ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டம் 75 -85
அத்தியாயம் 75 (482) லங்கா தா3ஹ: (லங்கையை எரித்தல்)
இதன் பின் சுக்ரீவன், தான் வானராதிபதியாக இருந்தும், மந்திரியான ஹனுமானைப் பார்த்து, தன் நன்றி கலந்த உணர்வைத் தெரிவித்துக் கொண்டு, மேலும் மேலும் பணிவாகவே பேசினான். குமாரர்கள் இறந்தார்கள். கும்பகர்ணன் மடிந்தான். இன்னமும் ராவணன் தன் பிடிவாதத்தை தளர்த்தாமல் நிமிர்ந்து நிற்கிறான். அவனுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். பலம் குறைந்தவர்களோ, பலசாலிகளோ எல்லா வானரங்களும் கையில் தீப்பந்தத்தை ஏந்தி லங்கைக்குச செல்லுங்கள். சூரியன் அஸ்தமனமாகி இரவு ஆரம்பிக்கும் நேரம் எல்லா வானர வீரர்களும் கைகளில் தீவட்டியை ஏந்தியபடி, லங்கையினுள் நுழைந்தார்கள். வாயில் காப்பவர்கள், கோணலான கண்களுடைய ராக்ஷஸர்கள், தீப்பந்தங்களோடு வரும் வானர சைன்யத்தைக் கண்டு பயந்து ஓடி விட்டனர். கோபுரங்களிலும், ப்ராகாரங்களிலும், மண்டபங்களிலும் பல வீடுகளிலும், இந்த வானரங்கள் ஆரவாரமாக கத்திக் கொண்டு நெருப்பை வைத்தனர். பல ஆயிரம் வீடுகளை இப்படி தீக்கு இரையாக்கினர். மலை போல உயர்ந்து நின்ற மாளிகைகள் தகர்ந்து விழுந்தன. ஆங்காங்கு அகரு வாசனை வீசியது. ஹரி சந்தனமும் எரிந்து நல்ல வாசனை பரவியது. முத்துக்கள், மணிகள், அழகிய வஜ்ரம், பவளம், பட்டு வஸ்திரங்கள், வெண் பட்டுக்களும் அக்னியில் சாம்பலாயின. கால் நடைகள் கருகின. பாத்திரங்கள், பாண்டங்கள் பொடிப் பொடியாகியது. குதிரைகள் கட்டும் இடங்களும் உருத் தெரியாமல் போயின. யானை கட்டும் இடங்களும், ரதங்களை நிறுத்தும் இடங்களும் ஸ்ம்ஸ்காரம் செய்யப் பெற்றன. புடமிடப்பட்டன. உடலைக் காக்க பயன்படும் கவசங்களும், படை வீரர்களில் குதிரை, யானைகளின் உடலைக் காக்கும் தோலாலான கவசங்களும், வாட்கள், வில்கள், வில்லின் நாண், பாணங்கள், தோமரங்கள் அங்குச சக்திகள், இன்னும் பல மாளிகைகளும், மற்றும் பல பொருட்களும் தீக்கிரையாயின. பல விதமான வீட்டுப் பொருள்களை, ஹுதவாஹணன் என்ற, அக்னி விழுங்கியது. ராக்ஷஸர்களின் வீடுகள், இருப்பிடங்கள், வீடு வாசல் உடையவர்களின் சொந்த உபயோக சாமான்களும், பொன்னால் அலங்காரமாக சித்ரங்கள் வரையப் பெற்றிருந்த கவசங்கள், மாலைகளையும், உயர்ந்த வஸ்திரங்களை அணியும் வசதி மிகுந்த ராக்ஷஸ குடும்பத்தினர், மதுவில் மயங்கி இருந்தவரும், நடக்க தள்ளாடிச் சென்றவரும், மனைவியை அணைத்து நின்றவரும், எதிரியிடம் தோன்றிய கோபத்தை அடக்கிக் கொண்டவர்களும், அதை வெளிப்படுத்தும் விதமாக க3தை4, சூலம் கத்தி இவைகளை ஏந்தியவர்களும், உணவு உண்ணும் சிலரும், பானங்களை பருகுபவர்களும். சயனங்களில் தூங்குபவர்களும், அழகிய கட்டில்களில் மனைவியுடன் உறவு கொண்டிருந்தவர்களும், பயந்து சிறு குழந்தைகளை மார்போடணைத்து பாதுகாப்பான இடம் தேடிச் செல்பவர்களும், இப்படி நூறு ஆயிரம் கோடி ஜனங்கள், லங்கா நிவாஸிகள், தீயில் மாட்டிக் கொண்டு திணறினர். மேலும் மேலும் வளர்ந்த தீயின் உக்ரத்தில் பல வீடுகள் கருகிப் போயின. மலை போல உயர்ந்த வீடுகள். க்ரௌஞ்ச, பர்ஹிண பக்ஷிகளின் நாதமும், வீணைகள் வாசிக்கப் படும் இசையும், பூஷணங்கள் உராயும் ஓசையும், நிறைந்த உயர்ந்த மாளிகைகளும், தீக்கிரையாயின. தீ பரவி தோரணங்களை பிரகாசமாகக் காட்டியது. அதைக் காண இடையிடையே மின்னலுடன் தோன்றும் கரு மேகக் கூட்டம் போல இருந்தது. மாளிகைகள் விழுந்தன. இந்திரனின் கை வஜ்ரத்தால் துண்டிக்கப் பட்டு விழுந்த மலைகள் போல விழுந்தன. வீடுகளில் மேல் தளத்தில் உறங்கிய அழகிய ஸ்த்ரீகளும், ஆபரணங்களை வீசி எறிந்து ஹா ஹா என்று அலறினர். வெகு தூரம் வரை இந்த எரியும் வீடுகள் பிரகாசமாகத் தெரிந்தன. ஔஷதி வனங்களுடன் ஹிமய மலை போல காட்சியளித்தன. வீடுகள், வாசல்கள் நெருப்பின் ஜ்வாலையோடு தாங்களும் சிவந்து மலர்ந்த கிம்சுக புஷ்பங்கள் போல காட்சியளித்தன. யானைகளும், குதிரைகளும், கொட்டில்களிலிருந்து அவிழ்த்து விடப் பட அவை தாறு மாறாக ஓடின. பெரிய பெரிய யானைகள், குதிரைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரிய, உயர் ஜாதி மிருகங்கள். சமுத்திரம் கொந்தளிக்கும் பொழுது, அதில் ஆமைகளும், முதலைகளும் போல அலைந்தன. ஓடி வந்த குதிரை, எதிரில் யானை விடுபட்டு வருவதைப் பார்த்து விலகி நிற்கிறது. சில இடங்களில் யானை பயந்து விலகி நிற்க குதிரை தன் வழி ஓடி செல்கிறது. சமுத்திரத்தில் எரியும் லங்கையின் நிழல் பூதாகாரமாகத் தெரிகிறது. முஹுர்த்த நேரத்தில் வானரங்கள் ஊரையே கொழுந்து விட்டெரியச் செய்து விட்டனர். பூமியின் க்ஷய காலமான இந்த சமயம், வசுந்தரா, வெளிச்சம் போட்டு காட்டப் பட்டது போல இருந்தது. புகையினால் அவஸ்தைப் பட்ட பெண்களின் ஓலம் வெகு தூரம் வரை கேட்டது. நெருப்பினால் ஏற்பட்ட காயங்களுடன் பலர் லங்கா நகரிலிருந்து வெளி வந்தனர். இவர்கள் மேல் வானரங்கள் எதிர்பாராத சமயம் தாவி குதிக்கின்றன. இந்த வானரங்களின் ராக்ஷஸர்களின் பரஸ்பர தாக்குதலாலும், கூச்சலும், திக்குகளிலும், சமுத்திரத்திலும் பரவியது. நெருப்பு காயங்களுடன் வெளியே வந்த ராக்ஷஸர்கள் மேல் குதித்து வானரங்கள் தொல்லை கொடுத்தன. இந்த வானரங்களின் கூச்சலும், ராக்ஷஸர்களின் அலறலும், சமுத்திரம், பூமி, அனைத்திலும் எதிரொலித்தது.
ராம, லக்ஷ்மணர்கள் இருவரும், உடல் காயம் இன்றி, அம்புகள் தைத்த அடையாளம் கூட இல்லாமல் நலம் ஆகி விட்டனர். இருவரும் சற்றும் பதட்டம் இல்லாமல் தங்கள் வில்லை கையில் எடுத்துக் கொண்டனர். வில்லில் நாணேற்றி, விரலால் மீட்டி நாதம் எழுப்பியதே, ராக்ஷஸர்கள் பயந்து அலற போதுமானதாக இருந்தது. அந்த வில்லுடனும், அதிலிருந்து கிளம்பிய நாதமும் ராமனை இன்னும் சோபையுடன் காட்டியது. பகவானான ப4வன் எனும் சிவன், வேத மயமான வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டது போல கோபத்துடன் வில்லை மீட்டி, நாதம் எழுப்பியது போல இருந்தது. இந்த வானர, ராக்ஷஸர்களின் கூச்சலையும், அலறலையும் மீறி ராஜ குமாரர்கள் இருவரும் வில்லை மீட்டிய நாதம் கேட்டது. ராமனுடைய வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள், மாளிகைகள், வீடுகள் மேலும் விழுந்தன. ராம பாணம் பட்டு, கைலாச சிகரமோ எனும்படி இருந்த வீட்டு விமானங்களும் சரிந்து விழுந்தன. தங்கள் வீடுகளிலும், வீட்டு விமானங்களிலும் ராம சரங்கள் வந்து விழுந்ததைப் பார்த்து ராக்ஷஸர்கள் சிம்ம நாதம் செய்தனர். அந்த இரவு அவர்களுக்கு ரௌத்ரமாகத் தெரிந்தது. சுக்ரீவன் கட்டளையை சிரமேற்கொண்டு, வானரங்கள் நுழை வாயிலில் நின்று கொண்டு, யுத்தம் செய்ய தாயாரானார்கள். சுக்ரீவனின் ஆணையை மீறியவர்கள் யாரானாலும் அங்கேயே தண்டிக்கப் படுவார்கள். இதைக் கேட்டு கைகளில் தீவட்டியை ஏந்திச் சென்ற வானரங்கள் கோட்டை வாயிலில் நின்ற பொழுது ராவணன் அளவில்லா ஆத்திரம் கொண்டான். ருத்ரனே ரூபம் எடுத்து வந்தது போல, உடல் பூரா கோபத்துடன் உரத்த குரலில் போர் முழக்கம் செய்தான்.
நிகும்ப4ன், கும்ப4ன் என்ற கும்பகர்ணனின் பிள்ளைகள் இருவரையும் பல ராக்ஷஸர்கள் துணையுடன் அனுப்பி வைத்தான். யூபாக்ஷன், சோணிதாக்ஷன், ப்ரஜங்க, கம்பனன், மேலும் பலர் கும்பகர்ணனின் புத்திரர்களோடு, ராவணனின் ஆணைபடி, சீக்கிரம் கிளம்புவோம். இங்கேயே இந்த வானரங்களை முறியடித்து ஜயிப்போம் என்று சொல்லியபடி கிளம்பினர். தாங்களும் திரும்பத் திரும்ப ஜய கோஷம் செய்தபடி லங்கையிலிருந்து கிளம்பினர். தங்கள் ஆபரணங்களின் ஒளியாலும், இயல்பான தங்கள் சரீர காந்தியாலும், வானரங்களின் தீவட்டிகளுக்கு சமமாக ஒளியை ஏற்படுத்திக் கொண்டனர். அந்த சமயம் அங்கு தாராதிபனான சந்திரனின் பிரகாசம், நக்ஷத்திரங்களின் பிரகாசம், ராக்ஷஸர்களின் ஆபரணங்களிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கற்றைகள், எரிந்து கொண்டிருந்த வீடுகளிலிருந்து அக்னியின் பிரகாசம் என்று வான மண்டலத்தையே சைன்யங்களுக்கு வழிகாட்டுவது போல ஒரே ஒளி மயமாக ஆக்கியது. இந்த வெளிச்சத்தில் அலை வீசும் கடல் மேலும் அழகுற விளங்கியது.
பதாகம் த்வஜம் இவைகளுடன் உத்தமமான கத்தி, பரஸ்வதம், பெரிய பெரிய ரதம், குதிரைகள், யானைகள், மற்றும் பல வாகனங்கள், பள பளக்கும் சூலம், க3தை4, கட்கம் (வாள்) ப்ராஸ, தோமர, கார்முகம், இவைகளுடன் அந்த ராக்ஷஸ படை, அளவிலும் ஆற்றலிலும் மிக அதிகமாகத் தெரியக் கண்ட வானரங்கள் திகைத்தன. கிங்கிணி நாதம் சேர, பரஸ்வதத்தை வீசிக் கொண்டு, பாதுகாப்பாக புஜங்களில் தங்க ஜாலம் போன்ற கவசம் அணிந்து, கந்தமால்யம், வாசனை மிகுந்த மாலைகள், மதுவை சிந்தும் புது மலர்கள் இவற்றுடன் மென்மையாக வீசிய காற்று, பெருங்கடலுக்கு உவமை சொல்லக் கூடிய அளவு பெரும் படை, சூரர்களாக நிறைந்திருந்ததைக் கண்டு வானரங்கள் நடுங்கின. பலமாக கத்தி தங்கள் பயத்தை உதற முயன்றன. வேகமாக தாவிக் குதித்து, தாங்களாகவே எதிரி சைன்யத்தில் மோதி கீழே விழுந்தன. விட்டில் பூச்சிகள் தங்களாகவே நெருப்பில் விழுவது போல இருந்தது. அவர்கள் பரிகம், அசனம் என்று ஆயுதங்களால் தாக்கினால், இந்த வானரங்கள் உன்மத்தம் பிடித்தவை போல மரங்களாலும், கற்களாலும் தங்கள் முஷ்டிகளாலும் இடை விடாது அடித்தன. இப்படி மேலே வந்து விழும் வானரங்களை உடனுக்குடன் ராக்ஷஸர்கள் தங்கள் வாட்களால், சிரச்சேதம் செய்தனர். பற்களால் கடி பட்டு, காதறுந்து, முஷ்டியினால் விகாரமாக்கப் பட்ட முகத்துடன் ராக்ஷஸர்கள் திரும்பிச் சென்றனர். கற்களால் முட்டி பெயர்ந்து பலர் நடக்க முடியாமல் திணறினர். பல வானர வீரர்கள் சேர்ந்து ராக்ஷஸர்களை வதம் செய்து அழித்தனர் என்றால் பல வானரங்கள் ராக்ஷஸர்களின் கத்திக்கு இரையாயின. கொன்றவனை மற்றவன் கொன்றான். தள்ளியவனை மற்றவன் தூஷித்தான். கடித்தவனை மற்றவனும் கடித்தான். தேஹி என்று அழைக்க மற்றவன், (ததாமி) தருகிறேன் என்று அடியைக் கொடுக்க, ஏன் கஷ்டப் படுகிறாய், நில்லு என்றும் குரல்கள் கேட்டன. வஸ்திரங்கள் நிலை குலைய, கவசங்களும், ஆயுதங்களும் விழ, கையில் எடுத்த மகா ப்ராஸம், கம்பு, சூலம், கத்தி என்று எங்கும் இரைந்து கிடக்க, வானர ராக்ஷஸர்களின் இடையில் பெரும் யுத்தம் நடந்தது. வானரங்களை பத்து, ஏழு, எட்டென்று கூட்டம் கூட்டமாக, ராக்ஷஸர்கள் அடித்து வீழ்த்தினர். ராக்ஷஸர்களையும் பத்து, ஏழு, எட்டென்று இவர்களும் அடித்தனர். தலை கேசம் ஒரு பக்கம் புரள, ஆடைகள் கிழிந்து தொங்க, கையில் இருந்த ஆயுதங்கள் மூலைக்கு ஒன்றாகச் சிதற, ராக்ஷஸர்களின் படையை வானரங்கள் சூழ்ந்து கொண்டன. மகா பயங்கரமான யுத்தம் தொடர்ந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் லங்கா தா3ஹ: என்ற எழுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 76 (483) கம்பனனாதி வத: (கம்பனன் முதலானோர் வதம்)
வீரர்களே மடிந்து விழும் அந்த யுத்த பூமியில், அங்கதன் கம்பனனை எதிர்கொண்டான். கம்பனன் தானே அங்கதனை அழைத்து தன் க3தை4யால் பலமாக முதல் அடியைக் கொடுத்தான். புரியாமல் திகைத்து நின்ற அங்கதன் சட்டென்று சமாளித்துக் கொண்டவனாக தன் கையில் இருந்த பாறாங்கல்லை அவன் பேரில் வீசி எறிந்தான். கம்பனன் அந்த அடி தாங்காமல் கீழே விழுந்தான். கம்பனன் விழுந்ததைக் கண்டு சோணிதாக்ஷன், தன் ரதத்தை ஓட்டிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். அவனும் கூரான, தன் கை ஆயுதங்களால் அங்கதனை அடித்தான். காலாக்னி போன்றதும், உடலைக் கிழிப்பதுமான கூரான அம்புகளை அங்கதன் மேல் விட்டான். நாராசமான, கூர்மையான நுனி உடையதுமான பல அம்புகளால், உடல் பூராவும் காயம் அடைந்தவனாக வாலி புத்திரன் அங்கதன், ஆயுதங்களை நிரப்பி வைத்திருந்த ரதத்தை ஓங்கி அடித்தான். சோணிதாக்ஷன் ஒரு பெரிய வாளை கையில் எடுத்துக் கொண்டான். யோசிக்க நேரமின்றி அங்கதன் ஆகாயத்தில் தாவிக் குதித்து, அவன் கை வாள் நழுவி விடும்படி செய்தான். அந்த வாளை எடுத்து அதாலேயே சோணிதாக்ஷன் பேரில் வீசினான். யக்ஞோபவீதம் போல அது அவன் உடலில் விழ, வெட்டி காயம் ஏற்படுத்தியது. அந்த வாளை கையால் சுழற்றியபடி அங்கதன் ரண பூமியில் வலம் வந்தான். வாளையும் க3தை4யையும் பிடுங்கிக் கொண்டு சோணிதாக்ஷனை, மேலும் தாக்கி, கீழே விழும்படி செய்தான்.
உடனே யூபாக்ஷன் ப்ரஜங்க3ன் என்ற ராக்ஷஸனுடன் ரதத்தில் வேகமாக அங்கதனை நோக்கி வந்தான். ஒரு பக்கம் சோணிதாக்ஷன், மற்றொரு புறம், ப்ரஜங்க3ன் இருவரிடமும் அகப்பட்டுக் கொண்ட அங்கதன் விசாக நக்ஷத்திரங்களிடையே பூர்ண சந்திரன் போல தோற்றமளித்தான். அங்கதனுக்கு காவலாக மைந்தனும், த்விவிதனும், முன்னேறி வந்தனர். இந்த மூன்று வானர வீரர்களுக்கும், மூன்று ராக்ஷஸ வீரர்களுக்கும் இடையில் கடும் போர் மூண்டது. வானரங்கள் மரங்களைக் கொண்டு வந்து வீசினால், தன் கத்தியினால் ப்ரஜங்க3ன் அவைகளை தடுத்து வெட்டி சாய்த்து விட்டான். ரதங்களையும் குதிரைகளையும் எதிர்க்க வானரங்கள் மரக்கிளைகளையே பெரும்பாலும் உபயோகிப்பது தெரிந்து, யூபாக்ஷன் என்ற ராக்ஷஸன் தன் சரங்களால் இவைகளை துண்டாடி விட்டான். த்விவித, மைந்தர்கள் சேகரித்து வைத்திருந்த மரக் கட்டைகளையும் இதே போல, சோணிதரன் தன் க3தை4யால் அழித்து விட்டான். ப்ரஜங்கன், எதிரியின் மர்மஸ்தானத்தை பிளக்கும்படியான பெரிய வாளைத் தூக்கிக் கொண்டு வந்து வாலி புத்திரனைத் துரத்தினான். எதிரி நெருங்கி வருமுன் ஒரு பெரிய அஸ்வகர்ண என்ற மரத்தை பிடுங்கி வைத்துக் கொண்டு அவன் அருகில் வரவும் ஓங்கி அடித்தான். புஜங்களை தன் முஷ்டியால் குத்தினான். வாலி புத்திரனின் முஷ்டியின் வேகம் தாங்காமல் அவன் பூமியில் விழுந்தான். கிழே கிடந்தவனின் அருகில் இருந்த வாளையும் பார்த்து அவன் மேல் முஷ்டியினால் முடிந்தவரை பலமாக குத்தினான். வஜ்ரம் போல விழுந்த அந்த அடிக்கு பதிலாக ராக்ஷஸனும் தன் முஷ்டியால் அவன் நெற்றியில் படும் படி அடித்தான். ஒரு முஹுர்த்த காலம் செய்வதறியாது திகைத்து நின்றான் அங்கதன். அதன் பின் தெளிந்து, அந்த வாளாலேயே ப்ரஜங்க3னைத் தாக்கி, தலை இற்று விழச் செய்தான்.
தன் தந்தை வழி உறவினன் இறந்து விழுந்ததைப் பார்த்து, யூபாக்ஷன், அங்கு பூர்ணாக்ஷன் (கண்களில் நீர் நிறைந்தவனாக) ஆனான். கை வில்லை விட்டு, ரதத்திலிருந்து இறங்கி, தானும் வில்லை கையில் எடுத்துக் கொண்டான். யூபாக்ஷன், உக்ரமாக வருவதைப் பார்த்து த்விவிதன் அங்கதன் உதவிக்கு வந்தான். யூபாக்ஷனின் மார்பில் கோபத்துடன் ஓங்கி ஒரு குத்து விட்டான். ஒரு கையால் அவனைப் பிடித்துக் கொண்டான். இதைக் கண்டு சகோதரனான சோணிதாக்ஷன், க3தையின் நுனியை மார்பில் அடித்து த்விவிதனை தடுத்தான். அடி பட்ட வேகத்தில் தடுமாறினாலும் சமாளித்துக் கொண்டு, அந்த க3தை4யையே பிடுங்கிக் கொண்டான். இதற்கிடையில் மைந்தனும் யூபாக்ஷனும் கடும் போர் புரிந்து கொண்டிருந்தனர். கைத்தலத்தால் ஓங்கி அடித்தான். சோணிதாக்ஷனும், யூபாக்ஷனும் வானர வீரர்களின் மத்தியில் சிக்கிக் கொண்டனர். ஆக்ரோஷத்துடன் இவை சண்டையிட்டன. சோணிதாக்ஷன் முகத்தில் நகத்தால் கீறினான் த்விவிதன். இதைத் தாங்க முடியாமல் அவன் பூமியில் விழுந்தான். ராக்ஷஸ சமூகம் தங்கள் தலைவனின் நிலையைக் கண்டு வருந்தியது. அவர்கள் மிகுந்த கவலையும் மனக் கலக்கமும் அடைந்தனர். கும்பகர்ணனின் மகனுக்கு உதவி செய்ய விரைந்தனர். தன் அருகில் வந்த போர் வீரர்களை சமாதானப் படுத்தி, உற்சாகம் அளித்து கும்பன் மகா பலத்துடன் போரில் ஈடுபட்டான். கையில் வில்லுடன் தீவிரமாக இறங்கியவன் ஆல கால விஷம் போன்ற பல சரங்களை தன் வில்லிலிருந்து புறப்படச் செய்தான். ஒவ்வொரு அம்பும் காணவே அரிய காட்சியாக இருந்தது. மின்னல், ஐராவதம் இவற்றுடன், தேவர்கள் கூட்டம், இவற்றுடன் இரண்டாவது இந்திரன் போல காட்சியளித்தான். காது வரை நாணை இழுத்து அவன் விட்ட அம்பு த்விவிதனைத் தாக்கியது. அழகிய பொன் வேலைப்பாடுகள் அமைந்த அம்புகள், மலையரசன் போன்ற பெரிய சரீரம் உடைய திவிவிதன், மலை சரிந்து விழுவதைப் போல விழுந்தான். இதைக் கண்ட மைந்தன் சகோதரனைக் காப்பாற்ற பெரிய கல்லை எடுத்துக் கொண்டு அவன் அருகில் ஓடினான். தன்னைத் தாக்க வந்த கல்லை கும்பன் லாகவமாக ஐந்து பாணங்களால் தடுத்து நிறுத்தி விட்டான். அடுத்த அம்பையும் தயாராக வைத்துக் கொண்டு, கூரான அந்த அம்பை மைந்தனின் மார்பில் படும் படி எய்து விட்டான். மர்மத்தில் பட்ட அந்த அடி மைந்தனை மயங்கி விழச் செய்து விட்டது. மாமன் மார் இருவரும் அடிபட்டு விழுந்து கிடப்பதைப் பார்த்து அங்கதன் அங்கு வந்தான். கும்பன் வில்லில் இருந்து சரங்கள் மழையாகப் பொழிவதைக் கண்டான். அங்கதனைக் கண்டதும் கும்பன் அவனை இலக்காக வைத்து அடிக்க ஆரம்பித்தான். ஐந்து கூரிய பாணங்கள் அங்கதனை தாக்கின. அந்த கூரிய பாணங்கள் மேலும் மேலும் தன் உடலைக் குத்தி கிழித்த பொழுதும் அங்கதன் கலங்காமல் நின்றான். கற்களையும், மரக்கிளைகளையும், கும்பன் மேல் வீசினான். கும்பன் அவைகளை அலட்சியமாக தடுத்து பொடியாகச் செய்தான். கும்பகர்ணன் மகன், வாலி புத்திரனை குறிவைத்து விடாமல் அடிக்கலானான். நெருப்பு பந்தங்களைக் கொண்டு யானைகளை விரட்டுவது போல அவன் குறி அங்கதன் பேரிலேயே இருந்தது. ஒரு கண்ணில் பட்டு, ரத்தம் வடியவும், ஒரு கையால் கண்களைப் பொத்திக் கொண்டே ஒரு சால விருக்ஷத்தை பிடுங்கி கும்பன் மேல் வீசினான். அவன் தோளில் தன் கைகளால் ஓங்கி அடித்தான். அவன் அசைந்து கொடுக்காமல், யானை மேல் இருந்தபடி, இந்திரகேது போல இருந்த சால விருக்ஷத்தை தன் கை அம்புகளைக் கொண்டு சிதறச் செய்து விட்டான். பார்த்துக் கொண்டிருந்த ராக்ஷஸர்கள் ஆரவாரம் செய்தனர். அங்கதன் தன் வலியை பொருட்படுத்தாமல் ஜய கோஷம் செய்தான். அங்கதன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதை, வானரங்கள் ஓடிப் போய் ராமனிடம் தெரிவித்தன. ராமரும், உடனே ஜாம்பவான் முதலிய பலரையும் அங்கதனைக் காப்பாற்ற அனுப்பி வைத்தார். எல்லோருமாக கோபத்துடன் வேகமாக வந்து கையில் வில்லை வைத்து குறி பார்த்துக் கொண்டிருந்த கும்பனின் மேல் விழுந்து, தங்கள் கையிலிருந்த கற்களையும், மரக்கிளைகளையும் கொண்டு அவனைத் தாக்கி, அங்கதனிடமிருந்து அவன் கவனத்தை திசை திருப்ப முயன்றார்கள். ஜாம்பவானும், சுஷேணனும், வேகதர்ஸி என்ற வானரமும் ஒரே சமயத்தில் தன் பேரில் விழுந்து தள்ளுவதைக் கண்டு கும்பன் பாணங்களால் தன்னைச் சுற்றி வேலி போட்டது போல தடுத்துக் கொண்டு விட்டான். ஜலம் நிறைந்த குளத்தை சுற்றிலும் உள்ள மலைகள் காப்பது போல அந்த வேலி அமைந்தது. இதைக் கடந்து வர முடியாமல் வானர வீரர்கள் திகைத்தனர். நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு விட்ட சுக்ரீவன், சகோதரன் மகனை காப்பாற்ற, நேரடியாக கும்பனுடன் மோதினான். மலைச் சாரலில் நடந்து செல்லும் யானையை சிங்கம் தாக்குவது போல தாக்கினான். பெரிய கற்களையும், அஸ்வகர்ணம், த4வம் எனும் மரங்களையும் பிடுங்கி எடுத்துக் கொண்டு, மற்றும் பல மரங்களையும் கொண்டு வேகமாக வீசி கும்பனை அடித்தான். ஆகாயத்தை மறைத்த அந்த மரங்களின் கூட்டத்தை இது வரை கண்டிராத வகையில் அந்த மரங்களை குறி வைத்து தீவிரமான அம்புகளை விட்டான். அந்த அடர்த்தியான மரங்களை தன் பாணங்களால் சின்னா பின்னமாக்கி விழச் செய்தான். தன் பேரில் விழுந்த பாணங்களையும் பொருட்படுத்தாமல், அந்த மரங்கள் பொடிபொடியானதையும் லட்சியம் செய்யாமல், சுக்ரீவன் கும்பனுடைய வில்லை வெடுக்கென்று பிடுங்கி உடைத்து விட்டான். ஒரே வேகத்தில் தாவி குதித்து, அவன் வில்லை முறித்தபின், தந்தத்தை இழந்த யானை போல திகைத்து நின்ற கும்பனைப் பார்த்துச் சொன்னான். நிகும்பனின் தமையனே, உன் வீர்யம் அத்புதமாக இருக்கிறது. உன் வில்லின் வேகமும் இணையற்றது. உன் பிரபாவமும், செயல் பாடும், ஆற்றலும் ராவணனுக்கு சற்றும் குறைந்ததல்ல. ப்ரஹ்லாதன், பலி, விருத்திரன், குபேரன், வருணன் இவர்களுடன் ஒப்பிடக் கூடிய அளவற்ற பலசாலிதான் நீ. சந்தேகமே இல்லை. பலத்தில் நீ உன் தந்தையையும் மிஞ்சி விட்டாய். கையில் வில்லுடன் உன் ஒருவனை, மூவுலகிலும் தேவர்கள் கூட ஜயிக்க முடியாது. புலன்களை அடக்கியவனை, வியாதிகள் அண்ட முடியாதது போல, மகா புத்திசாலியான வீரனே, உன் திறமையை என்னிடம் காட்டு. வர தானம் உள்ளதால் தான், தேவ தானவர்கள், உன் பெரிய தந்தையிடம் தோற்றார்கள். கும்பகர்ணனோ, தன் ஆற்றலால், புஜ பலத்தால் வெற்றி அடைந்தான். வில்லேந்திய இந்திரஜித்துக்கு சமமான பலமும், ஆற்றலும் உடைய நீ, இன்று ராக்ஷஸ வீரர்களுள் முதன்மையாக நிற்கிறாய். என்னுடன் சண்டையிட வா. தனியாக நாம் இருவரும் போர் செய்வதை, இந்திரனும் சம்பரனும் போரிட்டதைப் போல உலகங்கள் காணட்டும். உன் அஸ்திர ஞானத்தை காட்டினாய். மிகவும் பெருமைக்குரியது, உன் ஆற்றலும், அறிவும். பல வானரத் தலைவர்கள், பலசாலிகளாக இருந்தும் கீழே தள்ளப்பட்டார்கள். களைத்து நிற்கும் உன்னைக் கொன்றால் என்னைத் தூற்றுவார்கள். அந்த எண்ணத்தில் தான் கொல்லாமல் விட்டேன். சிரமப் பரிகாரம் செய்து கொண்டு வா. என் பலத்தைப் பார். இவ்வாறு சுக்ரீவனால் புகழ்ந்து பேசப்பட்டு, மதிக்கப் பட்டவுடன் அக்னியில் ஆகுதியை இட்டவுடன் அதன் ஜ்வாலை வளருவது போல அவன் தேஜஸ் மேலும் மேலும் வளர்ந்தது. பிறகு கும்பன் சுக்ரீவனை கைகளால் பிடித்து, த்வந்த யுத்தம் செய்ய ஆரம்பித்தான். இரண்டு யானைகள் மதம் தலைக்கேற மேல் மூச்சு வாங்க நிற்பது போல இருவரும் தயாராக நின்றனர். ஒருவரையொருவர், சரீரத்தால் கீழே தள்ளவும், ஒருவரையொருவர் கைகளை பிடித்து இழுத்தும் மல் யுத்தம் செய்தனர். யுத்தம் வேகம் எடுக்க, அவர்கள் வாயிலிருந்து புகையின்றி நெருப்பு ஜ்வாலை வெளி வந்தது. கால்கள் மிதித்து பூமி நசுங்க அலைகள் சுழன்று சுழன்று வீச, சமுத்திரம் கலங்கியது. கும்பனைத் தூக்கி சமுத்திரத்தில் போட்டு, அதன் அடித்தளத்தைக் காணச் செய்து விட்டான்,சுக்ரீவன். கும்பனின் பெரிய சரீரம் வேகமாக வந்து விழவும் ஜலத்தில் வசிக்கும் ஜீவ ஜந்துக்கள் தாறு மாறாக அலைந்தன. கும்பன் ஜலத்திலிருந்து வேகமாக வெளி வந்து வஜ்ரம் போன்ற தன் முஷ்டியால் சுக்ரீவனை அடித்தான். மார்பில் பட்ட அடி, தோல் உரிந்து ரத்தம் கொட்டியது. சுக்ரீவனும் திரும்ப அதே போல அஸ்தி மண்டலத்தில் ஒரு குத்து விட்டான். நேரம் ஆக, ஆக, இருவருக்கும் போர் வெறியும், வேகமும் வளர்ந்தது. மேரு மலையின் உச்சியில் இருந்து ஜ்வாலை புறப்படுவது போல இருவரும் மல் யுத்தத்தில் மும்முரமாக ஈடு பட்டனர். சுக்ரீவனும் தன் சக்தியை எல்லாம் திரட்டி கும்பனின் மார்பில் ஒரு குத்து விட்டான். அந்த அடியின் வேகத்தால் கலங்கி தீப்பொறிகள் பறக்க, திடுமென அடங்கி கிடக்கும் நெருப்பு போல பூமியில் விழுந்தான். சிவந்த சரீரம் உடையவனாக, ஆகாசத்திலிருந்து யதேச்சையாக விழும் பிரகாசம் போல விழுந்தான். மார்பில் அடிபட்டு விழும் கும்பனின் சரீரம், ரத்தம் பெருகி நணைந்த சரீரம், பசுக்களின் தலைவனான ரிஷபம் போலத் தோன்றியது. வானர ராஜனான சுக்ரீவனால் யுத்தத்தில் கும்பன் வதம் செய்யப் பட்டவுடன், ராக்ஷஸர்கள் மனதில் பயம் நிறைந்தது. மலைகள், வனங்கள் இவைகளும் ஆட, நில நடுக்கம் தோன்றியது. பூமியே ஆட்டம் கண்டது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கம்பனனாதி வதம் என்ற எழுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 77 (484) நிகும்ப4 வத4: (நிகும்பனின் வதம்)
தன் சகோதரனை சுக்ரீவன் வீழ்த்தி விட்டதை அறிந்த நிகும்பன் சுக்ரீவனை தன் கண்களாலேயே எரித்து விடுபவன் போல பார்த்தான். அவனுடைய பரிகம், ஐந்து விரல்கள் போன்ற அமைப்புடையது. அதற்கு மாலைகள் அணிவித்து அலங்கரித்திருந்தான். அந்த ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டான். அந்த ஆயுதத்துக்கு, தங்கத்தால் கவசமும், அதில் வைரங்கள் பதிக்கப் பெற்று வேலைப்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன. யம தண்டம் போல இருந்த அதைப் பார்த்து ராக்ஷஸர்களின் பயம் விலகியது. இந்திரனின் த்வஜம் போல இருந்த அந்த ஆயுதத்தை உயரத் தூக்கிப் பிடித்தவாறு, அகல வாயைப் பிளந்து போர் முழக்கம் செய்தான். புஜங்களில் அங்கதங்களும், காதில் குண்டலங்களும், மார்பில் அழகான மாலைகளுமாக நிகும்பன், சர்வாபரண பூஷிதனாக சோபையுடன் காணப்பட்டான். பரிகமும் ஒரு ஆபரணம் போல அவன் கையில் மின்னியது. இந்திர தனுஷ் வந்து மேகத்தை அலங்கரிப்பது போல, மின்னலுடன் கூடிய கார் மேகம் போல, பரிகத்தின் நுனியால், காற்றில் வீசி போருக்குத் தயாரானான். ஜய கோஷம் செய்து கொண்டே முன்னால் வந்தான், புகையின்றி அக்னி ஜ்வாலை போல கோபத்தால் ஜ்வலித்துக் கொண்டிருந்தான். விடபாவதீ என்ற கந்தர்வ நகரம், அதன் மகா உத்தமமான பவனங்கள், அமராவதியும் அதன் மாளிகைகளும், தாரா, க்ரஹ, நக்ஷத்திரங்கள், சந்திரன் மற்றும் மகா க்ரஹங்கள் யாவும் நிகும்பனின் இந்த பரிகத்தைச் சுழற்றியபோது சுழலுவது போல இருந்தது. பரிகத்தில் இருந்த வைரங்கள் கண்களைக் கூச செய்தது. வானரங்களுக்கோ, இது நிகும்பாக்னி, யுக முடிவில் தோன்றும் காலாக்னி என்பார்களே, அது தானோ என்று கலக்கம் தோன்றியது. வானரர்கள், ராக்ஷஸர்கள் யாவரும் கண் இமைக்கக் கூட மறந்தனர். ஹனுமான் தான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, அவன் முன்னால் வந்து நின்றான். அந்த பரிகத்துக்கு இணையாக ஹனுமானின் புஜங்களே ஆயுதமாக விளங்கியது. நிகும்பன் ஆத்திரத்தோடு வேகமாக அந்த பரிகத்தை மார்பில் வீச, அது ஹனுமானின் மார்பில் பட்டு தூள் தூளாகி சிதறியது. அதிலிருந்து நூற்றுக் கணக்கான தீப்பந்தங்கள் கிளம்பியது போல இருந்தது. இந்த அடி மகா வீரனாகிய ஹனுமானையே கதி கலங்கச் செய்து விட்டது. பூமியின் நடுக்கத்தில் மலை ஆட்டம் கண்டது போல ஹனுமானையும் அந்த பரிகத்தின் அடி ஆட்டம் காணச் செய்து விட்டது. ஹனுமான் தன் முஷ்டியை மடக்கி, பலத்தையெல்லாம் ஒன்று சேர்த்து, நிகும்பனின் மார்பில் ஓங்கி அடித்தான். வாயுவுக்கு சமமான வீர்யம் உடைய ஹனுமான் நிகும்பனை அடித்ததில், அவன் உடல் தோல் கிழிந்து ரத்தம் பெருகியது. பளீரென்ற மின்னல் வேகத்தில் பட்ட இந்த அடியால் நிகும்பன் நிலை குலைந்து போனான். சற்றுப் பொறுத்து தன்னை சமாளித்துக் கொண்டு, ஹனுமானை எட்டிப் பிடித்தான். லங்கா வாசிகள் இந்த வீரச் செயலை பாராட்டி பெரும் ஆரவாரம் செய்தனர். இறுக்கப் பிடித்திருந்த நிலையிலும், நிகும்பனின் முயற்சியை சிலாகித்தபடி, ஹனுமான் திரும்பவும் தன் முஷ்டியால் ஓங்கி குத்தி தன்னை விடுவித்துக் கொண்டு, சரமாரியாக நிகும்பனை குத்து விட்டு கீழே தள்ளி அவன் மார்பில் ஏறி நின்று கொண்டு அவன் இரு கைகளையும், தலையையும் பிடித்து தரையில் ஓங்கி அடித்து பயங்கரமாக கத்தினான். இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு ஆத்திரத்துடன் யுத்தம் செய்து, முடிவில் நிகும்பன் மடிந்ததும், வானர சைன்யத்தில் உற்சாக ஆரவாரம் திக்குகளில் எதிரொலிக்க, பூமியே நகர்ந்து விட்டது போலும், ஆகாயம் வெடித்துச் சிதறியது போலவும் இருக்க, ராக்ஷஸ வீரர்களை பயம் சூழ்ந்து கொண்டது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நிகும்ப4 வத4ம் என்ற எழுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 78 (485) மகராபி4ஷேணனம் (மகராக்ஷன் போருக்கு வருதல்)
நிகும்பனும் உயிரிழந்தான். கும்பனும் மாண்டான் என்ற செய்தி கேட்டு ராவணன் தன்னுள் குமைந்தான். அக்னி தானே வளருவது போல அவன் ஆத்திரம் வளர்ந்தது. சோகமும், க்ரோதமும், அந்த ராக்ஷஸ வீரனை அலைக்கழித்தன. க2ரனுடைய மகனான, விசாலமான கண்களையுடைய மகராக்ஷனை அழைத்தான். மகனே, போய் வா. என் கட்டளைப்படி பெரும் படையுடன், ராகவ, லக்ஷ்மணர்களையும் அந்த வானர கூட்டத்தையும் அழித்து விட்டு வா. கரன் மகன், இதைக் கேட்டு, வீரனானதால், உடனே சரி என்று சொல்லி போருக்கு கிளம்பினான். தசக்ரீவனை வணங்கி, பிரதக்ஷிண நமஸ்காரங்களை செய்து விட்டு, வெண் நிற மாளிகையான தன் வீட்டிலிருந்து, ராவணன் கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான். நல்ல பலசாலியான அவன், தன் அருகில் இருந்த படைத் தலைவனைப் பார்த்துச் சொன்னான். ரதத்தை தயார் செய். போர் வீரர்களை அழைத்து வா. சீக்கிரம். இதைக் கேட்டு படைத் தலைவனும் ரதத்தை உடனே கொண்டு வந்து நிறுத்தி, வீரர்களையும் ஒன்று சேர்த்து போருக்கு ஆயத்தங்கள் செய்து விட்டான். ரதத்தில், பிரதக்ஷிணம் செய்து வணங்கி நின்ற மகராக்ஷன், சாரதிக்கு சீக்கிரம் செல்லப் பணித்தான். ராக்ஷஸர்களைப் பார்த்து மகராக்ஷன் தன் திட்டத்தை விவரித்தான். நீங்கள் அனைவரும் முன் நின்று யுத்தம் செய்யுங்கள். நான் பின்னால் நிற்கிறேன். ராவண ராஜா எனக்கு ராம, லக்ஷ்மணர்களை வதம் செய்ய உத்தரவிட்டிருக்கிறார். நான் இன்று ராமனை வதைப்பேன். லக்ஷ்மணனையும் வதைப்பேன். சாகாமிருகமான மரக் கிளைகளில் வசிக்கும் மிருகம் சுக்ரீவனை நாசம் செய்வேன். வானர சைன்யத்தை இல்லையென்று ஆக்குவேன். உலர்ந்த கட்டையை அக்னி எரிப்பது போல இன்று எதிரிகளை என் சூலத்தால் (அழிப்பேன்) எரிப்பேன். வீரர்கள், பலசாலிகள், பல விதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு வந்து கூடினர். விருப்பம் போல வடிவம் எடுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். கூர்மையான பற்களும், மஞ்சள் நிறக் கண்களும் உடையவர்கள். பெரிய யானை போல உருவமும், தலையை விரித்து போட்டபடி, யானையைப் போலவே பிளிறுவதுமாக, பயங்கரமாக காட்சியளித்தனர். மகராக்ஷனும் பெரிய சரீரம் உடையவனே. அவனை சூழ்ந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் போருக்கு புறப்பட்டனர். பூமி அதிர நடந்து, சங்கம், பேரீ இவைகள் ஆயிரக் கணக்காக முழங்க, தங்கள் வாயாலும், கோஷங்கள் செய்து, தோள் தட்டும் ஓசைகளாலும் பெரும் சப்தம் எழச் செய்து கிளம்பிய சமயம், எதிர்பாராது, சாரதியின் கையிலிருந்து சாட்டை கீழே விழுந்தது. த்வஜம் சரிந்தது. ரதத்தில் பூட்டப் பட்ட குதிரைகள் ஏனோ கண்களில் நீருடன், மெதுவாக நடந்தன. காற்று புழுதியை சுமந்து வந்தது. பலமாக வாரியிறைத்தது. மகராக்ஷன் போருக்கு கிளம்பும் சமயம் இவை கெட்ட நிமித்தங்களாக கருதப் படும், நிகழ்ச்சிகள் ராக்ஷஸர்களின் உற்சாகத்தை அடக்கி விட்டது. மௌனமாக மனதில் யோசனையோடு நடந்தார்கள். ராம லக்ஷ்மணர்கள் இருக்கும் இடம் வந்தனர். மேகமோ, யானையோ, எருமையோ, எனும்படி, கரிய நிறத்தினர். க3தை4 முதலிய ஆயுதங்களை சுழற்றிக் கொண்டு போர் முனையில் நின்றவர்கள், நான் நான் என்று முந்திக் கொண்டு யுத்தம் செய்ய ஆவல் நிறைந்த வீரர்கள் குழப்பத்துடன் நடந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மகராபிஷேணனம் என்ற எழுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 79 (486)மகராக்ஷ வத4: (மகராக்ஷனை வதம் செய்தல்)
மகராக்ஷன் கிளம்பி விட்டான் என்று அறிந்ததும், வீரர்கள் உற்சாகம் அடைந்தவர்களாக ஆனார்கள். இதன் பின் அந்த வானர சைன்யத்துடன் யுத்தம் ஆரம்பித்தது. வானர, ராக்ஷஸ யுத்தம் பயங்கரமாக நடந்தது. தேவ, தானவ யுத்தம் போல தொடர்ந்தது. ஒரு புறம், மரங்கள் கற்களே ஆயுதமாக வந்து விழ, மற்றொரு பக்கம் சூலமும், பரிகமும் வீசப் பட்டன. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ராக்ஷஸர்களிடம் ஆயுதங்கள் பலவும் இருந்தன. சக்தி,வாள், க3தை4 குந்த3, தோமரங்கள், பட்டஸங்கள், பிண்டி பாலங்கள், இவைகளைக் கொண்டு விடாமல் அடித்தனர். பாசத்தாலும், உத்கர தண்டங்களாலும் மற்றவர் அடித்தனர். வானர சேனையை ஒரு கலக்கு கலக்கி விட்டனர். கரனுடைய மகன் இடைவிடாது பொழிந்த பாணங்களால் வருந்திய வானர வீரர்கள், பயம் துரத்த ஓடினார்கள். ஓடும் வானர வீரர்களைப் பார்த்து ராக்ஷஸர்கள் உரக்கச் சிரித்தனர். சிங்க நாதம் செய்தனர். ஓடி வரும் வீரர்களை எதிர் கொண்ட ராமர், அவர்களைத் தடுத்து ராக்ஷஸர்களை தானே போரில் சந்திக்க வந்தார். அவருடைய பாணங்கள் ராக்ஷஸர்களின் ஆயுதங்களுக்கு தடையாக நின்றன. ராக்ஷஸர்களின் முன்னேற்றம் தடைப் பட்டதைக் கண்டு, மகராக்ஷன் ஆத்திரம் கொண்டான். யாரது ராமன்? என் தந்தையைக் கொன்றவன். அவன் எங்கே? ஜனஸ்தானம் வந்து என் தந்தையையும், அவனுடன் சென்றவர்கள் அனைவரையும் ஒன்றாக நாசம் செய்த துர்புத்தி எங்கே? இன்று அவனை நான் யமலோகம் அனுப்புகிறேன். அவன் ப3ந்து4க்கள் எல்லோரும் யுத்த பூமியில் மடிய அவனும் இன்று அழிவான். பாருங்கள் ராக்ஷஸர்களே, இன்று ராமனையும் அவன் சகோதரன் லக்ஷ்மணனையும் வதம் செய்து அவர்கள் படை பலத்தையும் நாசம் செய்து அந்த ரத்தம் கொண்டு என் தந்தைக்கு நீர்க்கடன்களைச் செய்வேன். என்றான். சொன்னபடி அந்த ராக்ஷஸ குமாரன், ராமனுக்கு காட்ட விரும்பியது போல, தன் பலம் அனைத்தையும் பிரயோகம் செய்தான். ராமனைத் தவிர வேறு யாரிடமும் நான் யுத்தம் செய்ய மாட்டேன். மற்ற வீரர்களே, தள்ளி நில்லுங்கள். என்று அறை கூவினான். மேக நாதம் போல சப்தம் செய்யும் ரதத்தை ஓட்டிக் கொண்டு, யுத்த பூமியில், ராமனைத் தேடினான். சற்றுத் தொலைவில் ராமனும் அருகில் லக்ஷ்மணனும் நிற்பதைக் கண்டு, கைகளை ஆட்டி அவர்களை அழைத்தான். ராமா, நில். என்னுடன் த்வந்த யுத்தம் செய்ய வா. என் கூர்மையான அம்புகள் வில்லிலிருந்து புறப்பட்டு உன் உயிரைக் குடிக்க காத்திருக்கின்றன. என் தந்தையை தண்டகா வனத்தில் நீ கொன்றது போல, இப்பொழுது நான் உன்னை மாய்க்க காத்திருக்கிறேன். உன் செயலையே நான் திருப்பப் போகிறேன். என்னுள் தோன்றும் ஆத்திரம் என் உடலை தகிக்கிறது. துராத்மாவே, ராகவா, அந்த யுத்தம் நடந்த சமயம் நான் இருக்கவில்லை. அதனால் என்னை நீ அறிய மாட்டாய். இன்று அதிர்ஷ்ட வசமாக என் கண்ணில் பட்டாய். வசமாக அகப்பட்டுக் கொண்டாய். பசித்து நிற்கும் சிங்கத்தின் முன் மற்ற மிருகங்கள் தானே வந்து நிற்பது போல நிற்கிறாய். இன்று என் பாணங்களுக்கு இரையாகப் போகிறாய். உன்னால் கொல்லப் பட்ட வீரர்களுடன் இன்று நீயும் போய் சேர்ந்து கொள். பேசிப் பயன் என்ன? நான் சொல்வதைக் கேள். இந்த உலகம் பூராவும் பார்த்து களிக்கட்டும். நீயும் நானும், யுத்த பூமியில் த்வந்த யுத்தம் செய்வோம். வா. ராமா, எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள். அஸ்திரங்களா, க3தை4யா, இல்லை கைகளே போதுமா? நீ சொல்வது போல நானும் தயாராக வந்து விடுவேன். மேலும் மேலும் பேசிக் கொண்டே போகும் மகராக்ஷன் வார்த்தைகளைக் கேட்டு ராமர் சிரித்துக் கொண்டே ராக்ஷஸ குமாரனே, ஏன் வீணாக பிதற்றுகிறாய். யுத்தத்தில் வாய் ஜாலத்தால் ஜயிக்க முடியாது. நேரடியாக களத்தில் இறங்கி யுத்தம் செய்து பார். பொருத்தம் இல்லாமல் பேசுகிறாயே. பதினாலாயிரம் ராக்ஷஸர்களுடன் உன் தந்தையை, த்ரிசிரஸ், தூ3ஷணன் இவர்களை நான் தனி ஒருவனாக வதம் செய்தேன். நீயும் என் கையால் வதம் செய்யப் பட்டு ஆகாயத்தில் சஞ்சரிக்கும் மாமிச பக்ஷிணிகளான பறவைகளுக்கு இரையாகப் போகிறாய். எனவும், மகராக்ஷன் தன் பாணங்களை ஒன்றன் பின் ஒன்றாக பிரயோகிக்க ஆரம்பித்தான். ஆயிரக்கணக்கான அந்த பாணங்களை, தன் அருகில் விழுமுன், ராமர் தடுத்து, சிதறி விழச் செய்தார். கரனுடைய மகனுக்கும், தசரத குமாரனுக்கும் இடையில் நடந்த இந்த யுத்தம் விசித்ரமாக இருந்தது. ஆகாயத்தில் மேகங்கள் கர்ஜிப்பது போல இருவரின் வில்லில் இருந்து பாணங்கள் வெளிப்படும் ஓசை அந்த ரண பூமியை நிறைத்தது. இந்த அத்புத காட்சியைக் காண, தே3வ, தா3னவ, க3ந்த4ர்வர்கள், கின்னர, மகோரர்கள், அந்தரிக்ஷத்தில் நின்று வேடிக்கை பார்க்கலாயினர். இருவரும், பாணங்களால் அடிக்க, உடலில் தைத்த அம்புகள் ஏற்படுத்திய காயங்களைப் பொருட்படுத்தாமல், யுத்தம் தொடர்ந்து நடந்தது. ராமரது வில்லிலிருந்து புறப்பட்ட பாணங்களை அந்த ராக்ஷஸ சிறுவன், தடுத்து விட்டான். அவனுடைய பாணங்களை ராமரும் பலமுறை தடுத்துச் சிதறச் செய்தார். ஆத்திரத்துடன் மகராக்ஷனும் சளைக்காமல் யுத்தம் செய்தான். ஆகாயமே இந்த இருவரின் பாணப் பிரயோகங்களால் மறைந்து விட்டது போல கண்ணுக்குத் தெரியாமல் ஆயிற்று. திசைகளும் தெரியவில்லை. எட்டு நாராசமான பாணங்களால் மகராக்ஷனின் சாரதியை விழச் செய்தார், ராமர். அடுத்து வந்த பாணங்களால் ரதம் உடைந்து விழுந்தது. குதிரைகள் ஓடின. தரையில் நின்ற மகராக்ஷன், சூலத்தை கையில் எடுத்துக் கொண்டான். யுகாந்தாக்னி போல இருந்த அந்த சூலம் உலகத்து ஜனங்களை பயமுறுத்தியது. அதை ராகவன் பேரில் மகராக்ஷன் எய்தான். கர புத்திரனின் அந்த சூலம் ஆகாயத்திலேயே துண்டு துண்டாக சிதறும் படி ராம பாணம் எதிர் கொண்டது. ஆகாயத்தில் யுத்தத்தைக் காண நின்றிருந்தவர்கள், சாது, சாது என்று பாராட்டினர். சூலமும் கை விட்டுப் போனபின், முஷ்டியை மடக்கிக் கொண்டு மகராக்ஷன் முன் வந்தான். காகுத்ஸனைப் பார்த்து, நில், நில் என்று அலறினான். இப்படி ஓடி வரும் மகராக்ஷனைப் பார்த்து ராமர் சிரித்தபடி, பாவகாஸ்திரத்தை தன் மனதில் தியானித்து, வில்லில் பிரயோகித்து எய்தார். அந்த அஸ்திரம் ராக்ஷஸனை யுத்த பூமியில் மடிந்து விழச் செய்தது. மகராக்ஷன் மடிந்ததைக் கண்டு ராக்ஷஸ சைன்யம் லங்கையை நோக்கி ஓடி விட்டது. தசரதன் மகனும், ராக்ஷஸனான கரனின் மகனும் செய்த யுத்தத்தையும், மகராக்ஷன் மடிந்து விழுந்ததையும் கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். முன் ஒரு சமயம் வஜ்ராயுதத்தால், மலைகள் நொறுங்கியது போல இந்த காட்சியை நினைத்து மகிழ்ந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மகராக்ஷ வத4: என்ற எழுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 80 (487) திரோஹித ராவணி யுத்தம் (ராவணன் குமாரன், மறைந்திருந்து போர் செய்தல்)
மகராக்ஷன் போரில் மாண்டதைக் கேட்டு, ராவணன் பற்களை நற நறவென்று கடித்தான். கோபம் தலைக்கேறியது. வெற்றியே கண்டு வந்த அவனால் இந்த தோல்வியைத் தாங்க முடியவில்லை. மேற் கொண்டு என்ன செய்வது என்று யோசித்தான். யுத்தம் செய்ய தன் மகன் இந்திரஜித்தை அழைத்து உத்தரவிட்டான். வீரனே, இந்த ராம, லக்ஷ்மணர்களை போரில் வதம் செய்து விட்டு வா. இரண்டு விதங்களிலும் நீ உன் பலத்தைக் காட்டி யுத்தம் செய். இந்திரனையே ஜயித்தவன் நீ. அரிய காரியங்களை செய்யக் கூடியவன். இந்த மனிதர்களை போரில் வெல்வது உனக்கு கடினமான காரியமே அல்ல. தந்தையின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொண்டான் ராவணி, ராவணன் மகன், இந்திரஜித். போருக்குப் புறப்பட்டான். யாக சாலையில் அக்னி வளர்த்து ஹோமம் செய்து முறைப்படி பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டான். அவன் ஹோமம் செய்து அக்னியை வளர்த்துக் கொண்டிருக்கும் பொழுது தலையில் முக்காடு தரித்த ஸ்த்ரீகளும், ராக்ஷஸிகளும் வந்து சேர்ந்தனர். சிவந்த வஸ்திரங்களும், எண்ணெய் பிசுக்கு, (நெய்யில் எப்பொழுதும் ஊறிக் கிடப்பதால்) பிடித்த கரண்டிகளும், சஸ்திரங்களும், இலை வடிவில் நுனியுடைய சரங்கள், சமித் இவைகளை அக்னியில் ஹோமம் செய்து, தோமரங்களும், சரங்களாலும் அக்னியை நாலா புறமும் அலங்கரித்து, யக்ஞ பசுவை, கறுப்பு ஆட்டை உயிருடன் கழுத்தை நெரித்து பலி கொடுத்து, புகையின்றி அக்னி கொழுந்து விட்டெரிய அதில் சர ஹோமம் முறைப்படி செய்து, வெற்றியைக் குறிக்கும் நல்ல சகுனங்கள் தோன்ற, இந்திரஜித் மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அக்னி பிரதக்ஷிணமாக சுழன்றது. ஹாடக எனும் தங்க வர்ணத்தில் பிரகாசமாக இருந்தது. அக்னி தானே வந்து ஹவிஸை ஏற்றுக் கொண்டான். தேவ, தானவ ராக்ஷஸர்களுக்கு தானங்கள் செய்து, அக்னியை வணங்கி, சுபமான ரதத்தில் ஏறி அந்தர்தானம் ஆனான். (யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து நின்றான்). நான்கு குதிரைகள் பூட்டிய ரதம், கூர்மையான பாணங்கள் நிரப்பப் பெற்று, தயாராக நாண் ஏற்றி வைக்கப் பட்டிருந்த வில்லுடன் அந்த உத்தமமான ரதம், மிகவும் சோபையுடன் விளங்கியது. தன் சரீர காந்தியாலேயே ஒளி மயமாக இருந்த இந்திரஜித், ப்ரும்மாஸ்திரம் இவனுக்கு பாதுகாவலாக இருந்தது என்ற காரணத்தால், யாராலும் வெல்ல முடியாது என்ற நிலையில், சொல்ல முடியாத அளவு பலசாலியாக விளங்கினான். யுத்தத்தில் வெற்றியே கண்டு வந்த இந்திரஜித், நகரத்தை விட்டு வெளி வந்தான். அந்தர்தானத்தில் இருந்தபடியே, மந்திரி வர்கங்களுடன் பேசினான். இன்று காட்டில் திரியும் அந்த இரு போலி வீரர்களைக் கொன்று விட்டுதான் திரும்புவேன். என் தந்தை ராவணனுக்கு யுத்தத்தில் வெற்றியை பெற்றுத் தருவேன். இன்று ராமனைக் கொன்று. இந்த பூமியை வானரங்களே இல்லாது போகச் செய்வேன். லக்ஷ்மணனையும் கூடவே வதம் செய்து விடுவேன். அப்பொழுது தான் என் தந்தை முழுவதும் திருப்தியடைந்தவனாக ஆவார். என்று சொல்லி தீவிரமாக யுத்தத்தில் இறங்கினான். தந்தை சொல்லியிருந்தபடி, வெற்றி அல்லது வீர மரணம் என்று நாராசமாக, கூரிய பாணங்களை மழையாக பொழியலானான். ஆகாயத்திலிருந்து அந்த வீரர்கள் இருவரும் மூன்று தலை நாகங்களாகத் தெரியக் கண்டான். வானரங்களின் நடுவில் நின்று கொண்டு, புது புது அம்புகளை தயார் செய்து கொண்டிருக்கக் கண்டான். இவர்கள் தான் என்று நிச்சயம் செய்து கொண்டு, தன் வில்லை எடுத்து குறி பார்த்து, மழை பொழிவது போல பாணங்களை பொழிய ஆரம்பித்தான். ராம லக்ஷ்மணர்கள் கண்களுக்கு புலனாகாதபடி, அந்தரிக்ஷத்தில் நின்று கொண்டு, ரதத்தில் இருந்தபடி, கூர்மையான சரங்களால் ராம, லக்ஷ்மணர்களை அடிக்கலானான். நாலா புறமும் சரங்களாக அவர்களை சூழ்ந்து நிற்கவும், திவ்யமான அஸ்திரங்களை தங்கள் வில்லில் வைத்து பிரயோகம் செய்யலானார்கள். ஆகாயமே மறைந்து போகும்படி சரஜாலத்தை செய்து விட்டனர். சூரியனுக்கு இணையான அந்த வலை பின்னப்பட்டதால், இந்திரஜித்தின் சரங்கள் அவர்களை நெருங்க முடியவில்லை. திசைகள் மறைய அந்தகாரம் சூழ்ந்தது போல இருந்தது. புகையும், இருட்டும் ஆகாயத்தை மறைத்தன. வில்லின் நாணை இழுத்த சப்தமோ, அம்பு விர்ரென்று புறப்பட்ட சப்தமோ எதுவுமே கேட்கவில்லை. எய்பவனையும் தெளிவாக காண முடியவில்லை. கும்மென்ற இருட்டில் மலையிலிருந்து கல் மழை பொழிவது போல இருந்தது. அத்புதமாக, சரங்களை ராமர் இடைவிடாது எய்த வண்ணம் இருந்தார். வர பலத்தால் ராவணி, ராமரை தன் ஒளி மயமான கூர்மையான அம்புகளால் துளைத்தெடுத்தான். இருவரும் தங்கள் உடலில் பட்ட அம்புகளால் ஏற்படும் வேதனையை சற்றும் காட்டிக் கொள்ளாமல் பிரதி யுத்தம் செய்தனர். அந்தரிக்ஷத்திலும், ராவணியை அடைந்து அவனைத் தூக்கி ரத்தம் சொட்ட விழுந்தன அம்புகள். இடைவிடாது சரங்களால் அடிபட்டு களைத்த வீரர்களான ராம லக்ஷ்மணர்கள், இப்படி திரும்பி வரும் அம்புகளையும் சிதறி விழச் செய்ய வேண்டி இருந்தது. கூர்மையான அம்புகள் விழ, விழ, தசரத குமாரர்கள் இருவரும் புது புது அம்புகள், சஸ்திரங்களை தயார் செய்த வண்ணம் இருந்தனர். ராவணியோ, தன் ரதத்தில் மூலைக்கு மூலை தாவி ஆகாயத்தில் இருந்தபடி, சுலபமாக அஸ்திரங்களை கொண்டு ராகவர்களை தாக்கினான். கிம்சுக புஷ்பங்கள் உடல் பூரா மலர்ந்தது போல காயங்கள் சிவந்த ரத்த பெருக்குடன் காணப்பட்டது. இந்திரஜித்தின் இருப்பிடமும் தெரியவில்லை. அவன் வேகமும் பிடிபடவில்லை. உருவமும் கண்ணுக்கு புலப்படவில்லை. வில்லா, அம்பா, எப்பொழுது எப்படி எய்கிறான் என்பது எதுவுமே புரியவில்லை. சூரியன் மேகங்கள் நிறைந்த ஆகாயத்தில் தென்படாதது போல இருந்தது. வானரங்கள் நிலையோ கேட்கவே வேண்டாம். அனேகமாக எல்லா வானரங்களுமே அடிபட்டு, பூமியில் விழுந்து விட்டனர். லக்ஷ்மணன், சற்று கோபத்துடன், ராமரைப் பார்த்து, ப்ரும்மாஸ்திரம் விட்டு, ராவண குமாரனை வதம் செய்யப் போகிறேன் என்றான். ராமர் லக்ஷ்மணனைப் பார்த்து, பொறு, ஒருவனுக்காக ப்ரும்மாஸ்திரத்தை பிரயோகம் செய்து உலகத்தையே துன்பத்தில் ஆழ்த்தக் கூடாது. சண்டை செய்யாதவன், மறைந்து நிற்பவன், கை கூப்பி சரணடைந்தவன், ஓடிக் கொண்டிருப்பவன், புத்தி பேதலித்தவன், இவர்களைக் கொல்லக் கூடாது என்பது யுத்த தர்மம். இவனை வதம் செய்ய என்ன வழி என்று யோசிப்போம். நாம் நம் கையில் உள்ள மகா வேகமான அஸ்திரங்களை, ஆல கால விஷத்தைக் கக்குவது போல கூர்மையான சரங்களை எய்வோம். ரதத்துடன் ஒளிந்து கொண்டு, மாயா யுத்தம் செய்யும் இவனைக் கண்டு பிடிப்போம். கண்ணில் தென்பட்டால் நம் வானர வீரர்களே அவனைக் கொல்லக் கூடிய சக்தி உடையவர்களே. இவன் பூமியில் இறங்கட்டும். தேவ லோகமானாலும் சரி, பாதாளமானாலும் சரி, இப்படி ஒளிந்து கொண்டாலும் என் அம்புகள் கண்டு கொண்டு பூமியில் விழச் செய்து விடும். சுற்றிலும் வானர வீரர்கள் சூழ்ந்திருந்த சமயம், ராமர் பொதுவாக எல்லோருக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக பேசி விட்டு, க்ரூர கர்மா-கொடிய செயலைச் செய்பவனான இந்திரஜித்தை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி யோசிக்கலானார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் திரோஹித ராவணி யுத்தம் என்ற எண்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 81 (488) மாயா சீதா வத4: (மாயா சீதையை வதம் செய்தல்)
ராகவனுடைய எண்ணத்தை புரிந்து கொண்டு விட்ட இந்திரஜித் யுத்தத்தை நிறுத்தி விட்டு ஊருக்குள் வந்தான். தங்கள் சுற்றத்தாரையும், உற்றாரையும் ராம சைன்யம் வதம் செய்ததை நினைத்து மேலும் மேலும் ஆத்திரம் அடைந்தான். மேற்கு வாசல் வழியாக, சில ராக்ஷஸர்களுடன் வெளி வந்தான். தேவர்களுக்கு முள் போல உருத்திக் கொண்டு துன்பம் விளைவித்து வந்த இந்திரஜித் புலஸ்திய வம்சத்து வழியில் வந்த வீரனான இந்திரஜித், யுத்தம் செய்யத் தயாராக நின்ற ராம லக்ஷ்மணர்களைப் பார்த்து, பொருமினான். திரும்பவும் மாயா ஜாலத்தை செய்ய ஆரம்பித்தான். சீதையைப் போன்ற ஒரு மாயா தோற்றத்தை உருவாக்கி ரதத்தில் வைத்துக் கொண்டு பலவந்தமாக அவளை வதம் செய்வது போல செய்தான். பார்த்தவர்கள் மனம் கலங்கி நிற்கவும் அவர்கள் கவனத்தை திசை திருப்பும் விதமாகவும், கோணல் புத்தியூடன் வானர வீரர்கள் முன்னிலையில் ரதத்தை ஓட்டிக் கொண்டு சென்றான். ஊரை விட்டு வெளியேறும் இந்திரஜித்தைப் பார்த்து ஹனுமான் முதலான வானரங்கள் கற்களைத் தூக்கிக் கொண்டு பின் தொடர்ந்து சென்றன. அருகில் சென்று அடிக்க முயன்ற பொழுது ரதத்தில் முகம் வாடி சீதை இருப்பதைக் கண்டு திகைத்தன. ராகவ பத்னியான சீதை, ஒற்றைக் குழலுடன், உபவாசத்தால் இளைத்து போன உருவமும், கசங்கிய ஆடையுடன், நேர்மையே உருவானவள், உடல் புழுதி படந்து இருக்க, மைதிலி தானா என்று ஒரு நிமிஷம் கூர்ந்து பார்த்து தெரிந்து கொண்டு, நின்றன. மற்ற வானரங்கள் எப்பொழுதோ ஒரு முறை பார்த்தது தான். ஹனுமான் ஒருவனே சமீபத்தில் கண்டவன். கண்ணீரை பெருக்கிய ஹனுமான், களைத்து, இளைத்து கிடந்த சீதை ரதத்தில் இருப்பதைக் கண்டு பதறினான். சோகத்துடன், ராவண ராஜ புத்திரனின் ரதத்தில், தவமே உருக் கொண்டாற் போல சீதை நிற்பதைக் கண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபடி மற்ற வானரங்களுடன், அந்த ரதத்தை தாக்கலாயினர். வானர சைன்யம் தாக்குவதைக் கண்டு, ஆத்திரத்துடன், இந்திரஜித் சீதையின் தலையில் ஒரு அடி அடித்தான். க்ரூரமாக அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பலமாக உடல் பூரா அடித்தான். ராம, ராம என்று அலறுவது போல, மாயையால் ஸ்ருஷ்டி செய்தான். தலை கேசத்தைப் பிடித்து மூர்கமாக, இந்திரஜித் அடிப்பதைப் பார்த்து ஹனுமான் செய்வதறியாது, கண்களில் நீர் பெருக நின்று விட்டான். ராக்ஷஸ ராஜ குமாரன் கையில் அவஸ்தைப் படும் சீதையைப் பார்த்து மிகுந்த ஆத்திரத்தோடு ராவணியைப் பார்த்து கத்தினான். துராத்மன், உனக்கு என்ன நேர்ந்தது? தன் விநாசத்திற்காக நீ இவள் கேசத்தை பற்றியிருக்கிறாய். தெரிந்து கொள். ப்ரும்ம ரிஷி குலத்தில் பிறந்தவன், ராக்ஷஸ வம்சத்தில் வந்தவன், நல்ல குலத்தில் பிறந்த நீ செய்யும் செயலா இது? தி4க் த்வாம் (இது ஒரு வசைச் சொல்) பாபத்தைச் செய்ய துணிந்தவனே, உன் புத்தி இவ்வளவு கீழ்த் தரமாக ஏன் போகிறது? க்ரூரனே, பண்பை இழந்தாயோ. இப்படி ஒரு தகாத செயலை செய்கிறாயே, அல்பனே. உனக்கு பராக்ரமம் என்று ஏதாவது இருக்கிறதா? பாபியே, இதை விட மட்டமாக எந்த ஒருவனாலும் நடந்து கொள்ள முடியாது. அல்பனே, வீட்டிலிருந்து, ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப் பட்டு வனம் வந்த ராமனுடன் வந்தவள், அவனிடமிருந்தும் அபகரித்துக் கொண்டு வரப்பட்டவள், கொல்லப் படுகிறாள். இவள் உனக்கு என்ன அபராதம் செய்தாள் என்று இவளைக் கொல்ல முயற்சிக்கிறாய். சீதையைக் கொன்று விட்டு நீ வெகு காலம் வாழ்ந்து விடுவாயோ, இதோ இந்த ஒரு செயலுக்காகவே, என் கைகளில் வந்து விழுந்து விட்டாய். இது போல ஸ்த்ரீகளை வதம் செய்பவர்கள், திருடர்களை விட அல்பமானவர்கள். பதினான்கு லோகங்களிலும், அவமதிக்கப் பட்டு வதம் செய்ய தகுந்தவர்கள். இங்கு இப்பொழுது உயிர் வாழ ஆசைப்பட்டு, பர லோகத்தில் இம்சைகளை சேர்த்து வைத்து அனுபவிக்கப் போகிறாய். இவ்வாறு சொல்லிக் கொண்டே ஹனுமான், ஆயுதம் தாங்கிய வானர வீரர்களோடு இந்திரஜித்தை கடுமையாகத் தாக்கினான், மேலே வந்து விழுந்த வானரத்தைக் கண்டு ராக்ஷஸ வீரர்களின் படை அவர்களைத் தடுத்தது. ஆயிரக் கணக்கான பாணங்களை வர்ஷித்து விட்டு வானர சைன்யத்தை கலக்கி விட்டு செயலற்று அவர்கள் நிற்கையிலேயே, ஹரி ஸ்ரேஷ்டனான (ஹரி-வானரம்) ஹனுமானைப் பார்த்து இந்திரஜித் பேசலானான். சுக்ரீவனும், நீயும், ராமனும் என்ன காரணத்திற்காக இங்கு வந்து கூடியுள்ளீர்களோ,அந்த வைதேஹியைக் கொன்று விடுகிறேன். இதோ நீ பார், உன் எதிரிலேயே கொல்கிறேன். இவளைக் கொன்ற பின், ராமனையும் லக்ஷ்மணனையும் உன்னையும் சுக்ரீவனையும் கொல்வேன். அந்த துரோகி விபீஷணனையும் கொல்வேன். வானரமே, ஸ்த்ரீயைக் கொல்லக் கூடாது என்று எனக்கு உபதேசம் செய்ய வந்தாயா, உபத்ரவம் செய்யும் எதுவானாலும், யாரானாலும் கொல்லத் தகுந்ததே. இப்படி சொல்லிக் கொண்டே, அழுது கொண்டு நிற்கும் சீதையை கூர்மையான வாளால் தானே கொன்றான். யக்ஞோபவீதம் போல குறுக்காக அவளை வெட்டி சாய்த்து விட்டான். மாயா சீதையான அந்த உருவம் பூமியில் விழுந்தது. தானே அவளைக் கொன்று விட்டு, ஹனுமானைப் பார்த்து இந்திரஜித், இதோ பார், ராமனுடைய பத்னியை நான் கொன்று விட்டேன். இனி உங்கள் சிரமங்கள் எல்லாம் வீணே. என்ன செய்வீர்கள்? என்று சொன்னபடி, ரத்தம் தோய்ந்த வாளுடன் ரதத்தில் ஏறி இந்திரஜித் கிளம்பி விட்டான். ரத சப்தம் தேய்ந்து, தொலை தூரம் சென்று விட்டதை சப்தத்தால் அறிந்து கொண்ட வானரங்கள், முகம் வாடி, ஓடலாயினர். இந்திரஜித்தோ, மிக்க மகிழ்ச்சியோடு இருப்பது போலக் காட்டிக் கொண்டு மறைந்து விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மாயா சீதா வதோ4 என்ற எண்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 82 (489) ஹனுமதா3தி நிர்வேத3: (ஹனுமான் முதலானோர் வருந்துதல்)
திடுமென பெரும் ஓசை, சக்ரனான இந்திரனின் அசனி எனும் ஆயுதம் விழுந்தது போல கேட்கவும், வானர வீரர்கள் பயந்து நடுங்கி ஓடலாயினர். நாலா புறமும் பார்த்து எதுவுமே புலனாகாத நிலையில் திகைத்தனர். வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்த வானரங்களைப் பார்த்து, தாறு மாறாக அவைகள் ஓடுவதை நிறுத்தி, ஹனுமான் அவர்களிடம் எதற்காக ஓடுகிறீர்கள் என்று அதட்டினான். நல்ல வீரர்கள், யுத்தத்தை பாதியில் விட்டு ஓடுவது என்ன சூரத்தனம். என் பின்னால் வாருங்கள். நான் முன்னால் செல்கிறேன். சூரர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு, ரண பூமியிலிருந்து திரும்பி செல்லக் கூடாது. வாயு புத்திரன் இவ்வாறு உற்சாகமூட்டும் விதமாக பேசவும், கைக்கு கிடைத்த கற்கள், மரக் கிளைகள் இவற்றுடன் மகிழ்ச்சியாக போர் செய்ய தயாராக உற்சாகத்தை வருவித்துக் கொண்டு கிளம்பினார்கள். மீதியிருந்த ராக்ஷஸர்களைத் தாக்கி, நாலா புறமும் சூழ்ந்து கொண்டு யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். ஹனுமான் சொன்னபடி செய்ய வானரங்கள் காத்திருந்தன. இவர்களுடன் சென்ற ஹனுமான், உலர்ந்த கட்டையை அக்னி எரிப்பது போல, ராக்ஷஸ சைன்யத்தை தகிக்கலானான். காலாந்தகனோ, யமனோ எனும் படி, பயங்கரமாக போர் செய்து, ராக்ஷஸ சேனையை கலக்கி அழிக்க ஆரம்பித்தான். கோபமும், சோகமும் சேர்ந்து ஹனுமானை ஆட்டுவிக்க, பெரிய பாறாங்கல்லை எடுத்து இந்திரஜித்தின் ரதத்தின் மேல் வீசினான். கல் வருவதைப் பார்த்தே, சாரதி ரதத்தை வெகு தூரம் நகர்த்திச் சென்று விட்டான். இந்திரஜித்தை நெருங்காமலேயே அந்த கல் பூமியை பறித்துக் கொண்டு விழுந்தது. அந்த சமயம் அதன் அடியில் அகப்பட்டுக் கொண்ட ராக்ஷஸர்கள் நசுக்கப் பட்டார்கள். பலர் காயங்களோடு தப்பினர். வானரங்கள் கூட்டமாக மேலும் மேலும் கற்களை வீசியும் மரக்கிளைகளால் அடித்தும் ராக்ஷஸர்களை துன்புறுத்தினர். தன் வீரர்கள் அடிபட்டு வருந்துவதைக் கண்ட இந்திரஜித், ஆயுதத்தை எடுத்துக் கொண்டு எதிரில் வந்தான். தன் ராக்ஷஸ வீரர்களின் மத்தியில் நின்று கொண்டு சர மாரியாக வானரர்களைத் தாக்கி அடிக்க ஆரம்பித்தான். பல வானரங்கள் விழுந்தன. சூலங்களும் அசனி, வாள், பட்டஸங்கள் கூட முத்கரங்கள் இவைகளால் வானரங்களை அடித்து நொறுக்கினார்கள். ஹனுமானும் கைக்கு கிடைத்த சால மரங்கள், கற்கள் இவற்றைக் கொண்டு திரும்ப அடித்தான். ராக்ஷஸ வீரர்கள் இந்த தாக்குதலுக்கு திணறினார்கள். எதிரி சைன்யத்தை தடுத்து நிறுத்தி வானரங்களைப் பார்த்து ஹனுமான், திரும்பி போங்கள் இந்த படை பலத்தை நம்மால் எதிர்த்து நின்று போர் செய்ய முடியாது. ராமனுக்காக உயிரை கொடுக்க சித்தமாக போரில் இறங்கினோம். எந்த காரணமாக யுத்தம் செய்கிறோமோ அந்த ஜனகாத்மஜா சீதையே நஷ்டமாகப் போன பின் நாம் உயிரை விட்டுத் தான் என்ன பயன்? போய் ராமனிடமும், சுக்ரீவனிடமும் சொல்லுங்கள். என்ன செய்ய சொல்கிறார்களோ அதைச் செய்வோம். இவ்வாறு சொல்லி வானர வீரர்களை, மெதுவாக, திரும்பிச் செல்லச் செய்தான். ஹனுமான் போர் முனையிலிருந்து நகர்ந்து ராமரிடம் ஆலோசனை கேட்கச் சென்றவுடன், இந்திரஜித் தான் செய்யும் யாகத்தை முடிக்க நிகும்பிளா எனும் இடம் சென்று விட்டான். அங்கு அக்னி வளர்த்து முறைபடி யாகத்தை செய்தான். யாக குண்டத்தில் அக்னியை வளர்த்து ராக்ஷஸ விதிபடி மாமிசம் முதலியவற்றை அர்ப்பித்து ஹோமம் செய்யவும் அக்னி கொழுந்து விட்டெரிந்தது, சந்த்யா கால சூரியன் போல அக்னி ஜ்வாலை ரம்யமாக இருந்தது. ராக்ஷஸர்களின் நன்மைக்காகவும் வெற்றிக்காகவும், இந்திரஜித் சங்கல்பம் செய்து கொண்டு நெய்யை விட்டு (ஹவ்யம்), விதிப்படி ஹோமம் செய்ய, சுற்றிலும் ராக்ஷஸர்கள் காவல் நின்றனர். நியாய அநியாயங்களை அறிந்த பல ராக்ஷஸர்கள் சூழ்ந்து நின்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஹனுமதா3தி நிர்வேத3: என்ற எண்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 83 (490) ராமாஸ்வாஸனம் (ராமரை சமாதானப் படுத்துதல்)
ராக்ஷஸ, வானரங்களின் பெரும் போர் எழுப்பிய கூச்சலும் ஆரவாரமும் கேட்டு, ஜாம்பவானிடம் ராமர் சொன்னார். சௌம்ய, ஹனுமான் தன் பராக்ரமத்தைக் காட்டுகிறான் போலும். என்ன சத்தம். ஜாம்பவானே, நீயும் போ. உன் சகாயமும் அவர்களுக்குத் தேவையாக இருக்கும். இதைக் கேட்டு கரடி ராஜன், உடனே கிளம்பிச் சென்றான். ஹனுமான் நின்றிருந்த மேற்கு வாயிலை, தன் சைன்யத்தோடு சென்றடைந்தான். ஹனுமான் திரும்பி வருவதைப் பார்த்து திகைத்து நின்றான். வானரங்கள் யுத்தம் செய்து களைத்து மேல் மூச்சு வாங்க தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ஹனுமான் சைன்யத்தோடு திரும்பி வருவதைக் கண்டு, தன் வீரர்களையும் தடுத்து, ராமர் இருக்கும் இடம் திரும்பினர். ஹனுமான் நாங்கள் யுத்தம் செய்து முன்னேறி நகர வாயிலை அடைந்த சமயம், அழுது கொண்டிருந்த சீதையை எங்கள் கண் முன்னாலேயே ராவணன் மகன் வெட்டி வீழ்த்தி விட்டான். எனக்கு அதைக் கண்ட பின் என்ன செய்வது என்றே தெரியவில்லை. உங்களிடம் விஷயம் தெரிவிக்க வந்தேன். இதைக் கேட்டு ராகவனும் துக்கத்தில் மூழ்கி, நினைவிழந்தான். வெட்டிச் சாய்த்த மரம் போல பூமியில் விழுந்தான். தேவ குமாரன் போன்ற ராமன், பூமியில் விழுந்ததைக் கண்ட வானர வீரர்கள் நெருங்கிச் சென்று சூழ்ந்து கொண்டனர். பத்மமும், உத்பலமும் வாசனை வீசும் சுகந்தமான நீரைத் தெளித்து மயக்கம் தெளியச் செய்தனர். திடுமென தோன்றிய தாங்க முடியாத அக்னி ஜ்வாலை தாக்கியது போல கிடந்தான்.
லக்ஷ்மணனும் விஷயம் அறிந்து திகைத்து நின்றான். தன் ஸகோதரனை அணைத்தவாறு சமாதானமாக பேசினான். எப்பொழுதும் நன்மையையே நினைத்து, நல்லதையே செய்யும் தாங்களை தங்கள் அனுஷ்டிக்கும் தர்மம் இது போன்ற அனர்த்தங்களில் இருந்து காப்பாற்றவில்லையானால், அந்த தர்மத்தால் என்ன பயன்? உபயோகமற்றது. ஆர்ய, தாங்கள் புலன்களை அடக்கி, தர்மம் தான் சிறந்தது என்று சொல்வீர்களே,. நமக்கு கிடத்தது என்ன? ஜீவன்களுக்கும், அசையாத தாவர, ஜங்கமங்களை கண்ணால் காண முடிவது போல, தர்மம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனாலேயே தர்மம் என்ற ஒன்று இல்லவே இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த தாவரங்களும் மற்றவையும் உதவுவது போலக் கூட தர்மம் காப்பாற்றுவது இல்லை. உங்களைப் போன்றோர் இவ்வளவு கஷ்டத்தை ஏன் அடைய வேண்டும்? இந்த தர்மம் சக்தியுடையதாக இருந்தால், அதர்மத்தைச் செய்யும் ராவணன் இன்னேரம் நரகம் போய் இருக்க வேண்டும். உங்களைப் போல் தர்ம வழியில் நிற்பவர்கள் இது போல கஷ்டத்தை அனுபவிக்கவும் நேரக் கூடாது. ராவணன் துக்கம் கஷ்டம் எதுவுமின்றி இருக்க, உங்களுக்கு மேலும் மேலும் துன்பமே வந்து சேருகிறது. தர்மமும், அதர்மமும் பரஸ்பர விரோதிகள்,இல்லையா? தர்மத்தைச் செய்பவன் நல்ல தர்ம சிந்தனையும், வழியையும் பெறுவான். அதே போல அதர்மத்தை செய்பவன் தண்டனை பெறுவான். இப்படி அதர்மமே உருவானவர்களுடன் அதர்ம வழியில் போர் எய்தால் என்ன? இந்த ஜனங்களிடம் தர்மம் எடுபடாது. அதர்மத்தில் ருசி கண்டவர்கள். தகாத இடத்தில் தர்மத்தை சொல்வதால் என்ன பயன், விபரீதமாகத் தான் ஆகிறது. இப்பொழுது நடந்தது போல. இப்படி அதர்ம வழியில் நடப்பவர்களிடம் செல்வமும், பொருளும் நிலைத்து நிற்கிறது என்பதைப் பார்க்கும் பொழுது, தர்மமே பயனற்றது என்று ஆகவில்லையா? அதர்ம வழியில் ஒருவன் சுகத்தை பெறுவானேயானால், தர்மம் எதற்கு? அதர்ம வழியில் பல காரியங்களைச் செய்பவர்கள் வதம் செய்யப் படும் பொழுது வத கர்மம். வதம் செய்யும் செயல் இதனால் அதர்மமும் நசித்துப் போகிறது. இதன் பின் என்ன கெடுதலை செய்யப் போகிறது. விதி தான் காரணமாக இருக்கிறது. ஒருவன் அழிவதும், மற்றவர்களை அழிப்பதும், விதிப்படி நடக்கிறது. தர்மமோ, அதர்மமோ அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பாவதில்லை. பாப கர்ம பலன் என்று யாரும் கஷ்டப்படுவதில்லை. எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், அசத்தான- எந்த வித சக்தியும் இல்லாத ஒன்றை-எதுவும் செய்ய இயலாததால் தர்மத்தை நீங்கள் உறுதியோடு கடை பிடித்து வருகிறீர்கள். இதனால் என்ன லாபம்? எதிரிகளை அழிப்பதானாலும், தர்மத்தை முதலில் நிறுத்தி போரிடும் தாங்கள் பெறும் பயன் தான் என்ன? சத்-சத்யம் என்று ஒன்று உண்டானால், அதைக் கடை பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று வைத்துக் கொண்டால், இந்த சத்யத்தையே உயிராக கொண்டுள்ள தங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருப்பதைப் பார்க்க, சத்யம் காப்பாற்றும் என்று நம்ப முடியவில்லையே. அதனால் சத்யம் என்று ஒன்று இல்லவே இல்லை. அல்லது பலமில்லாதவன், அல்ப வீர்யன் இவர்களை தர்மம் ரக்ஷிக்குமோ என்னவோ. துர்பலனோ, மரியாதை இல்லாதவனையோ நாம் பின்பற்ற வேண்டியதும் இல்லை. என்னைப் பொறுத்த வரை பலமில்லாதவன், கோழை இவர்களை நம் முன்னோடியாக கொள்ளத் தேவையும் இல்லை. பராக்ரமம் உள்ளவன் தன் பலத்தை பிரயோகிப்பதே தர்மம். அதனால் உங்கள் பலத்தை நம்புங்கள். எப்படி தர்மம் உயர்வோ, அதே போல ஒருவனின் வீர்யமும், பலமும் உயர்வானதே. பரந்தபனே, சத்ய வசனம் தான் தர்மம் என்றால், அசத்யம், பொய், கருணையில்லாதது என்றால், நீங்கள் ஏன் தந்தையை கட்டிப் போடவில்லை. தர்மம், அதர்மம் என்பது சமயத்துக்கு தகுந்தபடி மாறுகிறது. இல்லையெனில் இந்திரன், முனிவரைக் கொன்று வஜ்ராயுதம் தயாரித்து, யாகம் செய்வானா? முனிவரைக் கொல்வது என்ன நியாயம்? (ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை எடுத்து இந்திரன் வஜ்ராயுதம் தயார் செய்து கொண்டு விருத்திராசுரனைக் கொல்லச் சென்றான் என்பது வரலாறு) ராகவா, சமயத்துக்கு தன்னிஷ்டப்படி அதர்மத்தையும் ஏற்றுக் கொண்டு, தர்மத்தோடு இணைத்தால் நாசம் தான் விளையும். தேவையானால் அதர்ம வழியிலும் போகலாம் என்று சம்மதம் கொடுத்தது போல ஆகிறது அல்லவா? கடைசியில் மனிதன் தன் இஷ்டப்படி சுய நலமாகத்தான் காரியங்களைச் செய்கிறான். தர்மமோ, அதர்மமோ எதில் அவனுக்கு உடனடியாக பலன் கிடைக்கிறதோ, அதுவே சிறந்தது என்று நம்புகிறான். ராஜ்யத்தை விட்டு வந்தபொழுதே, தர்மத்தை (ராஜ்ய பரிபாலனம் என்ற உங்கள் கடமையை) விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. என் எண்ணப்படி, இதை நீங்கள் தர்மமாக முதல் பொறுப்பாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். மலைகளில், மரங்கள் செழித்து வளருவதைப் போல செல்வம் நிறைந்து வளமாக இருப்பவனிடம் நண்பர்களும் மற்றவர்களும் சூழ்ந்து நிற்க, அரசனாக இருப்பவன் தான் செயல்களை செயல் படுத்த முடியும். உருப்படியாக ஏதாவது செய்ய முடியும். செல்வம் இழந்தவன், துர்பலனாகிறான். குட்டையில் தேங்கி நிற்கும் ஜலம், வெய்யில் காலத்தில் வற்றிப் போவது போல செல்வம் இன்றி கையாலாகாமல் நிற்பவனும், தன் கடமையை நிறைவேற்ற முடியாமல் போகிறான். இதுவும் ஒரு முக்யமான விஷயமே. செல்வமும், அதை தொடர்ந்து கடமையைச் செய்வதும் தேவையற்றது என்று விலகி போகும் பொழுது, அந்த சமயம் சுகமாகத் தோன்றினாலும், பின்னால் பாப காரியம் செய்யத் தூண்டுதலாக இந்த தியாகமே அமைகிறது. அது தோஷம் இல்லையா? எவனிடம் பொருளும், செல்வமும் நிறைந்து இருக்கிறதோ, அவனைச் சுற்றி நண்பர்கள், அவனைச் சுற்றி உற்றார்கள், இருப்பார்கள். செல்வம் உடையவன் தான் ஆண் மகன். அவன் தான் பண்டிதன். அவன் தான் விக்ரமம் உடைய வீரன். அவன் தான் புத்திசாலி. எவனிடம் செல்வம் இருக்கிறதோ, அவன் தான் மகா பலசாலி. அவனிடம் தான் குணங்கள் நிறைந்து நிற்கும். அவனே குணக்குன்று. இந்த செல்வத்தை (அரசை) துறந்து வந்து நாம் கஷ்டங்களையே அனுபவித்து வருகிறோம். ராஜ்யத்தைத் துறந்து வந்து, வீரனே, அந்த சமயம் ஏன் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தீர்களோ, நாம் கண்டது என்ன? எவனிடம் செல்வம் (அர்த்தம்) உள்ளதோ, தர்மமும், காமமும், ப்ரதக்ஷிணமாக அவனைச் சுற்றி வரும். செல்வம் இல்லாதவன், அர்த்தத்தை அனுஷ்டிக்க நினைத்தால், எதுவும் செய்ய முடியாது. மகிழ்ச்சியோ, காமமோ, தன் மானம் (கர்வம்), தர்மமோ, க்ரோதமோ, அடக்கமோ, ஆளுமையோ, செல்வம் உள்ளவனிடம் தான் எடுபடும். அவன் தான் இந்த குணங்களை செயல் படுத்த முடியும். தர்மமே குறி என்று நடப்பவர்களுக்கு இந்த உலகம் நஷ்டமாகத் தான் ஆகிறது. துர்தினங்களில் (மேக மூட்டமாக இருந்து சூரிய ஒளி தெரியாத நாட்களை துர்தினம் என்று சொல்வது வழக்கம்) க்ரஹங்கள் கண் பார்வைக்குப் புலனாகாதது போல இந்த அர்த்தம்-பொருள், உங்களிடம் இல்லாதபொழுது மற்ற குணங்கள் வெளிப்படவில்லை. குரு, பெரியவர் என்று, அவர் சொல்லைக் கேட்டு நீங்கள் நாட்டை விட்டு காட்டுக்கு வந்தீர்கள். உயிரினும் பிரியமான மனைவியை ராக்ஷஸன் அபகரித்துக் கொண்டு போனான். இன்று இந்திரஜித் மகா துக்ககரமான செயலை கண் முன்னே செய்து காட்டி விட்டான். இதை நாம் பிரதிகர்மா- சரியான பதிலடி கொடுத்து தான் ஆக வேண்டும். ராமா, எழுந்திரு. எழுந்திரு. நர சார்தூலா, உன் நீண்ட கைகளும், த்ருடமான விரதமும், பலனின்றி போகக் கூடாது. உன்னை உணர்ந்து கொள். மகாத்மா நீ, தெரிந்து கொள்ளாமல் ஏன் வருந்தி செயலிழந்து நிற்கிறாய். (கிம் ஆத்மானம் மகாத்மானம் நாவபுத்யஸே) இதோ பாருங்கள், ஹனுமான் உங்களிடம் ஈடுபாடுடையவன். ஜனகன் மகளை வதம் செய்ததைக் கண்ணால் கண்டதால் ஆத்திரம் கொண்டிருக்கிறான். இந்த செயலை கண்டிக்கும் விதமாக நான், என் அம்புகளால், லங்கையை, அதன் குதிரை படை, யானை, ரத, படைகளோடு, ராக்ஷஸேந்திரனையும் போரில் மடிந்து விழச் செய்வேன் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராமாஸ்வாஸனம் என்ற எண்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 84 (491) இந்திரஜித் மாயா விவரணம் (இந்திரஜித்தின் மாயா பற்றி சொல்லுதல்)
இவ்வாறு லக்ஷ்மணன் ராமனை சமாதானம் செய்து கொண்டிருந்த பொழுது, படை வீரர்களை ஒழுங்குபடுத்தி, அணி வகுத்து நிற்கச் செய்து விட்டு விபீஷணன் அங்கு வந்தான். கூடவே படைத்தலைவர்கள் சிலரும், அவன் மந்திரிகளும் வந்தனர். கண் மை போன்ற நிறமும், பெரிய யானையை போல உருவமும், பலமும் உடைய ஒரு படைத் தலைவனான விபீஷணன், நெருங்கி வந்தவன், கண்களில் நீருடன் வளைய வந்த வானரங்களையும், துக்கத்தில் மூழ்கி இருந்த ராகவனையும் பார்த்து திகைத்தான். லக்ஷ்மணன் மடியில் தலை வைத்து, சொல்லொணா வேதனையுடன் ராகவன் இருப்பதைக் கண்டான். இக்ஷ்வாகு குல நந்தனன், மகாத்மாவான ராமன் வருந்தும்படி என்ன நேர்ந்து விட்டது? தன் நினைவிழந்தவனாக, வேதனையும் வெட்கமுமாக நின்றிருந்த ராமரைப் பார்த்து விபீஷணன் என்ன இது என்று வினவினான். உடலும் உள்ளமும் தீனமாக, வேதனையோடு காட்சியளித்த ராமரைப் பார்த்து நம்ப முடியாமல் நின்றான். அதற்குள் அங்கு கூடிவிட்ட, சுக்ரீவன் முகத்தையும் பார்த்து, லக்ஷ்மணன் பதில் சொன்னான். இந்திரஜித் சீதையைக் கொன்று விட்டான். ஹனுமான் கண்டு வந்து சொன்ன இந்த செய்தியால் ராமன் வருந்துகிறான். சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, லக்ஷ்மணனை இடை மறித்து விபீஷணன், பொருள் பொதிந்த சில வார்த்தைகளைச் சொல்லி, நினைவிழந்து கிடந்த ராமரை தட்டி எழுப்பினான். மனுஜேந்திரா, ஹனுமான் சொன்னது நம்பக் கூடியதாக இல்லை. சமுத்திரம் வற்றி விட்டதாகச் சொல்வது போல இருக்கிறது. ராவணனுடைய எண்ணம் எனக்குத் தெரியும். துராத்மா. சீதையை கொல்ல மாட்டான். அவளிடம் அவனுக்கு உள்ள மோகமும் நான் அறிந்ததே. உனக்கு நன்மை உண்டாகட்டும். சீதையை விட்டு விடு, என்று நான் எவ்வளவு முறை யாசித்தேன். கேட்கவே இல்லையே. சாம எனும் சமாதானமோ, தானமோ, பேதமோ பலனளித்து விட்டால் யுத்தம் எதற்கு? அவளைக் காணவும் அவனால் முடியாது, மற்றவர்களையும் அனுமதிக்க மாட்டான். வானரங்களை ஏதோ வஞ்சனையால் ஏமாற்றி விட்டு ராக்ஷஸன் திரும்பிச் சென்று விட்டான் போலும். நிகும்பிளா எனும் இடத்தில் உள்ள மண்டபத்தில் ஹோமம் செய்வான். இந்த ஹோமம் முடிந்து திரும்பி வந்தால், இந்திரனோடு, தேவர்கள் அனைவரையும் ஜயித்து விடுவான். இதன் பின் ராவணன் மகனை எதிர்த்து நிற்பது மகா கஷ்டமாகி விடும். அதனால் இப்படி ஒரு மாயை செய்து வானரங்களை திசை திருப்பி இருக்கிறான். உக்ரமாக போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, வானர வீரர்களின் பராக்ரமத்தைக் குறைக்க இது ஒரு வழியாக உபயோகித்திருக்கிறான். இந்த ஹோமம் முடியும் முன், நாம் சைன்யத்தோடு அங்கு செல்வோம். தவறான செய்தியை நம்பி மன சஞ்சலம் கொண்டுள்ளாய். இதை உதறித் தள்ளி விட்டு நர சார்தூலா, வந்து படையினரை உற்சாகப் படுத்து. உன் முக வாட்டத்தைக் கண்டு எல்லோருமே கலங்கி போய் இருக்கின்றனர். நீ தைரியமாக இங்கேயே இரு. இங்குள்ள வீரர்களை தயார் செய். லக்ஷ்மணனை அனுப்பு. எங்கள் சைன்யத்துடன் அவன் தலைமை தாங்கி வரட்டும். இவன் தான் ராவணியை (ராவணன் மகன்) தன் கூரான அம்புகளால் அடித்து, அந்த ஹோமம் செய்வதை முடிக்க முடியாமல் தடுத்து, பாதியில் விட்டு யுத்தம் செய்ய வரவழைத்து, பின் வதமும் செய்வான். வேகம் நிறைந்த இவனுடைய பாணங்கள், தீக்ஷ்ணமாக கூராக உள்ளவை. அவன் ரத்தத்தைக் குடிக்க வல்லவை. அதனால் லக்ஷ்மணனுக்கு கட்டளையிட்டு அனுப்புங்கள். வஜ்ரதரனான இந்திரன் போல் இவன் ராக்ஷஸனை வதம் செய்து விட்டு வருவான். மனிதருள் மாணிக்கம் போன்றவனே, கால தாமதம் செய்ய வேண்டாம். நீ ராக்ஷஸ வதத்துக்கான ஆயுதத்தை உடனே தயார் செய்து கொடு. வாணியை இந்திரன் பயன் படுத்திக் கொண்டான் ஒரு சமயம், தேவர்களின் எதிரியைக் கொல்ல. அது போல உத்தமமான அஸ்திரத்தை லக்ஷ்மணனுக்கு கொடு. அவன் செய்து கொண்டிருக்கும் யாகம் முடிந்து விட்டால், ராக்ஷஸ ராஜ குமாரன் கண்ணுக்கு புலனாக மாட்டான். தேவ, அசுரர்கள் கூட அவனைக் கண்டு கொள்ள முடியாது. அதன் பின் அவன் சக்தியும் மிக அதிகமாகி விடும்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் இந்திரஜித் மாயா விவரணம் என்ற எண்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 85 (492) நிகும்பிளாபியானம் (நிகும்பிளை நோக்கி படையெடுத்தல்)
இதைக் கேட்டுக் கொண்டே எழுந்து வந்த ராமர் சரியாக கேட்டு, மனதில் வாங்கிக் கொள்ளவில்லை, என் மனமும், சரீரமும் என் வசத்தில் இருக்கவில்லை. விபீஷணா, நீ சொன்னதை மற்றுமொரு முறை சொல் என்றார். இழந்த தைரியத்தை திரும்பப் பெற்றவராக, வானரங்களுக்கிடையில் நிமிர்ந்து நின்று விபீஷணன் சொல்வதைக் கேட்கத் தயாராக ஆனார். விபீஷணனும் தான் சொன்னதை திரும்பவும் விளக்கிச் சொல்ல ஆரம்பித்தான். மகா பாக்யசாலியே, தங்கள் கட்டளைப் படியே நான் அணி வகுப்பை ஏற்பாடு செய்து விட்டு திரும்பினேன். நீங்கள் சொன்னபடியே, வார்த்தை பிசகாது, வீரர்களையும், படைத் தலைவர்களையும் அணி வகுத்து நிற்கச் செய்த பின், அவர்களுக்குத் தேவையான உத்தரவுகளையும் பிறப்பித்து விட்டு வந்தேன். அந்த படை வீரர்களும், சேனைகளும் தயாராக உள்ளனர். போர் முனைக்கு கிளம்பிச் சென்று விட்டனர். தலைவர்களும் நான் சொன்னதை புரிந்து கொண்டு, செயல் படுவார்கள். அந்த வேலை முடிந்து திரும்ப வந்தால், காரணமின்றி நீங்கள் வருந்தி தவித்துக் கொண்டிருப்பதையும், மற்றவர்களும் செய்வதறியாது வாடிய முகத்தோடு நிற்பதையும் கண்டேன். எல்லோருமே கலங்கி நின்றனர். நான் சொல்ல வேண்டிய வேண்டுகோள் ஒன்று உள்ளது. ராமா, கேள். இந்த வேதனையை விடு. இது ஆதாரமற்ற மோகம். உன்னை இந்த நிலையில் பார்க்கும் சத்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். முயற்சியைக் கை விடாதே. எடுத்த காரியத்தை நல்ல முறையில் முடிக்க வேண்டும். உற்சாகத்தை வரவழைத்துக் கொள். சீதையை திரும்ப அடைய வேண்டுமானால், இந்த ராக்ஷஸர்களை வதம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ரகுனந்தனா, நான் சொல்வதைக் கேள். உன் நன்மைக்காகத் தான் சொல்கிறேன். இந்த சௌமித்ரி, பெரும் படையுடன், பொறுக்கி எடுத்த வீரர்களுடன் கிளம்பட்டும். நிகும்பிளா போய் ராவணன் மகனை வதம் செய்யட்டும். இவனது வில்லிலிருந்து புறப்படும் ஆலகால விஷம் கக்கும் கூரிய பாணங்கள், ராக்ஷஸனை பதம் பார்க்கட்டும். இவன் தான் ராவணன் மகனை கொல்லக் கூடியவன். இயல்பாகவே வீரன். தவ வலிமையும், ஸ்வயம்பூ தந்த வரங்களும் அவனுக்கு மிக அதிகமான பலத்தை தந்திருக்கிறது. யாராலும் எதிர்த்து நிற்க முடியாது, இவன் தவம் செய்து ப்ரும்ம சிரஸ் என்ற அஸ்திரம் கிடைக்கப் பெற்றிருக்கிறான். இவன் மனதில் நினைத்தபடி இவன் குதிரைகள் ஓடும். இதைத் தவிர, பொறுக்கி எடுத்த வீரர்களுடன் பெரும் சைன்யமும் இவனுடன் நிகும்பிளா சென்றுள்ளது. இவன் ஹோமத்தை செய்து முடித்து விட்டு வந்தால், நாம் எல்லோரும் அழிந்தோம். சந்தேகமேயில்லை. நிகும்பிளை அடைந்து நீ செய்யும் யாகம் பூர்த்தியாகும் முன் எதிரிகள் யாரானாலும் போரிட்டு உன்னை வதம் செய்தால் தான் உனக்கு மரணம் என்று சர்வ லோகேஸ்வரனான ப்ரும்மா வரம் தந்திருக்கிறார். இது தான் அவனை வதம் செய்யும் வழி. நாங்கள் அவன் வாயிலாகவே அறிந்து கொண்ட உண்மை இது. அதனால் ராமா, கட்டளையிடு. இந்திரஜித்தை வதம் செய்து விட்டு வர அனுமதி கொடுத்து அனுப்பு. இவன் வீழ்ந்தால், ராவணனின் பலம் வீழ்ந்தது என்று கொள்ளலாம். பந்து மித்திரர்களோடு ராவணன் அழிவான். விபீஷணன் இவ்வளவு விவரமாக சொன்னதைக் கேட்டு, ராமர் பதிலளித்தார். தெரியும். அந்த மாயாவியின் பலத்தை நான் அறிவேன். சத்ய பராக்ரமனான விபீஷணா, அவன் ப்ரும்மாஸ்திரம் வைத்து பிரயோகிக்கத் தெரிந்தவன். நல்ல அறிவாளி. மாயாவி. மகா மாயங்களை அறிந்தவன். அதனாலேயே நல்ல பலசாலி. யுத்தம் என்று வந்தால், தேவர்கள், வருணன் உட்பட, ஜயித்து விடுவான். ரதத்தில் ஏறி, அந்தரிக்ஷத்தில், யார் கண்ணுக்கும் புலப்படாமல் சஞ்சரித்து, போர் செய்யும் பொழுது அவன் நடவடிக்கைகளை யாராலும் கணிக்க முடியாது. மேக மூட்டத்துக்குப் பின் சூரியனின் கதியை நிர்ணயிக்க முடியாமல் போவதில்லையா, அது போலத்தான். எதிரியின் மாயா பலத்தையும், பலத்தையும் அறிந்து கொண்ட ராமர், லக்ஷ்மணனைப் பார்த்து வானர ராஜனான சுக்ரீவனுடைய பிரதான சைன்யத்துடன், நீ போய் ராவண குமாரனை, மாயா யுத்தம் மறைந்து நின்று யுத்தம் செய்யும் கலையை அறிந்தவன் அவன், அவனை வதம் செய்து விட்டு வா என்று உத்தரவிட்டார். ஹனுமான் தலைமையில் வானரப் படையும், ஜாம்பவான் தலைமையில் கரடிகள் சைன்யமும், உனக்கு உதவியாக உடன் வருவார்கள். ராக்ஷஸனான இந்த விபீஷணன், தன் மந்திரிகளுடன் கூடவே வருவான். அந்த தேசத்தை அறிந்தவன் இவன். அதனால் வழி காட்டிச் செல்வான். மாயா ஜாலம் அறிந்த ராக்ஷஸ ராஜ குமாரனை வதம் செய்து விட்டு திரும்பி வா. இதைக் கேட்டு லக்ஷ்மணன், தானும் அத்புதமான பராக்ரமம் உடையவனே என்று நிரூபிப்பது போல, விபீஷணனுடன், உயர்ந்த வில்லை ஏந்தி, அதற்கு மேல் கவசம், கட்கம் (வாள்) சரங்கள், பொன்னாலான வில் இவைகளை எடுத்துக் கொண்டு தயாராக, ராம பாதத்தில் வணங்கி எழுந்து இன்று என் வில்லிலிருந்து புறப்படும் அம்புகள், ராவணன் மகன் உடலை கிழித்து லங்கையில் போய் விழப்போகிறது. ஹம்ஸ பக்ஷிகள், புஷ்கரிணியில் விழுவது போல இன்றே அந்த ரௌத்ரனுடைய சரீரத்தை என் சரங்கள், அவன் கை அம்புகளை, கிழே விழச் செய்து அவனையும் அழிக்கும்ஏ தமையன் முன் இவ்விதம் சூளுரைத்து விட்டு லக்ஷ்மணன், வேகமாக சென்றான். ராவணன் மகனை வதம் செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் தான் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. நிகும்பிளா செல்ல கிளம்பினவனை ராமன் மங்களா சாஸனம் , ஸ்வஸ்தி வசனங்கள் சொல்லி ஆசிர்வதித்து அனுப்பினார். லக்ஷ்மணன் முன்னே செல்ல, ஆயிரக் கணக்கான வானர வீரர்களுடன் ஹனுமான் பின் தொடர்ந்து சென்றான். விபிஷணன், அவன் மந்திரிகள் லக்ஷ்மணனுக்கு துணையாகச் சென்றனர். கரடி ராஜன் ஜாம்பவான் தன் சைன்யத்தையும் தயாராக வைத்திருந்து சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்தான். வெகு தூரம் சென்ற பின் அணி வகுத்து நின்ற சைன்யம் பெருமளவில் தென்படலாயினர். அந்த மாயாவியின் லோக மாயா என்ற நிலையை ஜயிக்க தானும் ப்ரும்ம விதானம் எனும் நிலையை அடைந்தான், ராஜ குமாரன் லக்ஷ்மணன். விபீஷணனோடு அங்கதனும், வாயு புத்திரனான ஹனுமானுடன் கலந்தாலோசித்தபடி, நடந்தான். பல விதமான நிர்மலமான சஸ்திரங்கள் ஒளி வீச, த்வஜங்கள் ஆபரணமாக ரதங்களை அலங்கரிக்க, எண்ணிக்கையில்லாத ரதங்கள் தயாராக நிற்க, அளவிட முடியாத வேகத்துடன் இருந்த பலசாலிகளான எதிரி சைன்யத்தினுள் நுழைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நிகும்பிளாபியானம் என்ற எண்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)