ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 14 – 30
அத்தியாயம் 14 (551) யக்ஷ ராக்ஷஸ யுத்தம் (யக்ஷர்களும், ராக்ஷஸர்களும் போரிடுதல்
இதன் பின், மகோதரன், ப்ரஹஸ்தன், மாரீச, சுக, சாரண, தூம்ராக்ஷன் என்ற ஆறு மந்திரிகளுடன் புறப்பட்டான். இவர்கள் எப்பொழுதுமே யுத்தம் செய்ய ஆவலுடன் இருப்பவர்கள், தங்கள் பலத்தில் எல்லையில்லா கர்வம் உடையவர்கள். உலகையே தன் ஆத்திரத்தால் எரித்து விடுபவன் போல நகரங்களையும், நதிகள், மலைகள், வனங்கள், உப வனங்கள் இவைகளை தாண்டி முஹுர்த்த நேரத்தில் கைலாஸ மலையை சென்றடைந்தான். யுத்தம் செய்யத் தயாராக வந்து நின்ற அவனை யக்ஷர்களால் தடுக்க முடியவில்லை. அரசன் சகோதரன், என்பதால் தயங்கி தனேஸ்வரனிடம் சென்று முறையிட்டனர். அவன் யுத்தம் செய்ய வந்திருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்ட தனாதிபன், யுத்தம் செய்ய இவர்களுக்கும் அனுமதி கொடுத்தான். பெரும் யுத்தம் நடந்தது, மலையையே ஆட்டி வைப்பது போல கோரமான யுத்தம் தொடர்ந்தது. ராக்ஷஸனின் மந்திரிகள் களைத்து விட்டனர். யக்ஷ ராக்ஷஸ மோதல் கடுமையாக இருந்தது. தன் சைன்யத்தின் நிலையைக் கண்டு தசக்ரீவன் உற்சாகப்படுத்த கோஷம் செய்து கொண்டு கோபத்துடன் ஓடினான். இதன் பின் அவன் படையைச் சேர்ந்த ராக்ஷஸர்களை ஆயிரக் கணக்கான யக்ஷர்கள் கொன்று குவித்தனர். கதைகளும், முஸலங்களும், சக்தி தோமரங்களும் வீசப் பட்டன. தசக்ரீவன் அந்த சைன்யத்தை எதிர்த்து நிற்க முடியாமல் திணறினான். மூச்சு முட்டுவது போல உணர்ந்தான். மழை பொழிவது போல அம்புகள் அவனை தடுத்தன. யக்ஷ சஸ்திரங்கள் பட்டு பெரிதும் உடல் காயமும் அவனை வருத்தியது. பெரிய மலையின் மேல் மழைச் சாரல் விழுவது போல அவன் மேல் சஸ்திரங்கள் சரமாரியாக வந்து விழுந்தன. இதிலிருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டு க3தை4யை எடுத்துக் கொண்டு யக்ஷ சைன்யத்தை தாக்கினான். உலர்ந்த கட்டைகளை அடுக்கி இருக்கும் அறையில் அக்னியை காற்றும் துணை செய்து எரிப்பது போல க்ஷண நேரத்தில் யக்ஷர்கள் சைன்யத்தை நிர்மூலமாக்கினான். மந்திரிகள் மகோதரன், சுகன் முதலானோரும் போரில் யக்ஷர்களை பெருமளவில் உயிரிழக்கச் செய்தனர். ரண முடிவில் யக்ஷர்கள் மிகவும் களைத்துப் போனார்கள். சஸ்திரங்கள் கைகளிலிருந்து நழுவின. வெள்ளத்தில் கரைகள் அரிக்கப் படுவதைப் போல ராக்ஷஸ சைன்யத்தின் முன் நிற்க இயலாமல் விழுந்தனர். யுத்த பூமியில் அடிபட்டு இறந்தவர்கள் சுவர்கம் செல்ல அதைக் காண ரிஷிகள் ஆகாயத்தில் கூடினர். தனாதிபன் மேலும் யக்ஷர்களை அனுப்பி வைத்தான், இதனிடையில் பெரும் சேனையோடு சம்யோத கண்டகன் என்ற யக்ஷன் தசக்ரீவனை எதிர்த்து வந்தான். விஷ்ணுவைப் போல தன் சக்கிரத்தால் மாரீசனை வீழ்த்தினான். புண்யம் தீர்ந்தவுடன் ஸ்வர்க லோகத்திலிருந்து பூமிக்கு வந்து விழும் மனிதர்களைப் போல அவன் வீழ்ந்தான். ஒரு முஹுர்த்த நேரம் நினைவிழந்து கிடந்தவன் பின் எழுந்து கொண்டான். தன்னை அடித்த யக்ஷனை துரத்தலானான். காவல் காக்கும் வீரர்களைத் தாண்டி மாளிகையினுள் நுழைந்து விட்டான். தொடர்ந்து வந்த தசக்ரீவனை சூர்யபானு என்ற ப்ரஸித்தி பெற்ற துவார பாலகன் தடுத்தான். தன்னை தடுத்தவனை அலட்சியமாக புறக்கணித்து விட்டு தசக்ரீவன் உள்ளே சென்றான். தடுத்தும் கேட்காமல் உள்ளே நுழையும் தசக்ரீவனை யக்ஷ வீரர்கள் சரமாரியாக அடித்தனர். ரத்தம் பெருகி காயம் அடைந்தாலும் ப்ரும்மாவின் வர பலத்தால் அவன் உடலுக்கு எதுவும் நேரவில்லை. யக்ஷன் கையிலிருந்த பெரிய தோரண கம்பை பிடுங்கி அவனையே திருப்பி அடித்தான். யக்ஷன் தூள் தூளாகிப் போனான். அவன் இருந்த இடமே தெரியவில்லை. இதைக் கண்ட மற்ற யக்ஷர்கள் நடுங்கினர். நதிகளிலும் குகைகளிலும் ஒளிந்து கொண்டனர். ஆயுதங்களை போட்டபடி போட்டு விட்டு உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 15 (552) புஷ்பக ஹரணம் (புஷ்பக விமானத்தை அபகரித்தல்)
ஆயிரக் கணக்கான யக்ஷர்களை அடித்து நொறுக்கி விட்டு தசக்ரீவன் முன்னேறி வருவதைக் கண்டு தனாதிபதியான குபேரன் தன் படைத்தலைவனான மணி பத்ரன் என்பவனை அழைத்து உத்தரவிட்டான். ராவணனை வதம் செய். மணி பத்திரனே, அவனை இனியும் விட்டு வைக்கலாகாது. அவன் எண்ணமும் பாபம், செயலும் பாபமே. யுத்தம் செய்வதில் சிறந்த நம் வீரர்களுக்கு சரணம் அளிக்க வேண்டும். நீ தான் அதை செய்ய முடியும். உடனே மணி பத்ரன் என்ற அந்த யக்ஷ ராஜா, நாலாயிரம் யக்ஷ வீரர்களுடன் போருக்குச் சென்றான். பல விதமான ஆயுதங்களைக் கொண்டு ராக்ஷஸர்களை அடித்து வீழ்த்தினர். நன்றாக கொடு, அடி, உதை என்று சொல்லிக் கொண்டே யுத்தம் செய்தனர். இரு பக்கமும் சமமான பலசாலிகள். யுத்தமும் கோரமாக தொடர்ந்தது. ஆகாயத்தில் தேவ, ரிஷி கந்தர்வர்களும் வேடிக்கை பார்க்க கூடினர். ப்ரஹஸ்தன் ஆயிரம் யக்ஷர்களை, மகோதரன் மற்றொரு கூட்டத்தை என்று அழித்தார்கள். கோபம் கொண்ட மாரீசனும் தன் பங்குக்கு இரண்டாயிரம் யக்ஷ வீரர்களை நாசம் செய்தான். நேர்மையான யக்ஷர்களின் யுத்த நெறி எங்கே? மாயா பலத்தில் மறைந்து நின்று போரிடும் ராக்ஷஸர்கள் எங்கே? எண்ணிக்கையிலும் அவர்கள் அதிகமாக இருந்தனர். தூம்ராக்ஷன் தன் முஸலத்தால் மணி பத்ரனின் மார்பில் கோபத்துடன் ஓங்கி அடித்தான். மணி பத்ரனும் தன் க3தையால் அவன் தலையில் ஓங்கி அடிக்க அவன் நினைவிழந்து தரையில் விழுந்தான். ரத்தம் பெருக தூம்ராக்ஷன் கீழே விழுந்ததைக் கண்டு தசானனன் ஓடி வந்தான். ஓடி வரும் தசானனைப் பார்த்து மணி பத்ரன் தன் சக்தியை எடுத்து மூன்று பாணங்களை அவன் மேல் போட்டான். இதனால் மணிபத்ரனின் மகுடம் கீழே விழுந்தது. ஆயினும் அவன் கலங்கவில்லை. பக்கத்தில் மகுடம் விழுந்ததால் அவனே பின்னால் பார்ஸ்வ மௌலி என்று அழைக்கப் பட்டான். மணி பத்ரன் பின் வாங்கியதைக் கண்டு பெரும் கோலாகல சப்தம் எழுந்தது. இதனிடையில் குபேரனும் அங்கு வந்து சேர்ந்தான். சங்கம், பத்மம் இவைகளுடன் சுக்ர சாபத்தால் பீடிக்கப் பட்ட பாதங்களுடன், சாபத்தின் பலனாக தன் கௌரவத்தை இழந்தவனைப் பார்த்துச் சொன்னான். துர்மதியே, நான் தடுத்தும் கேளாமல் தவறு செய்து கொண்டே போகிறாயே, இதன் பலன் உனக்குத் தெரிய வரும் பொழுது நீ முற்றிலும் அழிந்திருப்பாய். தெரியாமல் விஷத்தை அருந்தி விட்டு, தெரியாமல் செய்த தவறு தானே என்றால், முடிவு வேறு விதமாக ஆகி விடுமா? இது போன்ற நடத்தைகளால் தேவர்கள் சந்தோஷம் அடைவதும் இல்லை. இன்னமும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே. தாய், தந்தையரையும், குருவையும் யார் அவமதிக்கிறானோ, அதன் பலனை அவன் அனுபவித்தே ஆக வேண்டும். யம லோகம் செல்லும் பொழுது இதை அறிவர். நிலையில்லாத இந்த சரீரத்தில் தவம் செய்து தன்னை செம்மை படுத்திக் கொள்ளாதவன், முடிவு காலம் வரும் பொழுது மிகவும் சிரமப் படுவான். தர்மத்தினால், ராஜ்யம் தனம், சௌக்யம் இவற்றை அடைகிறான். அவனே அதர்மத்தினால் துக்கத்தை அனுபவிக்கிறான். சுகத்தை தேடுபவன், தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதர்மம் பாபத்தை சேர்க்கும். பாபத்தின் பலன் துன்பமே. அதையும் அனுபவித்தே தீர வேண்டும். அப்படியிருக்க, ஒருவன் பாப காரியம் செய்வானேயானால், அவன் மூடனே அன்றி வேறு என்ன சொல்ல? துர்புத்தியுடையவன் மனதில் நல்ல எண்ணமே உதிக்காது. எந்த விதமான கர்மாவை செய்கிறானோ, அதற்கேற்ற பலனை அடைகிறான். புத்தியோ, ரூபமோ, பலமோ, புத்திரர்கள், செல்வமோ, தைரியமோ, புண்ய கர்மாக்களின் பலனாகத் தான் ஒருவன் பெறுகிறான். உன் புத்தி இப்படி இருக்கிறது. நீ உன் அழிவைத் தான் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாய். உனக்கு சமமாக நான் நின்று பேசக் கூட கூடாது. அசத்தான காரியங்களை செய்பவர்களுக்கு இது தான் விதிக்கப் பட்டுள்ள நியதி. இவ்வாறு சொல்லி கொண்டிருக்கையிலேயே ராவணனின் மந்திரிகள் மாரீசன் முதலானோர் ஓடி மறைந்தனர். தசக்ரீவன் யக்ஷ ராஜனால் தலையில் அடிபட்டு துன்புற்ற போதிலும் தன் இடத்தை விட்டு அசையவில்லை. நம்பிக்கையை இழக்கவும் இல்லை. திரும்பவும் யுத்தம். இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து காயப் படுத்தினர். த3னதன் ஆக்னேய அஸ்திரத்தை உபயோகித்தான் எனில், ராக்ஷஸேந்திரன் வருணாஸ்திரத்தை பிரயோகித்தான். உடனே தன் மாயா ரூபத்தை எடுத்துக் கொண்டு ராக்ஷஸ ராஜன், மறைந்து நின்று வித விதமான ரூபங்களை எடுத்துக் கொண்டான். புலி, வராகம், மேகம், மலை, சாகரம், மரம், யக்ஷன், தைத்யன் இப்படி பல விதமாக தசானனன் காட்ய ளித்தான். இப்படி த4னத3னை அலைக்கழித்து, கடைசியில், அவன் பெரிய க3தை4யால் ஓங்கி அடித்தான். ரத்தம் ஆறாக பெருக, தனதன் விழுந்தான். வேரோடு பிடுங்கி எறியப் பட்ட அசோக மரம் போல தரையில் கிடந்தான். பத்மம் போன்ற நிதிகள் அவனை சூழ்ந்திருந்தன. நந்தன வனத்துக்கு கொண்டு வந்து அவை குபேரனை உயிர்ப்பித்தன. ராக்ஷஸேந்திரன் குபேரனை ஜயித்து விட்டோம் என்று மகிழ்ந்தான். தன்னுடைய வெற்றியைக் கொண்டாட குபேரனுடைய புஷ்பகம் என்ற விமானத்தை அபகரித்துக் கொண்டான். அதன் தூண்கள் தங்கத்தால் ஆனவை. தோரணங்கள் வைடூரியம் இழைத்து கட்டப் பட்டு இருந்தது. முத்துக்களால் வலைகள் பின்னப் பட்ட ஜன்னல்கள் உடையது. மனோ வேகத்தில் செல்லக் கூடியது. நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை உடையது. ஆகாயத்தில் பறக்கும் அது விரும்பிய ரூபத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதியுடன் இருந்தது. அதன் படிகள் மணிகள் இழைத்து பொன்னால் செய்யப் பட்டிருந்தன. புடமிட்ட பொன்னால் ஆன வேதியை உடையது. தேவர்களை ஏற்றிச் செல்லும் வாகனம். குறைவில்லாதது. எப்பொழுதும் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. மனதுக்கு நிம்மதியை, சுகத்தை தரக் கூடியது. பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியது. ப்ரும்மாவால் நிர்மாணிக்கப் பட்டது. எல்லா வித காமங்களும் நிறைவேறும் வண்ணம் திட்டமிட்டு கட்டப் பெற்றது. உத்தமமானது. மனோகரமானது. குளிரோ, உஷ்ணமோ, எந்த பருவ நிலையிலும் சுகம் தரும் வண்ணம் சுபமாக அமைக்கப் பட்டிருந்தது. இதில் அந்த ராக்ஷஸ ராஜன் ஏறி, மூன்று உலகையும் வெற்றி கொண்ட இறுமாப்புடன், கைலாஸ மலையிருந்து கீழே இறங்கினான். தன் ஆற்றலால் வெற்றி பெற்றதாக மகிழ்ந்து கொண்டாடினான். காற்று வேகத்தில் இந்த விமானத்தில் ஏறி தன் நகரை அடைந்து சபையில் நுழைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 16 (553) ராவண நாம ப்ராப்தி: (ராவணன் என்ற பெயரைப் பெறுதல்)
ராமா, இந்த ராக்ஷஸாதிபன் குபேரனை ஜயித்த பின், மகேஸ்வரன் ஸ்ருஷ்டித்த சரவணம் என்ற உயர்ந்த மலை ப்ரதேசத்திற்கு சென்றான். பாஸ்கரனின் கிரணங்கள் பட்டு தங்கம் போல ஜொலித்துக் கொண்டிருந்த மலையே மற்றொரு பாஸ்கரன் போல இருந்தது. அழகிய வனங்களைக் கொண்ட அந்த மலையில் ஏறுகையில் புஷ்பக விமானம் நின்று விட்டது. ஏன் நின்று விட்டது என்று மந்திரிகளுடன் கலந்தாலோசித்தான். ஏன் நான் நினத்தபடி செல்லவில்லை, பர்வதத்தில் யாரோ தடுக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். சற்று புத்திசாலியான மாரீசன் பதில் சொன்னான். காரணம் இல்லாமல் இந்த புஷ்பகம் நிற்கவில்லை ராஜன், ஒன்று இது குபேரனைத் தவிர மற்றவர்களுக்கு வாகனமாக பயன் படுவதில்லை என்று விதி முறை ஏதாவது இருக்கலாம், தனாத்யக்ஷன் இல்லாததால் நிச்சலனமாக நிற்கிறது போலும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, சிவபெருமானுடைய வாகனமான நந்தி பகவான், பயங்கரமாக, கருப்பும், மஞ்சளும் ஆன நிறமும், வாமன உருவமும், தடுக்க முடியாத விரிந்த புஜ பலமும், முண்டித தலையும், வித்தியாசமான உருவமுமாக அருகில் வந்து நின்று இவர்களைப் பார்த்து, ப4வனுடைய (ப4வ-சிவன்) சிவனுடைய கிங்கரன் நான். நந்திகேஸ்வரன். தசக்ரீவா, திரும்பி போ. இந்த மலை சங்கரன் விளையாடும் இடம். யாரும் இங்கு நெருங்க முடியாது. சுபர்ணனோ, நாக, யக்ஷ, கந்தர்வர்களோ, ராக்ஷஸர்களோ, எந்த ஜீவனும் இங்கு நுழைய முடியாது என்பது நடைமுறை விதி. அதனால் துர்புத்தியே, திரும்பி போ, இல்லையெனில் நாசமடைவாய் என்று எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்ட ராக்ஷஸ ராஜன் அளவில்லா கோபம் கொண்டான். அவன் குண்டலங்கள் ஆடின. ரோஷத்தால் சிவந்த கண்களுடன் புஷ்பகத்திலிருந்து இறங்கி யாரது சங்கரன்? என்று கத்தியபடி மலையடிவாரம் சென்றான். சற்று தூரத்தில் நந்தி பகவான் அருகில் நிற்பதையும் கண்டான். ஜ்வலிக்கும் சூலத்தை கையிலேந்தி, மற்றொரு சங்கரன் போல் நின்று கொண்டிருந்தவரை அலட்சியமாக பார்த்து இடி இடிப்பது போல சிரித்தான். வானர முகம் என்று ஏசினான். பகவான் நந்தியும் கோபம் கொண்டார். கடுமையான குரலில், ஏ, தசானனா, வானர முகம் என்று என்னை எப்பொழுது ஏசினாயோ, கற்களை கொட்டியது போல உபகாசமாக சிரிக்கிறாயோ, அதனாலேயே என் போன்ற உருவத்துடன், என் வீர்யமும், தேஜஸும் கூடிய வானரங்கள், உன் குலத்தை நாசம் செய்ய வரப் போகிறார்கள். நகமும், பற்களுமே ஆயுதங்களாக, மனோ வேகத்தில் சஞ்சாரம் செய்பவர்களாக க்ரூரமாக யுத்தம் செய்யும் ஆவலுடன், வெறி கொண்டு போர் புரிபவர்களாக, பெரிய மலை நடமாடுவது போன்ற உருவத்துடன் பிறப்பார்கள். அவர்கள் உன் கர்வம், அகங்காரம் இவற்றை ஒரேயடியாக படை பலத்துடன் சேர்த்து அடக்கி விடுவார்கள். மந்திரிகள், புத்திரர்கள், உற்றார், உறவினரோடு நாசம் அடைவாய். இதோ, இப்பொழுதே, நான் உன்னை வதம் செய்து விடுவேன் தான். என்னால் முடியும், ஆனால் மாட்டேன். ஏனெனின் உன் பாப கர்மாக்களின் பலனாக நீ ஏற்கனவே ஹதம் செய்யப் பட்டு விட்டாய். நந்தி பகவான் இப்படிச் சொன்னதும், தேவ துந்துபிகள் முழங்கின. புஷ்ப வ்ருஷ்டியும் உண்டாயிற்று. தசானனனோ, சற்றும் யோசியாமல், நந்தி பகவானின் பெருமையையும் உணராமல், மலை மேல் ஏறி புஷ்பகத்தின் வேகத்தை தடுத்து நிறுத்தி என்னை அவமதித்து விட்டாய். இதோ பார், இந்த மலையையே அடியோடு நாசம் செய்து விடுகிறேன். எந்த பலத்தில் ப4வன் என்ற மகேஸ்வரன் இங்கு அரசன் போல விளையாடுகிறான், பார்க்கலாம். பயப்பட வேண்டிய இடத்தில் எதுவும் அறியாமல் பிதற்றுகிறாய். நான் யார் தெரியுமா? என்று சொல்லிக் கொண்டே தன் புஜங்களை விரித்து மலையின் அடியில் கொடுத்து மலையை அசைக்க முயன்றான். மலை அசைந்து ஆடியது. தேவ கணங்கள் நடுங்கினர். பார்வதியும் பயந்து மகேஸ்வரனை அணைத்துக் கொண்டாள். உமா, அப்பொழுது மகாதேவன், தேவர்களுள் சிறந்த ஹரன், தன் கால் கட்டை விரலால் மலையை விளையாட்டாக அழுத்தினார். மலையின் அடியில் அகப்பட்டுக் கொண்ட தசக்ரீவனது புஜங்கள் நசுக்கப் பட்டன. அந்த ராக்ஷஸ ராஜனின் மந்திரிகள் செய்வதறியாது விழித்தனர். இவர்கள் இப்படி நின்றதைக் கண்டு மேலும் கோபமும், கைகள் நசுங்குவதால் ஏற்பட்ட உடல் வருத்தமும் சேர, ராவணன் மூவுலகும் நடுங்கும்படி உரத்த குரலில் அலறினான். அமாத்யர்கள், யுக முடிவு நெருங்கியதோ, வஜ்ரத்தால் அடி பட்டோமோ, என்று குலை நடுங்கினர். சமுத்திரங்கள் கூட அலைகளின் ஆட்டம் அடங்கி நின்றன. மலைகள் அசைந்து கொடுத்தன. யக்ஷர்களும் வித்யாதரர்களும் சித்தர்களும் இது என்ன? என்று மலைத்து நின்றனர். ராக்ஷஸ ராஜனின் பரிதாபமான கதறல் தான் இது என்று அறிந்த மந்திரிகள், ராஜன், மகா தேவனை, உமாபதியை துதி செய். வேறு வழி இல்லை. அவரை தோத்திரம் செய்து வணங்கு. நீலகண்டனை, மகா தேவனை உன் ஸ்தோத்திரங்களால் பிரார்த்தனையால் மகிழ்விப்பாய். அவரையன்றி வேறு யாரும் இன்னிலையில் உன்னை காப்பாற்ற இயலாது. சங்கரன் க்ருபாளு. கருணை நிரம்பியவர். உன் பிரார்த்தனையை கேட்டு நிச்சயம் அருள் புரிவார் என்று அறிவுரை செய்தனர். இதைக் கேட்டு தசானனனும், வ்ருஷபத்வஜனான மகா தேவனை, சங்கரனை துதி செய்து வழி பட்டான். சாம கானம் செய்தும், மற்றும் பல துதிகளை பாடியும் வணங்கி பிரார்த்தனை செய்தான். இப்படி வருந்தி புலம்பியபடி, ராக்ஷஸ ராஜன் ஆயிரம் ஆண்டுகள் தவித்தான். பிறகு, கைலாய மலையின் மேல் உறைந்திருந்த சங்கர பகவான் அவன் கைகளை விடுவித்து தசானனா, உன் வீர்யமும், தன்னம்பிக்கையும் என்னை மகிழ்விக்கின்றன. சைலம் (மலை) கையில் விழுந்தவுடன் நீ போட்ட கூக்குரலால் மூவுலகமும் நடுங்கியது. அதை நினைவில் கொண்டு உன்னை உலகத்தார் ராவணன் என்று அழைப்பார்கள் என்றார். (ராவ-சரய, ஸசரக்ஷெர்ம ராவண- கதறுதல், ஸசரக்ஷெர்மிநங). தேவர்களும், யக்ஷர்களும், மற்றும் உலகில் உள்ளோர் யாவரும் ராவணன், லோக ராவணன் (ராவணன் என்பவன் உலகையே கதறச் செய்தவன்) என்றே அழைப்பர். புலஸ்தியனே போய் வா. எங்கு வேண்டுமானாலும் போ என்றார். தசக்ரீவன் அவரிடம் மகா தேவனே, என்னிடம் தாங்கள் மகிழ்ச்சியடைந்தது உண்மையானால் எனக்கு ஒரு வரம் தாருங்கள். ப்ரும்மா எனக்கு தீர்காயுளையும், யக்ஷ, கந்தர்வ, தேவர்களால் எனக்கு மரணம் இல்லையென்று வரம் அளித்திருக்கிறார். உங்கள் கையால் எனக்கு ஒரு சஸ்திரம், ஆயுதம் தாருங்கள். இப்படி ராவணன் கேட்டதும், சங்கரன், சந்திர ஹாஸம் என்ற தன் வாளைக் கொடுத்தார். மீதி ஆயுளையும் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட ராவணனிடம் எச்சரிக்கையும் செய்தார். இதை அலட்சியமாக எண்ணாதே. நீ சற்று மதிப்பு குறைவாக நடந்து கொண்டாலும் இந்த ஆயுதம் என்னிடம் திரும்பி வந்து விடும். என்றார். இப்படி மகேஸ்வரனே, ராவணன் என்று பெயரிட்டு அழைக்க, அவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு புஷ்பகத்தில் ஏறினான். இதன் பின் பூமி முழுவதும் சுற்றினான். ஆங்காங்கு தென்பட்ட க்ஷத்திரிய அரசர்களை துன்புறுத்திய வண்ணம், பரிவாரங்களோடு பலரை அழித்தான். பலரை தொல்லை பொறுக்காமல் ஓடச் செய்தான். மீதியிருந்தவர்கள், இவனுடைய கர்வத்தையும், அட்டகாசத்தையும் தெரிந்து கொண்டு, இவனைக் காணும் முன்னே தோற்றோம் என்று ஒப்புக் கொண்டார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 17 (554) வேத3வதீ சாப: (வேதவதி என்பவள் கொடுத்த சாபம்)
உலகை சுற்றி வந்த ராவணன் ஒரு முறை இமய மலைச் சாரலுக்கு வந்து சேர்ந்தான். அங்கு மான் தோல் உடுத்தி ஜடை தரித்து தவம் செய்யும் ஒரு கன்யா ஸ்த்ரீயைக் கண்டான். இயல்பாகவே அழகான அந்த ஸ்த்ரீ, தவம், விரதம், நியமங்களின் தேஜஸும் சேர, பிரகாசமாக விளங்கினாள். அவளைக் கண்டு மோகித்து சிரித்துக்கொண்டே அவளை விசாரித்தான். ஏ, அழகிய பெண்ணே, இது என்ன? உன் இளமைக்கு சற்றும் பொருத்தமில்லாத தவ வாழ்க்கை. உன் அழகுக்கும், இள வயதிற்கும் தவம் செய்யும் செயல் ஏற்றது அல்ல. அரசர்களையும் மோகத்தில் ஆழ்த்தக் கூடிய அதி சுகுமாரமான உடல் அழகு உன்னுடையது. இதை தவம் செய்து வருத்துவது முறையல்ல. ஏன் இந்த கஷ்டமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறாய்? என்று இவ்வாறு விசாரித்துக் கொண்டிருக்கையிலேயே, அந்த பெண், அதிதி மரியாதைகளை குறைவற செய்ய ஏற்பாடுகளை செய்தாள். பின் பதில் சொன்னாள். என் தந்தை குசத்வஜன், என்ற ப்ரும்ம ரிஷி. அளவில்லா மகிமை, பெருமை கொண்டவர். ப்ருஹஸ்பதி பிள்ளை, குணத்திலும், தகுதியிலும் ப்ருஹஸ்பதிக்கு சமமாக இருந்தவர் அவர். நித்ய வேத பாராயணம் செய்பவர், அவரது வாக்கிலிருந்து உதித்தவள் நான். என் பெயர் வேதவதி. இதன் பின் தேவ கந்தர்வ, யக்ஷ, பன்னகர்கள், யாவரும் என் தந்தையிடம் என்னை யாசித்து வந்தனர். ராக்ஷஸ ராஜனே: என் தந்தை அவர்களில் யாருக்குமே என்னைத் தர விரும்பவில்லை. என்ன காரணம் என்று கேட்டாயே, ராக்ஷஸேஸ்வரா, சொல்கிறேன் கேள். என் தந்தை விஷ்ணுவைத் தான் தன் மாப்பிள்ளையாக தகுதியுள்ள வரனாக நினைத்து இருக்கிறார். மூவுலக நாயகனான விஷ்ணுவைத் தவிர மற்றவர்களுக்கு என்னைத் தர மறுத்து வந்த சமயம், தன் பலத்தில் கர்வம் கொண்ட தம்பு என்ற தைத்ய அரசன், தூங்கும் பொழுது என் தந்தையைக் கொன்று விட்டான். திடுக்கிட்டுப் போன என் தாய், தந்தையை அணைத்தபடியே நெருப்பில் விழுந்து விட்டாள். நான் மனதில் வரித்த நாராயணனை நினைத்துக் கொண்டு அவனை அடைய தவம் செய்து வருகிறேன். வேறு யாரும் என்னை அடைய முடியாது. நாராயணன் தான் என் பதி என்று சங்கல்பம் செய்து கொண்டு நான் தவ வாழ்வை மேற் கொண்டுள்ளேன். புலஸ்திய நந்தனா, நீ யார் என்பது எனக்குத் தெரியும். நலமாக போய் வா. மூவுலகிலும் நடப்பதை என் தவ வலிமையால் அறிந்து கொண்டு விடுகிறேன். இதைக் கேட்ட பின்பும், காம வசமாகி இருந்த ராவணன் புஷ்பக விமானத்திலிருந்து இறங்கினான். அழகிய பெண்ணே, ஏமாந்து போகிறாய். இப்படி ஒரு எண்ணம் உனக்கு ஏன் வந்தது? இது போன்ற தவ வாழ்க்கையும், பேச்சும் வயதான முதியவர்கள் புண்யத்தை சேர்த்துக் கொள்ள செய்வார்கள். எல்லா வித நல்ல குணங்களையும் கொண்ட நீ இப்படி பேசுவது பொருத்தமாக இல்லையே. மூவுலகும் போற்றத் தகுந்த அழகியே, உன் இளமையை வீணாக்காதே. நான் லங்காதிபதி. தசக்ரீவன் என்று பெயர் பெற்றவன். எனக்கு மனைவியாக வந்து எல்லா போகங்களையும் நன்றாக அனுபவி. அது யார்? விஷ்ணு என்று சொல்கிறாயே? யாரவன்? வீர்யத்திலும், தவத்திலும், போகத்திலும், பலத்தாலும் எனக்கு சமமாக நிற்க முடியுமா அவனால்? அவனைப் போய் நீ விரும்புவதாகச் சொல்கிறாய். உடனே அந்த பெண் வெகுண்டு, நீ சொல்வது சரியல்ல. நீ தான் மூவுலக நாயகனான விஷ்ணுவை அவமதிக்கிறாய். ராக்ஷஸேந்திரா, உன்னைத் தவிர வேறு யாரும் அவரை அவதூறாக பேசியதில்லை. இப்படி வேதவதி நிராகரித்தவுடன் அவள் தலைக் கேசத்தை பிடித்து தூக்கினான். ரோஷத்துடன் தன் தலை கேசத்தை வேகமாக விடுவித்துக் கொண்டவள், நெருப்பு போல ஜ்வலித்தாள். அவள் கைகளே கத்தியாக ராவணன் பற்றியிருந்த கேசத்தை அறுத்து வீழ்த்தியது. அக்னியில் தன் மரணத்தை தீர்மானித்துக் கொண்டு விட்டவளாக, ராவணனைப் பார்த்து பதில் உரைத்தாள். பண்பற்றவனே, நீ அனாவசியமாக என்னைத் தொட்டு பலாத்காரம் செய்த பின், இந்த சரீரத்துடன் இருக்க மாட்டேன். இதை தியாகம் செய்கிறேன். நில், ராவணா, நான் நெருப்பில் விழப் போகிறேன். வனத்தில் தனித்து நிற்கும் என்னிடம் நீ முறை தவறி நடந்ததற்காக நான் திரும்பி வந்து பிறப்பேன். சாதாரணமாக பெண்களால் புருஷர்களை வதம் செய்ய முடியாது. உனக்கு சாபம் கொடுக்கலாம். அது என் தவ வலிமையைக் குறைக்கும். நான் இது வரை யாகம் செய்ததும், தவம் செய்ததும் சிறிதளவாவது இருக்குமானால், நான் அயோனிஜாவாக ஏதோ ஒரு தர்மவானின் குலத்தில் பிறப்பேன், இவ்வாறு சொல்லிக் கொண்டே அவள் அக்னியில் குதித்து விட்டாள். புஷ்பமாரி பொழிந்தது. அவள் தான் ஜனகர் மகளாக வந்தாள். உனக்கு மனைவியாக வாய்த்தாள். நீ தான் சனாதனனான விஷ்ணு. முன் கொண்ட கோபமே அவள் மனதில் வேரூன்றி போய் இருந்தது. ராவணன் வதத்துக்கும் அவளே காரணமானாள். பூமியில், வயலில் கலப்பையின் நுனியில் அகப்பட்டாள். வேதியில், யாக குண்டத்தில் அக்னி பிழம்பு போல ஜ்வலிப்பவள், க்ருத யுகத்தில் இருந்தவள் இந்த வேதவதி. அந்த ராக்ஷஸனை வதம் செய்ய என்றே த்ரேதாயுகத்தில் மிதிலா குலத்தில் தோன்றினாள். ஜனகன் மகளாக வளர்ந்தாள். கலப்பையில் (சீத) உண்டானவள் என்பதால் சீதை என்று பெயர் பெற்றாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 18 (555) மருத்த விஜய: (மருத் கணங்களை ஜயித்தல்)
வேதவதி நெருப்பில் குதித்தது ராவணனிடத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பழைய படி உலகை சுற்ற ஆரம்பித்தான். யாகம் செய்து கொண்டிருந்த மருத்தன் என்ற அரசனைக் கண்டான். உசீர (வாசனையான வேரை உடைய செடி) விதையின் உள் மறைந்து தேவர்களுடன் யாகம் செய்தவன். சம்வர்த்தன் என்ற ப்ரும்ம ரிஷி ப்ரகஸ்பதியின் சகோதரர். மற்ற தேவ கணங்கள் புடை சூழ யாக காரியத்தை செய்து கொண்டிருந்தார். இந்த தேவர்கள் ராவணனின் வர பலத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தனர். எனவே, நேரில் அவனைக் கண்டதும், பயந்து (திர்யக்-குறுக்காக சஞ்சரிப்பவை, பறவை, மிருகங்கள்) உருவை எடுத்துக் கொண்டனர். இந்திரன் மயிலானான். தர்மராஜன் காகமானான். குபேரன் பல்லியானான். வருணன் ஹம்சமானான். மற்ற தேவதைகளும் இப்படி தங்களை மறைத்துக் கொள்ள, ராவணன் அசுத்தமான நாய் போல யாக சாலையினுள் நுழைந்தான். யாகம் செய்து கொண்டிருந்த அரசனிடம், வா யுத்தத்துக்கு, அல்லது தோற்றேன் என்று ஒப்புக் கொள் என்று அதட்டினான். மருத் என்ற அந்த அரசன், யார் நீ என்று வினவ, அட்டகாசமாக சிரித்து, அலட்சியமாக, தன் பெருமை பேசலானான். பார்த்திவனே, என்னைக் கண்டு பரபரப்படையாமல் நிற்கிறாயே. அதைக் கண்டு நான் சந்தோஷப் படுகிறேன். குபேரன் சகோதரன் என்று என்னை தெரிந்து கொண்டாலும் சரி. இந்த உலகில் என் பலத்தை அறியாதவர்கள் கூட இருக்கிறார்களா? என் சகோதரனை ஜயித்து அவன் விமானத்தை அபகரித்துக் கொண்டவன் நான். மருத் என்ற அந்த அரசன், நீ த4ன்யன் – பாக்கியம் செய்தவன் தான், சந்தேகமில்லை. உடன் பிறந்தவனையே ஜயித்திருக்கிறாயே. நிச்சயமாக உனக்கு சமமாக யாரும் இருக்க முடியாது தான். தர்ம வழியில் தவம் செய்து வரங்களைப் பெற்றதாக நான் கேள்விப் பட்டதில்லை, நீ சொல்வது தான். தானாக தற்பெருமை பேசிக் கொள்கிறாய். துர்மதே, நில், இதோ வருகிறேன். இங்கிருந்து நீ உயிருடன் தப்ப முடியாது. என் உயிருள்ளவரை உன்னை விட மாட்டேன். கூர்மையான என் பாணங்களால் உன்னை யம லோகத்துக்கே அனுப்புகிறேன். என்று சொல்லிக் கொண்டே, தன் வில், அம்பு முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போர் புரிய தயாரானான். கோபத்துடன் கிளம்பிய அரசனை வழி மறித்து சம்வர்த்தன் என்ற யாக குருவான மகரிஷி அறிவுரை சொன்னார். ராஜன்: நான் சொல்வதைக் கேள். இந்த சமயம் நீ போர் புரிவதும், அழிப்பதும் சரியல்ல. மாகேஸ்வர யாகம் ஆரம்பித்து விட்டு அதை முடிக்காமல் விடுவது குல நாசனமாகும். யாக தீ ஏற்றியவன் எப்படி கோபத்துக்கு இடம் கொடுக்கலாம். யுத்தம் செய்வது எப்படி சரியாகும்? இந்த ராக்ஷஸனுடன் யுத்தம் செய்து வெற்றி பெற வாய்ப்புகள் பாதி பாதி என்றே வைத்துக் கொள்வோம். சந்தேகத்துக் கிடமான இந்த செயலில் இறங்கும் முன் யோசி, இந்த ராக்ஷஸனும் எளிதில் ஜயிக்க முடியாதவனே. குருவின் இந்த சொல்லைக் கேட்டு அரசன் திரும்பி விட்டான். ஆயுதங்களை வைத்து விட்டு நிதானமாக யாகத்தில் அமர்ந்தான். உடனே ராவணனைச் சேர்ந்தவர்கள் ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்தனர். சுகன், ராவணன் ஜயித்து விட்டான். அரசன் சரணடைந்து விட்டான் என்று முழங்கினான். அங்கு இருந்த மகரிஷிகளை தின்று தீர்த்து ரத்தம் ஆறாக பெருக ஓட விட்டு, ராவணன் கூட்டம் திரும்பிச் சென்றது. அவன் அகன்றதும், தேவர்கள் தங்கள் சுய ரூபத்துடன் கூடி யோசித்தார்கள். இந்திரன் தனக்கு அடைக்கலம் கொடுத்த நீலத் தோகையுடைய மயிலுக்கு நன்றி தெரிவித்தான். இனி உனக்கு பாம்புகளிடம் பயம் இல்லாது போகட்டும். இந்த ஆயிரம் கண்கள், உன் தோகையில் உள்ளவை நான் மழை பொழியச் செய்யும் பொழுது சந்தோஷமாக ஆடி என்னை மகிழ்விக்கட்டும். அதுவரை மயிலுக்கு நீல வண்ணம் மட்டுமே. தேவேந்திரன் வரம் பெற்று நீண்ட தோகையைப் பெற்றன. காகத்தைப் பார்த்து தர்மராஜன், உன்னிடம் நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். மற்ற ஜீவன்களுக்கு வரும் வியாதிகள் உன்னை அண்டாது. உனக்கு மரண பயம் கிடையாது. மனிதர்கள் அடித்து கொன்றாலன்றி உனக்கு மரணம் கிடையாது. இந்த மனிதர்கள் என்னிடம் பயப்படுபவர்கள். பசி தாகம் இவற்றால் வாடி இருப்பவர்கள், உனக்கு ஆகாரம் கொடுத்து வந்தால் தன் சுற்றத்தாரோடு திருப்தியாக இருப்பார்கள். மனம் நிறைந்து நான் உனக்கு அளிக்கும் வரம் இது. வருணனும் ஹம்ச பக்ஷிக்கு ஒரு வரம் கொடுத்தான். கங்கை நீரில் விளையாடிக் கொண்டிருக்கும் நீ, இறக்கைகளே ரதமாக பறந்து செல்லும் ஹம்ஸமே, உனக்கு மிக அழகிய வர்ணம் அமையும். சந்திர மண்டலம் போல குளுமையான வெண்மை நிறத்தில் வளைய வருவாய். சுத்தமான கடல் நுரை போன்ற காந்தியுடன் என் சரீரமான ஜலத்தில் சஞ்சரிப்பாய். ஜலத்தில் நீ அளவற்ற மகிழ்ச்சியடைவாய் என்றான். ராமா, முன் காலத்தில் நீல நிறமும், வெண் திட்டுகளாகவும் நீளமான இறக்கைகளும், அலகு வெண்மையாகவும் இருந்த இப்பக்ஷிகள், இதன் பின் தூய வெண் நிறம் பெற்றன. அதுவே அவைகளுக்கு சிறப்பாயிற்று. பல்லிகளைப் பார்த்து வைஸ்ரவணன் சொன்னான். மலையில் வசித்த இந்த இனத்தவருக்கு பொன் நிறம் அளித்தான். தலையும் உடலும் பொன் நிறம் பெற்றன. இவ்வாறு வரங்கள் அளித்து அரசனுடன் அவரவர் இருப்பிடம் சென்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 19 (556) அனரண்ய சாப: (அனரண்யன் கொடுத்த சாபம்)
ராக்ஷஸாதிபன் மருத் என்ற அரசனை வென்ற திருப்தியோடு சென்றான். எங்கு யுத்தம் கிடைக்கும் என்று ஊர் ஊராக சென்று அரசர்களுடன் மோதிப் பார்த்தான். மகேந்திரன் வருணன் இவர்களுக்கு சமமாக நியாயமாக ஆண்டு வந்த ராஜாக்களிடம் யுத்தம் செய்ய அழைத்தான். அல்லது என்னிடம் தோற்றதாக ஒத்துக் கொள்ளுங்கள் என்று வம்புக்கு இழுத்தான். இது என் கொள்கை இரண்டில் ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இல்லையெனில் நல்ல கதியை அடைய மாட்டீர்கள். க்ஷத்திரியர்களின் லக்ஷணம் இது. அறிவிற் சிறந்த சில அரசர்கள் ஒன்று கூடி தங்களுக்குள் பேசிக் கொண்டு, அப்படியே இருக்கட்டும், உன்னால் நாங்கள் ஜயிக்கப் பட்டதாக நினைத்துக் கொள் என்று சொல்லி விட்டனர். துஷ்யந்தன், கா3தி4, சுரதன், க3யை அரசன் புரூரவன் இவர்கள் ஒன்று சேர்ந்து, தாங்கள் தோற்றதாக ஒப்புக் கொண்டனர். ராவணன் அயோத்தி வந்து சேர்ந்தான். அமராவதி என்ற நகரை இந்திரன் பரிபாலித்து வைத்து இருப்பதை போல, தன் நாட்டை மிகவும் நல்ல முறையில் பாலித்த அனரண்யன் அரசனாக இருந்தான். அவனிடம் போய் ராவணன் யுத்தத்திற்கு அழைத்தான். அல்லது தோற்றதாக ஏற்றுக் கொள். இது தான் என் கொள்கை, சாஸனம் என்றான். அனரண்யன் வெகுண்டான். வா, வா, த்வந்த யுத்தம் செய்வோம். ராக்ஷஸேந்திரனே, உன் பாப காரியங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஒரு நிமிஷம் நின்று தயார் செய்து கொள், நானும் ஆயத்தமாக வருகிறேன். இதற்குள் விஷயம் அறிந்த அரசனின் படைகளும் ராக்ஷஸேந்திரனுடன் போர் செய்ய தயாராக வந்து விட்டனர். பத்தாயிரம் யானைகள், அதைப் போல இரு மடங்கு குதிரைகளும், கணக்கில்லாத ரதங்கள், கால் நடை வீரர்கள் பூமியை மறைத்தபடி ஏராளமான போர் வீரர்கள் பெரும் போருக்கு தயாராக வந்து விட்டனர். யுத்தம் செய்யும் கலையை அறிந்து தேர்ந்தவனே ஸ்ரீ ராமா, அனரண்யன் படை பலம் மிக அற்புதமாக இருந்தது. ராவணன் வீரர்கள் இருக்கும் இடம் வந்த படை வீரர்கள், கடுமையாக போர் செய்தும், யாகாக்னியில் விடப் பட்ட ஹவ்யம் போல அந்த பெரும் படை நொடிப் பொழுதில் மறைந்தது. வெகு நாட்கள் தொடர்ந்து தேடித் தேடி ராவணனின் வீரர்களை போரில் வென்றனர். மீதி இருந்தவர்கள் விட்டில் பூச்சி நெருப்பில் விழுந்து மடிவது போல மடிந்தனர். தன் வீரர்கள் மடிந்ததைக் கண்டு அனரண்யன் தானே ராவணனுடன் நேரடியாக மோதினான். மாரீசன், சுகன், சாரண, ப்ரஹஸ்தன் என்ற ராவணன் மந்திரிகள் தோற்று ஓடினர். ராக்ஷஸ ராஜாவின் மேல் அனரண்யன் தொடுத்த பாணங்கள் எதுவும் செய்ய முடியவில்லை. பல விதமான அஸ்திர, சஸ்திரங்களை பிரயோகித்தும் அனரண்யனால் ராவணனை எதுவும் செய்ய முடியவில்லை. ராவணன் ஓங்கி தன் கைத்தலத்தால் அடித்ததை தாங்க மாட்டாமல் ரதத்திலிருந்து கீழே விழுந்தான். ரதத்திலிருந்து விழுந்து கை கால்கள் முறிய, நிலை குலைந்து சால மரம் வேரோடு சாய்ந்தது போல கிடந்தான். ராவணன் பலமாக சிரித்து, பரிகாசமாக இக்ஷ்வாகு ராஜாவைப் பார்த்து ராஜன், என்னுடன் மோதி என்ன பலன் தெரிந்து கொண்டாயா? போகத்தில் மூழ்கி கிடந்திருக்கிறாய். உலக நடப்பு தெரியவில்லை. மூவுலகிலும் எனக்கு சமமாக த்வந்த யுத்தம் யாரும் செய்ய முடியாது. தெரிந்து கொள். ராஜா அனரண்யன் எதுவும் செய்ய முடியாமல், என்ன செய்வது.? போதாத காலம். என்னை ஜயித்ததாக மார் தட்டிக் கொள்ளாதே. ராக்ஷஸா, என் போதாத காலம் நான் உன்னிடம் இன்று தோற்றேன். நான் புற முதுகு காட்டி ஓட வில்லை. நேருக்கு நேர் யுத்தம் செய்து உன்னால் தோற்கடிக்கப் பெற்றேன். என் உயிரை காப்பாற்றிக் கொள்ள இப்பவும் முடியும். ஆனால் என் இக்ஷ்வாகு குலப் பெருமையை நிலை நிறுத்த நான் தான தர்மங்கள் செய்தது ஏதேனும் இருந்தால், யாக யக்ஞங்கள் செய்ததும், அதன் பலனும் உண்டானால், என் பிரஜைகளை நல்ல முறையில் பாதுகாத்து வந்ததும் உண்மையானால், என் குலத்தில் உன்னை வதைப்பவன் வந்து பிறப்பான். தசரதன் மகனாக, ராமனாக உன்னுடன் போராடி உன்னைக் கொல்ல வருவான். அந்த சமயம் இடி இடிப்பது போல தேவ துந்துபி முழங்கியது. புஷ்ப வ்ருஷ்டியும் உண்டாயிற்று. ராஜா ஸ்வர்கம் சென்றான். ராக்ஷஸேந்திரனும் திரும்பிச் சென்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 20 (557) ராவணன் சந்துக்ஷணம் (ராவணன் போர் முழக்கம் செய்தல்)
பூமியில் இருந்த அரசர்கள் யாவரையும் துன்புறுத்தி வந்த ராக்ஷஸேந்திரன் முனி ஸ்ரேஷ்டரான நாரதரை சந்தித்தான். அவரை வணங்கி தசக்ரீவன் குசல ப்ரச்னம் செய்தான். அதன் பின் மேகத்தின் இடையில் நின்றபடி நாரதன் புஷ்பகத்தில் இருந்த ராவணனுடன் பேச்சு கொடுத்தார். விஸ்ரவஸ் மகனா? ராக்ஷஸ ராஜனே, நில், நில். உன் விக்கிரமம் பற்றி கேள்விப் பட்டேன். நிறைய ஜயித்து உன் சுற்றத்தாரையும், உற்றாரையும் நல்ல நிலைமையில் காத்து வருவதாக அறிந்தேன். சந்தோஷம். இருந்தும் நான் சொல்ல வந்த விஷயம் ஒன்று உண்டு. கேட்பதானால் கேள். கவனமாக கேள். குழந்தாய், திரும்பத் திரும்ப இந்த தேவர்களை ஏன் வதைக்கிறாய். துன்புறுத்துகிறாய். மரணத்தின் பிடியில் இருப்பது போல இங்குள்ளோர் பாதி உயிர் இழந்த நிலையில் இருப்பது போல இருக்கிறார்கள். தேவ, தானவ, தைத்யர்கள், யக்ஷ, கந்தர்வ, ராக்ஷஸர்கள், இவர்கள் கையால் மரணம் அடையாமல் இருக்க (அவத்யத்வம்) என்று வரம் பெற்றிருக்கிறாய். திரும்ப இவர்களை வருத்துவது சரி. ஆனால் மனிதர்கள் அப்படி அல்ல. எப்பொழுதும் செல்வத்தில் அறிவிழந்து, பல கஷ்டங்களை தாங்களே அனுபவித்து வருகிறார்கள். தவிர, முதுமை, பல வியாதிகள் இவர்களை அரித்தெடுக்கின்றன. இது போன்ற விரும்பத்தகாத பல கஷ்டங்களுக்கு இடையில், ஆங்காங்கு யாரோ ஒருவர் இருவர் புத்திசாலிகளாக இருந்து விட்டால், யுத்தம் செய்து அடக்கி விடலாம். ஏற்கனவே தெய்வத்தால் தண்டிக்கப் பட்டவர்களாக, அழிந்து கொண்டே வரும் மனித குலம், பசி, தாகம் இவை வேறு. அவர்களை வருத்த, தன் செயல்களால் சிந்தனையும், துக்கமும் வேறு அலைக்கழிக்க, பல விதமாக வருந்தும் இந்த மனிதர்களை மேலும் ஏன் துன்புறுத்துகிறாய்? ராக்ஷஸேஸ்வரா, உன் புஜ பலம் எப்படிப் பட்டது. மனிதனை இப்படிப் பார். மூடன், விசித்ரமானபொருள், செய்ய வேண்டியது எது செய்யக் கூடாது எது என்ற அறிவும் இல்லாதவர்கள். சிலசமயம் சந்தோஷம் அதிகமாகி விட்டால் வாத்யங்கள் வாசித்தும், நடனமாடியும் பொழுதைக் கழிப்பர். மற்றவர்கள் ஏதோ காரணம் சொல்லி கண்ணீர் விட்டபடி வருந்தியபடி அழுத முகமாகவே காணப்படுகிறார்கள். தாய், தந்தை மகன் என்று பற்று வைத்து, தன் மனைவி, பந்துக்கள் என்று மோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். இப்படி ஏற்கனவே தாங்க முடியாத சோக பாரத்தை சுமப்பவர்களை நீ மேலும் வருத்தாதே. இதற்கு மேல் தாங்கள் அனுபவிப்பது வெறும் துக்கமே என்பதைக் கூட அறிய மாட்டார்கள். இந்த உலகை துன்புறுத்துவது போதும். தாங்களாகவே நிறைய அனுபவிக்கிறார்கள். மனித உலகை நீ ஜயித்ததாகவே வைத்துக் கொள். நீ எதுவும் செய்யாவிட்டால் கூட இவர்கள் ஒரு நாள் யமலோகம் போக வேண்டியவர்களே. அதனால் புலஸ்திய வீரனே, யமனை அடக்கு. யமனை ஜெயித்து விட்டால், மற்ற அனைத்தும் அதனுள் அடக்கம். இதைக் கேட்டு லங்கேசன், தன் தேஜஸால் கர்வம் மேலிட, பெரிதாக சிரித்து, நாரதரை வணங்கி வினவினான். மகரிஷியே சண்டை உங்களுக்கு பிரியம் என்று அறிவேன். தேவ கந்தர்வர்கள் இடையில் சஞ்சரிக்கும் தாங்கள் சொல்வது சரியே. இதோ நான் கிளம்புகிறேன். ரஸாதலம் சென்று வெற்றியோடு வருவேன். மூவுலகையும் ஜயித்து நாகர்களையும், தேவர்களையும் என் வசத்தில் கொண்டு சமுத்திரத்தைக் கடைந்து அமுதம் எடுப்பேன். ரிஷி நாரதர் இதன் பின் தசக்ரீவனைப் பார்த்து சொன்னார். இந்த வழியில் ஏன் போகிறாய்? மற்றொரு வழி இருக்கிறது. யம லோகம் போவது மிக கடினம். யமலோகம் செல்ல மார்கம் இருக்கிறது. யமபுரி தகர்க்க முடியாத பாதுகாப்புடையது. நினைவிருக்கட்டும். இதைக் கேட்டு சரத் கால மேகம் இடி இடிப்பது போல சிரித்த தசானனன் யம புரியை ஜயித்ததாகக் கொள்ளுங்கள். ப்ரும்மன், இதோ நான் வைவஸ்வதனை (யமனை) ஜயிக்க தென் திசை நோக்கி செல்கிறேன். சூரிய குமாரன் அங்கு தானே இருக்கிறான். யுத்தம் செய்யும் ஆவலுடன் எங்கு யுத்தம் கிடைக்கும் என்று அலைந்த பொழுது நான் ஒரு பிரதிக்ஞை செய்தேன். நான்கு லோக பாலர்களையும் என் ஆளுகைக்குள் கொண்டு வருவேன் என்று சபதமிட்டேன். இதோ அதையும் நிறைவேற்றுகிறேன். யமபுரி செல்லுகிறேன். ஜீவன்களை தன் பாசத்தால் கட்டி இழுக்கும் யமனுக்கும் யமனாகிறேன். இப்படி முழக்கமிட்டு, நாரத முனிவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, தன் மந்திரிகளுடன் மகிழ்ச்சியாக தென் திசை நோக்கிச் சென்றான். நாரதரும் முஹுர்த்த நேரம் த்யானத்தில் ஆழ்ந்து இருந்தவர், யோசிக்கலானார். புகையில்லாத நெருப்பு போன்றவர், மனதில் சிந்தனை ஓடியது. எவன் இந்திரன் உள்ளிட்ட மூவுலகையும் காக்கிறானோ, சராசரங்களை ஆட்டி படைக்கிறானோ, அவன் ஆயுள் முடிவை நெருங்கி வரும் பொழுது எப்படி வெற்றியடைவான். தன் செயலே, தான் கொடுத்ததே சாக்ஷியாக, இரண்டாவது நெருப்பு போன்றவன், எந்த மகாத்மாவிடம் பூரண ஞானம் பெற்றவர்கள் கூட செயலற்று போகிறார்களோ, பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாக எவரைக் கண்டு மூவுலகையும் சுற்றி ஓடுகிறார்களோ, அந்த யமராஜனிடம் இந்த ராக்ஷஸேந்திரன் எப்படி தானே போவதாக கிளம்பி இருக்கிறான். எந்த யம ராஜா தானே ப்ரும்மாவாகவும், நற்காரியங்களுக்கும், கெட்ட காரியங்களுக்கும் பயன் தரும் நீதிபதியாக இருக்கிறானோ, மூவுலகும் எவனிடம் சரணடைந்து உள்ளதோ, அந்த யம ராஜனிடம் இவன் எப்படி போய் ஜயிக்கப் போவதாக வேறு சொல்கிறான். தானே தெரிந்து கொள்வான். போய் பார்க்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்க ஆவல் உந்தி தள்ளுகிறது. யம, ராக்ஷஸர்கள் போர் புரிவதை நேரில் பார்க்க வேண்டும்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 21 (558) யம, ராவண யுத்தம். (யமனும் ராவணனும் சண்டையிடுதல்)
ப்ராம்மண ஸ்ரேஷ்டர் நாரதர். யமனுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. நடந்ததை நடந்தபடி அவரிடம் சொல்ல நினைத்து யம புரி சென்றார். அக்னி காரியங்களை செய்து கொண்டிருந்த யமதேவனைப் பார்த்தார். பிராணிகளுக்கு யாருக்கு என்ன பலன் தர வேண்டும் என்று நிர்ணயிக்கும் அதிகாரம் இவருக்கே உரியது. நாரதர் வந்திருப்பதை அறிந்து அவருக்கு அர்க்யம், பாத்யம் முதலானவை கொடுத்து உபசரித்த பின் குசலம் விசாரித்தார், எங்கும் நலம் தானே மகரிஷியே. தர்மம் தழைத்து ஓங்குகிறதா? தர்மத்திற்கு கெடுதல் எதுவும் வந்து விடவில்லையே. இவ்வளவு தூரம் தாங்கள் வரக் காரணம் என்னவோ? தேவ, கந்தர்வர்கள் சதா சேவித்து வரும் தாங்கள் இங்கு வந்தது எனக்கு மிகவும் சந்தோஷம். எனவும் நாரதர் பதிலளித்தார். கேள், சொல்கிறேன். என்ன செய்யவேண்டுமோ தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள். தசக்ரீவன் என்ற ராக்ஷஸன் உன் நகரை ஆக்ரமித்துக் கொள்ள வந்து கொண்டிருக்கிறான். இதைச் சொல்லத்தான் நான் ஓடி வந்தேன். அடி தடியால் இப்பொழுது உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது. என்று சொல்லி முடிக்கும் முன், உதய சூரியன் போல பிரகாசமாக ராக்ஷஸனின் விமானம் தென்பட்டது. புஷ்பகத்தின் பிரபையால் அந்த தேசமே இருள் நீங்கி பிரகாசமாயிற்று. அவன் அருகில் நெருங்கிக் கொண்டிருந்தான். வரும் வழியிலேயே பிராணிகள் தங்கள் நற் கதியையும், மற்றவர் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். தண்டனை அனுபவிக்கும் ஜீவன்கள் அலறுவதையும் கண்டான். புழுக்கள் அரித்துக் கொண்டிருந்த நிலையில் சிலர், நாய்கள் துரத்த சிலர், காது கொண்டு கேட்க முடியாத பயங்கரமான புலம்பல்களும், கதறலும் திடுக்கிடச் செய்தது. வைதரணீம் என்ற நதியைக் கடந்து போகும் ஜீவன்கள். ரத்தம் பெருக நிற்பவர்கள். சுடு மணலில் கால் புதைய நடந்து செல்லும் சிலர். தர்மத்திற்கு விரோதமாக செயல்களைச் செய்த அதர்மிகள் வாள் முனையில் நடந்துச் செல்வதைக் கண்டான். ரௌரவம் என்னும் உப்பு நதியில் கூர்மையான ஆயுதங்கள் முனை கூர்மையாக நீட்டிக் கொண்டிருக்க அதில் பிரயாணம் செய்பவர், தாகம் என்று குடிக்க ஏதாவது வேண்டும் என்று யாசிப்பவர்கள். தாகத்தால் தவிப்போர், பசியினால் வாடுவோர், உயிரிழந்த சவங்களாக ஆன தீனர்கள், இளைத்து துரும்பாகி, நிறமிழந்து, கேசம் அவிழ்ந்து தொங்க, உடல் பூரா அழுக்கு மண்டி கிடக்க, கொடூரமானவர்களாக ஓடும் பலர், நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்கான ஜீவன்களை ராவணன் வழியில் கண்டான். ஒரு சிலர் மட்டும் நல்ல வீடுகளில் பாட்டும், வாத்ய இசையும் கேட்க மகிழ்ச்சியுடன், ஆனந்தமாக இருப்பதை ராவணன் கண்டான். தங்களின் நற்செயல்க ளின் பலனாக இந்த உயர்வை இவர்கள் அடைந்ததாக தெரிந்து கொண்டான். பசுவின் பால், பசுக்களை தானம் செய்தவர்கள், அன்ன தானம் செய்தவர்கள், வீடுகளை தானமாக கொடுத்தவர்கள், இவர்கள் தங்கள் நல்ல செயலின் பலனை அனுபவிக்கின்றனர். சுவர்ணம், மணி, முத்து இவைகளால் அலங்கரிக்கப் பட்ட ஸ்த்ரீகள், இவர்களை உபசரித்தனர். தார்மீகர்களான மற்றும் பலர், தங்கள் தேஜஸால் ஒளி வீசிக் கொண்டிருந்த மற்றும் பலர், இவர்களை ராவணன் கண்டான். தங்கள் தீய செயல்களின் பலனாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஜீவன்களை ராவணன் தன் விக்ரமத்தால் விடுவித்து விட்டான். தசக்ரீவ ராக்ஷஸனால் விடுவிக்கப் பட்ட பிராணிகள், தாங்கள் சற்றும் எதிர்பாராத, நினைத்து கூட பாராத சுகத்தை முஹுர்த்த நேரம் அனுபவித்தனர். ராக்ஷஸன் பலாத்காரமாக இவர்களை விடுவித்தவுடன், யம தூதர்கள் ராக்ஷஸனை துரத்தினர். எல்லா திசைகளிலிருந்தும் கல கலவென்ற ஓசை அதிகரித்தது. தர்ம ராஜனின் சூரர்களான காவல் வீரர்களும், ப்ராஸ, பரிக, சூலம், சக்தி, தோமர என்ற ஆயுதங்களால் புஷ்பகத்தின் மேல் மழையாக பொழிந்து, ராக்ஷஸ வீரர்களை அடித்தனர். அதன் ஆசனங்கள், வேதி தோரணங்கள் இவை முறிந்து விழுந்தன. புஷ்பகத்தை தேனீக்கள் மொய்ப்பது போல மொய்த்து சீக்கிரமே நாசமாக்கினர். கணக்கில்லாத அந்த சேனை வீரர்கள் தாக்கியும், புஷ்பகம் அதிக சேதமில்லாமல் பிழைத்தது. தசானனான ராஜாவின் வீரர்களும் பதிலுக்கு மரங்களையும், கற்களையும் ப்ரஸாதம் எனும் ஆயுதத்தாலும் தங்கள் சக்திக்கு ஏற்ப, எடுத்துக் கொண்டு தாக்குதலைத் தொடர்ந்தனர். யமனுடைய வீரர்களும், ராவணன் மந்திரிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி, அடித்து வீழ்த்தினர். ராக்ஷஸாதிபன் மாற்றி மாற்றி அடி வாங்கி ரத்தம் பெருக, மலர்ந்த அசோக புஷ்பம் போல காணப் பட்டான். இருந்தும் யம சைன்யத்தின் மேல் பயங்கரமான சஸ்திரங்களையும், மரம், கல் இவற்றையும் கொண்டு சர மாரியாக போட்டபடி இருந்தான். சல்லடையாக துளைக்கப் பட்ட நிலையிலும், தசானனன் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. நூறு யம படர்கள் ஒன்று சேர்ந்து ராக்ஷஸ ராஜனை சூழ்ந்து கொண்டனர். மேகம் மலையை சூழ்ந்து கொள்வது போல நாலாபுறமும் யமனின் வீரர்கள் சூலமும், பிண்டி பாலமும் கொண்டு அடிக்கவும், மூச்சு விட முடியாமல் திணறிய தசானனன், புஷ்பகத்தை விட்டு இறங்கி தரையில் நின்றான். கையில் வில்லும் அம்பும், அவனே அந்தகன் போல நின்றான். கோபத்துடன் பாசுபதாஸ்த்ரம் என்ற உயர்ந்த அஸ்திரத்தை வில்லில் பூட்டி, நில், நில் என்று அவர்களைப் பார்த்து கத்தியபடி, பிரயோகம் செய்தான். கோபத்துடன் சங்கரன் திரிபுரத்தை எரித்த காட்சியை நினைவூட்டியது. புகையில்லாத ஜ்வாலையுடன் அந்த அஸ்திரம், கோடை காலத்தில் வனத்தை அழிக்கும் காட்டுத்தீ போல பரவிச் சென்றது. ஜ்வாலை மாலையாக அதிலிருந்து வெளிப்பட அந்த அஸ்திரம் மரங்களையும் புதர்களையும் எரித்தபடி சென்றது. வைவஸ்வதனின் சேனை வீரர்கள், இந்த அஸ்திரத்தின் தேஜஸால் எரிந்து சாம்பலானார்கள். காட்டுத் தீயில் மடிந்து விழுந்த யானைகள் போல கீழே சரிந்தனர். இதைக் கண்டு ராக்ஷஸ ராஜேந்திரன் தன் மந்திரிகளுடன் சேர்ந்து அட்டகாசமாக சிரித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 22 (559) யம ஜய: (யமனை ஜயித்தல்)
ராவணனின் வெற்றி முழக்கத்தைக் கேட்டு, பிரபுவான வைவஸ்வதன், தன் சைன்யம் அழிந்ததையும், சத்ரு ஜயித்து விட்டான் என்றும் புரிந்து கொண்டான். தன் வீரர்கள் வதம் செய்யப் பட்ட செய்தி அறிந்து, கண்கள் கோபத்தால் சிவக்க, ரதத்தைக் கொண்டு வர பணித்தான். உடனே சாரதியும் திவ்யமான ரதத்தை கொண்டு வந்து நிறுத்தினான். யமனும் ரதத்தில் ஏறினான். கையில் பாசத்துடன் ம்ருத்யு ராவணன் முன் நின்றான். மூவுலகத்தையும் தன் பாசத்தால் கட்டி இழுத்துச் செல்பவன், கால தண்டமும் அருகில் இருக்க யம ப்ரஹரணம், தேஜஸால் ஜ்வலிக்கும் அக்னி போன்றது. அவனுடன் இருந்த முத்கரம் என்ற ஆயுதமும் நெருப்பே உருக் கொண்டு வந்தது போல இருந்தது. பெரும் கோஷத்துடன் ரதத்தை ராவணன் இருக்கும் இடம் நோக்கி செலுத்தினான். ராக்ஷஸ மந்திரிகள் ஓட்டம் பிடித்தனர். அல்பமான பலம் உள்ளவர்கள் அவர்கள். யமனின் முன் நிற்பது எப்படி சாத்தியம்? நம்மால் முடியாது என்று அலறிக் கொண்டு ஓடி மறைந்தனர். தசக்ரீவனுக்கு பயமும் தோன்றவில்லை. வாட்டமும் அடையவில்லை. யமராஜன் அருகில் சென்று ஆயுதங்களால் அடித்த போதிலும் அசையாமல் மலை போல நின்றான். ஏழு இரவுகள் இப்படி யுத்தம் நடந்தது. ராவணன் விழவும் இல்லை, ஜயிக்கவும் இல்லை. இருவருமே நல்ல பலசாலிகள். இருவருமே வெற்றி பெறத் துடித்தனர். இதனிடையில் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், பிரஜாபதியை முன்னிட்டுக் கொண்டு அந்த ரண பூமியை வந்தடைந்தனர். ஒரு யுகமே முடிந்து விட்டது போல இருந்தது. இருவரும் யுத்தம் செய்ய சளைக்கவுமில்லை. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கவும் முடியாத நிலை. ராக்ஷஸேந்திரன் தன் வில்லின் நாணை விரலால் சுண்டி விட்டு இடைவிடாது பிரயோகம் செய்த பாணங்கள் ஆகாயத்தையே மறைத்தன. ம்ருத்யுவை, அவன் சாரதியை என்று மாற்றி மாற்றித் தாக்கினான். யமனும் பதிலுக்கு ஆயிரக்கணக்கான பாணங்களைக் கொண்டு ராவணன் மர்மத்தில் அடித்தான். கோபம் கொண்ட யமனின் வாயிலிருந்து ஜ்வாலா மாலி கோபத்துடன் பெருமூச்சு விட அக்னியாக புகையுடன் வெளிஸ்ரீ வந்தது. தேவ தானவர்கள் ஆரவாரத்துடன் யமனை சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். ம்ருத்யு வைவஸ்வதனைப் பார்த்து விடுங்கள், இந்த ராக்ஷஸர்களைக் கொல்லாமல் விட மாட்டேன், இந்த ராக்ஷஸன் இனியும் இருக்க கூடாது, தன் எல்லையை மீறி துள்ளுகிறான், ஹிரண்யகசிபு, ஸ்ரீமான் நமுசி, சம்பரன், போலவும், விசந்தி தூமகேது போலவும், பலி, வைரோசனன் போலவும், தம்பு என்ற தைத்ய ராஜன், வ்ருத்திரன், பாணன், மற்றும் பல ராஜ ரிஷிகள் சாஸ்திரம் அறிந்தவர்கள், கந்தர்வர்கள், மகோரர்கள், ரிஷிகள், பாம்புகள், தைத்யர்கள், யக்ஷர்கள், அப்ஸரோ கணங்கள், யுக முடிவில் பூமி தலைகீழாக புரட்டி எடுக்கப் படும் பொழுது அழிவை அடைந்தார்கள். மலைகளும், நதிகளும், மரங்களும் நிறைந்த பூமி நாசம் அடைந்ததையும் நான் கண்டிருக்கிறேன். என்ன தான் பலசாலியானாலும் என் கை பாசத்துக்கு தப்ப முடியாது என்பது தான் இயற்கையின் நியதி. இந்த நிசாசரன் எம்மாத்திரம்? என்னை விடுங்கள், இவனை கொன்று விட்டு வருகிறேன். என் கண்ணில் பட்டவன் என்ன பலவானானாலும் உயிருடன் இருக்க மாட்டான். இது என் பலம் மட்டும் அல்ல. முஹுர்த்த காலம் கூட என் கண்ணில் பட்ட பின் உயிருடன் இருக்கக் கூடாது என்பது இயற்கையின் நியதி. இதைக் கேட்டு தர்ம ராஜன் ம்ருத்யுவைப் பார்த்து நீ இங்கேயே நில், நான் அவனை வதைக்கிறேன் என்று கால தண்டத்தை கையில் எடுத்துக் கொண்டு மகா ரோஷத்துடன் கிளம்பினார். கால பாசங்கள் அனைத்தும் அவர் அருகில் கொண்டு வந்து வைக்கப் பட்டன. பாவக, அசனி இவை போன்ற முத்கரம் என்றம் ஆயுதமும் கொண்டு வந்து வைக்கப் பட்டது. இதைக் கண்ணால் கண்டாலே பிராணிகள் உயிரை விடும் என்பது உறுதி. தொட்டாலும், மேலே விழுந்தாலும் என்ன ஆகும்? ராக்ஷஸனை தகிப்பது போல அவன் மேல் விழுந்த சமயம், மற்ற அனைவரும் அந்த இடத்தை விட்டே பயந்து அலறிக் கொண்டு ஓடி விட்டனர். யம தண்டம் உயர்த்தப் பட்டதைக் கண்டு தேவர்களும் நடுங்கினர். ராவணன் அந்த தண்டம் விழப் போகிறது என்று திகிலோடு காத்திருக்கையில் ப்ரும்மா வந்து தடுத்தார். வைவஸ்வத மகா பா3ஹோ: இந்த நிசாசரனை உன் தண்டத்தால் அடிக்காதே. நான் இவனுக்கு வரம் கொடுத்திருக்கிறேன். அதை நீ பொய்யாக்கி விடாதே. என் வாக்கை காப்பாற்று என்றார். என் வாக்கு பொய்யானாலும், என்னை மீறி யார் என்ன செய்தாலும், அது மூவுலகையும் பாதிக்கும். உலகில் சத்யமே இல்லை என்றாகும். இந்த கால தண்டமும் முன் ஒரு சமயம் என்னால் உண்டாக்கப் பட்டது. ம்ருத்யுவுக்கு கொடுத்தேன். தனக்கு பிடித்தவனோ, பிடிக்காதவனோ, நல்லவனோ, கெட்டவனோ, யாரானாலும் ரௌத்ரனாக பிராணிகளை ஸம்ஹாரம் செய்ய, மூவுலகிலும் பயத்தை தரும் இந்த அமோகமான கால தண்டத்தை நான் ஸ்ருஷ்டி செய்தேன். இதைக் கொண்டு இந்த ராக்ஷஸனை தற்சமயம் கொல்லாதே. (ந, ந என்று இரண்டு தடவை, கொல்லாதே, கொல்லாதே என்று இரண்டு தடவை சொன்னதாக திலகருடைய உரை). இது ராவணன் மேல் விழுந்தால் அவன் முஹுர்த்த நேரம் கூட உயிருடன் இருக்க மாட்டான். இது ராவணன் மேல் விழுந்து அவன் அழிந்தாலும் ஆபத்து, அழியா விட்டாலும் ஆபத்து. இரண்டுமே அசத்யமாகும். (ராவணன் அழிந்தால், ப்ரும்மா கொடுத்த வரம் பொய்யாகும். அழியா விட்டால், காலதண்டம் பாரபக்ஷம் இல்லாமல் உயிரை பறிக்கும் என்பது பொய்யாகும். இரண்டு விதத்திலும் சத்யத்திற்கு சோதனையே.) இந்த தண்டத்தை லங்கேசன் மேல் பிரயோகிக்க எண்ணி உயர்த்தியதை தாழ்த்து. அடிக்காதே. என்னை சத்யவானாக செய். உலகம் முழுவதும் நீ பார்த்து நடப்புகளை அறிந்தவன். என்று இவ்வாறு ப்ரும்மா சொல்லவும் தர்ம ராஜன், இதோ என் தண்டத்தை தாழ்த்திக் கொள்கிறேன். எனக்கு உங்கள் சொல் மதிக்கத் தகுந்ததே. என் மரியாதைக் குரியவர்கள் தாங்கள். ரண பூமியில் வந்து நின்ற பின், நான் வேறு என்ன செய்ய? வரத்தை சொல்லி நான் இவனை அடிக்கக் கூடாது என்று தடுத்து விட்டீர்கள். இந்த ராக்ஷஸன் கண்ணுக்குத் தெரியாமல் நான் மறைகிறேன் என்று சொல்லி அந்த க்ஷணமே அந்தர்த்யானமானான். குதிரைகளும், ரதங்களும் கூட மறைந்தன. தசக்ரீவன் உடனே தான் ஜயித்ததாக உரத்த குரலில் அறிவித்தான். கோஷம் இட்டான். புஷ்பகத்தில் ஏறி யமபுரத்தை விட்டு வெளியேறினான். வைவஸ்வதனும், மற்ற தேவர்களும், ப்ரும்மாவும், மகிழ்ச்சியுடன் தேவ லோகம் சென்றனர். நாரத மகா முனிவரும் திருப்தியுடன் அகன்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 23 (560) வருண ஜய: (வருணனை ஜயித்தல்)
மூன்று உலகிலும் புகழ் பெற்ற யமராஜனை வென்ற களிப்புடன் கிளம்பிய ராவணன், மேலும் யுத்தம் செய்யும் ஆவலுடன் தன் சகாக்களைப் பார்த்துச் சொன்னான். உடல் பூரா காயம், வழிந்தோடும் ரத்தக் கறை கூட இன்னமும் மறையவில்லை. இந்த நிலையிலும் யுத்தம் செய்ய விழையும், ராவணனைப் பார்த்து, உடன் இருந்தோர் ஆச்சர்யம் அடைந்தனர். இது என்ன வெறி என்பது போல அவனை பார்த்தனர். மாரீசன் முதலான மந்திரிகள், ஜய கோஷம் செய்து வாழ்த்தி தயங்கி நிற்க, ராவணன் அவர்களை உற்சாகப் படுத்தி, புஷ்பக விமானத்தில் ஏறச் செய்தான். இதன் பின் ரஸாதலம் சென்று, பாற்கடலை அடைந்தனர். தைத்ய உரக கணங்கள் நிறைந்ததும், வருணன் கவனமாக பாதுகாத்து வைத்திருந்ததுமான அந்த பாற்கடலுள், வாசுகியின் ஆதிக்கத்தில் இருந்த போகவதியை அடைந்தான். நாகர்களை தன் வசம் செய்து கொண்டபின், மணிமயீ என்ற நகரை அடைந்தான். காற்று கூட புக முடியாத கவசங்களுடன் தைத்யர்கள், வசித்தனர். வரங்கள் பெற்று, கவலையின்றி இருந்தனர். ராக்ஷஸர்கள் அவர்களை சூழ்ந்து நின்று கொண்டு போருக்கு அழைத்தனர். அந்த தைத்யர்கள் நல்ல பலசாலிகள். தவிர, பலவிதமான ஆயுதங்களையும் உபயோகிக்க அறிந்தவர்கள், தாங்களும் யுத்த தினவு எடுத்த தோள்களுடன், தயாராக இருந்தவர்கள் உடனே சம்மதித்தனர். இருவரும் சூலங்களாலும், த்ரிசூலங்களாலும், குலிசங்கள், பட்டஸ, கத்தி பரஸ்வதம் இவைகளால் ஒருவரையொருவர் குத்தியும், அடித்தும் தள்ளியும் பெரும் போர் நடந்தது. ராக்ஷஸர்களும் தானவர்களும் சளைக்காது தொடர்ந்து யுத்தம் செய்தனர். இப்படி பல வருஷங்கள் கடந்தன. வெற்றி தோல்வி, எதுவும் இன்றி, இரு தரப்பாரும் யுத்தம் செய்வதில் முனைந்து இருந்தனர். அச்சமயம் மூன்று உலக நடப்புகளையும் கவனித்துக் கொண்டிருந்த பிதாமகர் அங்கு வந்து சேர்ந்தார். காற்று புகாத கவசங்களையுடைய தைத்யர்களைத் தடுத்து அவர்களிடம் இந்த ராவணனை தேவ, அசுரர்கள் யாருமே வெல்ல முடியாது. மேலும் யுத்தம் செய்து ஏன் வீணாக நாசமாகிறீர்கள், அவனுடன் நட்பு கொள்வது தான் உங்களுக்கு நன்மை என்றார். எல்லாவித செல்வங்களையும் பிரிக்காமல் சேர்த்து அனுபவியுங்கள். நட்பின் இலக்கணம் இது தான். இதன் பின் ராவணன், அக்னியை சாக்ஷியாக வைத்து அவர்களுடன் நட்பு கொண்டான். நிவாத கவசா: – காற்று (கூட) புகாத கவசங்களை அணிந்தவர்கள், அவர்களுடன் மகிழ்ச்சியாக, திருப்தியாக இருந்தான். அங்கு அவர்களுடன், அவர்கள் செய்த உபசாரங்களை ஏற்றுக் கொண்டு ஒரு வருஷம் வசித்தான். பின் தன் நகர் திரும்பினான். தன் நகரில், பிரஜைகளும், மற்றவர்களும் அன்புடன், மதிப்புடன் அவனை கொண்டாடினர். ராவணன் இனிது வாழ்ந்தான். மாயா பலத்தையும் பற்றித் தெரிந்து கொண்டான். நூறு விதமான மாயா யுத்த முறைகளை கற்றான். வருணன் ஊரைத் தேடி ரஸாதலம் பூராவும் தேடினான். கால கேயர்கள் வாழ்ந்த அச்ம நகரம் (கல்லால் ஆன ஊர்) என்ற இடத்தை அடைந்தான். அங்கு சென்று மிகுந்த உடல் பலமும், அதனால் வரும் கர்வமுமாக இருந்த காலகேயர்களை கொன்றான். அச்சமயம் அதிக பலமில்லாதவன் என்று தெரிந்திருந்தும், சூர்ப்பணகையின் கணவனை கொன்று விட்டான். வித்யுத்ஜிஹ்வன், நாக்கினால் நக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம் அடித்து விட்டான். ஒரு முஹுர்த்த நேரத்தில் நாலாயிரம் தைத்யர்களை வெட்டி சாய்த்து விட்டு கைலாஸ மலை போல வெண் நிறமான வருணன் மாளிகையை ஆக்ரமித்துக் கொண்டு ஆண்டான். பாலை பெருக்கிக் கொண்டிருந்த சுரபி என்ற காமதேனுவைக் கண்டான். இந்த சுரபியின் பால் பெருகி பெருகி தான் பாற்கடல் தோன்றியதாக வரலாறு. ருஷப ராஜனையும், பசுவையும், மகாதேவனுடைய வாகனமான நந்திகேஸ்வரருடைய தாயாரையும் கண்டான். வராரணி என்ற சூரியனைக் கண்டான். இவர் அருளால் தான் சந்திரன் குளுமையான கிரணங்களுடன் பிரகாசிக்கிறான், இரவை ஆட்சி செய்கிறான் என்பதும் வரலாறு. இந்த சந்திரனை அண்டி, நுரையை உண்டு ஜீவிக்கும் மகரிஷிகள் பலர் வாழ்ந்து வந்தனர். அம்ருதம் உற்பத்தியான இடம் இது. பித்ருக்கள் தங்களுக்கு அளிக்கப் படும் ஸ்வதா எனும் உணவை பெறுவதும் இங்குதான். சுரபியை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து ராவணன் வருணன் மாளிகையினுள் நுழைந்தான். பலமான காவல் வீரர்களையும் தாண்டி, பாதுகாப்பாக பாலிக்கப் பட்டு வந்த நகரினுள் நுழைந்தான். நீர் அருவிகள் நூற்றுக் கணக்காக இருந்ததும், சரத் கால ஆகாயம் போல நிர்மலமாக இருந்ததுமான மாளிகையைக் கண்டு வியந்தான். வருணன் நகரில் பிரஜைகள் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக இருப்பதையும் கண்டான், படை வீரர்களை அடித்தும், தானும் அடி வாங்கியும், சற்று நேரம் சென்றது. பின் ராக்ஷஸ ராஜா அவர்களைப் பார்த்து, உங்கள் அரசனிடம் தெரிவியுங்கள். யுத்தம் செய்ய, ராவணன் வந்திருக்கிறான். யுத்தம் செய் அல்லது என்னிடம் தோற்றேன் என்று சொல்லச் சொல். அஞ்சலி செய்தபடி, உனக்கு இங்கு ஒரு பயமும் இல்லை என்று சொல்லச் சொல் என்றான். இதற்குள் கோபம் கொண்ட வருணனின் ஆட்கள், படை சூழ வந்து சேர்ந்தனர். புத்ர, பௌத்ரர்கள், படை வீரர்கள், நல்ல வீர்யமுடைய கேன, புஷ்கரன் என்ற வீரர்களும் திரண்டு வந்து சேர்ந்தனர். நினைத்த இடம் செல்லும் ரதங்களில், இளம் சூரியனின் பிரகாசத்துடன் போருக்குத் தயாராக வந்தனர். பயங்கரமான யுத்தம் தொடர்ந்தது. தசக்ரீவ ராக்ஷஸனும், அமாத்யர்களும் சேர்ந்து அடித்த அடியில், க்ஷண நேரத்தில் விழுந்தனர். வருணனின் புத்திரர்கள் தங்கள் படை நாசம் அடைந்ததைக் கண்டு, ராவண பாணங்கள் துரத்த, புஷ்பகத்தில், வீற்றிருந்த ராவணனை பார்த்த படியே ரதத்தில் ஏறி, ஆகாயத்தை அடைந்தனர். அங்கிருந்தபடியே பயங்கரமாக யுத்தம் செய்தனர். தேவ தானவர்க ளிடையில் நடக்கும் யுத்தம் போல வெகு தீவிரமான யுத்தம் நடந்தது. மகோதரன் முதலானோர், தங்கள் தலைவன் யுத்த பூமியில் செய்த சாகஸங்களால் உற்சாகம் பெற்றனர். ம்ருத்யு பயமோ, தோற்போம் என்ற கவலையோ இல்லை. வருண புத்திரர்கள், குதிரைகள் ரதங்களோடு துவண்டு விழுந்தனர். அதைக் கண்டு பெருத்த குரலில் அட்டகாசமாக ஆரவாரம் செய்தனர். வருண புத்திரர்கள் விடவில்லை. ரதங்களை விட்டு வில்லை எடுத்துக் கொண்டனர். எல்லோருமாக ராவணனை அடிக்கலாயினர். மேகம் மகா கிரியை பிளந்தது போல இரு பக்கமும் பாணங்கள் மழையாக பொழியலாயின. சற்று நேரத்தில், வருண புத்திரர்கள், கணக்கில்லாமல் மேலே வந்து வீழ்ந்த பாணங்களால் சேற்றில் அகப்பட்டுக் கொண்ட யானைகள் போல தவித்தனர். இதைக் கண்ட ராவணன் அட்டகாசம் செய்தான். ராக்ஷஸ படையினர் கொன்று குவித்ததைத் தவிர மீதி இருந்தவர் ஓடி ஒளியலாயினர். அவர்களைப் பார்த்து ராவணன் கத்தினான். வருணனிடம் போய் சொல்லுங்கள். எங்கே அவன்? எனவும், வருணனின் மந்திரி வினயமாக அவர் ப்ரும்ம லோகம் போய் இருப்பதை தெரிவித்தான். நீ அறை கூவி அழைக்கும் கந்தர்வனான அரசன் தற்சமயம் இங்கு இல்லை. ஏன் வீணாக அலறுகிறாய். இங்கு இந்த குழந்தைகளைக் கொன்று விட்டதாக மார் தட்டிக் கொள்கிறாய். இதனால் சற்றும் பாதிக்கப் படாமல், ராவணன் தன் பெயர் சொல்லி, தான் வென்று விட்டதாக அறிவித்தான். அதே அட்டகாச சிரிப்புடன் வருணாலயம் விட்டு விலகி ஊர் திரும்பினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 24 (561) க2ர, சூர்ப்பணகா2 த3ண்டகா வாஸாதே3ச: (கரனையும், சூர்பணகையையும் தண்டக வனத்தில் வசிக்க கட்டளையிடுதல்).
மன நிறைவோடு திரும்பிய ராவணன் வரும் வழியில் ராஜ குமாரிகள், ரிஷி, தேவ கந்தர்வ பெண்களைக் கவர்ந்து கொண்டு வந்தான். எந்த பெண் லக்ஷணமாக இருந்தாலும், தன் கண்ணில் பட்ட எந்த ஸ்த்ரீயானாலும், தன் இஷ்டப்படி, ராக்ஷஸன், அவள் உறவினர்களை, பந்து ஜனங்களைக் கொன்று தள்ளி விட்டு, விமானத்தில் ஏற்றிக் கொண்டு, வந்து விடுவான். இது போல யக்ஷ, பன்னக கன்னிகள், ராக்ஷஸ, அசுர, மனித ஸ்த்ரீகளை யக்ஷ, தானவ, கன்னிகளை, விமானத்தில் ஏற்றி நிரப்பிக் கொண்டான். அவர்கள் எல்லோருமே வருந்திக் கண்ணீர் விட்டனர். அவர்கள் துக்கமும் நெருப்பாக ஜ்வாலை வீசியதோ எனும் படி இருந்தது. இந்த கொடி போன்ற உடலழகுடைய பெண்களைக் கொண்டு, நதிகளால் சாகரம் நிரம்புவது போல, அந்த விமானம் நிரம்பியது. ஒவ்வொருவரும், பயம் சோகம், இவற்றுடன் அமங்கலமான கண்ணீருடன் இருந்தனர். நாக கந்தர்வ கன்னிகளும், மகரிஷிகளின் மகள்கள், தைத்ய தானவ கன்னிகள், விமானத்தில் நூற்றுக் கணக்காக அழுதபடி இருந்தனர். நீளமான கேசமும், அழகிய உடல் அமைப்பும் கொண்டவர்கள். பூர்ண சந்திரன் போன்ற முகம் உடையவர்கள், பெருத்த ஸ்தனங்களும், வஜ்ரத்தின் வேதிக்கு சமமான அழகுடையவர்கள், புடமிட்ட பொன் நிறத்தினர். பயமும் வருத்தமும் அலைக்கழிக்க, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அபலைப் பெண்கள், அவர்கள் வெளியிட்ட உஷ்ண மூச்சுக் காற்றினால், சூழ்நிலையே வெப்பம் கூடியதாக ஆயிற்று. அக்னி ஹோத்ரம் செய்யும் பாத்திரம் போல அந்த விமானம் இருந்தது. தசக்ரீவன் பலவந்தமாக வசப்படுத்திக் கொண்ட அந்த பெண்கள், கரும் புள்ளி மான் சிங்கத்திடம் அகப்பட்டுக் கொண்டது போல, கண்களிலேயே தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியபடி வாடிய முகத்தோடு இருந்தனர். சிலர் நம்மை விழுங்கி விடுவானோ என்று பயந்தனர், சிலர், கொன்று விடுவானோ என்று பயந்தனர், தாய் தந்தையரை, கணவன் மாரை நினைத்து சிலர் ஏங்கினர். சகோதரர்களை நினைத்து சிலர் கதறினர். நான் இல்லாமல் என் குழந்தை என்ன செய்வானோ, என் கணவன் என்ன செய்வான், என் தாய் என்ன செய்வாளோ என்ற ஓலம் நிறைந்தது. முன் ஜன்மத்தில் என்ன பாபம் செய்தேனோ, மரணமே என்னை ஏற்றுக் கொள் என்ற குரல்கள் கேட்டன. இந்த துக்கத்திற்கு முடிவே கிடையாதா என்று கதறும் சத்தம் சேர்ந்து கொண்டது. அஹோ: தி4க். இந்த மனித உலகம் போல மட்டமானது வேறு எதுவும் இருக்க முடியாது. அபலைகளான நம்மைக் காக்க வந்த நம் பந்துக்களையும் இந்த ராவணன் கொன்று விட்டானே. சூரிய உதயம் ஆனவுடன் நக்ஷத்திரங்கள் காணாமல் போவது போல நம்மை ரக்ஷித்து வந்த பந்துக்கள் இருக்கும் இடம் தெரியாமல் போனார்கள். இந்த ராக்ஷஸன், பல விதமான உபாயங்களை பயன் படுத்தி, வதம் செய்து தானே ரசித்து மகிழுகிறான். தவறான செயல், தவறான இடத்தில் விக்ரமம், யார் எடுத்துச் சொல்வார்கள்? பிறன் மனையை தொடுதல் பாபம் என்று கூட இவனுக்குத் தெரியாதா? சொல்வாரும் இல்லையே. இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறானே, இவன் ஒரு பெண்ணின் காரணமாகவே வதம் செய்யப் படட்டும். சதியான, உத்தம ஸ்திரீகள் பலரும் ராவணனை இப்படி சபித்தனர். இவர்கள் சாபமிட்ட பொழுது ஆகாயத்தில் துந்துபி முழங்கியது. பூ மாரி பொழிந்தது. பதிவிரதைகளான ஸ்திரீகளால் சபிக்கப் பட்டோமே என்ற கவலை சிறிதும் இன்றி ராவணன் தன் நகரமான லங்கையினுள் நுழைந்தான். அவனைச் சார்ந்த ராக்ஷஸர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனிடையில் ராவணன் சகோதரி தடாலென்று பூமியில் வந்து விழுந்தாள். தன் சகோதரியை தூக்கி நிறுத்தி ராவணன் சமாதானப் படுத்தினான். சொல், என்ன சொல்ல வந்தாயோ, பயமில்லாமல் சொல்லு. என்றான். கண்கள் சிவக்க அழுது புலம்பியவள், ராஜன், என் கணவனை ஏன் கொன்றாய்? உன் பலத்தைக் காட்டி என்னை விதவையாக்கி விட்டாய். இந்த யுத்தத்தில் நீ நூற்றுக் கணக்காக கொன்ற தைத்யர்களில் என் கணவனும் ஒருவன். பந்துவான உன்னால் நான் தீங்கிழைக்கப் பட்டேன். யுத்தம் என்றாலும், மாப்பிள்ளை என்று நீ காப்பாற்றியிருக்க வேண்டாமா? சகோதரியின் கணவன் உனக்கு உறவினன் இல்லையா? உனக்கே இது வெட்கமாக இல்லையா? உடன் பிறந்தவள் வாழ்க்கையை நாசம் செய்து விட்டோமே என்று வருத்தம் இல்லையா? இவ்வாறு சகோதரி தூற்றியதைக் கேட்டு ராவணன் பதில் சொன்னான். சமாதானமாக பேசி அவளுக்கு ஆறுதல் சொல்ல முனைந்தான். சகோதரியே, பயப்படாதே. அழாதே. எதற்கும் வருந்தாதே. நான் உன்னை கௌரவமாக சந்தோஷமாக வைத்துக் கொள்வேன். எப்பொழுதும் நீ வேண்டியதை என்னிடம் பெறலாம். வெற்றி பெற வேண்டும் என்ற குறியாக, யுத்தத்தில் மூழ்கி இருக்கும் பொழுது தன்னைச் சார்ந்தவனா, மாற்றானா என்று தெரிவதில்லை. பாணங்களை மழையாக பொழிவதிலேயே கவனமாக இருந்தபொழுது, விழுந்தவர்கள் யார் என்றா தெரியும்? அடிபட்டது மாப்பிள்ளை என்று எனக்குத் தெரியவில்லை. உன் கணவனை, என் சகோதரி கணவனை நான் வேண்டுமென்று கொல்லவில்லை. தற்சமயம் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல். செய்கிறேன். இதோ கரன் இருக்கிறான். இந்த சகோதரனுடன் வசி. ஆயிரமாயிரம் ராக்ஷஸ பலம் கொண்டவன். பதினாலாயிரம் ராக்ஷஸர்கள் கொண்ட படை இவனுடையது. இவன் தானம் கொடுப்பதில், பராமரிப்பதில் வல்லவன். நம் தாயின் சகோதரி மகன், நமக்கும் சகோதரனே. உன் கட்டளைப் படி நடப்பான். சீக்கிரம் இவனுடன் தண்டகா வனம் போ. இவனை நான் தண்டகா வனத்தை பரிபாலிக்க அனுப்புகிறேன். நீயும் போ. தூஷணன் இவன் படைத் தலைவனாக பதவி வகிப்பான். நீ சொல்வதை கண்டிப்பாக கேட்டு நடப்பான். விரும்பியபடி உருவம் எடுத்துக் கொண்டு இவன் கீழ் சேவகம் செய்யும் ராக்ஷஸர்கள் பலர் இருப்பர். இதன் பின் தன் சைன்யத்துக்கு கட்டளை பிறப்பித்தான். நாலாயிரம் வீரர்களை தேர்ந்தெடுத்து, க2ரனுடன் தண்டகா வனம் செல்ல அனுப்பி வைத்தான். கரனும் தண்டகா வனம் வந்து இடையூறு எதுவுமின்றி அரசனாக ராஜ்ய பாலனம் செய்ய ஆரம்பித்தான், அவனுடன் சூர்ப்பணகையும் தண்டகா வனம் வந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 25 (562) மது வத வாரணம் (மது என்ற அரக்கனை கொல்லாமல் தடுத்தல்)
அடர்ந்த தண்டகா வனத்தை கரனுக்கு கொடுத்து விட்டு, சகோதரியையும் சமாதானப் படுத்தி அவனுப்பி விட்டு, தன் பொறுப்பை செய்து விட்டதாக மகிழ்ந்தான். பின், தன் அடியாட்கள் புடை சூழ, நிகும்பிளா எனும் உபவனத்துள் நுழைந்தான். இது லங்கையின் அருகில் இருந்த, யாகம் செய்யும் இடம். நூற்றுக்கணக்கான யூப ஸ்தம்பங்கள் (யாகத்தில் பலி கொடுக்கும் இடம்) அழகிய நாற்கால் மண்டபங்கள் இவைகளுடன் யாகம் நடந்து கொண்டிருந்தது. ஜ்வலித்துக் கொண்டிருந்த யாக குண்டத்தையும், அதில் யாகம் செய்து கொண்டிருந்த தன் மகன் மேக நாதனையும் ராவணன் கண்டான். கருப்பு மான் தோல் உடுத்தி, கமண்டலுவும், ஜடா முடியுமாக தன் மகனைப் பார்த்து வியந்தான். அருகில் சென்று அணைத்துக் கொண்டு, மகனே, இது என்ன? ஏன் இந்த வேஷம் என்று வினவினான். உடனே அசுர குருவான சுக்ராச்சாரியார், யாகம் நடந்து முடிந்தால் தானே சம்பத்தும், சம்ருத்தியும் வரும், நான் சொல்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்தார். மிக விஸ்தாரமான ஏழு யாகங்களை உன் மகன் செய்து விட்டான். அக்னிஷ்டோமோ, அஸ்வமேதம், பஹு சுவர்ணக:, ராஜ- சூயம், கோமேதோ, வைஷ்ணவம் என்றவை. மிக அரிதான மகேஸ்வர யாகம் செய்யும் பொழுது, மகேஸ்வரனே ப்ரத்யக்ஷமாகி, ப்ரஸன்னமாக உன் மகனுக்கு வரங்களைக் கொடுத்தார். ராக்ஷஸேஸ்வரா, காமக3ம் – இஷ்டப்படி செல்லக் கூடிய ரதம், அந்த ரிக்ஷத்தில் சஞ்சரிக்க கூடியது, தாமஸம் எனும் மாயா சக்தி, இதன் மூலம் இருட்டை வரவழைத்துக் கொள்ளலாம். சுராசுரர்கள் புரிந்து கொள்ள முடியாத இந்த மாயா ஜாலங்களால் தான் யுத்தத்தில் வெற்றி அடைவது சுலபமாக இருக்கும். அக்ஷயமான- குறைவில்லாத அம்புகளை கொண்ட தூணியுடன், சுதுர்ஜயம் எனும் வில்லையும், அஸ்திரங்கள் பலவும் நிறைந்ததும், எதிரிகளை உடனடியாக நாசம் செய்ய வல்லவை- இவை அணைத்தையும் வரமாக பெற்று, தசானனநா, உன் மகன், இன்று யாக முடிவில் இருக்கிறான். நீயும் வந்து சேர்ந்தாய். அதனால் நிறுத்தி இருக்கிறேன். என்றார். உடனே தசக்ரீவன், இது எதற்கு? தேவை தானா? என் சத்ருக்களான இந்திரன் முதலானவர்களை யாகம் என்ற பெயரில் பூஜித்து இருக்கிறீர்கள். த்ரவ்யங்கள் கொடுத்து மகிழ்ச்சியுற செய்திருக்கிறீர்கள். போதும் வா. நல்ல காரியம் தான் சந்தேகமில்லை. ஆயினும், நாம் மாளிகைக்குப் போவோம், வா மகனே. பின், தசானனன் விபீஷணனுடனும், தன் மகனுடனும் மாளிகை திரும்பினான். உடல் அழகும், உயர்ந்த ஆபரணங்களும் அணிந்த பெண்கள், கண்ணீரும் கம்பலையுமாக பலவந்தமாக உடன் அழைத்து வரப் பட்டதைப் பார்த்து விபீஷணன் வருந்தினான். ராவணனைப் பார்த்துச் சொன்னான். இது என்ன காரியம்? புகழையும், பொருளையும், குலத்தையும் நாசம் செய்யும் இது போன்ற செயல்களை ஏன் செய்கிறாய்? தெரிந்தும் உன் மனம் போன போக்கில் போகிறாயே. நம் சுற்றத்தார் அணைவரும் எதிர்க்கிறார்களே. உறவினர்களையே அடித்து வீழ்த்தி, அவர்களின் அழகிய பெண்களைக் கவர்ந்து கொண்டு வந்திருக்கிறாய். உன்னை மீறி மது என்பவனால் கும்பீனஸி என்ற ஸ்திரீ அபகரிக்கப் பட்டிருக்கிறாள், தெரியுமா, என்றான். உடனே ராவணன், தெரியாதே, யார் அவன்? என்ன பெயர் சொன்னாய்? எனவும் விபீஷணனும் கோபம் கொண்டான். தெரியாதா, பாப காரியத்தின் பலன் கை மேல் கிடைத்தது. நம் தாய் வழி பட்டனார் சுமாலியின் மகன், மால்யவான் வயது முதிர்ந்தவர். நல்ல அறிவாளி. ராக்ஷஸ குலத்தைச் சேர்ந்தவர். நம் தாயின் பெரிய தந்தை. நமக்கும் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர். அவர் மகளின் மகள் கும்பீனஸி என்பவள், இவள் நமக்கு தாயின் சகோதரி முறை. அனல எனும் அக்னியில் உண்டானவள். நம் அணைவருக்கும் சகோதரியே. இவளை மது எனும் ராக்ஷஸன் பலாத்காரமாக தூக்கிச் சென்று விட்டான். உன் மகன் யாகத்தில் முணைந்திருந்தான், நான் நீரில் மூழ்கி தவத்தில் இருந்தேன், கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்து இருந்தான், நீயும் இல்லை. அமாத்யர்களை தோற்கடித்து, அந்த:புரத்தில் பாதுகாப்பாக இருந்தவளை காவலை மீறி, எதிர்த்தவர்களை அடித்து வீழ்த்தி வீட்டு, தூக்கிச் சென்று விட்டான். அவனை கொல்வதில் பயனில்லை. பெண்கள் எப்படியும் மணம் செய்து கொடுக்கப் பட வேண்டியவர்களே, சகோதரர்கள் கடமை இது. அதனால் நாங்கள் மதுவை எதுவும் செய்யவில்லை. இது உன் பாப காரியங்களின் பலனே. இதைக் கேட்டு, துர்புத்தியான ராவணன், தன்னை குற்றம் சொல்வதை பொறுக்க மாட்டாதவனாக, பொங்கி எழுந்தான். துஷ்டனாதலால் கண்கள் சிவக்க கத்தினான். சமுத்திர ஜலம் போல அவன் மனம் கொதிக்கலாயிற்று. என் ரதத்தை ஏற்பாடு செய்யுங்கள். சீக்கிரம், வீரர்கள் தயாராகுங்கள். கும்பகர்ணன், மற்றும் முக்யமான படைத்தலைவர்கள் உடனே வாருங்கள். அவரவர் வாகனங்க ளில் ஏறிக் கொள்ளுங்கள். பலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். ராவணனிடம் பயமின்றி ஒருவன் இருப்பதாவது. அந்த மதுவை இன்றே நாசம் செய்வேன். தேவ லோகம் போவேன். என் நண்பர்கள் உடன் வாருங்கள். யுத்தம் செய்ய தினவு எடுக்கும் என் தோள்களுக்கு யுத்தம் தருவேன். ஆயிரம் அக்ஷௌஹிணி, நான்கு ஆக்ரணீ போர் வீரர்கள், பலவிதமான ஆயுதங்கள் தாங்fகிய வீரர்கள் உடனே கிளம்பினர். இந்திரஜித் தலைமை தாங்கிச் செல்ல, ராவணன் மத்தியிலும், கும்பகர்ணன் பின்னாலும் அணிவகுத்துச் சென்றனர். விபீஷணன் லங்கையைக் காக்க, ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொண்டான். மது புரத்தை நோக்கி படைகள் புறப்பட்டன. கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், குதிரைகள், சிம்சுமாரங்கள், மகோரகங்கள் இவற்றுடன் ராக்ஷஸர்கள் முன்னேறிச் சென்றனர். நூற்றுக் கணக்கான தைத்யர்கள், தேவர்களுடன் விரோதம் பாராட்டும் மற்றவரும் சேர்ந்து கொண்டனர். தசானனன், மது புரத்தில் பிரவேசித்து, தன் சகோதரியையும், மதுவையும் கண்டான். அவள் கை கூப்பி வணங்கியபடி அவன் பாதங்களில் விழுந்தாள். பயத்தால் நடுங்கினாள். பயப்படாதே என்று அவளைத் தூக்கி நிறுத்திய ராவண அரசன், என்ன செய்ய வேண்டும் சொல், என்றான். கும்பீனஸீ என்ற அந்த சகோதரி, மகாராஜா, என் கணவனைக் கொல்லாதே. குல ஸ்திரீகளுக்கு இது போன்ற பயம் வரக் கூடாது. எல்லா விதமான பாபங்களிலும், துக்கத்திலும், வைதவ்ய பயம் மிகக் கொடியது. யாசிக்கும் என்னைப் பார். சத்யம் செய்து கொடு மகாராஜா, என்று வேண்டினாள். அவனோ, திமிருடன் விசாரித்தான் யாரது உன் கணவன்? காட்டு என்றான். அவனுடன் சேர்ந்தே தேவலோகம் போகிறேன், தேவலோகத்தை ஜயிக்கிறேன், என்றான். உன்னிடம் உள்ள பாசம், கருணையால் மதுவை வதம் செய்யாமல் விடுகிறேன். அவளும் உறங்கிக் கொண்டிருந்த ராக்ஷஸனை எழுப்பினாள். மனதில் மகிழ்ச்சியோடு பதியிடம் சொன்னாள். இதோ என் சகோதரன் தசக்ரீவன் வந்திருக்கிறான். மகா பலசாலி. தேவ லோகத்தை ஜயிக்கும் எண்ணத்துடன் வந்திருக்கிறான். உதவிக்கு உன்னையும் அழைக்கிறான். பந்துக்களோடு அவனுடைய உதவிக்குப் போய் வா. என் சகோதரன், யாவரும் போற்றும் நிலையில் இருக்கிறான். நம்மிடம் ஸ்னேகமாக இருக்கிறான். அவனுக்கு உதவி செய்வதும் நமது கடமையில்லையா? என்று கும்பீனஸி சொல்ல, அதைக் கேட்டு மதுவும் சரியென்று ஏற்றுக் கொண்டு, ராக்ஷஸேந்திரனை சந்திக்க வந்தான். முறைப்படி ராவண அரசனை மரியாதைகள் செய்து உபசரித்தான். தசக்ரீவனும், இரவு அங்கு தங்கி இந்த உபசாரங்களை எற்றுக் கொண்டு கிளம்பினான். பின் கைலாஸ மலையை அடைந்து வைஸ்ரவணன் இருந்த மலையில் தன் சேனையுடன் தங்கினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 26 (563) நள கூபர சாப: (நள, கூபரனுடைய ) சாபம்.
சைன்யத்தோடு தசக்ரீவன், சூரியன் அஸ்தமனம் ஆன பின் தாங்கள் தங்கும் இடத்தை தேர்ந்தெடுத்தான். சந்திரோதயம் ஆகியது. மலையின் சாரல்களில், அழகாக அதன் கிரணங்கள் பிரதிபலித்தன. துல்யமாக இருந்த அந்த இரவு வேளையில், படை வீரர்கள் பெரும்பாலும் தூக்கத்தில் ஆழ்ந்தனர். மகா வீர்யவானான ராவணன் மலையுச்சியில் அமர்ந்து, சந்திரனின் ஒளியில் பள பளத்த மலைப் பிரதேசத்தின் உயர்வை ரசித்து மகிழ்ந்தான். கர்ணிகார வனங்கள் சிவந்த புஷ்பங்களுடன் பிரகாசமாக தெரிந்தன. கதம்ப புஷ்பம் காடாக மண்டிக் கிடந்தது. மந்தாகினி ஜலமும், அதில் பத்மங்களும், சம்பக, அசோக, புன்னாக, மந்தார மரங்கள். சூத, பாடல, லோத்ர, ப்ரியங்கு, அர்ஜூன, கேதக புஷ்பங்கள். தகர, நாரிகேல, ப்ரியாலாபனம் முதலியவை. ஆரக்வதம், தமாலம், ப்ரியால பகுலம் முதலியவையும், இன்னமும் பல மரங்கள் அடர்ந்து அழகு பெற விளங்கிய வனாந்தரத்தில், கின்னரர்கள், மதுரமான குரல் வளம் உடையவர்களின் கீதமும் கேட்டது. அந்த கீதத்தின் இனிமையில் மனம் நிறைந்தது. வித்யாதரர்கள் மதுவுண்ட மயக்கத்துடன் பெண்களுடன் விளையாடிக் கொண்டும், பாடிக் கொண்டும் இருந்தனர். மணி அடிப்பது போல நாதம் இனிமையாக பரவிக் கிடந்தது. தனதன் (குபேரன்) வீட்டில் அப்ஸர ஸ்த்ரீகள், பாடிக் கொண்டிருந்தனர். காற்று வீசும் பொழுது ஆடும் மலர்கள், கொத்தாக பூக்களை சிதற விட்டன. அந்த மலைப் பிரதேசம் பூராவும் வாசனை மிகச் செய்யத் தீர்மானித்தது போல புஷ்பங்கள் சிதறின. மதுவும், மாதவ புஷ்பமும், மணம் வீசியது. இந்த வாசனைகளை ஒன்றாக ஏந்திக் கொண்டு, மந்தமாக வீசிய காற்றும் இதமாக இருந்தது. இந்த சூழ்லை ராவணன் மனதில் கிளர்ச்சியை உண்டு பண்ணியதில் ஆச்சர்யம் இல்லை. கானமும் புஷ்பங்கள் நிறைந்து மனதை மயக்கியதாலும், கு ளிர்ந்த இதமான காற்றாலும், மலையின் அழகாலும், ரம்யமான இரவும், சந்திரனின் குளுமையான பிரகாசமும் சேர, மகா வீர்யவானான ராவணன் காம வசம் ஆணான். சந்திரனை நோக்கியபடி, பெருமூச்சு விட்டான். இந்த சமயம் அங்கு திவ்யமான ஆபரணங்கள் அணிந்த ரம்பா என்ற அப்ஸரஸ்திரீ, கண்களுக்கு விருந்தாக வந்து சேர்ந்தாள். பூரண சந்திரன் போன்ற முகமும், மேகலா, மாலைகள் இவை அலங்கரிக்க, ஆறு ருதுக்களிலும் கிடைக்கும் புஷ்பங்களின் ரசத்தைக் கொண்டு தயாரித்தது போன்ற வாசனை திரவியத்தை பூசிக் கொண்டு, மற்றொரு லக்ஷ்மி தேவியே வந்தது போல, காந்தி, ஒளி, கீர்த்தீ இவை ஒன்று சேர்ந்து உருவெடுத்தது போலவும், மேக நிற, நீல வஸ்திரத்தை அணிந்து கொண்டவளாக வந்தாள். அவளுடைய முகம் சந்திரன் போலவும், புருவங்கள் வில் போலவும், கால்கள் யானை தும்பிக்கை போலவும், கைகளோ இளம் துளிர் போன்ற கோமளமானவையாகவும் காணப் பட்டன. சைன்யத்தின் நடுவில் புகுந்து சென்றவள், ராவணன் கண்களில் பட்டாள். வேகமாக செல்பவளை, காம வசமான ராக்ஷஸ ராஜன், கைகளைப் பிடித்து, பேச்சுக் கொடுத்தான். அழகியே, எங்கு போகிறாய்? யாரைத் தேடி நீ போகிறாயோ, அவனுக்கு நல்ல காலம் என்று தான் அர்த்தம். பத்மமும், உத்பலமும் சேர்ந்தது போன்ற, உன் முக ரஸத்தைப் பருக, தேவ லோக அம்ருதம் போல இன்பத்தை அனுபவிக்க இன்று யார் கொடுத்து வைத்திருக்கிறார்களோ, சுவர்ண கும்பங்கள் போன்ற உன் ஸ்தனங்கள் யாருடைய மார்பில் படிய போகின்றனவோ, பொன் மாலையணிந்த உன் இடுப்பும், ப்ருஷ்டமும், யாருக்கு விருந்தாகப் போகின்றனவோ, சுவர்க லோகமே இது தானோ எனும்படி மயக்குகிறது. எனக்கு மேலான புருஷன் வேறு யார் இருக்கிறார்கள். இந்திரனா? விஷ்ணுவா, அஸ்வினி குமாரர்களா? என்னைத் தாண்டி நீ யாரைத் தேடி செல்கிறாய். அழகியே இது பொருத்தமாக இல்லையே. சற்று உட்காரு, இந்த கல் பலகையில் அமர்வாய். மூவுலகிலும், எனக்கு மிஞ்சிய தகுதியுடையவன் வேறு யாருமே கிடைக்க மாட்டார்கள். இதோ, உன் முன்னால் யாசிப்பவன் த3சானனன். மூவுலகிற்கும் அரசனுக்கும் அரசன். என்னை ஏற்றுக் கொள். இதைக் கேட்டு ரம்பா நடுங்கினாள். கை கூப்பியபடி, தயை செய். இது சரியல்ல. நீ பெரியவன். இது போல என்னிடம் பேசுவது தகாது. வேறு யாராவது என்னைத் தடுத்து நிறுத்தியிருந்தால் கூட நீ என்னை ரக்ஷிக்க வேண்டியவன். உன் மருமகள் ஸ்தானத்தில் உள்ளவள் நான். சத்யமாக சொல்லுகிறேன். இதைக் கேட்டு தசக்ரீவன், தலை குனித்து நிற்பவளைப் பார்த்து, உடல் மயிர் கூச்செரிய நடுங்கியபடி நின்றவளை பார்த்த மாத்திரத்தில், என் மகனுக்கு நீ மனைவியானால் மருமகள் தான் என்றான். ஆமாம் என்ற ரம்பா, உன் சகோதரன் வைஸ்ரவனுடைய பிரிய புத்திரன் நளகூபரன் மனைவி நான். என் கணவன் நளகூபரன், தர்மத்தை ஆச்ரயிக்கும் பொழுது, ப்ராம்மணனோ எனும் படி சிறப்பாகச் செய்வான். வீர்யத்தில் க்ஷத்திரியன். கோபத்தில் அக்னி. பொறுமையில் பூமிக்கு சமமானவன். லோக பாலனுடைய மகனான அவனுக்கு என்னைக் கொடுப்பதாக நிச்சயித்துள்ளனர். அதை உத்தேசித்து தான், நகைகளால் அலங்கரித்துக் கொண்டு கிளம்பி வந்தேன். அவனையன்றி வேறு யாரையும் மனதால் கூட நினைத்து பார்க்க மாட்டேன். அதனால் ராஜன், என் கையை விடு. என்னை எதிர் நோக்கி ஆவலோடு காத்திருப்பான் உன் மகன் அவனுக்கு இடையுறு செய்தபடி நடுவில் தடுப்பது தவறு. என்னை விடு. ராக்ஷஸ புங்கவனே, நல்லோர் செல்லும் வழியில் செல்வாயாக. எனக்கு நீங்கள் கௌரவிக்கத் தகுந்த பெரியவர். அதே போல, உங்களுக்கும் நான் காப்பாற்றப் பட வேண்டிய மருமகள். தசக்ரீவன் இதைக் கேட்டு வினயமாக சொல்வது போல, நீ சொன்னாயே, நான் உனக்கு மருமகள் என்று, ஒரு பதியுடைய ஸ்திரீகளுக்கு அது சரி. ஒருவனுக்கு ஒருவன் என்று இருக்கும் குல ஸ்திரீகளுக்கு சரி. அப்சர ஸ்த்ரீகளுக்கு பதி என்று கிடையாது. தேவர்களில் ஒரு ஸ்திரீ தான் ஒருவனுக்கு என்ற நியதியும் கிடையாது. அதனால் நான் விரும்புவதில் தவறில்லை என்பது போல அவளை இழுத்து தான் இருந்த கல் பலகையில் அமரச் செய்து பலாத்காரமாக அவளை அடைய முயற்சி செய்தான். மாலைகளும், ஆபரணங்களும் நிலை குலைய ரம்பா, யானை புகுந்து கலக்கிய நதி போல ஆனாள். தலை கேசம் அவிழ்ந்து புரள, கை நடுங்க, பூக்கள் நிறைந்த கொடி பெரும் காற்றில் தடுமாறுவது போல தடுமாறினாள். வெட்கமும் அழுகையுமாக நளகூபரனையடைந்து அவன் காலில் விழுந்தாள். அவளை எதிர் நோக்கி காத்திருந்த நளகூபரன், காலில் விழுந்தவளை தூக்கி நிறுத்தி, இது என்ன ப4த்3ரே, என்று வினவ, அவளும் நடந்ததைச் சொன்னாள். இதோ, இந்த த3சக்ரீவன், தேவலோகம் செல்ல கிளம்பியவன், வழியில் சைன்யத்தோடு இந்த மலையில் தங்கியிருக்கிறான். உன்னைக் காண நான் வரும் வழியில் என்னைப் பார்த்து விட்டான். யார் என்று கேட்டான்? ராக்ஷஸனுக்கு நான் உண்மையான விவரங்களையே சொன்னேன். காமமும் மோஹமும் அவன் கண்களை மறைத்து இருக்கும் பொழுது நான் சொன்னது எதுவுமே அவன் காதுகளில் விழவில்லை. நான் உனக்கு மருமகளாவேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சினேன். என் வேண்டுகோள் எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு, என்னை பலாத்காரம் செய்ய ஆரம்பித்து விட்டான். என்னை மன்னித்து விடு. ஸ்திரீகளுக்கும், புருஷர்களுக்கான சமமான பலம் இல்லை. அவளை, ராவணன் மிக மோசமான முறையில் பலாத்காரம் செய்ததைக் கேட்டு, முஹுர்த்த காலம் தியானம் செய்து விட்டு, கையில் ஜலத்தை எடுத்து ராக்ஷஸேந்திரனுக்கு கடுமையான சாபம் கொடுத்தான். விரும்பாதவளை நீ பலாத்காரம் செய்ததன் பலனை அனுபவிப்பாய். இனி எந்த பெண்ணையும் அவள் இஷ்டம் இல்லாமல் நெருங்கினால் உன் தலை ஏழாக சிதறும். அவன் இப்படி ஜ்வலிக்கும் அக்னி போன்று சாபம் கொடுத்தபொழுது தேவ துந்துபிகள் முழங்கின. புஷ்ப வ்ருஷ்டியும் ஆகாயத்திலிருந்து விழுந்தது. பிதாமகர் முதல் எல்லா தேவர்களும் மகிழ்ந்தனர். இந்த பயங்கர சாபத்தைக் கேட்டு ராவணன், இனி தன் ஸ்திரீகளிடம் கூட நெருங்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டான். ராவணனால் அபகரிக்கப் பட்டு சிறை வைக்கப் பெற்றிருந்த பெண்களும் நிம்மதியடைந்தனர். நளகூபரன் கொடுத்த சாபம் அவர்களுக்கு விடுதலை அளிப்பதாக அமைந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 27 (564) சுமாலி வத: (சுமாலியை வதம் செய்தல்)
ராவணன் கைலாஸத்தை தாண்டி இந்திர லோகம் வந்து சேர்ந்தான். அவனுடைய சைன்யம் தேவலோகத்தில் இறங்கிய பொழுது கடலை கடைவது போன்ற பெரும் சப்தம் உண்டாயிற்று. இந்திரன் ராவணன் வந்திருக்கிறான் என்பதைக் கேட்டே தன் ஆசனத்தில் நடுங்கினான். நழுவி விழுந்து விடுவான் போல கூடியிருந்த தேவர்களைப் பார்த்துச் சொன்னான். ஆதித்யர்கள், வசுக்கள், ருத்திரர்கள், விஸ்வர்கள், சாத்யர்கள், மருத்கணங்கள் எல்லோரும் தயாராகுங்கள். யுத்தம் செய்ய வேண்டியிருக்கும். ராவணன் வந்து விட்டானே என்று பதறினான். அவர்களும் நல்ல வீரர்கள். விஷய ஞானம் உடையவர்கள். எனவே, கவனமாக யுத்த ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றனர். இந்திரன் தான் தீனனாக ராவணனிடம் பயந்து, விஷ்ணுவிடம் ஓடிச் சென்று விஷயத்தைச் சொன்னான். விஷ்ணோ, நான் என்ன செய்வேன்? எப்படி சமாளிப்பேன். பலவான் இவன். யுத்தம் செய்ய வந்து நிற்கிறான். வேறு காரணம் எதுவும் இல்லை. வர பலத்தால் நிமிர்ந்து நிற்கிறான். ப்ரும்மா, இவனுக்கு கொடுத்த வரங்களும் மாற்ற முடியாதவை. அவையும் சத்யமாகும். நமுசியையும், வ்ருத்திரனையும், பலியையும் நரக, சம்பரர்களையும் உன் பலத்தை ஏற்றுக் கொண்டு நான் அழித்தேனே அது போல செய் மதுசூதனனே, உன்னையன்றி வேறு எந்த தெய்வத்தையும் நாடி பலனில்லை. மூவுலகத்திலும் சராசரத்திலும் வேறு யாரை சரணடைவேன். நீ தான் சனாதனான நாராயணன், ஸ்ரீமான். பத்மநாபன். நீ தான் இந்த உலகங்களை ஸ்தாபித்து பாலித்து வருகிறாய். என்னையும் இந்திரனாக, தேவலோக தலைவனாக நியமித்தாய். இந்த சராசரம் உன்னால் ஸ்ருஷ்டி செய்யப் பட்டது. யாக முடிவில் இவை உன்னிடமே லயம் அடைகின்றன. அதனால் தேவ தேவனே: இப்பொழுது சொல். நீயே வந்து எனக்கு உதவி செய்கிறாயா? சங்க சக்ர தாரியாக வந்து ராவணனுடன் போர் புரிய வருகிறாயா? இந்திரனின் முறையீட்டைக் கேட்டு பகவான் நாராயண ப்ரபு யோசித்தார். பயப்படாதே: நான் சொல்வதைக் கேள். இந்த துஷ்டாத்மாவை அவ்வளவு சுலபமாக அழிக்க முடியாது. வர தானம் இவனுக்கு அபரிமிதமான சக்தியைக் கொடுத்திருக்கிறது. இவனை வெல்வது முடியாது. புத்திரனுடன் வந்திருக்கிறான். இதுவரை கேட்டிராத அரிய செயல்களைச் செய்யத் தான் போகிறான். இவன் மகன் பிறப்பிலேயே பலவான். நல்ல வீரன். நீ யுத்தம் செய். நான் அவனுடன் மோத இன்னும் சரியான நேரம் வரவில்லை. சத்ருவைக் கொல்லாமல் விஷ்ணு திரும்பி வந்தான் என்று பெயர் வரக் கூடாது. வர பலன் ராவணனை பாதுகாத்து நிற்கிறது. ப்ரும்மாவின் வாக்கு பொய்யாகாது. ஆனால், இந்திரா, நான் உனக்கு வாக்குத் தருகிறேன். இந்த ராக்ஷஸனுக்கு நான் தான் ம்ருத்யு காரணமாக இருப்பேன். ராவணனை உற்றார்., சுற்றத்தாருடன், ராஜ்யம், நகரங்களுடன் நாசம் செய்வேன். சரியான காலம் வரட்டும். இந்த செயலை செய்து தேவர்களை மகிழ்ச்சியடையச் செய்வேன், சந்தேகமே இல்லை. சசீபதியான தேவராஜனே: இப்பொழுது நீ உன் படை முழுவதையும் திரட்டி, யுத்தம் செய். என்றார். இதன் பின் வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், மருத்கணங்கள், அஸ்வினி குமாரர்கள், எல்லோருமாக சேர்ந்து கிளம்பினர். ராக்ஷஸனை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டனர். இரவு முடியும் தறுவாயில், பெரும் ஓசை கேட்டது. ராவண சைன்யம், பெரும் யுத்தத்திற்கு ஆயத்தமாக கோஷமிட்டனர். அவர்களுக்குத் தேவையே பயங்கரமான போர் தான் என்பது போல முன்னேறி வந்தனர். சீக்கிரமே தேவ சைன்யம் பலம் இழந்தது. யுத்த பூமியை நிறைத்த ராவண சைன்யத்தைப் பார்த்தே, தேவர்கள் நம்பிக்கை இழந்தனர். தேவ,தானவ,ராக்ஷஸர்களுக்கிடையில், பெரும் யுத்தம் நடந்தது. இருபுறமும் பலவிதமான ஆயுதங்கள் பிரயோகிப்பதால் உண்டான சத்தம் சமமாக இருந்தது. கோரமான உருவுடைய ராக்ஷஸர்கள், ராவணனுடைய மந்திரிகள் மாரீசனும், ப்ரஹஸ்தனும், மகா பார்ஸ்வ, மகோதரர்கள், அகம்பனனும், கும்பனனும், சுக, சாரண சம்ஹ்ராதனும், தூம கேதுவும், மகா தம்ஷ்டிரனும், கடோதரனும், ஜம்பு மாலி, மஹோதரனும், விரூபாக்ஷனும், சுப்தக்னன, யக்ஞ கோபன், துர்முகன், துர்ஷணன், கரன், த்ரிசிரஸ், கரவீராக்ஷ:, சூர்ய சத்ரு என்ற ராக்ஷஸன், மகா காயன், அதி காயன், தேவாந்தக, நராந்தகர்கள். இவர்கள் எல்லோருடனும் சேர்ந்து ராவணனின் முன்னோர்களில் ஒருவனான சுமாலியும் வந்து சேர்ந்தான். தேவ கணங்களை பலவிதமாக கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அடித்து துன்புறுத்தினர். காற்று, ஜலத்தில் வசிக்கும் ஜீவன்களை வாட்டுவது போல வாட்டினர். நிசாசரர்கள் தேவ சைன்யத்தை நாசம் செய்வதைக் கண்டு, சிங்கத்தைக் கண்டு மான் கூட்டம் சிதறி ஓடுவது போல தேவர்கள் ஓடி மறையலாயினர். இதனிடையில் வசுக்களில் எட்டாவது வசுவான, சாவித்ர என்ற பெயர் பெற்றவன், ரண பூமியில் நுழைந்தான். பலவிதமான ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் தைரியமாக போரிட்டபடி முன்னேறினான். சிங்கம் சிறு மிருகங்களை வெருட்டுவது போல விரட்டிக் கொண்டு சென்றான். ஆதித்யர்களான த்வஷ்டா, பூஷா இவர்களும் உதவியாக வந்து சேர்ந்தனர். இதன் பின் ராக்ஷஸ தேவ சைன்யங்களுக்கிடையில் பயங்கரமான யுத்தம் நடந்தது. யுத்தத்தில் புற முதுகு காட்ட மாட்டார்கள் என்று புகழ் பெற்ற ராக்ஷஸர்கள் நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக கொன்று குவித்தனர். இந்த சமயத்தில், சுமாலி சைன்யத்தின் முன்னால் நின்றபடி போரிடும் முறை வந்தது. மேகத்தை வாயு விரட்டுவது போல தேவ சைன்யத்தை அலறி ஓடச் செய்தான் சுமாலி. சூலமும், ப்ராஸங்களும் பயங்கர வேகத்தில் வந்து தாக்கின. தேவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அஷ்டம வசுவான சாவித்ரன், மகா கோபத்துடன் தன் சைன்யத்தை உற்சாகப் படுத்தி சரமாரியாக அடிக்கும் நிசாசரனான சுமாலியை வளைத்துக் கொண்டான். இருவருக்கும் இடையில் பயங்கர போர் நடந்தது. இருவருமே தோற்று ஓடத் தயாராக இல்லை. கடுமையான போர். சுமாலியின் பன்னக ரதம் உடைந்தது. ரதம் உடைந்தவுடன் கதையை எடுத்துக் கொண்டு போர் தொடர்ந்தது. சாவித்ரன் சுமாலியின் தலையில் ஓங்கி அடித்தான். கால தண்டம் போல அந்த க3தை4 இந்திரனின் வஜ்ரம் போல வந்து தாக்கியதில் மலைகள் அசனி என்ற இந்திர ஆயுதத்தால் பொடிப் பொடியானது போல சுமாலி தலையோ, எலும்புகளோ, மாமிசமோ எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. அப்படி உருக் குலைந்து போனான். க3தை4யினால் பஸ்மமாக ஆனான். இதைக் கண்டு ராக்ஷஸர்கள் ஒன்று கூடி பெருங்கூச்சலுடன் அலறிக் கொண்டு ஓடினர். வசுக்கள் தொடர்ந்து அவர்களைத் துரத்தியடித்தனர்.
இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 28 (565) ஜயந்தாபவாகனம் (ஜயந்தனை தூக்கிச் செல்லுதல்)
வசுவால் பஸ்மமாக ஆக்கப் பட்டான் சுமாலி என்ற செய்தியைக் கேட்டதும், தன் சைன்யம் ரண பூமியிலிருந்து ஓடுவதையும் அறிந்து, ராவண குமாரன் பெரும் கோபம் கொண்டான். மேக நாதன் என்ற அந்த வீரன், சிதறி ஓடிய ராக்ஷஸ வீரர்களை ஒன்று சேர்த்து, ஒழுங்கு படுத்தினான். அக்னி வனத்தில் இருந்த நல்ல ரதத்தில் ஏறி, அவன் போர் முனைக்கு வந்ததும் தேவர்கள் சைன்யம் நடுங்கியது. இந்திரன் அவர்களுக்கு தைரியம் ஊட்டி, அணி வகுத்து நிறுத்தி போர் செய்யத் தூண்டினான். பயப்படாதீர்கள், ஓடாதீர்கள் திரும்பி வாருங்கள், இதோ பாருங்கள் என் மகன் தலைமை தாங்கி நடத்த வருகிறான், நீங்கள் எல்லோரும் அவனுக்கு சகாயமாக போர் செய்ய வாருங்கள் என்று அழைத்து வந்தான். தேவர்களும் இந்திரன் மகனான ஜயந்தனை சூழ்ந்து நின்று கொண்டு, அவனுக்கு உதவி செய்பவர்களாக, ராவண குமாரனான மேக நாதனை எதிர்த்து போராட கிளம்பினர். மாதலி புத்திரனான கோமுகனின் ரதத்தையும், சாரதியையும் மேகனாதன் அடித்து வீழ்த்தினான். சசிகுமாரனான ஜயந்தன், அவன் சாரதி பேரிலும் பாணங்களைப் போட்டபடி, மகா கோபத்துடன் அவன் எதிரில் வந்து நின்றான். தேவ சைன்யத்தின் பேரிலும் பல கூர்மையான பாணங்களை இடை விடாது பிரயோகித்தான். ஒரே இருள் சூழ்ந்தது போல இருந்தது. ராவணசுதன், மேக நாதன், சத்ரு சைன்யத்தை அழிப்பது என்று தீவிரமாக முனைந்து அடிக்கவும், இந்திர குமாரன் ஜயந்தன் கண் முன்னாலேயே தேவ சைன்யத்து வீரர்களும், அதே போல திருப்பி அடிக்க, தேவர்களா, ராக்ஷஸர்களா என்று பரஸ்பரம் தெரிந்து கொள்ள முடியாதபடி, ஒரே குழப்பமாக ஆகி விட, இரு தரப்பினரும் ஆயுதங்களை அப்படி அப்படியே போட்டு விட்டு, ஓடலாயினர். ஒரு சமயம், தேவர்கள் தேவர்களையே அடித்துக் கொண்டனர். ராக்ஷஸர்கள் ராக்ஷஸர்களையே அடித்தனர். இருட்டு மூடியதில் எதுவும் புரியாமல் சிலர் வெளியேறினர். இதற்கிடையில் புலோம என்ற வீரன், ஜயந்தனைக் கடத்திச் சென்று விட்டான். மகள் வயிற்றுப் பேரனான ஜயுந்தனை சசி குமாரனை எடுத்துக் கொண்டு சாகரத்தினுள் ஒளிந்து கொண்டான். புலோம சசி (இந்திரன் மனைவி)யின் தந்தை வழி பாட்டனார். ஜயந்தன் காணாமல் போனதும் தேவதைகள், மன மகிழ்ச்சியும் உற்சாகமும் வடிந்து போக, அடி படும் துன்பம் தாங்க மாட்டாமல் ஓடி விட்டனர். ராவணனுக்கு மகா கோபம். தன் படை வீரர்களுடன் சேர்ந்து கொண்டு, தேவர்களை துரத்தி அடித்தான். பெரும் ஆரவாரம் எழுந்தது. தன் மகனைக் காணாததாலும், தேவர்கள் ஓடி மறைவதையும் கண்டு இந்திரன் மாதலி என்ற தன் சாரதியைப் பார்த்து, ரதத்தை கொண்டு வர பணித்தான். மிகப் பெரிய அந்த ரதம் தயாரகவே இருந்தது. வேகமாக ஓடும் குதிரைகளை பூட்டி ரதத்தைக் கொண்டு வந்தான். மின்னலுடன் கூடிய மேகங்கள், அந்த ரதத்தின் முன்னால் இடி முழக்கம் செய்தபடி, கட்டியம் கூறுவது போல சென்றன. கந்தர்வர்கள் பலவிதமான வாத்யங்களை வாசித்தபடி சேர்ந்து கொண்டனர். அப்ஸர கூட்டங்கள் நடனமாடின. தேவலோக நாயகனான இந்திரன் புறப்பட்டதில், ருத்ர, வசு, ஆதித்ய, சாத்ய, மருத்கணங்கள் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியவர்களாக இந்திரனைத் தொடர்ந்து போர் முனை செல்லத் தயாராக வந்து சேர்ந்தனர். இந்திரன் போருக்கு கிளம்பியதும் காற்று மகா கடுமையாக வீசியது. சூரியன் ஒளியின்றி ஆனான். பெரிய மின்மினி பூச்சி போன்று காட்சியளித்தான். இதற்கிடையில் விஸ்வகர்மா செய்து கொடுத்த ரதத்தில் ஏறி தசக்ரீவனும் கிளம்பினான். பலவிதமான நாகங்கள் சூழ, அவைகளின் உஷ்ணமான காற்றே அந்த இடம் முழுவதும் பரவி விஷத்தைப் பரப்பின. தைத்யர்களும், நிசாசரர்களும் ரதத்துடன் வந்து சேர்ந்தனர். மகேந்திரனை எதிர்கொண்டு ராக்ஷஸ ராஜன் முன்னேறிச் சென்றான். தன் மகனை தள்ளிவிட்டு தானே முன் வந்தான். ராவணியும் விலகி தந்தைக்கு வழி விட்டான். இதன் பின் பெரும் யுத்தம் நடந்தது. ராக்ஷஸர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில், பயங்கரமான யுத்தம். இரு புறத்திலிருந்தும் சஸ்திரங்கள் மழையாக பெருகலாயிற்று. கும்பகர்ணனும் எல்லா விதமான ஆயுதங்களையும் கையாள ஆரம்பித்தான். யார் யாருடன் சண்டை செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. பற்களால், புஜங்களால், கால்களால், சக்தி தோமரம் என்ற ஆயுதங்களால், கைக்கு கிடைத்ததை வைத்துக் கொண்டு அடிக்க ஆரம்பித்தனர். ருத்ரர்கள் பலர் வந்து ராக்ஷஸனை அடித்து வீழ்த்தினார்கள். கும்பகர்ணன் எதிர்த்து நிற்க இயலாமல் விழுந்தான். உடலிலிருந்து ரத்தம் நீராக பெருகி ஓடியது. மருத் கணங்களுடன் போரிட்ட சைன்யமும் தோற்று ஓடியது. சிலர் அடிபட்டு உடல் அங்க ஹீனமாகி கிடந்தனர். சிலர் ரதம் அழிய தரையில் நின்றனர். ரதங்களிலிருந்து நாகங்களும், கர, ஒட்டகங்களும், குதிரைகள், சிம்சுமாரம், பன்றிகள், பிசாச வதனம் உடையவை இவை யாவும் தேவர்களால் கொல்லப் பட்டது. ராக்ஷஸர்கள், அடிபட்டு கீழே விழுந்து கிடந்தவர்கள் உடலிலிருந்தும், ரத்தமும், மாமிசமும் பெருகி சேறாகி கிடந்தது. நதியாக ஓடியது. அதில் மிதந்த சஸ்திரங்கள் முதலைகளோ எனும் படி கிடந்தன. தேவர்களால் தன் சைன்யம் சின்னா பின்னமானதைக் கண்டு தசக்ரீவன் பெரும் கோபம் கொண்டான். அவனும் தன் பராக்ரமத்தால் பல தேவர்களை அடித்து நொறுக்கியபடி இந்திரனை நோக்கியே வந்தான். தன் பெரும் வில்லில் நாணை சுண்டி பெரும் ஓசையை எழுப்பிக் கொண்டு இந்திரனும் வந்தான். இந்த ஓசையில் திக்குகள் எதிரொலித்தன. ராவணனை இந்திரன் தன் பாணங்களால் கீழே தள்ளினான். ராவணன் சமாளித்துக் கொண்டு அதே போல் இந்திரன் பேரில் பாணங்களை மழையாக பொழிந்தான். இருவரும் இப்படி ஒருவரோடொருவர் போரிட்ட சமயம், இருள் சூழ்ந்ததால் யார் வில், யாருடைய அம்பு, அடிபட்டது யார் என்பது கூட தெளிவாக தெரிந்து கொள்ள முடியவில்லை.
இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 29 (566) வாசவ க்ரஹணம். (வாசவனைப்பிடித்தல்)
இருள் மண்டியதும், தேவர்களும், ராக்ஷஸர்களும் திகைத்தாலும், ஒருவரை ஒருவர் அடிப்பதை நிமூறுத்தவில்லை. தேவர்கள் படை ராக்ஷஸ படையை பத்தில் ஒன்றாக குறைத்து விட்டது. யம லோகம் சென்ற வீரர்கள் யார் யார் என்பதே தெரியாதபடி யுத்தம் தொடர்ந்தது. இந்திரனும் ராவணனும், ராவணியும் (மேகநாதன்) மூவர் மட்டும், இப்படி இருள் சூழ்ந்து பரவிய போதிலும், தங்கள் கவனம் சிதறாமல் தைரியமாக இருந்தனர். தன் படை பெரும்பாலும் நாசமடைந்ததைக் கண்டு, ராக்ஷசேந்திரன் கடும் கோபம் கொண்டான். ரதம் ஓட்டிய சாரதியை கடுப்புடன் நோக்கி, எதிரிகள் மத்தியில் என்னைக் கொண்டு விடு என்றான். இன்று இந்த தேவ சமூகத்தை என் விக்கிரமத்தால், அஸ்திரங்களால அழித்து விட்டுதான் மறு வேலை. நான் இந்திர பதவியை கைப் பற்றுவேன். இந்திரனை அழிப்பேன். குபேரனை, யமனை மற்றும் அனைவரையும் கொன்று யம லோகம் அனுப்புவேன். அவர்கள் எல்லோருக்கும் அதிபதியாக ஆவேன். யோசிக்காதே. சீக்கிரம் ரதத்தைக் கொண்டு வா. இரண்டாவது தடவையாக சொல்கிறேன். இன்று இரண்டில் ஒன்று பார்த்து விட்டுத் தான் ஓய்வேன். முடிவு வரை யுத்தம் செய்வேன் என்றான். இதோ, இந்த நந்தனம் எனும் தேவலோக தோட்டத்தில் வசிப்போம். என்னை அந்த உதய மலை இருக்கும் இடம் அழைத்துச் செல். இதைக்கேட்டு சாரதி, மனோ வேகத்தில் செல்லும் குதிரைகளைப் பூட்டி, சத்ருக்கள் மத்தியில், ரதத்தை ஓட்டிச் சென்றான். அவன் உத்தேசம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு விட்ட இந்திரன், தன் ரதத்தில் இருந்தபடியே, யுத்த பூமியில் இருந்த மற்ற தேவர்களைப் பார்த்துச் சொன்னான். தேவர்களே, கேளுங்கள். எனக்கு சரி என்று தோன்றும் வழி இது. தசக்ரீவனை உயிருடன் பிடித்து விடுங்கள். மிகவும் பலசாலி. காற்றை விட வேகமாக பறக்கும் ரதத்தில் வருகிறான். பர்வ காலங்களில், சமுத்திரத்தில் அலை அதிகரிப்பது போல இவன் பன் மடங்கு சக்தியோடு நம்மைத் தாக்க வருவான். வரபலம் இவனுக்கு சாதகமாக இருப்பதால் நம்மால் இவனை அழிக்க முடியாது. இவனுடைய துணிச்சலுக்கு அது தான் காரணம். அதனால் இவனை உயிருடன் பிடிப்போம். இவனையும் அடக்கி, நம் வசம் உள்ள படை பலங்களோடு, நம் அதிகாரத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். மூவுலகும் நம் ஆட்சிக்குள் இருப்பது போல இவனும் நமக்கு அடங்கி இருக்கச் செய்ய வேண்டும். இதன் பின் இந்திரன் ராவணனை விட்டு மற்ற ராக்ஷஸர்களை பயமுறுத்தி விரட்டலானான். வடக்குத் திசையிலிருந்து தசக்ரீவன் திரும்புவதில்லை என்ற சபதத்தோடு வந்து கொண்டிருந்தான். தென் திசையிலிருந்த இந்திரன் எதிர்பட்டான். நூறு யோசனை தூரம் தசக்ரீவன் முன்னேறிய பின், தேவர்கள் கூட்டம், அவன் பேரில் சரங்களை வர்ஷித்தது. தன் படை வீர்ர்கள் நாசம் அடைவதைக் கண்டு இந்திரன் ராவணனை நெருங்கினான். திடுமென பெரும் கூச்சல் எழுந்தது. ஆ.. செத்தோம் என்று தானவ வீரர்கள் பக்கத்திலிருந்து, அலறல் கேட்டது. இந்திரன் ராவணனை சிறை பிடித்து விட்டிருந்தான். இதைக் கண்டு ராவணீ- ராவணன் மகன், தன் ரதத்தை எடுத்துக் கொண்டு வேகமாக வந்தான். மகாமாயா யுத்த முறைகளை பின்பற்றலானான். இந்த அறிவை அவன் பசுபதியிடமிருந்து கற்றிருந்தான். பரபரப்பும் குழப்பமுமாக இருந்த சேனை வீரர்களைக் கடந்து இந்திரனையே குறி வைத்தபடி, முன்னேறினான். மகேந்திரன் தன் பின்னால், எதிரியின் மகன் ரூபத்தில் வந்த ஆபத்தை அறியவில்லை. மற்ற தேவர்கள் அவன் கவசத்தை வீழ்த்தினர். பல விதமாக தாக்கினர். ராவணன் மகன் அவர்களை லட்சியம் கூட செய்யாமல், பதிலடி கூட கொடுக்காமல், தன் குறியே கவனமாக நேராக இந்திரன் அருகில் சென்று மாதலியை அடித்தான். மகேந்திரன் பேரில் பாணங்களை மழையாக பொழிந்தான். சாரதியை விலக்கி விட்டு இந்திரனும், ஐராவதத்தில் ஏறி ராவணன் மகனைத் தாக்கினான். மாயாபலம் கொண்ட ராவணீ திடுமென அந்தரிக்ஷத்தில் மறைந்தான். இந்திரனை திகைக்கச் செய்து மறைவில் நின்று அம்புகளை எய்து, இந்திரனை களைக்கச் செய்தான். களைத்து விட்டான் என்று தெரிந்ததும், மாயையால் அவனைக் கட்டி, தன் சைன்யத்தின் நடுவில் கொண்டு சென்றான். உருவம் இன்றி ஏதோ மாயா சக்தி இந்திரனை கட்டியிழுத்துக் கொண்டு போவது போல நடத்திச் செல்வதைப் பார்த்த தேவ வீரர்கள் இது என்ன?என்று திகைத்தனர். யார் என்பது கண்ணுக்குத் தெரியவில்லை. யாரோ மாயாவி யுத்தக் கலையை நன்கு அறிந்த இந்திரனையே கட்டி இழுத்துக் கொண்டு தன்னையும் காட்டிக் கொள்ளாமல் செல்வது யார்? இதற்கிடையில் கோபம் கொண்ட சில தேவ வீரர்கள், ராவணன் கட்டுகளை அவிழ்த்து, அவன் மேல் சரமாரியாக அஸ்திரங்களை பொழிந்தனர். ராவணன், இப்படி போரிட்ட ஆதித்யர்களையும், வசுக்களையும் எதிர்த்து போரிட முடியாமல் திண்டாடினான். இப்படி சல்லடையாக துளைக்கப்பட்ட தந்தையை தன் மறைவான நிலையிலேயே மகன் மேகநாதன் கண்டான். தந்தையே வாருங்கள், நாம் யுத்த பூமியிலிருந்து வெளியேறுவோம். நாம் ஜயித்து விட்டோம். கவலையை விடுங்கள். இந்த தேவ சைன்ய தலைவன் யாரோ அவனை நான் பிடித்து விட்டேன். இந்த வீரர்களின் நம்பிக்கை, கர்வம், இவை தலைமையில்லாததால் பயனற்றவையே. தந்தையே,மூவுலகையும் உங்கள் இஷ்டம் போல் ஆட்டுவிக்கலாம். இனி யுத்தம் எதற்கு? மகன் சொன்னதைக் கேட்டு ராவணன் மகிழ்ந்தான். இனி யுத்தம் தேவையில்லை. தேவ சேனை வீரர்கள், குழப்பத்துடன் திரும்பினர். ரண பயம் விலகி, தன் பிரபுத்வத்தை ராவணன் திரும்பப் பெற்றான். தன் பக்கமே விஜயம் என்று அறிவித்து விட்டு நிசாசரபதி- இரவில் நடமாடுபவர் தலைவன், வீடு திரும்பினான். மகனை அருகில் அழைத்து பாராட்டினான். உன் அதி வீரமான பராக்ரமத்தால், என் குல கௌரவம் நிலை நிறுத்தப் பட்டது. நமக்கு சற்றும் குறையாத படை பலம் உள்ள தேவேந்திரனையே ஜயித்து விட்டாய். ஓருவனாக வாஸவனை ரதத்தில் ஏற்றிக் கொண்டு நீ முன்னால் போ. சேனை பின் தொடரட்டும். நானும் பின்னால் வருகிறேன். அப்படியே இந்திரனை பிடித்தபடி, ராவணீ முன் செல்ல சேனையும், ராவணனும் தொடர்ந்தனர். யுத்தம் முடிந்தது என்று போர் வீரர்களை அனுப்பி விட்டான் ராவண ராஜா.
(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வாஸவ க்ரஹணம் என்ற இருபத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.
அத்தியாயம் 30 (567) இந்திர பராஜய காரண கதனம் (இந்திரன் தோல்வியுறக் காரணம்).
அதி பலசாலியான இந்திரனை வெற்றி கொண்ட பின், தேவர்கள் ப்ரும்மாவிடம் சென்றனர். (ப்ரக்ஷிப்தம்-இடைச்செருகல்- துக்கத்துடன் முறையிட்டனர். பகவன், இந்திரன் சிறைப் பட்டான். நீங்கள் கொடுத்த வரம் தான் காரணம். ராக்ஷஸேந்திரனை நாங்கள் யாரும் வதம் செய்ய முடியாதபடி வரம் கொடுத்து விட்டீர்கள். அவன் மகனுக்கு மகேஸ்வரன் வரங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார். மாயா பலத்தால், பலவந்தமாக இழுத்துக் கொண்டு போய் இருக்கிறான். தேவர்கள் ஒரு சக்தியுமின்றி, கட்டுப் பட்டுக் கிடக்கிறோம். அதனால் நீங்களே தான் இந்திரனை விடுவித்து தர வேண்டும் என்று வேண்டினர்) இதன் பின் ப்ரும்மா ராவணன் இருப்பிடம் சென்றார். ஆகாயத்தில் இருந்தபடி அவனை அழைத்து பேசினார். ராவணன் தன், மகன் மற்றும் உறவினர்களுடன், கர்வத்துடன் தன் ஆசனத்தில் வீற்றிருந்தான். மகனே, ராவணா, நீயும் உன் மகனும், போரில் காட்டிய திறமையைக் கண்டு திருப்தியடைந்தேன். ஆஹா, உன் மகனின் ஆற்றல் உனக்கு சமமாக, ஏன் இன்னும் பல மடங்கு உயர்வாக இருக்கிறது. உங்கள் ஆற்றலால் மூவுலகையும் ஜயித்தவனாக ஆனாய். உன் பிரதிக்ஞையும் பூர்த்தியடைந்தது. இதோ, உன் மகன், ராவணீ, இணையற்ற பலவான் என்று சொல்லக் கேட்டு எனக்கும் மிகவும் சந்தோஷமே. இன்று முதல் அவனை இந்திரஜித்- இந்திரனை வென்றவன் என்று அழைப்போம். ராக்ஷஸ குமாரன் பலவானாக, யாராலும் எளிதில் வெல்ல முடியாதவனாக இருப்பான். மூவுலகும் அவன் செயலால், ராக்ஷஸ ராஜனே, உன் ஆட்சியின் கீழ் வந்து விட்டது. அதனால் இந்திரனை விட்டு விடு. மகேந்திரன், பாக சாஸனன், அவனை விடுவிக்க என்ன விரும்புகிறாய் என்று கேட்க, மேகநாதன், எனக்கு அமரத்வம் தந்தால், இவனை விடுவிக்கிறேன் என்றான். நான்கு கால்களுடைய மிருகங்கள், பறவைகள் தவிர, மரம், புதர், கொடி, புல், கல், மலை இவைகளிடம் கூட ஜந்துக்கள், சமயங்க ளில் பயப்படுகின்றன. அதனால் உலகில் எந்த பொருளிலும், எப்பொழுதும் பயம்-ஆபத்து, இருக்கிறது இவ்வாறு இந்திரஜித் சொல்லவும், ப்ரும்மா சொன்னார். அப்படி அமரத்வம் என்பது உயிரினங்களுக்கு கிடையாது. ஏதோ ஒரு விதத்தில், மரணம் தவிர்க்க முடியாததே. கால் நடைகள், பக்ஷிகள், அல்லது ஆற்றல் மிகுந்த பிராணியிடம் உன் மரணத்தை ஏற்றுக் கொள் என்றார். உடனே இந்திரஜித் என்ற அந்த ராவணன் மகன் தன் நிபந்தனைகளை வெளியிட்டான். கேளுங்கள். இந்திரனை விடுவிக்க வேண்டுமானால், இவை தான் என் நிபந்தனைகள். எனக்கு இஷ்டமான பொழுது, அக்னியில் ஹவ்யம் அளித்து, மந்திரங்கள் சொல்லி பூஜை செய்து யுத்தத்தில் இறங்குவேன். எந்த சத்ருவானாலும் வெற்றி எனக்கே கிடைக்கும் படி, குதிரையுடன் கூடிய ரதம் அக்னியிலிருந்து வெளி வர வேண்டும், அதில் இருக்கும் வரை எனக்கு அமரத்வம் தர வேண்டும். இந்த வரம் தந்தால் இந்திரனை விடுவிக்கிறோம் என்றான். அந்த யாகத்தை நான் செய்து முடிக்கும் முன் தேவர்கள் குறுக்கிட்டு வெற்றி பெற்றால், எனக்கு விமோசனம், முடிவு வரட்டும், மற்ற எல்லோரும் தவம் செய்து அமரத்வம் வேண்டுவார்கள். நான் என் புஜ பலத்தால் அமரத்வத்தை வேண்டுகிறேன் என்றான். ப்ரும்மா அப்படியே ஆகட்டும் என்று ஒப்புக் கொண்டார். இந்திரனையும் விடுவித்தனர். எல்லோரும் தேவ லோகம் சென்றனர். ராமா, இந்திரன் தன் மதிப்பை இழந்ததால் வாய் பேசாது இருந்தான். பிரஜாபதியான ப்ரும்மா அவன் மன நிலையை உணர்ந்து, சமாதானம் செய்வது போல பேசினார். சதக்ரதோ, நூறு யாகங்களைச் செய்தவனே, முன் நீ செய்தது நினைவு இல்லையா, அமரேந்திரனே, முன்பு நான் பல விதமாக பிரஜைகளை ஸ்ருஷ்டி செய்து கொண்டிருந்தேன். ஒரே வர்ணம், ஒரே அளவு ஒரே வித அமைப்பு. ஓரே அச்சில் வார்த்து எடுத்தது போல. இவர்களை பிரித்து அடையாளம் காட்ட கூட முடியாது. மனதை ஒரு முகப் படுத்தி, வித்தியாசமாக ஸ்ருஷ்டி செய்ய நினைத்து, பெண்களை உருவாக்கினேன். அதுவரை ஸ்ருஷ்டி செய்த பிரஜைகளில் எதெது உயர்வோ, அவைகளைச் சேர்த்து மிகுந்த பிரயாஸையுடன் அஹல்யா என்ற பெண்ணை ஸ்ருஷ்டி செய்தேன். ஹலம் என்ற சொல்லின் விளைவு ஹல்யம், இதன் பொருள்- அழகின்மை. இந்த ஹல்யம், அழகின்மை அருகில் நெருங்க கூட முடியாதபடி அஹல்யா என்ற ஸ்திரீ ரத்னத்தை ஸ்ருஷ்டி செய்தேன். ஹல்யம் இல்லாததால் அஹல்யா. இதே பெயரில் இவள் பிரசித்தமானாள். இப்படி ஒரு ஸ்திரீயை ஸ்ருஷ்டி செய்து விட்டோமே, இவளுக்கு ஏற்ற வரன் கிடைக்க வேண்டுமே என்ற கவலை தோன்றியது. இந்திரா, நீ நினைத்தாய், உயர் பதவியில் இருப்பதால், உனக்குத்தான் அவள் மனைவியாவாள் என்று மனக் கோட்டை கட்டினாய். நீயாக நினைத்துக் கொண்டாய். நான் மகாத்மா கௌதமரிடம் அடைக்கலப் பொருளாக விட்டு வைத்திருந்தேன். பல வருஷ காலம் அவரிடமே இருந்தாள். தன்னுடன் அழைத்துச் சென்ற முனிவர், பல வருஷ காலம், அவளை பெரும் மதிப்பும் மரியாதையுமாக நடத்தி வந்தார். மகா முனிவரின் வைராக்யம், திட சித்தம், தவ வலிமை இவற்றைக் கண்டு பத்னியாக அவளைத் தொட அனுமதித்தேன். அவளுடன் மகா முனி சந்தோஷமாக இருந்தார். தேவர்கள் அனைவரும் நான் அவளை கௌதமருக்கு கொடுத்ததில் மனத்தாங்கல் அடைந்தனர். இந்திரா, நீயும் மிகுந்த கோபத்துடன் முனிவர் ஆசிரமம் சென்றாய். கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல நின்றவளைக் கண்டாய். கோபமும், காமமும் உன் அறிவை மறைத்தது. அவளை பலாத்காரம் செய்தாய். மகரிஷியிடம் வசமாக அகப்பட்டுக் கொண்டாய். மகா தேஜஸ் உடைய அவரால் சபிக்கப் பட்டாய். என்ன தைரியம்? எந்த தைரியத்தில் நீ இப்படி ஒரு அக்கிரமத்தை செய்தாயோ, எந்த தைரியத்தில் என் மனைவியை கெடுத்தாயோ, எந்த தைரியத்தில் பயமின்றி சுற்றுகிறாயோ, அந்த தைரியம் உனக்கு இல்லாமல் போகட்டும். யுத்தத்தில் சத்ருக்க ளிடம் வசமாக மாட்டிக் கொள்வாய். நீ ஆரம்பித்து வைத்த இந்த துஷ்க்ருத்யம், கெட்ட காரியம், மனிதர்களிடமும் தோன்றும் சந்தேகமேயில்லை. அப்படி மனிதன் செய்யும் தவற்றால் அவனுக்கு ஏற்படக் கூடிய பாப சுமையில் பாதி உன்னை வந்து சேரும். செய்பவன் பாதி தண்டனையை அனுபவிப்பான். உனக்கு ஸ்திரமான இடமும் (பதவி) இனி கிடையாது. யார் யார் தேவர்கள் தலைவனாக வந்தாலும், நிரந்தரமாக இருக்க மாட்டான். இது என் சாபம். தன் மனைவியையும் மிகவும் கடிந்து கொண்டார். துர்விநீதே, கெட்ட நடத்தையுடையவளே, என் ஆசிரம எல்லைக்குள் இனி நுழையாதே. அழகும், இளமையும் உன்னிடம் தான் இருப்பதாக இறுமாந்திருந்தாயே. இனி நீ ஒருவள் தான் ரூபவதி என்ற தகுதியை இழப்பாய். உலகில் பிரஜைகள் அனைவருமே ரூபவதிகளாக பிறப்பர். தன்னைப் போல வேறு யாரும் இல்லை என்று தானே கர்வப்பட்டாய். இதன் பின் பலர் அதே போல அழகுடையவர்களாக பிறந்தனர். அவள் முனிவரை வேண்டிக் கொண்டு மிக மெதுவான குரலில் தன்னை மன்னிக்கும் படி கேட்டாள். நாதா, அறியாமையால் நடந்து விட்ட தவறு இது. அவன் உங்கள் உருவத்தில் வந்தான். அதனால் தான் சம்மதித்தேன் என்றாள். மகா முனியே காமாந்தகனான அவன் என்னை ஏமாற்றி விட்டான். நீங்கள் என்னை பொறுத்தருள வேண்டும் என்றாள். அஹல்யை இவ்வாறு சொல்லவும் கௌதம முனிவர், இக்ஷ்வாகு வம்சத்தில் ஒரு மகான் பிறக்கப் போகிறான். ராமன் என்ற பெயருடன். வனம் வருவான். விஷ்ணுவே மனித உருக் கொண்டு வருவார். உலக நன்மைக்காக. அவரை தரிசனம் செய்தால் நீ பாவனமாவாய். அவருக்கு அதிதி சத்காரங்கள் செய்து விட்டு, என்னை அடைவாய். அதன் பின் என்னுடன் வாழ்வாய். என்று சொல்லி முனிவர் தன் ஆசிரமம் சென்று விட்டார். அவர் மனைவி கடுமையான தவம் செய்தாள். சாப விமோசனத்திற்காக காத்திருக்கிறாள். இந்திரா, நீ நினைத்துப் பார். நீ செய்த துஷ்ட காரியத்தின் பலன் தான் இப்பொழுது சத்ரு வசம் பிடி பட்டாய். வேறு யாரும் காரணம் இல்லை. மனதை ஒருமுகப் படுத்தி சீக்கிரம் வைஷ்ணவ யாகம் செய். அந்த யாகத்தின் பலனாக, நீ பவித்ரமாகி தேவ லோகம் செல்வாய். உன் மகனும் இந்த யுத்தத்தில் அழியவில்லை. அவனை அவன் பாட்டன் கடலுக்கடியில் அழைத்துச் சென்று விட்டான். இதைக் கேட்டு தேவேந்திரன், வைஷ்ணவ யாகம் செய்தான். திரும்பவும் தேவ லோகத்தைப் பெற்று தேவராஜாவாக ஆனான். இது தான் இந்திரஜித்தின் பலம். தேவேந்திரனை ஜயித்ததால், இந்திரஜித் என்று புகழ் பெற்றான். மற்ற பிராணிகள் அவனுக்கு ஒரு பொருட்டா என்ன? கேட்டுக் கொண்டிருந்த ராமனும், லக்ஷ்மணனும், மற்ற வானர, ராக்ஷஸர்களும், வியந்தனர். விபீஷணன், முன் நடந்தது, கேட்டது நினைவு வரப் பெற்றேன் என்றான். ராமரும் கேட்டதாக நினைவு வருகிறது என்றார். உலகில், ராவணன் துன்பம் இழைப்பவனாக ஆனது இப்படித்தான் என்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், இந்திர பராஜய காரண கத2னம் என்ற முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.