பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டம் 41 – 56

பிப்ரவரி 26, 2014

அத்தியாயம் 41 (448) அங்க33 தூ3த்யம் (அங்கதன் தூது செல்லுதல்)

 

சுக்ரீவன் திரும்பி வந்தவுடன், ராமர் அவனை மார்புற அணைத்து என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் இது என்ன சாகஸம்? அரசனாக இருப்பவன் இது போல முன் யோஜனையின்றி சாகஸ காரியங்கள் செய்வது நல்லதல்ல. என்னையும் இந்த பெரிய சைன்யத்தையும், விபீஷணனையும், குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு, நீ கஷ்டமான காரியத்தில் துணிந்து இறங்கியிருக்கிறாய். சாகஸப்ரிய, இதனால் நாங்கள் எப்படி தவித்துப் போனோம் தெரியுமா? யோஜனையின்றி இது போல இனி செய்யாதே. உனக்கு ஏதாவது நேர்ந்தால், சீதையினால் தான் எனக்கு என்ன லாபம்? நீளமான கைகளையுடைய பரதனாலோ, இளையவன் லக்ஷ்மணனாலோ, சத்ருக்களை அழிக்கும் சத்ருக்னனாலோ என் சரீரத்தாலேயே கூட எனக்கு என்ன பயன்? நீ மட்டும் திரும்பி வராமல் இருந்தால், நான் என்ன தீர்மானம் செய்து கொண்டேன் தெரியுமா? உன் வீர்யம் தெரிந்தது தான். மகேந்திரன், வருணனுக்கு சமமான வீரர் தான், இருந்தாலும், ஒரு வேளை முடிவு விபரீதமாக போயிருந்தால், நான் என்ன செய்திருப்பேன், தெரியுமா? ராவணனை யுத்தத்தில் ஜயித்து, விபீஷணனை ராஜ்யாபிஷேகம் செய்வித்து விட்டு, அயோத்தி சென்று பரதனை அங்கு நிரந்தரமாக அரசனாக நியமித்து விட்டு, நான் என் சரீரத்தை தியாகம் செய்திருப்பேன்.  ராமர் இப்படி சொல்லவும், சுக்ரீவன் தன் செயலுக்கு மன்னிப்பு வேண்டினான். காரணம் விவரித்தான். உன் மனைவியைக் கடத்திச் சென்ற ராக்ஷஸ ராஜா, ராவணனைப் பார்த்தவுடன் எனக்கு பொறுக்க முடியவில்லை. என் பலம் தெரிந்து என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு, ஒரு கை பார்க்கலாம் என்று நினைத்தேன், என்றான். அவனை அவர் வீர செயலுக்காக பாராட்டி விட்டு, ராமர் லக்ஷ்மீ சம்பன்னனான லக்ஷ்மணனைப் பார்த்து, மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி விவாதிக்கலானார். குளிர்ந்த நீர் இருக்கும் இடம், பழங்கள் நிறைந்த வனங்கள் இவற்றை கைப்பற்றி நம் படை வீரர்களை வ்யூஹம் அமைத்து நிற்கச் செய்வாய்.  உலகமே அழியும் வண்ணம், மிகப் பெரிய யுத்தம் நம் முன்னால் நிற்கிறது. எதிரிகளின் சைன்யத்தை அழிக்கும் சமயம், நம் வானர, கரடி வீரர்களை பாதுகாப்பாகவும் வைக்க வேண்டும். காற்று கூட கடுமையாக வீசுகிறது. பூமி நடுங்குகிறது.  மலையின் உச்சிகள் ஆடுகின்றன. மரங்கள் தானாக விழுகின்றன. மேகங்கள் கழுகுகள் போல தோற்றமளிக்கின்றன. இடி இடிப்பதும்,  வழக்கமான  முழக்கமாக இல்லாமல் ஏதோ கெடுதல் நடக்கப் போவதை முறையறிவிப்பதைப் போல இடிச் சத்தம் கேட்கிறது. மழை பொழிவதும் க்ரூரமாக இருக்கப் போகிறது. ரத்தத் துளிகள், கலந்த வர்ஷா மழையாக இருக்கப் போகிறது. சந்த்யா கால வானத்தைப் பார். ரக்த சந்தனம் போல சிவந்த நிறத்தில், இதுவும் மனதில் பயத்தையே உண்டு பண்ணுகிறது. ஆதித்யனிடமிருந்து அக்னி மண்டலம் சிதறி விழுவதைப் போல தனித் தனியாக பிரகாசம் தெரிகிறது. இதுவும் மனதில் திகிலையே மூட்டுகின்றன.  மிருகங்களும் பக்ஷிகளும் தீனமாக அலறுகின்றன. பிரகாசம் இல்லாத இரவு, சந்திரனும் எங்கு மறைந்தானோ. உலகம் முடியும் சமயம்,பிரளய காலத்தில், கரும் சிவப்பு நிறத்தில் கிரணங்களோடு சந்திரன் இருப்பான் என்று கேள்வி பட்டிருக்கிறேன். இதன் ஒளி வட்டத்தைப் பார். அதுவும் ஏதோ கிரஹத்தால் பீடிக்கப் பட்டது போலவும், சிவந்த (நெருப்பில் போடப் பட்ட இரும்பு வர்ணம்) வண்ணமும், கொடூரமாகவும், தெளிவின்றியும் இருக்கிறது.  சூரியனுடைய பாதையில் லக்ஷ்மணா ஒரு கரும் புள்ளி போல கறையாகத் தெரிகிறது. நக்ஷத்திரங்களைப் பார். யுக முடிவில் நாம் இருப்பது போல பிரமை உண்டாகிறது.  லக்ஷ்மணா காகங்களும், கழுகுகளும், கருடன்களும் கீழ் நோக்கி விழுகின்றன. குள்ள நரிகள் அமங்கலமாக ஊளையிடுகின்றன. மலைத் துண்டுகளைக் (கற்களை) சூலங்களையும், வாட்களையும் கொண்டு, வானர, ராக்ஷஸர்கள் இடையே பெரும் போர் நடக்கப் போகிறது. பூமியில், யுத்தத்தில் மடிந்தவர்களின் ரத்தமும் நிணமும், மாமிசமும் சேறாக ஓடப் போகிறது.  நாம் சீக்கிரம், இன்றே ராக்ஷஸன் பாலித்து வரும் இந்த லங்கையை முற்றுகையிடுவோம். வானர சேனை நம்முடன் பாதுகாப்பாக வரட்டும். நாலா புறமும் இடைவெளியின்றி சூழ்ந்து கொள்வோம். கிளம்புங்கள் என்று ஆணையிடவும், அந்த மலையின் மேலிருந்து வேகமாக கீழே இறங்கினார். கீழே இறங்கி நின்று எதிரிகளால் சேதப் படுத்த முடியாதபடி அமைக்கப் பட்டிருந்த தன் படையின் அணி வகுப்பை பார்வையிட்டார். நேரம், காலம் இவற்றின் தன்மைகளை அறிந்தவராதலால், தாங்கள் புறப்பட சரியான நேரத்தை தேர்ந்தெடுத்துச் சொன்னார். சரியான நேரத்தில் தன் வில்லை கையில் எடுத்துக் கொண்டு யாவருக்கும் முன்னால் லங்கையை நோக்கி நடந்தார்.  சேனையும் தொடர்ந்து ராமர் கூடவே, விபிஷண, சுக்ரீவர்கள், ஹனுமான், ஜாம்பவான், நலன், ருக்ஷராஜன், நீலன், லக்ஷ்மணன் என்று வரிசையாக உடன் சென்றனர். பூமியே தெரியாதபடி மறைத்துக் கொண்டு, ருக்ஷ, வானரர்களின் சைன்யம் அதன் பின் சென்றது. யானை அளவு பெருத்த உடலைக் கொண்ட வானரங்கள் சிலர், மலையில் இருந்து பெயர்த்து எடுத்து வந்த கற்களையும், சிலர் வேரோடு பிடுங்கிய மரங்களையும் வைத்திருந்தனர். சீக்கிரமே, ராம லக்ஷ்மணர்கள், லங்கை வந்து சேர்ந்தனர்.  கொடிகள் பறக்க, அழகிய உத்யான வனங்கள், மாளிகைளில் கொடிகள் பறந்தன, அதுவே அழகிய காட்சியாக இருந்தது. வேலைப்பாடமைந்த வாயில் கதவுகள்.  உயர்ந்த பிராகாரங்கள். அதில் கட்டப்பட்டிருந்த தோரணங்கள்.  தேவர்களும் எளிதில் நுழைய முடியாதபடி, பாதுகாவலுடன் விளங்கிய கோட்டை. இந்த கோட்டைக்குள் வானர வீரர்கள், ராமரின் ஆணைப்படி, தங்களால் முடிந்தவரை முற்றுகையிட்டனர்.  லங்கையின் வடக்கு வாயில் மற்ற வாயில்களைக் காட்டிலும் உயர்ந்தது.  மலையின் சிகரம் போல தோற்றமளித்தது. அந்த இடத்திற்கு வில்லேந்திய வீரர்களாக ராம லக்ஷ்மணர்கள் வந்து சேர்ந்தனர். லங்கையின் வெகு அருகில், தாங்கள் தங்கும் பாசறையை அமைத்துக் கொண்டு, தசரதாத்மஜனான ராமன், லக்ஷ்மணனுடன், ராவணன் ஆட்சிக்குட்பட்ட, லங்கையில், ராவணன் தானே நின்று எதிர்க்கப் போவதாகச் சொன்ன வடக்கு வாசலில் போருக்குத் தயாராக நின்றனர். அந்த வாசலில் ராவணனைத் தவிர வேறு யாராலும் நிற்க முடியாது. சாகரத்தை வருணன் ரக்ஷிப்பது போல அந்த இடத்தை ராவணன் கடுமையான காவலுடன் ஆயுதம் தாங்கிய வீரர்களை நிறுத்தி, சாதாரண பொது ஜனங்களை அச்சுறுத்தும் விதமாக தயார் செய்து வைத்திருந்தான்.  பாதாளத்தை தானவர்கள், தங்களுக்கே சொந்தமானது என்று ரக்ஷிப்பது போல லங்கை நகரை தன்னுடையது என்று ரக்ஷித்தான்.  போர் வீரர்களுக்கான ஆயுதங்கள் கணக்கின்றி, அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. ஆயுதங்கள் குவியலாக அதே அளவு கவசங்களும் கிடந்தன. வாயில் அருகில் சென்று, முதலில் நீலன் கிழக்கு வாசலில், மைந்தன், த்விவிதனோடு சேர்ந்து முற்றுகையிட்டான்.  அங்கதன் தெற்கு வாயிலில் தன் முற்றுகையைத் துவங்கினான். ருஷபன், க3ஜன், க3வாக்ஷன், க3வயன், இவர்களுடன் ஹனுமான் மேற்கு வாசலை அடைந்தார். ப்ரமாதீ3, ப்ரக4ஸன், மற்றும் பலரும் உடன் வர, சுக்ரீவன் மத்தியில் நின்றான். சிறந்த வானர வீரர்களுடன்,  சுபர்ண (கருடன்) ஸ்வஸனன் (காற்று) இவர்களுக்கு சமமான வேகம் படைத்த (36) முப்பத்தாறு கோடி வானரர்கள், தனித் தனி குழுக்களாக அதனதன் தலைவர்களுடன் தயாராக இருக்க, சுக்ரீவன் தன் முற்றுகையைத் தொடர்ந்தான். ராமர் ஆணைப்படி, லக்ஷ்மணன், விபீஷணன் கூடச் சென்று, ஒவ்வொரு வாசலிலும், கோடி கோடி வீரர்களை நியமித்தான். சுக்ரீவனும், ஜாம்பவானும் தாங்கள் முற்றுகையிட்ட இடத்தை,  ராமருக்கு எந்த நேரத்திலும் சகாயமாக இருக்கும் படி அருகில் அமைத்துக் கொண்டனர்.  வானர சார்தூலர்கள் எனப்பட்ட, பல வானரங்கள் சார்தூலம் (சிறுத்தை) போன்றே பற்களுடையவர்களாக இருந்தனர். கைகளில் மரக்கிளைகளைப் பிடித்தபடி, மகிழ்ச்சியுடன் யுத்தம் செய்ய காத்திருந்தனர். பற்களும், நகங்களுமே ஆயுதங்களாக வால்களை சுருட்டிக் கொண்டு காத்திருந்தனர். விதம் விதமான உருவமும், முகமும் கொண்டவர்கள். சிலர் பத்து யானை பலம் எனக்கு என்றால், மற்றும் சில எனக்கு ஆயிரம் யானை பலம் என்றன.  மற்றும் சில, நூறு பங்கு அதிக பலம் எனக்கு என்று சொல்லிக் கொண்டாலும் அனைவருமே சமமான பலம் கொண்டவர்களே. விட்டில் பூச்சிகள் கூட்டமாக வருவது போல இந்த வானர கூட்டம் அலை மோதியது.  ஆகாயத்தை நிரப்பி பரவும் விட்டில் பூச்சிகள் போலவே, இந்த வானர வீரர்களின்  கூட்டமும், தரையை மறைத்தது. துள்ளி குதித்துக் கொண்டு லங்கையின் அருகில் வந்து விட்ட, ருக்ஷ, வானரங்கள், நூறு நூறு கோடி வானரங்கள் ஒரே சமயத்தில் மலையின் மேல் தோன்றின. இருபதாயிரம் வீரர்கள் யுத்தம் செய்யத் தயாராக, ஊருக்குள் செல்ல முயன்றன. கைகளில் ஒடித்த மரக்கிளைகளுடனும், வானரங்கள், வாயு கூட நுழைய முடியாது என்று பெயர் பெற்ற லங்கையை சுற்றிச் சூழ்ந்து கொண்டன. திடுமென தென்பட்ட இந்த வானரங்களின் தாக்குதலால் ராக்ஷஸர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.  மேகம் போன்று பெருத்த உடலும், இந்திரனுக்கு சமமான பலமும் கொண்ட வானரங்கள் படையுடன் நெருங்கி வருவதால் உண்டான சப்தமும் மிக அதிகமாக இருந்தது. காடும் மலைகளும் கொண்ட லங்கையே நடுங்குவது போல இருந்தது.  ராம லக்ஷ்மணர்களால் பாதுகாக்கப் பட்டு சுக்ரீவன் தலைமையில் கூடிய அந்த சேனை, தேவர்களும் உள்ளே நுழைய முடியாதபடி நெருங்கி நின்றது. ராக்ஷஸர்களின் வதம் தான் குறிக்கோள் என்பதை அவர்களிடம் பல முறை எடுத்துச் சொல்லியும், அடிக்கடி தலைமை தாங்கும் வீரர்களுடன் கலந்தாலோசித்தும், ராமர் உத்தரவுகள் பிறப்பித்தார். க்ரமம், யோகம், ஆனந்தர்யம் என்ற நிலைகளை நன்கு அறிந்தவரான ராமர், மூன்றாவது நிலையான ஆனந்தர்யம் என்ற நிலையை அடைய, ராஜ தர்மத்தையும் நினைவில் கொண்டு, விபீஷணனும் அனுமதிக்க, வாலி புத்ரனான அங்கதனை அழைத்துச் சொன்னார். சௌம்ய தச வதனனிடம் போய் நான் சொன்னதாகச் சொல். ராக்ஷஸா லக்ஷ்மி உன்னை விட்டு விலக, ஐஸ்வர்யம் உன்னை விட்டுப் போகப் போகிறது. லங்கையை ஒரு கலக்கு கலக்கி, பயமின்றி, கவலையின்றி, உடல் வருத்தமும் இன்றி இருந்த நாட்கள் முடிந்து விட்டன. புத்தி மழுங்கி தப்பிக்க நினைக்கிறாயா. ரிஷிகளுக்கும், தேவதைகளுக்கும், கந்தர்வ, அப்ஸரஸ்களுக்கும், நாகர்களுக்கும், யக்ஷர்களுக்கும், அரசர்களுக்கும், இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸனே என்னவெல்லாம் பாபங்கள் செய்தாயோ, அலட்சியம் மிகுந்த மனதால் நீ செய்த கெட்ட காரியங்களின் பலன் இதோ எதிரில் வந்து நிற்கிறது. இதை உன்னால் தவிர்க்கவும் முடியாது. எதிர்க்கவும் முடியாது. இன்று ஸ்வயம்பூவான ப்ரும்மா தந்த வரத்தின் பலனால் நீ அடைந்த கர்வம் தீரப் போகிறது.  மனைவியை பிரிந்ததால் வருந்தும் நான் கையில் வில்லுடன் போர் செய்யத் தயாராக எதிரில் நிற்கிறேன். இதுவே உன் அழிவுக்குப் போதும். உன் லங்கையின் வாசலில், தண்டதாரியாக நிற்கிறேன். தேவதைகள், மகரிஷிகள், எல்லா ராஜரிஷிகள் இருக்கும் இடம் செல்லப் போகிறாய். எந்த பலத்தால், மாயையால் சீதையை தண்டகாரண்யத்தில் இருந்து என்னை மீறி தூக்கி வந்தாயோ, அந்த பலத்தை இப்பொழுது காட்டு. ராக்ஷஸாதமா என் கூர்மையான பாணங்களால், அராக்ஷஸம், ராக்ஷஸனே இல்லாமல் செய்யப் போகிறேன். என்னிடத்தில் மைதிலியை ஒப்படைத்து நீ சரணம் அடைந்தால், தப்பிக்கலாம்.  ராக்ஷஸ ஸ்ரேஷ்டன், தர்மாத்மா, விபீஷணன் எங்கள் பக்கம் வந்து விட்டான். நிச்சயமாக, லங்கா நகர் ஐஸ்வர்யத்தை முழுவதுமாக அவன் அடையப் போகிறான். ராஜ்யத்தை அதர்மத்தின் துணையோடு வெகு நாள் ஆள முடியாது. விஷயம் தெரியாத மூர்க்க மந்திரிகளின் சகாயத்தோடு ராஜ்யத்தை ஆளுவது எளிதல்ல.  தைரியமாக வந்து யுத்தம் செய். ராக்ஷஸா உன் வீரத்தை துணையாக கொண்டு எதிரில் வா. என் பாணங்களால் அடிபட்டு பாவனமாக ஆகி உயிரை விடுவாய். மூன்று உலகையும் பக்ஷியாக மனோ வேகத்தில் கடந்து சென்று ஒளிந்து கொள்ளப் பார்த்தாலும், என் பார்வை பட்டாலே, உயிருடன் திரும்பி வர மாட்டாய். உன் நன்மைக்காக சொல்கிறேன். உன் சரீரம் போன பின், கிடைக்கும் பரலோக வாழ்க்கையை எண்ணி இப்பொழுதே லங்கையை கண்டு மகிழும் நிலையில் வைத்துக் கொள். நான் வந்து எதிரில் நின்ற பின், உனக்கு விமோசனம் ஏது? இந்த உலக வாழ்க்கை தான் ஏது?  இவ்வளவையும் கேட்டு, மனதில் பதிய வைத்துக் கொண்டு, தாராவின் மகனான அங்கதன், ஆகாய மார்க்கத்தை அடைந்து, ஹவ்யவாகனன (அக்னி) உருக்கொண்டு வந்தது போல வேகமாக விரைந்து சென்றான். முஹுர்த்த நேரத்தில், ராவணன் மாளிகையை அடைந்து, மந்திரிகளுடன் ராவணன் தன் சபையில் வீற்றிருப்பதைக் கண்டான். அவனுக்கு அருகில் குதித்து எழுந்த அங்கதன், புஜங்களில் அவன் சூடியிருந்த கனகாங்கதங்களுடன், நெருப்புத் துண்டம் திடுமென எதிரில் விழுந்தது போல இருந்தான்.  ராமனின் வார்த்தைகளை, குறையாமலும், மிகையாகாமலும், உள்ளபடி தெரிவித்தான். தன்னை யார் என்று சொல்லிக் கொண்டு, மந்திரி சபையில் யாவருக்கும் முன்பாக தூது வந்த விஷயத்தை தெரிவித்தான். கோஸலேந்திரனின் தூதன் நான்.  தெளிவாக செயல் படும் ராமனின் தூதன் நான். வாலி புத்திரன் அங்கதன் என்பான், நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம்.  கௌசல்யானந்த வர்தனன் ராமன் தெரிவிக்கச் சொன்ன ஒரு விஷயம் இந்த சபையில் சொல்லவே வந்தேன். எழுந்து வந்து நேருக்கு நேர் போரிடு. மனிதனாக இரு. கொமூடுரமான செயல்களைச் செய்பவனே உன்னை உன் மந்திரிகளுடன், உற்றார், உறவினரோடு அழிக்கவே வந்து நிற்கிறேன், நான். மூன்று உலகமும் தற்சமயம், நீ மரித்ததைக் கொண்டாடப் போகிறது. இடையூறு விலகியது என்று மகிழப் போகிறது. தேவ, தானவ, யக்ஷர்களுக்கும், கந்தர்வ, உரக, ராக்ஷஸர்களுக்கும், சத்ருவான உன்னை இன்று நான் மேலுலகம் அனுப்பப் போகிறேன். முள்ளாக உறுத்திக் கொண்டு இடையூறு செய்தாயே, அந்த ரிஷிகள் மகிழ்ச்சியடையும் படி உன்னை நான் வதம் செய்யப் போகிறேன். நீ வீழ்ந்தவுடன் இந்த அரசு விபீஷணனுக்குப் போகும்.  வைதேஹியை மரியாதையுடன் வணங்கி என்னிடம் ஒப்புவிக்கவில்லையெனில், உன் கதி அதோ கதி தான். இவ்வாறு கடுமையாகப் பேசிக் கொண்டே போகும் அங்கதனைப் பார்த்து  அளவில்லா ஆத்திரம் கொண்ட ராக்ஷஸேந்திரன், கண்கள் தாம்ரம் போல சிவக்க, தன் மந்திரிகளுக்கு கட்டளையிட்டான். பிடியுங்கள் இந்த மூர்க்கனை. அறிவில்லாத இவனைக் கொல்லுங்கள்  என்று திரும்ப திரும்பச் சொன்னான். ராவணனின் உத்தரவை நிறைவேற்ற நான்கு வீரர்கள் வந்து அங்கதனைக் கட்டிப் பிடித்தனர். அக்னி ஜ்வாலை போன்று இருந்த தாரா புத்திரனை, அழுத்தி பிடித்தனர்.  தன் பலத்தை இந்த ராக்ஷஸர்களுக்கு காட்டுவது என்று நிச்சயம் செய்து கொண்ட அங்கதன், தன்னை அமுக்கி பிடித்திருந்த வீரர்களுடனேயே ஆகாயத்தில் எழும்பினான். மலை போல உயர்ந்து நின்ற மாளிகையின் உச்சியின் நின்று கொண்டு அவர்களை கை நழுவ விட்டான். அந்த உயரத்திலிருந்து, அந்தரத்தில் இருந்து விழுவது போல அந்த ராக்ஷஸ வீரர்கள், தடாலென்று கீழே விழுந்தார்கள்.  இதன் பின் ராக்ஷஸ ராஜனைக் கூப்பிட்டு, அங்கதன்  மாளிகையின் சிகரத்தைக் காட்டினான். அவன் கண் முன்னாலேயே, கால்களால் ஓங்கி உதைக்க அந்த மாளிகை விரிசல் கண்டது.  முன்னொரு காலத்தில் ஹிமவானின் சிகரத்தை வஜ்ரதாரியான இந்திரன் பிளந்தது போல பிளந்தது.  மாளிகையை இடித்து விட்டு, தன் பெயரைச் சொல்லி அறை கூவி அழைத்து, பெரும் குரலில் கோஷம் செய்தபடி ஆகாயத்தில் தாவி குதித்தான். எல்லா ராக்ஷஸர்களும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, வானரங்கள் ஆரவாரம் செய்ய, வானரர்கள் மத்தியில் நின்றிருந்த ராமனிடம் வந்து சேர்ந்தான்.

 

ராவணன் தன் மாளிகை இடிந்ததில் பெரும் கோபம் கொண்டான். தன் விநாச காலம் ஆரம்பித்து விட்டது என்றும் உணர்ந்து கொண்டவன் போல பெருமூச்சு விட்டான். இங்கு ராமனோ, ஏராளமான வானர வீரர்கள் ஏக காலத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, சத்ருவை வதம் செய்வதில் இன்னும் தீவிரமான முனைப்போடு ஏற்பாடுகளைச் செய்யலானார்.  ஒரு பெரிய மலையே வந்து எதிரில் நிற்பது போன்ற, மிகப் பெரிய சரீரம் உடைய சுஷேணன், பல வானரங்கள் சூழ, நல்ல வீர்யவானான அவன், சுக்ரீவன் கட்டளைப்படி, நான்கு கோட்டை வாசல்களிலும் முற்றுகையிட்டிருந்த வானர வீரர்களை மேற் பார்வையிட்டபடி, சுற்றிச் சுற்றி வந்தான்.  நக்ஷத்திரங்கள்,  அம்புலியைச் சுற்றுவது போலிருந்தது. நூறு அக்ஷௌஹிணி வீரர்களின் தேவைகளை கவனித்து வந்தான். சமுத்திரம் போன்று பரந்து விரிந்திருந்த சேனையைக் கண்டு ராக்ஷஸ சமூகம் வியந்தது. கூடவே பயமும் எழுந்தது. ஒரு சிலர் பெரும் யுத்தம் வருகிறது என்று மகிழ்ச்சியடைந்தனர். வெளிப் பிராகாரங்கள் முழுவதும் வானரங்களால் நிரம்பி வழிந்தது. ராக்ஷஸர்கள் அதைக் காணவே முடியாமல் திகைத்தனர். வெளிப் பிராகாரமே  வானர மயமாக ஆகிவிட்டது. (வானரீ க்ருதம்). எதுவும் செய்ய முடியாமல் கை பிசைந்து நின்றனர். ஹா ஹா என்று சிலர் பயத்துடன் அலறினர்.  ராக்ஷஸ ராஜதானி, என்றும் இல்லாத காட்சியாக  கோலாகலமாக, அடி மனதில் பயம் இருந்தாலும்,  வெளிக்காட்டிக் கொள்ளாமல், தங்கள் பொறுப்பை உணர்ந்த சில ராக்ஷஸர்கள், கைக்கு கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சஞ்சரித்தனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண அங்க33 தூ3த்யம் என்ற நாற்பதாவது ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 42 (449)  யுத்3தா4ரம்ப4: ( யுத்த ஆரம்பம்)

 

இதன் பின் ராக்ஷஸர்கள் கூட்டமாக ராவணன் மாளிகையை அடைந்தனர். ராமன், எண்ணற்ற வானர வீரர்களுடன் முற்றுகையிட்டு நகரை சூழ்ந்து கொண்டு நிற்பதை அறிவித்தனர். தன் நகரம் சூழப்பட்டதையறிந்து கடும் கோபம் கொண்ட ராவணன், இரண்டு இரண்டு படிகளாகத் தாவி ஏறி மாளிகையின் உச்சிக்கு ஏறிச் சென்று சுற்றும் முற்றும் பார்த்தான். மலைகளுடனும், கானனங்கள், வனங்களுடன், தான் கவனமாக பாதுகாத்து வந்த லங்கா நகரம், கண் முன்னால் கணக்கில்லாத வானரங்கள் ஆக்ரமித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானரங்களே தென் பட்டன. பூமியைக் கூட காண முடியவில்லை. இந்த கூட்டத்தை எப்படி சமாளிப்போம் என்று கவலை கொண்டான். வெகு நேரம் யோசித்து, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கூர்ந்து பார்த்த பொழுது ராமன், தன் வீரர்கள் சூழ நிற்பதைக் கண்டான், தன் சைன்யத்தின் மத்தியில் ஏதோ பேசிக் கொண்டே, ஒருவித திருப்தியும், மகிழ்ச்சியும் முகத்தில் தெரிய, எதேச்சையாக லங்கையை நோக்கினார். நாலா புறமும் ராக்ஷஸர்கள் காவல் இருக்க, மிகுந்த பாதுகாப்புடன் ரக்ஷிக்கப் பட்ட நகரம், அழகிய கொடிகளும், பட்டங்களும்  கட்டப் பெற்றது. இதைக் கண்டு ஒரு நிமிஷம் ரசித்த ராமர், மனதால் சீதையிடம் சென்று விட்டார். உடனே முகமும், மனமும் வாடியது. என் காரணமாக சீதை இங்கு சிறையில் இருக்கிறாள். பூமியில் படுத்து, இளைத்து துரும்பாகி, சோகமே உருவாக இருக்கிறாள். இந்த எண்ணம் வந்ததும், சட்டென்று தன்னை சமாளித்துக் கொண்டவராக, போர் வீரர்களுக்கு ஆணையிட்டார். எதிரிகளை வதம் செய்வோம், கிளம்புங்கள், எனவும், எல்லோருமாக சிம்ம கர்ஜனை செய்தனர். உற்சாகம் பொங்கி பெருகியது. இந்த லங்கையை எங்கள் முஷ்டியாலேயே தகர்ப்போம் என்று ஆரவரித்தனர். அனேகமாக எல்லா வானரங்களுமே, உடைத்த மரக்கிளைகளுடன், அல்லது, மலை மேல் பொறுக்கி எடுத்த கற்கள் இவற்றையே ஆயுதமாக வைத்துக் கொண்டிருந்தனர். இவையனைத்தையும், ராவணன் மாளிகையின் மேல் நின்றபடி பார்த்தான். ராமனுக்கு பிரியமானதை செய்வோம், என்று உற்சாகத்துடன் மலைகளில் மரங்களில் ஏறும் வானரங்களையும் பார்த்தான். தன் உயிரை பொருட்படுத்தாமல், உயிரை விடவும் துணிந்து சால, தால மரக்கட்டைகளை தூக்கிக் கொண்டு ஓடி வரும் வானரங்களின் மனோ பலம் ராவணனை சிந்திக்கச் செய்தது.  கையில் மலையில் எடுத்த கற்களோ, மரக் கிளைகளோ இல்லாத வானரங்கள், தங்கள் முஷ்டியை மடித்துக் காட்டின. ப்ராகாரம், அழகிய தோட்டம், தோரணங்கள் எல்லாவற்றையும் குதறி எடுத்தன. சுத்தமான ஜலம், பார்க்கவே ப்ரஸன்னமாகத் தெரிந்த சிறு குளங்கள், இவையும் வானர மயமாகவே தெரிந்தன. எங்கும் தூசு, புல்லும், சிறு கட்டைகளும் இரைந்தன. ஆயிரம் வீரர்கள் கொண்ட படை, கோடி வீரர்கள் கொண்டது, நூறு கோடி வீரர்கள் என்று தனித் தனியாக எங்கே நோக்கினும் வானர படை லங்கையை ஆக்ரமித்தபடி முன்னேறிக் கொண்டிருந்தன. பொன் மயமான தோரணங்களை பிடுங்கி எறிந்தன. கைலாச சிகரம் போன்ற கோபுரங்களை மிதித்து அழித்தன. இங்கும் அங்குமாக தாவி  குதித்து, ஓடியும், கர்ஜித்துக் கொண்டும், வானரங்கள், பெரிய பெரிய யானைகள் அளவில் உருவத்தாலும், லங்கையை சுற்றி ஓடின.  ஜயத்யதி ப3லோ, ராம: லக்ஷ்மணச்ச மகா ப3ல: (அதி பலசாலியான ராமனுக்கு ஜயம், அதே போல பலவானான லக்ஷ்மணனுக்கும் ஜயம்) என்று கோஷம் இட்டன. சுக்ரீவ ராஜாவுக்கு ஜயம். இவன் ராகவனால் பாதுகாக்கப் படுபவன். இந்த கோஷமும் கர்ஜனையும், லங்கையின் ப்ராகாரங்களில் முழங்கின. இந்த வானரங்கள் விரும்பிய வடிவம் எடுக்க வல்லவை என்பதையும் ராவணன் கவனித்தான். தங்களை சுறுக்கிக் கொண்டும், பெருக்கிக் கொண்டும் திரிந்தன. வீர பா3ஹுவும், சுபா3ஹுவும், நலனும், இது வரை காட்டிலேயே திரிந்தவர்கள். ப்ராகாரத்தில்  எப்படியோ நுழைந்து விட்டார்கள். இதற்கிடையில் குமுதன், பத்து கோடி வீரர்கள் கொண்ட படையுடன்,கிழக்குவாசல் காவலைத் தகர்த்துக் கொண்டு, உள்ளே நுழைந்து விட்டான். இவனுக்கு உதவி செய்ய ப்ரகஸன் என்ற வானரத் தலைவனும் உள்ளே வந்தான். பின்னாலேயே பல வானரர்களை உடன் அழைத்துக் கொண்டு பனஸனும் நுழைந்து விட்டான். தென் திசையில் சதப3லி என்ற வீரன், தன் இருபது கோடி வீரர்களுடன் உள்ளே நுழைந்தான். தாராவின் தந்தை முதியவரான சுஷேணன், மேற்கு வாயிலைக் கவனித்துக் கொண்டார். ஆறு கோடி வீரர்களுடன் முன்னேறி வந்தார். வட     திசையில், ராமர், லக்ஷ்மணனுடன் கூட முன்னேறி வர, சுக்ரீவனும் உடன் நுழைந்தான். கோ3லாங்கூ4லம் எனும் பெரிய உருவத்தையுடைய க3வாக்ஷன், பார்க்கவே பயங்கரமான உருவம் உடையவன், கோடிக் கணக்கான வீரர்களுடன் ராமனின் பக்கங்களில் வந்தான். தூ3ம்ர: என்ற கரடி ராஜன், படு வேகமாக செல்லக் கூடிய தன் வீரர்களுடன், மற்றொரு பக்கத்தில் ராமனுக்கு காவலாக உள்ளே நுழைந்தான். தயாரான நிலையில், கையில்  க3தை4யுடன் விபீஷணன், தன் மந்திரிகளுடன் தொடர்ந்தான். க3ஜன், க3வாக்ஷன், க3வயன், சரப4ன், க3ந்த4 மாத3னன் என்ற ஐவரும், முன்னால் நின்று ஓடி, ஓடி வானர சேனை கட்டுக் குலையாமல் பார்த்துக் கொண்டனர். இவற்றைக் கண்ட ராவணனுக்கு கோபம் தலைக்கேறியது. உடனே தன் படை வீரர்களுக்கு உத்தரவிட்டான். உடனே கிளம்புங்கள் என்று ராவணன் வாயிலிருந்து உத்தரவு வந்தது தான் தாமதம், ராக்ஷஸர்கள் பெரும் கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்தனர். பேரிகள் முழங்கின. சந்த்ர, பாண்டிர, புஷ்கர, ஹேம கோணம் எனும் வாத்யங்களை முழங்கியபடி ராக்ஷஸர்கள் உச்சஸ்தாயியில், போர் முழக்கம் செய்தனர். நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான சங்கங்கள் முழங்கின. ராக்ஷஸர்கள் வாயில் வைத்து ஊதிய பொழுது, ரஜனீசரர்கள் (இரவில் சஞ்சரிப்பவர்) என்ற அந்த ராக்ஷஸர்கள், ஒரே மூச்சாக இழுத்து ஊதியதாலேயோ என்னவோ, நீலம் பாரித்து, கிளியின் வர்ணத்தை அடைந்து விட்டது போல் இருந்தது. அதுவரை மேகங்கள் சஞ்சரித்துக் கொண்டு, மின்னல்களுடன் இருந்த ஆகாயம், இடி முழக்கம் கேட்டவுடன்  மழை பொழிய ஆரம்பித்தது போல, ராவணனின் ஆணை கிடைத்தவுடன், ராக்ஷஸ சேனையும் குதித்துக் கொண்டு ஆரவாரத்துடன் போருக்கு புறப்பட்டது. எதிர் கொண்டு வந்த ராக்ஷஸ சேனைக்கு பதில் கொடுப்பது போல, சமுத்திரத்தில் வேகமாக அடிக்கும் அலைகளின் ஓசைக்கு இணையாக, வானர சைன்யமும் முழக்கம் இட்டது. மலய மலையே நிரம்பி விட்டது போல தோன்றியது. சங்க துந்துபி கோஷங்களும், சிம்ம நாதமும், வேகமாக செல்லும் வீரர்கள் நடையோசையும், பூமியும் ஆகாயமும், சாகரமும் ஒரே சமயத்தில் நிரம்பி வழிவது போல காணப்பட்டது. யானைகள் பிளிறுவதும், குதிரைகள் கனைப்பதும், ரதங்களின் சக்கரம் ஓடும் சத்தமும், ராக்ஷஸர்கள் அதிர நடக்கும் ஓசையும், பெரும் யுத்தம் ஆரம்பமாகி விட்டதை உணர்த்தின. தேவாசுரர்களூள் முன் நடந்த பெரும் போரைப் போலவே, வானரங்களுக்கும், ராக்ஷஸர்களுக்கும்  இடையிலும் பயங்கரமான யுத்தம் மூண்டது. க3தைகளையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல பிரகாசிக்கும், சக்தி, சூலம், பரஸ்வதம் போன்ற ஆயுதங்களையும், தங்கள் பெயரையும், பராக்ரமத்தையும் சொல்லிக் கொண்டு, வானரர்களைத் தாக்கினர். வானரர்களும், ராக்ஷஸர்களை அடித்து நொறுக்கினர். ஜயத்யதி ப3லோ ராமோ, ராஜா ஜயதி சுக்ரீவோ, லக்ஷ்மணச்ச மகா ப3ல: என்ற கோஷம் வானையெட்டியது. ஜய ஜய என்று சொல்லியபடி ராக்ஷஸர்களை முஷ்டிகளாலும், தங்கள் பல், நகம், இவற்றாலும் தாக்கினர். மேலும் மேலும் ராக்ஷஸர்கள் தேர்ந்த வீரர்கள் யுத்த களத்தில் இறங்கிய வண்ணம் இருந்தனர். பிடிபாலம், வாள், சூலம், இவைகளை வீசியபடி, வேகமாக வந்தனர். வானரர்களும் கோபத்துடன் அவர்களை ப்ராகாரத்திலேயே கீழே தள்ளி மிதித்து அழித்தன. இருபக்கமும் அடிபட்டு, ரத்தமும், நிணமும் பெருக, சேறாகி போன பூமியில், ராக்ஷஸ வானரர்களின் சமமான பலத்தோடு யுத்தம் நடந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் யுத்3தா4ரம்போ என்ற நாற்பதாவது இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 43 (450) த்3வந்த4 யுத்34ம்

 

இரண்டு பக்கமும், வானர, ராக்ஷஸர்களின் மத்தியில் கடுமையாக பல பரீக்ஷை ஆரம்பித்தது. ராக்ஷஸர்கள் பத்து திக்கும் கேட்கும்படி உரத்த குரலில் கோஷம் செய்து கொண்டு வந்தனர். தங்கத்தால் ஆன பீடங்களையுடைய குதிரைகளின் கனைப்பும், அக்னி ஜ்வாலை போன்று பிரகாசிக்கும் த்வஜங்களுடன், ஆதித்யனுக்கு சமமான ரதங்களும், மனதைக் கவரும் கவசங்களுடனும் ராக்ஷஸர்கள், ராவணனுக்கு ஜயம் என்று சொல்லியபடி யுத்தம் செய்ய வந்தனர். படைகள் படைகளுடன் என்று ஆரம்பித்த யுத்தம் திடுமென, தனி நபர்களுக்கிடையில் நடக்கும் த்வந்த யுத்தமாக மாறி விட்டது.  ஒருவருக்கொருவர் முட்டிக்கொள்ளவும், தாக்கித் தள்ளவும் யுத்தத்தின் போக்கே மாறியது போல இருந்தது. ஹரி புத்திரனான அங்கதனுடன் இந்திரஜித் ராக்ஷஸன் மோதினான். முன் ஒரு காலத்தில்,  த்ரியம்பகனுடன், அந்தகன் மோதியது போல. எப்பொழுதும் ரணத்தில் எதிரிகளால் தாங்க முடியாத பலத்தைக் காட்டும்  சம்பாதியும், ப்ரஜங்கன் என்ற ராக்ஷஸனும் மோதினர். ஜம்புமாலியும், ஹனுமானும் மோதிக் கொண்டனர். சுமஹாக்ரோதோ (மிக அதிகமான கோபம் உடையவன்) என்ற ராக்ஷஸன், ராவண சகோதரனான விபீஷணனுடன் கைகலப்பு செய்தபடி, இருவரும் த்வந்த யுத்தம் செய்தனர். தபனன் என்ற ராக்ஷஸனுடன் கஜன் என்ற வானரம், நீலனும், நிகும்பனும், வானரேந்திரனான சுக்ரீவன் ப்ரகஸனுடன், விரூபாக்ஷனுடன் லக்ஷ்மணன் என்று தொடர்ந்தது. அக்னி கேது, ரஸ்மி கேது என்ற ராக்ஷஸர்கள், மறு புறத்திலிருந்து சுப்தக்னன், யக்ஞ கோபன் என்ற இருவரும் ராமருடன் சண்டையிட வந்தார்கள். வஜ்ர முஷ்டி என்பவன் மைந்தனுடனும், அக்னி ப்ரபன் என்பவன், த்விவிதனுடனும் என்று ராக்ஷஸர்களுக்கும், வானரர்களுக்கும் இடையில் தனித் தனியாக சண்டை மூண்டது. ப்ரதபனன் என்ற வீரன், ராக்ஷஸன், ரண துர்தரன் – என்பவன் நலனுடன் எதிர்த்து நின்றான். ராக்ஷஸனை போரில் அசைக்க முடியாது என்று பெயர் பெற்றவன் என்றால், வானரனான நலன் வேகத்தில் ஈடு இணை இல்லாதவன் என்று பெயர் பெற்றவன். தர்ம புத்திரன் சுஷேணன் வித்யுன்மாலி என்ற ராக்ஷஸனுடன் மோதி த்வந்த யுத்தம் செய்தான். மற்ற வானரங்களும் எதிர்ப் பட்ட ராக்ஷஸர்களுடன் கைகலந்து போரைத் தொடர்ந்தனர். பெரும் யுத்தம். மயிர்க்கூச்சல் எடுக்கும் விதமாக தொடர்ந்தது. இரு பக்கமும் வீரர்கள் வெற்றியை விரும்பும் பலசாலிகள். ராக்ஷஸர்களும், வானர வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் யுத்தம் செய்தனர். வானர, ராக்ஷஸர்கள் உடல்களிலிருந்து கேசம் உதிர்ந்து விழுந்தன. சரீரம் மோதுவதால் உண்டான ரத்தப் பெருக்கு நதியாக பெருகியது. வஜ்ரத்தை ஏந்தி இந்திரன் அடிப்பது போல, இந்திரஜித், வாலி புத்திரனான அங்கதனை அடித்தான். அங்கதனும்  க3தை4யை எடுத்துக் கொண்டு, சத்ரு சைன்யத்தை நாசம் செய்ய வல்ல தன்  க3தை4யால் இந்திரஜித்தின் பொன்னாலான வேலைபாடமைந்த ரதத்தை, அதன் குதிரைகளோடும், சாரதியுடனும் வேகமாக அடித்து நொறுக்கினான். சம்பாதி மூன்று பாணங்களால் ப்ரஜங்கனோடு போர் செய்தபடி, அஸ்வகர்ணம் என்ற ஆயுதத்தால் யுத்த பூமியில் ப்ரஜங்கனை அடித்து வீழ்த்தினான். ரதத்தில் நின்றபடி ஜம்புமாலி ரதத்தையே ஹனுமானின் மார்பில் ஓட்டினான். மாருதாத்மஜன், அந்த ரதத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு, தன் புறங்கையால் ஓங்கி அடித்தான். பெரும் கோஷத்துடன் நலனை நெருங்கிய ப்ரதபனன், நலன் கையால் கண்களை இழந்தான். தபனன் என்ற ராக்ஷஸன் கைகளில் கூர்மையான பாணங்களுடன் போரிட வந்தவனை கற்களால் அடித்தும், முஷ்டியால் குத்தியும் கஜன் வீழ்த்தினான். சைன்யங்களை தன் வாயில் போட்டு விழுங்குவது போல வந்த ப்ரகஸனை சுக்ரீவன், சப்த பர்ணம் என்ற ஆயுதத்தால் தாக்கி பிளந்தான். அம்புகளை மழையாக பொழிந்து பயங்கரமாக காட்சியளித்த ராக்ஷஸனை, விரூபாக்ஷனை, லக்ஷ்மணன் ஒரே பாணத்தால் கீழே விழச் செய்தான். நாலா புறமும் சூழ்ந்து நின்று அக்னி கேதுவும், ரஸ்மி கேதுவும், சுப்தக்னன், யக்ஞ கோபன் என்பவனுமாக ராக்ஷஸர்கள் ராமர் மேல் அம்புகளைப் பொழிந்தனர். நால்வரின் தலைகளையும் ஒரு கூர்மையான அம்பினால், கொய்து கீழே விழும்படி ராமர் செய்து விட்டார். வஜ்ர முஷ்டி மைந்தனுடன் போர் செய்த பொழுது, தன் முஷ்டியினாலேயே மைந்தன் அவனை விழச் செய்தான். அவன் ரதமும், குதிரையும் கூட பூமியில் விழுந்தன. கரு நீல மலை போல நின்ற நீலனை, நிகும்பன் எதிர் கொண்டான். சூரியன் தன் ஒளிக்கிரணங்களால் மேகத்தைத் துரத்துவது போல தன் கூரிய அம்புகளால் நீலனை பிளந்து தள்ள முயன்றான். ப்ரஹஸ்தன் என்ற ராக்ஷஸன், தானும் நூறு அம்புகளைக் கொண்டு நீலனை அடித்தான். தனக்கு சகாயமாக அவன் செய்ததை ஆமோதித்த நிகும்பன் பலமாக சிரித்தான். அவனுடைய ரத சக்கரத்தையே எடுத்து, யுத்தத்தில் விஷ்ணுவைப் போல அந்த சக்கரத்தால் நிகும்பனை காயப்படுத்தி, உதவிக்கு வந்த சாரதியையும் மாய்த்தான். த்விவிதன், அசனி என்ற இந்திரனின் ஆயுதம் போன்று கூர்மையாக இருந்த ஒரு கல்லை எடுத்து எல்லா ராக்ஷஸர்களும் திகைத்து நிற்கும்படி அடிக்கலானான். வானரேந்திரனான த்விவிதனுக்கு ஆயுதமே அது தானே. மலையின் சிகரமோ எனும்படி பெரிய பெரிய பாறைகளையே ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டவன் அவன். அசனிப்ரபன் என்ற ராக்ஷஸன், தானும் அசனிக்கு சமமான பாணங்களை கையில் எடுத்துக் கொண்டான். இந்த அம்புகள் உடல் பூரா தைக்கவும், காயங்களிலிருந்து ரத்தம் பெருக, கோபம் கொண்டு, ஒரு சால மரத்தையே எடுத்து ரதத்தையும் குதிரையையும் வீழ்த்தி அசனிப்ரபனை உயிரிழக்கச் செய்தான்.  வித்யுன்மாலீ, ரதத்தில் அமர்ந்தவனாக, தங்க முலாம் பூசப் பெற்ற தன் அம்புகளால் திரும்பத் திரும்ப சுஷேணனை அடித்தான். பெரும் கூச்சலுடன் திரும்பத் திரும்பத் தாக்கினான். ரதத்தில் இருந்த அவனைப் பார்த்து, சுஷேணன் ஒரு பெரிய கல்லை எடுத்து, ரதத்தை தூள் தூளாக்கினான். லாகவமாக தப்பி, கீழே இறங்கி நின்ற வித்யுன் மாலி, பூமியில் காலூன்றி நின்றபடி, தன் க3தையை எடுத்து போரைத் தொடர ஆரம்பித்தான். வானரோத்தமனான சுஷேணனும் கோபம் கொண்டு, கையில் பெரிய கல்லை எடுத்துக் கொண்டு, ராக்ஷஸனை துரத்திக் கொண்டு சென்றான். வித்யுன்மாலி என்ற அந்த ராக்ஷஸன், வேகமாக ஓடி வரும் சுஷேணனை மார்பில்  க3தை4யால் ஓங்கி அடித்தான். பயங்கரமான அந்த அடியையும் பொறுத்துக் கொண்டு, சுஷேணன், தான் கொண்டு வந்த கல்லை ராக்ஷஸனின் மார்பில் ஓங்கி வீசினான். கல்லால் மார்பில் அடிபட்டது தாங்க முடியாத வலியும் வேதனையும் முகத்தில் தெரிய, வித்யுன்மாலி மயங்கி விழுந்தான். இப்படியாக சூரர்களான வானரர்களும், ராக்ஷஸர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல்  தேவர்களும் தைத்யர்களும் சண்டையிடுவது போல தங்கள் த்வந்த யுத்தத்தை தொடர்ந்தனர். உடைந்து விழுந்த வாட்களாலும்,  க3தை4களாலும், சக்தி, தோமர, பட்டஸம் என்ற ஆயுதங்களாலும் பிளந்து போன, உடைந்து போன ரதங்களாலும், யுத்தத்திற்கான குதிரைகளுமாக அடிபட்ட யானைகளும், வானர ராக்ஷஸர்களாலும், சக்கரங்கள் அச்சு முறிந்து தாறு மாறாக கிடப்பதுமாக, அந்த யுத்த களம் காணவே பயங்கரமானதாக இருந்தது. வானர, ராக்ஷஸர்களின், தலை இழந்த சரீரங்கள் ஆங்காங்கு இரை பட்டன. தேவாசுர யுத்த முடிவில் இருந்தது போலவே காட்சியளித்தது. வானர வீரர்களால், குத்திக் கிழிக்கப் பட்டவர்களாக, ரத்தம் சொட்ட, வருந்திய ராக்ஷஸர்கள், சூரிய அஸ்தமனம் ஆவதை எதிர் பார்த்து காத்திருந்தனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் த்வந்த யுத்தம் என்ற நாற்பதாவது மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 44 (451) நிசா யுத்தம் (இரவில் யுத்தம்)

 

இவ்வாறு வானர, ராக்ஷஸர்கள் யுத்தம் செய்து கொண்டு இருக்கும் பொழுதே, சூரியன் அஸ்தமனம் ஆனான். இரவு வந்தது. உயிரைக் குடிக்கும் இரவு வந்தது.  ஒருவருக்கொருவர் கொண்ட விரோதத்தால், தங்கள் தங்கள் வெற்றியையே குறியாகக் கொண்ட பயங்கரமான பலம் கொண்ட போர் வீரர்கள், இரவும் போரைத் தொடர்ந்தனர்.  வானர, ராக்ஷஸர்கள் ஒருவரையொருவர் ஏசிக் கொண்டனர்.  நீ ராக்ஷஸன் என்று வானரம் சொல்ல, நீ தான் வானரம் என்று ராக்ஷஸனும் பதிலுக்கு ஏசியபடி, அந்த இரவிலும் கை கலப்பில் இரு தரப்பிலும் நிறைய வீரர்கள் மாண்டனர். வெட்டு, குத்து, ஓடு, ஏய், ஏன் ஓடுகிறாய் என்ற சத்தங்கள், அந்த இரவு நேரத்தில் கேட்டன. கறுத்த உடலும், தங்க நகைகளுடன் பெரிய சரீரம் உடைய ராக்ஷஸர்கள், மலையரசன், ஔஷதிகள் பள பளக்க இருப்பது போல தெரிந்தனர். அந்த இரவில், ராக்ஷஸர்கள் கோபத்துடன், என்ன செய்கிறோம் என்பது தெரியாமல், வேகமாக ஓடி, விழுந்து, வானரங்களை விழுங்கினர். பதிலுக்கு வானரங்கள், அவர்களின், தங்கத்தால் ஆன ஆசனங்களையுடைய குதிரைகளை, பள பளக்கும் கொடிகளை, கிடைத்ததை பற்களால் கடித்து த்வம்சம் செய்தனர். ராக்ஷஸ கூட்டத்தை ஒரு கலக்கு கலக்கியவர்களாக, குஞ்சரம் எனும் யானையை, யானையின் மேல் இருந்தவர்களை, கொடிகள், பட்டங்கள் பறக்கும் ரதங்கள் என்று கைக்கு கிடைத்ததை, அடித்து, நொறுக்கி, பற்களால் கடித்து சேதப் படுத்தினர். ராமனும், லக்ஷ்மணனும், கூர்மையான அம்புகளால், கண்ணுக்கு  தென் பட்ட, தென் படாத ராக்ஷஸர்களை அடித்தனர். குதிரை, கோவேறு கழுதைகள் பூட்டிய ரதங்கள், சக்கரங்கள் தாறு மாறாக ஓட்டப் பட்டதில், எழுந்த புழுதி காதுகளையும், கண்களையும் நிறைத்தது. மயிர் கூச்செரியும் பயங்கரமான அந்த யுத்தத்தில், அடி பட்டவர்கள் உடலிலிருந்து ரத்தம் ஆறாக பெருகியது. அந்த சமயம், பேரீ, ம்ருதங்க, பணவ எனும் வாத்யங்களின் ஓசை, சங்கம், முழல், இவற்றின் நாதத்தோடு இசைந்து மிகவும் அத்புதமான கலவையாக கேட்டது. அடிபட்டு அலறும் ராக்ஷஸர்களின் ஓலமும், வானரங்களின் அடிபட்டு அழும் குரலும் நாராசமாகக் கேட்டது. சக்திகளாலும் சூல, பரஸ்வதங்களாலும் அடிபட்டு இறந்த வானரங்கள், கற்களால் அடிபட்டு இறந்த ராக்ஷஸர்களின் உடலும், சஸ்திரங்களின் பிரயோகத்தால் துண்டாடப் பட்ட உடல் பாகங்களும், பூஜை முடிவில் இரைந்து கிடக்கும் புஷ்பங்கள் போல யுத்த பூமியில் இரைந்து கிடந்தன. அந்த இரவு, ஹரி, ராக்ஷஸர்களின் உயிரை குடிக்கும் இரவாக அமைந்தது. யுத்த பூமி, இவர்களின் இறந்த உடல்கள், உடல் பாகங்கள், ரத்தம் , நிணம் இவை பெருகி சேறாக, உள்ளே நுழைவதோ, நடப்பதோ கூட கடினமான நிலையில் அருவருப்பாக காட்சியளித்தது.  ஜீவன்களால், தவிர்க்க முடியாத காலராத்ரி போல இருந்த நல்ல இருட்டில், ராக்ஷஸர்கள் ராமனையே நோக்கி ஓடி வந்தனர். தங்கள் மேல் பட்ட அம்புகளை வைத்து குறி பார்த்து, அடையாளம் கண்டு கொண்டவர்களாக ஓடி வந்தனர். கோபத்துடன் கர்ஜனை செய்யும் சப்தமும், அடிபட்டு அலறும் சத்தமும் சேர்ந்து, ஏழு சமுத்திரங்களும் சேர்ந்து ஆர்பரிப்பது போல கேட்டது. ஆறு சரங்களை ஏக காலத்தில் பிரயோகம் செய்தார் ராமர். ஆறு பேரைக் கொன்றார். கண் மூடித் திறப்பதற்குள், அக்னி ஜவாலை போன்ற கூர்மையான அம்புகளால், யக்ஞசத்ருவும்,  துர்தர்ஷன், மகா பார்ஸ்வ, மகோதரர்கள், வஜ்ரத்ம்ஷ்டிரன், மகா காயன், சுக, சாரணர்கள், இவர்கள் ராமருடைய பாணத்தால், மர்மத்தில் அடி பட்டவர்கள், உயிரை காப்பாற்றிக் கொள்ள யுத்த பூமியிலிருந்து வெளியேறினார்கள். பொன்னாலான,  வேலைப்பாடமைந்த பாணங்கள், தீ நாக்குகள் போல அந்த இரவில் மின்னின. திக்குகளையும் அடையாளம் காட்டுவது போல, ராம நாமம் பொறிக்கப் பட்ட ராம பாணங்கள் அந்த ரண பூமியை நிறைத்தது. ராமர் எதிரில் நின்ற மற்ற ராக்ஷஸர்கள், நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகளைப் போல மடிந்து விழுந்தனர். கூர்மையான பொன் நிற பாணங்கள், ஆயிரக் கணக்காக சரத் கால இரவின் கும்மிருட்டில், மின் மினி பூச்சிகள் பறப்பது போல பாய்ந்து சென்றன. ராக்ஷஸர்களின் அட்டகாசமும், வானரங்களின் கூக்குரலும் இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு இரவின் பயங்கரத்தை மேலும் அதிகரிக்கச் செய்தன. திடுமென எழுந்த இந்த சத்தங்கள் த்ரிகூட மலையில் எதிரொலித்தது, மலை பதில் சொல்வது போல இருந்தது. கோலாங்கூலங்கள் பெரிய சரீரம் உடையவை. ராக்ஷஸர்கள் போலவே, கறுத்த உடலும், பலமும் கொண்டவர்கள். கைகளால் அளைந்து தட்டுப் பட்ட ராக்ஷஸர்களை விழுங்கின. அங்கதன் தன் எதிரியைத் தேடி யுத்த பூமியில் அலைந்தான். ராவணன் மகனான இந்திரஜித்தை கண்டு கொண்டு அவன் ரதத்தையும் குதிரையையும் அடித்து விழ்த்தினான். ரதமும் விழுந்து, குதிரையும் அடிபட்ட நிலையில் இந்திரஜித், அங்கதன் எதிரில் நின்றவன், திடுமென மறைந்து போனான். வாலி புத்திரனின் இந்த வீரச் செயலைக் கண்ட தேவர்களும், ரிஷிகளும், மகிழ்ந்தனர். இந்த யுத்தத்தில் ராம லக்ஷ்மணர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதையும், அவர்கள் பிரபாவத்தையும் எல்லா ஜீவராசிகளும் உணர்ந்தனர். இந்திரஜித் யாராலும் ஜயிக்க முடியாதவன் என்று பெயர் பெற்றவன். கண்ணுக்கு புலப்படாமல் மறைந்து நின்றதைக் கண்டு, இதுவே அவன் நல்ல அடி வாங்கியிருப்பதை உணர்த்துவதாக எண்ணி மகிழ்ந்தனர். சுக்ரீவன், விபீஷணன் முதலானோர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படையாகவே சொன்னார்கள். சாது, சாது என்று பாராட்டினர். சத்ருவான இந்திரஜித் பலத்த காயமடைந்தான் என்பதைக்  கொண்டாடினார்கள். வாலி புத்திரனான அங்கதனிடம் தோற்றதில் இந்திரஜித் அதிக கோபமும், தாபமும் அடைந்தான். கோபத்தில் செய்வதறியாது, ப்ரும்மாவிடம் பெற்ற வரத்தினால், மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாமல் ஆகாயத்தில் நின்றபடி, கூர்மையான பாணங்களை கல் மாரி பொழிவது போல வர்ஷிக்க ஆரம்பித்தான். நாகமயமான சரங்களால், ராம லக்ஷ்மணர்களையும் அடித்தான். மாயையால் தன்னை மறைத்துக் கொண்டு, ராகவர்களையும் மோகம் அடையச் செய்து, யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து நின்று, கூட யுத்தம் செய்பவனாக, தன் சர பந்தத்தால், ராம லக்ஷ்மணர்களை கட்டி விட்டான். திடுமென, ஆலகால விஷம் போல வந்து விழுந்த சரங்களால் அடிபட்டு, குமாரர்கள் இருவரும் பூமியில் சாய்ந்ததைக் கண்ட வானரங்கள் திகைத்தன. நேரில் நின்று, வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாத ராக்ஷஸ ராஜ புத்திரன், துராத்மா, மறைந்து நின்று மாயையால், ராம லக்ஷ்மணர்களை கட்டி விட்டான், தன் நாக பாசத்தால் நினைவு இழக்கச் செய்து விட்டான். 

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நிசா யுத்தம் என்ற நாற்பதாவது நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

 

அத்தியாயம் 45 (452) நாக3 பாச ப3ந்த4: (நாக பாசத்தால் கட்டுண்டது)

 

அதி பலசாலியான ராமர், மறைந்து யுத்தம் செய்யும் ராவண குமாரனின் இருப்பிடத்தை நோக்கி பத்து வீரர்களை அனுப்பினார். இரண்டு பேர் சுஷேணனின் தாயாதிகள், நீலன், வாலி புத்திரனான அங்கதன், சரபன் எனும் வேகம் மிகுந்த அக்னி புத்திரன், எப்பொழுதும் வணங்கியே நிற்கும் ஜாம்பவான், ரிஷபம் போன்ற தோள்களையுடைய ரிஷபன், இவர்களை நியமித்தார். அவர்களும் மகிழ்ச்சியுடன் பெரிய மரக்கிளைகளை எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் தாவிச் சென்றனர்.  பத்து திக்குகளிலும் தேடினர். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் வேகத்துக்கு இணையாக செல்லும் சக்தி வாய்ந்த இந்த வானர வீரர்களை, மேலும் மேலும் விசேஷமான அஸ்திரங்களால் ராவணி (ராவணன் மகன்) தடுத்தான்.  நாராசம் போன்ற ஆயுதங்களால் உடலில் பட்ட காயங்களையும் லட்சியம் செய்யாமல் முன்னேறிச் சென்ற வானரங்கள், சூரியனைப் மேகம் மறைத்ததால் உண்டாகும் இருட்டைப் போல அந்தரிக்ஷத்தில் சூழ்ந்திருந்த அந்தகாரத்தில் எதையும் தெளிவாக காண முடியாமல் திகைத்தனர். யுத்த கலையை அறிந்திருந்த ராவணி, ராம லக்ஷ்மணர்களையே குறி வைத்து மேலும் மேலும் பாணங்களை மழையாக பொழிந்தான். நிரந்தரமான சரீரம் உடைய ராம லக்ஷ்மணர் இருவரும் அம்புகளாக மாறிய பாம்புகளால் சூழப் பெற்றனர். காயம் பட்ட இடத்திலிருந்து ரத்தம் பெருகி ஓடியது. இரண்டு கிம்சுக (ரத்தச் சிவப்பு நிற புஷ்பங்கள்) புஷ்பங்கள் மலர்ந்து கிடப்பது போல இருவரும் கிடந்தனர். கரு நீல மலையை ஒத்த சரீரம் உடையவனான இந்திரஜித் அந்தரிக்ஷத்தில் இருந்தபடி, தான் புலனாகாமலேயே சகோதரர்கள் இருவரையும் பார்த்து இந்திரனுக்கு கூட என்னுடன் யுத்தம் செய்யும் பொழுது, என்னை நேரில் காணவோ, பிடிக்கவோ முடியவில்லை. நீங்கள் மனிதர்கள், எனக்கு ஒரு பொருட்டே இல்லை. இதைக் கேட்ட சகோதரர்கள் இருவரும். கூர்மையான பாணங்களை அவன் இருக்கும் இடம் நோக்கி பிரயோகம் செய்தனர். கணக்கில்லாத பாணங்களை திரும்ப திரும்ப அடித்தாலும், மாயாவியான ராவணி, தன்னை அந்த பாண வர்ஷத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டவனாக, தானும் மேலும் மேலும் அடித்தான். இருவரையும் மர்ம ஸ்தானத்தில் படும்படி அடித்து விட்டு, அஸ்திரங்களால் கட்டவும் கட்டி விட்டான். நிமிஷ நேரத்தில் இருவராலும் பார்க்க கூட முடியவில்லை. த்வஜத்தில் கட்டியிருந்த கொடி, கயிறு அறுந்தவுடன் விழுவது போல இருவரும் பூமியில் சரங்களால் சல்லடையாக துளைக்கப் பட்ட உடலுடன் விழுந்தனர். வீர சயனத்தில், காயங்களிலிருந்து பெருகும் ரத்தத்துடன், இருவரும் உறங்குவது போல கிடந்தனர். உடல் பூரா வலியுடன் அசையாது கிடந்தனர். ஒரு விரல் அளவு இடம் கூட அவர்கள் உடலில் அம்பு படாத இடம் இல்லை. க்ரூரமான ராக்ஷஸனால் அம்புகளால் துளைக்கப் பெற்ற இருவரும் உடலிலிருந்து, ப்ரஸ்ரவன மலையில் அருவி கொட்டுவது போல ரத்தம் பெருகலாயிற்று.  முதலில் ராமர், மர்மங்களில் அடிபட்டவராக விழுந்தார். கோபம் கொண்ட இந்திரஜித் முன் ஒரு சமயம் இந்திரனை வெற்றிக் கொள்ள பயன்படுத்திய அம்புகள், கீழ் நோக்கி வீசப்பட்ட, பொன்னிறமான, கூர்மையான, நாராசமான பாணங்களாலும், பல்ல, அஞ்சலிக, எனும் அஸ்திரங்களாலும், வதிஸ தந்தம், சிம்ஹ தம்ஷ்டிரம், க்ஷீரம் எனும் ஆயுதங்களாலும் ராமனை அடித்து விட்டான். பாணங்களால் வீழ்த்தப் பட்டு கீழே கிடந்த ராமனைப் பார்த்து லக்ஷ்மணன் மிகவும் வேதனையடைந்தான். கமல பத்ராக்ஷனான ராமன் அம்புகளால் துளைக்கப் பட்டு பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டு அழ ஆரம்பித்தான். வானரங்களும் மிகவும் வேதனை அடைந்தன. கண்களில் நீர் நிறைய, வருத்தத்துடன், சப்தமிட்டன. வாயு புத்திரன் கூட செய்வதறியாது திகைத்து நின்றான், ராம லக்ஷ்மணர்களைச் சூழ்ந்து கொண்டு வாடிய முகத்தோடு நின்றனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நாக3 பாச ப3ந்தோ4 என்ற நாற்பதாவது ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 46 (453) சுக்3ரீவாத்3யனு சோக: (சுக்ரீவன் முதலானோர் வருத்தம்)

 

வானத்தையும், பூமியையும் மாறி மாறி பார்த்த வானரங்கள், பாணங்களால் அடிபட்டு ராம லக்ஷ்மணர்கள் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டனர். செய்வதறியாது திகைத்தனர்.  ராக்ஷஸர்கள் வேலை. அந்த சமயம் சுக்ரீவனுடன் விபீஷணன் வந்து சேர்ந்தான். நீல, மைந்த, த்விவித, சுஷேண, குமுத, அங்கதன் முதலானோர் அனுமானும் ராகவ குமாரர்கள் இருவரையும் எண்ணி துயரில் மூழ்கியபடி  நின்றனர். மெதுவாக சுவாசம் மட்டும் வந்து கொண்டிருக்க, வேறு எந்த வித அசைவும் இன்றி, அம்புகள் தைத்த இடத்தில் ரத்த பெருக்கோடு தூங்குவது போல கிடந்தனர். இரண்டு த்வஜங்கள் விழுந்து கிடப்பது போல, கீழே விழுந்து கிடக்கும் இரண்டு சர்ப்பங்கள் மூச்சு விடுவது போல, பெரு மூச்சு விட்டபடி, கிடந்தனர். கண்களில் நிரம்பிய கண்ணீருடன், சேனைத் தலைவர்களான வானர வீரர்கள் சூழ்ந்து நின்றனர். விபீஷணன் உள்பட, அனைத்து வீரர்களும், அம்பு பட்டு இவர்கள் விழக் கூட செய்வார்களா? என்று நம்ப முடியாத திகிலோடு வைத்த கண் வாங்காமல், விழுந்து கிடந்த இருவரையும், அசையாது கிடந்த இருவரையும் பார்த்தபடி நின்றனர். அந்தரத்தையும் நாலு திக்குகளிலும் பார்வையை செலுத்திய வீரர்கள், மாயா யுத்தம் செய்யும் ராவணியான இந்திரஜித்தை எங்குமே காண முடியவில்லை.  தன்னை மறைத்துக் கொண்டு யுத்தம் செய்யும் கலையை கற்றவன் இந்திரஜித். சற்று முயன்று விபீஷணன் தமையன் மகனைக் கண்டு கொண்டான். விபீஷணனும் தான் பெற்றிருந்த வரத்தின் பயனாக செயற்கரிய செய்த வீரனான இந்திரஜித்தை, வானத்தில் மறைந்து கொண்டு நிற்பதையும் கண்டு கொண்டான். தேஜஸ், புகழ், விக்ரமம் இவற்றில் சற்றும் சளைத்தவன் அல்ல இந்திரஜித். தன் அம்புகளின் இலக்கான ராம லக்ஷ்மணர்கள், தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு, மற்ற ராக்ஷஸர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தபடி, தூஷணனைக் கொன்றவன், கரனை வீழ்த்திய மகா பலசாலி என்று சொன்னீர்களே, இதோ வந்து பாருங்கள், என் பாணங்களால் அடித்து வீழ்த்தி விட்டேன். இவர்களை இனி யாராலும் பிழைக்கச் செய்ய முடியாது என்று மார் தட்டி, தற் பெருமையடித்துக் கொண்டான். எல்லா ரிஷிகள் கூட்டமும் வந்து சேர்ந்தாலும், இவர்களை காப்பாற்ற முடியாது. எந்த இருவர் காரணமாக என் தந்தை கவலையில் இரவுகளில் தூக்கமின்றி வாடுகிறானோ, மழைக் கால நதி போல எவர் பொருட்டு லங்கை கலங்கி தவிக்கிறதோ, எல்லா அனர்த்தங்களுக்கும் மூலமான இவ்விருவரையும் நான் வீழ்த்தி விட்டேன். ராம, லக்ஷ்மணர்களின், எல்லா வானர வீரர்களின் விக்ரமமும் பலனின்றி போயிற்று. சரத்காலத்து மேகம் போல இவர்கள் சக்தியும், வீர்யமும் உபயோகமின்றி வீணாயின. இவ்வாறு சொல்லிக் கொண்டே அருகில் நின்றிருந்த நீலனையும், மற்ற வானர சேனைத் தலைவர்களையும் அடிக்க ஆரம்பித்தான். நீலன் மேல் ஒன்பது பாணங்கள், மைந்தன், த்விவிதன் மேல் மூன்று மூன்று பாணங்கள், ஜாம்பவானின் மார்பை பிளந்து விடும் எண்ணத்தோடு, அவர் மார்பில் ஒரு பாணம், வேகமாக சென்ற ஹனுமானின் மேல் பத்து அம்புகள், கவாக்ஷன், சரபன் இருவர் மேலும் இரண்டு இரண்டு பாணங்கள் போட்டு வதைத்தான். இந்திரஜித் வாலி புத்ரனான அங்கதனையும், கோலாங்கூலர்களின் தலைவனான வீரனையும், பாணங்களை மழையாக பொழிந்து, அவர்கள் தப்பி ஓடுவதைத் தடுத்தான், இவ்வாறு ஒருவர் விடாமல் அடித்து விட்டு, உச்சஸ்தாயியில், பெரும் குரலில் முழக்கமிட்டான். மற்ற சிறிய வானரங்கள் பயந்து ஓடுவதைப் பார்த்து பெரிதாக சிரித்தான். இதோ, பாருங்கள். யுத்த களத்தில் என் பாணங்களால் கட்டி விட்டேன். ராக்ஷஸர்களே, கவலையை விடுங்கள். எனவும், ராக்ஷஸர்கள் ராவணியின் இந்த அத்புதமான வீர செயலை ஆச்சர்யத்துடன் நம்ப முடியாமல் பார்த்தபடி நின்றனர். சற்றுப் பொறுத்து, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி, இடி முழக்கம்  போன்ற தங்கள் குரலில் இந்திரஜித்தை வாழ்த்தலானார்கள்.  அசையாமல் பூமியில் கிடந்த ராம லக்ஷ்மணர்களைப் பார்த்து உயிரிழந்து விட்டனர் என்று எண்ணி, இந்திரஜித்தை சூழ்ந்து கொண்டு, மகிழ்ச்சியுடன் லங்கை திரும்பிச் சென்றனர். ராவணியின் பாணங்களால் ராம லக்ஷ்மணர்கள் அடிபட்டு கிடப்பதை தங்களுக்குள் பேசிக் கொண்டே சென்றனர். சுக்ரீவனை பயம் சூழ்ந்து கொண்டது. முகம் வாடி, கண்களில் நீர் ததும்ப, சோகமே உருவாக நின்ற சுக்ரீவனைப் பார்த்து விபீஷணன், சுக்ரீவா தைரியத்தை வரவழைத்துக் கொள். யுத்தம் என்றால் இப்படித்தான் விஜயம், வெற்றி நிலையானதல்ல. நமக்கு பாக்கியம் மீதி இருந்தால் இவர்கள் இருவரும் பிழைத்து எழுந்து விடுவார்கள். இது மூர்ச்சைதான். மயக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். நீ உன்னையும் தேற்றிக் கொண்டு, மற்ற வானரங்களும் பயந்து ஓடாமல் சேனையைக் கட்டுப் படுத்தி நிலை நிறுத்து. இவர்கள் சத்ய தர்ம பராக்ரமர்கள். இவர்களுக்கு ம்ருத்யுவினால் ஆபத்து இல்லை. தன் கண்ணீரால் நனைந்த கைகளால் சுக்ரீவன் கண்களை துடைத்த விபிஷணன், பின் தண்ணீரைக் கொண்டு வந்து ஜபம் செய்து அந்த ஜலத்தை சுக்ரீவன் மேல் தெளித்தான். வானர ராஜன் மீது நீரைத் தெளித்து அவனை உலுக்கி எழுப்பிய பின், வானர ராஜனே, இது ஸ்னேகத்தை, அன்பை வெளிப்படுத்தும் நேரமல்ல. எழுந்திரு. காலம் கடந்து போகு முன் யுத்த களத்தில் நமது பொறுப்பை நிறைவேற்றுவோம். அடுத்து செய்ய வேண்டியதை யோசி, என்று உணர்த்தினான். முழுவதும் நினைவு தப்பு முன் ராம,லக்ஷ்மணர்களை காப்பாற்ற முயற்சி செய். நம்மை பின்பற்றி வந்துள்ள சைன்யத்தை பற்றி யோசி. இவர்களையும் காப்பாற்ற வேண்டும்.  நினவு திரும்பிய உடனேயே ராமர் நம்மை ரக்ஷிப்பார். இது ராமனுடைய இயல்பே அல்ல. இப்படி மூர்ச்சையடைந்து கிடப்பது ராமன் விஷயத்தில் புதியதாக இருக்கிறது. ஆயுள் நீங்கியவனாக தெரியவில்லை. முகத்தைப் பார். லக்ஷ்மீகரமாக விளங்குகிறது. அதனால் உன்னைத் தேற்றிக் கொள். இந்த சேனையையும் நல்ல விதமாக சொல்லித் தேற்று. திரும்ப நாளை யுத்தத்திற்கான காரியங்களை ஆரம்பித்து நான் ஏற்பாடுகளை கவனிக்கிறேன். இதோ பார், பயத்தால் விரிந்த கண்களுடன், மயிர்கூச்செரிய, ஒருவரோடு ஒருவர் காதோடு காதாக பேசிக் கொண்டிருக்கிறார்களே, வானரங்கள், என்னைக் கண்டதும் ஓட்டம் எடுக்கிறார்களே, இந்த படை வீரர்களை சமாளி. சந்தோஷப்படுத்து. வாடிய மாலையை கழற்றி எறிவது போல இந்த சோகத்தை, வானரங்கள் மறந்து உற்சாகம் அடையும்படி செய். வானர ராஜனை இப்படி சொல்லி சமாதானம் செய்த விபீஷணன், தலை தெறிக்க ஓடும் வானர வீரர்களை ஒன்று சேர்த்து சேனையை திரும்ப நிலை நிறுத்தும் முயற்சியில் ஈ.டுபட்டான்.

 

மகா மாயாவியான, இந்திரஜித் ராக்ஷஸர்கள் புடை சூழ, தந்தையைக் காணச் சென்றான். ஆசனத்தில் வீற்றிருந்த தந்தையைப் பார்த்து, ராம, லக்ஷ்மணர்கள் அடி பட்டு விழுந்தார்கள். என் பாணங்களால் கட்டி விட்டேன் என்று சொல்லவும், மகனை மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டான் ராவணன். ராக்ஷஸர்கள் மத்தியில், மகன் வெற்றி வீரனாக வந்து சத்ருவை வீழ்த்தி விட்டேன் என்று சொல்லக் கேட்ட தந்தையான ராக்ஷஸ ராஜன், மகனை உச்சி முகர்ந்து பாராட்டி, நடந்ததை விளக்கிச் சொல்லும்படி கேட்டான். இந்திரஜித்தும், தன் பாணங்கள் பட்டு இருவரும் அசைவற்று பூமியில் கிடப்பதைச் சொன்னான். இதுவரை மனதில் உறுத்திக் கொண்டிருந்த ராம, லக்ஷ்மணர்கள் பற்றிய பயம் விலக, ராவணன் தன் மகனைக் கொண்டாடினான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சுக்ரீவாத்3யனுசோக: என்ற நாற்பதாவது ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 47 (454) நாக33த்34 ராம லக்ஷ்மண ப்ரத3ர்சனம் நாக பாசத்தால் மூர்ச்சித்த ராம லக்ஷ்மணர்களை காட்டுதல்)

 

ராவணாத்மஜன், இந்திரஜித், வெற்றி வீரனாக லங்கை திரும்பியதும், ராகவர்களை பத்திரமாக பாதுகாத்துக் கொண்டு, வானர வீரர்கள் நின்றனர். ஹனுமான், அங்கதன், நீலன், சுஷேணன், குமுதன், நலன், க3ஜன், க3வாக்ஷன், க3வயன், சரப4ன், க3ந்த4மாத3னன், ஜாம்ப3வான், ரிஷப4ன், ஸ்கந்தன், ரம்ப4:, சதபலி, ப்ருது2 எல்லோரும் சேனையை அணிவகுத்து நிறுத்தி வைத்துக் கொண்டும், மரங்களில் ஏறி நின்றபடியும், குறுக்கும், நெடுக்குமாக, மேலாகவும், எல்லா திசைகளிலும் கவனம் செலுத்தியபடி, கவனமாக காவல் இருந்தனர். புல் அசைந்தாலும், ராக்ஷஸனோ என்று நடுங்கினர். மகிழ்ச்சியில் திளைத்த ராவணன், இந்திரஜித்தை அனுப்பி விட்டு, சீதைக்கு காவல் இருந்த ராக்ஷஸிகளை அழைத்தான். த்ரிஜடையும், மற்ற ராக்ஷஸிகளும், அரசனது ஆணை என்பதால் வந்து சேர்ந்தனர். அந்த ராக்ஷஸிகளிடம் சந்தோஷமாக ராவணன் சொன்னான். இந்திரஜித்தால் கொல்லப் பட்டார்கள், ராமனும், லக்ஷ்மணனும். சீதையிடம் சொல்லுங்கள். புஷ்பக விமானத்தில் ஏற்றிக் கொண்டு போய் வீழ்ந்து கிடக்கும் ராம லக்ஷ்மணர்களைக் காட்டுங்கள் என்றான். எந்த ஆசிரயம், அடைக்கலம் தனக்கு நிச்சயம் என்று நம்பி என்னை இதுவரை லக்ஷியம் செய்யாமல் இருந்தாளோ, அது நாசமானதைக் காட்டுங்கள். இவள் கணவனோடு, சகோதரனான லக்ஷ்மணனும் மடிந்தான்.   யுத்த களத்தில் வீழ்ந்து கிடக்கும் அவர்களைப் பார்த்தால், மைதிலி, கவலையின்றி, மனதில் எந்த வித சங்கடமும் இன்றி, எதையும் லட்சியம் செய்யாமல் என்னை வந்தடைவாள்.

 

எல்லா விதமான ஆபரணங்களும் அலங்கரிக்க, இன்று காலனின் வசமான ராமனை லக்ஷ்மணனையும் சேர்த்து தானே கண்ணார கண்டு திரும்பினால் வேறு வழியின்றி விசாலா, என்னை நாடி வந்து ஏற்றுக் கொள்வாள் என்பது நிச்சயம்.  துராத்மாவான ராக்ஷஸ ராஜனின் இந்த வீண் பிதற்றலைக் கேட்டு, ராக்ஷஸிகள் அப்படியே என்று சொல்லி, புஷ்பகம் இருக்கும் இடம் சென்றனர். புஷ்பகத்தை எடுத்துக் கொண்டு ராவணனின் கட்டளைப்படி, அசோக வனம் சென்று மைதிலியை அழைத்துச் சென்றனர்.  தன் கணவனை எண்ணி வருந்தும் அவளையும் ஏற்றிக் கொண்டு, த்ரிஜடையும் உடன் வர ராக்ஷஸிகள் ராம லக்ஷ்மணர்களைக் காட்ட அவளை அழைத்துச் சென்றனர். இதனிடையில் ராவணன், லங்கையை பதாக, த்வஜங்களுடன் வெகுவாக அலங்கரிக்கச் செய்து விட்டான். ராகவர்கள் இருவரும், ராமனும் லக்ஷ்மணனும் இந்திரஜித்தால் வதம் செய்யப் பட்டனர் என்று பெருமளவில் முறையடித்து அறிவித்து விட்டான். விமானத்தில் த்ரிஜடையுடன் சென்ற சீதை வானர சேனை சின்னா பின்னமாகி கிடப்பதைக் கண்டாள்.  ராக்ஷஸர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதையும் கேட்டாள்.  ராம லக்ஷ்மணர்கள் அருகில் துக்கத்துடன் முகம் வாடி இருந்த வானரர்களையும் கண்டாள். அம்புகளே படுக்கையாக, விழுந்து கிடந்த வீரர்கள் இருவரையும் கண்டாள். நினைவின்றி நாக பாசத்தால் கட்டுண்ட நிலையில் லக்ஷ்மணனையும்,  ராமனையும் பார்த்தாள். கவசம் பிளந்து போய் அதனிடையில் அம்பு துளைத்து கிடந்த சரீரத்தைப் பார்த்தாள். பூமியில் தூண்கள் சரிந்து கிடப்பது போல கிடந்த ராம லக்ஷ்மணர்கள் இருவரையும் பார்த்து, புண்டரீகம் போன்ற கண்களையுடையவர்கள், அக்னி குஞ்சுகள் போல காணப்பட்ட  இருவரையும் கண்டாள்.  நர ரிஷபர்கள் என்று புகழ் பெற்றவர்கள் இவ்வாறு சர தல்பத்தில் (அம்பு படுக்கையில்) கிடப்பதைக் கண்டாள். துக்கம் தாங்காமல் பெரிதாக புலம்பினாள். தன் கணவனையும், சகோதரனான லக்ஷ்மணனையும் கண்களை நீர் மறைக்க, பார்த்து அழுதாள். தேவர்களுக்கு இணையான பிரபாவம் உடைய இருவரையும் பார்த்து இருவரும் உயிரிழந்ததாகவே எண்ணி புலம்பினாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நாக3 பாச ப3த்34 ராம லக்ஷ்மண ப்ரதர்சனம்: என்ற நாற்பதாவது ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) 4)

 

அத்தியாயம் 48 (455) சீதாஸ்வாஸனம் (சீதையை சமாதானம் செய்தல்)

 

தன் கணவன் அடிபட்டுக் கிடப்பதையும், அருகில் லக்ஷ்மணனும் வீழ்ந்து கிடப்பதையும் பார்த்து, சீதை பெரிதும் அழுதாள். துக்கம் அவளை உலுக்கியது. லக்ஷணம் அறிந்த சோதிடர்கள், எனக்கு புத்திரர்கள் உண்டு என்றும், சுமங்கலியாக இருப்பாய் என்றும் சொன்னார்களே, இப்பொழுது அடிபட்டு ராமன் கிடக்கும் சமயம், அந்த ஞானிகள் சொன்னது கூட பொய்யாகப் போனதே. யாகத்தில் ரிஷி பத்னிகள் என்னிடம் சொன்னார்களே, உன்னுடன் சேர்ந்து ராமன் நிறைய யாகங்கள் செய்வான் என்றனரே, ராமன் இப்படி கிடக்கும் சமயம் அந்த உத்தமர்கள் சொன்னதும் பொய்யாகிப் போனதே.  தவத்தில் சிறந்த  ப்ராம்மணர்கள், நான் கேட்ட பொழுது சுபமான செய்திகளைச் சொன்னார்களே, அவை, அந்த ஞானிகளின் வாக்குமா பொய்யாகிப் போகும்? வீரனான அரசனின் மனைவி நீ பாக்கியம் செய்தவள் என்றார்களே, அவர்கள் எல்லோருமே இந்த ராமன் அடிபட்டு கிடப்பதைப் பார்க்க, பொய்யர்களாக ஆனார்களா? இந்த ஞானிகளின் வாக்கும் தவறுமா? என் பாதங்களைப் பார்த்து இந்த பாதங்கள், பரந்த ராஜ்யத்தில் கணவனுடன் கூட அமர்ந்து ராஜ்யாபிஷேகம் செய்யப் பெறும் தகுதி வாய்ந்தவை என்றனரே, வைதவ்யம் அடையும் பெண்களுக்கு இது போன்ற சுபமான அங்க லக்ஷணங்கள் அமைவது அரிது. சுபமான என் அங்க லக்ஷணங்கள் எல்லாம் அழிந்து போயினவா? பத்மம் ஸ்த்ரீகளின் சரீரத்தில் (அடையாளமாக) தென்படும் பொழுது, பத்மம் என்ற பெயரே புனிதமாகிறது என்பார்களே, அது எப்படி தவறாகும். இப்படி ராமன் வீழ்ந்து கிடக்கிறானே, இவை எப்படி பயனற்றுப் போகும். என் கேசம் சூக்ஷ்மமானது, கறுத்த குழல், என் புருவங்கள் இணைந்தவை, என் துடைகளும் பெருத்து ரோமமின்றி இருப்பவை, பற்கள் வரிசையாக, குறைவின்றி இருக்கின்றன. என் ஸ்தனமோ பெருத்தும், இடைவெளியின்றியும் இருப்பவை. வெளியில் தெரியாமல் அடங்கிக் கிடக்கும் என் நாபியும் சுபமான லக்ஷணமே. மணியின் நிறம் என் உடல் நிறம், என் உடலில் வளர்ந்துள்ள ரோமம் கூட ம்ருதுவானவையே. இந்த பன்னிரண்டு லக்ஷணங்களும் என்னிடம் இருப்பதாக விஷயம் அறிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்களே. சுபமான லக்ஷணங்களை உடையவள், பாக்கியசாலி என்று புகழ்ந்தனரே. கால்களும், கைகளும், சமமாக வர்ணமும் உடையவை, மந்தஸ்மிதா என்றும் கன்யா லக்ஷணம் அறிந்தவர்கள் வர்ணித்தனரே. பெரும் ராஜ்யத்தில் சக்ரவர்த்தினியாக கணவனுடன் கூட எனக்கு அபிஷேகம் நடக்கும் என்றார்களே. இதைச் சொன்னவர்களும் சோதிடக் கலையில் வல்லவர்கள். அது அனைத்தும் இப்படி வீணாகுமா? ஜனஸ்தானத்தை சுத்தம் செய்து, தாண்ட முடியாத கடலையும் தாண்டி வந்த வீரர்கள் இந்த கோஷ்பதம் (பசுக்களின் முன் இரண்டு, பின் இரண்டு குளம்புகளுக்கு இடையில் உள்ள அளவு தூரம்) வீழ்த்தப் பட்டார்களே. வாருணம், ஐந்திரம், ஆக்னேயம், வாயவ்யம், ப்ரும்ம சிரஸ் எனும் அஸ்திரம் இவை ராகவர்களை வந்து அடையட்டும். கண்ணில் படாமல், மறைந்து நின்று மாயா யுத்தம் செய்து, இந்திரனுக்கு சமமான இந்த வீரர்களை, என் நாதனான ராமனையும் லக்ஷ்மணனையும் அனாதைகளாக அடித்து விட்டிருக்கிறான். ராகவன் கண் முன்னால் நின்று யாரும் யுத்தம் செய்து ஜயிக்க முடியாது. வாயு வேகத்தில், மனோ வேகத்தில் செல்பவனாக இருந்தாலும், ராகவ பாணத்திற்கு முன்னால் நிற்கவே முடியாது. இது காலத்தின் கோலம் தான். க்ருதாந்தன் எனும் விதியின் தவிர்க்க முடியாத விளையாட்டே. ராமன், தன் சகோதரனுடன் யுத்தத்தில் அடிபட்டு வீழ்ந்தான் என்பது நடக்கக் கூடிய காரியமாக இல்லவே இல்லை. இது போல ராமனையும், மகா பலசாலியான லக்ஷ்மணனையும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்னையும், என் தாயையும், மாமியாரான தபஸ்வினி கௌசல்யையும் கற்பனையில் கூட இப்படி ஒரு காட்சி அண்டாது. எப்பொழுது திரும்பி வருவார்கள்? எப்பொழுது சீதையையும், லக்ஷ்மணனையும், ராமனையும் காண்போம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்களே,  அந்த பெரியவர்களிடம் என்ன சொல்ல. விரதம் முடியும் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் தாய் மார்களிடம் எப்படிச் சொல்வோம்? இவ்வாறு வருந்தி புலம்பும் சீதையைப் பார்த்து த்ரிஜடா சொன்னாள். தேவி, வருந்தாதே. உன் கணவன் உயிருடன் தான் இருக்கிறான். நான் சொல்வதற்கான காரணங்களைச் சொல்கிறேன். எப்படி இந்த ராம லக்ஷ்மணர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்று தீர்மானமாக சொல்கிறேன் என்பதன் காரணத்தை சொல்கிறேன், கேள். தங்கள் தலைவன் அடிபட்டு போரில் மாண்டான் என்று தெரிந்தால் படை வீரர்கள் முகத்தில் கோபமோ, ஆனந்தமோ இருக்காது. தவிர, இந்த புஷ்பக விமானம் இந்த வீரர்கள் உயிரிழந்திருந்தால் உன்னைத் தாங்காது. நீரில் துடுப்பை இழந்த படகு இலக்கின்றி அலைவது போல இந்த சேனை உற்சாகமின்றி குறிக்கோள் இன்றி தன் போக்கில் அலைந்து கொண்டிருக்கிறது.  இவர்களை ஒன்று சேர்த்து நடத்திச் செல்லும் தலைவன் இல்லாதது தான் காரணம். நான் சொல்வதைக் கேள். இருவருமே, இதோ எழுந்து சக்தி வாய்ந்த இந்த சேனையை பழையபடி, உற்சாகமாக, கவலையின்றி போர் செய்யும் பரபரப்புடன், துடிப்புடன் செயல் படச் செய்து விடுவார்கள். நல்ல காலம் உதயமாகிறது என்ற நம்பிக்கையோடு பார். காரண காரியங்கள் அதைத்தான் தெளிவாகச் சொல்கின்றன. காகுத்ஸர்கள் இருவரும் அடிபட்டு தான் வீழ்ந்திருக்கிறார்கள். உயிர் தரித்திருக்கிறார்கள். உன்னிடம் கொண்ட அன்பினால் சொல்கிறேன். நான் இதுவரை பொய்யான பேச்சை பேசியதே இல்லை. இனியும் சொல்ல மாட்டேன். உன் சரித்திரத்தாலும், குண சீலங்களாலும் என் மனதில் நிறைந்து விட்டாய். இந்த இருவரும் இந்திரன் முதலான தேவர்கள் வந்து நின்றாலும், யுத்தத்தில் ஜயிக்கக் கூடியவர்கள். இவர்களை யாராலும் அசைக்க முடியாது. அப்படி ஒரு காட்சியை நான் கண்டிருக்கிறேன். அதனால் தான் உன்னிடம் திரும்பத் திரும்ப சொல்கிறேன். கவனித்துப் பார், மைதிலி, உணர்வு இன்றி கிடக்கும் பொழுதும் இவர்களது முகத்தில் லக்ஷ்மீகரமான களை அப்படியே இருக்கிறது பார். விட்டுப் போகவில்லை. சாதாரணமாக, உயிர் இழந்த மனிதர்களின் முகத்தைக் காணும் பொழுது விகாரமாகத் தெரியும். ஜனகாத்மஜே, உன் சோகத்தை விடு. மோகத்தை கலைத்துக் கொண்டு நிதர்சனமான உண்மையைப் பார். ராம லக்ஷ்மணர்கள் பொருட்டு மனம் வருந்தாதே. இந்த சமயம் இவ்விருவரும் உயிரைத் துறந்து போகக் கூடியவர்களே அல்ல. இவ்வாறு த்ரிஜடை சொல்லவும், கை கூப்பி வணங்கி ஏவமஸ்து நீங்கள் சொன்னது பலிக்கட்டும் என்று வேண்டிக்கொண்ட உத்தம ஸ்த்ரீயான மைதிலி அந்த புஷ்பக விமானத்தை திருப்பச் செய்து த்ரிஜடையுடன் லங்கை வந்து சேர்ந்தாள். புஷ்பக விமானத்திலிருந்து இறங்கி பழையபடி, அசோக வனத்தில் ராக்ஷஸிகளின் மத்தியில் இருக்கலானாள். ராக்ஷஸ ராஜன் விரும்பி, கவனமாக பாதுகாத்து வந்த அந்த மரங்கள் அடர்ந்த அந்த வனத்தில் உடல் இருந்தாலும், உள்ளம் ராம லக்ஷ்மணர்களிடமே இருந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சீதாஸ்வாஸனம் என்ற நாற்பதாவது எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 49 (456) ராம நிர்வேத3: (ராமனின் மன வருத்தம்)

 

சுக்ரீவன் முதலான வீரர்கள் எதுவும் செய்யத் தோன்றாமல், அச்சமயம் தங்கள் பொறுப்பு அவ்விருவரையும் பாதுகாத்தலே என்பது போல சுற்றி சுற்றி வந்தனர்.  முகத்தில் வேதனையும், கவலையும் மண்டிக் கிடந்தாலும் கோரமான பாணங்களின் தாக்குதலால் நினைவிழந்து கிடந்தாலும், நினைவைத் திரும்ப பெறுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். முதலில் நினைவு வரப் பெற்ற ராமன் எழுந்து நிலைமையை தெரிந்து கொண்டு விட்டான். தன் மன வலிமையாலும், உடல் ஆரோக்யத்தாலும், பாணங்களின் பாதிப்பிலிருந்து சீக்கிரமாக விடுபட்டான். அருகில் ரத்தம் பெருக ஆழமான காயங்களுடன் தீனமான முகத்துடன் கிடந்த சகோதரனைப் பார்த்து திடுக்கிட்டான்.  சீதையினால் எனக்கு என்ன பயன்? உயிர் வாழ்ந்து தான் என்ன பயன்? இதோ என் சகோதரன் உயிர் இழந்தவனாக கிடப்பதைக் காண நேர்ந்து விட்டதே. தேடிப் பார்த்தால், பூமியில் சீதைக்கு சமமான பெண் கிடைப்பாள். லக்ஷ்மணனுக்கு சமமான சகோதரன் கிடைக்க மாட்டான். எனக்கு மந்திரியாக, வழி காட்டியாக விளங்குபவன், இந்த வானர கூட்டத்தின் முன்னால் நான் உயிரை விடுவேன். சுமித்ரா மகன், ஐந்தாவது நிலையை (மரணம்) அடைந்து விட்டது நிஜமானால், நான் தாயார் கௌசல்யையிடம் என்ன பதில் சொல்வேன்? கைகேயியிடம் தான் என்ன சொல்வேன்? சுமித்ரா அம்பாவிடம் எந்த முகத்துடன் எதிரில் போய் நிற்பேன்? தன் மகனைக் காண ஆவலுடன் காத்து நிற்பவளிடம் நான் போய் என்ன சொல்வேன்.  இந்த செய்தி காதில் பட்டால் அவள் குரரீ என்ற பக்ஷியைப் போல கதறுவாள். கன்றை இழந்த தாய் பசு போல துடிப்பாள், நடுங்குவாள். இவன் இன்றி தனியாக நான் போய் நின்றால், அவளை எப்படி சமாதானப் படுத்துவேன். சத்ருக்னனும், பரதனும் என்ன நடந்தது என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்? என்னுடன் வனம் வந்தவன், அவன் இல்லாமல் நான் திரும்ப அயோத்தி போவேனா? சுமித்ரா எதுவும் சொல்லக் கூட வேண்டாம், அவள் முகக் குறிப்பில் அவள் மன வருத்தம் தெரியும். அதைக் கூட நான் தாங்க மாட்டேன். இங்கேயே நானும் சரீரத்தைத் துறந்து விடுகிறேன். உயிர் வாழ என்னால், முடியாது. ஹா திக், என் கஷ்டகாலம், துஷ்க்ருத்யங்களை செய்தவன், அனார்யன், நான். என் காரணமாக இந்த லக்ஷ்மணன் மாண்டவன் போல கிடக்கிறான். சரங்களே படுக்கையாக. லக்ஷ்மணா, எப்பொழுதும் நான் தான் மனம் வருந்தி புலம்புவேன். நீ சமாதானம் செய்வாய். உன்னால் எழுந்து என்னிடம் பேச முடியாமல் சக்தியிழந்து கிடக்கிறாய். இந்த யுத்தத்தில் ராக்ஷஸர்களை அடித்து வீழ்த்தியவன் நீ. நீயே அந்த யுத்த பூமியில் மற்றவர் மூலம் அடிபட்டு விழுவாயா? நம்பவே முடியவில்லை. தன் உடல் ரத்தமே சுற்றிலும் பெருகி ஓட இப்படி அம்பு படுக்கையில் கிடக்கிறாயே, சூரியன் அஸ்தமனம் அடைந்தது போல காண்கிறாய். மர்ம ஸ்தானங்களில் பட்டு விட்டதா? அது தான் பேச முடியவில்லையா? நீ வாய் திறந்து பேசாவிட்டால் கூட உன் கண்கள் சொல்லுமே. வனம் போகிறேன் என்று நான் கிளம்பியதும், யோசிக்காமல் உடன் வந்தவன். நீ யமனிடம் போனால் நான் பார்த்துக் கொண்டு நிற்கவா? நானும் உன்னை தொடர்ந்து வருவேன். என் தவற்றால் நீ இந்த கதியடைந்தாய். எனக்கு இஷ்டமான பந்து நீ. இப்படி ஒரு அவஸ்தையை அனுபவிக்க நேர்ந்துள்ளது. மிகுந்த கோபம் வந்த நேரத்தில் கூட நீ கடுமையாக பேசிக் கேட்டதில்லை. பிரியமில்லாததை எப்பொழுதும் சொன்னதில்லை. ஒரே வேகத்தில் ஐனூறு பாணங்களை ஒரே சமயத்தில் விட்டவன்.  கார்த்த வீர்யனை விட வில் வித்தையில் சிறந்தவன், லக்ஷ்மணன். இந்திரனே எதிரில் வந்து அஸ்திரங்களை, அம்புகளை பிரயோகித்தாலும், அதற்கு சமமான அஸ்திரங்களைக் கொண்டு திருப்பித் தரக்  கூடியவன். உயர்ந்த உத்தமமான படுக்கைகளில் தூங்க வேன்டியவன். பூமியில் அம்புகளுக்கிடையில் கிடக்கிறானே. என்னை பொய்யன் என்று தூற்றப் போகிறார்கள். விபீஷணனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தது  க3தை4யாகப் போகிறது.  சுக்ரீவா நீ திரும்பிப் போ. ராவணன், இந்த நிலையில் வெகு வேகமாக தாக்கி என்னையும் அழிக்கவே முயலுவான். அங்கதன், நீலன், நலன், அவர்கள் சேனை வீரர்கள் எல்லோரையும் பத்திரமாக அழைத்துக் கொண்டு, வந்த வழியே சமுத்திரத்தைக் கடந்து செல். யுத்தத்தில் யாரும் செய்ய முடியாத அரிய செயலை ஹனுமான் செய்தான். ருக்ஷ ராஜனும், கோலாங்கூலாதிபனும் செய்த வீர சாகஸங்களையும் நான் மறக்க மாட்டேன். அங்கதன் செய்ததையோ, மைந்த த்விவிதர்களின் செயலையோ, கேஸரியான சம்பாதி செய்த அத்புதமான யுத்தத்தையும் மறக்க மாட்டேன். தங்கள் பங்குக்கு க3வயன், க3வாக்ஷன், சரப4ன், க3ஜன், மற்றும் வானர வீரர்கள் உயிரை திருணமாக மதித்து போரிட வந்தார்கள். சுக்ரீவா, மனிதனாக பிறந்து விதியை வெல்ல முடியாது. ஒரு ஆப்தனான, அன்புடைய நண்பனாக செய்ய வேண்டியதை நீ செய்து விட்டாய். சுக்ரீவா, நீ தர்மத்திற்கு பயப்படுபவன்.  மித்ரனாக நீ செய்த உபகாரங்கள் மிக அதிகம். நீயும் உன்னை சார்ந்த வானர வீரர்களும் அதே அளவு விஸ்வாசத்துடன் எனக்காக உயிரைக் கொடுக்கவும் தயாரானார்கள். எல்லோருக்கும் அனுமதி தருகிறேன். உங்கள் விருப்பம் போல் திரும்பிச் செல்லுங்கள். கறுமையில்லாத பழுப்பு நிற கண்களையுடைய உடைய வானரங்கள், ராகவனின் பேச்சைக் கேட்டு மேலும் கண்ணீர் பெருக்கியபடி நின்றனர். இந்த நிலையில் விபீஷணன், கையில் ஏந்திய  க3தை4யுடன், சேனையை தாறு மாறாக ஓடாமல் வகைப் படுத்தி நிறுத்தி வைத்து விட்டு ராகவன் இருக்கும் இடம் வந்தான்.  கரு நீல மலை ஒன்று வேகமாக நடந்து வருவதைப் போல வந்த அவனை ஒரு நிமிஷம் ராவணி என்று (இந்திரஜித்) நினைத்த வானரங்கள் அலறின. அசையாமல் நின்றன. யுத்தபூமியில் புழுதி மண்டிய சரீரத்துடன் செய்வதறியாது நின்றன. இருவரும் வீழ்ந்தார்கள் என்று கேள்விப்பட்டதால், ராம லக்ஷ்மணர்களைக் காண விபீஷணன் வேகமாக வந்தான். காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட மேகக்கூட்டம் போல, வானர வீரர்கள் ஆங்காங்கு நிற்பதையும், இந்திரஜித் தான் வருகிறான் என்று நினைத்து தன்னைப் பார்த்து வானரங்கள் அலறுகின்றன என்பதையும் விபீஷணன் புரிந்து கொண்டான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராம நிர்வேதோ3 என்ற நாற்பதாவது ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 50 (457) நாக பாச விமோக்ஷணம் (நாக பாசத்திலிருந்து விடுபடுதல்)

 

வானர ராஜன் சுக்ரீவன் தான் முதலில் தன்னை சமாளித்துக் கொண்டவன். வானரங்களை அதட்டி நகரச் செய்தான். சற்று தூரத்தில் விபீஷணன் வருவதைப் பார்த்து இந்திரஜித் என்று பயந்து ஓடிய வானரங்கள் மேலும் கலவரத்தை மூட்டி விட்டன.  (முந்தைய அத்தியாயத்தில் இந்த வானரங்களின் பயத்தைப் பற்றி பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஆறு ஸ்லோகங்களால், சுக்ரீவனும், அங்கதனும் இந்த வானரங்களின் பயத்தைப் போக்க எடுத்துக் கொண்ட சிரமங்களையும், சந்தேகம்  விலக அவர்கள் தன்னிலை அடையச் செய்ததையும் வர்ணித்திருக்கிறார், கவி வால்மீகி) அங்கதன் சுக்ரீவனைப் பார்த்து சொன்னான். சுக்ரீவா, இதோ ராம, லக்ஷ்மணர்கள் அடிபட்டு தரையில் விழுந்து கிடக்கிறார்கள். நாம் இந்த கவலையிலேயே இருக்கும் பொழுது, இந்த வானரங்களை கவனிக்காமல் விட்டு விட்டோம். இதோ பார், இவர்கள் முகத்தில் பயம் தெரிய, நாலா திக்குகளிலும் ஓடுகிறார்கள். பயத்தில் கண்கள் தெறித்து விழுந்து விடும் போல நடுங்குகிறார்கள். இங்கும் அங்குமாக அலை பாய்கிறார்கள். ஏதோ நிமித்தம் இருக்க வேண்டும். பயப்படும்படியாக, ஏதோ நடக்கிறது. ஒருவருக்கொருவர் வெட்கம் இல்லாமல் பின்னால் திரும்பி பார்த்துக் கொள்கிறார்கள். ஒருவரையொருவர் இடித்துக் கொண்டும், கீழே விழுந்தவர்களைத் தாண்டிக்கொண்டும் ஓடுகிறார்கள். அங்கதன் சொல்லிக் கொண்டிருந்த இதே சமயம் விபீஷணன் கையில்  க3தை4யுடன் அங்கு வந்து சேர்ந்தான். சுக்ரீவனுக்கு ஜயம், ராகவர்களுக்கு ஜயம் என்று வாழ்த்திக்கொண்டே அருகில் வந்தான்.  விபீஷணனை அந்த கோலத்தில் (கையில் உயர்த்தி பிடித்த  க3தை4யுடன்) கண்டவுடன் தான் சுக்ரீவனுக்குப் புரிந்தது. வானரங்கள் பயந்து ஓடக் காரணம் என்ன என்பதும் தெரிந்தது. அருகில் நின்றிருந்த ருக்ஷ ராஜனான ஜாம்பவானைப் பார்த்துச் சொன்னான். இதோ இந்த விபீஷணனைப் பர்த்து தான், ராவணன் மகனான இந்திரஜித் என்று எண்ணி இந்த வானரங்கள் பயந்து அப்படி ஓடி இருக்கின்றன. சீக்கிரம் இவர்களிடம், வந்திருப்பது விபீஷணன் தான், பயப்பட வேண்டாம் என்று சொல்லி தடுத்து நிறுத்துங்கள். எனவும், ஜாம்பவானும் அவ்வாறே ஒடும் சைன்யத்தை தடுத்து நிறுத்தி, விஷயத்தைச் சொல்லி நிலைமையை சமாளிக்க முயன்றான். பயம் விலகியவர்களாக வானரங்கள் திரும்பி வந்தன. ஜாம்பவான் சொன்ன பின், விபீஷணனை புரிந்து கொண்டு சாந்தமானார்கள். விபீஷணனோ, ராமரின் சரீரம் அம்புகளால் துளைக்கப் பட்டு இருப்பதையும், இன்னமும் நினைவு திரும்பாமல் கிடக்கும் லக்ஷ்மணனையும் பார்த்து வருந்தினான். தன் கண்ணிரை அடக்க முடியாமல், அந்த கண்ணீரால் நனைந்த கைகளால் அவன் கண்களைத் துடைத்தவன், துக்கம் தாங்காமல் தானும் அழ ஆரம்பித்து விட்டான். தந்திரமாக யுத்தம் செய்யும் ராக்ஷஸர்கள் கையால் இவ்விருவரும் அடிபட்டனரே. நல்ல அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள், பிரியமாக பேசி, நடந்து கொள்பவர்கள், நேர்மையாக போர் செய்பவர்கள் இப்படி அடி பட்டு கிடக்க நேர்ந்து விட்டதே. என் தமையன் மகன் துராத்மா. மறைந்திருந்து போர் செய்பவன். கபடமான புத்தியால் இவர்களை வீழ்த்தியிருக்கிறான். எந்த இருவர்களின் வீர்யத்தை நம்பி, நான் என் முன்னேற்றமும், எதிர்காலத்தில் நல்ல நிலைமையை அடைவேன் என்றும் நம்பிக் கொண்டு இருக்கிறேனோ, அவர்களே விழுந்து விட்டார்கள். என் ராஜ்ய மனோரதமும் நிறை வேறப் போவதில்லை. நான் அழிந்தேன். ராவணன் தன் பிரதிக்ஞையை பூர்த்தி செய்தவனாக, தன் இஷ்டம் நிறைவேறிய கர்வத்துடன் திரிவான். இவ்வாறு புலம்பும் விபீஷணனை அணைத்தபடி, சுக்ரீவன் தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக சமாதானம் செய்தான். சிறந்த அறிவுடையவனே, கவலைப் படாதே. நீ நிச்சயம் லங்கா ராஜ்யத்தை அடைவாய். சந்தேகமே இல்லை. ராவணன், தன் மகனோடு, விருப்பம் போல இருக்க முடியாது.  இந்த இருவரும் காயம் பட்டு மயங்கித் தான் கிடக்கிறார்கள். இதோ சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து விடுவார்கள். இவ்வாறு விபீஷணனை சமாதானப் படுத்தி விட்டு, அருகில் நின்றிருந்த தன் மாமனாரான சுஷேணனைப் பார்த்து,  சூரர்களான சில வானரங்கள துணையோடு இந்த இருவரையும் கிஷ்கிந்தைக்கு அழைத்துச் சென்று குணப்படுத்துங்கள். என்றான்.  நான் இங்கு ராவணனை புல் பூண்டின்றி அழித்து விட்டு, மைதிலியை அழைத்து வருகிறேன். நஷ்டமான ஸ்ரீயை, இந்திரன் திரும்ப பெற்றது போல, நான் வெற்றி வீரனாக வருவேன்.  வானர ராஜன் சொன்னதைக் கேட்டு, சுஷேணன் பதிலளித்தான். தேவ, அசுரர்கள் யுத்தம் நடந்த பொழுது மிக பயங்கரமாக, கோரமாக நடந்தது. தானவர்களும், தேவர்களும் திரும்பத் திரும்ப, இருவரும் உயர்ந்த சஸ்திரங்களை அறிந்தவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த வீரர்களைப் பார்த்து பிருஹஸ்பதி, மந்திரங்கள் உச்சரித்தும், ஔஷதிகள், மருந்துகள் கொண்டும் சிகித்சை அளித்தார். அந்த ஔஷதிகள் இன்னமும் பாற்கடலில் கிடக்கின்றன. அவற்றை கொண்டு வரட்டும். வேகமாக வானரங்கள் போகட்டும். சம்பாதி, பனஸன் போன்றவர்கள் மலை மேல் இருக்கும் அந்த ஔஷதிகளை அறிவார்கள். திவ்யமான சஞ்சீவ கரணீம், விசல்யா, என்ற ஒன்று., இது தேவர்களால் தயாரிக்கப் பட்டது. சந்திரன் என்றும் த்ரோணம் என்பவையும், பாற்கடலான உத்தமமான சாகரத்தில், அமுதம் கடையப் பட்ட இடத்தில் இன்னமும் கிடக்கின்றன. ஔஷதங்கள் நிறைந்த அந்த பர்வதம், பாற்கடலில் தேவர்கள் கொண்டு வந்து போட்டது, அப்படியே கிடக்கிறது. வாயு புத்திரன் ஹனுமான் அங்கு போகட்டும். சுஷேணன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, வாயுவும், மேகம் மின்னலோடு நடுங்க, சமுத்திர ஜலம் கலங்க, பூமி நடுங்க, தன் இறக்கைகளின் சலனத்தால் தோன்றிய பெரும் காற்றினால் ஆங்காங்கு தீவுகளில் பெரிய பெரிய மரங்களை கீழே தள்ளி சாய்த்தபடி, உப்பு நீர்க் கடலில் பெரிய மரங்கள் வேரோடு சாய, அங்கு வசித்த பாம்புகளும், நாகங்களும் பயந்து அலை பாய்ந்து வேக வேகமாக சமுத்திரத்தின் அடி மட்டம் செல்ல, ஒரு முஹுர்த்த நேரத்தில், வைனதேயனான கருடன் அங்கு வந்து சேர்ந்ததை வானரங்கள் கண்டனர். கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல பிரகாசமாக விளங்கிய கருட ராஜனைக் கண்டனர். நெருங்கி வந்த கருடனைக் கண்டதும், நாகங்கள் அலறிக் கொண்டு ஓடின. இரு வீரர்களையும் கட்டி வைத்திருந்த நாக பாசம் விலகியது. சுபர்ணன் என்று அழைக்கப் படும் கருடன், காகுத்ஸ வீரர்களைப் பார்த்து வாழ்த்தி, தன் கைகளால் அவர்கள் உடல் பூராவும் தடவிக் கொடுத்தான். காயங்கள், இந்த ஸ்பரிசாத்தாலேயே குணம் அடைந்தன.  பழைய நிறமும், பொலிவும் இருவர் உடலிலும் வந்து சேர்ந்தது. தேஜஸ், வீர்யம், உற்சாகம், போன்ற உயரிய குணங்களும் வந்து சேர்ந்தன. நல்ல களை பொருந்திய உடல் அமைப்பும், புத்தியும், நினைவாற்றலும் இரு மடங்காகி வளர்ந்தன. அவர்கள் இருவரையும் எழுப்பி நிறுத்திய கருடன், வாஸவன் போல இருந்த இருவரையும், தனித் தனியே ஆலிங்கனம் செய்து மகிழ்ச்சியோடு ராமர் அருகில் நின்றான். ராமரும் கருடனைப் பார்த்து அதிர்ஷ்ட வசமாக தங்கள் வரவால் எங்கள் கஷ்டம் நீங்கியது. ராவணன் மகன் தன் சாமர்த்யத்தால், எங்களை வீழ்த்தியதிலிருந்து தப்பினோம். பழையபடி பலமும் எங்களுக்கு வந்து சேர்ந்தது. என் தந்தை தசரதன் போலவும், அஜன் (ப்ரும்மா), பிதாமகராக உயிர்களை காப்பாற்றுவது போலவும், தாங்கள் வந்து சேர்ந்தீர்கள். என் மனம் மகிழ்ச்சியில் நிறைந்துள்ளது. தாங்கள் யார்? அழகிய ரூபமும், திவ்யமான வஸ்திர ஆபரணங்களும் தரித்தவராக, திவ்யமான மாலையும், அங்க ராகமும் பூசிய உடலுமாக காண்கிறீர்கள்.  என்று வினவ, மகா தேஜஸ்வியும், மகா பலசாலியுமான வைனதேயன் பதில் சொன்னார். நான் பக்ஷி ராஜன். காகுத்ஸா, உன் சகா நான். பிரியமான உயிர், உடலுக்கு வெளியே சஞ்சரிப்பது போல சஞ்சரிப்பவன். க3ருத்மான் என்று அழைப்பர். உங்கள் இருவருக்கும் உதவி செய்யவே இங்கு வந்தேன். மகா வீர்யம் உடைய அசுரர்களோ, பலம் வாய்ந்த தானவர்களோ, கந்தர்வர்களோ, இந்திரனைத் தொடர்ந்து வரும் தேவர்களோ, இந்த சர பந்தனத்தை விடுவிக்க சக்தியுடையவர்கள் அல்ல. இது மிகவும் பயங்கரமானது. க்ரூர கர்மாவான இந்திரஜித் தன் மாயா பலத்தால், உண்டாக்கியிருப்பது. காத்ரவர்கள் எனும் கொடிய நாகங்கள் இவை. கூர்மையான பற்களுடன், விஷத்தை கக்கக் கூடியவை. ராக்ஷஸனின் மாயையால், (சரங்களாகி) உங்கள் உடலைத் தாக்கி வீழ்த்தின. சத்ய பராக்ரமா, ராமா, நீ பாக்யவான். தர்மம் அறிந்தவனே, எல்லா நன்மைகளையும் அடையப் பெறுவாய். உன் சகோதரன் லக்ஷ்மணனும், யுத்தத்தில் எதிரிகளை அழித்து வெற்றியை நிலை நாட்டுவான். இந்த செய்தியைக் கேட்டு, நான் வேகமாக வந்தேன். உங்கள் இருவரிடமும் உள்ள ஸ்னேகத்தால், நட்பை நிலை நிறுத்த ஓடி வந்தேன். இந்த கடுமையான அஸ்திர பந்தனத்திலிருந்து உங்களை மீட்டேன். நீங்கள் இருவரும் சற்றும் அயராது, தெளிவாக யோசித்து செயல் படுங்கள். இயல்பாகவே ராக்ஷஸர்கள், தந்திரமாக யுத்தம் செய்பவர்கள்.  நீங்கள் சுத்தமான பா4வத்துடன், நேர்மையாக யுத்தம் செய்ய வந்துள்ளீர்கள். உங்கள் நேர்மையே உங்களுக்கு பலம். அதனால் ராக்ஷஸர்களின் செயல்களை அப்படி அப்படியே நம்ப வேண்டாம். இந்த நிகழ்ச்சி ஒரு பாடமாக இருக்கட்டும். ராக்ஷஸர்கள் மாயாவிகள்.  நினைவிருக்கட்டும். என்று சொல்லி ராம லக்ஷ்மணர்களை அணைத்து ஆசிர்வதித்து சுபர்ணன் கிளம்பினான். சகே2 ராக4வா, எதிரிகளுக்கும் பிரியமானவன் நீ. எனக்கு விடை கொடு. நான் கிளம்புகிறேன். என் நிலையில், நண்பனாக உள்ள யாராக இருந்தாலும் இதைச் செய்திருப்பார்கள். அதனால் என் செயலை பெரிதாக எண்ணாதே.  உன் செயலை ஆதரிக்கும் உற்ற நண்பனாக நடந்து கொண்டேன். அவ்வளவு தான்.  பாலர்களும், முதியவர்களும் மட்டும் தான் லங்கையில் மீதம் இருப்பார்கள் எனும் படி, உன் சரங்களால் லங்கையை துளைத்து எடுத்து வெற்றி பெறுவாய். ராவணன் என்ற எதிரியை அழித்து, சீதையை அடைவாய்.  இவ்வாறு சொன்ன சுபர்ணன், வானர வீரர்களுக்கு மத்தியில் ராம லக்ஷ்மணர்களின் காயத்தை ஆற்றி, பிரதக்ஷிணமாக ஒரு சுற்று சுற்றி, ஆகாயத்தில் வந்தது போலவே காற்றோடு காற்றாக மறைந்தான். வானர வீரர்கள், சேனைத் தலைவர்கள், காயம் எதுவுமின்றி, நிமிர்ந்து நின்ற ராகவர்களைப் பார்த்து மகிழ்ந்தனர். தங்கள் வால்களை அடித்துக் கொண்டு, சிங்க நாதம் செய்தன. பேரியும், ம்ருதங்கமும் முழங்கலாயின. சங்கத்தை ஊதின. ஊரையே கலக்கும் விதமாக பெரும் குரலில் சத்தமிட்டன. மலையிலிருந்து கற்களையும், மரங்களையும் கொன்டு வந்து, தங்கள் தோள்களைக் குலுக்கி, வீரத்தை வரவழைத்துக் கொண்டன. போருக்குத் தயாராக கிளம்பின, ராக்ஷஸர்களை நடுங்கச் செய்வதாக சொல்லிக் கொண்டு உச்சஸ்தாயியில் கோஷம் இட்டன. லங்கை கோட்டை வாசலை சென்றடைந்தன. இரவில் இடி முழக்கம், காதை பிளப்பது போல, இந்த வானர வீரர்களின் ஜய கோஷம் கேட்டது. இரவு முடியும் தறுவாயில் இளம் காலை நேரத்தில் இந்த சத்தம் மிக அதிகமாக கேட்டது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நாக3 பாச விமோக்ஷணம் என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 51 (458) தூ3ம்ராபி4ஷேணனம் (தூம்ரன் போருக்கு வருதல்)

 

ஆனந்த கூத்தாடும் ராக்ஷஸ வீரர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் ஒரு பக்கம் இருக்க, வானர வீரர்களின் உற்சாகம் மிகுந்த ஜய கோஷமும் கேட்க, ராவணன் அதிர்ச்சியடைந்தான். கம்பீரமாக, தெளிவாக வந்த அந்த பெரும் ஓசையை கேட்டவுடன், தன் மந்திரிகளை அழைத்து விசாரித்தான். இந்த வானரங்களின் கூட்டத்திலிருந்து உற்சாகமான ஆரவார சத்தம் எப்படி வருகிறது? ஏதோ இந்த வானரங்கள் விரும்பியது நடந்து விட்டது போல கூச்சல் போடுகின்றனவே. ஏராளமானவர்கள், ஒரே சமயம் பெரும் குரலில் கர்ஜிக்கும் மேகம் போல ஓசையெழுப்பினால், அவர்களே எதிர்பாராத ஒரு பெரும் நன்மை அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும், என்பதில் சந்தேகமேயில்லை. இவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம், சமுத்திரத்தின் அலை ஓசையைக் கூட அடக்கி விடுகிறது, பாருங்கள். அந்த வீரர்கள் இருவரும் நாக பாசத்தின் சரங்களால் அடிபட்டு வீழ்ந்து கிடந்தனர். நினைவிழந்து கிடந்தனர். இப்பொழுது இந்த சத்தம், இந்த ஆரவாரம் எனக்கு சந்தேகத்தைக் கிளப்புகிறது.  இவ்வாறு மந்திரிகளை கலந்தாலோசித்த ராவணன்,  அருகில் இருந்த ராக்ஷஸ வீரர்களிடம், போய் இந்த வானரங்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு காரணம் என்ன என்று விசாரித்துக் கொண்டு வாருங்கள் என்று அனுப்பினான்.  சோகத்தில் மூழ்கி அடக்கமாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில் உற்சாக கூக்குரல் பொருத்தமாக இல்லையே. அந்த ராக்ஷஸர்களும் உடனே மாளிகையின் மேல் ஏறி சுக்ரீவன் அணி வகுத்து நிறுத்தியிருந்த வானரப் படையைக் கண்டனர். ராகவர்கள் இருவரும், நாக பாசத்திலிருந்து விடுபட்டவர் களாக நிற்பதைக் கண்டனர். இதைக் கண்டு திடுக்கிட்ட ராக்ஷஸர்கள், மாளிகையின் மேலிருந்து இறங்கி, முக வாட்டத்துடன், ராவணன் இருக்கும் இடம் வந்து சேர்ந்தனர். தீனமான முகத்துடன், இந்த அப்ரியமான விஷயத்தை ராவணனிடம் சொன்னார்கள். எந்த இருவர் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டு, நினைவிழந்து கிடந்தனரோ, அவ்விருவரும், பாண பாசத்திலிருந்து விடுபட்டு, தங்கள் புஜ பலம் மேலும் கூடியவர்களாக நிமிர்ந்து நிற்கின்றனர். கட்டியிருந்த கயிற்றை அறுத்து விட்டு பெருமிதமாக நடக்கும் யானைகள் போல இருவரும் இன்று யுத்த களத்தில் தென் படுவார்கள். கஜேந்திரனுக்கு இணையாக இவர்கள் விக்ரமும் (ஆற்றலும்) அதிகரித்திருக்கும் இவர்கள் சொன்னதைக் கேட்டு, ராக்ஷஸேந்திரன் சிந்தனையும் சோகமும் சூழ்ந்து கொள்ள, முக வாட்டம் அடைந்தான்.  வர பலத்தால் கிடைத்த பயங்கரமான அஸ்திரம், நாக பாசம். அந்த ஆலகால விஷம் போன்ற பாசத்தில் சிக்கியவர்கள், அதிலிருந்து விடுபடுவது எளிதல்ல. இந்திரஜித்தால் பிரயோகிக்கப் பட்ட அந்த பாணங்கள் அமோகமானவை. சூரியனுக்கு சமமான பிரகாசம் மிக்கவை. என் எதிரிகள் இந்த பாசத்திலிருந்து விடுபட்டார்கள் என்றால், நம் படை பலம் முழுவதுமே சந்தேகமான நிலையில் இருப்பதாக எண்ணுகிறேன். வாசுகியின் வீர்யம் இப்படி பலம் இல்லாததாக, பயனற்று கூட போகுமா என்ன? (வாசுகி – பாம்பின் பெயர்). இதனால் யுத்தத்தில் என் உயிர் பிழைத்தது என்று நம்பி இருந்தேன். மனதில் இந்த எண்ணங்கள் பெருமூச்சாக வெளிப்பட, புஸ் புஸ் என்று பெருமூச்சு விடும் மலைப் பாம்பு போலவே ராவணன் காட்சியளித்தான். ராக்ஷஸர்களின் மத்தியிலிருந்து தூம்ராக்ஷன் என்பவனை அழைத்து, ராக்ஷஸா, நீ இப்பொழுது கிளம்பு. நல்ல பொறுக்கி எடுத்த வீரர்களுடன், ராமனை வதம் செய்யும் உத்தேசத்துடன் சென்று, போர் செய். வானரர்களையும் நாசம் செய். ராக்ஷஸேந்திரனின் கட்டளையை ஏற்று, தூம்ராக்ஷன், அரசனை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, கிளம்பினான். அந்த மாளிகையின் வாயிலை விட்டு இறங்கியதுமே படைத் தலைவனை அழைத்து, யுத்தம் செய்ய போர் வீரர்களை தயார் செய் என்று உத்தரவிட்டான். தூம்ராக்ஷனின் கட்டளை, ராவண ராஜாவின் கட்டளை என்பதால், அவனும் உடனே ஆயத்தம் செய்ய முனைந்தான். பலசாலிகளான பல ராக்ஷஸ வீரர்கள், கர்ஜித்தபடி, மணிகளை இடுப்பில் அணிந்தவர்களாக உடனே புறப்பட்டனர். சூலம், உத்கரம், என்ற பலவிதமான ஆயுதங்களை ஏந்தியவர்களாக உற்சாகமாக போர் செய்யத் தேவையான பட்டஸம், க3தை, தண்டம், ஆயஸம், முஸலம், இவைகளை சேகரித்துக் கொண்டனர். பரிகங்களும், பிண்டிபாலம், பல்ல, ப்ராஸ, பரஸ்வத, என்ற ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். மேகங்கள் இடி இடித்தபடி, ஆகாயத்தில் வேகமாக சஞ்சரிப்பது போல, கோஷமிட்டுக் கொண்டு சென்றனர். தூம்ராக்ஷனுடைய ரதம் தயாராகி வந்தது. கவசங்கள், த்வஜங்கள் இவை அலங்காரமாக மாட்டப் பட்டிருந்தன. பலவித முகங்கள் செதுக்கிய (கடுமையான) வேலைபாடமைந்த (கர-கோவேறு கழுதையின் உருவம்) பொறிக்கப்பட்ட, ரதத்தில், பெரும் ஆரவாரத்துடன், தூம்ராக்ஷனும் ஏறினான்.  ஓநாய், சிங்கம், இவைகளின் உருவங்களும், கழுதை உருவங்களும் தங்கத்தில் பொறிக்கப்பட்டிருந்தன. சிரித்துக் கொண்டு ஹனுமான் இருந்த மேற்கு வாயில் நோக்கி ரதத்தைச் செலுத்தினான். அதில் பொறிக்கப்பட்டிருந்த கழுதையின் கத்தல், போன்ற குரல் உடைய தூம்ராக்ஷன் (கரயுக்தம்-கழுதை உருவம் உடைய, கரஸ்வனம்-கழுதை போன்ற குரலுடைய) கிளம்பியதும் வானத்தில் கழுகுகள் எதிர்கொண்டன. ரதத்தின் உச்சியில் ஒரு பெரிய கழுகு வந்து விழுந்தது. இறந்த உடலைத் தின்னும் இந்த மாமிச பக்ஷிணிகளான பறவைகள், த்வஜத்தின் முன்னால் மாலை கோர்த்தது போல அமர்ந்தன. அபஸ்வரமாக கூச்சலிட்டுக் கொண்டு, பாதி உடலுடன் கபந்தனாக ஒரு பக்ஷி ரத்தம் சொட்ட விழுந்தது. காற்றும் எதிர் திசையில் சுழன்று வீசலாயிற்று. இருள் மூடி, திசைகளும் தென் படவில்லை. ராக்ஷஸர்களுக்கு ஆபத்தை சொல்லும் விதமாக விழுந்த கழுகுகளைக் கண்டு தூம்ராக்ஷன் கவலை கொண்டான். க்ஷண நேரத்தில் எங்கிருந்தோ வந்து சூழ்ந்து கொண்ட இந்த பக்ஷிகள் எங்கிருந்து வந்தன என்று யோசித்தான். முன்னும் பின்னும் அணி வகுத்து வந்த ராக்ஷஸர்களுக்கும் இதே கவலை தோன்ற, செய்வதறியாது திகைத்தனர். எதிரில், ராகவனால், தானே ராகவன் முன் நின்று ஒழுங்கு படுத்தியிருந்த வானர படை, உற்சாகத்துடன் தங்களுடன் மோதத் தயாரான நிலையில் இருப்பதையும் கண்டனர். 

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் தூம்ராபிஷேணனம் என்ற ஐம்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 52 (459) தூ3ம்ராக்ஷ வத4ம் (தூம்ராக்ஷனை வதம் செய்தல்)

 

வானர சைன்யத்திலிருந்து தூம்ராக்ஷனை வரவேற்பது போல கோலாகலமான சத்தம் எழுந்தது. பயங்கரமான ஆற்றல் உடையவன் தூம்ராக்ஷன் என்பது அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. இதன் பின் ஹரி (வானரம்) ராக்ஷஸர்களின் மத்தியில் கடுமையான போர் மூண்டது. ஒருவருக்கு ஒருவராக, கைகளில் மரங்களை ஏந்தியவர்களுக்கும், சூல உத்கரத்தை ஏந்தியவர்களுக்கும் இடையில் கை கலப்பு ஆரம்பித்தது. ஆரம்பத்தில், பயங்கரமான த்ரிசூலங்களையும், விசித்ரமான பரிக4ங்களையும் கொண்டு போரிட்ட ராக்ஷஸர்களால் வானரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வானரங்களும் சளைக்காமல், வேரோடு பிடுங்கிய மரங்களாலேயே ராக்ஷஸர்களை தரையோடு தரையாகச் செய்தனர். கோபம் கொண்ட ராக்ஷஸர்கள் கூர்மையான பாணங்களை வானரங்களின் மேல் விட்டனர். பெரிய பெரிய  க3தை4களையும்  பட்டஸங்களையும் கொண்டு, வானரங்களை அடித்து நொறுக்கினர். சரங்கள் துளைத்த உடல்கள், சூலங்களால் பிளக்கப் பட்ட உடல்கள் என்று வானர வீரர்கள் ஆனாலும், மேலும் ஆத்திரம் கொண்டு, மரங்களோடு கற்களையும் எடுத்து வீசலாயினர். நல்ல வேகம் உடைய வானரர்கள், ராக்ஷஸர்களை கண்ட இடத்தில் அடித்து, தங்கள் பெயரைச் சொல்லி கோஷம் செய்தனர்.  ராக்ஷஸ சேனையை ஒரு கலக்கு கலக்கி விட்டன. வானர, ராக்ஷஸர்களுக்கிடையிலான அந்த யுத்தம் மகா கோரமாக தொடர்ந்தது. ராக்ஷஸர்கள் இவர்கள் மூலம் பலத்த காயம் அடைந்தனர். சிலர் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. பக்கங்கள் கிழிபட்ட முகம் உடையவர்களாக சிலர் குப்பையாக மரங்களால் அடிக்கப் பட்டவர்களாக, கற்களால் பொடியாக்கப் பட்டவர்களாக சிலர், சிலர் பற்களால் கடிக்கப் பட்டு காணப்பட்டனர். த்வஜங்களை கீழே தள்ளி,, ரதங்களை உடைத்து, அதை ஓட்டி வந்த மிருகங்களையும் அடித்து, ராக்ஷஸர்களைத் தரையில் விழச் செய்து அட்டகாசம் செய்தன. கஜேந்திரனோ, மலைக் குன்றோ எனும்படி பெருத்த உருவம் உடைய வானரங்கள், கால்களால் மிதித்தும், முஷ்டிகளால் குத்தியும், ராக்ஷஸர்களை நாசம் செய்தனர். தங்கள் குதிரைகள், ரதத்தில் பூட்டிய மிருகங்களோடு சேர்த்து கீழே தள்ளப் பட்டவர்களாக, பயங்கரமான வேகத்துடனும், பலத்துடனும் வானரங்கள் திரும்பத் திரும்ப வந்து வெறி பிடித்தது போல அடித்தும், குத்தியும் நகங்களால் கீறியும் பற்களால் கடித்தும் துன்புறுத்தியதில், முகமே மாறிப் போக, தலை மயிரைப் பிடித்து இழுத்து வானரங்கள் செய்த சித்ர வதையை பொறுக்க மாட்டாமல் அலறினார்கள். செய்வதறியாதவர்களாக, பூமியில் விழுந்தார்கள். சில ராக்ஷஸ வீரர்கள், வானரங்கள் புறங்கைகளால் அடித்ததையே பொறுக்க மாட்டாதவர்களாக, வஜ்ரத்தால் அடித்தது போன்ற தாங்க முடியாத வேதனைக்குள்ளானார்கள். மற்றும் சிலர் ஆத்திரமடைந்து பலம் கொண்ட மட்டும் கத்தி வானரங்களை பயமுறுத்த முனைந்தனர்.  தொடர்ந்து வானர வீரர்களின் முஷ்டி, நகம், பற்கள், தவிர மரங்கள் இவற்றால் தாக்கப் படுவது பொறுக்க மாட்டாமல் பலர் ஓடினர்.  ஓடும் வீரர்களைப் பார்த்து தூம்ராக்ஷன், அவர்களை தடுத்து நிறுத்த இயலாமல், தன் ஆத்திரத்தை வானர சைன்யத்தின் மேலேயே திருப்பினான். ப்ராஸங்களால் இழுத்து வானர வீரர்கள் பலரை கடைந்து எடுப்பது போல வாட்டினான். ரத்தம் சொட்ட கீழே விழச் செய்தான். முத்33ரம் எனும் ஆயுதத்தால், மேலும் பலரை பூமியில் விழச் செய்தான். பரிகத்தால் சிலரை, பிண்டிபாலம் என்ற ஆயுதத்தால் கிழித்து நாராக்கினான்.  பட்டஸத்தால் பலமாக அடித்து சிலரை கதி கலங்கச் செய்தான். சூலத்தால் சிலரைத் தாக்கினான். இவர்கள் தங்கள் உடலிலிருந்து பெருகிய ரத்தத்தில் நனைந்தார்கள். சிலர் ராக்ஷஸர்களின் காலடியில் மிதி பட்டு அழிந்தார்கள். பயத்தால் நடுங்கிய சிலர், ஏக பார்ஸ்வம் என்ற ஆயுதத்தால் குத்தி கிழிக்கப் பெற்றனர். த்ரிசூலமும், ஆந்த்ரம் எனும் ஆயுதமும் இப்படியே கிழித்து ரத்தம் பெருகச் செய்தன. கோரமான யுத்தம் தீவிரமாக ஆக ஆக, கற்கள் உராயும் சத்தமும், ஆயுதங்கள் உராயும் சத்தமும் கூட ஒன்று போல கேட்டன. இதற்கு அனுசரணையாக தாளம் போடுவது போல வில்லில் அம்பை தொடுத்து விடும் நாதமும், மிக மந்தமான கதியில் சங்கீதமும், காந்தர்வர்கள் பாடுவது போல இருந்தது. கையில் வில்லேந்தி நின்ற தூம்ராக்ஷன், பாணங்களை வர்ஷித்து, ஓடும் வானரங்களைப் பார்த்து சிரித்தபடி, மேலும் கணக்கில்லாத பாணங்களைப் பொழிய ஆரம்பித்தான். இதைக் கண்ட மாருதி, ஒரு பெரிய கல்லை கையில் எடுத்துக் கொண்டு, தூம்ராக்ஷனை நோக்கி வந்தான். கண்கள் சிவக்க, முகத்தில் ஆத்திரம் தாண்டவமாட,  தன் தந்தைக்கு சமமான பராக்ரமம் உடையவனான வாயுபுத்திரன், அந்த கல்லை தூம்ராக்ஷனுடைய ரதத்தின் மேல் வீசினான். மேலே வந்து விழும் கல்லைப் பார்த்து. பயந்து தன்  க3தை4யை தூக்கி, பரபரப்புடன், ரதத்திலிருந்து குதித்து கீழே வந்து நின்றான். மாருதி வீசிய கல் ரதத்தை தூள் தூளாக்கியது. சக்ரமும், த்வஜமும், அதில் பூட்டியிருந்த குதிரையும், ஆயுதங்கள் வைக்கப் பட்டிருந்த பெட்டியும், ஆசனமும் போன இடம் தெரியவில்லை. ரதம் நொறுங்கி விழுந்தவுடன் கிளைகளோடு ஒரு மரத்தைக் கொண்டு ராக்ஷஸனை வதம் செய்தான். தலை அறுந்து ராக்ஷஸன் விழுந்தான். தூம்ராக்ஷன் சமாளித்துக் கொண்டு ஓடுவதைக் கண்ட மாருதி, மற்றொரு பெரிய கல் ஒன்றை எடுத்துக் கொண்டு துரத்தினான். தூம்ராக்ஷன் பல முட்கள் நிறைந்த தன்  க3தை4யால் மாருதியின் தலையில் ஓங்கி அடித்தான். மருதனுக்கு இணையான பலம் கொண்ட மாருதன் அந்த அடியை லக்ஷியம் செய்யவில்லை. தூம்ராக்ஷனின் நடுத் தலையில் தன் கையிலிருந்த கல்லை வீசி, அவனை நிலை தடுமாறச் செய்தான்.  பெரும் மலை ஒன்று வேரோடு பிடுங்கி எறியப் பட்டது போல தூம்ராக்ஷன் நினைவு இன்றி பூமியில் சரிந்தான். தூம்ராக்ஷன் மடிந்து விழுந்ததைக் கண்ட ராக்ஷஸர்கள் ஓட்டமாக ஓடி லங்கையில் நுழைந்து கொண்டனர். வானரங்களின் இம்சையை பொறுக்க மாட்டாதவர்களாக ஓடினர். சத்ருவை ஒழித்த மாருதி, தன் சரீர சிரமத்தையும் மறந்தவனாக, மற்ற வானரங்கள் உற்சாகமாக வாழ்த்த, தானும் உற்சாகம் அடைந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் தூ3ம்ராக்ஷ வத4ம் என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 53 (460) வஜ்ரதம்ஷ்டிர யுத்தம் (வஜ்ர தம்ஷ்டிரன் செய்த யுத்தம்)

 

தூம்ராக்ஷன் அடிபட்டு விழுந்ததைக் கேள்விப்பட்ட ராவணன், ராக்ஷஸாதிபன், கோபத்துடன், மேல் மூச்சு வாங்க சீறும் நாகத்தைப் போல இருந்தான். சற்று யோசனையுடன், உஷ்ணமாக, தீர்கமாக பெருமூச்சு விட்டவன், வஜ்ரத்ம்ஷ்டிரன் என்ற ராக்ஷஸனை அழைத்தான். ஆத்திரத்துடன், அறிவிழந்து அவனுக்கு ஆணையிட்டான். வீரனே, நீ கிளம்பு. பொறுக்கி எடுத்த வீரர்களுடன் யுத்தகளம் செல்வாய். தாசரதி ராமனை கொல். சுக்ரீவனை அவன் படையுடன் நாசமாக்கு என்றான்.  வஜ்ரதம்ஷ்டிரனும், பெரும் படையுடன் கிளம்பினான். யானைகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள் பூட்டிய ரதங்களை, இவைகளின் மேல் ஆரோஹணித்த வீரர்களுடன், அழகிய பதாகம், த்வஜம் இவற்றுடன் ரதங்களில் அலங்காரமாகச் சென்றான். விசித்ரமான கேயூரம், முகுடம், இவற்றால் அலங்கரிக்கப் பட்டவனாக, ரதத்தை பிரதக்ஷிணம் செய்து வணங்கியபின், ஏறினான். ஆயுதங்கள்-யஷ்டிகள், தோமரங்கள், சூலங்கள், முஸலங்கள், பிண்டிபாலங்கள், பாசங்கள், சக்தி, பட்டஸங்கள் என்ற அனைத்தும் தாராளமாக இருந்தன. வாள், சக்கரங்கள்,  க3தை4கள், கூர்மையான பரஸ்வதங்கள், இவற்றுடன், பல விதமான ஆயுதம் ஏந்திய காலாட்படையினரும் உடன் சென்றனர். ராக்ஷஸர்கள் விதம் விதமான ஆடைகளுடன் தென்பட்டனர். யானைகள் மதம் கொண்ட நிலையில், பெரிய மலைகளே அசைந்து வருவது போல வந்தன. அதன் மேல் யுத்தம் செய்வதில் வல்லமை பெற்ற ராக்ஷஸர்கள், தோமரம் அங்குசம் இவைகளை ஏந்தியபடி, ஏறி அமர்ந்தனர்.  மின்னலுடன் கூடிய மழைக் கால மேகங்கள், ஆகாயத்தில் ஊர்ந்து செல்வது போல, பெரும் கோஷத்துடன் இந்த ராக்ஷஸ சேனை நகர்ந்தது.  தெற்கு வாசல் வழியாக யுத்த பூமியை அடைந்தது.  இங்கு அங்கதன் தன் சேனைக்கு தலைவனாக நின்றிருந்தான். வாசலைக் கடக்கும் பொழுதே அவர்களுக்கு அசுபமான சகுனங்கள் தோன்றின. ஏராளமான மின் மினி பூச்சிகள் ஆகாயத்திலிருந்து அவர்கள் மேல் வந்து விழுந்தன. நெருப்பை உமிழ்வது போல காணப்பட்டன. குள்ள நரிகள் பயங்கரமாக ஊளையிட்டன. மிருகங்கள் பயங்கரமாக சத்தமிட்டன. ராக்ஷஸர்களின் மரணத்தை முன்கூட்டியே எச்சரிப்பது போல இருந்தது. ராக்ஷஸ வீரர்கள் கால் தடுக்கி விழ இருந்தனர். சமாளித்து எழுந்து நடந்தனர். இந்த துர் நிமித்தங்களே, ராக்ஷஸர்களின் மனதில் பயத்தை தோற்றுவிக்கப் போதுமானதாக இருந்தது. வஜ்ரதம்ஷ்டிரன் கலங்காமல், தன் வீரர்களையும் தேற்றி, முன் செல்லச் செய்தான். ஓடும் ராக்ஷஸர்களைப் பார்த்து வானரங்கள் உற்சாகத்துடன் கூச்சலிட்டனர். நாலா திக்குகளிலும் இந்த கூக்குரல் எதிரொலித்தது. இதன் பின் வானர வீரர்களுக்கும், ராக்ஷஸர்களுக்கும் இடையில் கடுமையான போர் மூண்டது. ஒருவரையொருவர் வெட்டி சாய்ப்பதையே குறியாகக் கொண்டு போரிட்டனர். உடல் தனி தனியாக, கை, கால் வெட்டுப் பட்டவர்களாக, ரத்தம் பெருக்கோட எங்கும் ஓலம் நிறைந்தது. பூமியில் ரத்த சேற்றில் பலர் விழுந்தனர். யுத்தத்தில் புற முதுகு காட்டாத வீரர்கள் சிலர் ஆயுதங்களை பிரயோகம் செய்தனர்.  மலைப் பாறைகளும், ஆயுதங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓசையெழுப்பின. தவிர சங்கமும், பேரியும் முழங்கின. சிலர் அஸ்திரங்களை கை விட்டு கைகலப்பு செய்ய முனைந்தனர். புறங்கைகளாலும், பாதங்களாலும் முஷ்டியாலும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். முழங்கால் முட்டி பெயர்ந்து சிலர், உடலில் பட்டு சிலர், கற்கள் விழுந்து பொடிப் பொடியாக சிலர், சில வானரங்கள் யுத்தம் செய்யும் விதத்தில் எதிர்க்க முடியாமல் சிலர், வஜ்ரதம்ஷ்டிரன் முடிந்த வரை பாணங்களைப் பொழிந்து வானரங்களை பயப்படச் செய்தான். கையில் பாசத்துடன் நடமாடும் காலனைப் போல யுத்த பூமியில் சஞ்சரித்தான். பலசாலிகளான பலரும், அஸ்திரங்களையும் போர் முறைகளை அறிந்திருந்த பலரும், கோபத்தின் உச்சியில் வானரங்களை சின்னா பின்னமாக்கி குவித்தனர். அங்கதன் இதைக் கண்டு தன் ஆத்திரத்தை இரு மடங்காக்கிக் கொண்டு, சூழ்ந்து வரும் ஸம்வர்தக நெருப்பைப் போல, தாக்கலானான். கைகளில் மரத்தை எடுத்துக் கொண்டு, ராக்ஷஸ சைன்யத்தினுள் புகுந்து, அடிக்கலானான். சிவந்த கண்களுடன், ஒரு சிறிய மிருகத்தை சிங்கம் தாக்குவது போல தாக்கலானான். இந்திரனுக்கு சமமான பராக்ரமத்துடன், யுத்த பூமியை கலக்கினான். அங்கதன் கையால் அடிபட்ட பல ராக்ஷஸர்கள், வேரோடு சரிந்த மரங்கள் போல தலை அறுந்து தொங்க விழுந்தனர். ரதங்களும், குதிரைகளும், அழகிய கொடிகளுமாக, ஹரி, ராக்ஷஸ சரீரங்களும், அதிலிருந்து பெருகிய ரத்தமுமாக, யுத்த பூமி பயங்கரமாக காணப்பட்டது. இதன் மேல் அவர்கள் அணிந்திருந்த ஹாரங்கள், கேயூரங்கள், வஸ்திரங்கள் இவையும் அலங்கோலமாக தரையில் விழுந்து பரவிக் கிடந்தன. சரத்கால இரவு போல இருந்தது. மேகத்தை விரட்டிச் செல்லும் காற்று போல அங்கதனின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ராக்ஷஸ சேனை திணறியது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் வஜ்ரதம்ஷ்டிர யுத்தம் என்ற ஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 54 (461) வஜ்ரத3ம்ஷ்டிர வத4ம் (வஜ்ர தம்ஷ்டிரனின் வதம்)

 

அங்கதன் முன்னேறி வர வர, தன் படை வீரர்கள் சிதறிக் கொண்டு போவதையும் பார்த்த வஜ்ரதம்ஷ்டிரன் அளவில்லா ஆத்திரம் அடைந்தான். தன் வில்லின் நாணை விரலால் மீட்டி நாதம் எழுப்பினான். இந்திரன் வஜ்ராயுதத்தை வீசியது போல பெரும் நாதம் எழுந்தது. அந்த நாதத்தைக் கேட்டு வானரங்கள் நடுங்கின. சரமாரியாக வஜ்ர தம்ஷ்டிரனின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளுக்கு பல வானரங்கள் பலியாயின.  பலவிதமான யுத்த தந்திரங்களை அறிந்திருந்த  முக்யமான ராக்ஷஸ தலைவர்கள், ரதங்களில் ஏறி, வேகமாக செயல் பட ஆரம்பித்தனர். வானர வீரர்களின் கைகளில்  கற்களே ஆயுதங்களாக இருந்தன. பல ஆயுதங்களை ராக்ஷஸர்கள், வானரங்கள் மேல் பிரயோகம் செய்தனர். வானரங்கள் கையில் கிடைத்ததை, மரக் கிளைகள், கற்கள், சிறியதும் பெரியதுமாக, என்று வீசின. உத்தமமான யானையை போல கம்பீரமான பல ராக்ஷஸ வீரர்கள், யுத்த கலையைக் கற்றுத் தேர்ந்த சூரர்களாக, அஞ்சி புறமுதுகு காட்டி ஓடாதவர்களாக, நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தனர். ராக்ஷஸ சரீரங்களும், வானர உடல்களும், கை கால் உடைந்து தலையில்லாத உடலாக பலவிதமாக அடிபட்டு, பூமியில் விழுந்தன. ஆகாயத்தில் கழுகுகளும், மற்ற பக்ஷிகள் கங்க, பாலாட்ய, கோமாயு எனும் பக்ஷிகளும் வட்டமிட்டன. பயந்த சுபாவம் உடையவர்கள் இந்த காட்சியை கண்ணால் கண்டாலே உயிர் விட்டு விடுவார்கள் எனும்படி, தலையறுந்த பல சடலங்கள் பூமியில் கிடந்தன. இரு பக்கமும் நல்ல சேதம். ராக்ஷஸர்களும், வானரங்களும் அந்த யுத்தத்தில் அடிபட்டு விழுந்தன. வஜ்ரதம்ஷ்டிரன் கண் எதிரிலேயே ராக்ஷஸ சைன்யம் ஒடுங்கலாயிற்று. வானரர்களால் கடுமையாக தாக்கப் பட்ட ராக்ஷஸர்களில் ஒருவன் மடிந்து விழுவதைக் கண்ட ராக்ஷஸ சைன்யம் கட்டுப்பாட்டை இழந்தது. பயந்து நடுங்கிய ராக்ஷஸ போர் வீரர்களை, தைரியமூட்டி, ஒன்று சேர்க்க முயன்ற வஜ்ரதம்ஷ்டிரன், தன் பலத்தையெல்லாம் ஒன்று சேர்த்து, கடுமையாக பாணங்களை பிரயோகம் செய்தான்.  கல்லால் செய்யப்பட்டது போன்று திடமாக, கூர்மையான பாணங்கள் பட்டு ஏழு, எட்டு, ஒன்பது, ஐந்து என்று கூட்டம் கூட்டமாக, கொத்து கொத்தாக வானரங்கள் மடிந்து விழுந்தனர். கடும் ஆத்திரத்துடன் பிரதாபம் மிக்க வஜ்ரதம்ஷ்டிரன் யுத்தம் செய்த பொழுது எதிரில் நிற்க முடியாமல் பயந்து வானரங்கள் மூலைக்கு ஒன்றாக ஓடின. அங்கதனை சூழ்ந்து கொண்டு முறையிட்டன. பிரஜைகள் ப்ரஜாபதியிடம் முறையிடுவது போல. வானரங்களின் பயத்தை போக்க, அங்கதன் தானும் வஜ்ரத்ம்ஷ்டிரனும் மட்டும் போர் புரிவது என்று முடிவு செய்தான். மத்த கஜமும் வானரமும் மோதிக் கொண்டது போல இருவரும் மோதிக் கொண்டனர். ஆயிரம் ஆயிரம் பாணங்கள் கொண்டு வஜ்ரதம்ஷ்டிரன், அங்கதனை அடித்தான். யானையை தோமரங்களால் அடிப்பது போல அடித்தான். வாலி புத்திரன் உடலில் ரத்தம் பெருகியது. மகா பலசாலியான அவன் உடலில் ஒரு இடம் விடாமல் காயம் பட்டு ரத்தம் பெருகியது. ஒரு பெரிய மரத்தைக் கொண்டு வந்து வஜ்ரதம்ஷ்டிரன் மேல் போட்டான். எங்கிருந்தோ பெரிய மரம் ஒன்று தன் மேல் விழுவதைக் கண்டு பரபரப்படைந்த ராக்ஷஸன் தன்னை சமாளித்துக் கொண்டு மேலே விழுந்த மரத்தை தூள் தூளாக்கி விட்டான். வஜ்ர தம்ஷ்டிரனின் பராக்ரமத்தைப் பார்த்து வானர வீரனான அங்கதன் ஒரு பாறையை எடுத்து எறிந்தான். வேகமாக வீசப் பட்ட அந்த பாறை தன்னை நோக்கி வருவதைக் கண்ட வஜ்ரதம்ஷ்டிரன் ரதத்திலிருந்து இறங்கி  க3தை4யை கையில் எடுத்துக் கொண்டான். அந்த பாறையோ ரதத்தில் பூட்டியிருந்த குதிரை, சக்கரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து தரையோடு தரையாக்கியது.  திரும்பவும் ஒரு பாறையை அதிலிருந்த மரங்களுடன் அங்கதன் பெயர்த்து எடுத்து வஜ்ரதம்ஷ்டிரனின் தலை மேல் போட்டான். இதனால் அவன் மூர்ச்சையடைந்தான். தன் க3தை3யை ஆலிங்கனம் செய்து கொண்ட நிலையிலேயே முஹுர்த்த நேரம் நினைவின்றி கிடந்தான். நினைவு தெரிந்து எழுந்தவுடன், எதிரில் நின்ற அங்கதனை  க3தை4யால் ஓங்கி அடித்தான். அங்கதனின் மார்பை குறி வைத்து பலமாக போட்டான். இதன் பின்  க3தை4யையும் தவிர்த்து, இருவரும் முஷ்டி யுத்தம் செய்யலாயினர். ஒருவரையொருவர் முஷ்டியால் மோதிக் கொண்டும், அடித்துக் கொண்டும் முஷ்டி யுத்தம் செய்தனர்.  இருவரும் உடலிலிருந்து ரத்தம் பெருக, அங்காரகனும் புதனும் போல இருந்தனர். பின், பரம தேஜஸ்வியான அங்கதன், திடுமென ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி வைத்துக் கொண்டான். வாளையும் கையில் எடுத்துக் கொண்டான். தோலால் உறை போடப்பட்ட கூரிய வாள் இருவர் கையிலும் இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் ஒழித்து விட வேண்டும் என்று ஆவேசத்தோடு போரிட்டனர். இருவரும் தளர்ந்து களைத்தவர்களாக பூமியில் முட்டிக்கால் போட்டுக் கொண்டு நின்றனர். ஒரு நிமிஷ நேர இடைவெளிக்குப் பிறகு, அடிபட்ட நாகம் சிலிர்த்து எழுவது போல அங்கதன் சிலிர்த்து எழுந்தான்.  கையில் இருந்த நிர்மலமான வாளால், வஜ்ரத்ம்ஷ்டிரனின் தலையில் ஒரு போடு போட்டான். அவன் தலை பூமியில் உருண்டது. இரண்டாகப் பிளந்த தலை பூமியில் கிடப்பதைக் கண்ட ராக்ஷஸர்கள் பயத்தால் நடுங்கினர். வெட்கத்துடன் தலை குனிந்தபடி லங்கையை நோக்கி ஓட்டம் பிடித்தனர். வஜ்ரதம்ஷ்டிரனை வதம்  செய்து விட்டு, வஜ்ரதரனான இந்திரனைப் போல வானர வீரர்களின் மத்தியில் வாலி புத்திரன், முப்பத்து முக்கோடி தேவர்களும், சஹஸ்ராக்ஷனும் சூழ நிற்பது போல மகிழ்ச்சியுடன் நின்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் வஜ்ரத3ம்ஷ்டிர வத4ம் என்ற ஐம்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 55 (462) அகம்பன யுத்தம் (அகம்பனனுடன் போர் புரிதல்)

 

வாலி புத்திரனின் கையில் வஜ்ரத்ம்ஷ்டிரன் வதம் செய்யப் பட்டான் என்று  கை கூப்பி நின்று செய்தி சொன்ன படைத் தலைவனை, ராவணன் விசாரித்து நடந்ததை தெரிந்து கொண்டான். அதன் பின் சீக்கிரம் கிளம்புங்கள். அகம்பனனை தலைமை தாங்கச் சொல். அவனுக்கு எல்லா சஸ்திரங்களையும் பிரயோகிக்கத் தெரியும். இந்த யுத்தத்தில் தலைவனாகவும், காப்பாற்றுபவனாகவும் கண்டிப்பாக இருப்பான். நித்யம் யுத்தம் செய்ய விருப்பம் உடையவன். என் முன்னேற்றத்தில் நாட்டமுடையவன். இவன் காகுத்ஸனையும், சுக்ரீவனையும், நிச்சயம் வெற்றி கொள்வான். மற்ற பயங்கரமான வானரங்களையும் அடித்து நொறுக்கி விடுவான். ராவணனின் இந்த கட்டளையை ஏற்று, அகம்பனனும் தன் சேனையை விரட்டினான். பலவிதமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பயங்கரமான தோற்றத்துடன் பல ராக்ஷஸர்கள் படைத் தலைவனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு களத்தில் இறங்கினர். புடமிட்ட தங்கத்தாலான குண்டலங்களையணிந்த ராக்ஷஸன் ரதத்தில் ஏறி, நீருண்ட பெரிய மேகம் போன்ற ஆக்ருதியும், அதே போல இடி முழக்கம் போன்ற குரலுமாக, ஆரவாரத்துடன், ராக்ஷஸ வீரர்கள் புடை சூழ, கிளம்பினான். இவனுடைய தேஜஸும், பராக்ரமமும், தேவர்கள் கூட நினைத்து பார்க்க முடியாது. யுத்த களத்தில் ஆதித்யனுக்கு சமமாக இருந்தான். மகா உற்சாகத்துடன், யுத்தம் செய்யும் ஆவலுடன் குதித்து ஓடி வந்தவன் திடுமென வாட்டமடையும் படி அவனது இடது கண் துடித்தது. ரதத்தை இழுத்துச் செல்லும் குதிரைகள் எதிர்பாராது தயக்கம் காட்டின. அகம்பனனின் முக வர்ணமும் மாறியது. குரலும் தழதழத்தது. என்றுமில்லாமல் காற்று, சாதாரண நாட்களில் பரிவாக வீசுவது, இன்று கடுமையாக வீசுவது போல தோன்றியது. பறக்கும் பறவைகளும், மிருகங்களும், இன்று ஓசையிடுவது கூட கடுமையாக கேட்டது. இயற்கைக்கு மாறான இந்த சூழ்நிலைகள் பயத்தை தோற்றுவித்தன. சிங்கம் போன்ற தோள்களும், சார்தூலம் போன்ற ஆற்றலும் உடைய வீரனான அகம்பனன், இந்த துர்நிமித்தங்களை மனதில் போட்டுக் கொள்ளாமல் அலட்சியப் படுத்தி விட்டு, யுத்த களத்தில் இறங்கினான். ராக்ஷஸர்களுடன் வேகமாக கிளம்பிச் சென்றவனை வாழ்த்தி ஜய கோஷம், சமுத்திரத்தின் அலை ஓசையையும் அடக்கும் விதமாக எழுந்தது. வானர சைன்யம் இதைக் கேட்டு நடுங்கின. கைகளில் மரம், கற்கள் இவற்றுடன் போரிட வந்து சேர்ந்தன. இரண்டு படைகளும் சற்றும் சளைக்காது வெற்றி பெறும் முயற்சியை கைவிடாது தொடர்ந்து யுத்தம் செய்தன. ராம, ராவணர்களின் பொருட்டு இரு தரப்பிலும், உயிரையே த்ருணமாக மதித்து போரிட இசைந்து வந்திருந்தனர். அனைவருமே அதி பலசாலிகள். மலை போன்ற உருவம் உடையவர்கள். ராக்ஷஸர்களூம், வானரங்களும் ஒருவரையொருவர் கொன்று குவிக்கலாயினர். யுத்தத்தில் கோஷமிடும் அவர்களின் ஓங்கிய இரைச்சல் ஒன்றையொன்று மிஞ்சுவதாகவே இருந்தது. ஒருவருக்கொருவர் தூஷித்துக் கொண்டதும் தெளிவாக கேட்டது. தூசி பறந்து அந்த பிரதேசம் முழுவதும் பரவியது. சிவந்த வண்ணத்தில் பயங்கரமாக காணப்பட்ட மண்ணிலிருந்து எழுந்த புழுதி படர்ந்து பரவியது.  வெண் நிற பட்டாடைகள் இந்த புழுதி படிந்து மங்கின. த்வஜமா, பதாகமா, வர்மமா, துரகமா, எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. ஆயுதமும், ரதமும் கூட கண்களுக்குப் புலப்படவில்லை. ஓடும் வீரர்கள் போடும் கூச்சல்தான் மிகுந்து கேட்டது. சத்தம் தான் கேட்டதேயன்றி உருவங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. மிகுந்த கோபத்துடன் சென்ற வானரங்கள், வானரங்களையே அடித்து  நொறுக்கின. கண்களை மறைத்த புழுதிப் படலத்தில், ராக்ஷஸர்களே ராக்ஷஸர்களை அடித்துக் கொன்றனர். எதிரியை அடிக்கப் போய் கண் தெரியாததால் தன் பக்க ஆட்களையே அடித்து விட்டனர். இதன் காரணமாக பூமி ரத்த சேறாகியது. சற்று பொறுத்து ரத்த பெருக்கின் ஈரத்தால் புழுதி எழும்புவது குறைந்தது. உயிரற்ற உடல்களே தன்னை மறைக்க, பூமி கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாள். மரம், சக்தி, சிலா (கல்), ப்ராஸம் (ஆயுதம்), கதா, பரிகம், தோமரங்கள், இவை இருபக்கமும் இருந்த ஆயுதங்கள் ஆயினும் வானரங்களும், ராக்ஷஸர்களும் தயங்காது வீரத்துடன் போரிட்டனர். பெருத்த சரீரமுடையவர்களுக்கு அவர்கள் புஜங்களே பரிகம் என்ற ஆயுதமாக பயன்பட்டது. பயங்கரமான காரியங்களைச் செய்ய இரு தரப்பினரும் தயங்கவே இல்லை. ராக்ஷஸர்களை இவர்கள் கொன்று குவித்தனர் என்றால் ராக்ஷஸர்களு<ம் அதே போல வானரங்களை தாக்கினர். அவர்களும் ஆத்திரம் கொண்டு ப்ராஸ, தோமரம் இவைகளை ஏந்தியவர்களாக, சக்தி வாய்ந்த அஸ்திர சஸ்திரங்களையும் கொண்டு யுத்தம் செய்தனர். அகம்பனன் ஆத்திரத்துடம் போரிட்டாலும், இடையிடையே தன் வீரர்களையும் மகிழ்வித்து, உற்சாகம் ஊட்டியபடி இருந்தான். தங்கள் மேல் விழும் சஸ்திரங்களை மரக் கிளைகளாலேயே தடுத்து தங்களை காப்பாற்றிக் கொண்டு, சமயம் வாய்த்த பொழுது அதே மரக் கிளையாலேயே எதிரியை அடிக்கவும் செய்தனர். இதற்கிடையில் குமுதன் நலன் என்ற வீரர்களும், மைந்தன் த்விவிதனும் கோபத்துடன் களத்தில் இறங்கி ராக்ஷஸர்களைத் தாக்கினர். இவர்களும் பெரிய மரங்களைக் கொண்டு ராக்ஷஸ படையை மத்தினால் கடைவது போல கலக்கி விட்டனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் அகம்பன யுத்தம் என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 56 (463) அகம்பன வத4ம் (அகம்பனனை வதம் செய்தல்)

 

வானர வீரர்கள் செய்த அரிய செயலான யுத்த முறையைக் கண்டு அகம்பனன் தன்னுள் ஆத்திரத்தையும், போர் வெறியையும் வளர்த்துக் கொண்டான். சிறந்த வில்லை எடுத்து தயாராக வைத்துக் கொண்டு சாரதியிடம், சாரதியே, இந்த வானரங்கள் நம் ராக்ஷஸ வீரர்களை பெருமளவு கொன்று குவிக்கும் இடத்திற்கு ரதத்தைக் கொண்டு போ. பெருத்த சரீரம் உடைய பல வானரங்கள் கைகளில் பெரிய மரக் கிளைகளை வைத்துக் கொண்டு நிற்கின்றன. இவர்களை வதம் செய்தே ஆக வேண்டும். யுத்தத்தை சிலாகிக்கும் வீரன் தான் நான். இந்த வானரங்கள் நம் படையை ஒரு கலக்கு கலக்கி, அணி வகுத்து வைத்திருந்த ஒழுங்கையெல்லாம் கலைத்து விட்டார்கள். சரங்களை மழையாக பொழிந்து வானர படையை நிர்மூலமாக்க முனைந்தான், அகம்பனன். எதிரில் நிற்கக் கூட வானர வீரர்களால் முடியவில்லை. போர் செய்வது எங்கே? அகம்பனனது பாணங்களால் அடிபட்டு, கை கால்கள் உடைந்தவைகளாக ஓட்டம் பிடித்தனர். அகம்பனனோடு போர் செய்ய இயலாமல், அப்படி செய்ய முயன்றவர்களும் மரணத் தறுவாயில் இருப்பதை ஹனுமான் கண்டான். தன் சுற்றத்தாரைக் காக்க, கம்பீரமாக நடுவில் வந்து நின்றான். அந்த மகா வானரத்தைக் கண்டதுமே, வானர படையின் வீரர்கள் உற்சாகமும் பலமும் அடைந்தனர். திடுமென வந்து நின்ற ஹனுமான் மேல் அகம்பனன் அம்புகளை சரமாரியாக பொழிந்தான். தன் மேல் வந்து விழுந்த கூரிய அம்புகளைப் பற்றி கவலைப் படாமல் ஹனுமான், அகம்பனனை வதம் செய்ய என்ன வழி என்று யோசிக்கலானான். தன்  படை பலத்தை ஒன்று கூட்டி, பூமி நடுங்கும்படி வேகமாக ஓடி, அகம்பனனை அடிக்கச் செய்தான். மேலும் மேலும் உரத்த குரலில் அவன் கோஷம் இடுவதையும், தன் தேஜஸால் நெருப்பு போல பிரகாசமாக விளங்குவதையும் கண்டு அனைவரும் திகைத்தனர். கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஜ்வாலை போல இருந்தான். தன்னை யாராலும் அடிக்க முடியாது என்ற நம்பிக்கையோடு, ஒரு கையில் பெரிய கல்லை எடுத்துக் கொண்டு, வேகமாக ஓடி, வீசி சுழற்றி எறிந்தான். அது சுழன்று சுழன்று அகம்பனனை துரத்தியது. முன் காலத்தில் நமுசியை வஜ்ரம் கொண்டு புரந்தரனான இந்திரன் தாக்கியது போல இருந்தது. தன்னை நோக்கி வரும் பெரும் பாறையை தூரத்திலிருந்தே கண்டு கொண்ட அகம்பனன் அர்த்த சந்திரன் என்ற அஸ்திரத்தால் அதைத் தடுத்தான். ராக்ஷஸனின் பாணங்களால் அந்த மலைப் பாறை தூளாக சிதறியது. தன் குறி தூளாகி விழுந்ததைக் கண்டு ஹனுமான் மேலும் ஆத்திரமடைந்தான். பெரிய மலை போல வளர்ந்திருந்த அஸ்வகர்ணம் என்ற மரத்தை, வேரோடு பிடுங்கி, சுழற்றி அடித்தான். தன் கால்களால் பூமி அதிர உதைத்து ஓடிய வேகத்தில் இடைபட்ட மரக் கிளைகள் சட சடவென்று முறிய, ஹனுமான் யானைகளையும், அதில் ஏறியிருந்தவர்களையும் ரதங்களோடு ரதத்தில் இருந்தவர்களையும் நடந்து வந்த போர் வீரர்களையும் வரிசையாக அடித்துத் தள்ளிக் கொண்டே வந்தான். யுத்த களத்தில் நடமாடும் யமன், (அந்தகன்) போல சுழன்ற ஹனுமானைப் பார்த்து ராக்ஷஸர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தன் படை வீரர்களான ராக்ஷஸர்கள் மேல் தாக்குதல் செய்யும் ஹனுமான் மிக அதிக சேதம் விளைவிப்பதைக் கண்டு, கவலைக் கொண்ட அகம்பனன், ஓடும் வீரர்களை திரும்பி வர அழைத்தபடியே, கூரிய பாணங்களாக, உடலைக் கிழிக்கக் கூடியவைகளாக, பத்து பாணங்களை எடுத்து ஹனுமானின் மேல் பிரயோகித்தான். இந்த பாணங்களால் கிழிக்கப் பெற்றும், சற்றும் வாட்டமடையாத ஹனுமான், தன் மேல் குத்தி நின்ற அம்புகளே மரங்களாக மலை போல நின்றான். மலர்ந்து நிற்கும் அசோக புஷ்பம் போலவும், புகை இல்லாத நெருப்பு போலவும் நிமிர்ந்து நின்றான். பின், வேறொரு மரத்தை பிடுங்கி எடுத்துக் கொண்டு விரைவாக அகம்பனனின் தலையில் அடித்தான்.  ஹனுமானின் கை பலமும், கோபமும் ஒன்று சேர, பலமான அந்த அடியில் அகம்பனன் கீழே விழுந்து மடிந்தான். அகம்பனனே அடிபட்டு இறந்து விழுந்தான் என்பது ராக்ஷஸ வீரர்களுக்கு அளவில்லாத பயத்தையும், கவலையையும் தந்தது. பூகம்பம் வந்த சமயம் மரங்கள் நிலை கொள்ளாது தவிப்பது போல தவித்தனர். தங்கள் ஆயுதங்களை போட்டு விட்டு ராக்ஷஸ வீரர்கள் லங்கையை நோக்கி ஓட்டம் பிடித்தனர். வானரங்கள் ஓடும் ராக்ஷஸர்களை துரத்தின. அவிழ்ந்த கேசமும், வியர்வை ஆறாக பெருக, பயத்துடன், மேல் மூச்சு வாங்க, ஓடினர்.  ஒருவரையொருவர் இடித்து தள்ளிக் கொண்டு நகரத்தில் பிரவேசித்தனர். திரும்பித் திரும்பி ஹனுமான் நிற்பதை பார்த்துக் கொண்டே ஓடினர். அவர்கள் அனைவரும் லங்கைக்குள் நுழையும் வரை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு திரும்பிய ஹனுமனை மற்ற வானரங்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்தின. ஹனுமானும் மகிழ்ச்சியுடன் அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தான். காலத்திற்கேற்ப, தன் ஆற்றலை வெளிப்படுத்தும் ஹனுமான், வெற்றிக் களிப்பில் வானரங்கள் செய்த கூச்சலையும், அடி வயிற்றிலிருந்து அவை எழுப்பிய கத்தலையும் ரசித்தான். உயிருடன் இருந்த சில ராக்ஷஸர்களையும் விரட்டி, சிம்ம கர்ஜனை செய்தான். வீர சோபையுடன், ராக்ஷஸர்களை ஒன்று சேர அடித்த ஹனுமான், நண்பன் அல்லாத பெரிய அசுரனான பீமனை (பெரிய உருவம் கொண்டவனை) பலியை, பலசாலியை யுத்த களத்தில் வெற்றி கொண்ட விஷ்ணுவைப் போல விளங்கினான். தேவ கணங்கள் வந்து ஹனுமானைக் கொண்டாடின. ராம லக்ஷ்மணர்கள் நேரில் வந்து பாராட்டினர். சுக்ரீவன் மற்றும் வானர வீரர்கள், மகா பலசாலியான விபீஷணன் இவர்களும் வந்து வாழ்த்தினர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் அகம்பன வத4ம் என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக