பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டம் 118 -130

பிப்ரவரி 26, 2014

அத்தியாயம் 118 (525) சீதா ப்ரத்யாதே3ச: (சீதையை ஏற்க மறுத்து திருப்பி அனுப்புதல்)

 

அருகில் வந்து நின்ற சீதையை, லஜ்ஜையினால் உடல் குறுக நின்றவளைக் கூர்ந்து பார்த்து விட்டு, ராமர் தன் மனதில் உள்ளதைச் சொல்ல ஆரம்பித்தார். ப4த்3ரே இதோ இருக்கும் நீ, என் வீர்யத்தால், பலத்தால் ஜயிக்கப் பட்டாய். சத்ருவை போர் முனையில் சந்தித்து, வெற்றி கண்ட பின், நீ விடுவிக்கப் பட்டிருக்கிறாய். என் பௌருஷத்தால் சாதிக்க வேண்டியதை நான் சாதித்தேன். கோபத்தில் எல்லையில் இருந்தேன். இதனால் எனக்கு உண்டான அவமானம் துடைக்கப் பட்டு விட்டது. என் சத்ருவையும், எனக்கு ஏற்பட்ட அவமானம் இரண்டையும் ஒரே சமயத்தில் நான் பிடுங்கித் தூர எறிந்து விட்டேன். இன்று என் பௌருஷத்தை உலகுக்கு காட்டி நிமிர்ந்து நிற்கிறேன். என் சிரமங்களுக்கு பலனும் கிடைத்து விட்டது. என் பிரதிக்ஞையை நிறைவேற்றி என் மனதுள் பெருமிதம் பொங்குகிறது. சஞ்சல புத்தியுள்ள ராக்ஷஸன், என்னை விட்டுப் பிரித்து உன்னை அழைத்துச் சென்றானே, இது விதியின் விளையாட்டே. இந்த விதியையும், மனிதனாக நான் ஜயித்துக் காட்டி விட்டேன். என் தேஜஸால் அழிக்க முடியாத அவமானம் இது. சாதாரணமான அவமானமா? யார் தான் இதை சாதித்திருக்க முடியும்? அல்ப தேஜஸ் உடையவனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? இந்த அளவு புருஷார்த்தம் வேறு யாரிடம் இருக்கிறது?  சமுத்திரத்தைக் கடந்து வந்ததோ, லங்கையை முற்றுகையிட்டதோ, என்னைத் தவிர வேறு யாரால் செய்திருக்க முடியும்?  ஹனுமானுடைய அரிய சாகஸமும் பலனுடையதாக ஆயிற்று.  சுக்ரீவனும், சைன்யத்தோடு வந்து, யுத்தத்தில் தங்கள் விக்ரமத்தைக் காட்டியும், எது நன்மை தரும் என்று யோசித்து முடிவு செய்து, செயல் படுத்தி, அவனும், அவன் கூட்டதினரும் இயன்ற வரை பாடு பட்டது நல்ல பலன் அளித்தது.  அவன் எடுத்துக் கொண்ட சிரமம் வீண் போகவில்லை, இவ்வாறாக பேசிக் கொண்டே போகும் ராமனைப் பார்த்து செய்வதறியாது, குட்டி மான் போல கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருந்த சீதையைப் பார்த்து ராமனின் கோபம் அதிகமாயிற்று.  நெய் திடுமென நிறைய வார்க்கப் பட்டவுடன், யாகத்தீ குபீரென்று கொழுந்து விட்டெரிவது போல சினத்தின் ஜ்வாலை வீசியது.  குறுக்காக பார்த்துக் கொண்டு, புருவத்தை நெரித்தவாறு, வானர, ராக்ஷஸர்கள் மத்தியில் சீதையைப் பார்த்து கடுமையாக பேசலானார். மனிதன் தன் கடமையை புறக்கணிக்க முடியாது. தாங்க முடியாத அவமானத்தை துடைத்து எறிய வேண்டியது என் கடமையாயிற்று. என் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, சத்ருவை ஜயித்து உன்னை மீட்டேன். அகஸ்திய ரிஷி,எதிர்த்து நிற்க முடியாத தக்ஷிண திசையை தவத்தாலும், நிரந்தரமான முயற்சியாலும் வெற்றி கொண்டதைப் போல, உன்னை நான் ஜயித்தேன்.  இதையும் தெரிந்து     கொள். இந்த ரண பரிஸ்ரமம் என் நண்பர்களின் உதவியால் செய்து முடிக்க முடிந்தது. உனக்காக அல்ல. என் கௌரவத்தை, சரித்திரத்தை காப்பாற்றிக் கொள்ள என் மேல் வந்து விழுந்த அபவாதத்தை நீக்க நான் எடுத்துக் கொண்ட முயற்சி தான் இது. புகழ் பெற்ற என் வம்சத்தில் விழுந்த களங்கம் துடைக்கப் பட்டது. உன் சரித்திரத்தில் இப்பொழுது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நீ என் முன் நிற்கிறாயே, கண் வலி உடையவனுக்கு தீபம் போல எனக்கு உன்னைக் காணவே பிடிக்கவில்லை. எனக்கு பிரதிகூலமாக இருக்கிறாய். அதனால் போ. நான் அனுமதி அளிக்கிறேன். ஜனகன் மகளே, உன் இஷ்டம் போல போ. இதோ பத்து திக்குகளில் எங்கு வேண்டுமானாலும் போ. உன்னால் எனக்கு ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை.  உத்தமமான குலத்தில் பிறந்த எந்த புருஷன், பிறர் வீட்டில் வசித்த ஸ்த்ரீயை ஏற்றுக் கொள்வான்?  தேஜஸ் உடையவனாக இருந்தால்.   கோபம் நிறைந்த ராவணன் மடியில் இருந்து விழுந்தவள் நீ, அந்த துஷ்டனால் கெட்ட எண்ணத்தோடு பார்க்கப் பட்டவள் நீ,  உன்னை எப்படி ஏற்றுக் கொள்வான்? நான் நல்ல குலத்தில் பிறந்தவன். உன்னை எப்படி ஏற்றுக் கொள்வேன்? என் புகழைக் காத்துக் கொள்ளவே உன்னை மீட்டேன். எனக்கு இப்பொழுது உன்னிடத்தில் எந்த வித ஈ.டுபாடும் இல்லை. நீ போகலாம். இங்கிருந்து உன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாம். நான் யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்தேன். ப4த்3fரே,  அபலையான ஸ்த்ரீ என்பதால் அடைக்கலம் தேடி, நீ லக்ஷ்மணனிடமோ, பரதனிடமோ, யாரிடம் வேண்டுமோ போய் இரு. சுகமாக இரு. சுக்ரீவன் வானரேந்திரன் இதோ நிற்கிறான். ராக்ஷஸ ராஜன் விபீஷணனிடம் சௌகர்யமாக இருக்கலாம். யாரிடம் வேண்டுமானாலும் உன் மனதை செலுத்தி எப்படி சௌகர்யமோ செய்து கொள். மனோரம்யமான உன் திவ்ய ரூபத்தைப் பார்த்தும், தன் க்ருஹத்தில் கொண்டு வந்து வைத்த பின்னும் ராவணன் தான் எவ்வளவு நாள் பொறுத்திருப்பான்.

மைதிலிஸ்ரீ தன் கணவன் பிரியமாக பேசப் போகிறான் என்று நினைத்து வந்தவள், இப்படி ஒரு கடுமையான சொல்லைக் கேட்டு கண்களில் நீர் ஆறாக பெருக, க3ஜேந்திரன் கையில் அகப்பட்ட கொடி போல நடுங்கினாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சீதா ப்ரத்யாதே3சோ என்ற நூற்று பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 119 (526) ஹுதாசன ப்ரவேச: (அக்னி பிரவேசம்)

 

மயிர்கூச்செரியும் வண்ணம் கொடுமையான இந்த வார்த்தைகளைக் கேட்ட மைதிலி, ராகவனின் முகத்திலிருந்து வெளிப்பட்ட ஆத்திரத்தையும் கண்டு மிகவும் வேதனையை அடைந்தாள். கூட்டத்தின் நடுவில் நின்ற மைதிலி, கணவனின் கடும் சொல்லால், வெட்கம் பிடுங்கித் தின்ன, வாட்டமடைந்தாள். தன் உடலுக்குள்ளேயே நுழைந்து விடுவது போல அவமானம் அவளை வருத்த, ஜனகாத்மஜா, வாக்கு அம்புகளால் மிக அதிகமாக அடிபட்டவளாக, பெரிதும் வருந்தி அழுதாள்.   பின் தன் கைகளால் கண்ணீரைத் துடைத்தபடி, மெதுவாக குரல் தழ தழக்க பதில் கொடுத்தாள்.

 

ஏன் என்னிடம் இப்படி தகாத வார்த்தைகளை, செவிக்கு பயங்கரமான கடும் சொற்களை சொல்லி வதைக்கிறாய். வீரனே, ப்ராக்ருதமான கிராமத்து ஆண் மகன், ப்ராக்ருத, கிராமத்து ஸ்த்ரீயிடம் பேசுவது போல பேசினாய்.  நீ நினைப்பது போல அல்ல நான், தெரிந்து கொள்.  நீ சொல்லும் சரித்திரத்தில், என் நடத்தையின் பேரில் ஆணையாக சொல்கிறேன். ஏதோ தனிப்பட்ட சில ஸ்திரீகளின் துர்நடத்தையை மனதில் கொண்டு ஸ்திரீ ஜாதியையே தூஷிக்கிறாயே. நீ என்னை முற்றிலும் அறிந்தவனாக இருக்கும் பொழுது இந்த சந்தேகம் எப்படி வரும்? அதை இப்பொழுதாவது விடு. ப்ரபோ4 (ராவண) உடல் ஸ்பரிசம் என் மேல் பட்டது என்றால் அச்சமயம் நான் என் வசத்தில் இல்லை. வேண்டும் என்று விரும்பிச் செய்த செயலா அது? விதி தான் இதற்கு காரணம். காலத்தின் குற்றம். என் அதீனத்தில் உள்ள என் மனம் உன்னையே நாடுகிறது. உன்னையே நினைத்து வந்திருக்கிறது. பராதீனமான என் சரீரத்தில் எனக்கு என்ன அதிகாரம் இருந்தது. நீயும் இல்லாமல் தனியாக இருந்தேன். மானத, (எனக்கு சம்மானமும் கௌரவமும் தந்தவனே)  கூடவே வளர்ந்து உணர்ந்து கொண்ட பாவங்களாலும் (உணர்வுகளாலும்), இணைந்தே இருந்ததாலும் என்னை புரிந்து கொண்டது இவ்வளவு தான் என்றால், நான் சாஸ்வதமாக அழிந்ததாகவே கொள்ளலாம்.  ஹனுமான் என்ற வீரன் என்னைத் தேடி உன்னால் அனுப்பட்டு வந்த பொழுதே, லங்கையில் இருந்த என்னை ஏன் கை கழுவி விட வில்லை.  வானர வீரனின் முன்னால் இந்த வாக்யத்தை கேட்டவுடனே நானே உயிரை விட்டிருப்பேன். இந்த நாள் வரை நான் சந்தேகமும் பயமும் அலைக்கழிக்க வாழ்ந்திருக்கவே மாட்டேன். நண்பர்கள் எல்லோருமாக சேர்ந்து உனக்கு உதவி செய்தது பலனளிக்காமல் போகாது.  நரசார்தூலா| கோபத்தை மட்டும் மனதில் கொண்டு, சாதாரண மனிதனாக, ஸ்திரீத்வம் என்பதையே அவமதித்து இருக்கிறாய்.  ஜனகன் என்ற அரசனை மையமாகக் கொண்டு, வசுதா தலத்திலிருந்து உதித்தவள் நான். என் நடத்தையைப் பற்றி நீ நன்றாக அறிந்திருந்தும், அவமதித்திருக்கிறாய்.  பாலனாக என்னை கைப் பற்றி மணந்து கொண்டது உனக்கு பொருட்டாக இல்லை. நான் உன்னிடம் கொண்டிருந்த பக்தியும், என் சீலமும் அனைத்தையும் பின் தள்ளி விட்டாய். என்று சொல்லியபடி, கண்களில் நீர் பார்வையை மறைக்க, லக்ஷ்மணனைப் பார்த்து சொன்னாள். சௌமித்ரே| எனக்கு சிதையை தயார் செய். இந்த கஷ்டத்துக்கு அது தான் மருந்து. பொய்யாக அபவாதத்தை சுமந்து கொண்டு நான் உயிர் வாழ மாட்டேன். ஜன கூட்டத்தின் மத்தியில் என்னிடம் அப்ரியமாக பேசும் இந்த கணவனுடன், இவனால் கை விடப்பட்டு வாழ, எனக்கு பொறுமை இல்லை.    அக்னி பிரவேசம் செய்து வாழ்வை முடித்துக் கொள்வேன்.  இவ்வாறு வைதேஹி சொல்லவும், வெகுண்டெழுந்தவன், ராகவன் முகத்தை ஏறிட்டு நோக்கினான். ராமருடைய நிலையிலிருந்து அவனுக்கு இது சம்மதமே என்று அறிந்து கொண்டு சௌமித்ரி, சீதைக்கு சிதையை தயார் செய்தான். ராமருக்கும் இது உகந்ததாகவே இருந்தது. தலை குனிந்தபடி ராமரை பிரதக்ஷிணம் செய்து வைதேஹி கொழுந்து விட்டெரியும் அக்னியை நோக்கி வந்தாள்.  தேவதைகளை வணங்கி, மைதிலி ப்ராம்மணர்களையும் வணங்கி, கை கூப்பி வணங்கியபடி அக்னியின் அருகில் நின்றபடி சபதமிடுவது போல சொன்னாள். என் மனம் எப்பொழுதும் ராகவனை விட்டு விலகாது இருந்திருந்தால், உலகுக்கெல்லாம் சாக்ஷியான பாவகனான அக்னி என்னை காக்கட்டும். என்னை சுத்தமான நடத்தையுள்ளவளாக ராமன் உணர்ந்தால், உலகுக்கெல்லாம் சாக்ஷியான பாவகனான அக்னி என்னை காக்கட்டும். செயலால், மனதால், சொல்லால் நான் என் கடமையிலிருந்து மீறி, ராகவனைத் தவிர, சர்வ தர்மங்களை அறிந்தவனான ராகவனைத் தவிர நான் நினைக்காமல் இருந்தது உண்மையானால், சர்வ லோக ரக்ஷகனான பாவகன், அக்னி என்னை பாதுகாக்கட்டும். என்னை நன்னடத்தையுள்ளவளாக, ஆதித்யனும், பகவான் வாயுவும், திசைகளும், சந்திரனும், தினமும், சந்த்யா காலமும், இரவும், பூமியும், மற்றும் உள்ள பலரும் அறிந்திருந்தால், உலக ரக்ஷகனான பாவகன், அக்னி என்னைக் காக்கட்டும். இவ்வாறு சொல்லியபடி, வைதேஹி அக்னியை வலம் வந்து கொழுந்து விட்டெரியும் அக்னியில் சற்றும் தன் உள்ளத்தில் களங்கம் இல்லாதவளாக நுழைந்தாள். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, புடமிட்ட புது தங்கம் போன்று, புடமிட்ட தங்க ஆபரணங்களை அணிந்தவள் ஜ்வாலையினுள் குதித்து விட்டாள்.

 

அக்னியில் விழும் அவளை புண்யமான ஆஜ்யம், ஆஹுதியாக யாகாக்னியில் விழுவது போல மூவுலகத்தவரும் கண்டனர்.  ஸ்திரீகள் கூச்சலிட்டனர்.  அவளை ஹவ்யத்தை ஏந்திச் செல்வதால் ஹவ்ய வாஹனன் என்று பெயர் பெற்ற அக்னி விழுங்குவதைக் கண்டனர். மந்திரங்களால் சம்ஸ்காரங்கள் செய்யப் பெற்று வஸோர்தாரா, என்று யாக முடிவில் செய்யப் படும் இடைவிடாது தாரையாக வர்ஷிக்கப் படும் ஆஹுதி போல, யாகாக்னியில் விழுவதைப் போல கந்தர்வ தானவர்களும், மூன்று உலகத்தாரும் கண்டனர். ஸ்வர்கத்திலிருந்து ஏதோ தேவதை சாப வசத்தால் விழுவது போல அக்னியில் பிரவேசித்தவளைக் கண்டு ஹா ஹா என்று பெரும் சப்தம் உண்டாயிற்று.  ராக்ஷஸர்களும், வானரங்களும், அத்புதமான இந்த காட்சியைக் கண்டு திகைத்தனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஹுதாசன ப்ரவேசோ என்ற  நூற்று பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 120 (527) ப்ரும்ம க்ருத ராம ஸ்தவ| (ப்ரும்மா செய்த ராம துதி)

 

கண் முன்னால் நடந்ததைக் கண்டும், சீதையின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டும் இருந்த ராமரின் மனம் வருந்தியது. முஹுர்த்த நேரம் கண்களில் நீர் மல்க, பேசாது நின்றான். பிறகு வைஸ்ரவனனான ராஜா, யமன், எதிரிகளை அடக்க வல்ல சஹஸ்ராக்ஷன், மகேந்திரன், வருணன், மூன்று நயனங்களைக் கொண்ட பரமேஸ்வரன், ஸ்ரீமான் மகா தேவன், வ்ருஷத்வஜன் என்று புகழ் பெற்ற சாக்ஷாத் பரமேஸ்வரன், சர்வ லோகத்தையும் ஸ்ருஷ்டி செய்யும் ப்ரும்ம ஞானத்தில் சிறந்த ப்ரும்மா, இவர்கள் எல்லோருமாக சூரியனைப் போல பிரகாசிக்கும் தங்கள் விமானங்களில் ஏறி லங்கா நகரம் வந்து ராமரை சந்தித்தனர். ராகவனின் கூப்பிய கரத்தை பிடித்தபடி சொன்னார்கள். ஸ்ரேஷ்டமான ஞானிகளிலும் சிறந்த ஞானி,  உலகையே ஸ்ருஷ்டி செய்ய வல்லவன், ஏன் இப்படி அக்னியில் விழும் சீதையைத் தடுக்காமல் வாளா இருக்கிறாய்? தேவ கணங்களுக்குள் ஸ்ரேஷ்டமான தன் ஆத்மாவை ஏன் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறாய்.  முன் வசுக்களுள் பிரஜாபதியாக இருந்தாய். மூன்று உலகுக்கும் ஆதி கர்த்தாவான ஸ்வயம் பிரபுவானவன்.  எட்டு விதமாக விளங்கும் ருத்ரன். சாத்யர்களுக்குள் பஞ்சமன் (ஐந்தாவது). அஸ்வினி குமாரர்கள் உன் காதுகள். சந்த்ர சூர்யர்கள் கண்கள், உலகில் ஆதியிலும் அந்தத்திலும் நீ தான் இருக்கிறாய். பரந்தபனே, சாதாரண மனிதன் போல, வைதேஹியை அலட்சியப் படுத்துகிறாயே. இவ்வாறு லோக பாலர்கள் சொல்லவும், உலகுக்கு நாயகனான ராகவன், மூவுலக  ஸ்ரேஷ்டர்களையும் பார்த்து ராமர் சொன்னார்.  ஆத்மானம் மானுஷம் மன்யே, ராமம் தசரதாத்மஜம். – நான் என்னை தசரதன் மகனாக, ராமனாக, மனிதனாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? பகவன் | சொல்லுங்கள் என்று கேட்கும் காகுத்ஸனைப் பார்த்து ப்ரும்மா விவரிக்கலானார். சத்ய பராக்ரமனே|  கேள்.  நான் சொல்கிறேன்.  தாங்கள் தான் நாராயணன் என்ற தேவ தேவன்.  ஸ்ரீமான்.  சக்ரத்தை ஆயுதமாக கொண்டு விபு:  என்ற ப்ரபு.  ஒரு கொம்புடன் வராகமாக வந்தீர்கள். நடந்ததையும் நடக்கப் போவதையும் அறிந்தவர்கள். பங்காளிகளை ஜயித்தவன்.  அக்ஷரமான-அழிவில்லாத ப்ரும்ம லோகம், சத்ய லோகம், அதன் ஆதியிலும்,  மத்தியிலும், முடிவிலும் நீங்களே.  அழிவில்லாத  ப்ரும்ம  ஸ்வரூபம்

நீங்களே. உலகுக்கெல்லாம் அப்பாற்பட்ட பரம் பொருள்  நீங்களே தான். விஷ்வக்சேனராக, சதுர்முகமாக வந்ததும் நீங்களே.  சார்ங்கதன்வீ, ஹ்ருஷீகேசன் என்ற பெயர்களும் உடையவன்.  புருஷோத்தமனான புருஷன். எப்பொழுதும் வெற்றியே என்று வாளை ஏந்திய, தோல்வியே அறியாத விஷ்ணு, க்ருஷ்ணனும் நீங்களே.  ஏராளமான பலம் உடைய சேனானியும் நீங்களே. க்ராமணியும் நீங்களே. நீங்களே புத்தி, சத்வம், க்ஷமா, த3மம், ப்ரபாவம், அவ்யயம் எனும் குணங்களாக விளங்குபவன். உபேந்திரனும் நீங்களே. மதுசூதனனும் நீங்களே. இந்திரனின் கர்மாவை செய்யும் மகேந்திரனும், நீங்களே. பத்மனாபனும் நீங்களே.  யுத்த முடிவை நிர்ணயிப்பவனும் நீங்களே. சரணமடைந்தவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதில் உங்களுக்கு இணை இல்லை என்று மகரிஷிகள் சொல்வர். ஆயிரம் கொம்புகளையுடைய வேதத்தின் ஆத்மா.  நூறு நாக்குகளையுடைய பெரிய ரிஷபம்.  நீங்கள் தான்  மூவுலகுக்கும் ஆதி கர்த்தா.  ஸ்வயம்ப்ரபு நீங்களே. சித்தர்களுக்கும் தபஸ்விகளுக்கும் ஆசிரயம் அளிப்பவன்  நீங்களே. முன் தோன்றியவன்  நீங்களே.  நீங்கள் தான் யக்ஞம். நீங்கள் வஷட்காரனானவன்.  ஓங்காரன் நீங்களே.  பரந்தபன் என்றும் சொல்லப்படுபவன் நீங்களே. உங்களுடைய ப்ரபாவத்தையோ,  நீங்கள் தோன்றுவதையும், மறைவதையும் யாராலும் நிர்ணயிக்க முடியாது. நீங்கள் யார் என்பதையும் யாரும் அறிந்திலர்.  எல்லா ஜீவ ராசிகளிலும், ப்ராம்மணர்களில், பசுக்களில், எல்லா திக்குகளிலும், ஆகாயத்தில், பர்வதங்களில், பசுக்களில், வனங்களில் அந்தர்யாமியாக இருக்கும் ஆயிரம் சரணங்களுடைய ஸ்ரீமான்.  ஆயிரம் தலையுடையவன்.  ஆயிரம் கண்களுடையவன் நீயே. நீ தான் ஜீவராசிகளும்,  மலைகளும் உடைய பூமியைத் தாங்குகிறாய். பூமியின் அடியில் ஜலத்தில் பெரும் நாகமாக காணப்படுகிறாய். மூன்று உலகுகளையும் தாங்கிக் கொண்டு, தேவ, கந்தர்வ, தானவர்களையும் ஆள்பவன் நீயே.  நான் தான் (ப்ரும்மா) உன் ஹ்ருதயம். உன் நாக்கில் தேவி சரஸ்வதி இருக்கிறாள்.  உன் உடல் ரோமங்களில் தேவர்கள் வசிக்கிறார்கள். ப்ரபோ இவைகளை ப்ரும்மா நிர்மாணித்தார். நீ கண்களை மூடினால் அது இரவு. கண் திறந்தால் பகல். உன் ஸம்ஸ்காரத்தினால் வேதங்கள் தோன்றின. நீயில்லாமல் எதுவுமே இல்லை. இந்த உலகம் முழுவதும் உன் சரீரம். உன் ஸ்திரமான தன்மை பூமி, வசுதாதலம்,  அக்னி தான் உன் கோபம்.  ப்ரஸன்னமாக இருக்கும் நிலை தான் சந்திரன். ஸ்ரீ வத்ஸம் என்ற அடையாளம் கொண்டவன் நீ.  மூவுலகையும் கடந்து நின்ற வாமனன் நீயே. முன்பொரு சமயம் மூவடிகளில் உன் விக்ரமத்தால் பூமியை அளந்தாய். பலி என்ற மகாசுரனை அடக்கி, மகேந்திரனை ராஜாவாக செய்தாய். சீதை தான் லக்ஷ்மி. தாங்கள் விஷ்ணு என்ற தேவன். க்ருஷ்ணன், பிரஜாபதி. ராவண வதம் காரணமாக மனித சரீரத்தில் வந்தீர்கள்.  தர்மம் அறிந்தவர்களுக்குள் முதல்வனாக சொல்லப்படுபவனே, ராவண வதம் செய்து முடித்தாயிற்று. மகிழ்ச்சியுடன் தேவலோகம் செல்லலாம், வாருங்கள்.  அளவில்லாத பலமும், வீர்யமும், பராக்ரமமும், அமோகமானவை.  உன்னைக் காண்பதும் அமோகமே. ராமா| இந்த துதியும் அமோகமானதே, விசேஷமானதே.  உன்னை பக்தி செய்யும் மனிதர்களும் அமோகமாக இருப்பார்கள்.  யார் உன்னை புராணமான புருஷோத்தமனாக, அழிவில்லாத தேவனாக எண்ணி பக்தி செய்கிறார்களோ, அவர்கள் இக பர சுகங்களை நிச்சயம் அடைவார்கள்.

 

இது மகானான ப்ரும்மா செய்த ஸ்தோத்திரம். நித்யமான இதிகாசம். புராணமானது. இதைப் பாடும் மனிதர்கள் அவமானம் என்பதையே அறிய மாட்டார்கள். தோல்வியே காண மாட்டார்கள். என்றும், எதிலும் ஜயமே காண்பார்கள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப்ரும்ம க்ருத ராமஸ்தவம் என்ற நூற்று இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 121 (528) சீதா ப்ரதிக்3ரஹ|| (சீதையை ஏற்றுக் கொள்ளுதல்)

 

பிதாமகர் சொன்ன இந்த விவரங்களைக் கேட்ட பின், விபா4வசு எனும் அக்னி தேவன், தோன்றினான்.  சிதையிலிருந்து வைதேஹியை விலக்கி, அக்னி தேவனான ஹவ்யவாஹனன், தன் நிஜ உருவத்துடன், ஜனகாத்மஜாவை கை பிடித்து அழைத்து வந்தான். இளம் சூரியன் போன்று பிரகாசிப்பவளும், புடமிட்ட தங்க ஆபரணங்களை அணிந்தவளாகவும், சிவந்த வஸ்திரம் தரித்து, சற்றும் வாடாத மாலைகளுடன், அடர்ந்த கருங்கூந்தலுடன், ஆபரணங்கள் இவற்றுடன், மனஸ்வினியானவள், எப்படி அக்னியில் நுழைந்தாளோ அதே போல ராமனிடம் திருப்பிக் கொடுத்தான். விபா4வசு என்ற லோக சாக்ஷியான அக்னி தேவன் ராமனைப் பார்த்து, இதோ இந்த வைதேஹி, ராமா, இவளை ஏற்றுக் கொள். இவள் மாசற்றவள். மனதாலும், சொல்லாலும், தியானத்திலும் கூட கண்களாலும், இவள் உன்னையன்றி யாரையும் நெருங்கியதில்லை. நடத்தையில் கவனமாக இருப்பவள்.  இவளும் உனக்கு சற்றும் குறைந்தவள் அல்ல. மிக நேர்மையான நடத்தை யுடையவளே. தன் வீர்யத்தில் கர்வம் கொண்ட ராக்ஷஸ ராஜா ராவணனால் கடத்திச் செல்லப் பட்டாள். ஜன சஞ்சாரமற்ற வனத்தில், நீயும் அருகில் இல்லாத பொழுது, தன் வசம் இழந்த நிலையில் ராவணன் அவளை ஏமாற்றித் தூக்கிச் சென்றான்.  அந்த:புரத்தில் காவலுடன் வைக்கப் பட்டிருந்தாள். உன்னையே நினைத்து, உன் த்யானமாகவே காலம் கழித்தாள். ராக்ஷஸிகள் கூட்டம் இவளை ரக்ஷித்து வந்தது.  விரூபமாக கோரமாக காட்சியளித்த ராக்ஷஸிகளின் மத்தியில் அவர்கள் வித விதமாக ஆசை காட்டி, பய முறுத்தி ராவணனை எற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்திய போதிலும், சற்றும் அசையாமல் இருந்தவள். உன்னிடம் அந்தராத்மா பூர்வமாக மனதை செலுத்தி த்ருடமாக இருந்தாள். ராகவா, மாசற்றவளான இவளை மனதாலும், சுத்தமானவளை ஏற்றுக் கொள். வேறு எதுவும் யோசிக்காதே. மறுத்து பேசாதே. நான் கட்டளையிடுகிறேன். ராமன் இதைக் கேட்டு மனம் மகிழ்ந்து, கண்களில் நீர் பெருக, சற்று நேரம் பேசாமலேயே இருந்தார். தேவர்கள் தலைவனான ப்ரும்மாவைப் பார்த்து,  அவஸ்யம். நிச்சயமாக மூன்று உலகிலும் சீதையை பயம் அண்ட முடியாது. இவள் சுபமானவளே. வெகு காலம் ராவண க்ருஹத்தில் வசித்திருக்கிறாள். தசரதன் மகன் ராமன் அறிவில்லாதவன். காமாத்மா என்று உலகம் சொல்லும். ஜானகியைப் பற்றி விமரிசிக்கும். அவளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அவதூறு சொல்லும். என்னையன்றி வேறு யாரையும் மனதால் கூட சீதை நினைக்க மாட்டாள் என்பது எனக்கும் தெரிந்ததே. என்னிடம் அவளுக்கு உள்ள பக்தியையும் நான் அறிவேன். என்னை எல்லா விதத்திலும் அனுசரித்து நடப்பவள் என்பது நான் அறிந்ததே. மூன்று உலகிலும் அவளை நம்பச் செய்யும் விதமாக இந்த பரீக்ஷையை செய்தேன். அக்னியில் பிரவேசித்த சீதையை அலட்சியம் செய்தேன். இந்த விசாலா, தன் தேஜஸால், தன்னைக் காத்துக் கொண்டு விட்டாள். ராவணன், கரையை மீறாத கடல் அலைபோல தன் எல்லை மீற மாட்டான். துஷ்டாத்மாவான அவன் மைதிலியை மனதால் கூட நெருங்க முடியாது என்பதும், அவளை பலாத்காரம் செய்ய நினைக்க கூட அவனால் முடியாது,  கொழுந்து விட்டெரியும் அக்னி ஜ்வாலை போன்றவள் இவள் என்பதும் நான் அறிந்ததே. ராவணாந்த:புர ஐஸ்வர்யத்தைப் பார்த்து மைதிலி  மயங்க மாட்டாள்.  பாஸ்கரனுக்கு ப்ரபா போல எனக்கு மட்டுமே தான் சீதா. ஜனகன் மகளான இந்த மைதிலி மூவுலகங்களிலும் விசேஷமாக மாசற்றவள். தன்னம்பிக்கை உள்ளவன் கீர்த்தியை விட முடியாதது போல என்னால் இவளை விட முடியாது.  என்னிடம் அன்பு கொண்ட உங்கள் சொல்லை நான் கேட்டே ஆக வேண்டும். உலகில் கௌரவம் மிக்க, எல்லோரும் மதிக்கத் தகுந்த உங்கள் சொல்லை ஏற்கிறேன். என் ஹிதத்திற்காகத் தான் சொல்கிறீர்கள் என்று ஒப்புக் கொள்கிறேன். இவ்வாறு சொல்லி எல்லோரும் வாழ்த்த, ராமன் சீதையுடன் சேர்ந்து சுகமாக இருந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சீதா ப்ரதிக்3ரஹோ என்ற நூற்று இருபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 122 (529) தசரத ப்ரதிசயாதேச: (தசரதன் வந்து பரிந்துரை செய்தல்)

 

ராகவனின் பதிலைக் கேட்டு மகேஸ்வரன் மேலும் மங்களகரமான விஷயத்தைச் சொன்னார். புஷ்கராக்ஷனே| நல்ல வேளையாக இந்த அரிய செயலை நீ செய்து விட்டாய்.   உலகம் முழுவதும் பரவியிருந்த பெரும் இருட்டு உன்னால் விலக்கப் பட்டு விட்டது. ராவணன் மூலம் உண்டான பயம் நீங்கி விட்டது. தீனனாக இருக்கும் பரதனை ஆஸ்வாசம் செய்து, கௌசல்யை, கைகேயி, சுமித்ரா இவர்களையும், லக்ஷ்மண மாதாவான சுமித்திரையையும் பார்த்து விட்டு, அயோத்யா ராஜ்யத்தை அடைந்து, இக்ஷ்வாகு குலத்தை வம்சத்தை ஸ்தாபித்து, உற்றார், உறவினர், நண்பர்களை நலமாக இருக்கச் செய்து விட்டு, அஸ்வமேத யாகம் செய்து, குறைவில்லா கீர்த்தியையும் அடைவாய். ப்ராம்மணர்களுக்கு ஏராளமான தானம் கொடுத்து, நல்ல காரியங்களை செய்து  விட்டு தேவலோகம் செல்வாய். இதோ தசரத ராஜா, விமானத்தில் வந்து நிற்கிறார். காகுத்ஸா, நீ மனிதனாக உலகில் நடமாடிய பொழுது உன் குரு, தந்தை இந்திரலோகம் சென்றவர், புத்ரனான உன்னால் நல்ல கதி அடைந்துள்ளார். லக்ஷ்மணனோடு கூட இவரை வணங்கு. மகாதேவர் சொன்னதைக் கேட்டு, லக்ஷ்மணனுடன் விமான சிகரத்தில் நின்றிருந்த தசரதனைக் கண்டனர்.  வணங்கினர். சுத்தமான வஸ்திரத்தை அணிந்தவராக, தன் காந்தியால் பிரகாசமாக இருந்தவர், உயிருக்குயிரான மகனைக் கண்டார். அவர்களை அணைத்துக் கொண்டு சொன்னார். ஸ்வர்க வாசம் கூட நீ இல்லாமல் எனக்கு உவப்பாக இல்லை. ராமா. சத்யமாக சொல்கிறேன். கைகேயியின் வார்த்தைகள் இன்னமும் என்னை வாட்டிக் கொண்டிருக்கின்றன. உன்னை நாடு கடத்தச் சொன்னதைக் கேட்டு நீயும் வனம் போனாய்.  உங்கள் இருவரையும் சௌக்யமாக இப்பொழுது பார்த்து நான் திருப்தியடைகிறேன். பனி விலகியவுடன் சூரியன் தெளிவாக இருப்பது போல நான் உணருகிறேன். சுபுத்ரனான நான் என் வாழ்வில் நல்ல கதி அடைந்து விட்டேன். (சுபுத்ரன்-நல்ல மகனைப்பெற்றவன்) கஹோலா என்ற ப்ராம்மணனை அவன் மகன் அஷ்டாவக்ரன் கடையேற்றி விட்டது போல நீயும் எனக்கு நல்ல கதி கிடைக்கச் செய்து விட்டாய். இப்பொழுது தான் எனக்கும் தெரிகிறது. ராவணனை வதம் செய்ய தேவர்கள் செய்த வேலை இது. கௌசல்யா பாக்யம் செய்தவள். வனத்திலிருந்து திரும்பும் உன்னைக் காண்பாள்.  ஊர் திரும்பி வந்த மகனை கண் குளிரக் காணப் போகிறாள். ஊர் ஜனங்கள் பாக்யசாலிகள்.   திரும்பி வந்து சேர்ந்த தங்கள் அரசனை,  காண்பார்கள்.  அபிஷேகம் செய்து நனைந்து நிற்பவனை,  பரதனோடு சேர்ந்து இருக்கப் போகும் உன்னைக் காண நானும் ஆசைப் படுகிறேன். பதினான்கு வருஷங்கள், ராமா, இப்படி காட்டில் வாழ்ந்து தீர்த்து விட்டாய். சீதையும் உன்னுடன் வசித்தாள், லக்ஷ்மணனும் உடன் இருந்தான். வன வாசம் முறையாக முடித்து விட்டாய்.  என் பிரதிக்ஞையும்  பலனுடையதாயிற்று. பூர்த்தியாயிற்று.  ராவணனையும் யுத்தத்தில் வதம் செய்து தேவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சத்ருசூதனா, நல்ல காரியம் செய்தாய்.  நல்ல கீர்த்தியையும் அடைந்து விட்டாய். சகோதரர்களுடன் ராஜ்யத்தை நிர்வகித்து, தீர்காயுளுடன் இரு. என்று ஆசிர்வதித்த, தந்தையான அரசனை, ராமனும் கை கூப்பி வணங்கி நின்றான். வேண்டினான். தர்மம் அறிந்தவனே, இதே போல கைகேயியையும் பரதனையும் ஆசிர்வதியுங்கள். புத்ரனோடு உன்னை விட்டேன் என்று கைகேயியிடம் சொன்னீர்களே, அந்த சாபம், மகனோடு சேர்த்து கைகேயியை வாட்டக் கூடாது. மகா ராஜாவும் அப்படியே என்று சொல்ல, ராம லக்ஷ்மணர்களை ஆலிங்கனம் செய்து மேலும் சொன்னார். ராமனுக்கு பக்தியுடன் சுஸ்ரூஷைகள் செய்து வந்த சீதையும் எனக்கு பெரும் பிரியமான செயலை செய்து வந்திருக்கிறாள். தர்ம பலம் கிடைத்து விட்டது. நீயும் நிறைந்த தர்ம பலனையும், புகழையும் அடைவாய். ராமன் ப்ரஸன்னமாக இருந்தால், ஸ்வர்கமும் அடைவது எளிது. பெயரும், புகழும் ராம பிரஸாதத்தால் கிடைக்கும். சுமித்ரானந்த வர்தனா, லக்ஷ்மணா, நீயும் ராமனுக்கு பணிவிடைகள் செய்து சௌக்யமாக வைத்துக் கொள். ராமன் மூன்று உலகுக்கும் சௌக்யத்தை தரக் கூடியவன்.  இந்திராதி தேவர்கள், மூன்று உலகிலும் உள்ள சித்தர்கள், மகரிஷிகள் வந்து இந்த மகாத்மாவை பூஜிக்கின்றனர். இவன் புருஷோத்தமன் , அவ்யக்தம், அக்ஷரம், ப்ரும்மாவுக்கு சம்மதமானது. தேவர்களின் மனதில் உள்ள ரசசியம் இது தான். இந்த பரந்தாமனான ராம நாமம் தான் உனக்கு நல்ல சரணம், தர்ம சரணம் கிடைத்துள்ளது. அளவில்லா கீர்த்தியை அடைவாய். வைதேஹியும் செய்வாள். நீயும் அவளுடன் சேர்ந்து ராமனுக்கு பணிவிடைகள் செய். வணங்கி நின்ற லக்ஷ்மணனை, இவ்வாறு சொல்லி ஆசிர்வதித்து விட்டு, சீதையிடம் வந்தார். வைதேஹி கோபம் கொள்ளாதே. இவன் உன்னைத் தியாகம் செய்வதாகச் சொன்ன வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு மனத் தாங்கல், வருத்தம் அடையாதே.  உனக்கு நன்மைக்காகத் தான் செய்தான் என்று நினைத்துக் கொள். மாசற்ற உன்னை உலகுக்கு தெரியப் படுத்த என்று எடுத்துக் கொள். இதனால் நீ உன் பதிக்கு பணிவிடைகள் செய்வதில் அலட்சியம் காட்டாதே.  நான் கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்.. இந்த ராமன் தான் உனக்கு உயர்ந்த தெய்வம்.  இவ்வாறு புத்ரர்களை சமாதானம் செய்து, மருமகளான சீதையையும் கண்டு பேசி ஆசிர்வதித்து விட்டு, தான் வந்த விமானத்திலேயே தசரத ராஜா இந்திரலோகம் சென்றார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் தசரத ப்ரதிசயாதேசோ என்ற நூற்று இருபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 123  (530)  இந்திர வர தானம் (இந்திரன் வரம் அளித்தல்)

 

ககுத்ஸ குலத்து தசரத ராஜா திரும்பிச் சென்றவுடன்,  மகேந்திரன், கை கூப்பி தந்தைக்கு விடை கொடுத்த ராகவனைப் பார்த்து ராமா| உன் அமோகமான தரிசனம் கிடைத்தது. இதனால் மிகவும் மகிழ்ந்தோம். நீ மனதில் என்ன விரும்புகிறாயோ, சொல். லக்ஷ்மணனும், சீதையும் அருகில் இருக்க, ராமர் சகல தேவர்களுக்கும் ஈஸ்வரனே, என்னிடத்தில் அன்பு கொண்டு ஏதாவது செய்ய விரும்பினால், சொல்கிறேன்.  என் பொருட்டு உயிர் இழந்து யம லோகம் சென்ற வானரங்கள் உயிர் பெற்றுத் திரும்பி வர வேண்டும். இதைச் செய்யுங்கள் என்றார். என் காரணமாக தன் மகன், கணவன் தந்தை இவர்களைப் பிரிந்த வானர ஸ்த்ரீகள் தங்கள் பிரிய ஜனங்களுடன் சேர்ந்து வாழட்டும்.  வானரங்கள் உடலில் காயங்கள் எதுவும் இன்றி, உடல் ஊனம் இன்றி பலம், பௌருஷங்கள் நிறைந்தவர்களாக, கோலாங்கூலங்களும், கரடிகளும் எப்பொழுதும் போல இருக்க நான் காண வேண்டும். பருவ காலமோ, இல்லையோ, இவர்கள் இருக்கும், வசிக்கும் இடங்களில் புஷ்பங்கள், பழங்கள், காய்கறி வகைகள், நிறைந்து இருக்க வேண்டும். ராகவன் சொன்னதைக் கேட்டு இந்திரன் பதில் சொன்னான். ரகு நந்தனா, நீ கேட்ட வரம் மிகவும் உயர்ந்தது. நான் ஒன்று சொன்ன பின் மாற்றியதே இல்லை. நீ கேட்டபடியே நடக்கும். யுத்தத்தில் ராக்ஷஸர்களால் கொல்லப் பட்ட வானரங்கள் உயிர் பெற்று வருவார்கள். கரடிகளும், கோலாங்கூலங்களும் திரும்ப உயிருடன், கை, கால்கள் காயங்கள் ஆறி, நல்ல திட காத்திரமான சரீரத்துடன் வந்து சேருவார்கள். தங்கள் இஷ்ட மித்திர பந்துக்களுடன் இணைந்து வாழ்வார்கள். பருவ காலம் இல்லாத போதும் மரங்கள் புஷ்பங்கள் நிறைந்து பழங்கள் குலுங்க மரங்கள் இந்த வானரங்கள் வசிக்கும் இடம் தோறும் விளங்கும். நதிகள் நீர் நிறைந்து விளங்கும். காயம் பட்டுக் கிடந்த வானரங்கள் அனைத்தும், காயங்கள் நீங்கப் பெற்று,  நல்ல புஷ்டியான உடல் வாகுடன் தூங்கி எழுந்தது போல எழுந்து வந்து விட்டனர். மற்ற வானரங்கள் என்ன இது என்று ஆச்சர்யமடைந்தனர். எல்லோருமாக வந்து ராகவனை வணங்கி நின்றனர்.  தேவர்களும் காகுத்ஸன் விரும்பியதை அடைந்ததைக் கண்டு முதலில் ஸ்தோத்திரம் செய்தனர். துதிக்கு உரியவன் அவனே. லக்ஷ்மணனோடு இப்பொழுதே அயோத்தி செல்வாய். வீரனே, வானரங்கள் அவர்கள் இருப்பிடம் செல்லச் சொல். மைதிலியை சமாதானப் படுத்து. தவம் செய்து இளைத்து, உன்னையே நினைத்து, உன்னிடம் ஈடுபாடு,  பற்று கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறாள். சத்ருக்னனையும், தாய்மார்களையும் பார்க்க வேண்டும். சகோதரனான பரதனை சந்திக்கச் செல். இன்னமும் விரதம் அனுஷ்டித்து வருகிறான். நீ விலகி வந்த சோகமே இன்னமும் அவனை விட்டபாடில்லை.  ஊர் திரும்பிச் சென்று முடி சூட்டிக் கொள்.  ஊர் ஜனங்களை சந்தோஷமாக வைத்திரு. இவ்வாறு சொல்லி அவனிடம் விடை பெற்று,  சௌமித்ரியுடன் கூட ராமனை வணங்கி, தங்கள் விமானங்களில் ஏறி தேவர்கள் மன நிறைவோடு தேவலோகம் சென்றனர். தேவர்களை வழியனுப்பி விட்டு, ராமனும், லக்ஷ்மணனும் தங்கள் தங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தனர். சகோதரர்கள் இருவருமாக பரிபாலித்த பெரும் சேனை, இப்பொழுது வெற்றிக் களிப்பில் லக்ஷ்மீகரமாக விளங்கியது. குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திர ஒளியில் நிசா என்ற இரவே மகிழ்ந்து இருப்பது போல இருந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் இந்திர வர தானம் என்ற நூற்று இருபத்து   மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 124 (531) புஷ்பகோபஸ்தாபனம் (புஷ்பக விமானத்தை வரவழைத்தல்)

 

இரவு நன்றாகத் தூங்கி, விடியற்காலையில் எழுந்து, சுகமாக இருந்த ராமரை அணுகி, ஜய கோஷம் செய்து வாழ்த்தி, விபீஷணன் விசாரித்தான். ராகவா|  ஸ்நானம் செய்யத் தேவையான அங்க ராகங்கள், வஸ்திரங்கள் ஆபரணங்கள், திவ்யமான சந்தனங்கள், பலவிதமான மாலைகள் இவற்றை எடுத்துக் கொண்டு, அலங்கரிக்கப் பெண்கள் வந்து விட்டார்கள். உன்னை முறைப்படி ஸ்நானம் செய்விப்பார்கள். இவற்றை ஏற்றுக் கொண்டு என்னை அனுக்ரஹிக்க வேண்டும். இவ்வாறு சொன்ன விபீஷணனைப் பார்த்து ராகவன் பதில் சொன்னான். இந்த வானர வீரர்களை, சுக்ரீவன் முதலானவர்களுக்கு இந்த ஸ்நானம் முதலியவைகளை செய்வித்து உபசாரம் செய். என் காரணமாக, சுகமாக வாழ வேண்டிய பரதன் தவித்துக் கொண்டிருக்கிறான். சுகுமாரனான சிறுவன், சத்யமே பெரிதாக நினைப்பவன். அந்த கைகேயி புத்திரனான பரதனை விட்டு எனக்கு ஸ்நான பானாதிகள் முக்கியமல்ல.  வஸ்த்ரங்களோ, ஆபரணங்களோ, பரதனை சந்தித்த பிறகு தான்.  சீக்கிரம் இந்த வழியிலேயே, அயோத்தி நகரம் போய் சேருகிறேன்.  இந்த வழியில் தான் அயோத்தியிலிருந்து வந்தோம். கஷ்டமான வழி இது. கடந்து சென்றாக வேண்டும் எனவும், விபீஷணன் ஒரே நாளில் உங்களைக் கொண்டு சேர்க்கிறேன். ராஜ குமாரனே, புஷ்பகம் என்ற விமானம் இங்கு இருக்கிறது. சூரியனைப் போல தேஜஸுடன் விளங்கும். என் சகோதரன் குபேரனுடையது. பலாத்காரமாக ராவணன் அபகரித்துக் கொண்டு வந்தான்.  இது திவ்யமானது. உத்தமமானது, விரும்பிய வண்ணம் செலுத்திக் கொள்ள முடியும். யுத்தத்தில் குபேரனை ஜயித்து ராவணன் கைப் பற்றிக் கொண்டான். மேகம் போன்று விசாலமான விமானம் இது.  இதோ நிற்கிறதே, உனக்காகத் தான் இன்னமும் இங்கு வைத்து காப்பாற்றி வருகிறேன்.  இந்த வாகனத்தில் ஏறிக் கொள்வாய். கவலையின்றி அயோத்தி மா நகரம் போய் சேருவாய்.  என்னிடம் தயை செய்து என்னை அனுக்ரஹிக்க மனம் இருந்தால், என் குணங்கள் உன் மனதில் இடம் பெற்றிருந்தால், இன்று இங்கு வசிப்பாயாக.  அறிவுள்ளவனே, என்னிடம் உள்ள நட்பின் பெயரால் கேட்கிறேன்.  சகோதரன் லக்ஷ்மணனுடனும், மனைவி வைதேஹியுடனும், இன்று என் க்ருஹத்தில் உபசாரம் செய்து உபசரிக்க விரும்புகிறேன். அதன் பின் அயோத்தி கிளம்பலாம்.  இந்த சைன்யம், நண்பர்கள் எல்லோருடன் நான் அன்புடன் செய்யும் உபசரிப்பை ஏற்றுக் கொள். அன்பினாலும், நட்பின் நெருக்கத்தாலும் உன்னை வற்புறுத்திச் சொல்கிறேன்.  இல்லையெனில், நீ கட்டளையிட்டு நான் பணிய வேண்டியவன் தான்.  இது கட்டளையல்ல, வேண்டுகோளே என்றான். ராமர் விபீஷணனைப் பார்த்து, ராக்ஷஸர்கள், வானரங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்த சபையிலேயே வீரனே, உன் மந்த்ராலோசனைகள் மூலம், சரியான சமயத்தில் ஏற்ற அறிவுரைகள் சொல்லி, நீ எனக்கு நிறைய உதவிகள் செய்து விட்டாய். உன் வார்த்தையை நான் அவசியம் கேட்டே ஆக வேண்டும். ஆனால் பார், என் சகோதரன் பரதனைக் காண என் மனம் துடிக்கிறது. என்னைத் தேடி சித்ரகூடம் வந்தவன், திரும்பி அழைத்துப் போகும் எண்ணத்துடன் தலை வணங்கி என்னை யாசித்தான். அவன் விருப்பத்தை நான் நிறைவேற்றவில்லை. கௌசல்யை, சுமித்ரை, கைகேயி இவர்களையும், மற்ற குரு ஜனங்களையும் நண்பர்களையும், ஊர் ஜனங்களையும், புத்திரர்களுடன் காணத் துடிக்கிறேன்.  சீக்கிரம் விமானத்தை ஏற்பாடு செய். விபீஷணா, வந்த காரியம் முடிந்து விட்டது. இனியும் தாமதம் செய்யக் கூடாது. எனக்கு நீ நல்ல உபசாரங்கள் நிறைய செய்து விட்டாய். என் மனம் நிறைந்துள்ளது. விடை கொடு. கோபம் கொள்ள வேண்டாம். என் அவசரம், அதனால் தான் சொல்கிறேன். இதைக் கேட்டு ராக்ஷஸேந்திரன், விமானத்தைக் கொண்டு வந்து திரும்பி அவர்கள் அயோத்தி செல்ல தயாராக்கினான்.  வெண்மையான கொடிகள் கட்டி அலங்கரித்தான்.  பொன்னாலான பத்மங்கள் பதிக்கப் பெற்று,  காஞ்சன மாளிகை போல அழகான விஸ்தீர்ணமான இடங்கள், மணிகள் கட்டி, முத்துக்கள் கொண்டு ஜன்னல்கள் தயார் செய்யப் பெற்றன.  மணி ஓசை கேட்க நாலாபுறமும் கட்டப் பெற்ற கண்டாமணிகள், இனிய நாதம் எழுப்ப, விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்ட, மேருவின் சிகரம் போல அமைந்த விமானம், முத்தும், வெள்ளியும், தங்கமும் இழைத்து செய்யப் பெற்றிருந்த விதானங்கள். தரையோ, ஸ்படிகம், விசித்ரமான வேலைப்பாடுகளுடன், வைமூடுரியம் பதித்து செய்யப் பட்டிருந்தது. அழகிய ஆசனங்கள், உயர்ந்த தரை விரிப்புகள், பெரும் செல்வ செழிப்போடு மனோ வேகத்தில் செல்லக் கூடிய விமானம் தயாராக வந்து நின்றது. ராமனிடம் சொல்லி விட்டு விபீஷணன் கிளம்பினான். சௌமித்ரியுடன் அந்த விமானத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து விருப்பப்படி செல்லக் கூடிய, பெரும் மலை போல இருந்த விமானத்தைப் பற்றி விவரங்கள் அறிந்து கொண்டான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் புஷ்பகோபஸ்தாபனம் என்ற நூற்று இருபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 125 (532) புஷ்பகோத்பதனம் (புஷ்பக விமானம் கிளம்புதல்)

 

புஷ்பக விமானத்தை புஷ்பங்களாலும் அலங்கரித்துக் கொண்டு வந்து நிறுத்தினர்.  சற்று தூரத்தில் இருந்த ராமரைப் பார்த்து விபீஷணன், பரபரப்புடன் அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தான். எதுவானாலும் சீக்கிரம் செய்ய அவன் மனம் விழைந்தது.  லக்ஷ்மணனிடம் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த சமயம், ராமரும் அருகில் வந்து விபீஷணா, இந்த வானரங்கள் நமக்கு செய்த உதவிகள் அனந்தம். உற்சாகமாக தங்களால் இயன்றவரை,  செய்திருக்கின்றனர். இவைகளுக்கு ரத்னங்களும், பொருளும், வித விதமான ஆபரணங்களும் கொடுத்து உபசாரம் செய். இவர்கள் உதவியால் தானே யாராலும் நெருங்கக் கூட முடியாத லங்கையை ஜயித்தோம்.  மகிழ்ச்சியோடு, உயிரைத் திருணமாக மதித்து,  இந்த வானரங்கள் போரில் புற முதுகு காட்டாமல் நமக்காக போர் புரிந்தன.  இவர்களுக்கு தாராளமாக தனம், ரத்னம் இவற்றை கொடுத்து சன்மானம் செய் என்றார். இந்த உபசரிப்பையும், சன்மானத்தையும் ஏற்றுக் கொண்டு இவர்கள் திரும்பிச் செல்ல ஏற்பாடு செய். உன்னை அனுசரனையுடன், கருத்துடன் கவனிக்கும் தலைவனாக நினைப்பார்கள். தியாகம் செய்யவும் தயங்காதவன் என்று மதிப்பார்கள்.  ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நல்ல குணங்கள் இல்லாத அரசனை படை வீரர்கள் பின்னால் விட்டுச் சென்று விடுவார்கள். இதைக் கேட்ட விபீஷணனும், வானர வீரர்களுக்கு, ரத்னங்களும், பொருளையும் பிரித்துக் கொடுத்து உபசரித்தான். இவர்கள் தக்கபடி சன்மானம் பெற்றதையும், உபசரிப்பும் குறைவின்றி பெற்று மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த பின், ராமர் விமானத்தில் ஏறினார். மைதிலியை இழுத்து மடியில் இருத்திக் கொண்டு, லஜ்ஜையினால் அவள் முகம் சிவக்க, அருகில் சகோதரன் லக்ஷ்மணன், வில்லுடன் மற்ற ஆயுதங்களையும் பாதுகாத்து வைத்துக் கொண்டு, வெற்றி வீரனாக அமர்ந்திருக்க, எல்லா வானரங்களிடமும் விடை பெற்றுக் கொண்டு சுக்ரீவனிடமும், விபீஷணனிடமும் ப்ரத்யேகமாக சொல்லிக் கொண்டு, வானரோத்தமர்களே, நட்பின் அடையாளமாக இந்த அரிய செயலை முடித்துக் கொடுத்தீர்கள்.  அனுமதி தருகிறேன். நீங்கள் அனைவரும் பத்திரமாக உங்கள் இருப்பிடம் திரும்பிச் செல்லுங்கள் என்று சொல்லி விடை கொடுத்தார். சுக்ரீவா, எந்த காரியம் நெருங்கிய நண்பன், சினேகிதன் என்ற முறையில், அதர்மம் எதுவும் நேர்ந்து விடக் கூடாது என்று நீ கவனமாக செய்தாயோ, அவை நல்ல முறையில் பலன் தரும். கிஷ்கிந்தை போய், உன் சேனையுடனும், ராஜ்ய காரியத்தை பாலித்து வா. விபீஷணா நீயும் நான் கொடுத்த லங்கா ராஜ்யத்தை நல்ல முறையில் பரிபாலித்து வா. இனி உன்னை இந்திரனோ, தேவர்கள் கூட்டத்தோடு வந்தாலும் எதிர்த்து நின்று ஜயிப்பாய். உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. என் தந்தையின் ராஜ தானியான அயோத்தி மா நகரம் செல்கிறேன். உங்கள் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொள்கிறேன். வருகிறேன் என்று சொன்ன ராமனைப் பார்த்து வானரங்கள் கை கூப்பி வணங்கியபடி, விபீஷணனை முன்னிட்டுக்கொண்டு ஏதோ சொல்ல விரும்பியது போல இருந்தது. நாங்களும் அயோத்தியைக் காண விரும்புகிறோம். எங்களையும் அழைத்துச் செல்லுங்கள். வனங்களையும், நகரங்களையும் சுற்றிப் பார்ப்போம். அபிஷேகம் செய்து நனைந்து நிற்கும் உங்களையும் பார்த்து விட்டு, கௌசல்யையை வணங்கி விட்டு சீக்கிரம் எங்கள் ஊர் திரும்பி விடுவோம்.  ராஜ குமாரா, எங்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு சொன்ன வானரங்களையும், விபீஷணனையும் பார்த்து நல்லதாக போயிற்று. அதிகமான நண்பர்களுடனும், என் நலம் விரும்பும் ஸ்னேகிதர்களுடன் நான் என் ஊர் திரும்புவதும் இன்னும் அதிக விசேஷமே. சுக்ரீவா, சீக்கிரம் ஏறிக் கொள். உன் சேனையையும் ஏறச் செய். விபீஷணா, உன் மந்திரிகள் எல்லோருடனும் நீயும் ஏறிக் கொள். குபேரனுடைய அந்த விசேஷமான வாகனம் ராகவன் எல்லோரும் ஏறிக் கொண்ட பின், உத்தரவிட, ஆகாயத்தில் ஏறியது. ஹம்ஸம் போல பறக்கும் அந்த விமானத்தில் எல்லோருமாக செல்லும் பொழுது, ராமனும், குபேரனைப் போலவே சந்தோஷமாக, மன நிறைவோடு இருந்தான். ராக்ஷஸர்களும், வானரங்களும் சற்றும் சிரமம் இன்றி, அந்த விமானத்தில் வசதியாக அமர்ந்து கொள்ளவும் முடிந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் புஷ்பகோத்பதனம் என்ற நூற்று இருபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 126 (533) ப்ரத்யாவ்ருத்தி பத2 வர்ணனம்.(திரும்பி சென்ற வழியை விவரித்தல்)

 

ராமரின் அனுமதியுடன் விமானம் ஆகாயத்தில் பறக்கலாயிற்று. ஒரு பெரிய மேகத்தை மூச்சுக் காற்றால் தூக்கி நிறுத்தியதைப் போல அனாயாசமாக கிளம்பியது.  வியத்தகு வேகத்தில் செல்லலாயிற்று.. ரகு நந்தனன் கீழே பார்வையை செலுத்தி, சந்திரன் போன்ற முகத்தினளான மைதிலியைப் பார்த்து  சொன்னான்.   வைதேஹி, விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பட்ட லங்கா நகரைப் பார். கைலாச சிகரம் போன்ற த்ரிகூட சிகரத்தில் இருப்பதை நன்றாகப் பார். இதோ பார், மாமிசமும், நிணமும், சதையுமாக இரைந்து கிடக்கிறதே, இது தான் ரண பூமி. இங்கு தான் வானர ராக்ஷஸர்கள் பெரும் போர் புரிந்தனர்.  ராக்ஷஸேஸ்வரன், வரங்கள் பெற்று உலகை ஆட்டி வைத்தவன்,  தூங்குகிறான்.  மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான். உன் காரணமாக, விசாலா, ராவணனை நான் வதம் செய்தேன். இதோ பார், இங்கு தான் கும்பகர்ணன் கொல்லப் பட்டான். ப்ரஹஸ்தன் என்ற நிசாசரனும் மாண்டான். தூம்ராக்ஷனும், ஹனுமானால் கொல்லப் பட்டான். சுஷேணன் இங்கு வித்யுன்மாலியை கொன்றான். லக்ஷ்மணன் இந்திரஜித்தை மாய்த்தான். இந்திரஜித் ராவணனின் மகன். அங்கதன் இந்த இடத்தில் விகடன் என்ற ராக்ஷஸனை அடித்தான். மகா பார்ஸ்வ, மகோதரர்கள் நல்ல பலசாலிகள். விரூபாக்ஷன் மற்றும் பல பலசாலிகளான ராக்ஷஸர்கள் வதம் செய்யப் பட்டனர். இங்கு தான் மந்தோதரி என்ற ராக்ஷஸ பத்னி, மிகவும் வருந்தி அழுதாள். ஆயிரக் கணக்கான சபத்னிகள் அவளுக்கு. எல்லோரும் கண்களில் நீர் பெருக அவனைச் சார்ந்து நின்றனர். சமுத்திர தீர்த்தம் தெரிகிறது பார். இந்த இடத்தில் தான் சமுத்திரத்தைக் கடந்து வந்த இரவு நாங்கள் தங்கினோம். இதோ, பார்.  நாங்கள் கட்டிய சேது.  உப்பு சமுத்திரத்தில் குறுக்கே பாலம் கட்டினோம்.  விசாலாக்ஷி, மிகவும் கஷ்டமான செயலான இந்த  சேதுவை, நளன் கட்டி முடித்தான்.  இதோ பார், பொங்கி எழும் சமுத்திரத்தைப் பார்.  சங்கமும், சிப்பிகளும் நிறைந்து எல்லையில்லாமல் எப்பொழுதும் கர்ஜித்துக் கொண்டிருக்கும் சமுத்திரத்தைப் பார். ஹிரண்ய நாபன் என்ற மலையரசன். காஞ்சனமயமாக தெரிகிறான் பார். மைதிலி, இது சாகரத்தின் அடியில் இருந்தது.  உன்னைத் தேடி வந்த ஹனுமானின் பலத்தை சோதித்து, நம்பிக்கை வரச் செய்ய , ஹனுமானை தடுக்கச் சொல்லி சமுத்ர ராஜனால் அனுப்பப்பட்டது.  இதோ பார். சாகர தீர்த்தம். இது சேது பந்தம் என்றே புகழ் பெறப் போகிறது. மூவுலகத்திலும் பூஜிக்கப் போகிறார்கள். இது மிகவும் பவித்ரமானது. மகா பாதகத்தையும் நாசம் செய்யக் கூடியது.  இதில் முன்பு மகா தேவன் இருந்து அனுக்ரஹம் செய்தார். இங்கு தான் ராக்ஷஸ ராஜாவான விபீஷணன் வந்து சேர்ந்தான். இதோ பார், அழகிய காடுகளுடன் உள்ள இடம், இது தான் கிஷ்கிந்தா. இது சுக்ரீவனுடைய நகரம். இங்கு தான் நான் வாலியைக் கொன்றேன். கிஷ்கிந்தா நகரைப் பார்த்து சீதா, வாலி பாலித்து வந்த நகரம், இங்கு விமானத்தை நிறுத்தி, சுக்ரீவ பத்னிகள், தாரா முதலானோர், மற்றும் வானரங்களின் ஸ்திரீகளும் வரட்டும். எல்லோருமாக அயோத்தி செல்வோம், என்றாள்.  அப்படியே ஆகட்டும் என்று விமானத்தை நிறுத்தி ராமர், வானர ராஜனே, உன் வானர வீரர்களுக்கு கட்டளையிடு. தங்கள் தங்கள் மனைவிமார்களுடன், எல்லோரும் சீதையுடன் அயோத்தி வரட்டும். நீயும் உன் ஸ்த்ரீ ஜனங்களை அழைத்துக் கொண்டு சீக்கிரம் வா, என்றார். இதைக் கேட்டு வானராதிபன், வானரங்களிடம் விவரமாக சொல்லியனுப்பினான்.  தானும் அந்த: புரம் வந்து தாரையிடம் ப்ரியே, நீ மற்ற வானர ஸ்த்ரீகளுடன் சீக்கிரம் கிளம்பு.   மைதிலி சொன்னாள் என்று, அவள் இஷ்டத்தை பூர்த்தி செய்ய, ராமன் நம் அனைவரையும் வரச் சொல்லி அழைத்திருக்கிறான். அயோத்தி சென்று நாம் தசரத ராஜாவின் மனைவிகளையும் ராஜ ஸ்த்ரீகளையும் காண்போம். அயோத்தியை நம் பெண்களுக்கு சுற்றிக் காட்டுவோம். இதைக் கேட்டு தாரையும், எல்லா வானர ஸ்த்ரீகளையும் அழைத்து சுக்ரீவன் அனுமதி அளித்திருக்கிறான். நாம் எல்லோரும் உடன் செல்வோம். எனக்கும் அயோத்யா நகரை காண ஆவல் தான்.  ஊர் ஜனங்களுடன் நாமும் நகரத்துள் பிரவேசிப்போம்.  தசரத ராஜாவின் அரண்மனையையும், செல்வ செழிப்பையும் அந்த ஊர் ஸ்த்ரீகளையும் பார்த்து விட்டு வருவோம். கிளம்புங்கள் என்றான்.  துரிதப் படுத்தி அவர்களை முறையாக அலங்காரம் செய்து கொள்ளச் செய்து அழைத்து வந்தான். சீதையைக் காணும் ஆவலுடன் எல்லா வானர ஸ்த்ரீகளும் விமானத்தில் ஏறின.  எல்லோரும் ஏறிக் கொண்ட பின், விமானம் புறப்பட்டது.  ருஸ்ய  மூக சமீபம் வந்தது. வைதேஹியிடம் ராமர், சீதே, இதோ பார். மின்னலுடன் கூடிய மேகம் போல தெரிகிறதே, இது தான் ருஸ்ய  மூகம் என்ற மலையரசன்.  பொன் மயமான தாதுக்கள் நிறைந்தது. இங்கு தான் நான் வானர ராஜாவான சுக்ரீவனோடு சக்யம் செய்து கொண்டேன். வாலி வதம் செய்யவும் நேரம் குறித்துக் கொண்டேன். இதோ பார், பம்பா நதி. தாமரை மலர் பொய்கைகளும், அழகிய கானனமும் தெரிகிறது, பார். இங்கு தான் நீ இல்லாமல் நான் தனியே வருந்தி புலம்பி அழுதேன். இந்த நதிக் கரையில் தான் சபரி என்ற தவச் செல்வியைக் கண்டேன்.  இங்கு தான் யோஜனை தூரம் நீண்ட கைகளுடன் கப3ந்த4னைக் கண்டேன்.  சீதே, இதோ பார். ஜனஸ்தானத்து மரங்கள் காண்கின்றன. இங்கும் உன் காரணமாக பெரும் யுத்தம் நடந்தது. கொடியவனான ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் பெரும் யுத்தம் நடந்தது. க2ரனை இங்கு தான் மாய்த்தேன். தூஷணனையும் வதம் செய்தேன். த்ரிசிரஸ் என்று ஒருவனும் வந்தான். என் பலம் மிக்க பாணங்களால் அடித்து அவர்களை வெற்றி கொண்டேன். வரவர்ணினீ, இதோ பார். இது தான் நாம் வசித்த ஆசிரமபதம். நம் பர்ண சாலா  இதோ இருக்கிறது.  இன்னமும் அதே போல அழகாக விளங்குகிறது. சுபமான இடம். இதோ இந்த இடத்திலிருந்து தான் உன்னை ராக்ஷஸேந்திரன் பலாத்காரமாக கவர்ந்து சென்றான். இதோ பார், கோதாவரி நதி. ப்ரஸன்னமான ஜலம் பெருகி ஓட, ரம்யமாக, மங்களகரமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். இதோ, பார். மைதிலி, அகஸ்திய ஆஸ்ரமம். சுதீக்ஷ்ணருடைய ஆசிரமம். பிரகாசமாக தெரிகிறது, பார். இதோ பார். வைதேஹி, சரபங்காஸ்ரமம் தெரிகிறது, பார்.  இதோ, பார் வைதேஹி, இங்கு தான் சஹஸ்ராக்ஷன் என்ற இந்திரன் , புரந்தரன் வந்தான். இந்த தேசத்தில் தான் பெருத்த உருவம் கொண்ட விராதனை நான் கொன்றேன். இங்கு பார், மற்ற தபஸ்விகளின் இருப்பிடங்களும் தெரிகின்றன. சூரிய, வைஸ்வானரர்களுக்கு இணையான தவ வலிமை மிக்க அத்ரியையும் இங்கு தான் சந்தித்தோம். இங்கு தான் சீதே, நீ தபஸ்வினியான அத்ரி முனிவரின் பத்னியைக் கண்டாய். இதோ, பார். சித்ரகூட மலை. தெளிவாக தெரிகிறது பார். அதன் மலைச் சாரல்களே அழகு. இங்கு தான் பரதன் என்னை திருப்பி அழைத்துச் செல்ல வந்தான். இதோ பார், யமுனை நதி. கரையில் அழகிய காடுகளுடன், பரத்வாஜாஸ்ரமமும் இங்கு தான் இருந்தது. அவரும் இங்கு தான் இருப்பார். இதோ பார், யமுனை நதியும், அதன் கரையில் அடர்ந்த காடுகளும் தெரிகின்றன. பரத்வாஜாஸ்ரமம் இங்கு இருப்பதால் எங்கும் வளமாகத் தெரிகின்றன.  த்ரிபத2கா3 எனும்  கங்கை நதியைப் பார். பக்ஷிகள் பலவிதமாக வந்து விளையாட, புஷ்பங்களும் நிறைந்து வனங்களுடன் தெரிகிறது. இது தான் ஸ்ருங்கிபேர புரம்.  குகன் வந்து நம்மைக் கண்டது இந்த இடத்தில் தான். சரயூ நதி செல்கிறது. பார்த்தாயா. இங்கும் பல விதமாக மரங்கள், பூத்துக் குலுங்கும் மலர்களுடன் காணப்படுகின்றன. இதோ என் தந்தையின் ராஜதானியான அயோத்தியை நெருங்கி விட்டோம். இதோ பார், இந்த அயோத்தியை வணங்கு. வைதேஹி, நல்லபடியாக திரும்பி வந்து இதைக் காண்கிறோமே, இதன் பின் வானரங்களும், விபீஷண ராக்ஷஸனும் எட்டி எட்டி பார்த்து அயோத்தியை கண்டு மகிழ்ந்தனர். சுபமாக காட்சி தந்த அயோத்தி மா நகரம்  வரிசையாக வெண் நிற மாளிகைகளைக் கொண்டதும், அதுவே மாலை போல விளங்க, விசாலமான அறைகளில் யானைகளும், குதிரைகளும் நிறைந்து சப்தமாக இருக்க, மகேந்திரனுடைய அமராவதி போன்ற அயோத்யா நகரை வானரங்கள் கண்டனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப்ரத்யாவ்ருத்தி பத2 வர்ணனம் என்ற நூற்று இருபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)s

 

அத்தியாயம் 127 (534) ப4ரத்3வாஜாமந்த்ரணம் (பரத்வாஜர் விருந்துண்ண அழைத்தல்)

 

பதினான்கு ஆண்டுகள் பூர்த்தியான பின், ஒரு பஞ்சமியில், லக்ஷ்மணன் தமையனான ராமன், பரத்வாஜாஸ்ரமம் வந்து முனிவரை நியமத்துடன் வணங்கி நின்றான்.  தவ ஸ்ரேஷ்டிரரை,  தவமே தனமாக உடைய பரத்வாஜ முனிவரை வணங்கி குசலம் விசாரித்தான். பகவானே, இங்கு சுபிக்ஷமாக இருக்கிறதா? ஊரில் எல்லோரும் நலமா?  கேள்விப்பட்டீர்களா? என்று வினவினான். பரதன் நல்ல விதமாக இருக்கிறானா? தாய்மார்கள் உயிருடன் இருக்கிறார்களா? ராமன் இவ்வாறு கேட்கவும், பரத்வாஜ முனிவர் பதில் சொன்னார். ரகு ஸ்ரேஷ்டனான ராமனைப் பார்த்து சிரித்துக் கொண்டே  பரதனா, ஜடா முடியோடு, மாசடைந்த வஸ்திரத்துடன், உன்னை எதிர் நோக்கி காத்திருக்கிறான். உன் பாதுகையை அரியணையில் வைத்து ராஜ்ய பாலனம் செய்கிறான். மற்றபடி எல்லோரும் நலமே.  முன்னால் வல்கலை, மரவுரி தரித்து வனத்திற்கு கிளம்பிய உன்னைப் பார்த்து வருத்தமாக இருந்தது.  லக்ஷ்மணன், சீதையுடன் ராஜ்யத்தை விட்டு, தர்ம காரியமாக கிளம்பி விட்டாய்.  தந்தை சொல்லைக் காப்பாற்ற, எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு கால் நடையாக புறப்பட்டாய். ஸ்வர்கத்திலிருந்து இறங்கி வந்த அமரன் போல இருந்தாய். எல்லா சுகங்களையும் நொடியில் தியாகம் செய்து விட்டு கிளம்பினாய். வீரனே, அதைக் கண்டு என் மனதில் கருணை நிறைந்தது. கைகேயி சொன்னதற்காக, காட்டு கிழங்கு காய்களை புசித்துக் கொண்டு இருக்கப் போகிறாயே, எப்படி சமாளிப்பாய் என்று கவலையாக இருந்தது. இப்பொழுது செயல் வீரனாக, மித்ர கணங்களும் உடன் வர,  எதிரிகளை ஜயித்து, பந்து ஜனங்கள் கொண்டாட திரும்பி வந்திருப்பதைக் காண சந்தோஷமாக இருக்கிறது. ராகவா, உன் சுக துக்கங்களை நான் அவ்வப்பொழுது விசாரித்து தெரிந்து கொண்டேன். ஜனஸ்தான வதம் இவைகளையும் தெரிந்து கொண்டேன். தர்ம வழியில் நின்ற ப்ராம்மணர்கள், தபஸ்விகளுக்கு பாதுகாப்பாக இருந்தாய் என்று கேள்விப் பட்டேன். ராவணன், உன் மனைவியை கவர்ந்து சென்றதும், பாவம், இவள் மாசற்றவள், கஷ்டப் பட்டதும் அறிந்தேன். சீதையை மயங்கச் செய்ய மாரீசன் வந்தானாமே. கபந்தனை சந்தித்ததையும் கேள்விப் பட்டேன்.  பம்பா நதியை நோக்கிச் சென்றதும், சுக்ரீவனுடன் சக்யம் செய்து கொண்டதும், வாலி வதம் செய்யப் பட்டதும், வைதேஹியைத் தேடிச் சென்றதும், வாதாத்மஜனின் அரிய செயலும், வைதேஹியை கண்டு கொண்டு வந்து சொன்னதும், சமுத்திரத்தில் நளன் சேதுவைக் கட்டியதையும், லங்கையை எரித்ததையும், வானர சைன்யம் சந்தோஷமாக இந்த போரில் ஈ.டுபட்டதாகவும் அறிந்தேன்.  ராவணன் தேவர்களுக்கு உறுத்தலாக இருந்தான். அவன் புத்ர, பந்துக்கள், மந்திரிகள் படை வீரர்களுடன் வாகனங்களோடு யுத்தத்தில் வதம் செய்யப் பட்டதாகவும் அறிந்தேன். தேவர்கள் வந்து உன்னைக் கண்டதும், வரங்கள் தந்ததும், எனக்குத் தெரிய வந்தது. என் தவ வலிமையால் எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டேன். நானும் உனக்கு ஒரு வரம் தருகிறேன். சஸ்திரங்களை பூர்ணமாக அறிந்தவனே, இன்று இங்கு தங்கி என் ஆசிரமத்தில் விருந்தை ஏற்றுக் கொள். நாளை அயோத்யா போகலாம். என்றார். அரச குமாரனும் அவருடைய சொல்லைத் தலை வணங்கி ஏற்றுக் கொண்டான். அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, வரம் தருவதாக சொன்னீர்களே, என்று வினவினான்.  தனக்கு வேண்டியதை யாசித்தான். பருவ காலம் இல்லாத சமயத்திலும், அயோத்தி செல்பவர்களுக்கு வழியெல்லாம் மரங்கள் பழங்கள் நிறைந்தும், தேன் போல ருசியுடைய பழங்கள் எல்லா காலங்களிலும் கிடைக்க வேண்டும். அம்ருதம் போன்ற பல விதமான பழங்கள் எப்பொழுதும் கிடைக்க வேண்டும். அயோத்தி செல்லும் யாத்ரிகர்கள் இவற்றை எப்பொழுதும் பெற வேண்டும் என்று வேண்டினான். முனிவரும் அப்படியே ஆகட்டும் என்று வாக்களித்தார். உடனே அங்கு ஸ்வர்க லோகத்துக்கு சமமான மரங்கள் தோன்றின. பழம் இல்லாத மரங்களும் பழங்கள் நிறைந்து விளங்கின. புஷ்பமே இல்லாத மரங்கள் பூத்துக் குலுங்கின. வாடி உலர்ந்து இருந்த மரங்கள் பசுமை நிறைந்து காணப்பட்டன. மலைகளில் சரிவுகளில் மதுவைச் சொரியும் பல மரங்கள் நிறைந்தன. மூன்று யோஜனை தூரம் அயோத்தி செல்லும் வழி பூராவும் வளம் நிறைந்து காணப்பட்டது. வானரங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. திவ்யமான பல விதமான பழங்கள் உண்ண கிடைத்தன. இஷ்டம் போல சாப்பிட்டு மகிழ்ந்தன. ஆயிரக் கணக்கான வானரங்கள் மனம் நிறைந்து மகிழ்ச்சியோடு ஸ்வர்கமே சென்றது போல மகிழ்ந்தன .

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப4ரத்3வாஜாமந்த்ரணம் என்ற நூற்று இருபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 128 (535) ப4ரத ப்ரியாக்2யானம் (பரதனுக்கு பிரியமானதை தெரிவித்தல்)

 

அயோத்தி இருக்கும் இடம் நோக்கி யோசித்தபடி நின்று கொண்டிருந்த ராமர், ஹனுமானை அழைத்து ஒரு விஷயம் சொன்னார். ஹனுமானே, நீ போய் அரசன் மாளிகையில் யாவரும் நலமா என்று அறிந்து வா. முதலில் ச்ருங்கிபேர புரம் போ. குஹனைப் பார். அடர்ந்த காட்டின் நடுவில் இருப்பான். வேடர்கள் தலைவன். அவனை பார்த்து நான் குசலம் விசாரித்ததாகச் சொல்லு. அவனும் குசலமா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, உடல் நலம் எல்லாம் விசாரி. எனக்கு ஆத்ம சமமான சகா. என் விஷயமாக தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பான். அவன் அயோத்தி போகும் வழியையும், பரதனின் நிலையையும் அறிந்திருப்பான். விவரமாக கேட்டுத் தெரிந்து கொள். பரதனிடம், நான் சகோதரனுடனும், மனைவியுடனும் எடுத்த காரியத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்திருப்பதையும் சொல். பலசாலியான ராவணன், வைதேஹியை கவர்ந்து சென்றதையும், சுக்ரீவனை சந்தித்ததையும், யுத்தத்தில் வாலி வதம் ஆனதையும், மைதிலியைத் தேடி அலைந்ததையும், நீ போய் கண்டு கொண்டதையும், பெரும் கடலைத் தாண்டியதையும், சமுத்திரத்தின் உதவியையும், சமுத்திரத்தின் மேல் ஸேதுவைக் கட்டியதையும், ராவணன் எப்படி வதம் செய்யப் பட்டான் என்பதையும் மகேந்திரன் கொடுத்த வர தானமும், ப்ரும்மா, வருணன் முதலானோர் வந்து வரம் கொடுத்துச் சென்றதையும், மகாதேவ பிரஸாதத்தையும், என் தந்தையை சந்தித்ததும், திரும்பி வந்து இங்கு இருப்பதையும் பரதனிடம் தெரிவி.  ராக்ஷஸ ராஜா விபீஷணனும், வானர ராஜா சுக்ரீவனும் வந்திருப்பதையும் இவர்கள் உதவியுடன் ராவணனை ஜயித்து அளவில்லா கீர்த்தியடைந்துள்ளதையும் தெரிவி.  அவன் என்னிடம் எந்த விதமான எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறான் என்பதை, குறிப்பறிந்து செயல் படும் நீ தெரிந்து கொள். பரதனுடைய நடவடிக்கைகளும், இருக்கும் நிலையையும் உன்னித்துப் பார். பேச்சில், முகக் குறிப்பில், வர்ணத்தில், பார்வையில், சம்பாஷனையில், எல்லா செல்வமும் நிறைந்து, யானை, குதிரை, ரதங்கள் ஏராளமாக இருக்க, தந்தை, பாட்டன் வழி வந்த ராஜ்யம் அவன் மனதை மாற்றியிருக்கிறதா என்று கவனித்துப் பார்.  இவ்வளவு நாள் அனுபவித்து ஆண்ட காரணத்தால் ராஜ்யத்தில் அவனுக்கு ஈ.டுபாடு இருக்குமானால், உலகம் பூராவையும், அவனும் ரகு நந்தனனே, ஆளட்டும்.  அவன் மனதையும் தெரிந்து கொண்டு, செயலையும் தெரிந்து கொண்டு நாங்கள் நெருங்கி வெகு சமீபத்தில் வரும் முன் வந்து சொல்.  இவ்வாறு கட்டளையிடப் பட்ட ஹனுமான் மனித ரூபத்தை எடுத்துக் கொண்டு, அயோத்தி சென்றான். வேகமாக நாலெட்டாக கால் வைத்து, கருடன் போல, நல்ல பாம்பைக் கண்டதும் பாய்ந்து வந்து எடுப்பதைப் போன்ற வேகத்துடன் நடந்தான். பித்ரு பதத்தை தாண்டி, புஜகேந்திராலயம் எனும் பாம்புகள் வாழும் இடத்தையும் தாண்டிச் சென்றான். (விஹகேந்திராலயம் என்றும் பாடம். அந்த முறையில் விஹக-பறவை, பறவை ராஜனான கருடனின் வீட்டையும் தாண்டி என்பது திலகர் உரை). கங்கா, யமுனையின் சங்கமத்தை தாண்டி, ச்ருங்கிபேர புரம் சென்றான். குகனைக் கண்டு அவனுடன்  பேசியதில் மகிழ்ச்சியோடு ஹனுமான் சொன்னான். நீ காகுத்ஸனின் சகா. சத்ய பராக்ரமனான ராமனின் தோழன். சௌமித்ரியுடனும், சீதையுடனும் உன்னை குசலம் விசாரித்தான். இன்று பஞ்சமி.  இன்று இரவு முனிவர் வார்த்தைக்கு கட்டுப் பட்டு அங்கு வசித்து விட்டு பரத்வாஜ முனிவர் அனுமதி கொடுத்தால், இன்றே ராமனைக் காண்பாய்.  இதைக் கேட்டு உடல் புல்லரிக்க, குகன் சந்தோஷம் அடைந்தான். அவனிடம் விடை பெற்று, துள்ளி குதித்து, ராம தீர்த்தம் என்பதையும், வாலுகினீம் என்ற நதியையும், கோமதி நதியையும், பயங்கரமான சால வனம் என்ற வனத்தையும் கடந்து சென்றான். ஆயிரக் கணக்கான ஜனங்கள், இருண்டு கிடந்த பெரும் வீதிகள், இவற்றையும் கடந்து வேகமாக வெகு தூரம் சென்று நந்திக்ராமம் அருகில் வந்து விட்டதற்கு அறிகுறியாக, மலர்ந்து கிடந்த மரங்கள், அடர்ந்த தோப்பு ஒன்றை அடைந்தான். ஸ்த்ரீகள் கைகளில் குழந்தைகளுடனும், வயதானவர்களும், பலரும் மகிழ்ச்சியுடன் வளைய வந்து கொண்டிருந்தனர். சைத்ர ரதம் எனும் தேவ லோக தோட்டத்தில் இருப்பது போல மரங்கள் தெரிந்தன. அயோத்தியின் இரண்டு மைல் தூரத்தில், ஆசிரமத்தில் இளைத்து, மரவுரி அணிந்தவனாக, மான் தோலை போர்த்திக் கொண்டு நின்ற பரதனைப் பார்த்தான். உடல் பூரா புழுதி மண்டிக் கிடக்க, வயது முதிர்ந்தவன் போல நடுங்கும் உடல், சகோதரனுக்கு ஏற்பட்ட கஷ்டத்தால் தானும் வருந்தி, பழங்களையும், காய் கிழங்குகளையுமே உணவாகக் கொண்டு, தர்ம வழியில் தவம் செய்பவனாக, மேல் தூக்கி கட்டப் பட்ட ஜடையுடன், மரவுரி தரித்து, ப்ரும்ம ரிஷி போல தேஜஸுடன், தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்ந்த பரதனைக் கண்டான். பாதுகையின் பேரில், நாட்டை ஆண்டு வந்தவனைக் கண்டான். நான்கு வர்ணத்தாரும் பயமின்றி வாழ வகை செய்து கொடுத்தவனாக, மந்திரிகள் புடை சூழ, புரோஹிதர்கள் சுத்தமாக வந்து நிற்பதையும், படை வீரர்களின் தலைவர்கள் வந்து விவரங்கள் சொல்வதையும், காஷாய வஸ்திரம் அணிந்த ஊர் ஜனங்களையும் கண்டான். அவர்கள் (வல்கலையும்) மரவுரியும், மான் தோலும் அணிந்திருக்கும் பொழுது, புர ஜனங்களும் உயர்ந்த ஆடையணிகளை ஒதுக்கியவர்களாக, தர்ம வத்ஸலனான அரசனின் வழியே தாங்களும் காஷாய வஸ்திரம் தரித்து நடமாடியதும், தர்மமே உருவெடுத்து வந்தவன் போலவும்,  தர்மஞானியே உருவெடுத்து வந்து விட்டவன் போலவும் இருந்த பரதனைக் கண்டு மாருதாத்மஜன், கை கூப்பி வணங்கி, தான் வந்த விஷயத்தை தெரிவித்தான். தண்டகாரண்யத்தில் மரவுரி, மான் தோல் தரித்து கஷ்ட ஜீவனம் செய்கிறான் என்று எந்த ராமனை நினைத்து நீ வருந்துகிறாயோ, அந்த காகுத்ஸனான ராமன் உன்னை குசலம் விசாரித்தான். தேவனே, இந்த ஆழ்ந்த சோகத்தையும் வேதனையும் தீரும் காலம் வந்து விட்டது. இந்த முஹுர்த்தத்திலேயே நீ சகோதரனான ராமனுடன் இணைவாய். கவலையை விடு. ராவணனை வதம் செய்து, மைதிலியை திரும்பப் பெற்று, மகா பலசாலியான நண்பர்களைப் பெற்று, அவர்களுடன் வந்து கொண்டே இருக்கிறான். லக்ஷ்மணனும் உடன் வருகிறான். புகழ் வாய்ந்த வைதேஹியும் உடன் வருகிறாள். மகேந்திரனுடன் சசி சேர்ந்ததைப் போல சீதை ராகவனை, ராமனை அடைந்தாள்.  சகோதரன் மேல் பாசம் மிகுந்த பரதன் இந்த செய்திகளைக் கேட்டு மகிழ்ந்தான்.  ஆனந்த மிகுதியில் மூர்ச்சையாகி விழுந்தான். முஹுர்த்த நேரத்தில் எழுந்து ஆஸ்வாஸம் செய்து கொண்டு பிரியமாக பேசும் ஹனுமானைப் பார்த்து மேலும் விவரங்கள் கேட்டான். பரபரப்புடன் தன் ஆனந்த கண்ணீர் அவன் மார்பை நனைக்க இறுக அணைத்துக் கொண்டான். தேவனோ, மனிதனோ நீ யார் என்று தெரியவில்லை. ஏதோ என்னிடம் உள்ள கருணையால் இங்கு வந்து நல்ல செய்தி சொன்னாய். பிரியமானதைச் சொன்னவனே, உனக்கு நான் என்ன தருவேன்? நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக பசுக்கள் தரவா? நூறு கிராமங்கள் தரவா? நல்ல குண்டலங்கள் அணிந்த நல்ல நடத்தையுள்ள பதினாறு கன்னிகளை மனைவியாகத் தரட்டுமா? இந்த பெண்கள் பொன் வர்ணமும், எடுப்பான நாசியும், இடையும், சந்திரன் போன்ற சௌம்யமான முகமும் கொண்ட எல்லா விதமான ஆபரணங்களும் பூண்டவர்களாக, நல்ல குலத்தில் பிறந்தவர்கள்.  ராமன் வருகிறான் என்று ஹனுமான் சொல்லக் கேட்ட அரச குமாரனான பரதன், ராமர் வரும் திசையை ஆவலுடன் பார்த்தபடி, மேலும் விசாரித்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப4ரத ப்ரியாக்2யானம் என்ற நூற்று இருபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 129 (536) ஹனுமத் பரத சம்பாஷணம் (ஹனுமானும் பரதனும் சம்பாஷித்தல்)

 

வனம் சென்று பல வருஷங்களுக்குப் பிறகு ராமன் விஷயமாக கேள்விப் படுகிறேன். உலக வழக்கு ஒன்று உண்டு. மங்கள கரமான பாடல். உலகில் நூறு வருஷமானாலும் ஜீவித்திருப்பவனைத் தான் மங்களங்கள் வந்தடையும், என்பதாக. ராகவனுக்கும், வானரத்துக்கும் எப்படி தோழமை நட்பு ஏற்பட்டது.  எந்த தேசத்தில் சந்தித்தார்கள்? எப்படி? என்ன காரணம் கொண்டு இருவரும் நட்பு பூண்டார்கள்? விவரமாகச் சொல்லு என்று கேட்க, ஹனுமான் புல்லில் அமர்ந்து கொண்டு உற்சாகமாக ஆரம்பித்தான்.  வனத்தில் நடந்த ராம சரிதம் அனைத்தையும் சொல்லத் தயாரானான். உன் தாய் வரதானத்தை காரணமாகச் சொல்லி நாட்டை விட்டு காட்டுக்கு போகச் சொன்ன நாளிலிருந்து, ராஜா தசரதன் புத்ர சோகத்தால் மறைந்தது, தூதர்கள் உங்களை வேகமாக அழைத்து வந்தது,  அயோத்தி வந்து ராஜ்யம் உனக்கே என்ற பொழுது,  ஏற்றுக் கொள்ள விரும்பாமல் தாங்கள் சித்ரகூட மலை சென்று சகோதரனை திரும்பி வரச் சொல்லி அழைத்ததும், தர்ம வழியில் நின்ற ராமன் தந்தை சொல் மீற மாட்டேன் என்று உங்களை திருப்பியனுப்பியதும், ராம பாதுகையை எடுத்துக் கொண்டு நீங்கள் திரும்பி வந்ததும், நீங்கள் அறிந்ததே.  அதற்குப் பின் நடந்ததைச் சொல்கிறேன். தாங்கள் திரும்பிச் சென்றவுடன், மிருகங்களும், பறவைகளும் அந்த வனத்தில் இயல்பாக இல்லாமல் தவிப்பது போல இருந்தது.  யானைகள் நிறைந்தது, சிங்கமும், புலியும், சஞ்சரிப்பதுமான காட்டில், ஜன நடமாட்டம் இல்லாத தண்டகா வனம் என்ற பெரும் காட்டில் மூவரும் பிரவேசித்தனர். அடர்ந்த காட்டில், போய்க் கொண்டிருக்கும் பொழுது, திடுமென விராத4ன் என்ற ராக்ஷஸன் உரத்த குரலில் அதட்டிக் கொண்டு எதிரில் வந்து நின்றான். கைகளைத் தூக்கியபடி, பிளிறும் யானைப் போல, தலை குனிந்து வந்தவனை, சகோதரர்கள் இருவருமாக, பள்ளத்தில் தள்ளி விட்டனர். மிகவும் சிரமமான இந்த காரியத்தை செய்து விட்டு, இருவரும் மாலை நேரம் சரபங்காஸ்ரமம் சென்றனர்.  சரபங்கர் தேவ லோகம் சென்றதும், ராமர் முனிவர்களை வணங்கி விசாரித்துக் கொண்டு தண்டகாரண்யம் வந்தார். ஜனஸ்தானம் வந்து சேர்ந்தார்.  சில நாட்களுக்குப் பின், (துஷ்டையான) சூர்ப்பணகா அவர் அருகில் வந்து சேர்ந்தாள். ராமன் கட்டளையிடவும், லக்ஷ்மணன் வேகமாக வந்து வாளை எடுத்து அவள் காதுகளையும்,  மூக்கையும் அறுத்து விட்டான்.  உடனே பயங்கரமான பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்கள் எதிர்த்து வந்து நின்றனர். ராகவன் அங்கு வசித்த காலத்தில் அவர்கள் எல்லோரையும் வதம் செய்து விட்டார்.  ராமன் ஒருவனாக அந்த கூட்டத்தை அழித்து விட்டான். நாளின் நாலில் ஒரு பாகத்தில், ராக்ஷஸர்கள் ஒருவர் மீதியில்லாமல் அழிந்தார்கள்.  இவர்கள் எல்லோருமே பலசாலிகள். யாகத்தை விக்னம் செய்வதே இவர்கள் பொழுது போக்கு.  தண்டகாரண்ய வாசிகள் என்று பிரஸித்தமான அந்த ராக்ஷஸர்கள் ஒரே நாளில் அழிந்தார்கள்.  ராக்ஷஸர்கள் வாட்டி எடுக்கப் பட்டனர்.  க2ரனும் யுத்தத்தில் மாண்டான்.  இதைக் கண்டு அந்த ஸ்த்ரீ சூர்ப்பணகா, ராவணனிடம் சென்று முறையிட்டாள். ராவணனின் உறவினன் ஒருவன், மாரீசன் என்று பெயருடையவன்.  அவன் ரத்ன மயமான மான் உருவம் எடுத்துக் கொண்டு மைதிலிக்கு எதிரில் நடமாடினான். அதைக் கண்டு மோகித்து, பிடித்து தரும்படி மைதிலி ராகவனிடம் கேட்டாள். அஹோ, காந்தா, மனோகரமாக இருக்கிறது. இது நம் ஆசிரமத்தில் அழகாக இருக்கும் என்றாள். இதைக் கேட்டு ராமரும், வில்லை எடுத்துக் கொண்டு, ஓடும் பெண் மானை துரத்திக் கொண்டு போனார்.   வெகு தூரம் சென்ற பின் தன் பாணத்தால் அதைக் கொன்றார். சௌம்ய, இதன் பின் ராவணன் தசக்ரீவன், மிருகமான மான் ராமனை வெகு தூரம் இழுத்துச் சென்ற பின், லக்ஷ்மணனும் கவலையுடன் ராமனைத் தேடிச் சென்ற பின், ஆசிரமத்துள் நுழைந்தான்.  தனியாக இருந்த வைதேஹியை அபகரித்தான்.  ஆகாயத்தில்  ரோஹிணியை க்ரஹம் பிடித்தது போல இருந்தது.  அவளைக் காப்பாற்ற ஜடாயு ராவணனுடன் போரிட்டான்.  அவனை அடித்து வீழ்த்தி விட்டு ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு வேகமாக சென்றான். மலை உச்சியில் நின்றிருந்த நாங்கள் வானரங்கள், சீதையை கவர்ந்து செல்லும் ராவணனையும்,  பர்வதம் போன்ற அவன் சரீரத்தையும் பார்த்து ஆச்சர்யம் அடைந்தவர்களாக பார்த்துக் கொண்டு நின்றோம். ராவணன் லங்கை சென்று சீதையை சிறை வைத்தான். லோக ராவணன். உலகை துன்புறுத்தியவன் அவன். சுபமான தன் வீட்டில் எங்கும் தங்க மயமாக செல்வ செழிப்பை பறை சாற்றிக் கொண்டிருக்கும் தன் மாளிகையில் வைத்து சீதையை சமாதானம் செய்ய ஆரம்பித்தான். அவனை லட்சியம் செய்யாமல் சீதா அவனை ஒரு புல்லாக கூட மதிக்கவில்லை. அசோக வனத்தில் சிறைப் படுத்தப் பட்ட போதிலும், அவன் பால் சற்றும் கவனம் இல்லாதவளாக,  ராமனையே நினைத்தபடி இருந்தாள். இங்கு பொய் மானை அடித்து விட்டு திரும்பிய ராமர், அடிபட்டு உயிருக்கு மன்றாடும் ஜடாயுவைக் கண்டார். தன் தந்தையின் சகாவான ஜடாயு சொன்னதைக் கேட்டு, இறந்து போன அதற்கு ஸ்ம்ஸ்காரங்கள் செய்து விட்டு, ராம லக்ஷ்மணர்கள், வைதேஹியை தேடிக் கொண்டு வந்தனர்.  கோதாவரி கரையோரமாக வனங்களில் தேடிக் கொண்டே வந்தனர். பெரிய அரண்யத்தில் கபந்தன் என்ற ராக்ஷஸனைக் கண்டனர். சத்ய பராக்ரமனான ராமர், கபந்தன் சொன்ன விஷயத்தை நம்பி, ருஸ்ய மூக மலைக்குச் சென்று சுக்ரீவனோடு சக்யம் செய்து கொண்டார். இவர்களின் சந்திப்பு, நட்புடன், ஒருவருக்கொருவர் அன்புடன் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதாக இருந்தது.  சுக்ரீவனும் கோபம் கொண்ட வாலியினால் துரத்தப் பட்டவன்.  சம்பாஷனையில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, சமமான துக்கத்தை அனுபவிப்பவர்களாக, இருக்கவும், ஆழமான நட்பு இவர்களிடையில் தோன்றி வேரூன்றியது.  ராமனுடைய புஜ பலத்தால் சுக்ரீவன் தனக்கு ராஜ்யம் கிடைக்கப் பெற்றான். வாலி மகா பலசாலி. பெரிய உருவம் உடையவன்.  அவனை போரில் வதம் செய்து சுக்ரீவன் ராஜ்யத்தில் நியமிக்கப் பட்டான். உடன் இருந்த வானரங்களும் மகிழ்ந்தன. ராஜ குமாரியான சீதையைத் தேட, ராமனுக்கு வாக்களித்தான். சுக்ரீவ ராஜா  கட்டளையை ஏற்று,  பத்து கோடி வானரங்கள் நாலா திசைகளிலும் தேடச் சென்றன. வழி தவறி, திண்டாடிய ஒரு கூட்டம் விந்த்ய மலையில் தடுமாறி நின்ற பொழுது கால கெடுவும் தாண்டி விட்டது. திரும்பி வரவும் முடியாத நிலை. வருந்தி புலம்பிக் கொண்டு இவர்கள் நின்றதை கழுகரசன் சம்பாதி கேட்டான். அவன் ஜடாயுவின் சகோதரன்.  தன் கூர்மையான கண்களால் பார்த்து சீதை ராவணன் க்ருஹத்தில் இருப்பதைச் சொன்னான். நானும், என்னுடன் வந்தவர்களின் கஷ்டத்தை உணர்ந்து, என் வீர்யத்தால் நூறு யோஜனை தூரம் சமுத்திரத்தை தாண்டிச் சென்றேன்.  அங்கு அசோக வனத்தில் தனித்து இருந்த சீதையைக் கண்டேன். மாசடைந்த வெண் பட்டாடை அணிந்து, கடுமையான நியமங்களுடன், சற்றும் மனதில் நிம்மதியின்றி இருந்தாள். அவளை நெருங்கி, மெதுவாக என்னைப் பற்றி தெரிவித்துக் கொண்டு, ராமன் கொடுத்த அடையாளத்தைக் காட்டினேன். அந்த கனையாழியை தெரிந்து கொண்டு வாங்கிக் கொண்டவள், தன் தலையில் சூடும் சூடாமணியை ராமனுக்கு அடையாளமாக தரச் சொல்லிக்  கொடுத்தாள்.  வந்த காரியம் ஆயிற்று என்று நானும் திரும்பி வந்து ராமனிடம் மைதிலி உயிருடன் இருக்கிறாள் என்பதையும், நடந்த விவரங்களையும் தெரிவித்தேன்.  மரணத் தறுவாயில் இருப்பவன் அம்ருதம் கிடைக்கப் பெற்றது போல ராமர் மகிழ்ந்தார்.  மேற்கொண்டு செய்ய வேண்டியதை யோசித்து, ராவண வதம் தான் வழி என்று தீர்மானித்து செயல்பட ஆரம்பித்தார்.  உலக முடிவில் எல்லா லோகத்தையும் விபாவசு என்ற அக்னி அழிக்க நினைப்பது போல, ராமரும் ராவணனுடன் ராக்ஷஸ கூட்டத்தையே வதம் செய்ய தீர்மானித்தார்.  சமுத்திர கரையை அடைந்தோம். நளன் சேதுவைக் கட்டினான். அந்த சேதுவின் மூலமாக வானர சைன்யம் நடந்து அக்கரை சென்றது.  பிரஹஸ்தனை நீலன் கொன்றான். கும்பகர்ணனை ராகவன், ராவண குமாரனை லக்ஷ்மணன் வதைத்தான். ராமர் தானே ராவணனை நேரடியாக போராடி ஜயித்தார். வதைத்தார்.  ராவண வதம் ஆன பின், இந்திரனும், யமனும், வருணனும், மகேஸ்வரனும், ப்ரும்மாவும் வந்து சேர்ந்தனர்.  வாழ்த்தி வரங்கள் தந்தனர்.  தசரதரும் வந்தார்.  இவர்கள் தந்த வரங்களுடன், ரிஷி கணங்களும் சேர்ந்து கொள்ள, சுரர்களும் ரிஷிகளும் கூட காகுத்ஸனுக்கு வரங்கள் தந்தனர். வானரங்களுடன் மகா பிரியத்துடன் புஷ்பக விமானத்தில் ஏறி கிஷ்கிந்தை வந்தார்கள். கங்கை கரையை அடைந்து முனிகளின் ஆசிரமத்தில் தங்கி இருக்கின்றனர். நாளை எந்த இடையூறுமின்றி ராமனை தரிசிப்பாய். ஹனுமானின் சத்ய வசனத்தைக் கேட்டு பரதன் ஆனந்த கடலில் மூழ்கினான். கை கூப்பியபடி, வெகு நாளைக்குப் பின் என் மனோரதம் நிறைவேறியது என்றும் சொன்னான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஹனுமத் பரத சம்பாஷணம் என்ற நூற்று இருபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 130 (537) ப4ரத சமாக3ம: (பரதனை சந்தித்தல்)

 

நடந்த விவரங்களைக் கேட்டு பரமானந்தம் அடைந்த  பரதன், சத்ருக்னனுக்கு கட்டளையிட்டான். தேவாலயங்களும், நாற்கால் மண்டபங்களும், ஊரில் உள்ள எல்லா மாளிகைகளும், வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரிக்கப் படட்டும், ஊர்  முழுவதும் சுத்தம் செய்து, ஜனங்களும் ஸ்நானம் செய்து சுத்தமாக இருக்கச் செய். பாடகர்களும், துதி பாடும் மாகதர்களும், வைதானிகர்கள், வாத்யம் வாசிப்பதில் தேர்ந்தவர்கள், கணிகா ஸ்த்ரீகள் கூட்டமாக ராமனை எதிர் கொண்டழைக்கச் செல்லட்டும். சந்திரன் போன்ற அவன் முகத்தைக் கண்டு வாழ்த்தி வரவேற்கட்டும். பரதன் கட்டளையை ஏற்று சத்ருக்னன், ஆயிரக் கணக்கான சேவகர்களை இந்த வேலைகளைச் செய்ய நியமித்தான்.  நந்தி கிராமத்திலிருந்து அயோத்தி வரையிலான பாதை பள்ளங்களை நிரப்பி, சமமாக்குங்கள்.  வளைந்து செல்லும் பாதையை நேராக ஆக்குங்கள். பாதையை ஸ்திரமாகச் செய்யுங்கள். குளிர்ந்த ஜலம் தெளித்து வழி  முழுவதும்f, சீதளமாக இருக்கச் செய்யுங்கள்.  மற்றும் சிலர், பொரி, புஷ்பங்கள், இவைகளை சேகரித்து வழியில் மங்களகரமாக இரைத்து வையுங்கள்.  பதாகங்கள் தூக்கி உயரே கட்டப் படட்டும்.  நகரின் வழிகளில் ஆங்காங்கு கொடிகள் உயரே பறக்கட்டும். சூரியோதய சமயம் வீடுகள் பிரகாசமாக அலங்கரிக்கப் பட்டு இருக்கச் செய்யுங்கள். பூ மாலைகள், உதிரி புஷ்பங்கள், ஐந்து வர்ணங்கள் கொண்டு வாசனை மிகுந்த மலர்களை வழி முழுவதும், ராஜ மார்கம் நிறைய ஜனங்கள் வீசியபடி செல்லட்டும். ராஜ தாரா: –  அரசனின் ராணிகள், மந்திரிகள், சைன்யம், சேனையைச் சேர்ந்த பெண்கள், ப்ராம்மணர்கள், அக்கம் பக்க அரச குடும்பத்தினர், சேனையில் முக்கிய பதவி வகிப்பவர்கள், எல்லோரும் வரவேற்க கூடுங்கள். இதைக் கேட்டு த்ருஷ்டி, ஜயந்தன், விஜயன், சித்தார்த்தன், அர்த்த சாதகன், அசோகன், மந்த்ர பாலன், சுமந்திரன் யாவரும் வெளி  வந்தனர். மதம் கொண்ட ஆயிரம் யானைகள் தயாராயின.  இவைகளுக்கு பொன்னாலான முகப் படம் போட்டு அலங்கரித்தனர். மற்றும் சிலர் தங்க சாலையில் இருந்து குட்டிகளுடன் பெண் யானைகளை அழைத்து வந்தனர். சிலர் குதிரைகளில் ஏறி வேகமாக வந்தனர். மற்றும் சிலர் ரதங்களை தயார் செய்து கொண்டு வந்தனர். சக்தி, இஷ்டி, ப்ராஸ எனும் ஆயுதங்களை ஏந்திய வீரர்கள் குதிரைகளின் மேல் பவனி வந்தனர். உயரத் தூக்கி பிடித்த கொடிகளுடன் ஆயிரக் கணக்கான பிரமுகர்கள் இதில் ஏறி வந்தனர். கால் நடையாகவும் பலர் வந்தனர். தசரதனின் மனைவிகள் தகுந்த வாகனங்களில் ஏறி நந்தி கிராமம் வந்து சேர்ந்தனர். கௌசல்யாவை முன்னால் நிறுத்தி, சுமித்ரையையும் சூழ்ந்து வந்தனர். கைகேயியையும் உடன் அழைத்துக் கொண்டு எல்லோருமாக நந்தி கிராமத்தை வந்தடைந்தனர். ஊர் கொள்ளாமல் நந்தி கிராம நகரம் கல கலப்பாகியது.  ரதத்தின் ஓடும் சப்தமும், குதிரைகளின் கணைக்கும் சத்தமும், சங்க, துந்துபி கோஷங்களும் மேதினியே ஆட்டம் கண்டது போல கோலாகலமாக விளங்கியது.  ப்ராம்மணர்களில் முக்கியமானவர்களும், வேத கோஷம் செய்யும் வேத விற்பன்னர்களும், மாலை, மோதகம் இவைகளை கையில் ஏந்திய மந்திரிகளும் பரதனை சூழ்ந்து நின்றனர்.  வந்திகள் எனும் துதி பாடகர்கள் வாழ்த்த, சங்க, பேரி, இவை வாசிக்கப் பெற்று வரவேற்க, ஆர்ய பாதௌ- ராமனின் பாதுகையை எடுத்துக் கொண்டு தலையில் வைத்தபடி, வெண் சாமரம், வெண்ணிற மாலை, இவைகளையும், வெண்மையான கொற்றக் கொடி, வால வ்யஜனம் எனும் சாமரங்கள், அரசனுக்குரியதாக, பொன்னால் வேலைப் பாடு செய்யப் பெற்றதாக, இவைகளுடன் உபவாசத்தால் இளைத்து துரும்பாகி இருந்தாலும், மரவுரியும், மான் தோலையும் தரித்து சகோதரன் வருகையை எதிர்பார்த்து அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி முகத்தில் தெரிய, பரதன் முன்னால் நின்றான்.  மந்திரிகள் தொடர்ந்தனர். பவனாத்மஜனைப் பார்த்து பரதன், வானர இயல்பான குறும்பு எதுவும் செய்யவில்லையே. ராமனை இன்னமும் கானவில்லையே. வானரங்கள் இஷ்டம் போல உருவம் எடுக்க வல்லவர்கள் என்று சொன்னாயே, யாரையும் காணோமே என்று கவலையுடன் கேட்டான்.  ஹனுமான் இதைக் கேட்டு சமாதானம் செய்யும் விதமாக பொருள் பொதிந்த வார்த்தைகளைச் சொன்னான்.  பரத்வாஜ ஆசிரமத்தில், பழம் நிறைந்த மரங்கள், தேன் சொரியும் புஷ்பங்களுடன் உள்ள மரங்களும் நிறைய இருந்திருக்கும். பரத்வாஜரின் அனுமதியுடன் இங்கு குதித்து கும்மளமிட்டுக் கொண்டு வானரங்கள் தாமதம் செய்கின்றன போலும். இந்திரனும் வரம் கொடுத்திருக்கிறான்.  சைன்யத்துடன் பரத்வாஜர் முன்பு ஆதித்யம்-விருந்தோம்பலை செய்தவர் தானே. இதோ கேளுங்கள். மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் வானரங்களின் கூச்சல் கேட்கிறது.  வானர சேனை கோமதி நதியைக் கடக்கிறது என்று நினைக்கிறேன். வாலகினி நதியை நோக்கி புழுதி படலமாக எழுந்து நிற்பதைப் பாருங்கள். இதோ சால வனம். ரம்யமாக இருந்தது. வானரங்கள் அந்த வனத்தில் அட்டகாசம் செய்கின்றன போலும். இதோ, தூரத்தில் சந்திரன் உதித்தது போல, புஷ்பக விமானம் தெரிகிறது. ப்ரும்மா தன் மனதில் கற்பனையில் நிர்மாணித்தது. ராவணனை பந்துக்களோடு அழித்து மகாத்மாவான விபீஷணன் கைக்கு வந்துள்ளது. இளம் சூரியன் போன்ற வாகனம். ராம வாகனம் தான். குபேரனுடைய கருணையால், மனோ வேகத்தில் செல்லும் இந்த திவ்யமான விமானம் கிடைத்தது.  இதில் தான் ராகவர்கள், ராம லக்ஷ்மணர்கள் சீதையுடன் வருகிறார்கள்.  மகா தேஜஸ்வியான சுக்ரீவனும், ராக்ஷஸ ராஜா விபீஷணனும் வருகிறார்கள். உடனே பெரும் ஆரவாரம் எழுந்தது. வானளாவ எழுந்த பெரும் சப்தம், இதோ ராமன் என்று சொன்னதும், வரவேற்கும் விதமாக எழுந்தது. ரதங்களிலும், யானைகளிலும், குதிரைகளிலும் இருந்தவர்கள் இறங்கி பூமியில் நின்றனர். ஆகாயத்தில் சந்திரனைக் காண்பது போல விமானத்தில் இருந்த ராமரைக் கண்டனர். பரதன் கை கூப்பிய வாறு ராமரை எதிர் கொண்டு சென்றான். ஸ்வாகதம் கூறி வரவேற்றான். ப்ரும்மா தன் மனதால் ஸ்ருஷ்டி செய்த விமானத்தில் பரதன் முன் பிறந்தோன், நீண்ட கண்களுடன் மற்றொரு இந்திரன்  போல விளங்கினார். விமானத்தின் முன் சென்ற பரதன், சகோதரனை வணங்கினான். மேருவில் நின்ற பாஸ்கரனை வணங்குவது போல வணங்கினான். ராமனின் அனுமதியுடன் விமானம் பூமியில் இறங்கி நின்றது. விமானத்தில் பரதனை ஏற்றினார்கள். ராமன் அருகில் சென்று மகிழ்ச்சியுடன் திரும்பவும் அபிவாதனம் செய்தான். வெகு நாட்களுக்குப் பின் கண்களில் தென்பட்ட பரதனை மடியில் இருத்திக் கொண்டு ராமர் இறுக அணைத்துக் கொண்டார். பின் லக்ஷ்மணன் அருகில் சென்று அவனையும், வைதேஹியையும் பரதன் வணங்கினான்.  தன் பெயர் சொல்லி சுக்ரீவனையும், ஜாம்பவானையும் வணங்கினான். பின் அங்கதனையும் மைந்தன், த்விவிதன், நீலன், ரிஷபன் இவர்களையும் அணைத்து வரவேற்றான். சுஷேணனையும், நளன்., க3வாக்ஷன் இவர்களையும் அப்படியே வரவேற்றான். இவர்களும் மனித உருவம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் குசலம் விசாரித்தனர். இதன் பின் அரச குமாரன் சுக்ரீவனிடம், நாங்கள் நால்வர் சகோதரர்களாக இருந்தோம். உன்னுடன் ஐவரானோம். என்றான். சினேகம் அன்பினால் வளருகிறது. துரோகம் செய்வது எதிரிகளின் லக்ஷணம் என்றான். விபீஷணனையும் பார்த்து, அதிர்ஷ்ட வசமாக தங்கள் உதவியும் கிடைத்தது. அதனால் தான் இந்த அரிய செயலை எளிதாக செய்ய முடிந்தது என்றான். சத்ருக்னனும் அதே போல ராமரை வணங்கி லக்ஷ்மணனையும் வணங்கி, சீதையின் சரணங்களைப் பற்றி, வினயத்தோடு வணங்கினான்.  ராமரும், வெகு காலமாக பிரிந்திருந்த தாயை சென்று வணங்கினார்.  தாய் உள்ளம் உவகையால் பூரிக்க, சுமித்ரையையும். கேகய ராஜ குமாரியான கைகேயியையும் வணங்கினார். தாய் மார்களை விட்டு புரோகிதரை அணுகியதும்,  அவர்கள் ஸ்வாகதம் சொன்னார்கள். கௌசல்யானந்த வர்தனா, உனக்கு நல் வரவு என்று வரவேற்றனர்.  நகரத்து ஜனங்களும் அவ்வாறே கை கூப்பியவர்களாக ஸ்வாகதம் சொன்னார்கள்.  ஆயிரக் கணக்கான நகர ஜனங்களின் கூப்பிய கைகள், பல ஆயிரம் தாமரை மொட்டுகளாக ராமன் கண்களுக்குத் தெரிந்தன. ராம பாதுகையை பரதன் தானே கொண்டு வந்து நரேந்திரனான ராமனின் கால்களில் அணிவித்தான். ராமனைப் பார்த்து ராஜன்| இதோ இந்த பாதுகைகளை காப்பாற்றி ராஜ்யத்தோடு திருப்பிக் கொடுத்து விட்டேன். இன்று என் ஜன்மம் க்ருதார்த்தமாயிற்று. என் கஷ்டங்கள் தீர்ந்தன என்றான். என் மனோரதம் பூர்த்தியாயிற்று என்றான். திரும்பி வந்து நீ அயோத்யாவின் அரசனாக பதவி ஏற்று, காண்போமா என்று இருந்தது. இப்பொழுது இதோ பொக்கிஷம், செல்வம், ஊர், படை உங்கள் ஆசிர்வாதத்தால் பத்து மடங்காக உயர்த்தி வைத்திருக்கிறேன். இவைகளை பார்த்து ஏற்றுக் கொள்ளுங்கள். சகோதர பாசத்தின் எடுத்துக் காட்டாக பரதன் சொன்னதைக் கேட்டு, வானரங்கள் ஆனந்த பாஷ்பம் சொரிந்தன. இதன் பின், பரதனை அருகில் இருத்தி அணைத்துக் கொண்டு அந்த விமானத்திலேயே பரதாஸ்ரமம் சென்றனர். பரதாஸ்ரமம் அடைந்து சேனைகளோடு விமானத்திலிருந்து இறங்கி பூமியில் நின்றார். விமானத்தைப் பார்த்து நீ போய் வைஸ்ரவனை ஏற்றிச் செல்பவனாக திரும்பி போ. நான் அனுமதி தருகிறேன், என்று அனுப்பி விட்டார். ராமர் அனுமதி அளித்ததும், அந்த விமானம் வடக்கு நோக்கிச் சென்று, தனதன் எனும் குபேரனுடைய இருப்பிடத்தைச் சென்றடைந்தது. புரோஹிதர் பாதங்களை வணங்கி, தனக்கு சமமாக இருந்தவரை, அமராதிபனான இந்திரன் ப்ருஹஸ்பதியை வணங்குவது போல வணங்கி, அவரை மற்றொரு ஆசனத்தில் அமர்த்தி, பாதங்களை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு, தன் சுபமான ஆசனத்தில் அமர்ந்தார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப4ரத சமாக3ம – என்ற  நூற்று முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக