பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 46 – 64

பிப்ரவரி 26, 2014

அத்தியாயம் 46 (583) சீதா கங்காதீராநயனம் (சீதையை கங்கை கரைக்கு அழைத்துச் செல்லுதல்.)

 

அந்த இரவு சகோதரர்கள் அனைவருக்கும் மன நிம்மதியின்றி கழிந்தது. விடிந்ததும், லக்ஷ்மணன் சுமந்திரரை அழைத்து, வாடிய முகத்துடன் உத்தரவிட்டான். ஸாரதே, சீக்கிரம் ரதத்தில் குதிரைகளைப் பூட்டி தயார் செய். சீதை அமர வசதியாக விரிப்புகளுடன், ஆசனம் தயார் செய். புண்ய கர்மாக்களைச் செய்யும் மகரிஷிகள் வசிக்கும் ஆசிரமங்களைக் காண சீதையை அழைத்துச் செல்ல ராஜாவின் உத்தரவு. என்னை இந்த பணியைச் செய்யச் சொல்லியிருக்கிறார். சீக்கிரம் ரதத்தை கொண்டு வா. சுமந்திரரும் அவ்வாறே உயர் ஜாதி குதிரைகள் பூட்டிய ரதத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார். எப்பொழுதுமே நன்கு அலங்கரிக்கப்பட்டு, சுகமான ஆசனங்களும், அதில் வசதியாக விரிப்புகளும் போடப் பெற்று, தயாராகவே வைக்கப் படும் ரதம் தானே. சுமந்திரர் தயாராக வந்ததும், லக்ஷ்மணன் அரண்மனைக்குள் சென்று, சீதையைப் பார்த்து, தேவி, நீங்கள் அரசனிடம் உங்கள் விருப்பத்தைச் சொன்னீர்களாமே. அரசன் சம்மதித்து, ஆசிரமம் அழைத்துச் செல்ல எனக்கு கட்டளை இட்டிருக்கிறார். கங்கா தீரத்தில் உள்ள ரிஷிகளின் ஆசிரமங்களைக் காண உங்களை அழைத்துச் செல்ல வந்தேன் எனவும், சீதையும் அரசனது கட்டளை என்பதால் உடனே தயாராக கிளம்பி விட்டாள். தன் வஸ்திரங்கள், ஆபரணங்கள் இவைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். இந்த ஆபரணங்களை முனி பத்னிகளுக்கு கொடுப்பேன். த4னமும், வித விதமான வஸ்திரங்களும் அவர்களுக்கு கொடுப்பேன் என்றாள். சௌமித்ரியும், அப்படியே ஆகட்டும் என்று சொல்லி அவைகளை ரதத்தில் வைத்தான். மைதிலியும் ஏறிக் கொண்ட பின் ரதம் புறப்பட்டது. குதிரைகள் வேகமாக செல்லலாயின. அந்த சமயம், சீதை லக்ஷ்மணனைப் பார்த்து, ரகு நந்தனா, அசுபமான நிமித்தங்களைக்        காண்கிறேன். என் கண் துடிக்கிறது. இதயம் ஏனோ நடுங்குகிறது. உற்சாகம் வடிந்து, கவலை தோன்றுகிறது. திடுமென பூமியே சூன்யமாகி விட்டதா? உன் சகோதரனுக்கு மங்களம் உண்டாகட்டும். நீ சகோதர வாத்ஸல்யம் மிக்கவன். நீயும் வேண்டிக் கொள். என் மாமியார்களும் சௌக்யமாக இருக்க வேண்டுகிறேன். ஜன பதத்தில் உள்ள அனைவரும், மனிதர்கள், மற்ற பிராணிகள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டுகிறேன். இப்படி சொல்லியபடி சீதை தேவதைகளை அஞ்சலி செய்து வணங்கி வேண்டினாள். லக்ஷ்மணன் இதைக் கேட்டு, செய்வதறியாது எல்லோரும் நலமே என்றான். மனம் துணுக்குற்றாலும் காட்டிக் கொள்ளவில்லை. பின், கோமதி தீரத்தில் ஆசிரமங்கள் தென் படவும், லக்ஷ்மணன் இறங்கி, சாரதியிடம், சுமந்திரா, நிறுத்து, கங்கை கரை தெரிகிறது பார், நான் பாகீரதி ஜலத்தை தலையில்  தெளித்துக் கொள்கிறேன் என்றான். சிவ பெருமானே தலையில் தாங்கினாரே என்றான். குதிரைகளை இழுத்துப் பிடித்து நிறுத்தி, சீதை வசதியாக இறங்க வழி செய்து கொடுத்தார் சுமந்திரர். சுமந்திரரும், சௌமித்ரியும் கை லாகு கொடுத்து இறக்கி விட, பாபங்களை தீர்க்கும், கங்கைக் கரையை சீதை அடைந்தாள். நதிக் கரையில், பாதி நாள் கழிந்தது. திடுமென லக்ஷ்மணன் தன் கட்டுப் பாட்டை இழந்து அழ ஆரம்பித்தான். சீதை திகைத்து, எதுவும் புரியாமல், என்ன இது? ஏன் அழுகிறாய் என்று கேட்டாள். வெகு நாட்களாக நான் விரும்பிய இடம் இது. கங்கை கரை. இங்கு வந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சமயம் ஏன் அழுகிறாய்? நீ எப்பொழுதும் ராமன் அருகிலேயே இருப்பவன். இரண்டு நாள் பிரிந்து இருக்க வேண்டுமே என்று அழுகிறாயா? லக்ஷ்மணா, எனக்கும் ராமனிடத்தில் பற்றுதல் உண்டு. என் உயிரை விட அதிகமாக நேசிக்கிறேன். நானே சமாளித்துக் கொண்டு இருக்கிறேன்.சிறு பிள்ளை போல அழுகிறாயே. விவரம் அறியாதவனா நீ. இந்த கங்கையைக் கடந்து அக்கரையில் சேர்த்து விடு. முனிஜனங்களை தரிசிக்க ஏற்பாடு செய். இந்த ஆடை ஆபரணங்களை நான் அவர்களுக்கு கொடுக்கிறேன். மகரிஷிகளை உரிய முறையில் வணங்கி ஆசீரவாதம் பெற வேண்டும். ஒரு இரவு அவர்களுடன் வசித்து விட்டு நகரம் திரும்புவோம். எனக்கும், பத்ம பத்ரம் போன்ற கண்களும், சிம்மம் போன்ற மார்பும், சிறுத்த இடையும் உடைய ராமனைக் காண ஆவல் அதிகமாகிறது. மனம் பறக்கிறது. ராமன் மற்றவர்களை ஆனந்தம் அடையச் செய்வதில் வல்லவன். சீதை சொன்னதைக் கேட்டு, லக்ஷ்மணன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, படகோட்டிகளைக் கூப்பிட்டு, கங்கையைக் கடக்க ஏற்பாடு செய்தான். அவர்களும் உடனே தயாராக வந்து சேர்ந்தனர். தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு, சீதையை படகில் ஏறச் செய்து கங்கையைக் கடந்து அழைத்துச் சென்றான் லக்ஷ்மணன்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சீதா கங்காதீராநயனம் என்ற நாற்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 47 (584) ராம சாஸன கத2னம் (ராமருடைய கட்டளையைத் தெரிவித்தல்)

 

விசாலமான அந்த படகில், மைதிலியை முதலில் ஏறச் செய்து விட்டு, லக்ஷ்மணன் தானும் ஏறிக் கொண்டான். சுமந்திரரை ரதத்துடன் கரையில் இருங்கள் என்று தடுத்து விட்டு, படகை செலுத்தச் சொன்னான். படகோட்டியும் வேகமாக செலுத்த, பாகீரதியின் அக்கரை வந்து சேர்ந்ததும், மைதிலியிடம், லக்ஷ்மணன் பணிவாக சொல்ல ஆரம்பித்தான். கண்கள் குளமாக, தன் நிலையை சொல்ல ஆரம்பித்தான். தேவி, என் மனதில் ஒரு பெரும் பாரத்தை சுமந்து வருகிறேனே, அது உங்களுக்குத் தெரியாது. எதனால், மதிப்புக்குரிய என் தமையன் இந்த செயலில் என்னை பணித்தார் என்பதும் தெரியவில்லை. தேவி, இந்த செய்தியை தங்களிடம் சொல்லும் முன் என் உயிர் பிரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்னை இந்த செய்தியை தங்களிடம் சொல்லச் சொல்லி பணித்து விட்டார். அதை விட எனக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம். உலகமே நிந்திக்கப் போகும் இந்த செயலைச் செய்ய ஏன் தான் என்னைத் தேர்ந்தெடுத்தாரோ. சோபனே, என்னை மன்னித்து விடு. இதில் என் தவறு எதுவும் இல்லை என்று சொல்லியபடி லக்ஷ்மணன் அவள் பாதங்களில் விழுந்தான்.  தனக்கு மரணம் வந்தால் நல்லது என்று சொல்லியதும், பின்னால் பாதங்களில் விழுந்ததும், மைதிலியை துணுக்குறச் செய்தது. கவலையால் துடித்துப் போனவளாக, லக்ஷ்மணா, விவரமாகச் சொல். எனக்கு எதுவுமே புரியவில்லை. மஹீபதி- அரசன் க்ஷேமமாக இருக்கிறானா? நீ உடல் ஆரோக்யத்துடன் இருக்கிறாயா? லக்ஷ்மணா, நரேந்திரனான ராமன் பேரில் ஆணை, என்ன விஷயம், என்ன கஷ்டம், எதுவானாலும் உள்ளபடி சொல்லு. இதோ நான் கட்டளையிடுகிறேன். இதைக் கேட்டு லக்ஷ்மணன் தலை குனிந்தபடி, சபையில் எல்லோருக்கும் மத்தியில், உன் சம்பந்தப்பட்ட ஒரு அபவாதம், அரசன் காதில் எட்டியது. ஜனபதம் முழுவதும் உன்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதாகச் சொன்னார்கள். ஜனகாத்மஜே, ராமன் மனம் வருந்தி என்னிடம் சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்று விட்டான். அதை என் வாயால் நான் சொல்ல மாட்டேன். தேவி, எனக்கு மகா கோபம் வந்தாலும், ராஜாவின் மனதில் புதைந்துள்ள விஷயங்களை நான் அறியேன். என் முன்னால், மாசற்ற உன்னை அரசன் தியாகம் செய்து விட்டான். புர ஜனங்களின் மத்தியில் பரவிய அவதூறு காரணமாக, உன்னை தியாகம் செய்கிறான். வேறு எந்த வித குறையோ, குற்றமோ உன்னிடம் இல்லை. தேவி, இந்த ஆசிரமங்களில் உன்னை விட்டு வரும்படி எனக்கு உத்தரவு. நீயும் இந்த கங்கா தீரத்தைக் காண விரும்பினாய். உன் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள். இந்த மகரிஷிகளின் ஆசிரமத்தில் இரு. வருந்தாதே தேவி. சமாளித்துக் கொண்டு சந்தோஷமாக இரு. எங்கள் தந்தைக்குப் பிரியமான முனி புங்கவர், வால்மீகி இங்கு தான் இருக்கிறார். எங்கள் தந்தையின் நண்பர். அவரது பாதச் சாயையில் உங்களை விட்டுச் செல்கிறேன். ஜனகாத்மஜே, உபவாசங்கள்,      விரதங்களில் மனதைச் செலுத்தி அமைதியாக இரு. ராமனை மனதில் இருத்தி, பதிவிரதா தர்மத்தையும் பாலனம் செய்து வாருங்கள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும், தேவி, வேறு வழியில்லை.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராம சாஸன கதனம் என்ற நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 48 (585) சீதா பரித்யாக: (சீதையை தியாகம் செய்து விடல்)

 

இடி விழுந்தது போன்ற இந்த பயங்கரமான செய்தியைக் கேட்டு ஜனகாத்மஜா, முஹீர்த்த காலம் நினைவின்றி கிடந்தாள். காதில் விழுந்த செய்தியை மனதில் கிரஹித்துக் கொள்ள முடியாமல் தவித்தாள். கண்க ளில் நீர் மல்கியது. மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. லக்ஷ்மணா, என் சரீரம் துக்கத்தை அனுபவிக்கவே படைக்கப் பட்டது போலும். பூமியில் ப்ரும்மா என்னை ஸ்ருஷ்டி செய்ததே இப்படி சித்ரவதை செய்யவே தானோ. முன் பிறவியில் என்ன பாவம் செய்தேனோ. யார், யாரை, கணவன் மனைவிகளை பிரித்து வைத்தேனோ. அரசன் என்னை கை விடுவதா? என்னிடத்தில் என்ன குறை.? அப்பழுக்கு இல்லாத என் நடத்தை அவர் அறியாததா? முன்பும் ஆசிரமத்தில் வசித்தேன். ஆனால், ராமன் பாத அடிகளைத் தொடர்ந்துச் சென்றேன். ராமனுடன் இருந்ததால், மகிழ்ச்சியாக நிம்மதியாக இருந்தேன். என்னை தடுத்ததையும் மீறி, வன வாசத்தில் ராமனுடன் இருப்பதையே பெரிதாக எண்ணி வன வாசத்தில் துன்பத்தையும் இன்பமாக உணர்ந்தேன். இப்பொழுது எப்படி ஆசிரமத்தில் இருப்பேன். ஜன நடமாட்டம் இல்லாத இடத்தில், என் கஷ்டங்களை யாரிடம் சொல்லி அழுவேன். முனிவர்க ளிடம் என்ன சொல்வேன்? நான் தவறு செய்தேன், அரசன் தண்டனை கொடுத்தான் என்றா சொல்வேன். என்ன காரணத்திற்காக ராஜா என்னை தள்ளி வைத்தார்? சௌமித்ரே, இன்றே ஜாஹ்னவியில் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்வேன். அப்படி நான் உயிரை விட்டால் ராஜ வம்சம் பரிகாசத்துக்கு ஆளாகும். நீ உன் கடமையை செய் சௌமித்ரே, துக்கத்தை அனுபவிக்கவே பிறந்தவள் நான். என்னை இந்த நிர்ஜனமான காட்டுப் பிரதேசத்தில் விட்டு விட்டு திரும்பி போ. ராஜாவிடம் நான் சொன்னதாகச் சொல்லு. என் மாமியார்களிடம் என் வணக்கத்தைச் சொல். அரசனை குசலம் விசாரித்ததாகச் சொல். இந்த செய்தியை, லக்ஷ்மணா, இதே போல சொல்லு. தர்மமே பாராயணம் தர்மம்தான் எனக்குப் பெரியது என்று சொல்லிக் கொள்ளும் அரசனிடம் சொல். ராகவா, சீதை மாசற்றவள் என்பது உனக்குத் தெரியும். உன்னிடத்தில் நிறைந்த பக்தியுடையவள். உன் நன்மையில் அக்கறையுள்ளவள். ஏதோ உன் கீர்த்தியை மறைக்கும் அபவாதம் என்ற பெயரில், என்னைத் தியாகம் செய்கிறாய். உன்னையே நம்பி இருந்த என்னை விலக்கி விடும் அளவு பயமா? தர்ம வழியில் செல்லும் அரசன் சொல்லும் சொல் இதுதான் போலும். ஊர் ஜனங்களுக்கு கொடுத்த மதிப்பை உன் சகோதர்களுக்கும் கொடு. நல்ல தர்மம் உன்னுடையது. உன் கீர்த்தியும் இந்த செயலால் வெகுவாகப் பரவும். நான் என் சரீரத்தைப் பற்றி கவலைப் படவில்லை. ஊர் ஜனங்களின், பிரஜைகளின் நலனை நீ கவனித்துக் கொள். என்னைப் பொறுத்த வரையில் பெண்களுக்கு பதி தான் தெய்வம். பதி தான் உறவு, குரு எல்லாம். அதனால், கணவனது காரியம் என்றால் பெண்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது செய்ய வேண்டியது தான் முறை. இதைச் சொல் லக்ஷ்மணா, இன்னொரு விஷயம். என்னை நன்றாகப் பார்த்து விட்டுப் போ. ருது காலம் தாண்டி நான் ராமனது கர்ப்பத்தை தாங்கி இருக்கிறேன். இதையும் சொல். இதைக் கேட்டு லக்ஷ்மணன் தவித்தான். தலையை தரையில் மோதிக் கொண்டு அழுதான். அவளை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விட்டு, என்ன சொல்கிறாய் தேவி, நான் உன் ரூபத்தை இதற்கு முன் கண்டதேயில்லை. உன் பாதங்களைத் தான் கண்டிருக்கிறேன். ராமனும் அருகில் இல்லாத இந்த நிர்ஜனமான வனத்தில் உன்னை நிமிர்ந்து எப்படி பார்ப்பேன். என்று சொல்லியபடி அவளை நமஸ்கரித்து விட்டு வேகமாக நடந்து சென்று படகில் ஏறிக் கொண்டான். கண்களால் எதையும் காண சக்தியற்றவனாக அதே நிலையில் ரதத்திலும் ஏறிக் கொண்டான். திரும்பத் திரும்ப அனாதையாக நின்ற சீதையை கண்ணுக்கு தெரிந்த வரை பார்த்த படியே சென்றான். வெகு தூரம் வரை ரதத்தை பார்த்துக் கொண்டிருந்த சீதையை, ரதம் கண்ணுக்கு மறைந்ததும் நிலைமையின் தீவிரம் தாக்கியது. தாங்க மாட்டாத துக்கம் அவளை ஆட் கொண்டது. மயில் கூட்டங்கள் அவளை வினோதமாகப் பார்த்தன. தனக்கு புகலிடம் எதுவுமே இல்லை என்ற உண்மை சுட்டது. பாரமாக மனதை அழுத்தியது. செய்வதறியாது ஓவென அழலானாள்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சீதா பரித்யாக: என்ற நாற்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)  

 

அத்தியாயம் 49 (586) வால்மீகி ஆசிரம பிரவேச: (வால்மீகியின் ஆசிரமத்தில் நுழைதல்).

 

அழுதபடி நிற்கும் சீதையைக் கண்ட சில சிறுவர்கள், வால்மீகி முனிவரிடம் ஓடிப் போய் தெரிவித்தனர். முனிவரை வணங்கி பரபரப்புடன், வனத்தில் அழுதபடி நிற்கும் ஸ்திரீயைப் பற்றிச் சொன்னார்கள். இது வரை நாங்கள் அவளைக் கண்டதில்லை பகவன், நீங்கள் வந்து பாருங்களேன். நதிக்கரையில் ஒரு அழகிய பெண், யாரோ, மிகவும் துக்கத்துடன் காணப்படுகிறாள். ஏதோ பெரிய துக்கம், ஓவென்று அழுது கொண்டிருப்பதைக் கண்டோம். பார்த்தால் அனாதையாகவோ, வசதியற்றவளாகவோ தெரியவில்லை. மனித குலத்து ஸ்திரீ தானோ, அதுவே எங்களுக்கு சந்தேகம். இந்த ஆசிரமத்திற்கு அதிக தூரத்தில் இல்லை. யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று தேடுவது போல நிற்கிறாள். பாவம். அவளை அழைத்து வாருவோமா, சாதுவாகத் தெரிகிறாள், மரியாதையாக அழைத்து வந்து உபசரிப்போம். பகவன், நீங்கள் அவளைக் காப்பாற்றுங்கள். உங்களை சரணம் அடைந்தவளாகத் தான் தெரிகிறது. இவர்கள் சொல்வதைக் கேட்டும், தானும் தன் புத்தியால் உணர்ந்தும், தவத்தினால் பெற்ற ஞானக் கண்களால் நடந்ததை அறிந்தும், ஓட்டமும், நடையுமாக அந்து ரிஷி, மைதிலி இருக்கும் இடம் வந்தார். சீடர்கள், அவர் வேகமாக செல்வதைப் பார்த்து உடன் ஓடினர். அர்க்யத்தை கையில் எடுத்துக் கொண்டு, அவள் இருந்த இடத்திற்கு சற்று தூரத்திலிருந்தே நடந்து அவள் அருகில் சென்றார். ராகவனின் பிரியமான பத்னி, சீதை அனாதை போல நிற்பதைக் கண்டார். தன் தேஜஸால் அவளுக்கு இதமாக, மதுரமாக பேச ஆரம்பித்தார். நீ ராம மகிஷி, தசரதன் மருமகள் அல்லவா? ஜனக ராஜாவின் மகள். உன் வரவு நல் வரவாகுக. உனக்கு ஸ்வாகதம். மகளே, என் தவ வலிமையால், உன்னைக் கண்டதும், நடந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டு விட்டேன். காரணமும் தெரிந்து கொண்டேன். உன்னையும் நான் அறிவேன். பதிவிரதாவான உன்னையும் அறிவேன். தவம் செய்து சமாதியில் இருந்த பொழுது, நீ வருவது போல உணர்ந்தேன். மூவுலகிலும் நடப்பதை நான் உடனுக்குடன் தெரிந்து கொள்வேன். மாசற்றவளாக உன்னை நான் அறிவேன். என் தவப்பயனாக பெற்ற ஞானக் கண்கள் சொல்வது பொய்யாகாது. கவலையின்றி நீ என்னுடன் இரு. நான் இருக்கும் வரை உனக்கு ஒரு குறையும் வராது. ஆசிரமத்தில், தவம் செய்யும் தாபஸிகள், ஸ்திரீகள் இருக்கிறார்கள். உன்னை மகளாக பாவித்து கவனித்துக் கொள்வார்கள். மகளே, இதோ அர்க்யம். ஏற்றுக் கொள். கவலையின்றி, பயமின்றி இந்த ஆசிரமத்தில் வசிப்பாய். உன் வீடு போல எண்ணிக் கொள். தன் வீட்டில் உரிமையுடன் இருப்பது போல இரு. இதைக் கேட்டு சீதா கை கூப்பி வணங்கி, முனிவரின் அத்புதமான உபசாரத்தை ஏற்றுக் கொண்டு அவருடன் நடந்தாள். முன்னால் முனிவர் செல்ல, வினயமாக பின் தொடர்ந்தாள். வால்மீகி முனிவருடன் வரும் அவளைப் பார்த்து, முனி பத்னிகள் குதூகலமாக அவளை எதிர் கொண்டு வரவேற்க வந்தனர். ஸ்வாகதம், வா. முனி ஸ்ரேஷ்டரே, தாங்களும் வெகு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வணங்குகிறோம். சொல்லுங்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும்,? வால்மீகி, இவள் ராம பத்னி. ஜனகன் மகள்.  என் நண்பர் தசரதன் மருமகள். மாசற்றவள். ஏனோ கணவனால் கை விடப் பட்டாள். இவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இவளிடம் அன்புடன் ஸ்னேகமாக நடந்து கொள்ளுங்கள். என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்ததாகவும் இருக்கும், தவிர சுயமாகவே இவள் போற்றத் தகுந்த பெருமையுடையவளே. திரும்ப திரும்ப சீதையை சமாதானப் படுத்தி, அன்புடன் பேசி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, முனிவர், தன் குழாம் சூழ தன் ஆசிரமம் வந்து சேர்ந்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வால்மீகி ஆசிரம பிரவேச:: என்ற நாற்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)  

 

அத்தியாயம் 50 (587) சுமந்திர ரஹஸ்ய கதனம் (சுமந்திரர் சொன்ன ரகசியம்)

 

சீதை ஆசிரமத்தினுள் நுழைவதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மணனை வருத்தம் சூழ்ந்தது. தாங்க மாட்டாமல் சாரதியிடம், சாரதே, இதோ பாருங்கள். சீதையின் பிரிவைத் தாங்க எனக்கே முடியவில்லை. ராமன் என்ன பாடு படப் போகிறானோ. இதை விட வேறு என்ன துக்கம் வேண்டும். தன் மனைவியான, அப்பழுக்கற்ற ஜனகாத்மஜாவை, பிரியமானவளை இப்படி தள்ளி வைத்து விட்டானே. இது ராமன் தானாக செய்த செயலே அல்ல. ராகவனை சித்ரவதை செய்ய தெய்வம் முடிவு எடுத்துக் கொண்டது போலத் தெரிகிறது. விதியை மீற யாராலும் முடியாது. தான் கோபம் கொண்ட மாத்திரத்தில், எதிர்த்து நிற்கும், ராக்ஷஸர்களையும், அசுரர்களையும் அடித்து அழிக்கக் கூடியவனான ராமனே விதி வழி செல்கிறான். முன்பு தண்டகா வனத்தில், ஜன சஞ்சாரமற்ற காட்டில், தந்தையின் கட்டளை என்பதால் ஒன்பது வருஷங்கள், மேலும் ஐந்து என்று பதினான்கு வருஷங்கள் வசித்தானே, அது துக்கம் என்றால், இப்பொழுது, சீதையை பிரிவது என்பது அதை விட அதிக துக்ககரமானது. ஏதோ ஊர் ஜனங்கள், பேசினார்கள் என்று இப்படி முடிவு செய்தது மிகக் கொடுமையாக எனக்குப் படுகிறது. இந்த செயலில், என்ன தர்மம், என்ன கீர்த்தி இருக்கிறது? அல்ப ஜனங்கள் பேசியதை வைத்து மைதிலியை குற்றம் சொல்கிறானே. லக்ஷ்மணன் வேதனை தாங்காமல் புலம்பியதைக் கேட்ட சுமந்திரர், சௌமித்ரே, வருந்தாதே. மைதிலியைப் பற்றியும் கவலைப் படாதே. வேதனையை விலக்கி சமாதானப் படுத்திக் கொள். முன் ஒரு சமயம் உன் தந்தையிடம் ப்ராம்மணர்கள் ராமன் எந்த சிரமமானாலும், கடுமையான சோதனை வந்தாலும், தன் வசம் இழக்காமல் நிதானமாக இருப்பான் என்றும், அவன் ஜாதகப்படி மனைவியை பிரிந்து வாழ நேரிடும் என்றும் சொன்னார்கள். பிரிய ஜனங்கள் எல்லோரையும் பிரிந்து வாழ நேரலாம் என்றும் சொன்னார்கள். லக்ஷ்மணா, உன்னையும், பரத, ஸத்ருக்னர்களையும் கூட பிரிவான். காலம் செல்லச் செல்ல ஒரு நிலையில் உங்களையும் தியாகம் செய்வான். இதை யாரிடமும் சொல்லாதே. லக்ஷ்மணா, இந்த ரகசியம் உன்னுடன் இருக்கட்டும். பரத, சத்ருக்னர்களுக்கு தெரிய வேண்டாம். துர்வாச முனிவர் ஒரு முறை அரசனிடம் சொன்ன ரகசியம் இது. வசிஷ்டரும் இருந்தார். இன்னும் மகா ஜனங்கள் என்று அழைக்கப்படும் சில பிரமுகர்களும் இருந்தனர். நானும் இருந்தேன். ரிஷி சொன்னதைக் கேட்டவுடன், அரசர் என்னிடம் ஸாரதே, இதை யாரிடமும் சொல்லாதே என்று கேட்டுக் கொண்டார். லோகபாலரான அவரது கட்டளை என்பதால், நானும், இந்த விஷயத்தை என் மனதினுள் வைத்துக் கொண்டு விட்டேன். உன்னிடமும் சொல்லக் கூடாது தான். ஆனால் சத்யமல்லாத சொல்லை நான் பேச மாட்டேன். லக்ஷ்மணா, நீ கேட்க விரும்பினால், இன்னும் சில விஷயங்களைச் சொல்கிறேன். நரேந்திரன் இவைகளை ரகசியமாக காப்பாற்று என்று சொல்லி இருந்தாலும், இப்பொழுது காலம் வந்து விட்டது. விதியை மாற்ற முடியாது. இப்படி ஒரு துக்கம் வந்திருக்கிறதே, இதை பரதனிடமோ, சத்ருக்னனிடம் கூட சொல்லாதே. பலத்த பீடிகையுடன் ஆரம்பித்த ஸாரதியிடம், லக்ஷ்மணன் சொல்லுங்கள் என்று கேட்கத் தயாரானான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சுமந்திர ரஹஸ்ய கதனம் என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

அத்தியாயம் 51 ( 588) துர்வாச வாக்ய கதனம் (துர்வாசர் சொன்ன சொல்)

 

லக்ஷ்மணன் வேண்டிக் கொண்டதன் பேரில், சுமந்திரர் விவரமாகாச் சொல்ல ஆரம்பித்தார். அத்ரி புத்திரன், இந்த துர்வாச முனி. ஓரு வருஷ காலம், வசிஷ்டருடன் அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஓரு சமயம், உன் தந்தை அந்த ஆசிரமத்திற்குச் சென்றார். தங்கள் குல புரோஹிதரான வசிஷ்டருடன் இந்த முனிவரும் அமர்ந்திருப்பதைக் கண்டார். சூரியனுக்கு இணையான தேஜஸJடன் இருந்த அந்த இரு முனிவர்களையும் வணங்கினார். வசிஷ்டர் வழக்கம் போல ஆசிர்வாதம் செய்து, ஆசனம் அ ளித்த பின், குசலம் விசாரித்தார். பாத்யம், பழங்கள் கொடுத்து உபசரித்தார். பலவிதமான கதைகள் பேசிக் கொண்டு சிறிது நேரம் இருந்தார். மத்யான்ன வேளை நெருங்கியதும், விடை பெற எழுந்தார். அத்ரி புத்திரரான துர்வாசரைப் பார்த்து என் மகன், என் வம்சம் எப்படி இருக்கும் என்று வினவினார். என் மகன் ஆயுள் பலம் எப்படி? மற்றவர்கள் வருங்காலம் எப்படி இருக்கும் என்றும் வினவினார். என் வம்சத்தினரின் வருங்காலத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்று தசரதர் கேட்டதும் துர்வாசர் பதில் சொன்னார். ராஜன், முன்பு தேவாசுர யுத்தத்தில் நடந்ததைச் சொல்கிறேன் கேள். தைத்யர்கள், தேவர்களின் தாக்குதலைத் தாங்க முடியாமல், ப்ருகு பத்னியை சரணடைந்தார்கள். அவள் அவர்களுக்கு அபயம் அளித்து தன் வீட்டில் இருக்கச் செய்தாள். இவர்களுக்கு அபயம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்ததைக் கண்ட இந்திரன் கோபம் கொண்டான். தன் கூர்மையான நுனிகளுடைய சக்ரத்தால் ப்ருகு பத்னியின் தலையைக் கொய்து விட்டான். தன் மனைவி கொல்லப் பட்டதையறிந்த முனிவர், சட்டென்று விஷ்ணுவை சபித்து விட்டார். எதிரிகளைத் தானே நாசம் செய்வார் விஷ்ணு. இருந்தும், படபடப்பில் அவர் வாயிலிருந்து இந்த சாபம் வெளி வந்து விட்டது. ஜனார்தனா, என் மனைவியை ஏன் வதைத்தாய்? நீ மனிதனாகப் பிறப்பாய். அப்பொழுது பல வருஷங்கள் மனைவியைப் பிரிந்து வாழ்வாய். வாடுவாய். அப்பொழுது தான் இந்த துக்கம் என்ன என்பதை அறிவாய். இப்படி சாபம் கொடுத்தபின் ப்ருகு முனிவர் பச்சாதாபம் அடைந்தார். தேவனைப் பூஜித்தார். தவம் செய்து நான் ஆராதிக்கும் தெய்வமே நீ தான், உன்னை சபித்து விட்டேனே என்று வருந்தினார். பக்த வத்ஸலான பகவான், உலக நன்மைக்காக இந்த சாபத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இப்படி முன் ஜன்மத்தில் சாபம் பெற்றவர்தான் தங்கள் புதல்வனாக அவதரித்திக்கிறார். மகாராஜாவே, ராமன் என்ற பெயர் மூவுலகிலும் பரவி, வெகு காலம் சுகமாக இருந்தாலும், சாபத்தின் பலனை அனுபவித்தே ஆவான். இவனைப் பின் பற்றிச் செல்பவர்கள், சுகமாகவும், நிறைந்த செல்வச் செழிப்போடும் இருப்பார்கள். பத்தாயிரம், பத்து நூறு ஆண்டுகள் ராமன் ராஜ்யத்தை ஆண்டு விட்டு, ப்ரும்ம லோகம் போவான். நிறைய அஸ்வமேத யாகங்கள் செய்வான். பல ராஜ வம்சங்களை நிலை நிறுத்துவான். யாராலும் ஜயிக்க முடியாத படி இருப்பான். சீதையிடம் இரண்டு புத்திரர்கள் பிறப்பார்கள். அயோத்தியில் இல்லாமல், வேறு ஏதோ இடத்தில் பிறப்பார்கள். இதில் சந்தேகமேயில்லை. சத்யம். பின் ராகவன் சீதையின் புத்திரர்களுக்கு முடி சூட்டுவான். இப்படி வம்சாவளியை விளக்கிச் சொல்லி விட்டு மௌனமாகி விட்டார். அரசரும், முனிவர் மௌன விரதம் மேற் கொண்டவுடன், விடை பெற்று தன் நகரம் வந்து சேர்ந்தான். நான் கேட்டு, இதுவரை என் மனதினுள் புதைத்து வைத்திருந்த கதை இது தான். நரோத்தமா? நாம் என்ன செய்ய முடியும்? நம் கையில் என்ன இருக்கிறது. சீதையைப் பற்றி வருந்த பயனில்லை. மனதை தேற்றிக் கொள். பேசிக் கொண்டே இருவரும், சூரியன் மறையும் வரை கேசினீ நதிக் கரையில் வாசம் செய்ய தீர்மானித்தனர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், துர்வாச வாக்ய கதனம் என்ற ஐம்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 52 (589) ராம சமாதானம்(ராமன் சமாதானமடைதல்)

 

அந்த இரவு கேசினீ நதிக் கரையில் கழிந்தது. விடிந்தவுடன் லக்ஷ்மணன் புறப்பட்டான். பாதி நாள் பிரயாணத்தில் சென்றபின், நகரத்தினுள் பிரவேசித்தனர். அயோத்தி மா நகரில், ஜனங்கள், புஷ்டியாக மகிழ்ச்சியுடன், ரத்னங்களும், மணிகளுமாக அணிந்து, செல்வச் செழிப்புடன் காணப் பட்டார்கள். இதைக் கண்டு லக்ஷ்மணன் மேலும் வாட்டம் அடைந்தான். ஊர் ஜனங்கள் மகிழ்ச்சியாக வளைய வரும் பொழுது, தன் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு மட்டும், ஏன் கஷ்டம் தர வேண்டும். ராமனைப் பார்த்தவுடன் கேட்க வேன்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான். இதற்குள், சந்திர பவனம் போல குளுமையாக இருந்த அரண்மனை வந்து சேர்ந்து விட்டிருந்தனர். ராஜ பவனத்தில் இறங்கி, தலை குனிந்தபடி உள்ளே நுழைந்தான். நேருக்கு நேர் ராமனை பார்க்க முடியாதபடி கண்களை நீர் மறைத்தது. அவர் பாதங்களில் வணங்கி, வினயத்துடனும், மன வருத்தம்  வெளிப்பட, மிக தீனமாக, தங்கள் கட்டளை என்பதால், ஜனகாத்மஜாவை, நீங்கள் சொன்னபடி, கங்கா தீரத்தில் விட்டு விட்டு வந்தேன், என்றான். எனக்கு நன்றாக தெரிந்திருந்தும், மாசற்றவளான சீதையை, ஜன சஞ்சாரமில்லாத காட்டில் தனியாக விட்டு விட்டு வந்து விட்டேன். புருஷ வ்யாக்ரனே, நீயும் வருந்தாதே. இது காலத்தின் கட்டாயம். தன்னம்பிக்கை மிகுந்த உன் போன்ற வீர்ர்கள் இப்படி வருந்தக் கூடாது. உலகில் எல்லாமே அழிவை நோக்கித்தான் செல்கின்றன. அருவிகள் விழத்தான் பெருகி வருகின்றன. நட்பு, சேர்க்கைகள், பிரிவில் தான் முடிகின்றன. வாழ்க்கை மரணத்தில் தான் முடிகிறது. அதனால், புத்திரர்களிடம், மனைவி மக்களிடம், தன் செல்வத்தில் அதிக ஈடுபாடு கொள்ளக் கூடாது. பிரிவு நிச்சயம் தோன்றும். அப்பொழுது, இந்த ஈடுபாட்டின் காரணமாகவே துன்பமும் அதிகமாகத் தெரியும். ராஜன், நீ உன்னை கட்டுப்படுத்திக் கொள்ள சாமர்த்தியம் உள்ளவனே. உலகம் முழவதையும், ஒரு கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கவும் உனக்கு ஆற்றல் இருக்கிறது. அப்படியிருக்க நீ சாதாரண பாமரன் போல உன் உணர்ச்சிகளை  வெளிக் காட்டிக் கொள்ளாதே. உன் போல சிறந்த புருஷர்கள், தன்னை மீறி மோகம்  வெளிப்பட விட மாட்டார்கள். என்ன காரணத்திற்காக மைதிலியை தியாகம் செய்தாயோ, அதே போல உனக்கும் ஒரு அபவாதம் வந்து சேரும். அதனால், மனதை தளர விடாதே. கவனத்தை சிதற அடிக்கும் வல்லமை பெற்ற துயரம் உன் திட சித்தத்தை பாதிக்காமல் பார்த்துக் கொள். இவ்வாறு சமயோசிதமாக லக்ஷ்மணன் பேசவும் ராமரும் அமைதியடைந்தார். அப்படியா, என் கட்டளையை நிறை வேற்றியது சந்தோஷம். என் மன சங்கடம் விலகியது. நிம்மதியும் தோன்றுகிறது. லக்ஷ்மணா, உன் சொல் வளம் என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது என்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராம சமாதானம் என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)  

 

அத்தியாயம் 53 (590) ந்ருக சாப கதனம். (ந்ருகன் பெற்ற சாபம்)

 

லக்ஷ்மணனைப் பார்த்து ராமர், லக்ஷ்மணா, உன்னைப் போல ப3ந்து4க்கள் அமைவது அரிது. உன் வார்த்தைகள் என்னைத்  தூக்கி நிறுத்தி விட்டன. என் மன சஞ்சலங்கள் விலக, என் மனதிற்குகந்ததைச் சொன்னாய். நான் செய்தது தவறல்ல என்ற எண்ணமே எனக்குத் தெம்பைக் கொடுக்கும். எனக்குத் தோன்றுவதை சொல்கிறேன் கேள். நான்கு நாட்களாக ஊர் வேலைகளை கவனிக்கவில்லை. நமது கடமை, அதைச் செய்யாமல் விடுவது தவறு. அதுவும் உறுத்துகிறது. மந்திரிகளையும், பிரஜைகளையும் பிரமுகர்களையும் அழைத்து சபையைக் கூட்ட ஏற்பாடு செய். என்ன வேலை நடக்க வேண்டும் என்பதை யார் சொன்னாலும், ஆணோ. பெண்ணோ, பிரஜைகள் சொல்லும் பொழுது, அதை மதித்து கேட்க வேண்டியது நம் கடமை. தினம் தினம், அன்றைய ஊர்க் காரியங்களை கவனித்துச் செய்யாத அரசன் நரகத்துக்குத் தான் போவான். முன்னொரு காலத்தில், ந்ருக என்றொரு அரசன் இருந்தான். நல்ல அரசன். ப்ரும்ம வழியில் நிற்பவன். சத்யவான், நன்னடத்தை மிக்கவன். ஒரு சமயம், கோடிக் கணக்கான பசுக்களை ஸ்வர்ணத்தால் அலங்கரித்து, கன்றுகளோடு சேர்த்து புஷ்கர க்ஷேத்திரத்தில், பூமி தேவர்கள் எனப்படும் தன் பிரஜைகளுக்கு தானமாக கொடுத்தான். ஒரு பசுவும், கன்றுமாக அரசன் கை தவறுதலாக பட்ட மாத்திரத்தில், தானம் செய்த மாடுகளுடன் சேர்த்து அழைத்துச் செல்லப் பட்டு விட்டது. உண்மையில் அந்த பசு அக்னி ஹோத்ரம் செய்யும் ஒரு பிராம்மணனுடையது. தன் பசுவைக் காணாமல் அவர் தேடிக் கொண்டு வந்தார். அந்த பசு தான் அவருடைய ஒரே சொத்து போலும்.  வறுமையில் வாடி, ராஜ்யம் முழுவதும் தேடி அலைந்தார். ஓரு சமயம், கனகலாம் என்ற இடத்தில் தேடிய பொழுது, கன்றை இழந்து, தான் மட்டும் ஆரோக்யமாக இருந்ததை ஒரு பிராம்மணர் வீட்டில் கண்டு பிடித்தார். அதன் பெயரைச் சொல்லி அழைத்ததும், தன் எஜமானர் குரலை தெரிந்து கொண்ட பசு, அவருடன் வாத்ஸல்யத்துடன் சென்று விட்டது. அந்த பசுவை தானமாகப் பெற்று, இது வரை அதை வளர்த்த பிராம்மணரும், உடன் சென்றார். உரிமையாளரான பிராம்மணரிடம், இந்த பசு, ந்ருக ராஜாவினால், எனக்கு தானமாக தரப் பட்டது. அரசன் கையினால் தொட்டு எனக்கு கொடுத்தார். அதனால் என்னுடையது என்று வாதம் செய்தான். இருவர் தரப்பிலும் வாத, பிரதிவாதங்கள் தொடர்ந்தன. முடிவில் அரசனிடமே கேட்டு விடுவது என்று சென்றனர். ராஜ தரிசனம் கிடைக்க தாமதமாயிற்று. பல வருஷ காலம் காத்திருக்க வேண்யிருந்தது. இருவருக்குமிடையில் பகையும், கோபமும் வளர்ந்து கொண்டே போயிற்று. இருவரும் அரசனைக் கடிந்து கொண்டனர். மிகவும் அவசரமாக உங்களைக் காண வந்த எங்களுக்கு தரிசனம் தராது நாளைக் கடத்துகிறாயே, ந்ருக ராஜனே, எந்த ஜீவன் கண்ணுக்கும் படாமல் பல்லியாக போவாயாக என்று சபித்து விட்டனர். பல வருஷங்கள், பல நூறு வருஷங்கள் இப்படிக் கிடப்பாய். யது வம்சத்தின் புகழைப் பரப்ப ஒருவன் பிறப்பான். வாசுதேவன் என்ற பெயருடன் உலகில் பெரும் புகழோடு வருவான். அவன் தான் உனக்கு சாப விமோசனம் அளிப்பான். அந்த இடைப் பட்ட காலத்தில், நீயும் தவற்றை உனர்ந்து, பிராயச்சித்தம் செய்து கொள். பூ4 பா4ரத்தை தீர்க்க நர நாராயணர்களாக தோன்றுவார். கலியுகம் தோன்றும் முன், இவர்கள் வந்து உன்னை சாபத்திலிருந்து விடுவிப்பார்கள். இப்படி சாபம் கொடுத்து விட்டு, பிராம்மணர்கள் தங்கள் சண்டையில் வீணாக கழித்த நேரத்தில், வயது முதிர்ந்து, துர்பலமாக ஆன பசுவை, அதன் உரிமையாளரான பிராம்மணருக்கே கொடுத்து விட்டு, தங்கள் சண்டையைத் தீர்த்துக் கொண்டனர். இவ்வாறு ஒரு அரசன் தன் பிரஜைகளின் குறையை உடனே தீர்த்து வைக்காததால், சாபம் அடைந்தான். அதனால் சீக்கிரமாக தங்கள் பிரச்னைகளை என்னிடம் சொல்ல வந்துள்ள பிரஜைகளை என்னிடம் அனுப்பி வை. அரசன் தன் பிரஜைகளின் குறைகளைக் கேட்க கடமைப் பட்டவன். அதனால், சௌமித்ரே, யார் யார் என்ன காரியமாக வந்து நிற்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு வா என்று அனுப்பி வைத்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ந்ருக3 சாப கதனம் என்ற ஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 54 (591) ந்ருக ஸ்வப்ர பிரவேச: (ந்ருக ராஜா பள்ளத்தில் நுழைதல்)

 

ராமர் சொன்னதைக் கேட்டு லக்ஷ்மணன் வினயத்துடன், இப்படி ஒரு அல்ப தவறு, இதற்காகவா, கடுமையான பிராம்மண சாபம்? தேவையா, சரிதானா? யமதண்டம் மேலே வந்து விழுந்தது போல ந்ருக ராஜா வருந்தி இருக்கிறான். சாபம் பற்றி தெரிந்ததும், ராஜா பிராம்மணர்களிடம் என்ன சொன்னார். மகா கோபத்துடன் சாபம் கொடுத்த அவர்கள் சாந்தமானார்களா? ராமர் பதில் சொல்ல ஆரம்பித்தார். கேள், முன் நடந்ததை. சாபத்தைப் பற்றி அறிந்ததும், மந்திரிகளை அனுப்பி அவர்களைத் தேடச் செய்தான்.  இருவரும் சென்ற இடம் தெரியவில்லை. மந்திரிகள், பிரஜைகள், புரோகிதர்களைக் கூட்டி எனக்கு மிகப் பெரிய ஆபத்தை அறிவித்து விட்டு இருவரும் கண் காணாமல் சென்று விட்டனர். என் மகன் வசுவுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வையுங்கள். பள்ளம் ஒன்றை தயார் செய்யுங்கள். சில்பிகளைக் கொண்டு அதை வசிக்க ஏற்றதாக சுகமான தளங்களுடன் கட்டச் செய்யுங்கள். என் சாப காலத்தை நான் அதில் இருந்தபடி கழிப்பேன். ஒரு பள்ளம், மழையில் பாதிக்கப் படாமல், மற்றொன்று பனியில் பாதிக்கப்படாமல் இருக்கும்படி கட்டுங்கள். அதே போல வெயிற்காலத்தில் சூடு பாதிக்காமல் வசதியாக கட்டுங்கள். பழ மரங்களும், பூக்களைச் சொரியும் மரங்களும், புதர்களும் நிறைய நட்டு வையுங்கள். நல்ல வாசனை உள்ள மலர்ச் செடிகளையும், இந்த பள்ளங்களைச் சுற்றி நட்டு வையுங்கள். அரை யோஜனை தூரம் இந்த செடிகளும், மரங்களும், நிழல் தருபவையாக இருக்கட்டும். என் சாப காலத்தை எப்படியும் அனுபவித்து தான் ஆக வேண்டும். தன் மகன் வசுவை அழைத்து, மகனே, க்ஷத்திரிய தர்மம் தவறாமல் ஆட்சி செய்வாய். தர்மம் அறிந்தவர்கள் பிரஜைகள். என்னை பிராம்மணர்கள் சபித்ததைக் கண்டாய். இது பாடமாக இருக்கட்டும். இவர்களையும் தண்டிக்காதே. மகனே, விதியின் விளையாட்டு. எனக்கு இந்த துன்பம் அனுபவிக்க வந்து சேர்ந்திருக்கிறது. நமக்கு கிடைக்க வேண்டியது தான் கிடைக்கும். நமக்கு போக வேண்டிய இடங்கள் என்று விதித்துள்ள இடங்களுக்கு மட்டும் தான் போவோம். சுகமோ, துக்கமோ, நமக்கு விதிக்கப் பட்டுள்ளதை மட்டும் தான் நாம் அனுபவிக்கிறோம். ஏதோ பெரிய பாபம் செய்திருக்கிறேன் போலும். அதன் பலன் தான் அனுபவிக்கிறேன். இதை எண்ணி நீ வருந்தாதே என்று மகனிடம் சொல்லி விட்டு அந்த பள்ளத்தினுள் சென்று வசிக்க ஆரம்பித்தான். அந்த அழகிய வேலைப்பாடமைந்த பள்ளத்தினுள் நுழைந்ததுமே பிராம்மணர்களின் சாபம் அவனை வந்தடைந்தது.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ந்ருக ஸ்வப்ர பிரவேச: என்ற ஐம்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

அத்தியாயம் 55 (592) நிமி வசிஷ்ட சாப: (நிமி, வசிஷ்ட சாபங்கள்).

 

ந்ருக ராஜா பெற்ற சாபம் பற்றி தெரிந்து கொண்டாயா. மற்றொரு கதை சொல்கிறேன் கேள் என்ற ராமர், லக்ஷ்மணன் உற்சாகமாக கேட்கத் தயாராக ஆனதும், சொல்ல ஆரம்பித்தார். இக்ஷ்வாகு குலத்தில், நிமி என்ற அரசன், பெற்றோருக்கு பன்னிரண்டாவது பிள்ளை. நல்ல வீரமும், தர்மத்தில் மனமும் உள்ளவன். வைஜயந்தம் என்ற அழகிய நகரை நிர்மாணித்து, கௌதமர் என்ற குருவுடன் நகர பிரவேசம் செய்தான். தன் தந்தையை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், நீண்ட நாள் யாகம் செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டான். மனுவின் மகனான இக்ஷ்வாகுவிடம் அனுமதி பெற்று, வசிஷ்டரை யாக காரியங்களுக்கு குருவாக வரித்து, அதோடு நிற்காமல், ஆங்கிரசையும், அத்ரி முனிவரையும், ப்ருகு முனிவரையும் இதே யாகத்துக்கு அழைத்தான். வசிஷ்டர், இந்திரன் என்னை அழைக்கிறான், நான் வரும் வரை காத்திரு என்றார். காத்திருக்க விரும்பாத அரசன் கௌதமரை வரவழைத்தான். வசிஷ்டரும், இந்திரனின் யாகத்தை செய்து வைக்க கிளம்பினார். அரசனான நிமி, தன் ஊரின் அருகில், இமய மலைச் சாரலில், தீக்ஷை எடுத்துக் கொண்டு, ஐயாயிரம் ஆண்டுகள் யாகங்கள் செய்தான். இந்திர யக்ஞம் முடிந்து வசிஷ்டர் திரும்பினார். ராஜாவின் அழைப்பை நினைவில் கொண்டு யாக சாலையில், பிரதானமான தன் இடத்தை நிரப்ப வந்த பொழுது, கௌதமர் யாக வேலைகளைச் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். கோபத்தை அடக்கிக் கொண்டு அரசனை பார்த்து விட்டுப் போக அங்கேயே காத்திருந்தார். அன்று பார்த்து ராஜா நிமிக்கு ஒரே துர்க்கம். கண்களை சுழட்டிக் கொண்டு வர தூங்கி விட்டான். காத்திருந்த வசிஷ்டர் தன்னை அவமதித்ததாக எண்ணி விட்டார். காத்திருந்ததாலும், கோபமும், எரிச்சலும் தோன்ற அரசனே, நீ முதலில் செய்த தவறு, என்னை புறக்கணித்தது, இரண்டாவது தவறு என்னை காத்திருக்க வைத்தது, அசேதனமாக-உணர்வில்லாமல் போவாய் என்று சபித்து விட்டார். துர்ங்கி எழுந்த அரசன் இந்த சாபத்தைக் கேட்டு பரபரப்புடன், கோபமும் தலைக்கேற, நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் வந்ததையும், காத்திருந்ததையும் அறியாமல் இருந்த பொழுது, கோபம் கொண்டு இவ்வளவு கடுமையான சாபம் கொடுத்து விட்டீர்கள், யமதண்டம் மேலே விழுந்தது போல பயங்கரமான சாபம். ப்ரும்ம ரிஷியே, நீங்களும் என்னைப் போலவே அசேதனனாக திரியுங்கள். நான் சாபம் கொடுக்கிறேன் என்றான். இருவரும் சமமான பலம் உடையவர்கள். அதனால் இருவரது சாபமும் பலித்தது.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், நிமி வசிஷ்ட சாப: என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம். )

 

அத்தியாயம் 56 (593) மைத்ராவருணித்வ ப்ராப்தி (மைத்ரா வருணன் என்ற நிலையை அடைதல்)

 

லக்ஷ்மணன் இதைக் கேட்டு தன் சந்தேகத்தை  வெளிப் படுத்தினான். அசேதனர்கள் ஆனார்கள் என்றால், சரீரத்தை விட்டு எங்கே சென்றார்கள்? அதன் பின் சரீரம் எப்பொழுது கிடைத்தது.? ராமர் சொன்னார். இருவரும் தார்மிகர்களே. பரஸ்பரம் சாபம் கொடுத்து சரீரத்தை விட்டவர்கள். வாயு ரூபமாக ஆனார்கள். இருவரும் தவ வலிமை மிக்கவர்கள். சரீரத்தை இழந்த வசிஷ்டர், தன் தந்தையான ப்ரும்மாவிடம் சென்றார். தேவதேவனான ப்ரும்மாவை வணங்கி, பகவன், நிமி என்னை சபித்து விட்டான். அதனால் தேகம் இன்றி இருக்கிறேன். பத்மத்தில் தோன்றிய தேவா, மகா தேவா, நான் வாயுபூதனாக நிற்கிறேன். தேகம் இல்லாமல் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறேன். யாரானாலும், சரீரம் இல்லையென்றால் துன்பம் தானே. என் காரியங்கள் எல்லாம் சரீரம் இல்லாததால் தடை பட்டுக் கிடக்கின்றன. என்னிடம் கருணை காட்டுங்கள். பிதாமகரும், இதைக் கேட்டு, மித்ராவருண ரூபத்தை எடுத்துக் கொள். அயோனிஜனாக (சரீரத்திலிருந்து பிறக்காமல் தானாக உண்டாவது). என்றும் இருப்பாய். உன் தர்ம காரியங்களைச் செய்து வா. பிறகு என்னிடம் வருவாய் என்றார். வசிஷ்டரும், ப்ரும்மாவை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்று, வருணாலயம் சென்றார். அதே சமயம், மித்ரனும், காலனுக்கு வருணத்வம் அளித்தான். க்ஷிராப்தி-பாற்கடலில் உடன் தோன்றியவன் என்பதால். அதே பாற்கடலில் உதித்த ஊர்வசி என்ற அப்ஸர ஸ்திரீயும் தன் சகிகளுடன் அந்த இடம் வந்து சேர்ந்தாள். அழகிய வடிவம் கொண்ட அவளைக் கண்டு வருணன் மோகம் கொண்டான். தன்னுடன் வரும்படி அழைத்தான். அவளோ, கை கூப்பி அஞ்சலி செய்தவளாக, வினயத்துடன், சுரேஸ்வரா, உனக்கு முன் மித்ரன் என்னை வரித்து விட்டான். காமன் வசத்தில் இருந்த வருணனோ, வற்புறுத்தி அவளை பணிய வைத்தான். இதன் பின் ஊர்வசி மித்ரனிடம் சென்றாள். நான் முன்னால் அழைத்திருக்கும் பொழுது, நீ இன்னொருவனிடம் கூடி குலாவி விட்டு வருகிறாய், துஷ்ட சாரிணீ, என் கோபத்துக்கு ஆளானாய். பூலோகம் சென்று பிறப்பாய் என்றான். இதனிடையில், புதனுடைய மகன், காசிராஜன், ராஜரிஷியாக இருந்தவன், தன் தேஜஸை ஒரு கும்பத்தில் சேர்த்து வைத்தான். அவன் உனக்கு கணவனாக ஆவான்.இதன் பின் அவள் சாபத்தின் காரணமாக புரூரவஸின் மனைவியாக ஆனாள். அவனிடம் நகுஷனைப் பெற்றாள். இந்திரனை வஜ்ரத்தால் வதைத்து விட்டு, நூறு வருஷங்கள், மறைந்து வாழ்ந்த பொழுது இந்த நகுஷன், இந்திர பதவியை வகித்தான். ஊர்வசியும் தன் சாப காலம் முடியும் வரை பூலோகத்தில் வசித்து விட்டு இந்திர லோகம் சென்றாள்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், மைத்ராவருணித்வ ப்ராப்தி என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)  

 

அத்தியாயம் 57 (594) நிமி நிமிஷீகரணம் (நிமியை கண் இமையில் இருக்கச் செய்தல்)

 

அந்த அரசனும், ரிஷியும் சரீரத்தை விட்டார்களே, அவர்கள் என்ன ஆனார்கள் என்று லக்ஷ்மணன் கேட்டான். கும்பத்தில் சேர்த்து வைக்கப் பட்டிருந்த தேஜஸிலிருந்து சிறந்த பிராம்மணர்கள் தோன்றினர். முதலில் அகஸ்தியர் வந்தார். நான் உன் மகன் அல்ல என்று சொல்லி, மித்ரனை விட்டு விலகி வந்தார்.  வருணன், மித்ரன் இருவரின் மகனாக அதே கும்பத்திலிருந்து வசிஷ்டர் தோன்றினார். பிறந்த உடனேயே வளர்ந்து பெரியவரானார். இக்ஷ்வாகு வம்சத்தின் புரோகிதராக ஆனார். இந்த குலத்தின் நன்மைக்காக இன்றளவும் இருந்து வருகிறார். இது இப்படியிருக்க, நிமியின் கதையைக் கேள். தங்கள் அரசன் சரீரம் இன்றி ஆனதைக் கண்ட மற்ற ரிஷிகள், யாக தீக்ஷை எடுத்துக் கொண்டவரைக் காப்பாற்ற, அவர் சரீரத்தை பத்திரமாக வைத்து விட்டு, பெயரளவில் இருந்த அவரைக் கொண்டே யாகத்தை முடித்தனர். சரீரத்தை வாசனைப் பொருட்கள் கொண்டு பாதுகாத்தனர். யாகம் முடிந்ததும், ப்ருகு முனிவர், அரசனே, நான் திருப்தி அடைந்தேன். தேவர்களும் மகிழ்ந்தனர். உனக்கு சேதனம் கிடைக்கச் செய்கிறேன். அரசனே, என்ன வரம் வேண்டும் சொல். உன் சேதஸ்- உணர்வு எதில் சேர்த்து வைக்க விரும்புகிறாய், எனவும், நிமி, ஜீவன்களின் கண்களில் வசிக்க விரும்புகிறேன் என்றான். அப்படியே ஆகட்டும் என்று ரிஷிகள் ஆசிர்வதித்தனர். எல்லா ஜீவன்களின் கண்களுக்கு மேலும், வாயு உருவத்தில் நீ சஞ்சரிப்பாய். கண்களை சிமிட்ட நீ உதவுவாய். உன் காரணமாக ஜீவன்கள் கண்களின் மேல் பகுதியை அடிக்கடி முடித் திறக்க முடியும். இதன் பின் ரிஷிகள், நிமியின் தேகத்தை அரணிக் கட்டையைக் கொண்டு கடைந்தனர். நிமியின் புத்திரனை வெளிக் கொணர்ந்தனர். கடைந்து -மதனம், கடைதல்,  வெளிப் பட்டதால், மிதி என்றும், இயற்கையாக பிறக்காமல், பிறப்பிக்கப் பட்டதால், ஜனகன் என்றும் அழைத்தனர். இப்படி தேகம் இல்லாத அரூபமான நிமியிடம் தோன்றியதால், விதேஹன் என்றும் பெயர் பெற்றார். இந்த வம்வத்தில் பின்னால் வந்தவர்கள், மிதியின் மக்கள் என்பதால், மைதிலர்கள் என்றும், விதேஹ மக்கள் என்பதால், வைதேஹ என்றும் அழைக்கப் பட்டனர். இப்படியாக ரிஷி சாபத்திலிருந்து அரசனும், அரசரின் சாபத்திலிருந்து ரிஷியும் விடுபட்டனர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், நிமி நிமிஷீகரணம் என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)  

 

அத்தியாயம் 58 (595) யயாதி சாப: (யயாதியின் சாபம்)

 

இதைக் கேட்டு லக்ஷ்மணன், ராஜ சார்துர்லா, நிமி, வசிஷ்டரின் கதையை இன்று தான் தெரிந்து கொன்டேன். நிமி க்ஷத்திரியன். சூரன் தவிர, தீக்ஷையில் இருந்தவன். இதன் பின் இருவரும் எப்படி இருந்தனர்? பழையபடி நன்பர்களாக ஆனார்களா? சர்வ சாஸ்திரங்களையும் அறிந்தவன் உனக்குத் தெரியாததா என்பது போல அவனைப் பார்த்த ராமர் தொடர்ந்தார். மனிதர்களிடம் பொறுமை எப்பொழுதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. ரோஷம் பொறுக்க முடியாதது. அதையும் யயாதி எப்படி பொறுத்தான் என்பதைக் கேள். நகுஷனுடைய மகன் யயாதி அரசனானான். தன் ராஜ்யத்தை நன்றாக பரி பாலித்து வந்தான். அவனுக்கு இரண்டு மனைவியர். ஓரு மனைவி, நகுஷனே தேர்ந்தெடுத்த வ்ருஷபர்வனின் மகள், ஸர்மிஷ்டா. மற்றவள், அசுரகுல புரோகிதரான உஸனஸ், என்ற சுக்ராச்சாரியார் மகள் தேவயானை. தேவயானை யயாதிக்கு அனுசரணையாக இருக்கவில்லை. அவளிடம் யயாதிக்கு அன்போ, நேசமோ தோன்றவில்லை. அவளிடம், யது என்ற மகனும், ஸர்மிஷ்டாவிடம், புரு என்ற மகனும் பிறந்தனர். தாயைப் போல குணங்களுடைய புரு அரசனுக்கு பிரியமானவனாக வளர்ந்தான். இதனால் வருத்தமடைந்த யது தாயிடம் முறையிட்டான். அரிய செயல்களைச் செய்த ப்ருகு முனிவரின், பார்க்கவ குலத்தில் வந்தவள் நீ. மனதினுள் இந்த அவமானத்தை சகித்துக் கொண்டு வேதனையில் வாடுகிறாய். நாம் இருவரும் நெருப்பில் குதிப்போம், அந்த தைத்ய (அசுரராஜ) குமாரியுடன், அரசன் வெகு காலம் ரமித்துக் கொண்டு இருக்கட்டும். அம்மா, நீ பொறுத்துக் கொண்டு இப்படியே வாழ்வாய். ஆனால் எனக்கு அனுமதி கொடு. உன் போல் பொறுமையாக இருக்க என்னால் முடியாது. மகனின் முகம் வாட காண சகியாத தேவயானி தன் தந்தையை மனதில் நினைத்தாள். மகள் நினைத்த மாத்திரத்தில், பார்க்கவ வம்சத்தினரான சுக்ராச்சாரியார், வந்து சேர்ந்தார். மண வாழ்க்கையில் சந்தோஷமின்றி, தனக்குரிய ஸ்தானத்தை இழந்தவளாக கோபமும், தாபமுமாக இருந்த தேவயானியை விசாரித்தார். என்ன இது? என்ற தந்தையிடம் திரும்பத் திரும்ப முறையிட்டாள். அவர் சமாதானம் செய்தது எதுவும் அவள் காதில் விழவேயில்லை. முனி சத்தமா, சிறந்த முனிவரே, நான் அக்னியில் குதித்தோ, நீரில் மூழ்கியோ உயிரை விடுவேன். இனியும் உயிர் வாழ மாட்டேன். தந்தையே, நான் எப்படி உதாசீனப் படுத்தப் படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. இதனால் நான் படும் வேதனையும் சொல்லி முடியாது. மரத்தை அலட்சியம் செய்தால், அதை அண்டி வாழும் ஜீவன்களும் கஷ்டப்படும். ராஜரிஷி யயாதி என்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பல விதத்திலும் அலட்சியம் செய்கிறார். அவள் சொல்லச் சொல்ல முனிவர் கோபம் எல்லை கடந்தது. யயாதியைக் காணச் சென்றார். என்னை அலட்சியம் செய்கிறாயா. முதுமை அடைந்து, உடல் தளர்ந்து சிதிலமாகப் போவாய் என்று சபித்து விட்டார். தன் மகளை சமாதானம் செய்து விட்டு, மருமகனுக்கு சாபமும் கொடுத்து விட்டு தன் இருப்பிடம் சென்று விட்டார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், யயாதி சாப:  என்ற ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 59 (596) புரூ ராஜ்யாபிஷேக: (புருவின் ராஜ்யாபிஷேகம். )

 

உசனஸ் என்ற சுக்ராச்சாரியார், மகா கோபத்துடன் இருப்பதை அறிந்த அதே சமயம், தன் உடல் முதுமை வந்து தளர்ந்து போவதை யயாதி உணர்ந்தான். யதுவிடம் சொன்னான். யதோ, நீ தர்மம் அறிந்தவன் தானே, என் முதுமையை வாங்கிக் கொள். நான் இன்னமும் போகங்களை அனுபவிக்கவே ஆசைப் படுகிறேன். எனக்கு திருப்தியாகும் வரை விஷய சுகங்களை அனுபவித்து விட்டு, இந்த முதுமையை திரும்ப வாங்கிக் கொள்கிறேன். யது பதில் சொன்னான். உன் பிரியமான பிள்ளை புரு தானே. அவன் வாங்கிக் கொள்ளட்டும் இந்த கிழட்டுத் தன்மையை. அரசனே என்னை உன் அருகிலும் இருக்க விடவில்லை. பொருள் விஷயத்திலும் தள்ளியே வைத்திருந்தாய்.  உன்னுடன் அமர்ந்து போஜனம் செய்தானே, அவனே இந்த முதுமையை வாங்கிக் கொள்ளட்டும்.  அரசனும் புருவிடம் சொன்னான். மகனே. இந்த முதுமையை வாங்கிக் கொள். நான் இன்னமும் உலகில் பல சுகங்களை அனுபவிக்கவேயில்லை எனவும், கை கூப்பி தன்யனானேன், நான் பாக்யம் செய்தவனானேன். தங்கள் அனுக்ரஹம் கிடைக்கப் பெற்றேன். தங்கள் கட்டளைப் படி நடக்க கடமைப் பட்டவன் நான். இதைக் கேட்டு மகிழ்ந்து யயாதி தன் முதுமையை புருவுக்கு கொடுத்து விட்டான். அந்த அரசன் திரும்ப இளமையைப் பெற்று, பல ஆயிரக் கணக்கான யாகங்கள் செய்து பூமியை ஆண்டான். வெகு காலம் சென்ற பின் ராஜா புருவிடம் சொன்னான். மகனே உன்னிடம் அடகு வைத்திருந்த என் முதுமையை திரும்பக் கொடு. உன் கஷ்டம் தீரட்டும். நரையும், திரையுமான முதுமையை நான் வாங்கிக் கொள்கிறேன். என் வேண்டுகோளை கட்டளையாக ஏற்று நிறைவேற்றியதால், நான் மிகத் திருப்தியடைந்தேன். உனக்கே ராஜ்யாபிஷேகம் செய்து வைக்கிறேன் என்றவர், தேவயானியின் மகனைப் பார்த்து, ராக்ஷஸன் நீ. புத்ர ரூபத்தில் வந்த சத்ரு. பிரஜைகளிடம் உனக்கு எந்த செல்வாக்கும் இல்லாமல் போகட்டும். தந்தையான என்னை அவமதித்து விட்டாய். யாதுதானர்கள் என்ற பெயருடன் இரவில் சஞ்சரிக்கும் கூட்டத்தை மக்களாக பெறுவாய். சோம வம்சத்தில் நீயோ உன் வம்சத்தில் வருபவர்களோ இருக்கப் போவதில்லை. உன்னைப் போலவே உன் மக்களும் வினயமின்றி இருப்பார்கள். ராஜா யயாதி, புருவை ராஜ்யாபிஷேகம் செய்து வைத்து விட்டு, தான் வனம் சென்றான். காலம் வரவும், உடலைத் தியாகம் செய்து ஸ்வர்க்கம் சென்றான். காசி ராஜ்யத்தை புரு நல்ல முறையில் பாலித்து வந்தான். யது யாதுதானான் என்ற பெயருடன் இரவில் திரியும் மக்களைப் பெற்றான். ராஜ வம்சமே அவனை புறக்கணிக்க க்ரௌஞ்ச வனத்தின் ஒரு குகையில் வசித்தான். இது தான், யயாதி சுக்ராச்சாரியாரின் சாபத்திலிருந்து விடு பட்டதும், நிமி இமையில் அமர்ந்து சாப விமோசனம் பெற்றதும், ந்ருக ராஜன் தன் தோஷத்திலிருந்து விடு பட்டதுமான கதை. பேசிக் கொண்டிருக்கையிலேயே, கீழ் வானம் வெளுக்கவும், அருண கிரணங்கள், சிவந்து தெரியவும் ஆரம்பித்தது. சிவப்பு ஆடை அணிந்தது போல வானம் பிரகாஸமாகத் தெரிந்தது.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், புரூ ராஜ்யாபிஷேக: என்ற ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)  

 

 

அத்தியாயம் 60 (597) பா4ர்க்கவ ச்யவனாத்3யாக3மனம் (பார்க்கவ, ச்யவன முனிவர்கள் வருகை)

 

ராம,லக்ஷ்மணர்கள் இப்படி பேசிக் கொண்டே இரவைக் கழித்தனர். வஸந்த கால இரவு, அதிக வெப்பமும் இல்லை, குளிர்ச்சியும் இல்லாமல் சுகமாக இருந்தது. தினசரி செய்ய வேண்டிய தன் காரியங்களை முடித்துக் கொண்டு ராமர் சபைக்குச் சென்றார். சுமந்திரர் வந்து, ராஜன், பல தபஸ்விகள் வந்திருக்கிறார்கள். ஏதோ அடி பட்டவர்கள் போலத் தெரிகிறார்கள், பா4ர்க்கவரும், ச்யவனரும் அவர்களை அழைத்து வந்திருக்கின்றனர். உடனே உங்களை பார்க்க வேண்டும் என்று அவசரப் படுத்துகிறார்கள். யமுனா நதிக் கரையில் வசிப்பவர்களாம் என்றான். ராமர் அனுமதி கொடுக்கவும் நூற்றுக்கும் மேலான அந்த தபஸ்விகளை அழைத்து வர சுமந்திரார் சென்றார். பூர்ண கும்பம் வைத்து வரவேற்று, தவம் செய்து தேஜஸ் நிரம்பிய அவர்களை மரியாதையுடன், உள்ளே அழைத்து வந்து, தீர்த்தம் கொடுத்து, பழங்கள், காய் வகைகள் கொடுத்து, உபசரித்து, ராமரிடம் தரிசனம் செய்ய அழைத்து வந்தார். ராமரும், அவர்களுக்கு உண்ணவும், பருகவும் கொடுத்தாயிற்றா என்று விசாரித்துக் கொண்டு, அவர்களிடம் ஆசனங்க ளில் அமரச் சொன்னார். என்ன காரியம்? எதற்காக இவ்வளவு துர்ரம் வந்தீர்கள் என்று வினவினார். ஆக்ஞையிடுங்கள், மகரிஷிகள் தேவையை பூர்த்தி செய்வது என் கடமை.  எதுவானாலும் கேளுங்கள் என்று பவ்யமாக சொன்னார். இதைக் கேட்டு சாது, சாது என்று சொன்ன முனிவர்கள், நாங்கள் யமுனா நதிக்கரையில் உக்ரமாக தவம் செய்பவர்கள். நரஸ்ரேஷ்டனே, நீ இப்பொழுது சொன்னது உன் குலப் பெருமைக்கும் உனக்கும் தகுதியானதே. சாதாரணமாக அரசர்கள், முதலில் காரியத்தைக் கேட்டு விட்டுத் தான் பதில் சொல்வார்கள். நீயோ, எங்களிடம் செய்வதாக முதலில்    வாக்களித்து விட்டு பின் என்ன காரியம் என்று வினவுகிறாய். அதனால், நீதான் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மகத்தான ஆபத்திலிருந்து காப்பாற்றக் கூடியவன் என்ற நம்பிக்கை வந்து விட்டது என்றனர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், பா4ர்க்கவ ச்யவனாத்3யாக3மனம் என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)  

 

அத்தியாயம் 61 (598) லவணத்ராண ப்ரார்த்தனா (லவணனிடமிருந்து காப்பாற்ற வேண்டுதல்)

 

ரிஷிகள் பதட்டத்துடன் சொன்னதைக் கேட்டு காகுத்ஸன் பதில் சொன்னான். முனிவர்களே, என்ன காரணம்? ஏன் பயப்படுகிறீர்கள்? பார்க்கவர் பதில் சொன்னார். நரேஸ்வரா, இந்த தேசத்துக்கும் எங்களுக்கும் வந்துள்ள ஆபத்து பற்றிச் சொல்கிறோம் கேள். முன்பு க்ருத யுகத்தில், லோலன் என்பவன் மகன், மது என்ற மகாசுரன் இருந்தான். அவன் தானும் வேத சாஸ்திரங்கள் கற்றுத் தேர்ந்தான், கற்றறிந்த மற்றவர்களுக்கு அடைக்கலமும் தந்தான். நல்ல புத்திசாலி. சிறந்த நடத்தையும், தன் கொள்கையில் பிடிப்பும் உள்ளவன். தேவர்களும் அவனிடம் பிரியமாக இருந்தனர். பல ஆயிர வருஷங்கள் ருத்ரனைக் குறித்து தவம் செய்தான். ருத்ரனும் மகிழ்ந்து வரம் தந்தார். அவன் தவத்தை மெச்சி உயர்ந்த வரங்களைத் தந்தார். தன் சூலத்தை கொடுத்தார். என்னை மகிழ்விக்க பெரும் தவம் செய்தாய். அதனால் தான் இந்த ஆயதம் தருகிறேன். இது உன் கையில் உள்ளவரை யாரும் உன்னை எதிர்த்து நிற்க முடியாது. சுரர்களோ, அசுரர்களோ உனக்கு அழிவைத் தர முடியாது. அப்படி யார் எதிர்த்தாலும், இந்த ஆயுதம், அவர்களை பஸ்மமாக்கி விட்டு உன் கையில் வந்து விடும். இந்த வரம் ருத்ரன் கொடுத்த பின்பும் மது பணிவாக வேண்டினான். பகவன், இந்த சூலம் என் குலத்தில் பரம்பரையாக இருந்து வர வேண்டும். மது சொன்னதைக் கேட்டு, ருத்ரன், அது எப்படி முடியும், ஆனாலும் உன் மகன் ஒருவனுக்கு இது கிடைக்கச் செய்கிறேன். உன் மகன் கையில் இந்த சூலம் இருக்கும் வரை அவனை யாரும் கொல்ல முடியாது. இது போல வரம் பெற்ற மது, தேவ தேவனின் கையிலிருந்து சூலத்தை வாங்கிக் கொண்டான். தன் வீடு சென்றான். அவன் மனைவி கும்பீனஸி என்பவள், விஸ்வவசு-அனலா என்ற தம்பதிக்குப் பிறந்தவள். அவளிடம் பிறந்த மகன் லவணன் கொடியவன். பிறந்ததிலிருந்து துஷ்டன். அவன் துர்குணத்தைப் பார்த்து மது வருந்தினாலும் எதுவும் சொல்லவில்லை. உலகைத் துறந்து வருணாலயம் சென்றான். சூலத்தை லவணனிடம் கொடுத்து அதன் மகிமையையும் சொன்னான். சூலத்தின் விசேஷம் தெரிந்தவுடன் துர்புத்தியாதலால் உலகில் மற்றவரைத் துன்புறுத்த தொடங்கினான். அதுவும் தபஸ்விகளை அதிகமாக வாட்டுகிறான். இவன் கையில் சூலம் கிடைத்தது எங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தாக ஆகி விட்டது. காகுத்ஸா, நீ பல ரிஷிகளுக்கு அபயம் அளித்து காப்பாற்றி இருக்கிறாய். அதனால் உன்னைத் தேடி வந்தோம். காப்பாற்று, உன்னால் தான் லவணனிடமிருந்து எங்களை விடுவிக்க முடியும்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், லவணத்ரண ப்ரார்த்தனா என்ற அறுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

அத்தியாயம் 62 (599) சத்ருக்ன பிரார்த்தனா. (சத்ருக்னனின் வேண்டுதல்)

 

இப்படி ரிஷிகள் சொன்னதைக் கேட்டு ராமர் வினவினார். அந்த லவணன் எப்படி இருப்பான். எங்கு இருக்கிறான்? அவன் ஆகாரம் என்ன? நடவடிக்கைகள் என்ன? எல்லா ரிஷிகளும் ஒரே குரலில் லவணன், குழந்தையாயிருந்தது முதல், வளர்ந்து பெரியவனான வரை விவரித்தனர். ஆகாரமா? உயிருள்ள ஜீவன் எல்லாமே அவனுக்கு ஆகாரம் தான். தவம் செய்யும் முனிவர்கள் தான் பிடித்தமான பக்ஷணம். கொடுங்கோலன். துஷ்டன். மது வனத்தில் வசிக்கிறான். சிங்கம், புலி போன்ற மிருகங்களோடு பிராம்மணர்களையும் கொன்று குவிப்பான். இது தான் பொழுது போக்கு. மனிதர்களையே தினசரி போஜனமாக வைத்துக் கொண்டு விட்டான். கொல்லுவது என்று ஆரம்பித்து விட்டால், இடை விடாது கை சளைக்கும் வரை கொன்று குவிப்பான். காலனே தான். உடனே ராமர், கவலைப் படாதீர்கள், நான் கவனித்துக் கொள்ளுகிறேன், வதம் செய்கிறேன் என்றார். ரிஷிகளுக்கு அபயம்      அளித்து விட்டு தன் சகோதரர்களுடன் ஆலோசனை நடத்தினார். யார் லவணனைக் கொல்ல தயாராக இருக்கிறீர்கள். யாரை இந்த செயலில் ஈடுபடச் செய்யலாம்? பரதா, சத்ருக்னா, என்று கேட்டார். பரதனும் முன் வந்தான். சத்ருக்னனும் வந்தான். பரதனைப் பார்த்து, நீங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டீர்கள். நந்தி கிராமத்தில், அண்ணலின் வரவை எதிர்பார்த்தபடி, வசதியில்லாத படுக்கையில் படுத்து, ராமரைப் போலவே ஜடா முடி தரித்து, பழம் காய் கறிகளையே உண்டு விரதம் காத்தீர்கள். தாங்கள் திரும்பவும் கஷ்டப்பட வேண்டாம். என்னை அனுப்புவதில் என்ன சிரமம்? இதைக் கேட்டு காகுத்ஸன், சரி அப்படியே ஆகட்டும், மதுவின் சுபமான நகரத்தில் உன்னை அபிஷேகம் செய்து வைக்கிறேன் என்றார். தேவையானால், பரதனையும் கூட்டிக் கொள். நீயே கற்றுத் தேர்ந்தவன். சூரன். ஆற்றல் மிகுந்தவன். அரச குலத்தில் பிறந்தவன். சத்ருவை நாசம் செய்து குலப் பெருமையை நிலை நிறுத்து. அரச குலத்தில் பிறந்தவன் இப்படிச் செய்து தன் கடமையை செய்யாதவன் நரகத்துக்குத் தான் போவான். பாப புத்தியுள்ள லவணனை வதம் செய்ய நீ ஏற்றவனே. இனி எதுவும் யோசிக்க வேண்டாம். என் கட்டளை என்று கிளம்பு. லவணாசுரனை வதைத்து அவன் ராஜ்யத்திற்கு நீ அதிபதியாவாய் என்றார். வெற்றியோடு திரும்பி வா. வந்த பின் வசிஷ்டர் முதலான பெரியவர்களைக் கொண்டு முறைப்படி அபிஷேகம் செய்து வைக்கிறேன்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சத்ருக்ன பிரார்த்தனா. என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

அத்தியாயம் 63 (600) லவண வதோபாய கதனம். (லவணனை வதம் செய்ய வழி சொல்லுதல்)

 

இதைக் கேட்டு சத்ருக்னன் வெட்கம் அடைந்தான். காகுத்ஸா, நான் ராஜ்யத்தை விரும்பியதாக பொருள் கொள்ள வேண்டாம். நான், அதர்மமாக, பெரியவர்கள் இருக்கும் பொழுது ராஜ்யத்தை ஏற்றுக் கொள்வேனா? உன் கட்டளையை மேற்கொண்டு கண்டிப்பாக செய்வேன். யாராக இருந்தாலும், ராஜ சாஸனம் நிறைவேற்ற வேண்டிய ஒன்று என்பதை அறிவேன். இளையவன் சபையில் பேசக் கூடாது என்பதை வேத சாஸ்திரங்களில் படித்து தெரிந்து கொண்டிருக்கிறேன். பலரும் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். தாங்களே சொல்லி பல முறை கேட்டிருக்கிறேன். நான் பேசியது தவறு தான். நிச்சயம் அந்த லவணனால் கொல்லப் படுவேன். என் தவற்றுக்கு அது தான் தண்டனை. மூத்தவன் இருக்கையில் சபையில் பேசிய தவறு – அதற்கு தண்டனை நீங்களே கொடுங்கள். வேறு யாரும் எனக்கு தண்டனை கொடுப்பதை நான் பெற மாட்டேன். இவ்வாறு சத்ருக்னன் சொல்லவும் ராமர், பரதன், லக்ஷ்மணனைப் பார்த்து சொன்னார். அபிஷேக சாமான்களை கொண்டு வாருங்கள். இந்த ராகவனை, புருஷ வ்யாக்ரனை முடி மூசூட்டி அபிஷேகம் செய்து வைக்கிறேன். புரோகிதர்களையும், நிகமம் அறிந்த ரிஷிகளையும், மந்திரிகளையும் என் கட்டளை என்று சொல்லி அழைத்து வாருங்கள். அப்படியே என்று சொல்லி அபிஷேகத்திற்கான பொருட்களை சேகரித்துக் கொண்டு, மந்திரி வர்க்கங்களையும் அழைத்துக் கொண்டு அவ்விருவரும் வந்து சேர்ந்தனர். இதன் பின் சத்ருக்னனுக்கு முடி சூட்டும் வைபவம் நடந்தது. முடி சூட்டப் பெற்ற சத்ருக்னன் ஆதித்யன் போல பிரகாசித்தான். மருத் கணங்கள் சூழ, முன்பு இந்திரன், ஸ்கந்தனுக்கு அபிஷேகம் செய்து வைத்தது போல இருந்தது. ஊர் ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தனர். வேதம் அறிந்த பலரும் மகிழ்ந்து வாழ்த்தினர். கௌசல்யை, சுமித்ரா, கைகேயி மூவரும் மங்களாசாஸனம் செய்தனர். ராஜ பவனத்தில் இருந்த மற்றவர்களும் கலந்து கொண்டனர். யமுனா தீரத்திலிருந்து வந்திருந்த ரிஷிகளும், கலந்து கொண்டனர். லவணன் இறந்தான் என்று நம்பிக்கை கொண்டனர். முடி சூட்டப் பெற்ற சத்ருக்னனை அணைத்து ராமர் மதுரமாகச் சொன்னார். இதோ விசேஷ சக்தியடைய சரங்கள். திவ்யமானவை. எதிரிகளை அழிக்க வல்லவை. இதைக் கொண்டு லவணனை வதைப்பாய். இதை ஸ்வயம்பூவான ப்ரும்மா, பகவான் பாற்கடலில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஸ்ருஷ்டி செய்தார். யாரும் கவனிக்கவில்லை. யார் கண்ணுக்கும் இது  புலப்படாது. அதனாலேயே அமோகம் எனப்படும். துராத்மாக்களான மது கைடபர்களை வதைக்க கோபத்துடன் தயார் செய்யப் பட்டது. இந்த அரக்கர்கள் மூவுலகையும் தாங்களே ஸ்ருஷ்டி செய்வதாக கிளம்பினர். உலகை ஆட்டி வைத்தனர். இந்த ஆயுதத்தால் தான் அவர்களை வதைத்து பின் உலகங்களை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்தார். இது உலகில் உள்ள ஜீவன்களுக்கு பெரும் பயத்தைக் கொடுக்கும் என்பதால் நான் ராவண வதத்தில் இதை உபயோகிக்கவில்லை. மதுவின் கையில் த்ரயம்பகன் கொடுத்த உயர்ந்த சூலம் இருப்பதால் அதற்கு சமமான ஆயுதம் உனக்கும் வேண்டும் என்பதால் இதை உனக்குத் தருகிறேன். சூலத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தபடி மூவுலகையும் பயமுறுத்தி வருகிறான். நினைத்தபடி கொன்று குவித்து வருகிறான். யாராவது யுத்தம் செய்ய வந்தால் தான், எதிரியை பஸ்மமாக ஆக்கக் கூடிய இந்த ஆயுதத்தை எடுப்பான். அதனால் அவன் கோட்டை வாயிலில் நில். அவன் கையில் ஆயுதம் இல்லாமல் வரும் பொழுது, ஊருக்குள் நுழையும் முன் யுத்தத்துக்கு அழை. இப்படிச் செய்தால் தான் அவனை வெல்ல முடியும். மற்றபடி அவனை கொல்ல முடியாது. சிதிகண்டனான சிவபெருமான் சூலம் சக்தி வாய்ந்தது. தவிர அவரே தந்துள்ள வரம். அதையும் மீற முடியாது.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், லவண வதோபாய கத2னம் என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 64 (601) சத்ருக்ன ப்ரஸ்தானம். (சத்ருக்னன் கிளம்புதல்)

இவ்வளவும் சொல்லி, அவனுக்கு தைரியம் ஊட்டி, உயர்வாக பேசி அவன் மனோ பலத்தைக் கூட்டி, மேலும் சொன்னார். இதோ ஆயிரம் உயர் ஜாதி குதிரைகள். இரண்டாயிரம் ரதங்கள். நூற்றுக் கணக்கான யானைகள். நமது கடை வீதிகளையும் ராஜ மார்க்கங்களையும் அலங்கரிக்கப் பயன் பட்டவை, சத்ருக்னனுடன் செல்லட்டும். நட நர்த்தகர்களும் உடன் செல்லுங்கள். போதுமான அளவு தங்கம் வெள்ளி எடுத்துக் கொண்டு போ. இந்த பெரிய படையை, உன் பேச்சினாலும் பொருள் தந்தும், ரஞ்சகமாக வைத்திரு. அவர்கள் உன்னிடம் பிரியமாக இருக்கும்படி நடந்து கொள். தங்கள் மனைவி மக்களை பிரிந்து வந்த துக்கத்தை கூட உணராதபடி வைத்துக் கொள். தன் கீழ் உள்ளவர்களிடம் அன்புடன் நடந்து கொள்பவன் தான் அவர்களிடம் வேலை வாங்க முடியும். அதனால் உன் பெரும் படையைச் சார்ந்த வீரர்களை உற்சாகமாக வைத்திரு. நீ ஒருவன் மட்டுமே வில்லை ஏந்தி மதுவனம் செல். நீ யுத்தம் செய்ய வந்திருப்பதாக சந்தேகமே வராது. லவணன் அறியாதபடி கோட்டை முற்றுகையை செய். அவன் ஆகாரம் தேடி  வெளியில் சென்று திரும்பும் பொழுது தாக்கு. வேறு வழியில்லை சத்ருக்னா. எதிரில் நின்று போர் புரிபவர்கள் அழிவது உறுதி. வெய்யில் காலம் முடிந்து மழைக் காலம் ஆரம்பிக்கும் சமயம் துர்மதியான லவணனை வதம் செய். அதுதான் அவனுக்கு சரியான நேரம். உன் படை வீரர்கள் முன்னால் மகரிஷிகளை வைத்துக் கொண்டு முன்னேறட்டும். வேணில் காலத்தில் நீர் குறைந்து கங்கைக் கரையில் மணல் நிறைந்து இருக்கும். அங்கு உன் சேனையை நிறுத்தி வை. சாதாரண போர் வீரன் போல நீ மட்டும் முன்னால் வில்லை ஏந்தியவனாகச் செல். யாரும் சந்தேகிக்க முடியாதபடி. இவ்வாறு ராமர் உபதேசித்ததைக் கேட்டு புரிந்து கொண்ட சத்ருக்னன், தன் படையின் முக்கிய தலைவர்களை அழைத்து விவரங்கள் சொல்லி, யாருக்கும் எந்த தொந்தரவும் தராதபடி, தங்கி இருந்து நீங்கள் செயல் பட வேண்டும். அந்த பெரிய படையை பகுதிகளாக பிரித்து தனித் தனியே தங்க ஏற்பாடுகள் செய்து, தேவையான வசதிகளும் செய்து கொடுத்து விட்டு, தாய் மார்கள் மூவரையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டான். ராமரை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்றான். பரத, லக்ஷ்மணர்களை கை கூப்பி வணங்கி விடை பெற்றான். புரோகிதரான வசிஷ்டரையும் வணங்கி ஆசி பெற்றான். பின் தன் படையுடன் போருக்குப் புறப்பட்டான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சத்ருக்ன ப்ரஸ்தானம். என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக