ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டம் 57 – 65
அத்தியாயம் 57 (464) ப்ரஹஸ்த யுத்தம் (ப்ரஹஸ்தனுடன் யுத்தம் செய்தல்)
ராக்ஷஸேஸ்வரன் அகம்பனனின் வதத்தைக் கேட்டு மிகவும் கோபம் கொண்டான். வருத்தமும் தோன்ற முகம் வாடியது. மந்திரிகளைக் கலந்தாலோசித்தான். சற்று நேரம் யோசித்து, அவர்கள் எண்ணத்தையும் அறிந்து கொண்டு, காலையில் தன் படைகளின் நிலைமையை அறிந்து கொள்ளத் தானே சென்றான். லங்கா நகர பாதுகாவல் சரிவர இயங்குவதைக் கண்டான். த்வஜங்கள், பதாகங்கள் அலங்காரமாக பறந்து கொண்டிருந்தன. பல ராக்ஷஸ சேனைகள் ஆங்காங்கு முகாமிட்டு இருப்பதைக் கண்டான். வெளியே பகைவர்கள் முற்றுகையிட்டிருந்ததால், கோட்டைக்குள் உற்சாகம் குன்றி மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை என்பதைக் கவனித்தான். பொங்கி வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு, ப்ரஹஸ்தன் என்ற மந்திரியை, யத்த கலையில் வல்லவனை அழைத்து ஆலோசனை செய்தான். ஏஊர் முற்றுகையிடப் பட்டிருப்பதால் நாம் யுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. திடுமென இந்த தாக்குதல் ஆரம்பித்து விட்டதால், வேறு உபாயம் யோசிக்கக் கூட நேரம் இல்லை. நானோ, கும்பகர்ணனோ, தாங்களோ, இந்திரஜித், நிகும்பனோ இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தாங்கள் தான் என் சேனாபதி. அதனால் சேனாபதியே, உடனே தங்கள் சேனையை தயார் செய்யுங்கள். வெற்றியுடன் திரும்பி வர உடனே புறப்படுங்கள். இந்த வானர கூட்டம் உள்ள இடம் சென்று போர் புரியுங்கள். நீங்கள் வந்துள்ளதை அறிந்தாலே வானரங்கள் பயந்து, உங்கள் ராக்ஷஸ படை வீரர்களின் ஜய கோஷத்தையும் கேட்டாலே நடுங்கி ஓடி விடுவார்கள். இந்த வானரங்கள் சபலம் மிகுந்தவை. மரியாதையறியாதவைகள். அலை பாயும் மனம் உடையவைகள். யானைகள் சிங்க நாதத்தைக் கேட்டு மருளுவதைப் போல மருண்டு ஓடி விடுவார்கள். அவன் படை வீரர்கள் அனைவரும் சிதறி ஓடி விட்ட நிலையில், ராமனும், லக்ஷ்மணன் ஒருவனே அருகில் இருக்க, தன் வசம் இழந்து எவ்வித பாதுகாப்பும் இன்றி தனித்து விடப்பட்டவனாக, ப்ரஹஸ்தா, தங்களிடம் பிடி படுவான். எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஆபத்து இல்லை என்றும் இல்லை. பிரதிலோமமோ, அனுலோமமோ, ப்ரஹஸ்தா, தாங்கள் உசிதமாக நினைப்பது போல முடிவு எடுத்து செயல் படுங்கள். இதைக் கேட்டு படைத் தலைவனான ப்ரஹஸ்தன், ப்ருஹஸ்பதி ஒரு முறை அசுரேந்திரனிடம் சொன்னது போல, ராக்ஷஸேந்திரனிடம் பதில் சொன்னான். ராஜன், இந்த விஷயங்கள் நாம் ஏற்கனவே மந்திரி சபையில் விவாதித்தது தானே. ஒருவரை ஒருவர் பார்த்து நாம் விவாதித்தோம். நான் அப்பொழுதும் சொன்னேன். சீதையைத் திருப்பித் தருவதில் தான் நமக்கு நன்மை என்றேன். திருப்பித் தரா விட்டால் யுத்தம் வரும் என்றும் நாம் அறிந்ததே. அப்படிப்பட்ட நான், எப்பொழுதும் உன்னால் கௌரவிக்கப் பட்டு வந்தவன், உன் கையால் பொருளும் மற்றவையும் தானமாக நிறையப் பெற்றவன், சமாதானமாக நிறைய சொல்லி விட்டேன். உனக்குப் பிரியமானால் என்னதான் செய்ய மாட்டேன். என் புத்ர, தா3ர, த4னங்களோ, என் உயிரோ எதுவுமே பெரிதில்லை. உனக்காக யுத்தம் செய்து நான் வீர மரணம் அடைவதையும் காணத் தான் போகிறாய். இவ்வாறு தன் எஜமானனான ராவணனிடம் சொல்லி விட்டு சேனாபதியான ப்ரஹஸ்தன், படைகளை ஒன்று திரட்டி ஏற்பாடுகளைச் செய்ய விரைந்தான். ராக்ஷஸர்களே, பெரும் அளவில் படை வீரர்களாக திரண்டு வாருங்கள். என் கை பாணங்களால், அசனி (இந்திரனின் ஆயுதம்) போல மேலே வந்து விழும் கூரிய பாணங்களால் உயிர் இழக்கப் போகும் எதிரிகளின் உடல்களைத் தின்ன கழுகுகள் வட்டமிடப் போகின்றன. இதைக் கேட்டு ப்ரஹஸ்தனின் படைத் தலைவர்கள், விரைந்து சென்று தங்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட வீரர்களைக் கொண்டு வந்து அரச மாளிகை வாசலில் கூட்டமாக நிறுத்தினர். முஹுர்த்த நேரத்தில் அந்த மாளிகை வாசலில், ஆயுதங்களின் ஓசையும், ஜனங்களின் நடமாட்டமுமாக, யானைக் கூட்டம் கல கலவென்று சஞ்சரிப்பது போல ஆயிற்று. காலை நேரத்தில் அக்னி உபாசனம் செய்யும் ப்ராம்மணர்கள், அக்னியில் ஹோமம் செய்த நெய் வாசனையும் காற்றில் மிதந்து வந்தது. யுத்தம் செய்ய புறப்பட்ட வீரர்களுக்கு (மந்தரித்து) வாழ்த்தி, வித விதமாக மாலைகள் அணிவிக்கப் பட்டன. ராக்ஷஸர்களும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு உற்சாகத்துடன் கிளம்பினர். வில்லை ஏந்தி, கவசம் அணிந்து வேகமாக வந்த ராக்ஷஸ வீரர்கள், ப்ரஹஸ்தனுடன் அரசன் ராவணனும் நிற்பதைக் கண்டு, மரியாதையுடன் சூழ்ந்து நின்றனர். பேரியை முழக்கி, அரசனிடம் விடை பெற்றுக் கொண்டு, தயாராக இருந்த ரதத்தில் ப்ரஹஸ்தன் ஏறினார். உயர் ஜாதி குதிரைகள், பூட்டப் பெற்றன. திறமையான குதிரை ஓட்டுபவனும் தன் திறமையால் சிறந்த முறையில் பாதுகாப்பாக குதிரைகளை பழக்கி இருந்தான். சாக்ஷாத் சந்திரனும், சூரியனும் இறங்கி வந்தது போல ஒளி வீசும், பெரிய மேகம் இடி இடிப்பது போல கோஷம் எழுப்பும், உரக சின்னம் கொண்ட த்வஜம் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் பறக்க, லக்ஷ்மீகரமாக சிரிப்பது போல சுவர்ண ஜாலங்கள் நிறைந்ததும், தன் வசத்தில் உள்ள ரதத்தை ஓட்டும் கயிறுகளுமாக இருந்த ரதத்தில் ஏறினார். ரதத்தில் ஏறியவுடன் ப்ரஹஸ்தன், ராவணனுக்கு, அவனுடைய கட்டளைக்கு தன்னை முழுவதும் அர்ப்பித்துக் கொண்டவராக லங்கையிலிருந்து புறப்பட்டார். உடன் ஒரு பெரும் ராக்ஷஸ சேனையும் கிளம்பியது. துந்துபியின் கோஷமும், மழைக்கால இடியோசை போல முழங்கியது. வாத்தியங்களின் ஓசையும், சமுத்திரத்தை நிரப்புவது போல ஒலித்தன. இவற்றையெல்லாம் மீறி சங்க நாதமும் படை கிளம்பியவுடன், எழுந்தது. விசித்ரமாக ஒலி எழுப்பிக் கொண்டு, காதுக்கு நாராசமான ஸ்வரக் கோர்வையாக ஒலி எழுப்பிக் கொண்டு ராக்ஷஸர்கள் முன் சென்றனர். ப்ரஹஸ்தனுக்கு முன்னால் சென்ற வீரர்கள் பெருத்த உடலும், பயங்கரமான ரூபமும் உடையவர்களாக இருந்தனர். நராந்தகன், கும்பஹனு, மகா நாதன், சமுன்னதன் என்ற இவர்கள் ப்ரஹஸ்த மந்திரிகள். இவர்கள் சூழ்ந்து நின்றனர். இந்த அணி வகுப்புக்களுடன் கிழக்கு வாசலையடைந்தனர். யானைக் கூட்டம் போன்ற பலம் மிகுந்த பெரிய சேனையுடன், சமுத்திரம் போல அளவில்லாத வீரர்கள் சூழ, ப்ரஹஸ்தன் காலாந்தகன் போலவும், யமனைப் போலவும், போர்களத்தில் பிரவேசித்தார். இவர்கள் புறப்பட்டுச் செல்லும் ஓசையும், ராக்ஷஸர்கள் நடு நடுவில் செய்த ஜய கோஷமும், லங்கையின் பிரஜைகளையும், மற்ற ஜீவ ராசிகளையும் கவர்ந்தன. அவர்களும் தாங்கள் இருந்த இடத்திலேயே வினோதமான சப்தங்களைச் செய்தனர். மாமிசம், ரத்தம் இவற்றை உணவாகக் கொண்ட பக்ஷிகள் ஆகாயத்தில் தோன்றி, ரதத்தின் மேலாக அப்ரதிக்ஷணமாக சுற்றி வந்தன. வாயில் இருந்து நெருப்பை உமிழும், குள்ள நரிகள் ஊளையிட்டன. அந்தரிக்ஷத்திலிருந்து மின் மினிப் பூச்சிகள் விழுந்தன. காற்று கடுமையாக வீசியது. கிரகங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு, பிரகாசமாக வெளியில் தெரியவில்லை. மேக நாதமும் இனிமையாக இல்லை. ராக்ஷஸர்கள் ரதத்திலிருந்து செய்த ஜய கோஷமும் இணைந்து இல்லாமல் நாராசமாக இருந்தது. கேதுவின் (த்வஜஸ்தம்பம்) தலையில் கழுகு, தென் புறமாக சாய்ந்து நின்றது. இரு பக்கமும் தன் அலகால் கொத்தியபடி, அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்த ரதத்தின் சோபையைக் கெடுத்தது. சாரதியின் கையிலிருந்து குதிரைகளை இழுத்து பிடிக்கும் லகான் அடிக்கடி நழுவி விழுந்தது. புகழ் வாய்ந்த பலம், பௌருஷம் உடைய ப்ரஹஸ்தன், சேனையுடன் போர் முனைக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி வானர வீரர்களின் செவிக்கு எட்டியது. வானர வீரர்களும் பெருமளவில் கூச்சலிட்டு ராக்ஷஸ சேனயின் ஜய கோஷத்துக்கு இணையாக ஒலியெழுப்பினர். பெரிய மலைகளை பெயர்த்து தயார் செய்து வைத்துக் கொள்ளவும், மலையில் ஏறி பாறாங்கற்களை சேகரிக்கவும் முயன்றன. இரு பக்கமும் கூச்சலும் குழப்பமும் ஏறத்தாழ ஒரே அளவில் இருந்தன. ஒருவரையொருவர் வதம் செய்யும் நோக்கத்தில் இருவரும் ஒரே அளவு உற்சாகத்துடன் காணப்பட்டனர். ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் சத்தமும் கேட்டது. ப்ரஹஸ்தனும் வானர ராஜனின் சேனையை முற்றுகையிட்டான். தாங்களே தங்களை மாய்த்துக் கொள்ளும் விதமாக, தானாக நெருப்பில் வந்து விழும் விட்டில் பூச்சிகளைப் போல ராக்ஷஸ சேனை தானே எதிர் கொண்டு வந்து நின்றது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப்ரஹஸ்த யுத்தம் என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 58 (465) ப்ரஹஸ்த வதம் (ப்ரஹஸ்தனின் வதம்)
நல்ல பராக்ரம சாலியான ப்ரஹஸ்தன் படையுடன் முன்னேறி வருவதையறிந்து, ராமர் சற்று சிரித்தபடி, விபீஷணனிடம் விசாரித்தார். யார் இது? பெரிய உருவமும், நல்ல பலசாலியாகவும் தோற்றம் அளிக்கிறார். பெரும் படையுடன் வருகிறார். யார் இந்த வீர்யவானான நிசாசரன், சொல் என்றார். விபீஷணன் விவரித்தான். இவர் தான் சேனாபதி ப்ரஹஸ்தன், என்ற ராக்ஷஸன். லங்கையில் ராக்ஷஸ ராஜனுடைய முக்கால் பங்கு படைக்குத் தலைவர். நல்ல வீர்யம் உடையவர். அஸ்திர ஞானம் உடையவர். சூரர். புகழ் பெற்றவர். இதன் பின், பெரும் படையுடன், நல்ல வீரன் என்று பெயர் பெற்றவரும், பெருத்த சரீரம் உடையவரும், பெரும் படையின் சேனாபதியுமான, ப்ரஹஸ்தன் நெருங்க நெருங்க, ராக்ஷஸர்கள் கர்ஜிக்கும் சத்தமும் அதிகமாகியது. கைகளில் கத்தி, சக்தி, இஷ்டி, பாணங்கள், சூலங்கள், முஸலங்கள், க3தை4கள், பரிகங்கள், ப்ராஸங்கள், பரஸ்வதங்கள் என்று வித விதமான ஆயுதங்களுடன் விசித்ரமான வில் இவற்றுடன் ஜெயித்தே தீருவது என்ற சங்கல்பத்துடன் வந்த ராக்ஷஸ கூட்டத்தைப் பார்த்து முதலில் வானரங்கள் ஓடின. சற்று பொறுத்து, மரம், கிளைகளை எடுத்துக் கொண்டு, பூத்து குலுங்கும் மரங்களையும், பெரும் பாறாங்கற்களையும், எடுத்துக் கொண்டு யுத்தத்துக்குத் தயாராக வானர வீரர்களும் வந்து சேர்ந்தனர். இருவருக்கும் இடையில் பெரும் போர் மூண்டது. கல் மழை ஒரு புறம், அம்புகள், பாணங்கள் மழை ஒரு புறம். ஏராளமான ராக்ஷஸர்களும், வானரங்களும் இந்த போரில் மடிந்து விழுந்தனர். சூலத்தால் அடிபட்டவர்கள் பலர். உயர்ந்த ஆயுதங்கள் தாக்கி மடிந்து விழுந்தனர் சிலர். பரஸ்வதம் குத்தி கிழித்து சிலர் வீழ்ந்தனர். பேச்சு மூச்சு இன்றி பலர் தரையில் விழுந்து கிடந்தனர். அம்புகள் குறி தவறாது வந்து பட்டதில் ஹ்ருதயம் பிளந்து பலர் உடலை இழந்தனர். வாட்கள் நடுவில் இரண்டாக பிளக்க, தரையில் விழுந்த சில சடலங்கள் ராக்ஷஸர்கள் ஒரு புறம் விழ, வானரங்களுக்கும் நிறைய சேதம். கஷ்டங்கள் இருவருக்கும் பொதுவாகவே இருந்தன. ராக்ஷஸர்கள் சூலத்தாலும், பரஸ்வதத்தாலும் வானரர்களைக் குத்திக் கிழித்தனர் என்றால், வானரங்கள், மரக் கிளைகளாலும், மலையிலிருந்து கொண்டு வந்த பாறாங்கற்களாலும் பூமியோடு பூமியாக ராக்ஷஸர்களைத் தள்ளி நசுக்கி விட்டனர். வானரங்கள் கைத்தலத்தால் அடித்ததே வஜ்ரம் தாக்குவது போல இருந்தது. முஷ்டிகளாலும் கைகளாலும் பலரைக் கொன்று தள்ளினர். வாயிலிருந்து ரத்தத்தை உமிழ்ந்தவர்களாக பற்களை இழந்தவர்களாக, கண்கள் தெறித்து விழ, சற்று முன் சிம்ம நாதம் செய்த ராக்ஷஸர்களின் வேதனைக் குரல் எங்கும் ஒலித்தது. இரு தரப்பிலும் இதே நிலை தான். அடிப்பதும், வீழ்வதும், ஓலமிடுவதுமாக போர்க்களம், இரு சாராருக்கும் மிகுந்த சேதத்தை விளைவித்தது. வானரங்களும், ராக்ஷஸர்களும் ஆத்திரத்துடன், வீரனுக்குரிய வழியை ஏற்று, சற்றும் பயப்படாமல் கண்களைச் சுழற்றி, போரைத் தொடர்ந்து செய்தனர். நராந்தகனும், கும்பஹனுவும், மகா நாதனும், சமுன்னதனும் – இவர்கள் ப்ரஹஸ்தனின் மந்திரிகள். ஏராளமான வானரங்களை கொன்று குவித்தனர். இவர்களிடம் அடிபட்டு விழுந்து எழுந்து அடுத்த அடி படும் முன் ஓடிய வானரங்கள், ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு வந்து நராந்தகன் தலை மேல் போட்டு அவனை அழித்தன. துர்முகன் என்ற வானர வீரன் ஒரு பெரிய மரக்கிளையைக் கொண்டு வந்து, சமுன்னதனை ஓங்கி அடித்து விழச் செய்தான். ஜாம்பவான், மிகுந்த கோபத்துடன், தன் கையில் இருந்த கல்லால் மகா நாதனின் மார்பில் ஓங்கி வீசி விழச் செய்தான். தாரன் என்ற வானரம், கும்பஹனுவை தலையில் ஒரு மரக் கிளையால் அடித்து உயிரிழக்கச் செய்தான். இதைக் கவனித்த ப்ரஹஸ்தன், அடக்க மாட்டாத ஆத்திரத்துடன் தன் ரதத்தில் ஏறி, வில்லையும் அம்பையும் எடுத்து சரமாரியாக வானரங்களின் மேல் பொழிந்து பயங்கரமான யுத்தம் செய்தான். இரண்டு சேனைகளிலும், ஊழிகாலம் போல பெரும் போர் தொடர்ந்தது. நதியில் தோன்றும் சுழலோ, சமுத்திரத்தின் அலை ஓசைகளோ எனும் படி யுத்த கலையில் வல்லவனான ப்ரஹஸ்தன் கைகளிலிருந்து வெளிப்பட்ட அம்புகள் வானரங்களைக் குறி வைத்து அழித்தன. ராக்ஷஸ, வானர வீரர்களின் சடலங்கள் மலை போல குவியலாயிற்று. ரத்தமும் நிணமும் விழுந்து சேறாக, பூமியே கண்ணுக்குத் தெரியவில்லை, மாதவ மாதம், பலாச புஷ்பங்கள் பூமியை மறைத்தபடி விழுந்து கிடப்பது போலத் தோன்றியது. உடைந்த ஆயுதங்களும், மரக்கிளைகளும், உடல்களும், யம சாகரத்தை நோக்கி ஓடும் நதியைப் போல ரத்தம் பெருக ஓடுவதும், சேறாகி கிடந்த நிணமும், பாசி படர்ந்தது போன்ற தோற்றத்தைத் தர, உடல் தனியாக, தலை தனியாக போன சரீரங்களே மீன்களாக, யுத்த பூமி என்ற நதி, மேகம் கறுத்து நிறைந்திருக்கும் நாட்களில் சுழித்துக் கொண்டு ஓடும் நீரோடு, ஹம்ஸங்களும், ஸாரஸ பக்ஷிகளும் சஞ்சரிக்கும் இடத்தில், கழுகுகளும், கங்க பக்ஷிகள் மேலே வட்டமிட (யுத்த பூமி என்ற நதி) ஓடியது.
இந்த நதியைக் கடந்து வெளி வர, ராக்ஷஸர்களும், வானரங்களும் முயன்றன. புழுதி படிந்த பத்மத்தை, தண்டுடன் யானைக் கூட்டம் எப்படி அழிக்குமோ, அது போல ரதத்தில் இருந்த ப்ரஹஸ்தன் தன் பாணங்கள் என்ற மழையால் வானர வீரர்களை அடியோடு அழிப்பதை வெகு தூரத்திலிருந்து நீலன் கண்டான். வாயு வேகமாக வீசுவது போல ஆகாய மார்கமாக வேகமாக அந்த இடம் வந்து சேர்ந்தான். இதைக் கண்ட சேனாபதி ப்ரஹஸ்தன், நீலனை நோக்கி தன் ஆதித்யனின் வர்ணத்தில் பள பளத்த ரதத்தை செலுத்தினார். வில்லாளிகளுள் சிறந்தவரான அவர் தன் வில்லை எடுத்து, நீலனைக் குறி வைத்து அடிக்கலானார். கோபம் கொண்ட பாம்புகள் போல வேகமாக வந்த கூர்மையான பாணங்கள் நீலனின் உடலில் பட்டு தெறித்து விழுந்தன. நெருப்பு போல சுடும் அந்த பாணங்களின் தாக்குதலால் பாதிக்கப் பட்டாலும், சமாளித்துக் கொண்டு ஒரு பெரிய மரக் கிளையால் ப்ரஹஸ்தனை ஓங்கி அடித்தான். இந்த அடி வாங்கிய ராக்ஷஸ வீரனான ப்ரஹஸ்தன் மேலும் பெரும் குரலில் ஜய கோஷம் செய்தபடி, தன் கை வில்லில் அம்புகளை பூட்டி வானரங்களை அடித்த வண்ணம் இருந்தார். அகாலத்தில் வந்த சரத்கால மழையை தாங்க மாட்டாமல் பசு மாட்டுக் கூட்டம் திணறுவது போல வானரங்கள் திணறினார்கள். கண்கள் மூடி நினைவின்றி கிடந்த நீலன் சட்டென்று மூர்ச்சை தெளிய கண் விழித்து, ஒரு சால விருக்ஷத்தைக் கொண்டு ப்ரஹஸ்தனின் குதிரைகளை உயிரிழக்கச் செய்தான். மனோ வேகத்தில் ஓடக் கூடிய குதிரைகள் மடிந்து விழுந்தன. ப்ரஹஸ்தனின் வில்லை எடுத்து, நிமிஷ நேரத்தில் உடைத்து எறிந்தான் நீலன். தன் கையில் இருந்த வில் பறி போனதை உணர்ந்த ப்ரஹஸ்தன் முஸலம் என்ற பயங்கரமான ஆயுதத்தை கையில் எடுத்து ரதத்திலிருந்து இறங்கி நின்றபடி நேருக்கு நேர் இரண்டு, சேனாபதிகளும் தயாராயினர். இருவர் உடலும் ரத்தப் பெருக்கினால் குளித்தது போல கிடந்தது. சிங்கமும் சார்தூலமும் மோதிக் கொள்வது போல சிம்ம, சார்தூலம் போன்ற தங்கள் சேஷ்டையால், தங்கள் கூர்மையான பற்களால் ஒருவரையொருவர் காயப்படுத்தினர். இருவரும் விஜயத்தை நோக்கி வீரத்துடன் போரிடும் வீர்யவான்கள். போரில் புற முதுகு காட்டியறியாதவர்கள். வ்ருத்திரனும், வாஸவனும் போல புகழை விரும்பி போரிட்டவர்கள். சமமான பலம், வீரம் உடைய இருவரும் சளைக்காமல் போரிட்டனர். முஸலத்தால் நீலனின் நெற்றியில் ஓங்கி அடித்த ப்ரஹஸ்தன். ரத்தம் பெருக அவன் அலறியதை கேட்டார். அதே க்ஷணத்தில் ஒரு பெரிய மரத்தை எடுத்து, ப்ரஹஸ்தனின் மார்பில் அடித்து விட்டான் நீலன். எதிர் பாராத இந்த தாக்குதலால் நிலை குலைந்தாலும், முஸலத்தை எடுத்துக் கொண்டு நீலனை துரத்திக் கொண்டு ஓடினார். வெகு வேகமாக ஓடி வந்து தன் மேல் விழுந்த ப்ரஹஸ்தனை ஒரு பெரிய கல்லால் தாக்கினான். வானர வீரனின் கையிலிருந்து வேகமாக வந்து விழுந்த பெரிய பாறாங்கல், ப்ரஹஸ்தனின் தலையை சிதற அடித்து விட்டது. தன் சக்தியை இழந்து, கீழே விழுந்த அந்த க்ஷண பொழுதிலேயே உயிரும் பிரிந்தது. தடாலென உயிரற்ற சரீரம் விழுந்தது. வேரோடு பிடுங்கிய மரம் சாய்வது போல சாய்ந்தான். ப்ரஸ்ரவன மலையில் சிறு அருவிகளில் நீர் பெருகி ஓடுவது போல சரீரத்தின் பல பாகங்களிலிருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தது. அசைக்க முடியாத ப்ரஹஸ்தனே விழுந்தவுடன், ராக்ஷஸ சேனை வேறு வழியின்றி லங்கைக்கு திரும்பிச் சென்றது. சேதுவினால் தடைபட்ட நதி ஜலம் திரும்பி வருவது போல திரும்பிச் சென்றது, ராக்ஷஸ சேனை. அரசனின் மாளிகைக்குள் சென்று திடுமென ஊமைகள் ஆனது போல எதுவும் சொல்ல முடியாத சோகத்தில் மூழ்கியவர்களாக நின்றனர். நீலன் வெற்றி வீரனாக தன் பக்கத்து வீரர்களால் கொண்டாடப் பட்டான். ராமரையும் லக்ஷ்மணனையும் தேடிச் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியோடு நின்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப்ரஹஸ்த வத4ம் என்ற ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 59 (466) ராவணாபி4ஷேணனம் (ராவணன் போருக்கு புறப்படுதல்)
ராக்ஷஸ சைன்யத்தின் தலைவன் யுத்தத்தில் வீழ்ந்தபின், அவருடன் கடல் போல் பெருகி வந்திருந்த ராக்ஷஸ படை வீரர்கள் திரும்பிச் சென்று அரசனிடம் விவரம் சொன்னார்கள். வானர வீரனான நீலனால் மகா வீரரான ப்ரஹஸ்தன் வதம் செய்யப்பட்டதைச் சொன்னார்கள். பாவக (அக்னி) குமாரன் நீலன் என்ற அந்த வானர வீரன் என்பதையும் ராவண ராஜாவுக்குத் தெரிவித்தனர். இந்த செய்திகளைக் கேட்டு, ராக்ஷஸாதிபன் அளவில்லா ஆத்திரம் அடைந்தான். ப்ரஹஸ்தன் உயிர் துறந்த சோகமும் அவனை வாட்ட, ராக்ஷஸ படை வீரர்களைப் பார்த்து மேற்கொண்டு செய்ய வேண்டியதை ஆணையிட ஆரம்பித்தான். இந்திரன், தன் கீழ் இருந்த சாமரர்கள் எனும் போர் வீரர்களைப் பார்த்து உத்தரவிட்டது போல இருந்தது. எதிரிகளிடம் அலட்சியமாக இருக்கக் கூடாது. என் சேனாபதி, இந்திரன் படையையே கலக்கியவர். யானைகளும், படை வீரர்களும் சூழ இருந்தவரை, இவர்கள் வதம் செய்து விட்டார்களே. இந்த எதிரிகளை ஒழித்துக் கட்ட இன்று நானே போகிறேன். இன்று படைக்கு தலைமை தாங்கி நான் செல்வேன். இன்று அந்த வானர சைன்யமும், ராமனும் லக்ஷ்மணனும் வனத்தை அக்னி அழிப்பது போல என் பாணங்களால் அடிபட்டு மாயப் போகிறார்கள். இன்று பூமிக்கு, வானர ரத்தத்தினால் தர்ப்பணம் செய்கிறேன். இவ்வாறு சொல்லிக் கொண்டே, அக்னிக்கு சமமான பிரகாசமுடைய உத்தமமான குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமரராஜ சத்ருவான, ராவணன் ஏறினான். சங்கம், பே4ரீ, பணவம் எனும் வாத்யங்களின் நாதத்தோடு, தோள் தட்டி போருக்கு அழைத்தல், கனைத்தல், சிம்ம கர்ஜனை செய்தல் போன்ற போர் வீரர்களின் சேஷ்டைகளால் எழுந்த சப்தமும் சேர்ந்து கொள்ள, புண்யமான ஸ்தோத்திரங்களால் சிலர் வாழ்த்து சொல்ல, அந்த ஒலியும் ஓங்கி ஒலிக்க, ராக்ஷஸ ராஜன் கிளம்பினான். அந்த ராக்ஷஸ ராஜனை சூழ்ந்து, மலை போல, கரு மேகம் போல, பெருத்த சரீரம் உடைய போர் வீரர்கள், காவல் படையினர் சென்றனர். சிவந்து, நெருப்பை உமிழும் கண்களை உடையவர்களாக, இந்த போர் வீரர்களுடன் புறப்பட்ட, ராக்ஷஸ ராஜனான ராவணன், அமரர்கள் தலைவனான ருத்ரன் தன் பூத கணங்களுடன் புறப்பட்டது போல காணப்பட்டான்.
வழியனுப்ப வந்த நகர வாசிகள், திடுமென பெரும் உற்சாகத்துடன் தோன்றிய வானர சைன்யத்தைக் கண்டனர். உக்ரமான பெருங்கடல் போல, ஆகாயத்தில் இடி முழக்கம் ஏற்பட்டது போல கூச்சலுடன், கைகளில் மரங்களையும், பாறாங்கற்களையும் ஏந்தியபடி நிற்பதைக் கண்டனர். ராக்ஷஸ சேனை மிகவும் உக்ரமான ஆவேசத்தோடு வருவதைக் கண்ட ராமர், சஸ்திரங்களை அறிந்த வீரர்களுள் சிறந்தவனான விபீஷணனை அழைத்து விசாரிக்கலானார். பலவிதமான கொடிகள், த்வஜங்கள், சஸ்திரங்கள் இவைகளை நிரப்பிக் கொண்டு ப்ராஸ, கத்தி, சூலாயுதம் என்ற சஸ்திரம் இவைகளையும் ஏராளமாக சேகரித்துக் கொண்டு, கஜேந்திரன், நாகம் இவைகளுடன், குறைவற்ற பயமில்லாத வீரர்கள் சூழ வரும் சைன்யம் யாருடையது? ராமர் விசாரித்த விவரங்களை விபீஷணன் தெளிவாக சொல்லலானான். தானும் இந்திரனுக்கு சமமான பலம் கொண்ட வீரனே ஆனதால், படை வீரர்களை, அவர்களின் சிறப்புகளை, உடல் பலத்தை விவரித்தான். ராஜன், இதோ வருகிறானே, யானையைப் போன்ற கம்பீரமான நடையும், இளம் சூரியன் போன்ற தாம்ர நிற சரீர காந்தியுடன், யானையின் மேல் அமர்ந்தபடி, தலையை ஆட்டியபடி வருகிறானே, இவன் தான் அகம்பனன். இவன் கொடியில் மிருக ராஜனான சிம்மத்தை உடையவன். இந்திரனுடைய வில்லுக்கு சமமான தன் வில்லை தூக்கியபடி, இளம் யானைக்குட்டி இப்பொழுது தாம் முளைத்த பற்கள் நக நக வென, எதையேனும் கடிக்க விரும்புவது போல பரபரப்பாகத் தெரிகிறானே, இவன் தான் இந்திரஜித். நிறைய வரங்கள் பெற்றவன். விந்த்ய மலையோ, மகேந்திர மலையோ எனும்படி, பெருத்த சரீரமும், கையில் வில்லுடன், ரதத்தில் அமர்ந்து, அதிரதனாக அதி வீரனாக காண்கிறானே, தன் வில்லின் நாணை, சுண்டி ஓசை எழுப்பிக் கொண்டு வருகிறானே, இவன் தான் அதிகாயன். வளர்ந்து நிற்கும் பெரிய சரிரம் உடையவன். இதோ இளம் சூரியன் போல சிவந்த கண்களுடன், மணியோசை நாதமாக ஆடி வரும் யானை மேல் அமர்ந்தபடி, கொடூரமாக கர்ஜனை செய்கிறானே, இவன் தான் மகோதரன்., என்ற வீரன். இதோ இருக்கிறானே, இவன் தான் குதிரையில் காஞ்சனத்தால் விசித்ரமான வேலப்பாடுகள் அமைந்த ஆசனத்தில் அமர்ந்து சந்த்யா கிரி போலத் தெரிகிறானே, கையில் பிராஸத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு, மரீசியுடன் கூடிய பிசாசம் என்ற இனத்தைச் சேர்ந்தவன் வஜ்ரத்துக்கு சமமாக அடிக்கக் கூடியவன். இதோ கூர்மையான சூலத்தை ஏந்தியபடி, மின்னலைப் போலவும், வஜ்ரம் போலவும் வேகமாக வீசக் கூடிய த்ரிசிரஸ். எருதின் மேல் ஏறி, தன் உருவத்தால், தானும் மற்றொரு கிரி, மலை போல வருகிறானே, இவன் பெரும் புகழ் வாய்ந்தவன். அகன்ற மார்புடன், தன்னம்பிக்கையுடன், நாக ராஜனை கொடியில் உடையவன். தன் தோள்களைத் தட்டியபடி, வில்லை ஆட்டிக் கொண்டு வருகிறானே இவன் தான் கும்பன். இதோ வருபவன் தங்கத்தாலான வஜ்ரம் இழைத்து செய்யப் பட்ட பரிகத்தை (ஆயுதம்) புகை வரும்படி வேகமாக ஆட்டியபடி, இந்த ராக்ஷஸ சேனைக்கு நடு ஸ்தம்பம் போன்றவன், நிகும்பன். மிக பயங்கரமாக போர் செய்யக் கூடியவன். மேலும், வில், வாள், சரங்கள், அவற்றுடன் அக்னிக்கு சமமான பிரகாசமான சரீரமும் கொடியுடன் கூடிய ரதத்தில் ஏறி பார்வைக்கே உக்ரமாகத் தெரிபவன் நராந்தகன் என்பவன். இவனுக்கு சமயத்தில் மலைப் பாறைகளே போர் செய்ய சாதனங்களாக பயன் படும். இதோ, பலவிதமான கோரமான ரூபங்கள், புலி, ஒட்டக, யானைக் கூட்டதின் தலைவனான யானை, மான், குதிரை இவைகளின் முகங்களை தன் ரதத்தில் அலங்காரமாக பொறித்துக் கொண்டவனாக, கண்களை உருட்டியபடி வருகிறானே, அவன் தேவர்களை அடக்கியவன். இவன் குடை சந்திரனுக்கு சமமான காந்தியுடன் விளங்குகிறது. வெண் கொற்றக் குடை, சூக்ஷ்மமான கம்பிகளுடன், பூத கணங்களுடன் கூடிய ருத்ரன் போல விளங்கும் இந்த ராக்ஷஸாதிபதி கிரீடம் தரித்தவனாக, குண்டலங்கள் ஆட, மலையரசன், விந்த்ய மலை போன்ற பெரிய சரீரத்துடன், மகேந்திரன், வைவஸ்வதன் இவர்களின் கர்வத்தை அடக்கியவன். சூரியன் போல ஒளி மயமாக வருபவன் தான் ராக்ஷஸாதிபதி, ராவணன்.
அப்படியா என்று விபீஷணன் சொன்னதை காதில் வாங்கிக் கொண்ட ராமர், ராவணனைப் பார்த்து அஹோ, என்ன பிரகாசமான தேஜஸ். இந்த ராக்ஷஸ ராஜனான ராவணன் கண்களைக் கூச வைக்கும் கிரணங்களுடன் ஆதித்யனே நேரில் வந்தது போல நிற்கிறான். இவன் சரீரத்தை சூழ்ந்துள்ள தேஜஸால் தெளிவாக காண்கிறேன். தேவ, தானவ வீரர்களுக்கு இது போல சரீரம் அமையாது. இந்த ராக்ஷஸேந்திரனின் சரீரம், பிரகாசமாகக் காணப்படுவது போல இருக்காது. இந்த பெரும் செல்வந்தனான, பலசாலியான ராவணனின் படைத் தலைவர்களும், எல்லோருமே மலை போன்ற சரீரமும், மலை போல கலங்காது நின்று யுத்தம் செய்யும் வீரர்களே. நெருப்புச் சுடர் போன்ற ஆயுதங்களைத் தாங்கியவர்கள். நல்ல போர் புரியும் திறனுடைய வீரர்கள். இந்த போர் வீரர்கள், சரீரம் எடுத்து வந்துள்ள அந்தகனோ எனும் படி காட்சியளிக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக இந்த பாபாத்மா இன்று என் கண்ணெதிரே வந்து நிற்கிறான். சீதையை அபகரித்ததால் என் மனதில் பொங்கி எழும் கோபத்தை இன்று வெளிப்படுத்துகிறேன், என்று சொல்லியபடி, லக்ஷ்மணன் பின் தொடர, வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
இங்கு, ராவணன் தன் படை வீரர்களுக்கு ஆணைகள் பிறப்பித்தான். வாசல்களிலும், வீட்டு மாளிகைகளிலும், பரவி கவனமாக நின்று கொள்ளுங்கள்.அவரவர் தங்கள் இருப்பிடத்தில், ஸ்திரமாக நிற்கும்படி, சந்தேகத்துக்கு இடமில்லாமல் பாதுகாவலாக நின்று கொள்ளுங்கள். உங்களுடன் நானும் இங்கு வந்து விட்டது தெரிந்தால், இந்த வானரங்கள் தங்களுக்கு இடையூறு ஏதுவும் இருக்காது என்று நம்பிக்கை கொள்ள ஏதுவாகும். திடுமென எல்லாமாக சேர்ந்து சூன்யமான லங்கா நகருக்குள் சென்று அட்டகாசம் செய்யக் கூடும். இவ்வாறு சொல்லி அவர்களுக்கு உரிய இடங்களில் எதிரி கண்களுக்குத் தெரியாமல், தாங்கள் அடிக்க வசதியாக இருக்கச் செய்து விட்டு, தான் சமுத்திரம் கரை புரண்டு வருவது போல மோதிக் கொண்டு வரும் வானர சைன்யத்தின் மேல் தன் பாணங்களை பிரயோகிக்க ஆரம்பித்தான். பள பளக்கும் வில்லும் அம்பும் கொண்டு, திடுமென யுத்த களத்தில் குதித்து நின்ற ராக்ஷஸேந்திரனான, ராவணனை, வானர ராஜனான சுக்ரீவன் ஒரு பாறாங்கல்லை கையில் வைத்துக் கொண்டு துரத்தினான். அவன் கையில் மலையிலிருந்து பெயர்த்துக் கொன்டு வந்த பாறையில், மரக்கிளைகளும், செடி கொடிகளும் அப்படியே இருந்தன. அதை வீசி ராவணனுடன் போரை ஆரம்பித்தான். ராவணன் அது தன் பேரில் விழாதபடி, பாணங்களாலேயே தடுத்து நிறுத்தினான். பெரிய மரத்துடன் கூடிய அந்த மலையின் பாகம் போல இருந்த பாறாங்கல், பூமியில் விழவும், ராவணன் பதில் கொடுத்தான். பெரிய நாகம் போலவும், அந்தகன் போலவும் தோற்றமளித்த ஒரு சரத்தை ராவணன் தன் வில்லில் பூட்டி, பிரயோகம் செய்ய ஆயத்தமானான். காற்றின் வேகத்தில் செல்லும் அந்த அம்பு, நெருப்பு பொறி பறக்க, பெரும் கல் அல்லது அசனி என்ற இந்திரனுடைய ஆயுதம் போன்று சுக்ரீவனைத் தாக்கி அழிக்க வல்லதாக இருந்தது. கூர்மையான நுனி உடையதான அந்த அம்பு ராவணன் கைகளிலிருந்து விடுபட்டு, சுக்ரீவனை மகா வேகமாகத் தாக்கியது. குகன் கைகளிலிருந்து விடுபட்ட உக்ர சக்தியுடைய அம்பு க்ரௌஞ்ச மலையைத் தாக்கியது போல சுக்ரீவனை வீழ்த்தியது. பெருங்குரலில் ஓலமிட்டபடி, சுக்ரீவன் பூமியில் விழுந்தான். நினைவிழந்து தரையில் விழுந்து கிடந்த சுக்ரீவனைப் பார்த்து ராக்ஷஸ வீரர்கள் கேலியாக சிரித்தனர். இதைக் கண்ட க3வயன், க3வாக்ஷன், சுத3ம்ஷ்டிரன், ரிஷப4ன், ஜ்யோதிமுகன், நப4ன் என்ற வானர படைத் தலைவர்கள் ஆளுக்கொரு சிறிய மலையளவு இருந்த கற்களைத் ராவணன் படை வீரர்கள் மேல் வீசி பலரை விழச் செய்தனர். இந்த கற்களை ராவணன் தன் பாணங்களால் சிதறச் செய்தான். மேலும் வேலப்பாடமைந்த தங்க கவசம் கொண்ட தன் கூர்மையான பாணங்களால் சரமாரியாக வானரங்களைத் தாக்கி கலங்கச் செய்தான். பெரிய உருவம் கொண்ட வானர வீரர்கள் பலர், ராவணனின் அம்பு மழையைத் தாங்க சக்தியின்றி, பூமியில் விழுந்தனர். இந்த அம்புகள் துளைத்தது ஒரு புறம் இருக்க, ராவணனை நேருக்கு நேர் கண்ட பயமும் அவர்களை வாட்டி எடுத்தது. மூச்சு விடக் கூட மறந்தவர்களாக, இது வரை கோஷம் செய்து கொண்டிருந்தவர்கள், சரணாகத பரிபாலனான ராமனையே சரணடைந்தார்கள்.
ராமரும் உடனே, பரபரப்புடன் தன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார். லக்ஷ்மணன் பின்னாலேயே வந்து வணக்கத்துடன் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான். பொருள் பொதிந்த அந்த வாக்யத்தை லக்ஷ்மணன் வினயமாக சொல்லலானான். ஆர்ய, நீங்கள் இவனை எதிர்த்து போரிடுவது தங்கள் தகுதிக்கு அதிகமே. இந்த நீசனை வதம் செய்ய எனக்கு ஆணையிடுங்கள் ப்ரபோ, எனவும் ராமரும் சரி போய் வா. உன் திறமையைக் காட்டி போர் செய். ராவணன் யுத்தத்தில் மிகுந்த பராக்ரசாலி. மூவுலகிலும் இவனை எதிர்த்து நின்று ஜயித்தவர் யாருமில்லை. அவனுடைய பலம் குறைந்த இடங்களை(ஞக்ஷெர்க பஒiநத) மர்மஸ்தானங்களைத் தெரிந்து கொள். உன் பலா பலங்களை வெளிக் காட்டாதே. கண்கள், வில், முயற்சிகள் இவை யாவையும் உன்னை ரக்ஷித்துக் கொள்ளவும் பயன் படுத்து. கவனமாக போர் செய் என்று சொல்லி அவனை ஆலிங்கனம் செய்து ஆசிர்வதித்து, அனுப்பினார். லக்ஷ்மணனும் ராமரை வணங்கி யுத்த களம் நோக்கி புறப்பட்டான். யானையின் தும்பிக்கை போன்ற நீண்ட புஜங்களையுடைய ராவணனைக் கண்டான். அவன் கையில் இருந்த வில் பள பளவென்று, பயங்கரமாகத் தெரிந்தது. அந்த வில்லிலிருந்து எய்யப் பட்ட பாணங்கள் வானர சைன்யத்தை இருக்கும் இடம் தெரியாமல் மறைத்துக் கொண்டு மழையாக பொழிவதைக் கண்டான். ஹனுமான் இந்த சர ஜாலத்தை விலக்கி. ராவணனை நோக்கி ஓடுவதையும் கண்டான். அவனுடைய ரதத்தை ஒரு கையால் பிடித்து தடுத்து நிறுத்தி, வலது கையை ஓங்கி, ராவணனை நோக்கி அவன் பயப்படும்படியான ஒரு விஷயத்தைச் சொன்னான். ராவணா, தேவ, தானவ, கந்தர்வ, யக்ஷர்கள், சக ராக்ஷஸர்கள் இவர்கள் கையால் என் வதம் ஆகக் கூடாது என்று நீ ப்ரும்மாவிடம் வரம் பெற்றாய். வானரர்களை நீ விட்டு விட்டாய். அவர்களை நீ ஒரு பொருட்டாக நினைக்காததாலும், இருக்கலாம். இதோ பார். என் வலது கை முஷ்டி. ஐந்து விரல்கள் ஐந்து மரக்கிளைகள் போல இவை வெகுகாலமாக இந்த உன் உடலில் தங்கியிருக்கும் உயிருக்கு விடுதலை அளிக்க வல்லவை. ஹனுமானின் இந்த வார்த்தைகளைக் கேட்டு ராவணன் கண்கள் சிவக்க, மிகுந்த கோபத்துடன் பதில் அளித்தான். ஆஹா, சீக்கிரம் உன் ஆயுதத்தை பிரயோகம் செய். அழிவில்லாத கீர்த்தியை அடைவாய். வானர, உன் பலம் என்ன என்பது எனக்குத் தெரியும். முதல் அடியை நீ செய். பின் நான் உன்னை ஒன்றுமில்லாதவனாக செய்து விடுகிறேன். ராவணன் இவ்வாறு சொல்லவும், வாயு புத்திரன், ராக்ஷஸ ராஜனே, உன் மகன் அக்ஷனை நான் முன்னால் அடித்து வீழ்த்தியிருக்கிறேன். ஞாபகம் இருக்கட்டும். இதைக் கேட்டு, பொறுக்க மாட்டாத ராவணன் புறங்கையால் ஓங்கி வானர வீரன் வாயுபுத்திரனின் மார்பில் அடித்தான். அந்த அடி வாயு புத்திரனை ஒரு கலக்கு கலக்கி விட்டது. சமாளித்து தன்னை நிலைப் படுத்திக் கொள்ள ஒரு முஹுர்த்த நேரம் ஆயிற்று. அதே போல திரும்பத் தன் கைத்தலத்தால், உள்ளங்கையால் அமர த்வேஷியான ராவணனை ஓங்கி ஒரு குத்து விட்டான். பூமி திடுமென அசைந்து விட்டதோ எனும்படி பலமாக வந்த இந்த அடியினால் நிலை குலைந்து போன ராவண ராக்ஷஸனைப் பார்த்து, யுத்த களத்தில் இப்படி உள்ளங்கை அடி வாங்கியே திகைத்து நிற்பதைப் பார்த்து, வானரங்களும், ரிஷிகளும், சித்தர்களும், தேவர்கள், அசுரர்களும், ஹோ வென்று எக்காளம் இட்டு சிரித்தனர். தன்னைச் சற்று ஆசுவாசம் செய்து கொண்ட ராவணன் சொன்னான். வானர, சாது. பலத்தால் எனக்கு சமமான எதிரிதான் நீ. உன்னை சிலாகிக்கிறேன். எனவும் மாருதி பதில் சொன்னான். என் வீரமா? திக். என்ன பயன்? நீ இன்னமும் ஜீவித்து இருக்கிறாயே. ராவணா, என் கையினால் அடிபட்டு நீ மாண்டு விழவில்லையே. ராவணா, யுத்தத்தை தொடருவேன். அனாவசியமாக பேச்சை ஏன் வளர்க்கிறாய்? அதன் பின் என் முஷ்டி உன்னை யம லோகத்துக்கே அழைத்துச் செல்லும் பார். இதைக் கேட்ட ராவணன், ஆத்திரத்துடன் வலது கை முஷ்டியை ஓங்கி பலமாக வாயு புத்திரனை அடித்தான். ஹனுமான் அந்த அடியைத் தாங்க மாட்டாமல், கலங்கி நிற்பதைக் கண்ட நீலன், தன் ரதத்தில் வேகமாக அங்கு வந்து சேர்ந்தான். ராவணனும் தன் ரதத்தை அதி ரதியான நீலனை நோக்கிச் செலுத்தி, போரிட தயாரானான். பாம்புகள் போன்று சீறிப் பாயும் அம்புகளை, பயங்கரமான ஆயுதங்களை எதிரியின் மர்மத்தில் அடிக்கக் கூடிய வானர படைத் தலைவனான நீலனை பலமாக தாக்கினான். இந்த அம்புகள் மேலே விழ, ஒரு கையால் அதை விலக்கியபடி, மற்றொரு கையால் ஒரு பாறாங்கல்லை ராவணன் மேல் வீசினான். இதற்கிடையில் ஹனுமானும் தன்னை சமாளித்துக் கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தவனாக சண்டையைத் தொடரும் எண்ணத்துடன், நீலனுடன் போர் செய்து கொண்டிருந்த ராவணனை நோக்கி, ஆத்திரத்துடன் கத்தினான். மற்றவருடன் போர் செய்யும் பொழுது குறுக்கே போவது சரியல்ல. ராவணனனோ, தன்னை நோக்கி வந்த பெரிய மலைச் சிகரம் போன்ற பாறாங்கல்லை ஏழு பாணங்களால் அடித்து சிதறச் செய்வதில் கவனமாக இருந்தான். அந்த கல் உடைந்து பொடிப் பொடியாக ஆனதைக் கண்ட, வானரப் படைத் தலைவன் நீலன், காலாக்னி மூண்டது போன்ற கோபத்துடன், அஸ்வகர்ணம் என்ற மரத்தையும், த4வ, சால விருக்ஷங்களையும், பூத்து குலுங்கிய மாமரக் கிளைகளையும் கொண்டு வந்து ராவணன் மேல் போட்டான். இன்னும் மரக் கிளைகளையும் அடுக்கி வைத்துக் கொண்டான். அக்னி போன்ற சில அஸ்திரங்களை அடுத்தடுத்து பிரயோகம் செய்து, ராவணன் இந்த மரக் கிளைகளால் அடிபடுவதிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டான். இந்த அம்புகள் கூடாக தன்னை மறைப்பதையறிந்த அக்னி குமாரன் தன்னை மிகச் சிறியவனாக ஆக்கிக் கொண்டு வெளி வந்து விட்டான். தன் த்வஜத்தின் மேல் நின்ற அக்னி சுதனான நீலனைப் பார்த்து ராவணன் திடுக்கிட, நீலன் அட்டகாசமாக சிரித்தான். த்வஜத்தின் மேல், வில்லின் நுனியில், கிரீடத்தின் மேல் என்று மாறி மாறித் தெரிந்த அந்த வானரத்தைப் பார்த்து, லக்ஷ்மணன், ஹனுமான், ராமரும் கூட ஆச்சர்யமடைந்தனர். இந்த வானரத்தின் லாகவத்தைக் கண்டு, ராவணனும் அதிசயித்தான். ஆக்னேயம் என்ற சக்தி வாய்ந்த அஸ்திரத்தை எடுத்தான். வானரங்கள் தங்கள் இனத்து வீரன் ராவணனை ஆட்டுவிப்பதைக் கண்டு பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த மகிழ்ச்சிக் கூக்குரல் ராவணனனுக்கு மேலும் எரிச்சலை ஊட்டியது. எதுவும் சொல்லக் கூட தோன்றாதவனாக, த்வஜத்தின் மேல் நின்ற நீலனை நோக்கி பாணங்களை பிரயோகம் செய்யலானான். கையிலிருந்த வில்லில் பூட்டிய அம்புடன், நீலனைப் பார்த்து கபியே, நல்ல லாகவத்துடன் ஏறி நிற்கிறாய். மாயை அறிந்தவன் தான் நீ. உன் உயிரைக் காத்துக் கொள்ள முடியுமானால், காத்துக் கொள். வித விதமாக உன்னைக் காட்டிக் கொள்கிறாய். எப்படி ஒளிந்து கொன்டாலும் என் வில்லிருந்து புறப்படும் அம்புகள் உன்னைக் கண்டு கொண்டு அடிக்கும். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீ என்னதான் முயன்றாலும், இந்த அம்புகள் தொடர்ந்து வரும். என்று சொல்லிக் கொண்டே ராவணன், ராக்ஷஸ ராஜன், வானர படைத் தலைவனான நீலனைத் தாக்கினான். அஸ்திரம்-மந்திரம் சொல்லி விடப்பட்ட பாணம் தன் மார்பில் பட எரிச்சல் தாங்க மாட்டாதவனாக நீலன் பூமியில் விழுந்தான். தந்தையின் மகிமையால், தன் வீர்யத்தால், முழங்கால்களை ஊன்றிக் கொண்டு பூமியில் நின்றான், உயிர் விடவில்லை. நினைவு இன்றி பூமியில் நின்ற வானரத்தைப் பார்த்து, மேலும் மேலும் போர் செய்ய ஆவலுடன் ராவணன் அவனை அப்படியே விட்டு விட்டு, சௌமித்ரியை நோக்கித் தன் ரதத்தைத் திருப்பினான்.
மேகம் முழங்குவது போல முழங்கும் அந்த உயர்ந்த ரதம், ரண மத்தியில் வந்து நின்றது. தன் வில்லை விரல்களால் நிமிண்டி பெரும் நாதம் எழச் செய்தான், ராவணன். அந்த நாதமே மூவுலகையும் கலக்கியது. ஒப்பில்லாத அந்த வில்லையும், அதிலிருந்து கிளம்பிய நாதத்தையும் கேட்டும், ராவணனைப் பார்த்தும் சற்றும் கலங்காத சௌமித்ரி, நிசாசரேந்திரா, என்னிடம் வா. வானரர்களோடு போர் செய்வது உன் தகுதிக்கு ஏற்றதல்லவே என்று அழைத்தான். ராக்ஷஸ ராஜனும், உக்ரமான சௌமித்ரியின் வில்லின் ஓசையயும், தன் வில்லின் நாதத்தையும் மீறி ஒலித்த சௌமித்ரியின் குரலையும், ஜய கோஷத்தையும் கேட்டு, வேகமாக தன் ரதத்தை ஓட்டிக் கொண்டு, ஆத்திரத்துடன், சௌமித்ரியின் எதிரில் வந்து நின்றான். உன் அதிர்ஷ்டம், இன்று என் எதிரில் உயிருடன் நிற்கிறாய். ராகவா, வாழ்வின் முடிவை நெருங்கியவனுக்கு புத்தி விபரீதமாகப் போகும் என்பது சரியே. இந்த க்ஷணமே, நீ யமனுலகம் செல்லப் போகிறாய். என் பாணங்களே, வாகனமாக உன்னைக் கொண்டு செல்லும் என்றான். சௌமித்ரி அலட்சியமாக சிரித்து, கூர்மையான முன் பல் தெரிய பெருங்குரலில் கர்ஜனை செய்யும் ராவணனைப் பார்த்து, ராஜன், பிரபாவம் உடைய வீரர்கள் வீணாக வாய்ச் சொல்லில் நேரத்தை வீணாக்க மாட்டார்கள். புலம்புகிறாய். வெறும் பேத்தல். பாப காரியங்களைச் செய்பவர்களுள் நீ முதலிடம் பெற்றவனாக இருக்கலாம். உன் வீர்யத்தை அறிவேன். ராக்ஷஸேந்திரா, பலம், பிரதாபம், பராக்ரமம் இவையும் நான் அறிந்ததே. இதோ, கையில் வில்லுடன் நான் காத்து நிற்கிறேன். வீண் பேச்சு பேசிக் கொண்டு ஏன் நிற்கிறாய்? சௌமித்ரி சொன்னதைக் கேட்டு, ரோஷம் மேலிட, ராவண ராஜா, ஏழு கூர்மையான பாணங்களை ஒரே சமயத்தில் எய்தான். லக்ஷ்மணன் அதே போல தானும் கூர்மையான தன் பாணங்களால் அவைகளை தடுத்து நிறுத்தினான். நாகராஜா போன்ற தன் பாணங்கள் பயனற்று போனதைக் கண்டு ராக்ஷஸன், மேலும் சக்தி வாய்ந்த பாணங்களை பிரயோகம் செய்யலானான். ராமானுஜனின் வில்லிலிருந்து அதற்கு சற்றும் குறையாத சக்தி வாய்ந்த பாணங்கள், வெளிப்பட்டன. க்ஷுர, அர்த்த சந்திர, உத்தம கர்ணி, பல்ல சரங்கள், இவற்றை மேலும் மேலும் லக்ஷ்மணனும் எய்தான். அந்த சர ஜாலங்களையும், அதனதன் சக்தியையும் அறிந்து கொண்ட ராவணன், லக்ஷ்மணனின் கை லாகவத்தைக் கண்டு, அதிசயித்தான். திரும்பவும் தன் வில்லில், மேலும் சக்தி வாய்ந்த பாணங்களை பிரயோகம் செய்யலானான். லக்ஷ்மணனும் சளைக்காமல் இடைவிடாமல் அடித்தான். லக்ஷ்மணனின் பாணங்களும், கூர்மையானவை, மகேந்திரனின் வஜ்ரம் போன்ற, அசனிக்கு ஈடான, நெருப்பை உமிழும் மகா சக்தி வாய்ந்த பாணங்களே. இதற்கு மேலும் பொறுக்க மாட்டாத ராவணன், ஸ்வயம்பூ தந்த அரியதான ஒரு அஸ்திரத்தை, லக்ஷ்மணனின் நெற்றியில் படும் படி விட்டான். காலாக்னி போன்று தன் மேல் வந்து விழுந்த பாணத்தால் நிலை தடுமாறிய லக்ஷ்மணன், மிக கஷ்டப்பட்டு தன்னை சாமாளித்துக் கொண்டு, தன் பாணத்தால் தேவர்களின் விரோதியான ராவணனின் வில்லை உடைத்து எறிந்தான். கை வில்லை இழந்து நின்ற ராவணன் மேல் மேலும் மூன்று பாணங்களை விட்டான். இதை சற்றும் எதிர்பார்க்காத ராவணன், சற்று நிலை குலைந்தாலும், உடனே சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து நின்றான். உடல் பூராவும் காயம், ரத்தம் பெருக்கெடுத்து ஓட, கை வில்லையும் இழந்தவனாக, தேவ சத்ருவான ராவணன், ப்ரும்மாவிடம் வரமாகப் பெற்ற சக்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தான். புகையின்றி விளங்கும் நெருப்பு போல அலை மோதிக்கொண்டு நின்ற வானர சேனையை நோக்கியபடி, திடுமென சக்தியை சௌமித்ரியின் மேல் பிரயோகித்து விட்டான். லக்ஷ்மணன் அதைத் தடுக்க சரமாரியாக பாணங்களை விட்ட பொழுதும், சக்தி அவன் கைகளைத் தாக்கி விட்டது. சக்தி வாய்ந்த ஆயுதம் அந்த சக்தி என்ற ஆயுதம். அதனால் அடிபட்டதால் நிலை குலைந்து தடுமாறிய ரகு வீரன், அப்பொழுதும் மனம் கலங்காமல் நின்றான். வேகமாக வந்த ராவணன் அவனை தோள்களைப் பற்றித் தூக்கிச் செல்ல முயன்றான். ஹிமவான், மந்தர, மேரு மலை, தேவர்கள் உள்ளிட்ட மூவுலகையும் கூட ராவணன் தூக்கி நிறுத்தியிருக்கலாம். ஆனால், பரதனின் சகோதரனை அசைக்க முடியவில்லை. தன் மார்பில் சக்தி ஆயுதத்தால் தாக்கப் பட்டிருந்த நிலையிலும், விஷ்ணுவின் அம்சமான தன் இயல்பையும், எண்ணி பார்க்க முடியாத தன் பலத்தையும் நினைவு கொண்டு, அசையாது நின்றான். தானவனின் கர்வத்தை அடக்கும் சக்தி வாய்ந்த லக்ஷ்மணன்., அசைக்க முடியாதபடி நின்றவனை, தன் கைகளால் அடித்தும் அசைத்தும் தூக்க முயன்றான், ராவணன். இதை கவனித்து விட்ட வாயு புத்திரன், எங்கிருந்தோ ஓடி வந்தான். வஜ்ரம் போன்ற தன் முஷ்டியினால், ராவணனின் மார்பில் ஓங்கி குத்து விட்டான். அதைத் தாங்க முடியாமல் ராக்ஷஸ ராஜா, முழங்கால் பலத்தில் பூமியில் சரிந்தான். (முட்டி போட்ட நிலையில் நின்றான்) ஹனுமானின் முஷ்டியால் பட்ட அடி காரணமாக, காதுகள், கண்கள் பாதிக்கப்பட, வாய் மூலமாக ரத்தத்தை உமிழ்ந்தான். தலை சுற்ற ரதத்தின் மேலேறி உட்கார்ந்து கொண்டான். நினைவு தவறி, மூர்ச்சை போடும் நிலையில், எப்படியோ சமாளித்தபடி இருந்தான். அவ்வளவு பீம பராக்ரமன் என்று பெயர் பெற்ற மூவுலகையும் கலக்கும் ராவண ராஜா, நினைவிழந்து கிடக்கிறார் என்பதையறிந்து வானரங்கள் உற்சாகமாக கூக்குரல் இட்டனர். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், ரிஷிகள் இவர்களும் அந்த ஆரவாரத்தில் கலந்து கொண்டு ஜய கோஷம் செய்தனர். ஹனுமான், லக்ஷ்மணனின் நிலை கவலைக் கிடமாக இருப்பதையறிந்து அருகில் சென்று தடவிக் கொடுத்து, உபசாரம் செய்தான். ஹனுமானின் நட்பையும், பக்தியையும் மனதில் கொண்டு, சற்று முன் சத்ருவால் அசைக்க முடியாமல் போன தன் சரீரத்தை லகுவாக்கிக் கொண்டு, லக்ஷ்மணன் ஒத்துழைத்தான். யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியாத வீரனை தாக்கி கீழே தள்ளியதோடு, ராவணனனின் சக்தி ஆயுதம் திரும்ப தன் எஜமானனிடம் சென்று விட்டது. ஹனுமானால் பணிவிடை செய்யப் பட்ட லக்ஷ்மணன், ஆஸ்வாசம் அடைந்து, அதே சமயம் தன்னைத் தாக்கிய சக்தி ஆயுதமும் திரும்பிச் சென்று விட்டதாலும், லக்ஷ்மணன் தன் நிலை அடைந்து எழுந்து நின்றான். சர்ச்சைக்கு அப்பாற்பட்ட, தன் இயல்பான, விஷ்ணுவின் அம்சமான அவதார ரகஸ்யத்தை திரும்பவும் நினைத்துக் கொண்டான். ராவணனும், சற்று நேரத்தில் நினைவு பெற்று தன் பழைய நிலைக்குத் திரும்பி விட்டான். தன் பெரிய வில்லை கையில் எடுத்து கூர்மையான பாணங்களைத் தொடுக்க ஆரம்பித்தான். வானர சைன்யத்தின் பெரிய, முக்யமான வீரர்கள் எனப்பட்டவர்களே ஓட்டம் எடுத்தனர். இதைக் கண்டு ராகவன், தானே ராவணனுடன் போர் செய்ய வந்தான்.
போருக்குப் புறப்பட்ட ராகவன் அருகில் சென்று ஹனுமான் ஒரு விண்ணப்பம் செய்தான். என் முதுகில் ஏறிக் கொண்டு இந்த ராக்ஷஸனை அடியுங்கள். பகவானான கருடன் மேல் ஏறி விஷ்ணு போருக்கு புறப்பட்டது போல என் மேல் ஏறிக் கொள்ளுங்கள். இதைக் கேட்டு ராகவன், வாயு புத்திரனின் மேல் ஏறிக் கொண்டார். ரதத்தில் இருந்த ராவணனை மனிதர்களின் அரசனான ராகவன், யுத்த களத்தில் நேருக்கு நேர் சந்தித்தார். விரோசனன் மகனை, வைரோசனியை, கோபத்துடன் விஷ்ணு தாக்க முயன்றது போல, கையில் ஆயுதங்களோடு, வஜ்ரம் விழுந்தது போன்ற பெரிய குரலில் ஜய கோஷமிட்டபடி, முன்னேறினார். கம்பீரமாக, பொறுக்கி எடுத்த வார்த்தைகளைக் கொண்டு ராவணனைப் பார்த்து எச்சரித்தார்.
நில், நில், ராக்ஷஸ சார்தூலா, எனக்கு இப்படிப் பட்ட ஒரு அபசாரத்தைச் செய்து விட்டு, நீ எங்கு போய் தப்பிக்கலாம் என்று நினைக்கிறாய்? பத்து திக்குகளிலும் ஓடிப் போனாலும், இந்திரன், வைவஸ்வதன், பாஸ்கரன் இவர்களிடம் அடைக்கலம் கேட்டு ஓடினாலும், ஸ்வயம்பூ, வைஸ்வானர, சங்கரன் இவர்களிடம் சரணம் கேட்டு ஓடினாலும், இன்று என் கையிலிருந்து நீ தப்பிக்கவே முடியாது. உன் சக்தியால் அடித்து எந்த ம்ருத்யு வரும் என்று எதிர் பார்த்தாயோ, அதே ம்ருத்யு இன்றைய யுத்தத்தில், ரக்ஷோகண ராஜாவே, புத்திரர்களுடன், மனைவி மக்களுடன், சேர்த்து உன்னை வந்து சேரப் போகிறது. இதோ பார், என் அத்புதமான சரங்கள். இவை தான் ஜனஸ்தானத்தில் பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்கள் உயிரைக் குடித்தன. ராகவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, அதை கேட்டுக் கொண்டிருந்த ராவணன், ராகவனை தோளில் சுமந்து வந்து கொண்டிருந்த ஹனுமானைப் பார்த்து முன் வைரத்தை நினைவு படுத்திக் கொண்டு, கூர்மையான, காலாக்னிக்கு சமமான பாணங்களால் அடிக்க ஆரம்பித்தான். ஹனுமானுடைய தேஜஸ் மேலும் வளர்ந்தது. சுபாவமாக உள்ள ஹனுமானின் தேஜஸ் யுத்தத்தில், ராக்ஷஸ பாணங்கள் தைத்த பொழுதும் இயல்பான தேஜஸ் மேலும் வளர்ந்தது. வானர வீரன் காயம் பட்டதைக் கண்டு ராமரும் ஆத்திரமடைந்தார். தன் பாணங்களை சரமாரியாக பொழிந்து ரதத்தை, சக்ரம் கழன்று விழ, குதிரைகள் விலகி ஓட, சத்ரமும் சாமரமும், த்வஜமும், பதாகமும் கீழே விழ, சாரதியும் அடிபட்டு, அதில் இருந்த அசனி, சூலம், வாள் இவையணைத்தும் நாசமாகும் படி செய்தார். தனித்து நின்ற இந்திர சத்ருவை, எதிர் பாராத நேரத்தில் புஜங்களுக்கு மத்தியில், இந்திரன் ஒருமுறை மேரு மலையை வஜ்ரத்தால் அடித்தது போல அடித்தார். வஜ்ரம் போல மேலே விழுந்த இந்த அடியாலும் கலங்காமல் நின்றான், ராஜா ராவணன். தானும் பதிலுக்கு வில்லை எடுத்து அம்புகளை பிரயோகம் செய்தான். அடி பட்டு கலங்கியிருக்கிறான், சமாளித்துக்கொண்டு போருக்கு வருகிறான் என்பதை உணர்ந்து கொண்ட ராமர் அர்த்த சந்திரம் என்ற ஆயுதத்தை பிரயோகித்து அவன் கிரீடம் தரையில் உருளும்படி செய்தார். விஷம் நீங்கப் பெற்ற ஆசீவிஷம் (கொடியதொரு விஷம்) கொண்ட ஆலகால நாகம் போலவும், தன் கிரணங்களின் ஒளி அடங்கிய சூரியன் போல பிரகாசம் இல்லாதவனாகவும், கிரீடம் இழந்து, தன் கம்பீரம் குறைய நின்றவனைப் பார்த்து யுத்தத்தில் எதிரில் நின்ற ராக்ஷஸேந்திரனைப் பார்த்து ராமர் சொன்னார். நிறைய போராடி விட்டாய். உன் வீரர்களை அழித்து விட்டேன். களைத்து நிற்கும் உன்னை என் பாணங்களால் யம லோகம் அனுப்ப மாட்டேன். போ, நான் அனுமதி தருகிறேன். ராக்ஷஸ ராஜனே லங்கை சென்று, ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை வா. ரதம் தனுஷ் இவற்றுடன் வா. அப்பொழுது தான் நானும் ரதத்தில் நின்று சரிக்கு சரி போரிடும் பொழுது என் பலத்தை தெரிந்து கொள்வாய். இவ்வாறு ராமர் சொல்லவும், தன் கர்வமும், மகிழ்ச்சியும் தன்னை விட்டு விலக, தன் வில், வாள், குதிரைகள், சாரதி இவை எதுவும் உதவிக்கு வர இயலாத நிலையில், ராமர் பாணம் தைத்த இடம் ரணமாகி வலிக்க, மகா கிரீடத்தை இழந்தவனாக திடுமென திரும்பி லங்கையில் நுழைந்தான்.
ராவணன் திரும்பிச் சென்ற பின், அடிபட்ட வானரங்களையும், லக்ஷ்மணனையும் கவனித்து, தைத்திருந்த அம்புகளை எடுத்து, வைத்யம் செய்து குணப்படுத்துவதில் ராமர் ஈடுபட்டார். மூவுலகுக்கும் இந்திரனுக்கும் சத்ருவான ராவணன் போர் முனையில் தோற்றுத் திரும்பியதைக் கண்டு சுராசுரர்கள், பூத கணங்கள் திசைகள், சாகரங்கள் உள்ளிட்ட நில பகுதிகளில் வசித்தவர் அனைவரும், ரிஷிகள், மகோரர்கள், அதே போல பூமியில், நீரில் சஞ்சரிக்கும் ஜீவராசிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணாபி4ஷேணனம் என்ற ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 60 (467) கும்பகர்ண ப்ரபோத4: (கும்பகர்ணனை எழுப்புதல்)
ராம பாணம் எனும் பயத்தால் துரத்தப்பட்டவன் போல, தன் நகருக்குள் நுழைந்த ராவணன், தன் கர்வம் அழிந்தவனாக, மிகுந்த வேதனையுடன் இருந்தான். பெரிய யானை சிங்கத்திடன் தோற்றது போலவும், பன்னகம் கருடனால் வீழ்த்தப்பட்டது போலவும், மகாத்மாவான ராகவனால் வீழ்த்தப் பட்டான். தனக்கு இது மிகப் பெரிய அவமானம் என்று ராவண ராஜா நினைத்தான். ராக்ஷஸேஸ்வரன் திரும்பத் திரும்ப, ப்ரும்ம தண்டம் போல பிரகாசமானதும், மின்னல் போல ஓளியுடனும் இருந்த ராகவ பா3ணங்களை எண்ணி, எண்ணி கலங்கினான். காஞ்சனமயமான தன் திவ்யாஸனத்தை அடைந்து, எதிரில் நின்ற ராக்ஷஸர்களைப் பார்த்து கத்தினான். நான் செய்த தவம் என்ன? என் ப3லம் என்ன? மகேந்திரனுக்கு சமமாக இருந்தவன் இன்று ஒரு மனிதனிடத்தில் தோற்றுப் போனேன். அந்த ப்ரும்மா அப்பொழுதே சொன்னார். இப்பொழுது தான் அந்த எச்சரிக்கையின் மகத்வம் தெரிகிறது. மனிதர்களிடத்தில் உனக்கு ஆபத்து என்று நினைவு வைத்துக் கொள் என்றார். அது தான் எதிரில் மனிதனாக வந்து நிற்கிறது. தேவ, தானவ, கந்தர்வ, யக்ஷர்கள், ராக்ஷஸா, பன்னகர்கள், மூலமாக எனக்கு அழிவு கூடாது என்று வேண்டியபொழுது, நான் மனிதர்களிடம் பயம் கூடாது என்று வேண்டவில்லை. அனரண்யன் என்ற இக்ஷ்வாகு குல அரசன் ஒரு முறை சொன்னான். உன்னை, புத்திரர்கள், மந்திரிகள் கூட, படை பலத்தோடும், அஸ்வ, ரதங்கள் இவைகளுடனும் சேர்த்து அழிக்கப் போகிறான், பார்த்துக்கொண்டே இரு, என்றான். அந்த மனிதன் தான் தசரதன் மகனாக, ராமனாக பிறந்துள்ளான் போலும். வேதவதீ சபித்தாளே. அவளை நான் தாக்கியபொழுது கோபத்துடன் சபித்தாள். அவள் தான் சீதையாக, ஜனக நந்தினியாக, பிறந்துள்ளாள் போலும். பாக்யசாலி. உமையும், நந்திகேஸ்வரனும், ரம்பையும், வருணன் மகளும் என்னை சபித்தனர். ரிஷிகள் சொன்னது எதுவுமே பொய்ப்பதில்லை. அந்த சாபங்களின் பலனைத் தான் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் மனதில் நினைவு வைத்துக் கொண்டு பாதுகாவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள். வீடுகள், மாளிகைகளின் மேல் ராக்ஷஸர்கள் காவலுக்கு நிற்கட்டும். தேவ, தானவர்களின் கர்வத்தை அடக்கிய ஒப்பில்லா பலசாலியான கும்பகர்ணனை எழுப்புங்கள். தான் தோற்றதும், ப்ரஹஸ்தன் மாண்டதையும் எண்ணி, ராக்ஷஸ பலம் மிகப் பெரியது, அதை தர வாரியாக யுத்தம் செய்யவும், பாதுகாக்கவும் ஏற்பாடுகள் செய்தான். வாசல்களில் கவனம் வையுங்கள். பிராகாரங்களில் சுவர்களின் மேல் நில்லுங்கள். தூங்கிக் கொண்டிருக்கும் கும்பகர்ணனை எழுப்புங்கள். காலத்தால் நினைவு மயங்கி நடப்பது அறியாமல் நிச்சிந்தையாக தூங்குகிறான். ஒன்பது, ஆறு, ஏழு, எட்டு மாதங்கள் தொடர்ந்து தூங்குகிறான். யுத்தம் என்று வந்தால் ராக்ஷஸ கூட்டத்தின் மத்தியில், எருதின் முதுகில் உள்ள ககுபம்- போன்று தனித்து தெரிவான். வானரங்களையும், ராஜ குமாரர்களையும் சீக்கிரமே வதம் செய்து அழித்து விடுவான். ராக்ஷஸ வீரர்களுக்குள் இவன் முக்கியமானவன். நடு நாயகமாக நிற்பவன். இப்பொழுது தான் மந்த்ராலோசனைகளில் கலந்து கொண்டு விட்டு ஒன்பது நாள் முன்பு தூங்கப் போனான். மகா பலசாலியான அந்த கும்பகர்ணனை எழுப்புங்கள். க்ராம்ய சுகத்தில், (பாமரமான ) ஈடுபட்டு, சாதாரண பிரஜை போல இந்த மூடன் கும்பகர்ணன் எப்பொழுதும் தூங்கிக் கொண்டு வீணாக்குகிறான். இந்த ராமனோடு அவன் நியாயமாக போர் புரிந்தாலே போதும். ராமன் முதலானவர்களை அழித்து விடுவான். எனக்கு பக்க பலமாக இருப்பான். நான் கவலையின்றி போரில் முழுவதும் கவனம் செலுத்த முடியும். இந்திரனுக்கு சமமான பலம் உடைய இவனை எந்த விதமாக நான் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று யோசியுங்கள். இது போன்ற கஷ்டமான காலத்தில், பலசாலியான கும்பகர்ணனின் உதவி எனக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ராக்ஷஸேந்திரன் இவ்வாறு கட்டளையிடவும், சில ராக்ஷஸர்கள் சென்று கும்பகர்ணனை எழுப்ப முயன்றனர். ராவணன் கட்டளையை ஏற்றுக் கொண்டு, மாமிசம் முதலிய உணவு வகைகளை வாசனை திரவியங்கள், மாலைகள் மற்றும் சிற்றுண்டி வகைகளை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்றனர். கும்பகர்ணனின் பெரிய மாளிகைக்குச் சென்று, நீளமும், அகலமுமாக விஸ்தாரமான அந்த கூடத்தில் கும்பகர்ணன் உறங்கும் இடம் சென்றனர். கும்பகர்ணன் மூச்சுக் காற்றாலேயே பலர் விரட்டியடிக்கப்பட்டனர். கஷ்டப்பட்டு சமாளித்துக் கொண்டு, ஒரு சிலர் மாளிகையினுள் நுழைந்தனர். அழகிய குகை போன்ற அந்த இடம், பொன் வேய்ந்து அலங்காரமாக அமைக்கப் பட்டிருந்தது. மிகப் பெரிய உருவமாக, ராக்ஷஸ ராஜன் தூங்குவதைக் கண்டனர். மலை ஒன்று குறுக்காக விழுந்து கிடப்பதைப் போல கிடந்த கும்பகர்ணனைக் கண்டனர். எல்லோருமாக சேர்ந்து அவனை எழுப்பினர். மயிர்க் கால்கள் குத்திட்டு நிற்க, பாம்பு சீறுவது போல மூச்சு விட்டுக் கொண்டு, தன் மூச்சாலேயே அருகில் வருபவர்களை, பயமுறுத்தி, விரட்டியடித்தபடி, தூங்குபவனைக் காணவே பயமாக இருந்தது. பெரிய நாசித் துவாரமும், பாதாளம் போன்று அகன்ற வாயும், படுக்கையில் கிடந்த முழு சரீரமும், அங்கதம் கிரீடம் போன்ற ஆபரணங்களை அணிந்தவனாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு உறங்கும் கும்பகர்ணனை, மகா பலசாலியான புலி ஒன்று உறங்குவது போல கண்டு எழுப்ப முயன்றனர். மிருகங்கள், மகிஷங்கள் பன்றிகள் இவற்றின் மாமிசங்களைக் கொண்டு சமைத்த உணவு இவைகளுடன் அன்னமும் பெரும் அளவில் வைத்துக் கொண்டு காத்திருந்தனர். வித விதமாக மது வகைகளும் குடம் குடமாக நிரப்பி வைத்துக் கொண்டு காத்திருந்தனர். உயர் வகை சந்தனங்களை உடலில் பூசினர். வாசனை மிகுந்த மலர் மாலைகளால் உடலை மறைக்கும் விதமாக அணிவித்தனர். எழுந்தவுடன் மகிழ்ச்சியுடன் இருக்கும்படி எல்லாவித பொருட்களையும் வைத்துக் கொண்டு காத்திருந்தனர். சங்கங்கள் முழங்கின. ஒவ்வொரு சங்கும் முயல் குட்டியளவு பெரியதாக இருந்தது. பெரிய மேகங்கள் இடி இடிப்பது போல அந்த ராக்ஷஸர்கள் முழக்கம் இட்டனர். சத்தம் போட்டுக் கூவினர். தோள் தட்டி, கோஷம் இட்டனர். கும்பகர்ணனை துயிலெழுப்ப, முடிந்தவரை ஆரவாரம் செய்தனர். சங்கம், பேரீ, பணவ, நாதங்கள், தோள் தட்டும், சிங்க நாதம் செய்யும் கோஷங்கள், ராக்ஷஸ குரல்கள் மூவுலகும் கேட்டன. திசைகள் நடுங்கின. பறவைகள் இந்த சத்தம் கேட்டு அலறி விழுந்தன. வெகு நேரம் இவ்வாறு பல வித சப்தங்கள் செய்தும், கும்பகர்ணன் எழாததால், ராக்ஷஸர்கள் புஸHண்டி, முஸலம், க3தை4கள் இவற்றை கையில் எடுத்துக் கொண்டனர். கற்கள், மரக் கிளைகள் இவற்றையும் கொண்டு அடித்து எழுப்பும் முயற்சியில் இறங்கினர். பலசாலியான ராக்ஷஸர்களும், கும்பகர்ணனின் மூச்சுக் காற்று வெளிப்படும் பொழுது எதிரில் நின்று எதையும் செய்ய முடியாதபடி, காற்றில் அலைக்கழிக்கப் பட்டனர். ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் ஒரே சமயத்தில் இந்த சங்கம், பணவம் போன்ற வாத்யங்களை முழங்கினர். அப்படியும் அவனை எழுப்ப முடியாமல், அடித்தும் மேலே ஏறி குதித்தும் எதுவும் பலனில்லை. அதனால் பயங்கரமாக ஒரு செயலைச் செய்தனர். குதிரைகளையும், ஒட்டகங்களையும் கோவேறு கழுதைகள், நாகங்கள் இவற்றை, தண்டம், கசை அங்குசம் இவைகளைக் கொண்டு அடித்து அவன் மேல் விரட்டினர். பேரீ, சங்க வாத்யங்களை அடி வயிற்றிலிருந்து, முழு மூச்சையும் உபயோகித்து இசைத்து, பெரும் நாதம் எழச் செய்தனர். கட்டைகளையும், குச்சிகளையும் கொண்டு, கும்பகர்ணனின் உடலை நெம்பிப் பார்த்தனர். லங்கை முழுவதும் இந்த சப்தங்கள் எதிரொலித்தன. பர்வதங்கள், வனங்கள் எங்கும் இதே கூச்சலும், ஆரவாரமும் நிறைந்தது. ஆனால், கும்பகர்ணன் அசையவில்லை. திரும்பவும் ஆயிரம் பேரிகளை ஒரே சமயத்தில் அடித்து காதை பிளக்கும்படி சத்தம் எழச் செய்தனர். அப்படியும் அவன் எப்பொழுது நித்திரையிலிருந்து விடுபட்டு எழுந்திருக்கவில்லையோ, அவன் பெற்ற சாபத்தின் வசத்தில் தான் இப்படி இருக்கிறான் என்று புரிந்து கொண்டும், பொறுமையிழந்த ராக்ஷஸர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஒரே சமயத்தில் சிலர் பேரியை முழங்க, சிலர் கத்த, சிலர் கேசத்தை பிடித்திழுக்க, சிலர் காதைக் கடித்தும், தண்ணீர் நிறைந்த கும்பங்களைக் கொண்டு வந்து காதில் நிரப்பி, இவ்வளவு செய்தும், கும்பகர்ணன் துயில் கலையவில்லை. மற்றும் சில பலசாலிகள், கூடம், உத்கரம் இவற்றை கையில் எடுத்து, தலையில் மார்பில், உடலில் என்று அடித்து கயிறுகள் கொண்டு கட்டி இழுத்தும், சதக்னீ என்ற ஆயுதத்தைக் கொண்டு தாக்கியும், கும்பகர்ணன் அசையவில்லை. ஆயிரம் யானைகள் வந்து அவன் உடலைத் தூக்க முயன்றன. யானைகள் ஸ்பரிசம் பட்டதும், மெதுவாக கும்பகர்ணன் அசைந்தான். தன் மேல் இருந்த கணக்கற்ற கற்களையும் மரக் கிளைகளையும், பெரும் ஆயுதங்களால் அடிபட்ட உணர்வு சிறிதும் இன்றி, கீழே தள்ளி விட்டு, தாங்க முடியாத பசியுடன், எப்பொழுதும் தூங்கி எழும் பொழுது செய்யும் ஆரவாரம் கூச்சலுடன் பட்டென்று எழுந்தான். தன்னுடைய பெரிய கைகளை, நாகங்களோ, போகாசல மலைச் சிகரமோ எனும்படி இருந்த கைகளை நீட்டியும், வடவா முகம் போன்ற வாயைத் திறந்து கொட்டாவி விட்டபடி, மகா பயங்கரமாக அதிர முழக்கம் செய்தான். அவன் வாயைத் திறந்து கொட்டாவி விடும் பொழுது, பாதாளம் போல தெரிந்தது. மேரு மலையில் திவாகரன் உதித்தது போல, அதி பலசாலியான நிசாசரன், உறக்கம் தெளிந்து எழுந்து நின்றான். மலையில் இருந்து வீசும் காற்று போல அவனுடைய உள் மூச்சும், வெளி மூச்சும் அந்த சூழலையே கலக்கியது. எழுந்து நின்ற கும்பகர்ணனின் சரீரம் முழுவதுமாக காண, வெய்யில் கால முடிவில், மேகம், மின்னல்களோடு, மழை பொழிந்து கொண்டு இருப்பது போல இருந்தது. கண்கள் எரியும் நெருப்புத் துண்டம் போலவும், எரியும் கிரகங்கள் பூமியில் விழுந்து கொண்டிருப்பது போலவும், தக தகவென்றிருந்தன. எல்லோரையும் ஒரு முறை பார்த்து, எதிரில் இருந்த ஆகார வகைகளையும் நோட்டம் விட்டவன், அனைத்தையும், மிருகங்களையும், வராகங்களையும் அப்படி அப்படியே விழுங்க ஆரம்பித்தான். பசி அடங்கும் வரை மாமிசங்களைச் சாப்பிட்டு தாகம் தீரும் வரை மது வகைகளைக் குடித்து, இந்திர சத்ருவான கும்பகர்ணன் திருப்தியாகி விட்டான் என்று உணர்ந்த ராக்ஷஸ வீரர்கள், அருகில் சென்றனர். தலை குனிந்து வணங்கி, நாலாபுறமும் சூழ்ந்து நின்றன. நித்திரை கலைந்து எழுந்ததால் கண்கள் இன்னமும் தெளிவடையாமல் எல்லோரையும் ஒரு முறை பார்த்த கும்பகர்ணன், அவர்கள் பதட்டமாக இருப்பது கண்டு, சமாதானப் படுத்தினான்.
தன்னை எழுப்பியதால் ஆச்சர்யமும் வெளிப்பட, ராக்ஷஸர்களைப் பார்த்து விசாரித்தான். எதற்காக என்னை பலவந்தமாக எழுப்பினீர்கள்? ராஜா குசலமாக இருக்கிறானா? இங்கு ஆபத்து எதுவும் இல்லையே? அல்லது வெளி ஆட்களிடமிருந்து ஏதோ ஆபத்து வந்திருக்க வேண்டும். அதனால் தான் நீங்கள் இவ்வாறு அவசரமாக என்னை எழுப்பி இருக்கிறீர்கள். கவலை வேண்டாம். இன்று ராக்ஷஸ ராஜனுடைய பயத்தை கிள்ளி எறிகிறேன். மகேந்திரனேயானாலும், தள்ளி விடுவேன். நெருப்பேயானாலும் அணைத்து விடுவேன். ஏதோ அல்ப காரணத்துக்காக என் தமையன் என்னை எழுப்பச் சொல்லியிருக்க மாட்டான். அதனால் சொல்லுங்கள்? என்ன காரணம்? ஏன் என்னை கஷ்டப்பட்டு எழுப்பினீர்கள்? கும்பகர்ணன் இவ்வாறு வினவியதும், தைரியம் அடைந்த யூபாக்ஷன் என்ற மந்திரி கை கூப்பி வணங்கியபடி, விவரித்தான். நமக்கு தெய்வங்கள் மூலம் எந்த பயமும் இல்லை. வரவும் வராது. மனிதர்களிடம் தான் நமக்கு பயம். அது தான் மிகவும் வருத்துகிறது. தைத்ய தானவர்களிடமும் நமக்கு பயம் கிடையாது. இந்த மனிதர்களுக்கு முன்னால் நாம் நடுங்குவது போல வேறு எங்கும் நாம் பயத்தை உணரவேயில்லை. மலை போன்ற பெருத்த சரீரம் உடைய வானரங்கள், இந்த லங்கையை சூழ்ந்து நிற்கின்றன. சீதையை அபகரித்து வந்ததால், ராமனிடத்தில் நமக்கு பயம், ஆபத்து வந்து சேர்ந்துள்ளது. ஒரே ஒரு வானரம் வந்து இந்த லங்கை முழுவதையும் எரித்து விட்டது, குமாரன் அக்ஷன், அவனுடன் சென்ற வீரர்கள், யானைகளுடன் சேர்த்து அடித்து வீழ்த்தப்பட்டான். ராக்ஷஸராஜா, புலஸ்திய குல வீரன், தேவர்களை இது வரை ஆட்டிப் படைத்தவன், அவனையே, ஆதித்யன் போன்ற தேஜஸுடைய ராமன், போர் முனையில் போய் வா என்று அனுப்பி விட்டான். இது போல எந்த தேவர்களிடமும், தானவர்களிடமும் தைத்யர்களிடமும் இப்படி ஒரு அவமானம் நேர்ந்ததில்லை. உயிர் போகும் நிலையில், ராமன் விடுவித்து அனுப்பி விட்டான். யூபாக்ஷன் இதை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, தன் சகோதரனின் தோல்வியை கேட்கப் பொறாத கும்பகர்ணன், யூபாக்ஷனைப் பார்த்து கண்களை உருட்டி விழித்தான். யூபா எல்லா வானர சைன்யங்களையும் இன்றே ஒழித்து, ராம, லக்ஷ்மணர்களையும் இல்லையென்று ஆக்கி விட்டு வந்து நான் ராவண ராஜாவை சந்திக்கிறேன். இந்த வானர ரத்தம் கொண்டு இறந்து போன நம் ராக்ஷஸ வீரர்களுக்கு தர்ப்பணம் செய்கிறேன். ராம, லக்ஷ்மணர்களின் ரத்தத்தை நானே குடிக்கிறேன். ஆத்திரத்துடன், ரோஷத்துடன் அவன் சொன்னதைக் கேட்ட மகோதரன் என்ற படைத் தலைவன், வணக்கத்துடன் ஒரு விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.
ராவணனைப் பார்த்து, குண தோஷங்களை அலசி ஆராய்ந்த பின் கூட தாங்கள் யுத்த களத்தில் எதிரிகளை நாசம் செய்யலாம். அதுவும் சரியே என்று கும்பகர்ணன் ஏற்றுக் கொண்டு கிளம்பினான். அவனை எழுப்புவது என்ற பெரிய காரியத்தை செய்த திருப்தியோடு, ராக்ஷஸ வீரர்கள் தொடர்ந்து சென்றனர். வேகமாக நடந்து ராக்ஷஸேஸ்வரன் இருப்பிடத்தை அடைந்தனர். தசக்ரீவன், உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு, கை கூப்பி வணங்கியபடி, விஷயத்தைத் தெரிவித்தனர். ராக்ஷஸ ராஜனே, உன் சகோதரன் கும்பகர்ணனை எழுப்பி விட்டோம். இதோ இங்கு வந்து கொண்டிருக்கிறான். அவனை இங்கேயே சந்திக்க ஏற்பாடு செய்யவா? என்றும் வினவினர். அப்படியே செய்யுங்கள் என்று அனுமதி அளிக்கவும், ராக்ஷஸர்கள் ஓடி வந்து கும்பகர்ணனிடம் தெரிவித்தனர். அரசன் தங்களைக் காணத் தயாராக இருக்கிறார். உடனே சென்று அவரைக் காணலாம் என்று சொல்லி அழைத்து வந்தனர். கும்பகர்ணனும், தன் படுக்கையை விட்டு கீழே இறங்கி, முகம் கழுவி, ஸ்நானம் செய்து, ஆபரணங்கள் அணிந்து தாகத்துடன் பல விதமான பாணங்களை வரவழைத்து இரண்டாயிரம் குடங்கள் நிரம்ப குடித்து விட்டு கிளம்பினான். காலாந்தகன், யமன் போல மதம் பிடித்தவன் போல, மகிழ்ச்சியுடன் சகோதரனின் இருப்பிடம் சென்றான். கூடவே ராக்ஷஸ வீரர்கள் தொடர்ந்து வந்தனர். அவன் காலடி வைத்த இடத்தில் பூமி நடுங்கியது. ராஜ மார்கம் முழுவதும் கும்பகர்ணனின் சரீரத்தால் பிரகாசமாகியது போல இருந்தது. ஆயிரம் கிரணங்கள் கொண்ட சூரியன் தன் கிரணங்களால் பூமியை ஒளி பெறச் செய்வதைப் போல இருந்தது. அஞ்சலி செய்தபடி, ராவணன் மாளிகையில் நுழைந்தான். இந்திரன் மாளிகையில் ஸ்வயம்பூ நுழைவது போல நுழைந்தான். ராஜ மார்கத்தில் நின்ற அவனை, எதிரிகளை அழிக்கும் சக்தி வாய்ந்தவனின் பெரிய சரீரத்தைக் கண்டு வானர வீரர்கள், வெளியில் வந்து ஆச்சர்யத்துடன் பார்த்தன. பெரிய மலையையொத்த அவன் சரீரத்தைக் கண்டே நடுங்கின. சில பயந்து கீழே விழுந்தன. சில ஓடி ராமனை சரணடைந்தன. சில கிடைத்த திசையில் ஓடின. சில பூமியில் தரையோடு தரையாக படுத்தன. கிரீடம் அணிந்து, பெரிய மலையையொத்த சரீரத்துடன், தன் தேஜஸால் ஆகாயத்தை, ஆதித்யனை தொடுவது போல வானத்துக்கும், பூமிக்குமாக நின்றவனைக் கண்டு, வானரவீரர்கள், காட்டில் வசித்து பலவித ஜந்துக்களைப் பர்த்து பழகியிருந்தவர்களே, பயத்தால் நடுங்கி, இங்கும் அங்குமாக அலைந்து திரிந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கும்ப4கர்ண ப்ரபோ3தோ4 என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 61 (468) கும்ப4கர்ண வ்ருத்த கத2னம் (கும்பகர்ணனிடம் நடந்ததைச் சொல்லுதல்)
ராமரும், கிரீடம் அணிந்து, கையில் வில்லையும் ஏந்தி மகா தேஜஸுடன், பெரிய உருவமாக வந்த கும்பகர்ணனைக் கண்டார். முன்னொரு சமயம் வானத்தை அளாவி நின்ற விஷ்ணுவின் உருவம் போலத் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார். நீருண்ட மேகம் போலவும், பொன்னாலான அங்கதம் போன்ற ஆபரணங்கள் அணிந்தவனும், வளர்ந்து நின்ற ராக்ஷஸனுமான கும்பகர்ணனைப் பார்த்து வானரங்கள் திரும்பவும் ஓடின. ராமர் விபீஷணனைப் பார்த்து ஆச்சர்யத்துடன் வினவினார். இது யார்? பர்வதம் போன்று வந்து நிற்கிறான். வானரம் போன்ற கண்களுடையவன். மின்னலுடன் மேகத்தைக் காண்பது போல லங்கையில் தெரிகிறது. இவன் நேர்மையானவன். பூமியில் எழுப்பி வைத்த பெரிய கேது தண்டம், த்வஜ ஸ்தம்பம் போல நிற்கிறான். இவனைக் கண்டே வானரங்கள் செய்வதறியாது கலங்கி இங்கும் அங்குமாக ஓடுகின்றன. இவன் யார்? ராக்ஷஸ இனம் தானா? அல்லது அசுரனா? இது போன்ற உருவத்தை நான் இது வரை கண்டதில்லை. விபீஷணன் பதில் சொன்னான். இவன் தான் விஸ்ரவஸின் பிள்ளை கும்பகர்ணன். முன்னொரு சமயம் இந்திரனை ஜெயித்தான். இவனுக்கு இணையான சரீரமோ, பலமோ வேறு எந்த ராக்ஷஸனுக்கும் இல்லை. யுத்தத்தில் இவன் எதிரில் நின்று கணக்கில்லாத தே3வர்கள், தா3னவர்கள், யக்ஷர்கள், பு4ஜங்க3ங்கள், ராக்ஷஸர்கள், க3ந்த4ர்வ, வித்3யாதர , கின்னரர்கள், தோற்று ஆயிரக் கணக்கில் அழிந்திருக்கின்றனர். சூலம் ஏந்தியவனாக, விரூபாக்ஷனாக, இந்த கும்பகர்ணனின் பலத்தைப் பர்ர்த்து இவன் காலனே தான் என்று மோகம் அடைந்த மூவுலகத்து வீரர்களும், இவனைக் கொல்ல முடியாமல் தோற்று ஓடினர். இயற்கையிலேயே வீரன். மற்ற ராக்ஷஸ ராஜாக்களுக்கு பலம் வரதானம் மூலம் கிடைத்தது. பிறந்த உடனேயே பசியால் வருந்தியவனாக ஆயிரக் கணக்கான ஜீவ ஜந்துக்களை விழுங்கி விட்டான். இப்படி இவன் கிடைத்ததையெல்லாம் வாயில் போட ஆரம்பித்ததும், ஜனங்கள் நடுங்கினர். இந்திரனை சரணடைந்தார்கள். வஜ்ரத்தை ஆயுதமாக உடைய இந்திரன் தன் வஜ்ரத்தால் கும்பகர்ணனை அடித்து விட்டான். வஜ்ரத்தின் அடியைத் தாங்க மாட்டாமல், கும்பகர்ணன் பலமாக அலறி விட்டான். அந்த அலறலில் பூமி ஆடியது. தன்னை அடித்த வாஸவனை கும்பகர்ணன், கோபத்துடன் ஐராவதத்தின் தந்தத்தையே பிடுங்கி ஒரு குத்து விட்டான். இந்த அடியைத் தாங்க மாட்டாமல் இந்திரன் வெல வெலத்துப் போனான். இதன் பின் தேவ, ப்ரும்ம, ரிஷி, தானவர்கள் இவனால் பெரிதும் துன்புறுத்தப் பட்டனர். தன் பிரஜைகளுடன் இந்திரன் ஸ்வயம்பூவைச் சரணடைந்தான். கும்பகர்ணன். துன்புறுத்துவதை அவரிடம் தெரிவித்தார்கள். பிரஜைகளை விழுங்குவதையும், தேவர்களை ஒடுக்குவதையும் சொன்னார்கள். ஆசிரமங்களை இடையூறு செய்து அழிப்பதையும், பிறன் மனைவிகளை அபகரிப்பதையும் விவரித்தனர். இப்படி இவன் பிரஜைகளை விழுங்குவதை தொடர்ந்து செய்தால். சில நாட்களில் உலகில் எதுவுமே இல்லாமல் பூமியே சூன்யமாகி விடும். சர்வ லோக பிதாமகரான ப்ரும்மா ராக்ஷஸர்களை வரவழைத்து கும்பகர்ணனை கண்டார். கும்ப கர்ணனைக் கண்ட ப்ரும்மா ப்ரஜாபதியும் ஆடிப் போய் விட்டார். சமாளித்துக் கொண்டு, புலஸ்திய குலத்தில் பிறந்தவனேஸ்ரீ நீ உலகை அழிக்கவே பிறந்தவன் என்று தோன்றுகிறது. நிச்சயம் அது தான் நடக்கப் போகிறது. அதனால் இன்று முதல் நீ இறந்தவன் போல தூங்குவாய். ப்ரும்ம சாபத்தால் அந்த நிமிஷமே அவர் முன் வேரருந்த மரமாகச் சாய்ந்தான்.
(கும்பகர்ணனுக்கு ப்ரஜாபதி வரம் கொடுக்கும் முன், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, சரஸ்வதி தேவி, அவன் நாக்கில் இருந்து தேவ தேவனேஸ்ரீ பல வருஷ காலம் தூங்க விரும்புகிறேன். என்று வேண்டியதாகவும், அப்படியே ஆகட்டும் என்று ப்ரும்மா வரம் தந்ததாகவும், உத்தர காண்டத்தின் பத்தாவது அத்தியாயத்தில் சொல்லப் பட்டுள்ளது).
இதனால் பரபரப்படைந்த ராவணன் ப்ரும்மாவிடம் சென்றான். பொன் விளையும் மரத்தை வளர்த்து, விளைந்து பலன் தரும் காலத்தில் வெட்டிச் சாய்த்தது போல இருக்கிறது. ப்ரஜாபதே தன் பேரனை இவ்வாறு சபித்தது என்ன நியாயம்? உங்கள் வாக்கும் பொய்யாகாது. இவன் கண்டிப்பாக தூங்கத்தான் போகிறான். ஒரு கால வரையறை கொடுங்கள். இவன் தூங்கவும், விழித்திருக்கவும் கால அளவு கொடுங்கள். ராவணன் சொன்னதைக் கேட்டு ஸ்வயம்பூ ப்ரும்மா சொன்னார். இவன் ஆறு மாதம் தூங்கி, ஒரு நாள் விழித்திருப்பான். அந்த ஒரு நாளில் பூமியில் சஞ்சரித்து பசியுடன், வாய் திறந்தபடி, நெருப்பு விழுங்குவது போல உலகில் உள்ள ஜீவ ஜந்துக்களை விழுங்குவான். அக்னி கோபம் கொண்டது போல தகிப்பான். ராவண ராஜா, தற்சமயம் சங்கடத்தில் இருப்பதால், கும்பகர்ணனை எழுப்பி இருக்கிறான். ராமா, உங்கள் பராக்ரமத்தையறிந்து ராவணன் பயந்து விட்டான். இதோ, பாருங்கள், வீரர்கள் தங்கும் பாசறையிலிருந்து வந்தவன், வானரங்களை மிகுந்த கோபத்துடன் விரட்டிக் கொண்டு, கையில் அகப்பட்டதை விழுங்கிக் கொண்டு ஓடி வருகிறான். இவனை எதிரில் கண்டே வானரங்கள் அலறுகின்றன. எதிரில் நின்று போர் செய்வதாவது. அவர்களைப் பார்த்து, இது ஒரு யந்திரம் போலத் தான், பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள். விபீஷணன் விவரித்ததைக் கேட்டு ராமரும், சேனாபதியான நீலனை அழைத்து, சைன்யங்களை அழைத்து வியூஹம் அமைத்து நின்று கொள்ளுங்கள். வாசல்களில், மாளிகைகளில் முற்றுகையை தொடர்ந்து கற்களையும், மரக் கிளைகளையும், பாறைகளையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா வானரங்களும் ஆயுத பாணிகளாகவே நிற்கட்டும். ராமரின் கட்டளையை ஏற்று, நீலன் அதை அப்படியே நிறைவேற்றச் சென்றான். பின் க3வாக்ஷன், சரப4ன், ஹனுமான், அங்க3த3ன் முதலானோர், தங்கள் மலை போன்ற சரீரத்துக்கு சமமான பெரிய மலையில் கிடந்த கற்களைத் தூக்கிக் கொண்டு கோட்டை வாசலை நெருங்கினர். ராமரின் வார்த்தையால், மனோ பலம் பெற்றவர்களாக, கால்களால் பூமி அதிர நடந்து கூட்டமாகச் சென்றனர். இந்த வானரங்களின் சேனை, உக்ரமாக முன்னேறி சமுத்திரம் போல லங்கையை நோக்கிச் சென்றது. அனைவரும் கைகளில், பாறையோ, மரக்கிளையோ தற்காப்புக்காக வைத்துக் கொண்டிருந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கும்ப4கர்ண வ்ருத்த கத2னம் என்ற அறுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 62 (469) ராவணாப்4யர்த்தனா (ராவணனின் வேண்டுகோள்)
ராஜ சார்தூலம் போன்ற கம்பீரமான கும்பகர்ணனும், தூக்கம் கலையாமலேயே, லக்ஷ்மீகரமாக விளங்கிய ராஜ மார்கத்தில், தன் கம்பீரமும் விக்ரமும் வெளிப்பட நின்றான். பல ராக்ஷஸர்கள் அவனைச் சூழ்ந்து உடன் வந்தனர். வீடுகளிலிருந்து புஷ்பமாரி பொழிந்து பிரஜைகள் வாழ்த்து தெரிவிக்க, நடந்து சென்றான். ராக்ஷஸேந்திரனின் மாளிகை, பொன் வேய்ந்த ஜன்னல்களும், சூரியனின் ஒளி போல பிரகாசமாக உயர்ந்து நின்ற அழகிய கட்டிடம், வானத்தில் சூரியனுடன் முட்டுவது போல நின்ற அந்த ராக்ஷஸாதிபதியின் மாளிகையின் உள்ளே நுழைந்தான். வெகு தூரத்திலிருந்தே தன் தமையன் ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டான். ஸ்வயம்பூ, இந்திரனுடைய சபையில் நுழைவது போல அந்த மாளிகையின் உள்ளே நுழைந்தான். பூமி அதிர தன் கால்களால் வேகமாக நடந்து வந்த கும்பகர்ணன், ராக்ஷஸ கணங்கள் சூழ தமையனின் மாளிகையில் நுழைந்தான். ஒவ்வொரு அறையாக கடந்து சென்று தமையனின் வீட்டில் புஷ்பக விமானத்தில் மனம் வாடி அமர்ந்திருக்கும் குருவான (பெரியவனான) சகோதரனைக் கண்டான். கும்பகர்ணன் வந்து விட்டதைக் கண்டு மகிழ்ச்சியுடன் ராவணன் எழுந்து வந்து சகோதரனை வரவேற்று, அருகில் அமர்த்திக் கொண்டான். கும்பகர்ணன், தமையனின் காலில் விழுந்து வணங்கி விட்டு என்ன நடந்தது என்றும் வினவினான். ராவணன், வணங்கிய கும்பகர்ணனை தூக்கி அணைத்துக் கொண்டான். சகோதரன் அணைத்து தன்னிடம் காட்டிய அன்பை உணர்ந்து, கும்பகர்ணன், ஆசனத்தில் அவனருகில் அமர்ந்தான். பின், கண்கள் சிவக்க ராஜன், என்னை ஏன் கட்டாயமாக எழுப்பினீர்கள்? சொல்லுங்கள். யாரிடம் உங்களுக்கு பயம்? யார் இன்று உயிரிழந்து சடலமாக ஆகப் போகிறான். இப்படி கோபத்துடன் பேசும் சகோதரனைப் பார்த்து ராவணன் சற்று கண்கள் விரிய பதில் சொன்னான். மகா பலசாலியே, இன்று உன் வாழ்வில் முக்யமான நாள். தூங்கிக் கொண்டு சுகமாகவே இருந்து விட்ட நீ, ராமனால் எனக்கு எற்பட்டுள்ள ஆபத்தை அறிய மாட்டாய். இதோ இந்த தசரத ராமன், சுக்ரீவனுடன் சேர்ந்து கொண்டு, தன் படையுடன் சமுத்திரத்தைக் கடந்து வந்து, நம் படையை நெருக்குகிறான். கஷ்டகாலம். இந்த லங்கையின் வனங்களையும், உப வனங்களையும் பார். ஸேதுவின் மூலம் சுலபமாக வந்து இந்த வானரங்கள், மற்றொரு சமுத்திரம் போல லங்கையை சூழ்ந்து கொண்டு விட்டனர். ராக்ஷஸர்களில் முக்யமாக சொல்லக் கூடிய பலரை அழித்து விட்டனர். இவ்வளவு யுத்தம் நடந்து வானர சைன்யத்தில் சற்று கூட குறைந்ததாகவே தெரியவில்லை. இதற்கு முன்பும் நாம் வாரனர்களை வெற்றி கொண்டதில்லை. மகா பலசாலியே, இப்படி ஒரு ஆபத்து சூழ்ந்து நிற்கிறது. காப்பாற்று. இவர்களை இன்று ஒழித்துக் கட்டு. அது தான் காரணம் இன்று உன்னை எழுப்பச் செய்தேன். இதனால் பொக்கிஷமும் பெருமளவு குறைந்து விட்டது. இந்த லங்கையை காப்பாற்று. இதில் இப்பொழுது இருப்பதெல்லாம் பாலர்களும், வயது முதிர்ந்தவர்களுமே. உன் சகோதரனுக்காக, மகா பாஹோ, மிகக் கடினமான இந்த செயலை செய். இது வரை நான் இது போல எதுவுமே உன்னிடம் பேசியதில்லை. உன்னிடத்தில் எனக்கு நல்ல மதிப்பும், அன்பும் உண்டு. தேவாசுர யுத்தங்களில், பலமுறை ராக்ஷஸ வீரனேஸ்ரீ அணி வகுத்து நின்று, படையுடன் தேவர்களை ஜயித்திருக்கிறாய். அசுரர்களும் ஜயிக்கப் பட்டுள்ளனர். பீம பராக்ரமனே (பயங்கரமான ஆற்றல் படைத்தவனே) இவையனைத்தையும் திரும்ப செய். எல்லா ஜீவ ஜந்துக்களிடமும் உனக்கு சமமாக எவருமே இருந்ததில்லை. எனக்கு பிரியமானதும், ஹிதமானதுமான இந்த காரியத்தைச் செய். உத்தமமான செயல் இது. ரணத்தில் பிரியமானவனே, போரை விரும்புவனே, பந்துக்களிடம் பாசம் உடையவன் நீ. உன் தேஜஸால் கூட்டத்தோடு இந்த எதிரிகள் படையை த்வம்சம் செய். சரத் காலத்தில் காற்று உபவனத்தில் நாசம் விளைவிப்பது போல இந்த எதிரிகளின் படையில் நாசம் ஏற்படச் செய்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணாப்யர்த்தனா என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 63 (470) கும்பகர்ணானுசோக: (கும்பகர்ணனின் வருத்தம்)
ராக்ஷஸ ராஜா, அவன் இயல்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல், வருந்தி புலம்புவதைக் கேட்டு, கும்பகர்ணன் பலமாக சிரித்தான். பதில் சொன்னான். முன்பு நாம் மந்த்ராலோசனை செய்த பொழுது, எதை குற்றம், தோஷம் என்று விவாதித்தோமோ, அது தான் இப்பொழுது உன் முன் வந்து நிற்கிறது. உன் ஹிதத்தில் நாட்டம் உள்ள எல்லோரும் சொன்னோம். உன் பாப காரியத்தின் பலன் சீக்கிரமே வந்து விட்டது போலும். தவறான செயலை செய்பவர்கள், மலைச் சரிவில் கால் பாவாமல் விழுவது போல, மகாராஜனே, முதலில் யோசிக்காமல் இந்த காரியத்தைச் செய்தாய். உன் வீர்யத்தில் கர்வம் கொண்டு பின் விளைவுகளை யோசிக்கவில்லை. ஐஸ்வர்யம் உள்ளவன், முன் செய்ய வேண்டியதை பின்னாலும், பின்னால் செய்ய வேண்டியதை முன்னாலும் செய்தால், அவனை விவரம் அறிந்தவனாக, நல்லது கெட்டதை தெரிந்தவனாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. விபரீதமாக, தேச காலத்துக்கு பொருந்தாத, தன் செயல்களால் தாங்களே வருந்துவார்கள். ஹவிஸ், புலன்களை அடக்கி நியமத்துடன் இல்லாதவர்களுக்கு கொடுப்பது வீண் என்று சொல்வது போல, தன் செயல்களில் மூன்று விதமான, குறைவு, நிறைவு, சமமான நிலை என்ற சூழ் நிலைகளிலும், ஐந்து வித யோகங்கள் (செயலை ஆரம்பிக்கும் உபாயம், மனித, பொருள் சம்பத்துக்கள், சக்திகள், தேச கால விபாகங்கள், வரக் கூடிய ஆபத்துக்கள், கார்ய சித்தி என்பவை) இவற்றை ஆராய்ந்து, மந்திரிகள் யோசித்து சொல்ல அவகாசம் அளித்து, சபையின் கருத்தைக் கேட்டு நடப்பவன் ராஜா. எந்த அரசன், தன் வரவை உணர்ந்து, காலம் அறிந்து தன் மந்திரிகளையும் தட்டி எழுப்பி, புத்தி மதியாலும், நட்புணர்வோடும், நெருங்கியவனாக, தர்மம், அர்த்தம், காமம் இவற்றையும் குறைவின்றி அனுபவிக்கிறானோ, அந்த அரசன் தான் இரட்டை இரட்டையாக சொல்லப் படும் மூன்று நலன்களைப் பெறுகிறான். இந்த மூன்றிலும் எது உயர்ந்தது என்று உனக்குத் தெரிந்திருந்தும் ஏன் கவனமாக இல்லை. ராஜவாக இருந்தாலும், அவனைச் சேர்ந்தவர்களும், நிறைய கற்றறிந்தவர்களாக இருந்தும் என்ன பயன்? நிறைய தானம் செய்தல், சமாதானம், பேதம், காலத்தில் தன் ஆற்றலைக் காட்டுதல், யோகம் இவை தவிர (நயானயம்) நியாயம், அநியாயங்கள், சரியான காலத்தில் மந்திரிகளுடன் கலந்தாலோசித்து தர்மார்த்த காமங்களை உணர்ந்து அனுபவிப்பவன் வாழ்க்கையில் இது போல கஷ்டங்கள் வரவே வராது. அது போல உள்ளவனே ஆத்மவான். சுய கௌரவம் உடையவன். மந்திரிகளுடன், விஷயம் அறிந்தவர்களிடம் கலந்து ஆலோசித்து, ஒரு செயலில் நன்மை, தீமைகள், பின் விளைவுகள் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடஎது என்று முன் கூட்டியே தெரிந்து கொண்டு செய்பவன், என்றும் வாழ்கிறான். சாஸ்திர அர்த்தங்களை தெரிந்து கொள்ளாமல் மனிதர்கள், பசுக்கள் போல் புத்தியுடன், வெட்டிப் பேச்சாக, என்றும் பேசும் ஆவலுடன் மட்டும் மந்த்ராலோசனைகளில் பேசுகிறார்களே, விவரம், சாஸ்திரம் அறியாத இவர்கள் பேச்சைக் கேட்டு, பயனற்ற இவர்கள் சொல்லை மதித்து எதுவுமே செய்யக் கூடாது. நிறைய பொருளை விரும்பும் இவர்களின் பேச்சு, ஹிதம் நன்மை போலத் தோற்றம் தரும். இவர்கள் அர்த்த சாஸ்திரம் அறியாதவர்களாக இருந்தால், தங்கள் அறியாமையை மறைக்க அடித்து பேசுவார்கள். தீமை என்பதையே உணராமல் இவர்கள் வாக்கு வன்மையால் மயக்கும் விதமாக பேசுகிறார்களே, இவர்களை அடையாளம் கண்டு கொண்டு, முதலில் மந்த்ராலோசனை சபையிலிருந்து நீக்கி விட வேண்டும். இவர்களால் காரியம் கெடுவது தான் அதிகமாக இருக்கும். இவர்கள் சமயங்களில் சத்ருக்களுடன் சேர்ந்து கொண்டு, தன் யஜமானனை கவிழ்க்கவும் செய்வார்கள். இவர்கள் புத்திமான்களாக இருந்து விட்டாலோ, கேட்கவே வேண்டாம். விபரீதமான காரியங்களை செய்து விடுவார்கள். அரசன், இது போன்ற நண்பன் அல்லாத, நண்பன் போல தோற்றம் அளிக்கும் நபர்களை இனம் கண்டு கொள்ள வேண்டியது மிக அவசியம். கூடியிருக்கும் மந்திரி சபையில் இவர்களது செயல், நடவடிக்கைகளே காட்டிக் கொடுத்து விடும். உடனே மந்திரி சபையிலிருந்து வெளியேற்றி விடுவதே அரசனுக்கு நன்மை பயக்கும் செயலாகும். திடுமென ஒரு செயலை அவசரமாக செய்வார்கள். சபலமான செயல்களை உடையவர்கள், க்ரௌஞ்ச மலையின் இடைவெளியைத் தெரிந்து கொண்டு பறவைகள் வசிப்பது போல (க்ரௌஞ்ச மலை ஸ்கந்தனால் பிளக்கப் பட்டது. இதில் பறவைகள் அதுவரை கூடு கட்ட இயலவில்லை) அது போல சட்டத்தின் ஓட்டைகளைத் தெரிந்து கொண்டு உள்ளே நுழைந்து கெடுதல் விளைவிப்பது அல்லது தன் காரியத்தை சாதித்துக் கொள்வது போன்ற செயல்கள், இவை காட்டிக் கொடுத்து விடும். இந்த உடன் இருந்து குழி பறிக்கும் சத்ருக்களை தெரிந்து கொள்ளாதவன், அனர்த்தங்களையே அடைவான். தன் நிலையிலிருந்து தள்ளப் படுவான். இவையனைத்தையும் முன்னமே உனக்குச் சொன்னேன். சகோதரனே, எது நன்மை தரக் கூடியதோ அதை செய்வோம். யோசித்து நீ என்ன விரும்புகிறாயோ, அதையே செய்வோம்.
கும்பகர்ணன் பேசியதைக் கேட்டு தசக்ரீவன் புருவத்தை நெரித்து, கோபத்துடன் பதில் சொன்னான். மதிப்புக்குரிய குருவாக உன்னை நினைத்துக் கொண்டு ஆசாரிய ஸ்தானத்தில் நிறுத்திக் கொண்டு எனக்கு உபதேசம் செய்கிறாயா? எதற்கு இவ்வளவு வார்த்தைகளை வீணாக்குகிறாய்? இப்பொழுது நடக்கவேண்டியதை பார்ப்போம். பிரமையினாலோ, புத்தி தடுமாற்றத்தினாலோ, பலம், ஆற்றல் இவற்றில் கொண்ட நம்பிக்கையாலோ, செய்து விட்டதை திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறோம். வீண் க3தை4 பேசுவதாகத் தான் முடியும். புதிதாக எதையும் நீ சொல்லவில்லையே. இந்த சமயம் நாம் செய்ய வேண்டியது என்ன என்று யோசிப்போம். போனது போனதே. அதை நினைத்து வருந்தி என்ன ஆகப் போகிறது? என்னுடைய நியாயமற்ற இந்த செயலை, கவனக் குறைவால் நான் செய்த தவற்றை, உன் பலத்தால், ஆற்றலால் சமனாக்கு. என்னிடத்து ஸ்னேகம் இருந்தாலோ, உன் ஆற்றலில் நம்பிக்கை இருந்தாலோ, இதைச் செய். மனதில் அன்புடையவனாக இருந்தால் இதைச் செய். தீனனாக, பொருள் இழந்து கஷ்டத்தில் இருக்கும் உறவினனிடம் எவன் உதவி செய்கிறானோ, நம்பிக்கைத் தரும் தூதனாக நிற்கிறானோ, அவன் தான் உறவு, சுற்றத்தான். இவ்வாறு கடுமையாக பேசும் ராவணனிடம், இவன் கோபத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டு, கும்பகர்ணன் கவனமாக பதில் சொன்னான். தன் புலன்களின் வழி சென்று இப்பொழுது மிக மோசமான நிலையில் இருக்கும் அண்ணனை, பரிதாபத்துடன் உன்னித்துப் பார்த்து சமாதானமாக பேச ஆரம்பித்தான். கும்பகர்ணன் மெதுவாக பேசினான்.
ராக்ஷஸேந்திரா, போதும். கவலைப் படாதே. கோபத்தை விலக்கி விட்டு நிம்மதியாக இரு. நான் உயிருடன் இருக்கும் வரை நீ எதற்கும் கலங்க வேண்டாம். யாரை நினைத்து நீ தவிக்கிறாயோ, அவனை நான் இன்றே நாசம் செய்கிறேன். நீ எந்த நிலையில் இருந்தாலும் நான் உனக்கு நன்மையைத் தான் செய்வேன். உடன்பிறந்தவன் என்ற உரிமையுடன், இது வரை எனக்குத் தோன்றியதை எல்லாம் சொன்னேன். உன்னிடம் அன்புள்ளவன் ஆதலால், இது போன்ற சமயங்களில் யாரானாலும் சொல்லக் கூடியதைத் தான் சொன்னேன். நெருங்கிய பந்துவாக செய்ய வேண்டியதை, ரண பூமியில் நிச்சயம் செய்வேன். இன்று யுத்த களத்தில் தலைமையில் நான் செல்வதையும், நான் போரிடுவதையும் பார். ஹரிவாஹிணி, வானர சேனை பயந்து ஓடுவதைக் காணப் போகிறாய். ராமனும் சகோதரன் லக்ஷ்மணனும் போரில் மடிந்து விழுந்தபின் இவர்கள் என்ன செய்வார்கள். யுத்த பூமியிலிருந்து சீதையின் முன்னால் நான் ராமனது துண்டித்த தலையைக் கொண்டு வந்து வைப்பேன். நீ சந்தோஷமாக இரு, அண்ணா. இதைக் கண்டு சீதை துக்கத்தை அடையட்டும். யார் யாருடைய சொந்த ப3ந்த4ங்கள் இந்த யுத்தத்தில் வருந்துகிறார்களோ, அந்த ராக்ஷஸர்கள் இன்று நான் சமர பூமியில் வதைக்கப் போகும் ராமனைப் பார்த்து மன ஆறுதல் அடையட்டும். இவர்கள் கண்ணீரை இன்று நான் துடைப்பேன். உறவினர்களை இழந்து சோக சாகரத்தில் மூழ்கி இருக்கும் உறவினர்கள் முகம் மலரச் செய்வேன். சூரியனும் பிரகாசமாக இருக்க, மலையளவு பெரிய மேகம் போன்று சஞ்சரிக்கும் சுக்ரீவன் என்ற வானரத் தலைவனை தூள் தூளாக சிதறச் செய்கிறேன். ராகவனான, தாசரதியைக் கொல்லத் துடிக்கும் என் போன்ற ராக்ஷஸ வீரர்கள் உன்னை பாதுகாக்க இருக்கும் பொழுது நீ ஏன் வருந்துகிறாய்? என்னைக் கொன்று விட்டுத் தான் (அல்லது) கொன்றால் தான், ராமன் உன்னிடம் வருவான், வர முடியும். ராக்ஷஸாதிபா, அதனால் மனதில் கவலைக்கு இடமே கொடாதே. இப்போழுது கூட எனக்கு கட்டளையிடு, பரந்தபனே, இன்று வேறு யாரையும் யுத்த பூமிக்கு அனுப்ப வேண்டாம். உன் சத்ருக்களை நான் ஒருவனே கலக்கி விடுவேன். இந்திரனேயானாலும், யமனோ, அக்னி, மாருதன் இருவரும் சேர்ந்து வந்தாலோ, குபேர, வருணர்களானாலும், நான் அவர்களை ஒரு கை பார்த்து விட்டு வருவேன். கிரி போன்ற என் சரீரமும், என் கை சூலமும், கூர்மையான பற்களையும் பார்த்து, யுத்த பூமியில் இந்திரனே இருந்தாலும் நடுங்குவான். சந்தேகமேயில்லை. என் கையில் ஆயுதம் இன்றி, மண்ணில் வேகமாக நடக்கும் பொழுது உயிர் வாழ ஆசைப்படும் எவன் தான் எனக்கு முன் வருவான்? இந்த சக்தியோ, க3தை4யோ, அம்புகளோ எதுவுமே எனக்குத் தேவையில்லை. என் கைகளாலேயே அந்த இந்திரனையும் வதைத்து விடுவேன். என் முஷ்டியின் அடியை அந்த ராகவன் தாங்குவானோ, இல்லையோ, அப்படி முஷ்டியை எதிர்த்து நின்றால், என் அம்புகள் அவன் ரத்தத்தைக் குடிக்கும். ராஜன், நான் இருக்கும் பொழுது ஏன் கவலைப் படுகிறாய்? அவஸ்தை படுகிறாய்? சத்ருக்களை அழிக்க இதோ நான் கிளம்பி விட்டேன். ராமனிடத்தில் கொண்டுள்ள பயத்தை விடு ராஜன், இதோ நான் யுத்தத்தில் அவனைக் கொன்று வருவேன். ராம, லக்ஷ்மணர்களையும், சுக்ரீவனையும், மகா பலசாலியான ஹனுமானையும், இந்த லங்கையை எரித்தவன் அவன் தானே, அவனையும் மற்ற வானரங்களையும் யுத்த பூமியில் திரியும் யாராக இருந்தாலும், கொன்று விடுகிறேன். அசாதாரணமான கீர்த்தியை உனக்கு அளிக்க விரும்புகிறேன். ராஜன், உனக்கு யாரிடம் பயம்? இந்திரனிடமா? ஸ்வயம்பூவான ப்ரும்மாவிடமா? நான் கோபத்துடன் யுத்த பூமியில் நிற்கும் பொழுது இந்த தேவர்கள் கூட்டம் நிம்மதியாக படுத்து தூங்கி விடுவார்களா என்ன? யமனையும் அடக்கி விடுவேன். நெருப்பை விழுங்கி விடுவேன். சூரியனையே கீழே விழச் செய்வேன். நக்ஷத்திரங்களுடன் பூமியில் விழுந்து கிடப்பதைக் காண்பாய். இந்திரனை வதைப்பேன். வருணாலயம் எனும் சமுத்திரத்தைக் குடித்து தீர்த்து விடுவேன். பர்வதங்களை பொடிப் பொடியாக்குவேன். பூமியை கிழித்து விடுவேன். இன்று வெகு காலமாக உறங்கிக் கொண்டிருந்த கும்பகர்ணனின் ஆற்றலை உலகத்தார் காணட்டும். இந்த மூன்று உலகும் என் ஆகாரத்திற்குப் போதாது என்பது தெரிந்தது தானே. தாசரதியை வதம் செய்து நீ சுக போகத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவன், வீணாக கவலையில் மூழ்கியுள்ள உன்னை பழையபடி குதூகலமாக்க, நான் போகிறேன். ராமனையும், அவன் தம்பி லக்ஷ்மணனையும் சேர்த்து போரில் வீழ்த்தி வானர படைத் தலைவர்களை சாப்பிட்டு விடுகிறேன். நீ மகிழ்ச்சியாக ரமித்துக் கொண்டு இரு. வேண்டிய அளவு அக்ர்ய வாருணீ- ஒரு வகை மது குடித்து மகிழ்வாய். எதைச் செய்ய விரும்புகிறாயோ, செய். இந்த ஜ்வரம், பயம் உன்னை விட்டு விலகட்டும். என்னால் இன்று ராமன் யம லோகத்துக்கு அனுப்பப் பட்ட பின், வெகு காலத்திற்கு சீதா உன் வசத்திலேயே இருப்பாள், கவலைப் படாதே.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கும்ப4கர்ணானுசோகோ என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 64 (471) சீதா ப்ரலோப4னோபாய:(சீதையை ஆசை காட்டி இணங்கச் செய்ய உபாயம் செய்தல்)
பெரிய உடல் கொண்ட கும்பகர்ணன் சொன்னதைக் கேட்டு, மகோதரன் பதில் சொன்னான். கும்பகர்ணா, நீ நல்ல குலத்தில் பிறந்தவன். சுய கௌரவமும், பிடிவாதமும் உடையவன். ஆனால் நீ நிலைமையை சரியாக உணர்ந்து கொள்ளாமல், பழைய நினைவில் இருக்கிறாய். இது வரை நடந்ததும், உனக்கு முழுதும் தெரியாது. கும்பகர்ணா, அரசனுக்கு நியாய, அநியாயங்கள் தெரியவில்லை. நீ குழந்தையாக இருந்ததிலிருந்தே நினைத்ததை சாதிப்பாய். அதே போல வெட்டிப் பேச்சு பேசுகிறாய். இடம், புத்தி, இதுவரை ஏற்பட்டுள்ள நஷ்டங்கள், தேச காலங்கள் பற்றிய அறிவு இவையனைத்தும் உள்ள நம் அரசனே, தனக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை வரவழைத்துக் கொண்டிருக்கிறான். ப்ராக்ருத புத்தியுடைய சாதாரண ஜனங்கள் போல, பெரியவர்களை வணங்காத ஒருவனால் செய்யப் படும் காரியத்தை பலமும், நல்ல புத்தியும் உடைய எவனாவது செய்வானா? தர்ம, அர்த்த, காமங்கள் இவற்றை நீ விவரித்தாயே, அதை பிரித்து அறிந்து கொள்ளவும், உன் ஸ்வபாவத்தில் இடம் இல்லை. அவரவர் கர்ம பலன் தான் விரும்பிச் செய்யும் காரியங்களில் வெளிப்படுகிறது. பாபத்தை செய்பவன் நன்மை அடைவதும், அவன் முன் செய்த வினைப்பயனே. தர்மமோ, அர்த்தமோ, மற்றவையோ எதுவுமே நன்மை தருவதாக இல்லை. அத4ர்ம, அனர்த்தம் இவை, எதிர்க் காற்றுப் போல நம்மைத் தள்ளிவிடுகிறது. இவ்வுலக, பரலோக பலன்களை அவன் கர்மமே நிர்ணயிக்கிறது. கர்மம் ஒன்றையே ஆசிரயித்தவன், அதன் பலனைத்தான் அடைவான். இவையனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு செயலில் இறங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சத்ருவின் பலத்தையும் நாம் அறிந்து கொண்டுள்ளோம். இதில் மறைக்க என்ன இருக்கிறது? இந்த யுத்தத்திற்கு காரணம் என்ன என்பதும் தங்களுக்குத் தெரிந்ததே. இருந்தும் தவறான அந்த செயலையும் நாம் சற்றும், எதிர்பாராமல் நடந்ததையும் சொல்கிறேன், கேள். நம்ப முடியாத அந்த நிகழ்ச்சியைக் கேள். ஜனஸ்தானத்தில் ஒருவனாக, ராக்ஷஸர்களை அழித்தான். அங்குள்ள ராக்ஷஸர்கள் இன்னமும் கண்களில் பயம் வெளிப்படையாகத் தெரிய நடமாடுகிறார்கள். தூங்கும் சிங்கம் போன்ற தசரதாத்மஜனான ராமனை, எழுப்ப பார்க்கிறாய். சாக்ஷாத் காலனே போல தாங்க முடியாத ஜ்வலிக்கும் ராமனை, அதுவும் கோபத்துடன் யுத்த முனையில் யாரால் தான் எதிர் கொண்டு நிற்க முடியும்? இந்த எதிரியின் முன் தனியாக போவது எனக்கு சம்மதமாக இல்லை. இந்த சத்ருவை அடக்குவதும், தாக்குவதும் சந்தேகம் தான். த4னம் நிறைந்தவனை, செல்வமே இல்லாத ஒரு ஏழை தனக்கு எதிரியாக நினைப்பது போல இருக்கிறது. இதில் முனைந்து இன்னமும் செயலில் இறங்கினால் உயிரைத் தியாகம் செய்ய முனைவது போலத்தான். சந்தேகமேயில்லை. ராக்ஷஸோத்தமா, மனிதர்களில் இவனுக்கு சமமானவன் இல்லை. இந்திர, வைவஸ்வதர்கள் சேர்ந்து ஒருவனாக வந்தது போல வந்து நிற்கிறான். இவனுடன் மோத எப்படி தயாராகிறாய்? வெற்றியடைவோம் என்று எப்படி எண்ணுகிறாய்? இவ்வாறு கும்பகர்ணனுக்கு எடுத்துச் சொல்லி விட்டு, மகோதரன், சபையில் மற்ற ராக்ஷஸ வீரர்களுக்கு மத்தியில் ராவணனைப் பார்த்துச் சொன்னான். ராக்ஷஸேஸ்வரா, கேள். சீதை உன் வசம் ஆவாள் என்று எப்படி எதிர் பார்க்கிறாய்? அப்படியும் சீதையை அடைந்து தான் என்ன பயன்? வீணாக வெறும் வாய்ச் சொற்களால் என்ன கிடைக்கப் போகிறது. நான் ஒரு வழி சொல்கிறேன். உனக்கு சம்மதமானால் ஏற்றுக் கொள். நான், த்விஜிஹ்வன், ஸம்ஹராதி, கும்பகர்ணன், விதர்தனன் நால்வருமாக சேர்ந்து ராகவனைத் தாக்குகிறோம் என்று அறிவித்து விடு. நாங்கள் சென்று, ராமனுடன் போர் தொடுக்கிறோம்.. ஜெயித்து விட்டால் நான் சொல்லப் போகும் உபாயம் எதுவும் தேவையில்லை. நம் சத்ரு உயிருடன் இருந்தால், அப்பொழுது இந்த உபாயத்தைக் கொண்டு உன் விருப்பம் நிறைவேறச் செய்வோம். நாங்கள் யுத்த களத்திலிருந்து நேரே வருவோம். உடல் பூரா ரத்தம் பெருகி ஓட, எங்கள் உடலில் நாங்களாகவே, ராம நாமம் பொறித்த பாணங்களால் குத்திக் கொண்டு, கூர்மையான அந்த பாணங்கள் ராம லக்ஷ்மணர்களோடு சண்டையிட்ட பொழுது உடலில் தைத்ததாகவும் வேறு வழியின்றி ராம லக்ஷ்மணர்களை நாங்கள் விழுங்கி விட்டோம் என்றும் சொல்லியபடி உன் காலில் விழுவோம். தாங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறுவோம். பிறகு, அரசனே, ஊரில் கஜஸ்கந்தனை விட்டு முறை அறைந்து அறிவித்து விடு. ராமன் கொல்லப் பட்டான். லக்ஷ்மணனும் உடன் மடிந்தான். சைன்யம் முழுவதும் நம் வீரர்கள் வசம் ஆகி விட்டன, என்று ஊரெங்கும் முரசு ஒலிக்கச் சொல்லச் செய். மிகவும் மகிழ்ந்தவன் போல உன் வேலையாட்களுக்கும், அவர்கள் பரிவாரங்களுக்கும் நிறைய செல்வமும், பரிசும் பொருட்களும் கிடைக்கச் செய். எல்லோருக்கும் மாலைகளும், நல்ல வஸ்திரங்களும், வீரர்களுக்கு உரிய அங்க ராகங்கள், நல்ல மது வகைகள், வீரர்களுக்கு தர ஏற்பாடு செய். நீயும் மகிழ்ச்சியாக இருப்பது போல வெளியில் காட்டிக் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து குடி. இது பரவி, உலகம் பூராவும் ராக்ஷஸர்கள் ராமனைத் தின்று தீர்த்து விட்டார்கள் என்ற செய்தி பரவி, நம்ப வைத்த பிறகு, நீ ரகசியமாக சீதையை சந்தித்து, சமாதானம் செய்து அவளை தன, தான்யங்கள், மற்ற தேவைகள், ரத்னங்கள் இவைகளை வாரியிறைத்து உன் வசம் செய்து கொள்ள முயற்சி செய். ஆசை காட்டு. பயமும்,. சோகமும் அவளை பலஹீனமாகச் செய்து விட்ட நிலையில் இந்த சந்தர்பத்தில், தன் நாதன் தான் இறந்து விட்டானே என்ற எண்ணத்தில், உன் வசம் விரும்பாவிட்டாலும் வந்து சேருவாள். தன் கணவன் மடிந்து விட்டான் என்று தெரிந்த பின்னும், நிராசையினாலும், ஸ்த்ரீ லகுத்வம் (எளிதில் மயங்கும் பெண் புத்தியாலும்) உன்னைக் கண்டிப்பாக வந்து சேருவாள். அவள், முன்பு சுகமாக வாழ்ந்தவள். வசதிகளுடனேயே பிறந்து, வசதியாகவே வளர்ந்தவள். அப்படிப்பட்ட ஒரு சுகமான வாழ்க்கையை அவளுக்கு நீ அளிக்க முடியும். தேவையில்லாமல் மன வேதனையுடன் வாடிக் கொண்டிருக்கிறாள். உன்னை அடைந்தால் இழந்த சுக வாழ்க்கையை பெற முடியும் என்று தெரிந்தால், கண்டிப்பாக வருவாள். எனக்குத் தெரிந்து இது ஒரு நல்ல நீதி (வழி). ராமனைக் கண்ணால் கண்டாலே அனர்த்தம் தான். இங்கேயே, கற்பனையாக நாமே ஒரு நிகழ்ச்சியைத் தயார் செய்து கொண்டால், யுத்தமே இல்லாமல் நம் பலனை அடையலாம். நமக்கு சைன்யமும் அழியாது. யாருக்கும் சந்தேகமும் வராது. சத்ருக்களை யுத்த பயமின்றி, ஜயித்து, அரசனே, நீ புகழும், புண்யமும், பெரும் செல்வமும், கீர்த்தியையும், வெகு காலம் அனுபவித்துக் கொண்டிருப்பாய்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சீதா ப்ரலோப4னோபாய: என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 65 (472) கும்பகர்ணாபி4ஷேணனம் (கும்பகர்ணன் போர் முனைக்குச் செல்லுதல்)
மகோதரனை அலட்சியப்படுத்தி விட்டு, கும்பகர்ணன், அவனை விலக்கி, தானே தன் சகோதரனான ராவணனிடம் பேசலானான். உன் பயத்தை நான் போக்குகிறேன். ராமனை நான் இன்று இல்லாமல் செய்து விடுகிறேன். சத்ரு பயம் இன்றி நீ சந்தோஷமாக இரு. வீணாக நடக்காத காரியங்களைப் பற்றி பேசி வார்த்தைகளை விரயமாக்காதே. புலம்புவது சூரனாக இருப்பவனுக்கு அழகல்ல. வீண் பேச்சு, நீர் இல்லாத மேகங்கள் காரியமின்றி இடி முழக்கம் செய்வது போல. இன்று காரியம் முடிந்து நான் கர்ஜிப்பதைக் கேள். (மகோதரன் போல செயல் திறன் இன்றி வெறும் வாய்ப் பேச்சால் அலட்டிக் கொள்பவன் அல்ல நான். நீர் நிறைந்த மேகம் இடி இடித்து மழை பொழிவது போல, நான் எதிரிகளை அழித்து விட்டு வந்து சிம்ம நாதம் செய்வேன், கேள். என்பதாக) அரிய செயல்களை பாடு பட்டு செய்து முடித்து விட்டு வந்து அல்லாமல் சூரர்கள் தன் பெருமை பேச மாட்டார்கள். தானும் திருப்தியுற மாட்டார்கள். செயலிழந்து, புத்தியற்ற தன்னை பண்டிதனாக நினைத்துக் கொள்ளும் உன்னைப் போன்றவர்கள் மகோதரா, சொன்ன சொல்லை அரசன் நம்பியதால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறான். உன்னைப் போன்ற பிரியமாக பேசும், வெட்டிப் பொழுது போக்கும், உபயோகமற்ற ஆட்களால் அரசனுக்கு உறு துணையாக அவன் அக்ரமங்களுக்கும் உடன் செல்லும் உன் போன்ற வீரமற்ற கோழைகளால் தான் அரசன் இன்று இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு வருந்துகிறான். லங்கையில் அரசன் மட்டுமே மீதி என்ற நிலைக்கு வந்திருக்கிறோம். நமது பொக்கிஷம் காலி, பெரும் படை அழிந்தது. நண்பனாக ராஜாவின் அருகில் இருந்து, நட்புக்கு சற்றும் பொருத்தமில்லாத தவறான துர் போதனைகளை செய்கிறாய். இதோ, நான் புறப்பட்டு விட்டேன். சத்ருக்களை வென்று வருகிறேன். இது வரை நீங்கள் செய்து வந்த துர் போதனையால் அரசனுக்கு ஏற்பட்ட சரிவை சரி செய்யப் போகிறேன்.
கும்பகர்ணன் இவ்வாறு சொல்லவும், அரசனான ராவணன் பலமாக சிரித்தபடி பதில் சொன்னான். கும்பகர்ணா, இந்த மகோதரன் ராமனிடத்தில் மிகவும் பயந்து விட்டான். நடுங்குகிறான். அதனால் தான் அவனுடன் யுத்தம் செய்ய தயங்குகிறான். மற்றபடி இவன் நல்ல வீரனே. போர்க்கலையை அறிந்தவனே. ஆயினும், கும்பகர்ணா, உன்னைப்போல் வேறு யார் எனக்கு இருக்கிறார்கள்? அன்பு கொண்டவன், பலசாலி, உனக்கு இணை வேறு யார்? கும்பகர்ணா, சத்ருவை வெற்றி கொள்ளப் போ. வெற்றியடைவாய். இது போல பயப்படும் பலரையும் அவர்கள் பயத்திலிருந்து விடுவிக்கத்தான் உன்னை எழுப்பினேன். அரிந்தமா, (சத்ருக்களை அடக்குபவனே) நெருங்கிய உறவினர் தங்கள் அன்பை வெளிப்படுத்த இது தான் தருணம். அதனால் கிளம்பு. சூலத்தை எடுத்துக் கொள். கையில் பாசத்துடன் வரும் அந்தகன் போல வானரங்களையும், ராஜ குமாரர்களையும் விழுங்கி விட்டு வா. அவ்விருவரும் ஆதித்யனுக்கு சமமான தேஜஸ் உடையவர்கள். உன் ரூபத்தைக் கண்டே வானரங்கள், பயந்து அலறிக் கொண்டு ஓடப் போகின்றன. ராம,லக்ஷ்மணர்களுக்கும் அடி வயிற்றில் கலக்கம் உண்டாகும். இவ்வாறு சொல்லி மகாராஜா ராவணன், தானே திரும்பத் தோன்றியது போல, (தன் உயிருக்கு அபயம் கிடைத்தது போல) நம்பிக்கை வரப் பெற்றான். கும்பகர்ணனின் பலம் அறிந்தவன். அவன் பராக்ரமமும் அறிந்தவன். நிச்சயம் வெற்றியுடன் வருவான் என்ற நம்பிக்கைத் தந்த குதூகலத்தால், களங்கமும் நீங்கிய சந்திரன் போல மன அமைதி அடைந்தான். ஒரு கூர்மையான சூலத்தை கையில் எடுத்துக் கொண்டு கும்பகர்ணன் வேகமாக வெளியேறினான்.
பல யுத்தங்களில் சத்ருக்களின் ரத்தத்தைக் குடித்த தன் பழைய சூலத்துடன், இரும்பாலான கத்தி, பொன்னால் ஆன உறையில் புடமிட்ட தங்கம் போல ஜொலிக்க, இந்திரனுடைய அசனி என்ற ஆயுதம் போலவும், வஜ்ரத்துக்கு சமமான கௌரவம் வாய்ந்ததுமான ஆயுதங்களுடன், சிவந்த மாலையுடன், தானே கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல கிளம்பியவன், ராவணனிடம், நான் தனியாகவே போகிறேன், சைன்யம் இங்கேயே நிற்கட்டும் என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான். இன்று அந்த இளைத்து வாடிக் கிடக்கும் வானரங்கள் அனைவரையும் தின்று பசியாறுவேன் என்று சொன்னதைக் கேட்டு, ராவணன் சைன்யம் கூடவே வரட்டும். படையுடனேயே செல். கையில், சூலம் தவிர, உத்கலம், முதலியவற்றையும் எடுத்துக் கொள். வானரங்கள் சாதாரணமானவை அல்ல. வேகமாக செல்லக் கூடியவர்கள், மகத்தான ஆற்றல் உடையவர்கள். எதற்கும் அஞ்சாத கலங்காத நெஞ்சுரம் மிக்கவர்கள். செயல் வீரர்கள். தனியாக போனால், எல்லாமாக சேர்ந்து பற்களாலேயே கடித்துக் குதறி விடும். அதனால் எல்லாவித பாதுகாப்புடனும் கூடிய நம் ராக்ஷஸ படையுடன் செல். ராக்ஷஸர்களுக்குத் துன்பத்தை விளைவிக்கும் எதிரி தரப்பு வீரர்கள் அனைவரையும் மீதி இல்லாமல் நசுக்கி விடு. இதன் பின், ராவணன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து, மணிகளாலான மாலையை கும்பகர்ணனுக்கு அணிவித்து விட்டான். தன் புஜத்தை அலங்கரித்த அங்கதம், அங்குலீ என்று இஷ்டமான ஆபரணங்களை பூட்டி விட்டான். முயல் போன்ற வெண்மையான ஹாரத்தையும் அணிவித்தான். திவ்யமான, வாசனை மிகுந்த மலர் மாலைகளை கழுத்திலும், காதுகளில் குண்டலங்களையும், அணிவித்தான். இவ்வாறாக, ஹார, கேயூர, கங்கணம் என்ற எல்லா வித ஆபரணங்களும் அணிந்து கும்பகர்ணன், பெரிய கர்ணங்களை (காதுகளை) உடையவன், நன்றாக வளர்க்கப்பட்ட அக்னி போன்று காட்சி தந்தான். ஸ்ரோணி சூத்ரம், மேசகம் இவையும் ஒளி வீசின. (ஆபரணங்கள்) அம்ருத மதனத்தின் பொழுது புஜங்கத்தால் கட்டப் பட்டிருந்த மந்தர மலையை ஒத்திருந்தான். இதன் பின் கவசத்தை அணிந்தான். பாரத்தை தாங்க கூடியதும், காற்று கூட புக முடியாத பாதுகாப்பான மின்னலைப் போன்று ஒளி வீசும், தன் தேக காந்தியால் பிரகாசமாக பெரும் மலையில் சந்த்யா கால கிரணங்கள் படர்ந்து கிடப்பது போல தோற்றமளித்தான். கையில் சூலத்தையும் ஏந்தி, மூவுலகத்தையும் அளக்கத் தயாராகி நின்ற நாராயணன் போல நின்றான். தன் சகோதரனை ஆலிங்கணம் செய்து பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்த பின், தலை குனிந்து வணக்கத்துடன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான். போருக்கு கிளம்பியவன், காலில் விழுந்து வணங்கியதும், ராவணன் அவனை தூக்கி ஆசிர்வாதங்கள் செய்து அனுப்பினான். பெருத்த உடலும், ஓங்கிய குரலும், மகா பலசாலியுமான அவனை புகழ்ந்து பேசி ஆசிகள் வழங்கினான். சங்க, துந்துபி கோஷங்களும், ஆயுதம் தாங்கிய போர் வீரர்களின் இரைச்சலும், யானைகளும், குதிரைகளும், ரதங்களும் எழுப்பிய ஓசையால் பெரும் நாதமாக இடி முழக்கமாகக் கேட்க, ரதங்களில், உத்தமமான ரதியான கும்பகர்ணனைத் தொடர்ந்து, சேனையும் அணி வகுத்துச் சென்றது. சர்ப்பங்கள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், குதிரைகள், சிங்க, யானை, பறவைகள் இவை சித்திரங்களாக (அடையாளத்துக்காக) வரையப் பெற்றிருந்த ரதங்கள் அடுத்தடுத்து கிளம்பின. மாளிகைகளின் மேலிருந்து புஷ்பமாரி பொழிந்தனர். அந்த புஷ்பக் குவியலில் மறைந்து போன, கும்பகர்ணன் அதிலிருந்து மீண்டு, கையில் கூர்மையான சூலம், குடைகளுடன், தானவ, தேவ சத்ரு, மதத்துடன், ரத்தத்தைக் குடிக்கும் வெறியுடன் கிளம்பினான்.
கால் நடையாகவும், பல போர் வீரர்கள் கோஷமிட்டபடி உடன் வந்தனர். கண்களை பயங்கரமாக உருட்டி விழித்தபடி, ஸஸ்திரங்களை கையில் ஏந்தியவர்களாக, தொடர்ந்து சென்றனர். ஒரு சிலர் மிகப் பெரிய உருவமும், சிவந்த கண்களுமாக, சூலங்களையும், வாட்களையும், கூர்மையான பரஸ்வதங்களையும் வீசியபடி வந்தனர். பெரிய அகலமான பரிகங்கள், க3தை4கள், முஸலங்கள், தாள ஸ்கந்தங்கள், பெரிய பெரிய க்ஷேபணிகள், எதிர்த்து நிற்க முடியாத அளவு மற்ற ஆயுதங்கள், பயங்கரமாக, கண்ணால் கண்டாலே மயிர் கூச்செரியும் படியாக, கும்பகர்ணனுடன் சென்ற வீரர்கள் கைகளில் இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட வில்களிலிருந்து கிளம்பிய மகாநாதம், அறு நூறுக்கும் மேற்பட்ட மற்ற ஆயுதங்கள், இவற்றுடன் ரௌத்ரனாக, வண்டி சக்கரம் போல சுழலும் தன் பெருவிழிகளுடன், கும்பகர்ணன், திரும்பி தன்னுடன் வந்த வீரர்களைப் பார்த்துச் சொன்னான். இன்று இந்த வானர கூட்டத்தை, நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளாக, கூட்டம் கூட்டமாக என்னிடம் வந்து விழுந்து மடியச் செய்வேன். காட்டில் திரியும் வானரங்களால் என்னை திரும்பி எதுவும் செய்ய முடியாது. இவர்களைப் போன்ற பிறவிகள், புரங்கள், நகரங்கள் இவைகளுக்கு அலங்காரமானவைகள். நம் நகரை முற்றுகையிட்டுள்ள ராகவனும், அவன் சகோதரனும் தான் நம் இலக்கு. அவன் இறந்து விழுந்தால் எல்லாமே விழுந்தது. அவனை யுத்தத்தில் வதைப்பேன். என்று சொல்லிக்கொண்டே, பூமி கிடுகிடுக்கும் விதமாக, பெருத்த ஓங்கிய குரலில் போர் முழக்கம் செய்தான். சமுத்திரம் நடுங்கியது.
இவ்வாறு கும்பகர்ணன் போர் ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்கும் பொழுதே பயங்கரமான துர் நிமித்தங்கள் தெரிந்தன. தீப்பொறிகள் வானை சூழ்ந்தது போலவும், மேகங்கள் கழுதைகள் போலவும், சிவந்த வானமுமாக காணப்பட்டது. சாகரம், மலைகள், வனங்கள் இவை நிறைந்த பூமி நடுங்கியது. குள்ள நரிகள் ஊளையிட்டன. அவைகளின் வாயிலிருந்து நெருப்புத் துண்டங்கள் போல ஏதோ வெளியில் விழுந்தன. பறவைகள் அப்ரதிக்ஷணமாக வட்டமிட்டன. போகும் வழியில் மாலை போல கழுகுகள் பறந்தன. இடது கண்ணும் தோளூம் துடித்தன. சூரியன் ஒளியிழந்து காணப்பட, காற்றும் மந்தமாக வீசியது. சுகத்தை தருவதாக இல்லை. க்ருதாந்தன் எனும் விதி வழி காட்ட நடப்பது போல கும்பகர்ணன் இந்த நிமித்தங்களின் இடையிலும் கலங்காது முன்னேறினான். லங்கையின் ப்ராகாரங்களை கால் நடையாக கடந்து வந்து, யுத்த பூமிக்கு வந்தவன் எதிரில் வானர சைன்யம் சமுத்திரம் அலை மோதுவது போல கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படர்ந்திருக்க, வானர சேனை அத்புதமாகத் தெரியக் கண்டான். வானரங்களோ, கும்பகர்ணனின் மிகப் பெரிய உருவத்தைக் கண்டே, திகைத்தவர்களாக, காற்றில் நாலா புறமும் விசிறி எறியப் படும் இலைகள் போல ஆனார்கள். அந்த வானர சைன்யம், மிகப் ப்ரசண்டமாக, ஆகாயத்தில் மேகத் துண்டங்கள் சஞ்சரிப்பது போல இருப்பதைக் கண்ட கும்பகர்ணன், மகிழ்ச்சியுடன், ஆரவாரம் செய்தான். இந்த ஆரவார ஓசையிலேயே பல வானரங்கள் வேரறுந்த மரங்களாக பூமியில் விழுந்தனர். தன் பெரிய பரிகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கும்பகர்ணன் எதிரிகளை அழிக்க முற்பட்டான். யுக முடிவில் தன் கிங்கரர்களுக்கு தண்டம் அளிக்கும் பிரபு போல வானரக் கூட்டம் தன்னைப் பார்த்த மாத்திரத்தில் அலறும்படி வேகமாக நுழைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கும்பகர்ணாபி4ஷேணனம் என்ற அறுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)