ஸ்ரீமத் ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 41 – 55
அத்தியாயம் 41 (312) தக்ஷிணா ப்ரேஷணம் (தென் திசையில் அனுப்புதல்)
அந்த பெரிய வானரப் படையை கிழக்கு நோக்கி அனுப்பி விட்டு, சுக்ரீவன் தென் திசைக்கு வானரங்களை அனுப்ப முனைந்தான். அக்னி புத்திரனான நீலனையும், ஹனுமானையும், பிதாமகர் (ப்ரும்மா) புத்திரனான, ஜாம்ப3வானையும், மகா பலசாலிகளான சுஹோத்ரன், சராரி, சாரகு3ல்மன் என்ற வானரங்களையும், க3ஜன் க3வாக்ஷன், க3வயன், சுஷேணன், ருஷப4ன் இவர்களையும், மைந்த3ன்,
த்3விவிதன் இவர்களையும், விஜயன், க3ந்த4மாத3னன், உல்கா முகன், அசங்கன் என்ற ஹுதாஸ (அக்னி) புத்திரர்கள் இருவர், அங்கதன் தலைமையில் இருந்த வானரங்கள் என்று வேகமும் விக்ரமும் உடைய வானரங்களை விசேஷமாக தேர்ந்தெடுத்து ஆணையிட்டான். இவர்களை தலைமை தாங்கி நடத்திச் செல்ல அங்கதனை நியமித்தான். பின் தென் திசையைப் பற்றி விவரித்தான். இந்த திசையில் முக்கியமான இடங்கள், கடந்து செல்ல அரிய இடங்கள் என்று வரிசையாக பல தேசங்களை வானர ராஜன், வானரங்களுக்கு எடுத்துச் சொன்னான். ஆயிரம் தலை கொண்டது (சிகரம்) விந்த்யம். பலவிதமான மரங்கள், கொடிகள் அடர்ந்தது. நர்மதா என்ற நதியைக் காண்பீர்கள். கடப்பதற்கரிய இந்த நதியில் பெரும் நாகங்கள் வசிக்கின்றன. இதைச்சுற்றி, மேகலா, உத்கலா, தசார்ண என்ற நகரங்கள், அஸ்வவந்தி, அவந்தீ என்ற நகரங்கள், இவைகளை அணு அணுவாக கண்டு ரசித்தபடி செல்லுங்கள். அடுத்து வரும் த3ண்டகாரண்யம். இதன் மலைகள், நதிக் கரைகள், குகைகள், கோ3தா4வரி நதியினுள் தேடுங்கள். எல்லா இடங்களிலும் நன்றாகத் தேடுங்கள். அதன் பின், ஆந்திர, புண்டிர, சோழ, பாண்டிய, கேரள, அயோ முகம் எனும் இடம் இந்த இடங்களுக்கும் போய்த் தேடுங்கள். இந்த அயோ முகீ எனும் பர்வதம், தாதுப் பொருட்கள் நிறைந்தது. விசித்ரமான சிகரம் உடையது. அழகிய மலர்கள் நிறைந்த காடுகள் இருக்கும். சந்தன வனம் உள்ள இடங்கள், இங்கு நன்றாகத் தேடுங்கள். அங்கு ஒரு திவ்ய நதி பாய்கிறது. காவேரி என்ற பெயரில், அப்ஸர கணங்கள் இதன் கரையில் விளையாடுவர். ப்ரஸன்னமான நீருடன், சுபமாக காட்சி தருவாள். அந்த மலய மலையில், சக்தி வாய்ந்த, ஆதித்யனுக்கு இணையான தேஜஸ் உடைய மகரிஷி அகஸ்தியரைக் காண்பீர்கள். அவரை வணங்கி அனுமதி பெற்றுக் கொண்டு மகானான அவர் மனம் குளிர நடந்து கொள்ளுங்கள். தாம்ரபர்ணி நதியை அடைவீர்கள். இதில் முதலைகள் நிறைய இருக்கும். இதை நீந்தி கடந்து செல்லுங்கள். இந்த தாம்ர பர்ணி நதி, திவ்யமான சந்தன மரங்கள் அடர்ந்து மறைத்திருக்க, அனேக தீவுகளை உடையவளாக, கணவனை நாடிச் செல்லும் பெண் நாணத்துடன் செல்வது போல, சமுத்திரத்தை சென்றடைகிறாள். (நதி-த்3வீபம் உடையவள், தீவுகள், பெண்-த்வீபம், விளக்கை ஏந்தி) இதையடுத்து பாண்டிய ராஜ்யம் வரும். முத்துகளும் மணிகளும் கொண்டு அழகாக அலங்கரிக்கப் பட்ட நகரம். தங்க மயமாக திவ்யமான நகரம். பெரிய பெரிய தாழ்ப்பாள்களை உடைய கதவுகள், முத்துக்கள் இழைத்து செய்யப் பட்டிருக்கும். இவற்றைப் பார்த்துக் கொண்டே செல்லுங்கள். இதன் பின் சமுத்திரக் கரையை அடைவீர்கள். அகஸ்தியர் கவனமாக சிந்தித்து, உலகின் நன்மையைக் கருதி, மகேந்திர மலையை சமுத்திரத்தில் அமிழ்த்தினார். நீருக்குள், இந்த மகேந்திர மலையைக் காண்பீர்கள். விசித்ரமான அழகிய சிகரங்கள், மலைச் சாரல்கள், நதிகள், மரங்கள் என்று மலைகளுக்குரிய எல்லா லக்ஷணங்களும் பொருந்திய மகானான மலையரசன், ஜாதரூபம் (தங்கம்) நிறைந்த ஸ்ரீமான், இந்த மகேந்திர பர்வதம். பலவிதமான மரங்கள், மலர்ந்து கிடக்கும் புஷ்பங்களுடன் கொடிகள், இவைகளுடன் தேவ, ரிஷி, யக்ஷர்கள், முதலானவர்கள், அப்ஸர ஸ்த்ரீகள் இவர்கள், விரும்பி இங்கு வசிக்கிறார்கள். சித்த சாரணர்களும் கூட்டம் கூட்டமாக இங்கு வருவார்கள். அதி மனோஹரமான இயற்கையழகுடன் கூடிய இந்த மலைக்கு பருவ காலங்களில் இந்திரன் வரத் தவறுவதேயில்லை. இங்கு முனைந்து சீதையைத் தேடுங்கள். இதன் மறுபுறம் நூறு யோஜனை தூரம் பரந்து கிடக்கும் கடல். மனிதர்களால் நுழைய முடியாத தீவு ஒன்றும் தெரியும். அங்கும் தேடுங்கள். நன்றாக அலசித் தேடுங்கள். இது தான் நாம் வதம் செய்ய தேடிக் கொண்டிருக்கும் ராவணன் வாஸஸ்தலம். சஹஸ்ராக்ஷனுக்கு சமமான மகிமை வாய்ந்த ராக்ஷஸ ராஜனின் ஊர். இந்த சமுத்திர மத்தியில் அங்கா3ரகா என்ற பெயருடைய ராக்ஷஸி, நிழலைப் பிடித்து இழுத்து வைத்துக் கொண்டு புசிப்பவள். இவர்களுக்கு சந்தேகம் வராதபடி, வந்தாலும் சமயோசிதமாக பதில் சொல்லி தப்பித்துக் கொண்டு நரேந்திர பத்னியைத் தேடுங்கள். இதை தாண்டி சத யோஜனை தூரம் சமுத்திரத்தில் தேடிய பிறகு, சித்த சாரணர்கள் வசிக்கும், மலர்ந்த புஷ்பங்களுடன் கூடிய மரங்கள் அடர்ந்த மலை புஷ்பிதோ என்ற பெயருடன் விளங்கக் காண்பீர்கள். சந்திர, சூரியனின் கிரணங்களுக்கு இணையான பிரகாசத்துடன் சாகர ஜலம் நாலா புறமும் சூழ, ஆகாயத்தை தொட்டு விடும் போல உயர்ந்த சிகரங்களுடன் காணப்படும். தங்க மயமான இதன் ஒரு சிகரத்தில் சூரியனும், வெள்ளியாலான மற்றொரு சிகரத்தில் சந்திரனும் வசிக்கிறார்கள். இந்த மலையை செய் நன்றி மறந்தவர்கள் காண முடியாது. கொடூரமான குணம் உடையவர்களோ, நாஸ்திகர்களோ காண முடியாது. அதை தலையால் வணங்கி அந்த இடத்தை விட்டு கிளம்புங்கள். இதைக் கடந்து நாம் புக முடியாத சூர்யவான் என்ற பர்வதம். பதினான்கு யோஜனை தூரம் வழி நடக்க வேண்டும். வழியும் கஷ்டமானது. இதையும் தாண்டி வைத்யுதோ என்ற பர்வதம். எல்லா காலங்களிலும் புஷ்பிக்கும் மனோகரமான புஷ்பங்களும், பழங்களும் உடையது. இங்கு இஷ்டம் போல சாப்பிடுங்கள். அரிய பழங்களும், காய் கிழங்குகளும், ருசியுடன் இருப்பதைக் காண்பீர்கள். முடிந்தவரை சாப்பிட்டு மகிழுங்கள். இங்கு மது வகைகளும் கிடைக்கும். சந்தோஷமாக குடித்து அனுபவித்து விட்டு மேலே செல்லுங்கள். இதன் பின் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக குஞ்சரம் என்ற மலை காணப்படும். விஸ்வகர்மா அகஸ்தியருக்காக இங்கு மாளிகை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இங்கு ஒரு யோஜனை தூரம் விஸ்தாரமும், பத்து யோஜனை தூரம் உயரமும் உள்ள சர்ப்ப ராஜாவின் ஆலயம் போகவதி தெரியும். பலவிதமான ரத்னங்களும் அலங்காரமாக பதிக்கப் பெற்று, கூர்மையான பற்களும், கொடிய விஷமும் உடைய நாகங்கள் காவல் இருக்க இதில் சர்ப்ப ராஜா வாசுகி வசிக்கிறார். இந்த போகவதி நகரிலும் நுழைந்து மகா கவனமாகத் தேடுங்கள். இதைக் கடந்தும் என்ன தேசங்கள் தென் படுகின்றனவோ, தேடுங்கள். இதையும் கடந்து சென்றால், பெரிய ரிஷபம் இருக்கும். ரிஷபன் என்ற பர்வதம், பலவிதமான ரத்னங்களை உள்ளடக்கியது. கோ3சீர்ஷம், பத்3மகம், ஹரி, ச்யாமம், சந்தனம் என்பவை. உத்தமமான ரத்னங்களான இவை இங்கு தோன்றுகின்றன. அக்னிக்கு சமமான ஒளி மிகுந்த இந்த சந்தனத்தை தவறிப் போய் கூட தொடாதீர்கள். ரோஹிதா என்ற கந்தர்வர்கள், பயங்கரமானவர்கள் அவர்கள் தான் இந்த வனத்தை காவல் காத்து வருகிறார்கள். ஐந்து கந்தர்வ தலைவர்கள், சூரியனைப் போல காந்தியுடன் இருப்பார்கள். சைலூஷன், க்3ராமணி, சித்ரு, ஸுப்ரோ, பப்ரூ, இவர்கள் தவிர, ரவி சோம, அக்னி இவர்கள சரீர தாரிகளாக வசிக்கும் இடம். புண்ய கர்மாக்களை செய்தவர்கள் இருக்கும் இடம். பூமியின் முடிவில் ஸ்வர்கத்தையும் ஜயித்த பித்ரு ஜனங்கள் இருக்கும் இடம். அங்கு நம்மால் நுழைய முடியாது. யமனுடைய ராஜதானி. கடும் இருட்டு சூழ்ந்திருக்கும். வானர வீரர்களே, இது வரை தான் உங்களால் செல்ல முடியும். நீங்கள் நுழையவோ, தேடவோ இது தான் எல்லை. இதை தவிர வேறு இடங்கள் தென்பட்டாலும், அங்கும் தேடுங்கள். இதன் பிறகும் காணவில்லை என்றால், மற்ற இடங்களிலும் தேடுங்கள். வைதேஹி இருக்கும் இடத்தை தேடிக் கண்டு பிடித்து ஒரு மாதத்திற்குள் திரும்பி விடுங்கள், யார் வந்து ஒரு மாதத்திற்குள் கண்டேன் சீதையை என்று சொல்கிறார்களோ, அவன் எனக்கு சமமான அந்தஸ்தும், போகமும் கிடைக்கப் பெறுவான். என் உயிரை விட எனக்குப் பிரியமான செய்தி அது தான். எனக்கு பிரிய பந்துவாக ஆவான். அவன் இது வரை தவறு செய்திருந்தாலும் மன்னிக்கப் பெறுவான். நீங்கள் எல்லோருமே அளவில்லாத பராக்ரமம் உடையவர்கள். நல்ல குடியில் பிறந்தவர்கள். குண நலன்கள் நிரம்பப் பெற்றவர்கள். ராஜ குமாரியை தேடிக் கண்டு வாருங்கள், அதற்கு இணையாக, அதற்கு மேலும் நன்மையைப் பெறுவீர்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், தக்ஷிணா ப்ரேஷணம் என்ற நாற்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 42 (313) ப்ரதீசீ ப்ரேஷணம் (மேற்கு நோக்கி அனுப்புதல்)
தென் திசை நோக்கிச் செல்ல வானரர்களை தயார் செய்து, வழி சொல்லி அனுப்பி விட்டு, சுஷேணன் என்ற பெரிய வானரத்தை அழைத்துச் செய்ய வேண்டிய முறைகளை விவரிக்கலானான். பெரிய மேகம் போல இருந்த சுஷேணன் தாரையின் தந்தை. வாலியின் மாமனார். சுக்ரீவன் அவரை அணுகி வணங்கி அஞ்சலி செய்தவனாக மேற்கு திசையில் அவர் போய் தேட வேண்டிய இடங்களை வரிசைப் படுத்தி விவரமாகச் சொன்னான். மாரீச மகரிஷியின் புத்திரனும், நல்ல ஆற்றல் வாய்ந்த மகானுமான, சுஷேணன் மற்றும் பல வீரர்கள் சூழ நின்றிருந்தார். வைனதேயனுக்கு சமமான பிரகாசமும் புத்தியும், விக்ரமும் நிறைந்தவர். மற்றும் பல மரீசி புத்திரர்கள், மாரீசர்கள் வந்திருந்ததையும் கவனித்து, அவர்கள் பலத்தையும் ஆற்றலையும் அறிந்தவன் ஆனதால், வினயமாக பேசினான், சுக்ரீவன். இரண்டு நூறாயிரம் வீரர்கள், சுஷேணர் தலைமையில் வைதேஹியைத் தேடுங்கள். பெரிய ராஷ்டிரங்களையும், நிறைந்து பரந்து கிடக்கும் ஜன பதங்கள், நகரங்கள், அழகிய பெரிய நகரங்கள் எங்கும் தேடுங்கள். புன்னாக குக்ஷி என்ற இடம், வகுலம், உத்தாலகம் இவை ஜனங்கள் நிறைந்து இருக்கும். அதே போல தாழம்பு மண்டிக் கிடக்கும் இடங்கள் எங்கும் தேடுங்கள். ஒவ்வொரு நதியின் ஆரம்பத்திலிருந்தும், அதன் வழி பூராவும் தேடுங்கள். இங்கு நதிகள் குளிர்ந்த நீரையுடையவை. வேகமாக பிரவகித்துச் செல்பவை. தபஸ்விகளின் அரண்யங்கள், காடுகள், மலைகள், பாலைவனமாக வெறிச்சிட்டுக் கிடக்கும் மரு பூமிகள், பெரும் கற் பாறைகள், மற்றும் மலைகளே கோட்டை போல அமைந்துள்ள மேற்கு திசையில் நன்றாகத் தேடுங்கள். மேற்குத் திசையில் போய் நீங்கள் சமுத்திரத்தை அடைவீர்கள். அந்த கடல், திமிங்கிலம், நக்ரம் (ஆமை), முதலை, முதலியவை நிறைந்து, குறைவில்லாத ஜலத்துடன் அலை மோதிக் கொண்டு இருக்கும். இங்குள்ள தாழம்பூ புதர்களிலும், தமாலம் அடர்ந்த காடுகளிலும், தென்னந்தோப்புகளிலும், வானரர்களே, இஷ்டம் போல குதித்து விளையாடுங்கள். இந்த இடங்களில் சீதையைத் தேடுங்கள். ராவணன் இருக்கும் இடத்தை தேடுங்கள். அலைகள் மோத இருக்கும் பர்வதங்கள், காடுகள், முரசீ என்ற பட்டினம், அழகிய ஜடீபுரம், அவந்தி, அங்கலேபா, தவிர, இதுவரை கண்டிராத வனப் பிரதேசங்களும், வரும். ராஷ்டிரங்களும் பட்டினங்களும் விசாலமாக இருக்கும். சிந்து நதி சாகரத்தில் சங்கமமாகும் இடத்தில், ஒரு பர்வதம், ஹேமகிரி என்ற பெயருடைய, நூறு சிகரங்களையுடைய பெரிய மலை. பெரிய பெரிய மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும். இதனுடைய சாரல்களில், சிங்கங்கள் விளையாடும். திமிங்கிலம், மீன்வகைகள், யானைகள் இவைகளும் மர நிழலில் காணப் படும். மலையுச்சியில் காணப்படும் சிங்கத்தின் குகைகளில், இந்த யானைகளும் மதர்ப்புடனும், திருப்தியுடனும் வளைய வரும். இவைகளின் பிளிறல், இடி இடிப்பது போல இருக்கும். இந்த மலையின் சிகரங்கள் ஆகாயத்தை தொட்டு விடுவது போல உயர்ந்து இருக்கும். விசித்ரமான தாவரங்கள் நிறைந்தது. இந்த இடங்களில் வேகமாகத் தேடுங்கள். இந்த சமுத்திரக் கோடியில், பொன் நிறத்தில் நூறு யோஜனை தூரம், கடக்க முடியாத மலைத் தொடரைக் காண்பீர்கள். இருபத்து நான்கு கோடி கந்தர்வர்கள், சக்தி வாய்ந்த மகான்கள், விருப்பம் போல உருவம் எடுக்க வல்லவர்கள், அக்னி போன்ற தேஜஸ் உடைய இவர்களை வானரங்கள் இடையூறு எதுவும் செய்யாமல் விலகிச் செல்லுங்கள். இந்த பிரதேசத்து பழங்கள் எதையும் சாப்பிட வேண்டாம். இவர்கள் ஆற்றல் மிகுந்தவர்கள், எதிர்த்து நின்று எளிதில் சமாளிக்க முடியாது. இவர்கள் பழ, காய்கறி தோட்டங்களைக் கூட நல்ல பாதுகாவலுடன் வைத்திருப்பார்கள். அதற்காக பயப்படத் தேவையில்லை. உங்கள் வானர இயல்பாக நடந்து கொள்ளுங்கள். இந்த இடங்களில் ஜானகியைத் தேடுங்கள். அங்கு வைடூரிய வண்ணத்தில், மரங்களும், கொடிகளும் அடர்ந்த வஜ்ரோ என்ற பெரிய மலை இருக்கிறது. நூற்றுக் கணக்கான குகைகள் இருக்கும். இங்கு சற்று பிரயத்னத்துடன் தேடுங்கள். சமுத்திரத்தில் கால் பாகம் சக்ரவான் என்ற பர்வதம் இங்கு ஆயிரம் ஆரங்கள் உடைய சக்ரம் விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பட்டது. இங்கு தான் புருஷோத்தமன், பஞ்சமனான தானவ அரசன், ஹயக்ரீவனைக் கொன்று, சங்கையும், சக்ரத்தையும் இவனிடமிருந்து கைப்பற்றினார். இதன் விசாலமான மலைச் சாரல்களில். குகைகளில் ராவணனையும், வைதேஹியையும் தேடுங்கள். அறுபத்து நான்கு யோஜனை தூரத்தில் வராஹம் என்ற பர்வதம் தென்படும். சுவர்ணமான சிகரங்களும், ஆழமான கடல் நடுவில் கம்பீரமாகத் தெரியும். இதற்கு முன்னால் ஜ்யோதிஷம் என்ற ஜாத ரூப மயமான புரம், நகரம் உள்ளது. இங்குதான் துஷ்டனான நரகன் என்ற தானவ ராஜா வசிக்கிறான். இந்த இடத்திலும், மலைச் சாரல்களிலும், ராவணனை, வைதேஹியைத் தேடுங்கள். இந்த மலையரசனைத் தாண்டி, சமவெளி வரும். இந்த மலையும் பெருகி ஓடும் அருவிகளுடன், நல்ல இயற்கையழகுடன் காணப்படும். இதில் யானைகள், வராஹங்கள், சிங்க, வ்யாக்ரங்கள் எங்கும் கர்ஜித்த வண்ணம் இருக்கும். தங்கள் குரலையே கேட்டு மகிழ்ந்து, திரும்ப கத்தும். இங்குதான் பாகசாஸனன் எனும் மகேந்திரன், ஹரிஹயனாக, தேவர்களால் அபிஷேகம் செய்து வைக்கப் பட்டான். இந்த மலை மேகலான், (தொடர்ச்சி மலை) என்று பெயர் பெற்றது. மகேந்திரன் பாலிக்கும் இந்த மலையைக் கடந்து ஆயிரம் சிகரங்களையுடைய மலைத் தொடரைக் காண்பீர்கள். இளம் சூரியனின் வண்ணத்தில் தங்கத் தகடு போல ஜொலிக்கும், மஞ்சள் நிறப் பூக்களுடன், இந்த மலைகள் பார்க்கும் இடமெல்லாம் கண்களை பறிக்கும். இதன் நடுவில் மலைகளுக்கு அரசனான மேரு மலை தெரியும். வடக்கில் உள்ள மலையரசன் தான். ஒருமுறை பிரஸன்னமான ஆதித்யன் வரம் கொடுத்தார். சைலேந்திரனைப் பார்த்து இவையனைத்தும் உன்னைச் சார்ந்தே இயங்கும். இரவும் பகலும் என் தயவால் காஞ்சனமாகவே பிரகாசிக்கும். இங்கு தேவ கந்தர்வர்கள் வசிப்பார்கள். இவர்களும் சிவந்த நிறமாக காட்சியளிப்பார்கள். உலகில் தேவர்களும், மருத்கணங்கள், வசுக்கள், தேவலோக வாசிகள், இங்கு வந்து மேருவின் மேற்குப் பகுதியான உன்னிடத்தில் மாலை நேர சந்த்யா வந்தனம் செய்வார்கள். ஆதித்யனை வணங்குவர். சூரிய நமஸ்காரம் செய்வர். இவ்வாறு இவர்கள் துதி செய்து வணங்கியபின், அஸ்தமன மலைக்குப் பின் யார் கண்ணிலும் படாமல் சூரியன் மறைகிறான். பத்தாயிரம் யோஜனை தூரம், இந்த திவாகரன் அரை முஹுர்த்த நேரத்தில் கடந்து வேகமாக மலை வாயில் விழுகிறான். இந்த மலையின் சிகரத்தில் மிகப் பெரிய மாளிகை, மாடங்களும், கோபுரங்களுமாக, விஸ்வகர்மா கட்டி வைத்திருக்கிறார். அடர்ந்த மரங்களும், அதில் பக்ஷிகளின் கூக்குரலுமாக மிகவும் அழகாக இருக்கும். வருணன் கையில் பாசத்துடன் இங்கு வசிக்கிறான். மேரு மலைக்கும் அஸ்தமன மலைக்கும் இடையில், பத்து கிளைகள், தலைகள் போலத் தெரிய, தால மரங்கள் வரிசையும், வேதிகம் எனும் யாக சாலைகளும் உள்ளன. இங்கு எல்லா இடங்களிலும், கோட்டைகளிலும், நதிகளிலும், அருவிகளிலும், ராவணனை, வைதேஹியைத் தேடுங்கள். இங்குதான் மேரு சவர்ணி என்ற மகரிஷி இருக்கிறார். தன் கடும் தவ வலிமையால் ஆற்றலும், தேஜஸும் கூட, ப்ரும்மாவுக்கு இணையாக மேரு சவர்ணி என்ற பெயரும் பெற்றார். இவர் பெயரைச் சொல்லி விசாரிக்கலாம். இவரை அடி பணிந்து வணங்கி, மைதிலியைப் பற்றிச் சொல்லி, விசாரியுங்கள். இதுவரை உலகில் தாமஸமான இருட்டு மறைய, ஒளி வீசி உலகை காத்த பாஸ்கரன், பகல் பொழுதின் முடிவில் இங்கு மறைகிறான். வானர வீரர்களே, இது வரை தான் நீங்கள் செல்ல முடியும். இதற்கு அப்பால், பாஸ்கரன் இல்லாத, எல்லையில்லாத பரந்த வெளியைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. சீதையைக் கண்டு கொண்டு, ராவணின் இருப்பிடத்தையும் தெரிந்து கொண்டு அஸ்தமன மலை வரை தேடி விட்டு, மாதம் முடியுமுன், திரும்பி வாருங்கள். ஒரு மாதத்திற்கு மேல் எங்கும் தங்க வேண்டாம். அதற்கு மேல் தாமதம் செய்பவர்கள் என்னால் வதம் செய்யப் படுவீர்கள். வானர வீரர்களே, நீங்கள் சூரர்களே. உங்களுடன் ஆற்றல் மிகுந்த என் மாமனாரும் வருவார். நீங்கள் அனைவரும் விக்ரமம் உடையவர்கள், செயல் திறன் உடையவர்கள் என்பதில் சந்தேகமில்லை. உங்களிடம் ஒப்படைத்த வேலையை செய்து முடிப்பீர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பதையும் நான் அறிவேன். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள். மேற்குத் திசையில் அலசித் தேடுங்கள். நரேந்திர பத்னியை கண்டு கொண்டபின், நாம் நம் பொறுப்பை நிறைவேற்றியவர்களாக ராகவன் சமீபம் செல்வோம். இதைத் தவிர, இந்த காரியத்திற்கு அனுகூலமாக நீங்கள் எதுவும் செய்ய விரும்பினாலும் செய்யுங்கள். தேச காலங்களை அனுசரித்து, உங்கள் மனதில் பட்டதைச் செய்யுங்கள். இதன் பின் சுஷேணர் தலைமையிலான வானர படை, நிபுணனான சுக்ரீவன் சொன்னதை ஏற்று, விடை பெற்றுக் கொண்டு, வருணனின் திசையான, வருணன் பாலிக்கும் மேற்கு திசையில்சென்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ப்ரதீசீ ப்ரேஷணம் என்ற நாற்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 43 (314) உதீசீ ப்ரேஷணம் (வடக்கு நோக்கி அனுப்புதல்)
மாமனார் சுசேஷணரை வழி அனுப்பி விட்டு, வீரனான சதபலி என்பவரை நோக்கித் திரும்பினான். தனக்கும், ராகவனுக்கும் நன்மையுண்டாக, அந்த வானரேந்திரனிடம், பேசினான். உங்களைப் போலவே வீரர்களாக நூறாயிரம் வானரர்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். வைவஸ்வதனுடைய மகன் உட்பட உங்கள் மந்திரிகளை அழைத்துக் கொள்ளுங்கள். இமய மலையை அடுத்து உள்ள வட தேசத்தில் ராமபத்னியான வைதேஹியை தேட கிளம்புங்கள். இந்த காரியத்தில் நாம் வெற்றி பெற்று விட்டால், ராக4வனிடம் பட்டுள்ள கடனிலிருந்து விமோசனம் பெறுவோம். ராகவனுக்கு செய்ய வேண்டிய பிரதி உதவியை செய்தவர்களாக ஆவோம். ராகவன் மகான். நமக்கு மிகப் பெரிய உதவியைச் செய்திருக்கிறான். இந்த உதவிக்குப் பதிலாக நாமும் ஏதாவது செய்தால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும். நம் பிறவி பயனுடையதாக ஆகும். நம்மை, முன் பின் தெரியாத ஒருவர் உதவி கேட்டு செய்தாலே, மிகப் பெரிய புண்ய காரியமாக கருதப் படுகிறது. அப்படியிருக்க, மிகப் பெரிய உதவியை நமக்கு செய்தவர்களுக்கு நாம் பதில் உதவி செய்யாமல் இருக்கலாமா? இந்த நிலையில் நாம் ஜானகியை கண்டு பிடித்து சொல்வது தான் நாம் உடனடியாக செய்ய வேண்டியது. அதனால், நீங்கள் எல்லோருமே, தலைவனான என் நன்மையை நாடுபவர்கள். இந்த காரியத்தைச் செய்யுங்கள். எனக்காக. ராக4வனோ நரசத்தமன்( மனிதர்களில் உயர்ந்தவன்) நம்மிடத்தில் விசேஷமான அன்பு கொண்டவன். இந்த வட திசையில் உள்ள வனங்கள், கோட்டைகள், நதிகள், மலைகளை சார்ந்த இடம், மற்றும் எல்லா இடங்களிலும், நீங்கள் உங்கள் அறிவை பயன்படுத்தி, தேடுங்கள். இங்குள்ள மிலேச்சர்கள் (வெளி நாட்டினர்), புலிந்தர்கள், சூர சேனர்கள், ப்ரசதல தேசத்தவர், ப4ரத வம்சத்தினர், குரு வம்சம், பத்3ரகர்கள், சீனர்கள், பரமசீனர்கள், நிஹாரர்கள் என்பவர்கள், இங்கு திரும்பத் திரும்ப தேடுங்கள். இமய மலையின் சமவெளி பிரதேசங்களில் அலசித் தேடுங்கள். லோத்ர, பத்மக, புதர்களில் தேவ தாரு வனங்களில், ராவணனை, வைதேஹியைத் தேடுங்கள். இதன் பின் தேவ கந்தர்வர்கள் வசிக்கும் சோமாஸ்ரமம் சென்று, காலன் என்ற பெயருடைய பெரிய மலைச் சாரலை அடையுங்கள். இதனுடைய உயர்ந்த சிகரங்களில், சமவெளிகளில், குளங்களில், மஹாபா4காவான (பாக்யம் செய்தவள்) ராமபத்னி, அவளைத் தேடுங்கள். இதைக் கடந்து செல்லும், ஹேம க3ர்ப்ப4ம் என்ற மலையரசனைக் காண்பீர்கள். இதன் பின் சுத3ர்ஸனம் என்ற பர்வதம் வரும். இதன் பின் தேவசக2ன் என்ற பர்வதம் பக்ஷிகளுக்கு இருப்பிடமானது. பல விதமான மரங்களும், பலவிதமான பக்ஷி கணங்களும் நிறைந்தது. இந்த காட்டின் புதர்களில், அருவிகளில், குகைகளில், ராவணனை, வைதேஹியைத் தேடுங்கள். இதைக் கடந்து ஆகாசம் நூறு யோஜனை தூரம். பர்வதமோ, நதியோ, விருக்ஷமோ (மரமோ), உயிருள்ள ஜீவன்களோ எதுவுமே இருக்காது. வெட்டவெளி மட்டுமே. சீக்கிரமாக இதைக் கடந்து, கைலாஸ மலையை அடைந்து விடுங்கள். வெண்மையான இந்த சிகரத்தை அடைந்து மகிழ்ச்சி அடைவீர்கள். இங்கும் விஸ்வகர்மாவால் குபே3ரனுக்காக கட்டப் பட்ட ப4வனம் உள்ளது. வெண் மேகம் போன்று, தங்கத்தால் இழைத்து அலங்கரிக்கப் பட்டிருக்கும். இங்கு விசாலமான நளினீ என்ற நதி ஏராளமான கமல, உத்பல புஷ்பங்களுடன் காணப் படும். அப்ஸர கணங்கள் இதை பயன் படுத்துகின்றனர். ஹம்சங்களும் காரண்டவ பக்ஷிகளும், வளைய வரும். இங்கு வைஸ்ரவன ராஜா, எல்லா ஜீவ ஜந்துக்களாலும் பூஜிக்கப் படுபவர், அரசனாக இருக்கிறார். இங்கு யக்ஷ ராஜாவான த4னத3ன், ரகஸ்யமாக பாதுகாவலுடன் சந்தோஷமாக இருக்கிறார். இவருடைய மாளிகை சந்திரன் போல் இருக்கும். பர்வதங்களிலும், குகைகளிலும் வைதேஹியைத் தேடுங்கள். க்ரௌஞ்சம் என்ற மலைச் சிகரம் சென்று இதில் ஒரு பள்ளம் (வளை) நுழைய முடியாமல் அமைந்திருக்கும். பயப்படாதவர்கள் உள்ளே செல்லுங்கள். இதில் நுழைவது கடினம் என்பது பிரஸித்தம். (கேள்விப் பட்டிருக்கிறோம்). சூரியனுக்கு சமமான பிரபையுடைய மகாத்மாக்கள் வசிக்கிறார்கள். தேவர்களே பூஜிக்கும், மகான்களான மகரிஷிகள் பலர் இங்கு இருக்கிறார்கள். க்ரௌஞ்ச குகைகள் தவிர, மற்ற சாரல்கள், சிகரங்கள், சமவெளிகள், பள்ளத் தாக்குகள் இங்கெல்லாம் தேடுங்கள். க்ரௌஞ்ச சிகரத்தை நன்றாக கவனித்து பார்த்து, மரங்களே இல்லாத காம சைலம் எனும் இடத்தை, மானஸம் என்ற (விளையாடும் இடம்), பறவைகளின் இருப்பிடம், இங்கு தேவ, தானவ, ராக்ஷஸர்கள் மற்றும் எந்த ஜீவ ஜந்துவும் நுழைய வழியில்லை. இங்கும் எல்லா இடங்களிலும் தேடுங்கள். மலை சாரல்கள், மலைக் குன்றுகள் முதலிய இடங்களில் தேடுங்கள். க்ரௌஞ்ச மலையைத் தாண்டி மைனாகம் என்ற பர்வதம் மயனுடைய மாளிகை இங்கு அவன் தானாகவே கட்டிக் கொண்டது, தெரியும். தா3னவனான இவன் இருக்கும் இடத்தில், அஸ்வ முகம் கொண்ட ஸ்திரீகள் வசிக்கிறார்கள். இதன் பின் சித்தர்கள் வசிக்கும் ஆசிரமம் வரும். சித்3த4ர்கள், வைகா2னஸர்கள், பா3லகில்யா: என்ற தபஸ்விகள் – மாசற்ற இந்த தபஸ்விகளை வணங்கி, சீதையைப் பற்றி விசாரியுங்கள். தவ வலிமை, சித்திகள் பெற்ற இந்த மகான்களிடம் பணிவாக பேசுங்கள். இங்கு ஹேம புஷ்கரம் என்ற குளம், வைகா2னஸ என்ற குளம் மறைந்து கிடக்கும். இங்குள்ள ஹம்சங்கள் இளம் சூரியனின் நிறத்தில் சஞ்சரிக்கும். சுபமாக தென்படும். சார்வபௌ4மம் என்ற குபேரனுடைய அரண்மனையில் யானை தன் துணைகளான பெண் யானைகளுடன் எப்பொழுதும் சுற்றிக் கொண்டிருக்கும். இந்த குளத்தைத் தாண்டினால், சூரிய சந்திரனே இல்லாத, நக்ஷத்திர கணங்களோ, மேக மண்டலமோ இல்லாத, சப்தமின்றி வானவெளி, தெரியும். இந்த தேசத்தில் சூரியனுடைய கிரணங்கள் மட்டும் ஒளியைத் தருகின்றன. இங்கு தங்கள் தவம் நிறைவேறிய தபஸ்விகள் தேவர்கள் போல ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பது போல தெரிவர். இவர்கள் தேஜஸ், உடல் காந்தியே இவர்களைக் காட்டிக் கொடுக்கும். இதைக் கடந்து சைலோதா என்ற கீழ் நோக்கி பாயும் நதி, இதன் இரு கரைகளிலும் கீசகம் என்ற மூங்கில் காடு. இவைகள் தான் இந்த சித்தர்கள் போக வர, போக்கு வரத்து சாதனமாக, நதியைக் கடக்க உதவுகின்றன. வடக்கில் இருக்கும் இந்த சித்தர்கள், தாங்கள் செய்த புண்ய கர்மாக்களின் பயனாக இங்கு வசிக்கும் பேறு பெற்றவர்கள். குரவக எனும் புஷ்பங்கள் நிறைந்த இடத்தில் வசிக்கும் பேறு பெற்றுள்ளனர். மஞ்சள் நிற தாமரைப்பூ நிறைந்த குளத்தில் ஸ்நான பானங்களை முடித்துக் கொள்வார்கள். இது போல நீல வைடூரியம் போன்ற இலைகள் மறைக்க ஆயிரக்கணக்கான நதிகள் இங்குள்ளன. சில வனங்களில் உத்பலமே செக்கச் சிவக்க காணப்படும். தங்க நிறமான புஷ்பங்களும் அடர்ந்து பூத்திருக்கும். இதனால் இந்த நீர் நிலைகளே பொன் நிறம் பெற்று இளம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் காணப்படும். விலையுயர்ந்த மணி பத்ரம், சிவந்த கேஸரி (குங்குமப் பூ), விசித்ரமான நீலோத்பல வனங்கள் என்று இந்த தேசம் நாலாபுறமும் சூழ்ந்து கிடக்கும். இங்குள்ள நதிகளின் மணலில், முத்துக்களும், மணிகளும், கணக்கில்லாமல் அடித்துக் கொண்டு வரப் படும். தங்கத் துகள்களுமாக பெரும் செல்வம் நிறைந்து வரக் காணலாம். பெரிய மரங்கள் இதில் மூழ்கி அமிழ்ந்து கிடப்பதால், புஷ்பங்கள் மட்டும் வெளியே தெரிய, நெருப்பு குவியல் போலவும், தங்கத் தகடு போலவும், நடு நடுவில், நீர் மட்டத்தில் காணக் கிடைக்கும். இங்குள்ள மரங்கள் நித்ய புஷ்பா:- எப்பொழுதும் பூக்கக் கூடியவை. எல்லா பருவ காலங்களிலும் இலைகள் நிறைந்து காணப்படும். தொட்டாலே திவ்யமான வாசனை தரக் கூடியவை. எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வல்லவை. சில மரங்கள் பல உருவங்களில், ஆடைகளாகத் தரும். மற்ற வகை மரங்கள் பழ வகைகளை கணக்கில்லாமல் தரும். சில முத்து, வைர, ஆபரணங்களை அளிக்கக் கூடியவை. ஸ்திரீகளுக்கு அனுரூபமாக, தனியாக, ஆண்கள் அணிந்து கொள்ள ஏற்றவை என்று ஆபரணங்கள். எந்த பருவ காலமானாலும், அதற்கு ஏற்ப பழங்களைக் காணலாம். இங்குள்ள உத்தமமான மரங்கள் மிகவும் அரிதானவை. பல விதமானவை. தங்க மயமான சில மரங்கள், படுக்கைகளை அளிக்கும். (ப்ரசூயந்தே-ப்ரசவிக்கின்றன). அழகிய ஆசனங்களைத் தருகின்றன. மனம் விரும்பிய மாலைகளை, மற்ற சில மரங்கள் தருகின்றன. பலவிதமான பானங்கள், உணவு பண்டங்கள் என்று விளைவிக்கும் மரங்களும் காணப்படுகின்றன. ரூப யௌவனம் இளம் வயதினர், நல்ல குணமும் நிறைந்த பெண்களும் நடமாடக் காணலாம். க3ந்த4ர்வர்கள், கின்னரர்கள், சித்3த4ர்கள், நாக3ர்கள், வித்3யாத4ரர்கள், இங்கு தங்கள் பிரியமான பெண்மகளுடன் உல்லாசமாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள். சுக்ருதம்-நல்விணைப் பயன் உடையவர்கள். உல்லாசமாக வாழ விரும்புபவர்கள். -பெண்களுடன் ரசித்து வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். கீதங்களும், வாத்ய கோஷங்களும் உல்லாச சிரிப்பிலும், நிறைந்து இவர்கள் இருக்கும் இடமே கோலாகலமாக இருக்கும். இங்கு மகிழ்ச்சியில்லாதவனோ, அஸத்தான விஷயங்களில் நாட்டமுடையவனோ, காண முடியாது. நாள் தோறும் இங்கு நன்மைகளே பெருகி வருவதைக் காணலாம். இந்த இடத்தையும் கடந்து சென்றால், வடக்கில் பாற்கடலைக் காணலாம். மத்தியில் ஸோமகிரி என்ற பர்வதம். இந்திர லோகம் போனவர்களும், ப்ரும்ம லோகம் போனவர்களும் இந்த கிரி ராஜனைக் காண்பர். சூரியன் இல்லாத இடத்தில் இந்த ஹேம மயமான ஒளியாலேயே அந்த இடம் பிரகாசமாகத் தெரியும். பதினோரு ரூபமாக விளங்கும் ப4க3வான் சம்பூ,4 மகா தே3வன், விஸ்வாத்மா, கொழுந்து விட்டெரியும் நெருப்பு போலவும், சூரியனின் ஒளி போலவும் இங்கு இருக்கிறார். ப்ரும்ம ரிஷிகள் சூழ பகவான் ப்ரும்மாவும் வசிக்கிறார். நீங்கள் இதற்கு மேல் வடக்கில் போக வேண்டாம். இதற்கு மேல் எந்த ஜீவனும் செல்ல அனுமதி கிடையாது, முடியாது. இந்த ஸோமகிரி வரை செல்ல தேவர்களே தயங்குவர். சிரமப் படுவர். இதைக் கண்ணால் கண்டு விட்டு திரும்பி விடுங்கள். வானர வீரர்களே, இது வரை தான் வானரங்கள் செல்ல முடியும். இதற்கு அப்பால் சூரியன் இல்லாத, எல்லையில்லாத வெட்ட வெளியைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. இது வரை நான் சொன்ன இடங்களில் கவனமாகத் தேடுங்கள். நான் சொல்லாத இடங்கள் எதிர்ப் பட்டாலும் தேடுங்கள். இதை நீங்கள் செய்வதால் தசரத குமாரனுக்கு மிகவும் பிரியமானதை செய்தவர்களாக ஆவீர்கள். அதை விட அதிகமாக எனக்கு உபகாரம் செய்தவர்களாக நான் கொள்வேன். காற்றும் நெருப்பும் போல, விதேஹ ராஜாவின் மகளைக் கண்டு கொண்டு வந்தால் பெரும் நன்மையை செய்தவர்கள் ஆவீர்கள். இதன் பின் செயற்கரிய செய்தவர்களாக, உங்கள் பந்துக்களுடனும், நண்பர்களுடனும் உலகில் எல்லா நன்மைகளையும் பெற்று வாழ்வீர்கள். என் உபசாரத்திற்கு பாத்திரமாக ஆவீர்கள். சத்ருக்கள் என்று யாருமே உங்களுக்கு இருக்க மாட்டார்கள். அதற்கு நான் பொறுப்பு. உங்கள் பிரியமான ஜனங்களுடன், வானர வீரர்களே, வளம் பெற்று வாழ்வீர்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், உதீ3சீ ப்ரேஷணம் என்ற நாற்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 44 (315) ஹனூமத் சந்தேச: (ஹனுமானிடம் செய்தி சொல்லியனுப்புதல்)
சுக்ரீவன், மற்றவர்களிடம் சொல்லி முடித்த பிறகு, ஹனுமானிடம் வந்தான். தன் மந்திரிகளில், அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது இந்த ஹனுமானிடமே. இந்த காரியத்தை சாதிக்கக் கூடியவன் ஹனுமானே என்று அவன் மனதிற்குப் பட்டது. அதனால் திரும்ப மேலும் சில விஷயங்களை அவனுக்கு சொல்ல ஆரம்பித்தான். விக்ரமம் நிறைந்த வாயு புத்திரனான ஹனுமானிடம், வானர சேனையின் அரசன் மகிழ்ச்சியுடன் சொன்னான். வானர ஸ்ரேஷ்டனே, இந்த பூமியிலோ, அந்தரிக்ஷத்திலோ, வானத்திலோ, அமரர் வீடான தேவ லோகத்திலோ, நீருக்குள்ளோ, உன் போல பராக்ரமம் உடைய மற்றொரு பிறவியை நான் அறியேன். உனக்குத் தான் சுரர்கள், கந்தர்வர்கள், நாக, நர தேவதைகள், இவர்கள் பூமியிலும், அண்ட சராசரங்களிலும் வசிக்கும் இடம் தெரியும். மகா கபியே, உன்னிடத்தில் தான் கதி, வேகம், தேஜஸ், லாகவம் இவை உன் தந்தையான மாருதிக்கு சமமாக உள்ளன. அதனால் சீதையை எப்படித் தேடி கண்டு பிடிப்பது என்பதில் உன் முழு முயற்சியையும் செய். ஹனுமன் புத்தியும், பலமும், பராக்ரமும் உன்னிடம் தான் உள்ளன. நீ நியாயம் அறிந்த பண்டிதன். தேச காலங்களை அனுசரித்துக் கொண்டு போகும் வினயமும் உள்ளவன். என்றான். ராகவனும், இதே போல, இந்த காரியத்தை செய்து முடிக்கக் கூடியவன் ஹனுமனே என்ற நம்பிக்கை மனதில் தோன்ற, அவனை அழைத்து தன் பெயர் பொறித்த மோதிரத்தை, அங்கு3லீயத்தை ராஜகுமாரிக்கு அடையாளம் காட்ட கொடுத்தார். ஹரி ஸ்ரேஷ்டனே, இந்த அடையாளத்தை வைத்து ஜனகாத்மஜா, இது என்னிடமிருந்து வந்திருக்கிறது என்பதால் மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் கொள்வாள். விக்ரமனே, நீ செயல் வீரன். உன் வழியும், செய்யும் முறையும் பாராட்டுக்குரியன ஆகும். சுக்ரீவன் உன்னிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறான். நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கிறான். அதுவே எனக்கும் காரிய சித்தியை அடைவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கிறது என்றார். இதைக் கேட்டு, ஹனுமான் அதை வாங்கி தன் தலை மேல் வைத்துக் கொண்டு, அவரை அடி பணிந்து வணங்கி விட்டு கிளம்பி விட்டான். உத்தமமான இந்த வானர வீரனின் உடன் புறப்பட்ட வீரர்கள், ஆரவாரித்தனர். அவர்கள் கூட்டத்தில் மேகங்கள் விலகி நிர்மலமாக இருந்த வானில் சந்திரன் போல ஹனுமான் தனித்து தெரிந்தான். ராமர் மேலும் அதி பலசாலியான ஹனுமான், குறைவில்லாத உன் விக்ரமம் நான் அறிந்ததே. உன் பலத்தை தான் நம்பியிருக்கிறேன், பவன சுதனே, ஜனக சுதாவைக் காண என்ன செய்வாயோ, குறைவின்றி செய்வாய் என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமத் சந்தேஸோ என்ற நாற்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 45 (316) வானர ப3ல ப்ரதிஷ்டா (வானர படை புறப்படுதல்)
புறப்படத் தயாராக நின்ற படை பலத்தைப் பார்த்து ராஜா சுக்ரீவன், மறு முறை ராம காரியத்தை சரியாக நிறைவேற்ற அவர்களுக்கு எச்சரித்தான். கவனமாக செய்யுங்கள் என்று சொல்லி உத்தரவிட்டதும், இந்த கட்டளை அதி முக்கியம் வாய்ந்தது என்பதை உணர்ந்த வீரர்கள், தரையில் மொய்க்கும் விட்டில் பூச்சிகளைப் போல பூமியே தெரியாமல் மறைத்துக் கொண்டு நின்றிருந்தவர்கள், உடனே புறப்பட்டனர். ராமரும் லக்ஷ்மணருடன் அந்த ப்ரஸ்ரவன மலையில் தங்கினார். சீதையைக் கண்டு பிடிப்பதில் கால கெடு ஒரு மாதமே என்பதால், வடக்கு நோக்கி புறப்பட்ட சதபலி, தன் சேனை வீரர்களை துரிதப் படுத்தினார். மலையரசன் இருக்கும் வட திசை நோக்கி வேகமாக சென்றார்கள். கிழக்கு நோக்கி வினதனும் தன் படை வீரர்களுடன் அதே போல கிளம்ப, தாரன், அங்கதன் முதலானோர் கூட ஹனுமானும், அகஸ்தியர் வாழ்ந்ததால் சிறப்பு பெற்ற தென் திசை நோக்கி பயணமானான். மேற்கு திசையில் சுஷேணர், கடினமான பாதையில், வருணனின் ஆளுகைக்கு உட்பட்ட திக்கில் தேடக் கிளம்பினார். இப்படி எல்லா திக்குகளிலும் தேட ஏற்பாடுகள் செய்து விட்டு, சுக்ரீவன் அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தான். சீதையைக் கண்டு அழைத்து வருவோம், ராவணனை ஒழிப்போம் என்று கோஷமிட்டபடி கிளம்பினார்கள். ஆட்டமும், பாட்டமும், கோஷமும், வானரர்கள், தங்கள் இயல்புக்கு ஏற்ப, கீச் கீசென்று கத்தியும், தாவி ஓடியும், குதித்தும் ஆரவாரித்தபடி சென்றனர். நான் ஒருவனே ராவணனைக் கொன்று விடுவேன் போன்ற வீர முழக்கங்களும் கேட்டன. ராவணனை அடித்து நொறுக்கி விட்டு ஜனகாத்மஜாவை அழைத்து வந்து விடுவேன், என் வீரத்தைப் பார்த்து தான் அவள் நடுங்குவாள் என்று சில மார் தட்ட, நீங்கள் எல்லாம் எதற்கு, இங்கேயே இருங்கள், நான் ஒருவனே பாதாளத்தில் இருந்தாலும், ஜானகியை அழைத்து வந்து விடுவேன் என்றும் சூளுரைத்தன. பூமியை பிளந்து விடுவேன், கடலை வற்றச் செய்து விடுவேன், நூற்றுக் கணக்கான யோஜனைகளை அனாயாசமாகத் தாண்டி விடுவேன், பூமியிலும், சாகரத்தில், மலைகளில், வனங்களில், பாதாளத்தில் எங்கும் என் கதியை யாராலும் தடுக்க முடியாது என்று ஒவ்வொரு வானரமும் மார் தட்டி பேசி கபிராஜனுக்கு உத்திரவாதம் அளித்தன.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வானர ப3ல ப்ரதிஷ்டா என்ற நாற்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 46 (317) பூ4 மண்டல ப்ரமண கத2னம் (உலகை சுற்றியதை விவரித்தல்)
ஆரவாரம் செய்தபடி வானரங்கள் அந்த இடைத்தை விட்டு வெளியேறிய பின், ராமர் சுக்ரீவனிடம் எஎப்படி உனக்கு பூ மண்டலம் முழுவதும் தெரிந்தது? என்று வினவினார். சுக்ரீவனும் விஸ்தாரமாக சொல்ல ஆரம்பித்தான். மகிஷ உருவத்தில் வந்த துந்துபி என்ற ராக்ஷஸனை மலய மலையை நோக்கி வாலி தள்ளிக் கொண்டு போன பொழுது, அவன் வழியில் கிடைத்த ஒரு குகைக்குள் நுழைந்து விட்டான். அவனைக் கொல்ல வாலியும் உடன் உள்ளே நுழைந்தான். குகை வாசலில் என்னை காவல் நிறுத்தி விட்டுச் சென்றான். வருடம் ஓடியது. வாலி வெளியே வரவில்லை. இதன் பின், ரத்தம் பிரவாகமாக குகைக்குள்ளிருந்து வந்தது. இதைக் கண்டு நான் ஆச்சர்யம் அடைந்தேன். என் சகோதரனைப் பற்றிய கவலையே மனதில் நிறைந்திருந்ததால், செய்வதறியாமல் ஒரு பாறையை எடுத்து அந்த பள்ளத்தின் வாயிலை மூடி விட்டேன். மலை போல பெரிய பாறையை நகர்த்த முடியாதபடி வைத்து மூடி விட்டேன். வெளியில் வர முடியாமல் மகிஷன் மடியட்டும் என்பது தான் என் எண்ணம். வாழ்க்கையே வெறுத்த மன நிலையில் தான் நான் கிஷ்கிந்தை வந்தேன். ராஜ்யமும், என் பொறுப்பில் வந்தது, ருமை, தாரை இருவரும் என் பட்ட மகிஷிகளாக ஆனார்கள். நண்பர்கள் சூழ இருந்ததில், நாளா வட்டத்தில் பயம் அகன்றது. ஒரு நாள், அந்த தா3னவனைக் கொன்று விட்டு வாலி வந்து விட்டான். உடனே நான் மரியாதையோடு ராஜ்யத்தை அவனுக்கு கொடுத்து விட்டேன். பயமும் என்னை வாட்டியது. அவனோ, என்னைக் கொல்வதே குறியாக இருந்தான். துஷ்டன், நான் என் மந்திரிகளுடன் ஓட ஓட துரத்தினான். நான் அவனுக்கு பயந்து, கண்டபடி ஓடினேன். பல நதிகள், இதுவரை கண்டிராத வனங்கள், நகரங்கள் என்று பூமியில் நான் ஓடி ஒளியாத இடமே இல்லையெனும் படி ஓடினேன். எரியும் சக்கரத்துள் நுழைந்து புறப்படுவது போல, பூமியை கோஷ்பதமாக (பசுவின் காலடி குளம்புக்குள் இடைப் பட்ட இடம்) கடந்தேன். கிழக்கு திசையில் சென்ற சமயம், பலவிதமான மரங்களைக் கண்டேன். மலைகளையும், அழகிய நதிகளையும் பல குளங்களையும் கண்டேன். உதயாசலத்தைக் கண்டேன். பலவிதமான தாதுப் பொருட்கள் மண்டிக் கிடந்ததைக் கண்டேன். பாற்கடலைக் கண்டேன். அப்ஸர கணங்கள் அதன் கரையில் இருப்பதைக் கண்டேன். வாலி துரத்த துரத்த ஒவ்வொரு திக்கிலும் அதன் எல்லைக்கே சென்று திரும்பினேன். திரும்ப வாலி துரத்தவும், வேறு திக்கில் ஓடுவேன். தென் திசையில் ஓடி விந்த்ய மலை, சந்தன காடுகள், மரங்கள், மலைகள் என்று ஒளிந்து திரிந்து திரும்பினேன். மறுபடியும் மேற்கு நோக்கி ஓடலானேன். பல நகரங்களையும் தேசங்களையும் தாண்டி அஸ்தமன மலைக்கே சென்று திரும்பினேன். பின் வடக்கில் ஓடினேன். ஹிமவானைக் கண்டு மேரு மலையையும், உத்தர சமுத்திரத்தையும் கண்டேன். ஓடி ஓடி களைத்தேன். வாலி விடுவதாக இல்லை. அப்பொழுது தான் புத்திமானான ஹனுமான் எனக்கு யோசனை சொன்னான். ராஜன், வாலி மதங்க3முனிவரின் சாபத்திற்கு ஆளாகி இருக்கிறான். இந்த ஆசிரம மண்டலத்தினுள் நுழைந்தால் அவன் தலை நூறாக வெடிக்கும் என்பது தான் அந்த சாபம். அதனால் அவன் இந்த ஆசிரம பக்கம் வர மாட்டான். இங்கு நாம் சங்கடமில்லாமல், நிம்மதியாக இருக்கலாம். அதனால் தான் ராஜ குமாரா, இந்த ருஸ்ய மூக மலையை அடைந்து நாங்கள் வாழ்ந்து வந்தோம். வாலி இங்கு வந்ததில்லை. இப்படித்தான் ராமா, நான் உலகின் மூலை முடுக்குகளை எல்லாம் அறிந்து கொண்டேன். உலகம் முழுவதும் சுற்றி விட்டு இந்த குகைக்குள் தஞ்சம் அடைந்து விட்டேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், பூ4 மண்டல ப்ரமண கத2னம் என்ற நாற்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 47 (318) கபிசேனா ப்ரத்யாக3ம: (வானர படைகள் திரும்பி வருதல்)
சுக்ரீவன் கட்டளைப்படி வானரங்கள் விரைந்து சென்றன. வைதேஹியைத் தேட பலவாறாக முயற்சித்தன. குளங்கள், ஆறுகள், குகைகள், ஆகாயம், நகரங்கள், நதிகள் சூழ்ந்த கோட்டைகள், மலைகள், பாறைகள் என்று தேடின. சுக்ரீவன் சொன்னபடி சேனைத்தலைவர்கள், அந்த தேசங்களை நன்றாக அலசித் தேடினர். திரும்ப ஒரு மாதத்திற்குள் வந்து சேர வேண்டுமே என்ற கவலையில், இரவும் பகலும் நடந்து திரும்பி வந்தன. வெய்யிலோ, மழையோ, குளிரோ, எந்த பருவம் ஆனாலும் இரவுகளில் பழங்கள் நிறைந்த மரங்களில் இரவைக் கழித்து விட்டு, அந்த தேசத்தை பகல் பூராவும் தேடினர். மாதம் முடிந்தவுடன், ப்ரஸ்ரவன மலையைத் திரும்ப வந்து அடைந்தன. நிராசையுடன் வந்த அவர்கள் வானர ராஜனை சந்தித்து தங்கள் இயலாமையை தெரிவித்தனர். மகா பலவான் என்று சொல்லப் பட்ட வினதன், கிழக்குத் திசையில் வைதேஹியைத் தேடி, பயனின்றி வந்து சேர்ந்தான். வடக்கு நோக்கிச் சென்ற சதபலியும், தேடி அலுத்து, தன் படையுடன் திரும்பி விட்டான். மேற்குத் திசையில் சென்ற மாமனார், சுஷேணரும் மாதம் முடியும் தருவாயில் சுக்ரீவனிடம் வந்து விட்டார். ராமனுடன் அமர்ந்திருந்த சுக்ரீவனைக் கண்டு, நீ சொன்ன படியே மலைகள், வனங்கள், நகரங்கள், நதிகள், சமுத்திரக் கரை என்று தேடினோம். ஜனபதங்கள், குகைகள், எதையும் விடவில்லை. நீ சொன்ன இடங்கள் ஒன்று விடாமல், புதர்கள் முதல் தேடி விட்டோம். ஆகாய மார்கத்தில் உள்ள தேசங்கள், கோட்டைகள், பெரிய உருவம் கொண்ட ஜீவ ஜந்துக்கள் வாழும் இடங்கள் எல்லாம் தேடினோம். வானரேந்திரா, உதா3ர குணம் கொண்ட மகாத்மா அவன் தான் மைதிலியைக் காணப் போகிறான். அவள் சென்ற திக்கில் தேடச் சென்றிருக்கிறானே, அந்த வாயுசுதன் ஹனுமான் தான் அவன் என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், கபிசேனா ப்ரத்யாக3மனம் என்ற நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 48 (319) கண்டு வனாதி விசய: (கண்டு முனிவரின் வனத்தில் தேடுதல்)
தாரன், அங்கதன் முதலானவரோடு சென்ற ஹனுமான், சுக்ரீவன் சொன்னபடியே விந்த்ய மலைக் குகைகளிலும், வனத்திலும், அடர்ந்த காடுகளிலும் பல யோஜனை தூரம் சென்று தேடினார்கள். பர்வதங்களின் சிகரங்கள், நதிகள், கோட்டைகள், ஆறுகள் போகும் பாதைகளில், பெரிய பெரிய மரங்கள் அடர்த்தியாக இருந்த காடுகளில், இலைகள் அடர்த்தியாக இருந்த இடங்களில் எல்லாம் தேடினார்கள் நாலா திசைகளிலும் தேடியும் மைதிலியைக் காணவில்லை. கிடைத்த இடங்களில் பழங்களையும், காய் கறி கிழங்குகளையும் சுவைத்து பசியாறி, ஆங்காங்கு தங்கி இளைப்பாறி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். ஒரு இடம் நுழையவே முடியாதபடி, குகைகளும் ஆழமான பள்ளங்களுடனும் இருந்தது. ஜலமோ, ஜன நடமாட்டமோ இன்றி சூன்யமாக இருப்பதைக் காண பயத்தில் மயிர் கூச்செரிந்தது. அந்த இடத்தைக் கடந்து வெளி வந்த சமயம், வானரர்கள் மிகவும் களைத்து விட்டிருந்தனர். இது போன்ற அரண்யங்களில் தேடித் தேடி பயனில்லாமல், மற்றொரு தேசத்தை தேடுவோம் என்று கிளம்பினார்கள். மரங்கள், பழங்களோ, பூ இலையோ இன்றி கட்டையாக நின்றன. நதிகளில் ஜலம் இல்லை. காய் கிழங்குகள் துர்லபமாக இருந்தது. ஒரே வறட்சி. மிருகங்களோ, மகிஷங்களோ, யானைகளோ, சார்தூ3லங்களோ, மற்றும் வன விலங்குகளோ, அவ்வளவு ஏன்? பக்ஷிகள் கூட தென்படவில்லை. செடி, கொடி, மரங்கள், புதர்கள், தானாக வளரும் புல் பூண்டு தாவரங்களே கூட தென்படவில்லை. இப்படி ஒரு வறண்ட இடமா என்று அதிசயித்தபடி கடந்து சென்றனர். இந்த இடம் பசுமையாக, தாவரங்களும், இலைகள் அடர்ந்த மரங்களுமாகத் தான் இருந்தது. மலர்ந்த தாமரைக் குளங்களும், வாசனை மிகுந்து ப்ரமரங்கள் சூழத் கண்ணுக்கு விருந்தாகத் தான் இருந்தது. இவையனைத்தும் காணாமல் போயின. கண்டு என்ற மகரிஷியின் தபோ வனம். இந்த மகரிஷி சத்யவாதி. கடினமான விரதங்களை மேற் கொண்டு தவம் செய்து வந்தார். அவருடைய மகன், பத்து வயது சிறுவன் திடுமென மறைந்தான். அந்த வருத்தத்தில், இந்த இடத்தை சபித்து விட்டார். நிழல் கொடுக்கும் மரங்களோ, மிருகங்களோ, பக்ஷிக3ணங்களோ இன்றி, உள்ளே நுழைந்து வெளி வருவதே கடினமாகி விட்டது. இந்த கானனத்தின் முடிவில், மலைகளிலும், குகைகளிலும், நதிகள் பிரவகித்த அடையாளமே மீதியாக இருந்த இடங்களிலும் தேடினார்கள். ஜனகாத்மஜாவைக் காணவில்லை. கவர்ந்து சென்ற ராவணனையும் காணவில்லை. சுக்ரீவனுக்கு பிரியமானதை செய்ய விரும்பியதால், இந்த இடத்தை வேகமாக கடந்தனர். அடுத்து, கொடிகளும், புதர்களுமாக மூடிக் கிடக்க, க்ரூரமாக ஒரு அசுரனைக் கண்டனர். இவனுக்கு யாரிடமும் பயம் இல்லை. தேவர்களுக்கும் அஞ்சாதவன் என்று சொல்லிக் கொண்டான். திடுமென எதிரில் மலை போல வந்து நின்ற அசுரனைப் பார்த்து வானரங்கள் திகைத்தன. நீங்கள் எல்லோரும் அழிந்தீர்கள், இதோ வந்தேன் என்று கத்தியபடி, முஷ்டியைத் தூக்கிக் கொண்டு அருகில் வந்தான். வாலி புத்திரன், அங்கதன் அவன் உருவத்தையும், கத்தலையும் கேட்டு, ராவணன் தான் இவன் என்று எண்ணி தன் புறங்கைகளால் ஓங்கி அடித்தான். மலை போல நின்றிருந்தவன் அந்த அடியைக் கூட தாங்காமல் பொத்தென்று விழுந்தான். கன்னத்தில் பட்ட அடியில், வாயிலிருந்து ரத்தம் பெருகியது. அவன் மூச்சு விடுவது நின்று விட்டது என்று வானரங்கள் தெரிந்து கொண்டு வானரங்கள் பயமின்றி அந்த இடம் முழுவதும் தேடினார்கள். குகைகள், மலைச் சாரல்களில் நன்றாகத் தேடி விட்டு, அடுத்த காட்டிற்குள் பிரவேசித்தனர். இங்கும் அலைந்து திரிந்து தேடி விட்டு உடல் களைத்தவர்களாக மனமும் வாட, ஏகாந்தமான ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், கண்டு வனாதி விசய: என்ற நாற்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 49 (320) ரஜத பர்வத விசய: ( வெள்ளி மலையில் தேடுதல்)
அங்கதன் அவர்களைப் பார்த்து, மிகவும் களைத்து விட்டீர்கள், என்றான். தானும் களைத்து இருந்ததால் மெதுவாக பேசினான். மலைகள், நதிக்கரைகள், நுழைய முடியாத அடர்ந்த காடுகள், சமவெளிகள், மலைக் குகைகள் என்று எல்லா இடங்களிலும் தேடி விட்டோம். எங்குமே ஜானகியைக் காணவில்லை. அவளை கவர்ந்து கொண்டு போன ராவணனையும் காணவில்லை. தேவ கன்னிகை போன்ற ஜனகன் மகள், எங்கு இருக்கிறாளோ. நிறைய காலமும் விரயமாகி விட்டது. சுக்ரீவன் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். அதனால் திரும்பத் தேடுவோம். உடல் களைப்பை உதறி விட்டு, தூக்கத்தையும் அலுப்பையும் மறந்து திரும்ப எழுந்து வாருங்கள். தேடுவோம். ஜனகன் மகள் கிடைக்கும் வரை ஓய மாட்டோம். அனிர்வேதம் – தன்னம்பிக்கையை இழக்காமல் இருத்தல், இதுவும், பொறுமையும், மனதில் தோல்வியை ஏற்காத தன்மையும், தான் காரிய சித்திக்கு தேவையானவை என்று சொல்வார்கள். அதனால் தான் சொல்கிறேன். வானர வீரர்களே, இன்று மறு முறை இந்த வனம், துர்கம் -கோட்டை, நுழைய முடியாத மலையடிவாரங்கள் இவற்றில் தேடுவோம். உடல் வலியை பொருட்படுத்தாது இந்த வனத்தில் திரும்பத் தேடுவோம். நிச்சயம் நமது முயற்சிகளின் பலனை அடைவோம். நமது செயல்களில் பின்வாங்க இது நேரமல்ல. சுக்ரீவன் கோபக்காரன். கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். ராஜா அவன். அவனிடம் நாம் அஞ்சிதான் நடக்க வேண்டும். தவிர, ராம கோபத்துக்கும் ஆளாவோம். உங்கள் நன்மைக்காகத் தான் சொல்கிறேன். நமக்கு இடப்பட்ட கடமையை முடிக்காமல் திரும்புவதில் பலனில்லை. உங்களுக்குத் தோன்றியபடி செய்யுங்கள். வானரர்களே, உசிதம் என்றும் நம்மால் முடியும் என்றும் உங்களுக்குத் தோன்றினால், சொல்லுங்கள். நாம் ஒன்றாக இணைந்து செயல் படுவோம். உடனே க3ந்த4மாத3ன் எழுந்து அங்கதனுக்கு பதில் சொன்னான். பசியும் தாகமும் வாட்ட, வார்த்தை தெளிவில்லாமல் வர, சிரமப் பட்டு பேசினான். அங்கதா நீ சொன்னது சரியே. இது தான் நாம் செய்ய வேண்டியது. நமக்கு ஹிதமானது. திரும்பவும் தேடுவோம். மலைகளையும், குகைகளையும், சமவெளிகளையும் தேடி, சூன்யமான காடுகளிலும், சுக்ரீவன் நம்மிடம் சொன்ன இடம் ஒன்று விடாமல் தேடுவோம். எல்லோரும் வாருங்கள் எனவும், எல்லோருமாக எழுந்து மலைக் குகைகளில் தேடலாயினர். தென் திசையில் விந்த்ய மலைக் காடுகளில் தேடினர். ரஜத பர்வதம், சந்திரனுடைய பிரபை போன்று ஜொலித்தது. சிகரத்தில் ஏறி அதன் அடுத்த பக்கம் சமவெளியில் இறங்கினர். லோத்ர வனம் என்ற வனம் ரம்யமாக இருந்தது. சப்தபர்ண (ஒரு வகை மரம்) வனங்கள் வந்தன. சீதையைத் தேடிக் கொண்டே இதை கடந்தனர். எல்லோருமே மிக களைத்திருந்தனர். ராம மகிஷியை, அவனுடைய பிரியமான மனைவியை கண்டு பிடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வு தான் அவர்களை நடத்திச் சென்றது. மெதுவாக இறங்கி அந்த மலையடிவாரத்தில் சிரம பரிகாரம் செய்து கொள்ள அமர்ந்தனர். முஹுர்த்த நேரம் இளைப்பாறிய பிறகு திரும்பவும் விந்த்ய மலைகளில் தேடக் கிளம்பினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ரஜத பர்வத விசய: என்ற நாற்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 50 (321) ருக்ஷ பி3ல ப்ரவேச: (பள்ளத்தினுள் நுழைதல்)
விந்த்ய மலைகளின் குகைகளைப் பார்த்து, தாரனும் அங்கதனும், ஹனுமானுடன் விவாதித்தனர். இந்த குகைகள் அடர்ந்து இருட்டாக, சிங்க, சார்தூலங்கள் வாழ்வதாக காண்கின்றன. பாறைகளும் அருவிகளும் கூட நேராக இல்லை. நம் ப்ரஸ்ரவன மலை போல இல்லை. பேசிக் கொண்டே அந்த மலைத் தொடரின் தென் கோடிக்கு வந்து விட்டனர். வாயுசுதன், தான் முன்னால் போய் மலையை ஊன்றி கவனித்தான். ஒருவரை ஒருவர் விலகாமலும், அதே சமயம் தனித் தனியாகவும் தேட ஆரம்பித்தனர். க3ஜன், க3வாக்ஷன், க3வயன், சரப4ன், க3ந்த4மாத3னன், மைந்த3 த்3விவித3ர்கள், சுஷேணன், ஹனுமான், யுவராஜாவான அங்க3த3ன், தாரன், எல்லோருமே தங்கள் தேடலைத் தொடர்ந்து கொண்டிருந்த போதிலும், ஒருவருக்கொருவர் கூப்பிடு தூரத்திலேயே இருந்தனர். தொடர்ந்து இருந்த மலைச் சாரல்களில் தேடி தென் திசை சென்றனர், அகன்ற வாயுடன் ஒரு பள்ளத்தைக் கண்டனர். ருக்ஷ பி3லம் என்ற அதை தானவன் ஒருவன் காத்து வந்தான். எளிதில் உள்ளே நுழைய முடியாதபடி அமைந்திருந்தது. பசியும் தாகமும் வாட்ட களைத்தவர்களாக தண்ணீர் கிடைக்குமா என்று அந்த பள்ளத்தினுள் எட்டிப் பார்த்தனர். பல கொடிகளும் மரங்களும் பசுமையாகத் தென்பட்டன. க்ரௌஞ்ச பக்ஷிகளும், ஹம்ஸங்களும், சாரஸ பக்ஷிகளும், ஜலத்தில் நனைந்த சக்ரவாகங்களும் , உடலில் சிவந்த தாமரை மலரின் மகரந்தங்கள் ஒட்டிக் கொண்டிருக்க தாமரைக் குளம் இருப்பதை பறை சாற்றின. நல்ல நறு மணம் வீசியது. தங்கள் ஆவலை அடக்க மாட்டாமல், அந்த பள்ளத்தில் மேல் நின்றபடி, வானரங்கள் அதிசயத்தோடு அதனுள் நுழைய யோசித்தபடி நின்றன. மனதில் மகிழ்ச்சியும் உண்டாயிற்று. ஏதோ தைத்யேந்திரனுடைய மாளிகை போல எல்லா ஜீவ ராசிகளும் நிரம்பி, ஜீவ களையுடன் விளங்கியது. பயம் ஒரு புறம். ஆழம் தெரியாமல் காலை வைக்கத் தயக்கம். அதிக ஆழம் என்பது மட்டும் தெரிந்தது. எல்லோரும் ஹனுமானைப் பார்க்க, ஹனுமானும் அவர்களைப் பார்த்து உறுதியுடன் சொன்னான். நீங்கள் எல்லோரும் காடு, வனம் பற்றி அறிந்தவர்களே. தொடர்ச்சியாக மலைகளைப் பார்த்துக்கொண்டே தென் திசை வந்து விட்டோம். நாம் அனைவருமே களைத்து இருக்கிறோம். ஜானகியை காணவும் இல்லை. இதில் தென்படும் சக்ரவாக பக்ஷிகளும், ஹம்ஸங்களும், க்ரௌஞ்சங்களும், சாரஸமும் நீரில் நனைந்த உடலுடன் காணப்படுகின்றன. இவை இருக்கும் இடத்தில் ஜலாசயம், நீர் நிலை இருக்கும் என்பதும் உறுதி. நிச்சயம் குளமோ, ஏரியோ அருகில் இருக்கிறது,. இந்த பள்ளத்தின் கரையில், மரங்களும் பசுமையாகத் தெரிகின்றன. தைரியமாக போவோம், எனவும் எல்லாமாக உள்ளே நுழையத் தயாராகி விட்டன. சந்திரனோ, சூரியனோ ஒளி தர இல்லாத கும்மிருட்டு. திடுமென சிங்கத்தின் அலறல் கேட்கவும் நடுங்கி ரோமங்கள் குத்திட்டு நின்றன. மேலும் மாமிச பக்ஷிகளான மிருகங்கள் இருக்கக் கூடும் என்று தெரிந்தது. கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. அவர்கள் பராக்ரமம் எதுவும் பயன் தரும் நிலையிலும் இல்லை. இருட்டினுள் காற்று நுழைவது போல முன்னேறி நடந்தனர். வேகமாக பள்ளத்தினுள் இறங்கி விட்டார்கள். அடுத்து என்ன என்று தெரியாமலேயே நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஒருவரையொருவர் அணைத்தபடி எச்சரிக்கையோடு நடந்தனர். யோஜனை தூரம் நடந்தபின், தாகம், படபடப்பு என்ன செய்கிறோம், எங்கு போகிறோம் என்பது எதுவும் தெரியாமல், தாக சாந்திக்கு வழி கிடைக்கும் என்ற ஒரே நம்பிக்கையோடு, ஒருவரையொருவர் பிணைத்த கைகளை விடாமல், முன்னெச்சரிக்கையோடு நடந்தனர். ஒரு நிலையில் உயிர் வாழும் ஆசையே கூட இற்றுப் போயிற்று. இறங்கியாயிற்று. உடலும், உள்ளமும் துவண்டு போக, முடுக்கி விட்ட இயந்திரம் போல நடந்து கொண்டேயிருந்தனர். முடிவில்லாத பயணமாகத் தோன்றியது. திடுமென, இருட்டு விலக, வெளிச்சம் தெரிய சௌம்யமான வனத்தில் இருப்பதை உணர்ந்தார்கள். மரங்கள் ஒளி வீசக் கண்டனர். சால, தால மரங்கள் புன்னாக3, ககுப4 என்று பரிச்சயமான மரங்கள், வகுள, த4வ, சம்பக, நாக3 வ்ருக்ஷங்கள், பூக்கள் மலர்ந்து தெரிய, கர்ணிகார மரங்கள், கொத்து கொத்தாக சிவந்த மலர்கள், இளம் துளிர்கள், ரத்த சிவப்பாகத் தெரிந்தன. ஆபீடம் எனும் கொடிகள், ஆபரணங்கள் அணிந்து அலங்காரமாக நிற்பது போலவும், மரங்களின் உடல் பாகம் பசும் பொன்னால் ஆனது போலவும் காட்சி தந்தன. தாமரைக் குளங்களில், பறவைகள் முற்றுகையிட்டிருந்தன. தாமரை இலைகள், நீல வைமூடுரியம் போல பள பளவென்று இருந்தது. ஏராளமான தாமரை மலர்கள். பல வண்ணங்களில் இளம் சூரியனின் வண்ணத்திலும், பொன் போன்ற மஞ்சள் நிறத்திலும், பல வர்ண மீன்களும், பெரிய பெரிய ஆமைகளும், தாமரைக் குளங்கள் கண்ணுக்கு விருந்தாக இருந்தன. வீடுகள் பல மாளிகைகளாக இருந்தன. பொன் ஓடு வேய்ந்த விமானங்களும், வெள்ளித் தகடுகள் இழைத்தவைகளாகவும் இருந்தன. தாழ்ப்பாள்கள் ஒளியை சிதற, திறந்த சாளரங்களுடன், உயர்ந்த மாடங்கள், கோபுரங்களுடன் செல்வ செழிப்பை பறைச் சாற்றிக் கொண்டு நின்றன. மரங்களில் பழங்கள், பவழ மணி நிறத்தில் தென் பட்டன. பொன் வண்டுகள் பறக்க, மதுவைச் சிந்தும் மலர்கள், மணிகள் தங்கத்தால் கோர்க்கப் பெற்று சித்திர வேலைகள் செய்யப் பட்டிருந்தன. உயர்ந்த ஆசனங்கள், படுக்கைகள் தென் பட்டன. விலை மதிப்பு மிகுந்த வாகனங்கள், வெள்ளி, தங்கம், கண்ணாடி பாத்திரங்கள், திவ்யமான அகரு, சந்தனம் போன்ற வாசனைப் பொருட்கள், சுத்தமாக, உடனே சாப்பிடக் கூடிய நிலையில் காய்கறி, கிழங்குகளும், பழங்களும், பான வகைகளும், இனிய பழ ரஸங்கள், பானங்கள், குடி நீர் என்று இருந்தன. அழகிய ஆடைகள் குவிந்து கிடந்தன. கம்பளிகளும், மான் தோல்களும், குவிந்து கிடந்தன. சில இடங்களில் விரிக்கப் பட்டும், சில இடங்களில் மடித்தும் வைக்கப் பட்டிருந்தன. மேலும் செல்லச் செல்ல இவ்வாறான அரும் பொருட்கள் கணக்கில்லாமல் குவிந்து கிடப்பதைக் கண்டனர். சற்று தூரத்தில் சில பெண்மணிகள் நடமாடுவதைக் கண்டனர். ஒரு பெண்மணி மரவுரி தரித்து தாபஸியாக இருப்பதைக் கண்டு அவளிடம் சென்று தயங்கி நின்றனர். அவள் தவ வலிமை மிக்கவள் என்பது பார்த்த உடனேயே தெரிந்தது. அதிசயம் அடைந்த வானரங்கள் செய்வதறியாது நின்றன. ஹனுமான் முன் வந்து தாங்கள் யார்? இது யாருடைய இடம்? என்று வினவினான். வயது முதிர்ந்த அந்த மூதாட்டியை பணிவுடன் வணங்கி, செல்வ செழிப்பை பறை சாற்றும் வண்ணம், பொன்னும் மணியுமாக விளங்கும் இந்த குகை வீடு யாருடையது? தாங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள் என்றும் வினவினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ருக்ஷ பி3ல ப்ரவேசம் என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 51 (322) ஸ்வயம்ப்ரபா4தித்யம் (ஸ்வயம்ப்ரபா விருந்து உபசாரம் செய்தல்)
திரும்பவும் மான் தோலை உடுத்தியிருந்த (க்ருஷ்ணாஜினாம்பரம்- க்ருஷ்ணா என்ற வகை மான் அதனுடைய தோலால் ஆன உடை) அந்த மூதாட்டியிடம் ஹனுமான் விவரமாக வினவினான். தர்மசாரிணியாக, தவக் கோலத்தில் இருந்தவளிடம் பணிவாக சொன்னான். யதேச்சையாக இந்த பள்ளத்தினுள் நுழைந்து விட்டோம். இருட்டு என்பதைக் கூட எங்கள் பசி தாகத்தில் அலைந்து திரிந்த களைப்பில் நாங்கள் உணரவில்லை. எல்லோருமே களைத்து இருக்கிறோம். இந்த பெரிய அரண்யத்தில் இப்படியொரு பள்ளம், இதனுள் நீர் வாழ் ஜந்துக்கள், மற்ற ஜீவன்கள் நடமாடுவதைப் பார்த்து குடிக்க நீர் கிடைக்கும் என்ற ஆசையில் நுழைந்து விட்டோம். இங்குள்ள மரங்கள் செழிப்பாக இருப்பதைப் பார்த்தோம், புது இலைகள் இளம் சூரியனின் நிறத்தில் காணப்பட்டன. அதனால் இங்கு சூரிய வெளிச்சமும், தண்ணீர் வசதியும் இருப்பது உறுதியாயிற்று. பழங்கள், காய்கறிகள் சுத்தமாக, உடனடியாக சாப்பிடக் கூடிய நிலையில் வைக்கப் பட்டிருக்கின்றன. மாளிகைகளும் அழகாக இருக்கின்றன. நாவல் மரங்கள், பூத்துக் குலுங்கும் மரங்கள், வாசனை மிகுந்த நறு மலர்கள், இவை யாருடைய தேஜஸால் செழித்து வளருகின்றன. விமலமான ஜலம். அதில் பொன் நிற பத்மங்கள். பொன் வர்ண மீன்கள், ஆமைகளுடன் சேர்ந்து விளையாடுவதைக் காண முடிகிறது. இது யாருடைய தவ வலிமை. எங்களுக்குத் தெரியாத இந்த விவரங்களை நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும். இதைக் கேட்டு தபஸ்வியான அந்த மூதாட்டி பதில் சொன்னாள். தா3னவர்களில் ஒருவர் மயன் என்று இருந்தார். நல்ல தேஜஸ்வி. மாயாவி. தன் மாயையால் இந்த குகைக்குள் பொன் மயமாக இவற்றை நிறுவியிருக்கிறார். விஸ்வகர்மாவைத் தெரிந்திருக்கும். அவரும் தானவர்களுள் ஒருவரே. பல வருஷங்கள் தவம் செய்து, இந்த மாளிகைகளை உருவாக்கினார். ப்ரும்மாவை குறித்து தவம் செய்து சுக்ராச்சாரியாரிடம் பெரும் செல்வத்தை பெற்றார். இந்த வனத்தில் வசித்த பொழுது ஒரு அப்ஸர ஸ்த்ரீயான ஹேமா என்பவளிடம் ஈடுபாடு கொண்டார். இதை பொறுக்காத இந்திரன் கற்களால் அடித்து அவரைக் கொன்று விட்டான். பின் ப்ரும்மா இந்த வனத்தை ஹேமாவிடம் கொடுத்தார். சாஸ்வதமான பொருட்கள், தேவைகள் அனைத்தும் எப்பொழுதும் இருக்கும்படி, இந்த ஹிரண்மயமான மாளிகையையும் கொடுத்தார். நான் மேரு சவர்ணி என்ற ரிஷியின் புதல்வி. என்னுடைய பிரிய சகி ஹேமா. இந்த ப4வனத்தை நான் பாதுகாத்து வருகிறேன். என் பெயர் ஸ்வயம்ப்ரபா. அவள் நடனத்திலும் கானத்திலும் வல்லவள். அவள் எனக்கு வரம் கொடுத்தாள். இதை காவல் காத்து வருகிறேன். அது சரி, நீங்கள் யார்? இந்தக் காட்டில் ஏன் அலைந்து திரிகிறீர்கள். இந்த நுழைய முடியாத வனமும், இந்த பிலமும் (பள்ளமும்) எப்படி உங்கள் கண்ணில் பட்டன. இதோ, புத்தம் புதிய பழங்கள் இவை. காய், கிழங்கு வகைகள். தேவையான வரை புசித்து மகிழுங்கள், பசியாறுங்கள். இதோ தாகத்தை தீர்க்க பானங்கள். தாக சாந்தி செய்து கொள்ளுங்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஸ்வயம்ப்ரபா4தித்யம் என்ற ஐம்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 52 (323) பி3ல ப்ரவேச காரண கத2னம் (பள்ளத்தினுள் நுழைந்த காரணத்தைச் சொல்லுதல்)
சிரம பரிகாரம் செய்து கொண்டு வானரங்கள் தங்கள் இயல்பான உற்சாகத்தை அடைந்ததும், தாபஸி, திரும்பவும் அவர்களிடம் பரிவோடு பேசினாள். வானரங்களே, பசி அடங்கியதா? உடல் வலியும் அலுப்பும் நீங்கியதா? பழங்கள் சுவையாக இருந்தனவா? இப்பொழுது சொல்லுங்கள், என்னிடம் சொல்லலாம் அல்லவா? எனவும், ஹனுமான் முன் வந்து உள்ளது உள்ளபடி சொன்னான். எல்லா உலகுக்கும் அரசன், வருணனுக்கு சமமான சக்தியும் பலமும் உடையவன், தாசரதி, தசரத ராஜ குமாரன், தண்டகாவனம் வந்தான். லக்ஷ்மணன் என்ற அவன் சகோதரனும், மனைவி வைதேஹியும் உடன் வந்தனர். அவனுடைய மனைவியை ஜனஸ்தானத்திலிருந்து ராவணன் கடத்திச் சென்று விட்டான். வீரனான எங்கள் சுக்ரீவ ராஜா அவனுக்கு நண்பன். வானர ராஜாவின் கட்டளைப்படி நாங்கள் வந்தோம். ராவணன் என்ற அந்த ராக்ஷஸனையும், சீதா என்ற வைதேஹியையும் தேடப் பணித்தான். தென் திசை நோக்கி நாங்கள் வந்தோம். பல இடங்களிலும் தேடி பசியினால் களைத்து, மரத்தடியில் அமர்ந்தோம். எல்லோரும் முகம் வாடி, நிறம் வெளிறி, கவலையில் மூழ்கி சக்தியற்று அமர்ந்திருந்தோம். அந்த சமயம் இந்த பி3லம் ( பள்ளம்) கண்ணில் பட்டது. இருட்டாக இருந்த போதிலும், கொடிகளும் மரங்களும் இருப்பதாகத் தெரிந்தது. நனைந்த உடலுடன் ஹம்ஸங்கள் பறந்தன. குரரங்கள், ஸாரஸங்கள் இவைகளும் நனைந்த உடலுடன் காணப்பட்டன. இந்த பறவைகளே நீர் வாழ்வன. அதனாலும் அருகில் நீர் நிலை இருப்பது உறுதியாயிற்று. உள்ளே சென்று தான் பார்ப்போமே என்று நான் சொல்லவும், அப்படியே ஏற்றுக்கொண்டனர். அவர்களும் நான் சொன்னபடியே தாக சாந்திக்கு வழி இருக்கும் என்று நம்பினார்கள். ஒருவரோடு ஒருவர் கை கோத்தபடி, எல்லோருமாக மெதுவாக உள்ளே நுழைந்தோம். வேறு எந்த விதமான உத்தேசமும் எங்களுக்கு இல்லை. பசியினாலும், உடல் களைப்பினாலும் யதேச்சையாக உள்ளே வந்தவர்கள், உங்களைப் பார்த்து நின்றோம். தாங்கள் செய்த உபசாரத்தால், பழங்களும், காய்கறி கிழங்குகளும் எங்கள் பசியை போக்கி, புத்துணர்வைத் தந்தன. சரியான சமயத்தில், பசியினால் எங்கள் உயிர் பிரியாமல் காப்பாற்றினீர்கள். நாங்கள் பிரதி உபகாரம் செய்ய வேண்டும். சொல்லுங்கள், வானரங்கள் நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? இதைக் கேட்டு ஸ்வயம்ப்ரபா, உங்களை சந்தித்ததே சந்தோஷம். இங்கு எனக்கு என்ன தேவை, வேலை இருக்கிறது. சந்தோஷமாக இருங்கள், என்றாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், பி3ல ப்ரவேச காரண கதனம் என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 53 (324) அங்கதாதி நிர்வேத: (அங்கதன் முதலானோர் கவலை)
தாபஸியான ஸ்வயம்ப்ரபா இவ்வாறு மென்மையாக சொல்லவும், ஹனுமான் அவளைப் பார்த்து தர்மசாரிணி, நாங்கள் உங்களை தஞ்சம் அடைகிறோம். சுக்ரீவன் எங்களுக்கு கொடுத்த கால கெடு முடியுமுன் இந்த பள்ளத்திலிருந்து வெளியேற வகை செய்யுங்கள் என்றான். பயங்கரமான இந்த பள்ளத்தில் திக்கு திசை தெரியவில்லை. எங்கள் எல்லோருக்கும் சுக்ரீவனிடம் பயம். கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். அவன் கட்டளையை மீறினால், உயிர் போனதாகக் கொள்வோம். தர்மசாரிணீ, எங்களுக்கு கொடுக்கப் பட்ட காரியமும் மிகப் பெரியது. தாபஸி பதில் சொன்னாள். இந்த பிலத்தில் நுழைந்து விட்டால், உயிருடன் தப்புவது இயலாத காரியம். என் தவ வலிமையாலும், நியமங்களை அனுசரித்து பெற்ற சித்திகளாலும் உங்கள் அனைவரையுமே வெளியேற்றுகிறேன். எல்லோரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள். கண்களைத் திறந்து கொண்டு வெளியே போக முடியாது. உடனே வானரங்கள் தங்கள் மென்மையான கைகளால் கண்களைப் பொத்தி மூடிக் கொண்டன. சீக்கிரம் வெளியேற வேண்டும் என்ற ஆசையால், முகத்தையே கைகளால் மூடிக் கொண்டன. அடுத்த நிமிஷம் தாங்கள் பள்ளத்தின் வெளியே இருப்பதை உணர்ந்தார்கள். வெளியே நின்ற வானரங்களைப் பார்த்து ஸ்வயம்ப்ரபா4, ஆஸ்வாசப்படுத்தி, அந்த இடத்தைப் பற்றி விளக்கினாள். இது தான் விந்த்ய மலை. பலவிதமான மரங்கள் அடர்ந்து தெரிகின்றன. அதோ ப்ரஸ்ரவன மலை. அதோ பாருங்கள், மகா சமுத்திரம். சௌகர்யமாக போய் வாருங்கள். நான் கிளம்புகிறேன் என்று சொல்லி, திரும்ப பிலத்தினுள் சென்று விட்டாள். இந்த வானரங்கள் எதிரில் அலை மோதும் சமுத்திரத்தைக் கண்டனர். நீர் வாழ் ஜந்துக்கள், அலைகளோடு மேலே சென்று, திரும்ப அதனுடனேயே நீரில் மூழ்குவதைக் கண்டனர். ஆரவாரமான இந்த ஓசையைக் கேட்டு, இடி ஓசையோ என்று மயங்கின. மாயாவியான மயன் மாளிகையில் இருந்த பொழுதே, ராஜா சுக்ரீவன் கொடுத்த கால வரையறை முடிந்து விட்டது போலும் என்று விந்த்ய மலையடிவாரத்தில் மலர்ந்து கிடந்த மரங்களின் அடியில் அமர்ந்து தங்களுக்குள் மனம் விட்டுப் பேசிக் கொண்டன. நூற்றுக் கணக்கான கொடிகளில் மலர்கள் பூத்து குலுங்கின. வாசந்திகா மரத்தின் புஷ்பங்களைப் பார்த்ததும் அலறின. வசந்த காலம் வந்து விட்டது என்பதன் அறிகுறி வாசந்திகா மரத்தின் புஷ்பங்கள். வசந்த காலம் வந்து விட்டது என்று சொல்லிக் கொண்டன. காலம் ஓடி விட்டது. நாம் தான் கவனம் இன்றி இருந்து விட்டோம், என்பது உரைக்கவும், செயலிழந்து தரையில் அமர்ந்தன. வயது முதிர்ந்த வானரங்களும், விவரம் அறிந்தவர்களுமான சிலர், மதுரமாக பேசி, அவர்களுக்கு சமாதானம் சொன்னார்கள். தாங்கள் அனுமானித்தபடி, சுக்ரீவன் சொன்ன கால கெடு முடிந்து விட்டதை உறுதிப் படுத்தினார்கள். யுவராஜன், அங்கதன் நாம் வானர ராஜனின் கட்டளைப் படி, ஊரை விட்டு வெளியே வந்து தேட ஆரம்பித்து ஒரு மாதம் ஆனதை உணரவில்லை. ஆஸ்வயுஜ மாதத்தில் புறப்பட்டோம். கால கணக்கு வைத்துக் கொள்ள தவறி விட்டோம். இப்பொழுது என்ன செய்யலாம்? உங்களில் பலர் நீதி முறைகளை அறிந்தவர்கள். தலைவனின் நன்மையில் நாட்டமுடையவர்கள். எந்த காரியம் ஆனாலும், தீர்காலோசனையுடன் செய்யக் கூடியவர்கள். உங்களில் சிலரின் புகழ் திக்குகளில் எல்லாம் பரவியிருப்பதும் தெரிந்ததே. சுக்ரீவன் சொன்னதன் பேரில் என் தலைமையில் புறப்பட்டு வந்துள்ளீர்கள். நாம் மேற் கொண்ட கடமையை முடிக்காமல் திரும்பப் போய் பயனில்லை. அதை விட உயிரை விடுவதே மேல். வானர ராஜனின் ஆணையை மீறியவன் எவன் சுகமாக இருந்திருக்கிறான்? சுக்ரீவன் தானாக நியமித்த கால வரையறை அதை நாம் நினைவில் கொள்ளாமல் காலந்தாழ்ந்து போனால், சுபாவமாகவே கடுமையான சுக்ரீவன், இப்பொழுது அரசனாக, நம்மை தண்டிக்காமல் விட மாட்டான். தவறு செய்தவர்களை மன்னிக்கவே மாட்டான். அதை விட ப்ராயோபவேசம் (உண்ணாவிரதம் இருந்து மடிதல்) செய்வதே சிறந்தது. அதுவும், ராம காரியத்தில், சீதையைத் தேட என்ற அவன் முயற்சி பலனளிக்காமல் போனால் ஆத்திரமே அடைவான். அதைவிட மேல், நாம் அவன் எதிரிலேயே போகாமல், இங்கேயே உயிரை விடுவோம். மனைவி, குழந்தைகளை, செல்வம், வீடு வாசல்களைத் துறந்து, இந்த காடு மலைகளைச் சுற்றித் திரிந்தோம். இதில் நாம் அனுபவித்த கஷ்டங்களை அவன் செவி கொடுத்து கேட்க மாட்டான். திரும்ப போனால் துன்புறுத்துவான். வதம் தான் முடிவில். அதை விட இங்கேயே இருந்து மடிவோம். என்னை சுக்ரீவன் தானாக யுவ ராஜாவாக முடி சூட்டவில்லை. மகானான ராமனால் யுவ ராஜாவாக நியமிக்கப் பட்டேன். என்னிடம் சுக்ரீவனுக்கு நெடு நாளைய பகை உண்டு. இந்த சமயம் நான் போனால், இதே காரணமாக என்னை கடுமையாக தண்டிக்கவே முனைவான். என்னால் என் நண்பர்களான உங்களுக்கும் கஷ்டம். நான் இந்த புண்யமான சாகர கரையில் உயிரை விடுகிறேன். நீங்கள் திரும்பிப் போங்கள். இதைக் கேட்டு மற்ற வானரங்கள் மனம் நெகிழ்ந்தன. சுக்ரீவன் சுபாவமாகவே கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். தற்சமயம் ராகவனும் தன் பிரிய மனைவியை இழந்த துக்கத்தில் அவள் நினைவாகவே இருக்கிறான். நம் நிலைமையின் தீவிரத்தை அவர்கள் உணர மாட்டார்கள். காலமும் கடந்து, கடமையையும் முடிக்காமல் நாம் போய் நின்றால், நமக்கு என்ன வரவேற்பு இருக்கும்? ராகவனுக்கு பிரியமான காரியத்தை, நம்மைக் கொண்டு முடித்து தர சுக்ரீவன் விரும்பினான். நாம் செய்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருப்பவன், எதிர்மறையாக நாம் சொல்லும் செய்தி, அவனுக்கு பிடிக்காமல் போவதில் ஆச்சர்யமில்லை. ராகவனுக்காகவே நம்மை கொல்வான். தவறு செய்தவன், யஜமானனின் அருகில் செல்லவே கூடாது. நாம் அனைவருமே சுக்ரீவனின் பிரதான படையைச் சேர்ந்தவர்கள். இங்கேயே தேடிக் கொண்டிருப்போம். சீதை கிடைத்தால் திரும்பிப் போவோம். இல்லையெனில் யமராஜ்யம் போவோம், எனவும் மற்ற வானரங்கள் ஆமோதித்தன. வானரங்களின் மனதில் பயமே நிரம்பியிருப்பதைக் கண்டு தாரன் ஒரு உபாயம் சொன்னான். கவலை வேண்டாம். திரும்ப இந்த பிலத்தினுள் சென்று வசிப்போம். மாயா ஜாலங்கள் நிறைந்தது. யாரும் இதை எளிதில் கண்டு கொள்ளவோ, உள்ளே நுழையவோ முடியாது. நமக்கு உணவுக்கும் குறைவில்லை. ஏராளமான பழ மரங்களும், நீர் நிலைகளும் இருக்கின்றன. இந்திரனே வந்தாலும், ராகவனே தேடிக் கொண்டு வந்தாலும், வானர ராஜன் தேடிக் கொண்டு வந்தாலும் கண்டு பிடிக்க முடியாது. அதனால் பயம் இல்லை. மற்ற வானரங்கள் இதைக் கேட்டு ஆரவாரம் செய்தன. அவர்களுக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. நமக்கும் துன்பம் இல்லாமல் இது நல்ல வழியே என்றன,
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், அங்கதாதி நிர்வேதோ என்ற ஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 54 (325) ஹனுமத்பேதனம் (ஹனுமான் அறிவுரை)
தாரன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஹனுமான், மனதினுள் அங்கதனை சிலாகித்துக் கொண்டிருந்தான். யுவராஜாவாக ஆக தகுதி உள்ளவன் தான், இந்த வாலி மகன். ராஜ்யத்தையே நிர்வகிக்கும் புத்தி கூர்மையும், இவனிடம் இருக்கிறது. சுக்ல பக்ஷ சந்திரனின் கலை போன்று நல்ல வளரும் அறிகுறி இந்த இளம் வயதில் இந்த அங்கதனிடம் காணப்படுகின்றன. தந்தைக்கு சமமான பலமும், ப்ருஹஸ்பதி போல புத்தி கூர்மையும், தாரனை பணிவிடை செய்து மகிழ்விப்பதில் இந்திரன் சுக்ராசாரியருக்கு பணிவிடை செய்தது போல தெரிகிறது. சாஸ்திரங்கள் அறிந்தவன். தன் தலைவனுடைய கட்டளை எப்படிப் பட்டது, எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை தெளிவாக அறிந்திருக்கிறான். தற்சமயம் களைத்து இருக்கிறான். இவன் உற்சாகத்தை திரும்ப பெறச் செய்ய வேண்டும் என்று ஹனுமான் பேச ஆரம்பித்தான். நான்கு வித உபாயங்களில் மூன்றாவதான பேதம் என்பதிலிருந்து ஆரம்பித்தான். ஆளுக்கு ஆள் உபாயம் சொல்லி குழம்பிக் கிடந்த அங்கதனை மேலும் கலங்கச் செய்தான். கோபத்துடன் பேசுவது போல, தன் எண்ணத்தை சொன்னான். அங்கதா, என்ன பேச்சு பேசுகிறாய். உன் தந்தை வகித்த ராஜ்யம், அதை வாலியைப் போலவே நிர்வகிக்க வேண்டியவன் பேசுகிற பேச்சா இது. அங்கதா ஜாம்ப3வான், நீலன், சுஹோத்ரன், நான், இன்னும் எங்கள் போன்ற பலரை நீ சுக்ரீவனிடமிருந்து பிரிக்க முடியாது. சாம, தா3னாதி நால் வகைகளிலும் முடியாது. இந்த ஸ்திர புத்தி இல்லாத வானரங்கள், புத்ரர்கள், உற்றார் உறவினர், செல்வம், வீடு இவற்றை விட்டு உன்னுடன் வரும் என்றா நினைக்கிறாய். தவிர அந்த பி3லம் (பள்ளம்) ப்ரும்மாவினுடையது என்று சொல்லக் கேட்டோம். இதை லக்ஷ்மணன் பாணங்கள் அல்பமாக, அனாயாசமாக பிளந்து விடும். முன்பு இந்திரன், அசனி என்ற ஆயுதத்தை போட்டு அடித்தது ஒன்றுமே இல்லை எனும்படி, லக்ஷ்மணனுடைய கூர்மையான பாணங்கள் வந்து விழும். மலைகளைக் கூட பிளக்கும்படியான வஜ்ரம் போன்ற ஆயுதங்களால் லக்ஷ்மணன் அடிப்பான். நீ சொல்வது போல ப்ராயோபவேசம் செய்ய உன்னுடன் அமரும் வானரங்கள் திடுமென, புத்ர தா3ராதிகளை நினைத்துக் கொண்டு ஓடி விடுவார்கள். அல்லது பசி வந்தால், உடல் வலித்தால், இவை தாங்க மாட்டா. அப்பொழுது என்ன ஆகும்? உன் நலனை நாடும் நண்பர்களும் உடன் இருக்க மாட்டார்கள். பந்துக்களும் உடன் வர இருக்க மாட்டார்கள். உன் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். லக்ஷ்மண பாணங்கள், உன்னை எதுவும் செய்யாது, என்பதும் இல்லை. எதிர்த்து நீ நின்றால், லக்ஷ்மண பாணங்கள் பட்டு வீழ்வாய். எங்களுடன் சேர்ந்து நீயும் வந்து நின்றால் சுக்ரீவன் தண்டிக்க மாட்டான். முன் போலவே நீ யுவ ராஜாவாகத் தான் இருப்பாய். உன் தந்தை வழி உறவினன், சிறிய தந்தை, உன்னிடத்தில் அன்புடையவன் தான். சொன்ன சொல் மாற மாட்டான். உன் தாயிடம் நன்றிக் கடன் பட்டவன். அதனாலும் உன்னைக் கொல்ல மாட்டான். அதனால் அங்கதா, திரும்பி போவதில் தப்பில்லை வா என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமத் பேதனம் என்ற ஐம்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 55 (326) ப்ராயோபவேச: (வடக்கிருத்தல்)
ஹனுமானின் பேச்சைக் கேட்டு அங்கதன் குழம்பினான். தன் தலைவனிடம் மதிப்பு உடையவன் அதனால் தான் இப்படி பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டு பதில் சொன்னான். தன் அபிப்பிராயத்தைச் சொன்னான். ஸ்திரமான போக்கோ, நல்ல குணமோ, மனதில் தெளிவோ, நியாய உணர்வோ, கெடுதல் நினைக்காமல் இருக்கும் குணமோ, நேர்மையோ, விக்ரமமோ, தர்மமோ- இதில் எந்த குணமும் சுக்ரீவனிடத்தில் இல்லை. தமையனின் மனைவி தாய்க்கு சமமானவள். தமையன் உயிருடன் இருக்கும் பொழுதே அவளை தன் மனைவியாக்கிக் கொண்டவன். தர்மம் அவனுக்கு எங்கே தெரியும்? பள்ளத்தின் வாசலில் காவல் இரு என்று உள்ளே யுத்தம் செய்ய போனான். தமையன் உள்ளே சென்ற வழியை பாறை வைத்து மூடி விட்டு இவன் வந்து விட்டான். தமையன் என்ன ஆனான் என்று சிந்திக்கவில்லை. சத்யம் செய்து ராமன் கை பிடித்து சக்யம், நட்பு செய்து கொண்டு பின் மறந்தே போனான். இவன் என்ன சத்யவாதி. லக்ஷ்மணனிடம் உள்ள பயத்தால், தர்மம் என்று எண்ணியல்ல, எங்களை சீதையைத் தேட அனுப்பியிருக்கிறான். இதில் தர்மம் எங்கு வந்தது. பாபி, செய் நன்றி மறந்தவன், மறதியும், ஸ்திரமில்லாத புத்தியும் உள்ளவன். இவனை யார் நம்புவார்கள். நல்ல குலத்தில் பிறந்தவன், வாழ நினைப்பவன், இவனை நம்பி ஏன் இறங்கப் போகிறான். ஒரு போதும் இல்லை. ராஜ்யத்தில் குணம் உள்ளவனோ, நிர்குணனோ, தன் புத்திரர்களைத் தான் நியமிப்பார்கள். சுக்ரீவனுக்கு நான் சத்ரு குலத்தவன். வாலி மகன். என்னை ஏன் நீடித்து இருக்க விடுவான். உயிரோடு விட்டு வைத்திருப்பானா என்பதே சந்தேகம். அவன் கட்டளையை நிறைவேற்றாமல், தவறு செய்தவன் நான். சக்தியற்றவன். திரும்ப கிஷ்கிந்தை வந்தால் அனாதை போல நிற்பேன். விலங்கு பூட்டி சிறையில் வைத்தாலும் வைப்பான். சுக்ரீவன் க்ரூரன், வறட்டு பிடிவாதக் காரன். தயவு என்பதே இல்லாத கொடூரமான அரசன். நாட்டை விட்டு துரத்தினாலும் துரத்துவான். இப்படி விலங்குடன் இருப்பதைக் காட்டிலும், நாடு கடத்தப் படுவதைக் காட்டிலும், நான் ப்ராயோபவேசம் செய்து உயிரை விடுவது மேல். எனக்கு அனுமதி தாருங்கள், மற்ற வானரங்கள் அனைவரும் ஊர் திரும்பிச் செல்லுங்கள். நான் கிஷ்கிந்தை திரும்பப் போவதில்லை. இது நிச்சயம். இங்கேயே கிடந்து உயிர் விடுவது தான் என் முடிவு. என் வணக்கங்களைச் சொல்லி ராம லக்ஷ்மணர்களிடம் குசலம் விசாரியுங்கள். என் வணக்கங்களைத் தெரிவித்து ராஜாவிடம் குசலம் விசாரியுங்கள். வானர ராஜன், என் தந்தை வழி சிற்றப்பனிடம் நலம் விசாரித்ததாகச் சொல்லுங்கள். என் தாய், ருமா இவர்களையும் நலம் விசாரியுங்கள். என் தாயான தாரையை சமாதானம் செய்யுங்கள். இயல்பாகவே, புத்ர வாத்ஸல்யம் மிகுந்தவள். அவள் என் பிரிவைத் தாங்க மாட்டாள். என்னிடம் அக்கறை உள்ளவள், தபஸ்வினி. நான் இங்கு மறைந்தேன் என்று காதில் விழுந்தாலே உயிரை விட்டு விடுவாள். மற்றும் பெரியவர்கள், எல்லோரையும் வணங்கி, என் சார்பில் நலம் விசாரியுங்கள். இதன் பின் அங்கதன், பூமியில் தர்ப்பை புல்லை விரித்து அமர்ந்து விட்டான். இதைக் கண்ட வானரங்கள் கண்களில் நீர் மல்க, நின்றனர். சுக்ரீவனைத் திட்டின. வாலியைப் புகழ்ந்தன. அங்கதனை சுற்றி நின்று கொண்டு, தாங்களும் ப்ராயோபவேசம் செய்யத் தயாராயின. அங்கதன் சொன்னதன் உட்பொருள் இப்பொழுது தான் உரைத்தது போலும். எல்லோரும் தண்ணீரைத் தொட்டு கிழக்கு முகமாக அமர்ந்தன. சமுத்திரக் கரையை அடைந்து தர்ப்பையை விரித்து, அதன் தென் திசையில் கோடியில் அமர்ந்தன. (வடக்கிருத்தல்- வடக்கு முகமாக இருந்து உயிரை விடுதல்) நாங்களும் அங்கதனுடன் மடிவோம் என்று தீர்மானித்த வானரங்கள், ராமருடைய வனவாசமும், தசரதனின் மரணமும், ஜடாயு ஜனஸ்தானத்தில் யுத்தத்தில் வதம் செய்யப் பட்டதும், ராம கோபமும், சேர்ந்து இந்த வானரங்களின் உயிருக்கு ஆபத்தாக முடிந்தன என்று பேசிக் கொண்டே, பெருத்த உடலை உடைய வானரங்கள், சமுத்திர மணலில் திடுமென முளைத்த மலைக் குன்றுகளைப் போல ஆங்காங்கு அமர்ந்தனர். அந்த நிசியில், இவர்களின் கூச்சல், வானத்தில் மேகங்கள் திடுமென கூடி, இடி இடித்தாற் போல ஒலித்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ப்ராயோபவேசோ என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)