ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டம் 107 – 117
அத்தியாயம் 107 (514) ஆதித்ய ஹ்ருதயம்
ராவணன் யுத்தம் செய்யத் தயாராக எதிரில் வந்து நிற்கவும், ராமன் யோஜனையுடன், யுத்தம் செய்த களைப்புடன் இருந்ததையும், தேவர்களுடன் யுத்தத்தைக் காண வந்த பகவான் அகஸ்திய ரிஷி கண்டார். அவர் உடனே ராமன் அருகில் சென்று ராம, ராமா | மஹா பாஹோ | நான் சொல்வதைக் கேள். பழமையான ரகஸியம் இது. குழந்தாய்| எதிரிகள் அனைவரையும் ஜயிக்க உதவும் சக்தி வாய்ந்த மந்திரம் இது. ஆதித்ய ஹ்ருதயம் என்ற பெயருடையது. பாவனமானது. சத்ருக்களை ஒட்டு மொத்தமாக அழிக்க வல்லது. மிகவும் நன்மை தரக் கூடிய, அழிவில்லாத, ஜயத்தை தரும் இதை நித்யம் ஜபம் செய்ய வேண்டும். எல்லா மங்களங்களுக்கும் மேலான மங்களகரமானது. எல்லா பாபங்களையும் தீர்க்கக்கூடியது. சிந்தனை, சோகம் இவற்றை மாற்றி, சமாதானம் செய்யக் கூடியது. ஆயுளை வளர்க்கும் உத்தமமான மந்திரம். நான் சொல்கிறேன், கேள். ஓளிக் கிரணங்களைப் பரப்பி ஒளியை அளிக்கும் பாஸ்கரன், விவஸ்வான் என்று போற்றப்படும், புவனேஸ்வரனான இந்த சூரியனை, உதய காலத்திலேயே நமஸ்கரிக்க தேவர்கள் கூடி நிற்கின்றனர். இந்த சூரியனை பூஜை செய். வழி படு. இந்த சூரிய தேவன், எல்லா தேவதைகளுக்கும் உள் நின்று ஆத்மாவாக விளங்குபவன். தேஜஸ் நிரம்பியவன். ஒளியைத் தருபவன். தன் ஒளிக்கற்றைகளால் தேவாசுர கணங்களை, உலகங்களை காப்பாற்றுகிறான். இவரே தான் ப்ரும்மாவாக, விஷ்ணுவாக, சிவனாக, ஸ்கந்தனாக, பிரஜாபதியாக, மகேந்திரனாக, குபேரனாக, பித்ருக்களாக, வசுக்களாக, சாத்யர்களாக, அஸ்வினி குமாரர்களாக, மருத் கணங்களாக, மனுவாக, வாயுவாக, நெருப்பாக, ப்ரஜைகளின் ப்ராணனாக, ருதுக்களை நிர்வகிக்கும் இயற்கையாக, ஒளியைத் தருபவனாக, விளங்குகிறார். இவரே ஆதித்யன், சவிதா, சூரியன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆகாயத்தில் சஞ்சரிப்பவன், பூஷா என்றும், கிரணங்களையுடையவன் என்று பொருள் பட க3பஸ்திமான் என்றும், சுவர்ணம் போன்ற இளம் சூரியன் பானு என்றும், பொன் போன்ற ஒளிக்கற்றைகளுடன் திவாகரன், தினத்தை செய்பவன் என்றும் (பகல் நேரத்தை செய்பவன், பகல் வரக் காரணமாக இருப்பவன்) என்றும் அழைக்கப் படுகிறார். பசு மஞ்சள் நிறமான குதிரைகள், ஆயிரம் கிரணங்கள், வேகமாக செல்லும் ஏழு குதிரைகள், ஒளிக் கற்றைகள், இவைகளை உடையவர். இருட்டை வேரோடு களைபவர். சம்பூ, த்வஷ்டா, மார்த்தாண்டன், அம்சுமான் என்றும் அழைக்கப்படுபவர். ஹிரண்ய கர்பன், சிசிரன் (குளுமைக்கு காரணமானவன்) எரிக்கவும் கூடியவன், ரவி, அக்னி கர்பன், அதிதியின் புத்திரன், சங்கன், குளிரை விரட்டுபவன். ஆகாயத்தில் சஞ்சரிப்பவன், தாமஸமான இருட்டை முறியடிப்பவன், ருக், யஜுர், சாம வேதங்களில் போற்றப்படுபவன். பெருத்த மழைக்கும் காரணமானவன். நீருக்கும் நண்பன், விந்த்ய வீதீ- விந்த்ய மலைச் சாரல்களில் துள்ளி குதிப்பவன். (ப்ளவங்கமா -துள்ளி குதித்து ஓடும் இயல்புடைய வானரங்களுக்கும் பெயர்). தகிக்கக் கூடியவன். மண்டலமாக விளங்குபவன். ம்ருத்யுவும் இவனே. மஞ்சள் நிறமானவன். எதையும் பொசுக்கும் உஷ்ணமுடையவன். கவி, விஸ்வன், மகா தேஜஸ்வி, சிவந்த நிறமாகவும் காணப்படுபவன். எல்லா ஜீவ ராசிகளுக்குள்ளும் அந்தராத்மாவாக விளங்குபவன். நக்ஷத்திரங்கள், க்ரஹங்கள், தாரா இவைகளுக்குத் தலைவன். உலகை பிரகாசிக்கச் செய்பவன். தேஜஸ் என்று சொல்லக் கூடிய அனைத்திலும் அதிக தேஜஸ் உடையவன். பன்னிரண்டு விதமான (ஆத்மா) ரூபங்களை உடையவன், ஆன சூரிய தேவனே, உனக்கு வணக்கம், நமஸ்காரம். ஜயமாக, வெற்றியாக விளங்கும் உனக்கு நமஸ்காரம். வெற்றி வாய்ப்பைத் தரும் உனக்கு நமஸ்காரம். இளம் பசுமை கலந்த மஞ்சள் நிறக் குதிரைகளை உடைய உனக்கு நமஸ்காரம். அனேக நமஸ்காரம். ஆயிரம் கிரணங்கள் உடைய உனக்கு அனேக நமஸ்காரம். ஆதித்யனாக விளங்குபவனே | உனக்கு அனேக நமஸ்காரம். உக்ரனாக,. வீரனாக விளங்கும் உனக்கு நமஸ்காரம். சாரங்கனாக நிற்கும் (மழை) உனக்கு அனேக கோடி நமஸ்காரங்கள். பத்மத்தை மலரச் செய்யும் உனக்கு அனேக கோடி நமஸ்காரங்கள். மார்த்தாண்டனாக தகிக்கும் உனக்கு அனேக கோடி நமஸ்காரங்கள். ப்ரும்மா, ஈ.சான, அச்யுதன் இவர்களுக்கும் தலைவனாக நிற்கும் சூரிய தேவனுக்கு, ஆதித்யன் எனும் ஒளி மிகுந்தவனுக்கு நமஸ்காரம். தன் ஒளியால் பிரகாசமாக தெரியும், எல்லாவற்றையும் விழுங்கி விடும் ரௌத்ரமான ரூபம் உடையவனுக்கு நமஸ்காரம். இருட்டை விரட்டியடிக்கும், பனியை துரத்தும், சத்ருக்களை நாசம் செய்யும், ஒப்பில்லாத, எல்லையில்லாத பெருமைகள் உடையவனே | உனக்கு நமஸ்காரம். செய் நன்றி மறந்தவனை நாசம் செய்யும் தேவனே, ஜோதிகளுக்குத் தலைவனாக இருப்பவனே, உனக்கு நமஸ்காரம். புடமிட்டத் தங்கம் போன்று ஒளி வீசும், அக்னியாக நிற்பவனே, விஸ்வ கர்மாவே, உலகை செயல் பட வைப்பவனே, உனக்கு நமஸ்காரம். இருட்டை இல்லாமல் செய்பவனே, உனக்கு நமஸ்காரம். உனக்கு நமஸ்காரம். ரவியாக இருப்பவன், உலகில் சாக்ஷியாக நிற்பவன், (உலகின் நடப்புகளைக் கண்கூடாக காண்பவன்), பிரபுவான இவன் தான் நாசமும் செய்கிறான். ஜீவ ராசிகளை, பின் இவனே ஸ்ருஷ்டியும் செய்கிறான். இவனே வளர்க்கிறான். அவர்களை தண்டிக்கவும் செய்கிறான். தகித்து வருத்துகிறான். மழையாக பொழிந்து குளிர்விக்கிறான். இவன் கிரணங்களே இந்த காரியங்களைச் செய்கின்றன. தூங்கும் ஜீவன்களின் உள்ளும் இவன் விழித்திருக்கிறான். கவனமாக காவல் நிற்கிறான். இவனே அக்னி ஹோத்ரம். அக்னி ஹோத்ரம் செய்பவர்களுக்கு பலனாகவும் இவனே ஆகிறான். வேதங்களும், யாகங்களும், யாகங்களின் பலனும் இவனே. உலகில் நடைபெறும் செயல்கள் யாவும் இவன் ஆட்டுவிப்பதன் காரணமாகவே ஆடுகின்றன. செயல் படுகின்றன. இவன் தான் ரவி என்றும் அழைக்கப்படும் பிரபுவாகிறான். ஆபத்து காலங்களில், கஷ்டமான சமயங்களில், அடர்ந்த வனங்களில், பயத்துடன் தடுமாறும் பொழுதும், தன்னை நினைத்து போற்றும் அன்பர்களை கை விட மாட்டான். நிச்சயமாக காப்பாற்றுவான். ராகவா| இவனை வணங்கும் அன்பர்கள் ஒரு பொழுதும் வருந்த மாட்டார்கள். இவனை பூஜை செய். ஏகாக்ர சிந்தையோடு போற்று. ஜகத்பதியான தேவ தேவனாக எண்ணி வணங்கு. இந்த துதியை மூன்று முறை ஜபித்து நீ வெற்றியடைவாய். யுத்தத்தில் ஜயம் உனக்கே. இந்த க்ஷணத்திலேயே நீ ராவணனை வதம் செய்வாய். என்று இவ்வாறு வாழ்த்தி அகஸ்தியர் தன் வழியே சென்று விட்டார். இதைக் கேட்டு ராகவனும் தன் வருத்தம் கவலை தீர்ந்து அமைதி அடைந்தான். மிகவும் மகிழ்ச்சியுடன் தன் இயல்பான நிலைக்குத் திரும்பினான். கம்பீரமும், தன்னம்பிக்கையும் திரும்பப் பெற்றான். மூன்று முறை ஆசமனம் செய்து, சுத்தமாக ஆகி, ஆதித்யனைப் பார்த்து ஜபம் செய்தான். ஜபம் செய்த பின், மிகுந்த மகிழ்ச்சியும், மன நிறைவும் பெற்றான். தன் வில்லை எடுத்துக் கொண்டு, வீர்யம் நிறைந்தவனாக, ராவணனை நேருக்கு நேர் பார்த்து யுத்தம் செய்ய ஆயத்தமாக நெருங்கினான். என்ன ஆனாலும், இன்று இவனை வதம் செய்தே தீருவது என்று உறுதி பூண்டான். இதைக் கண்டு ரவியான சூரியனும் மகிழ்ந்து ராமனைப் பார்த்து, நிசிசரபதியான ராவணனின் அழிவு காலம் நெருங்கி விட்டதையறிந்து, -த்வர -வேகமாக செயல் படு என்று சொன்னான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹ்ருதயம் என்ற நூற்று ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 108 (515) சுபா4 சுப4 நிமித்த தரிசனம் (சுப அசுப நிமித்தங்களைக் காணுதல்)
கந்தர்வ நகரமோ எனும் படி விசாலமாக இருந்த பெரிய ரதம், அதன் கொடிகளைத் தூக்கிக் கட்டி, மாதலி தயார் செய்தான். எதிரி சைன்யத்தை நாசம் செய்ய வல்லதான ரதம். துடிப்பாக இருந்த குதிரைகளை மாலை அணிவித்து அந்த ரதத்தில் பூட்டினான். யுத்தம் செய்யத் தேவையான சாமான்களை நிரப்பினான். இதனிடையில், பதாகம், த்வஜம் இவைகளை அதனதன் இடத்தில் பொருத்தி, ஆகாயத்தைத் தொடுவது போலவும், பூமியை நடுங்கி அலறச் செய்வது போலவும், தன் சைன்யத்துக்கு மகிழ்ச்சியும், எதிரி தரப்பினருக்கு நாசத்தையும் விளைவிக்கும் வண்ணம், வேகமாக ஓசையுடன் வரும் ராவணனுடைய ரதத்தை, ராக்ஷஸ ராஜனுடைய ரதத்தை, நர ராஜனான ராமர் கண்டார். கரு நிற குதிரைகள் பூட்டப் பெற்று, ரௌத்ரமாக காணப் பட்டது. மின்னலுடன் கூடிய மேகம் நிறைந்த வானமோ, எனும் படி காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த இந்திர ஆயுதங்கள் போல, சரங்களை மழையாக பொழியும் வண்ணம் அமைக்கப் பட்டிருந்ததையும், மழை மேகம் போல, அம்புகளை மேலே இருந்து பொழியவும் வசதிகள் உடையதுமான ராக்ஷஸ ராஜாவின் உயர்ந்த ரதத்தை ராமர் கண்டார். வஜ்ரம் மலைகளை பிளந்தபொழுது, தோன்றிய சப்தத்துக்கு இணையாக ஓசை எழுப்பியபடி ஓடி வந்தது. அந்த வேகத்தில் இளம் (சந்திரன்) பிறை போல இருந்த வில் மீட்டப் பெற்று நாதம் எழ வரும் ரதத்தைப் பார்த்து, ராமர், சஹஸ்ராக்ஷனின் சாரதியான மாதலியை நோக்கி மாதலியே | பார். எதிரியின் ரதம் வேகமாக மேலே வந்து விழுவது போல ஓடி வருகிறது. பரபரப்புடன் இடது பக்கம் சாய்ந்து கொண்டு வருகிறது. இதை நான் அழிக்க விரும்புகிறேன். மேலெழும்பி வரும் மேகத்தை வாயு கலைப்பது போல இதை நான் கலைத்து, நாசமாக்குவேன். கண்ணுக்கு ரம்யமாக காட்சியளிக்கிறது. சற்றும் குறையின்றி பரபரப்புடன் காணப் படுகிறது. நம் ரதத்தையும் தயாராக்கு. வேகமாக கிளம்புவோம். புரந்தரன் ரதத்தை ஓட்டுபவன் நீ. எதையும் மறக்க மாட்டாய். இருந்தும் நினைவு படுத்துகிறேன். கட்டளையாகச் சொல்லவில்லை. ராமன் சொன்னதைக் கேட்டு மாதலி சந்தோஷமடைந்தான். தேவ ராஜனின் சிறந்த சாரதியான மாதலி ரதத்தை அவ்விதமே தயார் செய்தான். ராவணனின் ரதத்தை இடது புறமாக கடந்து சென்று ரதம் கிளப்பிய புழுதி ராவணன் முகத்தில் படுமாறு செய்தான். இதனால் கண்கள் தாமிரம் போல சிவக்க கோபத்துடன் தசக்ரீவன் தன் வில்லை எடுத்து எதிரில் வந்து நின்ற ராமனின் பேரில் தன் அம்புகளை பிரயோகம் செய்ய ஆரம்பித்தான். தன் மேல் தாக்குதலை ஆரம்பித்த ராவணனுக்கு பதிலடி கொடுக்க, தன் தைரியத்தையும், ரோஷத்தையும் ஒன்று சேர்த்து, ராமர் இந்திரனுடைய வில், அம்புகள் இவற்றை கையால் பற்றினார். சூரிய கிரணங்கள் போல ஒளி வீசும் பல அஸ்திரங்களும் அந்த ரதத்தில் வந்து சேர்ந்தன. இதற்குப் பின் நடந்த யுத்தம் விவரிக்க இயலாதது. இருவரும் ஒருவரையொருவர் வதம் செய்வதில் முனைந்து நின்றனர். இருவரும் எதிரெதிரில் நின்றதே, கர்வம் கொண்ட இரு சிங்கங்கள் நிற்பது போல இருந்தது. அச்சமயம் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், வந்து சேர்ந்தனர். இரண்டு ரதங்களில் எதிர் எதிராக நின்று யுத்தம் செய்வதைக் காண கூடினர். ராவணனின் வதத்தை விரும்பிய தேவர்கள், ராவணன் அழியவும், ராகவனின் ஜயத்துக்காகவும் கோஷம் இட்டனர். காற்று மண்டலமாக , தீவிரமாக, அந்தரிக்ஷத்தில் வீசியது. பெரும் கழுகுகளின் கூட்டம் ஆகாயத்தில் வட்டமிடத் தொடங்கின. ராவண ரதம் எங்கெங்கு செல்கிறதோ, கழுகு கூட்டம் தொடர்ந்து சென்றது. செம்பருத்திப் பூவின் வண்ணத்தில் சந்த்யா காலம் லங்கையின் மேல் படர்ந்தது. பட்ட பகலில், விளக்கு எரிவது போல பூமியில் பிரகாசமாகத் தெரிந்தது. கூட்டம் கூட்டமாக மின் மினி பூச்சிகளும், வண்டுகளும் ரீங்காரம் செய்து கொண்டு ராவண ராக்ஷஸ வீரர்களை துன்புறுத்தியவாறு இருந்தன. ராவணன் நின்ற இடத்தில் வசுந்தரா என்ற பூமியும் நடுங்கியது. ராவண வீரர்கள் வீசி அடிக்க முற்படும் பொழுது யாரோ கையைப் பற்றி தடுப்பது போல தடைகள் தோன்றின. சூரியனின் கிரணங்கள் சில சமயம் தாம்ர வர்ணத்திலும், மஞ்சளாகவும், வெண்மையாகவும் , பழுப்பு நிறத்திலும் விழுந்தன. ராவணன் சரீரத்தில் இந்த வகையில் கிரணங்கள் பல வர்ணங்களில் படும் பொழுது பெரும் மலையில் தாதுக்கள் மின்னுவது போல இருந்தது. குள்ள நரிகள், ஊளையிட்டதும் அப சகுனமாக இருந்தது. (சிவா|| குள்ள நரிகள். சிவம்-நன்மை) புழுதியை வாரியிறைத்துக் கொண்டு எதிர் காற்று சுழன்று அடித்தது. ராக்ஷஸ ராஜன் பார்வை மறைக்க திணறினான். அதே சமயத்தில் இந்திரனுடைய வில்லிலிருந்து பாணங்கள் அவன் படை மேல் வந்து விழுந்தன. ராவணன் கண் முன்னாலேயே மழை மேகமே இன்றி இடி ஓசை கேட்டது போல, இந்த பாணங்கள் வந்து விழுந்த ஓசை பயங்கரமாக கேட்டது. திசைகளும், மற்ற இடங்களும் கடும் இருட்டினால் சூழப் பெற்றதாக, ஆயிற்று. புழுதி படிந்து ஆகாயமும் கண்ணுக்கு புலப்படவில்லை. சாரிகா என்ற பறவைகள் ஏதோ கலஹம் செய்ய வருவது போல அந்த ரதத்தின் மேல் வந்து விழுந்தன. நூற்றுக் கணக்காக வந்து விழுந்த அந்த பறவைகளே பயத்தை கிளப்பின. குதிரைகளின் முட்டிகள் உரசி நெருப்புப் பொறி பறந்தன. இதனால் எப்பொழுதும் கண்களில் நீர் முட்டி நின்றது. ஒரே சமயத்தில் அந்த குதிரைகள் அக்னியையும், நீரையும் சொரிந்தன. இது போன்ற பல பயங்கரமான துர்நிமித்தங்கள் ராவணனின் நாசத்தைச் சொல்வது போல அடுத்தடுத்து தோன்றின. ராமனிடத்தில் நிமித்தங்கள்., சௌம்யமாக, சுபமாகத் தோன்றின. ஜயத்தை சொல்பவைகளாக, எங்கும் மங்களகரமான சகுனங்களே தென்பட்டன. இந்த சுபமான நிமித்தங்கள், தனக்கு வெற்றியைத் தரும் சூசகங்கள் என்று தெரிந்து கொண்ட ராமரும், மிகவும் மன நிறைவுடன், ராவணன் அழிந்தான் என்றே எண்ணிக் கொண்டார். தன்னிடத்தில் தோன்றிய சில நிமித்தங்களை, அதன் பொருளை உணர வல்லவரானதால், நல்ல சகுனங்கள், நமக்கு வெற்றி உறுதி என்ற நம்பிக்கையும் வலுப்பட, மகிழ்ச்சியுடன் நிம்மதியும் அடைந்தார். யுத்தத்தில் மேலும் பராக்ரமத்தைக் காட்டத் தயாரானார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சுபா4சுப4 நிமித்த தரிசனம் என்ற நூற்று எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 109 (516) ராவண த்4வஜோன்மத2னம் (ராவணன் கொடியை விழச் செய்தல்)
இதன் பின் நடந்த யுத்தம் மகா பயங்கரமானது. காணக் கிடைக்காத அரிய யுத்தம். ஸர்வ லோகத்தையும், பயத்தில் ஆழ்த்தி, இரு ரதங்களில் இரு வீரர்களும் ஏறி நின்று, மகா பயங்கரமாக யுத்தம் செய்த காட்சி. ராக்ஷஸ சைன்யமும், வானரங்களின் பெரும் படையும், கையில் ஆயுதங்களுடன் செயலற்று நின்றன. ப3லவான்களான நர, ராக்ஷஸர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் பொழுது, மற்றவர்களுக்கு என்ன வேலை? ஆச்சர்யத்தோடு, உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடப்பதை கவனிக்கலாயினர். ஒருவரையொருவர் தாங்கள் அடித்துக் கொள்வதை நிறுத்தி விட்டு, பல விதமான ஆயுதங்களுடன், தோள் உயர்த்தி துடிப்பாக நின்ற இருவரையும், அவர்களின் பல பரீக்ஷையாக நடக்கப் போகும் யுத்தத்தையும் காண ஆவலுடன், அதிசயமுமாக நின்றனர். ராவணனை வானரங்களும், ராமனை ராக்ஷஸர்களும் கண்களில் ஆச்சர்யம் ததும்ப பார்த்துக் கொண்டு நின்றதே ஒரு அத்புதமான சித்ரம் போல காட்சியளித்தது. இருவரும் நிமித்தங்களையும் பார்த்து புரிந்து கொண்டு, வெகு காலமாக அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வெளிப்பட யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். ஜயிக்க வேண்டும் என்று காகுத்ஸனும், மடிய வேண்டும் என்று ராவணனும் போர்க் களத்தில் இறங்கியது போல இருந்தது. தங்களுடைய வீர்யம் அனைத்தையும் இந்த யுத்தத்தில் காட்டி விட துடிப்பவர்கள் போல இருந்தனர். இதன் பின் தசக்ரீவன் தன் சரங்களைக் கோர்த்து, வில்லிலிருந்து எய்தான். ராகவனுடைய ரதத்தின் உச்சியில் கட்டப் பெற்றிருந்த த்வஜத்தை குறி வைத்து அடித்தான். அந்த அம்புகள், புரந்தரனின் த்வஜத்துக்கு சமமானவை ஆனதால், த்வஜம் வரை எட்டாமலே விழுந்து நாசமாயின. ரதத்தை தொட்டு விட்டு கீழே பூமியில் விழுந்து மறைந்தன. ராமரும் தன் வில்லை இழுத்து இதற்கு பதில் சொல்வது போல மனதால் நினைத்து, ராவணனுடைய த்வஜத்தை நோக்கி கூர்மையான சரத்தை விட்டார். கொடிய நாகம் போன்று தாங்க முடியாத சக்தியோடு, தன் சக்தியால் தானே பிரகாசமாகத் தெரிந்த அந்த சரம் தசக்ரீவனின் த்வஜத்தை அடித்து தள்ளியது. ராவணனுடைய ரணத்வஜம், வேரறுந்த மரம் போல அடியோடு பெயர்க்கப் பட்டதையறிந்து தசக்ரீவ மகா ராஜா, கோபத்தால் தகித்துக் கொண்டிருக்கும் நிலையை அடைந்தான். ஆத்திரம் அவனை சுட்டெரிப்பது போல இருந்தது. மேலும் கோபத்தின் வசத்தில் சரங்களை மழையாக பொழியலானான். ராமனுடைய குதிரைகளை தன் கூரிய பாணங்களால் துளைத்து எடுத்தான். இந்த பாணங்கள் தைத்த பின்னும் குதிரைகள் தடுமாறவும் இல்லை, பரபரப்பும் அடையவில்லை. பத்ம நாளத்தால் அடி பட்டது போல சுகமாக, தன்னிலை தவறாது நின்றன. குதிரைகள் சற்றும் பதட்டமடையாமல் நிற்பதைக் கண்டு தசக்ரீவன் மேலும் ஆத்திரத்துடன் இடைவிடாது அம்புகளை பொழிந்தான். க3தை4களும், பரிகங்களும், சக்ரங்களும், முஸலங்களும், மலை சிகரங்களும், மரங்களும், மேலும் சூலங்களும், பரஸ்வதங்களும் இந்த சஸ்திரங்களோடு, மாயா ஜாலம் போல வந்து விழுந்தன. பயத்தை உண்டாக்கியபடி பயங்கரமாக எதிரொலிக்கும் மகா கோரமான சப்தத்துடன் வந்து விழுந்தன. இந்த அம்பு மழையால் உலகமே சரங்கள் மயமாக ஆயிற்று. ராவணன், எதிரில் இருந்த ராகவ ரதத்தின் பேரில் சஸ்திரங்களை பிரயோகம் செய்து விட்டு, அதே வேகத்தில் வானர சைன்யத்தின் மேலும் அந்தரிக்ஷத்திலும் தன் வில்லின் வன்மையால் அம்புகளால் நிரப்பி விட்டான். சற்றும் களைப்படையாத மனதுடன், ஆயிரக் கணக்கான சஸ்திரங்களை இடை விடாது எய்த வண்ணம் இருந்தான். சற்றும் தயக்கமோ, சந்தேகமோ இன்றி, தசக்ரீவனின் கைகள் சரங்களைப் பொழிந்த வண்ணம் இருந்தன. யுத்தத்திலேயே தத்பரனாக, தன் ஒரே குறிக்கோளாக யுத்தம் செய்து கொண்டு நிற்கும் ராவணனைப் பார்த்து ராகவனும் சிரித்துக் கொண்டே, இதோ பார் என்று சொல்லி பதிலடி கொடுப்பது போல தன் வில்லிலும் கூர்மையான பாணங்களைப் பூட்டி, நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக எய்யலானார். இதைக் கண்டு ராவணன் தன் அம்புகளால் நிரந்தரமாக நிற்கும் சர ஜாலத்தைக் கட்டினான். ஆகாயத்தை மறைத்தபடி அவை நின்றன. இருவருடைய அம்புகளாலும் ஒளி மயமாகிப் போன ஆகாயம், இரண்டாவது சூரியனைக் கொண்ட ஆகாயமாகவே விளங்கியது. எந்த ஒரு பாணமும், நிமித்தம் இல்லாமல் எய்யப் படவில்லை. எதுவும் பலனின்றியும் போகவில்லை. எதுவும் அளவுக்கதிகமான சேதம் விளைவிப்பதுமாகவும் இல்லை. ஒன்றையொன்று தாக்கி அவை பூமியை சரணடைந்தன. இவ்வாறாக யுத்தத்தில், ராம, ராவணர்கள் ரண பூமியில் நின்றபடி அம்புகளை விடும் பொழுது, இடை விடாது இடது, வலது மாறி மாறி அடிக்கும் சமயம், சரங்களின் பெரும் எண்ணிக்கையால் ஆகாயம் மூச்சு விடத் திணருவது போல திணறச் செய்தனர். ராவணனுடைய குதிரைகளை ராமனும், ராமனுடைய குதிரைகளை ராவணனும் அடித்து வீழ்த்தினர். செய்த செயலுக்கு பிரதியாக, அடிக்கு பதிலடியாக இருவரும் தளராது போர் செய்தனர். இந்த யுத்தம் அத்புதமாக நடந்தது. ஒப்பிட முடியாத இந்த யுத்தம் முஹுர்த்த காலம் நீடித்தது. ராவணனும், லக்ஷ்மணாக்ரஜனும் கூர்மையான பாணங்களைக் கொண்டு சமமாக போர் செய்து கொண்டிருந்தாலும், ராவணன் மனதில் ராமன் த்வஜத்தை அடித்து தள்ளியது பெரும் ஆத்திரத்தை கிளப்பி விட்டபடி இருந்தது. மனதினுள் ஆத்திரம் புகைந்து கொண்டேயிருந்தது. இதை பெரும் அவமானமாக எண்ணி, ரகு குலோத்தமனான ராமனிடத்தில் மேலும் அதிக விரோதம் கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண த்4வஜோன்மத2னம் என்ற நூற்று ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 110 (517) ராவணைக சத சிரச் சே2த3னம் (ராவணனின் நூற்றியொரு தலையை கொய்தல்)
இவ்வாறு இருவரும் ஒரே கவனமாக யுத்தத்தை ஒரே சீராக நடத்திக் கொண்டிருந்த சமயம், மிகுந்த ஆவலுடன் உலகில் சகல ஜீவ ராசிகளும் யுத்தத்தைக் கண்டபடி திகைத்து நின்றிருந்தனர். அவர்களிடையே சமமாக இருந்த பல விஷயங்களை ஆச்சர்யத்துடன் கவனித்தனர். இருவரது ரதங்களும் உத்தமமானவை. ஒன்றையொன்று தாக்கின. பரஸ்பரம் கோபம் மிகுந்தவர்களாக, பரஸ்பரம் துரத்திக் கொள்பவர்களாக, பரஸ்பரம் வதம் செய்வதே குறிக்கோளாக, காணவே அச்சுறுத்தும் உருவைக் கொண்டவர்களாக இருந்தனர். மண்டலங்களாகவும், (வட்டமிட்டும்), நேர் வழியாகவும், போக வர இருந்த பாதைகளிலும், சாரதிகளின் பல விதமான சாமர்த்யங்களை காட்டுவது போல இருவரது ரதமும் முன்னும் பின்னுமாக ஓடின. ராவணனை ராமர் அடித்தார் எனில்., ராவணனும் ராமனை அடித்தான். முன் சென்று அடிப்பதிலும், பின் வாங்குவதிலும் இருவரும் சளைக்காது, தாக்குவதில் கவனமாக இருந்தனர். இருவருடைய ரதங்களும் நல்ல வேகமுடையவை. அதில் இருந்தபடி அம்புகளை இடை விடாது ஜாலங்களாக ஒருவர் மேல் ஒருவர் பிரயோகித்துக் கொண்டனர். மழை மேகம் போல இருவரும் சக்தியை உள்ளடக்கியவர்களாக, பல விதமாக தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டு, யுத்தம் செய்தனர். ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் நின்று தாக்கினர். ரதத்தின் முன் பக்கம் குதிரைகளை இழுத்து பிடிக்கும் துரம்-(அச்சு) எனும் பகுதிகள் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டன. குதிரைகள் முகத்தோடு முகம் மோதின. நின்று கொண்டிருக்கும் பொழுது பதாகங்கள் இடித்துக் கொண்டன. ராமன், நான்கு கூர்மையான அம்புகளை எய்து, குதிரைகளை விரட்டினான். தன் குதிரைகளை இடம் பெயரச் செய்ததைக் கண்டு ஆத்திரத்துடன் ராவணனும் அதே போன்ற கூர்மையான பாணங்களை ராமன் மேல் பிரயோகித்தான். நல்ல அடி. உடலைத் துளைத்து காயங்கள் உண்டானாலும் ராமன் அசையவில்லை. வருந்தவும் இல்லை. திரும்பவும் வஜ்ரத்தின் அடி போன்று பலமாக தாக்கும் ஆயுதங்களை பிரயோகம் செய்தார். ராவணனும் அதே போல ஆயுதங்களை எடுத்து மாதலியை குறி வைத்து அடித்தான். மாதலியின் உடலில் ஆழமாக பதிந்த அம்புகளால் அவனுக்கு எந்த விதமான தீங்கும் இழைக்க முடியவில்லை. தன்னை அடித்தால் கூட பொறுத்துக் கொள்பவன், மாதலியின் மேல் பட்ட அம்பினால் ராகவன் கோபம் கொண்டு எதிரியின் முகம் தெரியாதபடி சரங்களை சேர்த்து அடிக்கலானார். இருபது, முப்பது, அறுபது , நூறு என்று அம்புகள் வில்லிலிருந்து புறப்பட்டன. நுற்றுக் கணக்காக, ஆயிரக்கணக்காக பாணங்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன. எதிரியின் ரதத்தின் மேல் ராகவன் ஏராளமான பாணங்களை எய்து சேதப்படுத்தினார். ராவணனும் ரதத்தில் நின்றபடி க3தைகளையும், முஸலங்கள் (உலக்கைகள்) இவற்றை மழையாக பொழிந்தான். இதன் பின் நடந்த யுத்தம் மயிர் கூச்செரியச் செய்தது. இரு தரப்பிலும் சமமான பலமும், சேதமும் ஒன்றாகவே இருந்தன. க3தை4கள், முஸலங்கள் வீசப் படும் ஓசையாலும், சரங்கள் நேர் முகமாக வந்து தாக்கியதாலும், சமுத்திரம் வற்றலாயிற்று. ஏழு சாகரங்களும் உலர்ந்தன. சாகரங்கள் வற்றவும், பாதாள தளத்தில் வசிக்கும் பலரும், நாகங்களும், தானவர்களும், ராக்ஷஸர்களும் ஆயிரக்கணக்கானவர்கள் வருந்தினர். மலைகளும், கானனங்களும் உள்ளிட்ட மேதினி, பூமி நடுங்கியது. சூரியனின் ஒளி குன்றியது. காற்று அசையவில்லை. இதன் பின் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், பெரும் சிந்தனை வயப்பட்டனர். கின்னரர்களும், மகோரர்களும், இவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். கோ, ப்ராம்மணர்களுக்கு மங்களம் உண்டாகட்டும். உலகங்கள் சாஸ்வதமாக நிலைத்து நிற்கட்டும். ராகவன் யுத்தத்தில் ராக்ஷஸேஸ்வரனான ராவணனை ஜெயிக்கட்டும். என்று ஜபம் செய்தனர். இந்த ரிஷிகணங்களும், தேவர்களும் ராம ராவண யுத்தத்தையும் பார்த்தபடி இருந்தனர். மிகவும் பயங்கரமான யுத்தம். உடலில் ரோமங்கள் பயத்தால் குத்திட்டு நிற்க, கந்தர்வ, அப்ஸரஸ கூட்டங்களும், அத்புதமான யுத்தத்தைக் காண கூடி விட்டனர். வானத்திற்கு இணை வானமே. கடலுக்கு உவமை கடலே தான். அது போல ராம ராவண யுத்தம் ராம ராவண யுத்தமே. இது போல என்று உவமை சொல்ல முடியாதது என்று சொல்லிக் கொண்டே வேடிக்கைப் பார்த்தனர். ரகு குலத்தின் புகழை வளர்க்க என்றே உதித்தவன், நீண்ட கைகளையுடைய ராமன், இனியும் தாமதம் செய்யலாகாது என்று க்ஷுரம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார். ஆலகால விஷம் போன்ற அந்த ஆயுதத்தை வீசி, மணி குண்டலங்களை அணிந்திருந்த ராவணனின் தலையை துண்டித்து கீழே விழச் செய்தார். லக்ஷ்மீகரமான ராவணன் தலை பூமியில் விழுந்ததை மூன்று உலகத்தினரும் கண்டனர். திரும்பி பார்த்தால் அதே போல மற்றொரு தலை முளைக்க ராவணன் தலையுடன் முழுமையாக நின்றான். வேகமாக செயல் படும் வீரரான ராமர், திரும்பவும் அதே வேகத்தில் இந்த தலையை துண்டிக்க, துண்டித்த மாத்திரத்தில் ராவணன் புது தலை, முகம் பெற்று நின்றான். திரும்பவும் ராமன் ராவணன் தலையைத் தன் கை ஆயுதத்தால் வெட்டி சாய்க்கவும், புது தலை முளைத்து ராவணன் விகாரமின்றி நிற்கவுமாக, நூற்றி ஒரு தலைகள் ஒரே விதமாக காட்சியளித்து, ராமன் கையால் துண்டிக்கப் பெற்று விழுந்தன. ராவணனின் முடிவு என்பது இன்னமும் கைக்கெட்டாத தொலைவிலேயெ இருப்பதாகத் தோன்றியது. எல்லா விதமான அஸ்திரங்களையும், அவைகளை பிரயோகிக்கும் விதி முறைகளையும் கற்று அறிந்திருந்த ராமர், கவலையுடன் யோசித்தார். மாரீசன் எந்த ஆயுதத்தைக் கொண்டு வீழ்த்தப் பட்டானோ, கரனை அழித்த ஆயுதம் எதுவோ, தூஷணனை வதைத்த ஆயுதம் எதுவோ, க்ரௌஞ்சாரண்யத்தில் விராதனையும், தண்டகா வனத்தில் கபந்தனையும் வதம் செய்ய பயன் பட்ட ஆயுதம் எதுவோ, மலை மேல் ஏழு சால மரங்களையும் ஒன்றாக சாய்க்க பயன் பட்ட ஆயுதம் எதுவோ, வாலியை வதம் செய்ததும், சமுத்திரத்தை வற்றச் செய்ததுமான தன் பாணங்கள், ராவணனிடத்தில் பலம் குன்றி, தேஜஸ் இழந்து போவது ஏன் ? என்று யோசித்தார். குழம்பிய மனதுடனேயே ராவணன் பேரில் ஆயிரக் கணக்கான அம்புகளை விட்டார். ராவணனும் ரதத்தில் நின்றபடி பதிலடி கொடுத்தான். க3தை3களும், முஸலங்களுமாக ராமன் பேரில் வந்து விழுந்து திக்கு முக்காடச் செய்தன. திரும்பவும் அதே போல பயங்கரமான யுத்தம். சமமான பலம், சமமான தேஜஸ், அஸ்திரங்கள். மயிர் கூச்செரியச் செய்யும் பயங்கரமான யுத்தம். அந்தரிக்ஷத்திலும் பூமியிலும், திரும்பவும் மலை உச்சியிலும் தேவ, தானவ யக்ஷர்களின், பிசாசங்கள், உரக , பன்னகங்கள், ராக்ஷஸர்கள் இவர்கள் பார்த்துக் கொண்டு நிற்கையிலேயே, இரவு முழுவதும் யுத்தம் நடந்தது. பகலா, இரவா, முஹுர்த்தமா, க்ஷணமா, ராம ராவண யுத்தம் இடைவெளியே காணவில்லை. தசரதன் மகனும், ராக்ஷஸ ராஜனும் இடை விடாது போர் புரியும் பொழுது, யாருக்கு ஜயம் என்பதும் தெளிவாக சொல்ல முடியாத நிலையில் ராகவன் தான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பிய சாரதியான மாதலி ராமனுக்கு ஒரு விஷயம் தெரியப் படுத்தினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணைக சத சிரச் சே2த3னம் என்ற நூற்று பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 111 (518) பௌலஸ்த்ய வத|| (புலஸ்திய குலத்தினனான ராவணனின் வதம்)
மாதலி, ராகவனுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்தினான். வீரனே | தெரியாதவன் போல ஏன் இவனுக்கு பதிலடி கொடுத்தபடி இருக்கிறாய்? இவனை வதம் செய்ய பிதாமகரின் அஸ்திரத்தை பிரயோகம் செய். விநாச காலம் என்று தேவர்கள் சொல்லும் காலம் சமீபித்து விட்டது. எனவும், பெரும் நாகம் ஒன்று சீறிப் பாய்வது போல இருந்த ப்ரும்மாஸ்திரத்தை கையில் எடுத்தார். பகவான் அகஸ்திய ரிஷி கொடுத்தது. ப்ரும்மாவினால் அவருக்கு கொடுக்கப் பட்டது. ஈ.டு இணையில்லாதது. அளவற்ற பராக்ரமம் உடைய மகாஸ்திரம். ப்ரும்மா தானே ஒரு சமயம் இந்திரனுக்காக தயாரித்தது. அதன் பராக்ரமம் அளவிட முடியாதது. மூன்று உலகையும் ஜயிக்க சுரபதியான இந்திரன் கிளம்பிய பொழுது அவனுக்கு ப்ரும்மா வரமாக தந்தது. இதன் உடலில் பவன எனும் வாயுவும், பாவகன் – நெருப்பும், சூரியனும், உடலே ஆகாச மயமாகவும், மேரு மந்தரம் உருவமாகவும், பிரகாசமாக பொன்னால் காப்பிடப் பெற்று, தன் தேஜஸால் உலகத்தில் திடுமென சூரிய ஒளி பரவியது போல காட்டக் கூடிய ப்ரும்மாஸ்திரம். புகையுடன் கூடிய காலாக்னி போலவும், ஆலகால விஷம் போல ஒளி மிகுந்ததும், பெரும் நாகம் (யானை), குதிரை படைகளை பிளந்து விடக் கூடியதுமான, வேகமான செயல் திறனுடையது. கோட்டைகளை, மலைகளை பிளந்து தள்ளக் கூடியதும், ரத்தத்தை உறிஞ்சக் கூடியதும், பயங்கரமாக காட்சியளித்ததும், வஜ்ரம் போன்றதும், பெரும் ஓசையுடையதுமான எல்லோரையும் பயந்து அலற வைக்கும், பயங்கரமாக சீறிப் பாயும் பாம்பு போன்றதுமான திவ்யாஸ்திரம். யமனே ரூபம் எடுத்து வந்தது போல ரண களத்தில் , கண்டவர்களை பயத்தில் உறையச் செய்யும் அஸ்திரம். கழுகு, கருடன், கொக்குகள் போன்ற மாமிச பக்ஷிணிகளான பறவைகளுக்கும், கோமாயு எனப்படும் மிருகங்களுக்கும், மாமிசம் உண்ணும் ராக்ஷஸர்களுக்கும், இடைவிடாது தீனி அளிக்க வல்லது எனும்படி யுத்தத்தில் கொன்று குவிக்கும் தன்மை வாய்ந்த ப்ரும்மாஸ்திரம். இக்ஷ்வாகு குலத்திற்கு நன்மையும், எதிரி குலத்திற்கு பயத்தையும் தரும் உத்தமமான அஸ்திரம். ராமன், இதன் மந்திரத்தை ஜபித்து, வேதங்களில் சொல்லப் பட்ட முறையில் தன் வில்லில் பொறுத்தி, த்யானம் செய்த காலத்தில், உலகமே நடுங்கியது. பூமி நடுங்கியது. ராவணனின் மர்மஸ்தானத்தை குறி வைத்து ஏகாக்ர சித்தனாக ராமன் அஸ்திரத்தை ராவணன் பேரில் எய்தார். வஜ்ரம் போன்று எதிர்க்க இயலாததாக, அதை விட வலிமையான கரங்களால் விடப் பெற்றதான அஸ்திரம், ராவணனின் ஹ்ருதயத்தில் பட்டு அதை பிளந்தது. ரத்தம் தோய்ந்து, உயிரைக் குடித்தபின், பூமியில் நுழைந்தது. அந்த அம்பு ராவணனின் உயிரை மாய்த்து விட்டு, தன் கடமை தீர்ந்ததாக ராமனின் தூணியில் திரும்ப வந்து சேர்ந்தது. ராவணன் கையிலிருந்த வில்லும் அம்பும், மிக வேகமாக செயல் படும் ராவணன் உயிர் அவனை விட்டுப் பிரிந்த சமயம் தாங்களும் கைகளிலிருந்து நழுவி பூமியில் விழுந்தன. க்ஷண நேரத்தில் உயிர் பிரிந்து விட்டதால், தன் தேஜஸ் சற்றும் குறையாமல் ராவணன் தன் ரதத்திலிருந்து கீழே விழுந்தான். விருத்திரனை வஜ்ராயுதத்தால் இந்திரன் அடித்தபொழுது அவன் விழுந்தது போல இருந்தது. ராவணனே உயிர் இழந்து பூமியில் விழவும், மற்ற ராக்ஷஸ வீரர்கள், நாதனை இழந்தவர்கள், பயத்துடன் நாலா திக்குகளிலும் ஓடி மறையலாயினர். மரங்களைக் கொண்டே யுத்தம் செய்த வானரங்கள் அவர்களைத் தடுத்து மேலே விழுந்து நடனமாடின. ராகவனுடைய விஜயத்தில் மகிழ்ந்தன. இந்த வானரங்கள் மகிழ்ச்சியுடன் மேலும் துன்புறுத்த, லங்கா நகரில் போய் விழுந்த ராக்ஷஸர்கள், தாங்கள் அண்டியிருந்த ராக்ஷஸ ராஜனே விழுந்ததை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், அவன் யுத்த களத்தில் மடிந்ததைக் கண்ட பின்பும், நம்ப முடியாமல், கண்களில் நீர் மல்க புலம்பினர். செய்வதறியாது திகைத்தனர். வானரங்கள் வெற்றிக் களிப்பில் மிதந்தன. ராகவனுக்கு ஜய கோஷம் செய்த படி, ராவண வதத்தை பறை சாற்றியபடி வலம் வந்தன. அந்தரிக்ஷத்தில் சுபமான துந்துபி நாதம் எழுந்தது. முப்பது துந்துபிகள் ஏக காலத்தில் ஒலித்தன. காற்று சுகமாக வீசியது. ஆகாயத்திலிருந்து புஷ்ப மாரி பொழிந்தது., ராகவ ரதம் அருகில் நெருங்க முடியாதபடி கூட்டம் சேர்ந்தது. சாது, சாது என்று தேவதைகள் ஆகாயத்தில் நின்றபடி வாழ்த்தினர். தேவர்களுக்கும் சாரணர்களுக்கும் மகா சந்தோஷம். மனதில் நிம்மதி நிறைந்தது. சர்வ லோக பயங்கரனாக உலவி வந்த ராக்ஷஸன், ராவணன் இறந்து போனதில், ரௌத்ரனான ராக்ஷஸ ராஜன் மாண்டு விழுந்ததில், தேவர்கள் மன நிறைவு பெற்றனர். சுக்ரீவனும், அங்கதனும் தாங்கள் எடுத்த காரியத்தை நிறைவேற்றிய திருப்தியோடு வளைய வந்தனர். ராக்ஷஸ ராஜனை ராமன் வதம் செய்ததில் இவர்களுக்கும் மகிழ்ச்சியே. மருத் கணங்கள் இழந்த ஒளியைப் பெற்றன. திசைகள் தெளிவாக ஆயிற்று. ஆகாயம் நிர்மலமாக காட்சி அளித்தது. பூமியின் ஆட்டம் நின்றது. காற்று சாதகமாக வீசியது. திவாகரனும் ஸ்திரமான ஒளியுடையவனாக உதித்தான். இதன் பின் சுக்ரீவ, விபீஷணன் முதலிய முக்கியமான நண்பர்கள், லக்ஷ்மணனோடு ராமனை வந்தடைந்து, யுத்தத்தில் வெற்றி பெற்றதை பாராட்டி, வாழ்த்தினர். ஸ்திரமான பிரதிக்ஞையை உடையவனாக, தன் சபதத்தை நிறைவேற்றி, எதிரியை அழித்து, தன் ஜனங்களுக்கு நன்மை செய்து அவர்கள் சூழ நின்று, புகழ் பெற்றவனாக விளங்கினான். ரகு குல ராஜாக்களின் வம்சத்தில் கொண்டாடப் பெற்ற நந்தனனாக, மகா தேஜஸுடன், மூவுலகும் பாராட்ட, இந்திரன் நின்றது போல நின்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் பௌலஸ்திய வதம் என்ற நூற்று பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 112 (519) விபீ4ஷண விலாப : (விபீஷணன் வருந்தி புலம்புதல்)
ராமனால் வதம் செய்யப் பட்டு பூமியில் கிடந்த சகோதரனைப் பார்த்து விபீஷணன் மனம் வருந்தினான். தன் வேதனையை அடக்க மாட்டாமல் புலம்பினான். வீரனே, விக்ரமம் உடையவனே, கீர்த்தி வாய்ந்தவனே, நியாயம் அறிந்தவனாக, வினயமாகத் தானே இருந்தாய். உயர் தர படுக்கைகளில் சுகமாக உறங்கியவன், இப்பொழுது தரையில் விழுந்து கிடக்கிறாயே, ராமனால் ஜயிக்கப் பட்டு, உயிரை இழந்து கிடக்கிறாயே. அங்கதம் என்ற ஆபரணங்கள் பூட்டப் பெற்று அலங்காரமாக விளங்கும் கைகள் இரண்டும் விரிந்து கிடக்க, பாஸ்கரனுக்கு சமமான ஓளி பொருந்திய மகுடமும் இல்லாமல் கிடக்கிறாயே. வீரனே, நான் இந்த நிலை வரக் கூடும் என்று முன்பே எச்சரித்தேன். காமமும், மோகமும் உன் கண்களை மறைத்தன. நான் சொன்னதை நீ ஏற்கவில்லை. கர்வமும், தன்னம்பிக்கையும் அளவுக்கு அதிகமாக, மார் தட்டி பேசிய ப்ரஹஸ்தனோ, இந்திரஜித்தோ, மற்ற ஜனங்களோ, கும்பகர்ணனோ, அதி ரதனோ, அதி காயனோ, நராந்தகனோ, யார் யார் உனக்கு உகந்த முறையில் பேசினார்களோ, நீயும் அவர்கள் பரிந்து சொன்ன சொல்லை மதித்து ஏற்றுக் கொண்டாயோ, அவர்கள் யாருமே இன்று இல்லை. அவர்களும் இறுதிக் கடன் பெறும் நிலையில் விழுந்து கிடக்கிறார்கள். வீரனே, சஸ்திரங்களை ஏந்தியவர்களுள் சிறந்தவனே, நல்ல நீதி முறைகளுக்கு சேதுவாக இருந்தவன், தர்மமே உருவாக விளங்கியவன், சத்வ குணங்களுக்கு இருப்பிடமாக திகழ்ந்தவன், எந்த விதமான பிரச்னையானாலும் தீர்வு காண்பவன் எவனோ, ஆதித்யன் போன்ற அந்த எங்கள் அரசன் பூமியில் விழுந்தான். சந்திர கிரணங்கள் இருட்டில் மூழ்கி விட்டன. சித்ர பானு அடங்கி விட்டது. முயற்சிகள் இன்றியே வேலைகள் தடை படுகின்றன. இந்த வீரன் தோல்வியுற்று மாண்டதால் உலகில் இயக்கமே (சேஷ்டைகளே), இல்லையென்றாகி விட்டது. இந்த உலகில் மீதி என்ன தான் இருக்கும்? ராக்ஷஸ சார்தூலனாக வாழ்ந்தவன், ரண பூமியில் புழுதியில் புரளும் பொழுது, எது தான் இயங்கும் நிலையில் இருக்கக் கூடும். ராகவன் என்ற புயற் காற்று வந்து, இந்த பெரிய ராக்ஷஸ வ்ருக்ஷத்தை, மரத்தை, தன்னம்பிக்கை என்ற நாற்றுகள் முளைத்து, தவ வலிமையே பூக்களாக, தன் சௌர்யத்தால் வேரூன்றி நின்று, உயர்ந்து வளர்ந்து நின்ற ராவண மரத்தை அசைத்து தள்ளி விட்டது. ராவணன் என்ற இந்த பட்டத்து யானை, இக்ஷ்வாகு குலத்து சிங்கம் பிடித்துக் கொண்ட தேகத்தினனாக, தேஜஸே கொம்பாக, தந்தமாக, குல வம்சமே வம்சமாக, கோபமும் பிடிவாதமுமே தும்பிக்கையாக, நின்ற பெரிய யானையாக இருந்த ராவணன் ராகவ சிம்மத்தால் த்வம்சம் செய்யப் பட்டான். ராமன் எனும் மேகத்தால் அதன் மழை பொழிய, ராக்ஷஸாக்னியாக இருந்த ராவணன் அடக்கப் பட்டான். அணைக்கப் பட்டான். ப்ராக்ரமமும், உத்சாகமும் ஜ்வலிக்கும் அக்னி ஜ்வாலையாக பிரகாசிக்க, அவன் மூச்சுக் காற்றே புகையாக தன் பலமும் பிரதாபமும் ஒளியாக நின்ற ராவணாக்னி இன்று ராமன் என்ற மழை மேகத்தினால் அடங்கி விட்டான். வ்யாக்ரம் போல, உயர் ஜாதி புலி போன்று இருந்தவன் இன்று அடிபட்டு விழுந்து கிடக்கிறான். இவ்வாறு புலம்பும் விபீஷணனைப் பார்த்து ராகவன் சமாதானப் படுத்தினார். விபீஷணா, இவன் அழியவில்லை. செயலற்று கிடக்கிறான். சண்ட ப்ரசண்டமாக யுத்த பூமியில் வளைய வந்த வீரன், அதி உன்னதமான மகா உத்சாகம் உடையவன், நிச்சயம் தோற்று விழுந்தான் தான். ஆயினும், க்ஷத்திரிய தர்மத்தை அனுசரித்து போரில் மாண்டவர்களைக் கண்டு வருந்துவது இல்லை. மேலும் மேலும் விருத்தி, மேன்மையடைய வேண்டும், ராஜ்யத்தை விஸ்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் க்ஷத்திரியர்கள் போரில் உயிர் துறப்பதை பெருமையாக எடுத்துக் கொள்கின்றனர். எந்த ராவணனால், இந்திரனோடு சேர்த்து மூவுலகமும் பயந்து நடுங்கும்படி வைக்கப் பட்டிருந்ததோ, புத்திமானான அவன் தானே எப்பொழுது யுத்தத்தை தேர்ந்தெடுத்து, போரிட்டு யுத்த பூமியில் உயிரைத் துறந்தானோ, அவனுக்காக வருந்தி புலம்புவது அழகல்ல.. அவசியமும் அல்ல. இது வருந்தும் நேரமல்ல. எப்பொழுதும் விஜயனாக, வெற்றியே தான் என்பது யுத்த களத்தில் இதுவரை கண்டதும் இல்லை. இனிக் காணப் போவதும் இல்லை. வீரனாக இருப்பவன், தான் மற்றவர்களைக் கொல்லுவான் அல்லது தான் மற்றவர்களால் கொல்லப் படுவான். இதுதான் இதுவரை நம் முன்னோர்கள் கண்ட வழி. க்ஷத்திரியர்களுக்கு ஏற்ற தர்மம் இது. க்ஷத்திரியனின் மரணம் ரண பூமியில் நிகழுமானால் அவனுக்காக வருந்தக் கூடாது என்பது தான் மரபு. அதனால் எழுந்திரு. மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி யோசி. ராமர் சொன்னதில் நியாயம் இருப்பதை உணர்ந்த விபீஷணன், தன்னை சமாளித்துக் கொண்டு, சகோதரனின் நல்ல குணங்களை நினைத்து பச்சாதாபப் பட்டான். இதோ இந்த ராவணன், எந்த போரிலும், தோல்வியுற்று, தலை குனிந்து திரும்பியதில்லை. தேவர்கள் கூட்டத்தோடு வாஸவன் வந்த பொழுது, நிமிர்ந்து நின்று போரிட்டு வென்றான், சமுத்திரம் தன் அலைகளால் கரையைத் தொட்டு அடங்குவது போல , தாங்கள் வந்து நிற்கவும் உங்கள் முன்னால் உடைந்து விட்டான். இவன் தானம் அளித்ததும் கணக்கிலடங்கா. செய்த பூஜைகளும் ஏராளம். அனுபவித்த போகங்களும் கணக்கிலடங்கா. இவன் கீழ் வேலை செய்த அதிகாரிகளும், அடியாட்களும் நல்ல ஊதியம் பெற்று, நல்ல நிலைமையில் வாழ்ந்தார்கள். நண்பர்களுக்கு செல்வங்களை வாரி வழங்கினான். நண்பர்கள் அல்லாதவர்களோடு அதே போல த்வேஷமும் பாராட்டினான். இவன் வளர்த்த ஆஹிதாக்னியும், மகா தவங்களும், வேதத்தில் சொல்லப்பட்டவையே. அதில் கரை கண்டவன். கர்ம மார்கத்தில் சிறந்த நம்பிக்கையுடைய வீரன். இப்படிப் பட்டவனுடைய இறுதி கடன்களைச் செய்ய எனக்கு அனுமதி தர வேண்டும். இவ்வாறு கேட்ட விபீஷணனைப் பார்த்து கருணையால் இளகிய மனத்தினான ராமன், சாது என்று சொல்லி, உரிய இறுதிக் கடன்களை, ஸ்வர்கத்தை அளிக்க வல்ல சிரார்த்த காரியங்களை செய்ய, கட்டளையிட்டான். மரணம் வரை தான் வைரம், விரோதம். நம் காரியம் ஆகி விட்டது. இவனுக்கு சம்ஸ்காரங்கள் செய். உனக்கு எப்படி சகோதரனோ, அதே போலத் தான் எனக்கும், என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீஷண விலாபோ என்ற நூற்று பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 113 (520) ராவணாந்த:புர பரிதே3வனம் (ராவணனின், உற்றார், உறவினர்கள் வருந்துதல்)
ராவணனின் மரணச் செய்தி அந்த:புரத்தையெட்டியது. ராமனால் ராவண ராஜா வதம் செய்யப் பட்டான். இந்த செய்தி பரவியதும், ராக்ஷஸிகள் மிகுந்த வேதனையடைந்தனர். கன்றை இழந்த பசு போல, தடுத்தும் கேளாமல் கதறியபடி, தலை கேசம் அவிழ்ந்து தொங்க, பூமியில் விழுந்து புரண்டு அழுதனர். ராக்ஷஸர்களுடன் வடக்கு வாசல் வழியே வெளி வந்து மரணமடைந்து கிடக்கும் பதியைக் கண்டனர். ஆர்யபுத்ர, என்று சொல்லியபடி, சிலரும், ஹா நாதா என்று சிலரும் கப3ந்த4மாக (உடல் வேறு தலை வேறாக) கிடந்த உடலை ரத்த வெள்ளத்தில் மிதந்த சரீரத்தை கட்டியணைத்தபடி அழுது அரற்றினர். படைத் தலைவன் வீழ்ந்தபின், யானைப் படை சிதறியது போலவும், பெண் யானைகள் போலவும் இங்கும் அங்குமாக அலை பாய்ந்து கணவன் இறந்த துக்கத்தால் வாடி, கண்களில் நீர் வடிய நின்றனர். மகா வீரனான ராவணனை, பெருத்த சரீரம் உடையவனை தேஜஸ் நிரம்பியவனை, நீல மலை போல விழுந்து கிடந்தவனை அடிபட்டு பூமியில் கிடந்தவனைக் கண்டனர். ரண பூமியில் புழுதியில் படுத்துக் கிடப்பவனைக் கண்டு துணுக்குற்றவர்களாக வேரோடு பிடுங்கி எறியப்பட்ட காட்டுக் கொடி போல துவண்டார்கள். சிலர் தங்கள் அபிமானத்தால் உடலை கட்டி அணைத்து அழுதனர். சிலர் பாதங்களை பிடித்துக் கொண்டு புலம்பினர். சிலர் புஜத்தை தூக்கி தங்கள் மடியில் இருத்திக் கொண்டு வருந்தினர். உயிர் பிரிந்த முகத்தைப் பார்த்து சிலர் மூர்ச்சையடைந்தனர். மடியில் தலை வைத்து முகத்தைப் பார்த்து ஒருவள் அழுதாள். பனித்துளிகள் பத்மத்தை மறைப்பது போல இவர்கள் கண்ணீர் முகத்தை மறைத்தது. இவ்வாறு ரண பூமியில் வதம் செய்யப் பட்ட கணவனது உடலைக் கண்டு பெரும் குரலில் உரக்க அரற்றினர். எவன் இந்திரனையே நடுங்கச் செய்தானோ, எவனைக் கண்டு யமனே நடுங்கினானோ, வைஸ்ரவன ராஜா தன் புஷ்பகத்தை எடுத்துக் கொள்ள சம்மதித்தானோ, கந்தர்வர்களுக்கும், ரிஷிகளுக்கும், மகாத்மாவான பலருக்கும், தேவர்களுக்கும் எவன் பெரும் பயத்தை அளித்து வந்தானோ, அந்த ராவணனும் யுத்தத்தில் அடிபட்டு மாண்டு கிடக்கிறான். அசுரர்களிடமும், தேவர்களிடமும், பன்னகம் எனும் பாம்புகளிடமும் எவனுக்கு பயமோ, ஆபத்தோ இல்லையோ, இவர்களிடம் அறியாத பயத்தை இவன் மனிதர்களிடம் கொண்டான். தானவ, ராக்ஷஸர்களால் தேவர்களால், கொல்லப் படக் கூடாது என்று வரம் பெற்றவன், கால் நடையாக வந்த ஒரு மனிதனால் கொல்லப் பட்டான். தேவர்களால் எதுவும் செய்ய முடியாத வீரனாக யக்ஷர்களோ, அசுரர்களோ நெருங்க முடியாத பலசாலியாக இருந்தவன், இப்பொழுது எதுவுமில்லாதவன் போல் மனிதனால் தாக்கப் பட்டு ம்ருத்யுவை தழுவி விட்டான். இவ்வாறு சொல்லி பலவாக அழுத பெண்கள், தங்கள் துக்கத்தை அடக்க மாட்டாமல் வெகு நேரம் புலம்பியபடி இருந்தனர். நன்மையைச் சொல்லும் ஹித வாதிகளான நல்லவர்களின் சொல்லைக் கேட்காமல் சீதையை தன் மரணத்திற்காகத்தான் அபகரித்து வந்திருக்கிறான் போலும். கூடவே ராக்ஷஸர்களும் அழியக் காரணமாக இருந்திருக்கிறான். இவர்களுடன் கூட நாமும் அழிந்தோம். பிரியமான சகோதரனாக இருந்தும் விபீஷணன் நல்லதைச் சொன்ன பொழுது ஏற்கவில்லை. கர்வத்துடன் அவனை கடுமையாக விமரிசித்தீர்கள். அப்பொழுதே வலிய தன் வதத்தை தீர்மானித்துக் கொண்டு விட்டதைப் போல அவனை ஏளனம் செய்து விரட்டி விட்டீர்கள். அப்பொழுது விபீஷணன் சொல்லைக் கேட்டு, மைதிலியை ராமனிடம் திருப்பி அனுப்பியிருந்தால், நமக்கு இப்படி ஒரு துக்கம் வந்திராது. வேரையே ஆட்டி விட்டது போல மூல வ்ருக்ஷம் சரிந்திருக்காது. தன் இஷ்டம் நிறைவேறிய திருப்தியுடன் ராமன் நமக்கு மித்திரனாக இருந்திருப்பான். நாமும் இப்படி கணவனை இழந்தவர்களாக புலம்ப வேண்டி இருந்திருக்காது. சத்ருக்கள் ஜயிக்கவும் வழி இருந்திருக்காது. சீதையை பலவந்தமாக சிறை வைத்து கொடுமையான அந்த துர்குணத்தால், நாங்கள், தாங்கள், மற்ற ராக்ஷஸர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் வீழ்த்தப் பட்டோம். ராக்ஷஸ ராஜனே, உங்கள் காமமும் பூர்த்தியாகவில்லையே. விதி ஆட்டுவிக்கிறது. ஆட்டம் போடுபவனை விதி தண்டிக்கிறது. வானரங்கள், மனிதர்கள் மூலம் உங்கள் முடிவு- இதை விதி இந்த விதமாக நிர்ணயித்து வைத்திருக்கிறது. அர்த்தமோ, காமமோ, விக்ரமமோ, உங்கள் ஆணையோ, எதுவுமே, விதியின் விளையாட்டை மாற்றியமைக்க முடியாது. என்ன தான் முயற்சி செய்தாலும், நடப்பவை நடந்தே தீரும். ராக்ஷஸ ராஜனின் மனைவிகள் இவ்வாறு புலம்பினர். கண்களில் நீர் நிரம்பி கசிய குரரீ என்ற பக்ஷி போல ஓலமிட்டனர். கதறினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணாந்த:புர பரிதே3வனம் என்ற நூற்று பதின் மூமூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 114 (521) மந்தோ3த3ரீ விலாப|| (மந்தோதரி அழுது புலம்புதல்)
இவ்வாறு புலம்பும் ராக்ஷஸ ஸ்திரீகளில் மூமூத்தவளான தர்ம பத்னி, ராவணனுக்கு பிரியமான மந்தோதரி பதியை தீனமாக பார்த்து, தசக்ரீவனான தன் கணவனை, கற்பனைக்கெட்டாத தன் பராக்ரமத்தால் ராமன் கொன்று விட்டான் என்பதை நம்பவும் முடியாதவளாக, இறந்து விட்ட தசக்ரீவன் முன்னால் வந்து நின்றாள். வருத்தத்துடன், வைஸ்ரவனன் தம்பியே, மகா பாக்யசாலி என்று புகழோடு வலம் வந்தாயே, நீ கோபத்துடன் இருந்தால், புரந்தரன் என்ற இந்திரன் கூட எதிரில் நிற்க பயப்படுவான். ரிஷிகளும், பூமியை ஆளும் அரசர்களும், கந்தர்வர்களும், சாரணர்களும் உன் தொல்லை தாங்காமல் திசைகள் தோறும் ஓடி ஒளியவில்லையா? மனிதனாக வந்த ராமனிடம் உன் சக்தி எடுபடவில்லையே. இதில் உனக்கு வெட்கமாக இல்லையா? ராக்ஷஸ ராஜனே, எப்படி மூன்று உலகையும் ஆக்ரமித்து, செல்வமும், வீரமும் வெளிப்பட வாழ்ந்த உன்னை, விஷம் கூட உன்னை எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் மனிதன், அதுவும் காட்டில் திரிபவன் வீழ்த்தினான்? மனிதர்கள் எதிரில் விரும்பிய வண்ணம் உருவம் எடுக்க வல்ல உனக்கு, யுத்தத்தில் ராமனால் மரணம் என்பது பொருத்தமாகவே இல்லையே. இந்த செயல் போர் முனையில் ராமன் செய்தானா? மனிதன் தானா இந்த ராமன்? எல்லா விதங்களிலும் நிறைந்து நிற்கும் உன்னை ராமன் தாக்கி வதம் செய்தானா? ஜனஸ்தானத்து ராக்ஷஸ கூட்டத்தோடு கரன் என்ற உன் சகோதரனை மாய்த்ததையும் வைத்து பார்க்கும் பொழுது, இவன் சாதாரண மனிதன் அல்ல. எப்பொழுது யாரும் எளிதில் நுழைய முடியாத லங்கையின் உள்ளே, தன் பலத்தால் ஹனுமான் நுழைந்தானோ, அப்பொழுதே நாம் அழிந்தோம். வானரங்களைக் கொண்டு சமுத்திரத்தை கடக்க சேது கட்டினான் என்று கேள்விப்பட்டோமே, அப்பொழுதே நான் இந்த ராமன் சாதாரண மனிதன் இல்லை என்று சந்தேகப் பட்டேன். அல்லது ராம ரூபத்தில் க்ருதாந்தன் தானே வந்து நின்றிருக்கிறான். உன் விநாசத்திற்காக மாயையாக, வேறு உருவம் எடுத்துக் கொண்டு எதிரில் வந்து நின்றிருக்கிறான். இல்லையெனில் இந்திரனையும், வீரனே, நீ தாக்கியிருக்கிறாய். இந்திரனுக்கே உன்னை நிமிர்ந்து பார்க்க கூட சக்தி இருந்ததில்லையே. இந்த ராமன் மகா யோகி, சனாதனனான பரமாத்மா என்பது இதனால் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆதியும், மத்தியும் அந்தமும் இல்லாத மகத்திலும் மகத்தான, (பெரியதிலும் பெரியதான), தாமஸத்திற்கு அப்பாற்பட்ட ப்ரும்மா. சங்க, சக்ர, க3தை4 இவற்றை தரித்தவன். ஸ்ரீ வத்ஸம் அலங்கரிக்கும் மார்புடையவன். நித்யமான, வெல்ல முடியாத, சாஸ்வதமான அழிவற்ற பரம் பொருளே இவன். மனித உருக் கொண்ட சாக்ஷாத் மஹா விஷ்ணுவே. சத்ய பராக்ரமன். வானர ரூபத்தை எடுத்துக் கொண்டு தேவர்கள் இவனை சூழ்ந்து வந்திருக்கின்றனர். சர்வ லோகேஸ்வரன், தானே, உலகின் நன்மைக்காக, ராக்ஷஸ பரிவாரங்களோடு உன்னை வதம் செய்திருக்கிறான். இந்திரியங்களை ஜயித்து தவம் செய்து முன்பு உன்னால் மூன்று உலகமும் ஜெயிக்கப் பட்டது. அந்த வைரத்தை மனதில் கொண்டு அந்த இந்திரியங்களே உன்னை பழி வாங்கி விட்டன போலும். நானும் சொன்னேன். ராகவனோடு விரோதம் வேண்டாம், சமாதானமாக போகலாம் என்று எவ்வளவோ சொன்னேன். உனக்கு ஏற்கவில்லை. அதனால் தான் இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறோம். திடுமென, யதேச்சையாக கண்ணில் பட்ட சீதையிடம் ஏனோ இவ்வளவு ஆசை வைத்தாய். மோகம் கொண்டாய். ராக்ஷஸ ராஜனே, ஐஸ்வர்யம் அழியவும், தன் ஜனங்களின் நாசமும் உன் தேக வியோகமும் அதன் பலன்களே. அருந்ததிக்கு ஒப்பான, ரோஹிணியை விட சிறந்தவளான, கௌரவம் மிகுந்த சீதையை அபகரித்து, நீ செய்த செயல் மிகவும் கீழ்த்தரமானது. பூமியை விடச் சிறந்த பூதேவி, லக்ஷ்மிக்கும் லக்ஷ்மியான, கணவனுக்கு பிரியமான பத்னியான சீதையை, அழகிய வடிவம் உடையவளை, சுபமான லக்ஷணங்கள் பொருந்திய சீதையை காட்டில் தனியாக இருக்கும்பொழுது பலவந்தமாக அழைத்து வந்து, நீ மறைமுகமாக உனக்கே தீங்கு இழைத்துக் கொண்டதைத் தவிர என்ன சுகத்தை அடைந்தாய். அவள் சரீரத்தை அனுபவிக்க நீ விரும்பியது கூட நடக்கவில்லை. ப்ரபோ, அந்த பதிவிரதையின் தவத்தால் தான் நீ எரிந்து சாம்பலானாய். நிச்சயம் அவளைத் தொட்டு தூக்கிய பொழுதே தகிக்கப்படாமல் இருந்தது தான் அதிசயம். அக்னி முதலான தேவர்கள் உன்னிடம் நடுங்கி வணங்கி இருந்தனர். யாரிடமும் பயம் இல்லாமல் இருந்த நீ, உன் பாபத்தின் பலனைத் தான் அடைந்திருக்கிறாய். ஒருவன் செய்யும் பாப கர்மா, சரியான சமயம் வரும் பொழுது தண்டிக்கும் என்பது உண்மையே. சுப காரியம் செய்தவன் சௌக்யமாக இருப்பான், பாபத்தை செய்பவன் அதன் பலனை அடைவான் என்பதும் சரியே. விபீஷணன் நல்ல நிலைமைக்கு வந்து விட்டான். நீ உன் பாப பலனை அனுபவிக்கிறாய். ரூபத்திலும், அழகிலும், இன்னும் அதிக மேன்மை வாய்ந்த பெண்கள் உன்னிடம், உன்னை அண்டி இருக்கும் பொழுது, எல்லோரையும் விட்டு அனங்கன் வசமானாய். மோகம் கண்களை மறைக்க, தவறு செய்தாய். குலத்திலும், ரூபத்திலும், தாக்ஷிண்யத்திலும் மைதிலி, என்னை விட எந்த விதத்திலும் உயர்ந்தவளும் அல்ல, எனக்கு சமமானவளும் இல்லை. இந்த ஒப்பிடலைக் கூட நீ செய்து பார்க்கவில்லை. மோகம் தான் கண்களை மறைத்ததே. தன் அறியாமையால் வீழ்ந்தாய். எல்லா ஜீவராசிகளுக்கும் ம்ருத்யு வர ஒரு காரணம் இருக்கும். உன்னை யமனிடம் சேர்க்க இந்த மைதிலி வந்து சேர்ந்தாள். வெகு தூரத்திலிருந்த உன் மரணத்தை, சீதா ரூபத்தில் நீயே அழைத்துக் கொண்டு வந்து அருகில் வைத்துக் கொண்டாய். இப்பொழுது என்ன? மைதிலி ராமனுடன் சௌக்யமாக இருந்து அனுபவிப்பாள், அவள் துக்கம் எல்லாம் மறைந்து விட்டது. அவள் பாக்யசாலி. நான் தான் முடிவில்லா சோக சாகரத்தில் மூழ்கி கிடக்கப் போகிறேன். உன்னோடு கைலாசத்தில், மேரு மலையில், சித்ர ரதம் என்ற தேவ லோக உத்யான வனத்தில், எல்லா உத்யானங்களிலும் உன்னுடன் உல்லாசமாக சுற்றி வந்த நான், தகுதியான விமானத்தில் அல்லது உன் செல்வத்துக்கு அனுரூபமான வழியில் பல தேசங்களைக் கண்டு களித்தும், ஆங்காங்கு கிடைத்த விசித்திரமான மாலைகளையும் வஸ்திரங்களையும் அணிந்து மகிழ்ந்தவளாக சுகமாக இருந்தேன். இந்த போகங்கள் எதுவும் இனி எனக்கு இல்லை என்று தள்ளப் பட்டு விட்டேன். உன் முடிவினால் நான் எதுவும் இல்லாத அபாக்யவதியாகி விட்டேன். தி4க், அரசர்கள் செல்வங்கள் இவ்வளவு சஞ்சலமானவையா? ஹா ராஜன், ஹே ராஜனே, உன் சுகுமாரமான புருவங்கள், அழகிய உடல் நிறம், உயர்ந்த நாசி, உடலின் காந்தியும், லக்ஷ்மியும் (தேஜஸ்), சந்திரன் பத்மம், திவாகரனுடன் ஒப்பிடக் கூடியவை. கிரீடம் அலங்கரிக்கும் தாமிர நிற முகம் குண்டலங்கள் ஒளி வீச, மதுவருந்தி அரை மயக்கத்திலிருக்கும் சிவந்த கண்கள், பான பூமிகளில் பல விதமான மாலைகளணிந்து அழகாக மென்னகை புரியும் வதனம், இன்று அதன் இயல்பான ஒளியுடன் இல்லையே. ப்ரபோ, ராம ஸாயக- ராமன் வில்லிலிருந்து வந்த அம்புகள் ரத்தம் பெருகச் செய்து சேறாகிப் போன மண் உடலில் அப்பிக்கொள்ள, ரதம் ஓடி, கிளப்பி விட்ட புழுதியும் சேர்ந்து முகத்தை மறைக்கின்றன. ஹா, கடைசி காலம் என்னை விதவையாக்கியபடி வந்து சேர்ந்ததே. நான் சற்றும் எதிர் பாராத சமயம், என் மந்த புத்தி தான் காரணம். என் தந்தை தானவ ராஜன், கணவன் ராக்ஷஸேஸ்வரன், என் மகன் சக்ரனை இந்திரனை வெற்றி கொண்டு இந்திரஜித் என்று பெயர் பெற்றவன் என்று இதனால் கர்வமும், என் நாதன் இருக்க எனக்கு எங்கும் யாரிடமும் பயம் இல்லை என்று த்ருடமாக நம்பி, என்னைச் சுற்றி சூரர்கள், எதிரிகளை அடக்கி ஆளும் வீரர்களே நிறைந்துள்ளனர் என்றும் நம்பியிருந்தேன். இப்படி ஒரு மனிதனிடம் இப்படி ஒரு ஆபத்து வந்து சேர்ந்ததே. சாதாரணமாக விஹார சமயங்களில் இருப்பதை விட சங்க்ராம பூமியில் என் காந்தன் அதிக பிரகாசமாக, கம்பீரமாக நிற்பான். தானே நீல மலை போல கம்பீரமான பெருத்த சரீரம் உடையவன், கேயூர, அங்கத, வைமூடுரிய, முக்தா மணிகளால் ஆன ஆபரணங்கள் அணிந்து அதன் மேல் ஜ்வலிக்கும் மாலையும் அணிந்திருப்பான். மின்னல் கரு மேகத்தினிடையில் மின்னுவது போல இந்த ஆபரணங்கள் அவன் மேனியில் எடுப்பாக இருக்கும். அந்த சரீரம், ஒன்றா, இரண்டா, பல தீக்ஷ்ணமான, கூரான அம்புகள் தைக்கப் பெற்று விழுந்து கிடக்கிறது. தொடக் கூட முடியவில்லையே. எப்படி அணைத்துக் கொள்வேன். முள்ளம் பன்றி முதுகில் குத்திட்டு நிற்கும் ரோமங்கள் போல உடல் முழுவதும் அம்புகள் . வஜ்ர அடியினால் சிதறி விழுந்த மலையின் பாகங்கள் போல கீழே விழுந்து கிடக்கும் ராக்ஷஸ சரீரம். இது சத்யமாக ஸ்வப்னமே, கனவே. நீ எப்படி ராமனால் கொல்லப் பட முடியும்? யமனுக்கும் யமனாக இருந்தவன். நீ எப்படி அவன் வசம் ஆவாய்? மூவுலகங்களிலும் செல்வத்தை அனுபவிக்கவே பிறந்தவன். மூவுலகையும் நீ தூண்டி செயல் படக் கூடியவன். லோக பாலர்களையும் ஜெயித்தவன். சங்கரனையே ஆட்டி வைத்தாய். கர்வம் கொண்டு அலைபவர்களை பிடித்து அடக்குபவன். உன் பராக்ரமத்தால் மற்றவர்களை பணிய வைத்து பழகியவன். உலகையே வற்றிச் சுருங்கச் செய்பவன். உன் குரல் காதில் விழ, பூதங்கள் கூட அலறும் படி சத்ருக்களின் எதிரில் நீ கம்பீரமாக சொல்லும் சொல்லை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியாதபடி பேசுபவன். தன் படை வீரர்கள், வேலையாட்கள் இவர்களை பாதுகாப்பாக ரக்ஷிப்பவன். அவர்களை அரவணைத்துச் செல்லத் தக்க பயங்கரமான விக்ரமம் உடையவன். தானவேந்திரர்களை கொன்றவன். ஆயிரக்கணக்கான யக்ஷர்களை கவசம் அணிந்து வந்தவர்களை பிடித்துக் கொண்டு வந்த ஈ.ஸ்வரன் நீ. யாகங்கள் ஒன்றா, இரண்டா, தன் ஜனங்களை எப்பொழுதும் காப்பாற்றும் நல்ல அரசன். தர்மம் என்று பழமையிலே உழலாமல், யுத்தம் என்று வந்தால் மாயையால் ஸ்ருஷ்டி செய்து வென்றவன். அவ்வப்பொழுது, தேவ, அசுர, மனித கன்னிகளை அபகரித்துக் கொண்டு வந்திருக்கிறாய். சத்ருக்களின் ஸத்ரீகள் தான் சோகம், துக்கம் அனுபவிப்பார்கள். தன் ஜனங்களை எப்பொழுதும் பரிபாலித்து வந்ததால் உன் பக்ஷத்து ஸ்த்ரீகள் துன்பம் அடைந்ததேயில்லை. லங்கை எனும் தீவை கவனமாக பாதுகாத்து வந்தாய். பெரும் பயங்கரமான அரிய செயல்களை செய்தவன் நீ. ரதம் ஓட்டுபவர்களில் சிறந்தவன் நீ. எங்களுக்கு காம போகங்களைத் தருபவன் நீயே. இப்படி பெருமை வாய்ந்த என் கணவன் ராமனின் அம்புகளால் கொல்லப் பட்டு கீழே விழுந்து கிடப்பதைக் கண்டும் என் மனம் சிதறவில்லையே. உடலைத் தாங்கியபடி ஸ்திரமாக நிற்கிறேனே. உயர்தர படுக்கைகளில் படுத்து அனுபவித்த ராக்ஷஸேஸ்வரன், இந்த புழுதியில் ஏன் கிடந்து உறங்குகிறாய்? உன் மகன் இந்திரஜித் லக்ஷ்மணன் கையால் வதம் செய்யப் பட்ட பொழுதே நான் பாதி அடிபட்டு நம்பிக்கையிழந்து விட்டேன். இப்பொழுது முழுவதுமாக விழுந்து விட்டேன். எனக்கு பந்து ஜனங்களுக்கு குறைவில்லை. நாதா, நாதனான நீ தான் இல்லை. நீ இல்லாமல் நான் என்ன சுகத்தைக் காண்பேன். காலம் முழுவதும் எனக்கு சிந்தனைதான் மீதியாகும். அத்வானமாக நீண்ட வழி செல்லும் நீ என்னையும் அழைத்துச் செல். நான் இங்கு உயிர் வாழ மாட்டேன். என்னை அனாதரவாக விட்டு நீதான் எப்படி தனியாக செல்ல முடிந்தது. தீனமாக கதறுகிறேனே, என்னுடன் பேச மாட்டாயா? நகரத்தை விட்டு கால் நடையாக வெளியே வந்து, முகத்திரை எதுவும் இல்லாமல் வெட்ட வெளியில் கதறுவது பிடிக்கவில்லையா. இதோ பார், உன் மற்ற மனைவிகளும் வெட்கத்தை விட்டு ஓடி வந்து கதறுகிறார்களே, முகத்திரையின்றி வெளியே வந்து நிற்கும் இவர்கள் எல்லோருமே, உன் விளையாட்டுகளுக்கு சகாயமாக இருந்தவர்கள், இப்பொழுது அனாதைகளாக புலம்புகிறார்கள். என்ன பிரமாதம் என்று அலட்சியம் செய்கிறாயா? இவர்கள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையா? இவர்கள் அனைவரும் குலஸ்த்ரீகள். உன்னைச் சார்ந்தே வாழ்ந்தவர்கள். நீயின்றி விதவையாக தவிக்கிறார்கள். பதிவிரதைகளாக தர்மபரர்களாக, குரு சுஸ்ரூஷையில் கவனமாக இருந்து இவர்கள் தன் வசமின்றி சபித்தார்கள். நீ இவர்களுக்கு துரோகம் செய்தாய் அரசனே. உலகில் சொல்வதுண்டு. பதிவிரதை ஸ்திரீகள் கண்ணீர் பூமியில் விழக் கூடாது. அது நிச்சயம் தண்டித்து விடும் என்று. உன் விஷயத்தில் சரியாகி விட்டது. ராஜன், நீ உலகங்களை ஆக்ரமித்து, ஜயித்து, உன் வீர்யத்தை காட்டுவதாக எண்ணி இந்த பெண்களை அபகரித்துக் கொண்டு வந்து சேர்த்தாய். திருட்டுத்தனமாக மாயா மான் என்று ஏமாற்றி அவன் நாதனை அகலச் செய்து, தனித்து இருந்தவளை, ராமபத்னியை கொண்டு வந்தாயே, இது என்ன கோழைத்தனம்? இதில் உன் வீரம் எங்கே இருக்கிறது? யுத்தத்தில் நீ என்றும் கோழையாக பின் வாங்கி நான் கண்டதில்லை. பாக்யம் விபரீதமாக இருக்கும் பொழுது, நல்ல அறிவுரையும் பயனின்றி போகும் போலும். சாதாரணமாக நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்று யோசித்து தெரிந்து கொண்டு, கால் வைக்கும் வழக்கமுடைய என் மைத்துனன், மைதிலியை அபகரித்துக் கொண்டு வந்தாயே, அப்பொழுதே உனக்கு நன்மையைச் சொன்னான். இந்த செயலைக் கண்டு யோசித்து, ஆழ சிந்தித்து உனக்கு நன்மையைச் சொன்னான். அவன் வாக்கு சத்யமானதே. அதை நீ கேட்கவில்லையே. அதனால் தான் ராக்ஷஸர்களின் விநாச காலம் முன் வந்து நின்று கொண்டது. காமமும், க்ரோதமும் சேர்ந்து கஷ்டங்களை கொண்டு சேர்த்திருக்கிறது. வேரோடு அழிக்கும் மகா துக்கம் வந்து, ராக்ஷஸ குலத்தை அனாதையாக ஆக்கியுள்ளது. அரசனே, இந்த நாசத்திற்கு நீயே தான் காரணம், இப்படி நான் உன் புகழ் பெற்ற பராக்ரமத்தை மறந்து பேசுவது கூட சரியல்ல. பெண் மனம், கருணையால் பேச வைக்கிறது. சுக்ருதமோ, துஷ்க்ருதமோ, நீ உன் வழியில் சென்று விட்டாய். இனி நான் என்ன செய்வேன்? என்னால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை. நன்மையைச் சொன்ன ஹிதகாரிகளான நண்பர்கள் சொல்லை நீ கேட்கவில்லை. சகோதரன் என்று கூட ஏற்றுக் கொள்ளவில்லை. காரண காரியங்களோடு சொன்னான். முறைப்படி சொன்னான். ஸ்ரேயஸ்கரமான சொல்லைத் தான் சொன்னான். அந்த விபீஷணன் சொன்னது எதுவுமே உன் காதில் ஏறவில்லையே. மாரீசன், கும்பகர்ணன், என் தந்தை இவர்களும் சொன்னார்கள். வீர்ய மதத்தில் (கர்வத்தில்) இருந்த உனக்கு இவை ரசிக்கவில்லையே. அதன் பலன் தான் இது. நீல மேகம் போன்றவனே, மஞ்சள் பட்டாடை அணிந்தவனே, சுபமான அங்கதம் அணிந்து ஏன் ரத்தச் சேறாகி இருக்கும் பூமியில் கிடக்கிறாய்? தூங்குவது போல கிடக்கிறாயே, என்னுடன் பேச மாட்டாயா? மகா வீர்யவானான தக்ஷன், யுத்தத்தில் என்றும் புற முதுகு காட்டி அறியாதவன், யாதுதான-ராக்ஷஸ ராஜாவின் மகன் வழி பேரனாக வந்தவன், நீ இப்படி கிடக்கலாமா? எழுந்திரு, எழுந்திரு, ஏன் படுத்து உறங்குவது போல கிடக்கிறாய்? புதிய அவமானம் தலை குனிவு வந்து சேர்ந்ததே என்று லஜ்ஜையா? இதோ பார், இன்று பயமின்றி சூரியனின் கிரணங்கள் லங்கையில் பிரவேசிக்கின்றன. சூரியன் போன்ற தேஜஸுடன் யுத்தத்தில் எதிரிகளை வாட்டி வதைத்தாயே, வஜ்ரத்தை வஜ்ரதரன் எப்பொழுதும் பூசிப்பது போல நீயும் சூரியனை பூசித்து வந்தாய். பொன்னால் இழைத்து அலங்கரிக்கப் பட்ட உன் பரிகம் இதோ சின்னா பின்னமாகி கிடக்கிறது. இதையும் பிரியமான பத்னியை அணைப்பது போல அணைத்தபடி சமர பூமியில் கிடக்கிறாயே. நான் பிரியமில்லாதவளாக ஆகி விட்டேனா? என்னுடன் பேச ஏன் இந்த தயக்கம். தி4க், என் ஹ்ருதயம் ஏன் நூறாக சிதறி விழவில்லை. நீயும் ஐந்தாவது கதியை(பால்யம்,-சிசு பருவம், கௌமாரம்-குமாரனான பருவம், யௌவனம்- இளமை, வார்த்தக்யம்-முதுமை), பஞ்சத்வம் இவைகளுக்கு அடுத்த நிலை, மரணம்) அடைந்தபின் எனக்கு இந்த வாழ்வில் என்ன பாக்கியிருக்கிறது என்று இவ்வாறு புலம்பி வருந்தும் மந்தோதரி, தன் துக்கத்தைத் தாங்க மாட்டாமல் மூர்ச்சையானாள். அழுக்கு மண்டி கிடந்த ராவணன் மார்பில் முகம் பதித்து மூர்ச்சையாகி விழுந்தவள், சந்த்யா கால சிவந்த கிரணங்கள் பரவிய மேகத்தில், ஒளியின்றி மின்னல் தெரிவது போல கிடந்தாள். அவளை, சபத்னிகள், தங்கள் துயரை அடக்கிக் கொண்டு சமாதானம் செய்தனர். தேவி, உனக்குத் தெரியாததல்ல. உலகில் ஸ்திரமற்ற இந்த நிலையைப் பற்றி நீ அறிவாய். காலம் மாறும் பொழுது, அரசர்களின், சஞ்சலமான செல்வ நிலையும் மாறும். இதைக் கேட்டு மேலும் உரக்க சப்தமிட்டு அழுதாள். கண்ணீர் பெருகி அவள் உடலை நனைத்தது. இது இப்படி இருக்க, இங்கு ராமன் விபீஷணனைப் பார்த்து சொன்னான். விபீஷணா, உன் சகோதரனுக்கு சம்ஸ்காரங்களை முறைப்படி செய். இந்த ஸ்த்ரீகளை சமாதானம் செய்து அனுப்பு. இதைக் கேட்டு விபீஷணன் சற்று யோசித்து பதில் சொன்னான். தர்ம விரதத்தை கை விட்டவன், என் சகோதரன் தான். ஆனாலும் க்ரூரன், கருணையற்றவன், நேர்மையில்லாதவன். பிறன் மனைவியை தொட்டவனான இவனுக்கு நான் ஸம்ஸ்காரம் செய்ய தகுதியற்றவன். ப்ராத்ரு (சகோதர) ரூபத்தில் இருந்த சத்ரு இவன். எல்லோருக்கும் துன்பத்தையே இழைத்தான். எனக்கு மூத்தவன், குரு என்ற கௌரவத்தால் நான் பூஜிக்கத் தகுந்தவனே. ஆனால், ராவணன் இந்த கௌரவத்திற்கு தகுதியுள்ளவனே அல்ல. என்னையும் கொடியவன் என்றே உலகம் அழைக்கும். முதலில் அவன் செய்த கெட்ட காரியங்களை சொல்லி விட்டுத் தான் ஏதாவது நன்மை செய்ததையும் சொல்வார்கள். இதைக் கேட்டு, அர்த்தம் செறிந்த, அழகிய வாக்யங்களையே பேசும் ராமர், தர்மத்தின் வழி நின்று பதில் சொன்னார். உன் பிரபாவத்தால் தான் நான் ஜயிக்க முடிந்தது. அதனால் நீ விரும்புவதையும் நான் செய்தே ஆக வேண்டும். நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். இந்த நிசாசரன் அதர்மம், நேர்மையின்மை இவைகளுக்கு இருப்பிடமாக இருந்ததாகவே வைத்துக் கொள்வோம். தேஜஸ்வி, பலவான், யுத்த பூமியில் சூரனாக திகழ்ந்தவன். தேவர்கள், இந்திரன் உள்ளிட்ட யாரிடமும் தோற்றதில்லை என்று கேட்டு இருக்கிறோம். மகாத்மா, நல்ல பலம் உடையவன், உலகத்தையே வருத்தும் ராவணன், இவையணைத்தும் இருந்தாலும்., மரணம் வரை தான் விரோதம். நம் காரியம் ஆகி விட்டது. இவனுக்கு ஸம்ஸ்காரங்கள் செய். உனக்கு எப்படியோ அதே போலத்தான் எனக்கும்., உன் கையால் தசக்ரீவன், விதி முறைபடி ஸ்ம்ஸ்காரங்கள் செய்யப்பட தகுதியுடையவனே. தர்மம் அறிந்தவனே, இதை செய்து நீ தான் புகழை அடைவாய். இதைக் கேட்டு விபீஷணன் மனம் தெளிந்து, வேகமாக செயல் பட ஆரம்பித்தான். ராவணனுக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை செய்தான். சந்தன கட்டைகளைக் கொண்டு சிதை அமைத்து, பத்மத்தின் மகரந்தங்களைத் தூவி, ப்ராம்ம விதிபபடி, மான் தோலை விரித்து ஆசனம் அமைத்து அதன் மேல் கிடத்தினான். வேதங்கள் அறிந்த அரசனுக்கு இது கடைசி யாகம் என்றே சொல்லப்படுகிறது. தென் திசை நோக்கி வேதியை அமைத்து, அக்னியை அதன் இடத்தில் வைத்து, பாலுடன் நெய்யை சேர்த்து ஸ்ருவங்களில் (கரண்டிகளில்) நிரப்பி விட்டான். கால்களில் சக்கரம், தொடைகளில் உலுகலம் என்ற உரல், எல்லா விதமான தாரு பாத்திரங்கள், உத்தரணி, உலக்கை இவற்றைக் கொடுத்து, அந்தந்த இடத்தில் வைத்து, விதி முறைகளை அறிந்த அறிஞர்கள் சொன்னபடி, சாஸ்திரங்களில் கண்டுள்ளபடி, மகரிஷிகள் விதித்தபடியும் பசுவை பலி கொடுத்து (மேத்யம் எனும் பசு) நெய்யில் தோய்த்து பரத்தினர். கந்த மால்யங்களால் ராவணனை அலங்கரித்து, பல விதமான வஸ்திரங்கள் அணிவித்து விபீஷணன் உதவியோடு பொரிகளை வாரியிறைத்து, கண்களில் நீர் ததும்ப அபர காரியங்களை செய்தனர். விபீஷணன் சிதைக்கு தீ மூமூட்டினான். பின் ஸ்நானம் செய்து ஈ.ர வஸ்திரங்களோடு, திலாஞ்சலி செய்தான். தண்ணீர், எள், தூர்வா இவற்றைக் கொண்டு நீர்க் கடன்களை செய்து, தலை வணங்கி நின்றான். ஸ்த்ரீ ஜனங்களை சமாதானப்படுத்தி, நகரத்தினுள் போகலாம் என்று அழைத்துக் கொண்டு சென்றான். விபீஷணன், ஸ்திரீ ஜனங்கள் நகரத்தினுள் நுழைந்ததும், திரும்பி வந்து ராமன் அருகில் வந்து நின்றான். ராமரும், சைன்யத்தோடு, சுக்ரீவனும், லக்ஷ்மணனும் உடன் வர, வ்ருத்திரனை வென்ற சதக்ரது எனும் இந்திரன் மன நிறைவு பெற்றது போல மன நிறைவையடைந்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மந்தோ3த3ரீ விலாப: என்ற நூற்று பதி நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 115 (522) விபீ4ஷணாபி4ஷேக: (விபீஷணனுக்கு முடி சூட்டுதல்)
ராவண வதத்தை பார்த்துக் கொண்டிருந்த தேவ, தானவ கந்தர்வர்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டே தங்கள் இருப்பிடம் சென்றனர். கோரமான ராவண வதமும், ராகவனின் பராக்ரமமும், வானரங்களின் யுத்தமும், சுக்ரீவனின் அணி வகுப்பும், யுத்தம் செய்த முறைகளும் அலசப் பட்டன. லக்ஷ்மணனின், மாருதனின் பற்றுதலும், வீர்யமும் பாராட்டப் பட்டன. இவ்வாறு பல விதமாக தங்களுக்குள் பேசிக் கொண்டே அவரவர் இருப்பிடம் சென்றனர். இந்திரன் தந்த ரதத்தை, திருப்பி அனுப்பி மாதலிக்கு மரியாதைகள் செய்து அனுப்பினான். ராகவனிடம் விடை பெற்றுக் கொண்டு இந்திர சாரதியான மாதலி திரும்பவும் தேவலோகமே சென்று விட்டான். தேவ லோக சாரதி இந்திர லோகம் சென்றபின், ராகவன் மிகவும் மகிழ்ச்சியோடு சுக்ரீவனை ஆலிங்கனம் செய்து கொண்டார். லக்ஷ்மணன் வந்து நினைவூட்டவும், எல்லா வானர வீரர்களும் வந்து வணங்க, தங்கள் சேனை இறங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தார். அருகில் இருந்த சௌமித்ரியைப் பார்த்து, சௌம்ய, இந்த விபீஷணனை லங்கா ராஜாவாக அபிஷேகம் செய்து வை. இவன் என் பக்தன். என்னிடம் மிகுந்த பற்றுதல் உடையவன். எனக்கு உபகாரம் செய்தவன். இது எனக்கு மிக முக்கியமான காரியம். ராவணன் தம்பியை லங்கையில் அரசனாக அபிஷேகம் செய்யப் பெற்று, விபீஷண ராஜாவாக காண வேண்டும். இவ்வாறு ராமர் சொன்னவுடன் சௌமித்ரி, அப்படியே என்று சொல்லி தங்க மயமான ஒரு குடத்தை எடுத்துக் கொண்டான். வானர ராஜனின் கையில் கொடுத்து சமுத்ர ஜலத்தை கொண்டு வரச் சொல்லி கட்டளையிட்டான். வேகமாகச் சென்ற வானரங்கள், சமுத்திர ஜலத்தை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர். வாராசனத்தில் விபீஷணனை அமரச் செய்து ஒரு குடம் ஜலம் எடுத்து லக்ஷ்மணன் அபிஷேகம் செய்து வைத்தான். லங்கையின் ராக்ஷஸர்கள் மத்தியில் ராமனின் ஆணைப்படி, ராஜாவாக அபிஷேகம் செய்து வைத்தான். மந்திரங்கள் சொல்லி முறைபடி நண்பர்கள் கூட்டம் சூழ, முடிசூட்டு விழாவை நடத்தினான். சுத்த ஆத்மாவான, நல்ல மனம் கொண்ட, விபீஷணனுக்கு முடி சூட்டி வைத்து அவன் மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்தது. சுற்றியிருந்தோர், விபீஷணனின் நெருங்கிய நண்பர்களும், சுற்றத்தாரும் மகிழ்ந்தனர். ராமன் கொடுத்த அந்த பெரும் ராஜ்யத்தை அடைந்த விபீஷணன், லங்காதிபதியாக முடி சூட்டப் பெற்று பொறுப்பு ஏற்றான். இயற்கையும் தன் நிலையான இயல்புக்கு ஏற்ப அமைதியாகியது. ராக்ஷஸ ஜனங்களை கண்டு பேசி விட்டு ராமரிடமே திரும்பி வந்தான். அக்ஷதைகள், மோதகங்கள், பொரி, திவ்யமான புஷ்பங்கள் இவற்றை ஊர் ஜனங்கள் , ராக்ஷஸர்கள் கொண்டு வந்தனர். அவைகளை வாங்கி விபீஷணன் ராமருக்கே சமர்ப்பித்தான். மங்களகரமான பல மங்கள வஸ்துக்களை லக்ஷ்மணனுக்கு கொடுத்தான். க்ருத கார்யம், தன் விருப்பம் நிறைவேறியவனாக, விபீஷணன் மகிழ்ச்சியுடன் இருப்பதை ராமர் பார்த்து தெரிந்து கொண்டார். அவனிடமே எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்தார். சைலம் (மலை) போல அருகில் நின்ற வீரனான ஹனுமானைப் பார்த்து சௌம்ய, இந்த விபீஷணனிடம் அனுமதி பெற்று லங்கா புரியினுள் செல். ராவண க்ருஹத்தில் உள்ளே செல்லவும் முறைப்படி அனுமதி பெற்றுக் கொள். வைதேஹியை வாழ்த்தி நான் குசலமாக இருப்பதையும், சுக்ரீவனும், லக்ஷ்மணனும் உடன் இருப்பதையும் சொல். வெற்றி வீரனே, ராவணன் என்னால் வதம் செய்யப் பட்டதையும் சொல். இந்த பிரியமான விஷயத்தை மைதிலிக்கு சொல்லி விட்டு அவள் சொல்லும் செய்தியையும் எனக்கு வந்து தெரிவிப்பாயாக.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீ4ஷணாபி4ஷேக: என்ற நூற்று பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 116 (523) மைதிலி பிரிய நிவேத3னம் (மைதிலிக்கு பிரியமானதைச் சொல்லுதல்)
இவ்வாறு உத்தரவு இடப்பெற்ற மாருதாத்மஜனான ஹனுமான் லங்கா நகரில் நுழைந்தான். எதிர்ப்பட்ட நிசாசரர்கள் வணக்கம் தெரிவித்தனர். ராவண க்ருஹத்தினுள் நுழைந்து கவலையுடன் இருக்கும் ரோஹிணியைப் போல தனித்திருந்த சீதையைக் கண்டான். ராக்ஷஸிகள் சூழ மரத்தினடியில் சற்றும் உற்சாகம் இல்லாமல் அமர்ந்து இருந்தவளைக் கண்டான். மிகவும் வினயமாக வணங்கி, பவ்யமாக அருகில் சென்று, அபிவாதனம் சொல்லவும், நிமிர்ந்து பார்த்த தேவி, மகா பலவானான ஹனுமான் வந்து நிற்பதையறிந்து மகிழ்ச்சியடைந்தாள். வாய் பேசாது நின்றவனை பார்த்து யார் என்று அடையாளம் கண்டு கொண்டவளாக சந்தோஷமாக விசாரித்தாள். அவள் முகக் குறிப்பிலிருந்து தான் யார் என்பதை தெரிந்து கொண்டு விட்டாள் என்பதை அறிந்து ஹனுமான் ராமரின் கட்டளையைத் தெரிவித்தான். வைதேஹி, ராமர் குசலமாக இருக்கிறார். சுக்ரீவ லக்ஷ்மணர்களும் உடன் இருக்கிறார்கள். விபீஷணன் சகாயமாக இருக்கிறான். வானர வீரர்களின் பலத்தாலும், சத்ருவை வதம் செய்து, வெற்றி வீரனாக குசலமாக இருப்பதாகச் சொல்லச் சொன்னான். விபீஷணன் சகாயத்தாலும், லக்ஷ்மணனின் கூர்மையான அறிவினாலும் வானர வீரர்களுடன் சேர்ந்து ராவணனை யுத்தத்தில் மாய்த்து, ரகு நந்தனன், உங்களிடம் குசலம் விசாரித்து வருமாறு என்னை அனுப்பினான். தேவி, மனதுள் பொங்கும் மகிழ்ச்சியோடு உனக்கு பிரியமானதை சொல்ல வந்து விட்டேன். தேவி நல்ல காலம், உயிருடன் வாழ்கிறாய். தர்மம் அறிந்தவளே, போரில் எனக்கு வெற்றியும் கிடைத்து விட்டது. சீதே, கவலையின்றி சௌக்யமாக இரு. ராவணனை யுத்தம் செய்து வதம் செய்து விட்டேன். லங்கையும் இப்பொழுது நம் வசத்தில். தூக்கத்தை துறந்து, த்ருடமாக ஒரே நினைவாக, உன்னை மீட்க பாடு பட்டது பிரதிக்ஞை செய்தது நிறைவேறி விட்டது. பெரும் சமுத்திரத்தில் சேதுவைக் கட்டி, தாண்டி வந்தோம். ராவண க்ருஹத்தில் வசிப்பதில் பதட்டமடைய வேண்டாம். இப்பொழுது இது விபீஷண ராஜ்யம்.. லங்கைஸ்வர்யம் இப்பொழுது விபீஷணனுக்குத் தரப் பட்டுள்ளது. அதனால் ஆஸ்வாஸப்படுத்திக் கொள். இந்த இடம் ஸ்வக்ருஹமாக மாறி விட்டது. உன்னைக் காணும் ஆவலுடன் இந்த ஹனுமான் மகிழ்ச்சியுடன் அங்கு வருவான் என்று ராமரின் செய்தியை ஹனுமான் சொல்லவும், முழு நிலவு போன்ற முகம் மலர, சீதை கீழே இறங்கி வந்தவள், எதுவும் சொல்லவில்லை. சீதை எதுவும் சொல்லாது இருப்பதைக் கண்டு வானர வீரன் ஹனுமான் கேட்டான். என்ன யோஜனை, தேவி, ஏன் என்னுடன் பேசவில்லை. இவ்வாறு ஹனுமான் விசாரிக்கவும், தர்மவழியிலேயே நிற்பவளான சீதை பதில் சொன்னாள். மனம் நிறைந்திருப்பது தழ தழத்த குரலில் வெளிப்பட, ப்லவங்கமா, (குதித்து, தாவிச் செல்லும் வானரமே) என் கணவனின் வெற்றி வாகை சூடிய செய்தி அறிந்து மகிழ்ந்தேன். திக்கு முக்காடிப் போனேன். எதுவும் பேச நா எழும்பவில்லை. வானர வீரனே, உனக்கு இணையாக வேறு யாரையும் சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்தவரை, எனக்கு பிரியமான விஷயத்தை சொல்ல வந்த உன்னைப் போல் இனி ஒருவர் இருக்க முடியுமா? உனக்கு எப்படி வாழ்த்து சொல்வேன்? உனக்கு சமமான பரிசு எதுவாக இருக்கக் கூடும் என்று எனக்கு புரியவில்லை, என் நன்றியை எப்படி தெரிவித்துக் கொள்வேன். ஹிரண்யமோ, சுவர்ணமோ, பலவிதமான ரத்னங்களோ, பூமி முழுவதுமோ, மூவுலக ராஜ்யமா எதுவுமே உனக்கு கொடுப்பது இந்த செயலுக்கு ஈ.டாகாது. பதில் சொல்ல முடியாமல் திணறுகிறேன். என்று சொன்ன வைதேஹியைப் பார்த்து வானர ஸ்ரேஷ்டன் பதில் சொன்னான். சீதையின் எதிரில் நின்று அஞ்சலி செய்தபடி, கணவனது பிரியத்தில், அவனது ஹிதத்திலேயே உங்கள் நினைவு எல்லாம் அர்ப்பணித்து இருந்தீர்கள். வெற்றி பெற பிரார்த்தித்துக் கொண்டு இருந்தீர்கள். இவ்வளவு அன்புடன் பாசத்துடன் என்னிடம் சொன்ன சொல்லை தாங்கள் தான் சொல்லக் கூடியவர்கள். உங்களால் தான் இப்படி பேச முடியும். பொருள் பொதிந்த சொற்கள், அன்புடன் சொல்லப் பட்டன. ரத்னங்கள் நிறைந்த பல தேவ ராஜ்யங்களை விட உயர்ந்தது இந்த சொற்களே. இதைத் தாங்கள் சொன்ன மாத்திரத்திலேயே, தேவ ராஜ்யம் வரையிலான பல நன்மைகளை நான் அடைந்து விட்டேன். சத்ருக்களை ஜயித்து விஜயனாக நிற்கும் ராமனை இனி எந்த விதமான இடறும் இன்றி நிலைத்து நிற்பவனாக காண்கிறேன். என்று ஹனுமான் சொல்லவும், ஜனகாத்மஜாவான மைதிலி, பவனாத்மஜனைப் பார்த்து, சுபமான வாக்யங்களைச் சொன்னாள். வானரனே, லக்ஷணங்கள் பூரணமாக நிறைந்ததும், மதுரமான குணம் உள்ளதும், எட்டு விதமான புத்தி பூர்வமான வாக்யத்தைச் சொல்ல நீ தான் தகுதியுடையவன். ஸ்லாகனீயன்- போற்றத் தகுந்தவன், பாராட்டத் தகுந்தவன் நீயே. வாயுவின் மகனாக வந்து பரம தார்மிகனாக பலம், சௌர்யம், கேள்வி, ஞானம், விக்ரமம், தாக்ஷிண்யம், உத்தமமான தேஜஸ், பொறுமை, தன்னம்பிக்கை, தைரியம், வினயம், இவ்வளவும் உன்னிடம் உள்ளன. சந்தேகமே இல்லை. இதைக் கேட்டும் பரபரப்போ, பதட்டமோ இல்லாமல் ஹனுமான், அதே போல வினயமாக, கை கூப்பியவாறு சீதையிடம் சொன்னான். தேவி, இந்த ராக்ஷஸிகளை, நீங்கள் அனுமதி கொடுத்தால், கொல்ல விரும்புகிறேன். யார், யார் உங்களை முன்பு துன்புறுத்தியிருக்கிறார்களோ, பயமுறுத்தி ஆட்டி வைத்தார்களோ, அவர்கள் எல்லோரையும் கொல்வேன். வருத்தத்துடன் அசோக வன மரத்தடியில் அமர்ந்து இருந்த சமயம் இந்த ராக்ஷஸிகள் உங்களை மேலும் துன்புறுத்தின. ரூபமும் கோரம், அதைவிட கோரமான கண்கள், பயங்கரமான சரித்திரம் உடைய இந்த ராக்ஷஸிகள், இவர்களைக் கொல்ல அனுமதி கொடுங்கள். இது தான் நான் கேட்கும் வரம் என்றான். முஷ்டிகளாலும், கால்களாலும் கைகளாலும், இவர்களை பயங்கரமாக குத்தி அடித்துக் கொல்வேன். முழங்கால்களால் முட்டி, மோதி, குத்தி, மேலும் மேலும் அடித்து, பற்களால் கடித்து, கர்ண நாசங்களை சாப்பிட்டு, கேசத்தை பிடித்து ஆட்டி வைத்து, இந்த ராக்ஷஸிகளின் கூட்டத்தை இன்னும் பல விதமாக உபத்ரவம் செய்து கொல்வேன். ஹனுமான் இவ்விதம் சொல்வதைக் கேட்டு யஸஸ்வினியான ஜனகாத்மஜா, சீதா, மெல்லச் சிரித்தபடி தடுத்து வானரோத்தமா, இவர்களை ஏன் கோபிக்கிறாய்? ராஜாவை ஆசிரயித்து வாழும் தாசிகள். மற்றவனின் ஆணையை தலை மேல் கொண்டு செயல்படுத்தும் நிலையில் தன் விருப்பப்படியா என்னை வாட்டினார்கள்? ஏதோ என் பாக்யம் விபரீதமாக இருந்தது. எப்பொழுதோ செய்த துஷ்க்ருத்யம் காரணமாக, இந்த விதமாக அதட்டல்களையும், விரட்டல்களையும் கேட்க நேர்ந்தது. தன் செயலின் பலனையே தான் ஒருவன் அனுபவிக்கிறான். என் ஜாதக கோளாறு. தசா புக்திகளின் விஷமமான நிலை,. இதை அனுபவிக்க வேண்டி வந்தது. இது நிச்சயம். பலமற்ற ராவண தாஸிகள் இவர்கள். இவர்களை நான் மன்னிக்கிறேன். எதுவும் தவறாக செய்ததாக நான் நினக்கவில்லை. ராவண ஆக்ஞையால் என்னை பயமுறுத்தி, அதட்டினார்கள். ராவணனே இல்லை என்றான பின், இவர்கள் ஏன் வாய் திறக்கப் போகிறார்கள்? முன்பு ஒரு கதை சொல்வார்கள். தெரியுமா? கேள். புலியின் முன்னே நின்றபடி கரடி சொல்லிற்றாம். மற்றவர்களின் பாப கர்மத்தின் பலனை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. காலம் அறிந்து, நல்லவர்கள் ரக்ஷிப்பதைத் தான் கொள்கையாக கொள்ள வேண்டும். தங்கள் நடத்தை அப்பழுக்கற்றதாக இருக்க நினைப்பவர்கள், பாபம் செய்தவர்களோ, சுபமான காரியம் செய்தவர்களோ, வதம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தால் கூட, கருணையைத் தான் முதலில் காட்ட வேண்டும். நல்ல குடி பிறப்பு உடைய குணவான்களான, பெரியவர்கள், இதைத் தான் செய்வார்கள் . யார் தான் அபராதம், தவறு செய்யாதவன். (ந கச்சின்னா பராத்யதி) எப்பொழுதும் தவறே செய்யாதவன் என்று யாரையுமே சொல்ல முடியாது. அதனால் வானரோத்தமா, உலக ஹிம்சையையே விளையாட்டாக செய்து வந்த ராக்ஷஸர்கள், விரும்பிய வண்ணம் வடிவம் எடுக்க வல்ல சக்தியினால் கர்வம் கொண்டு, பாபமே செய்த போதிலும், நாமும் அதே போல தண்டித்து அவர்களை துன்புறுத்துவதில் என்ன பெருமை இருக்க முடியும்? என்றாள். ராமபத்னியான சீதை இவ்வாறு சொன்னதைக் கேட்டு, சொல்லின் செல்வனான ஹனுமானே திகைத்து விட்டான். தேவி, ராமனுடைய மனைவியாக நீங்கள் பேசுவது ரொம்பவும் சரியே. அந்த ராமனின் தர்மபத்னி வேறு எவ்விதம் பேசுவாள்? எனக்கு அனுமதி கொடுங்கள். ராகவன் இருக்கும் இடம் திரும்பச் செல்கிறேன் எனவும், வைதேஹி பதில் சொன்னாள். வானரோத்தமா, என் கணவனைப் பார்க்க விரும்புகிறேன். இதைக் கேட்டு ஹனுமான் அவளை உற்சாகமூட்டும் விதமாக, கண்டிப்பாக பார்க்கத் தான் போகிறாய், தேவி. பூர்ண சந்திரன் போன்ற முகமுடைய ராமனைக் காண்பாய். உடன் லக்ஷ்மணனும் இருக்கக் காண்பாய். ஸ்திரமான மித்திரன், சுக்ரீவனுடன், மூவுலக நாயகனான இந்திரன், சத்ருக்களை ஜயித்து விட்டு திரும்பியதை, சசி தேவி கண்டது போல காண்பாய். சாக்ஷாத் லக்ஷ்மி தேவியே தன் பத்மத்திலிருந்து இறங்கி நின்றாற் போல இருந்த சீதையிடம் இவ்வாறு சொல்லி நம்பிக்கை அளித்து விட்டு, ராமனிடம் வந்து சேர்ந்தான், ஹனுமான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மைதிலி ப்ரிய நிவேத3னம் என்ற நூற்று பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 117 (524) சீதா பர்த்ரு முகோத்வீக்ஷணம் (சீதை கணவனின் முகத்தைப் பார்த்தல்)
வானர வீரனான ஹனுமான் திரும்பி வந்து மகா ப்ராக்ஞனான ராமரைப் பார்த்து, சொன்னான். வில்லாளிகளுள் சிறந்த ராமனிடம், சொல்லின் செல்வனான ஹனுமான் சொன்னான். எதைக் காரணமாகக் கொண்டு இந்த யுத்த காரியத்தை ஆரம்பித்தோமோ, இந்த செயலின் பலனாக விளங்கும் தேவியை, இன்னமும் துக்கத்தில் வாடிக் கொண்டிருக்கும் சீதையை தாங்கள் காண வேண்டும். கண்களில் நீர் நிரம்ப, வெற்றிச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்தாள். முன்பு என்னைக் கண்டு பரிச்சயம் ஆனவள், நம்பிக்கைக்கு பாத்திரமானவன் தான் நான் என்பதை புரிந்து கொண்டு என்னிடம் பேசினாள். எடுத்த செயலை முடித்த வீரனாக, லக்ஷ்மணனுடன் இருக்கும் என் நாதனைப் பார்க்க விரும்புகிறேன். இதைக் கேட்டு எதுவும் பேசாமல், ஏதோ யோசிப்பது போல பேசாமல் நின்றார். முகம் வருத்தம் அடைந்து, கண்களில் நீர் மல்கியது. பெருமூச்சு விட்டு, உஷ்ணமான மூச்சுக் காற்றில் தன் வேதனையை மறைத்தவராக, பூமியை நோக்கியபடி, அருகில் நின்றிருந்த விபீஷணனைப் கூப்பிட்டுச் சொன்னார். திவ்யமான அங்கராகங்கள் பூசி, திவ்யமான ஆபரணங்களை அணிவித்து, தலை ஸ்னானம் செய்தவளாக, சீதையை இங்கு கொண்டு வந்து நிறுத்து என்றார். தாமதம் செய்யாதே. இதைக் கேட்ட விபீஷணன் வேகமாகச் சென்று, அந்த:புரம் சென்று தன் ஸ்த்ரீ ஜனங்களை அழைத்துக் கொண்டு, சீதை இருக்கும் இடம் சென்றான். அவர்களை சீதைக்கு ஸ்நானம் செய்வித்து, மங்களாபரணங்களை பூட்டி, அழைத்து வர கட்டளையிட்டான். உனக்கு பத்ரம்-நன்மை உண்டாகட்டும், தேவி, உன் கணவன் உன்னைக் காண விரும்புகிறான் என்று தெரிவித்தான். வைதேஹி பதில் சொன்னாள். ராக்ஷஸாதிபனே, நான் ஸ்நானம் செய்யும் முன் கணவனைக் காண விரும்புகிறேன் எனவும் விபீஷணன் உன் கணவன் தான் அரசன். அவன் சொல்லை கேட்கத் தான் வேண்டும் என்றான். சீதையும் சம்மதித்து, கணவன் சொல்லியபடியே, ஸ்நானங்களை செய்ய தீர்மானித்தாள். பெண்கள் அவளை தலை ஸ்நானம் செய்வித்து, அலங்காரம் செய்து, மிக உயர்ந்த ஆபரணங்களும், உயர்ந்த வஸ்திரங்களும் அணிவித்து, அழகிய சிவிகையில் ஏற்றி, நாலாபுறமும் திரைகள் தொங்க, பலர் காவல் வர, விபீஷணன் அழைத்துச் சென்றான். இதையறிந்தும் த்யானத்தில் மூழ்கியிருந்த ராமனை நெருங்கி வணங்கி, மகிழ்ச்சியோடு சீதையை அழைத்து வந்து விட்டதைத் தெரிவித்தான். ராக்ஷஸன் க்ருஹத்தில் வெகு நாளாக வசித்தவள் வந்து விட்டதையறிந்து, ஹர்ஷம்-மகிழ்ச்சி, தைன்யம்-கையாலாகாத தன்மை, ரோஷம்-ஆத்திரம் மூமூன்றும் ஏக காலத்தில் ராமனை வாட்டின. அருகில் வந்து நின்ற விபீஷணனைப் பார்த்து, ராக்ஷஸாதிபனே, எப்பொழுதும் என் வெற்றிக்கு பாடுபடுபவனே, வைதேஹியை சீக்கிரம் என்னருகில் வரச் சொல் என்றான். உடனே விபீஷணன், கூட்டத்தை அதட்டி விலக்கி, சிவிகை சீக்கிரம் ராம சமீபம் வர ஏற்பாடு செய்யலானான். கைகளில் கம்பும் தடுப்பும் வைத்துக் கொண்டிருந்த காவல் வீரர்கள், கூட்டத்தை விரட்ட முனைந்தனர். கரடிகளும், வானரங்களும், ராக்ஷஸர்களும் நிறைந்த கூட்டம். விரட்டியடிக்கப் பட்டு, நகர்ந்து சற்று தூரம் விலகிச் சென்றன. இப்படி விரட்டியடிக்கப் படும் பொழுது மறுத்து பேசி, அல்லது எதிர்த்து கோஷம் இட்ட சத்தமே, சமுத்திரத்தின் அலை ஓசை மெதுவாக ஆரம்பித்து பலமாக ஆகி பெரும் ஓசையாக கேட்பது போல கேட்டது. இப்படி விரட்டப் படுபவர்களைப் பார்த்து தாக்ஷண்யத்துடனும், சற்று கோபத்துடனும் ராமன் தடுத்தார். விபீஷணனை எச்சரிப்பது போல, கண்களில் அனல் பறக்க, பதட்டத்துடன் சொன்னார். எதற்காக, நான் இங்கு நிற்கும் பொழுதே, லட்சியம் செய்யாமல் என் ஜனங்களை வருத்துகிறாய்? உடனே நிறுத்து. இவர்கள் என் ஜனங்கள். வீடுகளோ, வஸ்திரங்களோ, பிராகாரங்களோ, இது போன்ற ராஜ சத்காரங்களோ, பெண்களுக்கு பாதுகாப்பு அல்ல. சரித்திரம், நடத்தை தான் அவர்களுக்கு பாதுகாவல். கஷ்ட காலங்களில், சங்கடமான சமயங்களில், யுத்தங்களில், ஸ்வயம்வர சமயத்தில், யாக சாலையில், விவாக பந்தலில், ஸ்த்ரீகளைப் பார்ப்பது குற்றமாகாது. இதோ இவள் யுத்த பூமியில் வந்து நிற்கிறாள். பெரும் சங்கடத்தில் இருக்கிறாள். இவளைக் காண்பதால் எந்த தோஷமும் இல்லை. அதுவும் நான் அருகில் இருக்கும் பொழுது, மற்றவர்கள் காண்பதில் தவறில்லை. அதனால், விபீஷணா, சீக்கிரம் அவளை அழைத்து வா. சீதா, என் நண்பர்களுடன் நிற்பதை பார்க்கட்டும். இதைக் கேட்டு, மனம் ஒப்பாவிடினும், சற்று யோசித்து, விபீஷணன், தலை குனிந்தபடி, சீதையை அழைத்து வந்தான். அச்சமயம் லக்ஷ்மண, சுக்ரீவர்கள், ஹனுமான், ராமரின் வார்த்தையைக் கேட்டு கவலை கொண்டனர். சற்றும் அன்போ, பரிவோ இல்லாமல், சீதையைப் பற்றி, பேசுவதாக தோன்றியது. தன் மனைவி என்ற கௌரவம் அளிக்காது, அவனுடைய செயலும், முகக் குறிப்புகளும், ஏதோ சீதையிடன் மனஸ்தாபம் என்று தங்களுக்குள் ஊகித்துக் கொண்டனர். லஜ்ஜையினால் உடல் குறுக, தன்னுள்ளேயே நுழைந்து விடுபவள் போல, விபீஷணன் பின் தொடர, கணவனை நோக்கி நெருங்கி வந்தாள். வஸ்திரத்தினால் முகத்தை மூடியபடி, ஜனக் கூட்டத்தில், கணவன் அருகில் வந்து ஆர்யபுத்ர, என்று அழைத்தவள், மேற் கொண்டு பேச முடியாமல் அழுதாள். ஆச்சர்யம், மகிழ்ச்சி, ஸ்னேகம் இவை நிரம்பிய விழிகளால், இதுவரை பதியை தேவதையாக எண்ணி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்தவள், சௌம்யமான கணவனை, அதை விட சௌம்யமான முகத்தினளான சீதை, நிமிர்ந்து பார்த்தாள். வெகு காலமாக காணாத கணவன் முகத்தை ஆவலுடன் பார்த்தாள். அப்பொழுது தான் உதயமான பூர்ண சந்திரன் போன்ற காந்தனை, விமலமான சசாங்கனான சந்திரன் போன்ற முகத்தினளான சீதை ஏறிட்டாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சீதா பர்த்ரு முகோத்வீக்ஷணம் என்ற நூற்று பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)