ஸ்ரீமத் பாகவதம்-இரண்டாவது ஸ்கந்தம்
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || -ஸ்ரீ சுகர் சொல்கிறார்
அத்யாயம்-1
அரசனே! நல்ல கேள்வி. உலகத்திற்கே நன்மை பயக்கும் விஷயம், தன்னைத் தானே விரும்புவது போல ஜனங்களுக்கு மிக பிடித்தமான, சம்மதமான மேலும் கேட்கத்தகுந்த விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?
கேட்பதற்கு விஷயங்கள் பல உண்டு. ராஜன்! அதுவும் அரசனுக்கு பல விஷயங்கள் தெரிந்து கொள்ள கேள்வி அவசியம். ஆயிரக் கணக்காக உள்ளன. ஆனால் சாதாரண மக்கள், தான், தன் குடும்பம் என்று இருக்கும் பொது அந்த ஜனங்கள், ஆத்ம தத்வம் பற்றி எதுவுமே தெரியாதவர்கள். அவர்கள் வாழ்க்கை எப்படி போகிறது. பாதி நாளை, நித்ரை அபகரிக்கிறது. வேலை, நாளில் பெரும் பகுதியை, சம்பாதிக்க வேண்டும் என்றும், வயதுக்கேற்ப, குடும்பத்தைக் காப்பாற்ற என்றும் சென்று விடுகிறது. தன் உடலை, தன் குழந்தைகள், பரிவாரங்கள், அரசனானாலால் சேனை, தேவையற்ற பல செலவினங்கள், கூடவே நகர்ந்து வரும் ம்ருத்யு கண்ணுக்கு புலப்படுவதில்லை. ஆதலால், பாரதா! சர்வாத்மாவான பகவான் தான் ஈஸ்வரன், ஹரி என்று அழைக்கப் படுகிறான். அபயம் வேண்டுமானால், அவனைத் தான் கேட்கவேண்டும், அவன் புகழைத் தான் பாட வேண்டும், நினைவில் இருத்தி வைத்து தியானம் செய்ய வேண்டும். ஞான யோகம் அதைத் தான் சொல்கிறது. தன் தர்மத்தை அனுஷ்டி. ஜன்ம லாபம் என்பது மனிதனாக பிறந்தவர்களுக்கு கடைசியில் நாராயண தியானம் தான். முனிவர்கள் ஹரி கதையில் லயித்து இருப்பது அவர்கள் பிறவி விசேஷமே. இந்த பாகவதம் என்ற புராணம் ப்ரும்மாவிடமிருந்து கேட்டு என் தந்தை எழுதியது. அவரிடம் நான் பாடம் கேட்டேன். முக்குணங்களை த்யாகம் செய்த துறவி நான். ராஜரிஷியே! உத்தம ஸ்லோகன் எனும் ஹரி கதையில் என் மனம் ஈடுபடுகிறது. நீ மகாபுருஷன்- பரந்த மனமுடைய அரசன். சிரத்தையுடன் கேட்பதால், நான் கற்ற படியே சொல்கிறேன். உன் மனம் எளிதில் முகுந்தனின் பாதத்தில் லயிக்கும். யோகிகளும் இதைக் கேட்டு பலனடைவர். யார் யார் ஹரி நாமத்தைக் கேட்டு பலனடைந்தார் என்பதில் ஏன் நேரத்தை வீணடிக்கிறோம். நல்லது செய்ய நினத்த நேரமே நல்ல முஹூர்த்தம் தான்.
கட்வாங்கன் என்ற ராஜ ரிஷி. (இந்த கதை பின்னால் வரும்.) ஒரு முஹூர்தமே வாழ் நாள் என்று அறிந்தான். உடனே அனைத்தையும் துறந்து, ஸ்ரீ ஹரியே சரணம் என்று வெளியேறினான். எது சம்ப்ரதாயம் என்பதை தெரிந்து கொள். அந்திம காலம் வரும் பொழுது அறிவுள்ளவர்கள், அசங்க சஸ்திரம்- சகவாசம் என்பதே ஒரு சஸ்திரம்- ஆயுதம். அதைக் கொண்டு ஆசைகளை ஒழித்து, வீட்டை விட்டு வெளியேறி, ஒரு புண்ய தீர்த்த கரையில் விதிப்படி சுத்தமான ஆசனத்தில் அமர்ந்து ஏகாக்ஷரம் என்றும் ப்ரும்ம பீஜம் என்றும் சொல்லப்படும் ஓங்காரத்தை ஜபித்த படி, ( புண்ய தீர்த்த ஸ்னானம் தேகம் ஆத்ம சுத்தி தரும். ப்ராணாயாமம்- வாயுவை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பர். இதன் பின் பாதத்தில் ஆரம்பித்து மனதை கட்டுபடுத்தும் யோக முறையை விவரிக்கிறார்.) விவரமாக, அண்ட கோசம் எனும் இந்த சரீரம் -நீர்,நிலம்,அக்னி,வாயு, ஆகாசம், மனம், புத்தி என்று ஏழு கோட்டைகள். (ஆவரணங்கள்- சுற்றுக்கள்)
யோக முறையில் தன் சரீரத்தில் முழுமையாக ஹரி த்யானமே என்று ஆன பின், அவரது உருவத்தை தன்னுள் ஸ்தாபித்துக் கொண்டான்.
பக்ஷிகள் போல அண்டம்- (முட்டையின் உள் பறவை இருப்பது போல) பகவானின் விராட் ஸ்வரூபம் – சர்வ ஸ்ருஷ்டியும் அவருடைய பிரதி பிம்பமாக கிரமமாக உலகில் தோன்றுகிறது. )அது அவருடைய விராட் ஸ்வரூபம். இந்த பரிணாமத்தால் வரும் விஸ்வம் விராட் என்ற பதத்தால் குறிப்பிடப் படுகிறது. பறவை போல என்றாலும், விராட் புருஷனுடைய அண்டத்தில் தோன்றுவது ஒரு இலையுடன் வரும் சிறு செடி போல வளரும் தன்மையது. மேலும் சர்ப்ப – பாம்பின் சரீரத்திலிருந்து பஞ்சு (அதன் சட்டை) வருவது போல, நீர், நிலம் என்ற பஞ்ச பூதங்களும், ஏழு ஆவரணங்களும் உத்பவிக்கின்றன. ப்ரும்மாண்டத்தைப் போலவே மனித சரீரத்திலும் இதே வரிசைக் கிரமம் தான். இந்த ஏழு ஆவரணங்களுடன் பிறந்த ஜீவன், அந்தர்யாமியாக ஈஸ்வரனும் இருக்கிறான். பகவான் தாரணாஸ்ரய: உருவம் வந்தாலும் உயிர் தருவது பகவானே. .
விராட் புருஷணின் அவயவங்களும் அதன் பெயர்களும்:
இந்த விராட் புருஷனின் பாதம் பாதாளம், சிலர் ரஸாதலம் என்பர். இரண்டு முழங்கால்களும் சுதலம். துடைகள் இரண்டிலும் கீழ் பாகம் விதலம், மேல் பாகம் அதலம்.
ஜகனம் என்ற பின்பகுதி மஹீ தலம். நபஸ்தலம் – (ஆகாயத்துடன் ) பூ லோகம். நாபி பகுதி – நீர் நிலைகள்.
மார்பு பகுதி ஜ்யோதி, ஜோதிகள் அனைத்தும்- ஸ்வர்கம்.
மஹர் லோகம் என்பது கழுத்து பகுதி. தபோ லோகம் என்பது நெற்றி. சத்ய லோகம் தலை.
தேவர்கள் கைகள்.
விராட் ஸ்வரூபத்தின் காதுகளின் உள் பாகம், திசைகள், காது என்ற அவயவத்தின் மற்ற செயல்பாடுகள் சப்தம் த்வனி, உச்சரிப்பு முதலியன. வாயு அதன் அதிபதி.
அதே போல மூக்கு இதில் அஸ்வினி குமாரர்கள் அதிபதிகள். வாசனை. எப்படியிருந்தாலும், அதிகமோ, குறைவோ, அது மூக்கு என்ற அவயவத்தின் செயல் பாடு.
அக்னி முகம். ஆகாசம் கண்கள். இதில் கண்கள் என்ற புலன், அதன் அதிபதி சூரியன். விராட் ஸ்வரூபமான பகவானின் கண்கள் பகலும் இரவும் ஆகும்.
விராட் ஸ்வரூபத்தின் புருவம் நான்கு முகமுடைய ப்ரும்மாவின் ஸ்தானம்.
விராட் ரூபத்தின் முகவாய் தண்ணீர், அதன் அதிபதி வருணன். விராட் பதியின் நாக்கு ரஸம்.
சந்தஸ், சந்த ப்ரதானா: வேதா: செய்யுள் என்பதன் கட்டுப் பாடுகள். எதுகை, மோனை என்று தமிழில். இந்த வகையில் வேதம் சந்தஸ் ப்ரதானமாக, அதாவது சந்தஸ் என்ற சாஸ்திரம் வேதத்துக்கு மிக முக்கியம். ஓரெழுத்து கூட கூடவோ குறையவோ கூடாது என்ற நியமம். செய்யுளாக அமைந்ததால் வேதத்துக்கு சந்தஸ் என்றே பெயர். கேட்டு, திருப்பி சொல்லியே வேதத்தை கற்றதால் சப்தமும், உச்சரிப்பும் மிக முக்கியம். சந்தஸ் என்பது மொழிக்கு இலக்கணம் போல செய்யுளின் அமைப்பை வரையறுக்கும் சாஸ்திரம். வேதத்தின் ஆறு அங்கங்களுள் ஒன்று.
விராட் புருஷனின் தலை. ப்ரும்ம ரந்த்ரம் என்ற பகுதி ஆசா பாசங்கள். மகன் முதலான பற்றுதல்கள். உலகம் அனைத்தும் செயல் படுவது அவருடைய கடாக்ஷத்தால்.
ஒவ்வொரு அவயவத்துக்கும் ஒரு அதிபதி, அதன் வேலைகள் என்று விஸ்தாரமாக சொல்கிறார்.
நதிகள் விராட் புருஷனுடைய நாடிகள். உடலில் உள்ள ரோமங்கள் மரங்கள். மூச்சுக் காற்று மாதரிஸ்வா என்ற காற்று. அவரது நடை சென்று கொண்டேயிருக்கும் காலம், வயது. அவரது குண ப்ரவாஹ: -, சத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள். கர்ம – காரியம் என்பது உலகில் ஜீவன்களின் நடமாட்டம்.
பகவானின் கேசம் நீரை சுமந்து செல்லும் ,மேகங்கள். சந்த்யா காலங்கள் அவரது உடை. அவரது ஹ்ருதயம் – மிக முக்கியமான அங்கம். அது சந்திரன்- மனம்
சூர்ய சந்திரர்கள் – இரண்டு பற்களில் தோன்றியதாக சொல்கிறார்கள். மற்ற பற்களில் நக்ஷத்திரங்கள்.
ஞான ரூபமான பகவானின் சக்தி மனிதனின் சித்தம். பூமியிலிருந்த மஹத் என்ற தத்வங்கள். (நீர்,நிலம்.அக்னி,வாயு,ஆகாசம்,மனம்,புத்தி என்பன). அந்த:கரணம்- மன சாட்சி -இதிலிருந்து அஹங்காரம்- தன்னியல்பு (எந்த செடி என்பது விதைக்குள்ளும், எந்த பறவை என்பது பறவையின் முட்டைக்குள்ளும் இருப்பது – ஹம்ஸங்கள் வெண்மையாக, கிளிகள் பச்சையாக, மயில்கள் விசித்ரமாக வர்ண கலவையாக என்பது மாறாமல் வர பயன்படும் தத்வம் ) வாக்கிலிருந்து ஸ்ரீ ருத்ரம்.
எல்லா உயிரினங்களிலும் புத்தி, வாழ்க்கையின் தேவைகள் அனைத்தும் கிடைக்குமாறு செய்யும் அந்த பரமாத்மா ஒருவனே அந்தராத்மா – உள் உறையும் செய்வம்- அதுவே சத்யம் என்று பஜிக்க வேண்டும்.
நான் கற்ற படியே சொல்கிறேன்.
((இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், முதல் அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்
அத்யாயம்-2
ஆத்ம யோனி – ப்ரும்மா – ப்ரளயத்திற்கு பிறகு ஸ்ருஷ்டியை ஆரம்பித்தார். அதற்கு முன் இருந்த பூவுலகை நினைவில் கொண்டு அதே போல உயிரினங்கள், தாவரங்கள், இயற்கை வளங்கள் என்று ஸ்ருஷ்டி செய்தார்.
(ஓரு யுகத்தின் முடிவில் மஹா பிரளயம் என்பதும், ஜீவ ராசிகளின் அடுத்த சிருஷ்டிக்கான அடிப்படை தத்துவங்கள், விதை முதலியன மட்டும் பாதுகாக்கப் படும் என்பதும் பாகவத்தின் பிற்பகுதியில் விவரமாக சொல்லப் படுகிறது)
சப்த ப்ரும்மம் என்ற வேதம் நிரந்தரமாக இருக்கும். தூங்கி எழுந்தவுடன் முன் தின நினைவுகள் உடன் வருவது போல, ப்ரும்மா தன் தொடர்பை அறிந்தார்.
நெல் முதலான தானியங்கள் உமியை நீக்கி விட்டு அரிசியை எடுத்துக் கொள்வது போல கற்பவர்கள்,சார பூதமான பகவானை அறிந்து கொள்ளவேண்டும் இகலோக வாழ்க்கைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தனம் அவசியம். அதை சம்பாதிக்க உழைக்கும் போது பகவானை மறந்து விடுவதும் இயல்பே. அவர்கள் ஸ்வர்கம், மறு பிறப்பு என்பதை அதிகமாக, மேலானதாக அறிகிறார்கள். இது ஒரு நிலை. மாயாமயமான இந்த உலகில் கனவில் வாழ்வது போல அவர்களது வாழ்க்கை, விழித்தவுடன் மறையும்.
அடுத்த நிலையில், உலகியலே துச்சம் என்று கருதுவது. இது மிக சிலரே அறிந்து கடை பிடிக்கவும் செய்கிறார்கள். அவர்களுக்கு தேவைகள் குறைவு. பூமி இருக்கும் பொழுது, கட்டில், படுக்கை என்பது எதற்கு? கைகள் இருக்கும் பொழுது தலையணை எதற்கு ? கைகளை குவித்தல், அஞ்சலி இருக்க தனியாக பாத்திரம் எதற்கு தண்ணீர் குடிக்க, மரவுரி இருக்க பட்டு ஸ்திரங்கள் எதற்கு என்பது அவர்களுடைய கொள்கை. துறவிகள், இவர்கள் தன் சித்தத்தில் தானே ரமிப்பவர்கள். சம்சார வாழ்க்கையில் சாரமில்லை என்பார்கள். அனந்தனான பகவானை பஜிப்பார்கள். பொதுவாக வாழ்வின் பொருள் என்ன? எதற்காக பிறப்பு, அதன் முடிவு என்று அலசுவார்கள். தங்கள் தேடலில் ஒரு சிலரே தன்னுள் வசிக்கும் பரமாத்மாவை அறிகிறார்கள்.
பகவான் விஷ்ணுவை வர்ணிக்கிறார்.
நான்கு கைகள், அவைகளில் முறையே, தாமரை மலர், சங்கு சக்ரம், கதை என்று உள்ள உருவை தியானிக்கிறார்கள். ப்ரசன்னமான முகம். தாமரை போன்ற கண்கள். கதம்ப புஷ்பத்தின் தளிர் போல மஞ்சள் நிற ஆடை- பீதாம்பரம், மகாரத்னங்கள் பதித்த பொன்னாலான அங்கதம், அதே போல ப்ரகாசிக்கும் ரத்ன மயமான கிரீடமும், குண்டலங்களும், ஹ்ருதய தாமரையில், யோகேஸ்வரர்கள் ஸ்தாபித பாத பல்லவம் (ப்ருகு முனிவரின் பாதங்கள்) ஸ்ரீ வாசம் செய்யும் மார்பு, கௌஸ்துப ரத்ன மாலை, என்றும் வாடாத வனமாலை, இடையில் மேகலை,கை விரல்களில் மோதிரங்கள், கைகளில் கங்கணங்கள், கால்களில் நூபுரங்கள், சுருள் சுருளான கேசம் மறைக்க மென் முறுவலோடு விளங்கும் முகம், தன் லீலையைத் தானே ரசிப்பது போல சிரிக்கும் கண்கள், தன்னுடைய அளவில்லாத அனுக்ரஹத்தை தெரிவிக்கும் புருவங்கள், மனம் கொண்டவரை இந்த உருவத்தை தியானிக்க வேண்டும். மனம் லயிக்கும் வரை திரும்பத் திரும்ப கண்டு ரசிக்க வேண்டும்.
ஒவ்வொரு அங்கமும் பார்த்து தியானிப்பதை சொல்கிறார். முதலில் பாதம். கதையை கையில் வைத்து இருப்பது வெற்றி கொள்வதற்காக. மனதை சுத்தம் செய்யும் ( இந்த இடங்களில் பாகவத ஸ்லோகங்கள் மிக அழகான பதங்கள், பொருள் புரியாமல் படித்தால் கூட ரசிக்கத் தகுந்தவை)
இந்த விஸ்வேஸ்வரனை பார்த்தவுடன் மனதில் பக்தியோகம் வருவது நிச்சயம். யதி- துறவியானாலும் கூட, சரீரத்தை போஷிக்காமல் இருந்தாலும், தேஹத் த்யாகம் தானாக செய்து கொள்வதில்லை. தேகம் என்ற பற்றுதல் இல்லாமல் இந்த உடலிலும் உள்ள இறைவன் அம்சத்தை மனதாலும், வெளி உலகில் மற்ற ஜீவன் களிலும் உள்ள இறையம்சத்தைக் காண்கிறார்கள்.
க்ஷேத்ரக்ஞன் – பகவானின் ஒரு பெயர். நிர்மலமான மனம் புத்தி இவற்றால் தன்னுள் இருப்பது ஆத்மா , பரமாத்மாவின் அம்சமும் என் ஆத்மாவில் உள்ளது என்ற அறிவை அடைபவன் தீரன். அவனுக்கு நல்ல சாந்தமான குணமும் அமையும். அவன் இக பரமான செயல்களை விடுவதால் எதையும் இழப்பதில்லை. பரம் பதம் வைஷ்ணவம் – விஷ்ணுவே பரம் பொருள் என்று நிரூபிக்க மற்ற தன் தத்துவங்களை, (நேதி நேதி-) ஒவ்வொன்றாக ஆராய்ந்து இது இல்லை, இது இல்லை என்று அவைகளைத் தவிர்த்து, “विज्ञानं ब्रह्म என்ற நியாயம் படி, அறிவில் சிறந்த, அனுபவம் வாய்ந்த முனிவர்கள் கண்டு கொண்டது இதுவே.
அஷ்டாங்க யோகம் என்பதை விவரிக்கிறார். ப்ராண வாயுவை ப்ராணாயாம பலத்தால் மூலாதாரத்தை தட்டி எழுப்பி, நாபி முதலிய இடங்களில் உள்ள ஆறு சக்கரங்களை யோக முறையால் கடந்து புருவ மத்தியை அடைய வேண்டும். புருவ மத்தியில் உள்ளது ஆக்ஞா சக்கரம். புலன் களை அடக்கி அதையும் தாண்டி உச்சந்தலையில் ப்ரும்ம ரந்த்ரம் என்ற சக்கரத்தை பிளந்து தன் தேகத்தையும் , புலன் களையும் விட்டு விட வேண்டும்
(இந்த யோக முறை பல இடங்களில், ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. குண்டலினி யோகம் – இதை குரு இல்லாமல் செய்ய முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது).
இது யோக சாதனைகளைச் செய்யும் சாதகர்களுக்கு. உள்ளும் வெளியிலும் அண்டத்தில் பவனன்- காற்று புகுவது போல ஆத்ம தத்வத்தை அறிந்தவர்கள். இவர்கள், வித்யா, தவம், யோகம், சமாதி என்று இருப்பவர்கள்.
கர்ம யோகிகள், வேதம் விதித்த யாக காரியங்களை செய்பவர்கள். இவர்கள் மறு பிறவி எடுக்கிறார்கள். விஷ்ணுவின் அருளால், ப்ரும்ம ஸ்ருஷ்டியில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இவர்களும் ஞானிகளே. அனுபவத்தால் அறிவார்கள். அனந்தனின் முகத்திலிருந்து வரும் உஷ்ண வாயுவால் விஸ்வம்-பூவுலகம் எரிகிறது- உஷ்ணமாக உயிரினங்கள் வாழ ஏதுவாக இருக்கிறது என்பதை அறிகிறார்கள். சித்தேஸ்வரர்கள்.
மிகவும் அரிதான யோக சாதனைகளைச் சொல்கிறார். முடிவாக, பகவான் சர்வ பூதங்களிலும் எப்பொழுதும் இருக்கிறார். அதனால், ராஜன்! ஹரி எல்லா இடங்களிலும் எப்பொழுதும் பூஜிக்கப் பட வேண்டும். கேட்டு, தானும் உடன் பாடி, மனதால் நினைத்து மனிதர்கள் நல்ல கதியை அடைவார்கள்.
அறிந்தவர்கள், பக்தர்கள் சொல்ல, பகவத் கதையை கேட்பவர்கள், அவருடைய சரணாரவிந்தங்களை அடைவார்கள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்துள்ள மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39
அத்யாயம்-3
அரசனே ! உன் கேள்விக்கு பதில் சொன்னேன். என்றோ ஒருநாள் காலகதியடையப் போகும் மனிதர்கள் மத்தியில் புத்திமானான அரசன் நீ.
ப்ரும்ம வர்சசான (வேத சாஸ்திரங்களை கற்று வித்வானான )மகன் வேண்டும் என்று விரும்பும் பெண், ப்ரும்ம ஞானம் பெற்ற பதியை அடைய வேண்டும் என்பது உலக நியதி. ப்ரஜைகள் வேண்டும் என்றால், ப்ரும்மாவை பூஜிக்க வேண்டும். அனுபவிக்க வேண்டும் என்றால் இந்திரனை பூஜிக்க வேண்டும்
ஐஸ்வர்யம் வேண்டும் என்பவர்கள் மாயாவான தேவியை பூஜிக்கவேண்டும். தேஜஸோடு மகன் வேண்டினால் அக்னியை, தனம் வேண்டுபவர் வசுக்களை, வீர்யம், ப்ரபாவம் வேண்டுபவர் ஸ்ரீ ருத்ரனை பூஜிக்க வேண்டும்.
போஜன பிரியன் என்றால் உணவு பண்டங்களை, ஸ்வர்கம் விரும்புபவன் அதிதியின் பன்னிரண்டு ஆதித்யர்களை பூஜிக்க வேண்டும். ராஜ்யம் வேண்டும் என்பவன் விஸ்வ தேவர்களை பூஜிக்க வேண்டும், அரசன், பிரஜைகளை தன் வசம் இருக்கச். செய்ய திக் பதிகளை பூஜிக்க வேண்டும்.
ஆயுள் வேண்டுபவன் அஸ்வினி தேவதைகளையும், உடல் புஷ்டியாக இருக்க இளா தேவி எனப்படும் பூ தேவியையையும், பிரதிஷ்டா- நிலைத்து இருக்க, லோக தாய் தந்தையர் எனப்படும் ஜீவாதாரமாக இருப்பவர்களான ரோதஸீ, வானமும் பூமியும் சேர்ந்த -த்யாவாப்ருதுவீ யை வணங்க வேண்டும்.
அழகிய ரூபம் வேண்டுவோர், கந்தர்வர்களான விஸ்வாவசு முதலியோரையும், மனைவி சுந்தரியாக வேண்டும் என்பவர்கள் அப்சர ரூபத்தில் ஊர்வசியை யாசிக்க வேண்டும். ஆதிபத்யம்- தலைமை பதவியை விரும்புபவர், பரமேஷ்டி என்றும் சர்வேஸ்வரன் என்றும் சொல்லப் படும் ப்ரும்மாவை வணங்க வேண்டும்.
புகழ் வேண்டுபவன், யக்ஞ புருஷனான விஷ்ணுவை வணங்க வேண்டும். பொக்கிஷங்கள், ஏராளமான பொருள் விரும்புபவன் ப்ரசேதஸ் என்ற வருணனை யாசிக்க வேண்டும். வித்யா-கல்வியை வேண்டுபவன் கிரீசனான சம்புவை வணங்க வேண்டும். தம்பதிகளிடம் அன்யோன்யம் வேண்டுமானால் உமாவை, மஹாதேவ பத்னியாக வணங்க வேண்டும்.
தர்மத்தை விரும்புபவன் உத்தம ஸ்லோகனான விஷ்ணுவை யாசிக்க வேண்டும். தன் வம்சம் வளர புத்ராதிகள் வேண்டுவோர், பித்ருக்களை , பாது காப்பு வேண்டுபவன், யக்ஷர்களை, பலம், மதிப்பு வேண்டுபவன், மருத் கணங்களையும் தேவ கணங்களையும் யாசிக்க வேண்டும்.
ராஜாவாக வேண்டும் என்பவர்கள், மனு தேவர்களை, மன்வந்தர பாலகர்களை வணங்க வேண்டும்.
அகாமன் எந்த தேவையும் இல்லாதவன், பூர்ண புருஷனான பகவானை பூஜிக்க தன்னைப் போன்ற பக்தர்களுடன் ஹரி கதையில் ஈடுபடுவான். எப்படியிருந்தாலும், எந்த விதமான பலனை விரும்பினாலும் கடைசியில் மோக்ஷம் வேண்டும் என்று வேண்டுபவன் உதார தீ: – பெருந்தன்மையுடையவன் என்கிறார்.
(‘யோ யோ யாம் யாம் தனும் பக்த:” என்று கீதையில் சொல்லியபடி, யார், யார், எந்த எந்த வித உருவத்தில் துதித்தாலும் அந்தந்த பலங்களை தருபவன் நானே. என்றபடி பரம புருஷனே முக்தியைத் தருகிறான் என்பது அபிப்ராயம். பகவானிடத்தில் திடமான பக்தியைத் த்ருவது பாகவத சங்கமே.)
ஞானம் பெற தனிமையில் தவம் செய்ய வேண்டும் என்பது போல மோக்ஷம் விரும்புபவர்கள் பக்தியோகத்தில் ஈடுபட வேண்டும். துறவியானாலும் ஹரி கதையை விரும்பாமலா இருப்பான்.
சௌனகர் கேட்டார்:
இப்படி சொன்னதைக் கேட்டு ராஜ ரிஷியான பரீக்ஷித், வியாசர் மகனிடம் வேறு என்ன கேட்டான்? வித்வான் சூதரே! இன்னும் கேட்கவே விரும்பும் எங்களுக்குச் சொல்லுங்கள். இந்த சபையில் எல்லோருமே ஒத்த மனத்தினரே. அரசன் பாகவதன் – பகவத் பக்தி உடையவனே. குழந்தை பருவத்திலேயே, மற்ற பாலகர்களோடு க்ருஷ்ணன் பற்றிய விளையாட்டுகளை விளையாடியவன். வியாசர் மகனும் வாசுதேவ பராயணன். நல்ல குணவான். அவன் பெருந்தன்மையை பலரும் பாடுவார்கள். சூரியோதயம், அஸ்தமனம் என்று. நாட்கள் ஓடுகின்றன. ஆயுள் குறைகிறது. உத்தம ஸ்லோகனை நினைத்து பேசும் பேச்சுக்களே பொருளுடையது.
மரங்கள் ஜீவிக்க வில்லையா? ரோமம் அடர்ந்த மிருகங்கள் சுவாசிக்க வில்லையா? கிராம பசுக்கள், உண்பதில்லையா, ? அது போல மாந்தர்கள் இருக்கலாமா? (உண்பதும் உறங்குவதும் மட்டுமா வாழ்க்கை?)
முகுந்தனை வணங்காத தலையில் கிரீடமும், அபிஷேக காலத்தில் கட்டிய பட்டும் வெறும் பாரமே. விஷ்ணு புகழை பாடாதவர்கள் கண்கள் மயில் இறகில் இருக்கும் கண்கள் போல பொருளற்றவையே. பாதங்கள் ஹரி இருக்கும் க்ஷேத்ரங்களுக்கு நடக்காதவரை, பெரிய மரங்களின் அடி பாகம், பாதங்கள் போல அசையாதவை. பகவானின் பாத தூளியை பெறாதவனும், பூஜை செய்த மலர்களின் மணத்தை உணராதவனும் மனிதனாக இருப்பதே வீண். பாடல்களை கேட்டு மயிர் கூச்சல் வராதவனும், கண்களில் நீர் துளிக்க ரசிக்காதவனும் அசையாத கல்லைப் போன்றவர்களே. எனவே, சூதரே, மேலும் சொல்லுங்கள். பாகவதர்களைப் பற்றி சொல்கிறீர்கள். எங்கள் மனதுக்கு இசைவாக உள்ளது. வியாசர் மகன், ஆத்ம வித்யா விசாரதன். சாதுவான அரசன் கேள்விக்கு என்ன பதில் சொன்னான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-25
அத்யாயம்-4
ஸ்ரீ சுகர் சொன்னதை கேட்டு, பரீக்ஷித் ராஜா, ஸ்ரீ க்ருஷ்ணரை மனப் பூர்வமாக தியானித்தான். தன் மனைவி மக்களை, வீடு, உறவினர்களை, பரந்த ராஜ்யத்தை, முற்றிலும் மறந்தான். என்னிடம் நீங்கள் தற்சமயம் கேட்கும் விஷயங்களையே தன்னுள் விசாரித்து, வாசுதேவ பகவானிடம் முழு மனதையும் செலுத்தினான். சுகரைப் பார்த்து “ப்ரும்மன்! சகலமும் அறிந்த தங்கள் வார்த்தைகளைக் கேட்டு என் உள்ளம் நிர்மலமாகியது. திரும்பவும் பகவானின் மாயை, இந்த பூவுலகை ஸ்ருஷ்டி செய்தது பற்றியே அறிய விரும்புகிறேன். தானே மறைக்கிறான், பின் தானே திரும்பத் தருகிறான், எந்த சக்தியால் இது சாத்யமாகிறது. தானே விளையாடியும், விளையாட வைத்தும், அத்புதமான செயல். கண்கட்டி வித்தை போல கண் முன்னே காட்டி மறைக்கிறானா? ப்ரக்ருதி-இயல்பான குணங்கள். சத்வ,ரஜஸ்,தமஸ்- இவைகள் அவன் கைபாவைகளாக இருக்க, உயிரினங்களில் தனித் தனியாகவோ, கூட்டாகவோ, இந்த குணங்கள் வெளிப் படச் செய்வதும் அவனே. நீங்கள் சப்த ப்ரும்மம் என்ற வேத சாஸ்திரத்தில் கரை கண்டவர். அதற்கும் மேல், வேதாந்தங்களையும் அறிந்தவர். “
இப்படி கேட்டவனைப் பார்த்து ஸ்ரீ சுகர், பரஸ்மை புருஷாய வணக்கம் என்று ஆரம்பித்து துதி செய்கிறார்.
மூன்று வித சக்திகளால், உலகில் தோன்றுதல், நிலையாக இருத்தல், பின் மறைதல் என்ற செயல்களை செய்வது அவனது லீலை. உள்ளும் புறமும் பரவி இருப்பவனை வணங்குகிறேன்.
திரும்பத் திரும்ப வணங்குகிறேன். பந்த பாசங்களில் இருந்து விடுவிப்பவன், அகில சத்வ மூர்த்தி, ஒரே ஹரி, வாசுதேவன் முதலிய அவதாரங்கள் எடுத்து, ஸ்ருஷ்டி முதலிய செய்ய, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்களை தனி தனியாகவோ, கூட்டாகவோ பயன்படுத்திக் கொள்கிறான்.
சாதுக்களை பாலனம் செய்பவன். துஷ்டர்கள் அவனிடம் விலகியே இருப்பார்கள். தன் ஐஸ்வர்யம், தன் இடம் என்று தனித்தே இருப்பவன். ப்ரும்ம ஸ்வரூபமான தன் ஸ்வரூபத்திலேயே ஆழ்ந்து இருப்பவன்.
கீர்த்தனம்- பகவானை துதித்து பாடுவது, ஸ்மரணம்-மனதில் தியானிப்பது, கண்களால் காண்பது-ஈக்ஷணம், வந்தனம்- வணங்குவது, ஸ்ரவணம் – பகவத் கதைகளை கேட்பது- இவை உடனடியாக மனதில் கெட்ட எண்ணங்களை அழித்து விடும். அந்த மங்களமான கீர்த்தி உடையவனை,
விவேகிகள் இவருடைய சரணங்களை சேவித்து, பந்தங்களை விட்டு, சிரமம் இன்றி ப்ரும்ம பதம் அடைகிறார்கள். அவர்களுக்கு இரண்டு வகையிலும், இக பர சுகத்தை தரும் அந்த மங்களமான கீர்த்தி உடையவனை நமஸ்கரிக்கிறேன்.
தபஸ்விகள், தானம் செய்பவர்கள், புகழ் உடையோர், மனஸ்வி எனும் அறிஞர்கள், மந்திரங்களை அறிந்தவர்கள், சுமங்களம் -சதாசார பரர்கள்- ஆசார சீலர்கள், என்றாலும் எவரிடம் சரணடையாமல் க்ஷேமம் அடைய முடியாதோ, அந்த மங்களமான கீர்த்தி உடையவனை நமஸ்கரிக்கிறேன்.
கிராதர்கள்- காட்டு வாசிகள், வேட்டையாடுபவர்கள், குலத்தை மீறி மணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைகள் (ப்ராம்மண வைச்ய தம்பதிகளின் சந்ததி- அதே போல மற்ற குலங்களின் சேர்க்கையால் பிறக்கும் சந்ததிகள் குலமிலி – இவர்கள் எந்த குலத்திலும் சேர்க்காமல் வேறு பெயர்களில் அழைக்கிறார். சமூகத்தில் இவர்களுக்கு அந்தஸ்தோ, மதிப்போ கிடைப்பதில்லை.) இது போன்றவர்களும் கூட, எந்த பகவானை ஆஸ்ரயித்து நன்மை அடைகிறார்களோ, ப்ரபவிஷ்ணுவான அவனை வணங்குகிறேன்.
இந்த பகவான் தான் ஆத்மாவிலும் அம்சமாக இருப்பவன். வேதசாரன், தர்ம மயன், தபோமயன், பரிசுத்தமானவன், ப்ரும்மா, மகேஸ்வரர்களால் போற்றப்படுபவன், அவன் நம்மை காக்கட்டும்.
ஸ்ரீ பதி,யாகத் தலைவன், பரஜாபதி, ஞானத்தின் அதிகாரி, லோக பதி, பூபதி. அனைவருக்கும் யமாதி தேவர்கள், யாதவர்கள், மற்றும் சாதுக்களின் பதி அனைவருக்கும் பதி. அவன் நம்மை காக்கட்டும்.
கவிகள் எவன் அருளால் உயர்ந்த தத்வங்களை புரிந்து கொள்கிறார்களோ, அந்த முகுந்த பகவான் நம்மை காக்கட்டும்.
नमस्तस्मै भगवते वासुदेवाय वेधसे ।
पपुर्ज्ञानमयं सौम्या यन्मुखाम्बुरुहासवम्
அரசனே, இதைத் தான், ப்ரும்மா நாரதருக்கு உபதேசித்தார். வேதங்களின் உறைவிடமான ஹரி முதலில் ப்ரும்மாவுக்கு போதித்தார். ப்ரும்மா நாரதருக்கு, நாரதர் வியாசருக்கு, வியாசர் எனக்கு, அதை தற்சமயம் நான் உனக்கு சொல்கிறேன்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், 4வது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-25
அத்யாயம்-5
நாரதர் ப்ரும்மாவிடம் சில கேள்விகளைக் கேட்டார். தேவ தேவனே, உலகில் முதல் மனிதன் தாங்கள், அதனால் அனைவருக்கும் மூத்தவர். ஆத்ம தத்வம் என்ற ஞானம் பெற்றவர். இந்த உலகை சிருஷ்டிக்க தங்களுக்கு உதவியது எது? என்ன ரூபம்? எது ஆதாரம்? எங்கிருந்து சிருஷ்டியை ஆரம்பித்தீர்கள்? அதன் அடிப்படை லயம் அல்லது கட்டுபாடு யாரிடம் தெரிந்து கொண்டீர்கள்?
