பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 56 – 67

பிப்ரவரி 26, 2014

அத்தியாயம் 56 (327) சம்பாதி ப்ரஸ்ன: (சம்பாதி வினவுதல்)   

 

இந்த வானரங்கள் உபவாசம் இருந்த மலையின் உச்சியில் சம்பாதி என்பவனும் வந்து சேர்ந்தான். சிரஞ்சீவியான கழுகு அரசன். ஜடாயுவின் சகோதரன். ஸ்ரீமான். இவன் ஆற்றலும், பலமும் பலர் அறிவர். விந்த்ய மலையின் ஒரு குகைக்குள் இருந்து வெளி வந்து, உபவாசம் இருக்க அமர்ந்த வானரங்களைப் பார்த்து மனதில் மகிழ்ச்சி கொண்டான். விதி தான் மனிதனை உலகில் ஆட்டுவிக்கிறது. சமயத்தில் தேவைகளை பூர்த்தி செய்து நன்மையும் செய்கிறது. வெகு காலத்திற்குப் பிறகு, எனக்கு ஆகாரமாக இந்த வானரங்களை கொண்டு வந்து சேர்த்ததும் விதியே. ஒவ்வொன்றாக உயிர்விட விட நான் புசித்து பசியாறுவேன் என்றது.  பசியினால் பல நாட்களாக வாடிக் கிடந்த பக்ஷியின் குதூகலத்தைப் பார்த்து அங்கதன் ஹனுமானிடம் சொன்னான். ஹனுமானே, பார். சீதை என்ற பெயரில், மறைமுகமாக வைவஸ்வத யமனே வானரங்களின் வாழ்க்கை முடிய நம்மை இந்த தேசம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.  ராமனுடைய வேண்டுகோளையும் நாம் நிறைவேற்றவில்லை. அரசன் ஆணையையும் முடித்துக் காட்டவில்லை. இந்த வானரங்களுக்கு இப்படி ஒரு ஆபத்து திடுமென வந்து சேர்ந்தது. வைதேஹியைக் காப்பாற்ற ஜடாயு போரிட்டதையும், மடிந்ததையும் நாம் கேள்விப் பட்டோம். இப்படி, பறக்கும் பறவைகள் கூட ராமனுக்கு பிரியத்தையே செய்ய விழைகின்றன. இதோ, நாமும் அதே போலத்தான் உயிர் விடத் துணிந்திருக்கிறோம். ஸ்னேகமும், காருண்யமும் உள்ளவர்கள், தங்களுக்குள் உயிரை கொடுத்து கூட உதவி செய்யத் தயங்க மாட்டார்கள். ஜடாயு செய்தது அது தான். ராகவனுக்காக அலைந்து நாமும் உயிர் விடும் தறுவாயில் இருக்கிறோம். பல காடுகளில் தேடி விட்டோம். மைதிலியைக் காணவில்லை. ஜடாயு பாக்யசாலி. ராவணனால் வதம் செய்யப் பட்டான். அவனுடன் யுத்தம் செய்து மாண்டான். ராமனால் அவனுக்கு நல்ல கதியும் கிடைத்தது.  சுக்ரீவனிடம் பயப்படத் தேவையும் ஏற்படவில்லை. ஜடாயுவை அடித்துக் கொன்றதும், அரசன் தசரதன் மறைந்ததும், வைதேஹியை ராவணன் கவர்ந்து சென்றதும், வானரங்கள் இப்படி நாசமடையவே தான் போலும். சீதையுடன் ராம லக்ஷ்மணர்கள் அரண்யத்தில் வாசம் செய்ததும்,  ராகவனுடைய பாணத்தால் வாலி வதம் ஆனதும், ராம கோபத்தால் ஜனஸ்தான ராக்ஷஸர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்ததும், கைகேயி பெற்ற வரங்களின் பலனே. அதன் பின் விளைவுகளே. பூமியில் படுத்து புரண்ட படி நடந்ததை அசைபோட்டுக் கொண்டிருந்த வானரங்களின் பேச்சால், இதுவரை வரிசையாக நடந்த அனர்த்தங்களை தெரிந்து கொண்ட சம்பாதி மனக் கலக்கம் உற்றான். தீனமாக அவர்களைப் பார்த்து வினவினான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சம்பாதி ப்ரஸ்னோ என்ற  ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 57 (328) ஜடாயு தி3ஷ்ட கத2னம் (ஜடாயு மறைந்ததை தெரிவித்தல்)

 

கூர்மையான அலகுடைய பக்ஷி ராஜன், அங்கதன் முதலானோர் செய்கையை கவனித்துக் கொண்டும் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டும் வந்தது.  ஜடாயுவின் பெயர் அடிபட்டதைக் கேட்டவுடன் அங்கதனைப் பார்த்து, யாரது? என் உயிருக்குயிரான இளைய சகோதரன் பெயரைச் சொல்லி உரக்க கோஷமிடுவது யார்? என் சகோதரன் ஜடாயு வதம் செய்யப் பட்டானா? என் மனம் நடுங்குகிறதே. ஜனஸ்தானத்தில் ராக்ஷஸனுக்கும், கழுகுக்கும் எப்படி சண்டை மூண்டது? என் தம்பியின் பெயரைக் கேட்டே வெகு நாட்களாகி விட்டன. இந்த மலையுச்சியிலிருந்து கீழே இறங்க வேண்டும்.  சற்று உதவி செய்யுங்கள்.  உங்களுடன் அமர்ந்து என் இளைய சகோதரனைப் பற்றி விசாரிக்க வேண்டும். என் தம்பி குணவான். நல்ல விக்ரமம் உடையவன். வெகு நாட்களாக அவனைப் பற்றி விவரம் எதுவும் தெரியாமல் இருந்தது.  உங்கள் வாயால் அவன் பெயரைக் கேட்டதும் சந்தோஷப்பட்டேன். ஆனால், அவன் போரில் மடிந்தான் என்று சொல்கிறீர்களே, அது எப்படி? வானரோத்தமர்களே, விஸ்தாரமாகச் சொல்லுங்கள். ஜனஸ்தானத்தில் இருந்தான். தசரதனுடைய சகா அவன். என் சகோதரன்.  தசரதனுடைய பிரிய புத்திரன் ராமன், அவன் ஜ்யேஷ்ட மகன் என்பதும் தெரியும். என் இறக்கைகள், சூரிய  ஒளியில் எரிந்து போய் விட்டன. அதனால் தான் நகர முடியாமல் கஷ்டப் படுகிறேன். இந்த மலையுச்சியிலிருந்து இறங்கி உங்களுடன் சமமாக அமர ஆசைதான். உங்கள் குரல் வேதனையில் தோய்ந்து இருப்பதை கேட்ட பின்னும், இங்கேயே இருக்கிறேன். அந்த கழுகரசனின் வார்த்தைகளுக்கு வானரங்கள் செவி மடுக்கவில்லை. அதன் செயல்- கிடைத்ததை தின்று விடும் குணம்- தெரிந்ததால் பதில் பேசாமல் இருந்தன. இவன் நம் அனைவரையும் தின்று விடுவான். நாமோ உயிர்த் தியாகம் செய்ய அமர்ந்திருக்கிறோம். இவனுக்கு வேட்டைதான் என்று பேசிக் கொண்டன.  இப்பொழுதே இவன் நம்மை புசித்தாலும் நல்லது தான். நம் வேலை சீக்கிரம் முடியும் என்றன. மற்ற வானரங்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, அங்கதன் மட்டும் சம்பாதியின் அருகில் சென்றான். கழுகு அரசனை இறக்கிக் கொண்டு வந்தான்.  அங்கதன் தங்கள் கதையைச் சொன்னான். ருக்ஷரஜஸ் என்று வானரேந்திரன், நல்ல பிரதாபம் உடையவன் இருந்தான். அரசனான அவன் தான் என் தந்தையின் தந்தை. இரண்டு குமாரர்களில், என் தந்தை வாலி, மற்றவன் சுக்ரீவன். இருவருமே பலசாலிகள். என் தந்தை வாலி, தன் அரிய செயல்களால் உலகில் புகழ் பெற்று வாழ்ந்தான். தசரத ராஜா, இக்ஷ்வாகு குல அரசன், அவன் மகன் ஸ்ரீமான் ராமன் என்பவன், தண்டகா வனம் வந்தான். சகோதரன் லக்ஷ்மணனுடனும், மனைவி சீதையுடனும் வனம் வந்தான். தந்தையின் கட்டளையை ஏற்று, தர்ம வழியில், நடந்து வந்தான். அவன் மனைவியை ஜனஸ்தானத்திலிருந்து ராவணன் பலவந்தமாக தூக்கிச் சென்றான்.  ராமனுடைய தந்தையின் சகா2 ஜடாயு என்ற கழுகரசன். ஆகாய மார்கத்தில், ராவணன் அவளைக் கவர்ந்து செல்வதைக் கண்டான். ராவணனை ரதத்திலிருந்து கீழே தள்ளி, மைதிலியை காப்பாற்ற முனைந்தான். களைத்து நின்ற சமயம், முதியவரான ஜடாயுவை, ராவணன் அடித்து வீழ்த்தி விட்டான். இப்படித்தான் ராவணனுடன் யுத்தம் செய்து வதம் செய்யப் பட்டான். பின், ராமர் அந்த வழியில் வந்த பொழுது, விழுந்து கிடந்த ஜடாயுவைக் கண்டு, அவருக்கு சம்ஸ்காரங்கள் செய்து நல்ல கதியடையச் செய்தார். இதன் பின் என் தந்தை வழி உறவினனான, சுக்ரீவனுடன் ராமர் சக்யம் செய்து கொண்டார். என் தந்தையை வதம் செய்தார். என் தந்தையுடன் சுக்ரீவனுக்கு விரோதம். என் தந்தையைக் கொன்று ராமர், சுக்ரீவனை அவன் மந்திரிகளுடன் ராஜ்யத்தில் அமர்த்தி விட்டார். அரசனாக முடி சூட்டி விட்டார். வானர ராஜனாக நியமிக்கப் பட்டவுடன், ராஜா சுக்ரீவன், எங்களை அனுப்பினான்.  வைதேஹியைத் தேடுங்கள் என்று கட்டளையிட்டு தென் திசைக்கு அனுப்பினான். இரவில் சூரியனைத் தேடுவது போல நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். தண்டகாரண்யத்தில் தேடி விட்டு, அறியாமல் எல்லோருமாக ஒரு பள்ளத்தில் இறங்கி விட்டோம். மயனுடைய மாயா சக்தியால் அந்த பள்ளத்தினுள் ஒரு நகரம் அமைக்கப் பட்டுள்ளது. அங்கு தேடிக் கொண்டிருந்த சமயம்,  நேரம் போனதே தெரியவில்லை.  ராஜா எங்களுக்கு கொடுத்த ஒரு மாத காலம் என்ற கால வரையறை முடிந்து விட்டது.  கபிராஜனுடைய குணம் தெரியும். அவனிடம் பயந்து உயிரை விடுவதே மேல் என்று ப்ராயோபவேசம் செய்யத் துணிந்து அமர்ந்திருக்கிறோம்.  காகுத்ஸனும், லக்ஷ்மணனும், கபிராஜனும் அவர்கள் கட்டளையை நிறை வேற்றாமல் திரும்பப் போனால் நிச்சயம் கோபத்துடன் தண்டிப்பார்கள். அங்கு போனாலும்  உயிருடன் இருப்பது சந்தேகமே, என்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஜடாயு தி3ஷ்ட கத2னம் என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

அத்தியாயம் 58 (329) சீதா ப்ரவ்ருத்யுபாலம்ப: (சீதையின் நிலையை கண்டறிந்து சொல்லுதல்)

 

உயிரை விடத் துணிந்து விட்ட வானரங்களைப் பார்த்து, க்ருத்ர (கழுகு) ராஜன், கண்களில் நீர் மல்க, பதில் சொன்னான். ஜடாயு என் இளைய சகோதரன். அவன் பலவானான ராவணனால் வதம் செய்யப் பட்டான் என்று சொல்கிறீர்கள். எனக்கு வயதும் ஆகி விட்டது. இறக்கைகளும் இல்லை. இதையும் கேட்டு நான் பொறுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இப்பொழுது சக்தி இல்லை. அதனால் என் தம்பியைக் கொன்ற எதிரியை பழி வாங்க நினைத்தாலும், செயல் படுத்த முடியவில்லை. முன்பு  வ்ருத்திர வதம் ஆன பின் நானும் என் சகோதரனும், சூரியனைத் தொட்டு விட நினைத்து மேலும் மேலும் வானில் உயரப் பறந்தோம். சூரிய கிரணங்களின்  வெப்பத்தையும் பொறுத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தோம். சூரியன் உச்சிக்கு வந்தபொழுது ஜடாயு தாங்க முடியாமல் தவித்தான். நான் என் இறக்கைகளால் அவனை மறைத்துக் கொண்டு அவன் கஷ்டப் படுவதை குறைக்க முயன்றேன். என் அன்பு சகோதரன் மிகவும் வாடி விட்டான். அவனைக் காக்க முனைந்ததில் என் இறக்கைகள் பஸ்மமாகி விட்டன. விந்த்ய மலையில் வந்து விழுந்தேன். இங்கு இருந்தபடி நான் எவ்வளவோ முயற்சித்தும் என் சகோதரனின் நிலை என்ன ஆயிற்று, எங்கு இருக்கிறான் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஜடாயுவின் சகோதரன் இவ்வாறு சொல்லவும், யுவ ராஜாவான அங்கதன், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு, சம்பாதியிடம்  உதவி கேட்டான். கழுகு அரசனே, ஜடாயுவின் சகோதரன் என்று சொல்கிறாய். அந்த ராக்ஷஸனின் நிலயம் எங்கு இருக்கிறது தெரியுமா? தெரிந்தால் சொல், என்றான். என் இறக்கைகள் பஸ்மமாகி விட்டன. எனக்கு சக்தியும் இல்லையே. வானரர்களே, வாய் வார்த்தையாக நான் ஒரு உபகாரம் செய்ய முடியும்.  எனக்கு எல்லா உலகமும் தெரியும். வருணனின், த்ரிவிக்ரமனாக விஷ்ணு பகவான் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் தெரியும். மகாசுரர்களை அடக்கியதும், சமுத்திர மத2னமும் தெரியும். இது ராம காரியம். முதலில் இதை நான் செய்யத்தான் வேண்டும். இது என் கடமையே.  முதுமை வந்து என் தேஜஸை அபகரித்து விட்டது. ஏதோ உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அழகிய இளம் பெண், சர்வாலங்கார பூஷிதையாக, ராவணன் அபகரித்துச் செல்வதை நான் பார்த்தேன். ராம, ராம என்றும், லக்ஷ்மணா என்றும் அலறினாள். பூ4ஷணங்களை வீசி எறிந்தாள். உடல் துடிக்க கதறினாள். அவளுடைய உயர்ந்த பட்டாடை, சூரியனின் கிரணங்கள் பட்டு,  ஒளியைச் சிதற விடுவதைப் போல இருந்தது. கறுத்த ராக்ஷஸனுடன் மேகத்தின் இடையில் மின்னல் பளிச்சிடுவது போல இருந்தாள். அவள் சீதையாகத் தான் இருக்க வேண்டும். ராம, ராம என்று அலறியதால் அவள்தான் என்பது நிச்சயம். அந்த ராக்ஷஸனின் இருப்பிடம் எது என்பதைச் சொல்கிறேன், கேளுங்கள். விஸ்ரவஸின் புத்திரன், சாக்ஷாத் குபேரனுடைய சகோதரன், லங்கா எனும் நகரை ஆண்டு வருபவன் அந்த ராக்ஷஸன் ராவணன். இதோ இருக்கிறது அந்த தீவு. சமுத்திரத்தில் நூறு யோஜனை தூரம் தள்ளி அமைந்திருக்கிறது. விஸ்வகர்மா அமைத்த நகரம் லங்கா புரி. பத்தரை மாற்றுத் தங்கத்தால் ஆன வாசல்களும், அழகிய வேலைப் பாடுகளும், யாக சாலைகளும், வெண்மையான ப்ராகாரங்களுமாக நேர்த்தியாக விளங்கும். அந்த லங்கா நகரில் தான் சீதை சிறை வைக்கப் பட்டிருக்கிறாள். வெண் பட்டாடையுடன், ராக்ஷஸிகள் சூழ ராவணனுடைய அந்த:புரத்தில், தீனமாக அமர்ந்திருக்கிறாள். ஜனக ராஜாவின் மகளை அந்த லங்கையில் காண்பீர்கள். நாலா புறமும் கடல் சூழ, மிக்க பாதுகாவலுடன் அமைந்த லங்கா நகரில், அவளைக் காண்பீர்கள். இந்த நூறு யோஜனை தூரத்தைக் கடந்து சென்று, தென் கரையில் ராவணனையும் காண்பீர்கள். வானரங்களே, சீக்கிரம், உங்கள் விக்ரமத்தைக் காட்டுங்கள். என் அறிவுக்கு பட்டதைச் சொல்கிறேன். போய் பார்த்துவிட்டு திரும்ப வாருங்கள். முதல் படி, குளிங்க எனும் தானியங்களை கொத்திச் சாப்பிடும் கோழி இனம்.  இரண்டாவது பலி போஜனம் எனும் காகம். மரங்களில் வசிக்கும் பறவைகள். மூன்றாவது க்ரௌஞ்சம், குரரீ என்பவை. ஸ்யேன எனும் கழுகு வகைகள் நான்காவது. கருடன் இனம் ஐந்தாவது. பலம், வீர்யம், அழகிய உருவம் இவை உடைய  ஹம்ஸங்கள் ஆறாவது. அதையும் அடுத்த நிலை வைனதேயனுடையது. வானர வீரர்களே, பிறப்பால் நாங்கள் வைனதேயர்கள். இங்கு இருந்தபடியே நான் ராவணனையும், ஜானகியையும் காண்கிறேன். எங்களுக்கும் நான்கு வேதங்களில் அதிகாரமும், கூர்மையான கண் பார்வையும் உண்டு.  ஆகாரம், வீர்யம், பிறவி இவற்றால் வானரர்களே, நூறு யோஜனை தூரம் பார்க்கும் சக்தி எங்களுக்கு பிறவியிலேயே அமைந்து விட்டது. தூர த்ருஷ்டி எங்கள் இன பறவைகளுக்கு உண்டு.  மிகவும் நீச காரியத்தை செய்திருக்கிறான் இந்த ராவணன். என் சகோதரனை வதம் செய்தவனை பழி வாங்கியதாகவும் ஆகும். இந்த உப்புக் கடலைத் தாண்ட உபாயம் தேடுங்கள். சீதையைக் கண்டு கொண்ட பின், வெற்றி வீரர்களாகத் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் என்னை சமுத்திர கரைக்கு அழைத்துச் செல்லுங்கள். என் சகோதரன் ஸ்வர்கம் சென்று விட்டான். அவனுக்கு நீத்தார் கடனை நான் செய்ய வேண்டும்.  நத, நதீபதி எனும் சமுத்திர கரைக்கு வானரங்கள், சம்பாதியை அழைத்துச் சென்றன. நீர்க்கடன்களை செய்தபின் திரும்ப அதனுடைய வாசஸ்தலத்தில் கொண்டு விட்ட வானரங்கள், நம்பிக்கையுடன் காணப்பட்டனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சீதா ப்ரவ்ருத்யுபாலம்ப:  என்ற  ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 59 (330) சுபார்ஸ்வ வசனானுவாத3:(சுபார்ஸ்வன் சொன்னதை திருப்பிச் சொல்லுதல்)

 

சம்பாதியின் வார்த்தைகள் அமுத தாரையென வானரங்களின் காதில் விழுந்தன.  நம்பிக்கையை தூண்டி விட்டது. வானர ஸ்ரேஷ்டனான ஜாம்ப3வான், தரையிலிருந்து குதித்து எழுந்து கழுகரசனிடம் சென்றான். மற்ற வானரங்களும் தொடர்ந்தன. எங்கே சீதா? யார் கண்ணால் கண்டது? யார் மைதிலியை அபகரித்துச் சென்றவனை அறிவான்.  அறிந்ததை எங்களுக்கும் சொல்லுங்கள்.  செய்வதறியாது திகைத்து நிற்கும் எங்களுக்கு வழி காட்டு. யார் அவன்? தாசரதியின் வில்லின் வலிமையையும், லக்ஷ்மணனின் கூர்மையான பாணங்களையும் பற்றி அறியாதவன். அறியாமல் இந்த காரியத்தை செய்திருக்கிறான் என்றான். வானரங்கள் சீதா விஷயமாக மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதையறிந்த சம்பாதி, மேலும் விவரமாக சொன்னான். கேளுங்கள். நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன்.  நீண்ட கண்களையுடைய சீதா இப்பொழுது எப்படி இருக்கிறாள் என்பதையும் அறிந்து சொல்கிறேன்.  இந்த மலை பல யோஜனை தூரம் பரவியிருக்கிறது. நான் இதில் விழுந்த நாளிலிருந்து கிடக்கிறேன். என் வயதும் கூடி, வீர்யமும் அழிந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நகர முடியாமல் ஒரே இடத்தில் கிடக்கிறேன். என் மகன் சுபார்ஸ்வன் எனக்கு ஆகாரங்கள் கொண்டு வந்து கொடுத்து கவனித்துக் கொள்வான். கந்தர்வர்கள் தீக்ஷ்ண காமா: (அதிக காமம் உடையவர்கள்), நாகங்கள் தீக்ஷ்ண கோபா: (அதிக கோபம் உடையவை), மான்கள் தீக்ஷ்ண ப4யம் (அதிக பயம் உடையவை) நாங்கள் தீக்ஷ்ண க்ஷூதா4: (நாங்கள் அதிக பசியுடையவர்கள்) என்பது நியதி. ஒரு நாள் எனக்கு பசி தாங்க முடியாமல் தவிக்கிறேன், என் மகன் சூரியன் மறையும் நேரம் வருகிறான். பசியினாலும், களைப்பினாலும், நான் அவனைக் கோபித்துக் கொண்டதையும் பொருட்படுத்தாமல், அவன் எனக்கு ஆகாரத்தை கொடுத்து விட்டு, ஒரு விஷயம் சொன்னான். அப்பா, நான் சரியான சமயத்தில் தான் வந்தேன். உங்கள் ஆகாரத்தை தேடி ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தேன். மகேந்திர மலையருகில் வரும் பொழுது, சாகரத்தில் இருந்த ஏராளமான சத்வங்களை, ஜீவ ஜந்துக்களை குறி பார்த்து நான் வேகமாக இறங்கிய பொழுது, குறுக்காக, அஞ்சன மலை உடைந்தாற்போன்ற கரிய நிற ராக்ஷஸன் ஒருவன் ஒரு ஸ்த்ரீயை அபகரித்துக் கொண்டு போய் கொண்டிருந்தான். நான் ஆகாரத்தை தேடுபவன் அவனிடம் வழி விடுமாறு கேட்டேன். சாதாரணமாக பணிவுடன் கேட்பவர்களை யாரும் அடிக்க மாட்டார்கள். தவிர, ஆகாய மார்கத்தில் பறவையான என்னை தடுக்க யார் தான் நினைப்பார்கள். வேகமாக போய்க் கொண்டிருந்தவன், என்னைத் தள்ளிக் கொண்டு நிற்காமல் சென்று விட்டான். வானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சித்34ர்கள், மகரிஷிகள் என்னை காப்பாற்றினர்.  நல்ல வேளை சீதா உயிருடன் இருக்கிறாள் என்று பேசிக் கொண்டனர். ஸ்த்ரீயையும் அழைத்துக் கொண்டு வான வெளியில் இந்த  வேகத்தில் பறக்கிறானே, நலமாக போய் சேர்ந்தால் போதும், அது வரை நல்லது என்றனர். இதன் பின் அவர்களே மேலும் சொன்னார்கள். இது ராக்ஷஸ ராஜா, ராவணன் என்ற பெயருடையவன். ராமருடைய மனைவி சீதையை கவர்ந்து செல்கிறான். இவள் பட்டாடைகளும், ஆபரணங்களும் நிலை குலைய கதற கதற தூக்கிச் செல்கிறான். வேகமாக போவதிலேயே கவனமாக இருக்கிறான். அவளோ, ராம, ராம என்றும் லக்ஷ்மணா, என்றும் அலறுகிறாள். இதுவும் காலத்தின் கட்டாயமே என்று முக்காலமும் உணர்ந்த சித்34ர்கள் சொல்கிறார்கள். இவ்வளவும் சுபார்ஸ்வன் என்னிடம் சொன்னான். இருந்தும் தொடர்ந்து சென்று போரிடவோ, சீதையை மீட்க வேண்டும் என்றோ எனக்குத் தோன்றவில்லை. என் இறக்கைகள் கூட இல்லை, பக்ஷிராஜன் என்று பெயர் தான். நான் நினத்து தான் என்ன பலன்? இப்பொழுது என்னால் செய்யக் கூடியது, என் வாக்கு, புத்தி, நல்ல எண்ணெம் இவைகளைக் கொண்டு உங்களுக்கு வழி காட்டுவது தான். கேளுங்கள், சொல்கிறேன். உங்கள் வீர பராக்ரமத்தைக் காட்ட ஒரு சந்தர்ப்பம். தாசரதிக்கு பிரியமானதை நானும் செய்ய வேண்டும். என் புத்தியும், வாக்கும் தான் எனக்கு வசமாக உள்ளன. இதைக் கொண்டு உலகுக்கே நன்மை செய்யப் போகிறேன். நல்ல வீரர்களாக, புத்தி கூர்மையுள்ளவர்களாக உங்களை பொறுக்கி எடுத்து இந்த வேலையில் ஏவியிருக்கிறான், உங்கள் அரசன். ராம லக்ஷ்மணர்களுடைய ஆயுதங்களும் குறி தவறாதவை. மூன்று உலகையும் ஆட்டிப் படைக்க வல்லவை. தசக்ரீவனும் நல்ல பலமும், விக்ரமும் உடையவனே. இருந்தாலும். உங்களைப் போன்ற வீரர்களுக்கு எதுவுமே செய்ய முடியாது என்பது இல்லை. அதனால் போதும், கால விரயம் ஆனது ஆயிற்று. மதி நுட்பத்துடன் செயல் படுவோம். நீங்கள் செயலுக்கு அஞ்சாதவர்கள். சுத்த வீரர்கள். இதில் சந்தேகமேயில்லை என்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுபார்ஸ்வ வசனானுவாத3:  என்ற ஐம்பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 60 (331) சம்பாதி புராவ்ருத்த கத2னம் (சம்பாதி முன் நடந்ததைச் சொல்லுதல்)

 

கழுகரசன் வேண்டிக் கொண்டபடியே, வானரங்கள், சமுத்திரக் கரையில் ஜடாயுவுக்கு நீர்கடன்கள் செய்ய செய்து, ஸ்னானம் செய்தபின், அதன் இருப்பிடத்தில் கொண்டு சேர்த்தார்கள். தன்னைச் சுற்றி அங்கதன் முதலானோர் அமர்ந்து இருப்பதைப் பார்த்து சம்பாதி மிகவும் சந்தோஷமாக மேலும் பழைய கதைகளை நினைவு கூர்ந்து சொல்லலானான். யாரும் சத்தம் போடாமல் அமைதியாக கேளுங்கள். எனக்குத் தெரிந்த வரையில் மைதிலியைப் பற்றிச் சொல்கிறேன். இந்த விந்த்யமலையில் முன்பு நான் விழுந்தேன். சூரிய கிரணங்கள் பட்டு எரிந்து பஸ்மமாகிப் போன இறக்கைகளும்,  தகிக்கும் உடலுமாக ஆறு இரவுகள் நினைவு இன்றி கிடந்தேன். ஏழாவது நாள் கண் விழித்தால் எதுவுமே புலப்படவில்லை. இதன் பின் சாக3ரத்தைப் பார்த்து, நதிகளையும், அருவிகளையும், அதைச் சுற்றி இருந்த பிரதேசங்களையும் வைத்து இது விந்த்ய மலைச் சாரலின் ஒரு பகுதி என்பதை ஊகித்துக் கொண்டேன். என்னைச் சுற்றி பல பக்ஷிகள் ஆரவாரம் செய்தன. நான் கண் விழித்ததில் அவைகள் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிந்தது. குகையின் உள்ளே நான் இருப்பதையும், விந்த்ய மலை என்பதையும் தெரிந்து கொண்டேன். நிசாகரன் என்ற பெயருடன் ஒரு ரிஷி உக்ரமாக தவம் செய்து சித்தியடைந்த ஆசிரமம் இருந்தது. இந்த ரிஷி பல வருஷங்களாக (8000 வருஷம்) இங்கு வசித்து விட்டு, ஸ்வர்கம் சென்றார். மெதுவாக மலையிலிருந்து இறங்கி குத்தும் முட் புதர்களுடன் தர்ப்பைகள் வளர்ந்து கிடந்த பூமியை வந்தடைந்தேன். அந்த ரிஷியைக் காண விரும்பினேன். ஜடாயுவும் நானும் அவரது ஆசிரமத்தில் படித்தவர்கள். அந்த ஆசிரமத்தில் நறுமணத்துடன் கூடிய சுகமான காற்று வீசியது. ஆனால், மரங்களில் புஷ்பங்களோ, பழங்களோ காணப்படவில்லை. நான் மெதுவாக ஒரு மரத்தடியில் அமர்ந்து நிசாகரன் என்ற அந்த மகானை தரிசிக்க காத்திருந்தேன். ஸ்னானம் செய்து விட்டு ஈரம் உலராத உடலும், தலையிலிருந்து சொட்டும் நீருமாக அவர் வந்தார். தூரத்திலிருந்தே, தவ வலிமையால் பெற்ற  ஒளி வட்டம் அவரை காட்டிக் கொடுத்தது.  அவரை கரடிகள், புலிகள், குள்ள நரிகள், சிங்கங்கள், யானைகள், ஊர்வன என்று ப்ரும்மாவை ஜீவ ராசிகள் தொடருவது போல ஆசிரமத்து ஜந்துக்கள் தொடர்ந்து வந்தன.  ஆசிரமத்தில் நுழையும் முன், என்னை ரிஷி பார்த்து தெரிந்து கொண்டு விட்டார். ஒரு முஹுர்த்த நேரம் சென்ற பின், வெளியே வந்து என்னை விசாரித்தார். என்ன காரியமாக வந்தாய்? உன் ரோமங்கள் எரிந்து போனதால் சௌம்யனே, அடையாளம் தெரியவில்லை. உன் தோலெல்லாம் வெந்து ரணமாகி கிடக்கின்றனவே. இறக்கைகள் ஏன் நெருப்பில் பொசுங்கி போனது போல காண்கின்றன. முன்பு எனக்கு பரிச்சயமான இரண்டு க்3ருத்3ரர்களும், சகோதரர்கள், கம்பீரமான தோற்றமும், காற்று போல வேகமும், அழகிய உருவமும் கொண்டவை. நீ மூத்தவன் சம்பாதி தானே. உன் தம்பி ஜடாயு. மனித உருவம் எடுத்து என் பாதங்களைப் பற்றிக் கொள். என்ன ஆயிற்று? எப்படி விழுந்தாய்?  எப்படி இறக்கைகளை இழந்தாய். வியாதியா அல்லது தண்டனையா? தண்டனை என்றால் தண்டித்தவர் யார்? விவரமாகச் சொல் என்றார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், புரா வ்ருத்த வர்ணனம் என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 61 (332) சூர்யானுக3மநாக்2யானம் (சூரியனை தொடர்ந்து சென்றது)

 

நானும் அனாவசிய சாகஸம் செய்து, சூரியனை தொடர்ந்து போய் பிடிக்க முயன்றதையும், தண்டிக்கப் பெற்றதையும் விவரமாகச் சொன்னேன். ப4கவன் உடல் முழுவதும் வெந்து போய், வ்ரணமாக இருக்கும் நிலையில் எனக்கு வெளியில் செல்ல வெட்கமாக இருக்கிறது. அடிபட்ட உடல் சிரமம், பேசக் கூட எனக்கு சக்தியில்லை. நானும் ஜடாயுவும் போட்டி போட்டுக் கொண்டு எங்கள் பலத்தில் எங்களுக்கு இருந்த கர்வத்தாலும், தன்னம்பிக்கையாலும், வானில் ஒருவரையொருவர் மிஞ்சும் எண்ணத்துடன் பறந்தோம். கைலாஸ மலையில் முனிஜனங்களுக்கு முன் பந்தயம் கட்டி, சூரியனை உதயத்திலிருந்து அஸ்தமன மலை வரை தொடருவோம் என்று மார் தட்டினோம். இருவரும் ஒன்றாகவே புறப்பட்டோம். மேலேயிருந்து பார்த்தால் தனித் தனியாக நகரங்கள், ரதத்தின் சக்கரம் போல காணப்பட்டன. சில இடங்களில் வாத்ய கோஷங்களும், சில இடங்களில் ப்ரும்ம கோஷமும் கேட்டன. பல ஸ்த்ரீகள் மதுரமாக பாடுவதும் கேட்டது. சிவந்த ஆடையணிந்த பலரைக் கண்டோம். வேகமாகத் தாவி, ஆதித்யனின் பாதையை அடைந்து விட்டோம்.  மேலேயிருந்து பூமியைப் பார்த்தால், பசுமையான வயல்கள், விரிப்புகளாகத் தெரிய, மலைகள் சிறு கற்களை இரைத்தாற்போல இருந்தன. ஆங்காங்கு நதிகளும், நீர் நிலைகளும், பூமியே உபவீதம் (பூணூல்) அணிந்தது போல காட்சியளித்தது. ஹிமவானும் விந்த்ய மலையும், மேருவும், மிகப் பெரிய இந்த மலைகள், நீரில் விளையாடும் யானைகள் போல தோற்றமளித்தன. கிளம்பிய போது இருந்த தீவிரம் குறைய, வியர்வை பெருக, உடல் வலியும், சூரிய வெப்பமும் எங்களை பாதிக்க,  பயம் தோன்றியது. மோகமும், தயக்கமும், மூர்ச்சையடைவோம் போன்ற உணர்வும் தலை தூக்கியது. எந்த திசை என்று புரியவில்லை. வாருணீ எனும் மேற்கு திசையா, ஆக்னேய எனும் யமனுடைய இருப்பிடம் இருக்கும் தென் திசையா, எதுவும் தெரியவில்லை. யுகாந்தம் வந்து விட்டது போலவும், நெருப்பில் வாட்டி எடுத்தது போல உடல் எரிச்சலும், கண்களை இடுக்கி சமாளித்துக் கொண்டு கீழே பார்த்தேன். பூமியிலிருந்து சூரியனைப் பார்ப்பது போலவே, பூமி சூரியனின் பாதையிலிருந்து காட்சி தந்தது.  ஜடாயு என்னைக் கேட்காமலே இறங்க துணிந்து விட்டான். அவனைப் பார்த்த நானும் தொடர்ந்தேன். என் இறக்கைகளால் அவனை அணைத்து, சூரியனின் வெப்பத்திலிருந்து அவனை பாது காத்தபடி, நான் சென்றேன். ஜடாயு பிழைத்தான். என் இறக்கைகள் எரிந்து சாம்பலாயின. நான் நினைவிழந்து வாயு மார்கத்திலிருந்து விலகி விழுந்தேன். ஜடாயு ஜனஸ்தானத்தில் விழுந்ததாக நினைவு. நான் இறக்கைகளின்றி, விந்த்ய மலையில் வந்து ஜடமாக கிடந்தேன். ராஜ்யமும் போயிற்று. இறக்கைகளும் இல்லை. உயிர் வாழ்ந்து என்ன பயன் என்று பலமுறை மலையிலிருந்து விழுந்து உயிரை விட முயற்சித்தேன். 

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சூரியானுக3மனாக்2யானம்   என்ற அறுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 62 (333) நிசாகர ப4விஷ்யாக்2யானம் (நிசாகரன் என்ற முனிவர் இனி நடக்கப் போவதைச் சொல்லுதல்.)

 

மிகுந்த வேதனையோடு நான் இவ்வாறு முனி புங்கவரிடம் என் கஷ்டத்தைச் சொல்லி அழுதேன். முஹுர்த்த நேரம் தியானத்தில் ஆழ்ந்த முனிவர், பின்வருமாறு சொன்னார். உன் இறக்கைகள் தகித்து அழிந்தது அழிந்தது தான். புதிதாக முளைக்கப் போவதில்லை. உன் உயிரும், கண்களும், பிற்காலத்தில் மிகப் பெரிய காரியத்திற்கு பயன்படப் போகின்றன. உன் விக்ரமமும் பலமும், இதுவரை காணாத அளவு வெளிப்படும் என்று நான் அறிகிறேன். என் தவ வலிமையால் நான் எதிர்காலத்தில் நடக்கப் போவதை உணர்ந்தேன். இது தவிர, நான் கேள்விப்பட்டதும் அதுவே. இக்ஷ்வாகு குலத்தில், த3சரத2ன் என்று ஒரு அரசன் வருவான். அவன் மகன் ராமன் என்ற பெயருடன் மகா தேஜஸ்வியாக விளங்குவான். தன் சகோதரன் லக்ஷ்மணனுடன் அரண்யம் செல்வான். தந்தையை சத்ய பராக்ரமனாக செய்ய, அவர் ஆணையை ஏற்று வனம் செல்வான்.  ராவணன் என்று ராக்ஷஸ ராஜா. இந்த ராமனின் மனைவியை அபகரிப்பான். இந்த ராக்ஷஸனை யாராலும் வதம் செய்ய முடியாது. ஜனஸ்தானத்திலிருந்து சீதையை கவர்ந்துச் செல்வதையும் யாராலும் தடுக்க முடியாது. அவளை பல விதமாக அவன், உணவு பதார்த்தங்களும், ஆடை ஆபரணங்களைக் காட்டியும் மயக்க முயலுவான். அவள் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், துக்கத்தில் மூழ்கி இருப்பாள். இந்திரன் வந்து பரமான்னம் அவளுக்குத் தருவான். சுரர்களுக்கு கூட கிடைக்காத அமுதம் போன்ற அந்த அன்னம், இந்திரன் அளித்தது என்று அறிந்து முதல் பாகத்தை ராமனுக்காக பூமியில் வைப்பாள். என் பர்த்தா, லக்ஷ்மணனுடன் உயிருடன் இருந்தாலும், தேவத்வம் அடைந்திருந்தாலும், இந்த அன்னம் அவர்களுக்கு போய் சேரட்டும் என்று வேண்டிக் கொள்வாள். ராம தூதர்களாக வானரங்கள் இங்கு வருவார்கள். நீ அவர்களுக்கு மைதிலி இருக்கும் இடம் சொல்ல வேண்டும். எங்கும் போகாதே. ஆனால் பக்ஷங்கள் இல்லாமல் எங்கு போகப் போகிறாய். தேச காலங்கள் கனிந்து வரக் காத்திரு. உன் இறக்கைகளையும் பழைய நிறத்தையும் திரும்பப் பெறுவாய். உன்னை இன்றே பழையபடி இறக்கைகளுடன் இருக்கும்படி செய்ய எனக்கு சக்தியில்லை. இங்கு இருந்தபடியே உலகுக்கு நன்மை தரும் பல செயல்களை செய்யப் போகிறாய். அந்த ராஜ குமாரர்களுக்கு மட்டுமல்ல, இதனால் பிராம்மணர்களும், தேவர்களும், முனிவர்களும், இந்திரனும் கூட நன்மை அடைவார்கள். நானும் இருந்து அந்த ராஜ குமாரர்களை பார்க்க விரும்புகிறேன். ஆனால் அவ்வளவு நாள் என்னால் உயிர் தரித்து இருக்க முடியாது.  நான் சரீரத் தியாகம் செய்கிறேன், என்று தத்வார்த்தங்களை அறிந்த அந்த முனிவர் சொன்னார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், நிசாகர ப4விஷ்யாக்2யானம் என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 63 (334) சம்பாதி பக்ஷ ப்ரரோஹ: (சம்பாதியின் இறக்கைகள் வளருதல்)

 

அந்த முனிவர், இன்னும் பல விதமாக அழகாக பேசி என்னை சமாதானம் செய்து விட்டு தன் ஆசிரமம் சென்று விட்டார். என் குகைக்குள்ளிருந்து வெளியில்  கொண்டு வரச் செய்து, மெதுவாக ஏறி விந்த்ய மலை மேல் இருந்து கொண்டு, உங்கள் வரவை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். கிட்டத் தட்ட நூறு வருஷங்கள் ஆகியிருக்கும். அந்த முனிவரின் வார்த்தையை மனதில் இருத்தி நம்பிக்கையோடு விடிவு காலம் வரும் என்று காத்திருக்கிறேன். நிசாகர முனிவர் மஹா ப்ரஸ்தானம் என்ற விரதத்தை ஏற்று,  ஸ்வர்கம் சென்ற பின், எனக்கு சஞ்சலமும், நம்பிக்கையும் மாறி மாறி வந்து அலைக்கழிக்கும். மரணத்தை தழுவலாம் என்று நினைத்து நான் தற்கொலை செய்து கொள்ளத் துணிவேன். முனி சொன்னதை நினைத்து அதைத் தவிர்த்து விடுவேன். உயிரை ரக்ஷித்து வைத்துக் கொள், அதற்கு அவசியம் வரும் என்று சொன்னது வேத வாக்காக என் மனதில் பதிந்து விட்டது. தீபம் தன்  ஒளியால் இருட்டை விலக்கி  ஒளி பரவச் செய்வது போல இந்த வார்த்தைகள் என் மனதில் தவறான எண்ணம் புகாமல் தடுத்து வருகிறது. ராவணன் துராத்மா செய்த காரியத்தை அறிந்தவுடன், என் மகனை வாயால் கடிந்து கொண்டேன். மைதிலியை ஏன் காப்பாற்றாமல் விட்டாய் என்று கேட்டேன். அவள் அலறலைக் கேட்டும், அந்த இருவரின் தவிப்பையும் உணர்ந்து கொண்டேன். தசரதன் என் நண்பன். அதனாலும் என் கடமை, மைதிலியை காப்பாற்றியிருக்க வேண்டும் என்றும் கடிந்து கொண்டேன். இது போல வானரங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, அவர்கள் எதிரிலேயே கழுகரசனுக்கு இறக்கைகள் முளைத்து வளரத் தொடங்கின. தன் சரீரத்தில் தோன்றிய மாறுதல்களை பழையபடி இறக்கைகள் வந்து விட்டதையறிந்து சம்பாதி மகிழ்ச்சி கடலில் மூழ்கினான். வானரங்களைப் பார்த்து நான் சொன்னபடி, ரிஷி நிசாகரனின் பிரபாவம் தான் இது. அவர் அளவிடமுடியாத தவ வலிமை உடையவர். ஆதித்ய கிரணங்களால் பொசுங்கிப் போன என் இறக்கைகள் திரும்ப கிடைத்து விட்டன. இளம் வயதில் எனக்கு இருந்த பராக்ரமும் திரும்ப கிடைக்கப் பெற்றேன். அதே போல பலமும், வீர்யமும் வந்து விட்டதாக உணர்கிறேன். அதனால் கிளம்புங்கள். சீதையைத் தேட எல்லா முயற்சிகளையும் செய்வோம். என் பக்ஷங்கள் திரும்ப கிடைத்ததே உங்கள் காரியம் சித்தியாகும் என்பதற்கான நல்ல அறிகுறி. தன் சக்தியைக் காட்ட அந்த வானரங்களை மலையுச்சியிலிருந்து தன் அலகால் கீழே கொண்டு வந்து சேர்த்தது. வானரங்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. இந்த சம்பவத்தால் வானரங்களும் தங்கள் பலமும், பௌருஷமும் கூடியதாக உணர்ந்தனர். அபி4ஜித் முஹுர்த்தத்தில் கிளம்பினர். சீதையை கண்டு பிடிக்க பல மடங்கு உற்சாகம்  அவர்களுக்கு வந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சம்பாதி பக்ஷ ப்ரரோஹோ என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 64 (335) சமுத்திர லங்க4ண மந்த்ரணம். (சமுத்திரத்தை கடக்க யோசனை செய்தல்)

 

க்3ருத்3ர ராஜன் சம்பாதி சொன்னதை திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்த வானரங்கள், தங்களுக்குள் புத்துணர்ச்சி தோன்றுவதை உணர்ந்தார்கள். ஓங்கி கோஷமிட்டனர். சிம்மத்தின் விக்ரமம் வந்து சேர்ந்தது போல, ராவணனின் நாசம் அதிக தூரத்தில் இல்லை என்று முழக்கமிட்டனர். மிகவும் சந்தோஷத்துடன் சாகர கரைக்கு வந்தார்கள். சீதையைக் காணப் போகிறோம் என்ற நம்பிக்கை வலுத்தது.  அந்த இடம் முழுவதும் சுற்றித் திரிந்து ரசித்தனர். மொத்த உலகத்தின் பிரதி பிம்பம் போல இருந்தது கடல். தென் கடலின் வட திசையில் வந்து நின்றனர். கடலில் மெதுவாக இறங்கி வானரங்கள் அனைவரும் உற்சாகமாக நின்றனர். பல விதமான நீர் வாழ் ஜந்துக்கள், மேலும் கீழுமாக சஞ்சரிப்பது ரசிக்கத் தகுந்ததாக இருந்தது.  பலவிதமான உருவங்களுடன், பெரிய பெரிய மீன்கள், ஆமைகள், சில தூங்குவது போல அமைதியாக இருக்க, சில துள்ளி குதித்து விளையாடின. சில இடங்களில் பர்வதாகாரமாக தெரிந்தன. பாதாள வாசிகளான தானவேந்திரர்களும் சஞ்சரித்தனர். ரோமம் குத்திட்டு நிற்க, பயமும், ஆவலுமாக இந்த காட்சிகளை வானரங்கள் ரசித்தனர். ஆகாயத்தைப் போலவே கடலும் எல்லையற்று இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தன. திடுமென கவலை சூழ யோசித்தனர். இந்த கடலைத் தாண்டி செல்ல வேண்டுமே, முடியுமா? கடலைப் பார்த்து மலைத்து நின்று விட்ட வானரங்களைப் பார்த்து வாலி புத்திரன் அங்கதன் ஆறுதல் சொல்லி உற்சாகமூட்டினான். பயமும் தயக்கமும் அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.  வருத்தப்படாதீர்கள். மனதில் வருத்தமோ, தயக்கமோ வர இடம் கொடுக்காதீர்கள். சற்று பலம் குறைந்தவர்களை இந்த தயக்கமும், கவலையும் செயலிழக்கச் செய்து விடும். கோபம் கொண்ட நாகம் பா3லகனை பலி வாங்குவது போல. நல்ல காரியம் செய்ய வேண்டிய சமயத்தில் இப்படித் தோன்றும் பயத்தையும், தயக்கத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நாம் உற்சாகத்தை மேற் கொள்வோம். இப்படி அங்கதன் அவர்களை சமாதானம் செய்து பேசிக் கொண்டிருந்த பொழுதே சூரியன் மலை வாயில் விழுந்து இருள் சூழ்ந்தது. அன்று இரவு நகர்ந்த பின், திரும்ப, அங்கதன் வானரங்களைக் கூட்டி மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்யலானான். மருத்3 க3ணங்கள் சூழ, இந்திரன் அமர்ந்திருப்பது போல அங்கதன் இருந்தான். வேறு யார் தான் இந்த வானர சேனையை கட்டி காக்க முடியும்? சிலர் அங்கதனைச் சுற்றி, சிலர், அனுமனுடன், சிலர் மற்ற பெரிய வானர வீரர்களுடன் என்று கூட்டம் கூட்டமாக விவாதித்தனர். அங்கதன் இறுதியில் கேட்டான். யார் இந்த மகா சமுத்திரத்தை கடக்க சக்தியுடையவன்? யார் இதை கடலைக் கடந்து சென்று, சுக்ரீவன் சொல்லைக் காப்பாற்ற போகிறான். எந்த வீரன் நூறு யோஜனை தூரம் கடலைக் கடந்து அரிய பெரிய செயலை சாதிக்கப் போகிறான்? அப்படி செய்வதால், இங்கு கூடியிருக்கும் நம் அனைவரையும் காப்பாற்றப் போகிறான். எந்த ஒருவனின் ஆற்றலால் நாம் அனைவரும் திரும்ப ஊர் போய் சேருவதும், நம் மனைவி மக்களைக் காண்பதும் சாத்தியம் ஆகும். காரியத்தை முடித்துக் கொண்டு சென்றால் தான் நமக்கு வரவேற்பும், பின் வாழ்க்கையில் சுகமும் கிடைக்கும். இது உறுதி. எந்த ஒருவனின் ஆற்றலால் நாம் ராம லக்ஷ்மணர்களையும், சுக்ரீவனையும் சந்தோஷமாக அருகில் சென்று காண முடியுமோ, அவன் நம்மில் யார்? அப்படி ஒருவன் நமக்கிடையில் இருந்து நூறு யோஜனை தூரம் சாகரத்தைத் தாண்டிச் சென்று வெற்றியோடு திரும்பி வரக் கூடியவன் யாரானாலும் நாங்கள் அவனைத் தஞ்சம் அடைகிறோம். அவன் புண்யமான அபயம் என்பதை நமக்கு அருள் செய்யட்டும். அங்கதனுக்கு யாருமே மறு மொழி சொல்லவில்லை.  அந்த வானர சைன்யமே ஸ்தம்பித்து போய் நின்றிருந்தது. திரும்பவும் அங்கதன் அவர்களைப் பார்த்து நீங்கள் அனைவருமே ப3லவான்கள், ஸ்ரேஷ்டர்கள், திடமான பராக்ரமம் உடைய வீரர்கள். பெயர் பெற்ற குலங்களில் பிறந்தவர்கள்.  நல்ல வீரர்கள் என்றும் தைரியசாலிகள் என்றும் நம்பப்படுபவர்கள். எப்பொழுதாவது, யாருக்காவது, ஏதாவது சந்தர்ப்பம் கிடைத்து சமுத்திரத்தை அல்லது எதையாவது தாண்டிய அனுபவம் இருக்கிறதா? அவரவர் சக்தியின் அளவை சொல்லுங்கள். என்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சமுத்திர லங்க4ண மந்த்ரணம் என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 65 (336) ப3லேயத்தாவிஷ்கரணம் (அவரவர் சக்தியை சொல்லுதல்)

 

அங்கதன் இப்படிக் கேட்டவுடன், வானரங்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களையும், எவ்வளவு தூரம் வெற்றிகரமாக தாண்டினோம் என்பதையும் தெரிவித்தன. க3ஜன்,  க3வாக்ஷன், க3வயன், சரப4ன், க3ந்தமாத3னன், மைந்த3, த்3விவித3ன், சுஷேணன், ஜாம்ப3வான் எல்லோரும் தங்கள் பராக்ரமத்தை சொன்னார்கள். தங்களால் செய்ய முடிந்ததை நினைவு கூர்ந்து சொன்னார்கள். கஜன், பத்து யோஜனை தூரம் தாண்டுவேன் என, கவாக்ஷன் இருபது  யோஜனை என்றான். கவயன் என்ற வானர வீரன், நான் முப்பது யோஜனை தூரன் சுலபமாகத் தாண்டுவேன் என, சரபன் முன் வந்து நான் நாற்பது யோஜனை தூரம் தாண்டுவேன் என்றான். கந்த மாதனன் ஐம்பது, மைந்தன் அறுபது, த்விவிதன் எழுபது, சுஷேணன் என்பது யோஜனை தூரமும் தாண்ட முடியும் என்று  சொன்னார்கள். முதியவரான ஜாம்பவான் எழுந்து, முன் ஒரு காலத்தில் எங்களுக்கும் நல்ல சக்தியிருந்தத்து. முதுமையினால் தளர்ந்து விட்டோம். ஆனாலும் ராம காரியம். வானர ராஜன் செய்து தருவதாக சொன்ன சொல்லை காக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம். நான் கண்டிப்பாக முயன்று பார்க்கிறேன். தொன்னூறு யோஜனை தூரம்  தாண்டி விடுவேன் என்றது. இவ்வளவு தான் என் பராக்ரமம் என்பது இல்லை. முன்பு பகவான் விஷ்ணு த்ரிவிக்ரமனாக வந்து பூமியை மூவடியால் அளந்த பொழுது கூடவே மூன்று உலகையும் பிரதக்ஷிணம் செய்தவன் நான். அப்படிப்பட்ட நான் இப்பொழுது வயது முதிர்ந்து, உடல் தளர்ந்து ஓடுவதும், தாண்டுவதும் பழைய கதையாகி விட்டது. என் இளம் வயதில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? என்றது. இவ்வளவுதான் முடியும் என்று நினைக்கிறேன். அவசியமானால், இன்னமும் முடியுமா என்று முயன்று பார்க்கிறேன் எனவும், அங்கதன் எழுந்தான். ஜாம்பவானை சிலாகித்து விட்டு, நான் நூறு யோஜனை தூரம் தாண்டுவேன். தாண்டி கடலைக் கடந்து அக்கரை சென்று விட்டு திரும்ப முடியுமா என்பது சந்தேகமே, என்றான்.  கவனமாக, மனதில் படும் சொல்லை விஷயமறிந்த முதியவரான ஜாம்பவான் சொன்னார்.  தாத, (குழந்தாய்) நீ நிச்சயம் நூறு யோஜனை தூரம் தாண்டுவாய், திரும்பியும் வருவாய். அந்த சக்தி உனக்கு உண்டு. ஆனால் வேறு யாரையாவது அனுப்புவது தான் சரி.  நீ தலைவன். உன் தலைமையில் நாங்கள் வந்திருக்கிறோம். அந்த பொறுப்பு உன்னிடம் இருப்பதால் நீயே கிளம்புவது சரியன்று. சைன்யத்தை தலைமை தாங்கி செல்பவன், சைன்யத்தின் மனைவி போன்றவன். மனைவியை காப்பாற்றுவது போல தலைவனைக் காக்க வேண்டும். எங்களால் ரக்ஷிக்கப்பட வேண்டியவன் நீ.  இந்த தேடல் என்ற செயலுக்கு நீ தான் மூலம், ஆதாரம். உன்னைச் சார்ந்து மற்றவர்கள் வந்துள்ளோம், எப்பொழுதுமே பொருளாதாரத்தில், மூலம் (சுக்ஷைகூIதுக்ஷைலு-மூல தனம்) ரக்ஷிக்கப் பட வேண்டியதே. மூலம் (வேர்) இருந்தால் தான் புஷ்ப, பழங்களைப் பார்க்க முடியும். அதனாலும் வேருக்கு நீர் வார்த்து போஷிப்பது அவசியமாகிறது,. நீ தான் இந்த காரியத்தை நடை முறைப்படுத்தி, தலைவனுக்கும்  பதில் சொல்ல வேண்டியவன். சாதனமும் நீயே, காரணமும் நீயே. எங்கள் குரு (அரசன்) புத்திரன், குரு (யுவ ராஜா) நீயே. அதனால் உன்னை வைத்து தான் நாங்கள் செயல்பட முடியும். ஜாம்பவான் இவ்வாறு சொல்லி தடுக்கவும், அங்கதன் நான் இல்லையென்றால், வேறு யார் இந்த அரிய செயலை செய்ய ஏற்றவன்? சொல்லுங்கள். வேறு யாரும் முன் வரவில்லையென்றால், பழையபடி ப்ராயோபவேசம் தான் வழி. வானர ராஜனின் கட்டளையை நிறைவேற்றாமல் நாம் திரும்பப் போவதில்லை. இது நிச்சயம்.  கிஷ்கிந்தை போனாலும் நமக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லை. வானரராஜன் நம்மை தண்டிக்காமல் விட மாட்டான். தன் கட்டளையை நிறைவேற்றாதவரை, அவன் நம்மிடம் ஈவு, இரக்கம் காட்ட மாட்டான். அதனால் நீங்களே சொல்லுங்கள். ஜாம்பவான் யோசித்து பதில் சொன்னார். இந்த காரியத்தை நல்ல முறையில் முடித்துக் கொடுக்கக் கூடியவன் நம்மிடையில் இருக்கிறான். அவனை நான் தூண்டி விடுகிறேன். என்று சொல்லி, தனியாக, இந்த சம்பாஷணைகளில் கலந்து கொள்ளாமல் அமர்ந்திருந்த வரிஷ்டனான பலசாலியான ஒரு வானரத்திடம் சென்று அமர்ந்தார். அனுமன் தான் அது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ப3லேயத்தாவிஷ்கரணம் என்ற அறுபத்தைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 66 (337) ஹனுமத் ப3ல சந்துக்ஷனம்.  அனுமனுக்கு அவன் பலத்தை நினைவுறுத்துதல்

 

இந்த ப்ரச்னைக்கு முடிவு என்ன என்ற கேள்விக் குறி எல்லோர் முகத்திலும் கவலையாகத் தெரிந்தது. ஜாம்பவான் ஹனுமானைப் பார்த்து பேசலானார். வீரனே, வானர ஜாதியாக இருந்தாலும், எல்லா சாஸ்திரங்களையும் அறிந்தவனே., தனிமையில் ஏகாந்தமாக வந்து அமர்ந்து விட்டாய், ஏன்? எதுவும் பேசாமல் இருக்கிறாய்?  ஹனுமன், நீ வானர ராஜனான சுக்ரீவனுக்கு சற்றும் குறைந்தவனல்ல. அவனுக்கு சமமானவனே. ராம லக்ஷ்மணர்களுடன் கூட ஒப்பிடும் அளவுக்கு தேஜஸும், பலமும் உனக்கு உண்டு. அரிஷ்டனேமியின் புதல்வன் வைனதேயன் என்ற மகா பலசாலி,  க3ருத்மான் என்று பெயர் பெற்றவன். உத்தமமான பக்ஷி ராஜன். பலமுறை அவனை நான் சமுத்திரத்தில் கண்டிருக்கிறேன். கடலிலிருந்து நாகங்களை குறி வைத்து உயரத்திலிருந்து பாய்ந்து கவ்விக் கொண்டு பறந்து விடுவது கண் கொள்ளா காட்சியே.  அந்த பக்ஷி ராஜனுக்கு இறக்கைகளில் என்ன பலமோ, அந்த பலம் உன் புஜங்களுக்கும் இருக்கிறது. விக்ரமும் வேகமும், அதற்கு சற்றும் குறைந்ததல்ல. ப3லம், பு3த்தி, ஆற்றல், தேஜஸ் இவை ஹரிபுங்கவனே, எல்லா ஜீவ ராசிகளிடமும் உள்ளதைவிட உயர்வாகவே உன்னிடம் அமைந்துள்ளன. ஏன் தன்னை அறிந்து கொள்ளாமல் இருக்கிறாய். ஒரு அப்ஸர ஸ்த்ரீ மிக அழகானவள். அஞ்சனா என்று பெயர். கேஸரி என்பவரின் மனைவி. இந்த கேஸரி வானர ராஜன். இவள் அழகு மூவுலகிலும் புகழ்ந்து பேசப்பட்டது. ஏதோ ஒரு சாபத்தால் வானர குலத்தில் பெண் வானரமாக பிறந்தாள். குஞ்சரன் என்ற சிறந்த வானர வீரனின் மகளாகப் பிறந்தாள். வானர இயல்பில் ஒரு நாள், தன் விருப்பம் போல உருவம் எடுக்க வல்லவள் ஆனதால், மனித உருவம் எடுத்துக் கொண்டு, அவள் அழகும் யௌவனமும்  கண்களைப் பறிக்க, விசித்ரமான மாலைகளும், உயர்ந்த பட்டாடைகளும் தரித்து,  மழைக் கால மேகம் கர்ஜித்துக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் மலையின் மேல் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.  மஞ்சள் நிற ஆடை, சிவந்த மேலாடை என்று வளைய வந்தவள், மெதுவாக நடக்கும் பொழுது காற்று வீச, அவள் ஆடை விலகியது. அந்த சமயம் அவள் அங்கங்கள் பளிச்சென்று தெரிந்தன.  பெருத்த அழகிய கால், துடை பாகங்களும், நெருங்கி இருந்த ஸ்தனங்களும், அழகிய முகமும், சிறுத்த இடையும், உருண்டு திரண்ட புஜங்களும், உடலமைப்பும், சுபமான சர்வாங்கமும் கொண்ட புகழ் பெற்ற ஸ்த்ரீயைக் கண்டதுமே, மாருதி, காம வசமானான். நீண்ட புஜங்களைப் பற்றி அவளை அணைத்துக் கொண்டான். தன் நிலை மறந்து மன்மதனின் வசமாகி அவளைக் கட்டிப் பிடித்தான். அவள் நடுங்கி விட்டாள். நல்ல நடத்தையுடையவள். யார் நீ? என்னுடைய ஏக பத்னி விரதத்தை ஏன் கெடுக்க நினைக்கிறாய். இதைக் கேட்டு மாருதி பதில் சொன்னான். பெண்ணே, பாக்யசாலியாக இரு. நான் உன்னை எந்த விதத்திலும் துன்புறுத்தமட்டேன். உனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டேன். பயப்படாதே. நான் மாருதி. உன்னை அணைத்து விட்டு இதோ விலகி விட்டேன். ஆயினும் என் ஸ்பரிசம் பட்டதால் வீர்யவானாக, புத்தி சம்பன்னனாக உன் மகன் பிறப்பான். மகா ஆற்றலும், மகா பலமும், பராக்ரமும் உடையவனாக புகழ் பெற்று விளங்குவான். தாண்டுவதிலும்,  குதிப்பதிலும் எனக்கு சமமாக இருப்பான். இவ்வாறு சொல்லவும், உன் தாய் மகிழ்ந்தாள். மகா கபியே,  குகைக்குள் உன்னை பெற்றெடுத்தாள்.  நீ பாலனாக இருந்த சமயம் உதய சூரியனைப் பார்த்து பழம் என்று எண்ணி, நீ தாவி தாவி குதித்து ஆகாய மார்கத்தில் சென்று விட்டாய். முன்னூறு யோஜனை தூரம் சென்றபின், அந்த சூரியனுடைய தேஜஸால், உனக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் உற்சாகம்  அடைந்து மேலும் தாவி, அந்தரிக்ஷம் சென்றாய். இதைக் கண்டு இந்திரன், கோபத்துடன் தன் வஜ்ரம் என்ற ஆயுதத்தால் அடித்தான். நீ மலை மேல் விழுந்தாய். அதனால் உன் கன்னம் (ஹனூ-கன்னம்) நசுங்கியது. அதிலிருந்து உனக்குப் பெயரே ஹனுமான் என்று ஆயிற்று.  நீ அடிபட்டதைக் கேட்டு க3ந்த4 வாஹனன் (மணத்தை ஏந்திச் செல்பவன்) என்ற பெயர் கொண்ட வாயு, மூன்று உலகிலும் தான் சஞ்சரிப்பதை நிறுத்தி விட்டான்.  ப்ரபஞ்சனன் என்றும் வாயுவுக்கு பெயர் உண்டு. மூவுலகும் ஸ்தம்பித்து நிற்கவும், தேவர்களும், மற்றவர்களும் பரபரப்புடன் திகைத்தனர். கோபித்துக் கொண்டிருந்த மாருதியை சமாதானம் செய்தனர். ப்ரும்மா உனக்கு வரம் கொடுத்தார். எந்த சஸ்திரத்தாலும் உன்னைக் கொல்ல முடியாது. யுத்தத்தில் சத்ய விக்ரமனாக புகழ் பெறுவாய் என்றார். உன் கன்னம் நசுங்கிப் போய் இருந்ததைக் கண்டு, சஹஸ்ராக்ஷன் எனும் இந்திரனும் வரம் கொடுத்தான். மரணம் உன்னை அண்டாது என்பதாக. அதனால் சிரஞ்சீவியாக இருப்பாய்.  உனக்கு வாஸ்தவத்தில் தந்தை கேஸரியே. மாருதனின் அனுக்ரஹத்தால் பிறந்தவன், அதனால் மாருதி போன்ற தேஜஸ், பலம் உனக்கு வாய்த்தது. இப்படிப்பட்ட உன் பலத்தை வர்ணிக்க நான் யார்? அரும் பெரும் காரியங்களைச் செய்ய உனக்குத் தான் சக்தி உள்ளது. அஞ்சனா க3ர்ப்ப4 சம்ப4வா நீ தான் எங்களுக்கு பிராண வாயு போன்றவன். எங்கள்  உயிர் தரிக்கச் செய்வது உன் கையில் இருக்கிறது.  வாயு சுதனே, வத்ஸ, குழந்தாய், ப்லவனம் (குதித்து தாவி தாண்டுதல்) எனும் தாண்டுதலைச் செய்ய நீயே ஏற்றவன். நாங்கள் உயிரை இழக்கும் நிலையில் இருக்கிறோம். நீதான் எங்களுக்கு அரு மருந்தாக இருந்து உயிர்ப்பிக்க வேண்டும். பக்ஷிராஜனே திரும்ப வந்து விட்டாற் போல, தாக்ஷ்யமும், (சாமர்த்யமும்) விக்ரமும் இணைந்து வந்தது போல வந்திருக்கிறாய். பகவான் த்ரிவிக்ரமனாக வந்த சமயம், நான் மூவுலகையும் அவருடன் பிரதக்ஷிணம் செய்திருக்கிறேன். முப்பத்து ஏழு கோடி ஜீவராசிகள் உடைய பூவுலகை வலம் வந்திருக்கிறேன். அந்த நான் இப்பொழுது வயது முதிர்ந்தவன், பராக்ரமம் எதுவும் இன்றி,  முதுமை என் சக்தியை இழக்கச செய்து விட்ட நிலையில், உன்னைத்தான் நம்பியிருக்கிறோம். எல்லா குணங்களும் நிரம்பியவன். நீதான் எங்களுக்கு கதி. அதனால் ப்லவங்கம, விஜ்ரும்பஸ்வ, மூச்சை அடக்கி வெளி விட்டு உன் பலத்தை பெருக்கிக் கொள். இந்த வானர இனத்திலேயே நீ உத்தமமானவன். இந்த வானர சைன்யம், உன் வீர்யத்தைக் காண காத்திருக்கிறது. ஹரி சார்தூலா, எழுந்திரு. இந்த பெருங்கடலைத் தாண்டு. உன் கதி (நடை)  மற்ற யாருக்கும் கிடையாது. உன் வழியே தனி. இந்த வானரங்களைப் பார். முகம் வாடி இருக்கின்றன. ஏன் இன்னமும் யோசிக்கிறாய். மகா வேகம் படைத்தவனே, மூவடியால் உலகை அளந்த த்ரிவிக்ரமன் போல நீயும் எழுவாய். த்ரிவிக்ரமன் போலவே உன் விக்ரமும் வளரட்டும். ஜாம்பவான் தூண்டி விட தன்  ஆற்றலைத் தெரிந்து கொண்ட ஹனுமான், பவனாத்மஜன் தன் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டு, வானரங்கள் மனம் குளிரச் செய்தான். 

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமத் ப3ல சந்துக்ஷணம் என்ற அறுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 67 (337) லங்க4னாவஷ்டம்ப: கடலைத் தாண்டும் முயற்சி

 

ஜாம்பவான் இப்படி ஸ்துதி செய்யவும், மகா பலசாலியான ஹனுமான் வளர ஆரம்பித்தான். வாலை ஆட்டிக் கொண்டு, மகிழ்ச்சியுடன் தன் பலத்தைக் கூட்டிக் கொண்டான். முதியவர்களான வானர வீரர்களும், ஹனுமனை தோத்திரம் செய்து, பாராட்ட, தேஜஸும் கூடி, வார்த்தைகளில் விவரிக்க முடியாத அதிசயமான ரூபத்துடன் ஹனுமான் காட்சி தந்தான். மலை குகையிலிருந்து வெளி வரும் சிங்கம் பிடறி மயிரை அசைத்துக் கொண்டு, வருவது போல, ஹனுமானும் கர்ஜனை செய்தபடி வளர்ந்தான். மாருதனுடைய புத்திரன் (ஔரஸ-மாருதியின் சொந்த மகன்) என்பதால் மாருதன் போலவே கர்ஜிக்கிறான். வளருகிறான். நூறு யோஜனை தூரம் தாண்ட தன்னை தயார் செய்து கொள்ளும் விதமாக வளர்ந்து தன் உருவத்தை பெரிதாக்கிக் கொள்ளும் ஹனுமனைப் பார்த்து வானரர்கள் எதிர்பாராத இந்த மாற்றத்தைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.  திகைத்தனர். மகிழ்ச்சியும், ஆராவார கூச்சலுமாக, சற்று முன் இருந்த கவலை மறைய, பெருங்குரலில்  கோஷமிட்டனர். விரிந்த கண்களுடன் வியப்பும் மகிழ்ச்சியுமாக ஹனுமானை உற்சாகப் படுத்தினர். நாராயணன் த்ரிவிக்ரமனாக வளர்ந்த பொழுது பிரஜைகள் ஆரவரித்து  ஊக்கமளித்தது போல இருந்தது. முகத்தின் சோபை உடல் வளர வளர அதிகமாகத் தெரிந்தது. புகையில்லாத நெருப்பு போலவும், ஆகாயமே விளக்கு வைத்தாற்போல  ஒளியைச் சிதற விடுவது போலவும், வானரங்களின் மத்தியிலிருந்து புறப்பட்டு வானரங்களில் மூத்தவர்களை வணங்கி, ஹனுமன் சொன்னான். அருஜத்- ஆரோக்யமான வாயு பர்வதங்களின் மேலே சஞ்சரித்து ஹுதாசன எனும் நெருப்பின் தோழனான வாயு, ப3லவான், ஒப்புவமை இல்லாதவன், ஆகாயத்தில் தெரிபவன், படைப்பிலேயே அதிக வேகம் உடைய வாயு, அவனுடைய ஔரஸ- மானஸ புத்திரன்- வாயுவின் அருளினால் பிறந்தவன்- -நான். ப்லவனம் (குதித்தல், எம்புதல் தவளை, குரங்குகள் செய்வது போல) எனும் தாவிச் செல்லும்  வகையில் எனக்கு இணை யாரும் இல்லை. வானத்தை மறைத்து என்னால் பரந்து நிற்க முடியும். மேரு மலையை எந்த வித உதவியுமின்றி ஆயிரம் முறை தொட்டு விட்டு வருவேன். என் புஜங்களின் சக்தியால் நான் சமுத்திர லங்க4ணம் அனாயாசமாக செய்வேன். இடையில் வரும் பர்வதங்கள், நதிகள் அனைத்தையும் சமாளிப்பேன். என் வேகத்தில் என் கால்களுக்கு இடையில் சமுத்திரம் கடையப் பட்டது போல கலங்கும். வருணாலயம் எனும் கடல், இதில் உள்ள பன்னக- நாகங்கள், இவைகளை சாப்பிடும் பக்ஷிராஜனான கருடன் வேகமாக வந்து நாகங்களை கொத்திக் கொண்டு போகும் சமயம் நானும் அதன் வேகத்துக்கு ஈ.டு கொடுப்பேன். உதய கிரியிலிருந்து புறப்பட்டு தன் கிரணங்களோடு ஜ்வலிக்கும் சூரியனை அவன் அஸ்தமனம் ஆகும் வரை தொடர்ந்து செல்லவும் என்னால் முடியும். பூமியைத் தொடாமலே திரும்பியும் வந்து விடுவேன். வானர வீரர்களே, என் மகத்தான வேகத்தாலேயே, ஆகாயத்தில் தென்படும் இடர்பாடுகளை களைந்து விடுவேன். சமுத்திரத்தை வற்றச் செய்வேன். பூமியை பிளந்து விடுவேன். மலைகளை ஆட்டி வைப்பேன். நான் தாண்டி குதித்து செல்லும் பொழுது எதிரில் எது வந்தாலும், என் கால்களுக்கு இடையிலான ஊரு, (துடை) வேகத்தில் அகற்றி விடுவேன். மகார்ணவத்தை, இந்த பெரும் கடலை, தாண்டும் என் முயற்சியில், கொடிகளிலும், மரங்களிலும் உள்ள புஷ்பங்கள் உதிர்ந்து என்னுடன் பறந்து வரப் போகின்றன. ஸ்வாதி நக்ஷத்திரத்தின் பாதை போல என் வழி ஆகாயத்தில் தனித்து தெரியப் போகிறது. பயங்கரமான ஆகாய மார்கத்தில் எம்பி குதித்து நான் ஏறியும். இறங்கியும் செல்வதை உலகத்தவர் அனைவரும் காணப் போகின்றனர். மகா மேகம் போன்று வானில் நான் சஞ்சரிப்பதை நீஙகள் காணத்தான் போகிறீர்கள். ஆகாயத்தையே விழுங்கி விடுவது போல ப்ரும்மாண்டமான உருவத்துடன் நான் மலைகளையும், மேகங்களையும் கைகளால் அப்புறப்படுத்திக் கொண்டு, சமுத்திரத்தை கலக்கிக் கொண்டு செல்லும் பொழுது, வைனதேயன், நான் எங்கள் இருவரில்  யாருக்கு வேகம் அதிகம் என்று நீங்கள் யோசிப்பீர்கள். சுபர்ண ராஜாவான வைனதேயன், என் தந்தை மாருதன், இப்பொழுது நான், என்று தெரிந்து கொள்வீர்கள்.  கண் மூடி திறப்பதற்குள், பிடிமானம் எதுவும் இல்லாத ஆகாயத்தில், திடுமென சென்றடைந்து விடும் என் வேகம், மேகத்தில் தோன்றும் மின்னலின் வேகத்திற்கு இணையாக இருக்கும். நான் சாகரத்தின் மேல் தாவி தாண்டிச் செல்லும் பொழுது, முன் காலத்தில் த்ரிவிக்ரமனாக பகவான் விஷ்ணு, மூவுலகை ஈரடியால் அளந்த சமயம், அவர் பாதம் காட்சி தந்ததைப் போல இருப்பேன்.  இவைகளை நான் அறிவினால் உணர்ந்து சொல்கிறேன். மனதில் பட்டதைச் சொல்கிறேன். நிச்சயம் ஜனகாத்மஜாவை காண்பேன். நீங்கள் அனைவரும் சந்தோஷமாக ஆரவாரியுங்கள். என் சக்தியில் சந்தேகம் வேண்டாம். மாருதனுடைய வேகமும், கருடனுடைய கூர்மையும் கொண்டு இருபதாயிரம் யோஜனை கூடத் தாண்டுவேன் என்று நான் நம்புகிறேன். வஜ்ரம் ஏந்திய வாஸவனோ, ஸ்வயம்பூவான ப்ரும்மாவோ, கையில் வைத்திருக்கும் அமுதத்தை, அவர்கள் எதிரிலேயே தட்டிப் பறித்துக் கொண்டு வந்து விடுவேன். இலங்கையைக் கூட அலாக்காக தூக்கி வந்து விடுவேன் என்று எனக்குத் தோன்றுகிறது.  இப்படி தன் புதிய வளர்ச்சியில் மகிழ்ச்சி நிறைந்த குரலில் ஹனுமான் வானரர்களிடம் நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசவும், வானரங்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தன. ஆச்சர்யத்துடன் வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் இருந்தன. இந்த உறுதி மொழிகள் அவர்களின் கவலையை அடியோடு நீக்கியது.  ஜாம்பவான் பேச ஆரம்பித்தார்.  வீரனே, கேஸரி மகனே, ஹனுமானே, மாருதாத்மஜனே, உன்னைச் சார்ந்தவர்களின் பெரும் கவலை நீங்கியது. தாத, உன் நலனில் நாங்கள் அனைவரும் நாட்டம் உடையவர்களே. நலமாக சென்று வர வாழ்த்துகிறோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த உன் காரிய சித்திக்கு மங்களா சாஸனம் செய்கிறோம்.  ரிஷிகளின் பிரஸாதத்தாலும், இந்த முதிய வானரங்களின் நல்லெண்ணத்தாலும், குரு ஜனங்களின் ஆசிர்வாதத்தினாலும், இந்த பெரும் கடலை கடக்க தாவிச் செல். நாங்கள் நீ திரும்பி வரும் வரை ஒற்றைக் காலில் நிற்போம். இந்த வானர சமூகத்தின் ஜீவிதம் (உயிர்) உன்னுடன் வரும். எங்கள் மனோ பலம் உனக்கு ஆதரவாக உடன் வரும். இதைக் கேட்டு ஹனுமான் அவர்களைப் பார்த்து, இந்த பூமி தளத்திலிருந்து நான் கிளம்ப இயலாது.  நான் இதை உதைத்துக் கொண்டு தாவிச் செல்லும் வேகத்தை இந்த பூமி தாங்காது. இந்த சிறு பாறைகள் இடைஞ்சலாக இருக்கும். மகேந்திர மலையின் சிகரம் ஸ்திரமானது, பெரியது. இந்த மகேந்திர மலையின் சிகரத்திலிருந்து நான் வேகம் எடுக்கிறேன். பல வித மரங்கள், தாதுக்கள் மண்டிய இடத்தில்,  நூறு யோஜனை தூரத்தை கடக்க, கால்களால் உதைத்து நான் தாவிச் செல்லும் வேகத்தை இந்த சிகரம் தாங்கும். இதன் பின் மாருதி மகனான வானர ஸ்ரேஷ்டன், மலை மேல் ஏறினான். எதிரிகளை த்வம்சம் செய்யக்கூடிய பலசாலியாக, பலவிதமான மரங்கள் வளர்ந்த மிருகங்கள் வாழ்ந்த பசுமையான தாவரங்கள் நிறைந்த கொடியில் மலர்ந்த புஷ்பங்கள், நித்யம் பூக்களுடனும் பழங்களுடனும் காட்சி தரும் மரங்கள், சிங்கமும், சார்தூலமும் சஞ்சரிக்கும், மதம் கொண்ட யானைகள் உலவும், யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் நிலைகளை கலக்கி அட்டகாசம் செய்யும், மகான்கள் வாழும் அந்த மகேந்திர மலையின் சிகரத்தை, மகா பலவானான ஹனுமான் மகேந்திரனுக்கு சமமான விக்ரமத்துடன், ஏறி அடைந்தான். மகானான அவன் பாதங்கள் பட்ட இடம் வலி எடுக்க, மகேந்திர மலை தவித்தது.  தன் போக்கில் மதம் கொண்டு திரிந்த பெரும் யானையை எதிர் பாராத விதமாக சிங்கம் தாக்கியது போல வேதனைப் பட்டது.  நாக கந்தர்வ மிதுனங்கள் பானங்களை ரசித்துக் கொண்டிருந்ததை கை நழுவ விட்டனர். பறவைகள் தூக்கியெறியப் பட்டு கீழே விழுந்தன. வித்யாதர கணங்கள் அவசரமாக மலைச் சாரலை விட்டு அகன்றனர். மலையில் அசையாது படுத்துக் கிடந்த பெரும் நாகங்கள் அசைந்தன. மலையுச்சியிலிருந்து தாதுக்களின் (உலோக) துகள்கள் சிதறின. அந்த மகா கிரியின் நிலையே இப்படி ஆகி விட்டது. பாதி ஊர்ந்து கொண்டிருந்த நாகங்கள், தங்கள் கதி தடைப் பட்டதால் வேதனையுடன் உஷ்ண பெருமூச்சு விட்டன. பூமியில் நட்ட கொடிக் கம்பத்தில் கொடியை பறக்க விட்டது போல அந்த மலை விளங்கியது. பயத்துடன் பரபரப்புடன் அவசரமாக மலையுச்சியை விட்டு விரைந்து செல்லும் ரிஷிகள் மலையுச்சியில் நிறைந்து விட்டனர். வழிப்போக்கன், நடு காட்டில் கூட வந்த யாத்ரியை தவற விட்டது போல, இவர்கள் அனைவரும் விலகிச் செல்லவும், மகா மலை தவிப்பது போல இருந்தது. தன் வேகத்தை தனக்குள் அடக்கிக் கொண்டு, மகா வேகவானான  வானர வீரன், எதிரிகளில் சிறந்த போர் வீரனையும் எதிர்த்து ஜயிக்க கூடிய வீரன், மனதை ஒருமைப் படுத்தி, மஹானுபாவன், தன் மனதால் இலங்கையை அடைந்தான். மனஸ்வியான ஹனுமான் மனோ பலம் மிகுந்தவன்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், லங்க4ணாவஷ்டம்போ என்ற அறுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் நிறைவுற்றது.

 

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக