் இருவருக்கும் பொதுவானதே. என் இனிய நண்பனே, என்று ராமன் மகிழ்ச்சியுடன் சுக்ரீவனிடம் சொன்னான். இலைகள், பூக்களுடன் கூடிய ஒரு கிளையை உடைத்து போட்டு, (சால மரக்கிளை) ராமனுடன் சுக்ரீவன் தானும் அமர்ந்தான். வானர ஸ்ரேஷ்டன், ஹனுமான், தானும் ஒரு சந்தன மரக் கிளையை அதன் பூக்களோடு உடைத்து வந்து லக்ஷ்மணனுக்கு ஆசனமாக போட்டான். இதன் பின், சுக்ரீவன், மென்மையாக, மதுரமான வார்த்தைகளால் தன் மகிழ்ச்சியை வெளிக் காட்டும் விதமாக, ராமனுடன் உரையாடினான். இன்னமும் அவன் கண்களில் பயமும், கவலையும் தெரிந்தன. ராமா, நான் ராஜ்யத்திலிருந்து விரட்டப் பட்டேன். பயத்துடன் தான் இந்த பிரதேசத்திலும் சஞ்சரிக்கிறேன். என் மனைவியும் அபகரிக்கப் பட்டாள். மிகவும் கஷ்டமான இந்த நிலையிலும், வனத்தில் கூட நிம்மதியாக இருக்க முடியாமல், பயம் வாட்டுகிறது. என் சகோதரன் தான் வாலி. அவன் தான் என்னை விரட்டுகிறான். என்னிடம் விரோதம் பாராட்டுகிறான். இதிலிருந்து எனக்கு விமோசனம் வேண்டும். ராமா, எனக்கு அபயம் தா இவ்வாறு சுக்ரீவன் வேண்டவும், மகா தேஜஸ்வியான ராமன், சிரித்துக் கொண்டே, மகா கபே, வானரமே, நட்பு என்பது ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதில் தான் நிலைத்து நிற்கும் என்பது எனக்குத் தெரியும். உன் மனைவியை கடத்திச் சென்ற வாலியை நான் வதைக்கிறேன். என்னுடைய அம்புகளைப் பார். இவை சூரியன் போல பிரகாசிக்கும், குறி தவறாத பாணங்கள். இவற்றை வேகமாக அந்த வாலியின் பேரில் பிரயோகித்து அவனை இல்லாமல் செய்கிறேன். மகேந்திர மலை கற்கள் போல கூர்மையான நுனியுடைய, நேராக, ரோஷத்துடன் சீறும் பாம்பு போன்ற என் அம்புகளால் தாக்கப் பட்டு பெரிய மலை கீழே விழுந்தது போல வாலி விழுவதை பார்க்கப் போகிறாய். தன் நன்மைக்காக ராமன், சொன்னதைக் கேட்டு, சுக்ரீவன் மிகவும் மகிழ்ந்தான். தன் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளிப் படுத்தினான். ந்ருசிம்ஹா, ராகவா, உன் தயவால் என் ப்ரியாவையும், ராஜ்யத்தையும் திரும்பப் பெறுவேன். நர தேவா, என் அண்ணன் என் மேல் விரோதம் பாராட்டி மேலும் என்னை துன்புறுத்தாதபடி செய். சீதை, வானரேந்திரன் (வாலி) ராக்ஷஸன் மூவருடைய முறையே, தாமரை, பொன் வண்ணமான, கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்ற கண்கள், சுக்ரீவனும் ராமனும் நட்பு கொண்ட சமயம், இடது கண்கள் வேகமாகத் துடித்தன.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்3ரீவ சக்2யம் என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 6 (277) பூ4ஷண ப்ரத்யபி4க்ஞானம் (ஆபரணங்களை அடையாளம் கண்டு கொள்ளுதல்)
இதன் பிறகு சுக்ரீவன் ரகுநந்தனனைப் பார்த்து அன்புடன் சொன்னான். இதோ என் மந்திரி ஒரு விஷயம் தெரிவித்தான். ஹனுமான் சொல்லி, என்ன காரியமாக வனம் வந்தாய் என்று தெரிந்து கொண்டேன். லக்ஷ்மணனுடன் வனத்தில் வசிக்கும் பொழுது, ராக்ஷஸன் உன் மனைவியை அபகரித்துச் சென்று விட்டதாகச் சொன்னான். ஜனகன் மகளான மைதிலியை, உன்னையும் லக்ஷ்மணனையும் விட்டுப் பிரித்து கழுகரசனான ஜடாயுவை கொன்று விட்டு, அழ, அழ, அவளைத் தூக்கிச் சென்று விட்டான், என்பதையும் அறிந்தேன். மனைவியைப் பிரிந்த துக்கம் சீக்கிரமே உன்னை விட்டு விலகும் ராமா, நான் அவளை கண்டு பிடித்து கொண்டு வருகிறேன். வேத ச்ருதி தொலைந்தது போல, காணாமல் போன சீதையை நான் அழைத்து வருவேன். பாதாளத்தில் இருந்தாலும் சரி, ஆகாயத்தில் இருந்தாலும் சரி, உன் மனைவியை திரும்ப அழைத்து வந்து உன்னிடம் ஒப்படைக்கிறேன். அரிந்த3மா (சத்ருக்களை அடக்கும் ஆற்றல் உடையவனே) இது நிச்சயம். ராகவா, நானும் வாக்கு மீற மாட்டேன். இந்திரன் உள்ளிட்ட தேவர்களும், அசுரர்களும் முயன்றாலும் கூட அவளை எதுவும் செய்ய முடியாது. விஷம் கலந்த உணவு போல அவர்கள் அவளை நெருங்க கூட முடியாது., உன் துயரத்தை விடுவாய். உன் பிரிய மனைவியை நான் மீட்டுத் தருகிறேன். ஒரு அனுமானத்தால் அவளை அறிவேன். அவள் தான் சந்தேகமே இல்லை. ஒரு கொடிய ராக்ஷஸனால் தூக்கிச் செல்லப் பட்ட ஒரு ஸ்த்ரீயை ராம, ராம என்று அலறும், லக்ஷ்மணா, என்றும் குரல் கம்ம, ராக்ஷஸன் மடியில், பாம்பு அரசனின் மனைவி போல துடித்து புரளும் ஒரு பெண்மணியைக் கண்டேன். என்னோடு சேர்த்து ஐந்து வானரங்கள் அங்கு இருந்தோம். மலை உச்சியில் நின்றதாலோ எங்களைப் பார்த்து தெரிந்தோ என்னவோ, தன் மேலாடையை அவள் வீசி எறிந்தாள். அதில் சுப4மான ஆப4ரணங்கள் இருந்தன. அவைகளை நாங்கள் கீழே விழாமல் பிடித்துக் கொண்டோம். பத்திரமாக வைத்திருக்கிறோம். ராகவா, அவைகளை கொண்டு வருகிறோம். அவற்றைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்வாய். இவ்வாறு பிரியமாக பேசிய சுக்ரீவனைப் பார்த்து ராமர் சகே2 சீக்கிரம் கொண்டு வா. ஏன் இன்னமும் தாமதம் செய்கிறாய்? எனவும், சுக்ரீவன் மலையின் ஆழமான ஒரு குகைக்குள் நுழைந்தான். வேகமாக சென்று உத்தரீயமும் அதனுள் ஆபரணங்களுமாக இருந்த முடிச்சை எடுத்து வந்தான். இதோ பார், என்று அவற்றை ராமனிடம் காட்டினான். அந்த ஆடையையும் ஆபரணங்களையும் பார்த்து கண்களில் நீர் நிறைய, பனி மூடிய சந்திரன் போல ஆனான். சீதையிடம் உள்ள ஸ்னேகத்தால், கண்கள் ப்ரவாகமாக ஆயின. ஹா ப்ரியே, என்று தன் தைரியத்தை இழந்தவனாக பூமியில் விழுந்தான். தன் மார்போடு அந்த ஆபரணங்களை அணைத்துக் கொண்டு, புற்றில் இருந்து வெளி வரும் பாம்பு போல பெருமூச்சு விட்டபடி, தன் கண்ணீரை கட்டுப் படுத்தவும் முடியாமல் அருகில் இருந்த சௌமித்திரியைப் பார்த்து கேட்டான். லக்ஷ்மணா, இதோ பார். வேகமாக கடத்தப் பட்டுச் செல்லும் போதும், சீதை, நமக்கு வழி காட்ட கீழே போட்டிருக்கிறாள். தன் சரீரத்திலிருந்து ஆபரணங்களை உத்தரீயத்தில் முடிந்து புல் நிறைந்த இந்த பூமியைப் பார்த்து வீசியிருக்கிறாள். ஆபரணங்கள் சிதறாமல் சிதையாமல் அப்படியே இருக்கின்றன. பார், எனவும், லக்ஷ்மணன் பதில் சொன்னான். குண்டலங்களையோ, இடுப்பில் அணியும் கேயூரம் எனும் ஆபரணத்தையோ நான் அறியேன். கால் கொலுசு தெரியும். தினமும் பாதங்களில் வணங்கும் பொழுது அவை என் கண்ணில் படும் என்றான். ராகவன் சுக்ரீவனிடம் பரபரப்புடன் விசாரித்தான். சுக்ரீவா, சொல், எந்த பக்கமாக அவளைத் தூக்கிக் கொண்டு போவதை கண்டாய்? என் உயிருக்குயிரான மனைவியை அபகரித்துச் சென்ற ராக்ஷஸன், எந்த தேசத்தவன். என் துன்பத்தை வளர்க்கும் அந்த ராக்ஷஸன் எங்கு வசிக்கிறான்? இவன் பொருட்டு நான் எல்லா ராக்ஷஸர்களையும் அழித்து விடப் போகிறேன். மைதிலியைக் கவர்ந்து என் ரோஷத்தை கிளப்பி விட்ட அந்த ராக்ஷஸனை உயிருடனிருக்க விட மாட்டேன். தன் ம்ருத்யுவைத் தானே தேடிக் கொண்டது போல என்னிடம் விரோதம் கொண்டு மரண வாயிலுக்கே வந்து விட்டவன். இரவில் நடமாடும் அந்த ராக்ஷஸன் பலவந்தமாக அவளைத் தூக்கிச் சென்றவன், அந்த என் எதிரி யார் என்று சொல். வானர ராஜனே, அவனை இப்பொழுதே யமனுடைய சன்னிதியில் கொண்டு நிறுத்துகிறேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், பூ4ஷண ப்ரத்யபி4க்ஞானம் என்ற ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 7 (278) ராம சமாஸ்வாஸனம் (ராமனை சமாதானப் படுத்துதல்)
துயரத்துடன், ராமன் இவ்வாறு கேட்கவும், வானரம், தானும் அதே போல வருந்தி கண்ணீர் விட்டபடி, பதில் சொன்னான். அந்த பாபியான ராக்ஷஸனின் இருப்பிடம் நான் அறியேன். அவன் குலம், நிச்சயமாக ஏதோ தாழ்ந்த குலத்தவன் தான் அவன். அவனுடைய விக்ரமம், சாமர்த்யம் எதையும் நான் அறியேன். ஆனால் சத்யம் செய்கிறேன். ராமா, நீ வருந்தாதே. நான் எப்பாடு பட்டாவது மைதிலியை நீ திரும்ப பெறும்படி செய்கிறேன். என் புஜ பலத்தைக் கொண்டு, ராவணனை அவன் கூட்டதோடு அழியும்படி செய்கிறேன். நீ என்றென்றும் என்னிடம் பிரியமாக இருக்க, நான் இதைச் செய்கிறேன். இந்த கவலையை விடு. உன் இயல்பான தைரியம் தான் உன் போன்றோருக்கு அழகு. எனக்கும் தான் மனைவியைப் பிரிந்த துக்கம் வாட்டுகிறது. நான் இப்படி சிந்திக்கவும் இல்லை, கவலைப் படவும் இல்லை. தைரியத்தை இழந்து அழவும் இல்லை. சாதாரண வானரம் நான். தாங்களோ, மகான். வினயம், தைரியம் என்ற உயர்ந்த குணங்களுக்கு இருப்பிடமாக இருப்பவர். நீங்கள் ஏன் மனதை தளர விட வேண்டும்? கண்களில் வடியும் நீரை தைரியத்துடன் கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள். நல்ல பெருந்தன்மை உடையவர்களின் மரியாதை, மனவுறுதியை காப்பாற்றிக் கொள்ளுங்கள். தன் நம்பிக்கையுடைய தீரன், கஷ்டகாலத்திலும், பணம் (செல்வம்) குறைந்தபோதும், உயிரே போய் விடுமோ என்ற பயம் தோன்றும் காலத்தும், தன் புத்தியை உபயோகித்து, தீர ஆலோசித்து விமர்சனம் செய்து கொண்டு, கலங்காமல் நிற்பான். கோழையான மனிதன் தான், நித்யம் மனக் கவலையை தீர்க்க மாட்டாமல் திண்டாடுவான். பாரம் அதிகமான படகு தண்ணீரில் மூழ்குவது போல தன் மன பாரத்தினால் தானே அழிவைத் தேடிக் கொள்வான். இதோ என் கை கூப்பி வணக்கம் தெரிவித்து , உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன். அன்பினால் உங்களிடம் சொல்கிறேன். உங்கள் பௌருஷத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். மற்ற எண்ணங்களுக்கு மனதில் இடம் தராதீர்கள். தன்னம்பிக்கையும் ஆற்றலும் நிறைந்த உங்கள் இயல்புக்கு திரும்பி வாருங்கள். துயரம் வந்த பொழுது, அதையே நினைத்து வருந்துபவன், ஒருக்காலும் சுகத்தை அடைய மாட்டான். அவர்களுடைய தேஜஸும் குறையும். அதனால் நீங்கள் சிந்தனையை விடுங்கள். இப்படி துயரத்தையே தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தால், உயிர் வாழ்வதே கடினமாகி விடும். இந்த துக்கத்தை விடுங்கள். ராஜேந்திரா, தைரியமாக எழுந்து வாருங்கள். சினேகிதன் என்ற முறையில், உங்களுக்கு ஹிதம் என்று எண்ணி சொல்கிறேன். உபதேசம் செய்யவில்லை. நம் தோழமையை நினைத்துப் பார்த்து, நான் சொல்வதைக் கேளுங்கள். இவ்வாறு மதுரமாக, சமாதானப் படுத்திய சுக்ரீவனைப் பார்த்து ராமர் சொன்னார். மேல் துண்டால் முகத்தையும், கண்ணீரையும் துடைத்துக் கொண்டு, தன் இயல்பான நிலைக்குத் திரும்பிய ப்ரபு, சுக்ரீவனின் சொற்களால் தன்னை உணர்ந்தவராக, அவனை அணைத்துக் கொண்டு, ஒரு தோழன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தாய், சுக்ரீவா, என்றார். அன்பினாலும், என் நன்மையை விரும்புவதாலும், நீ என்னை தட்டி எழுப்பி விட்டாய். இதோ நான் என் இயல்பான குணத்தோடு நிமிர்ந்து நிற்க, உன் உதவி தான் காரணம். இது போல பந்து (உறவினன்) கிடைப்பது அரிது. இது போல கஷ்டமான நாட்களில் ஒரு நண்பன் இப்படி அமைவது கடினம். மேற்கொண்டு நடப்பதை யோசிப்போம். மைதிலியைத் தேட நீ முயற்சி செய்வாய். ராக்ஷஸன் துராத்மா, ரௌத்ர குணம் கொண்டவன் அதனால், கவனமாக செயல் பட வேண்டும். நான் செய்ய வேண்டியதையும் தயங்காமல் சொல். க்ஷேத்ரமும் நன்றாக இருந்து, நல்ல மழையும் பெய்தால் எப்படி விளையுமோ, அது போல உன் சொல் என்னிடம் எடுபடும். நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நான் அபிமானத்தோடு சொல்வதாகத் தோன்றினாலும், அது உண்மையே என்று நம்பி ஏற்றுக் கொள். பொய், நான் சொன்னதே இல்லை. இனியும் சொல்ல மாட்டேன். எப்பொழுதும் சொல்ல மாட்டேன். இது நான் உனக்கு சபதம் செய்து சொல்கிறேன். நான் நம்பும் சத்யத்தின் பேரில், ஆணை. இதன் பின் மிகவும் மகிழ்ந்த சுக்ரீவன் தன் கவலை நீங்கியவனாக ஆனான். ராகவனுடைய பேச்சும், சபதம் செய்ததும் அந்த சமயம் உடனிருந்த வானரங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. ஏகாந்தத்தில், நரனும், வானரனும் தங்கள் சுக, துக்கங்களை பகிர்ந்து கொண்டனர். மனிதருள் மாணிக்கமான ராகவனால் தன் காரியம் நிறைவேறும் என்று சுக்ரீவன் நம்பினான். மகானுபாவன் அவன் என்பதை வானர வீரன், மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ராம சமாஸ்வாஸனம் என்ற ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 8 (279) வாலி வத4 ப்ரதிக்ஞா (வாலியை வதம் செய்ய பிரதிக்ஞை செய்தல்)
இந்த சம்பாஷனைகளின் முடிவில், வானர ராஜனான சுக்ரீவன் மிக மகிழ்ச்சியடைந்தவனாக காணப் பட்டான். லக்ஷ்மணனும் அருகில் இருக்க, தன் நன்றியை தெரிவித்துக் கொண்டான். சிறந்த குணங்களின் இருப்பிடமான தாங்கள் எனக்குத் தோழனாக கிடைத்தது என் பாக்கியம். இதனால் நான் தேவதைகளின் அனுக்ரஹத்திற்கும் பாத்திரமாவேன் என்பதில் ஐயமில்லை. உங்கள் உதவியுடன் தேவலோகமே கூட எனக்கு கைக்கெட்டும் நிலையில் இருக்கும் பொழுது என் ராஜ்யம் கிடைப்பது என்ன கஷ்டம்? என் ப3ந்து4க்கள், மித்திரர்கள் இடையில் நான் தான் பாக்யசாலி. ஏனெனில் எனக்குத் தான் அக்னி சாக்ஷியாக ரகு குல செம்மல் நண்பனாக வாய்த்தான். நாள் செல்லச் செல்ல நானும் உங்களுக்கு ஏற்ற அனுரூபமான தோழன் தான் என்று உணருவீர்கள். நான், தானே என் குணங்களைச் சொல்லிக் கொள்வது சரியல்ல. உங்களைப் போன்ற மகான்கள், எடுத்த செயலை முடித்தே தீரும் ஆற்றல் உடையவர்கள். ஒருவரிடம் அன்பு வைத்தாலும், அது அசையாத ஆழமான பாசமாகத் தான் இருக்கும். தன்னம்பிக்கை மிக்கவனே, ராமா, தங்கமோ, வெள்ளியோ, ஆடை ஆபரணங்களோ, சாதுக்களின் நட்பில் விரிசலை உண்டு பண்ணாது என்று சாதுக்கள் சொல்வார்கள். செல்வம் நிறைந்தவனோ, தரித்ரனோ, துக்கத்தில் ஆழ்ந்தவனோ, சுகமாக இருப்பவனோ, தோஷமுடையவனோ, தோஷமே இல்லாதவனோ, நட்பு கொண்ட தோழன் உற்ற உறவினன் ஆவான். இருவருக்குள்ளும் அன்யோன்யமான தோழமை இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் செல்வத்தை தியாகம் செய்தோ, சுகத்தை தியாகம் செய்வதோ, தேகத்தையே தியாகம் செய்வதோ கூட இயல்புதான். ஆமாம், ஆமாம் என்று ராமனும் சுக்ரீவனை ஆமோதித்தான். லக்ஷ்மணனும் உடனிருக்க, சுக்ரீவனை புத்திசாலியாக அங்கீகரித்தான். வாஸவனுக்கு இணையான ஆற்றல் உடையவன் என்று பாராட்டினான். ராமன் நிற்பதைக் கண்டு, லக்ஷ்மணனும் நின்று கொண்டே இருப்பதை பார்த்து சுக்ரீவன், வனத்தில் சுற்றும் முற்றும் பார்த்தான். சற்று தூரத்திலேயே, பூக்களுடன் விளங்கிய சால மரத்தைக் கண்டான். ஒரு சில இலைகளே தெரிய, பூக்கள் நிறைந்திருந்த ஒரு கிளை வண்டுகள் மொய்த்திருந்ததை, ஒரு கிளையை உடைத்து, சால மரக் கிளையில் ராமனை அமரச் செய்து தானும் அமர்ந்தான். அவர்கள் இருவரும் அமர்ந்த பின்னும், லக்ஷ்மணன் நிற்பதைப் பார்த்து ஹனுமான், வேறொரு கிளையை கொண்டு வந்து போட்டு, வினயத்துடன் அமரச் செய்தான். ராமன் சௌகர்யமாக அமர்ந்த பின், சுற்றிலும் உத்தமமான அந்த மலையின் இயற்கையழகில், பிரஸன்னமான சமுத்திரம் போல, தன்னை உள்ளடக்கி மரக் கிளையில் அமர்ந்திருந்த ராமனைப் பார்த்து சுக்ரீவன், மெதுவாகச் சொன்னான். இந்த மகிழ்ச்சியின் ஊடே கவலை வாட்டிய தன் மனதின் மற்றொரு பாகத்தை திறந்து காட்டினான். ராமா, நான் என் மனைவியை பிரிந்து, அவளை பறி கொடுத்த துக்கத்துடன் இந்த ருஸ்ய மூக மலையில் திரிந்து கொண்டிருக்கிறேன். என் சகோதரன் வாலியினால் உறவையே நிராகரிக்கப் பட்டேன். அதற்கும் மேல் விரோதம் பாராட்டி வருகிறான். வாலியை நினைத்தாலே, நடுங்கும் எனக்கு, அனாதையான என்னிடம் தயவு செய். நீ சர்வ லோக சரண்யன், சர்வ லோக பயங்கரனாகவும் விளங்குவாய், தவற்றைக் கண்டால் என்று நான் அறிவேன். இதற்கு சிரித்துக் கொண்டே ராமன் பதில் சொன்னான். உபகாரம் செய்வது தான் நட்புக்கு அழகு. அபகாரம் செய்தவன் சத்ருவாவான். இன்றே உன் மனைவியை அபகரித்தவனைக் கொல்கிறேன். இதோ பார், வேகமாக செல்லும் கூர்மையான என் அம்புகளைப் பார். இவை கார்த்திகேய வனத்தில் தோன்றிய சரங்கள். பொன் வர்ணமாக அலங்கரிக்கப் பட்டது. கல்லால் ஆன அம்போ, மகேந்திர மலையின் கல்லோ மேலே வந்து விழுந்தது என்று அடிபட்டவன் மயங்கும்படி கனமானது. குறி தவறாத இவை ரோஷத்துடன் சீறும் பாம்புகள் போன்றவை. சகோதரன் என்று பெயர் வைத்துக் கொண்டு சத்ருவாக இருக்கும் வாலியை, தவறு செய்தவனை, மலையை பிளந்தது போல பிளந்து, கிழே விழுந்து கிடப்பதைப் பார்க்கத்தான் போகிறாய். ராகவனின் பேச்சைக் கேட்டு சுக்ரீவன் சாது, சாது என்று சொல்லி மகிழ்ந்தான். ராமா, நான் மிகவும் கஷ்டப்பட்டவன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு நீ தான் கதி. என் தோழனானதால் உன்னிடம் மனம் விட்டு பேசுகிறேன். கைகளைப் பற்றிக் கொண்டு அக்னி சாக்ஷியாக நாம் நட்பு கொண்டோம்., என் உயிருக்கும் மேலானவன் ஆகி விட்டாய். சத்யமாக சொல்லுகிறேன். கண்களில் நீர் மறைக்கிறது. சந்தோஷத்தில் திக்கு முக்காடுகிறேன். அதனால் பேச்சு வரவில்லை என்றான். தன் கண்களைத் துடைத்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ராகவனைப் பார்த்து மேலும் சொன்னான். முன்பு வாலி என்னை ராஜ்யத்திலிருந்து இறக்கி விட்டான். கடுமையாக திட்டி விரட்டினான். ஓட ஓட விரட்டினான். உயிருக்குயிரான என் மனைவியையும், கவர்ந்து கொண்டான். என் நண்பர்களை சிறையில் அடைத்து விட்டான். அதோடு நில்லாமல் என் உயிரை எடுப்பதில் இப்பொழுது முனைந்து இருக்கிறான். அவன் அனுப்பிய பல வானரர்களை நான் போரிட்டு அழித்தேன். அதனால் தான் யாரைப் பார்த்தாலும் சந்தேகம். இந்த சந்தேகம் தான் ராகவா, முதன் முதலில் உன்னைப் பார்த்ததும் நடுங்கினேன். அதனால் தான் நானே வந்து வரவேற்கவில்லை. பயப்படவேண்டிய விஷயத்தில் எல்லோரும் தான் பயப்படுகிறார்கள். ஹனுமான் முன்னிட்ட ஒரு சிலர் தான் என் உதவிக்கு அருகில் இருக்கிறார்கள். நான் உயிர் வாழ்வதே இவர்கள் தயவால்தான். இவ்வளவு கஷ்டங்களுக்கிடையிலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உலாவி வருகிறேன் என்றால் மிகையில்லை. எங்கு போனாலும் உடன் வருவார்கள். நின்றால் நிற்பார்கள். இதை இன்னும் விவரிப்பானேன். என் சகோதரன் வாலி, உடல் ப3லத்துக்கு பெயர் போனவன். அவனை அழித்தால் தான் என் கஷ்டம் விடியும். அதைச் சுற்றித் தான் என் சுகமும், வாழ்வும் நிலைத்து நிற்க முடியும். இது தான் என் சோக கதை. மனக் கஷ்டம் தாங்காமல் சொல்லி விட்டேன். கஷ்டப் படுவேனோ, சுகமாக இருப்பவனோ, நண்பனுக்கு நண்பன் தான் உதவி. இதைக் கேட்டு ராமன் விசாரித்தான். என்ன காரணத்தால் விரோதம் ஏற்பட்டது. அதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றான். அந்த அடிப்படை காரணத்தை தெரிந்து கொண்டு தகுந்த முறையில் பதில் கொடுக்கலாம். இருவரின் பலம், குறை, நிறைகளைத் தெரிந்து கொண்டு செய்ய வேண்டியதைச் செய்வோம். உன்னை அவமானப் படுத்தினான் என்று கேட்டு எனக்கு அடங்கா கோபம் வந்தது. காற்றில் அலைக்கழிக்கப் படும் சமுத்திர ஜலம் போல அது மேலும் பெருகுகிறது. நான் த4னுஷை எடுத்து நிறுத்தி அம்பை பூட்டும் முன் கவலைப் படாமல் சொல். என் வில்லும் அம்பும் இந்த செயலுக்காகவே ஏற்பட்டது என்று வைத்துக் கொள். உன் எதிரி என்னால் அழியத் தான் இன்னமும் உயிருடன் இருக்கிறான். தன் நான்கு வானர நண்பர்களோடு, சுக்ரீவன் தனக்கும் வாலிக்கும் விரோதம் வளர்ந்த கதையை விவரித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வாலி வத4 பிரதிக்ஞா என்ற எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 9 (280) வைர விருத்தாந்தானுக்ரம:(விரோதம் வளர்ந்த விவரம், வரிசைக்ரமமாக)
வாலி என்ற என் சகோதரன், எனக்கு மூத்தவன், என் தந்தைக்கு பிரியமானவன், எனக்கும் அப்படித்தான் இருந்தான். தந்தை இறந்தபின், இவன் தான் மூத்தவன் என்று ராஜ்யத்தில் முடி சூட்டினர். எல்லோருக்கும் அது சம்மதமே. தந்தை, பாட்டனார் வழி வந்த ராஜ்யத்தை அவன் ஆண்டபோது, நான் ஏவல் வேலை செய்பவனாக அருகிலேயே நின்றிருந்தேன். து3ந்து3பி4யின் மகனான மாயாவி என்று வயதில் பெரியவன், அவனுடன் ஒரு பெண்ணின் காரணமாக விரோதம் என்ற வரை நான் கேள்விப் பட்டிருந்தேன். அவன் ஒரு சமயம் ஜனங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கிஷ்கிந்தா வாசலை அடைந்தான். பெருங்குரலில் சத்தமிட்டு வாலியை போருக்கு அழைத்தான். தூங்கிக் கொண்டிருந்த என் சகோதரன், கூக்குரலிடும் பைரவ நாதத்தைக் கேட்டு, விருட்டென எழுந்தவன், உடனே வேகமாக அவனை எதிர் கொண்டு போரிடச் சென்றான். அசுரன் அவன், அவனைக் கொல்ல கோபத்துடன் கிளம்பியவன், ஸ்த்ரீ ஜனங்கள் தடுத்தும் கேளாமல், நான் வணங்கியபடி தடுத்து போக வேண்டாம் என்று வேண்டியதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், எங்கள் அனைவரையும் லட்சியம் செய்யாமல் வெளியேறிச் சென்றான். மகா பலசாலிதான். இருந்தும், நானும் பின் தொடர்ந்து சென்றேன். அவன் கூடவே ஓடினேன். நான் தூரத்தில் பின் தொடர்ந்து வருவதை அந்த அசுரன் கண்டான். வாலியைப் பார்த்ததுமே பயந்தவன், இதன் பின் ஓடலானான். வேகமாக ஓடும் அவனைத் துரத்திக் கொண்டு நாங்கள் இருவரும் ஓடினோம். வழி பூரா சந்திரனின் வெளிச்சம், பிரகாசமாக இருந்தது. புல் மூடிய ஒரு பள்ளத்துள் அவன் இறங்கி விட்டான். அசுரனைத் தொடர்ந்து ஓடிய நாங்களும் அந்த பள்ளத்தை அடைந்து நின்றோம். பள்ளத்துள் சென்று விட்ட எதிரியை விட மனமின்றி ரோஷத்துடன் வாலி என்னிடம் சுக்ரீவா, இந்த பள்ளத்தின் நுழை வாயிலில் நீ நில். நான் உள்ளே போய் எதிரியைக் கொன்று போடும் வரை அசையாதே, என்று சொல்லிச் சென்றான். நான் இதைக் கேட்டு கவனமாக இருக்கும்படி வேண்டிக் கொண்டேன். என் பெயரில் சபதம் செய்து, நகராதே என்று சொல்லி பள்ளத்துள் நுழைந்து விட்டான். அப்படிச் சென்றவன், ஒரு வருஷம் ஆகியும் வெளியே வரவில்லை. என்ன நடக்கிறது என்பதும் எனக்குத் தெரியவில்லை. அந்த இடத்திலேயே நின்றபடி நான் காலம் கழித்தேன். காலமோ ஓடிக் கொண்டிருக்கிறது. என் அண்ணனையும் காணவில்லை. சகோதர பாசம் என்னை ஏதோ விபரீதம் என்றே எண்ண வைத்தது. அதனால் பயந்து நடுங்கினேன். வெகு நாட்கள் இவ்வாறு சங்கடத்துடன் தவித்தபின் ஒரு நாள், அந்த பள்ளத்திலிருந்து ரத்தமும், நிணமுமாக வெளி வந்தது. அதைக் கண்டு நான் மிகவும் பயந்து விட்டேன். துக்கமும் அடைந்தேன். அசுரர்கள் கூச்சலிடும் ஒலியும் என் காதில் விழுந்தது. என் மூத்தவன் வலி தாங்காமல் அலறுவது போலவும் கேட்டது. யுத்தத்தில் அடிபட்டு விட்டானோ? இந்த அடையாளங்களை வைத்துக் கொண்டு நான் இறந்தது என் சகோதரனே என்ற முடிவுக்கு வந்தேன். ஒரு பெரிய கல்லை எடுத்து, மலை போல் இருந்ததைப் புரட்டி, பள்ளத்தின் நுழை வாயிலை மூடி விட்டு அவனுக்கு நீர் தெளித்து விட்டு துக்கத்துடன் நான் கிஷ்கிந்தா வந்து சேர்ந்தேன். தோழனே, நான் மேல் மூச்சு வாங்க ஓடி வந்து சொன்னதை பெரு முயற்சியுடன் மந்திரிகள் கேட்டு விஷயத்தை புரிந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து யோசித்து சம்மதித்து எனக்கு முடி சூட்டினர். நியாயமாக நான் ராஜ்யத்தை ஆண்டு வரும் பொழுது, ராகவா, என் மனம் இன்னமும் சகோதரனை கௌரமாகவே எண்ணி இருந்த சமயம், ஒரு நாள் சத்ருவைக் கொன்று விட்டு வாலி ஊருக்குள் வந்தான். அவனை மதித்து, முறைப் படி நான் வணங்கினேன். சந்தோஷமாக அவன் ஆசி வசனம் எதுவும் சொல்லவில்லை. அவன் பாதங்களில் என் மகுடம் படும்படி விழுந்து வணங்கினேன். ஆயினும் வாலி என்னிடம் தயை கொள்ளவில்லை.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வைர விருத்தாந்தானுக்ரமோ என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 10 (281) ராஜ்ய நிர்வாஸக் கத2னம் (ராஜ்யத்தை விட்டே வெளியேற உத்தரவிடுதல்)
கோபத்துடன் பரபரப்பாக ஓடி வந்தவனை, நான் முடிந்தவரை சமாதானப் படுத்த முயற்சி செய்தேன். நல்ல வேளை சௌக்யமாக வந்து சேர்ந்தாய். அதிர்ஷ்ட வசமாக எதிரியையும் அழித்து விட்டாய். இதுவரை அனாதையாக இருந்த எனக்கு நாதனாக வந்து சேர்ந்தாய். இதோ பல கம்பிகளுடைய, பூர்ண சந்திரன் உதித்தது போன்ற ச2த்ரம், சாமரங்கள், இவைகளை ஏற்றுக் கொள். ராஜனே, மிகவும் கஷ்டப் பட்டு பள்ளத்தின் நுழை வாயிலில் வருஷக் கணக்காக காத்திருந்தேன். ரத்தம் அந்த பள்ளத்தின் உள்ளிருந்து பிரவாகமாக வருவதைப் பார்த்து நடுங்கி விட்டேன். ஏற்கனவே என்ன ஆயிற்றோ என்ற கவலை. என்ன செய்வது என்று தெரியாமல், மலைச் சிகரத்தை எடுத்து பள்ளத்தை மூடி, அங்கிருந்து ஓடி கிஷ்கிந்தை வந்து சேர்ந்தேன். அதுவரை கவலையில் மூழ்கியிருந்த மந்திரிகளும் ஊர் ஜனங்களும் எனக்கு முடி சூட்டினர். என் விருப்பத்தால் நான் முடி சூட்டிக் கொள்ளவில்லை. என்னை மன்னித்து விடு. நீ தான் அரசன். கௌரவத்துக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவன். நான் எப்பொழுதும் போல இருக்கிறேன். நீ இல்லாததால் இந்த ராஜ்ய காரியத்தை நான் ஏற்று நடத்தி வந்தேன். இடையூறு இல்லாத மந்திரி ஜனங்கள், ஊர் ஜனங்கள் இவர்களோடு திரும்ப ஒப்படைக்கிறேன். நான் பாதுகாத்து வந்ததை உன்னிடம் தருகிறேன். சத்ருக்களை வெற்றி கொள்ளும் வீரனே, என்னிடம் மனத்தாங்கல் கொள்ளாதே. இதோ கை கூப்பி வணங்குகிறேன். வேண்டிக் கொள்கிறேன். ஊர் ஜனங்களும், மந்திரிகளும் பலவந்தமாக என்னை அரசனாக்கினார்கள். தேசம் அரசன் இல்லாமல் சூன்யமாக இருக்கக் கூடாது என்பதால் அரசனாக நியமிக்கப் பட்டேன். ஸ்னேகத்துடன் இவ்வளவு சொல்லியும், அந்த வானரம் கோபமாக பேசி, தி4க், த்வாம் (நிந்தனை, வசைச் சொல்) என்று திட்டி, மேலும் பலவிதமாக ஏசினான். பிரஜைகளையும், மந்திரிகளையும், கூப்பிட்டு வைத்துக் கொண்டு, நண்பர்களுக்கு மத்தியில் என்னை வாய் கூசாமல் ஏசினான். அவர்களிடம் அவன் சொன்னான் உங்களுக்குத் தெரியும். ஒரு நாள் இரவில் மாயாவி என்ற மகாசுரன், க்ரூரமாக என்னை போருக்கு அழைத்தான். கெட்ட புத்தியுடையவன், யுத்தம் செய்ய அறை கூவினான். அவன் கர்ஜனையைக் கேட்டு, நான் அரண்மனையில் இருந்து வேகமாக வெளியேறிச் சென்றேன். இதோ இந்த சகோதரன், கெட்ட எண்ணத்தோடு என்னை பின் தொடர்ந்து வந்தான். எனக்கு துணை ஒருவன் பின்னால் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், பலசாலியாக இருந்தும் அவன் ஓடத் தொடங்கினான். நாங்கள் இருவருமாக அவனைத் துரத்த, துரத்த மேலும் பயந்து ஓடினான். வேகமாக ஓடி ஒரு பள்ளத்துள் நுழைந்து விட்டான். அவன் பயங்கரமான அந்த பள்ளத்துள் நுழைந்து விட்டதைக் கண்டதும், இதோ இந்த சகோதரனிடம் நான் சொன்னேன். அப்பொழுதே இவனைக் காண க்ரூரமாக இருந்தான். இந்த அரக்கனைக் கொல்லாமல் நான் ஊருக்குள் வர மாட்டேன். நான் இவனைக் கொன்று விட்டு வெளி வரும் வரை இந்த பள்ளத்தின் வாசலிலேயே இரு, என் வரவை எதிர்பார்த்து காத்திரு என்று சொல்லி உள்ளே சென்றேன். இவன் வாயிலில் நிற்கிறான் என்ற எண்ணத்துடன் நான் உள்ளே சென்றேன். அந்த அரக்கனை தேடிக் கண்டு பிடிக்கவே, ஒரு வருடம் ஆகி விட்டது. கடைசியில் அவனைக் கண்டு பிடித்து, இதற்குள் அவன் தன் தவற்றை உணர்ந்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான், அவன் பந்துக்களும் வந்து சேர்ந்தனர், எல்லோரையும் சேர்த்து அழித்து விட்டேன. அந்த சண்டையில் பெருகிய ரத்தம், அந்த பள்ளம் நிரம்பி, அந்த இடத்திலிருந்து வெளியே வருவதே சிரமமாகி விட்டது. து3ந்து3பி4யின் மகனான அந்த எதிரியைக் கொன்ற பின் வெளியே வரப் பார்த்தால், வாசல் கல்லால் மூடப் பட்டு இருந்தது. சுக்ரீவா, என்று பலமுறை திரும்ப திரும்ப அழைத்தும், கத்தியும் ஒரு பயனும் இல்லை. பதிலே வராமல் போகவும், நான் மிகவும் துக்கத்தையடைந்தேன். காலால் உதைத்து தள்ளி அந்த பள்ளத்திலிருந்து வெளி வந்து கால் நடையாக ஊர் வந்து சேர்ந்தேன். இங்கு வந்து பார்த்தால், இவன் தனக்கு ராஜ்யத்தை வசமாக்கிக் கொண்டு. முடி சூட்டிக் கொண் டிருக்கிறான். சுக்ரீவன் கொடியவன். சகோதர பாசம் இல்லாத, அல்லது மறந்து விட்ட மூர்க்கன் என்று சொல்லி என்னை உடுத்திய துணியோடு ஊரை விட்டே விரட்டி விட்டான். அவனால் அவமானப் பட்டது மட்டுமல்லாமல், என் மனைவியையும் அபகரித்துக் கொண்டு விட்டான். அவனிடம் உள்ள பயத்தால் பூமி முழுதும் சுற்றித் திரிந்தேன். கடல் சூழ்ந்த இந்த உலகில் ஒரு இடம் பாக்கி இல்லை. வேறொரு காரணத்தால் இந்த ருஸ்ய மூக பர்வதத்தில் வாலி நுழைய முடியாது என்று அறிந்து இங்கு வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். இது தான் எங்களிடையில் விரோதம் வளர்ந்த கதை. நானே நினைக்காமல் இப்படி ஒரு கஷ்டம் வந்து சேர்ந்தது. இதோ பார், ராகவா, வாலியிடம் பயந்து வருந்தும் எனக்கு சர்வ லோக ரக்ஷகனான நீ தான் தயவு செய்ய வேண்டும். சர்வலோக பயங்கரனாகவும் நீ இருப்பாய் என்பது தெரியும். அதனால் நீ வாலியை வதம் செய்தால் தான் என் துயர் தீரும் இவ்வாறு சுக்ரீவன் சொல்லவும், ராமர் சிரித்துக் கொண்டே கேட்பது போல கேட்டார். என் அம்புகள் குறி தவறாதவை. சூரியனைப் போன்ற தேஜஸ் உடையவை. இந்த அம்புகளை தவறாக நடந்து கொண்ட வாலியின் மேல் பிரயோகிக்கிறேன். உன் மனைவியை அபகரித்த அவனை நான் காணும் வரை தான் அவன் உயிருடன் இருப்பான். பாபாத்மாவான வாலி சரித்திரம் இழந்தவன் என்று தெரிகிறது. என்னையே ஒப்பிட்டுக்கொண்டு பார்த்து, உன் துக்கம் எவ்வளவு என்று உணருகிறேன். துயரக் கடலில் மூழ்கியிருக்கும் உன்னைக் காப்பாற்றுகிறேன். நிச்சயம் உன் விருப்பம் நிறைவேறப் பெறுவாய். ராமனுடைய சொல், தன் நன்மைக்கே என்று சுக்ரீவன் அகமகிழ்ந்தான். மேலும் விவரித்தான்.
இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ராஜ்ய நிர்வாஸ கத2னம் என்ற பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 11 (282) வாலி வதா4விஷ்கரணம் (வாலியை வதம் செய்ய தீர்மானித்தல்)
தன் சக்தியைப் பற்றிச் சொல்லி தனக்கு நம்பிக்கையை வளர்க்கும் விதமாக ராமன் பேசியதால், சுக்ரீவன் மகிழ்ச்சியடைந்தான். உபசாரம் செய்து ராமனை பூஜித்து மேலும் சொல்லலானான். சந்தேகமே இல்லை. நீங்கள் கோபம் கொண்டால் யுகாந்த பாஸ்கரன் போல உங்களுடைய கூர்மையான, தகிக்கும், மர்மத்தை தாக்கும் அம்புகளால் உலகங்களை அழித்து விடக் கூடியவர் தான். வாலியினுடைய பலம், வீர்யம், கலங்காத தன்மை இதை நான் விவரித்து சொன்னபின், என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யோசித்து முடிவு செய்யுங்கள். சமுத்திரத்தின் மேற்கிலிருந்து கிழக்கு, தெற்கிலிருந்து வடக்கு, என்று சூரியன் உதிக்கும் முன், ப்ரும்ம முஹுர்த்தத்தில் வாலி சுற்றி விட்டு வந்து விடுவான். சற்று கூட வாட்டமே அவனிடம் தெரியாது. பெரிய மலைகளையும் கால் நடையாக நடந்து குதித்து மேலேறி, உச்சியை அடைந்து விடுவான். பல உயர்தர பெரிய மரங்களை வனத்தில் காரணமில்லாமல் ஒடித்து போட்டிருக்கிறான். அவ்வளவு ப்ரயத்னம் உடையவன். கைலாச சிகரம் போன்ற பெரிய உருவம் கொண்டு துந்துபி என்று ஒரு அரக்கன், ஆயிரம் யானை பலம் உடையவனாக இருந்தான். அவன் ஒரு சமயம் மகா சமுத்திரத்தைப் பார்த்து, என்னிடம் யுத்தம் செய்ய வருகிறாயா? என்று கேட்டான். வீர்யம் அதிகமானதால் துஷ்டனானான். வரங்கள் பெற்றதால் மோகம் அவன் கண்களை மறைத்திருந்தது. இவனாக போய் யுத்தம் செய்ய அழைத்தும், மகானான சமுத்திர ராஜன், தானே வந்து, விதி வசத்தால் புத்தியை இழந்த இந்த அசுரனிடம், (துந்துபியிடம்) உன்னுடன் யுத்தம் செய்ய எனக்கு சக்தியில்லை. நான் சமர்த்தன் அல்ல, யுத்தம் செய்வதில் வல்லவனே, நான் சொல்வதைக் கேள். உன் தினவு எடுக்கும் புஜங்களுக்கு ஏற்ற, யுத்தம் செய்ய தகுதி பெற்ற ஒருவனைப் பற்றிச் சொல்கிறேன். சைல ராஜன், மகாரண்யத்தில் தபஸ்வி ஜனங்களுக்கு சமமாக இருப்பவன், சங்கரனுடைய மாமனார், ஹிமவான் என்று பெயர், பல பெரிய நீர் வீழ்ச்சிகளைக் கொண்டவன், பல குகைகளையுடையவன், அவன் தான் உனக்கு மகிழ்ச்சி தரும் விதமாக எதிர்த்து நின்று போராடுவான் என்றான். சமுத்திர ராஜன் பயந்து விட்டான் என்று அந்த அசுரன், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல கிளம்பி, ஹிமய மலையை அடைந்தான். அந்த மலையின் வெண்மையான பெரிய கற்களை பூமியில் வீசியெறிந்தான். அதோடு து3ந்து3பி4 பெருங்குரலில் யுத்த முழக்கமும் செய்தான். வெண் மேகம் போன்ற ஆக்ருதியுடன், சௌம்யமாக ப்ரீதி உண்டாகும்படியான ரூபத்துடன் ஹிமவான் தான் இருந்த இடத்திலிருந்தே பதில் சொன்னான். து3ந்து3பே4 என்னைத் துன்புறுத்தாதே. நான் என்ன யுத்த தர்மத்தைக் கண்டேன். எப்பொழுதும் தபஸ்விகள் நிறைந்து என்னை அண்டியிருக்க, நான் போர் செய்வது பற்றி எதுவும் அறியாதவன். இதைக் கேட்டு துந்துபி, கோபத்தால் சிவந்த கண்களுடன் இரைந்தான். நீ யுத்தம் செய்ய சமர்த்தன் இல்லையா, என்னிடம் பயந்து அப்படி சொல்கிறாயா? எதுவானாலும், என்னிடம் யுத்தம் செய்ய தகுதி வாய்ந்த ஒருவனைச் சொல் என்றான். இதைக் கேட்டு, ஹிமவான் யோசித்து கவனமாக, வார்த்தைகளை கோர்த்து பதில் சொன்னான். இதுவரை யாரும் ஹிமவானிடம் இப்படி பேசியதில்லை. சற்று கோபத்துடன் பதில் சொன்னான். வாலி என்று இந்திரன் மகன், இந்திரனுக்கு சமமான ப்ராக்ரமம் உடையவன், வானரமானாலும், அளவில்லாத ஒப்பிலா, பராக்ரமம் உடையவன். கிஷ்கிந்தையில் வசிக்கிறான். அவன் யுத்த கலை அறிந்தவன். மகா புத்திசாலி. சமர்த்தன். அவனைப் போய் பார். நமுசி, வாஸவனுடன் த்வந்த யுத்தம் செய்தது போல நீங்கள் இருவரும் த்வந்த யுத்தம் செய்யுங்கள். நீ உன் யுத்தம் செய்யும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினால், சிக்கிரமே போய் வாலியை எதிர் கொள். சூரனான அவன் எளிதில் பணிய மாட்டான் என்று ஹிமவான் சொன்னதைக் கேட்டு துந்துபி கோபத்துடன் உடனே புறப்பட்டான். கிஷ்கிந்தையை அடைந்து மகிஷ ரூபத்துடன், கூரிய கொம்புகளுடன், பயங்கரமான உருவத்துடன், மழைக் கால மேகம் போல ஆகாயத்தில் நீர் நிறைந்து தெரிவது போல வாசலில் வந்து நின்றான். பூமி நடுங்கும்படி துந்துபி கோஷம் போலவே ஓங்கி முழக்கம் இட்டான். அருகிலிருந்த பெரிய மரங்களை முட்டித் தள்ளி, பூமியை தன் கால் குளம்பினால் குழி பறித்தபடி, கொம்புகளால் வாசல் கதவை முட்டியபடி கர்வத்துடன் யானையைப் போல தாக்கினான். அந்த:புரம் சென்றிருந்த வாலி இந்த சப்தத்தைக் கேட்டு, பொறுக்க மாட்டாத கோபத்துடன் தன் ஸ்த்ரீகளுடன் வெளியே குதித்து வந்தான். தாரா கணங்களுடன் சந்திரன் உதிப்பது போல இருந்தது. தெளிவான வார்த்தைகளால் அளந்து பேசுவதுபோல துந்துபியைக் கேட்டான். காட்டில் அலையும் வானரங்கள் அனைத்துக்கும் தலைவனான ஹரீஸ்வரன் (குரங்குகள் தலைவன்) நான், ஏன் என் நகர் வாசலில் இடித்து சத்தம் போடுகிறாய்? து3ந்து3பே | உன்னை எனக்குத் தெரியும். உயிரை காப்பாற்றிக் கொள், ஓடு, இதைக் கேட்டு துந்துபி பெரும் கோபம் கொண்டு, ஸ்த்ரீகள் மத்தியில், என்னிடம் நீ இப்படி பேசுவது சரியல்ல. என்னுடன் யுத்தம் செய். என் பலம் என்ன என்று தெரிந்து கொள்வாய் என்றான். அல்லது இன்று இரவு என் கோபத்தை பொறுத்துக் கொள்கிறேன். உதயம் ஆனவுடன், வந்து சண்டையிடு. இப்பொழுது காம போகத்தில் திளைத்திருக்கிறாய். வானர ஸத்ரீகளை அணைத்து மகிழ்ந்து (சாகா2 ம்ருகம்) கிளைகளில் தாவும் உன் கூட்டத்தினருடன், பந்து ஜனங்களுடன் கூடி குலாவி மகிழ்ந்து இரு. பின்னால் என்னிடம் யுத்தம் செய்ய வா. நான் உன் கர்வத்தை நாசம் செய்ய வந்திருக்கிறேன். எனக்கு சமமாக போரிட்டு கிஷ்கிந்தையில் புது சரித்திரம் படை. யாராக இருந்தாலும் மதம் பிடித்து அலைபவனை, நிறைய குடித்து மயங்கியவனை, எல்லாவற்றையும் இழந்து தவிக்கிறவனை- இவர்களை கொல்பவன் மிகவும் மட்டமானவன். அதனால் உன்னைப் போல மதம் கொண்டவனையும் நான் கொல்ல விரும்பவில்லை. வாலி சிரித்தபடி பதில் சொன்னான். தாரா முதலிய ஸ்த்ரீகளை உள்ளே அனுப்பி விட்டான். நான் நிறைய மதுவை அருந்தி மயங்கி கிடக்கிறேன் என்று சாக்கு போக்கு சொல்லாதே. உண்மையில் என்னிடம் உனக்கு பயம். இதோ என் முதல் அடி. பதில் அடியைக் கொடு பார்க்கலாம். இவ்வாறு சொல்லி கோபத்துடன் தந்தை இந்திரன் கொடுத்த பொன் மாலையை கழற்றி விட்டு யுத்தம் செய்ய வந்து விட்டான். மலை போல இருந்த துந்துபியை, கொம்புகளைப் பற்றி சுழற்றியபடி, வானர ராஜன் தானும் சத்தமாக போர் முழக்கம் இட்டான். வாலி அந்த துந்துபியை போட்டு புரட்டி எடுத்து விட்டான். அதன் காதுகளிலிருந்து ரத்தம் பெருகலாயிற்று. இருவருமே ஒருவரையொருவர் ஜயிக்க வேண்டுமென்ற வெறியோடு போரைத் தொடர்ந்தனர். துந்துபியும், வானரமும் மிக பயங்கரமாக சண்டையிட்டனர். வாலியின் பலமோ, இந்திரனுக்கு சமமானது. முஷ்டிகளாலும், முழங்கால்களாலும், பாதங்களாலும், கற்களாலும் இடை விடாது ஒருவரை –யொருவர் அடித்துக் கொண்டனர். வானர, அசுரர்களின் சண்டை நீடித்தது. அசுரன் பலம் குறைய ஆரம்பித்தது. வாலி வெற்றி பெரும் வாய்ப்பு கூடியது. துந்துபியை தூக்கித் தரையில் அடித்தான். உயிர் போகும் படி அடிபட்டு, மாவு போல பிசையப் பட்டான். கடைசியில் உயிரிழந்து பூமியில் தடாலென்று விழுந்தான். அந்த உடலை, வாலி தன் பலம் கொண்ட மட்டும் வீசி எறிந்தான். ஒரு யோசனை தூரம் தள்ளி அந்த உடல் விழுந்தது. வீசிய வேகத்தில் அந்த இறந்த உடலில் இருந்த ரத்த துளிகளும், நிணமும் மதங்கருடைய ஆசிரமத்தில் விழுந்தது. முனிவர் அதைக் கண்டார். ரத்தமும், மாமிசமும், நிணமுமாக, அவர் கோபம் கொண்டு யாராக இருக்கும் என்று யோசித்தார். யார் இந்த துராத்மா? இவ்வளவு பரபரப்புடன் ரத்த விளாறாக வீசியிருக்கிறான்? யாரது? எந்த முட்டாள் இப்படி ஒரு விவரம் இல்லாத அறிவில்லாத செயலை செய்தது என்று இரைந்தார்? வெளியில் வந்து பார்த்த முனிவரின் எதிரில் பர்வதாகாரமான மகிஷ உடல் உயிரிழந்து கிடந்தது. தன் தவ வலிமையால் இதை செய்தது வாலி தான் என்று தெரிந்து கொண்டார். அந்த இறந்த உடலை அவருடைய ஆசிரமத்தில் வீசியெறிந்த வாலிக்கு சாபமிட்டார். இந்த இடத்திற்கு அவன் வரக் கூடாது. வந்தால் அவன் வதம் தான் நடக்கும். இந்த நந்தவனத்தை நான் பாதுகாத்து வருகிறேன். இதில் மாமிசமும் ரத்தமுமாக, மகிஷ சரீரத்தை வீசி அசுத்தமாக்கி விட்டான். அந்த அசுர உடல், பூமியில் விழும் பொழுது மரங்களை உடைத்துக் கொண்டு விழுந்தது வேறு அவருடைய கோபத்தை அதிகரித்தது. இந்த ஆசிரமத்தின் முன் ஒரு யோஜனை தூரம் நாற்புறமும், அந்த துர்புத்தி வாலி வந்தால் நிச்சயம் அவன் உயிருடன் இருக்க மாட்டான். அவனுடைய மந்திரிகள் என் வனத்தில் வசிப்பவர்கள், அவர்களும் கேட்கட்டும். யாரும் இங்கு இருக்க கூடாது. கிளம்புங்கள். சௌகர்யம் போல வெளியேறுங்கள். யாராவது என் சொல்லை மீறி இருந்தால் அவர்களையும் சபித்து விடுவேன். என் புத்திரன் போல இந்த வனத்தை பாலித்து வந்தேன். இலை, துளிர் இவை உடைந்து நாசமாக, பழங்கள் உதிர்ந்து வீணாகி விட்டன. இன்று ஒரு நாள் அவகாசம் தருகிறேன். நாளை எந்த வானரமாவது என் கண்ணில் பட்டால், பல வருஷ காலம் அவன் சிலையாக நிற்க வேண்டி வரும். முனிவர் சொன்ன சொல்லைக் கேட்ட வானரங்கள் அந்த வனத்திலிருந்து வெளியேறின. இதைக் கண்ட வாலி விசாரித்தான். மதங்க வன வாசிகள், நீங்கள் எல்லோருமாக வெளியேறி என் அருகில் வருகிறீர்கள். காட்டில் வாழும் வானரங்கள் குசலமாகத் தானே இருக்கிறார்கள்.? என்ன விஷயம்? எனவும், அந்த வானரங்கள் தாங்கள் வெளியேறிய காரணத்தையும், முனிவரின் சாபத்தையும் வாலிக்கு தெரியப்படுத்தின. பொன் மாலையணிந்த வாலி, இதைக் கேட்டு மகரிஷியிடம் கை கூப்பி வணங்கியபடி யாசித்தான். மகரிஷி அவனை கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்தி விட்டு, தன் ஆசிரமத்தில் நுழைந்து விட்டார். சாபத்தின் காரணமாக வாலி செயலிழந்து நின்றான். அதிலிருந்து இந்த சாப பயத்தினால் ருஸ்ய மூக மலையின் அருகில் கூட வர மாட்டான். அவ்வளவு ஏன், கண்ணால் காணக் கூட பயம். அவன் வர முடியாது என்று அறிந்து நான் இந்த மகா வனத்தில், என் மந்திரிகளோடு வசிக்கிறேன். அலைந்து திரிகிறேன். துரத்தப் பட்டவனாக வருத்தத்துடன் வசிக்கிறேன். இதோ பார், இது தான் அந்த துந்துபியின் எலும்புக் கூடு. அசுரனை, தன் வீர்யத்தைக் காட்டி, தோற்கடித்தபின், வீசியெறிந்த உடலின் மீதியான அஸ்தியே மலை போல கிடக்கிறது. இதோ இந்த சால மரங்கள் ஏழு மரங்கள் கிளைகளோடு நிற்கின்றனவே, இவற்றில் ஒன்றை கைகளால் ஆட்டி, ஏழு மரங்களும் இலைகள் உதிரச் செய்வான். இது ஒரு விளையாட்டு, வாலிக்கு. இது அவனுடைய தனிப் பட்ட வீரம். அரசனே, அந்த வாலியை நீ எப்படி யுத்தம் செய்து ஜயிக்கப் போகிறாய்.? சுக்ரீவன் இப்படி சொல்லவும் சிரித்துக் கொண்டே லக்ஷ்மணன் சொன்னான். என்ன செய்தால் நீ வாலி வதம் செய்ய முடியும் என்று நம்புவாய்?, உடனே சுக்ரீவன், இதோ இந்த ஏழு சால மரங்கள். இவைகளில் ஒவ்வொன்றையும் அடிக்கடி பிளந்து இருக்கிறான். ஒரே அம்பினால் ராமன் இவைகளை அடித்தால் ராமனுடைய விக்ரமத்தில் நம்பிக்கை கொண்டு, வாலி வதம் ஆனதாகவே எடுத்துக் கொள்வேன் என்றான். மகிஷனுடைய அஸ்தி இதோ இருக்கிறது. இதை பாதத்தால் தூக்கி இரண்டு வில் வைக்கும் தூரம் தூக்கிப் போட்டால் நம்புவேன். இவ்வாறு சொல்லி, கண்கள் சிவக்க நின்றிருந்த ராமனை முஹுர்த்த நேரம் தியானம் செய்து விட்டு திரும்பவும் சொன்னான். தானும் சூரன், மற்றொரு சூரனையும் வதைத்தவன் வாலி. அவன் பலமும் பௌருஷமும் உலகறிந்தது. யுத்தத்தில் அவன் தோற்றதே இல்லை. இவனுடைய செயல்கள் எதுவும் செயற்கரியவையே, என்று தேவர்களே ஒப்புக் கொள்வர். இதையெல்லாம் எண்ணித்தான் பயந்து நான் ருஸ்ய மூக மலையை அண்டி வாழ்ந்து வருகிறேன். அந்த வெற்றி கொள்ள முடியாத, தாங்க முடியாத பராக்ரமம் உடையவனை, வானரேந்திரனை, யுத்தத்தில் கோபம் கொண்டால் யாராலும் எதிர்க்க முடியாது -அப்படிப்பட்ட வீரனை நினைத்து நான் ருஸ்ய மூக மலையிலிருந்து ஒரு அடி கூட வெளியில் வைக்க நடுங்குகிறேன். மனம் நிறைய கவலையோடும், சந்தேகத்தோடும், இந்த மகா வனத்தில் திரிந்து கொண்டிருக்கிறேன். என்னிடம் அன்பு கொண்ட ஹனுமான் முதலான மந்திரிகளுடன் இருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல மித்திரர்கள் கிடைத்துள்ளனர். நீங்கள் கிடைத்தது என் பாக்கியமே. புருஷ வ்யாக்ரா உன்னைத்தான் இமயமலையைப் போல நம்பியிருக்கிறேன். என்னுடைய துர்புத்தியுள்ள சகோதரன் பலத்தை நான் அறிவேன். பலசாலி அவன். ராகவா யுத்தத்தில் உன் பராக்ரமத்தை நான் நேரில் கண்டதில்லை,. நான் உன்னை வாலியோடு ஒப்பிட்டு பேசவில்லை. அவமானம் செய்வதாகவும் எடுத்துக் கொள்ளாதே. உங்களால் முடியாதோ என்று பயப்படவும் இல்லை. வாலியின் மிக அரிய செயல்களை கண்டவன் ஆனதால் மனதில் அதைரியம் உண்டாகிறது. ராமா, உன் சொல் பிரமாணம் தான். உன் உடல் வாகும், தைரியமும், தெரியக் கிடக்கின்றன. இவையே நீ மகா தேஜஸ்வி என்று காட்டுகின்றன. நீறு பூத்த நெருப்பாக தெரிகிறது. சுக்ரீவனின் இந்த வார்த்தையைக் கேட்டு மெல்ல நகைத்தவாறு ராமன் பதில் சொன்னான். ப்ரபு, சுக்ரீவனைப் பார்த்து உனக்கு என் விக்ரமத்தில் நம்பிக்கை வர, யுத்தத்தில் என் தகுதியை நிரூபித்துக் காட்டுகிறேன், போதுமா இவ்வாறு சொல்லி, லக்ஷ்மணன் முன் பிறந்தோன், துந்துபியின் உடலை கால் கட்டை விரலால் அனாயாசமாக பத்து யோசனை தூரம், தள்ளி விழும்படி எட்டி உதைத்தார். உலர்ந்து கிடந்த அசுரனின் உடலை கால் கட்டை விரலால், வீர்யவானான ராமன், வீசியதைக் கண்டு சுக்ரீவன் மேலும் சொன்னான். லக்ஷ்மணனுக்கு முன்னால், சுட்டெரிக்கும் சூரியன் போல இருந்த ராமனைப் பார்த்து, வானரங்களுக்கு முன்னால் நின்றபடி ராமனிடம் சொன்னான். ஈரமாக மாமிசத்துடன் இருந்த பொழுது வாலி வீசி எறிந்தான். இப்பொழுது மாமிசம் எதுவுமின்றி உலர்ந்து புல் போல ஆகி விட்டது. ராகவா, நீ இப்பொழுது சந்தோஷத்தோடு உதைத்து தள்ளியதை, வாலி மிக களைப்பாக இருந்த சமயம், மகிஷனுடன் போராடி கொன்று, இதே போல வீசி எறிந்தான். ரகு நந்தனா, இதில் உன் பலம் அதிகமா என்று தீர்மானிக்க முடியவில்லை. ஈரமானது, உலர்ந்தது இதில் இடை வெளி மிக அதிகம் ராகவா என்றான். இது தான் சந்தேகம் உங்கள் இருவரில் யார் அதிக பலசாலி என்று தெரிந்து கொள்ள. ஒரு சால மரத்தை பிளந்து காட்டு. தெளிவாக தெரிந்து விடும் உன் பலம் என்ன என்பது. உன் வில்லை தயார் செய்து கொண்டு யானை தும்பிக்கை போல் நீண்டு இருப்பதை காது வரை இழுத்து மகா சரத்தை விடு. இதோ இந்த சால மரம் தான். நீ சந்தேகமில்லாமல் உன் அம்பால் இதை பிளந்து விடுவாய். வீணாக பேச்சை வளர்த்துவானேன். எனக்கு பிரியமானதை நீ கண்டிப்பாக செய். ராஜகுமாரனே, என் மேல் ஆணை. எப்படி தேஜஸில் சூரியன் சிறந்தவனோ, மகா மலைகளில் ஹிமய மலை சிறந்ததோ, நான்கு கால்களால் நடக்கும் மிருகங்களில் சிங்கமோ, அதே போல மனிதர்களில் வீரத்தில் சிறந்தவன் நீதான் என்று முடித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வாலி ப3லாவிஷ்கரணம் என்ற பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 12 (283) சுக்ரீவ ப்ரத்யய தானம் (சுக்ரீவனுக்கு நம்பிக்கை அளித்தல்)
சுக்ரீவன் இவ்வளவு விவரமாக சொன்னதைக் கேட்டு, அவனுக்கு நம்பிக்கையூட்ட, மகா தேஜஸ்வியான ராமர், தன் வில்லை கையில் எடுத்தார். பயங்கரமான ஒரு அம்பை திக்குகள் எதிரொலிக்க பெரும் சத்தத்துடன் சால மரத்தை குறி வைத்து எய்தார். பலமாக விடப்பட்ட அந்த அம்பு, மலையில் இருந்த சால மரங்களை ஏழையும் பிளந்து கொண்டு பூமியில் சென்றது. (ரஸாதலம்) சென்றது. (பூமியை பிளந்து கொண்டு வேகமாக சென்ற அம்பு திரும்ப தூணியை வந்தடைந்தது. சால மரங்களை பிளந்த வரை தான் சுக்ரீவன் கண்டான். மற்றவை அவன் கண்களுக்கு புலப்படவில்லை என்று உரையாசிரியர் திலகர் ) ஏழு சால மரங்களும் பிளக்கப் பட்டு கிடப்பதைக் கண்டு வானர ராஜன், ராமனுடைய சர வேகத்தில் ஆச்சர்யம் அடைந்தான். சாஷ்டாங்கமாக பூமியில் விழுந்து ராகவன் பாதங்களில் தலை வைத்து வணங்கினான். ராமனுடைய செயலால் மகிழ்ந்து, தர்மம் அறிந்த ராமனை எல்லா விதமான, அஸ்திரங்களை அறிந்தவனை, சூரனை, நேரில் கண்டு மகிழ்ச்சியால் திக்கு முக்காடினான். புருஷ ரிஷப, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரையும் உன் பாணங்களால், யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியும். இந்த வாலி எம்மாத்திரம் ப்ரபோ, ஏழு சால மரங்களையும் பிளந்து பூமியில் சென்ற பாணம், இதன் முன் யார் தான் எதிர்த்து நிற்க முடியும். அதுவும் யுத்த பூமியில். இன்று என் துயரம் தீர்ந்தது. மகேந்திரன், வருணன் இவர்களுக்கு சமமான உங்களை மித்திரனாக அடைந்து என் உள்ளம் அன்பு நிறைந்து விளங்குகிறது. கை கூப்பி வணங்கி வேண்டிக் கொள்கிறேன். இன்றே எனக்கு விருப்பமானதை செய்யுங்கள். இதன் பின் லக்ஷ்மணனை கலந்தாலோசித்து, சுக்ரீவனை அணைத்துக் கொண்டு, கிஷ்கிந்தா போவோம். சீக்கிரம், நீ முன்னால் போ. நீ போய் வாலியை சகோதர துரோகியை யுத்தம் செய்ய அறை கூவி அழைப்பாய் என்றார். எல்லோருமாக வேகமாக சென்று, வாலியின் ஊரில் மரங்கள் இடையில் தங்களை மறைத்துக் கொண்டு நின்றனர். சுக்ரீவன் பலமாக கத்தினான். வாலியை யுத்தம் செய்ய வரும்படி அழைத்தான். வேகமாக வந்தது மூச்சு இரைக்க, ஆகாயத்தை பிளக்கும் ஓங்கிய குரலில் போருக்கு அழைத்தான். அந்த அறை கூவலைக் கேட்டு, வாலி கோபத்துடன் குதித்துக் கொண்டு எழுந்து வந்தான். அஸ்தமன சூரியன் திரும்ப வந்தாற் போல. இதன் பின் மகா பயங்கரமான யுத்தம், வாலி, சுக்ரீவர்களுக்கிடையில் மூண்டது. ஆகாயத்தில் பயங்கரமான கிரகங்களான புதனும், அங்காரகனும் போல இருந்தனர். கைத்தலம் கல் போலவும், முஷ்டிகள் வஜ்ரம் போலவும் தாக்க, சகோதரர்கள் இருவரும் விரோதத்தின் உச்சியில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். இருவரும் உருவத்தில் ஒத்து இருந்தனர். தேவர்களோ என்று சந்தேகம் கொள்ளும்படி உடல், பலம், ஆக்ருதி இவைகளுடன் சண்டையிட்டனர். ராகவனுக்கு எது சுக்ரீவன், எது வாலி என்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. அதனால் உயிரை பறிக்கும் சரத்தை விடவில்லை. இதற்கிடையில் வாலியின் கையால் நல்ல அடி வாங்கி களைத்த சுக்ரீவன், ராமனைக் காணாமல், திரும்ப ருஸ்யமூக மலைக்கு ஓடி விட்டான். அடியால் துவண்டு, களைத்து ரத்த விளாறாக, உடல் பூரா வலியுடன், வாலி துரத்தி வர, அவன் கோபத்திலிருந்து தப்பிக்க மகா வனத்தில் நுழைந்து விட்டான். சாபத்தின் நினைவு வரவும், வாலி பயத்துடன் பிழைத்து போ என்று சொல்லி விட்டு திரும்பி விட்டான். ராகவன், சகோதரனுடன் ஹனுமான் உடன் வர, சுக்ரீவன் இருந்த வனத்துக்கே வந்து சேர்ந்தார். அங்கு வந்து சேர்ந்த ராமரை லக்ஷ்மணனுடன் சேர்த்து பார்த்து, சுக்ரீவன் வெட்கத்துடன் தீனமாக பூமியை பார்த்தவாறு சொன்னான். கூப்பிடு யுத்தத்திற்கு என்று என்னிடம் சொல்லி, உன் விக்ரமத்தையும் காட்டி, நம்பிக்கையூட்டி, என் விரோதியிடம் இப்படி அடி வாங்க வைத்து, இது என்ன காரியம்? ஏன் இப்படி செய்தாய்? அப்பொழுதே ராகவா, நீ வாலியை வதம் செய்ய மாட்டேன் என்று சொல்லியிருக்கலாம். நான் இவ்வளவு தூரம் போய் முட்டியிருக்க மாட்டேன். தீனமாக அழுது புலம்பும் சுக்ரீவனைப் பார்த்து ராமர் பதில் சொன்னார். சுக்ரீவா, கேள். கோபத்தை விடு. நான் ஏன் என் பாணத்தை விடவில்லை என்பதைச் சொல்கிறேன். நீயும் வாலியும் பரஸ்பரம் ஒரே விதமான அலங்காரம், ஆடை, பருமன், நடை என்று ஒத்து இருந்தீர்கள். யார் வாலி, யார் சுக்ரீவன் என்ற வித்யாசமே தெரியவில்லை. குரலும், பாவனையும் கூட ஒன்றாக இருக்க, விக்ரமும், வாக்யமும் கூட ஒரே போல இருக்க, கவனித்து பார்த்து கூட என்னால் வித்தியாசப் படுத்தி தெரிந்து கொள்ள முடியவில்லை.. வானரோத்தமா, உங்கள் இருவரின் உருவ ஒற்றுமை என்னை செயலிழக்கச் செய்து விட்டது. என் அம்பு சத்ருவை கொன்று விட்டுத் தான் விடும். மகா வேகமானது. உயிரைக் குடிக்கும் பயங்கரமான என் அம்பை, உங்கள் உருவ ஒற்றுமையால், யார் மேல் விடுவது என்ற குழப்பத்தால், நான் விடவில்லை. தவறி உன் மேல் பட்டால், மூலத்தையே அழித்தவனாவேன். அறியாமல் பாணம் உன்மேல் பட்டு நீ இறந்து பட்டால், சிறு பிள்ளைத் தனமாக மூடத் தனமாக இருந்திருக்கும். என் பெயரே கெட்டுப் போகும். அபயம் கொடுத்து அவனையே வதம் செய்து விட்டான் என்று ஆகும். மகா பாதகமாக பேசப்படும். நானும், லக்ஷ்மணனும், சீதையும் இப்பொழுது உன் அதீனத்தில் இருக்கிறோம். உன்னை சரண் அடைந்துள்ளோம். அதனால், வானரா, எழுந்திரு. திரும்ப யுத்தம் செய். போ. சந்தேகப் படாதே. இந்த முஹுர்த்தம், பார், வாலி யுத்தத்தில் மாண்டு விழுவதைப் பார்ப்பாய். என் ஒரு அம்பு போதும். அவனை வீழ்த்த. உனக்கு ஒரு அடையாளம் செய்து கொள். து3வந்த4 யுத்தம் செய்யும் உங்கள் இருவரில் யார் நீ என்று தெரிந்து கொள்ள முடியும். இதோ இந்த க3ஜ புஷ்பம் என்ற புஷ்பத்தைப் பறித்து லக்ஷ்மணா சுபமாக இவன் கழுத்தில் மாலையாக போடு. அதன் பின், அந்த மலைப் பிரதேசத்தில் நிறைய பூத்துக் கிடந்த புஷ்பங்களைப் பறித்து மாலையாக கட்டி, லக்ஷ்மணன் சுக்ரீவன் கழுத்தில் மாலையாக போட்டான். சந்த்யா காலத்தில் மேகம் வெண்மையான கொக்குகள் கூட்டமாக பறக்க, மாலையணிந்தது போல தெரிவது போல அந்த லக்ஷ்மீகரமான பூமாலையால் சோபையுடன் காட்சி தந்தான். ராமனின் சமாதான வார்த்தைகளால் இழந்த தைரியத்தை திரும்பப் பெற்றவனாக சுக்ரீவன், ராமனுடன், வாலி ஆண்டு வந்த கிஷ்கிந்தை செல்ல புறப்பட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவ ப்ரத்யய தா3னம் என்ற பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 13 (284) சப்தஜனாஸ்ரம ப்ரணாம: (சப்த ஜன ஆசிரமத்தை வணங்குதல்)
ருஸ்யமூகத்திலிருந்து, லக்ஷ்மணன் தமையனான ராமன், சுக்ரீவனுடன் கிஷ்கிந்தையை அடைந்தான். வாலியினால் பாலிக்கப்பட்டு வந்த பிரதேசம். யுத்தத்திற்கு தேவையான சாதனங்கள், காஞ்சன பூஷிதமான தன் பெரிய வில், சூரிய கிரணங்கள் போன்ற அம்புகள், மற்றும் பலவற்றையும் எடுத்துக் கொண்டு வழி நடந்தனர். ராக4வர்களுக்கு முன்னால் சுக்3ரீவன் கழுத்தில் பட்ட அடியையும் பொருட்படுத்தாமல் சென்றான். லக்ஷ்மணனுக்கு பின்னால் ஹனுமான், வீரர்களான நலன், நீலன் என்ற வானரங்கள், தாரன் என்ற மகாவீரன், வானர சேனைத் தலைவர்கள், சென்றனர். அவர்கள் இங்கும் அங்கும் பார்த்தபடி, புஷ்ப பாரத்தால் வணங்கி நின்ற மரங்களையும், மறுபுறம் பிரஸன்னமான நதி, அருவிகள், சாகரத்தை நோக்கி பிரவஹிக்கும் நதிகள், இவைகளை பார்த்தபடி சென்றனர். மலை குகைகளை, மலைகளை, சிறிய அருவிகள், அதிக நீர் இல்லாத ஓடைகள், மலைச் சிகரங்கள் சில பெயர் பெற்றவை, வெட்ட வெளியான சமவெளிப் பிரதேசங்கள், இவை யாவுமே கண்ணுக்கு விருந்தாக அழகாகத் தெரிந்தன. இவற்றை ரசித்தபடி சென்றனர். சில இடங்களில் தாமரைக் குளங்கள், வைடூரியம் போல விமலமான ஜலத்துடன், மலர்ந்த புஷ்பங்களுடன், மொட்டுகளுடன் சோபையோடு விளங்கின. நீர் நிறைந்த தடாகங்கள் இவைகளிலும், காரண்ட, ஸாரஸ, ஹம்ஸ, வஞ்சுள, ஜல குக்குடங்கள் எனும் நீர் வாழ் பக்ஷிகளையும் கண்டனர். இவை தவிர, சக்ரவாகங்களும், மற்றும் பல பெயர் தெரியாத பக்ஷி இனங்களும் இனிய நாதம் செய்து கொண்டிருந்ததையும் ரசித்தனர். ம்ருதுவான தானியங்கள், துளிர்கள் இவற்றையே ஆகாரமாக கொண்ட, பயமின்றி சஞ்சரிக்கும், காட்டு மான்கள், பல நின்று கொண்டும், மெதுவாக நடந்து கொண்டும் இருப்பதைக் கண்டனர். சில பக்ஷிகளுக்கு தடாகமோ, நீரோ வேண்டியிருக்கவில்லை. வெண்மையான தந்தங்களையுடைய காட்டு யானைகள் சில தனியாக சஞ்சரித்துக் கொண்டிருந்தன. பயங்கரமான உருவத்துடன், இவை கரைகளை உடைத்துக் கொண்டிருந்தன. மதம் கொண்ட இவை, மலைகளிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட மலையின் பாகமே தானோ எனும் படி பெருத்த உடல்களுடன், திரிந்தன. பூமியில் புரண்டு புழுதி படிந்த உடல்களுடன் வானரங்கள், மற்றும் பல காட்டு விலங்குகள், ஆகாயத்தில் கூட்டமாக பறக்கும் பக்ஷிகள், இவற்றைப் பார்த்துக் கொண்டே வேகமாக சென்றனர். சுக்ரீவனுடைய ஆணைக்கு கட்டுப் பட்டு உடன் வந்த வானரங்களும் வேகமாக நடந்தன. இப்படி வேகமாக நடந்து கொண்டிருந்த பொழுதே, ரகுநந்தனன், த்3ருமஷண்ட3ம் என்ற வனத்தைக் கண்டு சுக்ரீவனிடம் விசாரித்தான். இதோ மேகம் போல ஆகாயத்தில் வ்ருக்ஷ ஷண்ட3ம் (அடர்ந்த மரங்கள் கூட்டம்) தெரிகிறதே. விரிந்து பரந்த வாழைத் தோட்டம். இது என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சகே2 (நண்பனே) இந்த விவரத்தை எனக்குச் சொல்வாய். ராமன் இவ்வாறு குதூகலத்துடன் கேட்கவும், நடந்து கொண்டே சுக்ரீவன் பதில் சொன்னான். ராகவா, இந்த விஸ்தீர்ணமான ஆசிரமம் சிரமத்தை போக்கக் கூடியது. உத்யான வனங்களும், நல்ல ருசியான பழ வகைகளும் கிடைக்கும் இடம். இங்கு சப்த ஜனங்கள் என்ற முனிவர்கள் நியமத்தோடு வாழ்ந்து வந்தனர். ஜலத்தில் மூழ்கி இருந்தபடி தவம் செய்தனர். தலை கீழாக ஏழு பேரும் தவம் செய்து வந்தனர். ஏழு இரவுகளுக்கு ஒரு முறை ஆகாரம் உட்கொண்டு வந்தனர். வாயுவே ஆகாரமாக வனத்தில் வசித்தனர். பல வருஷங்களுக்குப் பிறகு எழுவரும் சரீரத்துடன் தேவலோகம் சென்றனர். இவ்வளவு பிரபாவம் மிக்க இந்த தபஸ்விகளால் மரங்கள் வரிசையாக அடர்ந்து வளர்க்கப் பட்டன. இந்திரன் முதலிய தேவர்களும், அசுரர்களும் கூட நுழைய முடியாத இந்த ஆசிரமத்தை அமைத்தனர். இந்த ஆசிரமத்தில் பக்ஷிகள் வருவதில்லை. தானே தவிர்க்கின்றன. மிருகங்களும் அப்படியே. அப்படி தெரியாமல் நுழைந்து விட்டால் திரும்புவதே இல்லை. ஆபரணங்களின் ஓசை இங்கு கேட்கிறது. பலவிதமான பேச்சு சப்தங்களும் கேட்கின்றன. துர்யம், கீதம் இவைகளின் நாதமும் கேட்கிறது. நல்ல வாசனை மிகுந்து திவ்யமாக இருக்கிறது. ராகவா, அக்னி ஹோத்ரம் முதலிய மூன்று வித அக்னியும் எரிகிறது என்பது புகை மூலம் தெரிகிறது. அவை மரங்களை சூழ்ந்து புறாவின் நிறத்தில் அடர்ந்து தெரிகின்றன. இதோ, இங்கும் மரங்களின் மேல் புகை மூட்டம் தெரிகிறது. மலைகளின் மேல் மேகம் படர்ந்து இருப்பது போல தெரிகிறது. ராகவா, அந்த தர்மாத்மாக்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குவோம். இங்கு வந்து இந்த முனிவர்களை வணங்குபவர்கள் சரீரத்தில் எந்த விதமான அசுபமும் ஏற்படாது என்று நம்பிக்கை. ராமனும், லக்ஷ்மணனுடன் அந்த மகாத்மாக்களை எண்ணி த்யானம் செய்து வணங்கினான். அந்த முனிவர்களை வணங்கி விட்டு எல்லோருமாக தொடர்ந்து நடந்தனர். சப்த ஜன ஆசிரமத்திலிருந்து வெகு தூரம் நடந்து சென்ற பின், கிஷ்கிந்தையைக் கண்டனர். வாலியின் ஆளுமைக்குட்பட்ட கிஷ்கிந்தையைக் கண்டனர். இதன் பின், ராமானுஜன் (லக்ஷ்மணன்), ராமன், வானரம் மூவரும் தங்கள் உதயசூரியன் போன்று பிரகாசமான ஆயுதங்களை தயாராக வைத்துக் கொண்டு, சுரர்கள் எனும் தேவர்களின் தலைவனான இந்திர புத்திரன், வாலி ஆண்டு வந்த நகரில், அவனை வதம் செய்ய கூடினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சப்த ஜனாஸ்ரம ப்ரணாம: என்ற பதிமூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 14 (285) சுக்ரீவ கர்ஜனம் (சுக்ரீவன் கர்ஜனை செய்தல்)
வேகமாக நடந்து சென்று அனைவரும் வாலி ஆண்டு வந்த கிஷ்கிந்தையை அடைந்தனர். அடர்ந்த வனத்தில், மரங்கள் பின்னால் தங்களை மறைத்துக் கொண்டு நின்றனர். காட்டில் நாலா பக்கமும் பார்வையை செலுத்திய சுக்ரீவன், அந்த அழகிய வனத்தை எப்பொழுதும் நேசித்து வந்தவன், தானே கோபத்தை வரவழைத்துக் கொண்டான். பெருங்குரலில் முழக்கமிட்டு, யுத்தத்திற்கான அறைகூவலைச் செய்தான். தன் பரிவாரங்கள் சூழ, ஆகாயத்தை பிளக்கும்படி ஓங்கிய குரலில் சத்தமிட்டான். காற்றின் வேகத்தால் அலைக்கழிக்கப் பட்ட மேகம் இடி இடிப்பது போல கத்தினான். இளம் சூரியன் போலவும் சிங்கம் வெறி கொண்டு நடை போடுவது போலவும் இருந்த ராமனை ஒரு முறை பார்த்து விட்டு, அரிய இந்த செயலை அவனால் தான் செய்து முடிக்க முடியும் என்று மனதில் நினைத்துக் கொண்டவனாக அவனிடம் வேண்டினான். வாலியின் ஊரில் நுழைந்து விட்டோம். பொன்னாலான தோரணங்கள் அலங்கரிக்க, கொடி, யந்திரங்கள் நிறைந்த முன் வாயில் இது. வானரங்கள் பாதுகாவலாக நிற்கின்றன. ராக4வா, வாலி வதம் செய்வதாக முன் சொன்ன பிரதிக்ஞையை நினைவு கொள்ளுங்கள். பருவ காலங்களில் முளைக்கும் செடிகள் போல உங்கள் பிரதிக்ஞையை நிறைவேற்றவும் காலம் வந்து விட்டது. சத்ருக்களை எதிர்த்து நாசம் செய்யும் சக்தி வாய்ந்த ராமன் பதில் சொன்னான். க3ஜ புஷ்ப மாலை அடையாளமாக உன் கழுத்தில் லக்ஷ்மணன் அணிவித்திருக்கிறான், ஆகாயத்தில் விபரீதமாக நக்ஷத்திர மாலையுடன் சூரியன் ஜ்வலிப்பது போல ஜ்வலிக்கிறாய். இன்று வாலியிடம் உனக்கு உள்ள பயம், விரோதம் இரண்டையும், ஒரு பாணத்தால் நான் அழிக்கிறேன். சகோதர ரூபத்தில் உள்ள உன் சத்ருவை எனக்கு காட்டு. இன்று வாலி வதம் செய்யப் பட்டு புழுதியில் விழப் போகிறான். என் கண்ணில் பட்டபின் அவன் உயிருடன் திரும்பி போனால், நீ உடனே என்னை குற்றம் சொல்லாதே. குறை, நிந்தனை சொல்லக் கூடாது. உனக்கு எதிரில் ஏழு சால மரங்களை பிளந்து காட்டினேன். அதனால் எனக்கு வாலியை வதம் செய்யக் கூடிய பலம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள். நான் இதுவரை பொய் சொன்னதில்லை. இனியும் சொல்ல மாட்டேன். என்ன கஷ்டம் வந்தாலும் இது என் கொள்கை. விட மாட்டேன். தர்ம லோபம் என்ற விஷயங்களை நான் எப்பொழுதும் சொல்லவே மாட்டேன். (தர்ம லோபம்-தர்மத்திற்கு விரோதம்) உனக்கு கொடுத்த பிரதிக்ஞையை நிறைவேற்றுவேன். கவலையை விடு. பொன் மாலையணிந்த வாலியை போருக்கு அழைப்பது வரை தான் உன் வேலை. இந்திரன் மழையைக் கொண்டு பூமியில் அரிசியை, நெல்லை விளைவிப்பது போல நீ நிமித்த மாத்திரமே. அந்த வானரன் வெளியே வரும்படி போருக்கான அறைகூவலை பலமாக செய். உலகமெல்லாம் வென்றவன், தன் பலத்தால் பெரும் புகழடைந்தவன், நீயே முன் ஒரு சமயம் அவனுடன் மோதியிருக்கிறாய். போர் செய்வது வாலிக்கும் பிடித்தமானது என்று சொல்லியிருக்கிறாய். இது போன்ற சூரர்கள் எதிரிகள் போருக்கு அழைக்கும் பொழுது மறுப்பதும் இல்லை. உடனே வருவான். தன் பலம் தெரிந்தவன். ஸ்த்ரீ ஜனங்களுக்கு முன்னால் தன் இயலாமையை காட்டிக் கொள்ள மாட்டான். ராமன் இவ்வாறு சொல்லவும், பொன்னிறமான மஞ்சள் நிறக் கண்களையுடையவன், க்ரூரமாக சத்தமிட்டான். பெருங்குரலில், ஆகாயத்தை ஊடுருவிச் செல்வது போல முழக்கமிட்டான். அந்த சப்தத்தில், பூமியில் பயந்த பசுக்கள் பயந்து ஓடின. ராஜ தோஷத்தினால் பீடிக்கப் பட்ட குலஸ்த்ரீகள் போல ஓடின. (?) போரில் அடிபட்டு, அங்க ஹீனம் ஆனவர்கள் போல மிருகங்கள் தலை தெறிக்க ஓடின. கிரகங்கள் புண்யம் தீர்ந்தவுடன் பூமியில் விழுவது போல பறவைகள் விழுந்தன. இதன் பின் இந்த மேகத்துக்குச் சமமான இடி முழக்கத்தை அவசரம் அவசரமாக சுக்ரீவன் செய்தான். சூரிய புத்திரன், சௌர்யத்தால் வளர்ந்த தேஜஸுடன், நதிகளின் அரசனான சமுத்திரத்தில், காற்றினால் தள்ளப்பட்டு, அலைகள் வரிசை பல்கி பெருகுவது போல தன் பலம் வெளிப்பட விளங்கினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்3ரீவ க3ர்ஜனம் என்ற பதினான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 15 (286) தாரா ஹிதோக்தி: (தாரை ஹிதமாக சொல்லுதல்)
அந்த:புரத்தில் இருந்த வாலி, தன் சகோதரன் அடங்காத கோபத்துடன் எழுப்பும் போருக்கான அறைகூவலைக் கேட்டான். எல்லா ஜீவராசிகளையும் நடுங்க வைக்கும் அந்த கூக்குரலைக் கேட்டு அவன் தூக்கமும், மதுவின் மயக்கமும் தெளிய, பெரும் கோபம் சூழ்ந்து கொண்டது. சட்டென்று எழுந்தான். சந்த்யா கால சூரியன் போன்ற வாலி, ஆங்காரத்துடன் எழுந்து நின்றான். அப்பொழுதுதான் கிரஹணம் பிடித்த சூரியன் போல தன் ஒளியை இழந்தவனானான். பயங்கரமான பற்களும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல சிவந்த கண்களும், குளத்திலிருந்து வீசி எறியப் பட்ட பத்மம் போல விளங்கினான். சுக்ரீவனின் கூப்பாட்டைக் கேட்டு பொறுக்க மாட்டாமல் குதித்து எழுந்தான். வேகமாக பாதம் வைத்து பூமியை பிளந்து விடுவது போல பூமி அதிர நடந்தான். அவனை தாரா அணைத்து, ஸ்னேகத்துடன் அன்பை வெளிப்படுத்தி, தன் பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல், பரபரப்பை அடக்கிக் கொண்டு, அவன் நன்மைக்காக பேசலானாள். வீரா, திடுமென நதியில் வெள்ளம் வந்தது போல வந்துள்ள இந்த கோபத்தை விடுங்கள். படுக்கையிலிருந்து எழுந்து, உடனே தயாராக போருக்கு கிளம்பும் இந்த எண்ணத்தை, கழுத்தில் அணிந்த மாலையை மறுநாள் வீசியெறிவது போல வீசுங்கள். இவனுடன் சங்க்4ராமம் (போர்) செய்வதால் ஹரிராஜனே, வீரனே, உங்களுக்கு என்ன லாபம். உங்களை எதிர்த்து நிற்கும் சத்ருக்கள் நிறைந்து விட்டதாகவோ, (இப்பொழுது அழிக்காவிட்டால்) வீணாகும் என்றோ பயம் இல்லை. பரபரப்புடன் படுக்கையை விட்டெழுந்து உடனே கிளம்புவது எனக்கு சரியாகப் படவில்லை. கேளுங்கள். இதோ சொல்கிறேன். என்ன காரணத்திற்காக தடுக்கிறேன் என்பதையும் சொல்கிறேன். ஒரு முறை அடி வாங்கியவன் திரும்பவும் போருக்கு அழைக்கிறான் என்றால், உன்னால் அடிக்கப்பட்டு பிழிந்து எடுத்தது போல சக்தியை இழந்தவன் , ஓடியவன், திக்கு திசை தெரியாமல் உயிருக்கு பயந்து நடுங்கியபடி போனவன், திரும்ப இங்கு வந்து நின்று போருக்கு அழைப்பது எனக்கு சந்தேகத்தை கிளப்புகிறது. அவனுடைய கர்வமும், முயற்சியும், இப்பொழுது கத்தும் முறையையும் பார்த்தால், சப்தமிடும் பரபரப்பும், ஏதோ அல்பமான காரணமாகத் தெரியவில்லை. ஏதோ சகாயம் கிடைத்திருக்கிறது. இங்கு வந்து நிற்கும் சுக்ரீவனுக்கு நிச்சயம் ஏதோ உதவி கிடைத்திருக்கிறது. நல்ல பலமான வீரனின் உதவி கிடைத்ததாலேயே இது போல கர்ஜிக்கிறான். பிறவியிலேயே புத்திசாலி, நிபுணன். இந்த வானரன், பரீக்ஷை செய்து பார்க்காமல் யாரையும் நம்ப மாட்டான். நம்பி காரியத்தில் இறங்க மாட்டான். தவிர, முன்பே, நான் ஒரு விஷயம் கேள்விப் பட்டேன். அங்க3த3ன் வந்து சொன்னான். நம் குமாரன் அங்க3த3ன் வனத்தில் சுற்றித் திரிந்து விட்டு வரும் பொழுது, அவனுக்கு ஆப்தமான சில ஒற்றர்கள் அங்கு நடப்பதை தெரிவித்தனர். அயோத்யா நகர ராஜ குமாரர்கள், சூரர்கள், போரில் தோல்வியே காணாதவர்கள், இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவர்கள், ராம லக்ஷ்மணர் என்று பெயர் பெற்றவர்கள், சுக்ரீவனின் இஷ்டத்தை பூர்த்தி செய்ய வந்து சேர்ந்திருக்கின்றனர். உன் சகோதரன் தான் யுத்தத்தில் கடுமையாக போரிடக் கூடியவன் என்பது தெரிந்ததே. ராமனும், யுத்தம் என்று வந்தால், எதிரியின் பலத்தை வீழ்த்தி, யுகாந்த அக்னி போல எழக் கூடியவன். அண்டியிருக்கும் சாதுக்களுக்கு நிவாஸ விருக்ஷம் போன்றவன். உதவி என்று வந்தவர்களுக்கு ஒரே கதி. கஷ்டத்தில் உள்ளவர்கள் சரணம் என்று வந்தால் காக்கக் கூடிய ஒரே வீரன். புகழ் தானே வந்து நிரம்பும் பாத்திரம். க்ஞான, விக்ஞானம் நிறைந்தவன். தந்தையினால் ஜன நடமாட்டமில்லாத வனத்துக்கு விரட்டப் பட்டவர். தாதுப் பொருட்கள் மண்டி மலையரசனுக்கு உருவம் கொடுப்பது போல குணங்களால் உருவானவன். அதனால் அந்த மகானோடு உனக்கு விரோதம் தகாது. ஜயிக்கமுடியாத ஈடு இணையில்லாத பராக்ரமம் உடைய ராமனுடன், போரில் சூரனே, உன் நன்மைக்காக சொல்கிறேன், இப்பொழுது போரை எதிர்கொண்டு போவதை நான் விரும்பவில்லை. நான் சொல்வதைக் கேட்டு, அதன்படி செய்யுங்கள். உங்கள் ஹிதம் இதில் தான் என்று நான் நம்புவதால், இவ்வளவு சொல்கிறேன். சுக்ரீவனைக் கூப்பிட்டு சீக்கிரம் யுவராஜாவாக முடி சூட்டி வையுங்கள். உங்களுக்கு இளையவன். சகோதரன். அவனுடன் என்ன விரோதம்? என்னைக் கேட்டால், ராமனுடன் நட்பு கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும் என்று தான் சொல்வேன். விரோதத்தை தூக்கியெறிந்து விட்டு சுக்ரீவனுடன் ஸ்னேகமாக இருக்கலாம். இளையவன் என்பதால் இந்த வானரமும், நீங்கள் அணைத்து, சீராட்டப் பட வேண்டியவன் தானே. அங்கு இருந்தாலும், உங்கள் எதிரில் நின்றாலும், உங்களுக்கு உறவு முறையுடையவன். உடன் பிறந்தவனுக்கு சமமான உறவினன் வேறு யார் இருக்க முடியும். தானம் அளித்து கௌரவித்து, உபசாரம் செய்து நீங்கள் இதுவரை செய்த அநீதிக்கு மாற்றுத் தேடுங்கள். இந்த விரோதத்தைக் களைந்து உங்கள் அருகில் அவன் நிற்கட்டும். சுக்3ரீவன், விபுலக்3ரீவன் (அழகிய கழுத்துடையவன், அகன்ற கழுத்துடையவன்.) உடன் பிறந்தவன் என்பது மாற்ற முடியாத உண்மை. அவனை மூத்தவனாக, தமையனாக இருந்து அரவணைத்துக் கொண்டு போவது தான் தற்சமயம், தங்களுக்கு நல்லது. வேறு வழியில்லை. என்னிடம் அன்பு இருக்குமானால், நான் எது சொன்னாலும், செய்தாலும், தங்கள் நன்மைக்கே என்று நம்பினால், இவ்வளவு வேண்டிக் கொள்ளும் என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். தயவு செய்யுங்கள். நான் புலம்புவதை கேட்டு என்னிடம் கோபம், கொள்ள வேண்டாம். கோசல ராஜ குமாரன், இந்திரனுக்கு சமமான பராக்ரமம் உடையவன். அவனுடன் விரோதம் வேண்டாம். இப்படி தாரா, வாலியிடம் எது நல்லது என்பதை விவரமாக எடுத்துரைத்தாள். விநாசகாலம் வந்து சேரும் பொழுது, யமன் வாயில் விழ இருக்கும் ஜந்து போல, இந்த உபதேசம் அவனுக்கு பிடிக்காமல் போயிற்று.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், தாரா ஹிதோக்தி என்ற பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 16 (187) வாலி சம்ஹார: (வாலி வதம்)
தாரகைகளின் நாயகனான சந்திரன் போன்ற முகத்தையுடைய தாரா சொன்னதைக் கேட்டு, வாலி அவளை பயமுறுத்தும் விதமாக பேசலானான். என் சகோதரன் என்ற பெயர் கொண்ட சத்ரு இப்படி எதிரில் நின்று கர்ஜிக்கும் பொழுது என்ன காரணம் சொல்லி பொறுத்துக் கொள்வேன்? சூரர்களாக விளங்கும், யுத்தம் என்றால் கலங்காத வீரர்களுக்கும், போரில் புற முதுகு காட்டி ஓடாத வீரர்களுக்கும், இப்படி போருக்கு அறை கூவும் பொழுது பதில் கொடுக்காமல் பொறுத்துக் கொள்வது மரணத்தை விட கொடியது. அதனால் நானும் இதை பொறுக்க மாட்டேன். தவிர போர் செய்வது எனக்கு பிடித்தமானதே. ஹீனக்3ரீவன், (விபுலக்3ரீவனுக்கு எதிர்பதம். நிறைந்த கழுத்துடையவன் என்று தாரா சொன்னதற்கு பதிலாக கழுத்தே இல்லாதவன் என்று வாலி) சுக்3ரீவன் வந்து சத்தம் போடுகிறான். நான் எப்படி சும்மா இருப்பேன். ராமன் விஷயமாக கவலைப் படாதே. அவன் தர்மம் அறிந்தவன். செய் நன்றி மறவாதவன். அவன் எப்படி பாப காரியத்தைச் செய்வான்? உன் ஸ்த்ரீ ஜனங்களுடன் திரும்ப போ. ஏன் இன்னும் என் பின்னால் வருகிறாய்? என்னிடம் உன் பாசத்தை காட்டி விட்டாய். என்னிடம் உனக்கு பக்தி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு விட்டேன். இதோ போய் சுக்ரீவனுடன் போர் செய்யப் போகிறேன். இந்த பரபரப்பை விடு. இவனுடைய உயிரை பறிக்க மாட்டேன். ஒரு தட்டு தட்டி கர்வத்தை அடக்கி விட்டு வருகிறேன். வேண்டிய அளவு, முஷ்டியாலும், மரங்களால் அடித்தும் வலி எடுக்க ஓடச் செய்து விடுவேன். நான் கர்வத்தோடு எதிரில் போய் நின்றாலே தாங்க மாட்டான் துராத்மா. தாரையே, போதும், நிறுத்து. உன் சினேகிதத்தைக் காட்ட எச்சரிக்கை செய்து விட்டாய். என் உயிர் மேல் சபதம் செய்கிறேன். என் மேல் ஆணை. இந்த உடன் பிறந்தானை போரில் வெற்றி கொண்டு வருகிறேன். அவனை அணைத்து தாரா, பிரியமாக பேசி, அழுது கொண்டே பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து ஸ்வஸ்தி வசனங்கள் சொல்லி மங்களா சாஸனம் செய்தாள். மந்திரங்கள் அறிந்தவள். கணவன் வெற்றி பெற வாழ்த்தி அனுப்பினாள். கூட வந்த பெண்களுடன் அந்த:புரம் சென்றாள். சோகம் அவளை விட்டபாடில்லை. தாரா, கூட வந்த பெண்டிருடன் தன் வீட்டிற்குள் நுழைந்த பின். வாலி மகா சர்ப்பம் போல பெருமூச்சு விட்டுக் கொண்டு நகரத்தை விட்டு வெளியேறினான். மகா கோபத்துடன் வெளியேறி நாலா புறமும் சத்ரு எங்கே என்று கண்களால் தேடினான். சுக்ரீவனைக் கண்டு கொண்டான். ஸ்ரீமானான வாலி, அசையாமல், சற்றும் கலங்காமல் அமர்ந்திருந்து, நெருப்பு போல ஜ்வலிக்கும், மஞ்சள் நிறக் கண்களுடைய சுக்ரீவனைக் கண்டான். எதிரில் இருந்த சுக்ரீவனைப் பார்த்து வாலி மிக ஆங்காரத்துடன் முஷ்டியை உயர்த்திக் கொண்டு, அவனை நோக்கி அடிக்கத் தயாராக முன்னேறிச் சென்றான். பொன் மாலையணிந்த வாலியை நோக்கி சுக்ரீவனும் தன் முஷ்டியை தூக்கியபடி அடிக்கச் சென்றான். வாலி, கோபத்தினால் சிவந்த கண்களுடன், தானே வந்து போருக்கு அழைக்கும் சுக்ரீவனைப் பார்த்துச் சொன்னான். இதோ பார். என் முஷ்டியை. விரல்களை மடக்கி நன்றாக அழுத்தி பிடித்திருக்கிறேன். நான் வேகமாக உன் முகத்தில் குத்தினால் உயிரிழந்து விடுவாய். சுக்ரீவனும் அதே போல வாலிக்கு பதில் சொன்னான். என் தலையில் முஷ்டியால் அடித்துப் பார். உன் உயிரையும் பறித்துக் கொண்டு விழும். தெரிந்து கொள், என்றான். வாலியின் கையால் அடிபட்டவன், ரத்தம் பெருக, கோபத்துடன் ஓடினான். வாலி மலை போல நின்றான். சுக்ரீவனும் ஒரு சால மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்துக் கொண்டு, வேகமாக வாலியை அடித்தான். வஜ்ரம் மகா கிரியை அடித்தது போல விழுந்தது. அந்த அடியின் பலத்தால் கலங்கி போன வாலி, அதிக பாரத்தினால் சாகரத்தில் செல்லும் படகு சாமான்களோடு ஆடுவது போல ஆனான். இருவரும் பயங்கரமான விக்ரமம் உடையவர்கள். சுபர்ணனுக்கு சமமான வேகம் உடையவர்கள். வளர்ந்து கோரமான சரீரமும் கொண்டு, சந்திர சூரியர்கள் ஆகாயத்தில் சண்டையிடுவது போல சண்டையிட்டனர். ஒருவரையொருவர் சத்ருவாக நினைத்தவர்கள், பிடி எங்கு கிடைக்கும் என்று தேடி பிடித்துக் கொண்டனர். வாலியின் கை ஓங்கியது. அவன் பலமும், வீர்யமும் அதிகமாக இருந்தது. சூரிய புத்திரனான சுக்ரீவன் தோற்கலானான். வாலியினால் கர்வம் அடங்கப் பெற்று, தன் உடல் வலிமை குறைய, தோல்வியைத் தழுவலானான். கோபத்துடன் தன் திறமையைக் காட்டி போரிட்டான். மரங்கள், கிளைகள், வஜ்ரம் போன்ற தன் நகங்கள், முஷ்டிகள், முழங்கால்கள், பாதங்கள், புஜங்கள் இவைகளால் மறுபடி. மறுபடி தாக்கி யுத்தத்தைத் தொடர்ந்தான். வ்ருத்திரனும், வாஸவனும் கோரமாக சண்டையிட்டது போல போர் வளர்ந்தது. இருவருடைய வானர சரீரமும் ரத்தத்தில் குளித்தது போல ஆயிற்று. மேகத்தின் இடி முழக்கம் போல இருவரும் கர்ஜித்துக் கொண்டும் ஒருவரையொருவர் பயமுறுத்திக் கொண்டும் இருந்தனர். தோற்கும் நிலையில், சுக்ரீவனை வானர அரசன் வாலி பார்த்தான். நான்கு திசைகளிலும், ராகவனைத் தேடி அவன் கண்கள் சுழலுவதைக் கண்டான். அப்பொழுது ராமன் சுக்ரீவன் களைத்து விட்டதை அறிந்து, வாலியை வதம் செய்ய எண்ணி, ஒரு அம்பை கையில் எடுத்து அதை கண்ணால் பார்த்தார். ஆல கால விஷம் போன்ற ஒரு சரத்தை (அம்பை) எடுத்து, வில்லில் பூட்டி, கால சக்ரம் போல வில்லை வளைத்து, அம்பை சாக்ஷாத் யமனே வந்தது போல எய்தார். அந்த வில்லின் கோஷத்தைக் கேட்டு பயந்து பறவைகள், பயந்து நடுங்கின. மிருகங்கள் ஓடின. காலம் முடிந்து யுகாந்தம் வந்து விட்டதோ என்று மோகம் கொண்டன. வில்லிலிருந்து அம்பை, வஜ்ரம் போல சப்தம் செய்து கொண்டு, எரியும் கல் போல இருந்த மகா பாணத்தை, ராகவன், வாலியின் மார்பில் பட விட்டான். இதனால் வீர்யம் அழிந்து மகா தேஜஸ்வியான, வானர ராஜன், அதன் வேகத்தால் தாக்கப் பட்டு, பூமியில் விழுந்தான். இந்திர த்4வஜம் வேரோடு சாய்க்கப்பட்டது போல, ஒரு பௌர்ணமியில் நிலவு விழுந்தது போல, ஆஸ்வயுஜ சமயத்தில் (மாசத்தில்) ஸ்ரீயை இழந்து நினைவு இன்றி விழுந்தான். தங்கமும், வெள்ளியும் கொண்டு அலங்கரிக்கப் பட்ட உத்தமமான சரத்தை, உத்தமமான நரனான ராமன், சத்ருவை அழிக்கும் அந்த அம்பு ஒளியை உமிழ, சிவபெருமான் வாயிலிலிருந்து புகையுடன் கிளம்பிய அக்னியைப் போல விடுவித்தான். அதனால் அடிபட்ட வாஸவன் மைந்தன், ரத்தமும், நீரும் பெருக, காற்றினால் தள்ளப் பட்ட மலரைச் சொரியும் அசோக மரத்தைப் போல நினைவின்றி பூமியில் விழுந்தான். போரில் அடி பட்டு விழுந்த இந்திர த்fவஜத்தை ஒத்திருந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வாலி சம்ஹாரோ என்ற பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 17 (287) ராமாதி4க்ஷேப: (ராமனை குறை கூறுதல்)
வேரோடு வெட்டிச் சாய்த்த மரம் போல, ராம பாணத்தால் அடிபட்ட வாலி விழுந்தான். ரணத்தில் நிலைத்து நின்று கடுமையாக யுத்தம் செய்யும் ஆற்றல் மிகுந்தவன் தான். ஆடை ஆபரணங்களோடு பூமியில் சர்வாங்கமும் பட கிடந்தான். தேவராஜனின் கொடி கயிறு இற்று அறுந்து போனால், கொடி கீழே விழுவதைப் போல விழுந்தான். வானரர்களின் கூட்டத்து தலைவனான அவன் வீழ்ந்தவுடன், ஆகாயத்தில் சந்திரன் இல்லாமல் போனால் எப்படி இருக்குமோ, அது போல பூமி ஒளி குறைந்து விளங்கியது. பூமியில் விழுந்த பின்னும் வாலியின் சரீரத்தில் லக்ஷ்மிகரமான தேஜஸ் அழியவில்லை. உயிர் போகவில்லை, பராக்ரமமும் குறையவில்லை. இந்திரன் கொடுத்த உயரிய பொன்மாலை, வஜ்ர பூஷணம், வானர ஸ்ரேஷ்டனின் உயிரையும், தேஜஸையும், லக்ஷ்மியையும் தாங்கிக் கொண்டிருந்தது. சந்த்யா நேரத்து மேகம் போல பொன் மயமான அந்த மாலையுடன் வீரனான வாலி காட்சியளித்தான். அவனுடைய மாலையும், சரீரமும், மர்மத்தை அடிக்கும் சரமும், மூன்று விதமாக மாறி லக்ஷ்மியே நிற்பது போல கிழே விழுந்தவனும் சோபையுடன் விளங்கினான். அவனுக்கு ஸ்வர்கத்துக்கு வழி காட்டுவது போல அந்த அஸ்திரம் அவன் உடலில் தைத்து இருந்தது. ராம பாணத்தால் அடிபட்டு விழுந்தவனுக்கு பரம உத்தமமான கதியைத் தருவதாக இருந்தது. நெருப்பு தன் தீக்கனல்கள் இல்லாத நிலையில் எரிவது போல, யுத்தத்தில் வீழ்ந்தவனை மரியாதையோடு மெதுவாக பார்க்கத் துவங்கிய வீரனை, புண்யம் தீர்ந்தவுடன் தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து சேர்ந்த யயாதியைப் போல, யுகத்தின் முடிவில் ஆதித்யனை பூமியில் விழச் செய்தது போல, மகேந்திரனைப் போலவே போரில் தாங்க முடியாத வீரத்தைக் காட்டும் மகேந்திரன் புத்திரனை, கீழே விழுந்த வாலியை, இன்னமும் பொன் மாலையை அணிந்தவனாக, குறுகிய மார்பும், நீண்ட கைகளும், சிவந்த வாயும், முகமும் குரங்கு கண்களும் உடையவனாக ராமனும் லக்ஷ்மணனும் கண்டனர். அருகில் சென்றனர். ராகவனையும், மகா பலசாலியான லக்ஷ்மணனையும் கண்ட வாலி, கடுமையான, ஆனால் தர்மம் நிறைந்த நியாயமான கேள்வியைக் கேட்டான். நீ பெரிய சக்ரவர்த்தியின் மகன் என்று பெயர் பெற்றவன். கண்ணுக்கு விருந்தாக இருக்கிறாய். நல்ல குலத்தில் பிறந்தவன். நன்னடத்தை உள்ளவன். தேஜஸ்வி. ஒழுக்கத்தில் சிறந்தவன். (மறைந்து நின்று) எதிரில் நிற்காமல் என்னை வதம் செய்து உனக்கு என்ன புதிய பெருமை கிடைத்து விட்டது? நான் யுத்தத்தில் மூழ்கியிருக்கும் பொழுது அம்பு கொண்டு என் மார்பில் தாக்கியிருக்கிறாய். ராமன் கருணை நிறைந்தவன். பிரஜைகளின் நன்மைக்காக பாடு படுபவன். தயையும் அனுசரணையும் மிக்கவன். நல்ல உத்ஸாகம் உடையவன். காலம் அறிந்தவன். திடமான விரதங்களை உடையவன். இப்படி உலகில் எல்லோரும் உன் புகழ் பாடுகின்றனர். அடக்கம், பொறுமை, சாந்தி, தர்மம், தன்னம்பிக்கை, சத்யம், பராக்ரமம் இவை அரசர்களுக்கான குணங்கள். ராஜன், அபராதிகளை தண்டிப்பதும் அரசன் கடமையே. இந்த குணங்களை வைத்து பார்க்கும் பொழுது நான் ஒரு பிரஜை. தாரை தடுத்தும் கேளாமல் சுக்ரீவனோடு மோத வந்தேன். நான் மற்றவனோடு சண்டையிட்டுக் கொண்டு மும்முரமாக அதே கவனத்தில் இருந்தபொழுது நீ அடித்தது தகாது. உன்னை எதிரில் காணாத போது நீ என்னை அடிப்பாய் என்று நினைக்கவில்லை. உன்னை தன் ஆத்மாவை இழந்தவனாக, தர்மத்தை த்வஜத்தில் வைத்துக் கொண்டு அதர்மமாக நடப்பவனாக, நான் எதிர் பார்க்கவில்லை. பாபம் நிறைந்தவன், புற்களால் மறைக்கப் பட்ட கிணறு போல கபடமானவன், நல்லவன் போல வேஷம் போட்டுக் கொண்டு பாபத்தை செய்பவன், உள்ளடங்கி இருக்கும் அக்னி போன்றவன், இந்த விதமாக உன்னை நான் எதிர்பார்க்கவே இல்லை. உள்ளம் பூராவும் அதர்மமே நிறைந்திருக்க அதை மறைத்து கொண்டு, நல்லவனாக வேஷம் போடுபவனாக நான் எதிர் பார்க்கவில்லை. தற்சமயம் வனத்திலும் உன் நகரத்திலும் நான் உனக்கு எந்த அபகாரமும் செய்யவில்லை. உன்னை நன்றாக அறிந்தவன் கூட இல்லை. குற்றமற்ற என்னை ஏன் கொன்றாய்? காட்டில் மட்டுமே தென்படும் வானர இனத்தைச் சேர்ந்தவன் நான். பழங்களையும், கிழங்குகளையும் ஆகாரமாக கொண்டவன். என்னை இங்கு வந்து நான் சண்டைக்கு வராத பொழுது மற்றவனோடு மும்முரமாக போர் செய்து கொண்டிருந்த சமயம், என்னை ஏன் அடித்தாய்? பெரிய சக்ரவர்த்தியின் மகன் என்று புகழ் பெற்றவன், கண்ணுக்கு இனியவனாகவும் வேறு இருக்கிறாய். நீ என்ன ஆண்மையுடையவன் தானா? ராஜன், எவன் தான் க்ஷத்திரிய குலத்தில் பிறந்து இப்படி தர்மலிங்கத்தில் மறைந்து கொண்டு (புருஷ உருவம் கொண்டு) இது போல க்ரூரமான காரியத்தை செய்ததாக கேட்டிருக்கிறாய். சந்தேகமே இல்லை. இப்படி ஒரு அதர்மவானைப் பற்றி நான் கேட்டது கூட இல்லை. ராமா, ராஜ குலத்தில் பிறந்தவன் நீ. த4ர்மவான் என்று புகழ் பெற்றவன். ப4வ்யமான உருவில் வந்து அப4வ்யமான, தகாத செயலை செய்து விட்டு ஏன் ஓடுகிறாய்? சாம, தா3னம், பொறுமை, தர்மம், சத்யம், தன்னம்பிக்கை, பராக்ரமம் இவை அரசர்களின் குணம். ராஜன், அபராதிகளை தண்டிப்பது அவன் கடமையே. நாங்கள் காட்டில் திரிபவர்கள். பழங்களையும், காய்களையும், தின்பவர்கள். இது எங்களது இயல்பு. நீ மனிதர்களின் அரசன். பூமி, பொன், வெள்ளி இவை உங்களுக்குள் விரோதம் வளர காரணமாக இருக்கலாம். இங்கு இந்த வனத்தில் உனக்கு ஆசை வர என்ன இருக்கிறது? என்னுடையது என்று எந்த பொருள் மேல் நீ லோபம் கொண்டாய்? எங்களிடம் என்ன பலன்களை எதிர்பார்க்கிறாய் ? நயமும், வினயமும், விரோதமும், அனுக்ரஹமும், ராஜாவின் செயல் முறைகள். அரசர்கள் இஷ்டம் போல் நடக்க கூடாது. நீயோ காமமே பிரதானமானவன். க்ரோதத்தை அடக்காதவன். ராஜாவின் நடத்தைக்கு புறம்பான குணங்கள் உடையவன். கையில் ஆயுதம், அதை எப்படி பயன் படுத்துவது, யார் மேல் அடிக்கலாம் என்று அதே கவனமாக உலவி வருகிறாய். உனக்கு தர்மத்தில் ஈ.டுபாடும் இல்லை. பொருளிலும் புத்தி நிலைத்து நிற்க வில்லை. உன் இந்திரியங்கள் போன வழியில் காமாதுரனாக, மனித அரசனே, குறுகி நிற்கிறாய். காகுத்ஸனே, அபராதம் செய்யாத என்னை உன் பாணங்களால் அடித்து அதர்மத்தில் உழலுகிறாய். இது போன்ற அருவருப்பான செயலை செய்து விட்டு நல்லவர்கள் மத்தியில் என்ன சொல்வாய்? ராஜாவைக் கொன்றவன், ப்ரும்ம ஹத்தி செய்தவன், பசுவை வதைத்தவன், சோரன், பிராணிகளைக் கொல்வதில் ருசியுடையவன், நாஸ்திகன், மற்றவர்களை அண்டி இருப்பவன், இவர்கள், அழிவை அடைவார்கள். காட்டிக் கொடுப்பவன், கதர்ய: – மித்திரர்களைக் கொல்பவன், குரு படுக்கையை உபயோகிப்பவன், (குரு பத்னியிடம் தவறாக நடப்பவன்) இவர்கள் பாபாத்மாக்களுக்குரிய உலகம் செல்வார்கள். சந்தேகமே இல்லை. என் தோலை உடுத்தவும் முடியாது. என்னுடைய ரோமம், எலும்பு இவை எதையும் நல்லவர்கள் உபயோகிப்பதில்லை. என் மாமிசமும் சாப்பிட ஏற்றதில்லை. அதிலும் உன் போன்ற நியமங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என் மாமிசம் தேவையும் இல்லை. ஐந்து ஐந்து நகங்களையுடைய ஜீவன்களைத்தான் பிராம்மணர்களும், க்ஷத்திரியர்களும் சாப்பிடலாம்.
(ஸல்ய: ஸ்வாவித்- முள்ளம்பன்றி: கோதா- – முதலை: சச: முயல், கூர்ம-ஆமை) என் தோலையும் எலும்பையும் விவரம் அறிந்தவர்கள் தொடக் கூட மாட்டார்கள். நானும் ஐந்து நகம் உடைய பிராணியே, ஆனாலும் என் மாமிசம் சாப்பிட ஏற்றதல்ல. அப்படி இருக்க நான் வதம் செய்யப் பட்டிருக்கிறேன். தாரா, எனக்கு நன்மையைச் சொன்னாள். தடுத்தாள். அவளை மீறி மோகத்தால் காலன் கையில் மாட்டிக் கொண்டு விட்டேன். நீ நாயகனாக இருந்தால், ராமா, இந்த பூமி ஸனாதனாக, தலைவனையுடையவனாக ஆகாது. சீலம் நிறைந்த நல்ல பெண், தூர்த்தனான பதியை அடைந்தது போல ஆகும், நேர்மையில்லாதவன், பிறப்பிலேயே அல்பம், பொய்யான அடக்கம், மனக் கட்டுப்பாடு காட்டுபவன், எப்படி தசரதனுக்கு நீ பிள்ளையாக பிறந்தாய்.? பாபி, மகான் தசரதன். அவன் சரித்திரத்தை வீணாக்கிக் கொண்டு நல்லவர்களின் தர்மத்தை மீறுபவனாக எப்படி உதித்தாய்? ராமன் என்ற யானை, தர்மத்தை தியாகம் செய்தல் என்ற அங்குசம் கொண்டு என்னை வீழ்த்தி விட்டது. இந்த செயல் அசுபம் மட்டுமல்ல, யுக்தமானதும் அல்ல. யாரானாலும் நேர்மையான புத்தியுடையவர்கள் தூற்றுவார்கள். அறிஞர்கள் நிறைந்த சபையில் என்ன சொல்வாய்? எங்களிடம் விரோதம் உள்ளவர்கள், உன்னை புகழ்ந்து பேசி உன் விக்ரமத்தை சிலாகிப்பார்கள். அபகாரம் செய்யும் மனிதனிடம், ராஜன், விக்ரமம் இருப்பதாக நான் நம்பவில்லை. என் எதிரில் நின்று நான் காண யுத்தம் செய்திருந்தால், இப்பொழுது வைவஸ்வதம் எனும் லோகத்தை பார்த்துக் கொண்டிருப்பாய். என் கையால் அடிபட்டு உயிரிழந்தவனாக. என்னை நேருக்கு நேர் சந்திக்காமல் கொன்று போட நினைத்திருக்கிறாய். கள்ளைக் குடித்து மயங்கி தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனை, பாம்பு கடித்து விட்டு போவது போல என்னை அடித்து வீழ்த்தி இருக்கிறாய். முன்னாலேயே என்னிடம் இந்த காரியத்தை முடித்து தர வேண்டியிருந்தால், நான் ஒரே நாளில் மைதிலியை உன்னிடம் கொண்டு வந்து சேர்த்திருப்பேன். சுக்ரீவனுக்கு பிரியத்தை செய்வதற்காக என்னை வதம் செய்திருக்கிறாய். இந்த ராவணனை கழுத்தில் கட்டி தூக்கிக் கொண்டு வந்திருப்பேன். யுத்தத்தில் ஜயித்துக் கொண்டு வந்திருப்பேன். சமுத்திர ஜலத்திலோ, பாதாளத்திலோ, மைதிலி எங்கு இருந்தாலும் தேடிக் கொண்டு வந்து சேர்த்திருப்பேன். உன் ஆணைப்படி ஸ்வேதாவை அஸ்வதரீ கொண்டு வந்தது போல. நான் சாதாரணமாக ஸ்வர்கம் சென்றிருந்தால், சுஜ்ரீவன் ராஜ்யத்தை அடைந்தால் அது உசிதம், சரி எனலாம். இப்பொழுது என்னை அதர்மமாக கொன்று விட்டு அவன் ராஜ்யத்தில் முடி சூட்டிக் கொள்ளக் கூடாது. தகாது. இது போல ஜனங்கள் விதியினால் நியமிக்கப் படுகிறார்கள். உன்னால் முடிந்தால், சக்தியிருந்தால் எனக்கு சரியான பதிலை யோசி. இவ்வாறு சொல்லி முகம் வாடி, சரத்தினால் அடிபட்ட வலி முகத்தில் தெரிய, சூரியனைப் போல இருந்த ராமனை ஏறிட்டுப் பார்த்து, பேச்சை நிறுத்தி மௌனமாக இருந்தான், அமர ராஜனான இந்திரனின் மகன் வாலி.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ராமாதி4க்ஷேபோ என்ற பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 18 (289) வாலி வத4 சமர்த்தனம் (வாலி வதத்தை நியாயப் படுத்துதல்)
ராமனால் அடிக்கப்பட்டு, நினைவு மழுங்கி கொண்டிருந்த போதும், கோபத்தோடு கடுமையாக விமரிசனம் செய்த வாலியை, தர்மார்த்தம் நிறைந்த பொருள் பொதிந்த பதிலைச் சொல்ல ராமர் தயாரானார். சூரியன் ஒளியிழந்தானோ, தண்ணீரை மழையாக பொழிந்து விட்ட கார் மேகமோ, அணைந்து போன நெருப்போ எனும்படி பேசிய வாலி வாய் மூடி மௌனியாக ஆனான். அந்த வானர ராஜனை பார்த்து, குற்றம் சாட்டப் பட்டவனான ராமன் பதிலுரைத்தான். உத்தமமான தர்மார்த்தங்கள் அறிந்தவன், வானர ராஜனுக்கும் உரைக்கும்படி தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தான். லௌகீகமாக தர்மம், அர்த்தம், காமம், காலம் இவைகளை சரியாக தெரிந்து கொள்ளாமல், சிறு பிள்ளைத் தனமாக என்னை ஏன் நிந்திக்கிறாய்? புத்தி நிறைந்த வயது முதிர்ந்த ஆசார்யர்களை விசாரிக்காமல், அவர்கள் சம்மதம் இன்றி, சௌம்யனே, வானர இயல்பான சபல புத்தியினால் என்னை குற்றம் சாட்ட விரும்புகிறாய். இந்த பூமி இக்ஷ்வாகு குல அரசர்கள் ஆளுகைக்கு உட்பட்டது. மலைகளும், வனம், காடுகளும் அடங்கிய பூமி. இங்குள்ள மிருகங்கள், பக்ஷிகள், மனுஷ்யர்களை அணைக்கவும், அடிக்கவும், தண்டிக்கவும் இக்ஷ்வாகு வம்சத்தின் அரசர்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த நாட்டை சத்யவான், நேர்மையானவன் எனும் ப4ரதன் ஆளுகிறான். நயம், வினயம், இவை இரண்டும் தவிர சத்யமும் எந்த அரசனிடம் நிலைத்து நிற்கிறதோ, இவற்றுடன் விக்ரமமும் உள்ள அந்த அரசன், ப4ரதன், தேச காலங்களை அறிந்தவன். அவன் த4ர்மாதேசம் (கட்டளை) செய்திருக்கிறான். அதை நிறைவேற்றுவது என் போல் உள்ளவர்கள் கடமை. நானும் மற்ற அரசர்களும் தர்மம் நிலைத்து நிற்கும்படி அவன் கட்டளையை ஏற்று நடமாடிக் கொண்டிருக்கிறோம். பூமி முழுவதும் நடப்போம். அந்த பரதன் தர்மமே உருவாக பூமியை ஆளும் பொழுது தர்ம விரோதமான செயலை யார் செய்ய முடியும், செய்யத் துணிவார்கள். அதனால் நாங்கள் எங்கள் தர்மத்தில் நிலையான புத்தி உடையவர்கள். அனுசரித்து நடப்பவர்கள். பரதனின் கட்டளைப் படி, விதி முறைப்படி தர்மத்தை ஏற்று நடக்கிறோம். நீயோ கலப்படமான தர்மத்தை அனுஷ்டிப்பவன். நிந்திக்கும்படியான செயலை செய்தவன். காம தந்திரம் தான் உனக்கு பிரதானமாக ஆகி விட்டது. ராஜா என்ற கோட்டில் நிற்காமல் அலைகிறாய். மூத்த சகோதரன் தந்தைக்கு சமமானவன். வித்தையைத் தரும் ஆசிரியனும் தந்தைக்கு சமமானவனே. அதனால் பிறப்பினால் தந்தையையும் சேர்த்து மூன்று பேர் தந்தை ஸ்தானம் தந்து கௌரவிக்கப் பட வேண்டியவர்கள். இளையவனை தன் மகனாக பார்க்க வேண்டும். பாவிக்க வேண்டும். சிஷ்யனும் நல்ல குணமுடையவன் மகனாவான். தன் மகனோடு சேர்த்து இந்த மூவரும் புத்திரன் என்ற வாத்ஸல்யத்தோடு நோக்க வேண்டியவர்கள். இதுவும் தர்மமே. நல்லவர்கள் அனுஷ்டிக்கும் தர்ம மார்கம் சூக்ஷ்மமானது. எளிதில் புரிந்து கொள்ள முடியாதது. வானர ராஜனே, மரங்களில் தாவி குதித்து ஓடும் நீ எப்படி அறிவாய்? எல்லா ஜீவன்களின் ஹ்ருதயத்திலும் வியாபித்து இருக்கும் ஆத்மா, சுபமோ, அசுபமோ அறியும். இயற்கையிலேயே சபலம் உள்ளவன், கூட இருப்பவர்களும் அதே போல சபல சித்தம் உடைய வானரங்களே. இவர்களுடன் நீ எப்படி மேலான அறிவைப் பெறுவாய். பிறவியிலேயே குருடன், மற்றொரு பிறவிக் குருடனிடம் கேட்டு புதியதாக என்ன தெரிந்து கொள்ள முடியும்? இதை இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். வெறும் கோபம் மட்டும் வைத்துக் கொண்டு என்னை நிந்திக்க கூடாது. எதனால் நான் உன்னை அடித்தேன் என்பதைச் சொல்கிறேன் கேள். சகோதரன் மனைவியை அபகரித்து தர்மத்தை விட்டு அவளை அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். சுக்ரீவன் மனைவி ருமா உனக்கு மருமகள் போன்றவள். அவளிடம் நீ நியாயமின்றி உன் காமத்தை பூர்த்தி செய்து கொள்ள விழைகிறாய். இது தர்ம விரோதம் என்பதால் தண்டனை அளிக்கப் பட்டது. இது போல தர்ம விரோதமாக நடந்து கொள்ளும் காமாதுரர்களுக்கு தண்டனை தவிர வேறு எந்த விதத்தில் கட்டுப் பாட்டை விதிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவன் நான். இது போல பாப காரியத்தை பொறுத்துக் கொள்ள மாட்டேன். கூட பிறந்த சகோதரியையும், இளைய சகோதரனின் மனைவியையும், மனிதன் காமம் நிறைந்த எண்ணத்தோடு நடந்து கொள்வானானால், சாஸ்திரங்களில் அவனுக்கு தண்டனை வதம் தான் என்று சொல்லப் பட்டிருக்கிறது. பரதன் பூமியை ஆளும் சக்ரவர்த்தி. நாங்கள் அவன் கட்டளையை நிறை வேற்றி வருபவர்கள். நீ தர்மத்தை மீறியவன். எப்படி உன்னை உதாசீனப் படுத்த முடியும்? குரு தர்மத்தை மீறியவனை, காம வழியில் இது போல அத்து மீறி செல்பவர்களை பரதன் அடக்குவதில் முனைந்து இருப்பவன். அந்த பரதன் அறிவு மிகுந்தவன், தர்மத்தோடு ராஜ்யத்தை ஆண்டு வருபவன். நாங்களோ பரதன் கட்டளையை சிரமேற் கொண்டு அதுவே விதி என்று நடப்பவர்கள். வானர ராஜனே, உன்னைப் போல சட்டத்தை, கட்டுப்பாட்டை மீறுபவர்களை தண்டிக்கவே நியமிக்கப் பட்டிருக்கிறோம். சுக்ரீவனுடன் நான் நட்பு கொண்டிருக்கிறேன், லக்ஷ்மணனும் அப்படியே. தாரம், ராஜ்யம் இரண்டையும் இழந்து நிற்பவன், என்னிடம் ஈ.டுபாடு கொண்டுள்ளான். அக்னி சாக்ஷியாக நான் பிரதிக்ஞை செய்து கொடுத்து விட்டேன். என் போன்றவர்கள், ஒரு பிரதிக்ஞை செய்து கொடுத்து விட்டு எப்படி மீறுவோம். அதனால் இது போன்ற தர்ம பரமான காரணங்களால் தான் உன்னை அடித்தேன். இது சாஸனம் என்று ஏற்றுக் கொள். உன்னை அடக்கியது தர்ம சம்மதமே என்று புரிந்து கொள். நண்பன் என்பவனுக்கு உபகாரம் செய்வதும் தர்மம். நீயும் அதையே செய்திருக்கலாம். ஏனெனில் நீயும் தர்ம வழியில் நாட்டை ஆளுவதாக சொல்கிறாய். மனு சொன்ன இரண்டு ஸ்லோகங்களைச் சொல்கிறேன், கேள். இது தான் அறிஞர்கள் ஏற்றுக் கொண்டது, நாங்களும் அனுசரிக்கிறோம். மனிதர்கள் பாபம் செய்தால், அரசனின் தண்டனையை அனுபவிப்பதால், பாபம் நீங்கி, மற்றவர்களைப் போலவே நல்ல காரியங்களை செய்தவர்களுக்கு இணையான ஸ்வர்கத்தை அடைகிறார்கள். திருடன் தண்டனையை அனுபவித்து விட்டால், விடு பட்டபின், திருட்டு குற்றத்தின் பயனை அனுபவித்துக் கழித்து விடுகிறான். பாபியை தண்டிக்காமல் விட்ட அரசன், அந்த பாப பலனை அனுபவிக்கிறான். என் முன்னோர்களுள் ஒருவரான மாந்தாதா, என்பவர், ஸ்ரமணன் (அடி ஆள்) செய்த பாபத்தை அனுபவித்தார். அந்த ஸ்ரமணன், இப்பொழுது நீ செய்த பாபத்தை தான் செய்தான். மற்றும் பல அரசர்கள், கவனக் குறைவால் நிகழ்ந்த பிழைகளுக்கு பிராயச் சித்தம் செய்து தங்கள் மேல் உண்டான களங்கத்தை நீக்கிக் கொண்டுள்ளனர். வானர சார்தூலா, அதனால் பச்சாதாப் பட வேண்டாம். இந்த செயல் தர்மத்தை நிலை நிறுத்தவே செய்யப் பட்டது. நாங்களும் எங்கள் வசத்தில் இல்லை. தர்மம் எங்கள் கைகளை கட்டி விடுகிறது. மற்றொரு காரணமும் கேள், வானர ராஜனே, இதைக் கேட்ட பின் நீ சற்றும் கோபம் கொள்ளக் கூடாது. இதில் எனக்கு மனஸ்தாபமோ, கோபமோ இல்லை. வலை வீசியும், கயிற்றால் கட்டியும், பள்ளம் வெட்டி மறைத்தும், பலவிதமாக மனிதர்கள், மறைந்து இருந்தும், சில சமயம் நேரெதிரில் நின்றும் மிருகங்களைப் பிடிப்பது உண்டு. ஓடும் மிருகங்களையோ, பயப்படும் நிலையில் நம்பி அண்டியிருக்கும் நிலையிலோ, தவறு செய்ததாலோ, செய்யாமலோ, மாமிசம் வேண்டி ஜனங்கள் மிருகங்களை அடிப்பது உண்டு. இதில் தோஷம் இல்லை. தர்மத்தில் சிறந்த ராஜ ரிஷிகள், கூட வேட்டையாடச் செல்வர். அதனால் நீ யுத்தத்தில் என் பாணத்தால் வீழ்த்தப் பட்டாய் என்றால், அது பெரிய குற்றமாகாது. கிளைக்கு கிளை தாவும் மிருகம் தானே நீ, உனக்கு சமமாக யுத்தம் செய்தோ, செய்யாமலோ, நான் வதைப்பதில் தவறில்லை. அரசர்கள் துர்லபமான தர்மத்தையும் தர வேண்டியவர்கள். வானர ஸ்ரேஷ்டனே, நடை முறையில் இருக்கும் தர்மத்தை சுபமானதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்.? தேவர்கள் மனித ரூபத்தில் இந்த பூமியில் நடமாடுகிறார்கள். நீ தர்மத்தை அறியாமல், வெறும் கோபம் மட்டும் கொண்டு நிந்திக்கிறாய். தந்தை பாட்டனார் வழியில் நான் தர்மத்தை அனுசரித்து நடப்பதை குற்றம் சொல்கிறாய். இவ்வாறு ராகவன் சொல்லவும், மிகுந்த உடல் வேதனையிலும், ராகவனைக் குறை கூறவில்லை. நியாயத்தை உணர்ந்தவனாக, கை கூப்பி ராகவனை வேண்டிக் கொண்டான். இப்பொழுது நீ சொன்னது சரியே. அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். சந்தேகமேயில்லை. உயர்ந்த நிலையில் இருந்து நீ பேசும் பொழுது, கீழ்த்தரமான, அல்ப ஜீவனான நான் எதுவும் பதில் சொல்வது உசிதமல்ல. முடியவும் முடியாது. முன்னால் நான் என் அறியாமையால், கடுமையாக விமரிசனம் செய்ததை பொருட்படுத்தாதே. ராகவா, நீ பொருள் உணர்ந்த தீர்க தரிசனம் உடையவன். பிரஜைகளின் நன்மையில் நாட்டம் உடையவன். உன் புத்தி எப்பொழுதும் தெளிவாக இருக்கிறது. கார்ய காரணங்கள், அதன் பலன் இவைகளை நீ அறிவாய். என்னையும் தர்மத்தை விட்டு நகர்ந்து போனதாலோ, முன்னோர்கள் வழியை அத்து மீறியதாலோ தள்ளி, விடாமல் தர்மம் அறிந்தவனே, காப்பாற்றுவாய். என்னைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. தாரையைப் பற்றியும் எனக்கு கவலையும் இல்லை. பந்துக்களைப் பற்றியும் நான் வருந்தவில்லை. என் மகன் குணவான். கனகாங்க3த3ன், பொன்னிறமான அந்த அங்க3த3னைப் பற்றி தான் கவலைப் படுகிறேன். குழந்தையிலிருந்தே நான் அவனை மிக செல்லமாக வளர்த்து வந்திருக்கிறேன். என்னைக் காணாமல் அவன் தான் வற்றிய தடாகம் போல வாடி விடுவான். என் ஒரே பிரியமான மகன். பா3லன். இன்னும் விவரம், அறியாதவன். அவனை நல்ல வழியில் காப்பாற்றி முன்னுக்கு கொண்டு வருவது உன் பொறுப்பு. சுக்ரீவனிடத்திலும், அங்கதனிடத்திலும் நல்ல எண்ணம் கொள். நீ தான் காரியங்களை செய்ய வேண்டியது, செய்யக் கூடாது என்று பிரித்து இவர்களுக்கு ஆணயிடவும் வேண்டும், பாதுகாத்து அரவணைக்கவும் வேண்டும். நரபதியே, லக்ஷ்மணனிடத்திலும், பரதனிடமும் நீ வைத்துள்ள அக்கறையை, சுக்ரீவனிடமும், அங்கதனிடமும் காட்ட வேண்டும். என்னிடம் உள்ள த்வேஷம் காரணமாக, சுக்ரீவன் தாரையிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள். அவளிடம் த்வேஷம் (விரோதம்) பாராட்டாமல் இருக்கச் செய். உன் அனுக்ரஹத்தால், அவன் ராஜ்யத்தை அடையட்டும். உன் வசத்தில், நீ சொல்லும் விதமாக பணிந்து நடந்து வந்தால் தேவலோகத்தையே சம்பாதிக்கலாம். பூமியை ஆளுவது எம்மாத்திரம். தாரை தடுத்ததையும் கேளாமல் உன் கையால் வதம் செய்யப் பட வேண்டும் என்று விரும்பியது போல வந்தேன். சுக்ரீவன், என் சகோதரன், அவனிடம் த்வந்த யுத்தம் செய்தேன். இவ்வாறு ராமனிடம் சொல்லி, வணங்கி வாலி, மேலும் எதுவும் பேசாமல் வாயடைத்து நின்றான். தெளிவான அறிவும், தரிசனமும் பெற்று விட்ட வாலியைப் பார்த்து, சமாதானமாக ராமர் பேசினார். அமைதியாக, பொருள் பொதிந்த வார்த்தைகளால், தர்ம தத்வம் அவன் புரிந்து கொள்ளும் படி, தெளிவாக சொன்னார். வானர குலத்தோனே, நீங்கள் வருந்த வேண்டாம். மரத்துக்கு மரம் தாவும் இயல்பு உங்கள் இனத்தவருக்கு உண்டு. அது இயற்கையே. எங்களைப் பற்றியும் கவலை வேண்டாம். நாங்கள் விசேஷமான தர்ம விதியை அனுசரித்து செல்ல இருக்கிறோம். தண்டிக்கப் பட வேண்டியவன் தண்டனை பெறச் செய்வதும், தண்டிக்க வேண்டியவன் தண்டத்தை எடுப்பதுமான இந்த செயல், காரண காரிய சித்தியைப் பொறுத்து இரண்டும் அமையும். அதனால் கவலைப் பட வேண்டாம். என் பாணத்தால், தண்ட சம்யோகத்தால் (தண்டம் உடலில் பட்டதால்) கல்மஷம் நீங்கப் பெற்றவராக ஆகி விட்டீர்கள். (என் கையால் அடி பட்டதே உங்கள் நன்மைக்கே). உங்கள் இயல்பான நிலையை அடைந்து தர்மத்துக்கு அனுசரணையாக நடந்து வருவீர்களாக. இந்த சோகத்தை விடுங்கள். சோகமும், மோகமும், பயமும், வானர வீரனே, இனி உங்களை வருத்தக் கூடாது. மனதை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் அங்கதன் எப்படி இருக்கிறானோ, அதே போல என்னிடமும் இருப்பான். மதுரமாக மகாத்மாவான ராமன் சொல்லவும், தன்னை ஒரு முகமாக்கிக் கொண்டு, தெளிவாக ரணத்தில் தன்னை அடித்தவனான ராமனிடம், முதலில் தோன்றிய க்ரோதமும், வெறுப்பும் சற்றுமின்றி, வேண்டினான். அடி பட்ட வேதனை மிகுந்து இருந்தாலும், அதை லட்சியம் செய்யாமல், ப்ரபோ, அறியாமையினால் உங்களை தூஷித்தேன். மகேந்திரனுக்கு சமமான ப்ராக்ரமம் உடையவரே, சிறந்த பலசாலி நீங்கள். என்னிடம் தயை செய்யுங்கள். என்னை மன்னித்து விடுங்கள். மனிதருள் மாணிக்கமாக விளங்குபவர் நீங்கள் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வாலி வத சமர்த்தனம் என்ற பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 19 (290) தாராக3மனம் (தாரை வருதல்)
ராம பாணத்தால் வீழ்த்தப்பட்டு, தரையில் கிடந்த வாலி, ராமனின் நியாயமான வாதங்களைக் கேட்டு பதிலேதும் சொல்லாமல் பேசாமல் இருந்தான். ராம பாணம் பட்டதால் உயிர் பிரியும் நிலையில் இருந்தான். அதற்கு முன், சுக்ரீவனோடு கை கலந்ததில் கற்களால் பட்டதும், முழங்கால்கள் குத்தி கிழிந்ததுமாக சரீரம் முழுவதும் ரணம். வாலியின் மனைவி இதை கேள்விப் பட்டாள். ராம பாணம் பட்டு வீழ்ந்ததை அறிந்தாள். மகனோடு இருந்தபொழுது இந்த விவரம் காதில் விழவும், குகையிலிருந்து புறப்பட்ட பெண் மான் போல வேகமாக கிளம்பிச் சென்றாள். அவர்களிடையில் பலசாலிகள் என்று பெயர் பெற்ற அங்கதன் முதலானோர் கூட ராம பாணத்தைக் கண்டு பயந்து ஓடி விட்டனர். பயந்து ஓடும் அவர்களையும் பார்த்தாள், வானரங்கள் வேக வேகமாக ஓடி விழுவதைப் பார்த்தாள். சேனையிலிருந்து, தலைவன் அடிபட்டு விழுந்தவுடன், மற்ற வீரர்கள் ஓடுவது போல ஓடின. தன் துக்கத்தை அடக்கிக் கொண்டு சிதறி ஓடும் அந்த வீரர்களை ஒன்று சேர்த்து, பிரயாசையுடன் அவர்களை ஓடாமல் தடுத்து நிறுத்தினாள். உயிருக்கு பயந்து ஓடுபவர்களை, சோர்ந்து போனவர்களை, அம்புகளால் கட்டி வைப்பது போல கூட்டினாள். வானரர்களே, நீங்கள் உங்கள் அரசனுக்கு பாதுகாவலாக செயல் படுபவர்கள். அரசனை விட்டு, நீங்கள் பயந்து ஓடி வரலாமா? ஏன் இப்படி தவறான வழியில் செல்கிறீர்கள்? ராஜ்யத்தின் காரணமாக, சகோதரன், தன் தமையனையே ரௌத்ரமாக அடித்து வீழ்த்தினானா? அல்லது வெகு தூரம் விரைந்து செல்லும் ராம பாணம் பட்டு வீழ்ந்தானா? என்று வானர ராணி கேட்கவும், வானரங்கள் விவரமாக சொன்னார்கள். மகன் உயிருடன் இருக்கும் பொழுது திரும்பி போ. உன் மகனைக் காப்பாற்றிக் கொள். யமன் தான் ராம ரூபத்தில் வந்து நிற்கிறான். வஜ்ரம் போன்ற பாணங்களால் வாலியையே வீழ்த்தி விட்டான். மரங்கள் உடைந்து விழுகின்றன. பெரிய பெரிய மலை பாறைகளும் உடைந்தன. இந்திரனுக்கு சமமான வாலியே அடிபட்டு விழுந்த பின், மற்ற வானரங்கள் எம்மாத்திரம். எல்லோரும் ஓடி விட்டோம். நமது சேனை முழுவதும் சிதறி விட்டது. நகர வாயிலை மூடுங்கள். காவலை கெட்டிப் படுத்துங்கள். உடனே அங்கதனுக்கு முடி சூட்டி அரசனாக்குங்கள். நடந்து வந்து வாலி புத்திரனை நாங்கள் காப்போம். இந்த இடம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், மற்ற வானரங்களோடு வேறு பாதுகாப்பான குகைக்குச் சென்று விடுவோம். மனைவியை இழந்த, மனைவியுடன் என்று பல வானரங்கள் இருக்கிறோம். லோபிகளான, பிரிந்து போன நம் இனத்தாரிடமே நமக்கு அதிக பயம். தோன்றியபடி வானரங்கள் தலைக்குத் தலை இப்படி பேசிக் கொண்டே போகவும், தாரா, சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள். தன் நிலைக்கு ஏற்ப, புத்திரனால் எனக்கு என்ன ஆக வேண்டும், ராஜ்யம் தான் எனக்கு எதற்கு? நானே இருந்து என்ன செய்யப் போகிறேன். மகா பாக்யசாலியான வாலி, வானரங்களில் சிம்மம் போல இருந்தவன், அவனே அழிந்தபின், என் கணவரை இழந்த பின், எனக்கு மீதி என்ன இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன? அங்கு நானும் நடந்தே செல்கிறேன். ராம பாணத்தால் அடிபட்டு வானர ராஜன் கிடக்கும் இடமே செல்கிறேன் என்று சொல்லிக் கொண்டே பெரிதாக அழுது கொண்டே ஓடினாள். தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு அழுதாள். அருகில் சென்று விழுந்து கிடந்த கணவனைக் கண்டாள். அரக்கர்களைக் கூட போரில் வென்றவன், புற முதுகு காட்டி அறியாதவன், மலையரசனைக் கூட அசைக்கும் வல்லமை உடையவன், வாஸவனின் வஜ்ரம் போன்றவன், பெருங்காற்றிலும் அசையாது நிற்பவன், பெரும் மேகம் போல கர்ஜிப்பவன், இந்திரனுக்கு சமமான பலசாலி, மழை பெய்து ஓய்ந்த மேகம் போன்றவன், பயங்கரமாக போர் செய்தாலும் தானும் அவர்களுக்கு சமமாக ஆடுபவன், சூரன், மற்றொரு சூரனால் வீழ்த்தப் பட்டான். சார்தூலம் எனும் புலி, மாமிசத்திற்காக சிங்கத்தை வீழ்த்தியது போல. உலகம் முழுவதும் கொடிகளுடனும், யாக சாலைகளுடனும் பெருமையாக வாழ்ந்தான். சுபர்ணன், நாகத்தின் காரணமாக சைத்ய வனம் எனும் தேவ லோக நந்த வனத்தை சின்னா பின்னமாக்கியது போல. உத்தமமான வில்லை இறக்கி வைத்து நிற்கும் ராமனைப் பார்த்தாள். அருகில் ராமானுஜன், அதன் பின் தன் கணவனின் சகோதரனான சுக்ரீவனையும் கண்டாள். இவைகளைக் கடந்து தன் கணவன் வீழ்ந்து கிடந்த இடம் சென்றாள். மிக்க வேதனையுடன் பூமியில் விழுந்து புரண்டாள். தூங்கி விட்டாளோ எனும்படி, சற்று நேரம் அசைவின்றி கிடந்தவள், திடுமென எழுந்து ஆர்ய புத்ர என்று அரற்றினாள். மனைவியான அவள், ம்ருத்யுவின் பாசத்தால் கட்டப் பட்டவன் போல கிடந்த வாலியைப் பார்த்து அழுதாள். அங்கு வந்த அங்கதனையும் பார்த்து, சுக்ரீவன் பெரும் மனக் கிலேசம் அடைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், தாராக3மனம் என்ற பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 20 (291) தாரா விலாப: (தாரையின் புலம்பல்)
தாரைகளின் நாயகனான சந்திரன் போன்ற முகத்தையுடைய தாரா, தன் கணவன் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு அவனை அருகில் சென்று அணைத்துக் கொண்டாள். அந்தகன் போல வந்து தன் கணவனை அடித்து வீழ்த்திய ராமபாணம் யானைக்கு சமமான அவனது பெருத்த சரீரத்தை துளைத்துச் சென்று இருப்பதைப் பார்த்து கதறினாள். வேரோடு பிடுங்கப்பட்ட மரம் போல ஆனாள். இந்திரனுக்கு சமமானவன் என்று புகழப் பெற்ற வாலி வீழ்ந்ததை பொறுக்க மாட்டாமல் அழுதாள். வானர ராஜனே, மரத்துக்கு மரம் தாவி குதித்து ஓடும் வானரங்கள் தலைவனே, யுத்தத்தில் பயங்கரமாக வீரம் காட்டுவாய் என்பார்களே. ஏன் இந்த அபலையைப் பார்த்து இன்று பேசாமல் இருக்கிறாய். ஹரி சார்தூ3லா, எழுந்திரு. நல்ல படுக்கையில் போய் படு. உன் போன்ற அரசனுக்கு இப்படி தரையில் விழுந்து கிடப்பது அழகல்ல. உனக்கு வசுதா4 (பூமி மிகவும் பிரியமானவள் என்பது தெரிந்ததே. ஏனெனில் நீ வசுதா4தி4பன். (பூமியின் நாயகன்) உயிர் போனாலும் இந்த பூமியை விட மாட்டேன் என்பது போல அணைத்துக் கொண்டிருக்கிறாய். நிச்சயமாக உனக்காக ஸ்வர்க மார்கத்தில் கிஷ்கிந்தையைப் போலவே மற்றொரு இடம் தயாராக இருக்கிறது. அதனால் தான் எங்களுடன் வெகுகாலமாக, மது நிறைந்த பூக்களுடன் கூடிய வனங்களில் விளையாடி மகிழ்ந்ததை மறந்து அல்லது அலுத்து சலித்து விட்டாய் போலும். நான் தான் சோக சாகரத்தில் மூழ்கி ஆனந்தம் இன்றி, எதிர்காலம் பற்றி எந்த நம்பிக்கையும் இன்றி தவிக்கிறேன். மகா யூத2பன் பெரிய சேனைத் தலைவனான நீ இன்றி, நீ ஐந்தாவது நிலையை அடைந்த பின் நாங்கள் என்ன ஆவோம். (குழந்தை பருவம், பால்யம், இளமை, முதுமை-4 இவைகளுக்கு அடுத்த நிலை-மரணம்). நீ விழுந்து கிடப்பதைப் பார்த்தும் என் ஹ்ருதயம் ஆயிரக் கணக்காக சிதறி விழவில்லையே. கல் மனம் என்று நினைக்கிறேன். சுக்ரீவன் மனைவியை அபகரித்தாய். அவனையும் துரத்தினாய். ஆனால் அவன் மூலமாகவே உனக்கு முடிவும் வந்து விட்டது, பார். நன்மையை நான் சொல்லியும் ஏற்காமல் என்னை நிந்தித்தாய். அலட்சியம் செய்தாய். மோகம் உன் கண்களை மறைத்தது. உன் நன்மையை விரும்புபவள் தானே நான். நன்மையைத் தானே சொன்னேன். இப்பொழுது தென் திசையில் ரூப யௌவனம் மிக்க அப்சர ஸ்த்ரீகளை மயக்கி உன் வசம் ஆக்கிக் கொள்ளப் போகிறாய். உன் ஜீவிதம் முடிந்து விட்டது என்பதால் தான் போலும் விதி உனக்கு எதிராக இருந்து விட்டது. சுக்ரீவனிடம் அனாவசியமாக, அவன் பலாத்காரமாக அழைத்தவுடன் அடித்து எதிர் கொள்ள வந்தாய். உன் வசம் இழந்தாய். இந்த காகுத்ஸனும், தேவையில்லாமல் உன்னை வதம் செய்து விட்டு, மற்றவனோடு சண்டையிடும் சமயம் குறுக்கே புகுந்து அடிப்பது நிந்திக்கத் தகுந்தது என்பதைக் கூட உணராமல், சற்றும் வருத்தம் இல்லாமல் நிற்கிறான் பார். நான் தான் அனாதையானேன். இது வரை துக்கமே அறியாதவள், வைதவ்யம் பூண்டு தவிக்கிறேன். என் நிலை மிக பரிதாபமாக ஆகி விட்டது. நம் மகன் அங்கதனை மிகப் பிரியமாக கொண்டாடி வளர்த்தோம். அவன் சுகுமாரன். சுகத்திலேயே வளர்ந்தவன். இப்பொழுது எப்படி இருப்பான்? தந்தை கோபத்தில் கண் மண் தெரியாமல் நடந்து கொண்டு இப்படி விழுந்து கிடந்தால் அவன் கதி என்ன? அங்கதா, உன் தந்தையை நன்றாக பார். பின்னால் கிடைக்காது. உன் மகனை உச்சி முகர்ந்து ஆசிர்வாதம் செய். சமாதானப் படுத்து. பிழைத்து எழுவாய் என்று நம்பிக்கையில்லையே. நீண்ட பிரயாணத்திற்கு தயாராகி விட்டவன் போல தெரிகிறாய். உன்னை அடித்து ராமன் மிகப் பெரிய செயலை செய்திருக்கிறான். சுக்ரீவனுடன் சேர்ந்த பின் அவன் மனதில் கருணை என்பதே இல்லாமல் போய் விட்டது. சுக்ரீவா, திருப்தியா? ருமாவுடன் சந்தோஷமாக இரு. ராஜ்யத்தை அனுபவி. உன் சகோதரன் தான் உனக்கு சத்ரு. அவனைத் தான் அடித்தாயிற்றே. இப்படி புலம்புகிறேன், என்னிடம் ஏன் பேசவில்லை. இதோ பார், வானர ராஜனே, உன் மற்ற மனைவிகளும், ஏராளமாக வந்து கூடியிருக்கிறார்கள். இவள் அழுவதைக் கேட்டு, மற்ற ஸ்த்ரீகளும், அங்கதனை அணைத்துக் கொண்டு பெரிதாக ஓலமிட்டு அழுதனர் அங்கதனை விட்டு நீண்ட பிரயாணம் போகிறீர்களே, பிரிய புத்திரனை விட்டுப் போவது சரியா? நானோ, என் மகனோ உங்களுக்கு அப்ரியமாக என்ன செய்தோம். எங்கள் இருவரையும் பிரிந்து வெகு தூரம் செல்லத் தயாராகி விட்டீர்களே. உங்கள் பாதத்தில் விழுந்து வணங்குகிறேன். அறியாமல் நாங்கள் தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள். ஹே, வானர ராஜனே, என்று இவ்வாறு தாரா மிகவும் வேதனையோடு அழுதபடி, கணவனின் அருகில் மற்ற ஸ்த்ரீகளுடன் ப்ரயோபவேசம் செய்யத் தீர்மானித்து விட்டாள். பூமியில் வாலி கிடக்கும் இடத்திலேயே அணைவருமாக தீக்குளிக்க முனைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், தாரா விலாபோ என்ற இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)