ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 78 – 92
அத்தியாயம் 78 (615) ஆபரணாகம: (ஆபரணங்கள் வந்து சேர்வது)
ராமா, அவன் பேச ஆரம்பித்த உடனேயே எனக்கு ஆச்சர்யம் உண்டாயிற்று. மதுரமாக பேசினான். கை கூப்பி நின்று பணிவாக பேசினான். அவன் சொன்னதை அப்படியே சொல்கிறேன் கேள் ப்ரும்மன், என் வாழ்வில் நடந்த சுக துக்கங்கள். தாங்கள் முனிவர், உங்கள் கட்டளையை மீற முடியாது என்பதால் சொல்கிறேன். வைதர்பகன் என்பவர் என் தந்தை. நல்ல புகழ் வாய்ந்தவர். சுதேவன் என்றும் அவரை அழைப்பர். வீர்யவான். இரண்டு மனைவியரிடம், இரு புத்திரர்கள் பிறந்தனர். என் பெயர் ஸ்வேதன். மற்றவன் சுரதன். தந்தை ஸ்வர்கம் சென்றபின், ஊர் ஜனங்கள் எனக்கு முடி சூட்டி அபிஷேகம் செய்து வைத்தனர். நானும் தர்மத்தை அனுசரித்து நல்ல முறையில் ராஜ்யத்தை ஆண்டு வந்தேன். பல வருஷங்கள் இனிமையாக கழிந்தன. ராஜ்யத்தை ஆண்ட படி, பிரஜைகளின் நன் மதிப்புக்கு பாத்திரமானவனாக, நாட்கள் சென்றன. என் காலம் முடியும் தறுவாய் வந்து விட்டதை உணர்ந்து கால தர்மத்தை அனுசரித்து வனம் சென்றேன். இந்த ஜன நடமாட்டமில்லாத விசாலமான வனம், இதில் இதே குளக்கரையில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினேன். என் சகோதரன் சுரதன் அரியணையில் அமர்ந்தான். நானே முடி சூட்டி வைத்துவிட்டுத் தான் வந்தேன். இந்த குளக்கரையில் பல காலம் தவம் செய்து உத்தமமான ஸ்வர்க பதவியை அடைந்தேன். ப்ரும்ம லோகம் போயும், பசி தாகங்கள் என்னை விடவில்லை. இதனால் பெரிதும் வருந்தினேன். நேராக ப்ரும்மாவிடம் சென்று வேண்டினேன். பகவன், இதுவோ, ப்ரும்ம லோகம். இங்கு பசி தாகங்கள், மற்ற இந்திரிய உபத்ரவங்கள் கிடையாது என்பது பிரஸித்தம். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? நான் என்ன பாவம் செய்தேன்? என்ன காரணத்தால் இவை என்னை இன்னமும் தொடர்ந்து வந்து பாதிக்கின்றன. என் ஆகாரம் என்ன என்று நான் கேட்கவும் அவர் சொன்னார். சுதேவன் மகனே, உனக்கு ஆகாரம் வேண்டுமா? உன் சரீர மாமிசத்தையே சாப்பிடு. தவம் செய்யும் பொழுது உன் உடல் கொழுத்துக் கிடந்தது. விதை விளைக்காமல் எதுவும் முளைக்காது ஸ்வேதா, நீ தவம் செய்யம் பொழுது, ஒரு யதி, தபஸ்வி, அந்த நிர்ஜனமான வனத்திற்கு வந்தார். சூக்ஷ்மமான திருப்தி கூட உனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் பிக்ஷைக்கு வந்திருக்கிறார். நீ அவருக்கு உபசாரமும் செய்யவில்லை. அதிதி வந்திருக்கிறார், அதுவும் நல்ல தபஸ்வி, நீ அவரை கண்டு கொள்ளாமல், வரவேற்று பேசாமல், தவத்தில் மூழ்கி இருப்பது போலக் காட்டிக் கொண்டாய். அதனால் தான் ஸ்வேதா, ஸ்வர்கம் வந்தும், உன்னை பசி தாகங்கள் வாட்டுகின்றன. புஷ்டியான ஆகாரங்களைக் கொண்டு உன் உடலை வளர்த்தாயே, அதையே சாப்பிடு. என்ன ருசி, என்ன திருப்தி என்று தெரிந்து கொள். அந்த வனத்திற்கு அகஸ்திய முனிவர் வருவார். அவர் மூலம் விமோசனம் பெறுவாய் என்றார். அந்த அகஸ்திய முனிவர் தான் என்னை கரையேற்ற வேண்டும். தேவ தேவனுடைய கட்டளை, இந்த அருவருக்கத் தக்க உணவை புசித்து வருகிறேன். பல வருஷங்கள் ஓடி விட்டன. ப்ரும்மன், இந்த என் சரீர மாமிசத்தையே உண்டு வருகிறேன். அருவருத்தாலும், வேறு வழியில்லை. பசி என்ற உனர்வு இன்னமும் என்னை விட்ட பாடில்லை. என்னை காப்பாற்றுங்கள். கரையேற்றுங்கள். கும்பயோனீ எனப்படும் அகஸ்தியரை அன்றி வேறு யாராலும் என்னை காப்பாற்ற முடியாது. இந்த ஆபரணம் என்னைக் காப்பாற்ற நான் தருவதாக இருக்கட்டும். பகவன், ஏற்றுக் கொள்ளுங்கள். என் மேல் தயை செய்யுங்கள். முனிவரே, என்னிடம் உள்ள அனைத்து தனம், வஸ்திரங்கள், பக்ஷ்யம் (உண்ணத் தக்கவை), போஜ்யம் (அனுபவிக்கத்தக்கவை) தருகிறேன். என்னிடம் உள்ள, காம, போகங்கள் அனைத்தையும் தருகிறேன். என்னை காப்பாற்றுங்கள் என கதறினான். அவனை கரையேற்ற இந்த ஆபரணத்தை நான் வாங்கிக் கொண்டேன். நான் இதை கையில் வாங்கிக் கொண்ட உடனேயே அந்த ராஜரிஷியின் முன் ஜன்மத்து மனித உடல் மறைந்தது. அவனும், சரீரம் மறைந்த உடனேயே திருப்தியடைந்தவனாக தேவலோகம் சென்றான். இந்திரனுக்கு சமமான தேஜஸைப் பெற்றான். கஷ்டம் விலகி சுகமாக இருந்தான். அவன் தந்த ஆபரணம் தான் இது என்று சொல்லி முடித்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஆபரணாகம: என்ற எழுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 79 (616) தண்ட ராஜ்ய நிவேச: (தண்ட ராஜ்யத்தில் நியமித்தல்)
அகஸ்தியர் சொன்னதைக் கேட்டு ராமர், ஆச்சர்யத்துடன், அவரை வினவினார். பகவன், அந்த கோரமான வனம், அவன் தவம் செய்து வந்த இடம் எது? வைதர்பகன் தவம் செய்த இடம், ஏன் அவன் தவம் செய்த இடம் நிர்ஜனமாக, மனித நடமாட்டமில்லாமல் போயிற்று.? மிருகங்கள், பக்ஷிகள் கூட இல்லாமல் சூன்யமாக ஆவானேன். எதனால் அவன் இப்படி ஒரு சூன்யமான இடத்தை தேர்ந்தெடுத்தான்? ஆவலுடன் ராமர் கேட்டவுடன் அகஸ்தியர், பதில் சொன்னார். குழந்தாய், முன்பு க்ருத யுகத்தில், மனு என்பவன், தண்டதரன் என்ற பெயரில் பிரபுவாக இருந்தான். இக்ஷ்வாகுவின் தந்தை தான் மனு. தன் மகனை கிழக்கு திசையில் ராஜ்யத்தில் நியமித்து விட்டு, உலகில் ராஜ வம்சத்தை வளர்த்து வா என்று கட்டளையிட்டார். தந்தைக்கு அப்படியே வாக்கு கொடுத்த இக்ஷ்வாகுவைப் பார்த்து, மனு, நீ கண்டிப்பாக அப்படியே செய்வாய், சந்தேகமேயில்லை. நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். தண்டமும் (தண்டனை) அரசன் கொடுத்தே ஆக வேண்டும். அதே சமயம், காரணமின்றி தண்டிக்கவும் கூடாது. அபராதியான மனிதனுக்கு அளிக்கப்படும் தண்டனைகளும், விதிகளை அனுசரித்து அளிக்கப்படும் பொழுது, அரசனுக்கு பெருமையே சேர்க்கும். அவனுக்கு ஸ்வர்கத்தையே அளிக்கும். ஆகவே, புத்திரனே, தண்டனை அளிப்பதிலும் உறுதியாக இரு. என்று சொன்னார். அப்பொழுது தான் உன் ராஜ்யத்தில் தர்மமும், நியாயமும் ஓங்கி நிற்கும் என்று சொன்னார். தன் மகனுக்கு நல்ல அறிவுரைகள் செய்த திருப்தியுடன் மனு ஸ்வர்கம் சென்றான். தந்தை சென்ற பின், தன் சந்ததி பற்றிய கவலை இக்ஷ்வாகுவை ஆட்கொண்டது. பல நற் காரியங்களைச் செய்து தேவ குமாரர்கள் போன்ற நூறு மகன்களைப் பெற்றான். இவர்களில் கடைசியாக பிறந்த மகன் மூடன். கல்வியும் ஏறவில்லை. பெரியவர்களை மதித்து நடந்து கொள்ளவும் தெரியவில்லை. அவனுக்கு தண்டன் என்று பெயர் சூட்டினார். இவன் உடலில் தண்டனையாக அடி விழத்தான் போகிறது என்றும் நம்பினார். தேடித்தேடி விந்திய மலைச் சரிவுகளில் ஒரு இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்திற்கு அரசனாக தண்டனை நியமித்தார். மகன் பெயரை மதுமந்தன் என்று மாற்றி, உசனஸ் என்ற சுக்ராசாரியரை, புரோகிதராக இருக்க வேண்டினான். அழகிய வனத்தில், மலைச்சாரலில் நகரை நிர்மானித்து, புரோகிதரையும் நியமித்து ராஜ்ய பாலனம் செய்ய வைத்தான். புரோகிதர் சுக்ராசாரியார் வழி காட்ட ராஜ்ய பாலனம் குறைவற நடக்கவும் ஜனங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். தேவலோகம் போல அந்த நகரம் இருந்தது. புத்தியில்லாத வனாக இருந்தும், இக்ஷ்வாகு மகன் ராஜ்யத்தை நன்றாகவே நிர்வகித்து வந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், தண்ட ராஜ்ய நிவேச: என்ற எழுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (
அத்தியாயம் 80 (617) அரஜா சங்கம: (அரஜாவைக் காணல்)
அகஸ்தியர் சற்று நிறுத்தி, யோசிப்பது போல இருந்தது. பின் தொடர்ந்தார். கதையை தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். காகுத்ஸா, அந்த தண்டன் பல வருஷங்கள் ராஜ்யத்தை ஆண்டான். சாந்தமாக, இடையூறு இன்றி ராஜ்யத்தை ஆண்டான். ஒரு சமயம், சைத்ர மாஸம், பார்கவரின் அழகிய ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான். மனத்தைக் கவரும் அழகிய அந்த வனப் பிரதேசங்களில் வளைய வந்து கொண்டிருந்த பார்கவரின் மகளைக் கண்டு மையல் கொண்டான். புத்தியற்றவன். அருகில் சென்று விசாரித்தான். பெண்ணே, நீ யார், யார் மகள் நீ, சுபமானவளே, என்னை காமன் வாட்டுகிறான், அதனால் தான் உன்னைக் கேட்கிறேன் என்றான். மோகத்தினால் உன்மத்தனாகி நின்றவனைப் பார்த்து பார்கவி மகள், நிதானமாக அறிவுறுத்துவது போல பதில் சொன்னாள். நான் பார்கவரின் (ப்ருகுவின் மகன்-பார்கவன, சுக்ராசாரியார்.) மகள். நேர்மையும் நன்னடத்தையும் உள்ள மகான் என் தந்தை. ராஜேந்திரா, என் பெயர் அரஜா. இந்த ஆசிரமத்தில் வசிக்கிறோம். என்னை பலாத்காரமாகத் தொடாதே. என் தந்தையின் பாதுகாப்பில் இருக்கும் கன்னிப் பெண் நான். அவர் சொல்வதைத் தான் கேட்பேன். அவர் தான் எனக்கு குரு. நீயும் அவர் சிஷ்யனே. அவர் கோபித்துக் கொண்டால் பெரும் ஆபத்து விளையும். அரசனே, நான் என் தந்தையின் விருப்பத்தை, அனுமதியை மீறி எதுவும் செய்ய முடியாது. நீ போய் என் தந்தையிடம் என்னை மணம் செய்து தரும்படி கேள். அதை விட்டு தகாத செயல் எதுவும் செய்தால், பலன் விபரீதமாக இருக்கும். ஜாக்கிரதை. என் தந்தை தவ வலிமை மிக்கவர். கோபத்தால் மூவுலகையும் எரிக்கக் கூடியவர். நீ யாசித்தால் ஒரு வேளை, சம்மதிக்கலாம். இப்படி அரஜா எச்சரித்தும், காம வசமாகிப் போன தண்டன், உன்மத்தனாக தான் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான். தலையில் கை வைத்து அஞ்சலி செய்தான். வேண்டினான். அழகியே, தயை செய். காலதாமதம் செய்யாதே. வரானனே, உன்னைக் கண்டு என் உள்ளம் தகிக்கிறது. உன்னை அடைந்த பின், சாபமோ, வதமோ எதுவானாலும் சரி, நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றான். பயங்கரமான சாபத்தையும் உனக்காக ஏற்றுக் கொள்வேன் என்றான். நான் உன் பக்தன். என்னை ஏற்றுக் கொண்டு அருள் செய்வது உனக்கு உரிய கடமையே. பயப்படாதே. நான் தன் நிலையிழந்து தவிக்கிறேன். உன்னை நேசிக்கிறேன் என்று இவ்வாறு பிதற்றியபடி அவளை பலாத்காரமாக அடைய முயன்றான். அவள் மறுத்ததையும், தடுத்ததையும் சற்றும் லட்சியம் செய்யாமல், நடுங்கும் அவள் உடலை, மேலும் மேலும் தீவிரமாக அணைத்து தன் வெறியைத் தீர்த்துக் கொண்டான். இந்த கோரமான செயலை செய்து விட்டு மதுமந்தன் தன் நகரை அடைந்தான். ஆசிரமத்தின் அருகிலேயே நின்றபடி அரஜா அழலானாள். தேவர்களுக்கு இணையான தன் தந்தையை எதிர்பார்த்து பயத்துடன் காத்திருந்தாள்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், அரஜா சங்கம: என்ற எண்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 81 (618) தண்ட சாப: (தண்டனுக்கு கிடைத்த சாபம்.)
அளவில்லாத தவ வலிமை மிக்க முனிவர், தேவரிஷியான பார்கவர், முஹுர்த்த நேரம் காத்திருந்து விட்டு, பசி மிகுந்தமையால், மகளைத் தேடிக் கொண்டு வந்தார். உடலெல்லாம் புழுதி மண்டி கிடக்க தீனமாக அழுது கொண்டு இருந்த மகளைக் கண்டார். விடியற்காலை சூரிய ஒளி அருணனின் பிடியில் மலினமாக தெரிவது போல கிடந்தாள். ஏற்கனவே பசியால் துடித்துக் கொண்டிருந்தவர் மகளின் நிலையைக் கண்டு பெரும் ஆத்திரம் கொண்டார். மூவுலகையும் எரித்து விடும் ஆத்திரத்துடண் தன் சிஷ்யர்களைப் பார்த்து, தண்டனுடைய விபரீதமான செயலைப் பாருங்கள். அதனால் வந்துள்ள ஆபத்தையும் பாருங்கள், என்றார். கோபத்தில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல ஆனார். இந்த துராத்மா, தன் பந்துக்களுடன் அழியும் நேரம் நெருங்கி விட்டது. நெருப்பில் விரலை விட்டது போல அவனுடைய இந்த தீய செயலின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். f பயங்கரமான பாபத்தைச் செய்திருக்கிறான். பாபத்தின் பலன் விடாது. இன்றையிலிருந்து ஏழு நாட்களுக்குள், பாபம் செய்த அந்த ராஜா, தன் படை பலத்துடன் வதம் செய்யப் படுவான். இந்த மூடனின் ராஜ்யத்தில் நூறு யோஜனை தூரம் புழுதி மண்டி போகட்டும். தண்டனுடைய நிலத்தில் வரும் வாரம் முழுவதும் புழுதிப் பயல் அடிக்கப் போகிறது. மண்ணை வாரி அடிக்கும். எதுவுமே கண்ணுக்குப் புலனாகாது. அத்வானமாகும். ஆசிரமத்து ஜனங்களை எச்சரித்து தண்டன் ராஜ்ய எல்லைக்குள் நுழையாமல் இருக்கச் சொன்னார். இதைக் கேட்டு பார்கவரான சுக்ராசாரியரின் சிஷ்யர்கள், பலர் அந்த பிரதேச எல்லையை விட்டே வெளியேறினர். இப்படி தண்டனை சபித்து விட்டு அரஜாவைப் பார்த்து, துரதிருஷ்டம் பிடித்தவளே, நீ இங்கேயே இரு. உனக்காக இந்த குளம் கட்டித் தருகிறேன். உணவு வகைகளும் குறைவற கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். உன் விடிவு காலத்தை எதிர் நோக்கி காத்திரு என்று சொல்லி விட்டு, வெளியேறி விட்டார். தந்தையும் கை விட்டதையறிந்த அரஜா பெரிதும் வருந்தி அழுதாள். வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் அதை ஏற்றுக் கொண்டாள். பார்க்கவர் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். ஏழு நாட்களில் தண்டனுடைய ராஜ்யம் பஸ்மமாக ஆயிற்று. ப்ரும்மவாதி சொன்னது பலித்தே விட்டது. தண்டன் இந்த விந்த்ய மலைச் சாரலில் ஆட்சி செய்தது கதையாகப் போயிற்று. தர்மத்தை மீறியவனை ரிஷி சபித்த இடம் தண்டகாரண்யம் என்றே பெயர் பெற்றது. அதற்கு முன் ரிஷிகள் ஸ்திரமாக தங்கி இருந்ததால், ஜனஸ்தானம் என்ற பெயரில் விளங்கியது. ராகவா, இது தான் நடந்த கதை. வா, ஸந்த்யா கால ஜபம் செய்யும் நேரம் வந்து விட்டது என்றார். பூர்ண கும்பத்துடன் ரிஷிகள் வந்து விட்டனர். தண்ணீரில் இறங்கி ஸ்நான பானங்களை முடித்துக் கொண்ட பின், அஸ்தமன சூரியனை வணங்கத் தாயாராயினர். வேதம் அறிந்த பெரியவர்களுடன் சூரியனும் அஸ்தமனம் ஆகத் தயாராக வந்து விட்டான். ராமா, நீயும் நீரில் இறங்கு என்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், தண்ட சாப: என்ற எண்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 82 (619) ராம நிவர்த்தனம் (ராமரை வழியனுப்புதல்)
சந்த்யா ஜப தபங்களைச் செய்ய ராமரும் அந்த குளத்தில் இறங்கினார். அப்ஸர, தேவ கணங்கள், சேவித்த குளத்தில் இறங்கி, தண்ணீரை கையில் எடுத்தார். மேற்கு நோக்கி நின்றபடி சந்த்யா ஜபங்களைச் செய்யத் துவங்கினார். சற்று பொறுத்து, முனிவரின் ஆசிரமம் வந்து சேர்ந்தார். முனிவருடன் பழம், காய் வகைகள், ஔஷதிகள் இவைகளை உணவாக விருந்தோம்பலை ரசித்து உன்டார். உயர்ந்த தான்ய வகைகளையும் முனிவர் தயார் செய்து வைத்திருந்தார். அம்ருதம் போல ருசி மிகுந்த அந்த உணவை சாப்பிட்டு நர ஸ்ரேஷ்டன் திருப்தியானான். சந்தோஷமாகவும், திருப்தியுடனும் அந்த இரவைக் கழித்தார். மறுநாள் விடியற்காலை எழுந்து விடைபெற்றுச் செல்ல தயாரானார். முனிவரிடம் வந்து போய் வருகிறேன், அனுமதி தாருங்கள் என்றார். மகாத்மாவான தங்களைத் தரிசித்தது என் பாக்யம். தன்யனானேன். அடிக்கடி தங்களை தரிசிக்க வருகிறேன். இப்பொழுது கிளம்புகிறேன் என்றார். தர்மமே கண்களாக உடைய அந்த முனிவர், ராமரைப் பார்த்து அரசனே, நீ பேசுவதும் நன்றாக இருக்கிறது. பொருத்தமான வார்த்தைகளை, பொருத்தமான இடத்தில் பயன் படுத்தி நீ அழகாக ரசிக்கும் படி பேசுகிறாய். ரகு நந்தனா, நீயே பாவனன். உத்தமமான பிறவி. ஓரு முஹுர்த்த நேரம் உன்னைப் பார்த்தவர்கள் மறக்க மாட்டார்கள். பிறவி பெற்றதன் பயனைப் பெற்றவர்கள் ஆவார்கள். உன் தரிசனம் கிடைக்கப் பெற்ற ஜீவன்களைப் பூஜிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. உன்னை தவறான கண்களோடு பாரப்பவர்கள் நிச்சயமாக நாசமடைவார்கள். தாங்களாக அழிவைத் தேடிக் கொண்டவர்களாக, யம தண்டத்தை வருவித்துக் கொண்டவர்களாக ஆவார்கள். அப்படிப் பட்ட பாவனமான உன் கதையைப் பேசும் யாரானாலும், சொல்பவரும், கேட்பவரும் நல்ல கதியை நிச்சயம் அடைவார்கள். உன் பிரயாணம் சௌகர்யமாக இருக்கட்டும். ராஜ்யத்தை நியாயமாக பாலனம் செய். ஜனங்களுக்கு நீ தான் வழி காட்டி. இவ்வாறு முனிவர் வாழ்த்தி விடை கொடுக்கவும், கை கூப்பி வணங்கி ராமரும் விடை பெற்றார். தன் புஷ்பக விமானத்தில் ஏறினார். அமரர் கூட்டம் சஹஸ்ராக்ஷனை வழியனுப்புவது போல இருந்தது. மற்ற முனிவர்களும் வாழ்த்தி வழியனுப்பினர். மேகங்களுக்கு இடையில் சந்திரன் தெரிவது போல ராமர் அந்த விமானத்தில் ஒளி மயமாக காட்சி தந்தார். முற்பகல் கடந்து விட்ட நிலையில் அயோத்தி வந்து சேர்ந்தார். மாளிகையின் மத்திய அறையில் இறங்கிக் கொண்டு, புஷ்பக விமானத்தை போய் வா, உனக்கு மங்களம், என்று சொல்லி அனுப்பி விட்டார். வாயில் காவலர்களை அழைத்து நான் வந்து விட்டதை பரத, லக்ஷ்மணர்கள் இருவருக்கு மட்டும் தெரிவி. அதிக அமர்க்களம் செய்யாமல் சொல் என்று சொல்லி விட்டு சீக்கிரமாக திரும்பி வா என்றும் சொன்னார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராம நிவர்த்தனம் என்ற எண்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 83 (620) ராஜ சூய ஜிஹீர்ஷா (ராஜ மூசூய யாகம் செய்ய விரும்புதல்)
ராமர் சொன்னபடியே வாசலில் நின்றிருந்த சிறுவர்கள் பரத, லக்ஷ்மணர்களிடம் செய்தி சொல்ல ஓடினர். இருவரும் வந்து ராமரை அணைத்து தங்கள் மகிழ்ச்சியையும், அன்பையும் தெரிவித்து விட்டு நடந்ததை விசாரித்தார்கள். அந்தணருடைய காரியம் நிறைவேறியது. மேலும் சில தர்ம காரியங்களைச் செய்ய விரும்புகிறேன். ராஜ ஸுய யாகம் செய்யலாம். நல்ல பிரவசனங்கள், தர்ம காரியங்கள், இவைகளை நிறைவாகச் செய்யலாம். என் ஆத்மா போன்றவர்கள் நீங்கள் இருவரும், உடன் இருக்க ராஜ ஸுய யாகம் செய்யலாம் என்று ஆசைப் படுகிறேன், இந்த யாகத்தில் தர்மம், பொது ஜன நலம் தான் பிரதானமாக இருக்கும். இந்த யாகத்தை மித்ரன் முறைப்படி செய்து வருணத்வம் பெற்றான். சோமனும் ராஜ ஸுய யாகம் செய்து மூவுலகிலும் நல்ல பெயர் அடைந்ததோடு, அழியாத ஸ்தானமும் கிடைக்கப் பெற்றான். இதைப் பற்றி யோசித்து எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யுங்கள். நன்மை தரும் வகையில் சிறப்பாக செய்ய வழிகளை எனக்குச் சொல்லுங்கள். பரதன் இதைக் கேட்டு வினயமாக, ராமா, தர்மம் உன்னிடத்தில் நிலைத்து இருக்கிறது.f பூமி உன்னை நம்பி இருக்கிறது. புகழ் உன்னை அண்டி வளர்கிறது. பூமியில் உள்ள அரசர்கள், ராஜ்யாதிபதிகள், யாவரும் உன்னை மற்றொரு பிரஜாபதி போல போற்றுகின்றனர். நாங்கள் மட்டுமல்ல, எங்களைப் போலவே, உலகத்தார் அனைவரும், உன்னை மதிப்பும் மரியாதையுனும் மகாத்மாவாக பார்க்கிறார்கள். பிரஜைகள் தங்கள் தந்தையைப் போல நினைக்கிறார்கள். பூமியின், அதிலுள்ள மற்ற ஜீவன்களுக்கும் கதி நீயே தான். அப்படி இருக்க இந்த யாகம் எதற்கு? இதில் ராஜ வம்சங்கள் அழியும். வீணாக கோபமும், அகங்காரமும் தலையெடுக்கும். தன்னை பௌருஷம் உள்ளவனாக காட்டிக் கொள்ள போட்டி வரும். பொறாமை, சண்டை தொடரும். அதனால் புருஷோத்தமா, இந்த யாகத்தைத் துவங்கி வீணாக கலவரம் ஏற்பட்டு மனிதர்கள் மடிவார்கள். நம்மிடம் ஏற்கனவே புகழும், அதிகாரமும் நிறைந்து இருக்கும் பொழுது, இது தேவையா? இதைக் கேட்ட ராமர், அப்படிச் சொல்கிறாயா, என்று பரதனிடம் மேலும் விவரமாக தன் எண்ணத்தை விவரித்தார்.
ஏ பரதா, நீ சொல்வதும் சரியே. இதனால் உன்னிடத்தில் எனக்கு மதிப்பும் கூடுகிறது. பூமியை பாலனம் செய்பவன் என்ற தகுதிக்கேற்ப, உன் கவலையைத் தெரியப் படுத்தினாய். நீ சொல்வதும் சரி. ஜனங்களுக்குத் துன்பம் தரும் செயலை நாம் செய்ய வேண்டாம். ராஜ ஸுய யாகம் வேண்டாம். தன்னை விட சிறியவர்களானாலும், நன்மையைச் சொல்லும் பொழுது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நீ சொல்வதை ஏற்கிறேன் என்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராஜ மூசூய ஜிஹீர்ஷா என்ற எண்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 84 (621) வ்ருத்ர தபோ வர்ணனம். (வ்ருத்ரனின் தவம்)
ராமரும், பரதனும் விவாதித்துக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மணன் தன் அபிப்பிராயத்தைச் சொல்ல வந்தான். அஸ்வமேத யாகம் பாவனமானது. யாராலும் அடக்க முடியாத பலமும், வீர்யமும் உள்ளவர்கள் செய்வது. ரகுநந்தனா. இதை யோசித்துப் பாருங்கள். முன்பு இந்திரனுக்கு வ்ருத்திரனை வதம் செய்ததால் ப்ரும்ம ஹத்தி தோஷம் வந்தது. தன் தோஷத்திலிருந்து விடு பட அவன் இந்த அஸ்வமேத யாகம் தான் செய்தான். தேவாசுரர்கள் ஒற்றுமையாக இருந்த பொழுது, இந்த வ்ருத்திரன், தைத்ய குலத்தில் பிறந்த மகான் என்பதாக அனைவருக்கும் சம்மதமாக இருந்து வந்தான். மூவுலகையும் பாசமும் நேசமுமாக பாலித்து வந்தான். நூறு யோஜனை தூரமே இருந்த ராஜ்யத்தை மூன்று மடங்காக்கினான். செய்நன்றி மறவாதவன், தர்மம் அறிந்தவன், நல்ல புத்தி சாலி என்ற புகழ் பெற்றான். விஸ்தீர்ணமான ராஜ்யத்தை கவனமாக, நீதி தவறாமல் ஆண்டு வந்தான். அவன் ராஜ்யத்தை ஆண்ட காலத்தில் பூமியில் பொன் விளைந்தது. பூக்களில் மணம், ரஸம் நிரம்பியிருந்தது. பழங்கள், காய்கறிகள் ருசியுடன் விளைந்தன. பூமியில் செழிப்பும் வளமும் நிறைந்தது. அதிக உழைப்பு இன்றியே விளைச்சல் மிகுந்தது. எங்கும் வளமாக ஜனங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். காணவே அத்புதமாக இருந்த ராஜ்யத்தில் அவன் திருப்தியோடு, மகிழ்ச்சியோடு இருந்து வந்தான். அவன் மனதில் தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. தவம் செய்வது மிகச் சிறந்தது. மற்ற சுகங்கள் மயக்கும் தன்மை வாய்ந்தவை. மதுரேஸ்வரன் என்ற தன் மகனை ராஜ்யத்தில் அமர்த்தி விட்டு, தான் உக்ரமான தவம் செய்யலானான். எல்லா தேவதைகளும் தவித்தன. இந்திரன் மிகவும் வருந்தினான். விஷ்ணுவிடம் போய் முறையிட்டான். வ்ருத்திரன் உக்ரமாக தவம் செய்கிறான். உலகங்களை ஜயித்து விட்டான். மிக பலசாலியாக ஆகி விட்டான். என் ஆளுமைக்குள் அவன் அடங்கவில்லை. இந்த அசுர ராஜன் இன்னும் தவம் செய்தால் மூவுலகும் இவன் வசத்தில் தான் இருக்கும். இவனை கவனியாது விட்டிருக்கிறீர்களே என்று முறையிட்டான். உங்கள் முன் தான் அவன் அடங்கி இருப்பான் என்பது நிச்சயம். வேறு யாராலும் அவனை அடக்க முடியாது. விஷ்ணுவே, உங்கள் அன்புக்கும் அவன் பாத்திரமாகி விட்டான். அதனால் தான் உலகில் இவன் தலைமை ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஆனால் தேவர்களுக்கு சற்று கருணை காட்டுங்கள். தேவலோக வாசிகளான நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம். உலகில் அமைதியை நிலை நிறுத்த உங்களையே நம்பி வந்திருக்கிறோம். கருணை காட்டு. வ்ருத்திரனை வதம் செய்து எங்களைக் காப்பாய். தேவர்களை எப்பொழுதும் காப்பவன் நீயே. இப்பொழுதும் எங்களைக் காக்க உன்னையே வேண்டுகிறோம்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வ்ருத்ர தபோ வர்ணனம் என்ற எண்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 85 (622) வ்ருத்திர வத: (வ்ருத்திரனை வதம் செய்தல்)
லக்ஷ்மணன் சொல்லிக் கொண்டிருந்த கதையைக் கேட்டுக் கொண்டிருந்த ராமர், வ்ருத்திர வதம் வரைச் சொல்லு என்றார். லக்ஷ்மணன் தொடர்ந்தான். சஹஸ்ராக்ஷன் என்ற இந்திரன், மற்ற தேவர்களுடன் விண்ணப்பித்துக் கொண்டதையடுத்து, விஷ்ணு தேவர்களைப் பார்த்துச் சொன்னார். எல்லா தேவர்களும் இந்திரனுடன் நின்றிருந்தனர். முதலில் நான் வ்ருத்திரனின் நண்பன். இது என் கையை கட்டிப் போடுகிறது. அதனால் உங்களுக்காக நான் வ்ருத்திரனைக் கொல்ல மாட்டேன். மகாசுரன்தான். உங்களுக்கும் நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும். அதனால் ஒரு உபாயம் சொல்கிறேன். அதன்படி நடந்து வ்ருத்திரனை வதம் செய்யுங்கள். நான் என்னையே மூன்றாகப் பிரித்துக் கொள்கிறேன். அப்பொழுது வாஸவன் வ்ருத்திர வதம் செய்ய முடியும். ஒரு அம்சம் வாஸவனிடம் லயிக்கட்டும். மற்றோரு அம்சம் வஜ்ரத்தில் இருக்கும். மூன்றாவது பூமியில் இருக்கும். அப்பொழுது இந்திரன் வ்ருத்திர வதம் செய்யட்டும். புரியாமல் விழித்த தேவர்கள் இது எப்படி ஸாத்யமாகும் என்ற கேள்வியை தங்களுக்குள் அடக்கிக் கொண்டு, அப்படியே ஆகட்டும் என்றனர். நீங்கள் சொன்னால் சரி, சத்ருக்களை அழித்து எங்களைக் காப்பவன் நீங்கள் தானே. உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும், நாங்கள் கிளம்புகிறோம் என்று விடை பெற்றனர். வாஸவனின் உடலில் உங்கள் தேஜஸை சேர்த்து என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் என்றனர். எல்லோருமாக வ்ருத்திரன் தவம் செய்து கொண்டிருந்த மகாரண்யத்தை அடைந்தனர். உத்தமமான தவக் கோலத்தில், உக்ரமாக தவம் செய்து கொண்டிருந்த வ்ருத்திரனைக் கண்டனர். மூவுலகையும் எரித்து விடுபவர் போலவும், ஆகாயத்தை விழுங்கி விடுபவர் போலவும் அசுர ஸ்ரேஷ்டன் தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தே அவர்கள் குலை நடுங்கியது. தோற்காமல் இருப்போமா, இந்த தபஸ்வியை ஜெயிக்க முடியுமா? என்று சந்தேகித்தனர். சஹஸ்ராக்ஷன் தன் சக்தி முழுவதும் பியோகித்து வ்ருத்திரனை அடித்தான். கீழே விழுந்த வேகத்தில், தலை காலாக்னி போல உக்ரமான தவ வலிமையுடன் கூடியதானதால், பூமியில் படவும் உலகமே நடுங்கியது. இவருடைய வதம் நடக்க முடியாதது, உலகமே அழியப் போகிறது என்ற முடிவுக்கு வந்தனர். வ்ருத்திரனை அடித்து விட்டுத் திரும்பிய வாஸவனை ப்ரும்ம ஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. தோஷத்தின் அடையாளம் தெரியவும் இந்திரன் நடுங்கினான். அக்னி முதலான தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். த்ரிபுவன நாதனான விஷ்ணுவை திரும்பத் திரும்ப பூசித்தனர். பிரபோ, நீதான் கதி. உலகில் முன் பிறந்தவன் நீ தானே. எங்கள் தந்தை நீ தானே. உலகை காப்பாற்ற விஷ்ணு என்ற தன்மையை ஏற்றுக் கொண்டாய். உன்னால் வ்ருத்திர வதம் சாத்யமாயிற்று. ஆனால், இந்திரனை ப்ரும்ம ஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டதே. இதிலிருந்து அவனை விடுவி. தேவர்கள் சொன்னதைக் கேட்டு விஷ்ணு சொன்னார். என்னை பூஜித்துக் கொண்டிருந்தால் போதும், நான் இந்திரனை பரிசுத்தமாக ஆக்குகிறேன். புண்யமான அஸ்வமேத யாகத்தைச் செய்யட்டும். அதன் பின் தேவர் தலைமை பதவியை அடைவான். இழந்த செல்வாக்கைப் பெறுவான் .இப்படிச் சொல்லி விஷ்ணு மறைந்தார். தேவர்கள் அவரை ஸ்தோத்திம் செய்து கொண்டே இருந்தனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வ்ருத்ர வத: என்ற எண்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 86 (623) ப்ரும்ம ஹத்யாஸ்தரணம் (ப்ரும்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுவித்தல்.)
வ்ருத்திர வதம் பற்றி சொல்லி முடித்த லக்ஷ்மணன் மேலும் தொடர்ந்து நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான். வ்ருத்திரனை வதம் செய்த பின் இந்திரனுக்கு வ்ருத்திரஹா என்ற பெயர் உண்டாயிற்று. நினைவின்றி உடலைச் சுருக்கிக் கொண்டு படுத்துக் கிடக்கும் பாம்பு போல கிடந்தான். அவன் செயலின்றி கிடக்கவும் உலகமே உற்சாகம் இன்றி ஆயிற்று. உலகத்தில் ஈரம் வற்றியது. காடுகள் வறண்டன. பூமி ஒளியிழந்து வாடியது. நீர் வளமின்றி, அருவிகளும், குளங்களும், குட்டைகளும் பெயரளவுக்கு தெரிந்தன. வறட்சி வெளிப் படையாக தெரிந்தது. தேவர்களும் எதுவும் செய்யத் தோன்றாமல், பயமும் கவலையும் அடைந்தனர். அதன் பின் விஷ்ணு சொன்னதை ஏற்று யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். புரோகிதர்களையும்,உபாத்யாயர்களையும், மகரிஷிகளையும் அழைத்துக் கொண்டு தேவர்கள் இந்திரன் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த இடம் வந்து சேர்ந்தனர். ப்ரும்ம ஹத்தி தோஷத்தால், ஒளியிழந்து வாடிக் கடந்த இந்திரனைக் கண்டனர். அவனை முன் நிறுத்தி அஸ்வமேத யாகத்தைத் துவங்கினர். யாகம் மிகப் பெரிய அளவில் விரிவடைந்தது. அனைவரும் ஏக மனதாக யாகத்தில் ஈடு பட்டனர். யாக முடிவில் அந்த ப்ரும்ம ஹத்தி தோஷமே உருக் கொண்டு வந்து நின்றது. எனக்கு இடம் எங்கே என்று கேட்டது. தேவர்கள் கவலை நீங்கியவர்களாக, உன்னை நான்காக பிரித்துக் கொள் எனவும் அதுவும், தன்னை நான்காக பிரித்துக் கொண்டது. தனக்கு இருப்பிடமாக நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஒரு பாகத்தால், நதிகளில் மழைக்கால நீர் ஓடும் நான்கு மழைக்கால மாதங்களில் வசிப்பேன். பூமியின் ஒரு பாகத்தில் எப்பொழுதும் இருப்பேன். இளம் பெண்களிடம் ஒவ்வொரு மாதமும் மூன்று இரவுகள் வசிப்பேன். ப்ராம்மணர்களைக் கொல்பவர்கள் யாரானாலும், என் நான்காவது பாகம் அவர்களிடம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். தேவர்களும் மகிழ்ச்சியுடன் இந்த வரத்தை அளித்தனர். அவனுக்கு இந்த வரம் அளித்த மாத்திரத்தில், வாஸவன் தன் தோஷம் நீங்கப் பெற்றவனாக ஆனான். பழைய நிலைக்குத் திரும்பி பாவனமான யாகத்தை தானே முன்னின்று செய்து முடித்தான். அப்படிப்பட்ட அத்புதமான யாகம் இது. இதைச் செய்வோம். இந்திரனுக்கு சற்றும் குறைவில்லாத பலமும், வீரமும் உடைய ராமரும் சரி என்று ஏற்றுக் கொண்டார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ப்ரும்ம ஹத்யாஸ்தரணம் என்ற எண்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 87 (624) இலா ஸ்திரீத்வ ப்ராப்தி (இலா பெண் தன்மையடைதல்)
லக்ஷ்மணன் சொல்லி முடித்தவுடன் ராமர், அதை ஆமோதித்தவராக, அப்படியே செய்வோம். வ்ருத்திரவதம், தொடர்ந்து வந்த தோஷம், தோஷ நிவ்ருத்தி இவைகளைப் பற்றி விவரமாக சொன்னாய் என்று பாராட்டினார். முன்பு ஒரு சமயம் கர்தம பிரஜாபதி என்று ஒருவர் இருந்தார். அவர் மகன் பாஹ்வீஸ்வரன். அனிலன் என்றும் பெயர் உடையவன். நீதி தவறாமல் ராஜ்ய பரிபாலனம் செய்து புகழோடு வாழ்ந்து வந்தான். பிரஜைகளை தன் சொந்த மக்கள் போல கவனமாக பாலித்தான். அவனை சுரர்கள், தைத்யர்கள், ராக்ஷஸ, நாக, பன்னகர்கள் அனைவரும் போற்றினர். தர்மமும் வீர்யமும் ஒருங்கினைந்து அவனிடம் புகழை வளர்த்தது. ஒரு சமயம் வேட்டையாடச் சென்றான். தன் வேலையாட்கள், மந்திரிகளுடன் ஒரு சைத்ர மாத ரம்யமான வேளையில் அரண்யத்தில் பல மிருகங்களை வேட்டையாடிக் குவித்தபடி சென்றவன் மகாதேவர் பிறந்த இடம் வந்து சேர்ந்தான். அந்த இடத்தில், ஹரனான மகாதேவன், மனைவி பார்வதியுடன் இருந்தார். அவருடன் அவரைச் சார்ந்த அனைவரும் இருந்தனர். விளையாட்டாக ஹரன், ஸ்திரீ ருபம் எடுத்துக் கொண்டு, அந்த மலையின் அருவியில் இறங்கினார். உடனே அந்த வனத்தில் இருந்த ஜீவராசிகளில் ஆண் வர்கம் முழுவதும் பெண் உருக் கொண்டன. அந்த சமயம் பார்த்து, அரசனான, இலன்-கர்தமருடைய மகன் மிருகங்களை வேட்டையாடித் திருப்தியுறாமல் அங்கு வந்து சேர்ந்தான். காட்டு யானைகள், மான்கள், பக்ஷிகள் யாவையும் பெண் இனமாக இருக்கக் கண்டு, திகைத்தவன், தானும், தன்னுடன் வந்த காவலர் யாவரும் பெண் உருக் கொண்டு விட்டதையறிந்து உணர்ந்த பொழுது பெரிதும் வருந்தினான். பயமும் எழுந்தது. சிதிகண்டரான உமாபதியைத் துதித்தான். தன் படை வீரர்கள், அடியாட்களுடன் அவரைச் சரணடைந்தான். வரதனான அவரும், (எளிதில் மகிழ்ந்து வரம் தரும் இயல்பினர்) சிரித்து, தன் தேவியுடன் கர்தமர் மகனே, எழுந்திரு, எழுந்திரு. ஆணாக ஆக வேண்டும் என்பதைத் தவிர வேறு வரம் கேள் என்றார். மகானான அவர் சொல் மேலும் வருத்தத்தையே அளித்தது. வேறு வரம் கேட்கும் மனநிலையும் இல்லை. பின் சைலசுதாவான உமையை வணங்கி, தேவி, நீ உலகுக்கெல்லாம் அருள் பாலிப்பவள். ஈசன் மனைவியே கருணை காட்டு. அமோகமாக காட்சி தருபவளே, என்னை அருள் கண் கொண்டு பார், என்று வேண்டினான். ஹரனும் அருகில் இருக்கத் தன்னை வேண்டியதன் பொருளை புரிந்து கொண்ட உமா தேவி, ருத்ரனின் சம்மதத்துடன் பதில் சொன்னாள். அவரிடம், தேவனே, தாங்கள் எப்பொழுதும் வரம் தருவதில் ஈடு இணையற்றவர், நான் உங்கள் உடலில் பாதியல்லவா, இன்று நான் வரம் தருகிறேன் என்று சொல்லி அரசனிடம், பாதி ரூபம் ஸ்திரீயாகவோ, புருஷனாகவோ, நீ விரும்பும் வரை இருக்கும் என்றாள். அரசனும் மகிழ்ந்து, தேவி நீங்கள் அனுக்ரஹம் செய்வதானால், ஒருமாதம் ஸ்திரீ, ஒரு மாதம் புருஷன் என்று இருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டான். தேவியும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதித்தாள். ராஜன், நீ புருஷனாக இருக்கும் பொழுது ஸ்திரீயாக இருந்ததை நினைவில் கொள்ள மாட்டாய். அதே போல ஸ்திரீயாக இருக்கும் பொழுது, ஆண் உருவில் இருந்ததை நினைக்க மாட்டாய் என்றாள். இதன் பின் அந்த அரசன் இலா, ஒரு மாதம் ஆணாகவும், ஒரு மாதம் பெண்ணாகவும் வளைய வந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், இலா ஸ்திரீத்வ ப்ராப்தி என்ற எண்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 88 (625) புத சமாகம: (புதன் வந்து சந்தித்தல்)
ராமர் இந்த கதையைச் சொல்லிக் கேட்ட பரதனும், லக்ஷ்மணனும் ஆச்சர்யம் அடைந்தனர். அடுத்து என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ள ஆவலாக ஆயினர். அந்த ராஜா பெண் சரீரம் கிடைத்த பொழுது எப்படி நடந்து கொண்டான்? திரும்ப பழையபடி ஆண் சரீரம் வந்ததும் எப்படி சமாளித்தான்? குதூகலத்துடன் அவர்கள் விசாரிக்கவும் ராமர் தொடர்ந்து சொன்னார். முதல் மாதம் ஸ்திரீயாக இருந்த பொழுது லோக சுந்தரியாக, தன் கீழ் வேலை செய்த ஸ்திரீ ஜனங்கள் சூழ்ந்து நிற்க மகிழ்ச்சியாக இருந்தான். அந்த காட்டில் அலைந்து திரிந்து மகழ்ந்தாள். வாகனங்கள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி விட்டு, மலை சாரல்களிலும, குகைகளிலும், வசித்தாள். அடர்ந்த மலையின் அருகில் ஒரு குளம் இருந்தது. குளக் கரையில் சோமன் மகனான புதனை சந்தித்தாள். அப்பொழுது தான் உதித்த இளம் சூரியனைப் போல இருந்த புதனைப் பார்த்து ஆச்சர்யமடைந்தாள். ஜல மத்தியில் நின்று புதன் கடும் தவம் செய்து கொண்டிருந்தான். தன் முன்னாள் புருஷத் துனைவர்களுடன் சேர்ந்து (அவர்களும் பெண்ணுருவை அடைந்திருந்தனர்) குளத்தை வற்றச் செய்தாள். அவளைக் கண்டதுமே, புதன் காமன் வசமாகி, நீருக்குள் நிற்க முடியாமல் தவித்தான். மூவுலகிலும் சிறந்த பேரழகி இவளே என்று நினைத்தவனாக யாராக இருக்கும், தேவர்களை விட அதிக கவர்ச்சியாகத் தெரிகிறாளே என்று யோசித்தான். தேவ ஸ்திரீகளில், நாக யக்ஷ, கந்தர்வ ஸ்திரீகளில் இது போல கண்டதேயில்லையே என்று யோசித்தான். இது போல ரூப லாவண்யம் மிக அரிதாகத்தான் கிடைக்கும். இவள் எனக்கு ஸமமானவளாக இருப்பாள், இது வரை வேறு யாரும் இவளை மணந்து கொண்டிருக்காவிடில், நான் முயற்சிப்பேன் என்று நினைத்தபடி அருகில் சென்றான். வந்த பெண்களின் பின்னால் தொடர்ந்து அவர்கள் ஆசிரமத்திற்குச் சென்று கூவியழைத்தான். அவர்களும் வந்து புதனை வணங்கி நின்றனர். உங்களில் லோக சுந்தரியாக காட்சி தரும் இவள் யார்? ஏன் இங்கு வந்திருக்கிறாள்? விவரமாகச் சொல்லுங்கள் எனவும் அவர்களும் உற்சாகமாக பதிலளித்தனர். எங்களுக்கு இவள் தான் தலைவி. இவளுக்கு கணவன் இல்லை. எங்களுடன் இந்த காட்டில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறாள். அவர்கள் சொன்னதில் நம்பிக்கை வராமல், தன் தவ வலிமையால் நடந்ததைத் தெரிந்து கொண்ட புதன், அந்த அரசனையும், உடன் இருந்த ஸ்திரீகளையும் கிம்புருஷிகள் என்ற ஸ்தானத்தை அடைவீர்களாக. இந்த மலைச் சரிவிலேயே உங்கள் வாசஸ்தலம் அமையட்டும். இங்கு கிடைக்கும் பழங்கள், காய் வகைகளே உங்கள் உணவாகும் என்றான். ஸ்திரீகளே, கிம்புருஷர்கள் என்பவர்களை கணவனாக அடைவீர்கள் என்றான். புதன் சொன்னபடியே, அந்த பெண்கள் கூட்டம், கிம்புருஷிகள் என்ற நிலையை அடைந்தனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், புத சமாகம: என்ற எண்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 89 (626) புரூரவ ஜனனம் (புரூ ரவன் பிறப்பு)
பரதனும், லக்ஷ்மணனும் இது வரை கிம்புருஷர்கள் பற்றி இப்பொழுது தான் கேள்விப் பட்டவர்ளாக அப்படியா, என்றனர். பிரஜாபதியின் கதையை ராமர் தொடர்ந்தார். தவம் செய்து கொண்டிருந்த புதன் அழகிய ரூபமுடைய அந்த பெண்ணைப் பார்த்து, சோமனுடைய மகன் நான். என்னை ஏற்றுக் கொள், அன்புடன் ஏறிட்டுப் பார் எனவும், தன் ஜனங்களும் தன்னை விட்டுப் போய் விட்ட நிலையில், சூன்யமான அரண்யத்தில் இலா, புதனைப் பார்த்துச் சொன்னாள். நான் இஷ்டம் போல சஞ்சரிக்கிறவள். தற்சமயம் உன் வசத்தில் இருக்கிறேன். நீ விரும்பியபடி செய்து கொள் என்று அனுமதித்தாள். அவள் சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் அவளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். சந்திரனின் புதல்வன் புதன். மாதவ மாதம் க்ஷண நேரம் போலச் சென்றது. அவளுடன் இன்பமாக ஒரு மாத காலம் ஓடி விட்டது. ஒரு மாதம் சென்றபின் சயனத்திலிருந்து எழுந்த ப்ரஜாபதி மகனான இலா, நீருக்குள் நின்று தவம் செய்யும் புதனைக் கண்டான். கைகளை உயரத் தூக்கி எந்த வித பிடிமானமும் இல்லாமல் நின்றபடி தவம் செய்து கொண்டிருந்த புதனைப் பார்த்து, பகவன், இந்த மலை குகைக்குள், என் காவலர்களுடன் வந்தேன். என் சைன்யம் எங்கு சென்றது தெரியவில்லை, என்னைச் சார்ந்தவர்களையும் காணவில்லை என்றான். தன் நிலை மறந்த அரசன் பேசியதைக் கேட்டு, புதன் சமாதானமாக பேசினான். கல் மழை பொழிந்ததில் உன் ஆட்கள் நாசமாயினர். நீயும் மழைக்கு ஒதுங்கியவன் ஆசிரமத்தில் தூங்கி விட்டாய், பயப்படாதே. இங்கு கிடைக்கும் பழங்கள், காய் கறிகளை சாப்பிட்டபடி நீ விரும்பும் வரை நிம்மதியாக இருக்கலாம் என்றான். அரசன் தன் வேலையாட்கள் நாசமானதைக் கேட்டு வருந்தினான். மிக தீனமாக விசாரித்தான். ராஜ்யத்தில் வேலையாட்கள் சூழ இருந்தவன், இப்பொழுது அவர்கள் இல்லாமல் நானும் ராஜ்யத்தை தியாகம் செய்கிறேன். என் மூத்த மகன் சசபிந்து என்பவன், அவன் ராஜ்யத்தை ஆளட்டும். உடன் வந்தவர்கள் காணாமல் போக நான் மட்டும் என் நகரம் எப்படித் திரும்பி போவேன். புதன் அவனை சமாதானப் படுத்தி இங்கேயே இருக்கலாம் என்று சொல்லி ஆறுதலாக பேசினான். ஒரு வருஷம் இங்கேயே இரு. கர்தம புதல்வனே நான் உனக்கு நன்மையே செய்வேன் என்றான். இதைக் கேட்டு இலாவும் சம்மதித்தான். மாத முடிவில் ஸ்திரீயானதும், புதன் அவளை அனுபவித்துக் கொண்டிருந்தான். அடுத்து புருஷனாக ஆனதும் புதனுடன் தவம் சார்ந்த தர்ம காரியங்களை கவனித்துக் கொண்டு பொழுதை செலவழித்தான். ஒன்பதாவது மாதத்தில், இலா புதனுடைய மகனை பெற்றெடுத்தாள். புரூரவஸன் என்ற பெயர் கொண்ட குழந்தையை பிறந்த உடனேயே தந்தையின் கையில் ஒப்படைத்தாள். புதனுக்கு சமமான வர்ணமும், தேஜஸும் உடைய அந்த குழந்தை, மகா பலசாலியாகவும் இருந்தது. மாத முடிவில் திரும்ப புருஷனாக ஆன இலாவை புதன் இனிமையாக பேசியபடி சந்தோஷமாக வைத்திருந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், புரூரவ ஜனனம் என்ற எண்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 90 (627) இலா புருஷத்வ ப்ராப்தி: (இலா புருஷத் தன்மையை அடைதல்)
பரதனும், லக்ஷ்மணனும் பொறுமையை இழந்தவர்களாக ராமரிடம் வினவினர். ஒரு வருஷம், இலாவை தன் மனைவியாக அனுபவித்து வந்தானே, புதன், அதன் பின் அவள் என்ன ஆனாள்? ராமர் தொடர்ந்தார். புதன் புத்திசாலி, தைரியசாலியும் கூட. சம்வர்த்தர், ஸ்யவனர், ப்ருகு புத்ரன், அரிஷ்டநேமி, ப்ரமோதனர், மோதகரம், துர்வாசர் இவர்கள் அனைவரையும் அழைத்து, சபையில் தைரியமாக நடந்தவைகளை விவரித்தான். இதோ, இந்த இலா, கர்தமருடைய மகன், அரசனாக இருந்தான். உங்களுக்கே தெரியும் என்ன நடந்தது என்று. இப்பொழுது இவன் நன்மைக்காக நாம் என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, கர்தமரும் வந்து சேர்ந்தார். இவருடன், மற்றவர்கள் அழைத்ததின் பேரில், புலஸ்தியர், க்ரது, வஷட்காரம், ஓங்காரம் போன்ற மகா தேஜஸ்களும் உருக் கொண்டு வந்தன. கர்தமர் தன் மகனின் க்ஷேமத்திற்காக அவர்களிடம் பேசினார். கேளுங்கள். இந்த அரசன் நன்மை பெற நாம் செய்யக் கூடியது ஒன்று தான். நாம் அனைவருமாகச் சென்று வ்ருஷபத்வஜனான பரமசிவனிடம் சென்று வேண்டிக்கொள்வோம். அந்த தேவனுக்கு பிரியமான யாகம் அஸ்வமேத யாகம். அதைச்செய்வோம். இந்த அரசனைக் காக்க நாம் எல்லோருமாக என்ன செய்யவேண்டுமோ அதை நிச்சயமாக செய்வோம். உத்தமமான அந்தணர்கள் ஒத்துக் கெண்டனர். ருத்ரனைக் குறித்து பெரிய அளவில், யாகம் துவங்கியது. சம்வர்தரின் மகன் பரபுரஞ்ஜயன் மருத் என்று பெயர் பெற்றவன். அவனை யாகத்தை நடத்தி வைக்க நியமித்தனர். விதிப்படி யாகம் நடந்தது. ருத்ரனும் மகிழ்ச்சி அடைந்தார். யாக முடிவில், ருத்ரன் எல்லா முனிவர்களின் எதிரிலேயே, நான் மிகவும் திருப்தியடைந்தேன். இந்த அஸ்வமேத யாகத்தை சிரத்தையுடன் செய்தீர்கள். இந்த இலனுக்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். இதைக் கேட்டு ரிஷிகள் ஒரே குரலில் அவரை துதித்து, இவன் தன் இயல்பான புருஷத் தன்மையை அடைய வேண்டும் என்றனர். மகாதேவனும் அப்படியே என்று சொல்லி அவனை பழையபடி ஆணாக மாற்றினார். இந்த வரமளித்து விட்டு மறைந்து விட்டார். அஸ்வமேத யாகமும் நிறைவுற்றது. பிராம்மணர்களும் தங்கள் இருப்பிடம் சென்றனர். அரசன் பாஹ்வீகம் என்ற தன் பழைய நகரை விட்டு மத்ய தேசத்தில் புதியதாக ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான். சசபிந்து தொடர்ந்து பாஹ்வீக ராஜாவாக நீதி தவறாது, ராஜ்ய பாலனம் செய்து வந்தான். அவன் காலம் முடிந்து அவன் மகன் ஏலன் என்பவன் அரசனானான். அஸ்வமேத யாகத்தின் பலன் உடனே தெரியும். பெண்ணாக உரு மாறிய இலா அரசன் தன் இயல்பை பெற்றது இந்த யாக பலன் தானே என்று முடித்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், இலா புருஷத்வ ப்ராப்தி: என்ற தொன்னூறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 91 (628) யக்ஞ சம்விதானம் (யாகசாலையை நிறுவுதல்)
இப்படி பேசிக் கொண்டிருந்து விட்டு ராமர், லக்ஷ்மணனிடம், வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஸ்யபர், மந்திரிகள், மற்றும் பிராம்மண ஸ்ரேஷ்டர்கள், முக்கியமான பிரமுகர்கள், கொண்ட சபையைக் கூட்டச் சொன்னார். இவர்களை கலந்தாலோசித்த பின் நல்ல லக்ஷணங்கள் கொண்ட அஸ்வத்தை (குதிரையை) விடுவோம். துரிதமாக செயல் படும் இயல்புடைய லக்ஷ்மணன் காலம் தாழ்த்தாது, அனைவரையும் வரவழைத்து சபையைக் கூட்டினான். தான் அஸ்வமேத யாகம் செய்ய விரும்புவதாக அவர்களிடம் பணிவாக கூறி வணங்கிய ராமரை அவர்கள் ஆசிர்வதித்தனர். ருத்ரனை வணங்கி பாவனமான யாகத்தை செய்ய உடனே ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கினர். யாக சம்பந்தமான விவரங்களை ராமர் அவர்களிடம் கேட்டு குறித்துக் கொண்டார். லக்ஷ்மணனுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். மகோத்ஸவம், இதைக் கொண்டாட சுக்ரீவனுக்கு தன் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்து சேர தூதனை அனுப்பு. விபீஷணனுக்கு சொல்லி அனுப்பு. சுற்றத்தாருடன் வரச் சொல். நமக்கு நண்பர்களான, நம் நலம் விரும்பும் அரசர்கள் எல்லோரையும் அழை. தங்கள், உற்றார், சுற்றத்தினர் உடன் வேலையாட்களையும் அழைத்து வரச் சொல். தேசாந்திரம் போய் இருக்கும் அந்தணர்களையும் வரவழை. தபோதனர்களான ரிஷிகள் எங்கு இருந்தாலும் யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பி வரவழை. மனைவி மக்களோடு வந்து சேரச் சொல். நட நர்த்தகர்கள், தாள வாத்யம் வாசிப்பவர்கள், கலைஞர்கள் அனைவரையும் கோமதி நதிக் கரையில் பெரிய யாகசாலை கட்டி அதில் தங்கச் செய்ய ஏற்பாடுகளை துரிதமாக செய். சாந்தி காரியங்களைச் செய்து யாகத்தை ஆரம்பியுங்கள். முக்கியமான காரியம். ஈடு இணையில்லாதது. சிறப்பாக செய்ய வேண்டும். கோமதி நதிக் கரையின் நைமிச க்ஷேத்திரத்தில், வேலைகள் தொடங்கப் படட்டும். வந்தவர்கள் அனைவரும், நன்றாக கவனிக்கப் பட்டு திருப்தியாக, மரியாதைகள் செய்யப் பட்டவர்களாக, சந்தோஷம் அடைய வேண்டும். தேவையான ஆட்களை நியமித்துக் கொள், சீக்கிரமாக ஏற்பாடுகளைச் செய். பரதன் அஸ்வத்தின் முன்னால் போகட்டும். நூறாயிரம் பாத்திரங்களில், தானியங்களும், இருபதாயிரம் எள் கொண்டு செய்யப் பட்ட பதார்த்தங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். சணகம், கொத்துக் கடலை, குலித்த, மாஷாண (உளுந்து), லவணம் (உப்பு), தேவையான எண்ணேய், நெய் முதலானவை, வாசனைப் பொருட்கள், கோடிக் கணக்கில் சுவர்ணம், ஹிரண்யமும் தாராளமாக பரதன் கொண்டு செல்லட்டும். கடை வீதிகளுக்கு நடுவில் நட நர்த்தகர்கள், பாடுபவர்கள், ஆடுபவர்கள், மற்றும் இள வயதினர் கலைஞர்கள் செல்லட்டும். இவர்கள் பரதனின் சைன்யத்தின் முன்னால் செல்லட்டும். நிகமம் அறிந்தவர்கள், உடல் வளத்தை வளர்த்துக் கொண்ட பயில்வான்கள், பிராம்மணர்கள், கட்டுப் பாட்டுடன் வேலை செய்யத் தெரிந்த ஜனங்கள், கோசாத்யக்ஷர்கள் (பணத்தை பாதுகாத்து கொண்டு செல்பவர்கள்), வாழ்த்துப் பாடுபவர்கள், அந்த:புரத்து ஜனங்கள், தாய் மார்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள், காஞ்சனமயமான என் பத்னியும், யாக தீக்ஷையை செய்து வைக்கத் தெரிந்த அறிஞர்களும் பரதனுக்கு முன்னால் செல்லட்டும். தகுதி வாய்ந்த அரசர்கள் வரும்பொழுது அவர்களை வரவேற்று உபசரித்து, தங்கச் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து கொள். பொறுக்கி எடுத்த அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படை. அன்ன, பான, வஸ்திரங்கள், அந்த அரசர்களுடன் வரும் காவல்காரர்கள், வேலையாட்களுக்கும் குறைவில்லாமல் கொடு. சத்ருக்னனையும் அழைத்துக் கொள். சுக்ரீவன் தன் சுற்றத்தாருடன் முன் செல்ல, வேத வித்துக்கள், பிராம்மணர்கள் கூட்டமாக வட்டமாகச் சென்றனர். விபீஷணனும் தன் மனைவி மக்களுடன், மற்றும் சில ராக்ஷஸர்களுடன் வந்து சேர்ந்தான். தீவிரமாக தவம் செய்து வலிமை பெற்ற மகரிஷிகளுக்குத் தானும் தானங்கள் செய்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், யக்ஞ சம்விதானம்: என்ற தொன்னூற்று ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 92 (629) ஹய சர்ச்சா (குதிரையைப் பற்றிய விவாதம்)
எல்லா முன்னேற்பாடுகளையும் குறைவற செய்து விட்டு, பரதனின் தமையனான ராமர், க்ருஷ்ண ஸாரமான-கறுப்புக் குதிரையை விட்டார். ரித்விக்குகளும், லக்ஷ்மணனும் குதிரையை பாதுகாத்துக் கொண்டு உடன் சென்றனர். தான் சைன்யத்தோடு நைமிச க்ஷேத்ரம் சென்று யாகசாலையை பார்வையிட்டார். நல்ல முறையில் யாக சாலை தயாராக ஆவதைக் கண்டு திருப்தியடைந்தார். நைமிச க்ஷேத்திரத்தில் இருக்கும் பொழுது பல அரசர்களும் வந்து காணிக்கை சமர்ப்பித்தனர். ராமரும் அவர்களுக்கு பதில் மரியாதைகள் செய்தார். தகுதி வாய்ந்த உயர் குலத்து அரசர்கள், அவரவர் தகுதிக்கேற்ப அன்பளிப்புகள் கொடுத்தார். உடன் வந்த ஏவல், காவல் வேலை செய்பவர்களுக்கும் அன்ன, பானாதிகள், வஸ்திரங்கள் இவைகளை பரதன், சத்ருக்னனுமாக தந்தனர். வானரங்களும், சுக்ரீவனும், மற்றவர்கள் போலவே ஆடையலங்காரங்களை அணிந்து கொண்டனர். விபீஷணன், தன் உற்றாரான ராக்ஷஸர்களுடன் ஆபரணங்கள் அணிந்தவனாக, மகரிஷிகளுக்கு மரியாதைகள் செய்தான். அஸ்வமேத யாகம் நடந்து கொண்டிருக்கையிலேயே, லக்ஷ்மணன் நடத்திச் சென்ற குதிரையைப் பற்றியும் விமரிசனம் செய்து பேசிக் கொண்டனர். இப்படிப்பட்ட ராஜ சிங்கத்தின் யாகம், உத்தமம் என்பது தவிர வேறு பேச்சேயில்லை. யாசகர்கள் தேஹி என்று கேட்கும் முன் அவர்கள் திருப்தி அடையும் வரை கொடுக்கப் பட்டது. யாக மத்தியில் தான தர்மமும் நிறைய நடந்தது. பலவிதமான கௌடர்கள், காண்டவர்கள், (கௌடர்கள்- வங்காளப் பகுதியைச் சேர்ந்தவர்கள், காண்டர்கள், மேற்குப் பகுதியைச் சேர்ந்த குருக்ஷேத்திரம் அருகில் உள்ள ஊர்.). இவர்கள் வாயிலிருந்து இன்ன பொருள் வேண்டும் என்ற சொல் வெளி வரும் முன் வானர, ராக்ஷஸர்கள் அவர்கள் கையில் கொண்டு வந்து கொடுத்து விட்டதை உணர்ந்தார்கள். யாருமே அழுக்கு வஸ்திரங்களுடனோ, பசி தாகம் வருத்தவோ காணப்படவில்லை. எங்கும் ஜனங்கள் மகிழ்ச்சியுடன் ஆரோக்யமாகவே காணப்பட்டனர். சிரஞ்ஜீவிகளான சில மகான்கள்,இது போல யாகத்தைக் கண்டதுமில்லை, கேட்டதும் இல்லை என்று பாராட்டினார்கள். யாருக்கு என்னத் தேவையோ, கிடைத்தது. தங்கம் விரும்பியவன் தங்கம், ரத்னம் கேட்டவன் ரத்னம் என்று கிடைக்கப் பெற்றார்கள். வெள்ளியும், தங்கமும், வஸ்திரங்களும் கொடுக்க கொடுக்க குறையாமல் இருக்கக் கண்டனர். இந்திரன் செல்வமோ, குபேரன் செல்வமோ, யம, வருணன் இவர்களின் செல்வமோ, இங்குள்ள செல்வத்துக்கு ஈடாகாது என்று பேசிக் கொண்டனர். எங்கும் வானரங்கள், எங்கும் ராக்ஷஸர்கள், கை நிறைய அள்ளி, அள்ளிக் கொடுத்தனர். உணவும், ஆடைகளும் வேண்டிய அளவு தானம் செய்தபடி யாகம் ஒரு வருஷ காலம் வளர்ந்து கொண்டு சென்றது.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஹய சர்ச்சா என்ற தொன்னூற்று இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)