பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 65 – 77

பிப்ரவரி 26, 2014

அத்தியாயம் 65 (602) சௌதாஸன் கதை

 

ஒரு மாத காலம் இந்த ஏற்பாடுகள் செய்வதில் கழிந்தது. அதுவரை வழியில் கிடைத்த இடத்தில் தங்கியிருந்து, சத்ருக்னன் தான் தனியாகப் புறப்பட்டான். வால்மீகி ஆசிரமத்தில் இரண்டு இரவுகள் தங்கியிருந்து, அவரை வணங்கி ஆசிகள் பெற்றான். பணிவாக அவரிடம் வேண்டினான். ப4கவன், என் குருவான ராமனின் காரியமாக வந்தேன். நாளைக் காலை வருணனின் திசையான மேற்கு நோக்கி பிரயாணம் செய்ய நினைக்கிறேன். அது வரை இங்கு தங்க அனுமதி வேண்டும் என்றான். இதைக் கேட்டு சிரித்த முனிவர், அரச குமாரனே, உனக்கு ஸ்வாகதம், தாராளமாக இரு. இந்த ஆசிரமம், ரகு குலத்தில் வந்தவர்களுக்கு சொந்த வீடு போல. உரிமையோடு தங்கலாம். இதோ பாத்யம். ஆசனத்தில் அமர்ந்து கொள். அர்க்யம் எடுத்துக் கொள். பழங்கள், காய்கள் தான் உணவு. இவைகளை எடுத்துக் கொள் என்றார். காகுத்ஸனான சத்ருக்னனும், அந்த உணவை சாப்பிட்டு திருப்தி ஆனான். இது என்ன? கிழக்கு திசையில் இருக்கும் ஆசிரமம் யாருடையது? வால்மீகி சொன்னார். சத்ருக்னா, உன் முன்னோர்களில், சுதாஸன் என்ற ஒருவர் இருந்தார். அந்த அரசனின் மகன் வீர்யவானான வீரசஹன் என்பவன். குழந்தையாக இருந்த பொழுதே வேட்டையாட வந்தான். இரண்டு ராக்ஷஸர்கள், சார்தூலம் போல உருவம் எடுத்துக் கொண்டு வந்து ஜீவன்களைத் துன்புறுத்திக் கொண்டும், வனத்து மிருகங்களை ஏராளமாக கொன்று குவித்துக் கொண்டிருப்பதையும் கண்டான். அப்படியும் திருப்தியடையவில்லை போலும். வனத்து மிருகங்கள் ஒன்று கூட பாக்கியில்லை. இதையறிந்து ராக்ஷஸர்களுள் ஒருவனை அம்பினால் அடித்துக் கொன்றான். ராக்ஷஸன் அழிந்தான் என்று நினைத்தால், மற்றவன் கண்ணில் பட்டான். அவன் சௌதாஸனைப் பார்த்து, என் ஸகாவை ஒரு அபராதமும் செய்யாத போது கொன்றாயே, அதனால் உனக்கும் நான் அதே போல தண்டனை தருகிறேன் என்று சொல்லி மறைந்து விட்டது. காலம் சென்றது. ராஜாவான குமாரன் யாகம் செய்தான். ஆசிரமத்தில் யாக பசுவை வசிஷ்டர் பாதுகாத்து வந்தார். தேவ யக்ஞம் போல அந்த யாகம் பல ஆண்டுகள் விமரிசையாக நடந்தது. யாக முடிவில், இந்த ராக்ஷஸன், பழைய விரோதத்தை மனதில் வைத்தவனாக, வசிஷ்டர் போல உருவம் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். யாகம் தான் முடிந்து விட்டதே, உணவு வேண்டும் என்று அவன் சொன்னதை, சற்றும் சந்தேகம் இல்லாமல் அரசன் அனுமதித்து விட்டான். ஆனால் சமையல்காரர் கவலை கொண்டார். உடனே அந்த ராக்ஷஸன் தன் உருவை சமையல்காரரைப் போல ஆக்கிக் கொண்டான். அரசனிடம் மாமிசம் கலந்த உணவை பரிவோடு கொடுத்தான். ஹவிஸ் கலந்த உணவு என்று அதை எடுத்துக் கொண்டு, தானே பத்னியான மதயந்தியுடன் போய் வசிஷ்டருக்கும் அரசன் உபசரித்தான்.  அவரிடம் கொடுத்த உடனேயே வசிஷ்டர் தெரிந்து கொண்டு விட்டார். மிகக் கோபத்துடன் அரசனிடம், இது என்ன தைரியம்? நர மாமிசம் கலந்த உணவை எப்படி எனக்குத் தர எண்ணினாய். இன்றிலிருந்து இதுவே உன் உணவாகட்டும், என்று சபித்து விட்டார். இதைக் கேட்டு அரசனும், பதில் சாபம் கொடுக்க கையில் ஜலத்தை எடுத்தான். உடனிருந்த மனைவி, மதயந்தி தடுத்து, வசிஷ்டர் நமது குலகுரு, அவரை எப்படி நீங்கள் சபிக்கலாம், என்றாள். அரசனும் புரிந்து கொண்டு கையில் எடுத்த ஜலத்தை தன் காலில் விட்டுக் கொன்டான். அந்த சாப ஜலம் அவன் பாதங்களைச் சுருக்கி விட்டது. அதிலிருந்து கல்மாஷ பாதன் என்று அழைக்கப் பட்டான். பணிவுடன் வசிஷ்டரை வணங்கி நடந்ததைச் சொன்னான். ராக்ஷஸன் தானே வந்து அன்னம் கேட்டதையும், ஹவிஸ் கலந்த உணவு என்று சமையல்காரர் சொன்னதையும் சொன்னான். வசிஷ்டர் புரிந்து கொண்டார். இது அந்த ராக்ஷஸனின் வேலை. அரசனே, இதில் உன் குற்றம் எதுவும் இல்லை. நான் கோபம் கொண்டு உன்னை சபித்து விட்டேனே அதை மாற்ற முடியாது ஆனால் மற்றொரு வரம் தருகிறேன். பன்னிரண்டு ஆன்டு காலத்தில் சாபம் விலகும். கடந்த காலம் உன்னை வருத்தாமல் இருக்கவும் வரம் தருகிறேன். அந்த அரசன் சாபத்தை அனுபவித்து சாபம் தீர்ந்து திரும்ப ராஜ்யத்தை அடைந்து ஆண்டான். அந்த கல்மாஷ பாதர் ஆசிரமம் தான் அருகில் இருக்கிறது. ஏன் கேட்கிறாய்? என்றார். சத்ருக்னனும் கதையைக் கேட்டபின் அவருடன் பர்ணசாலையில் நுழைந்தான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சௌதாஸன் கதை என்ற அறுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

 

 

 

அத்தியாயம் 66 (603) குச லவ ஜனனம் (குச லவ பிறப்பு)

 

சத்ருக்னன் பர்ணசாலையில் வசித்த அன்று இரவு சீதையும் இரு புதல்வர்களைப் பெற்றெடுத்தாள். நடு இரவில், முனி குமாரர்கள் வந்து முனிவரிடம் இந்த விவரத்தைச் சொன்னார்கள். ப4கவன், ராமபத்னிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன. தாங்கள் வந்து குழந்தைகளுக்கு ரக்ஷைகள் செய்யுங்கள் என்றனர். பூ4த விநாசினீ என்ற ரக்ஷையைக் கட்டுங்கள் என்றனர். முனிவரும் விரைந்து சென்றார். இளம் சந்திரன் போல, பிரகாசமாக, தேவ குமாரர்கள் போல அழகாக இருந்த சிசுக்களைக் கண்டார். குச முஷ்டி, லவம் என்ற மூலிகைகளைக் கொண்டு காப்புகள் செய்தார். முதலில் பிறந்தவன் குசன் என்ற பெயருடன் மந்திர சம்ஸ்காரங்கள் செய்யப் பெற்றான். இளையவன் லவன் என்ற பெயருடன். வயது முதிர்ந்த மூதாட்டிகள் குழந்தைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்தனர். காப்பாக பயன்பட்ட மூலிகைகளே பெயராக அமைந்தது. குச லவர்கள் என்றே பிரசித்தி பெற்றனர். இந்த பெயருடன் அமோகமாக இருப்பார்கள் என்று முனிவர் வாழ்த்தினார். மூதாட்டிகள், காப்புக் கயிற்றை முனிவரிடமிருந்து வாங்கி குழந்தைகள் கையில் கட்டி விட்டனர். மேலும் கோத்ர பெயரைச் சொல்லி தாலாட்டு பாடினர். ராம, சீதா புதல்வர்கள் பிறப்பைக் கொண்டாடினர். அர்த்த ராத்திரியில், என்ன கோலாகலம் என்று சத்ருக்னன் வியந்தான். பர்ணசாலைக்குள் சென்று விசாரித்தான். யாரோ, ஒரு தாய்க்கு, அதிர்ஷ்ட வசமாக புத்திரர்கள் நலமாக பிறந்து இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.  வெளியில் இருந்தபடியே வாழ்த்தினான். சிராவண மாதத்து, மழைக்கால இரவு. சத்ருக்னன் சந்தோஷமாக அங்கேயே அந்த இரவைக் கழித்தான். விடியற்காலையில், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு விடை பெற்றுச் சென்றான். ஏழு நாட்கள் நடந்து யமுனா தீரம் சென்றடைந்தான். பிரசித்தி பெற்ற முனிவர்களுடன் அவர்கள் ஆசிரமங்களில் வசிக்கலானான். தன்னைக் காட்டிக் கொள்ளாமல், அவர்களுள் ஒருவனாக சாமான்யனாக வசித்தான். காஞ்சனன் முதலான முனிவர்களுடன் நட்பு கொண்டான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், குச லவ ஜனனம் என்ற அறுபத்து மூஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

அத்தியாயம் 67 (604) மாந்தா4த்ரு வத4: (மாந்தாத்ருவின் வதம்)

 

மறுநாள் பா4ர்க்கவரிடம், லவணனின் பலம் என்ன என்று விசாரித்தான். மூசூலத்தின் பலம் பற்றிச் சொல்லுங்கள். யார் யார் இதனால் அடிபட்டு மாண்டனர் என்று கேட்டான். முனிவரும் சொல்ல ஆரம்பித்தார். ரகுநந்தனா, இவன் அடித்து நொறுக்கியது ஏராளம். இக்ஷ்வாகு வம்சத்திற்கு செய்த அநியாயம் பற்றி சொல்கிறேன், கேள். முன்பு அயோத்தியில் யுவனாஸ்வன் மகன் மாந்தா4தா என்று இருந்தான். நல்ல பலசாலி. உலகில் வீரர்கள் என்று புகழ் பெற்றவர்களுள் ஒருவனாக திகழ்ந்தான். அவனுக்கு தேவலோகத்தையும் ஆள ஆசை வந்தது. இந்திரனுக்கு பயம். மற்ற தேவர்களும் நடுங்கினர். மாந்தா4தா இந்திர பதவிக்கு முயற்சி செய்கிறான் என்ற செய்தி பரவியது. இந்திரனுக்கு சமமான ஆசனம், அர்தாஸனம் – பாதி ஆசனம், எனக்கு என்ற அவனது கோரிக்கையைக் கேட்டு தேவ கணங்கள் நடுங்கின. பாகசாஸனன் (இந்திரன்) சமாதானமாக மாந்தா4தாவிடம் பேச முனைந்தான். அரசனே, நீ பூமிக்கு அரசன். பூ4 லோகத்தையே இன்னும் முழுமையாக வென்ற பாடில்லை. பூமி முழுவதும் உன் வசத்தில் இருக்குமானால் தேவ லோகத்தில் படையெடுக்கலாம். உடனே மாந்தாதா கேட்டான். இந்திரனே, பூலோகத்தில் என்னை எதிர்க்க கூடியவர்கள் யார் இருக்கிறார்கள். என்று வினவினான். உடனே இந்திரன், லவணனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். லவணன் என்ற ராக்ஷஸன். மதுவனத்தில் இருக்கிறான். உன் ஆட்சியை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. தெரியுமா? என்றான். தனக்கு எதிரான இந்த விமரிசனத்தை சற்றும் எதிர்பார்க்காத மாந்தாதா, வெட்கத்துடன், பதில் சொல்ல முடியாமல், இந்திரனிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்ப வந்து விட்டான். ஏமாற்றம் கோபமாக உருவெடுத்தது. படையை திரட்டிக் கொண்டு லவணனை எதிர்த்து போர் செய்ய கிளம்பினான். மதுவின் மகனான லவணனை தனக்கு அடி பணியச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் போருக்கு அழைத்தான். முதலில் ஒரு தூதனை அனுப்பினான். தூதன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, அவன் பேச்சு தனக்கு சாதகமாக இல்லை என்று தெரிந்தவுடன் லவணன் அவனை விழுங்கி விட்டான். தூதன் திரும்பி வராததைக் கண்டு மாந்தா4தா தானே நேரில் வந்து அம்புகளைப் போட்டு சண்டையைத் துவக்கினான். ராக்ஷஸனோ பலமாக சிரித்து சூலத்தை கையில் எடுத்துக் கெண்டான். படை பலத்தோடு சேர்த்து அரசனை அழிக்க அந்த ஆயுதத்தை பிரயோகித்தான். அரசனை அது படையோடு சேர்த்து பஸ்மமாக்கி விட்டு திரும்ப அவனிடமே வந்து விட்டது. இது போல லவணன் பலரை பஸ்மமாக்கி இருக்கிறான். நாளைக் காலை நீ லவணனை வதம் செய்வாய். அவன் ஆயுதத்தை கையில் எடுக்கும் முன் வதம் செய்து விடு. உலகுக்கும் நன்மை உண்டாகட்டும். உன் காரியமும் நிறைவேறும் என்றார். ராஜகுமாரா, நாளைக் காலையில் மாந்தாதாவை அழித்த லவணன் உன் கையால் வதம் செய்யப் படட்டும். வேட்டையாடி திரும்பி வரும் சமயம், கையில் ஆயுதத்தை எடுக்கும் முன் தாக்கு, வெற்றியடைவாய் என்று வாழ்த்தினார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், மாந்தா4த்ரு வத4: என்ற அறுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 68 (605) லவண சத்ருக்ன விவாத: (லவணனும் சத்ருக்னனும் விவாதித்தல்)

 

இப்படி பழைய கதைகளைப் பேசிக் கொண்டும், வெற்றி பெற வேண்டுமே  என்ற கவலையுடனும் அந்த இரவு கழிந்தது. விடியற்காலையில் ராக்ஷஸன் கோட்டைக்கு  வெளியே வந்தான். வேட்டையாட கிளம்பினான். பாதி நாள் கடந்தது. பல மிருகங்களைக் கொன்று பாரமாக  தூக்கிக் கொண்டு திரும்பி வரும் பொழுது, இடையில் யமுனையை நீந்தி கடந்து வந்து விட்ட சத்ருக்னனை எதிரில் கண்டு நின்றான். அவனையும் அவன் கையில் ஆயுதத்தையும் பார்த்து அலட்சியமாக, நராதமனே, இதைக் கொண்டு என்ன செய்வாய், என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய் என்று சிரித்தான். ஆயிரக் கணக்கானவர் ஆயுதங்களுடன் வந்து என்னுடன் மோதி இறந்திருக்கிறார்கள். பலரை நான் விழுங்கியிருக்கிறேன். உனக்கும் மரண ஆசை வந்து விட்டதா? இன்று எனக்கு ஆகாரமும் பூரணமாக ஆகி விட்டது. நீயாகவே வந்து என் வாயில் விழ காத்திருக்கிறாய், என்று சிரித்துக் கொண்டு சொல்ல சத்ருக்னன் ரோஷத்துடன் எழுந்தான். உடல் நடுங்கியது,    கண்களில் நீர் மல்கியது. ரோஷத்தின் காரணமாக, அவன் உடலிலிருந்து கோபாக்னி கிரணங்களாக  வெளிப் படுவது போல இருந்தது. நிசாசரனைப் பார்த்து மகா கோபத்துடன் சொன்னான். துர்புத்தியே, உன்னுடன் த்வந்த யுத்தம் செய்யத் தான் வந்திருக்கிறேன். நான் தசரதன் மகன். ராமனின் இளைய சகோதரன். நித்ய சத்ருக்னன் என்று புகழ் பெற்ற சத்ருக்னன். உன்னை வதம் செய்யவே வந்திருக்கிறேன். நான் போருக்கு அழைக்கும் பொழுது நீ மறுக்க முடியாது. த்வந்த யுத்தம் செய்ய வா. நீ என் சத்ரு. என்னிடமிருந்து உயிருடன் தப்ப முடியாது. என்றான். ராக்ஷஸன் சிரித்தான். அட, என் அதிர்ஷ்டம், நீயாகவே வந்து மாட்டிக் கொண்டாய். ராவணன் என் தாயின் சகோதரி மகன். ராக்ஷஸாதிபன். ஒரு பெண்ணின் காரணமாக அவனை குலத்தோடு அழித்தான் உன் சகோதரன். அது என் மனதை வருத்திக் கொண்டே இருந்தது. நானும் சரியான நேரத்தை தான் எதிர் பார்த்து காத்திருக்கிறேன். உன் குலத்தினரை, அடியோடு அழிக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தேன். நீயாக வந்து சேர்ந்தாய். வரப் போகும் சந்ததிகளையும் சேர்த்து அழிக்கிறேன் வா, வா என்றான். யுத்தம் செய்வோம், நான் தயார். சற்று நில். நான் என் ஆயுதத்தை கொண்டு வருகிறேன் என்றான். உடனே சத்ருக்னன், என்னைத் தாண்டி நீ எப்படி உள்ளே போவாய். எதேச்சையாக எதிர் பட்ட சத்ருவை விடவே கூடாது. அப்படி யார் எதிரியை கை நழுவ விடுகிறானோ அவன் மந்த புத்தி உடையவனே. அவனால் எதையும் சாதிக்க முடியாது. அதனால் உன்னைக் கண்ட நேரம் எனக்கு நல்ல நேரமாக இருக்கட்டும். யமனுடைய வீடு தான் நீ போக வேண்டிய இடம். அம்புகளால் துளைத்த உன் உடலை உன் வீட்டில் சேர்க்கிறேன். ராமனுக்கு விரோதி மூவுலகுக்கும் விரோதியே என்றான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், லவண சத்ருக்ன விவாத: என்ற அறுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 69 (606) லவண வத: (லவணனை வதம் செய்தல்)

 

சத்ருக்னன் பேசியதைக் கேட்டு லவணன் ஆத்திரம் அடைந்தான். நில், நில் என்றபடி ஓடி வந்தான். கைகளை பிசைந்தபடி, பற்களை நற நற வென்று கடித்தபடி, அருகில் வந்தான். சத்ருக்னனை பெயர் சொல்லி அழைத்து, ஆத்திரத்துடன் வரும் ராக்ஷஸனை சத்ருக்னன் பார்த்தான். கோபத்தில் மேலும் பயங்கரமாக       தோற்றமளித்த அரக்கனை தேவ சத்ருக்னன் (தேவர்களின் சத்ருக்களை வெல்பவன்) என்று பெயர் பெற்றவன், வா, வா, நீ நினைப்பது போல என்னை எளிதில் வெல்ல முடியாது, இதோ பார், என் பாணம் உன்னை யம லோகம் அனுப்பப் போகிறது, இன்று ரிஷிகளும், மற்றவர்களும் நீ மடிந்து விழுவதைப் பார்த்து மகிழப் போகிறார்கள். ராவணனை வதம் செய்தவுடன் முக்கோடி தேவர்களும் நிம்மதியடைந்தது போல. பிராம்மணர்கள் வருத்தம் தீரட்டும். ஜனங்கள் நலமாக வாழட்டும். வஜ்ரம் போன்ற பாணங்கள், என் கையிலிருந்து  வெளிப்பட்டு உன் உயிரைக் குடிக்கட்டும். சூரியன் கிரணங்கள் தாமரை மலரைத் துளைத்துக் கொண்டு நுழைவது போல உன் இதயத்தினுள் நுழையும் பார் என்றான். இதற்குள் லவணன் ஒரு பெரிய மரத்தை  தூக்கிக் கொண்டு வந்து அவன் மேல் போட்டான். அதை தன் பாணத்தால், சத்ருக்னன் நூறாக பிளக்கச் செய்தான். திரும்பவும் சளைக்காமல் வேரோடு மரங்களை ராக்ஷஸன் சத்ருக்னன் மேல் போடுவதும், சத்ருக்னின் பாணங்கள் அவைகளைச் சிதற அடிப்பதுமாக யுத்தம் தொடர்ந்தது. ஓரு சமயம், ஒரு பெரிய மரத்தால் சத்ருக்னன் தலையில் ஓங்கி போடவும், அவன் கிட்டத்தட்ட மயங்கிய நிலைக்கு வந்து விட்டான். ராக்ஷஸன் அவன் இறந்தான் என்று எண்ணி அட்டகாசமாக சிரித்தான். பார்த்துக் கொண்டிருந்த தேவர்களும், ரிஷிகளும், ஹா ஹா என்று துக்கத்துடன் அலறினர். இந்த இடை வெளி கிடைத்த நேரத்திலும், லவணன் தன் மாளிகைக்குள் செல்லவோ, சூலத்தை எடுத்து வரவோ செய்யாமல் தானே விழுங்கி விடலாம் என்று நினைத்தபடி அருகில் வந்தான். ரிஷிகள் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தனர். நினைவு திரும்பவும் சத்ருக்னன் தன் திவ்யாஸ்திரத்தை கையில் எடுத்தான். வஜ்ரம் போன்ற தோற்றம் உடைய அந்த அஸ்திரம், நான்கு திசைகளிலும்  ஒளி பரப்பிக் கொண்டு சீறி பாய்ந்தது. மூவுலகமும் நடுங்கியது. நல்ல வேலைப்பாடும், வேகமும், யாராலும் இது வரை ஜயிக்கப் படாத பெருமையும், உடையது. பல காலமாக சந்தனம் கொண்டு பூஜை செய்யப் பெற்று, காலாக்னி போன்று குலை நடுக்கம் எழச் செய்யும் சக்தி வாய்ந்தது. தேவர்கள் பிதாமகரான ப்ரும்மாவிடம் சென்று, தேவ தேவா இது என்ன, உலகம் அழியப் போகிறதா என்று வினவினர். பிதாமகர் அந்த அஸ்திரத்தின் மகிமையை விவரித்தார். தேவர்களே, கேளுங்கள். சுத்ருக்னன், லவணனை வதைக்க இந்த அஸ்திரத்தை தொடுத்து இருக்கிறான். அதன் தேஜஸால் இங்கு தேவர்களும் கூட கண் கூச நிற்கிறோம். இந்த அஸ்திரம், சனாதனனான தேவனுடையது. பகவானின் ஆயுதம். மது கைடபர்களை வதைத்து உலகத்தை காக்க மகாத்மாவான விஷ்ணு பகவான் தானே தாயாரித்துக் கொண்டது. மது, கைடபர்கள் இருவரும் பயங்கர சக்தி வாய்ந்த ராக்ஷஸர்கள். அவர்களைக் கொல்ல இப்படி ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. ஏனெனில் இவர்களும் விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றியவர்களே. போய் பாருங்கள். ராம சகோதரன், சத்ருக்னன், லவணனைக் கொல்வதற்கு சாக்ஷியாக நில்லுங்கள். அவர்களும் இதைக் கேட்டு லவண வதத்தைக் கண்ணால் காண வந்து சேர்ந்தார்கள். கையில் திவ்யமான ஸரத்துடன் நின்றிருந்த சத்ருக்னனைக் கண்டனர். கொழுந்து விட்டெரியும் யுகாந்த நெருப்போ, எனும் படி கண் கூச வைத்த அந்த அஸ்திரத்தை கையில் எடுத்து, லவணனைத் திரும்ப போருக்கு அழைத்தான் சத்ருக்னன். பெரும் கோபத்துடன் லவணன் எதிர்த்து வந்தான். காது வரை வில்லை இழுத்து சத்ருக்னன் அந்த பாணம், லவணனின் மார்பில் பட எய்தான். ராக்ஷஸனின் மார்பை பிளந்து கொண்டு அது ரஸாதளம் சென்றது. அங்கு இருந்த ஞானிகள் அதை பூஜித்து ரகு நந்தனிடம் திரும்பச் செய்தனர். பெரிய மலை ஒன்று விழுந்தது போல லவண ராக்ஷஸன் தடாலென உயிரற்று விழுந்தான். அவன் இறந்ததும், ருத்ரன் தந்த சூலமும், தேவர்கள் கண் முன்னாலேயே ருத்ரனிடம் சென்று விட்டது. ரகு வீரன், சத்ருக்னன், ஒரே ஒரு பாணத்தால், உலகை ஆட்டி வைத்த அரக்கனைக் கொன்று பயம் நீங்கச் செய்து விட்டான். மா பெரும் இருட்டு, ஆயிரம் கிரணங்களுடன் சூரியோதயம் ஆனவுடன் விலகுவது போல மக்களின் துயரம் விலகியது. கொடிய நாகத்தை அடக்குவது போல ரகுநந்தனன், லவணாசுரனை அழித்து விட்டான் என்று தேவர்களும், ரிஷிகளும், பன்னக, அப்ஸரஸ்களும் பேசிக் கொண்டனர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், லவண வத:    என்ற அறுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 70 (607) மது4புரி நிவேச: (மதுவின் நகரத்தில் பிரவேசித்தல்)

 

லவண வதம் ஆனவுடன் இந்திரன், அக்னி, மற்ற தேவர்களும் வந்து சத்ருக்னனை பாராட்டினார்கள். வத்ஸ, குழந்தாய், நல்ல காலம் வெற்றியடைந்தாய். லவண ராக்ஷஸன் ஒழிந்தான். புருஷ சார்துர்லா, என்ன வரம் வேண்டுமோ, கேள் என்றனர். நாங்கள் அனைவரும் சேர்ந்து உனக்கு வரம் தரவே வந்திருக்கிறோம். உன் வெற்றிக்காக நாங்களும் பிரார்த்தனை செய்தோம் என்றனர். இதைக் கேட்டு சத்ருக்னன், நீங்கள் அனைவரும் சேர்ந்து வந்திருக்கிறீர்களே, உங்களை தரிசித்ததே பாக்யம். என் வெற்றிக்காக வேண்டிக்கொண்டதாக சொல்கிறீர்களே, அதுவே எனக்கு பெரிய வரம் கிடைத்தது போலத் தான் என்றான். இந்த மதுபுரி மிக ரம்யமாக இருக்கிறது. சீக்கிரமே நான் இதில் பிரவேசம் செய்ய வேண்டும். தேவர்களால் நிர்மாணிக்கப் பட்டது. இது தான் நான் வேண்டுவது என்றான். தேவர்களும் அப்படியே ஆகட்டும், என்று சொல்லி இந்த ஊர் என்றும், வீரர்கள் நிறைந்த ஊராக இருக்கும் என்று சொல்லி ஆசிர்வதித்து விட்டுச் சென்றனர். சத்ருக்னனும், தன் படை வீரர்களை அழைத்து விவரம் சொல்லி, சுபமான ஸ்ரவண நக்ஷத்திரம் கூடிய நல்ல நாளில், படை வீரர்கள் புடை சூழ நகர பிரவேசம் செய்தான். அடுத்த பன்னிரண்டு வருஷங்களில், அந்நகரம், பல விதத்திலும் மேன்மையடைந்து தேவலோகம் போலவே ஆயிற்று. மக்கள் சற்றும் கவலையின்றி வசித்தனர். காலத்தில் மழை பெய்து, விளைச்சல் அமோகமாக இருந்தது. வயல்களில் பசுமை நிறைந்து இருந்தது. ஆரோக்யம் மிகுந்தவர்களாக, வீரர்களாக பிரஜைகள் சத்ருக்னனால் பாலிக்கப் பட்டு மகிழ்ச்சியாக இருந்தனர். யமுனா தீரத்தில், பிறை சந்திரன் போல அமைந்திருந்த நகரம், சோபையுடன் விளங்கியது. பெரிய         மாளிகைகளும், கடைவீதி, நாற்சந்திகள், என்று சிறப்பாக விளங்கியது. பல விதமான வியாபாரங்கள் பெருகி வளர்ந்தன. நால் வர்ணத்தாரும் சிறப்புடன் வாழ்ந்தனர். லவணன் முன் நிர்மாணித்திருந்த நகரை, சத்ருக்னன், பல விதத்திலும் சிறப்பாக ஆக்கி, உத்யான வனங்களும், பொழுது போக்கு ஸ்தலங்களும், விளையாடும் இடங்களுமாக அழகு பெறச் செய்து விட்டான். மனிதர்கள் தேவர்களுக்கு இணையாக இதில் வசதியுடன் வாழ்ந்தனர். பல தேசங்களிலும் இருந்து வியாபாரிகள் வந்து வாணிபத்தை பெருக்கினர். இதனால் செல்வம் பெருகியது. செல்வ செழிப்பு மிக்க இந்த நகரை பார்த்து சத்ருக்னன் பெரும் உவகை எய்தினான். தான் வளர்த்த நகரை ராமரை காணச் செய்ய வேண்டும் என்ற ஆவலும் வளர்ந்தது. பன்னிரண்டாவது ஆண்டும் முடிந்த நிலையில், தன் நகரத்து ஜனங்கள் பற்றியும், அமர புரி போல அதை தான் சிறப்பாக செய்து வைத்துள்ளதையும் ராமரிடம் சொல்லி அவரை அழைத்து வந்து காட்ட தீர்மானித்தான், பரதனின் தம்பியான சத்ருக்னன்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், மதுபுரி நிவேச:  என்ற எழுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

அத்தியாயம் 71 (608) சத்ருக்ன பிரசம்ஸா (சத்ருக்னனை புகழ்தல்)

 

ஒரு சில வீர்ர்களே துணை வர. சத்ருக்னன், பன்னிரண்டாவது ஆண்டு முடிவில், அயோத்தி நோக்கி பயணமானான். நம்பிக்கைக்கு பாத்திரமான படைத்தலைவர்கள், மந்திரிகள் வசம், நாட்டின் பாதுகாப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றான். நூறு ரதங்கள், குதிரைகள் மட்டுமாக பின் தொடர பயணம் தொடங்கியது. ஏழெட்டு நாட்கள் பயணம் செய்து வால்மீகி ஆசிரமத்தை அடைந்தான். அங்கு சில நாட்கள் தங்கினான். வால்மீகியை வணங்கி அவர் தந்த அர்க்ய, பாத்யங்களை ஏற்றுக் கொண்டு நாட்டு நடப்புகளை விசாரித்தான். பலவிதமான நாட்டு நடப்புகளையும், கதைகளையும் பேசியபடி நாட்கள் நகர்ந்தன. லவண வதம் பற்றி சத்ருக்னன் சொல்ல, முனிவர் அதை பாராட்டினார். அரிய செயலை செய்திருக்கிறாய். லவணனை வதம் செய்வது எளிதல்ல. அவன் கையில் எவ்வளவு அரசர்கள், போர் வீரர்கள் மடிந்திருக்கிறார்கள் தெரியுமா? அவனைக் கொன்று நீ உலகுக்கே நன்மை செய்திருக்கிறாய். விளையாட்டாக மிகப் பெரிய எதிரியை அழித்து விட்டாய். ராவணனுடைய வதம், பலத்த ஏற்பாடுகளுடன் செய்யப் பட்டது. நீ அநாயாசமாக செய்து விட்டாய். தேவர்கள் இந்த லவணன் ஒழிந்தான் என்று மகிழ்ந்திருப்பார்கள். எல்லா ஜீவராசிகளுக்கும், பூத கணங்களுக்கும் இதனால் மிகவும் நன்மையே. ராகவா, நானும் வாஸவனுடைய சபையில் இருந்து அந்த காட்சியைக் கண்டேன். எனக்கும் அந்த வீரச் செயல் மிகவும் பிடித்தது. திருப்தியாக இருந்தது. அன்புடன் உன்னை அணைத்து, உச்சி முகர்ந்து ஆசிர்வதிக்க மனம் பரபரத்தது என்று சொல்லி முனிவர் அவனை அணைத்து உச்சி முகர்ந்து ஆசிர்வதித்தார். சத்ருக்னனுக்கு உடன் வந்த படை வீர்ரகளுடன் சேர்த்து விருந்து அளித்தார். நன்றாக சாப்பிட்டு, மதுரமான இசையைக் கேட்டு மகிழ்ந்து, முறையாக ராம சரிதம் பாடப் பட்டதையும் கேட்டான். தந்த்ரீ, லயம் இவை சேர, (தந்தி வாத்யங்களும், தாள வாத்யங்களும்) மூன்று ஸ்தாயிகளிலும், தவறில்லாத மொழியும், இலக்கண,இலக்கிய சுத்தமான உச்சரிப்புடனும், சமமான தாளங்களுடனும், சிறப்பாக பயிற்றுவிக்கப் பட்ட பாடகர்கள் போல பாடினார்கள். வால்மீகி முனிவர் சமீபத்தில் இயற்றிய காவியம் அந்த ராமசரித காவியம் என்பதையும் தெரிந்து கொண்டான். முன்பு நடந்தது நடந்தபடி, சத்யமான வார்த்தைகள், சத்ருக்னன் கண்களில் நீர் முட்டச் செய்தது. தன்னை மறந்து லயித்துக் கேட்டான். நேரடியாக கண் முன்னே அந்த காட்சிகளைக் காண்பது போலவும், தானும் நிகழ்சிகளில், பங்கு கொள்வது போலவும் உணர்ந்து மெய் சிலிர்த்தான். மற்றவர்கள் இசையின் இனிமையில் மூழ்கி திளைத்தனர். ஆச்சர்யம், ஆச்சர்யம் என்று பாராட்டினர். என்ன இது? நாம் எங்கு இருக்கிறோம்? கனவு காண்கிறோமா என்று தங்களுக்குள் படை வீரர்கள் பேசிக் கொண்டனர். நேரில் பார்ப்பது போல முன் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் காண்கிறோமே என்று வியந்து சத்ருக்னனிடம் சொன்னார்கள். நரஸ்ரேஷ்டனே, முனிபுங்கவரை விசாரியுங்கள், யார் பாடுவது? சத்ருக்னனும், எல்லோரும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள், நம் சைன்யத்து வீரர்கள் இது போன்ற அத்புதமான கானத்தை கேட்டதில்லை. இந்த ஆசிரமத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. ஆயினும் இதையெல்லாம் விசாரித்துக் கொண்டு இருக்க முடியாது என்று சொல்லி விட்டு முனிவரை வணங்கி, தன் இருப்பிடம் சென்று விட்டான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சத்ருக்ன பிரசம்ஸா என்ற எழுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

அத்தியாயம் 72 (609) சத்ருக்ன ராம சமாகம: (சத்ருக்னனும் ராமனும் சந்தித்தல்)

 

படுக்கையில் படுத்த சத்ருக்னனுக்குத் தூக்கம் வரவில்லை. காதில் விழுந்த ராம கீதம், மனதில் பலவித எண்ணங்களைத் தோற்றுவித்தது. உறக்கம் அண்டவிடாமல் செய்தது. இரவு முழுவதும், ஸ்வர சுத்தமாக, தாளக்கட்டுடன், இனிமையாக கேட்ட கீதத்தையே நினைத்தபடி கழித்தான். விடியற்காலை எழுந்ததும், தன் தினசரி, பர்வ கால காரியங்களை முடித்துக் கொண்டு, முனிவரிடம் சென்றான். கை கூப்பி அவரிடம் பகவன், ரகுநந்தனன் ராகவனைக் காண செல்கிறேன், விடை கொடுங்கள் என்று சொல்லி, மற்ற ரிஷிகளிடமும், விரதம் அனுஷ்டிப்பவர்களிடமும், அதே போல, எங்களுக்கு விடை கொடுங்கள் என்றான். முனிவரும், விடை பெற வந்த சத்ருக்னனை அணைத்து, ஆசிர்வதித்து அனுப்பினார். முனிவரை வணங்கித் தன் ரதத்தில் ஏறி, சீக்கிரமே அயோத்தி நகரம் போய் சேர்ந்தான். ராகவனைக் காணும் ஆவலுடன் விரைந்துச் சென்றான். அரண்மனையில், மந்திரிகள் மத்தியில், அமரர்கள் மத்தியில் இந்திரன் போல, பூரண சந்திரன் போன்ற முகமுடைய ராஜா ராமன் கம்பீரமாக அமர்ந்திருந்ததைக் கண்டான். சத்ய பராக்ரமனான ராமனை வணங்கி, பணிவாக, தாங்கள் சொன்னபடியே செய்து விட்டேன். லவணனை வதைத்து விட்டேன். நகரத்தை கைப் பற்றி, அதை நல்ல முறையில் செப்பனிட்டு வைத்திருக்கிறேன். நமது ராஜ்யம் அங்கு ஸ்தாபிதம் செய்யப் பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு வருஷங்களாக, இந்த வேலையில் மூழ்கியிருந்தாலும், உங்களைக் காணாது தவித்துப் போய் விட்டேன். இன்னமும் உங்களைப் பிரிந்து வாழ விரும்பவில்லை. அதனால் பல நாட்கள் இங்கு இருந்து விட்டுப் போக அனுமதிக்க வேண்டும். தாயை இழந்த குழந்தை போல நான் தங்கள் அண்மைக்காக ஏங்குகிறேன் என்றான். அவனை அணைத்து ஆறுதல் சொல்லி, வீரனே, கவலைப் படாதே, இது போல பிரிவுகளுக்கு வருந்துவது க்ஷத்திரியர்களுக்கு அழகு இல்லை. ராஜாக்களாக இருப்பவர்கள் சொந்த பந்தங்களை பெரிதாக மதித்து வருந்துவது கூடாது. பிரஜைகள் தான் நம் செல்வம், பந்துக்கள். அவர்களை முறையாக பாலனம் செய்வது தான் நம் கடமை. அவ்வப்பொழுது அயோத்தி வந்து என்னைப் பார். இப்பொழுது உன் நகரம் செல். எனக்கு நீ மிகவும் பிரியமானவன், சந்தேகமேயில்லை. ஆனால் அதை விட ராஜ காரியம், பிரஜா பாலனம் அதிக முக்கியமானது. அதனால் வத்ஸ, காகுத்ஸா, ஏழு ராத்திரி இங்கு இரு. அதன் பின் தன் வேலையாட்கள், படைகள், வாகனங்களுடன், உன் ஊர் போய் சேருவாய். சத்ருக்னன், ராமர் சொல்வதில், நியாயம் இருப்பதையறிந்து, தீனமாக  அப்படியே ஆகட்டும் என்றான். ராமனுடைய ஆக்ஞை படி, ஏழு ராத்திரிகள் அங்கு வசித்தான். மறு நாள் காலை எழுந்து போய் வருகிறேன் என்று சொல்லி கிளம்பினான். ராம, லக்ஷ்மணர்களிடமும், பரதனிடமும் விடை பெற்றுக் கொண்டு ரதத்தில் ஏறினான். பரதனும், லக்ஷ்மணனும், வெகு தூரம் வரை உடன் வந்து, வழியனுப்ப, சத்ருக்னன் தன் ஊரை நோக்கிச் சென்றான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சத்ருக்னராம சமாகம: என்ற எழுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

அத்தியாயம் 73 (610) ப்ராம்மண பரிதேவனம் (பிராம்மணனின் வருத்தம்)

 

சத்ருக்னனை அனுப்பி விட்டு, ராமர், மற்ற சகோதரர்களுடன், பழையபடி, தன் ராஜ்ய காரியங்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். பல நாட்கள் சென்றன. ஒரு நாள் ஜன பதத்திலிருந்த ஒரு பிராம்மணன் இறந்த தன் குழந்தையைக்  தூக்கிக் கொண்டு ராஜ மாளிகை வாசலில் வந்து நின்றார். பாசமும், துக்கமும் சேர, தேம்பித் தேம்பி அழுதபடி, அடிக்கடி புத்ரா என்றும், மகனே என்றும் அரற்றினார். முன் ஜன்மத்தில் என்ன பாபம் செய்தேனோ, ஒரே மகன் உன்னை பறி கொடுத்து விட்டு தவிக்கிறேனே, இன்னமும் பாலகன். இளமையையே எட்டவில்லை. ஐந்து வயது மகன், அகாலத்தில் இப்படி காலனிடம் சென்றாயா, மகனே, என்றும் அழுதார். நானும் சில நாட்களில் உன்னிடம் வந்து சேருகிறேன், மரணம் தான் எனக்கும் மாற்று. உன் தாயாரும் நானும், வேறு என்ன தான் செய்வோம், நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லையே. எந்த பிராணியையும் துன்புறுத்தியதும் இல்லை. நான் செய்த எந்த தகாத காரியத்தின் பலனோ இது, தெரியவில்லை. நீ பித்ரு காரியங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியவன், முன்னால் போய் சேர்ந்து விட்டாயே. இது போல கேட்டதே இல்லையே. ராம ராஜ்யத்தில் இப்படி அகால மரணம் எப்படி சம்பவிக்கலாம்.? ராமர் செய்த மிகப் பெரிய தவறு ஏதோ இருக்க வேண்டும். அதனால் தான் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இறந்தான். இல்லையெனில், சாதாரணமாக ஆசையுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்த சிறுவன் ஏன் மரணமடைகிறான்? ராமா, அரசனே, நீ உயிருடன் இருக்கும் பொழுது, இப்படி ஒரு குழந்தை ம்ருத்யு வசம் ஆனது நியாயமா? நானும், என் பத்னியும் இந்த மாளிகையின் வாசலிலேயே மரிப்போம். ப்ரும்மஹத்தி தோஷமும் உன்னை வந்தடைய ராமா, சுகமாக இரு. உன் சகோதரர்களுடன், ராமா, சிரஞ்ஜீவியாக இரு. இது வரை உன் ராஜ்யத்தில் சௌக்யமாக இருந்தோம். உன் பிரஜைகளான எங்களுக்கு வீழ்ச்சி காலம் ஆரம்பித்து விட்டது போலும். இனி சுகம் ஏது? அனாதைகள் போல தவிக்கப் போகிறோம். இக்ஷ்வாகு குலத்தின் அரசர்கள், தர்ம நியாயத்திற்கு பெயர் போன மகாத்மாக்கள். ராமர் அரசனாக வந்து அதை மாற்றி விட்டான் போலும். முதிர்ச்சியடையாதவனோ இவன்? பிரஜைகள் முறையாக பாலிக்கப் படாவிட்டால், ராஜ தோஷத்தினால் பாதிக்கப் படுகிறார்கள். அரசனின் நடத்தை சரியாக இல்லையெனில், பிரஜைகள் அகாலத்தில் மரணமடைவர். நகரத்திலும், வெளியிலும், சரியான பாதுகாப்புகள் செய்து, கவனமாக இல்லாத ராஜ்யத்தில் இப்படித்தான் அகால மரணம் நிகழும். இது நிச்சயமாக ராஜ தோஷம் தான். இது வரை அறிந்திராத, சிறுவனின் மரணம். இப்படித் திரும்ப திரும்ப பல விஷயங்களைச் சொல்லி அழுது அரற்றினார். தன் மகன் இறந்த துக்கத்தில் அரசனை தூஷித்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ப்ராம்மண பரிதேவனம் என்ற எழுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

அத்தியாயம் 74 (611) நாரத வசனம் (நாரதர் சொன்னது)

 

இப்படி வேதனை மிக்க பிராம்மணர் அரற்றவும், அதைக் கேட்ட ராமர், மந்திரிகளை அழைத்து விசாரித்தார். பிராம்மணரின் வேதனை அவரையும் வருந்தச் செய்தது. வசிஷ்டரையும், வாம தேவரையும், நிகமம் தெரிந்த அறிஞர்களையும், தன் சகோதரர்களையும் கூட்டி ஆலோசனை செய்தார். வசிஷ்டர் உள்பட, எட்டு மந்திரிகளும் வந்து சேர்ந்தனர். வாழ்க என்று அரசனை வாழ்த்தி விட்டு, மார்க்கண்டேயரும், மௌத்கல்யரும், வாமதேவரும், காஸ்யபரும், ஜாபாலி, கௌதமர், நாரதர் முதலிய பிராம்மணர்கள் எல்லோரும் வந்து தங்கள்      ஆசனங்களில் அமர்ந்தபின், ராகவன், பிராம்மணரின் தூஷணையைச் சொல்லி, அவர்களின் பதிலுக்கு காத்திருந்த சமயம், நாரதர் எழுந்தார். ராமரது கவலை அவரது குரலிலேயே தெரிந்தது. எனவே, ஆறுதலாக பேசலானார். ராஜன், கேள், இந்த பாலனின் மரணம் சரியான காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறேன். முன்பு க்ருத யுகத்தில், தவம் செய்தவர்கள் பிராம்மணர்கள் மட்டுமே. மற்றவர் தவம் செய்ய முனைந்ததில்லை. அக்காலத்தில் தீர்க தரிசிகளாகவும், தவம் செய்து தேஜஸால், அக்னி போல ஜ்வலித்துக் கொண்டு, அவர்கள் இருந்த பொழுது மரணம் யாரையும் அண்டவில்லை. பின் த்ரேதாயுகத்தில், க்ஷத்திரியர்களும் அவர்களுடன் சேர்ந்து தவம் செய்ய சென்றார்கள். வீர்யமும், தவ வலிமையும் சேர்ந்து முன் ஜன்மங்களில், மனிதர்கள், சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள். த்ரேதாயுகத்தில் தான், ப்ரும்ம க்ஷத்ரம்- பிராம்மணத்வமும், க்ஷத்திரிய தர்மமும் இணைந்து செயல்படலாயின. இந்த இரண்டு யுகங்களிலும், நான்கு வர்ணங்களிலும், தனியாக விசேஷமோ, அதிக மதிப்போ தராமல், சமமாக பாவித்தனர். நான்கு வர்ணத்தாரும் சமமான அந்தஸ்தை அனுபவித்தனர். தர்மமே உருவானது போல அந்த த்ரேதாயுகம் நடந்து கொண்டிருந்த பொழுது, அதர்மம் தன் ஒரு காலை பூமியில் பதித்தது. அதர்மம் வந்தால், தேஜஸ் குறைவது கண்கூடு. பொய் என்ற சொல் பூமியில் காலுர்ன்றி விட்டது. அசத்யம் என்ற தன் காலை பூமியில் ஊன்றச் செய்த அதர்மம், இது வரை இல்லாத துஷ்க்ருத்யங்களுக்கும்-கெடுதலான செயல்களுக்கும், இடம் கொடுத்தது. ஆயுள் முன் போல தீர்கமாக இருப்பதும் சாத்யமில்லாமல் போயிற்று. இருந்தும் த்ரேதாயுகத்தில், சத்ய தர்ம பராயணர்களாக, சுபமான காரியங்களையே செய்து வந்த ஜனங்கள், பிராம்மணர்களும், க்ஷத்திரியர்களும், தவம் செய்த பொழுது, மற்றவர்கள் இவர்களுக்கு பணிவிடை செய்து வந்தனர். வைஸ்ய சூத்திரர்கள், இதை தங்கள் சிறந்த தர்மமாக ஏற்றுக் கொண்டனர். மற்ற வர்ணத்தினருக்கு சூத்திரர்கள் பணிவிடை செய்தனர். மதித்து மரியாதை செய்தனர். இந்த சமயம் தான் அதர்மம், அசத்யம் இரண்டும், நிரந்தரமாக வாசம் செய்ய வந்து சேர்ந்தன. இதன் பின் அதர்மம் தன் இரண்டாவது காலையும் பூமியில் அழுந்த ஊன்றி விட்டது.  த்வாபர யுகம் ஆரம்பித்த சமயம் அது. துவாபர யுகம் முடியும் தறுவாயில், இந்த அசத்யமும், அதர்மமும் நன்றாக வளர்ந்து விட்டன. இப்பொழுது வைஸ்யர்களும், தவம் செய்ய முன் வந்தனர். மூன்று யுகங்களிலும், முறையாக மூன்று வர்ணத்தினரும், தவம் செய்வது வழக்கம் ஆயிற்று. இன்னமும் சூத்ரனுக்கு இந்த தகுதி கிடைக்கவில்லை. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களும், பெரும் தவம் செய்வது, வரும் கலி யுகத்தில் அதிகமாகும். துவாபர யுகத்திலேயே இச்செயல் அதிகரித்து விட்டது. அது போல ஒருவன் கடும் தவம் செய்து கொண்டிருக்கிறான். அதன் பலன் தான் இந்த சிறுவனின் மரணம். செய்யும் செயல், விஷய- உலக வழக்கை ஒட்டியிருந்தாலும், தர்ம காரியமானாலும், விபரீதமாக போகும் பொழுது, அரசனேயானாலும், நன்மை பயக்காது. கெடுதலுக்கு காரணமாக, இக பரத்திலும் நன்மை தராத படி ஆகும். இது போல அதர்மமான காரியத்தில் ஈடுபடும், துர்மதியால், அரசனும் நரகம் தான் அடைவான். தவமானாலும், நற்காரியங்கள் ஆனாலும், தர்மத்தை மீறிய செயலானாலும், ஆறில் ஒரு பங்கு அரசனை வந்தடையும். தர்மத்துடன் பிரஜைகளை பாலிக்கும் அரசன், ஆறில் ஒரு பங்கை தான் அனுபவித்துக் கொண்டு, பிரஜைகளின் நன்மையையும் சிந்திக்காமல் இருந்தால் என்ன நியாயம்? அரசனே, நீ உன்னையே சோதித்து எங்கு தவறு என்று யோசி. நீ என்ன தவறு செய்தாய் என்று கண்டு பிடி. முயற்சி செய். இப்படி செய்தால் தான் அரசர்களுக்கு தர்மமும் வளரும், ஆயுளும் வளரும். இந்த பாலகனுக்கும் உயிர் வரும்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், நாரத வசனம் என்ற எழுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 75 (612) சம்பூக நிசய: (சம்பூகனை தேடுதல்)

 

நாரதர் சொன்ன செய்தியைக் கேட்டு ராமர் மன நிம்மதி அடைந்தார். லக்ஷ்மணனைப் பாரத்து, சௌம்ய, போ. போய், இந்த பிராம்மணனுக்கு ஆறுதலாக இரண்டு வாரத்தைகள் பேசி, அவருடைய இறந்த குழந்தையை வாங்கி எண்ணெய் குடத்தில் வை. நல்ல வாசனைப் பொருட்களும், வாசனை மிகுந்த எண்ணெய்களும் விட்டு, குழந்தையை சற்றும் வாட்டம் காணாதபடி பாதுகாத்து வை. நன்னடத்தை உள்ள அந்தணன் மகன், மறைத்து பத்திரமாக வை. இதன் மேல் எதுவும் பட்டு எந்த வித ஆபத்தும், சேதமும் வரக் கூடாது. அவ்வாறு பார்த்துக் கொள். இவ்வாறு லக்ஷ்மணனுக்கு உத்தரவிட்டு, மனதால் புஷ்பகத்தை தியானித்தார். குறிப்பறிந்து புஷ்பகம், உடனே வந்து சேர்ந்தது. நராதிபா, இதோ, நான் வந்து விட்டேன் என்று பணிந்து நின்றது. அதைச் சார்ந்த கிங்கரர்களும் அதே போல நின்றனர். புஷ்பக விமானம் இவ்வாறு அழகாக பேசியதை ரசித்த ராமர், மற்ற மந்திரிகளிடம் விடை பெற்றுக் கொண்டு விமானத்தில் ஏறினார். தன் வில், அம்புறாத்தூணி, வாள் இவற்றை எடுத்துக் கொண்டு, பரதனையும், சௌமித்ரியையும் நகர காவலுக்கு நியமித்து விட்டு, மேற்கு திசை நோக்கி பயணமானார். பசுமையான அந்த பிரதேசங்களில், திரும்பத் திரும்ப தேடியபடி சென்றார். வடக்கு திசையில் ஹிமவான் பரந்து பரவியிருந்த திசையிலும் வந்து தேடினார். அங்கும் காணாமல், கிழக்குத் திசை சென்றார். எங்கும் தேடிப் பார்த்தபடி சென்றார். பூமி தெரியாதபடி செழிப்பாக இருந்த பிரதேசம். அதை புஷ்பகத்தில் இருந்தபடியே தரிசனம் செய்தார். இதன் பின், தென் திசை வந்தார். மலைச் சாரலின் மேல் அழகிய குளத்தைக் கண்டார். அந்த குளத்தில் அமர்ந்து, தவம் செய்து வந்த தாபஸனைக் கண்டார். அவனைப் பார்த்து, சுவ்ரத, தன்யனானாய். நீ பாக்யசாலி. நீ யார்? தவத்தில் முதிரந்தவனே, இவ்வளவு கடும் தவம் செய்யக் காரணம் என்ன? நான் தசரத குமாரன் ராமன். தெரிந்து கொள்ளும் ஆவலால் கேட்கிறேன். உன் விருப்பம் என்னவோ? ஸ்வர்கத்தை வேண்டி இந்த தவமா? அதற்கு மேலும் உயர்ந்த பதவியை அடையவா? வரம் பெற என்று தவம் செய்கிறாயா? இவ்வளவு கடுமையாக தவம் செய்யக் காரணம் என்ன? யாரைக் குறித்து தவம் செய்கிறாய். தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தாபஸ, நீ யார்? பிராம்மணனா? உனக்கு மங்களம். யாராலும் வெற்றி கொள்ள முடியாத பலம் மிகுந்த க்ஷத்திரியனா? மூன்றாவது வர்ணத்தினனான வைஸ்யனா? சூத்ரனா? உண்மையில் நீ யார், சொல். தலை கீழாகத் தொங்கிய அந்த தபஸ்வி, ராமனின் வார்த்தைகளைக் கேட்டு, அதே நிலையில் இருந்தபடியே, தான் யார் என்பதையும், என்ன காரணத்தினால் தவம் செய்கிறான் என்பதையும் விவரித்தான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சம்பூக நிசய: என்ற எழுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)

 

செயற்கரிய செய்த வீரனான ராமர், ம்ருதுவாக கேட்கவும், ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்ற சம்பூகன் மெதுவாக விவரித்தான். என் பெயர் சம்பூகன். பிறப்பால் சூத்ரன். இந்த சரீரத்தோடு தேவத்வம் பெற விரும்பி, தவம் செய்கிறேன். தேவலோக ஆசை தான். வேறு எதுவும் இல்லை. உக்ரமான தவத்தில் ஈடுபட்டேன். இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, தன் கூரிய வாளை எடுத்து ராமர் அவன் தலையைக் கொய்தார். அந்த தாபஸன் இறந்து விழுந்ததும், தேவர்கள் சாது, சாது என்று பூமாரி பொழிந்தனர். ராமன் சத்ய பராக்ரமன் என்று மகிழ்ந்து கொண்டாடினார்கள். இதுவும் ஒரு தேவகார்யமே, உன்னால் இன்று நிறைவேறியது என்றனர். என்ன வரம் வேண்டுமோ கேள், இந்த சூத்ரனுக்கு ஸ்வர்க பதவி அருகதை இல்லை, ஆனால், உன் கையால் வதம் செய்யப்பட்ட காரணமாக அவன் சுவர்கம் போவான் என்றனர். ராமர் உடனே, நீங்கள் திருப்தி அடைந்தது உண்மையானால், இறந்த குழந்தை உயிர் பிழைக்கட்டும் என்று வேண்டினார். அகால மரணம் என் ராஜ்யத்தில் தோன்றுவது, என் தவறே என்று உலகத்தார் குற்றம் சொல்வார்கள். நானும் குழந்தையை இழந்த அந்த தந்தைக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். தேவர்களும் இதைக் கேட்டு, கவலையை விடு, காகுத்ஸா, நீ இந்த தாபஸனை வதைத்த நிமிஷமே அச்சிறுவன் உயிர் பெற்று விட்டான். பந்துக்களுடன் சேர்ந்து விட்டான். உனக்கும் மங்களங்கள் உண்டாகட்டும், நாங்கள் கிளம்புகிறோம். அகஸ்தியர் ஆசிரமம் செல்கிறோம், பன்னிரண்டு வருஷமாக தீஷையில் இருந்து இப்பொழுது தான் விரதத்தை முடித்திருக்கிறார். நீயும் வா, அந்த முனிவரை தரிசனம் செய்து விட்டுப் போகலாம் என்று அழைத்தனர். ராமரும் சம்மதித்தார். தேவர்கள் பலவிதமாக தங்கள் வாகனங்களில் சென்றனர். பின் தொடர்ந்து வந்த ராமரும், தன் புஷ்பக விமானத்தில் சென்றார். வெகு விரைவில் கும்பயோனி என்று புகழ் பெற்ற அகஸ்தியரின் ஆசிரமத்தை அடைந்தனர். தபோதனரான அவரும் தேவர்களை மகிழ்ச்சியுடன், வரவேற்று உபசரித்தார். அவர்களும் சிறிது நேரத்தில் கிளம்பி தேவ லோகம் சென்றனர். நராதிபனான ராமர், தேவர்கள் சென்றபின் அகஸ்தியர் அருகில் வந்த பணிந்து வணங்கி அவர் கொடுத்த விருந்தையும் ஏற்றுக் கொண்டார். ராகவா, ஸ்வாகதம், நல்ல வேளை வந்து சேர்ந்தாய். என் மனதில் எப்பொழுதும் நல்ல மதிப்பைப் பெற்றவன், அதிதியாக வந்தது மிக்க மகிழ்ச்சி. தவம் செய்த சூத்ரனை வதைக்க நீ வந்திருப்பதாக சொன்னார்கள். இறந்த சிறுவனையும் உயிர்ப்பித்து விட்டாய். இன்று இரவு இங்கேயே இரு. நாளைக்காலை புஷ்பக விமானத்தில் உன் நகரம் செல்வாய். நீ தான் நாராயணன். உன்னிடம் தான் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. நீ தான் உலகனைத்துக்கும் தலைவன். எல்லா பூதங்களாகவும் இருப்பவனும் நீயே. அழிவற்ற சனாதனனாக இருப்பவனும் நீ தான். இதோ இந்த ஆபரணம் விஸ்வகர்மா செய்தது. இதை எடுத்துக் கொள். உன் அழகுக்கு அழகு சேர்க்கட்டும். அணிந்து கொள். எனக்குத் திருப்தியாக இருக்கும். தானம் பெற்ற பொருளை திரும்ப தானம் செய்வது விசேஷமாக சொல்லப் படுகிறது. இதை பாதுகாத்து வைத்துக் கொள்வதும் உன்னால் தான் முடியும். பிரகாஸமாக சூரிய கிரணம் போல விளங்கும் இந்த ஆபரணத்தை வாங்கிக் கொள் என்று கொடுத்தார். இக்ஷ்வாகு அரசனான ராமர், தன் க்ஷத்திரிய தர்மத்தை மனதில் கொண்டு, பதில் சொன்னார்.

இது போல தானம் வாங்கிக் கொள்வது பிராம்மணர்களுக்கு விதிக்கப் பட்டது. பெரியவரே, நான் க்ஷத்திரியனாக இருந்து இதை எப்படி வாங்கிக் கொள்வேன். விஷயம் அறிந்த பெரியவர் நீங்கள் தான் இது சரியா என்று  சொல்ல வேண்டும் என்றார். அகஸ்தியர் சொன்னார். ராமா, முன்பு க்ருதயுகத்தில் எங்கும் பிராம்மணர்களே நிறைந்திருந்தனர். அரசன் என்று ஒரு சமூகமே கிடையாது. இந்திரன் ஓருவன்தான் தேவர்கள் தலைவனாக இருந்தான். பின் பிரஜைகள், அரசனை வேண்டினர். தேவர்கள் தலைவனாக சதக்ரது- நூறு யாகங்கள் செய்பவன் இந்த பதவிக்கு ஏற்றவன் என்று விதித்தாய். பின் பூவுலகத்திலும் இப்படி ஒரு தலைவன், அரசன் வேண்டும் என்ற வேண்டு கோள் எழுந்தது. பிரஜைகள் தீவிரமாக இருப்பதையறிந்து, ப்ரும்மாவும் லோக பாலர்கள், அந்தணர்கள், வாஸவன் முதலியவர்களையும் வரவழைத்தார். அவரவர் தேஜஸிலிருந்து ஒரு பாகம் தாருங்கள் என்று கேட்டு வாங்கி, காப்பாற்றும் சக்தி வாய்ந்தவன் ந்ருபன்-ராஜா, அரசன் என்று ஸ்ருஷ்டி செய்தார். லோக பாலர்களும், மற்றவர்களும் இதற்கு சம்மதித்தனர். பின் ப்ரும்மா, லோகபாலர்க ளின் விசேஷ சக்தியையும் அவர்களுக்கு கொடுத்து, அரசன் என்பவன் பிரஜைகளுக்கு ஈஸ்வரன், தலைவனாக இருப்பான் என்று நியமித்தார். அவன், இந்திரனுடைய சக்தியால், கட்டளையிடும் சக்தியைப் பெற்றான். வருணனுடைய பங்கால், தன் உடலை உறுதியாக வைத்திருக்கிறான். குபேரனுடைய பங்கினால், செல்வ செழிப்பைப் பெற்றான். அந்தந்த தேவதைகளின் தன்மை கைவரப் பெற்றான். அதனால் இந்திரன் பங்கான இதை ஏற்றுக் கொள். இதனால் எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் உண்டாகும் என்றார். ராமரும், முனிவரின் தர்மார்த்தமான வார்த்தைகளைக் கேட்டு சம்மதித்து, அவர் கொடுத்த ஆபரணத்தை ஏற்றுக் கொண்டார். அதன் பின், இந்த ஆபரணம் உங்கள் கைக்கு எப்படி வந்தது என்று வினவினார். அத்புதமாக இருக்கிறது இந்த ஆபரணம், உடலோடு ஒட்டி, அழகாக தெரிகிறது என்று வியந்தார். எப்படி, எங்கிருந்து என் கைக்கு வந்து சேர்ந்தது என்பதைச் சொல்கிறேன் கேள் என்று ஆரம்பித்தார். முன் த்ரேதாயுகத்தில் இதே ஆசிரமத்தில், என் கைக்கு வந்தது. எனக்கு தானமாக இது கிடைத்ததே ஒரு வியத்தகு சம்பவம் தான் என்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சம்பூக வத:  என்ற எழுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)  

 

 

அத்தியாயம் 77 (614) ஸ்வர்கி பிரச்ன: (ஸ்வர்கியின் கேள்வி))

 

ராமா, முன்பு த்ரேதாயுகத்தில் ஒரு அரண்யம். விஸ்தீர்ணமாக பல யோஜனை தூரம் பரவியிருந்தது. மிருகங்களோ, பக்ஷிகளோ எதுவும் இன்றி, மனித நடமாட்டமும் இல்லாததால், இடையூறு இன்றி தவம் செய்யலாம் என்று நான் சென்றேன். அந்த அரண்யத்தின் அழகைச் சொல்லி முடியாது. ஏராளமான ருசியான பழங்களும், காய் வகைகளும், மரங்களும் தென் பட்டன. மத்தியில் பெரிய குளம். இதில் ஹம்ஸ பக்ஷிகளும், காரண்டவ, சக்ரவாக பக்ஷிகளும் நிறைந்திருந்தன. பத்மமும், உத்பலமும் போட்டி போட்டுக் கொண்டு மலர்ந்திருந்தன. புல்  வெளியும் பசுமையாக காணப் பட்டது. மிகவும் ஆச்சர்யமாக இருந்ததோடு, சுகமான வாசனை மூக்கைத் துளைத்தது. புழுதியின்றி எங்கும் சுத்தமாக இருந்தது. அந்த குளத்தின் அருகில் ஒரு ஆசிரமம். எந்த தபஸ்வி விட்டுப் போனதோ நான் அதில் வசிக்கலானேன். அன்று இரவு அங்கு தூங்கி விடிந்தவுடன் குளத்தில் குளிக்கப் போனேன். அங்கு சற்றும் வாடாத நிலையில் ஒரு இறந்த சரீரத்தைக் கண்டேன். புஷ்டியாக இருந்திருக்க வேண்டும், நல்ல அங்கங்களுடன் காணப் பட்டது. குளத்தில் இறங்க வந்து மரணம் அடைந்திருக்கலாம். அந்த சவத்தின் அருகில் நின்று நான் யோசித்தேன். என்ன, ஏது, ஒன்றும் புரியாமல் அங்fகேயே அமர்ந்தேன். சற்று நேரத்தில், மனோ வேகத்தில் பறக்கும் ஒரு விமானம், ஹம்ஸங்களே வாகனமாக அழகிய அத்புதமான காட்சி அளித்தபடி வந்து சேர்ந்தது. அந்த திவ்ய விமானத்தில், சர்வாலங்கார பூஷிதைகளாக அழகிய அப்ஸர ஸத்ரீகள் ஆயிரக் கணக்காக அமர்ந்திருப்பதைக் கண்டேன். ஸ்வர்கத்தைச் சேர்ந்த ஒருவன் விமானத்தில் இருந்தான். பாடுபவரும், வாத்யம் வாசிப்பவருமாக, சிலர் பாட, சிலர் தாளம் போட, சிலர் சந்திர கிரணம் போன்ற சாமரங்களை வீசிக் கொண்டிருந்தனர். சிலர் அவன் முகத்தில் துளிர்த்த வியர்வையைத் துடைத்தனர். அவன் கண்கள் தாமரை இதழை ஒத்திருந்தன. மேரு மலை போன்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவன் என்னைக் கண்டதும் இறங்கி வந்தான். எதுவும் பேசாமல், குளத்தில் இறங்கி, கீழே கிடந்த சவத்தை சாப்பிட ஆரம்பித்தான். ஸ்வர்க வாசம் செய்பவன், அந்த பெரிய சரீரத்தை விழுங்கி விட்டு நீரில் சற்று நேரம் அளைந்து விட்டு திரும்பிச் சென்று விட்டான். தானும் தேவன் போல இருக்கிறான், உத்தமமான விமானத்தில் வந்து இறங்கியவன், எதுவும் பேசாமல் போகப் பார்த்தவனைத் தடுத்து நான் விசாரித்தேன். யார் நீ, தேவன் போல தெரிகிறாய், ஆனால் இவ்வளவு மட்டமான ஆகாரத்தை ஏன் புசிக்க வேண்டும், அருவருக்கத்  தகுந்த இந்த சவத்தை ஏன் சாப்பிட வேண்டும், பண்புடைய மனிதர்களே சாப்பிடாத மனித உடல், மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இப்படி இறந்த மனித உடலைத் தின்பது எனக்கு ஸாதாரணமான விஷயமாகத் தெரியவில்லை என்றேன். இதைக் கேட்ட ஸ்வர்கி-ஸ்வர்க வாசம் செய்பவன், பதில் சொன்னான். நடந்தது நடந்தபடி விவரமாகச் சொன்னான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஸ்வர்கி பிரார்த்தனா என்ற எழுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக