பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் பாகவதம்-மூன்றாவது ஸ்கந்தம்

ஏப்ரல் 24, 2024

|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||  

காபிலேயோபாக்யானம்  

 அத்யாயம்-1

இதைத் தான் முன் ஒரு முறை மைத்ரேயன் என்ற முனிவரும் என்னிடம் கேட்டார்.  “எதற்காக அந்த ராஜ குலத்தை சேர்ந்தவன் காட்டுக்குப் போனார் ? வசதியாகத் தானே இருந்தார் ?”

ராஜா பரீக்ஷித், “மைத்ரேய முனிவரை அவர் சந்தித்தாரா? எந்த இடத்தில்? விதுரர்  நல்ல குணவான்.  பெரியவரான மைத்ரேயனிடம் என்ன பேசினார்?” – என்றார்.  ஸ்ரீ சுகர் பதில் சொன்னார்?

சகோதரனான கௌரவ அரசன், தன் புத்திரர்கள் செய்வது அதர்மம் என்று தெரிந்தும் அவர்களை தண்டிக்காமல், சுயோதன்  தன்னையே திட்டிய பொழுதும் பேசாமல் இருந்ததும் விதுரரால் பொறுக்க முடியவில்லை. அதனால், கஜாஹ்வயம் என்ற  தீர்த்த ஸ்தானத்திற்கு சென்று விட்டார்.   தியானம், யோகம் என்று நாட்களை கழித்தார்.  புதிய நகரங்கள், புண்ய தீர்த்தங்கள், மலை ப்ரதேசங்கள், தெளிவான நீருடன் குளங்கள், நதிக் கரைகள்,  கோயில்கள் இவற்றை தரிசித்துக் கொண்டு தனியாக சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

நாடு முழுவதும் பாத யாத்திரை சென்றார்.  எந்த வசதியும் இல்லாமல், கிடைத்த இடத்தில் தங்கி, ஹரி பஜனை செய்து கொண்டு, பாரத வர்ஷம் முழுவதும் சுற்றியவர்  த்வாரகா அருகில் ஏக சக்ரம்  என்ற இடம் வந்தார்.  அங்கு தான், தன் நண்பனின் மறைவைப் பற்றி கேள்விப் பட்டார்.   பொறாமையால் மூங்கில் காடு பற்றி எரிந்ததும் கேட்டு வருத்தத்துடன் சரஸ்வதி தீரம் வந்தார்.  அங்கு முனிவர்கள் பலர் இருந்தனர். உஸனஸ், மனு, ப்ருது, ஆங்கிரஸ், ஸ்ரார்த தேவர் முதலானோர் குகைகளில் இருந்தனர்.  மேலும் பலர் பகவான் விஷ்ணு            ஸ்ரீ க்ருஷ்ணராக வந்த சமயம் அவர் பாதம் பட்ட இடங்களில் கோவில்களை கட்டியிருந்தனர்.  அவற்றைக் கண்களால் காணவே ஸ்ரீ  க்ருஷ்ண நினைவு வந்தது. 

அதன் பின் செழிப்பாக இருந்த சௌராஷ்டிரம் வந்தார். சௌவீரம், மத்ஸ்ய, குருஜாங்கலம், என்ற இடங்களை கடந்து உத்தவர் இருந்த யமுனா கரை வந்தார்.  உத்தவர், வாசுதேவர் கூடவே இருந்தவர், அமைதியானவர், ப்ருஹஸ்பதியின் முதல் மகனாக அறியப் பட்டவர்,  அவரை இறுகத் தழுவி குசலம் விசாரித்தார்.  தன் சுற்றத்தாரை பற்றி விசாரித்தார். 

புராண புருஷர்கள்,  தன் நாபியில் உதித்த ப்ரும்மா படைத்தது போல சூரசேனன் வீட்டில் அவதரித்தனர். உண்மையான காரணம் பூமிக்கு நன்மையைச் செய்ய. 

கௌரவர்களின் சிறந்த நண்பர் பாமன், சௌரி- சூர சேன வம்சத்தினன்- அவன் சகோதரிகளை தன் சொந்த புத்ரிகளைப் போல பாலித்தான்.  படைத்தலைவன், அவன் நலமா?

யது குல ப்ரத்யும்னன், சுகமாக இருக்கிறானா?   ஸ்ரீ க்ருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் பிறந்த மகன்.  

சாத்யகி, வ்ருஷ்ணி, போஜ, மற்றும் தாஸார்ஹர்களின் அதிபதி, அவனை தாமரைக் கண்ணன் ஸ்ரீ க்ருஷ்ணன் தான் அபிஷேகம் செய்து வைத்தான்

ஹரியின் மகன், சாம்பன், ரதத்தில் முன் நிற்பவன், வீரன், நலமா? இவனைப் பெற ஜாம்பவதி ஏராளமான விரதங்களைச் செய்தாள்.  அம்பிகையின் மகன் குஹனை வேண்டினாள்.

அர்ஜுனனிடம் தனுர் வித்தை, அதன் ரகஸ்யங்களைக் கற்ற யுயுதானன் நலமா? இவன் அதோக்ஷஜனான ஸ்ரீ க்ருஷ்ண பக்தன். மற்ற யாதவர்களுக்கு கிடைக்காத அனுக்ரஹம் பெற்றவன்.

இவ்வாறு மற்ற குமார்கள், நண்பர்கள், அனிருத்தன், மற்றும் பலர், இவர்களைப் பற்றியும், நடந்த யுத்தம் அதன் பின் என்ன நடந்தது என்றும் வினவினார்.

அது நாள் வரை நடந்தவைகளை அறியாத விதுரர்,  ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு, நலம் விசாரிக்கிறார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது  ஸ்கந்தத்தின்,  முதல் அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-51

 அத்யாயம்-2

விதுரரின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று உத்தவர் திகைத்தார்.  ஸ்ரீ க்ருஷ்ணரின் உடன் இருந்தவர், அவரின் ஒவ்வொரு செயலையும் கூடவே இருந்து கவனித்தவர் ஆதலால் அவருக்கு பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது.

காலம் கடந்து, நடந்த விவரங்களை அறியாத விதுரர் அவரிடம்  ஊர் மக்களின் நலம் விசாரிக்கிறார். என்ன பதில் சொல்வது?

ஐந்து வயது சிறுவன், தாய் யசோதா, உணவை கையில் வைத்துக் கொண்டு சாப்பிட அழைத்து கெஞ்சுவாள், விளையாட்டு மும்முரத்தில் அந்த குழந்தை சாப்பிட மறுக்கும் – க்ருஷ்ணனின் கூடவே இருந்த உத்தவர் அந்த காட்சியை நினைவு கூறுகிறார்.  தன் காலம் முழுவதும் அந்த க்ருஷ்ணனுடன் கழித்த நாட்கள், இந்த வயதான காலத்தில் எதை சொல்வார், எதை விடுவார்?  சற்று நேரம் பேசாமல் இருந்தார்.  வந்தவரும் சாமான்யமானவரல்ல.  துறவியாக ஊரை விட்டுச் சென்றவர் எதையும் அறியாமல் விசாரிக்கிறார்.

தன்னை சமாளித்துக் கொண்டு, கண்களில் நீர் வழிய, ஒரு விநாடியில், வைகுண்டத்திலிருந்து பூமிக்கு இறங்கியவர் போல, (ஸ்ரீ க்ருஷ்ணரின் அருகாமையில் திளைத்தவர் தன்னை விடுவித்துக் கொண்டு) கண்களைத் துடைத்துக் கொண்டு பதில் சொல்லலானார்.

உத்தவர் சொல்கிறார்:  க்ருஷ்ணன் என்ற சூரியன் அஸ்தமித்தது.  அதை மலைப் பாம்பு போல காலம் விழுங்கி விட்டது. நலம் என்று எதைச் சொல்வோம்.  செல்வத்தை அளிக்கும் தேவியே விலகி விட்ட நிலையில், வீடுகளில் மீதமிருப்பது என்னவாக இருக்கும்?  உலகம் தன் வளமையை இழந்தது. கூட்டமாக இருந்த யாதவர்களும் போனார்கள். மீதி இருந்தவர்கள் ஹரியை உணரவேயில்லை. குளத்து  மீன்கள் விண் மீன்களை அறியாதது போல. 

அவரைச் சுற்றி பலவிதமாக இருந்தார்கள்.  கண்ணசைவில் புரிந்து கொள்ளக் கூடியவர்கள்,   தன்னம்பிக்கை மிக்கவர்கள், தன்னலமே உருவானவர்கள், தன் சுகமே பிரதானமாக இருந்தவர்கள்,  மற்றும் தூய்மையானவர்கள்,  என்ற அனைத்து விதமான ஜீவன்களையும் ரிஷபம் பாரத்தை தூக்குவது போல தன் தோளில் சுமந்தவன். 

தேவ மாயையால் என்றோ, அசத்தான – நன்மையில்லாத ஒன்றை நம்பியதாலோ, புத்தி தடுமாறுகிறது. அவர் சொல்லை மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. தன்னுள் தானே நிறைந்த ஹரி அவன்.

திருப்தியில்லாத அரசர்கள், தவமோ தகுதியோ இல்லாத அரசர்கள் அவர்களுக்கும் தன் உருவைக் காட்டினான். உலகுக்கே கண்ணானவன்.  அலங்காரத்துக்கே அலங்காரமானவன்,  அளவற்ற ஐஸ்வர்யம் உள்ளவன், தன் யோக மாயையால் தன்னை மறைத்துக் கொண்டு, மனித உலகத்துக்கு ஏற்ற வகையில் தன் உருவத்தை அமைத்துக் கொண்டான்.

தர்மபுத்திரனின் ராஜ சூய யாகத்தில், முதல் மரியாதையை பெற்ற சமயம் (பூர்ண கும்பம் கொடுத்து ), பார்த்த வேத விற்பன்னர்கள், அறிஞர்கள்,  நன்று என்றனர். புகழ்ந்து பேசினர். 

ராஸ லீலையில் அன்பையே கண்ட வ்ரஜ ஸ்த்ரீகள், தங்கள் வேலைகளை விட்டு, அவரது கண் பார்வையால் அழைக்கப் பட்டவர்களாக பின் தொடரவில்லையா?

சாந்த ஸ்வரூபி. மற்றவர்களின் வேண்டுகோளுக்காக இரங்கி ப்ரும்மாவை, அக்னியை தண்டித்தான். எனக்கு என்ன வருத்தம் என்றால், வசுதேவர் வீட்டில் பிறந்தவன் , வ்ரஜ தேசத்தில் வளர நேரிட்டது.  தன் பகவத் ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு பயந்தவன் போல தானே தன்னை அந்த நகரத்திலிருந்து வெளியேற்றிக் கொண்டான்.  அனந்த வீர்யன் அவன். அவனுக்கா பயம்?

அவன் தாய் தந்தையரை வணங்கி “அம்மா, அப்பா,  கம்ஸன் பொல்லாதவன்.  நான் வெளியேறியது அவனுக்குத் தெரிய வேண்டாம்” என்றானாம். இதைக் கேட்டு என் மனம் சொல்லொனா துக்கத்தை அடைந்தது.  இவனை அறிந்தவர்கள் மறக்கவா முடியும். புருவ அசைவினால் பூமியின் பாரத்தை குறைத்தவன்.

ராஜசூய யாகத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவனுக்கு விரோதிகளே இல்லை எனும் படி அனைவரும் நல்ல கதியை அடைந்தனர்.  யோகிகள் அவனை கொண்டாடினர். யாரால் இந்த பிரிவை பொறுக்க முடியும்?

யுத்த களத்தில் அவனைக் கண்டவர்கள் புண்யம் செய்தவர்கள்.   பார்த்தனின் அஸ்திரங்களால் பரிசுத்தமாக்கப் பட்டு அவனடி சேர்ந்தனர்.  தானே, தனக்கு உவமையில்லாதவன், மூன்று செயல்களையும் தானே முன்னின்று செய்பவன். அவனுடைய  ராஜ்ய லக்ஷ்மியால்  எல்லா நன்மைகளும் அவனை தேடி வந்தன, சிற்றரசர்கள் தங்கள் கிரீடங்களை அவன் காலடியில் சமர்ப்பித்து வணங்கினர்.

எங்களை பதவியில் அமர்த்தச் சொல்லி உக்ரசேனரிடம் ஆணையிட்டான். அவனுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததே எங்கள் பாக்கியம்.

அந்த பூதனா, கொல்லத்தானே நினைத்தாள். மடியில் விஷத்தை வைத்துக் கொண்டு பாலூட்ட வந்தாள்.அவளும் நல்ல கதியடைந்தாள்.  தயாளுவான கண்ணனின் கருணையால்.

போஜராஜாவின் சிறையில் வசுதேவர் தேவகிக்குப் பிறந்தான். தேவகியின் வேண்டுதலுக்கு இரங்கி அவர்கள் மகனாக வந்தான். கம்சனால் ஆபத்து வரும் என்று வசுதேவர் பயந்தார்.  அதனால் பதினோரு வயது வரை தன் பராக்ரமத்தை மறைத்துக் கொண்டு கோகுலத்தில் வாழ்ந்தான்.  கோபாலர்களோடு, யமுனைக் கரையில், உப வனங்களில் பறவைகளின் கூச்சலுக்கு இடையில் மகிழ்ந்து திரிந்தான். இள வயது பெண்களைச் சீண்டி விளையாடினான். கோகுலத்தில் செல்வம் நிறைந்தது. கோபால சிறுவர்கள் பின் தொடர வேணுவை இசைத்தபடி முன் செல்வான்.

எவ்வளவு பேரை அந்த போஜ ராஜன் அனுப்பினான். அவர்களை விளையாட்டாக பந்தாடினான்.  விஷ ஜலத்தை குடித்த தன் நண்பர்களை காக்க காளியன் என்ற பாம்பு அரசன், அவனை விரட்டி, கோகுலத்துக்கு நல்ல குடி நீர் கிடைக்கச் செய்தான்.  நந்த கோபனின் ராஜ்யத்தை செல்வம் கொழிக்கும் படி செய்தான். யாகங்கள் செய்வித்தான். சிறந்த வேத விற்பன்னர்கள் நிறைந்தனர்.

இந்திரன் யாகத்தை நிறுத்தியதால் கோபம் கொண்ட இந்திரன் அடாது வர்ஷித்தான்.  தன் லீலையால் மலையையே குடையாக்கி கோகுலத்தை காத்தான்.  சரத் காலம் வந்தால் போதும். கோகுலம் கொண்டாடும். பாட்டும், ஆட்டமும், கோகுலத்து சிறுவர்களும் சிறுமிகளும்  சந்தோஷமாக அவனுடன் கழித்தனர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த   காபிலேயோபாக்யானம் என்ற மூன்றாவது  ஸ்கந்தத்தின், இரண்டாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-34

அத்யாயம்-3

உத்தவர் தொடர்ந்தார்:  அவர் எண்ணம் முழுவதும் ஸ்ரீ க்ருஷ்ணரிடமே இருந்ததால் நடந்த நிகழ்ச்சிகளையே தொடர்ந்து கூறலானார்.

அதன் பின் தந்தை இருந்த ஊருக்கே வந்து சேர்ந்தான். பலதேவனுடன்  சேர்ந்து  எதிரிகளை அழித்து, பூமியின் பாரமாக இருந்தவனைக் கொன்றார். சாந்தீபினி குருகுலத்தில் கல்வி கற்ற பின் அவர் விஸ்தாரமாக சொன்ன கதையைச் கேட்டு அவர் புத்திரனை மீட்டுக் கொடுத்தார்.

பீஷ்மக கன்யா (ருக்மிணி) அழைத்தாள் என்று ஸ்ரீ ரூபமான அவளை, காந்தர்வ விதியால் ,  கவர்ந்தான். தன் பங்கு என்று கருடன் செய்தது போல

காளைகளை அடக்கி நக்னஜித் என்ற பெண்னை மணந்தான். அதனால் கோபமடைந்த சிலர் எதிர்த்தனர். அவர்களை போரிட்டு வென்றான். 

தன் மகனை யாரோ கவர்ந்து செல்கின்றனர் என்று தரித்ரி -பூதேவி அலறினாள். தன் சுனாப என்ற சக்கரத்தால் பூமியை துளைத்து அவள் மகனை காத்தான். பின் அவள் மகளை மணந்தான்.

இவ்வாறு தனக்கு அனுரூபமான  எட்டு பெண்களை மணந்தான். ஒவ்வொருவரிடமும் தன்னைப் போலவே பத்து பத்து குமாரர்களைப் பெற்றான்.

போரிட வந்த கால, மாகத சால்வலி போன்றவர்களை வென்று, தன் மக்களின் வீரத்தை வெளிப்படுத்தினான். சம்பரன், த்விவிதன், பாணன், முரன், பல்வலன், மற்றும் தந்த வக்த்ரன், இவர்களையும் வென்றான்.

ஒரே குடும்பத்தின் இரு சகோதரர்களின் புத்திரர்கள் போரிட முனைந்த பொழுது இரு பக்கமும் அரசர்கள் சேர்ந்து கொண்டனர்.  குருக்ஷேத்ரம் என்ற யுத்த களம் – அவர்கள் அதில் தன் படைகளோடு வந்து வீழ்ந்தனர்.

கர்ணன், து:ஸாஸனன், சௌபலீ இவர்களின் தவறான வழிகாட்டலால், மதியிழந்த சுயோதனன் தன் ராஜ்யம், உயிர் இரண்டையும் இழந்து பூமியில் கால் (துடை) உடைந்து விழுந்து கிடப்பதைப் பார்த்து வருந்தினான். 

 த்ரோண, பீஷ்ம, அர்ஜுன, பீம என்ற வீரர்கள், மற்றும் என்னைச் சேர்ந்த யாதவ சேனை என்று அனைவரும் சேர்ந்து பதினெட்டு அக்ஷௌஹிணி  வீரர்கள்.

இந்த சகோதர்கள், மதுவினால் மதி மயங்கி, கண் சிவக்க,  தங்களுக்குள் விவாதித்தனர்.  பூ பாரத்தைக் குறைக்க இதை விட நல்ல வழி இல்லை என்று நினைத்தோ, அனுமதித்தான்.

உத்தரை-அபிமன்யுவின் மகன் கர்பத்தில் இருக்கும் பொழுது த்ரோண புத்ரனின் அஸ்திரத்தால் அடிக்கப் பட்டான். பகவான் தான் காப்பாற்றினார்.

தர்மபுத்திரன் மூன்று அஸ்வ மேத யாகங்கள் செய்தான்.  ஸ்ரீ க்ருஷ்ணரின் அறிவுரைகளின் படி ராஜ்யத்தை ஆண்டான். விஸ்வாத்மாவான பகவானும் உலகில் வேத சாஸ்திரங்களின் வழியில் வாழ்ந்து த்வாரவதி என்ற தன் நகரில், ஞான மார்கத்தை கை கொண்டான்.  மென்மையாக அன்புடன் பேசி, தூய்மையான தன் நடத்தையாலும், உடன் இருந்த ஸ்ரீ கடாக்ஷத்தாலும், இந்த உலகத்தையும் எங்களையும் சந்தோஷப் படுத்திக் கொண்டு, தானும் சுற்றத்தாரோடு சந்தோஷமாக இருந்தான். பல வருஷங்கள் இப்படிச் சென்றன. அவனும் இல்வாழ்க்கையில் நாட்டம் குறைந்து யோக மார்கத்தை அனுசரிக்கலானான்.  யோகேஸ்வரன் என்ற பெயர் பெற்றான்.

ஊருக்குள், ஒரு சமயம் விளையாட்டாக போஜ குமாரர்கள் ஏதோ செய்யப் போக, ஒரு முனிவரின் சாபத்துக்கு ஆளாகினர்.  அதன் பின் வ்ருஷ்ணி, போஜ, அந்தகன் முதலானோர், ப்ரபாஸ நகரம் வந்தனர். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, பொன், வெள்ளி, வஸ்திரங்கள், படுக்கை போன்ற பல விதமான தானங்களைச் செய்து,  அன்னதானம்  பகவதர்ப்பணம் என்றும் செய்த பின், பூமியில் விழுந்து வணங்கினர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த    காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், மூன்றாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-28 

அத்யாயம்-4

உத்தவர் சொன்னார்: ஏகமாக உண்டும், வாருணி என்ற மதுவை குடித்தும், மனம் தடுமாறி, ஒருவருக்கொருவர், தூஷித்துக் கொண்டு, உயிரை விட்டனர்.  மதுவை குடித்து பாதிக்கப் பட்டு மூங்கில் வனம் அழிவது போல ஒட்டு மொத்தமாக அழிந்தனர். 

பகவான் இதையறிந்து, சரஸ்வதி நதிக் கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டார்.  என்னைப்  பார்த்து நம் குலத்தைக் காக்க, நீ பதரிக்குப் போ என்று ஆணையிட்டார்.  ஆனாலும் அவருடைய எண்ணம் என்ன என்பது தெரிந்து,  அவர் இருப்பிடம் சென்றேன். மரத்தடியில்  லக்ஷ்மீ பதியான ஸ்ரீ க்ருஷ்ணன்,

 அமைதியாக  அருணன் போல (இளம் சிவப்பாக) கண்களுடன்,  நான்கு கைகளுடன், ஸ்யாமள வண்ணன், பீதாம்பரத்துடன், தூய்மையே உருவாக அமர்ந்திருந்தான்.  இடது மடியில் வலது கையை ஊன்றி, அஸ்வத்த மரத்தடியில் இருந்தார்.

அந்த சமயம், மஹா பாகவதரான  வியாசர்,  எதேச்சையாக வந்தார்.  வணங்கி நின்ற அந்த மகரிஷியிடம் பிரியமாக, மென் முருவலோடு சொன்னதை நானும் கேட்டேன்.

பகவான் சொன்னார்:  உன் மனதில் ஓடும் விருப்பத்தை புரிந்து கொண்டேன். யாருக்கும் கிடைக்காத அதை தருகிறேன்.  முன் ஒரு சமயம் வசுக்களின் விஸ்வஸ்ருஜ் என்ற யாகத்தில், நீ வசுவை விரும்பினாய்.  ஸாதோ!  என் அனுக்ரஹம் பெற்று,  இங்கு இரு, நான் உலகை துறப்பதை பார்.

முன்பு நான் ப்ரும்மாவுக்குச் சொன்னேன்.  ஆரம்பத்தில் என் நாபியில் அவர் தோன்றிய சமயம் உலக ஸ்ருஷ்டி ஆரம்பிக்க எண்ணியிருந்த நான், ஞான உபதேசம் செய்தேன்.  பெரியவர்கள் அதை பாகவதம் என்றனர். என் சரித்திரம், மகிமைகள் அடங்கிய செய்திகள். 

எனக்கு மெய் சிலிர்த்தது.  பரம புருஷனின் அனுக்ரஹம், ஒவ்வொரு க்ஷணமும் எனக்கு கிடைத்தது என் பாக்கியம். கண்களில் நீர் வழிய அவரிடம் கை கூப்பி, வினவினேன்.  ஹே! பகவன்! உன் பாத கமலங்களை சரணம் அடைந்தவர்களுக்கு எது தான் துர்லபம்? நான்கு தேவைகளும் தானே வந்து சேரும். (தர்மம்,அர்த்த (பொருள்), காமம், மோக்ஷம்)  இருந்தாலும் எனக்கு அவைத் தேவையில்லை. உன் காலடியில் கிடப்பதையே பெரிதாக நினைக்கிறேன் என்றேன்.

உலகில் இருந்து செய்ய வேண்டியது எதுவும் இல்லை,  என்றும் இருப்பவன் புதிதாக பிறப்பு என்பதும் உனக்கு இல்லை. அடைய முடியாத பொருள் என்பதோ, பெரும் விரோதி, அவனிடம் தப்பித்து ஓட வேண்டும் என்ற அவசியமோ இல்லை. ஏனெனில் நீயே காலாத்மா.  மற்றவர்களுக்கு சரணமாக இருப்பவன் நீ. 

மந்தராலோசனைகளில் என்னை அழைத்து விசாரிப்பாய்.  உனக்குத் தெரியாததையா நான் சொல்வேன்.  அறியாதவன் போல என்னை விசாரித்தாய், ப்ரபோ!  தேவா! அதை நினைத்தால் என் மனம் பெருமிதம் அடைகிறது. பரம ஞானம், யாருமறியாத உன் சரித்திரம் , அதை நீயே சொல்லிக் கேட்டோம், பகவானே! அதைப் பெற தகுதியுடையவனா நான்?  இந்த சம்சாரக் கடலை எப்படித் தாண்டுவோம், அதைச் சொல்லு.

ஆவேசத்துடன் நான் இப்படிச் சொன்னதைக் கேட்ட பகவான், ஆனையிடுவது போல சொன்னார்.  நான் மனப் பூர்வமாக ஆராதித்த தேவன், ஆத்ம தத்வம் என்பதை போதித்தான்.  அவரை வணங்கி, விடை பெற்று இங்கு வந்து சேர்ந்தேன்.  இதோ, பதரி செல்ல இருக்கிறேன். நண்பரே,  அங்கு பகவான் இருக்கிறார். நரனாக, பகவானாக, ரிஷியாக,  பலவிதமாக உலக நன்மைக்காக தவம் செய்கிறான். 

ஸ்ரீசுகர் சொன்னார்:  உத்தவர் வாயால் கேட்டு, மிக வருந்தினார் விதுரர்.   உலகியல் அறிந்தவர்,  தன்னை அடக்கிக் கொண்டு பாகவதரான, உத்தவருக்கு விடை கொடுத்தார்.  யோகேஸ்வரரே!  ஈஸ்வரன் உமக்கு அளித்த அந்த ரகசியமான ஆத்ம தத்வம் என்பதை எனக்கும் சொல்லுங்கள். நானும் விஷ்ணுவின் பக்தனே.  நமக்குள் சொல்லிக் கொள்வதில் தவறில்லை.

விதுரரே! உங்களுக்குத் தெரியாததா? பகவான் உலகைத் துறக்கும் முன் சொன்ன செய்திகளை அவசியம் சொல்கிறேன்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இருவரும் பகவானின் கதைகளை பேசிய படியே இரவைக் கழித்தனர். 

ராஜா பரீக்ஷித் கேட்டான் – வ்ருஷ்ணி, போஜ வீரர்கள், அதி ரதர்கள் அனைவரும் போன பின்னும் உத்தவர் எப்படி உயிருடன் இருந்தார் ? பகவானே தானே உலகைத் துறந்ததாகச் சொன்னீர்கள்.

முனிவரின் சாபம் என்ற ஒரு காரணத்தால் யாதவ குலம் அழியும் என்று ஆன பொழுது, அவர்  காலனை வேண்டினார். நான் உலகை துறந்து போனாலும்  நான் உபதேசம் செய்த என் ஞானம் அழியக் கூடாது. உத்தவன் அறிவான். அவன் தான் என்னை முழுதும் அறிந்தவன். அவனை இந்த சாபம் அண்டாமலிருக்கட்டும் எனக்கும் உத்தவருக்கும் அணுவும் வித்தியாசமில்லை. குணமோ, திறமையோ என்னை விட எந்த விதத்திலும் குறைந்தவனில்லை.  அதனால் நான் இல்லாத இந்த உலகை பாதுகாக்க இங்கு இருக்கட்டும் என்றார்.

மூவுலக குரு  சொன்னதைக் கேட்டு,  பதரி ஆசிரமம் வந்து சமாதி யோகத்தால், பகவானை ஆராதித்துக் கொண்டு இருக்கிறார் உத்தவர்.

விதுரர், “ இதுவும் அவன் விளையாட்டு –அவர் செய்த  மற்ற அரிய காரியங்களை மனதில் நினைத்த படி, தேஹ ந்யாசம், உடலை விடுவது கூட, தீரனாக இருந்தால் தான் சாத்யம். மற்ற ஜீவன்களுக்கு இது நினைத்து கூட பார்க்க முடியாது. எதற்காக இப்படி செய்தான்?  மற்றவர்களுக்கு தைரியம் வரட்டும் என்றா? “ என்று நினைத்தார். நினைக்க நினைக்க அடக்கமாட்டாமல் வாய் விட்டு அழுதார்.  காலிந்தி நதிக் கரையில் சில நாட்கள் இருந்தார்.  மைத்ரேய முனிவரை சந்தித்தார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், நான்காவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-36

அத்யாயம்5

 ‘த்யு நதி’ ஆகாயத்திலிந்து வந்த நதி கங்கை, அதன் கரையில் குரு வம்சத்து பெரியவரும், மைத்ரேய முனிவரும் ஸ்ரீ க்ருஷ்ணரின் பிரிவால் அடைந்த மன வருந்தம் குறைய, தங்களுக்குள் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

விதுரர்: தங்கள் சௌக்யத்திற்காக மக்கள் உழைக்கிறார்கள். அவர்களுக்கு சுகம் கிடைக்கிறதா? அல்லது வேறு விதமாக நலன் பெறுகிறார்களா?  அவர் அனுக்ரஹத்தால் ஜீவன்கள் வழக்கம் போல வாழ்கின்றனர். நாம் என்ன செய்வோம்? மனிதர்களின் ஹ்ருதயத்தில் வசிக்கும் பகவான்,  பக்தி செய்யும் அடியார்களுக்கு ஞானத்தைத் தருகிறான்.  அவருடைய அவதார கதைகளைச் சொல்லும் பாகவத புராணம் பற்றி சொல்லுங்கள். உலகை ஸ்ருஷ்டித்து, காத்து பின் கலைத்து பின் எதற்காக  திரும்ப ஏன்  எந்த பொறுப்பும், செயலும் இன்றி, தற்சமயம்   தூங்குகிறான்?  யோகாதீஸ்வரன், அனைத்து ஜீவன்களிலும் அம்சமாக இருந்தவன், யாருமறியாத குகையில் தனித்து இருப்பானேன்?  விளையாட்டாக, வேதம் அறிந்த  ப்ராம்மணர்கள், பசுக்கள், தேவலோக வாசிகள் என்று அனைவரின் க்ஷேமமே – நலனே தன் அவதாரத்தின்  காரணம் என்றான். எவ்வளவு கேட்டாலும் அலுக்காத அவன் சரித்திரம்,

லோக நாதன் அவன்.  . லோக பாலர்களையும்,  வித விதமான தத்வங்களை பயன் படுத்தி பூ லோகம் மட்டுமல்ல சகல லோகங்களையும் ஒவ்வொன்றையும் தனித்தன்மையுடனும், உருவத்துடனும் அமைத்தான். பிரஜைகளுக்கு ,  தன் ரூபம், செயல், பெயர்கள் என்பதையும் அறிவித்தான்.  நாராயணன் தான் விஸ்வஸ்ருட்- விஸ்வத்தை ஸ்ருஷ்டித்தவன், தன் கர்பத்தில் தாங்குபவன் என்பதை சற்று விவரமாக சொல்லுங்கள், முனிவரே. நீங்கள் வியாசரிடமிருந்து நிறைய கேட்டிருக்கிறீர்கள்.  ஏதேதோ விரதங்கள்,  அவரிடம் தெரிந்து கொண்டோம். எதிலும் மனம் ஈடுபடவில்லை. செய்தாலும் திருப்தியில்லை. ஸ்ரீ க்ருஷ்ண கதை தான் பிடிக்கிறது.  தீர்த்தங்கள், யாகங்கள், பெரிய அறிவாளிகளால் தொழப்படும் துதிகள் இவை க்ருஷ்ண கானத்திற்கு முன் பயனற்றவையே. இது தான், காதின் வழி மனதை சென்றடைந்து, வீடு வாசல்களில் ஈடுபாட்டைக் குறைக்கிறது.  உன் சகா வியாசர், பாரதமும் தான் சொன்னார். அரசர்களின் சராசரி மனித குணங்கள், கேளிக்கைகளை வர்ணித்து என்ன பலன்? ஹரி கதைக்கு ஈடு ஆகுமா?  சிரத்தையுடன் கேட்பவர்களின் மற்ற உலகியலில் நாட்டம் குறைகிறது. நிவ்ருத்தி மார்கம் (ஞானமார்கம்-) , சகல துக்கங்களையும் உடனே அழிக்கும் சக்தி வாய்ந்தது. ஹரியின் சரித்திரத்தில் நாட்டமில்லாமல்  பலவிதமாக யோசித்தும், திரும்பத் திரும்ப ஏதோ புதிதாக கண்டு கொள்வதாகச் சொல்வதும் பயனற்றதே. இமைக்காமல் பார்க்கும் தேவர்களின் ஆயுளும் வீணே. ஸ்ம்ருதிகளை நம்பாமல் வெறும் வாதத்திற்காக  படிப்பதும் வீணே.

அதனால்,   ஹரியின் கதையே கதைகளின் சாரம்.  பொறுக்கி எடுத்த புஷ்பங்கள் போல எங்கள் நன்மைக்காக  அவரது கீர்த்தியையே சொல்லுங்கள். உலகை படைத்தும், காத்தும் பின் கலைப்பதுமான தன் செயலுக்காகவே அவதாரங்கள் எடுத்து, மனிதன் போலவே வாழ்ந்து காட்டியதை சொல்லுங்கள்.

 அதன் படியே முனிவரும் மனிதர்களின் நலனுக்காக சொல்ல ஆரம்பித்தார். மைத்ரேய முனிவர் “சாதோ! சரியாக கேட்டாய்.  உலக நன்மைக்காக அதோக்ஷஜன் எனும் ஸ்ரீ க்ருஷ்ணனின் கதையை விவரித்தால் நமக்கும் நல்லதே. க்ஷத்ரியனாக வழ்ந்தாலும், பாதராயன – பராசரரின் மகன் அல்லவா?  நீ இவ்வாறு நினப்பது அதிசயமல்ல.  முழு மனதோடு, ஈஸ்வரனான ஹரியை வணங்குகிறாய்.  மாண்டவ்ய முனிவரின் சாபத்தால், பிரஜைகளை சம்ஹாரம் செய்யும் யமன், பூமியில் பிறக்க வேண்டியிருந்தது.  சத்யவதியின் மகனாக பிறந்தார்.  அதன் பின் பாரத கதை. பணிப் பேண்ணிடம் பிறந்தவன் நீ. ( விதுரர் பராசர முனிவருக்கும்  அரண்மனை பணிப் பெண்ணிற்கும் மகனாக மூன்றாவது குழந்தையாக பிறந்ததாக பாரத கதை.) அரண்மனையில் அனைவருக்கும் பிரியமானவனாக ஆனாய்.  பாகவதன் ஆனதால் உனக்கு உபதேசம் செய்கிறேன். தவிர, பகவானே, கிளம்பும் முன் என்னிடம் சொல்லியிருக்கிறார். உனக்கு உபதேசம் செய்ய சொல்லி. ஆகவே, நீ விரும்பிய படியே, பகவானின் சரித்திரத்தை  சொல்கிறேன். “ என்றார்.

பகவான் ஒருவனே தன்னில் தானே லயித்து இருப்பவன்.

இதன் பின் ஸ்ருஷ்டி பற்றிய விவரங்களை சொல்கிறார். (முன் அத்யாயங்களில் சொன்ன மஹத் தத்வம் முதலானவை)

தேவர்கள் துதி செய்கின்றனர்:

சரணமடைந்தவர்களின் தாபத்தை குறைக்கும் குடை போன்ற உன் பாதக் கமலங்களை வணங்குகிறோம்.  அந்த பாதங்களை யதிகள் வணங்கி தங்கள் சம்சார துக்கத்தை விட்டு விலகி உன் பதத்தை அடைகின்றனர்.

ப்ரும்மா, ஈசன்,  போன்றோரும் எந்த பாதத்தை ஆஸ்ரயித்து, மேன்மையடைந்தனரோ, அதே போல சகல வித்யைகளுடன் கூடிய  உன் பாதத்தின் சாயையில் நாங்களும் சரணடைகிறோம்.   வேதங்களையும், அதன் சாகைகளையும் ரிஷிகள், உன்னிடமிருந்து கற்றார்கள்.  சிரத்தையுடனும், பக்தியுடனும் கேட்டு, தங்கள் ஹ்ருதயத்தில் நிலை நிறுத்திக் கொண்டார்கள்.  வைராக்ய பலத்தாலும், தங்கள் ஞானத்தாலும் வளர்த்துக் கொண்டார்கள். அவர்கள் தீரர்கள் எனப்படுகின்றனர்.  அதனால் நாங்களும் உன் பாத கமலங்களைச் சரணடைகிறோம்.

உலகில் ஸ்ருஷ்டி,ஸ்திதி, சம்ஹாரம் என்ற செயல்களை திறம்பட செய்வதற்காக அவதாரம் செய்தாய். நீ உன்னை சரணடைந்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் அருளுவாய் என்று அறிவோம். சரீரமே தான்,   தான் என்றும், தன் சுற்றத்தார் என்றும் நம்பும் உலக மக்களிடம் இருந்து நாங்கள் தொலைவில் இருந்தாலும், பகவானே, நீயே எங்களுக்கு சரணம்.

எங்களை உன் ஸ்ருஷ்டி காரியத்தில் சில பொறுப்புகளை கொடுத்து பங்கேற்கச்  சொல்கிறாய்.  ஆணையை சிரமேற்கொள்கிறோம்.   பிறவியற்றவனே! (யாகங்களில்) ஹவிஸ் பெறுவதையும், பதிலுக்கு நாங்களும் உலக ஜீவன்களுக்கு  உணவு தருவதையும் (மழை பொழிதலும், தாவரங்கள் வளருவதுமான செயல்கள்) செய்கிறோம். தேவர்களான எங்களுக்கும் ஆதி தேவன் நீயே.  எங்கள் கண்களில் இருந்து எங்கள் கடமைகளை சரி வரச் செய்ய அனுக்ரஹம் செய்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், ஐந்தாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-50

அத்யாயம்6

மைத்ரேய ரிஷி சொன்னார்:  இவ்வாறு தன் சக்திகளை அவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு,லோக தந்திரங்களை பற்றியும் சொல்லி அவர்கள்  செய்ய வேண்டிய செயல்களையும் சொன்னார்.

“கால’ என்ற தேவியை  மிகுந்த செயல் திறனுடைய முப்பத்து மூன்று தத்வங்களும் கூட்டமாக உடனே சென்றடைந்தன.  தானும் சேஷ்டா என்ற ரூபத்தில் அந்த கணத்துள் நிழைந்து கொண்டார்.  அது வரை செயலற்றிருந்த அந்த கணம்-கூட்டம் – அனைத்து தத்வங்களும் – உயிர் பெற்றன.  அந்த முப்பத்து தத்வங்களும், பரம புருஷனான பகவானின் சக்தியில் ஒரு அம்ச செயல்திறனை தாங்களும் பெற்றன.

பரபுருஷனாலேயே ஆணையிடப் பெற்ற அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து விஸ்வ ஸ்ருஷ்டியை செய்ய அந்த  தத்வங்களின் கணம்,  பலவிதமாக வெளிப்பட்டு சராசரங்களை உருவாக்க வந்து சேர்ந்தன. (தனியாக இருந்தால் ஒரு திறன், அதுவே மற்ற தத்வங்களோடு சேரும் பொழுது மற்றொரு திறன் என்பதாக)

ஹிரண்மயமான பகவான், ஆயிரம் வருடங்கள், அண்டகோசத்தில் வசித்தார். அண்டம் நீரில் மிதந்து கொண்டிருந்தது.  அவர் தன்னுள் உலகை படைக்க தேவையான சக்தியை, கருவாக வைத்துக் கொண்டிருந்தார். தேவ , மற்றும் தன் சக்திகள் அனைத்தையும் உள்ளடக்கி, தன்னைத் தானே ஒருமுறை, பத்து முறை, மூன்றாக என்று பிரித்தார். இது தான் அனைத்து உயிரினங்களுக்கும் ஆத்மாவாக பரமாத்மா தன் அம்சத்தைக் கொடுத்த நிகழ்ச்சி. எனவே இதுவே முதல் அவதாரம்.  இது தான் அடிப்படை அல்லது ஆரம்பம் என்று கருதப் படுகிறது.

ஆத்மாவின் செயல்திறம், தேவ அல்லது மாறாத இயற்கையின் செயல்திறம், உயிரினங்களின் செயல் திறம் என்ற மூன்று முறை. விராட் ப்ராணன் பத்து முறை,  ஹ்ருதயம் ஒருமுறை- தன்னையே பலவாக ஆக்கிக் கொண்டது. விஸ்வத்தை படைக்க உதவியாக, அவைகளின் விஸ்தீர்ணம் அதிகமாகவும், பரவலாக ஆகும் பொருட்டும், தெளிவான உருவில் இருந்த கோளத்தை, அதோக்ஷஜன்(விஷ்ணு பகவான்) தன் தேஜஸால்

வெப்பமூட்டினார்.  (நீரில் மிதந்த கோளம் அச்சமயம் மற்றொரு மஹத் தத்துவமான அக்னி சேர்ந்தது. ) இந்த வெப்பத்தால் தேவர்களிடம் பல யாக சாலைகள் (பவித்திரமான அக்னி இருக்கும் இடம்)  புதிதாகத் தோன்றின.  வரிசையாக சொல்கிறேன் கேள்.

அந்த அக்னி -ஜீவன்களின்- வாயில் குடி கொண்டது. அக்னி தேவனாக,  லோக பாலனாக பொறுப்பேற்றது.  தன் அம்சத்தின் பலத்தால், வாய் பேசுதல் என்ற செயலை செய்ய, அந்த சொற்கள் மூலம் அவர் யார் என்பதை அறிவிப்பதாகவும் நியமித்தார்.  

அதன் பின் தாலு- வாயின் அடி பாகம், வெளிப்பட்டது. அதற்கு லோக பாலனாக வருணனை பகவான் நியமித்தார்.  அதன் பின்  நாக்கு என்ற உறுப்பு இணைந்தது. இதனால் ரஸம் என்பதையறிய முடிந்தது .

அஸ்வினி தேவதைகள் என்ற  இரட்டையர், பகவானின் கட்டளைப் படி,  மூக்கு என்ற அவயவத்தில் குடி புகுந்தனர்.  நுகர்தல் என்பதை அவர் அம்சத்தால் வாசனையை அறியச் செய்வது அவர்களின் செயலாயிற்று. முச்சு விடுதல் மற்றொன்று..

கண்கள் வெளிப்பட்டன. த்வஷ்டா இதன் அதிகாரியாக நியமிக்கப் பட்டார்.   அவரும் லோக பாலனாக பொறுப்பேற்றார்.  பகவானுடைய அம்சமாக கண் உருவங்களை காண முடிந்தது. 

உயிரினங்களின்  தோலாக காற்று நியமிக்கப் பட்டது.  ஒன்று ப்ராணன், மற்றொன்று ஸ்பரிசம் என்று இரண்டு செயல்கள்.  காற்று-வாயு என்ற தேவனும் லோக பாலனாக நியமிக்கப் பட்டான்.

காதுகள் இணைந்தன.  திசைகள் தங்கள் பொறுப்பாக பதவி ஏற்றனர். ஸ்ரோத்ரம்- காது என்ற அவயவத்தால், சப்தத்தின் தன்மை அறியப் படுகிறது.

 த்வக்- என்ற மேல் தோல்,  ரோமங்களுடனும், இணைந்தது.  அரிப்பு போன்ற உணர்வுகளை அறிய உதவும். இவை  தாவரங்களின் அறியும் திறன் கொண்டவை.

ப்ரும்மா தானே ஜனன  உறுப்பான மேட்ரம் என்ற அவயவத்தில் இணைந்தார். தன் அறிவை அதில் பிரயோகித்தார். ரேதஸ் என்ற அம்சத்துடன் ஆனந்தம் என்பதை வெளிப் படுத்துவதாக அமைந்தது.

குதம் என்ற அவயவத்தில் மித்ரன் என்ற லோக பாலன் பொறுப்பேற்றார். பாயு என்ற அம்சத்துடன் வெளியேற்றம் என்ற செயலை ஏற்றார்.

கைகள் தோன்றின. அவைகளில் தேவ லோக நாயகனான இந்திரன் இணைந்தான்.  பரம புருஷனின் கைகளின் அம்சமாக செயல்கள்  கைகளுக்கு அமைந்தன.  பாதங்கள் தோன்றின. அதில் லோக நாயகனான விஷ்ணு பொறுப்பேற்றார். நடை என்ற தன் அம்சத்தால், அடைய வேண்டிய இலக்கை அடைவது என்பது சாத்யமாயிற்று.

புத்தி தோன்றியது. வாகீசன் என்ற ப்ரும்மாவின் அம்சம் இதில் இணைந்தது. அறிவு என்பதன் அம்சமாக அறிய வேண்டியவைகளை அறிய தேவையான சக்தி வந்தது.

ஹ்ருதயம் என்ற அவயவம் இணைந்தது. இதன் தலைமையை சந்த்ரமா ஏற்றது. மனஸ் என்பதன் அதிகாரியாக சந்திரன் ஆனான்.  மாற்று எண்ணங்கள், பேதங்கள் கொண்ட மனஸ் என்பதின் செயல்களை சந்திரன் நிர்வஹிக்கிறான்.  ஆத்மானம் – தான், தன்னுடைய, தன்னியல்பு என்ற அபிமானம் மனதில் குடி கொண்டது.  கர்மாவின் பலனாக, செய்ய வேண்டியவைகள்  என்பவை இதன் பொறுப்பு.

பரம புருஷனின் தலையிலிருந்து வானம், பாதங்களிலிருந்து பூமி, நாபியிலிருந்து அண்டவெளி  தோன்றின. 

சத்வம் என்ற குணம், மிகச் சிறந்த அறிவு.  சித்தம் என்ற அம்சத்துடன் இணைந்து இது விக்ஞானம் -மேம்பட்ட அறிவு என்ற தகுதியை தருகிறது.  மிகவும் சத்வமான தேவலோகத்தை தேவர்கள் பெற்றனர். ரஜஸ் என்ற குணத்தை பூமியும்,    மூன்றாவது குணமான தமஸ், பகவானின் நாபியில் அடைக்கலம் கொண்ட ருத்ர பார்ஷதர்கள், (ருத்ரனின் உடன் வசிப்பவர்கள் – ஏவலர்கள்) வானத்தையும் இடமாக கொண்டனர்.

முகத்திலிருந்து ப்ரும்மம் தோன்றியது.  அதனால் வர்ணங்களில் முக்யமானது ப்ராம்மணர் என்று ஆயிற்று.  குரு எனப்பட்டனர்.  புஜங்களிலிருந்து வெளிவந்தனர் க்ஷத்ரம்- அதன் வம்சத்தினர் க்ஷத்திரியர்கள் ஆனார்கள். காப்பாற்றுவதே இவர்கள் தொழில், குணம். மற்ற வர்ணத்தினரை பாதுக்காக்கும் பொறுப்பு ,அவர்களின் இடர்களை நீக்கும் வேலை இவர்களுடையது.  நேர்மையான  குணம், சமயோசிதமான செயல் இவைகளுடன்,உலக வாழ்க்கைக்கு பயன் படும் வகையில் வைஸ்யர்களை உத்பத்தி செய்தார். இவர்கள் அவரது துடைகளிலிருந்து தோன்றினர். இவர்கள் அரசர்களுக்கு உதவியாக வாணிபம் முதலியன செய்வர்.

பகவானின் பாதங்களிலிருந்து அடுத்த வர்ணத்தினர் தோன்றினர். தர்ம காரியங்களில் சிறு உதவிகளைச் செய்பவர்கள், இவர்களின் செயல்களால் ஹரி சந்தோஷப் படுகிறார்.

இந்த வர்ணத்தினர் தங்கள் செயல், தொழில் தர்மங்களால் ஹரியை பூஜிக்கின்றனர். எந்த வர்ணத்தில் பிறந்தனரோ அந்த குல தர்மத்தையே சிரத்தையாக அனுஷ்டித்து வந்தனர்,  இதில் க்ஷத்திரியர்கள், பகவானின் தெய்வீக கர்மத்தை செய்ய அவருக்கு இணையானவர்கள்.

தன் யோக மாயா பலத்தில் பகவான் செய்யும் செயலுக்கு நாம் எந்த விதத்தில் சேவை செய்ய முடியும்? இருந்தாலும் சொல்கிறேன். தெரிந்த வரை, நான் கேட்டபடி சொல்கிறேன்.  என் வார்த்தைகள் மற்ற இடத்தில் பொருளில்லாமல், அதாவது அதற்கு மதிப்பு இல்லாமல் போகலாம். அதை ஈடு கட்ட ஹரியின் கீர்த்திகளைப் பாடுகிறேன்.  இப்படி பாடுவதன் ஒரே லாபம், மனிதனுடைய வார்த்தைகள்,  பகவானின் குணங்களை பேசுவது தான் என்று சொல்வர்.  அதை ஸ்ருதி என்ற வேதமே, நிறைய சொல்லியிருக்கிறது.  ஆதி கவி ப்ரும்மாவே, தன் மனதில் பல ஆண்டுகளாக இந்த எண்ணத்தை வைத்திருந்தார்.  யோக மார்கத்தில் பல காலம் பயின்ற பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் சொன்னார்.  ஆகவே, பகவானின் மாயா, மாயை அறிந்தவர்களுக்கும் புரிந்து கொள்ள முடியாது. அவருக்கே தெரியாது தான் என்ன செய்யப் போகிறோம் என்பது, மற்றவர்கள் என்ன சொல்ல., நானும் மற்ற தேவர்களும் எங்கும் தேடியும்,  எங்கள்  வாக்கும், மனமும்,  எதையும் காணாமல் திரும்பியதோ, அந்த பகவானுக்கு நமஸ்காரம்.

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த    காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், ஆறாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-40

அத்யாயம்7

மைத்ரேய முனிவர் சொன்னதைக் கேட்டு,  த்வைபாயனன்  என்ற பராசரரின்  மகன், விதுரர், பதில் சொன்னார்.  “ப்ரும்மன்!  சின்மாத்ரன் – சித் என்ற உயர்ந்த நிலையில் இருப்பவன் பகவான் என்பர்.  மாறுதல்கள் இல்லாத பரம் பொருள்.  லீலை தான் என்றாலும், நிர்குணன் என்று பெயர் பெற்றவன் குணங்களுக்கு, அதன் செயல் பாடுகளுக்கு ஏன் உடன் படுகிறான் ?  சிறுவர்கள் போல விளையாட்டு.  உலக வாழ்க்கை முறைகளை ஏன் ஏற்க வேண்டும்? நிவ்ருத்தி மார்கம் என்ற ஞான மார்கம் தானே அவருடையது?   ஸ்வத: த்ருப்த: என்பர்- தன்னில் தானே லயித்து இருப்பவர். அதற்கு எதிரான தன் மாயையால் உலகை சிருஷ்டி செய்தார் என்று சொன்னீர்கள். பின் அதே மாயையால் காத்தும் பின் கலைத்தும் ஏன் செய்ய வேண்டும்?  தேசம், காலம் இவற்றைக் கொண்டு தன்னிலிருந்து வேறாக ஒரு உலகை ஏன் படைக்க வேண்டும். நிறைவான அவபோதம்- அறிவும் ஆற்றலும் உள்ளவனுக்கு இது தேவையா?  ஒரே பகவான், எங்கும் நிறைந்திருப்பவன், அவனுக்கு கர்ம பலன் ஏது? செய்த வினையால் துன்பம் என்பதும் ஏது?  பகவானே ! எனக்கு பகவானே இப்படி உலக மாயையில் உழல்வது உவப்பாக இல்லை.  என் மனம் சங்கடப் படுகிறது. “

ஸ்ரீ சுகர் சொன்னார். இதைக் கேட்டு முனிவர் சிரித்தார்.  கேட்டவர் க்ஷத்திரியராக இருந்தாலும் அறிவு தாகம் உடையவர்.  பிறவி ஞானி.  பகவானின் சித்தம் என்பதை எப்படி சொன்னால் இவர் மனம் சமாதானம் அடையும் என்று யோசித்தவர் போல பதில் சொன்னார்.

“நான் என்ன சொல்ல, பகவானின் விருப்பம், அவருடைய மாயை.  பந்தமே இல்லாத ஈஸ்வரனுடைய  தயை. அதனால் கட்டுபடுகிறான்.

நீரில் சந்திரனின் பிம்பம் அலை பாய்வது போல தெரிவது சந்திரனின் தவறா? அவ்வாறே இல்லாத ஒன்று இருப்பதாக தெரிவது காண்பவரின் குணம்.  அது போலத் தான் ஆத்மா, பரமாத்மா என்ற பேதமும். அவனே ஞான மார்கத்தை உபதேசித்தான்.  வாசுதேவனாக வந்த பொழுது கருணையால் அதை பக்தி யோகம் என்பதால் மெள்ள மெள்ள மறைத்தான்.

சுய கட்டுப்பாடின்றி  தன் புலன் களின் வழியே செல்வதையே குணமாக கொண்டவன் கூட தன்னிலிருந்து வேறாக ஹரியை நினைத்து ஈடுபாட்டுடன் பக்தி செய்தால், அவன் கஷ்டங்கள் விலகுவதை கண் கூடாக காண்பான்.  தூங்கி எழுந்தவன் போல அவன் துன்பம் மறைந்து விடும்.

முராரி தன்னைப் பற்றி பாடும் அடியார்களின் அனைத்து கஷ்டங்களையும் தீர்த்து வைக்கிறான்.  ஆத்ம தத்துவம் அறிந்தவர்கள் அவனுடைய பாத தூளியை சேவிப்பதால் எதைத் தான் அடைய முடியாது?

விதுரர்  “நீங்கள் சொல்வது சரியே. என் சந்தேகம் விலகியது. இரு மார்கங்களுமே எனக்கு ஏற்றவையே. ஹரியின் மாயையே.  சரியாக சொன்னீர்கள்.  அடி மட்டத்தில் இருக்கும் மூடனோ,  அறிவிற்சிறந்தவனோ, இருவருக்கும் நன்மையே பக்தி யோகம்.  அதை மறந்தவன் தான் சிரமப் படுவான்.  பொருள் வேண்டுமென பக்தி செய்பவன் கூட,  அவனுடைய சரண சேவையால் அதை அடைவான்.  மது என்ற அரக்கனை அழித்த பகவானின் பாத சேவை எதைத் தான் தராது? நித்யம் ஜனார்தனனை வணங்கி வழிபடுவர்களுக்கு அடைய முடியாதது என்று எதுவுமே இல்லை.

மஹத் போன்ற இயற்கை சக்திகளை தானே சிருஷ்டி செய்தவன்,  நாளடைவில் அதில் சில மேன்மைகளை கூட்டி தானே அதில் பிவேசித்தான்.  அதனாலேயே முதல் புருஷன் என்று சொல்லப் படுகிறான்.  ஆயிரம் பாதங்கள், துடைகள், புஜங்கள் என்று விஸ்வரூபமாக வந்தவனிடம் உலகங்கள் அடைக்கலமாயின.  எவனிடத்தில் பத்து வித ப்ராணங்கள்,  ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் மூன்றாக ஆனதும், வர்ணங்கள் பற்றி சொன்னதையும் மறுமுறை சொல்லுங்கள்.  தன் புத்திரர்கள், பேரன்கள், மருமகன்கள், மற்றும் தாயாதிகள் என்று ப்ரஜைகள்  பல்கி பெருகி பலவிதமாக இருந்தார்களே, யார் இதற்கு மூலமாக இருந்தார்கள் அதைச் சொல்லுங்கள்.  ப்ரஜாபதிகள் என்பவர்களை யார் நியமித்தார்? எப்படி தேர்ந்தெடுத்தார்?  சர்கம், அனுசர்கம் என்பதையும், மனு, மன்வந்தரங்கள், இவர்களின் தலைவர்கள் பற்றியும் சொல்லுங்கள். இவர்களின் வம்சங்கள், வம்ச சரித்திரங்களையும்,  பூமியின் மேல் உலகம், கீழுலகம்  இந்த விவரங்களைச் சொல்லுங்கள்.

இவைகளின் இருப்பு, ப்ரமாணம், பூவுலகம் என்பதையும் வர்ணித்துச் சொல்லுங்கள். கால் நடைகள், மனித, தேவர்கள், ஊர்வன, பறவைகள், இவைகளின் கட்டமைப்பு என்ன என்பதையும், கர்பத்தில் தோன்றுபவை எவை, வியர்வையில் பிறப்பவை, முட்டையிலிருந்து தோன்றும் த்விஜ-இரட்டை பிறப்புடைய பறவைகள். தானே இரண்டாக பிளந்து தோன்றும் ஜீவன்கள், இவை பற்றியும், உலகில் குணாவதாரம் என்பதையும், ஸ்ருஷ்டி,ஸ்திதி,சம்ஹாரம் என்பதையும், ஏற்படுத்திய ஸ்ரீநிவாசனின் உதார, பெருமை மிக்க பராக்ரமத்தையும் விவரித்துச் சொல்லுங்கள்.

வர்ணாஸ்ரம விபாகங்கள், ரூபம்,சீலம் போன்ற ஸ்வபாவங்கள், ரிஷிகளின் தோற்றம், வேலைகள், வேதத்தின் அறிவுரைகள், யாக கர்மாக்கள், அவைகளை சரிவர செய்ய வேண்டிய நியமங்கள். யோக முறைகள், கார்யம் (பலன்) இல்லாத கர்ம யோகம்,  சாங்க்யம் என்ற ஞான யோகம், தந்திரம், இதை பகவானே சொல்லியிருக்கிறார்.

இது தவிர, பாகண்டம் என்ற நாஸ்திக வாதம், அதன் குறைகள், கீழ் நோக்கிச் செல்லும் விஷயங்கள், ஜீவன்கள் செல்லும் வழிகள், எவைகள், எந்த அளவில் குணம், கர்மம் இவைகளிலிருந்து தோன்றுகின்றன,

தர்மார்த்த காம மோக்ஷம் என்ற நான்கு ,  இதன் நிமித்தங்கள், விரோதங்கள், சட்டங்கள், தண்ட நீதி, , விதியின் போக்கு, வேதம் காட்டும் வழி இவைகளையும்,

சிரார்தம் செய்வதன் விதி முறைகள், ப்ரும்மன்! பித்ருக்களின் சர்கம் என்பது என்ன?  க்ரஹ நக்ஷத்திர தாரைகள், இவைகள் காலத்தின் அங்கங்கள் என்று பார்த்தோம், இவை பற்றியும்,

தானம் செய்வதும், தவம் செய்வதும், குளம் வெட்டுவது போன்ற பூர்த்த செயல்கள், அதன் பலன், வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும் பொழுது, மனிதனுக்கு என்ன தர்மம், பெரும் ஆபத்து வந்த காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

தர்மத்தின் பிறப்பிடமே என்று பகவானைச் சொன்னீர்கள்,  ஜனார்தனன் எந்த தர்மத்தை செய்தால் மிகவும் மகிழ்வான் ? யாரிடம் மிகவும் சந்தோஷமடைவான் என்பதைச் சொல்லுங்கள். தன் சிஷ்யர்கள், மற்றும் உடன் அனுசரித்து இருக்கும் பிள்ளைகள்,  இவர்கள் கேட்காமலே இவர்களுக்கு உபதேசம் செய்யலாம். நிறைய தத்வங்கள் சொன்னீர்கள். பலவிதமாக பரிணமிப்பவை. இவைகளை எப்படி அறிவது, பயன் படுத்துவது?

புருஷன் என்பவனின் உடலமைப்பு, சரியான இருப்பு என்பது என்ன? ஞானம், வேத பரமான அறிவு, இவைகளை குரு சிஷ்யர்களுக்கு எப்படி போதிப்பது?

நிமித்தங்கள் பற்றியும் சில அறிஞர்கள் சொல்லியிருக்கின்றனர்.  தானாக மனிதர்கள் ஞானம் பெற முடியாதா? சுயமான அறிவு எங்கிருந்து வரும்?  பக்தியோ, வைராக்யமோ, தானாக வருமா?

பல சந்தேகங்கள் நான் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புவது ஹரியிடம் உள்ள பற்றுதலால் தான், எந்த விதமாக தன் செயல்களை செய்கிறான் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். வயதானதால் புத்தி மழுங்கி விட்டது. எல்லா வேதங்களும், யாகங்களும் தவம்,தானம் முதலியவைகளும், ஜீவனுக்கு அபய ப்ரதானம் செய்யும் பகவானுக்கு எதிரில் ஒன்றுமேயில்லை.

ஸ்ரீ சுகர் சொன்னார்: கௌரவ குலத்தின் ப்ரதானமாக இருந்தவன், முனிவர்களில் ப்ரதானமாக இருந்தவரிடம் கேட்டார். பகவத் கதையை சொல்ல வாய்ப்பு கிடைத்தது என்றெண்ணியோ, அவர் மிக்க மகிழ்ச்சியுடன் சிரித்தபடி சொல்லலானார்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-42  

அத்யாயம்8

மைத்ரேய முனிவர்  பாகவதத்தைச் சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.

உலகில் முதன் முதலான ஆதி புருஷனான சங்கர்ஷணன் என்ற தேவன் மிகச் சிறந்த குணங்களுடையவன் என்று பெயர் பெற்றவனாக இருந்தான். சனக, சந்தன என்ற குமாரர்கள், அவரிடம் பர தத்வம் என்பது பற்றி தெரிந்து கொள்ள வந்து சேர்ந்தனர். அவர்களே நல்ல அறிவுடையவர்களே.  கண் முன் பகவான் வாசுதேவனின் அம்புஜாக்ஷம் -தாமரை போன்ற கண்கள் சிறிதளவே திறந்து ஆசிர்வதித்து, பெரும் அறிஞர்களைத் தோற்றுவித்ததைக் கண்டவர்கள்.

தேவ நதியில் ஸ்நானம் செய்து ஈரத்தலையுடன், ஜடை முடி தரித்த தபஸ்விகள் வந்து அவர் பாதத்தில் வணங்கி நிற்பதையும், ஆதிசேஷன் கன்னிகள்  பத்மங்களால் அர்ச்சிப்பதையும்,  கண்டவர்கள்.

அனுராகத்துடன் பாடுபவர்கள். அவர் சஹஸ்ர கிரீடங்களும் ஆதிசேஷனின் படங்களில் ப்ரதிபலிப்பதைப் பார்த்தவர்கள்,  சங்கர்ஷணர் நிவிருத்தி என்ற ஞான மார்கம் என்பதை  ஏற்றுக் கொண்டவர் என்பதை பாகவதர்கள்- பகவத் பக்தர்கள்  அறிவார்கள்.  சனத் குமாரர் கேள்விக்கு அவர் பதில் சொன்னார். தன் வாழ் நாளையே சாங்க்யம் என்ற துறையிலேயே செலவழித்தவர் அவர்.  அதே விரதமாக இருப்பவர்.

சாங்க்யாயனர் என்ற அவர், பரமஹம்ஸர்கள் எனப்படும் உயர்ந்த பண்டிதர்களில் முதல்வராக எண்ணப்படுபவர்.  பகவானின் விபூதிகளை அந்த குமாரர்களுக்கு போதித்தார். அதை அவர்கள் என் தந்தை பராசரருக்கு போதித்தனர்.   பின்னர் ப்ருஹஸ்பதிக்கும் போதித்தார். என் தந்தை, இந்த முதல் புராணம் என்பதை எனக்கு அருளினார். அதை உனக்குச் சொல்கிறேன். வத்ஸ! சிரத்தையுடன் கேட்கிறாய். ஆசார சீலன் என்று அறிவேன். கேள்.

உலகமே ப்ரளய ஜலத்தில் மூழ்கி இருந்தது.   ஆதிசேஷன் என்ற  பாம்புகளின்  அரசனே படுக்கையாக, அதில் பகவான் தூங்கிக் கொண்டிருந்தார்.   அசையாது கிடந்தார்.   மஹா பிரளய காலத்தில் உலகியல் சூக்ஷ்மங்களை, பஞ்ச பூதங்கள் முதலானவைகளை காலம் முதலிய சக்திகளை,  அந்த மாபெரும் வெள்ளத்தில் வீணாகாமல் காக்க தன்னுள் வைத்திருந்தார். , அக்னி மரக்கட்டையில் அடங்கி கிடப்பது போல தன் சக்திகளை மறைத்து இருந்தார்.  நான்கு யுகங்கள், அதே போன்ற ஆயிரம் யுகங்கள், தண்ணீரில் கிடந்தார்.  அதன் பின்  விழித்தவர், தன் சக்தியால் காலா என்ற தேவியை உயிர்ப்பித்தார். அவளிடம் கர்ம தந்திரங்கள் என்பவைகள் இருந்தன.  தன் உடலில் உலகங்கள் நீல வண்ணமாக இருப்பதையும் கண்டார்.

சூக்ஷ்மமான,  பொருள் நிறைந்த தன் கடாக்ஷத்தால்,  உடலினுள் இருந்த ரஜோ குணத்தை, இந்த கால என்ற சக்தியுடன் இணைத்து, உலரச் செய்து, தன் நாபியில் பிளந்தார். அதில் பத்ம கோசம் ( மகரந்தம் நிறைந்த தாமரை மலர்)) உடனடியாக எழுந்தது. காலா என்ற சக்தியின் தூண்டுதலால் தன் பிரகாசத்தால், விசாலமான அந்த நீர் நிலையை சூரியன் ப்ரகாசிப்பது போல. (ஆத்ம யோனி – தானே இரு பாலாராகவும் இருந்து) அந்த லோக பத்மம் – அதில் விஷ்ணுவின் அம்சமாக தானே ப்ரவேசித்தார். அதனுள் தானே வேதமயமான விதாதா- படைப்பவர் -ப்ரும்மா வாக ஆனார். அதனால் அறிஞர்கள் அவரை ஸ்வயம்புவம் – தானே தோன்றியவர் என்கிறார்கள்.

அந்த தாமரை பூவின்  நுனியில் விதை கூட்டில் இருந்தபடி உலகை பார்த்துக் கொண்டிருந்தார். நாலா திசையிலும் கண்களைச் சுழற்றி  பார்த்துக் கொண்டிருந்தவரின் முகம் – திசைக்கு ஒன்றாக நான்காக ஆயின.  அதில் இருந்தபடி யுக முடிவில், அலை வீசும் மாபெரும்  வெள்ளத்தின் நீரால்,  முழுதுமாக தடைப்பட்ட மூச்சுக்  காற்றை நீரின் வேகத்திலிருந்து வலுக் கட்டாயமாக விடுவித்துக் கொண்டு பத்மத்தில் இருந்த சமயம் தன்னையோ, தான்  ஆதி தேவன் என்பதையோ,  தானே ஏற்படுத்திய உலகியல்-லோக தத்வம் என்பதையோ  உணரவில்லை.

யாரது? நான் யார்? பத்மத்தில் இருக்கிறேன்? இந்த பத்மம் எங்கிருந்து வந்தது? எல்லையில்லாத நீர் பரப்பு, இதன் அடியில் என்னதான் இருக்கிறது?  எதன் மேல் இந்த பத்மம் நிலைத்து நிற்கிறது, எதுவுமே புரியவில்லை, என்று இவ்வாறு எண்ணியபடி அந்த பத்மத்தின் தண்டுகளின் வழியாக தண்ணீரை. அடைந்தார். அதன் மூலம் மூலமான நாபியை கண்டு பிடித்தார்.  ஒரே இருட்டு. தேடித் தேடி, அலுத்தார். திரும்பி வந்தார். தன் இடத்துக்கே, பத்மத்திலேயே வந்து யோசித்தார்.  மெள்ள மெள்ள ஸ்வாசம் திரும்பி வரவும் அறிவும் வந்தது. நீள உள் மூச்சு, வெளி மூச்சு வரவும், புத்தி வேலை செய்தது.  அந்த பத்மத்திலேயே சமாதி யோகத்தில் வசதியாக அமர்ந்து கொண்டார்.

காலம் சென்றது. அந்த அஜன், பிறவியற்றவன்,  யோக சாதனையால் ஓரளவு தெளிவு பெற்று, தன்னுள் நோக்கி தேடிப் பார்த்தது. எதுவும் புலப்படவில்லை.  முன் போலவே தாமரைத் தண்டினுள் நுழைந்து புறப்பட்டு, வெண்ணிறமான சேஷ படுக்கையைப் பார்த்து, அதன் வழியே பார்வையைச் செலுத்தி யாரோ அதில் படுத்திருப்பதையும் கண்டது.  யுகாந்த வெள்ளம், படம் எடுத்த பாம்பின் தலையில் இருந்த மணி பிரகாசமாக ஒளி விட, சூழ்ந்திருந்த இருட்டு விலகி , கண்கள் கூச, கீழ் நோக்கி ஆழ்ந்து நோக்கினார். பசுமையான கல் நிறைந்த மலை போன்ற உருவம், சந்த்யா கால வானம் போல, ரத்னங்களின் ஓளி பல வண்ணங்களைச் சிதறியடிக்க, அதிலிருந்து மணம் நிறைந்த பூக்களின் வாசனையுடன் வன மாலை,வேணு, இவைகளை கையில் ஏந்தி, கால்களில் மூவுலகையும் சுருக்கி விசித்ரமான திவ்யாபரணங்களை தரித்தவராக, அருகில் லக்ஷ்மி தேவி அமர்ந்திருக்கும் தேகத்தைக் கண்டார்.

மனிதர்கள், தங்கள் பலவிதமான தேவைகளை நிறைவேற்ற வேண்டி பலவிதமாக அர்ச்சனைகள், வேண்டுதல்கள் செய்து கொண்டும்,  எவருடைய பாத பத்மங்களை சேவிக்கிறார்களோ, அவர்களுக்கு கருணையுடன், சந்திரனின் ஒளிக்கு சமமான தன்  பாதங்களின் நகங்களின் ஒளி விரல்களிடையில் பரவியிருக்கும் அத்புதமான தரிசனத்தை தரும் பகவான்.

முகத்தில் மென்முருவல், அதுவே போதும் பக்தர்களின் தாபத்தை தீர்க்க, குண்டலங்களின் ஒளி கன்னங்களில் ப்ரதிபலிக்க, சிவந்த அதரங்கள், நாசியும், புருவங்களும், கதம்பம், கிஞ்ஜல்கம் , பிசங்கம் என்ற புஷ்பங்கள், போன்ற மஞ்சள் நிற ஆடையுடன், தன்னையே அலங்கரித்துக் கொண்டது போல மேகலை இடுப்பில் அணியும் நகை,  ஒட்டியானம் பளபளக்க, அனந்த தனம் என்ற மாலை, ஸ்ரீவத்ஸம் என்ற மணி மார்பில் துலங்க, மிகச் சிறந்த கேயூரங்கள், ஆயிரம் புஜங்களிலும் துலங்க, வெளியில் தெரியாத மூலம், புவனாங்க்ரிபேந்த்ர,(பூமியின் பாதங்கள்- பாதாளம் அதன் தலைவன் ஒரு நாகம்)  மஹீந்த்ர (தேவ லோகத்து நாகம்)  என்ற போகங்கள், நாகங்கள் சூழ்ந்து மறைத்திருக்க,  சராசரத்திற்கும் ஆதாரமான பகவான்,  நாலாபுறமும் தண்ணீரால் சூழப்பட்டவராக,  பூமியைத் தாங்கும் யானைகள் -திக் கஜங்கள் அருகில் தெரிய,  ஆயிரம் கிரீடங்களால், பொன்மயமான ஸ்ருங்கம், உச்சி பாகம், (தலை) கௌஸ்துப ரத்னத்தை தாங்கியபடி ஆவிர்பவித்தது.

 வேதங்களின் சாரமான தேன் வண்டுகளின் ரீங்காரமே தன் கீர்த்தியை பாடுவது போல லக்ஷ்மீகரமான வனமாலையுடன் ஹரியை, சூரியனோ, சந்திரனோ, வாயுவோ, அக்னியோ காண முடியாத த்ரிதாமம்- என்ற பிரகாசம் சுற்றிலும் சூழ்ந்து இருந்ததைக் கண்டார்.

அதே சமயம், அதன் நாபியிலிருந்து வந்த சரோஜம்- தாமரைப் பூ, நீரில் மூச்சு விட்டது போல, சிறிய சலனம்- அதைக் கண்டார், உலகை படைக்கப் போகும் விதாதா-ப்ரும்மா- அதுவே முதல் வெளிப்பாடு என்று உணர்ந்தார்.  கர்மபீஜம் – ஒரு செயலின் ஆரம்பம், ரஜோ குணத்துடன் கூடியது, ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்ய முதல் அடி எடுத்து வைத்தது போல, பார்த்தவுடன் துதி செய்தார்.  அந்த சிறு சலனத்தையே தனக்கு வழிகாட்டியாக அவர் எடுத்துக் கோண்டார்.  வெளியில் தெளிவாகத் தெரியாத பகவானின் அத்புதமான ஆற்றலை எண்ணி, அவரிடம் தன் மனதை செலுத்தியவராக ஆனார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், எட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-33

 அத்யாயம்9

ப்ரும்மா நா தழ தழக்க  துதி செய்யலானார்: பகவானே!  இன்று நான் உன்னைத் தெரிந்து கொண்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு, சாதாரண மனிதர்களுக்கு அரிதான காட்சி, இது தான் என்று சுட்டிக் காட்ட முடியாத உன் ஸ்வரூபம். உன்னையன்றி வேறு யார் இருக்கிறார்கள்?   அப்படி ஒருவர் இருந்தாலும்  உன் மாயையின் பல ரூபங்களை  அறிந்தவன் நீ ஒருவனே.

எனக்கு அனுக்ரஹம் செய்யவே வந்தாய். தமஸ் என்ற இருட்டை விட்டு தெளிவு என்பதன் உதயத்தால், என்னை வெளிக் கொணர்ந்து விட்டாய்.  ஆயிரக் கணக்கான அவதாரங்களில் இது முதல் அவதாரம். உன் நாபி என்ற பவனத்தில் நான் பிறந்தேன். இதை விட அதிகமாக, உன் ஸ்வரூப தரிசனம்.  சற்றும் குறைவில்லாத ஆனந்தம் மட்டுமே ஆனது. விஸ்வத்தை ஸ்ருஷ்டி செய்பவனை நான் நேரில் காண்கிறேனா என்று நம்பவே கூட முடியவில்லை.  பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள் என்ற அனைத்தும் என்னை வந்தடைந்தன.   புவன மங்களா! என் மங்களத்திற்காக என் த்யானத்தில் வந்து தரிசனம் தந்தாய்.  அதை உன் உபாசகர்களுக்கு தருவாய் என்று அறிந்திருக்கிறேன். அந்த பகவானுக்கு நமஸ்காரம்.  உன்னையே வணங்கி வேண்டுகிறன். நீ தயை செய்.

உன் சரணாரவிந்தத்தில் அன்றலர்ந்த தாமரையின் மணம்.  இதை நுகர்பவர்கள், ஸ்ருதியையே கேட்டு பழகிய காதுகள் உடைய பெரியோர்.  அவர்கள் பக்தியுடன் உன்  சரணங்களை வந்தடைந்திருக்கிறார்கள். அவர்களை உன் ஹ்ருதயம் என்ற அம்புஜத்தில் வைத்து பாதுகாக்கிறாய்.  மனிதர்கள் மனதில் பயம் வர காரணம் செல்வம், தன் தேகம், நண்பர்கள் இவர்கள் விஷயமாக கவலை, பிரியம், அவமானம், அதிகமான லோபம்- பேராசை. நான்,  எனது என்ற எண்ணம்- இவையே துன்பங்களின் ஆணிவேர்.   உன் பாதம் தான் அபயம் அளிக்கும். பயத்தைப் போக்கும்.

விதி வசத்தால் புத்தியை இழந்த சிலர் தான் உன்னிடம் பாராமுகமாக இருப்பர்.  உன்னை வந்தடையும் வரை அவர்கள் நம்பும் உலகியல் சுகங்கள் துக்கமே. நாள் முழுதும் பொருள் ஈட்டுவது போன்ற வேலைகள், இரவில் நித்ரை,  இப்படியும் சிலர் உலகில் சஞ்சரிக்கின்றனர்.  இவர்கள் உன்னைப் பற்றி பேசுவது கூட இல்லை.

நீ  வேதம் சொன்ன வழியில் செல்லும் அன்பர்களுக்கு அவர்களின் பாவம், யோகம் இவற்றை உன் ஹ்ருதயத்தில் தரிக்கிறாய்.  எந்த விதமாக உன்னை வழிபடுகிறார்களோ, அதே வழியில் அவர்களுக்கு அனுக்ரஹம் செய்கிறாய்.  தன் காரியமாக உன்னை ஆராதிப்பவர், தேவர்களேயானலும் உன் அருள் அவர்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.  சர்வ உயிரினங்களையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவன் உனக்கு அந்தரங்க சினேகிதனாகிறான்.  சிலர் பலவிதமான யாக கர்மாக்களைச் செய்தும், தானம், தவம் இவைகளையும் உக்ரமான விரதங்களை அனுஷ்டித்தும், பகவத் ஆராதனம் என்றும் பல செயல்களை செய்வர்.

உன் லீலைகளுக்கு நமஸ்காரம். உன் அவதார குண, பெயர்கள், இவற்றை அறியாமல் சொன்னாலும் அதன் பலன் உடனே கிடைத்து விடுகிறது. பிறவியின் துன்பத்தை உடனே கடந்து விடுவார்கள். அந்த அஜன்-பிறப்பில்லாத பரம் பொருளுக்கு நமஸ்காரம்.

 நான், கிரிசன் என்ற மஹேஸ்வரன், தாங்களும் சேர்ந்து இந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி,லயம் என்ற உன் செயல்களைச் செய்கிறோம். இதையும் பிளந்து ஒரே விருக்ஷமாக- மரமாக- நிற்கிறாய். புவனத்ருமம் ஆன உனக்கு நமஸ்காரம்.

உலகம் தன் சுக சௌகர்யத்திற்காகவே முனைந்து தன் செயல்களை செய்கிறது.  உன்னை அர்ச்சனை செய்வதை விட இந்த ஆசையின் தாக்கம்  பலமாக இருந்தாலும் சிறிதே நினைத்தாலும் அந்த இடரை களைந்து நற்கதி அளிக்கிறாய். அந்த உனக்கு நமஸ்காரம்.

நானும் பயந்தேன். இரவும் பகலும் உன்னை ஆராதித்தேன். பல காலம் தவம் செய்தேன். யாகங்கள் செய்தேன். அந்த அதிமகாய (யாக ரூபன்) உனக்கு நமஸ்காரம்.

உயிரினங்களின் ஜீவன் நீ.  நீயே விரும்பி எடுத்துக் கொண்ட சரீரம் உன் அவதாரங்கள். அந்த புருஷோத்தமனுக்கு நமஸ்காரம்.

உலக க்ஷேமம் என்பதற்காக நீரில் மூழ்கி கிடந்தாய்.  அலை வீசும் பயங்கர பிரளய ஜலம்.  உன் நாபி பத்மத்தில் வந்தவன் நான். எனக்கு உன் அனுக்ரஹத்தால் மூவுலகும் படைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.  ப்ரும்மாண்டத்தையும் வயிற்றில் சுமந்த உனக்கு நமஸ்காரம். யோக நித்ரையில் ஆழ்ந்த உனக்கு நமஸ்காரம். இன்று நான் சகல ஜகத்துக்கும் ஆத்மாவான உன்னை, பவன் பவ்யமாக வணங்கும் உன்னை,  உன் கடாக்ஷ பலத்தில்,  முன் போல் உலகை சிருஷ்டிக்க ஆரம்பிக்கிறேன்.   அடைக்கலம் என்று வந்தவனுக்கு அருளும் உன் துணையுடன் படைக்கும் தொழிலில் மன தூய்மையுடன் செய்கிறேன். வேறு எந்த வித கெட்ட எண்ணமோ, கர்வமோ, என்னை அண்டாதிருக்கட்டும். உன் நாபி குகைக்குள் நான் இருந்த சமயம், அந்த சக்தியின் மேம்பட்ட அறிவாக நான் இருந்தேன். அன்று நான் கண்ட உன் உருவம், என்னால் விவரிக்க இயலாதது.

புராண புருஷணனான  நீ  எல்லையில்லாத கருணையே உருவானவன்,  உலகை புனர் நிர்மாணம் செய்ய எழுந்தவன்,  அன்புடன் கண்களாகிய தாமரையால் தடவிக் கொடுப்பது போல என்னைப் பார்த்து,    மதுரமான சொல்லால் என்னை ஆட்கொண்டாய்.  

மைத்ரேயன் சொன்னார்: தான் உருவானதை விவரித்த பின், மனதார ஸ்ரீ க்ருஷ்ணரை துதி செய்து விட்டு நிறுத்தினார்.  மது சூதனனும், கல்ப பிரளய ஜலத்தில் தான் கிடந்ததை  அவர் மிக வருத்தத்துடன் சொன்னதை புரிந்து கொண்டு, ப்ரும்மாவைப் பார்த்து சொன்னார். “வேத கர்ப, (வேதங்கள் உன்னிடம் அடைக்கலமாகி உள்ளன) ஸ்ருஷ்டி செய்வதை ஆரம்பி. நீ தற்சமயம் கேட்டது அனைத்தையும் உனக்கு முன்பே தந்து விட்டேன்.  திரும்பவும் நிறைய தவம் செய். என் சம்பந்தமான வித்யைகளையும் கற்றுக் கொள். அவைகளைக் கொண்டு மனதின் ஆழத்தில், எப்படி உலகங்கள் அமைய வேண்டும் என்பதைக் காண்பாய்.  அதன் பின், உன் உள்ளும், உலகிலும் பக்தியுடன், ஒரு முகமாக இருந்து என்னைக் காண்பாய். ப்ரும்மன்!  இந்த லோகங்களும், நீயும், என்னில் என்றும் இருப்பவர்கள், என்னைச் சார்ந்தவர்களே.

மரக் கட்டையில் அக்னி போல சர்வ பூதங்களிலும் நான் உறைந்து இருப்பதை, உலகம் அறியட்டும். அதனால் கவலையை விடு.  வகை வகையான செயல் பாடுகளுடன், ஏராளமான பிரஜைகளை ஸ்ருஷ்டி செய். உன் ஆத்மா அதனால் வருந்தாது. பல ஆண்டுகள் என் அனுக்ரஹத்துடன் தொடர்ந்து செய்வாய்.  நீ முதல் ரிஷி. உன்னை ரஜோ குணம் பாதிக்காது.  உன் மனம் என்னிடத்தில் நிலைத்து நிற்குமாதலால், பிரஜைகளை உத்பத்தி செய்யும் சமயத்திலும் பாதிக்கப் பட மாட்டாய்.   உயிரினங்கள், அவர்கள் தேகம் என்பன பற்றி எதுவுமே தெரியாதே என்று தயங்க வேண்டாம்.  என்னை பார். பஞ்ச பூதங்கள், முக்குணங்கள் இவைகளுடன் ஆத்மாவும் சேர்ந்து உருவாக்கு.  ஏற்கனவே நான் காட்டியிருக்கிறேன். தாமரைத் தண்டில் நீ  அடி வரை தேடி வந்தாயே, அந்த சமயம் காட்டினேன்.  நீ இப்பொழுது சொன்னாயே, என் சரித்திரம், துதி செய்தாயே, அதுவும், தவம் செய்தாயே, யோக நிஷ்டையில் ஆழ்ந்து இருந்தாயே, இவையும் என் அனுக்ரஹமே.  உலகங்களை படைத்து ஜயிக்க வேண்டும் என்று என்னை வேண்டி துதி செய்தாய். அதனால் மகிழ்ந்தேன்.  பத்ரமஸ்து தே- உனக்கு நன்மைகள் உண்டாகட்டும். என்னை நிர்குணன் என்றும் குணமயன் என்றும் சொன்னாய்.  இந்த துதி நிலைத்து நிற்கும். 

பூர்த்தம்- குளம் வெட்டுதல் போன்ற சமூக சேவைகள், தவம் – மனதை அடக்கி தன் மேன்மைக்காக தியானம் செய்தல், யாக காரியங்கள், தானம், யோக சமாதிகள், இப்படி பல விதமாக மனிதர்கள் இவை என்னை சந்தோஷப் படுத்தும் என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்வார்கள்.  ஆத்மா வின் ஆத்மா நான்.  சரீரம் உடைய ஜீவன் களின் உள்ளுறையும் ஆத்மா நானே.   சர்வ வேதமயமான ஆத்மயோனியான நான் அனைத்து உலகிலும் பரவியிருப்பவன் என்பதை நினைத்து உன் ஸ்ருஷ்டி என்ற தொழிலை ஆரம்பி முன் போலவே உலகம் நிறையட்டும். ப்ரதான புருஷன், லோகேஸ்வரன் தன் சுய ரூபத்தையும் காட்டி அனுக்ரஹம் செய்து விட்டு, மறைந்தான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், ஒன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-44

அத்யாயம்10

விதுரர் ஒரு சந்தேகம் என்றார்.   பகவான் மறைந்த பின் ப்ரும்மா தன் படைப்புத் தொழிலை எப்படிச் செய்தார்.  லோக பிதாமஹர் – உலகிற்கே பாட்டனார் ஸ்தானத்தில் என்பர்.  எப்படி பிரஜைகள், எந்த விதமாக, உடல், மனம் என்ற வித்தியாசமான உயிரினங்கள் எப்படி தோன்றின.  வரிசையாக சொல்லுங்கள். உங்களுக்கு தெரியாதது இல்லை.

 மைத்ரேய முனிவர்: விரிஞ்சி – ப்ரும்மா அதன் பின் நூறு ஆண்டுகள் தவம் செய்தார்.  பகவான் சொன்னபடியே, தன் ஆத்மாவை பரமாத்மாவில் வைத்து, கடும் தவத்தில் ஈடு பட்டார்.   நாளடைவில் நீரில் விளையும் தாமரை, இதுவரை அசையாதிருந்தது, வாயு லேசாக தொட்டவுடன்,  மெள்ள நடுங்கியது. இவருடைய தவம் தன்னுள் தான் என்று லயித்து இருந்த சமயம் அவரைச் சுற்றி ஏதோ ஒரு சக்தி வீர்யம் மிக்கதாக தோன்றி வாயுவுக்கு வேகத்தை கொடுத்து, நீரிலும் சலனத்தை ஏற்படுத்தி விட்டது.  அதை பார்த்த அந்த நீர் நிலை, பழைய நினைவு வந்தாற்போல் இப்படித்தான் நானும் ஒரு சக்தியால் அசைக்கப் பட்டேன் என்றது.  பத்ம கோசம் பகவானின் தூண்டுதலால், தன்னைத் தானே உலுக்கி இரண்டாக, மூன்றாக, பதினான்காக,  பிரிந்தது.  இப்படித்தான் உலகில் ஜீவன்கள் பல்கி பெருகின. பரமேஷ்டி- பரம புருஷனுடைய உத்தேசம், சங்கேதமாக சொன்னது போல  இந்த நிகழ்ச்சி அமைந்தது.

விதுரர் ஆச்சர்யத்துடன்,  ஹரியினுடைய அத்புதமான செயல். பின்  காலத்தை எப்படி கணக்கிட முடிந்தது? என்றார்.

முக்குணம் என்பதன் பாதிப்பு அதன் ஒன்றுடன் ஒன்றான சம்பந்தம் ஒரு ஒழுங்கில் வரவில்லை. பகவான்  சுலபமாக, தானே அதை ஒதுக்கீடு செய்து காட்டினர்.  விஸ்வம் ப்ரும்மம் – தன்மாத்ரம் என்ற உணர்வுகள் (பார்வை,கேள்வி,மணம்,ருசி,ஸ்பரிசம்)  விஷ்ணுவின் மாயையால் ஏற்படுவது.   வெளிப்படாத ஈஸ்வர சக்தியால் காலம் பிரிக்கப் பட்டது.  இந்த சமயம் (நிகழ்)  முன்னால்,(கடந்த) பின்னால் (வரும்) என்று பிரித்தார்.  படைப்பும் ஒன்பது விதமாக ஆயிற்று. ஒன்று இயற்கை, மற்றது செயற்கை என்பதாக.

காலம், பௌதிக பொருள்,(த்ரவ்யம்- அடிப்படையான கச்சா பொருள்), குணம் என்பன மூன்று மூன்று விதமாக ஆயின. இரண்டாவது அஹம் என்ற பாவம் (தன்னியல்பு) இதில் பௌதிகமான பொருள், ஞானம் (அறிவு), செயல் – இவைகளின் வெளிப்பாட்டினால் உண்டாவது.

மூன்றாவது உயிரினம் தோன்றுவது, தன்மாத்ரம் என்ற உணர்வுகளும், த்ரவ்யம் என்ற பௌதிக பொருளுடன் சேர்ந்து உண்டாவது. (த்ரவ்யம்- மாறாத இயற்கைத் தத்துவங்கள்)  இதன் சக்தி இணைந்து தோன்றும்.

நாலாவது, இந்திரியங்களுடனான கூட்டு. இது ஞானமும், செயலும் சேர்ந்து ஏற்படும். வைகாரிகம் என்பது தேவர்களின் ஸ்ருஷ்டி. ஐந்தாவது மனம் என்ற தத்துவத்தின் ஆளுமையில் அமையும். 

ஆறாவது தமஸ் என்ற குணம். புத்தியின் உதவியின்றி, படைப்பது. – இந்த ஆறும் ப்ராக்ருத (இயற்கை) என்பன.

வைகாரிகோ என்பவை- ரஜஸ் என்ற குணம் பிரதானமானவை.   ஹரியின் எண்ணத்தில் உதிப்பது. ஏழாவது என்பதில் முக்கியமான படைப்பு, ஆறு பகுதிகளாக உள்ளன.  வனஸ்பதி (காடுகளில் தானே வளரும் மரங்கள்) ஓஷதி எனும் செடிகள், கொடிகள், தடிமனான வெளிப்புறம் (த்வக்- மேல் தோல்) நிறைந்த திடமான மரங்கள், – இவைகளின் உள் புறம் ஈரமாக இருக்கும், புத்தி அல்லது மனம் என்ற தத்துவம் மட்டும் இல்லாதவை. தமஸ் என்ற குணம் விசேஷம்.  உள்ளூற ஸ்பரிசம் என்ற உணர்வு உடையவை.

எட்டாவது படைப்பு குறுக்காக உடலமைப்பு உள்ளவை. (கால் நடைகள்- நிமிர்ந்து நிற்காமல் சஞ்சரிப்பவை) இதில் இருபத்தியெட்டு விதங்கள் என்பது ஒரு கணக்கு.  இவைகளுக்கு அறிவு இல்லை, மிக தாமசமானவை. உணர்வு என்ற தத்துவத்தால் மட்டுமே அறியப் படுபவை.  வாசனை மற்றும் ருசியை அறிபவை. தேனீ  போன்றவை.

காளை, மஹிஷம்,(எருமை), மான், பன்றி, பசுக்கள், (antelope) ஒரு வகை மான், இரட்டை நகங்கள் உடைய மிருகங்கள், ஒட்டகங்கள், குதிரை, கழுதை, கோவேறு கழுதை, காளையில் ஒருவகை, எட்டு கால்களுடன் பனி நிறந்த மலைப் பிரதேசங்களில் காணப்படுவது, யாக் என்ற வளர்ப்பு மிருகம், இவைகள் ஒரு நகம் உடையவை. பாலூட்டிகள்.  

ஐந்து நகங்கள் உடையவை:  நாய், குள்ள நரி, ஓனாய், புலி, பூணை, முயல், முள்ளம் பன்றி, சிங்கம், குரங்கு, ஆடு, ஆமை, உடும்பு, முதலை வகைகள்,  கழுகு, கருடன், கொக்கு,கழுகு ஜாதி ஸ்யேன-பாஸ முதலியன,  கரடி, மயில், ஹம்சம்,  பொதுவான பறவைகள், சக்ரவாகம், காகம், ஆந்தை முதலியன- இவைகள் ஆகாயத்தில் பறக்கும் பறவைகள்.

கீழ் நோக்கி நகருபவை ஒன்பதாவது.  ஊர்வன.

பாலூட்டிகளில் ஒருவித ஜனங்கள், ரஜோ குணமே அதிகமானவர்கள், தன் வேலையே கவனமாக, துக்கத்திலும் சுகமாக இருப்பவர்கள்,

வைக்ருதர்கள் என்பதில் மூன்றுவகையினர். தேவ சர்கம் என்பவர்- பிறப்பில் தேவர்கள், இதிலும் எட்டு வகையினர்.  இவர்கள் அறிவுடையோர். 

பித்ருக்கள், அசுரர்கள்,கந்தர்வர்கள், அப்சரஸ் என்ற ஜாதியினர், சித்தர்கள், யக்ஷ, ராக்ஷஸர்கள், சாரணர்கள், பூத ப்ரேத பிசாசங்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள், என்ற பத்து பிரிவினர், விஸ்வஸ்ருக் என்ற பகவானால் படைக்கப் பட்டவர்கள். 

 அடுத்து, வம்சங்கள், மன்வந்தரங்கள் பற்றி சொல்கிறேன். ஆத்மபூ என்ற ஹரி தன் ரஜோ குணத்தினால் ஒவ்வொரு கல்பத்திலும்-யுகத்திலும் தன்னைப் போலவே, எல்லையில்லாத தன் சங்கல்பத்தால், தன் ஆத்ம ஸ்வரூபமாக –(தன்னையே நகல் எடுத்தது போல) ஸ்ருஷ்டித்திருக்கிறார்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பத்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-29

அத்யாயம்11 

மைத்ரேயர் தொடர்ந்தார்:   நல்ல விஷயங்கள் எல்லையின்றி இருக்கின்றன. முடிவாக அனைத்தையும் இணைப்பது,பரமாணு என்று சொல்லலாம்.   பொருள்களின் அடிப்படை அதுவே. ஒரு பொருளின் உருவம், அதன் செயல்படும் போக்கு இதை எது நிர்ணயிக்கிறது?  ஏதோ ஒன்று இது தான் என்று வரையறுக்க முடியாமல்  மறைந்து அல்லது தொக்கி நிற்கிறது. அதை தான் பரமாணு என்பர்.

இவ்வாறே காலமும், சூக்ஷ்மமோ, ஸ்தூலமோ,  தீர்மானமாக இது தான் என்று அனுமானம் செய்ய இயலாது. பகவானும் அவ்வாறே. வ்யக்தமாக- தெளிவாக கண்ணுக்கு புலப்படாது ஆனால் இருப்பதை அறிய முடியும். காலமும் பரமாணுவே. (அணுவிலும் மிகச் சிறிய அணு)  சத்- மூலப் பொருள் (கச்சா பொருள்-அடிப்படை வஸ்து-எந்த உருவமும் அமைய அதன் மிகச் சிறிய பாகம்  மண் குட த்திற்கு மண் தேவை என்பது போல) காலத்தின் அளவு கோல் பரமாணு என்ற மிகச் சிறிய பாகம்.  

அணு, பரமாணு என்ற இரண்டு. த்ரஸரேணூ – சூரிய ஒளிக் கற்றையில் தூசிகளின் துகல்கள் போல மிகச் சிறிய அளவு.  இதில் மூன்று வகை: வலையில் விழும் சூரிய ஒளி, வானத்திலிருந்து ஆகாயத்தின் ஒரு துளி விழுந்தது போல, – இதிலும் மூன்று வகைகள்: ஒன்று वेध:  लव निमेष  என்பன. त्रुटि -நொடி- இதன் நூறில் ஒன்று வேத:, மூன்று வேதங்கள் லவ, மூன்று லவங்கள் நிமேஷம் – இவைகளின் மூன்று பங்கு ஒரு க்ஷணம். ஐந்து க்ஷணங்கள் – லகு -இவைகளின் கூட்டுப் பகுதி, காஷ்டா (काष्ठा) எனப்படும்.  लघु என்பதன் பதினைந்து பங்கு  ‘ நாடிகா’. அதன் இரு மடங்கு முஹூர்தம்.  ப்ரஹரம், ஷட்யாமம், சப்தயாமம் என்று எண்ணிக்கை தொடரும். பன்னிரண்டின் பாதி -ஆறு என்பது நான்கு விரல்களின் நான்கு பங்கு.  ஒரு லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில், ஒரு உளுந்து அளவு துவாரத்தில் பொன்னாலான குண்டு (mudhdhu) ஒன்றால் தடைக்கல்கொடுத்து, தண்ணீர் முழுவதும் வெளியாக எடுக்கும் நேரம் ஒரு யாமம். நான்கு யாமங்கள், அதன் நான்கு பங்கு அதாவது பதினாறு யாமங்கள் ஒரு நாள்.  ஒரு பக்ஷம்   பதினைந்து நாட்கள்.  இவை சுக்லம் என்றும் க்ருஷ்ண என்றும் இரண்டும் சேர்ந்து மாதம்.  பித்ருக்களுக்கு அது பகலும் இரவும்.  இரண்டு மாதங்கள் ஒரு ருது – பருவ காலம்.  ஆறு அயனங்கள்- தக்ஷிணம், உத்தரம் என்று.  இரண்டும் சேர்ந்து வருஷம் ஆகும்.  நூறு ஆண்டுகள் மனிதனின் ஆயுட்காலம் – பரமாயுள் – என்பர்.

க்ரஹ, உப க்ரஹங்கள், நக்ஷத்ர , என்ற சக்கரம் பரமாணுவிலிருந்து எண்ணப்படும்.   வருஷம், சம்வத்ஸரம், பரிவத்ஸர, இடா வத்ஸர , அனு வத்ஸர, வத்ஸரம் என்று பேச்சு வழக்கு.

க்ருதம், த்ரேதா, த்வாபரம், கலி என்று நான்கு யுகங்கள். தேவர்களின் இருபத்திரண்டு வருஷங்கள் சாவதானம் எனப்படும். நான்கு, மூன்று இரண்டு, ஒன்று என்று க்ருத யுகத்திலிருந்து வரிசையாக எண்ணப்படும். இரண்டு ஆயிரம், இரு பங்கு, நூற்றுக் கணக்கான என்று எண்ணிக்கைகள். சந்த்யா கால இடைவெளிகளில் காலம் கணக்கிடப்பட்டு நூறு நூறு என்ற வகையில் கணக்கிட்டு யுகங்களை நிர்ணயிக்கிறார்கள். க்ருத யுகத்தில் தர்மம் நான்கு கால்களுடன் இருக்கும்.  (அடுத்து வரும் யுகங்களில் குறைந்து கொண்டே வந்து கலி யுகத்தில் ஒரு காலுடன் நிற்கும்) 

 மூன்று உலகிலும் ஆயிரம் யுகங்கள், ப்ரும்மாவின் தோற்றத்திலிருந்து நாளாகவும், விஸ்வக்ருக்- உலகை படைத்தவர் கண் மூடி இருக்கும் காலம் வரை இரவு என்றும் வகைப் படுத்தினர்.  இரவு முடியும் சமயம் லோக கல்பம் ஆரம்பிக்கும்.  மநு என்பவர்கள்  பதினான்கு பகல்களை ஆளுவர். தங்கள் கால நியமங்களை .  அவர்களே நிர்ணயித்துக் கொள்வர். மன்வந்தரங்களிலிருந்து மனிதர்கள். அவர்கள் வம்சத்தினர் ரிஷிகள், தேவர்கள் எனப்படுவர்.  ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் தேவேந்திரன் என்ற பதவியை ஒருவர் ஏற்பார், மற்ற தேவர்களும் அதே போல தேர்ந்தெடுக்கப் படுவர்.

ஸ்ருஷ்டியின் தினசரி என்று ப்ரும்மாவில் தொடங்கி மூவுலகிலும்  நடைமுறையில் உள்ளது. கால் நடைகள்., பித்ருக்கள், தேவர்கள்- இவர்களின் தோற்றம், அவர்கள் கர்ம பலன்.

மன்வந்தரங்களில் பகவான், சத்வமான தன் மூர்த்திகளுடன், உலகை காக்கிறார்.  தாமஸமான குணம் மட்டுமாக, தன்னை அடக்கிக் கொண்டு தின முடிவில் மௌனமாக, செயலின்றி இருப்பார். அவரை அனுசரித்து பூ முதலான மூன்று உலகத்தினரும், நிசி என்ற இரவு வந்தவுடன், சூரிய சந்திரர்களும் இன்றி, சங்கர்ஷண என்ற அக்னி தகிக்கும் அதில் இருப்பர். அச்சமயம் ப்ருகு முதலானோரை, மஹர் லோகம் செல்ல வேண்டுவார்கள்.  

உடனடியாக கல்ப முடிவு என கடல்கள் ஒன்றாக பொங்கி எழுந்து, சண்ட மாருதங்கள் தட தடக்க, ப்ரும்மாண்டமான அலைகள் மேலெழ ப்ரளயமாக மூழ்கடிக்கும். அதன் முடிவில் அனந்தனை படுக்கையாக கொண்டு பகவான் யோக நித்ரையில் ஆழ்வார்.  ஜனங்களும் அலை அலையாக வந்து  துதி செய்வர்.  கால கதி இவ்வாறு தினம் இரவு என்று மாறி மாறி வரவும், இன்று வரை நூறு மனித ஆயுள், அதாவது ஒரு மனித ஆயுள் நூறு ஆண்டுகள், அது போல நூறு பரமாயுள் எனப்படும். அதை முதல் பாதி, பின் பாதி என்று பிரித்தனர். தற்சமயம் நாம் இருப்பது இந்த இரண்டாவது – பரார்தம்- பின் பாதி.

முதல் பரார்தத்தில்- முன் பகுதியில், , ப்ராம்மோ என்ற ஒரு மகான் இருந்தார்.  அச்சமயம் தோன்றிய கல்பம் – அதற்கான ப்ரும்மா சப்த ப்ரும்மா எனப்பட்டார்.  அதன் முடிவில் அடுத்த கல்பம் பாத்மம் எனப்பட்டது.  அந்த சமயம் தான் ஹரியின் நாபி கமலத்திலிருந்து உலகம் என்ற தாமரை உதயமாயிற்று.   அதன் பின் வாராஹ என்ற கல்பம் வந்தது.  அச்சமயம் ஹரி ஸூகர என்ற பன்றி வடிவில் தோன்றினார்.   இதன் மறு பாதியில்,  ஆதியும் அந்தமும் இல்லாத, ஜகதாத்மாவான  பகவானுக்கு பணி செய்ய நிமேஷ என்பவரை நியமித்தனர்.   இந்த சமயம் அல்லது காலம், பரமாணு  முதலியவைகள், இதன் இரண்டாவது பாதியில்  பூமியின் பெருகி வளர்ந்த விஸ்தீர்ணம்,  பல வித மாறுதல்களுடன் விசேஷங்களுடன் சூழப்பட்ட அண்ட கோசம்,  வெளிப்புறமாக ஐம்பத்தைந்து  கோடி வளர்ந்து விட்டிருந்தது.  பத்திற்கும் மேலான பரமாணுவாக அவர் ப்ரவேசித்த அண்ட கோசம், பல கோடி அண்ட ராசிகளாக பெருகி விட்டிருந்தன.  இந்த காரணங்களால், அதை அக்ஷரம் ப்ரும்ம என்றனர்.  இது தான் மஹாத்மாவான பரம புருஷனின் விஷ்ணுவின் தாமம்- இருப்பிடம் ஆயிற்று.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பதினொன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-49

அத்யாயம்12

மைத்ரேயர் தொடர்ந்தார்.  பரமாத்மாவின்  வழி காட்டலில் பகவானின்  காலம்  என்பதைப் பற்றி இதுவரை சொன்னேன்.  வேத கர்ப – தன்னுள் வேதம் அனைத்தையும் வைத்திருப்பவன் என்ற பகவானின் குணம் என்பதை நான் அறிந்தவரை விவரிக்கிறேன்.

படைத்தல் தொழிலை முதன் முதலில் ஆரம்பித்த சமயம், அவித்யா வ்ருத்தி:- அறியாமையின் வெளிப்பாடு என்ற தாமஸம் நிறைந்த உயிரினங்களே தோன்றின.  மஹா மோஹம், போகத்தில் நாட்டம், க்ரோதம், கண்மூடித் தனமான க்ரோதம் , அதன் முடிவில் தானே அழிவேன் என்ற பயம் இத்துடன் தன் முதல் படைப்பைப் பார்த்து ப்ரும்மாவே மகிழ்ச்சியடையவில்லை. பகவானையே நினைத்து மற்றொரு புதிய பிறவிகளை உருவாக்கினார்.  சனகன், சனந்தன், சனாதனன் மற்றும் சனத்குமாரன் என்ற நால்வர்  – பிறவியிலேயே துறவிகளாக, உலக வாழ்வில் நாட்டமில்லாதவர்களாக பிறந்தனர்.  அவர்களைப் பார்த்து ஸ்வயம்பூவான ப்ரபு சொன்னார்,  புத்திரர்களே!  பிரஜைகளை உருவாக்குங்கள், என்றார்.  அவர்கள் அதை விரும்பவில்லை.  பிறவியிலேயே வாசுதேவ பராயணர்களாக இருந்தனர். மறுத்தனர். இதை தனக்கு செய்த அவமானமாக கருதிய அவர், அந்த நிமிஷம் தோன்றிய கோபத்தை அடக்கவே முயன்றார். ஆனால் அது அவர் புருவத்தில் ஒன்றாக கூடி அந்த  கோபமே நீல லோஹிதனான குமாரன் தோன்றி விட்டான். அந்த சிசு  பலமாக அழ ஆரம்பித்தது. தேவர்களுக்கு முன்னோடியான பவன் என்ற பகவான் அவர்தான். ஜகத்குரோ, எனக்கு நிறைய பெயர்கள் வேண்டும்.  தங்கும் இடங்கள் வேண்டும்.  அதைச் சொல்லுங்கள் என்றார்.   

அதைக் கேட்டு பாத்மபுவர்- பத்மத்தில் தோன்றிய ப்ரும்மா, சமாதானமாக பதில் சொன்னார்.  நீ வேண்டியதை அவசியம் செய்கிறேன், என்று அன்புடன் சொல்லி, பெயர் வைக்கிறேன், பிறந்த உடனேயே அழுதாயா, அதையே உனக்கு பெயராக வைக்கிறேன்.  தேவர்களில் சிறந்தவனே, என் மகனே, ஆரவாரித்து அழுதாய், (ரோதனம்-அழுகை) அதனால் உலகில் உன்னை ருத்ரன் என்றே அழைப்பர் என்றார். இந்திரியங்கள், வாயு, ஆகாசம் முதலான பஞ்ச பூதங்கள், சூர்ய சந்திர, அக்னி இவர்களும்,  முன்னமேயே என்னால் ஏற்படுத்தப் பட்டனர் என் மனதில் ஏற்பட்ட, மன்யு-மநு, மஹினசோ, (அசு:-ப்ராணன்), மஹேசான அல்லது மஹான்சிவ,ருத த்வஜ:, உக்ர ரேதஸ், ( தாங்க முடியாத வீர்யம்) பவன், காலன், வாம தேவன், த்ருத வ்ரதன் ,- இவை உன் பெயர்கள்.

ருத்ரனே! உனக்கு,  புத்தி, வ்ருத்தி, உஸனோமா, நியுத்சு:, ஸர்ப்பி, இலா, அம்பிகா, இராவதீ, சுதா, தீக்ஷா, ருத்ராணீ என்று  ஸ்த்ரீகள்.  

இந்த பெயர்களையும்  பதவிகளையும், இந்த பெண்களையும் ஏற்றுக் கொள்.  இவர்களுடன் படைப்பு செயலைச் செய்.  நீ ப்ராஜபதி. நிறைய பிரஜைகளை உருவாக்கு.  இவ்வாறு ப்ரும்மாவின் வழிகாட்டலில், பகவான் நீல லோஹிதன் தன் சத்வ குணத்தால் தனக்கு சமமான பிரஜைகளை படைத்தார். ருத்ரர்கள், ருத்ரனால் படைக்கப் பட்டவர்கள் இவர்களால் உலகம் நிரம்பியது. கணக்கில்லாமல்  இப்படி ருத்ர கணங்கள் தோன்றவும் ப்ரஜாபதி யோசித்தார்.  சுரோத்தமா!  (ருத்ரன் முதல் தேவன் என்பதால்) போதும், போதும். இது போன்ற பிரஜைகள் போதும். சற்று நிறுத்து. நீயும் தவம் செய். உனக்கு நன்மையுண்டாகட்டும். உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாகட்டும். தவத்தால் தான் முன் ஒருமுறை நீயே உலகை படைத்தாய். தவம் தான் விளக்கு. பரம் ஜோதி. தவத்தால் தான் சகல ஜீவ ராசிகளிலும் அந்தர்யாமியாக இருக்கும் அதோக்ஷஜன் எனும் அவரை மனிதன் அடைகிறான்.

மைத்ரேயர் தொடர்ந்தார்: இவ்வாறு வாகீசன் (ப்ரும்மா) வேண்டிக் கொண்டபின் அவரும் தவம் செய்ய புறப்பட்டார்.  அதன் பின் ப்ரும்மா தன் ஆழ்ந்த தியானத்தால் பத்து பிள்ளைகளைப் பெற்றார்.  உலகில் நல்ல பிரஜைகள் உருவாகவேண்டும் என்பதற்காக. பகவானைப் போலவே சக்தியுடையவர்களாக பிறப்பித்தார். மரீசி, அத்ரி, ஆங்கிரஸ், புலஸ்த்யர், புலஹ:, க்ரது:, ப்ருகு, வசிஷ்டர், தக்ஷன், பத்தாவதாக நாரதர். 

துடையிலிருந்து நாரதர், தக்ஷன் கட்டை விரலில் இருந்து, ஸ்வயம்பூவின் ப்ராணனில் இருந்து வசிஷ்டர், அவருடைய சருமத்திலிருந்து ப்ருகு, கையிலிருந்து க்ரது:, நாபியிலிருந்து புலஹர், காதுகளிலிருந்து புலஸ்தியர், ஆங்கிரஸ் ரிஷி முகத்திலிருந்து, கண்களிலிருந்துஅத்ரி, மரீசி மனசிலிருந்து  என்று பத்து பிள்ளைகள் பிறந்தனர். தர்மம் ஸ்தனங்களிலிருந்து – அந்த இடத்தில் நாராயணர் இருந்தார். அதர்மம் பின் பகுதியில் – அதிலிருந்து உலகம் பயப்படும் ம்ருத்யு வந்தான். ஹ்ருதயத்தில் காமன், புருவத்தில் க்ரோதம், கீழ் உதடுகளில் லோபம், வாயிலிருந்து வாக்கு, கடல்கள் மேட்ரம் என்ற ஜனன உறுப்பிலிருந்து,  நிருரிதி: பாயுவிலிருந்து, நிழலில் இருந்து கர்தமர், இவர் தேவஹூதி என்பவளை மணந்தார்.  மனசிலிருந்தும், தேகத்திலிருந்தும் இவ்வாறு மக்களைப் பெற்றார்.  வாக்கு மகள் தான் ஆனாலும் ஸ்வயம்பூ அவளை விரும்பினார். அவள் விரும்பாவிட்டாலும் அவளை வேண்டினார் என்று கேள்வி.  அதர்மமாக இச்செயலைச் செய்த  தந்தையை, பிள்ளைகள் மரீசி முதலானோர், கண்டித்தனர்.  இது நியாயம் அல்ல. இதுவரை நடந்தது இல்லை, இனியும் நடக்கப் போவதில்லை.  உனக்குப் பிறந்த மகள், அவளை நிர்பந்திக்காதே. ஜகத்குரு என்று பெயர் பெற்ற நீங்கள், உங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்  இது தகாது என்றனர்.  உலகம் உங்களைப் பார்த்து தாங்களும் செய்யத் துணிவர். அது நல்லதல்ல. 

அதன் பின் அவர்கள் பகவானை துதித்தனர்.  ஆத்மாவில் உறையும் பகவான் தான் தன் சங்கல்ப ரூப ஞானத்தால் அவர் மனதில் அதர்மமாக தோன்றிய காமத்தை அடக்கினார்.  தர்மத்தை காக்க வேண்டும் என்று உணர வைத்தார். தன் சந்ததிகள் முன் அவமானப் பட்ட ப்ரும்மா, ப்ரஜாபதியாக இருந்த தன் உடலை தியாகம் செய்தார்.  அதை திசைகள் ஏற்றுக் கொண்டன.

அதன் பின் பகவானின் அனுக்ரஹத்தால் வேதங்களை தன் நான்கு முகங்களிலிருந்தும் வெளிவரச் செய்தார். நான் பழையபடி உலகங்களை எப்படி படைப்பேன் என்று யோசித்தார். நான்கு வேதங்கள், உபவேதங்கள், கர்ம தந்திரம், இவைகளுடன் தர்மம் தன்  நான்கு கால்களுடன் (ஸத்யம், தபோ, தயா, தானம் என்று தர்மத்தில் கால்களாக சொல்வர்) ஆஸ்ரமங்கள் நான்கும் அவரை அடைந்தன.

விதுரர்  எந்த முகத்திலிருந்து வேதத்தின் எந்த பகுதி  வந்தது? என்று  வினவியதிற்கு பதிலாக மைத்ரேயர் தொடர்ந்தார்.  ருக், யஜுர்,சாம, அதர்வ வேதங்கள் கிழக்கு முகங்களிலிருந்து, யாக சாஸ்திரங்கள்,  ஸ்தோத்திரங்கள், ப்ராயச்சித்தம் போன்றவைகளை வரிசைக் கிரமமாக விவரமாகச் சொன்னார்.  ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வம், தன் வேத ஸ்தாபனம், இந்த முகத்திலிருந்து வந்தன.  இதிகாச புராணங்கள், ஈஸ்வரனின் ஐந்தாவது வேதம் , எல்லா முகங்களிலிருந்தும் வந்தன. இவைகள் பலவிதமான தத்துவங்களைச் சொல்லும் .

பதினாறு வித்யைகள் கிழக்கு முகத்திலிருந்து, மேற்கு முகத்திலிருந்து சில, அதிராத்ரௌ என்ற சில , சகோசவம் வாஜபேயம் என்பவைகளைப் பற்றி விவரித்தார்.  வித்யா, தானம், தவம், சத்யம் தர்ம என்ற பதங்கள், ஆசிரமங்கள்,  அதனுடன் உள்ள கார்ய க்ரமங்கள் இவற்றையும் விவரித்தார்.

சாவித்ரம்,(ப்ரும்மசர்யம்)  ப்ராஜாபத்யம் இல்லறம்- சந்ததி தோன்றுதல்- , ப்ராஹ்ம(உபனயனம் ஆன ஒரு வருஷ முடிவு விரதத்தை முடித்தல்) , ப்ருஹத் (வேதம் சொன்னபடி ப்ரும்மசர்யம் நைஷ்டிகி) , வார்த-சொல். அதன் பாகுபாடுகள், வைகானசா,(சமைக்காமல் கிடைத்ததை உண்பவர்) வாலகில்யா: (புதிய உணவு கிடைத்தால், பழையதை தியாகம் செய்பவர்) உதும்பரா:காலையில் எழுந்தவுடன் எந்த திசையை முதலில் காண்கிறார்களோ அந்த திசையில் கிடைத்த பழங்களை மட்டும் உண்பவர்.  .ஃபேனபா: (  பசியை ஜயித்தவர்கள்).  வனம், வன வாசிகள்.

ந்யாசம்,- துறவு.    குடீசகர்கள், (ஆசிரம வாசிகள்) ப்ரும்ஹவாதோ,(ஞான ப்ரதானிகள்)  ஹம்ஸ (ஞானத்தை அடைய  பயிற்சியில் இருப்பவர்கள்) நிஷ்க்ரியர்கள்,(ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவர்கள்)

 ஆன்வீக்ஷிகீ, (ஆத்ம விசாரம்) த்ரயீ (கர்ம வித்யா), வார்தா (ஸுவர்கம் முதலான பலங்கள்), தண்டநீதி (பொருளாதாரம்) என்பவை பற்றி சொன்னார்.

பூ: புவ:ஸ்வ – என்பவை வ்யாஹ்ருதிகள் எனப்படும்.   ப்ரணவத்துடன் சேர்த்து  சொல்வது முறை.

காயத்ரி, உஷ்ணிக் என்ற சந்தஸ் – காவ்ய அலங்காரம் பற்றி சொல்கிறார்.   அதற்கான கட்டுபாடுகள்.

சப்தங்கள் ஏழு விதமாக வெளிப் படும் என்பதைச் சொல்கிறார். ஒவ்வொரு எழுத்தும் அதன் உச்சரிப்பு சரீரத்தின் எந்த பாகத்திலிருந்து வரும் என்பது பற்றி விவரிக்கிறார். (க முதலான ஐந்து வரிசைகள்) ஸ்பர்சம் , அகாரம் முதலான உயிரெழுத்துக்கள்- ஸ்வர வர்ணங்கள்; ஊஷ்ம என்பவை ஷஶ்ஸஹ- என்ற நான்கு, அந்தஸ்த என்பவை ய ர ல வ)

நிஷாத, ருஷப, காந்தார, ஷட்ஜ, மத்யம, தைவத பஞ்சம – என்ற ஏழு ஸ்வரங்கள் வந்தன. ப்ரும்மா சப்த ப்ரஹ்ம ஸ்வரூபன்.  வைகரி- வாய் வார்த்தையில் தெரியும் படியும், ஓங்கார ரூபத்தில் வெளியில் தெரியாதவராகவும் இருப்பார்.  

மறுபடியும் ஸ்ருஷ்டி என்ற தன் படைப்புத் தொழிலை எப்படி செய்வேன் என்று யோசித்தார். முன் அத்ரி முதலானவர்களை படைத்தது போலவே மேலும் பலவிதமான ஜீவ ராசிகளை படைக்க ஒரு பெண் பால் வேண்டும் என்பதை நினைத்து தன்னையே இருபாலாருமாக ஆக்கிக் கொண்டார்.  அதில் ஆண் மனு என்ற ஸ்வாயம்புவ மனு,(ஸ்வயம்பூவின் மகன்)  முதல் பிரஜாபதி. அதில் பெண்ணாக தோன்றியவள் சதரூபா.

 சதரூபா என்பவள்  மனுவின் மனைவியானார். அவளிடம் மிதுன தர்மத்தால், ஐந்து பிள்ளைகளைப் பெற்றார்.  ப்ரியவ்ரதன், உத்தான பாதன், மூன்று பெண்கள், ஆகூதி, தேவஹூதி, ப்ரசூதி என்றுபெயர்கள். ருசி என்ற முனிவருக்கு ஆகூதியைக் கொடுத்தார். கர்தமருக்கு தேவஹூதியையும், தக்ஷன் என்ற முனிவருக்கு ப்ரசூதிம் என்பவளையும் கொடுத்தார்.  உலகில் ப்ரஜைகள் நிறைய வேண்டும் என்று விரும்பினார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பன்னிரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-29

அத்யாயம்13

விதுரர் கேட்டார்:   ஸ்வயம்பூ வின் பிரிய புத்ரன் ஸ்வாயம்புவன் சம்ராட்- சக்ரவர்த்தி, மனைவியுடன் எங்கு எப்படி இருந்தான்? ஆதி ராஜா அவன் சரித்திரத்தையும் சொல்லுங்கள் முனிவரே – அவரும் ஹரியை ஆராதிப்பவன் தானே.  (விஷ்வக்-விஸ்வமே, சேனா- ஞான லக்ஷணா)  

தன் மனைவியுடன் , ஸ்வாயம்புவ மனு வேதகர்பன் என்றழைக்கப்படும் ப்ரும்மாவிடம் சென்றார். தந்தையே, தாங்கள் தான் உலகத்துக்கெல்லாம் பிறப்பைத் தருபவர்.  அவர்கள் வாழ்க்கையின் போக்கை நிர்ணயிப்பவர், உங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்வோம்? என , ப்ரும்மா சொன்னார்.

“மகனே! மிக்க மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் நன்மை உண்டாகட்டும். நீ இப்பொழுது பூமியின் நாயகன்.  குற்றம் குறையின்றி நியாயமாக ஆட்சி செய். மனப்பூர்வமாக உன்னை ஆசிர்வதிக்கிறேன். முதல் கடமை உன் சந்ததி வளரட்டும். அது தான் மிகப் பெரிய சக்தி.  அவர்களை உனக்கு சமமான குணவான்களாக தயார் செய். பூமியை தர்மமே பிரதானமாக ஆட்சி செய். யாக காரியங்களால் பரம புருஷனான ஸ்ரீ ஹரியை ஆராதித்து வா. இது தான் எனக்கு நீ செய்யும் மிகப் பெரிய கைங்கர்யம்.  பிரஜைகளை நல்ல முறையில் பரி பாலனம் செய்து வந்தாலே, ஹ்ருஷீகேசன் (விஷ்ணுவின் பெயர்) மகிழ்ச்சியடைவார்.  அவரே ஜனார்தனன் யாகமே அவர் அடையாளம். அவர் ஆத்மா திருப்தியடையவில்லையெனில் அனைத்து சிரமங்களும் வீணே.

கட்டளையிடுங்கள், பகவான் விருப்பப் படியே செய்கிறேன். எங்களுக்கு வசிக்க இடம் வேண்டுமே. பூமி அனைத்து ஜீவராசிகளுக்கும் இருப்பிடமாக இருந்து வந்தது. இப்பொழுது நீரில் மூழ்கி விட்டதே. அதை எப்படி வெளிக் கொணர்வேன்? என்றார் மனு.

ப்ரும்மாவும் பூமியை எப்படி வெளிக் கொணர்வோம் என்று சிந்தித்தார்.  நான் தேவ அசுரர்களை படைக்கும் வேலையில் மும்முரமாக இருந்த சமயம் பெருகிய ஜலத்தில் மூழ்கி பூமி ரஸாதளம் சென்று விட்டாள். நான் என்ன செய்வேன்? பகவான் தான் வழி காட்ட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அவரது நாசியில் இருந்து, கட்டை விரல் அளவு சிறிய வராகம் ஒன்று வெளி வந்தது. பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தரத்தில் இருந்த அந்த வராகம், யானை அளவு வளர்ந்தது.  அத்புதமான காட்சி.மரீசி முதலிய ரிஷிகள், குமாரர்கள், இவர்களுடன் மனுவும், அந்த பன்றி ரூபத்தைப் பார்த்து தங்களுக்குள் என்னவாக இருக்கும் என்று பேசிக் கோண்டனர்.  ப்ரும்மாவும், அஹோ, என்ன இது? என் நாசியிலிருந்து வந்தது, அடுத்த க்ஷணத்தில் பெரிய மலை போல நிற்கிறது, பகவனே தானோ, யக்ஞ ரூபனான ஸ்ரீ ஹரியே, என் வருத்தத்தை உணர்ந்து வந்திருக்கிறார் போலும் என்று வியந்தார். இப்படி தன் பிள்ளைகளுடன் வியந்து அவர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயெ, பெரிய கர்ஜனை கேட்டது. மலையரசன் போல ஓங்கி வளர்ந்து நின்ற யக்ஞ புருஷன்,  அவரையும், அவர் பிள்ளைகளையும், மற்றும் அங்கு கூடியிருந்த மரீசி முதலான , ரிஷி முனிவர்களையும் ஆறுதல் அடையச் செய்தான். ஜன, தப, சத்ய லோகங்களில் வசித்தவர்கள்,அந்த உறுமலைக் கேட்டு, தங்கள் குறையைத் தீர்க்க வந்து விட்டான் என்று எண்ணி, துதி செய்யலானார்கள். மலைகளின் இடையே தொடர்ந்து கேட்கும் எதிரொலி போல பகவானின் கர்ஜனை அண்ட முழுதும் எதிரொலித்தது.  வேதத்தை முழுமையாக அத்யயனம் செய்து அதன் படியே வாழ்க்கையை நடத்தும் ஞானிகள்,  அவர்களின் எதிர் பார்ப்பை  நியாயப் படுத்துவது போல, யக்ஞ புருஷன் ஜலத்தில் குதித்தான்.  

உயர தூக்கிய வால், வலிமையான உடல், நீண்ட கூர்மையான ரோமங்கள் அடர்ந்த முதுகு பாகம், அதிவெண்மையான பள பளக்கும் பற்கள், பகவான் தன் அழகிய சுய ரூபத்தை மறைத்துக் கொண்டு ஒரு மிருகமாக, ரிஷிகளின் துதிகளை கேட்டபடி, ஒரே தாவலில் ஆகாயத்தை அடைந்து பயனித்தார்.  தன் மூக்கினால் நுகர்ந்து பூமியை தேடுவது போல, இருந்தது. தடாலென்று கடலில்  விழுந்த வேகத்தில் சமுத்திரம் அலறியது. என் மடியில் ஏராளமான ஜீவராசிகள் தவிக்கின்றன. இது என்ன என்று ஆர்பரித்த தன் அலைகளால் கேட்பது போல இருந்தது. யக்ஞேஸ்வரா, பாஹி மாம் என்று அலறுவது போல.

தன் குளம்புகளால் நீரைக் கிழித்து உட் புகுந்த வராகம் பூமியைக் கண்டவுடன், தன் கூரான பற்களால் பூமியை தூக்கிக் கொண்டு நீரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில் பயங்கர கோபத்துடன் சிங்கம் போல கர்ஜித்துக் கொண்டு தாக்க வந்த ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை தாக்கி கொன்றார்.  தமால புஷ்பம் போன்ற நீல வண்ணன், வெண்மையான பல் நுனியில் பூமியை அனாயாசமக ஒரு யானை விளையாடுவது போல தூக்கிக் கொண்டு வருவதை பார்த்த விரிஞ்சி முதலானோர், வாழ்த்துப் படல்களை பாடியபடி அவரை எதிர்கொள்ள வந்தனர்.

ரிஷிகள் வாழ்த்துகின்றனர். ஜிதம் ஜிதம்- வெற்றி, வெற்றி – யக்ஞ பாவன- யாக ருபியான நீ, மூன்று வேதங்களுமே உன் சரீரம்.  ரோமத்தின் அடர்த்தியில் அவைகளை மறைத்துக் கொண்டு, நிஜ  சரீரம் அல்லாமல், காரண (முக்கியமான காரணத்திற்காக) சூகரன்- பன்றி உருவம் எடுத்த உனக்கு நமஸ்காரம்.  

துஷ்டர்கள் உன்னைக் காண்பது கூட அரிது.  இந்த சரீரமோ அவர்கள் பார்த்து நடுங்கும்படி உள்ளது. யாகமூர்த்தியே! உன் சருமத்தின் ரோமங்கள் சந்தஸ் (வேத மந்திரங்கள்) என்றால், . ஆஜ்யம்(நெய்)  உன் கண்கள், பாதங்கள், நான்கு  முக்கிய புரோஹிதர்கள். (யாகத்தில் நால்வர், நான்கு பக்கங்களிலும் அமர்ந்து செய்வது சாதுர்ஹோத்ரம்).  உன் தலையே யாக குண்டம்.   உன் வயிறு அக்னி, காதுகள் (துவாரத்துடன்) கரண்டிகள்,  ஹவிஸ் மீதி உன் வாய், நாசியில் கிரஹங்கள், நீ மெல்லுவது சாதுர்ஹோத்ரம் என்ற யாகம். 

சூகர (பன்றி) உருவமே யாக ஸ்வரூபம் என்று வர்ணிக்கிறார்.

சர்வ யாக கர்த்தாவான உனக்கு நமஸ்காரம். அனைத்து மந்திரங்களுக்கும் அடிப்படையான செயலே பிரதானமான இந்த உன் அவதாரத்துக்கு நமஸ்காரம்.  வைராக்யம், பக்தி இவைகளால், தன்னையே வென்றவர்கள் பெறும் உத்தமமான ஞானமே நீ தான்.  வித்யா குருவும் நீயே.  உனக்கு நமஸ்காரம்.

பல்லின் ஒரு நுனியால் தண்ணீரிலிருந்து வெளிக் கொணர்ந்த பூமி, பிரகாசமாக தெரிகிறாள். வனத்திலிருந்து வெளிவரும் கஜேந்த்ரன் கையில் பூவை ஏந்தியிருப்பது போல உன் கையில் பூதரா-   பூ மாதா தெரிகிறாள்.  (பூதரா – மலைகளையும், மரங்களையும் தாங்குபவள்)  

 இவ்வாறு பலவிதமாக துதி செய்கின்றனர்.  அதை கேட்டபடியே, பகவான் தன் குளம்புகளால் சமுத்திர நீரை சற்று விலக்கி பூமியை ஸ்தாபனம் செய்கிறார்.

ரிஷிகளும் மற்றவர்களும், உலக மக்களுக்கு என்றும் நன்மையை செய்வாயாக என்று  வேண்டிக் கொள்கின்றனர். வராகமாக வந்து பூதேவியை காத்த இந்த வரலாறு படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் பல நன்மைகளைத் தரும் என்று  பலஸ்ருதி (பலன்) சொல்லப் படுகிறது.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதின்மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-50 

அத்யாயம்14

காரண சூகரன்- காரியத்திற்காக பன்றி உருவம் எடுத்தவன்  எனும் பொருள் பட பகவான் பன்றியாக -வராஹமாக வந்த கதையை விதுரர் – மைத்ரேய முனிவர் சொல்லக் கேட்டார். ஆனால் அவருக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அதை முனிவரிடம் சொன்னார்.

முனிஸ்ரேஷ்ட! யக்ஞ மூர்த்தியான ஹரியால் முதல் தைத்யன் ஹிரண்யாக்ஷன் கொல்லப் பட்டான் என்று கேட்டிருக்கிறோம். பூமியை தூக்கிக் கொண்டு  பகவான் வெளிவருகிறார், அசுரன் எதிர்படுகிறான், அவர்கள் இடையில் என்ன காரணத்தால்  சண்டை நடந்தது?  

மைத்ரேயர் விளக்குகிறார்.  அது தான் ஹரியின் அவதார கதை. நீ விரும்பி கேட்கிறாய், சொல்கிறேன் கேள். மனிதர்களின் மரண பயத்தை ஒழிக்கும். ம்ருத்யுவின் பாசம் என்பதை (கயிறு)  அறுக்கும்.

இந்த ஹரியின் சரித்திரத்தைச் சொல்லி, குழந்தையாக இருந்த  உத்தான பாதரின் மகன் துருவனை,  பாடும் முனி நாரதர் , அனேகமாக மரணத்தின் வாயிலை எட்டி இருந்த நிலையில் ஸ்ரீ ஹரியின் பதமாகிய வைகுண்ட லோகத்துக்கு போகச் செய்தார்.  இன்றளவும் இந்த இதிகாசம் வர்ணிக்கப் படுகிறது. நானும் ப்ரும்மாவே தேவ தேவர்கள் மத்தியில் சொல்லி கேட்டிருக்கிறேன்.

தக்ஷனின் மகளான திதி, மரீசி முனிவரின் மகனான காஸ்யபர் என்ற தன் கணவரிடம் சந்ததி வேண்டும் என்று வேண்டினாள். சந்த்யாகாலம் என்பதையும் பாராமல் நிர்பந்தித்தாள். அவரோ இன்னமும் தன் அக்னி ஹோத்ர காரியத்தை முடிக்காமல் அந்த யாக சாலையிலேயே இருந்தார்.

திதி கணவனிடம் உரிமையுடன் சொன்னாள்: வித்வன், வாழைத் தோட்டத்தை யானைக் கூட்டத் தலைவன் அலைக்கழிப்பது போல, என்னை காமன் அலைக்கழிக்கிறான்.  மற்ற மனைவிகள் மத்தியில் என்னை நீங்கள் உயர்வாக எண்ணுவது தெரியும். புத்ரனுக்காகத் தானே மணம் செய்து கொண்டீர்கள் என்று வெட்கத்துடன், கீழ் நோக்கி பார்த்தபடியே சொன்னாள்.  என் தந்தை எங்களைத் தனித்தனியாக விசாரித்தார். “குழந்தாய்! யாரை விரும்புகிறாய்” என்றார்.  நாங்கள் பதின்மூன்று பேர். யாருக்கு யாரைப் பிடிக்கிறதோ அவருக்கே மணம் செய்து கொடுத்தார்.  எந்த விதமான ஆசையானாலும் தீர்த்துவைப்பது தானே பதியின் கடமை- என்று இவ்வாறு நிறைய பேசும் மனைவியை, சமாதானப் படுத்தினார்.   நான்கு ஆஸ்ரமங்களில் இல் வாழ்வை தேர்ந்தெடுத்த பின், அதன் கஷ்ட நஷ்டங்களை ஏற்கத் தான் வேண்டும். கடலை நீரில் செல்லும் வாகனத்தில் கடப்பது போல.  மானினீ! நீ என்னில் பாதி – இருவருமாகத்தான் இந்த வாழ்க்கை என்ற வண்டியை ஓட்ட வேண்டும்.  உனக்கும் நான் செய்ய வேண்டிய கடமை உள்ளது. அதனால் நீ விரும்பும் மகனைத் தருகிறேன் என்று சம்மதித்தார்.  ஆனால் இது கோரமான வேளை. நாலா புறமும் பயங்கரமான காட்சிகளைக் காண்கிறேன்.  இது போல சந்த்யாவேளையில் பகவான் பூதபாவன: தன்னுடைய பரிவாரத்துடன், பூதங்களாகிய ஏவல் செய்யும் பூதங்களுடன்,  வ்ருஷபாரூடனாக  சஞ்சரிக்கிறான். அவர் வேஷமே தனி. விரித்த கேசமும், ஜடையும், ஸ்மசான பஸ்மம் பூசிய உடலும்,  மூன்று கண்களாலும் உலகை பார்க்கிறார்.  உன் மைத்துனன் தானே – (தக்ஷனுடைய மற்றொரு பெண் தாக்ஷாயணி பார்வதி, அவளை மணந்தவர் என்பதால் – (ஒரே குடும்பத்தின் மாப்பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சகோதர்கள் என்பது வழக்கு ) அவருக்கு தன் ஜனங்கள், பிறர் என்ற எண்ணமே கிடையாது.  யாரையும் கொண்டாடவும் மாட்டார், யாரையும் அதிகமாக வெறுக்கவும் மாட்டார். அவரை வணங்குவோம்.  இவருடைய சரித்திரம் தூய்மையானது.  சூழ்ந்து இருக்கும் அவித்தையை அகற்ற புத்திமான்கள், கல்வியில் கரை காண விரும்புபவர் இவரை வணங்கி வேண்டுவர்.  இவர்களைப் பொறுத்தவரை அதிசயமானவர். தன்னைப் பொறுத்தமட்டில் இப்படி அலங்கோலமாக திரிகிறார். என்று சிரிப்பவர்கள் அசத்துக்கள்.  அறிவில்லாதவர்கள். தன்னிலேயே தன்னைக் காணும் இவரை விவரம் தெரியாதவர்கள் வஸ்திர, போஜன, ஆபரண, அனுலேபனம், மாமிச பக்ஷிணிகள் என்று தங்களிஷ்டப் படி இருப்பவர்கள் எப்படி அறிவார்கள் ? விஸ்வமே மாயை தானே.  இதற்கு ப்ரும்மாதிகள் காவலாளிகளாக இருக்கிறார்கள்.  இவருடைய ஆக்ஞை படி  புது ஸ்ருஷ்டி தோன்றுகிறது.  பிசாச வேஷம். ஆனால், செயலோ சரித்திரமோ  நினைத்து கூட பார்க்க முடியாதது.

கர்பவதியான திதி பயந்தாள்.  ப்ராணா யாமம், ஜபம், தபம் என்று இருந்த கணவரிடம் வேண்டினாள். அகாலத்தில் ஜனித்த என் குழந்தையை பூத கணங்கள் எதுவும் செய்து விடக் கூடாது என்று. ருத்ரனை நமஸ்கரித்தாள்.

नमो रुद्राय महते देवायोग्राय मीढुषे । शिवाय न्यस्तदण्डाय धृतदण्डाय मन्यवे| |

மகானான ருத்ரனுக்கு நமஸ்காரம்.  துக்கத்தை நீக்குபவர் – दु:खं द्रावयतीति -रुद्र:  

मीढुषे -सकामेषु फल सेचनकर्त्रे  – பொருளை வேண்டுபவர்களுக்கு பலன்களை வாரி வழங்குபவர்

எதையும் வேண்டாதவர்களுக்கு சிவாய – மங்களமானவர், ந்யஸ்த தண்டாய – ஆயுதங்களை எடுக்க மாட்டார் அதே சமயம் துஷ்டர்களிடம் கையில் ஆயுதத்துடன் காட்சி தருவார்.  சம்ஹாரம் அவரது செயல். அவருடைய மன்யு – கோபத்திற்கு நமஸ்காரம்.  என்று துதித்தா ள்.

 உமை சகோதரி யானதால், அவள் கணவரான பகவான் என்று உரிமையுடன் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என்றாள்.   சதி பதிகள் நலனை காப்பவர் என்பதால் தம்பதிகள் ருத்ரனை வணங்குவது வழக்கம்.

இப்படி தன்னைத் தானே நொந்து கொள்ளும் மணைவியை கஸ்யபர் சமாதானப் படுத்தினார்.  பிறக்கும் குழந்தைகள் உலகில் துன்புறுத்தும் குணங்களோடு பிறப்பார்கள். அதனால் என்ன? நாம் பகவானை வேண்டுவோம்.   அவர்கள் அக்ரமம் அதிகமானால் பகவான், தானே அவதரித்து அவர்களை அழிப்பார்.

திதியின் வருத்தத்துக்கு எல்லையே இல்லை. எனினும் ஒரு சமாதானம் பகவான் கையால் வதம் செய்யப் படுவார்கள் என்பது.  “அப்படியே இருக்கட்டும். மறு பிறவியாவது நன்மையாக  இருக்கும்”  என்று தன்னை தேற்றிக் கொண்டாள்.

கஸ்யபர் அவள் வருத்ததைப் போக்கும் உத்சாக வார்த்தைகளைச் சொன்னார்.  இந்த புத்திரர்களின் வழி வரும் நம் சந்ததிகள் புடம் போட்ட தங்கம் போல ஞானிகளாக, பக்தர்களாக இருப்பார்கள் என்றார்.  பகவான் கைவிட மாட்டார். நம் பேரன் மகா பாகவதனாக இருப்பான்.  உலகிலும் புகழ் பெறுவான்,  உலகை துறந்து  வைகுண்டம் செல்வான்.  பேராசை இல்லாமல், அடம்பரம் எதுவுமின்றி, நல்ல குணவானாக, எப்பொழுதும் மகிழ்ச்சியாக, மற்றவர்கள் துன்பப் படுவதை சகிக்காதவனாக, இருப்பான். அவனுக்கு சத்ருவே இருக்க மாட்டார்கள்,  கோடை காலத்து கடும் தாபத்திலும் சந்திரன் குளிர்ந்து இருப்பது போல இருப்பான்.  உள்ளும் புறமும் சுத்தமானவனாக, தாமரை மலர் போன்ற கண்களுடன், பகவானே அனுக்ரஹித்த அழகிய ரூபத்துடன்,  உன் பேரன்,  ஸ்ரீயின் பதியான வைகுண்ட வாசியை காணும் அருள் பெற்றவனாக இருப்பான். 

இதைக் கேட்டு திதி சமாதானம் அடைந்தாள்.  தன் துஷ்ட பிள்ளைகளும் ஸ்ரீ க்ருஷ்ணரால் வதம் செய்யப்படுவார்கள் என்பதும் அவள் துக்கத்தைக் குறைத்தது. அமோகமான பேரனின் பிறப்பை எதிர் நோக்கலானாள். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதிநாலாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-50    

 அத்யாயம்-15

 ஸ்ரீ சுகர் சொன்னார்:  

திதி மிகவும் பயந்தாள். தன் மகன் உலகத்தில் துன்பத்தையே விளைவிப்பான் என்பது அவளைக் கவலைக்குள்ளாக்கியது. அதனால் பிள்ளைப் பேற்றை தானே தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாள். தேவர்களும் கலங்கினர். என்ன ஆகும்? பலசாலியாக பிறக்கப் போகும் குழந்தை சூரிய சந்திரர்களை கூட மறைத்து விடக் கூடும். இருளில் மூழ்குவோம். இந்திராதி தேவர்கள் தங்கள் செயல்களைச் செய்ய முடியாது என்று சந்தேகித்தனர். எனவே  உலகை சிருஷ்டித்த பகவானை துதி செய்ய ஆரம்பித்தனர்.

“விபோ! நாங்கள் கவலைப் படுவது எதனால் என்று அறிவீர்கள்.  காலத்தால் அழியாத ப்ரபாவம் தங்களுடையது.  கஸ்யபருடைய சந்ததி எங்களை அழிக்கும் என்று பயப்படுகிறோம்.

விக்ஞான வீர்யாய –சிறந்த ஞானியான நீங்கள் உங்கள் மாயையால், முக்குணங்களை உண்டாக்கினீர்கள்.  அவ்யக்தரான- வெளிப் படையாகத் தெரியாத மறை பொருளான-  உங்களுக்கு வணக்கம்.

உங்களைப் போலவே மனதில் எண்ணி புவனத்தை உருவாக்கினீர்கள். நல்லதும் கெட்டதுமாக கலந்து தான்   என்பதை அறிவோம். யோகிகளுக்கும், ப்ராணாயாமம் முதலியன செய்து புலன்களை வென்றவர்களுக்கும் உங்கள் அருளைப் பெற்றவர்களுக்கும் என்றுமே தலை குனிவு ஏற்பட்டதில்லை.

உங்கள் சொல்லால், கயிற்றால் கட்டி வைத்த பசுவைப் போல நாங்கள் கட்டுப் படுகிறோம். லோகத்தில் யாக காரியங்களில் செய்யும் பலி- ஹவிஸ்  – என்பதை பெறுகிறோம்.

ஆகவே, எங்களுக்கு நன்மையை செய்ய வேண்டுகிறோம்.  உலகம் தாமஸ குணத்தில் மூழ்கி விட்டால்,  யாக கர்மாக்கள் நின்று விட்டால், என்ன செய்வோம் என்று கவலைப் படுகிறோம்.

திதியின் கர்பத்தில் வளரும் ப்ரஜாபதி காஸ்யபரின் குழந்தை உலர்ந்த கட்டையில் தீ பிடித்தது போல வேகமாக வளர்ந்து வருகிறது.”

மைத்ரேயர் சொன்னார்:  ப்ரும்மா பலமாக  சிரித்தார்.  சப்த கோசரன் அல்லவா?  பிரியமாக, அவர்களுக்கு ஆறுதலாக பதில் சொன்னார். என் மானஸ புத்திரர்கள்,  உங்களுக்கு முன் பிறந்தவர்கள்.  சனகன் முதலானோர்.  அவர்களுக்கு எதிலும் பற்றில்லை. உலகைச் சுற்றி வந்தவர்கள் ஒரு சமயம் வைகுண்டம் சென்றனர்.   அனைவரும் வணங்கும் இடம் அது. அங்கு இருப்பவர்கள் அனைவரும் வைகுண்ட மூர்த்தி மஹா விஷ்ணு  போலவே உடைகள் ஆபரணங்களுடன் இருப்பார்கள்.  ஹரி ஆராதனை, தர்மத்தை அனுசரித்தல் போன்ற தங்கள் செயல்களால், அந்த இடத்தில் இடம் பிடித்தவர்கள். அங்கு தான், ஆதி புருஷனான விஷ்ணுவுடன் பவனும், வாகீசனும் இருப்பர்.  காமதேனு, மற்றும் பருவ காலம் இன்றியும் பழுக்கும் வித விதமான மரங்களும்  சுகமே உருவாக இருந்த இடம். அந்த இடத்தில் சனகாதி நால்வரும் மெதுவாக ரசித்து ஒவ்வொன்றையும் பார்த்து வியந்தபடி சென்றனர்.

தங்கள் துணைவியருடன் விமானத்தில் சஞ்சரிக்கும் போதும் பாடிக் கொண்டே செல்கின்றனர். வைகுண்டவாசியான மஹா விஷ்ணு அவர்களின் தலைவன். அதே போல ஜலத்தின் அடியில் இன்னும் மலராத மது மாதவி புஷ்பங்களிலிருந்து நல்ல வாசனை வீசுகிறது.  புறாக்கள், சாரஸ, சக்ரவாக, தாத்யூஹ, ஹம்ச, கிளி, தித்திரி, பர்ஹிணீ -மயில்  -என்ற பறவைகளின் கூக்குரல் கோலாஹலமாக இருக்கிறது. நடுவில் ஒரு ப்ருங்கராஜன்- ராஜா தேனீ ஹரிகதையை பாட ஆரம்பித்த சமயம் அவையும் தங்கள் கூக்குரலை நிறுத்தி பாட்டைக் கேட்பது போல இருக்கிறது.

·         மந்தாரம், குந்த (மல்லிகை), குரப, உத்பல, ஸ்தபக, அர்ண, புன்னாக, நாக பகுல, அம்புஜ, பாரிஜாதா: என்ற மலர்கள் துளசி மாலையை அணிந்தவனுக்கு அர்ச்சனை செய்யப் படும்பொழுது, தங்களை தாங்களே பெருமித்துடன் உணர்கின்றன.

ஹரியின் பாதங்களை கண்ட மாத்திரத்தில்,  வைதூர்ய, மரகத, பொன் இவை நிரம்பிய விமானங்களில் வருபவர்கள்,  (அவர்கள் இடுப்பும், உடலும் பெரிதாக இருந்தாலும்,) புன்னகையுடன், வருகின்றனர். மனதில் ஸ்ரீ க்ருஷ்ணனே நிறைந்திருக்கும் சமயம், உடலழகை  பெரிதாக நினைக்கவில்லை போலும்.

லக்ஷ்மி தேவியின் இருப்பிடம்  என்பது எங்கும் தூய்மையாய் இருப்பதில் தெரிகிறது.  பணியாளர்கள் கூட மிக விருப்பத்துடன் பணியை செய்கின்றனர். ஏதோ ஒரு விதத்தில் அங்கு இருப்பதே பாக்யம் என்று நினைப்பது போல.  கிணறுகளில் அம்ருதம் போன்ற தெளிவான நீர் நிறைந்திருக்கிறது.  துளசி வனத்தைப் பார்த்து  அங்கு வரும் லக்ஷ்மி தேவி பகவானை நினைக்கிறாள். அர்ச்சனைக்கு பயன் படுத்துகிறாள்.  இந்த வைகுண்டத்தை காணாதவர்களும், கேளாதவர்களும் ஏதோ வேண்டாத கதைகளை கேட்டு பொழுதை வீணடிக்கின்றனர்.

தங்கள் யோக மாயா பலத்தினால்  சனகன் முதலான குமாரர்கள் அந்த வைகுண்டம் வந்து சேர்ந்தனர்.   விஸ்வகுரு வசிக்கும் இடம். புவனங்களில் உள்ள அனைவரும் வணங்கும் பகவான் இருப்பதாலேயே, விசித்ரமாக மனதை கவர்ந்த அந்த இடத்தை கண்டு அவர்கள் பிரமித்தனர்.  மிக்க மகிழ்ச்சியுடன்  ஒவ்வொரு அறையாக பார்த்துக் கொண்டே நிதானமாக நடந்தனர். ஆறு நடைகளைக் கடந்து ஏழாவது நடையை அடைந்த பொழுது, இரு தேவர்கள் நின்றிருப்பதைக் கண்டனர். ஒத்த வயதினர், கையில் கதையுடன், விலையுயர்ந்த கேயுரம், குண்டலங்கள், கிரீடங்களுடன் அழகிய அலங்காரங்களுடன் நின்றிருந்தனர்.  மதம் கொண்ட யானையின் மத்தகத்து முத்துக்களால் ஆன வன மாலை தரித்து, உரமேறிய நான்கு புஜங்கள், கைகளை இடுப்பில் வைத்த படி, முகத்தில் புருவம் நெரிய, சிவந்த கண்கள்,  சற்று எதிர்ப்பை காட்டும் முகபாவத்துடன்  தென்பட்டனர்.

முதல் ஆறு நடைகளிலும் தடையின்றி நுழைந்தவர்கள், இங்கும் அதே போல நினைத்து ஏழாவது நடையின் அறையிலும் அதே போல எந்த தயக்கமும் இன்றி நுழைய முற்பட்டனர்.  யாருமே அவர்களை வெளியாளாக பார்க்கவில்லை. அங்கிருந்த முனிவர்களும் மற்றவர்களும் சிறுவர்கள் என்று எண்ணியோ, தடுக்கவில்லை. அங்கும் பெரிய வஜ்ர கதவுகள் இருந்தன. கத்தியால் தடுத்த காவலர்களைப் பார்த்து சிரித்தனர்.  பகவானின் அறை வாசலில் அவருக்கு ப்ரதிகூலமாக நடந்து கொள்கிறார்கள் என்று எண்ணினர்.  அந்த சிரிப்பு காவலர்களை வெகுள வைத்தது.   குமாரர்களும் தங்களை தடுத்த காவலர்களை சற்றே சினத்துடன் நோக்கினர்.

அவர்களைப் பார்த்து, “யார் நீங்கள்? ஏன் எங்களை தடுக்கிறீர்கள்? பகவானை தரிசிக்க வந்த அடியார்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் என்ன காவலர்கள் நீங்கள் ?இங்கு இருப்பவர்களும் தர்மத்தைக் கடை பிடிக்கும் உயர்ந்த ஞானிகள்.  ப்ரசாந்தமான – மிக அமைதியான பர புருஷனின் வாசலில் நிற்கும் நீங்கள் உங்களைப் போலவே எங்களையும் அறிவிலிகள் என்று நினைத்தீர்களா? “

பகவான் இருக்கும் இடத்தில்  தகுதியுள்ளவன், இல்லாதவன் என்ற பாகுபாடே கிடையாது.  உயிரினங்கள் அனைத்தையும் தன் வயிற்றில் வைத்திருப்பவன், மண் பானையில் இருக்கும் ஆகாசமே தான் வானத்திலும் என்று உணர்ந்த தீரர்கள், இங்கு இருப்பவர்கள்.  பூலோக  அரசர்கள் வேண்டுமானால், தன், தனது என்று பேதம் பார்க்கலாம்.  பயம் தான்  பாகுபாடு செய்வதின் அடிப்படை. இங்கு பயம் ஏது? தேவர்களுக்கு சமமான உங்கள் உடைகளும், ஆயுதங்களும், எதற்கு? அவைகளுக்கு ஒரு பயனும் இல்லை. வைகுண்ட நாதனான பகவானின் சன்னிதானத்தில் நின்று கொண்டே தவறு செய்யும் உங்களுக்கு என்ன அபராதம் விதிக்கலாம்? யோசிக்கிறோம்.  காம க்ரோதங்கள் நிறைந்த இடம் பூலோகமே. அங்கு அரசர்களும் தங்கள் உடமைகளை காக்க உங்களைப் போன்ற காவலாளிகளை நியமிப்பர். அங்கு செல்லுங்கள். தன்னுடைய, பிறருடைய என்று என்று வித்தியாசம் பாராட்டுவர். காம, க்ரோத லோபங்கள் தலைவிரித்தாடும் இடம் அது.  இதற்குள் தங்கள் தவறை உணர்ந்த காவலர்கள்,  பயந்து நடுங்கிஅவர்கள் காலில் விழுந்தனர். தவறு செய்விட்டோமே என்று பரிதவித்தவர்கள், குமாரர்களைப் பார்த்து வேண்டினர். “  உங்களை தடுத்தது எங்கள் தவறு.  அதற்கு நீங்கள் சினம் அடை ந்ததும் இயல்பே. பக்தர்களான நீங்கள் தரும் தண்டனையை ஏற்கிறோம்.  எந்த  மட்டமான நிலையில் இருக்க நேர்ந்தாலும், பகவானின் நினைவு மட்டும் எங்களை விட்டு அகலாமல் இருக்கும் படி அனுக்ரஹிக்க வேண்டும்” என்றனர்.

இதற்குள் பகவானே, லக்ஷ்மி தேவியுடன் அங்கு வந்து விட்டார்.  பரம ஹம்ஸ முனிவர்கள் அந்த குமாரர்கள்.  தேடிப் போய் அழைக்க வேண்டியிருக்க, தானே வந்தவர்களை வரவேற்க வந்து விட்டார்.

அப்படி வந்தவரை தங்கள் சமாதி யோக சாதனைகளின் பலனாக கண்ணாரக் கண்டனர். தன் ஏவலர்கள், மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார்கள் என்று அறிந்து உடனே தானே வரவேற்க வந்தவர்.  ஹம்ஸம் போன்ற வெண்ணிற சாமரங்கள் அனுகூலமாக வீச,   சந்திரனின் குளுமையை ஒத்த வெண்மையான குடை, முத்து மாலைகளின் மேல் குளிர்ந்த நீர்த் திவலைகளை தெறித்த படி, த்வாரபாலர்களையும் சுமுகமாகவே பார்த்தபடி,  எல்லா நல்ல குணங்களும் இவரிடம் தான் உள்ளன எனும்படியான முக பாவம்,  அன்புடன் பார்க்கும் பார்வையே மனதை தொட்டு வருடுவது போல சுகமாக இருக்க, சத்ய லோக பர்யந்தம் பரவிய உலகங்களில் சூடாமணி போல ப்ரகாசிக்கும் வைகுண்டம் என்ற தன் நிவாச ஸ்தானத்தை தன் இருப்பினாலேயே பிரகாசிக்கச் செய்பவராக விளங்குபவர், பீதாம்பரமும், வனமாலையும், புஜங்களில் வளையமும், கருடனின் மேல் வைத்த கையும், மற்றொன்றில் தாமரை மலரை சுழற்றிக் கொண்டும்  வந்தவரைக் கண்டனர்.

மின்னலை பழிக்கும் ப்ரகாசமான மகர குண்டலங்கள் கன்னங்களில் ஒளியைச் சிதற, மணிமயமான கிரீடம், தோள்களில் விலையுயர்ந்த ஹாரமும், மார்பில் கௌஸ்துப மணியும், தன் பக்தர்கள் விரும்பிய வண்ணம் காட்சி தருவதால், இந்த சௌந்தர்யம் அவருடன் இணை பிரியாது இருக்கும் ஸ்ரீ தேவியின் அருகாமையினால் என்பது ஒரு பக்கமிருக்க, என் சௌந்தர்யம் என்று பக்தர்கள் நினைப்பது அவரவர் மனோ பாவமே என்று சொல்வது போல மென் நகையுடன் கூடிய முகம், கண்டவுடன் பணிய வைக்கும் காம்பீர்யம் உடைய அவரைக் கண்டனர்.  இன்னமும் திருப்தியடையாத கண்களுடனேயே அவரை நமஸ்கரித்தனர். 

பாதங்களில் நமஸ்கரித்தவர்களை துளசி மணம் கவர்ந்தது.   அங்கு வீசிய மென் காற்றில் அவர்கள் நாசியை துளைத்தது. தங்கள் சாதனைகளால் புலன்களை வென்றவர்கள் என்ற பிரசித்தி பெற்றிருந்த முனி குமாரர்களும் அந்த மணத்தால் கிளர்ச்சியடைந்தனர் போலும்.  ஒரு நிமிஷ நேரம் பிரமித்தனர். அருண வர்ண அதரங்களில் வெண்மையான மல்லிகை மலர் போன்ற தூய மென்முறுவல் –          ( கவியின் வர்ணனை)  அதுவே ஆசிகளை அள்ளி வீசியது என நினைத்தபடியே குனிந்து அவரது பாதங்களில் வணங்கினர்.  நகங்கள் மணி போல ஒளிர்ந்தன. முழு அழகையும் நம்மால் ஒரே சமயத்தில் கண்ணால் காண முடியாது என்று நினைத்தோ, மனதால் தியானிக்க ஆரம்பித்தனர்.  யோக மார்கத்தில் சாதகர்கள் தியானத்தில் காணும் பரப்ரும்மத்தை நேரில் காணும் பொழுது, அஷ்டைஸ்வர்யம் நிறைந்தவராக அவரை துதி செய்தனர்.

ஹே அனந்த ! தன்  ஹ்ருதயத்திலேயே உறையும் உன்னை அறியாதவர்கள் நீ இருப்பதாக உணர மாட்டார்கள்.  நாங்கள் உணர்ந்திருந்தும் இன்று நேரில் காட்சி தருகிறாய், அஹோ பாக்யம் – என்ன தவம் செய்தோமோ. உங்களிடம் உண்டான எங்கள் தந்தை உபதேசம் செய்தார்.  காணவே முடியாத, ஆத்ம தத்வம்  என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.  எங்கள் காதுகளின் வழியாக அந்த உருவம் எங்கள் உள்ளத்தில் பிரவேசித்து இருப்பதை உணர்வினால் அறிந்தோம். அந்த பரமாத்ம தத்வத்தை இன்று காண்கிறோம்.  தன்னில் லயித்த முனிவர்கள் கூட ஹரியின் விஷயமாக பேசுவதை விரும்புவர்.  அதிலேயே பரமானந்தம் அடைவதாகச் சொல்வார்கள்.  சாலோக்ய, சாமீப்ய என்ற அருகில் இருபதற்கான பதவிகளையும் கூட மறுதலிக்க கூடியவர்கள்.  அதை விட உன் புகழை பாடுவதே சிறந்த அனுபவம் என்று சொல்வார்கள்.  

(காவலர்களை கடிந்து கொண்டது மனதை உறுத்தியது போல மேலும் வேண்டுகின்றனர்)

வண்டு தேனில் மயங்குவது போல இந்த காவலர்களும் உன் பாத பக்தியை என்றும் அனுபவிக்கட்டும்.  எங்கள் வாக்கும் உன் பாத துளசியைப் போலவே தூய்மையானதாக  இருக்கட்டும்.  அளவில்லாத மகிமையுடைய உங்களை நேரில் காணக் கிடைத்த வாய்ப்பு, அதை காண அனுக்ரஹித்ததாலேயே, எங்கள் கண்கள் புனிதமடைந்து விட்டன.  நாங்கள் என்ன கைம்மாறு செய்வோம். இந்த நமஸ்காரங்கள் தான் – திரும்பத் திரும்ப நமஸ்கரிக்கிறோம் என்றனர்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதினைந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-50    

 அத்யாயம்16

இவ்வாறு முனி குமாரர்கள் துதி செய்து பாடியதைக் கேட்ட  வைகுண்ட வாசியான பகவான் ஸ்ரீ ஹரி, அவர்களை வரவேற்றார். 

இந்த இருவரும் என் பார்ஷதர்கள்.  (எப்பொழுதும் அருகில் இருக்கும் காவலாளிகள்)  ஜயன், விஜயன் என்று பெயர்.  எனக்கு உதவியாக என்னை அனுசரித்து இருப்பவர்கள் தான். இன்று உங்களால் கண்டிக்கப்பட்டார்கள்.  அது சரிதான். தன் தகுதியை மீறினால் அபராதம் விதிப்பது தான் நியதி. பெரியவர்களை அவமதித்ததால் நாங்கள் அதை ஏற்கிறோம்.  என் விருந்தினர்களை அவமதித்தால் எனக்கு செய்தது போலத்தான்.  எஜமானரின் நல்ல பெயரை இது போன்ற ஏவலர்களின் தவறான அணுகுமுறை கெடுத்துவிடுகிறது.  வியாதிகள் சருமத்தை நாசம் செய்வது போல.

கேட்கவே அம்ருதம் போல இருக்கும் நிர்மலமான இந்த வைகுண்டத்தின் புகழை கெடுக்கும் இச்செயலை கண்டிக்கிறேன். தபஸ்விகளின் பாத தூளி அனைத்து வித  பாபங்களையும் போக்கும், நற்கதியைத் தரும் என்று நானே அறிவுறுத்தியிருக்கிறேன்.   ஸ்ரீ தேவி என்னை விட்டு அகலாமல் இருக்கிறாள் என்றால் அதற்கு இதுவும் ஒரு காரணம்.  தன் கர்ம பலனையே எனக்கு சமர்ப்பித்து விட்டு பற்றின்றி இருக்கும் அந்தணர்களை திருப்தி என்று சொல்லும் வரை நான் உபசரிப்பது வழக்கம்.  யாக காரியங்களில் தேவர்களுக்கு தரும் ஆஹுதியை ஏற்கும் சமயம் கூட அந்த நிறைவு வருவதில்லை.  என் பக்தர்கள் என்னை நம்பி பலவிதமான அழகான சொற்களால் பூஜிக்கின்றனர். என்னை அழைக்கும் பல பெயர்களை சொல்லி பாடுகின்றனர். எனவே என் ஏவலர்கள் உங்கள் தண்டனையை ஏற்கச் செய்கிறேன். அத்துடன் எனக்கு அருகில் அனுகூலமாக இருந்து வந்தவர்கள், என்னிடம் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் ஆதலால் தண்டனை காலம் முடிந்து திரும்ப என் சேவகத்துக்கு வரட்டும் என்று ஆணையிடுகிறேன்.

ரிஷிகள் ப்ரவாஹமாக வேத மந்த்ரங்களை ஓதுவது போலவும், அழகிய,  அன்புடன் சொல்லப் படுவது போல தோற்றமளிக்கும் அவரது மதுரமான சொற்கள், தங்கள் செயலை அங்கீகரிக்கிறாரா அல்லது நிந்திக்கிறாரா என்று சந்தேகம் தோன்ற  ரிஷி குமாரர்கள் தடுமாறினர்.  ஏற்கனவே தங்கள் சினத்தை வெளிப் படுத்தியதற்காக வருந்திக் கொண்டிருந்தவர்கள். பின்னர், அவர் சொல்லில் ஒளிவு மறைவு இல்லை, உண்மையாகத்தான் சொல்கிறார் என்று நம்பிக்கை வர தாங்களும் மகிழ்ந்தார்கள்.

“தேவ, நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை. சர்வேஸ்வரன் தாங்கள்.  உங்கள் காவலர் எங்களுக்கு நல்வரவு அளிக்காதது, உங்களுக்கே செய்த அவமானம் என்றும், எனக்கு அனுக்ரஹம் என்றும் நீங்கள் சொல்வது பொருந்தவில்லை. எளிய ரிஷி சிறுவர்கள் நாங்கள்.  ப்ரும்மண்யம் என்பதற்கே தெய்வம் ப்ராம்மணர்கள், அவர்களுக்கும், பகவானான தாங்கள் தான் ஆத்ம தெய்வம்.  சனாதன தர்மம் என்பது உங்களிடமிருந்தே ஆரம்பிக்கிறது, உங்களால் ரக்ஷிக்கப் படுகிறது. தர்மத்தின் பலனே தாங்கள் தான், அதனால் மிகவும் போற்றத்தகுந்த, சக்தி வாய்ந்த அதிகாரி,   சுவர்கம் போன்ற சாதாரண பலன்களை தருபவராக மட்டும் உங்களை நினைக்கவில்லை. நிர்விகாரி- நிலையானவர்.  மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லப் படுபவர். அதனால் இந்த வார்த்தைகள், லோக சிக்ஷா- உலகினருக்கு சொல்லப் பட்ட அறிவுரையாகக் கொள்கிறோம் என்றனர்.

உங்கள் தயவால், மரணத்தையும்  அனாயாசமாக வெற்றிக் கொள்கிறார்கள். அதே சமயம் உங்கள் தயவின்றி என்னதான் போராடினாலும் அந்த பரம ஞானம் கிடைப்பதில்லை. அப்படியிருக்க நீங்கள் ‘அனுக்ரஹிக்கப்பட்டேன்’ என்று சொல்வது என்ன நியாயம். யார் உங்களை ஆசிர்வதிக்க முடியும்?  ஒவ்வொரு வேளையும், பொருளை விரும்பும் பக்தர்கள் வந்து சேவிக்கிறார்கள், உங்கள் பாதத்தில் புது துளசியை அர்ப்பணம் செய்கிறார்கள்.  மார்பில் ஸ்ரீ தேவியை தரித்து இருப்பவர், உங்களிடம் மற்றவர்கள் என்ன குறை காண முடியும்?  (ஏதோ அந்தணர்கள் ஆசிர்வாதத்தால் என்று சொன்னால், அவளை தாயாக, தங்களுக்கு முன்னோடியாக வணங்கும் அனைவரும் வருந்துவர்.  அது அந்தணர்களை பாதிக்கும்.) சராசரங்களை மூன்று குணங்களாலும் மனித, தேவர்கள், நன்மைக்காக ஏற்படுத்தி, சத்வ குணத்தால் வரதனாக இருக்கும் தாங்களே அந்தணர்களையும் ரக்ஷிக்க வேண்டும்.  அவர்களை கைவிட்டால், மற்றவர்களும் அதை பின் பற்றுவார்கள்.

உலகத்தில் அனைவருக்கும்  நன்மையே உண்டாக வேண்டும் என்பது உங்கள் விருப்பம். வேத விற்பன்னர்கள் உங்களைப் போலவே சத்வ குணமே பிரதானமாக கொண்டவர்கள்.  வேத மார்கம் அழிந்து விடக் கூடாது என்று இருப்பவர்கள்.   உண்மையாக சிரத்தையுடன் அவர்களை உயர்வாக நினைப்பதில் தவறில்லை. ஆனால் தன்னையே தாழ்த்திக் கொள்ள வேண்டாம். இந்த பிரச்னையை ஆரம்பித்த எங்களுக்கு  தண்டனை கொடுங்கள், என்றனர்.  அல்லது உங்கள் காவலர்கள் தன் கடமையைத் தான் செய்தார்கள், தவறு செய்யவில்லை என்றால் எதுவும் நடக்காதது போல விட்டு விடுங்கள்.   உங்கள் இஷ்டம்.

பகவான் சொன்னார்: இவர்கள் அசுரர்களாக உடனடியாக ஒரு வேலை செய்ய வேண்டியுள்ளது. அந்தணோத்தமர்களே, என் சங்கல்பம் உங்கள் வாயால் தண்டனையாக வந்துள்ளது. அதை புரிந்து கொள்ளுங்கள். பூமியில் பிறந்து இவர்கள்,சமாதி, யோகம் இவைகளை பயின்று சில காலம் இருந்து விட்டு திரும்ப என்னிடமே வருவார்கள். 

ரிஷி குமாரர்களும் சமாதானமாகி, கண்ணுக்கு இனியதான வைகுண்டத்தில் அதில் ஸ்வயம் பிரகாசமாக விளங்கும் வைகுண்ட வாசியான பகவானுடன் இருந்து மகிழ்ச்சியாக இருந்தனர். பின் அவரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்றனர்.  சந்தோஷமாக அந்த கோலாஹலமான அனுபவத்தை தங்களுக்குள் பேசிக் கொண்டே சென்றனர்.  பகவானும் காவலர்களைப் பார்த்து, பயப்பட வேண்டாம், நல்லதே நடக்கும் என்றார். அவர்களை கௌரவித்து அனுப்பி விட்டு ஸ்ரீ தேவியுடன் தன் வாசஸ்தலம் சென்றார். 

ஹரியின் லோகத்திலிருந்து காவலர் இருவரும் முகம் வாடி வெளியேறினர்.  எங்கும் ஹா ஹா என்ற கோஷம் கேட்டது. அவர்கள் தான் தற்சமயம் திதியின் கர்பத்தை அடைந்துள்ளனர். காஸ்யபரின் மகனாக அசுரராக, உண்மையில் யம படர்கள் போல கொடூரமான குணங்களோடு பிறப்பர்.  பகவானின் சங்கல்பம் இது.

விஸ்வத்தை ஸ்ருஷ்டி, ஸ்திதி , லயம் என்று மூன்று விதமாகவும் பரிபாலிக்கும் யோகேஸ்வரன்,  நம்மால் அனுமானிக்க முடியாத மாயை அவனுடையது.   வேத நாயகன் நிச்சயம் நமக்கு நன்மையே செய்வார்.  நாம் விமரிசித்து பேசி என்ன ஆகப் போகிறது.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதினாறாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-37  

அத்யாயம் 17 

நூறு ஆண்டுகள் கர்பத்தை தாங்கிய திதி இரட்டையர்களை பிரசவித்தாள்.  அவர்கள் பிறந்த சமயம் நிறைய கெட்ட சகுனங்கள் தோன்றின.  தேவலோகத்திலும், பூமியிலும், ஏதோ மிக பயங்கரமாக நடக்கப் போவதை அறிவிப்பது போல.  மலைகளுடன் பூமி நடுங்கியது.  திசைகள் வெப்பத்தைக் கக்கின.  தூமகேது எனும் உபக்ரஹங்கள் விழுந்தன. இவை கெடுதலை விளைவிக்கும் என நம்பப் படுபவை. வாயு  புயலாக  வீசி பெரிய மரங்களை வீழ்த்தியது.  கருமேகம் சூழ்ந்து வானத்தை மறைத்தது. பெரிய அலைகளின் ஆர்ப்பாட்டம்  தாங்காமல்  கடல் கதறியது.  நதிகளில் நீர் வெப்பத்தின் காரணமாக தள தள என கொதிக்க பங்கஜங்கள் வாடி உதிர்ந்தன.  சுற்றிலும் தூசி படலமாக சூரியனின் ஓளி ராஹு கேதுவினால் தடுத்தது போல மங்கலாக காணப்பட்டது.  மலைகளின் குகைகளிலிருந்து அருவிகள் பொங்கி பெருகின.  கிராமங்களில் ஓனாய்களும், குள்ள நரிகளும் ஊளையிட்டன.  சிங்கங்கள் கூட, அழுவது போலவோ, பாடுவது போலவோ, தலையை மேல் நோக்கி தூக்கி விசித்திரமான ஓசையை வெளியிட்டன.  கழுதைகளின் கர கரவென்ற குரல், கூட்டம் கூட்டமாக சேர்ந்து அலறியது நாராசமாக இருந்தது.  இந்த சத்தத்தைக் கேட்டு பறவைகள் கூட்டிலிருந்து விழுந்தன. அடர்ந்த காடுகளில் பசுக்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தன.   பசுக்கள் பயந்து பால் வெளிறி நீராக கொட்டியது.  பல பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலைக் கூட எதிர்த்து நிற்கும் மரங்கள் அவை.  நல்ல க்ரஹங்கள் என்று நம்பப் பட்டவை கூட ஒன்றோடொன்று முரண்டு காணப் பட்டன.  

இந்த சகுனங்கள் என்ன சொல்கின்றன என்பது புரியாமல் நிறைய குழந்தைகள் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனை எண்ணி கவலைப் பட்டனர். பிரளயமோ என்ற பயம் மேலோங்கியது. இதற்கிடையில் திதி பெற்ற பிள்ளைகள் மலையளவு வளர்ந்து விட்டனர்.  வானளாவி வளர்ந்த தைத்யர்கள் (திதியின் மைந்தர்கள்) பொன் மயமான கிரீடமும், திடமான சரீரமும், கைகளில் அங்கதங்கள் பள பளக்க, எடுத்த அடி ஒவ்வொன்றும் பூமியை அதிரச் செய்ய, இடையில் ஒளி வீசிய காஞ்சீ என்ற ஒட்டியானம், சூரிய ஓளியை மிஞ்ச,  நடந்தனர்.  பிரஜாபதி அவர்களுக்கு நாம கரணம் செய்வித்தார்.  முதலில் பிறந்தவன் ஹிரண்ய கஸ்யபன் என்றும் அடுத்தவன் ஹிரண்யாக்ஷன் என்றும் அழைக்கப் பட்டனர்.

ஹிரண்ய கசிபு சீக்கிரமே லோக பாலர்களை தன் வசப் படுத்திக் கொண்டான்.  மரண பயம் இல்லாமல் இருக்க ப்ரும்மாவிடம் வரம் பெற்றான். அவன் இளையவன் ஹிரண்யாக்ஷன், சகோதரனுக்கு  மிகப் பிரியமானவனாக ஆனான். கையில் கதையை எடுத்துக் கொண்டு  உலகைச் சுற்றி வந்தான் எங்கே சண்டை போடலாம் என்பதே குறியாக. அவனைக் கண்ட தேவர்கள் நடுங்கினர்.  அவனுடைய  நடையின் வேகம் மற்றவர்களால் எண்ணியே பார்க்க முடியாமல், அதன் காரணமாக அவன் இடையாபரணங்களும் கால் நூபுரங்களும் அலறுவது போல பெரும் ஓசையை வெளியிட, வைஜயந்தி மாலை ஆட ,  பெரிய கதையை சுழற்றியபடி, மனோ பலம் என்பதை வரமாக பெற்றவன்,  பயமே இன்றி, சற்றும் தயவின்றி அடிக்க கூடியவன் என்பதால் எதிரில் யாரும் நிற்காமல் ஓடி ஒளிந்தனர்.

யாரை போருக்கு அழைக்கலாம் என்றே கதையுடன் கிளம்பியவன் யாருமே எதிர்க்காதலால் கோபம் கொண்டான்.  அவர்களை பலமாக கூவி அழைத்தான். இந்திரன் முதலான தேவர்களை அழைத்தும் வராததால், சமுத்திர ஜலத்தில் மதம் கொண்ட யானை போல நடந்தான்.  அவன் கால் வைத்தவுடன், வருணனின் சேனைகள், கடல் வாழ் பிராணிகள், வந்து சேரும் பெரு நதிகள்,  அவன் அடிக்காமலே, பயந்து ஓடினர்.

பல நாட்கள், வருஷங்கள், இவ்வாறு சென்றன. சமுத்திர ஜலம் அவன்  இடுப்பளவே வந்தது.  அந்த ஜலத்தில் நடை போட்டபடி,கதையை சுழட்டிக் கொண்டு ப்ரசேதஸ் என்ற நீரின் தலவனின் ஊர் வந்து சேர்ந்தான்.   லோக பாலகனான அந்த தேவனை,   கடல் வாழ் உயிரினங்களின் தலைவனை பிடித்து, சிரித்துக் கொண்டே இழுத்து வந்து என்னுடன்  போர் செய்ய வா என்றான்.  அந்த ப்ரசேதஸ் என்ற லோகபாலகன் நல்ல வீரன். தானும் பலமுறை போரில் வெற்றி வாகை சூடியவன். தைத்ய தானவர்களுக்குள் மதிப்பாக இருந்தவன். ராஜ சூய யாகம் செய்து தன் புகழை நிலை நாட்டியவன்.

தற்சமயம் வெறும் உடல் பலத்தால் மதம் கொண்டு போருக்கு அழைத்தவனை பொறுமையாக புத்தி பூர்வமாக பதில் சொன்னான். உடல் பலத்தில் நாம் சமமானவர்கள் இல்லையே. புராண புருஷனான மகா விஷ்ணுவைத் தவிர வேறு யாரும் உனக்கு ஈடாக போர் புரிய தகுதியுள்ளவர்கள் இல்லை.  அவரிடம் போரிடு. போர் விதிகள் தெரிந்தவர்,  உனக்கு சமமாக போரிட சந்தோஷமாக வருவார்.  சம பலம் உள்ளவர்களிடம் தான் உன் திறமையை காட்ட வேண்டும் என்றான்.

அப்படி ஒரு வீரன் இருக்கிறானா என்று ஆச்சர்யத்துடன், நாளைக்கே அவனை வீர சயனத்தில் தள்ளுகிறேன் – ஏன் தெரியுமா, உன்னைப் போன்ற அசத்துக்களை இது போல உயர்ந்த பதவிகளில் வைத்திருக்கிறானே, தனக்கு சமயத்தில் உதவுவான் என்று நினைத்தானோ,  என்று எகத்தாளமாக சொன்னபடி அகன்றான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதினேழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 39    

அத்யாயம்18 

ஜலேசன், நீரின் நாயகன், ப்ரசேதஸ், பேசியதை கேட்ட ஹிரண்யாக்ஷன் அவனை விட்டு விட்டு, ஹரியை தேட ஆரம்பித்தான். நாரதர் வாயிலாக அவர் ரஸாதளத்தில் இருப்பதாக அறிந்து அங்கு வேகமாகச் சென்றான். அங்கு பூமியை தன் பல்லின் நுனியில் தாங்கியபடி வந்தவரை பார்த்து  பலமாக சிரித்துக் கொண்டு,  அஹோ, காட்டு மிருகம் என்றான்.  அவரை பார்த்து, அறிவிலியே, வா வா, பூமியை கீழே வை. சமமான என்னுடன் போரிடு. இங்கிருந்து நலமாக திரும்ப மாட்டாய். தேவர்களுக்காக இப்படி ஒரு  பன்றி ரூபம் எடுத்தாயா? எங்களுடைய சபத்னி குமார்கள், (தேவர்கள்) – சுய பலம் இல்லாதவர்கள். மாயையால் அசுரர்களை வெல்வார்கள்.  யோக மாயா என்ற அல்ப பௌருஷம் உள்ளவன் நீ அவர்களுக்கு சகாயம்.   உன்னை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். இப்பொழுது பார். என் கதையால் தலை அறுந்து விழப் போகிறாய். அதன் பின் யாகத்தில் பாகம் பெறும் தேவர்களோ, ரிஷிகளோ, யாருமே இருக்கப் போவதில்லை. 

தன் கையில் இருந்த பூமி பயந்து நடுங்குவதைக் கண்டு,  தண்ணீரின் மத்தியிலிருந்து வெளி வந்தார்.  முதலை வாயில் அகப்பட்ட குட்டி யாணை போல  வந்தார்.  அவரை பின் தொடர்ந்து சென்ற ஹிரண்யாக்ஷன் ( ஹிரண்ய கேசன் என்றும் பெயர்) யானையை மீன் குஞ்சு தொடருவது போல இருந்தான்.  கொடூரமான பற்கள், கடுமையான குரல், இவைகளுடன் லஜ்ஜையின்றி, பகவானைப் பார்த்து ஏன் பயந்து ஒளிந்து கொள்கிறாய் என்றான்.

தன் கையிலிருந்து பூமியை நீரின் மேல் வைத்து விழாமல் இருக்க தன் சக்தியை அளித்து நிலை நிறுத்தி விட்டு,   எதிர் நின்ற அசுரன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, ப்ரும்மா வியந்து பூமாரி பொழிய, பெரிய கதையை கையில் ஏந்தி, நெருப்பின் மறு உருவம் போல,  பொன்னாலான சித்ரங்களுடன் இருந்த ஆயுதத்துடன், பல்லைக் கடித்தபடி அளவற்ற கோபத்துடன் தரமில்லாத வார்த்தைகளைப் பேசும்,  அசுரனைப் பார்த்து சிரித்துக் கொண்டே பதில் சொன்னார், பகவான்.

நாங்கள் வனத்தில் திரியும் மிருக இனமே. உங்களைப் போன்ற கிராமத்து சிங்கங்களை வேட்டையாடுவோம்.  வீரர்களான எங்களுக்கு ம்ருத்யு – மரணம் ஒரு பொருட்டல்ல. உன் வீண் பேச்சைக் கேட்டு பயப்பட.  அல்பனே! நாங்கள்,  இந்த சமுத்திரத்து உயிரினங்களை காக்கும் பொறுப்பை ஏற்றவர்கள். உன்னைப் போல் கையில் கதையை வைத்துக் கொண்டு விரட்டுபவர்கள் அல்ல.   எந்த விதத்திலும் உன்னை பாதிக்காத எளிய உயிரினங்கள்- அவர்களை உன் கதையைக் காட்டி ஓட வைக்கிறாய். இது என்ன வீரம்?  நாங்கள் எதிர்த்து நிற்கிறோம், மஹா பலசாலியான ஒருவனை எதிர்த்து விட்டு எங்கே ஓடி ஒளிய முடியும்.  நீயோ பாதசாரிகளின் (கால்களே ரதமாக நடந்து செல்லும் படை- காலாட்படை) படைத் தலைவன். இனி தோல்வியை சந்திக்க தயாராகிக் கொள்.   உன் பதவியை இழந்து நிற்பாய்.

பகவான் அவனை மட்டம் தட்டி பேசியது பொறுக்காமல் கோபத்தை தூண்டி விட்டது போல கொதித்து எழுந்தான் ஹிரண்யாக்ஷன்.  தன் கதையால் பகவானை அடிக்க ஆரம்பித்தான்.  பெரு மூச்சு விட்டபடி, அடிபட்ட நாகம் போல வேகமாக எதிர்த்து ஓடி வந்தான்.  இருவரும் மதயானைகள் போல ஒருவரையொருவர் தாக்கினர்.  தைத்ய ராஜனும், யக்ஞ புருஷனும் சண்டையிடுவதைப் பார்க்க ப்ரும்மா அங்கு வந்தார்.  ஆதி சூகரம்- பன்றி ரூபத்தில் இருந்தவரைப் பார்த்து, “பகவானே, இவன் மாயாவி. அறிவிலி.  துஷ்டன். எங்கள் யாகங்களை கெடுக்கிறான்.  உலகத்தை சுற்றி சுற்றி வருகிறான். யாரை அடிக்கலாம் என்பதே குறியாக.சிறுவன் பாம்பின் வாலை தூக்கி விளையாடுவது போல இது என்ன காரியம். சந்த்யா காலமானால் இவன் பலம் அதிகரிக்கும். அதற்கு முன் வதம் செய்து விடுங்கள்,  இவன் உங்களை எதிர்த்த நிமிஷத்திலேயே உயிரிழந்தவன் போலத் தான்.  அபிஜித் என்ற இந்த முஹூர்தத்தில் யுத்தத்தை முடித்து உலகில் உயிரினங்களை பயமின்றி வாழச் செய்யுங்கள்.” என்றார்.

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த    காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பதினெட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-28

அத்யாயம்19 

ப்ரும்மா அன்புடன் தன் கவலையைச் சொல்லவும், பகவான் கடைக்கண்ணால் ஜாடை மூலம் அதை அங்கீகரித்தார்.  அதன் பின் எதிரில் பயமின்றி நின்றவன் ஒருவகையில் உறவினன், ஆனாலும் தற்சமயம் எதிரி, அசுரன் ஹிரண்யாக்ஷன் வராக உருவத்தின்  தாடையில் ஓங்கி அடித்தான்.  அந்த அடி தாங்காமல் பகவானின் கையில் இருந்த கதை கீழே விழுந்தது.  யுத்த தர்மத்தை நினைத்து அசுரனான ஹிரண்யாக்ஷன் இதை நல்வாய்ப்பு என்று நினைக்காமல், கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கும் எதிரியை அடிக்கக் கூடாது என்ற நியதியின் படி,  பகவானை எதிர்க்காமல், கதையை திரும்ப எடுத்துக் கொள்ளும்வரை காத்திருந்தான். பகவானின் கதை கீழே விழுந்தவுடன் உலகம் திகைத்தது. பகவானோ எதிரியானாலும், தர்மத்தை கை பிடித்தவனை  பாராட்டினார்.

வானத்தில் நலம் விரும்பும் தேவ ரிஷிகளின் ஆசிகளும், இந்த அசுரனை சம்ஹாரம் செய் என்ற வேண்டுகோளும் நிறைந்தன.   தன்னுடைய சக்ரத்தை நினைத்து பகவான் தியானம் செய்யவும் அது அவர்  கைக்கு வந்தது. அவருடைய ஆயுதமான  சக்கரத்தை கண்டதும் கண்கள் நெருப்பாக ஜொலிக்க, பற்களை கடித்தபடி, அதிக கோபத்துடன் அசுரன் அடித்தான். தன் சக்தி தெரியாமல் போருக்கு வந்து விட்டான் என்று நினைத்தோ பகவான் உடனே பதிலடி கொடுத்தார். அவன் கதையும் விழுந்தது.  எடுத்துக் கொள், என்னை ஜயிக்கத்தானே வந்தாய்  என்று சொல்லி சிரித்தார்.  இதை அவமானம் என நினைத்து அந்த வீரன், கதையை விட்டு சூலத்தை எடுத்துக் கொண்டான்.  அந்த அடியை வாங்கிக் கொண்டவர்,  இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்று தன் சக்கரத்தால் அதை தாக்கி நொறுங்கச் செய்தார். தன் முஷ்டியை இறுக்கிக் கொண்டு பலமாக அலறிக் கொண்டும் முன்னேறி வந்த அசுரனை பகவான் அசையாமல் நின்று எதிர் கொண்டார். யானையை பூ மாலையால் தாக்கியது போல – அசுரன் தன் மாயா பலத்தால் அந்தர்தானமானான். என்ன நடக்கிறது என்று தெரியாமல் உலகை தூசி படலம் சூழ்ந்தது. ப்ரளயமோ என்று உலகத்தினர் திகைத்தனர்.   பயங்கர புயல் ஒரு புறம், கற்கள் விழுவது போல மழை, அத்துடன் மின்னலும், இடியும் சேர்ந்தால் எப்படி இருக்கும்?  இதனிடையிலும் முஷ்டியால் தொடர்ந்து அடித்த அசுரனின் காதுகளின் அடியில் தன் சக்கரத்தால் அடித்தார். அத்துடன் அவன் மாயையால் ஸ்ருஷ்டித்தவைகளும் அகன்றன. தைத்யன் விழுந்தான்.

திதியின் உள்ளுணர்வு தன்மகனின் முடிவை எண்ணி வருந்தியது. கூடவே பகவான் கையால் மரிப்பான் என்ற வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. வராக உருவத்தில் வந்த பகவான் தன் முன்னங்கால்களால் அவனை கிழித்து வதம் செய்தார்.   ப்ரும்மா முதலான தேவர்கள் பகவானின் பாதம் பட்டு இந்த அசுரன் நல்கதியடைந்தான்.  தங்கள்  அறியாமையால் வருவித்துக் கொண்ட  தண்டனையாக  இந்த துர்கதியை அடைந்த அசுரன், மும்முறை தன்னுடன் போரிட்ட  பின்னரே  தன்னையடைவான் என்பது பகவானின் சங்கல்பம். என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

नमो नमस्तेऽखिलयज्ञतन्तवे-स्थितौ गृहीतामलसत्त्वमूर्तये ।                      दिष्ट्या हतोऽयंजगतामरुन्तुदः-त्वत्पादभक्त्या वयमीश निर्वृत

நல்ல வேளை. இந்த அசுரன் மடிந்தான். யக்ஞ புருஷனான உனக்கு நமஸ்காரம்.  உன் பாத பக்தியால் அவனும் நல்ல கதியடைந்தான். பகவானே, நாங்களும் காப்பாற்றப் பட்டோம்

ஆதி சூகரன் ஹரி, இவ்வாறு ஹிரண்யாக்ஷணை வதம் செய்து உலகை காத்தார் என்று மைத்ரேயர் சொல்லவும் கேட்டுக் கொண்டிருந்த விதுரர் மகிழ்ச்சியடைந்தார். மேலும் ஹரியின் அவதார கதைகளைக் கேட்க தயாரானார்.  கஜேந்திரன், முதலை வாயில் அகப்பட்ட கதையை சொல்லுங்கள் என்றார்.

இந்த காரண சூகரன் என்ற வராஹ அவதார கதையை கேட்பவர்களும் பாடுபவர்களும் ஸ்ரீ ஹரியின் ஆசிகளைப் பெறுவர் என்று சொல்லி இந்த பகுதியை முடிக்கிறார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பத்தொன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-38

 அத்யாயம்20 

சௌனகர் கேட்டார்:  ஸ்வாயம்புவ மனு மற்ற ஸ்ருஷ்டிகளை எப்படி செய்தார்?  விதுரர் மகா பாகவதர்.    ஸ்ரீ க்ருஷ்ணருக்கு பக்தனாக, நெருக்கமாக இருந்தவர். ஆதலால் மூத்த சகோதரனையும் அவன் சந்ததிகளையும் த்யாகம் செய்து விட்டு விலகி விட்டார்.   மைத்ரேயரிடம் வந்து ஹரி கதையை சொல்ல கேட்கவும், அவருடன் ஸ்ரீ க்ருஷ்ணனின் அவதார கதைகளை கேட்க நமக்கும் வாய்ப்பு கிடைத்தது.  மேலே சொல்லுங்கள்.

மைத்ரேயர் சொன்னார்.  ப்ரும்மா ப்ரஜாபதிகளை உருவாக்கினார்.   மரீசி முதலானோர்களும், ஸ்வயம்புவ மனுவும் ப்ரும்மாவின் வழிகாட்டலில் பூமியில் உயிரினங்களை படைத்தனர். அதை சற்று விவரமாக சொல்லுங்கள். மனைவிமார்களுடன் இருந்தார்கள். ( ப்ரும்மா தான் ஒருவராக முன் யக்ஷாதிகளை ஸ்ருஷ்டி செய்ததை நினைவு படுத்துவது போல, மானச புத்திரர்கள், சரீரத்திலிருந்து தோன்றியவர்கள் என்பது போல)

உயிரினங்களின் நல்ல காலம், பகவான் சிருஷ்டியை தொடங்க நினைத்து, எப்படி செய்வது என்று சிந்திக்கையில், அவருடைய எண்ணங்களில் தோன்றிய சலனம் சத்வ ரஜஸ்,தமஸ் என்ற முக்குணங்களாகின.

முதலில் சத்வ குணம், மஹத் என்ற என்றும் மாறாத இயற்கை சக்தி. ரஜோ குணம் அதனுடன் சேர்ந்து பஞ்ச பூதங்களை ஆகாயம் முதலான ஐந்து தோன்றின. ஒவ்வொன்றும் தனித் தனியாக பௌதிகத்தில் எதையும் செய்ய முடியாது. தேவ யோகத்தால் ஹிரண்மயமான அண்டத்தை ஸ்ருஷ்டித்தன.  உயிரற்ற , அல்லது சலனமற்ற அதை சமுத்திர ஜலத்தில் கிடக்கச் செய்தனர்.  ஆத்மா இல்லாமல். அதில் ஆயிரம் வருஷங்கள் ஈஸ்வரன் வசித்தார்.  அதன் பின் அவரது நாபியில் தோன்றிய பத்மம் ஆயிரம் சூரியனின் ஒளியைக் கொண்டிருந்தது.  அனைத்து ஜீவன்களின் இருப்பிடமான பகவான் தானே அதில் இருந்தார். பகவான் உள்ளே நித்திரையில் இருந்த சமயம் லோகத்தை பழைய படி ஸ்தாபிக்க வேண்டி தன் நிழலில் இருந்து ஐந்து பர்வங்களை உருவாக்கினார். தாமஸ குணங்கள் தாமிஸ்ரம், அந்த தாமிஸ்ரம், தமம், மோகம், மஹா தம: அதனுள் தானே வாசம் செய்தார். அவருக்கு தாமஸ குணம் பிடிக்கவில்லை. அதில் இருந்தபடி படைத்தவர்கள் தான் யக்ஷ ரக்ஷசர்கள், ராத்ரி, பசி தாகம் முதலியவை.  இரவை விரும்பும் தேவர்கள் என்பர்.

தன்னுடைய எந்த உருவத்தில் இந்த நிழல் தோன்றியதோ அதை களைந்தார்.  அதை விட்டு வெளி வந்தார். யக்ஷ ,ரக்ஷஸ என்ற அந்த பிறவிகள், தாமஸ குணம் மேலோங்கி, பசி தாகம், அதிகமாகவும், ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். 

ப்ரும்மாவின் மனதில் சத்வ குணம் மேலோங்கி இருந்த சமயம் தேவர்கள் பிறந்தனர். சத்வமயமான உடலுடன் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து தினம்- பகல் வந்தது.

அவர்  மனதில் காமம் தோன்றிய சமயம் அசுரர்கள் பிறந்தனர். அது சந்த்யா காலம். அதை அசுரர்கள் பறித்துக் கொண்டனர்.  ஸ்த்ரீ ரூபம் அந்த சமயத்தில் தோன்றவும் அசுரர்கள் ப்ரும்மாவை  துரத்தலானார்கள். அவர்களின் அட்டகாசம் தாங்காமல், ப்ரும்மா பகவானை சரணடைந்தார்.  அந்த பெண் உருவம் அழகிய கண்களும், இடையும் வெண் பட்டு உடையும், ஸ்தனங்களும், ஒவ்வொரு அவயவமும் நளினமாக காண அழகாகவும் ஆயிற்று.  அவளைக் கண்ட அசுரர்கள் அனைவரும் அவளை விரும்பினர்.  அஹோ ரூபம், அஹோ தைர்யம், இளம் வயது என்று காமத்துடன் அனுகியவர்களை அவள் கண்டு கொள்ளவேயில்லை. சந்த்யா என்ற அந்த பெண் உருவை, சூழ்ந்து கொண்டு யார் நீ எங்கிருந்து வந்தாய் என்று வினவினர். மேலும் பலவிதமாக அவளை விசாரித்தனர்.   அங்கம் அங்கமாக வர்ணித்தனர். ஒரு நிலையில் அறிவிலிகள் பெண் தானே என்று அவளை பலாத்காரமாக இழுத்தனர். பலமாக சிரித்து, பகவான் அந்த உருவைத் தியாகம் செய்தார். சந்த்யா காலத்தில்  கந்தர்வ அப்சர கணங்களை ஸ்ருஷ்டி செய்தார்.  அந்த அழகிய பெண் –  சந்த்யா என்பவளை விஸ்வாவசு என்பவர் தலைமையிலான கந்தர்வர்கள் கைப்பற்றினர். 

பூத பிசாசங்களை படைத்தார்.  திசைகளே ஆடைகளாக. தலையை விரித்து போட்டபடி, வந்த அவர்களைக் கண்டு தானே கண்களை மூடிக் கொண்டார்.  ப்ரபுவின் ஜ்ரும்பனா என்ற பெண்ணை அவர்கள் பறித்துக் கொண்டனர். (ஜ்ரும்பனம்- கொட்டாவி விடுதல்)  தூக்கம், தாறுமாறான இந்திரியங்களின் போக்கு இந்த பூதங்களின் அடையாளம்.  அதன் பின் பலவந்தமாக தன்னை மறைத்துகொண்டு ஸ்ருஷ்டியை செய்தார். அதனால் தான் பித்ரு காரியங்கள் என்பவை துவங்கின.  ஹவ்யம், கவ்யம் என்பன தங்கள் குல முன்னோர்களை முன்னிட்டு செய்ய ஆரம்பித்தனர். முன்னோர்கள் கண்ணுக்கு தெரியாவிட்டாலும் அவர்கள் அவைகளை ஏற்றுக் கொள்வர்  என்பது நம்பிக்கை.

சித்தர்களையும், வித்யாதரர்களையும் தன்னைப் போலவே  எதிரில் காணவும் முடியும் திடுமென மறையவும்  முடியும் என்ற திரோதான சக்தியால் படைத்தார். .  கின்னரர்கள் கிம்புருஷர்கள் என்பவர்களை தன்னுடைய ப்ரதி பிம்பமாகவே படைத்தார்.  அவர்கள் இருவர் இருவராக பாடுவதும் ( ப்ரதி பிம்பத்தை பார்த்து தானே ரசித்ததால் அதே குணத்தோடு பிறந்தனர் ) உடலை அனுபவிப்பது, மிகவும் எதிர்பார்ப்புகளொடு உறங்கியும் சந்ததி இல்லை என்பதால், கோபத்துடன் அந்த தேகத்தை விட்டனர்.  அச்சமயம் அவர்கள் உடல்களிலிருந்து விழுந்த ரோமங்கள் க்ரூரமான பாம்புகளாக ஆயின.  நாகா: என்ற பெயர் (ஸர்பத: வேகமாக செல்வதால்) வந்தது.

அதன் பின் திருப்தியடைந்தவராக, தன் மனதால் தன்னைப் போலவே மானச புத்திரர்களாக மனு என்பவர்களை ஸ்ருஷ்டி செய்தார். அவர்களுக்கு புருஷாகாரமான தனது உடலையே (புரம்-தேகம்) என்பதையே கொடுத்தார்.  அவர்களும் மகிழ்ந்து நீங்கள் செய்தது மிகச் சிறந்த காரியம் என்று புகழ்ந்தனர்.

அக்னி ஹோத்ரம் முதலான செயல்களைச் செய்து நாங்களும் அன்னம் முதலியவைகளை உண்போம் என்று மகிழ்ந்தனர்.

அதன் பின் தன் தவத்தாலும், வித்யையாலும், யோகம், சமாதி இவைகளைக் கொண்டு ஹ்ருஷீகேசன் ரிஷிகளை தங்களுக்கு பிடித்தமானவர்களான பிரஜைகளாக ஸ்ருஷ்டித்தார்.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் தன் தேகத்தின் ஒரு அம்சத்தை கொடுத்தார். அவையாவன, சமாதி, யோகம், ருத்தி- அமானுஷமான சக்தி மற்றும், நிறைவு,  ஐஸ்வர்யம், தபஸ், வித்யா, விரக்தி என்பன.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-52

அத்யாயம்21 

விதுரர் ஸ்வாயம்புவ மனுவின் வம்சம் வளர்ந்த கதையைச் சொல்லுங்கள் என்றார்.  ப்ரியவ்ரதன், உத்தான பாதன்  என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.   சப்த த்வீபங்கள் உடைய தன் பூமியை நன்றாக ஆண்டு வந்தார்.  அவர்  மகள் தேவஹூதி.  கர்தமர்  என்ற ரிஷிக்கு மணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு நிறைய குழந்தைகள் என்று தெரியும். . அந்த கதையைச் சொல்லுங்கள் என்றார்.

மைத்ரேயர் ஆரம்பித்தார். இது நடந்தது  க்ருத யுகத்தில்.  ப்ரும்மா கர்தமரிடம் ப்ரஜைகளை உருவாக்குங்கள் என்று சொல்லி இருந்தார்.  அந்த சமயம், அவர் சரஸ்வதி நதிக் கரையில் தவம் செய்து கொண்டிருந்தார். பல காலம் சென்றபின்  அவருக்கு ஸ்ரீ ஹரியின்  தரிசனம் கிடைத்து.  பகவானின் சப்த ப்ரும்மம் – சப்த ரூபமான அந்த ரூபத்தை கண்டு பரவசமானார். சூரியன் போன்ற பிரகாசமான அவரை உள்ளன்புடன்  துதி செய்தார்.    – வெண்மையான சரீரத்தில் கருங்குழல் ,  வெண், நீல உத்பல புஷ்பங்களாலான மாலையுடன், கிரீடமும், குண்டலமும், மார்பில் கௌஸ்துப மணியும்,  சங்க சக்ர கதா தாரியாக,  கருட வாகனத்தில் ஆகாயத்தில் நின்றவரின் கண்களின் குளுமையான பார்வை மனதை தொட வீழ்ந்து சேவித்தார். “பகவானே!  கண்கள் செய்த பாக்கியம் உங்கள் தரிசனம் கிடைத்தது. யோகத்திலேயே வாழ் நாளை கழித்த யோகிகளுக்கும்  கிடைக்காத  தரிசனம்.  உன் பாத தரிசனம் சம்சார கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.  நான் எனக்கு சமமான சீலம் உடைய ஒரு பெண்ணை மணந்து பிரஜைகளை பெருக்க வேண்டும் என்பது ப்ரஜாபதியின் ஆதேசம்-கட்டளை.  எனவே,  உலக ரீதியில் வாழ்ந்து உன் நினைவாகவே தேக தர்மத்தை நிறைவேற்றுவேன்.  சிலந்தி தன் கூட்டைக் கட்ட உடலின் உள்ளே இருந்தே சக்தியைப் பெறுவது போல நானும் என் வம்சத்தை விருத்தி செய்வேன். எனக்கு இடப்பட்ட பொறுப்பு அது. உன் அனுக்ரஹமாகவே இதை ஏற்றுக் கொள்கிறேன். உன்னிடம் நான் வேண்டுவது ஒன்றே. அனுபவித்து அதன் படி உலக நியதிகளை ஏற்படுத்தியவன் நீ. அதனால் உனக்குத் தெரியும்.  ரிஷியாக வாழ்ந்த எனக்கு ஒரு சிறிது காமத்தைக் கொடு. வணங்கத் தகுந்த உன் பாத சரோஜத்தில் இந்த அல்ப விஷயத்தைக் கேட்கிறேன். இப்படி மிகவும் சங்கோசத்துடன் பகவானிடம் வேண்டிய ரிஷியைப் பார்த்து பகவான் அம்ருதம் போன்ற தன் வாக்கால், கண்களால் அன்புடனும், மென் சிரிப்புடனும் சொன்னார்.

“உன் வாழ்க்கை முறையைத் தெரிந்து தான் உன்னிடம் இந்த செயலை ஒப்படைக்கிறேன். எனக்கு சமமாக ப்ரஜாபதியின் மகன் சப்த த்வீபம் என்ற ப்ரும்மாவர்தம் -பூ உலகை  ராஜ்ய பரிபாலனம் செய்து வருகிறான்.  அவன் தன் மனைவி சதரூபா என்பவளுடன் நாளை மறு நாள் இங்கு வருவான். அவனுடைய மகள் நல்ல அழகி. நல்ல சீலமும் குணங்களும் உள்ளவள்.  அவளுக்கு தகுந்த மணாளனைத் தேடிக் கொண்டிருக்கிறான்.  உன்னை அவளுக்கு ஏற்றவனாக நினைக்கிறான். இது வரை மனதை அடக்கி பல காலமாக  தவம் செய்த உனக்கு அந்த ராஜகுமாரி, நல்ல மனைவியாக இருப்பாள். ஒன்பது குழந்தைகளை உனக்குப் பெற்றுத் தருவாள்.  வேத விற்பன்னரான நீ அவளிடம் ஒத்து வாழ்ந்து வருவாயாக. பிறக்கும் குழந்தைகளிடம் தயையுடன் நடந்து கொள். அவர்களுக்கு பாதுகாப்பாக இரு.  என்னிடம் வைத்த உன் மனதுடன் உலகை ரக்ஷிப்பாய்,  உன் உள்ளத்தில் என்னையும் ஸ்மரித்து இருப்பாய். என் அம்சமாக உன் க்ஷேத்ரமான தேவஹூதியிடம், உன் வீர்யத்துடன் மகனாக பிறக்கிறேன்.  சில தத்வங்களை உலகுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சொல்லி, பகவான் சரஸ்வதி நதியின் பிந்து சரஸ் என்ற இடத்திலிருந்து கிளம்பி விட்டார்.

மனு ஒரு வாகனத்தில் -ரதத்தில் தன் மனைவி, மகளுடன் யாத்திரையாக பூமியை சுற்றிக் கொண்டு வந்து ஒரு நல்ல நாளில், பகவான் சொன்னபடி, சாந்தமாக இருந்த அந்த ஆசிரமத்தையடைந்தார். அந்த இடத்தில் பகவானின் கண்ணீர் விழுந்ததால்  பிந்து சரஸ் என்ற பெயர் வந்ததாக சொல்வர்.  சிவாம்ருத ஜலம் எனப்படும் சரஸ்வதி நதி தீரம். மகரிஷிகள் நிறைய வசித்த இடம். புண்யமான மரங்கள், செடி கொடிகளோடு  பசுமையாக இருந்த இடம்.  மான்களும் மற்ற மிருகங்களும் வளைய வந்தன. எல்லா பருவ காலங்களிலும் புஷ்பங்களோடு வன ராஜ்யம் என லக்ஷ்மீகரமாக விளங்கியது. மதம் கொண்ட யானைகள் கூட்டம், அதே போல மதம் கொண்ட வண்டுகள் ரீங்காரம் செய்தன.  ஆனந்தமாக மயில்கள் ஆட, கோகிலங்கள் அதற்கு இசைய பாடுவது போல இருந்தது. கதம்ப புஷ்பங்களும், சம்பக, அசோக, காரஞ்ச்ச, ஜாபா, பகுல, மல்லிகை மந்தார, குடஜம் . மாம்பூ, இவைகள் அலங்காரமாக இருந்தன. குளங்களில், காரண்டவ, ஹம்ஸ பக்ஷிகள், ப்லவ, குரரம், ஜலத்தில் வசிக்கும் கோழிகள், சாரஸ, சக்ரவாக, இவையனைத்தும் கூச்சலாக கூவின. அதே போல சில மிருகங்கள்- மான்கள், க்ரோட, நாய்கள், பசுக்கள், கவயம் எனும் வகை பசுக்கள், பசு வாலுடன்  சில மான்கள், குள்ள நரிகள், கஸ்தூரி மான் இவைகள் நிறைய தென்பட்டன. 

அந்த தீர்த்த ஸ்தானத்தில் நுழைந்த ஆதி ராஜன், தவ வலிமையால் நெருப்பு போல ஜொலித்த முனிவரைக் கண்டார். பல நாட்களாக தவம் செய்து கொண்டிருப்பதை அவரது உடல் நிலையே காட்டியது. அவர் மனம் மகிழ்ந்தது மெலிந்த உடல், தயை ததும்பும் கடைக்கண் பார்வை,   அம்ருதம் போன்ற வாக்குகள் காதில் தேனைப் பாய்ச்சின,   அவருடைய மலினமான மரவுரி உடையும், பார்த்த மாத்திரத்தில் வணங்கச் செய்யும் சரித்திரமும் அரசனை கவர்ந்தன.  ரிஷி கர்தமர் தன் குடிசைக்கு வந்த அரசனை தகுதியான உபசாரங்கள் செய்து வரவேற்றார். அர்க்யம் முதலின கொடுத்தபின் பகவான் சொன்னது நினைவுக்கு வந்தது. தானாகவே அரசனிடம் தெரிவித்தார். “ அரசனே, பிரஜைகளை பாதுகாக்க நீ செய்யும் நல்ல செயல்களை அறிவேன். சத்தான- நல்ல குடிகளை பாதுகாப்பது போலவே,அசத்தான பிரஜைகளை கண்டிப்பதும் அவசியமே. சூரிய சந்திரர்கள்,அக்னி, வாயு இவர்களை சம தர்மத்துடன் அவர்களுக்கு ரூபங்களையும் ஸ்தானங்களையும் கொடுத்த உனக்கு நமஸ்காரம்.   மணிகணங்கள் அலங்கரிக்கும் உன் தோள்களில்  கோதண்டத்தை தாங்கி,ரதத்தில் மற்ற அசத்துக்களை பயமுறுத்துகிறாய். உன் சைன்யங்கள் உலகை சுற்றி வருகின்றன. சூரியனின் கதியைப் போலவே உள்ளன.  பகவானே ஏற்படுத்திய வர்ணாஸ்ரம தர்மங்கள், ஒருவகையில் பாதுகாப்பான கட்டுப்பாடுகள்.  திருடர்கள்  அதை கலைக்கவே முயலுவார்கள்.  அப்படி செய்ய இடம் கொடுத்தால் அதர்மம் மேலோங்கும்.  காத்துக் கொண்டிருக்கும் மற்ற அரசர்கள் நீ சற்று அசந்தாலும் உன் ராஜ்யத்தை அபகரித்து விடுவர், உலகமே அந்த திருடர்களால் அழியும். அது கிடக்கட்டும், அரசனே! நீ இங்கு வந்த காரணம் என்ன?  தெளிவாக நாம் அதைப் பற்றி மனம் விட்டு  பேசுவோம்.”

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின்,  இருபத்து ஒன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-54

அத்யாயம்22 

முனிவரை பார்த்து அரசன் திகைத்தான். தன்னுடைய அனுஷ்டானத்தில் ஈடுபாட்டுடன் தவம் செய்து வருபவரிடம், லௌகிகமான தன் எண்ணத்தை எப்படி தெரிவிப்பது என்ற யோசனை வந்தது. பின் சமாளித்துக் கொண்டு பின் வருமாறு சொன்னார். “ப்ரும்மா தன் முகத்திலிருந்து தங்களை உருவாக்கினார். வேதத்தை காப்பாற்ற,  சந்தோ -வேதமே உருவாக,  தவம், வித்யா, யோகம் இவை அனைத்தும் ஒரு சேர, தனக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.  நெருப்பு போன்ற தூய்மையான ரிஷி தாங்கள். அதே போல எங்களையும்  உருவாக்கினார். சஹஸ்ர பாத் என்ற பெயருடைய அவர் (ஆயிரம் கைகளும், கால்களும் உடையவர்) அவருடைய இருபது புஜங்களிலிருந்தும்  க்ஷத்திரியர்களாகிய நாங்கள் தோன்றினோம். எனவே தான் ரக்ஷிப்பது அதாவது காப்பாற்றுவது என்ற செயலில் நாங்கள் இருவரும் அன்யோன்யமாக இருக்கிறோம்.  ப்ரும்ம ஞானிகளையும் அவரே தான் உருவாக்கினார்.  உங்களைப் பார்த்தவுடனேயே என் சந்தேகங்கள் விலகி விட்டன. நீங்கள் அந்த பகவானுக்கு சற்றும் குறைந்தவரில்லை.  என் பாக்கியம் உங்களை கண்டு கொண்டேன்.  சாதாரண ஜனங்களுக்கு காணக் கிடைக்காத உங்கள் பாத தரிசனம்,  மங்களகரமான அதில் என் தலை வைத்து வணங்குகிறேன்.  உங்கள் மதுரமான வார்த்தைகள் என் கவலையை தீர்த்து விட்டன.

எனக்கு மிகவும் பிரியமான மகள் விஷயமாக உங்களைக் காண வந்தேன்.   என் மகளை நல்ல முறையில் குணசாலியாக வளர்த்து இருக்கிறோம்.   நாரதர் உங்களைப் பற்றி சொன்னார்,  இவளை உங்களுக்கு கொடுக்கலாம் என்றும் அவர் சொன்னதால் வந்தோம்.  அதனால் மகாமுனிவரே, உங்களுக்கு எல்லாவிதத்திலும் அனுரூபமான மனைவியாக இருப்பாள். இவளை ஏற்றுக் கொள்ளுங்கள்.  இல்லறத்தில் நாட்டமில்லாதவர் என்பதும் தெரியும். பகவானே அனுக்ரஹித்து உங்களை இல்லறத்தில் ஈடுபடவும் உலகியலை அனுசரித்து  நல்ல பிரஜைகளை உருவாக்கச் சொன்னதாகவும் அறிவேன்.   எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த விவாகத்தை நடத்த விரும்புகிறேன்”

முனிவர் பதில் சொன்னார். எனக்கு சம்மதமே. உங்கள் மகளை மணந்து கொள்கிறேன்.  எனக்கு அனுரூபமான பெண் உங்கள் அழகிய மகள்,  நீங்கள் விவாக ஏற்பாடுகளைச் செய்யுங்கள், என்றார்.  எனக்கு பல பெண்கள் பிறப்பார்கள் என்றும், உங்கள் மகளை மறுக்காதே என்றும் பகவானே சொல்லியிருக்கிறார்.  விவாகம் விமரிசையாக நடந்தது.  மஹாராணியான சதரூபா, ஏராளமான ஆடை ஆபரணங்களையும், பணியாட்களையும்  மகளுக்கு உதவியாக இருக்க பணியாட்களையும் தந்தாள்.  மகளும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து அரசர் மன நிம்மதியுடன் அவளை அனைத்து ஆசீர்வதித்தார்.  எல்லா தந்தைகளையும் போலவே அவரும் மகளை அனுப்ப கலங்கினார்.  பின் தன் பரிவாரங்களோடு விடைபெற்று சென்றார். 

கர்தமரும் பர்ஹிஷ்மதீ என்ற இடத்தில் குசம், காஸம் என்ற பசுமையான புல் நிறைந்த சூழ்நிலையில் தன் மனைவியுடன் வசிக்கலானர்.  நாளடைவில் குழந்தைகளுடனும் மனைவியுடனும் வசிக்கும் பொழுதும் பாடுபவர்களும் வந்து ஹரி கதைகளைச் சொல்ல நாட்கள் சுகமாக கழிந்தன.  இல்வாழ்க்கை அவரது யோக சாதனைகளையோ, சுய கட்டுபாடுகளையோ பாதிக்கவிடாமல் பகவானின் தியானத்துடனேயே வாழ்ந்தார்.

பகவத் கதைகளை கேட்பதிலும், த்யானம் செய்வதிலும், விஷ்ணு பூஜைகள் செய்வதிலும் பல நாட்கள்

சென்றன.  சரீரமோ, மனசோ, பௌதிகமான தடைகளோ அந்த தவ சீலரை பாதிக்கவில்லை.  கூடியிருந்த சிஷ்யர்களுக்கும், மற்ற முனிவர்களுக்கும் பலவிதமாக பலவிதமான தர்மங்களையும், அரச நீதியையும், வர்ணாஸ்ரம கட்டுப்பாடுகளையும்  விவரித்து உபதேசங்கள் செய்து வந்தார்.  இது தான் ஆதி ராஜனான மனுவின் கதை.  கர்தமரின் குழந்தைகளைப் பற்றி சொல்கிறேன் கேள். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின்,  இருபத்து இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39

அத்யாயம்23 

பெற்றோர்கள் திரும்பிச் சென்ற பின்  இருவரும் பவனும் பவானியையும் போல ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்ந்தனர். பிரியமாக பேசியும், சுய கட்டுப்பாடு -நடத்தை, கௌரவம் கொடுத்தும் பெற்றும், அடக்கத்துடனும், உதவிகள் செய்து கொண்டும், நட்பாக இருந்தனர். காமம், ஆடம்பரம், துவேஷம், லோபம், குற்றம், மதம் – சோம்பல், இவைகள் பாதிக்காத குறைவில்லாத உழைப்பு  இவற்றுடன் தேஜஸே உருவான பகவானை சந்தோஷிக்கச் செய்தனர்.   கர்தமரோ  தேவ ரிஷிகளிலும் முதல்வராக போற்றப் படுபவர் என்பதால் ஏற்படும்  மரியாதையுடனும் சேவைகள் செய்து ஆசிகளைப் பெற்றாள்.  பல காலம் சென்றது. ஓயாத விரதங்கள், வேலைகள் இவற்றால் மெலிந்து விட்ட மனைவியைப் பார்த்து கர்தமர் பிரியத்துடன், குற்ற உணர்வால் வருந்தினார்.   தயையுடன் குரல் தழ தழக்க அவளிடம் சொன்னார். “ உன் சேவைகளாலும் பக்தியாலும் மகிழ்ந்தேன்.  மானிடப் பெண்ணே!  உன் அனுசரனையால்  நான் கௌரவிக்கப் பட்டேன். தன் உடல் நலத்தை தான் பெரிதும் விரும்புவர். அப்படியிருக்க நீ  என் காரணமாக உன்னையே கூட அதிகம் போஷித்துக் கொள்ளவில்லை. ஒரு விதத்தில் நான் என்னுடைய தவம், தர்மம், தவம், சமாதி, வித்யா, ஆத்ம யோகம் என்று அதிலேயே மூழ்கி இருந்து விட்டேன்.  நீயோ எனக்கு சேவை செய்வதே போதும் என்று இருந்து விட்டாய்.

பகவானின் புருவம் நெரிந்ததால் உண்டான  சில தத்வங்கள், உலகியல் சுகத்துக்காகவும் ஏற்பட்டவை,  அந்த சுகமான அனுபவங்களையும் நீயும் குறைவறப் பெறுவாய். சாதாரண மனிதர்களுக்கு நினைத்தே பார்க்க முடியாத,, அரசர்களின் விக்ரமங்களாலும்  கூட பெற முடியாத பல அனுபவங்களையும் அனுபவிப்பாய்.  . அகில யோக மாயா வித்யா விற்பன்னர் என்று பெயர் பெற்ற கணவனா இப்படி பேகிறார் என்று நம்ப முடியாமல் தேவஹூதி ஏறிட்டுப் பார்த்தாள்.

நான் பாக்கியம் செய்தவள். உங்களை கணவனாக அடைந்த நான் வேண்டுவது ஒன்றே. ப்ரும்ம ரிஷி, அமோகமான யோக சாதனைகள் செய்தவர் என்ற பெருமைகள் உடையவர். ஒரு சிறிது உடல் உறவும் இருந்தால் மிகப் பெருமையாக உணர்வேன். பெண்கள் மிக உயர்வாக எண்ணும் தாய்மை வேண்டும்.

பிரியமான மனைவியின் நியாயமான கோரிக்கையை ஏற்று, கர்தமர் தன் யோக பலத்தால் விருப்பப்படி எங்கும் செல்ல உதவும் ஒரு விமானத்தை தயாரித்தார். திவ்யமான, பல விதமான மணிகளால் அலங்கரிக்கப் பட்ட எல்லா பருவ காலங்களிலும் மிதமான தட்ப வெட்பங்களுடன்  கூடிய அழகிய விமானம் அது.  அதையும் விசித்ரமான பட்டு தோரணங்களும்,  மாலைகளும், என அதில் நிறைத்தார்.  பல தளங்கள் உள்ள அந்த விமானத்தில், படுக்கைகளும், சிறு ஆசனங்கள் மென்மையான உறையுடன் தயாராக இருந்தன. பல கலையழகு நிரம்பிய சில்பங்கள் ஆங்காங்கு வைக்கப் பட்டிருந்தன. மகா மரகதம் என்பதால் ஆன தரை.  முத்தும், பவளமும், இந்த்ர நீல மணிகள் பொன் மயமான சிகரத்தில் பதிக்கப் பட்டிருந்தன.  இவைகளைப் பார்த்தும் அவள் அதிகமாக மகிழ்ந்ததாக தெரியவில்லை.  இந்த குளத்தில்குளித்து விட்டு வா, இந்த விமானத்தில் ஏறிக் கொள் என்று அழைத்த பின், அவள் சரஸ்வதி நதியில் குளிக்க இறங்கினாள். அவளை திடுமென பத்து பணிப் பெண்கள் சூழ்ந்து நாங்கள் உனக்கு பணிப் பெண்கள். என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுங்கள் என்றனர். அந்த பெண்கள் தேவஹூதியை ஸ்னானம் செய்வித்து, நன்கு அலங்கரித்து, புதிய ஆடைகள், புது ஆபரணங்கள் அணிவித்து,  அம்ருதம் போன்ற அன்னமும், உயர்ந்த  பானமும் அளித்து, கொண்டு வந்து  சேர்த்தனர்.  ஆகாயத்தில் தாரா கணங்களுடன் இருக்கும் சந்திரன் போல வித்யாதர ஸ்த்ரீகள் பணிவிடை செய்ய பதியுடன் அமர்ந்தாள். 

அந்த விமானத்தில் அஷ்ட லோக நாயகன் விளையாடும் குலாசலம் என்ற மலைப் பகுதிகள், தென்றல் வீசும் சுகமான இடங்களில் சித்தர்கள் வணங்க, பல பனித் துளியால் நிறைந்த ரமணீயமான இடங்களையும் ரசித்தபடி, தனதன் போல மகிழ்ந்தாள்.  தேவர்களின் நந்தன வனத்திலும், புஷ்ப பத்ரம் எனும் இடத்திலும் தடையின்றி உலாவி மகிழ்ந்தனர். பளபளத்த அந்த விமானத்தில் விரும்பியபடி பல இடங்களுக்கு அதை செலுத்தி காற்று உலகில் பரவுவது போல உலகை சுற்றி வந்தனர். பகவானை அனவரதமும் எண்ணி வணங்கும் மனிதர்களுக்கு எது தான் அடைய முடியாத தூரம், அல்லது கஷ்டம்.  பூமி உருண்டையாக இருப்பதை மனைவிக்கு காட்டினார். அவளுடைய ஆச்சர்யத்திற்கு அளவேயில்லை. பலவிதமான இடங்களையும் கண்டு மகிழ்ந்து விட்டு தங்கள் ஆசிரமம் வந்து சேர்ந்தனர். 

தன்னையே ஒன்பது விதமாக பிரித்துக் கொண்டு அவள் ஆசைப்பட்டபடியே இல்லற இன்பங்களை அனுபவித்தார். வருஷங்கள் நிமிஷமாக கடந்தன.  தேவஹூதியும் ஒன்பது பெண்களைப் பெற்றாள்.  அனைவரும் நல்ல அழகிய உடல் வாகும் சிவந்த உத்பலம் போன்று மென்மையாகவும் வளர்ந்தனர். மீண்டும் தன் தவத்தை தொடர கிளம்பிய பதியைப் பார்த்து தேவஹூதி, என் விருப்பத்தை நிறைவேற்றி பெண்களை பெற்றோம். இவர்களுக்கு தகுதியான வரன் பார்த்து மணமுடிப்பதும் நமது கடமையே என்று நினைவுறுத்தினாள்.  இவ்வளவு நாள் பொறுத்தீர்கள். உங்கள் சாதனை தடைபட்டது. எனக்கு உங்களுடைய உயர்ந்த சாதனைகளும் பரமார்த்தம் என்பதும் தெரியாமலே போய் விட்டது. இப்பொழுது உணருகிறேன். ஜீவனின் வாழ்க்கை தீர்தபதன் எனும் பகவானின் பாத சேவையின்றி உயிருடன் இருந்தாலும் மரித்தது போல் தான் என்பதை. பகவானின் மாயை என்னை மறைத்தது போலும். உங்களையும் என்னைப் போலவே பந்தத்தில் ஆழ்த்தி விட்டேன். என்று வருத்தத்துடன் சொன்னாள்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபத்து மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-57

அத்யாயம்24

இவ்வாறு தன்னையே நொந்துகொள்ளும் மனைவியைப் பார்த்து கர்தமர் சொன்னார். வருத்தப் படாதே. ராஜபுத்ரி நீ, உன்னையே ஏன் தாழ்த்திக் கொள்கிறாய்.  பகவானே உன் கர்பத்தில் வருவார்.  நீயும் பல விரதங்களை செய்து வந்திருக்கிறாய்.  இப்பொழுதும் பொறுமையுடனும், சாந்தமாக ஈஸ்வரனைக் குறித்து தவம் செய்.  பொருள்கள் தானமும் செய்து  வா.  எனக்கு மகனாக வருவதாக சொல்லியிருக்கிறான்.  ப்ரும்ம பாவனமான மகன்  பிறப்பான். உன் மன க்லேசம் விலகட்டும்.  பல காலம் தேவஹூதியும் அதே போல அவர் சொன்ன விஷயங்களை சிரத்தையுடன் செய்து வந்தாள். கர்தமருடைய வீர்யத்தில் மரத்தில் அக்னி இருப்பது போல இருந்து அவளுக்கு மகனாக பிறந்தார்.  அச்சமயம் வானத்தில் துந்துபி முழங்கியது. வாத்யங்கள் இசைக்கப் பட்டன. கந்தர்வர்கள் பாடினர்.  அப்சரஸ்கள் ஆடினர். எங்கும் மகிழ்ச்சி நிறைந்தது. பூமாரி பொழிந்தது.  திசைகள் சுகமாக நீர் நிறைந்து குளிர்ந்தன. ஜனங்களுடைய மனமும் மகிழ்ந்தன. கர்தமருடைய ஆஸ்ரமம் இருந்த சரஸ்வதி தீரத்திற்கு ப்ரும்மாவும், மரீசி முதலிய ரிஷி கணங்களும் வந்து சேர்ந்தனர். பரப்ரும்மமான பகவானை, சத்வாம்சம் நிறைந்தவனாக, சத்ருக்களை அழிக்கும் வீரனாக, தத்வ ஞானம் அளிக்கும் பொருட்டு பிறந்தவனை  காண வந்து சேர்ந்தனர். அவருடைய எண்ணத்தை உள்ளபடி உணர்ந்து அதை மதிப்பவர்களாக மகிழ்ச்சியுடன்  கர்தம ரிஷியை வாழ்த்தினர்.

ப்ரும்மா சொன்னார்: மகனே,  என்னை கௌரவித்து விட்டாய்.  என் சந்ததியை வளர்த்து பெருகச் செய் என்று  நான் வேண்டியதை நிறைவேற்றி விட்டாய்.  தந்தைக்கு மகன் இப்படித்தான் இருக்க வேண்டும்.  தந்தை சொல்வதை ஏற்று அவர் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.  இந்த பெண்களும் நாகரீகம் தெரிந்தவர்களாக அழகிகளாக இருக்கிறார்கள். தகுதியுடைய வரன்களுக்கு அவர்கள் மனம் விரும்புவது போல் மணம் செய்து கொடு. உலகில் பிரஜைகள் பெருகட்டும்.   தன் மாயையால் பகவான் ஆதி புருஷன் அவதரித்திருப்பதை நான் அறிவேன்.  மனித உடலில்  கபிலனாக வருகிறான்.  ஞான விக்ஞான யோகத்தால் கர்ம மார்கத்தை மட்டுமே நம்பியிருக்கும் மனிதர்களை தூக்கி விட, ஹிரண்ய கேசன், பத்மம் போன்ற கண்களையுடையவன், பத்மம்  என்ற முத்ரையுடன், பத்மபாதங்களுடன்  வருவான்.

 மனித பெண்ணே! உன் கர்பத்தில் தோன்றியுள்ளவன்  கைடபாரி என்ற மஹாவிஷ்ணுவே.  அவித்யை என்ற சந்தேக சிக்கலை அவழ்த்து பூமியில் ப்ரசாரம் செய்வான். 

இவன் சித்தர்கள் கணங்களின் தலைவன். சாங்க்யம் என்ற ஞான மார்கத்தைச் சொல்லும் ஆசார்யர்களின் சம்மதத்தை பெற்றவன். உலகில் கபிலன் என்ற பெயருடன் உன் புகழை பரப்புவான். 

இவ்வாறு தம்பதியரை சமாதானப் படுத்தி விட்டு குமாரர்கள், நாரதர் முதலானோர், ஹம்ஸ விமானங்களில் தங்கள் இருப்பிடம் சென்றனர். அவர்கள் சென்றபின், கர்தமர் தன் பெண்களை ரிஷிகளுக்கு மணம் செய்வித்தார்.  மரீசிக்கு கலா என்பவளை, அனசூயாவை அத்ரிக்கு, ஸ்ரத்தா என்பவளை ஆங்கிரசுக்கு, ஹவிர்புவா என்பவளை புலஸ்தியருக்கு,கதி என்பவளை புலஹர் என்ற ரிஷிக்கு,  க்ருது என்பவருக்கு சதீ என்ற பெண்ணை, ப்ருகு முனிவருக்கு க்யாதி என்பவளை, அருந்ததி என்பவளை வசிஷ்டருக்கு , அதர்வணர் என்ற ரிஷிக்கு சாந்தி என்பவளை – என்றிவ்வாறு தன் பெண்களை சிறந்த ப்ராம்மணர்களான ரிஷிகளுக்கு மணம் செய்து கொடுத்து அவர்களை தம்பதிகளாக  அனுப்பி வைத்தார்.  விவாக சம்பந்தமான நாந்தி என்ற விடை பெறுதல் என்ற சடங்கையும் முடித்து அவர்கள் தங்கள் இருப்பிடம் சென்றனர். 

பகவானே தன் மகனாக அவதரிக்கப் போகும் விஷயத்தை அறிந்து பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளானார். க்ராம்யமான என் க்ருஹத்தில் உதிக்கப் போகிறார்.  பல ஜன்மங்களில் தவம் செய்து அறிய வேண்டிய பகவான், நமது எளிமையை பொருட்படுத்தாமல் வருகிறான்.  நல்ல சாதனைகள் செய்து யோகம், சமாதி என்று யதிகள் பகவானை தரிசிக்க தவிக்கின்றனர், அவர் என் சூன்யமான குடிலுக்குள் வருகிறார்.  தேவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவார்கள். உலகில் மங்களம் நிறையும்.

பகவானே, உன் சொல்லை காப்பாற்ற என் இல்லத்தில் அவதரிக்கிறாய். பக்தர்கள் பெருமையை காப்பாற்ற அவர்களுக்கு ஞானோபதேசம் செய்ய வருகிறாய்.  உன்  பக்தர்கள் விரும்பும் ரூபங்கள் எதுவானாலும், அந்த  அந்த ரூபத்தில் காட்சியளிக்கிறாய்.   அறிவுடையோர் உயரிய தத்வங்களை அறிய எப்பொழுதும் வணங்கத் தகுந்த உன் பாதங்களை சரணடைகின்றனர். ஐஸ்வர்ய, வைராக்யம், புகழ், அவபோதம் – தெளிந்த அறிவு, வீர்யம், ஸ்ரீ  இவை நிரம்பிய உன்னை சரணடைகிறேன்.

பர புருஷன், ப்ரதான், மஹான், காலம், கவி, மூன்றாக தெரிபவன், லோக பாலன், தன் அனுபவத்தால் ஏற்படுத்திய இந்த ப்ரபஞ்சம், சுதந்திரமான சக்தியுடைய கபிலனை ஆராதிக்கிறேன். ப்ரஜாபதி நீ அவதாரம் செய்யப் போகிறாய் என்பதை அறிந்து மகிழ்ச்சியுடன் சொன்னார்.  எனக்கு இந்த உயரிய தந்தை பதவி உன்னால் கிடைத்தது. உன் நினைவை மனதில் சுமந்து  கொண்டு  சற்றும் துக்கமில்லாமல் நான் நடமாடுவேன்.

ஸ்ரீ பகவான் பதில் சொன்னார்:  நான் முன் சொன்ன சொல் தான்  சத்ய லோகத்திற்கு ப்ரமாணம். அதனால் உன்னில் அவதரிக்கிறேன்.  முக்தியடைய விரும்பும் சாதகர்களுக்கு கூட அரிதாகவே கிடைக்கும் இந்த வாய்ப்பு, உலகில் சாங்க்ய யோகம் என்பதை பரப்புவதற்காக, உலகில் அதன் சிறப்புகளை சொல்வதற்காகவும்,  ஆத்ம தரிசனம் என்பதை சாதகர்களுக்கு அளிக்கவும் இந்த அவதாரம்.   இந்த ஆத்மா பற்றிய அறிவு, வெளியில் தெளிவாக தெரியாத வழி. பல காலமாக யாரும் முயற்சி செய்யாமல் இந்த துறை வெகுவாக நஷ்டமாகி விட்டது.  அதை புனருத்தாரணம் செய்யவே இந்த உடலை நான் தரிக்கிறேன்.  எங்கு வேண்டுமானாலும் போ. என்னிடம் பொறுப்பை ஒப்படைத்து உன் சாதனைகளை தொடர்ந்து செய்.   என்னை பூஜித்து , மரணமில்லாத அமரத் தன்மையை அடைவாய்.

நான் ஸ்வயம் ஜோதியான ஆத்மா, அனைத்து உயிரினங்களிலும் அவர்களது ஹ்ருதய குகையில் வசிக்கிறேன். உன்னிடத்தில் உன்னையே காணும் ஆத்ம வித்யா என்பதை அறிந்து கொள், அதன் பின் உனக்கு சோகமோ, பயமோ தோன்றாது. இந்த ஆத்யாத்மிகா – ஆதி ஆத்மாவான என்னை அறிவது- என்ற வித்யா எல்லா செயல்களுக்கும் பின்னால் உள்ள பயத்தை போக்கும்.  பயத்தை வெற்றி கொள்வாய்.

மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு அபயமளித்த கபிலரிடம் விடை பெற்று,  கர்தமர் தென் திசை நோக்கி பயணம் செய்து வனம் சென்றார்.  மௌன விரதம் மேற்கொண்டு திடமான விரதங்களுடன், தனிமையில் துறவியின் நியமங்களை அனுசரித்தபடி இருந்தார்.  மனதில் தியானம் செய்து வந்தார். நல்லது, அல்லாதது எதிலும் பட்டுக் கொள்ளாமல் குணங்களையும் வென்றவராக, பக்தி ஒன்றே என பாவித்து இருந்தார். தானே, அஹம்பாவம் (தன்னியல்பு) அகன்றது.  என்னுடையது என்ற எண்ணமே இல்லாமல் போனது. உயிரினங்கள் அனைத்தையும் சமமாக பார்த்தார். ப்ரசாந்தமான புத்தியுடன் தீரனாக, சமுத்திரத்தின் சாந்தமான  அலை போல இருந்தார்.

சர்வக்ஞன் எனும் பகவான் வாசுதேவனிடத்தில் முழுமையான பக்தி பாவத்துடன், பந்தங்கள் அறுபட்டவராக, தன்னையறிந்தவராக  ஆனார்.

आत्मानं सर्वभूतेषु भगवन्तमवस्थितम् ।अपश्यत्सर्वभूतानि भगवत्यपि चात्मनि ॥ ४६॥

என்றபடி அனைத்து ஜீவராசிகளிடமும் தன்னையே காண்பவராக, உலகில் எல்லா உயிரினங்களிடமும் உள்ளது ஒரே பரமாத்மாவின் அம்சமான ஆத்மாவே என்ற உண்மையை உணர்ந்து அறிந்தார்.

ஆசையோ, வெறுப்போ, இல்லாமல் சமமாக அணுகும் குணம் வந்து சேர்ந்தது.  தன் பக்தி நெறியாலேயே பரம பாகவதர் என்ற தகுதியை அடைந்தார். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின்,  இருபத்து நாலாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-57

|| ஸ்ரீமத் பாகவதத்தில் காபிலோபாக்யானம் என்ற மூன்றாவது ஸ்கந்தம் நிறைவுற்றது || 

ஓம் தத் சத் ||

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக