பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டம் 86 – 95

பிப்ரவரி 26, 2014
 

 

அத்தியாயம் 86 (493) ராவணி ப3ல கத2னம் (ராவண குமாரனின் பலத்தை விவரித்தல்)

 

இருட்டு நுழைவது போல, யாருமறியாமல் ராவணி இருந்த இடம் வந்து சேர்ந்த உடன், ராவண சகோதரன், விபீஷணன், லக்ஷ்மணனிடம் ரகஸ்யமாகச் சொன்னான். இதோ, மேக ஸ்யாமளமாக, பெருத்த சரீரத்துடன், ராக்ஷஸர்கள் நிற்கிறார்களே, வானர வீரர்களை இவர்களுடன் போர் தொடுத்து கவனத்தை கலைத்து வைத்துக் கொள்ளச் சொல். மரங்களும், கிளைகளையும் ஆயுதங்களாக உடைய வானரங்கள் இந்த இடத்தில் பேதம் என்ற யுத்த முறையை அனுசரிக்கட்டும். இந்த பெரிய சேனை பிளவு படும்படி செய்ய வேண்டும். இந்த படையின் அணி வகுப்பு கலைந்தால் தான் ராக்ஷஸேந்திரனின் மகன் நம் கண்ணுக்கு புலனாவான். இந்த காரியம் முடியும் முன் நீ உன் கூர்மையான குறி தவறாத பாணங்களால் அடி.   க்ரூர கர்மாவான இந்திரஜித்தை வதம் செய்து விடு. இவன் எல்லா உலகுக்கும் பயத்தை தான் தருகிறான். அல்லது உலகமே இவனைக் கண்டு நடுங்குகிறது. இதை ஆமோதித்த லக்ஷ்மணன் தன் வில்லை எடுத்து பிரயோகம் செய்தான். சரமாரியாக அம்புகள் சீறிக் கொண்டு பாய்ந்தன. வானர வீரர்களும், கரடி வீரர்களும் தங்கள் நகம், பல், மரக் கிளைகள், கற்கள் இவைகளையே ஆயுதமாகக் கொண்டு போர் செய்யலாயினர். வானர சைன்யத்தை மீதியில்லாமல் அழித்து விடுவோம் என்று சொல்லிக் கொண்டு ராக்ஷஸர்களும் அம்பு மழை பொழிந்தனர். வானர, ராக்ஷஸர்கள் அடித்துக் கொண்டதால் எழுந்த சப்தம் ஆகாயத்தை நிறைத்தது.  லங்கையில் எதிரொலித்தது. வித விதமான சஸ்திரங்கள், ஆயுதங்கள், கூர்மையான பாணங்கள், ஒரு பக்கம். மரக் கிளைகளும், பாறாங்கற்களும் ஒரு புறம். யுத்தம் கோரமாகத் தொடர்ந்தது. அந்த ராக்ஷஸர்களும் தங்கள் விகாரமான உருவத்தாலேயே வானர வீரர்களிடம் பயத்தை உண்டு பண்ணினார்கள்.  அதே போல அவர்களும் தங்கள் கைக்கு கிடைத்த கல், மரங்கள் இவற்றாலேயே பல ராக்ஷஸர்களை அடித்து வீழ்த்தினார்கள். கரடிகளும், வானரங்களும் கூட சில மிகப் பெரிய உருவம் உடையனவாக இருந்தன.  தன் சைன்யம் இப்படி அடிக்கப் பட்டு, சின்னா பின்னமாகிப் போவதை ராவணி கவனித்தான். அடர்ந்த மரங்களுக்கிடையில் மறைந்து இருந்து ஹோமம் செய்து கொண்டிருந்தவன் அதை முடிக்காமல் பாதியிலேயே எழுந்து வந்து விட்டான்.  ஏற்கனவே தயாராக இருந்த ரதத்தில் மகா கோபத்துடன் ஏறினான். மிகப் பெரிய வில்லை கையில் ஏந்தி, கால மேகம் போன்ற பிரகாசத்துடன் சிவந்த கண்களும், முகமுமாக, கோபத்தில் மற்றொரு அந்தகன் போல தோற்றமளித்தான். ரதத்தில் ஏறி, அவன் நின்றவுடனேயே அவன் வீரர்கள் அவன் கட்டளைக்காக அவனைச் சூழ்ந்து நின்று கொண்டனர். மகா பயங்கரமாக அவர்களுடன் லக்ஷ்மணன் போரிட்டுக் கொண் டிருந்தான். அந்த சமயம் ஹனுமான் மிகவும் பிரயாசையுடன், பெரிய மலை போன்று அடர்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தை அந்த ராக்ஷஸ சைன்யத்தின் மத்தியில் போட்டான். பல ராக்ஷஸர்கள் அதனடியில் நசுங்கி விழுந்தனர். காலாக்னி போல அதிலிருந்து நெருப்பும் எழுந்தது. பலர் இதனால் நினைவிழந்து விழுந்தனர். மேல் மூச்சு வாங்க நின்றிருந்த ஹனுமானைப் பார்த்து, பல ராக்ஷஸ வீரர்கள், இது தான் சமயம் என்று ஹனுமானைத் தாக்க தயாராக அருகில் வந்தனர். பெரும் யுத்தம் நடந்தது. அசையாது நின்ற ஹனுமானை இந்திரஜித் பார்த்தான். வாயு சுதன், தன் எதிரிகளை பயங்கரமாக வதைப்பதையும் கண்டான். சாரதியிடம்., அதோ அந்த வானரம் நிற்கும் இடம் செல் என்று உத்தரவிட்டான்.  இவனை அலட்சியம் செய்து விட்டால், இவன் நம் படைக்கு பெரும் சேதம் விளைவிப்பான் என்றான்.  சாரதியும் மாருதி இருந்த இடம் நோக்கி வந்தான். அளவிட முடியாத பலசாலியான இந்திரஜித்தை, ரதத்தில் தாங்கியபடி வந்தான். அவனும் நெருங்கி அம்புகளையும், வாளையும், பட்டஸங்களையும் மழையாகப் பொழிந்தான். வானர வீரனான ஹனுமானின் தலையிலேயே குறி வைத்து அடித்தான். அந்த கோரமான ஆயுதங்களை தன் கையால் பிடித்து ஹனுமான் மகா ஆத்திரத்துடன் இந்திரஜித்தைப் பார்த்துச்  சொன்னான்.  சூரனாக இருந்தால் இந்த வாயு புத்திரனோடு தனியாக யுத்தம் செய். உயிருடன் திரும்ப மாட்டாய். என் கை வேகத்தை நீ தாங்குவாயா, பார்க்கலாம். இவ்வாறு அறை கூவி நிற்கும் ஹனுமானையும், சக்தி வாய்ந்த ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு நிற்கும் இந்திரஜித்தையும் பார்த்த விபீஷணன், லக்ஷ்மணனிடம் சென்று சௌமித்ரே| இந்த ராவணன் மகன், இந்திரனை ஜயித்தவன். ரதத்தில் ஏறி நின்று ஹனுமானை கொன்றாலும் கொல்லக் கூடியவனே. நீ உன் வில்லின் அம்புகளால் அவனை திசை திருப்பு.  நீ தான் அவனைக் கொல்ல முடியும். விபீஷணன் சுட்டிக் காட்டிய பின் எதிரில் மலை போல நின்று, உரக்கக் கத்தி போருக்கு அறை கூவும் ராவணியை லக்ஷ்மணன் கண்டான்.

 

இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணி ப3ல கத2னம்  என்ற எண்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 87 (494) விபீஷண, ராவணி பரஸ்பர நிந்தா3 (விபீஷணனும் ராவணன் மகன் இந்திரஜித்தும் பரஸ்பரம் ஏசிக் கொள்ளுதல்)

 

விபீஷணன் லக்ஷ்மணனிடம் விவரித்துச் சொல்லி விட்டு,  வில்லை ஏந்திய நிலையில் அவனை கைப்பற்றி அழைத்துக் கொண்டு முன்னேறிச் சென்றான். சற்று தூரம் சென்றவுடனேயே, பெரிய வனத்தைக் கண்டு, அதனுள் நுழைந்தனர். லக்ஷ்மணனுக்கு அங்கு நடக்கும் யாக கார்யத்தைப் பற்றி விவரித்தான். பெரிய கருமேகம் போன்று அடர்ந்து வளர்ந்திருந்த ந்யக்ரோத மரத்தைக் கண்டனர். தேஜஸ்வியான ராவண சகோதரன் விபீஷணன், லக்ஷ்மணனுக்கு அதைச்  சுட்டிக் காட்டினான், இங்கு தான் ராவணி (ராவணன் மகன்) அக்னியில் ஹோமம் செய்து, தானம் , ஹவிஸ் முதலியன அக்னியில் சமர்ப்பித்து விட்டு, யுத்தம் செய்யக் கிளம்புவான். இயல்பாகவே பலசாலி அவன். இதன் பின் யார் கண்ணுக்கும் புலனாகாத சக்தியைப் பெற்று விடுவான். உயர்தர அம்புகளால் கட்டிப் போட்டு சத்ருக்களை வதம் செய்யத் தகுதியைப் பெற்று விடுவான். ந்யக்ரோத மரத்தின் அடியில் யாக சாலையில் அவன் அமரும் முன், கூர்மையான பாணங்களால் அடித்துக் கொன்று விடு. அவன் ரதத்தையும், சாரதியையும் கூட வதம் செய்து நாசமாக்கு. இதைக் கேட்டு லக்ஷ்மணன் வில்லை எடுத்து நாண் பூட்டி தயாராக இருந்த அம்புகளை கோர்த்து பிரயோகம் செய்யலானான். அக்னி வர்ணத்தில் இருந்த அந்த ரதத்தில் மகா பலசாலியான ராவணன் மகன், இந்திரஜித், கவசம் அணிந்து, கையில் வில்லும், ரதத்தில் கொடியுடனும் காணப்பட்டான். இவனை போருக்கு அழை என்று விபீஷணன் சொல்ல, சௌமித்ரியும் அவ்வாறே போருக்கு அறை கூவல் விட்டான். அருகில் விபீஷணனைக் கண்டதும் இந்திரஜித் கடும் கோபம் கொண்டான்.

 

ராக்ஷஸா| நீ என் தந்தையின் உடன் பிறந்த சகோதரன். நெருங்கிய உறவினனான எனக்கு துரோகம் செய்ய எப்படி உனக்கு மனம் வருகிறது? துர்மதே| (துர்புத்தியுள்ளவனே) உனக்கு உற்றாரும் கிடையாது. உற்றார் என்று அன்பும் இல்லை. ஒரே ஜாதி என்ற ஈ.டுபாடும் இல்லை. நட்பு என்பது அறவே இல்லை. உடன் பிறந்தவன் மகன் என்ற உறவு தரும் பாசமோ, தர்மமோ எதுவுமே உன்னிடம் இல்லை. தர்மத்தை அவமதிக்கிறாயே. துர்புத்தியுடையவனே, உன்னைக் கண்டு யாரும் நம்பத் தயங்குவார்கள். சாதுக்கள் நிந்திப்பார்கள். சொந்த ஜனங்களிடம் கௌரவமாக இருப்பதை விட்டு, வேற்று மனிதர்களிடம் கை கட்டி சேவகம் செய்வதை உயர்வாக நினைக்கிறாய். உனக்கு புத்தியில்லை. இது இரண்டிலும் உள்ள வேறுபாடு உனக்கு உறைக்கவில்லை. தன் ஜனங்களிடம் சுகமாக இருப்பது எங்கே? மாற்றானிடம் மண்டியிட்டு அல்பமாக வாழ்வது எங்கே? தன் ஜனங்கள் நிர்குணமாக இருந்தால் கூட, குணவானான வெளியாட்களை விட சிறந்தவனே. மாற்றான், மாற்றான் தான். என்னதான் சொன்னாலும், தன் இனத்து ஜனங்கள் போல உதவிக்கு வருவார்களா ? தன் பக்ஷத்தை விட்டு எதிரிகளின் பக்ஷத்தை சென்றடைந்தவன், தன் கட்சியில் முதலில் தாழ்வை அடைகிறான். பின் எதிரிகள் பக்ஷத்திலும் அவமதிக்கப் பட்டு நாசமாகிறான். நீ செய்திருக்கும் காரியம் சற்றும் கருனையோ, பரிவோ இல்லாதது. ராக்ஷஸனே| ஏன் என்று கேட்பாயோ, உன் உடன் பிறந்தான், ராவணன், கடுமையாக சொன்னதை பொறுக்கும் குணம் கூட உன்னிடம் இல்லை பார். ராவணன் சகோதரனாக இருந்து என்ன பயன்? இதற்கு விபீஷணன் பதில் சொன்னான்.

 

ராக்ஷஸ ராஜ குமாரனே| என் சீலம் தெரியாதது போல பேசிக் கொண்டே போகிறாயே. கடுமையாக பேசுவதை விட்டு, சற்று நான் சொல்வதை பொறுமையாகக் கேள். எனக்கு சற்று மதிப்பு கொடுத்து என் தரப்பு வாதத்தையும் கேள்.  நானும் க்ரூர கர்மாக்களைச் செய்யும் ராக்ஷஸ குலத்தில் பிறந்தவன் தான்.  ஆயினும் ராக்ஷஸர்களுக்குப் பொருந்தாத சீலம் எனும் குணம் எனக்கு இயல்பாகவே அமைந்து விட்டது. எனக்கு கொடூரமான வீர தீர செயல்களிலும் நாட்டம் இல்லை. அதர்மமான வழியிலும் நாட்டம் இல்லை. பாபம் செய்வது என்று நிச்சயம் செய்து சங்கல்பம் செய்து கொண்டவன் போல பாப காரியமே செய்யும் சகோதரனிடம் எனக்கு மன ஒற்றுமையோ ஈ.டுபாடோ  வரவில்லை. இது போன்ற உறவைத் துறப்பதில் தான் சுகமே.  கையில் வந்து விழுந்து விட்ட ஆலகால விஷத்தை உடனே கீழே போடுவது போல.  துன்புறுத்துதல், மற்றவர் பொருளை அபகரித்தல் பிறன் மனையை , மாற்றன் மனைவியை தொடுதல், இவைகளை துராசாரம், ஒழுக்கம் இல்லாதவை, விடத்தக்கது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். எரியும் வீட்டை துறந்து வருவது தான் உயிர் பிழைக்க வழி. பிறர் பொருளை அபகரித்தலும், பிறன் மனைவியை நெருங்குவதும், தன் நண்பர்கள்,  நலம் விரும்பும் உறவினர்களிடம் ஏகமாக சந்தேகம் கொள்ளுதல், இவை அழிவைத் தேடித் தரும் தோஷங்கள். மகரிஷிகளை வதம் செய்வதும், எல்லா தேவர்களிடமும்  வெறுப்பு.  சுய அபிமானமும், கோபமும், வைர பாவமும், எதையும் எதிர்த்து நேர் மாறாக செய்யும் தன்மை இவை என் சகோதரனிடம் உள்ள கெட்ட குணங்கள். அவன் ஐஸ்வர்யத்தையும் உயிரையும் பறிக்க வல்ல கொடிய குணங்கள். இந்த தோஷங்கள் அவனிடம் உள்ள நல்ல குணங்களை மறைத்து விட்டது. மேகங்கள் மலைகளை மறைப்பது போல. இந்த கெட்ட குணங்களுக்காகத் தான் நான் என் சகோதரனை விட்டு விலகி வந்தேன். உன் தந்தையோ, இந்த லங்கையோ, நீயோ, யாருமே இருக்கப் போவதில்லை. குழந்தைத் தனமான, அபிமானம்,  வினயமின்மை இவை தான் உன் பேச்சில் காண்கிறேன்.  என்ன சொல்ல வேண்டுமோ சொல்லிக் கொள். கால பாசத்தால் கட்டுண்டு இருக்கிறாய். இன்று உனக்கு காலம் முடியப் போகிறது. என்னைத் திட்டி என்ன நலன் பெற விழைகிறாயோ, அடைந்து கொள். ராக்ஷஸனே, ந்யக்ரோத மரம் வரை போகக் கூட உன்னால் முடியாது. காகுத்ஸனை மீறி, அவனை வெற்றி கொண்டு போக முடியுமானால் போ. உயிர் பிழைத்து இருப்பதே இயலாத காரியம். லக்ஷ்மணனோடு யுத்தம் செய். லக்ஷ்மணன் கையால் வதம் செய்யப் பெற்றால் தேவ காரியங்களைச் செய்வாய். காட்டு உன் பலத்தை. சர்வ ஆயுதங்களையும் உபயோகி. இவனும் தயாராக இருக்கிறான். இன்று லக்ஷ்மணன் விடும் பாணங்களுக்கு இரையாகி, உன் படை பலத்தோடு திரும்ப போக முடியுமா, பார். முடியாது.

 

இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீஷண ராவணி பரஸ்பர நிந்தா3 என்ற எண்பத்து  ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 88 (495)சௌமித்ரி ராவணி யுத்தம் (சௌமித்ரியும் ராவணன் மகனும் யுத்தம் செய்தல்)

 

விபீஷணனின் விளக்கத்தை கேட்டும் ஆத்திரம் அடங்காதவனாக ராவணி, இந்திரஜித், என்ன சொல்கிறோம் என்பது கூடத் தெரியாமல்,  மிக கடுமையான வார்த்தைகளால் பதில் கொடுத்தான். வேகமாக குதித்து ரதத்தில் ஏறி நின்றான். எல்லா விதமான ஆயுதங்களையும் சேர்த்து வைத்துக் கொண்டான். காலந்தகனோ, யமனோ என்று ஐயுறும்படி நின்றான். கறுப்பு  நிற குதிரைகள் பூட்டப் பெற்று அலங்காரமாக ரதம் தயாராக நின்றது.  அரிய பல அஸ்திரங்களை தன் வில்லில் பூட்டி பிரயோகம் செய்யத் தயாரானான். அவன் இப்படி அலங்கரித்த ஆயுதங்கள் நிரம்பிய ரதத்தில் நிற்பதைக் கண்டு, ராகவானுஜன், லக்ஷ்மணனை ஹனுமான் தன் முதுகில் ஏறிக் கொள்ளச் செய்தான். யுத்தம் செய்ய லக்ஷ்மணனும் தயார் என்பதை அறிந்து, விபீஷணனையும், லக்ஷ்மணனையும் ஒன்றாக அழைத்து, வானர வீரர்களையும் அழைத்து என் பராக்ரமத்தைப் பாருங்கள் என்று போருக்கு அறை கூவினான். என் வில்லிலிருந்து புறப்படும் சரமழை, உங்களால் தாங்க முடியாமல், ஆகாயத்திலிருந்து மேகம் பொழிவது போல, பொழியப் போகிறது.  திணறப்போகிறீர்கள்.  வைக்கோல் போரை நெருப்பு அழிப்பது போல, என் பாணங்கள் உங்கள் சைன்யத்தை நிர்மூலமாக்கப் போகின்றன. தீக்ஷ்ணமான என் அம்புகள், சூலங்கள், சக்தி, உத்கரம், இஷ்டி, தோமரங்கள், உங்கள் உடலைக் குத்திக் கிழிக்கப் போகின்றன.  உங்கள் எல்லோரையுமே இன்று யமனுலகம்  அனுப்பி வைக்கிறேன். யுத்தத்தில் தளராத வேகம் உடைய என் கை வண்ணத்தை இன்று பாருங்கள். கார் மேகம் போல கர்ஜிக்கும் என் முன் யார் தான் நிலைத்து நிற்க முடியும். இரவு யுத்தம் செய்த பொழுது வஜ்ராசனி போன்ற என் பாணங்கள் தாக்கி இருவரும் (ராம, லக்ஷ்மணர்கள்) நினைவு இழந்து கிடந்தனரே, மறந்து விட்டதா? இன்னமும் அவர்களுக்கு முழு நினைவும் திரும்பியதாக எனக்குத் தோன்றவில்லை. யம சதனம், யமன் வீடு சென்று திரும்பியவர்களாக இன்னமும் மயக்க நிலையிலேயே இருக்கிறார்களா, என்ன  என்னுடன் யுத்தம் செய்ய வந்து விட்டார்கள்,  நான் ஆலகால விஷம் போல கொடியவன் என்பதை அறியாமலே.

 

ராக்ஷஸ குமாரன் கர்ஜித்ததைக் கேட்டு, லக்ஷ்மணன் சற்றும் முகம் மாறாமல், பயம் இன்றி, பதில் சொன்னான். ராக்ஷஸா| போகாத ஊருக்கு வழி சொன்னாய். வாய் பேச்சில் வீரத்தைக் காட்டினாய்.  செயலில் செய்து காட்டுபவன் தான் புத்திசாலி, அவன் தான் சமர்த்தன். துர்மதியே, எப்படியோ அடைய முடியாததை அடைந்து விட மார் தட்டுகிறாயே.  வெறும் வாய்ச் சொல்லில் தான் உன் வீரமா? மறைந்து கண்ணுக்கு புலனாகாமல் நின்று எங்களை மயக்கமடையச் செய்தாயே. இது திருடன் செய்யும் செயல் அல்லவா? வீரனாக இருப்பவன் இது போல செய்ய வெட்கமடைவான். இதோ நான் எதிரில் நிற்கிறேன். உன் பாணத்தில், உன் பராக்ரத்தைக் காட்டு.  வெறும் வாய்ப் பேச்சு தேவையில்லை என்று சொல்லியவாறே, லக்ஷ்மணன் தன் பெரிய வில்லை எடுத்து வளைத்து, கூரான பயங்கரமான பாணங்களை இடை விடாது விட ஆரம்பித்தான். இந்திரஜித்தின் வில்லிலிருந்தும்,  விஷப் பாம்புகள் போன்ற  பாணங்கள் மகா வேகத்துடன் வெளிப்பட்டு, லக்ஷ்மணன் மேல் பட்டுத் தெறித்து விழுந்தன.  மகா வேகத்துடன் எய்யும் திறமை வாய்ந்த இந்திரஜித்தின் பாணங்கள், மேல் மூச்சு வாங்கத் திணறும் நாகங்கள் போலவே இருந்தன. சௌமித்ரியை பல இடங்களில் துளைத்து காயமுற செய்து விட்டான். காயத்திலிருந்து பெருகிய ரத்தம் உடலை நனைக்க, புகையில்லாத நெருப்பு ஜ்வாலை போல விளங்கினான் லக்ஷ்மணன். தன் செயலைக் கண்டு தானே மகிழ்ந்தவனாக இந்திரஜித் பெரும் குரலில் ஜய கோஷம் செய்தவாறு,  சௌமித்ரே| என் வில்லிலிருந்து புறப்படும் அம்புகள் இன்று உன் உயிரைக் குடித்து விட்டுத் தான் நிற்கும்.  இன்று உனக்குத் துணையாக ஒனாய்களும், கழுகுகளும் தான் இருக்கப் போகின்றன. கருடன்கள் உன் உயிரற்ற உடல் மேல் விழுந்து கிடக்கப் போகின்றன. சௌமித்ரே| இன்று முதல் உன் பெயர் எங்கோ கேட்டதாக ஆகப் போகிறது.  யமதூதர்களுடைய அதட்டல் காதில் விழவில்லை. க்ஷத்ரபந்து, மகா அயோக்யன், பரம துர்மதியான ராமன் தன் பக்தனும், சகோதரனுமான உன்னை என் கையால் வதம் செய்யப் பட்டு சடலமாகத் தான் காணப் போகிறான். கவசங்கள் துளைக்கப் பெற்று விழுந்து கிடக்க, பூமியில் உடல் பூரா அம்புகள் துளைத்து குத்திட்டு நிற்க, காணப் போகிறான். இன்று என்னால் கொல்லப்பட்ட உன் உத்தமமான சரீரத்தை தான் காண்பான் என்று இவ்வாறு ராவணன் மகன் தன் போக்கில் கர்வத்துடன் சொல்லிக் கொண்டே போகையில், பொருள் பொதிந்த வார்த்தையை, தகுந்த சமயத்தில் பிரயோகிக்கத் தெரிந்த வாக்கு வல்லமை பெற்ற சௌமித்ரி, இடை மறித்து வாய் ஜாலம் எதற்கு? துர்புத்தியே, ராக்ஷஸனுக்குரிய கொடுமையான செயல்கள் செய்யக் கூடியவன் தான் நீ. ஏன் இப்படி பேசிக் கொண்டே போகிறாய். இதைச் செயலில் செய்து காட்டு. எதையும் செய்யாமல் பிதற்றிக் கொண்டே போகிறாய். ராக்ஷஸனே, இதில் என்ன லாபம்? உன் புலம்பலை நான் நம்பும்படி ஏதாவது செய்து காட்டு. வெறும் வாய்ச் சொல்லில் கடுமையைக் காட்டித் திரிகிறாய். நான் உன்னைப் போல அவசியமில்லாத பேச்சை பேச மாட்டேன். இதோ பார், என்று சொல்லி ஐந்து நாராசமான, கூரான பாணங்களை, காதுவரை வில்லின் நாணை இழுத்து இந்திரஜித் மேல் விட்டான். ராக்ஷஸனின் மார்பில் பட்டன. ஜ்வலிக்கும் பாம்பு போன்ற கூரான பாணங்கள் வேகமாக வந்து சூரிய கிரணங்கள் போல வந்து மார்பைத் தாக்கவும், இந்திரஜித் கலங்கி விட்டான். சமாளித்துக் கொண்டு, ஆத்திரத்துடன் குறி வைத்து மூன்று அம்புகளை லக்ஷ்மணன் மேல் படும் படி விட்டான். ராக்ஷஸ, நர சிம்மம் போன்ற இருவரது வேகமும், திறமையும் அந்த போரில் வெளிப்பட்டது. ஜயிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருவருமே உக்ரமாக போர் புரியலானார்கள். இருவரும் பலசாலிகள். இருவரும் பல முறை தங்கள் ஆற்றலைக் காட்டி ஜயித்தவர்கள். இருவரும் எல்லா அஸ்திர, சஸ்திரங்களையும் அறிந்த அறிஞர்கள். அளவிட முடியாத பலமும், தேஜஸும் இருவரிடமும் சமமாகவே  இருந்தன. ஆகாயத்தில் இரண்டு கிரஹங்கள் அடித்துக் கொள்வது போல இருவரும் அடித்துக் கொண்டனர். பல, வ்ருத்திரன் போல இருவரும் அச்சம் என்பதையே அறியாத வீரர்கள். இரண்டு கிரகங்கள் மோதிக் கொள்வது போல மோதிக் கொண்டனர். புது புது மார்கங்களையும், மற்ற யுத்த முறைகளையும்  கண்டு பிடித்து, புது புது அஸ்திரங்களை தயார் செய்து போர் புரிந்தனர். இப்படி சமமான வீரர்கள் யுத்தம் செய்யும் பொழுது மகிழ்ச்சியே அடைந்தனர். நர, ராக்ஷஸ சிம்மங்கள் இரண்டும் ஒருவரை ஒருவர் வெற்றி கொள்வதையே குறியாகக் கொண்டு, வில்லும் அம்பும் கையில் வைத்து இருவருமே மற்றவரை அம்பு மழை பொழிந்து தாக்கினாலும், கலங்காமல், இடி இடிப்பது போலவும், மின்னல் போலவும், அம்புகளின் பரஸ்பர கதியில் தெரிய, யுத்த கலையில் வல்லவர்கள் மேலும் மேலும் முன்னேறினர். சம்பரனும், வாஸவனும் சண்டையிட்டது போல மும்முரமான போரில் தங்களையே மறந்தனர்.

 

இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சௌமித்ரி, ராவணி யுத்தம் என்ற எண்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 89 (496)  சௌமித்ரி சந்துக்ஷணம் (லக்ஷ்மணனை போருக்கு புறப்பட தூண்டுதல்)

 

மேல்   மூச்சு வாங்க, சர்ப்பம் போல சீறிக்கொண்டு சௌமித்ரி, ராக்ஷஸேந்திரனை குறி வைத்து,   அம்புகளைத் தொடர்ந்து விட்டான். வில்லின் ஓசையைக் கேட்டே ராவணி சிந்தையில் ஆழ்ந்தான். அவன் முகத்தில் கவலையின் ரேகைகளைக் கண்டு கொண்ட விபீஷணன், லக்ஷ்மணனை உற்சாகப்படுத்தும் விதமாக,  பேசலானான். சௌமித்ரே| இவனை கவலை வாட்டுகிறது. முக வாட்டம் இவன் தோற்றுக் கொண்டிருப்பதை தெரிவிக்கிறது. விடாது அடி. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றான். இதைக் கேட்டு லக்ஷ்மணனும், தகிக்கும் அக்னி ஜ்வாலை போன்ற பாணங்களை விடாது பிரயோகித்தான். விஷப் பாம்பு போன்ற அஸ்திரங்கள், இந்திரனின் வஜ்ராசனி போன்ற அஸ்திரங்கள் ஒரு முஹுர்த்த காலம் இடைவிடாது சர மழையாக பொழிந்து களைத்தான்.  ராவணியும் இந்த அடி தாங்காமல் சற்று நேரம் நினைவின்றி இருந்தான். பின் சமாளித்து எழுந்து வந்து பார்த்தால், சௌமித்ரி அப்பொழுதும் வில்லும் கையுமாக நின்று கொண்டிருந்தான். கண்கள் சிவக்க, சௌமித்ரியைப் பார்த்து, கடுமையாக தாக்கிப் பேசலானான். முதல் நாள் யுத்தத்தில் என் பராக்ரமத்தைப் பார்த்தவன் தானே,  நினைவு இல்லையா. உங்கள் இருவரையும்   மூர்ச்சையடைந்து பூமியில் விழச் செய்தேனே. அதுவும் நினைவு இல்லையா? அல்லது யமபுரம் செல்லத் தயாராகி விட்டாயா? என்னை எதிர்த்து நின்று போரிட வந்து விட்டாய். அன்றைய போரில் விழுந்தது நினைவு இல்லையெனில் இதோ பார்..   சற்று இங்கேயே நில். என்றான். இவ்வாறு சொல்லி, ஒரே சமயத்தில் ஏழு பாணங்களால் சௌமித்ரியை அடித்தான். பத்து பாணங்களால் ஹனுமானையும் அடித்துக் காயப் படுத்தினான். கூர்மையான பாணங்களால்  குறி வைத்து இரண்டு மடங்கு ஆத்திரத்துடன், விபீஷணனை அடித்து வீழ்த்தினான். இந்திரஜித்தின் இந்த வீர விளையாட்டைப் பார்த்து லக்ஷ்மணன் சிரித்தபடி, யோசியாமல் இது என்ன பிரமாதம் என்பது போல பயங்கரமான அம்புகளை தன் வில்லில் இருந்து வெளிப்படச் செய்தான். முகத்தில் சற்றும் தயக்கமோ, பயமோ காட்டாமல், ராவணியைப் பார்த்து யுத்த பூமியில் நின்று யாரும் விளையாட மாட்டார்கள், வீரனே. உன் சரங்கள் அல்ப வீர்யமுடையவை. கனம் இல்லாதவை. மேலே பட்டால் கூட அதிக சேதம் விளைவிக்காதவை.  வெற்றி பெற விரும்புவோர் இது போன்ற அல்பமான சரங்களைக் கொண்டு போரிட மாட்டார்கள். என் அம்புகளைப் பார். என்று சொல்லியபடி, சர மழை பொழிந்தான். இந்த ஆயுதங்களால் ராவணியின் கவசம் பிளந்து சிதறியது. ஆகாயத்திலிருந்து தாரா கணங்கள் விழுவது போல, ரதத்தில் இருந்து அந்தரிக்ஷத்தில் இருந்து கீழே விழுந்து பரவின. உடல் பூரா காயத்துடன் மேலும் மேலும் அதிக ஆத்திரத்துடன், ஆயிரக் கணக்கான பாணங்களை பிரயோகம் செய்து லக்ஷ்மணனை அடித்தான். மகா திவ்யமான லக்ஷ்மணனுடைய கவசத்தையும் பிளந்து சிதறி விழச் செய்தான். ஒருவருக்கொருவர் சளைக்காமல், அடிக்கு பதிலடி என்று விடாமல் போர் செய்தனர். இருவருக்கும் மேல் மூச்சு வாங்கியது. சமமான பலம், அஸ்திர ஞானம் உள்ளவர்கள் ஆதலால் சமமாக சண்டையும் வளர்ந்தது. இருவருக்கும் உடலில் பட்ட காயங்களில் ரத்தம் பெருகியது. வெகு நேரம் கூர்மையான பாணங்களால் தாக்கியபடி இருந்தனர். யுத்த கலையை அறிந்தவர்கள், இருவரும்.  பரஸ்பரம் அடித்து,  காயம் பட்டனர்.   வெற்றியே குறியாக நின்றனர். பாணங்கள் தைக்கப் பெற்று, கவசங்கள் கிழிந்து, த்வஜம் கீழே விழ, ப்ரஸ்ரவன மலையில் அருவி கொட்டுவது போல, தங்கள் சரீரத்திலிருந்து ரத்தம் பெருக நின்றனர். இடைவிடாது வில்லின் நாணை இழுத்ததும், அம்பை விட்டதும், பெருத்த ஓசையைக் கிளப்பியது. ஆகாயத்தில், பருவ கால மேகம் கனத்து நிற்பது போல இருவரும் வெகு நேரம் போரில் முனைந்து நின்றனர். யுத்தத்தை நிறுத்தும் முயற்சியோ, சிரமம் என்றோ எண்ணவில்லை. திரும்பத் திரும்ப தங்களிடம் இருந்த தேர்ந்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் கவனமாக இருந்தனர். அந்தரிக்ஷம் பூராவும் இவர்களுடைய சர ஜாலத்தால மூடப் பெற்றது போலாயிற்று. தோஷம் இன்றி, லகுவாக, வித விதமான பிரயோகங்கள் முறையாக, அழகாக செய்யப்பட்ட அந்த யுத்தம், தேர்ந்த வீரர்களான நர, ராக்ஷஸர்களின் யுத்தமும் காண்பவர் மனதைக் கவர்ந்தது. பின் தனித் தனியாக தங்கள் திறமையைக் காட்டினர். சுற்றி இருந்த ஜனங்கள் பயத்தால் நடுங்கினர். பயங்கரமான சாட்டையடி போல சத்தம் எழுந்தது. ஆகாயத்தில் மேகங்கள் மோதிக் கொள்ளும் பொழுது தோன்றும் இடி முழக்கம் போல இவர்களது ஆயுதங்கள் மோதிக் கொண்ட பொழுது சப்தம் எழுந்தது. இருவர் உடலிலும் பட்டுத் தெறித்த அம்புகள் நுனி சிவந்து காணப்பட்டன. பாண மயமாக அந்த இடமே ஆயிற்று. வனத்தில் சால்மலி, கிம்சுக புஷ்பங்கள் பூத்திருப்பது போல இருவர் உடலிலும் காயங்கள் நிறைந்தன. இந்திரஜித் லக்ஷ்மண யுத்தம், பரஸ்பரம், வெற்றி கொள்ளும் முயற்சியில் இந்திரஜித் லக்ஷ்மணனையும், லக்ஷ்மணன் இந்திரஜித்தையும் சற்றும் சிரமத்தை உணராதவர்களாக அடித்தனர். வெகு நேரம் ஆன பின்னும், நிறுத்துபவர்களாகவோ, சிரம பரிகாரம் செய்து கொள்ளவோ இருவரும் நினைத்து பார்க்கவில்லை. இவர்கள் இருவரும் களைத்து இருப்பதையறிந்து சற்று நேரம் யுத்தத்தை நிறுத்தி வைக்கச் சொல்லி, அறிவுரை செய்தவாறு விபீஷணன் அங்கு வந்து சேர்ந்தான்.

 

இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில்  சௌமித்ரி சந்துக்ஷணம்   என்ற எண்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 90 (497) சௌமித்ரி ராவணி யுத்தம் (சௌமித்திரியும் ராவணியும் போரிடுதல்)

 

நரனான லஷ்மணனும், ராக்ஷஸனான இந்திரஜித்தும், மும்முரமாக போர் செய்து கொண்டு,  அதே நினைவாக, அதே கவனமாக இருந்ததில், உடல் வருத்தம், பசி, தாகம் கூட அவர்களை வாட்டவில்லை. ராவண சகோதரன், யுத்த முனையில் நின்று, அவர்கள் கவனத்தை கலைக்க, தன் வில்லிலிருந்து பாணங்களை விட்டான். அருகிலிருந்த ராக்ஷஸ வீரர்களைத் தாக்கி கீழே விழுந்தன. அவர்கள் விபீஷணனைச் சூழ்ந்து கொண்டார்கள். பெண் யானைகள் நடுவில் யானைத் தலைவன் நிற்பது போல நின்றான் விபீஷணன். ராக்ஷஸ வீரர்கள், யுத்தம் செய்ய ஆயத்தமாக இருப்பதைப் பார்த்து வானர வீரர்களை உற்சாகப்படுத்தினான். இதோ இவன் ஒருவன் தான் ராக்ஷஸர்களின் கதி என்பது போல நிற்கிறான். இவனை விட்டால், ராவணனைத் தவிர, அந்த பக்ஷத்தில் வேறு வீரர்கள் யாரும் கிடையாது. இவன் அழிந்தால் ராவணனின் பலமும் அழிந்தது எனலாம். ஏன் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்? வானர வீரர்களே, முன் வாருங்கள். வீரனான ப்ரஹஸ்தன் மடிந்தான். நிகும்பனும் மகா பலசாலி. அவனும் வீழ்ந்தான். கும்பகர்ணனும், கும்பனும், தூம்ராக்ஷன் என்ற ராக்ஷஸர்கள் போரில் மடிந்தார்கள். ஜம்புமாலி, மகா மாலி,  தீக்ஷ்ண வேகோ, அசனிப்ரப, சுப்தக்னன், யக்ஞ கோபன், ப்ரஜங்கோ, ஜங்கன் முதலானோரும், அக்னிகேது, ரஸ்மிகேது இவர்களும் நல்ல வீரர்கள். வித்யுத்ஜிஹ்வன், த்விஜிஹ்வன், சூர்யசத்ரு என்ற ராக்ஷஸன், அகம்பனன், சுபார்ஸ்வன், சக்ரமாலி, கம்பனன், தேவாந்தக, நராந்தகர்கள், இவர்களைப் போரில் மடியச் செய்து நாம் மிகவும் முன்னேறி இருக்கிறோம்.  கைகளால் சமுத்திரத்தை நீந்தி கடந்தது போன்ற செயல் இது. ஆயினும் இதே வேகத்தில் நாம் மீதிப் பேரையும் வென்றாக வேண்டும். தங்கள் பலத்தில் கர்வம் கொண்டு நிமிர்ந்து நின்று ராக்ஷஸர்கள் தாங்களாக வந்து போர் செய்து மடிந்தனர். நாம் வெற்றியை அணுகிக் கொண்டிருக்கிறோம்.  என் தந்தையின் மற்றொரு மகன், அவனை நான் கொல்வது யுக்தமும் அல்ல, நியாயமும் அல்ல.  அதே போலத்தான் சகோதரன் மகனையும்  எதிர்த்து நின்று போரிடுவது நியாயம் இல்லைதான். ராம காரியம் என்பதால் நான் தைரியமாக இறங்கி இருக்கிறேன்.  என் மனதில் தோன்றும் தயக்கத்தை உதறித் தள்ளி விட்டு செயலில் இறங்கி இருக்கிறேன். இவனைக் கொல்ல நினைத்தாலும், பாசம் காண்களில் நீரை நிரப்புகிறது.  கண்ணீர் பெருகுகிறது. அதனால் லக்ஷ்மணன் தான் இந்த ராவணியை அடக்கப் போகிறான். இவர்கள் அருகில் வேறு யாரும் நெருங்க முடியாதபடி, வானரங்களே கவனமாக இருங்கள். யார் நெருங்கினாலும் அடித்து வீழ்த்துங்கள். வானரங்களும், விபீஷணனுடைய அறிவுரையை ஏற்றுக் கொண்டன.  மகிழ்ச்சியோடு வாலை ஆட்டின. இதன் பின் வானரங்கள், கனைத்துக் கொண்டும், குதித்துக் கொண்டும், மேகத்தைக் கண்டு ஆடும் மயில்கள் ஆனந்தம் அடைவது போல, வித விதமான ஓசைகளை கிளப்பினர்.  ஜாம்பவானும் தன் படையுடன் வந்து சேர்ந்தார். சுற்றி காவல் இருந்த ராக்ஷஸர்களை நகங்களாலும், பற்களாலும் தாக்கினர். கற்களால் அடித்து வீழ்த்தினர்.  முதலில் கரடி ராஜனைக் கண்டு பயந்த ராக்ஷஸர்கள் பயம் தெளிந்து பட்டஸங்களையும், சூலங்களையும் கொண்டு தாக்க ஆரம்பித்தனர். ராக்ஷஸ சேனையை நாசம் செய்யும் ஜாம்பவானை கொல்லத் துணிந்தனர். தேவாசுரர்கள், பலம் மிகுந்த இரு பக்ஷமும் போரில் மோதிக் கொள்வது போல சப்தம் காதைத் துளைத்தது. ஹனுமானும் பெரிய சால மரத்தைச் சுழற்றிய படி குதித்துக் கொண்டு வந்து நின்றான். லக்ஷ்மணனை தன் தோளில் தூக்கிக் கொண்டான். முதுகில் லக்ஷ்மணன் இருந்த நிலையிலும் கைக்கு எட்டியவரை ராக்ஷஸர்களை அடித்து துன்புறுத்தினான்.  விபீஷணனை தன் யுத்த முறையால் அடித்து களைப்படையச் செய்து விட்டு, இந்திரஜித் திரும்ப லக்ஷ்மணனிடமே வந்து சேர்ந்தான்.  திரும்பவும், லக்ஷ்மணனும், இந்திரஜித்தும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து சர மழையாக பொழிந்து ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையைத் தொடர்ந்தனர்.  சந்திரனும், சூரியனும் போல, கோடைக்கால முடிவில் மேகங்கள் மோதிக் கொள்வது போல, வில்லில் நாணை இழுத்து, அம்பை பூட்டியதோ, விட்டதோ எதுவுமே கண்களுக்குத் தெரியவில்லை. வில்லிலிருந்து அம்பு புறப்பட்டது தெரியவில்லை. தன் மேல் படாமல் காத்துக் கொண்டதோ, எதுவுமே அவர்கள் கை லாகவத்தால் தெரியவில்லை. பாண வர்ஷங்களால் ஆகாயம் மூடிக் கிடந்தது. ஒரு சமயம் இந்திரஜித் லக்ஷ்மணனை நோக்கிப் போவது போல இருந்தது. மற்றொரு சமயம் லக்ஷ்மணன் இந்திரஜித்தை நெருங்கிக் கொண்டு இருப்பது போல காட்சியளித்தது. இரு தரப்பிலிருந்தும் கூரான பாணங்கள் சீறிப் பாய்வது மட்டுமே தெரிந்தது. திக்குகளில் இருள் சூழ்ந்தது. சூரியனும் மறைந்த பின் எங்கும் இருள் தான். மாமிசம் தின்னும் பக்ஷிகள் வட்டமிடத் தொடங்கின. அச்சமயம் காற்றும் அசையவில்லை. நெருப்பும் சுடவில்லை. மகரிஷிகள் உலகம் பிழைக்க ஜபம் செய்யலாயினர். கந்தர்வர்களும், சாரணர்களுமாக வந்து நின்றனர். ராக்ஷஸ சிம்மமான இந்திரஜித்தின் கரிய உடல், அவன் ஆபரணங்களால் அடையாளம் காண நேர்ந்தது.  நான்கு கூரிய பாணங்களால் லக்ஷ்மணன் அவன் குதிரைகளைத் துளைத்தான். அதே போல மற்றொரு பாணத்தால் சாரதியை குறியாகக் கொண்டு, அசனி என்ற பாணத்தை விட்டான். ராகவனுடைய கை வண்ணத்தால், தலை தனியாக துண்டித்து விழுந்தது. சாரதி விழுந்தவுடன், மந்தோதரி சுதனான இந்திரஜித் தானே சாரத்யமும் செய்யலானான். பின் வில்லை எடுத்து போரில் ஈ.டுபட்டான். இந்த அத்புதமான செயலைக் கண்டவர் வியந்து நின்றனர். சாரத்யம் செய்யும் சமயம் குதிரையின் மேல் இருந்த கைகளில் அடித்தான். வில்லை எடுத்து முனைந்து நின்ற பொழுது குதிரைகளைத் தாக்கினான். லக்ஷ்மணனும் கவனமாக கிடைத்த இடைவெளிகளை விடாமல் பயன்படுத்தி அம்புகளைக் கொண்டு இந்திரஜித்தை ஏதோ ஒரு விதமாக தாக்கிக் கொண்டிருந்தான். சாரதி இறந்ததே, இந்திரஜித்தை வருத்தமடையச் செய்தது. முகம் வாடி நின்றவனைப் பார்த்து வானரங்கள் குதூகலத்துடன் லக்ஷ்மணனிடம் வந்து தெரிவித்தன. சரபன்,  ப்ரமாதி, ரபஸன், கந்த மாதனன் நால்வரும் வேகமாக சென்று இந்திரஜித்தின் விசேஷமான குதிரைகள் மேல் தாவி ஏறினர். மலை போன்ற சரீரம் உடைய இந்த வானரங்கள் எறி அமர்ந்ததும், குதிரைகள் திணறின.  குதித்தும், மிதித்தும் அவை அட்டகாசம் செய்ததில் கடையப் பெற்றது போல வருந்தி பூமியில் விழுந்தன. ரதத்தையும் சின்னா பின்னமாக்கி விட்டு வானரங்கள் லக்ஷ்மணனிடம் சென்று நின்று கொண்டன. இதைக் கண்டு ராவணி, வேகமாக லக்ஷ்மணன் அருகில் வந்தான். கால் நடையாக வந்து பாணங்களை பொழியும் எதிரியை, லக்ஷ்மணன் நேருக்கு நேர் நின்று போரைத் தொடர்ந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சௌமித்ரி ராவணி யுத்தம்  என்ற தொன்னூறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 91 (498) ராவணி வத| (ராவணன் மகன் இந்திரஜித்தை வதம் செய்தல்)

 

குதிரையும் மடிந்து விழுந்தபின், தரையில் நின்ற ராக்ஷஸ ராஜ குமாரனான இந்திரஜித், கடும் கோபத்துடன் தானே தன் தேஜஸால் நெருப்பாக ஜ்வலித்தான். இருவரும் வில்லேந்திய வீரர்கள். ஒருவரையொருவர் யுத்தத்தில் கொல்ல விரும்பியவர்களாக கையில் ஆயுதம் எடுத்தவர்கள், வெற்றி இருவருக்கும் எட்டாமல் போக, காட்டில் யானையும், ரிஷபமும் போல த்வந்த யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். படை வீரர்கள் ராக்ஷஸர்களும், வானரங்களும் இடை விடாது மோதிக் கொண்டனர்.  அது ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது.  ராக்ஷஸ வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டியபடி, ஊக்குவித்துக் கொண்டு நடு நடுவில் இந்திரஜித் அவர்களைப் பார்த்துச் சொன்னான். ராக்ஷஸ வீரர்களே| நாலா திக்குகளிலும் இருள் பரவச் செய்யுங்கள். இன்றா நாளையா என்று இந்த வானரங்கள் அறிய முடியாதபடி செய்யுங்கள். நீங்கள் திடமாக ஊன்றி நில்லுங்கள்.  போரைத் தொடர்ந்து செய்து கொண்டு, வானர வீரர்களை மோகத்திலேயே இருக்கச் செய்யுங்கள். நான் ரதத்தை எடுத்துக் கொண்டு திரும்ப வந்து விடுகிறேன். நான் வரும் வரை இந்த காட்டு மிருகங்களை சமாளியுங்கள். நான் நகரம் போயிருப்பது தெரிந்தால் இவை யுத்தம் செய்யாமல் நிறுத்தி விடுவார்கள்.  என்று சொல்லி வானரங்களை ஏமாற்றி. அவர்கள் அறியாத வண்ணம் லங்கா நகரின் உள்ளே சென்றான்.

 

ரதத்தைக் கொண்டு வரும் எண்ணத்துடன், ஊருக்குள் சென்று, ரதத்தை பூஜித்து, ஆயுதங்கள் நிரப்பி, உயர் ஜாதி குதிரைகளைப் பூட்டி, குதிரையின் நடத்தும் முறைகளை அறிந்த சாரதியும், நல்ல முறையில் அவனுக்கு விளக்கிச் சொல்லி, தானும் ரதத்தில் ஏறினான்.  மந்தோதரி சுதனான இந்திரஜித் முக்யமான ராக்ஷஸ வீரர்களுடன் நகரத்தை விட்டு வெளியே வந்தான்.  க்ருதாந்தன் (யமன்,  விதி) அவனை உந்தித் தள்ளியது. எதிரிகளை அழிக்கும் ஆற்றல் மிகுந்த இந்திரஜித் ஊரிலிருந்து வெளிப்பட்டு, வேகமாக லக்ஷ்மணனும், விபீஷணனும் நிற்கும் இடம் வந்து சேர்ந்தான். ரதத்தில் ஏறி நின்ற ராவணாத்மஜனைப் பார்த்து லக்ஷ்மணன், வானர ராஜன், விபீஷணன் அனைவருமே ஆச்சர்யம் அடைந்தனர். அவனுடைய புத்தி கூர்மையையும், லாகவத்தையும் வியந்தனர். ராவணியும், ஆத்திரத்துடன் வானரங்களையும், மற்றவர்களையும் கைக்கு கிடைத்தபடி அடித்து வீழ்த்தலானான். வில்லை மண்டலமாக வைத்துக் கொண்டு நாலா திசைகளிலும் ஒரே சமயத்தில் பாண பிரயோகம் செய்தான். நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக வானரங்கள் அடி பட்டு விழுந்தன. மிகுந்த லாகவத்துடன் வானரங்களை அடித்து கீழே விழச் செய்தான். பொறுக்க மாட்டாமல் வானரங்கள் சௌமித்ரியை சரணம் அடைந்தன. ப்ரஜைகள் ப்ராஜாபதியை சரணமடைவது போல சரணம் அடைந்தன. யுத்தத்தில் காட்ட வேண்டிய இயல்பான கோபத்துடன் சௌமித்ரி, தன் கை வண்ணத்தால் அவன் வில்லை அடித்து தள்ளினான். இந்திரஜித் உடனே மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அதே வேகத்தில் தொடர்ந்தான். இதையும் லக்ஷ்மணன் குறி வைத்து மூன்று பாணங்களால் அடித்து வீழ்த்தினான். வில் முறிந்து கீழே விழுந்தவுடன், ஆலகால விஷம் போன்ற ஐந்து பாணங்களை ஒன்றாக இந்திரஜித்தின் மார்பை குறி வைத்து அடித்தான். பெரிய வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் அவன் பெருத்த உடலை துளைத்துக் கொண்டு கீழே விழுந்தன. ரத்தம் பெருக, அந்த நிலையிலும் மற்றொரு புது வில்லை எடுத்துக் கொண்டு ராவணி போர் செய்ய வந்து விட்டான். இந்திரன் போல இடைவிடாது பாணங்களைப் பொழிந்து லக்ஷ்மணனை அடித்தான்.  லக்ஷ்மணன் அவைகளைப் பொறுத்துக் கொண்டான். ராவணிக்கு தன் அத்புதமான சக்தியைக் காட்டுவது போல அவன் பாணங்களை தன் சரீரத்தில் வாங்கிக் கொண்டு நின்றான்.  மூன்று அம்புகளால் தனித் தனியாக தாக்கினான். ராக்ஷஸ ராஜகுமாரனுக்கு சுற்றிலும் வலை பின்னியது போல பாணங்களை தொடுத்தான். அப்பொழுதும் அவன் லக்ஷ்மணனை விடவில்லை. அம்பு மழையாக பொழிவதையும் நிறுத்தவில்லை. அவைகளைத் தன் முன் வரும் பொழுதே வழியிலேயே லக்ஷ்மணன் தடுத்துச் சிதறச் செய்து விட்டான். அவன் ரதத்தையும், சாரதியையும் குறி வைத்து அடித்ததில், சாரதி தலையில் பட விழுந்தான். சாரதி இல்லாமல் குதிரைகள் திகைத்தன. மண்டலமாக அவை ஓடின. இதுவும் அத்புதமான காட்சியாக இருந்தது. ஆத்திரத்துடன் அவனும் லக்ஷ்மணனுக்கு பதிலடி கொடுத்தான். பத்து பாணங்களால் லக்ஷ்மணனை அடித்தான்.  இதைப் பொறுக்க மாட்டாமல் லக்ஷ்மணனும் ராவணி உடலை கிழிக்கும்படி அடித்தான். ராவணி ஆத்திரம் தாங்காமல் வஜ்ரம் போன்ற பத்து பாணங்களால் திரும்ப அடித்தான். லக்ஷ்மணனின் கவசத்தில் பட்டு அவை திரும்பி வந்தன. கவசம் தான் பிளக்க முடியாதபடி உறுதியாக இருக்கிறது என்று எண்ணி லக்ஷ்மணனின் நெற்றியில் அடித்தான். தன் கை வண்ணத்தையும் ,வேகத்தையும் காட்டுவது போல ப்ருஷத்கம் என்ற ஆயுதத்தால் அடித்தான். நெற்றியில் இந்த ஆயுதம் தைத்தபடி நின்றது.  மூன்று சிகரங்களுடன் நிற்கும் மலை போல இருந்தான்.  இதற்கும் ஐந்து சரங்களை பிரயோகித்து பதிலடி கொடுத்தான். மகா பலசாலியான இருவரும், இந்திரஜித்தும், லக்ஷ்மணனும், இருவரும் சளைப்பவர்களாக இல்லை. இந்திரஜித்தின் சுபமான குண்டலங்கள் மேல் பட்டு அவை அறுந்து விழுந்தன. இருவரும் பெருகும் ரத்தத்தை பொருட்படுத்தவே இல்லை. ஒருவரை ஒருவர் நெருங்குவதிலும், தாக்குவதுமாகவும் இருந்தனர். கிம்சுக புஷ்பம் மலர்ந்தது போல உடல்  முழுவதும் காயம். இதன் பின் (சமர கோபேன) யுத்தத்தில் இயல்பாக வரும் கோபத்துடன் விபீஷணனை பல பாணங்களைக் கொண்டு முகத்திலேயே அடித்தான், அயோ  முகம் எனும் பாணங்களைக் கொண்டு,  மூன்று பாணங்களால் விபீஷணனைத் தாக்கி அதே வேகத்தில் வானர வீரர்களையும் அடித்தான். விபீஷணன் கோபத்துடன் அவன் குதிரைகளைத் தாக்கினான்.  தன் கை  க3தை4யால் குதிரைகளை அடித்து ராவணன் மகன் ரதத்திலிருந்து கீழே இறங்கச் செய்தான். சாரதியும் இறந்து விட, ரத சக்தியை தன் தந்தை வழி உறவினனான விபீஷணன் மேல் பிரயோகித்தான். வேகமாக வரும் அந்த அஸ்திரத்தைக் கண்டு லக்ஷ்மணன், இடையிலேயே அதை தன் பாணங்களால் சிதறச் செய்தான். உடனே விபீஷணன் மார்கணம் எனும் ஆயுதத்தை ஐந்து ப்ரதேசத்தில் ஒரே சமயத்தில் அடிக்கும் படி பிரயோகித்தான்.  அவை  ராவணியைத் துளைத்து அவன் ரத்தத்தை குடித்து நுனி சிவந்து பூமியில் விழுந்தன. இந்திரஜித்தின் கவனம் இப்பொழுது விபீஷணன் பேரிலேயே இருந்தது.  யமன் கொடுத்த சக்தி வாய்ந்த ஒரு அஸ்திரத்தை எடுத்தான். அவன் கையில் அந்த அரிய உத்தமமான அஸ்திரத்தைக் கண்டு லக்ஷ்மணனும் அதற்கு சமமான, அதை முறியடிக்கக் கூடிய மற்றொரு பாணத்தை எடுத்தான். குபேரன் ஒரு முறை ஸ்வப்னத்தில் கொடுத்த ஒரு அஸ்திரம் இந்திரனாலும், மற்ற சுராசுரர்களாலும் எதிர்த்து நிற்க முடியாத அரிய ஆயுதம், இதை பிரயோகித்தான். இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகள் தங்களுக்குள் மோதிக் கொள்வது போல இந்த அஸ்திரங்கள் இரண்டும் வழியிலேயே மோதிக்கொண்டன. இரண்டு வீரர்களும் தங்கள் ஸ்ரேஷ்டமான வில்லிலிருந்து அதிசயமான, பலம் வாய்ந்த அஸ்திரங்களை பிரயோகிக்கவும் அந்த இடமே இந்த வீரர்களால் ஜாஜ்வல்யமாயிற்று.  ஆகாயத்தையும் தங்கள் தேஜஸால் ஒளி பெற செய்தனர். முகத்தோடு முகம் அடித்துக் கொண்டு இருவரும் விழுந்தனர். இருவர் மார்பிலும் மற்றவரால் அடிக்கப் பெற்ற பாணங்கள் ஏற்படுத்திய காயங்கள் தென்பட்டன.

 

புகையும், நெருப்புக் கனலும், தீப்பொறியுமாக அஸ்திரங்களின் உரசலால் அந்த இடம் நிறைந்தது.  மகா க்ரஹங்கள் போன்ற இருவரும் ஒருவரையொருவர் விழச் செய்து பல முறை மேதினியில் விழுந்து எழுந்தனர். தங்கள் சரம் நடுவில் தடுக்கப் பட்டால் ரோஷமும், வெட்கமும் இருவரும் அனுபவித்தனர். உடனே சமாளித்து வேறு அஸ்திரம் எய்வர். மிகவும் கவனமாக லக்ஷ்மணன் வாருணாஸ்திரத்தை விட்டான். மகேந்திரனை வென்றவனான இந்திரஜித் அதை ரௌத்ரம் என்ற அஸ்திரத்தால் முறியடித்தான். வாருணாஸ்திரம் முறிந்தது. இந்திரஜித் உடனே ஆக்னேயம் என்ற அஸ்திரத்தை தியானித்து தன் அம்பில் எய்தான். உலகத்தை வற்றச் செய்து விடும் நோக்கத்துடன் அதை பிரயோகம் செய்தான். அதை சௌரம் என்ற அஸ்திரத்தால் லக்ஷ்மணன் முறியடித்தான்.  தன் ஆக்னேயாஸ்திரம் முறியடிக்கப் பட்டவுடன் இந்திரஜித் கோபத்துடன் ஆசுரம் என்ற அஸ்திரத்தை தியானித்து எய்தான். சத்ருக்களை நாசம் செய்யக் கூடிய இந்த மகா கோரமான அஸ்திரம், ஒளி வீசும் கூடம், முத்கரம், சூலங்கள், புசுண்டி,  க3தை4கள், வாள், பரஸ்வதம் போன்ற ஆயுதங்களை ஸ்ருஷ்டி செய்து அனுப்பியது.  சர்வ சத்ருக்களை நாசம் செய்யும் இந்த ஆசுர அஸ்திரத்துக்கு எதிராக, சௌமித்ரி மாகேஸ்வராஸ்திரம் என்ற அஸ்திரத்தால் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டான். சமமான வீரர்களான இருவருக்கும் இடையில் போர் கடுமையாக இருந்தாலும், காண்போருக்கு அத்புதமாக இருந்தது.  ஆகாயத்தில் இருந்த ஜீவர்கள், லக்ஷ்மணனை காப்பாற்ற முனைந்தன.

 

இதனிடையில் பைரவர்கள் போல வானர ராக்ஷஸ யுத்தமும் நடந்து கொண்டிருந்தது.  தேவர்கள் நடப்பதை அறிய கூட்டம் கூட்டமாக ஆகாயத்தில் நின்றனர். ரிஷிகளும், பித்ருக்களும், தேவர்களும் கந்தர்வ, உரக, கந்தர்வர்கள் இந்திரனை முன்னிட்டுக் கொண்டு லக்ஷ்மணனை காத்தனர். ராகவானுஜன், மற்றொரு மார்கணம் என்ற ஆயுதத்தை எடுத்து எய்தான். நெருப்பு போன்று தொட முடியாதபடி தகித்துக் கொண்டு, ராவணன் மகன் உடலை பிளக்கும்படியான ஆயுதம், சுவர்ணம் போல பள பளத்துக் கொண்டு சரீரத்தின் உள்ளே செல்லக் கூடிய பயங்கரமான ஆலகால் விஷம் போன்ற ஆயுதம்.   ராக்ஷஸர்கள் இதைக் கண்டே நடுங்கினர். இந்த அஸ்திரத்தால் தான் ஒருசமயம் இந்திரன் மகா தேஜஸுடன் அசுரர்களை ஜயித்தான். முன்பொரு சமயம்,  தேவாசுர யுத்தம் நடந்த பொழுது இந்திரன் இதை பயன் படுத்தினான். யுத்தங்களில் பல முறை உபயோகித்து, தோல்வியே காணாதது என்று புகழ் பெற்ற அஸ்திரம் அது.  ஸ்ரேஷ்டமான அந்த அஸ்திரத்தை, ஸ்ரேஷ்டமான தன் வில்லில் பொருத்தி, நர ஸ்ரேஷ்டனான லக்ஷ்மணன் குறி பார்த்து வில்லில் வைத்தபடி, காலன் உலகை அழிப்பது போல அழிக்கக் கூடிய திவ்யாஸ்திரத்தை தியானித்து, வில்லில் பொருத்தியபடியே, மனதினுள் தியானம் செய்தான். ராமன், தர்மாத்மா, சத்ய சந்தன் என்பது உண்மையானால், பௌருஷத்தில் அவனுக்கு இணையாக யாரும் இல்லை என்பது உண்மையானால்,   சரமே| இந்த ராவணியை கொல்.  என்று தியானித்து பிரயோகம் செய்தான். காது வரை வில்லின் நாணை இழுத்து, சௌமித்ரி யுத்தம் செய்வதில் வல்லவனான வீரன், இந்திரஜித்தின் மேல் படும்படி அடித்தான். அந்த ஐந்திராஸ்திரம், அவன் தலையை காக்கும் த்ராணம், (ஹெல்மெட்) ஒளி வீசும் குண்டலங்கள்,  லக்ஷ்மீகரமான முகம், அதை உடலிலிருந்து வேறு படுத்தி பூமியில் விழச் செய்தது. அந்த ராக்ஷஸனுடைய அறுபட்ட தலையுடன், மீதியிருந்த உடல், பூமியில் தடாலென்று விழுந்தது.

 

ராவணாத்மஜன் அடிபட்டு உயிர் துறந்தவனாக ரத்த வெள்ளத்தில் மிதந்தான். கவசம் அணிந்தவன், தலைக்கு பாதுகாப்பாக த்ராணம் அணிந்து, அடிபட்டு விழும் பொழுது அவன் தன் சரங்களை பாதுகாப்பாக வைக்கும் உறையும் விழ,  வானரங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. தேவர்கள் வ்ருத்திர வதம் ஆனவுடன் மகிழ்ந்தது போல மகிழ்ந்தனர். அந்தரிக்ஷத்தில், தேவர்களும், மகரிஷிகளும், கந்தர்வ அப்ஸரஸ் ஜனங்களும், கோலாகலமாக ஆரவாரம் செய்தனர். தங்கள் தலைவன் விழுந்ததை அறிந்து ராக்ஷஸ சேனை, வானரங்கள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, துரத்த, நாலா திக்குகளிலும் ஓடி மறைந்தன. ஆயுதங்களைத் துறந்து லங்கையை நோக்கி எதையும் நினைத்து பார்க்க முடியாதவர்களாக ஓடினார்கள். மிகவும் பயந்தவர்களாக நூற்றுக் கணக்காக கிடைத்த வழியில் ஓடினர்.  பல விதமான ஆயுதங்களையும் கீழே போட்டு விட்டு ஓடினர். சிலர் வானரங்கள் துரத்த லங்கையில் நுழைந்தனர். சிலர் சமுத்திரத்தில் விழுந்தனர். சிலர் மலையில் ஏறி மறைந்து கொண்டனர். இந்திரஜித் வதம் செய்யப் பட்டானா என்று நம்ப முடியாதவர்களாக., ரண பூமியில் அவன் விழுந்து கிடப்பதைக் காண பொறுக்காதவர்களாக, ராக்ஷஸர்கள் ஆயிரக் கணக்கில் ஓடியவர்களில் யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை. சூரியன் அஸ்தமனம் ஆனவுடன் சூரிய கிரணங்கள் காண கிடைக்காதது போல உடன் மறைந்தனர். இந்திரஜித் என்ற மகா வீரன் போரில் மடிந்து விழுந்தவுடன், ஆதித்யன் தன் ஒளிக் கிரணங்களை உள் வாங்கிக் கொண்டது போலும், நெருப்பு ஜ்வாலையை அடக்கிக் கொண்டது போலவும், உயிரிழந்த அந்த மகா வீரன் பூமியில் கிடந்தான். உடல்  முழுவதும் பட்ட காயங்களின் வேதனை தீர்ந்தது. எதிரிகள் தொந்தரவு எதுவும் இன்று தூங்குவது போல இருந்தான். இந்திரஜித் மடிந்தான் என்ற செய்தி தேவ லோகத்தில் இந்திராதி தேவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  தேவர்கள் கூட்டதோடு இந்திரனும் கலந்து கொண்டான். துந்துபி முழங்கியது. அப்ஸரஸ்த்ரீகள் நடனமாடினர். கந்தர்வர்கள் ஆடிப் பாடினர். ஆகாயத்திலிருந்து புஷ்ப மாரி பொழிந்தது. அத்புதமான காட்சியாக இருந்தது. க்ரூர கர்மாவான அந்த ராக்ஷஸன் வதம் செய்யப் பட்டதை பாராட்டினர். நீர் சுத்தமாக ஆயிற்று. திசைகள் சுத்தமாயின. தைத்ய தானவர்களும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.  எல்லோரும் கூட்டமாக வந்து வாழ்த்தினர். சிந்தையின்றி மனக்லேசமின்றி, இனி தைரியமாக நீங்கள் சஞ்சரிக்கலாம் என்று ப்ராம்மணர்களைப் பார்த்துச் சொன்னார்கள். யுத்த பூமியில் சேனைத் தலைவர்களாக இருந்த வானர வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.  அளவிட முடியாத எதிர்க்க முடியாத பலசாலி என்று உலகம் கொண்டாடிய இந்திரஜித், ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான வீரன், போரில் தோற்றான், என்றதும், விபீஷணன், ஹனுமான், ஜாம்பவான் மற்றும் முக்கியமான வீரர்கள், விஜயத்தின் காரண கர்த்தாவான லக்ஷ்மணனை வாழ்த்தினர். வானரங்கள் தங்கள் மகிழ்ச்சியை கூக்குரல் இட்டும், கர்ஜனை செய்தும், வெளிப்படுத்தின. லயத்தை அடைந்து விட்ட திருப்தியோடு ராகவனை சூழ்ந்து நின்றன. வாலை அடித்தும், தோள் தட்டியும், வானரங்கள் லக்ஷ்மணனுக்கு வெற்றி என்று முழக்கம் இட்டும்,  ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டும், மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.  தங்களுக்குள் ராகவன் சம்பந்தமான  க3தை4களைப் பேசிக் கொண்டனர்.  மிகக் கடினமான காரியம் இது.  இதை செய்து விட்டான் லக்ஷ்மணன் என்று விஷயமறிந்தவர்கள் லக்ஷ்மணனை பாராட்டி பேசினர். தேவர்களும் இந்திரஜித் அழிந்தான் என்று மகா நிம்மதி அடைந்தனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணி வத4 என்ற தொன்னூற்று ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 92 (499) ராவணி சஸ்திர ஹத சிகித்ஸா (இந்திரஜித்தின் சரங்களால் பட்ட காயங்களுக்கு சிகித்சை செய்தல்)

 

சுப லக்ஷணனான லக்ஷ்மணன், உடல் முழுவதும் பெருக்கெடுத்து ஓடும் ரத்தமும், காயமுமாக இருந்தாலும், சக்ரஜேதா, இந்திரனை ஜயித்தவன் என்று புகழ் பெற்ற ராவணன் மகனை வென்றதில் மகிழ்ச்சியடைந்தான். ஜாம்பவானையும், ஹனுமானையும் பார்த்து மற்ற பெரிய வீரர்களையும் அழைத்துக் கொண்டு, சுக்ரீவனும், ராமரும் இருக்கும் இடம் வந்து சேர்ந்தான். ஒரு பக்கம் விபீஷணனும், மறு பக்கம் ஹனுமானுமாக தாங்கி வர, ராமரை அடைந்து வணங்கி நின்றான். அருகில் சென்று இந்திரஜித் வதம் செய்யப் பட்டதை தெரிவித்தான்.  ராவணியின் தலை லக்ஷ்மணனின் பாணத்தால் துண்டிக்கப் பட்டதை விபீஷணன் விவரித்தான்.  ராமரும் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்ததை அறிந்து அவனை பாராட்டினார்.  சாது லக்ஷ்மணா| சந்தோஷம். மிக அரிய வீரச் செயலை செய்து காட்டி விட்டாய்.  ராவணன் மகனை ஜயித்ததில் யுத்தமே நம் பக்கம் தான்.  ஜயம் நம் பக்கமே என்பது உறுதியாகி விட்டது.  நாம் வெற்றி பெறுவோம்  என்று சொல்லி லக்ஷ்மணனை உச்சி முகர்ந்து, லஜ்ஜையுடன் தயங்கி நின்றவனை பலவந்தமாக தன் பக்கம் இழுத்துக் கொண்டு மடியில் இறுத்தி, காயங்களை தடவிக் கொடுத்து, சகோதரனான  லக்ஷ்மணனை பார்த்து திரும்பத் திரும்ப மகிழ்ந்தார். ஆயுதங்கள் தைத்து கிழிந்து போன பல இடங்களில் ரத்தம் பெருகுவதைக் கண்டதும், ராமர் மிகவும் வருந்தினார். ஆயினும் வெற்றியடைந்ததால் உண்டான நிம்மதியுடன், அவன் காயங்களுக்கு மருந்து போட்டு சிகித்ஸை செய்வதில் கவனத்தைத் திருப்பினார். புத்திரன் இறந்ததில் ராவணன் பாதிக்கப் பட்டிருப்பான். இனி அவனையும் சுலபமாக வெல்வோம்.  மிக கஷ்டமான காரியத்தை செய்து விட்டாய். லக்ஷ்மணா| மீதிக் காரியங்களை இனி சீக்கிரமே செய்து விடுவோம். ராவணனுக்கு வலது கரமாக இருந்த இந்திரஜித் அழிந்தான் என்பது அவனுக்கு பெரும் இழப்பே. விபீஷணனும், ஹனுமானும் பெரும் செயல்களை செய்திருக்கின்றனர்.  ரண பூமியில் அவர்கள் ஆற்றலைக் காட்டி போரிட்டு வந்திருக்கின்றனர்.  நீங்கள்  மூவரும் இரவும் பகலும் போராடி வென்று வந்துள்ளீர்கள். ராவணனுக்கு பெரிய இடியாக இருக்கும் இந்த செய்தி. நிச்சயம் மிகவும் வருந்துவான். புத்திர வதம் அவனை சோகத்தில் ஆழ்த்தும். சீக்கிரமே அவனை படையுடன் சென்று அழிக்கிறேன். லக்ஷ்மணா| நீ தலைமை தாங்கி நடத்திச் செல்லும் பொழுது, சீதையோ, ராஜ்யமோ, எதுவுமே எனக்கு கைக் கெட்டிய தூரத்தில் தான் இருக்கிறது என்ற நம்பிக்கை வருகிறது. இனி அடைய முடியாதது என்று எதுவுமே இல்லை. இந்திரனை வென்றவனையே நீ வென்று விட்டாய். என்று பல விதமாக லக்ஷ்மணனை பாராட்டி மகிழ்ந்தார். சுஷேணனை அழைத்து ராமர், லக்ஷ்மணன் உடலில் அம்புகள் தைத்திருப்பதை நீக்கி, நலமாக ஆகும் வரை. உரிய சிகித்சைகளைச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டார்.  விபீஷணனனுக்கும், அதே போல சிகித்சை செய்யுங்கள்.  இந்த கரடிகள், வானரங்கள் அடங்கிய சேனையில் யாராக இருந்தாலும், காயத்துக்கு மருந்து போட்டு, குத்தி உடைந்து நிற்கும் அம்பு நுனிகளை நீக்கி, வைத்யம் செய்து நலமாக செய்யுங்கள் எனவும், சுஷேணன் கட்டளையை சிரமேற்கொண்டு லக்ஷ்மணனுக்கு சிகித்சையை உடனே தொடங்கினான்.  விசல்யம் என்ற மருந்தை மூக்கால் நுகர்ந்து பார்த்ததிலேயே பாதி உடல் நலம் பெற்று விட்டதாக லக்ஷ்மணன் உணர்ந்தான். காயங்கள் ஆறி, வேதனை அகல, லக்ஷ்மணன் சுகமாக ஆனான். ராமனின் கட்டளைப்படி, படை வீரர்கள் அனைவருக்கும் உரிய சிகித்ஸை தரப்பட்டது. உடல் உபாதை நீங்கப் பெற்ற வானர வீரர்கள் சுக்ரீவனை சூழ்ந்து கொண்டு, நின்றனர்.  இதன் பின் ராமன், வானர ராஜாவான சுக்ரீவன், விபீஷணன், ஜாம்பவான், முதலானோர்,  லக்ஷ்மணன் காயம் நீங்கி பழைய உடல் நிலையை அடைந்ததைக் கண்டு மகிழ்ந்தார்கள். மிக அரியச் செயலை செய்த லக்ஷ்மணனை பாராட்டி பேசி மேலும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணி சஸ்திர ஹத சிகித்ஸா என்ற தொன்னூற்று இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 93 (500) சீதா ஹனனோத்யம நிவ்ருத்தி (சீதையைக் கொல்ல முயன்றதை தடுத்தல்)

 

ராக்ஷஸ மந்திரிகள், இந்திரஜித் வதமானதை அறிந்து திகைத்தனர். மிக வருத்தத்துடன் ராவணனிடம் தெரிவித்தனர். மகா ராஜா| யுத்தத்தில் லக்ஷ்மணனால் தங்கள் மகன் கொல்லப் பட்டான். விபீஷணன் சகாயம் செய்திருக்கிறான். யுத்தத்தில் இவன் எதிரிகள் சார்பில் நமக்கு துரோகம் செய்திருக்கிறான். சூரன், எந்த யுத்தமானாலும் வெற்றியே அடைந்து வந்துள்ளவன் இந்திரஜித்.  இவனைச் சார்ந்தவர்களும் தேர்ந்தெடுத்த சூரர்களே. இருந்தும் லக்ஷ்மணனால் கொல்லப் பட்டான். உன் மகன் இந்திரஜித், என்று புகழ் பெற்றவன், பரலோகம் சென்று விட்டான். முடிந்தவரை லக்ஷ்மணனோடு போரிட்டு அவனை வாட்டி எடுத்தான்.

 

இதைக் கேட்டு ராவணன் பயங்கரமான செய்தியை, புத்திரனின் மரணத்தைக் கேட்டு சொல்லொணாத் துயரம் அடைந்தான். வெகு நேரம் நினைவு இன்றி மூர்ச்சித்துக் கிடந்தவன், சமாளித்துக் கொண்டு எழுந்து வந்தான். புத்ர சோகத்துடன், உடல் தளர, விசித்து விசித்து அழுதான். ஹா, ராக்ஷஸ வீரனே|, சேனையின் தலைவனே| என் குழந்தாய். மகா ரதி என்று புகழ் பெற்று வளைய வந்தாயே. இந்திரனையே ஜயித்து வந்தவன், இன்று லக்ஷ்மணன் கையில் மரணத்தை தழுவினாயோ? உன்னை காலாந்தகன் கூட தொட மாட்டானே. கோபம் கொண்டு நீ பாணங்களைப் பொழிய ஆரம்பித்தால், யாராயிருந்தாலும் நடுங்குவார்களே.  மந்தர மலைச் சிகரம் கூட நடுங்கும். இந்த லக்ஷ்மணன் எப்படி ஜயித்தான்?  இன்று வைவஸ்வத ராஜா, என் மதிப்புக்குரியவன், அவன் கூட நீ போய் சேர்ந்து விட்டாயா? கால தர்மம் இது. சுத்த வீரர்களுக்கு இது தான் வழி. சுர கணங்களேயானாலும், யாருக்காக போர் புரியச் சென்றார்களோ அவன் பொருட்டு மடிவதால் உத்தமமான கதியை அடைவார்கள். இன்று தேவர்களும், லோக பாலர்களும், ரிஷிகளும், இந்திரஜித் மடிந்தான் என்று கேட்டு நிம்மதியாக உறங்குவார்கள். இன்று மூன்று உலகும், பூமியும், அதன் காடுகளும், நதிகளும் கூட ஒரு இந்திரஜித் இல்லாததால் எனக்கு சூன்யமாகத் தெரிகிறது. ராக்ஷஸ ஸ்த்ரீகள் அந்த:புரத்தில் புலம்பும் சத்தம் கேட்கிறதே. பெண் யானைகள், மலை குகையில் ஓலமிடுவது போல ஒலிக்கிறது. யுவ ராஜ்யம், லங்கை, இந்த ராக்ஷஸ பரிவாரம், உன் தாய், தந்தையான நான், எங்கள் அனைவரையும் விட்டு, மகனே | எங்கு சென்றாய். வீரனே | நான் யம புரி சென்று நீ எனக்குச் செய்ய வேண்டிய அந்திம கிரியைகளை நான் உனக்குச் செய்ய நேர்ந்து விட்டதே.  இது என்ன விபரீதம்? சுக்ரீவனும் லக்ஷ்மணனும், ராகவனும் உயிருடன் இருக்கும் பொழுது என் அம்புகளுக்கும் தப்பி பிழைத்து இவர்கள் நிற்கிறார்கள், நீ எங்கே போய் விட்டாய் மகனே. எங்களை பரிதவிக்க விட்டு எங்கு போனாய்? இன்று இவ்வாறு வருந்தி புலம்பும் ராஜா ராவணனை பெரும் கோபம் ஆட்கொண்டது. புத்திரனின் மரணத்தால், பன் மடங்காகிப் போன ஆத்திரம், இயல்பிலேயே கோபக்காரனான ராவணனை மேலும் அதிகமாக கொழுந்து விட்டெரியச் செய்தது. கோடைக் காலத்தில் அர்க்கம், (எருக்கம் செடி, சூரியன் இரண்டையும் குறிக்கும்) சூரிய கிரணத்தால் வாட்டுவது போல நெற்றியிலும், புருவத்திலும் சேர்ந்து அமர்ந்து விட்டது போல கோபம் கொப்பளித்தது.  யுக முடிவில் முதலைகள், மற்றும் ஜலத்தில் வாழும் ஜந்துக்களுடன் சமுத்திரம், கொந்தளிப்பது போல தவித்தான். வாயிலிருந்து வெளிப்படையாக ஜ்வாலை வீசியது.  விருத்திரனுடைய முகத்திலிருந்து புகையுடன் நெருப்பு வெளி  வந்தது போல வந்தது. புத்ர வத சோகமும், தோல்வியின் ஆத்திரமும் சேர்ந்து அவனை ஆட்டிப் படைத்தன. செய்வதறியாது திடுமென வைதேஹியை நினைத்தவன், அவளை வதம் செய்ய தீர்மானித்தான்.

 

இயல்பாகவே சிவந்த கண்கள் மேலும் சிவந்து, கோபாக்னி கனல் வீச, கண்கள் இரண்டும் தீப பந்தங்கள் போல ஜ்வலித்தன. இயல்பிலேயே பயமுறுத்தும் உடல் வாகு. கோபமும் சேர்ந்து, சாக்ஷாத் ருத்ரனே வந்து நின்றது போல நின்றான். இந்த கோபத்துடன் விழித்த கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. எரியும் விளக்கிலிருந்து வடியும் எண்ணெய் துளிகள் போல கண்டன. பற்களைக் கடிக்கும் பொழுது ஏற்பட்ட சப்தம் நாராசமாக கேட்டது. பெரிய யந்திரத்தை தானவர்கள் சுழற்றுவது போல கேட்டது. காலாக்னி போல கோபத்துடன் அவன் பார்வை சென்ற இடங்களில் எல்லாம், ஆங்காங்கு இருந்த ராக்ஷஸர்கள் பயத்தால் நடு நடுங்கினர். சராசரங்களை ஒட்டு மொத்தமாக தகிப்பது போல கோபத்துடன் கொந்தளிக்கும் அவனைக் காணவே, அந்தகன் போல பார்க்கும் அவன், பார்வையை தவிர்த்து ராக்ஷஸர்கள் அசையாது நின்றனர். மகா கோபத்துடன் ராவணன், ராக்ஷஸர்கள் நடுவில் நின்றபடி சொன்னான்.  என்னால் மிகக் கடுமையான விரதங்கள் அனுஷ்டித்து ஆயிர வருஷங்கள் தவம் செய்யப் பட்டது. அந்தந்த சமயங்களில் ஸ்வயம்பூவான ப்ரும்மாவை மகிழ்ச்சியாக செய்திருக்கிறேன். இந்த தவ வலிமையாலும், ஸ்வயம்பூவின் அனுக்ரஹத்தாலும் இது வரை நான் தேவர்களிடமோ, அசுரர்களிடமோ பயம் என்ற சொல்லையே அறியாமல் இருந்து வந்திருக்கிறேன். ப்ரும்மா கொடுத்த கவசம் எனக்கு பாதுகாப்பாக இருக்கும். ஆதித்யன் போன்று ஒளி மிகுந்த கவசம் இது. தேவாசுர யுத்தங்களில் இந்திரன் வஜ்ரத்தாலும் பிளக்க முடியாத சக்தி வாய்ந்த கவசம். இன்று இதையணிந்து ரதத்தில் ஏறி போர் முனைக்குச் செல்வேன். இன்று என்னை யார் எதிர்த்து நிற்கிறார்கள் பார்க்கலாம்.  என் தவத்தால் மகிழ்ந்து ஸ்வயம்பூ, சரங்கள், வில்லுடன் சேர்த்து தேவாசுர யுத்த சமயத்தில் எனக்குக் கொடுத்தார். நூற்றுக் கணக்கான அம்புகளுடன் என் வில்லை தயார் செய்யுங்கள். ராம லக்ஷ்மணர்களை வதம் செய்யவே நான் போர்க்களத்தில் இறங்கப் போகிறேன். புத்ர வதம் மனதை வாட்ட, சுபாவமாகவே க்ரூரமான குணம் உடையவன். மேலும் கொதிப்புடன் பேசினான். சற்று யோசித்து ராவணன் சீதையை கொல்வது என்று முடிவு செய்தான். தாம்ர வர்ண கண்கள் மேலும் சிவக்க, பேசக் கூட தயங்கி தீன ஸ்வரத்தில் பதில் அளித்துக் கொண்டிருந்த ராக்ஷஸர்களைப் பார்த்து  என் மகன் வானரங்களை ஏமாற்ற மாயையால் சீதா வதம் செய்தானே, அதை உண்மையாக ஆக்குகிறேன். அது தான் எனக்கு மன சாந்தியை அளிக்கக் கூடியது. க்ஷத்திர பந்துவை (வசைச் சொல்) மனதில் நினைத்து அவனையே நம்பிக் கொண்டிருக்கும் சீதையை நாசம் செய்வேன். இவ்வாறு மந்திரிகளிடம் சொல்லி விட்டு தன் வாளின் மேல் கையை வைத்தான். விமலமான உறையிலிருந்து அதை உருவி எடுத்துக் கொண்டு, மந்திரிகளும், மனைவியும் இருந்த அந்த சபையிலிருந்து, புத்ர சோகம் கண்களை மறைக்க, உருவிய வாளோடு சீதை இருக்கும் இடம் சென்றான்.

 

வேகமாக வெளியேறிய ராக்ஷஸ ராஜனைப் பார்த்து சில ராக்ஷஸர்கள் சிம்ம நாதம் செய்தனர். ஒருவரை ஒருவர் கலந்தாலோசித்து ராக்ஷஸன் கோபத்துடன் இருப்பதையறிந்து, இன்று இவனைக் கண்ட மாத்திரத்தில் மனித ராஜ குமாரர்கள் இருவரும் தவிக்கப் போகின்றனர் என்று பேசிக் கொண்டனர். நான்கு லோக பாலர்களையும் இதே போல கோபத்தால் தான் ஜயித்தான். பல சத்ருக்களை போர்களில் வென்று வந்தான். மூன்று உலகங்களிலும் இருந்த உயர்ந்த ரத்னங்களைக் கவர்ந்து வந்தான். விக்ரமத்திலும், பலத்திலும் பூவுலகில் இவனுக்கு சமமாக யாரும் இல்லை. இப்படி பேசிக் கொண்டே அசோக வனத்தைச் சென்றடைந்தனர். வைதேஹியை கொல்ல வேகமாக செல்லும் ராவணனை நண்பர்களும், ஹிதத்தைச் சொல்லும் உற்றாரும் தடுத்தனர். லட்சியம் செய்யாமல் கேது கிரகம், ரோஹிணியைத் துரத்துவது போல துரத்திச் சென்றான். ராக்ஷஸிகளின் பாதுகாவலில் இருந்த மைதிலி,  கொடூரமாக, ஆயுத பாணியாக ஆத்திரத்துடன் வரும் ராக்ஷஸ ராஜனைக் கண்டாள். பலரும் தடுத்தும் கேளாமல் ஆவேசமாக வருபவனைப் பார்த்து மைதிலி வருந்தினாள். துக்கத்துடன் புலம்பியபடி சொன்னாள். இதோ, என்னைக் கொல்ல வருபவன், இதே ஆவேசத்தோடு என் நாதனையும் கொல்லப் போனான். என் நாதன் இருக்கும் பொழுதே அனாதை போல என்னைக் கொல்ல வந்திருக்கிறான். பலவிதமாக என்னை தூண்டிப் பார்த்தான். பதியை அனுசரித்துச் செல்லும் என்னை அதை விட்டு, என்னுடன் வா, என்னுடன் குலாவி மகிழ்ந்து இரு என்று போதனை செய்தான். நான் அதை ஏற்றுக் கொள்ளாததால் கொன்று போட்டு விட தீர்மானித்து விட்டான் போலும். நிராசை காரணமாக என்னை தீர்த்து கட்டி விட தீர்மானித்து விட்டான், க்ரோதமும், மோகமும் அவன் கண்களை மறைக்கிறது. அதனால் தான் இப்படி ஒரு முயற்சி. துர்புத்தி மட்டும் தானா.  அல்லது நர வ்யாக்ரர்கள் என்று போற்றப் படும் ராஜ குமாரர்கள், என் காரணமாக யுத்தத்தில் தோல்வியை அடைந்து விட்டார்களா? ஆ என்ன கஷ்டம். என் பொருட்டு ராம லக்ஷ்மணர்கள் நாசம் அடைவதா? அல்லது புத்திர சோகத்தால் ராம லக்ஷ்மணர்களைக் கொல்லாமல் என்னை கொன்று விடுவதாக முனைந்து விட்டான் போலத் தோன்றுகிறது. பாபமே எண்ணம் கொண்டவன்.   ஹனுமான் சொல்லையும் நான் கேட்கவில்லை. என் கெட்ட காலம். அவன் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு ராமனிடம் சேர்ப்பதாகச் சொன்னான். அது எனக்கு சம்மதமாக இருக்கவில்லை. கணவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்திருப்பேனோ. இப்படி கவலைப் பட வேண்டி இருந்திருக்காது. கௌசல்யை எப்படி இந்த செய்தியை ஏற்பாள். அந்த தாய் உள்ளம் உடைந்து போகாதா? ஒரு மகனைப் பெற்றவள். அவனும் போரில் மடிந்தான் என்று கேட்டால், அவள் எப்படித் தாங்குவாள். இப்படி ஒரு நிலையில் அழுது கொண்டிருக்கும் போது மகன் பிறந்ததையோ, வளர்ந்து குழந்தை பருவத்தில் விளையாடியதோ, யௌவனமோ உடனே நினைவுக்கு வராது. நிராசையுடன் கொல்லப்பட்ட தன் மகனுக்கு  சிரார்தம் எப்படி செய்வாள்.  நிச்சயம் அக்னியில் விழுவாள், அல்லது நீரில் மூழ்குவாள். இந்த குப்ஜை (கூனீ) வந்து அனைத்தையும் கெடுத்தாள். தி4க், அவள் நாசமாக போகட்டும். பாபத்தையே குறியாக கொண்ட மந்தரை எங்கிருந்தோ வந்து சேர்ந்தாள். அவள் பொருட்டு தான் கௌசல்யா இப்பொழுது இப்படி ஒரு துக்கத்தை அனுபவிக்கிறாள். இப்படி புலம்பி வருந்தும் சீதையைப் பார்த்து ரோஹிணி சந்திரன் இல்லாமல், கிரக வசம் தவிப்பது போல இருந்தவளை ராக்ஷஸ ராஜாவின் மந்திரிகளில் ஒருவர், சுபார்ஸ்வோ என்ற பெயருடைய அறிஞர், ராவணனுக்கு நல்ல புத்தியை சொன்னார். மற்ற மந்திரிகள் தடுத்தும் கேளாமல் அரசனுக்கு அறிவுரை சொல்ல முனைந்தார்.

 

3சக்3ரீவா, சாக்ஷாத் வைஸ்ரவனுடைய சகோதரனே, உன் புத்தி ஏன் இவ்விதம் செல்கிறது. நீ செய்யக் கூடிய காரியமா இது. வைதேஹியைக் கொல்ல க்ரோதத்துடன் முடிவு எடுத்தாயா? இது என்ன தர்மம்? வேத வித்யைகளை கற்றுத் தேர்ந்தவன், தன் செயலில் எப்பொழுதும் முழு ஈ.டுபாட்டுடன் செய்து வருபவன் ஒரு ஸ்த்ரீயை வதம் செய்ய எப்படித் துணிந்தாய். ரூப சம்பன்னாம்- அழகிய உருவம் உடைய மைதிலியை சற்று கவனித்து பார். அரசனே | இந்த கோபத்தை எங்களுடன் சேர்ந்து ராமனிடத்தில் காட்டு. இன்றே கிருஷ்ண பக்ஷ சதுர்தசி. இன்று உடனே போருக்கு புறப்படு.  சத்ரு சைன்யத்தை அழித்து வெற்றி வீரனாக வா. உன் படையினர் நல்ல வீரர்கள். சூரனாக, புத்தி மானாக, நல்ல ரதத்தில் ஏறி, வாள் ஏந்தி, உயர் ரக ரதத்தில் அமர்ந்தவனாக, தாசரதியை கொன்று விட்டு வா. மைதிலியை அடைவாய். என்ன காரணத்தாலோ, நட்புடன் இந்த மந்திரி சொன்னது ராவணனுக்கு சம்மதமாக இருந்தது. துராத்மா. இதன் பின் தன் மாளிகைக்கு திரும்பச் சென்று சபையைக் கூட்டினான்.

 

இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சீதா ஹனனோத்3யம நிர்விருத்தி  என்ற தொன்னூற்று மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 94 (501) கா3ந்த4ர்வாஸ்திர மோகனம் காந்தர்வாஸ்திரத்தைக் கொண்டு மயங்கச் செய்தல்)

 

தன் அரண்மனையில் பிரவேசித்த ராவண ராஜா, துக்கத்தின் எல்லையில் இருந்தான்.   கோபம் கொண்ட சிங்கம் போல,  பெரு மூச்சு விட்ட படி, ஆசனத்தில் அமர்ந்தான்.  கூடியிருந்த மகா பலசாலிகளான படைத் தலைவர்களைப் பார்த்து கை கூப்பி வணங்கினான்.  புத்ரனின் மரணத்தால் பாதிக்கப் பட்டிருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. தாங்கள் எல்லோரும், யானையோ, குதிரையோ எது சௌகர்யமோ, வாகனங்களில் பூட்டிக் கிளம்புங்கள். ரதங்களில் வருபவர்கள் வரட்டும். கால் நடையாக வரும் பதாதிகளும், வரட்டும்.  ஒரு ராமனை இந்த யுத்தத்தில் குறி வைத்து போரை நடத்துங்கள். மழைக்கால மேகம் நீரை வர்ஷிப்பது போல, பாண மழை பொழிந்து இவனை வதம் செய்யுங்கள். அல்லது நானே தீக்ஷ்ணமான என் பாணங்களால் இந்த ராமனது சரீரத்தை பிளந்து, உலகம் முழுவதும் காண, ராமனை நான் உங்கள் அனைவருடைய உதவியுடன் வதம் செய்கிறேன். இப்படி ராக்ஷஸ ராஜன் பேசி உத்தரவு கொடுத்தவுடன், மற்ற ராக்ஷஸ மந்திரிகள் வெளியேறி, வேகமாக தங்கள் ரதங்கள், குதிரை இவைகளில் ஏறி போர் முனைக்குச் செல்லத் தயாரானார்கள்.

 

பரிகங்களையும், பட்டஸங்களையும், அம்பு, வாள், பரஸ்வதங்கள், சரீரத்தை பிளந்து உயிரைக் குடிக்கும் பல ஆயுதங்களை வானரர்கள் மேல் விட்டனர். வானரங்களும் தங்கள் ஆயுதமான மரக் கிளைகளையும், கற்களையும் ராக்ஷஸர்கள் மேல் வீசி அடித்தனர்.  பெரும் போர் நடந்தது. சூரியோதயம் வரை ராக்ஷஸ வானரங்களின் சண்டை இடை விடாது தொடர்ந்தது. விசித்ரமான பல கதாயுதங்களையும்,  ப்ராஸங்களையும், வாட்களையும், பரஸ்வதங்களையும் உபயோகித்து வானரங்களை அடித்து நொறுக்கினார்கள். இந்த யுத்தம் இப்படி நடந்து கொண்டு இருக்கும் பொழுது பெரும் புழுதி படலம் எழுந்து கண்களை மறைத்தது.

 

ராக்ஷஸர்கள், வானரங்கள் எல்லோருமே சூடான காற்றின் வேகத்தில், கண்ணீரும் பெருக, நின்றனர்.  யானைகளும், ரதத்தில் பூட்டியிருந்த குதிரைகளும் கூட இந்த புழுதியால் பாதிக்கப் பட்டன. த்வஜம் கட்டியிருந்த மரம் இவையும் ஆட்டம் கண்டன. சரீரம் உடைய அனைவரும் உஷ்ணமான கண்ணீரைப் பெருக்கினர். கண்களை மறைத்த புழுதியின் ஊடே த்வஜங்கள் கட்டியிருந்த ரதங்கள், குதிரைகள், மற்றும் பல விதமான ரதங்கள், வாகனங்கள் இவற்றின் மேல் ஏறிக் குதித்தும், இறங்கியும், தாவித் தாவி குதித்தும் ஓடியும் அழித்து நாசமாக்கினார்கள். ராக்ஷஸர்களின் கேசத்தையும், காதுகளையும் நெற்றி, மூக்குகளில் தங்கள் கூர்மையான நகங்களாலும் பற்களாலும் குத்தியும், கடித்தும் கிழித்தனர். ஒவ்வொரு ராக்ஷஸனையும் சூழ்ந்து நூற்றுக் கணக்கான வானரங்கள் நின்றன. துரத்தின. பழம் நிறைந்த மரத்தை பறவைகள் மொய்ப்பது போல மொய்த்தனர். பர்வதம் போன்ற பெரிய உருவமுடைய ராக்ஷஸர்கள் இந்த தொல்லையை பொறுக்க முடியாமல் திணறினர். அவர்கள் வசம் இருந்த பெரும்  க3தை4களையும், ப்ராஸங்களையும், வாள்களையும், பரஸ்வதங்களையும் பிரயோகிப்பது கூட சிரமமாக இருந்தது. முடிந்த வரை இந்த ஆயுதங்களால் அடித்தனர். ராக்ஷஸர்கள் கூட்டம் பெரும் சேனையாக வானரங்களை சரமாரியாக அடிக்கவும், அவை ஓடிச் சென்று ராமரை சரணடைந்தன. உடனே வில்லை எடுத்துக் கொண்டு,  ராமர் வந்து ராக்ஷஸ சைன்யத்துடன் நேரடியாக மோதி, பாணங்களை மழையாக பொழிந்தார். ராமர் நுழைந்ததும், ஆகாயத்தில் மேகங்கள் சூரியனை நெருங்க முடியாதது போல, ராக்ஷஸர்களும் தவித்தனர்.  நெருங்க முடியாமல், அவன் கை லாகவத்தைக் கண்டு திகைத்தனர். வேகமாகவும், தெளிவாகவும் குறி வைத்து அடித்ததைக் கண்டு வியந்தனர். பெரும் படையை நடத்திச் சென்று கொண்டு, பெரிய பெரிய ரதங்களை கூட நாசமாக்கியபடி சென்ற ராமரைக் கண்டு, காட்டில் தன்னிச்சையாக செல்லும் வாயுவின் கதியோ என்று நினைத்தனர். சின்னா பின்னமாகி, அம்புகளால் எரிந்தும், உடைந்தும், ஆயுதங்கள் தாக்கி உடைந்தும்,  படை பலம் நாசமாவதைக் கண்டனர். ஆயினும் ராமர் தன் நிதானத்தை இழக்காமல் இருப்பதைக் கண்டனர். உடலில் அடிபட்ட பொழுது கூட எதிரில் ராமர் நின்று, அடித்ததாக நினைக்கவில்லை.   இந்திரியங்களின் பொருட்டு நிற்கும் பூதாத்மாவைக் காணும் ப்ரஜைகளைப் போல இருந்தனர். இதோ இவன் யானைக் கூட்டத்தை அழித்து விட்டான். இதோ இவன் ரதத்தில் ஏறி வந்த பெரிய வீரனை வதம் செய்து விட்டான். இதோ இவனுடைய கூர்மையான பாணங்கள் கால் நடையாக வரும் போர் வீரர்களை அடித்து விழச் செய்து விட்டது. குதிரைகளின் மேல் பவனி வரும் வீரர்களுக்கும் அதே கதியே. இப்படி அருகில் நின்றவனை ராகவனாக கண்டு, தங்களைத் தாங்களே அடித்து மாய்த்துக் கொண்டனர்.  ராகவன் போலவே உருவம் கொண்டு விட்ட வீரர்கள், தங்களைப் பற்றி தெரியாததால் அருகில் இருந்தவனை ராகவனாக அடையாளம் கண்டு கொண்டு மாய்த்தனர். ராகவனுடைய விசேஷமான காந்தர்வாஸ்திரத்தால் மோகம் கண்களை மறைக்க, ராமர் எதிரி படையை கலக்கி, அழித்துக் கொண்டு வருவதை கண்டாரில்லை. அந்த ராக்ஷஸார்கள் ஆயிரக் கணக்கான ராமர்களை அந்த ரண பூமியில் கண்டனர். திரும்பிப் பார்த்தால் ஒருவன் தான் காகுத்ஸன், ராகவனாக ரண களத்தில் இறங்கி போரில் மூமூழ்கியிருப்பவனைக் கண்டனர். சுற்றும் சக்கரத்தில் ஆரங்கள் தெரியாதது போல, ராமரைக் கண்களால் காண முடியவில்லை. அந்த ராம சக்கரம், கால சக்கரம் போலவே சுழன்றது. ராக்ஷஸர்களைக் கொன்று குவிக்கும் திவ்யாஸ்திரங்கள் நிரம்பி இருந்த தூணியையும், தேஜஸ், புத்தி, இந்த குணங்கள் பிரகாசமாகத் தெரிய, வில்லிலிருந்து நாணை உதறிக் கொண்டு புறப்பட்டுச் செல்லும் அம்புகளின் ஓசை இடைவிடாது நாதமாகக் கேட்க, உயர்ந்த வில்லும், சரங்களை வைக்கும் தூணியுமாக சத்வ குணமே உருக் கொண்டு வந்தது போல ராமரைக் கண்டனர். நாளின் எட்டாவது பாகம் ராமர் ரண களத்தில் இறங்கி ஒருவனாக ராக்ஷஸர்களை வதம் செய்ததைக் கண்டனர்.  விருப்பம் போல உருவம் எடுக்க வல்ல ராக்ஷஸர்கள், இவர்களின் பத்தாயிரம் படைகள், காற்று வேகத்தில் பறக்கும் ரதங்கள், பதினெட்டு யானைப் படைகள், உயர் ஜாதி யானைகள் வேகமாக செல்லக் கூடியவை, பதினான்கு ஆயிரம் குதிரை மேல் ஏறி வந்த ராக்ஷஸ போர் வீரர்கள்,  இரண்டு நூறாயிரம் , இதுவரை கால் நடையாகவே வந்த பதாதீ எனும் படை வீரர்கள், நாளின் முடிவில் இறந்து பட்டனர். குதிரைகளை இழந்தவர்கள், ரதத்தை இழந்தவர், த்வஜம் கீழே விழுந்து தோல்வியைத் தழுவியவர்கள், அதனால் மன வருத்தம் அடைந்தவர்கள்,  இப்படி தங்கள் வேஷம் கலைந்தவர்களாக நிசா சரர்கள் லங்கையை நோக்கித் திரும்பிச் சென்றனர். திடுமென கோபம் கொண்டு ருத்ரன் விளையாடியது போல ருத்ர தாண்டவம் நடந்த இடம் போல, இறந்து கிடந்த யானையை, குதிரைகளை,  உடைந்த ரதங்களுமாக அந்த ரண பூமி காட்சியளித்தது. இதன் பின் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், சாது,சாது என்று ராமனின் செயலைப் பாராட்டினர். சுக்ரீவன், ஹனுமான், தர்மாத்மாவான விபீஷணன், ஜாம்பவான், மைந்த, த்விவிதர்கள் இருந்த கூட்டத்தில் ராமர் சொன்னார். இந்த திவ்யமான அஸ்திர பலம், எனக்கும் த்ரயம்பகனுக்கும் மட்டுமே தெரிந்த வித்தை என்றார். அந்த பெரிய ராக்ஷஸ சைன்யத்தை வதம் செய்து விட்டு இந்திரனுக்கு சமமான மகாத்மாவாக ராமர், அஸ்திரங்களாலும் சஸ்திரங்களாலும் வெற்றி கொண்டு நின்றதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த தேவர்களால் துதிக்கப் பட்டார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கா3ந்த4ர்வாஸ்திர மோஹனம் என்ற தொன்னூற்று நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 95  (502)  ராக்ஷஸி விலாப|  (ராக்ஷஸிகளில் புலம்பல்)

 

இப்படி ஆயிரக் கணக்கான படை வீரர்கள், குதிரைகளில் ஆரோகித்துச் சென்றவர்கள், ரதங்களில் சென்றவர்கள், த்வஜங்களுடன் அக்னி வர்ணமாக ஜொலித்த ஆயிரக் கணக்கான ரதங்கள், க3தை, பரிகம் என்று ஆயுதங்களைச் சுமந்து சென்ற ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள், தீக்ஷ்ணமான பாணங்களால் அடிபட்டு, உயிர் துறந்தனர். அல்லது வாகனங்களையும் ரதங்களையும் விட்டு உயிர் தப்பி ஓடி மறந்தனர். இவை அனைத்தையும் ராமர் ஒருவராகச் செய்தார் என்று கேட்டவர்களும், கண்ணால் கண்டவர்களும், மிகவும் பரபரப்பும், பயமும் அடைந்தார்கள். ராக்ஷஸிகளும் கூட்டம் கூட்டமாக தீனர்களாக செய்வதறியாது கவலையுடன் நின்றனர். கணவனை இழந்தவர்கள், புத்ரனை, பந்துக்களை இழந்தவர்கள் என்று பரிதவிக்கும் ராக்ஷஸிகள் கூட்டமாக ஆங்காங்கு கூடி நின்று புலம்பினர்.  இந்த சூர்ப்பணகை புத்தி ஏன் இப்படி போயிற்று? வயது முதிர்ந்தவள். கோரமான முகம் உடையவள். பெருத்த வயிறும், இவளும், வனத்தில் கந்தர்ப்பனே (மன்மதனே) உருவம்  எடுத்து வந்தது போல இருக்கும் ராமனைக் கண்டு மோகம் கொண்டாள். சுகுமாரன் நல்ல பண்புடையவன்.  உலகத்தில் ஜீவ ராசிகள் அனைத்துக்கும் நன்மையையே செய்ய நினைக்கும் உத்தமமான குணம் உடையவன். அவனைக் கண்டு இவள் மோகம் கொண்டாளாம். உலகமே இவளை வதம் செய்ய காத்து நிற்கிறது.  ரூபம் சிதைந்து முதுமை எய்திய நிலையில் இவள் மனதில் காமம் நிறைந்து நிற்கிறதா? குணம் என்று எதுவுமே இல்லாதவள், குணக் குன்றான ராமனை விரும்பினாளே. ராமன் பேசினால், வார்த்தைக்கு வார்த்தை ஜனங்கள் அப்படியே கேட்பார்களே.  (ஔஜஸ்-என்ற வார்த்தையின் பொருள் இந்த ஓஜஸ் உடையவன் சொல் எடுபடும். எந்த நிலையிலும் அழகான வார்த்தைகளைச் சொன்னாலும், ஏனோ தானோவென்று சொன்னாலும் இவன் சொல் கேட்பவர்களை உடனே பணியச் செய்யும்.  தேஜஸ் வேறு.  ஓஜஸ்தேஜோ த்4fயுதி த4ர| -என்று சஹஸ்ர நாமத்தில் வரும். மஹொஜஸம் என்று ராமரை வர்ணிக்கிறார்கள்.)  சுமுகமான ராமனை இந்த துர்முகி கண்டு காம வசம் அடைந்தாளாம். ராக்ஷஸி,  நம் ஜனங்களின் அல்ப பாக்யம் . அது தான் இந்த நரைத்த தலை கொண்ட முதியவளை, செய்யக் கூடாத செயலை, நகைப்புக்கு இடமான செயலை செய்யத் தூண்டியிருக்கிறதோ.  உலகத்தில் யார் தான் இதைக் கேட்டு அருவருத்து ஒதுக்க மாட்டார்கள்? ராக்ஷஸர்களின் விநாசத்திற்காக, தூ ஷணனும், க2ரனும், போரில் மடிய வேண்டும் என்ற தெய்வ சங்கல்பம் நிறைவேறத்தான் போலும். இந்த கோரமான ஸ்த்ரீ ரூபம் கொண்ட ராக்ஷஸி, ராகவனை போய் இம்சித்தாள் போலும். இந்த கஷ்டங்களுக்கு அது தான் மூல  காரணம் இப்பொழுது நாம் அனுபவிக்கிறோம்.  அதன் காரணமாகத் தானே ராவணன் மனதில் விரோதம் வளர்ந்தது.  தசக்ரீவன் சீதையைக் கொண்டு வந்தான். வதம் செய்ய நினைத்தான்.  என்ன ஆனாலும் இந்த ராவணன், ஜனகாத்மஜாவான சீதையை அடைய முடியப் போவதில்லை. இவள் காரணமாக பல சாலிகளான எதிரிகளுடன், அளவில்லாத வைர பாவம் விரோதம் ராவணன் மனதில் வளர்த்துக் கொண்டு, பொறாமையும் கோபமுமாக நிறைந்து நிற்கிறான். முன் விராதன், வைதேஹியைக் கடத்திச் சென்று, அவளை தனக்குத் தரும் படி ராமனிடம் கேட்டபொழுது என்ன நடந்தது என்பது தெரியாததா? ஒரே பாணத்தால் அவனை வீழ்த்தி வதம் செய்து விடவில்லையா.  நிதர்சனமாக நாம் கண்ட உண்மை இது. அது தான் இப்பொழுதும் நடக்கப் போகிறது. பயங்கரமான ஆற்றல் படைத்த ராக்ஷஸர்களின் பதினாலாயிரம் வீரர்கள் ஜனஸ்தானத்தில் ராமனை எதிர்த்து நின்று நிமிஷ நேரத்தில் அவனுடைய கூரான, அக்னி சிகா,- தீயின் நாக்கு போன்ற அம்புகளால் அடிபட்டு மாண்டார்களே. கரனும் அழிக்கப் பட்டான். யுத்தத்தில் தூஷணனும், த்ரிசிரஸும் மாண்டார்கள். ராமனுடைய பாணங்கள் ஆதித்யன்  தாக்கியது போல தாக்கியதைக் கண் கூடாகக் கண்டோமே. யோஜனை தூரம் நீண்ட கைகளையுடைய கபந்தனும், இந்த ராமனுடைய ஆற்றலால் மாண்டான். ரத்தத்தின் ருசி கண்ட கபந்தன், அலறிய அலறல், நாம் கண் கூடாக கண்டு கேட்டதே. அது போதாதா.? சஹஸ்ர நயனனான இந்திரன் குமாரன் வாலி, அவனை ராமன் வதம் செய்தான்.  மேரு மலை போல பெருத்த சரீரம் உடையவன் வாலி. இதையும் நாம் கண் கூடாகக் கண்டோம். ருஸ்ய மூக மலையில் ஒளிந்து, எந்த வித எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இன்றி, தீனனாக சுற்றிக் கொண்டிருந்தான் சுக்ரீவன். அவனை ராஜ்யத்தில் அமர்த்தி, அரசனாக அபிஷேகம் செய்வித்தான். இந்த நிதர்சனமான செயல் போதாதா? ராமனின் ஆற்றலை நாம் அறிந்து கொள்ள. ஒரே ஒரு வாயு புத்திரன் லங்கை வந்து சேர்ந்தான். ராக்ஷஸர்களுடன் போரிட்டு, இந்த லங்கை நகரையும் எரித்து விட்டு திரும்பி போய் விட்டான். இது போதாதா? ராமனின் ஆற்றலை நாம் தெரிந்து கொள்ள? வானரக் கூட்டத்தை வைத்துக் கொண்டு, சமுத்திரத்தை அடக்கி அதன் மேல் சேதுவைக் கட்டி, அதன் மேல் கால்களால் நடந்தே கடந்து வந்து விட்டானே.  இந்த செயல் போதாதா? அவன் ஆற்றலை நாம் துல்லியமாக தெரிந்து கொள்ள.  எல்லா ராக்ஷஸர்களுக்கும் ஹிதமானதும், தர்மார்த்தம் சகிதமான நல்ல வார்த்தையைத் தான் விபீஷணன் சொன்னான். அது மோகத்தில் மூழ்கிய  நம் அரசனுக்கு ஏற்கவில்லை. த4னத3ன் எனும் குபேர சகோதரன் நம் ராஜா. விபீஷணனின் அறிவுரையை ஏற்று ராவணன் நடந்து கொண்டிருந்தால், இந்த லங்கை இப்பொழுது மயான பூமி போல வாடி வதங்கி கிடக்காது.  துக்கத்தில் மூழ்கிக் கிடக்காது. மகா பலசாலியான, கும்பகர்ணன் வதம் செய்யப் பட்டான் என்று தெரிந்தவுடனேயே, நிறுத்தியிருக்கலாம்.  வீரனான அதிகாயனையும், லக்ஷ்மணன் கையால் மரணமடைய அனுமதிக்காமல் இருந்திருக்கலாம். பிரியமான புத்திரன் இந்திரஜித்தையும், இழந்த பின்னும் ராவணன் விழித்துக் கொள்ளவில்லையே. ராக்ஷஸிகளின் குலத்தில் என் மகன், என் சகோதரன், என் கணவன் யுத்தத்தில் மாண்டான் என்று ஒவ்வொருவரும் அழுது அரற்றிக் கொண்டிருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக, ரதங்கள் அஸ்வங்கள், யானைகள் இந்த போரில் அழிந்தன. கால் நடையாக சென்ற போர் வீரர்களும் சூரனான ராம சைன்யத்தின் முன் நிற்க முடியாமல் தோற்று மாண்டனர். ருத்ரனோ, விஷ்ணுவோ, மகேந்திரனோ, நூறு யாகம் செய்த இந்திரனோ, இவர்களில் யாரோ தான் ராம ரூபத்தில் வந்து நம்மை வதைக்கிறார்கள்.  அல்லது காலன், (யமன்) தானே ராம ரூபம் எடுத்துக் கொண்டு வந்து ராக்ஷஸ குலத்தை நாசம் செய்யப் புறப்பட்டிருக்கிறானோ. வாழ்வில் நம்பிக்கையிழந்து நிராசையுடன் நாம் காலத்தை கழிக்கிறோமே, நாமும்  பார்க்கப் போனால் வதம் ஆனவர்களே.  அந்த நிலையில் தான் உயிரைப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம்.  இந்த பயத்திற்கு முடிவு ஏது?  விடிவு காலம் ஏது? அனாதைகளாக இப்படிப் புலம்புகிறோமே,  நமக்கு யார் ஆதரவு தருவார்கள். ராவணன் சூரன் தான். நிறைய வரங்கள் கிடைக்கப் பெற்று ஆற்றல் மிகுந்தவன் தான். இப்படி ஒரு பயம் ராம ரூபத்தில் வந்து நிற்பதை ஏன் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறான் ? தேவர்களோ, கந்தர்வர்களோ, பிசாசங்களோ, ராக்ஷஸர்களோ, ராமனை எதிர்த்து நிற்கும் ஒருவனை, காப்பாற்றவோ, மீண்டும் உயிர்ப்பிக்கவோ முடியாது. ஒவ்வொரு நாள் யுத்தத்திலும்,  வெவ்வேறு துர் நிமித்தங்களைக் காண்கிறோம்.  இந்த நிமித்தங்களே ராவணன் ராமன் கையால் நாசமடைவான் என்று உறுதியாக கூறுவது போல இருக்கிறது. பிதாமகர் மகிழ்ச்சியுடன் ராவணனுக்கு வரம் அளித்த பொழுது தேவ, தானவ, ராக்ஷஸர்களால் இவன் வதம் இல்லை என்று அருளியபொழுது,  மனிதர்களைப் பற்றி எதுவும் வாக்களிக்கவில்லை.  ராவணனும் யாசிக்கவில்லை. அதனால் தான் இந்த மனித ரூபத்தில் நம் முன் பயமே மலை போல வந்து நிற்கிறது.  நம் ராக்ஷஸ குலத்துக்கும், ராவணனுக்கும் வாழ்வின் முடிவே வாய்த்திருக்கிறது. பிதாமகரின் வரம் பெற்ற உடன், கர்வத்துடன் தனக்கு நிகர் இல்லை என்ற அகம்பாவத்துடன் ராவணன் தன் பலத்தை பறை சாற்ற தேவர்களை வாட்டி வதைத்தான். அவர்கள் பிதாமகரை (ப்ரும்மாவை) வேண்டிக் கொண்டிருப்பார்கள்.  இந்த தேவர்களின் நன்மைக்காக, மகாத்மாவான பிதாமகரை ஸ்தோத்திரம் செய்து பூஜித்து அவரை மகிழ்வித்த பின், அவரும் வரம் கொடுத்தார் போலும்.  இன்றிலிருந்து எல்லா தானவ ராக்ஷஸர்களும், மூன்று உலகிலும் பயத்தால் நடுங்கிக் கொண்டே சஞ்சரிப்பார்கள். இதன் பின் தேவர்கள், இந்திரனுடன் மகா தேவனைச் சென்று வணங்கி அவரையும் துதி செய்து மகிழ்வித்து இருப்பார்கள். அவரும் தேவர்களுக்கு வரம் அளித்திருப்பார். உங்கள் நன்மைக்காகவும், ராக்ஷஸர்களை ஒடுக்கவும் ஒரு பெண் தோன்றப் போகிறாள். சீதை என்ற பெயருடன் அவதரிப்பாள்.  துர்விநீதனான ராவணன் அவளை அபகரிப்பான். அவள் ராவணனையும், அவனுடன் எல்லா ராக்ஷஸர்களையும் சேர்த்து அழியக் காரணமாக இருப்பாள் என்று சொல்லியிருப்பாரோ? அது தான் நாம் தற்சமயம் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு காரணமோ? அதனால் தான் இப்பொழுது உலகில் யாருமே அடைக்கலம் தரக் கூடிய நிலையில் இல்லாமல் தவிக்கிறோம். யுக முடிவில் காலன் வருவது போல இந்த ராமன், புதிது புதிதாக அஸ்திரங்களை தயார் செய்து அடிக்கிறான்.  நமக்கு முன்னால் பயமே பெரிய சுவராக எழுந்து நிற்கிறது.  நாம் என்ன செய்வோம்? வனத்தில் பெண் மான்கள் நாலாபுறமும் பரவி வரும் காட்டுத் தீயின் நடுவில் செய்வதறியாது திகைத்து நிற்பதைப் போல திகைத்து நிற்கிறோம். இந்த புலஸ்திய குலத்தில் வந்த ராக்ஷஸ ராஜா, நம்மை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டாரே. நாமும் எந்த ராவணன் இந்த ஆபத்துக்கு காரணமோ, அவனையே சார்ந்து நிற்கிறோம். இவ்வாறு பல விதமாக ராக்ஷஸ ஸ்த்ரீகள் ஒருவரையொருவர் கைகளால் பற்றிக் கொண்டு தோளோடு அணைத்துக் கொண்டும்,  வருந்தி புலம்பினர். பாரமாக பயம் மனதை அழுத்த, உரக்க வாய் விட்டு அழுதனர்.  அதை கேட்கவே பயங்கரமாக இருந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராக்ஷஸிகளின் விலாபம்  என்ற தொன்னூற்று ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக