பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 31 – 45

பிப்ரவரி 26, 2014

அத்தியாயம் 31 (568) ராவண நர்மதாவகாஹ: (ராவணன் நர்மதையில் இறங்குதல்)

   

அகஸ்தியர் சொன்னதைக் கேட்ட ராமர் மேலும் வினவினார். பகவன், ராக்ஷஸன் பூமியில் வந்ததிலிருந்து உலகில் சுற்றி வந்தானே, அப்பொழுது உலகம் சூன்யமாகவா இருந்தது? ராஜாவோ, ராஜ மாதாக்களோ இல்லையா? இவனைக் கண்டிக்க கூடிய பெரியவர்கள் யாருமே இல்லையா? ராஜ்யம் ஆண்டவர்கள் பலம் இன்றி அடங்கித் தான் இருந்தார்களா? நல்ல அஸ்திரங்கள் யாரிடமும் இல்லையா? எப்படி எல்லோரையும் ஜயித்தான்? அகஸ்தியர் மெல்ல சிரித்தபடி பதில் சொன்னார். ராவணன் மற்றவர்களைத் துன்புறுத்தி வருத்திய போதும், அரசர்கள் இருந்தனர். அப்படி ஒரு சமயம், ராவணன் எதிர்ப் பட்டவர்களை துன்புறுத்தியபடி, மாஹிஷ்மதி என்ற ஊரைஅடைந்தான். அந்த ஊர் ஸ்வர்க புரி போல இருந்தது. வசுரேதஸ் என்ற அரசன் அதை ஆண்டு வந்தான். அர்ஜூனன் என்ற பெயரும் உடையவன். அவன் யாக சாலையில் எப்பொழுதும், அக்னீ சர குண்டேசயம் – எதிரிகளை தாக்கத் தயாராக ஆயுதங்கள் எப்பொழுதும் இருக்கும்படி, இருக்கும். அந்த அரசன் ஒரு சமயம், தன் பத்னிகளுடன், நர்மதையில் ஸ்னானம் செய்யச் சென்றான். ஹைஹயாதிபதி என்றும் பெயர் பெற்ற இவன் நல்ல பலசாலி. அதே தினம், ராவணனும் அங்கு வந்து சேர்ந்தான். ராவணன், தான் ராக்ஷஸேந்திரன் என்ற ஹோதாவோடு, மந்திரிகளை விசாரித்தான். எங்கே அர்ஜூன ராஜா? ராவணன் நான் வந்திருக்கிறேன், சீக்கிரம் சொல்லுங்கள் என்று அதட்டினான். யுத்தம் செய்ய அழைத்தபடி நான் வந்திருக்கிறேன் என்பதை உங்கள் அரசனிடம் சொல்லுங்கள் என்றான். விவரம் அறிந்த மந்திரிகள் அரசன் அச்சமயம், நகரில் இல்லையே என்பதை விளக்கிச் சொன்னார்கள். விஸ்ரவஸ் மகனான ராவணன் அதோடு விடாமல், ஊர் ஜனங்களிடம், அரசன் இருக்கும் இடம் விசாரித்து தெரிந்து கொண்டு, விந்த்ய மலைச் சாரல் வந்து சேர்ந்தான். விந்த்ய மலையைப் பார்த்து அதிசயித்தான். இமய மலைக்கு ஈடாக இருப்பதை ரஸித்தான். பூமியில் வேரூன்றி, ஆகாயத்தை தொடுவது போல நின்ற மலை வேந்தனைக் கண்டான். ஆயிரக் கணக்கான சிங்கங்களும், அவை வசித்த குகைகளும், கணக்கில்லாத சிகரங்களுமாக, வேகமாக விழும் நதி ஜலமும், அட்டகாசமாக் பெருகி வரும் நீர் வீழ்ச்சிகளுமாக அழகிய காட்சிகளைக் கண்டான். தேவ, தானவ, கந்தரவர்கள், அப்ஸர கணங்கள், கின்னரர்கள், பெண்களுடன் விளையாடி மகிழும் இடமாக இருந்ததைக் கண்டான். ஸ்வர்க லோகம் போல இருந்தது. நதிகளில் தண்ணீர் ஸ்படிகம் போல  தெளிவாக இருந்தது. மலையின் அமைப்பே, படம் எடுத்து ஆடும் அனந்த நாகம் அமர்ந்த நிலையில் இருப்பதாக நினைத்தான். மலை ஹிமய மலையைப் போலவே ஆங்காங்கு சம வெளிகளுடன் காணப்பட்டது. இப்படி மலையை ரஸித்துக் கொண்டே ராவணன் நர்மதா நதியை அடைந்தான். கற்களை அளைந்தபடி மேற்கு கடலை நோக்கி ஓடும் நர்மதா நதியின் அழகைக் கண்டு மனம் மகிழ்ந்தான். அங்கிருந்த குளங்களில், சிங்கங்களும், ஸார்துர்லங்களும், கரடிகள், யானைகள் யாவும் வெப்பம் தாங்காமல், தவித்து தாகத்தை தணித்துக் கொள்ள, வந்து தண்ணீரைக் குடித்து குளத்தையே வற்றச் செய்து விடுமோ என்பது போல நிறைந்து இருப்பதைக் கண்டான். சக்ரவாக பக்ஷிகள், காரண்டவ, ஹம்ஸங்கள், தவிர, நீரில் வாழும் சேவல்கள், ஸாரஸங்கள் எப்பொழுதும் மதம் பிடித்தது போல கூவும் பறவை இனங்கள் நிறைந்து இருப்பதைக் கண்டான். மலர்ந்து கிடந்த பூக்களுடன் மரங்கள், ஜோடி ஜோடியாக, சக்ர வாகங்கள், பரவிக் கிடந்த விசாலமான மணல்கரை, கூட்டம் கூட்டமாக ஹம்ஸங்கள் மேகலை அணிவித்தது போலத் தெரிவதைக் கண்டான். புஷ்பங்களின் மகரந்தத்தை உடல் முழுவதும் பூசி விட்டது போல, தண்ணீரில் நுரை வெண்மையாக பரவிக் கிடந்தது. தண்ணீரில் மூழ்கி குளித்தால், உத்பல புஷ்பங்கள், மெள்ள மெள்ள  தொடுவது போல உடலில் படும். உத்பல பூக்களே காண அரும் காட்சியாக, சுகமாக இருந்தது. தன் புஷ்பக விமானத்திலிருந்த இறங்கி, நதிகளில் சிறந்த நர்மதா நதியை, தன் மனதிற்குப் பிடித்த பெண்ணை ஆவலுடன் தழுவுவது போல, ஆசையுடன் நர்மதா நதி நீரில் மூழ்கினான் தஸானனன். அந்த நதிக் கரையில் மணல் கரையில், பல விதமான முனி ஜனங்களிடையே இருந்த மந்திரிகளிடம் விசாரித்தான். இது என்ன கங்கையா? நர்மதாவா? முதல் முறை நர்மதாவின் அழகைக் கண்ட பரவசத்தில் ஆனந்தக் கடலில் மூழ்கியவன் போல உற்சாகமாக தன் மந்திரிகளை அழைத்தான். ப்ரஹஸ்த, சுக, சாரணன் முதலிய மந்திரிகளை அழைத்து, விளையாட்டாக சிரித்தபடி, இதோ பாருங்கள். ஆயிரக் கணக்கான கிரணங்களுடன் உலகையே காஞ்சனமாக ஆக்குவது போல, தீக்ஷ்ணமான தாபத்தை தரும், சூரியன் ஆகாயத்தில் பாதியை அடைத்துக் கொண்டிருக்கிறான். நான் இங்கு இருப்பதையறிந்து தான் போலும், சூரியன் சந்திரன் போல குளிர்ச்சியாக ஆகி விட்டான். நர்மதா ஜலமும் குளிர்ச்சியாக, சிரம பரிகாரம் செய்வது போல இருக்கிறது. நல்ல வாசனையுடன் பெருகி ஓடுகிறது. என்னிடம் பயந்து காற்றும் மந்தமாக வீசுகிறது. இந்த நர்மதா நதி மிக உயர்ந்த நதி. நர்ம வர்தினி. உடலுக்கு இதமானவள். முதலைகள், மீன்கள், பறவைகள், அலைகள், இவற்றுடன் பயந்து நிற்கும் பெண் போல இருக்கிறாள். அதனால் நீங்களும், களைத்து இருப்பீர்கள். பல அரசர்களுடன் போரிட்டு, ரத்தத்தையே சந்தனம் போல பூசிக் கொண்டு அலுத்து சலித்திருப்பீர்கள். உடல் களைப்புத் தீர நீங்களும், இந்த நதியில் மூழ்கி            குளியுங்கள். சுபமான ஜலம். நர்மதா, சர்மதா. பெரிய தாமரை மலர்களே முகமாக, பெரிய யானைகள் கங்கையில் இறங்குவது போல, இந்த நதியில் இறங்கி பாபங்களை போக்கிக் கொள்ளுங்கள். நானும் சிவ பூஜை செய்கிறேன். ராவணன் இவ்வாறு அனுமதி அளித்ததும், பிரஹஸ்த, சுக, சாரணர்கள், மகோதர, துர்ம்ராக்ஷன், நர்மதையில் இறங்கி குளிக்கலாயினர். ராக்ஷஸர்கள், மகா யானைகள் போன்ற உருவம் உடையவர்கள், நதியில் இறங்கி கலக்கிய கலக்கலில், நதியே வற்றி விடும் போலாயிற்று. குளித்து முடித்த ராக்ஷஸர்கள், ராவணனுக்கு பூக்களை கொண்டு வந்து கொடுத்தனர். மலையளவு பூக்களை க்ஷண நேரத்தில் கொண்டு வந்து குவித்து விட்டனர். திரும்பவும் நர்மதா நதியில் இறங்கி ஸ்நானம் செய்து, ஜப தபங்களை முடித்துக் கொண்டு, பழைய ஆடைகளை களைந்து புதிய வெண் பட்டு ஆடைகளை தரித்துக் கொண்டு நடந்த ராவணனை மந்திரிகள் பின் தொடர்ந்தனர். ராவணன் போகும் இடமெல்லாம், மலைக் குன்றுகள் உடன் செல்வது போல பெருத்த உடலுடைய ராக்ஷஸ மந்திரிகள் சென்றனர். பொன்னாலான சிவ லிங்கத்தையும் தூக்கிக் கொண்டு சென்றனர். மணலில் அந்த லிங்கத்தை ஸ்தாபனம் செய்து ராவணன் ஆங்காங்கு புஷ்பங்களாலும், கந்தம் முதலியவற்றாலும் அர்ச்சனை செய்தான். சந்திரனை தலையில் ஆபரணமாக தரித்தவரும், வரங்களைத் தருபவரும், நல்லவர்களின் துன்பத்தை துடைப்பவருமான சிவ பெருமானை துதித்து பாடி, கைகளை விரித்து வேண்டியபடி, ஆடவும் ஆரம்பித்தான்.

(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராவண நர்மதாவகாஹ: என்ற முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.

 

அத்தியாயம் 32 (569) ராவண கிரஹணம் (ராவணனைப் பிடித்தல்)

 

பயங்கரமான ராக்ஷஸன், நர்மதா நதிக் கரையில், அட்டகாசமாக பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்து கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்த சமயம், சற்று தூரத்தில், மாஹிஷ்மதியின் அரசனான அர்ஜூனன், நர்மதா நதியில் பெண்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். ஆயிரம் பெண் யானைகள் நடுவில், குஞ்சரம் போல நின்றிருந்தான். தன் புஜ பலத்தை பரீக்ஷிப்பது போல திடுமென தன் ஆயிரம் கைகளால், நதியைத் தடுத்து நிறுத்தினான். கார்த்த வீர்யனுடைய கைகளே அணையாக தடுக்க, தடைபட்ட ஜலம், கரைகளை அரித்துக் கொண்டு சுழல்களாக எதிர்த்துக் கொண்டு ஓடலாயிற்று. மீன்களும், முதலைகளும், ஆமைகளும், புல் தரையும், புஷ்பங்களும், அந்த வேகத்தோடு போட்டியிடுவது போல, மழைக்கால வெள்ளம் போல சுழித்துக் கொண்டு ஓடியது. கார்த்த வீர்யார்ஜூனன் அனுப்பியதைப் போல பெருகி வந்த ஜலம் ராவணனுடைய புஷ்பார்ச்சனையை அடித்துச் சென்று விட்டது. தன் பூஜையை பாதியில் நிறுத்தி விட்டு ராவணன், கோபத்துடன் பிரிந்து செல்லும், பிரிய மனைவியைப் போல நர்மதை எதிர் திசையில் பெருகி ஓடுவதைக் கண்டான். மேற்கு திசையில் சாகரத்தை நோக்கி ஓடிய நதி திடுமென கிழக்கில் திரும்பி வேகமாக செல்வதைக் கண்டான். ராவணன் கண்களுக்கு அந்த நதி பெண்ணாகத் தெரிந்தாள். கரையிலிருந்த மந்திரிகளை அழைத்து, திடுமென நதியில் வேகம் வந்த காரணத்தை கண்டு பிடிக்கச் சொன்னான். சுக, சாரண என்ற சகோதரர்கள் இருவரும், உடனே ஆகாய மார்கமாக சென்றனர். மேற்கு நோக்கி பாதி யோனை தூரம் சென்றவர்கள், பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்த புருஷனைக் கண்டனர். பெரிய சால மரம் போன்ற உருவமும், தண்ணீரில் கலைந்த கேசமும், மதுவின் மயக்கம் தெரிய இருந்த கண்களும், மதுவின் பிடியில் உடல் தளர இருந்தவன் தன் கைகளால், நீரின் வேகத்தை தடுத்துப் பிடித்துக் கொண்டு இருப்பதைக் கண்டனர். மலை போன்ற ஆயிரம் பாதங்கள். பூமியில் ஊன்றிக் கொண்டு நின்றன. பல இளம் பெண்கள் அவனுடன் காணப் பட்டனர். மதம் பிடித்த பல ஆயிரம் பெண் யானைகளுக்கு இடையில் ஆண் யானை போலத் தெரிந்தான். இது வரை கண்டிராத இந்த காட்சியைக் கண்டவர்கள், ராவணனிடம் ஓடி வந்து தெரிவித்தனர். பெரிய சால மரம் போல சரீரம் உடையவன், யாரோ ஒருவன், ராக்ஷஸா, நர்மதையை அணை போட்டுத் தடுப்பது போல தன் கைகளாலேயே தடுத்து, பெண்களை ஸ்நானம் செய்வித்து, விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறான். அவன் ஆயிரம் கைகளுக்குள், நிறுத்தப் பட்ட நதி ஜலம், சாகரம் போல சேர்ந்து அலை அடித்துக் கொண்டு திரும்பி பிரவகிக்கிறது. இதைக் கேட்டு ராவணன், அர்ஜூனன் தான் என்று சொல்லியபடி தான் தேடி வந்த அர்ஜூனனுடன் போர் புரியும் உத்தேசத்துடன் கிளம்பி விட்டான். திடுமென காற்று பலமாக வீசி, புழுதியை வாரி இறைத்தது. இரைச்சலுடன் சுழன்று வீசியது. தன் மந்திரிகளுடன் அர்ஜூனன் இருக்கும் இடம் வந்த ராவணன், தேக்கி வைத்த ஜலத்தில் பெண்களுடன் குலாவிக் கொண்டிருந்த அர்ஜூனனைப் பார்த்து, கோபத்தில் சிவந்த விழிகளோடு, அர்ஜூன ராஜாவின் மந்திரிகளைப் பார்த்து கத்தினான். அமாத்யர்களே, சீக்கிரம், உங்கள் அரசனிடம் சொல்லுங்கள். ராவணன் என்ற ராக்ஷஸன், யுத்தம் செய்ய அழைக்கிறான் என்று சொல்லுங்கள். உடனே அந்த மந்திரிகளே, தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வந்து, யுத்தம் செய்ய இதுவா நேரம்? நல்லது ராவண ராஜா, உன் வீரம் நல்லது. பெண்களுடன் இருக்கும் அரசனிடம் உன் பலத்தைக் காட்டப் போகிறாயா? இப்பொழுது அரசனிடம் எப்படி யுத்தம் செய்வாய், பொறு ராவணா, இன்று இரவு கழியட்டும், நாளைக் காலை வந்து போருக்கு அழைத்து, உன் போர் ஆசையைத் தீர்த்துக் கொள். போர் புரிய தினவு எடுக்கும் உன் புஜங்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். நாங்கள் அனைவரும் இருப்போம். எங்களுடன் போர் புரிந்து உன் திறமையை காட்டுவாய். பிறகு அர்ஜூன ராஜாவிடம் செல்வாய் என்றனர். இவர்கள் சொல்லி முடிக்கும் முன்பே ராவணனின் மந்திரிகள் அவர்களை பிடித்து விழுங்க ஆரம்பித்தனர். அச்சமயம் நர்மதா தீரத்தில், கல கலவென்ற சப்தம் உண்டாயிற்று. அர்ஜூன ராஜாவின் காவல் வீர்ர்கள், ஆயுதங்களோடு வந்து சேர்ந்தனர். பெரும் யுத்தமே துவங்கியது. கம்பு, கத்தி, தோமரம், சூலம், த்ரிசூலம், என்று பல வகை ஆயுதங்களும் வந்தன. ஹைஹயாதிபதியின் ஆட்கள் வேகமாக செயல் பட்டனர். சமுத்திரம் ஆரவாரிப்பது போல, யுத்த கோஷம் முழங்கியது. மீன்களும், ஆமைகளும், முதலைகளும் கொண்ட சமுத்திரம் போலவே, ஹைஹயாதிபதியின் வீரர்கள் ஆரவாரித்தனர். ப்ரஹஸ்தன், சுக, சாரண என்ற ராவன மந்திரிகள், கார்த்த வீர்யனுடைய படையை தாக்கினர். விளையாடிக் கொண்டிருந்த அரசனிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டது. வாயில் காப்போன் வந்து சொன்னதும், அர்ஜூனன் சாவகாசமாக, பயப்பட வேண்டாம் என்று பெண்களிடம் சொல்லி விட்டு, நீரை விட்டு  வெளியில் வந்தான். கருநீல மலை ஒன்று கங்கையிலிருந்து  வெளி வருவது போல வந்தான். கண்களில் க்ரோதம் கொப்பளித்தது. உயர்ந்த பொன் ஆபரணங்களை அணிந்ததே, நெருப்பாக ஜொலிக்க, கதையை சுழற்றியபடி வந்து சேர்ந்தான். சூரியனைக் கண்ட இருட்டு போல ராவணனின் வீர்ர்களை ஓடச் செய்தது.  பெரிய கதை, கைகளையே முறித்து விடும் போல., அதை அலட்சியமாக தூக்கிக் கொண்டு கருட வேகத்தில் வந்தவன், வழி மறித்து நின்ற ப்ரஹஸ்தனைக் கண்டான். கையில் முஸலம் என்ற ஆயுதத்துடன் ப்ரஹஸ்தன், சூரியனை விந்திய மலை மறிப்பது போல நின்றான். இரும்பு பூண் போட்ட அந்த ஆயுதத்தை, கார்த்த வீர்யார்ஜூனனை நோக்கி வீசினான். தன்னை நோக்கி வந்த முஸலத்தை, அர்ஜூனன் தன் கதையால் தடுத்து நிறுத்தினான். இதன் பின் ப்ரஹஸ்தனை துரத்திக் கொண்டு ஓடினான். பாதி கைகளால் கதையை சுழற்றியபடி, ப்ரஹஸ்தனை தன் கதையால் ஓங்கி அடித்தான். ப்ரஹஸ்தன் விழுந்தான். அவன் விழுந்ததைக் கண்ட ராக்ஷஸ வீரர்கள், மாரீச, சுக, சாரணர்கள், மகோதர, தூம்ராக்ஷர்கள், ரண பூமியிலிருந்து  வெளியேறி சென்று விட்டனர். ராவணன் தானே, அர்ஜூனனைத் தாக்க வந்தான். ஆயிரம் கைகளுடையவனும், இருபது கைகளுடையவனும் மோதிக் கொண்டனர். அரசனுக்கும், ராக்ஷஸனுக்கும் இடையில் கோரமான யுத்தம் நடந்தது. நகரும் மலை போன்ற இருவரும், சாகரம் போன்ற கொந்தளிப்புடன், ஆதித்யன் போன்ற தேஜஸும், நெருப்பே போல தகிக்கும், பலம் மிகுந்த இரு நாகங்கள் போலவும், பெண் யானையை காளைகள் துரத்துவது போலவும், சிங்கம் போல தங்கள் பலத்தில் கர்வமும் உடையவர்களாக, மேகம் போல கத்திக் கொண்டு, ருத்ரனும், காலனும் போல, ராக்ஷஸனும், அரசனும், கோபத்துடன் ஒருவரை ஒருவர் கதையால் அடித்துக் கொண்டனர். வஜ்ரத்தால் அடிபட்ட மலைகள் சிதறுவது போல அடித்துக் கொண்டனர். கதையால் அடிக்கும் பொழுது, கற்கள் மோதிக் கொள்வது போல, நெருப்பும் சப்தமும் எழுந்தது. அர்ஜூனனுடைய கதை ஆகாயத்தில் மின்னல் தெறித்தது போல  ஒளி வீசியது. அதே போல ராவணன் அரசனின் மார்பில் அடித்த பொழுது, மின் மினி கூட்டம் பறந்தது. இருவரும் சளைக்கவில்லை. வாட்டமடையவில்லை. பலியும், இந்திரனும் சண்டையிட்டது போல இருந்தது. விருஷபங்கள், இரண்டு கொம்புகளால் மோதிக் கொள்வது போலவும், தந்த நுனிகளால் இரண்டு ஆண் யானைகள் மோதிக் கொள்வது போலவும், பரஸ்பரம் அடித்துக் கொண்டனர். இதன் பின் அர்ஜூனன் தன் சக்தி முழுவதும் பிரயோகித்து, ராவணனை அடிக்கவும், மார்பில் பட்ட அந்த அடி, ஒரு வில் வைக்கும் தூரம், ராவணனை பின் வாங்கச் செய்தது. நிலை குலைந்து நின்ற ராவணனை வேகமாகச் சென்று, கருடன் பாம்பைப் பிடிப்பது போல அர்ஜூன ராஜா பிடித்துக் கொண்டான். ஆயிரம் கைகளாலும் தூக்கி பிடித்து கட்டி வைத்து விட்டான். பலியை நாராயணன் கட்டியது போல ராவணன் கட்டுப் பட்டதையறிந்து, சித்த, சாரண, தேவதைகள், சாது, சாது என்று கோஷித்து அர்ஜூனன் மேல் பூமாரி பொழிந்தனர். புலி தான் அடித்த மிருகத்தை  தூக்கிச் செல்வது போலவும், மிருக ராஜா, யானையை இழுத்துச் செல்வது போலவும், ஹைஹய ராஜா உரத்த குரலில் அறிவித்தபடி சென்றான். இதனிடையில் மூர்ச்சை தெளிந்த ப்ரஹஸ்தன் ராவணன் பிடி பட்டதையும் இழுத்துச் செல்லப் படுவதையும் உணர்ந்தான். மற்ற மந்திரிகளும் உடன் வர, பின்னாலேயே சென்றனர். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்கள், விடு, விடு, நில், நில் என்று அலறியபடி, மேலே வீசிய முஸலங்களையும், சூலங்களையும் சற்றும் லட்சியம் செய்யாமல், அர்ஜூன ராஜா சென்று கொண்டேயிருந்தான். தேவ விரோதிகளின் ஆயுதங்களை மட்டும், பத்திரமாக பிடித்து வைத்துக் கொண்டான். பின் அதே ஆயுதங்களை அவர்கள் மேல் படும் படி வீசி ஓடச் செய்தான். பின் தொடர்ந்த ராக்ஷஸர்களை இவ்வாறாக ஆட்டி வைத்தபடி அர்ஜூன ராஜா தன் நகரம் சென்றான். நண்பர்களுடன் வெற்றி வீரனாக வரும் அவனை ஊர் ஜனங்கள் வரவேற்றனர். புரோஹிதர்கள் மந்த்ராக்ஷதைகள்  தெளித்து வாழ்த்தினர். பலியை அடக்கி, சஹஸ்ராக்ஷன் இந்திரன் நுழைந்தது போல தன் நகரத்தினுள் பிரவேசித்தான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராவண கிரஹணம் என்ற முப்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 33 (570) ராவண விமோக்ஷ: (ராவணனை விடுவித்தல்)

 

வாயுவை பிடிப்பது போல அரிய செயல், ஹைஹய ராஜா ராவணனை சிறை பிடித்து விட்டான் என்றும், தேவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டதை புலஸ்திய முனிவர் கேட்டார். (ராவணன் தந்தை). மகன் மேல் கொண்ட பாசத்தால், மாஹிஷ்மதி அரசனை கண்டு பேச வந்தார். வாயு மார்கமாக, வாயு வேகத்தில் மாஹிஷ்மதி நகரை அடைந்தார். அமராவதி போல மகிழச்சியுடன் புஷ்டியாக ஜனங்கள் நடமாடிக் கொண்டிருந்த நகரில், ப்ரும்மா, அமராவதியில் நுழைவது போல நுழைந்தார். ஆதித்யனே இறங்கி நடந்து வருகிறானோ என்று ஐயம் தோன்றும்படி, தன் தேஜஸால் அனைவரையும் கவர்ந்தார். இன்னார் என்று தெரிந்து கொண்டு வாயில் காப்பவர்கள், அரசனிடம் தெரிவித்தனர். புலஸ்தியர் வந்திருக்கிறார் என்று கேள்விப் பட்டவுடன், ஹைஹயபதி, கூப்பிய கரங்களுடன் எதிர் கொண்டு அழைக்க வந்து விட்டான். அரசனின் புரோஹிதர் அர்க்யம், பாத்யம், இவைகளுடன் அரசனுக்கு முன்னால் சென்றார். இந்திரனுக்கு முன்னால் ப்ருஹஸ்பதி செல்வது போல. பரபரப்புடன் முனிவரை நமஸ்கரித்து, உதய சூரியன் போல தேஜஸJடன் இருந்த அந்த முனிவர் வந்ததே பெரும் பாக்கியம் என்று கருதி வரவேற்றான். அவருக்கு மதுபர்க்கம், பால், பாத்யம், அர்க்யம் இவற்றைக் கொடுத்து, வரவேற்றபடி, முன்னால் சென்றான். நாத் தழ தழக்க அவரிடம், இன்று என் மாஹிஷ்மதி நகரம் பாக்கியம் செய்தது. அமராவதி நகருக்கு இணையாக ஆயிற்று. யாருக்கும் எளிதில் கிடைக்காத தங்கள் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். இன்று என் பிறவி பயன் பெற்றது. நான் செய்த விரதங்கள் அதன் பலனைப் பெற்றன. என் தவம் பலித்தது. தேவர்கள் கூட வணங்க முடியாத தங்கள்      பாதங்களில் விழுந்து வணங்கும் பேறு பெற்றேன். இந்த ராஜ்யம், இந்த என் குழந்தைகள், என் மனைவிகள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். என்ன காரியம்,? எங்களுக்கு கட்டளையிடுங்கள். இவ்வாறு பணிவுடன் சொன்ன அரசனைப் பார்த்து, முனிவரும் பரிவுடன் குசலம் விசாரித்தார். அதன் பின் ஹைஹய ராஜனைப் பார்த்து நரேந்திரனே, உன் பலம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று அறிகிறேன். தசக்ரீவனையே கட்டி வைத்து விட்டாயே. எவனிடம், பயந்து, சாகரமும், காற்றும் ஸ்தம்பித்து நிற்குமோ, அந்த ராவணனையே ஜயித்து விட்டாய். என் பேரன் அவன். ரண முடிவில் உன்னிடம் தோற்று சிறைபட்டு இருக்கிறான். என் பேரனின் புகழ் உலகெங்கும் பரவியது. நீயும் கேள்விப் பட்டு இருப்பாய். நான் இன்று யாசிக்கிறேன். என் வார்த்தையை மதித்து தசானனை விடுதலை செய், என்றார். அர்ஜூனன் எந்த வித மறுப்பும் சொல்லாமல், ராக்ஷஸேந்திரனை விடுவித்து விட்டான். அதோடு நிற்காமல், தேவ விரோதி என்றும் பாராட்டாமல், ஆடை ஆபரணங்களும் கொடுத்து, கௌரவித்து, அக்னி முன் இருவரும், ஒருவரையொருவர் இனி துன்புறுத்துவதில்லை என்று ஒப்பந்தத்தோடு நட்பும் செய்து கொண்டனர். ப்ரும்ம புத்திரரான புலஸ்தியரை வணங்கி, வழியனுப்பி விட்டு தன் வீடு சென்றான். புலஸ்தியரும் தன் வழி சென்று விட்டார். அவரும் விட்டுச் சென்றபின், பிரதாபம் நிறைந்த ராவணன், பெரும் வெட்கம் அடைந்தான். புலஸ்தியரும் வந்த காரியம் இவ்வளவே என்பது போல ப்ரும்ம லோகம் சென்று விட்டார். தனித்து விடப்பட்ட ராவணன், கார்த்த வீர்யார்ஜூனனிடம் கட்டுப் பட்டதை எண்ணி எண்ணி மறுகினான். புலஸ்தியர் வந்து விடுவித்தது அவன் தன் மானத்தை பாதித்தது.. ஆயினும் ராவணனை எதிர்க்க யாரும் துணியவில்லை. அவனை அலட்சியம் செய்யவும் துணிவில்லை சில காலம் சென்றபின், கார்த்த வீரயார்ஜூனனுடைய நட்பு கிடைத்து விட்டதே ராவணன் இறுமாப்பை அதிகரித்தது. மறுபடியும் அரசர்களை வாட்ட ஆரம்பித்தான். அகங்காரத்துடன் பூமியை வலம் வந்தான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராவண விமோக்ஷ: என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.

 

 

அத்தியாயம் 34 (571) வாலி ராவண சக்2யம் (வாலியும் ராவணனும் நட்பு கொள்ளுதல்)

   

அர்ஜூனனிடமிருந்து விடுபட்ட பின் ராவணன் திரும்பவும் உலகைச் சுற்ற ஆரம்பித்தான். இந்த சம்பவத்தால் தோன்றிய வெட்கம் அதிக நாள் நீடிக்கவில்லை. பழையபடி, ராக்ஷஸனோ, மனிதனோ, தன்னை விட பலவானாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன், யாரானாலும், கர்வத்துடன் யுத்தம் செய்ய அழைத்தான். ஒரு சமயம், வாலி ஆண்டு வந்த கிஷ்கிந்தை வந்து சேர்ந்தான். பொன் மாலையணிந்த வாலியை யுத்தத்திற்கு அழைத்தான். வானர மந்திரிகள், தாரன், அவன் தந்தை இருவரும், அவனைப் பார்த்து, ராக்ஷஸேந்திரா, வாலி இதோ வந்து விடுவான். நான்கு சமுத்திரங்க ளிலும் சந்த்யா கால ஜப தபங்களை முடித்துக் கொண்டு, வருவான். தினசரி வழக்கம் இது. அவனையன்றி வேறு யார் உன்னுடன் போர் செய்ய முடியும்? ஒரு முஹுர்த்தம் நில். இதோ இருக்கும் எலும்புக் குவியலைப் பார். சங்கு போல் வெளுத்துக் கிடக்கின்றன. தானாக வந்து போருக்கு அழைத்து வானர ராஜாவின் கையால் மாண்டவர்கள் இவர்கள். வெறும் எலும்புக் கூடுகளாக கிடக்கிறார்கள். நீ அம்ருதம் உண்டிருந்தால், வானர ராஜனோடு மோத தயாராகிக் கொள். இல்லையென்றால், அவ்வளவு தான் ஆயுள், வானர ராஜன் கையால் மரணம் விதித்திருக்கிறது என்று ஒத்துக் கொள். விஸ்ரவஸின் மகனே, உலகில் ஒரு அதிசயம் பார். வானர ராஜனைக் காணும் வரை உன் உயிர் உன் உடலில் இருக்கும். அல்லது சீக்கிரமே மரணத்தை தழுவ ஆசையானால் தெற்கு சமுத்திரம் போய் பார். வாலி அங்கு இருப்பான். பூமியிலிருந்து  வெளி வரும் அக்னி ஜ்வாலை போல நிற்பான். தாரன் இவ்வாறு எச்சரித்ததை அலட்சியப் படுத்தி விட்டு ராவணன், தக்ஷிண சாகரம் நோக்கித் தன் புஷ்பகத்தில் சென்றான். பொன் மலை ஒன்று நிமிர்ந்து நிற்பது போலவும், இளம் சூரியன் போன்ற முகமும், சந்தயா கால ஜப தபங்களில் மூழ்கி இருப்பதையும் கண்டான் கரு மேக நிறத்தினன் ராவணன். வாலியை பிடித்து விடும் எண்ணத்துடன், புஷ்பகத்திலிருந்து இறங்கி, சத்தமில்லாமல் வாலியை நெருங்கினான். யதேச்சையாகத் திரும்பிய வாலியின் கண்களில் ராவணன் பட்டான். அவனுடைய கெட்ட எண்ணத்தை தெரிந்து கொண்டாலும், சற்றும் பதட்டம் அடையவில்லை. குறு முயலை நோக்கி சிங்கம், போலவும், பாம்பை பார்த்து கருடன் போலவும், ராவணனை ஒரு பொருட்டாகவே வாலி நினைக்கவில்லை. பாப புத்தியுடன் நெருங்கிய ராவணனை தன் கட்கத்தில் இடுக்கிக் கொண்டு, அதே நிலையில் மூன்று சமுத்திரங்களிலும், சலனமில்லாமல் ஜப தபங்களை முடித்துக் கொண்டு, திரும்பினான். கை கால்களை உதைத்துக் கொண்டு, கருடன் வாயிலிருந்த தொங்கும் நாகம் போல, ராவணனை பலரும் கண்டனர். அப்படி காண்பார்கள் என்பதை வாலியும் உறுதி செய்து கொண்டான். மௌனமாக, முறையாக எதையும் விடாமல் தன் ஜபங்களை, மந்திரங்களை சொல்லி முடித்துக் கொண்டு கிளம்பினான். இருவரும் தங்கள் புஜ பலத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். ஓருவரையொருவர் எப்படி வீழ்த்துவது என்று மனதினுள் திட்டமிட்டுக் கொண்டு சரியான நேரத்திற்காக காத்திருந்தனர். அதனால் தான், தன் பின்னால் மெதுவாக அடியெடுத்து வைத்து ராவணன் வருகிறான் என்பதை உணர்ந்து கொண்ட வாலி, வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருப்பவனைப் போல நின்று கொண்டு அருகில் வந்தவனை கோழியை அமுக்குவது போல அமுக்கிப் பிடித்து விட்டான். ராவணனின் மந்திரிகள், ஆகாயத்தில் மேகத்தை தள்ளிக் கொண்டு போவதைப் போல வாலி, ராவணனை தள்ளிக் கொண்டு போவதைப் பார்த்து பின் தொடர்ந்தனர். அவர்கள் துரத்தவும் வாலி மேலும் உற்சாகமாக வானத்தில் சுற்றலானான். மேகங்களுக்கிடையில் சந்திரன் போல விளையாட்டாகச் சென்றான். ராக்ஷஸனின் மந்திரிகள் தவித்தனர். அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒதுங்கி நின்றனர். உயிர் வாழ விரும்புபவர் யாரானாலும் வாலியின் வழியில் நிற்கக் கூடாது என்பதைப் புரிந்து கொண்டு விட்டவர்கள் போல. வாலியோ, இன்னும் அதிக உற்சாகத்தோடு, ஒவ்வொரு சமுத்திரத்திலும் ஸ்நானம், ஜபம் இவைகளை விரிவாக செய்து கொண்டு, கட்கத்தில் இடுக்கியபடியே வெகு தூரம் சமுத்திரத்தின் மேல் பறந்து சென்று கிஷ்கிந்தை திரும்பினான். களைத்துப் போனவனாக, கிஷ்கிந்தையின் உபவனத்தில் அமர்ந்தான். கட்கத்திலிருந்து ராவணனை விடுவித்தான். எங்கே இருக்கிறாய் என்று சிரித்துக் கொண்டே விசாரித்தான். ராவணன் வியப்போடு, சிரமப்பட்டு கண்களைத் திறந்தவன், வாலியைப் பார்த்து, வானரேந்திரா, உன்னுடன் யுத்தம் செய்யத் தான் வந்தேன். அதையும் நீ செயலிலேயே காட்டி விட்டாய். அஹோ பலம், அஹோ வீர்யம். உன் காம்பீர்யம் தான் என்ன? என்னை ஒரு பசு போல கட்டிப் போட்டு உலகெல்லாம் சுற்றி, நான்கு சமுத்திரத்தையும் வலம் வந்து விட்டாய். சற்றும் சளைக்காமல், என்னையும்  தூக்கிக் கொண்டு, வேறு யார் தான் இது போல சாதிக்க முடியும்? மூன்று உலகங்களிலும் இது போன்ற கதி மூன்று பேருக்குத் தான் உண்டு. மனம், காற்று, சுபர்ணன் என்ற கருடன். இப்பொழுது உனக்கும் அந்த வேகம் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன். அதனால் ஹரி புங்கவா, உன்னுடன் அக்னி சாக்ஷியாக நட்பு கொள்ள விரும்புகிறேன். என் மனைவிகள், மக்கள், நகரம், ராஜ்யம், போகங்கள், ஆடை ஆபரணங்கள், எல்லாமே நம் இருவருக்குள்ளும் பிரிவு இல்லாமல் ஒன்றாக இருக்கும். ஹரி ராஜனே, நாம் இனி நண்பர்களாக இருப்போம் என்று சொல்லி, அக்னியை மூட்டி, ஹரி ராக்ஷஸர்கள், சகோதரர்கள் போல அணைத்துக் கொண்டு, கைகளை நீட்டிப் பிடித்துக் கொண்டு, நட்புடன் கிஷ்கிந்தையில் சந்தோஷமாக சுற்றினர். மகிழச்சியுடன் இரண்டு சிங்கங்கள் போல உலவினர். சுக்ரீவன் போல சகோதரனாக ஒரு மாதம் வசித்த ராவணன், மந்திரிகள் வந்து அழைக்கவும், அவர்களுடன் தன் நகரம் சென்றான். இது தான் வாலியும் ராவணனும் நண்பர்களான கதை. அந்த வாலியைத் தான், நீ நெருப்பில் விழும் விட்டில் பூச்சியைப் போல வதைத்தாய்.

 

(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில்,வாலி ராவண சக்2யம் என்ற முப்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.

 

அத்தியாயம் 35 (572).. ஹனுமதுத்பத்தி (ஹனுமான் பிறப்பு)

 

தென் திசையில் தங்கி விட்ட அகஸ்திய முனிவரைப் பார்த்து ராமன் மேலும் வினவினான். வாலி, ராவணன் இருவருமே நல்ல பலசாலிகள் தான். இருந்தாலும் ஹனுமானுக்கு சமமாக மாட்டார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. சௌர்யம், தாக்ஷிண்யம், பலம், தைரியம், அறிவு, நியாய உணர்வு, தீர்ப்பு, விக்ரமம், பிரபாவம் இவையனைத்தும் ஹனுமானிடத்தில் குடி கொண்டுள்ளன. சாகரத்தைக் கண்டவுடனேயே வாடி வருந்திய வானர வீரர்களை சமாதானப் படுத்தி, நூறு யோசனை தூரம் சமுத்திரத்தைத் தாண்டிச் சென்றவன். ராவணன் ஊரான லங்கையை தாக்கி, ராவணன் அந்த::புரத்தில் நுழைந்து, சீதையைக் கண்டதோடு அவளோடு பேசி, ஆறுதலும் சொல்லி இருக்கிறான். சேனைத் தலைவர்கள், மந்திரி குமாரர்கள், கிங்கரர்கள், ராவணன் குமாரர்கள் என்று வந்த அனைவரையும் ஒருவனாக எதிர்த்து போரிட்டு ஜயித்திருக்கிறான். பந்தத்திலிருந்து விடுபட்டு, தசானனை பயமுறுத்தி, லங்கையை கொளுத்தி விட்டான். காலனோ, இந்திரனோ, விஷ்ணுவோ, குபேரனோ இது போல யுத்தம் செய்து, வேகமாக செயல் பட்டதாக கேட்டதேயில்லை. இந்த ஹனுமானுடைய புஜ பலத்தால், லங்கையும், சீதையும், லக்ஷ்மணனும், யுத்தத்தில் வெற்றியும், எனக்கு கிடைத்தது. ராஜ்யமும், பந்துக்களும், ஹனுமானின் உதவியால் நான் பெற்றேன். வானர ராஜாவான சுக்ரீவனுக்கு ஹனுமான் சகாவாக, மந்திரியாக இல்லாது போயிருந்தால், வேறு யார் தான், ஜானகியின் நிலைமையைக் கண்டு பிடித்திருக்க முடியும்? ஏன், சுக்ரீவனுடன் வாலி விரோதம் பாராட்டிய போது, நண்பனாக, வாலியை அடக்கி சுக்ரீவனுக்கு உதவவில்லை? அந்த நேரத்தில் தன் பலம் அவனுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில், வானர ராஜன், தன் உயிரைக் காத்துக் கொள்ள ஓடி ஒளிந்து கொண்டிருந்தான். கூடவே இருந்தும், ஹனுமான் அவன் கஷ்டத்தை நீக்க வாலியை வதைக்கவில்லை? அமரர் பூஜிக்கும் பெருமை பெற்ற மகாமுனியே, ஹனுமானின் இந்த செயலுக்கு காரணம் என்ன? விஸ்தாரமாக சொல்லுங்கள். இவ்வாறு ராமர் வேண்டிக் கொண்டதும், காரண காரியங்களை அறிந்த முனிவர், ஹனுமான் முன்னிலையிலேயே விவரமாக சொல்ல ஆரம்பித்தார். ரகுஸ்ரேஷ்டனே, நீ சொல்வது சரியே. ஹனுமான் விஷயத்தில், அவனுக்கு சமமான பலசாலியோ, அறிவாளியோ யாரும் இல்லை. முன் ஒரு சமயம், இவனுக்கு ஒரு முனிவர் சாபம் இட்டார். தவிர்க்க முடியாதபடி அந்த சாபம் அமைந்து விட்டது. அதன் காரணமாகத் தான் தன் பலத்தை தானே உணராதவனாக ஆனான். மகா பலவானே, ராமா, குழந்தை பருவத்திலேயே இவன் ஒரு காரியம் செய்தான். அதை வர்ணிக்க இயலாது. கேள். சூரியனிடம் வரம் பெற்று சுவர்ணமாக விளங்கும், சுமேரு என்ற மலை. அங்கு ராஜ்ய பாலனம் செய்து கொண்டிருந்த கேஸரி இவன் தந்தை. அஞ்சனா அவன் தாய். அவளிடம் வாயு தன் மகனை பிறக்கச் செய்திருந்தான். அவள் ஒரு நாள், பழங்கள் சேகரிக்க வெளியில் சென்றிருந்த சமயம், தாயாரைக் காணாமல், பசியும் வாட்ட, பெரிதாக அழுதான்.சரவண பொய்கையில், சரவணன் அழுதது போல இருந்தது. பழம் வேண்டும் என்ற எண்ணத்துடன் அண்ணாந்து பார்த்த சிசுவிற்கு சூரியனே பழம் போல காட்சியளித்தான். தானே இளம் சூரியன் உருவெடுத்து வந்தது போலிருந்த குழந்தை, ஆகாய சூரியனைப் பார்த்து, அதை பிடிக்க ஆகாய மார்கமாக தாவினான். இளம் கன்று பயமறியாது  என்பதற்கிணங்க ஆகாயத்தில் தாவிய குழந்தையை தேவதானவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தபடி நின்றனர். யார் இது? வாயுவா? கருடனா? மனமே தானா?  என்று அதிசயித்தனர். வாயுபுத்திரன், ஆகாயத்தில் சஞ்சரிக்கிறான். சிசுவாக இருக்கும் இந்த சமயத்திலேயே இவனுடைய விக்கிரமம் இப்படி இருக்குமானால், வளர்ந்து பெரியவன் ஆகும் போது எவ்வளவு பலவானாக ஆவான் என்று அதிசயித்து பேசிக்கொண்டனர். மகனை அணைத்தபடி வாயு குளுமையாக வீசிக் கொண்டே சென்றான். பல யோஜனை தூரம் ஆகாயத்தில் இப்படி சென்ற பின்னும், அந்த சிசுவுக்கு திருப்தி ஏற்படவில்லை. குழந்தைத்தனமான குதூகலம், தந்தையின் உதவியும் சேர, ஆகாயத்தில் வெகு நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்தான். குழந்தை என்று சூரியனும் தகிக்காமல் விட்டான். அதே தினம், ராகுவும் சூரியனைப் பிடிக்க துரத்திக் கொண்டு வந்தான். வழியில் எதிர்பட்ட குழந்தை மேல் இடிக்கவும், பயந்தான். நேரே இந்திர பவனம் போய் தேவேந்திரனைப் பார்த்து எரிச்சலோடு இரைந்தான். தேவேந்திரா, உனக்குப் பசித்தால், சூரிய, சந்திரர்களை விழுங்கு என்று வரம் தந்து விட்டு, இப்பொழுது மற்றவர்க்கு எப்படி கொடுப்பாய். விருத்திரனைக் கொன்றவன் என்று புகழ் பெற்றவன் வாக்குத் தவறலாமா? இன்று எனக்கு விதிக்கப் பட்ட பருவ காலம். சூரியனைப் பிடிக்க வந்தேன். இன்னொரு ராகு வந்து சூரியனை பிடித்துக் கொண்டு விட்டது. இதைக் கேட்டு பரபரப்படைந்த வாஸவன், தன் ஆசனத்தை விட்டு     துள்ளி குதித்து எழுந்தான். தன் பொன் மாலையை அணிந்து கொண்டு ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டு, ராகு முன் செல்ல, நான்கு தந்தங்களும், கைலாஸ சிகரம் போல பெருத்ததுமான அந்த யானை மதஜலம் பெருக ஓட்டம் பிடித்தது. சுவர்ண மணிகள் அட்டகாசமாக ஒலித்தன. சூரியனும் ஹனுமானும் இருந்த இடம் வந்து சேர்ந்தனர். முன்னால் வந்த ராகுவைக் கண்டதும், என்ன நினைத்தோ, ஹனுமான், ராகுவைத் துரத்த ஆரம்பித்தான். சிம்ஹிகா மகனான ராகு, முகம் மட்டுமே உடையவன், வேறு திக்கில் பார்த்து பரபரப்புடன் இந்திரா, இந்திரா, என்று அழைத்தான். ஏற்கனவே  தெளிவில்லாத குரல், பயந்து அலறும் பொழுது, இன்னும் குழப்பமாக ஒலிக்க, இந்திரன் ராகுவிடம், பயப்படாதே, நான் இந்த குழந்தையை கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லி திரும்பினான். குழந்தையின் கவனம், இப்பொழுது, ஐராவதத்தின் மேல் சென்றது. குதாகலத்துடன், அதை நோக்கி விரைந்து சென்றது., ஐராவதத்தை துரத்திக் கொண்டு சென்ற சமயம், இந்திரனும், அக்னியும், சேர்ந்து நின்றது போல பிரகாசமாக இருந்தது. இவனை தடுத்தே ஆக வேண்டுமே என்ற கவலையுடன், கோபத்தை அடக்கி, தன் கை குலிசத்தால், (ஆயுதத்தால்) மெதுவாக தட்டினான். இந்திர வஜ்ரத்தால் அடி பட்டதால், தடால் என்று கீழே விழுந்தான் ஹனுமான். விழுந்த இடம், ஒரு பெரிய மலை. அதனால், தாடை முறிந்தது. இந்திரன் வஜ்ரத்தால் அடித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த வாயு கோபத்துடன் எச்சரித்தான். நிலை குலைந்து விழுந்த தன் குழந்தையை எடுத்துக் கொண்டு, மலை குகைக்குள் சென்று விட்டான். வாயுவின் இயக்கம் இன்றி உலகமே ஸ்தம்பித்து நின்றது. உயிரினங்கள் அனைத்தும் தவித்தன. மூச்சு விடக் கூட முடியாமல் அலறினர். மூட்டுகளைத் திருப்ப முடியாமல் கட்டைகளாக ஆயினர். வாயுவின் கோபத்தால், மூவுலகும், அழிவின் எல்லையில் நின்றது. ஸ்வாத்யாயமோ, வஷட்காரமோ, தர்மமோ, எதுவும் இல்லை. தேவ, அசுர, கந்தர்வர்கள், பிரஜைகள், மனிதர்கள், எல்லோருமாக ப்ரும்மாவிடம் ஓடினர். இந்த கஷ்டத்திலிருந்து விடு பட வேண்டுமே. வயிறு ஊதி ஒவ்வொருவரும், படாத பாடு பட்டனர். பகவானே, நீங்கள் தானே நான்கு விதமாக ஸ்ருஷ்டி செய்தீர்கள். உங்கள் ஆக்ஞையால் வாயு எங்களுக்கு பிராணனைத் தந்திருக்கிறான். எங்கள் உயிருக்கு உத்திரவாதமாக இருந்தவன், இப்பொழுது துன்புறுத்துகிறானே, அந்த:புரத்தில், ஸ்திரீகளை அடைப்பது போல அடைத்து வைத்திருக்கிறானே. உங்களை சரணடைகிறோம், எங்கள் கஷ்டம் உங்களுக்குத் தெரியவில்லையா,  இதைக் கேட்டு பிரஜைகளின் தலைவனான ப்ரும்மா – காரணம் என்னவென்றால் – என்று ஆரம்பித்தார். என்ன காரணத்திற்காக வாயு கோபம் கொண்டு கத்துகிறான், வருந்துகிறான் கேளுங்கள். இவனுடைய அம்சமாக பிறந்த பிள்ளையை இன்று இந்திரன் அடித்து விட்டான். ராகுவின் முறையீட்டைக் கேட்டு அவனுக்கு உதவி செய்வதாக எண்ணி குழந்தையை அடித்து விட்டான். அதனால் தான் வாயுவுக்கு கோபம். அசரீரியாக நின்று, சரீரங்களில் பிராணனை நிலை நிறுத்துபவன் இவன். வாயு இல்லையெனில், சரீரம் மரக்கட்டை தான். வாயு தான் பிராணன். வாயு தான் சுகம். வாயுவினால் தான் இந்த உலகம் இயங்குகிறது. வாயு நம்மை உதறி விட்டால், நமக்கு வாழ்வே இல்லை. இன்று நாம் வாயுவின் சக்தியை ப்ரத்யக்ஷமாக கண்டு கொண்டோம். வாருங்கள், நாம் எல்லோருமாக வாயு கோபித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் இடம் செல்வோம். தேவர்களே, கவலை வேண்டாம். நாம் நாசம் அடைய மாட்டோம். இதன் பின் தேவ, கந்தர்வ, மற்றும் பிரஜைகளுடன், ப்ரும்மா, மாருதன் இருந்த இடம் வந்து சேர்ந்தார். அடிபட்ட மகனை மடியில் போட்டு சமாதானம் செய்து கொண்டிருந்த வாயுவைக் கண்டனர். சூரியனோ, உருக்கி எடுத்த தங்கமோ எனும்படி பிரகாசமாக இருந்த வாயு புத்திரனைக் கண்டு ப்ரும்மா, கருணையுடன் பார்த்தார். பிரஜைகளின் நன்மைக்கானதை செய்யலானார்

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஹனுமதுத்பத்தி என்ற முப்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.

 

 

அத்தியாயம் 36 (573) ஹனுமத்வரப்ராப்தியாதி (ஹனுமான் பெற்ற வரங்கள்).

 

தன் புத்திரன் அடி பட்டதால் மிகவும் வருத்தத்துடன் இருந்த வாயு பகவான், தன் குழந்தையை ப்ரும்மாவின் எதிரில் கொண்டு வந்து போட்டான். குன்டலங்கள் அசைய, தலையில் சூடிய பூமாலையுடன், துவண்டு கிடந்த குழந்தையை ப்ரும்மா தொட்டார். அவர் கரம் பட்ட மாத்திரத்தில், வாடிய பயிர் நீர் கிடைக்கப் பெற்றதும் நிமிர்ந்து நிற்பது போல வாயு புத்திரன் எழுந்து விளையாட ஆரம்பித்து விட்டான். ஸ்தம்பித்துக் கிடந்த உயிரினங்கள் பிராணனைப் பெற்று நடமாட ஆரம்பித்து விட்டன. பழைய படி இயக்கம் பெற்ற பிரஜைகள், மகிழ்ச்சியுடன் சஞ்சரித்தனர். தாமரைக் குளங்களில் பனியின் தாக்கத்தால் வாடிக் கிடந்தவை, பனி நீங்கியபின் மலர்ந்து காட்சி தருவது போல ஆயினர். ப்ரும்மாவும், வாயுவுக்கு சாதகமாக மற்ற தேவர்களுடன் பேசினார். ஹே, மகேந்திரா, ஈச, வருண, ப்ரஜேஸ்வர, தனேஸ்வரன் முதலானவர்களே, நான் சொல்லப் போவதைக் கேளுங்கள். இதில் உங்கள் நன்மையும் அடங்கியுள்ளது. இந்த சிசு உலகில் பல காரியங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதனால், உங்களால் முடிந்தவரை, வரங்கள் தந்து இவனது சக்தியை பெருக்குங்கள். உடனே மகேந்திரன், தன் கழுத்து மாலையை எடுத்து அணிவித்து, என் கையால் அடி பட்டதால், தாடை நீண்டது. அதனால், நீண்ட தாடையுடையவன் என்று பொருள்பட ஹனுமான் என்றே அழைக்கப்படுவான். நான் இவனுக்கு ஒரு அத்புதமான வரம் தருகிறேன். இன்றிலிருந்து, எந்த ஆயுதத்தாலும், என் வஜ்ரத்தாலும் கூட அடிபட்டு துன்புற மாட்டான். சூரிய பகவான் இவனுக்கு மார்க்கண்டன், மரணம் இல்லாத சிரஞ்சீவியாக வரம் அளித்தார். என் தேஜஸில், நூற்றில் ஒரு பங்கு தேஜஸை இவனுக்குத் தருகிறேன். இதனால் இவன் சாஸ்திரங்களைக் கற்கும் சக்தியைப் பெறுவான். எல்லா சாஸ்திர ஞானமும் இவனுக்கு கிடைக்க அருள் செய்கிறேன். அதனால், நல்ல வாக்கு வன்மை உடையவனாக ஆவான். சாஸ்திர ஞானத்தில், இவனுக்கு இணையாக யாரும் ஆக மாட்டார்கள். வருணன் தன் பங்குக்கு வரம் தந்தான். இவனுக்கு மழையினால், வெள்ளத்தினால் மரணம் வராது  என்று உறுதியாக கூறினான். இருபதினாயிரம் வருஷம் ஆனாலும், என் பாசத்தாலோ, நீராலோ, தண்டத்தாலோ மரணம் வராது. யமனும், ஆரோக்யத்தை வரமாக அளித்தான். இதோ என் க3தை4, இதை மனமுவந்து தருகிறேன். யுத்தத்தில், இவன் சிரமப்படாமல் இருக்க வரம் தருகிறேன் என்று ஒரு கண் மஞ்சளாக உடைய குபேரன் வரம் தந்தான். சங்கர பகவான், என் ஆயுதங்களால், ஒரு பொழுதும் இவனுக்கு மரணம் வராது என்று வரம் அளித்தார். ப்ரும்மா, ப்ரும்மதண்டத்தாலோ, ப்ரும்மாஸ்திரத்தாலோ இவனுக்கு எந்த பயமும் இருக்காது என்று வரம் தந்தார். பால சூரியன் போல நின்ற சிசுவைப் பார்த்து விஸ்வகர்மாவும், என்னால் ஸ்ருஷ்டிக்கப் பட்ட எந்த அஸ்திரமும், இவனை எதுவும் செய்யாது. சிரஞ்சீவியாக இரு என்று ஆசிர்வதித்தார். தேவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில், வரங்கள் தந்த பின், ப்ரும்மா வாயுதேவனைப் பாரத்து, மாருதா, உன் மகன், தன்னை எதிர்ப்பவர்களுக்கு பயங்கரமாகவும், நம்பியவர்களுக்கு அபயம் தருபவனாகவும் சிரஞ்சீவியாக இருப்பான், யாராலும் ஜயிக்க முடியாத அபரிமிதமான பலம் உடையவனாகவும் இருப்பான் என்றார். விருப்பம் போல உருவம் எடுத்துக் கொள்ளவும், விரும்பிய இடம் செல்லவும், சஞ்சரிக்கவும், இவனால் முடியும். இவன் போகும் வழியில், யாரும் தடை செய்ய முடியாது. அத்புதமான செயல்களை செய்து, நல்ல கீர்த்தியை அடைவான். ராவணனை அழிக்க கருவியாக இருப்பான். ராமனுக்கு உதவியாக பல காரியங்களை சாதிப்பான். இவ்வாறு சொல்லி விட்டு ப்ரும்மா, மற்ற தேவர்கள் புடை சூழ திரும்பிச் சென்றார். கந்தவாகனன் ( மணத்தை கொண்டு செல்பவன்) என்று பெயர் பெற்ற வாயுவும், மகனுடன் தன் இருப்பிடம் சென்றான். அஞ்சனையிடம் விவரங்களைச் சொல்லி குழந்தையை ஒப்படைத்து விட்டுச் சென்றான். சமுத்திரம் நிரப்பப் பட்டது போல வரங்கள் இவனை மூழ்கடித்தாலும், இவன் தன் எல்லையை மீறவில்லை. குருவிடம், ஆசிரமத்து ரிஷிகளிடம், பயமின்றி கல்வி கற்றான். கரண்டிகள், பாத்திரங்கள், வல்கலை, மான் தோல், மற்றும் கைக்குக் கிடைத்ததை வீசி உடைத்து உருத் தெரியாமல் செய்வான். எந்த விதமான் ஆயுதத்தாலும் இவனுக்கு பயம் இல்லை என்று பகவான் சம்பு வரம் தந்திருக்கிறாரே என்று ரிஷிகள் பொறுத்துக் கொண்டார்கள். ஓரு சமயம், கேஸரி அதட்டியும், கேட்காமல் துஷ்டத்தனம் செய்த இந்த குழந்தையை ப்ருகு, ஆங்கிரஸ் இருவரும், கோபத்தை  வெளிக் காட்டாமல், சற்று அடங்கி இருக்க சபித்து விட்டனர். எங்களுக்கு இடையூறு செய்யாதே. வெகு நாள் நீ உன் பலத்தை அறிந்து கொள்ளாமல் போவாய் என்றனர். உன் கீர்த்தியை உனக்கு மற்றவர் நினைவு படுத்தினால் தான் தெரிந்து கொள்வாய் உன் சக்தியை உணருவாய் என்றனர். தேஜஸ் நிறைந்த மகரிஷிகளின் வாக்கு இவனது தேஜஸை மட்டுப் படுத்தியது.  இதன் பின் ஹனுமான், சாதுவாக. அடக்கம் மிகுந்தவனாக சஞ்சரித்தான். அந்த சமயம், வாலி சுக்ரீவர்களின் தந்தை ருக்ஷரஜஸ், வானர அரசனாக இருந்தான். நல்ல தேஜஸோடு நீண்ட காலம் அரசனாக இருந்த பின் கால கதியடைந்தான். மந்திரங்கள் அறிந்த மந்திரிகள், வாலியை அரசனாகவும், சுக்ரீவனை வாலி ஸ்தானத்தில், யுவராஜாவாகவும் நியமித்தனர். ஹனுமானுக்கு பால்யத்திலிருந்தே, சுக்ரீவனுடன் பிரிக்க முடியாத நட்பு தோன்றி வளர்ந்தது. காற்றும் நெருப்பும் போல இருவரும் இணை பிரியாது இருந்தனர். தன் அதீதமான சக்தியை உணராமல் சுக்ரீவனுக்கு சமமாகவே இருந்தான். வாலி. சுக்ரீவர்களிடையே விரோதம் முற்றி, வாலி விரட்டி சுக்ரீவன் கலங்கிய போது கூட தன் அமானுஷ்யமான சக்தியை  வெளியிடவில்லை.    ரிஷிகளின் சாபத்தால், தன் இயல்பான சக்தியையும், பலத்தையும் உணராதவனாக நடமாடிக் கொண்டிருந்ததால், சுக்ரீவனுடன் கூடவே இருந்தானே தவிர, உதவி எதுவும் செய்யத் தெரியவில்லை. கூண்டிலடைப்பட்ட சிங்கம் போல இவன் ஆற்றல்  வெளிப் படாமலே மறைந்து கிடந்தது. பார்க்கப் போனால், இந்த ஹனுமானைப் போல காம்பீர்யம், சாதுர்யம், வீர்யம், தைர்யம், பராக்ரமம், உத்ஸாகம், அதி பிரதாபம், சௌசீல்யம், மாதுர்யம், நியாய அநியாயங்கள் இவற்றை அறிந்தவர்கள் உலகில், வேறு யார் உண்டு? சூரியனிடமிருந்து இலக்கணம் கற்றவன். அதற்காக, பெரிய கிரந்தத்தை கையில் வைத்தபடி, சூரியன் உதயம் ஆனதிலிருந்து, அஸ்தமனம் வரை, பின் தொடர்ந்து சென்று அவர் சொன்னதை கிரகித்துக் கொண்டான். சூத்திரங்களையும், வ்ருத்தி, அர்த்த பதம், மகா அர்த்தம், சங்க்ரஹம் (இலக்கண பரிபாஷைகள்) இவைகளை சந்தேகம் இன்றி கற்றுத் தேர்ந்தான். சாஸ்திர ஞானத்தில் இவனுக்கு சமமானவர்கள் யாருமே இல்லை. பொது அறிவிலும், வேத பாராயணம் செய்வதிலும், இவனுக்கு சமமானவர்கள் யாரும் இல்லை. நவ வ்யாகரன பண்டிதன் என்று புகழப் பெற்றான். தவம் செய்து, குருவை வணங்கி மரியாதைகள் செய்தும், பல சாதனைகள் கைவரப் பெற்றான். சமுத்திரத்தின் ஆழத்தை அளந்து சொல்வான், நெருப்பில் நுழைந்து அதன் வெப்பத்தை கண்டு சொல்வான் என்று ப்ரும்மா வாழ்த்தினார். யுக முடிவில் அந்தகன் போல செயல் படுவான், அச்சமயம், இவன் எதிரில் யாராலும் நிற்கக் கூட முடியாது. இவனைப் போலவே மற்றும் பலர் தோன்றுவார்கள். பெருத்த உடலுடைய வானரங்கள். சுக்ரீவன், மைந்தன், த்விவிதன், நீலன், தாரன், அநிலன் முதலானவர்கள். ராமா, உனக்கு சகாயம் செய்யவே ஸ்ருஷ்டிக்கப் பட்டார்கள். நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டேன். ஹானுமானின் பால லீலைகள் இவை. இவ்வளவு நேரம், அகஸ்தியர் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்த ராமனும், சௌமித்திரியும், மற்ற வானரங்களும், ராஷஸர்களும் ஆச்சர்யம் அடைந்தனர். பின் அகஸ்தியர், ராமா, இது வரை உங்களுடன் பேசியதும், பார்த்ததும் திருப்தியாக இருந்தது. நாங்கள் கிளம்புகிறோம் என்று எழுந்தார். உக்ரமான தேஜஸ் உடைய முனிவரை வணங்கி, ராமர் இன்று என் வாழ்வின் பலன் கிடைத்தது. தேவதைகளும், பித்ருக்களும் எனக்கு அனுக்ரஹம் செய்துள்ளனர். உங்கள் தரிசனம் கிடைத்ததே என் பாக்கியம். என் உற்றார், சுற்றத்தார், தங்கள் வருகையால், பலன் அடைந்தனர். சந்தோஷமாக இருக்கிறார்கள். ஓரு விண்ணப்பம். ராஜ்ய காரியமாக வந்தவன் உங்களை தரிசித்தேன். கிராமங்களில், சுற்று வட்டாரங்க ளில் வசதிகள் செய்ய வந்தேன். இப்பொழுது உங்கள் உதவியோடு யாக காரியங்களை செய்ய விரும்புகிறேன். சிஷ்யர்கள் மற்றும் உங்களுடன் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு, வந்து, தங்கள் தலைமையில் யாகம் செய்ய எனக்கு அருள வேண்டும். இந்த அனுக்ரஹம் செய்யுங்கள். என் குறைகள் தீர நான் இந்த யாகத்தை பூரணமாக செய்து முடிக்க வேண்டும். என் மூதாதையர்களும் மகிழ்வார்கள். எனவே அடிக்கடி சிஷ்யர்கள் புடை சூழ வாருங்கள். அகஸ்தியரும், மற்ற முனிவர்களும், அப்படியே ஆகட்டும், என்று சொல்லி கிளம்பினார்கள். ரிஷிகள் அனைவரும் சென்ற பின், ராகவனும், சூரியாஸ்தமனம் ஆகவே, கரடிகளையும், வானரங்களையும் அனுப்பி விட்டு, சந்த்யா கால ஜப தபங்களை முடித்துக் கொண்டு, இரவு வரவும், அந்த::புரம் சென்றான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஹனுமத் வர ப்ராப்த்தி என்ற முப்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.

 

அத்தியாயம் 37 (574) பௌரோபஸ்தானம் (பிரஜைகளை சந்திப்பது)

 

காகுஸ்தன் முடிசூட்டப்பட்ட பின். ஜனங்கள், அளவில்லா மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும், அந்த இரவைக் கழித்தனர். விடிந்தது. காலையில் அரசனை துயிலெழுப்ப வரும் பாடகர்கள், இனிமையாக காலை வணக்கம் பாடியபடி அரச    மாளிகை வந்து சேர்ந்தனர். நல்ல பயிற்சியும் வளமான குரலும் உடையவர்கள். அரசனை மகிழ்விக்க வேண்டும்  என்று உண்மையான ஆவலுடன் பாடினர். வீரனே, சௌம்யனே, துயிலெழுவாய், நீ உறங்கும் பொழுது, உலகமே உறங்குகிறது. நராதிபனே, உன் விக்ரமம் விஷ்ணுவிற்கு சமமானது. அஸ்வினீ குமாரர்கள் போல அழகிய ரூபம் உடையவன் நீ. புத்தியில் ப்ருஹஸ்பதிக்கு சமமானவன். ப்ரஜாபதிக்கு சமமான தேஜஸ் உடையவன். பொறுமையில் பூமிக்கு சமமானவன். பாஸ்கரனுக்கு இணையானவன். வாயு பகவானுக்கு சமமான வேகம் உடையவன். சமுத்திரம் போன்று கம்பீரமானவன். அசைக்க முடியாத ஸ்தா2னு (சிவ பெருமான்), போல திட சித்தம் உடையவன் நீ. சௌம்யமான குணத்தில், சந்திரன் போல விளங்குகிறாய். இது போன்ற அரசர்கள் இதற்கு முன் தோன்றியதில்லை, இனியும் தோன்றப் போவதில்லை. தர்மமே கொள்கையாக, பிரஜைகளின் நன்மையே கவனமாக, நியாயத்தில் உறுதியாக, நீ இருப்பது போல கண்டதில்லை. ஸ்ரீயும் கீர்த்தியும் உன்னிடம் என்றும் இணை பிரியாது இருக்கும். சதா காலமும் நிலை பெற்று இருக்கும். இவ்வாறு மதுரமாக மேலும், துதி பாடல்களை இனிமையாக பாடி, அரசனை துயிலெழுப்ப முணைந்தனர். பாடல்களை கேட்டபடி, ராமர் உறக்கம் கலைந்து எழுந்தார். வெண்மையான விரிப்புகளுடன் அழகாக இருந்த படுக்கையிலிருந்து எழுந்தார். நாக சயனத்திலிருந்து ஹரி நாராயணன் எழுந்து வருவது போல இருந்தது. துயிலெழுந்து வரும் ராமனை கை கூப்பியபடி, அறிஞர்கள் பலரும் வாழ்த்தினர். சுத்தமான ஜலம் நிறைந்த பாத்திரங்களுடன் சிலர் அருகில் சென்றனர். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, உரிய நேரத்தில், அக்னி காரியங்களை செய்து விட்டு தேவாகாரம் எனும் பூஜையறைக்குச் சென்று பரம்பரையாக இஷ்வாகு வம்சத்தினர் பூஜித்து வந்த தெய்வங்களுக்கு பூஜைகளைச் செய்தார். வரிசை கிரமமாக தேவர்கள், பித்ருக்கள், பிராம்மணர்கள் – இவர்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளை செய்த பின், ஜனங்கள் பின் தொடர  வெளியறைக்கு வந்து சேர்ந்தார். புரோகிதரும், மந்திரி வர்கங்களும் உடன் வந்தனர். தேஜஸ் மிகுந்த முனிவர்கள், குல குரு வசிஷ்டருடன் வந்து சேர்ந்தனர். ஜனபதங்களை ஆண்ட சிற்றரசர்கள், மற்றும் பல அரச வம்சத்தினரும் வந்து சேர்ந்தனர். இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் ராமர் அமர்ந்த பின், பக்கங்களில், பரதரனும், லஷ்மணனும், சத்ருக்னனும் அமர்ந்தனர். அதைக் காண, மூன்று வேதங்களும், யாகம் செய்யும் அறிஞரை சூழ்ந்து நிற்பது போல இருந்தது. அனைவரும், அவரவர்களுக்கு உரிய ஆசனத்தில் அமர்ந்தனர். சிலர் நின்றபடி இருக்க, சிலர் அருகிலும் எதிரிலும் கிடைத்த இடத்தில் ஆனந்தமாக அமர்ந்தனர். சுக்ரீவன், இருபது வானரங்கள் தொடர வந்து வணங்கினான். நான்கு ராஷஸர்கள் தொடர வந்த விபீஷணனும் வந்து குபேரனை வணங்குவது போல வணங்கினான். வேத வித்துக்களும், நற்குடியில் பிறந்த பிரமுகர்களும் வந்து தலை வணங்கி வணக்கம் தெரிவித்த பின் தங்களுக்கான ஆசனங்களில் அமர்ந்தனர். ஸ்ரீமான்களான பல ரிஷிகள், அரசர்கள், வானரங்கள், ராக்ஷஸர்கள், சிற்றரசர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் நிறைந்த அந்த சபையில், சஹஸ்ராக்ஷன் இந்திரன், தன் சபையில் இருந்ததை விட அதிக பொலிவுடன் ராமன் இருந்தான். இதன் பின், புராணம் அறிந்தவர்களும், தர்ம நியாயம் அறிந்தவர்களும், மதுரமாக உரையாடினர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், பௌரோபஸ்தானம் என்ற முப்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.

 

அத்தியாயம் 38 (575) ஜனகாதி பிரதி பிரயாணம். (ஜனகர் முதலானோர் திரும்பிச் செல்லுதல்)

 

இவ்வாறே தினம் தினம், ராகவனது ராஜ சபை கூடியது. ராஜ்ய காரியங்களை இந்த சபையில் விவாதித்து, ராஜ்ய பரி பாலனம் செய்து வந்தார். சில நாட்கள் சென்ற பின், மிதிலாதிபதியான ஜனகரை வணங்கி கேட்டுக் கொண்டார். தாங்கள் தான் எங்களுக்கு வழிகாட்டி. உங்கள் கருணையால் பாலிக்கப்பட்டோம். தங்களுடைய உக்ரமான தேஜஸ் பலமும் சேர்ந்து தான், நான் ராவணனை வெற்றி கொண்டேன். மிதிலா வம்சமும், இக்ஷ்வாகு வம்சமும் சம்பந்தம் செய்து கொண்ட பின், பரஸ்பரம் அன்பு வளர்ந்தே வந்திருக்கிறது. ஆகவே, அரசனே தாங்கள் தங்கள் ஊர் செல்லுங்கள். இதோ ரத்னங்கள். இவைகளை எடுத்துக் கொண்டு பரதன் உங்களை ஊரில் கொண்டு சேர்ப்பான். இதைக் கேட்டு அவரும் சந்தோஷமாக, அரசனே மிக்க மகிழ்ச்சி. உங்கள் அன்பும், நியாய உணர்வும், என்னை பரவசப்படுத்துகின்றன. எனக்காக எடுத்து வைத்திருக்கும், இந்த ரத்னங்களை நான் என் மகளுக்கே கொடுக்கிறேன். இவ்வாறு சொல்லி மன நிறைவுடன், மிதிலாதிபர் ஜனகர், கிளம்பிச் சென்றார். அவர் கிளம்பிச் சென்றவுடன், கேகய நாட்டிலிருந்து வந்திருந்த தன் மாமனை வணங்கி ராமர் வேண்டிக்கொண்டார். இந்த ராஜ்யம், நான், பரதன், லக்ஷ்மணன் எல்லோரும் தங்கள் அதீனத்தில் உள்ளவர்களே. எங்களுக்கு நல்வழி காட்டி வந்துள்ளீர்கள். முதியவரான தங்கள் தந்தை உங்களை எதிர் பார்த்து காத்திருப்பார். அதனால் தாங்கள் இன்றே புறப்படுவது நல்லது என்று தோன்றுகிறது. லக்ஷ்மணன் தங்களுடன் வருவான். ஏராளமான தனம், ரத்னம் இவைகளை எடுத்துக் கொண்டு உங்களை ஊர் வரை கொண்டு சேர்ப்பான். யுதாஜித்தும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிக் கிளம்பினார். ரத்னங்களும், தனமும் குறைவின்றி உங்களிடமே இருக்கட்டும் என்று சொல்லி கொடுத்து விட்டுச் சென்றார். ராமர் முன்னாலேயே பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விட்டார். கேகய வர்தனனும், (யுதாஜித்தும்), அதே போல பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விட்டு கிளம்பினார். தன் நண்பன் போன்ற யுதாஜித்தை வழியனுப்பி விட்டு, ராமர் காசி ராஜனான பிரதர்தனன் என்ற அரசனைப் பார்த்து, வேண்டிக் கொண்டார். தாங்கள் இங்கு வந்து தங்கள் நட்பையும், அன்பையும் காட்டி விட்டீர்கள். பரதனுடன் சரீரத்தாலும் நிறைய செய்து விட்டீர்கள். காசேய-எனும் அழகான உங்கள் ஊர், வாரணாசி என்றும் பெயர் பெற்றது. பாதுகாப்பானது. தோரணங்களுடன் பிரகாசமாக இருக்கும். ஆகவே, கிளம்புங்கள். இவ்வாறு சொல்லி தன் பத்ராசனத்திலிருந்து இறங்கி வந்து, மார்புடன் அணைத்து வாழ்த்தி அனுப்பினார். ராமரிடம் அனுமதி பெற்ற காசி ராஜனும் புறப்பட்டுச் சென்றான். அதன் பின் மற்ற முந்நூறு அரசர்களுக்கும், இதே போல விடை கொடுத்து அனுப்பினார், ராமர். தாங்கள் இங்கு வந்து தங்கள் அன்பையும், நட்பையும் காட்டி எங்களை பெருமைப் பட வைத்தீர்கள். உங்களுடைய தர்மம், நியாயம், சத்யம் இவைகளை பாராட்டுகிறேன். உங்கள் அனுக்ரஹத்தாலும், பெரியவர்களுடைய ஆசீர்வாதத்தாலும், ராவணனை அழிக்க முடிந்தது. ராக்ஷஸேஸ்வரனாக இருந்தவன் துராத்மாவாக இருந்ததால் அழிந்தான். நான் காரணமாக மட்டுமே இருந்தேன். உங்கள் அனைவருடைய ஆசீர்வாதமும், நல்லெண்ணமும் தான் இதை சாதிக்க வழி செய்தது. ராவணன், தன் புத்ர பௌத்ரர்களுடனும், மந்திரி வர்கங்களுடனும் யுத்தத்தில் வீழ்ந்தான். பரதன் உங்கள் அனைவரையும் வரவழைத்து தயாராக இருந்திருக்கிறான். நீங்கள் உங்கள் ஊரை விட்டு வந்து வெகு காலமாகிறது. நீங்கள் உங்கள் ஊரை கவனிக்கச் செல்லுங்கள். இதைக் கேட்ட அந்த அரசர்களும் சந்தோஷமாக பதில் சொன்னார்கள். ராமா, அதிர்ஷ்ட வசமாக நீ சத்ருக்களை அழித்து விஜயனாக ராஜ்யத்தில் அமர்த்தப்பட்டாய். வைதேஹியையும் மீட்டு வந்து விட்டாய். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. வெற்றி வீரனாக உன்னைக் காண்கிறோமே, இது எங்கள் பாக்கியம். எங்களை புகழ்ந்து பாராட்டுகிறாயே, அது உன் சிறப்பு இயல்பேயன்றி, நாங்கள் எதுவும் சொல்லும்படியாக செய்து விடவில்லை. விடை பெறுகிறோம், சென்று வருகிறோம். எப்பொழுதும் எங்கள் மனதில் இருப்பாய், இதே போல என்றும் நட்புடன், அன்புடன் இருப்போம் என்று சொல்லி சென்றனர். ராமரும், அப்படியே ஆகட்டும் என்று சொல்லி விடை கொடுத்தார். ராமர் தந்த மரியாதைகளை ஏற்றுக் கொண்டு, தங்கள் இருப்பிடம் சென்றனர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஜனகாதி பிரதி பிரயாணம் என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.

 

அத்தியாயம் 39 (576)வானர ப்ரீணனம் (வானரங்களை திருப்தி படுத்துதல்)

 

இப்படி அரசர்களை மனம் மகிழ பேசி வழியனுப்பி வைத்தபின், ராமர் திரும்பினார். ஒரே சமயத்தில் யானைகளும், குதிரைகளும் கிளம்பிச் சென்றதில் பூமி அதிர்ந்தது. ராகவனுக்கு ஒருவேளை தேவைப்பட்டால் உதவ என்றே பல அக்ஷௌஹிணீ சேனைகள் வந்து இறங்கியிருந்தன. பரதன் கட்டளையை ஏற்றுக் கொண்டு, படையுடன் வந்திருந்த அரசர்களும், அவர்கள் வீரர்களும், தங்கள் ஏமாற்றத்தை  வெளிப் படுத்தியபடி சென்றனர். திரும்ப ராம ராவண யுத்தத்தைக் காணவா போகிறோம். பரதன் நம்மை அழைத்து நிறுத்தி வைத்தது வீணாயிற்று. நாம் அணைவரும் போய் ராவணனை அழித்திருக்கலாம். ராமர், தலைமை தாங்கி, லக்ஷ்மணனும் உடன் காவலாக வந்திருந்தால், நாமும் பயமின்றி கடலைத் தாண்டி லங்கையை அடைந்து ராக்ஷஸ ராஜனுடன் யுத்தம் செய்திருப்போம். நமது பராக்ரமத்தை காட்ட நல்ல வாய்ப்பு இருந்திருக்கும், பயன் படாமல் போயிற்று. இவ்வாறு கதைகள் பேசியபடி அரசர்கள் படையுடன் திரும்பிச் சென்றனர். அவர்கள் ராஜ்யமும் பரந்து விரிந்தவையே, செல்வ செழிப்பு மிக்கவையே, மக்கள் மகிழ்ச்சியாகவே இருந்தனர். தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் சென்று நடந்த விஷயங்களை தெரிவித்தனர். திரும்பி வந்த லக்ஷ்மணன், பரதன், ஸத்ருக்னன், இவர்கள் அளித்த பல விதமான அன்பளிப்புகளை ராமரிடம் சமர்ப்பித்தனர். குதிரைகள், வாகனங்கள், யானைகள், ரத்னங்கள், உயர்ந்த சந்தனங்கள், பலவிதமான ரதங்கள் – இவைகளை ராமர் சுக்ரீவனிடமும், விபீஷணனிடமும் தனது அன்பளிப்பாக கொடுத்து விட்டார். வெற்றி பெற உதவியாக இருந்த வானர வீரர்களுக்கும், ராக்ஷஸர்களுக்கும் நிறைய கொடுத்தார். அவர்களும், ராமர் கொடுத்த ரத்னங்களை, தலையில், புஜங்களில் அணிந்தபடி மகிழ்ச்சியாக இருந்தனர். ஹனுமானையும், அங்கதனையும், அருகில் அழைத்து அணைத்தபடி, ராமர், சுக்ரீவனிடம் சொன்னார். சுக்ரீவா, உனக்கு அங்கதன் ஒரு சுபுத்திரன், அனுமான் ஒரு நல்ல மந்திரி – இவர்கள் இருவருமே உனக்கு நேர்மையே உபதேசம் செய்வார்கள். இதனால் எனக்கும் நன்மையே. இவ்விருவரும், சன்மானம் பெற தகுதியுடையவர்கள், என்று சொல்லி தான் அணிந்திருந்த ஆபரணங்களை கழட்டி அங்கதன், அனுமன், இருவருக்கும், அணிவித்தார். நீலன், நலன், கேஸரி, குமுதன், கந்தமாதனன், சுஷேணன், பனஸன், மைந்த த்விவிதர்கள், ஜாம்பவான், கவாக்ஷன், தவிர, தும்ரன், வலீமுகன், பரஜங்கன், ஸந்நாதன், ததிமுகன், இந்திரஜானு போன்ற மற்ற படைத் தலைவர்களையும், அருகில் அழைத்து, கண்களால் பருகுவது போல அன்பு ததும்ப பார்த்து, மதுரமாக சொன்னார். நீங்கள் அனைவரும் என் நண்பர்கள். உடன் பிறந்த சகோதரர்கள் போன்றவர்கள். காட்டில் வசிக்கும் நீங்fகள், நல்ல சமயத்தில் . பெரும் சங்கடத்திலிருந்து என்னைக் காப்பாற்றி, எனக்கு பெரும் உதவி செய்தீர்கள். உங்களை பிரஜைகளாக உடைய சுக்ரீவ ராஜா பாக்யசாலி. இவ்வாறு சொல்லியபடி அவர்களுக்கு வஸ்திரங்கள், ஆபரணங்கள் முதலியவைகளை தாராளமாக கொடுத்தார். அவர்களும், வயிராற உண்டு, மதுவைக் குடித்தபடி மகிழ்ச்சியாக இருந்தனர். இரண்டாவது மாதமும் இப்படியே சுகமாக கழித்தனர். குளிர் காலம் வந்தது. ராமனுடைய அன்புக்கு பாத்திரமானவர்கள், மேலும், சில காலம் இக்ஷ்வாகு ராஜதானியில் வசித்தனர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வானர ப்ரீணனம் என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 40 (577) ஹனுமத் பிரார்த்தனா (அனுமனின் வேண்டுகோள்)

   

வானரங்களும், கரடி (ருக்ஷ), ராக்ஷஸர்களும் மகிழ்ச்சியும், நிம்மதியுமாக காலத்தை கழித்துக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ராமர் சுக்ரீவனை அழைத்துச் சொன்னார். நண்பனே, கிஷ்கிந்தைக்குப் போய் வா. உன் ராஜ்யத்தை இடையூறு இன்றி நன்றாக பாலித்து வா. அங்கதனுடன் பிரியமாக இரு. ஹனுமான், நளன் முதலானோர், மற்றும் பல வீரர்கள், மாமனார் சுஷேணன், பலசாலிகளுக்குள் குறிப்பிடத்தக்க தாரன், குமுதன், நீலன் எல்லோரையும் மதிப்புக் கொடுத்து அரவணைத்து நடந்து கொள். மற்றும், சதபலி, மைந்தன், த்விவிதன், கஜன், கவாக்ஷன், கவயன், ஸரபன் எல்லோருக்கும், ஊர் திரும்ப வேண்டும். அன்புடன் அவர்களை அழைத்துக் கொண்டு கந்த மாதன பர்வதம் செல்வாயாக. ஜாம்பவான், ருஷபன் போன்றவர்கள், எனக்காக உயிரைக் கொடுக்க முன் வந்தவர்கள். இவர்கள் விரும்புவதைச் செய். ஊர் போய் சேர ஆவலுடன் இருப்பார்கள். இவ்வாறு சொல்லி, சுக்ரீவனை அணைத்து, பிரியமாக விடை கொடுத்தார். இதன் பின், விபீஷணனைப் பார்த்து, தர்மம் அறிந்தவனே, லங்கைக்குக் கிளம்பு. உன் ராஜ்ய நிர்வாகம் தடை படக் கூடாது. போய் வா. ராக்ஷஸர்களுக்கும், சகோதரன் வைஸ்ரவனுக்கும், நீ செய்ய வேண்டிய கடமைகளைச் செய். ராஷஸா, நீ அதர்ம வழியில் ஒரு போதும் மனதை செலுத்தாதே. புத்திமானான அரசர்கள், வெகு காலம் பூமியை ஆள்வார்கள். நானும், சுக்ரீவனும் எப்பொழுதும், உடன் இருப்பதாக நினைத்துக் கொள். கவலையின்றி போய் வா. ராக்ஷஸ, ருக்ஷ, வானரங்கள், சாது, சாது என்று பாராட்டி, மதுரமாக பேசுவதில் நீ வல்லவன் ராமா, இனிமையாக பேசினாய். இப்படி இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, ஹனுமான் வந்து வணங்கி, தனது வேண்டுகோளை  வெளியிட்டான். ராஜன், எனக்கு உங்களிடத்தில் உள்ள சினேகமும், பக்தியும், இப்படியே இருக்க வேண்டும். என் மனம் வேறு எதிலும் நாட்டம் கொள்ளக் கூடாது. உலகில் ராம கதை உள்ள வரை, என் உயிரில் பிராணன் இருக்கும் வரை, இந்த உன் திவ்ய சரித்திரத்தை, யார் சொன்னாலும், என் காதுகளால் கேட்ட வண்ணம் இருக்க வேண்டும். உன் கதாம்ருதத்தைக் கேட்டு நான் மனதை சமாதானப் படுத்திக்கொள்வேன். ஹனுமான் சொன்னதைக் கேட்டு ராமர், தன் வராஸனத்திலிருந்து இறங்கி வந்து, அவனை மார்புறத் தழுவிக் கொண்டார். கவி ஸ்ரேஷ்டனே, அப்படியே ஆகட்டும். (கவி-வானரம்). என் கதை உலகில் உள்ள வரை உன் விருப்பமும் நிறைவேறும். நீ செய்த ஒவ்வொரு உபகாரத்திற்கும், நான் உயிரையே கொடுப்பேன். ஹனுமந்தா, (எல்லா உபகாரத்திற்கும், பிரதி உபகாரம் செய்ய முடியாதபடி நாங்கள் கடனாளியாகவே இருக்கும்படி நேர்ந்து விட்டது … சில பிரதிகளில் இல்லை.) பிரதி உபகாரம் செய்வதும் மனிதனின் கடமையே. அதனால் இந்த சந்திர ஹாரத்தை தருகிறேன் என்று சொல்லி, தன் கழுத்திலிருந்து மாலையைக் கழற்றி ஹனுமானுக்கு அணிவித்தார். அந்த மாலையுடன் ஹனுமான் பிரகாசமாகத் தெரிந்தான். ராகவனைப் பிரிய மனமின்றி சுக்ரீவனும், விபீஷணனும், மற்ற வானரங்களும், திரும்பத் திரும்ப ராமரை வணங்கி விடைபெற்றன. கண்களில் நீர் மல்க அவர் தந்த வெகுமதிகளையும், உபசாரங்களையும் ஏற்றுக் கொண்டனர். தேஹி (தேஹத்துக்குச் சொந்தமான ஆத்மா) தேஹம் உடலைப் பிரிந்து செல்வது போலச் சென்றனர். ரகுவம்சத்தை விளங்கச் செய்ய வந்த ராமரை நினைத்தபடி விருந்தாளிகள், அதே நினைவாக திரும்பிச் சென்றனர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஹனுமத் பிரார்த்தனா என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 41 புஷ்பக புனரப்4யனுக்ஞா (புஷ்பக விமானத்தை திருப்பி அனுப்புதல்)

 

விருந்தினர்களை வழியனுப்பி விட்டு, தன் சகோதரர்களுடன் ராமர் சுகமாக இருந்தார். ஒருநாள், மத்யான்ன வேளையில் சகோதரர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அஸரீரி கேட்டது. சௌம்ய ராமா, என்னை கொஞ்சம் கவனி. குபேர பவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புஷ்பகம் நான். குபேர பவனம் திரும்பிச் செல்ல விரும்புகிறேன். குபேரனோ நீ இப்பொழுது ராமனுடைய வசத்தில் இருக்கிறாய். ராவணனை குலத்தோடு, மந்திரி வர்க்கங்களோடு அழித்து வெற்றி கொண்டவன் ராமன். ராகவனுக்கு வாகனமாக அங்கேயே இரு. எனக்கும் சம்மதமே என்று சொல்லி விட்டான். அதனால் நான் உங்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன். உங்கள் உத்தரவின்படி உலகங்களை சுற்றி வர அழைத்துச் செல்வேன் என்றது. இதைக் கேட்ட ராமர் அப்படியா? குபேரன் சம்மதித்து அனுப்பியிருப்பதால், இதில் தோஷம் எதுவும் இல்லை. இப்பொழுது போய் வா, நான் நினைக்கும் சமயம் வந்தால் போதும் என்று சொல்லி, வாசனை மிகுந்த தூபங்கள், மலர்கள், பொரி முதலியவைகளைக் கொண்டு உபசாரங்கள் செய்து அனுப்பி வைத்தார். சித்தர்கள் செல்லும் பாதை உனக்கு வசதியாக இருக்கட்டும், தடங்கல் எதுவும் இன்றி நிம்மதியாக போய் வா என்றார். இவ்வாறு ராமரால் வாழ்த்தி வழி அனுப்பி வைக்கப் பட்ட புஷ்பக விமானம் மகிழ்ச்சியுடன் தன் வழி சென்றது. புஷ்பகம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்த பின் பரதன் ராமரிடம், வீரனே, நீ ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டதிலிருந்து, ராஜ்யத்தில் பல நன்மைகள் வந்துள்ளதைக் காண்கிறோம். மனிதர் மட்டுமல்ல, மற்ற ஜீவன்களும் கூட, நோய் நொடியின்றி, இந்த ஒரு வருஷமும், மாதமும் நலமாக இருந்துள்ளதைக் காண்கிறோம். வயது முதிர்ந்த ஜீவன்களுக்கு கூட மரணம் வரவில்லை. பெண்கள் சிரமமின்றி பிரஸவிக்கிறார்கள். நல்ல சரீர சம்பத்துடன், ஊர் ஜனங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அம்ருதம் போல நீரை வர்ஷிக்கும் மேகங்கள், காலத்தில் பொழிகின்றன. காற்றும் சுகமாக இதமாக வீசுகிறது. இது போல அரசன் அமைந்தது நம் பாக்கியம் என்று பேசிக் கொள்கிறார்கள் என்றான். இதைக் கேட்டு ராமரும் மகிழ்ந்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், புஷ்பக புனரப்4யனுக்ஞா என்ற நாற்fபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) (ஸ்லோகங்கள் – 22 )

 

அத்தியாயம் 42 (579) ராம சீதா விஹார:  (ராமர் சீதை மகிழ்ச்சியுடன் இருத்தல்)

 

பொன் விமானத்தை அனுப்பி விட்டு ராமர், அரண்மனையின் அசோக வனம் என்ற சிறு தோட்டத்திற்குச் சென்றார். அந்த உத்யான வனம், சந்தன, அக3ரு, மாமரங்கள், உயர்ந்த கா3லேயகம் என்ற மரங்கள், தே3வதா3ரு மரங்கள் நிறைந்து அலங்காரமாக இருந்தது. சம்பக, அசோக, புன்னாக3, மதூக, பனஸம் இவைகளும், பாரிஜாத மரங்களும் மேலும் அழகூட்டின. லோத்ர, நீப, அர்ஜுன, நாக3, சப்த பர்ண, அதிமுக்தகம் என்ற வகைகளும், மந்தா3ர, கத3லி, குல்ம (புதர்), கொடி வகைகளும், நிறைந்து சூழ்ந்து இருந்தன. பிரியங்குகள், கத3ம்ப, வகுலம் போன்றவைகளும், ஜம்பூ4 (நாவல்), தா3டிமீ (மாதுளை), கோவிதா3ரம் என்ற செடிகளும், மரங்களும், எப்பொழுதும் ரம்யமான மலர்கள், பழங்கள் தரும் மரங்கள், திவ்யமான வாசனையுடன், இயல்பான இளம் துளிர்களும், தழைகளும், இவை தவிர, இத்துறையில் வல்லுனர்கள், சில்பிகள் அமைத்து வைத்த அழகிய தாவிர வகைகளுமாக, காட்சி தந்தது. அழகிய புஷ்பங்களால் கவரப்பட்டு வந்த வண்டுகளின் ரீங்காரம் சூழலை ரமணீயமாக்கின. இவை தவிர, கோகிலங்களும், ப்4ருங்க3ராஜ என்ற பக்ஷிகளின் கூவல்களும் சேர்ந்து ஒலித்தன. பல வர்ணங்களில் பக்ஷிகள். சித்ர விசித்ரமான பறவைகள், மாமரங்களிலும், மற்ற மரங்களிலும், வாசம் செய்தன. அக்னியை ஒத்த பொன் நிற பக்ஷிகள், நீல மேகம் போன்ற வண்ண பக்ஷிகளுடன் சேர்ந்து பறந்தது கண்களைக் கவர்ந்தன. இவைகளால் மரங்களே பிரகாசமாக விளங்கின. நல்ல மணம்  வீசும் மலர்கள் இரைந்து கிடந்தன. நீர் நிறைந்த தடாகங்கள், பல விதமான உருவங்களிலும், வடிவங்களிலும், மாணிக்கம் பதித்த படிகளுடன், தாமரைகளும், உத்பலங்களும், காடாக மண்டி கிடக்க, சக்ரவாக பக்ஷிகள் கூக்குரலிட்டு, அந்த பிரதேசத்தை மேலும் ரம்யமாக்கின. அதற்கு பதிலளிப்பது போல, தா3த்யூகம், சுக (கிளி), ஹம்ஸங்களும், ஸாரஸ பக்ஷிகளும் கூக்குரலிட்டன. கரைகளில் செழித்து வளர்ந்திருந்த  மரங்களும், பூத்துக் குலுங்கின. கற் பலகைகள் கொண்டு அழகிய பாதைகளும், பிராகாரங்களும் அமைக்கப் பட்டிருந்தன. வைடுரியமோ, மணியோ என்பது போல பரிசுத்தமாக பாதுகாக்கப் பட்டிருந்தன. இளம் துளிர்களும், மலர்களும், மரங்கள் காற்றில் அசையும் பொழுது, கீழே விழுந்து பூமியை மறைத்தன. தாரா கணங்களுடன் கூடிய ஆகாயம் போல விளங்கியது. இந்திரனுடைய நந்தன வனம் போலவும், ப்ரும்மாவின் சைத்ர வனம் போலவும், ராமனுடைய வனமும் அமைந்திருந்தது. அமர அழகிய ஆசனங்கள் போடப் பட்டிருந்தன. இடை இடையே கொடி வீடுகள்    குளிர்ச்சியாகத் தெரிந்தன. விசாலமான இந்த அசோக வனத்தில் ரகுநந்தனன் பிரவேசித்தார். அழகிய விரிப்புகள் போடப் பெற்று தயாராக இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். சீதையை கையை பிடித்து அருகில் அழைத்துக் கொண்டார். சசியும், புரந்திரனும் போல இருவரும், பலவித மாமிசங்கள், பழங்கள், ஆகாரங்கள் இவற்றை அனுபவித்து மகிழ்ந்தனர். அரசன் மனம் நிறைந்து உல்லாசமாக இருக்க, அரண்மனை சிப்பந்திகள் விரைவில் ஏற்பாடுகளைச் செய்தனர். நடனமாடுபவர்களும், பாடுபவர்களும் வந்து சேர்ந்தனர். அழகிய இளம் பெண்கள், பானங்களை ஏந்தியாபடி வந்தனர். காகுத்ஸன் எதிரில் அவர்கள் நடனமாடினர். ராமனே ரமயதாம் வர: – மகிழ்ச்சியூட்டுவதில் வல்லவன். அவனை ரம்யமாக உற்சாகப் படுத்த ராமா: – பெண்கள், கூடினர். சீதையுடன் அழகிய ஆசனத்தில் அமர்ந்து இந்த கேளிக்கைகளை ரசித்து மகிழ்ந்தார். சில நாட்களில், அருந்ததியுடன் வசிஷ்டர் போலவும் காட்சி தந்தார். தேவ லோக பெண் போல இருந்த சீதையை மகிழ்விக்க தானும் தினமும் அந்த தோட்டத்துக்கு வந்து பொழுதைக் கழித்தார். இப்படி இவர்கள், உல்லாசமாக மன நிறைவோடு இருக்க, பல நாட்கள் கடந்தன. ஸிசிரம் எனும் பனிக்காலமும் வந்து மறைந்தது. நாளின் முன் பகுதியில் தர்ம காரியங்களைச் செய்து விட்டு, மீதி நேரத்தை அந்த:புரத்தில் கழிப்பது வழக்கமாயிற்று. சீதையும் காலை நேரங்களை தெய்வ காரியங்களுக்கு, பர்வ காலங்களுக்கான விசேஷ காரியங்கள், மற்றும் தினசரி வேலைகளை கவனித்து செய்ய, மற்றும் மாமியார்களுக்கு பணிவிடை செய்வதுமான வேலைகளுக்கு ஒதுக்கி விட்டு, கடமைகள் முடிந்த பின் சர்வாலங்கார பூஷிதையாக ராமனிடம் வந்து சேருவாள். தேவ லோகத்தில் அமர்ந்திருக்கும் சஹஸ்ராக்ஷனை சசி அணுகியது போல. இப்படி அருகில் வரும் மனைவியை ராமர் வெகுவாக ரசித்ததோடு, ஸாது, ஸாது என்று அவள் அலங்காரங்களை பாராட்டவும் செய்தார். ஒரு நாள், வைதேஹி, உன்னிடத்தில், நம் வம்சம் வளர சந்ததியைப் பெற விரும்புகிறேன். உன் விருப்பம் என்ன சொல், உடனே பூர்த்தி செய்வேன் என்றார். சீதை சிரித்தபடி, புண்யமான தபோ வனங்களைப் பார்க்க வேண்டும் ராமா, கங்கா தீரத்தில் உக்ரமாக தவம் செய்யும் ரிஷிகளைப் பார்க்க வேண்டும். தேஜஸ் நிறைந்த முனிவர்கள், பழம், கிழங்குகளைச் சாப்பிட்டபடி, மர நிழல்களில் வாழ்வதைக் காண வேண்டும். ஒர இரவு ஒரு பகல், ஏதோ ஒரு தப வனத்தில், முனிவர்களுடன் சேர்ந்து இருந்து விட்டு வர வேண்டும். அப்படியே ஆகட்டும் என்று ராமரும் வாக்களித்தார். கவலையின்றி இரு வைதேஹி, நாளை நிச்சயம் அழத்துப் போகிறேன் என்று வாக்களித்தார். இதன் பின் நண்பர்களும் வந்து சேர, எல்லோருமாக பவனத்துக்குள் நுழைந்தனர். தன் வீட்டின் மைய பாகம் வரை சீதையை அழைத்துக் கொண்டு ராமர் உள்ளே சென்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராம சீதா விஹார:: என்ற நாற்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 43 (580)  ப4த்3ர வாக்ய ஸ்ரவணம் (ஒற்றன் சொல்லைக் கேட்டல்)

 

ஆசனத்தில் அமர்ந்திருந்த ராமரைச் சுற்றி பலரும் அமர்ந்திருந்தனர். பல விதமான கதைகளைச் சொல்பவர்களும், ஹாஸ்யமாக பேசுபவர்களும் அருகில் இருந்தனர். விஜயன், மது4மத்தன், காஸ்யப:, பிங்க3ளன், சூடன், சுராஜன், காளீயன், ப4த்3ரன், த3ந்த வக்த்ரன், சுமாக3தன் முதலானோர். இவர்கள், வேடிக்கையும், விளையாட்டுமாக பல கதைகளையும், சம்பவங்களையும் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். பாதி சம்பாஷனையில் ராமர் வினவினார். ப4த்3ரம், நகரத்தில் என்ன பேசிக் கொள்கிறார்கள்.? ஜனங்களின் மன நிலை என்ன? என்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் நிலவுகிறது. சீதையைப் பற்றியும், பரதன், லக்ஷ்மணனைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்? சத்ருக்னன், தாயார் கைகேயியைப் பற்றி என்ன எண்ணம் ஊர் ஜனங்கள் மத்தியில் நிலவுகிறது? இரவில் ஊருக்குள் சஞ்சரிக்கும் ஒற்றர்கள் என்ன சொல்கிறார்கள். இதைக் கேட்டு ஒற்றன் வணக்கத்துடன் பதிலளித்தான். ராஜன், ஊர் ஜனங்கள், நல்ல விதமாகத்தான் பேசிக் கொள்கிறார்கள். ராவண விஜயத்தைப் பாராட்டி பேசுகிறார்கள். இந்த யுத்தமும், ஜயமும் பற்றி பல கதைகள் பரவியுள்ளன. ப4த்ரன் இவ்வளவு சொன்ன பின் ராமர் மேலும் வினவினார். எதையும் மறைக்காதே, மேலும் சொல்லு என்றார். சுபமானாலும், அசுபமானாலும், ஊர் ஜனங்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை மறைக்காமல் சொல்லு என்றார். தெரிந்து கொண்டால், சுபமானால் தொடர்ந்து செய்வோம். அசுபமானால் மாற்றிக் கொள்வோம், பயப்படாதே, கவலையின்றி விவரமாகச் சொல் என்றார். ராமர், இவ்வாறு துருவி துருவிக்கேட்கவும், பத்ரம் மிக கவனமாக பொறுக்கி எடுத்த சொற்களுடன் விவரமாகச் சொல்ல அரம்பித்தான். ராஜன், கேள். ஊர் ஜனங்கள், நாற்         சந்திகளிலும், கடை வீதிகளிலும், வனங்கள், உபவனங்கள் இவற்றிலும், என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறேன். ராமர் செய்தது அரிய செயல். சமுத்திரத்தின் மேல் சேதுவைக் கட்டி விட்டார். இது போல கேட்டதேயில்லை. தேவ தானவர்கள் கூட இப்படி ஸமுத்திரத்தின் மேல் சேது கட்டியதாக கேட்டதே இல்லை.  நெருங்கவே முடியாதவன் என்று பெயர் பெற்ற ராவணன், தன் படை பலங்கள், கோட்டை கொத்தளங்களோடு அழிக்கப் பட்டான். வானர வீரர்கள், கரடிகள், மட்டுமா, ராக்ஷஸர்கள் கூட ராமர் வசம் ஆகி விட்டனர். ராவணனை வதம் செய்ததோடு தன் கோப தாபங்களை விட்டு விட்டு ஊர் வந்து சேர்ந்து விட்டார். சீதையுடன் சேர்ந்ததில் தான் அவருக்கு எவ்வளவு ஆனந்தம். முன்பு ராவணன் அவளை மடியில் இருத்தி, அபகரித்துக் கொண்டு போனான். லங்கைக்கு கொண்டு போய் அசோக வனத்தில் வைத்தான். அரக்கர்களின் வீட்டில் இருந்தவளை, எப்படி ராமர் குறை சொல்லாமல் ஏற்றுக் கொண்டார்? நாமும் நம் மனைவிமார்களிடம் இந்த பொறுமையைக் காட்டியாக வேண்டும். ராஜா செய்வதைத் தான் பிரஜைகள், அனுசரித்து நடப்பார்கள். இப்படி பலவும் பேசுகிறார்கள். ராஜன், ஜனபதங்களிலும் இப்படி ஒரு பேச்சு நிலவி வருகிறது. இதைக் கேட்டு ராமரின் முகம் வருத்தத்தில் வாடியது. கூடியிருந்த நண்பர்களைப் பார்த்து இது என்ன குழப்பம் என்று கேட்டார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். அவர்களும் தலை குனிந்தபடி, ராமரை வணங்கி, இப்படித்தான் நாங்களும் கேள்விப் பட்டோம், இவன் சொல்வது சரிதான் என்றனர். அவர்கள் சொன்னதை மனதில் வாங்கிக் கொண்ட ராமர், அவர்களை அனுப்பி விட்டு யோசிக்கலானார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ப4த்3ர வாக்ய ஸ்ரவணம் என்ற நாற்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 44 (581) லக்ஷ்மணாத்யானயனம். (லக்ஷ்மணன் முதலியோரை அழைத்து வரச் செய்தல்)

 

நண்பர்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு தனியாக யோசனையில் ஆழ்ந்தார். அருகில் இருந்த வாயில் காப்போனைக் கூப்பிட்டு, சீக்கிரம் லக்ஷ்மணனை அழைத்து வா. பரதனையும், சத்ருக்னனையும் அழைத்து வா. (சுப லக்ஷணனான லக்ஷ்மணன், மகா பாக்யசாலியான பரதன், ஜயிக்க முடியாத சத்ருக்னன்) இதைக் கேட்டு, வாயில் காப்போன், தலை வணங்கி, வேகமாகச் சென்று லக்ஷ்மணனை அழைத்து வர அவன் வீடு சென்றான். ஜய கோஷம் செய்து வாழ்த்தி விட்டு, ராஜா உங்களை அழைக்கிறார். தாமதமின்றி உடனே கிளம்புங்கள் என்றான். அரசனான ராமனின் கட்டளை எனவே லக்ஷ்மணன் மறு பேச்சின்றி உடனே கிளம்பி ரதத்தில் புறப்பட்டு விட்டான். வேகமாக ராம பவனம் சென்றான். லக்ஷ்மணன் புறப்பட்டுச் செல்லும் வரை உடன் இருந்து விட்டு, வாயில் காப்போன், பரதனிடம் சென்றான். பரதனை வாழ்த்தி வணங்கி விட்டு, ராஜா உங்களைக் காண விரும்புகிறார் என்று தெரிவித்தான். ராமனுடைய மாளிகையிலிருந்து வாயில் காப்போன் செய்தி கொண்டு வந்திருக்கிறான் என்று கேட்டதுமே பரதன் புறப்பட்டு விட்டான். தன் அசனத்திலிருந்து குதித்து எழுந்து காலால் நடந்தே சென்றான். பரதன் புறப்பட்டுப் போகும் வரை காத்திருந்த வாயில் காப்போன், சத்ருக்ன பவனம் சென்றான். ரகுஸ்ரேஷ்டனே, வா, வா, கிளம்பு, ராஜா, உங்களைக் காண விரும்புகிறார் என்று தெரிவித்தான். லக்ஷ்மணனும், பரதனும் ஏற்கனவே கிளம்பிச் சென்று விட்டனர் என்றும் சொன்னான். உடனே சத்ருக்னனும் புறப்பட்டான். இவர்களுக்கு முன் வந்து வாயில் காப்போன் அரசனிடம் மூவரும் வந்து சேர்ந்து விட்டதை தெரியப் படுத்தினான். சிந்தனையில் மூழ்கி வாட்டமாக இருந்தவர், சீக்கிரம் அழைத்து வர உத்தரவிட்டார். தேஜஸ் வாய்ந்த ராஜகுமாரர்கள், மூன்று இந்திரர்கள் இணைந்து வந்ததைப் போல கம்பீரமாக நுழைந்தனர். கை கூப்பி அஞ்சலி செய்தபடி, தலை தாழ்த்தி வணங்கியபடி வந்தவர்கள், அரசனின் முகத்தைப் பார்த்து ஏதோ குழப்பம் என்று ஊகித்துக கொண்டனர். ராகு பிடித்த சந்திரன் போலவும், ஸந்த்யா காலத்து அஸ்தமன சூரியன் போலவும், ஒளியிழந்து கிடந்த ராமனது முகத்தைப் பார்த்து திடுக்கிட்டனர். கண்களில் நீரும், சோபையிழந்த தாமரை போலவும் முகம் வாட இருந்த ராமரை வணங்கி செய்வதறியாமல் பேசாமல் நின்றனர். அவர்களை அணைத்துக் கொண்ட ராமர், உட்காருங்கள் என்று சொல்லவும் அவர்கள்    ஆசனங்களில் அமர்ந்தனர். நீங்கள் மூவரும் தான் எனக்கு உயிர், நீங்கள் மூவரும் தான் எனக்கு எல்லாம். உங்கள் உதவியோடு தான் நான் ராஜ்ய பாலனம் செய்கிறேன். சாஸ்திரங்களை அறிந்தவர்கள் நீங்கள். நல்ல புத்தி உடையவர்கள். நான் சொல்வதைக் கேட்டு யோசித்து, ஆராய்ந்து பதில் சொல்லுங்கள் எனவும், என்ன சொல்லப் போகிறாரோ, என்று மனம் கலங்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போன்ற குழப்பங்கள் மனதில் தோன்ற, வாய் பேசாது அவர் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், லக்ஷ்மணாத்யானயனம் என்ற நாற்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம். )

 

 

 

 

அத்தியாயம் 45 (582) சீதா ஸமுத்ஸர்கா3தேஸ: (சீதையை  வெளியேற்ற கட்டளை)

 

குழப்பத்துடன் மூவரும் அமர்ந்தபின், முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு பேசலானார். கவனமாக கேளுங்கள். யாரும் குறுக்கே பேச வேண்டாம். ஊர் ஜனங்கள் மத்தியில் என்னையும் சீதையையும் குறித்து எந்த விதமான பேச்சு நடமாடுகிறது என்று தெரிந்து கொண்டேன். ஊர் ஜனங்கள், ஜனபத மக்கள் மத்தியில், பெரும் அபவாதமாக ஒரு பேச்சு எங்களைச் சுற்றி நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு அது மிகவும் அருவருக்கத்தக்கதாக, என் மர்ம ஸ்தானத்தில் குத்தி வாட்டுகிறது. நான் பெயர் பெற்ற இக்ஷ்வாகு குலத்தில் வந்தவன். சீதையும் ஜனகர்களின் உத்தமமான குலத்தில் தோன்றியவள். உங்களுக்குத் தெரியும், ஜன நடமாட்டமில்லாத தண்டகா வனத்தில், ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு சென்றான். நான் அவனை வதம் செய்து அழித்து விட்டேன். இந்த சமயம், அந்த ராஷஸன் ஊரில் வசித்தவளை, அயோத்யா நகருக்கு அழைத்து வந்தது சரிதானா என்ற பிரச்னை எழுந்துள்ளது. அக்னி பிரவேசம் செய்ய சொன்னதும், பொது மக்களிடம் நம்பிக்கை வரத்தானே. சௌமித்ரி பார்த்தான். நேரிடையாக கண்டவன் இதோ இருக்கிறான். ப்ரத்யக்ஷமாக அக்னி தேவன் அவளை பரிசுத்தமானவளாக என்னிடம் ஒப்படைத்தான். தேவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டனர். மாசற்ற வைதேஹியை வாயு தேவனும் புகழ்ந்தான். சந்திர ஆதித்யர்கள் வாழ்த்தினர். இவையனைத்தும், தேவர்கள் முன்னிலையில் நடந்தது. எல்லோருக்கும் தெரியும். மைதிலியை மாசற்றவளாக ஒத்துக்கொண்டு ரிஷிகள் மத்தியில் என்னிடம் ஒப்படைத்தனர். அவ்வளவு ஜனங்கள் மத்தியில், லங்கையில், பாபம் இல்லாதவளாக, சுத்தமானவளாக, ஏற்றுக் கொண்டேன். என் அந்தராத்மாவுக்குத் தெரியும். மைதிலி மாசற்றவள் என்பது. பின் அவளையும் அழைத்துக் கொண்டு அயோத்தி வந்தேன். இப்பொழுது என் மனதை வருத்தும் பெரும் அபவாதத்தை கேள்விப்படுகிறேன். ஊர் ஜனங்கள் மத்தியில், ஒருவிதமான சந்தேகமும், தவறான எண்ணமும் நிலவி வருகிறது. இதை அறிந்து என் மனம் மிகவும் வருந்துகிறது. எப்படியோ ஒரு பழிச் சொல், அபகீர்த்தி வந்து விட்டது. இது போன்ற பழிச் சொல் கீழே தள்ளி விடும். உலகில் கீர்த்தி உடையவனின் கீர்த்தி தான் போற்றப் படுகிறது. பழிச் சொல்லுக்கு இடம் கொடுத்தால் அவ்வளவு தான். நிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். தன் புகழை, பெயரை காப்பாற்றிக் கொள்ளத்தான் பாடு படுகிறோம். நான் உயிரை விடுவோமா என்று யோசிக்கிறேன். அபவாத பயத்தால் நான் நடுங்குகிறேன். இது ஜானகியின் காதில் விழுந்தால் அவள் எப்படி துடிப்பாள். அதனால் நீங்கள் தான் இந்த சோக ஸாகரத்தில் மூழ்கி தத்தளிக்கும் எனக்கு கை கொடுக்க வேண்டும். இதை விட அதிக துக்கம் இருக்கும் என்று தோன்றவில்லை. நாளைக் காலை, சௌமித்ரே, சுமந்திரரை ரதத்தை பூட்டச் சொல். சீதையை அழைத்துக் கொண்டு போய் நகரத்தின் எல்லையில் விட்டு விடு. கங்கைக் கரையைத் தாண்டி வால்மீகி முனிவரின் ஆசிரமம் இருக்கிறது. தமலா நதிக் கரையில் அழகிய ஆசிரமம். அங்கு விட்டு விடு. ஜன நடமாட்டமில்லாத அந்த சூன்யமான இடத்தில் அவளை விட்டு விட்டு சீக்கிரம் திரும்பி வந்து விடு. நான் சொன்னதைச் செய். சீதையைப் பற்றி யாரும், எதுவும் பேச வேண்டாம். சௌமித்ரே, கிளம்பு, யோசிக்காதே. இதில் ஆக்ஷேபனை ஸமாதானங்களுக்கு இடமேயில்லை. இதைத் தடுத்தால், எனக்கு உன்னிடம் கோபம் தான் வரும். என் புஜங்களின் பேரில் ஆணை. என் உயிரின் பேரில் ஆணை. இந்த செயலை உடனே நிறைவேற்று. யாரும் எனக்கு ஆலோசனை சொல்லி என் முடிவை மாற்றிக் கொள்ளச் சொல்ல முயற்சி செய்ய வேண்டாம். என்சாஸனத்தில் நம்பிக்கை இருந்தால், இப்பொழுது நான் சொல்வதைச் செய்யுங்கள். முன்னாலேயே அவள் தன் ஆசையை ஒரு முறை  வெளியிட்டிருக்கிறாள். கங்கைக் கரையில், ஆசிரமங்களில் வசிக்க வேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னாள். தன்      கண்களில் நீர் வடிய மன வருத்தத்தை மறைக்க  முடியாமல் முகம் காட்ட, ராமர் தன் சகோதரர்கள் உடன் வர, மாளிகையின் உள்ளே சென்றார். பெரிய யானை மூச்சு விடுவது போல அவர் பெருமூச்சு  வெளிப்பட்டது.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சீதா ஸமுத்ஸர்கா3தேஸ: என்ற நாற்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக