ஸ்ரீமத் பாகவதம்
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
தக்ஷ சாபோ என்ற நான்காவது ஸ்கந்தம்
அத்யாயம்-1
மைத்ரேயர் சொன்னார்: மனுவிற்கு சதரூபாவிடம், ப்ரியவ்ரத, உத்தானபாத என்ற இரு மகன்கள் தவிர ஆகூதி,தேவஹூதி, ப்ரசூதி என்ற மூன்று பெண்களும் பிறந்தனர்.
ஆகூதி என்பவளை ருசி என்பவருக்கு மணம் செய்து கொடுத்தனர், (உறவு முறையால் சகோதரன் என்றாலும் எல்லோருடைய சம்மதத்துடனும் மணம் செய்து கொடுத்தனர்) தவபலம் நிறைந்தவர் அவர். அவர்களுக்கு யக்ஞஸ்வரூபியான பகவானே மகனாகவும், தக்ஷிணா என்பவள் மகளாகவும் பிறந்தனர். அவர்களுக்கு பன்னிரண்டு குழந்தைகள். தோஷ, ப்ரதோஷ, சந்தோஷ, பத்ரன், சாந்தி, இடஸ்பதி, இத்ம: கவி, உசஸ்வன:, சுதேவோ, ரோசனோ த்விஷட். தீஷிதா என்ற தேவர்களாக ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் இருந்தனர்.
கர்தம புத்ரிகளை ஒன்பது ரிஷிகளுக்கு மணம் செய்து கொடுத்ததை முன்பே சொன்னேன். அதில் ப்ரசூதியின் குழந்தைகள் பற்றி சொல்கிறேன், கேள். மரீசியின் மனைவி கலா, கஸ்யபர் என்ற முனிவரையும், பூர்ணிமானம் என்பவரையும் பெற்றாள். பூர்ணிமான் , விரஜ, விஸ்வக என்ற பிள்ளைகளையும், தேவகுல்யா என்ற மகளையும் பெற்றார். இந்த தேவகுல்யா என்ற மகள் தான் அடுத்த ஜன்மத்தில் ஹரியினுடைய பாதங்களை அலம்பிய ஜலமாக உலகை பாவனம் செய்யும் நதி கங்கையாக ப்ரவஹித்தாள்.
அத்ரியின் மனைவி அனசூயா, மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். மூவருமே ப்ரசித்தமானவர்களாக ஆனார்கள். தத்த, துர்வாஸர், சோமன். ஈசனின், விஷ்ணுவின், ப்ரும்மாவின் தேஜசுடன் பிறந்தனர்.
விதுரர் கேட்டார். குருவே, அத்ரியின் வீட்டிற்கு, மூன்று தேவர்களும், ஸ்திதி, உத்பத்தி, லயம் எனும் செயல்களுக்கு பொறுப்பானவர்கள், ஏதோ உத்தேசத்துடன் சென்றார்களே, அந்த கதையை சொல்லுங்கள்.
அத்ரி முனிவர், நான் முகனான ப்ரும்மா முதன் முதல் ஸ்ருஷ்டி செய்த முனிவர்களுல் ஒருவர். அவர் மனைவி அனசூயாவுடன் குலாசலம் (ருக்ஷாசலம்) என்ற இடத்தில் தவம் செய்து வந்தார். அந்த இடம் விந்த்ய மலையடிவாரத்தில் மிக ரமணீயமாக இருந்தது. கொத்து கொத்தாக மலர்ந்த பலவித மலர்கள், பலாச, அசோக போன்ற மரங்கள், நீர் நிறைந்த குளங்கள், நதி, என்று தவம் செய்ய அமைதியான இடம். ப்ராணாயாமம் செய்து பலவருஷங்கள் மனம் உடல் இரண்டையும் தன் வசப் படுத்திக் கொண்ட முனிவர் ஒரு பாதத்தில் நின்று தவம் செய்தார். காற்றே போஜனம்.ஜகதீஸ்வரனை வணங்குகிறேன். தனக்கு சமமான மகனை எனக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். அவரது தீவிரமான தவம் அவரது மஸ்தகத்திலிருந்து வெப்பமான புகையாக வெளி வந்து மூவுலகையும் தகிக்கலாயிற்று. அப்சர, கந்தர்வ, முனி ஜனங்கள் அவரது ஆசிரமத்தில் வந்து கூடினர். அவர்களைப் பார்த்த முனிவர், ருஷபம்,ஹம்ஸ,சுபர்ண என்ற வாகனங்களில் வந்த மும்மூர்த்திகளையும் வணங்கினார். கண்களைத் திறந்து அவர்களை வணங்கி துதித்தார்.
அத்ரி சொன்னார்: விஸ்வ உத்பத்தி, ரக்ஷணம், லயம் என்று உலகில் ஒவ்வொரு யுகத்திலும் மாயா குணத்தால் தேகம் தரிக்கும் மூவரும் இந்த இடத்திற்கு வந்த காரணம் என்னவோ? ப்ரும்மா என்னை பிரஜைகளை ஸ்ருஷ்டி செய் என்று ஆணையிட்டார். சாதாரண மனிதர்களின் மனதால் கூட அண்ட முடியாத தூரத்தில் இருப்பவர்கள், ஒன்றாக வந்தது எனக்கு ஆச்சர்யமே. தயவு செய்து சொல்லுங்கள்.
தேவர்கள் சொன்னார்கள்; நீ என்ன காரணத்திற்காக தவம் செய்கிறாயோ, அது கண்டிப்பாக நடக்கும். எங்களை இங்க வரவழைத்தது அந்த சத்சங்கல்பமே. ப்ரும்மன், அதனால், எங்கள் அம்ச பூதமாக புகழுடன் உலகில் உன் பெருமையை பறை சாற்றியபடி வாழ்வார்கள் உன் மகன்கள். இவ்வாறு வரம் கொடுத்தவர்கள் உடனே மறைந்தனர்.
அத்ரி-அனசூயா தம்பதிக்கு, ப்ரும்மாவின் அம்சமாக சோமன் (சந்திரன்) பிறந்தான். விஷ்ணுவின் அம்சமாக தத்தன் எனும் தத்ராத்ரேயர், சங்கரனின் அம்சமாக துர்வாசரும் பிறந்தனர்.
ஆங்கிரஸ் என்றமுனிவரின் மனைவி ஸ்ரத்தா. நான்கு புத்திரிகளைப் பெற்றாள். சினீவாலி, குஹூ, ராகா, அனுமதி என்பவர்கள். வசிஷ்டரும், ப்ருஹஸ்பதியும் மகன்கள்.
புலஸ்தியர் என்ற ரிஷி, ஹவிர்பூ என்ற மனைவியிடம், அகஸ்தியர் என்பவரை பெற்றார். அடுத்த பிறவியில், ஜடராக்னி,விஸ்ரவா என்ற மகன்கள். மற்றொரு ,மனைவி கேசினி என்பவளின் மகன்கள் ராவண, கும்பகர்ண,விபீஷணன் என்பர். யக்ஷபதியான குபேரன், இட்விடா என்பவளின் மகன்.
புலஹருடைய மனைவி கதி என்பவளுக்கு. கர்மச்ரேஷ்டன், வரீயாம்சன், சஹிஷ்ணு என்ற மூன்று மகன்கள்.
க்ரது என்பவரின் மனைவி க்ரியா வாலகில்யான் என்ற ஆறாயிரம் ப்ரும்ம தேஜஸால் பிரகாசித்த ரிஷிகளைப் பெற்றாள்.
வசிஷ்டர் ஊர்ஜா என்பவளிடம் சித்ரகேது முதலான ஏழு ரிஷிகளைப் பெற்றாள். சித்ரகேது, சுரோசி, விரஜா, மித்ரன், உல்பனோ, வசுப்ருத், த்யுமான், சக்தி என்பவர்கள்.
அதர்வண ரிஷி சித்தி என்பவளிடம், த்ருதவ்ரதன் என்பவனைப் பெற்றாள்.
தத்யஞ்சமன், அஸ்வசிரஸ் – இவர்கள் ப்ருகு வம்சத்தினர். க்யாதி என்ற மனைவியிடம் ப்ருகு தாதாரன், விதாதாரன்,ஸ்ரீ -இவள் பகவானின் பத்னியானாள்),ஆயதி, நியதி என்ற பெண்கள் -இவர்கள் மேருவை மணந்தனர். அவர்களுக்கு ம்ருகண்டு, ப்ராணன் என்று மகன்கள். மார்கண்டேயன் ம்ருகண்டு மகன். ப்ராணன் மகன் வேதசிரஸ். கவி என்ற ப்ருகு புத்திரனுக்கு பகவானே உசனா என்ற முனிவராக பிறந்தார். சுக்ராசார்யர் இவரே.
இந்த முனிவர்கள், தாங்களும் நல்லவர்களாக இருந்து, பிரஜைகளையும் வளர்த்தார்கள். கர்தமருடைய மகள் வயிற்று சந்ததிகள், பற்றிச் சொன்னேன். ப்ரும்மாவின் மகனான தக்ஷன் ப்ரசூதி, மானவி என்பவர்களை மணந்தான். அவர்களிடம் அழகிய கண்களுடைய பதினாறு பெண்களைப் பெற்றான். பதிமூன்று பெண்களை தர்மனுக்கு கொடுத்தான். அக்னிக்கு ஒன்று, மற்றவளை பவனுக்கு கொடுத்தான். தர்மனுடைய பத்னிகள்: ஸ்ரத்தா, மைத்ரீ, தயா, சாந்தி, துஷ்டி:, புஷ்டி:, க்ரியா, உன்னதி:, யுத்வித், மேதா, திதிக்ஷா, ஹ்ரீ, மூர்த்தி என்பவர்கள்.
ஸ்ரத்தாவின் மகன்கள்: சுபன் மைத்ரீ, ப்ரஸாதன், அபயன், தயா,சாந்தி, சுகம், முதன்,ட துஷ்டி: ஸ்மயம்,புஷ்டி
புத்தி என்பவள், யோகம், க்ரியா, உன்னதி, தர்பம்,அர்த்தம், இவர்களையும்,
மேதா என்பவள், ஸ்ம்ருதி, திதிக்ஷா, க்ஷேமம், ஹ்ரீ:, ப்ரஸ்ரயன் என்ற மகனையும்,
மூர்த்தி என்பவளுக்கு, நர நாராயண என்ற ரிஷிகள். இவர்கள் பிறந்ததால், உலகமே மகிழ்ந்த து. அனைவரும் மகிழ்ந்தார்கள். திவ்ய வாத்யங்களை இசைத்தும், பூ மாரி பொழிந்தும் தேவர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். தேவர்கள் துதித்தனர்.
இருவரும் அதன் பின் கந்தமாதனம் எனும் இடத்தையடைந்தனர். பின் ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் பூவுலகத்தில் அவதரித்த காரணமே, பூ பாரத்தை குறைப்பதே. க்ருஷ்ணனாக, பலராமனாக வந்தனர்.
ஸ்வாஹா, அபிமானி என்ற அக்னியின் குழந்தைகள், மூன்று பெண்களைப் பெற்றனர். பாவகம், பவமானம், சுசி,- இவர்களை ஹுத போஜனர்கள் என்பர். இவர்கள் மூலம் நாற்பது நான்கு அதன் பின் மேலும் ஐந்து விதமான அக்னிகள் தோன்றின. மொத்தம் நாற்பத்து ஒன்பது விதமான அக்னிகள். வைதானிய கர்மாக்களில், அக்னியுடன் செய்யும் யாகங்களில் இவர்கள் இருப்பர்.
பவனுடைய மனைவி சதீ பவன் என்ற தேவனை மணந்தாள். தங்களுக்கு சமமான புத்திரனைப் பெறவில்லை. ஒரு சமயம் தந்தை அழைக்காததால் பவன் வரவில்லை என்ற விஷயத்தில் ஏற்பட்ட கோபத்தில், தன்னையே யோக மார்கத்தில் எரித்துக் கொண்டாள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷ சாபோ – என்ற நான்காவது ஸ்கந்தத்தின், முதல் அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -66
அத்யாயம்–2
பவன் எனும் மகேஸ்வரன் நல்ல சீலமுடையவர், ஸ்ரேஷ்டன் என்று அறிவோம். தக்ஷனும் தன் மகளிடம் அன்புடையவர். எதனால் விரோதம் சொந்த மருமகனிடம்? தன் மகள் சதீயையே அலட்சியம் செய்யும் அளவு கோபம் வரக் காரணம்? சராசர குரு, அவருக்கு விரோதிகளே கிடையாது, சாந்த மூர்த்தி, ஆத்மாராமன் என்று உலகமே மதிக்கும் ஒருவரிடம் அதுவும் அவர் தன் மகளை மணந்தவர் என்ற உறவும் சேர்ந்து இருக்க, அவரை அலட்சியம் செய்யலாமா? அதுவும் மகள் தன் உயிரையே தியாகம் செய்யும் அளவிற்கு விரோதமா? சொல்லுங்கள் என்று விதுரர் கேட்டார்.
மைத்ரேயர் சொன்னார்: ஒரு சமயம், விஸ்வஸ்ருட் என்ற ப்ரும்மாவின் யாகத்தில் சிறந்த ரிஷிகள், தேவதா கணங்கள் என்று அனைவரும் கூடியிருந்தனர். அந்த சபையில் தக்ஷன் நுழைந்த பொழுது, ப்ரும்மாவையும், சங்கரனையும் தவிர அக்னி முதலான தேவர்களும், மற்றவர்களும் எழுந்து மரியாதை செய்தனர். முன்னாலேயே அமர்ந்து விட்ட சங்கரனைக் கண்டதும் தக்ஷனுக்கு தன்னை அவமரியாதை செய்து விட்டதாக கோபம் வந்த து. இவன் என் மகளை மணந்தவன் எனக்கு சிஷ்யனாவான். மரியாதையே அறியாத மூடன். தரம் அறியாது என் மகளை இவனுக்கு கொடுத்து விட்டேனே – வானரம் போன்ற கண்கள் இவனுக்கு – என் மகள் அழகிய மான் விழியாள், எழுந்து நின்று எனக்கு மரியாதை செய்ய வேண்டியதிருக்க, வாய் மூடி மௌனியாக அமர்ந்திருக்கிறான். விரித்த சடையும், உடலில் பூசிய பஸ்மமும் – எனக்கு பிடிக்கவேயில்லை. இருந்தும் என் மகளை தாரை வார்த்து கொடுத்தேன். மரியாதை தெரியாதவன், சூத்ரனுக்கு வேத மந்திரங்களை கற்றுத் தருவது போல. பூத கணங்கள் சூழ வலம் வருபவன். கோரமான ப்ரேதங்கள் இவைகளுடன் சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் திரிபவன். உடல் முழுவதும் பஸ்மம் , அசிவன்- மங்களமே இல்லாதவன் சிவன் -மங்களன் என்று பெயர். மதம் கொண்ட ஜனங்களுக்குத் தான் இவனை பிடிக்கும். ப்ரமத பூதங்களின் தலைவன். தமோ குணமே உருவானவன். இந்த மன நோயாளிக்கு என் மகளைக் கொடுத்து விட்டேன், ப்ரும்மா சொன்னார் என்பதற்காக. என்றிவ்வாறு கிரீசனை பலவிதமாக நிந்தனை செய்து கொண்டே போனார். கையில் நீரை எடுத்துக் கொண்டு சபிக்கவும் தயாரானார். மற்றவர்கள் தடுத்தும் கேளாமல், இந்த பவன், தேவர்களின் யாகங்களில் மற்ற தேவர்களுடன் தன் பாகத்தை பெறாமல் போகட்டும் என்று சபித்தார். (சாபம் உண்மையில் பவன் மற்ற தேவர்களுக்கு முன்னால் தன் பாகத்தைப் பெறட்டும் என்றோ, மற்ற தேவர்கள் தங்கள் பாகத்தை பெற்ற பின் பெறட்டும். ஏனெனில் இவர் போஷகர் என்ற ஸ்தானத்தில் இருப்பவர், கொடுப்பது தான் இவரது செயல், தான் முன்னதாக பாகத்தை பெற மாட்டார் என்பதாகவோ பொருள் கொள்ளப்பட்டது) சபித்து விட்டு தக்ஷன் வேகமாக வெளியேறி விட்டார்.
கேட்டுக் கொண்டிருந்த நந்திதேவர், பொறுக்காமல், தக்ஷனுக்கு சாபம் கொடுத்தார். சங்கர த்ரோஹியான தக்ஷனும், சாபம் கொடுப்பதை அனுமோதித்த ப்ராம்மணர்களும் தத்வ ஞானம் என்பதை பெறாமலே, சம்சாரம் என்ற பந்தத்திலேயே உழலட்டும். அறிவு சார்ந்த எதுவும் இல்லாத பசு அந்த தக்ஷனுடைய முகம் ஆட்டு முகமாக ஆகட்டும். இவனை ஆதரித்த ப்ராம்மணர்கள், செல்வம் இன்றி, யாசகர்களாக வாழட்டும்.
ஒட்டு மொத்தமாக ப்ராம்மண குலத்தை சபிக்கத் துணிந்த நந்தியை ப்ருகு முனிவர் தடுத்தார். தன் ப்ரும்ம தண்டத்தின் மேல் ஆணையிட்டு ப்ரதி சாபம் – நந்தியின் சாபத்திற்கு எதிர் சாபம் கொடுத்தார். இந்த பவனை நம்புபவரும், அவனை அனுசரிப்பவர்களும் பாகண்டினர் (ஆசாரம் இல்லாதவர்கள்) ஆகட்டும். அசுத்தமாக, மந்த புத்தியாக, ஜடையும் பஸ்மமும் தரித்தவர்களாக, சிவதீக்ஷை எடுத்துக் கொண்டும் அலையட்டும். ப்ரும்மத்தையும், ப்ராம்மணர்களையும் நிந்திக்கும் நீங்கள், மனித குலத்துக்கே கெடுதல் செய்தவர்கள். சனாதனமான நேர் வழி, ஜனார்தனனை ஆராதித்து நற்கதியடைந்தார்களே, அதுவே பிரமாணம். ப்ரும்மம் தான் பரமம்.தூய்மையானது. நல்லவர்களின் வழி அதுவே. இந்த பூத கணங்கள் சூழச் செல்லும் பாகண்ட தேவனை பின் பற்றிச் செல்லுங்கள், என்றார்.
மைத்ரேயர் சொன்னார்: ப்ருகு சாபம் கொடுத்ததை கண்டு கொள்ளாமல் பவனும் வெளியேறினார். அவரை தொடர்ந்து அவருடைய பரிவாரங்களும் வெளியேறின. விஸ்வஸ்ருஜ யாகம், அது பகவான் ஹரியை குறித்து செய்யபடும் யாகம் பல வருஷங்கள் நீடிக்கும். குறையாக நிறுத்தக் கூடாது என்பதற்காக நடந்த சம்பவங்களால் அதில் உத்சாகம் குறைந்தாலும், பெயருக்கு யாகத்தை முடித்து கங்கை யமுனை நதிகளில் அவப்ருத ஸ்னானம் செய்து அனைவரும் தங்கள் இருப்பிடம் சென்றனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -35
அத்யாயம்–3
காலம் கடந்தும் மருமகன், மாமனார் இடையில் துவேஷம் குறையவே இல்லை. தக்ஷனை ப்ரும்மா ப்ராஜபதிகள் அனைவருக்கும் தலைவனாக நியமித்தார். ப்ருஹஸ்பதி யாகம் என்று ஆரம்பித்து வசிஷ்டர் முதலான ரிஷிகள் அனைவரையும் அழைத்து மிக விமரிசையாக செய்ய ஆரம்பித்தான் தக்ஷன். ப்ரும்ம ரிஷிகள் தேவ ரிஷிகள், பித்ரு தேவதைகள் என்று அனைவரும் மனைவிகளுடனும் வந்தனர். அவர்களை முகமன் சொல்லி வரவேற்று, ஆசனங்களில் அமரச் செய்து தக்ஷன் உபசாரம் செய்தான். இதைப் பற்றி வானத்தில் சஞ்சரிக்கும் சிலர் பேசிக் கொள்வதைக் கேட்டு சதீ தாக்ஷாயணி விசாரித்தாள். தந்தை வீட்டில் மகோத்ஸவம் நடப்பதும், அனைத்து திக்குகளிலிருந்தும் உப தேவ பெண்களும், ஆகாயத்தில் விமானத்தில் பலரும், அலங்கரித்துக் கொண்டு செல்வதைப் பார்த்தாள். வீட்டு வாசலில் நின்று அவர்களின் குண்டலங்களையும், உடைகளையும் பார்த்து வியந்தவள், பூதபதியான கணவனிடம் வந்து சொன்னாள்.
உங்கள் மாமனார் ப்ரஜாபதி ஏதோ யாகம், மஹோத்ஸவமாக செய்கிறார் போலும். எல்லோரும் போகிறார்கள். என் சகோதரிகளும் தங்கள் கணவர்மாருடன் நிச்சயம் போவார்கள். உறவினர், சினேகிதர்களைப் பார்க்கலாம், நாமும் போய் கலந்து கொள்ளலாமா? கொடியேற்றி விட்டார்கள் போல. என் தாயாரை பார்க்கலாம். மற்ற சகோதரிகளின் புகுந்த வீட்டு உறவினர்கள் வந்திருப்பார்கள். பாருங்கள், மற்ற பெண்கள் எல்லோரும் அலங்கரித்துக் கொண்டு கணவன் மாருடன், கூட்டம் கூட்டமாக போகிறார்கள். பிறந்த வீட்டு விசேஷம் என்றால் எந்த பெண் தான் போக ஆசைப் பட மாட்டாள்? கணவன், குரு, தந்தை வீடுகளுக்கு அழையாமலே போகலாம் என்பது தானே வழக்கம். அதனால், தயவு செய்து, என்னை அழைத்து போங்கள். உங்களில் பாதி தானே நான். என் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள், என்று கெஞ்சினாள்.
ரிஷி சொன்னார்: இவ்வாறாக ப்ரியாவான மனைவி கேட்டதும், கிரீசன் சிரித்தார். ப்ரும்மா இருந்த சபையில் மட்டமான வார்த்தைகளால் அவமதித்ததை, நினைத்து தயங்கினார். அவளை சமாதனப் படுத்தும் விதமாக மெதுவாக சொன்னார். சோபனே! அழையாத விருந்தாளியாக கூட பந்துக்கள் வீடுகளுக்குப் போகலாம் தான். அவர்கள் உண்மையாக நம்மிடம் அக்கறையுடன் இருந்தால் போகலாம். நம்மிடம் குற்றம் குறை சொல்லாமல் கோபம் கொள்ளாமல் இருந்தால் போகலாம் தான். வித்யா, தவம், செல்வம்,உடல் வாகு, சம வயது, குலம், இந்த ஆறு குணங்களும் நல்லவர்களிடம் இருந்தால் பிரகாசிக்கும், அதுவே துஷ்டர்களானால் அவர்களது , கர்வத்தைத் அதிகரிக்கும். யாருக்கும் எந்த பயனும் இல்லை. இவர்களை தன் உறவினன் என்றெண்ணி நெருங்குவது யோசிக்க வேண்டிய விஷயம். இவர்கள் பார்வையே கோணல். எதிலும் குற்றமே தெரியும். க்ரோதம் வெளிப்படையாக தெரிந்தால், சொந்தமேயானாலும் எப்படி பொறுக்க முடியும்? அதனால் நம்மை வெறுப்பவர்கள், எதிரிகளே. அவர்கள் வெறுப்புடன் அவச்சொல் சொன்னால் நம் மனது தாங்குமா? ராத்திரியும் பகலும் அந்த சொல்லே குடையும். மேன்மேலும் உயர் பதவிகளை வகிக்கும் உன் தந்தை முக்கியமான ப்ரஜாபதி என்பது வாஸ்தவம். நீ அவருடைய ப்ரியமான மகள் என்பதும் வாஸ்தவம். ஆனால் என்னை மணந்த பின் அதே போல எதிர் பார்க்க முடியாது. அசுரர்கள் ஹரியை எதிர்ப்பது போல அவர் என்னை எதிர்க்கிறார். நீ ஏன் அப்பா வந்த பொழுது மரியாதை செய்யவில்லை என்று கேட்கிறாயா? என்னைப் போன்றோர் ஹ்ருதயத்தில் இருக்கும் பரம புருஷனான வாசுதேனுக்கு மட்டும் தான் மரியாதை செலுத்துவோம், அபிமானியான மனிதர்களுக்கு அல்ல. அந்த:கரணம் சுத்தமாக இருந்தால் தான் வாசுதேவன் தெரிவான். ப்ரியே! உனக்கு பெற்ற தந்தை. ஆயினும் என் பத்னியாக ஆன பின் அவரையோ, அவரை பின் பற்றும் மற்றவர்களையோ நீ சொந்தமாக நினைக்க வேண்டியதில்லை. அதையும் மீறி நீ போவாயானால் உனக்கு நல்லதல்ல. அவமானப்படுவாய். வேண்டாம், உன்னால் தாங்க முடியாது.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -25)
அத்யாயம்–4
மைத்ரேயர் தொடர்ந்தார்: இவ்வளவு சொன்னபின் சங்கரர் சிந்தனையில் ஆழ்ந்தார். நடக்கப் போவதை அறிந்தவர் போல, தன் மனைவியின் விருப்பத்தையும், அதன் விளைவுகளையும் நினைத்தோ, கவலையில் ஆழ்ந்தார். அவள் கிளம்புவதை பார்த்துகொண்டு வாளா இருந்தார். தன் கணவன் சாதாரணமனவன் அல்ல,பரமபுருஷன் என்பதையும் மறந்தவளாக பிறந்த வீட்டு உத்சவத்திற்கு போக விடாமல் தடுக்கும் கணவனாக மட்டுமே நினைத்து கண்கள் குளமாக கோபத்துடன் ஏறிட்டாள். வருத்தமும், ரோஷமும் அவளை அலைக்கழிக்க கிளம்பினாள். பவனின் ஏவலாட்கள் பலர் அவளை பின் தொடர்ந்தனர். ஆயிரக் கணக்கான யக்ஷர்கள், மற்றும் வீரர்கள் பாதுகாவலாக பரபரப்புடன் பின் தொடர்ந்தனர். ரிஷப வாகனம், முன்னால் நந்திகேஸ்வரர், மற்றும் வெளியில் செல்லும் பொழுது செய்யும் ஏற்பாடுகள், முன்னும் பின்னும் வழக்கமான பரிவாரங்கள், மங்கள பொருள்களை ஏந்திச் செல்பவர், நல்ல சகுனங்கள் முதலியவைகளையும் சோதித்து உடன் சென்றனர். (நடக்கப் போவது நன்மையாக இருக்காது என்று ஊகித்தவர்கள் போல)
யாக சாலையிருந்து ப்ரும்ம கோஷம் கேட்டது. ப்ராம்மணர்களும், ரிஷிகளும் நிரம்பியிருந்தனர். மண் பாண்டங்கள் முதல் தங்கத்தாலான பாத்திரங்கள், மற்றும் யாகத்துக்கு தேவையான பொருள்கள் தென்பட்டன. யாகசாலையில் நுழைந்தனர். உள்ளே நுழைந்தவளை யாருமே வரவேற்கவில்லை. அவள் முகம் வாடியதைக் கூட கண்டு கொள்ளாமல் யாகம் செய்பவரின் கோபத்தை நினைத்து பேசாமல் இருந்தனர். அவள் தாயும், சகோதரிகளும் ஆதரவுடன் அனைத்தனர். அவர்கள் கண்களில் நீருடன் பேசியதோ, தாயார் அவளுக்கு உயர்ந்த ஆசனத்தைக் கொடுத்ததோ சதிக்கு நிறைவைத் தரவில்லை. தந்தையின் பராமுகம் வருத்தமாக இருந்தது.
ருத்ரனுக்கான பாகம் அளிக்கப்படாமலேயே யாக காரியங்கள் நடந்தன. தந்தையின் வெளிப்படையான துவேஷம், அதைக் கண்டிக்க வேண்டிய பெரியவர்கள் அந்த சபையில் பேசாமல் இருந்தது, அந்த யாகத்துக்கே தலைவியாக அமர்ந்திருக்க வேண்டிய சதி, கோபத்தால் கொதித்தாள். சிவபெருமான் இல்லாத இந்த யாகம் வெறும் புகையை கிளப்பும் அக்னி என்று வசை பாடினாள். பூத கணங்களை தடுத்து, தானே பேசலானாள்.
சதி “ அனைவரையும் அரவனைத்துக் கொண்டு செல்லும் ஸ்ரீ ருத்ரன், அவரையே எதிர்த்து விரோதம் பாராட்டும் ஹே, ப்ராம்மணர்களே, எது சரி, அல்லது தவறு என்று சொல்ல வேண்டிய நீங்களே சிவ நிந்தைக்கு துணை போவது போல கூடியிருக்கிறீர்கள். எவருடைய பெயரைச் சொன்னாலே மனிதனுடைய பாவங்களே மறையுமோ, அவரையே தூஷித்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்? மங்களமான சிவனை அலட்சியம் செய்யும் அமங்களமான உங்கள் செய்கை. ப்ரும்ம ஞானம் வேண்டுவோர் வணங்கும் பாத பத்மம், உலகில் வேண்டுபவர்க்கு ஆசிகளை வர்ஷிக்கும் விஸ்வ பந்து, அவரிடமா விரோதம் ? சிவ தூஷனையை கேட்காமல் காதுகளை மூடிக் கொண்டு விலக வேண்டியிருக்க யாகத்தில் பங்கு கொள்ள வந்துள்ள உங்கள் நாக்கிலிருந்து தர்மம் தானே விலகி ஓடிவிடும். சிதிகண்டனை தூஷிக்கும் உன்னிடம் உண்டான இந்த சரீரம், நான் தரித்திருக்க மாட்டேன். ஒவ்வாத உணவை உண்டவன் அதை வெளியேற்றினால் தான் உடல் நிலை சரியாகும் என்பது போல இந்த சரீரத்தை விடுவேன்.
உன் கோத்ரம், அதனால் தாக்ஷாயணி என்று விருஷத்வஜன் அழைப்பார். அந்த என் பெயரை விடுகிறேன். இப்படி அந்த யாக சாலையில் தக்ஷனை நேருக்கு நேர் நின்று சொல்லி விட்டு, கிழக்கு நோக்கி அமர்ந்து,ஆசமனீயம் செய்து, மங்களமான மஞ்சள் நிற உடையில், கண்களை மூடி யோகத்தில் ஆழ்ந்தாள். ப்ராணனை சமன் செய்யும் ப்ராணாயாமம் செய்து, நாபி சக்ரத்திலிருந்து சக்தியை கிளப்பி, மெதுவாக கொண்டு சென்று, கழுத்திலிருந்து புருவ மத்தியில் நிறுத்தினாள். அன்புடன் தன் தேகத்தை பகிர்ந்து கொண்ட மகேசனை நினைத்து, தக்ஷனிடம் கொண்ட கோபத்தால் அதை விடுவித்துக் கொண்டு மனஸ்வினி, தன் உடலில் அந்த யோகத்தால் விளைந்த அக்னியை ஏற்றுக் கொண்டாள். தன் கணவனின் பாத ஸ்மரணம் மட்டுமே மனதில், தானே தன் தேகம் எரிவதை பார்த்தாள்.
பூ உலகிலும், தேவ லோகத்திலும் அனைவரும் இந்த அத்புதத்தைப் பார்த்து திகைத்தனர். ஆ, சதீ, தன் கணவனிடம் உள்ள அன்பினால் என்ன காரியம் செய்து விட்டாள் என்று அலறினர். ஆஹா, என்ன சொல்வோம், ப்ராஜாபதியின் மகள், உலகமே அவன் ப்ரஜைகள், அவனிடம் கோபம், மனஸ்வினீ, தன் தன்மானமே பெரிது என்று எண்ணி விட்டாள். தக்ஷ பிராபதி என்ன செய்யப் போகிறார். அவருக்கு வரப் போகும் அளவில்லாத அபகீர்த்தியை எப்படி தாங்குவார். ஜனங்கள் பலவிதமாக பேசி விமரிசனம் செய்து கொண்டனர். ஆனாலும் ஒரு பெண், தந்தைக்கு எதிராக, தன் கணவனுக்காக பரிந்து பேசி உயிர்த் தியாகம் செய்து கொள்வாளா என்று அதிசயித்தனர்.
இதற்குள் சதியின் கூட வந்த பரிவாரங்கள், ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தாக்க வந்தனர். கூட்டத்தில் இருந்த ப்ருகு முனிவர், யாக அக்னியை அணைய விடாமல் தடுத்து, சோம மந்த்ரம் என்பதால் ருபவோ என்ற தேவதைகளை வரவழைத்து, பூத கணங்களை துரத்தினார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -34)
அத்யாயம்–5
நடந்த விஷயங்களை நாரதர் சொல்லி பவன் தெரிந்து கொண்டார். பவானி தானே தன்னை மாய்த்துக் கொண்டதையும், உடன் சென்ற பரிவாரங்களை ப்ருகு முனிவர் விரட்டியதையும் கேட்டு கோபம் கொண்டார். அக்னியே மழையாக பொழிகிறதோ என்று ஐயப்படும் வகையில் விரித்த சடையும், கம்பீர நாதமும் சிரிப்புமாக, தன் உடலை ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்த்துக் கொண்டு, ஆயிரம் கைகளுடன், மூன்று சூரியன் எழுந்தாற்போல கபால மாலையும் மற்ற ஆயுதங்களுடனும் கிளம்பினார். பூதகண தலைவன் அவனை என்ன செய்ய என்று கேட்க, தக்ஷனை அவனுடைய யாக பூமியோடு சேர்த்து அழி என்று உத்தரவிட்டார்.
அவரும், ருத்ரனின் பரிவாரங்கள் சூழ, சூலத்தை ஏந்திக் கொண்டு உலகை முடிவுக்கு கொண்டு செல்லும் (ஜகதந்தகாந்தகம்) பலமாக கூச்சலிட்டுக் கொண்டு தாக்கினர். அந்த யாகத்தின் யஜமானன், கூடியிருந்தோர், மேற்கு திசையில் ஏராளமாக புழுதி பறந்ததைக் கண்டு என்ன இது என்று திகைத்தனர். எங்கிருந்து இந்த அளவு புழுதி வருகிறது என்று அனைவரும், யாகத்தில் பங்கு கொண்ட ப்ராம்மணர்களும், மற்றும் கூடியிருந்த ஆண்களும் பெண்களுமாக இருந்த சபை கவலையடைந்தது.
