ஸ்ரீமத் ராமாயணம் – பால காண்டம் 1-30
ஸ்ரீமத் ராமாயணம்
பால காண்டம்
அத்தியாயம் 1 நாரத வாக்யம். 4
அத்தியாயம்2ப்ரும்மாவின் வருகை (ப்ரும்மா வருதல்) 9
அத்தியாயம் 3. காவ்ய ஸ்ம்க்ஷேபம், (கதை சுருக்கம்). 11
அத்தியாயம் 4 அனுக்ரமனிகா ( நிகழ்ச்சி நிரல்) 13
அத்தியாயம் 5அயோத்யா வர்ணனை…… 15
அத்தியாயம் 6ராஜ வர்ணனை…… 16
அத்தியாயம் 7அமாத்ய வர்ணனை (மந்திரிகள் பற்றிய வர்ணனை) 18
அத்தியாயம் 8 சுமந்திர வாக்யம் (சுமந்திரன் சொல்லியது) 19
அத்தியாயம் 9 ருஸ்யஸ்ருங்கோபாக்யானம் (ருஸ்ய ஸ்ருங்க முனிவரின் கதை) 21
அத்தியாயம் 10 ருஸ்ய ச்ருங்க முனிவரை வர வழைத்தல்.. 22
அத்தியாயம் 11ருஸ்ய ச்ருங்க முனிவர் அயோத்யா வருதல்.. 23
அத்தியாயம் 12 அஸ்வமேத ஏற்பாடுகள்.. 25
அத்தியாயம் 13 யக்ஞசாலா பிரவேசம். 26
அத்தியாயம் 14 அஸ்வமேதம். 27
அத்தியாயம் 15 ராவண வதோபாயம் (ராவணனை வதம் செய்ய உபாயம் தேடுதல்) 30
அத்தியாயம் 16பாயஸ உத்பத்தி. 32
அத்தியாயம் 17 ருக்ஷ வானர உத்பத்தி(கரடி, வானரங்களின் பிறப்பு) 33
அத்தியாயம் 18ராமாத்யவதார: (ராமன் முதலானோர் பிறப்பு) 35
அத்தியாயம் 19விஸ்வாமித்திர வாக்யம். 39
அத்தியாயம் 20 தசரத வாக்யம் (தசரதரின் பதில்) 40
அத்தியாயம் 21வசிஷ்ட வாக்யம் (வசிஷ்டரின் உபதேசம்) 42
அத்தியாயம் 22வித்யா ப்ரதானம்,(வித்யா-புதிய வித்தையை உபதேசித்தல்) 43
அத்தியாயம் 23 காமாஸ்ரம வாசம் (காமாசிரமம் என்ற இடத்தில் வசித்தல்) 45
அத்தியாயம் 24தாடகா வன ப்ரவேசம் (தாடகா வனத்தில் நுழைதல்) 46
அத்தியாயம் 25 தாடகா வ்ருத்தாந்தம், (தாடகையின் கதை) 48
அத்தியாயம் 26தாடகா வத4: (தாடகையின் வதம்) 49
அத்தியாயம் 27அஸ்திரக்ராம பிரதானம் (அஸ்திரங்களை பெறுதல்) 51
அத்தியாயம் 28 அஸ்திர சம்ஹார க்ரஹணம். 52
அத்தியாயம் 29 சித்3தா4ஸ்ரமம். 53
அத்தியாயம் 30 யக்ஞ ரக்ஷணம்(யாகத்தைக் காத்தல்) 55
அத்தியாயம் 32 குசனாப கன்யா உபாக்யானம் (குச நாபர் மகளின் கதை) 58
அத்தியாயம் 33 விஸ்வாமித்திர வம்ச வர்ணனை…… 59
அத்தியாயம் 34 விஸ்வாமித்திர வம்ச வர்ணனை…… 61
அத்தியாயம் 35 உமா கங்கா விருத்தாந்த ஸம்க்ஷேபம். 62
அத்தியாயம் 36உமா மாகாத்ம்யம். 63
அத்தியாயம் 37 குமாரோத்பத்தி(குமரன் என்ற முருகன் பிறப்பு) 64
அத்தியாயம் 38சகர புத்ர ஜனனம் (சகர புத்திரன் பிறப்பு) 66
அத்தியாயம் 39 ப்ருது2வீ விதா3ரனம் (பூமியைத் தோண்டுதல்) 67
அத்தியாயம் 40 கபில தர்ஸனம் (கபிலரைக் காணுதல்) 68
அத்தியாயம் 41ஸகர யக்ஞ சமாப்தி. 70
அத்தியாயம் 42ப4கீ3ரத2 வரப்ரதா3னம் (பகீரதனுக்கு வரம் அளித்தல்) 71
அத்தியாயம் 43 கங்கா அவதரணம் (கங்கை இறங்கி வருதல்) 72
அத்தியாயம் 44 ஸாக3ரோத்3தா4ரம் (ஸக3ர புத்திரர்களை கரையேற்றுதல்) 75
அத்தியாயம் 45 அம்ருதோத்பத்தி(அம்ருதம் தோன்றுதல்) 76
அத்தியாயம் 46 தி3தி கர்ப்ப பேதம் (திதியின் கர்ப்பத்தை அழித்தல்) 78
அத்தியாயம் 47 விசாலா கமனம். 79
அத்தியாயம் 48 சக்ர அஹல்யா சாபம் (இந்திரன் அகல்யை, இவர்களை சபித்தல்) 80
அத்தியாயம் 49 அஹல்யா சாப மோக்ஷம் (அகல்யை சாபத்திலிருந்து விடுபடுதல்) 82
அத்தியாயம் 50ஜனக சமாக3மம்(ஜனகரை சந்தித்தல்) 83
அத்தியாயம் 51 விஸ்வாமித்திரர் விருத்தாந்தம் (விஸ்வாமித்திரரின் கதை) 85
அத்தியாயம் 52 வசிஷ்டாதித்யம் (வசிஷ்டர் செய்த விருந்துபசாரம்) 86
அத்தியாயம் 53சப3லா நிஷ்க்ரய: 87
அத்தியாயம் 54பப்லவாதி ஸ்ருஷ்டி (பப்லவர்களை உற்பத்தி செய்தல்) 89
அத்தியாயம் 55விஸ்வாமித்திர தனுர்வேதாதிகம். 90
அத்தியாயம் 56ப்ரும்ம தேஜோ பலம்(ப்ரும்ம தேஜஸின் பலம்) 91
அத்தியாயம் 57 திரிசங்கு யாஜன பிரார்த்தனை (திரிசங்குவின் வேண்டுகோள்) 93
அத்தியாயம் 58 த்ரிசங்கு சாபம் (திரிசங்கு பெற்ற சாபம்) 94
அத்தியாயம் 59 வாசிஷ்ட சாபம் (வசிஷ்டரின் பிள்ளைகளை சபித்தல்) 96
அத்தியாயம் 60 த்ரிசங்கு ஸ்வர்கம் (திரிசங்கு சுவர்கம்) 97
அத்தியாயம் 61 சுன:சேபவிக்ரய: (சுன:சேபன் என்பவனை விற்றல்) 99
அத்தியாயம் 62 அம்ப3ரீஷ யக்ஞம் (அம்பரீஷனின் யாகம்) 100
அத்தியாயம் 63 மேனகா நிர்வாச: (மேனகையை வெளி யேற்றுதல்) 101
அத்தியாயம் 64 ரம்பா சாபம் (ரம்பையின் சாபம்) 103
அத்தியாயம் 65 பிரும்ம ரிஷித்வ ப்ராப்தி (ப்ரும்ம ரிஷி பதவி பெறுதல்) 104
அத்தியாயம் 66 த4னு:ப்ரசங்க: (வில்லைப் பற்றிய விவரம்) 106
அத்தியாயம் 67 த4னுர்பங்க: (வில்லை உடைத்தல்) 107
அத்தியாயம் 68 தசரதாஹ்வானம் (தசரதரை அழைத்தல்) 108
அத்தியாயம் 69தசரத2 ஜனக சமாகம: (தசரதரும், ஜனகரும் சந்தித்தல்) 110
அத்தியாயம் 70 கன்யா வரணம் (பெண் கேட்டல்) 111
அத்தியாயம் 71 கன்யாதான ப்ரதிஸ்ரவ: (கன்யாவை தர சம்மதித்தல்) 113
அத்தியாயம் 72கோ3தா3ன மங்களம் (கோ3தா3ன மங்களம்-காப்பு கட்டுதல்) 114
அத்தியாயம் 73 தசரத2 புத்ரோத்3வாஹ: (தசரதரின் புத்திரர்களின் விவாகம்) 115
அத்தியாயம் 74ஜாமத3க்னி அபி4யோஹ: (ஜமதக்னி மகன் வந்து எதிர்த்தல்) 117
அத்தியாயம் 75 வைஷ்ணவ த4னு: ப்ரசம்ச: (வைஷ்ணவ வில்லின் பெருமை) 118
அத்தியாயம் 76ஜாமத3க்3ன்ய ப்ரத்ஷ்டம்ப4: (ஜமதக்னி புத்திரரை அடக்குதல் ) 120
அத்தியாயம் 77 அயோத்யா பிரவேசம்(அயோத்தியில் பிரவேசித்தல்) 121
ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் பால காண்டம் முற்றும். 123
அத்தியாயம் 1 – நாரத வாக்யம்
தபஸ்விகளுள் சிறந்த தபஸ்வி, வார்த்தைகளையும் பொருளையும் உணர்ந்தவர் என்று போற்றப்படும் நாரதரிடம் வால்மீகி கேட்கலானார். முனிவர் பெருமானே, இந்த உலகில் தற்சமயம் சிறந்த குணவான் யார்? வீரமுள்ளவன் யார்? எவன் தர்மத்தை அறிந்தவன்? செய்நன்றி மறவாதவன், சத்யமான வாக்குடையவன், தன் கொள்கையில் பிடிப்பும் உறுதியும் உள்ளவன், இவ்வளவும் இருந்தும் ஒழுக்கமும் நன்னடத்தையும் உடையவன் யார்? எந்த ஜீவராசியானாலும், நன்மையே செய்ய நினைக்கும் கருணாமூர்த்தி யார்? வித்வானாகவும் செயல் திறன் மிக்கவனும், கண்ட மாத்திரத்தில் பிரியமாக இருப்பவனும், தன்னம்பிக்கை உடையவன், கோபத்தை வென்றவன், அசூயை அண்ட முடியாதவன், புத்திமான், நீதிமான், ஸ்ரீமான், நல்ல நாவன்மை உடையவன், இவ்வளவு குணங்கள் உள்ளவன் வெகுண்டால் உலகமே நடுங்கும் – இப்படி ஒரு மனிதப்பிறவி இருக்க முடியுமா? இருந்தால் எனக்குச் சொல்லுங்கள். நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மகரிஷியே, நீங்கள் எல்லாம் அறிந்த ஞானி. நீங்களே இப்படிப்பட்ட ஒருவரை அறியக்கூடியவர். வால்மீகியின் சரமாரியான கேள்விகளுக்கு மிக சந்தோஷமாக நாரதர் பதில் அளிக்க தயார் ஆனார். – கேள் – என்று சொல்லி ஆரம்பித்தார். நீ சொன்ன குணங்கள் மிக அதிகம். இவை ஒரு மனிதனிடத்தில் அமைவது அரிது. ஆயினும் அப்படி ஒரு மகானை நான் அறிவேன். இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன். இராமன் என்ற பெயர் உடையவன். நல்ல வீரமும் தன்னடக்கமும் உடையவன். கல்வி கேள்விகளில் சிறந்தவன். நீ கேட்ட குணங்கள் அனைத்தும் அதற்கு அதிகமாகவும் உள்ளவன். தன் கொள்கையில் அசையா பிடிப்பு உடையவன். புத்தி, நீதி, நல்ல வாக்கு, லக்ஷ்மி கடாக்ஷம் உடையவன். சத்ருக்களை அடக்கக்கூடிய வீரமும் உள்ளவன். அகன்ற தோளும் நீண்ட புஜங்களும் சங்கு போன்ற கழுத்தும் அழகிய தோற்றமும் பொலிவும் உள்ளவன். இவன் அறியாத தர்மம் இல்லை. சத்யமே உருவானவன். மக்களின் நலத்தையே பிரதானமாக நினைத்து செயல் படுபவன், புகழும், ஞானமும் இவனை அண்டி பெருமை பெறும். உள்ளும் புறமும் தூய்மையும், பார்த்தவரை வசீகரிக்கும் தோற்றமும், தவ வலிமையும் உடையவன். பிரும்மாவிற்கு சமமானவன், விஷ்ணுவுக்கு சமமான செல்வம் உடையவன்.பூமியைப் போல் பொறுமையுடையவன். ஆயினும் சத்ரு என்று வந்தால் பயங்கரமாக கோபம் கொள்வான். தர்மத்தின் காவலனாக, ஜீவ லோகத்தை ரக்ஷிப்பவனாக, தன் தர்மத்தையும், ஜனங்களின் தர்மத்தையும் மதித்து நடப்பவன், வேத வேதாந்தங்களோடு தனுர் வித்தை கற்றவன். சாஸ்திரங்களையும் அறிந்தவன். ஆதலால், நல்ல ஞாபக சக்தியும் பிரதிபாவும் (தேக காந்தி) உடையவன், அதனாலேயே எல்லோருக்கும் பிரியமானவன். சாது, அதனால் தீனன் என்று பொருள் அல்ல. நல்ல திறமைசாலி. யாராலும்,எப்பொழுதும் அணுகத்தகுந்த வகையில் எளிமையானவன். உதாரணம் சொல்ல வேண்டுமானால், நதிகள் சமுத்திரத்தை அடைவது போல் இயல்பாக இவனை காணலாம். எப்பொழுதும் பிரியமான வார்த்தைகளை பேசும் போதும், தான் ஒரு மகான் என்பதை உணர்த்தக்கூடிய வல்லமை பெற்றவன்.
இவ்வளவு நல்ல குணங்கள் ஒருங்கே அமையப் பெற்றவன் யாரோ எனில், அவன் தான் கௌசல்யை பெற்ற மகன், இராமன் என்று ஊருக்குள் பெயர் பெற்றவன். இவனை வர்ணிக்கப் போனால், சமுத்திரத்தின் காம்பீர்யமும் (கம்பீரமான தோற்றமும்) இமய மலை போன்ற தைரியமும், விஷ்ணு போன்ற பராக்ரமும், சந்திரன் போன்ற பிரியமான தோற்றமும், கோபம் வந்தால் காலாக்னி போலவும், பொறுமையில் பூமிக்கு சமமாகவும் உள்ளவன். தியாகம் செய்வதில் இவனுக்கு ஈடு, இணை கிடையாது. சத்யத்தில் தர்மராஜனே வந்தது போலவும் உள்ள இவனை, தந்தையான ராஜா தசரதன் யுவராஜாவாக நியமிக்க எண்ணி பட்டாபிஷேகம் செய்ய முனைந்தான். மிகவும் மகிழ்ச்சியுடன் நாளை யுவராஜ பட்டாபிஷேகம் என்று அறிவித்தான்.
அபிஷேக ஏற்பாடுகளைப்பார்த்த கைகேயி முன் கொடுத்த வரத்தை நினைவுபடுத்தி, இப்போது கேட்கலானாள். ராமனை வனத்துக்கு அனுப்பு, என் மகனான பரதனுக்கு முடி சூட்டு என்று கேட்டாள்.தர்ம பாசம் போன்ற, சத்ய வசனத்திற்கு கட்டுப்பட்டு, ராஜா தசரதன் பிரியமான மகனான ராமனை வனத்துக்கு அனுப்ப இசைந்தான்.கொடுத்த வாக்கை காப்பாற்றும் பொருட்டு, தந்தை சொல் மீறாத தனயனாக , ராமனும்காட்டுக்குச் சென்றான்.கைகேயி மனம் மகிழ வனம் கிளம்பிய ராமனை சகோதரன் என்ற சொல்லுக்கே இலக்கணமான லக்ஷ்மணன் பின் தொடர்ந்தான். ஜனக ராஜாவின் மகளும்,ராமனின் பிரியமான பத்னியுமான சீதையும் உடன் வரத் தயராக ஆனாள்.ஊர் ஜனங்கள் தொடர்ந்து வர, மூவரும் தந்தை தசரதனை நினைத்தபடியே ச்ருங்கிபேரபுரம் எனும் இடத்தை அடைந்தனர். கங்கை கரையில் அமைந்த இந்த இடத்தில்சாரதியான சுமந்திரரை திருப்பி அனுப்பிவிட்டு, அடர்ந்த கானக வழியில் சென்றனர். பல நதிகளையும்காடுகளையும் கடந்து பரத்வாஜரை சந்தித்து, அவர் அனுமதியுடன் சித்ர கூடத்தில் வசிக்கலானார்கள். அழகிய பர்ணசாலை கட்டிக்கொண்டு,தேவ கந்தர்வர்களுக்கு இணையான நிம்மதியும் சுகமுமாக வாழலாயினர்.
சித்ரகூடம் சென்ற ராமனை எண்ணி எண்ணி தசரத ராஜா உயிர் விட்டார். வசிஷ்டர் முதலிய குரு ஜனங்கள் பரதனை வரவழைத்து – நீயே ராஜா – என்ற போது பரதன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ராமனை அழைத்து வர அவனும் வனம் சென்றான். மஹாத்மாவும் சத்யபராக்கிரமமும் உடையவனான ராமனை தனக்கு மூத்தவன் என்ற முறையில்- நீயே தர்மம் அறிந்தவன். அரசனாக முடி சூட உரிமை உடையவன்- என்று வேண்டினான். தந்தையின் கட்டளையை மீற விரும்பாத ராமன் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தான். திரும்பத் திரும்ப தான் வர இயலாது என்று சொல்லி தன் பாதுகையை (காலணி ) ந்யாசமாக (அடையாளப் பொருளாக) தந்து அயோத்திக்கு பரதனை திருப்பி அனுப்பி விட்டான். தன் விருப்பம் நிறைவேறாமலே பரதன் ராம பாதுகையை சிரமேற்கொண்டு நந்தி கிராமத்தில் இருந்து கொண்டுராமன் திரும்பி வரும் நாளை எதிர் பார்த்தபடி ராஜ்யத்தை நிர்வகித்து வரலானான். பரதனும் திரும்பி சென்றபின் சத்யசந்தனும், இந்திரியங்களை ஜயித்தவனுமான ராமன் நகர ஜனங்களும் மற்றவர்களும் திரும்பவும் வரக்கூடும் என்று எண்ணி தண்டகா வனத்துள் பிரவேசித்தான். மிகப்பெரிய அந்த வனத்தில் நுழைந்த உடனேயே எதிர்பட்ட விராதனை அழித்த பின், சரபங்க முனிவரை கண்டான். சுதீக்ஷ்ணரையும், அகஸ்தியரையும், அகஸ்தியரின் சகோதரனையும் தரிசித்தனர். அகஸ்தியர் சொன்னபடி, இந்திரனுடைய விஷ்ணு தனுஷை எற்று கொண்டான். மிகவும் சந்தோஷமாக அவர் அளித்த வாள், குறையாத அம்புகளை உடைய தூணி (அம்பு வைக்கும் உறை) இவற்றையும் பெற்றுக்கொண்டான். அரண்யத்தில் வசித்த இந்த நாட்களில் அனேக முனிகளும், ரிஷிகளும் அந்த காட்டில் வசித்து வந்த மற்றவர்களுடன் வந்து ராமனிடம் அசுரர்களையும், ராக்ஷஸர்களையும் வதம் செய்து தங்களை ரக்ஷிக்கும்படி வேண்டிக்கொண்டனர். அப்படியே ஆகட்டும் என்று ராமனும் அவர்களுக்கு பிரதிக்ஞை (சத்யம்) செய்து கொடுத்தான். ராக்ஷஸர்களை ஒடுக்குவதாகவும் அக்னிக்கு சமமான தவ வலிமை கொண்ட அந்த தண்டகாரண்ய வாசிகளான ரிஷிகளுக்கு வாக்கு கொடுத்தான். அங்கு வசித்த சமயம் ஒரு நாள் தன் விருப்பம் போல் உருவம் எடுத்துக்கொள்ளும் வல்லமை வாய்ந்த சூர்பணகா என்ற ராக்ஷஸி, அங்க ஹீனம் செய்யப்பட்டாள். சூர்ப்பணகையால் தூண்டி விடப்பட்டு சண்டையிட வந்த ஜனஸ்தானத்து ராக்ஷஸர்களையும், கரன், த்ரிசிரஸ், தூஷணன் என்பவர்களையும் எதிர்த்து நின்று போரில் வென்றான். அவர்களை தொடர்ந்து வந்த ராக்ஷஸ சைன்யம், மொத்தம் பதினாயிரம் அரக்கர்களையும் கொன்று குவித்தான். தாயாதிகளான இவர்கள் வதம் செய்யப்பட்டதை கேள்விப் பட்டு வந்த ராவணன், மாரீசனை உதவி கோரினான். மாரீசன் பலவிதமாக தடுத்துப் பார்த்தான். பலவானான ராமனுடன் மோதாதே என்று மாரீசன் சொன்னது ராவணனுக்கு உறைக்கவில்லை. காலத்தால் துரத்தப்பட்டவன் போல் ராவணன், மாரீசனை உடன் அழைத்துக்கொண்டு ராமனுடைய ஆஸ்ரமம் இருந்த இடம் வந்து சேர்ந்தான். மாயாவியான மாரீசனால் வெகு தூரம் ராம, லக்ஷ்மணர்களை அழைத்து செல்லச் செய்து, ராம பத்னியை (சீதை) அபகரித்து கொண்டு சென்றான். செல்லும் வழியில் தடுத்த கழுகரசனான ஜடாயுவை கொன்றான். இறந்து கிடந்த கழுகு அரசனான ஜடாயுவை கண்டு சீதை அபகரிக்கப்பட்டாள் என்று அறிந்து ராமர் வேதனைக்குள்ளானார். இந்த வேதனைக்கிடையில் ஜடாயுவுக்கு ஸம்ஸ்காரங்கள் செய்து விட்டு சீதையை தேடிக்கொண்டு செல்லும் பொழுது, கபந்தன் என்ற ராக்ஷஸனை பார்த்தார். சாபத்தால் கோர வடிவம் பெற்ற கபந்தனை தகனம் செய்யவும், அவன் திவ்யமான தன் சுயரூபத்தை அடைந்து, சபரியைக் கண்டு மேலும் விவரங்கள் அறிந்து கொள், அவள் தர்மம் அறிந்தவள், தர்மத்தை கடைப் பிடிப்பவள் என்று சொல்லிமறைந்தான்.
மஹா தேஜஸ்வியான ராமர், எதிரியை போரில் வீழ்த்தக்கூடிய சாமர்த்யம் உடையவரான ராமர், சபரியைக் காண அவள் ஆஸ்ரமம் சென்றார். தசரத புத்ரன் ராமனுக்கு உகந்த விதத்தில்சபரியும் வரவேற்று உபசாரங்கள்செய்தாள். பம்பா தீரத்தில் அனுமனைக் கண்டார். அனுமன் சொல்படி சுக்ரீவனைக் கண்டார். சுக்ரீவனுக்கு நடந்தது அனைத்தையும் ராமர் விளக்கிக் கூறினார். அதுவரை நடந்த கதையும், விசேஷமாக சீதையைப் பற்றியும்சொன்னார். இவ்வளவையும் கேட்ட பின்னர் சுக்ரீவன், அக்னியை சாக்ஷியாகக் கொண்டு முறைப்படி சந்தோஷமாக சக்யம் (நட்பு)
செய்து கொண்டார்.அதன்பின் சுக்ரீவன் தனக்கும் வாலிக்கும் பகை தோன்றிய காரணத்தை நண்பனான காரணத்தால் உரிமையுடனும், துக்கம் தாங்காமல் நடந்தது அனைத்தையும் சொன்னான்.வாலியை வதம் செய்வதாக ராமர் ஒத்துக்கொண்டார். வாலியின் பலத்தை விவரித்து வானரமான சுக்ரீவன், ராமருடைய புஜபலத்தில் தனக்கு இருந்த அவநம்பிக்கையை வெளியிட்டான். மலையளவு கிடந்த துந்துபியின் சரீரத்தைக் காட்டினான். தனக்கு நம்பிக்கை உண்டாக வாலி செய்தது போல காலால் வீசி எறியச் சொன்னான். அந்த சரீரத்தை புன்னகையோடு கால் கட்டை விரலால் பல நூறுயோஜனை தூரம் தள்ளி விழச் செய்தார் ராமர். அப்படியும் சுக்ரீவன் சந்தேகம் தீராமல் நிற்பதைக் கண்டு, ஏழு சால மரங்ளையும் ஒரே அம்பினால் வீழ்த்திக் காட்டினார். மரங்களைத் துளைத்த அம்பு, மலைகளையம் ரசாதலத்தையும் கடந்து திரும்ப ராமரிடம் வந்து சேர்ந்தது. இதனால் நம்பிக்கையும், திருப்தியும், அடைந்த வானர ராஜவான சுக்ரீவன், கிஷ்கிந்தைக்கு ராமருடன் கூட கிளம்பிச் சென்றான். குகையை அடைந்து சுக்ரீவன் கர்ஜனை செய்தான். அந்த சப்தத்தைக் கேட்டு வானர அரசனான வாலி வெளியில் வந்தான். தடுத்த மனைவி தாரையை அலட்சியம் செய்து சுக்ரீவனோடு சண்டையிடத் தயார் ஆனான். அவனை ஒரே அம்பினால் ராமர் வீழ்த்தினார். சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்குப்படி, வாலியை வதம் செய்து சுக்ரீவனை வானர அரசனாக நியமித்து அபிஷேகம் செய்வித்தார்..
அவனும் எல்லா வானரர்களையும் ஒன்று கூட்டி ஜனகர் மகளான சீதையைத் தேட பல திக்குகளிலும் அனுப்பி வைத்தான். கழுகு அரசனான சம்பாதியின் அறிவுரையின் படி ஹனுமான் உப்பு நீர் நிறைந்த சமுத்திரத்தைக் கடந்து பல யோஜனைகள்தாவிச் சென்றான். ராவணன் பாலித்து வந்த லங்கா நகரை சென்றடைந்தான். அசோக வனத்தில் ராமனையே த்யானம் செய்துகொண்டிருக்கும் சீதையைக் கண்டான். அடையாளம் காட்டி, நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லி வைதேஹியை சமதானம் செய்தபின் தோரண வாயிலை இடிக்கலானான். அதைத் தடுத்த ஐந்து சேனாபதிகளையும், ஏழு மந்திரி குமாரர்களையும் ஜயித்து, அக்ஷணையும், சூரணையும் வீழ்த்தி, இந்திரஜித்திடம் தானாகவே கட்டுண்டான். பிரும்மாவிடம் தான் பெற்ற வரத்தின் பலத்தினால் அஸ்திரத்திலிருந்து விடுப்பட்டபோதிலும், ராக்ஷஸர்களின் துன்புறுத்தலை சகித்துக் கொண்டான். லங்கையை எரித்து, பின், சீதைக்கு அதனால் ஆபத்து இல்லை என்பதை உறுதியாக தெரிந்து கொண்டு ராமரிடம் விஷயம் சொல்லத் திரும்பி வந்தான். மஹாத்மாவான ராமரை அடைந்து வலம் வந்து பிரியமான(கண்டேன் சீதையை) என்ற செய்தியைத் தெரிவித்தான்.
பின்னர் சுக்ரீவன் உடன் வர சமுத்திரக்கரையை அடைந்து சூரியனுக்கு சமமான தேஜஸ் கொண்ட, சமுத்திரத்தைக் கலங்கச் செய்து, சமுத்திரராஜன் தானே வந்து வேண்டிக் கொள்ள சாந்தம் அடைந்து, அவன் அனுமதிப்படியே சமுத்திரத்தின் மேல் சேதுவைக்கட்டி , லங்கையை அடைந்து, ராவணனை யுத்தத்தில் ஜெயித்து, ராமர் சீதையைத் திரும்ப பெற்ற பொழுது வெட்கமும் வேதனையும் அடைந்தார். கூடியிருக்கும் ஜனங்கள் மத்தியில் அவளைக் கடுமையாக விமரிசித்தார். அதை பொறுக்க மாட்டாத சீதை அக்னி ஜ்வாலையில் பிரவேசித்தாள். அக்னி தேவன் தானே வந்து , சீதையை குற்றமற்றவள் என்று திருப்பித் தரவும், ராமர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். மூன்று உலகங்களிலும் தேவ ரிஷி கணங்கள் ராகவனின் இந்த செயலால் சந்துஷ்டியை அடைந்தனர்.
ராக்ஷஸேந்திரனான விபீஷணனை லங்கையில் முடி சூட்டி வைத்துவிட்டு, தான் நினைத்த காரியத்தை செய்து முடித்துவிட்ட திருப்தியுடன் ராமர் மகிழ்ச்சி அடைந்தார். தேவர்களிடம் வரங்கள் பெற்று வானரர்களைத் திரும்ப அவர்கள் இடத்தில் சேர்ப்பித்துவிட்டு புஷ்பக விமானத்தில் தோழர்களோடு அயோத்தி நோக்கி பிரயாணப்பட்டார். சத்ய பராக்ரமனான ராமர் பரத்வாஜர் ஆஸ்ரமத்தை அடைந்து, அனுமானை பரதனிடத்தில் செய்தி சொல்லி அனுப்பினார். சுக்ரீவனுடன் பேசிக்கொண்டே ராமர் புஷ்பகத்தில் ஏறி நந்திக்ராமம் வந்து சேர்ந்தார். நந்தி கிராமத்தில் ஜடா முடிகளைக் களைந்து சகோதரர்களுடன் கூட ராமர், சீதையுடன் ராஜ்யத்தையும் திரும்பப் பெற்றவர் ஆனார்.
உலகமே மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியது. திருப்தியும், நல்ல ஆரோக்யமான சரீரமும் உடையவர்களாய், தார்மிக சிந்தனை உடையவர்களாய், துர்பிக்ஷம் (வறுமை) பயம் இவை அண்ட முடியாதவர்களாய் இருந்தனர். தந்தை இருக்க தனயன் இறந்தான் என்பதே கிடையாது. அதாவது புத்ரன் இறந்து துக்கம் அனுபவிக்க நேரவே இல்லை. பெண்கள் பதிவிரதைகளாக, சுமங்கலிகளாக இருந்தனர். அக்னியால் பயமோ, நீரில் மூழ்கி இறப்போ, வாயுவினால் நஷ்டம் என்றோ ஜுரம் முதலியவற்றால் துன்பம் என்றோ இருந்ததில்லை. பசிக் கொடுமையோ, திருட்டு பயமோ வாட்டவில்லை. நகரங்களும், பெரிய ஊர்களுமாக, தன தான்யஙகள் நிரம்பியிருந்தன. க்ருதயுகத்தில் இருந்ததுபோல ஜனங்கள் மகிழ்ச்சியோடு வசித்தனர்.
பல நூறு அஸ்வமேத யாகங்கள் செய்து, பலவிதமாக பொன், பசுக்கள், இவைகளை தகுதி அறிந்து ப்ராம்மணர்களுக்கும், மற்றவர்களுக்கும் கொடுத்தும் கணக்கில்லாத தானங்கள் செய்தும், நூறு மடங்கு ராஜ வம்சங்களை ராமர் நிலை நிறுத்துவார். சாதுர்வர்ண்யம் (நால் வகை பிரிவினர்) தங்கள், தங்கள் தர்மத்தில் பிடிப்புஉள்ளவர்களாக , திருப்தியாக இருப்பார்கள். பத்தாயிரம், பத்து நூறாயிரம்வருடங்கள் ராமர் ராஜ்யத்தை ஆண்டு விட்டு பிரும்மலோகம் போவார். இந்த பாவனமான ராம சரித்திரம் வேத மந்திரங்களுக்கு இணையானது. இதை படிப்பவர்கள், எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள். ஆயுளைத் தரக்கூடிய இந்த ராமாயணத்தைப் படித்து மனிதர்கள், புத்ரன், பௌத்திரன் என்று வம்சம் விளங்க ஸ்வர்கம் செல்லுவர். பிராம்மணர் படிப்பதால் வாக்கு வன்மை பெறுவர். க்ஷத்திரியர் ஆளும் பூமியை அடைவர். வாணிபம் செய்வதன் பலனை வைஸ்யனும் சூத்திரனானவன் மகானாகவும் ஆவார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில் -நாரத வாக்யம்- என்ற முதல் அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் – 2
ப்ரும்மாவின் வருகை (ப்ரும்மா வருதல்)
நாரதரின் வார்த்தையைக் கேட்டு சொல் வளம் மிக்க முனிவரான வால்மீகி, தன் சிஷ்யர்களுடன் அவருக்கு தகுந்த மரியாதைகள் செய்தார். நாரதரும் புறப்பட்டு போனார். நாரத முனிவர் தேவலோகம் சென்ற ஒரு நாழிகை பொழுது கடந்த பின்பும், அதே நினைவாக, சிஷ்யனான பரத்வாஜனுடன் அருகில் இருந்த கங்கையின் கிளை நதியான தமஸா நதிக்கு ஸ்னானம் செய்ய சென்றார். தெளிவான தமஸா நதியின் நீரைக் கண்டு பரத்வாஜனிடம் சொன்னார் -தெளிவான இந்த நீரைப் பார் பரத்வாஜா, கண்ணுக்கு ரம்யமாகவும், மகிழ்ச்சி தரும் விதமாகவும், நல்ல மனிதர்களின் உள்ளம் போல தெளிந்த இந்த ஓடை நீரை பார்-என்று சொல்லிக் கொண்டே அவனிடம் கலசத்தையும், தன் மரவுரி ஆடைகளையும் வாங்கிக் கொண்டு ஸ்னானம் செய்ய நீரில் இறங்கினார். நீரில் நின்றபடி நாற்புறமும் அடர்ந்து கிடந்த வனத்தை சுற்றி பார்வையை செலுத்திய முனிவர் ஜோடியாக பறந்து வந்த க்ரௌஞ்ச பக்ஷிகளை கண்டார். அந்த சூழ்நிலையும், ஜோடி பக்ஷிகளும் மனதை நிறைத்த அதே வேளையில், பாபம் செய்வதே தன் குறிக்கோள் என்பது போல் ஒரு வேடன் பக்ஷிகளில் ஒன்றை அடித்தான். முனிவர் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே, பெண் பறவை ரத்தம் சொட்டச் சொட்ட துடி துடித்து இறந்தது. மனைவி இறந்து வீழ்ந்ததைக் கண்ட ஆண் பறவை வேதனை நிறைந்த குரலில் அழுது அரற்றலாயிற்று. கூடவே பறந்து வந்த தன் சகதர்மிணியை நிமிஷ நேரத்தில் இழந்த துக்கத்தில் ஆண் பறவை படும் பாடு ரிஷியின் மனதில் அளவில்லாத கருணையை சுரக்க செய்தது. இது அதர்மம் என்று எண்ணிய ரிஷி, வேடனைப் பார்த்து, தன்னையுமறியாமல் பின் வருமாறு சொன்னார்.
-மா நிஷாத3 ப்ரதிஷ்டாம்த்வமக3ம: ஸாஸ்வதீ: சமா: | யத் க்ரொளஞ்ச மிது2னாத் ஏகமவதீ4: காம மோஹிதம். ||
வேடனே நீ நல்ல கதியடைய மாட்டாய். காதல் வயப்பட்ட இந்த ஜோடிப்பறவைகளில் ஒன்றை அடித்துவிட்டாயே -என்று கதறினார். இவ்வாறு சொல்லி கண் கலங்கிய ரிஷி, தான்சொன்ன வார்த்தைகளை திரும்பவும் நினைத்துப் பார்த்தார். சோகத்தில் மூழ்கிய பக்ஷியைப்பார்த்து தானும் சோகத்துடன் சொன்ன வார்த்தைகள் புது வடிவும், அர்த்த செறிவும் நிறைந்த ஸ்லோகமாக வெளிப்பட்டதைக் கண்டார்.(வேடனைக் கடிந்து கொண்டதாகத் தோன்றும் இப்பாடல் -லக்ஷ்மி வாசம் செய்யும் ஸ்ரீமந்நாராயணனே,என்றென்றும் வாழ்வாயாக.இரட்டையர்களாக இருந்த இரு அரக்கர்களில்காமத்தின் வசமான ராவணனை வதம் செய்தாய் அல்லவா,- என்றும் பொருள் கொள்ளலாம். } மேலும் பலவிதமாக உரைகள்பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். தான் சொன்ன சொற்களையே திரும்ப ஒரு முறை சொல்லிப் பார்த்த முனிவர்சீடனான பரத்வாஜனைப் பார்த்துச்சொன்னார். பாதங்களாக அமையப்பெற்று சமமான அக்ஷரங்களுடன், தாளக் கோப்புடையதாகவும், அழகிய ஸ்லோகமாக வந்து விட்டதே, என் சோகம் ஸ்லோகமானது விந்தையே என்றார். சீடன் வாயால் அதை சொல்லக்கேட்ட முனிவர் அக மகிழ்ந்தார். நீர் நிரம்பிய குடத்துடன் சீடன் உடன் வர, பர்ணசாலையை அடைந்தார். சற்று நேரத்தில் முனிவர் த்யானத்தில்ஆழ்ந்தார். அந்த சமயம் முனிவரைக் காண ப்ரும்மா யதேச்சையாக வந்தார். அவரைக் கண்டதும் வால்மீகி முனிவர் அவசரமாக எழுந்து நின்று வரவேற்று, அர்க்யம், ஆசனம் முதலியவைக் கொடுத்து உபசரித்து, கை கூப்பி நின்றவராக, எதிர் பாராது வந்த ப்ரும்மாவின் முன் நின்றார். ப்ரும்மா ஆசனத்தில் தான் அமர்ந்த பின்பு வால்மீகியை பார்த்து ஆசனத்தில் அமரச் சொன்ன பின் அவரும் தன் ஆசனத்தில் அமர்ந்தார். அனாவசியமான வைர புத்தியுடன், பாபியான வேடன் க்ரௌஞ்ச பக்ஷியை அடித்ததும், அதைத்தொடர்ந்து ஆண் பறவையின் வேதனையும், காரணமின்றி பரிதவிக்க விட்ட விதியையும் நினைத்து அவர் மனதில் வேதனை பொங்கிக் கொண்டு இருந்தது. இதை நினைத்தவுடன் கூடவே தன் ஸ்லோகமும் நினைவில் வந்தது. தன் மன சங்கடத்தை அடக்க முயன்ற முனிவரைப் பார்த்து ப்ரும்மா லேசாக சிரித்தவாறு கேட்கலானார். -நீ சொல்லியது ஸ்லோகமே. இதில் வருத்தம் அடைய வேண்டாம். என் தூண்டுதலால் உன் வாக்கில் சரஸ்வதி விளையாடி இருக்கிறாள். ராமர் சரித்திரத்தை, குறையின்றி முழுவதுமாக எழுதுவாய். ரிஷிகளில் சிறந்தவனே, உலகில் புத்தியுள்ளவனும், தர்மாத்மாவுமான, குணவானான ராமனின் கதையை நாரதரிடம் கேட்டபடி இயற்றுவாய்.அந்த மகானின் வாழ்வில் நடந்தது ரகசியமோ, வெளிப்படையாகவோ, ராமருடைய, சௌமித்ரியின், ராக்ஷஸர்களின், வைதேகியின் வாழ்க்கையில் உள்ளும் புறமும் உனக்கு விளங்கும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்இந்த காவ்யத்தில் உன் சொல் பயனற்று போகாது. இந்த ராம கதையை ஸ்லோகமாக அமைத்து அழகிய பாடலாக செய். பூமியில் நதிகளும் மலைகளும் உள்ள அளவு உன் காவ்யமும் நிலைத்து நிற்கும். இந்த ராமாயண கதை உன்னால் எழுதப்பட்டது நிலவி வரும் வரையில் நீயும்,மேலும், கீழும் என்னால் ஸ்ருஷ்டி செய்யப்பட்ட எல்லா உலகங்களிலும் சஞ்சரிப்பாய். – இவ்வாறு சொல்லி ப்ரும்மா மறைந்தார்.
ஆச்சர்யம் நீங்கப் பெறாத முனிவர் சீடனைத் திரும்பவும் அந்த வார்த்தைகளைச் சொல்லச் சொல்லி கேட்டார். சமமான அக்ஷரங்களுடனும், நான்கு பாதங்களுடனும், பாட எளிதாக அமைந்த சொற்றொடர்களுடனும் அழகிய ஸ்லோகமாக அமைந்தது. அவர் மனதில் இந்த ஸ்லோகத்துக்கு புதுப் புது அர்த்தங்களும் தோன்றின.இதே போல ராமாயண காவ்யம் முழுவதையும் நான் படைப்பேன் என்று உறுதி பூண்டார். உயர்ந்த தத்வார்த்தங்களை உள்ளடக்கி, அழகிய சொற்களால், உதார குணமுடைய ராம கதையை, உதார மனம் உடைய முனிவர் இயற்றலானார். சமாசங்களும் (சம்ஸ்க்ருத இலக்கணம் சம்பந்தப்பட்டது), சந்தி யோகங்களும் நிறைந்த சுலபமான, மதுரமான, பொருள் நிறைந்த வார்த்தைகளைக் கொண்டு முனிவர் இயற்றிய தச முக வதம், ராமசரிதம் என்ற காவ்யத்தைக் கேளுங்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில் -ப்ரும்மாவின் வருகை- என்ற இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 3 – காவ்ய ஸ்ம்க்ஷேபம், (கதை சுருக்கம்).
தர்மாத்வான அந்த முனிவர், காவ்யத்தின் உள்ளடக்கத்தை கிரமமாக தன் மனதுள் நினைவு படுத்திக்கொண்டு, நீரைத் தொட்டபடி, தர்ப்பாசனத்தில் கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு, கை கூப்பியபடி ராம சரிதத்தை த்யானம் செய்தவராக தான் எழுதப் போகும் காவ்யத்தின் அமைப்பை தீர்மானித்துக் கொண்டார். ராம,லக்ஷ்மண,சீதைக்கும், அரசனான தசரதனுக்கும், மனைவியுடன், ராமருடன் என்ன நடந்ததோ, நடந்தபடி, சிரித்ததும், பேசியதும், நடந்ததும், செய்ததும் அனைத்தையும் தன் தர்மத்தின் பலத்தால் நடந்த படி மனக்கண்ணில் கண்டார். ஸ்த்ரீயுடன், மூவருமாக வனத்தில்அலைந்த பொழுது என்ன கிடைத்ததோ, சத்ய சந்தரான ராமர் எதையெல்லாம் கண்களால் கண்டாரோ, யோகத்தில் இருந்த முனிவர் அவையனைத்தையும் ப்ரத்யக்ஷமாகத் தெரியக் கண்டார். நடந்தது அனைத்தும் உள்ளங்கை நெல்லிக்கனி போல அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. சிறந்த தேஜஸ்வியான அந்த முனிவர், தர்மத்திலிருந்து விலகாமல் மனக்கண்ணால் கண்டபடி, மனத்திற்கு உகந்த ராமரின் கதையைப் புனைய முனைந்தார். தர்மம், அர்த்தம் நிறைந்ததும், தர்ம, அர்த்த, காம குணங்களை விவரிப்பதும்சமுத்திரத்தைப் போல உயர்ந்த மணி முத்துக்களைக் கொண்டதும், பாடலாக இசைத்துக் கேட்க மனோரஞ்சகமாகவும் மஹரிஷி நாரதர் சொன்னது போலவே, ரகு வம்சத்தின் ரகுநாதனின் கதையை ரிஷி புங்கவரான வால்மீகி செய்தார்.
ராமருடைய பிறப்பு ,அவருடைய அளவில்லாத பலம், யாவருக்கும் இசைந்த நல்லகுணம், ஜனங்களிடம் அன்பு, பொறுமை, இனிமையானத் தன்மை, சத்யசீலம், விஸ்வாமித்ரருடன் நடந்தபோது, பேசிய, கேட்ட பலவிதமான சித்ர கதைகள், ஜானகியுடன் விவாகம், தனுசை முறித்தது, பரசுராம, ராம விவாதம், தசரதனுடைய குணங்கள், ராம அபிஷேக ஏற்பாடுகள், கைகேயியின் துஷ்ட பாவனை, அபிஷேகத்தை நிறுத்தியது, ராமருடைய வனவாசம், அரசனின் சோகம், பரலோகத்தை அடைதல், ஜனங்கள் வருந்துதல், அவர்களை திருப்பி அனுப்புதல், வேடர் குல அரசனை சந்தித்துப் பேசியது, சுமந்திரரை திருப்பி அனுப்பியது, கங்கையை கடந்து சென்றது, பரத்வாஜரை தரிசித்தது, அவரது அறிவுரைப்படி சித்ர கூடத்தில் வசித்தது, வாஸ்து தர்மப்படி பர்ணசாலையை கட்டிக்கொள்ளுதல், பரதன் வந்து சேருதல், ராமரை பரதன் வேண்டுதல், தந்தையின் இறுதிக் கடன் செய்தல், பாதுகைக்கு அபிஷேகம் செய்து, பரதன் நந்தி கிராமத்தில் வசித்தல், ராமர் தண்டகாரண்யத்தில் பிரவேசித்தல், விராதனை வதைத்தலும் சரபங்கர் என்ற முனிவரைக் காணல்,சுதீக்ஷ்ணரை சந்தித்தல், அனசூயையின் உதவி, சீதைக்கு அங்கராகம் (உடலில் பூசிக்கொள்ள வாசனைப் பொடி) அளித்தல், அகஸ்தியரைக் கண்டது, அவரிடம் விஷ்ணு தனுசை பெற்றுக்கொண்டது, சூர்ப்பணகையுடன் சம்பாஷனை, விரூபம் ஆக்கியது, கர த்ரிசிரஸ் முதலானவர்களின் வதம், ராவணன் வெகுண்டு எழுதல், மாரீசனின் வதம், வைதேஹி அபஹரனம், ராகவனின் வேதனை, ஜடாயு தரிசனம், ஜடாயு சம்ஸ்காரம் கபந்தனைக் காணுதல், பம்பா நதியைக் கடந்து சபரியைக் காணுதல், ஹனுமானைக் காணுதல், ருஸ்யமூக மலையை அடைதல், சுக்ரீவனைக் கண்டு நட்புக் கொள்ளுதல், வாலி சுக்ரீவ யுத்தம், சுக்ரீவன் அடிபடுதல், பின் வாலி வதம், தாரா வருத்தம், மழைக் காலம் என்று அங்கேயே தங்குதல், ராகவ சிங்கமான ராமர் கோபம், சுக்ரீவன் சைன்யத்தைத் திரட்டுதலும் பல திக்குகளிலும் சீதையைத் தேட அனுப்புதலும், பூமியிடம் வானரங்கள் வேண்டிக்கொள்ளுதல், ருக்ஷனுடைய குகையைக் காணல், ப்ராயோபவேசம் (தர்ப்பாசனங்களில் அமர்ந்து வடக்கு நோக்கி சாகும் வரைஉண்ணா விரதம் இருத்தல்) செய்ய முனைதல், சம்பாதி வருகை, பர்வதத்தின் மேல் ஏறுதல், லங்கையைக் காணல், சிம்ஹிகாவை வதம் செய்தது, லங்கையின் மலய மலையைக் கண்டது, இரவில் லங்கையில் நுழைந்தது,ஒரு ஸ்த்ரீயை (சீதையை) தேடல் மது சாலைகளை (பான பூமி) காணல்,மாளிகையின் பல இடங்களிலும் சுற்றிச் சுற்றித் தேடல், ராவணனைக் கண்டது, புஷ்பக விமானத்தைக் கண்டது, அசோக வனத்தில் சீதையைக் கண்டு கொண்டது, அடையாளத்தைத் தருதல், சீதையுடன் பேசுதல், ராக்ஷசிகளின் பயமுறுத்தல், திரிஜடை தன் கனவு பற்றிச் சொல்லக் கேட்டல், சீதை சூடாமணியைத் தருதலும், மரங்களை முறித்தல், ராக்ஷஸர்களை வீழ்த்துதல், கிங்கரர்களை ஹனுமன் அடித்தது, பிடிபட்டது, லங்கையை எரித்துவிட்டு திரும்பி வந்து மதுவனத்தை நாசம் செய்தது,சுக்ரீவன் ராகவனை ஆஸ்வாசப்படுத்துதல், மணியைத் தருதல், சமுத்திர ராஜனை சென்றடைதல், சேது பந்தனம், சமுத்ர ராஜனின் உதவியுடன் சமுத்திரத்தைக் கடத்தல், இரவில் லங்கையில் பிரவேசித்தல், விபீஷணன் வருகை, ராக்ஷஸ வதத்திற்கான உபாயங்களைச் சொல்லுதல், கும்பகர்ண, இந்திரஜித்மரணம், ராவணனை அழித்தல்,எதிரியின் ஊரில் சீதையை அடைந்தது, விபீஷணன் ராஜ்ய பட்டாபிஷேகம், புஷ்பக விமானத்தில் அயோத்யாசென்றது, பரதனை சந்தித்தல்,ராம பட்டாபிஷேகம், எல்லா சைன்யங்களையும்திருப்பி அனுப்பியது தன் ராஜ்யத்தில் சந்தோஷமாக இருப்பதையும், வைதேஹியை கை விட்டதையும், ராமர் பூமியில் வசித்த பொழுது நடை பெறாத மற்ற விஷயங்களை உத்தர காவ்யத்தில் பகவான் வால்மீகி முனிவர்இயற்றினார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில் -காவ்ய ஸம்க்ஷேபம்- என்ற நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 4 அனுக்ரமனிகா ( நிகழ்ச்சி நிரல்)
ராஜ்யத்தை அடைந்து ராமர் அரசனாக இருந்தபொழுதே விசித்ரமான பதங்களைக் கொண்ட இந்த சரிதத்தை முனிவர் இயற்றி முடித்து விட்டார். இதில் இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்கள், ஆறு காண்டங்கள், ஐநூறு சர்க்கங்கள் இதைத் தவிர உத்தரக்காண்டத்தில் நடக்கப்போவதையும் எழுதி முடித்த முனிவர், இதை எப்படி வெளியிடுவது என்று யோசிக்கலானார். நல்ல எண்ணம் கொண்ட முனிவர் இவ்வாறு யோசனையில் ஆழ்ந்திருந்த சமயம் குச, லவர்கள் வந்து பாதத்தில் வணங்கி நின்றார்கள். இந்த இருவரும், தர்மம் சார்ந்த அறிவும், புகழும் வாய்ந்த அரச குமாரர்கள். ஆஸ்ரமத்தில் வசித்த இச்சகோதரர்கள்நல்ல குரல் வளமும், சங்கீத ஞானமும் உடையவர்கள். வேதம் கற்றுத் தேர்ந்தவர்கள். முறையாக வேதத்தை அத்யயனம் செய்துவைக்க என்றே, வால்மீகி முனிவர் அவர்களை ஆஸ்ரமத்தில் ஏற்றுக் கொண்டிருந்தார். இவர்களுக்கு, மகத்தான -சீதாயா: சரிதம் மஹத் – (சீதையின் உயர்ந்த கதை),-பௌலஸ்திய வதம்- (புலஸ்திய வம்சத்தினரின் வதம்), என்றும், பெயரிட்ட ராமாயண காவ்யம் முழுவதையும் படிக்கவும், பாடவும் பயிற்சி அளித்தார். இந்த காவ்யம் இனிமையானது, மூன்று வித ப்ரமாணங்களும் கொண்டது, ஏழு விதமானஜாதிகளில் அமைக்கப் பெற்றது, ஸ்ருதி, லயம் இசைந்து பாடத் தக்கது, ஸ்ருங்காரம், கருணை, ஹாஸ்யம், ரௌத்3ரம், ப4யானகம் என்ற வீரம், இந்த ரஸங்கள் நிறைந்த காவ்யத்தைப் பாடினார்கள். கந்தர்வ கான முறைகளை அறிந்திருந்த சகோதரர்கள் இருவருமே, மதுரமான குரலும், இனிமையாகப் பேசும் சுபாவமும் உள்ளவர்கள். பிம்பத்திலிருந்து வெளிப்பட்ட மற்றொரு பிம்பம் போன்ற உருவ ஒற்றுமை உடையவர்கள். ராமரின் வாரிசாக உதித்த அரச குமாரர்கள். உத்தமமான இந்த ஆக்யானம் அல்லது கதையை மாசற்ற இந்த இளம் குமரர்கள், வாயினால் சொல்லிப் பார்த்து, விதி முறைப்படி கற்றுத் தேர்ந்து, முனிவர்கள், பிராம்மணர்கள், சாதுக்கள் கூடும் இடங்களில் பாடிக் காட்டினார்கள். இதைக் கேட்டு தர்ம வழியில் நிற்கும் முனிவர்கள் மற்றும் சாதுக்கள், கண் கலங்க நன்று, நன்று என்று ஆச்சர்யத்துடன் .இச்சிறுவர்களைப்புகழ்ந்து, மனம் நிறைந்த ஆனந்தத்துடன்,பாடும் குச லவர்களை, (பாடகர்களை என்றும் பொருள்) – பாராட்டுக்குரியவர்கள் என்பதால் மனதார பாராட்டினார்கள். கீதத்தின் இனிமை என்ன ? ஸ்லோகங்களன் விசேஷம் தான் என்ன ? என்றோ நடந்தது நேரில் கண்டது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கொண்டாடினார்கள். பா4வத்தை உணர்ந்து அக்குமாரர்கள் பாடினார்கள். இருவரும் இணைந்து ரஞ்சகமாக ஸ்வர சம்பத்துடன்பாடினார்கள். தபஸ்விகளான முனிவர்கள் அனுபவித்துக்கேட்க, சிறுவர்கள் தாங்களும் மேலும், மேலும் அனுபவித்து பாடலானார்கள். ஒரு முனிவர் மிகவும் சந்தோஷமடைந்து கலசத்தை அன்பளிப்பாக கொடுத்தார். ஆனந்தமடைந்த மற்றொருவர் வல்கலத்தையும், மற்றொருவர் மான் தோலையும், மௌஞ்சி என்ற கயிற்றை ஒருவரும், ஒருவர் கமண்டலுவும், ஒருவர் யக்ஞசூத்திரத்தையும் பரிசாக கொடுத்தனர். உடும்பரீ என்ற சிறந்த பாயை ஒருவர் அன்பளிப்பாகத் தரவும், மற்றவர் ஜப மாலையை அளித்தார். ஆடையை ஒருவர் தர, மற்றவர் குடாரம் எனும் காய், கிழங்குகளை வெட்டப் பயன் படும் ஆயுதம், அதைத் தந்தார். ஒருவர் காஷாய வஸ்த்ரம் தந்தார் எனில், மற்றவர் மரவுரியை கொண்டு வந்து கொடுத்தார். வாயார -ஆயுஷ்மான் பவ- என்று வாழ்த்தினார்கள்.சத்ய வாதிகளான முனிவர்கள் பல விதமான நல்லாசிகளைவழங்கினர்.வரங்களைக் கொடுத்தனர். வால்மீகி முனிவரால் பாடப்பட்ட இந்த காவ்யம் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது என்று பாராட்டினார்கள்.வருங்கால கவிகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடியது, கிரமமாக முடிக்கப் பெற்றது, நன்றாக பாடத்தெரிந்தவர்கள் முறையாக பாட இசைவாக அமைக்கப் பெற்றது. கேட்பவர்கள் மனதைக் கவரும் வண்ணம் எங்கும் புகழ் பெற்றவர்களாய், ஆயுள், ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாய் உள்ள இந்தசரித்திரத்தைப் பாடிக்கொண்டு ராஜ வீதிகளில் நடந்து வரும் பொழுது, ராமர் பார்த்தார். குச லவர் என்ற சகோதரர்களை, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, தானே சத்ருக்களை அழிக்கும் வல்லமை வாய்ந்த ராமர், அச் சிறுவர்களை, மரியாதைக்குரியவர்களாக மதித்து, முறையாக உபசாரம் செய்தார். தன் பொன்னாலான சிம்மாசனத்தில் அமர்ந்து ராமர் மந்திரிகளையும், சகோதரர்களையும் உசிதமான ஆசனங்களில் அமரச் செய்தார். அழகே வடிவான அந்த சிறுவர்களை வியந்து பார்த்த ராமர், பரத, சத்ருக்ணன், லக்ஷ்மணன் இவர்களிடம் -தெய்வீகத் தன்மைக் கொண்ட இச்சிறுவர்களின் ஆக்யானம், காவ்யத்தைக் கேளுங்கள். விசித்ரமான பதங்களைக் கொண்ட இந்தப் பாடலை இவர்கள் அழகாகப் பாடுகிறார்கள் – என்றார். அவர்களும் இனிமையாக, தங்களுக்கு ஏற்ற ஸ்ருதியில், வாத்ய, லயம் இவற்றுடன், மிக விஸ்தாரமாக பாடினார்கள். உடல் புல்லரிக்க, மனமும் ஹ்ருதயமும் ஆனந்தத்தால் நிறைய, அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் கேட்டு மயங்க பாடல் சுகமாக அமைந்தது. ராமர் -இந்த முனிவர்கள் ராஜ லக்ஷணங்கள் உடையவர்கள், சிறந்த பாடகர்கள், தவ வலிமையும் உடையவர்கள், சிறந்த (மகானுபாவம்) இந்த சரித்திரத்தை புரிந்து கொண்டு கேளுங்கள்- என்றார். ராமரின் இந்த வார்த்தைகளால் ஊக்குவிக்கப்பட்ட சிறுவர்கள் நன்றாக பாடினார்கள். மார்கம், விதானம் என்ற முறைகளை அனுசரித்துப் . கூட்டத்தோடு அமர்ந்து ராமரும், லயித்து, ஈ.டுபாட்டுடன் கேட்கலானார்.
(மகானுபாவம் சரிதம் என்பதன் பொருள் – நடந்ததை நடந்தபடி சொன்ன சரித்திரம் என்பது மட்டுமல்ல,அதை வெளிப்படுத்தும் காவ்யத்தின் அழகு, அதை சிறப்பித்து மகா அனுபவம் என்றும் கொள்க. கேட்ட மாத்திரத்தில் ஆனந்தம் அளிக்கும் காவ்யம். சீதையின் சரிதம், ராம சரிதத்தை விட விசேஷமானது என்று சொல்லப்பட்டதாக ஆகிறது.)
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பாலகாண்டத்தில், அனுக்ரமணிகா என்ற நான்காவது அத்தியாயம்).
அத்தியாயம் 5 -அயோத்யா வர்ணனை
(ஸர்வா பூர்வமியம் என்று ஆரம்பிக்கிறார் வால்மீகி முனிவர். விஸ்தாரமாக ராமாயணத்தை ஆரம்பித்த கவி, சத்ய வாக்யமாக, தெய்வீகமான ஸர்வாபூர்வம் என்று ஆரம்பித்தது விசேஷம். யதேச்சையாக நேர்ந்த பத சேர்க்கை என்றாலும், அர்த்த செறிவும் உள்ளது. இந்த காவ்யம் ஸர்வா பூர்வம்- எல்லாவற்றிற்கும் முந்தையது. ஸர்வாதிசாயி- அதிசயமானது, ஸர்வாபாதேயம் – எல்லோரும் வணங்கத்தக்கது என்று இவ்வாறு-ப4விஷ்ஸ்யதி— பிற்காலத்தில் இவ்வாறுஉயர்வாக எண்ணப்படும் என்ற உள்ளர்த்தங்களை பெரியவர்கள் காண்கிறார்கள்.)
பூமி அணைத்தும் யாருக்கு சொந்தமாக இருந்ததோ, ப்ரஜாபதியில் ஆரம்பித்து, வெற்றி வாகை சூடி வந்த அரசர்களுள் ஒருவர் சகரர். இவரால் சாகரம்-சமுத்திரம் வெட்டப்பட்டது. ஆறாயிரம் பிள்ளைகள் இவரைச் சூழ்ந்து கொண்டு சென்றார்கள். இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த இந்த மஹான்களான அரச பரம்பரையில்நடந்த கதை ராமாயணம் என்று பெயர் பெற்றது. அதை முழுவதுமாக நான் சொல்லப்போகிறேன்.
தர்ம, காம, அர்த்தங்கள் நிறைந்த இந்த காவ்யத்தை அசூயை இல்லாமல் கேளுங்கள். கோசலம் என்ற விசாலமான ஜனபதம் (பெரிய ஊர்), சரயூ நதிக்கரையில் அமைந்திருந்தது. மகிழ்ச்சி நிறைந்த, தன, தான்யம் நிரம்பப் பெற்ற ஊர். அதனுள் அயோத்யா என்ற சிறு ஊர் (நக3ரீ) உலகப் புகழ் பெற்று விளங்கியது. மானவேந்திரனான மனுவினால் தானே உண்டாக்கப்பட்டது. பன்னிரண்டு யோஜனை பரப்புள்ளது. மூன்றுவிதமான -மகா பதா- என்ற பெரிய வீதிகள், அகலமாக நல்ல விதமாக போடப்பட்டிருந்தது, இந்த பெரிய வீதிகள், தினமும் நீர் தெளித்து, பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, லக்ஷ்மீ கரமாக, ராஜ மார்கமாக விளங்கும். தேவலோகத்தில் இந்திரன் வசிப்பது போலவே, இந்த ஊரில் ராஜா தசரதன் வசித்து வந்தான். இவன் எப்பொழுதும் தன் ராஜ்யத்தை விஸ்தரிப்பதிலேயே கவனமாக இருந்து வந்தான். தோரணங்களும், அழகிய தாழ்ப்பாழ்களும், திட்டமிட்டு அமைக்கப்பட்ட கடை வீதிகளும், யந்த்ரங்கள் பொருத்தப்பட்ட கடைகளும், சில்பிகள், பாடகர்கள், மாகதர்கள் எனும் துதி பாடும் கூட்டத்தினர், நிறைந்து இருந்தனர். உவமை சொல்ல முடியாதபடி காந்தியுடைய உயர்ந்த மாடங்கள், அதன் மேல் பறக்கும் நூற்றுக் கணக்கான கொடிகளுடன், அழகாக விளங்கின. பல இடங்களில் நடன, நாடக அரங்கங்கள், உத்யானங்கள், மாமர வகைகள், ஒட்டியானம் போன்று சால மரங்கள் சுற்றிலும் இருக்க, கம்பீரமான கோட்டை, அகழி சூழ்ந்ததும், யாரும் எளிதில் நுழைய முடியாதபடி பாதுகாப்பாக அமைந்த கோட்டை. யானைகளும், குதிரைகளும், பசுக்களும், ஒட்டகங்களும், கோவேறு கழுதைகளும், (கோலாங்கூலம்), நிறைந்தது. பிரமுகர்களும், ராஜ உத்யோகஸ்தர்களும், யாகம் செய்பவர்களும் காணப்பட்டனர். வாணிபம் செய்ய நாலா தேசத்திலிருந்தும் வந்து கூடிய வணிகர்களால் கல கலப்பாக இருந்தது. பலவிதமான ரத்னங்கள் இழைத்துக் கட்டிய மாளிகைகள், பர்வதம் போல் உயர்ந்து நிற்கின்றன. கூடாகாரம் எனும் தான்யம் வைக்கும் குதிர்கள் நிறைந்து காணப்பட்டன. இந்திரனுடைய அமராவதி போல சமதளமான பூமியில் கட்டப்பட்ட, ஓட்டை, விரிசல் இல்லாமல் பார்த்து கட்டப்பட்ட வீடுகள், விமானங்கள் (கூரைகள்) அழகூட்ட, பலவிதமான ரத்னங்கள் நிறைந்ததாக, எட்டு கோண வடிவங்களிலான,அழகிய பெண்டிர்களும் மற்றவர்களும்வளைய வர நிறைவாக காணப்பட்டன. அரிசி, நெல் நிறைந்த குதிர்கள், கரும்பு போல் இனிக்கும் குடிநீர், துந்துபி, வீணை, ம்ருதங்கம், பணவம் எனும் வாத்யஓசைகள் சதா விளங்க, உத்தமமான சித்தர்கள் தங்கள் தவப் பயனாக பூமியிலிருந்து தேவலோகம்செல்ல பயன் படும் விமானம் போலவும், அழகாக அமைக்கப்பட்ட வீடுகளின் வரிசைகளும், உள்ளே வசிக்கும் உத்தமமான மனிதர்கள் பாதுகாப்பாக இருக்க பாணங்களால் துளைக்கப் படாதவாறு அமைக்கப் பட்டிருந்தன. மிக சாமர்த்ய சாலிகளான சப்த வேத்யம் என்ற கை வேலை அறிந்தவர்களால் வேலைப்பாடு செய்யப்பெற்று விளங்கின. கூர்மையான பாணங்களாலும், தங்கள் புஜ வலிமையாலும், சுற்றியிருந்தவனங்களில் மதம் பிடித்து தன்னிஷ்டம் போல் திரியும் சிங்கம், புலி, வராகம் இவற்றை வேட்டையாடும் வீரர்கள் ஆயிரக்கணக்காக, பெரிய ரதங்களில் சுற்றிக்கொண்டிருப்பர். இவ்வளவு பெருமை வாய்ந்த அயோத்யா நகரில் ராஜா தசரதர் வசித்து வந்தார். வேதங்களை, அதன் ஆறு அங்கங்களுடன் கற்றுத் தேர்ந்த பிராம்மணோத்தமர்கள், அக்னி ஹோத்ரம் முதலியவற்றை இடை விடாது செய்து வந்தனர்.இது போல சத்யம், நியாயம் என்ற குணங்கள் நிறைந்த ஆயிரக்கணக்கான மகாத்மாக்கள், சாதாரண ரிஷிகள், மகரிஷிகள்என்று படிப்படியாக ரிஷி கணங்களும் சூழ்ந்து இருந்தனர்.
(இது வரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், அயோத்யா வர்ணனை என்றஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்).
அத்தியாயம் 6 – ராஜ வர்ணனை
இந்த அயோத்தியில், வேதம் அறிந்தவர்கள் ஊர் ஜனங்களின் பிரியத்திற்கு பாத்திரமானவர்களாகவும், தேஜஸ் வாய்ந்தவர்களாகவும்,முக்காலமும் அறிந்தவர்களாகவும், இருந்தனர். அதிரதீ என்று சொல்லப்பட்ட ராஜா தசரதர், தர்மத்தில் நம்பிக்கைஉள்ளவராக, புலனடக்கம் உள்ள மகரிஷியாக, உலகில் பலசாலி என்று பெயர் பெற்றவராக, எதிரிகளை அழித்து, தன் மக்களைக் காப்பவர், புலன்களை அடக்கியவர், செல்வமும், சேமித்து வைக்கப்பட்ட மற்ற பொருள்களாலும் இந்திரன், குபேரனுக்கு சமமானவர்.உலகை மனு எப்படிகாத்து வந்தாரோ அதே போல வாழ்ந்து உலகை ஆண்டு வந்தார்.சத்ய சந்தனான இந்த அரசனால் இந்திரனுடைய அமராவதி போல அயோத்யா பாதுகாக்கப்பட்டது.இந்த நகரத்தில் ஜனங்கள் மகிழ்ச்சியாகவும், தர்ம சிந்தனையோடு, நிறைய கற்றவர்களாகவும், திருப்தியாகவும், செல்வம் நிரம்பியவர்களாகவும், சத்யமேபேசுபவர்களாகவும், இருந்தனர். இந்த உத்தமமான நகரில், செல்வம் குறைவு என்று யாருக்குமே இல்லை. பெரிய குடும்பத்தை உடையவன், தன் செயலை செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறான் என்றோ, இவனிடம் பசு, குதிரை, தன, தான்யம் எதுவும் இல்லை என்றோ யாரும் இல்லை. காமியாகவோ, ஒழுக்கம் கெட்டவர்களாகவோ யாரும் இல்லை. கொடூரமாகவோ, அதிக ஆத்திரம் உடையவனாகவோ யாரையும் காண முடியாது. நாஸ்திகனோ, கல்வியறிவு இல்லாதவனோ காணவே முடியாது. எல்லா ஆண்களும், பெண்களும் கட்டுப்பாட்டுடனும், தர்ம சீலர்களாகவும் இருந்தனர்.மகரிஷிகள் போல் குற்றமற்றவர்களாகவும், நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களாகவும் இருந்தனர்.குண்டலம், மகுடம், மாலை, அலங்காரங்கள், வாசனை திரவியங்கள் இவை எல்லாம் இன்றி யாரையுமே காண முடியாது. தானம் கொடுப்பதில் தயக்கம் காட்டுபவரோ, தான் அனுபவிக்காத லோபியோ, கிடையாது.கைகளில் ஆபரணம் சூடாதவர்களே இல்லை. அதே போல சுய மரியாதையும் நிறைந்து இருந்தனர். நித்யம் அக்னி வளர்க்காத அல்ப புத்தி உடையவர்களோ, திருடரோ, எப்பொழுதும் அயோத்தியில் இருந்தது இல்லை.பிராம்மணர்கள், தம் காரியங்களில் மும்முரமாக ஈ.டுபாட்டுடன், சுயக் கட்டுப்பாடுடன் இருந்தனர். தானம், அத்யயணம் என்று தங்களுக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்வார்கள். தானம் பெறும் விதத்திலும் கட்டுப்பாடுடன் இருந்தனர். நாஸ்திகம் பேசுபவனும் இல்லை. பொய் பேசுபவனும் இல்லை. முழுமையான கல்வியறிவு பெறாதவனும் இல்லை. அசூயை உடையவனோ, சக்தியற்றவனோ, புத்தியற்றவனோ இல்லை. வேதம் கற்றவர்கள், வேதத்தை அதன் ஆறு அங்கங்களூடன் கற்றவர்களாக இருந்தனர். விரதங்களை அனுசரிப்பவர்கள், ஆயிரக்கணக்காக தானம் செய்தனர். தீனனாக எவரையும் காண முடியாது. அல்ப புத்தி உடையவனோ, வருந்துபவனோ கிடையாது. அழகற்ற பெண்களோ, ஆண்களோ, அயோத்தியில் எப்போதுமே இருந்தது இல்லை.ராஜாவிடம் விஸ்வாசமில்லாத பிரஜையும் அயோத்தியில் கிடையாது. பிராம்மணர் முதலிய நான்கு வர்ணத்தினரும், தேவதைகள், அதிதிகள் இவர்களை பூஜித்தனர். செய் நன்றி மறவாத கொடையாளிகள். சரீர பலமும், மன தைர்யமும் உடையவர்கள். தர்மத்தையும், சத்யத்தையும் கடைப்பிடித்து பல்லாண்டு வாழ்பவர்கள். புத்ரபௌத்திரர்களுடன், மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தனர். முன்பு மனு என்ற ராஜா தன் ராஜ்யத்தை பரி பாலித்தது போலவே, தசரத ராஜா ஒரு குறையும் இன்றி பிரஜைகளைப் பாலித்து வந்தார். அக்னி போன்ற வீரர்கள், மிருதுவான, மனோ பலமில்லாதவர்களைபொறுக்க மாட்டார்கள். தன் வித்தையில் தேர்ந்தவர்கள், குகையில் கிடக்கும் சிங்கம் போன்றவர்கள். காம்போஜ நாட்டு உயர் தர குதிரைகள், காடுகளிலும், விந்த்ய மலையில் பிறந்த உயர் ரக யானைகளும், பர்வதம் போன்ற பெரிய உருவம் உடைய யானைகள், ஐராவதம் போன்ற குலத்தில் பிறந்த ஜாதி யானைகள், மகா பத்ம குலத்தைச் சேர்ந்தவைமதம் பிடித்த நிலையில் எப்பொழுதும் தயாராக உள்ள நிலையில் யானைப் படையை உடைய அயோத்யா,இரண்டு யோஜனை தூரத்திலிருந்தே எளிதில் நுழைய முடியாத பாதுகாவலோடு இருந்தது. இந்த நகரை தசரத ராஜா பாலித்து வந்தான். நக்ஷத்திரங்களை சந்திரன் அடக்கி ஆளுவது போல ஆண்டான். இந்திரனுக்கு சமமான இந்த அரசன், அழகிய தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள், பல விதமான வேலைப்பாடுகளுடன் கூடி மங்களகரமாக விளங்கும் அயோத்யா நகரில், பல சிற்றரசர்கள் சூழ ஆட்சி செய்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின்,ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ராஜ வர்ணனை என்ற ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 7அமாத்ய வர்ணனை (மந்திரிகள் பற்றிய வர்ணனை)
இக்ஷ்வாகு வம்சத்து மந்திரிகள், அரசனின் எண்ணத்தைக் கோடி காட்டினாலே புரிந்து கொள்பவர்களாகவும், உள் நடப்புகள் பற்றித் தெரிந்தவர்களாகவும், இருந்தனர்.எப்பொழுதும் பிரியமாக இருப்பதிலும், ஹிதமாக செயல்படுவதிலும், சிறந்து விளங்கினர். புகழ் வாய்ந்த மகான்களாக எட்டு மந்திரிகள், ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். ராஜ காரியங்களில் முழு மனதோடு ஈ.டு பட்டவர்கள். த்ருஷ்டி, ஜயந்தன், விஜயன், சித்தார்த்தன், அர்த்த சாதகன், அசோகன், மந்த்ரபாலன், சுமந்திரன் என்ற எட்டுபேர்.ரித்விக் என்ற வேத பாண்டித்யம் பெற்ற மகான்கள்இருவர், வசிஷ்டரும், வாமதேவரும்.சுயக்ஞன், ஜாபாலி, காச்யபன், கௌதமன், மார்க்கண்டேயன் என்ற பெரியவர், காத்யாயணர் என்ற பிராம்மணர்,இவர்களும், பிரும்ம ரிஷிகளாகவும், நித்யம் யக்ஞம் செய்பவர்களாகவும் இருந்து அரசனுக்கு ஆலோசனை சொல்வார்கள்.நிறைந்த கல்வியினால் வணங்கி இருப்பவர்கள், சாமர்த்யமும், ஒருவருடன் ஒருவர் ஸ்னேகமாகவும், நீதி அறிந்தவர்களாகவும், நிறைய படித்தவர்களாயினும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்தவர்கள், சாஸ்திரங்களை அறிந்த திடமான கொள்கையுடையவர்கள்,கீர்த்தி வாய்ந்தவர்கள், சொன்ன சொல்லை நடத்திக் காட்டுபவர்கள்.. தேஜஸ், பொறுமை, புகழ் – இவை இவர்களை அடைந்து புகழ் பெறும்.மெதுவாகபுன்னகையுடன் இனிமையாக பேசுபவர்கள்.கோபத்தாலோ, காம வசப்பட்டோ பொய் பேசாதவர்கள். தன் விஷயமோ, வெளி விஷயமோ, இவர்கள் அறியாதது எதுவுமே இல்லை. செய்து கொண்டிருக்கும் வேலை, செய்யப்பட்டது இவைகளை தூதர்கள், ஒற்றர்கள் மூலமாக கண் காணிக்கும் சக்தி வாய்ந்தவர்கள். நட்புடன் பழகுவதில் கெட்டிக்காரர்கள். அவசியம் நேர்ந்தால்,தன் மகனையும் தண்டிக்கத் தயங்காதவர்கள்.பொக்கிஷத்தையும், பலத்தையும் பாதுகாப்பதில் கவனமாக இருப்பவர்கள். அறிவற்ற ஒருவன் தவறாக செய்தால் கூட தண்டிக்க மாட்டார்கள். வீரர்களாக இருந்தாலும் உத்ஸாகத்தைக்கட்டுக்குள் வைத்துக் கொண்டிருப்பவர்கள். ராஜ தர்மத்தை அனுசரிப்பவர்கள், ஒழுக்கத்துடன் இருப்பவர்களை மதிப்பவர்கள், அதே சமயம் விஷயத்தில் சபலமுடையவர்களையும், பிராம்மணனோ,க்ஷத்திரியனோ துன்புறுத்த மாட்டார்கள். இவர்கள் பொக்கிஷத்தை எப்பொழுதும் நிரப்பியே வைத்திருப்பார்கள். யாவரும் அறிந்த இவர்கள் ஒரே குறிக்கோள் உடைய சிறந்தஅறிஞர்கள்.மனிதனின் பலாபலம் அறிந்து, கடுமையாக தண்டிக்கவும் கூடியவர்கள் என்பதால், நாட்டில் யாருமே பொய் சொல்பவனோ, துஷ்டனோ, பிறன் மனையை நாடும் தூர்த்தனோ, கிடையாது. இதனால் நாடும், சுற்றுப்புற நகரங்களும் அமைதியாக இருந்தன. நல்ல வசதியான வாழ்க்கை, ஆடை ஆபரணங்களோடு,அரசனின் நன்மையையே நினைப்பவர்களாக, நீதி நியாயம் இவற்றோடு குருவின் குணங்களை பின்பற்றும் சீடர்களாக,பராக்கிரமத்தில் பெயர் பெற்றவர்களாக, வெளி நாடுகளில் கூட மதிக்கப்பட்டவர்களாக, நல்ல புத்தியும் குணமும் நிறைந்து, இருந்தனர்.குணமற்றவர் என்று ஒருவருமே இல்லை. அரச நீதியான சந்தி, விக்ரஹம் இவற்றை அறிந்த, சுபாவமாகவே மந்திராலோசனை செய்வதில் வல்லவர்களாக, சூக்ஷ்மமான புத்தி உடையவர்களாக,செல்வந்தர்களாக, நீதி சாஸ்திரங்களில் விசேஷ க்ஞானம் உடையவர்களாக இருந்தும் பிரியமாக பேசுபவர்களான மந்திரிகளுடன் தசரத ராஜா பூமியை நல்ல முறையில் ஆண்டு வந்தான். ஒற்றர்கள் மூலம் நாட்டு நடப்பை அறிந்து கொண்டு, தர்மத்தின் துணையோடு பிரஜைகளை சந்தோஷப்படுத்தி பாலித்து வந்தான். கொடையாளிஎன்று உலகம் முழுவதும் பெயர் பெற்றான். தனக்கு சமமான, தனக்கு மிஞ்சிய சத்ருவை, அவன் சந்திக்கவே இல்லை.பிரமுகர்களும், தனவான்களும்,எப்பொழுதும் வணங்கி நிற்க, பலவிதமான நண்பர்களுடன், இந்திரன் தேவ லோகத்தை ஆண்டது போல, ராஜ்யத்தை ஆண்டான். புத்தி சாமர்த்தியமும், செயல் திறனும் கொண்ட, நன்மையே விரும்பும், அன்பும் ஈ.டுபாடும் கொண்ட மந்திரிகளின் உதவியால் அப்பொழுது தான் உதித்த சூரியன் தன் பிரகாசம் பொருந்திய கிரணங்களுடன் விளங்குவது போல விளங்கினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், பால காண்டத்தில், அமாத்ய வர்ணனை என்ற ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 8 சுமந்திர வாக்யம் (சுமந்திரன் சொல்லியது)
இவ்வளவு பெருமைகள் வாய்ந்த தர்மம் அறிந்த மகானான ராஜா தசரதன் ஒரு மகனுக்காக தவித்தான். வம்சம் விளங்க அவனுக்கு ஒரு மகன் இல்லை. யோசித்து யோசித்து, வம்சம் விளங்க ஒரு புத்திரன் வேண்டும் என்று வேண்டி ஏன் நான் அஸ்வமேத யாகம் செய்யக்கூடாது என்று தீர்மானித்தான். யாகம் செய்வது என்று தீர்மானித்தபின் எல்லா மந்திரிகளையும் அழைத்து ஆலோசனை கேட்டான். மந்திரிகளில் முக்கியமானவனான சுமந்திரரிடம் சொன்னான் -புரோகிதர்களையும், எல்லா குரு ஜனங்களையும் சீக்கிரம் அழைத்து வா- என்று. சுமந்திரனும் வேகமாக சென்று, சமஸ்த மந்திரிகளையும், வேத விற்பன்னர்களையும் அழைத்து வந்தான். சுயக்ஞன், வாமதேவன், ஜாபாலி, காஸ்யபன், புரோகிதரான வசிஷ்டர், மற்றுமுள்ள ப்ராம்மணோத்தமர்கள் எல்லோரும் கூடினர். அவர்களை முறைப்படி வணங்கி மரியாதை செய்த பின், ராஜா தசரதன், தர்மம் அர்த்தம் நிரம்பிய தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டான். – கொஞ்சி குலாவ எனக்கு மகன் இல்லை என்பது எனக்கு குறையாகவே உள்ளது. அதனால் அஸ்வமேத யாகம் செய்ய நினைக்கிறேன். சாஸ்திரத்தில் சொல்லியபடி, இந்த யாகத்தை நான் எவ்வாறு செய்ய வேண்டும்? என் விருப்பம் நிறைவேறுமா? நீங்கள் நன்றாக யோசித்து சொல்லுங்கள்- என்று வேண்டிக் கொண்டான். -நல்லது நல்லது- என்று ப்ராம்மணர்களும், மற்றவர்களும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். வசிஷ்டர் உள்ளிட்ட ப்ராம்மணர்கள், மகா மந்திரிகள், அரசனின் விருப்பத்தை அப்படியே செய்வோம். சரயூ நதிக்கரையில் யாக பூமியை அமைப்போம். ஏற்பாடுகளை கவனிக்கலாம். குதிரையை விடுவோம். நல்லபடியாக யாகம் முடித்து நீ விரும்பிய புத்திரனை பெறுவாய் அரசனே என்று வாழ்த்தி, -புத்திரனை விரும்பிய நீ இது போல தார்மீக வழியில் யோசித்தாயே, நல்லது.- என்று சொல்லிச் சென்றனர். இதனால் மகிழ்ந்த அரசன் மந்திரிகளை கூப்பிட்டு எற்பாடுகளை ஆரம்பிக்கச் செய்தான்.-குதிரைகளைப் பற்றி அறிந்த சாமர்த்யசாலிகளானவீரர்களிடம் பயிற்சி பெற்ற குதிரையை ஓட விடுங்கள். அதை பயிற்றுவித்த வீரர்களும் உடன் செல்லட்டும். சரயூ நதிக் கரையில் யக்ஞ பூமியைக் கட்டுங்கள். விதி முறைப்படி சாந்தி பாடங்கள் நடக்கட்டும். எல்லா அரசர்களூம் இந்த யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த உயர்ந்த யாகத்தை செய்யும் பொழுது எந்த விதமான தவறும் நேரக்கூடாது. கஷ்டம் ஏற்படக்கூடாது. எங்கே இடைவெளி கிடைக்கும், நாம் உள்ளே புகுந்து கெடுக்கலாம் என்று பிரும்ம ராக்ஷஸர்கள் காத்திருப்பார்கள். யாகம் அழிந்தால், அதைச் செய்யும் கர்த்தாவான எஜமானன் அழிவான். அதனால் கவனமாக, எப்படி இந்த யாகம் விதி முறைகள் எள்ளிவும் பிசகாமல் நடக்குமோ, அப்படி ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.- என்றான். அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, அரசனின் மரியாதையை ஏற்றுக் கொண்டு, மந்திரி சபை கலைந்தது. அவர்கள் அரசனை வாழ்த்தி விடை பெற்றுச் சென்றனர்.அவர்களை வழி அனுப்பிய பின் ராஜா தசரதன் அடுத்த நிலையில், (பதவியில்) இருந்த மந்திரிகளை அழைத்துச் சொன்னான். -வேதம் அறிந்த ரிஷிகளால் முறைப்படி யாகம் செய்யலாம் என்று உபதேசம் பெற்று விட்டேன். அதனால் நீங்கள் தான் இதை நல்ல முறையில் முடித்து தர உதவ வேண்டும். நீங்கள் சாமர்த்யசாலிகள், செய்ய வேண்டிய காரியங்களை உடனே ஆரம்பியுங்கள் – என்று சொல்லி அவர்களையும் அனுப்பி விட்டு தன் அரண்மனைக்குள் சென்றான். அந்தரங்கமான பிரியம் கொண்ட தன் மனைவிகளை அழைத்து அவர்களிடம் -பிள்ளை வேண்டி யாகம் செய்யப் போகிறேன்,நீங்களும் விரதம் மேற்க் கொள்ளுங்கள் – என்றான்.அந்த மனைவிகளின் அழகிய வதனங்களும், பனி விலகிய பின் மலரும் தாமரையைப் போல விகசித்தன.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்தொகுப்பில், பால காண்டத்தில், சுமந்திர வாக்யம் என்ற எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 9 ருஸ்யஸ்ருங்கோபாக்யானம் (ருஸ்ய ஸ்ருங்க முனிவரின் கதை)
அன்று இரவில் சந்தித்தபொழுதுசுமந்திரர் அரசனிடம் தனியாக ஒரு விஷயம் சொல்லலானான். –அரசே, நான் முன் ஒரு முறை கேள்விப் பட்டதைச் சொல்கிறேன். ரித்விக் எனப்படும் பண்டிதர்கள் சொல்லி நான் கேட்டேன். சனத்குமாரர் ஒரு முறை சொன்னாராம். ரிஷிகளிடத்தில்.உங்களுக்குப் பிள்ளை இல்லையே என்பது பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது, உங்களுக்கு புத்திர பிராப்தி உண்டு என்றாராம். காச்யபருடைய பிள்ளை விபாண்டகன் என்று ஒரு முனி. அவருக்கு ருஸ்ய ச்ருங்கர் என்று ஒரு பிள்ளை.தந்தை சொல் ஒன்றே அறிந்தவனாக, காட்டில் தன்னந்தனியாக வளர்ந்தவன். முனிவர் வேறு எதுவுமே அறிய அவனை விடவில்லை.இவ்வாறு பிரும்மசர்ய விரதத்தைக் காத்து வந்தான். கடுமையான விரதம்.உலகில் இதைப் பற்றி பிராம்மணர்கள் பேசிக் கேட்டிருக்கிறோம். அக்னியை வணங்குவதும், வளர்ப்பதும், தந்தை சொல் கேட்பதுமாகவே இந்த பிள்ளை வளர்ந்துபெரியவன் ஆனான். அந்த சமயம் அங்க ராஜ்யத்தை ரோமபாதர் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் ராஜ்யத்தில், இதுவரைக் கண்டு அறியாத கொடிய கஷ்டம். மழையே இல்லாமல் வறட்சியாக ஆயிற்று ஜனங்கள் படும் பாடு சகிக்காமல் ராஜா மந்திரிகளையும், குரு ஜனங்களையும் அழைத்து என்ன செய்யலாம்என்று விசாரித்தார். -நீங்கள் எல்லோரும் தர்மம் அறிந்தவர்கள். உலகத்தின் கஷ்ட நஷ்டங்களைஉணர்ந்தவர்கள். பிராயசித்தம் செய்ய வேண்டுமா ? நன்கு யோசித்து எனக்கு ஒரு வழிச் சொல்லுங்கள்- இவ்வாறு அரசன் வேண்டிக் கொண்ட பின் அந்த அறிஞர்கள் ஒன்று கூடிச் சொன்னார்கள். –அரசனே, விபாண்டகரின் புத்திரனான ருஸ்ய ஸ்ருங்கரை எப்படியாவது இங்கு அழைத்து வந்து, உன் பெண் சாந்தாவை அவருக்கு விவாகம் செய்து கொடு.- என்றனர்.இதைக் கேட்டு அரசன் கவலைf கொண்டார். அந்த ருஸ்யஸ்ருங்க முனிவரை எப்படி என் நாட்டிற்கு வரவழைப்பேன் என்று யோசித்தார். அவர் மந்திரி சபையைக் கூட்டி,புரோஹிதர்களையும், மகா மந்திரிகளையும் அனுப்ப முடிவு செய்தார்.அப்பொழுது அவர்கள் தலை குனிந்தவாறு, விபாண்டக முனிவரிடம் எங்களுக்கு பயம்,நாங்கள் போய் இந்த செயலை நிறை வேற்ற முடியாதுஎன்று மறுத்து விட்டார்கள்.அவர்களே அரசனுக்கு ஒரு உபாயமும் சொன்னார்கள். கணிகா ஸ்த்ரீகளை அனுப்பி, ருஸ்ய ச்ருங்கரைவர வழைத்துக் கொள்வோம் என்று சொல்ல, அவ்வாறே ருஸ்ய ச்ருங்க முனிவரை அழைத்து வந்து, மகள் சாந்தாவை மணம் செய்து கொடுக்க, மழையும் பொழிந்தது,. மருமகனான ருஸ்ய ச்ருங்கர், உனக்கும்புத்திர செல்வத்தை அனுக்ரஹிப்பார்என்று இதுவரை சனத்குமாரர் சொன்னதாக நான் கேட்டதைச் சொன்னேன்- என்று சுமந்திரன் முடிக்க, மகிழ்ச்சி அடைந்த தசரத ராஜா, ருஸ்ய ச்ருங்கரை எப்படி அழைத்து வந்தார்கள் விவரமாக சொல்லு என்று வேண்டிக் கொண்டார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ருஸ்ய ச்ருங்க முனிவரின் கதை என்ற ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 10 ருஸ்ய ச்ருங்க முனிவரை வர வழைத்தல்
சுமந்திரர், அரசன் கேட்டுக்கொண்டபடி, மேலும் சொல்லலானார். ருஸ்ய ச்ருங்கரை, எப்படி எந்த உபாயம் செய்து மந்திரிகள் அழைத்து வந்தார்கள் அதுவும் எனக்குத் தெரியும், சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.ரோமபாதரிடம், முனிவர்கள் தயங்கியவாறு சொன்னார்கள். -நல்ல உபாயம் இல்லை தான், இருந்தாலும் வேறு வழியில்லை என்பதால் சொல்லுகிறோம்.ருஸ்ய ச்ருங்கர் வனத்திலேயே வளர்ந்தவர், தவம் செய்வதன்றி வேறு எதுவும் அறியாதவர். பெண்களையும், அவர்களிடம் விஷய சுகம் பெறலாம் என்பதும்அவர் அறியாதது. அதனால் இதையே தொழிலாக கொண்ட சில பெண்களை அனுப்புவோம். நல்ல அழகிய பெண்கள், நன்கு அலங்கரித்துக் கொண்டு செல்லட்டும். முனிவரைத் தகுந்தபடி மயக்கி அழைத்து வரட்டும்.– சரி என்று அரசரும் சம்மதித்துஅவ்வாறே தேர்ந்தெடுத்து எடுத்த சில பெண்கள் வனத்திற்குச் சென்றனர்.ஆசிரமத்திற்கு வெகு தூரத்தில் இருந்தே அவரை கண்களால் காண முயற்சி செய்தனர். தந்தை சொல்லை மீறாத தனயன், காட்டை விட்டு வெளி வந்ததே இல்லை. பிறந்ததில் இருந்து வேற்று மனிதரை, ஆணோ, பெண்ணோ கண்டதேயில்லை.நகர, ராஜ்யங்களில் நடப்பது என்ன என்றும் உணராதவனாகவே வளர்ந்து விட்டவர். யதேச்சையாக அந்த பக்கம் ஒரு முறை வந்தார். விபாண்டகர் மகன், இனிமையாக பாடும், நல்ல அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்த, அழகிய பெண்களைக் கண்டார். அவர்களும் ரிஷியை சூழ்ந்து கொண்டு விசாரித்தனர். -யார் நீங்கள்? எப்படி இருக்கிறீர்கள் பிரும்ம ரிஷியே?- என்று குசலம் விசாரித்து, தனியாக இந்த அடர்ந்த காட்டில் வசிக்க பயம் இல்லையா? என்று கேட்க, அது வரை கண்டிராத அந்த பெண்களின் மயக்கும் உடல் அழகில் மகிழ்ந்து போய் பதில் சொன்னார். உடனே தன் தகப்பனாரிடம் சொல்ல வேண்டும் அன்று அவர் மனதில் தோன்றியது. -நான் விபாண்டகர் மகன். ருஸ்ய ச்ருங்கர் என்பது என் பெயர். இங்கு அருகில் தான் எங்கள் ஆசிரமம். மங்களகரமான தோற்றம் உடையவர்களே – அங்கு வாருங்கள் .உங்களுக்கு நான் அதிதி சத்காரம் செய்ய விரும்புகிறேன்.- ரிஷி புத்திரனின் வார்த்தைகளைக் கேட்டு அவர்கள்சரி என்று கூடவே சென்றனர். அதிதிகளான அவர்களுக்கு, முனிவர் விதிப்படி மரியாதைகள் செய்தார்.இதோ அர்க்யம், இது பாத்யம், இது கிழங்கு, இது பழம் என்று எடுத்துக் கொடுக்க, அவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.பின், விபாண்டக முனிவர் வந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து, வேகமாக திரும்பிச் செல்ல முனைந்தனர். எங்களுடைய விசேஷமான பழங்கள், உணவுப்பண்டம் இவை என்று சொல்லி,மோதகங்களையும், மற்றும் பல விசேஷமாக தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும் கொடுத்தனர்.வாங்கி கொள்ளுங்கள், சீக்கிரம் சாப்பிடுங்கள் என்றனர். ஆலிங்கனம் செய்து அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அந்தப் பெண்கள், முனிவர் வருமுன் கிளம்பி விட்டனர். இதுவரை சுவைத்தறியாத, பக்ஷணங்களின் ருசி(அவைகளையும் பழம் என்றே எண்ணி முனிவர் உட்கொண்டார்). அவர்கள் கிளம்பிச் சென்ற பின், ஏதோ ஒரு வித அவஸ்தையும் துக்கமும் அலைக்கழிக்க, முனிபுத்திரர் தானாகவே முதல் நாள் அந்த பெண்களை சந்தித்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.மனதைக் கவரும் விதமாக ஆடை உடுத்தி, வசீகரமான புன்னகையுடன் எதிர்கொண்டழைத்த அந்த பெண்கள், எங்களுடைய ஆசிரமத்திற்கு நீங்களும் வாருங்கள், ரிஷி குமாரா, என்று அழைத்தனர். அங்கும் பலவிதமான பழங்களும், கிழங்குகளூம் உண்டு என்று பலவிதமாக குழைந்து பேசவும், முனிவரும் அவர்களுடன் வரத் தயார் ஆகி விட்டார். அந்தப் பெண்கள் சந்தோஷமாக முனிவரை அழைத்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தனர்.ஊர் எல்லையில் மகானான அவரது காலடி பட்டதுமே, மழை பொழியலாயிற்று.மழையைக் கண்டதுமே, முனிவர் வந்து விட்டார் என்பதை அறிந்து, அரசனான ரோமபாதர், எதிர் கொண்டழைத்து, தலை வணங்கி, ஊருக்குள் அழைத்துச் சென்றார். அர்க்யம் முதலியன சமர்ப்பித்து, பிராம்மணோத்தமரான அந்த முனிவரிடம் வேண்டிக் கொண்டார். -அனுக்ரஹம் செய்ய வேண்டும் முனிவரே, கோபம் கொள்ளக் கூடாது – என்றார். வீட்டிற்குள் அழைத்து வந்து, மகளான சாந்தாவை மணம் செய்து கொடுத்து, இருவரையும் ஒன்றாகக் கண்டு அரசர் மிகவும் மகிழ்ந்து போனார்.முனிவரை சந்தோஷமாக வைத்திருக்க, மரியாதைகள் செய்துராஜா ரோமபாதரும் திருப்தி அடைந்தார், முனிவரும் மனைவியான சாந்தாவுடன், சந்தோஷமாக இருந்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ருஸ்ய ச்ருங்கரை அங்க தேசத்துக்கு அழைத்து வந்த விதம் என்ற பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 11ருஸ்ய ச்ருங்க முனிவர் அயோத்யா வருதல்
சுமந்திரர் மேலும் சொல்லுவார். -தேவ லோகத்தில் சனத்குமரர் சொன்னபடியே, நான் திரும்பவும் சொல்வதைக் கேளுங்கள் அரசரே. அவர் சொன்னது -இக்ஷ்வாகு வம்சத்தில் நல்ல தார்மிகனான, ராஜா தசரதன் என்று ஒருவன் சத்யத்தையே தன் உயிர்மூச்சாக கொண்டு பிறப்பான். அந்த அரசன் அங்க தேசத்து அரசனான ரோமபாதருடன் நட்புக் கொள்வான். அபத்யம் (சந்ததி)இல்லாதவனாக ஆகி விட்டேன், தர்மாத்மாவான அங்க தேசத்து அரசனே,சாந்தாவின் பதியை அனுப்பி என் யாகத்தை பூர்த்தி செய்து கொடு என்று வேண்டுவான். இதைக் கேட்டு அந்த அரசனும், சற்று யோசித்து, தீர்மானம் செய்து கொண்டவராக, புத்திரனுடன் கூடிய சாந்தாவையும், அவள் கணவனையும் அனுப்பி வைப்பார்.யாகம் செய்ய விரும்பும் தசரத ராஜா, அந்த முனிவரை வணங்கி, விண்ணப்பித்து, மரியாதையுடன் அழைத்து வந்து யாகத்தை பூர்த்தி செய்வான். அவனுக்கு நான்கு புத்திரர்கள் பிறப்பார்கள்.-என்று இது வரை சனத் குமாரர் ப4விஷ்ய வாணியாக கூறியதை நான் சொன்னேன், என்று சுமந்திரர் சொல்லி நிறுத்தி, அதனால் அரசனே, இப்பொழுது நீங்கள் நேரில் சென்று அவரை அழைத்து வாருங்கள்.வாகனங்களையும், சேனையையும் அழைத்துச் செல்லுங்கள், என்றும் சொன்னான். வசிஷ்டரையும் கலந்து ஆலோசித்துக் கொண்டு, சுமந்திரர் சொன்னதையும் மனதில் கொண்டு, அந்தப்புரத்து பெண்டிரையும், மந்திரிகளையும் அழைத்துக் கொண்டு, மெதுவாக பல நதிகளையும்வனங்களையும் கடந்து சென்று, ரோமபாதர் மாளிகையில் இருந்த முனிவரைத் தேடிச் சென்றார் ராஜாதசரதர்.அக்னி பிழம்பாக ஜ்வலித்துக் கொண்டிருந்த முனிவரை வணங்கி, அவருக்கு தகுந்த மரியாதைகளைச் செய்தார். நண்பன் என்பதால் மிகவும் மகிழ்ச்சியுடன் ரோமபாதரும் தசரதரைப் பற்றி முனிவரிடம் சொன்னார். ஏழெட்டு நாட்கள் சென்ற பின் தசரத ராஜா ரோம பாதரிடம் சொன்னார். – உன் மகள் சாந்தாவும், அவள் கணவரான ருஸ்ய ச்ருங்கரும், என் தேசத்துக்கு வரட்டும். மிக முக்யமான காரியம் ஒன்று உள்ளது- என்றார். அரசரும் அப்படியே ஆகட்டும் அன்று சொல்லி, முனி புத்திரரும், தன் மருமகனுமான ருச்ய ச்ருங்கரிடம் -மனைவியுடன் தாங்கள் போய் வாருங்கள்- என்று சொல்லவும், அவரும் சம்மதித்து தன் மனைவியுடன் கிளம்பினார். ரோம பாதரும், தசரதரும் ஒருவரையொருவர், ஸ்னேகத்துடன் அஞ்ஜலி செய்து கொண்டும், மார்போடு அணைத்து ஆலிங்கணம் செய்து கொண்டும்விடை பெற்றுக் கிளம்பினர். வேகமாக செல்லும் சில தூதர்களை முன் கூட்டியேநகரத்தை அலங்கரித்து வைக்கும்படி உத்தரவிட்டு அனுப்பினார்.கொடிகளாலும், மாலைகளாலும், வாசனை திரவியங்களாலும், நகரத்தைஅழகு படுத்துங்கள் என்று அரசன் சொல்லி அனுப்பியபடியே, ஊர் அலங்கரிக்கப்பட்டு, ஜனங்கள் சந்தோஷமாக ராஜாவை எதிர் கொண்டு அழைத்தனர். சங்க, துந்துபி கோஷங்களுடன், பிராம்மணோத்தமர்கள் முன் செல்ல, தசரத ராஜா ஊருக்குள் பிரவேசித்தார். நகர ஜனங்களும், தங்கள் அரசனுடன் வரும் ரிஷி குமாரரைக் கண்டு மிகவும் மகிழ்ந்து, தேவ லோகத்தில்இந்திரனுடன் தேவர்கள் எப்படி காஸ்யபரை வர வேற்றார்களோ அதே போல வரவேற்று உபசரித்தனர். அரசனின் மாளிகைக்குள் அழைத்துச் சென்று வசதியாக அவர் தங்க ஏற்பாடுகள் செய்து கொடுத்த பின், நிம்மதியுடன் சென்றனர்.அந்தப்புரத்து ஸ்த்ரீகள் சாந்தாவை தங்களுடன் மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றனர். சில நாட்கள் அவர்கள் இருவரும் அரசனின் விருந்தினர்களாக அங்கேயே தங்கினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ருஸ்ய ச்ருங்க முனிவரின் அயோத்யா பிரவேசம் என்ற பதினோராவது அத்யாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 12 அஸ்வமேத ஏற்பாடுகள்
பல பக்ஷங்களும் நாட்களும் ரம்யமாக கழிந்தபின், வஸந்த ருது வந்ததும், அரசர் தன் யாகத்தைப் பூர்த்தி செய்ய விரும்பினார். ரிஷி புத்திரரை தலை குனிந்து வணங்கி, தன் குலத்திற்கு சந்தானத்தை வேண்டி யாகம் செய்ய வருமாறு வேண்டிக் கொண்டார் தசரத ராஜா. சரி என்று அவரும் சம்மதித்து, ஏற்பாடுகள் செய்யுங்கள், குதிரையை அவிழ்த்து விடுங்கள், சரயூ நதியின் வடக்கு பகுதியில் யாக சாலை அமைக்கலாம் என்றார். அப்போது அரசர் சுமந்திரனைப் பார்த்து சொன்னார் –சுமந்திரா, ரித்விக்குகளான, உத்தமமான பிராம்மணர்களை, சுயக்ஞன், வாமதேவன், ஜாபாலி, காச்யபன் புரோகிதரான வசிஷ்டர் மற்றும் உள்ள பிராம்மணர்களையும் அழைத்து வா.-அவ்வாறே சுமந்திரர் வேகமாகச் சென்று அவர்கள் அனைவரையும் அழைத்து வரவும், அரசர் அவர்களுக்கு தகுந்த மரியாதைகள் செய்த பின் தர்ம அர்த்தங்கள் நிறைந்த வார்த்தைகளைச் சொன்னார். –நான் மிகவும் விரும்பும், ஒரு குழந்தைக்காக ஏங்கும் எனக்கு, புத்திர பாக்யம் இதுவரை இல்லை. அதனால் அஸ்வமேத யாகம் செய்வோம்என்று என் மனதில் பட்டது. சாஸ்திர விதிப்படி நான் இந்த யாகத்தை செய்ய விரும்புகிறேன். இந்த ரிஷி புத்திரர் மிகவும் மகிமை வாய்ந்தவர். இவர் அருளால் நான் விரும்பியதைப் பெறுவேன் என்றுநம்புகிறேன்.- இவ்வாறு அரசன் சொன்னதும், சாது, சாது (நன்று, நன்று)என்று கூடியிருந்த பிராம்மணர்களும், வசிஷ்டர் முதலான எல்லோரும் அரசரது வார்த்தையை ஏற்று, ருஸ்ய ச்ருங்கரின் தலைமையில்யாகத்தை செய்யத் தயாராயினர். யாகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வோம், சரயூ நதிக் கரையில் யாக சாலையை அமைப்போம், நான்கு பலசாலிகளான பிள்ளைகளைப் பெறுவாய் என்று ஆசிர்வதித்தனர். இதைக்கேட்டு அரசன் அகமகிழ்ந்தான். குதிரையை பயிற்றுவிப்பதில் திறமை வாய்ந்தவர்களால் பயிற்சி பெற்றிருந்த குதிரை அவிழ்த்து விடப்படட்டும், அதற்குபயிற்சி அளித்தவரும் உடன் செல்லட்டும். சரயூ நதிக் கரையில் யாக சாலையை அமையுங்கள்.சாந்தி பாடங்கள் நடக்கட்டும்.எல்லா அரசர்களும் இந்த யாகத்தைச் செய்ய முடியும். எந்த விதமான அபராதமோ, கஷ்டமோ வராது. ப்ரும்ம ராக்ஷஸர்கள் உள்ளே புகுந்து இடைஞ்சல் செய்யக் காத்திருப்பார்கள். யாகத்தைக் கெடுத்தால், அதன் கர்த்தா அழிவான். அதனால் இந்த யாகம் நல்ல விதமாக முடியும் விதமாக, நிபுணர்களாக வந்து இந்த காரியங்களைச் செய்யுங்கள் என்றுஉத்தரவிட்டான்.அப்படியே ஆகட்டும் என்று மந்திரிகளும் அவ்வாறே செய்வதாக சொல்லி விடை பெற்றனர்.அவர்கள் விடை பெற்றுச் சென்ற பின் அரசர் தன் அரண்மனைக்குள் நுழைந்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில் அஸ்வமேத சம்பாரோ என்ற பன்னிரண்டாம் அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 13 யக்ஞசாலா பிரவேசம்
திரும்ப வசந்தம் வரவும், ஒரு வருடம் ஓடி விட்டது. அஸ்வமேத யாகத்தைச் செய்ய முனைந்த அரசன், வசிஷ்டரை வணங்கி, என் யாகத்தை முடித்துக் கொடுங்கள் என்று வேண்டினான். யாகத்தின் பல பகுதிகளையும் விக்னமின்றிசெய்யுங்கள். நீங்கள் எனக்கு குரு மட்டுமல்ல, நெருங்கிய நண்பரும் ஆவீர்கள். என்னிடம் அன்பு கொண்டவர். இந்த யாகத்தின் நிர்வாகப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என, அவரும் ஆகட்டும்என்று ஒத்துக் கொண்டார். உன் இஷ்டபடியே செய்கிறேன் என்று சொல்லி, யாக கர்மத்தில் தேர்ந்த பல முதியவர்களையும், பிராம்மணர்களையும், தர்ம சிந்தனை உள்ளவர்களையும் அந்தந்த இடத்தில் நியமிக்கிறேன், வேலையில் திறமையுள்ள சில்பிகள், தோண்டுபவர்கள், கட்டடம் கட்டுபவர்கள், தவிர, நடன, நாடகம் ஆடுபவர்கள், பல விதமான சாஸ்திரங்களை அறிந்த, நேர்மையான பண்டிதர்கள், வேதம் அறிந்தவர்கள், யாக காரியத்தை ஏற்றுக் கொள்ள வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். இந்த யாக காரியங்களை நன்கு அறிந்த சாகஸம் மிகுந்தகலைஞர்களை அழைத்து வாருங்கள்.அரசனுக்கு, அவர் செய்ய வேண்டிய விரத காரியங்களை செய்து தர வாருங்கள்.நூற்றுக்கணக்கான ப்ராம்மணர்கள் தங்க இடங்கள் ஏற்பாடு செய்யுங்கள். அன்னம், பானம், பக்ஷ்யம் முதலியவை நிறைய தயார் செய்யுங்கள்.ஊர் ஜனங்களுக்கும் இவை தாராளமாக கிடைக்க விஸ்தாரமாக ஏற்பாடுகள் செய்யுங்கள். வெகு தூரத்திலிருந்து வரும் அரசர்கள் தங்க தனித் தனியாக, இட வசதி செய்து தாருங்கள். குதிரை, யானை கட்டும் இடங்களும், இரவு ஓய்வு எடுக்க படுக்கையறைகளும்,கூட வரும் சேவகர்களுக்கு இருப்பிடம் முதலியனவையும், வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கு எல்லா வசதிகளும், எல்லா தேவைகளும் குறைவற இருக்குமாறு,அன்னம், பானம் , பக்ஷ்யம் முதலியவை குறைவில்லாமல் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யுங்கள்.ஊர் ஜனங்களுக்கும் நிறைவாக அன்ன தானம் செய்ய வேண்டும். மரியாதையாக உபசரித்து செய்யுங்கள். கேலியாகவோ, விளையாட்டாகவோ செய்யாதீர்கள். எல்லா வர்ணத்தினருக்கும், அவரவர் தகுதிக்கு ஏற்ப மரியாதை செய்யுங்கள்.
காமத்தினாலோ, கோபத்திலோ, மறந்தும் கூட யாரையும் அவ மரியாதை செய்து விடாதீர்கள். யாக காரியத்தில் மூழ்கி இருக்கும் ஜனங்கள், சில்பி முதலானவர்கள், இவர்களை விசேஷமாக கவனியுங்கள். இவர்களுக்கு நல்ல முறையில் மரியாதை செய்து, பணமும், போஜனமும் குறைவற கொடுக்க வேண்டும். அவரவர்கள் தாங்களே விரும்பி பங்கெடுத்துக் கொண்டு, விக்னமில்லாமல் எல்லா காரியங்களும்நடக்க ஒத்துழையுங்கள். இவ்வாறு வசிஷ்டர் சொல்லவும், எல்லோரும் வசிஷ்டரிடம் வந்து அப்படியே செய்வதாக வாக்களித்தனர்.எதையும் விட மாட்டோம் என்றனர்.சுமந்திரரைக் கூப்பிட்டு வசிஷ்டர் ஆணையிட்டார். பூமியில் உள்ள தார்மீகனான அரசன் ஒருவர் கூட விடாமல், எல்லோரையும் அழைத்து வர ஏற்பாடு செய். பிராம்மணர்கள்,க்ஷத்திரியர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள் அணைவரும் வருமாறு தேவையான ஏற்பாடுகள் செய்து வை. மிதிலாதிபதியான ஜனகன், மகா வீரன், சத்ய சந்தன், அவரை நீயே நேரில் போய் அழைத்து வா. காசி ராஜன் எப்பொழுதும் பிரியமாக பேசுபவன். தேவர்களுக்கு இணையான நல்ல பெயர் பெற்றவன். இவரையும் நீ நேரில் போய் அழைத்து வா. அதே போல கேகய ராஜா பெரியவர். பரம தார்மீகர். நமது அரசருடைய மாமனார். அவரையும் அவரது மகனையும் சேர்த்து அழைத்து வா. அங்கதேச அரசன் ரோம பாதன், நம் அரசனின் சினேகிதர். கிழக்கு தேசத்து அரசர்கள், சிந்து, சௌவீர அரசர்கள், சௌராஷ்டிரத்தைச் சேர்ந்த அரசர்கள், தக்ஷிண தேசத்துஅரசர்கள் எல்லோரையும் வரவழை. இந்த .அரசர்கள் எல்லோருமே நம்அரசரிடம் மதிப்பும் அன்பும் உடையவர்கள். இவர்கள் எல்லோரையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, பந்துக்களுடனும், மித்திரர்களுடனும் வரும்படி சொல்.வசிஷ்டரின் வார்த்தைகளைக் கேட்டு சுமந்திரர், உடனடியாக செயல் பட்டார். அரசர்களை அழைத்து வர தகுந்த மனிதர்களை உத்தரவிட்டு அனுப்பினார். நன்கு விஷயமறிந்த தூதர்களை அரசரதுஆணையை தெரிவித்து, உடன் அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார்.வசிஷ்டர் சொன்னபடி தானும் கிளம்பினார். வேகமாக போய் எல்லா அரசர்களையும் அழைத்து வர விரைந்தார். வேலைகளை அறிந்தவர்கள் வசிஷ்டரிடம் வந்து செய்யவேண்டியவற்றை விளக்கிச் சொல்லி அனுமதி பெற்றுச் சென்றனர். வசிஷ்டரும் அவர்களிடம் சொன்னார். தானம் செய்யும் போது அலட்சியமாகவோ, விளையாட்டாகவோ தரக்கூடாது.அலட்சியமாக கொடுக்கும் தானம் கொடுப்பவனையே அழித்து விடும்.ஞாபகம் இருக்கட்டும் என்று எச்சரித்தார். சில நாட்களில் இரவிலும், பகலிலுமாக மற்ற தேசத்து அரசர்கள் வந்து சேர்ந்தனர். ராஜா தசரதனுக்கு பலவிதமான ரத்னங்களைக் கொண்டு வந்தனர். வசிஷ்டர் சந்தோஷமாக அவர்களைவரவேற்று தசரதனிடம் – உங்கள் விருப்பப்படி இவர்கள் அனைவரையும் வரவழைத்து விட்டேன்- என்று சொன்னார். யாகத்துக்கான பூர்வ காரியங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. யாகத்தை ஆரம்பிக்கலாம் என்றார். மனதால் நிர்மாணித்து பின் உருவம் கொடுத்தது போல செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ப்ரயத்யக்ஷமாக காண்பாய். அரசரும், ருஸ்ய ச்ருங்கரும் அதை அப்படியே என்று ஆமோதிக்க, நல்ல நக்ஷத்திரமும், யோகமும் கூடிய தினத்தில் புறப்பட்டார். ருஸ்ய ச்ருஙகர்
முன் செல்ல பின்னால், வசிஷ்டர் முதலான உத்தமமான முனிவர் கணங்கள் யாக சாலையை அடைந்து, யாகத்தை ஆரம்பித்து வைத்தனர். யாக சாலைக்குச் சென்று, சாஸ்திர முறைப்படி, ஸ்ரீமானான தசரதன், தன் பத்னிகளோடு தீக்ஷயை ஏற்றுக்கொண்டார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், யாகசாலை பிரவேசம் என்ற பதின்மூமூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 14 அஸ்வமேதம்
ஒரு வருடத்திற்குப் பிறகு யாக குதிரை திரும்பி வந்தது. சரயு நதியின் வடக்கில் யாக சாலையில் அரசன் யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தான். பிராம்மணோத்தமர்கள் அரசனுடைய மகா யக்ஞமான அஸ்வமேத யாகத்தில் ருஸ்ய ச்ருங்க முனிவரை பின் பற்றி, அவர் தலைமையில் காரியங்களைச் செய்தனர். தாங்களே வேத சாஸ்திரங்களை அறிந்தவர்கள், எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அறிந்தவர்கள், எல்லா யாக காரியங்களையும் சிரத்தையுடன் செய்தார்கள். யாகத்தின் பூர்வாங்க காரியங்களை காலையில் செய்து முடித்து, மத்யான்ன காலத்தில் யாகத்தை வளர்த்தனர். நடுவில் அரசனுக்கு அவர் செய்ய வேண்டியதையும் சொல்லிக் கொடுத்து செய்ய வைத்தனர். மூன்றாவது நாள் யாகமும் குறைவற நடந்தது. இதில் இந்திரன் முதலானவர்களை அழைத்தனர். ருஸ்ய ச்ருங்கர் தலைமையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திர வாக்யங்களைச் சொல்லி, சரியான முறையில், மதுரமான பாடல்களாலும், மந்திர மயமான ஆஹ்வானங்கள் (அழைப்புகள் விடுத்தல்) செய்து, தேவ லோகத்தில் உள்ள தேவதைகளைக் கூப்பிட்டு, ஹவிஸ் பாகங்களை சமர்ப்பித்தனர். ஹோதா என்ற யாகம் செய்பவர், ஒவ்வொரு தேவதையையும் கூப்பிட்டு ஹவிஸ் பாகம் தரும் பொழுது சிறிதளவு கூட தடங்கலோ, வார்த்தை தடுமாறலோ ஏற்படாமல் சிரத்தையாக கொடுத்தனர்.பிரும்மாவே வந்து நடத்தியது போல க்ஷேமம் ஒன்றையே குறியாக யாகம் நடந்தது.நாள் பூராவும் அவர்கள் களைத்தவர்களாகவோ, பசியினால் வாடுபவர்களாகவோ தென் படவில்லை. ஒவ்வொரு ரிஷி முனிவருக்கும் குறைந்தது நூறு சிஷ்யர்கள். இதில் யாருமே அவித்வான், கல்வியறிவுகளில் குறையுடையவர்கள், என்பதே இல்லை. பிராம்மணர்கள் உணவு கொண்டார்கள் என்றால், அவர்களுடன் கூட வந்தவர்களும் சாப்பிட்டார்கள். தாபஸர்கள், ஸ்ரமணர்கள் என்ற பிரிவினர், முதியவர்களும், வியாதியால் பீடிக்கப்பட்டவர்களும், பெண்களும்,குழைந்தைகளும் கணக்கில்லாமல் இருந்தனர். இடை விடாது அன்ன தானம் நடந்தது.- தீ3யதாம் தீ3யதாம் அன்னம் அன்னம் ஆகாரம் கொடுங்கள், திரும்ப திரும்ப கொடுங்கள், வஸ்த்ரங்களும் அதே விதமாக கொடுங்கள் என்று அரசரால் தூண்டப்பட்டு, அவ்வாறே செய்தனர். மலை போல குவிந்த அன்னம் ஆங்காங்கு தென்பட்டன. நாளுக்கு நாள்அந்த யாகத்தில்பல தேசங்களிலிருந்தும் வந்து சேர்ந்த மனைவி மக்களோடு கூடிய ஜனங்கள், அந்த யாகத்தில் அன்ன பான வகைகளால் விசேஷமாக கவனித்து உபசரிக்கப்பட்டவர்களாக, பலவிதமாக புகழ்ந்து பேசலானார்கள். தசரதனிடம் வந்து, ஆஹா, திருப்தியாக சாப்பிட்டோம்,உனக்கு நன்மை உண்டாவதாக, என்று சொல்லி விடை பெற்றார்கள். தாங்களும் நன்றாக அலங்கரித்துக்கொண்டு வந்த ஜனங்கள், பிராம்மணர்களை சூழ்ந்து கொண்டு உபசரித்தனர்.வேறு சிலர் பெரிய பெரிய மணி குண்டலங்களை அணிந்து கொண்டு வந்திருந்தனர். இடை இடையில் சிலர்காரண காரியங்களைக் குறித்து பேசிக்கொண்டும், ஒவ்வொருவரையும் அறிந்து கொள்ளும் ஆசையினால், பரஸ்பரம் விசாரித்துக் கொண்டும்,நாளுக்கு நாள் அங்கு ஜனங்கள் சௌக்யமாக இருந்தனர். எல்லா காரியங்களையும் சாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி நடத்தினர். அந்த அரசனது சபையில், வாதம் செய்வதில் சமர்த்தர்களும், நிறைய கல்வி கற்றுத் தேர்ந்தவர்களும், வேதங்களை ஆறு அங்கங்களோடு பாராயணம் செய்தவர்களும், விரதங்களை ஏற்றுக் கொண்டு முறையாக செய்பவர்களும்இருந்தனர். யூபம் என்று சொல்லப்படும் யாக தண்டம் அலங்காரமாக தங்க முலாம் பூசப்பெற்றது.இருபத்தியொரு யூபங்களுக்கு இருபத்தியொரு வஸ்திரங்கள், ரத்னங்கள் என்று ஒவ்வொன்றும் அலங்கரிக்கப்பட்டன.ஆறு பில்வம், காதிரம், பர்ணினம், ஸ்வேஷ்மாதகம், தேவதாரு இரண்டு – இவை கொடி கட்டப்படும் மரங்கள்.இவைகளை நன்றாக திடமாக நிற்கும்படி சில்பிகள் நட்டு வைத்தனர்.எட்டு பக்கமும் முட்டுக் கொடுத்து நிறுத்தினார்கள். புஷ்பங்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்கரித்தனர். யாக தீக்ஷை ஏற்ற ஏழு முனிவர்கள், சப்த ரிஷிகள் போல விளங்கினர். சாஸ்திரவிதிப்படி ஒவ்வொன்றையும் முறையாக செய்தனர். சாஸ்திர க்ஞானம்கொண்ட குசலமான பிராம்மணர்களால் யாக அக்னி மூட்டப் பெற்றது. (இதன்பின் யாக முறைகள் விவரமாக வர்ணிக்கப்படுகிறது.) ராஜ சிங்கமான தசரதனுக்கு உசிதமான முறையில் யாகாக்னி வளர்க்கப்பட்டது. பொன் நிறத்தில் கருடன் பதினெட்டு ரூபத்தில் மும்மடங்காக, அந்தந்த தேவதைகளை உத்தேசித்து பசுக்கள் கட்டப்பட்டன, உரகங்கள், பக்ஷிகள் என்றுசாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி குதிரைகள், நீர்வாழ் ஜந்துக்கள், இவைகளை ருத்விக்குகள் சாஸ்திர விதிப்படி நிர்மாணித்தார்கள். முன்னூறு பசுக்கள் யூபஸ்தம்பங்களில் கட்டப்பட்டன. தசரத ராஜாவின் அஸ்வ ரத்னம் கொண்டு வரப்பட்டது. கௌஸல்யா அந்த குதிரையை நடத்திக் கொண்டு வந்தாள்.(இதன் பின் யாகத்தில் கொடுக்கப்பட்ட பலிகளைப் பற்றிய வர்ணனை).யாக முடிவில் ரித்விக்குகளுக்கு அரசன் நிலத்தை தானம் செய்தபொழுது, -நீங்கள் தான் இந்த நிலத்தை ரக்ஷிக்க சக்தியுடையவர்கள், இதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்- என்று அரசனிடமே திருப்பிக் கொடுத்து விட்டனர். -நாங்கள் அத்யயனத்திலும், தவத்திலும் ஈ.டுபட்டவர்கள், அதிக விலையில்லாத பொருட்கள், மணிகளோ, ரத்னம், சுவர்ணமோ, பசுக்களோ எது முடியுமோ கொடு- என்று கேட்க, அரசன் பிராம்மணர்களுக்கும், வேதம் அறிந்தவர்களுக்கும் நூறு நூறு பசுக்கள் கொடுத்தான். கோடிக்கணக்கான தங்க, வெள்ளிக் காசுக்கள் கொடுத்தான். ருஸ்ய ச்ருங்க முனிவருக்கும், வசிஷ்டருக்கும் அதில் நியாயமாக சேர வேண்டிய பங்கை கொடுத்து விட்டு பிராம்மணர்கள் சந்தோஷமாக சென்றனர். குற்றேவல் செய்த மற்றவர்களுக்கும்கோடிக்கணக்கான தங்க காசுக்கள் கொடுத்தான், அரசன்.ஏழையான ஒரு பிராம்மணனுக்கு கைகளுக்கு கங்கணம் பரிசாக கொடுத்தான். யாசித்தவனுக்கு வேண்டியதைக் கொடுத்தான். இவ்வாறே வந்திருந்த அரசர்களையும், பிராம்மணர்களையும் திருப்தி செய்து வைத்து வணங்கி நின்ற அரசனை எல்லோரும் ஆசிர்வதித்து, வாழ்த்தினார்கள். பூமியில் விழுந்து வணங்கிய, உதார குணமுள்ள அந்த அரசன் யாக சாலை வந்து ருஸ்ய ச்ருங்கரிடம், என் குலம் விளங்க நீங்கள் செய்ய இருக்கும் விசேஷ யாகத்தை ஆரம்பியுங்கள் என்று வேண்டிக்கொண்டான். அப்படியே ஆகட்டும் என்று சொல்லிய முனிவர், குலத்தை விளங்கச் செய்யும் நான்கு புத்திரர்கள்உனக்கு பிறப்பார்கள் என்று ஆசிர்வதித்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில் அஸ்வமேதம் என்ற பதினான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 15 ராவண வதோபாயம் (ராவணனை வதம் செய்ய உபாயம் தேடுதல்)
மேதாவியான அந்த முனிவர், சற்று நேரம் த்யானம் செய்து விட்டு, அரசனிடம் சொன்னார. -புத்திரனை வேண்டி செய்யும் அந்த புத்திர இஷ்டியை நான் செய்கிறேன். அதர்வ வேதத்தில் சொல்லியிருக்கும் முறைப்படி, அந்த மந்திரங்களைக் கொண்டுயாகத்தை செய்கிறேன். இது சிறந்த பலனை அளிக்க வல்லது. – இதன் பின் யாகத்தை ஆரம்பித்தார். புத்திரனை விரும்பிச் செய்யும் அந்த யாகத்தில், மந்திரங்களைச் சொல்லி அக்னியில் ஹோமம் செய்தார். தேவர்கள், கந்தர்வர்கள், பரம ரிஷிகள், தங்கள் பங்கைப் பெற வந்து சேர்ந்தார்கள். அவர்கள் எல்லோரும், தவிர அழைப்புக்கிணங்கி அங்கு வந்திருந்த தேவர்களும் பிரும்மாவிடம் பேச ஆரம்பித்தார்கள். – லோக கர்த்தாவான பிரும்மாவே, உங்கள் கருணையால் வரம் பெற்ற ராவணன் என்ற ராக்ஷஸன் எங்களைத் துன்புறுத்துகிறான். பலத்தைக் கொண்டு அவனை வீழ்த்த எங்களால் முடியவில்லை. பகவானே, முன்பு மிகவும் மகிழ்ந்திருந்த சமயம் நீங்கள் அவனுக்கு வரத்தைக் கொடுத்தீர்கள். அதன் பின் நித்யம் அவனுடைய அட்டகாசங்களைப் பொறுத்து வருகிறோம். மூன்று உலகங்களிலும் உயர் நிலையில் உள்ளவர்களை அவன் வெறுக்கிறான். பாடாய் படுத்துகிறான். தேவ லோக அரசனான இந்திரனைக் கீழே தள்ள விரும்புகிறான். நீங்கள் கொடுத்த வரம் அவன் கண்களை மறைக்கிறது. ரிஷிகள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், தேவர்கள் எல்லோரையும் மரியாதையின்றி வதைக்கிறான். சூரியன் அவன் அருகில் சுடுவதே இல்லை. காற்று அதி வேகமாக வீசுவதில்லை. இது நிஜம். சதா அலைகள் அடித்துக் கொண்டிருக்கும் சமுத்திரம் அவனைக் கண்டு ஆடாதுஅசங்காது நிற்கிறது. பார்வைக்கும் கோரமாக இருக்கும் அவனிடம் நாங்களும் நடுங்குகிறோம்.பகவானே, அவனைக் கொல்ல நீங்களே தான் வழியும் சொல்ல வேண்டும்.- தேவர்களின் முறையீட்டைக் கேட்ட பிரும்மா, சற்று யோசித்துச் சொன்னார். அட, ஒரு வழி இருக்கிறது. அவன் என்னிடம்வரம் கேட்டபொழுது, கந்தர்வர்கள், யக்ஷர்கள், தேவ தானவர்கள், ராக்ஷஸர்கள்- இவர்கள் என்னைக் கொல்லக் கூடாது என்று கேட்டான். நானும் சரி என்று வரம் கொடுத்தேன். தெரிந்தோ தெரியாமலோ, அலட்சியமோ, அவன் மனிதர்களால் மரணம் கூடாது என்று கேட்கவில்லை. அதனால் அவனை ஒரு மனிதன் தான் கொல்லவேண்டும். வேறு விதத்தில் அவனுக்கு மரணம் சம்பவிக்க வழியே இல்லை- என்றார். இதைக் கேட்டு தேவர்களும், மகரிஷிகளும் மகிழ்ந்தனர். இந்த செய்தி அவர்களுக்கு பிரியமாக இருந்தது. இதே சமயத்தில் அங்கு பகவான் விஷ்ணு வந்து சேர்ந்தார். உலக நாயகனான அவர், சங்கம், சக்கரம், கதை இவைகளைத் தாங்கியவராக,பீதாம்பரம் அணிந்தவராக அந்த கூட்டத்தினிடையே வந்து நின்றார்.அவரை வணங்கி தோத்திரம் செய்து எல்லா தேவர்களுமாக சேர்ந்தாற்போல் அவரிடம் பேச ஆரம்பித்தனர். – ஹே விஷ்ணு, உலகத்தின்நன்மைக்காக உன்னை நியமிக்கிறோம். அயோத்யாபதியான ராஜா தசரதனுக்கு மகனாக பிறப்பாயாக. இந்த தசரதன் தர்மம் அறிந்தவன். கொடையாளி. மகரிஷிக்கு சமமான தேஜஸ் உடையவன். இவனுக்கு மூன்று மனைவிகள். லஜ்ஜை, லக்ஷ்மி, கீர்த்தி இவை தான் இம்மூவருக்கும் உவமையாக சொல்லத் தகுந்தவை. இந்த குணங்களே உருவெடுத்து வந்தது போல் உள்ளனர். நீ உன்னை நான்கு பாகங்களாக பிரித்துக் கொண்டு இந்த தம்பதிகளுக்கு மகன்களாக பிறப்பாயாக. இங்கு நீ மனிதனாக வளைய வருவாய். வளர்ந்து உலகத்திற்கே இடைஞ்சலாக இருக்கும் இந்த ராவணனை அழிப்பாயாக.இவனை தேவர்களால் அழிக்க முடியவில்லை இந்த ராவணன் யாராலும் எதிர்க்க முடியாதபடி வரங்கள் பெற்றுள்ளதைர்யத்தால் ரிஷிகளை எப்போதும் பயமுறுத்துகிறான். கந்தர்வர்களை, சித்தர்களை, முனிவர்களை யாரையும் விடுவதில்லை. கந்தர்வ ஸ்திரீகள் நந்தவனத்தில் விளையாடும் பொழுது, ரௌத்திரமாக வந்து துன்புறுத்துகிறான். இவனை வதம் செய்ய வேண்டும் என்று யாசிக்கவே வந்தோம். எங்களுடன் சித்தர்களும், முனிவர்களும், கந்தர்வ, யக்ஷர்களும் வந்திருக்கிறார்கள். உன்னையே சரண் அடைகிறோம். எங்கள் எல்லோருக்கும் நீயே தான் கதி, பரந்தாமனே, இந்த தேவ சத்ருவை, உலகில் அரசர்களுக்கு எதிரியாக இருக்கும் இவனை வதம் செய்ய நீ மனம் வைத்தால் தான் நாங்கள் உய்வோம் – இவ்வாறு தேவர்களால் வேண்டிக்கொள்ளப்பட்ட மகா விஷ்ணு, பிரும்மாவை முன்னிட்ட அந்த தேவ லோக கூட்டத்தைப் பார்த்து வணங்கி விட்டு சொன்னார். -பயத்தை விடுங்கள்.உங்களுடைய நன்மைக்காக யுத்தத்தில் ராவணனை, புத்திர, பௌத்திரர்களோடு, மந்திரி வர்கங்களோடு, மித்திரன், பந்துக்கள், தாயாதிகளுடன் சேர்த்து அழிக்கிறேன். பூ உலகில் மனிதனாக வாழ்கிறேன். இந்த பூமியை ஆளுபவனாக, பத்தாயிரம், மேலும் ஆயிரம் வருஷங்கள் இந்த உலகில் வசிக்கிறேன்.- இவ்வாறுதேவர்களுக்கு வரம் அளித்த, ஆத்மவான் என்று போற்றப்படும் விஷ்ணுதன் பிறப்புக்கு ஏற்ற மனிதனைத் தேடி யோசிக்கலானார்.பின், தாமரையை போன்ற கண்களையுடையஅவர், தன்னை நான்கு விதமாக பிரித்துக் கொண்டு, தானே நான்கு பிள்ளைகளாக பிறக்க தசரத அரசனை தந்தையாக ஏற்றுக்கொண்டார். அப்போது மதுசூதனான விஷ்ணுவை, தேவ, ரிஷி, கந்தர்வ, ருத்ர, அப்சர கணங்கள் திவ்யமான தோத்திரங்களால் போற்றினர். ராவணன் உக்ரமான பலம் பொருந்தியவன். கர்வம் அதிகமாகி விட்டது. அதனால் தேவர்களின்தலைவனான இந்திரனை சத்ருவாக நினைக்கிறான். சாதுக்கள், தபஸ்விகள், தவத்தைக் கலைக்கிறான். இப்படி பயத்தைக் கொடுக்கும் இவனை அழித்து உலகத்தை விராவணம்- ராவணன் இல்லாமல் செய்வாயாக. உக்ரமான பௌருஷம் உடைய இவனை இவன் சைன்யத்தோடு, பந்துக்களோடு அழித்து லோகத்தை காத்த பின் ஸ்வர்கத்திற்குச் செல்வாயாக. அது வரை சுரேந்திரன், ஸ்வர்கத்தை கவனமாக பாதுகாத்து, தோஷங்கள், கல்மஷங்கள் விலக ரக்ஷித்து வைப்பான்.
( இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், ராவண வதோபாய:என்ற பதினைந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 16பாயஸ உத்பத்தி
தேவர்கள் சமூகத்தால் இவ்வாறுநியமனம் செய்யப்பட்ட மகா விஷ்ணு தெரிந்திருந்தும், அவர்களைப் பார்த்துஇவ்வாறு கேட்டார். –தேவர்களே, அந்த ராக்ஷஸ ராஜனைக் கொல்ல என்ன உபாயம்? ரிஷிகளுக்கு உபத்ரவமான அவனை எப்படி நான் அழிப்பேன்?- தேவர்கள் அழிவில்லாத விஷ்ணுவைப் பார்த்து பதில் சொன்னார்கள். -மனிதனாக உருவம் எடுத்துக் கொண்டு ராவணனை யுத்தம் செய்து அழிப்பாயாக.- என்றனர். ராவணன் வெகு நாள் தவம் செய்தான். லோகத்தை சிருஷ்டி செய்யும், உலகின் முதல்வனான ப்ரும்மா இதனால் மகிழ்ச்சியடைந்தார். அந்த சந்தோஷத்தில் அவனுக்கு, ராக்ஷஸனுக்கு, வரங்கள் கொடுத்துவிட்டார்.உலகில், மனிதனைத் தவிர, மற்றவர்களால் அழிவு வராதபடி வரம் வாங்கி கொண்டான். வரம் வாங்கிய சமயத்தில் மனிதனை ஒரு பொருட்டாக எண்ணாமல் அலட்சியமாக இருந்து விட்டான். இப்படி பிதாமகரான ப்ரும்மாவிடம் வரம் பெற்றதும் கர்வம் அடைந்தான். மூன்று உலகையும் வருத்துகிறான். பெண்களை அபகரிக்கிறான். அதனால் இவனை மனிதர்களால் தான் கொல்ல முடியும். இவ்வாறு தேவர்கள் சொல்லக் கேட்ட பகவான், தன் தந்தையாக தசரதனையே ஏற்றவனாக கண்டான். அந்த சமயத்தில் நல்ல பராக்ரமம், புகழ் உடையவனாக இருந்தும் பிள்ளையில்லாமல் புத்திரனை விரும்பியாகம் செய்து கொண்டிருப்பவன்.இவ்வாறு, மனதில் நிச்சயம் செய்து கொண்ட பகவான் விஷ்ணு, ப்ரும்மாவை அழைத்து விடை பெற்றுக் கொண்டு,தேவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டு மறைந்து போனார். இங்கு யாக சாலையில், யாகம் செய்யும் அக்னியிலிருந்து, ஒரு பெரிய பூதம், பலசாலியாக, பெரும் வீரன் போன்றதோற்றத்துடனும் வெளிப்பட்டது. துந்துபி போன்ற குரல். சிவந்த முகமும், ஆடையும், கறுத்த தேகமும், ஸ்னேகமான முக பாவத்துடனும், அடர்ந்த கூந்தலும், மீசையுமாக, திவ்யமான ஆபரணங்களைத் தரித்து, சுபமான லக்ஷணங்களை உடையவனாக, மலை உச்சியை கிள்ளி எடுத்தது போலவும், மதம் கொண்ட சிறுத்தையை போன்ற பராக்ரமமும், திவாகரனைப் போன்ற அழகிய தெய்வீகமான நெருப்பு ஜ்வாலை போலவும் ஒளி வீசிக்கொண்டு, நெருப்பில் புடமிட்ட தங்கம் போலவும், வெள்ளியினால் ஓரங்களில் அலங்கரிக்கப்பட்டது போலவும், பத்னியை பிரியமாக அணைப்பது போல பாயஸம் நிரம்பிய பாத்திரத்தை கையில் ஏந்தி, இரண்டு பெரிய புஜங்களால் கஷ்டப்பட்டு தூக்குவது போல, தானே மாயாவியோ என்று ஐயம் தோன்ற, இவர்களைப் பார்த்துச் சொன்னான். -தசரத ராஜனே, ப்ரஜாபதியின் ஆள் நான். அவர் அனுப்பி இங்கு வந்திருக்கிறேன்.–எனவும் அரசன் நடு நடுங்கிவினவினான். –பகவானே, உன் வரவு நல் வரவாகுக. நான் செய்ய வேண்டியது என்னவோ? இதற்கு பதிலாக, ப்ரஜாபதியின் தூதுவனான அந்த பூதம் சொன்னான். தேவர்களை நீ வேண்டி, அர்ச்சித்துக் கொண்டிருப்பதால்உனக்கு இதைக்கொடுக்க வந்தேன். தேவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த பாயஸத்தை, புத்திரனைத் தரக்கூடிய இதை ஏற்றுக்கொள். தன்யமான இது ஆரோக்யத்தைக் வளர்க்கும்.அனுரூபமான உன் பத்னிகளை சாப்பிடச் செய். அவர்களிடம் எதை வேண்டி நீ யாகம் செய்கிறாயோ, அந்த புத்திர ப்ராப்தியை அடைவாய்.- அப்படியே ஆகட்டும் என்று அரசன் அதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தலையில் வைத்துக் கொண்டு, பொன்னாலான அந்த பாத்திரத்தை,தேவர்களால் தயாரிக்கப்பட்ட திவ்ய அன்னம் நிரம்பிய அந்த பாத்திரத்தை, அத்புதமான பூதமாக தோன்றினாலும், பிரியமாக பேசிய பூதத்தை வணங்கி பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, மிகவும் சந்தோஷமாக ஆனான். தேவர்களின் அனுக்ரஹத்தால் கிடைத்த இந்த பாயஸத்தைப் பெற்று, பரம ஏழையான தரித்திரன் நிறைய செல்வத்தைப் பெற்றது போல மகிழ்ச்சியில் திக்கு முக்காடினான். தன் வேலையை முடித்துக் கொண்டு அந்த அத்புதமான பூதம் அங்கேயிருந்து மறைந்தது. அந்த:புரம் மகிழ்ச்சியினால் பிரகாசமாயிற்று. புது ஒளிஸ்ரீ வெள்ளம் பாய்ந்தது போல ஆயிற்றுஅந்த:புரத்தில் நுழைந்த உடனேயே,தசரதர் கௌசல்யையிடம் சொன்னார், இதோ, புத்திரனைத் தரக் கூடிய பாயஸத்தை ஏற்றுக்கொள். பாதி பாயஸத்தை கௌஸல்யையிடம் அரசர் கொடுத்தார்.. சுமித்ரையிடம், நராதிபனான தசரதன், பாதியிலும் பாதியைக் கொடுத்தார். மீதியில் பாதியை கைகேயியிடம் கொடுத்தார்.பின்னும் மீந்ததை யோசித்து சுமித்திரையிடம் கொடுத்தார். தனித் தனியாக தன் மனைவிகளிடம் அம்ருதம் போன்ற பாயஸத்தைக் கொடுத்தவுடன் அவர்களும் மிகப் பெரிய சன்மானம் கிடைத்ததாக எண்ணி, மனம் உவகையால் பூரிக்க, அதை அருந்தினார்கள். அந்த உத்தமமானஸ்திரீகள்,புவி ஆளும் அரசனிடமிருந்து உத்தமமான பாயஸத்தை தனித் தனியாக பெற்று அக்னியும், ஆதித்யனும் போன்ற தேஜஸுடன் சீக்கிரமே கர்பம் தரித்தனர். தங்கள் மனம் விரும்பிய,பிள்ளைகளின் கர்பத்தை தாங்கிய நிலையில் நாளாக, நாளாக, அவர்களைப் பார்த்து அரசன், ஸ்வர்க லோகத்தில் நாராயணன், சித்த ரிஷி கணங்கள் சூழப்பட்டவனாக, எப்படி ஆனந்தமாக இருப்பானோ, அதே போல சந்தோஷமாக, ஆனந்தமாக இருந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், பாயஸ உத்பத்திஎன்ற பதினாறாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 17 ருக்ஷ வானர உத்பத்தி(கரடி, வானரங்களின் பிறப்பு)
அந்த மகானான அரசனிடம் மகாவிஷ்ணு, புத்திரனாக பிறப்பது என்று ஆனவுடன்,ஸ்வயம்பூவான ப்ரும்மா, மற்ற தேவதைகளிடம் பேசலானார். நமக்கு நன்மை செய்யும்உத்தேசத்துடன் சத்ய சந்தனான மகா விஷ்ணு, மனிதனாக பிறக்க ஒத்துக் கொண்டுள்ளான். அவனுக்கு உதவியாக பலசாலிகளாக, விருப்பம் போல் வடிவம் எடுத்துக் கொள்ளும் சக்தியுடையவர்களாக, மாயை அறிந்தவர்களாக, சூரர்களாக, வாயுவுக்கு சமமான வேகம் உடையவர்களாக, நீதி அறிந்தவர்களாக, புத்திமான்களாக, விஷ்ணுவுக்கு சமமான பராக்ரமம் உடையவர்களாக, எளிதில் வீழ்த்த முடியாதவர்களாக, உபாயங்களை அறிந்தவர்களாக, சிங்கம் போன்று கர்ஜிக்க கூடியவர்களாகஅமுதமுண்டவர்கள் போலவும் எல்லா வித அஸ்திர க்ஞானம் உடையவர்களாக, முக்கியமான அப்சர ஸ்த்ரீகளின் சரீரத்திலும், கந்தர்வ ஸ்த்ரீகளின் உடலிலும், கின்னர ஸ்த்ரீகளிடமும், வானர ஸ்த்ரீகள், யக்ஷர்கள், பன்னக, வித்யாதரர்களிடமும், வானர ரூபமுடைய புத்திரர்களை சிருஷ்டி செய்து கொடுங்கள்.ஏற்கனவே நான் ஜாம்பவான் என்ற கரடிகளில் சிறந்தவனை சிருஷ்டி செய்து விட்டேன். யதேச்சையாக கொட்டாவி விடும் பொழுது, என் வாயிலிருந்து வெளிப்பட்டான் அப்படியே ஆகட்டும் என்று அவர்களும் அந்த உத்தரவை ஏற்றுக் கொண்டவர்களாக, வானர ரூபத்தில் பிள்ளைகளைப் பெற்றார்கள். மகானான ரிஷிகளும், சித்த வித்யாதரர்களும், சாரணர்களும், வனத்தில் சஞ்சரிக்கும் புத்திரர்களைப் பெற்றனர். மகேந்திரன் போல காந்தியுடைய வாலியை இந்திரன் பெற்றான். தகிக்கும் சூரியன், சுக்ரீவனைசிருஷ்டித்தார்.பிருகஸ்பதி தாரம் என்ற பெரிய வானரத்தைப் பெற்றார். வானர கூட்டத்திலேயே மிகவும் உத்தமமான புத்திமான் இவன். குபேரனுடைய புத்திரனாக க3ந்த3 மாத3னன் என்ற வானரம்.விஸ்வகர்மா நளன் என்ற பெரிய வானரத்தை பெற்றார். அக்னியின் பிள்ளை நீலன் என்பவன் அக்னிக்கு சமமான காந்தியுடையவன். தேஜஸாலும், புகழாலும், வீர்யத்தாலும் தந்தையை மிஞ்சினவனாக ஆனான்.அழகிற் சிறந்த அஸ்வினி குமாரர்கள், செல்வமும் நிறைந்தவர்கள், மைந்த3ன், த்3விவிதன் என்ற வானரங்களை உத்பத்தி செய்தான். வருணன் சுஷேணன் என்ற வானரத்தை பிறப்பித்தார்.பர்ஜன்யன், சரப4ன் என்ற பலசாலியான வானரத்தை பிறக்கச் செய்தார். மாருதனின் சரீரத்திலிருந்து தோன்றிய ஹனுமான் என்ற வானரன், ஒருமுறை வஜ்ரத்தினால் அடிபட்டான். வைனதேயன் போல் வேகமாக சஞ்சரிக்க கூடியவன்.மற்ற முக்யமான வானரங்களை விடவும் புத்திசாலி, பலவானும் கூட. இவர்கள் பத்து தலை ராவணனின் வதத்திற்காக என்றே சிருஷ்டிக்கப்பட்டவர்கள். இப்படி ஆயிரக்கணக்கில் தோன்றினார்கள். அளவிட முடியாத பலமும், வீரமும், தன் விருப்பம் போல் வடிவம் எடுத்துக் கொள்ளக் கூடிய ஆற்றலும், யானை போன்றும், மலை போலவும் சரீரம் உடையவர்கள். கரடிகள் வானரங்கள், பசு மாட்டின் வால் போன்ற வாலுடையவர்கள், சீக்கிரமே பிறந்தனர். எந்த தேவதையின் அம்சமோ, அதே போல உருவம், பராக்ரமம் உடையவர்களாக தனித் தனி அடையாளங்களோடு பிறந்தனர். பசு போன்ற வாலுடைய கரடிகளிடம் சிலர் பிறந்தனர். பெண் கரடியிடம் சிலர், கின்னர ஸ்த்ரீகளிடம் சில வானரங்கள், தேவர்களும், மகரிஷிகளும், கந்தர்வர்களும், தீக்ஷ்ண புத்தியுடைய யக்ஷர்களும், புகழ் வாய்ந்த நாகர்கள், கிம்புருஷர்கள், சித்த வித்யா தரர்கள், பலரும் சந்தோஷமாக ஆயிரக்கணக்கான புத்திரர்களை ஈன்றனர். இந்த வானரங்கள் பெரிய உருவமும், வனத்தில் சஞ்சரிக்கும் குணமுள்ளவையாகவும் இருந்தன. அப்சர ஸ்த்ரீகளும், வித்யாதர ஸ்த்ரீகளும், நாக கன்யா, கந்தர்வீ இவர்களின்உதவியால், வேண்டியபடி உருவம் பலம், இஷ்டம் போல் சஞ்சரிக்கும் குணம் இவற்றைப்பெற்றவர்களாக சிங்கம்போலும் சார்தூ3லம் போலும் நடை போட்டனர். பெரிய பெரிய கற்களைத் தூக்கி எறிந்து உடைக்க கூடியவர்கள். வேரோடு மரங்களை பிடுங்கும் பலம் உடையவர்கள். நகங்களும் பற்களும் கூர்மையாக உடையவர்கள். தவிர அஸ்திரங்களைப் பற்றி அறிந்தவர்கள். பெரிய மலையை அசைக்கக் கூடியவர்கள். ஸ்திரமாக இருக்கும் பெரிய மரங்களை பிளந்து விடுபவர்கள். நதிகளின் பதியான சமுத்திரத்தை வேகமாக பறந்து குறுகச் செய்யும் ஆற்றல் உடையவர்கள். காலால் மிதித்து பூமியை பிளக்க செய்பவர்கள். கடலை நீந்திக் கடந்து விடுவார்கள். ஆகாயத்தில் பறந்துச் சென்று மேகங்களை கைகளால் பிடிப்பார்கள். வனத்தில் தன்னிஷ்டம் போல் போய்க் கொண்டிருக்கும் மதம் பிடித்த யானைகளையும் பிடித்து அடக்கும் வல்லமையுடையவர்கள். பறந்து செல்லும் பறவைகளை பலமாக ஒலி எழுப்பி விழச் செய்வார்கள். இது போன்ற வானரங்கள் நூறு நூறு ஆயிரம், சேனை தலைவர்களாகவும், சேனைத் தலைவர்களிடமும் உண்டாயினர். மற்றொரு புறம் கரடிகள் ஆயிரக்கணக்கான கரடிகளை உத்பத்தி செய்தன. மற்றவை பலவிதமான காடுகளுக்கும் மலைச்சாரல்களுக்கும் சென்றன. சூர்ய புத்திரனான சுக்ரீவனும், இந்திர புத்திரனான வாலியும் சகோதரர்களாக பிறந்தனர். நலன், நீலன், ஹனுமான் போன்ற வானரங்கள் யுத்தம் செய்வதில் தேர்ச்சி பெற்று, கூர்மையான புத்தியும் பலமும் கொண்டு நடமாடின. அளவில்லாத பலமுடைய வாலி இவர்களை, தன் புஜ பலத்தால் பாதுகாத்து வந்தான். இது போன்ற கரடி, வானரம், பசு வால் கொண்ட கரடிகள், இவை கர்வத்துடன் சிங்கம், புலி, சிறுத்தை, பாம்புஇவற்றை சீண்டி விளையாடின. பூமி இவைகளால் நிறைந்து இருந்தது. ராம சகாயம் என்ற காரணத்தால் பயங்கரமான பெரிய உருவம் கொண்ட இந்த வானர வீரர்கள், மேகம் போன்றும், விந்த்ய மலை போன்றும், தோற்றம் கொண்டவர்களாக பூமியில் சஞ்சரித்தனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், ருக்ஷ வானர உத்பத்தி என்ற பதினேழாவதுஅத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 18ராமாத்யவதார: (ராமன் முதலானோர் பிறப்பு)
மகாத்மாவான ராஜா தசரதனின் யாகம்நிறைவுற்றதும், தேவர்கள் யாகத்தில் தங்கள் பங்கைப்பெற்றுக்கொண்டு தம் இடம் செல்லவும், தீக்ஷா நியமங்களை முடித்துக்கொண்டு, தன் பத்னிகளுடனும்,வேலையாட்கள்,சேனைக் கூட்டங்களுடனும் அரசன் அயோத்யா நகரில் பிரவேசித்தான். மற்ற அரசர் சமூகமும்,தகுதிகேற்றவாறு, மரியாதைகள் பெற்று சந்தோஷமாக அரசனை வணங்கி விடை பெற்று தங்கள் இருப்பிடம் சென்றனர். அந்த நகரத்திலிருந்து தங்கள் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்ற அவர்களைப் பார்த்து அரசனின் பாதுகாவல் வீரர்கள் கவலை நீங்கி நிம்மதி அடைந்தனர். ப்ராம்மண சிரேஷ்டரான ருஸ்ய ச்ருங்கரும், சாந்தாவுடன், அரசருடன் அயோத்யா சென்று, நன்றாக மரியாதைகள் செய்யப் பெற்றவராக கிளம்பிச் சென்றார். சிறிது தூரம் உடன் சென்று ராஜா வழியனுப்பி வைத்தார்.இவ்வாறுஎல்லோரையும்அனுப்பிவிட்டு மனம் நிறைந்தவனாக புத்திரர்கள் பிறக்கும்நாளை எதிர் நோக்கி,சுகமாக காலத்தைக் கழித்து வந்தான். யாகம் முடிந்து ஆறு ருதுக்கள் சென்றன. பன்னிரெண்டாம் மாதத்தில், சித்திரை மாத நவமி திதியில், அதிதி தைவ நக்ஷத்திரத்தில், தன் உச்ச இடத்தில் ஐந்து கிரஹங்கள் இருக்கும் பொழுது, கர்க்கடக லக்னத்தில், வாக்பதி இந்துவுடன் கூடியிருக்கும் பொழுது,எல்லா உலகும் வணங்கத் தகுந்தஜகன்னாதனை, எல்லா லக்ஷணங்களும் கூடியவனாக ராமரை, கௌசல்யை பெற்றெடுத்தாள்.இக்ஷ்வாகு குலத்தை விருத்தி செய்யப் பிறந்த மகனை , விஷ்ணுவின் பாதி அம்சமான மஹா பாக்யசாலியானராமனை கௌசல்யா ஈன்றெடுத்தாள். அதிசயமான தேக காந்தியுடன் கூடிய இந்த பிள்ளையை பெற்றெடுத்த கௌசல்யா, அதிதி, தேவராஜனான இந்திரனைப் பெற்ற பொழுது இருந்தது போலவே சோபையுடன் விளங்கினாள். கைகேயியிடம் பரதன் என்ற, சத்ய பராக்ரமனான மகன் பிறந்தான். சாக்ஷாத் விஷ்ணுவின் நான்கில் ஒரு பாகமாக, எல்லாவிதமான நற்குணங்களும் அமையப் பெற்றவனாக விளங்கினான்.பிறகு, லக்ஷ்மண, சத்ருக்னர்களை சுமித்ரா ஈன்றாள். இவ்விருவரும் எல்லா அஸ்த்ர சஸ்த்ர ஞானமும் உடையவர்களாக, விஷ்ணுவின் பாதி அம்சமாக இணைந்து விளங்கினர். புஷ்ய நக்ஷத்திரத்தில், மீன லக்னத்தில், எப்பொழுதும் நிறைந்த மனதுடையவனாக பிறந்தவன் பரதன். சார்ப்பே- ஆயில்ய நக்ஷத்திரத்தில் சுமித்ரா புத்திரர்கள், சூரியன் அப்பொழுது தான் உதயமாகி இருக்க, (குலீரே), பிறந்தனர். அரசனுக்கு நான்கு புத்திரர்கள், தனித் தனியாக பிறந்தனர். குணம் நிறைந்தவர்களாக, ஒரே விதமான ரூபம், ருசி உடையவர்களாக, பாதத்தின் மேல் பாதம் வைத்தது போலஒன்று போல இருந்தனர். கந்தர்வர்கள் பாட, அப்சர கணங்கள் ஆட, தேவர்கள் துந்துபிகளை முழங்கினர். ஆகாயத்திலிருந்து பூ மாரி பொழிந்தது.அயோத்தியில் உத்ஸவம் ஏராளமான அளவில் கொண்டாடப் பட்டது. ஜனங்கள் கூட்டம்கூட்டமாக வீதிகளில் கூடிக் கொண்டாடினார்கள்.நடனம் ஆடுபவர்களும்,நர்த்தனம் ஆடுபவர்களும், பாடுபவர்களும், பலவிதமான வாத்யங்கள் இசைப்பவர்களுமாக தெருக்களில் நிரம்பினர். எல்லோரும் பலவிதமான ரத்ன ஆபரணங்களை அணிந்தவர்களாக வீதியை நிறைத்தனர். துதி பாடும் பாடகர்கள், (இவர்களை வந்தி, மாகதர்கள் என்று அழைப்பர்). இவர்களுக்கு அரசன் தாராளமாக தனத்தை அள்ளிக் கொடுத்தான். பிராம்மணர்களுக்கு செல்வமும், பசுக்களையும் ஆயிரக்கணக்கில் தானம் செய்தான். பதினோரு நாள் ஆனவுடன் நாமகரணம் செய்வித்தான். மூத்தவனான பிள்ளையை –ராமன்- என்றும், கைகேயி பிள்ளையை –பரதன் என்றும், சௌமித்ரியை –லக்ஷ்மணன்- மற்றவனை –சத்ருக்னன்- என்றும், பெயர் வைத்தான். வசிஷ்டர் மிகவும் விருப்பத்துடன் இந்த நாமகரண வைபவத்தைநடத்தி வைத்தார். பிராம்மணர்களுக்கு போஜனம் செய்வித்தார் ஊர் ஜனங்கள், சுற்றியுள்ள நகரத்தைச் சேர்ந்தவர்கள், அனைவருக்கும் அன்ன தானம் செய்தான்..ஜன்மக் கிரியைகளை செய்து வைத்த பிராம்மணர்களுக்கு அமோகமான ரத்னங்களை அள்ளிக் கொடுத்தான். இவர்களில் மூத்தவனான ராமன் கேதுவைப் போல, மிகவும் மனம் கவரும் தோற்றம் உடையவனாக இருந்தான். தந்தை உள்ளம் கவர்ந்தவனாக, ஜீவ ராசிகளுக்கு பிரும்மாதிரும்பி வந்தது போல இருந்தான். வளர, வளர எல்லோருமே வேதம் கற்று அறிந்தனர். சூரர்களாக ஆனார்கள். எல்லோருமேஜனங்களின் நன்மையைக்கருதி செயல் படும் குணமுடையவர்களாக விளங்கினர். நல்ல குணங்கள் நிரம்பியவர்களாக, ஞானம் நிறைந்தவர்களாக ஆனார்கள். இவர்களுள் ராமன், மற்றவர்களைக் காட்டிலும் அதிக தேஜஸும், சத்ய பராக்ரமம் உடையவனாகவும் தனித்து விளங்கினான். நிர்மலமான சந்திரனைப் போல எல்லோருக்கும் பிடித்தவனாக ஆனான். யானை ஏற்றம், குதிரை ஏற்றம், ரதம் ஓட்டுதல் இவற்றில் தேர்ச்சி அடைந்தனர். தனுர் வித்தையும் கற்றனர். தந்தைக்கு உதவி செய்வதிலும், தானாக முன் வந்து செய்தனர். குழந்தையிலிருந்தே, லக்ஷ்மணன் மிகவும் அன்புடையவனாக, லக்ஷ்மனோ லக்ஷ்மி வர்த4ன: என்று சொல்லும்படி, மூத்தவனான ராமனுக்கு, உலகமே அவனுக்கு அன்பு செலுத்தினாலும் கூடவே இருந்து சரீரத்தால் ராமனுக்கு பிடித்ததைச் செய்பவனாக, மற்ற எல்லோரையும் விட ராமனுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருந்தான். ராமனின் மற்றொரு உயிர் வெளியில் நடமாடுகிறது என்று சொல்லும்படி, லக்ஷ்மி சம்பன்னனான லக்ஷ்மணன் இருந்தான். புருஷோத்தமனான ராமன் அவனன்றிஉறக்கம்கொள்ள மாட்டார். அறுசுவை உண்டியை கொண்டு வந்து தந்தாலும், லக்ஷ்மணன் இல்லாமல் தொட மாட்டார். குதிரையின் மேல் ஏறி வேட்டைக்குச் செல்லும்பொழுது, இந்த ராகவனை, கையில் வில்லுடன் பாதுகாத்தவாறு, லக்ஷ்மணன் பின் தொடருவான். லக்ஷ்மணனின் சகோதரன் சத்ருக்னன் பரதனை நெருங்கி இருந்தான். பரதனுக்கு தன் உயிரை விட மேலான சகோதரனாக, எப்போதும் பிரியமாக இருந்து வந்தான். இது போல குணம் மிகுந்த நான்கு பிள்ளைகளுடன் தசரத ராஜா, மிகவும் ஆனந்தமாக, தேவர்கள் சூழ, பிதாமகரான பிரும்மா இருப்பது போல பெருமையுடன் விளங்கினான். நாளடைவில் அவர்கள், ஞானம் நிறைந்தவர்களாக, குணவான்களாக, லஜ்ஜையும், கீர்த்தியும் உடையவர்களாக, எல்லாம் அறிந்திருப்பதுடன், தொலை நோக்கு உடையவர்களாகவும், நல்ல தேக காந்தியுடனும் பிரபாவத்துடனும் வளைய வந்தனர். இவர்களைப் பார்த்துப் பிதாவான தசரதர் எல்லையில்லாத ஆனந்தம் அடைந்தார். வேத அத்யயனமும் ஈ.டு பாட்டுடன் செய்து முடித்து விட்டனர். தந்தைக்கு வேண்டிய உதவிகளையும் விருப்பமாக செய்தனர். தனுர் வித்தையும் கற்றுத் தேர்ந்து விட்டனர். இப்போது இவர்களுக்கு தகுந்த மனைவிகளைத் தேட வேண்டுமே என்று தசரதர் கவலை கொண்ட சமயம், தன் உபாத்யாயர்களிடமும், பந்துக்களிடமும், இது பற்றி பேசலானான்.
இவ்வாறு மந்திரி மண்டலத்தில் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, மகா தேஜஸ்வியான மஹா முனிவர் விஸ்வாமித்ரர்வந்து சேர்ந்தார். அவர் அரசனைக் காண வேண்டி,துவாரபாலகர்களைப்பார்த்து -சீக்கிரமாக போய் கா3தி4யின் பிள்ளை, கௌசிக முனியான, நான் வந்திருக்கிறேன் என்று அரசனிடம் சொல்- என்றார். அதைக் கேட்டு பயமும் மரியாதையுமாக அரசனின் ஆட்கள் ஓடிச் சென்று, மனம் படபடக்க, மாளிகையினுள் இருந்த அரசனிடம், விஸ்வாமித்திரர் வந்திருக்கிறார் என்பதைத் தெரிவித்தனர்.இந்த வார்த்தையைக் கேட்டதுமே, புரோஹிதர்களும், அங்கு இருந்த மற்றவர்களும் உடன் வர, இந்திரன் பிரும்மாவை எதிர் கொண்டழைப்பதைப்போலபரபரப்புடன், அரசன் விஸ்வாமித்திரரை எதிர் கொண்டழைக்க விரைந்து வந்தான். விரதங்கள் அனுஷ்டித்து, தன் தேஜஸால் ஜ்வலித்துக்கொண்டிருக்கும் அவரைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியுடன் முகம் மலர, அவருக்கு அர்க்யங்கள் சமர்ப்பித்தான். அவரும் அரசனின் அர்க்யத்தை முறைப்படி வாங்கிக் கொண்டு, அரசனைக் குசலம் விசாரித்தார்.நகரத்தில், செல்வ நிலையில், நலமா என்று விசாரிக்க ஆரம்பித்தவர், ஜனங்கள், அவர்கள் நடமாடும் இடங்களில், பந்துக்களிடம், நண்பர்களிடம், சுமுகமாக, நலமாக இருக்கிறதா என்றும் வினவினார். குசிக புத்திரரான விஸ்வாமித்திரர், தசரத ராஜாவை மேலும் விசாரித்தார். சாமந்தர்கள் பிரமுகர்கள், தனவான்கள் உனக்கு வணங்கி இருக்கிறார்களா? சத்ருக்களை ஜயித்து, தெய்வ காரியங்களையும், மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் குறைவில்லாமல் செய்கிறாயா? இதற்குள் வசிஷ்டரும் வந்து சேரவே, அவரையும், மற்ற ரிஷிகளையும் முறைப்படி குசலம் விசாரித்தார். எல்லோருமே மகிழ்ச்சியுடன் அரசனின் மாளிகையினுள் நுழைந்தனர். தகுதிக்கேற்ற ஆசனங்களில் அமர்ந்தனர். பின், தசரத ராஜா, மகா முனிவரான விஸ்வாமித்திரரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சொன்னார் -அம்ருதம் கிடைத்தது போலவும், நீரே இல்லாமல் வறண்டு கிடக்கும் பொழுது மழை வந்தது போலவும், குழந்தை பேறுஇல்லாதவன் தனக்கு சமமான மனைவியிடம் புத்திரர்களைப் பெற்றது போலவும், பொருளைத் தொலைத்தவன் திரும்பப் பெற்றது போலும், நல்லஉயர்வை அடையும் போது தோன்றும் நியாயமான மகிழ்ச்சியைப் போலவும், உங்கள் வரவு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.மகா முனிவரே, உங்கள் வரவு நல் வரவாகுக. என்ன பெரிய வேலையானாலும், சொல்லுங்கள், நான் மகிழ்ச்சியுடன் செய்து தருகிறேன். நீங்கள் இங்கு வந்ததே என் பாக்கியம். எந்த விதமான பணியானலும்,நீங்கள் என்னிடம்சொல்லி நிறைவேற்றிக் கொள்ளலாம். மகா முனிவரே, இன்று என் வாழ்க்கை பயன் பெற்றது. என் பிறப்பும் பயனுடையதாக ஆயிற்று.முதலில் தவ வலிமையால், ராஜ ரிஷி பட்டம் பெற்று, திரும்பவும் தவம் செய்து ப்ரும்ம ரிஷியானீர்கள். அதனாலேயே எனக்கு உங்களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது. அத்புதம், பவித்ரம், உங்கள் தரிசனம் கிடைக்கப்பெற்றதால் நல்ல கதியடைந்தேன் பிரபோ, தாங்கள் வந்த காரியம் என்ன சொல்லுங்கள். எது தேவையோ சொல்லுங்கள். உங்கள்அனுக்ரஹம் மேலும் மேலும் எனக்கு கிடைக்க வேண்டும். கௌசிக முனிவரே, நான் என்ன செய்ய வேண்டும் ? என்ன காரியம் என்பதை விவரமாக சொல்லுங்கள். நீங்கள் எனக்கு தெய்வத்துக்கு சமமானவர்கள். உங்களுக்காக எதுவும் செய்ய தயாராக இருக்கிறேன். எனக்கு புதியதொரு நன்மை வர இருக்கிறது போலும். அதனால் தான் தங்கள் பாதம் இங்கு பட்டுள்ளது. உங்கள் வரவினால், என் தர்மார்த்தங்கள் மிக உயர்ந்த நிலையை அடைந்து விட்டன.- இவ்வாறு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன், இனிமையாக, வினயத்துடன்,சொன்ன வார்த்தைகளை கேட்டு,தன் செயலால் புகழும், பெருமையும் அடைந்தகுணங்களின் சிறந்த பரம ரிஷியான விஸ்வாமித்திரரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின்,ராமாத்யவதாரம் என்ற பதினெட்டாவதுஅத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 19விஸ்வாமித்திர வாக்யம்
இவ்வளவு விரிவாக, அத்புதமாக, ராஜ சிங்கமான தசரதன் சொன்னதைக் கேட்டு, உடல் புல்லரிக்க, மகா தேஜஸ்வியான விஸ்வாமித்திரர் பேசலானார். – இந்த உலகில் வேறு யாராலும் இவ்வாறு பேச முடியாது. உன் தகுதிக்கு ஏற்றவாறுபேசினாய். ராஜ சார்தூலா, (அரசர்களுக்குள் சிறுத்தை போன்று வலிமை மிக்கவன்)நீ பிறவியிலேயே மகான். நல்ல குலத்தில் பிறந்தவன், வசிஷ்டரை குருவாக பெற்றவன்.அவர் அறிவுரை கிடைக்கப் பெற்றுள்ளாய்.அதனால் நான் நினைத்து வந்த காரியம் நிறைவேறியதாகவே எண்ணுகிறேன்.செய் அரசனே, உன் சத்யத்தை நிலை நிறுத்தும்குணத்தில் எள்ளளவும் சந்தேகமில்லை.நான் சில சித்திகளை அடைய விரும்பி, நியமங்கள், விரதங்கள் ஏற்று யாகம் நடத்தி வருகிறேன். அதை இடையூறு செய்யும் இரண்டு ராக்ஷஸர்கள், விருப்பம் போல் ரூபம் எடுத்துக் கொள்ளும் மாயாவிகள், பல காலமாக விரதம் இருந்து இதோ முடிக்கும் தறுவாயில் இருக்கும்போது அரச ஸ்ரேஷ்டனே, மாரீசன், சுபா3ஹு என்ற இரண்டு ராக்ஷஸர்கள், நல்ல பயிற்சி பெற்றவர்கள், மாமிசம், ரத்தம் இவற்றை என் யாக சாலையில் வர்ஷிக்கின்றனர்.பாடு பட்டு இவ்வளவு நாள் தவம் இருந்து,முடியும் தறுவாயில் பலனின்றி போவதா, என்று உற்சாகமிழந்து அங்கிருந்து புறப்பட்டு வந்தேன். அரசனே, என் கோபத்தை வெளியிடவும் மனம் வரவில்லை. என் விரதம் அப்படிப்பட்டது. விரதத்தில் இப்படி சாபம் கொடுப்பதும் மறுக்கப்பட்டுள்ளது. அதனால் சிங்கம் போன்ற பராக்ரமசாலியான அரசனே, உன் மகனான ராமனை, சத்ய பராக்ரமனை தருவாய். காக பக்ஷம் என்ற சிகை அலங்காரம் செய்து கொண்டுள்ள சிறுவன், ஆயினும் சூரன். இந்த ராமனை தா. இவன் சக்தியும், என் உள்ளடங்கிய தேஜஸும் சேர, இந்த ராக்ஷஸர்களை அடக்கவும், அழிக்கவும் முடியும். இவனுக்கு பல விதமான நன்மைகளை நான் பெற்றுத் தருவேன், சந்தேகமேயில்லை. மூன்று உலகங்களிலும்,இப்பொழுது செய்யும் இந்த செயலால் பெருமையடைவான்.அவர்கள் இருவரும் ராமனுக்கு எதிரில், நிற்க கூட முடியாது.இவர்களை ராமனை அன்றி வேறு மனிதர்களால் கொல்லவும் முடியாது.நல்ல வீரம் உடையவர்கள் அவ்விரு ராக்ஷஸர்களும். கால பாசம் அவர்களை நெருங்குகிறது என்பதைத் தான் அவர்கள் உணரவில்லை.. ராஜ சார்தூலா, ராமனுடைய பராக்ரமத்திற்கு எதிரில் அவர்கள் இருவரும்ஒன்றுமேயில்லை.பார்த்திபனே, என் மகன் என்று பாசத்தால் கட்டுப் பட தேவையேயில்லை. நான் உனக்கு பிரதிக்ஞை செய்து தருகிறேன். அந்த இரு ராக்ஷஸர்களும் அழிந்தார்கள் என்றே கொள்ளலாம். சத்ய பராக்ரமனான ராமனை நான் அறிவேன். (அஹம் வேத்3மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம்). இதோ இருக்கும் வசிஷ்டரும் அறிவார். மற்றும் இங்குள்ள தபஸ்விகள், தேஜஸ் வாய்ந்த க்ஞானிகள் அறிவார்கள். உலகில் தர்மமும், புகழும் தான்உயர்ந்தது என்று நீ எண்ணினால், இவை நிலைத்து நிற்க வேண்டும் என்று நீ விரும்பினால், ராஜேந்திரா, ராமனை எனக்குத் தா. உன் மந்திரிகள் அனுமதியையும் கேட்டுப் பெற்றுக் கொள். வசிஷ்டரையும், மற்ற அறிஞர்களையும் கலந்து ஆலோசித்து ராமனை என்னுடன் அனுப்பு. மிகவும் அன்புடைய, பாசமுடைய மகனை எனக்குத் தா. பத்து ராத்திரிகள், ராஜீவ லோசனான ராமனை, என்னுடன் அனுப்பு. யக்ஞம் முடியும் வரை என்னுடன் இருக்க அனுமதி கொடு. இதில் மன வருத்தம் அடையாதே. அவசியமே இல்லை. – இவ்வாறு கூறி தர்ம, அர்த்தம் நிறைந்த தன் வேண்டுகோளைச் சொல்லி முனிவர் நிறுத்தினார்.விஸ்வாமித்திரரின் கோரிக்கையைக் கேட்டு, சுபமேயானாலும், அரசன் சோகத்தில் மூழ்கினான். மோகம் கண்களை மறைக்கத் தடுமாறினான். பின் சமாளித்து, எழுந்திருந்துபயத்துடன் சொல்ல ஆரம்பித்தான். தன் ஹ்ருதயமே பிளந்து விடுமோ என்ற துக்கத்துடன், தன் ஆசனத்திலிருந்து தடுமாறி எழுந்திருந்து, வருத்ததுடன், பதில் உரைத்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், விஸ்வாமித்திரர் வாக்யம்என்ற பத்தொன்பதாவதுஅத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 20 தசரத வாக்யம் (தசரதரின் பதில்)
விஸ்வாமித்திரர்வார்த்தைகளைக் கேட்டு ராஜ சார்தூலன் என்று பெயர் பெற்றிருந்த அரசன் ஒரு முஹுர்த்த நேரம்தன் நினைவு இன்றி மூர்ச்சித்தவனாக இருந்தான். மூர்ச்சை தெளிந்து எழுந்துபேசலானான். -பதினாறுவயது நிரம்பாத பாலகன் ராமன் ராஜீவ லோசனன்.யுத்தம் செய்யும் தகுதி இவனிடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதுவும் ராக்ஷஸர்களுடன். அக்ஷௌஹிணி நிறைந்த சேனை, இதன் தலைவன் நான், இந்த சேனை சூழ வந்து அந்த ராக்ஷஸர்களை, இரவில் சஞ்சரிக்கும் மாயாவிகளை அடிக்கிறேன். இவர்கள் சூரர்கள், விக்ரமம் உடையவர்கள், அஸ்த்ர ஞானம் உடையவர்கள். என் சொல்படிக் கேட்கக் கூடியவர்கள். இந்த சேவகர்கள், ராக்ஷஸக் கூட்டத்துடன் மோதிபோரிட யோக்யதை உள்ளவர்கள்.இவர்களை அழைத்துச் செல்லுங்கள், ராமனை அழைத்துச் செல்லவேண்டாம்.நானே வில்லை ஏந்தியவனாக யுத்த பூமியில் முன்னின்று, உயிருள்ளவரை போராடி ராக்ஷஸர்களை அழிக்கிறேன். உங்களுடைய நியமும், விரதமும்நல்லபடியாக காப்பாற்றப்படும். நான் வருகிறேன். ராமனை அழைத்துச் செல்ல வேண்டாம். பாலகன் இவன். கற்க வேண்டியதை இன்னும் முழுமையாக கற்றுத் தேறாதவன். பலாபலன்களை அறிய மாட்டான். அஸ்த்ர பலமும் இல்லை. யுத்தம் செய்து அறியாதவன்.ராக்ஷஸர்களை அடக்க இவனால் முடியாது. அவர்களோ மறைந்து நின்று சண்டையிடுவார்கள் என்பது நிச்சயம். ராமனை விட்டுப் பிரிந்துநான் ஒரு முஹுர்த்த காலம் கூட உயிர் வாழ மாட்டேன். அதனால், முனிசார்தூல, ராமனை அழைத்துச் செல்ல வேண்டாம். அப்படி ராமன் வந்து தான் ஆக வேண்டுமானால், சதுரங்க சேனையோடு நானும் வருகிறேன்.குசிகர் மகனே,ஆறாயிரம் வருஷத்திற்குப் பிறகு மிகவும் கஷ்டப்பட்டு, வேண்டிபெற்ற மகன் இவன். இந்த ராமனை அழைத்துச் செல்ல வேண்டாம். நான்கு பிள்ளைகளில் இவன் தான் எனக்கு மிகவும் பிரியமானவன்.மூத்தவனான இவன் தர்மமே பிரதானமாக நினைப்பவன். இவனை அழைத்துச் செல்ல வேண்டாம்.உங்கள் ராக்ஷஸர்களின் வீரம் என்ன? யார் அவர்கள்? யாருடைய பிள்ளைகள்? எவ்வளவு சக்தியுடையவர்கள்? இவர்களை பாதுகாத்து ரக்ஷிப்பவர்கள் யாவர்? ராமன் அவர்களுடன் எப்படி போரிட வேண்டும்? என் பலத்துடன் நானும் வந்தால், மறைந்து போரிடும் அவர்களுடன் எப்படி போர் செய்ய வேண்டும்? இவையனைத்தையும் விளக்கிச் சொல்லுங்கள்.பகவானே, அவர்கள் முன் எப்படி நிற்க வேண்டும்? துஷ்ட எண்ணம்கொண்டவர்கள், வீர்யம் மிகுந்தவர்கள் ராக்ஷஸர்கள்.- ராஜாவின் இந்த வார்த்தையைக் கேட்டு விஸ்வாமித்திரர்சொன்னார். -புலஸ்திய வம்சத்தில் சிறந்த ராவணன் என்று ஒரு ராக்ஷஸன். அவனுக்கு ப்ரும்மா வரங்கள் கொடுத்திருக்கிறார். அந்த பலத்தில் அவன் உலகை துன்புறுத்தி வருகிறான். மகா பலசாலியான மகா வீர்யவான். பல ராக்ஷஸர்கள் சூழ வலம் வருகிறான். ராக்ஷஸாதிபதியான இந்த ராவணன் மிகுந்த பராக்ரமம் உடையவன் என்று கேள்வி. இவன் விஸ்ரவஸின் பிள்ளை.வைஸ்ரவனான குபேரன் தம்பி. தானே யாகங்களைக் கெடுக்க வர முடியாமல் போனால், அவன் அனுப்பி வைக்கும் இரண்டு ராக்ஷஸர்கள், மாரீசன், சுபா3ஹு, என்ற இருவர், இவர்களும் நல்ல பலசாலிகளே, யாகத்தைக் கெடுக்க வந்து விடுவார்கள்.- முனிவர் இவ்வாறு சொல்லவும், ராஜா -யுத்தத்தில் நானே அந்த துராத்மாக்களின் எதிரில் நின்று போரிடத் தயங்குவேன். என் மகனிடம் கருணை காட்டுங்கள். அல்ப பாக்யனான எனக்கு நீங்கள் தான் தெய்வம். தேவ, தானவ, கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள், யாருமே ராவணன் முன் நின்று யுத்தம் செய்ய சக்தியுடையவர்கள் அல்ல. மனிதர்கள் எம்மாத்திரம்? ராக்ஷஸன் யுத்தம் செய்ய எதிர் வரும் வீர்யம் மிக்கவர்களின் வீர்யத்தையும் அபகரித்துக் கொண்டு விடுவான். அதனால் நானும், என் பலத்தோடு கூட ராவணனை எதிர்த்து போரிட சக்தியற்றவன் தான்.முனி ஸ்ரேஷ்டரே, என் பலமோ, என் படை பலமும் சேர்ந்தோ கூட அந்த ராக்ஷஸனை வீழ்த்த முடியாது எனும் பொழுது, சங்க்4ராமம், ரணம் இவற்றை அறியாத என் பிள்ளையை எப்படித் தருவேன். பாலகனான என் மகனைத் தர மாட்டேன். ப்ரும்மரிஷியே,சுந்தன், உபசுந்தன் இருவரும் காலனுக்கு சமமானவர்கள்.யாகத்தைக் கெடுக்க என்றே வந்தவர்கள். என் மகனைத் தர மாட்டேன். அவர்களுடன் நான் பந்து மித்திரர்களுடன் வந்து யுத்தம் செய்வேன். உங்களையும் அழைத்துச் செல்வேன். – இவ்வாறு பலவிதமாக ஜல்பிதம், உளற ஆரம்பித்து விட்ட அரசனைக் கண்டு குசிக புத்திரரான விஸ்வாமித்திரருக்கு கடுமையான கோபம் வந்தது.மகரிஷி, தானே, தன் யாகத்தில் ஆஜ்யத்தில் நனைத்துப் போடப் பெற்ற ஆகுதி எப்படி ஜ்வாலையோடு விளங்குமோ, அது போல கோபத்தில் அக்னி பிழம்பாக ஜ்வலிக்கலானார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தசரத வாக்யம் என்ற இருபதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 21வசிஷ்ட வாக்யம் (வசிஷ்டரின் உபதேசம்)
பாசமும், கவலையும் அலைக்கழிக்க, தசரத ராஜா, மகா வருத்ததுடன் சொன்னதைக் கேட்டு மிகுந்த கோபம் கொண்ட விஸ்வாமித்திரர், அரசனிடம் -முதலில் தருவதாக சொன்ன பொருளை இப்பொழுது தர மறுக்கிறாய். ராகவ குலத்திற்கே இது இழுக்கு. இவ்வளவுதான் நீ என்றால், அரசனே, இதோ நான் போகிறேன். வாக்கை மீறியஅரசனே, இஷ்ட மித்திர பந்துக்களுடன் சுகமாக இரு- என்று கோபத்துடன் சொல்லி விட்டு கிளம்பினார். ஆத்திரத்துடன் விஸ்வாமித்திரர் இவ்வாறு சொல்லவும், நல்ல புத்திமானான அவரது வார்த்தையின் தீக்ஷ்ணம் (கடுமை)பூமண்டலத்தையே கலக்கியது. தேவர்களும் பயந்தார்கள். மகரிஷி கோபம் கொண்டு விட்டார்என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் என்ன நடக்குமோ என்று அஞ்சுகையில், விரத அனுஷ்டானங்களில் சிறந்த வசிஷ்ட முனிவர், தசரத ராஜாவைப் பார்த்து சொன்னார்: – ஸ்ரீமானே, நீ இவ்வாறு தர்மார்தத்தை கை விடக் கூடாது. ரகு குலத்தை சேர்ந்தவர்கள், தர்மாத்மா என்று பெயர் பெற்றவர்கள். மூவுலகிலும் அதனாலேயே இவர்களுக்கு மதிப்பு. இதை நீயும் பின் பற்றுவாயாக. அதர்மமாக ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, உன் பேரில் பாவத்தை ஏன் சுமக்கிறாய்? முதலில் தருகிறேன் என்று சொல்லிவிட்டு பின்னால் மறுத்தால், தடாகங்களையும், நந்தவனங்களையும் அழித்த பாபம் வந்து சேரும்.அதனால் ராமனை கொடு- என்றார். அஸ்திரம் தெரியுமோ, தெரியாதோ, விஸ்வாமித்திரரின் பாதுகாப்பில் இருக்கும்வரை, ராக்ஷஸர்கள் எதுவும் செய்ய முடியாது. அம்ருதம், சுற்றிலும், அக்னியுடன் இருந்தால், எப்படியோ அப்படி ராமன் பாதுகாக்கப்படுவான். இவர் தர்மமே உருவாக வந்தவர். வீரர்களுள் சிறந்தவர். தவம் செய்வதில் இவருக்கு இணை இல்லை. புத்திமான்களுள் இவரை மிஞ்சியவர்கள் இல்லை. மூவுலகிலும், சராசரங்களிலும் உள்ள எல்லா அஸ்திரங்களும்இவருக்கு தெரிந்ததே.மற்ற சாதாரண மனிதர்கள் இவரை இதுவரை அறிந்து கொண்டதுமில்லை, இனி அறியப்போவதும் இல்லை.தேவர்களோ, ரிஷிகளோ, அசுரர்களோ, ராக்ஷஸர்களோ, கந்தர்வ, யக்ஷ ப்ரவரர்களோ, எல்லா அஸ்திரங்களையும் ப்ருஸாஸ்வர் (சில பதிப்புகளின் க்ருஸாஸ்வர்) என்பவரின் புத்திரர்களிடம்ஒப்படைத்து இருந்ததை, இவர் ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்த நாட்களிலேயே, இவருக்கு சமர்ப்பித்து விட்டனர். தக்ஷ கன்னிகைகள் இருவர் ஜயா, சுப்ரபா என்று பெயர் கொண்ட அழகிய பெண்கள். இவர்களிடம்உயர்ந்த அஸ்திர ஸஸ்திரங்கள் இருந்தன. ஜயா என்ற பெண் ஐநூறு பிள்ளைகளைப் பெற்றாள். சுப்ரபாவும் ஐநூறு பிள்ளைகளை, விருப்பம் போல் வடிவம் எடுத்துக்கொள்ளும் சக்தியுள்ள, பலம் பொருந்திய மாயாவிகளான அசுரர்களைப் பெற்றாள் யாராலும் எதிர்க்க முடியாத சம்ஹாரம் என்ற அஸ்திரங்களை, இந்த வம்சத்தில் வந்த குசிக புத்திரரான விஸ்வாமித்திரர் அறிவார். இதைத் தவிர புதிய அஸ்திரங்களை உண்டு பண்ணுவதிலும் இவர் சமர்த்தர். அதனால் இந்த முனிவர், சர்வக்ஞனான மகான். இவர் இதுவரை நடந்ததையும் அறிவார், இனி நடக்கப் போவதையும் அறிவார். இவருடன் ராமனை அனுப்பநீ யோசிக்கவே வேண்டாம். இந்த ராக்ஷஸர்களை இவரே அடக்க முடியும். உன் பிள்ளையின் நன்மைக்காக உன்னை அண்டி யாசிக்கிறார். சூரிய குலத்தில் பிறந்த அரசன் தசரதன், இவ்வாறு வசிஷ்டர் சொல்லியதை கேட்டபின், மனம் தெளிந்து குசிக புத்திரரான முனிவருக்கு தன் மகனைத் தர இசைந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், வசிஷ்ட வாக்யம் என்ற இருபத்தோராவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 22வித்யா ப்ரதானம்,(வித்யா-புதிய வித்தையை உபதேசித்தல்)
வசிஷ்டர் இவ்வாறுசொன்னபின்,ராஜா தசரதன்,லக்ஷ்மணனுடன் இருந்த, ராமனை அழைத்தார். தாய், தந்தை, குரு வசிஷ்டர் எல்லோரும் இவர்களை ஆசிர்வதித்தனர். புரோஹிதரான வசிஷ்டர் மங்களாசாஸனம் செய்து வைத்தார். பிரியமான புத்திரனை உச்சி முகர்ந்து, அந்தராத்மா சுத்தமாக விருப்பத்துடன், விஸ்வாமித்திரர் கையில் ஒப்படைத்தார். ராஜா தசரதன்.அப்போது காற்று சுகமாக மாசின்றி, தூசு தும்பு இன்றி வீசியது. (வாயு என்பதால், வாயுவின் அபிமானிகளான தேவர்கள் என்று பொருள். புறப்படும் சமயம், வரப் போகும் மங்களத்தைச் சுட்டிக் காட்டும் வகையில், தந்தை மகனை பாசத்துடன் வருடுவது போல, சுகமான ஸ்பர்சத்தால், சரீரத்தின் மேல் சுகமாக வீசியது என்று பாவனை).விஸ்வாமித்திரரிடம் ஒப்படைக்கப் பட்ட சமயம், ராஜீவ லோசனான ராமன் மேல் பூமாரி பொழிந்தது. தேவர்களின் துந்துபி ஒலித்தது. அந்த மகாத்மா கிளம்பிய பொழுது சங்கத்வனியும், துந்துபி வாத்ய முழக்கமும்கேட்டன. விஸ்வாமித்திரர் முன்னே செல்ல,ராமன் பின் தொடர்ந்தான். காகபக்ஷம் என்ற சிகையலங்காரத்துடன் இருவரும், கையில் வில்லேந்தி பின் சென்றனர். சௌமித்திரியும் அவ்வாறே பின் தொடர்ந்தான். மூன்று தலை நாகம் போவது போல மூவருமாக வேகமாக சென்று மறைந்தனர்.இதன் பின் குசிக புத்திரைத் தொடர்ந்து, சகோதரர்களான அழகிய வடிவம் உடைய ராஜகுமாரர்களான ராம லக்ஷ்மணர்கள். நன்றாக அலங்கரித்துக்கொண்டவர்களாக, ரக்ஷைக்காக கைகளில் கட்டப் பட்ட காப்புகளுடன், பிரகாசமான வாளையும் ஏந்தி, லக்ஷ்மீ கரமான சோபையுடன் கூடியவர்களாக, முனிவரைத் தொடர்ந்து செல்வதைக் காண, ஸ்தாணுவான மகாதேவனை, நம் சிந்தைக்கு அப்பாற்பட்ட பரம் பொருளை, அக்னி குமாரர்கள் பின் தொடர்ந்து செல்வது போல இருந்தது. அரை யோஜனை தூரம் சென்ற பின், விஸ்வாமித்திரர், ராமா என்று மதுரமான குரலில் அழைத்தார். நேரத்தை வீணாக்க வேண்டாம். தண்ணீரை எடுத்துக் கொள். ப3லா, அதிப3லா என்ற மந்திரங்களை இப்போது உனக்கு உபதேசிக்கப் போகிறேன். கிரஹித்துக் கொள். இதனால் உனக்கு, சிரமமோ, ஜ்வரமோ, ரூபத்தில் மாறுதலோ ஏற்படாது. தூங்கிக் கொண்டிருந்தாலும், கவனமில்லாமல் இருந்தாலும் இதன் பலத்தால் ராக்ஷஸர்களிடம் இருந்துகாப்பாற்றப்படுவாய். ராக்ஷஸர்கள் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. உலகில் பலம் என்று சொன்னால், புஜ பலத்திற்கு சமமாக எதுவுமேயில்லை. ராகவா, மூன்று உலகிலும் உனக்கு சமமானவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் .இந்த இரண்டு வித்தைகளும்,உன்னை அனைவருக்கும் மேலான ஸ்தானத்தில் வைக்கும். பலா, அதிபலா இவை இரண்டும் எல்லா ஞானத்துக்கும் தாயார் போன்ற மந்திரங்கள்.பலா, அதிபலா என்ற இந்த மந்திரங்களை அறிந்தவர்கள் பசி, தாகம் இவற்றால் வருந்த மாட்டார்கள். இந்த இரண்டு வித்தைகளையும் கற்றுக் கொள்வதால், உன் புகழும் கூடும். பிதாமகரான ப்ரும்மாவின் புத்திரர்கள் இந்த இரண்டு வித்தைகளும். இதைப் பெற உனக்குத்தான் தகுதி இருக்கிறது.தர்மம் அறிந்தவனே, நிச்சயம் இவை உன்னை அடைந்து பல மடங்கு விஸ்தாரமாக ஆகும். தவ வலிமையால், அடக்கி வைத்திருந்த இவை பல ரூபங்களின் தோன்றப் போகின்றன. இதன் பின் ராமன் ஜலத்தை தொட்டுக்கொண்டு, (சுசி) சுத்தமானவனாக, மகா தேஜஸ்வியான முனிவரிடமிருந்து அந்த வித்தைகளை வாங்கிக் கொண்டான் மலர்ந்த முகத்துடன் வித்தை கை வரப் பெற்ற ராமன், அதிக சோபையோடு, எல்லையில்லா விக்ரமம்உடையவனாக காணப் பட்டான். சரத் காலத்தில் சூரியன் ஆயிரம் கிரணங்களுடன் விளங்குவது போல இருந்தான். குசிக புத்திரரான குருவின் தேவைகளையறிந்து செய்து விட்டு அன்றுஇரவு சரயூ நதி கரையில் தூங்கிக் கழித்தனர். பழக்கமில்லாத, அனுசிதமான புல் படுக்கையில் படுத்த போதிலும், அருகில் படுத்து, தாலாட்டுவது போல விஸ்வாமித்திரர் பேசியதை கேட்டபடியே, தசரத புத்திரர்களுக்கு, அந்த இரவு ஒரு க்ஷணமாக கழிந்தது.
.(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், வித்யா ப்ரதானம் என்ற இருபத்திரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 23 காமாஸ்ரம வாசம் (காமாசிரமம் என்ற இடத்தில் வசித்தல்)
இரவு முடிந்து விடிந்தவுடன், புல் படுக்கையில் உறங்கும் காகுத்ஸனைப் பார்த்து மிகவும் அன்புடன், விஸ்வாமித்திரர் சொன்னார். -கௌஸல்யா சுப்ரஜா ராம,பூர்வா ஸந்த்3யா ப்ரவர்த்ததே| உத்திஷ்ட நர சார்தூ3ல, கர்த்தவ்யம் தை3வமாஹ்னிகம் ||கௌசல்யையின் தவப் புதல்வனே, ஹே ராம, எழுந்திரு, விடியற்காலை ஸந்த்யா நேரம்.நர சார்தூல, சிங்கம் ஓன்று வீர நடை போடுவது போல நடைபோடும் ராஜகுமாரா, கண் விழிப்பாய்.தெய்வ காரியங்களையும், நித்ய காரியங்களையும் செய்ய வேண்டும், வா, – மகரிஷியின் மிக உத்தமமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அரச குமாரர்கள், உடனே எழுந்து, ஸ்னானம் முதலியன செய்து ஜபம் செய்ய ஆரம்பித்தனர். நித்ய கர்மாக்களைச் செய்தபின்,வீரர்களான இருவரும், தபோதனனான விஸ்வாமித்திரரை வணங்கி, சந்தோஷமாக கிளம்பத் தயாரானார்கள். நடந்து செல்லும் பொழுது, சரயூ நதி கங்கையைக் கடக்கும் இடத்தை கண்டனர். த்ரிபதகா என்ற திவ்யமான நதியான கங்கைக் கரையில், புண்யாத்மாக்களான ரிஷிகளின் ஆஸ்ரமத்தை கண்டனர். உக்ரமான தேஜஸ் உடையவர்களாக அந்தமுனிவர்கள் பல வருஷ காலமாக சிறந்த தவம் செய்து வந்தவர்களாகத் தெரிந்தது. இதைப் பார்த்த குமாரர்கள் விஸ்வாமித்திரரை கேட்டனர்.-இந்த புண்யமான ஆஸ்ரமம் யாருடையது? தற்சமயம் இங்கு யார் வசிக்கிறார்கள்? பகவன், நாங்கள் இதை அறிந்து கொள்ள ஆசைப் படுகிறோம் என்றனர். சிரித்துக்கொண்டே முனிவர் பதில் சொன்னார். – அப்படியா, கேளுங்கள். இது முன்னால் யாருடைய ஆஸ்ரமமாக இருந்தது தெரியுமா? கந்தர்ப்பன் (மன்மதன்) உருவமுடையவனாக இருந்தான். காமன் என்றும் விஷயம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள். இங்கு ஸ்தா2னு என்று போற்றப்படும் சிவ பெருமான் தவம் செய்து கொண்டிருந்தார். நியமத்துடன் புலன்களை அடக்கி, சமாதியில் இருந்த அவரை, தேவேந்திரனின் கட்டளைப்படி, மருத் கணங்களுடன் வந்து காமன் அவர் தவத்தைக் கலைத்தான். மகாத்மாவான சிவ பெருமான் ஹும் என்று சொன்னார். ரௌத்திரமான மூன்றாவது கண் திறக்க, காமனின் சரீரம் எரிந்து சிதறியது. காமன் சரீரத்தை இழந்தான். இதன் பிறகு, ஈ.ஸ்வரன் அவனை அசரீரியாக ஆக்கிவிட்டார்இதன் பின் காமன் அனங்கன் என்றே அழைக்கப்படுகிறான். ராகவ- காமன் சரீரத்தை விட்ட இடம் , அதனால் இது காமாஸ்ரமம் என்றே அழைக்கப்படுகிறது. அப்பொழுது இங்கு இருந்த முனிவர்களின் சிஷ்யர்கள் தர்ம சிந்தனையோடு இங்கு வாழ்கிறார்கள். பாபம் தீண்டாத, மாசில்லாத குணத்தினர். இன்று இரவை நாம் இங்கு கழிப்போம். ராகவா, எவ்வளவு அழகான இடம் இது, பார்த்தாயா? புனிதமான நதிகளின் இடையில் நாளை படகில் கடந்து செல்வோம்.குளித்து ஜபங்களை முடித்து நித்ய கர்மாககளைச் செய்த பின் கிளம்புவோம். இரவு இங்கு நிம்மதியாக இருக்க முடியும். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்த முனிவர்கள், தவம் செய்து செய்து தீர்கமான நயனங்களால் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள், விஸ்வாமித்திரரின் இந்த முடிவைக் கேட்டு மகிழ்ந்தனர். குசிக புத்திரரான முனிவருக்கு அர்க்யம், பாத்யம் இவற்றை அளித்து, ஆதித்யம், (விருந்தோம்பல்), செய்து பின்னால் ராம, லக்ஷ்மணர்களுக்கும் அதிதி சத்காரங்கள் செய்தனர்.இதன் பின் பல கதைகளைப் பேசி மகிழ்ச்சியாக சந்த்யா ஜபங்களை முடித்துக் கொண்டு அங்கு இருந்த முனிவர்களோடு கழித்தனர். விவரம் அறிந்த மற்றவர்களும் வந்து சேர, அந்த இடம் விரத சம்பன்னர்களான முனிவர்களால் நிறைந்தது. காமாஸ்ரமத்தில் சுகமாக, சுவாரஸ்யமான இனிய கதைகளைப் பேசியபடி இரவைக் கழித்தனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், காமாஸ்ரம வாசம் என்ற இருபத்து மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 24தாடகா வன ப்ரவேசம் (தாடகா வனத்தில் நுழைதல்)
மறு நாள் விடியற்காலையில், நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்த பின், சகோதரர்கள் இருவரும் விஸ்வாமித்திரரை தொடர்ந்து நதிக்கரை வந்து சேர்ந்தனர். அங்கு இருந்த முனிவர்கள் அனைவரும், விரதங்கள், அனுஷ்டானங்கள் செய்து முடித்தவர்கள். கூடவே வந்து படகில் ஏற்றிவிட்டு முனிவரிடம் – நீங்களும் ஏறிக் கொள்ளுங்கள். அரச குமரர்களுடன் உங்கள் யாத்திரை இடையூறு இன்றி சௌகர்யமாக இருக்கட்டும். தாமதம் செய்ய வேண்டாம். கிளம்புங்கள் – என்று விடை கொடுத்தனர். முனிவரும் சரி, அப்படியே ஆகட்டும் என்று அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டார். கங்கை நதியை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த கிளை நதியின் ஓட்டத்தோடு, சகோதரர்கள் இருவருடனும் படகில் சென்றார். –ஹோ- என்ற இரைச்சலுடன் வந்தநதியின் சப்தத்தை கேட்டனர். நீரின் நடுவில் படகு சென்று கொண்டிருந்த போது, ராமனும், லக்ஷ்மணனும் முனிவரிடம் சப்தத்தின் காரணத்தை அறிய, -ஜலம் பிளந்து போகும் போது இது என்ன பெரும் ஓசை எழுகிறதே, இது என்ன த்வனி?- என்று குதூகலமாக ராமன் கேட்டவுடன், முனிவர் விவரமாக சொல்ல ஆரம்பித்தார். -கைலாச மலையில், ப்ரும்மா தன் மனதால் நிர்மாணித்த ஒரு நதி இருந்தது.இது அவருடைய மானஸம், மனதில் உதித்த நதி.அயோத்யாவில் ஓடும் சரயூ இதிலிருந்து பிரிந்து வந்தது தான். அதனால் இந்த கோலாஹலமான சத்தத்துடன் திரும்பஜாஹ்னவியான கங்கையை வந்தடைகிறது. தண்ணீரின் மோதுதலால் உண்டாகும் சப்தம் இது.இதை வணங்குங்கள். – இரு நதிகளும் சேரும் அந்த இடத்தில், அரச குமாரர்கள் இருவரும் நமஸ்காரம் செய்து, தென்கரையை அடைந்துமெதுவாக நடந்து சென்றனர்.அந்த வனம் ஏனோ சாதாரணமாக இல்லை. கோரமாக தென்படுகிறது என்று சந்தேகம் கொண்டு ராமர் முனிவரிடம் கேட்டார். அஹோ, இந்த வனம் அடர்ந்து, இருக்கிறது. ஆந்தை கூக்குரல் தான் அதிகம் கேட்கிறது.பயங்கரமான நாய்களும், கூக்குரலிடும் பக்ஷிகளும், காட்டுப் பறவைகள் நிறைந்தும்காண்கின்றது.ஆனால் பறவைகள் இப்படி கோரமாக ஓசை எழுப்புவது அதிசயம்.சிங்கம், புலி, வராஹம், யானைகள் இவைகளும் அழகாக இருந்தும், த4வ, அஸ்வகர்ண, க2திர, வில்வம், திந்து3க, பாடல, ப3த3ரீ என்று இன்னும் பல மரங்களும் நிறைந்திருந்தும், ஏன் இது பயங்கரமாக காட்சியளிக்கிறது? மகா தேஜஸ்வியான முனிவர் ராமரின் சந்தேகத்தைத் தீர்க்கும் விதமாக பதில் சொன்னார். குழந்தாய், கேள். இது யாருடைய வனம் என்பதைச் சொல்லுகிறேன். முன்பு விருத்திரனை வதம் செய்தபோது, சேற்றில், மூழ்கியவன் போல், உடல் பூராக அழுக்குடன், பசியாலும் வாடிய ஸஹஸ்ராக்ஷனான இந்திரனை ப்ரும்மஹத்தி தோஷமும் சேர்ந்து கொண்டது. அப்பொழுது இந்திரனை ஸ்நானம்செய்வித்து தேவர்களும், ரிஷிகளும், மற்ற தபோதனர்களும் கலசங்களால் நீர் எடுத்து உடல் அழுக்கை தேய்த்துக் கழுவினர். அந்த அழுக்கையெல்லாம் இந்த பூமியில் தள்ளி, திரும்பத் திரும்ப உடல் மேல் படிந்த கறுப்பைத் தேய்த்துக் கழுவி கீழே தள்ளினார்கள். இதனால் இந்திரன் தன் சரீரம் நிர்மலமாகவும், கருமையான அழுக்கு இன்றியும் ஆனதில் மகிழ்ச்சி அடைந்தான். தன் சரீரத்தின் அழுக்கைத் தாங்கிய இந்த பூமிக்கு வரங்கள் கொடுத்தான். இந்த விசாலமான ஜனபதம், உலகில் பெரும் கீர்த்தியை அடையும் என்பதாக. தேவர்களும் சாது, சாது, நன்று நன்று என்றனர். தேவேந்திரனின் வரத்தால், இந்த இடம் வெகு காலம் செழிப்பாகவும், தன தான்யம் நிறைந்தும் இருந்தது. வெகு காலம் சென்ற பின் ஒரு யக்ஷி இங்கு தோன்றினாள். தன் விருப்பம்போல் வடிவம் எடுத்துக் கொள்ளும் திறன் உடையவளாகவும், மாயாவியாக, ஆயிரம் யானை பலம் கொண்டவளாகவும் இருந்தாள். தாடகா என்று பெயர். ராமா, உனக்கு மங்களம் உண்டாகட்டும். இவள் சுந்தனுடைய மனைவி.இந்திரனுக்கு சமமான பலம் உள்ள மாரீசன் இவள் மகன். உருண்ட புஜங்களும், பெரிய தலையும், அகலமான வாயும், மகா பெரிய உடலும், பயங்கரமான தோற்றமும் உடைய ராக்ஷஸன் இவள் மகன். இந்த ஜனபதத்தை தினமும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். துஷ்டசாரிணியான தாடகை, இங்கு வழியை அடைத்துக் கொண்டு, அரை யோஜனை தூரத்தில் வசிக்கிறாள். தாடகா வனத்திற்கு இந்த வழியாகத் தான் போக வேண்டும். உன் புஜ பலத்தால், நீ இவளை ஜயிக்க வேண்டும்.என் அனுமதியோடு, இவளைக் கொன்று விடு.இந்த தேசத்தை இடையூறு செய்யும் இவளைக் கொன்று, இதை பழையபடி வளமாக இருக்கச் செய். நாம் வந்தது போல இந்த பிரதேசத்திற்கு வேறு யாரும் எளிதில் வர முடியாது. இந்த யக்ஷியால், பொறுக்க முடியாத கோர வடிவுடையவளால், இந்த இடம் துன்புறுத்தப் பட்டு தவிக்கிறது. யக்ஷி வந்ததிலிருந்து நாசமான இந்த இடம் இன்று வரை அதே போல பயங்கரமாகவே இருக்கிறது. இது தான் இந்த இடத்தின் கதை.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், தாடகா வன பிரவேசம் என்ற இருபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 25 தாடகா வ்ருத்தாந்தம், (தாடகையின் கதை)
இணையில்லாத மகானான முனிவரின் வார்த்தைகளைக் கேட்டு, ஆண் சிங்கம்போன்ற ராமர், மேலும் வினவினார். சாதாரணமாக யக்ஷர்கள் அதிக பலமில்லாதவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அபலையான இவள் ஆயிரம் யானை பலம் பெற்றது எப்படி? லக்ஷ்மணனுடன் சேர்த்து, ராமருக்கு பதில் சொல்லும் விதமாக, விஸ்வாமித்திரர், அவர்கள், மனம் கலங்காமல், கேட்கும் படி வேடிக்கையான வார்த்தைகளால் விவரித்தார். எப்படி ஏராளமான பலத்தைப் பெற்றாள் என்பதைக் கேள், ராகவா, வர தானத்தால் கிடைத்த பலம் இது.சுகேது என்று ஒரு யக்ஷன் இருந்தான். குழந்தை இல்லையென்று தவம் செய்தான். பிதாமகரான ப்ரும்மா மகிழ்ந்து அவனுக்கு கன்யா ரத்னமான தாடகையை மகளாகக் கொடுத்தார். அவளுக்கு ஆயிரம் யானை பலத்தையும் ப்ரும்மா தான் கொடுத்தார். இந்த யக்ஷனுக்கு பிள்ளையைக் கொடுக்கவில்லை. வேகமாக வளர்ந்து வந்த இந்த பெண்ணை சுந்த3னுக்கு மணம் செய்து கொடுத்தான். சில காலம் சென்ற பின் யக்ஷி ஒரு மகனைப் பெற்றாள். மாரீசன் என்ற அந்த மகன் சாபத்தால் ராக்ஷஸனாக ஆனான். அகஸ்தியரின் சாபத்தால் சுந்தன் இறந்தான். சுந்தன் இறந்தவுடன் இவள் புத்திரனுடன் சேர்ந்து அகஸ்தியரை அழிக்க முயன்றாள்.ஆங்காரத்துடன் பலமாக சத்தமிட்டுக் கொண்டு ஓடி வந்தாள். வேகமாக மேலே விழுந்த அவளைப் பார்த்து அகஸ்திய முனிவர், ராக்ஷஸனாக ஆவாய் என்று மாரீசனை சபித்தார். தாடகையையும் சபித்தார். மகா யக்ஷியாக, நர மாமிசம் தின்பவளாக ஆவாய் என்றும், கோரமான முகமும் உடையவளாக ஆவாய் என்றார். உடனே அவள் அழகிய உருவம் நீங்கி, கோரமான பயங்கரமான உருவம் அடைந்தாள். அவளோ சாபம் பெற்றும், அடங்கா கோபம் கொண்டவளாக அகஸ்தியர் நடமாடி வந்த இந்த இடத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறாள்.இந்த யக்ஷி மகா பயங்கரமானவள். பசு, பிராம்மணர்கள் இவர்களின் நன்மைக்காக இவளைக் கொன்று விடு ராகவா. இவள் பராக்ரமம் நன்மை செய்வது அல்ல. இவள் நடத்தையும் மகா துஷ்டையாக ஆகி விட்டது. சாபத்தால் பீடிக்கப் பட்ட இவளை எந்த மனிதனும் பொறுக்க மாட்டான். இவளைக் கொல்ல, இந்த மூவுலகில் வேறு யாராலும் முடியாது. அதனால் ராகவா, ஸ்த்ரீயாயிற்றே, வதம் செய்யாலாமா என்று அருவருப்பு அடையாதே. நான்கு வர்ணத்தாரும் அடங்கிய ஜனங்களின் நன்மைக்காக, ராஜ குமாரர்கள், தயையோ, தயையில்லாமலோ, பிரஜைகளின் ஹிதம் ஒன்றே குறியாக சில சமயம் துணிந்து செயல் படத்தான் வேண்டும். நல்லவர்களை காப்பாற்ற, பாவனமோ, தோஷமுடையதோ, சில காரியங்களைச் செய்து தான் ஆக வேண்டும். ராஜ்ய பாரம் வகிப்பவர்களுக்கு இது சனாதனமான தர்மம். அதர்மம் என்ற எண்ணத்தை விடு, காகுத்ஸா, இவளிடம் தர்மம் என்பதே இல்லை. முன்பு விரோசனன் மகளான மந்தரையை, அவள் பூமியைக் கொல்ல முனைந்த போது, இந்திரன் அடித்தான். விஷ்ணுவும் ஒரு முறை பதிவிரதையான ப்3ருகு3 பத்னியை, காவ்ய மாதா (பிருஹஸ்பதியின் தாயார்) அடிக்க நேர்ந்தது. அவள், அனிந்திரம், உலகமே இந்திரன் இல்லாமல் இருக்கட்டும் என்று இந்திரனை அழிக்க கிளம்பினாள். அதனால் அவளை அழித்தார். மகாத்மாவான பல ராஜ குமாரர்கள், அதர்மத்தில் ஈ.டுபட்டவர்கள், பெண்களாக இருந்தாலும் அழிக்கத்தான் வேண்டி இருந்திருக்கிறது. அதனால் இந்த தயக்கத்தை விட்டு, இவளை அடி. அரசகுமாரனே, என் உத்தரவுப் படி அடித்து கொல்லு, என்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தாடகா விருத்தாந்தம் என்ற இருபத்து ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 26தாடகா வத4: (தாடகையின் வதம்)
சந்தேகத்துக்கு இடமின்றி முனிவர் பேசியதைக் கேட்ட பின்பும், தன் கொள்கையை எளிதில் மாற்றிக் கொள்ளாத குணம் கொண்ட ராமர் முனிவரிடம் சொன்னார். -என் தந்தை உத்தரவிட்டபடி, அவர் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், குசிக முனிவரின் வார்த்தை என்பதாலும்நான் சிறிதும் மனதில் சந்தேகமின்றிஉடனே செய்ய வேண்டியவன் தான். தாங்கள் சொல்லை மீறக் கூடாது என்றும், அலட்சியப் படுத்தக் கூடாது என்றும், அயோத்தியிலிருந்து கிளம்பு முன்னே தந்தை கண்டித்துச் சொல்லியிருக்கிறார். அதனால் தந்தைசொல்லைக் கேட்பவனாக, ப்ரும்ம வாதியானநீங்கள் சொல்வதாலும் தாடகையை வதம் செய்கிறேன். அதில் சந்தேகமேயில்லை. பசு, பிராம்மணர்கள்இவர்களின் நன்மைக்காக, இந்த தேசத்தின் நன்மைக்காகவும், இணையில்லாத புகழ் வாய்ந்த தங்கள் சொல்லை ஏற்று முனைந்து செய்கிறேன்.– இவ்வாறு சொல்லி, வில்லின்நடுவில் பிடித்தபடி, எதிரிகளை நாசம் செய்வதில் வல்லவரான ராமன், நான்கு திக்குகளிலும் எதிரொலிக்கும்படி, நாணின் ஒலியை எழுப்பினான். இந்த சப்தத்திலேயே தாடகா வன வாசிகள் அலறியடித்துக் கொண்டு வர, இதைக் கேட்ட தாடகா, மிகவும் கோபம் கொண்டு, சப்தம் வந்த திசையை உத்தேசமாக கொண்டு, க்ரோதத்தில் வேறு எதுவும் தோன்றாதவளாக, ராக்ஷஸி, வேகமாக ஓடி வந்தாள். அவள் வந்த வேகத்தாலும், அதனால் எற்பட்ட சத்தத்தினாலுமே, ராகவன் அவள் யார் என்பதைத் தெரிந்து கொண்டான்.கோரமான உருவம் இன்னும் க்ரோதத்தால் விகாரமாகி, வயதானவளாக தோற்றத்தால் தெரிந்து கொண்ட ராமன், லக்ஷ்மணனிடம் சொன்னான்.–லக்ஷ்மணா, இந்த யக்ஷிணியின் கோரமான பயங்கர உருவத்தைப் பார். பயந்த ஸ்வபாவம் உடையவர்கள் இவளைக் கண்ட மாத்திரத்திலேயே ஹ்ருதயம் பிளக்க நடுங்குவார்கள்.யாராலும் அடக்க முடியாத மாயா பலம் உடைய இவளை,காது மூக்குகளை அரிந்து திரும்பி ஓடச் செய்கிறேன். ஸ்த்ரீ என்பதால் இதுவரை ரக்ஷிக்கப்பட்டு வந்திருக்கிறாள். இவளைக் கொல்ல வேண்டாம் என்று தோன்றுகிறது. இவளுடைய வீர்யத்தையும், நடையையும் அழித்தால் போதும் என்று நினைக்கிறேன். – இவ்வாறு ராமன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அதி பயங்கரமான கோபத்துடன் வந்த தாடகை, கைகளை தூக்கிக் கொண்டு கர்ஜித்தபடி ராமனை நோக்கி ஓடி வந்தாள். விஸ்வாமித்திரர் –ஹும்- காரம் செய்து அவளை நிற்கச் செய்து, ராகவர்களுக்கு ஸ்வஸ்தி வசனங்கள் சொல்லி, வெற்றி உண்டாகுக என்று வாழ்த்தினார். ஏகமாக புழுதியைக் கிளப்பி அவர்கள் இருவரையும் சிறிது நேரம் தாடகை, கண் திறக்க முடியாமல் அவஸ்தைப் பட செய்தாள். உடனே மாயா ஜாலத்தால், மறைந்து நின்று கற்களால் அடிக்க ஆரம்பித்தாள்.இதன் பின் ராகவன் கோபம் கொண்டான். மலை கற்களை அவள் மழையாக பொழிந்த போது அம்புகளால் அதை தடுத்து நிறுத்தியதோடு, திரும்பி தூர ஓடிப் போகயத்தனித்தவளைதடுத்து கைகளை வெட்டினான். புஜங்கள் இற்று விழ, கோரமாக கர்ஜிக்கும் அவளை, லக்ஷ்மணன் துரத்திச் சென்று காதுகளையும், மூக்கு நுனியையும் அறுத்தான். உடனே வித விதமான ரூபம் எடுத்துக்கொண்டு, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து நின்று கொண்டு அந்த யக்ஷி, மாயையினால் அவர்களை பலவிதமாக அலைக்கழித்தாள். கற்களை மழையாக பொழிந்தவாறு பயங்கரமாக நடமாடினாள். கற்களை மழையாக பொழியும் அவள் போக்கைத் தடுக்க எண்ணி, கா3தி4 புத்திரர் (விஸ்வாமித்திரர்) ராமனைப் பார்த்து -தயக்கம் வேண்டாம், ராமா,இவள் துஷ்டை, பாப காரியங்களே செய்யும் பாபி. மாயையால் இன்னும் வளருவாள். யாகங்களை விக்னம் செய்யும் யக்ஷி. சந்த்யா வருமுன் இவளை வதம் செய்து விடு. ராக்ஷஸர்கள்சந்த்யா காலத்தில் அடக்க முடியாத பலம் பெற்று விடுவார்கள்.- இவ்வாறு விஸ்வாமித்திரர் சொல்லவும், மேலே விழும் கற்களாலே மட்டுமே அவள் இருக்கிறாள் என்பது தெரிய, மறைந்து நின்ற தாடகையை, சப்த வேதி என்ற அஸ்திரங்களைக் கொண்டு அம்புகளால் சரமாரியாக அடித்தார்.அவள் அம்புகளால் தடுத்து நிறுத்தப் பட்ட அந்த நிலையிலும் , திரும்பத் திரும்ப இருவரையும் அடிக்க ஓடி வந்தாள். வேகமாக வந்து விழும், மலை சிகரம் போன்ற அவளை, மார்பில் அம்பினால் அடித்துக் கொன்றார். பயங்கரமான தோற்றத்துடன் அவள் இறந்து விழுந்ததும், சுர பதியான இந்திரனும், மற்ற தேவதைகளும் சாது, சாது, நன்று,நன்றுஎன்று பாராட்டினார்கள். ஸஹஸ்ராக்ஷனான இந்திரனும், மற்ற தேவர்களும் விஸ்வாமித்திரரிடம் வந்து, அவரை பாராட்டி -கௌசிக முனியே- உங்களுக்கு மங்களம்உண்டாகட்டும். இந்திரன் உள்ளிட்ட மருத் கணங்கள் ராகவனின் இச்செயலால் மகிழ்ச்சியடைந்தோம். எங்கள் அன்பை அவனுக்குத் தெரிவியுங்கள். பிரஜாபதி, ப்ருஸாஸ்வ புத்திரர்கள், சத்ய பராக்ரமம் உடையவர்கள், தவ வலிமை உடையவர்கள். இவர்கள் அன்பையும் ராமனுக்குத் தெரிவியுங்கள். ப்ரும்மன், நீங்கள் தகுதியான குரு. அதனால் தான் உங்களைத் தொடர்ந்து வர இசைந்திருக்கிறான். அரசகுமாரனான இவன் இன்னும் மகத்தான காரியங்ளை செய்து, தேவர்கள் மகிழச் செய்யப் போகிறான் என்று மகிழ்ச்சியுடன் வந்த வழியே சென்றார்கள்.. அவர்கள் விஸ்வாமித்திரரை வணங்கி விடை பெறவும், சந்த்யா காலமும் வந்து சேர்ந்தது. தாடகையின் வதத்தால் சந்தோஷம் அடைந்த முனிவர், ராமனை உச்சி முகர்ந்து, கொண்டாடினார். ராமா இன்று இரவு இங்கேயே வசிப்போம். நாளைக் காலை என் ஆஸ்ரமத்திற்குச் செல்வோம் என்றார்.சரி என்று ஆமோதித்த ராஜகுமாரர்களும் அன்று இரவு அந்த தாடகா வனத்தில் சுகமாக இருந்தனர். சாபத்திலிருந்து விடுபட்ட அந்த வனம், அன்றே ரமணீயமாக ஆகி விட்டது. சைத்ரவனம் போல் ஆகிவிட்டது. (தேவலோகத்து வனத்தின் பெயர்). தேவர்களும், சித்தர்களும் வாழ்த்த, அந்த இரவு, ராம, லக்ஷ்மணர்கள் முனிவருடன், கூடவே வசித்து, தூங்கி, அவரால் விடியற்காலையில் எழுப்பப்பட்டனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தாடகா வதம் என்ற இருபத்தாறாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 27அஸ்திரக்ராம பிரதானம் (அஸ்திரங்களை பெறுதல்)
அன்று இரவு தூங்கி எழுந்தவுடன், விஸ்வாமித்திரர், ராமனை புகழ்ந்து பேசி, இனிமையாக பேசியவாறு -அரசகுமாரனே, உனக்கு மங்களம் உண்டாகட்டும். உன் செயலால் மிகவும் மகிழ்சியடைந்தேன். மனமுவந்து, பிரியமாக இந்த அஸ்திரங்களை உனக்குத் தருகிறேன். எந்த அஸ்திரங்களால், தேவ கந்தர்வ கணங்களோ, உரக(நாக) கூட்டமோ, எதிர்த்தாலும்,யுத்தத்தில் எதிரிகளை அடக்கி, வதம் செய்து வெற்றி பெறுவாயோ. அந்த திவ்யமான அஸ்திரங்களை உனக்கு முழுவதுமாக தருகிறேன். த3ண்ட சக்ரம் என்ற திவ்யமான அஸ்திரம் இது. ராகவா, த4ர்ம சக்ரம் என்று ஒரு அஸ்திரம், கால சக்ரம் என்று ஒன்று, விஷ்ணு சக்ரம், உக்ரமான ஐந்த்ராஸ்திரம், வஜ்ரம் என்ற அஸ்திரம், சைவம், சூலம் என்ற விசேஷமான ஆயுதம், ப்ரும்ம சிரஸ் என்ற அஸ்திரம், ஐஷிகம் என்று ஒரு அஸ்திரம், இவைகளை உனக்குத் தருகிறேன். இதைத் தவிர, மஹாபா3ஹோ, ப்ரும்மாஸ்திரம் என்ற உத்தமமான அஸ்திரமும் தருகிறேன். இந்த இரண்டு க3தைகளும், மோத3கீ, சிகரீ, என்று பெயர் உடையவை, இவைகளையும் தருகிறேன். தர்மபாசம் என்று ஒரு அஸ்திரம், அதே போல, கால பாசம் என்று மற்றொன்று, பாசம், இதைத்தவிர, வாருணம் என்ற அஸ்திரம், இவைகளையும் தருகிறேன். இரண்டு சிறிய பாதி கற்களையும் தருகிறேன். பினாக பாணியின் பைனாகம் என்ற அஸ்திரமும், நாராயணம் என்றதும், ஆக்3னேயம், சிகரம் என்று பெயருடையதும், வாயவ்யம், பிரத4னம் என்ற ஒன்று, உனக்கு இவைகளைத் தருகிறேன்.இவை தவிர, ஹயசிரோ என்ற அஸ்திரம், க்ரௌஞ்சம் என்ற இவை இரட்டையான சக்திகள். இவைகளையும் தருகிறேன். கங்காலம், முஸலம் இவை கோரமானவை. காபாலம் என்று ஒன்று, கங்கணம் இவைகளை ராக்ஷஸர்களை வதம் செய்யும் பொருட்டு உனக்குத் தருகிறேன். வைத்யாதரம், மகாஸ்திரம், நந்தனம் இவை உயர்ந்த வாள் வகைகள். இவைகளையும் தருகிறேன்.காந்தர்வாஸ்திரம், மானவம் இவைகளோடு, சௌரம் இவைகளையும் வர்ஷிக்கவும், வற்றச் செய்யவும், நெருப்பால் சுடச்செய்வதும், நெருப்பை அணைப்பதுமான அஸ்திரங்கள், மோகனம் என்ற எதிர்க்க முடியாத அஸ்திரம் , கந்த3ர்ப்ப த3யிதம் என்றதையும், பைசாசமான அஸ்திரத்தையும், மாத3னம் என்பதையும் தருகிறேன். அரசகுமாரனே, தாமசம், சௌமனம் இவை இரண்டும் மிகவும் பலம் வாய்ந்தவை. சம்வர்த்தம், மௌஸலம் இவையும் எதிர்க்க முடியாதவை, சத்யம் என்று ஒரு அஸ்திரம், மாயாத4ரம் என்ற ஒன்று, சௌரம் என்றஅஸ்திரம் தேஜஸைக் கொடுக்கும், எதிரியின் தேஜஸை அபகரிக்க கூடியது. சௌம்யாஸ்திரம், குளிர்ச்சியான சிசிரம், த்வாஷ்டிரம் என்ற அஸ்திரம், பயங்கரமானது. சூரியனுக்கும் குளிர்ச்சி தரக்கூடிய சீதேஷும் தவிர, மானவம், இவைகள் நல்ல பலம் வாய்ந்தவை. இவைகளை ஏற்றுக்கொள், சீக்கிரம். – கிழக்கு முகமாக நின்று, சுசியாக, முனிவர் இவற்றை ராமனுக்கு சந்தோஷமாக கொடுத்தார். மந்திர அடிப்படையில் அமைந்ததும், உத்தமமானதும், தேவர்களுக்கும் கிடைக்க முடியாத சர்வ சங்க்ரஹம் என்ற முறையில் அனைத்தையும் ராமனுக்கு கொடுத்துவிட்டார். ஜபம் செய்துகொண்டிருந்த, புத்திமானான விஸ்வாமித்திர முனிவரிடமிருந்து இந்த அஸ்திரங்கள் ராமனை வந்தடைந்தன. ராமனை வணங்கி அந்த அஸ்திரங்கள் சந்தோஷமாக -ராகவா, இதோ நாங்கள்எல்லோரும் இனி உனக்கு கிங்கரர்கள். உன் சொல்படி, ஆணைப்படி நடக்க வேண்டியவர்கள். எங்களைக் கொண்டு என்ன என்ன செய்ய விரும்புகிறாயோ, செய்து கொள். நாங்கள் உன் சித்தப்படி செய்வோம்.-என்றன.இவ்வாறு அவை ஓன்று சேர்ந்து சொல்லவும், ராமனும் மிக்க மகிழ்ச்சியடைந்து, அவைகளை கைகளில் வாங்கிக் கொண்டு, நீங்கள் அனைவரும் என் மானஸா- மனதில் வசிப்பவர்களாக இருங்கள் என்று வேண்டிக் கொண்டான். பிறகு விஸ்வாமித்திரரை வணங்கி, கிளம்பத் தயாரானார்கள்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், அஸ்திர க்ராம ப்ரதானம் என்ற இருபத்தேழாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 28 அஸ்திர சம்ஹார க்ரஹணம்
எல்லா அஸ்திரங்களையும் பெற்றுக் கொண்ட காகுத்ஸனான ராமன், மகிழ்ச்சியுடன்,முனிவருடன் நடந்து கொண்டே கேட்டான் . முனி புங்கவரே, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கூட கிடைக்காத அஸ்திரங்களைக் கிடைக்கப் பெற்றேன். இவைகளை அடக்குவதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். – இவ்வாறு ராமன் சொல்லவும், விஸ்வாமித்திரர், சுசியாக, சுத்தமாக விரதங்களை அனுசரித்து வந்துள்ள முனிவர், அவைகளை அடக்கும்வழி முறைகளையும் சொன்னார். சத்யவந்தம், சத்ய கீர்த்திம், த்3ருஷ்டம், ரப4ஸம், ப்ரதிஹாரதரம், பராங்முக2ம், அவாங்முகம், லக்ஷ்யாலக்ஷ்யா என்ற இரண்டு, த்ருடனாப, சுனாபகௌ, தசாக்ஷ, தச வக்த்ர என்ற இரட்டை, த3ச சீர்ஷ, ச்ருதோதரௌ, பத்3மனாப, மகானாப என்ற இரட்டை, து3ந்து3னாப4, ச்வனாப4 என்றஇரட்டை, ஜ்யோதிஷம், க்ருசனம், நைராஸ்ய விமல, யௌக3ந்த3ர வினித்3ரௌ, தை3த்ய ப்ரமத2னௌ, சுசிபா3ஹோ, மகாபா3ஹோ, நிஷ்குளி, விருசி, சார்சிமாலி, த்3ருதிமாலி, வ்ருத்3தி4மான், ருசிர, பத்ரியம், சௌமனசம், விதூ3த மகர: என்ற இருவர்,கரவீரகரம், த4ன தா4ன்யௌ, காமரூபம், காமருசிம், மோகனம், மாரனம், ஜ்ரும்ப3கம், சர்வனாப4ம், சந்தானாவரௌ, ப்ருசாஸ்வதனயான், பா4ஸ்வரான், காமரூபின:, இவற்றைப் பெற்றுக் கொள்ள தகுதியுடையவன் நீ ஒருவன் தான் ராம, இவைகளை ஏற்றுக்கொள். ராமனும் சந்தோஷத்துடன் அவற்றை ஏற்றுக் கொண்டான்.திவ்யமான, ப்ரகாசமான தேகத்துடன் சில நேரில் வந்து, சில நெருப்பு போன்றவை, சில புகை போன்றவை, சந்திர, சூரியன் போன்றவை, சில கை கூப்பியவாறு, அஞ்சலி செலுத்துபவராக சில, ராமனிடம் மதுரமாக பேசினர். -இதோ நாங்கள் வந்துள்ளோம். என்ன செய்ய வேண்டும் சொல்,- என்று கேட்க, -மானஸா வாக இருங்கள்,வேண்டும்போது உதவி செய்யுங்கள் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பி விட்டான். அவைகள் ராமரை பிரதக்ஷிணம் செய்து வணங்கி விடை பெற்றுச் சென்றன. மேலும் நடந்து செல்கையில், விஸ்வாமித்திரரைப் பார்த்து ராமர் கேட்டார். -இது என்ன, மலைக்கு அருகில் மேகம் போல தெரிகிறதே, மரங்கள் போல தெரிகின்றன, அழகாக இருக்கிறது. மான்கள் சுற்றி சுற்றி வருகின்றன, மனோகரமாக இருக்கிறது. தவிர, பக்ஷிகள் கீச், கீச் என்று கோலாகலமாக இரைவதும் கேட்க இனிமையாக இருக்கிறதே, இவ்வளவு அழகிய ஆஸ்ரமத்தை விட்டுயாரோ வெளியேறி விட்டார்கள் என்று தெரிகிறது. இந்த தேசத்தில் அடி வைத்ததுமே, சுகமான ஒரு உணர்வு ஏற்படுவதால், பகவானே, இது யாருடைய ஆஸ்ரமமாக இருந்தது? தயவு செய்து எனக்கு விளக்கி சொல்லுங்கள். துஷ்டசாரிகளும், பாபிகளுமான ராக்ஷஸர்கள், உங்கள்யாகத்தை நாசம் செய்யும் துராத்மாக்கள் இருக்கும் இடம் வந்து விட்டோம் என்று நினைக்கிறேன். பகவன், உங்களுடைய யாகம் நடக்கும் இடம் எது? நான் ராக்ஷஸர்களை வதம் செய்து ரக்ஷிக்க வேண்டும் என்று சொல்லி அழைத்து வந்தீர்களே, இவை எல்லாவற்றையும் விவரமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். முனிஸ்ரேஷ்டரே, சொல்லுங்கள்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், அஸ்திர சம்ஹார க்3ரஹனம் என்ற இருபத்து எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 29 சித்3தா4ஸ்ரமம்
ஈடு இணையில்லாத குணவானான ராமர், வனம் பற்றி விசாரித்தவுடன், மகா முனிவரான விஸ்வாமித்திரர் விளக்கிச் சொன்னார். இங்கு தான் தேவர்களில் வரிஷ்டரான (சிறந்தவரான) ப்ரபு விஷ்ணு, தவம் செய்வதே பலனாக, பல வருஷங்கள், யுகங்கள், தவம் செய்து வந்தார். தபஸ்வியாக அவரே வசித்த இடம் இது. வாமனருடைய பூர்வாஸ்ரமம்.சித்தாஸ்ரமம் என்று பெயர் பெற்றது. இங்கு தவம் செய்தவர்கள் சித்தர்கள் ஆனார்கள். ராஜா வைரோசனி (விரோசனன் மகன்), பலி,தேவர்களையும், இந்திரன் உள்ளிட்ட மருத்3 கணங்களையும் வென்று, மூவுலகிலும் புகழ்வீச ராஜ்யம் ஆண்டு வந்தான். அசுரன் தலைவனான அவன் பெரிய யாகம் செய்தான். பலி எஜமானனாக இருந்து யாகம் செய்த போது தேவர்கள், அக்னி தேவன் தலைமையில் இந்த ஆஸ்ரமத்திற்கு வந்து விஷ்ணுவை சந்தித்தார்கள். விரோசனன் மகனான பலி யாகம் செய்கிறான். இந்த யாகம் முடியுமுன், தாங்கள் வந்த காரியத்தை செய்து முடியுங்கள். யாசகம் பெற வந்தவர்கள், இங்கும் அங்குமாக சஞ்சரிக்கிறார்கள். யார், எது, எப்பொழுது கேட்டாலும் அப்படியே தருகிறான் பலிசக்ரவர்த்தி.ஆதலால் நீங்கள், தேவர்களின் நன்மைக்காக, மாயா யோகத்தை அடைந்து, வாமனனாக ஆகி எங்களுக்கு நன்மை செய்ய வேண்டுகிறோம். ஹே விஷ்ணுவே, என்று பிரார்த்தித்தனர்.இதே சமயத்தில், அக்னி பிழம்பு போன்ற தேஜஸ் உடையவர், காஸ்யபர் என்பவர், அதிதி என்ற தன் மனைவியுடன், வரம் அருளும் மதுசூதனனை தோத்திரம் செய்தார். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நியமத்துடன், விரதம் இருந்து தவம் செய்து, பெரும் மதிப்பும், மரியாதையும் பெற்றவர் , இந்த காஸ்யபர். தவமே உருவானவர் போலும், தவமே உருக் கொண்டு வந்தது போலவும், தவமே பொருளாகவும் உள்ள மதுசூதனனைப் பார்த்து, என் தவப் பலனே, உங்களை நேரில் காண்கின்றேன். நான் இதுவரை ஆராதித்து வந்த புருஷோத்தமனையே நேரில் காணும் பாக்கியம் பெற்றேன். உலகு அனைத்தையும் உன் சரீரத்தில் விளங்கக் காண்கின்றேன். நீயே ஆதியும் ஆவாய். இப்படித்தான் என்று உறுதியாக சொல்லமுடியாத,எல்லையில்லாத,தன்மை உடையவன்.உன்னை நான் சரணம் அடைகிறேன். மாசற்ற குணவானான காஸ்யப முனிவரைப் பார்த்து, மனம் மகிழ்ந்தவராக ஹரி சொன்னார். – உனக்கு வேண்டிய வரம் எதுவானாலும் கேள். உங்கள் இருவருக்கும் வரம் தருவது மிக அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது.- என்றார். இதைக் கேட்டு மரீசி புதல்வரான காஸ்யபர், -எனக்கும், அதிதிக்கும் மகனாக பிறப்பாயாக. இந்திரனுக்கு இளைய சகோதரனாக ஆவாய். எதிரிகளை அழிக்கும் பலம் உடையவனே, சோகத்தில் மூழ்கியுள்ள தேவர்களுக்கு உதவி செய். உன் அருளால், இந்த இடம் சித்தாஸ்ரமம் என்று ப்ரஸித்தமாக ஆகப்போகிறது. உன் காரியம் ஆன பின்இந்த இடத்தை விட்டுச் செல்வாய்,- என்றார்.இதன் பின் அதிதிக்கு மகனாக பகவான் பிறந்தார். வாமனனான (குள்ளமான) உருவம் எடுத்துக் கொண்டு, வைரோசனியான, பலிச்சக்ரவர்த்தியின் யாகம் நடக்கும் இடம் சென்றார். மூன்று அடி மண் கேட்டு, முதலில்பூமியை வாங்கிக் கொண்டு, மகேந்திரனுக்கு பூலகைதிருப்பித் தந்தார். பூவுலகம் திரும்ப இந்திரன் வசம் ஆனது. சர்வ லோக க்ஷேமத்தின் பொருட்டு, இரண்டாவது அடியால் உலகையெல்லாம் வாங்கிக் கொண்டு, தன் சக்தியால் பலியை அடக்கி, மகேந்திரனுக்கு மூவுலகையும் திருப்பித் தந்தார். மூவுலகும் திரும்ப இந்திரன் வசம் ஆனது. வாமனர் முன்னால் இருந்த இடம் என்பதால் பக்தியுடன் நானும் இந்த இடத்தில் வசித்தேன்.இங்கும் யாகத்துக்கு இடையூறு செய்யும் ராக்ஷஸர்கள் வருகிறார்கள். துஷ்டசாரிகளான அவர்களை, நீதான் அடக்க வேண்டும். வா, சித்தாஸ்ரமம் செல்வோம். இந்த ஆஸ்ரம பதம் எப்படி எனக்கு பழகிய இடமோ, அப்படியே தான் உனக்கும்.என்று சொல்லியபடி அன்புடன், ராம, லக்ஷ்மணர்கள் கையைப் பிடித்துஅழைத்துக் கொண்டு ஆஸ்ரமத்துள் நுழைந்தார். மூடியிருந்த பனி விலகி, புனர்வசுவுடன்கூடிய சந்திரன் போல, தெளிவாக நின்றார். மகா தேஜஸ்வியான அவரைக் கண்டதும் சித்தாஸ்ரமத்து முனிவர்கள் எல்லோருமே வந்து விஸ்வாமித்திரரை வணங்கி நின்றனர். மரியாதையுடன் அவரை உபசரித்து வரவேற்றனர். அதே போல ராஜ குமாரர்களுக்கும் அதிதி சத்காரங்களைச் செய்தனர். ஒரு முஹுர்த்த காலம் ஓய்வெடுத்துக் கொண்டு, முனிவர் எழுந்தவுடன், கை கூப்பியபடி வினயமாக,- இன்றே தாங்கள் தீக்ஷை எடுத்துக் கொள்ளுங்கள். முனிபுங்கவரே, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். சித்தாஸ்ரமம் சித்தமாக ஆகட்டும்.உங்கள் வாக்கு பலிக்கட்டும்- என்று வேண்டினர். முனிவரும் அதை ஏற்று, தன் கட்டுப்பாடுகள் நிறைந்த விரதம், நியமம் இவற்றுடன் தீக்ஷையை மேற் கொண்டார். குமாரர்களும் அன்று இரவு தூங்கி, விடியற் காலையில், எழுந்து, நீரைத் தொட்டுக் கொண்டு, ஜபம் முதலியவற்றை செய்து, நியமத்துடன் அக்னி காரியங்களை செய்து முடித்த பின் முனிவரை வணங்கினர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், சித்தாஸ்ரமம் என்ற இருபத்தொன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 30 யக்ஞ ரக்ஷணம்(யாகத்தைக் காத்தல்)
தேச காலம் அறிந்தவர்களும், நல்ல வீரர்களுமான அரச குமாரர்கள், தேச கால வர்த்தமானங்களை அனுசரித்து பேச வல்லவர்கள், கௌசிகரிடம் விவரம் அறிந்து கொள்ளும் ஆவலுடன் வினவினர். -ப4கவன், இந்த நிசாசரர்கள் எப்போது வருவார்கள். அந்த க்ஷணமே அவர்களை அடிக்கிறோம். – யுத்தம் செய்ய ஆசையுடன் பரபரக்கும் காகுத்ஸ குமாரர்களைப் பார்த்து, மற்ற எல்லா முனிவர்களும்மகிழ்ந்தனர்.குமாரர்களை புகழ்ந்தார்கள்.- இன்றிலிருந்து ஆறு இரவுகள் நீங்கள் காவல் காக்க வேண்டும். தீக்ஷையை ஏற்றுக் கொண்டுள்ள இந்த முனிவர் மௌன விரதம் இருப்பார்- என்றனர். இதைக் கேட்டு ராஜ குமாரர்கள், தூக்கம் இன்றி, ஆறு இரவுகள் காவல் காத்தனர். கைகளில் வில்லை ஏந்தியபடி, விஸ்வாமித்திர முனிவரை பாதுகாப்பவர்களாக உபவாசம் மேற் கொண்டனர்.இவ்வாறு நாட்கள் செல்லச் செல்ல ஆறாவது நாளும் முடியும் தறுவாயில், ராமர் சௌமித்திரியிடம் கவனமாக இரு என்று சொன்னார்.முதல் முறையாக யுத்தம் செய்யும் பரபரப்புடன் ராமர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வேதியில் நெருப்பும் கொழுந்து விட்டெரிந்தது. உபாத்யாயர்கள், புரோஹிதர்கள் யக்ஞ அக்னியை மூட்டினர். (உபாத்யாயர்-ப்ரும்மா, புரோஹிதர்-உபத்3ருஷ்டா. யுத்தம் செய்யும் ஆவலுடன் ராமன் பரபரத்து சொல்வதும், யாகத்தீ மூண்டெழுவதும் சம காலத்தில் நடக்க, ராக்ஷஸர்கள் எந்த நிமிஷமும் வரலாம் என்பது விளங்குகிறது). தர்ப்பம், சமித்து, சமசம், ச்ருக் (நெய் விடும் கரண்டி), குசுமம் (பூ), இவற்றுடன், ரித்விக்குகளால் சூழப் பட்ட விச்வாமித்திரர் யாகத் தீயை மூட்டினார். மந்திரங்கள் சொல்லி நியமமாக நடக்க வேண்டிய முறைப்படி யாகம் வளர்ந்தது.இதே சமயத்தில் ஆகாயத்தில் பயங்கரமான சத்தம் உண்டாயிற்று.மழை நாளில் மேகத்தை பிளந்து கொண்டு மழை பொழியும் முன் இடி இடிப்பது போல பயங்கரமான சத்தம் உண்டாயிற்று. மாயாவிகளான ராக்ஷஸர்கள் இங்கும் அங்குமாக ஓடலாயினர்.கண்ணுக்குத் தெரியாமல் நின்ற மாரீசனும், சுபாஹுவும் அவர்களைத் தொடர்ந்து வந்த அவன் கூட்டத்தாரும் பயங்கரமான உருவம் உடையவர்களாய், ரத்தம் வடியும் மாமிசம் இவற்றை வர்ஷித்தனர். ரத்தமும் நிணமும், வேதியை நணைக்கும் முன், ராமர் அவர்களைப் பார்த்து பரபரப்புடன் ஓடி வந்து, லக்ஷ்மணனைப் பார்த்துச் சொல்வார் – லக்ஷ்மணா, பார். தப்பு காரியம் செய்ய முனைந்த இந்த ராக்ஷஸர்களைப் பார். மேகங்களை அக்னி விலக்குவது போல மானவாஸ்திரம் போட்டு இவர்களை விலக்குகிறேன். இவர்களை கொல்ல வேண்டாம் என்று எண்ணுகிறேன். – இவ்வாறு சொல்லியவாறே, ராஜீவ லோசனான ராமன், வேகமாக வில்லில் நாணைப் பூட்டி, பரம பாஸ்வரமான மானவம் என்ற அஸ்திரத்தைத் தொடுத்து மாரீசனின் மார்பில் படும்படி அடித்தார். அவனும் அந்த அஸ்திரத்தால் அடிபட்டு, முழு நூறு யோசனை தூரம் துரத்தப்பட்டு, சமுத்திரத்தில் விழுந்தான். நினைவிழந்து, அடிபட்ட வலியால் துடித்துக் கொண்டு, சீதளமான சமுத்திர ஜலம் இன்னும்அதிக வேதனையளிக்க விழுந்து கிடந்த மாரீசனைப் பார்த்து ராமர் லக்ஷ்மணனிடம் சொன்னார். –லக்ஷ்மணா, பார். (சீதேஷு ப3லம் – சீதேஷு என்ற அஸ்திரத்தின் பலம் – இந்த அஸ்திரத்தின் குணம். அதாவது இந்த அஸ்திரத்தை பிரயோகிப்பதால் எதிரி நடுங்குவார். இங்கு குளிரால் நடுங்க செய்துள்ளது. இந்த சீதேஷு மானவம்என்ற அஸ்திரத்தின் தர்மத்துடன் கூடிய தன்மை இது. இவனை மோகிக்கச் செய்து அழைத்துச் சென்று விட்டது, உயிரை எடுக்கவில்லை. பார்த்தாயா. இவர்களையும் வதைக்கிறேன், மனதில் ஈ.ரமில்லாமல், துஷ்ட காரியங்களையே செய்வதில் கவனமாக இருப்பவர்கள், இந்த யாகத்தை கெடுக்க வந்து பாபாத்மாக்களான இவர்களை கொல்லுகிறேன் என்று லக்ஷ்மணனிடம் சொல்லியபடி லாகவமாக தன் வில்லை எடுத்து, தன் திறமையைக் காட்டுவது போல, நாணையும் பூட்டி ஆக்னேயாஸ்திரத்தை சுபா3ஹுவின் மார்பில் அடித்தார். உடனே அவன் அடிபட்டு வீழ்ந்தான்.மற்றவர்களைவாயவ்யாஸ்திரத்தைக் கொண்டு அடித்தான். யக்ஞத்தைக் கெடுக்க வந்த ராக்ஷஸர்கள் அனைவரையும் அழித்து விடவும், இந்திரன் விஜயனாக வந்த போது முன்னொரு சமயம், பூஜிக்கப்பட்டது போலவே, முகம் மலர, ராகவனை மிகவும் உதார குணமுடையவனாக,முனிவர்கள் கொண்டாடினர். யாகம் முடிந்தவுடன், முனிவர் வடக்கு திசையைப் பார்த்து ராகவனிடம் பின்வருமாறு சொன்னார். –ராகவா, குருவின் வார்த்தையைக் கேட்டு நன்றாக செய்தாய். நானும் கிருதார்த்தனானேன். புகழ் பெற்றவனே, இந்த சித்தாஸ்ரமம் பெயருக்கு ஏற்ப சித்தமாக ஆகியது. – இவ்வாறு ராமனை புகழ்ந்தவாறு, மாலை நேர ஜபங்களை செய்யலானார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், யக்ஞ ரக்ஷணம் என்ற முப்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)