உள்ளங்கை நெல்லிக் கனி போல அனைத்தையும் அறிவீர்கள். இறந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் என்பதையும் தங்களைத் தவிர வேறு யார் அறிவார்கள்? இந்த உலகை விக்ஞான பூர்வமாக, அதாவது ஒரு ஒழுங்குடன் ஸ்ருஷ்டிக்க எது உதவியது? என்ன ஆதாரம்? எது வெளியிலிருந்து தெரிந்து கொண்டது எது உங்கள் சுய அறிவினால், ஒருவராக ஸ்ருஷ்டி செய்தீர்களா, பஞ்ச பூதங்கள் மட்டுமா, உங்கள் மாயையுமா? ஊர்ண நாபி (வயிற்றில் நூலைக் கொண்டது என்ற பொருள்) சிலந்தி போல தாங்களே யார் உதவியும், வெளி உபகரணங்களும் இல்லாமல் படைப்புத் தொழிலைச் செய்தீர்களா?
உங்களுக்கு சமமாக சொல்ல வேறு யாருமே இல்லை. நீங்கள் செய்த அளவு தவம் வேறு யாரும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. சகலேஸ்வரா! உங்கள் சிஷ்யன், இது வரை நான் அறிந்ததெல்லாம் தங்களிடம் கற்றதே. தானாக ஊகித்து அறிய என்னால் முடியவில்லை.
ப்ரும்மா சொன்னார். குழந்தாய்! நல்ல கேள்வி. தெரிந்து கொள்ள ஆசைப் படுவது அவசியம். உன் காரணமாக பகவானுடைய எல்லையற்ற ஆற்றலை எண்ணியும், உனக்குச் சொல்லவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு மகிழ்ச்சியே. உன் அறிவுத் தாகத்தால் நீ கேட்டாலும், எனக்கும் உபகாரமே செய்திருக்கிறாய்.
நானாக செய்ததாக நினைக்கிறாய். என்னை பகவான் என்று நினைத்தாயா? முற்றிலும் தவறு என்றும் இல்லை. இந்த படைப்புத் தொழிலைச் செய்ய என்னால் முடியும் தான். ஆனால், எனக்கு மேல் உள்ள ஈஸ்வரனை அறியாமல் சொல்கிறாய். நானாக சூர்ய சந்திர தாரகைகளை உண்டாக்க முடியுமா என்ன? பகவான் மனதில் உருவானவை, அதை நான் செயல் படுத்தினேன். அதற்கு முன்
न तत्र सूर्यो भाति न चन्द्र तारकम्, नेमा विद्धुतो भान्ति कुथोऽयमग्नि: | तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति|| (kata.u.5-15)
கடோபனிஷத் சொல்வது : அதற்கு முன் சூரியனோ, சந்திரனோ, தாரகைகளோ இருக்கவில்லை. அக்னி எங்கிருந்து வரும்? இந்த ஒளியை தன்னுள் வாங்கி அக்னி ஒளிர்கிறது. அனைத்துமே அந்த பகவானின் ப்ரகாசத்தால் பிரகாசிக்கின்றன. (ஸுர்ய சந்திரர்களும் பகவானின் அருளால், ஒளியை பெறுகின்றன)
तस्मै नमो भगवते वासुदेवाय धीमहि ।
यन्मायया दुर्जयया मां ब्रुवन्ति जगद्गुरुम् || அந்த வாசுதேவனை வணங்குகிறேன். அவனுடைய மாயையால் என்னை ஜகத்குரு என்கிறார்கள். அதுவே எனக்கு லஜ்ஜையாக இருக்கிறது. அறியாமல் ஜனங்கள் பேசுகிறார்கள். நான், எனது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது அவர்களது அறியாமையே.
உலகில், எந்த உருவத்திற்கும் அடிப்படையான மூலப் பொருட்கள், த்ரவ்யம் எனப்படும். அதை உருவாக்க தேவையான செயல்கள் (கர்ம) சரியான காலம், அதற்கான ப்ரத்யேக குணங்கள், அதன் ஆயுள், இவையெல்லாமே வாசுதேவனால் நிர்ணயிக்கப் படுகிறது. அதை மீறி யாராலும் எதையுமே செய்ய முடியாது.
नारायणपरा वेदा देवा नारायणाङ्गजाः ।नारायणपरा लोका नारायणपरा मखाः ॥ १५॥
नारायणपरो योगो नारायणपरं तपः ।नारायणपरं ज्ञानं नारायणपरा गतिः ॥ १६॥
நாராயணனே வேதங்களுக்கு ஆதாரம். தேவர்கள் நாரயணனின் சரீரத்தில் தோன்றியவர்கள். உலகமே நாரயணனால் இயங்குகிறது. யாகங்கள் நாராயணனுக்காகவே. யோகமும், தவமும் நாராயணனை குறித்தே செய்யப் படுகிறது. ஞானம் நாராயணனை அறிவதே. உலகியல் செயல் படுவதே நராயணனின் அருளால்.
அந்த ஈஸ்வரனின் கண்காணிப்பில், படைப்புத் தொழிலைச் செய்கிறேன். அகிலாத்மாவான அவன் ரகசியமாக உள்ளிருந்து என்னை நடத்திச் செல்வதாக உணர்கிறேன். அவருடைய கண் அசைவில் எனக்கான உத்தரவை பெறுகிறேன். குணங்கள் அவனுக்கு இல்லை. எனினும் சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்கள், இவை உலகில் பிறந்த மனிதர்களின் பாப புண்யங்களை நிர்வகிக்கின்றன , அதாவது சத்வ குணம் மனதையும், ரஜோ குணம் புலன்களையும், தமோ குணம் உடலால் செய்யும் செயல்களையும் நிர்வகிக்கின்றன என்பதால். அவைகளையும் தன்னுள் வைத்திருக்கிறான். உலகில் மனிதனை உடலை வருத்தி செய்யும் செயல்களும், புலன்களால் அறிந்து செய்யும் செயல்கள், கண் முதலான இந்திரியங்கள், அறிந்து செய்யும் செயல்களும், மனதால் அல்லது புத்தியால் அறிந்து செய்யும் செயல்களும் , ஜீவன் களின் அன்றாடத் தேவைகளான, மூல பொருட்கள், அறிவு, உடல் உழைப்பு இவற்றை நிர்வகிக்கின்றன என்பதால் இன்றியமையாதனவை. இவ்வகையில் பகவான் தன்னால் படைக்கப் பட்ட உலகின் அசையும் அசையாத பொருட்களின் ஈஸ்வரனாக இருக்கிறான்.
காலம், கர்ம, ஸ்வபாவம் இவைகளை தன் மாயையால் தன் வசத்திலேயே வைத்திருக்கிறான். காலம் பிறப்பு -அது ஜீவனின் அதீனத்தில் இல்லை. கர்ம- செயல் என்பது தானாக அமைவது,அவனுடைய அத்ருஷ்டம் எனலாம். ஸ்வபாவ: பிறந்த பிறப்பின் இயல்பான ஸ்வபாவம் இதையும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிறான். குணம் மாறுவதாலும், பரிணாமத்தால் தன் இயல்பு மாறுவதும் கர்ம – தன் செயலால் மறு பிறப்பும் அமைகிறது.
அடுத்து இதே வரிசையில் அஹங்காரம்- தன்னியல்பு – என்பதையும் மூன்றாக, சத்வ, ரஜஸ் தமஸ் என்று சொல்கிறார். த்ரவ்ய சக்தி, க்ரியாசக்தி,ஞான சக்தி என்பதாக.
பஞ்ச பூதங்களில் முதலானது ஆகாசம். ஆகாசத்திலிருந்து,வாயு, வாயுவிலிருந்து அக்னி, அக்னியிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி என்பது ப்ரசித்தம்.
தாமஸ அஹங்காரம் அதன் பிறப்பிடம். சப்தம் சூக்ஷ்ம ரூபம். விரைவில் பரவும் தன்மையுடையது – அதன் மூலம் ஆகாசம் உதயமாகியது.
சப்தம் வாயுவின் குணம். ஸ்பரிசம், சப்தம் இவை அனுகுணங்கள். ஸ்பரிசம் -தொடுதல் – உடலில் படும் பொழுது உணருகிறோம். தொடுகையால் வரும் சப்தம் நபோ -ஆகாயத்தின் குணம்.
தேஜஸ். -சூடு, அக்னியின் குணம். ரூபமுடையது. இதற்கும் தொடுகையும், சப்தமும் உண்டு.
நீர். ரசம்-ருசி, இதற்கு முந்தைய மூன்றும் அக்னி, வாயு, ஆகாசம் இவைகளின் தொடர்பும் உள்ளதால் அதன் குணங்களான, தொடுகை, சப்தம்,ரூபம் இவையும் உண்டு.
பூமிக்கு ருசி, கந்தம்- வாசனை இவை பிரதான குணங்கள். ரூபம், தொடுகை, சப்தம் இவை அனுகுணங்கள்.
இன்னும் விவரமாக நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.
இதன் விளைவாக மனம் அதன் அதிஷ்டானமான சந்திரனும் தோன்றின. கூடவே பத்து தேவதைகள். திசை, காற்று, சூரியன், ப்ரசேதர்கள், அஸ்வினி என்ற இரட்டையர். இந்த ஐந்தும் முறையே, காது, தோல்,கண், நாக்கு,மூக்கு இவைகளின் ஆதாரமாக இருக்கிறார்கள். வஹ்னி, இந்திரன்,உபேந்திரன், மித்ரன், ப்ராஜாபதி -ப்ரும்மா. முறையே, வாக்கு, கைகள், பாதங்கள், குதம், ஜனன உறுப்பு இவைகளின் செயலுக்கு ஆதாரமாக இருக்கிறார்கள்.
இவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பகவானின் சங்கல்பத்தால், சத் என்றும் அசத் என்றும் உருவாகின்றன.
ப்ரளய காலம் முடிந்தவுடன், பரம புருஷனான பகவான், ஜீவன் இல்லாத, உணர்வு இல்லாத, நீரில் மிதந்த அண்டம் என்பதை உயிரூட்டினார். நீரில் மிதந்த என்பதால் அதற்கு முன் அண்டம் நீரில் மிதந்தது என்பதன் மூலம், கர்பத்திலிருந்து பிறப்பது என்பது அறியப் படுகிறது. நான்கு முகமுடைய புருஷனாக பரம புருஷன், அண்டத்தை பிளந்து, அதின் உள்ளிருந்து ஆயிரம் முகம், ஆயிரம் கண்கள், ஆயிரம் கைகள் ஆயிரம் பாதங்கள் இவற்றுடன் வெளி வந்தார். “சஹஸ்ர சீர்ஷா புருஷ: சஹஸ்ராக்ஷ: சஹஸ்ரபாத் (புருஷ சூக்தம்)”
सहस्र शीर्षा; पुरुष: सहस्राक्ष: सहस्रपात् “
புருஷன் என்று சொல்லப்படும் மஹாவிஷ்ணுவின் அவயவங்களிலிருந்து பதினான்கு உலகங்களும் தோன்றின. பதினைந்து கோடி விஸ்தீர்ணமுள்ள ப்ரும்மாண்டத்தில் நீள வாக்கில் (ஆயாமதோ) விஸ்தாரமான அண்டத்திலிருந்து சிதறியவை அந்த புருஷனின் அவயவங்களோடு நிமித்த காரணங்களால் அறிஞர்களான முன்னோர்கள் இணைத்து பதினான்கு லோகங்கள் உண்டாயின என்கிறார்கள்.
இடுப்பிலிருந்து மேல் ஐந்து, இடுப்பிற்கு கீழ் ஐந்து அவயவங்களிலிருந்து மற்றவை என்று பிரித்திருக்கிறார்கள்.
புருஷனுடைய முகத்திலிருந்து,ப்ரும்ம, இரு புஜங்களிலிருந்து க்ஷத்ர, துடைகளிலிருந்து வைஸ்ய, பாதங்களிலிருந்து சூத்ரன் தோன்றினர்.
பூலோகம் பாதங்களிலிருந்து. நாபியிலிருந்து புவர்லோகம். ஹ்ருதயத்திலிருந்து சுவர்கம், மார்பிலிருந்து மஹர் லோகம். கழுத்திலிருந்து ஜன லோகம், ஸ்தனங்களிலிருந்து தபோ லோகம், தலையிலிருந்து சத்ய லோகம். சத்ய லோகம் தான் ப்ரும்மலோகம் சனாதனமானது.
இடுப்பிலிருந்து அதலம், இரண்டு துடைகளிலிருந்தும் விதலம், முழங்கால்களிலிருந்து சுத்தமான சுதலம், பின் பகுதிகளிலிருந்து தலாதலம், குல்பத்திலிருந்து- முன் கால்களிலிருந்து ரஸாதலம், பாதத்திலிருந்து பாதாளம் என்று தானே லோக மயமாக ஆனான்.
ஒரு சிலர், பாதங்களிலிருந்து பூலோகம், நாபியிலிருந்து புவர்லோகம், தலையிலிருந்து ஸ்வர்லோகம் என்பர்.
இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், 5வது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-42
அத்யாயம்-6
ப்ரும்மா தொடர்ந்தார். இவ்வாறு ஆரம்பித்த ஸ்ருஷ்டியில், மஹத் என்ற நிலையான இயற்கை தத்துவங்களான ஆகாசம்,வாயு, அக்னி,நீர், நிலம் என்று வரிசை , புருஷ சூக்தம் -என்பதில் ஓரளவு, அதன் தொடர்ச்சியாக விராட் புருஷனுடைய மற்ற ரூபங்களைப் பற்றி விவரிக்கிறார்.
வாக் என்ற நமது புலனுக்கு அதிஷ்டாதா அல்லது அதிகாரி வஹ்னி- தீ – அதற்கான இடம் க்ஷேத்ரம். முகம்-வாய். சந்தஸ் என்பது ஏழு -காயத்ரி, உஷ்ணிக்,ப்ருஹதீ, பங்க்தி,ஜகதீ, த்ரிஷ்டுப்,அனுஷ்டுப் என்பது ப்ரதானமானவை. த்வக் முதலான ஏழு தாதுக்கள்- இது வார்த்தைகளின் அடிப்படை உருவம் ,தாது என்பது சுருக்கமான வடிவம், அதன் விரிவாக்கமே வார்த்தையாகும். இது இலக்கணம். வாயின் மற்றொரு செயலான உணவு- தேவர்களுக்கு தருவது ஹவ்யம், பித்ருக்களுக்கு- கவ்யம், இந்த இரண்டின் மீதி அம்ருதம் எனப்படும். மனிதர்கள் ஆறு விதமான ருசிகளை அறிய உதவும் இந்திரியம்- புலன் நாக்கு, இதன் அதிஷ்டாத்தா அதாவது அதிகாரி வருணன்.
பிராணவாயு முதல், வாயுவின் இடம் மூக்கின் உள்பகுதி. தாவரங்கள்- தானியங்கள், காய்,பழங்கள் அனைத்தும் அஸ்வினி தேவைதைகளின் ஆதீனம். உணவின் மணத்தை அனுபவிப்பது மூக்கு என்ற இந்த்ரியம். நல்லது, கெட்டது இரண்டுமே. தன் புத்தியினால் நல்லதோ, கெட்டதோ ஜீவன்கள் உணருகின்றன.
கண் என்ற இந்திரியத்தின் வேலை, உருவத்தைப் பார்ப்பது. வெண்மை முதலான வர்ணங்களை அறிவது, ப்ரகாசம் முதலியவற்றை உணருவது கண். சூரியன் கண்ணின் மணிகளின் ஸ்தானம். திசைகள்., தீர்த்தங்கள் இவைகளை காது என்ற அவயவம் அறியும். காதின் உள் பகுதி, குகை போன்ற இடம், அதன் இருப்பிடம். கேட்கும் செயல், சப்தம் இவைகளுக்கு மடல் போன்ற காதின் வெளிப் பகுதி என்ற அவயவம் இருப்பிடம். ஆகாசம் அதிகாரி.
இவ்வாறு இந்திரியங்கள் செயல்பட அதை உணர்ந்து கொள்ள என்று இருப்பது ஜீவன்களின் உடல்.
ஸ்பரிசம், வாயு இவைகளுக்கு, தோல் இருப்பிடம். அனைத்து யாகங்கள், செயல்கள் – மரங்கள் போன்ற அசையாத ஆனால் உயிருள்ளவைகளும் வளருதல் முதலான செயல்களுக்கும், விராட் புருஷனின் ரோமங்கள் இருப்பிடம்.
ஹரியின் கேசம் மேகமாகவும், அவருடைய மீசை முதலியன மின்னலாகவும், (மின்னல் உருவம் உடையது, மாறிக் கொண்டே இருக்கும் என்பதால் வளரும் நகங்கள் அதன் ஆதீனம்).
மூன்றுலகமும், பூ:புவ:ஸ்வ: – என்பவை, ஹரியினுடைய விக்ரமம், பாதங்களின் செயல்பாடு. பாதம் , க்ஷேமத்தையும், மங்களத்தையும் தரும் என்பதாலும், சரணம் அதாவது அடைக்கலம் அளிக்கும் என்பதாலும், மோக்ஷம் முதலான வரங்களைத் தரும், வேண்டினவற்றை வேண்டியவாறே தரும் என்பதும் அவரது குணம். சர்வ காம ப்ரத:, என்றவாறு தானம் என்பது அவருடைய பாதங்களின் இயல்பு. மோக்ஷம் என்பதே அவரது பாத மூலம் என்பது வசனம்.
தண்ணீர்- ரேதஸ், உலக ஸ்ருஷ்டிக்கு காரணமானவை. மழை, தக்ஷ ப்ராஜாபதியின் ஆதீனத்தில் உள்ளன. பிறப்புறுப்பு, ப்ரஜாபதி என்ற ப்ரும்மா, மைதுனம் அதன் சம்பந்தமான அனைத்தும் ஹரியின் ரகசிய உறுப்புக்கள். அவரே பீஜப்ரதா என்பது தாத்பர்யம்.
மற்ற இரண்டு மல மூத்திரங்களை விசர்ஜனம் செய்யும் அவயவங்கள், யமன் தேவதை. அபானத்வாரம் இருப்பிடம். நிர்ருதி என்ற அசுரன் ஆதீனம். ம்ருத்யு என்ற தேவதை, உயிர் பிரியவும், நரகத்திற்கும் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது.
தமஸ் என்ற அறிவின்மை, ப்ருஷ்டம் , நத நதிகள் நாடிகளில், மலைகள் அந்த விராட் புருஷனின் எலும்புகளிலிருந்து தோன்றுகின்றன.
வெளியில் தெரியாத, அன்னம் முதலிய உணவுகளின் ரசம், கடல்கள், சமுத்திரங்கள், ஜீவன்கள் முதலானவைகள் தோன்றுவதும், மறைவதும் ஆன செயல்களுக்கு அவரது வயிற்று பாகம் இருப்பிடம். அனைத்து ஜீவன்களின் மனம் அவரது ஹ்ருதயத்தில் இருப்பதாக சொல்லப் படுகிறது.
தர்மத்தின், நான்முகனான என், உன், குமாரர்கள் சனகாதிகள், பவ, ருத்ரன் இவர்கள், முந்தைய முனிவர்கள், சுர, அசுரர்கள், நாகங்கள், பறவைகள், ஊர்வன, மிருகங்கள், கந்தர்வ, அப்சரஸ்கள், யக்ஷ ராக்ஷஸர்கள், பூத கணங்கள், உரகங்கள், பசுக்கள், பித்ருக்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், மரங்கள், தாவரங்கள், மற்றும் பல ஜீவன்கள், நீரில் வாழ்பவை, நிலத்தில், ஆகாயத்தில் இருக்கும் க்ரஹ, நக்ஷத்திர, ருக்ஷ -உபக்ரஹம், உதிரும் நக்ஷத்திரங்கள், மின்னல், மற்றும் பாலூட்டிகள் இவையனைத்தும் விராட் புருஷனே. (அம்சமே) ப்ரும்மாண்டத்தை சூழ்ந்து இருப்பது அவனே. . “ச பூமிம் விஸ்வதோ வ்ருத்வா” – அவன், பூமியையும் அதன் வெளிப் பகுதியான ப்ரும்மாண்டத்தையும் சூழ்ந்து – “
விக்ஞானம் -மேலான அறிவு என்ற தத்வம், மஹத் என்ற பஞ்ச பூதங்களுக்கும் மேலான பகவானின் ஆத்ம- தன் அந்த:கரணம்- மனசாட்சி என்பது ஸ்ரேஷ்டமான, சிறந்த இருப்பிடம்.
இவ்வாறு புல் பூண்டு முதல் நம் வரை இருந்தும், இருப்பதும், வருவதுமான அனைத்தும், விராட் புருஷனின் அதீனமே – “புருஷ ஏவேதம் சர்வம், யத்பூதம் யச்ச பவ்யம்” என்றபடி உள்ளும் புறமும்,நடந்ததையும், வருவதையும், அவன் பார்க்கிறான், அறிந்து ரக்ஷிக்கிறான் .
அபயம்- பயத்தை போக்குதல், பயத்தை போக்குவதோடு மோக்ஷத்தை தருகிறான். என்ன காரணத்தால் அழியக் கூடிய அன்னம் (கர்ம பலன்) தருகிறானோ, அதே காரணத்தால் பிறப்பு, இறப்பு என்ற பயங்கள் இல்லாத அழியாத மோக்ஷத்தையும், தருகிறான். பரமானந்தம் எனும் மோக்ஷத்திற்கும் அவனே ஈஸ்வரன். அதனால் ப்ரும்மன்! நாரத! அந்த பரம புருஷனுடைய மஹிமை அளவிட முடியாதது, யாராலும் அதை மீற முடியாது.
பூ:புவ:ஸ்வ: என்ற மூவுலகமும் க்ருஹஸ்தர்கள் என்ற குடும்பஸ்தர்களுக்கானது. இவற்றின் தலை என்ற அவயவமாக மஹர் லோகம், அதற்கு மேல் ஜன, தப,சத்ய என்ற பெயருடைய லோகங்கள் வரிசையாக, அம்ருதம்-மரணமின்மை, க்ஷேமம்-வியாதிகள் இல்லாமலிருத்தல், அபயம்- பயமின்மை இவைகளை கொண்டுள்ளன.
இந்த மூன்று உலகமும், ஜன, தப,சத்ய லோகங்கள், முதல் மூன்றின் (பூ,புவ:ஸ்வ) புற வெளியில் இருப்பவை. க்ருஹஸ்தர்கள் அல்லாத, ப்ரும்மசாரி, வானப்ரஸ்தம் என்ற வயதானவர்கள், இவர்களுக்கானவை.
வித்யா- இரண்டு வகைப்படும். பரம புருஷன் என்ற க்ஷேத்ரக்ஞன் – ஞானி
साशनन – अनशनन –
சாஸனன் -ஜீவன், – -கர்ம பலனை அனுபவிக்க கூடியது. அனசனன் -கர்ம பலன் இல்லாதது -தேவன்.
பரமேஸ்வரனிடமிருந்து அண்டம் ப்ரும்மாண்டம் தோன்றியது என்பதால், அதிலிருந்து, பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள் என்ற புலன்கள், சப்தம் முதலான ஐந்து தன்மாத்திரைகள். இவைகளால் ஆன பூவுலகம் பிறந்தது. அதன் உள்ளிருந்தாலும் சூரியன் தன் கிரணங்களால் உலகில் பரவி இருப்பதை போல விஸ்வம் என்ற உலகை பிரகாசிக்கச் செய்வதோடு, ஒரே சமயத்தில் தான் ப்ரும்மாண்டத்தில் இருப்பவனாகவும் அதை தாண்டி, ப்ரும்மாண்டத்திலிருந்து வேறு பட்டவனாகவும் இருக்கிறான் என்பது தாத்பர்யம்.
நான் அவருடைய நாபி பிரதேசத்திலிருந்து உண்டானவன். அந்த சமயம் எதையுமே அறியாதவனாக பரம புருஷனின் அவயவம் மட்டுமே என்று இருந்தேன். உலகியலில் லோகம் என்றோ, யாகம் செய்வது என்பதோ எதுவும் தெரியாதவனாக. பின்னால் அக்னிஷ்டோமம், பசுக்கள், ஆடு முதலியன, தாவரங்கள், அஸ்வத்தம் போன்றவை, கடைந்து அக்னியை உண்டாக்குவது போன்றவற்றை அறிந்தேன். தேவ யாகம், யாக பூமி. வசந்தம் முதலான காலங்கள். அதன் மாறுதல்கள். தர்மம் முதலானவைகளை அறிந்து கொண்டேன்.
காஞ்சனம்-தங்கம் முதலிய வஸ்துக்கள், ஓஷதிகள்- செடி கொடிகள், பல விதமான விதைகள், எண்ணெய், நெய் போன்ற வஸ்துக்கள், ரஸம்- பால், வெல்லம் போன்றவைகளின் ருசி, இரும்பு முதலிய தாதுக்கள், மண், புற்று, ஜலம், கங்கை முதலான நதி ஜலங்கள், பாதங்களாக பிரித்து ஓதும் வேத மந்திரங்கள், கட்டுப்பாடில்லாத சந்தம்- வசன நடையில் இருந்தவை, விதி முறைகளுடன் யஜுர் வேதம், கான ப்ரதானமான சாம வேதம், நான்கு அத்வர்யூ -வேத விற்பன்னர்களுடன் செய்யப்படும் சாதுர்ஹோத்ரம் என்ற விசேஷமான யாகங்கள், இவைகளை அறிந்து கொண்டேன்.
அக்னி ஹோத்ரம் முதலானவைகளை அதன் சாஸ்த்ர சம்ப்ரதாயங்களோடு கற்றுக் கொண்டேன். மந்திரங்கள் இரண்டு வகைப் படும். பீஜ மந்த்ரம், மாலா மந்த்ரம் என்பன. (இருபது எழுத்துக்களில் வாக் பீஜ மந்த்ரங்கள். அதை விட அதிகமான மாலா மந்த்ரங்கள். ) ஜபம் செய்ய தேவையானவை. தக்ஷிணை- யாக காரியங்களில் உடன் ஈடுபடுபவர்களுக்கு தர வேண்டிய சம்பாவனைகள். ப்ரும்மசர்யம் போன்ற நியமங்கள். மந்த்ர தேவதைகள், அவர்களின் தாரதம்யம் – முதல், அடுத்தது என்ற வரிசை கிரமம்- போதாயனம் முதலிய கல்ப விதிகள், சங்கல்பம்- இதைச் செய்கிறேன் என்று ஆரம்பத்தில் எடுத்துக் கொள்ளும் மனம், வாக்கு, ஸ்மரண, கீர்த்தனைகள் இன்ன சூத்ரம் என்ற விதிகள் இவைகளை அறிந்து கொண்டேன்.
செய்யும் செயலுக்கான பலன்கள் எவை, சுவர்கம் முதல் பல வகை பலன்கள், பல விதமான அபிப்பிராயங்கள், சிரத்தை என்பதன் அத்யாவசியம், இது நமது நன்மைக்கே என்ற நம்பிக்கையால் வருவது சிரத்தை. பிராயச்சித்தம்- எதிர்பாராத இடையூறுகள், தவறுகளுக்கு மன்னிப்பு கோருதல், ப்ரும்ம சமர்ப்பணம் வரையிலான விதிகள்.
“யக்ஞேன யக்ஞம் அயஜந்த தேவா: “ என்று புருஷ சூக்த மந்த்ரம்.
இவ்வாறு யாக சாதனங்களை அறிந்து கொண்ட நான் அந்த விதிகளின் படியே யாகம் செய்ய ஆரம்பித்தேன். நாராயணனின் நாபியில் உதித்தவன் என்பதால், அனைத்துமே நாராயண சரீர சம்பந்தமுள்ளவையே என்பதை அறிந்தேன். பகவானுக்கு சமர்ப்பணம் செய்வது என்ற நோக்கமே முக்கியமானதாக செய்யப் படுவதால் அந்த செயல் யக்ஞம் எனப்படுகிறது. பஸ்யந்தீ இதி பஸவ: என்பதன் பொருள் மனிதர்களின் மனம் அல்லது உணர்வு – பாணிபாதம் என்பது யூபம்- யாக மண்டபத்தின் தூண்- யக்ஞ பூமி மானவ தேகம், பாத்திரங்கள் தலை முதலான அவயவங்கள், நர ரூபத்தில் நாராயணன் தன் சரீரத்தையே, விஸ்வ மானவ ஜீவன ஆதாரமான, பழம், காய்கறிகள் முதலான ஔஷதிகள், (பச்சிலை முதலான தாவரங்கள்- மனித உணவுக்கானவை) வளரவும், உபயோகமாகவும் யாகத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார். (புருஷ சூக்தம் )
மரீசி முதலான ஒன்பது ப்ரஜாபதிகள் தோன்றினர். பின் மனிதர்களில் முனிவர்கள், பித்ருக்கள், சுயமாக அறிவுடைய பெரியவர்கள், தேவர்கள், தைத்யர்கள், மனிதர்கள், யாகங்கள் செய்தனர். மனு முதலானவர்கள், தங்களுக்கு எதையும் வேண்டாமல் நாராயண ஸ்வரூபமே. உலகம் என்ற எண்ணத்துடன் யாகங்கள் செய்தனர்.
இவ்வகையில் ஓரளவு தெரிந்து கொண்ட நான், பகவான் நாராயணன் அருளால், அவர் அனுமதியுடன், அவரது வழிகாட்டலில் இந்த ஸ்ருஷ்டி என்பதை ஆரம்பித்தேன். தற்சமயம் காணப்படும் விஸ்வம் என்பது உதயமாகியது. பகவானின் அதீனத்தில், ஹரன், ருத்ரனாக உலகை சம்ஹரதி- அழிக்கிறான், பின் தோற்றுவிக்கிறான். விஷ்ணு ரூபமாக, உலகை காக்கிறான், தானே ரக்ஷிக்கிறான். அவ்வாறே ரஜோ குண பிரதானமாக ஸ்ருஷ்டியைச் செய்ய ப்ரும்மாவாக, சத்வம் பிரதானமாக கொண்டு காக்கும் தொழிலையும், தமோ குண பிரதானமாக சம்ஹாரம் என்பதையும் செய்கிறான்.
குழந்தாய்! நீ கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன். பகவான் அன்றி எதுவும் தோன்றாது. நல்லதோ, அல்லதோ, அவன் அன்றி அணுவும் அசையாது என்பதே சத்யம். உண்மை.
என் மனதில் வியாபித்திருக்கும் நாராயணன் சாட்சியாக, நான் சொல்லும் சொல் எதுவும் தவறாகாது. என் மனம் எதையும் தவறாக எண்ணாது. என் இந்திரியங்கள் எந்த காலத்திலும் அசத்தான- தவறான வழியில் செல்லாது.
பகவானின் நாபி கமலத்தில் தோன்றியதால், நானே வேத மயமாக, தவம் என்பதன் உருவமாக, அல்லது தவம் செய்வதில் நாட்டமுடையவனாக, கஸ்யபர் புதலான பிரஜாபதிகளால் வணங்கப் படும் தலைவனாக, இருக்கிறேன். யோக சாதனையை அதன் விதி முறைகளோடு செய்து என் தகுதியை, சுய கட்டுப்பாட்டுடன் வளர்த்துக் கொள்கிறேன். பரம புருஷனால் என் தோற்றம் வந்தது என்பதால் என் பொறுப்புகளும் அதிகம்.
அந்த பகவானை நமஸ்கரிக்கிறேன். எவரது அருளால், பவம் என்ற ஜனன மரணம் என்ற வட்டத்துள் சுழலும் சம்சாரிகள், இந்த உலகில் மனைவி,மக்கள், வீடு வாசல், முதலான வசதிகளை அனுபவிக்கிறார்கள். அவரை சரணமடைந்து பர லோகத்திலும், பரமானந்தம் அடைகிறார்கள். ஆகாயம் போன்று எல்லையற்ற மாயா விலாசங்களை கொண்டவர் பகவான். அவரை நமஸ்கரிக்கிறேன்.
அவரது சுய ரூபம் யாராலும் அறிய முடியாதது. ப்ரும்மாவாக நானோ, நாரத, சனகாதிகளான நீங்களோ, வாம தேவனோ, மஹேஸ்வரனோ கூட அறிந்து கொள்ள முடியாது. மற்றவர்கள் எம்மாத்திரம்?
அவருடைய அவதார கதைகளை பாடும் ஜனங்கள், நானும், என் போன்ற பிரஜாபதிகளும் கூட, அவருடைய உள் மனம், உத்தேசம் என்ன என்பதை அறிந்தவர்கள் இல்லை. அந்த பகவானை நமஸ்கரிக்கிறேன்.
அவர் தான் ஆதி புருஷன். தான் பிறவியற்றவனாக இருந்தும், கல்பம் தோறும் பிறவி எடுக்கிறான், ஆத்மாவை ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை தருகிறான், காப்பாற்றுகிறான். (தன் பொறுப்பில், அவதார காலத்தில், உபகரணமான தன் ஆத்மாவையே, கர்த்தாவான தானே ஸ்ருஷ்டித்துக் கொள்கிறான், தன்னையே தருகிறான் பிறகு மறைக்கிறான்)
நாரத ரிஷியே! அவரை, விசுத்தம்-விசேஷமாக தூய்மையானவன், அதனால் அவனைப் போல மற்றொன்று இல்லாமை. அத்விதீயன் என்றும், கேவலம் ஞானம்- ஞானமே உருவானவன் என்றும், ஸ்திரமானவன் என்றும், சத்யம் – துக்க தோஷமில்லாத ஆனந்த ஸ்வரூபன் என்றும், தேசத்தாலும், காலத்தாலும் மாறாத பூர்ண ஸ்வரூபன் என்றும், அனாத்யந்தம் – ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்றும், நிர்குணன், அத்வயன் என்றும் முனிவர்கள் துதிக்கிறார்கள்.
பகவானின் முதல் அவதாரம்- புருஷ சூக்தத்தில் விவரிக்கப் பட்ட சஹஸ்ர சீர்ஷ – ஆயிரம் தலைகளுடன் செய்த அவதாரம். தசாங்குல: தசம் பத்து என்பதில் உள்ள முதல் ஒன்று என்ற எண்ணிக்கை -ஒருவனே சர்வாந்தர்யாமி என்பதையும், அடுத்து வரும் பூஜ்யம் ப்ரக்ருதி என்பதையும்- பஞ்ச பூதங்கள், மனம், புத்தி அஹங்காரம், மாயா, பரம புருஷன் என்ற பத்து. த்ரவ்ய-மூலப்பொருள், சக்தி, உணர்வு, என்பவைகளுடன் உலகை வியாபித்து நின்ற பகவானின் பத்து அங்குலங்கள் பத்தின் வர்கமான ஆயிரமாக, ஆயிரம் சீர்ஷம்- தலையாக பரிணமித்தது என்பது விளக்கம்.
காலம், ஸ்வபாவம், கார்ய காரணம், ப்ரக்ருதியின் மூன்று சக்திகள், வைணவ கொள்கையில் ஸ்ரீ,பூ,நீலா என்றும், சாக்த கொள்கையில் இச்சா, ஞான, க்ரியா என்றும் ப்ரக்ருதியின் மூன்று சக்திகள் சொல்லப் படுகின்றன.
தக்ஷன் முத்லான ஒன்பது ப்ரஜாபதிகள் ஒன்பது எண்களின் அதி தேவதைகள்.
எண்களின் முதல் எண், அதன் தொடர்ச்சியாக இரண்டு மூன்று என்று எண்கள் பிறப்பதால், அதற்கான
சாமர்த்த்யம் . (தக்ஷத்வம்) உள்ளதால் அந்த பிரஜாபதிக்கு தக்ஷன் என்றே பெயர்.
நாரத, சனக, சனந்தன,சனத்குமார, சனத்சுஜாத , ப்ரும்மாவின் மானஸ புத்திரர்கள். மனதில் உதித்தவர்கள். ஞானமே உருவானவர்கள், பக்தி யோகத்தை பரப்புகிறார்கள்.
லோக பாலர்கள் என்பவர்கள் இந்த்ராதி தேவதைகள். செயலுக்கு ஏற்ப பலன் என்பதாக, சத் காரியங்கள் செய்பவர்களுக்கு சௌக்யம் முதலான பலன்களைத் தந்து நல்ல காரியங்களில் மக்களின் மனதை ஈடுபடச் செய்வார்கள்.
ஆகாயத்தில் சஞ்சரிக்கும் கருடன் போன்றவர்கள், மண்டல சாரிகள் எனப்படுவர். பானு மண்டலம், க்ரஹங்களின் சஞ்சாரம், பூமியின் சுழற்சி, சூரிய குடும்பத்தின் பரிவர்த்தனம்- சலனம் என்பதில் உதவியாக இருக்கின்றனர். அவர்களில் இரவு பகல் என்ற இரண்டு பக்ஷங்கள், இறக்கைகள் உள்ள, ப்ரும்மாண்ட ஸ்திதிக்கு காரணமாக விளங்கும் வைனதேயன், சுபர்ணன், அக்ஷயன், கருத்மான், அகண்டமான கால ஸ்வரூபன். அதனால் தான், காலத்தைக் குறிக்கும் சூரியனுடைய முன் தோன்றலான அருணன், கருத்மதக்ரஜ -கருத்மானின் முன் பிறந்தோன் என்ற பொருளில் தினம் என்பதின் முன் பகுதி மட்டுமான பாதி சரீரி என்ற பொருளில், அனூரு என்ற பெயரும் பெற்றான். மேலும் பூமி ஆகாச மத்திய ரேகாவாக கருட மாதா வினதா சொல்லப் படுகிறாள்.
நரலோக பாலகர்கள் சூர்ய சந்த்ர முகமாக, பூமியில் அவதரிக்கும், மனு, மாந்தாதா என்பவர்கள்.
பாதாளம் முதலிய கீழுலகம், பூவுலகில் உத்தர துருவத்திலிருந்து, தக்ஷிண துருவம் வரையில் வியாபித்து இருக்கும் சர்ப்பம் போன்ற உருவம் உடைய குண்டலினி, பூமியின் ஸ்திர தன்மைக்கு காரணமாக இருப்பதால், அனந்த சக்தியுடையவன், அனந்தன், ஆதி சேஷன் என்று அறியப் படுகிறான். அதனாலேயே, அனந்தன் பூ பாரத்தை தாங்குகிறான் என்று புராணங்களில் வர்ணிக்கப் படுகிறான். வாசுகி என்ற மற்ற மூவரும் க்ரஹங்களுக்கு மத்தியில் பரஸ்பர ஆகர்ஷண சக்தி மார்க்கங்களை நிர்வஹிக்கிறார்கள். பூமியில் நதிகளின் ப்ரவாகத்தை, பிராணிகளின் சரீரத்தில் ரத்த நாளங்கள் தோன்றுவதில் உதவியாக இருக்கிறார்கள்.
கானம், வித்யா என இருப்பவர்கள் கந்தர்வர்கள். அவர்கள் ஜீவன்களின் கைகளில் உள்மூச்சு, வெளி மூச்சு இவைகளின் போக்கு, ஹ்ருதய துடிப்பு, இவற்றை நிர்வஹிக்கிறார்கள். வித்யாதரர்கள் என்பவர்கள், செல்வத்தை சம்பாதிக்க சாதனங்கள், மந்திர தந்திரங்கள், – இவர்கள் தான் ஜீவன்களின் கார்யசித்தி, பிராணிகளின் நடமாட்டம், கண்களில் தென்படும் ப்ரபஞ்சத்தின் பலவிதமான பொருட்களின் தீர்கத்வம் நீண்ட ஆயுள், வைசால்யம்-பரப்பு, கனதா- அடர்த்தி, பரிமாண கோணங்கள் இவைகளின் விதிகள் இவற்றை நிர்வஹிக்கின்றனர்.
யக்ஷா: என்பவர்கள் மனித உடல் இன்றி, பர்வதங்களின் சாரலில், பெரிய மரங்களில், குகைகளில், பல தேசங்களிலும் பாறைகளின் அமைப்பிலும், இருக்கும், விஷய அறிவு உடையவர்கள்.இவர்களின் ஆகாரம், மரங்களில் கிருமி, கீடக முதலியவை. தன் ஸ்திதியை இடையூறு செய்யும் மனிதர்களை பயமுறுத்துவார்கள். அதே சமயம் தன்னுடன் இணங்கி இருப்பவர்களுக்கு பாரத்தை தூக்குவது போன்ற காரியங்களில் உதவியாக இருப்பார்கள்.
ராக்ஷஸர்கள் சரீர நிர்மாண காரணமாகும் பிதாவின் வீர்யம், பிந்து இவைகளையும், ஜீவன் களின் எலும்புகளையும், ஸ்தூல சரீரம், கோசம் இவற்றின் அதி தேவதைகளாக இருப்பார்கள். ஊர்வன, உரக, நாகர்கள் என்பவர்கள், சாதாரணமாக கரு உருவாவதை நிர்வஹிப்பார்கள். பீஜம், துளிர் என்பவற்றை பித்ருக்கள் என்பவர்கள் நிர்வகிக்கிறார்கள்.
திதியின் மைந்தர்கள் தைத்யர்கள். இவர்களிலிருந்து சற்றே மாறுபட்டவர்கள் தானவர்கள். தேகம் இல்லாமல் உயிர் உள்ள ஜீவன்கள் ப்ரேதர்கள். மாமிச பக்ஷிணர்கள் பிசாசர்கள். உடல் இல்லாமல் ப்ரக்ருதி சக்தியுள்ளவை பூதங்கள். கூஷ்மாண்டவர்கள் இந்த ஜாதியினர்.
இவையனைத்தும் மிகச் சிறிய அளவிலாவது பகவானின் அம்சம் உடையவர்களே. பகவானின் ஐஸ்வர்யம், மஹத் என்பதிலிருந்து, தேஜஸிலிருந்து, ஓஜஸ் என்ற சக்தியிலிருந்து, உத்ஸாகம், சகிப்புத் தன்மை, மற்றும், வேகம், தைர்யம், பலம், தாரணா என்ற பொறுத்துக் கொள்ளும் சக்தி (stamina) பொறுமை, சஹனம்- ஏற்றுக் கொள்ளும் குணம், ஸ்ரீ – சோபை-அழகு, ஹ்ரீ:-லஜ்ஜா, விபூதி நியாம என்பவை, ஆத்மா, புத்தி, யுக்தமான சொல், அத்புதமான சப்தங்கள், இவையனைத்தும் ரூபமாக வரும் சமயம், போற்றத்தகுந்தவையே. தன் இச்சையால் எடுத்துக் கொண்ட, திவ்ய மங்கள ரூபமான பகவானின் விராட் புருஷனின், தனதேயான (SELF) விபூதியே இந்த ரூபங்களின் அடிப்படை என்பது தாத்பர்யம்.
அவதாரங்கள் அனேகம். அவைகளில் பிரசித்தமானவற்றை வர்ணிக்கிறேன். ப்ராதான்யமாக, முக்யமாக ரிஷி முனிவர்கள் சொல்லும் லீலாவதாரங்கள் – இவைகளை கேட்டு உன்னை புனிதப் படுத்திக் கொள்வாயாக.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-45
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்
அத்யாயம்-7
ப்ரும்மா தொடர்ந்தார். பூமி ஒரு சமயம் ஒரு அசுரனால் மறைத்து வைக்கப் பட்டாள். அதை மீட்க பகவான் வராகமாக அவதரித்தார். அந்த அவதாரம் யக்ஞாவதாரம் எனப்படும்.
ருசி என்ற பிரஜாபதி, அவர் மனைவி ஆகூதி. இவர்களுக்கு ஒரு மகன் சுயக்ஞன் – அவன் மனைவி தக்ஷிணா – அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் சுய என்ற தேவர்கள் ஆனார்கள். சுயக்ஞன் தேவேந்திரன் ஆனான். தாய் வழி பாட்டனார் அவனை ஹரி என்றே அழைத்தார். தேவனாக ஆனதும், உலகை தன் இஷ்டப்படி ஆட்டுவித்தான்.
அடுத்தது கபிலாவதாரம். கர்தமர் என்ற பிரஜாபதி. தேவஹூதி அவர் மனைவி. ஒன்பது சகோதரிகளுக்கு பின் மகனாக பிறந்தார். தன் தாயாருக்கு ஆத்ம தத்வம் என்ற ப்ரும்ம வித்யாவை உபதேசித்தார். அதனால் அவள் இந்த ஜன்மத்திலேயே முக்தியை அடைந்தாள்.
தத்தாத்ரேய அவதாரம்: அத்ரி மஹரிஷி புத்ரன் வேண்டும் என்று வேண்டியதால் மகிழ்ந்த பகவான், என்னையே தந்தேன் என்று அவருக்கு மகனாக பிறந்தார். தந்தேன் என்ற பொருள் பட தத்த- கொடுக்கப் பட்டவன் – என்றே இந்த அவதார பெயராகியது. பக்தனுக்கு வேண்டியதை தருபவன் என்ற பகவானின் குணம் இதில் அறிகிறோம். அவரை பக்தி செய்த யது, ஹேஹயன் போன்றவர்களும் உலகிலும் பல நன்மைகளை அடைந்தனர், பின்னர் அவரது பாத பங்கஜ பூஜா பலனாக மோக்ஷத்தையும் அடைந்தனர். யது வம்சத்தில் வந்தவன் தான் யயாதி.
குமார அவதாரம்: ஒரு யுகம் முடிந்து ப்ரளயத்தில் நஷ்டமான பல விஷயங்களில் ஒன்று ஆத்ம தத்வம் என்ற சம்ப்ரதாயம். ஆரம்பத்தில் ப்ரும்மாவாக செய்த தவங்கள், தானே செய்த தவங்கள் இதன் பலனாக ப்ரும்மாவின் புத்திரர்களாக நான்கு குமாரர்கள் பிறந்தனர். சனம்- தவம் – தவத்தின் பலனாக பிறந்தவர்கள் என்ற பொருளில் சனத் குமாரர்கள் முறையே சனத்குமாரன், சனகன், சனந்தனன், சனத் சுஜாதன் – என்று பெயர்கள். இவர்கள் பிறவி ஞானிகள். உலக வாழ்க்கையில் ஈடுபடாமல், ஞான மார்கத்தையே ஏற்றுக் கொண்டவர்கள். ஆத்ம தத்வம் என்ற சம்ப்ரதாயம் மறு மலர்ச்சி பெறச் செய்தார்கள்.
நர நாராயண அவதாரம்: தர்ம என்ற பெயருடைய ப்ரஜாபதி. அவர் மனைவி தக்ஷன் மகளான மூர்த்தி என்பவள். அவர்களுக்கு நாராயணன், நர என்று இரட்டையர்களாக பிறந்தார். இந்த கதை பின்னால் சொல்லப் படுகிறது. அனங்கன் என்ற மன்மதன் தேவ காரியமாக, தவம் செய்து கொண்டிருந்த பகவானின் தவத்தைக் கலைக்க பெண்களை அனுப்பினான். ஊர்வசியை சிருஷ்டித்து அவர்கள் முன் நிறுத்தி, அவர்களை திருப்பி அனுப்பினார் என்பது கதை.
துருவன்: உத்தான பாதன் என்ற அரசன். அவன் மனைவிகள் இருவர். சுருசி, சுநீதி என்று பெயர்கள். . அரசன் சுருசியிடம் அதிக பிரியமாக இருந்தான். அதனால் அவள் கர்வம் கொண்டாள். சுநீதி மகன் துருவன். ஒருநாள் அவள் சொன்ன கடுமையான சொல்லைத் தாளாமல் துருவன் அரண்மனையை விட்டு வெளியேறி, தவம் செய்தான். பாலகனான அவனுக்கு பகவான் அருள் புரிந்ததும் துருவன் என்ற நக்ஷத்திரமாக ஆனதும் பின்னால் சொல்லப்படுகிறது.
வேனன் என்ற அரசகுமாரன் துஷ்டனாக இருந்தும் மந்திரி மற்றும் பிரஜைகளால் அரியணையில் அமர்த்தப் பட்டான். ஆயினும் அவன் துன்புருத்தலால் மக்கள் அவதியுற்றனர். அவன் அகாலமாக மடிந்தான். ரிஷிகளின் வேண்டுதலின் மேல், அவனுக்கு புத்திரனாக ப்ருது என்ற பெயரில் பிறந்தார். அவன் பூமியை நல்ல முறையில் பாதுகாத்து விளைச்சல், பசுக்கள், இவற்றை வ்ருத்தி செய்தான் என்ற சரித்திரம் பின்னால் சொல்லப் படுகிறது.
நாபி என்பவரிடம் ருஷப என்பவராக பிறந்தார். சுதேவி என்று தாயார் பெயர். ஜடயோகம் என்பதை அனுசரித்தார். பரமஹம்ஸர்கள் – ஸோஹம் – அதுவே நான் என்ற மந்திரமே ஹம்ஸ மந்திரம் – அதை ஜபித்து உயர் நிலையை அடைந்தவர்கள் பரம ஹம்ஸர்கள். இவர்கள் துறவிகள். ஹம்ஸ மந்திரமே ஸ்வாசத்தால் பாடப்படும் சாமவேதம். அதனுடன் தொண்டையிலிருந்து உச்சரிக்கப் படும் நாதமே ருஷப என்பது. இந்த நிலையில் ஓங்கார தியானம் செய்யும் பொழுது ரிக் வேதத்தின் தர்சன சித்தி அடைவர். – எனவே ருஷபர், ரிக்வேத மூர்த்தியான ஹரி என்று ஆகிறது. நாபியிலிருந்து நாதம் வருவது, தந்தையின் பெயரான நாபி என்பதாகவும், வாக்தேவியை நினைவு படுத்துவதாக தாயாரின் பெயர் சுதேவி என்பதாலும், ருஷபர் என்பது அவர் பெயராகவும் அமைந்துள்ளது.
என் (ப்ரும்மாவின்) யாகத்தில் வேத மயமான, பகவான் ஹயக்ரீவனாகத் தோன்றினார். அந்த குதிரை முகத்திலிருந்து, அழகிய வேத வாக்யங்கள் வெளி வந்தன. பொன்னிறமாக, வேத மயன், யாகமயன், அகில தேவதாத்மா என்று துதி செய்தோம். ஹல் என்பது ஒரு சங்கேதம். அகாரத்திலிருந்து ஹ காரம் வரை உயிர், மெய் எழுத்துகள் அனைத்தும் குறிக்கும் இலக்கண பரி பாஷை. வாக் தேவியின் உடலில் தோன்றியவை. “அக்ஷராணாமகாரோ அஸ்மி” என்ற கீதா வாக்கின் படி பரமாத்ம சங்கேத மான ‘அ’ காரம் – அதில் ஆரம்பித்து மற்ற அக்ஷரங்கள், அதன் பின் சொற்கள், பதங்கள், வாக்கியங்கள் என்று விரியும் மொழி. அதாவது அகில வித்யா பூதமான ‘ஹ’ என்ற சப்தம். ( அ காரம் என்பதில் ஆரம்பித்து என்று சொல்ல ‘ஹ’ உச்சரிப்பு வசதிக்காக ‘அ’ ஹ என்று துவங்கும். அதே போல கடைசி எழுத்துடன் சேர்த்து ‘ஹல் என்று ஆகும். பாணினியின் வியாகரண மாகேஸ்வர சூத்ரங்கள் அ இ உண் என்று ஆரம்பிக்கும்.)
மேலும் தலை எல்லா அக்ஷர, ப்ரபஞ்ச அபிவ்யக்தி தோற்றத்திற்குமான ஸ்தானம் என்பதால் க்ரீவம்- கழுத்திற்கு மேல் உள்ள தலை, ஹயமாக, அகாரத்தில் ஆரம்பித்து ஹ வில் முடியும் அக்ஷரங்களாக ஆவதால், ஹய – என்பது வித்யா ஸ்தானம். ‘ஹய’ ஸ்தூலமான பொருள், வெளியில் தெரியும் குதிரை முகம் என்பது அக்ஷர மயமான வாக் தேவதா என்பதும், ஆத்மா என்பது தேஹ. ப்ராண இரண்டும் சேர்ந்த பின் உள்ள உடலில் இருப்பதாக கொள்வதாலும், நிர்மலமான ஞானானந்த மயமான, சர்வ வித்யா ஆதாரமான பரமாத்மாவின் விக்ஞானமயமான் ப்ரும்ம யக்ஞத்தில் ஹயசீர்ஷ: குதிரை முகன் அல்லது வாக்கின் தேவதா ஸ்வரூபம் ஹயஃக்ரீவ: என்று பொருள். (தலையையும் உடலையும் சேர்ப்பது க்ரீவம் என்ற கழுத்து) தவிர ஸ்வாஸ நிஸ்வாஸ- மூச்சை உள் வாங்குவதும் வெளி விடுவதுமான செயல் ‘சோஹம் ‘ என்ற மந்திர த்தின் மற்றொரு பெயரான ப்ரணவாகாரம், ப்ரணவம் சந்தஸ் என்ற வேதத்தின் சாரபூதம் – அதன் சாரமானது என்று சொல்வது போல, ஹயக்ரீவனின் மூக்கின் வழி வெளி வரும் மந்திரம் -உலக ஸ்ருஷ்டிக்கு ஆதாரமான வேத வாக்கியங்களின் உத்பத்தி ஸ்தானமாகவும், (ப்ரணவமாகவும்) இணைத்து சொல்லப் படுகிறது. மேலும் ஹய என்ற சப்தம் உலக வழக்கில் குதிரை என்ற பிராணி என்பதாக ஆனதால், பகவானுடைய உருவம் அஸ்வம் என்ற குதிரை முகமாக ஆகி விட்டது. “ ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதீம், ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே “ என்ற பிரசித்தமான ஸ்லோகம் சொல்வது ஞான மயமான, வித்யா ஸ்வரூபமான யக்ஞ புருஷணான பகவானைச் சொல்கிறது.
யுக முடிவில், ஒரு சமயம் ஸ்வாயம்புவ மனு ப்ரளய ஜலத்தில் (நதியில்) நின்றவாறு இரு கைகளை குவித்து அஞ்சலி செய்து கொண்டிருக்கும் பொழுது, உலகத்தின் அனைத்து உயிரினங்களின் இருப்பிடமான பூமியின் வடிவத்தில், மீனாக பகவான் காணப்பட்டார். அந்த ப்ரளய ஜலத்தில், அவரது வாயில் வேதங்கள், அதன் சாகைகளோடு பிடித்துக் கொண்டிருந்தார். யுகாந்தம் என்பதால், ஸ்தூலமான உலகம் காணப்படவில்லை. மீன் உருவம் சகல உயிரினங்களுக்கும் பீஜ ரூபம் (முதல் வடிவம்) என்று அறியப் படுகிறது. உருவமற்ற உலகம். எங்கும் தண்ணீர், அதில் மூழ்காமல் வேத சாகைகள் அடுத்த யுகம் தோன்றும் சமயம் வேண்டியிருக்கும் என்பது போல், அவற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு நீரில் விளையாடுவது போல பகவான் சஞ்சரித்ததாக பாகவதம் வர்ணிக்கிறது. திரும்பவும் ஸ்ருஷ்டியை ஆரம்பிக்க தேவையாக இருக்கும் என்று நினைத்தோ, அவரிடம் சமர்ப்பித்தது போல புது உலகை நிர்மாணிக்கத் தயாரான பஞ்ச பூதங்கள் முதலியன, ஸ்ருஷ்டி ரகசியம் அடங்கிய வேத சாகைகளை அவரிடம் கொண்டு சேர்த்து விட்டன. இது தான் வேதோத்தாரணம் என்று கவிகள் சொன்னது. (“வேதான் உத்தரதே” என்று அஷ்டபதி ஆரம்பம்.)
கூர்மாவதாரம்: பாற்கடலில், தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அம்ருதம் பெற கடைய நினைத்த பொழுது மத்தாக மந்தர மலையை கடலில் போட்டனர். அதை மூழ்காமல் பாதுகாக்க பகவான் கூர்மமாக ஆமையாக அவதாரம் செய்து தன் முதுகில் மலையைத் தாங்கினார். மலை கடையப் படும் பொழுது கடலைக் கலக்கி சேறாக்கியது. பின் அத்தியாயங்களில் விவரமாக சொல்லப்படுகிறது.
நரசிம்ஹாவதாரம்: தேவர்களை பயமுறுத்தி ஆட்டுவித்த அசுரன், ஹிரண்யகசிபு. அவனை சம்ஹாரம் செய்ய பயங்கரமான பற்கள், நகங்கள் இவற்றுடன் நர சிங்கமாக அவதரித்தார். கையில் கதையுடன் அடிக்க வந்த ஹிரண்ய கசிபுவை தன் மடியில் இருத்தி, நகங்களால் வேகமாக கிழித்தார்.
கஜேந்த்ர மோக்ஷம்: குளத்தில் இறங்கிய கஜேந்திரனை, ஒரு பெரிய முதலை, காலைப் பிடித்து இழுத்தது.அதிலிருந்து விடுபட முடியாமல் தன் யானைக் கூட்டத் தலைவனான கஜேந்திரன், கையில் அந்த சமயம் பறித்த தாமரை மலரோடு, “ஹே! ஆதி மூலமே! அகில லோக நாதா! தீர்த்தங்களில் இருப்பவனே! பாவன கீர்த்தே! காப்பாற்று என்ற கதறல் கேட்டவுடனே ஓடி வரும் நாராயணனே! என்னை காப்பாற்று என்று அலறியது. உடனே, சக்கரத்தை எடுத்துக் கொண்டு, கருடன் மேல் ஏறி, அங்கு வந்து கையை பிடித்து மேலே இழுத்து காப்பாற்றினார். சக்கரத்தால் முதலையை வீழ்த்தினார்.
வாமனாவதாரம்: அதிதிக்கு பன்னிரெண்டு மகன்கள். ஆதித்யர்கள் எனப்படுவர். கடைசி மகன் யக்ஞாதிபதியான பகவான். இளையவன் என்றாலும் குணங்களால் ஸ்ரேஷ்டன். அவரே வாமனன். ஏனெனில் தன் சிறு பாதங்களால் உலகனைத்தையும் ஆக்ரமித்து விட்டான். பலியிடம் ஏன் யாசிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு யாசிக்காமல், தர்ம மார்கத்தில் இருப்பவனுடைய செல்வத்தை யாராலும் அசைக்க முடியாது என்று சொல்கிறது பாகவதம். பகவான் யாசித்த மூன்றடி நிலத்தை தருவதாக சொல்லி, உடனேயே தானம் செய்தான் பலி என்ற அந்த அரசன். அதனால் அவனுக்கு நஷ்டம் எதுவுமில்லை. விபுதாதி பதி, – மூவுலகிற்கும் அதிபதியான பகவான், தன் பாத கமலங்களை அவன் சிரசில் வைத்தார். ஓங்கி உலகளந்த பகவானின் பாத கமலங்களை ப்ரும்மாதி தேவர்கள் செய்த பாத ப்ரக்ஷாலனம்- கால்களில் விட்ட நீரும் அவன் தலையில் விழுந்தது.
(போக மயமான அரச வாழ்க்கை, எவ்வளவு நன்மை செய்தாலும், ஏதோ ஒரிடத்தில் ஒரு ஜீவன் துன்பப்படுவதை தவிர்க்க முடியாது என்பதால், அந்த பிறவியில் அனுபவிக்கும் சுக சௌக்யங்கள் மட்டுமே என்று ஆகும். தியாகமே கொள்கையாக எளிய வாழ்க்கை வாழ்பவர்கள் சாஸ்வதமான வைஷ்ணவ பதங்களை அடைவார்கள் என்று பொருள்.- உரையாசிரியர்கள்)
நாரதரே! உங்களுக்கும் பகவான் யோக சாஸ்திரம் சொல்லிக் கொடுத்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் ஞானம், பாகவதம் என்ற இந்த ஆத்ம தத்வ தீபம் என்பதையும் அளித்தார். வாசுதேவனே சகலமும் என்று நம்பும் பக்தர்கள் இதை மிக உயர்வாக எண்ணுகிறார்கள்.
மனு வம்சத்தில் ஒவ்வொரு மன்வந்தரத்திலும் பகவான் அவதரிக்கிறார். பத்து திக்குகளிலும் தன் தேஜஸை பரவ விடுகிறார். அதுவே சக்ரமாக உலகை பாதுகாக்கிறது. அவருடைய சரித்திரம் மூன்று உலகிலும் பிரசித்தமானது. துஷ்டர்களான அரசர்களிடம் தண்டம்- தண்டனையையும் தருகிறார். தர்மம் தழைக்கவும், அதர்மம் அழியவும் அவதரிக்கிறார்.
தன்வந்திரி அவதாரம்: ஜனங்கள் வியாதிகளால் அவதிப் படுவதை குணப்படுத்தும் ஔஷதிகளை வைத்துக் கொண்டு, தன்வந்திரி பாற்கடலில் அவதரித்தார். ரோகி- வியாதியஸ்தனை காப்பற்றுகிறார். ஆயுளை வளர்க்கும் ஆயுர்வேதம் என்ற சாஸ்திரத்தையும் அனுக்ரஹித்தார்.
பரசுராம அவதாரம்: ப்ராம்மணர்களை துன்புறுத்தினால் வேத அத்யனமும், ஆசாரங்களும் வீணாகும் என்பதை உணர்த்த ப்ராம்மண விரோதிகளாக இருந்த அரச குலத்தை பகவான் பரசு என்ற கோடாலியை ஆயுதமாக கொண்டு அழித்தார். மூன்று ஏழு முறை- இருபத்தோரு முறை உலகை சுற்றி எங்கெல்லாம் வேத பாரயணமும், சிஷ்டாசாரமும் குறைந்ததோ, அங்கெல்லாம் தன் பரசுவால் அரச குலத்தை அழித்தார் என்பதால் பரசுராமன் என்று பெயர் பெற்றார்.
ராமாவதாரம்: ராம அவதாரம் அனைவருக்கும் பிடித்த அவதாரம். இக்ஷ்வாகு வம்சத்தில் சகோதரர்களுடன் பிறந்து, தந்தையின் கட்டளையை ஏற்று, மனைவி சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் வன வாசத்தை மேற்கொண்டார். அனுகூலமான சுமுகன். சகல குணங்களும் உடைய, அதிகமாக மக்களுக்கு இசைந்த அவதாரம். இவரிடம் விரோதித்துக் கொண்டு ராவணன் அழிந்தான். இவரிடம் சமுத்திரம் பயந்தது. எதிரியான ராவண ராஜதானி செல்ல வழி விட்டது. இந்த செயலால் ராமன் தன் சேனையுடன் இலங்கை, செல்லவும், அவன் வானர சேனை, இலங்கையை ஒரு கலக்கு கலக்கி, போரிட்டு, ஹரன் செய்தது போல ஊரையும் தீக்கு இரையாக்க வழி வகுத்தது. என்னைப் போல யாருண்டு? என்று கர்வத்துடன் நிமிர்ந்த ராவணன், செய்த சீதாபஹரணம் என்ற மிகப் பெரிய தவற்றினால், பகவான் ராமனின் கோபத்திற்கு ஆளானான். தன் தனுஷ்- வில் அம்பு மட்டுமே ஆயுதமாக அவனை போரில் வென்றார்.
க்ருஷ்ணாவதாரம்: பூமியில் அசுரர்கள், அசுர குணங்களுடன் அரசர்களாக ஆதிக்கம் செலுத்தவும், பலமில்லாத சாதாரண குடி மக்களை துன்புறுத்துவதும் அதிகமாகியது. பூமி இவர்களின் பாரத்தால் திணறினாள். இந்த காரணத்தால், பகவான் அவதாரம் செய்தார், இருவராக- கருமையான கேசம் உடைய ஸ்ரீ க்ருஷ்ணர், வெண்மையான கேசத்துடன் பலராமன்.
குழந்தையாக இருந்த பொழுதே பூதனா, மூன்று மாதத்தில் சகடாசுர வதம், உரலில் கட்டப்பட்டு தளர் நடையாக நடந்து அர்ஜுன மரங்களை கீழே தள்ளியது போன்ற சாகஸ செயல்களை செய்தார்.
வ்ரஜ தேசத்தில் விஷமான நீரை குடித்து மயங்கிய கோபால சிறுவர்களை காப்பாற்ற, காளிங்கன் மேல் நடனம் செய்தது – அந்த செயல் அசாதாரணமானது, மனித யத்தினத்தால் செய்ய முடியாத தேவ கார்யம் என்று போற்றினர். தன் மகன் வாயில் ப்ரும்மாண்டத்தைக் கண்டு திகைத்த தாயான யசோதா, வருண பாசத்திலிருந்து நந்த கோபனை மீட்டது, கோபர்களை குகையிலிருந்து மீட்டு வந்தது என்ற செயல்களால் கோகுலத்தையே வைகுண்டமாக்கிய அவதாரம்.
க்ருஷ்ணாவதார கதைகளை சுருக்கமாக சொல்லி முடிக்கிறார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-53
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்
அத்யாயம்-8
பரீக்ஷித் மகாராஜா, மேலும் கேட்க விரும்பியதால் ஸ்ரீ சுகர் தொடர்ந்து சொல்கிறார்.
ஹரியின் சரித்திரம் மங்களகரமானது என்று தெரிந்து கொண்டே.ன். நாரதர் இன்னும் என்ன சொன்னார்?
மஹாபாகோ! என் உடலை தியாகம் செய்யும் முன் ஸ்ரீ க்ருஷ்ணரிடம் என் மனம் லயிக்கும் படி காதால் கேட்கிறேன். சிரத்தையுடன் கேட்கிறேன். என் மனதில் வேறு எண்ணமின்றி அவரே என் மனதில் நிறையட்டும். சரத் காலம் வந்தால் குளங்களில் வண்டல் அடியில் படிந்து நீர் தெளிந்து இருக்கும். அது போல என் மனதின் குழப்பங்கள் தீர்ந்து நான் ஹரியை நினைக்கச் செய்ய பரிசுத்தமான உங்கள் சொற்களால் தான் முடியும்
மனிதன் என்னதான் உலகில் சுற்றினாலும், தன் வீட்டிற்கு திரும்பி வருவது போல, பக்குவமான மன நிலை உள்ளவன் வித விதமான சாஸ்திரங்களைப் படித்தாலும் ஸ்ரீ க்ருஷ்ண பாதத்தை விடுவதில்லை.
பஞ்ச பூதங்களால் ஆன சரீரம் என்று சொன்னீர்கள். ப்ரும்மன்! எப்படி ஆரம்பித்தது? என்ன காரணத்தால் முதல் ஜீவன் உண்டானான். ஈஸ்வரன் இந்த பஞ்ச பூத சம்பந்தம் இல்லாதவன். ஈஸ்வரனின் ப்ரக்ருதி முதலான உபாதானங்கள்- கருவிகள் எங்கிருந்து வந்தன. அவருடைய இச்சா மாத்ரம்- அவருடைய விருப்பம் மட்டுமே காரணமா அல்லது வேறு நிமித்தங்கள் உண்டா? உங்களுக்குத் தெரிந்திருக்கும்
பூதாத்மா, அஜன், (ப்ரும்மா) விஷ்ணுவிடம் பிறந்தார். அந்த பலத்தில் பஞ்ச பூதங்கள், அஹங்காரம் முதலிவைகள், மேலும் தேவையான தத்வங்களைச் சிருஷ்டி செய்து கொண்டார். அவருடைய அனுமதியில், சுதந்திரமாக படைக்கும் தொழிலைச் செய்தார். நாபியில் இருந்து பிறந்ததால், பகவானின் ரூபத்தை நேரடியாக கண்டவர். அதே அவயவங்களோடு படைத்தார்.
விஸ்வ ஸ்ருஷ்டிக்கு, அதன் இருப்புக்கு காரணமானாலும் அழியாத தன்மையுடையவர். (அவ்யய:) மாயாதீசன், (மாயை என்பவதை நிர்வஹிப்பவர்) தன் மாயையை விட்டு, யோக நித்ரையில் – தூங்குவதாக சொன்னீர்கள். எங்கு?
தன் அவயவங்களிலிருந்து இந்திரன் முதலான லோக பாலர்கள், பாதாளம் முதலான லோகங்களை ஸ்ருஷ்டித்தார் என்று உங்களிடமிருந்துஅறிந்தோம். கல்பம், மஹா கல்பம், இடைப்பட்ட கல்பம் என்பதன் கால அளவு என்ன? இறந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் என்பவைகளை எந்த விதத்தில் கணக்கிடுவோம்? தேவ, பித்ரு, மனுஷ்யர்களுடைய ஆயுள் என்பது எவ்வளவு? அதை கணக்கிடும் விகிதம் என்ன?
யோகி சுகரே! அணு, கண் கொட்டும் நேரம் என்பவை மிகச் சிறிய கால அளவு. சம்வத்ஸரம், யுகம் முதலியன மிகப் பெரியவை. காலத்தை எப்படி அளப்பது? கர்ம பலனாக பிறவிகள் அமையும் என்பதானால், அவை என்ன? அதன் பெயர் என்ன? எப்படி எது உயர்வு, தாழ்வு என்று தீர்மானிப்போம். இதற்கு அளவுகோல் எது?
குணங்களில் சத்வம் என்பதை தீர்மானிப்பது எது? தேவ பதவி அடைய நினைக்கும் மனிதர்களில் எந்த செயல்கள் புண்ய பாபங்களை , அவற்றின் கூட்டு அல்லது பல செயல்களின் பரிணாமம் என்பது, யாரால், எப்படி, எந்த செயலால், கர்மங்கள் அளவில்லாதது எனும் பொழுது, இதில் தேர்வு செய்ய யார் அதிகாரி? எவர் இவ்வகையில் தேவ பதவியை அடைந்துள்ளார்கள்?
பூமி, பாதாளம், திசைகள், ஆகாயம், பெரு வெளி, க்ரஹங்கள், நக்ஷத்ர, மரங்கள், பர்வதங்கள், இவைகள், சிறிய ஆறு முதல் சமுத்திரங்கள், தீவுகள், வரை ஜீவன்களின் பிறப்பு நேரலாம் எனில், அதில் ஆகாய, பாதாளம் முதலிய இடங்களில் பிறந்தவர்களின் வாழ்க்கை முறை எப்படியிருக்கும்?
அண்டத்தின் வெளியில், என்ன வஸ்துக்கள், அதைச் சுற்றியுள்ள இடங்கள் பாகவதர்கள் என்ற பெரியவர்கள், வாழ்வது எப்படி? அங்கும் வர்ணாஸ்ரம, நியமங்கள் இருக்குமா? ஆச்சர்யமான ஒரு விஷயம், ஹரி ஒவ்வொரு யுகத்திலும் அவதரித்து அந்தந்த யுக தர்மத்தை அனுஷ்டிக்கிறார் என்பது.
வர்ணாஸ்ரம தர்மம்: தன் திறமைகளுக்கேற்ப பொருள் ஈட்ட தொழில்களில் ஈடுபடுகிறார்கள். அதன் அடிப்படையில் வர்ணாஸ்ரமங்கள் தோன்றின. அதை கடைபிடிப்பது தர்மம் . ராஜ தர்மம் எந்த காலத்திலும் பிரஜைகள் சுகமாக இருக்க வேண்டியவற்றைச் செய்வது. ஆபத்தில் காப்பாற்றுவது.
இந்த ஈஸ்வரன், இவரும் உலகில் உள்ள மனிதர்கள் போலவே உடல் மற்ற அவயவங்கள் உள்ளவனாக சித்தரிக்கப் படுகிறார்.அதனால் இவரிடம் விசேஷமாக, சிறப்பாக வேறு என்ன இருக்கிறது? இவரை பஜிப்பதால் ஒவ்வொரு பதத்திற்கும் மோக்ஷம் என்று சொல்லப் படுகிறது. விவரமாக சொல்லுங்கள். இவரிடமிருந்து உலகங்கள் வந்தன. ஜகதாகாரம்- உலகத்தின் அளவு, (வடிவம் மற்றும் கொள்ளலவு) அவரிடமிருந்து தோன்றிய பத்மம் ப்ரும்மாண்டம் போலவே இருந்ததாகச் சொன்னீர்கள். மூன்று உலக அளவில் ஒரு பத்மம் ஒருவரின் வயிற்றில் இருந்து வர வேண்டுமானால், அவருடைய மற்ற அவயவங்கள் எப்படி இருந்திருக்கும்? சாதாரண புருஷனின் அளவு அவயவங்கள் உடையவராக சொல்லப் படுகிறார் (தன் ஸ்ருஷ்டியில் உண்டான் ஜீவன் அளவு அந்த ஜலத்திலிருந்து “) என்ற வாக்கியத்திலிருந்து அறிகிறோம். அப்படியானால், ஜீவனை விட, பரம புருஷனுக்கு என்ன விசேஷம் என்பதைச் சொல்லுங்கள்.
யோகத்தை சாதகம் செய்த யோகீஸ்வரர்கள் அணிமாதி அஷ்ட சித்தியை அடைகிறார்கள். வேத, ரிக் வேதம் முதலியவை, உபவேதங்கள்- ஆயுர்வேதம் முதலியவை, , தர்ம ஸாஸ்திரங்களை, இதிஹாஸ புராணங்கள்-முன் நடந்த சரித்திரங்கள், இவைகளை கற்றவர்கள், அவைகளில் சொல்லப் படும் தர்ம, அர்த்த, காமங்கள் அதனால் பெறும் பலன்கள் பற்றியும்,
ப்ரளயமும், பின் புதிதாக தோன்றுவதும், யாக கர்மாக்கள், வைதிகமானவை, பூர்தம், ஸ்ம்ருதிகளை ஆதாரமாக கொண்டவை, தர்ம, அர்த்த, காமங்கள் – இதன் விதி முறைகளும், பூர்த்தம்-தடாகம்,கிணறு,ஆலயங்கள், அன்ன தானம் செய்வது இவைகளை நிர்மானிக்கும் பொது ஜனங்களுக்குக்கான செயல்கள்,
புண்ய பாபங்கள், கர்ம வாசனைகள் உள்ளவர்கள், இவர்களுக்கான நன்மை தீமைகளும், வேத மார்கத்தை நிராகரித்து பாகண்டர்கள் எனப்படும் மக்களின் வாழ்க்கை முறை என்ன? மோக்ஷம் பெற இவர்களின் தராதரத்தை அளப்பது எப்படி?
சுதந்திரமானவன் பகவான். தன் மாயையால் அதாவது தன் சக்தியால் விளையாடுகிறான், செயல் படுகிறான். மாயையை விட்டு விலகி, எந்த சமயத்திலாவது தான் சாட்சியாக இருந்து உலகை காண்கிறானா?
யோகீஸ்வரரே, சுகரே! உங்களை சரணம் அடைந்துள்ள நான் இதுவரை கேட்டதில் உண்டான எனது சந்தேகங்கள் இவை. அனைத்தையும் வரிசையாக, விவரமாக எனக்கு புரியும்படி சொல்ல வேண்டுகிறேன்.
உங்கள் சொல் தான் ப்ரமாணம். ஆத்மபூ: என்ற ப்ரும்மா. ப்ரும்ம ரிஷியின் கோபத்துக்கு ஆளாகி உயிர் போகும் நிலையில் உள்ள எனக்கு அச்யுதன் கதை என்ற அம்ருதம் தான் மருந்து.
சூதர் சொல்கிறார்: இப்படி கேட்டவனிடம் ப்ரும்மராதன் என்ற ஸ்ரீ சுகர் விஷ்ணு ராதன் என்ற அரசனிடம் சொல்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். கூடியிருந்த அனைவரும் கேட்கத் தயாராகினர்.
பாகவதம் என்ற புராணத்தை சொல்ல ஆரம்பித்தார். ப்ரும்மாவுக்கு பகவானே சொன்னது. ப்ரீக்ஷித் ராஜா என்ன என்ன கேள்விகளைக் கேட்டானோ, அதற்கெல்லாம் தகுந்த பதில்களைச் சொல்லலானார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-29
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்
அத்யாயம்-9
ஞானாத்மாவான ஹரியினுடைய விருப்பம் இல்லாமல், அவருடைய சத்வாதி குணங்கள் இல்லாமல், சுயமாக சரீரம் இல்லாத புதிய உயிர், ஒரு சரீரத்தை பெற முடியாது. கனவில் யானை, குதிரைகளை பார்க்கும் மனிதன், அவைகளை அடையாளம் கண்டு கொள்வது எப்படி சாத்யமாகிறது? நினைவில் அவைகளை கண்டும் தெரிந்தும் கொண்டது உள் மனதில் நினைவாக பதிந்து போய் உள்ளது. இதே போல வாசனா என்ற பகவானின் விருப்பத்தால் மட்டுமே இயங்கும் மற்ற ரஜோ, தமோ குணங்கள். இவை இல்லாமல் இதுவரை சரீரம் இல்லாத, உலகில் பிறவி எடுக்கத் தயாராகும் ஜீவன் ஏதோ ஒரு சரீரத்தை பெறுவதே ஈஸ்வரனின் அனுக்ரஹத்தாலேயே என்பது முதல் காரணம். பலரூபங்கள் – தேவ, அசுர, மனித, ம்ருக பக்ஷிகள் என்று பலவிதமான ரூபங்களில், இது நான் என்று உணருவது ‘அஹம் பாவம்’ தன்னியல்பு. இது ஜீவனின் தேஹ ஆரம்பம்.
புருஷ- ப்ரக்ருதி என்ற முதல் இரண்டு பாகங்கள் ஒன்று மஹத் – மாறாத ஆகாயம், வாயு முதலான ஸ்திரமான தத்வங்கள். ப்ரக்ருதி – மாறும் தன்மையுடைய கர்மேந்திரிய – கை கால் முதலானவை, ஞானேந்திரியங்கள்-கண் காது என்றவை, தன்மாத்திரைகள் என்ற பார்வை, கேள்வி என்ற அதன் செயல்கள், தவிர மனம், புத்தி, அஹங்காரம் – இதில் ப்ரக்ருதி என்ற ஜீவன்கள், நான், என்னுடைய என்ற பாவனைகள், மற்றும் மூன்று குணங்களாலும் (சத்வ,ரஜஸ் தமஸ் ) மோகம் அடைகிறார்கள். நான் என்னுடைய என்ற எண்ணத்தைக் கடந்த சாதகர்கள் சிறந்தவர்கள், மற்றவர்கள், மாயையில் கட்டுண்டு இருந்தாலும் பக்தி என்ற சாதனத்தால் உய்யக் கூடும் – நற்கதியை அடைவார்கள்.
ஆத்ம தத்வம் என்பதை விவரித்து பகவானே சொன்னது தான் நமக்கு பிரமாணம். அது தான் சத்யம். அது என்ன? அது தான் தவம் செய்தல், தன்னை பஜித்தல் – என்று ப்ரும்மாவுக்கு சொன்னார். பக்தி என்பதை முதலில் உபதேசித்தவரே பகவான் தான்.
ஆதி தேவன் அவர் தான் ஜகத்தின் குரு ப்ரும்மா. பகவானின் நாபி கமலத்தில் தோன்றிய சமயம், தானே உலகை ஸ்ருஷ்டி செய்ய நினைத்தார். அப்படி புதிதாக உலகை ஸ்ருஷ்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை. தப- தவம் செய் என்று யாரோ சொல்வதை கேட்டார். இரு முறை தப தப – தவம் செய் தவம் செய் என்று கேட்டபின், யாரது, குரலுக்கு உடையவரை காண விரும்பி நாலா பக்கமும் பார்த்தார். எதுவும் தென்படவில்லை. தவம் செய்வதில் முனைந்தார். தான் அறிந்தவரை மூச்சை அடக்கி வசம் செய்து கொண்டு, கர்மேந்திரியங்கள், ஞானேந்தியங்கள் இவைகளையும் அடக்கி, த்யானத்தில் ஆழ்ந்தார். பல காலம் தவம் செய்தபின், அவருக்கு தன் உலகமான வைகுண்டத்தை பகவான் காட்டினார்.
எந்த இடத்தில் க்லேசம்- வருத்தம் என்பது இல்லையோ, மோகமோ மற்ற தயக்கமோ இல்லையோ அதைக் கண்ட பேரறிஞர்கள் போற்றிய இடம். ராஜஸமோ, தாமஸமோ இரண்டும் சேர்ந்தோ அந்த இடத்தில் காண முடியாது. பகவானின் தொண்டர்கள் மட்டுமே புழங்கும் இடம். காலமோ, மாயையோ அங்கு இராது. நிர்மலமான ஞானம் சத்வ மயமானது.
இந்த்ர நீல மணி போல ஸ்யாம வர்ணத்தினர். சுகுமார சரீரம், தேக காந்தியும், கமல பத்ரம் போன்ற கண்களும், நான்கு கைகளுடனும், பீதாம்பரதாரிகளாக, மார்பில் அலங்காரமாக மாலைகளுமாக அவரைப் போலவே அவருடைய பார்ஷதர்கள் என்ற பலர் இருந்தனர். அனைவருடைய நீல நிற உடலும், பீதாம்பரமும் சேர்ந்து, மின்னல்களுடன் ஆகாயம் போல இருந்தது. அங்கு லக்ஷ்மி தேவி தன் காந்தியை எங்கும் பரவ விட்டவளாக, தன் தோழிகளுடன் பாடிக் கொண்டிருந்தாள். ப்ரும்மா அங்கு நன்மைகளின் நாயகனாக, ஸ்ரீய:பதி, லக்ஷ்மி தேவியின் மணாளன், யக்ஞபதி, ஜகத்பதி என்று இருந்தவரைக் கண்டார். தன் அடியார்களிடமும் அன்புடன் பேசும் அவருடைய முகம், கிரீடம், குண்டலம், சதுர்புஜம், பீதாம்பரம், மார்பில் ஸ்ரீ தேவி, மிக உயர்ந்த ஆசனம், இவை தவிர, சூழ்ந்து இருந்தவை, மஹத் அஹங்காரம் என்ற அனைத்து சக்திகளும், நற்குணங்கள், இவற்றுடன் சந்தோஷமாக இருந்த பகவானைக் கண்டார்.
அவரை கண்ட ஆனந்தத்தில் மூழ்கி திக்கு முக்காடியவர், அவரை வணங்கினார். பரமஹம்ஸர் என்ற சொல்லுக்கு பொருளானவர். அவரைப் பார்த்து, உயிரினங்களை ஸ்ருஷ்டி செய்ய தன் ஆணைப்படி செய்யத் தகுந்தவன் என்பது போல சற்றே சிரித்தபடி, கைகளை பிடித்துக் கொண்டு பேசினார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: வேத கர்பமான உலகை படைக்கத் தகுந்தவன் நீ என்பதில் நான் சந்தோஷம் அடைகிறேன். வெகு காலமாக செய்த தவத்தால் மகிழ்ந்தேன். என்ன வரம் வேண்டுமோ, கேள் என்றார். மிகப் பெரிய வரம் என்பது என் தரிசனமே. கடினமான தவங்கள் செய்தாலும், புத்தியுள்ளவர்கள் என் தரிசனத்தையே பெரிதாக எண்ணுவார்கள். என் வைகுண்ட லோகத்தை காண விரும்புவார்கள், தவம் என் ஹ்ருதயம். தவத்தின் ஆத்மா நானே. என் தொழில்கள், படைத்தலும் காத்தலும் என் தவத்தாலே.
ப்ரும்மா சொன்னார்: பகவன்! நானும் என் விருப்பத்தை அறிந்து கொண்டேன். அனைத்து ஜீவன்களிலும் உள் மனம் என்ற குகையில் இருக்கும் உங்களை கண்டு கொண்டேன். இருந்தாலும், யாசிக்கிறேன். ஸ்தூல சூக்ஷ்மங்களை நான் அறிய வேண்டும். அனுக்ரஹிக்க வேண்டுகிறேன். விளையாட்டாக, படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்றையும் செய்யும் உங்களுடைய சக்தியை எனக்கும் அருள வேண்டுகிறேன். சிலந்தி தானாக தன் வலையை கட்டிக் கொள்வது போல யாருடைய உதவியும் இன்றி இந்த செயல்களைச் செய்கிறீர்கள். எனக்கு அந்த கலையை அருள வேண்டும், மாதவா!. பகவானே எனக்கு கற்றுக் கொடுத்தார் என்ற தைர்யத்துடன் நான் செய்கிறேன். சற்றும் குறைவின்றி, ப்ரஜோத்பத்தி என்ற செயலை, உங்கள் அனுக்ரத்துடன் செய்கிறேன். பகவான் என் கைகளைப் பற்றி (சம மாக நினைத்து) இந்த பொறுப்பை ஒப்படைத்தார் என்பதால் , எனக்குள் கர்வம் வராமலிருக்கட்டும். ஒரு நண்பன் தன் நண்பனை அறிவுறுத்துவது போல, என்னை இந்த செயலில் அமர்த்தியிருக்கிறீர்கள், இதை முழு மனதுடன் பொறுப்பாக செய்கிறேன்.
ஸ்ரீ பகவான் சொன்னார். மிக முக்கியமான ஞானம் என்பதை, விக்ஞானம்- அதை விட மேம்பட்ட அறிவுரைகள், அதன் நுணுக்கங்கள், அதன் சம்பந்தமான மற்ற விஷயங்கள், இதோ பெற்றுக் கொள், தந்தேன் என்றார்.
என்னைப் போலவே ரூபம், குணங்கள், செயல்கள் உனக்கும் அமையட்டும் என்று அனுக்ரஹிக்கிறேன். படைப்பது நான் மட்டுமே என்று இருந்தது. இந்த விஸ்வமே நான் தான். ப்ரளய காலத்திற்கு பிறகும் மீதம் இருப்பது நானே. சூர்ய சந்திரன் முதலிய பஞ்ச பூதங்கள், எப்படி உலகில் ஊடுருவி இருந்து அவைகளின் வளர்ச்சிக்கு உதவினாலும் வெளியே தெரியாமல், தான் தன் பூரணமான தன்மையை தக்க வைத்துக் கொள்கிறதோ, அது போல நான் அனைத்து ஸ்தாவர ஜங்கம பொருள்களிலும் இருக்கிறேன்.
இவ்வளவு தான் தெரிந்து கொள்ள வேண்டியது. அன்வய:- காரணத்தை தெரிந்து கொண்டு செயல்களில் ப்ரவேசி- இறங்கு. (எண்ணித் துணிக கர்மம்) அதில் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து கொள். பின்னால் எதிர் மறையாக ஏதேனும் வரக் கூடுமா என்பதை யோசித்து அதற்கான மாற்று என்ன என்பதையும் தயாராக வைத்துக்கொள்.
எந்த பிரச்னையும் உன்னை பாதிக்காது. த்யானம், சமாதி முதலான யோக பலத்தால், திடமாக இருந்து என் வழியில் நட. கல்பங்கள் அதன் பகுதிகள் எதிலும் நீ தடுமாற மாட்டாய்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: தனக்குவமை இல்லாதான், பிறவியற்றவன், உலகில் தோன்றப் போகின்ற உயிரினங்களுக்கு பொறுப்பை ஏற்ற ப்ரும்மாவுக்கு, உபதேசங்கள் செய்துவிட்டு அவர் கண் முன்னே மறைந்தார்.
அனைவரது ஹ்ருதயத்திலும் நிறைந்து இருக்கும், ஹரியை நமஸ்கரித்து, அவர் உபதேசித்த வழியில் ப்ரும்மா ஸ்ருஷ்டி- படைப்புத் தொழிலை ஆரம்பித்தார்.
அவர் சொன்ன படியே த்யானம், யமம் முதிலிய யோக சாதனைகள் இவற்றை செய்தார். தன்னுள் ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டார். எதைச் செய்தால் பிரஜைகளுக்கு நன்மை உண்டாகும் என்பதை யோசித்து ஸ்தூலமாக ஒரு வரை படம் போல செய்து கொண்டார். அவருக்கு உதவி செய்ய, ஏவிய வேலைகளைச் செய்பவராக அவருடைய மானச புத்திரன் நாரதர் வந்து சேர்ந்தார். தந்தைக்கு மகன் ஆற்றும் கடமை என்பது போல உடன் இருந்தார். அன்புடனும், தன்னடக்கத்துடனும், உதவிகளைச் செய்தார்.
பகவான் தன்னிடம் சொன்ன பாகவத கதையை ப்ரும்மா நாரதருக்கு உபதேசித்தார். அவர், சரஸ்வதி நதி தீரத்தில் தவம் செய்து கொண்டிருந்த வியாசருக்கு அதை உபதேசித்தார். நீ கேட்ட கேள்விகளுக்கு பதிலும், மேலும் பல விஷயங்களையும் சொல்கிறேன்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-54
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்
அத்யாயம்-10
பத்து விஷயங்கள் – சர்கம், விசர்கம்,ஸ்தானம், போஷணம், ஊதய, மன்வந்தர, ஈசானுகதா:, நிரோத: முக்தி, ஆஸ்ரய: என்று சொல்கிறார்.
மாறாத இயற்கை சக்திகளான ஆகாசம் முதலியன, சர்கம் என்றும், மனித யத்னத்தில் உள்ளவை, அசையும் அசையா ஜீவன்கள் விசர்கம் என்றும் சொல்லப்படுகிறது.
பகவானுடைய இருப்பிடமான வைகுண்டம் ஸ்தானம் எனப்படும். அவருடைய அனுக்ரஹம், சாது ஜனங்களை அனுக்ரஹிப்பது முதலானவை போஷணம்.
பகவான் அனுக்ரஹித்த நல்லவர்கள் நடத்தை-ஆசார நியமங்கள், மன்வந்தர: என்றும், ஜீவன் செய்த நல்ல, கெட்ட செயல்களின் பலனாக தொடரும் கர்ம வாசனா என்பவை ஊதய: எனப்படும்.
ஹரியின் அவதார கதைகள், அவரை அனுசரிக்கும் சாதுக்களின் கதைகள், மற்றும் பல இதிகாசங்கள் ஈசானுகதா: எனப்படும்.
யுக முடிவில் யோக நித்ரையில் இருக்கும் பகவானிடத்தில் அனைத்து உயிரினங்களும், சக்திகளும், தத்துவங்களும் அவருள் ஐக்யமாவது நிரோதம் எனப்படும். இக லோக வாழ்க்கையை துறந்து, சிதானந்தமான பரம் பொருளை தியானித்து நற்கதியை அடைவது மோக்ஷம் எனப்படும்.
உலகம் தோன்றியதிலிருந்து யுக முடிவில் லயம் அடைவது வரை, அடைக்கலம் தரும் பகவான் ஸ்ரீமன் நாராயணனே ஆஸ்ரய: என்ற சொல்லால் குறிக்கப் படுகிறார்.
பரமாத்மா, அந்தர்யாமி என்று அழைக்கப்படும் இவர், இயற்கை எனும் மஹத் தத்வங்கள், சூரிய சந்திரர்கள், அக்னி வாயு முதலான மாறாத தத்வங்கள், இவற்றை இயங்க செய்யும் பொழுது ஆதி தைவிகர்-
கண்கள் முதலிய இடங்களில் அதை இயக்கும் சக்தியாக இருக்கிறார். கண் முதலிய உறுப்புகளுடன் இருக்கும் உருவங்களில் இருப்பவர் ஆதி பௌதிகர். பார்வை, பார்க்கப்படும் பொருள்,பார்ப்பவன் இவை இருந்தும், அந்தர்யாமியாக பகவான் இல்லாதவரை இம்மூன்றும் மட்டும் இருந்தும் பயனில்லை. எனவே, உள்ளுறை பகவான் ஸ்வாஸ்ரயன்,- சுயமாக செயல்பட முடிந்தவன், ஜீவன் அன்யாஸ்ரய:.-தானாக எதையும் செய்ய முடியாதவன்.
பரம புருஷனாக, அண்டத்தை பிளந்து வெளி வந்த சமயம், தனக்கு படுக்க ஒரு இடம் தேடினார். தெளிவாக இருந்த நீரைப் பார்த்தார். அதை தன் இருப்பிடமாகக் கொண்டு அதில் சயனித்தார். அதனால் நாராயணன் எனப்படுகிறார்.
ஜீவன் தன் கர்ம பலனைப் பொறுத்து சுபமோ அசுபமோ அனுபவிக்கிறான். மஹத், பஞ்ச பூதங்கள் என்பவை ஜீவனுக்கு உதவும், ஆனால் காண முடியாதவை காலம் – சென்று கொண்டேயிருப்பதால் மாறுதல் அல்லது வளர்ச்சிக்கு காரணமாகிறது. அனுபவிப்பவன் ஜீவன். இவைகளும் ஸ்ரீமன் நாரயணனின் அனுக்ரஹத்தால் செயல் திறன் உடையதாக ஆகின்றன. இவருடைய அனுக்ரஹம் இல்லையெனில் அவைகளின் இருப்பே இல்லை.
ஒன்றாக இருந்த தேவன் பலவாக விரும்பி தன் யோக சயனத்திலிருந்து எழுந்தார். ப்ரகாசமாக ஹிரண்மயம்- பொன் மயமாக இருந்த வீர்யத்தினால், கர்ப ரூபமான சரீரத்தை அதி தைவம், அத்யாத்மம், அதிபூதம் என்று மூன்றாக பிரித்துக் கொண்டார். ஒரே பௌருஷம்- புருஷ சம்பந்தமான வீர்யம் மூன்றாக வெளிவந்தது. அந்த புருஷனின் க்ரியா சக்தியால், ஆகாயத்திலிருந்து இந்திர சக்தி, (ஓஜ:) மனஸ் சக்தி (ஸஹ:} தேக சக்தி {பலம்} என்பதும் பிறந்தன. இந்த மூன்று சக்திகளும் சேர்ந்து சூக்ஷ்மமான அஸு: – ப்ராணன், உயிர் – { இதை சூத்ரம் என்றனர்} பிறந்தன.
ப்ராணந்தம்- எல்லா உயிர்களிலும் இயங்கும் ப்ராண: , அதை அரசர்களை பணியாளர்கள் பின் தொடர்வது போல, அனு ப்ராணா: என்ற மற்றவை அனுசரித்து தொடர்கின்றன.
அவருடைய முகத்திலிருந்து . முகம்- வாய் என்ற அவயவம் அமைந்தது. தாலு- முகவாய் அதை தாங்குவதாக அமைந்தது. தாலுவின் உதவிக்கு நாக்கு என்ற அவயவம்- ருசியை அறிய அமைந்தது.
அபானன் என்ற பெயரில், கீழ் நோக்கி ப்ராணன் வயிற்றின் மத்தியில் இயங்கி, பசி தாகம், தோன்றுகின்றன. பசித்தவனுக்கும், தாக சாந்திக்கும் முகத்திலிருந்து நாக்கு ருசியை அறிவதாகவும், அந்த ஜிஹ்வா- நாக்கு என்ற இந்திரியத்திற்கு உதவியாகவும் அமைந்தது. இதற்கு வருணன் தேவதையானான். தொடர்ந்து பலவிதமான ருசிகளும் வந்தன.
பரம புருஷன் நுகர விரும்பும் போது, நாஸிக- மூக்கு என்ற அவயவம் தோன்றியது. அதன் செயல், ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ப்ராணவாயுவை சுத்தம் செய்வது. அதற்கு உதவும் விதமாகவும், அந்த அவயவம் ஸ்திரமாக நிற்கவும், வாயு என்ற தேவதை, கந்த வஹன்- வாசனையை சுமந்து செல்பவன் என்ற பொருள்-பெயருடையவன் தேவதையாகவும், மூக்கு என்ற இந்திரியம் வாசனையை அறிவதாகவும் அமைந்தது.
ப்ரகாசம் இல்லாமல் சூன்யமாக இருந்த சமயம் தான் பார்க்க வசதியாக கண் என்ற அவயவத்தை உண்டாக்கினார். கண்கள் அதன் இடம். ஜோதி தேவதை. கண் என்பது இந்திரியம். ரூபம் என்பதை க்ரஹித்துக் கொள்ளும் தன்மை அதன் குணம்.
ரிஷிகள் வேதங்களை அறிந்த பொழுது, தானும் அவற்றை கிரஹித்துக் கொள்ள, காதுகள் என்ற அவயவங்களை தோற்றுவித்தார். இவைகளுக்கு திசைகள் என்பவை தேவதைகள். ஸ்ரோத்ரம்- காது என்ற இந்திரியம். சப்தத்தை க்ரஹித்துக் கொள்வது என்பது அதன் செயல்
பொருள்களின் மென்மை, கடினம், உருவம் சிறியன, பெரியவை, சூடு, அதிக சூடு, குறைவான சூடு என்றும், குளிர்ந்து இருப்பதை உணரும் அவயவம் தோல். தொடுதல் – என்ற இந்த செயலுக்கு அவயவம் தோல்.அதில் முளைக்கும் ரோமங்கள், தேவர்கள். தொட்டவுடன் அது கனமா, லேசானதா என்று அறிவது த்வக் என்ற இந்திரியத்தின் செயல். அதன் உள்ளும் வெளியும் வாயு சஞ்சரிக்கிறது. எப்படியெனில், ஸ்பர்சம் என்ற பெயரில். இது த்வக் என்ற இந்திரியத்தின் மற்றொரு குணம் அதாவது செயல். வாத என்ற காற்று தேவதை.
செயல்களை செய்ய பகவானின் விருப்பப் படி கைகள் முளைத்தன. இந்திரன் அவைகளின் அதிஷ்டான தேவதையானான்.
தன்னிஷ்டப்படி நடந்து செல்ல பாதங்கள் முளைத்தன.
ப்ரும்மா கண் பார்வை வேண்டி அதன் கண்களில் வட்ட வடிவமான கண் மணிகளை வைத்தார். ஜோதியுடன் சூர்யனும் அதி தேவதையானான். ரூபம், குணம், இவற்றை கண் அறிந்து கொள்வதாக கண் என்ற இந்திரியமும், அதன் வெளி பக்க உருவங்களும் தோன்றின.
ப்ரஜைகளை உத்பத்தி செய்ய ஜனன இந்திரியங்கள், ஆண் பெண் சம்பந்தம் இவைகளுக்கு ப்ரஜாபதியான ப்ரும்மாவே அதி தேவதையானார். .
உண்ட உணவு உடலில் ஜீரணித்த பின் மீதியானது வெளியேற குதம்,பாயு என்ற உறுப்புகள் உருவாகின.
நாபி ப்ராண அபான என்ற வாயுக்களை கட்டுபடுத்துகிறது. அபானம் தான் ம்ருத்யுவுக்கு காரணம்.
அன்ன பானம் இவைகளின் சாரத்தை க்ரஹிக்க வயிற்றைச் சுற்றியும் நாடிகள் உண்டாயின. குக்ஷி என்ற வயிறு தான் இருப்பிடம்.
अन्त्र नाडी -intestinal track –
என்பவை அன்னத்தையும், நாடிகள் பானங்கள், நீரையும் சங்க்ரஹிக்கின்றன. – உறுஞ்சுகின்றன. இந்த அன்த்ர, நாடி என்பவைகளுக்கு நதிகளும் கடல்கள், சமுத்திரங்களும் தேவதைகள். வயிறு நிரம்பினால் துஷ்டி, ரஸம் அதிகமாகவோ குறைந்தாலோ உடல் பருமன்-புஷ்டி,
சிந்திப்பவர்களுக்கு, ஹ்ருதயம், மனம், சந்திரன், சங்கல்பம் இவை அதி தேவதைகள்.
ஆண் பெண் உறவு, அதன் பலனாக புத்ர புத்ரிகள் பிறப்பதும், அதன் இந்திரியங்கள் செயல்பாடு. அதனால் பெறும் சுகத்திற்கு இரு பாலாருடைய இந்திரிய தேவதா அதி தேவதை.
ஜீவன்களின் உடலின் மேல் பாகமான தோல் -இரண்டு வகைப் படும். ஸ்தூலமான எலும்புகளை மூடிய மேல் பாகம். மற்றொன்று சூக்ஷ்மமானது. தோலின் அமைப்பில் பஞ்ச பூதங்களில் நிலம், நீர்,அக்னி இவைகளும் இருந்தாலும் வாயுவும் ஆகாசமும் அதி தேவதைகள். ஸ்பர்சம் என்ற உணர்வு.
மாமிசம், ருதிரம்,கொழுப்பு, தசை, எலும்பு மஜ்ஜை- (எலும்புகளுக்கு இடையில் இருப்பவை) இவை அனைத்திலும் ஏழு தாதுக்களும் உள்ளன. இந்த தாதுக்கள் என்பன நிலம், நீர், அக்னி, இவைகளின் சேர்க்கை. பஞ்ச பூதங்களில் இவை சரீரத்தில் செயல்படுபவை.
பிராணன் ஆகாசம், ஜலம், வாயு இவைகளின் சேர்க்கையால் பிறக்கின்றது.
ஜீவனின் கண் முதலான புலன்கள் தனித் தனியாக சில குணங்கள்- உணர்வுகளை கொண்டுள்ளன. ( கண்-பார்வை, செவி-கேள்வி, மூக்கு-நுகர்தல்,நாக்கு-ருசி, உடல்- ஸ்பர்சம் என்பன) அஹங்காரம்- தன்னியல்பு என்பது ஜீவனின் உருவம் வந்தபின் தோன்றுவது. மனம் காம க்ரோதாதிகளின் பிறப்பிடம். ஆத்மா ஸ்வரூபம். புத்தியினால் பலவிதமான அறிவுகளைப் பெறவும், அவைகளை வளர்த்துக் கொள்ளவும், தானாக புதிய விஷயங்களைக் கண்டு கொள்ளவும் முடியும்.
பஞ்சபூதங்களுடன்,மனம், புத்தி, அஹங்கார, என்ற எட்டு மாறாத இயற்கை தத்துவங்கள், இவை வெளி கோட்டையாக உள்ள பகவானின் ஸ்தூல ரூபம். சூக்ஷ்ம ரூபமானது, கண்களுக்கோ, மனதுக்கோ புலப்படாத, வார்த்தைகளால் விவரிக்க முடியாத, ஆதி அந்தமில்லாத, ரூபம். “அணோரணீயான், மஹதோ மஹீயான்” என்ற வேத வாக்யம் பகவானை அணுவிலும் சிறியவன், பெரும் அண்டத்தை விட பெரியவன் என்று சொல்கிறது. சங்க சக்கர, கதா தாரியாக காணுபவன் அதே போல காணலாம். ஆதி மத்யம்,அந்தம் இல்லாத பரம் பொருளாக மனதால் தியானிக்கலாம்.
ப்ரஜாபதிகள், மனு, தேவர்கள்,ரிஷிகள், பித்ரு கணங்கள், தவிர, சித்த சாரணர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள்,என்று பல ரூபங்கள். கின்னர, அப்சர, நாக, ஸ்ர்ப்பம், கிம்புருஷ என்ற வகையினர், ராக்ஷஸர்கள், பிசாச, ப்ரேத,பூதங்கள் என்றும் பசுக்கள், பக்ஷிகள், மரங்கள், மலைகள் ஊர்வன , நிலம் நீர் இரண்டிலும் வாழ்பவை, நிலம்,ஆகாயம் இரண்டிலும் வாழ்பவை என்று பலவிதமாக உயிரினங்கள்.
சத்வ ரஜஸ் தமஸ் என்ற குணங்கள், தேவ, மனித, அசுரர்கள், என்றாலும் ஒவ்வொருவருக்கும் தனித் தனியான நடையுடை பாவனைகள், உணவு முதலிய பழக்க வழக்கங்கள். இந்த பகவான் தான் தர்ம ரூபம். உலகை நிலை நிறுத்தி, உலகில், கால் நடைகள்,மனிதன், தேவர்கள் இவர்களை காக்கிறான். பின், காலாக்னி என்ற ரூபத்தில் தானே ஸ்ருஷ்டி செய்த இந்த உலகை காலத்தால் காற்று, மேகத்தை கலைப்பது போல கலைத்து விடுகிறான்.
இது தான் பகவானின் இயல்பு. இது தான், இப்படித்தான் இருப்பான் என்று யாராலும் அனுமானிக்க முடியாது. ப்ரும்ம கல்பம் என்ற இதைப் பற்றி பொதுவாக சொன்னேன். அடுத்து பத்ம கல்பம் என்பதை பின்னால் சொல்கிறேன்.
சௌனகர் இடை மறித்தார்.
சூதரே, விதுரர் என்ன ஆனார்? தீர்த்த யாத்திரை போனவர் திரும்பி வந்தாரா? பந்துக்களை துறந்தது ஏன்?
பரீக்ஷித் ராஜாவுக்கு மஹா முனி சொன்ன வரலாற்றை சொன்னபின் வரிசைக் கிரமமாக சொல்கிறேன், என்றார் சூதர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-51
|| இத்துடன் இரண்டாவது ஸ்கந்தம் நிறைவுற்றது ||
||ஓம் தத்ஸத் ||
அவதாரங்களைப் பற்றி ப்ரும்மா சொல்வதாக பாகவத சரித்திரத்திலிருந்து.:-
என் (ப்ரும்மாவின்) யாகத்தில் வேத மயமான, பகவான் ஹயக்ரீவனாகத் தோன்றினார். அந்த குதிரை முகத்திலிருந்து, அழகிய வேத வாக்யங்கள் வெளி வந்தன. பொன்னிறமாக, வேத மயன், யாகமயன், அகில தேவதாத்மா என்று துதி செய்தோம். ஹல் என்பது ஒரு சங்கேதம். அகாரத்திலிருந்து ஹ காரம் வரை உயிர், மெய் எழுத்துகள் அனைத்தும் குறிக்கும் இலக்கண பரி பாஷை. வாக் தேவியின் உடலில் தோன்றியவை. “அக்ஷராணாமகாரோ அஸ்மி” என்ற கீதா வாக்கின் படி பரமாத்ம சங்கேத மான ‘அ’ காரம் – அதில் ஆரம்பித்து மற்ற அக்ஷரங்கள், அதன் பின் சொற்கள், பதங்கள், வாக்கியங்கள் என்று விரியும் மொழி. அதாவது அகில வித்யா பூதமான ‘ஹ’ என்ற சப்தம். ( அ காரம் என்பதில் ஆரம்பித்து என்று சொல்ல ‘ஹ’ உச்சரிப்பு வசதிக்காக ‘அ’ ஹ என்று துவங்கும். அதே போல கடைசி எழுத்துடன் சேர்த்து ‘ஹல் என்று ஆகும். பாணினியின் வியாகரண மாகேஸ்வர சூத்ரங்கள் அ இ உண் என்று ஆரம்பிக்கும்.)
மேலும் தலை எல்லா அக்ஷர, ப்ரபஞ்ச அபிவ்யக்தி தோற்றத்திற்குமான ஸ்தானம் என்பதால் க்ரீவம்- கழுத்திற்கு மேல் உள்ள தலை, ஹயமாக, அகாரத்தில் ஆரம்பித்து ஹ வில் முடியும் அக்ஷரங்களாக ஆவதால், ஹய – என்பது வித்யா ஸ்தானம். ‘ஹய’ ஸ்தூலமான பொருள், வெளியில் தெரியும் குதிரை முகம் என்பது அக்ஷர மயமான வாக் தேவதா என்பதும், ஆத்மா என்பது தேஹ. ப்ராண இரண்டும் சேர்ந்த பின் உள்ள உடலில் இருப்பதாக கொள்வதாலும், நிர்மலமான ஞானானந்த மயமான, சர்வ வித்யா ஆதாரமான பரமாத்மாவின் விக்ஞானமயமான் ப்ரும்ம யக்ஞத்தில் ஹயசீர்ஷ: குதிரை முகன் அல்லது வாக்கின் தேவதா ஸ்வரூபம் ஹயஃக்ரீவ: என்று பொருள். (தலையையும் உடலையும் சேர்ப்பது க்ரீவம் என்ற கழுத்து) தவிர ஸ்வாஸ நிஸ்வாஸ- மூச்சை உள் வாங்குவதும் வெளி விடுவதுமான செயல் ‘சோஹம் ‘ என்ற மந்திர த்தின் மற்றொரு பெயரான ப்ரணவாகாரம், ப்ரணவம் சந்தஸ் என்ற வேதத்தின் சாரபூதம் – அதன் சாரமானது என்று சொல்வது போல, ஹயக்ரீவனின் மூக்கின் வழி வெளி வரும் மந்திரம் -உலக ஸ்ருஷ்டிக்கு ஆதாரமான வேத வாக்கியங்களின் உத்பத்தி ஸ்தானமாகவும், (ப்ரணவமாகவும்) இணைத்து சொல்லப் படுகிறது. மேலும் ஹய என்ற சப்தம் உலக வழக்கில் குதிரை என்ற பிராணி என்பதாக ஆனதால், பகவானுடைய உருவம் அஸ்வம் என்ற குதிரை முகமாக ஆகி விட்டது. “ ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதீம், ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே “ என்ற பிரசித்தமான ஸ்லோகம் சொல்வது ஞான மயமான, வித்யா ஸ்வரூபமான யக்ஞ புருஷணான பகவானைச் சொல்கிறது.
*********