புயல் காற்று வீசவில்லை. திருடர்கள் கூட்டம் போலவும் இல்லை, உச்சி வெய்யில் தகிக்கிறது, பசுக்களும் அலையவில்லை. எங்கிருந்து புழுதி ? பிரளய ஆரம்பமோ என்று நடுங்கினர். ப்ரசூதியும் மற்ற பெண்டிரும் உணர்ந்தனர். இது ப்ரஜாபதியின் செயலுக்கு எதிர் விளைவே. மற்ற சகோதரிகள் கண் முன்னாலேயே, சதீ மறைந்ததை தந்தையாக இருந்தும் பார்த்துக் கொண்டு வாளா இருந்தாரே, அவள் கணவர் யார் என்று தெரியாதா? யுக முடிவில் ஜடையை விரித்து போட்டுக்கொண்டு, கையில் சூலத்தை ஏந்தி திக் கஜங்களை விரட்டிக்கொண்டும், ஆடுபவன். அட்டாட்ட ஹாஸத்தினாலேயே குலை நடுங்கச் செய்பவன். கேட்கும் நிறை மாத கர்பிணிகள், அந்த க்ஷணமே ப்ரசவித்து விடுவர். தாமஸ தேஜஸ் அவருடையது. அதை கிளப்பி விட்டு, அவரை ஆத்திரமூட்டியதும் இவரே. இவருடைய புருவ நெரிப்பில், பயங்கரமான பற்களை நெரிப்பதில், சூரிய சந்திரர்களே ஒளியிழப்பர். இந்த ப்ரும்மா எதற்கு அவரை கோபமூட்ட வேண்டும்?
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையிலேயே, மேலிருந்து ஏதோ விழுவது போல ஆயிரக் கணக்கில் ஹரனின் பரிவாரங்கள் பயங்கரமான தோற்றத்துடன் விண்ணளாவிய உடலினராக யாக பூமியை நிறைத்தனர். எதிர் பட்டதையெல்லாம் த்வம்சம் செய்து கொண்டு முன்னேறினர். யாகத்திற்கான ப்ரும்மாண்டமான ஏற்பாடுகள் நொறுங்கின. யாக பாத்திரங்களா, அக்னி குண்டங்களா, வேதி வளையங்களா எது என்ன என்று யோசிக்க கூட இல்லை. அக்னியை அணைத்தனர். முனி பத்னிகளை விரட்டி அனுப்பி விட்டு, வந்திருந்த சில தேவர்களை பிடித்துக் கொண்டனர்.
மணிமான் எனும் வீரபத்ரன், ப்ருகு ப்ரஜாபதியை கட்டி வைத்தான். சண்டேசன் என்பவன் பூஷணம் என்ற முனிவரை, நந்தீஸ்வரர் பகன் என்பவரை பிடித்து கட்டினார். கூடியிருந்த ருத்விக் எனும் யாக அதிகாரிகளும், காண வந்திருந்த பிரஜைகளும், தேவர்களும் ஓட்டம் எடுத்தனர். ப்ருகுவின் மீசையை பிடுங்கினர், பகனுடை கண்களை குத்தினர், பூஷணனின் பற்கள் விழுந்தன, பல்லைக் காட்டி சிரித்தார் சதியின் கோபத்தைக் கண்டு என்பதால், தக்ஷனுடைய மார்பில் ஏறி நின்று தன் சூலத்தால் குத்தினர். தக்ஷனுடைய தடித்த தோலில் அவை இறங்காததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். அவர் யோக சக்தியை அறிந்து யஜமான பசு என்று அவன் தலையை கொய்தனர். எங்கும் ஆஹா என்ற சப்தம் நிறைந்தது. அந்த தேவ யாகத்தை எரித்து ஊழித்தீ போல நின்றவர், பின் தன் இருப்பிடம் சென்றார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -26)
அத்யாயம்–6
ஸ்ரீ ருத்ரனின் பரிவாரங்களின் சூல, பட்டிச, நிஸ்த்ரிம்ச, கதை என்ற ஆயுதங்களால் தாக்கப் பட்டு தோல்வியடைந்த தேவர்கள் உடல் முழுதும் காயங்கள் அல்லது உடல் அங்க முறிவு என்று தவித்தார்கள். மிகவும் வேதனையுடன் ப்ரும்மாவிடம் முறையிட்டார்கள். நீங்களோ, அல்லது பகவான் நாராயணனே தலையிட்டோ இந்த யாக காரியத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள். விபு சொன்னார். க்ஷேமத்தை தரும் தேஜஸ்வி, வணங்கத் தக்கவள், அவளிடம் தவறு செய்திருக்கிறான். நீங்களும் தவறு செய்தீர்கள். அவனுடன் சேர்ந்து இந்த காரியத்தில் அமர்ந்து நீங்களும் உடந்தையாக இருந்திருக்கிறீர்கள். போய் அவரிடமே மன்றாடுங்கள். அவர் எளிதில் அருளக் கூடியவர். சமாதானப் படுத்துங்கள். யாகம் பாதியில் நிற்கக் கூடாது என்று விரும்பினால், லோகபாலர்கள் எல்லோருமாக, பிரியமான மனைவியை இழந்த துக்கத்திலும், அவமானகரமான வார்த்தைகளை பேசி ஏசியவரிடம் கோபித்துக் கொண்டும் உள்ளவரிடம் போய் யாசியுங்கள். மன்னிப்பு கேளுங்கள்.
நானோ, இந்த யாகமோ, நீங்களோ அல்லது ஏதோ ஒரு உடல் தரித்த ஜீவனோ, முனிவர்களோ, ஞானிகளோ, பலசாலிகள், வீர்யம் உள்ளவர்கள் என்றோ பெருமை பட்டுக் கொள்ளும் எவரும், அவருடைய ஆத்ம சக்தியை உணர்ந்தவர்கள் இல்லை. இவ்வாறு சொல்லி, ப்ரும்மா, தானும் தேவர்கள், ப்ரஜாபதிகள், பித்ருக்கள், இவர்களுடன் கைலாசம் சென்றார். அந்த உயர்ந்த மலை ப்ரபுவுக்கு பிடித்தமான இடம். ஔஷதிகள் பெற, தவம் செய்ய, மந்திரங்கள் பலன் அளிக்க சாதனைகள் செய்ய,ஏற்ற இடம். சித்தர்களும், மனிதரல்லாத பலரும் அங்கு பிறந்தவர்கள். கின்னர கந்தர்வ அப்சரஸ்கள் என்றும் கூடியிருக்கும் இடம். உயர்ந்த சிகரங்கள், சிகரங்களின் மேல் பாகம் மணிமயமாக காட்சியளிக்கும். விசித்திரமான தாதுக்கள் நிறைந்த மலை அது. பலவிதமான மரங்கள், செடி கொடிகள், பலவிதமான மான்கள் போன்ற மிருகங்கள் வளைய வரும் இடம். நிர்மலமான ஜலத்துடன் அருவிகள், பலவிதமான குகைகள், மலைச் சாரல்கள், அங்கு வரும் பயணிகள் உல்லாசமாக உணர ஏற்ற இடம். சித்தர்கள் மனைவிமாருடன் உலவும் இடம். மயில்கள், கோகிலங்கள், கிளிகள் மற்றும் பல பறைவகளுக்கு இணையாக வண்டுகள் தேனைப் பருகி மயங்கி ரீங்காரம் செய்யும் இடங்களும்,
இந்த இடத்துக்கு வாருங்கள், என்று அழைப்பது போல இந்த பறவைகளின் கூச்சலும், அவர்கள் விரும்பும் பழங்களுடைய மரங்கள் நிறைந்த இடம். யானைகள் சாவகாசமாக நடந்து அருவிகளைத் தேடிப் போகும். மந்தார, பாரிஜாத, தமால, சாலதாலங்கள், கோவிதார, அர்ஜுன மாமரங்கள் போன்ற புஷ்பங்கள் மணம் வீசும். பெரிய மரங்கள், கதம்ப, நீப மரங்கள், நாக புன்னாக சம்பக பூ மரங்கள், பாடல, அசோக , பகுள மரங்கள், குந்த புஷ்பம்- மல்லிகை- குரவகம் , ஸ்வர்ணார்ண, சத பத்ர மரங்கள், சிறந்த ரேணுக ஜாதி மரங்கள், குப்ஜம், மல்லிகை, மாதவீ கொடிகளும் மண்டி கிடக்கும். பனசம், உதும்பர, அஸ்வத்த, ப்ளக்ஷ, ந்யக்ரோத, ஹிங்கு மற்றும் பூர்ஜம், ஔஷதிகள், பூகம், ராஜ பூகம், நாவல் போன்ற மரங்களும், கர்ஜூர-பேரீச்சம் பழம், மாம்பழம்,ப்ரியால, மதுக, இங்குதி மரங்கள், மூங்கில் காடுகள்- உள்ள இடம் – இவைகளிலிருந்து வேணு கானம் கேட்கும்.
நீர் நிலைகளில், குமுதம், உத்பலம் கல்ஹார, சத பத்ர போன்றவை, மற்றும் நளினீ, கல ஹம்ஸம், கூவும் பறவைக் கூட்டங்கள், இவைகளுடன், அழகூட்டும். மான்களும், வானரங்களும், வளர்ப்பு மிருகங்களும், மிருகேந்திரனும், கரடி, குள்ள நரிகள், பசு போன்ற சில மிருகங்கள், சரபம், வ்யாக்ரம் எனும் புலி, ருரு எனும் மிருகம், எருமை மாடுகள், முதலியன. தவிர காது வரை நீண்ட வாய் உடைய வ்ருகனாபி – கஸ்தூரி மான்கள், என்பவைகளும், மற்றும் தாமரை தடாகங்களும் நிறைந்த இடம்.
அந்த இடத்தில் கங்கை நதி சூழ்ந்து பவானி ஸ்நானம் செய்ததால் பவித்ரமான ஜலம், நறு மணத்துடன் அழகாக இருந்தது. அங்கு அலகா என்ற நகரைக் கண்டனர். சௌகந்திகம் என்ற வனத்தையும், அங்கிருந்த குளத்தில் பங்கஜ மலரின் மணத்தை வைத்து அந்த காட்டிற்கே சௌகந்திகம் என்று பெயர் வந்ததாகச் சொல்வர். கங்கையும் அலகநந்தா என்ற நதியும் வெளிப்புறத்தில் ஊரைச் சூழ்ந்து சென்றன. தீர்த பாதர் என்ற பவனுடைய பாத தூளியால் பாவனமான நதிகள் அவை. தேவ லோகத்து பெண்கள் அந்த நதிகளில் மூழ்கி பதி பத்னிகள் ஒருவர் மேல் ஒருவர் நீரை வாரியடித்து விளையாடி மகிழ்வர். அவர்கள் குளித்தபின் குங்கும வண்ணமாக சுழித்து ஓடும் நீரில் யானை கூட்டம் தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீரைக் குடிக்க வரும்.
பொன், வெள்ளி நிறங்களில் மணி மயமான விமானங்களில் நூற்றுக் கணக்காக அந்த நகரின் மேல் பறப்பதைக் கண்டனர். குபேரனுடைய நகரம். செல்வ செழிப்புக்கு கேட்க வேண்டுமா? சௌகந்திக வனத்தில் பலவிதமான பழ மரங்கள், கிளிகளும், மற்ற பறவைகளும், கூச்சலிட, இணயாக வண்டுகளின் ரீங்காரமும் இனிமையான நாதம், கல ஹம்ஸங்கள் உலவும் நீர் நிலைகள், அடர்ந்த காட்டின் ஊடே வெளிவரும் காற்று சுகமான மணங்களை ஏந்தி வந்தது மனதை கவர்ந்தது. கிணறுகளில் கீழிறங்க படிகள் வைடூரியமென மின்னின. உள்ளே உத்பல பூக்கள் தொடுத்து வைத்த மாலை போல நிறைந்து இருந்ததை கிம்புருஷர்கள் பார்த்து வணங்கினர். நூறு யோஜனை தூரம் பரவிய வெட்டவெளி, மலையின் நிழலில் குளுமையாக, வெய்யிலின் தாபம் தெரியாமல் இதமாக இருந்தது. அந்த இடத்தில் மோக்ஷத்தை விரும்பி சாதனை செய்ய ஏற்றதாக, மஹா யோகமயமாக இருந்த இடத்தில் தேவர்கள், சாந்தமாக அமர்ந்திருந்த பரமசிவனைக் கண்டனர்.
(ஹர ஹர நம: பார்வதீ பதயே ஹர ஹர மஹா தேவ)
சாந்தமான சனந்தனன் முதலிய மஹா சித்த புருஷர்களும், குபேரனும், அவன் பரிவாரங்களும் வணங்கினர். மஹாதேவன் பரம சாந்தமாக இருக்கக் கண்டனர்.
வித்யா தவம் யோகம் என்ற வழிகளில் காண கிடைக்கும் அதீஸ்வரன், விஸ்வ சுஹ்ருதன்- உலகங்களில் உள்ள அனைவருக்கும் நண்பன். வாத்சல்யன்- பரிவுடையவன், லோக மங்களன், மங்களமானவன்,
தவம் செய்பவர்களுக்கு பிடித்தமான உருவம் உடையவன், பஸ்மம், தண்டம் ஜடை இவை அடையாளங்கள். சந்த்யாகாலம் போன்ற கண்களைக் கவரும் நிறம், சந்திர கலையை தரித்தவன், அந்த
சனாதனமான ப்ரும்மனை தர்ப்ப ஆசனத்தில் அமர்ந்திருக்க கண்டனர். நாரதர் ஏதோ கேட்க பதில் சொல்லிக் கொண்டிருந்தார். சின்முத்ரை (கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சேர்த்து) அக்ஷமாலை கையிலுமாக இருந்தவரை லோகபாலர்களுடன்,கிரீசனை முனிவர்களும், மனு என்பவர்களில் முதலான ஆதி மனுவானரை, கை கூப்பி வணங்கினர்.
அவரோ, அங்கு வந்திருந்த விஷ்ணு,ப்ரும்மா முதலியவர்களைக் கண்டதும் ஆசனத்திலிருந்து எழுந்து வணங்கி வரவேற்றார். சித்தர்களும், மகரிஷிகளும், எதிரில் நீல லோஹிதன்- பரம சிவன், அவரை நமஸ்கரித்து, துதி செய்தனர்.
ப்ரும்மா சொன்னார்: ஜகத் ப்ரும்மா தாங்கள் தான் என்பதை அறிவேன். விஸ்வ ஈசன், விஸ்வம் – அனைத்து உலகங்களுக்கும் தலைவர் நீங்கள். ஜகத் காரணர்- உலகம் தோன்றவே காரணமான பீஜம் நீங்கள். சக்தி
என்றும், சிவன் என்றும் நாங்கள் அறிந்தவர்களை விட மேலான அழியாத ப்ரும்மம்
பகவன்! சிவ சக்தி என்று நீங்களே ஏற்றுக் கொண்ட ரூபங்கள். ஸ்ருஷ்டிக்கவும், காக்கவும், கலைக்கவும் -இது உங்கள் விளையாட்டு. சிலந்தி தானாக வலையை கட்டி பின் கலைப்பது போல.
தர்மார்த்தங்கள் முதலியவைகளை மதிக்காத தக்ஷனை யாகம் செய்ய வைத்தீர்கள். நீங்கள் ஏற்படுத்திய வேதத்தின் வழிகள் தான், அதையே சாஸ்திரங்களை அறிந்த ப்ராம்மணர்கள் சிரத்தையுடன் அனுசரிக்கிறார்கள்.
வேத மார்கம் அதாவது கர்ம மார்கம் அதை அனுசரிப்பவர்களுக்கு மங்கள மங்களமானவன். உடல் எடுத்த ஜீவன், தன் பிறர் என்று அறியும் உணர்வை தந்தவரே தாங்கள் தான். அமங்களமான தாமசமானவைகளுக்கு நெருப்பு போன்றவர். உங்களின் அடியார்கள் மனதில் உறைபவர் தாங்கள். அவர்கள் உலகில் அனைத்தையும் உங்கள் ஸ்வரூபமாகவே காண்கிறார்கள். ஒவ்வொரு உயிரினத்தையும் உங்கள் ஆத்மாவின் அம்சமாக இருக்க, யாருக்கு யாரிடம் த்வேஷம் ? யார் அயல், யார் தன்னை சார்ந்தவன்? ஜீவன்கள் தான் பசுக்கள், நீங்கள் பசுபதி அல்லவா?
கர்ம மார்கம், யாகாதி வேதம் விதித்த கர்மாக்களை செய்பவர்கள் பலர். மற்றவர் உயர்ந்தால் அசூயை படுபவர். மனம் முழுதும் ரோஷமே ஆனவர்களும் இருப்பர். வார்த்தைகளாலேயே உத்வேகம் கொள்வர். அவர்களை தயவு செய்து அழிக்காதீர்கள், பிரபுவே.
இதுவும் நாபியில் புஷ்பத்தை ஏந்திய பரம் பொருளின் மாயையே. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமான புத்தி, பார்வை, அனுமானம் என்று பல விதமாக செயல் பட வைக்கிறது. அது தெய்வ செயல். அதை பரிவுடனும் தயையுடனும், பாருங்கள்.
அத்வரம்- யாகம் அதை அழியவிடாமல் நிலை நிறுத்துங்கள் ப்ரபோ! முடியாத ப்ரஜாபதியின் யாகம் நல்லபடியாக முடியட்டும். உங்கள் பாகத்தை தராமல் நிறுத்த அவர்களுக்கு அதிகாரமும் இல்லை, அவசியமும் இல்லை. விவரம் அறியாத அல்பர்களின் செயல்.
யாக யஜமானன் (தக்ஷன்) பிழைக்கட்டும். பகன் என்ற முனிவரின் கண்கள் நேராகட்டும். ப்ருகு முனிவரின் மீசை முளைக்கட்டும். பூஷணரின் பற்கள் முன் போல ஆகட்டும். உடல் ஊனம் அடைந்த தேவர்களின் உடல்கள் நேராகட்டும். ருத்விக்குகளின் தூசி மண்டிய உபகரணங்கள் சுத்தமாகட்டும். உங்கள் அனுக்ரஹத்தால் அனைவருக்கும் கோப தாபங்கள் மறையட்டும். ருத்ரனாக உங்களுக்கு உரிமையான உங்கள் பங்கை அவர்கள் தானாகவே தரட்டும். யாகத்தை கெடுத்தவர்கள் மனம் திருந்தட்டும்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -53)
அத்யாயம்–7
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு ப்ரும்மா சமாதானம் செய்யவும் பவனும் சமாதானமாகி, கேளுங்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
ப்ரும்மாவே! சிறுவர்களின் செயலை நான் பெரிதாக நினைக்கவில்லை. அவர்கள் தேவமாயை என்பதால் கட்டுப் பட்டிருந்தார்கள். அதற்குரிய தண்டனையைத் தான் அனுபவிக்கிறார்கள். தலை துண்டிக்கப் பட்ட தக்ஷ ப்ரஜாபதியின் தலை ஆட்டு முகமாக இருக்கட்டும். மித்ரன் கண்கள் சரியாகட்டும், பூஷன் யாகம் செய்பவருடைய பல்லில் அமரட்டும். மீந்ததை சாப்பிடுபவனாக. தேவர்கள் இதுவரை தங்கள் யாகங்களை முறையாக செய்தவர்கள், அவர்களுடைய அங்கங்களில் அஸ்வினி தேவர்களின் புஜங்களும், பூஷ்ணனின் கைகளும் யாகத்தின் அத்வர்யூ என்ற இடத்தில் இருக்கும் சமயம் உதவும். (யாகத்தை செய்பவர்) ப்ருகு முனிவருக்கும் ஆட்டு மீசையும், தாடியும் வளரட்டும்.
மைத்ரேயன் சொன்னார்: மீடுஷ்டமன் என்று அழைக்கப் படும் மஹாதேவன், சொல்லியதைக் கேட்டு அனைவரும் திருப்தியடைந்தனர். தேவர்களும், மகரிஷிகளும், பாதியில் நிறுத்தியிருந்த யாகத்தை முடித்தனர். பகவான் சொன்னபடியே யாகத்தின் பசு ஆட்டின் தலையை தக்ஷனுக்கு பொருத்தினர். தூங்கி எழுந்தது போல தக்ஷனும் எழுந்து நேரில் வ்ருஷத்வஜன் என்ற சிவபெருமானைப் பார்த்து, சாந்தமாக பேசினான். துதி செய்ய முயன்றாலும், மகளின் நினைவில் உணர்ச்சி தொண்டையை அடைக்க எதுவும் சொல்ல முடியவில்லை. தன்னை சமாளித்துக் கொண்டு பேசலானான்.
“ஆஹோ! எனக்கு நிறைய அனுக்ரஹம் செய்து விட்டீர்கள் ப்ரபோ! ஏற்றுக் கொள்கிறேன். ப்ரும்மார்த்த தத்வத்தை போதிப்பவர் தாங்கள். அதனால் ப்ராம்மணர்களை பசுவை காக்கும் இடையன் போல கையில் தண்டத்துடன் காக்க வேண்டுகிறேன். தவறு செய்யாமல் இருக்க தண்டனை தேவைதான். சபையில் உங்களை அவமதித்து கண்டபடி பேசியதையும் மறந்து மன்னிக்க வேண்டுகிறேன்.
மைத்ரேயர் சொன்னார்: அதன் பின் ப்ரும்மா அனுமதித்து எல்லா ப்ராம்மணர்களும் கலந்து கொண்டு யாகத்தை முடித்தனர். பாதியில் நிறுத்தியதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டனர். சங்கரனின் தண்டனையாக பெற்ற ஆட்டு தலையுடனேயே தக்ஷ பிரஜாபதி இருந்தார். விஷ்ணு பகவான், தன் கருட வாகனத்தில் வந்து பாகத்தை ஏற்றுக் கோண்டார். வழக்கம் போல சங்க, சக்ர, கதா தாரியாக, வனமாலை, கௌஸ்துபம் முதலிய ஆபரணங்களுடனும் வந்தார். அனைவரும் அவரை வரவேற்று விழுந்து வணங்கினர். அவருடைய தேஜஸால் வாயடைத்து கூப்பிய கரங்களுடனும் அவரை பார்த்தபடியே திகைத்து நின்றனர். தக்ஷன் தன் சுய உணர்வை பெற்று துதி செய்தான். சபையில் இருந்த மற்றவர்களும் உன் சரணம் தான் எங்களை காப்பாற்றி வருகிறது எங்கள், பிழைகளை பொறுத்தருள வேண்டும் என்று பணிந்து வணங்கினர்.
ப்ருகு சொன்னார். இதுவும் உன் மாயையே. எங்கள் அறிவை மறைத்து, திரை போட்டது போல இருட்டில் தூங்குவது போல உன்னை நினைக்காமலும், உன் தத்வங்களை உணராமலும் இருந்து விட்டோம். பகவானே, பொறுத்தருள வேண்டும். வணங்குகிறோம்,
ப்ரும்மா சொன்னார்: நீ முக்குணங்களுக்கும் அப்பாற் பட்டவன். சாதாரண ஜீவன்களிடம் பேத பாவம் பார்ப்பதில்லை. ஞானி என்றோ, செல்வந்தன் என்றோ, குணமுடையவன் என்றோ உன்னை நீ அண்டியவர்களை எடை போடுவதில்லை. உனக்குத் தெரியும்.
இந்திரன் சொன்னான்: அச்யுதா! இது கூட உன் லீலையே. மனதை ஆளத் தெரிந்தவர்களுக்கு ஆனந்தரூபன், விஸ்வ பாவனன் அதே சமயம், உன் அஷ்ட புஜங்களிலும் புத்தியின்றி த்வேஷம் பாராட்டுபவர்களுக்கு எச்சரிக்கை விடுவது போலவே ஆயுதங்கள் தரித்திருக்கின்றன.
மனைவிமார் சொன்னார்கள்: இந்த யாகம் என்பது யாரால் உண்டாக்கப் பட்டது? நல்ல காலம், பசுபதியின் கோபத்திலிருந்து தப்பினோம். இந்த யாகசாலை பலரும் விழுந்து அழுது அபவித்ரமாகி விட்டது. தயாளுவான நீ உன் அருள் பார்வையால் புனிதமாக்கு. நீயே தானே யக்ஞாத்மா
ரிஷிகள் சொன்னார்கள்: பகவன், உன் செயலை நாங்கள் கணிக்கவா முடியும்? உன் மனம் போல் செய்கிறாய். செல்வம் வேண்டும் என்று தனியாக லக்ஷ்மி தேவியை வேண்டுகிறோம், அவளோ உன்னை பின் தொடர்ந்து தான் வருகிறாள்.
சித்தர்கள் சொன்னார்கள்: உன் கதையை அம்ருதமாக நினைத்து பருகி, மத யானை போல மனதை அடக்க முடியாதவர்கள் ஆகி விட்டார்கள். க்லேசம் என்ற தாவாக்னி அவர்களை தகிக்கிறது. தாகம் என்று கதாம்ருதம் என்ற குளத்தில் இறங்கியவர்கள் தவிக்கிறார்கள். வெளி வர முடியவில்லை. ப்ரும்ம ஞானம் உள்ளவர்களால் அது முடிகிறது. எங்களால் முடியவில்லை.
யாகத்தின் யஜமானர்கள் சொன்னார்கள்: ஸ்ரீனிவாசா! உனக்கு ஸ்வாகதம். உன் காந்தாவான ஸ்ரீ யுடன் எங்களை காப்பாற்று. நீங்கள் இல்லாமல் இந்த யாகம் சோபிக்கவில்லை, நீங்கள் தான் தலைவர். தலை இல்லாத மனிதன் எப்படி இருப்பான்?
லோக பாலர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு தெரியாததா? நேர் எதிரில் பார்த்தால் தானா, உங்கள் உள்மனம் காணாததா? உங்கள் மாயையே. நீங்களே ஆறு, எட்டு என்று உலகை இயக்கும் பூதங்களுடன் விளையாடுகிறீர்கள்.
யோகேஸ்வரர்கள் சொன்னார்கள்: ப்ரபோ! நாங்கள் வேறு யாரிடம் போய் கேட்போம். எங்களை வேறாக எண்ணாமல், பக்தியை தவிர வேறு எதுவும் தெரியாத எங்களுக்கும் அனுக்ரஹம் செய்ய வேண்டும்.
ப்ரும்மா சொன்னார்: வணங்குகிறேன். சத்வ குணமே ப்ரதானமாக இருப்பவர், தர்மம் முதலானவற்றை தன்னிடம் வைத்திருப்பவர், நிர்குணன், இவரைப் போல மற்றொருவரை நானறியேன்.
அக்னி சொன்னார்:எவருடைய தேஜசால் ஆஜ்யத்தில் முக்கிய ஹவ்யம் என்பதை நான் கொண்டு செல்கிறேனோ, அவர் ஐந்து விதமான யாகங்களின் ஐந்து விதமான பரிமாணங்களுக்கு அதிகாரி. அந்த யக்ஞ பூதமானவரை வணங்குகிறேன்.
தேவர்கள் சொன்னார்கள்: முன்பு கல்பம் அபாயத்தில் இருந்த சமயம், தன் வயிற்றில் அனைத்தையும் வைத்துக் கொண்டு நீங்கள் தான் தண்ணீரில், பாம்பு படுக்கையில் கிடந்தீர்கள். பரம புருஷன் நீங்களே. சித்தர்களின் ஹ்ருதயத்தில் பலவிதமாக அத்யாத்ம விசாரங்களை செய்வார்கள். அதே பரம புருஷன் இன்று எங்கள் கண்களுக்கு எதிரில் வந்து நிற்கிறான். அடியாட்கள் நாங்கள், பகவானே, உங்கள் ஏவலர்களாக எங்களை பாருங்கள்.
கந்தர்வர்கள், வித்யாதரர்கள், ப்ராம்மணர்கள், அனைவரும் வரிசையாக வந்து வணங்கி துதி செய்தார்கள். பகவானும் தக்ஷனைப் பார்த்து, நானே ப்ரும்மா, பரமசிவனும் நானே. உலகம் தோன்ற காரணமாக இருந்தவன். அத்யாத்மேஸ்வரன், – பிராணிகளின் உள் ஆத்மாவாக அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவன், எனக்கு என்று எதுவும் விசேஷமாக இல்லை.
என் மாயையால், நான் முக்குணங்களைக் கொண்டு இந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற செயல்களை செய்கிறேன். அதற்கு தகுந்தாற் போல என் பெயரும் அடையாளமும் மாறும். அதனால் ப்ரும்மா என்ற அத்வைதமான ஒன்றை, ப்ரும்ம,ருத்ரன்,விஷ்ணு என்று பேதப் படுத்தி அறிகிறார்கள். அது எப்படி இருக்கிறது என்றால், மனிதன் தன் தலையிலிருந்து கால் வரை பேத புத்தியோடு பார்ப்பது போலத் தான். எங்களுக்குள் பேதம் இல்லை. உயிரினங்களில் ஆத்மாவாக இருந்து ரக்ஷிப்பது எங்கள் செயல். ருத்ரனுக்கு அவருக்கு உரிய பாகத்தை கொடுங்கள். யாக கார்யம் முடிந்தவுடன், அவப்ருத ஸ்னானம் செய்து ருத்விக்குகளை கௌரவியுங்கள். போகும் முன் பொதுவாக தர்மம் என்பதை கடைபிடியுங்கள், என்று சொல்லி சென்று விட்டனர்.
இப்படித்தான் தாக்ஷாயணி தன் பழைய உடலை விட்டாலும், ஈஸ்வரனையே பதியாக அடைய வேண்டும் என்று ஹிமவானின் புத்ரியாக மேனா என்பவளிடம் பிறந்தாள் என்பது வரலாறு. அதே தியானமாக இருந்தாள் என்பர், அவளைப் பொறுத்தவரை அவள் கணவன் என்றுமே அவளைப் பிரியாதவன்., .
பகவான் சம்பு செய்ததையும், தக்ஷ யாகத்தில் நடந்த விஷயங்களையும் சிஷ்யரான உத்தவரிடமும் என் தந்தை கேட்டு எனக்குச் சொன்னார். இதை பக்தியுடன் கேட்பவர் நற்கதியடைவர் என்றும் சொன்னார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -60)
அத்யாயம்–8
மைத்ரேயர் சொன்னார்: சனகர்களும், நாரதரும் இல்லறத்தில் ஈடுபாடு இல்லாததால் மணம் செய்து கொள்ளவில்லை. இவர்களும் ப்ரும்மாவின் புத்திரர்களே. ஞான மார்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால் அவர்களை விடுவோம், அடுத்த வம்சத்தைப் பற்றிச் சொல்கிறேன்.
ப்ரியவ்ரத, உத்தானபாதன் என்பவர்கள், ஸ்வாயம்புவ மனுவின் புத்திரர்கள். இந்த ஸ்வயம்புவ மனு ஹரியின் ஓர் அம்சத்தைக் கொண்டவர். சதரூபா அவர் மனைவி. அவர்களின் மகன்கள். அரசர்களாக இருந்தனர். உத்தான பாதருக்கு இரு மனைவிகள், சுருசி, சுநீதி என்று. இருவரில் சுருசி அரசனுக்கு பிரியமானவள், சுநீதியின் மகன் துருவன். ஒரு சமயம் சுருசியின் மகன் உத்தமனை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்த அரசன், துருவனிடம் அலட்சியமாக இருந்தார். தானும் தந்தை மடியில் அமர விரும்பிய துருவனை சுருசி தடுத்தாள். அரசன் எதிரிலேயே அவனை கண்டித்தாள். மகனே உனக்கு அரசனின் மடியில் அமர தகுதி இல்லை. என் வயிற்றில் பிறந்த மகன் தான் அரசனுக்கு வாரிசு, நீ என் குழந்தை அல்லவே, இதுபோல அனாவசிய ஆசைகள் படாதே. தவம் செய்து பகவானை வேண்டி என் மகனாக பிறந்து வா. அரசனின் அன்புக்கு பாத்திரமாகி, அரியணையில் அமரலாம் என்று நிஷ்டூரமாகச் சொன்னாள்.
தாயின் சபத்னி- இவ்வளவு கொடூரமாக பேசியவுடன் தடியால் அடிபட்ட நாகம் போல, மனம் வாடி சுருண்டு தந்தை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த இடத்தை விட்டகன்று, தாயிடம் சென்றான். உதடுகள் துடிக்க, பெருமூச்சு விட்டபடி அழும் குழந்தையை அனைத்து மடியில் இருத்தி சுநீதி என்ன நடந்தது என்று கேட்டறிந்தாள். சக்களத்தியின் நடத்தையால் மனம் உடைந்து அழுதாள். தன்னை சமாளித்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இடர் இது என்று அறிந்து, குழந்தாய், அழாதே. மற்றவர்களை துன்புறுத்தி யாரும் வாழ்ந்ததில்லை. சுருசி சொன்னது ஒரு விதத்தில் சரியே. அரசனின் அன்பை பெறாத மனைவி நான். என் வயிற்றில் பிறந்து நான் பாலூட்டி வளர்த்ததால் தானே உனக்கு இந்த அவமானம். உத்தமனைப் போல மதிப்புடன் வாழ விரும்பினால் அதோக்ஷஜன்- பகவானை ஆராதித்து வா. கோப தாபங்கள், அசூயை இல்லாமல் அவருடைய பாத பத்மங்களை ஆராதித்து வா. அவர் அருளால் உத்தமமான குணங்களையும் உயர்வான பதவிகளையும் அடைவாய். வருத்தப் படாதே. உனக்கும் மனு தான் பிதாமஹர் (தந்தையின் தந்தை). அவரும் முழு மனதோடு பகவானை ஆராதித்து, யாகங்கள் செய்து, பூலோகத்தில் மற்றவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத நன்மைகளை அடைந்தார். அந்த பகவானையே துதி மகனே. அவர் தன் பக்தர்களிடம் வாத்சல்யம் உடையவர். மோக்ஷம் விரும்பும் சாதகர்களும் அவரை வணங்கி வேண்டியதை பெறுவர். வேறு எதையும் யோசிக்காதே. இவருடைய சரணங்களே துணை என்று ஏகமனதாக தியானம் செய். அவருடைய கண்கள் பத்மம் போன்று இருக்கும். அதுவே உன் துக்கத்தை போக்கும். கையில் தாமரை பூவை வைத்துக் கொண்டிருப்பவர், அவருடைய பத்னியான ஸ்ரீயுடன் இருப்பார்.
இவ்வாறு தாயாரால் சமாதானமாக சொன்ன வார்த்தைகளின் பொருளை சிறுவன் துருவன் உணர்ந்தான். தன்னைத் தானே அறிந்து கொள்ள, தந்தையின் ஊரை விட்டே விலகிச் சென்றான்.
நாரதருக்கு இந்த சிறுவன் வீட்டைத் துறந்து சென்றது தெரிய வந்ததும் அவனிடம் வந்தார். துருவனை அணைத்து தலையில் தூய்மையாக்கும் நீரை தெளித்து உபதேசம் செய்தார். அஹோ! என்ன தன்மானம் இந்த அரச குமாரனுக்கு. ஒரு சொல் பொறுக்க முடியாத ரோஷம்.பாலன் இவன். இவனுக்கு மாற்றாந்தாயின் அவச் சொல் மனதை காயப் படுத்தி விட்டது.
புத்ரக! குழந்தாய், இனி மானமோ, அவமானமோ உன்னை வாட்டாது. விளையாட்டுச் சிறுவன், நீ. வேற்றுமைகள் இருக்கலாம், ஆனால் அதனால் துயரப் படக் கூடாது. தன் வினையை அனுசரித்து மனிதர்கள் உலகில் மோகத்தினால், வேறுபடுகிறார்கள். கிடைத்ததில் திருப்தி அடைவது தான் புத்திசாலித்தனம். உன் தாய் சொன்னது சரியே. அவள் உபதேசித்தபடியே யோக சாதனைகளைச் செய். மனிதர்களுக்கு அந்த பரபுருஷனின் ப்ரசாதம் தான் முக்யம் என்று சொல்வேன். பிறர் உதவியின்றி, தானே தீவிரமாக தவம் செய்து, யோகசமாதிகளின் மூலம் தன்னறிவை வளர்த்துக் கொண்டு, தேடித் தேடி தான் கண்டு கொள்ள வேண்டும். அதனால், இந்த அல்பமான ஆசையை விட்டு விலகி வா. அதில் எதுவும் உயர்வு இல்லை. உனக்கு கிடைத்த வாய்ப்பு, முயற்சி செய். காலம் வரும் பொழுது நன்மைகளை அடைவாய். யாருக்கு எது என்பது, தெய்வத்தின் கையில், சுகமோ, துக்கமோ, மனிதர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். அதற்காக பல பிறவிகள் எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். தாமசமான உடல் சம்பந்தமான ஆசையை விடு. ஆத்மாவின் நல்கதியைப் பற்றி சிந்தனை செய். நல்ல குணங்களை வளர்த்துக் கொள். அதனால் உனக்கும் மகிழ்ச்சி. குணம் இல்லாதவர்களிடம் நட்பும் தேவையில்லை. சமமானவர்களிடம் தேடிச் சென்று நட்பாக இரு. தாபம் உன்னை வாட்டாது.
துருவன் சொன்னான்: தங்கள் அன்பான உபதேசத்தால் சுகம் துக்கம் இரண்டையும் சமமாக பாவிக்கும் शमम् – மனப்பாங்கு- என்பதை அடைந்தேன். எங்களைப் போன்றவர்கள் தாங்களாக அறிந்து கொள்வது இயலாது. ஆயினும் எனக்கு இன்னமும் வினயம் என்பது வரவில்லை. அவ்வளவு கோபம் அடைவானேன். சுருசி சொன்னதும் ஊசி குத்தினாற் போல என் இதயத்தில் வலிப்பானேன். வார்த்தை தானே, ஏதோ பாணத்தால் அடிபட்டது போல ஏன் வருந்தினேன். இந்த லௌகிகமான சுகம் வேண்டாம். மூவுலகிலும் உத்க்ருஷ்டமான பதவியைத் தரும், முனிவர்களின் சாதுவான வழிகளைச் சொல்லுங்கள். என் தந்தையோ, அவரை சார்ந்தவர்களோ இதுவரை அறியாத வழி அது. அதை சொல்லுங்கள் ப்ரும்மன்.! நீங்கள் நிச்சயம் பகவானின் அங்கத்தில் பிறந்தவர். வீணையை மீட்டிக் கொண்டு உலக நன்மைக்காக சூரியன் உலகை சுற்றுவது போல போல சுற்றி வருகிறீர்கள். (ப்ரதி பலன் கருதாமல்)
நாரதர் விவரமாக பதில் சொன்னார். உன் தாய் சொன்ன வழி தான் உனக்கு நன்மை தரும். பகவான் வாசுதேவனை நம்பிக்கையுடன் வணங்கு, தனக்கு தர்மம், அர்த்தம், காமம்,மோக்ஷம் – இந்த நாலும் தான் உலகில் மக்களுக்கு வேண்டியவை, என்று விரும்புபவர் ஹரியின் பத சேவையை மனதார செய்ய வேண்டும். அதனால், யமுனைக் கரையில் மதுவனம் என்ற இடம் உள்ளது. அந்த இடத்தில் ஹரி நித்யவாசம் செய்கிறார். அங்கு ஓடும் நதியின் பெயர் காலிந்தீ. அதில் மூழ்கி ஸ்னானம் செய். உனக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து கொண்டு நீயே ஒரு ஆசனத்தை தயார் செய்து கொள். மூன்று முறை ப்ராணாயாமம் செய்து ப்ராண, இந்த்ரிய, மனோ பலம் இவைகளைக் கூட்டிக் கொள். மெள்ள தியானம் செய். குருவுக்கு குருவானவர், அவர் எப்படி இருப்பார், பார்த்ததில்லையே என்கிறாயா? கருணை ததும்பும் முகம், கண்களும் முகமும், காண்பவர் மனம் மகிழும் படி எப்பொழுதும் ப்ரசன்னமாகவே இருக்கும். அழகான நாசி, சீரான புருவங்கள், அழகிய தலை, தெய்வீகமான அழகு. கச்சிதமான வாலிப உடல் வாகு, கண்களும் உதடுகளும் அருணனின் கிரணங்கள் போல சிவந்திருக்கும், கருணையே உருவானவர், தன்னை அண்டியவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்,
ஸ்ரீவத்ஸம் என்ற மணியை அணிந்திருப்பார், மேகம் போன்ற நீல நிறத்தினன், வன மாலையை அணிந்திருப்பார், கைகளில் சங்க சக்ர கதா பத்மம் இவைகளை வைத்திருப்பார், கேயுரம், வலயங்கள் அணிந்த நான்கு புஜங்கள். கிரீடமும் குண்டலமும், கௌஸ்துப மணி அலங்கரிக்கும் கழுத்தும், பீதாம்பரமும், இடுப்பில் காஞ்சி என்ற ஆபரணமும், நூபுரம் எனும் காலணிகளும், சாந்தமான காணத் தகுந்த உருவம் மனதுக்கும் கண்களுக்கும் இதமான உருவம் இப்படி தியானம் செய்து கொள். அவருடைய கால் நகங்களில் உயர் மணி போன்ற ஒளி காலில் வணங்கி நிற்பவர்களை ஆசீர்வதிப்பது போல இருக்கும். ஒவ்வொரு அங்கமாக மனதில் பதிந்து கொண்டு ஒரே உருவமாக மென் முறுவலோடு இருப்பவராக தியானம் செய். இப்படி பகவானின் உருவத்தை நினைத்து நினைத்து அவனையன்றி வேறு எதுவுமே மனதில் இல்லாமல் செய்து கொள். சுபத்ரம்- மிகவும் சுபமான உருவம்- பரம ஞானி, எங்கும் நிறைந்தவர் நிவ்ருத்தி என்ற மேலான மார்கத்திற்கு இட்டுச் செல்பவர் இவரை ஜபம் செய். ஏழு இரவுகள் ஜபம் பண்ணி மனிதர்கள் வான வெளியில் செல்லும் தேவ கணங்களை காணுவர். அந்த மந்திரம் “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” இதை ஜபித்து வா. இந்த மந்திரத்தை உருவேற்றிக் கொண்டு, பல விதமான பொருள்களை அர்ப்பணம் செய். கிடைத்ததை, சுத்தமான நீர், பூ மாலைகள், காட்டில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகள், பச்சை காய்கறிகள், சில தளிர்கள், துளசி தளம் இவைகளால் அர்ச்சனை செய். பூமியில் அல்லது ஜலத்தில் அர்ச்சனையை செய்யலாம். மிதமாக உண்டு சாந்தமாக ஜபம் செய். தன் விருப்பம் போல பூமியில் அவதாரம் செய்பவர், ஏதோ ஒரு அவதாரத்தை நினைத்துக் கொள். பரிசாரகம் என்ற அர்க்யம் தருதல், மலர் தூவி அர்ச்சனை செய்வது இப்படி உடலால் செய்வதை மானசிகமாகவும் செய்யலாம். மந்திரத்தை சொல்லி மனதினுள் உருவாக்கிக் கொண்ட பகவத் ஸ்வரூபத்திற்கு மானசிகமாக செய்யலாம். உடல், வாக்கு, மனம் இவற்றால் பக்தி பூர்வமாக செய்வது உகந்தது.
மனிதர்கள் மமதையில்லாமல், உணர்ந்து செய்யும் பூஜைகள், அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்யும். வேண்டியதை வேண்டியவாறு கொடுக்கும். மனிதர்கள், காம,அர்த்த,ஞானம், மோக்ஷம் -இதில் எதை விரும்பினாலும் இந்த பக்தியால் அடைவர்கள். மற்றொரு வழி, விரக்தி-துறவு. நிரந்தரமாக பாவ பூர்வமாக செய்யும் மானசிக பூஜையால் முக்தியடைவர். துருவனும் அவரை வணங்கி மதுவனம் சென்றான். ஸ்ரீஹரி வாழ்ந்து கால் தடம் பதிந்த இடம் என்பதால் பாவனமான இடம்.
அவன் தபோ வனம் சென்றபின் நாரதர் அரசரை சந்தித்து அவர் மரியாதையுடன் அளித்த சுகமான ஆசனத்தில் அமர்ந்தார். ராஜன்! ஏன் முகன் வாடியிருக்கிறது? என்ன வருத்தம்? அரச காரியங்களில் எதுவும் கஷ்டம் இல்லையே, செல்வமோ, தர்மமோ, காமமோ குறைவின்றி உள்ளனவா ? அரசன் சொன்னான்: ப்ரும்மன்! என் மகன், சிறுவன்,என் மனைவி எதோ சொன்னாள் என்பதற்காக என் எதிரிலேயே, வீட்டைத் துறந்து சென்று விட்டான். ஐந்து வயது பாலகன். அவன் தாயும் எங்கோ சென்று விட்டாள். அனாதையாக காட்டில் உடல் ஓய்ந்து,பசியுடன் களைத்து தூங்கும் பொழுது ஓனாய்கள் தின்று விடாமல் இருக்க வேண்டும் அவனுடைய சாந்தமான முகம், வருந்தி, வாடியதே, கண் முன்னால் நிற்கிறது. அஹோ! என்ன துர்பாக்கியம், மனைவி சொன்னால் என்ன, நான் ஏன் செயலற்று நின்றிருக்க வேண்டும். பாலகன் என் மடியில் அமர வேண்டும் என்பதைத் தானே கேட்டான், ஏன் வாளா இருந்தேன், வடி கட்டிய மூடன் நான்.” என்று சொல்லி கதறிய அரசனைப் பார்த்து நாரதர் சொன்னார். நடந்ததை நினைத்து வருந்தாதே. உன் மகன் சாதாரண பிறவி இல்லை. பகவானின் அருள் பெற்றவன். உலகில் பெரும் புகழை அடைவான். அவனுடைய ப்ரபாவம் தெரியாமல் மனம் வருந்துகிறாய். உன் மகன் மிக கடினமான செயலைச் செய்து முடித்து, சீக்கிரமே லோக பாலர்களுக்கும் தலைவனாக உயர்வான். உன் புகழையும் பரப்புவான்.
தேவ ரிஷி நாரதர் இவ்வாறு சொல்லவும், அரசன் சமாதானமானாலும், அரச வாழ்க்கையை துறந்து மகனையே அனவரதமும் நினைத்து வருந்தியபடி இருந்தார். நாரதர் அவருக்கும் உபதேசம் செய்து, அரசன் கடமையை விடக் கூடாது , நீயும் விரதங்கள் அனுசரி, பூஜைகளைச் செய் என்றார்.
வனத்தில் துருவன் அவர் சொன்னபடியே, மூன்று இரவுகள் முடிவில், நாவல் பழம் அல்லது அந்த நிறத்து பதரி – இலந்தை பழம் – மட்டும் உண்டு ஒரு மாதம் விரதம் இருந்தான். அடுத்த மாதம், ஆறு ஆறு இரவுகளின் முடிவில் புல், இலைகள் மட்டும் உண்டு ப்ரபுவை நினைத்து தியானம் செய்தான். மூன்றாவது மாதம் ஒன்பது இரவுகளின் முடிவில் நீரை மட்டும் அருந்தினான். அதன் பின் சமாதியில் ஆழ்ந்து விட்டான். நாலாவது மாதம் பன்னிரண்டு நாட்களுக்கு ஒருமுறை, வாயுவை மட்டுமே உண்பவனாக ஆனான். தன் சுவாச கதிகளை தன் வயப் படுத்திக் கொண்டு தேவனை ஆராதித்தான். ஐந்தாவது மாதம் அந்த சுவாச பயிற்சியால், கட்டையாக ஸ்தாணுவை போல், அசையாது ஒரு காலில் நின்றான். மனதின் அலைச்சல்களை முற்றிலும் நிறுத்தி பகவானுடைய ரூபத்தை நாரதர் சொன்னபடியே நினைத்து, வெளி உலகில் எதையுமே காணாதவன் ஆனான். மஹத் என்ற இயற்கைகளுக்கும் ஆதாரமான புருஷேஸ்வரன், ப்ரும்ம ஸ்வரூபம் மட்டுமே அவன் மனதில் என்று ஆன சமயம் உலகமே நடுங்கியது.
அந்த அரசகுமாரன் ஒரு காலில் நின்ற சமயம், அவன் கட்டை விரல் பட்ட பூமி, திசைகளைத் தாங்கும் யானைகளின் அரசன் நடனமாடுவது போல இடதும் வலதுமாக ஆடியது. தன் உயிர் மூச்சையே தடுத்து நிறுத்தி, விஸ்வாத்மன் என்ற பகவானை தியானம் செய்த பொழுது, மூவுலகிலும் உயிரினங்கள் தாங்க முடியாத மூச்சு திணறலை அனுபவித்தனர். லோக பாலர்கள் ஸ்ரீ ஹரியிடம் ஓடினர்.
தேவர்கள்” பகவன்! நாங்கள் மூச்சு விட முடியாமல் தவிக்கிறோம். சராசரத்திலும் ப்ராணிகளின் ப்ராணன் தடைபடுகிறது. எங்களை காப்பாற்று. இந்த கஷ்டம் தாங்க முடியவில்லை. அடைக்கலம் நீயே” என்றனர்.
பகவான் சொன்னார்: பயப்பட வேண்டாம். கடுமையான விரதங்களுடன் பாலன் ஒருவன் தவம் செய்கிறான். நான் கவனிக்கிறேன். நீங்கள் உங்கள் இருப்பிடம் திரும்பிச் செல்லுங்கள். உத்தான பாதரின் மகன், ப்ராணனை நிறுத்தி தவத்தில் இருக்கிறான். என்னையடையவே விரும்பிகிறான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 82)
அத்யாயம்-9
மைத்ரேயர் சொன்னார்: பயம் விலகி லோகபாலர்கள் வணங்கி விடை பெற்றனர். பகவானும் கருட வாகனத்தில் மது வனம் சென்றார். மனதினுள் யோக நிலயில் மின்னல் போல ஒளி வீசிக் கொண்டிருந்த பகவத் ஸ்வரூபம் மறைந்தது போல இருக்க சட்டென்று கண் விழித்த துருவன் எதிரில் அவர் நேரில் தெரியக் கண்டான். திடுமென எதிரில் வந்து நின்றவரை திகைப்புடன் பார்த்தவன், கீழே விழுந்து வணங்கினான். என்ன செய்வது தெரியவில்லை. கண்களால் பருகுபவன் போல பார்த்தான். புஜங்களால் அணைத்து உச்சி முகர்வது போல இருந்தது. அப்படி திகைத்து நின்றவனின் கன்னத்தில் ப்ரும்ம மயமான சங்கால் தடவினார். அதன் மூலம் வாய் பேசும் சக்தியை திரும்ப பெற்றவன் போலவும், தெய்வீகமான பர தத்வத்தை அறிந்தவன் போலவும், பக்தி பாவம் நிரம்பப் பெற்றவன் போலவும், தன்னுணர்வுடன் பேசலானான்.
துருவன் சொன்னான்: நமோ பகவதே புருஷாய துப்யம் – பரம புருஷனான பகவானே, உனக்கு நமஸ்காரம். என்னுள் நிறைந்து உறங்கிக் கொண்டிருந்த என் வாக்கு -என் பேசும் சக்தியை திருப்பிக் கொடுத்தாய். உன் பெருந்தன்மையால், அனைத்து சக்திகளையும் தர வல்லவன் நீ. என் மற்ற அவயவங்களையும் கை கால்கள், காது, சருமம், மற்றும் பிராணங்களையும் தட்டி எழுப்பும் பரம புருஷனான பகவானே உனக்கு நமஸ்காரம்.
உன் ஆத்ம சக்தியால், மாயை என்பதையும், முக்குணங்களையும் மஹத் முதலானவைகளையும் ஸ்ருஷ்டி செய்த பின் அதனுள் நீயே ப்ரவேசித்தாய்.
ஆர்த்த பந்தோ! வருந்தும் அடியார்களுக்கு உடனே உதவ விரைந்து வரும் உற்ற உறவினனே!- உன் அன்பர்கள் யாருமே கஷ்டம் என்று தவிக்க மாட்டார்கள். நீ கொடுத்த அறிவு, அதனால் உலகம் தூங்கி எழுந்தவன் போல எழுந்தது. உன் பாதம் தான் சரணம் என்பதை யார் தான் மறக்க முடியும். அப்படி மறந்தவன் யாராவது இருந்தாலும் அதுவும் உன் மாயையே. கல்ப தருவான உன்னிடம் தவிட்டை யாசிப்பது போல உலக இன்பத்தை யாசிக்கிறார்கள். உன்னிடம் என் பக்தி பெருகட்டும். மஹாத்மாக்கள் சங்கத்தில் நானும் இருக்க வேண்டும். சம்சார பந்தம் என்னை வாட்டாமல் இருக்கட்டும். உன்னை பஜனை செய்து பாடுபவர்கள் மத்தியில் நானும் இருக்க வேண்டும். மனிதன் அறிவை பெறவே உன்னை வணங்குகிறான். உன் பாத த்யானத்தாலோ. உன் அடியார்களுடன் இருந்து அவர்கள் சொல்லும் உன் சரித்திரத்தைக் கேட்டோ, பெறுவது ப்ரும்ம லோகத்தில் கூட கிடைக்காது. என்னுள் உன்னிடம் பக்தி பெருகட்டும். உன் பக்தர்கள் போலவே நானும் குடும்பம், புத்ர தார எனும் சம்சார சூழலில் மூழ்காமல் இருக்க வேண்டும். கல்ப முடிவில் உலகம் முழுவதும் உன் வயிற்றில் வைத்து காப்பாற்றி, அனந்த சயனத்தில் உறங்கினாய். உன் நாபியிலிருந்து பொன்மயமான பத்மம் மூலம் உலகை தோற்றுவித்தாய். அப்படிப்பட்ட உனக்கு நமஸ்காரம். நீ பரிசுத்தமான நித்ய முக்தன். உயிரினங்களில் உள்ளும் மறைந்து இருக்கும் ஆத்மா. அதியக்ஞன்- யக்ஞ புருஷன் என்று உன்னைச் சொல்வார்கள். நீ தனித்து தெரிகிறாய். உன்னிடம் த்வேஷம் பாராட்டுபவர் தோற்பர். வித்யை , பலவிதமான சக்திகள், வரிசை கிரமாக உன்னிடம் தோன்றியவையே. அந்த ப்ரும்ம, விஸ்வபவன், ஏகனாக- ஒருவனாகவே இருக்கும், அனந்தன்- தோற்றம் – முடிவு என்ற சுழற்சி இல்லாத ஆனந்தமே உருவான உன்னை வணங்குகிறேன்.
என்று இவ்வாறு துதி செய்தவனைப் பார்த்து சந்தோஷமாக பகவான் பதில் சொன்னார். “அரச குமாரனே! நீ எதை விரும்பி தவம் செய்ய வந்தாய் என்பதை நான் அறிவேன். அரிதான வேறு ஒன்றைத் தருகிறேன். யாராலும் எட்ட முடியாத உயர் பதவி. அதை தருகிறேன். க்ரஹ நக்ஷத்திர ஜோதிகளின் மத்தியில், அசையாது நிற்கும் துருவம் என்ற நக்ஷத்திரமாக ஒளி விசிக் கொண்டு இருப்பாய். அச்சில் சுழலும் சக்கரம் போல நக்ஷத்திர க்ரஹ மண்டலங்கள் சுழலுகின்றன. ஒரு சிலர் அதைத் தாண்டி ஸ்திரமாக இருக்கின்றனர். தர்மம், அக்னி, கஸ்யபர், சுக்ரன், முனிகள், இவர்கள் அந்த வட்டத்தில் நித்யமாக வசிக்கின்றனர். தென்திசை நோக்கி நக்ஷத்திரங்களுடன் சேர்ந்து செல்கின்றனர்.
உன் தந்தை ராஜ்யத்தை உன்னிடம் ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு வனம் செல்வார். நீண்ட காலம் நீ ராஜ்யம் செய்வாய். உன் சகோதரன் உத்தமன் அகால மரணம் அடைவான், அவன் தாயும் காட்டுத் தீயில் மாய்வாள். அது தவிர்க்க முடியாதது. அவர்கள் வினைப் பயன். யாகங்கள் செய்து நாட்டை சுபிக்ஷமாக வைத்திருப்பாய். பின் சங்கல்பம் செய்து தான தர்மங்கள் நிறைய செய்வாய். சாதாரண மக்களுக்கு பல ஜன்மங்களில் அடைவதை நீ இந்த ஜன்மத்திலேயே பூர்த்தி செய்து என்னை அடைவாய். அதன் பின் பிறப்பற்ற நிலையில் த்ருவ நக்ஷத்திரமாக வானில் தெரிவாய், என்று சொன்ன பகவான் தன் கருட வாகனத்தோடு திடுமென மறைந்தார்.
துருவனும் அவ்வாறே நகரம் திரும்பி, ராஜ்யத்தை ஏற்று, நல்லபடியாக வாழ்ந்து, பக்தனாகவே இருந்து மறைந்தான். விதுரர் ஆச்சர்யப் பட்டார். அரியதான பதவியை அடைந்தான் துருவன். கிடைத்த ராஜ்யத்தையும் பற்றின்றி ஏற்றான். எப்படி ஊரார் அவனை எதிர்கொண்டனர்.?
மைத்ரேயர் சொன்னார்: அது மட்டுமல்ல, மாற்றாந்தாயும், அவள் மகனும் அகால மரணமடைந்ததால், நல்ல கதி கிடைக்காமல் போகுமே என்றும் கவலைப் பட்டான். சனந்தன் முதலானோர், பல காலம் சமாதியில் இருந்து அடைந்ததை ஆறு மாதங்களில் அடைந்தேன். மந்த புத்தி நான், உன்னிடம் அல்பமாக எதையோ யாசித்தேன். என் மனதை கலைத்தது எது? நாரதர் சொன்னதை முழுவதுமாக என் மனம் அறியவில்லை போலும். இப்பொழுதும் சகோதரனின் கதியை நினைத்து வருந்துகிறேன். உயிர் போன பின் சிகித்சை செய்வது போல, இப்பொழுது ராஜ்யம் எனக்கு தருகிறாய். வேண்டாம். ஜகதாத்மாவான உன்னை ஸ்மரித்து ராஜ்யத்தையா கேட்பேன். தனம் இல்லாதவன் பகவானை நேரில் கண்ட பொழுதும் அல்பமான சிறு பொருளை யாசிப்பது போல.
மைத்ரேயர் சொன்னார்: துருவன் வனம் சென்றபின் அரசன் உத்தானபாதன் ராஜ்யத்திலோ, மற்ற சுக போகங்களிலோ நாட்டமில்லாதவனாக நாரதர் சொன்னபடி ஏராளமாக தனம் தானம் செய்து விட்டு நம்பிக்கையான ப்ராம்மணர்களிடமும், மந்திரிகளிடமும் ராஜ்ய நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டு .குதிரையில் ஏறி, யாத்திரை கிளம்பினான். சங்க துந்துபி நாதங்கள், ப்ரும்ம கோஷம் இவைகளுடன் வழியனுப்பப் பட்டான். சுநீதியும், சுருசியும் கூட தங்கள் நகைகளை அணிந்து உடன் சென்றனர். உபவனத்தின் அருகில் மகனைப் பார்த்து மகிழ்ந்தவராக, ரதத்திலிருந்து இறங்கி மகனை அணைத்து கதறினார். கடந்த சில நாட்களாக நாரதர் உபதேசித்த படி, விஷ்வக் சேனரை ஆராதித்து,வந்திருந்ததால் அவருடைய குணமும் மேன்மையடைந்திருந்தது. கண்ணீராலேயே மகனை அபிஷேகம் செய்தார். துருவனும் தந்தையை வணங்கி அவருடைய ஆசிகளை பெற்றான். தாய் மார்களையும் வணங்கி அவர்களுடன் நகரம் சென்றான். சுருசியும் தன் காலில் விழுந்து வணங்கிய துருவனை அணைத்து உச்சி முகர்ந்து நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக இரு என்று நாத்தழதழக்க வாழ்த்தினாள். உத்தமனும் சகோதரனை அன்புடன் அணைத்து வரவேற்றான். தாயார் சுநீதி புத்துயிர் பெற்றதாக உணர்ந்தாள். கண்களில் நீர் வழிய அவனை ஆசீர்வதித்தாள். மகனே, நீண்ட காலம் சுகமாக இருப்பாய். அண்டியவரைக் காக்கும் பகவான் உனக்கு நல்லதையே செய்வார். ம்ருத்யுவை ஜயித்து வந்துள்ளாய், என்றாள். இவ்வாறு அனைவராலும் வரவேற்கப்பட்டு நகரம் வந்தான். பூர்ண கும்பமும், பலவிதமான மலர் மாலைகளாலும் நகரமும், அரண்மனை வாசலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. வழியெங்கும் சந்தனம் தெளித்து, மங்கள அக்ஷதைகள் வீசி, பூவிதழ்களும், மங்களப் பொருட்களும் நிறைத்து பெண்கள் ஆரத்தி எடுத்து, அன்புடன் ஆசிகள் அளிக்க, பலவிதமான வாத்ய இசைகள் முழங்க, மந்திர கோஷங்களுடனும் அரண்மனையில் நுழைந்தான். தந்தையின் வீட்டில் ராஜ போகமாக இருந்த பல சௌக்யங்களுடன் தேவன் போல நடத்தப் பட்டான். கடல் நுரை போன்ற படுக்கைகள், பொன் மயமான ஆசனங்கள், ஸ்படிகமும், மஹா மரகதமும், மணிகளின் ஒளி சிதற இருந்த மாளிகை. பெண் பணியாட்கள் கூட மனம் கவரும் வண்ணம் ஆடை அணிகளுடன் இருந்தனர். அழகான உத்யான வனம். பறவைகளின் இனிய கூக்குரலும் ஜோடி ஜோடியாக தென்பட்ட பறவைகளும், மிருகங்களும்,கூடவே பறக்கும் வண்டின் ரீங்காரமும் ரம்யமாக இருந்த உபவனம். கிணறுகளும் அழகான படிக்கட்டுகளுடன், உத்பல, தாமரை மலர்களுடன், சக்ரவாஹம், சாரஸம் என்ற பறவைகளும் நிரம்பி இருந்தன. உத்தானபாதர் ராஜரிஷி என்று அழைக்கப் பட்டார். தனயனுடை ப்ரபாவம் அவனே நடந்ததைச் சொல்லக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார். வயதான காரணத்தாலும், பிரஜைகளும் சம்மதித்ததாலும்,, ப்ரஜைகளுக்கு இதற்குள் துருவனிடம் ஏற்பட்ட ஒட்டுதலாலும் துருவனை ராஜ பதவியில் அமர்த்தினார்.
தானும் வயதான காரணத்தால், அந்த நாளைய வழக்கப்படி வனம் சென்றார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 67)
அத்யாயம்-10
மைத்ரேயர் தொடர்ந்தார்: ப்ரஜாபதியின் மற்றொரு மகன் சிசுமாரன் என்பவருடைய மகள் ப்ரமி என்பவளை துருவன் மணந்தான். அவளிடம் கல்பன், வத்சரன் என்று மகன்கள். இலா என்ற வாயுவின் மகளிடம், புஷ்கலன் என்ற மகனும் ஒரு மகளுமாக அவன் சந்ததி வளர்ந்தது. உத்தமன் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்றவன், ஒரு யக்ஷனால் கொல்லப் பட்டான். மகனைத் தேடிச் சென்ற சுருசியும் அதே போல மறைந்தாள். ( உத்தமனைத் தேடிச் சென்ற சமயம் தாவாக்னி எனும் காட்டுத் தீயில் விழுந்தாள் என்பர்) சகோதரன் இறந்த செய்தி கேட்டு துருவன் யக்ஷனுடன் போரிடச் சென்றான். கிழக்கு நோக்கிச் சென்றவன் ருத்ரனின் பரிவாரங்கள் நடமாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். ஹிமயமலையின் அடிவாரத்தில் அழகான அலகா நகரம் தென்பட்டது. தன் சங்கத்தை எடுத்து ஊதினான். அமைதியான அந்த இடத்தில் அந்த சங்கின் சப்தம் மிகப் பெரியதாக கேட்டதால் யக்ஷ ஸ்த்ரீகள் பயந்தனர். ஆயுதங்களோடு யக்ஷ வீரர்கள் ஓடி வந்தனர், த்ருவன் போரைத் துவங்கினான். பெரும் பாலான யக்ஷ வீரர்கள் காயமடைந்தனர். இரு தரப்பிலும் ஆயுதங்கள் சத்தமும், சங்க நாதமும் அட்டஹாஸமாக நடந்த யுத்தம் திடுமென ஓசையின்றி அமைதியாகியது. துருவன், அவன் சாரதி சித்ர ரதனுடன் எதிரில் யாருமே இல்லாத யுத்தகளத்தில் செய்வதறியாது திகைத்தான். அதன் பின் எங்கிருந்தோ மண்னை வாரியடிப்பது போலவும், சிவந்த மழைநீர் மழையாக பொழிவதே ரத்தமாகத் தெரிய, கல் மழை போலவும் விழவும், மாயா யுத்தம் செய்கிறார்கள் என்பது புரிந்தது.துருவனின் சேனை வீரர்கள் படு காயமடைந்தனர். துருவனும் இந்த தாக்குதலை எதிர்க்கத் தெரியாமல் திகைத்தான். அங்கு வந்த முனிவர்கள் துருவனிடம், சார்ங்க தன்வனான பகவானை வேண்டிக் கொள் என்றனர். அவர் தான் உன்னை காப்பாற்ற முடியும் என்றனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -30 )
அத்யாயம்-11
ரிஷி முனிவர்கள் சொன்னபடி, துருவனும், தன் வில்லை எடுத்து, பகவான் நாராயணனை நினைத்து, அவரால் தயாரிக்கப் பட்ட அஸ்திரத்தால் அடிக்கத் துவங்கும் முன்பே, யக்ஷர்களின் மாயா மறைந்தது. ஞானம் வந்தவுடன் சாதகனின் க்லேசங்கள் மறைவது போல மறைந்தன. பொன் மயமான இறக்கைகளுடன் கல ஹம்ஸங்களில் வசிக்கும் குளத்திலிருந்து பக்ஷிகள் பறப்பது போல, துருவனின் சரங்களும் அவர்களைத் தாக்கின. மயூரங்கள் அலறுவது போல ஓசை எழுந்தது. அதை முறியடிக்க நாகங்கள் போல தன் அஸ்திரங்களை எடுத்து துருவன் அடித்தான். (கவியின் வார்த்தை ஜாலம்) அவை ஸூரிய மண்டலத்தை துளைத்துக் கொண்டு சென்றது.
அதே சமயம் மனு பிதாமகர் அங்கு வந்து துருவனை அழைத்து, போதும், குழந்தாய், சகோதரனுக்காக ஆரம்பித்த இந்த போரை நிறுத்து. குற்றம் செய்யாதவர்களை அடிக்க கூடாது என்று துருவனை தடுத்தார். உபதேவதைகளான இவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. இவர்களை எதிர்த்து போர் செய்வது தகாது. நம் குலத்திற்கு பெருமை சேர்க்காது. உன் சகோதரன் உனக்கு ப்ரியமானவன் தான். யாரோ ஒருவன் அவனுக்கு கெடுதல் செய்தான் என்பதற்காக இவ்வளவு பேரை காயப் படுத்தி என்ன காரியம் இது? இந்த இடம் சாந்தமானது. தன்னை உயர்த்திக் கொள்ளும் பொருட்டு குறைந்த வசதிகளுடன், ஹ்ருஷீகேசனை தியானித்து சாதனைகள் செய்து வரும் அவருடைய அனுசரர்கள், அவரை பின்பற்றும் சாதுக்களின் மார்கம். சர்வ பூதங்களிலும் இருக்கும் பகவான், கண்களால் காணவும், மனதால் அறியவும் முடியாத துராராத்யன் எனும் பகவானின் பரமபதம். அவருடைய பரிவாரங்கள், சாதுக்களின் வழியில் செல்லும் இவர்களை எப்படி வதம் செய்ய துணிந்தாய்? சர்வாத்மாவான பகவானுக்கு அவனுடைய படைப்பில் அனைவரும் ஒன்றே. அவருடைய கருணையும், நட்பும் அனைவரிடத்திலும் ஒரே விதத்தில் தான் வெளிப்படுகிறது. பகவான் ப்ரசன்னமாக இருந்தால் மனிதர்கள் அல்பமான தாமச குணங்களிலிருந்து விடுபடுவார்கள். இங்குள்ளவர்கள் ஜீவன் முக்தர்கள். ப்ரும்ம லோகம் செல்லவும், நிர்வாணம் எனும் உயர் நிலையை அடைவதுமே இவர்களது இலக்கு. பஞ்ச பூதங்களில், யோஷித்- பெண்பால், புருஷனாக, அவர்களின் முயற்சியால், அல்லது உழைப்பால், யோஷித்புருஷர்கள் தோன்றினர். ராஜன்! உனக்கு தெரிந்திருக்காது. பகவானின் மாயையால், முதன் முதலில், குணங்களையும் மஹத் என்ற இயற்கை தத்துவங்களையும் கொண்டு உலகை படைத்தல் என்பதை ஆரம்பித்த சமயம், ஒன்றுடன் ஒன்று இணைத்து புது புது பிரஜைகளை, உயிரினங்களை தோற்றுவித்தார். அதனால், கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இந்த உலகம் ஏதோ (அயஸ்காந்தம்) காந்தத்தின் சக்தியால், இரும்பால் ஆன பொருள் அசைவது போல அவர் எதிரில் சுற்றிக் கொண்டிருக்கிறது, இதன் பின்னால். நிமித்த மாத்திரமாக பகவான் இருந்தார் (உலகை சுழல விட்டு, இயற்கையில் தானாக ஏற்படும் மாறுதல்கள் புது உயிரினங்களை, பொருள்களை தோற்றுவிப்பதைக் கண்டு கொண்டிருந்தார் ) கால சக்தியும் குணங்களின் பல சேர்க்கைகள், மூலம் அவரது வீர்யம்-சக்தி அல்லது அம்சம் பிரிபட்டு, அவைகளை செயல் திறம் உடையதாக செய்கின்றது, தான் எதுவுமே செய்யாமல் இருப்பது போல காட்டிக் கொண்டே, உள் நின்று இயங்கச் செய்கிறார். பகவானின் இச்செயலுக்கு காரணம் யாருக்குத் தெரியும். அவருடைய விருப்பம் – {சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம், கர்தாரம் அகர்தாரம் அபி மாம் வித்தி – என்ற கீதா வாக்யம், ஹந்தா- அடிப்பவன், என்று நினைத்தால் அவன் ஹந்தா, ஹத: அடிபட்டவன் என்று நினைத்தால் ஹத:– கடைசியில் யாரும் அடிபடவுமில்லை, அடிக்கவும் இல்லை இருவருக்குமே தெரியாத விஷயம், இருவருமே அடிபடவும் இல்லை, அடிக்கவும் இல்லை -அடி உடலுக்குத் தான், ஆத்மா அழிவில்லாதது போன்ற உபதேசங்கள் }
உன்னைச் சார்ந்தவர்கள், மற்றவர்கள் என்று நினைத்து அடித்தாலும், இறப்பது அல்லது அழிவது பகவானின் ஸ்ருஷ்டி. ஓடுபவனை துரத்தி அடித்து,புழுதி துகள்களை காற்று தள்ளிச் செல்வது போல, அந்த துகள் இடம் தான் மாறும், இங்கிருந்து சற்று தூரம் செல்லும், அவ்வளவே. ஒரு ஜந்துவின் ஆயுசை குறைப்பது பிரபுவின் செயலை குறை சொல்வது ஆகும். இதை சிலர் வினை என்பர் சிலர் ஸ்வபாவம் என்பர். உன் சகோதரனை ஒரு யக்ஷன் கொன்றதாக நீ சொல்கிறாய். ஜீவனின் பிறப்பும் இறப்பும் அவன் தோன்றும் பொழுதே நிச்சயமாகிறது. இந்த யக்ஷன் அடிக்காவிட்டாலும் கூட உன் சகோதரன் ஆயுள் முடிந்திருக்கும். மூன்று செயல்களையும் ஸ்ருஷ்டி,ஸ்திதி,லயம் என்பதைச் செய்யும் பகவான் அவன் தான் ஜகத் என்பதில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் காரணம். அவனை வணங்கு. பசுக்கள் கயிற்றினால் ஒரு தண்டத்தில் கட்டப் பட்டால் அது கயிறு எட்டிய தூரம் மட்டுமே செல்வது போல ஜீவன்கள். அவன் அனுமதித்த அளவு தான் வாழ்வும் தாழ்வும்.
உன்னையே எடுத்துக் கொள். ஐந்து வயது பாலகன், மாற்றந்தாயின் சுடுசொல் பொறுக்காமல் வனம் சென்றாய், பகவானின் அருளால் எட்டாத உயரம் சென்றாய். அவருடைய அனுக்ரஹத்தால் நல்ல நிலமையில் அரசனாக வாழ்கிறாய். நிர்குணமான, அழிவற்ற அந்த பரமாத்மாவை நினை. தன் சக்தியை வெளிக் காட்டாமல் ஆனந்தமே உருவாக இருப்பவனை பக்தி செய். சரியான மருந்தால் ரோகம் விலகுவது போல மெள்ள மெள்ள இந்த அறியாமையிலிருந்து விடுபடுவாய். தான் தனது என்ற மோகம் அகலும்.
தவிர, தனதன்-குபேரன், கிரீசனின் சகோதரன். அவனை அவமதித்து விட்டாய். குழந்தாய்! அவர் தான் புண்ய ஜனங்கள் என்று அழைக்கப்படும் இந்த யக்ஷர்களை தோற்றுவித்தார். அவரை சமாதானப் படுத்து. அவரிடம் போய் வினயமாக, உன் தவற்றை உணர்ந்தவனாக, உண்மையான பச்சாதாபத்துடன் பேசு. அவருடைய மகத்தான குலம் மேலும் வளர வேண்டும், அது தான் நமக்கும் நல்லது.
இவ்வாறு பிதாமகரான மனு தன் வம்சத்தில் அந்த சிறுவனுக்கு உபதேசம் செய்து விட்டு அகன்றார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதினொன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -35 )
அத்யாயம்-12
துருவன் போரை நிறுத்தியதை அறிந்த தனதன், -குபேரன், சாரணர்களுடனும், யக்ஷ கின்னரர்களுடனும் வந்து அவனை சந்தித்தான்.
குபேரன்: “ அரசகுமாரனே! பிதாமஹர் சொன்னதன் பேரில் போரை நிறுத்தியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நல்லது. நீயும் யக்ஷர்களை அழிக்கவில்லை, எந்த யக்ஷனும் உன் சகோதரனைக் கொல்லவில்லை. காலம் செய்யும் வேலை. உயிரினங்களின் வாழ்நாளை நிச்சயிப்பது காலன் தான் – அந்த செயலுக்கு அவன் தான் ப்ரபு, தலைவன். நீ, நான் என்று பேதங்கள் தீவிரமாக ஞான மார்கத்தில் இருப்பவர் எண்ணுவதில்லை. உலக வாழ்க்கை என்பதே ஜீவன்கள் உறக்கத்தில் காணும் கனவு போல – விழித்ததும் கலைந்து போகும். அது போலத்தான் உறவுகளும். அதனால், துருவா! பத்ரமாக போய் வா. நல்லதே நடக்கட்டும். உன் வழி பகவான் அதோக்ஷஜனை வழி படுவது தானே. அதையே செய். அனைத்து ஜீவன்களின் உள்ளும் உறைபவன், அசையும், அசையா பொருட்கள் யாவையும் அவனே. அவனையே பூஜித்து வா. வணங்கத் தகுந்தவன், நமது இவ்வுலக நன்மைக்கும், மறுபிறவி என்பதை இல்லாமல் செய்ய பரலோக சாதனமும் அந்த பகவானே. அவரது ஆத்ம மாயை- தன்னிச்சையான செயல், இணைப்பதும், பிரிப்பதும், அவருடைய மேற்பார்வையில் முக்குணங்களும் சக்தி பெறுகின்றன.
உத்தான பாதரின் மகன் நீ, எது வேண்டுமோ கேள். விரும்பியதை தயங்காமல் கேள். நீ அம்புஜ நாபனின் வரம் பெற்றவன் என்பது தெரியும். அதை விட மேலாக வேறு என்ன வேண்டும். எங்கள் நன்மைக்காக ஏதாவது தர விரும்புகிறேன். துருவனும் தன் தவறை உணர்ந்து, அவருடைய பெருந்தன்மையை மதித்து, பகவானிடத்தில் அசையாத பக்தியையே வேண்டினான். ஒரு பொழுதும் தான் அதிலிருந்து விலகாமல் இருக்க வேண்டும் என்றான். குபேரனும் மகிழ்ந்து அந்த வரங்களை கொடுத்து விட்டு மறைந்தார், துருவனும் நாடு திரும்பினான்.
ஊர் திரும்பியவன் யாக யக்ஞங்கள் செய்தான். தாராளமாக தானங்கள், யாகத்தை நடத்திக் கொடுத்தவர்களுக்கு சன்மானங்கள், தேவதா ப்ரீதிகள் என்பதையும் குறைவற செய்தான். தனதனின் உபதேசங்கள் அவனை அனைத்து ஜீவன்களையும் சமமாக எண்ணும் உயர்ந்த குணத்தை அளித்திருந்தது.பல ஆண்டுகள் நியாயமாக ராஜ்யத்தை ஆண்டான். பிரஜைகள் அவனிடம் அன்புடன் இருந்தனர். காலம் வந்ததும் தன் சந்ததியிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு சமாதியில் மூழ்கி உயிர் துறந்தான். அவனை அழைத்துச் செல்ல வானத்திலிருந்து விமானம் வந்தது. வானத்து நக்ஷத்திர கூட்டங்களைப் பார்த்து வியந்தான். சந்திரன் போல தானும் பிரகாசமாக இருப்பதை உணர்ந்தான். அங்கு நான்கு கைகளுடனும், ஸ்யாமள வர்ணமும், கொண்ட சிறுவர்கள், விரிந்த தாமரை போன்ற கண்களுடனும் கைகளில் கதையுடன், நல்ல ஆடைகளுடனும், கதை , கிரீடம், அங்கத குண்டலங்களுடனும் சேவை செய்ய இருந்தனர். பரிவாரங்களின் தலைவன் வந்து வணங்கி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். சுனந்த,நந்த என்பவர்கள் புன்னகையுடன் வரவேற்றனர். “ராஜன்! நல்வரவாகுக. தாங்கள் ஐந்து வயதில் செய்த தவம் எங்கள் பகவானை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்து விட்டது. எங்களுடைய தேவன், சார்ங்க தன்வன் என்ற பெயருடைய பகவானின் பார்ஷதர்கள், பரிவாரங்கள் நாங்கள் இருவரும். பகவானின் விஷ்ணுபதம் என்ற இடத்திற்கு உங்களை அழைத்துப் போக வந்தோம் என்றனர். இந்த விமானத்தில் ஏறிக் கொள்ளுங்கள். மற்றவர்களால் எண்ணிக் கூட பார்க்க முடியாத விஷ்ணுவின் இருப்பிடம் அழைத்து வர எங்களுக்கு உத்தரவு என்றனர். “
மைத்ரேயர் சொன்னார்: வைகுண்ட சேவகர்களின் தலைவன், மதுரமாக சொன்னதைக் கேட்டு, துருவன் மகிழ்ந்து, ஸ்னானம் செய்து மங்களமாக முனிவர்களை வணங்கி விமானத்தில் ஏற தயாராகும் போது தானும் ஸ்வர்ண மயமாக இருப்பதை அறிந்தான். அந்தகன் வந்ததைக் கண்டு, சேவகர்கள் சொன்னபடி அவர் தலையில் காலை வைத்து விமானத்தில் ஏறினான். துந்துபிகள் முழங்கின. ம்ருதங்க, பணவம் என்ற வாத்யங்கள் இசைக்கப் பட்டன. கந்தர்வர்கள் பாடினர். புஷ்ப வ்ருஷ்டி உண்டாயிற்று. ஸ்வர்லோகத்தில், தன் தாய் சுநீதியைக் கண்டான். தாயை விட்டுச் செல்வதா என்று தயங்கியவனிடம் சேவகர்கள் அவள் முன்னால் வாகனத்தில் செல்வதைக் காட்டினர். மூவுலகையும் சுற்றி வந்து முனிவர்களையும், மற்றவர்களையும் பார்த்தபடி விஷ்ணு பதமான வைகுண்டம் வந்து சேர்ந்தான். வைகுண்டத்தின் அழகை வியந்தபடி சாந்தமே உருவாக இருந்த அச்யுத ப்ரிய பாந்தவர்களையும், ஆத்ம தத்துவங்களை அறிந்த தஸ்விகளையும் கண்டான்
இவ்வாறாக உத்தான பாதரின் மகனாக பிறந்த துருவன் மூவுலகிலும் சூடாமணி போல பிரகாசிக்கும் கம்பீர வேகமும், நிமிஷம் விடாமல் சுழலும் சக்கரத்தில், ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லியபடி, சக்கரத்தின் மேட்ரம் எனப்படும் தண்டம் – சக்கரத்தின் நடுவில் திடமாக நடப்படும் அச்சில் – கட்டப்பட்ட மாடுகள் போல வளையவரும் வானத்து நக்ஷத்திர கூட்டங்களின் நடுவில், த்ருவனாக, அசையாதவனாக பதவியை அடைந்தான்.
நாரதர் இதைக் கண்டு மிக மகிழ்ந்தார். சுநீதியின் மகன், அவள் செய்த தவப் பயன். வேதம் அறிந்தவர்களும் மற்ற சாதகர்களும் நினைத்து கூட பார்க்க முடியாத நன்மை அவளுடைய நல் எண்ணத்தால், மகனால் கிடைக்கப் பெற்றாள். ஐந்து வயது மகனுக்கு பக்தியை உபதேசித்தாள். யதேச்சையாக அங்கு சென்ற நானும் வாசுதேவ மந்திரத்தை உபதேசித்தேன், சிரத்தையாக அதை ஏற்று தவம் செய்து நல் கதியடைந்தான் என்று பெருமையுடன் சொன்னார்.
மைத்ரேயர் சொன்னார்: குரு வம்சத்து பெரியவரே (விதுரர்) நீங்கள் கேட்டபடி துருவனின் கதையைச் சொன்னேன். விளையாட்டுச் சிறுவன், தாயார் உபதேசத்தால் விஷ்ணுவின் சரணத்தையடைந்தான் என்ற இந்த கதை கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் நன்மையைத் தரும்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பன்னிரெண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் 52)
அத்யாயம்-13
விதுரர் துருவன் கதையைக் கேட்டு சற்று நேரம் அதிலேயே லயித்து இருந்தார். மைத்ரேய முனிவரிடம் கேட்டார். ப்ரசேதஸ் என்பவர்கள் யாவர்? அவர்கள் வம்சத்தில் வந்தவர்கள் யாவர்? எந்த விதத்தில், என்ன செய்ததால் புகழ் பெற்றார்கள் ¿ யாக காரியங்களை எந்த இடத்தில் இருந்து செய்தார்கள்? மகாபாகவதம் என்பது மிகப் பெரிய நூல். பகவானையே கண்ட நாரதர் அவர் எப்படி கர்மயோகம், பணிவிடை செய்வது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டார்? பகவான் யாக புருஷன். தர்ம சீலரான ஜனங்களால் வேதம் சொன்னபடி யாக காரியங்களைச் செய்வர். பக்தி என்பதை நாரதர் தானே பரப்பினார். தேவரிஷி நாரதர். பகவத் கதை என்பது எப்படி வந்தது. அவர் வர்ணித்து சொன்னபடியே, முனிவரே! எனக்கும் சொல்லுங்கள், என்றார்.
மைத்ரேயர் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். த்ருவன் மகன் உத்கலன் ஏனோ அரசு பதவியையும், புகழையும் விரும்பவில்லை. பிறவியிலேயே சாந்தமானவன், தந்தை வழியில் அனைத்து உயிரினங்களையும் சமமாக காணும் குணத்தை அடைந்தான். ஆத்ம தத்வம்- பகவானின் அம்சமாக உலகம், உலகம் அவருள் அடக்கம் என்பது அவனுக்கு இயல்பாக புரிந்திருந்தது. யோக சாதனைகளில் தீவிரமாக ஈடுபட்டான். எதிலும் பற்றில்லாத அவனை உலகத்தார், ஜடம் என்றும் உன்மத்தன் என்றும் ப்ரமியின் மகன் தானே என்றனர். (ப்ரமம் என்பது உலக வழக்கில் அறியாமை சார்ந்ததாக கருதப் படுகிறது) அவனுக்கும் ஆறு பிள்ளைகள் பிறந்தனர். புஷ்பார்ணன் என்பவன் மனைவி ப்ரபா,தோஷா என்ற இருவர். ப்ராத:, மத்யம்தினம், சாயம் என்று அவர்கள் பிள்ளைகள். தோஷாவின் மூன்று பெண்கள்: ப்ரதோஷோ, நிசீதோ,வ்யுஷ்ட என்று அவர்கள் பெயர்கள். அந்த வம்சத்தில் வந்தவன் மனு, அவன் வம்சத்தில் அங்கன் என்பவனின் மகன் வேனன். இந்த வேனன் என்பவன் அதி துஷ்டனாக இருந்தான். ப்ரஜைகள் மிகவும் வருந்தினார்கள். அங்க ராஜா அவனை திருத்தவும் முடியாமல் தானே ஊரை விட்டு வெளியேறினான். வேனனை முனிவர்கள் சபித்தனர். உயிர் பிரிந்த உடலில் அவன் வலது கையில் கடைந்தனர். வேனனின் அராஜகமான ராஜ்யத்தில், திருடர்கள் அதிகரித்தனர். மேலும் பலவிதமாக மக்கள் வருந்திய சமயம் ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாக ப்ருது பிறந்தான். அரசனான்.
விதுரர் சொன்னார்: நல்ல சீலம் உடையவர் என்றும் சாது, மஹாத்மா என்பர். அவருடைய காலத்தில் எப்படி துஷ்டர்கள், வந்தனர், ஜனங்கள் வருந்தும் படியாக. வேனனின் கையில் ப்ரும்ம தண்டத்தால் கடைந்ததாகச் சொன்னீர்கள்? அரசன் துறவு மேற்கொண்டபின், தர்மம் அறிந்த முனிவர்கள் ஏன் அவனை தண்டித்தனர். சாதாரணமாக அரச குலத்தைச் சேர்ந்தவர்களை குற்றம் செய்திருந்தாலும் கொல்வதில்லை.
மைத்ரேயர் சொன்னார். அங்க ராஜன் அஸ்வமேத யாகம் செய்தான். பெரிய யாகம். தேவதைகளை அழைத்த பொழுது யாரும் வரவில்லை. ருத்விக்குகள் திகைத்து, அரசனிடம் சொன்னார்கள். ராஜன், நாங்கள் சிரத்தையாக சாஸ்திரத்தில் சொன்னபடி தான் யாக காரியங்கள் செய்து வருகிறோம். பொருள்களையும் சுத்தமாக தேடி கொண்டு வந்திருக்கிறோம். சந்தஸ் என்ற வேதத்தை அத்யனம் செய்த, விரதங்களை அனுஷ்டிக்கும் வேத விற்பன்னர்களை அழைத்து வந்திருக்கிறோம். தேவர்களை கர்மசாக்ஷிகள் என்பர். அவர்கள் வராமல் ஏன் எங்களை அவமதிக்கிறார்கள் ?
இதைக் கேட்டு யாகத்தின் யஜமானானஅங்க ராஜா மிக வருந்தினான். சபையைக் கூட்டி தன் மந்திரிகளை விசாரித்தான். அழைத்தும் தேவர்கள் வரவில்லை. சபையோர்களே, சொல்லுங்கள்,நான் செய்த தவறு என்ன?
அரசவையின் மந்திரிகள் சொன்னார்கள்: நரதேவா! இதில் நீங்கள் எதுவும் தவறு செய்யவில்லை. குற்றம் என்று சொல்ல வேண்டுமானால், உங்களுக்கு மகன் என்ற சந்ததி இல்லை. புத்ரகாமனான நீங்கள் புத்ரகாமேஷ்டி என்ற யாகத்தை செய்யுங்கள். அதன் பின் தேவர்கள் உங்கள் யாகத்தில் பங்கு ஏற்பார்கள். அங்கராஜனும் அவ்வாறே ஹரியை தியானம் செய்து வேண்டினான். யாகத்தை நடத்திய ப்ராம்மணர்களும் விஷ்ணுவை குறித்த யாகத்தைச் செய்தனர். அந்த யாக குண்டத்திலிருந்து பொன்னால் ஆன ஆடையும், கைகளில் பொன்னால் ஆன பாத்திரத்தில் பாயசம் என்பதையும் வைத்துக் கொண்டு ஒரு திவ்ய புருஷன் எழுந்தான். அந்த ப்ராம்மணர்கள் அனுமதியுடன் தானும் தன் பத்னிகளுமாக பாயசத்தை அருந்தினான்.
அரசி கர்பம் தரித்து சரியான காலத்தில் மகனைப் பெற்றாள். அவன் தன் தாய் வழி பாட்டனார் அதர்மத்தில் வளரும் ம்ருத்யு. அவர் வழியில் இந்த மகனும் அதர்மமே உருவானான். வளர வளர, அவனது மூர்க்கம் அதிகமாயிற்று. வேட்டையாடச் சென்றால் சாதுவான மிருகங்களையும் முனிவர்களையும் அடிப்பான். வேனன் என்றே அழைக்கப் பட்டான். விளையாடும் சிறுவர்களை இளம் வயதினரை பிடித்து, கொடூரமாக அடிப்பான். துஷ்டனான இந்த மகனை பலவிதமாக திருத்த முயன்றும் பலனில்லை. ப்ரஜைகள் இல்லாத குடும்பஸ்தர்கள், தேவனை வேண்டி மகனைப் பெறலாம். ஆனால் அதே மகனால் துன்பப்படும் பொழுது, யாரை வேண்டுவது? துஷ்டனான மகனால் ஜனங்கள் பெற்றவரை தூற்றுகிறார்கள். எல்லோரிடமும் அந்த மகனால் விரோதம் வருகிறது. இதைத்தான் மோஹம் என்றும் பந்தனம் என்றும் சொன்னார்கள். சம்சாரம் க்லேசம் தருவதே என்று பண்டிதர்கள் சொல்வார்கள். மகன் பிறப்பது, தன் மகன், தன் குலம் வளர்ப்பவன் என்பதால் வரம் என்று நினைத்தோம். நல் வழியில் செல்லாத மகன் குடும்பத்தில் துன்பத்தைத் தான் தருகிறான். வீடே வசிக்க முடியாததாக ஆகிறது. என்று இப்படி பலவாறாக நினைத்து குழம்பியவன் விடியற் காலையில் வீட்டைத் துறந்து வெளியேறினான்.
அரசன் வெளியேறியதை அறிந்த ஊர் மக்களும், மந்திரிகளும் தேடக் கிளம்பினர். எங்கும் தேடியும் கிடைக்காமல் திரும்பிவந்து யாக சாலையில் இருந்த ரிஷிகளிடம் சொன்னார்கள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதின்மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் 41)
அத்யாயம்-14
ப்ருகு முதலான முனிவர்கள் லோக க்ஷேமத்தை நினைத்து, நாடு அரசன் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதால், சுநீதீ யை அழைத்து ப்ரஜைகளுக்கு சம்மதம் இல்லையென தெரிந்தே வேனனை ராஜ்யத்தில் அரசனாக அமர்த்தினர், திருடர்கள் சர்பத்தால் கடிபட்ட மூஞ்சூறு போல ஓடி விட்டனர். அவன் உக்ரமாக தண்டனை கொடுப்பவன் என்று பயந்தனர். உடனே,தன்னை மிக சக்திசாலியாக கல்பித்துக் கொண்டு அஷ்ட விபூதிகளும் தன்னை வந்தடைந்து விட்டது என்றும் தன்னைத் தானே பெருமையாக நினைத்துக் கொண்டான். அங்குசம் இல்லாத மதயானை போல கட்டுக்கடங்காதவன் ஆனான். ரதத்தில் ஏறி ஊரைச் சுற்றினான். பூமி நடுங்கியது.
யாக யக்ஞங்கள், தானம், ஹோமம் எதுவும் செய்யக் கூடாது என்று ஆணையிட்டான். பேரீ வாதங்களுடன் எப்பொழுதும் அட்டஹாஸமாக வலம் வந்தான். யாகம் செய்பவர்களும், முனிவர்களும், துஷ்டத்தனம் அளவு மீறி போகிறதே என்று வருந்தி தங்களுக்குள் பேசிக் கொண்டனர். விறகின் இரு பக்கமும் தீ வைத்தது போல குணமில்லாத அரசனால் துன்பமே என்றனர். அராஜக பயம் என்று இவனை அரசனாக்கினோம். தகுதியில்லாதவன், இவன் அரசன் ஆனதாலேயே அதிக பயம் என்றாகி விட்டது. இப்பொழுது மக்களுக்கு என்ன பதில் சொல்வோம். பாம்புக்கு பால் வார்த்து வளர்த்தால் அது வளர்த்தவனே என்று கடிக்காமலா இருக்கும். சுபாவமாகவே வேனன் துஷ்டன். அதை நிரூபித்து விட்டான். ப்ரஜைகளை கொல்லுகிறான்.
சுனீதீ யின் வம்சத்தினன் என்பதால் அரசனாக்கினோம். சொல்லி பார்க்கலாம். சமாதானமாக சொன்னால் ஒருவேளை சம்மதிக்கலாம். திருந்தலாம். அப்படி நமது சொல்லை ஏற்காவிட்டால், லோக நன்மைக்காக நாம் நமது தேஜஸாலேயே தகித்து விடுவோம். சாது மிரண்டால் என்பது போல, தங்களை அடக்கி பழகிய முனிவர்களுக்கு கோபமும் அடங்கியே இருக்கும். எல்லோருமாகச் சென்று வேனனிடம் சமாதானமாக பேசிப் பார்த்தனர்.
“அரசகுமாரனே! உன்னிடம் உள்ளதை எடுத்துச் சொல்கிறோம். உன் ஆயுள், ஸ்ரீ, கீர்த்தி இவை வளரட்டும்.வாக்கு,மனம், உடல்,புத்தி இவைகளால் தர்மத்தை அனுசரிப்பதால் மனிதர்கள் சோகமில்லாமல் வாழ்வார்கள். இவற்றை மறுத்தால் அடைவது எல்லையில்லாத சோகம் மட்டுமே. பிரஜைகளுக்கு க்ஷேமம் என்று செய்வதை மறுக்காதே, தடுக்காதே. இவை நஷ்டமானால், அரசன் ஐஸ்வர்யம் இழப்பான், பதவியிலிருந்து இறங்குவான்.
ராஜன்! உன் மந்திரிகள் யாருமே உனக்கு நன்மையைச் சொல்லும் நிலையில் இல்லை. அவர்களே துஷ்டர்கள். உன் செல்வத்தை அனுபவிக்கவே உன்னை சூழ்ந்து நிற்கிறார்கள். எந்த ராஜ்யத்தில், பகவான் யாக புருஷன், என்று எண்ணி மக்களால் தங்கள் குல வழக்கப்படி பூஜிக்கப் படுகிறாரோ, அங்கு அவர் சந்தோஷப் படுகிறார். விஸ்வாத்மா அவர். தன் சாஸனம்- தன் ஆளுமை மதிக்கப் படுகிறது என்பது அவருக்கு திருப்தியைத் தரும். அவர் திருப்தியடைந்தால் எது தான் கிடைக்காது. வரி வசூல் செய்யும் அரசர்கள், லோகபாலர்கள். அவர்கள் கடமை அதை மக்கள் நன்மைக்காக செலவழிப்பது. அவர்கள் உலகம் முழுவதும் யாக யக்ஞங்கள் செய்வது, மூன்று வேதங்களும் அவனே, தவமே உருவானவன் அவனிடத்தில் மூவுலகத்து செல்வங்களும் உள்ளன என்பர். உன் தேசத்தினர் செய்யக் கூடாது என்று தடை விதிக்காதே. ப்ராம்மணர்களைக் கொண்டு யாகம் யக்ஞம் செய்விப்பதால், பகவானின் அம்ச பூதமான தேவர்கள் மகிழ்கிறார்கள். அவர்கள் உலகுக்கு நன்மையே செய்வார்கள். அதை அவமரியாதை செய்யாதே.
வேனன் சொன்னான்: அறிவிலிகளே! நீங்கள் தான் அதர்மத்தை தர்மமாகச் சொல்கிறீர்கள். அரசனை கடவுளாக மதிக்க வேண்டியது இருக்க, தன் பதியை விட்டு ஜார பதியை விரும்பும் பெண் போல பேசுகிறீர்கள். யார் இந்த யக்ஞ புருஷன்? விஷ்ணு,விரிஞ்ச்சி,கிரீசன், இந்திரன், வாயு, யமோ, சூரியன், மழை, சந்திரன், குபேரன் பூமி, அக்னி வருணன், யாவரும் மேலும் பலரும் அரசனின் சரீரத்தில் இருக்கிறார்கள். வரமோ, சாபமோ தருவது அரசனே. சர்வதேவமயன் அரசன். யாக யக்ஞங்கள் எதுவும் வேண்டாம், பலி என்று தருவதை என்னிடம் கொடுங்கள். என்னை விட உயர்ந்தவன் யாருண்டு?
புத்தி கெட்டவன், இவனுக்கு புத்தி சொல்ல வந்தோமே என்று ரிஷி முனிவர்கள் வருந்தினர். தன்னை பண்டிதனாக எண்ணி கர்வத்தின் உச்சியில் இருக்கும் இவனுக்கு சமாதானமாக நாம் பேசுவது உகந்ததல்ல. ஹன்யதாம், கொல்லுங்கள், ஹன்யதாம், இவன் பிறவி துஷ்டன் இவனைக் கொல்லுங்கள். கொடியவன் உயிருடன் இருந்தால் உலகை சீக்கிரமே பஸ்மமாக ஆக்கி விடுவான் என்றனர்.
ஹரி நிந்தையை செய்பவன் இவன். இவன் அரசனின் வராசனம் என்பதில் அமர தகுதியில்லாதவன். நரதேவன் என்று அரசர்களைச் சொல்லுவோம். வெட்கம் இன்றி விஷ்ணுவை யக்ஞபதி என்றால் நிந்திக்கிறான். ஒரு குணமுமில்லாத வேனன்- உலகையே நாசமாக்குவான். இந்த ஐஸ்வர்யத்தைப் பெற்று நியாயமாக இருப்பவனுக்கு அனுக்ரஹம் செய்வது போல அநியாயமாக இருப்பவனுக்கு தண்டனையும் தரத்தான் வேண்டும். இவ்வாறு எண்ணிய ரிஷிகள், ஹூங்காரத்தாலேயே அவனை தகித்து விட்டனர். அச்யுதனை நிந்தை செய்து வாழவா முடியும்?
ரிஷிகள் திரும்பிச் சென்றவுடன் தாயான சுநீதா, வித்யா யோகம் என்ற ஒரு முறையால் அவன் உடலை காப்பாற்றி வந்தாள். ஒரு சமயம், முனிவர்கள் சரஸ்வதி நதியில் ஸ்னானம் செய்து விட்டு கரையில் தங்கள் நித்ய அக்னி காரியங்களை செய்து விட்டு பேசிக் கொண்டிருந்தனர். ஏதோ கெடுதல் வரும் போலத் தெரிகிறது. பயங்கரமான உத்பாதம் வர இருக்கிறது. பூமி திருடர்களால் கெடுதல் செய்யப் படுவாள். இப்படி பேசிக் கொண்டிருக்கையிலேயே, திருடர்கள் புழுதிப் படலம் வீச ஓடுவதைக் கண்டனர். செல்வத்தை சுரண்டுவதே காரியமாக இவர்கள் அலைவதைக் கண்டு வருந்தினர். தலைவன் இல்லாமையால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதைக் கண்டனர். அராஜகம். நல்லதே இல்லையென்றாகி விட்டது. தடுக்க யாரும் இல்லை.
பாத்திரம் ஓட்டையானால், அதில் விடும் பாலும் ஒழுகுவது போல ப்ராம்மணர்களின் வீர்யமும் குறைந்தது.
அங்க ராஜன் ராஜ ரிஷியாக இருந்தவன். அவன் வம்சமே வீணாவதா ? இந்த வம்சத்து அரசர்கள் அனைவரும் நன்றாகத் தான் ஆண்டார்கள். இவ்வாறு யோசித்து, ரிஷிகள் இறந்த அரசனின் துடையை கடைந்தனர். அதிலிருந்து பாஹுகன் என்ற நரன் வந்தான். காகம் போன்று கரு நிறத்துடன், சிறு உருவமாக, சிறுத்த புஜங்கள், பெரிய கூனல் முதுகில், வளைந்த நாசியும், ரத்தம் போல சிவந்த கண்களுடன், முடி தாமிர நிறமாக குச்சி குச்சியாகவும் இருக்க, வணங்கி நின்றவன், நான் என்ன செய்யவேண்டும் என்று தீனமாக கேட்டான். நிஷீதத- உட்காரு என்று என்றனர். பின்னர் அவன் வம்சமே நிஷாதர்கள் எனப்பட்டனர். மலைகளிலும் காடுகளில் மட்டுமே தென்படுபவர்களாக இருந்தனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதிநான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் 46)
அத்யாயம்-15
மைத்ரேயர் சொன்னார்: மறு முறை அரசனுக்கு சந்ததியை உருவாக்க ரிஷிகள் முயன்றனர். புஜங்களில் அதே போல கடையவும் ஒரு ஜோடி வந்தனர். ரிஷிகள் மகிழ்ந்தனர். பகவானுடைய சங்கல்பம் என்றனர். இது விஷ்ணுவின் கலை-ஒரு பகுதி. உலகை காக்கவே வந்துள்ளது. ஸ்ரீ தேவியான லக்ஷ்மியின் கடாக்ஷமே. என்றும் அருகில் இருக்கும் மஹா விஷ்ணுவின் பத்னி ஸ்ரீ தேவி. இவன் அரசர்களில் முதல்வன் என்று பெயர் பெறுவான். உலகெங்கும் இவன் புகழ் பரவும் ப்ருது என்றே அழைப்போம். (ப்ருதுஸ்ரவஸ்-எங்கும் பரவிய புகழ்) இவளும் சுததி (ஆழகிய பற்களையுடையவள்) அர்சி என்ற பெயருடன் ப்ருதுவுடனேயே வந்தவள். இவளும் லக்ஷ்மி தேவியின் அம்சமே.
மைத்ரேயர் சொன்னார்: அந்த ரிஷிகள் சந்தோஷமாக இருவரையும் பாராட்டினர். கந்தர்வர்கள் பாடினர். புஷ்பவ்ருஷ்டி உண்டாயிற்று. சித்தர்கள் தங்கள் ஸ்த்ரீகளுடன் நடனம் ஆடினர். சங்கம், துர்யம், ம்ருதங்கம் முதலிய வாத்யங்கள் முழங்கின. தேவர்கள், ரிஷிகள், பித்ரு கணங்கள் எல்லோரும் அந்த காட்சியைக் காண வந்து சேர்ந்தனர். ப்ரும்மா பார்த்தவுடன், வேனனின் வலது கையில் கதையுடன், பாதத்தில் அரவிந்தம், இவைகளைப் பார்த்து வியந்து நிச்சயமாக இது ஸ்ரீ ஹரியின் அம்சமே என்றார். பரமாத்மாவின் அழிவில்லாத சக்கரம் -அதன் அம்சம் என்றார்.
அதன் பின் அபிஷேக ஏற்பாடுகள் ஆரம்பித்தன. பல இடங்களிலிருந்தும் ஜனங்கள் தேவையான பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். ஆறுகள், நதிகள், மலைகள், கிராமங்கள், பறவைகள், மிருகங்கள், வானம், பூமி என்று அனைவரும் எதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தனர். ப்ருது அரசனாக அபிஷேகம் செய்யப் பட்டான். பத்னி அர்சியும் அலங்கரிக்கப்பட்டு உடன் இருந்தாள். உயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் என்று பலவும் அவர்களுக்கு தனதனால் அளிக்கப் பட்டன. பொன்னாலான ஆசனத்தையும் தனதன் அளித்தான். வருணன் வெண் குடையை, வாயு சாமரங்களை, தர்மன் புகழ் வாய்ந்த கீர்திமதி என்ற மாலையை,இந்திரன் உயர்ந்த கிரீடத்தை, யமன் சம்யமனம் என்ற தண்டம், ப்ரும்மா ப்ரும்ம மயமான கவசம், பாரதி அழகான ஹாரம், ஹரி சுதர்ஸன சக்கரம், அவர் மனைவி குறைவில்லாத செல்வ செழிப்பு, ருத்ரன் தச சந்த்ரம் என்ற வாள், நூறு சந்த்ரம் என்ற வாளை அம்பிகா. சோமன் அம்ருத மயமான குதிரைகள், த்வஷ்டா அழகிய வேலைப் பாடமைந்த ரதம், அக்னி, ஆஜவகம் என்ற வில், சூர்யன் ஒளி வீசும் அம்புகள், பூமி யோக மயமான பாதுகை, வானம் புஷ்பங்களின் மாலைகள் என்று பரிசளித்தனர். வானத்தில் சஞ்சரிக்கும் தேவ கன்னிகைகள் நாட்யம், சுஸ்வரமான கீதம், வாத்யங்கள், இவைகளைக் கொடுத்தனர். அந்தர்தானம் என்பதை வானத்தில் சஞ்சரிக்கும் பறவைகள், ரிஷிகள் ஆசிர்வாதங்களை, சமுத்திரம் தன்னிடத்தில் தோன்றும் சங்கு, கடல்கள், பர்வதங்கள், நதிகள், ரத வீதிகளை கொடுத்தனர். சூதர்கள், மாகதர்கள், வந்தீ என்று பலர் அரசவையில் பாடவும், ( துதிப் பாடல்கள், கட்டியம் கூறுதல் போன்ற வேலைகள் செய்பவர்) வந்தனர். அரசனின் வம்சாவளியை சொல்லும் வழக்கப்படி, வேனன் மகன் என்றே சொன்னார்கள்.
அபிஷேகம் முடிந்து ப்ருது பேசலானான்: அனைவருக்கும் வணக்கம், சூதர்களே, மாகதர்களே, வந்தி எனும் துதி பாடுபவர்களே, உலகில் நான் இன்னும் அறியாதவன், அறியப் படாதவனே. உங்கள் புகழ் பாடல்களை எப்படி ஏற்றுக் கொள்வேன்? எதுவுமே நான் செய்ய ஆரம்பிக்கவில்லையே. எனவே, உங்கள் வார்த்தைகள் பொருளற்றவை. சபையோர்களே, உள்ளபடி சொல்லுங்கள். உத்தம புருஷர்களாக இருந்த பெரியவர்களின் குணங்களை நினைத்து பாடாதீர்கள். மஹத்தான குணங்களையுடைய பகவான், அவனை போற்றும் பாடல்கள் சாதாரண ஜனங்களுக்கு ஏற்புடையது அல்ல. இன்னமும் நான் நீங்கள்போற்றும் படி எதுவும் செய்யவில்லை. செய்த பின் பாராட்டுங்கள். இப்பொழுது புகழ்ந்து சொல்லி நானும் ஏற்றுக் கொண்டால் பிற் காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் அது எனக்கு தர்ம சங்கடத்தையே உண்டு பண்ணுகிறது.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதினைந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-26
அத்யாயம்-16
மைத்ரேயர் சொன்னார்: இப்படிச் சொன்ன அரசனைப் பார்த்து அரச சபையில் பாடுவதை கௌரவமாக நினைத்திருந்த பாடகர்கள், மகிழ்ந்தனர். எங்கள் பாடலை விட தற்சமயம் நீங்கள் பேசியது அம்ருதமாக இருக்கிறது, அரசே. நாங்கள் பாடியதும் வெற்று வார்த்தையல்ல. பகவான் தன் மாயையால் அவதரித்து இருப்பதை அறிவோம். வேனனின் அங்கஜாதன் (மகன்), நல்ல வீரமும், ஆண்மையுடனும் வருவாய். வாசஸ்பதி கூட நினைத்து பார்க்க முடியாத ஆற்றலுடன் வளருவாய். எங்கள் திருப்திக்காக பாடுகிறோம். தற்சமயம் ப்ருதுவாக வந்திருப்பது ஹரியே என்றே முனிவர்கள் சொன்னார்கள். சிலாக்யமான செயல்கள் செய்வான் என்றனர். இந்த அரசன் தர்மத்தைக் காப்பான். நல்ல முறையில் ஆட்சி செய்வான், வரப் போகும் அரசர்களுக்கும் முன்னோடியாக இருப்பான் என்றனர். இவன் ஒருவனே, லோகபாலர்கள் அனைவரையும் தன்னுள் வைத்தவன். அந்தந்த காலங்களில் இரு லோகத்திற்கும் நன்மையானதை குறைவின்றி செய்வான் என்றனர்.
சூரியன் போல அனுகூலமாக இருப்பான். எட்டு மாதங்கள் சூரியன் பூமியிலிருந்து ஜலத்தை உறிஞ்சி, பின், மழை காலத்தில் மழையாக பொழிவது போல. வசூல் செய்வதும் காலத்தை அனுசரித்து, மக்கள் சிரமப்படாமல் இருக்கும்படி, அதிகமாக விளையும் சமயம் அதிகமாகவும், மற்ற நாட்களில் முடிந்தவரையும் வசூலிப்பான். பூமியைப் போல பொறுமையாக இருப்பான். இந்திரனைப் போல ரக்ஷிப்பான். காலத்தில் இந்திரன் வர்ஷிப்பது போல இவனும் குடி மக்களை ரக்ஷிப்பான். அனுகூலமாக பேசி, அன்புடன் நோக்கி, மென் முறுவலுடன் குறைகளைக் கேட்டறிந்து ஆட்சி செய்வான். ஆடம்பரமாக தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாமல் அவசியமான செயல்களை முன் கூட்டியே செய்து விடுவான். அருகில் இருப்பது போலவே இருந்தாலும் எவரும் மிக நெருங்கி அவனது கொள்கைகளில் தலையிட விடாமல் தள்ளியிருப்பான். வேன- மூங்கில் – மூங்கில் காட்டில் தீ தோன்றுவது போல நெருங்க முடியாதவனாகவும் இருப்பான்.
சாரணர்களைக் கொண்டு மக்களை உள்ளும் புறமும் எடை போட்டு வைத்திருப்பான். தலைமை பொறுப்பை அலட்சியமாக ஏற்று நடத்துவான். வாயுவும் ஆத்மாவும் உடலில் இருந்து செயல் படுவது போல. தண்டனை கொடுப்பதில் நியாயமாக இருப்பான். எதிரியானாலும் அவன் மகனை தண்டிக்க மாட்டான். தன் மகனேயானாலும் குற்றவாளி எனத்தெரிந்தால் தண்டிப்பான். இவனுடைய தர்மசக்கரம் தடையின்றி மானஸாசலம் வரை செல்லும். பகவான் சூரியன் உள்ளவரை இவனது புகழும் இருக்கும். இவர் தான் அரசன் என்று மக்கள் மகிழ்ந்து கொண்டாடும் வகையில் இருப்பான்.
திடமான விரதங்கள் உடையவன். , சத்யசந்தன், ப்ரும்ம தேவர்களான ப்ராம்மணர்களுக்கு ஆதரவாக இருப்பான். முதியவர்களிடம் மரியாதையாக இருப்பான். அடைக்கலம் அளிப்பவன். அனைவரையும் மதிக்கத் தெரிந்தவன். தீனர்களை அன்புடன் காப்பான். தன் மனைவியை தன்னில் பாதியாக மதிக்கத் தெரிந்தவன், பிற பெண்களைத் தாயாக காண்பான். பிரஜைகளிடம் தந்தை போல இருப்பான். ப்ரும்ம வாதிகளான ரிஷிகளிடம் கிங்கரன் போல சேவை செய்வான். மனிதர்களை தன்னைப் போலவே எண்ணி நடத்துவான். நண்பர்களிடம் ஆனந்தமாக இருப்பான். கூட்டங்களில் தெளிவாக பேசுவான். துஷ்டன் என்றால் தண்டிக்கத் தயங்க மாட்டான். த்ரயீ என்ற வேத புருஷனின் அவதாரம் இவன். உள்ளுறை ஆத்மாவே இவன். பரமாத்வானின் ஒரு பகுதியாக அவதரித்தவன். உலகை ஆள வந்தவன். ஆதலால் பலவிதமான பொருளற்ற புகழுரைகள் இவனுக்கு தேவையேயில்லை.
அரசர்களின் தலைவன். சூரியன் போல கைகளில் அம்பு வில் இவற்றுடன் தென் திசை நோக்கி யாத்திரை செல்வான். ஆங்காங்கு இருந்த சிற்றரசர்கள், தாங்களாகவே வரி செலுத்த வந்தனர். ஆதி ராஜன் சக்ராயுதம் வைத்திருப்பவன் என்று அனைவரும் மதிப்பும் மரியாதையுமாக எண்ணினர்.
நூறு அஸ்வமேத யாகங்கள் சரஸ்வதி நதிக் கரையில் செய்வான். அங்கு இவனது குதிரையை தேவேந்திரன் அபகரிப்பான். சனத் குமாரரை தன் மாளிகையில் சந்தித்து ஞானோபதேசம் பெறுவான். யாராலும் எதிர்க்க முடியாத பராக்ரமத்தோடு ராஜ்ய பாலனம் செய்பவனை விமரிசிக்க பயப்படுவார்கள். தடையின்றி உலகை சுற்றி வரும் பொழுது தன் தேஜஸால் அனைவரிடமும் சுமுகமாக இருப்பான். அதனால் தேவர்கள் மட்டுமல்ல, அசுரர்களும் புகழும்படி இருப்பான்
இவ்வாறு அரச சபையில் பாடும் வந்திகள்- பாடகர்கள். சொன்னார்கள்.
அதே போல ப்ருது என்ற அந்த அரசன் பிரஜைகள் போற்றும் படி இருந்தான். நாளடைவில் பூமியை சீராக்கி, பயிர்கள் நன்கு வளர தேவையானவைகளை விவசாயம் செய்பவர்களுக்கு கொடுத்து, மேலும் பல உதவிகளைச் செய்தான். பயிர் செழித்ததால் ராஜ்யத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். . மேட்டு நிலங்களை தன் வில்லால் பிளந்து சமமாக்கித் தந்தான். பாறைகளை அகற்ற உதவினான். ஆஜகவம் என்ற வில், அதை மீட்டி நாதம் வரச் செய்வான். வில்லை தோளில் தரித்தபடி செல்லும் சமயம், வாலை தூக்கிக் கொண்டு ம்ருகேந்திரனே உலாவுவது போல இருக்கும். பல சமயங்களில் தானே நிலத்தை உழுது சமன் செய்து விடுவான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதினாறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-26
அத்யாயம்-17
மைத்ரேயர் தொடர்ந்தார்: இவ்வாறு அந்த வேனன் மகன், தன் குணங்களாலேயே பிரசித்தி பெற்றான். வேண்டியவர்களுக்கு, தேவையானதைக் கொடுத்து, மரியாதைக்குரியவர்களை மதித்து வணங்கியும், முக்கியமான ப்ராம்மணர்களை , மற்ற வர்ணத்தினர், தன்னிடம் ஏவிய வேலைகளை செய்யும் பணியாளர்கள், முதல் மந்திரிகள், அரண்மனை ஆலோசகர்கள், ஊர் ப்ரமுகர்கள், ஜான பத தலைவர்கள், அவர்கள் வரிசைக் கிரமப் படி மதித்து நடந்து கொண்டான்.
விதுரர் கேட்டார்: பூமி பசு ரூபம் எடுத்தது ஏன்? பல விதமான ரூபம் உடையவள் தரித்ரீ என்ற பூ தேவி. அவளிடம் ப்ருது ராஜா என்ன கிடைக்கப் பெற்றான், கறந்தான் என்று சொன்னீர்கள். எதை கறந்தான்? எது கன்றாக இருந்தது? கறக்கப் பட்டது என்ன? இயற்கையிலேயே மேடும் பள்ளமுமாக இருந்தவள் பூ தேவி, அவளை எப்படி சமமாக்கினான்? அரசனுடைய யாக குதிரையை தேவர்கள் எதற்காக அபஹரித்தார்கள்?
ப்ரும்மன்! நீங்கள் ப்ரும்ம வித் – ப்ரும்மத்தை அறிந்தவர்களில் சிறந்த சனத் குமாரன் என்பவரிடம் கற்றவர்கள். ஞானம் விக்ஞானத்துடன் அறிந்தீர்கள். ராஜ ரிஷியாக இருந்த ப்ருது என்ன கதியடைந்தான்?
அதுவும், மற்றும் ஸ்ரீ க்ருஷ்ணர் சம்பந்தப் பட்ட பாகவத கதைகளையும் சொல்லுங்கள். நல்ல முறையில் சுவாரஸ்யமாக சொல்பவரிடம் கேட்பதே உயர்வு. விருப்பமுடன் கேட்கும் பக்தன் நான். உங்களுடைய, மற்றும் அதோக்ஷஜனுடைய கதைகளைச் சொல்லுங்கள். வேனன் மகனாக வந்த பகவான் பசுவை கறந்தான் என்பது பற்றி சொல்லுங்கள்.
மைத்ரேயர் சொன்னார்: ப்ருது அங்க ராஜ்யத்தில் அரச சபையில் முக்கியஸ்தர்களான ப்ராம்மணர்களால், அரசனாக அபிஷேகம் செய்து வைக்கப் பட்டான். ஜனங்களும் ஏற்றுக் கொண்டார்கள். ப்ருது ராஜ்யத்தை ஏற்றுக் கொண்ட சமயம், நாட்டில், பயங்கர பஞ்சம் வந்தது. பிரஜைகள், பசி, ஆகாரம் இல்லாமை, முதலியவற்றால் உடல் இளைத்து, அவரிடம் முறையிட்டனர்.
“அரசனே! நாங்கள் பசி கொடுமையால் மிகவும் தவிக்கிறோம். மரத்தின் உள்ளே அக்னி தகிப்பது போல. உங்களை சரணடைகிறோம். எங்களுக்கு உதவும் பதியாக எண்ணி எங்கள் கஷ்டங்களைச் சொல்கிறோம்.முதலில் எங்களுக்கு அன்னம் வேண்டும். பசி தாங்கவில்லை. எங்கள் உடலில் உயிர் வர, சக்தியை அளியுங்கள். லோகபாலன் நீங்கள்” என்றனர். ப்ருது திகைத்தான். பிரஜைகளின் இந்த நிலையை எப்படி சரி செய்வது? என்று சம்பந்தப் பட்டவர்களிடம் வினவினான். கலந்து ஆலோசித்து கையில் வில்லை எடுத்து பூமியை துளைக்க முயன்றான். அவன் கை வில்லை பார்த்து நடு நடுங்கி பூ தேவி துரத்தப் பட்ட மான் போல ஓடினாள். அவளை அரசன் துரத்திச் சென்றான். அவளைக் கண்டவர்கள் ம்ருத்யுவைக் கண்டது போல பயந்தனர். நானா திசைகளிலும் ஓடி யாரும் உதவ முன் வராததால், அரசனிடமே முறையிட்டாள். அவளும் தர்மம் அறிந்தவள் தானே. அதனால் “அரசனே உன் ப்ரஜைகளைக் காக்க என்னை அடிக்க வருகிறாய். என் குறையையும் கேள். என்னையும் நீ பாலிக்க வேண்டியவனே” என்றாள். நான் என்ன குற்றம் செய்தேன் என்று அடிக்க வருகிறாய்? தீனமான பெண் என்றும் பாராமல் கொல்லத் துணிகிறாய்? உன்னை தர்மம் அறிந்தவன் என்று சொல்கிறார்களே , அதற்கு தகுந்தவன் தானா? குற்றமே செய்திருந்தாலும், உடனடியாக பெண்களை துன்புறுத்த மாட்டார்கள். தீன வத்ஸலன் என்று பெயர் பெற்றவன், இப்படி செய்யலாமா? என்ன நினைத்து என்னை துளைக்க முயன்றாய்? என்னை துண்டாக்கி என்ன செய்யப் போகிறாய்? என்னை என்றும் அழியாத நாவம்- படகு, அதன் மேல் விஸ்வம்-உலகம் நிலைத்திருக்கிறது என்பர். மஹா பிரளய நீரின் மேல் நிலையாக நிறுவப் பட்டிருக்கிறது என்பதை அறியாதவனா? என்னை அழித்தால், உன்னுடன், உன் பிரஜைகளையும் அலை மோதும் நீரில் தான் தள்ளப் போகிறாயா?
ப்ருது சொன்னான்: வசுதே! என் சாஸனத்தில் உள்ளவள், என் உத்தரவை மீறுபவர்களை தண்டிப்பது என்ற முறையில் உன்னை தண்டிக்க வந்தேன். பூ லோக உயிரினங்களுக்கு உணவைத் தருவது உன் செயல். வசு- செல்வம் உன்னிடம் தான் இருக்கின்றன. தினமும் புல்லைத் தின்கிறாய், பால் தருவதில்லை. அதனால் துஷ்டை- அத்து மீறியவள் தண்டனைக்குரியவள். ஸ்வயம்பூ, அனைத்து ஔஷதிகளின் (தாவரங்கள்) விதைகளையும் உன்னிடம் ஒப்படைத்தார். நீ அதை வளர விடாமல் வைத்திருக்கிறாய். இதோ பார், இவர்கள் உணவு இல்லாமல் வாடி வதங்கி இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டத்தை போக்க நான் என்ன செய்வேன். அதனால் உன்னிடம் ஒளித்து வைத்திருப்பதை என் பாணங்களால் வெளிக் கொணரப் போகிறேன். பெண் என்று சொல்கிறாய். யாராயிருந்தாலும் மற்றவர்களிடம் இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டால், என் போன்றவர்கள் வதைக்கத்தான் செய்வார்கள். பசு வேடம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். உன் மாயையை அறிவேன். என் பிரஜைகளை காப்பாற்ற உன்னை துளைத்து எடுக்கப் போகிறேன்.
ஆத்திரத்துடன் க்ருதாந்தன் -யமன்- போல பேசும் அரசனை விட்டு பூமி பகவானை துதி செய்தாள்.
‘நம: பரஸ்மை புருஷாய ‘ முதல் தேவனான பரம புருஷனை வணங்குகிறேன். உன் மாயையால் பலவித உருவங்கள் எடுத்துக் கொள்கிறாய். குணமயமானவன் நீ. உன் ஸ்வரூத்துக்கு ஏற்றபடி செல்வமோ, செயலோ, செய்வித்தலோ, மாற்றுவதோ உன் வழக்கம்.
உன்னால் நான் நியமிக்கப் பட்டேன். ப்ரும்மாவால் என்னிடத்தில் பொருள்கள் சேமித்து வைக்கப் பட்டன. இந்த அரசன் வில்லும் கையுமாக வந்து மிரட்டுகிறான். உன்னையன்றி வேறு யாரிடம் சரணடைவேன்?
முன்னொரு சமயம், உலக ஸ்ருஷ்டிக்காக, சராசரத்தையும் தன் மாயையால் என்னிடம் ரகசியமாக வைத்து பாதுகாக்கச் சொல்லி ஆணையிட்டாய். அதைத் தான் நான் செய்கிறேன். தர்ம பரமாக நான் செய்வதை இந்த அரசன் அழிக்கப் பார்க்கிறான்.
ஈசன் தாங்கள் சேமித்த செல்வம் தானே இது.. விவரம் தெரியாத இந்த ஜனங்கள் ஜயிக்க முடியாத உன் மாயையை அறியாமல், நீதான் செய்கிறாய், செய்விக்கிறாய், நீயே ஏகன், நீயே அனேகன் மேலான பரமேஸ்வரன் என்பதை தெரிந்து கொள்ளாமல், என்னை குற்றம் சொல்கிறார்கள்.
யுகங்கள் தோறும் ஸ்ருஷ்டிக்காக திரும்பவும் தேவையானவற்றை என்னிடம் பாதுகாப்பாக வைத்திருந்து, உன் சக்தியால், த்ரவ்ய, க்ரியா, காரக, சேதன, ஆத்மா இவைகளைக் கொண்டு பழையபடி உலகை உருவாக்குகிறாய். அந்த அளவற்ற சக்திக்கு நமஸ்காரம். அந்த பர புருஷனான வேத ரூபமான உனக்கு நமஸ்காரம்.
விபோ! தாங்களே நிர்மாணித்த இந்த உலகம் பூத,இந்திரிய, அந்த:கரண இவைகளின் கூட்டால் அமைந்தது. என்னை ரஸாதளத்திலிருந்து காப்பாற்றி கொண்டு வந்து ப்ரளய ஜலத்தில் ஸ்தாபித்தாய். ஆதி வராகனாக வந்த உனக்கு நமஸ்காரம். ஜலத்தில் தடுமாறிய என்னை நிலை நிறுத்திய தாங்கள் தான் என்னை தற்சமயம் காக்கவும் வேண்டும். அதே வீர மூர்த்தி இப்பொழுது ராஜ்ய பாலகனாக உக்ர மூர்த்தியாக கொடிய அம்புகளல் அடிக்கத் தயாராக நிற்கிறாய்.
புகழ் பெற்ற வீரர்கள், உன் குணங்களை பாடுபவர்கள், ஈஸ்வரனாக வணங்குபவர்கள், என்னைப் போலவே மனம் கலங்கி நிற்பார்கள். இந்த யுகத்தின் மாயை இது என்பதா. அந்த வீரர்களுக்கு நமஸ்காரம்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதினேழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-36
அத்யாயம்-18
இவ்வாறு பகவானை துதி செய்த பின் பூதேவி, பயம் நீங்காதவளாக தன்னை சமாளித்துக் கொண்டு மேலும் ப்ருதுவைப் பார்த்து சொன்னாள்: உன் கோபத்தை அடக்கிக் கொள். நான் சொன்னதை யோசித்துப் பார். தேன் வண்டு போல நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வது தான் பெரியோர்களுக்கு அழகு. இந்த உலகில், அல்லது பரலோகத்தில், தத்வ தரிசிகளான முனிவர்கள் மனிதர்கள் நன்மை பெற யோகம் என்பதே சிறந்த வழி என்று சொன்னார்கள். முன் சென்றவர்கள் காட்டிய வழி, அதில் தனக்கு பயன்படும் உபாயங்களை கண்டு கொள்ளலாம். சிலர் சிரத்தையுடன் தாங்களே முனைந்து எது நல்லது என்று அறிந்து கொள்கிறார்கள். இவைகளைக் கண்டு கொள்ளாமல் தானாக தான்தோன்றித் தனமாக செய்ய ஆரம்பிப்பவர்கள் திரும்பத் திரும்ப ஆரம்பித்து முடிவைக் காணாமல் பாதியில் நிறுத்தி, நேரமும் பொருளும் நஷ்டமாகும்,
அரசனே! முன் ப்ரும்மா ஔஷதிகள் (பச்சிலையுடைய செடி கொடிகள்) உணவிற்காக ஏற்படுத்தினார். அதை சில மூடர்கள் முறையின்றி பயன் படுத்தி அழித்தார்கள். நான் அதை பார்த்தேன். அனாவசியமாக திருடப் படுகிறது, முக்கியமான சில செடி கொடிகள், விளை பொருள்கள், யாக காரியத்தில் முக்கியமாக கருதப் படுபவை, உங்களைப் போன்ற லோக பாலகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசர்கள் கண்டு கொள்ளவேயில்லை. காலப் போக்கில் அந்த விதைகள் க்ஷீணமடைந்து விட்டன. பல நாட்களாக நானும் அதை காக்கவே முயன்று வந்துள்ளேன். நீயே பார். எனக்கு ஒரு கன்றைக் கொடு. கன்றிடம் வாத்ஸல்யம் உடைய பசு நான். நான் பாலாக உன் தேவைகளைத் தருகிறேன். அனுரூபமான தோஹனம்- கறந்த பாலை வைக்கத் தகுந்த பாத்திரம். அதையும் கொடு. கறப்பவனாக பகவானே இருக்கட்டும். பூவுலகில் அடைக்கலம் தருபவனாக விளங்கும் பகவான் விரும்பினால், வேண்டிய அளவு அன்னம், கறந்து கொள். தேவர்கள் மழை பொழியாமல் விட்டாலும் என்னிடம் நீர் இருக்கவேண்டும். தண்ணீர் தங்க வேண்டுமானால் நிலம் சமமாக இருக்க வேண்டும். . அதனால் நிலத்தை சமமாக்கு. அதற்கு சமமாக என்னிடம் பாலையும் பெறுவாய்.
அரசனும் அவ்வாறே ஸ்வாயம்புவ மனுவை கன்றாக வைத்து, தன் கைகளாலேயே கறந்து ஔஷதிகள்- தாவரங்கள், செடி கொடிகள் முதலியவைகளைப் பெற்றான். (நிலத்தை சமன் செய்து, தண்ணீரையும் பெருமளவில் தங்கச் செய்து செடி கொடிகளையும், தாவரங்களையும் வளரச் செய்தான் என்பது உட்பொருள் தன் கைகளே பாத்திரமாக, -தன் புஜ வலிமையே மூல தனமான பூமியை வளப்படுத்தினதாக )
மற்றும் சில அறிஞர்கள், ப்ருது கறந்து கொண்டபின் , தங்களுக்கு வேண்டிய அளவு கறந்து கொண்டார்கள்.
ரிஷிகள், ப்ருஹஸ்பதியை கன்றாக வைத்து, சந்தோ மயமான (வேத மயமான) சுத்தமான பாலைக் கறந்து கொண்டார்கள். ( அராஜகமான வேன ராஜ்யத்தில் வேத பரமான யாகங்கள் எதுவும் செய்ய முடியாமல் இருந்ததை இதன் பின் தொடர்ந்தனர்)
தேவர்கள், இந்திரனை கன்றாக வைத்து பொன் மயமான பாத்திரத்தில் சோமம், வீர்யம், ஓஜஸ் என்ற பலம், இவைகளை பாலாக கறந்து கொண்டார்கள்.
தைத்யர்கள்- திதி புத்திர்கள், தானவர்கள், ப்ரஹ்லாதனை கன்றாக வைத்து, இரும்பு பாத்திரத்தில் தேவ மதுவை பாலாக கறந்து கொண்டனர். (ஓவ்வொரு யுகத்திலும் ப்ரஹ்லாதன் பிறப்பான் என்றபடி தங்கள் வம்ச நன்மையை விரும்பினர்)
கந்தர்வ அப்சரஸ் என்பவர்கள், விஸ்வாவசு என்பவரை கன்றாக வைத்து பத்ம மயமான பாத்திரத்தில், மது சௌபகம் காந்தர்வம் (கந்தர்வர்களுக்கு உரியதான மது சௌபகம்) என்ற பாலை கறந்து கொண்டனர்.
சிரார்த தேவதைகள் என்பவர்கள், மகா பாக்கியசாலிகளான சிலர், . பித்ருக்கள் சிரத்தையுடன் சூரியனை கன்றாக வைத்து மண் பாத்திரத்தில் கவ்யம் (कव्यम्) என்ற பாலை கறந்து கொண்டனர்.
சித்தர்கள் கபிலரை கன்றாக வைத்து, சங்கல்பமே பிரதானமான சித்திகளை, வான சாஸ்திர வித்தைகளை அவர்களும், வித்யாதரர்களும் பெற்றனர்.
மற்றும் சிலர் மாயா என்பதை மாயையை விரும்பும் மாயாவிகள், அந்தர்தானம், அத்புதம், இவைகளை செய்து காட்டும் அறிவை மயனை கன்றாக வைத்து தாரணையே (கற்றதை பலமுறை செய்து செய்து பார்த்தல்) பிரதானமாக உள்ளவைகளை கறந்தனர்.
யக்ஷ ராக்ஷஸர்கள் பூதங்கள் பிசாசங்கள், இரவில் நடமாடும் சிலர், பூதேசன்- சிவன் அன்பர்கள் கபாலம், ரக்தம் இவற்றை கறந்து கொண்டனர்.
பாம்புகள் சர்ப்பங்கள், நாகங்கள், தக்ஷகனை கன்றாக வைத்து விஷத்தை பில (பள்ளம்) பாத்திரத்தில் கறந்து கொண்டனர்.
பசுக்கள், காளையை கன்றாக்கி புல்லை,, பெரிய பற்களையுடைய ம்ருகேந்திரன் அரண்யமே பாத்ரமாக பற்கள் உடைய மிருகங்களை கறந்து கொண்டனர்.
மாமிசம் உண்ணும் ப்ராணிகள், மாமிசத்திற்கு ஏற்றவைகளை, சுபர்ணனை கன்றாக வைத்து பறவைகள் அசையும் அசையா பொருட்களுடன் சராசரத்தை விரும்பின.
வட வ்ருக்ஷம் என்ற ஆல மரத்தை கன்றாக வைத்து காட்டு மரங்கள், தனித் தனி விதமான பாலை பெற்றன. மலைகள் ஹிமவானை கன்றாக வைத்து, பலவிதமான தாதுக்கள் தங்கள் மலைச் சாரல்களில் பெற்றன.
இவ்வாறு ஒருவருவரும், தாங்கள் உயர்வாக எண்ணுவதை வைத்து, பூ தேவியின் பால் (உதவியால்) தங்களுக்கு ஏற்ற பாத்திரங்களில் சகல விருப்பங்களையும் தரும் பூதேவியின் அருளால் பெற்றனர். இதனால் மகிழ்ந்த ப்ருது அரசன், அன்புடன் பூதேயை தன் மகளாக ஏற்றுக் கொண்டான். அவள் சொன்னபடியே முடிந்தவரை மேடு பள்ளங்களை சீராக்கி தண்ணீர் தேங்கும்படி குளங்களை வெட்டி, கிராமங்களை, சற்று பெரிய நகரங்களை நிர்மாணித்தான். கோட்டைகளை, தானியங்கள் சேகரிக்கும் இடங்கள், கோசாலைகள், வ்ரஜ எனும் கால் நடைகளை வளர்க்கும் இடங்கள், போர் வீரர்களுக்கான கூடாரங்கள், வேட்டையாடுபவர்களுக்கான கேடம்(खेट्म्) என்ற இடங்கள், வியாபாரிகளுக்கான தனி இடங்கள், முதலியவற்றை நிர்மாணித்தான். இது வரை இது போல பொதுமக்கள் நலத்துக்கான இடங்கள் இருந்திருக்கவில்லை என்பதால் ப்ருது முதல் அரசன் புரம்- நகரம் என்பதை நிர்மாணித்தான். மக்கள் பயமின்றி வாழ்ந்தனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதினெட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-32
அத்யாயம்-19
அதன் பின் ப்ருது, அரசனாக பல யாகங்களை செய்தான். மனுவின் ப்ரும்மாவர்தம் என்ற இடத்தில், கிழக்கு திசையில் சரஸ்வதி நதிக் கரையில், நூறு யாகங்கள் செய்தான். அதைப் பார்த்து, தன்னுடைய தனி சிறப்பு அது என்பதால் நூறு யாகங்கள் செய்தவன் என்று சிறப்பு பெயராக ‘சதக்ரது’ என்ற அழைக்கப் பட்ட இந்திரன் பொறாமை கொண்டான். யாக குண்டத்தில் தானே சாக்ஷாத் பகவான் ஸ்ரீ ஹரி, ஈஸ்வரன், தோன்றினான். ப்ரபு தானே சர்வ லோக குரு.
இந்திரனுடன், ப்ரும்மா, முதல் லோகபாலர்கள், கந்தர்வர்கள் பாடிக் கொண்டு வர, முனிகளும் அப்சரர்களும், சித்தர்கள், வித்யாதரர்கள், தைத்ய தானவர்கள், பகவானின் பார்ஷதர்கள் (பிரதான காவலர்கள்) சுனந்த நந்தன் என்பவர்களும், மற்றும் முக்கிய அனுசரர்கள், (பணியாட்கள்) கபிலர், நாரதர், தத்தர், யோகேசர்கள், சனகன் முதலானோர், அனைவரும் வந்தனர். பாகவதர்கள் இவர்களைப் பார்த்து உத்சாகமாக உடன் வந்தனர்.
ப்ருதுவின் ராஜ்யத்தில் பூமி சகல சௌக்யங்களையும், செல்வங்களையும் தருபவளாக இருப்பதைக் காணவே வந்தனர். எஜமானான அரசன் வேண்டிக் கொண்டான் என்று, செல்வங்களை பூ தேவி பாலாக வர்ஷிக்கிறாள், என்பது ஆச்சர்யம். நதிகள் அனைத்து ரஸங்களையும் – பால், தயிர், அன்னம், முதலியவைகளின் ருசியுடன், மரங்கள் பழங்கள் பெருமளவு தேன் வடியும் ருசியுடன் பழங்களுடன், என்று இருப்பதைக் கண்டனர். சமுத்திரங்கள், ரத்னங்களின் பெட்டகம் போலவும், மலைகள் நான்கு விதமான ஆகாரங்களைத் தருவதாகவும், பொது மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய அதிகாரிகள் இருப்பதையும் கண்டு அதிசயித்தனர்.
இதைக் கண்டு, இந்திரனின் அசூயை வளர்ந்தது அதோக்ஷஜன் தானே ப்ருதுவாக வந்திருக்கிறான் என்பது கூட நினைவில்லை. யாகத்தை தடுக்கவே முயன்றான். சத மேத என்ற அஸ்வமேத யாகத்தின் யக்ஞ பசு எனப்படும் நூறாவதான கடைசி அஸ்வம், அதை திருடிக் கொண்டு அந்தர்தானமானான்.
வேகமாக கிளம்பிச் சென்றவனை அத்ரி மகரிஷி பார்த்தார். இது என்ன அக்ரமம் என்று நினைத்தார். தர்மம் அறியாதவனா, ஏன் இப்படி அதர்மத்தை அவிழ்த்து விட்டது போல செய்கிறான் என்று நினைத்தார்.
அத்ரி மகரிஷி ப்ருதுவின் மகனிடம் இந்த விஷயத்தைச் சொன்னதும் அவன் நில் நில் என்று கத்தியபடியே இந்திரனை பின் தொடர்ந்தான். ஆனால் அவனுடைய தார்மிகமான உருவத்தை பார்த்து தயங்கினான். ரிஷிகள் போன்ற உருவம், உடல் முழுவதும் பஸ்ம-விபூதி தரித்த கோலம், பாணத்தை பிரயோகிக்க யோசித்தான். திரும்பி வந்தவனைப் பார்த்து அத்ரி சொன்னார்: மகனே! யாராயிருந்தாலும் யாகத்தை, அது நடந்து கொண்டிருக்கும் சமயம் தடுப்பவன் மஹா அதமன். அவனை வதைக்கத் தான் வேண்டும். மஹேந்திரன் தான் ஆனாலும் இது பெரிய குற்றம். ராவணன் ஜடாயுவை அடித்தது போல, ப்ருது புத்திரன், இந்திரனை தொடர்ந்து சென்று தாக்கினான். இந்திரனை கொல்லாமல் சாமர்த்யமாக வென்று, யாக பசுவை- அஸ்வத்தை கவர்ந்து கொண்டு யாக சாலைக்குத் திரும்பினான். அத்ரி மகரிஷி மகிழ்ந்து அவனுக்கு விஜிதாஸ்வ – என்று பெயர் சூட்டினார்.
ப்ருதுவும் இந்திரனின் மாயா ரூபத்தை அடிக்க தன் வில்லை எடுத்தான். கூடியிருந்த ரிஷிகள் தடுத்தனர். யாகத்தை முடிக்காமல் யுத்தம் செய்ய வேண்டாம். ஏகோன சத க்ரது: – ஒன்று குறைய நூறு யாகம் செய்தவன் என்று இருக்கட்டுமே. நீயோ மோக்ஷம் அடைவதையே விரும்புவாய், விடு, என்று சமாதானப்படுத்தினர். பகவானின் அம்சம் உடையவன் இந்திரன். அவனுக்கு சில பொறுப்புகள் பகவானே கொடுத்திருக்கிறார். இருவருமே உலக நன்மைக்காக செய்ய வேண்டியவை பல உள்ளன. நீயும் உத்தம ஸ்லோகன் – புகழ் வாய்த்தவன். அரசனே! இதை நினைத்து வருந்தாதே. நாங்கள் சொல்வதைக் கேள் என்றனர். இவ்வாறு நம்மை மீறி வரும் தடைகளை தெய்வ சங்கல்பம், என்று அத்துடன் விட்டு விடு. அதிக ஆத்திரம் மனதை குழப்பும். இந்த யாகத்தை இத்துடன் முடிப்போம். இந்திரன் தான் பாஷாண்டியாக – அதர்மியாக செய்தால், நாமும் அதே போல அவனைத் தண்டித்து அதர்மத்தை செய்ய வேண்டாம். தர்மத்தை காக்க வந்தவன் நீ. தர்மம் அந்தந்த நேரத்தை பொறுத்தது. வேனனின் அக்கிரமத்தால் உலகம் கஷ்டப் படுவதைத் தடுக்க அவதரித்தாய், அவன் மகனே ஆனாலும் விஷ்ணுவின் பகுதியாக இந்த அவதாரம் என்பதை அறிவோம்.
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு லோக குரு சொல்லி அரசனை அவப்ருத ஸ்னானம் என்பதை செய்து யாகத்தை முடிக்க வைத்தார். வந்திருந்த அறிஞர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். அரசனுக்கு ஏராளமான ஆசிகளை அளித்தனர். அவர்களை கௌரவித்து, தானங்களை தாராளமாக செய்து அரசனும் அவர்களை சந்தோஷமாக அனுப்பி வைத்தான். பித்ருக்கள், தேவர்கள், ரிஷி, பொது ஜனங்கள் என்று அனைவருக்கும் செய்ய வேண்டியவைகளை குறைவறச் செய்தான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பத்தொன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-42
அத்யாயம்-20
வைகுண்டத்திலிருந்து பகவான் இந்திரனுடன் ப்ருது ராஜனை சந்திக்க வந்தார். நூறு யாகம் செய்ய முயன்றதையும் பாராட்டினார். யாக பதி யான பகவான் , ஒன்று குறைந்தாலும் நான் மகிழ்ந்தேன் என்றார். இந்த இந்திரன் அஸ்வத்தை கவர்ந்து சென்று யாக காரியத்தை நிறுத்தி விட்டான் என்று அறிந்தேன். அவனை மன்னித்து விடு.
மனிதர்களின் அரசன் குடி மக்களுக்கு தேவ சமானமானவன். உத்தமர்கள் எனப்படும் நல்ல மனிதர்கள் பொறாமைக்கு இடம் கொடுப்பதில்லை. ஏனெனில் ஆத்மா வேறு, உடல் வேறு என்று அறிந்தவர்கள் தான். உன் போன்ற பதவியில் இருப்பார்கள் இப்படி பொறாமைக்கு இடம் கொடுத்தால் இதுவரை செய்த நல்ல காரியங்கள் மறந்து போகும். வித்வானாக இருப்பவன் பற்றின்றி இருப்பான். தன் குழந்தைகள், செல்வம், இவைகளை தனது என்று ஒரு போதும் எப்படி நினைக்க மாட்டான். சுத்தமான ஸ்வயம் ஜோதி ஒன்றே. அது நிர்குணமானது. மறு பக்கம் குணங்களே நிரம்பியது. எதையும் தள்ளி நின்று சாக்ஷியாக மட்டுமே இருந்து பார்க்கும் பரமாத்மா. ஆத்மாவை விட மேம் பட்டது. உயிரினங்களின் ஹ்ருதயத்தில் இருந்தும், பார்வையாளனாக இருக்கும் பரமாத்மாவை அறிந்தவர்கள் கூட, என் உள்ளத்தில் பரமாத்மா இருந்து என்னை இயக்குகிறான், ஆனாலும் என் செயல்கள் அவனை பாதிப்பதில்லை என்பதை அறிவார்கள். தன் குல வழக்கப் படி தினமும் என்னை சிரத்தையுடன் பஜிப்பவன் நாளடைவில் சந்தோஷமாக இருப்பான். பர தத்வத்தை உள்ளபடி அறிவான். அவனது எண்ணங்கள் பரவலாகும். உலகில் அனைத்தும் ஒன்றேயான பர தத்வத்தின் பல ரூபங்கள் என்பதை உணர்வான். அதனால் எந்த பற்றுதலும் இன்றி இருக்கும் உள்ளத்தில் சாந்தியே நிரம்பியிருக்கும். ப்ரும்ம கைவல்யம் அடைவான். (மறு பிறவி இராது) செல்வம், ஞானம், க்ரியா இவைகள் இந்த நிலையில் அவனை பாதிப்பதில்லை. உள்ளிருக்கும் ஆத்மாவை அறிந்தவன் நல்ல கதியை அடைவான் என்பதில் சந்தேகமில்லை. மற்றவர்களின் மேன்மையான குணங்களோ, சம்பத்துக்களோ, கண் எதிரே தெரியும் அவர்களின் சுக துக்கங்களோ, உன் போன்ற ஸூரிகள் – பெரும் பதவிகளில் இருப்பவர்கள், பொருட்படுத்தக் கூடாது. வீரனே! உன் கடமையை செய். லோக ரக்ஷணம் என்பது தான் உனக்கு விதிக்கப் பட்ட கடமை. உனக்கு சமமாகவோ, உயர்வாகவோ, மட்டமாகவோ யார் எப்படி இருந்தாலும் அரசனுக்கு தன் பிரஜை என்ற ஒரே அளவு கோல் தான் . அதன்படி சம மான பொறுப்புடன் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரஜா பாலனம் அவன் தொழில்.
செழிப்பான காலத்தில் லாபத்தில் ஆறு அம்சம்(6%) வரி வசூலிக்க வேண்டும். மற்ற பிரஜைகளின் நன்மைக்காக இதை செய்ய வேண்டும். பிரஜைகளின் புண்யத்தில் அரசனுக்கான பங்கை பெறுகிறான். அதனால், அவர்களை ரக்ஷிக்காமல் விட்டால் பாபத்திலும் பங்கை பெறுவான். அதனால் வரி வசூலிப்பது நாட்டிற்காகவே. அது போலவே தன் குணத்தால் செயலால் உயர்வான். செய்தால் பாராட்டுவதை விட, செய்யாமல் விட்டால் அதிகமாக தூஷிக்கப் படுவான். அவனுக்கு விதிக்கப் பட்ட செயல்களை, ப்ராம்மணர்கள், ஊர் முக்யஸ்தர்கள், தர்மம் அறிந்தவர்கள், இவர்களின் வழி காட்டுதலில், தன் கொள்கையையும் நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவன். அரசனே, என்னிடம் வேண்டும் வரம் கேள். உன் குண சீலம் இவற்றால் நான் மகிழ்ந்தேன். யாகமோ, தவமோ, யோகமோ இவைகளால் மட்டும் என்னை சுலபமாக அடைய முடியாது. சம சித்தன்- எந்த நிலையிலும் தன் சமமான-நியாயமான உணர்வை மீறாதவன் எனக்கு அருகில் இருக்கிறான்.
இவ்வாறு லோக குருவான பகவானால் அறிவுறுத்தப் பட்ட அரசன் ப்ருது, தலை வணங்கி அதை ஏற்றுக் கொண்டான். ஆணையிடுங்கள், நான் என்ன செய்ய வேண்டும் என்றான். மகேந்திரன், வெட்கி தலை குனிந்து நின்றிருந்தான். அவனை அணைத்து சமாதானப் படுத்தி அவனை விரோதியாக எண்ணியதை விட்டு, விட்டான்.
அதன் பின் ப்ருது ராஜா செய்த மரியாதைகளையும், பக்தியுடன் சரணங்களில் செய்த அர்ச்சனைகளையும் ஏற்றுக் கொண்டார். உடனே கிளம்பாமல் சற்று நேரம் அங்கு இருந்தார். கண்களில் நீர் வழிய ஆதி ராஜன் எதிரில் நின்ற ஸ்ரீ ஹரியை கை கூப்பியபடி பார்த்தபடி இருந்தான். எதுவும் பேச முடியாமல் குரல் தழ தழத்தது. உண்மை தானா, ஹ்ருதய குகையில் இருப்பதாக சொல்லப் படும் பகவான் எதிரிலா நிற்கிறேன் என்று நம்ப முடியாமல் திகைத்தவன் போல இருந்தான்.
ப்ருது “ ப்ரபோ! தங்களோ வேண்டிய வரங்களை தருபவர். உங்களிடம் என்ன யாசிப்பேன்? இந்த மனித உலகின் போகங்களைக் கேட்பேனா? தன்னை வசப் படுத்திக் கொண்டவனுக்கு இவைகளால் என்ன லாபம்? ஸ்வர்கம் வேண்டும் என்பேனா? இங்கு பல அறிஞர்கள் கூடி பகவானின் பதாம்போஜத்தில் பக்தியுடன் பாடியும் பேசியும் அனுபவிக்கிறார்களே , எதேச்சையாக கேட்டவர்கள் கூட நன்மைகளை அடைகிறார்களே, அந்த சுகம் அங்கு இல்லையே, அதனால் அதுவும் எனக்கு உயர்வாக படவில்லை. அதனால் எனக்கு உன்னிடம் அசையாத பக்தியைக் கொடு. இந்த பூ உலகில் பூஜை செய்தும், உங்கள் அருளை எண்ணி பாடியும், பேசியும், மற்றவர்களிடம் கேட்டும் என் வாழ்வை நிறைவாக்கிக் கொள்வேன். லக்ஷ்மி தேவியைப் போல அனவரதமும் தங்கள் அருகிலேயே இருக்க வேண்டும். எந்த இடத்தில் சாதுக்கள், உன்னை பூஜிக்கிறார்களோ அங்கு லக்ஷ்மி தேவி கண்டிப்பாக இருப்பாள், அது போன்ற நிலையை எனக்கும் கொடு. ஜகஜ்ஜனனீ என்று அவளைப் போற்றுகிறோம். எந்த செயலும் செய்யும் முன் அவளை வேண்டி ஆரம்பிக்கிறோம். தீன வத்ஸலன் நீ உன்னை வணங்கினாலே அவள் அருளும் கிடைத்துவிடும். தந்தை தனயனுக்கு செய்வது போல என்றும் உங்கள் அருளும் ஆசியும் வேண்டுகிறேன்.
மைத்ரேயர் சொன்னார்: இப்படி ஆதி ராஜன் துதி செய்ததும், பகவான் அப்படியே ஆகட்டும். நல்ல காலம், உனக்கு இது போன்ற மெய்யறிவு அமைந்துள்ளது. நாளடைவில் என் மாயையான இந்த பிறவி பெரும்கடலை கடப்பாய். ப்ரஜாபதே! நான் சொன்ன அறிவுரைகளின் படி ஆண்டு வருவாய். நல்லதே நடக்கும். என்றார்.
இவ்வாறு ராஜரிஷியான ப்ருதுவுக்கு ஆசீர்வாதம் செய்து விட்டு பகவான் கிளம்பினார். தேவரிஷிகளும், பித்ருக்களும், கந்தர்வ, சித்த சாரணர்களும், மற்றும் உலகில் பலரும், யக்ஞேஸ்வரனின் சம்பாஷனையைக் கேட்க வந்தவர்கள் உடன் திரும்பிச் சென்றனர். அவர் கண்களிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு அரசனும் அவனது மந்திரிகள், ஆசிரியர்கள் திரும்பிச் சென்றனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-38
அத்யாயம்-21
பகவானின் அருள் வாக்கை பெற்றவன் என்று ஜனங்கள் ப்ருது அரசனை மிகவும் மதித்து மகிழ்ந்து வரவேற்றனர். ஆங்காங்கு வரவேற்பு அலங்கார வளைவுகள், தோரணங்கள், பூக்கள், பூ மாலைகள், சுவர்ண தோரணங்கள் என்று ஊர் முழுவதும் அலங்கரித்து விட்டனர். சந்தன, அகரு,வாசனை கலந்த நீர் தெளித்து தெருக்களும், ராஜ வீதிகளும் மணத்தன. உதிரி புஷ்பங்கள், அக்ஷதை, பொரி முதலியவைகளைக் கொண்டு வழியெங்கும் மங்களமாக செய்திருந்தனர். தூண்களில் வாழைக் குலைகளுடன் வாழை மரங்கள் கட்டப் பட்டிருந்தன, பூக (பாக்கு) மரங்களின் சிறு செடிகள் நடப்பட்டன. வரிசையாக விளக்குகள் ஏற்றி, சிறுவர் முதல் பல வயதிலும் உள்ள பெண்கள் ஆரத்தியுடன் தயாராக நின்றனர். சங்க, துந்துபி வாத்யங்கள் முழங்கின.
வேத கோஷம் செய்யும் பெரியவர்கள் முன் செல்ல அரசன் ப்ருது தன் நகரில் நுழைந்தான். அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பல துறைகளிலும் முன்னோடியாக இருந்து புகழ் பெற்ற பெரியவர்கள் வந்து ஆசீர்வதித்தனர். கிரமங்களிலிருந்தும், பெரிய நகரங்களிலிருந்தும் வந்திருந்த ஊர் மக்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிய வந்தனர். செயற்கரிய செய்தவன் என்று கொண்டாடினார்கள். பல ஆண்டுகள் நல்லபடியாக ராஜ்யத்தை ஆண்டபின் பரம பதம் சென்றான்.
சூதர் சொன்னார்: ஆதி ராஜன் என்று பெயர் பெற்ற ப்ருதுவின் கதையைக் கேட்டபின்னும் விதுரர் மேலும் வினவினார். குணவான் அதனால் புகழ் பெற்றான். அது மட்டுமல்ல. ஜனங்களின் அன்பையும் பெற்றான். முனிவரே! பூதேவியால்அனுக்ரஹிக்கப் பட்டான். வைஷ்ணவ தேஜஸ் உடையவன் , பூதேவியிடம் வேண்டிய பொருள்களைப் பெற்றான் என்று தெரிந்து கொண்டேன். என்ன பொருள்கள், எப்படி அவனுக்கு கிடைத்தன? அதையும் சொல்லுங்கள் என்றார். பின்னால் வந்த அரசர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறான். எப்படி ராஜ்ய பரிபாலனம் செய்வது என்பதை அவன் சரித்திரம் சொல்கிறது. இன்று வரை எல்லா அரசர்களும் ப்ருதுவின் பாதையில் தடங்கலின்றி செல்கிறார்கள்.
மைத்ரேயர் சொன்னார்: கங்கை யமுனை நதிகளின் இடைப் பட்ட நிலத்தை ஆண்டவன். ஏழுதீவுகள் உள்ள பூமியில் ஒருவனே சாசகனாக, செங்கோல் செலுத்தினான். ப்ராம்மணர்கள், அச்யுத கோத்ரர்கள், மற்றும் பலரும் அவன் ஆணையை ஏற்றுக் கொண்டனர்.
ஒரு சமயம் பல அறிஞர்கள், ரிஷிகள், சாதுக்கள்,நிறைந்த சபையைக் கூட்டி அவர்கள் அபிப்ராயத்தைக் கேட்டான். “சபையோர்களே! கேளுங்கள். கேட்டபின் உங்கள் எண்ணத்தை சொல்லுங்கள். எதுவானாலும், அந்தந்த துறையில் உள்ளவர்கள் அனுபவம் மிக்கவர்களின் சொல் ஏற்க வேண்டியதே. அறிந்து கொள்ளத்தான் கேட்கிறேன், அரசனாக ஆணையிடவில்லை. மிகுந்த பிரயாசைகளுடன் என்னை வேனன் வம்சத்தினனாக ஏற்று அரசனாக்கினீர்கள். அதனால் என் கடமைகளும் ஏராளமாக இருந்தன. துஷ்ட நிக்ரஹம் என்று சிலரை தண்டித்தேன். தன் தர்மத்தை அனுசரித்து அமைதியாக வாழ விரும்பும் பிரஜைகளுக்கு அவ்வாறே வேண்டியவைகள் குறைவற கிடைக்கும்படி செய்துள்ளேன். தொழில் செய்யும் மக்களுக்கு அதற்கான சாதனங்களை, வசதிகளை செய்து கொடுத்தேன். அரசன் நியாயமாக செய்யவேண்டியதைச் செய்தால் பகவான் திருப்தியடைவான் என்று வேதம் அறிந்த பெரியவர்கள் சொல்வார்கள். மக்களிடம் வரியை வசூலித்துக் கொண்டு ப்ரதி பலனாக அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டால், அரசன் அந்த மக்களுடைய பாப கர்மாக்களின் பலனையும் ஏற்க வேண்டியிருக்கும் என்றும் சொன்னார்கள். பொது ஜனங்கள் தங்கள் குல தர்மப் படி தங்கள் செயல்களை செய்து வந்தாலே அரசனுக்கு நன்மை. அதுவே அவர்கள் தங்கள் குல தர்மத்தை செய்ய முடியாமல் சிரமப்பட்டால், அதன் பலன் எனக்கு தீமையாக முடியும்.ஹே! ப்ரஜா:! பிரஜைகளே நீங்கள் உங்கள் சுய நலத்திற்காக, குடும்ப நலனுக்காக செய்யும் நல்ல காரியங்களில் எனக்கும் பங்கு உண்டு என்பதால், உங்கள் குல தர்மானுஷ்டானங்களை குறைவற செய்யுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.
என் குல மூத்தோர்கள், மனுவிலிருந்து ஆரம்பித்து, உத்தானபாத, துருவ, ராஜ ரிஷி ப்ரியவ்ரதன், என் தாத்தா, அங்க ராஜா வரை, மற்றும் ப்ரும்மா, மகேஸ்வரன், ப்ரஹ்லாதன், பலி என்ற பலரும் , நான்கு வித புருஷார்த்தங்களும் (தர்மார்த காம,மோக்ஷம்) பகவான் அருளால் மட்டுமே சாத்யம் என்று நம்பினர். கர்மம் தானாக பலன் தராது. இதில் மாற்று கருத்து இல்லை. ஒரு சிலரே, ம்ருத்யுவின் பெண் வயிற்று பேரன், வேனன் போன்றோர், உண்மையை அறியாத மூடர்கள் தான் மறுப்பார்கள். நாம் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை. நாம் நம்மை படைத்து, கங்கா ப்ரவாஹம் போல நன்மைகளை அளித்து வரும் பகவானையே நம்புவோம். குல வழக்கப்படி அத்யயனம் செய்யுங்கள், குலத் தொழில் செய்யுங்கள் எதுவானாலும் பகவத் தியானத்தோடு செய்யுங்கள். பின்னின்று இயக்குபவன் அவனே என்ற நினைவோடு மனதால், சொற்களால், உடலால் செய்வதை அதே தியானமகச் செய்யுங்கள். நிச்சயம் பலன் பெறுவீர்கள்,
பகவான் தானே யக்ஞ ரூபனாக இருக்கிறான். “यज्ञो वै विष्णु:” என்பது வேத வாக்யம். பலவிதமான பொருள்கள் யாகத்தில் பயன் படுத்தப் படுகின்றன. உலக நன்மைக்கான சங்கல்ப மந்திரங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும். பொது மக்களுக்கு பல வித தானங்கள் செய்யப்படும். இதை விவரமாக நல்ல அறிஞர்களைக் கொண்டு செய்யப் போகிறோம். பகவானே யாகரூபியாக இருப்பதால் அவரை மகிழ்விக்கும் வகையில் தான் யாகங்களை செய்ய நிறைய த்ரவ்யம், உபகரணங்கள் இவைகளை பயன் படுத்துவோம். பரமானந்த ஸ்வரூபியான பகவான் மரத்தினுள் அக்னி போல உயிரினங்களின் உள்ளும் உறைந்து இருப்பவர். அதனால் என்னுடன் இணைந்து இந்த யாக காரியங்களில் ஈடுபடுங்கள். பிரஜைகள், ப்ராம்மணர்கள் தங்கள் கல்வி, பயிற்சி இவைகளால் நாட்டுக்கு நன்மையை பயப்பதான இந்த யாகத்தை திறம்பட செய்யட்டும். மற்றவர்கள் அவர்களை மதிப்புடன் நடத்துங்கள். ப்ரும்ம நித்யம்- அழிவிலாத ப்ரும்மம் – அதை சிரத்தை, தவம், மௌனம் , சம்யமம் , சமாதி – இவை அந்த ப்ரும்மத்தை அடைய சாதனைகள். இதை செய்யும் தவ சீலர்கள் – இவர்களை நான் தலையின் அவர்கள் பாதத் தூளி பட வணங்குகிறேன். ப்ரும்ம குலம், பசுக்கள். என்னை அனுசரிப்பவர்கள், எல்லோரையும் ஜனார்தனன் மகிழ்ந்து ஆசீர்வதிக்கட்டும்.
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு சொல்லும் அரசனை சாதுக்கள், பித்ரு தேவதைகள், அந்தணர்கள், மகிழ்ந்து சாது, சாது என்று சொல்லி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். புத்ரேன ஜயதி-மகனால் நன்மை அடைவான்- என்பது உண்மையான வார்த்தை. ப்ரும்ம தண்டத்தால் வேனன் அடிபட்டான். தாமசமான குணமே பிரதானமாக பாபியாக இருந்தான். ஹிரண்ய கசிபு கூட பகவானை நிந்தித்து பாபத்தை சம்பாதித்தான். மகன் ப்ரஹ்லாதனால் நல்ல கதியடைந்தான். சர்வ லோகத்துக்கும் ஒரே பாதுகாவலானாக இருக்கும் ஸ்ரீ ஹரியிடம் பக்தியால், தங்கள் புத்திரர்களால் இந்த தந்தைகள் இருவரும் நல்ல கதியை அடைந்தனர். அஹோ! இன்று உன்னுடன் நாங்களும் ப்ரும்மண்ய தேவன், கதையை கேட்டு ரசித்தோம். அரசனே! உன் ஆட்சியில் இது அதிசயமில்லை. சிரஞ்ஜீவ- நீடுழி வாழ்க. பிரஜைகளிடம் அன்புடன் இருப்பவன். நாங்களும் எங்களை மேம்படுத்திக் கொள்ள உன் வார்த்தைகள் தூண்டுகோலாக இருக்கின்றன. உண்மையான பக்தன் தான் மற்றவர்களிடம் இது போன்ற மாற்றத்தை உண்டு பண்ண முடியும்.
नमो विवृद्धसत्त्वाय पुरुषाय महीयसे ।यो ब्रह्म क्षत्रमाविश्य बिभर्तीदं स्वतेजसा ॥
தன் தேஜஸால், ப்ரும்ம ஸ்வரூபியான பரம புருஷனே, க்ஷத்திரியனுடைய செயலையும் நடத்துகிறான். அந்த மகானான பலவிதமான ஆற்றல்களை உடைய பகவானை வணங்குகிறேன்.
((இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து ஒன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-53
அத்யாயம்-22
ஜனங்கள் ப்ருதுவின் அரிய செயல்களால் மகிழ்ந்து, தங்கள் அரசனை வாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருக்கும் பொழுது, குமாரர்களான நான்கு முனிவர்களும் வந்தனர். சித்தர்களான அவர்களை சூரியனே இறங்கி வந்தது போன்ற தேஜசுடன் இவர்கள் வருகை, அதைக் கண்டவர்களின் பாபம் என்ற இருட்டை போக்கி விடுவார்கள் என்பது போல இருந்தது. தன் சபையினருடன் அவரை வரவேற்க எழுந்தான். சபையினரும் மிக்க மரியாதையுடன் தலை குனிந்து வணங்கியபடி அரசனைத் தொடர்ந்தனர். அர்க்யம் முதலியன கொடுத்து ஆசனங்களில் அமரச் செய்தனர். பாதத்தில் விட்ட நீரை புனிதமாக எண்ணி தலையில் தெளித்துக் கொண்டனர். பொன் மயமான தன் அரியனையிலேயே அவர்களை அமரச்செய்தான். சிரத்தை, அடக்கம் இவைகளுடன் அன்புடனும் அவர்களை குசலம் விசாரித்தான்,
ப்ருது” அஹோ! என்ன பாக்கியம் செய்தேன். உங்கள் காலடி பட்ட என் தேசம் பாவனமாயிற்று. உங்களை காண்பதே முனிவர்களுக்கும் அரிது என்பர். குமாரர்கள் அனுக்ரஹம் செய்த என் ராஜ்யத்தில் வேறு எது தான் இவ்வுலகிலோ, பர லோகத்திலோ அடைய முடியாதது? உங்கள் அருள் கிடைத்தாலே, சிவன் விஷ்ணு மற்றும் தேவதைகள் தாங்களே ஆசீர்வதிப்பார்கள். உலகை சுற்றி சுற்றி வரும் நீங்கள் உலகியலில் எதையும் லட்சியம் செய்வதில்லை என்றும் அறிந்திருக்கிறோம். அனைத்தையும் கண்டும் அறிந்தும் ஆத்மாவாக உள்ளுறையும் பகவானே காரணம். செல்வம் இல்லாதவர்கள் கூட குடும்பஸ்தர்கள் பாக்கியசாலிகள். ஏனெனில் இவர்களுடைய வீடுகள், உள்ள பூமி, இங்குள்ள தண்ணீர், புல் பூண்டுகள், அனைத்தும் உங்கள் வரவால் பாவனமாகிவிட்டன. சாதுக்கள் (விருந்தினர்கள்) , பலரும் வந்து இருந்து அனைவருமாக அனுபவிப்பது வீட்டுக்கு அழகு. அந்தண ச்ரேஷ்டர்களே, உங்கள் வரவு நல்வரவாகுக. வயதான பின் மோக்ஷம் விரும்பி சிரத்தையுடன் செய்யும் பல சாதனைகளை நீங்கள் பால பருவத்திலேயே செய்தவர்கள். எங்கள் இந்திரியங்கள், இகலோக காரியங்களிலேயே மூழ்கி உள்ளன. துக்கமோ சுகமோ அனுபவிக்கிறோம். அதைத் தவிர வேறு எண்ணமே இல்லை. ஆத்மா ராமர்கள்- தன்னிறைவு பெற்றவர்கள், சிறந்த ஞானிகள்,என்பதால் குசலம் விசாரிப்பதில் அர்த்தமில்லை. நாம் ஒருவருக்கொருவர் நலம் விரும்பும் நண்பர்கள் ஆதலால், கேட்கிறேன். என்ன காரியமாக வந்தீர்கள்? எங்களுக்கு அனுக்ரஹம் செய்யவே வந்துள்ளீர்கள் என்பது வரை தெளிவாக தெரிகிறது. உருவம் தான் சித்தர்கள், ப்ரும்மாவே தாங்கள் என்று அறிவோம்.
மைத்ரேயர் சொன்னார். இனிமையாக சுருக்கமாக சொன்னாலும் தன் எண்ணத்தை அழகாக சொல்லி முடித்த ப்ருதுவைப் பார்த்து, மெல்ல சிரித்தபடி, குமாரர் பதில் சொன்னார்..
சனத்குமாரர் சொன்னார். நன்றாக கேட்டீர்கள் மகாராஜனே! அறிவுடையவர்கள். உங்களைப் போன்றவர்கள் இப்படித்தான் எண்ணுவார்கள், பேசுவார்கள். பொது ஜனங்களின் நன்மையே உங்கள் முதல் பொறுப்பாக நினைப்பது தெரிகிறது. கூடிப் பேசுவது இருவருக்கும் நல்லது. சம்பாஷனைகள், ஒருவருக்கொருவர் ப்ரச்னைகளை கேட்டுக் கொள்வதும் பரஸ்பரம் தீர்வாக கூட அமையும். ராஜன்! மதுவை வென்ற மாதவனின் பாதாரவிந்தங்களில் மனதை செலுத்துபவர், அவருடைய குண கதைகளில் ஈடுபாடு உள்ளவர் என்பதால், இயல்பாகவே உங்கள் மனத்தில் களங்கம் என்பதே இல்லாமல் தூய்மையாகி விட்டது.
சாஸ்திரங்கள் சொல்வதும் இவ்வளவே. தன் பிரஜைகளின் க்ஷேமம் தான் அரசனின் முதல் கடமை. தன், தன்னுடைய என்ற எண்ணம் நிர்குணமான ப்ரும்மாவை நம்புவதால் அருகிலேயே வராது. நித்யம் யோகேஸ்வரனை உபாசித்து, தனிப்பட்ட சாதனைகளாலும், மேலும் மேலும் தன் அறிவை வளர்த்துக் கொள்வதில் மற்ற பெரியோர்களின் வரலாறும் வழி காட்டக் கூடும். தன்னைச் சுற்றி பலர் இருப்பதில் பெருமை கொள்வதற்கில்லை. அவர்களும் ஒத்த குணமுடையவர்களாக பகவானிடம் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பது அவசியம்.
அஹிம்சை, பரமஹம்ஸ (யோகிகள்) பற்றிய வரலாறுகள், நிணைவாற்றல், எது செய்ய வேண்டியது எது தேவையில்லாதது என்ற பாகுபாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். இயல்பாகவே ப்ரும்மத்தில் விருப்பம் உள்ளவன், நல்ல குருவிடம் ஞான மார்கத்தை கற்றுத் தேர்ந்து, ஆசைகளைத் துறந்து ஐந்தாக உள்ள வீர்யமற்ற ஜீவ கோசம் என்பதை எரித்து விடுவான். அக்னி மூட்டப்பட்டால் கிடைத்ததை விழுங்கி எரிப்பது போல. (பஞ்ச பூதங்களால் சூழப்பட்ட ஜீவ கோசம்- ஹ்ருதயம், அதை சாதனைகளால் கட்டுக்குள் வைக்க, ஞானம், அதைப் பெற குரு உபதேசம் இவை தேவை. இவை இரண்டையும் பெற்றாலும் சுபாவமாக ஈச்வர பக்தியுள்ளவன் தான் முழுமையாக பயன் பெறுவான். அவித்யை எனும் மனித பிறவியின் குணத்தை ஞானத்தால் எரித்து விடுவான்.) சுகம் துக்கம் என்ற இரட்டைகளால் பாதிக்கப்படாமல் உள்ளும் புறமுமாக சாந்தனாக பர தத்வத்தை அவன் தெளிவாக காண்பான். இக லோக வாழ்கை என்பதை கனவில் காண்பது போல காண்பதும், பின் அதை மறப்பதும், அது ஒரு தோற்றமே உண்மையல்ல என்று உணருவதும் அவனுக்கு சாத்தியமாகும். இல்வாழ்கை அவனுக்கு ஒரு சத்யமான மார்கமே. இக பர லோகத்திற்கான சாதனமே. அவ்வளவுதான். நீரிலேயே இருந்தாலும் நாணல் போன்ற தாவரங்கள், அந்த நீரில் மூழ்காமல் தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வது போல – ஆகவே, யாருடன் நாம் உரையாடுகிறோம், உடன் வசிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நான்கு வித புருஷார்த்தங்களில் மோக்ஷம் தான் இலக்கு, மற்ற மூன்றும் ஓரளவு தான், அவை உள்ளூற யம பயத்தையே கொண்டது- ஒரு நாள் அழியும் தன்மையது. அதனால், நரேந்திரா! இந்த பூமியில் உள்ளவரை, பலவிதமான மக்கள் சூழ இருக்கத்தான் வேண்டும். சிலர் தேஹமே அனைத்தும் என்ற கொள்கையுடையவர், ஒரு சிலர் அது அழியக் கூடியதே என்ற உணர்வு உள்ளவர்கள், எப்படி இருந்தாலும் உன் கொள்கையில் மாற்றம் இல்லாமல் அவர்களுடன் அனுசரித்துக் கொள். அனைவரும் பகவான் ஸ்ருஷ்டியே. “ஸோऽஸ்மி” என்ற ப்ரும்ம வாக்கியம் அது தான் தாரக மந்திரம். இவ்வாறு பலவிதமாக உபதேசித்தார்.
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு சிறந்த ஞானியான குமாரர் உபதேசிக்கவும், ஆத்மகதி என்பதை காட்டி,நன்றாக விவரித்தும் சொன்னதைக் கேட்டு அரசன் பதில் உரைத்தான்.
“ எனக்கு உங்கள் அனுக்ரஹம் கிடைத்தது என் பாக்கியம். முன் பகவானே உபதேசித்தார். அதைத் தொடர்ந்து
நீங்களும் வந்துள்ளீர்கள். என் உள்ளத்தில் நன்றாக வேரூன்றி நிலைத்து நிற்கும்படி நன்றாக சொன்னீர்கள். வேறு என்ன வேண்டும், என் ப்ராணனோ, தாரம்-மனைவி, புத்திரர்கள், ப்ரும்மன்! வீடு வாசல், பரிவாரங்கள், ராஜ்யம், பலம், பூமி, பொக்கிஷம் எல்லாமே இந்த உபதேசங்களுக்கு முன் ஒரு பொருட்டும் இல்லை. சேனாபதி என்றும், ராஜ்யம் என்றும், தண்டம், தலைமை என்பவைகளாலும், சர்வ லோக அதிபதி என்றும் சொல்லப் படுபவைகளுக்கு வேத சாஸ்திரம் அறிந்தவனும் தகுதியுடையவனே. அந்தணன் தன் உழைப்பில் கிடைப்பதை தானே அனுபவிக்கிறான். அன்னமோ, வஸ்திரம், தனம் என்பவை க்ஷத்திரியன் முதலானவர்கள், அந்தணனின் ஆசியினால் பெறுகிறார்கள். தானம் செய்வதில் சுதந்திரம் க்ஷத்திரியனுக்கு இல்லை. நிகமம் – வேத சாஸ்திரங்களின் பொருளை சொல்லி, எங்களுக்கு பகவானைப் பற்றியும் சொல்லி, எதை செய்தால் மேன்மை என்பதை சொல்லி, அதிலேயே திருப்தி அடையும், அந்தண உத்தமரே, உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
மைத்ரேயர் சொன்னர்: இவ்வாறு சொல்லி மகா ராஜா ப்ருது அவர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்தான். அவர்களும் அரசனை ஆசிர்வதித்து கண் முடி திறக்கும் முன் மறைந்தனர். மகாராஜா வைன்யன்-ப்ருது, பூமியை நல்ல படியாக ஆண்டான். அத்யாத்ம சிக்ஷா- ஆத்ம தத்வம்- ஆத்மா, பரமாத்மா என்ற விஷயங்கள் பற்றி அறிந்து கொண்டது அவனுக்கு மகிழ்ச்சியளித்தது.. அந்தணர்களை மதித்து அவர்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டான். தன் செயல்களை திட்டமிட்டு, கால, தேசம், தன் சக்தி, இவற்றுடன் எது உசிதமோ, எந்த அளவு செலவழிக்க முடியுமோ, என்பதையும் யோசித்தே செய்தான். எது செய்தாலும் அதை ப்ரும்மார்ப்பணம் என்று சொல்லி, தான் அந்த செயலை செய்ய நியமிக்கப் பட்டவன் மட்டுமே என்பது போல தன் பிரஜைகளின் பிரதி நிதியாகவே எண்ணி நடந்து கொண்டான். மனதளவில் பற்றின்றி, வீட்டில் இருந்தாலும், சாம்ராஜ்ய லக்ஷ்மி அவனிடம் இருந்தாலும், போகங்களில் ஈடுபடாமல், சூரியன் போல பாரபக்ஷம் இன்றி அனைவருக்கும் உகந்தவனாக இருந்தான். தனக்கு அனுகூலமான ஐந்து பிள்ளைகளைப் பெற்றான். விஜிதாஸ்வன், தூம்ரகேசன், ஹர்யக்ஷன், த்ரவிணன், வ்ருகம் என்று பெயர்கள்.
தன் காலத்தில், சோம ராஜன் போலவும், சூரியன் போல கொடுத்தும், தான் பெற்றும், எப்படி பூமியிலிருந்து நீரை உறிஞ்சி, மழையாக திருப்பி தருகிறதோ, அது போல வரி வசூலித்தும், வசதிகள் செய்து கொடுத்தும், சமயங்களில் உறுதியாக தண்டித்தும், பூமியின் செல்வத்தை பெருக்கினான். எதிர்க்க முடியாத பராக்ரமம் உடையவனாக, மகேந்திரன் போல இருந்தான். வானம் பொழிவது போல மக்களுக்கு தராளமாக கொடுத்தான். சமுத்திரம் போல ஆழ்ந்த குணம், தன் சக்தியை வெளிக் காட்டாமல் அடக்கம், தன் கொள்கைகளில் மலை போல உறுதி, தண்டிப்பதில் தர்ம ராஜன், ஹிமவான் போல அளவிட முடியாத ஆச்சர்யங்கள் நிறைந்தவனாக, குபேரன் போல நிறைந்த பொக்கிஷம் உடையவனாக, வருணன் போல மற்றவர்களால் கணிக்க முடியாதவனாக, மாதரிஸ்வா போன்று அனைத்து இடங்களிலும் பரவலாக அறிந்தவனாக, பகவான் பூத நாதன் போல எதிர்க்க முடியாத பலசாலி, மன்மதன் போன்ற உடலும், கம்பீரத்தில் சிங்கம், வாத்சல்யம் மனு போலவே, ப்ரபுத்வம் என்பதில் ப்ரும்மாவே எனும்படியும் ப்ரும்ம வாதம் செய்வதில் ப்ருஹஸ்பதி, தன்னையறிவதில் தானே ஸ்ரீ ஹரி, குரு, பக்தியில் விஷ்வக்சேனர், மற்ற தன் முயற்சி, லஜ்ஜை, சீலம் இவைகளில் தனக்கு ஈடு தானே என்றும் இருந்தான். அவன் புகழை கேட்டவர்கள் மயங்கினர். குணவான்களில் ஸ்ரீ ராமர் போலவும் இருந்தான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-63
அத்யாயம்-23
ஒரு சமயம் திடுமென நினைத்துக் கொண்டாற் போல தனக்கு வயது ஆகி விட்டது என்பதை உணர்ந்தார். தன் மகன்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு அந் நாட்களில் பெரியவர்கள் வயதான காலத்தில் வீடு வாசல்களைத் துறந்து வனம் செல்லும் வழக்கத்தையொட்டி தானும் வனம் செல்ல நினைத்தார். அந்த நினைவு வந்ததே ஈஸ்வரனுடைய கட்டளை என்று நம்பினார். மகளை மகன்களிடம் ஒப்படைத்து விட்டு, மனைவியுடன் கிளம்பி விட்டார். வைகானஸ என்ற முறைபடி உக்ர தவத்தில் ஈடுபட்டார். சில சமயம் பழங்கள், கிழங்குகள் என்று ஆகாரம், அதன் பின் உலர்ந்த இலைகள், அதன் பின் நீர் மட்டுமே,அதன் பின் வாயு மட்டுமே என்று ஆகாரத்தைக் குறைத்துக் கொண்டே வந்தார். வேணிற் காலத்தில் பஞ்ச தபஸ், ஐந்து விதமான வெப்பம், குளிர் காலத்தில் கழுத்து வரை நீரில் அமிழ்ந்து இருந்து என்று அதன் நியமங்களை அனுசரித்தார். ப்ராண வாயுவை அடக்கி பேச்சையும் குறைத்து, ஸ்ரீ க்ருஷ்ண தியானம் மட்டுமே என்று தவம் செய்தார். ப்ராணாயாமம் தொடர்ந்து செய்து ஆறு வித பிராணன் களையும் தன் வசம் செய்து யோக சாதனையின் முடிவில் கமலாசனம் – என்பதில் நிறுத்தினார். சனத் குமாரர் உபதேசித்த படியே யோக சாதனைகளைச் செய்து ஆத்யாத்மிகம் என்ற உயர் நிலையில் பகவானை ஆராதித்தார். சாதுக்கள் பகவானையே நம்பி இருப்பவர்கள், சிரத்தையுடன் சாதனைகளைச் செய்து மனதை தன் வசம் வைத்துக் கொள்வார்கள். தன் இக லோக கடமைகளை செய்து முடித்து விட்ட திருப்தியுடன் பர லோக சாதனமான தவம், சுய கட்டுப்பாடு என்பதியும் குறைவற செய்து ஞானம், விரக்தி இவைகளுடன் தன் ஜீவகோசம் என்பதை பிளந்தார். இந்த நிலையை அடைய, யோக சாதனைகளும் தவமும் மட்டும் போதாது, பகவானிடம் அசலமான- முறையாத நம்பிக்கையும் வேண்டும். இவ்வாறு வீரனான அந்த அரசன், தன் ஆத்மாவை பரமாத்மாவில் ஐக்யபடுத்தி, ப்ரும்மமாகவே ஆனார். சரீரத்தையும த்யாகம் செய்தார். . குண்டலினி யோக முறைப்படி, வாயுவை குதத்திலிருந்து மேலேற்றி, மெள்ள மெள்ள நாபி,ஹ்ருத் கண்ட , புருவ மத்தி, உச்சந்தலை கொண்டு சென்று வாயுவை வாயுவுடன், பூ என்ற மண் அம்சமான உடலை (உடலின் கடினமான பகுதிகளை)நிலத்துடன், தேஜஸ் என்ற அம்சத்தை அதன் மூலப் பொருளுடன், ஆகாசத்தில் உயிர் தத்வத்தை, த்ரவம் என்பதை (சரீரத்தின் ருதிரம் முதலான திரவங்கள்) , நீரில் அதனுடைய அம்சமாக மனித உடலில் இருந்ததை நீருடன் என்று பிரித்து வெளியேற்றி விட்டார். க்ஷிதி-பூ தத்வம் (மண் அல்லது நிலம்) இதை நீருடன், அதை தேஜஸை -அக்னியுடன், அக்னியை வாயுவுடன், வாயு ஆகாசத்தில் என்று முதலில் தோன்றிய கிரமத்திலேயே அவரிடமிருந்து விடுபட்டன. மற்றும் இந்திரியங்கள், உடல் இயங்க காரணமாக இருந்தவை மனம், தன்மாத்ரைகள் இவைகளை பௌதிகமான பஞ்ச பூதங்கள் விலகியபின், மஹத் என்ற தத்வத்துடன் இணைந்து கொண்டன.
மாயாமயமான உலகில் வாழ்ந்த காலத்திலும் தன் குணங்களுடன் எப்படி வாழ வேண்டும் என்று காட்டுவது போலவே வாழ்ந்து, பின் ஞான வைராக்ய மார்கங்களை அனுசரித்து ப்ரபு தன் லீலையை முடித்து தன் இருப்பிடம் சென்று விட்டார்.
அர்சி என்ற மஹாராணி, அவருடன் வனம் வந்த அவருடைய பத்னி, கோமளமான சரீரம் உடையவள், கால்கள் பூமியை ஸ்பர்சித்தாலே வாடும் என்பது போன்ற உடல் வாகுடையவள், அவள் அறிந்தெல்லாம், தன் பதியின் சேவையே, அவருடைய தேவைகளை பூர்த்தி செய்வதே என்று வாழ்ந்தவள், அவர் பிரிவினால் பாதிக்கப் பட்டாலும், தன் துக்கத்தை வெளிக் காட்டவில்லை, அவருக்கு உதக க்ரியா – நீர் வார்த்தல் என்ற அபர கார்யத்தை தானே செய்து விட்டு, முப்பத்து மூன்று தேவதைகளையும் , மூன்று முறை ப்ரதக்ஷிணம் செய்து வணங்கி கணவனையே நினைத்தபடி தானும் சிதையில் வீழ்ந்தாள்.
தேவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பூமாரி பொழிந்தனர். பதியுடன் மரணத்திலும் கலந்த அவர் மனைவியைக் கொண்டாடினர். ஆஹா, இந்த பெண் தன்யா- பாக்யம் செய்தவள் என்றனர். புகழ் பெற்ற அரசனின் பத்னியாக வாழ்ந்தாள். யக்ஞ மூர்த்தியான பகவானுக்கு ஸ்ரீ தேவி போல . – நம் கண்ணெதிரிலேயே அவள் பர லோகத்திலும் ப்ருது மகா ராஜனை அடைந்து விட்டாள் என்று போற்றினர். அவருடைய சீலத்திற்கும், பகவானிடத்தில் பக்திக்கும் இது ஏற்றதே என்றும் பலவாறாக பேசிக் கொண்டனர்.
மைத்ரேயர் சொன்னார்: ஆத்ம ஞானம் பெற்ற ப்ருது ராஜா தனக்குரிய கீர்த்தியை அடைந்தான். உடன் அவன் மனைவியும் உடன் சென்றாள், என்ற இந்த கதையை படிப்பவர்களூம், கேட்பவர்களும் ப்ருது போலவே புகழை அடைவார்கள். பலவிதமான பலஸ்ருதிகளைச் சொல்லி முடித்தார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39
அத்யாயம்-24
மைத்ரேயர் தொடர்ந்தார்: ப்ருதுவின் மகன் விஜிதாஸ்வன் பட்டத்துக்கு வந்தான். தன் இளையவர்களையும் தனக்கு சமமான பதவிகளில் அமர்த்தினான். ஹர்யக்ஷனுக்கு கிழக்கு, தூம்ரகேசனுக்கு தெற்கு, வ்ருகனுக்கு மேற்கு, துர்யோ என்பவனுக்கு வடக்கு என்று பிரித்து கொடுத்தான். சிகண்டி என்ற மனைவியிடம் மூன்று குழந்தைகள் பிறந்தன. முன் ஒரு சமயம் வசிஷ்டர் சாபத்தால் மறைந்திருந்த பாவக, பவமான, சுசி என்ற மூன்று அக்னிகளும் உயிர் பெற்றன. ராஜ்ய காரியங்களான வரி வசூலித்தல் முதலியவைகளை மற்றவர்களிடம் விட்டு விட்டு தான் நீண்ட யாகம் செய்ய முனைந்தான். அதை வெற்றிகரமாக முடித்து சமாதி நிலையில் நற்கதியடைந்தான்.
அந்த வம்சம் ஹவிர்தானன் என்பவன் மூலம் வளர்ந்தது. ஹவிர்தானனுக்கு ஏழு பிள்ளைகள். பர்ஹிஷ்பதன், கயன், சுக்லன், க்ருஷ்ணன், சத்யன், ஜிதவ்ரதன் என்பவர். இவர்களில் பர்ஹிஷ்பதன் வேத்தில் சொன்ன கர்ம காண்டத்தையும், யோக மார்கத்தையும் ஒரு சேர அனுசரித்தான். விடாது யாகம் செய்து வந்தவன் ராஜ்யத்தில் கிழக்கு பகுதி யாகத்தில் பயன்படும் குசம் என்ற புல் மூடிய ப்ரதேசமாக ஆகி விட்டது. பின்னால் அவன் பெயரே, ப்ராசீன பர்ஹிஷி என்று மாறியது. சமுத்திரத்தின் மகளான சதத்ருதிம் என்பவளை மணந்து பத்து பிள்ளைகள் பிறந்தன.
அதிக அளவில் பிரஜைகளை உத்பத்தி செய்யச் சொல்லி தந்தை சொன்னதைக் கேட்டு, அவர்களும் சமுத்திரத்தில் இருந்து தவம் செய்தனர். எதேச்சையாக பகவான் கிரீசனை வழியில் சந்தித்தனர். அவரை மகிழ்வித்து ஜபம், பூஜைகள் செய்தனர்.
விதுரருக்கு ஆச்சர்யம். அது எப்படி பகவான் கிரீசனை வழியில் சந்தித்தனர். அவரும் அனுக்ரஹம் செய்தாரா? அவரை எப்படி ப்ரசேதசர்களூக்கு அனுக்ரஹம் செய்தார். முனிவரே, விவரமாக சொல்லுங்கள். மனித பிறவியில் அவரை காண்பது முனிவர்களுக்கே சிரம சாத்யமம். ஆத்மாராமர் தான். ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் ப்ரும்மாவினால் ருத்ரன் என்று பெயரிடப் பெற்றார். சக்தியுடன் தான் எப்பொழுதும் சஞ்சரிப்பார். பகவான் பவன் என்று அறிந்திருக்கிறோம்.
மைத்ரேயர் சொன்னார்: ப்ரசேதஸ் ப்ருது மகாராஜாவின் மகன். தந்தை சொல்லை ஏற்று கிழக்கு திசையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டான். தவம் செய்வது தான் அவன் எண்ணமாக இருந்தது. எல்லையற்ற பரந்து விரிந்து இருந்த சமுத்திரத்தைக் கண்டு அதிசயித்தான். பலவித வர்ணங்களில் தாமரைகளும், நீல நிற உத்பல புஷ்பங்களும் கண்களைக் கவர்ந்தன., கல்ஹார, இந்தீவர புஷ்பங்கள். ஹம்சங்களும், சாரஸ. சக்ரவாக, காரண்டவ என்ற பக்ஷிகளும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. ப்ரமரங்கள்-வண்டுகள், சுருதி பிசகாமல் ரீங்காரம் செய்வதாக எண்ணினான். பலவித கடலில் வளரும் தாவரங்கள். பத்மங்கள் காற்றில் ஆடும் பொழுது விசிறிய மகரந்த மணம் எங்கும் நிறைந்து இருந்தது. காற்று அதனுடன் விளையாடுவது போல இருந்தது. கந்தர்வர்கள் பாடுவது கேட்டது. பணவம், ம்ருதங்கம் என்ற வாத்யங்கள் இசைப்பதை முதல் முறையாக கேட்டனர்.
இவ்வாறு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கும் சமயம் ஒரு தேவ புருஷன் தன் பரிவாரங்களோடு சமுத்திர ஜலத்திலிருந்து வருவதை ப்ரசேதஸும், அவன் உடன் இருந்த மற்றவரும் கண்டனர். புடமிட்ட பொன் போன்ற நிறம். சிதிகண்டம்.மூன்று கண்கள். பார்க்க பார்க்கத் தெவிட்டாத சுமுகமான முகமும் உருவமும். மரியாதையும் மகிழ்ச்சியும் மேலிட விழுந்து வணங்கினார்கள். அவர் தான் ப்ரணதார்திஹரன் என்று புகழ் பெற்ற (தன்னை வணங்கும் பக்தர்களின் தாபத்தைத் தீர்ப்பவன்) பகவானான, தீன வத்ஸலன். இவர்களைப் பார்த்து தர்மம் அறிந்தவர்கள், நேர்மையான குணம் உடையவர்கள் என்று முன்னமே அறிந்தது போல அன்புடன் வினவினார்.
ருத்ரன் சொன்னார்: நீங்கள் யாரென்று அறிவேன். நீங்கள் நினைப்பதையும் தெரிந்து கொண்டே, அனுக்ரஹம் செய்யத்தான் வந்தேன் என்றார். வாசுதேவன் எனக்கு பிரியமானவன். உங்கள் தந்தை வாசுதேவன் பக்தன். அதனால் எனக்கும் பிரியமானவர்களே. நூறு ஜன்மங்களில் தன் குல வழக்கப் படி தர்ம காரியங்களைச் செய்து வருபவன் , விரிஞ்சி என்ற ப்ரும்ம பத்தை அடைவான். அதன் பின் உலக வாழ்க்கையின் முடிவில் என்னைக் காண்பார்கள். பகவான் விஷ்ணுவின் பதமான வைகுண்டம் தான் பாகவதர்களின் இலக்கு. பாகவதர்கள் எனக்கும் பிரியமானவர்கள். என்னை வணங்குபவரோ, விஷ்ணு பக்தரோ என்பதில் பேதமில்லை.
உங்களுக்கு ஒரு மங்களமான ஜபத்தை சொல்லித் தருகிறேன். பவித்திரமான இந்த மந்திரத்தை குறைவில்லாத செல்வம் பெற கேட்டுக் கொள்ளுங்கள்.
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு மனம் கனிந்து பகவான் பரம சிவன் அவர்களுக்கு உப்தேசித்தார். கைகளைக் கூப்பி நின்றிருந்த ராஜ குமாரர்களுக்கு பகவான் நாராயண பரமான சொல்லை அருளினார்.
ருத்ரன் சொன்னார்: नमः पङ्कजनाभाय भूतसूक्ष्मेन्द्रियात्मने ।वासुदेवाय शान्ताय कूटस्थाय स्वरोचिषे- பங்கஜ நாபன், அணுவிலும் அணுவானவன், மகத்திலும் மகத்தானவன், பெரியவன், இருளாகவும், ஒளியாகவும் இருக்கும் வாசுதேவனுக்கு நமஸ்காரம். என்று ஆரம்பித்து பல ஸ்லோகங்களில் வாசுதேவனை துதித்தார்.
சங்கர்ஷணன், சூக்ஷ்மமானவன், மனிதர்களின் வாழ்வை நிறைவு செய்யும் அந்தகன் அவனே, தான் முடிவில்லதவன். உலகையே முதலில், உணர்வு கொள்ளச் செய்த அந்தராத்மாவான ப்ரத்யும்னன் என்ற பெயரில் அறியப்பட்டவன்.
நமோ நம: அனிருத்தாய, : ஹ்ருஷீகேசாய இந்திரியாத்மனே,; நம: பரம ஹம்ஸாய, பூர்ணாய, நிப்ருதாத்மனே||
மேலும் பலவாறாக துதி செய்கிறார். இளைஞர்களான அரச குமாரர்களுக்கு, தகுந்த உபதேசம் செய்தார். கடமையை செய்யும் பொழுதே பகவத் தியானமும், நல்ல குணமும் அவசியம் என்று வலியுறுத்தினார். பிரஜைகளை பெருக்குங்கள். அதுவும் பகவானின் கட்டளையே என்றார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-79
அத்யாயம்-25
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு சொல்லி பகவானை, பார்ஹிஷதர்கள் பூஜித்தனர். அவரும் கண் முடி திறக்கும் முன் மறைந்தார். ருத்ர கீதம் என்ற இந்த துதி மிக ப்ரபலமானது. பகவான் விஷ்ணுவை துதி செய்து மகேஸ்வரன் செய்தது. நியமத்துடன் அதை அந்த ராஜகுமார்கள் ஜபித்தும், பலகாலம் தவம் செய்தும் வந்தனர். ப்ராசீனபர்ஹிஷன் என்ற அந்த ராஜ குமாரன், கர்ம மார்கத்தையே பெரிதாக எண்ணி இருந்தான். ஒரு சமயம் நாரதர் வந்தார். இதுவும் சரிதான் ராஜன்!. துக்கம் விலகும், சுகமாக இருக்க வழி கோலும். ஆயினும் இது அனைத்திலும் ஸ்ரேயஸ்- உயர்வு என்று சொல்ல முடியாது.
ராஜா கேட்டான்: மஹாபாக! பெரியவரே, எனக்கு இது தவிர வேறு மார்கம் தெரியவில்லையே. இதற்கும் மேலான ஒன்று இருக்கிறதா? அதை எனக்குச் சொல்லுங்கள், என்றான்.
சம்சாரி, வீட்டில் புத்ர தாராதிகள், அவர்களுக்கு தேவைகள், அதற்கான செல்வம் சம்பாதிப்பது என்றே என் பொழுது செல்கிறது.
நாரதர் சொன்னார்: ப்ரஜாபதியான அரசனே! இதுவும் தான் வாழ்க்கை. ஒரு கதை சொல்கிறேன் கேள். ஒரு சமயம் புரஞ்சனன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு சகா. அவன் உலகை சுற்றி யாத்திரை செய்தான். எதைத் தேடி அலைந்தானோ அது கிடைக்கவில்லை. அவனுக்கே தான் எதைத் தேடுகிறோம் என்பதை சொல்லத் தெரியவில்லை போலும். பல ஊர்களைச் சுற்றியவன், எங்கும் நன்மையே தான் அவன் கண்ணில் பட்டது. ஒரு சமயம் இமய மலையின் தென் பக்கத்து சரிவில் ஒரு ஊர். அதற்கு ஒன்பது வாசல்கள்.
ப்ராகாரங்கள், உபவனங்கள், மாடி வீடுகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகள், பொன்னும், வெள்ளியும் வீடுகளின் மேற் பகுதிகளில் அலங்காரமாக பயன் படுத்தப் பட்டிருந்தன. போகவதி என்ற நகரம் போல நீல மணிகளும் , வைடூர்ய,ஸ்படிக , முத்துக்கள், மரகதம், சிவந்த மணிகள் இவைகளாலும் மாளிகைகள் பிரகாசித்தன. நான்கு வழி வீதிகள், ரத வீதிகள், விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள், சிறு உபவனங்கள், கொடிகள் கட்டப் பெற்ற யாக சாலைகள்., புரங்களின் வெளியே பலவித மரங்கள், செடி, கொடிகள் நிறைந்த உபவனம், மிருங்கங்கள் துள்ளி விளையாடின, கோலாஹலமான நீர் நிலைகள், பனித் துளிகள் அருவியாக பெருகி இருக்க, ஒருபுறம், பூக்களின் மணத்தை சுமந்து வந்த வாயு, ஆங்காங்கு பாத்திகளில் சிறு செடிகளும், நளினி எனும் நீரில் மலரும் பூக்களும், காட்டு ம்ருகங்கள் நிறைந்து இருந்தாலும் அவைகளால் பாதிக்கப் படாத முனி விரதர்கள், கோகிலங்களின் கூவலைக் கேட்டு தங்களை கூப்பிடுகிறதோ என்று எண்ணி வழிப் போக்கர்கள் தங்களாகவே வந்து பார்த்துச் செல்வர். அங்கு சுற்றி வந்த பொழுது ஒரு பெண்ணைப் பார்த்தான். தன்னுடன் பணியாட்களும், தவிர ஏவலர்களுமாக பல பேருடன் வந்து கொண்டிருந்தாள். ஐந்து தலை நாகம் ஒன்று பாதுகாவலாக உடன் வந்தது.
தனக்கு அனுகூலமான பதியைத் தேடுபவள் போல இருந்தாள். அழகிய நிறமும், விசாலமான கண்களும், எடுப்பான நாசியும், வரிசையான பற்களுமாக கவர்ச்சிகரமாக இருந்தாள். குண்டலங்கள் காதுகளை அலங்கரித்தன. தேவதை போல இருந்தாள். கால்களில் நூபுரங்கள் சப்தமிட்டன. இளம் வயதினள் என்பது உடல் வளர்ச்சியில் தெரிந்தது. வெட்கத்துடன் வஸ்திரத்தால் தன்னை மறைத்துக் கொண்டவளைப் பார்த்து புரஞ்சனன் சகா மயங்கினான். மிகுந்த ப்ரேமையுடன், யார் நீ, பத்ம பலாசம் போன்ற கண்கள், யாருடையவள் நீ, எங்கு வசிக்கிறாய், இந்த வெளிப் புறத்தில் என்ன தேடுகிறாய்? சொல் என்றான். யார் இவர்கள். பதினோரு போர் வீரர்கள் உன்னைத் தொடர்ந்து வருகிறார்கள். இந்த பெண்கள் யாவர்? எதற்கு இந்த ஐந்து தலை நாகம் உன்னை முன் சென்று வழி காட்டுகிறது? நீ ஹ்ரீ, பவானீ அல்லது ரமாவா? பதியைத் தேடுகிறாயா? உன்னைப் பார்த்தால் செல்வ செழிப்பில் இருப்பவள் என்று தோன்றுகிறது. கமலா தேவியா? கையில் இருந்த பத்மங்கள் விழுந்துவிட்டன என்று தேடுகிறயா? சுபகே! பாக்கியசாலியான பெண்ணே, இந்த தேவ மகளிரில் நீ ஒருவளாகத் தெரியவில்லை. பூமியில் பாதங்கள் இருப்பதால் மனிதப் பெண்தான் என்று ஊகிக்கிறேன்.
பகவான் விஷ்ணுவின் லக்ஷ்மி தேவி போல நீயும் என் மனைவியாகி இந்த ராஜ்யத்தை அலங்கரிப்பாய். சோபனே! என்னை ஏற்றுக் கொள். உன்னைக் கண்டதிலிருந்து மன்மதனால் வாட்டப் படுகிறேன் உன் முகம், அழகிய புருவம், கண்கள், கருங்கூந்தல், நிமிர்ந்து என்னைப் பார், அழகிய உன் வாயால் ஒரு சொல் சொல்வாயாக. வெட்கத்தினால் என்னைப் பார்ப்பதை தவிர்க்கிறாய் போலும்.
நாரதர் சொன்னார்: இவ்வாறு யாசிக்கும் புரஞ்சன சகா வை பார்த்து சிரித்துக் கொண்டே அவள் பதில் சொன்னாள். “என் பெற்றோர் யார் என்பது தெரியாது. என்ன குலம் என்பதும் தெரியாது. இந்த ஊரில் இருக்கிறேன். இதை நிர்மாணித்தவன் தான் எனக்கு சரணம். இந்த சகிகள் தான் எனக்கு துணை, , உதவி செய்பவர்கள். இந்த நாகம் என் பாதுகாப்புக்காக என்னுடன் வருகிறது. இந்த நாட்டையும் காவல் காக்கிறது.அதிர்ஷ்டவசமாக வந்துள்ளாய். பத்ரம் தே- உனக்கு நன்மை உண்டாகட்டும். உலகியலான வாழ்க்கையை விரும்புகிறாய். நான் சம்மதிக்கிறேன். இந்த நகரையும் பாலனம் செய்வாய். இது ஒன்பது முகம் கொண்டது. வேறு எவரை நான் மனம் விரும்பி ஏற்றுக் கொள்வேன் – புத்தியோ, ரசிகனோ இல்லாத ஒரு மனிதன், பசு போன்றான். சம்ப்ரயங்களை அறியாதவன் எனக்கு ஈடு ஆவானா?
( விளக்கம்- ஓன்பது வாசல்கள் உள்ள கோட்டை- மனிதனின் உடல். குலம்- நான், எனது என்ற புத்தி- வரும் காலம்- ஈஸ்வர ஞானம் – அதுவும் தெரியாது. வினைப் பயன் என்னை எவ்வாறு ஆட்டுவிக்கப் போகிறது என்பதும் தெரியாது. பந்துக்கள்- இந்திரியங்கள். மனித ஆயுள் நூறு என்பது சங்கேதம். புத்தி மனிதனின் சிறப்பு. அதனால் பசுக்களுக்கு இக- பர லோக சாதனைகள் என்பது கிடையாது. புத்தி மனிதனை ஆஸ்ரயித்து இருப்பது, ஈஸ்வரனை அடைய வழி சொல்கிறது. பரமாத்மாவை அறியாத மனிதர்களும் அகோவிதா: அறிவு இல்லாதவர்கள். ஆத்மரதி- ஆத்ம திருப்தன் அல்லது தான் யார் என்று அறிந்தவன்- மனித பிறவியில் தான் இது சாத்யம்- ஞானம் மோக்ஷத்துக்கு வழி காட்டும்- தர்மாதி அனுஷ்டானம், புத்ர சுகம் இவைகளுடன் இல்லற வாழ்க்கையே சிறந்தது. )
அதன் பின் இருவரும் தம்பதிகளாக அந்த நகரத்தில் பல காலம் வாழ்ந்தனர். ஆடலும் பாடலுமாக அவர்கள் வாழ்க்கை இனிதே சென்றது. மேல் வாசல்கள் ஏழு, கீழே இரண்டு – ஒவ்வொன்றும் ஒரு வித செயலுக்கானது.
மனித சரீரமும் அதன் பாகங்களும், செய்யும் செயல்களுமே அந்த நகரத்தின் கோட்டைகளாகவும், அதன் பெயர்களாகவும் அமைக்கப்பட்டிருந்தன.
ஒன்றாக உண்டும், குடித்தும், உறங்கியும் ஒன்றாக காலம் கழித்தனர். சில சமயம் பாடினாள். சிரித்தாள். சில சமயம் அழவும் செய்தாள். ஜல்பம் என்ற வேண்டாத பேச்சிலும் காலம் சென்றது. தூக்கத்திலும், பேச்சிலும் காலம் சென்றதே தெரியவில்லை. அதிலேயே முழ்கி இருந்தவன் மிருகம் போல தன் கடமைகளை மறந்தவனாக ஆனான். தான் செய்து வந்த யாகங்கள், தினசரியைகளை கூ ட மறந்தான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்இருபத்து ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-62
அத்யாயம்-26
ஒரு சமயம் வேகமாக செல்லக் கூடிய ஐந்து குதிரகள் பூட்டிய ரதத்தில் கிளம்பினான். கையில் பொன் அம்புகள், ப்தினோரு போர் வீர்கள் கொண்ட சேனைத் தலைவனாக, வனம் சென்றான். என்ன நினைத்தோ, வனத்தில் மிருகங்களை கண்டபடி அடித்தான். வேட்டைக்குச் செல்பவர்கள் சில நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பது வழக்கில் உள்ள சட்டம். அசுரன் போல கருணையின்றி பேராசையுடன் வேட்டையாடுபவன் தண்டிக்கப் பட வேண்டியவன். குணமில்லாதவன் அறிவிழந்தவன் என்று அவர்களை குற்றம் சாட்டுவர். முயல்கள், பன்றிகள். எருமைகள், பசுவால் கொண்ட மிருகங்கள், ருரூ, சல்யன் எனும் சிறு மிருகங்கள், இவைகள் சில இறந்தன, பல அடிபட்டு உடல் அங்கம் இழந்தவைகளாக துடித்தன. அரசன் தானும் களைத்து சோர்ந்து விட்டான். பசி தாகம் வாட்டினாலும், சாப்பிடாமல், குளித்து முடித்து நேரே படுக்கைக்குச் சென்றான். தூபங்கள், வாசனைப் பொருட்களால் அலங்கரித்து கொண்டு மனைவியைத் தேடினான். வீட்டில் தாயாரோ, மனைவியோ இல்லையெனில் சூன்யமாக தெரிவது இயல்பே. எங்கே போனாள் என்று துக்கத்தில் ஆழ்ந்தான். பணிப் பெண்கள் “அரசனே! ஏன் வருந்துகிறாள் என்பது தெரியவில்லை. பூமியில் படுக்கையின்றி படுத்து கிடக்கிறாள்” என்றனர். புரஞ்ஜனன் அவளை சமாதானப் படுத்த முனைந்தான். வழக்கம் போல அவள் இயல்பாக இல்லை. எந்த சமாதானமும் எடுபடாமல் போகவே, கால்களில் விழுந்தான். என்ன தண்டனை கொடுப்பாயோ, ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் இப்படி பாராமுகமாக இருக்காதே என்று கெஞ்சினான். நல்ல ஆடையோ, ஆபரணமோ இன்றி நீ கிடப்பதை என்னால் சகிக்க முடியவில்லை என்று அரற்றினான். எதற்கும் அவள் அசையவில்லை.
( மனித சரீரமும், அதன் அங்கங்களும் கோட்டையாகவும் வனமாகவும் குணங்களாகவும் இந்த பகுதி முழுவதும் உருவகப்பட்டுள்ளன)
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்இருபத்து ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-26 ||
அத்யாயம்-27
நாரதர் சொன்னார்: இவ்வாறு முழுமையாக அவள் வசம் ஆனவனாக ஆகி விட்ட புரஞ்சனன், இரவு பகல் எதையும் உணரவில்லை. ஒருநாள் ஸ்னானம் செய்து விட்டு வந்தவளை அணைத்து சரஸமாக பேசிக் கொண்டிருந்தான். அவளும் அதை ரசித்தபடி திருப்தியாக இருந்தாள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விரும்பி உடல் சுகமே பெரிதாக காலம் கழித்தனர். உயர் தரமான படுக்கை, மற்ற வசதிகளுடன் அருகில் மனைவியும் அவளும் விரும்பி தன்னை அர்ப்பணித்தவளாக இருக்கையில் வாழ்க்கையின் பொருளே அது தான் என்பது போல காலம் சென்றது. அந்த நேரத்தில் எது நல்லது, எது உண்மை எது மற்றது என்று எண்ணமே எழவில்லை. இளமை ஒரு நொடியாக அகன்றது. நூற்று பதினோரு புத்திரர்கள் பிறந்தனர். ஆயுளில் பாதியும் நிறைந்தது. புரஞ்சன பிரஜாபதியின் மகள்கள் அதே போல நூற்று பத்து பேர், அழகும், சீலமும், ராஜ குமாரிகள், என்பதற்கேற்ப உதார குணமுள்ளவர்களாகவும் இருந்தனர். அந்த பாஞ்சால அரசன், சரியான வரன் களைப் பார்த்து பெண்களுக்கு மணமுடித்தான். புத்திரர்களும் அதே போல குடும்ப வாழ்கையில் ஈடுபட்டு நிறைய புத்திர புத்ரிகளைப் பெற்றனர். புரஞ்சன வம்சம் பாஞ்சால தேசத்தில் பல்கி பெருகியது. வீட்டுச் சொத்திலேயே வாழ்ந்து வளர்ந்தவர்கள், பொறுப்பில்லாமல் திரிந்தனர். மமதையும், உழைப்பை அறியாத சுக வாழ்க்கையும் கண்டபடி செலவழித்தனர். யாகங்கள், ஏராளமான பலிகள் கொடுத்து,கோரமான தீக்ஷைகள், தேவர்கள், பித்ருக்கள், பூத பதிகள் இவர்களிடம் வேண்டுதல்கள் என்று பலவிதமாக. செலவழித்தனர். நாளடைவில் அவன் பிரிய மனைவிகளுக்கே அவனிடம் வெறுப்பு வந்தது.
சண்ட வேகன் என்று கந்தர்வ ராஜா. அவனிடம் மிகப் பெரிய படை இருந்தது. ஆறாயிரத்துக்கும் மேல் பலசாலிகளான சிறந்த வீர்கள். அவர்கள் புரஞ்சன நகரை ஆக்ரமித்தனர். கூட்டம் கூட்டமாக புரஞ்ஜனனின் படை வீர்கள் போரில் ஈடுபடுத்தப் பட்டனர். போரில் தோல்வியை எதிர் பார்த்து பந்துக்கள் கவலைப் பட்டனர். உடல் பலம் தளர்ந்தது. உடன் மன வலிமையும் குறைந்தது (வயதானதால் பந்துக்களாக இருந்த புலன்களே ஒத்துழைக்கவில்லை) காலத்தின் மகள் நரை – வந்து ஆக்ரமித்தாள். முதுமையின் முதல் அடையாளம். முதல் முறையாக ம்ருத்யு பயம் வந்தது. இதுவரை உல்லாசமாக மனைவியே எல்லாம் என்ரு இருந்தவனுக்கு தாங்க முடியாத முதுமை தவிர்க்க முடியாதது. காலத்தின் மகள் ஒருசமயம் என்னையும் தாக்க வந்தாள். அந்த சமயம் யதேச்சையாக நான் பூ லோகம் சென்றிருந்தேன். நான் நைஷ்டிக ப்ரும்மசாரி, விரதங்கள் செய்பவன் ஜரா மரணங்கள் எனக்கு கிடையாது என்று வரம் பெற்றவன் என்பதையறியாமல். வேறு யாரும் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னிடம் அவள் விரும்பியது நடக்கவில்லை என்பதால் பெரிய சாபம் கொடுத்தாள். என் ஆசையை மதிக்காத நீ ஒரு இடத்திலும் நிலைத்து இருக்க மாட்டாய், அலைந்து கொண்டேயிருப்பாய் என்று சாபமிட்டாள். அதன் பின் அவள் யவன ராஜா (-சுக்ர பகவானால் சபிக்கப் பட்ட யயாதியை சென்றடைந்தாள். பயம் – என்பதை (நரை கண்டவுடன் மனதில் தோன்றுவது பயம் என்பது பொருள்)
(சாபத்தால் முதுமை அடைந்தவன் ராஜரிஷி யயாதியிடம் பயம் இருந்ததால், அங்கு அடைக்கலம் பெற்றாள். )
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-30
அத்யாயம்-28
யயாதியின் சைன்யம் பயம் என்பது .ப்ரஜ்வரம், கால கன்யா -ஜரா (நரை )- இவ்விருவருடனும் உலகை ஆக்ரமித்தான். ஒரு சமயம் புரஞ்சனனின் போகமே பிரதானமக இருந்த நகரை ஆக்ரமித்தனர். வயதான நாகங்களால் சூழப்பட்ட நகரம். கால கன்யா சந்தோஷமாக அந்த நகரை தன் வசப் படுத்திக் கொண்டாள். அவள் ஆளுமையில் ஊர் மக்கள் சாரமில்லாமல் துவண்டு போனார்கள். அவளின் பசிக்கு ஈடு கொடுக்கமுடியாமால் யவன தேசத்தவர். நாலா புறமும் சிதறி ஓடினர். அவள் வெற்றி நடை போட்டாள். வீட்டு வாசல் வழியாகவே தைரியமாக சென்றாள். ஊருக்குள் தடுப்பவர் எவருமில்லை. இதுவரை நினைத்தே பார்த்திராத தாக்குதல். வளர்ந்து விட்ட பெரிய குடும்பம் – தான், தன் என்பதே நினைவாக இருந்தவன். நிலை குலைந்து போனான். ராஜ்யம் தொலைந்தது. காலத்தின் மகள் நாலாபுறமும் சூழ்ந்து அவனது பலத்தை அழித்தாள். கந்தர்வர்களும் யவனர்களும் சூறையாடினர். மனைவி முன் போல அன்புடன் இல்லை. புத்ர பௌத்ரர்களும் எதிர்த்தனர். மந்திரிகள் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். தனித்து விடப் பட்டவன், ஜரையால் பலம் இழந்தவன், பாஞ்சால ராஜன், எதிரிகளால் வேட்டையாடப் பட்டவன், சிந்தனை வயப் பட்டான். என்ன செய்வது என்று யோசித்தான். இன்னமும் மனதில் காமம் அடங்கவில்லை. மனைவியோ பெற்ற பிள்ளைகளோ கூட மறுத்த போது கூட அவர்களையே விரும்பினான். சீக்கிரமே கந்தர்வ வசம் ஆனது ராஜ்யம். முதுமை மேலும் வாட்டியது. ஊரை விட்டு வெளியேற முயன்றான். அதற்குள், பயம் என்ற மூத்தவன் வழிகாட்ட, ப்ரஜ்வார: அந்த நகரை எரித்தான். எரியும் ஊரில், தன் சந்ததிகளோடு, மனைவி மக்களோடு அழிந்தான். மரத்தின் பொந்துகளில் வாழும் நாகங்கள், மரம் காட்டுத் தீயால் பாதிக்கப் பட்ட சமயம் வெளியே திணறுவது போல திணறினான். அழுதான். எரியும் வீட்டில் அகப்பட்டது லாபம் என்று கந்தர்வர்கள் மற்ற எதிரிகள் பிடுங்கிக் கொண்டனர்.
வாழ்நாள் பூராவும் சுய நலமே பெரிதாக வாழ்ந்தவன், இப்பொழும் பரலோகம் சென்று விட்ட என் மனைவி எப்படி வாழ்வாள் என்று கவாலைப் பட்டான். தன் புத்ர, பௌத்ரர்களை பற்றி எண்ணி கவலைப் பட்டான்.
பெண் நினைவாகவே உயிரை விட்டவன், விதர்ப தேச அரசனின் மகளாகப் பிறந்தான். அந்த பெண் விவாக வயதடைந்தவுடன், சுயம் வரம் நிச்சயித்தான். பராக்ரமியான அரசனுக்குத் தான் என் மகள் என்று கோஷித்தான். அந்த நாட்களில் பிரசித்த அரசனான பாண்ட்ய ராஜா போட்டியில் அனைத்து அரசர்களையும் ஜயித்து அந்த பெண்ணை மணந்தான். மலயத்வஜ ராஜாவுக்கு, மிக அழகான ஸ்யாமள நிற கண்களுடன் புத்ரியும் ஏழு புத்திரர்களும் பிறந்தனர். அவர்கள் தன் நாட்டின் பிரதான அரசர்களாக ஆட்சி புரிந்தனர். நாளடைவில் அவர்கள் வம்சம் புத்திரர்கள், பௌத்திரர்கள் என்று பெருகியது.
அகஸ்தியர் அந்த குடும்பத்து பெண் ஒருவளை மணந்தார். அவர் புத்திரர்கள், த்ருடஸ்யுதன், இத்மவாஹன் என்று இருவர். மலயத்வஜன் தன் மகன்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு குலாசலம் சென்று விட்டான். ராஜ ரிஷியாக இருந்த அவனுடன் அவன் மனைவி வைதர்பி என்பவளும் சென்றாள். தாம்ரபர்ணி, சந்த்ரவஸா என்ற நதிகளில் ஸ்னானம் செய்து உடலும் உள்ளமும் தூய்மையாக இருவரும் பகவத் தியானத்தில் நாட்களை கழித்தனர். தவம் செய்வதன் நியமங்களை அனுசரித்து, பழங்கள், பச்சை காய்கறிகள், என்று மிதமாக உண்டு, தவம் செய்தனர். யோக சாதனைகளை மேற்கொண்டு ப்ரும்மத்தில் மனம் ஒன்றி, பற்றின்றி ஸ்தாணுவைப் போல ஸ்திரமாக வாசுதேவனை துதி செய்தனர். மலயத்வஜன் உயிர் போன பின் செய்வதறியாது தவித்து புலம்பி, தானும் தீயில் விழ யத்தனித்தவளை, ஒரு காலத்தில் குடும்ப சகாவாக இருந்த ஒரு ப்ராம்மணன் கண்டான். அவளைத் தடுத்து அன்புடன் பேசி, அவளிடம் சமாதானப் படுத்தி, அழாதே, என்று சொல்லி உலகியலைச் சொன்னான்.” பெண்ணே! யார் நீ, யாருடையவள், இதோ தூங்குவது போல கிடக்கிறானே, இவன் யார்? இவனுக்காக நீ ஏன் வருந்துகிறாய்? , என்னைத் தெரிகிறதா? நான் உங்கள் குடும்பத்தின் நண்பன், முன் பல காலம் உங்களுக்கு ஆலோசகனாக இருந்திருக்கிறேன். நினைவு இருக்கிறதா? அதன் பின் பல பிறவிகள். மனம் போனபடி வாழ்ந்தீர்கள். உலக சுகமே நிரந்தரம் என்று நம்பி இருந்தீர்கள். நான் அவிக்ஞாத சகா. புரஞ்சனன் என்ற அரசனாகவும், அவன் மனைவியுமாக ஒரு பிறவி. புருஷன், மனைவி என்ற பந்தமே பகவானால் ஸ்ருஷ்டிக்கப் பட்டது. பிரஜைகள் பெருக வேண்டும் என்பதற்காக. என்று பலவிதமாக தத்வ உபதேசங்கள் செய்தான். ஒன்றே இரண்டாகி முதன் முதலில் பர புருஷன் ஸ்ருஷ்டியை ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து உலகம் இயங்கி வருவதைச் சொல்லி, மானசமான ஹம்ஸம், மற்றொரு பரமாத்மான ஹம்ஸத்தால் தட்டி எழுப்ப பட்டது போல இருந்தது. அவளும் உண்மையை உணர்ந்து, சோகம் நீங்கி தன் உணர்வை அடைந்தாள்.
பர்ஹிஷ்மான் என்ற இந்த சரித்திரம், அத்யாத்மம் என்ற விஷயத்தை, கதை ரூபமாக, ஒருவனின் வாழ்க்கையாக சொல்லப் பட்டிருக்கிறது. இப்படியும் கற்பனையாக சொன்னது சிலருக்கு பிடிக்கும் என்று பாகவதம் சொல்கிறது. .
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-65
அத்யாயம்-29
நாரதரிடம் கதை கேட்ட ப்ராசீன பர்ஹிஷ், பகவன், நீங்கள் சொன்ன கதை எனக்கு புரியவில்லை. நாங்கள் கர்ம மார்கத்தை அனுசரித்தாலும் அதுவே எல்லாம் என்று நினைக்கவில்லை. கவிகள், அறிவுடையோர் அறிவார்கள்.
நாரதர் விவரித்தார். எல்லா உயிரினங்களுக்கும் தன் தேகத்தை போஷித்துக் கொள்ள அறிவு இருக்கிறது. அது போல மனிதனும் தன்னை போஷித்துக் கொள்ள அறிவுடன், ப்ரக்ஞா- என்ற மேம்பட்ட அறிவையும் உடையவன். அதிலும் அரசனாக இருப்பவனுக்கு பொறுப்புகள் அதிகம். மனித பிறவி அடைந்தவன், இக லோகத்தை விட்டு பரலோகம் அடைய வேண்டும். மறு பிறவி, மறுபடியும் அதே வாழ்க்கை என்று இருக்காமல் பகவானை நினைக்க வேண்டும். …….
அத்யாயம்-30
விதுரர் சொன்னார். ப்ரும்மன்! ப்ராசீன பர்ஹிஷனின் பிள்ளைகள் ருத்ர கீதம் பாடினார்கள். அது ஹரியை குறித்த துதி என்பது வரை புரிகிறது. என்ன பலன் அடைந்தார்கள். எதேச்சையாக பகவான் கிரீசனைக் கண்டு அனுக்ரஹம் பெற்றார்கள் என்று சொன்னீர்கள். அது பற்றி விவரமாகச் சொல்லுங்கள்.
ப்ரசேதஸ் தந்தை சொன்னபடி, தவம் செய்ய முனைந்தனர். இடையூறின்றி, சமுத்திரத்தின் உள்ளே ருத்ர கீதத்தை ஜப யக்ஞம் என்பதாகச் செய்யலானார்கள். புரஞ்சனனும் மகிழ்ந்தான். பல காலம் இவ்வாறு சென்ற பின், பகவான் சனாதனான பரம புருஷன், அவர்கள் எதிரில் கருட வாகனத்தில் வந்தார். மேருவின் சிகரம் போல கருடனின் உருவம்ஆகாயத்தில் பரவி நின்றது. மணி ஒளி வீசும் கழுத்தும், பீதாம்பரமும் திசைகளில் தக தகத்தன. இருளை அகற்றும் அருணனின் கிரணங்கள் போல அவருடைய பொன் ஆபரணங்கள் ஜொலித்தன. கிரீடம், அஷ்ட ஆயுதங்கள், உடன் வந்த பரிசாரகர்கள், முனிவர்கள், சுரேந்திரன் இவர்கள் கூட்டமும், எட்டு புஜங்களின் மத்தியில் ஸ்ரீ தேவியும், வனமாலையும், கண் கொள்ளா காட்சியாக இருந்தன. வணங்கி நின்ற பர்சிஷத புத்திர்களிடம் இடி முழக்கம் போன்ற குரலில் பேசலானார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: என்ன வரம் வேண்டுமோ, கேளுங்கள். பத்ரம் தே – உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். அரச குமாரர்களே, உங்கள் தவத்தை மெச்சினேன். என்றார். சந்த்யா காலத்தில் உங்களை நினைப்பவர்கள் உங்கள் சகோதரர்களுக்கு இணையாக ஆவார்கள். ருத்ர கீதத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தீர்கள். உங்களுக்கு வேண்டிய வரங்களைத் தருகிறேன். நல்ல அறிவையும் அருளுகிறேன். என்றார். தந்தை சொல்லை மதித்து தவம் செய்ய முனைந்தீர்களே அது சாலவும் நன்று. அதுவே உங்கள் குணத்துக்கு சான்று, குலத்துக்கு பெருமை. தந்தையின் மற்றொரு ஆணை பிரஜைகளை பெருக்குங்கள் என்பது. அது அவர் பெருமையை உலகில் பரவச் செய்யும் என்றார். என்ன வரம் கேட்பது ?. என்று அறியாமல் அவர்கள் தயங்க, அவரே மேலும் சொன்னார்.
கண்டு என்பவரின், ப்ரம்லோசா என்ற பெண்னிடம் பிறந்த பெண் கமல லோசனா,
(கண்டு என்ற முனிவரின் தவத்தைக் கலைக்க இந்திரன் ப்ரம்லோசா என்ற பெண்னை அனுப்பினான். அவளுடன் முனியர் பல காலம் கழித்தார். பின் சுவர்கம் செல்லும் முன் தன் கர்பத்தை மரங்களுக்கு கொடுத்து விட்டு அந்த பெண் சென்றாள். பெண் மகவு பிறந்தது. கண்டு முனிவரன் ப்ரும்ம தேஜசுடன் பிறந்த பெண் அழகியாக இருந்தாள். மரங்களின் அரசன், சோமன்- சந்திரன். பிறந்த குழந்தையின் பசிக்கு எதைக் கொடுப்பது என்று யோசித்து தன் சுட்டு விரலை அதன் வாயில் கொடுத்து சூப்ப வைத்தான். மரங்களின் கனி அம்ருதமாக இருப்பது அவன் செயலால் என்பதால் அது அம்ருதம். அதை குடித்து வளர்ந்த அப்சர ஸ்த்ரீயின் பெண். பல விதத்திலும் உங்கள் வம்சம் வளர உதவுவாள் என்றார். ஒரு பெண், எல்லோருக்கும் எப்படி மனைவி ஆவாள் என்ற கேள்விக்கு, அவள் அனுசரித்து நடந்து கொள்வாள். பல காலம் சந்தோஷமாக வாழ்ந்து பல தனயர்களைப் பெற்ற பின் என்னை வந்தடைவீர்கள் என்று அனுக்ரஹித்தார். ருத்ர கீதம் பாடி தவம் செய்த உங்களை இந்த இக லோக வினைகள் தொடராது. என்றார்.
இதைக் கேட்டு ப்ரசேதஸர்கள் திகைத்தனர். துதி செய்தனர்.
உங்கள் உதார குணம் வேண்டுபவரின் க்லேசத்தை போக்கக் கூடியது. மனம், வாக்கு, இவைகளை விட வேகமாக செல்லக் கூடிய உங்கள் கருணை கடாக்ஷம் பெரும் பாலை நிலத்தையும் கடக்கச் செய்து விடும். உங்களுக்கு நமஸ்காரம். தூய்மையே உருவானவர், சாந்தன்- அமைதியானவர் என்று வணங்குகிறோம். எங்கள் ஹ்ருதயத்தில், மனிதன் அல்லாத ஆத்மாவாக உள் உறைந்து காப்பவர் என்று வணங்குகிறோம்.
உலகை படைத்து, காத்து, கலைக்கும் உங்கள் மாயை. அதை வைத்து ஆட்டுவிக்கும் குணத்துக்கு நமோ நம:- பல நமஸ்காரங்கள்..
விசுத்த சத்வர், ஹரி, ஹரிமேதஸ், வாசுதேவன் , க்ருஷ்ணன் என்று பல பெயர்கள். எப்பொழுதும், அனைவருக்கும் நன்மையே செய்பவர். பத்மனாபனான உங்களை நமஸ்கரிக்கிறோம். கமல மாலையை தரித்தவர், கமலம் போன்ற பாதங்கள், கண்களும் கமலம் போன்றவையே- உங்களை நமஸ்கரிக்கிறோம். கமலத்தின் மகரந்தம் போன்ற மஞ்சள் நிற வஸ்திரம் தரித்தவர், பீதாம்பர தாரி, அனைத்து பூதங்களிலும் இருப்பவர், ஆயுளை தரும் உங்களுக்கு நமஸ்காரம்.
எங்களுக்கு வேறு என்ன வேண்டும்? மானிட ஜன்மத்தில் கண்களால் காண அரிதான உங்களுடைய இந்த ரூபத்தைப் பார்த்த பின் எதுவுமே தேவையில்லையே. இந்த தரிசனமே எல்லா கஷ்டங்களையும் நீக்கி விடும். தீன வத்ஸலன் நீங்கள். பெரியோர்கள் விரும்புவது கூட இந்த அளவே, இதற்காக தவம் செய்கிறார்கள், அனுதினமும் ஸ்மரிக்கிறார்கள், நன்மையல்லாததை எங்கள் அருகில் கூட வராமல் காப்பவர் நீங்கள். சின்னஞ்சிறு ஜீவன் முதல் மிகப் பெரிய ஜீவன்கள் வரை உள்ளிருந்து இயக்குபவர் உங்களுக்கு தெரியதா எங்களுக்கு எது நன்மை என்று, எதுவானாலும் ஏற்றுக் கொள்கிறோம். ஜகத்பதே! நாங்கள் வேண்டுவது இது தான். பகவான் ப்ரஸன்னமாக இருந்து எது பரகதிக்கு நல்லதோ அந்த வழியைக் காட்டுங்கள். பாரிஜாதம் தாராளமாக கிடைக்கும் பொழுது அதன் ருசியில் திளைக்கும் வண்டுகள் அருகிலேயே இருந்தாலும் மற்ற மரங்களை நாடிச் செல்வதில்லை. அது போல அனந்தனான உங்கள் தரிசனம் கிடைத்தபின், எங்களுக்கு வேறு எதிலும் நாட்டமிலை. இந்த பிறவியில் மட்டுமல்ல, வினைப் பயனாக வரும் பிறவிகளிலும் பாகவதர்களான உங்கள் பக்தர்களுடன் எங்கள் வாழ்க்கை அமையட்டும். சுவர்கம் கூட இதற்கு பின் தான். ஏனெனில் கூடி பாடுவதும், கதைகள் கேட்பதும், பஜனைகள் செய்வதும் தரும் ஆனந்தம் அங்கு இருக்காது என்கிறார்கள்.
சாக்ஷாத் பகவான் பவனை- சங்கரனை, க்ஷண நேரம் கண்டாலும், சிறந்த வைத்யனான அவர் உபதேசித்த கீதம்,எங்களுக்கு இந்த உயர்வை தந்துள்ளது. குரு ஜனங்களின் அருளால் கற்றதும், தங்கள் நடத்தைகள் மூலமே சிக்ஷித்த பெரியவர்களும், அந்தணர்களும், எங்கள் நண்பர்களும், அனசூயாவை போலவே அசூயை இல்லாதவர்கள். என்ன தவம் செய்தோம்? கடல் நீரில் மூழ்கி, அன்ன ஆகாரமின்றி நாங்கள் பல காலம் செய்த தவத்தின் பலன், இந்த அனைவரும் உங்களுடைய அனுக்ரஹத்திற்கு பாத்திரமாக வேண்டும் என்று வேண்டுகிறோம். மனு, ஸ்வயம்பூ, பகவான், பவன், என்று தவம் ஞானம் உடைய விசுத்த சத்வா: தூய்மையானவர்கள், எல்லையில்லாத தங்கள் மகிமையை துதிக்கிறார்கள், அவர்களுடன் சேர்ந்து வணங்குகிறோம்.
नमः समाय शुद्धाय पुरुषाय पराय च ।-वासुदेवाय सत्त्वाय तुभ्यं भगवते नमः ॥ ४२॥
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு துதி செய்யவும் மகிழ்ந்த ஸ்ரீ ஹரி, ப்ரீதியுடன் அனுக்ரஹித்து விட்டு, தன் இருப்பிடம் சென்றார்.
கடல் நீரின் ஆழத்திலிருந்து ஊர் திரும்ப நினைத்து கடல் மட்டத்திற்கு வந்தவர்கள், மரங்களே நிறைந்து ஊரே தெரியாமல் இருந்ததைக் கண்டார்கள். அதனால் கோபம் கொண்டு மரங்களை விலக்க எண்ணி தங்கள் வாயால் ப்ரசண்ட மாருதம் என்ற காற்றை வரவழைத்து அழித்தனர். பிதாமகர் ஓடி வந்தார். பேரன்களான பர்ஹிஷ்மதி ராஜ குமாரர்களை சமாதானப் படுத்தினார். மீதி இருந்த மரங்கள் பயந்தன. பயந்து தங்களுடன் ஒண்டி கொண்டிருந்த ரிஷியின் மகளை கொண்டு வந்து ஒப்படைத்தனர். அவளை ஸ்வயம்பூ அவர்களுக்கு மணம் செய்வித்தார். அபூர்வமான பிறவி அவள். மாரீஷா- மரங்களில் பிறந்தவள்.
அந்த யுகம் காலத்தின் வசம் ஆகி முடிந்த பின், நாலாவது யுகம் ஆரம்பித்தது. அந்த யுகத்தில் தெய்வ சங்கல்பத்தால் ப்ரும்ம புத்ரனாக தக்ஷன் தோன்றினார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து ஒன்பது, முப்பதாவது அத்யாயங்களின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-51
அத்யாயம்- 31
ப்ராசேதஸர்கள், முதுமை அடைந்தனர். மனைவியை பிள்ளைகளிடம் விட்டு தாங்கள் மட்டும் வனம் சென்றனர். ப்ரும்ம தீக்ஷை எடுத்துக் கொண்டு மேற்கு திசையில் யோக சாதனைகளில் ஈடு பட்டனர். அங்கு நாரதர் வந்தார். எழுந்து நின்று அவரை வரவேற்று உபசரித்த பின் ப்ராசேதஸர்கள் வினவினர்.
“ஸ்வாகதம் முனிவரே! சுர ரிஷியே, உங்களக் கண்டது எங்கள் பாக்கியம். எங்கும் சுற்றிக் கொண்டிருப்பவர், சூரியன் போலவே லோகத்தில் அபயம் அருளுபவராக நீங்களும் சுற்றி வருகிறீர்கள். நீங்கள் சொல்லியபடியும், ஸ்ரீ பரமேஸ்வரன் சொல்லியபடியும் நடத்திய என் வாழ்க்கை அனேகமாக முடியும் தறுவாயில் இருக்கிறது, ப்ரபோ! அத்யாத்ம ஞானமும், தத்வார்த தரிசனமும் என்னை அனாயாசமாக இந்த பவ சாகரத்திலிருந்து கரையேற உதவியுள்ளது.
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு ப்ரசேதஸ் சொன்னதைக் கேட்டு நாரதர் சொன்னார். அவர்கள் அனைவரையும் பார்த்து பதில் சொன்னார். நான் யார் உபதேசம் செய்ய- பகவான் ஸ்ரீஹரி செயல்- உலகில் அரசர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னாரோ அதே போல வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள். நல் குடி பிறப்பு, நேர்மையான செயல்கள், நீண்ட வாழ்நாள் (அல்லது உடல் நலம்), மனப் போக்கு, ஆளுமையோடு கூடிய சொல் -இவைகள் அரசனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் என்றார். தாய் வயிற்றில் பிறப்பது ஒரு பிறப்பு, பின் உபனயனம் அல்லது ப்ரும்மோபதேசம் பெறுவது இரண்டாவது பிறப்பு, யாகங்கள் செய்து வேத கர்மாக்களை விதிப்படி செய்வது மூன்றாவது பிறப்பு. கல்வி கற்றலும், தவம் செய்வதும் – பயிற்சிகளை விடாமல் செய்வதும், வார்த்தைகளை பொருள் பட சொல்வதும், நல்ல மனப் போக்கும், புத்தி, நிபுணத்வம்- திறமை, நல்ல பலம், புலனடக்கம் இவையனைத்தும் இருந்தாலும் விஸ்வாத்மா ஸ்ரீ ஹரியின் அனுக்ரஹம் இல்லாமல் பிரகாசிக்காது.
ஜீவன்கள் நன்மைகள் என்று கருதுவது தன் நலம் (தன் ஆத்ம க்ஷேமம்) வரை தான். ஸ்ரீ ஹரிதான் அனைவருக்கும் விரும்பும் பலனைத் தரும் பிரிய பந்து. மரத்தின் வேருக்கு நீர் பாய்ச்சினாலேயே மரத்தின் கிளைகள், தண்டுகள், துளிர்கள் வரை மகிழ்ச்சியடைகின்றனவோ, அது போலத்தான். இந்திரியங்களுக்கு ப்ராணன் – உயிர், தருவது போல ஸ்ரீ ஹரியின் சேவை ஒன்றே போதும். சூரியனிடமிருந்து நாட்களை கணக்கிடுகிறோம், வாரங்கள், மாதங்கள் என்று காலக் கணக்கு. பூமியில் ஜனித்த, அசையும் அசையா பொருட்கள் அனைத்தும் பூமியில் சங்கமம் ஆகின்றன. குணங்கள் அனைத்தும் ஸ்ரீஹரியிடம் சங்கமம் ஆகின்றன. ஜகதாத்மா ஸ்ரீ ஹரியின் இடம் என்பது சூரியன் பிரபை தூங்கிய உயிர்களை எழுப்புவது போல். த்ரவ்ய (மூலப் பொருள்), க்ரியா, ஞானம் என்ற வேறுபாடுகளுடன் சுழலுகிறது. ஒரு சூரியன் வானம் முழுவதும் வெளிச்சம் தருவது போல, பூமியில் வாழும் அனைத்தும் தங்கள் முயற்சியின்றியே, ப்ரும்மத்திடம் சக்தியைப் பெறுகின்றன. ரஜஸ், தமஸ், சத்வம் என்ற பேதங்கள். (மூன்று அளவு கோல்கள்) கொண்டவையாக. உயிரினத்தின் ஒரே ஆத்மா, அனைத்திலும் பரவியிருக்கும் ப்ரதான புருஷன், தன் தேஜஸால் குணங்களை இந்த அளவு கோலால் பகிர்ந்து அளித்து அதனதன் தனித் தன்மையை நிலை நிறுத்துகிறான். அவனது தயையோ, திருப்தியோ, என்று ஏதோ ஒன்று, அசையும் அசையா உலகை காக்கிறது. அனைத்து ஜீவன்களின் நன்மையில் தானும் மகிழ்ச்சியடைகிறான். அதனால் தான் ஜனார்தனன். பாரபக்ஷம் இல்லாமல் இருப்பதாக தெரிந்தாலும், தன்னிடம் பக்தி கொண்ட, தன் செயல்களில் நேர்மையாக இருப்பவன், தனம், உடல் பலம் இவை இல்லாதவன் என்றாலும் இவர்களுக்கு அதிக அனுக்ரஹம் செய்கிறான். தன் குலம், தனம் என்று கர்வத்துடன் செய்யும் செயல்களுக்கு பலனும் அதற்கு தகுந்த அளவிலேயே அமையும். ஸ்ரீ தேவி ஹரியினுடனேயே அனுசரித்து இருப்பவள். அவளைத் தனியாக வேண்டுவதே தேவையில்லை.
மைத்ரேயர் சொன்னார்: நாரதர் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அரசர்களை ஆசீர்வதித்து தன் இருப்பிடம் சென்றார். அவர்களும் தங்கள் சாதனைகளைத் தொடர்ந்து செய்பவர்களாக, காலம் வந்த பின் நல்ல கதியை அடைந்தனர். பெரியவரே, இது தான் நீங்கள் கேட்க விரும்பிய நாரத-ப்ரசேதஸ கதை.
ஸ்ரீ சுகர் சொன்னார்: விதுரர் அதன் பின் அவரை வணங்கி விடைபெற்றார். கஜஸாஹ்வயம் என்ற இடத்தில், தன் உறவினர்களின், சுற்றத்தார்களை காண கிளம்பினார். இந்த கதையை கேட்பதின் பலனாக, ஆயுள், தனம், சௌக்யம், ஈஸ்வர பக்தி இவை அமையும் என்று பலஸ்ருதி சொல்லி முடிக்கிறார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் முப்பத்து ஒன்றாவது அத்யாயங்களின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39