ஸ்ரீமத் ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 21 – 40
அத்தியாயம் 21 (292) ஹனுமதா3ஸ்வாஸனம் (ஹனுமான் ஆறுதல் சொல்லுதல்)
ஆகாயத்திலிருந்து விழுந்த நக்ஷத்திரம் போல கீழே விழுந்த தாராவை மெதுவாக ஹனுமான் சமாதானம் செய்தான். தான் செய்த வினையின் பயனே, ஜீவன்களுக்கு குணமாகவும் (நன்மையாகவும்), தோஷமாகவும் (தீமையாகவும்) வெளிப்படுகிறது. சுபமோ, அசுபமோ, எல்லாவற்றையும் சேர்ந்து தான் அனுபவிக்கிறான். நீ யாரை எண்ணி வருந்துகிறாய்? நீயே வருத்தத்தில் இருக்கிறாய்? நீயே தீனமாக இருந்து எந்த தீனனுக்காக இரங்குகிறாய்? இந்த நீர்க்குமிழி போன்ற வாழ்க்கையில் யாருக்காக யார் வருந்துவது? இதோ குமாரன் அங்கதன். இவன் உயிருடன் இருக்கும் வரை இவனை கவனித்துக் காப்பாற்று. மேற் கொண்டு செய்ய வேண்டியது என்ன என்று யோசி. உன் சாமர்த்யம் அதில் செலவாகட்டும். இந்த உலகில் வாழ்க்கை நிச்சயமில்லாதது என்பதும் நீ அறிந்தது தானே. ஜீவன்களின் வருகையும், உயிர் நீத்தலும் நம் கையில் இல்லை. இக பர நன்மைகளைக் கருதி, எப்பொழுதும் சுபமானதையே செய்ய வேண்டும் என்பது சான்றோர் வகுத்த வழி. எவனிடத்தில் ஆயிரக் கணக்கான (அர்புதானி- நூறு மில்லியன்) வானரங்கள் தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக எண்ணி, விஸ்வாசத்தை வைத்திருந்தார்களோ, அந்த தலைவன் வாலி கால கதி அடைந்து விட்டான். இவன் நியாயமாக அர்த்தம், பொருள் தெரிந்து கொண்டவன். சாம, தான, காமம் இவைகளுக்கு அப்பாற் பட்டவன். தர்மவான்கள் அடையும் பெரும் உலகை அடைந்து விட்டான். சந்தேகமே இல்லை. இவனை நினைத்து நீ கவலைப் பட வேண்டியதில்லை. இந்த வானர வீரர்களும், உன் மகன் அங்கதன், வானர ராஜ்யம் இவை இப்பொழுது உன் தலைமையில் இயங்கட்டும். நீ பொறுப்பை ஏற்றுக் கொள். இவர்கள் அனைவரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். இவர்களை சாமாதானப் படுத்து. உன்னால் வளர்க்கப் பட்ட அங்கதன் பூமியை ஆளட்டும். சந்ததியை காப்பாற்ற வேண்டியதும் உன் பொறுப்பாகிறது. இப்பொழுது உடனடியாக செய்ய வேண்டிய க்ருத்யங்களைச் செய்வோம். அரசனுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளுடன் இவனுடைய சம்ஸ்காரங்களைச் செய்வோம். அங்கதனுக்கு முடி சூட்டுவோம். சிம்மாசனத்தில் அமர்ந்த புத்திரனைப் பார்த்து நீ மன சாந்தி அடைவாய். கணவன் மறைவினால் துயரம் அடைந்திருந்த தாரா, எதிரில் நின்று வினயமாக வேண்டிய ஹனுமானைப் பார்த்து பதில் சொன்னாள். அங்கதன் போல் நூறு புத்திரர்கள் இருந்தாலும் வாலிக்கு ஈடாகாது. நான் வானர ராஜ்யத்தை நடத்திச் செல்ல அருகதை உள்ளவள் அல்ல. அங்கதனும் அல்ல. தந்தை வழி ராஜ்யத்தை சுக்ரீவனே அடையட்டும். மேற் கொண்டு க்ருத்யங்களையும் அவனே செய்யட்டும். அங்கதனிடத்தில் இப்படி ஒரு எண்ணம் பரவ வேண்டாம். ஹனுமானே, புத்திரனுக்கு தந்தை தான் பந்து. தாயல்ல. எனக்கு வானர ராஜ்யத்தை நிர்வகிக்கும் சக்தியும் இல்லை. முன்பும் இல்லை, இப்பொழுதும் இல்லை. என் முன் அடிபட்டு கிடக்கும் வீரனை நான் சேவித்தால் போதுமானது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமதா3ஸ்வாஸனம் என்ற இருபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 22 (293) வால்யனுசாஸனம் (வாலி தீர்மானித்து ஆணையிடுதல்)
நாலா புறமும் பார்வையைச் செலுத்தி, மெதுவாக மந்தமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்த வாலி, தன் மகனுக்கு முன்னால் நின்றிருந்த சுக்ரீவனைக் கண்டான். வெற்றி பெற்ற சுக்ரீவனைப் பார்த்து வானர ராஜன், தெளிவாக, ஸ்னேகமாக பேசினான். சுக்ரீவா, என்னிடம் குறை கண்டு தோஷம் என்று தள்ளாதே. காலம் இழுக்கிறது பலவந்தமாக. அதன் படி புத்தியை மோகம் சூழ்ந்து கொள்கிறது. இரண்டும், இப்பொழுது தெரிகிறது, நமக்கு நன்மையைச் செய்யவில்லை. இயற்கையாக உடன் பிறந்தவனிடம் இருக்க வேண்டிய பாசம் கூட தொலைந்து விட்டது. விபரீதமாக விரோதம் வளர்ந்தது. இன்றே நீ வானரங்களின் இந்த ராஜ்யத்தை ஏற்றுக் கொள். நானும் இதோ, இன்றே வைவஸ்வத லோகம் அடைந்து விடுவேன் என்றும் தெரிந்து கொள். என் வாழ்க்கையையும், ராஜ்யத்தையும், ஏராளமான செல்வத்தையும் விட்டுச் செல்கிறேன். இதோடு என் புகழும் பெருமளவு மாசு பட்டு விட்டது. இந்த நிலையில் நான் சொல்வது உனக்கு பிடிக்காமல் இருக்கலாம். கஷ்டமாக இருந்தாலும் செய். ராஜன், என் மகன் இவன். இன்னும் விவரம் அறியாத பா3லகன். சுகமாக வாழ்ந்தவன். இவன் கஷ்டப் படாமல் பார்த்துக் கொள். பூமியில் விழுந்து புரண்டு கண்ணீர் விடுவதைப் பார். என் உயிருக்குயிரான மகன். என் குல விளக்கு. என் வாரிசு. நான் இல்லாததால் துன்பப் படாமல் பார்த்துக் கொள். இனி நீ தான் இவனுக்கு எல்லாம். பயந்தால், அபயம் அளித்து நான் இவனிடம் எப்படி இருப்பேனோ, அதே போல நடந்து கொள். தாரையின் மகன். உனக்கு சமமான பராக்ரமம் உடையவன். ராக்ஷஸர்களை வதம் செய்ய இவன் உன் முன் நிற்பான். உனக்கு அனுகூலமான காரியங்களைச் செய்து யுத்தத்தில் உதவியாக இருப்பான். இளம் வயது பாலகன். ஆனாலும் அங்கதன் உன்னை கரை சேர்ப்பான். இந்த தாரா, சுஷேணன் மகள். இவள் சூக்ஷ்மமான பொருளாதார அறிவு உடையவள். விளைச்சல், உற்பத்தி செய்தல் போன்ற பல விஷயங்களில் தெளிவான அறிவுடையவள். இவள் சரி என்று சொல்வது கண்டிப்பாக சரியாக இருக்கும். இவள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள். சந்தேகம் இல்லாமல் அந்த வழியில் செல். தாரா சொல்லி ஒரு காரியம் வேறாக ஆனதே இல்லை. ராகவனுடைய காரியத்தையும் நீ குறைவற செய்து தர வேண்டும். செய்யாமல் விட்டால் அதர்மம் என்பது தவிர, அவன் மனம் வாடினால், உன்னையும் அழித்து விடுவான். இதோ இந்த பொன் மாலையை அணிந்து கொள். சுக்ரீவா, இதில் லக்ஷ்மி நித்ய வாசம் செய்வாள். நான் இறந்த பின், விட்டு போய் விடக்கூடும். இப்பொழுதே போட்டுக் கொள். சகோதர பாசத்துடன் இவ்வளவும் சொல்லி விட்டு, திடுமென முகத்தின் தெளிவு மறைய, க்ரஹணம் பிடித்த சந்திரன் போல் ஆனான். வாலியின் பேச்சைக் கேட்டு சாந்தமாகி, தானாகவே யுக்தமானதை செய்ய முன் வந்த சுக்ரீவன், பொன் மாலையையும் வாங்கி கொண்டான். பொன் மாலையை சுக்ரீவனிடம் கொடுத்து விட்டு, வாலி தன் மகன் அங்கதன் பக்கம் திரும்பினான். மகனே, தேச காலங்களை அனுசரித்து நடந்து கொள். பிரியமோ, இல்லையோ, பொறுத்துக் கொள். சுக துக்கங்களை சமமாக பாவிப்பாய். சுக்ரீவன் சொல்படி நடந்து கொள். மகா பாக்கிய சாலி நீ. என்னால் நீ எப்படி கொண்டாடி, அன்பாக வளர்க்கப் பட்டாயோ, அதே போல சுக்ரீவனிடம் எதிர் பார்க்க முடியாது. இவன் நண்பனிடமும் நெருங்காதே, சத்ருவானாலும் நெருங்காதே. யஜமானன் என்று பழகு. அவன் நலனில் பெருந்தன்மையோடு நடந்து கொள். சுக்ரீவன் விருப்பம் அறிந்து நடந்து கொள். யாரிடமும் அதிக ஸ்னேகமும் வைக்காதே. அதற்காக நண்பனே இல்லாமல் எல்லோரிடத்திலும் விலகியே இருக்காதே. இரண்டுமே எல்லை மீறினால், தோஷமே. அதனால் நடு வழியில் இரு. இவ்வளவு சொல்லும் முன், கண்கள் செருக, அடிபட்ட வேதனை முகத்தில் தெரிய, பற்கள் கிட்ட, ஏறக்குறைய உயிர் இழந்த நிலைக்கு வந்து விட்டான். வானர சேனைத் தலைவர்களும், மற்ற வானரங்களும் அலற ஆரம்பித்தன. எல்லா வானர பிரஜைகளும் மனம் வருந்தின. கிஷ்கிந்தை இன்று சூன்யமாகி விட்டது. வானர ராஜன் ஸ்வர்கம் சென்று விட்டான் என்று கதறின. எங்கள் உத்யானங்கள், காடுகள் எல்லாமே அதன் தலைவனை இழந்து சூன்யமாகி விட்டன. வானர ராஜனை வீழ்த்தி, வானரங்களை ஒளியில்லாமல் செய்து விட்டீர்கள். எவனுடைய முயற்சியால், மகத்தான வனங்களும், கானனமும், பூக்கள் நிறைந்து விளங்குகிறதோ, இதை இனி யார் எங்களுக்குச் செய்யப் போகிறார்கள். கந்தர்வர்கள் கூட பெரும் யுத்தம் செய்த வீரன். கோ3லபன் என்ற க3ந்த4ர்வனுடன் பதினைந்து வருஷம் போரிட்டான். இரவு, பகல் இன்றி அந்த போர் நீடித்தது. அதன்பின் பதினாறாவது வருஷம் கோ3லபன் வீழ்ந்தான். அந்த துர்வினீதனைக் கொன்று வாலி, பெரிய பல்லும், பயங்கரமான உருவமும் உடையவனை வதைத்து, எங்கள் எல்லோருக்கும் அபயம் அளித்தான். அவன் எப்படி இப்பொழுது வீழ்த்தப்பட்டான் என்பது தான் நம்ப முடியாததாக உள்ளது. வானரங்கள் தங்கள் அரசன் வதம் செய்யப் பட்டதில் மிகுந்த மன வருத்தத்தை அடைந்தன. சிங்கம் நிறைந்த காட்டில், பாதுகாவலாக நின்ற பசுக்கள் தலைவன், அடிபட்டு கிடந்தால், மற்ற பசுக்கள் செய்வதறியாது திகைப்பது போல திகைத்தனர். இதனிடையில் தாரா, தன் கணவன் முகத்தைப் பார்த்து, துயரம் மேலிட, அவன் உடலை அணைத்துக் கொண்டு , மகா வ்ருக்ஷத்தை கொடி தழுவியது போல தழுவியபடி அழுதாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வால்யனுசாஸனம் என்ற இருபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 23 (295) அங்க3தா3பி4வாத3னம் (அங்கதன் வணங்குதல்)
முகத்தோடு முகம் வைத்து கணவன் உடலோடு அரற்றிய தாரா, ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு, இறந்து கிடந்த கணவன் உடலைப் பார்த்து புலம்பினாள். எஎனக்கு பதில் சொல்லாமல் கிடக்கிறாயே, என் துக்கத்திற்கு வடிகால் ஏது? பூமியில் கல் கிடப்பது போல கிடக்கிறாய் என்னை விட உனக்கு பூமி அதிக பிரியம் போலும். அவளை அணைத்துக் கொண்டு படுத்துக் கிடக்கிறாய். என்னுடன் பேசக் கூட முடியவில்லை. இந்த செல்வம் அனைத்தும் சுக்ரீவன் வசமாகப் போகிறது. அஹோ, சுக்ரீவன் தான் வீரன், விக்ரமன் என்றாகி விட்டது. சாகஸப் ப்ரிய, ருக்ஷ, வானரங்களில் பலசாலியான தலைவன் வீழ்ந்து விட்டான், என் புலம்பலையும், பிரியமான அங்கதனையும் நினைத்து பதில் சொல். இது வீர சயனம், இதில் யுத்தத்தில் அடிபட்டவன் தான் படுக்கலாம். உன் எதிரிகளை முன்பு நீ இப்படி கிடத்திக் கொண்டிருந்தாய். நல்ல ஜனங்கள் உனக்கு மந்திரிகளாக சுற்றிலும் இருந்தனர். யுத்தம் உனக்கு பிரியமான விளையாட்டாக இருந்தது. எனக்கு பிரிய கணவனாக இருந்தாய். இப்பொழுது என்னை அனாதையாக விட்டு விட்டு கிளம்பி விட்டாய். சூரனுக்குத் தான் பெண்ணை கொடுக்க வேண்டும் என்பார்கள். இப்பொழுது என்னைப் பார். ஒரு நிமிஷ நேரத்தில் என்னை தனியாக விட்டு கணவன் இல்லாதவளாக ஆக்கிச் சென்று விட்டாய். என் கௌரவம் அழிந்தது. என் வழி நிரந்தரமாக அடைபட்டு விட்டது. ஆழம் தெரியாத துயரக் கடலில் நான் மூழ்கி கிடக்கிறேன். உன் ஹ்ருதயமோ, கல்லாகி விட்டது. என்னிடம் இவ்வளவு பிரியமாக இருந்தவன், போனபோது, என் ஹ்ருதயம் ஏன் ஆயிரம் சுக்கல்களாக உடைந்து சிதறவில்லை. பதி இல்லாத பெண்ணுக்கு புத்திரன் இருந்தும், த4ன தா4ன்யங்கள் நிறைந்திருந்தும், அவளுக்கு வித4வா என்று பெயர் சூட்டப் படுகிறது. பூச்சிகளும், மற்றவைகளும் நடமாடும் இடத்தில் உனக்கு படுக்க இடம் தேடிக் கொண்டு விட்டாய். புழுதி படிந்து, ரத்தம் உலர்ந்து உன் சரீரத்தை இப்பொழுது பார்க்கும் பொழுது அணைக்கக் கூட என் கைகளால் முடியவில்லை. சுக்ரீவன் திருப்தியாக ஆனான். இன்று உன்னிடம் மிக அதிகமாக விரோதம் பாராட்டியவன் ஜயித்து விட்டான். ராமன் எய்த ஒரு பாணம், உன் சரீரத்தை தொட்டமாத்திரத்தில் நீ விழுந்து விட்டாய். உன்னைத் தடுத்து பார்த்தேன். இப்பொழுது இறந்து கிடக்கிறாயே என்று புலம்பினாள். அவன் உடலில் தைத்த பாணத்தை நீலன் வெளியே பிடுங்கி எடுத்த பொழுது பளிச்சென்று ஒரு ஒளி தெரிந்தது. அதனுடன் ரத்த துளிகளும் அவன் உடலிலிருந்து வெளிப் பட்டது. மலையிலிருந்து தாம்ர தாது கலந்து விழும் அருவி போல இருந்தது. தாரா, தன் புத்திரன் அங்கதனை அருகில் அழைத்து, புழுதியை துடைத்து, உடல் பூரா ரணமாக கிடந்த தன் பதியை, அவன் தந்தையை காட்டினாள். இதோ உன் தந்தை. அவர் கிடப்பதைப் பார். விரோதத்தை வளர்த்து தானே முடிவைத் தேடிக் கொண்டார். இளம் சூரியனைப் போன்ற சரீரம், யமன் வாயிலை சென்றடைந்து விட்டது. புத்ர, உன் தந்தை அரசன். அவனை வணங்கு. இருவருமாக பாதத்தில் வணங்கினர். அகன்ற புஜங்களுடன், நான் அங்கதன் என்று சொல்லி வணங்கும் மகனை முன் போல திர்காயுசாக இரு மகனே என்று ஏன் வாழ்த்தவில்லை. நானும் மகனே சகாயம் என்று விடப் பட்டேன். பசுக்கள் கூட்டத்தில் நுழைந்த சிங்கம், கன்றுடன் கூடிய பசுவை அடித்தது போல, சங்க்4ராமம் எனும் யக்ஞத்தில், ராம பாணம் அடித்ததே ஜலமாக, நான் இல்லாமலேயே தனியாக அவப்4ருத ஸ்நானம் செய்து முடித்து விட்டாய். தேவராஜன், உன்னிடம் சந்தோஷமாக கொடுத்த பொன் மாலை எங்கே? இங்கு என் கண்ணில் படவில்லையே. ராஜ்யலக்ஷ்மி உன் உயிர் பிரிந்த நிலையிலும் உன்னை விட்டுப் போகவில்லை. சூரியன் தன் கதியில் சுழன்று திரும்பி வரும் பொழுது மலையரசனை ஓளி மயமாக்குவது போல தெரிகிறது. உன்னை தடுத்து நிறுத்த என்னால் முடியவில்லை. என் வார்த்தைகள் உனக்கு ஏற்கவில்லை. நான் நினைத்ததை செயல் படுத்த என்னால் முடியவில்லையே. அதனால் நானும் வீழ்ந்தேன். யுத்தத்தில் அடிபட்டு நீ இறந்து பட்ட பொழுது, என்னிடமிருந்த லக்ஷ்மியும் விலகி சென்று விட்டாளோ?
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், அங்கத3 அபி4வாத3னம் என்ற இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 24 (295) சுக்ரீவ தாராஸ்வாஸனம் (சுக்ரீவன் தாரையை சமாதானப் படுத்துதல்)
கண்ணீர் விட்டு கதறி அழும் தாரையைப் பார்த்து, வாலியின் இளைய சகோதரன், தானும் வாலியின் முடிவை நினைத்து மன சங்கடம் அடைந்தான். முகம் வாட, அவனும், கண்களை நீர் மறைக்க, ராமன் அருகில் சென்றான். அவனுடன் சதா அண்டியிருந்த வானரங்களும் உடன் சென்றனர். ஆலகால விஷம் போன்ற கூர்மையான பா3ணங்களையும், வில்லையும் கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்த ராமனை, குறி தவறாத இலக்குடையவனைப் பார்த்து சொன்னான். நரேந்திரா, தாங்கள் பிரதிக்ஞை செய்த படி செய்து காட்டி விட்டீர்கள். தாங்கள் செயலின் பலன் உடனே தெரிந்து விட்டது, என் ஆசையும் அகன்றது. இந்த வாலியின் ஜீவிதத்துடனேயே போகங்களிலிருந்து என் மனமும் ஆசையைத் துறந்தது இதோ இந்த ராஜ மகிஷி, மிகவும் வருந்தி அனாதை போல அழுகிறாள். ஊர் ஜனங்கள் அனைவரும் அண்ணன் பிரிவைத் தாங்க மாட்டாமல் ஓலமிடுகின்றனர். அண்ணன் இறந்து போனான். இவைகளைக் கண்டு அங்கதன் என்னை தீராத சந்தேகக் கண் கொண்டு பார்ப்பான். எனக்கு ராஜ்யத்தில் ஆசை விட்டுப் போயிற்று. கோபத்தாலும், அடக்க முடியாத ஆங்காரத்தாலும், மிகவும் அலைக்கழிக்கப் பட்டதாலும், என் அண்ணனை வதம் செய்வது எனக்கு மிக அவசியமாக தோன்றியது. இக்ஷ்வாகு குமரா, இப்பொழுது நிஜமாகவே அவனை வதம் செய்தபின், வானர ராஜனை போருக்கு அழைத்து வீழ்த்தி அவன் மரணத்துக்கு காரணமான பின், நான் மிகவும் வருந்துகிறேன். தவிக்கிறேன். அந்த ருஸ்யமூக மலையிலேயே நெடு நாள் வாஸம் செய்வதே எனக்கு ஸ்ரேயஸ் என்று இப்பொழுது உணருகிறேன். அந்த விசேஷமான மலையில் என் போக்கில் வாழ்ந்து கொண்டிருந்திருக்கலாம். இவனை வதைத்து மூன்று உலகிலும் எனக்கு ஒரு லாபமும் இல்லை. நான் உன்னை கொல்ல மாட்டேன், ஓடு என்று என்னை உயிருடன் தப்ப விட்டான். மகாத்மா, புத்திசாலி. ராமா, அப்படி சொன்னது, அவன் பெருந்தன்மைக்கு அழகு. நான் இப்பொழுது செய்திருப்பது என் அறியாமைக்கு எடுத்துக் காட்டு. யார் தான் நல்ல குணசாலியான சகோதரனை வதம் செய்ய நினப்பார்கள்? ராஜ்யமும், சுகமும் என்ன செய்யும்? அதன் உட்பொருளை உணராமல், காமமே குறியாக நான் நடந்து கொண்டு விட்டேன். இவனைக் கொல்வது என் எண்ணமாக இருக்கவில்லை. என் சக்தியை மீறிய செயல் என்பதால், என் புத்தி விபரீதமாக ஆகி, உயிரை எடுப்பதாக மாறி விட்டது. மரத்தின் கிளையை நான் உடைத்து போட்டு, முஹுர்த்த நேரம் தலை குனிந்து நின்றேன். என்னை சமாதானப் படுத்திச் சொன்னான். இனி இப்படி செய்யாதே -என்றான். சகோதர பாசமும், பெருந்தன்மையும், தர்மமும் இவனிடம் பாதுகாப்பாக இருந்தன. என்னால் க்ரோதமும், காமமும், குரங்கு புத்தியும் தான் காட்ட முடிகிறது. நினைத்தே பார்க்க முடியாதது, தவிர்க்கப் பட வேண்டியது, இப்படி கூட ஒரு விருப்பம் இருக்க முடியுமா என்று தள்ள வேண்டியது, கண்களால் காணத் தகாதது, அப்படி ஒரு பாபத்தை செய்திருக்கிறேன். நண்பனே, என் சகோதரனை, இந்திரன் த்வஷ்டா வதம் செய்தது போல வதம் செய்திருக்கிறேன். இந்திரனுடைய பாபத்தை, பூமி, ஜலம், ஸ்த்ரீகள், மரங்கள் இவை ஏற்றுக் கொண்டன. என் பாபத்தை யார் ஏற்றுக் கொள்வார்கள்? கிளைக்கு கிளை தாவும் குரங்கு, என்னிடம் எதை எதிர் பார்க்க முடியும்? இந்த சன்மானம், மரியாதை இவற்றுக்கு நான் உரியவன் இல்லை. ஜனங்கள் என்னை யுவ ராஜனாக ஏற்றுக் கொண்டாலே அதிகம். ராஜ்ய பாரம் எனக்கு எப்படி ஒட்டும். நான் அதற்கு எப்படி தகுதியானவன் ஆவேன். அதர்மம் நிறைந்த குல நாசத்துக்கு காரணமான இப்படி ஒரு செயலை செய்து விட்டு எந்த முகத்தோடு ஜனங்கள் முன் நிற்பேன். நிந்திக்கும்படி ஒரு பாப காரியத்தை செய்தவன் நான். மகா நீசத்தனமான செயல். உலகில் வெறுக்கத்தக்க இந்த செயலால் என் மனம் மிகவும் வேதனை அடைகிறது. மழை, பள்ளத்தில் பெய்யும் பொழுது, நீரின் வேகம் அதிகமாவது போல, யானை அட்டகாசம் செய்து நதிக் கரையை, மணலை விழச் செய்வது போல செய்திருக்கிறது. (சுக்ரீவன் தன்னை யானையோடு ஒப்பிடுகிறான். காவ்ய அலங்காரம், ரூபகம் எனப்படும்) சகோதரன் வதம் இதன் பின் பாகம் என்றால், என் சந்தாபம் இதன் தலை, கண், தும்பிக்கை, தந்தமாக இருக்கின்றன. மனிதருள் சிறந்தவனே, அஹோ, இந்த கஷ்டம் தாங்க முடியவில்லையே. நெருப்பில் புடமிடப்படும் பொழுது தங்கம் அடிபட்டு தவிப்பது போல தவிக்கிறேன். எங்கள் குலத்தில் எல்லோரும் பலசாலிகள். வானர சேனைத் தலைவர்கள். அங்கதனைப் பார். பாதிப் பிராணன் போனவன் போல வாட்டமுடன் தெரிகிறான். சோகமும், தாபமும் இவன் பாதி உயிரை பறித்து விட்டன போலும். அங்கதனுக்கு சமமான மகன், நல்லவனாக, கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று கேட்பவனாக, வசத்தில் இருப்பவனாக, சுபுத்ரன் எங்கு கிடைப்பான்? இது போல சகோதரனை அண்டி நான் இருந்தது போல எந்த தேசத்திலும் ஒற்றுமையை காண முடியாது. ஒருவேளை அங்கதன் உயிருடன் இருக்கலாம். தாயார் அவனை பரிபாலிக்க இருக்கலாம். நான் சகோதரனிடமும், புத்திரனிடமும் இழந்த அன்பை பெற அக்னி பிரவேசம் செய்யப் போகிறேன். இதோ இருக்கும் மற்ற வானரங்கள், எந்த தேசத்திலிருந்தும் சீதையைத் தேடிக் கொண்டு வருவார்கள். ராஜ குமாரா, நான் இல்லாவிட்டாலும் குறைவின்றி அந்த வேலை நடக்கும். குலத்தை அழித்த, உயிர் வாழ தகுதியற்ற, எனக்கு அனுமதி கொடு. நான் செய்த தவற்றுக்கு பிராயசித்தம் செய்கிறேன் என்று இவ்வாறு வருந்தும் சுக்ரீவனை, வாலியின் இளைய சகோதரனைப் பார்த்து ரகு வீரன், சங்கடத்துடன் சற்று நேரம் பேசாமல் இருந்தார். அச்சமயம், புவனத்தை பாதுகாத்து ரக்ஷிக்கும், பூமிக்கு சமமான பொறுமையுடைய, பயமின்றி யாரும் நெருங்கத்தக்கவனான ராமன், அழுது புலம்பும் தாரையைக் கண்டார். அந்த வானர ராஜனின் மனைவியை, தன் கணவனின் இறந்த உடலை அணைத்து கதறும் அழகிய கண்களையுடைய தாரையை, (ஹரி) வானர மந்திரிகள் மற்றவர்கள் ஆறுதல் சொல்லி, மெதுவாக அங்கிருந்து அழைத்து போவதைக் கண்டார். அவர்களுடன் மெல்ல நடந்து சென்ற பொழுது, கையில் வில்லும், அம்புமாக, சூரியனுக்கு சமமான தேஜஸுடன் நின்ற ராமனைக் கண்டாள். வெளி மனிதர்களை கண்டறியாத தாரா, ராஜலக்ஷணங்களுடன், நெடிதுயர்ந்து, ஆக்ருதியுடன், வசீகரமான கண்களுடன் நின்றவனை, மான் விழியாளான தாரா, இது தான் காகுத்ஸனாக இருக்க வேண்டும் என்று ஊகித்தாள். எளிதில் நெருங்கமுடியாத மகானுபாவன், இந்திரனுக்கு சமமானவன், தன்னை சமாளித்துக் கொண்டு அந்த வீரனிடம் சென்றாள். சுத்தமான மனதையுடையவள், அவனை நேராக பார்த்து, உடல் இன்னமும் நடுங்க, மனஸ்வினியான தாரா, தன் லயத்தை குறி வைத்து அடித்து விட்ட ராமனைப் பார்த்து கேட்டாள். ராமா, நீ அப்ரமேயன். து3ராசத3ன். (எளிதில் நெருங்க முடியாதவன்), புலங்களை அடக்கியவன், உத்தமமான தா4ர்மிகன். குறைவிலா கீர்த்தியுடையவன். நல்ல அறிவாளி, பூமிக்கு சமமான பொறுமையுடையவன். சிவந்த கண்களையுடையவன். கையில் எடுத்த பா3ணமும், தூணியும் வில்லும் நீ மகா பலசாலி என்பதைக் காட்டுகின்றன. போரில் வதம் செய்வது உனக்கு கை வந்த கலை, மனித சரீரத்தில், தெய்வீகமான காந்தியுடன் விளங்குகிறாய். ஒரே பாணத்தால் என் கணவனை அடித்து வீழ்த்தி விட்டாய். என்னையும் அதே அம்பால் அடித்து விடேன். ராமா, நானும் என் கணவன் இருக்குமிடம் செல்வேன். நான் இல்லாமல் வாலி மிகவும் கஷ்டப்படுவான். ஸ்வர்கம் சென்றாலும், தாமரையின் நிர்மலமான பத்ரம் போன்ற கண்களுடையவன், என்னைத் தேடி காணாமல், பொன் நகைகள் அணிந்து வளைய வரும் அப்ஸர ஸ்த்ரீகளையும் விரும்ப மாட்டான். அந்த இடத்திலும் வருத்தமும், துயரமும் என் பிரிவினால் அவனை வாட்டும். அழகிய தடாகங்களின் கரையில் இப்பொழுது விதே3க கன்யாவை விட்டுப் பிரிந்து நீ அவஸ்தை படுவது போல அவஸ்தையை அனுபவிப்பான். நீ அறிவாய். மனைவியை பிரிந்து, குமாரர்களான ஆண்கள் எப்படி கஷ்டப் படுவார்கள், துக்கம் அனுபவிப்பார்கள் என்று நீ உணர்ந்தவன் அதனால், மனதில் புரிந்து கொண்டு என்னையும் வாலி சமீபம் அனுப்பி விடு. வாலி அங்கும் வருந்தாமல் இருக்கட்டும். ஸ்த்ரீ வதம் செய்யக் கூடாது என்று தயங்குகிறாய், என்னை ஸ்த்ரீ என்று பார்க்காதே. வாலியின் ஆத்மா என்று எண்ணி வதம் செய். ஸ்த்ரீ வத தோஷம் உன்னைத் தாக்காது. சாஸ்திரங்களும், வேதங்களும், புருஷனுக்கு மனைவியை ஆத்மா என்று சொல்கின்றன. ஒரு மனிதனுக்கு மனையாளாக ஒரு பெண்ணை தானம் செய்வதை விடச் சிறந்த தானம் வேறு எதுவும் இல்லை. அதிலும் நீ வாலிக்கு அவனுக்கு பிரியமான பெண்ணை தரப் போகிறாய். வீரனே, தர்மத்தை எண்ணிப் பார். இந்த தானத்தால் நீ அதர்மம் எதையும் செய்ததாக ஆகாது. வருத்தத்தில் வாடும் என்னை, அனாதையாக என் கணவரிடமிருந்து விலக்கி அழைத்துச் செல்கிறார்கள். இந்த நிலையில் நீ என்னை வதைப்பதில் தவறில்லை. ஸ்வர்கம் சென்று, யானை உல்லாசமாக நடப்பது போல நடக்கும், குதித்து ஓடும் வானர ராஜனை விட்டு, புத்திசாலியும், உயர்ந்த பொன் மாலையணிந்தவனுமான என் கணவனை விட்டு நான் அதிக நாட்கள் உயிருடன் இருக்க மாட்டேன். இவ்வாறு தாரா சொல்வதைக் கேட்ட ராமர், அவளை சமாதானப் படுத்தி ஆறுதல் சொன்னார். வீரனுக்கு மனைவியாக வாழ்ந்தவள், மனம் தளராதே. ப்ரும்மா உலகை படைத்த பொழுது, சுக துக்கம் சேர்த்து தான் படைத்திருக்கிறார். அவன் செயல் நாம் துக்கமோ, சுகமோ அனுபவிக்கிறோம். என்பது உலகில் பேசப் படும் ஒரு சொல். மூன்று உலகமும் அவருடைய நியதியை மீறி எதுவும் செய்வதில்லை. நீயும் மன அமைதியை பெறுவாய். உன் மகனும் யுவராஜா பதவியை அடைவான். இது விதியின் விளையாட்டு, அல்லது படைத்தவனின் விருப்பம் என்று தீரர்களான வீர பத்னிகள், வருந்துவதில்லை. பரந்தாமனான ராகவனால், சமாதானம் செய்யப் பட்ட தாரை, தன் துயரை மறந்து இயல்பாக ஆனாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவ தாராஸ்வாஸனம் என்ற இருபத்து நாலாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 25 (296) வாலி சம்ஸ்காரம் (வாலியின் இறுதிக் கடன்களை நிறைவேற்றுதல்)
சுக்ரீவனையும், தாராவையும், அங்கதனையும், அவர்களுக்கு சமமான வருத்தத்துடன் ராமர் சமாதானப் படுத்த முனைந்தார். கூடவே லக்ஷ்மணனும் இருந்தான். புலம்பி, அழுது கொண்டு இருப்பதால் போன உயிருக்கும் பலனில்லை. இருப்பவர்களுக்கும் நன்மையில்லை. இதில் மேற் கொண்டு நாம் செய்ய வேண்டியது என்ன என்று பார்ப்போம். உலக நடப்பு படி அனுசரித்து நடக்க வேண்டும். போதும் கண்ணீர் விட்டது. ஓரளவுக்குத்தான் எந்த செயலையும் அனுஷ்டிக்க வேண்டும். நியதிதான் உலகு சென்று கொண்டே இருப்பதன் அடிப்படை. நியதி தான் காரியம் நிறைவு பெற சாதனமாகவும் ஆகிறது. நியதி தான் உலகில் எல்லோருடைய இருப்பு, நடப்பு இவற்றின் அடிப்படையாகும். யாரும் தான் தான் கர்த்தா என்று எண்ன முடியாது. நியோகம்- நியதி என்பதன் தலைவனோ, கரை கண்டவனோ யாரும் இல்லை. உலகம் தன் போக்கில் இயங்குகிறது. காலம் தான் அதற்கு இலக்கு. காலம் காலத்தை மீறிச் செல்வதில்லை. காலம் தேய்வதுமில்லை. இயற்கையை மீறி எந்த செயலும் நடைபெறுவதுமில்லை. இந்த காலத்திற்கு இயற்கையின் நியதிக்கு பந்துவும் இல்லை. காரணமும் இல்லை, பராக்ரமும் இல்லை. மித்ரன், தா3யாதி3 என்ற சம்பந்தமும் இல்லை. காரணம் தன் வசத்திலிருப்பதில்லை. ஆனால் விவரம் அறிந்தவர்கள், காலத்தின் பரிணாமம் என்ன என்பதை கவனிக்க வேண்டும், தர்மம், அர்த்தம், காமம் இவை காலக்ரமத்தை சூழ்ந்து நடைபெறுகின்றன. இங்கு வாலி, தன் இயற்கையை எய்தினான். தான் செய்த வினைப் பயன்களை அனுபவித்தான். தர்ம, அர்த்த, காமங்களில் எதையும் விடாமல் அனுபவித்து புனிதனாக அல்லது புனிதமான தர்ம, அர்த்த, காமங்களை அனுபவித்து விட்டான். தன் தர்மத்தைக் காப்பாற்றி தன் செயலால் ஸ்வர்கம் செல்கிறான். தன் உயிரை விட்டபின் அவன் அடுத்த கதியான ஸ்வர்கத்தை அனுபவிக்கச் செல்கிறான். இது தான் இயற்கையின் நியதி. அதைத் தான் வாலி சென்றடைந்திருக்கிறான். இன்னமும் துக்கம் கொண்டாட வேண்டாம். செய்ய வேண்டியதைச் செய்வோம். ராமன், சொல்லி முடித்தவுடன், லக்ஷ்மணன், மனம் வாடி நின்றிருந்த சுக்ரீவனிடம், பொருள் பொதிந்த வார்த்தைகளால் சமாதானம் செய்தான். சுக்ரீவா, இந்த வாலிக்கு இறுதிக் கடன்களை நீ செய். தாரா, அங்கதன் அவர்களும் உடன் இருக்க வாலியை தகனம் செய்ய ஏற்பாடு செய். உலர்ந்த கட்டைகளை ஏராளமாக கொண்டு வரச் சொல். சந்தனம் போன்ற உயர் ஜாதி மரக் கட்டைகளை கொண்டு வாலியை தகனம் செய்வோம். சிறுவன் அங்கதன். இவனையும் சமாதானப் படுத்து. இன்னும் சிறு பிள்ளைத் தனமாக யோசித்து நிற்காதே. இப்பொழுது இந்த ஊர் உன் ஆளுமையில் இருக்கிறது. அங்க3தா3 மாலைகள், நல்ல வஸ்திரங்கள் கொண்டு வா. நெய், எண்ணெய், வாசனைத் திரவியங்கள், மற்ற பொருட்களையும் கொண்டு வாருங்கள். தாரா, நீ பல்லக்கு தயார் செய்து சீக்கிரம் கொண்டு வா. தாரன், அவ்வாறே பல்லக்கை கொண்டு வந்தான். பல வானரங்கள் சேர்ந்து இழுக்கும்படியாக செய்து கொண்டு வந்தான். பெரிய ரதம் போல, அழகிய ஆசனங்களுடன் அழகாக செய்திருந்தான். பக்ஷிகள் முதலிய வேலைப் பாடுகள், மரங்கள், புஷ்பங்கள் முதலிய சித்திர வேலைப் பாடுகள் செய்து அலங்கரித்திருந்தான். அழகிய இலைகளைக் கொண்டு மேற்பாகத்தை முடித்திருந்தான். ஜன்னல்களுடன் கூடிய விமானம் போல அதை அமைத்திருந்தான். விசாலமாக, விஸ்வகர்மாவின் வேலை போல நன்றாக செய்திருந்தான். தா3ரு மரத்தைக் கொண்டு, அழகிய கைவேலையுடன் தயாராக கொண்டு வந்தான். ஆபரணங்களும் மாலைகளும் அலங்காரமாக மாட்டப் பட்டிருந்தன. வாசனைக்காக ரக்த சந்தனம் உபயோகித்து, அதன் மேல் பத்மங்கள், புஷ்பங்கள் இவற்றை விரவியிருந்தான். சுற்றிலும் பிரகாசமாக இளம் சூரியன் வர்ணத்தில் அமைத்திருந்தான். பல்லக்கு தயாரானதைப் பார்த்து ராமர், சீக்கிரம் வாலி உடலை எடுத்து வரச் சொல், இறந்தவர்களுக்கான காரியங்களை சீக்கிரம் செய்து முடிக்கச் சொல், என்றார். மற்ற வானரங்களோடு அங்கதனும் சேர்ந்து வாலி உடலை பல்லக்கில் ஏற்றினார்கள். பலவிதமான மாலைகள் வஸ்திரங்கள், ஆபரணங்களுடன், வாலியை பல்லக்கில் வைத்து உயிர் பிரிந்த பின் தேகத்துக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை குறைவின்றி செய்ய, ராஜாவாக சுக்ரீவன் கட்டளையிட்டான். ரத்னங்களை, மற்றும் பல விலையுயர்ந்த பொருட்களை வாரி இறைத்தபடி நாலா புறமும் வானரங்கள் சூழ, பல்லக்கு புறப்பட்டது. செல்வத்தில் திளைத்த அரசர்கள் பெறும் எல்லா விதமான மரியாதைகளையும் உங்கள் தலைவனுக்கு செய்யுங்கள் என்று சொல்ல, வானரர்கள் அனைவரும் தங்கள் பந்துவை, உறவினரை இழந்தது போன்ற துக்கத்துடன் செயல் பட்டனர். பெண்கள் ஓலமிட்டபடி தொடர்ந்தனர். வாலியின் பெருமை வீரம் பேசப்பட்டது. அந்த கூக்குரல் வனாந்தரங்களில் எதிரொலித்து, வனத்தை சூழ்ந்தது. மணல் பிரதேசங்களில், மலை, நதிகள், இவைகளைத் தாண்டி ஊர்வலம் சென்றது. ஒரு ஏகாந்தமான இடத்தில் பல்லக்கை நிறுத்தி வாலியின் உடலை சிதையில் வைத்தனர். அப்பொழுது தாரா, வாலியின் உடல் மீது விழுந்து அரற்றினாள். ஹா நாதா, ஹா வானர மகாராஜ, ஹா, எனக்கு பிரியமானவனே என்று சொல்லி சொல்லி அழுதாள். உயிர் போன பின்னும் உன் முகம் வாடவில்லையே. அஸ்தமிக்கும் சூரியன் போல உன் முகம் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது. ராம பாணம் உனக்கு யமனாக வந்து வாய்த்தது. ஒரு பாணத்தை விட்டு எங்கள் அனைவரையும் அனாதையாக்கி விட்டான். இதோ இந்த வானரர்கள், உன் பிரஜைகள். நடந்து இந்த அத்வானத்திற்கு வந்துள்ளனர். தெரிந்து கொள். இவர்கள் உன் பிரிய மனைவிகள். இது சுக்ரீவன். இவர்கள், மந்திரிகள், தாரன் முதலானோர். இதோ பிரஜைகள் அனைவரும் வந்து மரியாதையாக நிற்கின்றனர். என்று பதியை பிரிந்து புலம்பும் தாரையை மற்றவர்கள் விலக்கினர். சுக்ரீவனுடன் அங்கதனும் நின்று சிதைக்கு தீ மூட்டினான். விதி முறைப்படி செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்தனர். இதன் பின் நீர்க் கடன்களை முடிக்க நதிக் கரைக்குச் சென்றனர். பின் எல்லோருமாக அங்கதனை முன் நிறுத்தி, வாலிக்கு நீர் வார்த்தனர். சுக்ரீவன் தானம் முதலிய கர்மாக்களை செய்ய, ராமனும் அதில் கலந்து கொண்டான். நல்ல பௌருஷம் வாய்ந்த வாலியை, இக்ஷ்வாகு குல நாதனான ராமனின் பாணத்தால் அடிபட்டு உயிரிழந்தவனை தகனம் செய்து விட்டு, சுக்ரீவன், ராமனிடம் வந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வாலி சம்ஸ்காரோ என்ற இருபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 26 (297) சுக்3ரீவாபி4ஷேக: (சுக்ரீவனுக்கு முடி சூடுதல்)
ஆடை கலைந்து, முகம் வாடி இருந்த சுக்ரீவனை வானர மந்திரிகள் சூழ்ந்து கொண்டனர். பிதாமகரை ரிஷிகள் சூழ்ந்து நிற்பது போல நன்மை செய்யும் ராமனை, சூழ்ந்து நின்றனர். கை கூப்பியபடி அவர்களை தலைமை தாங்கி வந்த ஹனுமான் பேசினான். வாயு புத்திரன், பொன் மலையோ, இளம் சூரியனோ எனும் படி பிரகாசமாக விளங்கினான். தங்கள் தயவால் சுக்ரீவன் தந்தை, பாட்டனார் வழி வந்த ராஜ்யத்தை அடைந்தான். சாதாரண வானரர்களுக்கு கிடைக்க முடியாத இந்த பதவி ப்ரபோ, உங்கள் அருளால் சுக்ரீவன் கிடைக்கப் பெற்றான். நீங்கள் அனுமதித்தால், நகரத்துள் சென்று சுற்றத்தாரும், உற்றாரும் மேற் கொண்டு செய்ய வேண்டிய காரியங்களை செய்வர். இவனும் ஸ்நானம் செய்து வந்திருக்கிறான். வாசனை திரவியங்களும், ஔஷதிகளும் சேர்த்து ஸ்நானம் செய்து வைக்கப் பட்டான். உங்களுக்கும் ரத்னம் முதலிவைகளைக் கொண்டு உபசரிப்பான். இந்த மலை குகை அழகிய வாசஸ்தலமாக மாற்றப் பட்டுள்ளது. தாங்கள் இதில் இளைப்பாறி, வசிக்கலாம். எங்கள் வானர குலம் மகிழ்ச்சியடையும் படி எங்கள் அரசனை பதவியில் அமர்த்துங்கள் என்று வேண்டிக் கொண்டான். ராகவன் பதில் சொன்னார். பதினான்கு ஆண்டு கிராமமோ, நகரமோ நான் நுழைய மாட்டேன். என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்கு அது. இந்த அழகிய மலை குகையில் சுக்ரீவன் ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளட்டும். முறைப்படி செய்ய வேண்டியதை செய்து கொள்ளுங்கள். நடை முறை வழக்கங்களை அறிந்தவரான ராமர், இப்பொழுது நல்ல நிலமைக்கு வந்து விட்ட சுக்ரீவனைப் பார்த்து, சுக்ரீவா, அங்கதனுக்கு யுவ ராஜா அபிஷேகம் செய்து வை, என்று சொன்னார். உன் தமையனின் மகன், உனக்கு சமமான பலம் உள்ளவன், இவன் தான் யுவ ராஜாவாக தகுதி பெற்றவன். வரப் போவது மழைக் காலம். ஸ்ராவணம். எங்கும் நீர் நிறைந்து இருக்கும். வரும் நான்கு மாதங்களும், வார்ஷிக மாதங்கள் என்று சொல்லப் படும். இது புது முயற்சிகளை ஆரம்பிக்க ஏற்ற காலம் அல்ல. நீ உன் ஊருக்குள் போய் சுகமாக இரு. இந்த மலையடிவாரத்தில் நான் லக்ஷ்மணனுடன் இருக்கிறேன். இந்த மலை குகை அழகாக ரம்யமாக இருக்கிறது. விசாலமாக நல்ல காற்றோட்டமாக இருக்கிறது. நல்ல ஜலம் அருகில் நிறைய இருக்கிறது. கமலமும், உத்பலங்களும் நிறைந்த குளமும் உள்ளது. கார்த்திகை மாதம் வந்தவுடன், ராவண வதம் செய்ய கிளம்பு. இது நமக்கு கிடைத்துள்ள இடைவெளி நேரம். நீ உன் மாளிகைக்குப் போ. முடி சூட்டிக் கொண்டு, உன் தோழர்களை சந்தோஷப் படுத்து. இவ்வாறு ராமர் அனுமதித்ததும், வானர ராஜனான சுக்ரீவன், வாலி ஆண்டு வந்த கிஷ்கிந்தைக்குச் சென்றான். ஆயிரக் கணக்கான வானரங்கள் அவனை வணங்கியபடி பின் தொடர்ந்தன. பிரஜைகள் வானரத் தலைவனாக வந்த சுக்ரீவனை வணங்கி, தலை தரையில் படும் படி வணங்கினார்கள். சுக்ரீவன் பிரஜைகளுடன் பேசி, வணங்கியவர்களை எழுப்பி குசலம் விசாரித்த படி, தமையனின் அந்த:புரம் சென்றான். நண்பர்கள் அவனை அமரர்கள், ஸஹஸ்ராக்ஷன் எனும் இந்திரனுக்கு அபிஷேகம் செய்வித்தது போல செய்தார்கள். வெண் குடையும், தங்க பிடியுடைய சாமரமும், வந்து சேர்ந்தன. எல்லா விதமான ரத்னங்களும் பீ3ஜ ஔஷதி4கள், பாலுடைய மரத்தின் இலைகள், புஷ்பங்கள், வெண் பட்டாடைகள், அங்க3 ராகங்கள், நல்ல வாசனை உடைய மாலைகள், தரையில் பூக்கும், நீரில் தோன்றும், புஷ்ப மாலைகள், நல்ல சந்தனம், திவ்யமான வாசனை திரவியங்கள் நிரம்ப கொண்டு வந்து அக்ஷதைகளும் குறைவில்லாத பொன், தேன் சொட்டும் ப்ரியங்கு3 – குங்குமப்பூ)
(இதை பற்றி ஒரு குறிப்பு : ப்ரியங்கு3 விகஸதி ஸ்த்ரீணாம் ஸ்பர்சாத், அதாவது இந்த ப்ரியங்கு பெண்களின் ஸ்பரிசம் பட்டால் பூக்கும் என்பதாகும். தவிர,
(கவிகள் சில வகை பூக்கள் மலர சில சூழ்நிலைகளில் சில வகையான செய்முறைகள் பற்றி வர்ணித்துள்ளனர். அவையாவன-
பாதாத்யாத் அசோக, ஸ்மிலக, குரவகௌ, – காலால் உதைப்பதால் அசோகமும், குரவகமும்: கண்டூஷ சேசனாத் பகுல:- வாய் எச்சில் பட்டு ப3குலம்: நர்ம வாக்யாப்4யாம் மந்தா3ரோ- பரிவாக பேசுவதால் மந்தா3ரம்: படு ம்ருது3 ஹஸனாத் சம்பக: ம்ருதுவாகவும், சாமர்த்யமாகவும் சிரிப்பதால் சம்பகம். : வக்த்ர வாதாத் சூதோ- வாயினால் ஊதுவதால், அந்த காற்று பட்டு, மாமரம்: கீ3தாத் நமேரு – பாடுவதால் நமேரு என்ற மரம்: நர்த்தனாத் கர்ணிகார: முன் நின்று ஆடுவதால் கர்ணிகாரம்:)
தயிர், புலியின் தோல், பதினாறு சிறந்த கன்னிப் பெண்கள், இவற்றை சேமித்தனர். பின் வானர ஸ்ரேஷ்டனை காலத்தில், முறைப்படி ரத்னங்களும், வஸ்திரங்களும், ஆகாரங்களும் கொடுத்து பிராம்மணர்களை உபசரித்து, பின் குச ஆசனத்தில் அமர்ந்து அக்னியை வளர்த்து, மந்த்ரங்களால் புனிதமாக்கப் பட்ட ஹவிஸ் கொண்டு, மந்திரம் அறிந்தவர்கள் ஹோமம் செய்து, அதன் பின் பொன்னாலான வராஸனத்தில், வீட்டு மாடியில், அழகிய சித்திரங்கள் போட்டு அழகுற செய்த இடத்தில், கிழக்கு நோக்கி பல மந்திரங்கள் சொல்லி அமரச் செய்த பின், நத நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களைக் கொண்டு, வானரங்கள் அந்த சமயத்தில் நதிகளிலிருந்தும், சமுத்திரத்திலிருந்தும், கொண்டு வந்த ஜலத்தைக் கொண்டு தங்க கலசங்களில் நீரை நிரப்பிக் கொண்டு, விமலமான ஜலம், சுபமான வ்ருஷப ஸ்ருங்கத்தால் ஆன கலசங்களும், பொற்குடங்களும் சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட முறையிலும், மகரிஷிகள் வகுத்து தந்த விதி முறைப்படியும், க3ஜன் , க3வாக்ஷன், க3வயன், சரப4ன், க3ந்த4 மாத3னன், மைந்த3ன், த்3விவித3ன், ஹனுமான், ஜாம்ப3வான், நலன், எல்லோருமாக வாசனை நிறைந்த நல்ல ஜலத்தைக் கொண்டு அமரர்கள் வாஸவனை அபிஷேகம் செய்வித்தது போல அபிஷேகம் செய்து வைத்தனர். சுக்ரீவன் முழுக்காட்டப் பட்டு, அபிஷேகம் செய்யப் பட்ட பின், எல்லா வானர வீரர்களும், மகிழ்ச்சி பொங்க, குதூகலமாகச் சென்றனர். ராமனின் வார்த்தையை நினைவில், கொண்டு சுக்3ரீவன் அங்க3த3னை யுவ ராஜாவாக நியமித்தான். அங்கதனும் யுவ ராஜாவாக ஆன பின், மனம் நிறைந்த ஆசிகளுடனும், அன்புடனும் வானரர்கள், சாது4, சாது4 என்று சொல்லி சுக்ரீவனைப் பாராட்டினார்கள். ராமனை, லக்ஷ்மணனை திரும்பத் திரும்ப பாராட்டி மகிழ்ந்தனர். அந்த காரியங்கள் நன்றாக நடந்தேறியதில், அனைவரும் மகிழ்ந்தனர். கிஷ்கிந்தா திரும்பவும் பதாக, (கொடி) த்4வஜங்கள் அலங்கரிக்க, ஜனங்கள் மனம் நிறைந்து மகிழ்ச்சியோடு உலவி வர, ரம்யமாக ஆயிற்று. மலை குகைகளில் பழைய உல்லாசம் திரும்பியது. ராமரிடத்தில் வந்து மகாபிஷேகம் நன்றாக நடந்தேறியதைச் சொல்லி, வானர சேனைத் தலைவன், ருமா என்ற தன் மனைவியையும் திரும்பப் பெற்று, வீர்யவானாக, தேவேந்திரன் போல தன் ராஜ்யத்தை அடைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவாபி4ஷேகோ என்ற இருபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 27 (298) மால்யவன்னிவாஸ: (மால்யவானில் வசித்தல்)
சுக்ரீவனின் ராஜ்யாபிஷேகம் நடந்து முடிந்து, வானரமும் தன் குகைக்குச் சென்ற பின், ராமன் தன் சகோதரனுடன் ப்ரஸ்ரவண மலையை வந்தடைந்தார். புலி, மற்றும் பல மிருகங்கள் நிறைந்ததும், சிங்கத்தின் பயங்கரமான கர்ஜனை இடை விடாது ஒலிக்கும் அடர்ந்த காட்டுப் பிரதேசம். பலவிதமான கொடிகளும், புதர்களும் , மரங்களும் அடர்ந்த இருண்ட காடுகளில் கரடிகள், வானரங்கள், பசு வால் கொண்ட மிருகங்கள், பூனைகள் இவை வாழ்ந்து வந்தன. மேகம் போன்ற நிறமுடைய மலைப் பகுதி, எப்பொழுதும் சுத்தமான ஜலம் நிறைந்ததுமான, அந்த மலையின் உச்சியில் அமைந்த விசாலமான பெரிய குகையில் சௌமித்திரியுடன் தான் வசிக்க ஏற்ற இடமாக ராமர் தேர்ந்தெடுத்தார். சுக்ரீவனுடன் சில காலம் இருந்த பின் அந்த சமயத்துக்கு உகந்த, ரசிக்கத் தகுந்த சில விஷயங்கள் ரகு நந்தனன் கண்ணில் பட்டன. வணங்கி வினயத்தோடு நிற்கும் லக்ஷ்மணனை, லக்ஷ்மீகரமானவனை (பார்வைக்கு), லக்ஷ்மி வர்த4னனை (லக்ஷ்மியை வளர்க்க கூடியவனை), தன் இளவலைப் பார்த்துச் சொன்னார். லக்ஷ்மணா, இந்த குகை விசாலமாக காற்றோட்டமாக இருக்கிறது. இதில் மழைக் காலம் முடியும் வரை இருப்போம். இந்த மலை சிகரமும் உன்னதமாக உயர்ந்து ரம்யமாக இருக்கிறது. ராஜ குமாரா, வெண்மையான, கறுத்த, தாமிர நிற, கற்கள் அழகூட்ட, பலவிதமான தாதுப் பொருட்கள் மண்டிக் கிடக்கின்றன. சமவெளிகளும், அருவிகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. பலவிதமான மரங்கள் அடர்த்தியாக நிற்க, அதைத் தழுவி, அழகிய கொடிகள் சுற்றிக் கொண்டு தெரிகின்றன. பலவிதமான பக்ஷிகள் நிறைந்து, மயூரங்கள் கூக்குரல் இடுகின்றன. மாலதி மல்லிகை புதர்கள், சிந்துவார, குரண்டகம் முதலியவைகளும், கதம்ப, அர்ஜுன, சர்ஜம் முதலியவை மலர்ந்து ரம்யமாக தெரிகின்றன. இதோ தாமரை மலர்ந்து இருக்கிறது. சேறு மண்டியிருக்கும் இடத்தில், இதுவும் நம் குகைக்கு அருகிலேயே இருக்கிறது. லக்ஷ்மணா, கிழக்கு திசையில், நீர் ப்ரவகிக்கும் விதமாக இந்த குகையின் அமைப்பு சிறப்பாக அமைந்துள்ளது. பின் புறம் உயர்ந்து, காற்று இல்லாமல் இருக்கும். குகையின் வாயிற்புறம் சமதளமாக அமைந்துள்ளது. விசாலமாக, ம்ருதுவாக, மை போன்ற நிறத்தில் பள பளக்கிறது. வடக்கில் பார் லக்ஷ்மணா, இந்த மலை சிகரம் நெடிதுயர்ந்து இருக்கிறது. கண் மை போல, கார் மேகம் போல இதன் நிறம் ஒரு புறம். தென் திசையில் பார். வெண் பட்டாடை உடுத்திய கைலாச சிகரம் போலத் தெரிகிறது. பலவிதமான தா4துப் பொருட்கள் நிரம்பியது என்று தெரிகிறது. மேற்கு திசையில் பிரவஹிக்கும் நதி சலனமில்லாமல், தூய்மையாக இருக்கிறது. குகையின் கிழக்கு திசையில் பார். த்ரிகூட மலையில் ஜாஹ்னவி பிரவஹித்தது போல, சம்பகம், திலகம், தால, தமால புஷ்பங்கள் பூத்துக் குலுங்குவதைப் பார். பத்மகம், சரளம், அசோக வகை மரங்களும் அழகுற அமைந்துள்ளன. வானீரம், தினிசம், வகுலம், கேதகம், த4வம், ஹிந்தாளம், ஸ்த்ரிடை, நீலம், வேத்ரகம், க்ருதமலம், இவை கரைகளில் வளர்ந்து பலவித ரூபங்களில் ஆங்காங்கு விளங்குகின்றன. ஆடை அலங்காரங்களுடன் அழகாகத் தெரியும் பெண் போல இயற்கை அழகுற அமைந்துள்ளது. பலவிதமாக கூக்குரல் இடும் பலவிதமான பக்ஷிகள், ஒருவருக்கொருவர் மிகவும் அன்புடைய சக்ரவாக பக்ஷிகள், அலங்கரிக்கின்றன. அழகிய மண், அதி ரம்யமான ஹம்ஸ, ஸாரஸ, பக்ஷிகள் அலங்கரித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் அட்டஹாஸமாக சிரிப்பது போல இருக்கின்றன, உத்பலங்கள், சில இடங்களில் நீல நிறமான உத்பலங்கள், மற்றும் சில இடங்களில் சிவந்த நிறங்களில், சில இடங்களில் வெண்மையான நிறத்தில் என்று பல நிறங்களில் காணப்படுகின்றன. திவ்யமான குமுத மொட்டுக்கள், பாரிப்லவம் எனும் பக்ஷிகள், நூற்றுக்கணக்காக சூழ்ந்து, ப3ர்ஹிண, க்ரௌஞ்ச பக்ஷிகளும் இரைச்சலாக கத்துகின்றன. ரமணீயமான நதியை கூட்டமாக வந்து முனிவர்கள் உபயோகிக்கின்றனர். சந்தன மரங்களைப் பார். வரிசையாக நட்டு வைத்தது போல, மனதில் உதித்தது போல ககுப4 மரங்கள் சமமாக வளர்ந்திருப்பதைப் பார். சத்ருக்களை அழிக்க வல்ல வீரனே, அதோ பார். இந்த இடம் அதி ரமணீயமாக இருப்பதைப் பார். இங்கு நாம் நிச்சயம் ரசித்து, உணர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியும். இந்த இடத்திலேயே நமது வாசஸ்தலத்தை நிறுவிக் கொள்வோம். இங்கிருந்து கிஷ்கிந்தையும் வெகு தூரத்தில் இல்லை. அழகிய காடும் அருகில் இருக்கிறது. சுக்ரீவனுடைய நகரமும் இருக்கிறது. ராஜ குமாரனே, கீதங்கள் வாத்ய கோஷங்களாக காதில் விழுகின்றன. வானரர்கள், மிருதங்க வாத்யங்களுடன் நடனமாடுகிறார்கள் போலும். சுக்ரீவனுக்கு மனைவியும் கிடைத்து விட்டாள். ராஜ்யமும் கைக்கு வந்து விட்டது. நண்பர்களுடன் கொண்டாடுகிறான் போலும். ஏராளமான செல்வமும் வந்து சேர்ந்திருக்கிறது. கேட்பானேன் என்று சொல்லிய ராகவன் லக்ஷ்மணனுடன் தங்கள் இருப்பிடத்தை அங்கு அமைத்துக் கொள்வதில் முனைந்தான். நாலா புறமும் பார்க்க வசதியான, சமவெளியுடன் கூடிய அந்த ப்ரஸ்ரவண மலை குகையில், சௌகர்யமாக த்ரவ்யங்கள் நிறைந்த இடத்தில், மலையின் மேல் வாசம் செய்யலாயினர். வெளிப்பார்வைக்கு வசதியாக தெரிந்த இந்த சமவெளியும், மலைக் குகையும் ராமர் மனதில் உறுத்திக் கொண்டிருந்த வேதனையை தீர்க்க சக்தியற்றதாகவே இருந்தது. தன் உயிருக்குயிரான மணைவி அபகரிக்கப் பட்டது வேதனையை தந்து கொண்டேயிருந்தது. உதித்துக் கொண்டிருந்த சந்திரனைப் பார்த்தால், மேலும் அதிகம் வாட்டமுற்றார். இரவில் படுத்தால் நித்திரை வர மறுத்தது. திடுமென எழுந்து உட்கார்ந்து கொண்டு கண்ணீர் மல்க யோசனையில் ஆழ்ந்தார். அவரைப் போலவே அதே அளவு துக்கம் மனதில் இருந்தாலும், லக்ஷ்மணன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு ராமருக்கும் ஆறுதல் சொன்னான் வீரனே, இந்த வேதனையை மறக்கப் பார். இப்படி துக்கம் மனதை அரிக்க இடம் தராதே. துக்கமும் துயரமும் மனதை விட்டு களையப் பட வேண்டியவை. இடம் கொடுத்தால் இவை அனைத்தையும் நாசம் செய்து விடும். சந்தேகமேயில்லை. தாங்கள் செயல் வீரர். தெய்வ சங்கல்பம் என்று நம்பும் குணமுடையவர். ஆஸ்திகர். குண சீலன். கூடவே உழைக்கவும் தயங்காதவர். முயற்சி இன்றி அந்த ராக்ஷஸனைக் கொல்ல முடியாது. முறையற்ற செயலைச் செய்த ராக்ஷஸனை நீங்கள் நிச்சயம் யுத்தத்தில் வெற்றி கொள்வீர்கள். மனதிலிருந்து துயரத்தை அடியோடு களைந்து விட்டு முயற்சியை மேற் கொள்ளுங்கள். பின், அந்த ராக்ஷஸனை சுற்றத்தோடு, வேரோடு அழிக்கத் தயாராகுங்கள். சமுத்திரம், வனம், மலை என்று இயற்கையாக அமைந்த பூமியையே தலைகீழாக மாற்ற உங்களால் முடியும். அந்த ராவணன் எம்மாத்திரம். மழைக் காலம் இதோ வந்து விட்டது. சரத்காலம் வரும் வரை பொறுத்திருப்போம். அதன் பின் ராஜ்யத்தோடு, அவன் பரிவாரம், சேனைப் படைகள், சேர்த்து அவனை நாசம் செய்வோம். நான் உங்களுடைய உள் உரையும் சக்தியை தட்டி எழுப்புகிறேன். மூடி கிடக்கும் தணலை ஊதுவது போல, நிறைய ஆகுதிகள் செய்த பின் அடங்கி கிடக்கும் நெருப்பை கிளறி விடுவது போல, உங்கள் அடக்கி வைக்கப் பட்டிருக்கும் உள்ளுணர்வை தட்டி எழுப்பப் பார்க்கிறேன். ஹிதமானதும், சுபமானதுமான லக்ஷ்மணனது வார்த்தைகள், ராமனது மனதைத் தொட்டன. தன் தோழனுக்கும் மேலான சகோதரன் லக்ஷ்மணனிடம் ராமர் பதில் சொன்னார். நீ சொன்னது சரியே. என்னிடம் உள்ள அன்பினாலும், ஸ்னேகத்தாலும், என் நன்மையைக் கருதியும், சத்யமும் உன் விக்ரமும் வெளிப்பட பேசினாய் லக்ஷ்மணா,. எல்லா செயல்களையும் முடக்கி விடும் துயரத்தை இதோ விட்டேன். விக்ரமத்தில் அளவிட முடியாத தேஜஸை உத்ஸாகமாக கொண்டு வரப் போகிறேன். சரத் காலம் வரும் வரை பொறுத்து இருப்போம். உன் சொல்படி நடக்கிறேன். சுக்ரீவனுடைய நாட்டிற்கும் வளம் பெருகச் செய்கிறேன். உபகாரம் செய்தவனுக்கு பிரதி உபகாரம் செய்யத் தான் வேண்டும். செய் நன்றியை மறந்தவனும், பதில் உதவி செய்யாதவனும், நல்லவர்கள் மனதை நோகச் செய்கிறார்கள். இவ்வாறு ராமர் சொல்லவும் லக்ஷ்மணன் ஆறுதலாக பதில் பேசி, வணக்கத்துடன் அவர் சொல்வதைக் கேட்டு, தன்னை உணர்ந்து கொள்ளும்படியான தத்துவ உபதேசங்கள் செய்து, தன்னைத் தானே அறியும் மேலான உபதேசத்தைச் செய்தான். நரேந்திரனே, உங்களுக்கு உவப்பாக உள்ள விஷயங்களையே இது வரை சொன்னேன். அதற்கும் மேலாக கர்த்தாவாக, ஈஸ்வரன் ஒருவன் இருக்கிறான் சரத் காலத்தை எதிர்நோக்கி பொறுமையாக இருப்போம். இந்த மழையை பின்னால் சத்ருவை அழிக்கும் நேரத்திற்காக பொறுத்துக் கொள்வோம். கோபத்தை அடக்கிக் கொண்டு சரத் காலம் வரும் வரை நான்கு மாதங்கள் என்னுடன் பொறுமையை காப்பாய். சத்ருவை வதம் செய்ய சக்தியை வளர்த்துக் கொண்டு சிங்கங்கள் உலவும் இந்த மலையின் மேலேயே வசிப்போம் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், மால்யவன்னிவாஸோ என்ற இருபத்தேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 28 (299) ப்ராவ்ருட் ஜ்ரும்பணம் (மழைக் கால இடி ஓசை)
இவ்வாறு வாலியை வதம் செய்து சுக்ரீவனை ராஜ்யத்தில் அமர்த்தியபின், மால்யவான் மலையில் வசித்து வந்த காலத்தில் ராமர் ஒரு நாள் லக்ஷ்மணனிடம் சொன்னார். லக்ஷ்மணா, மழைக் காலம் வந்து விட்டது. ஆகாயத்தைப் பார். மேகங்கள், மலைகள் போல ஆகாயத்தை நிரப்பிக் கொண்டு நகர்ந்து செல்கின்றன. ஜலம் வரும் நேரம் இது. மழை பொழியப் போகிறது. ஒன்பது மாதம் கர்ப்பம் தரிப்பது போல சூரியனுடைய கிரணங்களால் சமுத்திர ஜலத்தைக் குடித்து ஆகாயம் பிரஸவிக்கிறது. இதன் ரஸாயணம் என்ன விசேஷம் தெரிகிறதா? (உப்புத் தண்னி சமுத்திர ஜலம். அதைக் குடித்தும் கர்ப்பம் தரிக்க வேண்டுமானால், ஆகாயத்தின், நல்ல எண்ணம், தவிர, உலக க்ஷேமத்திற்காக அதை மதுரமாக ஆக்கித் தருவது தான் விந்தை – உரையாசிரியர்) இந்த மேக மாலைகளில் படிப் படியாக இருப்பது போலத் தெரிகிறதே, அதில் ஏறி, சூரியனையே தொட்டு விடலாம் போல இல்லை? குடஜ, அர்ஜுன மாலைகளைக் கொண்டு போய் சூரியனுக்கு அணிவித்து விட்டு வர முடியும் போல காட்சி தருகிறது விந்தையாக இல்லை? சந்த்யா கால கிரணங்கள் சிவந்து தாம்ர வர்ணமாகத் தெரிய அதன் உள்ளே அதி வெண்மையாக, மெதுவான, ஆகாய படலங்கள், காயம் பட்டு அதன் மேல் பட்டி கட்டி விட்டது போலத் தெரிகிறது. காமாதுரன் போல ஆகாயம் பெருமூச்சு விடுவது போல் மந்தமான காற்று வீசுகிறது. அது சந்த்யா கால சந்தனம் பூசிக் கொண்டு, வெண்ணிற ஜலத்தை பொழிகிறது. பூமியைப் பார், சீதையை போல சோகத்தில் மூழ்கி இருக்கிறது. புது மழை ஜலம், கண்ணீர் விடுவது போலவும், பொங்கி நுரையாக ஓடுவது, தர்மத்தை எண்ணி கலங்கி வாடும் சீதையையும் ஒத்திருக்கிறது. மேகத்திலிருந்து விடுபட்டு, வெண் தாமரையைத் தொடுவது போல குளிர்ச்சியாக, கூப்பிய கைகளின் உள்ளே, பிடிக்கலாம் போல தாழம்பூ வாசனையைத் தாங்கி வரும் காற்று விளங்குகிறது. இந்த மலையில் நிறைய அர்ஜுன மரங்கள் பூத்திருக்கின்றன. அதனுடன் அதை மிஞ்ச நினைப்பது போல தாழம்பு வாசனை தூக்கலாகத் தெரிகிறது. சுக்ரீவனைப் போலவே இந்த மலையும், எதிரியை சாந்தப் படுத்தி விட்டு, அபிஷேகம் செய்யப் படுகிறது. மேகம் (க்ருஷ்ணாஜினம்-மான் தோல்) போல இதை தழுவி நிற்க, தாரையாக பொழியும் அருவிகள், யக்ஞோபவீதம் போல குறுக்காகத் தெரிய, காற்று நிரம்பிய குகைகளில் இருந்து வரும் சத்தம் (வாயால் ஏதோ படிப்பது போல இருக்க) நன்கு கற்றறிந்த அறிஞர் போல இந்த மலை தெரிகிறது. ஆகாயம் வேதனையோடு இருப்பது ஏன் தெரியுமா? திடும் திடும் என கசையால் அடிப்பது போல மின்னல் வெளி வருகிறது. தங்க நிறமான சாட்டையால் அடி பட்டு, உள்ளூக்குள் குமுறி அழும் அழுகுரல் தானோ இடி முழக்கம்? அதனால் முகத்தில் வேதனை படர்ந்து தெரிகிறதோ, லக்ஷ்மணா புரிகிறதா? கார் மேகத்தின் மடியில் மின்னல் துள்ளுகிறது. ராவணன் தூக்கிச் சென்ற போது, மைதிலி இப்படித்தான் துடித்திருப்பாளோ? இந்த திசைகளைப் பார். மன்மதனின் வசம் ஆனது போல, ஒருவரையொருவர் துரத்துவது போல, சந்திரனைத் தேடுவது போல விரைகின்றன. கிரகங்களும், சந்திரனும் மேகத்தின் அடர்ந்த பரப்பில் மறைந்து கண்ணுக்குத் தெரியாததால் தேடுகின்றன போலும். மலைகளைப் பார். மழைக் காலம் வந்ததால், மகிழ்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விடுவது போல, அது பெருகி ஓடுவது போல, சாரல்களில் குடஜ புஷ்பம் பூத்துக் குலுங்குவதைப் பார். என் துயரத்தை கிளறி ஊதி விடுவது தான் இவைகளின் நோக்கமோ? பனித்துளிகளோடு கூடிய காற்று புழுதியை அடக்கி விடுவதால், தூசு தும்பு எதுவும் இன்றி, சாந்தமாக இருக்கும் இந்த சூழ் நிலையில், அரசர்கள் யாத்திரைகளைத் தவிர்த்து ஓர் இடத்திலேயே தங்கி இருப்பார்கள். எப்பொழுதும் சுற்றிக் கொண்டிருக்கும் யாத்ரிகள் கூட தன் தேசங்களை சென்றடைவர். மனதால் வாழ ஆசை கொண்ட சக்ரவாக பக்ஷிகள், இப்பொழுது தங்கள் பிரியமான துனையுடன் கிளம்பி விட்டன. இவை வர்ஷா கால மழைத் துளிகளை குடிக்கும் குணம் உள்ளவை. இவைகளின் இறக்கைகளில் மழை வேகமாக அடித்தால் கூட அவை கீழே விழுவதில்லை. சில இடங்களில் பிரகாசமாக, சில இடங்களில் மறைந்து, ஆகாயம் போல பரவலாக சிதறிக் கிடப்பதாகத் தெரிகிறது. அமைதியான கடல் நடுவில், ஒரு சில மலைகள் முளைத்து நிற்பது போலத் தெரிகிறது. மலையின் நதிகள், ஸர்ஜ, கதம்ப புஷ்பங்களையும், புது ஜலம் பர்வதத்தின் தாதுப் பொருட்களை அடித்துக் கொண்டு வருவதையும், இவைகளை கலந்து சுமந்து கொண்டு வாசனையுடன் வீசும் காற்று, வெகு வேகமாக செல்லும் மயூரங்களும், கேகா எனும் பக்ஷிகள் இவையும் துணை வர வீசுகிறது. ரஸம் நிறைந்த ஜம்பூ பலம் (நாவல்) வண்டுகள் மொய்க்க (தேனை பருக வந்தவை), நிறைய சாப்பிட முடிகிறது. பழுக்காத மாங்காய்கள், வெம்பி போய் வித விதமான வர்ணத்தில் காற்றில் அடிபட்டு விழுந்து கிடக்கின்றன. மதம் பிடித்த யானை போல கர்ஜிக்கும் மேகங்கள், மின்னல் கொடியையும், கொக்குகள் வரிசையாக பறப்பது, மாலை அணிவித்தது போலவும் இருக்க, பெரும் மலை போன்ற ஆகிருதியுடன் தெரிகின்றன. இவை சண்டைக்குத் தயாராக கிளம்பியது போல இருக்கிறது. மழை நீர் மறைத்த புல்வெளிகளில், பர்ஹிண பக்ஷிகள் நடமாடுகின்றன. வனங்கள், மழை நின்ற நேரம், மத்யான்ன நேரங்களில் கண் கொள்ளா காட்சியாக விளங்குகின்றன. பறக்கும் கொக்குகள், மழை நீரில் மூழ்கி திளைத்து, மலைச் சிகரங்களில் ஓய்வெடுத்துக் கொண்டு திரும்ப பறக்கின்றன. கூட்டமாக இவை மேகத்துடன் ஓடி விளையாடுவது போல சந்தோஷமாக உயரத்தில் பறந்து மகிழ்கின்றன. காற்றில் வீசியெறியப் பட்ட சங்கு மாலையை அணிந்திருப்பது போல, ஆகாயம் காட்சியளிக்க, பூமியில் இந்த்ர கோ3ப – ஒருவகை பூச்சி, சிவப்பு, வெண்மை நிறங்களில்) பூச்சிகள், புதிதாக முளைத்த புல் தரைகளில் கோலம் போட்டது போல, அமர்ந்திருக்கின்றன. நதிகள் சமுத்திரத்தை நாடி வேகமாகச் செல்கின்றன. கொக்குகள் மகிழ்ச்சியுடன் கார் மேகத்தை நாடிச் செல்கின்றன. கணவனை அன்புடன் தேடி மனைவி செல்கிறாள். வனாந்தரங்களில் மயில் நடனம் நடை பெறுகிறது. கதம்ப வ்ருக்ஷங்கள், கிளைகளில் கதம்ப மொட்டுகள் நிரம்பி காணப் படுகின்றன. (கதம்பக மரத்தில், இடி சத்தம் கேட்டு மொட்டுகள் தோன்றும்.), காளைகள் காமத்துடன் பசுக்கள் இருக்கும் கொட்டிலை நோக்கிச் செல்கின்றன. பூமியும் பயிர் பச்சைகளுடன் அழகாக காட்சி தருகிறாள். இந்த மேகங்கள் நீரைத் தாங்குகின்றன. மழையாகப் பொழிகின்றன. மகிழ்ச்சியுடன் காணப் படுகின்றன. சில சமயம் த்யானத்தில் ஆழ்ந்திருப்பது போல், சில சமயம் நடனம் ஆடுவது போல், சில சமயம் ஒருவரையொருவர் கூடி சமாதானமாக பேசிக் கொள்வது போல், தெரிகின்றன. நதிகளில் நீர் அடர்ந்து காணப் படுகிறது. வனப் பிரதேசங்களில் யானைகள் மதம் பிடித்தது போல அலைகின்றன. தங்கள் பிரியமான துணையை விட்டு விலகி மயில்களும், வானரங்களும் நடமாடுகின்றன. தாழம்பு வாசனையை முகர்ந்து மகிழ்ச்சியுடன் வனத்தில் அருவி கொட்டும் நீர் ஓசையைக் கேட்டு யானைகளும் மயில்களுக்கு இணையாக நடனமாடுகின்றன. ஆறு கால்களுடைய தேனீக்கள், க்ஷண நேரம் புஷ்ப ரஸத்தை ரசித்து அதில் திளைத்து இருந்து விட்டு, பறந்து போய் விடுகின்றன. ஏனெனில் மழை தாரையில் அடிபட்டு கதம்ப மரக் கிளைகளில் காத்திருந்து கிடைத்த க்ஷண நேரத்தில் புஷ்ப ரஸத்தை பருகி விட்டு பறந்து விடுகின்றன. நாவல் மரங்களில் அங்க ராக பொடி போன்ற கரும் சிவந்த பழங்கள் நிறைந்து வணங்கி நிற்கும் நாவல் மரக் கிளைகளில் இந்த தேனீக்களும் கூட்டம் கூட்டமாக சேர்ந்து பறக்கின்றன. ரணத்திற்காக தயார் செய்யப் பட்ட படை யானைகள் போல, கொக்குகள் அணி வகுத்துச் செல்கின்றன. அதைக் காண யானைப் படைகள் மேல் கட்டப் பட்ட கொடிகள் போலவும், யானகள் பிளிறும் பெரும் சத்தம் போலவும், மேகத்தின் இடியோசை வந்து காதில் படவும், கொக்குகள் அணி வகுத்துச் செல்கின்றன. இந்த மேக நாதத்தைக் கேட்டு எதிரொலியென்று எண்ணி யானைகள் திரும்பி போகின்றன. காட்டுப் பிரதேசங்களில் சில இடங்களில் தேனீக்கள் கூட்டம் கூட்டமாக ரீங்காரம் செய்து கொண்டு பறக்க, சில இடங்களில் நீல கண்டமாக மயில்கள் ஆட, மதம் கொண்ட யானைகள் சில இடங்களில் ஆட, பல விதமான ஜீவன்களுக்கு இடம் கொடுத்தது போலத் தெரிகிறது. புது ஜலம் நிரம்பிய பூமிகளில் கத3ம்ப3, ஸர்ஜ, அர்ஜுன மரங்களின் தளிர்கள் விழுந்து குவியலாகத் தெரிய, மயில்கள் மதம் பிடித்தது போல ஆட, கள் குடிக்கும் இடம் போல இருக்கிறது. இலைகளில் தங்கியிருக்கும் துளி நீர், நிர்மலமான முத்து போல காட்சியளிக்கிறது. இதை பல வனங்களில் பறக்கும் பறவைகள், தாகம் எடுக்கும் பொழுது வந்து குடிக்கின்றன. இந்திரன் கொடுத்தது என்று மகிழ்ச்சியுடன் குடிப்பது போலத் தெரிகிறது. வனங்களில் சங்கீத கச்சேரி நடக்கிறது. வண்டுகள், மதுரமாக ரீங்காரம் செய்து கொண்டு பாடுகின்றன. மரங்களில் தாவும் வானரங்கள் தங்கள் குரலால் தாளம் போடுகின்றன. மேகத்தின் இடியோசை மிருதங்கம் வாசிப்பது போல உடன் கேட்கிறது. இதற்கு அனுசரணையாக மயில்கள் சில சமயம் வேகமாக ஆடுகின்றன. சில சமயம் கழுத்தை தூக்கிக் கொண்டு கத்துகின்றன. சில சமயம் மரத்தின் மேல் அமர்ந்து தன் தோகையை கீழே விரித்து பரவ விட்டுக் கொண்டு, வனத்தையே சங்கீத மயமாக ஆக்குகின்றன. வெகு நேரம் தூங்கிக் கொண்டிருந்த வானரங்களை மேகத்தின் கர்ஜனை, இடியோசை எழுப்பி விட்டது. பல விதமான உடல் சேஷ்டைகளுடன் விசித்ரமாக ஒலியெழுப்பிக் கொண்டு, புது மழை நீரில் நணைந்தபடி பாடுகின்றன. சக்ரவாக ஜோடிகளைத் தள்ளிக் கொண்டே புது வெள்ளம் பொங்க நதிகள், கரைகளில் வாடி விழுந்த இலைகளை தள்ளிக் கொண்டு (சக்ரவாக பக்ஷிகளுக்கு இடையூறு செய்யாமல், அப்புறப் படுத்திக்கொண்டு) தானும் தன் பதியை சென்றடையும் பரபரப்புடன் வேகமாக ப்ரவகித்துச் செல்கின்றன. (நதிகளின் பதி சமுத்திரம்). நீலமான மலைகளில் நீல வர்ணமாகத் தெரிகின்றன. மேகங்களில் இருக்கும்பொழுது அதே நீர், மேக வர்ணமாக விளங்குகிறது. காட்டுத் தீ எரித்த இடங்களில், காட்டுத்தீ நிறமாக, மலைகளில் வரும் பொழுது மலையாகவே, தங்கள் உற்பத்தி நிலையை கொண்டுள்ளன. யானைகள் உற்சாகமாக சுற்றுகின்றன. அவை செல்லும் வனங்கள் ரம்யமாக இருப்பதுடன், நீப (வேம்பு), அர்ஜுன மரங்களின் வாசனையும் காற்றில் கலந்து வீசுகின்றன. மயில்களும், அதைப் போன்ற பறவைகளுடன் தோகை விரித்து மகிழ்ச்சியுடன் ஓசை கிளப்புகின்றன. சக்கரத்துடன் கூடிய வண்டியுடன், பசு மாடுகளும் மேயும், புல் தரைகள் உள்ளன. மழை நீரின் வேகத்தில் அடிபட்ட மகரந்த கொடிகளையுடைய தாமரை மலர்களை விட்டு வண்டுகள் உடனே கதம்ப புஷ்பங்களை நாடிச் செல்கின்றன. சொல்லவொண்ணாத மகிழ்ச்சியுடன் தாவிச் செல்கின்றன. பெரிய யானைகள் மதம் கொண்டு திரிகின்றன. ம்ருகேந்திரன் என்று அழைக்கப்படும் சிங்கங்கள் விஸ்ராந்தியாக அமர்ந்திருக்கின்றன. மன நிறைவு முகத்தில் தெரிய. இந்த நகேந்திரனும் (மலையரசன்) ரம்யமாகத் தெரிகிறான். நிறைய நரேந்திரர்கள் இந்த பூமியில் உள்ளனர். சுரேந்திரன் (இந்திரன்-மழைக்கு காரணமானவன்) நிறைய நீரை பொழிந்து விளையாடி இருக்கிறான். மேகங்கள் சமுத்திர ஓசையையும் தூக்கி அடிக்கின்றன. நிறைய நீரை சுமந்து கொண்டு ஆகாயத்தை இருப்பிடமாக கொண்டுள்ளன. நதிகள், குளங்கள், ஸரஸ் எனும் சிறிய நீர் நிலைகள், கிணறு, மஹீ எனப்படும் குட்டை, இவை அனைத்தும் நீர் நிறைந்து பெருகி ஓடுகின்றன. காற்று பெரும் ஓசையுடன் வீசுகிறது. மழைத்துளிகள் பெரும் தூற்றலாக விழுகின்றன. நதிகளின் கரைகளை அரித்துக் கொண்டு ஓடுகின்றன. வழியில் தடங்கல்களை தகர்த்துக் கொண்டு ஓடுகின்றன. நரன் (மனிதர்களால்) நரேந்திரன் போல, மகேந்திரன் கொடுத்த காற்றால் கொண்டு வரப் பட்ட கார் மேகங்களே கும்பங்களாக, அதன் மூலம் நீரை பொழியச் செய்து அபிஷேகம் செய்தது போல, தன் ரூபத்தையும், லக்ஷ்மி கடாக்ஷத்தையும், தாங்களே காண காட்சியளிக்கின்றன. மேகம் நிறைந்துள்ள ஆகாயத்தில் (நக்ஷத்திரங்கள் தென்படாததால்) தாரையுடன் கூடிய பாஸ்கரன் தரிசனம் தருவதில்லை. திசைகள் ஒளி மங்கி, கார் மேகங்களின் கரு நிறத்தால் இருட்டியது போல காண்கின்றன. மலைகளின் குகைகள், மழை தாரையில் குளித்து, குளிப்பாட்டப் பட்டு அதிக சோபையுடன் தெரிகின்றன. மிக அதிகமாக பெரும் துளிகளாக பொழியும் மழை சாரல் முத்துக்கள் கோத்த மாலை போல தெரிகின்றன. வேகமாக வரும் தண்ணீர் மலையின் கற்களில் தடைபட்டு, சுழித்துக் கொண்டு ஓடுவது, கால் தடுக்கி சமாளித்துக் கொண்டு திரும்ப ஓடுவது போல இருக்கிறது. குகைக்குள் ப3ர்ஹிண பக்ஷிகள் இணந்து இரைச்சலாக கத்துவதை பாராட்டி மாலையணிவிப்பது போல இருக்கிறது. வெகு வேகமாக வெள்ளமாக பெருகி வரும் வெண் நுரையுடன் கூடிய மழை நீர், மலைகளின் கழுத்தில் முத்து மாலையை அணிவித்தது போல பெரும் குகைகளின் சிகரங்களில் இருந்து வடிகிறது. இந்த மழை நீர் பிரவாகம், ஸ்வர்க்க ஸ்த்ரீயின் கழுத்திலிருந்து நழுவி விழுந்து விட்ட முத்து மாலையே தானோ? சூரியன் அஸ்தமித்ததை எவ்வாறு தெரிந்து கொள்வது? பறவைகள் வீடு திரும்புவதைக் கண்டும், தாமரை மலர்கள் மூடிக் கொள்வதை வைத்தும், மாலதி புஷ்பங்கள் மலருவதைக் கொண்டும், சூரியன் அஸ்தமனம் ஆகி விட்டான் என்று தெரிகிறது. சுற்றிக் கொண்டு யாத்திரை சென்ற அரசனின் படைகள் திரும்பி வருகின்றன. வைரங்களும், மார்கங்களும், (விரோதங்களும், வீதிகளூம்) தண்ணீரால் சமப் படுத்தப் பட்டன. பாத்ரபத மாதத்தில் (புரட்டாசி) மாதத்தில் வேதம் கற்றுக் கொள்ளும் ப்ராம்மணர்களுக்கு, ப்ரும்மா, இது சாம வேதம் கற்றுக் கொள்ளும் நேரம் என்று சொல்கிறார். வேலைகளை செய்து முடித்து விட்டு, இந்த மழை காலத்திற்காக பொருட்களை சேகரித்து வைத்திருந்து, கோசல ராஜாவான ப4ரதன் ஆஷாட பர்வத்தை எதிர் நோக்கி தயாராக இருப்பான். சரயூ நதியிலும் வெள்ளம் நிறைந்து நதியின் இரைச்சல் கேட்கும். என்னைக் காண வந்த ஜனக் கூட்டத்தின் இரைச்சலை ஒத்திருக்கும் அந்த ஓசை. இந்த நீண்ட மழைக் காலத்தை சுக்ரீவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எதிரியும் அழிந்தான். மனைவியும் கிடைத்துவிட்டாள். பெரும் ராஜ்யத்தில் அமர்த்தப்பட்டு விட்டான். நான் தான் இன்னமும், பெரும் ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப் பட்டவனாக, மனைவியையும் பறி கொடுத்து, இந்த பெரும் மழையில் நதியின் கரைகள் போல அலைக் கழிக்கப் படுகிறேன். லக்ஷ்மணா என் சோகம் நீண்டு கொண்டே போகிறது. மழை, வெளியில் செல்ல முடியாமல் தடுக்கிறது. ராவணனும் மிக கொடிய சத்ரு. கடக்க முடியாத பெரும் துன்பம் சூழ்ந்திருப்பதாக படுகிறது. இந்த பாதைகளைப் பார். இதில் யாத்திரை செய்ய முடியுமா? சுக்ரீவன் வணங்கி நின்றபோது கூட நான் ஒன்றும் சொல்லவில்லை. இப்பொழுது மனைவி மக்களோடு இணைந்திருக்கிறான். வெகு நாட்கள் பிரிந்திருந்தவன், இந்த சமயம் அவனிடம் எதுவும் சொல்வது கூட கடினம். என் காரியம் மிகப் பெரியது. அதனால் வானரத்தை குறை கூறவும் நான் விரும்பவில்லை. தானே நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு, காலம் வந்து விட்டது என்று அறிந்து, உபகாரம் செய்ய வேண்டியதை நினைவு கொள்வான் என்று எதிர்பார்ப்போம். சந்தேகப் படுவானேன்? அதனால் சுப லக்ஷணா, நானும் நல்ல காலம் வரும் என்று எதிர்பார்த்து காத்திருப்பேன். இந்த நதிகளுடையதும், சுக்ரீவனுடையதும் ஆன பிரஸாதத்தை (தயவை) எதிர்பார்த்து பேசாது இருக்கப் போகிறேன். உபகாரம் செய்தவனுக்கு பிரதி உபகாரம் செய்வதுதான் வீரனுக்கு அழகு. செய் நன்றி மறந்தவனும், பிரதி உபகாரம் செய்யாதவனும், நல்லவர்களுடைய மனதை துன்புறுத்துகிறான். இவ்வாறு ராமர் சொல்லவும், லக்ஷ்மணன் மனதில் இருத்திக் கொண்டு, ராமனுக்கு உத்ஸாகத்தை வளர்க்கும் விதமாக தன் ஆத்ம பலத்தை உணரும்படி சுபமாக பேசலுற்றான். ராஜன், உங்கள் விருப்பப்படி இந்த வானர ராஜன் கண்டிப்பாக செய்வான். அதிக தாமதம் செய்ய மாட்டான். சரத் காலத்தை எதிர் நோக்கி இருப்பான். பொறுங்கள். இந்த மழையையும் பொறுத்துக் கொள்ளுங்கள். சீக்கிரமே சத்ருவை அழிக்க மன வலிமையைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ப்ராவ்ருட் ஜ்ரும்பணம் என்ற இருபத்தெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 29 (300) ஹனுமத் ப்ரதி போ3த4னம் (ஹனுமான் நினைவு படுத்துதல்)
வானம் வெளுத்து விட்டது. ஹனுமான் ஆகாயம் நிர்மலமாக, மேகக் கூட்டம் இன்றி இருப்பதையும், ஸாரஸ பக்ஷிகள் கவலையின்றி பறந்து கொண்டிருப்பதையும், சந்திரனின் கிரணங்கள் ஒளி பரப்ப இரவு ரம்யமாக இருப்பதையும் கவனித்தான். இந்த அழகிய காட்சியைக் கண்டவுடன் ஹனுமான் சுக்ரீவனை நினைத்தான். தர்ம, அர்த்தம் இவைகளில் மந்த புத்தியுடையவனாக, அஸத்தான மார்கத்தில் திளைத்து, தனிமையில் தன் இஷ்டப்படி இருப்பவனை, தன் காரியம் ஆன திருப்தியுடன், பெண்களுடன் கூடிக் குலவி அதிலேயே மூழ்கி இருப்பவனை, தான் விரும்பிய, ஏங்கிய எல்லா மனோ ரதங்களும் ஒன்று சேர கிடைத்து விட்ட களிப்பில் தன்னை மறந்து இருப்பவனை, தன் மனைவியை அடைந்ததோடு, தாராவையும் விரும்பும் வானர ராஜனை, இரவு பகலாக கேளிக்கையில் மூழ்கி, ஜ்வரம் விட்டவனாக, எந்த வித சங்கோஜமும் இல்லாமல், நந்தன வனத்தில், அப்ஸர ஸ்த்ரீகளுடன் விளையாடும் இந்திரனைப் போல, மந்திரிகளிடம் ராஜ்ய காரியங்களை ஒப்படைத்து விட்டு, அவர்களை கண்ணால் கூட காணாமல் இருப்பவனை, ராஜ்யத்தை ஆளும் உத்தேசம் என்ன என்பதையே மறந்து விட்டு, காமத்திலேயே மூழ்கி இருப்பவனை, கால தர்மத்தை நன்கு அறிந்தவனும், நிச்சயமான பொருளாதார அறிவு படைத்தவனும், பொருள் பற்றிய தத்துவங்களை அறிந்தவனுமான, அனுமான், வானர ராஜனை நெருங்கி அறிவுரை கூறலானான். ஹிதமானதும், நன்மை பயக்க கூடியதுமான பத்தியமான (கடை பிடிக்க கடினமாக இருப்பினும், முடிவு நன்மையைத் தரக் கூடிய செயல்கள்) அறிவுரையை செய்தான். சாம, தர்ம, அர்த்தம், நீதி இவைகளை விளக்கும்படியான சொல்லை, பொருள் உணர்ந்து பேசக் கூடிய அனுமன், நயமாகவும், அன்புடனும், தன்னிடம் நம்பிக்கை கொண்டு அதைக் கேட்டு அனுசரிக்கும் விதமாக சுக்ரீவனிடம் பேசலானான். ராஜ்யம் கிடைத்து விட்டது. புகழும் வந்து சேர்ந்தது. குல தனமான ராஜ்யம், கூடவே லக்ஷ்மீ கடாக்ஷமும், செல்வமும் உன் கைக்கு வந்து விட்டது. மித்திரர்களைக் கூட்டி, செய்ய வேண்டியதை யோசித்து செய்ய வேண்டியது தான் தற்சமயம் நீ செய்ய வேண்டிய செயல். அதை உடனே இப்பொழுதே செய். கால தேசங்களை அனுசரித்து நண்பர்களுடன் தன் நடவடிக்கைகளை சரியாக வைத்துக் கொள்பவனுடைய ராஜ்யமும், புகழும், பிரதாபமும் வளரும். எவனுடைய பொக்கிஷமும், தண்டமும், நண்பர்களும், ஆத்மாவும் சமமாக இயங்குகின்றனவோ, சீராக இருக்கின்றனவோ, அவன் ராஜ்யத்தை இடையூறு இன்றி அனுபவிக்கிறான். அதனால், தாங்கள் செல்வம் கிடக்கப் பெற்று, அழியாத நல் வழியில் நின்று, நண்பனுக்காக, தேடிச் சென்று நட்பு கொண்டு அழைத்து வந்தவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய காலம் வந்து விட்டது. மற்ற காரியங்களை நிறுத்தி வைத்து விட்டு, தன் ஆப்த நண்பனுக்காக எவன் முனைகிறானோ, அவன் காலம் கடந்தபின் பரபரப்பாக, முன் பின்னாக காரியங்களை செய்வதால் தோன்றும் அனர்த்தங்களை தவிர்த்தவன் ஆகிறான். இந்த முன் யோசனை இல்லாதவன், கடைசி நேர அனர்த்தங்களில் மூழ்கி தத்தளிப்பான் என்பதும் உண்மையே. காலம் கடந்தபின் ஏராளமாக செய்தாலும், அந்த நண்பனுக்கு வேண்டியதை செய்ததாக ஆகாது. அதனால் வீரனே, நாம் உடனடியாக செய்ய வேண்டிய பொறுப்பு ராகவனுடைய காரியம். நாம் வாக்களித்தபடி, வைதேஹியைத் தேட ஏற்பாடுகளைச் செய்வோம். கடந்து போன காலம் திரும்ப வராது. ராஜன், வேகமாக செயல்பட துடித்தாலும், ராகவன் தற்சமயம் உன் வசத்தில் இருப்பதால் பொறுத்துக் கொண்டிருக்கிறான். நல்ல அறிவுடையவன். ஏராளமான ப3ந்து4க்களையுடையவன். அவன் பழம் பெரும் குல வழி வந்த குணம் காரணமாக, உனக்காக பொறுத்திருக்கிறான். காத்திருக்கிறான். தானே அளவிட முடியாத பலமும், பராக்ரமும் உடையவன், உயர்ந்த குண நலன்கள் உடையவன், உன்னையும் ஒரு பொருட்டாக எண்ணி காத்திருக்கிறான் என்பது அவன் பெருந்தன்மை. உனக்கு அவன் செய்த உதவிக்கு பிரதி உபகாரம் செய். வானர ராஜனேஸ்ரீ சிறந்த வானரங்களை பொறுக்கி கட்டளையிடு. அவன் வந்து உன்னை கேட்கும் வரை தாமதம் செய்யாதே. மற்றவர் தூண்டிய பின் செய்வது ஏடாகூடமாக ஆகும். வானர ராஜனே, அரிய செயலையும் செய்யக் கூடியவனே நீ. எதுவும் நன்மை செய்யாதவனுக்கு கூட நீ உதவி செய்ய தயங்கியதில்லை. அப்படி இருக்க, உனக்கு ராஜ்யமும், செல்வமும் கிடைக்கச் செய்தவனுக்கு, நீ பிரதி உபகாரம் செய்ய, சக்தி இருந்தும், இன்னமும் ஏன் ஆரம்பிக்காமல் இருக்கிறாய்? ராகவன் நினைத்தால் அவன் பாணங்களால் சுர, அசுர, பன்னக என்று அனைத்தையும் தன் வசம் ஆக்கிக் கொள்ள முடியும். நீ செய்த பிரதிக்ஞையை நினைத்து தன்னை அடக்கிக் கொண்டு காத்திருக்கிறான். நீ பிராணத்யாகம் செய்யும் நிலையில் இருந்தாய். அந்த சமயம் உன்னைக் காப்பாற்றி கரை சேர்த்தவன் ராமன். அவனுடைய வைதேஹியை நாம் தேடுவோம். பூவுலகிலும், வானுலகிலும், எங்கு இருந்தாலும் கண்டு பிடிப்போம். தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, மருத் கணங்களோ, யக்ஷர்களோ அவனுக்கு எதிராக எதுவும் செய்ய பயப்படுவார்கள். ராக்ஷஸர்கள் எம்மாத்திரம்? சக்தி வாய்ந்தவன், உனக்கு முன்பே உதவி செய்தவன், அந்த ராமனுக்கு பிரியமானதை நீ செய்தே ஆக வேண்டும். வானர ராஜனே, எல்லா விதத்திலும் முயற்சி செய்வோம். பூமியின் அடியிலோ, நீரின் ஆழத்திலோ, மேலே ஆகாயத்திலோ, எங்கு வேண்டுமானாலும் உன் கட்டளைப் படி நம் படை வீரர்கள் செல்வார்கள். செல்ல சக்தியுடையவர்களே. அதனால் வானர ராஜனே, கட்டளையிடு. யார், எங்கே, எப்படி முயற்சி செய்ய வேண்டும்.? கோடிக் கணக்கான நல்ல வீரர்கள் உன் படையில் இருக்கிறார்கள். சரியான சமயத்தில் நல்லபடியாக ஹனுமான் எடுத்துச் சொல்லக் கேட்ட சுக்ரீவன், அதை அப்படியே ஏற்றுக் கொண்டான். புத்திசாலித் தனமாக செயல் பட்டான். எப்பொழுதும் துடியாக இருக்கும் நீலனைக் கூப்பிட்டான். எல்லா திக்குகளிலும் இருந்து சைன்யங்களை வரவழைக்க ஏற்பாடு செய். சைன்யங்களுடன் அவர்கள் சேனைத் தலைவர்களும் வந்து சேரட்டும். ஒருவர் விடாமல் வந்து சேரும்படி ஏற்பாடு செய். காவலில் சிறந்த வீரர்கள், வேகமாக குதித்து ஓடக் கூடிய வானரங்கள், தளராத முயற்சியுடையவர்கள், இவர்களை உடனே என் கட்டளைப்படி ஒன்று கூட்டு. நீயும் மற்றொரு சைன்யத்தை தயாராக வைத்துக் கொள். மூன்று, ஐந்து (பதினைந்து) இரவுக்குள் இங்கு வந்து சேராத வானரங்களை தலையை சீவி விடு. அது தான் தண்டனை. விசாரனையே வேண்டாம். வயதான வானரங்களையும் நீ அங்கதனுடன் சென்று பார். என் கட்டளையை அவர்களுக்குச் சொல்லு. இவ்வாறு ஏற்பாடுகளைச் செய்து விட்டு, வானர ராஜன், திரும்பவும் தன் மாளிகைக்குள் சென்று விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமத் பிரதி போ3த4னம் என்ற இருபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 30 (301) சரத்3 வர்ணனம் (சரத் கால வர்ணனை)
மேகங்களிலிருந்து விடுபட்டு ஆகாயம் நிர்மலமாக ஆயிற்று. சுக்ரீவனும் தன் குகைக்குள் நுழைந்து விட்டான். இங்கு ராமர், ஒரு மழைக் கால இரவில் உறக்கம் வராமல் எழுந்து கொண்டார். அவர் மனதில் துக்கம் பொங்கியது. வெளுத்த வானத்தையும், பிரகாசமாகத் தெரிந்த சந்திரனின் ஒளியையும், சரத் கால இரவின் துல்லியமான அழகையும் கண்டார். மனம் வாடியது. உலகே சந்திரனின் ஒளியை சந்தனம் போல பூசிக் கொண்டு நிற்பது போல காட்சியளித்தது. ஜனகன் மகளான தன் மனைவியைப் பிரிந்ததும், சுக்ரீவன் காமமே பெரிதாக களியாட்டம் போடுவதும், நேரம் வீணாகிறதே என்ற கவலை அவர் மனதில் நிரம்பியது. மனதில் அகலாமல் இருந்த ஜானகியை திரும்ப நினைத்துப் பார்த்துக் கொண்டார். பொன் மயமான தா4துக்கள் நிறைந்த அந்த மலையுச்சியில் அமர்ந்து, சரத் கால ஆகாயத்தைப் பார்த்து அவரது மனம் சீதையிடம் சென்று விட்டது. மேகங்களோ, இடி முழக்கமோ, மின்னல் வரிசையோ எதுவுமின்றி, மென்மையான ஸாரஸ பக்ஷிகளின் கூக்குரலே நிறைந்திருக்க, நாத்தழு தழுக்க, வருத்தத்துடன் புலம்பலானார். ஆசிரமத்தில் என்னுடன் வசித்த பொழுது, என் பிரியா, இந்த ஸாரஸ பக்ஷிகளின் கூக்குரலுக்கு அதே குரலில் பதில் கொடுப்பாள். மகிழ்வாள். இப்பொழுது எங்கு இருக்கிறாளோ? என்ன செய்கிறாளோ? மகிழ்ச்சியாகவா இருக்கப் போகிறாள்? பொன் வண்ணமாக மலர்ந்து கிடக்கும் இந்த அசன புஷ்பங்களின் நடுவில் அதே போல மலர்ந்த பொன் முகத்துடன், புன்னகையுடன் என்னை அழைத்துக் காட்டுவாள். அதே புஷ்பங்களை இப்பொழுது கண்டாலும், நான் அருகில் இல்லாத சமயம் ரஸிக்கவா போகிறாள்? கல ஹம்ஸங்கள் கீச் கீசென்று கத்தும். அதே போல கல கலவென்று பேசுபவள், இந்த சத்தம் கேட்டு துயிலெழுவாள். என்னையும் எழுப்புவாள். எங்கு இருக்கிறாளோ? துயில் கொள்வாளோ, என்னை எழுப்ப நினைப்பாளோ ? ஆரவாரமின்றி ஜோடி ஜோடியாக செல்லும் சக்ரவாக பக்ஷிகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இணைந்து செல்லும் அந்த பக்ஷிகளுக்கு தன் துணையைத் தவிர வேறு உலகமே கிடையாது. தாமரை இதழ் போன்ற கண்களையுடைய விசாலா, மேலும் கண்கள் விரிய இந்த பக்ஷிகளைக் கண்டு மகிழ்வாள். நதி, கிணறு, குளம் குட்டை எங்கு சென்றாலும், காடுகள், வனங்கள் என்று அலைந்தாலும், அவளுடன் இருக்கும் பொழுது மன நிறைவும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்குமே, அதே இடங்கள் தனிமையில் என்னை ஈர்ப்பதில்லையே. அவள் சுகுமாரி, என் பிரிவு அவளை வாட்டும். இந்த சரத் காலத்தின் நியதி, உற்றாரை எண்ணி ஏங்கச் செய்யும். இந்த சமயம் ஏற்கனவே, கலங்கி இருக்கும் அவளை காமனும் வாட்டுவானோ, அவள் எப்படித் தாங்குவாள்? கண்களில் நீர் மல்க, கவலையுடன் முகம் வாடி இருந்த சகோதரனைக் கண்டு, லக்ஷ்மணன் அனுதாபம் மேலிட, அருகில் சென்று ஆறுதல் சொல்லலானான். ஆர்ய, இது என்ன? தங்கள் பௌருஷம், தன்னம்பிக்கை எங்கே? இப்படி காமனால் துன்பப்பட மனதில் இடம் தரலாமா? இது உங்கள் பெருந்தன்மைக்கே இழுக்கல்லவா? தங்கள் யோக பலத்தால் இந்த துன்பத்திலிருந்து விடுபட்டு, சமாதி நிலையை அடைய முயற்சி செய்வீர்களா? தன் செயல்களில் மூழ்கி இருப்பதும், மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வதும், சமாதி யோகத்தில் காலத்தை செலவழிப்பதும் தங்களுக்கு கை வந்த கலை. தாங்களே சமர்த்தர். உதவி செய்யவும், அளவில்லாத சக்தியும், ஆற்றலும் உடையவர். தற்சமயம் நடப்பவை வினைப் பயன் என்று மனதை தேற்றிக் கொள்ளுங்கள். மனித குல மாணிக்கமே, ஜானகி தங்களை நாதனாக அடைந்தவள். மற்றவர் எவரும் அவளை எதுவும் செய்ய முடியாது. கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்றவள். அந்த கற்புத் தீயின் எதிரில் நின்று, வேறு யாரும் எதுவும் செய்ய முடியுமா என்ன? அவளுக்கு தீங்கு செய்வது இருக்கட்டும். இந்த நெருப்பின் அருகில் சென்று தாங்களே பொசுங்கிப் போகாமல் திரும்ப முடியுமா என்ன? யாராலும் எதிர்த்து நிற்க முடியாத பலம் உள்ளவன் லக்ஷ்மணன். இயல்பாகவே லக்ஷணங்கள் உடையவன். சொல் வன்மை உடையவன். அவன் சொல் எப்பொழுதும் நேர்மையாகவே சரியாகவே இருக்கும். இது அவன் பிறவிக் குணம். ராமர் அறிந்ததே. லக்ஷ்மணனின் அறிவுரை ஹிதமாக, பத்யமாக (ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும், நன்மை தரக் கூடியது,) நியாயத்தைச் சொல்வது, சாம, தர்ம, அர்த்தம் நிறைந்தது. எந்த காரணத்தைக் கொண்டும் தட்ட முடியாதது. ராமரும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டார். எசந்தேகமில்லாமல் நாம் மேற்கொண்டு செய்வதைத்தான் யோசிக்க வேண்டும். அதை கவனிப்போம். அரிய செயலைத் தொடருவோம். நடந்ததை எண்ணி நல்லதோ, கெட்டதோ, நினைத்துக் கொண்டே இருந்து என்ன பயன்? பத்3ம தளம் போன்ற கண்களையுடைய சீதையை ஒருமுறை நினைத்து பார்த்தவர், முகம் வாடியிருந்தாலும் லக்ஷ்மணனுக்கு பதில் சொன்னார். ஸஹஸ்ராக்ஷன் (இந்திரன்) பூமியை நீராட்டி, திருப்தி செய்து விட்டான். பயிர்கள் முளைத்தெழுந்து வளரத் தொடங்கி விட்டன. தன் காரியம் ஆன திருப்தியோடு திரும்பி விட்டான். மேகங்களும் நனைந்து, கம்பீரமாக கோஷமிட்டு, மலைகளிலும், மரங்களிலும் தங்களிடம் இருந்த நீரை கொடுத்துவிட்டு, விஸ்ராந்தியாக சிரம பரிகாரம் செய்து கொள்கின்றன. (நீரை சுமந்து வந்த களைப்புத் தீர) பெரும் யானைகள் மதம் நீங்கப் பெற்றது போல, மேகங்கள் வேகம் நீங்கி மெல்ல நடை போடுகின்றன. திசைகளை நீலோத்பலம் போல வெளிர் நிறத்துடன், தன் கருமையை திசைகளுக்கு கொடுத்து விட்டன போலும். மழைக் காற்றும் ஜலத்தை தாங்கி வேகமாக வீசியது, குடஜ, அர்ஜுன புஷ்பங்களின் வாசனையை பரவச் செய்தவை, இப்பொழுது சாந்தமாக வீசுகிறது. திடுமென, மயில்கள் கத்துவதும், யானைகள் பிளிறுவதும் கூட நின்று விட்டன. வேகமாக விழும் அருவியின் ஓசை கூட அடங்கி விட்டது. லக்ஷ்மணா, மகா மேகங்கள் வந்து ஜலத்தை வர்ஷித்து அபிஷேகம் செய்த பின், மலைகள், சந்தனம் பூசிக் கொண்டது போல சந்திரனின் ஒளியால் பூசப் பெற்று விளங்குகின்றன. இந்த சரத் காலம் தன்னிடமுள்ள அழகையெல்லாம் பங்கிட்டு கொடுத்திருப்பது போலத் தெரிகிறது. சப்தசத (ஒரு வகை மரம்) மரங்களின் கிளைகளில், சந்திர சூரியர்களின் கிரணங்களில், உயர்ந்த ஜாதி யானைகளின் விளையாட்டுகளில், தன்னுடைய தனித் தன்மையை பகிர்ந்து அளித்து விட்டு, சரத் தோன்றுகிறாள். லக்ஷ்மீ எப்பொழுதும் ஓரு இடத்தில் நில்லாள் என்பது பிரஸித்தம். பல இடங்களில் அவள் சோபை தெரியும். அதுதான் அவள் இயல்பு. இந்த சரத் கால குணமும் அதே போலத் தான். சூரியனின் முதல் கிரணங்கள் பட்டு, கண் விழிக்கும் பத்மங்களின் கூட்டங்களில் அவள் அதிகமாக காணப் படுகிறாள். போட்டி போடுவது போல, சப்தசத மரங்களின் புஷ்பங்களின் வாசனை, அதில் மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம் கீதமாக ஒலிக்க, வேகமாக வீசும் காற்றுடன், மதம் கொண்ட யானைகளின் திமிரையும் அடக்கும் விதமாக, அழகாக வீசுகிறது. வெகு தூரம் யாத்திரை செய்து விட்டு வந்த உறவினரை வரவேற்பது போல ஹம்ஸங்கள், சக்ர வாக பக்ஷிகளை வரவேற்கின்றன. பெரிய விரிந்த இறக்கைகளையுடைய இந்த பக்ஷிகள், தங்கள் இணையை விட்டு எப்பொழுதும் பிரிவதில்லை. பத்மங்களின் மகரந்தம் இவைகளின் இறக்கைகளில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. பெரும் நதிகளை கடந்து வந்ததால், மணல் துகள்களும் தெரிகின்றன. ஹம்ஸங்கள் பிரியமுடன் இவைகளுடன் உறவாடுகின்றன. லக்ஷ்மி தன் கடாக்ஷத்தை பல விதங்களில் வெளிப்படுத்துகிறாள். பள்ளத்தை நோக்கிப் பாயும் அருவிகளில் பிரஸன்னமான ஜலத்தில், பசுக்களின் கூட்டத்தில், மதம் கொண்ட யானைகளின் நடையில் என்று அழகு பளிச்சிடுகிறது. ஆண் மயூரங்கள் த்யானத்தில் ஆழ்ந்து நிற்கின்றன. அவைகளுக்கு பிடித்தமான மேகக் கூட்டம் ஆகாயத்தை விட்டு விலகிச் சென்று விட்டன. மற்ற தோகை விரித்தாடும் பறவைகளும் வனத்தில் அதிகமாக காண முடியவில்லை. உற்சவம் முடிந்தபின் இருக்கும் மன நிலையில் இந்த மயூரங்கள் பெண் மயிலிடம் கூட நாட்ட மின்றி, விரக்தியாக தியானத்தில் மூழ்கி விட்டன போலும். வனப் பிரதேசங்களில் வீசும் காற்றில் மனதை மயக்கும் வாசனை வீசுகிறது. மரங்கள் ஏராளமான புஷ்பங்களைத் தாங்கி வளைந்து வணங்கி நிற்கின்றன. பளிச்சென்று விளக்கு போட்டது போல, பொன் நிற மலர்களும், வெண் நிற மலர்களும் பிரகாசமாக தெரிகின்றன. மலர்ந்த புஷ்பங்களின் அழகு கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது. தன் பிரிய பந்துக்களான பெண் யானைகள், குட்டிகள் தொடர, ஆண் யானைகள், நளினீ- தாமரைத் தண்டை விரும்பும் இந்த யானைகள், நீரில் மூழ்கி விளையாட, மந்த மந்தமாக நடந்து வருவது ரஸிக்கத் தகுந்ததாக இருக்கிறது. ஆகாயம் அலம்பி விட்டது போல வெளுத்து காட்சியளிக்கிறது. நதியில் ஜலம் குறைந்து, கீற்றாக கணப் படுகின்றன. காற்றும் குளிர்ந்து வீசத் தொடங்கி விட்டது. திசைகள் இருள் நீங்கி பிரகாசமாக ஆகி விட்டன. அரசர்கள் தங்களுக்குள் பகை கொண்டவர்கள் செயல்பட ஆரம்பிக்கும் நேரம் இது. சூரியனின் கிரணங்கள் சேறாக இருந்த நிலத்தை உலர்த்தி சமமாக்கி விட்டன. புழுதிப் படலம் அடங்கி விட்டது. இது தான் சமயம் என்று அரசர்கள் போர் புரிய கிளம்பி விட்டனர். சரத் காலத்துக்கே உரிய (சீதோஷ்ண நிலை காரணமாக) உடல் வலுவை பெற்று, மிகவும் ஆனந்தமாக சேற்றில் விளையாடி உடல் பூரா மண்ணாக, யுத்தம் செய்யத் தயாராக ருஷபங்கள், பசுக்களின் மத்தியிலிருந்து ஹுங்காரம் செய்கின்றன. பெண் யானைகள் குல ஸ்த்ரீகள் போல, மனதில் எழும் தீவிரமான ஆசையையும் அடக்கியபடி, மதம் கொண்ட (ஆண் யானை) கணவனை நெருங்கி உரசியபடி, வனத்தில் உடன் செல்கின்றன. மயூரங்களின் நிலை தான் பரிதாபம். தங்களுக்கு ஆபரணமாக விளங்கும் பெரிய தோகையை விலக்கி விட்டு, நதிக் கரைகளில் உலவும் சமயம், ஏதோ, ஸாரஸ பக்ஷிகள் சீண்டுவது போலவும், பயமுறுத்துவது போலவும் கற்பனை செய்து கொண்டு வாட்டத்துடன் மன அமைதியின்றி செல்கின்றன. தங்கள் பங்குக்கு கஜேந்திரங்கள் என்ற பெரிய யானைக் கூட்டத் தலைவர்கள், காரண்டவ, சக்ரவாக பக்ஷிகளை அதட்டி விரட்டியபடி, தாமரைக் குளங்களில் இறங்கி விழுந்து புரண்டு நீரைக் கலக்கி, தாமரைத் தண்டுகளை மாலையாக மாட்டிக் கொண்டு, தண்ணீரை அள்ளி அள்ளி குடிக்கின்றன. சேறும் இன்றி, அடி மண் (வண்டல் மண்) தெரிய பிரஸன்னமான, தெளிவான ஆற்று நீர், அருகில் பசுக்களும், மாடு, கன்றுகளும் நிரம்பிய கோகுலம், இடையில் அமைதியாக ஓடும் நதிகளில் ஸாரஸ பக்ஷிகளின் இடை விடாத கூக்குரலையும் ரஸித்தபடி ஹம்ஸங்களும், சந்தோஷமாக வந்து சேருகின்றன. நதிக் கரைகளில் வேகமாக ஓடும் நதிப் பிரவாகத்தில், குரங்குகள் தங்கள் வழக்கமான உற்சாகத்தை இழந்து நிற்க, ஓசையின்றி, நதிக் கரையும் அமைதியாக விளங்குகிறது. சர்ப்பங்கள் பல வர்ணங்களில் வெளிப் படுகின்றன. புதிதாக நீரைதாங்கி வந்த மேகங்கள் மழையைப் பொழியவும், அவை உடலில் பட்டு, காயங்களோடு, பசியும் சேர, பயங்கர விஷம் கொண்ட பாம்புகள், தங்கள் வளைகளில் வெகு காலமாக அடை பட்டு கிடந்தவை மெல்ல வெளி வந்து நடமாடுகின்றன. ராக3வதி- அன்புடையவள். ராக3வதி -சிவந்த நிறமுடையவள். சந்த்யாகாலம் ராகவதியாக, சந்திரனின் ஸ்பரிசத்தால் மகிழ்ச்சியுடன் கண் விழித்த தாரகையைக் கண்டு, (ராகவதி-பொறாமை கொண்டு) தானாகவே ஆகாயத்தை விட்டு வேகமாக விலகிச் செல்கிறாள். (சந்த்யா காலம் மறைந்து இருட்டத் தொடங்கி விட்டதை கவி சொல்லும் அழகு) நதிகள் தங்கள் வேகம் குறைய, நீரின் அளவு குறைய ஆங்காங்கு மணல் தரை தெரிகிறது. வெட்கத்துடன் கணவனுடன் துயிலும் பெண்களின் ஆடை விலகி உடல் பாகம் தெரிவது போல அவை தெரிகின்றன. நல்ல வெண் பட்டு உடுத்தி நிற்கும் பெண் போல ராத்திரி விளங்குகிறாள். சந்திரன் (சஸாங்கன்) உதித்ததால் சௌம்யமான வதனம், தாரா கணங்களே சிமிட்டும் கண்கள், சந்திரனின் ஒளிப் பிரவாகமே அவள் உடுத்தியிருக்கும் ஆடை, என்று அழகாக தெரிகிறாள். சால மரத்தின் பழுக்காத பழங்களை கடித்து துப்பி, விளையாட்டாக ஸாரஸ பக்ஷிகள் மகிழ்கின்றன. இவை ஒரு ஒழுங்குடன் வரிசையாக செல்வது ஒரு அழகு. திடுமென எல்லாமாக எழுந்து ஆகாயத்தில் அதே அணி வரிசையில் பறக்கின்றன. வெண்மையான இந்த பறவைகள் பறப்பது, காற்று வேகத்தில் தொடுத்து வைத்த பூ மாலை ஆகாயத்தில் வீசி எறியப் பட்டது போலவும், அது தானாக நீல வானத்திற்கு மாலை அணிவித்தது போல விழுந்தது போலவும் காட்சி தருகிறது. ஒரு ஹம்ஸம் தூங்குகிறது. அதைச் சுற்றி குமுத மலர்கள். அழகான ஒரு குளத்தில் நீர் நிரம்பிய இடத்தில் அது இருக்கிறது. மேகங்கள் இல்லாத நிச்சலமான வானத்தில், தாரா கணங்களுடன் கூடிய சந்திரன் அந்தரிக்ஷத்தில் தெரிவது போலவே, இந்த நீர் நிலையில் உள்ள ஹம்ஸமும் தெரிகிறது. ஓசையிடும் (மேகலை) இருப்பில் அணியும் ஒட்டியாணம் போல கல கலவென இரைச்சலிடும் ஹம்ஸங்கள் சூழ, பத்மங்களும் உத்பலங்களும் மலர்ந்து மாலையாகத் தெரிய, இந்த உத்தமமான வாபி (கிணறு) இன்று அலங்காரம் செய்து கொண்ட உத்தம ஸ்த்ரீ போன்ற லக்ஷ்மீ கடாக்ஷத்தைப் பெற்று விளங்குகிறது. பொழுது விடிந்து விட்டது என்பதற்கு அறிகுறியாக, மூங்கில் குழல்களில் புகுந்து புறப்பட்டு வரும் காற்றின் நாதம் கேட்கிறது. (தூர்ய மிஸ்ர ராகம்) இந்த சஞ்சாரத்தை பூர்த்தி செய்வது போல, பசுக்களும் காளைகளும் சத்தமிடுகின்றன. ஒருவருக்கொருவர் ஸ்வரக் கோர்வையை பூர்த்தி செய்வது போல இந்த ஒசைகள் இணைந்து இனிமையாக கேட்கின்றன. மந்தமான காற்று இதமாக வீசுகிறது. நதிகளில் விழுந்த புத்தம் புது மலர்கள், மலர்ந்து சிரிப்பது போல இருக்க, அதை இடையூறு செய்யாமல் நகர்ந்து போவது போல இருக்கிறது. அல்லது இந்த புது மலர்களின் எதிரில் நிற்க வெட்கி, காற்று மெதுவாக விலகிச் செல்கிறது. துவைத்து உலர்த்திய வெண் பட்டாடை போல நதிக் கரைகளில் சிப்பிகள் நிறைந்து காண்கின்றன. ஆறு கால்களையுடைய வண்டுகள், மிக மகிழ்ச்சியாக தென்படுகின்றன. வனத்தில் சுற்றித் திரிந்து தங்கள் பிரியாவுடன், ஏராளமான மதுவைக் குடித்து மயங்கியவைகளாக, கால்களில் மகரந்த பொடிகள் ஒட்டிக்கொண்டு வெண்மையாகத் தெரிய நாங்களும் காற்றுடன் யாத்திரை செய்வோம் என்பது போல பறக்கின்றன. ஜலம் பிரஸன்னமாக இருக்கிறது. அதில் மலர்ந்துள்ள குமுதம் பிரகாசமாகத் தெரிகிறது. க்ரௌஞ்ச பக்ஷிகளின் நாதமும் ஓங்கி ஒலிக்கின்றன. சாலி வனத்தில் பழங்கள் இன்னமும் முதிரவில்லை. காற்று ம்ருதுவாக வீசுகிறது. சந்திரனும் விமலனாக காட்சி தருகிறான். மழைக் காலம் முடிந்து விட்டது தானே என்று ஐயம் கொள்வது போலவும் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டு விட்டது போலவும் ஒரு காட்சியைத் தோற்றுவிக்கின்றன. நதிகளே புது மணப் பெண்ணாக, நீர் மட்டத்தில் உள்ள மீன்களே மேகலையாக இருக்க, மெதுவாக நடக்கின்றனர். இரவு முழுவதும் கணவனால் அனுபவிக்கப் பட்ட மணப் பெண் விடிந்தபின், களைப்பும், சோம்பலுமாக நடப்பது போல அது இருக்கிறது. நதி முகங்களும் இது போன்ற புது மணப் பெண்ணின் முகத்தை ஒத்திருக்கிறது. சக்ரவாகங்களும், சைவலங்களும் சிப்பிகள் பட்டாடை உடுத்தியது போல உடலைச் சுற்றியிருக்க, பத்ரங்களுடன் ரம்யமாக காட்சி தருகின்றன. பா4ண, அஸன என்ற புஷ்பங்கள், முழுமையாக மலர்ந்து தென்படுகின்றன. அலங்காரமாக அமைந்துள்ளன. வண்டுகள் இனிமையாக ரீங்காரமிடுகின்றன. தன் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு மன்மதன் தன் வேலையை செய்ய இவைகளையும் பயன் படுத்திக் கொள்கிறான் போலும். நீரை பொழியும் இந்த மேகங்கள், செம்மையாக மழையை பொழிந்து உலகையே திருப்தியடையச் செய்து விட்டு, குளங்களையும் தடாகங்களையும் நிரப்பி விட்டு, முளை விட்ட பயிர் பச்சைகளுடன் பூமி செழிப்பாக இருப்பதைக் கண்டு திருப்தியுடன் வந்த வேலை முடிந்தது என்று ஆகாயத்தை விட்டுச் சென்று விட்டன போலும். இப்பொழுது ஜலமும் பிரஸன்னமாக இருக்கிறது. குரரீ என்ற பக்ஷிகளின் கூக்குரல் கூட இனிமையாக இருக்கிறது. நீர் நிலைகள் சக்ரவாக பக்ஷிகள் நிறைந்து காணப் படுகின்றன. அஸன புஷ்பங்கள், சப்த பர்ணங்கள், கோவிதா3ரங்கள் என்று புஷ்பங்கள் எங்கும் மலர்ந்து கிடக்கின்றன. மலைச் சாரல்களில் இவை பந்துக்களோடு இருப்பது போல அடுத்தடுத்து காணப் படுகின்றன. அடர்ந்து இருக்கும் இந்த பூ மரங்கள் கறுமையாகத் தெரிகின்றன. லக்ஷ்மணா, இந்த நதியைப் பார். ஹம்ஸங்களும், ஸாரஸ, சக்ரவாகங்களும், குரரீ என்ற பக்ஷிகளும் நதிக்கரை மணலை நிறைத்துக் கிடக்கின்றன. ஜயிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட ராஜ குமாரர்கள், ஒருவருக்கொருவர் தாங்கள் கொண்ட பகையை எண்ணி, யுத்தம் செய்ய இது தான் தருணம் என்று கிளம்பி விட்டார்கள். ராஜ குமாரனே, இது இந்த அரச குமாரர்களின் முதல் யாத்திரை. சுக்ரீவன் மட்டும் ஏன் இன்னமும் தயாராகாமல் இருக்கிறான்? அவனுக்கு இந்த உத்வேகம் வந்ததாகத் தெரியவில்லையே. நான்கு மாதம், மழைக் கால மாதங்கள், முடிந்து விட்டன. சீதையைக் காணாத என் மனம் தான் நூறு வருஷங்கள் ஆனது போல தவிக்கிறது. சக்ரவாக பக்ஷி போல கணவனான என்னைத் தொடர்ந்து வனம் வந்தாள். இந்த கடும் வனப் பிரதேசத்தை ஏதோ, விளையாடும் உத்யான வனமாக எண்ணி மகிழ்ந்தாள். என் நிலையை என்ன சொல்ல? ராஜ்யத்தை தர மறுத்து, வனத்துக்கு விரட்டப் பட்டு, பிரியமான மனைவியையும் பிரிந்து வாடும் என்னிடம் இந்த சுக்ரீவனுக்கு இன்னமும் தயவு வரவில்லையா? அல்லது லக்ஷ்மணா, அவன் என்னைப்பற்றி இப்படி நினைக்கிறானோ? இந்த நிமிஷம் இவன் அனாதை. தீனன். ராவணன் இவனை மிரட்டுகிறான். காமவசத்தில் மனைவியை எண்ணி புலம்புகிறான். உற்றார் உறவினர்கள் வெகு தூரத்தில் இருக்கிறார்கள். அதனால் தான் என்னை வந்து சரணம் அடைந்திருக்கிறான். வானர ராஜன் இப்படி எண்ணி தாமதம் செய்தால், நம்மை அவமதித்ததாகாதா? சீதையைத் தேட ஏற்பாடுகள் செய்யும் காலம் வந்தும், துர்மதி இன்னமும் எதுவும் செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கிறான். லக்ஷ்மணா, நீ கிஷ்கிந்தைக்குப் போய் அவனிடம் சொல், மூர்க்கன். கிராம்ய சுகத்தில் ஈடுபட்டு தன்னை மறந்திருக்கிறான். முன் உதவி செய்தவனுக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டியதிருக்க, வேண்டிக் கொண்ட பின்பும் நம்பிக்கையை வளர்த்து, அதைக் கெடுப்பவன் புருஷாத4மன். நல்லதோ, கெட்டதோ, வாக்கு கொடுத்ததை நிறைவேற்றுபவனே வீரன். அவன் தான் உத்தமமான மனிதன். செய் நன்றி மறந்தவர்களை, பிரதி உபகாரம் செய்யாமல் செய்த உபகாரத்தை மறந்தவனின் உடலை, மாமிச பக்ஷிகளான பறவைகள் கூடத் தொடுவதில்லை. அவ்வளவு நீசனாக மதிக்கப் படுகிறான். என் வில்லின் பலத்தை யுத்த முணையில் காண விரும்புகிறானோ? என் அம்புகள் மின்னல் போல பறக்கும். வில்லின் நுனிகள் தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டு கண்ணைப் பறிக்கும். இதைப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். நான் யார் என்பதை. வஜ்ரம் விழுவது போல விழும் என் பா3ணங்களின் ஓசையை கேட்க விரும்புகிறான் போலும். ஒரு முறை எதிரில் நின்று எனக்கு சகாயமாக நீயும் நிற்க, போரிட்டால் தெரிந்து கொள்வான். எந்த காரியத்தை முன்னிட்டு நாம் இவ்வளவு தூரம் வந்தோம், நேரம் தாழ்த்தாமல் அதை முடிக்க வேண்டுமே என்ற கவலையெல்லாம் அவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மழைக் காலம் என்று சொல்லி தனக்கு அவகாசம் கேட்டான். நான்கு மாதங்கள் ஓடி விட்டன. விளையாட்டு புத்தி, இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை. மந்திரிகள், பிரஜைகள் இவர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டு, குடியிலும், கூத்திலும் நேரத்தைக் கழிக்கின்றனர். நாம் இருவரும் தான் பரிதாபமாக, நமது சோகத்தையும், கவலையையும் பொறுத்துக் கொண்டு காத்திருக்கிறோம். வத்ஸ, லக்ஷ்மணா, நீ போய் சுக்ரீவனிடம் சொல். மகா பலவானான நீ போனால் மரியாதையாக பேசுவான். என் ரோஷம் எப்படிப்பட்டது என்று அவனிடம் சொல். நான் சொன்னதாக இதையும் சொல். வாலி அடிபட்டு சென்ற வழி இன்னமும் திறந்தே தான் இருக்கிறது. என்று சொல். அடிபட்டு வாலி சென்றது போல செல்ல விருப்பமா? என்று கேள். நேரம், காலத்தை அனுசரித்து நடந்து கொள். சுக்ரீவா, இல்லையெனில் வாலியின் கதி தான் உனக்கும் என்று சொல். வாலி என் ஒரு பாணத்தால் அடிபட்டு வீழ்ந்தவன் தான். ஆனால் உன்னை, உன் உற்றார், உறவினரோடு சேர்த்து அழிப்பேன். சத்ய வழியிலிருந்து தவறும் உன் போன்றவர்களுக்கு தண்டனையும் கடுமையாகவே இருக்கும். இனியாவது எது ஹிதம், நன்மை என்பதை புரிந்து கொண்டு செயல் படு. நர ஸ்ரேஷ்டனே, லக்ஷ்மணா, சமயத்துக்கு ஏற்றாற் போல, இன்னம் என்ன சொல்ல வேண்டுமோ சொல். சீக்கிரம் போ. இனியும் தாமதம் வேண்டாம். வானர ராஜனே, என்னிடம் சத்யம் செய்து செய்வதாக சொன்ன பிரதி உதவியை செய். சாஸ்வதமான தர்மம் இதுவே. வாலியை பின் பற்றி யம லோகம் போவாய். என் சரங்கள், ஆயுதங்கள் இவற்றின் வலிமையை நான் சொல்லித் தான் நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. என்றான். லக்ஷ்மணன் ராமனின் கோபாவேசத்தைக் கண்டு திடுக்கிட்டான். தன் தமையனின் உண்மை நிலையை புரிந்து கொண்டவனாக (கையாலாகாதவன் போல சுக்ரீவன் தயவை எதிர் நோக்கி நிற்க வேண்டி வந்ததால் சுய பச்சாதாபம் மேலிட) தீவிரமாக வானர ராஜனிடம் தான் எப்படி பேச வேண்டும் என்பது பற்றி யோசிக்கலானான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சரத்வர்ணனம் என்ற முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 31 (302) லக்ஷ்மணக்ரோத4: (லக்ஷ்மணனின் கோபம்)
ராமானுஜன் லக்ஷ்மணன், தன் தமையனின் சங்கடத்தை புரிந்து கொண்டான். குறைவில்லாத ஆற்றல் உடையவன், கொள்கைக்காக தன்னை அடக்கிக் கொண்டிருக்கிறான். ஆற்றாமையோடு சோகமும் சேர, அதன் காரணமாக கோபம் அலைக்கழிக்க, தீ3னனாக பேசுவதைக் கண்டு, லக்ஷ்மணன் ஆறுதல் சொன்னான். அண்ணலே, வானர பிறவி. நியாய அநியாயங்களை அதனிடம் எதிர் பார்க்க முடியாது. காரிய அகாரியங்களை தெரிந்து கொண்டு, பலாபலன்களை யோசித்து செயல் படுவான் என்று எப்படி நாம் எதிர் பார்க்க முடியும். வானர குணம், ராஜ்ய லக்ஷ்மி கைக்கு வந்தவுடன், போகத்தில் மூழ்கி விட்டது. அதை விட்டு வெளி வந்து யோசிக்க அதற்கு அவகாசமும் இல்லை. புத்தியும் இல்லை. புத்தி குறைவு காரணமாக கிராம்யமான கேளிக்கைகளில் தன்னை மறந்து இருக்கிறான். தாங்கள் செய்த உதவிக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்பதே நினைவு இருக்கிறதோ, இல்லையோ. இது போன்ற குணம் இல்லாதவர்களுக்கு ராஜ்யத்தை கொடுத்ததே தவறு. இவன் முன் பிறந்தவனை அழித்ததைப் போலவே இவனையும் அழித்து விடுவோம். உங்களைப் போல் நான் கோபத்தை அடக்கிக் கொண்டு காத்திருக்க மாட்டேன். இன்றே போய், அசத்தான அந்த சுக்ரீவனை ஒழித்து விட்டு வருகிறேன். வாலி புத்திரன் அங்கதன், மற்ற வானர வீரர்களுடன் ராஜ்யத்தை ஆளட்டும். இவ்வாறு தன் வில்லையும் அம்பையும் தயாராக வைத்துக் கொண்டு, கோபத்துடன் துடிக்கும் இளவலை, ராமர் ஏறிட்டார். யுத்தம் என்று வந்தால் தன் ஆற்றலை காட்டக் கூடிய வீரனை, சமாதானம் செய்தவாறு ராமர் சொன்னார். லக்ஷ்மணா, பொறு. என் மனத்தாங்கலைக் கேட்டு பொறுக்க மாட்டாமல், நீயும் வத4ம் செய்ய கிளம்பி விட்டாய். பொறு. உன் போன்றவர்கள் உலகில் பாப காரியம் எதுவும் செய்யக் கூடாது. அது மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்து விடும். புருஷோத்தமனானவன், தன் கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தற்சமயம், லக்ஷ்மணா, நீ உன் கோபத்தைக் காட்டாதே. முன் போலவே அந்த வானர ராஜனிடம் அன்புடன் பேசு. நயமாக சொல்லி செயல் படச் சொல். கடுமையான வார்த்தைகளைக் கூட தவிர்த்து, சமாதானமாக பேசு. கால தாமதம் செய்யாதே என்று உரைக்கும்படி சொல் என்று இவ்வாறு தமையன் சொல்லிக் கொடுத்தபடி, லக்ஷ்மணன் சுக்ரீவனின் ஊருக்குள் நுழைந்தான். எதிரியை அடியோடு அழிக்க வல்ல வீரன் அதை வெளிக் காட்டாமல், சமாதானமாக பேச, தன்னை தயார் செய்து கொண்டபடி சென்றான். ராமனுக்கு பிரியமானதைச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கோடு வானரத்தின் மாளிகையை நோக்கிச் சென்றான். மலை, சிகரங்களை தன்னுள் அடக்கி வைத்திருப்பது போல, தன் பெரிய வில்லையும், அம்புகளையும் தாங்கியபடி சென்றான். இந்திரனின் ஆயுதத்துக்கு ஒப்பான வில், காலாந்தகனுக்கு இணையான அம்புகள், இவற்றை கையில் பிடித்தபடி நடந்து சென்றான். ப்ருஹஸ்பதிக்கு சமமான புத்தியுடையவன், இப்பொழுது தமையன் சொன்னபடியே செய்வதாக எண்ணிச் சென்றான். தன் மனதில் பட்டதை சொல்லவோ, செய்யவோ தயங்கினான். தன் வரை காமக் க்ரோதங்களை அடக்கியவன், இப்பொழுது ராமனின் கோபத்தைக் கண்டு தானும் வெகுண்டான். வேகமாக வீசும் காற்று போல கடும் கோபத்துடன் நடந்தான். உள் மனதின் குமுறல் அவன் நடையிலேயே வெளிப்பட்டது. சால, தால அஸ்வ கர்ண மரங்கள் அவனது நடை வேகத்தில் சரிந்து விழுந்தன. மலையின் பாறைகளை தன் கைகளால் விலக்கியபடி, பல மரங்களை விழச் செய்தபடி வேகமாக நடந்தான். வேகமாக செல்லும் யானையின் பாதம் பட்டு சிறு கற்கள் பொடியாவது போல, அவனது பாதம் பட்டு கற்கள் நொறுங்கின. காரியத்தின் அவசரத்தை முன்னிட்டு, சீரான நேர் வழியைத் தவிர்த்து, ஒத்தையடிப் பாதையில் சென்றான். வெகு தூரத்திலிருந்தே, வானர ராஜனின் மாளிகையைக் கண்டான். மலைகளின் நடுவில், அந்த வானர ராஜனின் கோட்டை அமைந்திருக்கும் நேர்த்தியைக் கண்டு, இக்ஷ்வாகு ராஜகுமாரன் வியந்தான். உதடுகள் துடிக்க, சுக்ரீவனை நினைத்தபடி மேலும் நடந்தான். கிஷ்கிந்தையை காவல் காக்கும் பெரும் வானர வீரர்களை வெளிப் பிராகாரத்தில் கண்டான். வேகமாக வரும் லக்ஷ்மணனைப் பார்த்து, யார் என்பது தெரியாமல் அந்த வானர வீரர்கள், வளர்ந்த மரக் கிளைகளையும், பாறைகளையும் தற்காப்புக்காக எடுத்துக் கொண்டன. இந்த செயலைக் கண்டு லக்ஷ்மணனின் கோபம் இரண்டு மடங்காயிற்று. நிறைய கட்டைகளை (எரி பொருள்) போட்டு எரியும் நெருப்பை தூண்டி விட்டது போல கோபம் கொழுந்து விட்டெரியலாயிற்று. இன்னிலையில் லக்ஷ்மணனைக் கண்ட வானரங்கள் பயந்து நாலா புறமும் சிதறி ஓடின. வேகமாக ஓடி சுக்ரீவனுடைய மாளிகையை அடைந்து, கோபத்துடன் லக்ஷ்மணன் வருவதை தெரிவித்தன. ரகஸியமாக தாரையுடன் சல்லாபமாக இருந்த வானர ராஜன், சுக்ரீவன், இந்த வானர வீரர்களின் எச்சரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அங்கிருந்த மந்திரிகள் ஆணைப்படி இந்த வீரர்கள் கோட்டையைக் காக்க விரைந்தனர். நகரை விட்டு வெளி வந்து கோட்டையை சூழ்ந்து நின்றன. கறுத்த மலை போன்ற உருவம் உடையவை, நகமும் பற்களுமே ஆயுதங்களாக கொண்ட வானர வீரர்கள், விகாரமான, கோர ரூபம் கொண்டவை சில, பத்து யானை பலம், அதை விட அதிகமான பலம் என்று பலசாலிகளான வானரங்கள், சிறுத்தை போல மதர்ப்பும், பலமும் உடையவை, கைகளில் உடைந்த மரக் கிளைகளையும், கற்களையும் வைத்துக் கொண்டு தயாராக நின்றன. சுக்ரீவனின் பொறுப்பின்மையையும், தன் தமையனின் துக்கத்தையும் ஒன்றாக எண்ணிப் பார்த்த லக்ஷ்மணன் திரும்பவும் பெரும் கோபம் கொண்டான். கோபத்தினால் கண்கள் சிவக்க, தீர்கமாக உஷ்ண பெருமூச்சு விட்டபடி, புகையுடன் எரியும் தீ நாக்குகள் போலானான். பாணங்களே நாக்காக, அம்புகளே அதன் உடலாக, தன் தேஜஸே விஷத்துடன் கூடிய பெரும் நாக3ராஜன் போல, அது விஷத்தைக் கக்குவது போல அம்புகளை எய்யத் தயாரானான். காலாக்3னி போலவும், க3ஜராஜன் போலவும் கம்பீரமாக நின்றவனை அங்கதன் கண்டான். பயத்துடன் அருகில் சென்று மிகவும் வினயமாக, கூப்பிய கரங்களுடன் வருத்தம் தெரிய விசாரித்தான். சிவந்த கண்கள் தாமிரம் போல ஜொலிக்க இருந்த லக்ஷ்மணன் இவனைக் கண்டு வத்ஸ, அங்க3தா3 சுக்ரீவனிடம் போய் சொல். நான் வந்துள்ளேன் என்பதை தெரிவி. ராமானுஜன் உன்னைத் தேடி வந்திருக்கிறான் என்று சொல். தன் தமையனின் கஷ்டத்தை பொறுக்க மாட்டாமல், லக்ஷ்மணன் உன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறான் என்று சொல். அங்க3தா3 அவன் ஏதாவது பொருந்தும்படி பதில் சொன்னால் என்னிடம் வந்து சொல். சீக்கிரமாக வா. வத்ஸ, பயப்படாமல் போ. நான் சொன்னதாகச் சொல். பதில் சொன்னால் வந்து சொல் என்று சொல்லவும் அங்கதன் மிகவும் வருத்தத்துடன், சிற்றப்பனின் அருகில் செல்ல விரைந்தான். சௌமித்ரி வந்திருக்கிறான் என்றான். லக்ஷ்மணனின் கோபமான நிலையைக் கண்டவன், வருத்தத்துடன் முகம் வாட வேகமாக வந்தவன், சிற்றப்பனின் பாதங்களில் விழுந்து வணங்கி, தன் தாயையும், சுக்ரீவனின் பத்னியான ருமையையும் வணங்கி விட்டு லக்ஷ்மணனின் செய்தியை தெரிவித்தான். சுக்ரீவன் மதுவின் மயக்கத்தில், இன்னமும் மத3னனின் பிடியில் இருந்தான். தூக்கம் கலையவில்லை. லக்ஷ்மணனைக் குறித்து வானரங்கள் தங்களுக்குள் கிளுகிளுவென்று பேசிக் கொண்டன. தாங்களும் அவனைப் போலவே சிம்ம நாதம் செய்தன. இந்த ஆரவாரத்தில் சுக்ரீவன் விழித்துக் கொண்டான். மதுவினால் சிவந்த கண்களும், நிலை குலைந்த ஆடை ஆபரணங்களுமாக அரைத் தூக்கத்தில் எழுந்து நின்றான். அங்க3த3ன் சொன்னதை வைத்து நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்ட மந்திரிகள் அவசரமாக அவனை எழுப்பி, லக்ஷ்மணன் வந்திருப்பதை உணரும்படி எடுத்துச் சொன்னார்கள். சமாதானமாக பேசி சுக்ரீவனை புரிந்து கொள்ளச் செய்தனர். இந்திரனை சுர கணங்கள் நெருங்கி நிற்பதுபோல சுக்ரீவனை சூழ்ந்து நின்றபடி அறிவுரை கூறினர். ராம லக்ஷ்மணர்கள், சகோதரர்கள், சத்ய சந்தர்கள், மகா பலசாலிகளான ராஜ குமாரர்கள், ராஜ்யத்தை ஆளப் பிறந்தவர்கள், உனக்கு ராஜ்யத்தை தந்தவர்கள், உன்னுடன் நட்பு கொண்டவர்கள். அவர்களில் ஒருவனான லக்ஷ்மணன் கையில் வில்லேந்தி வாசலில் நிற்கிறான். அவனைக் கண்ட மாத்திரத்தில் பயந்து நடுங்கி வானரங்கள் இங்கும் அங்குமாக ஓடுகின்றன. ராக4வ சகோதரன், இந்த லக்ஷ்மணன், சொல்லின் செல்வன், வாக்ய சாரதி. ராமர் ஆணைபடி உன்னைக் கண்டு ஒரு விஷயம் சொல்ல வந்திருக்கிறான். எந்த விதமான சாகஸத்துக்கும் அஞ்சாதவன். இதோ இந்த தாரா தனயனான அங்கதனை உன்னிடம் விஷயம் சொல்ல அனுப்பியிருக்கிறான். அங்கதன் விரைந்தோடி வந்திருக்கிறான். அவன் சொல்வதை கொஞ்சம் கேள். கண்கள் ரோஷத்துடன் சிவந்திருக்க, லக்ஷ்மணன் நம் நகர வாயிலில் நிற்கிறான். நம் வானரங்களை கண்ணாலேயே பொசுக்கி விடுவான் போல நிற்கிறான். அவனை தலையால் வணங்கி, உன் புத்திரர்கள், உற்றார் உறவினரோடு போய் சமாதானம் செய். சீக்கிரம் போ. அவன் கோபத்தை தணி. எழுந்திரு. உன் சுய நிலைக்கு வா. ராமர் என்ன சொல்லி அனுப்பி இருக்கிறாரோ, கேட்டு அதன் படி செய். ராஜன், எழுந்திரு. நீ வாக்கு கொடுத்திருக்கிறாய். அதை சத்யமாகச் செய்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், லக்ஷ்மணக்ரோத4: என்ற முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 32 (303) ஹனூமத் மந்த்ர: (ஹனுமான் அறிவுரை சொல்லுதல்)
கோபத்துடன் லக்ஷ்மணன் மாளிகை வாசலில் நிற்கிறான் என்ற செய்தியை மந்திரிகள் வந்து தெரிவிக்கவும், மயக்கம் தெளிந்த சுக்ரீவன், தன் வராசனத்திலிருந்து துள்ளி குதித்து இறங்கி வந்தான். அவன் மந்திரிகள் விஷயம் அறிந்தவர்கள். சரியான மந்த்ராலோசனை சொல்ல வல்லவர்கள். சுக்ரீவனும் நம்பிக்கையோடு அவர்களிடம் ஆலோசனை கேட்டான். நான் தவறு எதுவும் செய்யவில்லையே. தவறாக எதுவும் பேசவில்லையே. ராகவ சகோதரன், லக்ஷ்மணன் ஏன் கோபத்துடன் வந்து நிற்க வேண்டும். என் நலனில் அக்கறை இல்லாத சிலர், என்னிடம் பொறாமை கொண்ட சிலர் அருகில் இருந்து விஷயங்களைத் தெரிந்து கொண்டு அவனிடம் பொய்யாக எதையோ சொல்லி மூட்டி விட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எல்லோரும் விசாரியுங்கள். தாங்களாக யோசித்தும் சொல்லுங்கள். லக்ஷ்மணன் வரவுக்கு என்ன காரணம் என்று மெதுவாக தெரிந்து கொள்ளுங்கள். லக்ஷ்மணனிடமோ, ராமனிடமோ எனக்கு பயம் இல்லை. அவர்களிடம் எனக்கு ஆபத்து வரும் என்று நாம் நினைக்கவில்லை. ஆனால், நண்பன், அகாரணமாக கோபித்துக் கொண்டால், பட படப்பு உண்டாகிறது. எப்பொழுதும் ஒருவரை நண்பராக கொள்வது எளிது. அதை காப்பாற்றி வைத்துக் கொள்வது தான் கஷ்டம். மனம் சஞ்சலமானது. அதனால் அல்ப காரியத்திற்காக கூட ஒருவர் மனம் மாறக் கூடும். நட்பில் விரிசல் தோன்றும். ராமர் எனக்கு செய்த உதவியை நினைத்து பார்க்கிறேன். அதே போல பிரதி உபகாரம் செய்ய என்னால் முடியாது. ஏதோ என்னால் முடிந்ததை செய்யத் தான் நினைக்கிறேன். அதுவும் தடைபட்டு போகுமோ என்று அஞ்சுகிறேன். சுக்ரீவன் இவ்வாறு மனம் விட்டு பேசிக் கொண்டே போகவும், மந்திரிகள் மத்தியில் இருந்து ஹனுமான் தன் கருத்தை தெரிவிக்க முன் வந்தான். ஹரிக3ணேஸ்வரா வானர கூட்டத் தலைவனே, நீ செய் நன்றி மறக்காமல் ராமர் செய்த உதவியை நினைத்து பிரதி உபகாரம் செய்ய நினைப்பதில் உன் நல்ல குணம் தெரிகிறது. உனக்கு இஷ்டமானதை செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்திரனுக்கு சமமான பலம் கொண்ட வாலியை தூரத்திலிருந்தே அடித்துக் கொன்றான். உன்னிடம் கொண்ட நட்பின் காரணமாக உன்னை நல்வழிப் படுத்த கோபம் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன். சிறுவர்களை அதட்டுவது போல, லக்ஷ்மணனை அனுப்பி இருக்கிறான். லக்ஷ்மணன் லக்ஷ்மி வர்த4னன். ராம சகோதரன். நீ உன் மயக்கத்தில், நேரம், காலம் எதையும் உணரும் நிலையில் இல்லை. சப்தச் சத மரங்கள் இலை அடர்ந்து கறுத்து தெரிகின்றன. மலர்கள் நிறைந்து சுபமாக காணப் படுகின்றன. சரத் காலம் ஆரம்பித்து விட்டது. ஆகாயத்தை பார். இடி மின்னலுடன் மேகங்கள் விலகி மறைந்து விட்டன. நிர்மலமாக இருக்கிறது. திசைகள், நதிகள், நீர் நிலைகள், பிரஸன்னமாக இருக்கின்றன. இது உத்யோக காலம். உழைக்க வேண்டிய நேரம். வானர ராஜனே, நீதான் இதை அறிந்து கொள்ளாமல், உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாய். உன் மயக்கத்தை தெளிவிக்கவே, லக்ஷ்மணன் வந்திருக்கிறான். ராகவன் ஏதாவது கோபமாக பேசினாலும் பொறுத்துக் கொள். மனைவியைப் பிரிந்து அவன் வேதனையில் இருக்கிறான். தவறு செய்தவன் நீ. அதனால் அடக்கமாக, கை கூப்பி அஞ்சலி செய்து லக்ஷ்மணனிடம் பணிவாக பேசு. மந்திரிகளுடன் சென்று ஹிதமானதை மட்டுமே பேசு. இந்த சமயம் உன் சுய கௌரவம் பார்க்காதே. ராகவன் வில்லை தூக்கி நிறுத்தி, கோபத்துடன் போரிடுவது என்று ஆரம்பித்து விட்டால், தேவாசுர, கந்தர்வர்கள் என்ன, அனைவரையும் தன் வசம் ஆக்கிக் கொள்ள சாமர்த்யம் உள்ளவனே. அவனை நீ சமாதானமாக, உன் பக்கம் தயவுடன் இருக்கும்படி பார்த்துக் கொள். முன்னால் உனக்கு உதவி செய்ததை மறக்காதே. அதனாலேயே அதிக பணிவுடன், ராகவன் மனம் கோணாமல் நடந்து கொள். உன் புத்திரர்கள், பந்து மித்திரர்களுடன் போய், தலையால் வணங்கி மன்னிப்பு கேள். கணவனிடம் மனைவி நடந்து கொள்வது போல ராஜன், நீயும் ராமனிடம் நடந்து கொள். கபிராஜனே, ராமனுடைய, ராமானுஜனுடைய கட்டளைகளை நீ மனதால் கூட மீற நினைக்காதே. உன் மனதிற்குத் தெரியும், ராகவனின் பலம். சுரேந்திரனுக்கு சற்றும் குறைந்தல்ல. மனிதன் தானே என்று அலட்சியமாக இருக்காதே.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமன் மந்த்ரோ என்ற முப்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 33 (304) தாரா சாந்த்வ வசனம் (தாரை சமாதானம் செய்தல்)
இதற்குள், ராமரது கட்டளைப் படி லக்ஷ்மணன் குகைக்குள் நுழைந்து விட்டான். வாசலில் நின்ற பெரிய பெரிய வானரங்களும், அஞ்சலி செய்தவாறு வணங்கி வழி விட்டன. யாரும் தடை செய்யவில்லை. பயத்துடன் அசையாது நின்றன. த3சரதா2த்மஜன், கோபத்துடன் வருகிறான் என்பது அவனது பெரு மூச்சிலேயே வெளிப்பட்டது. அந்த குகையே ப்ரும்மாண்டமாக, திவ்யமாக, ரத்னமயமாக, பூக்களும், பழங்களும் நிறைந்த மரங்களுடன் வனங்களுமாக, ரம்யமாகவும், செல்வ செழிப்பை பறை சாற்றுவதாகவும் இருந்ததை லக்ஷ்மணன் கண்டான். கடை வீதிகளும், பெரும் மாளிகைகளும், வீடுகளுமாக, எல்லா பருவ காலங்களிலும் பழங்களும், புஷ்பங்களுமாக நிறைந்த மரங்களுடன் இருக்கக் கண்டான். தேவ கந்தர்வர்களின் புத்திரர்கள், வானர ஜன்மம் எடுத்து வளைய வருவதைக் கண்டான். இவர்கள் திவ்யமான ஆடை ஆபரணங்களுடன் கண்களுக்கு விருந்தாக, நட்புடன் பழகும் தன்மையினராகத் தெரிந்தனர். சந்தன, அகரு பத்மங்கள் இவற்றின் வாசனை வீசியது. மைரேயமும் (ஒருவகை மது) மதுவும் வழி நெடுக தாராளமாக இருந்தன. அகலமான அந்த பிரதான வீதி விந்த்ய மேரு மலைக்கு இணையாக உயர்ந்த மாளிகைகளைக் கொண்டிருந்தது. ராகவன் அங்கு, மலைகளையும், விமலமான நீருடன் பிரவகித்த நதிகளையும் கண்டான். அங்க3த3னுடைய அழகிய வீடு, மைந்த3, த்3விவித3ர்களின் வீடு, க3வன், க3வாக்ஷன், க3ஜ, சரப4ன் இவர்களுடைய வீடுகள், வித்4யுன்மாலி, சம்பாதி, சூர்யாக்ஷன், ஹனுமான், இவர்களின் வீடுகள், வீர பா3ஹு, சுபா3ஹு, நலன் போன்ற மகான்களின் வீடுகள், பிரதானமான ராஜ வீதியிலேயே அமைந்திருப்பதைக் கண்டான். இவைகள் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப் பட்டன. வெண் மேகம் போன்ற பிரகாசத்துடன், திவ்யமான மாலைகளால் அலங்கரிக்கப் பட்டதாக இருந்தன. ஏராளமான த4ன, தா4ன்யங்களுடன், ஸ்த்ரீ ரத்னங்களும் நிறைந்து இருந்தன. கோட்டை வெண் சால மரத்தால் பாதுகாப்பாக அமைக்கப் பட்டிருந்தது. மகேந்திரனுக்கு சமமான உயர்ந்த மாளிகை சுக்ரீவ ராஜாவின் மாளிகை. வெண் நிற மாடிகளுடன் கூடிய பெரிய மாளிகை. கைலாச சிகரம் போல உயர்ந்து, தனித்து நின்றது. இங்கும் பழ மரங்களும், பூத்து குலுங்கும் மரங்களும் எல்லா பருவ காலத்தும் நிறைந்து இருக்கும்படி அடர்ந்து காணப்பட்டன. குளுமையான நிழலைத் தரும் மரங்கள், மனதைக் கவரும் வண்ணம் திவ்யமான புஷ்பங்களும், பழங்களும், இந்திரனுடைய தயவால், கறுத்து அடர்ந்து மேகம் போல விளங்கிய பெரிய பெரிய மரங்கள். ஆயுதம் தாங்கிய வீரர்கள் காவல் காக்க பொன்னாலான தோரணங்கள் அலங்கரிக்க இருந்த சுக்ரீவனது மாளிகையின் முகப்பு வாயிலில் நுழைந்தான், லக்ஷ்மணன். தடையேதுமின்றி அண்ட வெளியில் பா4ஸ்கரன் பயணம் செய்வது போல, யாருடைய குறுக்கீடும் இன்றி உள்ளே சென்றான். பல விதமான ஜனங்கள் நிரம்பியிருந்த ஏழு அறைகளை கடந்து சென்றான். அதன் பின் பலத்த காவலுடன் அந்த:புரம் தென்பட்டது. தங்க, வெள்ளி கட்டில்களும், அழகிய ஆசனங்கள் நல்ல உயர் ரக விரிப்புகளுடனும் காணப்பட்டன. ஆங்காங்கு தரையில் விரிப்புகள் போட்டு நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தன. உள்ளே நுழைந்ததுமே, மதுரமான கானம் கேட்டது. தந்தி வாத்யங்கள், தாள வாத்யங்கள் இணைந்து எழுந்தன. சமமான பதங்களுடன், தெளிவான அக்ஷரங்களுடன் பாடுவது கேட்டது. பல ஸ்த்ரீகள் ரூப, யௌவன சம்பன்னர்களாக, பலவிதமான ஆகிருதிகளுடன் சுக்ரீவ பவனத்தில் நடமாடக் கண்டான். உத்தமமான ஆபரணங்களும், மாலைகளும் அணிந்து, உற்றார் உறவினர் கூடியிருந்தனர். யாருமே, திருப்தியில்லாமலோ, கவலையுடனோ, உயர்தர ஆடை ஆபரணமின்றியோ, இருக்கவில்லை. சுக்ரீவனின் அடி மட்ட வேலையாட்கள் கூட சந்தோஷமாக காணப்பட்டனர். நூபுரங்களும், மேகலைகளும் ஓசையிட்டன. இந்த ஓசையைக் கேட்டு லக்ஷ்மணன் வெட்கினான். தன் கோபத்தைக் காட்ட வில்லின் நாணை மீட்டி, பெரும் நாதம் எழச் செய்தான். அது நாலா திசைகளிலும் பரவி எதிரொலித்தது. ஸ்த்ரீகளின் மத்தியில் நடமாட முடியாமல் ஓரமாக நின்றான். இந்த வில்லின் ஒலி வானர ராஜனின் காதில் விழுந்தது. லக்ஷ்மணன் வந்து விட்டான் என்று அறிந்து, தன் வராசனத்திலிருந்து குதித்து இறங்கினான். பயம் மேலிட்டது. அங்கதன் சொன்னது சரியாயிற்று. நிஜமாகவே லக்ஷ்மணன் வந்து விட்டான் என்று தெரிகிறது. சகோதர பாசம் மிக்கவன். வில்லின் ஒலியிலிருந்தே அவன் மன நிலை புலப்பட்டது. பயத்துடன் நடுங்கியபடி, தாராவைப் பார்த்து வேண்டினான். தாரா, சுபாவமாகவே மிருதுவாக பேசுபவன், மென்மையாக நடந்து கொள்பவன், இப்படி கோபாவேசமாக வர என்ன காரணம் இருக்க முடியும்? குமாரனை இப்படி கோபம் கொள்ள வைத்தது எது என்று உனக்குத் தெரிகிறதா? அகாரணமாக கோபாவேசம் அடைபவனும் அல்ல. நாம் ஏதாவது தவறு செய்து விட்டோமா. நம்மவர்கள், இவர்களுக்கு பிடிக்காததை எதையாவது செய்துவிட்டார்களா? யோசித்துப் பார்? சீக்கிரம் சொல். என்ன காரணம் என்று தெரிந்தால் பரிகாரம் செய்யலாம். அல்லது பா4மினி நீயே போ. நீயே போய் லக்ஷ்மணனைப் பார்த்து விசாரி. சமாதானமாக பேசி அவனை சமாதானமடையச் செய். உன்னைக் கண்டால் (விசுத்3தா4த்மா-உயர்ந்த பண்புகள் உடையவன்) தன் கோபத்தைக் காட்ட மாட்டான். சாதாரணமாக, ஸ்த்ரீகளிடம் பண்புடையவர்கள் தங்கள் கோபத்தைக் காட்ட மாட்டார்கள். நீ சமாதானமாக பேசி, அவன் வந்த காரணத்தை தெரிந்து கொள். பின்னால் நான் வந்து வரவேற்கிறேன். கமல பத்ராக்ஷனான லக்ஷ்மணனைப் பார்க்கிறேன். அவள் நடை தடுமாற, மதுவை அருந்தியதால், உடல் சோர, இடுப்பில் அணிந்திருந்த காஞ்சி, நூபுரங்கள் நழுவுவதையும் கூட பொருட்படுத்தாது வணக்கத்துடன் சென்றாள். வானர ராஜனின் மனைவி வருவதைப் பார்த்ததுமே, லக்ஷ்மணன் அவ்விடத்தை விட்டு விலகிப் போக யத்தனித்தான். ஸ்த்ரீகளுக்கு முன்னால் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, உதாசீனமாக, வாய் பேசாமல் நகர்ந்தான். மதுவின் மயக்கத்தால் சுபாவமாக உள்ள லஜ்ஜையை விட்டு, நரேந்திர குமாரன் அமைதியாக இருத்ததாலும், தைரியமாக, அவனை சமாதானப் படுத்தும் விதமாக சாமர்த்யமாக பேசினாள். மனுஜேந்திர புத்திர (மானிட அரசனின் மகனே) ஏன் இந்த கோபம்? என்ன காரணம்? உன் சொல்லை மதிக்காமல் எவனாவது நடந்து கொள்கிறானா? உன் கட்டளையை யாரால் மீற முடியும்? அப்படிச் செய்பவன் யார்? வனத்தில் இருக்கும் உலர்ந்த கட்டையைப் போன்றவன், தா3வாக்னி-காட்டுத்தீயான உன்னை சீண்டி விளையாடுகிறான். சந்தேகத்துக்கு இடமின்றி அவள் சமாதானம் பேசத்தான் வந்திருக்கிறாள் என்பது தெரியவும், லக்ஷ்மணன் பதில் சொன்னான். தாரே இது என்ன? காமத்தில் மூழ்கி, தர்மார்த்தங்களை மறந்து என்ன களியாட்டம்? அரசன் மறந்தாலும், மற்றவர் நினைவு படுத்துவதில்லையா? அரசனுக்கு நன்மையைச் சொல்ல யாரும் இல்லையா? ராஜ்யத்தை தான் பெரியதாக நினைக்கவில்லை, நாங்கள் வேதனையோடு காத்திருக்கிறோமே, அதை நினைத்து பார்க்க வேண்டாமா? அதையாவது எடுத்துச் சொல்வார் யாருமில்லையா? மந்திரிகள், பிரமுகர்களுடன் கூட, நீயும் சேர்ந்து மது பானமே செய்து காலத்தை கழிக்கிறீர்கள். நான்கு மாதங்கள்-மழைக் கால மாதங்கள். ஓய்வு எடுத்துக் கொண்டு வருவதாகச் சொன்ன ஹரி ராஜன், மறந்தே போய் விட்டான். நான்கு மாதங்கள் முடிந்து விட்டதை அவன் உணரவே இல்லை. களியாட்டத்தில், மது மயக்கத்தில் கிடக்கிறான். தர்மார்த்தங்களை சேவிப்பவர்கள், இப்படி மதுவினால் மயங்கி கிடப்பதில்லை. இதை உயர்வாக கொள்வதும் இல்லை. இந்த மது பானத்தால் பொருளும் நஷ்டமாகிறது. தர்மம் பிறளுகிறது. காமமும் வீணாகிறது. தர்ம நஷ்டத்தை எப்படி ஈடு செய்வோம? பொருள் நஷ்டத்தை, நல்ல நண்பனின் இழப்பை எப்படி சரி செய்ய முடியும்? சத்ய தர்ம பராயணனான மித்திரன் கிடைத்தும், தர்ம, அர்த்தங்களை பெரிதாக நினைப்பவன் என்ற அவன் குணம் தெரிந்தும், இப்படி நடந்து கொண்டால், இவை கை விட்டுப் போக எவ்வளவு நேரம் ஆகும். நாம் இணைந்து ஒரு செயலில் இறங்கினோம். பாதியில் அதை விட்டு விலகினால், தத்துவம் அறிந்த தாரையே நீயே சொல். எங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறான்.
இதைக் கேட்ட தாரை, லக்ஷ்மணனின் மதுர ஸ்வபாவம், இந்த கோபமான நிலையிலும் வெளிப் படுவதை உணர்ந்து வியந்தாள். தர்மார்த்தங்களை இயல்பாகச் சொல்லும் பாங்கை, சொல் வன்மையை புரிந்து கொண்டாள். கடந்து போன நாட்களில், தர்மார்த்தங்களை சுக்ரீவன் மறந்து, காலம் தாழ்த்தியதையும் நினைத்து, லக்ஷ்மணனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பதில் சொன்னாள். ராஜ குமாரனே, கோபம் கொள்ள இது நேரம் இல்லை. தன்னைச் சார்ந்தவர்களிடம் அதிகமாக கோபம் கொள்வதும் விவேகமாகாது. உங்கள் நலத்தில் அக்கறை கொண்டவன் தான் சுக்ரீவன், அவனுடைய கவனக் குறைவை பொறுத்துக் கொள். வீரனே அவன் தவற்றை பெரிதாக நினைக்காதே. புத்தியில், சக்தியில், உங்களைவிட குறைவான நண்பன். அவனிடம் போய் கோபம் கொள்ளலாமா? தாமஸமான நபர்கள் தான் கோப வசத்தில் தன்னை மறந்து பேசுவார்கள். நீ சத்வ குணம் மிக்கவன். உனக்கு எதற்கு கோபமும், ஆத்திரமும். ஹரி வீர பந்தோ, வானர ராஜனுக்கு நீயும் பந்துவே. உன் ரோஷத்தின் காரணமும் நான் அறிவேன். கால விரயம் ஆனதையும் அறிந்து கொண்டேன். எங்களுக்கு நீங்கள் செய்த பெரும் உதவியையும் அறிவேன். இனி செய்ய வேண்டியதையும் அறிவேன். அதே சமயம் சரீரஜன் என்ற மன்மதனுடைய தவிர்க்க முடியாத சக்தியையும் அறிவேன். சுக்ரீவன் போன்ற வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளவர்களை அவன் (மன்மதன்) ஆட்டிப் படைப்பதையும் அறிவேன். சுய கட்டுப் பாடு இல்லாத பாமர ஜனங்கள், இவன் வலையில் வீழ்ந்து மீள முடியாமல் கிடப்பதும் நிஜம். நீ காமனை வென்றவன். ஆனால் மன்யு என்ற கோபத்தின் வசம் ஆகி நிற்கிறாய். இந்த காமனின் வசம் ஆனவர்கள், தேச, காலமோ, அர்த்த தர்மமோ எதையுமே மனதில் ஏற்றுக் கொள்வதில்லை. நினைவில் கொள்வதில்லை. இந்த சுக்ரீவன் என் அருகில் தான் இருக்கிறான். காம போகத்தினால், லஜ்ஜையும் இவனை விட்டு விலகி விட்டது. பொறுத்துக் கொள். எப்படிபட்ட வீராதி வீரனாக இருந்தாலும் எதிர் நின்று போரிட்டு வெல்லும் சக்தி வாய்ந்தவன் நீ, பரவீர ஹந்த என்று பெயர் பெற்றவன் நீ. வானர வம்சத் தலைவனான சுக்ரீவனும் உன் சகோதரனே. பெரிய மகரிஷிகளே, தர்மத்தை அனவரதமும் அனுஷ்டிப்பவர்கள், தவத்தில் மூழ்கியவர்களே, சமயத்தில் காமனின் வசமாகி, மோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த வானர ராஜன் இயல்பாகவே சபல புத்தியுள்ளவன். சுகம் வந்த பொழுது தன்னை மறந்ததில் என்ன ஆச்சர்யம்?
அந்த வானர ஸ்த்ரீயான தாரை, அளவில்லாத பௌருஷம் கொண்ட லக்ஷ்மணனிடம், தன் நாயகனான சுக்ரீவனை காப்பாற்றும் பொருட்டு, இன்னமும் விளையாட்டு புத்தியாக, மது மயக்கத்தில் கிடப்பவனை, லக்ஷ்மணனின் கோபத்திலிருந்து மீட்க, உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அழகாக சமாதானம் செய்தாள். மேலும் சொன்னாள். நரோத்தமா, சுக்ரீவன் தன் பங்கு செயலையும் ஆரம்பித்து விட்டான். வெகு நாள் முன்பே, ஆணையிட்டுத் துவக்கி விட்டான். உங்கள் காரியத்தைச் செய்ய சக்தி வாய்ந்த வானரங்களை பல இடங்களிலும் இருந்து வரவழைத்து படையை கூட்டியிருக்கிறான். பல மலைகளிலும், காடுகளிலும் இருந்து வானரங்கள் கோடிக் கணக்காக வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் வா. நீ உன் நடத்தையைக் காப்பாற்றிக் கொண்டு ஒதுங்கி இருக்கிறாய். மனதில் களங்கமின்றி, நட்புடன் மித்ர பாவத்துடன், நல்லவர்களின் மனைவியை ஏறிட்டுப் பார்ப்பதில் தவறில்லை. தாரா இவ்வாறு அனுமதி அளித்தபின், தன் காரியத்தின் அவசரத்தையும் எண்ணி, லக்ஷ்மணன் அவளுடன் அந்த:புரத்தில் நுழைந்தான். பொன் மயமான பரமாசனத்தில் அமர்ந்திருந்த சுக்ரீவனைக் கண்டான். அழகிய விரிப்புகளுடன் கூடிய ஆஸனத்தில், ஆதித்யன் போலவே அமர்ந்திருப்பதைக் கண்டான். மகேந்திரன் போலவே ஆடை ஆபரணங்களோடு, தெளிவாக இருப்பதைக் கண்டான். உடன் இருந்த ஸ்த்ரீகளும் நல்ல ஆடை ஆபரணங்களோடு அதே போல இருந்தனர். அருகில் ருமை என்ற தன் மனைவியை அணைத்தபடி, தன் ஆசனத்தில் அமர்ந்து குறைவில்லாத ஆற்றல் உடைய லக்ஷ்மணனை தன் கண்கள் விரிய, அதை விட விசாலமான கண்களையுடைய லக்ஷ்மணனைக் கண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், தாரா சாந்த்வ வசனம் என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 34 (305) சுக்ரீவ தர்ஜனம் (சுக்ரீவனை மிரட்டுதல்)
வெளிப் பார்வைக்கு தைரியமாக இருப்பது போல தோற்றம் அளித்தாலும், புருஷ ரிஷபனான லக்ஷ்மணன் கோபத்துடன் இறுகிய முகத்துடன் இருப்பதைப் பார்த்து சுக்ரீவன் உள்ளூற நடுங்கினான். தசராத்மஜன், தன் சகோதரனின் வேதனையை பொறுக்க மாட்டாமல் துடிப்பதும் தெரிந்தது. தன் சுவர்ண மயமான ஆஸனத்தை விட்டு குதித்து எழுந்தான். மகேந்திரனது அலங்கார த்வஜம் விழுந்தது போல இருந்தது. ருமா, முதலிய மற்ற ஸ்த்ரீகளும் அதே போல ஆஸனத்தை விட்டு எழுந்து வந்து அருகில் நின்றனர். ஆகாயத்தில் பூரண சந்திரனை, தாரா கணங்கள் தொடருவது போல தொடர்ந்தனர். கை கூப்பியவாறு அவர்களுடன் செய்வதறியாது மரமாக நின்றான். ருமை, மற்றும் ஸ்த்ரீ கணங்களுடன் நின்ற சுக்ரீவனை லக்ஷ்மணன் ஏறிட்டான். கோபம் அகலாத குரலிலேயே பேசலானான். உலகில் அரசனாக இருப்பவன் சத்வ குணங்கள் நிறைந்த பெரியார்களுடன் இருக்க வேண்டும். இந்திரியங்களை வென்றவனாக, தயவும் பெருந்தன்மையும் உடையவனாக, செய் நன்றி மறவாதவனாக, சொன்ன சொல்லை மீறாதவனாக, இப்படிப் பட்ட குணங்கள் உடைய அரசன் தான் நிலைத்து நிற்பான், மதிக்கப் படுவான். எந்த அரசன், தன் நண்பனை, முன் அவன் செய்த உதவிகளையும் மறந்து, தர்ம வழியில் நிற்பவன், சொன்ன சொல்லை பெரிதாக மதிப்பவன் என்று தெரிந்தும், அவனுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகிறானோ, அவனை விட கொடியவன் வேறு யார் இருக்க முடியும்? காரணமின்றி நூறு அஸ்வங்களை கொல்வதும், ஆயிரம் பசுக்களை கொல்வதையும் விட, மனிதன் தான் கொடுத்த வாக்கை மீறும் பொழுது, தன் பந்து, உற்றார், உறவினரையே கொன்றவன் ஆகிறான். உதவியை பெற்றுக் கொண்டு, பிரதி உபகாரம் செய்வதை அறவே மறந்து போகும், நண்பர்களுக்கு, வதம் தான் தண்டனை. இது ப்ரும்மா சொன்ன ஸ்லோகம். உலகமே வணங்கும் ப்ரும்மா ஒரு முறை, செய் நன்றி மறந்தவர்களைப் பார்த்து கோபத்துடன் சொன்னார். வானர ராஜனே, தெரிந்து கொள். பிராம்மணனைக் கொன்றவனை விட, மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கொடியவர்கள். பசுவைக் கொல்வது, விரதத்தை தடுத்தல் இது போன்ற பாபங்களுக்கு கூட விடிவு உண்டு. பரிகாரம் சொல்லப் பட்டுள்ளது ஆனால் செய் நன்றி மறந்தவனுக்கு விமோசனமே கிடையாது. அனார்யன் நீ (பண்பற்றவன்) வானரா, இது போல செய் நன்றி மறந்து சொன்ன சொல்லையும் காப்பாற்ற முடியாதவன் என்பது நிச்சயம். ராமரிடம் உன் காரியத்தை சாதித்துக் கொண்டாய், மறந்து விட்டாய். பதில் உதவி செய்வதாக சொன்னாய். மறந்து விட்டாய். சீதையைத் தேட யத்னம் செய்வதாக சொன்னாய். நீ செய்ய விரும்பினால் தானே. க்ராம்யமான கேளிக்கைகளில் தன்னை மறந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். ராமர் உன்னை நம்பினார். தவளை வேடம் கொண்ட சர்ப்பம் இது என்று தெரிந்து கொள்ளவில்லை. தவளை போல் குரல் கொடுத்தாய். உன்னையும் பொருட்டாக எண்ணி வானர ராஜ்யத்தையும் உனக்கு அளித்தார். ராமரின் அரிய செயலை நீ அறியாய். வாலியை ஒரே பாணத்தால் அடித்து வீழ்த்தியதை பார்த்தாய். அந்த வழி இன்னமும் திறந்தே இருக்கிறது. வாலி அடிபட்டு இறந்து பட்ட வழி இன்னமும் மூடப்படவில்லை. சுக்ரீவா, காலம் அறிந்து நடந்து கொள். வாலியைப் போல மரணத்தை எதிர் கொள்ளாதே. நிச்சயம். இக்ஷ்வாகு குல வரிஷ்டனான ராமனது வில்லிலிருந்து புறப்படும் அம்புகளைத் தான் காண்பாய். வஜ்ரம் போன்றவை. அதன் பின் உனக்கு சுகம் ஏது? மனதாலும் ராம காரியத்தை அலட்சியம் செய்தவனுக்கு நன்மை என்பது ஏது?
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவ தர்ஜனம் என்ற முப்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 35 (306) தாரா சமாதானம்
தன் ஆத்திரம் தீர பேசிய லக்ஷ்மணனை தாரா, சமாதானம் செய்தாள். லக்ஷ்மணா அப்படி சொல்லவே சொல்லாதே. இவனிடம் கடுமையாக பேசாதே. அதிலும் உன் வாயிலிருந்து இவ்வளவு கடுமையான வார்த்தைகளால் இவனைச் சாடாதே. இவன் தாங்க மாட்டான். இந்த சுக்ரீவன் செய் நன்றி மறந்தவனும் அல்ல. மூர்க்கனும் அல்ல. பயங்கரமாக எதையும் செய்பவனும் அல்ல. உலக நடப்பு தெரியாதவனும் அல்ல. செய்த உதவியை இவன் மறக்க மாட்டான். மறக்கவும் இல்லை. வேறு யாரும் செய்ய முடியாத அரிய செயலை செய்து ராமர் இவனுக்கு உதவி இருக்கிறார். ராமரது தயவால் தான் கீர்த்தி, வானர ராஜ்யம் இவற்றை சாஸ்வதமாக அடைந்துள்ளான். மனைவி ருமாவையும் திரும்பப் பெற்றான். என்னையும் அடைந்தான். பரந்தப, இந்த பாக்யங்கள் கிடைத்த மகிழ்ச்சியில், வெகு நாட்களாக தூங்காமல் அனுபவித்த கஷ்டங்கள் மறைய, தூங்கி விட்டான். நேரம் போனது தெரியாமல் இருந்து விட்டான். விஸ்வாமித்திர முனிவரும் தான் க்3ருதாசீயிடம் பத்து வருஷங்கள் கழித்தார். தர்மாத்மாவான விஸ்வாமித்திர மாமுனி, காலம் ஓடி மறைந்ததை அறியவே இல்லை. அந்த மகா முனிவரே அப்படி நேரம், காலம் தெரியாமல் சிற்றின்பத்தில் ஈடுபட்டு இருந்தார் என்றால், சாதாரண பாமர ஜனங்களைப் பற்றி கேட்பானேன். லக்ஷ்மணா, வெகு காலம் கஷ்டப்பட்டவன். சரீர சுகம் கிடைத்தவுடன் தன்னை மறந்து விட்டான். இவனுடைய காமத்தை பொறுத்துக் கொள், லக்ஷ்மணா, ஆத்திரப்படாதே. தாத (சிறியவர்களை அழைக்க பயன்படுத்தும் சொல்) சாதாரண பாமர மனிதன் போல, உள் விஷயம், காரணங்களைத் தெரிந்து கொள்ளாமல் உன் போன்ற விவரம் அறிந்த மகா புருஷர்கள், எடுத்த எடுப்பில் கோபம் கொண்டு குற்றம் சாட்டுவது சரியல்ல. லக்ஷ்மணா சுக்ரீவனுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். உன்னை வேண்டுகிறேன். நான் தெளிவாக இருக்கிறேன். பெரும் கோபத்துடன் எழுந்த பட படப்பு அடங்கட்டும். இந்த சுக்ரீவன், ருமையையும், என்னையும், இந்த ராஜ்யத்தையுமே, அதனால் ராமனுக்கு நன்மை உண்டாகுமானால் தியாகம் செய்து விடுவான் என்று நான் நம்புகிறேன், ராகவனை சீதையுடன் சேர்த்து வைப்பான். ராவணனை யுத்தத்தில் அழித்து சசாங்கன், ரோஹிணியை திரும்பப் பெற்றது போல, ராகவன் சீதையை பெறச் செய்வான். லங்கையில் உள்ள ராக்ஷஸர்கள், நூறாயிரம் கோடி வீரர்கள், அதைத் தவிர பத்தாயிரம் வீரர்களாக, முப்பத்தாறு நூறாயிரம் போர் வீரர்களின் அணிகள் (ஸஹஸ்ர சதம்) இந்த வீரர்களை போரில் வெல்லாமல், ராவணனை நெருங்க முடியாது. இவர்களோ விருப்பம் போல ரூபம் எடுக்க வல்ல பலசாலிகள். சீதையைக் கவர்ந்து போன ராவணன் அவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறான். சகாயமில்லாமல், இந்த பெரிய போரை நடத்த முடியுமா? லக்ஷ்மணா ராவணன் க்ரூரமான காரியங்களை விளையாட்டாக செய்பவன். இதை வாலியே சொல்லி நான் கேட்டிருக்கிறேன். சுக்ரீவனுக்கு கூட தெரியுமோ, என்னவோ, நான் கேட்டதைச் சொல்கிறேன். வாலி விஷயம் அறிந்தவன். அவன் வந்ததை நான் அறியேன். சுக்ரீவன், உங்களுக்கு உதவி செய்ய வானரங்களை பல இடங்களுக்கும் அனுப்பி, படையுடன் வரச் சொல்லி இருக்கிறான். யுத்தம் செய்ய படைபலம் வேண்டாமா? அவர்களில் பலர் நல்ல வீரர்கள். மகா மகா பலசாலிகள். ஆற்றல் படைத்தவர்கள். ராகவ காரியத்தை சரியாக நிறைவேற்ற, இவர்களின் அனைவரின் உதவியும் தேவையாக இருக்கும். இன்று அந்த வானரர்கள் வந்து சேர வேண்டும். சௌமித்ரே, இந்த ஏற்பாட்டை சுக்ரீவன் முதலிலேயே செய்து விட்டான். ஆயிரம் கோடி கரடிகள், கோலாங்கூல எனும் வானரங்கள், நூறாயிரம் இன்று வந்து உன்னை சந்திப்பார்கள். ஆத்திரத்தை விடு லக்ஷ்மணா, கோடிக் கணக்கான அதற்கும் அதிகமான வானர வீரர்களை சந்திக்கப் போகிறாய். உன் ரத்தச் சிவப்பான கண்களை, ஆத்திரத்தில் துடித்த முகத்தைப் பார்த்த இந்த நகர பெண்கள் இன்னமும் அமைதி அடையவில்லை. முதலில் தோன்றிய சந்தேகம், பயம் இன்னமும் அவர்களை வாட்டுகிறது, பார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், தாரா சமாதானம் என்ற முப்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 36 (307) சுக்ரீவ லக்ஷ்மணானுரோத: (சுக்ரீவன், லக்ஷ்மணனுக்கு விளக்கிச் சொல்லுதல்)
சுபாவமாக இளகிய மனம் படைத்த லக்ஷ்மணன், விவரமாக தாரா சொன்னதைக் கேட்டு அமைதியானான். தர்மார்த்தங்கள் நிறைந்த தாரையின் மறு மொழி, லக்ஷ்மணனை, கோபத்தை விட்டு சகஜ நிலைக்கு திருப்பி விட்டது என்று தெரிந்ததும், சுக்ரீவனும், கிழிந்த பழைய ஆடையைத் தியாகம் செய்வது போல தன் பெரும் பயத்தை கை விட்டான். கழுத்தில் இருந்த மாலையையும் உதறி விட்டு, தன் மது மயக்கத்திலிருந்து முழுவதுமாக விடுபட்டவனாக தெளிவாக பேசினான். பலசாலியான லக்ஷ்மணனை நெருங்கி மன மகிழ்ச்சியோடு வினயமாக பேசினான். சௌமித்ரே, என்னிடமிருந்து லக்ஷ்மி (செல்வம்) கீர்த்தி, கபிராஜ்யம் இவை யாவுமே தொலைந்து போன நிலையில், நான் மனம் வாடி நின்ற சமயம் ராமர் செய்த உதவி மிகப் பெரிது. அவர் அருளால் நான் இவைகளைத் திரும்பப் பெற்றேன். தன் அரிய செயல்களால் புகழ் பெற்றவன். அவனுக்கு அதே போல பதில் உதவி செய்ய முடியாது. நினைத்து கூட பார்க்க முடியாதது. யாருக்கு அந்த சக்தி இருக்கிறது. நிச்சயம் சீதையை அடைவான். ராக்ஷஸ ராஜனை வெல்வான். நான் பெயரளவில் உதவியாக நிற்பேன். தன் ஆற்றலாலேயே இச்செயலை ராமன் செய்து முடிப்பான். எனக்கு ராமர் உதவி செய்ய ஏழு மரங்களையும் மலைப் பாறைகளோடு ஒரே பாணத்தால் பிளந்து தன் திறமையைக் காட்டினானே, லக்ஷ்மணா, தன் வில்லை எடுத்து நாணை பூட்டி, விரலால் மீட்டி ஓசையெழச் செய்தாலே போதும். பூமியே நடுங்கும். அந்த வீரனுக்கு நான் உதவி செய்வது எங்ஙணம். நரர்ஷப, அந்த மகானுடன் நான் அனுயாத்திரை உடன் செல்வது எனக்குத்தான் பெருமை சேர்க்கும். ராவணனை, ஊரோடு, உற்றார், உறவினரோடு அழிக்க அவன் புறப்படும் போது நானும் உடன் இருப்பேன். என் சக்தியோ, தகுதியோ அவ்வளவே. என் மனதில் உள்ள அன்பினாலும், அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையாலும் நான் அத்து மீறி ஏதாவது செய்திருந்தால், மன்னித்து விடு. யார் தான் தவறு செய்யவில்லை? சுக்ரீவன் இப்படி தாழ்ந்து பணிவாக, மன்னிப்பு கேட்கவும், லக்ஷ்மணன் கோபம் மறைந்தது. ஸ்னேகம் மீதூற, அன்புடன் பதில் சொன்னான். வானரேஸ்வரா என் தமையன் எப்பொழுதும் சநாதனே. (நாதனுடன் கூடியவனே) அநாதையில்லை. சமயத்துக்கு உதவி செய்ய அவனுக்கு யாராவது வந்து சேருவார்கள். தற்சமயம் நீ மனமுவந்து அவனுக்கு உதவி செய்வதாக கூறுகிறாய். நேர்மையானவன் தான் நீ. சுக்ரீவா, இந்த ராஜ்யம் உனக்கு கிடைத்தது சரியே. இதை அனுபவிக்கத் தகுந்தவனே நீ. மிகுந்த பிரதாபம் உடைய என் தமையன், இப்பொழுது உன் உதவியும் சேர, நிச்சயமாக யுத்தத்தில் வீரர்களை வெற்றி கொள்வான். சுக்ரீவா, நீ நன்றாக பேசினாய். நீ செய் நன்றி மறந்தவனும் அல்ல. புறமுதுகு காட்டாத வீரன் தான். நல்ல குடியில் பிறந்தவன். விவரம் அறிந்தவனே. அதற்கு தகுந்த வகையில் பேசினாய். சாமர்த்யம் குறைவாக இருந்தால், இப்படி ஒரு சொல் வராது. என் சகோதரனையும், உன்னையும் விட்டால் வேறு யாரால் இப்படி பேச முடியும். என் சகோதரனுக்கு ஏற்ற நண்பனே நீ. தேவர்கள் வெகு காலத்துக்கு முன்பே சகாயம் செய்ய வானரர்களை பிறப்பித்து விட்டார்கள். வா, என்னுடன் வந்து இதே போல என் சகோதரனின் சந்தேகத்தையும் தெளிவி. அவன் மனைவியைப் பிரிந்த வருத்தத்துடன் இருக்கிறான். சமாதானமாக பேசு. ராமருடைய மன வேதனையை தாளாமல் நான் சொன்ன கடுமையான சொல்லையும் பொறுத்துக் கொள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவ லக்ஷ்மணானுரோத: என்ற முப்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 37 (308) கபி சேனா சமாத்யயனம் (வானர சேனையை திரட்டுதல்)
லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்டு, சுக்ரீவன், அருகில் நின்றிருந்த ஹனுமனைப் பார்த்து, வானரர்களை பல இடங்களிலிருந்தும் வரவழைக்க ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னான். மஹேந்திர, ஹிமவத (இமயமலை), விந்த்3ய, கைலாஸ சிகரங்களில், மந்த3ர மலையில். பாண்டு சிகரத்தில், ஐந்து மலைகளில் இந்த வானரங்கள், இளம் சூரியனின் வண்ணத்துடன் கவலையின்றி எங்கும் சுற்றித் திரியும். மேற்கு சமுத்திர ஓரங்களிலும் இவை காணப்படும். ஆதி3த்ய பவனத்தில், மலைகளில், சாயங்கால சந்த்யா வண்ணங்களில். பாஞ்சால வனம் எனும் இடத்தில் சஞ்சரிக்கும் வானரங்கள், பெருத்த உடலை உடையவை. யானை போல தேகமும் கறுத்த மேகம் போலவும் தெரிவார்கள். இவை அஞ்சன மலையில் இருப்பவை. மகா சைல எனும் மலைகளின் குகைகளில் வசிப்பவை பொன் நிறமானவை. மேரு மலையருகில் இருப்பவை புகை மூட்டம் போல காணப்படுவர். மகா மலையில் உள்ளவர்களும் இளம் சூரியனின் வண்ணத்தில் காணப்படுவர். இந்த வானரங்கள் நல்ல வேகம் உடையவை. மைரேயம் எனும் மதுவை அருந்துபவர்கள். அழகிய வனங்களில், பெரிய காடுகளிலும், நல்ல வாசனை வீசும் மரங்கள் உள்ள இடங்களிலும் உள்ள வானரங்களை அழைத்து வா. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் வானரங்கள் இங்கு வந்து சேர வேண்டும். சாம தானம் முதலிய வழிகளை பின் பற்றி இவை யாவும் எந்த வித தடங்கலும் இல்லாமல், மறுப்பு சொல்லாமலும் வந்து சேரும்படி செய். வேகமாக செல்லக் கூடிய பல தூதர்களை நான் முன்பே அனுப்பி இருக்கிறேன். அவர்களையும் துரிதப் படுத்த உங்களையும் அனுப்புகிறேன். எந்த வானரங்கள் மிகவும் தாமதமாக செயல் படுகின்றனவோ, எவை காம மோகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனவோ, அவைகளை என்னிடம் கொண்டு வரவும். நான் தண்டனை கொடுப்பேன். பத்து நாட்களுக்குள் யார், யார் என் கட்டளைப் படி என்னைக் காண வந்து சேரவில்லையோ, அவர்கள் ராஜ கட்டளையை மீறிய குற்றத்திற்காக, தலை சீவப் படுவார்கள். என் கட்டளைப் படி நூறு, நூறாயிரம், கோடிக் கணக்கான வானரங்கள் புறப்படுங்கள். திசைகளை நோக்கிச் செல்லுங்கள். என் கட்டளையை செயல் படுத்தும் விதமாக பல திக்குகளிலும் செல்லுங்கள். வானர சிங்கங்களே, ஆகாயத்தை மேகம் மறைப்பது போல, நீங்களும் ஆகாயத்தை மறைத்துக் கொண்டு பெரும் அளவில் புறப்படுங்கள். என் கட்டளை. சிறந்த வானர வீரர்கள், பயங்கரமான தோற்றம் உடையவர்கள், கிளம்புங்கள். வழியை அறிந்து செல்லக் கூடியவர்கள், உலகம் முழுவதும் சுற்றி, தென் பட்ட வானர வீரர்கள் அனைவரையும் திரட்டி அழைத்து வாருங்கள். வாயு சுதனான ஹனுமானும், இதை உடனே செயல் படுத்த முனைந்தான். பல திக்குகளுக்கும், தேர்ந்த வானரர்களை அனுப்பலானான். அந்த வானரங்கள் அந்த க்ஷணமே, விஷ்ணு பாதம் போல (வாமனாவதாரத்தில் விஷ்ணு காலால், மூன்று அடியில் அண்ட சராசரங்களில் பரவியது போல) ஒளி பரப்பியபடி வழியைத் தேடிக் கொண்டு சென்றார்கள். ராம காரியமாக, சமுத்திரங்களிலும், மலைகளிலும், வனங்களிலும், குட்டைகளிலும் இருந்த வானரங்கள் அனைவரையும் தூண்டிக் கிளம்பச் செய்தனர். கபி ராஜனுடைய கட்டளை, ம்ருத்யு தண்டம் போன்றது. அதை மீற யாருக்கும் தைரியமில்லை. சுக்ரீவனிடம் கொண்ட பயத்தினால் அவை புறப்பட்டு வந்தன. அந்த மலையிலிருந்து கரு மை (கண் மை) போன்ற கரு நிறத்து வானரங்கள், கரு வண்ண மலை உருக் கொண்டது போல தோற்றத்துடன் ராகவன் இருக்கும் இடம் செல்ல புறப்பட்டனர். கோடிக் கணக்கான வானர வீரர்கள் அன்றே சூரியன் அஸ்தமித்த சமயம் ராகவன் இருந்த மலையை அடைந்து விட்டனர். கைலாஸ சிகரத்திலிருந்தும், சிம்மம் புலி போல பலம் கொண்ட ஆயிரம் கோடி வானர வீரர்களின் கூட்டம் வந்து சேர்ந்தது. ஹிமய மலையில் பழங்களையும், காய் கிழங்குகளையும் சாப்பிட்டு வளர்ந்தவை இவை. அனல் போல சிவந்த நிறம் கொண்ட வானரங்கள் குதித்து வேகமாக வந்து சேர்ந்தன. இவை விந்த்ய மலையிலிருந்து வந்தவை. ஆயிரம் கோடிக்கு மேல் குதித்து வேகமாக வந்து சேர்ந்தன. தமால வனத்தில் வசிப்பவை பாற்கடலின் அலை போல, தேங்காயையே சாப்பிட்டு வளர்ந்தவை, கணக்கில்லாமல் வந்து சேர்ந்தன. குகைகளில், காடுகளில், பள்ளத் தாக்குகளில் வசித்த வானரங்கள் சேனை, சூரியனையே மறைத்துக் கொண்டு வந்து சேர்ந்தன. இந்த வானரங்களை விரைவாக செல்ல பணித்தபடி சென்ற வானரங்கள், இமய மலையில் அந்த பெரிய மரத்தைக் கண்டனர். அந்த மலைச் சாரலில் தான் முன்பொரு சமயம் மகேஸ்வரன் யாகம் செய்தார். உலகில் அனைவருக்கும் மன சந்துஷ்டியும் அளித்தபடி மனோகரமாக, திவ்யமாக விளங்கினார். இந்த வானரங்கள், அந்த யாக சாலையில் அன்னம் சிதறியதால் விளைந்த பழம், காய் கிழங்குகள், அம்ருதம் போன்ற சுவையுடன் இருப்பதைக் கண்டு வியந்தார்கள். இந்த பழ வகைகளை உண்பவர், ஒரு மாத காலம் திருப்தியாக பசியின்றி இருப்பர். இந்த பழங்களையும், காய் கிழங்குகளையும் வானர வீரர்கள் சேகரித்துக் கோண்டனர். யாகம் நடந்த இடத்திலிருந்து, மணம் மிகுந்த மலர்களையும் பறித்து சேகரித்துக் கொண்டனர். இவைகளை சுக்ரீவனுக்கு கொடுக்க வேண்டும், அவன் சந்தோஷப் படுவான் என்று எண்ணி சேகரித்துக் கொண்டன. இந்த வானரங்கள், உலகின் மூலை முடுக்குகளிலிருந்து வீரர்களைத் திரட்டி, தாங்கள் முன் நின்று நடத்திச் சென்றன. முஹுர்த்த நேரத்தில் வேக வேகமாக நடந்து இவை சுக்ரீவன் இருக்கும் இடம் வந்து சேர்ந்தன. தாங்கள் கொண்டு வந்த பழங்கள், காய் கிழங்குகளை புஷ்பங்கள் இவற்றை சுக்ரீவனுக்கு கொடுத்தன. காடுகளிலும், மலைகளிலும், நதிக் கரைகளிலும் உலகில் வானர ஜாதி இருக்கும் இடம் எல்லாம் சென்று இவர்களை திரட்டி அழைத்து வந்து விட்டோம். உங்கள் கட்டளைப்படி, மேலும் பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு மகிழ்ந்து, சுக்ரீவன், அவர்கள் கொண்டு வந்த அன்பளிப்பையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், கபி சேனா சமானயனம் என்ற முப்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 38 (309) ராம சமீப க3மனம் (ராமன் அருகில் செல்லுதல்)
சுக்ரீவன், அவர்கள் தந்த அன்பளிப்புகளை ஏற்றுக் கொண்டு உபசாரமாக பேசி அவர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் சென்றபின், தன் காரியம் ஆன திருப்தி மனதில் நிறைந்தது. மகா பலசாலியான ராமனும், இந்த வானரங்களின் வருகையால் நம்பிக்கை கொள்வான் என்று நினைத்துக் கொண்டான். இந்த கணக்கில்லாத வானர கூட்டத்தைப் பார்த்து, லக்ஷ்மணனும் மன நிறைவோடு சுக்ரீவனை விசாரித்தான். சுக்ரீவா, வா, கிஷ்கிந்தையை விட்டுக் கிளம்புவோம் என, சுக்ரீவனும் உடனே கிளம்பினான். இனி உன் கட்டளைப் படி நான் நடக்க சித்தமாக இருக்கிறேன் என்று லக்ஷ்மணனைப் பார்த்து சொல்லியபடி, ஸ்த்ரீ ஜனங்களை, தாரா முதலானவர்களை அனுப்பி விட்டு, முழு மூச்சுடன் செயலில் இறங்கினான். வாருங்கள், வாருங்கள், என்றும், கிளம்புங்கள் என்றும் குரல் கொடுத்து அந்த வீரர்களையும் அழைத்துக் கொண்டு பயணமானான். கை கூப்பியபடி ஸ்த்ரீ ஜனங்களும் கூச்சமின்றி பார்க்கத் தகுந்த விதமாக தங்களளவில் கௌரவமாக உடை உடுத்தியபடி, வந்து நின்றவர்களைப் பார்த்து சூரியனுக்கு சமமான காந்தியையுடைய சுக்ரீவ ராஜா கட்டளையிட்டான். வானரர்களே, என் பல்லக்கை தயார் செய்யுங்கள். அவர்களும் அவ்வாறே செய்தனர். சுக்ரீவனும், லக்ஷ்மணா, ஏறிக் கொள் என்று சொல்லி, அந்த காஞ்சனமான வாகனத்தில் கிளம்பினான். வெண் குடையை மேல் தாங்கி பெரும் வானரங்கள் தூக்க கிளம்பினார்கள். சாமரங்கள், வெண் கொற்றக் குடை சகிதம், சங்கம் பேரி, முதலியவை முழங்க புறப்பட்டனர். முன்னால் துதி பாடகர்கள் சென்றனர். உத்தமமான ராஜ்ய லக்ஷ்மியை அடைந்த சுக்ரீவன் (முதல் முறையாக) அரச மரியாதைகளுடன் கிளம்பினான். நூறு வானரங்கள், கூர்மையான ஆயுதங்களோடு முன்னும் பின்னும் பாதுகாக்கச் சென்றான். ராமர் இருக்கும் இடம் வந்ததும், லக்ஷ்மணனுடன் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி, கை கூப்பி வணங்கியபடி அவர் அருகில் சென்று பேசாமல் நின்றான். தாமரை மொட்டுகள் போல கூப்பிய கரங்களுடன், அசையாது நிற்கும் தாமரை தடாகம் போல நின்ற சுக்ரீவனை ராமர் பார்த்தார். உடன் வந்த வானர சைன்யத்தையும் பார்த்தார். காலில் வந்து விழுந்த சுக்ரீவனைத் தூக்கி நிறுத்தி அன்புடன் அணைத்துக் கொண்டார். உட்கார், என்று சொன்னார். பூமியில் அமர்ந்த சுக்ரீவனைப் பார்த்து, விசாரித்தார். சுக்ரீவா, காலம், தேசம் இவற்றை அறிந்து தர்மார்த்தங்களை செய்கிறாயா? தன் செயல்களை ஒழுங்காக திட்டமிட்டுக் கொண்டு எதையும் விடாமல் செய்பவன் தான் சிறந்த அரசன். தர்மத்தையும் அர்த்தத்தையும் விட்டு, காமமே பெரிதென்று வாழ்பவன், மரத்தின் நுனியில் தூங்கியவன் ஆவான். விழுந்தபின் விழித்துக் கொள்வான். தனக்கு நண்பர்கள் அல்லாத எதிரிகளை அழித்தும், உற்றாரான நண்பர்களை அரவணைத்தும் மேலும் நண்பர்களை பெருக்கிக் கொள்வதில் கவனமாகவும் இருக்க வேண்டும். மூன்று விதமான தர்மார்த்த காமங்களை அனுபவிக்க வேண்டியவனே அரசன். ஆனாலும் தர்மம் தான் முதலில் பேசப் படுகிறது. ராஜனுடைய முதல் கடமை தர்மத்தை ரக்ஷிப்பதே ஆகும். சத்ரு வினாசனா, இது நாம் செயல் பட வேண்டிய சமயம். நம் முயற்சிகளை ஒரு முனைப் படுத்தி செயல்களை ஆரம்பிப்போம். உன் மந்திரிகளுடன் கலந்து யோசி. ராமர் இவ்வாறு சொல்லவும் சுக்ரீவன் பதில் சொன்னான். மஹாபாஹோ, என் செல்வம், கீர்த்தி, சாஸ்வதமான கபி ராஜ்யம் இவை அனைத்தும் தொலைந்து போய் இருந்தன. உங்கள் தயவால் திரும்ப இவைகள் கிடைக்கப் பெற்றேன். நீங்களும், உங்கள் சகோதரனும் எனக்கு செய்துள்ள உதவி மிகப் பெரியது. இதற்கு பதில் உபகாரம் செய்யாமல் இருப்பது அபராதம். குற்றமே ஆகும். நூற்றுக் கணக்கான இந்த வானர வீரர்கள் வந்து சேர்ந்திருக்கின்றனர். உலகில் பல சாலியான வானர வீரர்களை சேகரித்து அழைத்து வந்திருக்கின்றனர். கரடிகளும், கோ லாங்கூலங்களும் வந்துள்ளனர். அந்தந்த காடு, வனம், குகை, கோட்டை இவைகளின் அடையாளமாக, பயங்கரமான உருவத்துடன் வந்திருக்கிறார்கள். தேவ கந்தர்வ புத்திரர்கள், இந்த வானரங்கள். விருப்பம் போல உருவம் எடுக்கக் கூடியவை. தங்கள் சைன்யம் புடை சூழ வந்து விட்டனர். நூற்றுக் கணக்கான, நூறாயிரம் குழுக்களாக, கோடிக் கணக்கான வானரங்கள், இருபதாயிரம் கொண்ட அணிகளாக சங்கம் (எண்ணிக்கை) பேர்களும் அணிகளாக, அர்புத சதம் (நூறு கோடி) வீரர்களாக, முன்னும் பின்னுமாக வானர வீரர்கள், சமுத்திர கரைகளிலிருந்தும், உலகின் மூலை முடுக்குகளிலிருந்தும் வந்து சேருவார்கள். இவர்கள் எல்லோருமே, நல்ல விக்ரமம் உடையவர்கள். ஒவ்வொருவரும் ஒரு இந்திரனுக்கு சமமானவர்கள். விந்த்ய, மேரு மலைவாசிகள் இவர்கள். அந்த மலைகள் போன்ற தோற்றம் உடையவர்கள். இவர்கள் உன்னிடம் வந்து சேர்ந்து, ராக்ஷஸனான ராவணனை அழித்து மைதிலியைக் கொண்டு வந்து விடுவார்கள். ஹரி ராஜன், (வானர ராஜன்) கட்டளைக்கு பணிந்து பெருமளவில் கூடியிருந்த வானரர்களையும், அவர்களை திரட்டி, அணி வகுத்து வரச் செய்திருந்த சுக்ரீவனின் செயலையும் பாராட்டிப் பேசிய ராகவன், மகிழ்ச்சியில் மலர்ந்த கண்களுடன் மலர்ந்த நீலோத்பலம் போல விளங்கினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ராம சமீப க3மனம் என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 39(310) சேனா நிவேச: (சேனையை தயார் செய்தல்)
கை கூப்பியபடி பணிவாக சுக்ரீவன் சொன்னதைக் கேட்டு ராமர், அந்த கைகளுடன் சேர்த்து அவனை அணைத்துக் கொண்டார். இந்திரன் மழை பொழிகிறான் என்றால் உலகில் அது ஒரு அதிசயமே இல்லை. ஆதித்யன் ஆயிரம் கிரணங்களோடு திசைகளை ஒளி மயமாக ஆக்குவதும் புதிதில்லை. சந்திரன் தன் சௌம்யமான கிரணங்களால் பூமியில் விமலமான காந்தியை பரவச் செய்வதும் அதிசயமல்ல. அதே போல உன் போன்றோரும் நண்பனுக்கு பிரதி உதவி செய்வதும் புதிதல்ல. சௌம்யனே சுக்ரீவா, நான் உன்னை அறிவேன். நீ எப்பொழுதும் பிரியமாக பேசுபவன். இந்த இயற்கையின் நியதிகள் போல குண நலன்கள் உனக்கும் இருக்கின்றன. நீ எனக்கு சகாயமாக வருவதால், நான் இப்பொழுதே எல்லா எதிரிகளையும் வென்று விட்டதாகவே நினைக்கிறேன். நீ என் நண்பனாக, எனக்கு உதவி செய்யவும் தகுதி வாய்ந்தவனே. இந்த ராக்ஷஸாத4மன், தன் வினாசத்திற்காகவே மைதிலியை கடத்திச் சென்றிருக்கிறான். பௌலோமியை வஞ்சித்து, அனுஹ்லாதன் சசியை கடத்திச் சென்றது போல. சீக்கிரமே அந்த ராவணனை கூர்மையான என் பாணங்களால் அடிப்பேன். பௌலோமியின் தந்தை கர்வத்துடன் நின்றவனை, இந்திரன் அடித்தது போல அடிப்பேன். இதற்குள் புழுதிப் படலம் எழுந்தது. ஆகாயத்தை மறைத்துக் கொண்டு உஷ்ணமான, கடுமையான சூரியனையும் மறைத்துக் கொண்டு, இந்த புழுதிப் படலம் எழுந்தது. இந்த புழுதியில் திசைகளே கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தன. மலைகளும் காடுகளும் கொண்ட பூமி நடுங்கியது. பின், மலையரசன் போன்ற உருவமும், கூரிய பற்களையுமுடைய எண்ணற்ற வானரங்களால் பூமியே கண்ணுக்குத் தெரியாதபடி அந்த இடம் நிறைந்தது. கண் மூடி திறக்கும் நேரத்தில் அந்த இடம் கோடிக் கணக்கான வானர பரிவாரங்களால், அவர்கள் தலைவர்களின் கட்டளைக் கிணங்கி நிறைக்கப் பெற்றது. இந்த வனத்தில் சஞ்சரிக்கும் வானரங்களின் கூக்குரலும் விதம் விதமாக ஒலித்தது. மலை வாசிகளின் குரல் ஒருபுறம், சமுத்திர கரைகளில் வசிப்பவர்கள் குரல் ஒரு புறம், மேகம் போல கர்ஜிக்கும் சில குரல்கள் மற்றும் பல, இணைந்து ஒலித்தன. ஒரு சில இளம் சூரியனின் நிறம் என்றால், மற்றும் சில முயல் வண்ணத்தில் வெண்மையாக காட்சி தந்தது. சில தாமரையின் மகரந்த நிறமான மஞ்சள் நிறத்துடன், மற்றும் சில மேரு மலை வாசிகள், கைலாச மலையின் வெண்மை நிறத்துடன் காணப் பட்டன. ஆயிரம் கோடி வானரங்களில் நடுவில் சதபலி என்ற வானரன் இருந்தான். தாரையின் தந்தையான வானர வீரன், பொன் மலை வந்து நிற்பது போல நின்றான். பல நூறு கோடி வானரர்கள் சேனை அவனுடன் வந்திருந்தது. ருமையின் தந்தை, சுக்ரீவனின் மாமனார், தாமரையின் மகரந்தம் போன்ற மஞ்சள் வர்ணத்தினார். நல்ல வீரர். இவரும் கோடிக் கணக்கான வீரர்கள் சூழ நின்றார். இவர் நல்ல புத்திமானும் கூட. பல அணிகள் கொண்ட பெரும் வானர படையுடன், ஹனுமானின் தந்தை கேஸரி வந்து சேர்ந்தார். கோ3லாங்கூல இனத்தவரின் ராஜா க3வாக்ஷன், பீம பலம் கொண்டவன். ஆயிரம் கோடி வானர வீரர்கள் சூழ, வந்து சேர்ந்தார். தூ3ம்ரன் என்ற கரடி ராஜன், இரண்டாயிரம் கோடி வீரர்களுடன் காணப் பட்டார். பனஸன் என்ற வானரத் தலைவன், மகாசலம், பெரிய மலை போன்ற பெருத்த வானரங்களின் படையுடன் மூன்று கோடி வீரர்களின் அணிவகுப்புடன் வந்து சேர்ந்தான். நீலன் என்ற வானர படைத் தலைவன், நீலாஞ்சனம் கரு மை போன்ற கரு நிற வானரப் படையுடன் வந்து சேர்ந்தான். பத்து கோடி வீரர்கள் அவனுடன் இருந்தனர். பொன் மலை போன்ற உருவத்துடன், க3வயன் என்ற படைத் தலைவன் ஐந்து கோடி வீரர்களுடன் வந்தான். த4ரீ முகன் என்ற படைத்தலைவனும், கணக்கில்லாத ஆயிரம் கோடி வீரர்களுடன் சுக்ரீவன் சமீபமாக வந்து நின்றான். அஸ்வினி புத்திரர்களான மைந்த3னும், த்3விவித3னும் ஆயிரம் கோடி, கோடி வானர வீரர்களுடன் வந்து சேர்ந்தனர். க3ஜன் என்ற பல சாலியான வானரம், மூன்று கோடி வீரர்களுடன் வந்தான். மேலும் பத்து கோடி வீரர்களும் வர சுக்ரீவனிடம் வந்து நின்றான். அவன் கட்டளைக்கு காத்திருந்தான். ருமன்வான் என்ற வானர வீரன், இவனும் நூறு கோடி வீரர்கள் சூழ வந்து நின்றான். க3ந்த4மாத3னன் தொடர்ந்து பின்னாலேயே வந்தது போல அங்கு வந்து சேர்ந்தான். இவனுடன் வந்த வீரர்களும், ஆயிரம் கோடி, நூறாயிரம் என்று ஆகும். இதன் பின் தந்தைக்கு சமமான பலம் கொண்ட அங்கதன் தன் வீரர்களுடன் வந்து சேர்ந்தான். இவன் படை வீரர்களின் எண்ணிக்கை, பத்ம சதம், சங்க சதம் என்பவை ஆகும். இதன் பின் தாரன் வந்தான். வெகு தூரத்திலிருந்தே, ஆகாயத்தில் கண் சிமிட்டும் தாரையைப் போல (நக்ஷத்திரம்) போல கண்ணுக்குத் தென்பட்டான். ஐந்து கோடி வானர வீரர்களுடன் வந்து கொண்டிருந்தான். இந்திர ஜானு என்ற வானர படைத் தலைவன், பதினோரு கோடி வீரர்களோடு மறு புறம் வந்து கொண்டிருந்ததும் தென் பட்டது. ரம்பன் என்ற வானர வீரன், இளம் சூரியன் போன்ற பிரகாசத்துடன், பத்தாயிரம் வீரர்கள் புடை சூழ., மேலும் ஆயிரம், நூறாயிரம், என்று அணி வகுத்து பின் தொடர வந்தான். பின் துர்முகன் என்ற வானர சேனாபதி, இரண்டு கோடி வீரர்களுடன் வந்தான். ஹனுமானும், கைலாஸ மலை போன்ற உருவம் கொண்ட பலசாலிகளான ஆயிரம் கோடி வானர வீரர்களை அழைத்து வருவது தெரிந்தது. நளன் வந்தான். கிளைக்கு கிளை தாவும் வானரங்கள், கோடிக் கணக்காக பின் தொடர வந்தான். சுக்ரீவனுடைய அபிமானத்துக்கு பாத்திரமான த3தி4முகன், பத்து கோடி வீரர்களுடன் வந்து கொண்டிருந்தான். சரப4ன், குமுதன், வஹ்னி வீரன், ரம்ஹன் என்பவன், மற்றும் பல வானர வீரர்கள், பர்வதங்களையும், வனங்களையும் கடந்து வந்து சேர்ந்தனர். வந்து சேர்ந்த படைத் தலைவர்களின் எண்ணிக்கையே கணக்கில் அடங்காமல் இருந்தது. வந்தவர்கள் பூமியில் அமர்ந்தனர். சிலர் மரங்களில் தாவியும், சப்தமிட்டுக் கொண்டும், மரங்களிலேயே இருந்தனர். சூரியனைச் சுற்றி மேக கணங்கள் நிற்பது போல சுக்ரீவனைச் சுற்றி இவர்கள் நின்றனர். மகிழ்ச்சி நிறைந்த குரலில் தங்களுக்குள் பேசிக் கொள்வதும் ஆரவாரமாக கேட்டது. சிலர் வணங்கியபடி, சிலர் அருகில் வந்து விசாரித்து தங்கள் வருகையை தெரிவித்தனர். சுக்ரீவனும் உடனுக்குடன் அவர்களை ராமனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தான். இதோ, வானர வீரகள் வந்து விட்டார்கள். அவர்களை சௌகர்யமாக இருக்கும்படி, அவர்கள் வசதிக்கேற்ப, மலைச் சாரல்களில், வனங்களில் தங்கச் செய்து விட்டு, மொத்த படை பலத்தை கணக்கிட்டு, அவர்களை தயார் செய்து விட்டு வருகிறேன் என்று கிளம்பினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சேனா நிவேசோ என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 40 (311) ப்ராசீ ப்ரேஷணம் (கிழக்கில் தேட அனுப்புதல்)
எதிரி பலத்தை எடை போடுவதில் சமர்த்தனான ராமனிடம் வந்து சுக்ரீவன், வானர வீரர்கள் வந்து விட்டார்கள். அணி வகுத்து அவர்களை வசதிக் கேற்ப தங்கவும் ஏற்பாடுகள் செய்து விட்டேன். இவர்கள் அனைவருமே பலசாலிகள். விருப்பம் போல உருவம் எடுக்க வல்லவர்கள். என் ஆணயை சிரமேற் கொண்டு செய்யக் கூடியவர்கள். பல வானர வீரர்கள், தை3த்ய தா3னவர்களுக்கு சமமான பலம் கொண்டவர்கள். எளிதில் களைப்படைய மாட்டார்கள். உற்சாகத்துடன், உழைக்கத் தயங்காதவர்கள். ஒவ்வொருவரும் அரிய பல செயல்களைச் செய்து புகழ் பெற்றவர்கள். பட்டங்கள் பெற்றவர். ஆற்றலுக்கு பெயர் போனவர்கள். பூமியிலும், நீரிலும் சஞ்சரிக்கக் கூடியவர்கள். பல விதமான மலைகளில் வசிப்பவர். கோடிக் கணக்கில் இவர்கள் வந்து விட்டார்கள். ராமா, இனி இவர்கள் உனக்கு கிங்கரர்கள். உன் சொல்லைக் கேட்டு அதன் படி நடப்பவர்கள். இவர்கள் போர் வீரர்களுக்கு உரிய முக்கியமான குணம், கட்டளையை புரிந்து கொண்டு நடக்கும் வீரர்கள். தங்கள் தலைவனின் நலனையே பெரிதாக நினைப்பவர்கள். உன் எண்ணத்தை புரிந்து கொண்டு செயல் படுவார்கள். சரியான சமயத்தில் வந்து விட்ட இந்த வீரர்கள் பல விதமான சாகஸம் உடையவர்கள், இவர்களிடம் என்ன செய்யலாம் என்பதை விவரமாகச் சொல். இந்த சைன்யம் இனி உன் சைன்யம். உன் ஆணைக்குட்பட்டது. எது உனக்கு சரியென்று தோன்றுகிறதோ, அது போல கட்டளையிட்டு நடத்திச் செல்வாயாக. சுக்ரீவன் இப்படிச் சொல்லவும் ராமர் சொன்னார். முதலில் சீதை உயிருடன் இருக்கிறாளா, இல்லையா என்பதைக் கண்டு பிடிப்போம். ராவணன் வசிக்கும் தேசத்தையும் கண்டு பிடிப்போம். ராவணனின் இருப்பிடத்தையும், வைதேஹியின் நிலையையும் தெரிந்து கொண்ட பின், சமயம் வரும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறேன். இந்த செயலை என்னால் செய்ய முடியாது. லக்ஷ்மணனாலும் செய்ய முடியாது. வானர ராஜனே, உன்னால் தான் முடியும். உன் படை வீரர்களால் தான் இதை சாதிக்க முடியும். அதனால் நீயே, அவர்களுக்கு ஆணையிடு. தலைவன் நீ. நீயே எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று விவரமாக இவர்களுக்குச் சொல்லி அனுப்பு. என்றார். நீ என் நண்பன். அறிவுடையவன். கால தேசங்களை அனுசரித்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து கட்டளையிடு. இதைக் கேட்டு, வினதன் என்ற படைத் தலைவனை அழைத்து சுக்ரீவன், ராம லக்ஷ்மணர்களின் எதிரிலேயே, கைலாஸ பர்வதம் போல இருந்த அந்த பெரிய வானரத்திடம் விளக்கிச் சொல்லலானான். சூரியசந்திர புத்திரர்கள் போன்ற வானர வீரர்களுடன் செல்வாய். இவர்கள் தேச, கால அறிவு மிக்கவர்கள். செய்ய வேண்டியவைகள், செய்யக் கூடாததை அறிந்தவர்கள். இப்படிப் பட்ட வேகமாக செல்லக் கூடிய நூறாயிரம் வானரங்களை அழைத்துக் கொண்டு கிழக்கு திசையில் செல். (இங்கு சுக்ரீவன் கிழக்கு என்றது, விந்த்ய மலைக்கும், ஹிமய மலைக்கும் நடுவில் இருந்த ஆர்யாவர்த்தம் என்கிறார் உரையாசிரியர்) பல மலைகளும், வனங்களும், காடுகளும் நிறைந்து இருக்கும். அங்கு மலை சிகரங்களிலும், வனங்களிலும், நதிக் கரைகளிலும், ராவணன் இருப்பிடத்தை தேடுங்கள். சீதை இருக்கிறாளா என்று தேடுங்கள். பாகீரதி நதியை அடுத்து சரயூ, கௌசிகி நதிகளை கடந்து செல்லுங்கள். காலிந்தீ, யமுனை நதிகளை யாமுனம் என்ற மலைப் பகுதிகளை, சரஸ்வதி நதியை, சிந்து சோனா நதி, இந்த நதியின் ஜலம் மணி போல தெளிவாக இருக்கும், கால மஹீ என்ற பூமியை அடுத்து வரும் மலைகளை, காடுகளைக் கடந்து செல்லுங்கள். ப்ரும்ம மாலா, விதேஹ, மாலவான், காசி, கோஸல தேசங்கள், மகதம், மகா க்ராமங்கள், புண்டிர, வங்க தேசங்கள், கோசக் காரர்களின் பட்டினம், வெள்ளி போன்ற பூமியை உடைய இடங்கள் இங்கெல்லாம், தேடிக் கொண்டே செல்லுங்கள். ராமருடைய பிரிய மனைவியை, தசரதனுடைய மருமகளைத் தேடுங்கள். சமுத்திரத்தில் மூழ்கித் தேடுங்கள். மந்தர மலையின் கோடி வரை வசிக்கும் ஜனங்களிடம் விசாரியுங்கள். கர்ணப்ராவரணா:, என்றும், உஷ்டகர்ணகா: என்றும் யவனர்கள் தென்படுவார்கள். ஒரு பாதம் உடையவர்கள். இரும்பு போன்ற முகமும், கோரமான முகமும் கொண்டவர்கள். அழிவில்லாத பலம், மனிதனையே அடித்து தின்னும் ஜாதியினர். அடுத்து வரும் பிரதேசங்களில் வேடர்கள், தீக்ஷ்ணமான தலையலங்காரத்துடன், பொன் வண்ணத்தினராக, கண்டவுடன் நட்பு கொள்ளும் படியான அன்பு நிறைந்த தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள், ஆமை, மீன் இவற்றை சாப்பிடும் வேடர்கள். தீவில் வசிப்பவர்கள். நீருக்கடியிலும் சஞ்சரிக்கக்கூடியவர்கள். இவர்களை நரவ்யாக்ரர்கள் என்றும் அழைப்பர். இவர்கள் வீடுகளையும் அலசித் தேடுங்கள்.
இந்த மலைகளில் தாவிக் குதித்துச் செல்லுங்கள். ஏழு ராஜ்யங்கள் ஒன்று சேர்ந்து, யவத்வீபம் என்ற மலை நாடு. உயர்ந்த மலைச் சிகரங்கள் ஒன்று சேர்ந்து ஆகாயத்தையே தொட்டு விடும் போல நிற்கும். தேவ தானவர்கள் இங்கு வசிக்கிறார்கள். இந்த மலை உச்சியில், அருவிகளில், வனங்களில், ராம பத்னியைத் தேடுங்கள். இதன் பின், சிவந்த ஜலத்துடன், ஆழமான சோனா நதி, வேகமாக பிரவகித்துக் கொண்டு செல்லும். இந்த வழியே சென்று, சமுத்திரத்தைக் கடந்து, சித்த சாரணர்கள் வசிக்கும் இந்த சமுத்திரக் கரையில், தீர்த்தங்களிலும், அழகிய விசித்திரமான வனங்களிலும், ராவணன், வைதேஹி இருவரையும் தேடுங்கள். இதே மலையிலிருந்து உற்பத்தியாகி பிரவகிக்கும் மற்ற நதிகளும் இதே போல ரம்யமாக நீர் நிறைந்த அருவிகளும், சமவெளிகளுமாகத் தென்படும். இவைகளும் சமுத்திரத்தை அடையும் இடத்தில் பெரிய பெரிய தீவுகள் காணப் படும். இங்கும் தேடுங்கள். இந்த தீவுகளில் உள்ள ராக்ஷஸர்கள், நிழலைப் பிடித்து இழுப்பார்கள். இந்த சமுத்திரம், ரௌத்ரமான அலைகளுடன், ஆரவாரிக்கும் நீரின் ஓசையுடனும், பெருத்த உருவமுடைய ராக்ஷஸர்களுமாக காணப் படும். வெகு காலம் பசியுடன் காத்திருந்தவர்களுக்கு ப்ரும்மா, அனுமதி அளிக்கவும், நிழலைக் கொண்டே, அந்த நிழலுக்கு உரிய ஜந்துவை இழுத்து சாப்பிடுவார்கள். கருமேகம் போன்ற அந்த கடலில், பெரிய பெரிய நாகங்களும் வசிக்கும். லோஹிதம் என்ற இந்த சாகரத்தின் ஜலம் ரத்த சிவப்பாக இருக்கும், இந்த கடலும் ஆரவாரமாக, அலை ஓசையுடன் விரிந்து பரந்து கிடப்பதைக் காண்பீர்கள். இதன் பிறகு, வைனதேயனுடைய வீட்டைக் கண்பீர்கள், ரத்னங்கள், மணிகள் நிறைந்து, பசுமையான தோட்டத்தின் நடுவில் பெரிய வீடு. விஸ்வகர்மா கட்டியது. இங்குள்ள ராக்ஷஸர்கள், மந்தேஹா எனப்படுவர். பெரும் மலை போன்ற பயங்கரமான தோற்றத்துடன் இருப்பர். மலைச் சிகரங்களில் தொங்கிக் கொண்டிருப்பர். தங்கள் இஷ்டம் போல சஞ்சரித்துக் கொண்டும், சூரியோதய சமயம் இவர்கள் ஜலத்தில் குதிப்பார்கள். ராக்ஷஸர்களான இவர்கள் தினமும் ப்ரும்ம தேஜஸால், சூரியனுடைய கிரணங்களால் அடிபட்டு, சிவந்து காணப் படுவார்கள். ஆயினும் திரும்பத் தொங்குவார்கள். இதன் பின் க்ஷீரோத3ம் என்ற சாகரத்தைக் காண்பீர்கள். வெண் மேகம் போன்று பரவிக் கிடக்கும் இந்த கடல் பூமிக்கு முத்து மாலை அணிவித்தது போல இருக்கும். இதன் நடுவில் மகாஸ்வேதோ ரிஷபம், அதி வெண்மையான ரிஷபம், என்ற ஒரு பர்வதம், மலர்ந்து மணம் வீசும் திவ்ய மலர்களாலும், வெள்ளியால் நிறைந்த மலைகளும் சூழ இருக்கும். வெண் தாமரை மலர்கள் நிறைந்த குளங்கள், பொன் மயமான கேஸரங்கள், மகரந்த பொடி நிறைந்தவை, சுதர்ஸனம் என்ற பெயர் கொண்ட ஹம்ஸங்கள் நிறைந்து காணப்படும். பலவிதமான சாரணர்கள், யக்ஷ, கின்னரர்கள், அப்சரோ கணங்கள், மகிழ்ச்சியுடன் இங்கு வந்து கூடுவர். இந்த நளினியை (தாமரைத் தண்டு) வேண்டி அடிக்கடி வருவார்கள். இந்த க்ஷீரோதத்தைக் கடந்து வானரங்களே மேலும் செல்லுங்கள், ஜலோதம் என்ற ஸ்ரேஷ்டமான பர்வதத்தைக் காண்பீர்கள். பயங்கரமான நீர் வாழ் ஜந்துக்கள் நிறைந்தது. அல்லது பார்க்கும் யாவருமே பயப்படுவர். இங்கு தான் அந்த கோபத்தில் பிறந்த ஹயமுகன் (குதிரை முகம் கொண்டவன்) இருந்தான். அவனுடைய முகத்திலிருந்து வெளிப்பட்ட ஓதனம் (அன்னம்), இந்த இடத்தில் வேகமாக சராசரங்களில் பரவியது. நீர் வாழ் ஜந்துக்கள், அச்சமயம் அலறின. வடவாமுகம் என்ற இது பற்றி அறிந்தவர்கள் சொல்லிக் கேட்டது தான். உதயாசலத்திற்கு பதின் மூன்று யோஜனை தூரத்தில் ஜாத ரூப சிலம் என்ற கனக பர்வதம், அதில் சந்திரனைப் போன்ற ஒளியுடைய பன்னகம் (நாகம்) பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும். பத்ம பத்ரம் போன்ற விசாலமான கண்களுடன் கூடிய அதை, வானரங்களே, காண்பீர்கள். மலையுச்சியில் அமர்ந்திருக்கும், உலகில் ஜீவ ராசிகள் அனைத்தும் வணங்கும் பெருமையுடைய அனந்தனை, தேவனைக் காண்பீர்கள். மூன்று தலைகளுடன், காஞ்சனமான த்வஜஸ்தம்பமும், வேதிகம் எனும் யாக சாலையும் அருகில் இருக்கக் காண்பீர்கள். தேவர்கள் தலைவன் இந்திரன், மலையுச்சியில் பிரகாசமாக, கிழக்கு திசையில் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறான். இதற்கு அப்பால் ஸ்ரீமானான உதயாசலம், பொன் மயமாக இருக்கக் காண்பீர்கள். இந்த மலையும் பல யோஜனை தூரம் அடர்ந்து, பொன் மயமான சிகரங்களுடன், ஆங்காங்கு யாக சாலைகளுடன் இருக்கும். பூக்கள் நிறைந்த சால, தமால, தாள மரங்கள், கர்ணிகார மரங்கள், சூரியனுக்கு இணையான ஜாதரூபம் எனும் பொன் வர்ணத்தில் மின்னுவதைக் காணலாம். இதன் சிகரம், சௌமனஸம் என்று பெயர் பெற்றது. இது தனித்து தெரியும். த்ரிவிக்ரமனாக பகவான் விஷ்ணு இதன் மேல் ஒரு பாதத்தை வைத்து, மற்றொரு பாதத்தை மேரு மலையின் மேல் வைத்தார். திவாகரன், ஜம்பூத்வீபம் என்ற இந்த தேசத்தை வடக்காக சுற்றி வந்து, இந்த சிகரத்தில் முழுவதுமாகத் தெரிவான். இங்குள்ள மகரிஷிகள், வைகானஸர்கள், இவர்கள் சூரிய வர்ணத்துடன், தங்கள் தவ வலிமையால் காந்தியுடன் காணப் படுவர். இதன் அருகில் சுதர்ஸனம் என்ற தீவு பிரகாசமாகத் தெரிகிறதே, அங்கு உயிருள்ள பிராணிகள் அனைத்தும் சக்தியையும், கண் பார்வையையும் பெறுகின்றன. அந்த மலையின் சிகரத்தில், மலைசாரல்களில், குகைகளில், வனங்களில், ராவணனை, வைதேஹியைத் தேடுங்கள். தானே காஞ்சன சைலம் (தங்க நிறம்) இதில் சூரியனின் பிரகாசமும் பட்டு, தக தகவென்று ஜொலிக்கும். கண்களைப் பறிக்கும் ஒளியுடன் கூடிய இந்த மலையில் காலை சந்த்யா நேரம், செக்கச் சிவக்கத் தெரியும். ஆதியில் இது பூமிக்கும், புவனத்திற்கும் நுழை வாயிலாக இருந்தது. சூரியன் உதிக்கும் இடமாக. கிழக்கு திசையாகப் பெயர் பெற்றது. இந்த மலையின் பின் புறங்களிலும், அருவிகளில், குகைகளில், ராவணனை,. வைதேஹியைத் தேடுங்கள். இதற்கு அப்பால் கிழக்கு திசையில் போவது முடியாது. தேவர்கள் சஞ்சரிப்பார்கள். சந்திர சூரியர்களைத் தவிர மற்றவர்களுக்கு எதுவும் புலப்படாத இருட்டு சூழ்ந்திருக்கும். இந்த மலையின் ஒரு பாகம் விடாமல், குகைகளிலும், வனங்களிலும், நான் சொல்லாத மற்ற இடம் ஏதாவது இருந்தால் அங்கும் நன்றாகத் தேடுங்கள். வானர வீரர்களே, இது வரை தான் நாம் செல்லக் கூடிய எல்லை. இதற்கு அப்பால் சூரியனும் இல்லாமல் பரந்து கிடக்கும் இடத்தில் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. வைதேஹியை கண்டு பிடித்து, ராவணனின் இருப்பிடத்தையும் தெரிந்து கொண்டு, ஒரு மாதம் முழுவதும் முடியு முன் வந்து சேருங்கள். ஒரு மாதத்திற்கு மேல் எங்கும் தங்க வேண்டாம். தாமதம் செய்பவர்கள் தண்டிக்கப் பெறுவீர்கள். சிரச்சேதம் தான் தண்டனை. போய் வாருங்கள். வெற்றியுடன் திரும்பி வாருங்கள். மைதிலியைக் கண்டு கொண்டு மகிழ்ச்சியுடன் வாருங்கள். நீங்கள் போகும் கிழக்குத் திசையில் அடர்ந்த காடுகள் நிறைந்த, இந்திரனுக்கு சமமான காந்தியுடைய இந்த கிழக்கு திசையில் சாமர்த்யமாகச் சென்று, ரகு வம்ச பிரியாவான சீதையைக் கண்டு பிடித்து திரும்பி வாருங்கள். அதன் பின் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. என்றும் சுகமே.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ப்ராசீ ப்ரேஷணம் என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)