ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டம் 16 – 25
அத்தியாயம் 16 (423) விபீஷணாக்ரோச: (விபீஷணன் கோபம்)
விபீஷணன் தெளிவாக, நிதானமாகத் தான் சொன்னான். ஆயினும் காலத்தின் வசத்தால், அந்த ஹிதமான சொற்கள் ராவணனுக்கு சினத்தையே மூட்டின. சபத்னி (சக்களத்தி) கூட வாழ்வதும், ஆலகாலம் விஷம் கொண்ட பாம்புடன் வாழ்வதும் கூட சாத்யமாகலாம், ஆனால், மித்ரன் போன்ற வாய் வார்த்தைகளுடன், மனதால் சத்ருவாக இருப்பவனுடன் வாழ்தல் அரிது. ராக்ஷஸனே, தாயாதி, பங்காளி என்று வந்தால், உலகம் பூராவும் இதே போலத்தான் இருப்பதைக் கண்டிருக்கிறேன். தன் பங்காளிக்கு ஒரு கஷ்டம் என்றால் இந்த பங்காளி (தாயாதி) என்ற பந்துக்கள் அதிக சந்தோஷம் அடைவார்கள். முன்னுக்கு வந்து விட்ட சாதகனாகவோ, வைத்யனோ, தர்ம சீலமாக இருப்பவனையோ, இந்த பங்காளி கூட்டம் அலட்சியம் செய்யும். சூரனாக இருப்பவனை அவமதிக்கும். ஆததாயி எனும் இவர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து கொண்டு, கஷ்டத்தில் இருக்கும் பங்காளியை ஏளனம் செய்து மகிழ்வர். மனதில் ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு, செயல் படும் இந்த பங்காளிகள், மிகவும் பயங்கரமானவர்கள். யானைகள் பாடும் ஒரு ஸ்லோகம் உண்டு. பத்மவனத்தில் ஒருமுறை கையில் கயிற்றுடன் வந்த மனிதர்களைப் பார்த்து யானைகள் பேசிக் கொண்டன. அக்னியோ, மற்ற ஆயுதங்களோ, பாசமோ (கயிறு) நமக்கு பயமே இல்லை. நமது இனத்தவரே தங்கள் சுயநலத்திற்காக நம்மையும் படுகுழியில் தள்ளுவார்கள். இந்த தாயாதி, ஞாதி எனும் பந்துக்கள் (பங்காளிகள்) தான் பயங்கரமானவர்கள். நம்மை பிடிக்க, நம் இனத்தவரையே பயன்படுத்திக் கொள்கின்றனர். சந்தேகமேயில்லை. ஞாதீ எனும் பங்காளியிடம் பயப்பட வேண்டும் என்பது நாம் அறிந்ததே. பசுக்களிடம் நிறைவான செல்வம் இருப்பது போல, ப்ராம்மணனிடம் அடக்கம் இருப்பது போல, ஸ்த்ரீகளிடம் சாபல்யம் இருப்பது போல, பங்காளிகளிடம் பொறாமை நிறைந்திருக்கும். அதனால் இவர்களிடம் கவனமாகத் தான் இருக்க வேண்டும். அதனால் எனக்கு இது விருப்பமில்லை. எப்படி நான் உலகில் பெருமை வாய்ந்தவனாக, ஐஸ்வர்யம் நிறைந்தவனாக, நல்ல குலத்தில் பிறந்தவனாக, சத்ருக்களுக்கு நினைத்தாலே பயம் தோன்றும்படி அவர்கள் சிந்தையில் நிலைத்து இருக்கிறேனோ, அதே போல இருக்கவே விரும்புகின்றேன். குளத்தில் தாமரை இலைகளில் விழுந்த நீர் பட்டும் படாமலும் இருப்பது போலத்தான் இந்த உறவினர். இப்படிபட்ட பண்பற்றவர்களுடன் நட்பு கொள்வதும் தாமரை இலை தண்ணீர் போலத்தான். வண்டு தாகம் வந்தால் ரஸத்தைக் குடிக்க மட்டுமே வருவது போலத்தான். உன் போன்ற பண்பற்றவர்களுடன் உறவினன் என்று இசைந்து இருப்பதும் தேவையற்றதே. ஸ்நானம் செய்து விட்டு வந்து யானை தன் தலையில் தானே சேற்றை வாரி இறைத்துக் கொள்வது போலத்தான், உன் போன்ற பண்பற்றவர்களின் நட்பும். உன்னையன்றி வேறு யாராவது இப்படி பேசியிருந்தால், விபீஷணா இவ்வளவு நேரம் உயிருடன் இருக்க மாட்டான். திக், குலபாம்ஸன (கஷ்டம், குலத்தை கெடுக்க வந்தவனே) குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பே, என்றான் ராவணன். ஆத்திரத்தின் உச்சியில் நின்று கத்திய ராவணனின் இந்த வார்த்தைகளைக் கேட்டபின், நியாயவாதியான விபீஷணன் இதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவனாக, நான்கு ராக்ஷஸர்களுடன் குதித்து எழுந்து விட்டான். தானும் ஆத்திரம் அடைந்தான். ஆகாயத்தில் நின்று கொண்டு தமையனான ராவணனைப் பார்த்து அதே வேகத்தில் பதில் சொன்னான். என் தமையன் நீ. என்னை என்ன வேண்டுமானாலும் சொல். மூத்தவன் தந்தைக்கு சமமாக மதிக்கப் பட வேண்டியவன். தர்ம வழியில் செல்லாமல் கஷ்டத்தை எதிர் கொள்கிறாய் என்பதால் சொன்னேன். தவறாக எண்ணிக் கொண்டு என்னைப் பார்த்து மிகக் கடுமையாக பேசுகிறாய். இதை என்னால் பொறுக்க முடியவில்லை. தசானனே, உன் நன்மைக்காக ஹிதமாக எடுத்துச் சொன்னேன். காலத்தின் நிர்பந்தம். உனக்கு ஏற்கவில்லை. உன் நல்ல காலம் முடிந்து விட்டது போலும். அதனால் தான் என் சொல் உனக்கு ஏற்கவில்லை. இப்படித்தான் விதியில் பிடியில் இருப்பவர்கள், என்னதான் தேர்ந்தவர்களாக இருந்தாலும், நல்ல உபதேசத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ராஜன், எப்பொழுதும் பிரியமாக பேசுபவர்கள் சுலபமாக கிடைப்பார்கள். பிரியமில்லாத ஹிதமான வார்த்தையைச் சொல்ல தயங்குவார்கள். இப்படி உண்மை நிலையை எடுத்துச் சொல்பவனும், கேட்பவனும் மிகவும் அரிது, அரணிக் கட்டையில் அக்னி பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்தபின் அதை தவிர்ப்பது எப்படி முடியாதோ, அதே போலத்தான். கூர்மையான ராம பாணங்கள், நெருப்புத் துண்டங்கள் போல மேலே விழும். அவை உன் மேல் பட்டு, நீ தோற்று விழுவதை பார்க்க எனக்கு மனம் இல்லை. சூரர்களாக, பலவான்களாக, அஸ்திர சஸ்திரம் அறிந்தவர்களாக இருந்தாலும், யுத்தம் என்று வந்தால், முடிவு எப்படியும் இருக்கலாம். எந்த கட்சியினர், விதியின் பிடியில் இருக்கிறார்களோ, எவர்களுக்கு அழிவு காலம் வந்து விட்டதோ, அவர்கள் தான் வீழ்வார்கள். மணல் வீடு போல சரிந்து விழுவர். அதனால் என்னை மன்னித்து விடு. நீ பெரியவன். உன் நன்மைக்காக நான் சொன்னது பிடிக்கவில்லையென்றால், விட்டு விடு. உன்னையும் இந்த நகரத்தையும் காப்பாற்றிக் கொள். ராக்ஷஸர்களையும் சேர்த்து. உனக்கு நன்மையுண்டாகட்டும். நான் போகிறேன். நான் இல்லாமல் சுகமாக இரு. நிசாசரனே, உன் நன்மைக்காகத்தான், படுகுழியில் விழ இருக்கும் உன்னைத் தடுக்கிறேன். அது உனக்கு பிடிக்கவில்லை. அயுட்காலம் முடிந்து விட்ட நிலையில் உள்ளவர்கள், நண்பர்கள் சொல்லும் ஹிதமான சொற்களை ஏற்றுக் கொள்வதில்லை.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீஷணாக்ரோச: என்ற பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 17 (424) விபீ4ஷண சரணாகதி நிவேத3னம் (விபீஷண சரணாகதி)
ராவணனின் சகோதரன், கடுமையாக பதில் சொல்லி விட்டு ராகவன் இருந்த இடத்திற்கு முஹுர்த்த நேரத்தில் வந்து சேர்ந்தான். ராமனும், லக்ஷ்மணனும் அவனைக் கண்டார்கள். மேரு மலையின் சிகரம் போல பெருத்த உருவத்துடன், ஒளி வீசும் மின்னல் போல, ஆகாயத்தில் நின்றவனை, பூமியிலிருந்து வானரத் தலைவர்களும் கண்டனர். மேகமோ (அசலம்) மலையோ எனும்படி இருந்த விபீஷணன், வஜ்ராயுதம் போல ப்ரபையுடன் திவ்யமான ஆபரணங்கள் அலங்கரிக்க, ஆயுதங்களை ஏந்தியவனாக, இருந்தான். அவனைத் தொடர்ந்து வந்த நான்கு ராக்ஷஸர்களும், அதே போல கையில் ஆயுதங்களுடனும், நல்ல ஆபரணங்களை உடலில் தரித்துக் கொண்டவர்களாகவும் விளங்கினர். தன்னையும் சேர்த்து ஐந்து பேராக வந்து நின்ற விபீஷணனைப் பார்த்து சுக்ரீவன், மற்ற வானர வீரர்களுடன் இது பற்றி பேசி யோசிக்கலானான். சற்று நேரம் யோசித்த பின்னும் ஒரு முடிவுக்கும் வர முடியாமால், ஹனுமான் முதலான வானரர்களை அழைத்து விசாரித்தான். இதோ இந்த நான்கு ராக்ஷஸர்களுடன் வருபவன், கையில் ஆயுதங்களோடு வருகிறானே, நம்மைக் கொல்லத்தான் வருகிறானோ என்றான். சுக்ரீவனின் பேச்சைக் கேட்டு மற்ற வானரங்கள் தற்காப்புக்காக, சால மரங்களையும், பெரிய கற்களையும் எடுத்து வைத்துக் கொண்டு தயாராக நின்றனர். ராஜன், சீக்கிரம் உத்தரவு கொடுங்கள். இந்த துராத்மாவை வதம் செய்து விடுகிறோம் என்றனர். அல்ப தேஜஸ் உடைய இந்த ராக்ஷஸர்களை சீக்கிரமே பூமியில் விழச் செய்கிறோம் என்று ஆர்பரித்தன. தங்களுக்குள் இவர்கள் ஏதோ பேசிக் கொள்வதைப் பார்த்த விபீஷணன், சமுத்திர கரை வந்தும், வட திசையில் ஆகாயத்திலேயே நின்றான். நிறைந்த அறிவுடையவனான விபீஷணன் பெரிய குரலில், சுக்ரீவனையும் மற்ற வானரர்களையும் பார்த்து ராவணன் என்ற ராக்ஷஸ ராஜா, தவறு செய்து கொண்டிருக்கிறான். அவன் ராக்ஷஸேஸ்வரன். எனக்கு மூத்த சகோதரன். அவனுக்கு இளைய சகோதரன், நான் விபீஷணன் என்று பெயர் பெற்றவன். இந்த ராவணன் தான் ஜனஸ்தானத்திலிருந்து சீதையை அபகரித்துக் கொண்டு வந்தவன். தடுத்த ஜடாயுவையும் வதம் செய்து விட்டவன். சீதை, ராக்ஷஸ ஸ்த்ரீகள் நாலாபுறமும் சூழ, தன் வசத்தில் சுதந்திரமாக இருக்க முடியாதபடி, பலத்த காவலுடன், நன்றாக ரக்ஷிக்கப் பட்டு வருகிறாள். நான் அவன் செயலின் விபரீதத்தை, அதன் காரண காரியங்களோடு பலவிதமாக புத்தி சொல்லி பார்த்தேன். நல்லபடியாக, சீதையை ராகவனிடம் கொடுத்து விடு என்று யாசித்தேன். திரும்பத் திரும்ப நான் சொல்லியும், ராவணன் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. மரணத் தறுவாயில் உள்ளவனுக்கு, விதியும் விபரீதமாக இருந்தால், மருந்து வேண்டியிருப்பதில்லை, அது போல ராவணனுக்கு என் வேண்டுகோள் ஏற்கவில்லை. அந்த நான், ராவணனால் கடுமையாக ஏசப் பட்டு, தாஸன் போல அவமதிக்கப் பட்டேன். இப்பொழுது என் புத்திரர்களையும், மனைவி மக்களையும் விட்டு ராமனை சரணடைகிறேன். சர்வலோக சரண்யனான ராமனிடம் சீக்கிரம் சொல்லுங்கள். தயவு செய்து விபீஷணனான நான் சரணம் வேண்டி வந்து நிற்பதைச் சொல்லுங்கள். அதிக அனுபவம் இல்லாத சுக்ரீவன் இதைக்கேட்டு, லக்ஷ்மணனுக்கு முன்னால் பரபரப்புடன் ராமனிடம் சென்று இந்த செய்தியைச் சொன்னான். ராவணனுடைய இளைய சகோதரனாம், விபீஷணன் என்ற பெயருடையவன், நான்கு ராக்ஷஸர்களுடன் வந்து நிற்கிறான். உங்களிடம் சரணடைய வந்திருப்பதாக தெரிவிக்கச் சொல்கிறான். பரந்தபனே, மந்த்ராலோசனையிலும், வ்யூஹம் அமைத்து சேனையை வடிவமைப்பதிலும், நயத்திலும், ஒற்றர்களைக் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ, அதையும் தீர்மானித்துக் கொண்டு ஆணையிடுங்கள். உங்கள் நலம், நம் வானரங்களின் க்ஷேமம், எதிரிகளின் எண்ணம், இவைகளை ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். இந்த ராக்ஷஸர்கள் விரும்பிய வண்ணம் உருவத்தை மாற்றிக் கொள்ள வல்லவர்கள், மாயாவிகள் என்பது தெரியும்., கண்ணுக்குத் தெரியாமல் நின்றும் சண்டை போடுவார்கள். நல்ல சூரர்கள். போரின் நெளிவு சுளிவுகளை அறிந்தவர்கள். அதனால் வெளிப்பார்வைக்குத் தெரிவதை வைத்து இவர்களை ஒரு போதும் நம்பக் கூடாது. ராக்ஷஸேந்திரனுடைய ஒற்றனாகக் கூட இருக்கலாம். இளைய சகோதரன் என்கிறான். உள்ளே நுழைந்து, நமது நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, பின் அடித்தாலும் அடிக்கலாம். தன் மித்திரர்கள் கூட்டம், மூல பலம், சேவகம் செய்யும் ஊழியர்கள் பலம் இவற்றை ஏற்றுக் கொள்ளலாம். சத்ரு சகாயத்தை நம்பக் கூடாது. பிறப்பினால் இவன் ராக்ஷஸன். உடன் பிறந்தவன், அனுசரித்து மித்ரனாக இருந்தவன். எதிரி பக்ஷத்திலிருந்து வந்து நிற்கிறான். இவனை எப்படி நம்பலாம்.? ராவணன் தான் ரகசியமாக அனுப்பி வைத்திருக்கிறான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவனை உடனே தண்டிப்பது தான் சிறந்த வழி என்று எனக்குத் தோன்றுகிறது. பொறுமையின் பூஷணமாக நிற்பவனே இந்த ராக்ஷஸன் ஏதோ கெட்ட எண்ணத்தோடு தான் வந்திருக்கிறான். நம்பி இடம் கொடுத்தால், நம்மையே அழித்து விடுவான், ஜாக்கிரதை. சந்தேகத்துக்கு இடம் கொடாமல் எதிரியின் ஒற்றன், சாமர்த்யமாக உள் விஷயங்களைத் தெரிந்து கொண்டு, சமயம் வாய்த்த பொழுது ஆந்தை, காக்கை கூட்டத்தை அழிப்பது போல அழித்து விடுவான். இவனை வதம் செய்வோம். உடன் வந்துள்ள மந்திரிகளையும் சேர்த்து கடுமையாகத் தண்டிப்போம். கொடியவனான ராவணனின் சகோதரன் இவன் என்று இவ்வாறு ராமனைப் பார்த்து படபடப்புடன் தன் எண்ணத்தை வெளியிட்டு விட்டு, சுக்ரீவன் மௌனமாக நின்றான். சேனைத் தலைவன் சுக்ரீவன். அவன் எண்ணம் தெரிந்து விட்டது. ராமர் ஹனுமான் முதலானோர் பக்கம் திரும்பினார். வானர ராஜன், ராவணனின் இளைய சகோதரன் பற்றி தன் எண்ணத்தை சொல்லி விட்டார். நீங்களும் கேட்டீர்கள். அவர் மனதில் தோன்றியதை விவரமாகச் சொல்லக் கேட்டீர்கள். நெருக்கடி வரும் பொழுது என்ன தான் ஆற்றல் நிரம்பியவன் ஆனாலும், நண்பர்களையும் கலந்தாலோசிப்பது அவசியம். உங்கள் மனதில் உள்ளதைச் சொல்லுங்கள் என்று ராமன் கேட்கவும், மற்ற வானர வீரர்களும் மரியாதையுடன் தங்கள் எண்ணத்தைச் சொன்னார்கள்.
ராகவா, மூன்று உலகிலும், தங்கள் அறியாதது ஒன்றும் இல்லை. நட்பின் இலக்கணமாக திகழும் தாங்கள் எங்களுக்கும் மதிப்பு கொடுத்து விசாரிக்கிறீர்கள். தாங்கள் தான் சத்ய விரதன். தார்மிகன், த்ருடமான விக்ரமம் உடையவன், சூரன், ஆராய்ந்து செயல் படுபவன். நல்ல நினவாற்றலும், கட்டுப்பாடும் உடையவன். நண்பர்களிடம் கூட சமமான அந்தஸ்து கொடுத்து அவர்கள் எண்ணத்தை தெரிந்து கொள்ள விழைகிறீர்கள் என்றான் சுக்ரீவன். உன் மந்திரிகள், ஒவ்வொருவராக தங்கள் எண்ணத்தைச் சொல்லட்டும். தாங்கள் நினைப்பதை, சரியான காரணங்களுடன், செய்ய வேண்டியது என்ன என்பதையும் சொல்லட்டும். அனைவருமே புத்திசாலிகள், ஆற்றல் மிகுந்தவர்கள், என்பது தெரிந்ததே என்றான், ராகவன். முதலில் அங்கதன் எழுந்தான். விபீஷணனை பரீக்ஷை செய்து பார்ப்போம். சத்ரு சைன்யத்திலிருந்து வந்தவனை எப்பொழுதும் சந்தேகத்தோடு தான் கண் காணிக்க வேண்டும். திடுமென வந்த உடனேயே விபீஷணனை நம்பத் தகுந்தவனாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. உள் மனத்தின் எண்ணங்களை மறைத்துக் கொண்டு நல்லவர்கள் போல நடிப்பார்கள். சமயம் வாய்த்த பொழுது இடைவெளி கிடைத்ததை பயன் படுத்திக் கொண்டு பிளவை ஏற்படுத்துவார்கள். அதனால் மிகப் பெரிய அனர்த்தம் விளையும். எந்த ஒரு செயலையும், செய்யும் முன் அதனால் தோன்றக் கூடிய நன்மை, தீமைகளை கணித்துக் கொண்டு செய்யத் துணிய வேண்டும். குணம் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். தோஷம் அதிகமானால், விட்டு விடுவோம். இவனிடத்தில் நமக்கு குறைகளே அதிகம் தெரியுமானால், மறு யோசனையின்றி இவனைத் தியாகம் செய்து விடுவோம். அப்படியின்றி குணங்களே அதிகம் இருந்தால், சந்தோஷமாக ஏற்றுக் கொள்வோம் என்றான். சரபன் எழுந்தான். நடக்கக் கூடிய விஷயமாக தன் எண்ணத்தைச் சொன்னான். அரசனே, ஒற்றர்களை அனுப்பி இவனை கண் காணிக்கலாம். சூக்ஷ்ம புத்தியுள்ள ஒற்றர்கள் இவனைச் சுற்றி நடப்பதை தெரிந்து கொண்டு வந்த பின் நாம் யோசித்து மேற் கொண்டு செய்ய வேண்டியதை யோசிப்போம்ஏ என்றான். ஜாம்பவான் எழுந்தான். சாஸ்திரங்களை அறிந்தவர் ஆனதால், அதில் நிறைய அனுபவம் உடையவர். ஆதலால் தன் எண்ணத்தைச் சொன்னார். ராக்ஷஸேந்திரனும், விபீஷணனும் ஒருவருக்கொருவர் கருத்து வேறு பாடு உடையவர்களே. காலம் தவறி வந்து நிற்கிறான். அது தான் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. யோசித்து செய்யலாம். இதன் பின் மைந்தன் எழுந்தான். நியாய, அநியாயங்களை அறிந்தவன், கருத்தாழம் மிக்க செய்தியைச் சொன்னான். இந்த விபீஷணன் ராவணனின் தம்பி. இவனை மதுரமாக விசாரிக்கலாம். மெதுவாக பேச்சு கொடுத்து இவனுடைய உள்ளெண்ணத்தை புரிந்து கொள்வோம். அதன் பின் தீர்மானிப்போம். துஷ்டனா, துஷ்டன் இல்லையா என்பது சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தால் தெரிந்து விடும் என்றான். இதன் பின் அனுபவம் மிக்க ஹனுமான் எழுந்தான். ராகவா தாங்கள் அறியாதது எதுவும் இல்லை. தங்கள் புத்தி கூர்மைக்கு முன் ப்ருஹஸ்பதியும் வாயடைத்து நிற்க வேண்டியதே. எங்களுக்கு ஒரு மதிப்பு கொடுத்து விசாரிக்கிறாய் என்பதால் சொல்கிறோம். மற்ற மந்திரிகள் சொன்ன விஷயங்களும், இப்பொழுது நடந்துள்ள செயலும் ஒத்து போகவில்லை. ஒரு வேலையில் ஈடுபாட்டுடன் செய்து காட்டாத வரை ஒருவனுடைய சாமர்த்யத்தை நாம் எடை போடக் கூடாது. கண்டவுடன் ஒருவரைப் பற்றி அபிப்பிராயம் நாமே எற்படுத்திக் கொள்வது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. ஒற்றர்களை அனுப்புவோம் என்று ஒருவர் சொன்னார். இதில் பலன் எதுவுமில்லை என்பதால் ஏற்கத் தக்கதாக இல்லை. இதில் எந்தவிதமான பொருளோ, செல்வமோ சம்பந்தப் பட வில்லை. காலம் கடந்து இந்த விபீஷணன் வந்திருக்கிறான் என்று ஒரு வாதம். இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில், இந்த தேச காலமும், அவ்வப்போழுது மாறும். மனிதனுக்கு மனிதன் குண தோஷங்கள் மாறுவது போல மாறிக் கொண்டே இருக்கும். ராவணனிடத்தில் துஷ்டத்தனத்தைக் கண்டு, தங்கள் சக்தியையும் அறிந்து கொண்டு, இப்பொழுது வந்திருப்பது அவன் புத்திசாலித் தனத்தை தான் காட்டுகிறது. யாரும் அறியாமல் ரகஸியமாக அவனை கண் காணிக்கலாம் என்றும் சொல்லப் பட்டது. வந்தவன் நேர்மையாக இருந்தால், கேள்விக் கேட்கப் படுவதைப் பார்த்து சந்தேகம் வரலாம். இதனால் நல்ல நண்பனாக வர இருந்த ஒருவனை நாம் இழந்தவர்களாக ஆவோம். நல்ல எண்ணத்தோடு, நம்பிக்கையோடு வருபவனை அனாவசியமாக சந்தேகக் கண் கொண்டு பார்த்து நாமே நஷ்டமடைவோம். மற்றவர்களுடைய மனோ பாவத்தை சட்டென்று நாம் தெரிந்து கொள்வது அவ்வளவு சுலபமான செயலும் அல்ல. ஸ்வபாவமாக நிபுணனாக இருப்பவன் தன் மனோ பாவத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கவும் அறிந்திருப்பான். இவன் சொல்வதைக் கேட்டால், கெட்ட எண்ணத்தோடு வருவதாகத் தெரியவில்லை. இவன் முகமும் ப்ரஸன்னமாக இருக்கிறது. கபடு உடையவனாகத் தெரியவில்லை. சந்தேகம் இல்லாத தீர்மானமாக புத்தியுடன், ஸ்வஸ்தமாக இருக்கிறான். கெட்டவனாக இருந்தால், நேருக்கு நேர் நிற்க மாட்டான். இவன் சொல்லும் தீயதாகத் தெரியவில்லை. அதனால் எனக்கு இவனுடைய நல்லெண்ணத்தில் சந்தேகம் இல்லை. மறைத்து வைத்துக் கொண்டாலும் ஒருவனது உடல் வாகும், முழுவதும் மறைந்து விடாது. உள் மனதின் பாவனைகளை அரசர்களின் நடையுடை பாவனைகள் கண்டிப்பாக காட்டிக் கொடுத்து விடும். சரியான தேச, காலம் அறிந்து தான் வந்திருக்கிறான். தாங்கள் செயல் வீரன், வேகமாக பலன் தரும் விதமாக தங்கள் பிரயோகங்களைக் கண்டிருப்பான். தங்கள் செய்கைகளையும், அதன் பலன்களையும், ராவணனின் பொய்யான பகட்டு வார்த்தைகளையும் கேட்டு உங்கள் பக்கம் அதிக நன்மை கிடக்கலாம் என்று நம்பி வந்திருக்கலாம். வாலி வதமும், சுக்ரீவனின் ராஜ்ய பட்டாபிஷேகமும் அவன் காதுகளுக்கும் எட்டியிருக்கும். தனக்கும் ராஜ்யம் கிடைக்கக் கூடும் என்ற அபிலாஷையுடன், புத்திசாலித்தனமாக இங்கு வந்திருக்கலாம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது இவனை நம் பக்கம் எற்றுக் கொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். இது என் எண்ணம். இந்த ராக்ஷஸனின் நேர்மை பற்றி நான் சொன்னதை ஏற்றுக் கொள்வதோ, தள்ளுவதோ, தங்கள் இஷ்டம். புத்திசாலிகளின் சிறந்தவனே, உங்கள் சொல் தான் பிரமாணம் என்று முடித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீ4ஷண சரணாகதி நிவேத3னம் என்ற பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 18 (425) விபீஷண ஸங்க்ரஹ நிர்ணய: (விபீஷணனை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தல்)
வாயு குமாரன் சொன்னதைக் கேட்டு ப்ரஸன்னமாக ஆன ராமர், தன் மனதில் ஏற்கனவே தீர்மானித்துக் கொண்டு விட்டாலும், மற்றவர்கள் அபிப்பிராயத்தையும் தெரிந்து கொள்ளும் பொருட்டு கேட்டுத் தெரிந்து கொண்ட பின், தன் எண்ணத்தைச் சொன்னார். நீங்கள் என் நலனை விரும்பும் நண்பர்கள். அதனால் விபீஷணனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளவே விரும்பினேன். எனக்கும் ஒரு எண்ணம் விபீஷணனிடத்தில் இருக்கிறது. சொல்கிறேன். கேளுங்கள். என் கொள்கை, யாராயினும், நண்பன் என்று சொல்லிக் கொண்டு வந்தால் எப்பொழுதும் கை விட மாட்டேன். அவனிடம் குறை இருந்தால் கூட பொருட்படுத்த மாட்டேன். நல்ல ஜனங்களுடைய குணமே அது தான். இதைக் கேட்டு சுக்ரீவன் குறுக்கிட்டு ஒரு விஷயம் சொன்னான். மற்றொரு வானரமும் விவரமாக இதையே சொன்னார். துஷ்டனோ, இல்லையோ, இந்த ராக்ஷஸன், இப்படிபட்ட ஒரு கஷ்டமான நிலையில் இருக்கும் சகோதரனை விட்டு வருகிறானே, மற்ற யாரைத் தான் சரியான சமயத்தில் கை விட்டு விலக மாட்டான்? இவனை எப்படி நம்ப முடியும்? சுக்ரீவன் சொன்னதைக் கேட்டு, மற்றவர்களையும் பார்த்த ராமர், சற்று சிரித்தபடி, லக்ஷ்மணன் பக்கம் திரும்பினார். லக்ஷ்மணனை விசாரித்தார். சாஸ்திரங்களை கற்று அறியாமலோ, பெரியவர்களை அண்டி சேவை செய்யாமலோ, சுக்ரீவன் இப்பொழுது பேசியது போல பேச முடியாது. சரியே. ஆனாலும் இதில் இன்னமும் சூக்ஷ்மமாக எனக்கு ஒரு விஷயம் தெரிகிறது. எல்லா அரசர்களிடமும், ப்ரத்யக்ஷமாகத் தெரிவது ஒன்று, லௌகீகமாக மற்றொன்று, என்று இரண்டுமே இருக்கும். நண்பரல்லாதவர், அந்த குலத்தில் உதித்தவர், மற்றொரு சூழ் நிலையில் வேறு ஒரு தர்மத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயமாக உத்தரவிடப் பட்டவர், கஷ்டகாலங்களில் எதிர்த்து நிற்பவர் என்று பல வகைப் படுவர். அதனால் தான் இவன் இங்கு வந்திருக்கிறான். தன்னைச் சார்ந்தவர்கள் சுற்றத்தார், உறவினர் இவர்களை பாபமில்லாதவர்கள், தன் குலத்தினர், நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று கொள்வது இயற்கை. அதனால் அரசர்களுக்கு இந்த சமயத்தில் இது போல வருபவனை சந்தேகிப்பது அவசியமே. மற்றொரு தோஷம் சொல்லப் பட்டது. இவன் உள்ளே வந்து எதிரி பலத்தை தெரிந்து கொண்டு போகத் தான் வந்திருக்கிறான் என்பதாக. இதற்கும் சாஸ்திர சம்மதமாக பதில் சொல்கிறேன். கேளுங்கள். நாம் அவன் குலத்தை சேர்ந்தவர்கள் அல்ல. நமது நடவடிக்கைகளைக் கொண்டு அவன் என்ன புரிந்து கொள்வான். மற்றொரு காரணம் யாரோ சொன்னார்கள். ராக்ஷஸனான விபீஷணன் ராஜ்யத்தை அடையும் ஆசை உடையவனாக இருக்கலாம். நம்மைக் கொண்டு அவன் ஆசை நிறைவேறும் என்று நினைத்து வந்திருக்கலாம். அதனால் விபீஷணனை ஏற்றுக் கொள்வோம், என்பதாக. எல்லா சகோதரர்களும் பரதனுக்கு இணையாக மாட்டார்கள். தந்தைக்கு மகன் என் போலவோ, நண்பர்கள் உன்னைப் போலவோ கிடைப்பது அரிது இவ்வாறு ராமர் சொல்லி நிறுத்தவும், லக்ஷ்மணனும் சுக்ரீவனுமாக எழுந்திருந்து பணிவாக சொன்னார்கள். இந்த விபீஷணன் ராவணன் அனுப்பித்தான் வந்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம், அப்படி இருந்தால் அவனை வதம் செய்வது தான் சரி என்று எனக்குத் தோன்றுகிறது. ராக்ஷஸன் வஞ்சக புத்தியுடன் இவனை இங்கு அனுப்பி, நம் நம்பிக்கைக்கு பாத்திரமாகும் படி நடந்து கொண்டு, ரகஸியமாக, நம்மிருவரில் ஒருவரையோ, இருவரையுமோ தீர்த்துக் கட்டும்படி சொல்லி உத்தரவிட்டு அனுப்பியிருக்கலாம். அல்லது லக்ஷ்மணனை கொல்லச் சொல்லி, உத்தரவிட்டு இருக்கலாம். அதனால் உடன் வந்துள்ள மந்திரிகளோடு வதம் செய்வது தான் சரி. கொடுமையான ராவணனின் உடன் பிறந்தவன், இவன். இவனை எப்படி நம்பலாம். என்று கேட்டு விட்டு சுக்ரீவன் மௌனமானான். ராமர் பதில் சொன்னார். துஷ்டனோ, துஷ்டன் இல்லையோ, யாராக இருந்தால் என்ன? இவன் இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸன் தான். ஆனாலும் என்ன? மிக சூக்ஷ்மமாகக் கூட எனக்கு துன்பம் விளைவிக்க யாராலும் முடியாது. பிசாசங்களோ, தானவர்களோ, யக்ஷர்களோ, பூமியில் உள்ள ராக்ஷஸர்களோ, என் விரல் நுனியால் நான் ஒருவனே வதம் செய்ய சக்தியுடையவனே. என் மனதில் வதம் செய்ய நினைத்து விட்டால், ஹரிகணேஸ்வரா, யாராலும் தடுக்க முடியாது. ஒரு க3தை4 கேள். ஒரு புறாவின் மனைவியை ஒருவன் வேட்டையாடி கொன்று விட்டான். பின்னால் ஒரு சந்தர்ப்பத்தில் அவன், அந்த புறாவிடமே சரணமடைந்தான். அந்த புறா, அவனையும் உபசரித்து தன் மாமிசத்தையே உணவாக ஏற்றுக் கொள்ள வேண்டியது. அந்த சத்ரு தான் தன் மனைவியைக் கொன்றவன் என்றும் அந்த புறா அறிந்திருந்தும். இப்படி ஒரு பக்ஷியே சரணன் என்று வந்தவனை ரக்ஷிக்குமானால், என் போன்ற ஜனங்கள் ஏன் மறுக்க வேண்டும்? கண்வ ரிஷியின் மகன் கண்டு (ஒருவர் பெயர்) பாடிய பாட்டைக் கேட்டிருப்பீர்கள். தீனமாக, கை கூப்பியபடி வந்து நின்று நீ தான் கதி என்று சரணம் யாசிப்பவனை, சத்ருவே ஆனாலும், கருணையுடன் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும், கொல்லக் கூடாது. கஷ்டத்தில் இருப்பவனோ, அல்லது கர்வத்துடன் செல்வாக்குடம் இருப்பவனோ, மற்றவனை சரணம் என்று அடைந்தால், தன் உயிரைக் கொடுத்தாவது அவனைக் காப்பாற்ற வேண்டும். பயத்தினாலோ, மோகத்தாலோ, காமத்தினாலோ, ரக்ஷிக்காமல் விட்டு விட்டால், தன் சக்திக்கேற்ப நியாயமான முறையில் இந்த கடமையை செய்யத் தவறினால், உலகில் நிந்திக்கப்படும் பாபியாக ஆவான். சரணம் அடைந்தவனை ரக்ஷிக்காதவன், நம் கண் முன்னாலேயே நாசம் அடைவான். அவனுடைய சுக்ருதம், செய்த புண்யம் அவ்வளவும் வீணே. காப்பாற்று என்று வந்தவனை கை விட்டால், அதில் வரும் தோஷம் மிகப் பெரியது. இது ஸ்வர்கத்தைத் தராது. கீர்த்தியை நாசமாக்கும். பலமோ, வீர்யமோ எதுவுமே இந்த செயலில் கிடையாதுஎ இவ்வாறு கண்டு முனிவர் சொன்னதைத் தான் நான் பின் பற்றப் போகிறேன். சரணம் என்று வந்தவனை காப்பாற்றுவது தான் தர்மம். புகழும் (ஸ்வர்கம்) நல்ல கதியும் தரக் கூடியது. இதனால் நம் நிலை மேன்மை பெறுமேயன்றி குறையாது. ஒரு முறை வந்து வணங்கி என்னைப் பார்த்து நீ தான் கதி என்று வந்தவனை ஒரு போதும் கை விட மாட்டேன். உலகில் எந்த ஜீவனாக இருந்தாலும் சரி, இது என் விரதம். ஹரி ஸ்ரேஷ்டா அவனை அழைத்து வா. நான் அவனுக்கு அபயம் அளித்தாகி விட்டது. சுக்ரீவாஸ்ரீ வந்திருப்பது, விபீஷணன் தானா அல்லது ராவணனாகவே இருந்தாலும் அழைத்து வாஏ என்றார்.
ராமரின் இந்த பேச்சைக் கேட்டு, வானர வீரனான சுக்ரீவன், குரல் தழ தழக்க, அன்புடன் பதில் சொன்னான். இதில் ஆச்சர்யப் பட என்ன இருக்கிறது. நீ தர்மம் அறிந்தவன். லோக நாதன். எல்லோருக்கும் சுகத்தையே தருபவன். பெருந்தன்மையோடு நல்ல வழியில் நினைப்பவன். நீ சொன்னதைக் கேட்டு என் மனமும் மாறி விட்டது. என்னுடைய அந்தராத்மாவும், இந்த விபீஷணன் மாசற்றவன் என்றே நினக்கிறது. அனுமானம், பா4வம் இவற்றாலும், நன்றாக பரீக்ஷை செய்தும் இவனை ஏற்றுக் கொள்வது தான் சரி என்று நம்புகிறேன். சீக்கிரமே, அவனும் எங்களுக்கு சமமாக இங்கே இருக்கட்டும். ராகவா விபீஷணனும் நல்ல அறிவாளி. நம்முடன் நட்பு கொண்டு நண்பனாக இங்கு இருக்கட்டும். இவ்வாறு சொல்லி, சுக்ரீவன் சீக்கிரமாக விபீஷணனை காணச் சென்றான். இந்திரன், வைனதேயனான பக்ஷிராஜனைக் காணச் சென்றது போல இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீ4ஷண சங்க்3ரஹ நிர்ணயோ என்ற பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 19 (426) ஸர தல்ப சம்வேச: (தர்ப்பை ஆசனத்தில் அமருதல்)
ராமர் அபயம் கொடுத்து ஏற்றுக் கொண்ட பின், ராவணன் சகோதரனான விபீஷணன், பூமியை நோக்கி ஆகாயத்திலிருந்து மிக்க மகிழ்ச்சியுடன் இறங்கினான். அவனிடம் நேசம் கொண்டு உடன் வந்த மந்திரிகளும் அதே போல இறங்கி அருகில் வந்து நின்றனர். ராமரை நெருங்கி அவர் காலில் விழுந்து வணங்கினான். நான்கு ராக்ஷஸர்களுடன் சரணம் வேண்டி, தானும் தன் மந்திரிகளுமாக ராமர் பாதங்களில் விழுந்து எழுந்தவன், ராமரிடம் தன் நிலையை விவரித்தான். ராகவா, நான் ராவணனின் இளைய சகோதரன். அவனால் மிகவும் அவமதிக்கப் பட்டேன். தர்மமோ, நியாயமோ, மனதை சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கச் செய்ய வேண்டும். தாங்கள், உலகில் எல்லா ஜீவன்களுக்கும் அபயம் அளிப்பவர் என்பதால் உங்களை சரணமடைந்தேன். லங்கையை, என் சுற்றார், உற்றார், உறவினர்கள், செல்வங்கள் எல்லாவற்றையும் துறந்து வந்து விட்டேன். இனி என் சுகமோ, வாழ்க்கையோ, ராஜ்யமோ, உங்கள் கையில் தான் இருக்கிறது. இவ்வாறு விபீஷணன் சொன்னதைக் கேட்டு ராமர், அவனை சமாதானப் படுத்தும் விதமாக கண்களால் அன்பு ததும்பப் பார்த்து, சொல். ராக்ஷஸர்களின் பலம் என்ன? குறை என்ன? என்று கேட்டார். ராமர் கேட்டபடி, விபீஷணன் ராவணனுடைய பலத்தைப் பற்றி விவரமாக சொல்லலானான். ராவணனை உலகில் யாராலும் வதம் செய்ய முடியாது. தேவர்களோ, தானவர்களோ, ராக்ஷஸர்களோ அவனை நெருங்கக் கூட முடியாது. பத்து தலைகள், ப்ரும்மாவின் வர தானத்தால் பெற்றவன். ராவணனுக்கு அடுத்தவன், எனக்கு மூத்த சகோதரன், கும்பகர்ணன். நல்ல வீர்யமுடையவன். இந்திரனுக்கு சமமாக யுத்தம் செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவன். ராமா, அவனுடைய சேனாபதி, ப்ரஹஸ்தன் என்று கேள்வி பாட்டிருக்கலாம். கைலாஸத்தில் இவன் மணிபத்ரனை வென்றான். கோ3தா3ங்குலித்ராணம் என்பதையும், பிளக்க முடியாத கவசத்தையும் அணிந்தவர். போரில் வில்லேந்தி, கண்ணுக்கு புலப்படாமல் நின்று யுத்தம் செய்பவன், இந்திரஜித். அணி வகுத்து சேனையை நிறுத்தி வைத்து, பெரும் போரில், அக்னியை வணங்கி, மறைந்து நின்று இந்த இந்திரஜித் யுத்தம் செய்து எதிரிகளை வதைப்பான். இவனுடைய போர் முறைகளே புதுமையானவை. ஊகிக்க முடியாதவை. மகோதர, மகாபார்ஸ்வ என்ற ராக்ஷஸர்கள், அகம்பனன் இவர்கள் அவனுடைய சேனைத் தலைவர்கள். லோக பாலர்களுக்கு சமமாக யுத்தத்தில் வீரத்தைக் காட்டுவார்கள். பத்து கோடி, ஆயிரம் கோடி ராக்ஷஸர்கள் அதாவது பத்தாயிரம் கோடி ராக்ஷஸர்கள் விரும்பியபடி உருவத்தை மாற்றிக் கொண்டு ராவணனுடன் இருந்தனர். லங்கா வாசிகளான இந்த ராக்ஷஸர்களை, நிணமும் மாமிசமுமாக புசிக்கக் கூடியவர்களை வெற்றிகரமாக நடத்திச் சென்று, லோக பாலர்களை வெற்றி கொண்டான். தடுத்த தேவர்களையும் ராவணன் போரில் முறியடித்தான். விபீஷணன் சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டு, யோசித்தபடி த்ருட பராக்ரமனான ராமன், பதில் சொன்னார். விபீஷணா, ராவணனின் படைத் தலைவர்களையும் அவர்கள் பராக்ரமத்தையும் பற்றிச் சொன்னாய். தெரிந்து கொண்டேன். இந்த ப்ரஹஸ்தன், சகோதரர்களுடன் சேர்த்து ராவணனை வதம் செய்யப் போகிறேன். தசானனனுக்குப் பின் உன்னை அரசனாக ஆக்குவேன். இது சத்யம். ரஸாதலம் சென்றாலும், பாதாளத்தில் பதுங்கினாலும், ராவணனைக் கண்டு பிடித்து, அவன் ப்ரும்மாவிடமே அடைக்கலம் புகுந்திருந்தாலும் விட மாட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை அவனை தப்ப விட மாட்டேன். புத்திரர்கள், படை பலம், பந்துக்கள், உற்றார்கள், எல்லோருமாக சேர்த்து ராவணனைக் கொல்லாமல் அயோத்தியில் நுழைய மாட்டேன். என் மூன்று சகோதரர்களின் பேரில் ஆணை. ராமர் இவ்வாறு ஆவேசமாகச் சொன்னதைக் கேட்டு தலை வணங்கி தர்மாத்மாவான விபீஷணன் சொன்னான். ராக்ஷஸர்களை வதம் செய்ய உதவி செய்வேன். உயிர் உள்ளவரை உங்கள் படையில் இருந்து போராடுவேன் என்று சத்யம் செய்தான். இவ்வாறு சொன்ன விபீஷணனை அணைத்துக் கொண்ட ராமர், மகிழ்ச்சியுடன் லக்ஷ்மணனைப் பார்த்து லக்ஷ்மணா, சமுத்திர ஜலத்தைக் கொண்டு வா. அதைக் கொண்டு இந்த ஞானியான விபீஷணனை முழுக்காட்டு. நான் ப்ரஸன்னமாக சாட்சியாக நிற்க, இவனை ராக்ஷஸ ராஜாவாக அபிஷேகம் செய் என்றார். இவ்வாறு உத்தரவு இட்டதும், லக்ஷ்மணனும் அவ்வாறே விபீஷணனை ஜலத்தால் முழுக்காட்டி, வானர வீரர்களின் மத்தியில், ராமரின் கட்டளைப் படி அரசனாக அபிஷேகம் செய்து வைத்தான். ராமருடைய கருணையை, (அபயம் என்று விபிஷணனை உடனே ஏற்றுக் கொண்டு அருளியதை) கண்டு ராமரை புகழ்ந்து, சாது, சாது நன்று, நன்று என்று பலமாக கோஷம் இட்டு ஆரவாரத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. ஹனுமானும் சுக்ரீவனும் விபீஷணனைப் பார்த்து இந்த எல்லையற்ற சமுத்திரத்தை எப்படிக் கடப்போம் என்று வினவினார்கள். சேனைகளுடன், எல்லா வானர வீரர்களும் கூட்டமாக தாண்டியாக வேண்டும். இந்த நத நதீபதி எனப்படும் வருணாலயத்தை எப்படி கடப்போம். ஒரு உபாயமும் தோன்றவில்லை என்றனர். இதைக் கேட்டு விபீஷணன் பதில் சொன்னான். ராஜா ராகவன், இந்த சமுத்திரத்தை சரண் அடையட்டும். இந்த சாகரம் சகரன் என்ற அரசனால் தோண்டப் பட்டது. அளவில்லாத, ஒப்பிட முடியாத பெரும் கடல். இது ராமனுடைய முன்னோர்களின் வேலை என்று தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு விபீஷணன் விஷயம் அறிந்து சொல்லவும், சுக்ரீவன் ராமனும் லக்ஷ்மணனும் இருந்த இடம் வந்து சேர்ந்தான். மெதுவாக, விபீஷணன் சொன்னதை அவர்களிடம் விண்ணப்பித்துக் கொண்டான். (விபுலக்ரீவன்), சுக்ரீவன் சொன்ன, சமுத்திரத்தை நோக்கி பிரார்த்தனை செய்வது ராமருக்கும் உவப்பாகவே இருந்தது. இயல்பாகவே தர்ம வழியில் செல்லும் ராமர், இந்த யோஜனையை உடனே ஏற்றுக் கொண்டார். லக்ஷ்மணனையும், பின் சுக்ரீவனையும் பார்த்து ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார். சிரித்துக் கொண்டே லக்ஷ்மணா, விபீஷணனின் ஆலோசனை எனக்கும் சரி என்றே தோன்றுகிறது. நீ சொல், சுக்ரீவா நீயும் சொல், உன்னுடைய அபிப்பிராயம் என்ன? என்று கேட்டார். சுக்ரீவா, மந்த்ராலோசனை செய்து பழக்கப் பட்டவன், இரண்டு விதமாகவும் யோசித்து முடிவாக இருவரும் சொல்லுங்கள் என்றார். ராமர் அவர்கள் அபிப்பிராயத்தை கேட்டதால் இருவரும் யோசித்து மரியாதையுடன் பதில் சொன்னார்கள். ராகவா, எங்களுக்கு இது எப்படி சம்மதம் இல்லாமல் இருக்கும்.? சுலபமாக நாம் செய்யக் கூடிய காரியம். இந்த சமுத்திரம், ஆழமாக, கடக்க அரிதாக இருப்பது தெரிந்ததே. இதன் மேல் சேது கட்டாமல் நாம் எப்படி அக்கரை போய் சேருவோம். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், அசுரர்கள் சேர்ந்து வந்தாலும், லங்கையை கைப்பற்ற முடியாது. சூரனான விபீஷணன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டு செய்வோம். நேரம் கடத்தாமல் உடனே செயல் படுவோம். இந்த சமுத்திரத்தையே வழி கேட்போம். எப்படி சைன்யத்தோடு நாம் இதைக் கடந்து ராவணன் பாலித்து வரும் லங்கையை போய் சேருவோம் என்று சொல்லி தர்ப்பாஸனங்களை தயாரித்து (தர்ப்பை என்ற புல்லால் ஆன ஆசனம்) சமுத்திரத்தின் கரையில் உபவாசம் இருக்க ஆரம்பித்த ராமர், வேதியின் உள்ளே நுழைந்த அக்னி போல பிரகாசமாக இருந்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஸர தல்ப சம்வேசோ என்ற பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 20 (427) சுக்3ரீவ பே4தனோபாய: (சுக்ரீவனை கலைக்க உபாயம் செய்தல்)
சேனைகள் வந்து இறங்கியிருப்பதைப் பார்த்து சுக்ரீவனின் வீரர்கள் என்றும் தெரிந்து கொண்ட, சார்தூலன் என்ற ராக்ஷஸன், ராக்ஷஸ ராஜாவின் ஒற்றன், சேனைகளின் கட்டுக் கோப்பான அணி வகுப்பைக் கண்டு அதிசயித்தான். சுக்ரீவனால் கவனமாக பாதுகாக்கப் பட்ட படை. மிகவும் ஒழுங்காக இருப்பதையும் ராவண ராஜாவிடம் தெரிவிக்க ஓடினான். லங்கையின் உள்ளே வேகமாக சென்று அரசனைக் கண்டான். வானரங்கள், கரடிகள் நிறைந்த ஒரு பெரும் படை லங்கையை முற்றுகையிட வந்திருக்கின்றன. ஆழமாக, ஒப்பில்லாத இந்த சாகரத்தின் கரையில் மற்றொரு சாகரமோ எனும் படி ஏராளமான வீரர்கள் வந்து இறங்கி இருக்கிறார்கள். இருவர், ராம, லக்ஷ்மணர் என்ற பெயருடையவர்கள், தசரத குமாரர்களாம், உத்தமமான ஆயுதங்களை கையிலேந்தி, சீதையைத் தேடி வந்திருக்கின்றனர். இந்த சமுத்திரக் கரையில் அமர்ந்திருக்கின்றனர். பத்து யோஜனை தூரம் இந்த சேனை வீரர்கள் நிற்கிறார்கள். ஆகாயத்தில் நின்று பார்த்து உண்மை நிலையை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தூதர்களையும் அனுப்பி நிலைமையை சீர் தூக்கி பார்த்து, நிறைய தானம் கொடுத்தோ, சமாதானமாக பேசியோ, அவர்களுக்குள் பிளவு ஏற்படுத்தியோ, உடனே செயல் படுங்கள். ராக்ஷஸேஸ்வரனான ராவணன், சார்தூலன் சொன்னதைக் கேட்டு பரபரப்பும், கவலையும் அடைந்தான். சுகன் என்ற ராக்ஷஸனை அழைத்து சுக்ரீவனிடம் போய் நான் சொன்னதாகச் சொல். இந்த செய்தியை மிக ரகஸியமாக, ம்ருதுவான வார்த்தைகளால் அவனுக்கு மனதில் படும்படி சொல். நீயோ பெரிய ராஜ குலத்தில் பிறந்தவன். நல்ல பலசாலி. ருக்ஷ ரஜஸ் என்பவனின் மகன். எனக்கு சகோதரனுக்கு சமமானவன் நீ. ஹரீசா, நீ இப்பொழுது இறங்கியிருக்கும் செயலில், உனக்கு ஒருவித லாபமும் இல்லை. செய்யாமல் விட்டால் நஷ்டமும் இல்லை. நான் ராஜகுமாரனின் மனைவியை அபகரித்து வந்தால், அதில் உனக்கு என்ன? சுக்ரீவா, கிஷ்கிந்தைக்கு திரும்பி போ. உன் வானர கூட்டத்தால் இந்த லங்கையை ஒரு பொழுதும் ஜயிக்க முடியாது. தேவர்களும், கந்தர்வர்களும் கூட இதில் வெற்றி பெற முடியாது எனும் பொழுது மனிதர்களும், வானரங்களுமாக இந்த லங்கையை பிடிக்க முடியுமா? என்று இவ்வாறு ராக்ஷஸ ராஜன் சொன்ன செய்தியை எடுத்துக் கொண்டு, தூதுவனான சுகன், உடனே ஆகாய மார்கமாக, சாகரத்தின் மேலாக கடந்து சென்று வெகு தூரம் பயணம் செய்து ஆகாயத்தில் நின்றபடியே சுக்ரீவனை அழைத்து ராவணனின் செய்தியைச் சொன்னான். இதை சொல்லி முடிக்கும் முன் வானரங்கள் வேகமாக குதித்து எழுந்து சென்று, முஷ்டிகளால் அடித்தும், உதைத்தும், தாக்க ஆரம்பித்தன. ஏக காலத்தில், பல வானரங்கள் இடையில் அகப்பட்டுக் கொண்ட ராக்ஷஸன், தடாலென்று பூமியில் இறங்கி அடி தாங்காமல் அழுது அரற்றியபடி, காகுத்ஸா, காப்பாற்று. தூது வந்தவர்களை கொல்லுவதில்லை. இந்த வானர வீரர்களை தடுத்து நிறுத்து. இவர்கள் தன் எஜமானனின் கொள்கையை கை விட்டு தன் இஷ்டம் போல செய்கிறார்கள். தனக்கு கொடுக்கப் பட்ட செய்தியைச் சொல்லாத தூதனைத் தான் வதம் செய்ய வேண்டும். மிகவும் சங்கடத்துடன் சுகன் இவ்வாறு புலம்பியது ராமர் காதில் விழுந்தது. உடனே வந்து இவனை வதம் செய்து விடாதீர்கள் என்று தடுத்தபடியே வேகமாக வந்தார். வானர, கரடி கூட்டங்களிடமிருந்து சுகனை விலக்கினார். காய்ந்த சருகு போல ஆன சுகன், விடுபட்டதும், ஆகாயத்தில் நின்றபடி மேலும் சொல்ல ஆரம்பித்தான். ஏசுக்ரீவாஸ்ரீ சிறந்த பண்புடையவன் நீ. சக்தி வாய்ந்தவனேஸ்ரீ எங்கள் அரசனிடம் என்ன பதில் சொல்லட்டும்ஏ என்று கேட்டான். இவ்வாறு சுகன் சொன்னதைக் கேட்டு, வானரங்கள் மத்தியில் தன் பலம் தெரிய நின்று கொண்டு, தீனமாக கேட்ட சுகன் என்ற ராவணனின் ஒற்றனைப் பார்த்து சுக்ரீவன் பதில் சொன்னான். குரலிலேலே தன் வலிமையை காட்டும் விதமாக கர்ஜித்தான். நீ எனக்கு மித்ரனும் அல்ல. என்னிடம் அனுதாபம் கொண்டவனும் அல்ல. எனக்கு எப்பொழுதும், எந்த விதத்திலும் நீ உபகாரம் செய்யவும் இல்லை. எனக்கு பிரியமானவனும் இல்லை. வாலி, உன்னை வதம் செய்ய நினைத்தது போல் எனக்கு உன்னை வதம் செய்யும் எண்ணமும் இல்லை. நீ வதம் செய்யப் பட வேண்டியவன் தான் என்பது வேறு விஷயம். நானே உன்னைக் கொல்லுவேன். உன் புத்திரர்கள், தாயாதிக்கூட்டம், பந்துக்கள், எல்லாவற்றையும் சேர்த்து நானே நாசமாக்குவேன். லங்கையையும் என் பெரும் பலத்தால், சீக்கிரமே பஸ்மமாகப் போகச் செய்வேன். ராவணா, நீ தப்பிக்க முடியாது. உன்னை யார் ரக்ஷிப்பார்கள். தேவர்கள், இந்திரன், இவர்களில் யாரிடம் அடைக்கலம் புகுவாய்? சூரியனின் பாதையில் ஒளிந்து கொண்டாலும், உன்னை விட மாட்டேன். மலை குகைகளில் மறைந்து கொள்வாயோ, மகேஸ்வரனின் பாத கமலங்களில் சரணடைவாயோ, எப்படியானாலும், உன் உற்றார், சுற்றாருடன் அழிந்தாய். மூன்று உலகிலும் உன்னைக் காப்பாற்ற யாரும் முன் வர மாட்டார்கள். பிசாசங்களோ, ராக்ஷஸனோ, கந்தர்வனோ உன்னைப் போன்ற ராக்ஷஸனோ, யாரும் உனக்கு உதவி செய்ய தயாராக இல்லை என்பதை தெரிந்து கொள். வயது முதிர்ந்த ஜடாயு என்ற பக்ஷிராஜனை அடித்து விட்டு, நீ என்ன ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் எதிரில் நின்று போர் புரிந்து ஜயித்தா சீதையை அபகரித்தாய்? இன்னமும் உனக்கு புத்தி வரவில்லையே. இன்னமும் ராமன் யார் என்று தெரிந்து கொள்ளாமல் தடுமாறுகிறாயே. அவன் மகா பலசாலி, நல்ல அறிவாளி,, தேவர்கள் கூட எதிர்த்து நிற்க முடியாத போர் நுணுக்கம் அறிந்தவன். உன் உயிரை எடுக்கவே வந்தவன். இதன் பின் வாலி புத்திரனான அங்கதனும் பேசினான். மகாராஜா, இவன் தூதன் அல்ல, ஒற்றன் என்று எனக்குத் தோன்றுகிறது. இங்கு நின்று கொண்டு நம் படை பலத்தை எடை போடுகிறான். இவனை பிடித்து நிறுத்திக் கொள்வோம். லங்கை திரும்பிப் போக விட வேண்டாம் என்றான். அரசன் அனுமதியுடன், வானரங்கள் குதித்து எழுந்து சுகனை கட்டி பிடித்து ராமனிடம் அழைத்து வந்தனர். வழி முழுதும் சுகன் அனாதை போல புலம்பிக் கொண்டே வந்ததை யாரும் லட்சியமே செய்யவில்லை. சுகன் அலறினான். பலவந்தமாக என்னைக் கட்டி இழுத்து வந்திருக்கிறீர்கள், என் கண்களை குருடாக்குவீர்களோ, என்ன செய்தாலும், நான் பிறந்ததிலிருந்து மரணம் அடையும் வரை செய்த பாபங்கள் உங்களையே சேரும். என்னைக் கொன்றால், அல்லது நான் உயிரை இங்கு விட்டேனேயானால், அதன் பலனையும் அனுபவிப்பீர்கள் என்றான். அதற்குள் அங்கு வந்து விட்ட ராமர், வானரங்களை தடுத்து தூது வந்தவன் இவன், இவனை விட்டு விடுங்கள என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சுக்3ரீவ பே4தனோபாய: என்ற இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 21 (428) சமுத்ர ஸம்க்ஷோப: (சமுத்திரத்தை வற்றச் செய்தல்)
இதன் பின், கடற்கரையில் தர்ப்பை எனும் புல்லை பரப்பி, அதன் மேல் அமர்ந்து கிழக்கு நோக்கி சமுத்திரத்தை வணங்கி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். சமுத்திர ராஜனை, தன் கைகளை விரித்து வேண்டினார். சர்ப்பம் போல நீண்ட கைகள். எதிரிகளை அழிக்கும் வல்லமை பெற்ற ராமனின் புஜங்கள்- ஒருகாலத்தில் இவை பொன் ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. விலை மதிப்பில்லாத தங்க கேயூரம், முத்துக்களாலான ப்ரவரம் எனும் ஆபரணம் இவை இந்த புஜங்களில் இருந்ததால் பெருமை பெற்றன, சந்தனமும், அக3ருவும் (வாசனைப் பொருட்கள்) பூசப் பெற்றவை, நற்குடியிற் பிறந்த மாதர்களால், இளம் சூரியனின் வண்ணத்தில் பூசப்பட்ட சந்தன குழம்பு எப்பொழுதும் மணக்க, முன் சீதையுடன் கூடி இருக்கும் சமயங்களில் தனிச் சோபையுடன் விளங்கியவை, கங்கா ஜலத்தில் வசிக்கும் தக்ஷகன் போல நீண்டவை, யுத்தத்தில், எதிரிகளை வாட்டமுறச் செய்யும் வல்லமை பெற்றவை, காலனோ என்று எண்ணி நடுங்கச் செய்பவை, நண்பர்களுக்கு ஆனந்தம் தருபவை, இடது கரத்தில் வில்லின் தழும்பு ஏறியிருக்க, வலது கை (தக்ஷிண) தன் பெயருக்கு ஏற்ப தாக்ஷிண்யம் மிகுந்தது. மகா பரிகம் போல (குறுக்குக் கட்டை போல) திரண்டு இருந்தவை, ஆயிரக் கணக்கில் பசுக்களை தானம் செய்த கைகள், இன்று எனக்கு மரணம் அல்லது சாகரத்தை தரணம் (தாண்டுதல்) என்று நிச்சயம் செய்து கொண்டு, முனிவர்களைப் போல விரதங்களையும், நியமங்களையும் முறையாக அனுஷ்டித்து, தன் வேண்டுதலை ஆரம்பித்தார். இவ்வாறு ராமர், நியமத்தோடு புல் தரையில் அமர்ந்து சரணாகதியை ஆரம்பித்து மூன்று இரவுகள் முடிந்து விட்டன. மூன்றாவது இரவும் முடிந்து விடிந்தவுடன், த4ர்ம வத்ஸலன் என்றும் நீதிமான் என்றும் போற்றப் பட்ட ராமர், சாகரத்தைக் குறித்து பிரார்த்தனை செய்தும், நதிகளின் தலைவன், சாகரன், வரவில்லை. முறைப்படி ராமர் செய்த வேண்டுகோளை ஏற்று எதிரில் வரவில்லை. இதனால், இடது கோடியில் இயல்பாகவே சிவந்த கண்களையுடையவன், பெரும் கோபம் கொண்டான். அருகில் இருந்த லக்ஷ்மணனைப் பார்த்து இந்த சமுத்திரம் நம்மை அவமதிக்கிறது. இன்னமும் எதிரில் வந்து நிற்கவில்லை பார். பொறுமையும், அடக்கமும், நேர்மையும், ப்ரியமாக பேசுவதும், குணம் இல்லாதவர்களிடம் எடுபடாது. இந்த நல்ல குணங்கள் அவை இல்லாதவர்களிடம் பலன் தராது. தன்னை தானே புகழ்ந்து கொண்டு, துஷ்டனாகவும், கர்வம் கொண்டவனாகவும், விபரீதமாக நடக்கும் மனிதனைத் தான் கண்டபடி அடிப்பவனைத்தான் உலகத்தார், பயந்து சொன்னபடி கேட்கின்றனர். அமைதியாக இருந்து புகழையும் அடைய முடியாது. நல்ல பெயரையும் எடுக்க முடியாது. யுத்தத்தில் வெற்றியும் பெற முடியாது. அதனால் லக்ஷ்மணா, இன்று என் பாணங்கள் பட்டு, பிளந்து போன மகரங்கள் (ஆமைகள்) மட்டுமே மகராலயத்தில் நிறைந்து கிடக்கப் போகின்றன. (மகராலயம் -சமுத்திரம்), நீர் வற்றிப் போன நிலையில், கொந்தளிக்கும் அடிப்பரப்பில் வசிக்கும் பெரிய பாம்புகள் தடுமாறுவதைப் பார். யானைகள் பிளிறுவதையும், மீன்களும், மற்ற நீர் வாழ் ஜந்துக்களும், நிலை குலைந்து போவதைப் பார். சமுத்திர ஜலத்தை என் பாணங்களால் வற்றச் செய்வேன். நான் பொறுமையுடன் தாழ்ந்து நின்று வேண்டியதால், இந்த சமுத்திர ராஜன் அசமர்த்தன், சாமர்த்யம் இல்லாதவன் என்று எண்ணி விட்டான் போலும். அலட்சியம் செய்கிறான். இது போன்ற ஜனங்களிடம் பொறுமையாக இருந்து பயன் இல்லை. என் எதிரில் வராமல் சமுத்திரம் மௌனம் சாதிக்கிறது. லக்ஷ்மணா, என் வில்லை எடு. ஆலகால விஷம் போன்ற அம்புகளைக் கொண்டு வா. சமுத்திரத்தை வற்றச் செய்கிறேன். வானர வீரர்கள் நடந்து சென்று அக்கரை அடையட்டும். வற்றாத கடல் என்று பெயர் பெற்ற இந்த சாகரத்தை வற்றச் செய்கிறேன். கட்டுப் பாட்டை மீறாத அலைகளுடன் ஆயிரக் கணக்கான அலைகள் ஆரவாரத்துடன் விளங்கும் இந்த சமுத்திர ராஜனை தன் எல்லைகள் காணாமல் போக திகைக்கச் செய்கிறேன். இந்த மஹார்ணவம் எனும் பரந்து விரிந்த சமுத்திரம், நீர் வாழ் ஜந்துக்கள், முதலைகள் நிறைந்து இருக்கிறதே, இதை என் பாணங்களால் வற்றச் செய்கிறேன். இவ்வாறு சொல்லி, கோபத்தினால் கண்கள் துடிக்க, வில்லேந்திய கைகளுடன் யுகாக்னி போல தகிப்பவனாக ராமன் நின்றான். இந்திரனின் வஜ்ராயுதம் போன்ற பல ஆயுதங்களை உக்ரமான, கூர்மையான பல அம்புகளை தன் வில்லிலிருந்து அடுத்தடுத்து பிரயோகம் செய்தான். அந்த உத்தமமான அம்புகள், பெரும் வேகத்துடன், நெருப்பைக் கக்கியபடி, சமுத்திரத்தில் விழ, பயத்துடன் பாம்புகள் தாறுமாறாக அலைய, கடல் நீர் பொங்கி மிக பயங்கரமாக இருந்தது. சுழல் காற்றின் வேகமும், அதன் ஓசையும் போல சமுத்திரத்தில் இருந்து ஆரவாரம் எழுந்தது. பெரிய பெரிய அலைகள் வீச, முதலைகளும் ஆமைகளும் பெரிய உருவங்களோடு வீசி எறியப் பட, சங்குகளும், சிப்பிகளும் இரைய, அலைகள் அடித்ததால் பெரும் புகை சூழ்ந்தது போல, அதுவே ஜல மட்டத்தை மறைத்தது. திடுமென கடல் கொந்தளித்து, பயங்கரமாக காட்சியளித்தது. பாம்புகள் தங்கள் அமைதியான வாழ்க்கை பாதிக்கப் பட்டதால், சங்கடத்துடன் நெளிந்தன. அவைகளின் கண்களும், நாக்குகளும், நெருப்பு பிழம்பு போல தனித்து ஜ்வலித்தன. பாதாளத்தில் வசிக்கும் தானவர்களும் இந்த திடீர் மாற்றத்தால், திகைத்தனர். சிந்து ராஜனின் அலைகள் பெரிய மலையளவு எழுந்து அடங்கின. விந்த்ய மலையோ, மந்தரமோ எனும் படி, உயர்ந்து எழுந்தன. சுழன்று சுழன்று வீசிய கடல் அலைகளும், பரபரப்புடனும், பதபதைப்புடனும் வளைய வந்த பாம்புகளும், தானவர்களும், தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளி வந்த முதலைகளுமாக கடல் தத்தளித்தது. இப்படி உக்ரமான வேகத்துடன், ஒப்பில்லாத தன் வில்லைத் தயாராக்கி, ஒலி எழ சீண்டியபடி நின்ற ராகவனிடம், லக்ஷ்மணன் வந்து, வேண்டாம், வேண்டாம் என்று சொல்லி வில்லை தான் வாங்கிக் கொண்டான். இது இல்லாமலே சமுத்திர ராஜன் தங்களுக்குப் பணிந்து வருவான். ஒப்பில்லாத வீரனே, உங்களைப் போன்ற வீரர்கள், சினந்து கொள்வதும், தண்டிப்பதும் சரியல்ல. இயல்பான உங்கள் சாது வ்ருத்தம – சமாதானமான வழி, அதையே கடைபிடியுங்கள். ராம கோபத்தைக் கண்டு திடுக்கிட்டு ஹா கஷ்டம், என்று ஆகாயத்தில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த மகரிஷிகள், சுரர்கள், தேவ ரிஷிகளும், வேண்டாம், வேண்டாம், என்று ஒருமிக்க வேண்டினர். லக்ஷ்மணன் சாமாதானம் செய்ததில் ஆறுதல் அடைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சமுத்திர ஸம்க்ஷோபோ என்ற இருபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 22 (429) சேது ப3ந்த4: (சேதுவைக் கட்டுதல்)
இதன் பின் ரகு ஸ்ரேஷ்டனான ராமர், சமுத்திரத்தைப் பார்த்து கடுமையாகச் சொன்னார். மஹார்ணவா, பெரும் கடலே, இன்றே உன்னை வற்றிப் போகச் செய்ய என்னால் முடியும். நீர் வற்றி பாதாளம் தெரிந்தால் அதையும் சேர்த்து அழிக்க முடியும். என் அம்புகள் உன் ஜலத்தை தகிக்கச் செய்து விடும், சுருங்கிப் போவாய். சாகரா, மணல் தான் மிஞ்சியிருக்கும். எங்கும் புழுதி தான் பறக்கும். என் அம்புகள், ஆழமான உன் ஜலப் பரப்பை வற்றச் செய்தபின், வானரங்கள் சுலபமாக நடந்து சென்றே அக்கரை அடைந்து விடுவார்கள். என் பௌருஷமும், விக்ரமமும் நீ அறியாதவை. தானவாலயா, என்னுடன் மோதி வீணாக கஷ்டப்படாதே. ப்ரும்மாஸ்திரத்தை த்யானித்து, அம்பில் பூட்ட முனைத்து விட்டார், ராமர். வில்லை இன்னும் வேகமாக இழுத்து பிரயோகம் செய்ய வேண்டியது தான். ஸ்வர்க லோகம் நடுங்கியது. மலைகள் ஆட்டம் கண்டன. உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. திசைகள் தென்படவே இல்லை. நீர் நிலைகள், குளங்களும், நதிகளும் வற்ற ஆரம்பித்தன. சூரியனும், சந்திரனும், நக்ஷத்திரக் கூட்டங்களும் குறுக்காக பயணம் செய்தன. பாஸ்கரனின் கிரணங்கள் வெளிச்சம் போட்டு காட்டின. ஆயினும் இருள் மறையவில்லை. நூற்றுக் கணக்கான மின் மினி பூச்சிகள், நிறைந்தது போல ஆகாயம் காட்சியளித்தது. ஆகாயத்திலிருந்து, அதனைத் தாண்டி, அந்தரிக்ஷத்திலிருந்து மிகப் பெரிய ஓசைகள் எழுந்து பரவின. ஆகாயத்திலிருந்து வரிசை வரிசையாக காற்றின் வேகம் மரங்களைப் பிளந்து தள்ளின. மேகங்களைத் தூக்கிக் கொண்டு ஓடுவது போலவும், மலை சிகரங்களில் மோதியது போலவும், மின்னல் பிரகாசமாக வெளிப்பட்டது. தேவ லோகத்தையே தொட்டு விடுவது போல மேகக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து பெருத்த ஓசையுடன் இடி இடித்தன. இப்படிச் செய்யும் பொழுது அக்னியும், மின்னல்களும் வெளி வந்தன. கண்ணில் தென்பட்டவை எல்லாம் வஜ்ரத்தால் அடிபட்டது போல அலறின. கண்ணில் படாமல் மறைந்திருந்தவை, பயங்கரமாக ஓலமிட்டன. பயந்து நடுங்கியபடி செய்வதறியாது திகைத்தன. நீர் வாழ் ஜந்துக்கள் அனைத்தும், நீரில் தோன்றும் அலைகளோடு, நாகங்களோடு, ராக்ஷஸர்களோடு, மற்ற ஜீவ ராசிகளோடு நடுங்கின. பயத்துடன் இங்கும் அங்குமாக அலை பாய்ந்தன. திடுமென அதிகரித்த சமுத்திர ஜலத்தின் வேகத்தால், அலைகள் ஒரு யோஜனை தூரம் கரையைக் கடந்தது. இப்படி கொந்தளித்து, தன் கரையை மீறிச் செல்வது போல பொங்கி எழும் சமுத்திரத்தை பார்த்தபடி எதுவும் செய்யாமல் நின்றான். அச்சமயம், மத்தியில் இருந்து சாகரன் தானே எழுந்து வந்தான். உதய சூரியன், மேரு மலையின் மேல் நிற்பது போல கண்ணுக்குத் தென்பட்டான். ஜ்வாலை பறக்கும் நாக்குகளுடன், பாம்புகள் உடன் வந்தன. கண்ணுக்கு குளிர்ச்சியான வைமூடுரியம் போலவும், சிவந்த மாலையும், ஆடைகளும், பொன் மாலைகளும் அலங்கரிக்க, தாமரை இதழ் போன்ற கண்களுடன், தலையில் பூ மாலைகளை சூடியவனாக, எதிரில் நின்றான். தன்னுள் பதுங்கிக்கிடக்கும் ரத்னங்களைக் கொண்டே ஆபரணங்கள் செய்வித்தவன் போலவும், ஹிமவான் போல பலவிதமான தாதுப் பொருட்கள் நிறைந்த மலை போலவும், கௌஸ்துப மணியின் சகோதரன் போன்ற ஒரு மணி, மின்னல் போல பிரகாசமாக இருக்க, அதை தன் விசாலமான மார்பில் அணிந்தவனாக, ஆர்பரித்த அலகளாலேயே மேலுக்குத் தள்ளப் பட்டவனாக எதிரில் நின்றான். அலைகளுடன் கூடவே, தள்ளப் பட்டு பர பரத்த, முதலைகளும், உரகங்களும், ராக்ஷஸர்களும் உடன் வந்தன. காளிகா என்ற, கறுத்து வீசிய காற்றினால் தள்ளப் பட்ட அலைகளின் ஆட்டமும் மிக அதிகமாக இருந்தது. தேவதைகளுக்கு சமமான உருவம் எடுத்துக் கொண்டு சில நீர் வாழ் ஜந்துக்கள் தொடர்ந்தன. சமுத்திர ராஜனைத் தொடர்ந்து கங்கை, சிந்து முதலிய பிரதான நதிகளும் வர, சாகரன் முதலில் பெயர் சொல்லி அழைத்து, கையில் வில்லுடன் நின்றிருந்த ராமனைப் பார்த்து கை கூப்பி அஞ்சலி செய்தவனாகப் பேச ஆரம்பித்தான். ராகவா, இந்த பூமி, வாயு, ஆகாயம், ஜலம், ஜோதி, இவை தன் இயல்பிலேயே நிற்பவை. சாஸ்வதமாக மாறாத குணங்களைக் கொண்டவை. என் இயற்கை சுபாவம், நான் ஆழமாக, கடக்க முடியாதவனாக இருப்பது தான். நான் அதைத்தான் கடை பிடித்தேன். இதை நான் மீற முடியாது. மீறினால் பலவிதமாக மாறுதல்கள் விபரீதமாகத் தோன்றும். இதை நான் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ராஜ குமாரா, என்னிடம் வாழ்ந்து வரும் முதலை, ஆமை, மீன் இவைகளின் நலனைக் கருதி, செயல் பட வேண்டியவன் நான். காமத்தாலோ, லோபம் காரணமாகவோ, பயம் காரணமாகவோ நான் ஜலத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியாது. வேறு எந்த உபாயம் செய்து கடந்து செல்வதானாலும் நான் உதவி செய்வேன். உன் வீரர்கள் தாண்டிச் செல்லும் வரை, என்னிடம் உள்ள முதலைகளை அடக்கி வைத்திருப்பேன். எந்த விதத் தடங்கலும் இன்றி வானரங்கள் கடந்து போக வழி செய்வேன். ராமர் சொன்னார் என் வில்லில் நான் பூட்டிய இந்த அம்பு வீணாகக் கூடாது. அமோகமான பாணம் இது. இதை நான் செலுத்தக் கூடிய ஒரு இடம் சொல் என்றார். ராமர் சொன்னதைக் கேட்டு, அவர் கையில் தயாராக இருந்த ஆயுதத்தையும் பார்த்து சாகரன் பதில் சொன்னான். வடக்கு திசையில் ஒரு இடம் இருக்கிறது. த்3ரும குல்யம் என்று பெயர் பெற்றது. நீ புகழ் பெற்று விளங்குவது போலவே, இந்த இடம் ப்ரஸித்தமாக, காணவே பயங்கரமாக இருக்கும். ஆபீ4ரம் என்ற கொடிய பாம்புகள், என் ஜலத்தைக் குடித்து தீர்க்கின்றனர். பாபகாரியம் செய்யும் இந்த ஜந்துக்கள் என்னைத் தொடுவதே எனக்குப் பிடிக்கவில்லை. உன் உத்தமமான சரம் இந்த பாபிகளை அழிக்கட்டும். இதைக் கேட்டு ராமரும், சாகரம் காட்டிய இடத்தில், தன் பாணத்தை பிரயோகம் செய்தார். இந்த இடம் மரு காந்தாரம் பாலைவனம் என்று உலகில் பிரஸித்தி பெறலாயிற்று. ராம பாணம் பட்டவுடன் பூமி அலறினாள். இதனால் ஏற்பட்ட காயத்திலிருந்து பாதாள நீர் வெளி வரலாயிற்று. பெரிய கிணறு தோன்றியது. அதை வ்ரண (காயம்) என்றே அழைக்கின்றனர். இந்த கிணற்றில் நீர் வற்றாமல் சமுத்திரம் போலவே விளங்குகிறது. இதில் ஜலம் விழுவதும் பலமான ஓசையாக கேட்கும். மரு காந்தாரம் என்றே இந்த இடம் பிரஸித்தி பெறும் என்று சொல்லி ராமர் அதற்கு ஒரு வரமும் அளித்தார். பசுக்கள் நிறைந்து, ரோகம் குறைந்து, பழங்களும், கிழங்குகளும் ரஸம் நிறைந்ததாக, எப்பொழுதும் ஈரமும், பால் நிறைந்தும், நல்ல வாசனையுடைய ஔஷதிகள் நிறைந்தும் இந்த பாலைவனம் எப்பொழுதும் சுபிக்ஷமாக இருக்கும். இவ்வாறு ராமர் கொடுத்த வரத்தால், நல்ல பாதையும் ஏற்பட்டது. இந்த பள்ளத்தை வற்றச் செய்து தன் பாணத்திற்கு ஒரு இலக்கை தந்த பின், ராகவனைப் பார்த்து சமுத்திர ராஜன் சொன்னான். சர்வ சாஸ்திரங்களையும் அறிந்தவனே, இதோ நளன் என்று ஒருவன் இருக்கிறானே, இவன் விஸ்வகர்மாவின் மகன். தந்தைக்கு சமமான சாமர்த்யம் உள்ளவன். இவன் தந்தையே இவனுக்கு வரம் தந்திருக்கிறார். இந்த வானர வீரன் என் மேல் சேதுவைக் கட்டட்டும். இவன் தந்தை எனக்கு நண்பன் அதே போலத்தான் இவனும் எனக்கு. நான் அந்த சேதுவை தாங்கிக் கொள்கிறேன். இவ்வாறு சொல்லி சமுத்திர ராஜன் மறைந்தான். நளனை வெளிப்படுத்தி, ராமனுக்கு அறிமுகப் படுத்தி விட்டு சென்று விட்டான். இதன் பின் நளன் ராமனிடம் வந்தான். நான் சேதுவைக் கட்டுகிறேன். இந்த வருணாலயத்தின் மேல் விஸ்தீர்ணமாக பாலத்தைக் கட்டுகிறேன். என் தந்தையின் திறமை எனக்கும் உண்டு. அதை பயன்படுத்தி, சமுத்திர ராஜன் சொன்னது போலவே சேதுவைக் கட்டுகிறேன். உலகில் மனிதனுக்கு தண்டம் தான் வரம் என்று தோன்றுகிறது. செய் நன்றி கொன்றவர்களிடம் பொறுமையை காட்டுவது வீண். சமாதானமாக பேசுவதோ, தானமோ மற்ற எதுவுமே பலன் தராது. இந்த பெரிய சாகரம், ராகவனின் தண்டத்திற்கு பயந்து, பள்ளத்தைக் காட்டிக் கொடுத்து விட்டது. சேது கட்டுவதைக் காணும் ஆசை வேறு. என் தாயார் மந்தராவுக்கு என் தந்தை விஸ்வகர்மா ஒரு வரம் கொடுத்தார். தேவி, எனக்கு சமமான மகன் உனக்குப் பிறப்பான் என்றார். அதனால் விஸ்வகர்மாவின் வம்சத்தில் பிறந்த அவருக்கு சமமான (கட்டட கலைஞர்) நான். இந்த சமுத்திர ராஜனால் நினைவு படுத்தப் பட்டேன். சமுத்திர ராஜன் சொன்னது சரியே. மற்றவர்கள் யாரும் சொல்லாமல் நான் தானாக என் சாமர்த்யத்தை பறை சாற்றிக் கொள்ள விரும்பவில்லை. இந்த வருணாலயத்தின் மேல் சேதுவைக் கட்ட எனக்கு திறமையும் இருக்கிறது, நம்பிக்கையும் வந்து விட்டது. மற்ற வானர வீரர்களை உதவிக்கு வைத்துக் கொண்டு இன்றே சேதுவைக் கட்டஆரம்பிக்கிறோம். ராமரும், மற்ற வானரங்களுக்கு, நளனுக்கு உதவி செய்யச் சொல்லி உத்தரவு கொடுத்தார். நூற்றுக் கணக்கான வானரங்கள் அந்த பெரும் வனத்தில் மகிழ்ச்சியுடன் கூடினர். ஒவ்வொன்றாக தாங்களே மலை போல பெருத்த உடல் கொண்டவர்களாக, மலைகள் (கற்கள், மரங்கள்) இவற்றைக் கொண்டு வந்து குவித்தனர். சால, திலகம், ஸ்தினிசம் என்ற மரங்கள், வில்வம், சப்தபர்ணம், கர்ணிகாரம், இவை புஷ்பங்களோடு கொண்டுவரப் பட்டன. சூதம், அசோகம், என்ற மரங்கள் இவை வேரோடு பிடுங்கிக் கொண்டு கிளைகளை ஒடித்துக் கொண்டும் வரப் பட்டன. இவை சமுத்திரத்தை நிரப்பின. மரத்தின் கிளைகளை இந்திரன் கொடியைத் தூக்கிக் கொண்டு போவது போல, உற்சாகமாகத் தூக்கிக் கொண்டு வந்து சேர்த்தன. தாள மரங்கள், தென்னை மரங்கள், மாதுள புதர்கள், விபீதகம் என்ற வகை மரங்கள், பகுளம், கதிரம் எனும் வகை, வேம்பு (நிம்ப) மரங்களையும் பிடுங்கிக் கொண்டு வந்தன. பெரிய யானை அளவு, கற்களையும் கொண்டு வந்து சேர்த்தன. மலைகளை பெரும் ப்ரயத்னத்தோடு பெயர்த்து தூக்கிக் கொண்டு வந்தன. சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து வேகமாக சாகர ஜலத்தில் வீசிய பொழுது, சமுத்திர ஜலம் தூக்கியடித்து ஆரவாரம் செய்தது. அந்த நீர்த் திவலைகள் ஆகாயத்தையே எட்டின. சில வானரங்கள் சேர்ந்து சமுத்திரத்தின் மேல் கயிற்றைக் கொண்டு வந்து சேர்த்தன. நூறு யோஜனை தூரம் கயிறுகள் கொண்டு வரப் பட்டன. பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் கொண்ட சேதுவை, நளன், நத நதீபதியான சமுத்திரத்தின் மேல் கட்டினான். ஒரு சிலர் கையில் தண்டத்துடன், வேலையில் ஈடுபட்டிருந்த வானரங்களை பாதுகாத்தனர். ராமருடைய கட்டளையை சிரமேற்கொண்ட வானர வீரர்கள், மேகம் போன்ற பர்வத கற்களையும், பூத்துக் குலுங்கும் மரங்களையும் புல் கயிற்றால் கட்டினர். அப்படி அப்படியே கொண்டு வந்து சேது கட்ட உபயோகித்தனர். சிறு குன்று போல இருந்த பெரும் கற்களையும் சுமந்தபடி வானரங்கள் ஓடி ஓடிச் சென்றன. ஓடும் பொழுது சிதறிய கற்கள் உராய்ந்து உண்டான சத்தமே பெருமளவு இருந்தது. முதல் நாள் பதினான்கு யோஜனை சேது கட்டப் பட்டு விட்டது. இதனால் உற்சாகமடைந்த வானரங்கள், மேலும் வேகமாக செயல் பட மறு நாள் இருபது யோஜனை தூரம் பூர்த்தியாயிற்று. பெரிய பெரிய உடல் வாகுள்ள வானரங்கள், தங்கள் பலத்தை ஒன்று கூட்டி, மூன்றாவது நாள், அதே முயற்சியோடு இருபத்தியோரு யோஜனை தூரத்தைக் கட்டி முடித்தனர். நான்காவது நாள், இதுவே இருபத்திரண்டாக உயர்ந்தது. தங்கள் வேகத்தை இன்னும் அதிகரித்துக் கொண்ட வானரங்கள், ஐந்தாம் நாள், இடைவிடாது வேலை செய்து, இருபத்து மூன்று யோஜனை தூரம் பூர்த்தி செய்தனர். விஸ்வகர்மாவின் மகனான நளன், தன் தந்தையைப் போலவே, செய்யும் தொழிலே கவனமாக, சமுத்திரத்தின் மேல் சேதுவைக் கட்டி முடித்து விட்டான். ஆகாயத்தில், ஸ்வாதியின் பாதை தனித்து தெரிவதைப் போல சேதுவின் அமைப்பும் அமைந்தது. (ஸ்வாதி நக்ஷத்திரம்). இதன் பின் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும் வந்து ஆகாயத்தில் நின்றபடி இந்த அத்புதமான காரியத்தை கண்டு களித்தனர். பத்து யோஜனை விஸ்தீர்ணமும், நூறு யோஜனை நீளமும் கொண்ட சேதுவை, நள சேது என்று கொண்டாடினர். வேறு யாராலும் செய்ய இயலாத இந்த செயலை நளன் செய்து முடித்தான். வானரர்கள் அதன் மேல் குதித்தும், ஓடியும், கர்ஜித்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. எண்ணி பார்க்க முடியாத இந்த அத்புதமான மயிர் கூச்செரியச் செய்யும் செயற்கரிய செயலால், ஆவல் தூண்டப் பட்ட எல்லா ஜீவ ராசிகளும், சமுத்திரக் கரைக்கு வந்து சேதுவை தரிசித்துச் சென்றனர். ஆயிரம், கோடிக் கணக்கான வானர வீரர்களின் ஒன்று சேர்ந்த உழைப்பின் பயனாக, சமுத்திரத்தின் மேல் சேதுவைக் கட்டி, மறு கரையைச் சென்றடைந்தார்கள். இந்த சேது, விசாலமாக, நல்ல தளம் போடப் பெற்று, நன்றாக இடைவெளியின்றி இணைக்கப் பட்டதாக, நடக்க இசைவாக, பார்வைக்கு லக்ஷணமாக, சமுத்திரத்தின் தலையில் வகிடு (எல்லைக்கோடு) எடுத்தது போலக் காணப்பட்டது. சமுத்திரத்தைக் கடந்து சென்றவர்களுடன், கையில் க3தை4யுடன் விபீஷணன், தன் மந்திரிகளுடன் வழி காட்டுவது போல முன் நடந்து சென்றான். சுக்ரீவன் ராமரைப் பார்த்து, தாங்கள் ஹனுமான் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள். லக்ஷ்மணனை அங்கதன் தூக்கி வருவான், என்றான். இந்த சாகரம், மிகப் பெரியது, ராகவாஸ்ரீ இந்த இருவரும் ஆகாய மார்கமாக உங்களைக் கொண்டு சேர்ப்பார்கள் என்றான். ராகவன் வானரங்களுடன் நடந்து செல்வதையே விரும்பினார். அந்த சேனையின் முன்னிலையில் தலைமை தாங்கி, ஸ்ரீமானான ராமர், வில்லேந்தி லக்ஷ்மணனுடனும், சுக்ரீவனுடனும் நடந்தே சென்றார். மற்ற வானரங்கள் மத்தியிலும், பக்கங்களிலும், வந்தன. சில நீரில் குதித்தன. ஒரு சில வழி தெரியாமல் திண்டாடின. ஒரு சில ஆகாய மார்கமாக, கருடன் போல பறந்தன. தாண்டிச் சென்றன. இந்த வானரங்கள் செய்த கூச்சலில், சாகரத்தின் ஓசை கூட அடங்கி விட்டது. அந்த சேதுவின் மேல் நடந்து கடலைக் கடந்த பல வானர வீரர்கள், குதி நடை போட்டுக் கொண்டுச் சென்றன. கரையை அடைந்து ராமர் தன் கூடாரத்தை அமைத்தார். அமைத்தார். வானரங்களுக்குத் தேவையான பழங்கள், காய், கிழங்குகள் நிறைந்து இருந்த வனத்தை தேர்ந்தெடுத்தார். தேவர்களும், சித்த சாரணர்களும், ராமனை பர பரப்புடன் தேடி வந்து, அத்புதமான சேது பந்தனத்தை பாராட்டி, மகரிஷிகளுடன், கடல் நீரைக் கொண்டு ராமனை முழுக்காட்டினர். நர தேவனே, வெற்றி பெறுவாய், சத்ருக்களை ஜயிப்பாய். இந்த சமுத்திரத்தையும் சேர்த்து உன் நாட்டையும் பெற்று ஆளுவாய். பல காலம் வாழ்ந்திருப்பாயாக என்று பல விதமான சுபமான வாழ்த்துக்களை அருளினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சேது ப3ந்தோ4 என்ற இருபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 23 (430) லங்காபி4ஷேணனம் (லங்கையை முற்றுகையிடுதல்)
லக்ஷ்மணனின் முன் பிறந்தோனான ராமன், நிமித்தங்களின் லக்ஷணங்களையும் அறிந்தவன். இளைய சகோதரனை அணைத்துக் கொண்டு, லக்ஷ்மணா, இப்பொழுது நாம் காணும் நிமித்தங்களின் பேரில் சொல்கிறேன். குளிர்ந்த நீரைத் தொட்டு, பழங்கள் நிறைந்த வனங்களை நம் வசப் படுத்திக் கொண்டு, படைகளையும் அணி வகுக்கச் செய்து, தயாராக நிற்போம். உலகையே நாசம் செய்யக் கூடிய பயங்கரமான ஒரு விஷயத்தை எதிர் கொள்ளப் போகிறோம். இந்த ருக்ஷ, வானர வீரர்களை பாதுகாத்து நிர்வகிக்க வேண்டும். காற்று மாசு பட்டதாக வீசுகிறது. பூமி நடுங்குகிறது. பர்வதத்தின் உச்சிகள் ஆடுகின்றன. மரங்கள் கீழே விழுகின்றன. இந்த நிமிஷம், அறுபட்ட மிருக மாமிசத்தின் நிறத்தில் மேகங்கள் அலைகின்றன. மேகத்தின் இடியோசையும் கடுமையாக இருக்கிறது. ரத்தமும் நிணமுமாக மழை பொழியப் போவது போல மனதில் ஒரு காட்சி தெரிகிறது. இந்த சந்த்யா காலமும் சிவந்த சந்தனம் போன்று கொடூரமாக காட்சி அளிக்கிறது. ஆதித்யனிடமிருந்து அக்னி மண்டலம் எரிந்து கொண்டே கீழே விழுவது போல இருக்கிறது. மிருகங்களும், பக்ஷிகளும் தீனமாக அலறுகின்றன. சூரியனைப் பார்த்து முறையிடுவது போல, பெரும் பயம் வரப் போவதைக் குறிக்கும் நிமித்தங்களில் இந்த மிருகங்களின் ஊளையும் ஒன்று. இரவு வந்து விட்டது. இருட்டில் சந்திரனின் ஒளியும் குளுமையாக இல்லை. தகிக்கிறது. சந்திரனைப் பார்த்தாலும் கடும் சிவப்பாக, உலகத்தின் நாச காலத்தில் உதிப்பது போலத் தெரிகிறது. சந்திரனைச் சுற்றி பரிவேஷம், (பரி வட்டம்) சிவந்து காணப்படுகிறது. சூரியனிடத்தில் கருமையான களங்கம் தென்பட்டது. லக்ஷ்மணா, இவையெல்லாம் நல்ல நிமித்தங்கள் அல்ல. நக்ஷத்திரங்களைப் பார். புழுதி படிந்து காணப்படுகின்றன. யுக முடிவு வரும் போலத் தோன்றுகிறது. காகங்களும், ஸ்யேனங்களும், கழுகுகளும், கீழ் நோக்கி பறக்கின்றன. குள்ள நரிகள், அமங்கலமாக ஊளையிடுகின்றன. பயந்து அலறுவது போலத் தோன்றுகின்றன. கற்களும், சூலங்களும், வாள், கத்திகளும், வானரங்களும், ராக்ஷஸர்களும், மாற்றி மாற்றி வீசி அடிக்க பெரும் யுத்தம் வரப் போகிறது. பூமியில் மாமிசமும், ரத்தமும் இரையப் போகிறது. இன்றே சீக்கிரமாக, ராவணன் பாலித்து வரும் இந்த லங்கா நகரை முற்றுகையிடுகிவோம். நாலா புறமும் வானர வீரர்கள் சூழ, வேகமாகச் செல்வோம். இவ்வாறு சொல்லி, யுத்தம் வந்ததில், தன் பராக்ரமத்தைக் காட்டி யுத்தம் செய்ய கிடைத்த வாய்ப்பினால் உற்சாகம் கொண்டவராக, ராமன் எல்லோருக்கும் முன்னால் சென்றார். லங்கையை நோக்கி படை புறப்பட்டது. விபீஷணனும், சுக்ரீவனும், மற்ற வானர வீரர்களும், எதிரியை நிச்சயம் வதம் செய்து விடுவோம், வெற்றி நமதே என்று கோஷம் செய்தபடி, நிச்சயமாக வெல்வோம் என்ற உறுதியோடு நடை போட்டனர். ராகவனுடன் நடந்த வானர வீரர்கள், ராகவனின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று மனப் பூர்வமாக விரும்பினர். அவர்களை அன்புடன் பார்த்தபடி, அவர்கள் மன உறுதியையும், வீர்யத்தையும் பாராட்டியபடி ராகவன் நடந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் லங்காபி4ஷேணனம் என்ற இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 24 (431)ராவண ப்ரதிக்ஞா (ராவணன் சூளுரைத்தல்)
சுக்ரீவ ராஜாவின் முக்யமான பிரமுகர்கள் அடங்கிய ராஜசபை, சுபமான நக்ஷத்திரங்கள் நிறைந்த இரவில், சரத் கால சந்திரன் போல சோபையுடன் விளங்கியது. அந்த படை வீரர்களின் கால்களின் வேகத்தால் பூமி அதிர்ந்தது. சாகரம் போன்ற சேனையின் நடமாட்டத்தால், வசுந்தரா என்ற பூமி மிகவும் பாதிக்கப்பட்டாள். வேகமாக நடந்த வானர சேனை லங்கையை நெருங்க நெருங்க, பேரீ, ம்ருதங்க வாத்யங்களின் கோஷங்கள், மயிர் கூச்செரியும் வண்ணமாக ஓங்கி ஒலித்ததைக் கேட்டனர். இந்த கோஷம் இந்த வீரர்களையும் தூண்டி விட, உற்சாக மிகுதியில், அதை விட அதிகமாக தாங்களும் கோஷம் செய்தனர். ராக்ஷஸர்களும், இந்த வானர வீரர்களின் கர்ஜனையைக் கேட்டனர். மதம் கொண்டு ஆடுபவர்கள் செய்யும் ஜயகோஷம் இடி முழக்கத்திற்கு இணையாக இருப்பதைக் கேட்டனர். சித்ர த்வஜங்கள், கொடிகள் பறக்க, சோபனமாக விளங்கிய லங்கையைக் கண்டவுடன், ராமனின் மனம் சீதையிடம் சென்று விட்டது. இங்கு தான் மான் விழியாளான என் சீதை, ராக்ஷஸிகளின் காவலில் இருக்கிறாள். சிவந்த சரீரம் உடைய ஏதோ ஒரு க்ரஹத்தால், ரோஹிணி நக்ஷத்திரம் பீடிக்கப் பட்டது போல இருக்கிறாள். சிந்தனை மனதை அழுத்த நீண்ட பெருமூச்சு விட்டவர், அருகில் லக்ஷ்மணனைப் பார்த்து, தனக்குத்தானே ஆறுதலாகச் சொல்லிக் கொள்வது போல தம்பியிடம் சொன்னார். லக்ஷ்மணா, இதோ பார். ஆகாயத்தில் கோலம் போட முனைவது போல உயர்ந்து நிற்கும் இந்த மாளிகைகளைப் பார். மலையின் உச்சியில், விஸ்வகர்மா, தன் மனதில் கற்பனை செய்தபடி கட்டியிருக்கிறார். இந்த லங்கையில் விமானங்கள் ஏராளமாக ஒன்றையொன்று மிஞ்சும்படி நிறைந்து தெரிகின்றன பார். விஷ்ணுவின் பாதத்தால், ஆகாயத்தில் வெண்மையான நிறம், வெண் மேகங்கள் போல, ஆகாயத்தை மறைத்தது போல காட்சியளிக்கிறது. சித்ர ரதம் என்ற அழகிய வனங்கள் பூக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பலவிதமான கொடிகள் பறக்கின்றன. புஷ்பங்களையும், பழங்களையும், இந்த மத கஜங்கள் அனுபவிப்பதைப் பார். பூக்களைச் சுற்றி வண்டு மொய்க்கின்றன. அல்லது பெரிய பெரிய தோட்டங்கள், பூக்கள் நிறைந்து இருப்பதால் வண்டுகளின் நடமாட்டமும் அதே அளவு நிறைந்திருக்கிறது. குயில்கள் பாடும் ஓசை, தோதவீ என்ற பக்ஷிகளின் இரைச்சல், இதமான காற்று. என்று ராமர் பரவசமாக இயற்கையின் அழகில் தன்னை பறி கொடுத்தவராக சொல்லிக் கொண்டே போனார். இதன் பின், தாசரதியான ராமர், தன் படை வீரர்களை தகுந்தபடி அணி வகுத்து இருக்கச் செய்து, நிர்வாகத்தை தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். அங்கதனும், நீலனும் மத்தியில் ஹ்ருதய ஸ்தானத்தில் நில்லுங்கள். இந்த இருவரையும் யாராலும் ஜயிக்க முடியாது. சுற்றிலும் வானர சைன்யம் சூழ்ந்து நில்லுங்கள். வலது பக்கம் ரிஷப4ன் என்ற வானர வீரன் பொறுப்பேற்கட்டும். யானையைப் போல பலமும், வேகமும் உடைய கந்தமாதனன் வானர சேனையின் இடது பகுதியில் பொறுப்பு ஏற்று, தலைமை தாங்கட்டும். நான் முன் பகுதியில், தலை வாசலில் லக்ஷ்மணனோடு நிற்கிறேன். ஜாம்பவானும், சுஷேணனும், தன் வேகத்தைக் காட்ட விரும்பும் வானரங்கள் இருவரும், மற்றும் உள்ள சிறந்த கரடிகள், சேனையின் வயிற்றுப் பகுதியான மத்திய பாகத்தை காக்கட்டும். கால்கள் ஆரம்பிக்கும் இடத்தில், கபிராஜா சுக்ரீவன் நிற்கட்டும். மேக மண்டலத்தோடு ஆகாயமே இறங்கி வந்து விட்டாற் போல பரவி இருந்த வானர சேனை, அணி வகுத்து நின்றதே புதுமையாக இருந்தது. முன்னணியில் நின்ற அறிவு மிகுந்த, தேஜஸும் உடைய பெரிய வானரங்கள் கட்டுக் கோப்பாக தங்கள் கீழ் இருந்த படை வீரர்களைப் பாதுகாத்தார்கள். பெரிய கற்களையும், மரங்களையும் தூக்கிக் கொண்டு, யுத்தத்தில் தங்கள் பலத்தைக் காட்ட வானர வீரர்கள் தயாராக நின்றனர். லங்கையை தங்கள் முஷ்டிகளாலேயே பெயர்த்து விடுவோம் என்று பேசிக் கொண்டன. தங்கள் மனதில் பட்டதை சந்தோஷமாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அப்பொழுது ராமர் சுக்ரீவனை அழைத்துச் சொன்னார். சேனையை தயார் செய்து விட்டோம். இந்த சுகனை விட்டு விடு என்றார். சுக்ரீவனும் தூது வந்த சுகனை விடுவித்தான். நடுங்கியபடி அந்த சுகம் ராவணனிடம் சென்றது. (சுகன் என்ற தூதன், சுகம் என்பது கிளிக்கும் பெயர்) ராவணன் தன்னருகில் வந்த சுகத்தை (சுகனை) பார்த்து சிரித்தபடி, என்ன இது, தூது வந்த கிளியே, உன் பக்ஷங்கள் அடிபட்டு கிடக்கின்றனவே, அந்த கூட்டத்தில் மாட்டிக் கொண்டு விட்டாயா? பலர், பலவிதமான குழப்பமான கொள்கை உ<டையவர்கள், ஆளுக்கு ஆள் ஏதாவது சொன்னார்களா? குழம்பி விட்டாயா? என்று ஏதோ ஹாஸ்யமாக பேசுவது போல பேசிக் கொண்டே போக, பயத்தால் நடுங்கியபடி நின்ற சுகன் உண்மை நிலவரத்தைச் சொல்ல ஆரம்பித்தான். ராஜன், சாகரத்தின் வடகரையில் நின்று நீ சொன்னதைச் சொன்னேன். செய்தி முழுவதும், நிதானமாக, புரியும் படி சொன்னேன். என்னைக் கண்டதும் வானரங்கள், கோபத்துடன் முஷ்டியை உயர்த்திக் கொண்டு அடிக்க வந்தன. சீக்கிரமே என்னை பிடித்து விட்டனர். அடிக்கவும், குத்தவும் ஆரம்பித்தனர். பேசவே முடியவில்லை. கேள்வி என்ன கேட்பேன்? இயல்பாகவே வானரங்கள் கோபம் மிகுந்தவை. கூர்மையான புத்தியும், வெறியும் மிகுந்தவை. அந்த ராமனோ, விராத4னை, கப3ந்த4னை, நம் க2ரனை அடித்தவன். வீழ்த்தியவன். சுக்ரீவனின் துணையோடு, சீதையைத் தேடி வந்திருக்கிறான். அகலமும் நீளமுமாக சேதுவைக் கட்டி, உப்பு நீர் நிறைந்த சமுத்திரத்தை தாண்டி வந்து விட்டான். ராக்ஷஸர்களை எதிர்த்து போரிட அறை கூவியபடி நிற்கிறான். கையில் வில் ஏந்தி படையின் முன்னணியில் இருக்கிறான். ஆயிரக்கணக்கான கரடிகள், வானரங்கள் நிறைந்த இந்த சேனையே புதுமையாக இருக்கிறது. ஒவ்வொன்றும் சிறு குன்று போல பெருத்த உருவத்தில், பூமியை மறைத்தபடி நடமாடுகின்றன. இந்த வானர சேனைக்கும், நமது ராக்ஷஸ சேனைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. தேவ, தானவ சேனை எதிரெதிராக நின்று மோதிக் கொள்ளத் தயாராக நிற்பது போல இருக்கிறது. ஊருக்குள் நுழைந்து நாசம் விளைவிக்கும் முன் ஒரு காரியம் செய். சீதையை அவனிடம் கொடுத்து விடு. அல்லது பெரும் யுத்தத்திற்கு தயாராக ஆகிக் கொள் என்று சொல்லி நிறுத்தியது. சுகனின் வார்த்தையைக் கேட்டு ராவணன் கோபம் கொண்டான். சிவந்த கண்களாலேயே எரித்து விடுவது போல பார்த்தான். என்னுடன் போரிட தேவ, தானவ கூட்டமே வந்தாலும் கூட சீதையைத் தர மாட்டேன். எல்லா லோகமும் வந்து பயமுறுத்தினாலும் கூட முடியாது. இதோ பார், உன் முன்னாலேயே என் சரங்கள் ராகவனை ஓட ஓட விரட்டப் போகின்றன. வஸந்த காலத்தில் பூக்கள் நிரம்பிய மரங்களை வண்டுகள் மொய்ப்பது போல என் பாணங்கள் ராகவனை மொய்த்து விடும். மின் மினி பூச்சிகளைக் கண்டு உயர்ந்த ஜாதி யானையான குஞ்சரம் பயப்படுவதாவது. என் தூணியில் கூர்மையான அம்புகள் இருக்கின்றன. நெருப்பைக் கக்கிக் கொண்டு அவை வெளிப்படும் பொழுது அவர்கள் என்ன கதி ஆகிறார்கள் பார். நல்ல பலசாலி நான். என் முழு பலத்தோடு எதிர்த்து நிற்பேன். ஜோதிகளில் சிறந்த சூரியன் போல, தன் பிரபையால் தனித்து நிற்பேன். சாகரத்துக்கு இணையான வேகத்தோடு செயல்படுவேன். காற்றுக்கு இணையான நடை என் நடை. இதையெல்லாம் தாசரதி அறிய மாட்டான். அதனால் தான் என்னோடு மோத வருகிறான். முன் காலத்தில் நான் போர்களில் காட்டிய பராக்ரமத்தை அவன் அறிந்திருக்க நியாயமில்லை. என்னுடைய வில் என்ற வீணை, அம்புகளால் மீட்டி நான் வாசிக்கும் பொழுது, வெற்றி கோஷம் போன்று முழக்கம் நாராச தளம் வரை போய் கேட்கும். இந்த கோஷமே எதிரிகளை பயந்து நடுங்கச் செய்யும். எனக்கு துன்பம் விளைவிக்க எண்ணி வந்த எதிரி சேனையில் மூழ்கி திளைத்து நான் மீண்டு வருவேன். ஆயிரம் கண்களுடைய வாஸவனோ, வருணனோ, தானே யமனே வந்தாலும் வைஸ்ரவனனே வந்து நின்றாலும், தங்கள் ஆயுதங்களைக் கொண்டு என்னை அழிக்க முடியாது. (சரங்கள் என்ற அக்னியால் என்னை பொசுக்க முடியாது).
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண ப்ரதிக்ஞா என்ற இருபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 25 (432) சுக, சாரண ப்ரேஷணாதிகம்(சுகனையும், சாரணனையும் அனுப்புதல்)
தசரதாத்மஜனான ராமன், தன் படையோடு கடலைத் தாண்டி லங்கையின் கரையை எட்டி விட்ட நிலையில், ராவணன், தன் மந்திரி சபையைக் கூட்டினான். இது வரை நாம் கேள்விப்படாத புதுமை, ராகவன் கடலின் மேல் சேதுவைக் கட்டி, படை பலத்தோடு வந்து சேர்ந்து விட்டான். கடக்க முடியாத கடலையும் கடந்து வந்து விட்டான். சமுத்திரத்தில் சேது பந்தனம் செய்தது கூட பெரிதில்லை. இந்த வானர சேனையின் அளவு, வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகத் தெரிகிறது. நீங்கள் இருவரும் வானர சைன்யத்தின் உள் புகுந்து, சேனையின் பலம், அளவு இவற்றைத் தெரிந்து கொண்டு வாருங்கள். ராமனுடைய, சுக்ரீவனுடைய மந்திரிகள் யாவர், எப்படிப் பட்டவர்கள், வானர வீரர்களின் படைத்தலைவர்கள், அவர்கள் சக்தி என்ன, சேதுவை எப்படி கட்டினார்கள். ஜலம் நிறைந்த சாகரத்தின் மேல் என்ன செய்து சேதுவைக் கட்ட முடிந்தது. வானர வீரர்கள் தற்சமயம் தங்கும் இடம், வசிக்கும் நிலை என்ன? ராமனுடைய வேலை என்ன? சக்தி, வீர்யம் அல்லது தனிப் பட்ட போர் முறைகள் என்ன? லக்ஷ்மணனுடைய வீர்யம் போர் செய்யும் முறை இவற்றையும் நன்றாகத் தெரிந்து கொண்டு வாருங்கள். யார் அவர்கள் சேனாபதி? இதையும் தெரிந்து கொண்டு சீக்கிரம் திரும்பி வாருங்கள். இவ்வாறு கம்பீரமாக கட்டளையிட்ட பின், சுக, சாரணர்கள் என்ற ராக்ஷஸர்கள் இருவரும், தாங்களும் வானர ரூபம் எடுத்துக் கொண்டு, கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே நுழைந்தனர். எண்ண முடியாத பெரும் கூட்டமாக இருந்த வானர சேனையைக் கண்டு மலைத்து விட்டனர். மலைகள் மேலும், அருவிகளிலும், குகைகளிலும், சமுத்திர கரையிலும், உப வனங்களிலும், எங்கு நோக்கினாலும் வானர வீரர்களே காணப்பட்டனர். நீந்த தயாராக இருந்த சிலர், நீந்தி கரையேறிய சிலர், நீந்த ஆசைப்பட்டாலும் தயங்கி நீரில் இறங்க பயந்தபடி சிலர், ஊருக்குள் நுழைந்தவர்கள், நுழைய காத்திருப்பவர், என்று பலவகையிலும், பலசாலிகளான வானரங்கள், உச்சஸ்தாயியில் தங்களுக்குள் பேசிக் கொள்வது கேட்டது. சமுத்திரம் போலவே அளவில் இருந்த அந்த சேனை, அந்த சமுத்திரம் போலவே அடுத்தடுத்து வந்து கொண்டேயிருப்பதை சுக, சாரணர்கள் கண்டனர். மறைந்து, ஒளிந்து நடமாடிய இவ்விருவரையும் விபீஷணன் கண்டு கொண்டான். இருவரையும் பிடித்து ராமரிடம் அழைத்துச் சென்றான். ராமா, இவர்கள் இருவரும் ராவணனுடைய மந்திரிகள். சுக, சாரணர்கள் என்று தெரிவித்தான். லங்கை நகரத்திலிருந்து ஒற்று வேலை செய்ய வந்திருக்கிறார்கள் என்றான். உயிர் வாழ்வதில் நம்பிக்கையே இற்றுப் போன நிலையில், முகம் வெளிறி, பயந்து நடுங்கியபடி நின்றிருந்த இருவரையும் ராமர் ஏறிட்டுப் பார்த்தார். கூப்பிய கரங்களுடன் தங்கள் நிலையை எடுத்துச் சொன்னார்கள். ராஜன், நாங்கள் இருவரும் எங்கள் அரசன், ராவணன் அனுப்பித் தான் வந்தோம். ரகு நந்தனா, இந்த படையின் பலத்தை அறிந்து கொள்ளத்தான் வந்தோம் என்றனர். உடனே ராமர் சிரித்துக் கொண்டே, படை பலம் முழுவதும் பார்த்து விட்டீர்களா? எங்களை நன்றாக பரீக்ஷித்து தெரிந்து கொண்டீர்களா? உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை பூர்த்தி செய்து கொண்டு சௌக்யமாக போய் வாருங்கள். இன்னமும் பார்க்காதது இருந்தால் நன்றாக பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதையும் தெரிந்து கொள்ளுங்கள். விபீஷணனே அழைத்துச் சென்று காட்டுவான் என்றார். எல்லா ஜீவராசிகளிடம் தயை மிகுந்த பரம்பொருளான ராகவன், மேலும் பரிவுடன், பிடிபட்டோமே என்று பயம் வேண்டாம். ஆயுதம் இன்றி இருப்பவர்களோ, பிடிபட்டவர்களோ, தூதனாக வருபவனோ, இவர்களைக் கொல்லக் கூடாது. மறைந்து ஓளிய வேண்டாம். உங்கள் சுய ரூபத்தில், விபிஷணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, லங்கை திரும்பிச் சென்று, த4னத3ன் சகோதரனான ராவணனிடம் நான் சொன்னதாகச் சொல்லுங்கள். நான் இப்பொழுது சொல்வது போலவே, ராக்ஷஸ ராஜாவிடம் சொல்லுங்கள். எஎந்த பலத்தை நம்பி சீதையை என்னிடமிருந்து கடத்திக் கொண்டு வந்தாயோ, அதைக் காட்டு. உன் இஷ்டம் போல, சைன்யத்துடன், உற்றார், உறவினருடன், நாளை காலையில் நாங்கள் லங்கையைத் தாக்கும் பொழுது காட்டு. பிராகாரங்களையும், தோரணங்கள் அலங்கரிக்கும் மாளிகைகளையும், ராக்ஷஸ பலமும் எங்கள் முன் தோற்று அடி பணிந்து நிற்கப் போவதைப் பார். ராவணா, வரப் போகும் யுத்தத்தில் நான் என் கோபத்தைக் காட்டப் போகிறேன். உன்னால் தாங்க முடியுமா, பார். நீயோ, உன் சைன்யமோ எதிரில் நிற்க முடியாமல் ஓடத்தான் போகிறீர்கள். நாளைக்காலை, இந்திரன் வஜ்ரத்தை தானவர்கள் பேரில் பிரயோகித்ததைப் போல, நானும் ஆயுதப் பிரயோகம் செய்யப் போகிறேன். தயாராக இரு இது தான் நான் ராவணனுக்குச் சொல்லும் பதில் செய்தி. போய் சொல்லுங்கள் என்று சொல்லி சுக, சாரணர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் ராகவனைப் பார்த்து ஜய, ஜய என்று வாழ்த்தி தர்ம வத்ஸலனான ராகவனை நினைத்தபடி லங்கை வந்து சேர்ந்தனர். ராவணனைக் கண்டு நடந்ததைச் சொன்னார்கள். ராவணா, ராக்ஷஸேஸ்வரா, விபீஷணன் எங்களைக் கண்டு கொண்டான். ராகவன் முன் கொண்டு நிறுத்தினான். நியாயமாக நாங்கள் வதம் செய்யப் பட்டிருக்க வேண்டும். அளவில்லா தேஜஸ் உடைய தர்மாத்மா ராமன். எங்களை விடுவித்து விட்டான். நான்கு லோக பாலர்களும் ஒன்றாக இருப்பது போல இந்த நால்வரும் சிறந்த மனிதர்களாக, உத்தமமான குணம் உடையவர்களாக சேர்ந்திருக்கிறார்கள். தாசரதியான ராமன், ஸ்ரீமான் லக்ஷ்மணன், விபீஷணனும், சுக்ரீவனும் நல்ல தேஜஸுடன் மகேந்திரனுக்கு சமமான விக்ரமத்துடன் இருக்கிறார்கள். இப்பொழுது தோரணங்கள் தொங்க அழகான ப்ராகாரங்களுடன் விளங்கும் லங்கையையே பெயர்த்து எடுத்துச் சென்று விடுவார்கள். மற்ற வானர வீரர்கள் இருக்கட்டும், ராமனுடைய ரூபமும், போரில் அவனது அணுகு முறையும் பார்த்தால், அவன் ஒருவனே லங்கையை நாசம் செய்ய போதுமானது. நீங்கள் மூவரும் சேர்ந்தும் எதுவும் செய்ய முடியாது. ராம, லக்ஷ்மணர்களால் பாலிக்கப் பட்டு வரும் சுக்ரீவனின் வானர சேனை, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் வந்தாலும் கூட பிளக்க முடியாதது. பத்து யோஜனை விஸ்தீர்ணமும், நூறு யோஜனை நீளமும் உள்ள சேது கட்டப் பட்டதை கண் முன்னே காண்கிறோம். சாகரத்தைக் கடந்து சேனையும் வந்து சேர்ந்து விட்டது. நத நதீபதியின் தென் திசையில் ராமன் தன் சேனையுடன் வந்து தங்கியிருக்கிறான். தாண்டி வந்து சேர்ந்து விட்டவர்களும், இன்னும் வந்து கொண்டிருப்பவர்களுமாக சேனையில் உள்ளோரின் பலமும் சக்தியும் சொல்லத் தரமன்று. கொடியைத் தூக்கிக் கொண்டு வானர வீரர்கள் மகிழ்ச்சியுடன் முன்னேறி வருகிறார்கள். ஆவலுடன் யுத்தம் செய்ய வருகின்றனர். அவர்களுடன் விரோதம் பாராட்ட வேண்டாம். நம் நிலைமையை உணர்ந்து அமைதி காப்போம். சீதையை தாசரதிக்கு கொடுத்து விடு என்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சுக, சாரண ப்ரேஷணாதிகம் என்ற இருபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)