பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டம் 96 – 106

பிப்ரவரி 26, 2014

அத்தியாயம் 96  (503)  ராவணாபி4ஷேணனம் (ராவணன் போருக்குச் செல்லுதல்)

 

வீட்டுக்கு வீடு எழுந்த இந்த சத்தத்தை ராவணன் கேட்டான். ராக்ஷஸிகளின் பரிதாபமான ஓலம், அவர்கள் மன வேதனையையும், வருத்தத்தையும் காட்டியது. உற்றார், உறவினரை இழந்த லங்கையின் ராக்ஷஸ குல ஸ்த்ரீகள்,  இவர்களது பரிதாபமான நிலையை நினைத்து, ஒரு முஹுர்த்த நேரம் தியானத்தில் ஆழ்ந்தான். நினைக்க நினக்க ஆத்திரம் மிக அதிகமாக அவனை ஆட்கொண்டது. பற்களால் உதட்டைக் கடித்து, கோபத்தில் கண்கள் சிவக்க, ராக்ஷஸர்களே கண்டு நடுங்கும்படி, காலாக்னி போல ஆனான். அருகில் இருந்த ராக்ஷஸர்களை அதட்டினான். ஏற்கனவே பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவர்களை மேலும் நடுங்கச் செய்தான். கண்களாலேயே எரித்து விடுபவன் போல உறுத்துப் பார்த்து, மகோதரனையும், மகா பார்ஸ்வனையும், விரூபாக்ஷன் என்ற ராக்ஷஸனையும் அழைத்தான். சீக்கிரம் சைன்யத்தை தயார் செய்யுங்கள். என் ஆணை எனவும் அவர்களும் உடனே எஞ்சியிருந்த ராக்ஷஸ வீரர்களைத் திரட்டி, அரசன் கட்டளையைச் சொல்லி, போருக்கு ஆயத்தமாக்க முனைந்தனர். அரசனுக்கு மங்களா சாஸனம் முதலியவற்றைச் செய்து, அவர்களும் தயாரானார்கள். தலைவனின் விஜயத்தை விரும்பும் பிரஜைகளாக, கை கூப்பி வணங்கி விடை பெற்று வெளியேறினர். க்ரோதத்தில் தன்னை மறந்தவனாக, ராவணன் உரக்கச் சிரித்து, மகா பார்ஸ்வன், மகோதரன், விரூபாக்ஷன் இவர்களைப் பார்த்து,  இன்று என் பாணங்களுக்கு இரையாக்கி, ராம லக்ஷ்மணர்களை பர லோகம் அனுப்புவேன். என் வில்லிலிருந்து புறப்படும் பாணங்கள், யுக முடிவில் ஆதித்யன் போல தேஜஸ் நிரம்பியவைகள்.   கரன், கும்பகர்ணன், ப்ரஹ்லாதன், இந்திரஜித் இவர்களின் வதத்துக்கு இன்று நான் பழிக்குப் பழி வாங்குவேன். சத்ரு வதம் தான் வழி.  அந்தரிக்ஷமா, திசைகளா, நதிகளா, சாகரமா, எதுவும் தெரியாமல் என் பாணங்களைக் கொண்டு வலை பின்னுவேன். இன்று வானர வீரர்களை பகுதி பகுதியாக அணி வகுத்து நிற்கும் படையினரை, என் வில்லில் பூட்டிய அம்புகளால் கொன்று குவிப்பேன். வாயு வேகத்தில் செல்லும் இந்த என் ரதத்தில் வேகமாக  சென்று,  என் வில் என்ற சமுத்திரத்தில் அலைகள் போல கிளம்பும் அம்புகளைக் கொண்டு கடைந்து எடுக்கிறேன். இரண்டு மைல் தூரம் வரை பத்மங்கள் மலர்ந்து நிற்கும் தடாகம் போல,  அதில் மகரந்தம் நிறைந்த பத்மங்கள் போல பரவிக் கிடக்கும் வானர தாமரைக் குளங்களை காட்டு யானைப் போல கலக்குகிறேன். நாளம்-தண்டோடு வீசியெறியப்பட்ட தாமரை மலர்களைப் போல கூட்டம் கூட்டமாக வானர வீரர்கள் வேரோடு சாய்ந்து, பூமியை நிரப்பப் போகிறார்கள். அது கூட பூமியில் அலங்காரமாகவே  இருக்கும். மரக் கிளைகளை கையில் வைத்துக் கொண்டு போர் புரிவதாக பெயர் பண்ணிக் கொண்டுத் திரியும் இந்த வானரங்களை நூறு நூறாக ஒரே பாணத்தால் அடித்துக் கொல்கிறேன். என் கணவன் மாண்டான், சகோதரன், என் மகன்  இறந்தான் என்று அலறும் இந்த ராக்ஷஸ ஸ்த்ரீகளின் கண்ணீர் பிரவாகத்தை இந்த எதிரிகளைக் கொன்று, அவர்களின் வதத்தால் துடைக்கிறேன்.  இன்று பூமியே தெரியாதபடி, என் பாணங்களால் அடிபட்டு வானர சடலங்களே நிறைந்திருக்கச் செய்கிறேன். ஓநாய்கள், கழுகுகள், மற்றும் மாமிச பக்ஷிகளான பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் எதிரிகளின் மாமிச உணவையே கொண்டு தர்ப்பணம் செய்கிறேன்.  இப்படிச் சொல்லிக் கொண்டே போகும் ராவணனைப் பார்த்து மகா பார்ஸ்வன், மகோதரன் இருவரும், அரசனை சுய நிலைக்கு கொண்டு வர, முயற்சித்தனர். இதோ சேனைகள் தயாராகி விட்டன. வாழ்த்தி அனுப்புங்கள் என்றனர். என் ரதத்தை தயார் செய்யுங்கள். சீக்கிரம் என் வில்லைக் கொண்டு வாருங்கள். எல்லோரும் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள் என்று சொல்லியபடி நடந்தான். படைத் தலைவர்கள் தவித்தனர். ராக்ஷஸர்களை வீட்டுக்கு வீடு சென்று சம்மதிக்கச் செய்து, இலங்கை நகரில் மிகச் சாதாரண நிலையில் உள்ள போர் வீரனைக் கூட விடாது அழைத்து வந்தனர். முஹுர்த்த நேரத்தில் படை கிளம்பியது. பல விதமான ஆயுதங்களைத் தோளில் ஏந்தி பயங்கரமான உருவம் உடைய பலரும் சேர்ந்து கொண்டனர். வாயால் உரத்து கோஷம் செய்தபடி, வாட்களையும் பட்டஸங்கள், சூலங்கள்,  க3தை4கள் முஸலங்கள், கலப்பை, சக்திகள், கூர்மையான நுனிகளையுடைய பல கூட முத்கரங்கள், கம்புகள், தடிகள், சக்ரங்கள், கூர்மையான பரஸ்வதங்கள், பிண்டி பாலங்கள், சதக்னீ எனும் ஆயுதம், மற்றும் பல விசேஷமான ஆயுதங்களுடன் ராவணன் ஆணை என்று சொல்லி அழைத்துக் கொண்டு வேக வேகமாக வந்தனர். பத்தாயிரம் யானைகள், இருபதாயிரம் ரதங்கள், மூன்று பங்கு குதிரைகள், கோடிக்கணக்கான கேவேறு கழுதைகள், ஒட்டகங்கள் இவை தயாராயின. கால் நடையாக வந்த வீரர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. படைத் தலைவர்கள் அணி வகுத்து நின்ற சேனைகளின் முன்னிலையில் நின்றார்கள். இதற்குள் ராவணன் ரதத்தை தயார் செய்து சாரதியும் வந்து சேர்ந்தான். அழகிய மாலைகள், வஸ்திரங்கள் நிறைந்து அலங்காரமாக அமைக்கப் பட்ட உயர் ஜாதி குதிரைகளுடன் அழகிய ரதம் பல விதமான ஆயுதங்கள் நிரம்பப்பெற்று, கிங்கிணி மணிகள் ஒலிக்க, ரத்ன ஸ்தம்பங்களும், ரத்னங்கள் இழைத்த ஆசனங்களுமாக, ஆயிரம் பொற் கலசங்கள் வைக்கப் பட்டு இருந்தது. இதைக் கண்டு ராக்ஷஸர்களே அதிசயித்தனர். ரதத்தை கண்டதும்,  அவசரமாக எழுந்து வந்த  ராக்ஷஸேஸ்வரன்,  தானே தன் தேஜஸால் ஒளிச் சுடராய், கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல பிரகாசமாக இருந்தவன், சாரதி முதலானோர் தயாராக காத்திருந்த ரதத்தில் ஏறினான்.  எட்டு குதிரைகள் பூட்டப் பெற்றிருந்தன. ராக்ஷஸ வீரர்கள் நாலா புறமும் புடை சூழ, பூமியை தன் வசத்தில் வைத்திருந்த ராவண ராஜா கம்பீரமாக புறப்பட்டான். ராவணன் அனுமதி பெற்று, மகோதரனும் மகா பார்ஸ்வனும், விரூபாக்ஷனும் தங்கள், தங்கள் ரதங்களில் ஏறினர். ஜய கோஷம் செய்தவாறு கிளம்பினர். ஏக காலத்தில் எல்லோருமாக செய்த ஜய கோஷத்தின் ஓசையில் பூமி நடுங்கியது. பூமி அதிர அட்டகாசமாக படை புறப்பட்டது. காலாந்தகனோ, யமனோ எனும்படி மகா சக்திசாலியான ராவணன் வில்லைத் தூக்கி பிடித்தபடி, ராம லக்ஷ்மணர்கள் இருந்த திசை நோக்கி தங்கள் பிரயாணத்தை தொடர்ந்தான். சூரியன் மறைந்தது போல காணப்பட்டது.  திசைகள் இருண்டன.  பறவைகள் கோரமாக கூச்சலிட்டன.  பூமி ஆடுவது போல தோன்றியது.  ரத்த மழை பொழிவது போல தோன்றியது. குதிரைகள் கால் இடறின. த்வஜத்தின் மேல் கழுகுகள் வந்து விழுந்தன. குள்ள நரிகள் ஊளையிட்டன. தசக்ரீவ ராக்ஷஸனின் இடது கண் துடித்தது. இடது புஜம் நடுங்கியது. முகம் வெளிறியது. வாய் குழறி, குரல் தடுமாறியது. யுத்த களத்துக்குப் புறப்பட்ட ராவணன் முன் தோன்றிய இந்த துர் நிமித்தங்கள், நாசத்தை தெரிவிப்பனவாகவே இருந்தன  ஆகாயத்திலிருந்து மின்மினி பூச்சிகள் விழுந்தன.  காகமும் கழுகுமாக சேர்ந்து அபஸ்வரமாக சப்தமிட்டன. இந்த துர் நிமித்தங்களைக் கண்டு சிந்தனை வயப்பட்டவனாக இருந்தும், ராவணன் காலத்தின் வசமாகி யுத்தத்தில் தான் வதம் செய்யப் போவதாக மார் தட்டிக் கொண்டே அதே அகம்பாவத்துடன் மேலே சென்றான். ரத கோஷம் கேட்டு, வானரங்களும் போர் புரியும் முன்னெச்சரிக்கையோடு  எதிரில் வந்தன. வானர, ராக்ஷஸர்களிடையில் பயங்கரமான யுத்தம் மூண்டது. ஒருவரையொருவர் ஏசிக் கொண்டும், தங்கள் கட்சிக்கு ஜய கோஷம் செய்து கொண்டும், போரைத் துவக்கினர். தசக்ரீவன், அலங்கரிக்கப் பட்ட தன் சரங்களால் வானரங்களை வேகமாக தாக்கினான். பெருமளவில் சேதமுறச் செய்தான். பல வானரங்கள் ராவணனின் அம்புகளால் தலை அறுபட்டு விழுந்தன. சிலருக்கு காதுகள் அறுபட்டன. அங்கஹீனமாக பலர் துடித்தனர். பக்கங்களில் கிழிக்கப் பட்ட உடலுடன் சிலர், மூச்சே நின்று போக விழுந்தவர்கள் பலர், கண்களில் அடிபட்டவர்கள், தலையில் காயம் என்று பலரும் தசானனன் கோபத்துக்கு ஆளான வானரங்கள் தவித்தனர். கண்களை இடுக்கியபடி, கோபத்துடன் ராவணன் எங்கு ரதத்தை ஓட்டியபடி சென்றானோ, அந்த இடத்தில் வானர வீரர்கள் அவனுடைய அம்புகளின் தாக்குதலைத் தாங்க முடியாமல் நிலை குலைந்தனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணாபி4ஷேணனம் என்ற தொன்னூற்று ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 97  (504)  விரூபாக்ஷ வத4ம் (விரூபாக்ஷனின் வதம்)

 

துண்டிக்கப் பட்ட அங்கங்களுடன் கீழே விழுந்து கிடந்த வானரங்கள் பூமியை மறைத்தன. ஒரே சமயத்தில் வந்து மேலே பட்ட ராவண பாணங்களை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் பெருமளவில் வானர சைன்யம் நாசம் அடைந்தது. நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகளைப் போல ஒன்றாக மடிந்து விழுந்தன. அம்பு பட்ட வலியால் துடித்து அலறியபடி, ஓடினர். நெருப்பு (துணுக்குகள்) கனல் பட்டு துடித்து ஓடும் யானைகள் போல ஓடின. பெரும் மேகத்தை காற்று தள்ளிக் கொண்டு போவது போல வானர சைன்யம் ராவண பலத்தால் துரத்தப் பட்டு ஓடின. ராக்ஷஸேந்திரன், தன் பாணங்களால் மேலும் மேலும் நாசம் செய்து கொண்டே முன்னேறினான். ராகவன் எதிரில் வந்து நின்றான். அடி பட்டு, அங்கஹீனம் ஆகி, அலறி ஓடும் வானர வீரர்களைப் பார்த்து சுக்ரீவன் தன் கூடாரத்தில் சுஷேணனை நிறுத்தி விட்டு தானும் யுத்த களத்தில் இறங்கினான். தனக்கு சமமான வீரனை தன் சேனை காவலுக்கு நிறுத்தி விட்டு, உற்சாகமாக, எதிரியைத் தேடிக் கொண்டு சுக்ரீவன் கால் நடையாகவே சென்றான். கையில் ஆயுதங்களோடு  அவன் முன்னும் பின்னும் வீரர்கள் தொடர்ந்தனர். பெரும் கற்களையும், பெரிய மரக் கிளைகளையும் எடுத்துக் கொண்டு போரை சந்திக்கச் சென்றனர். பல ராக்ஷஸ வீரர்களை அடித்து தள்ளிக் கொண்டே தானும் உரத்த குரலில் ஜய கோஷம் செய்து கொண்டு சுக்ரீவன் அட்டகாசமாக வேகமாக சென்றான்.  யுக முடிவில், வாயுதேவன், வளர்ந்த மரங்களையும், எதிர்ப்படும் மலைகளையும் விலக்கியபடி செல்வது போல, எதிரில் வந்த பல பெரும் ராக்ஷஸர்களையும், விலக்கிக் கொண்டே சென்றான். கற்களை மழையாக பொழிந்து ராக்ஷஸ சேனையைக் கலக்கினான். திடுமென சுக்ரீவனின் இந்த தாக்குதலால் ராக்ஷஸர்கள் கீழே விழுந்து அலறினர். விரூபாக்ஷன், தான் தனியாக, ராவணன் பெயரைச் சொல்லி வாழ்த்தியபடி, ரதத்திலிருந்து இறங்கி கஜஸ்கந்தன் என்ற யானையின் மேல் ஏறினான். மகா ரதியான விரூபாக்ஷன் யானை மேல் சவாரி செய்து கொண்டே, பெரும் குரலில் சிம்ம கர்ஜனை செய்து கொண்டே வானரங்களை துரத்தினான். சுக்ரீவன் பேரில் ஏராளமான சரங்களை மழையாக பொழிந்தான்,. அடிபட்ட ராக்ஷஸர்களை தூக்கி நிறுத்தி ஆசுவாசப் படுத்தி, யுத்தம் செய்ய தயாராக்கினார்கள். அந்த ராக்ஷஸனின் அம்புகளால் துளைக்கப் பட்டு காயமடைந்த சுக்ரீவன், இவனை வதம் செய்தே தீருவது என்று தீர்மானித்தான். இதன் பின் ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி, கையில் வைத்துக் கொண்டு, விரூபாக்ஷன் யானையுடன் வரும் வழியில் நின்றான். யானையை பலமாக அடிக்க,  அடி தாங்காமல்,  யானை ஒரு வில் வைக்கும் தூரம் நகர்ந்து, அடி பட்ட வலியால் பிளிறினாலும், அதன் மேல் இருந்த ராக்ஷஸன் பாதிக்கப்படவில்லை. நேருக்கு நேர் எதிரியை தாக்க ராக்ஷஸன் வானர வீரன் முன் வந்து நின்றான். காலம் காலமாக பரம்பரையாக உபயோகித்து வந்த கவசம், வாள் இவைகளை எடுத்து சுக்ரீவனை பயமுறுத்துவது போல அருகில் வந்தான், சுக்ரீவன் மற்றொரு பெரும் கல்லை எடுத்து தடாலென அவன் மேல் வீசி விட்டான். அதைத் தன் வாளால் தடுத்து, திரும்ப சுக்ரீவன் பேரிலேயே விழச் செய்தான். இதை எதிர்பார்க்காத வானர ராஜன், முஹுர்த்த நேரம் மயங்கிக் கிடந்தான். சமாளித்து எழுந்து, முஷ்டியை மடக்கியபடி, ராக்ஷஸனைத் தாக்கக் கிளம்பினான்.  விரூபாக்ஷனின் மார்பில் முஷ்டியால் ஓங்கி குத்தினான், விரூபாக்ஷன் கதி கலங்கி நின்றான். சமாளித்துக் கொண்டு, சுக்ரீவனின் கவசத்தை தன் வாளால் பிளந்து கீழே விழச் செய்தான். தன் கால்களால் சுக்ரீவனை மிதித்தபடி நின்றான். வானர ராஜன் தன்னை விடுவித்துக் கொண்டு, கற்களை விட கடினமான தன் கைத்தலத்தாலேயே ஓங்கி அடித்தான். சுக்ரீவனின் இந்த கைத்தல அடியைத் தாங்க மாட்டாமல் ராக்ஷஸன் லாகவமாக தன்னை சமாளித்துக் கொண்டு, சுக்ரீவன் மார்பில் தன் முஷ்டியால் குத்தினான். சுக்ரீவனின் கோபம் கட்டுக் கடங்காததாயிற்று. தன்னை ராக்ஷஸனின் பிடியிலிருந்து எப்படியோ சமாளித்து விடுவித்துக் கொண்டு, விரூபாக்ஷணை அடிக்க சரியான தருணத்தை எதிர் நோக்கியிருந்தான். சரியான சமயத்தில், கழுத்தில், இந்திரனின் அசனி என்ற ஆயுதம் அடிப்பது போன்ற பலத்துடன் தன் தைத்தலத்தால் ஓங்கி அடித்து விரூபாக்ஷனை உயிரிழக்கச் செய்தான். ப்ரஸ்ரவனன் மலையில் அருவி பெருக்கெடுத்து ஓடுவது போல அவன் சரீரத்திலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே விரூபாக்ஷன் (கோணலான கண்களுடையவன்) அவனை மேலும் விரூபாக்ஷணாக ஆக்கியது கண்டு வானரங்கள் அருகில் வந்து பார்த்தன. துடித்து புரளும் விரூபாக்ஷன், ரத்தத்தில் தோய்ந்து கிடப்பதைக் கண்டனர். இரு பெரும் சமுத்திரங்கள் மோதிக் கொண்டால் உண்டாகும் அலை ஓசை போல பெரும் சத்தத்துடன், இரு பக்க சேனையும் மேலும் உக்ரமாக போரைத் தொடர்ந்தனர். விரூபாக்ஷனை தங்கள் தலைவன், மாய்த்ததை அறிந்த வானர வீரர்களின் மகிழ்ச்சி கங்கா பிரவாஹம் போல பொங்கி எழுந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விரூபாக்ஷ வத4ம் என்ற தொன்னூற்று ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 98  (505) மகோதர வத4| (மகோதரன் வதம் செய்யப்படுதல்)

 

இரு பக்கமும் தேர்ந்த வீரர்களைக் கொண்ட வானர ராக்ஷஸ சேனைகள், மிகப் பெரிதாக இருந்தவை, நேரம் செல்லச் செல்ல வெய்யில் காலத்து நதி போல வற்றி சிறுத்துக் கொண்டே போகலாயிற்று. இரு தரப்பிலும் நல்ல சேதம். தன் தரப்பில் வீரர்கள் அழிவதையும், விரூபாக்ஷனின் மரணத்தாலும், ராக்ஷஸாதிபனான ராவணனை இரட்டை மடங்கு கோபமும், தாபமும் ஆட்கொண்டது. வானர வீரர்கள் தங்கள் தரப்பு ராக்ஷஸர்களை கண்டபடி அடித்து மடியச் செய்வதையும் தன் படை பலம் குறைந்து கொண்டே வருவதையும் கவனித்தான். யுத்தத்தில் வெற்றியே கண்டு வந்த அவன் இதை விதியின் விபரீதமாகவே உணர்ந்தான்.  அருகில் இருந்த மகோதரனிடம் தன் ஆற்றாமையைத் தெரிவித்தான். மகாபாஹோ | உன்னிடம் தான் சற்று வெற்றியை எதிர்பார்க்கிறேன்.  நீ தான் வெற்றியை நிலை நாட்டக் கூடியவன். உன் பராக்ரமத்தைக் காட்டு. வீரனே | எதிரி கூட்டத்தை  நிர்மூலமாக்கு. எஜமானனுக்கு விசுவாசமாக உன் செயல் திறனை காட்ட இது தான் சமயம். நன்றாக போர் செய் என்று வாழ்த்தி உற்சாகமூட்டி, அனுப்பினான். மகோதரனும் அப்படியே என்று சொல்லி கட்டளையை ஏற்றுக் கொண்டவனாக நெருப்பில் தானே விழும் விட்டில் பூச்சியைப் போல எதிரி சைன்யத்தில் தானே பாய்ந்து நுழைந்தான். வானர சைன்யத்தை ஒரு கலக்கு கலக்கி பெரும் சேதம் ஏற்படச் செய்தான். தானே வீரன். ராவணனின் உற்சாகமூட்டும் செயலால் மேலும் ஆக்ரோஷமாக போர் செய்தான். வானரங்களும் பெரிய பெரிய கற்களைக் கொண்டு தாக்கின. எதிரி கூட்டத்தில் உள்ளேயே நுழைந்து பெருமளவு நாசம் விளைவித்தன. மகோதரன் மகா கோபத்துடன், தன் பொன் மயமான சரங்களை மழையாக பொழிந்தான். வானரங்கள் கை, கால் துடை என்று முறிந்து விழச் செய்தான். வானரங்கள் திக்குக்கு ஒன்றாக பறந்து ஓடின. சில சுக்ரீவனை சரணடைந்தன. கண்டபடி அடிபட்டுக் கொண்டு வந்து நின்ற வானரங்களைப் பார்த்து, சுக்ரீவன் தானே சத்ருவான மகோதரனை எதிர் கொள்ள வந்தான். மகோதரனைக் கொல்ல, பெரும் மலையளவு இருந்த பெரிய கல்லை எடுத்து அவன் மேல் வீசினான். திடுமென தன் மேல் வந்து விழும் பெரிய கல்லைக் கண்டு மகோதரன், தன் பதட்டத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல், கை அம்பினால் அதை சுக்கு நூறாகச் செய்தான். ராக்ஷஸனால் பிளந்து தள்ளப் பட்ட அந்த பெரிய பாறாங்கல், நூறாக, ஆயிரம் துகளாக பூமி பூராவும் பரவியது. தான் வீசிய கல் பயனற்றுப் போய் தூளானதைக் கண்ட சுக்ரீவன், ஒரு சால மரத்தை வேரோடு பிடுங்கி அடித்தான். சூரனான ராக்ஷஸன் அதையும் தன் அம்புகளால் சிதறச் செய்தான். அதே சமயம் கீழே விழுந்து கிடந்த ஒரு பரிகத்தை எடுத்து அவன் முகத்தின் முன் காட்டியபடி சுக்ரீவன் அதன் நுனியால் குதிரைகளை அடித்து விழச் செய்தான்.  குதிரைகள் கீழே விழவும், மகோதரன் கீழே இறங்கி  க3தை4யை கையில் எடுத்துக் கொண்டான்.  க3தை4யுடன் மகோதரனும், பரிக4த்தை கையில் வைத்தபடி சுக்ரீவனும், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பசுவும் எருதுவும் போல இருவரும் மேகமும், மின்னலும் கூடியது போல தேக காந்தியுடன் தொடர்ந்து போரிட்டனர்.  க3தை4யும் உடைந்து விழும்படி தன் பரிகத்தால் சுக்ரீவன் அடித்தான். பரிகமும் பூமியில் உடைந்து விழுந்தது. பூமியில் கிடந்த ஒரு இரும்பு உலக்கையை கண்ட சுக்ரீவன் அதை பாய்ந்து சென்று கையில் எடுத்துக் கொண்டு மகோதரனை தாக்கினான். மகோதரனும் உடனே புதிய  க3தை4யை கையில் எடுத்துக் கொண்டான். சற்று நேரம் சென்ற பின், இருவர் கை ஆயுதங்களும் முறிந்து விழ, முஷ்டிகளால் யுத்தம் தொடங்கியது. இருவரும் சமமான தேஜஸ், பலம் உடையவர்கள். ஒருவருக்கொருவர் சளைக்காமல் தொடர்ந்து போரிட்டனர். அடிக்கு அடி, என்று கைகளால் அடித்துக் கொண்டனர். பூமியில் விழுந்து புரண்டு எழுந்தனர். பரஸ்பரம் திரும்பவும் நையப் புடைத்து புஜங்களால் ஒரு வரையொருவர் தள்ளி கீழே விழச் செய்தனர். உடல் களைத்து போகவும், கைக்கு எட்டிய வாளை எடுத்துச் கொண்டனர். மகோதரன் கவசத்துடன் வேகமாக வாளை வீசி வரவும், சுக்ரீவனும் தயங்காமல் தன் கை வாளை வீசியபடி எதிரில் சென்றான். இருவரும் ரோஷம் மிக்கவர்கள். சமமான பலம் உடையவர்கள். தொடர்ந்து சண்டையை அதே வேகத்தில் நடத்திக் கொண்டு இருந்தனர். யுத்தம் செய்வதே அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது. சஸ்திரங்களை அறிந்தவர்கள், ஜயத்தை விரும்பியே இருவரும் போர் செய்தனர். வீரத்தை மதிப்பவனான மகோதரன் வாளை வீசினான். சுக்ரீவன் பதிலுக்கு தன் வாளை வீசிய பொழுது, குண்டலம், தலையை பாதுகாக்கும் சிரத்ராணம்,(ஹெல்மெட்) இவற்றுடன் தலை துண்டித்து விழுந்தது. தலையறுந்த ராக்ஷஸன் கீழே விழுந்தாலும், சுக்ரீவன் அப்படியே விடாமல், மற்ற வானரங்களைக் கொண்டு முழுவதுமாக உயிர் இழக்கச் செய்தான். தசக்ரீவன் வாய் விட்டே அழுதுவிட்டான். ராகவன் தரப்பினர் மகிழ்ந்தனர். ராக்ஷஸர்கள் அனைவரின் முகங்களும் வாடிச் சுருங்கின. எல்லோருமே பயந்து நடுங்கியபடி, ரண களத்தை விட்டு ஓடினர். பெரிய மலையின் சிகரம் போன்ற மகோதரனை வதம் செய்து விட்டு சூரிய குமாரனான சுக்ரீவன் சாக்ஷாத் சூரியனே போல தன் தேஜஸாலும், காந்தியாலும் பிரகாசமாக விளங்கினான். விஜயனாக வெளி  வந்த வானர ராஜனைப் பார்த்து தேவர்கள், யக்ஷ, கின்னரர்கள், பூமியில் இருந்த மற்றவர்களும் வாழ்த்தி பாராட்ட, சந்தோஷமாக இருந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மகோத3ர வத4ம் என்ற தொன்னூற்று எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 99  (506)  மகா பார்ஸ்வ வத|| (மகா பார்ஸ்வனின் வதம்)

 

மகோதரன் மாண்டதும் மகா பார்ஸ்வன் சேனைத் தலைமையை ஏற்றுக் கொண்டான். சுக்ரீவனை உறுத்துப் பார்த்து, கோபத்தால் சிவந்த கண்களுடன் யுத்த பூமியில் இறங்கினான். அங்கதனுடைய சேனையை கணிசமாக குறைத்தான். வானரங்களின் சரீரத்தில் மேல் பாகங்கள் காற்றின் வேகத்தில் மரத்திலிருந்து பழங்கள் விழுவது போல தொப் தொப்பென்று விழலாயின. ஒரு சிலரது தோள்களில் அம்புகளை விட்டு புஜங்கள் துண்டித்து விழச் செய்தான். பக்கங்கள் அறுபட்டு சில வானரங்கள் தவித்தன. அவனுடைய பாண வர்ஷத்தை தாங்க மாட்டாமல் வானரங்கள் இங்கும் அங்குமாக ஓடின. வருத்தத்துடன் முகத்தை தொங்கப் போட்ட படி வானரங்கள் திகிலுடன் நின்ற தன் படை பலத்தைப் பார்த்து அங்கதன் செய்வதறியாது திகைத்தான். மகாபார்ஸ்வன் என்ற ராக்ஷஸ படைத் தலைவனிடம் அடி வாங்கி வீரர்கள் சோர்ந்து போய் இருந்தனர். உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, அங்கதன் பர்வ காலத்தில் சமுத்திரத்தில் தோன்றும் வேகத்துக்கு இணையாக இரும்பாலான பரிகம் என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான். சூரியனின் பிரகாசத்துக்கு இணையாக இருந்த அந்த பரிகம் என்ற ஆயுதத்தை மகா பார்ஸ்வன் பேரில் பிரயோகித்தான். அந்த அடி தாங்காமல் மகாபார்ஸ்வன் மூர்ச்சையானான். சாரதி, ரதம் இவற்றை விட்டு பூமியில் நினைவின்றி விழுந்தான். அந்த சமயம், கரடி ராஜனான ஜாம்பவான், தன் அணி வகுத்து நின்றிருந்த படையின் மத்தியில் இருந்து வந்து,  கையிலிருந்த கல்லை அவன் பேரில் வீச, குதிரைகள் மேல் கல் பட்டு கீழே விழுந்தன. ரதமும் உடைந்தது. முஹுர்த்த நேரத்தில் நினைவு திரும்பி மகா பார்ஸ்வன் எழுந்த பொழுது,  இதைக் கண்டு, அங்கதனின் மார்பை குறி வைத்து பல பாணங்களால் அடித்தான். ஜாம்பவானும், க3வாக்ஷனும் கூட இந்த தாக்குதலில் காயம் அடைந்தனர். இதைக் கண்டு ஆத்திரம் மேலிட அங்கதன் பரிகத்தை எடுத்துக் கொண்டான். இரண்டு கைகளாலும் பிடித்து சுழற்றி சற்று தூரத்தில் நின்றிருந்த ராக்ஷஸன் மேல் படும் படி வீசி எறிந்தான். இந்த அடியில் அவனை வதம் செய்து விட வேண்டும் என்று நினைப்பது போல இருந்தது.  வேகமாக வந்த பரிகம், ராக்ஷஸனின் வில்லையும், சரங்களையும், தலையை காக்கும் பாதுகாப்பு கவசத்தையும் சேர்த்து அடித்து நொறுக்கியது. உடனே வாலி புத்திரனான அங்கதன், தன் கைத்தலத்தால் அடிக்க ஆரம்பித்தான். குண்டலம் அணிந்திருந்த காதுகளில் கைத்தலத்தால் ஓங்கி ஒரு அறை விட, மகா பார்ஸ்வன் ஆத்திரம் பன் மடங்காகியது.  ஒரு கையால் மிகப் பெரிய பரஸ்வதம் என்ற ஆயுதத்தை வேகமாக எடுத்து, எண்ணெயில் மூழ்க வைத்து த்ருடமாக மலை போல அசையாத தன்மையுடன் செய்யப் பட்டிருந்த ஆயுதத்தை கோபத்துடன் வாலி புத்திரன் மேல் பிரயோகித்தான். இடது புஜத்தின் தசைப் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டன. அங்கதன் ரோஷத்துடன் அந்த பரஸ்வதம் என்ற ஆயுதத்தை தன் உடலில் பதிந்திருந்ததை பிடுங்கி எறிந்தான். வஜ்ரம் போன்ற தன் முஷ்டியை மடக்கிக் கொண்டு எதிரியைத் தாக்கத் தயாரானான். தன் தந்தைக்கு சமமான பராக்ரமம் உடைய அங்கதன், முஷ்டியில் தன் பலம் அனைத்தையும் சேர்த்து மகா பார்ஸ்வனின் மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டான். ஸ்தனங்களின் மத்தியில் வேகமாக வந்து விழுந்த முஷ்டியின் அடி, அந்த ராக்ஷஸனின் ஹ்ருதயத்தையே பிளந்து விட்டது போல ராக்ஷஸன் அந்த க்ஷணமே பூமியில் விழுந்தான். தலைவனான மகா பார்ஸ்வன் அடிபட்டு விழுந்ததும், அந்த படை வீரர்களின் உற்சாகம் வடிந்து போய், பயம் ஆட்கொண்டது. இதைக் கண்டு ராவணன் கோபம் மேலும் அதிகமாகியது. வானரங்கள் மகிழ்ச்சியுடன் சிம்ம கர்ஜனை செய்தன.   அவர்கள் மனம் நிறைந்து  பல முறை செய்த இந்த கர்ஜனைகளைக் கேட்டு ராவணன், லங்கையை இந்த சத்தத்தாலேயே கிடு கிடுக்க வைப்பது போல வானரங்கள் செய்த அட்டகாசத்தை கேட்டு பொறுக்க மாட்டாதவனாக தீவிரமான தாக்குதலுக்கு தயாரானான்.  மேலும் தீவிரமாக போர் செய்யவே நினைத்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மகா பார்ஸ்வ வத4ம் என்ற தொன்னூற்று ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 100 (507) ராம ராவணாஸ்த்ர பரம்பரா(ராம, ராவணர்களின் தொடர்ந்த அஸ்திரங்களின் தாக்குதல்)

 

ராக்ஷஸர்களான மகோதர, மகாபார்ஸ்வன் என்ற இரட்டையர்கள், யுத்த களத்தில் மாண்டதை அடுத்து, முன்பே விரூபாக்ஷனும் வதம் செய்யப் பட்ட செய்தியையும் அறிந்து ராவணன் தன் நிலை கொள்ளாமல் தவித்தான்.  தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கோபத்தால் நிறைந்தது. தன் சாரதியைப் பார்த்துச் சொன்னான். என் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ராம லக்ஷ்மணர்களை அழிப்பேன். அப்பொழுது தான் என் மந்திரிகளைக் கொன்ற எதிரிகளுக்கு புத்தி புகட்டியவனாக ஆவேன்.  இந்த ராம வ்ருக்ஷத்தை சாய்ப்பேன். (ராமன் எனும் இந்த மரத்தை). இந்த மரத்தில் தான் சீதா என்ற புஷ்பம் பலனைத் தரும்.  இந்த மரத்தின் பெரிய கிளைகள், ஜாம்பவான், சுக்ரீவன், குமுதன், நலன், மைந்தன், த்விவிதன், அங்கதன், கந்த மாதனன், ஹனுமான், சுஷேணன், மற்றும் பல வானர படைத் தலைவர்கள்.  கிளம்புவோம் என்று சொல்லி பத்து திசைகளும் அதிர, ரதத்தை ஓட்டிக்கொண்டு, ராகவன் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான். நதிகளிலும், காடுகளிலும், கானனங்களிலும் இந்த சப்தம் எதிரொலித்தது.  வராகங்களும், மிருகங்களும், யானைகளும், நடமாடும் பூமி அசைந்து ஆடியது. பயங்கரமான இருட்டு பரவியது. அஸ்திர பிரயோகம் செய்ததில், வானரங்கள் தகிக்கப் பட்டு கருகி விழுந்தன. பயங்கரமான அந்த அஸ்திரம் ஏராளமான புழுதியை கிளப்பி விட்டது. ஓடும் வானரங்களும் அதை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தன. ப்ரும்மா தானே ஸ்ருஷ்டி செய்த அஸ்திரம் அது. அந்த சேனையின் படை வீரர்கள் பெருமளவு ராவணனின் அஸ்திரங்களின்  தாக்குதலால் செயலிழந்து நூற்றுக் கணக்காக கீழே விழுவதைக் கண்டு ராகவன் யோசித்தான். (ஹரி) வானர வீரர்களை மூலைக்கொன்றாக ஓடச் செய்து விட்டு ராக்ஷஸ சார்தூலனான ராவணன், ராமன் இருக்கும் இடம் வந்தான். தோல்வியே அறியாதவன், நிமிர்ந்து நின்று கொண்டிருப்பதைக் கண்டான். விஷ்ணுவுடன், இந்திரன் நிற்பது போல, லக்ஷ்மணன் உடன் நிற்க, ராமன் நிற்பதைக் கண்டான். ஆகாயத்தைத் தொடுவது போல, நீண்ட வில்லையும், அதை ஏந்திய கைகளையும் கண்டான். பத்மபத்ரம் போன்ற விசாலமான கண்களையும், தீர்க்கமான கைகளையும், எதிரிகளை அடக்கும் சக்தி வாய்ந்த புஜங்களையும் கண்டான். இதன் பின் பலசாலியான ராகவன் (லக்ஷ்மணன்) சௌமித்ரியுடன் கூட, அங்கு வந்த ராவணனைக் கண்டார். வானரங்கள் நொறுங்கிப்போய் விழுவதையும், தன்னை எதிர்த்து போர் செய்ய வரும் ராவணனையும் பார்த்து, தன் வில்லை மைய பாகத்தில் கை வைத்து எடுத்து நிமிர்த்தினார். வில்லின் நாணை நிமிண்டி ஓசை எழும்பச் செய்தார். அந்த ஓசையே நாதமாக, நாலா திக்குகளிலும் பரவி, மேதினியை பிளப்பது போல ஒலித்து, எதிரொலித்தது.  ராவணனின் பாணங்கள் செய்த அத்புத லீலையை அப்பொழுது தான் கண்ட ராக்ஷஸ, வானர வீரர்கள் ராமனின் வில் செய்த அத்புதமான நாதத்தையும் கேட்டனர். ராம, லக்ஷ்மணர்களின் இலக்கு, அம்புகளின் வழியில் நேருக்கு நேர் வந்த (ஸரபதம்-சரங்கள் செல்லும் மார்கம் ) ராவணன் சந்திர சூரியர்களின் மார்கத்தில் ராகு எதிர்ப்படுவதைப் போல இருந்தான். அவனுடன் தான் முதலில் யுத்தம் செய்ய விரும்பியவர்களாக லக்ஷ்மணன் கூர்மையான சரங்களை தன் வில்லில் பூட்டி விடலானான். அவை அக்னி சிகா(தீயின் நாக்கு) போல சீறிட்டு பாய்ந்தன. இவைகளை லக்ஷ்மணன் தன் வில்லில் தொடுத்து பிரயோகித்த மாத்திரத்தில், ராவணன் ஆகாயத்தில் தன்  பாணங்களால் தடுத்து நிறுத்தி விட்டான். ஒரு பாணத்தை,  ஒரு பாணத்தால், பத்து பாணங்களைத் தன் பத்து பாணங்களால் தடுத்து செயலிழக்கச் செய்து விட்டான். லக்ஷ்மணனை தன் கை லாகவத்தால் பிரமிக்கச் செய்து விட்டு, அவனை அலட்சியம் செய்தவனாக நேராக ராமனிடம் சென்றான். மலை போல அசையாது நின்ற ராமனை நெருங்கினான். கோபத்தால் சிவந்த கண்களுடன், ராகவன் பேரில் பாணங்களை மழையாக வர்ஷித்தான். ராவணனின் வில்லிலிருந்து புறப்பட்ட சரங்கள் தாரையாக, மழை போல பொழிவதைக் கண்டு, ராமர் வேகமாக தன் ஆயுதத்தை எடுத்துக் கொண்டார். க்ஷண நேரத்தில், தயாரானார். தன்னுடைய ப4ல்ல என்ற ஆயுதத்தால், ராவணனின் சர மழையை தடுத்து நிறுத்தினார். கோபத்துடன் எய்யப்பட்ட, ஆலகால விஷம் போலும், தீக்கனல் போலும், வந்து விழும் அம்புகளை ராமர் செயலிழக்கச் செய்தார். ராகவன் ராவணனை வேகமாக அடிக்க, ராவணன் ராகவனுக்கு அதே போல பதிலடி கொடுக்க, ஒருவருக்கொருவர் பல விதமான  தீக்ஷ்ணமான பாணங்களால் சமமாக யுத்தம் செய்தனர். இரு தரப்பிலும் பாணங்கள் மழையாக பொழிந்தன. வலதும் இடமுமாக மாறி மாறி கைகள் விசித்திரமான வேலைப்பாடு செய்வது போல மண்டலங்களாக சரங்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. இருவருமே தோல்வியே அறியாதவர்கள். இருவரும் வேகமாக பாணங்களை எய்யக் கூடியவர்கள். இருவருமே களைப்பு, சலிப்பின்றி பாணங்களை எய்து கொண்டிருந்தனர். திடுமென எதிருக்கு எதிர் நின்று போர் செய்ய ஆரம்பித்தவுடன், உலகமே பயத்தால் ஸ்தம்பித்து நின்று நடப்பதை காணலாயிற்று.

 

ரௌத்ரமாக நின்ற இருவரும், கையில் வில்லுடன், யமனோ, அந்தகனோ என்று நினைக்கும் வண்ணம் போர் வெறியுடன் நின்றனர். புது புது விதமான பாணங்கள் ஆகாயத்தில் நிறைந்தன. சூரியன் இல்லாத பொழுது மேகத்தில் மின்னல் கோடு கிழிப்பது போல, பளீர், பளீரென இந்த பாணங்கள் தோன்றி மறைந்தன. ஆகாயம்  ஜன்னல்களாக பிரிக்கப் பட்டது போல, பள பளத்த அம்புகள், ஜாலங்களாக பின்னலிட்டு கோலமிட்டன. வேகம் நிறைந்து, மிகவும் தீக்ஷ்ணமான நுனிகளுடன், க்ருத்ர பத்ரம் -செயற்கை இலைகள் என்று பெயருடைய, நுனியில் அமைந்த வேலைப்பாடுகள் விசிறிகளாக காற்றை வீச, சரங்களால் ஆகாயம் மூடப் பெற்ற சமயம், அந்தகாரம் மாயையாக சூழ்ந்தது. சூரியன் அஸ்தமனமான பின்பும், பெரும் மேக கூட்டங்கள் தங்கள் வழியில் அலைந்து கொண்டு இருப்பதைப் போல இருவரும் ஸ்திரமாக நின்றனர். ஒருவரையொருவர் வதம் செய்யும் நோக்கத்துடன் போர் செய்தனர். இருவரும் சமமான பலம், ஆற்றல் இவைகளுடன், விருத்திரனும், வாஸவனும் யுத்தம் செய்தது போல இருந்தது.   நினைத்து பார்க்க முடியாத, செயலில் காட்ட முடியாத அத்புதமான வீர விளையாட்டு.  இருவரும் உயர் குடியில் பிறந்தவர்கள். இருவரும் சஸ்திர ஞானம் முழுமையாக உடையவர்கள்.  அஸ்திரங்கள் என்று பார்க்கும் பொழுது, இருவருமே குறிப்பிடத் தக்க தேர்ச்சி உடையவர்கள்.  யுத்த களத்தில் இருவரும் இறங்கி இருக்கின்றனர். அவர்கள் இருவரும் எந்த வழியில் செல்கின்றனரோ, அந்த வழியில் சரங்களே அலைகளாக, அலைகள் காற்றினால் தள்ளப்பட்டு சமுத்திரத்தில் பாய்வது போல தெரிந்தது.  தேர்ந்த கை லாகவத்துடன் பாணங்களை எய்து தன் வீரத்தை காட்டக்கூடிய ராவணன், லோக ராவணன் (உலகை இம்சிப்பவன்) நாராச மாலாம் என்ற அம்புகளைக் கொத்தாக ராமனின் நெற்றியில் அடித்தான். தன் தலையால் அதைத் தாங்கிய ராமர் சற்றும் பாதிக்கப்படவில்லை. ரௌத்ரனான ராவணன் வில்லிலிருந்து எய்யப் பட்ட அந்த பயங்கரமான அஸ்திரத்தை நீலோத்பல தளம் போல மென்மையாக ஏற்றுக் கொண்டார். இதன் பின் மந்திரங்களை உச்சரித்து, ரௌத்ரம் என்ற அஸ்திரத்தை தேர்ந்தெடுத்து, சரங்களை மறுபடியும் சேர்த்து வைத்துக் கொண்டு, அவைகளை கோபத்துடன் தன் வில்லில் பூட்டி எய்தார். அவை மகாமேகம் போன்ற கவசத்தில் பட்டுத் தெறித்து விழுந்தன. வதம் செய்ய முடியாத ராவணனுக்கு இந்த அம்புகளால் சிறிதளவும் வருத்தமோ, வலியோ தோன்றவில்லை. திரும்பவும் ரதத்தில் ஏறி வந்த ராக்ஷஸாதிபனை, தன்னை அடித்தது போலவே நெற்றியை குறி பார்த்து அடித்தார். அந்த பாணங்கள், தங்கள் பாண ரூபத்தை விட்டு, ஐந்து தலை பாம்புகளாக  உருமாறி, பெருமூச்சு விட்டுக் கொண்டு சீறிப் பாய்ந்து ராவணனைத் தாக்கிய பின் பூமிக்குள் நுழைந்து கொண்டன.  ராவணன் ஆசுரம் என்ற மிக பயங்கரமான அஸ்திரத்தை, அதன் மந்திரத்தைச் சொல்லி எய்யத் தயார் ஆனான். சரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிச் சிறப்பு பெற்றவை. சில சிம்மம் போன்ற முகமுடையவை. புலி, சில கழுகு, காகம் போன்ற முகம் உடையவை, கருடன், கழுகு போன்ற முக அமைப்பு கொண்டவை சில. கலை மான் போன்ற முக அமைப்பு கொண்டவை,  வாயை பிளந்து கொண்டு நிற்பது போல பெரும் வாயை உடையவை. கோரமானவை, ஐந்து முகங்கள் கொண்டவை, நாக்கை நீட்டி இருப்பது போன்ற உருவங்கள், இப்படி கூர்மையான  பலவற்றை ராவணன்  தன் வில்லிலிருந்து பிரயோகம் செய்தான்.  ஒரு சில சரங்கள் கர முகம் உடையவை. சில வராக முகம் உடையவை, நாய், சேவல் இவை போன்ற முகம் உடையவையும், மகரம் போன்ற முகமும், சில விஷ ஜந்துக்களின் உருவத்தை ஒத்தவைகளாகவும் காணப்பட்டன. இவை தவிர, பல பாணங்களை மாயாவியான ராவணன் எய்தான். இவை ராமனை நோக்கிச் சீறிப் பாய்ந்தபடி வந்தன. இந்த ஆசுரம் என்ற அஸ்திரம், மந்திர பலத்தால்,  ராமரை நாலு புறமும் சூழ்ந்து கொண்டன. இதிலிருந்து விடுபட ராமர், உற்சாகமாக அக்னிக்கு சமமான பாவகம் என்ற அஸ்திரத்தை விட்டார். அக்னி போல அக்னி தீப்த முகம், சூரிய முகம் என்ற அஸ்திரங்கள், அர்த்த சந்திர, சந்திர முகம், தூம கேதுமுகம், க்ரஹ, நக்ஷத்திர முகங்கள், மஹோல்கா முகம் என்ற அஸ்திரங்கள் வித்யுத் ஜிஹ்வோ என்றவை, இது போல பல சரங்களை பிரயோகம் செய்தார். ராவணாஸ்திரங்களுடன் மோதி, ராமரின் சரங்களும் ஆகாயத்தில் மறைந்தன. பல ஆயிரம் துகள்களாக சிதறின. ராவணனின்  அஸ்திரங்கள் அனைத்தையும் ராம பாணங்கள் செயலிழக்கச் செய்வதைக் கண்டு வானரங்கள் களிப்பெய்தின. ராகவனைச் சுற்றி நின்று கொண்டு சுக்ரீவன் முதலான வானர வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன.  ராவணன் கை வண்ணத்தால் வெளிப்பட்ட சக்தி வாய்ந்த அஸ்திரங்களையும் முறியடித்த ராமர், அந்த பெரும் யுத்த பூமியில் மகிழ்ச்சியுடன் நின்றதைப் பார்த்து வானரங்கள் உரத்த குரலில் ஆரவாரம் செய்து, தங்கள் களிப்பை வெளிப்படுத்தின.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராம ராவணாஸ்திர பரம்பரா என்ற நூறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 101 (508) லக்ஷ்மண சக்தி ஷேப| (சக்தி ஆயுதத்தால் லக்ஷ்மணன் அடிபட்டு விழுதல்)

 

தன் அஸ்திரங்கள் அனைத்தையும் அதற்கு இணையான அஸ்திரங்களைக் கொண்டு ராமன் முறியடித்து விட்டதைக் கண்டு ராவணனின் ஆத்திரம் இரு மடங்காகியது. மேலும் சிந்தித்து புதிய ஒரூ அஸ்திரத்தை எடுத்தான். மயன் உண்டாக்கியது. பெரும் தேஜஸுடன் கூடிய மகா அஸ்திரம், ரௌத்ரம் எனப்படும் அதை ராமன் பேரில் எய்யத் தயாரானான். அதனுடன் சூலங்களும் தானாக வெளிப்பட்டன.  க3தை4கள், முஸலங்கள், கார்முகம் எனும் வில், வஜ்ரம் போன்ற ஒளி மிகுந்த பல ஆயுதங்கள், முத்கரங்கள் கூட பாசங்கள், ஒளி மிகுந்த அசனிகள், வந்து விழுந்தன.  யுக முடிவில் காற்று வீசி,  சூறாவளியாக வெளிப்படுவது போல அடுத்தடுத்து அஸ்திரங்கள் வெளி  வந்தன.  ஏராளமாக வெளிப்பட்ட இந்த அஸ்திரங்களை முறியடிக்க ராமர் காந்தர்வ அஸ்திரத்தை தேர்ந்தெடுத்து பிரயோகம் செய்தார்.  ராவணனின் அஸ்திரத்தின் மூலம் வெளிப்பட்ட அனைத்து ஆயுதங்களும் செயலிழந்தன.  ராவணனின் கோபம் கட்டுக்கடங்காது போயிற்று.  தாமிரம் போல கண் சிவக்க, சௌரம் என்ற அஸ்திரத்தை விட்டான். அதிலிருந்து பள பளக்கும் சக்கரங்கள், வெளி  வந்தன. பிரகாசமாக கண்களை கூச வைக்கும் சூரியனுடைய ஒளிக் கற்றைகள் போன்று,  ராவணனின் வில்லில் இருந்து மகா வேகமாக வெளி  வந்தன.  இங்கும் அங்குமாக விழும் இந்த அயுதங்களால் ஆகாயமே ஒளி மயமாக ஆயிற்று.  திசைகள் வெளிச்சம் போடப் பெற்று,  பிரகாசமாகத் தெரிய,  சந்திர, சூரிய கிரஹங்கள், ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் உதித்தது போல ஆயிற்று. அந்த சக்கரங்களை தன் பாணங்களால் ராமர் துளைத்தார். பல விசித்ரமான ஆயுதங்களை ராவணன் தன் வில்லில் பூட்டி வெளிப்பட செய்தும்,  பயனில்லாமல் போயிற்று.  ராம பாணத்தின் முன் அவை நிற்க இயலாமல் மறைந்தன.  இதுவும் பயனற்று போகவும், ராவணன் கோபத்துடன் பத்து பாணங்களை ஏக காலத்தில் எய்தான்.  ராவணனின் ப்ரும்மாண்டமான வில்லிலிருந்து வந்து தாக்கிய பாணங்களைக் கண்டு ராமர் கலங்கவில்லை.  அசையாமல் நின்றார். உடல் முழுவதும் துளைத்து எடுக்கும்படி பல பாணங்களை ராமரும் கோபத்துடன் ராவணன் மேல் எய்தார். பல சரங்கள் அடுத்தடுத்து வந்து விழுந்தன. இதனிடையில் லக்ஷ்மணன் ஏழு சிறந்த அம்புகளைக் கொண்டு ராவணனின் த்வஜம்,  மனித தலை போன்று அமைக்கப் பெற்றிருந்ததை கிழே தள்ளினான். பளபளக்கும் குண்டலங்களோடு இருந்த சாரதியின் தலையைத் துண்டித்து கீழே விழச் செய்தான். யானையின் தும்பிக்கை போன்று நீண்டிருந்த வில்லையும் ஒரு பாணத்தால் அடித்து கீழே விழச் செய்தான். ஐந்து கூர்மையான சரங்கள் இதைச் செய்தன. விபீஷணன் இதனிடையில் தன்  க3தை4யால் குதிரைகளை அடித்து வீழ்த்தினான். கார் மேகம் போல துடியாக நின்ற குதிரைகள் மடிந்து விழுந்தன. குதிரைகள் இல்லாத ரதத்திலிருந்து இறங்கிய ராவணன், தன் சகோதரன் மேல் தன் ஆத்திரத்தைக் காட்டலானான்.  விபீஷணனின் பேரில் சக்தி வாய்ந்த சக்தி ஆயுதத்தை எய்தான். அது விபீஷணனைத் தாக்கும் முன்பே, லக்ஷ்மணன் இடையிலேயே தாக்கி முறியச் செய்து விட்டான்.  மூன்று பாணங்களால் அது சிதறிப் போகவும், வானரங்கள் குதூகலத்துடன் கோஷமிட்டன. காஞ்சனத்தால் மாலை அணிவிக்கப் பட்டிருந்த அந்த சக்தி ஆயுதம் மூன்றாக சிதறியது.  தீப்பொறிகள் பறந்தன.  ஆகாயத்தில் மின் மினிப் பூச்சிகள் வட்டமிடுவது போல காட்சியளித்தன. இதன் பின் மிகவும் கௌரவமாக எண்ணப்பட்டு வந்த காலனுக்கும் எதிர்க்க முடியாத சக்தி வாய்ந்த,  தன் தேஜஸால் பிரகாசமாக இருந்த சக்தி என்ற பெரிய ஆயுதத்தை ராவணன் எடுத்தான்.  ராவணன் அதை வேகத்துடன் வீசவும், மகா கோரமாக இந்திரனின் அசனி ஆயுதத்திற்கு சமமான ஒளியுடன் சீறிக் கொண்டு புறப்பட்டது.  விபீஷணனை அது தாக்குமுன், லக்ஷ்மணன் பாய்ந்து வந்து அதைத் தடுக்கும் விதமாக தன் வில்லில் பாணங்களைப் பூட்டி தயார் செய்து கொண்டு  ராவணனைத் தடுத்தான்.  சக்தி ஆயுதம் விபீஷணனின் மேல் பட்டு விபரீதமாக எதுவும் ஆகுமுன் அதைத் தடுக்க எண்ணி, தானே ராவணன் முன் நின்று பதிலடி கொடுக்கத் தீர்மானித்தான். தன் முயற்சியை புரிந்து கொண்டு தடுத்து விட்ட லக்ஷ்மணனைப் பார்த்து ராவணன் கோபத்துடன் கத்தினான்.  விபீஷணன் தன் இலக்கிலிருந்து தப்பி விட்டது வேறு கோபத்தை அதிகரித்தது. பல ஸ்லாகின்| (வீரத்தை மதிப்பவனே) போற்றப்பட வேண்டிய வீரனே| என் சகோதரனை காப்பாற்றி விட்டாய். அதே ராக்ஷஸ சக்தி உன் உயிரை பறிக்கப் போகிறது பார். இது உன் ஹ்ருதயத்தை பிளந்து, ரத்தம் பெருகச்  செய்யும். என் கை பரிகத்தில் இருந்து வெளிப்பட்டு உன் உயிரை எடுத்துக் கொண்டு தான் போகப் போகிறது.  இப்படிச் சொல்லிக் கொண்டே, எட்டு மணிகளைக் கொண்ட சக்தியை, மயனின் மாயையால் செய்யப் பட்ட சத்ருக்களை வதைக்கக் கூடிய சக்தி ஆயுதத்தை லக்ஷ்மணனைக் குறி வைத்து, ஒளி வீசும் அந்த பாணத்தை எய்து விட்டு, ராவணன் அட்டகாசமாக சிரித்தான்.    இந்திரனின் அசனி போலவே, பயங்கரமான வேகத்துடனும், ஒலியுடனும் வந்த அந்த பாணம் லக்ஷ்மணனின் மேல் வந்து விழுந்தது.  லக்ஷ்மணனை இந்த சக்தி ஆயுதம் தாக்காமல் இருக்க, ராமன் மனதினுள், லக்ஷ்மணனுக்கு ஸ்வஸ்தி அஸ்து- மங்களம் உண்டாகட்டும், சக்தியின் சக்தி பயனற்றுப் போகட்டும் என்று வேண்டியபடி  நிற்கையிலேயே, ராவணனனுடைய கோபத்துடன் வந்த  சக்தி ஆயுதம் ஆல கால விஷம் போல லக்ஷ்மணனை மூழ்கடித்தது.  மகா வேகத்துடன் மார்பில் வந்து விழுந்த ஆயுதம், நாகங்களின் அரசனின் நீண்ட நாக்குகள் போல தீக்ஷ்ணமாக, ராவணன் வெகு தூரம் வரை செல்லும்படி இழுத்து அடித்த வேகத்தால்,  அதிக கனமாக மேலே விழுந்ததால், லக்ஷ்மணன் மூமூர்ச்சையடைந்து பூமியில் விழுந்தான்.   அருகில் நின்ற லக்ஷ்மணனின் இந்த நிலையைக் கண்டு ராமர், தன் சகோதரனிடம் கொண்ட பாசத்தால் முகம் வாடி, மிகவும் வருந்தினார்.  கண்களில் நீர் நிரம்ப, முஹுர்த்த நேரம் என்ன செய்வது என்று யோசித்து, யுக முடிவில் அக்னி வளருவது போல தானும் தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.  துக்கம் கொண்டாட இது சமயமல்ல என்று நினைத்து ராவணனின் வதமே குறிக் கோளாக பெரும் யுத்தம் செய்தார்.  இடையிடையில் சக்தியால் அடிபட்டுக் கிடக்கும் லக்ஷ்மணனையும் பார்த்துக் கொண்டே, யுத்தத்திலும் கவனமாக இருந்தார். லக்ஷ்மணன் ரத்தப் பெருக்கில் நனைந்து கிடந்தான். மலைப் பாம்புகளுடன் கிடப்பது போல அசையாது கிடந்தான்.   ராவணனின் சக்தி மகா பலம் வாய்ந்தது. வானர வீரர்கள் என்ன முயற்சி செய்தும் லக்ஷ்மணனை அதன் தாக்குதலிலிருந்து விடுவிக்க முடியவில்லை. வேகமான செயல் திறனுடைய ராக்ஷஸன் லாகவமாக எய்திய பாணங்கள் கத்தையாக வந்து விழ, சௌமித்ரியை துளைத்துக் கொண்டு அவை பூமிக்குள் மறைந்தன.   அவற்றை ராமன் தன் கைகளால் பற்றி இழுத்து. செயலிழக்கச் செய்தார். லக்ஷ்மணன் உடல் பூராவும் மர்மத்தை நாசம் செய்யும் விதமாக பாணங்கள் குத்திட்டு நிற்க, ராமன் அவைகளை கைகளாலேயே பிடுங்கி எறிந்து, லக்ஷ்மணனை அணைத்தபடி, தன் மேல் அதன் பாதிப்பு ஏற்fபட்டதையும் பொருட்படுத்தாமல், சுக்ரீவன் ஹனுமான் இவர்களை அழைத்து கட்டளையிட்டார். லக்ஷ்மணனை சூழ்ந்து காவலாக நில்லுங்கள். வானரோத்தமர்களே| என் பராக்ரமத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது. நான் வெகு காலமாக விரும்பி எதிர் பார்த்திருந்த தருணம். இந்த பாபாத்மாவான ராவணனை வதம் செய்தே தீர வேண்டும். சக்ரவாக பக்ஷி மழைக்காக காத்திருந்து, வெய்யில் கால முடிவில் கார் மேகத்தைக் கண்டு மகிழ்வது போல இப்பொழுது சமயம் கை கூடி வந்திருக்கிறது. இந்த முஹுர்த்தத்தில் உங்களுக்கு சபதமிட்டுச் சொல்கிறேன். சத்யமாக இன்று உலகம் ராவணன் இன்றியோ (அராவணன்) ராமன் இன்றியோ (அராமம்) ஆகப் போகிறது. வானரங்களே| ராஜ்யம் நஷ்டமானதும், வனத்தில் வாசம் செய்ததும், தண்டகா வனத்தில் வேதனையுடன் நடந்து திரிந்து அலைந்ததும், வைதேஹியைத் தொலைத்ததும், ராக்ஷஸர்களுடன் மோதுவதும் என்று பல கஷ்டங்களை அனுபவித்தோம். யாவும் முடியும் நேரம் வந்து விட்டது. ராவணனை இன்று போரில் வதம் செய்து இந்த கஷ்டங்களுக்கு பரிகாரம் தேடுவேன்.  என்ன காரணம் கொண்டு வானர சைன்யத்தை இங்கு கொண்டு வந்து சேர்த்தேனோ, வாலியைக் கொன்று, சுக்ரீவனை ராஜ்யத்தில் அமர்த்தி, என்ன காரணத்திற்காக சமுத்திரத்தைக் கடந்து வந்தோமோ, சமுத்திரத்தில் சேதுவைக் கட்டினோமோ, அந்த ராவணன் இன்று போர் முனையில் என் கண்களுக்கு இரையாக எதிரில் நிற்கிறான்.  என் கண்ணில் பட்டபின் இனி இவன் உயிருடன் திரும்ப முடியாது. திருஷ்டி விஷம் உடையவன் கண்ணில் பட்டால் மீள முடியாதது போல.  ராவணன் இப்பொழுது என் கண்களில் படும் தூரத்தில் இருக்கிறான்.  அமைதியாக, சௌக்யமாக நின்று இந்த பயங்கரமான யுத்தத்தைப் பாருங்கள்.  பர்வதங்களின் மேல்  நானும் ராவணனும் யுத்தம் செய்வதை காணும் தூரத்தில் வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள்.  இந்த யுத்தத்தில் ராமனுடைய ராமத்வம் என்ன என்பதை தெரிந்து கொள்வீர்கள். மூன்று உலகும், கந்தர்வர்களும், தேவர்களும், ரிஷி கணங்களும், சாரணர்களும் இன்று என் செயல் திறனை காணட்டும். இன்று என் செயல் திறத்தைக் கண்டு வியக்கட்டும்.  இன்று நான் காட்டப் போகும் என் வீர தீரத்தை பூமி உள்ளவரை உலகில், சராசரங்களில், தேவ லோகத்தில்  க3தை4யாக பேசப் போகிறார்கள். எங்கு யுத்தம் என்று நடந்தாலும் அந்த இடத்தில் கூடி நின்று, இன்று நான் செய்யப் போகும்  யுத்தத்தைப் பற்றித் தான் பேசுவார்கள் என்று சொல்லியபடி, தன் கவனம் முழுவதும் செலுத்தி கூர்மையான அம்புகளால் ராவணனை தாக்க ஆரம்பித்தார்.  ராவணனும் சளைக்காமல் ஒளி வீசும், கூர்மையான நாராசமான முஸலங்களால் மேகம் மழை பொழிவது போல ராமன் பேரில் வர்ஷித்தான். ராம, ராவணர்கள் எய்த பாணங்கள் ஒன்றையொன்று,  தாக்கி முறியடித்து செய்த சப்தங்கள் மொத்தமாக கேட்டது.  முறிந்தும், உடைந்தும், இரைந்தும் கிடந்த சரங்கள், ராம, ராவண பாணங்கள் அந்தரிக்ஷத்தில் இருந்து ஒளி வீசியபடி பூமியில் வந்து விழுந்தன.  வில்லின் ஓசையும், பலமாக கேட்டது. அத்புதமான காட்சி. உலகம் பூராவும் நடுங்கியபடி பார்த்துக் கொண்டிருந்தனர். சர ஜாலம் மழையாக ராமனது ஒளி மிகுந்த வில்லிலிருந்து வரவும், சமாளிக்க முடியாமல் ராவணன் பின் வாங்கினான். காற்று வேகமாக வீசி கனமற்ற மேகத்தைத் தள்ளிச் செல்வது போல பயம் அவனை விரட்டியது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் லக்ஷ்மண சக்தி க்ஷேபம் என்ற  நூற்று ஓராவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 102 (509) லக்ஷ்மண சஞ்ஜீவனம் (லக்ஷ்மணனை மூர்ச்சை தெளிவித்தல்)

 

ஒரு பக்கம் ராவணனுக்கு சமமாக பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தாலும், பலவானான ராவணனால் அடிக்கப் பட்டு நினைவிழந்து, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் லக்ஷ்மணனே ராமரது மனதில் வியாபித்து நின்றான்.  பாணங்களை எய்து கொண்டிருக்கும் பொழுதே இடையில் சுஷேணனைக் கூப்பிட்டு இதோ ராவணனின் வீர்யத்தால் அடிபட்டு, லக்ஷ்மணன் பூமியில் விழுந்து கிடக்கிறான்.  வலியால் துடித்து பாம்பு போல நெளிகிறான். கண் கொண்டு பார்க்க முடியவில்லை.  என் மனதில் சோகத்தை நிறைக்கிறது.  என் உயிருக்கும் மேலான உற்ற சகோதரன் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான்.  சுத்த வீரன் இவன். இந்த நிலையில் இவனைப் பார்த்துக் கொண்டு நான் எப்படி யுத்தத்தில் கவனம் செலுத்துவேன்.  என் சகோதரன், சமரம் யுத்தம் என்றால் கௌரவமாக நினைப்பவன். சுப லக்ஷணங்கள் உடைய லக்ஷ்மணன். இவன் மரணம் அடைந்தால் உயிர் வாழ எனக்கு என்ன இருக்கிறது? சுகங்கள் தான் எனக்கு எதற்கு? அதனால் எனக்கு என்ன பயன்?  என் வீர்யம் தலை குனிகிறது, கையிலிருந்து வில் நழுவுகிறது. கண்களை நீர் மறைக்கிறது. என் அம்புகள் கூட இவனுக்காக வருந்துகின்றன. சரீரம் நடுங்குகிறது.  ஸ்வப்னத்தில் விமானத்தில் செல்பவன் நடுங்குவது போல. எனக்கு கவலை அதிகமாகிறது. ராவணன் என் சகோதரனை அடித்து வீழ்த்தியிருக்கிறான். மர்மஸ்தானங்களில் பலமாக அடித்து நகர முடியாமல் செய்திருக்கிறான். 

 

பிரியமான சகோதரன், அவன் உயிரே வெளியில் நடமாடுகிறது என்று சொல்லும் அளவு ஒட்டுதலுடன் உடன் வரும் சகோதரன்.  அவனின் கவலைக் கிடமான உடல் நிலை ராகவனின் மனதை வாட்டியது. ஒரு நிலையில் பொறுக்க மாட்டாதவனாக வாய் விட்டே புலம்பி விட்டார். யுத்தம் செய்து நான் என்ன அடையப் போகிறேன். உயிர் தான் எதற்கு? சீதையால் தான் எனக்கு என்ன லாபம்? என் பிரிய சகோதரன் புழுதி படிய ரண பூமியில் விழுந்து கிடப்பதை பார்த்த பின்னும் நான் ராஜ்யத்தை விரும்புவேனா?  ராஜ்யத்தால் எனக்கு என்ன ஆக வேண்டும்?? உயிர் வாழத்தான் என்ன பிடிப்பு இருக்கிறது. இந்த யுத்தம் செய்து தான் என்ன கிடைக்கப் போகிறது. இந்த ரண பூமியில் அடிபட்டு தூங்குவது போல கிடக்கிறானே, என் தம்பி உடன் பிறந்தவன்.  ஊருக்கு ஊர் மனைவிகள் கிடைப்பார்கள், ஊருக்கு ஊர் பந்துக்கள்  வந்து சேருவார்கள். எந்த தேசத்தில் லக்ஷ்மணன் போல உடன் பிறந்த சகோதரன் கிடைப்பான். அது போல் ஒரு இடம் நான் அறிந்ததில்லையே. லக்ஷ்மணன் இல்லாமல் ராஜ்யத்தால் தான் எனக்கு என்ன பயன்? புத்ர வாத்ஸல்யம் மிக்க சுமித்ரா தாயிடம் திரும்பிப் போய் நான் என்ன சொல்வேன்.? சுமித்ரா என்னை கடுமையாக பார்த்து விட்டு, எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தால் கூட, என்னால் தாங்க முடியாது. தாயார் கௌசல்யையிடம் தான் என்ன பதில் சொல்வேன். கைகேயியிடம் தான் எப்படிப் போய் நிற்பேன்?  எந்த முகத்தைக் கொண்டு பரதனையும், சத்ருக்னனையும் ஏறிட்டுப் பார்ப்பேன்.  அவனுடன் சேர்ந்து வனம் சென்றாய், அவன் இல்லாமல் திரும்பி வந்தாயா? என்று கோபமாக கேட்டால். இங்கேயே என் மரணம் சம்பவித்தால் நன்றாக இருக்கும். பந்துக்கள் எதிரில் போய் நின்று அவர்களின் நிந்தைக்கு ஆளாக வேண்டாம்.  முந்தைய ஜன்மங்களில் நான் என்ன  தீவினை செய்தேனோ, அதன் பலன் தான் அனுபவிக்கிறேன். அது தான் தார்மிகனான என் சகோதரனை அடித்து வீழ்த்தியிருக்கிறது. என் கண்ணெதிரில் இவன் இப்படி கிடக்கிறானே, ஹா, லக்ஷ்மணா | என் உடன் பிறப்பே, மனித ஸ்ரேஷ்டன் என்றால் நீ தான். சூரன் நீ. உத்தமமான சுத்த வீரன் நீ தான். பிரபோ4, என்னை விட்டுத் தனியாக பரலோகம் செல்லத் துணிந்தாயா, புலம்புகிறேனே, என்னிடம் பேச மாட்டாயா? எழுந்திருப்பா.   என்னிடம் பேசு. ஏன் படுத்துக் கிடக்கிறாய். தீனமாக அழுகிறேனே. என்னை கண்களைத் திறந்து பார்.  நீ தான் எப்பொழுதும் என்னை சமாதானப்படுத்துவாய். உற்சாகமாக பேசி என்னை தைரியம் ஊட்டுவாய். சோகத்தில் மூழ்கி வனம் வனமாக, மலைகளிலும், காடுகளிலும் அலைந்து நான் வாடிய பொழுது ஆறுதல் சொல்லித் தேற்றுவாய்.  நீயே விழுந்து கிடப்பாயோ என்று பலவிதமாக புலம்பும் ராமனை, சுஷேணன் ஆறுதல் செய்து மேலும் சொன்னான்.

 

மகாபா3ஹோ, இவன் இறக்கவில்லை. லக்ஷ்மணன் லக்ஷ்மி சம்பன்னன், லக்ஷ்மி வர்த4னன். லக்ஷ்மி கடாக்ஷம் நிரம்பியவன்.  இவன் முகத்தைப் பார். விகாரமாகவில்லை. முகத்தில் தேஜஸ் குறையவில்லை. பிரஸன்னமாக இருக்கிறான் பார். இவன் முகமே தேஜஸுடன் ஒளியுடன் இருப்பதைப் பார். பத்மம் போல கைகள், கைத்தலங்கள் சிவந்து காணப்படுகின்றன.  கண்கள் ஒளியுடன் பிரஸன்னமாக இருக்கிறது. உயிர் போன உடலில் இந்த ஒளியும், பிரஸன்னமான நிலையும் இருக்காது. தலைவனே, தீர்காயுஸ் உடைய மனிதர்களுக்குத் தான் முகம் இப்படி இருக்கும். இவன் லக்ஷ்மி வர்தனான லக்ஷ்fமணன். இவன் ப்ரேதமாக ஆக மாட்டான். வருந்தாதே, வீரனே. இவன் உயிருடன் தான் இருக்கிறான்.  சற்று பொறு. பூமியில் விழுந்து உடல் நடுங்க தூங்குவது போல கிடக்கிறான். தெளிந்து எழுந்தவுடன்  பேசுவான். மூச்சு விடுகிறான், பார். இழையாக நடுங்கிக் கொண்டு, திரும்பத் திரும்ப உள் மூச்சாக வாங்குகிறான். இவ்வாறு சொல் வளம் மிக்க சுஷேணன் ராமனை சமாதானம் செய்து விட்டு, அருகில் நின்றிருந்த ஹனுமானைப் பார்த்து துரிதப்படுத்தினான். சௌம்ய, சீக்கிரம் போ. ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வா. முன்னால் ஜாம்பவான் சொல்லியபடியே தென் சிகரத்தில் விளைந்திருக்கும் ஔஷதி மலையைக் கொண்டு வா. விசல்ய கரணீ என்று ஒன்று, சுபமானது. ஆயுதங்கள் துளைத்து காயப்படுத்தியதை குணமாக்கும். சவர்ண கரணீம், இதையும் கொண்டு வா. இது உடலுக்கு சீரான வர்ணத்தை அளிக்கும். கூடவே சஞ்சீவனியையும் கொண்டு வா. சந்தான கரணீம், இது உடைந்த பாகங்களை இணைத்து வைக்கும். இதையும் கொண்டு வா. சீக்கிரம் கொண்டு வா. இந்த லக்ஷ்மணனை உயிர்ப்பிக்க வேண்டியது நம் கடமை.

 

இதைக் கேட்டு உடனே ஹனுமான் பறந்தான். ஔஷதி பர்வதத்தை அடைந்தான். எந்த ஔஷதி என்பது தெளிவாக புரியவில்லை. இந்த மலை சிகரத்தையே எடுத்துச் செல்வேன். என்று உறுதியுடன், இந்த மலைச் சிகரத்தில் தான் ஔஷதிகள் விளைந்திருந்தன என்று நினைவு படுத்திக் கொண்டு, கூர்ந்து பார்த்தான்., இது தான் என்று ஊகிக்கிறேன். சுஷேணன் சொன்னதும், இந்த விதமாகத் தான் இருந்தது என்று தீர்மானித்தபடி, விசல்ய கரணி எது என்று தெரியாமல் விட்டுச் சென்றால், கால தாமதம் ஆகும், மலைச் சிகரத்தையே எடுத்துச் செல்வதே நல்லது என்று மலையை மூன்று முறை பிரதக்ஷிண நமஸ்காரம் செய்த பின், அதன் சிகரத்தை பெயர்த்து தூக்கிக் கொண்டு கிளம்பினான்.  மலைச் சாரலில் நன்கு வளர்ந்திருந்த மரங்கள் பூத்து குலுங்கின. அதை எடுத்து கைகளில் அதன் கனம் தாக்காமல் வசதியாக வைத்துக் கொண்டான். வேகமாக திரும்பி வந்து சுஷேணனிடம் தெரிவித்தான். பெரியவரே எது எந்த பச்சிலை என்பது சரியாகத் தெரியவில்லை. அதனால் மலையையே பெயர்த்துக் கொண்டு வந்து விட்டேன் என்றான். அவனை பாராட்டி சமயோசிதமாக செய்ததை புகழ்ந்து பேசி, சுஷேணன் தனக்கு வேண்டிய பச்சிலைகளைத் தேடி பறித்துக் கொண்டான். ஹனுமானின் செயலை ஆச்சர்யத்துடன் வானர, ராக்ஷஸர்கள் எல்லோருமே பாராட்டினர்.  தேவர்களால் கூட செய்ய முடியாத அரிய செயல் இது என்று போற்றினர். அந்த ஔஷதிகளை முறைப்படி தயாரித்து லக்ஷ்மணனுக்கு சுஷேணன் புகட்டினான்.  சரங்கள் குத்தி கிழிபட்டு கிடந்தவன், அந்த ஔஷதியின் வாசனை நாசி வழியே உள்ளே செல்லச் செல்ல காயங்கள் ஆறி எந்த புண்ணும் இன்றி, சீக்கிரமே எழுந்து நின்று விட்டான்.

 

தரையிலிருந்து எழுந்து நின்றவனைக் கண்டு வானரங்களும் மற்றவர்களும் சாது, சாது , நன்று, நன்று என்று சுஷேணனை பாராட்டினர். அவரை போற்றி கௌரவித்தனர்.  ஏஹி, ஏஹி, வா, வா என்று ராமர் லக்ஷ்மணனை அழைத்து கண்களில் நீர் மல்க அணைத்துக் கொண்டார். உடலோடு அணைத்து அவனை வாழ்த்தி  நல்ல காலம் பிழைத்து வந்தாய். உன்னை உயிருடன் பார்க்கிறேன். மரண வாயில் வரை சென்று மீண்டு விட்டாய். லக்ஷ்மணா நீ இல்லாமல் எனக்கு சீதையாலும் ஒரு பயனுமில்லை. நான் உயிர் வாழ்ந்து இருப்பதிலும் பெருமையில்லை. நீ இன்றி நான் வெற்றி பெற்று தான் என்ன பயன்? இவ்வாறு சொல்லும் ராமனை, மிகவும் வருத்தத்துடன், உடைந்து போன குரலில் லக்ஷ்மணன் பதில் சொன்னான்.  சத்ய பராக்ரமா, முன்னால் பிரதிக்ஞை செய்து விட்டு, இப்பொழுது பாமரன் போல நீங்களும் புலம்பலாமா?  உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் பிரதிக்ஞை செய்வது என்பது விளையாட்டல்ல. அனகா4, மாசற்றவனே, பிரதிக்ஞையை நிறைவேற்றுவது தான் மகான்களின் லக்ஷணம். நிராசை என்பது கூடவே கூடாது.  என் பொருட்டு வருந்துவதும், நம்பிக்கை இழந்ததும் போதும்.  ராவண வதத்தை செய்து, உன் பிரதிக்ஞையைக் காப்பாற்று. உன் பாணம் செல்லும் வழியில் வந்தவன் கூட உயிருடன் திரும்பக் கூடாது.  தீக்ஷ்ணமான பற்களைக் கடிக்கும் சிம்மத்தின் எதிரில் வந்த யானை, பெரிதாக இருந்தாலும் உயிருடன் திரும்புவதில்லை.  என்னைக் கேட்டால், சீக்கிரமாக அந்த துராத்மாவை வதம் செய்வது தான் சரி என்று சொல்வேன். இன்று சூரியன் அஸ்தமனம் ஆகு முன் இன்றைய பொழுது முடியுமுன், செயலை முடிப்போம். இந்த யுத்தத்தில் ராவணனை வதம் செய்ய நீ தீர்மானித்தபடி, உன் பிரதிக்ஞையை நிறைவேற்ற, இன்றே, இப்பொழுதே முடி.  ராஜ குமாரனான நீ கொண்ட அபிலாஷையை நிறைவேற்றிக் கொள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் லக்ஷ்மண சஞ்ஜீவனம் என்ற நூற்று இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)s

 

அத்தியாயம் 103 (510) ஐந்த்ர கேது பாதனம் (இந்திர கேது எனும் கொடியை விழச் செய்தல்)

 

லக்ஷ்மணனின் பேச்சைக் கேட்டு தெளிவு பெற்ற ராமர், தன் வில்லை கையில் எடுத்து அம்புகளை பூட்டி தயாராக ஆனார். எதிரிகளின் பராக்ரமத்தையும் நன்கு உணர்ந்து பாராட்டும் திறன் வாய்ந்தவர், ஆதலால் ராவணனுக்கு ஏற்ற கோரமான சரங்களை தன் வில்லிலிருந்து வெளிப்படச் செய்தார்.   ராக்ஷஸாதிபனோ, மற்றொரு ரதத்தில் ஏறி, காகுத்ஸனை நோக்கி ஓடி வந்தான். ஸ்வர்பானு எனும் ராகு சூரியனை நோக்கி ஓடி வருவது போல வந்தான். ரதத்தில் இருந்த தசக்ரீவன், வஜ்ரத்துக்கு சமமான தன் பாணங்களால், பயங்கரமாக ராமனை அடிக்கலானான். மழை மேகம் தன் தாரையால் பூமியில் வர்ஷிப்பது போல வர்ஷித்தான். கொழுந்து விட்டெரியும் நெருப்புக் கனல் போன்ற அலங்காரமாக தங்கத்தால் வேலைப்பாடு செய்யப் பெற்றிருந்த சரங்கள் இடைவிடாது பொழிந்த வண்ணம் இருந்தன. தன்னம்பிக்கையுடன் நிலைத்து நின்ற ராவணனை ராமர் எதிர் தாக்குதல் செய்து வீழ்த்த ஆரம்பித்தார். பூமியில் நின்று ராமரும்,  ரதத்தில் இருந்து ராவணனும் போரை கடுமையாக செய்யலானார்கள். இது சமமான யுத்தமல்ல என்று தேவ, கந்தர்வ, தானவர்கள் அபிப்பிராயம் சொன்னார்கள்.  இதைக் கேட்டு தேவேந்திரன், அவர்கள் சொல்லில் உண்மை இருப்பதையும் உணர்ந்து மாதலி என்ற தன் சாரதியை அழைத்தான்.  மாதலி | என் ரதத்தை எடுத்துக் கொண்டு சீக்கிரம் போ. ரகோத்தமனான ராமனுக்கு உதவி செய். மாதலியே இது மிகப் பெரிய உபகாரமாகும்.  தேவர்களுக்கு நன்மை தரக் கூடிய இந்த செயலை நாம் செய்தே ஆக வேண்டும். மாதலி என்ற அந்த தேவ சாரதியும், அப்படியே ஆகட்டும் என்று தலை வணங்கி  உத்தரவை ஏற்றுக் கொண்டு பூமியை நோக்கிச் சென்றான். சாரத்யம்- ரதம் ஓட்டும் வேலையை, ராமனுக்காக செய்ய கிளம்பினான்.  உயர்ந்த அந்த ரதத்தை குதிரைகள் பூட்டி, அலங்காரமாக பொன்னால் சித்ர வேலைப்பாடுகள் செய்யப் பெற்றதும்,  பல நூற்றுக் கணக்கான மணிகள் பூட்டப் பட்டதுமான ரதத்தை, இளம் சூரியன் போன்ற பிரகாசமும், வைமூடுரியங்களால் இழைக்கப் பெற்றதுமான  ரதத்தை, பொன் மயமான ஆசனங்களுடன், வெண் மேகம் போன்று விளங்கிய ரதத்தை, தங்கத்தாலான ஜாலங்கள் (ஜன்னல், கம்பிகள்) சாளரங்கள், வெள்ளியிலான தண்டம் அதன் உச்சியில் த்வஜம் என ஸ்ரீமானான, தேவ ராஜனின் உயர்ந்த ரதம் தயாராகியது.  இந்திரனின் உத்தரவுப்படி, மாதலி அந்த ரதத்தை எடுத்துக் கொண்டு தேவலோகத்திலிருந்து இறங்கி, காகுத்ஸனை நோக்கி பயணம் செய்யலானான்.  காகுத்ஸனை நெருங்கி விட்டான். கையில் ரதக் கயிறுகளுடன் ரதத்தில் நின்றபடியே ராமனைப் பார்த்து வேண்டினான். சஹஸ்ராக்ஷனின் சாரதியான மாதலி, கை கூப்பி வணங்கியபடி,  வேண்டுகோளை வினயத்துடன் விண்ணப்பித்தான். காகுத்ஸா, சஹஸ்ராக்ஷன் இந்த ரதத்தை அனுப்பியிருக்கிறான். உனக்கு வெற்றி உண்டாக வாழ்த்தி அனுப்பியிருக்கிறான். மகா சத்வ, நிறைந்த ஆற்றலுடையவனே, உனக்காக இது தரப்பட்டுள்ளது. ஸ்ரீமானே, நீயே சத்ருக்களை அழிக்கக் கூடியவனே. ஆனாலும் இது இந்திரனுடைய மிகப் பெரிய வில். கவசமும் அக்னி போன்றது.  சரங்களும் ஆதித்யனுக்கு இணையானது. இதன் சக்தியும் விமலமானது, கூர்மையானது. இதில் ஏறிக் கொள்.  இந்த ரதத்தில் ஏறி ராக்ஷஸனை வதம் செய்வாய்.  ராஜ குமாரனே, என்னை சாரதியாக ஏற்றுக் கொள். தானவர்களை மகேந்திரன் எதிர்த்து போர் செய்ய செல்லும் பொழுது நான் உடன் சென்று பழக்கப் பட்டவன். என்று சொல்லியபடி வணங்கி, ரதத்தை சுற்றிக் கொண்டு வந்து நிறுத்தினான்.  உலகத்தையே தன் லக்ஷ்மீகரமான தேஜஸால் பிரகாசிக்க செய்யக் கூடியவரான ராமர் மாதலியின் வார்த்தையை மதித்து, ரதத்தில் ஏறினார்.  இதன் பின் நடந்த யுத்தம் அத்புதமாக இருந்தது. இருவருக்கும் இடையில் சமமாக, உடலை புல்லரிக்கச் செய்வதாக இருந்தது. ராமருக்கும், ராவணனுக்கும் இடையில், யுத்தம் நடந்தது. ராக்ஷஸனான ராவணனுக்கும், ஆற்றல் மிகுந்த ராமனுக்கும் இடையில் நடந்த போர். காந்தர்வாஸ்திரத்தை அதே போல காந்தர்வம் கொண்டும், தெய்வீகமான அஸ்திரத்தை தெய்வீகம் கொண்டும் ராக்ஷஸ ராஜனின் ஒவ்வொரு அஸ்திரத்தையும் ராகவன் முறியடித்தான்.  பயங்கரமான அஸ்திரங்களை ஆத்திரத்துடன் ராவண ராக்ஷஸனும், இடைவிடாது பிரயோகிக்கலானான். மகா விஷம் பொருந்திய பாம்புகளாக மாறி, ராவணன் கை வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் ராமனைத் தாக்கின. தங்கள் வாயிலிருந்து நெருப்பை உமிழும், நெருப்புத் துண்டங்களாக அவை வெளி  வந்தன. வாயை பிளந்து கொண்டு, பயங்கரமாக ராமனை விழுங்குவது போல ராமனை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தன. வாசுகி போன்ற கூர்மையான நாக்கும், விஷம் நிறைந்ததுமான சரங்கள், திசைகளை நிரப்பிய வண்ணம், பரவி நின்றன. போரின் நடுவில், திடுமென வந்து விழுந்த பாம்புகளின் கூட்டத்தைப் பார்த்து ராகவன், காருடாஸ்திரம் என்ற உயரிய அஸ்திரத்தை பிரயோகித்தார். சர்ப்ப சத்ருக்களாக அந்த அஸ்திரங்கள் சிறகுகளால் அலங்கரிக்கப் பட்டு,  பொன் போன்ற ஒளி மிகுந்த அந்த அஸ்திரங்கள், பாம்புகளை விரட்டிச் சென்றன. சர்ப்ப ரூபத்தில் மிக வேகமாக செல்லும் ராவண சரங்களை, இவை துரத்திச் சென்று அழித்தன.  ஒவ்வொரு சரமும், சுபர்ணன் எனும் கருட ராஜனின் ரூபத்தில் துரத்தின. ராமருடைய பாணங்கள் கூர்மையானவை. தேவையான சமயத்தில், தேவையான ரூபம் எடுக்க வல்லவை. தன் அஸ்திரம் பயனற்று திரும்பியதும், ராவணன் மேலும் அதிக ஆத்திரம் அடைந்தான். செயற்கரியதை செய்யும் ராமர் பேரில் ஏராளமான பாணங்களை பிரயோகித்ததோடு, மாதலியையும் தாக்கலானான். ரதத்தின் நடுவில் இருந்த கம்பத்தை (கேதுவை) தாக்கி விழச் செய்தான். சரங்களை பின்னியது போல தொடர்ந்து வர்ஷித்து இந்திரனுடைய குதிரைகளை வசமிழக்கச் செய்தான். இந்த அரிய செயலை வியந்து பார்த்துக் கொண்டிருந்த தேவ,  கந்தர்வர்கள் கவலை கொண்டனர்..   சாரணர்களும், தானவர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், ராமர், ராவணனின் தாக்குதல்களால் கஷ்டப் படுவதைக் கண்டு, தாங்களும் வருந்தினர். விபீஷணனும், வானர வீரர்களும் வேதனையடைந்தனர். ராமசந்திரனை, ராவண ராகு பிடித்து வருத்துவதைக் கண்டு செயலிழந்து நின்றனர். பிரஜாபதியின் நக்ஷத்திரமான ரோஹிணியை, சந்திரனுக்கு பிரியமான நக்ஷத்திரத்தை, ஆக்ரமித்த புதன் கடத்திச் சென்றது போல பிரஜைகளுக்கு மிகவும் அசுபமானதும், கஷ்டம் தருவதுமான செயலை செய்தது போல இருந்தது. புகை சூழ்ந்த அலைகளால் நிரம்பி அடித்துச் செல்லும் சமுத்திரம் போல, திடுமென அலைகள் நெருப்பாக மாறியது போல மேல் எழும்பி, திவாகரனைத் தொடுவது போல ஆக்ரோஷமாக நின்றன.  சூரியனின் தேஜஸ் குறைந்து, மந்தமான ஒளியுடன் காணப்பட்டது.  உடல் தனியாக கபந்தனாக எங்கும் காணப்பட்டன.  தூம கேது அடித்து சூழ்ந்ததால், கோஸல ராஜாக்களின் சாதகமான நக்ஷத்திரம்,  இந்திரன், அக்னி, முதலான தேவதைகளின் தலைவனாக வெளிப்படையாகத் தெரிபவன், ஆகாயத்தில் விசாக நக்ஷத்திரத்தை அங்காரகன் ஆக்ரமித்தது போல, கிளம்பினான்.  இருபது புஜங்களும், பத்து தலைகளுமாக ராவணன், கையில் பிடித்த அம்புகளும், வில்லும் ஆயுதங்களூமாக எதிரில் நின்றான்.  மைனாக மலையே எதிரில் வந்து நிற்பது போல ராவணன் காட்சியளித்தான். தசக்ரீவ ராக்ஷஸனால் மேலும் மேலும் துன்புறுத்தப் பட்ட ராமர், தன் வில்லை எடுத்து அம்புகளை பூட்டக் கூட அவகாசம் இன்றி தவித்தார். சற்று யோசித்து, புருவங்களை நெரித்து, கோபத்தால் சிவந்த கண்களால் உறுத்து, கண்களாலேயே எரித்து விடுவது போல நோக்கினார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஐந்த்ர கேது பாதனம் என்ற  நூற்று   மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 104  (511)   ராவண சூல ப4ங்க3|| (ராவணனின் சூலத்தை உடைத்தல்)

 

கோபத்தால் ஜ்வலித்துக் கொண்டிருந்த ராமனுடைய முகத்தைப் பார்த்து, உலகில் எல்லா ஜீவன்களும் நடுங்கின. பூமியும் ஆட்டம் கண்டது. சிங்கமும், சார்தூலமும் நடமாடும் காடுகளைக் கொண்ட மலைகளும், அசலம், நகராதவை என்று பெயர் பெற்ற மலைகளும் ஆட்டம் கண்டன. நதிகளின் தலைவனான சமுத்திரம் வற்றியது போல ஆயிற்று. கடுமையான குரலை உடைய பறவைகள் மட்டுமே ஆகாயத்தில் சஞ்சரிக்கலாயின. ஆகாயத்தில் மேகமும் கடுமையாக காணப்பட்டது. துர்நிமித்தங்கள் கண் முன்னால் நர்த்தனமாடின. ராமர் மிகக்  கடுமையாக ஆத்திரம் அடைந்து இருப்பதையும், துர்நிமித்தங்களையும் கண்டு, உலகமே பயந்து நடுங்கியது. ராவணன் மனதிலும் பயம் தோன்றியது. விமானங்களில் ஏறி, தேவர்களும், கந்தர்வர்களும், மகோரர்களும், ரிஷிகளும் தானவ தைத்யர்களும் கருத்மான் என்று ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பறவை இனத்தாரும், உலகையே மாற்றி அமைக்கக் கூடிய அந்த யுத்தத்தை கண் கொட்டாமல் என்ன நடக்குமோ என்ற திகிலோடு காண வந்து சேர்ந்தனர். இரண்டு சூரர்கள் பல விதமான பயங்கரமான ஆயுதங்களுடன் பல பரீட்சை செய்வதை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். வந்து நின்ற அசுரர்கள், தசக்ரீவனை ஜய ஜய என்று வாழ்த்தி நின்றனர். தேவர்கள் ராமனைப் பார்த்து நீ தான் ஜயிப்பாய்,  என்று திரும்பத் திரும்ப வாழ்த்தினர்.  ராவணன், இதனிடையில் மகா கோபத்துடன் ராகவனை அடிக்க தன் சூலத்தை கையில் எடுத்துக் கொண்டான். மகா பயங்கரமான ஆயுதம் அது. வஜ்ரம் போன்றது. பெரும் ஓசையுடன் மேலே விழுந்து வீழ்த்தக் கூடியது. எதிரிகளை மீதியில்லாமல் நாசம் செய்ய வல்லது. காணவே பயங்கரமான தோற்றம் உடையது. குகைகளுடன் கூடிய மலை சிகரம் போன்று பெரியது. புகை பறக்க தீக்ஷ்ணமான நுனியை உடையது. யுகாந்தாக்னி போல கனல் பறக்கும் தன்மை உடையது. காலனே கூட நடுங்கும் வகையில் பயங்கரமான சக்தியுடையது. மிக ரௌத்ரமானது. எதிர்த்து நிற்க யாராலும் இயலாத தன்மை உடையது. எல்லா உலகையும் நடுங்கச் செய்யும் பயங்கரமான ஆயுதம். கிழித்து, உடைத்து நாசம் செய்யக் கூடிய அந்த ஆயுதத்தை. கோபத்தின் உச்சியில் இருந்த ராவணன் கையில் எடுத்துக் கொண்டான். சூலத்தின் மத்தியில் பிடித்து தூக்கினான். பல ராக்ஷஸ வீரர்கள் அவனுக்கு ஆதரவாக நாலா புறமும் சூழ்ந்து நின்றனர். பெருத்த சரீரத்துடன், துள்ளி குதித்து நின்று, பெரும் குரலில் ஓசையெழ ஜய கோஷம் செய்தான். கண்கள் ரோஷத்தால் சிவந்து, பயங்கரமான அந்த சிம்ம கர்ஜனையை கேட்டு அவன் தரப்பு வீரர்கள் மகிழ்ந்தனர். பூமியையும் அந்தரிக்ஷத்தையும், திசைகளையும் அதற்கு அப்பாலும், அவன் எழுப்பிய கோஷத்தில் நடுங்கச் செய்தான். மகா பயங்கரமான அந்த கர்ஜனையைக் கேட்டு, ஏற்கனவே பெருத்த குரலுடையவன் மேலும் உரக்கக் கத்தியதில், உலகமே பயந்து நடுங்கியது. சமுத்திரம் கலங்கியது.  சூலத்தை ஏந்தியவனாக, அட்டகாசமாக ராமனைப் பார்த்து,  கடுமையாக பேசலானான்.  ராமா | மிகுந்த ரோஷத்துடன் இந்த சூலத்தை நான் கையில் எடுத்திருக்கிறேன். உன் உதவிக்கு வந்திருக்கிற உன் சகோதரனையும் சேர்த்து, உன் உயிரைப் பறிக்க இது காத்திருக்கிறது.

 

(உன் ரோஷத்தைப் போலவே இந்த சூலமும், மூவுலகையும் நாசம் செய்யக் கூடியது. எங்கும் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை.  அதனால் இது வரை சமமான எதிரி இல்லாமல் இதை பிரயோகிக்க வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. இப்பொழுது சகோதரனுடன் சேர்த்து உன்னை அழிக்க இதை பிரயோகிக்கப் போகிறேன் என்று அர்த்தம் தொனிப்பதாக உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.)

 

யுத்த பூமியில் இறந்த என் ராக்ஷஸ படை வீரர்களுக்கு, உன்னைக் கொன்று, இப்பொழுதே உசிதமான மரியாதையை செய்தவனாக ஆவேன். நில். இப்பொழுதே உன்னைக் கொல்கிறேன். ராகவா | இந்த சூலத்தால் உன்னை அழிப்பேன் என்று சொல்லியபடி சூலத்தை வீசினான். ஆகாயத்தில் அது வரும் பொழுது எட்டு மணிகள் ஒலிக்க, பெரும் சப்தத்துடன் மின்னலின் பிரகாசம் போல, ராவணன் கையிலிருந்து விடுபட்டு வந்த சூலம் பிரகாசமாக இருந்தது. கண்ணால் காணவே கோரமாக இருந்த அந்த சூலத்தைப் பார்த்து ராகவன், தன் வில்லைத் தூக்கி நிறுத்தி, கூர்மையான பல அம்புகளை அதை தடுக்கும் விதமாக விட்டான். யுக முடிவில் அக்னியை தடுக்க, இந்திரன் ஜலத்தை மழையாக வர்ஷிப்பது போல, சரங்களை வர்ஷித்தான்.  ராமனின் வில்லிலிருந்து வெளிப்பட்ட அம்புகளை, அந்த சூலம் தகிக்கச் செய்தது. நெருப்பு விட்டில் பூச்சிகளை நாசம் செய்வது போல. அந்தரிக்ஷத்திலேயே தன் பாணங்கள் பஸ்மமாகப் போனதைக் கண்டு ராமர் கவலைப் பட்டார்.  ஆத்திரத்துடன், வாஸவன், மாதலி மூலம் கொடுத்தனுப்பியிருந்த சக்தியை எடுத்துக் கொண்டு, ராகவன், வேகமாக வீசினார். அதிலும் கட்டியிருந்த மணிகள் அசைந்து ஒலியெழுப்பின. யுக முடிவில் மின்மினி பூச்சிகள் போல, நெருப்புக் கனல் தெறிக்க, ஆகாயத்தை நிரப்பிய சக்தி ஆயுதம், ராக்ஷஸ ராஜன் பிரயோகித்த சூலத்தின் மேல் விழுந்தது. சக்தியினால் தாக்கப் பட்ட சூலம் நூறாக உடைந்து சிதறி பூமியில் இறைந்தது.  இதன் பின் பொருத்தமான பாணங்களைக் கொண்டு ராமர் குதிரைகளை அடித்து வீழ்த்தினார், வேகமாக ஓடக் கூடிய அந்த குதிரைகள், ராமனின் தீக்ஷ்ணமான, கூர்மையான பாணங்கள் பட்டு விழுந்தன. அதே சமயத்தில் ராவணன் மார்பிலும் சரங்களை இடை விடாது எய்தார். நெற்றியில் மூன்று பத்ரிகளை எய்யவும், மலர்ந்த  அசோக புஷ்பம் போல, (பெருகிய ரத்தத்தினால்), சிவந்த சரீரம் உடையவனாக ஆகி விட்டான்.  ராம பாணம் தைத்து, ரத்தம் பெருக தான் நிற்பதை நினைத்து கூட பார்க்க முடியாதவனாக ராவணன், மிகவும் வேதனை அடைந்தான். வெட்கம் பெரும் கோபமாக மாறியது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண சூல ப4ங்கோ3 என்ற  நூற்று நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

 

அத்தியாயம் 105 (512) தசக்ரீவ விசூர்ணனம் (தசக்ரீவ ராவணனை அலைக்கழித்தல்)

 

கோபம் கொண்ட காகுத்ஸனின் பாணங்களுக்கு ஈ.டு கொடுக்க முடியாமல் தவித்த ராவணன், மேலும் பல மடங்கு ஆத்திரமே அடைந்தான். கண்கள் நெருப்புத் துண்டங்களாக சிவந்தன. தன் வில்லை எடுத்துக் கொண்டு மேலும் கடுமையாக போர் புரிய ஆயத்தமானான்.  ஆயிரக் கணக்கான பாணங்களை, மேகம் மழை பொழிவது போல பொழியலானான்.  குளத்தில் நீர் நிரம்புவது போல அந்த ராவண பாணங்கள், ராகவனைச் சுற்றி நிரம்பின. இதனால் சற்றும் கலங்காமல் மகா மலை போல ராகவன் அசையாது நின்றார்.  தன்னை நோக்கி வந்த பாணங்களைத் தடுத்து நிறுத்தியபடி,  தன் கிரணங்களை திரும்ப இழுத்துக் கொள்ளும் சூரியனை போல நின்றார்.  வேகமாக பாணங்களை பிரயோகிக்கத் தெரிந்த ராவணன், ராகவனின்  மார்பை குறி வைத்து அடிக்கலானான். பல இடங்களிலும் அம்புகள் தைத்து ரத்தம் வெளிப்பட, மலர்ந்து நிற்கும் அசோக மரம் போல நின்றார். (அசோக புஷ்பம் ரத்தச் சிவப்பு).  சற்றுப் பொறுத்து காகுத்ஸனும் தன் வில்லை எடுத்துக் கொண்டான். யுக முடிவில் சூரியனைப் போல தேஜஸுடன் பதில் கொடுக்க ஆரம்பித்தார். ஒருவருக்கொருவர் சளைக்காமல் தொடர்ந்து யுத்தம் செய்தனர். கோபத்துடன் ராவணனைப் பார்த்து ராகவன் கடுமையாகச் சொன்னான். ராக்ஷஸா| என் மனைவியை ஜனஸ்தானத்திலிருந்து அறியாமையால் அபகரித்துக் கொண்டு வந்தாயே. தன்னைக் காத்துக் கொள்ள முடியாத அபலையான ஸ்த்ரீயை கடத்திக் கொண்டு வந்த செயலே உன்னை வீர்யமற்றவனாக காட்டுகிறது. நான் இல்லாத சமயம், வனத்தில் தனியாக இருந்த வைதேஹியை, திடுமென வந்து அபகரித்துக் கொண்டு வந்து, நான் சூரன் என்று மார் தட்டி பேசுகிறாய். சூரனே, உன் வீர்யத்தை ஸ்த்ரீகளிடமா காட்டுவது. நாதன் அருகில் இல்லாத சமயம், பிறன் மனைவி என்றும் யோசியாமல், இது என்ன வீரம்? கோழையின் செயல் அல்லவா? இப்படி ஒரு செயலை செய்து விட்டு நான் சூரன் என்று மார் தட்டிக் கொள்கிறாய்.  மரியாதையை மறந்தவன், வெட்கம் இல்லாதவன், சரித்திரம் எதுவும் இல்லாதவன் நீ.  உன் கர்வத்தால்,  தானே ம்ருயுவை எதிர் நோக்கி நிற்கிறாய்.  தான் சூரன் என்று சொல்லிக் கொள்கிறாய். ஒரு காலத்தில் நீ சூரனாக இருந்து , குபேரன் சகோதரனாக, பல அரிய செயல்களைச் செய்தவன் தான்.   இப்படி ஒரு தரக் குறைவான செயலை செய்து, அதன் பலனை இதோ அனுபவிக்க இருக்கிறாய்.  துர் புத்தியுடையவனே | நான் சூரன் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறாயே,  வெட்கமாக இல்லை? திருடன் போல வந்து சீதையைக் கடத்திச் சென்றாயே, அதுவே என் எதிரில் நீ சீதையைச் சீண்டியிருந்தால் உன் சகோதரன் க2ரனை காண அந்த க்ஷணமே சென்றிருப்பாய்.  என் அம்புகள் உன்னை அவனிடம் சேர்த்திருக்கும். நல்ல வேளை, என் கண்ணெதிரில் வந்து நிற்கிறாய். இதோ என் கூர்மையான பாணங்களால் உன்னை யம லோகம் அனுப்புகிறேன். உன் குண்டலங்கள் ஜொலிக்கத் தலையை அம்புகள் துண்டித்து விழச் செய்தால், மாமிசம் தின்னும் பக்ஷிகளுக்கு. நல்ல உணவாகும்.  பூமியில் விழுந்து கிடக்கும் உன் உடலை கழுகுகள் மொய்க்கட்டும். பெருகி ஓடும் ரத்தத்தைக் குடிக்கட்டும்.  உயிர் பிரிந்து சடலமாகக் கிடக்கப் போகிறாய்.  கருடன் கையில் பாம்பு போல அவஸ்தைப் படப் போகிறாய். இவ்வாறு சொல்லிக் கொண்டே, ராமன் அருகில் வந்து விட்ட ராவணனை தன் அம்புகளால் அடிக்க ஆரம்பித்தார். பலமும், வீர்யமும், மகிழ்ச்சியும் இரண்டு மடங்காகி விட்டது போல இருந்தது. எதிரியை வதம் செய்து விடுவது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற முனைந்தது போல இருந்தது. நினைத்த மாத்திரத்தில் அவர் கைக்கு அஸ்திரங்கள் வந்து சேர்ந்தன. மகிழ்ச்சி காரணமாக, அவர் கை வேகமும் கூடியது. இந்த நிமித்தங்கள் சுபமானவை என்பதால் ராமர் தனக்குள் தீர்மானித்துக் கொண்டு இன்னமும் அதிக சாகஸத்தோடு எதிரியை தாக்க ஆரம்பித்தார். ஒரு பக்கம் வானரங்களின் கற்களின் தாக்குதலும், மறுபக்கம் ராமனின் அஸ்திரங்கள் தாக்கியும் ராவணன் நிறமிழந்து முகம் வெளிற தவித்தான். அவன் மனம் வாடியது. அந்தராத்மாவின் குழப்பம் அவன் கை வேகத்திலும் தெரிந்தது. சரியாக குறி வைத்து அம்புகளை எய்ய விடாமல் தடுத்தது. கையிலிருந்து சரங்கள், வழுவி விழுந்தன. பல விதமான அஸ்திரங்களும், ம்ருத்யு சமீபித்து விட்ட நிலையில் எந்த வகையிலும் உதவுவதாக இல்லை. இதைக் கண்ட சாரதி, தன் தலைவனின் குழம்பிய நிலையைக் கண்டு, மெதுவாக யுத்த பூமியிலிருந்து ரதத்தை வெளியில் கொண்டு வந்து விட்டான். ராம பாணங்கள் தைத்து நினைவு இல்லாத நிலையில் ராவணன் களைத்தவனாக ரதத்தில் விழுந்து கிடந்தான். மிகவும் துன்புற்ற நிலையில் ராவணனைக் கண்ட சாரதியும், பௌருஷத்தை இழந்தவனாக கிடந்த ராவணனுடன் ரதத்தை ரண பூமியிலிருந்து அப்புறப்படுத்தும் விதமாக ஓட்டிச் சென்று விட்டான். வேகமாக ஓட்டிச் சென்ற சாரதி, யுத்த பூமியில் களைத்து விழுந்து விட்ட தன் எஜமானனின் உயிரைக் காக்கும் பொருட்டு வெகு தூரம் அழைத்துச சென்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் தசக்ரீவ விசூர்ணனம் என்ற நூற்று ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 106  (513)  சாரதி விஞேயம் (சாரதியின் விண்ணப்பம்)

 

காலன் பிடியில் இருந்ததாலோ என்னவோ, சாரதியின் இச்செயல் ராவணனுக்கு உவப்பாக இல்லை. கோபத்துடன் அவனைப் பார்த்து விழித்து கத்தினான். சக்தி இல்லாதவன் போலவும், வீரமற்ற கோழை போலவும், பௌருஷம் இல்லாதவன் போலவும் பயந்தவன், அல்பன் போல ஆற்றல் சற்றும் இல்லாதவன் போலவும், தேஜஸ் இல்லாதவன் போலவும், என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாயே.  என் அஸ்திரங்கள் என்னை கை விட்டு விட்டனவா? என் மாயா யுத்த தந்திரங்கள் என்னை விட்டு விலகி போய் விட்டனவா? துர்புத்தியே | என்னை அவமதித்து விட்டாயே. உன் அல்ப புத்தியால் என்னை ரண பூமியிலிருந்து விலக்கி கொண்டு வந்து மாசு படுத்தி விட்டாய். எதற்காக என் கட்டளையை எதிர் பார்க்காமல் என்னை அவமானம் செய்வது போல எதிரிகள் முன்னிலையில் ரதத்தை திருப்பி ஓட்டிக் கொண்டு வந்தாய். பண்பற்றவனே| வெகு காலமாக நான் சேர்த்து வைத்திருந்த என் மதிப்பும், பெருமையும், என் வீர்யம் பற்றிய நம்பிக்கையும் ஒரே சமயத்தில் நாசமாக்கப் பட்டன. எதிரிகளாலேயே பாராட்டப் பெற்ற வீர்யம் என் வீர்யம்.  என்னுடன் போர் புரிவதையே ஒரு இனிய அனுபவமாக மாற்றான் நினைக்கும் படி போர் புரிபவன் நான். எல்லோரும் பார்க்க, கோழை, பேடியைப் போல ரண பூமியிலிருந்து என்னை விலக்கி, ஓட்டி வந்து விட்டாயே. உன் மோகத்தால் புத்தி இல்லாமல் இந்த செயலை நீ செய்திருக்கவில்லையென்றால், என் சந்தேகம், வேறு யாரோ, உனக்கு பரிசுகள் கொடுத்து தூண்டி விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது நண்பர்கள் செய்யும் காரியம் அல்ல.  நலம் விரும்பும் பந்துக்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.  எதிரிகள் செய்யும் காரியம் தான் இது. என்னை தலை குனிய வைத்து விட்டாயே. சீக்கிரம் ரதத்தை திருப்பி ஓட்டு. என் சத்ருக்கள் நான் எங்கே என்று தேட ஆரம்பிக்கும் முன் என்னை ரண பூமியில் முன் வரிசையில் கொண்டு நிறுத்து.  என்னுடன் நீ சேர்ந்து இருந்தது உண்மையானால், என் குணங்களை நினைவில் வைத்திருப்பாயானால் சீக்கிரம் ரதத்தை ரண பூமிக்கே கொண்டு செல் என்று மிக கடுமையாக வசை மாரி பொழியவும்,  அரசனின் எண்ணத்தை தெரிந்து கொள்ளாமல், தானாக நன்மையை விரும்பிச் செய்த செயல், ராவணனுக்கு இவ்வளவு ஆத்திரத்தை கிளப்பி விடும் என்று அறியாத சாரதி, மெதுவாக சமாதானம் செய்வது போல சொன்னான். அரசனே| நான் பயப்படவில்லை. நான் மூடனும் அல்ல. சத்ருக்கள் ஆசை காட்டி என்னை தூண்டி விடவும் இல்லை. எனக்கு உங்களிடம் உள்ள அன்பு குறையவும் இல்லை. மனம் மயங்கி புத்தி பேதலித்த நிலையிலும் நான் இல்லை. தாங்கள் செய்த உயர்ந்த நற்காரியங்களை நான் மறந்து போகவும் இலலை. உங்கள் நன்மைக்காக, போரில் தோல்வியை தழுவக் கூடாதே, அதனால் உங்கள் புகழுக்கு பங்கம் வரக் கூடாதே என்ற நல்லெண்ணம் மட்டுமே என் மனதில் இருந்தது. உங்களுக்கு நன்மை என்று நினைத்து செய்தேன். பிடிக்காமல் போகும் என்று நினைக்கவே இல்லை. ராஜன், என்னை தவறாக எண்ண வேண்டாம். என் விஸ்வாசத்தில் அவ நம்பிக்கை கொள்ள வேண்டாம். உங்கள் நலம் விரும்பும் உண்மையான ஊழியன் தான் நான். அறியாமல் செய்த தவற்றை, பெரிதாக்காமல் மன்னித்து விடுங்கள். இதோ திரும்ப ரண பூமியில் சேர்க்கிறேன். கேளுங்கள். நான் ஏன் ரதத்தை திருப்பி ஓட்டி வந்தேன் என்ற காரணம் சொல்கிறேன். நதி ஜலத்தில் சமுத்திர ஜலம் பெருகி எதிர்த்து வந்தது போல யுத்த பூமியிலிருந்து ரதத்தை திருப்பி ஓட்டி வந்தேன். (சமுத்திர ஜலம் பெருகி, எதிர்த்து நதியில் பிரவகித்தது போல என்று திலகர் உரை). பெரும்  யுத்தம் செய்து தாங்கள் களைத்து இருந்தீர்கள். உங்கள் முகத்திலும் மகிழ்ச்சியோ, நிதானமோ காணப்படவில்லை. இந்த குதிரைகளும் களைத்து இருந்தன. வெய்யிலில் வாடி நிற்கும் பசு மாடுகள் போல இருந்தன. துர்நிமித்தங்களும் ஏராளமாக தெரிந்தன. நமக்கு விபரீதமான நிமித்தங்கள். அதனால் தான் அப்ரதக்ஷிணமாக ஓட்டி வந்தேன்.  தேச காலங்களை அனுசரித்து தான் நாம் நடக்க வேண்டும்.  லக்ஷணங்கள், இங்கிதங்கள், மறை முகமான சில குறிப்புகள் இவைகளையும் நாம் அவ்வப்பொழுது கண்டு நடக்கப் போவதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். தீனமாக இருப்பதையும், உடல் வருத்தத்தையும், ரதத்தில் இருப்பவனின் பலாபலத்தையும், பூமியில் பள்ளம், மேடு இவற்றையும் சமமாக இருப்பதோ, மேடும் பள்ளமுமாக நேர் பாதையின்றி இருப்பதையும், யுத்த காலத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எதிரியின் உள் நோக்கையும் ஊகித்துக் கொள்ள வேண்டும். நேராக எதிர்த்து நின்றும், சற்று விலகி நின்றும், தன்னிடத்தில் நிலைத்து நின்றும், பின்னடைந்தும் யுத்தம் செய்வது ரதத்தை ஓட்டும் சாரதிகள் கவனித்து செய்ய வேண்டிய செயல்களாகும். தங்கள் சிரம பரிகாரம் செய்து கொள்ளும் அவசியத்தாலும், குதிரைகளின் களைப்பையும் பார்த்து இதை நான் செய்தேன். கோபம் கொள்ளாமல் பொறுத்துக் கொள்ளுங்கள்.  நான் தன்னிச்சையாக இதை செய்து விட்டேன் என்று கோபம் கொள்ள வேண்டாம். எஜமான விசுவாசம் தான் என்னை இச்செயலை செய்யத் தூண்டியது. இப்பொழுது கட்டளையிடுங்கள். எதிரிகளை நாசம் செய்ய வல்ல தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உறுதியாக சொல்லுங்கள், வீரனே | நான் அப்படியே செய்கிறேன். தங்கள் மனதில் எள்ளிவும் சந்தேகமோ, மனத் தாங்கலோ இருக்கக் கூடாது. மகிழ்ச்சியோடு ஆணையிடுங்கள். ராவணனும் மன அமைதி அடைந்தவனாக சாரதியை புகழ்ந்து, மேலும் யுத்தம் செய்வதிலேயே குறியாக, சாரதியே | சீக்கிரம் என் ரதத்தை ராகவனின் எதிரில் கொண்டு போய் நிறுத்து என்றான். சத்ருக்களை வதம் செய்யாமல் ரண பூமியிலிருந்து புற முதுகு காட்டி ஓட மாட்டான், ராவணன்  என்றான்.  தன் கை ஆபரணங்களில் ஒன்றை சாரதிக்கு பரிசாக கொடுத்து சமாதானம் செய்து ராவண ராஜா, மன நிறைவுடன் புறப்பட்டான், சாரதியும் அவ்வாறே ரதத்தை திருப்பி, குதிரைகளை தட்டிக் கொடுத்து, க்ஷண நேரத்தில் ராமன் முன்னால் ரதத்தை கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சாரதி விஞேயம் என்ற நூற்று ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக