|| ஸ்ரீமத் பாகவதம் – ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஏழாவது ஸ்கந்தம். ||
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-1
பரீக்ஷித் ராஜா வினவினான்: ப்ரும்மன்! நீங்களே பகவான், அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வார். அனைவருக்கும் நண்பனாக பிரியமாக இருப்பவர். என்று சொன்னீர்கள். இந்திரனுக்கு சாதகமாக தைத்யர்களை கொன்றார் என்றும் கதை சொன்னீர்கள். அது ஏன்? சுரகணங்கள் எந்த விதத்தில் உயர்வு. அசுர்கள் மட்டுமே தண்டிக்கப் படுகிறார்கள். குணமில்லாத தேவர்கள் கூட அவருடைய கோபத்துக்கு ஆளாவதில்லையே. நாராயண குணங்களை சொல்லிக் கேட்டபின் இந்த சந்தேகமும் வருகிறது. தாங்கள் தான் இதற்கு சமாதானம் சொல்ல வல்லவர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: மஹாராஜா! நல்ல கேள்வி. ஸ்ரீ ஹரியின் சரித்திரம், பாகவத மாஹாத்ம்யம் பக்தியை வளர்க்கும் அத்புதமான சரித்திரம். நாரதர் முதலிய ரிஷிகள் பாடி பரவச் செய்த புண்ய கதை. ஸ்ரீ க்ருஷ்ணனை வணங்கி மேலும் ஹரியின் கதையை சொல்கிறேன். பாரபக்ஷம் இல்லாமல் நாம் அறிந்த இயற்கையின் நன்மை தீமைகளைக் கடந்தவர். பிறவியற்றவன். நம்மால் அவருடைய செய்கைகளை விமரிசிக்க முடியாது. முக்குணங்கள் சத்வ, ரஜஸ் தமஸ் என்பவை உயர்வும் தாழ்வும் நாம் அதில் காண்பது தான். ஸ்ரீஹரி அதற்கு அப்பாற் பட்டவர், அதனால் வருத்தமோ, மகிழ்ச்சியோ அவருக்கு இல்லை. பிறவியில் சத்வம் மேலோங்கி இருந்த பொழுது தேவ ரிஷிகள் தோன்றினர். ரஜஸ் மேலோங்கி இருந்த சமயம் அசுரர்கள் தோன்றினர். தாமசம் மேலோங்கி இருந்த சமயம் யக்ஷ, ராக்ஷஸர்கள் தோன்றினர்.
ஆதித்யனிடம் வெளிச்சம், கட்டைகளில் நெருப்பு, பாத்திரங்களில் நீர், கடத்திலும் வெளியிலும் ஆகாசம், வாசனை மூலம் காற்று என்று சுட்டிக் காட்டுவது போல பகவானை சுட்டிக் காட்டவழியில்லை. கவிகள், அறிஞர்கள் தாங்கள் அனுபவத்தால் கண்டறிந்து சொன்னார்கள். அசுர்களிடம் பக்ஷபாதம் காட்டி வதம் செய்வதாக நினைப்பது தவறு. ப்ரும்ம சாபத்தால் அசுர குலத்தில் பிறக்க நேரிட்ட ஜீவன்களை, மீட்கவே வதம் செய்தார்.
ராஜன்! முன் ஒரு சமயம் அஜாத சத்ரு என்று பெயர் பெற்ற தர்ம புத்திரர், யாகம் செய்த பொழுது நடந்த சம்பவம். சேதி ராஜன் என்ற சிசுபாலனுக்கு வாசுதேவன் சாயுஜ்யம் எனும் தன் அருகிலேயே வாசம் செய்யும்படியான அனுக்ரஹத்தை அளித்தார். தர்மபுத்திரர் ஆச்சர்யப் பட்டார். அந்த யாக சபையில் கூடியிருந்த ரிஷி முனிவர்களை கேட்டார். ‘அஹோ! அத்புதம். தனிமையில் தவம் செய்பவர்களுக்குக் கூட கிடைக்காத நல்ல கதி. வாசுதேவன் என்ற பர தத்வத்தில் இந்த சேதி ராஜா சேர்ந்து விட்டான். வாசுதேவனை சதா நிந்தித்துக் கொண்டே இருந்தவன். பகவானை நிந்தித்த வேன ராஜா, தண்டனையை அடைந்தான். இந்த தமகோஷ சுதன்- சிசுபாலன், நிந்திக்கும் வார்த்தைகளையே பேசினான். தந்த வ்க்த்ரனும் கோவிந்தனிடம் அவன் மேன்மையை பொறுக்க மாட்டாமல் சபித்துக் கொண்டே இருந்தான். ப்ரும்மரூபன் பரம் பொருள், அழிவில்லாதவன் என்று நாம் போற்றும் க்ருஷ்ணனை வாய்க்கு வந்தபடி தூஷணைகளையே செய்தான். இப்படி பொது இடத்தில் அனைவரும் காண தவறாக பேசியவனைக் கூட பகவான் பொறுத்துக் கொண்டது மட்டுமல்ல தன்னிடமே சேர்த்துக் கொண்டார் என்பது நம்மால் நினைக்க கூட முடியவில்லை. பகவன்! இதற்கு என்ன காரணம்? தயவு செய்து சொல்லுங்கள்’ என்றார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: நாரதர் பதில் சொன்னார். இது நிந்தனை, இது புகழ்ச்சி, இது நல்லது, இது கெட்டது என்று மனிதர்கள் கல்பித்துக் கொண்டவையே. சிலரை உயர்ந்தவர், என்றும் மற்றவர் தாழ்ந்தவர் என்றும் தங்களுக்குள்ளேயே பேதம் பார்ப்பதும் ,ஹிம்சையும், அபிமானத்தால் தண்டிப்பதும், கடுமையாக பேசுவதும், ஜீவன்களுக்குள் நம்மவர் பிறர் என்று பிரித்து வித்தியாசம் பார்ப்பதும் இவர்கள் அறியாமையே. அகில லோகமும் பரமாத்மாவில் அடக்கம். எனவே அவர் ஜீவன்களில் தாரதம்யம் பார்ப்பதுமில்லை. தண்டிப்பதும் அந்த ஜீவனின் நன்மைக்காகவே. பயத்துடன் அணுகுபவரும், அன்புடன் நெருங்குபவரும், காமத்துடன் – தன் தேவையை முன்னிட்டுக் கொண்டு வேண்டுபவரும், எப்படியோ அதே போலவே விரோதமாக நினைத்து வருபவரும், அவர் அருகில் சென்றபின் தனித் தனியாக நினைப்பதேயில்லை. ஒருவர் பக்தி யோகத்தால் அனவரதமும் நினைப்பது போலவே, விரோதியாக நினைப்பவனும் அனவரதமும் அதே நினைவாக இருக்கிறான். குளவி ஒரு புழுவை கொண்டு வந்து தன் கூட்டில் வைத்து தன் போல ஆக்குமாம். அந்த சிறு ஜீவன் குளவியையே பார்த்து பார்த்து தானும் அதுபோல ஆகுமாம், அது போல பகவானும் தன்னை விரோதிப்பவனையும் அருகில் தன் நினைவோடு இருக்கும்படி வைத்துக் கொள்கிறார். நாளடைவில் விரோதியும் பக்தனாவான் என்பதாக சொல்கிறார். இவ்வாறு மாயையால் மனிதனாக வந்த ஈஸ்வரன், ஸ்ரீ க்ருஷ்ணன், விரோதியையும் தன்னை நினைக்கச் செய்து அவன் பாபங்களைத் தீர்க்கிறார்.
காமத்தால், த்வேஷத்தால், பயத்தினால் ஸ்னேகத்தால், பக்தியால் என்று பலவிதமாக மனித மனதில் ஏற்றி, அவனை பாபங்களிலிருந்து விடுவிக்கிறார். கோபிகள் காமத்தால், கம்சன் பயத்தினால், சேதி அரசன் போன்றவர்கள் துவேஷத்தால், வ்ருஷ்ணி குலத்தவர் சம்பந்தம் செய்து கொண்டதால், உங்களைப் போன்றவர்கள் நட்பினால், பக்தியினால் நாங்கள் . வேனன் போன்றவர்கள் கடைசி நிலையில் உள்ளவர்கள். ஏதோ ஒரு உபாயத்தால் அவனையும் ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில் மனம் லயிக்கச் செய்யவேண்டும்.
பாண்டவா! தாய் வழி உறவினன் சேதி அரசனும், தந்த வக்த்ரனும். இவர்கள் இருவரும் மஹா விஷ்ணுவின் அணுக்க தொண்டர்கள், வாசல் காவலர்கள். சாபத்தினால் அந்த பதத்திலிருந்து தள்ளப் பட்டனர்.
யுதிஷ்டிர் கேட்டார்: எப்படி சாபம் வந்தது? யார் சாபம் கொடுத்தது? ஸ்ரீ ஹரியின் அருகிலேயே இருந்தவர்கள் என்ன செய்து சாபத்துக்கு ஆளானார்கள். வைகுண்ட புர வாசிகள், தேக சம்பந்தமான தொடர்பே இல்லாதவர்கள் என்று கேட்டிருக்கிறோம்.
நாரதர் சொன்னார்: ஒரு சமயம், ப்ரும்மாவின் புதல்வர்கள் சனகன் முதலானோர் மூவுலகையும் சுற்றிக் கொண்டு வரும் வழியில் வைகுண்டம் சென்றார்கள். முன்னோர்களுக்கும் முன்னோர்கள். அவதூதர்கள், ஆறு ஏழு வயது வளர்த்தியிலேயே இருந்தனர். குழந்தைகள் என்று எண்ணி துவாரபாலகர்கள் தடுத்தனர். அவர்களை இந்த வைகுண்ட வாசத்துக்கு ஏற்றவர்கள் அல்ல, ரஜஸ் தமஸ் இல்லாத இந்த இடத்தில் யாரென்று கூட வினவாமல் கடுமையாக பேசுகிறீர்கள். உங்களுக்கு ஏற்ற அசுர குலத்தில் பிறக்கக் கடவீர் என்று சபித்தனர். ஆனாலும், கருணயுடன் மூன்று ஜன்மங்கள் அங்கு இருங்கள், பின் ஸ்ரீ ஹரியின் பாத சேவையில் திரும்பி வந்து சேருங்கள் என்றனர். அப்படி வந்தவர்கள், மூத்தவன் ஹிரண்ய கசிபு, ஹிரண்யாக்ஷன் இளையவன்; ஹிரண்ய கசிபுவை சிம்ஹ ரூபம் எடுத்து வதம் செய்தார். ஹிரண்யாக்ஷனை வராகமாக வந்து வதம் செய்தார். ஹிரண்ய கசிபு தன் மகன் ப்ரஹ்லாதன், கேசவ பிரியன் என்பதற்காகவே, மகன் என்றும் பாராமல் கொல்லத் துணிந்தான். பலவிதமாக முயன்றும், தர்ம பிரியனான ப்ரஹ்லாதன் பகவத் பக்தன், அமைதியானவன். சம தர்சனம் – அனைவரையும் ஒரே போல காணும் குணம் அவனுக்கு சர்பூதாத்ம பூதனான பகவான் அருளால் வாய்த்திருந்தது.
அடுத்ததாக கேசினீ என்பவளுக்கு விஸ்ரவஸர் மகனிடம் ராவண கும்பகர்ணர்களாக பிறந்தனர். ராமர் கையால் ராவணன் மாண்டான். ராம வீர்யம் பற்றி உனக்கு மார்க்கண்டேயர் சொல்வார். அவர்களே தற்சமயம் க்ஷத்திரியர்களாக, தாய் வழி உறவினர்களாக வந்து ஸ்ரீ க்ருஷ்ணரின் சக்ரத்தால் வதம் செய்யப் பட்டு நல் கதியடைந்து விட்டனர். விஷ்ணு பார்ஷதர்கள் என்ற துவார பாலகர்கள், திரும்பவும் தங்கள் பதவியை அடைந்தனர்.
யுதிஷ்டிரர் திரும்பவும் கேட்டார்: தன் மகனிடமே எப்படி அந்த அளவு துவேஷம் வந்தது? பகவன்! ப்ரஹ்லாதன் கதையைச் சொல்லுங்கள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், முதல் அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-47
அத்யாயம்-2
நாரதர் சொல்லானார்:
தன் தம்பி ஹிரண்யாக்ஷனை வதம் செய்து விட்டார் என்று அறிந்து ஹிரண்யகசிபு அதிக கோபமும் வருத்தமும் அடைந்தான். கண்கள் சிவக்க, பல்லை கடித்தபடி, க 3தையை உயரத் தூக்கி தன் பக்கத்து தானவ தைத்தேயர்களை அழைத்தான். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து, பங்காளி வந்து என் சகோதரனை கொன்று விட்டான். மாயாவி, காட்டு மிருகம் போல க்ரூரமாக, சற்றும் குணமின்றி, சிறு பிள்ளைத் தனமாக செய்த செயலுக்கு அவனை என் ஸூலத்தால் பிளந்து கொட்டும் உதிரத்தை வைத்து என் தம்பிக்கு தர்ப்பணம் செய்யப் போகிறேன். வேரோடு குலத்தையே அழிக்கிறேன். அதன் பின் தேவலோகத்தவர், விஷ்ணு ப்ராணர்கள் – விஷ்ணுவே அவர்களின் மூச்சு- என்று சொல்லிக் கொள்கிறார்களே அவர்கள் ஒட்டு மொத்தமாக அழிவார்கள். நீங்களும் தவம் ஸ்வாத்யாயம் என்று செய்து உங்கள் பலத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் விஷ்ணு, அந்தணர்கள் செய்யும் யாகத்தால் வளருகிறான். யாகம் தர்ம மயமான பரம புருஷனே. தேவ, ரிஷி, பித்ருக்கள் அனைவரும் தர்மத்தை அறிந்து அதன் படி நடப்பவர்களே. எங்கெல்லாம், அந்தணர்கள், பசுக்கள், வேத பாராயணம் , வர்ணாஸ்ரம காரியங்கள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று தீயிட்டு கொளுத்துங்கள். அதைக் கேட்டு சுயமாகவே கலவரத்தை விரும்பும் அவனுடைய அடியாட்கள், சென்ற இடம் எல்லாம் கலஹம் செய்தனர் தீ மூட்டினர், மக்களை பயமுறுத்தினர். புரங்களை, கிராமங்களை உத்யானவனங்கள், க்ஷேத்ரங்கள், ஓய்வு எடுக்கும் இடங்கள், மாட்டுக் கொட்டில்கள், குதிரை லாயங்கள், சேனை தங்குமிடம் எதையும் விடவில்லை தீக்கிரையாக்கினார்கள். பாலங்கள், ப்ராகாரங்கள், கோபுரங்கள் இவைகளை சுத்தியலால் தாக்கினர். நெடுங்காலமாக வளர்ந்த மரங்களை சிலர் கோடாலிகளால் வெட்டினர். இவர்கள் படுத்திய பாட்டில், தேவர்கள் தேவலோகத்தை விட்டு வெளியேறினர்.
ஹிரண்ய கசிபு, இனி இங்கு தைத்யர்களின் ஆதிக்கம் தான். நானே அழிவில்லாத ஆத்மா, சுத்தன், எங்கும் வியாபித்து இருப்பவன், என்றவன், மேலும் பல நல்ல குணங்களை தன்னிடம் இருப்பதாக சொல்லிக் கொண்டு, திரிந்தான். வேகமாக செல்லும் நதியின் நீரில், மரங்களும் உடன் செல்வது போல தோற்றம் தருவது போல, பூமியே தன் இஷ்டத்துக்கு ஆடுவது போல உணர்ந்தான். தன்னிடம் இல்லாத தெய்வத் தன்மையை தானே தன்னிடம் இருப்பதாக பறை சாற்றிக் கொண்டு உலவினான்.
தன் தாயிடமும், பெண் உறவினர்க்ளிடமும், புதல்வர்களையும் கவலைப் படாதீர்கள். சண்டைக்கு பயப்படவேண்டாம். எதிரியின் கையால் அடிபட்டு மாய்வது சிறப்பான மரணம் என்றான். வழிப் போக்கர்களுக்காக தண்ணீர் பந்தல் வைத்திருப்பர். அங்கு வருபவர்கள் தாகம் தீர தண்ணீரை குடித்துவிட்டு போவர். அவர்களுக்கும், அந்த தண்ணீர் பந்தலுக்கும் என்ன உறவு- சில நிமிடங்கள். தாகம் தீரும் வரையே-அதே போலத் தான் ஜீவன்கள் உலகில் வாழும் வாழ்க்கையுடன் தொடர்பும். நித்யமான ஆத்மா அழிவில்லாதது. சுத்தமானது, எங்கும் பரவி இருப்பது, அனைத்துக்கும் மேலானது. இந்த ஆத்மா ஒரு உடலில் தங்கி அந்த உடலுக்குரிய ஜீவனின் குணங்களை ஏற்றுக் கொள்கிறது. நதிக் கரையின் மரங்கள் அதன் ஓட்டத்தோடு இயைந்து நகருவது போல தோற்றம் தருவது போலவே, கண்களால் பார்த்து பூமி நகருவதாக நினைக்கிறார்கள். இந்த ஓட்டத்தோடு ஓடினாலும், தன்னையறிந்தவன், மனதில் கல்மஷம் இல்லாதவன், தானும் அந்த பரமாத்மாவுக்கு இணையாக ஆகிறான். நிரந்தரம் இல்லாத உடலை தனது என்று நினைப்பதும், உறவினர் அன்புடையவர், மற்றவர் என்று பிரித்து சொல்வதும், அவர்கள் பிரிவுக்கு வாடுவதும் வினைப் பயன்.
ஒரு செயல் நடப்பதும், அது முடிவதும், சோகமும், விவேகமும் அவிவேகமும், கவலையும் மறதியும் நிறைந்த இந்த கதையை யமராஜனின் பந்துக்கள் பேசிக் கோள்வதை வைத்து சொல்கிறேன் கேள்.
உசீனரன் என்ற இடத்தில் ஒரு அரசன், சுயக்ஞன் என்பவன், தன் தாயாதிகளுடன் யுத்தத்தில் கொல்லப் பட்டான். அவனை யுத்த களத்தில் பார்த்தவர்கள் மிகவும் வருந்தினர். ரத்ன கவசம் உடைந்து, ஆபரணங்கள் சிதறி எங்கும் இறைந்து கிடந்தன. ஹ்ருதயம் அம்புகளால் துளைக்கப் பட்டு, தரையில் கிடந்தான். பத்னிகள் இந்த நிலையில் கணவனை பார்த்து ஹா நாதா! என்று மிகவும் வருந்தி அழுதனர், பெரும் குரலில் அழுது, அஹோ, விதாதா! படைத்தவனே, கருணையில்லையா, எங்கள் பிரபு உசீனர எனும் ராஜத்தின் ப்ரஜைகளுக்கு வாழ்வின் ஆதாரமாக இருந்தவன், இப்பொழுது அவர்களுக்கு துக்கத்தை அளிப்பவனாக மாற்றி விட்டீர்கள். எங்கள் அரசன், எங்கள் கணவன் இல்லாமல் எப்படி வாழ்வோம்? எங்களையும் அவனுடன் சேர்த்து அழைத்துச் செல்லுங்கள் என்று முறையிட்டனர். சூரியனும் மறைந்தான்.
விடிந்த பின் சிறு பையனாக வேடம் தரித்து யம ராஜா அவர்களிடம் வந்தார். ‘அஹோ! இது உலக நியதி தான் என்று அறிந்தும் இப்படி பரிதவிக்கிறீர்களே. எங்கிருந்து வந்தார்களோ, அங்கேயே திரும்பிச் செல்வது தான் மனித தர்மம். அதை மறந்து இறந்தவனுக்காக எவ்வளவு துக்கம், அழுகை, ப்ரலாபம். நாம் எப்படி வந்தோம் இந்த பூவுலகத்துக்கு. நம் முன்னோர்கள் நம்மை நினைக்கிறார்கள். மற்ற ஓநாய் போன்ற மிருகங்கள் விழுங்கிவிடாதபடி கர்பத்தில் வைத்து தாய் காக்கிறாள். பிறந்த குழந்தையை அழிவில்லாத பகவான் காப்பாற்றுகிறார். தண்டித்தும் அரவணைத்தும் தந்தையாக வளர்க்கிறார். வழியில் விழுந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைக்கிறது. வீட்டில் பாதுகாத்து வைத்திருப்பது அழிந்தும் போகிறது. விதியால் காப்பாற்றப் பட்டு, அநாதையாக காட்டில் திரியும் ஜீவனும் உயிர் வாழ்கிறது. உயிரினங்கள் தாங்கள் பிறக்க காரணமான உடல்- பிறவியை அனுசரிக்கின்றன. ஒரே விதமான வினைப்பயன் என்பது எப்பொழுதும் இருப்பதில்லை. சரீரம் பரம புருஷனின் மனதில் தோன்றியது. ஜீவனுக்கு சில காலம் தங்க ஒரு இடம்- வாடகை வீடு போல. காலம் தான் வாழ்வை நிர்ணயிக்கிறது. நீரும், ஸூரியனின் தாபமும் சேர்ந்து வளரும் தாவரங்கள் நாளடைவில் முற்றி உருவழிந்து தானே மறைகின்றன. மரத்தினுள் நெருப்பு மறைந்திருப்பது போல காற்று ஜீவன்களின் உள் உறைகிறது, ஆகாயம் எங்கும் பரவி இருப்பது தெரிவதேயில்லை அதே போல பரம புருஷன் நம் அறிவுக்கு புலனாவதில்லை. இந்த சுயக்ஞன் தூங்குவது போல கிடக்கிறான், இவனை எண்ணி வருந்த வேண்டாம். உடல் இருக்கும் வரை ஜீவன் அதற்கான வேலைகளை செய்து தான் ஆக வேண்டும். வாழ்க்கையே மனதின் கற்பனை போலவோ, கனவில் வருவது போலவோ, ஒரு தோற்றமே. அது நிச்சயமல்ல என்று விழித்தவுடன் நாம் உணர்வது போல என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்வார்கள். எனவே வருந்த வேண்டாம்.
ஒரு வேடன், ஆங்காங்கு வலை விரித்து காத்திருந்தான். பக்ஷிகள் தானாக அதில் சிக்க ஆசை காட்டுவது போல அதில் தானியங்களை இறைத்திருந்தான். குருவி தம்பதிகள், அதைக் கண்டன. பெண் குருவி அதில் மாட்டிக் கொண்டது. ஆண் குருவி மிகவும் வருந்தியது. கடவுளே, கருணையில்லையா? இந்த பெண் குருவி தனித்து எப்படி வாழும், வேடனே என்னையும் ஏற்றுக் கொள், எங்கள் கூட்டில் இன்னும் இறக்கை முளைக்காத குஞ்சுகள் உள்ளன. இந்த தாய் குருவி இல்லாமல் அவைகளை நான் எப்படி போஷிப்பேன். என்னை எடுத்துக் கொள். அவளை விட்டு விடு- குஞ்சுகள் தாயார் இல்லாமல் பரிதவிக்கும். என்றது. இதைக் கேட்ட பின்னும் அந்த வேடன் அந்த குருவியையும் தன் அம்பால் அடித்து வீழ்த்தி விட்டான். அது அவனுக்கு உணவு, எனவே, அந்த செயல் தவறல்ல. இயற்கை நியதி. இது உங்களுக்கும் பொருந்தும். உங்கள் அரசன், உறவினன் என்று பரிதவிக்கிறீர்கள், இதே நிலை தான் உங்களுக்கும் காத்திருக்கிறது, காலத்துக்கும் ஏதோ ஒரு காரணம் கிடைக்கும், மரணம் அனைவருக்கும் பொதுவானதே. நூறு ஆண்டுகள் அழுது புரண்டாலும் இறந்த மன்னன் திரும்பி வரமாட்டான்.
ஹிரண்யகசிபு சொன்னான்: அந்த சிறுவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் வியந்தனர். தாயாதிகள், உறவினர்கள், உலக வாழ்க்கையே அனித்யம் தானே என்று உணர்ந்து சமாதானம் அடைந்து திரும்பினர்.
நாரதர் தொடர்ந்தார்: தைத்ய ராஜன் சொன்னதைக் கேட்டு, திதி தன் மருமகளுடன் திரும்பிச் சென்றாள். புத்ர சோகம் விலகி மனம் அடங்கியது.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-61
அத்யாயம்-3
நாரதர் சொன்னார். ஹிரண்யகசிபு தன்னை யாரும் வெற்றி பெற முடியாதவனாக, முதுமையோ, மரணமோ அண்ட முடியாதவனாக, தன்னிகரற்ற வீரனாக, தன் ராஜ்யத்தை ஆள தீர்மானித்தான். மந்தர மலையை அடைந்து கடுமையாக தவம் செய்தான். கைகளை உயர தூக்கி, பாதங்களின் கட்டை விரல் பலத்தில் நின்று கொண்டு ஜடை முடி தரித்தவனாக பல காலம் அசையாமல் தவம் செய்தான். ஸுரியன் தன் கிரணங்களுடன் தகிப்பது போல அவன் தலையிலிருந்து புகை கிளம்பலாயிற்று. மேல், கீழ், இடை பாகம் என்று மூவுலகையும் தகிக்கலாயிற்று. திசைகள் அந்த வெப்பத்தால் பள பளத்தன. தாரகைகளும் க்ரஹங்களும் விழுந்தன. பூமியே நடுங்கியது. அந்த நிலை தேவலோகத்திலும் பரவியதும், தேவர்கள் ப்ரும்மாவை சரணடைந்தார்கள். தேவதேவா! தைத்யன் தவம் செய்கிறான். எங்களால் தேவலோகத்தில் இருக்க முடியவில்லை தகிக்கிறது. உலகமே அழியும் முன் பகவானே, காப்பாற்றுங்கள் என்றனர். அவனுக்கு என்ன தேவை? எதற்காக தவம் செய்கிறான்? அவனுடைய சங்கல்பம், சராசரத்தையும் ஜயித்து நானே தலைவனாவேன். பரமேஷ்டி (அதிக யாகங்கள் செய்தவன்) என்று என் சிம்மாசனத்தை அடைவேன். காலத்தை என் ஆதீனத்தில் கொள்வேன். கல்பங்கள், வைஷ்ணவ சக்திகள் இவைகளை ஒழிப்பேன். நானே மூன்று உலக நாயகனாக த்ரிபுவனேஸ்வரன் என்று கொண்டாடப் படுவேன் என்பது. உங்கள் பதவிக்கே ஆபத்து என நினைக்கிறோம். அதனால் விண்ணப்பிக்கிறோம்.
ப்ரும்மாவும் ப்ருகு முனிவர், தக்ஷன் முதலானோரோடு தைத்ய ராஜனின் இருப்பிடம் சென்றார். தவம் செய்வதில் கவனமாக ஒரே நினைவுடன் இருந்த அசுரனை எறும்பு, கரையான், பூச்சிகள் சூழ்ந்திருந்தன. உலகில் ஸூரிய ஒளி பரவி இருப்பது போல அசுரனைச் சுற்றி ஒரு ஒளி படர்ந்திருந்தது. ப்ரும்மா வியந்தார்.
காஸ்யபா! எழுந்திரு. எழுந்திரு. உன் தவம் சித்தியாயிற்று. வரம் அளிக்க நான் வந்திருக்கிறேன். என்ன விருப்பமோ, கேள். உன் தவத்தை மெச்சினேன். அத்புதமான மன அடக்கம். பூச்சிகள், எறும்புகள் உண்ட சரீரத்தில் உயிர் எலும்புகளில் மட்டுமே தங்கி உள்ளன. இது போல யாரும் இதுவரை தவம் செய்ததும் இல்லை, இனி செய்யப் போவதும் இல்லை. கடினமான இந்த தவத்தால் நீ என்னை பிரமிக்கச் செய்து விட்டாய். திதி நந்தன! என் ஆசிகள்.
நாரதர் சொன்னார்: இவ்வாறு சொல்லி, ப்ரும்மா தன் கமண்டலு ஜலத்தை தெளித்து, எறும்பு முதலானவை அரித்து இருந்த உடல் பாகங்கள் பழைய படி ஆகச் செய்தார். முன்னிலும் அதிக பலசாலியாக, இளைஞனாக புடமிட்ட பொன் போன்ற வர்ணத்தினனாக, ஹுரண்ய கசிபு எழுந்தான். வானத்தில் ஹம்ஸ வாகனத்தில் நின்ற ப்ரும்மாவைப் பார்த்து வணங்கினான். நால் திசைகளையும் பார்த்து கண்களில் நீர் பள பளக்க தழதழத்த குரலில் வேண்டினான்.
ஹிரண்ய கசிபு: கல்ப முடிவில் கால சிருஷ்டி இருட்டில் கண் தெரியாதவன் போல இருக்கிறேன். என் முன்னால் ஸ்வயம் ஜோதி ஸ்வரூபமான நீங்கள் உங்கள் காந்தியால் உலகைக் காணச் செய்து விட்டீர்கள். மூவுலகை படைத்து, காத்து, பின் கலைக்கும் உங்களுக்கு நமஸ்காரம். சத்வ,ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களே இருப்பிடமாக உள்ள மஹான் உங்களுக்கு நமஸ்காரம். ஆதியான, பீஜமான, ஞான விக்ஞான மூர்த்தி, ப்ராண, இந்திரிய, மனம், புத்தி, இவைகளை பலவிதமாக பயன் படுத்தி உயிர்களின் உருவங்களை படைத்தவர், உங்களை வணங்குகிறேன். ப்ரஜைகளுக்கு ப்ராணனாக, உலகை படைத்து அதை இயக்குபவர், சித்தம் என்பதன் சித்தம், மனம், இந்திரியங்கள், இவைகளை ஆட்டுவிப்பவர், பஞ்ச பூதங்களுக்கும் தலைவன் உங்களை வணங்குகிறேன். மூன்று வேதங்கள் ஸ்வரூபியான நீங்களே, ஏழு விதமான அக்னி ஹோத்ரம் முதலான யாகங்கள், இவைகளில் நான்கு ஹோதாக்கள், (யாகத்தில் நான்கு பக்கமும் அமர்ந்து யாகத்தை செய்பவர்கள்) சாதுர் ஹோத்ரம் என்ற வித்யை விதிப்படி, செய்விக்கிறீர்கள். அதே சமயம், உயிரினங்கள் அனைத்திலும் உறையும், ஒரே ஆத்மாவான உங்களை, அந்தராத்மா என்றும் கவி என்றும் அனந்தன் என்றும் போற்றுகிறார்கள்.
ஜீவ லோகத்தின் ஜீவன், அவர்களின் ஆயுள், – கால ரூபன்- ஒவ்வொரு நொடியாக கணக்கிட்டு இறுதியில் ஜீவனின் ஆயுளை முடிப்பதும் நீங்களே. ஆத்மா, ஞான ரூபி, பரமேஷ்டி- பரமேஸ்வரனிடத்தில் உதித்தவன், பிறவியற்றவன், மஹான் என்றும் உள்ள ஹிரண்யகர்பன் நீங்களே.
உலகில் உங்களை மிஞ்சி ஒரு சக்தி என்பது எதுவும் இல்லை. எதிர்ப்பதும் எதுவும் இல்லை. கல்வி, கலைகள், உயிர்களின் உடல், என்று அனைத்தும் உங்களுள் அடக்கம்- ஹிரண்யகர்பன் – மற்ற அனைத்தும் உங்களுக்கு பிறகே. இந்த ஸ்தூலமான ப்ரும்மாண்ட சரீரம், அழிவில்லாத ஆதி புருஷன் – அவ்யக்தன். வ்யக்தன் சித் அசித் என்ற எதிர்மறைகளும் உங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டவையே. பகவானே, நமஸ்காரம். வரதோத்தமா! எனக்கு வரம் தருவதானால், பஞ்ச பூதங்களால் ஆன இந்த ஸ்ருஷ்டியில் எனக்கு மரணம் வராமல் இருக்கும்படி வரம் அருள வேண்டும். உள்ளேயோ, வெளியிலோ, பகலும் கூடாது, இரவும் கூடாது, ஆயுதங்கள் எதுவும் என்னைக் கொல்லக் கூடாது. பூமியிலோ, அம்பரம்- ஆகாயத்திலோ என் மரணம் சம்பவிக்க கூடாது. மனிதனாலோ, மிருகத்தாலோ எனக்கு மரணம் வரக் கூடாது. உயிரற்ற, கல் போன்றவைகளோ, ப்ராணன் உள்ள முதலைகள் முதலிய பிராணிகளாலோ, மரணம் வரக் கூடாது. தேவர்களோ, அசுர்களோ, என்னை எதிர்த்து த்வந்த யுத்தம் செய்ய எவருமே இருக்க கூடாது. லோகபாலர்களுக்கு சமமாக இருக்க வேண்டும்.
மொத்தத்தில், அமரனாக, மரணம் அற்றவனாக இருக்கவே வரம் வேண்டுகிறேன்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஹிரண்ய கசிபு வர யாசனம் என்ற மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-38
அத்யாயம்-4
ஹிரண்ய கசிபுவின் தவத்தால் மகிழ்ந்திருந்த ப்ரும்மா அவ்வாறே வரங்களை அளித்தார். மகனே, இவை மிகவும் அரிய வேண்டுகோள்கள். என்னிடம் வரம் என்று கேட்டு விட்டாய். அதனால் துர்லபமானவை என்று அறிந்தே சம்மதிக்கிறேன். இவ்வாறாக ப்ரும்மா அசுரனை அனுக்ரஹம் செய்து விட்டு மறைந்தார்.
வர பலத்தினால், அசுரன் பொன் மயமான சரீரத்தை அடைந்தான். மனதினுள், பகவானிடம் த்வேஷத்தை வளர்த்துக் கொண்டான். தன் தம்பியை கொன்றவர் என்று அவரை வெறுத்தான். மூன்று உலகிலும் திக்விஜயம் செய்து தன் வசம் ஆக்கிக் கொண்டான். தேவாசுர, மனிதர்கள், இந்திர லோகத்தினர், கந்தர்வ, கருட, பாம்பு தலைவர்கள், சித்த சாரணர்கள், வித்யாதர, ரிஷிகள், பித்ருக்கள், மனு முதலானோர், யக்ஷ, ரக்ஷ, பிசாச, ப்ரேத பூதங்கள், யாரையும் விடவில்லை. இப்படி வெற்றி கொண்ட பின், லோக பாலர்களின் ஸ்தலங்களையும் கைப் பற்றினான். விஸ்வகர்மாவினால் கட்டப் பட்ட தேவர்களின் அழகிய உத்யான வனங்கள் சூழ்ந்த த்ரிவிஷ்டபம் என்ற மகேந்திரனின் பவனம் ,மரகத பச்சை வர்ணத்தில் இலைகளுடன் மரங்கள், ஆங்காங்கே வரிசையாக ஸ்படிக தூண்கள், அழகிய வேலைப்பாடமைந்த விரிப்புகளுடன் ஆசனங்கள், தேவலோகத்து ஸ்த்ரீகள், அங்கும் இங்குமாக நடமாடிக்கொண்டிருக்கும் சமயம், அவர்களின் நிழல் தரையில் தெரிவதை காண முடியும், அதை கைப்பற்றினான். குபேர பவனத்தையும் தனதாக்கிக் கொண்டான்.
அதன் பின் தன் ராஜ்யத்தை செவ்வனே நிர்வகித்தான். யாகங்கள் செய்து யாகத்தில் அமர்ந்து செய்யும் அந்தணர்களுக்கும், பங்கேற்ற மற்றவர்களுக்கும் நிறைய தக்ஷிணைகள் கொடுத்தான். அந்த ஹவிர் பாகங்களை தேவர்களுக்கு கொடுக்காமல் தானே ஏற்றுக் கொண்டான். சப்தத்வீபவதி- ஏழு தீவுகளைக் கொண்டவள் என்று பெயர் பெற்ற பூமி உழவு, நடவு என்ற செயல்கள் இல்லாமலேயே விளைந்தது. வானம் தேவையானதை அளித்தது. ரத்னாகாரம் என்று அழைக்கப் படும் சமுத்திரம், உப்புக் கடல், சுரா என்ற மது (கள்) நிறைந்த கடல், நெய் நிறந்த கடல், பாற்கடல், தயிர் நிறைந்த கடல், கரும்பு ரஸம் நிரம்பிய கடல், சுத்தமான நீர் உடைய கடல் என்றவை தவிர அவைகளின் மனைவிகளான நதிகளும் ரத்னங்களை தன் அலைகள் மூலமே கொண்டு வந்து கொடுத்தன. மலைகள், மலைச் சரிவுகள், அழகிய மலை வாசஸ்தலங்கள், எல்லா பருவகாலங்களிலும் பழங்கள், புஷ்பங்கள் இவைகளைத் தந்தன. தான் ஒருவனாக, இந்திரன் முதலான தேவர்களின் செயல்களான, மழை பொழிதல், ஸுரியனின் வெப்பம், வாயுவின் சலனம் என்றவைகளை நிர்வகித்தான். எட்டு திசைகளையும் ஆக்ரமித்து அதிகாரம் செலுத்தி வந்தவன், தன் போகங்களையும் இஷ்டப்படி அனுபவித்தான். அதர்மாக செய்த பல காரியங்களால், உலகில் வருந்திய மக்களைக் கண்டு, சனகாதி முனிவர்கள் அவனை சபித்தனர். அவன் ஆட்சியும் அக்ரமங்களும் நீடித்தன.
காலம் செல்லச் செல்ல ஐஸ்வர்ய மதம் அவன் தலைக்கேறவும், தாங்க முடியாமல் தேவர்கள் பகவான் ஸ்ரீ ஹரியை சரணடைந்தார்கள். சாந்தமான அமலமான சன்யாசிகள் அந்த இடத்திற்கு சென்றவர்கள் திரும்புவதில்லை. அவர்களுக்கு அசரீரியாக ஒரு வாக்கு கேட்டது. மேகம் இடி இடிப்பது போல கம்பீரமான குரல். பயப்படாதீர்கள், எல்லோருக்கும் நன்மையே உண்டாகட்டும். என் தரிசனம் உங்களுக்கு எல்லா ஸ்ரேயஸ்களையும் தரட்டும். இந்த தைத்யனின் அத்து மீறிய செய்கைகளை அறிவோம். சரியான காலம் வர காத்திருங்கள். இவனுடைய செயல்கள் எப்பொழுது, தேவர்களுக்கு எதிராக, வேதங்களை தூஷிப்பதாக, பசுக்களையும் அந்தணர்களையும், சாதுக்களையும் துன்புறுத்துவதாக ஆகிறதோ,தர்மத்தையும் என்னையும் துவேஷிக்கிறானோ, உடனே அழிவான். அவன் மகன் ப்ரஹ்லாதன் சாந்தமாக, அனைவருடனும் நட்பும் நல்ல குணமுமாக அவனை விரோதிப்பான். அந்த சமயம் தான் ஏற்றது, அவனை தண்டிக்க.
இவ்வாறு லோக குருவான ஸ்ரீ ஹரி சொன்னதும், தேவர்கள், திரும்பி தங்கள் இருப்பிடம் சென்றனர். அசுரனின் அழிவு அதிக தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை பிறந்தது.
அசுரனுக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர். ப்ரஹ்லாதன், அவர்களுள் குண சாலியாக இருந்தான். ப்ரும்ம நம்பிக்கை உள்ளவனாக, சீலம் உடையவனாக, இருந்தான். சத்யசந்தன், ஜிதேந்திரியன், தன்னையறிந்தவன், அனைத்து உயிர்களிலும் உறையும் ஒரே ஆத்மா என்பதை அறிந்து அனைவரிடமும் சமமாக நடந்து கொண்டான். என்றும் பிரியமான நண்பனாக இருந்தான். தந்தையிடம் பெரு மதிப்பு வைத்து அவரிடம் தாஸனாக இருந்தான். ஒரு தந்தையை போல தீன வத்சலன், சகோதரன் போல அருகில் இருப்பவன், குருவை ஈஸ்வரனாக மதித்தான், கல்விகள் அவனைத் தானே வந்தடைந்தன பல பிறவிகளில் கற்றது போல, இருந்தும் கர்வமோ, தான் உயர்ந்தவன் என்ற உணர்வோ இல்லாதவன் என்றனர். எப்பொழுதும் உத்சாகமாக இருப்பான். வேதங்கள், தர்சனம் என்ற தத்வங்கள், இவைகளைக் கற்றுத் தேர்ந்தான். அவன் சாந்தமும், புத்தியும், திருப்தியும், அசுரனுக்கு பிறந்தவனா எனும் படி இருந்தன. கவிகள் சொல்லும் நல்ல குணங்கள் ஒருமித்து அவனிடம் இருந்தன. அது போல குணங்களின் சங்கமம் பகவானிடம் மட்டுமே இருக்க முடியும் என்று பேசிக் கொண்டனர். சபைகளில் எதிரிகள் கூட அவனை புகழ்ந்தே பேசினர். வாசுதேவனிடத்தில் பிறவியிலேயே ஈடுபாடு தோன்றி விட்டது தான் இவை அனைத்துக்கும் சிகரமாக ஆயிற்று.
விளையாட்டுப் பருவத்திலேயே, விளையாட பொருட்களை நாடவில்லை. மனதில் கோவிந்த எண்ணத்துடனேயே, அமர்ந்தான், நடமாடினான், உண்டான், தூங்கினான், குடித்தான், பேசினான்
வைகுண்டவாசியை பஜித்து வந்தான், பாகவதர்கள் போலவே, சிரிப்பான், ஆனந்தமாக பாடுவான், நடனம் ஆடுவான், தன்மயமாக அவரை நினைத்து தியானத்திலும் இருப்பான். உத்தம ஸ்லோகன் எனும் ஸ்ரீ ஹரியின் பதாரவிந்தங்களில் திடமான நம்பிக்கையுடன், மன அடக்கம் வரப் பெற்றவனாக இருந்தான். இதையறிந்த ஹிரண்யகசிபு திகைத்தான். ப்ரஹ்லாதனை குற்றவாளியாக அறிவித்தான்.
யுதிஷ்டிர் கேட்டார். தன் மகன் தானே – குணவானாக இருந்தால் தந்தை மகிழ்வது தானே வழக்கம். குற்றம் காண்பது எதற்காக? தன் சொல்லை மீறிய புதல்வர்களையும் ஏதோ ஒரு வகையில் தண்டித்தோ, வசைச் சொற்கள் சொல்லியோ திருத்தவே முயலுவார்கள். துவேஷம் வருமா? குற்றமே ஆனாலும் மரண தண்டனை வரை செல்வார்களா? எனக்கு தோன்றவில்லை. ப்ரும்மன், விவரமாக சொல்லுங்கள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-46
அத்யாயம்-5
அசுர ராஜன், ஹிரண்யகசிபு, அசுர் குல குருவான சுக்ராசார்யரை தன் அரச புரோஹிதராக நியமித்தான். அவருடைய புதல்வர்கள், ஷண்டன், அர்கன் என்ற இருவரும் அருகிலேயே வசித்தனர். அவ்விருவரும் அரசன் அழைத்து வந்து சேர்த்த மாணாக்கனான ப்ரஹ்லாதனுக்கு கற்பிக்கலாயினர். மற்றும் சில அசுர பாலகர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். ப்ரஹ்லாதன், ஆசிரியர் சொன்னதை கேட்டு திரும்பச் சொல்லி நல்ல மாணவனாகவே இருந்தான். ஒரு சமயம் அசுர ராஜன் வந்து, தன் மகனை மடியில் அமர்த்திக் கொண்டு என்ன கற்றுக் கொண்டாய்? உனக்கு பிடித்ததைச் சொல்லு என்று கேட்கவும், ப்ரஹ்லாதன் பதில் சொன்னான். அசுரவர்ய! மனிதர்கள் அசத்தான விஷயங்களை விலக்கி, மனதில் ஹரியை தியானித்து வனம் சென்று தன் பாபங்களை போக்கி கொள்ள வேண்டும்.
நாரதர் சொன்னார்: மகன் சொன்னதைக் கேட்டு பலமாக சிரித்தான். பின் ஆசிரியர்களைப் பார்த்து இது என்ன என் கொள்கைகளுக்கு எதிராக இவன் ஏதோ சொல்கிறான். சரியாக சொல்லிக் கொடுங்கள். விஷ்ணு பக்ஷத்திலிருந்து யாராவது இங்கு வந்து விட்டீர்களா?
தைத்யனின் புரோஹிதர்கள், வீட்டிற்கு அழைத்து வந்து அவனிடம் நயமாக விசாரித்தனர். குழந்தாய், ப்ரஹ்லாதா, உண்மையைச் சொல், பயப்படாதே, சின்னஞ் சிறுவன் உனக்கு இந்த விபரீதமான புத்தி எப்படி வந்தது? யாரது உன்னிடம் பலவந்தமாக இப்படி ஒரு எண்ணத்தை விளைவித்தது?நீயாகவே சொல்கிறாயா? எதுவானாலும் சொல் குழந்தாய், பெரியவர்கள் கேட்கிறோம்.
நீ எங்கள் குலநந்தனன் அல்லவா?
ப்ரஹ்லாதன் சொன்னான்: தான், மற்றவன் என்று மனிதர்கள் தவறாக நினைக்கிறார்கள். அதுவே பகவானின் மாயை தான். இப்படி மனித மனதை ஆட்டுவிக்கும் பகவானுக்கு நமஸ்காரம். மனிதர்கள், மிருகங்கள், இவைகளுக்கிடையில் புத்தியில் வித்தியாசம் வைத்தவன் அவனே. இவர் வேறு.நான் வேறு என்று பேதம் காண்பது அறியாமை. வேதம் அறிந்தவர்கள், பல விதமாக நிரூபிக்க முயன்றிருக்கிறார்கள். காந்தத்தின் முன் இரும்பு தானாகவே ஆகர்ஷிக்கப் படுவது போல என் மனம் சக்ரபாணியின் சன்னிதியில் தானாகவே இழுக்கப் படுகிறது. எப்படி நான் மட்டும் அந்த சன்னிதிக்கு அருகில் சென்றேன், அதுவோ, தவம் விரதம் இவைகளை பல காலம் அனுஷ்டித்து அடையும் தகுதி அது என்பது உண்மையே. ஏதோ காரணத்தால், எதேச்சையாக நான் அடைந்துள்ளேன்.
இதைக் கேட்டு, ராஜ சேவகர்கள், அரசனால் நியமிக்கப் பட்ட ஆசிரியர்கள் திகைத்தனர். கோபித்தனர். எங்கள் பெயரைக் கெடுக்கிறான், இந்த குலத்துக்கு அங்காரம் போல (சிறு நெருப்பு பொறி) போல வந்து வாய்த்திருக்கிறான். நான்காவது தான் இவனிடம் பிரயோகிக்க வேண்டும் (ஸாம, தான், பேத, தண்டம் என்பதில் தண்டம் ) என்று சேவகர்களைக் கொண்டு கசையால் அடித்தனர். இவன், அசுர ராஜன் என்ற சந்தன வனத்தில் முள் செடி போல வந்து பிறந்திருக்கிறான். வேரோடு பிடுங்கக் கூடிய விஷ்ணுவின் பரசு – கோடாலி
யாக இந்த இளம் பாலகன் பேச்சு இருக்கிறதே. இவ்வாறாக நினைத்து அவனைத் திருத்த, பலவிதமாக உபாயங்களை முயன்றனர். பயமுறுத்தி, தங்கள் வழிக்கு கொண்டு வர முயன்றனர். அப்படியும் ப்ரஹ்லாதனை தங்கள் வழிக்கு கொண்டு வர முடியாமல், அவன் தாயாரிடம் கொண்டு விட்டனர். ஸ்னானம் செய்வித்து அலங்கரித்து மகனை தந்தையின் முன் கொண்டு நிறுத்தினர். தன் காலில் விழுந்து நமஸ்கரித்த மகனை ஆவலுடன் ஹிரண்ய கசிபு தூக்கி மடியில் இருத்தி, உச்சி முகர்ந்து, மகன் என்று பாசத்தினால் கண்கள் பனிக்க, கண்ணீரால் அவனை மகிழ்ச்சியுடன் நனைத்தவனாக, முகம் மலர, ப்ரசன்னமானவனாக, ஹே ப்ரஹ்லாதா! என்றழைத்தான். மகனே, நீண்ட ஆயுளுடன் இரு என்று ஆசிர்வதித்தான். மகனே, சுக்ராசார்யாரின் புதல்வர்களிடம் என்ன கற்றுக் கொண்டாய்? என்றான்.ப்ரஹ்லாதன் சொன்னான்:
श्रवणं कीर्तनं विष्णोः स्मरणं पादसेवनम् ।अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम्
கேள்வி, பாடுதல், விஷ்ணுவை மனதார நினைத்தல், பாதங்களில் வணங்குதல், பூஜை, வந்தனம், அடியாள் போல சேவை செய்தல், சகாவாக இருத்தல், ஆத்ம நிவேதனம்.
மனிதர்கள் இந்த பத்து விதமாக விஷ்ணு பகவானிடம் பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விதமாக பகவானிடம் தன்னை சமர்ப்பிக்கும் ஒன்பது வழிகளை அறிவது தான் உத்தமமான கல்வி என்று நினைக்கிறேன். இதைக் கேட்ட ஹிரண்ய கசிபு குரு புத்திரர்களிடம் வெகுண்டான். பற்களைக் கடித்தவாறு, ப்ரும்மபந்தோ! – (இது ஒரு வசைச் சொல்) என்ன இது இப்படி விபரீதமாக எதிரியை புகழும் படி கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். என்னையே மதிக்காமல் சாரமில்லாத எதையோ என்னிடமே என் மகன் சொல்கிறான். துர்மதி. சாதுக்கள் அல்லாத பலர் இருக்கிறார்கள். வஞ்சனையாக நண்பன் போல அருகில் வந்து பேசுபவர்கள் என்றான். குரு புத்திரர்கள், ‘ இந்த்ரசத்ரோ! நீ இந்திரனுக்கு சத்ரு. உன் மகன் சொல்வது நாங்கள் கற்பித்தது அல்ல. தானாக சொல்கிறான். பிறவியிலேயே இவனுக்கு இந்த குணம் வந்துள்ளது. எங்களை கோபிக்காதீர்கள். எங்கள் குற்றம் அல்ல. ஹிரண்யகசிபு மகனிடம் திரும்பினான். குரு இவர்கள் சொல்லவில்லையெனில் எப்படி உனக்குத் தெரியும்?
ப்ரஹ்லாதன் சொன்னான்: தந்தையே, உலக வாழ்க்கையே நிரந்தரம் என்று நினைத்து தினசரி உணவும், மற்ற தேவைகளுமே முக்கியமானவை என்று உழைக்கும் சாதாரண மக்கள் க்ருஷ்ண பரமாகவோ, தன் மேன்மை பற்றியோ நினைக்கவே முடிவதில்லை. குருடனால் வழி காட்டப் படும் மற்றொரு குருடன் போல ஒரே ரீதியில் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர். ஒரே அச்சில் கட்டப் பட்ட கயிற்றின் நீளத்தை பொறுத்து அவர்களின் வாழ்க்கையின் செயல்கள் நிர்ணயிக்கப் படுகின்றன. இவர்கள் இதிலிருந்து மீள வேண்டுமானால் அறிவு மிக்க பெரியவர்களின் அருகில் இருந்து உபதேசம் பெற வேண்டும்.
ஹிரண்யகசிபு தன் கோபத்தை அடக்க மாட்டாமல், மகனை தன் மடியிலிருந்து வீசியெறிந்தான். கண்கள் சிவக்க உத்தரவிட்டான். அசுர்களே, இந்த சிறுவனை கட்டுங்கள். இவன் என் சகோதரனைக் கொன்றவனை உயர்வாகச் சொல்கிறான். அவன் காலில் விழுகிறான். ஐந்து வயது சிறுவன். எந்த தந்தை இப்படி ஒரு மகனை தியாகம் செய்வான். தன்னை சாராத யாரோ ஒருவனுடைய மகன் கூட மருந்துகள் நோயை தீர்ப்பது போல ஹிதம் செய்யலாம். உடன் பிறந்த நோய் தனக்கு பிறந்தவனே கூட அஹிதமாக இருக்கலாம். நோய் முற்றினால் அந்த அங்கத்தை வெட்டி விடுவதே மேல். மற்ற அங்கங்கள் பாதிக்கப் படாதவரை சுகமாக இருக்கலாம். எல்லா விதமான உபாயங்களையும் பயன் படுத்தி இப்படி உடன் பிறந்தே கொல்லும் வியாதியை ஒழிக்கத் தான் வேண்டும். கூடவே அமர்ந்து விருந்துண்ணும், ஆசனங்களில் சமமாக அமர்ந்தும், நல்ல நண்பன் போல காட்டிக் கொண்டே துரோகம் செய்யும் சத்ரு அழிக்கப் பட வேண்டும். சாதகனுக்கு இந்திரியங்களே துஷ்டர்களாக ஆவது போல.
இவ்வாறு அரசனே அனுமதித்தபின் அசுரர்கள் கூட்டமாக, ஆயுதங்களோடு, வெட்டு, கொல் என்று பயங்கரமக கோஷமிட்டுக் கொண்டு வந்தனர். காணவே பெரிய பற்களும், தாமிர நிற கேசமும், மீசை, உடல் ரோமங்களோடு பயங்கரமாக இருந்தவர்கள், ஆட்டமும் பாட்டமுமாக, அமர்ந்திருந்த ப்ரஹ்லாதனை ஸூலங்களால் அடித்தனர். பரப்ரும்மத்தில் மனம் லயித்திருக்க, அசையாது தியானத்தில் இருந்த சிறுவனை அவை அசைக்க முடியவில்லை. பலனின்றி போயிற்று. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்னதான் சத் காரியங்கள் செய்தாலும் எடுபடாமல் போவது போல. இந்த வீரர்களின் முயற்சி பலிக்காமல் போனதும், ஹிரண்யகசிபு யோசித்தான். பல விதமாக யோசித்து பின், திக் கஜங்களை, விஷ நாகங்களை ஏவினான். அபிசாரம் என்ற தந்த்ரம் அறிந்தவர்களை அழைத்தான். மலையிலிருந்து தள்ளச் செய்தான். பல விதமான மாயா ப்ரயோகங்களைச் செய்தும் உணவே இல்லாமல் பட்டினி போட்டும், விஷம் கொடுத்தும் பலனில்லை. பனிக்கட்டி சூழ வைத்தும், தண்ணீரில் மூழ்க வைத்தும், வாயு, அக்னி, இவைகளால் சீண்டியும் சிறுவனை எதுவும் பாதிக்கவில்லை. பாறைகளை புரட்டி விழச் செய்தான். ஒரு நிலையில், தானே தன்னை நொந்து கொண்டான். இது என்ன நான் செய்வது சரியல்லவே. கண் எதிரில் இருக்கும் என் மகன், விஸ்வாமித்ர முனிவர் காப்பாற்றிய சுன:ஸேபன் (शुन:शेप:) போல திடமாக நிற்கிறான். இவன் அளவில்லாத அனுபாவம் உள்ளவன். பயமே இல்லை. அமரன்- மரணமே இல்லாதவன் போலும். இவனை விரோதித்துக் கொள்வதால் எனக்கு ஆபத்தே. எனக்கே அழிவைத் தந்தாலும் தரும். என்று யோசித்தான். சற்றே வாடிய முகத்துடன், குழம்பி இருந்தவனிடம் குருபுத்திர்களான, ஷண்டன், அர்கன் என்ற இருவரும் சமாதானமாக சொன்னார்கள். ‘அரசே! மூவுலகையும் புஜ பலத்தால் ஜயித்தவர் நீங்கள். உங்கள் குரலைக் கேட்டே நடுங்கினர் அனைத்து வீரர்கள் குழாமும். உங்கள் மகன், இளம் சிறுவன் இவனுடைய குண தோஷங்களை பெரிது படுத்த வேண்டாம். வருண பாசத்தால் கட்டி, எங்கும் ஓடி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குரு பார்கவர்(ஸுக்ராசார்யர்) வரும்வரை பெரியவர்கள் சிலர் அவனுக்கு நல்ல புத்தி சொல்லட்டும். அசுரனும் சரி என்று அந்த உபாயத்தை ஏற்றுக் கொண்டான். தானே மகனுக்கு, தர்மம், அர்த்தம் (பொருளாதாரம்), காமம் என்ற உலகியல் விஷயங்களை உபதேசித்தான். ஆரம்பத்திலிருந்து பாடம் கற்பித்தான். ப்ர்ஹ்லாதன் வணக்கத்துடன் அமர்ந்து கவனமாக கேட்டுக் கொண்டான். தனக்கு குரு உபதேசித்த பரமார்த்தமான விஷயங்களை சொல்லும் முன் பாலகர்கள் அழைக்கவும் ப்ரஹ்லாதன் விளையாட ஓடி விட்டான். அசுர அரசன் அந்த குழந்தைகளிடம் பிரியமாக பேசி, அவர்களையும் அருகில் அமரச் செய்தான். அரசன் என்ற மதிப்பினால் அமர்ந்திருந்த சிறுவர்கள், சுக துக்கம் என்ற இரட்டைகளான துன்பங்கள், என்ற அறிவுரையை கண் கொட்டாமல் அரசனைப் பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்தனர். சிறுவர்களிடம் பாகவதனான அசுர சிறுவன் கருணையுடன் சொன்னதையே மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-57
அத்யாயம்-6
ப்ரஹ்லாதன் சொன்னான்: குமாரர்களாக உள்ள வயதில் தர்மம் என்பது பாகவதர்கள்- பகவானிடம் ஈடுபாடு கொண்ட அறிவுடையோர், அனுசரிப்பதே. மனித பிறவியே அரிதானது. அதுவும் நிரந்தரமல்ல. மனித பிறவி மட்டுமே நன்மை பயப்பதுமில்லை. ஸ்ரீ விஷ்ணுவின் பாதங்களில் மனதை செலுத்தி சரணடைய வேண்டும். அவர் தான் நண்பனாக, பிரியமானவனாக இருப்பவர். சர்வ ஜீவன் களுக்கும் ஆத்மேஸ்வரன்- ஆத்மாவில் உறையும் ஈஸ்வரன். தைத்யர்களுக்கு உடல் சுகமே சுகம். அதற்கு மேல் சிந்திப்பதில்லை. அதற்கு உழைக்கிறார்கள். ஆனால் ஒரு ப்ரயத்னமுமின்றி துக்கம் வந்து சேருகிறது. அதனால் ஆயுள் முழுவதும் பயனின்றி போகிறது. அதில் எந்த க்ஷேமும் இல்லை. முகுந்த சரணாம்புஜ சேவையே முக்தியைத் தரும். உடல் நலத்தை பேணுவதிலேயே பயத்துடன் செயல்களை செய்ய வேண்டாம். மனித சரீரம் நூறு ஆண்டுகளே நீடிக்கும். அதில் பாதி ஐம்பது ஆண்டுகள் தூக்கத்தில் போகும். இளம் வயதில், பாலகனாக விளையாடி இருபது ஆண்டுகள் போகும். பின்னால் முதுமை வந்து உடல் தளர்ந்த பின், இருபது ஆண்டுகள். உடல் பலத்தை பெருக்குவதிலும், காமத்திலும், மோஹத்திலும், குடும்ப பொறுப்புகளிலும், பல காலம் செலவழியும். குடும்பஸ்தனுக்கு உறவுகள், பாசம், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை பாரமாக கவனத்தை ஈர்க்கும். இதில் செல்வத்திலும், அதைச் சேர்ப்பதிலும் உயிரை விட அதிக ஆசை. அதற்காக சேவகனாக, வியாபாரியாக, சில சமயம் திருடனாக கூட மாறுவான். அன்புடைய மனைவி, தன்னிடம் மிகுந்த பாசம் உடையவள், அவளைச் சார்ந்தவர்கள், தங்கள் வம்சத்தில் வரும் குழந்தைகள் என்று அந்த பந்தம் வளரும். புதல்வர்கள், புதல்விகள், சகோதர்கள், தந்தையர், மற்ற உறவினர்கள், அழகான வீடு, பணியாட்கள், நல்ல தொழில், பசு பக்ஷி வர்கங்கள் என்று பகிர்ந்து கொள்ள நிறைய வந்து சேரும். செல்வம் சேர்க்கும் ஆசையால் லோபம், திருப்தியின்மை, தன் வீட்டைக் கட்டும் பூச்சி, தான் வெளிவர கூட முடியாதபடி வாசலை அடைத்து விடுவது போல ஆவர். தன் மனைவி, குடும்பம் இவற்றை காப்பாற்ற ஆயுள் முழுவதும் உழைக்கிறார்கள். செல்வம் எவ்வளவு தான் சேர்த்தாலும் பற்றாக்குறை. குடும்பஸ்தன் சதா கவலையுடனே இருக்கிறான். இது மட்டுமே உலகம் என்று நினைக்க வேண்டாம் அசுர குழந்தைகளே. அதைத் தாண்டி பரமார்த்தமாக ஒரு இடம்- எந்த இடத்தில் யாரும், எங்கிருந்தாலும், தீனனாக உணரமாட்டான். சக்தியுடையவனாக தன் ஆத்ம பலத்தை அறிந்து கொள்வான். கட்டுப்படாமல் சுதந்திரமாக இருங்கள். ஆதி தேவனான ஸ்ரீமன் நாராயணனை பரம் பொருளை அறிந்து கொள்ள அதிக சிரமம் கூட தேவையில்லை. அவரே நம் ஆத்மாவிலும் இருப்பவர். எங்கும் பரவி இருப்பவர். பஞ்ச பூதங்களிலும், ப்ரும்மாண்டத்தில் உள்ள அனைத்து இயற்கை சாதனங்களிலும். மிகச் சிறியதிலிருந்து மிகப் பெரியவைகளிலும் இருப்பவர். அவர் தான் அழிவில்லாத பரமேஸ்வரன். ஆத்ம ஸ்வரூபம், அனுபவத்தால் காணக்கிடைக்கும். ஆனந்தமே உருவானவர். தன் மாயையால், உலகில் பரவியும் விலகியும் இருப்பார். அதனால், குழந்தைகளே, இந்த அசுர குணம் வேண்டாம். அனைவரிடமும் நட்பாக இருங்கள், அதிலேயே அதோக்ஷஜன் மகிழ்வார். அவர் மனம் குளிர்ந்தால் எது தான் கிடைக்காது. குணங்களின் வேறு பட்ட சேர்க்கையால் தர்மம் என்றும் அதர்மம் என்றும் சொல்வர். இவைகளினால் அடையும் பலன்களும் நமக்குத் தேவையில்லை. ஆத்யன், அனந்தன் என்று அந்த பெயர்களை மறக்காமல் அவரடி பணிவோம். தர்மம், அர்த்தம், காமம் என்ற மூன்று தேவைகள். தர்க்க சாஸ்திரம், வேதங்கள், நயதம- என்ற தண்ட நீதி- அரசர்கள் அனுஷ்டிக்க வேண்டியவை இவை அனைத்தும் சத்யமே. இவற்றை விவரிக்கும் பலவிதமான விளக்கவுரைகள். இவைகள் சொல்வதும் கடைசியில் ஸ்வாத்மார்ப்பணம்- தன்னையே பர புருஷன் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. நாராயணன் நரசகன்- ஸ்ரீமன் நாராயணன் மனிதர்களுக்கு சகா போன்றவன் என்பதை அவர் நாரதருக்கு உபதேசம் செய்ததில் இருந்து அறியலாம். மிக உயர்வாக சொல்லப்படும் ஞானம் எளிதில் கை வராது. சகலத்தையும் துறந்து, தனிமையாக, பகவானையே நினைத்து தவம் செய்பவர்கள் அடைவதை அதே பகவானின் பாதம் பணிந்து அவர் தம் பாதங்களின் தூளியை தலையில் தரித்தவர்களும் அடைவர். இந்த விஷயங்களை முன் ஒரு சமயம் நாரதர் வாயிலாக கேட்டறிந்தேன். சுத்தமான பாகவதம் என்ற தர்மம் ஞானம் அதை விட மேலான விக்ஞானம் என்பதை அவரிடம் அறிந்தேன்.
மற்ற சிறுவர்கள் சொன்னார்கள்; ப்ரஹ்லாதா, நம் குருவையன்றி வேறு யாரையும் நாமறியோம். அந்த:புரத்து வாசியான உனக்கு கிடைத்த பெரியவர்களுடனான உபதேசமும், அனுபவமும் எங்களுக்கு எப்படி எட்டும்? அதனால் நீயே சொல், எங்கள் சந்தேகத்தை தீர்த்து வை. என்றனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 30
அத்யாயம்-7
குருகுல சிறுவர்கள் வேண்டிக் கொண்டபடி ப்ரஹ்லாதன் அவர்களுக்கு உபதேசம் செய்தான். நாரதரிடம் தான் கற்றதை அப்படியே சொன்னான்.
என் தந்தை தவம் செய்ய மந்த்ராசலம் சென்றபின், பெரும் போர் மூண்டது. தானவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வாசவன் முதலான தேவர்களுக்கும் இடையே பல பரீக்ஷையாக அந்த யுத்தம் அமைந்தது. தேவ சைன்யத்துக்கு எதிராக நிற்க முடியாமல் அசுரர்கள் பல திசைகளிலும் ஓடி மறைந்தனர். மனைவி மக்கள், மித்ரர்கள், ஆப்தர்களானவர்கள், வீடு வாசல், பசுக்கள், பணியாட்கள் அனைத்தையும் விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே ஓடினர். தந்தையின் அரண்மனையை அவர்கள் ஸூரையாடிய பொழுது இந்திரன் என் தாயாரை பிடித்து விட்டான். அழ அழ அவளை தூக்கிக் கொண்டு போகும் சமயம் நாரதர் எதிரில் வந்தார். சுரபதே! வேண்டாம். இவள் என்ன தவறு செய்தாள். மாற்றான் மனைவி, சதி, அவளை விடு. விட்டு விடு. இந்திரன் உடனே கேட்கவில்லை. இவள் வயிற்றில் அசுரனின் குழந்தை வளருகிறது அதுவும் தேவர்களின் எதிரி தானே. பிரசவம் ஆகும் வரை இருக்கட்டும், பிறக்கும் மகனை கொன்று விட்டு விட்டு விடுகிறேன் என்றான்.
வயிற்றில் வளரும் சிசு என்ன கண்டது ? நல்லதா, பொல்லாதா என்ன அறியும். களங்கமில்லாத பாலகன். அவன் பரம பாகவதனாக இருப்பான். அனந்தனை பஜிப்பவனாக வளருவான். உன்னை எதிர்க்க மாட்டான். கவலைப் படாதே என்று நாரதர் சொன்னார். இந்திரனும் சம்மதித்து அவளை விட்டு விட்டு தன் இருப்பிடம் சென்றான். ரிஷி என் தாயாரை, தன் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தார். மகளே! உன் கணவன் வரும் வரை இங்கு நிம்மதியாக இரு என்று அபயம் அளித்தார். அவளும் தேவேந்திர பயம் இல்லாமல் அங்கு வசித்தாள். ரிஷிக்கு வேண்டிய பணிவிடைகளை செய்தாள். தன் கர்பத்தில் உள்ள சிசுவின் நன்மைக்காக அல்லும் பகலும் பகவானை வேண்டிக்கொண்டபடி நாட்களை கடத்தினாள். ரிஷி கருணை மிக்கவர். அவளுக்கு தர்மம், தத்வம், ஞானம் முதலியவைகளை உபதேசித்தார். என்னையும் உத்தேசித்தே சொன்னார். அவள் நினைவில் இருக்கிறதோ இல்லையோ, நான் மறக்கவில்லை. அதைத் தான் சிரத்தையுடன் கேட்கும் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.
பிறப்பிலிருந்து ஆறு உணர்வுகள் தேகம் உடைய ஜீவன்களுக்கு சொல்லப் படுகின்றன. ஆத்மா தனி. பருவகாலம் வந்தால் மட்டுமே பழுக்கும் பழம் போல ஈஸ்வரனின் செயல். ஆத்மா, உடலின் உள் உறைகிறது. இந்த ஆத்மா நித்யமானது, அழிவில்லாதது. சுத்தமானது. க்ஷேத்ரக்ஞன் என்ற பகவானின் அம்சம். தானாக எதுவும் செய்யாது, அதை காணவும் முடியாது. பரவி இருக்கும் – எதனாலும் மறைக்கவும் முடியாது. இந்த பன்னிரண்டு லக்ஷணங்களால் ஆத்மாவை அறியலாம். எங்கும் இருப்பது ஒரே ஆத்மா தான் என்பதால், நான், என்னுடையது, மற்றவன் அவனுடையது என்ற எண்ணங்கள் பொருளற்றவை. இது தன் உடலில் தனக்கு ஏற்படும் மோகமே. அந்த எண்ணத்தை தவிர்க்க வேண்டும். தங்க சுரங்கத்தில் மண் மூடி கிடக்கும் ஸ்வர்ண துகள்களைப் பிரித்து ஸ்வர்ணகாரன் என்ற ஆசாரி (பொன் நகை செய்பவண்) முழுமையான நகையாக செய்வதைப் போல அத்யாத்மம் அறிய யோக சாதனைகள் உள்ளன. க்ஷேத்ரம் என்ற இந்த உடல், இதில் ஆத்மவித் என்ற ப்ரும்ம ஞானத்தை அறிந்து கொள்ள வேண்டும். எட்டு விதமான ப்ரக்ருதிகள்- இயற்கை சாதனங்கள். மூன்று குணங்கள். இவை ஒன்றோடொன்று இணைவதால் பதினாறு விதமாகும். இப்படி உருவான உடலில், ஒன்றேயான பரபுருஷன் தன் அம்சத்தை இட்டு நிரப்பி உடல் செயல் பட செய்கிறான். இவ்வாறு இயற்கையும், குணங்களும் சேர்ந்து உருவானாவை, அசையும், அசையாதவை என்று இருவகைப் படும். தாவரங்களுக்கும் உயிர் உண்டு ஆனால் இடம் விட்டு இடம் செல்வதில்லை. பிராணிகளும் நடமாடினாலும் புத்தி ஓரளவே. மனிதர்களுக்குத் தான் யோசித்தல், தானே கண்டு கொள்ளுதல் என்பது சாத்யம். இவர்கள் ஆத்மாவை இது அல்ல, இது அல்ல என்று ஒவ்வொன்றையும் ஆராய்ந்து (வாசனையா, ருசியா, எது உடலில் உறையும் ஆத்மா ) என்று தேடுவர். விவேகமும், ஆராய்ந்து அறியும் திறமையும் இருப்பதால், மனிதர்கள் பலவித சித்தாந்தங்களை, வேத வாக்யங்களை, என்று பலவிதமாக தேடிக் கண்டு கொள்வர். புத்தியும் மூன்றுஅவஸ்தைகள்-நிலைகளில் செயல்படும். விழிப்பு, கனவு (தூக்கம்), இடைபட்ட தூங்கி விழிக்கும் முன் முழுவதுமாக நினைவு வராத இடைபட்ட நிலை- சுஷுப்தி – எனப்படும். புத்தியின் ப்ரயோகத்தால், தன் செயல்களின் பலனாக நடப்பதை கொண்டும், ஆராய்ந்து, வாயுவின் வாசனையை வைத்தே எங்கிருந்து வருகிறது என்று கண்டு கொள்வது போல ஆத்மாவை அறிவர். இவைகளின் முதல்படி சம்சாரம் என்ற இந்த பூமியில் வாழ்வு. இது குணங்கள் வினைப் பயன்கள் இவற்றால் கட்டுண்டு இருக்கின்றன. அறியாமை இதன் அடிப்படை. கனவு போல என்று தெரிந்தாலும் உலகியல் மனிதர்களுக்கு விருப்பமானதாகவே உள்ளது.
நீங்கள் செய்யக் கூடியது, இந்த அடிப்படை அறியாமையை களைந்து ஞானம் பெற யோக சாதனைகளைச் செய்ய வேண்டும். பல உபாயங்கள், ஆயிரக் கணக்காக இருக்கின்றன. அதில் பகவானே (கீதையில்) சொன்னது, (யத்கரோஷி -யதஸ்னாசி, யஜ்ஜுஹோஷி, என்ற ஸ்லோகம்) உன் செயல்களை யாவையும் எனக்கு அர்ப்பணமாக செய்து விடு ) குருவுக்கு பணிவிடை செய்தும், பக்தியாலும், கிடைத்ததை அர்ப்பணம் செய்தும், சாது ஜனங்களின் சங்கத்தில் இருந்து அறிந்து கொண்டும், ஈஸ்வர ஆராதனை, பூஜை முதலியவைகளை செய்தும், சிரத்தையுடன் பகவானின் கதைகளைக் கேட்டும், பாடியும், தியானம், மூர்த்தி பூஜைகள், ஸ்ரீ ஹரி எல்லா ஜீவன் களிடமும் சமமாக இருக்கிறான் என்பதை திடமாக நம்பி இருப்பதும் அவசியம். உலகியலில் நாட்டம் குறைந்து, வாசுதேவனான பகவானிடம் பக்தி செய்து வந்தாலே, போதுமானது. பாடல்களை அனுபவித்து பாடும் பொழுதே, பகவானின் லீலைகளை மனதில் நினைக்கலாம். ஆடியும் பாடியும், ஏதோ நேரில் கண்டது போல உத்வேகத்துடன் நடந்து கொள்வதும் பக்தர்களின் செயல் பாடுகள். ஹரே! ஜகத்பதே நாராயணா! என்று பஜனை செய்வர். இப்படிச் செய்ய கூச்சமடைய மாட்டார்கள். இந்த நிலையில் பக்தியாலேயே அதோக்ஷஜனை அடைகிறார்கள்.
அவரை நினைப்பது சீக்கிரமே, இந்த சம்சார சக்கரத்திலிருந்து விடுபடச் செய்யும். ப்ரும்ம நிர்வாணம் என்ற நிலை என்று அறிந்தவர்கள் சொல்வார்கள். எனவே மனதில் ஸ்ரீ ஹரியை நினைத்து பஜனை செய்யுங்கள். பாலகர்களே! இதில் அதிக கஷ்டம் இல்லை. பகவான் எங்கோ தூரத்தில் இல்லை. நம் ஹ்ருதயத்திலேயே வசிக்கிறான். நம் சகாவாக சமயத்தில் சரியான வழியைக் காட்டுவான். அரச பதவி, மனைவி, மக்கள், பசுக்கள், பூமி, நிறைந்த பொக்கிஷம், அனைத்தும் பொருளாதாரம், காமம் என்பவைகளே. க்ஷணத்தில் விழக் கூடியவையே. மனிதனுக்கு என்னதான் இவைகளில் பற்று இருந்தாலும், சமயத்தில் உதவாது. மகா யாகங்கள் செய்வர். அதிசயமான செயல்களைச் செய்வர். நம்மால் எந்த வித்திலும் குறை சொல்ல முடியாத, நாம் கண்டதில்லை, கேட்டது தான் என்ற பரமாத்மாவான ஸ்ரீ ஹரியை பக்தியுடன் ஆராதிப்போம். சுகத்திற்காகவும், துக்கத்திலிருந்து விடுபடவும், சங்கல்பம் செய்து கொண்டும் வேதம் விதித்த செயல்களைச் செய்யும் கர்ம மார்கிகள், கர்ம பலனை தியாகம் செய்வதால் சுகம் அடைவார்கள். பலனை எண்ணியே செய்பவர்கள் பந்தத்தில் சிக்கிக் கொள்வர்.
பொருள்களில் ஆசை, மற்றவர்களால் விரும்பப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, நிரந்தரமில்லாத இந்த உடலில் பற்றுதல் இவைகளால் அலைக்கழிக்கப் படுகிறார்கள். தன் உடலுடனே அழியக் கூடிய இந்த விஷயங்களுக்காக இந்த சிரமம் படுவானேன்? அசுரா:! இதில் தன்னலம் அன்றி வேறு ஏதாவது தெரிகிறதா?
உடலை வருத்தி சுகம் என்று தேடி அதைக் காண முடிந்திருக்கிறதா?
அனைத்து ஜீவன்களுக்கும் ஸ்ரீ ஹரியே, பிரியமான ஆத்மேஸ்வரன். மஹத் முதலான பஞ்ச பூதங்கள், இவற்றால் பெற்ற உடல், தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ, யக்ஷ, கந்தர்வர்களோ, ஸ்ரீ முகுந்தனை பஜனை செய்து நற்கதி பெற முடியும். அசுராத்மஜா:! ஹே அசுர புதல்வர்களே, இந்த தேவன், அசுரன், ரிஷிகள் என்று மட்டும் ஸ்ரீ ஹரியை திருப்தி படுத்த முடியாது. நன்னடத்தை, நிரம்ப அறிவு, தானங்கள், தவம், யாகங்கள், ஒழுக்கம், விரதங்கள், இவை அனைத்தையும் விட திடமான பக்தி பெரியது. எனவே, ஹரியிடம் பக்தியுடன் பஜனை செய்யுங்கள். தன்னைப் போலவே உலகில் அனைவரையும் மதிக்க தெரிந்து கொள்ளுங்கள். கோவிந்தனிடத்தில் ஏகாந்த பக்தியே உய்வடைய வழி, அதையே செய்யுங்கள்.
இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 30
அத்யாயம்-8
அசுர சிறுவர்கள், ப்ரஹ்லாதனின் அறிவுரையைக் கேட்டு, குருவிடம் கற்ற பாடங்களை விட அதுவே உயர்வாக இருப்பதாக உணர்ந்தனர். இவர்கள் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட குரு புத்திரர்கள், ஏதோ தவறு என்று பயந்து அரசனிடம் தெரிவித்தனர். தன் மகனே தனக்கு அனுகூலமாக இல்லை என்ற செய்தியால் வெகுண்ட கோபவேசத்தால் உடல் நடுங்க, உடனடியாக மகனை கொல்லும் எண்ணத்துடன் விரைந்து வந்தான். ப்ரஹ்லாதனை கடுமையாக திட்டினான். கண்கள் சிவக்க,கைகூப்பி வணங்கி நின்றவனை, இயல்பாகவே கடுமையானவன், காலால் மிதிபட்ட சர்ப்பம் போல சீறியபடி, ஹே! துர்விநீத! வினயம் இல்லாதவனே, மந்த புத்தி, குல நாசகனாக வந்த அதமன், என் ஆட்சியை குறை கூறும் உன்னை இதோ யமலோகம் அனுப்புகிறேன் என்று பலத்த குரலில் அதட்டியவன், சிறுவன் நீ, என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய். என் சொல்லை மீறினால் என்ன தண்டனை தெரியுமா? நான் வெகுண்டால் மூவுலகும் நடுங்கும். மூவுலக தலைவர்களும் நடுங்குவர். பயமின்றி, ஹே! மூடா! என் கட்டளையை ஏன் மீறினாய்?
ப்ரஹ்லாதன் சொன்னான்: ராஜன்! எனக்கு மட்டுமல்ல, அது தான் பலம். பலசாலி என்று உள்ள அனைவருக்கும் அது தான் பலம். கடந்த, நிகழ்,வரும் காலங்களிலும் சராசர -அசையும் அசையா பொருட்கள் அனைத்தும், ப்ரும்மா முதலானவர்களையும் தன் வசம் வைத்திருப்பவர், அவர் தான் பலம்.
அந்த ஈஸ்வரன் மஹா ப்ராக்ரமம் உடைய காலன், அவனே உயிரினங்களில் புலன்களுடன் உள்ள வடிவம் செயல் பட செய்பவன். அதன் மனதின் சக்தி, தைர்யம், பலம். தேக சக்தி, இந்திரியங்களுடன் அவர்களின் ஆத்மா. அவன் தான் பரம ஸ்ரேஷ்டன். முக்குணங்களையும் ஆளுபவன். அத்துடன் மற்ற தத்வங்களுடன், உலகை படைத்தும், காத்தும், பின் கலைக்கிறான். தந்தையே, இந்த அசுர குணத்தை விடுங்கள். மனதை சாந்தமாக வைத்துக் கொள்ளுங்கள், எதற்கு மற்றவரிடத்தில் துவேஷம்? அனைவரையும் சமமாக பாருங்கள். மன அடக்கம் இல்லாத இடத்தில் தான் துவேஷம் போன்ற கெட்ட எண்ணங்கள் வரும். அனைத்து ஜீவன்களையும் சமமாக எண்ணுவதே பகவானுக்கு செய்யும் பெரிய ஆராதனை. தன் இந்திரியங்களே தான் ஒருவனுக்கு சத்ரு. அது திருடன் போல ஐஸ்வர்யம், செல்வம் இவைகளை மற்றவர்களிடமிருந்து அபகரித்து தான் வெற்றி பெற்றதாக எண்ண வைக்கிறது. பத்து திசைகளையும் தானே வென்றதாக பெருமை பேச வைக்கிறது. இந்த அபிமானம் கண்களை மறைக்கிறது. இன்னமும் எதிரிகள் இல்லாமல் இல்லை. சரீரம் தான் வெவ்வேறு, ஆத்மா ஒன்றே என்ற அறிந்த பெரியவர்கள், சமதர்சிகள். அனவரும் ஒன்றே என்று தெரிந்ததால் எவரையும் எதிரியாக சொல்வதில்லை.
ஹிரண்ய கசிபு பதிலுக்கு ஆத்திரத்துடன், நிச்சயம் நீ மரணத்தை எதிர் கொண்டு நிற்கிறாய். அளவுக்கு மிஞ்சி உளறுகிறாய். மந்த புத்தியே! என்னையன்றி ஜகதீஸ்வரனாக ஒருவன் இருக்கிறான் என்றால், எங்கே இருக்கிறான், இந்த கம்பத்திலா? காணவில்லையே என்றான். இதோ நான் அதிகப்ரசங்கித் தனமாக பேத்தும் உன்னை தலை வேறு உடல் வேறு என்று ஆக்குகிறேன், உன் பகவான் வந்து காப்பாற்றுகிறானா பார்க்கலாம் என்று சொல்லியபடி, தன் சிம்மாசனத்திலிருந்து இறங்கி, கையில் வாளுடன் வந்தவன் அந்த கம்பத்தை ஓங்கி அடித்தான். அந்த கம்பத்திலிருந்து பயங்கரமான சப்தம் எழுந்தது. அண்டங்கள் நடுங்கின. கட கடவென்ற சப்தம் ப்ரும்மா முதலான தேவர்கள் தங்கள் முடிவு வந்து விட்டதாகவே பயந்தனர். புத்திரனை கொல்ல கிளம்பியவன், முன் கேட்டறியாத பயங்கரமான ஓசை, அத்துடன் அத்புதமான அபூர்வமான ஒன்றை சபை நடுவில் கண்டான். தேவர்களின் எதிரிகளான அசுரர்களை அலறச் செய்தவன்.
सत्यं विधातुं निजभृत्यभाषितं व्याप्तिं च भूतेष्वखिलेषु चात्मनः ।अदृश्यतात्यद्भुतरूपमुद्वहन् स्तम्भे सभायां न मृगं न मानुषम् ॥
தன் பக்தன் சொன்னதை நிரூபிப்பதற்காக, அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக இருப்பவன், முன் கண்டிராத அத்புதமான ரூபத்தை எடுத்துக் கொண்டவனாக, சபையின் கம்பத்தில் மனிதனுமல்ல, மிருகமுமல்ல என்பது போன்ற உருவம் எடுத்துக் கொண்டு வெளிப்பட்டான்.
திகைத்து, இது என்ன உருவம் என்று பார்த்தபடி இருந்த ஹிரண்யகசிபுவின் முன்னால் ஸ்ரீ ஹரி, நரசிங்கமாக தோன்றினார். பயங்கரமான ரூபம் என்று வர்ணிக்கிறார். தகிக்கும் நெருப்பில் புடமிட போட்ட தங்கம் போல பள பளத்த சிவந்த கண்கள், சிங்கத்தின் பிடரி பயிர், ஜடையுடன் முகத்தை மறைக்க, பயங்கரமான பற்கள், சிங்கத்தின் கத்தி போன்ற கூர்மையான நாக்கு, அடர்ந்த புருவங்கள், சங்கு போன்ற மேல் நோக்கி உயர்ந்த காதுகள், மலை குகை போல ஆழமான வாயும், மூக்கும், கன்னங்களும் முகவாயும் பயங்கரமாக காது வரை நீண்டிருக்க, வானளாவிய சரீரம், அடங்கிய கழுத்து, அதனடியில் விசாலமான மார்பு பிரதேசம், சிறுத்த இடைகள், சந்திரனின் கிரணம் போன்ற வெளுத்த கூர்மையான ரோமங்கள், நாலு திசைகளிலும் பரவி நின்ற எண்ணற்ற புஜங்கள், நூற்றுக் கணக்கான நகங்கள், இவைகளே ஆயுதமாக, தன்னுடைய இயல்பான ஆயுதங்கள் எதுவும் இன்றி, இருந்தவரைப் பார்த்து ஹிரண்யகசிபு இதுவும் ஸ்ரீஹரியின் மாயா தோற்றமே, என்னைக் கொல்ல வந்திருக்கிறான் என்று சொல்லியபடி, தன் கதாயுதத்துடன் போருக்குத் தயாராக
சிங்கத்தின் முன் குட்டி யானை போல எதிர்த்தான். பதங்க:- விட்டில் பூச்சி தானாகவே வந்து நெருப்பில் வீழ்ந்து உயிரை விடுவது போல ந்ருசிங்கத்தின் ஆற்றலின் முன் விழுந்தான்.
அதில் என்ன ஆச்சர்யம். சத்வ ப்ரகாசமான ஸ்ரீ ஹரியிடத்தில் தாமசமான இருள் மறைவது இயல்பானதே.
ஸ்ரீ ஹரியோ, முன் தாமசமான ப்ரளய கால இருட்டையே தான் விழுங்கியவர் தானே. அசுரன் கதையால் அடிப்பதைப் பார்த்த தேவர்கள் திகைத்தனர். அசுரனால் அவர்களுடைய இருப்பிடமும் அக்ரமிக்கப் பட்டு விட்டதால், மேகக் கூட்டங்களில் மறைந்து நின்றபடி திகிலுடன் பார்த்தபடி இருந்தனர். அசுரன் கையிலிருந்து விடுபட்ட ந்ருஹரியைக் கண்டதும் ஆஸ்வாசமடைந்தனர். ஆஹா, என்னிடம் பயந்து விட்டான் என்று ஆர்பரித்தபடி, தன் வாளை அதன் உறையிலிருந்து உருவி எடுத்துக் கொண்டு, அசுரன் கழுகின் வேகத்துடன். முன்னேறினான். ஸ்ரீ ஹரியின் அட்டஹாஸமும், தேஜசும் அவன் கண்களைக் கூசச் செய்தன. புலி பதுங்கி இருந்து மூஷிகத்தை பிடிப்பது போல, அல்லது பாம்பை கருடன் கொத்திக் கொண்டு போவது போலவும், உலகை நாலா திக்குகளிலும் ஆக்ரமிக்கும் க்ரஹம் போல, அசுரனை மடக்கி பிடித்தார். சபையின் சபா த்வாரத்தின் உள்ளும் அல்ல, புறமும் அல்ல, பூமியிலும் அல்ல, வானத்திலும் அல்ல என்பது போல தன் தொடையில் போட்டுக் கொண்டு, நகங்களால், உயிரை எடுக்கும் ஆயுதங்களும் அல்ல, இரவும் அல்ல, பகலும் அல்ல என்ற சந்த்யா காலத்தில், தன் நீண்ட நாக்கினால் அவன் உயிரை எடுத்தார். ரத்தம் தோய்ந்த சிங்க முகம் எதிர்த்து நின்ற யானையை த்வம்சம் செய்தபின் இருப்பது போலவே இருந்தது.
தன் நகத்தின் நுனியால், ஹிரண்யாசுரனின் ஹ்ருதய கமலத்தை கிழித்து எடுத்தார். அதை விட்டு விட்டு, மற்ற அசுர வீரர்களை நோக்கி திரும்பினார். ஆயிரக் கணக்காக ஓடி வந்த அசுர வீரர்களையும் நகத்தாலேயே தாக்கி, மடியச் செய்தார்.
வானளாவி நின்றதால் அவருடைய மூச்சுக் காற்றுப் பட்டு மேகங்கள் பாதிக்கப்பட்டன. திக் கஜங்கள் பயந்து அலறின. ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த விமானங்கள், ஆட்டம் கண்டன. ந்ருஹரியின் பாதங்களால் மிதிக்கப் பட்ட பூமி திணறினாள். அவருடைய வேகத்தில் மலைகள் தூக்கி வீசப் பட்டன. ந்ருஹரியின் தேஜஸின் முன் வானமோ, திசைகளோ, அடுத்து அண்டாண்டங்களோ இருப்பதே தெரியவில்லை. சபையில் சிம்ஹாஸனத்தில் அமர்ந்தவரை யாரும் நெருங்கவே பயந்தனர். சர்வ லோகத்துக்கும் தலைவலியாக இருந்த ஹிரண்ய கசிபு அந்த முதல் தைத்யன் ந்ருஹரியால் யுத்தத்தில் ஹதம் செய்யப் பட்டதையறிந்து அனைவரும் மகிழ்ந்தனர். மகிழ்ச்சியில் தேவர்கள், தேவ ஸ்த்ரீகள் அனைவரும் முக மலர்ச்சியுடன் புஷ்பங்களை வர்ஷித்தனர். வானம் அவர்களின் வாகனங்களால் நிரம்பியது. வாத்யங்களின் வாத்யம் குதூகலமாக எங்கும் கேட்டது. கந்தர்வர்களின் ஆட்டமும், அந்த ஸ்த்ரீகளின் பாட்டும் பரவியது. சற்று நேரம் பயந்து ஒதுங்கி இருந்த ருத்ரன், ப்ரும்மா முதலியோர்கள் தைரியமாக அருகில் வந்தனர். தலை யில் வைத்த அஞ்சலியுடன் ஒவ்வொருவராக வந்து துதி செய்தனர். ரிஷிகளும் பித்ருக்களும், சித்தர்களும், வித்யாதர, மஹோரகர்களும் , ப்ரஜாபதியும், கந்தர்வ அப்சரஸ் சாரணர்கள், யக்ஷ, கிம் புருஷர்களும் வேதாளங்களும், சித்த கின்னர்களும், விஷ்ணு பார்ஷதர்கள் அனைவரும், சுனந்த குமுதன் முதலியோரும், அதே போல தலைக்கு மேல் கைகூப்பி வணங்கியபடி தீவிர தேஜசுடன் அமர்ந்திருந்த நரசிம்மரை அதிகம் நெருங்காமலே வணங்கினர்.
ப்ரும்மா சொன்னார்: வணங்குகிறேன். அனந்தன், அளவில்லாத சக்தியுடையவன், விசித்ர வீர்யன், பவித்ர கர்மாவை செய்பவன், விஸ்வத்தின் யுகம் தோறும் காத்தும் , பின் லயமாகச் செய்தும் தன் குணங்களால், லீலையால், சேர்த்து இயங்கச் செய்யும் அழிவற்ற உங்களுக்கு நமஸ்காரம்.
ஸ்ரீ ருத்ரன் சொன்னார்: யுகாந்தத்தில் வெளிப்படும் உங்கள் கோபம் தற்சமயம் இந்த அசுரனை அழிக்க வந்துள்ளது. அவன் மகனை காப்பாற்றுங்கள். பக்த வத்சல! அவன் உங்கள் பக்தனே.
இந்திரன் சொன்னான்: எங்களுக்கு உரித்தான யாக பாகங்கள் திரும்ப பெற்றோம். இந்த தைத்யன் தானே இந்திரனாகவும் மற்ற தேவர்களுமாக தோன்றி யாக ஹவிசை அபகரித்துக் கொண்டு விட்டான். அதனால் எங்கள் ஹ்ருதய கமலம் – உள்ளத்தை உங்களிடமே ஒளித்து வைத்து இருந்தோம். இப்பொழுது அசுரன் அழிந்தான், எங்கள் பயமும் நீங்கியது. நரசிங்கனாக வந்த உன் செயலால் எங்கள் இயல்பான உரிமைகளைப் பெற்றோம்,
ரிஷிகள் சொன்னார்கள்: நீ தான் எங்கள் தவத்தின் பலன். பரமன், ஆதி புருஷன், ஆத்ம தேஜஸால் ஸ்ருஷ்டிக்கிறாய். ஆதி அந்தம் இல்லாத சரணடைந்தவர்களைக் காப்பவனே, இந்த அசுரனால் சேதமான இந்த மூவுலகையும் புனருத்தாரணம் செய்ய வேண்டும். அதற்காகவே இப்படி ஒரு ரூபம் எடுத்து வந்தாயா?
பித்ருக்கள் – எங்கள் வம்சத்தினர் செய்யும் ஸ்ரார்தங்கள் எங்களுக்கு வந்து சேரவில்லை. அவர்கள் அளித்த எள்ளும் நீரும் இந்த அசுரனின் வயிற்றில் இருந்ததோ, அதை உன் நகங்களால் கிழித்து காட்டினாயோ, ந்ருஹரே! அகில தர்ம பாலனான உனக்கு நமஸ்காரம்.
சித்தர்கள்: எங்களுக்கு நீயே தான் கதி. யோக சித்திகளை இந்த அசாது –(ஸாது எதிர்பதம் அசாது) தன் தவ வலிமையால் அபகரித்துக் கொண்டான். அந்த துஷ்ட காரியத்தைத் தான் உன் நகங்களால் கீறி, அழித்தாயா, ந்ருசிம்ஹ, உன்னை வணங்குகிறோம்.
வித்யாதரர்கள்: எங்கள் வித்யைகளை இடை மறித்தான். பல காலமாக நாங்கள் தாரணை என்ற முறையில் கற்றுத் தேர்ந்த கலைகள், வித்தைகள், இவைகளை, பலம் வீர்யம் இவைகளால் கர்வம் கொண்டவனாக அவைகளை தடுத்தான். யுத்தம் செய்து துஷ்ட மிருகத்தைக் கொல்வது போல அழித்தாய், எங்கள் வித்தைகள் காப்பாற்றப் பட்டன, ந்ருசிம்ஹ, வணங்குகிறோம்.
நாகர்கள்: பாபி இவன். எங்கள் ரத்னங்களை, அத்துடன் ஸ்த்ரீ ரத்னங்களையும் அபகரித்தான். இவனை என்ன செய்தால் என்ன என்று தவித்தோம். அவன் மார்பை பிளந்தது எங்களுக்கு மிக்க மிகிழ்ச்சியே. உனக்கு நமஸ்காரம்.
மனுக்கள்: நாங்கள் மனுக்கள். உங்கள் கட்டளைப் படி நடப்பவர்கள். திதி மகனான இவனால் அவமானப் பட்டோம். அந்த துஷ்டனை அடக்கி விட்டீர்கள் ப்ரபோ! எப்படி உங்களுக்கு கைம்மாறு செய்வோம், உங்கள் கிங்கரர்கள் நாங்கள், கட்டளையிடுங்கள்.
ப்ரஜாபதிகள்: ப்ரஜாபதிகள் நாங்கள். உங்களால் ப்ரஜா பாலனத்திற்காகவே ஸ்ருஷ்டிக்கப் பட்டோம். இது வரை தடை பட்ட எங்கள் செயல்களை செய்வோம். இதோ உங்களால் மார்பு உடைக்கப் பட்டு கிடக்கிறானே, இனி ஜகத்துக்கே மங்களம் தான். சத்வ மூர்த்தே, நன்று இந்த அவதாரம்.
கந்தர்வர்கள்: ப்ரபோ! நாங்கள் நட,நாட்ய காயகா: – நாடகம்- அபிநயம் செய்பவர்கள், நாட்யமாடுபவர்கள், பாடுபவர்கள். தன் பலம் அதிகாரம் இவைகளைக் கொண்டு அதிகாரம் செய்தான். இவன் இந்த தசையை அடைந்து கிடக்கிறானே, அது எங்கள் நன்மைக்கே.
சாரணர்கள்: உலக வாழ்க்கை தொடர வேண்டாம், என்றும், அபவர்கம் எனும் உன் பாத சேவையையே வேண்டும் என்று உன் பாதங்களை ஆஸ்ரயித்த சாரணர்கள் நாங்கள். நன்றே செய்தாய். இந்த அசுரன் ஹ்ருதயம் பிளந்து விழுந்தான்.
யக்ஷர்கள்: நாங்கள் உன் அணுக்கத் தொண்டர்கள். உன் அருகில் இருந்து மனதுக்கு பிடித்த செயல்களை செய்து வந்தோம். அந்த திதி சுதன் எங்களை பல்லக்கு தூக்கிகளாக ஆக்கி விட்டான். ஜனங்களுக்கு சொல்லொணா தாபத்தைக் கொடுத்த இந்த அசுரன் உன்னால் பஞ்சதாம்- மரணத்தை அடைந்தான்.
கிம்புருஷர்கள்: நாங்கள் கிம் புருஷர்கள். தாங்களோ மஹா புருஷன் எனும் ஈஸ்வரன். எங்களை அலட்சியம் செய்தான். இந்த மட்டமான மனிதன் மரித்தான்.
வைதாளிகர்கள்: எங்கள் குலத்தினர், சபைகளில், யாகங்களில், உங்களூடைய அமலமான புகழை பாடுவோம். அதனால் மக்களிடையே பெரும் மதிப்பை பெற்றோம். இந்த துர் ஜன்மா அதை ஒட்டு மொத்தமாக நிறுத்தச் செய்து விட்டான். எங்கள் நல்ல காலம், உன்னால் ஹதம் செய்யப் பட்டான். பகவன்! வியாதி நிவாரணமானால் பத்ரம்- நிம்மதி வருமே அது போல நாங்கள் துயர் நீங்கினோம்.
கின்னர்கள்: உங்கள் அனுசரர்கள், உடன் வரும் கின்னர கூட்டத்தினர். இந்த தைத்யன் எங்களுக்கு ஊதியம் எதுவும் தராமலே வேலை வாங்கினான். ஹரே! இந்த பாபாத்மா உன்னால் அழிந்தான். ஹரே! நரசிம்ஹ நாதா! எங்களுக்கு நன்மையை செய்.
விஷ்ணு பார்ஷதர்கள்: அத்புதமான உங்கள் நரஹரி ரூபத்தை பார்த்து வியக்கிறோம். சரணம் அடைந்தவர்களை காப்பதைக் கண்டிருக்கிறோம். இது இவர் விதி ஈசனே! விப்ர- அந்தணனால் சபிக்கப் பட்டவன். இந்த மரணமே இவனுக்கு அனுக்ரஹம் என்று அறிகிறோம்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 56
அத்யாயம்-9
இவ்வாறு ப்ரும்மா, ருத்ரன் முதல் அனைத்து தேவர்களும் வந்து வணங்கியும் நரசிங்கருடைய ஆச்சர்யமான கோபத்தை குறைக்க முடியவில்லை. தேவர்கள் லக்ஷ்மி தேவியையே அனுப்பினார்கள். அத்புதமான ரூபம், அந்த காணக் கிடைக்காத மிகப் பெரிய உருவத்தை லக்ஷ்மி தேவி சமாதனப் படுத்த முடியும் என்று நினைத்தனர். அவள் முன் கண்டறியாத, கேட்டறியாத உருவம் என்பதால் சந்தேகம் கொண்டு மறுத்து விட்டாள். ப்ரஹ்லாதனையே அனுப்பினர். அருகில் ப்ரும்மா உதவிக்கு நின்றார். மகனே! உன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு இருப்பவரை நீயே போய் சமாதனம் செய் என்றனர். சம்மதித்த ப்ரஹ்லாதன் அருகில் சென்று வணங்கினான். தன் காலில் விழுந்த சிறுவனைப் பார்த்து தேவன் கருணையுடன் எழுப்பி, அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். காலடியில் சர்ப்பத்தைக் கண்டு பயந்தவர்களுக்கு அபயம் அளிப்பது போல. அந்த கை மேலே பட்டவுடனே தன்னை ஸூழ்ந்திருந்த அசுபங்கள் விலகி விட்டதாக ப்ரஹ்லாதன் உணர்ந்தான். பரிசுத்தமான மனதுடன் அவர் பாத பத்மங்களை தன் மனதில் இருத்திக் கொண்டான். கண்களில் நீர்பெருகியது. மனதின் மகிழ்ச்சி உடலில் தெரிந்தது. ஆழ்ந்த தியானத்தால் தன் மனதை ஒருமுகப் படுத்திக் கொண்டான். வாயில் வார்த்தைகள் வெளி வராமல் குரல் தழ தழத்தது. அவரையே பார்த்தபடி துதி செய்தான்.
ப்ரஹ்லாதன் சொன்னான்: ப்ரும்மா முதலான தேவர்கள், முனிவர்களும் சித்தர்களும், ஒரே குரலில் மனப் பூர்வமாக சொற்களின் ப்ரவாகமாக ஆராதித்தனர். பகவானை பூஜை செய்ய, உயர் குல பிறப்போ, தனம் நிறைந்த உறவினர் கூட்டமோ, தவ சீலர்களோ, தேஜஸால் வரும் ப்ரபாவமோ, பலம் பௌருஷம் புத்தி, இவைகள் இணைந்து இருப்பதோ, பர புருஷனுக்கு ஆராதனையாக முடியாது. பக்தியால் பகவான் சந்தோஷப் படுகிறார். கஜேந்திரனுக்கு அருளியதே சாட்சி. பன்னிரண்டு குணங்கள் அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டதாகச் சொல்வர். (தர்மம், சத்வம், தமம், தவம், சங்கோசம், அஸூயை இல்லாமை, அறிதலில் ஆர்வம், யாகம், தானம், உறுதி, வேத ஞானம், விரதங்கள்) இந்த குணங்கள் இருந்தும் அரவிந்த நாபன் என்ற பகவான் விஷ்ணுவிடம் துவேஷம் இருந்தால் என்ன பலன்? சுய கர்வம் உள்ள ஒருவர் என்னதான் அறிவாளியானாலும் அவரால் மற்றவர்களுக்கு நன்மை இல்லை. முகத்தில் இட்ட திலகம் ப்ரதி பிம்பத்தில் தானே காண முடியும்.
பகவான் பக்தியினால் மட்டுமே மகிழ்ச்சியடைகிறார். இந்த குலத்தில் பிறந்தேன் என்பதால் நான் அசுரன். எனக்கு தெரிந்த வரை பகவானை துதிக்கிறேன். விதியின் வசம் தான் பிறப்பும், நல்ல குலத்திலோ, மற்றதிலோ அதை மாற்ற முடியாது. இந்த க்ரோதமும் உங்கள் அவதாரமும் உலக க்ஷேமத்திற்காக, எவரையும் பயப்படுத்த இல்லை என்று அறிகிறேன். அதனால் ப்ரபோ! இந்த ரூபத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உலகை ஹிம்சித்த அசுரன் மடிந்தான். இந்த க்ரோதத்தை விட்டு உங்களுடைய சௌம்யமான ரூபத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உபத்ரவமே செய்யும் தேள் போன்ற ஜந்துக்கள் போன்ற சில பிறவிகள். இவைகளை வதம் தான் செய்ய வேண்டும். சாதுக்கள், சாதாரண ஜனங்கள் உங்களை இந்த ரூபத்தில் கண்டதில்லை எனவே, அவர்களுக்காக இந்த பயங்கர உருவத்தை விடுங்கள். . அவதார காரியம் அசுரன் மடிந்ததில் ஆகி விட்டது. உலகமே நிம்மதியடைந்துள்ளது. ந்ருசிம்ஹ, இந்த ரூபத்தை உலக நன்மைக்கானது என்பதை என்றும் நினைத்திருப்பார்கள்.
நான் பயப்படவில்லை. இந்த பயங்கரமான தோற்றம்- சிங்க முகமும், நீண்ட நாக்கும், தீயின் ஜ்வாலை போல சிவந்த கண்களும், புருவங்களும், உக்ரமான பற்களும், அசுரனின் குடலை மாலையாக தரித்திருப்பதும், ரத்தம் தோய்ந்த சிங்கத்தின் பிடரி மயிர்களும், சங்கு போன்ற நீண்ட காதுகளும், அட்டகாசமான சிரிப்பால் பயந்த திக் கஜங்கள், வாளின் கூர்மையுடன் நகங்கள், இவைகளைக் கண்டு நான் பயப்படவில்லை. , எளியவர்களுக்கு இரங்கும் குணவானே! உலகியலில் உள்ள துன்பங்களைக் கண்டு பயப்படுகிறேன். உன் சரண கமலங்களில் என்னை ஏற்றுக் கொள். இந்த பிறவி, மறு பிறவி என்ற சுழலில் திரும்ப திரும்ப புதுப் புது ஜீவன்களின் கர்பத்தில் பிறப்பதை, பிரியமானது அப்ரியமானது என்ற உறவுகள், அவைகளின் அருகாமை சுகம் என்றால் பிரிவு மிக துன்பம், என்று சோகம் அக்னியாக தகிக்கும் இந்த சம்சார பந்தம் வேண்டாம். இப்படி அலையாமல் எனக்கு உன்னடி நிழலைத் தர வேண்டுகிறேன்.
ந்ருசிம்ஹ! ப்ரும்மா முதலானோர் புகழ்ந்து பாடும் உன் அவதார லீலைகளை கேட்டபடி, உங்களருகில் சேவகனாக இருக்க வரம் தர வேண்டும். இந்த பாலகனுக்கு வேறு அடைக்கலம் இல்லை. வியாதியுடையவனுக்கு ஔஷதம்- மருந்தே சரணம். கடலில் மூழ்கியவனுக்கு கிட்டிய படகே சரணம்.
என் தந்தையும் தாயும் நீங்களே. ஒரு வேளை, இது போன்ற கஷ்டமான சமயங்களில், எப்படியோ, யாராலோ, ஏதோ ஒரு சமயத்தில், முன் பின் அறியாத ஒருவன் உதவிக்கு வருவான் என்பது நியதி என்று வைத்துக் கொண்டாலும் அந்த ரக்ஷகன் நீங்களே தானாக இருப்பீர்கள். சந்தர்பத்துக்கு தகுந்த வேடத்தில் வந்து சேருவாய். எப்படி தீர்மானமாகச் சொல்கிறாய் என்றால், உலகில் தாய் தந்தையை, அதையும் விட மேலான ப்ரும்மா போன்றவர்கள், அவரவர் செயல்களை குறைவற செய்ய முடிவதும் உன் அனுக்ரஹத்தலேயே. அடிப்படையான சக்தி நீயே. அதனால் எந்த சமயத்தில், என்ன காரணத்தால், எந்த கருவியினால், எவரை தூண்டி விட்டு, அந்தசூழ்நிலைக்கு ஏற்ற சாதனங்களையும், யாருக்கு தர வேண்டும் என்பதும், தன்னைச் சார்ந்தவர்களொ, மற்றவர்களோ, அவர்களைக் கொண்டு செய்விக்கிறாய். யாரானாலும் சமயத்தில் உதவி செய்பவன் உன் ஸ்வரூபமே, நீயே.
மற்றவர்களுக்கு உதவி செய்வது பொதுவாக மனித குணமே இல்லை என்ற விதிப்படி, எனக்கு ரக்ஷகன் நீயே. உன் அனுக்ரஹத்தால், மாயை மனத்தை ஆட்டுவிக்கிறது. காலத்தால் தூண்டப்பட்டு செயல்களைச் செய்ய தூண்டுகிறது. வேத சாரமான பதினாறு ஆரங்கள் உடைய சம்சார சக்ரம். இதை யார் தவிர்க்க முடியும். நீயே தன் ஆற்றலால் ஆத்ம குணங்களை வென்றவனாக, காலத்தை தன் ஆளுமைக்குள் வைத்திருப்பவன், அணைக்கவும், தண்டிக்கவும் சக்தியுடையவன், ப்ரும்மாவினால் இந்த சக்ரத்தில் தள்ளப் பட்ட உன் தாஸன் என்னை காப்பற்றுங்கள் பிரபோ!.
உலகில் மனிதர்கள், ஆயுள், செல்வம், பதவி இவைகளைத் தான் அதிகமாக வேண்டுகிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். இவையனைத்தையும் நிரம்ப பெற்றிருந்த என் தந்தை உங்கள் அட்டகாசமான சிரிப்பு, புருவங்களின் நெரிசல் இவைகளால் ஹதம் செய்யப் பட்டதை நேரில் கண்டேன். எனவே அனித்யமான போகங்கள், தேவலோகமே ஆனாலும் எனக்கு வேண்டாம். என்னை உங்கள் அருகில் பணிவிடை செய்யும் தாஸனாக வைத்துக் கொள்ளுங்கள்.
வேத வாக்யங்களால் சொல்லும் ஆசிகள் கானல் நீரைப் போன்றதே. அனைத்து நோய்களுக்கும் இடம் கொடுக்கும் இந்த சரீரம், இதையறியாத மனிதர்கள் நெருப்பின் ஜ்வாலையை தேன் துளிகளால் அணைக்க முயலுவது போல அல்ப சுகங்களில், காமத்தை திருப்தி செய்ய பாடு படுகிறார்கள்.
தாமசமே அதிகமான இந்த அசுர குலத்தில் பிறந்த எனக்கு, ப்ரும்மா முதலானவர்களுக்கு கூட கிடைக்காத உங்கள் சரீர ஸ்பரிசம், என் தலையில் உங்கள் பத்ம கரத்தை வைத்து அனுக்ரஹித்தீர்கள். என்னே உங்கள் அனுகம்பம்- பரிவு. பிறவிகளில் உயர்வு தாழ்வு என்று மற்றவர்கள் நினைக்கலாம். தாங்கள் அனைவருக்கும் நண்பனானவன். சிருஷ்டியில் ஏற்றத் தாழ்வு காண்பது அறியாமை. பல விதமாக சாதனைகள் செய்து உங்கள் அனுக்ரஹத்தை அடைய முயற்சிகள், தவம் விரதங்கள் செய்கின்றனர். அங்கும் அவர்களின் சாதனைகளுக்கு ஏற்ற பலன்களே கிடைக்கின்றன. வேண்டியதை கொடுக்கும் கல்ப தரு கூட வேண்டியதைத் தான் தரும். அதற்கு மேல் தராது.
எதுவுமில்லாத எனக்கு உங்கள் அனுக்ரஹம் கிடைத்தது என் குரு ஸ்ரீ நாரதரின் அருளால் என்று நினைக்கிறேன். உங்கள் பக்தன் நாரதர் முதலில் எனக்கு தரிசனம் தந்து உபதேசம் செய்தார். அவர் கிணற்றில் விழுந்தவனை தூக்கி விடுவது போல எதுவுமறியாத என்னை ஞானோபதேசம் செய்து தூக்கி விட்டார். அவரோ உங்கள் பக்தன், தாசன், எனவே எனக்கு கிடைத்த இந்த அனுக்ரஹம் அவர் காரணமாக கிடைத்தது என்பதில் சந்தேகம் இல்லை.
அனந்த! என் தந்தையின் வதமும், என் ப்ராண ரக்ஷணமும், உங்கள் பக்தனான ரிஷியின் வார்த்தையை சத்யமாக்கவே. வாளைத் தூக்கிக் கொண்டு என்னிடம், என்னை தவிர வேறு யார் ஈஸ்வரன்? என்று அசட்டுத் தனமாக கொல்வேன், என்று வந்த என் தந்தையிடமிருந்து என் உயிரை காத்தவர் நீங்கள். ஆதி அந்தம் மத்யம் என்று எங்கும் பரவி இருப்பவர், தன் மாயையால் குணங்களின் வேறு பட்ட பிரயோகங்களால் பல விதமாக ஸ்ருஷ்டி செய்த பின், தானே அவைகளின் உள் உறைபவர். இந்த அசுர அரசனின் நிதனம் காலத்தினால் நிர்ணயிக்கப் பட்டது. மரத்திற்கு காரணம் விதை என்றும், பூமி அதன் இருப்பிடம் மட்டுமே, அந்த விதையை மரமாக்குவது பூமியே என்றாலும், காரணங்கள் இரண்டு வகையாக – ஒன்று வெளியில் தெரிவதாக, விதை போல சூக்ஷ்மம் பூமி போல மறைந்திருந்து வளர்ப்பது – இந்த இரண்டு வகையாகவும் உலகங்களை நீங்களே பூத, ஸூக்ஷ்ம என்ற இரண்டுமாக இருந்து இயங்கச் செய்கிறீர்கள். ப்ரளய ஜலத்தில் தூங்குவது போல தெரிந்தாலும், யோக முறையில், கண்களை மூடி தன்னைத் தானே பரமானந்தமாக அனுபவித்துக் கொண்டு தாமசமோ, குணங்களோ இல்லாத நான் காவது நிலையில் விழித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள்.
உங்கள் சரீரம் நீரில் மூழ்கி அனந்த சயனத்தில் ஆத்மாராமனாக செயலற்று கிடந்ததால் கால சக்தி இயற்கை தர்மங்கள் மூலம் எழுப்பினாள். சமாதி நிலை கலைந்து உங்கள் நாபியில் ஆல மரத்து மிக சூக்ஷ்மமான விதையிலிருந்து பெரிய ஆல மரம் வளர்வதைப் போல , மகா பத்மம் தோன்றியது. அது போலவே ஒரு காரணம் காட்டி இந்த பத்மத்திலிருந்து சுத்த சத்வமான ப்ரும்மா பிறக்கச் செய்தீர்கள். அதிலிருந்து பீஜம்-விதை தான் காரணம் என்று உலகில் காட்டி உங்கள் உள்ளேயே பரவியிருந்த சத்வ குணத்தை காட்டிக் கொள்ளவேயில்லை. துளிரைக் கண்டதும் அதனடியில் விதை இருந்திருக்கும் என்று மனிதர்களை ஊகிக்க வழி வகுத்தது. கடுமையான தியானத்தாலும், தவம் செய்தும் அந்த ப்ரும்மா தனக்குள்ளேயே உங்களைக் கண்டு கொண்டார். உபாதானம் என்ற அதி ஸூக்ஷ்மமான தரிசனம் அவருக்கு கிடைத்தது. விவேகியானவன் பூமியில் வாசனையைக் கொண்டு அதன் காரணத்தை கண்டு கொள்வது போல. பகவானாக ஆயிரக் கணக்கான முகங்கள், கரங்கள், பாதங்களோடு அவருக்கு தரிசனமாயிற்று. அதனால் மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவருக்கு தாங்கள் ஹயசிரன்- குதிரை முகம் கொண்டவனாக வேதங்களை எதிர்த்த பலசாலிகளான மது கைடப என்பவர்களை வதம் செய்து, ஸ்ருதி கணங்களை காத்த உங்களை சதா,ரஜஸ்,தமஸ் சேர்ந்த ரூபமாக சொல்கிறார்கள்.
இது போல ஒவ்வொரு யுகத்திலும் அரசனாக,மிருகமாக, தேவனாக, நீர் வாழ் ஜந்துவாக, அவதாரங்கள் செய்து உலகில் ப்ரதி கூலமாக- எதிராக செயல்படும் அசுரர்கள் போன்றவர்களை அழித்து, தர்மத்தை நிலை நிறுத்துவதை வழக்கமாக கொண்ட நீங்கள் கலி யுகத்தில் மறைந்து இருப்பீர்கள். வைகுண்ட நாதனே! உங்கள் கதைகளை கேட்டு மனம் மகிழ்ச்சியடைகிறது. ஹர்ஷ, சோக,பயம் என்ற உணர்ச்சிகளால் நிறைந்த கதைகள், இவற்றை கேட்டபின் என் தீனமான நிலையை எப்படி விமரிச்சிப்பேன். உங்களை துதி செய்ய மனம் விழைகிறது. உடல் இந்திரியம் காமத்தை நாடுகிறது. புலன்களின் சபலம் என்னை மட்டுமல்ல அனைத்து மனிதர்களையும் தடுமாற வைக்கிறது. இப்படி தன் செயல்களால், தன்னை கட்டுப் படுத்த முடியாமல் அடுத்தடுத்து பிறப்பு இறப்பு. வைதரணியில் யாத்திரை என்று தவிக்கும் ஜனங்கள் இன்னமும், தான், மற்றவன், மித்ரன், விரோதி என்ற வித்தியாசங்களை விடவில்லையே.
அகில குரோ! ஆர்த்த பந்தோ! – எளிய மக்களின் துன்பங்களை துடைக்கும் உறவினன் நீயே- மறு பிறவி வேண்டாம் என்று ப்ரார்த்திக்க கூடத் தெரியாத எளிய ஜனங்கள், அவர்களுக்கு அனுக்ரஹம் செய். தேவா! முனிவர்கள் சாதாரணமாக தங்கள் முக்தியை வேண்டுவார்கள். அவர்களால் மௌனம் காக்கவும், நிர்ஜனமான இடத்தில் தனித்து இருந்து யோக சாதனைகளைச் செய்யவும், புலனடக்கி தவம் செய்யவும் முடிகிறது. அந்த சுய கட்டுபாடு இல்லாத பொது ஜனங்கள் வாழ்க்கையில் எதுவும் சாதிக்க முடியாத அறியாமை சூழ்ந்தவர்கள் தான் பெரும்பாலோர். இவர்களுக்கு சரணாகதி பற்றி என்ன தெரியும்? நீ சரணடைந்தவர்களை காப்பாய் என்பதும் தெரியாது. வெற்று வாழ்க்கை நடத்தி மடிந்து போக ஒரு பிறவியா, உங்களைத் தவிர வேறு யார் அவர்களின் நிலையை அறிவர், அவர்களை நல் வழிப் படுத்து. உங்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
வாயுவாக, அக்னியாக, அவனி-நிலமாக, வானமாக, நீராக இருப்பவன், ப்ராண இந்திரியங்களை ஆட்டுவிப்பவன், ஹ்ருதயம், சித்தம் அனுக்ரஹம்- இவையனைத்தும் உங்கள் குணங்கள். சகுணமாகவும், விகுணமாகவும் இருப்பவர். அதற்கும் மேல், மனம் வாக்கு இவைகளுக்கும் எட்டாத பரப்ரும்மம். பூரணமாக உங்களின் பெருமையை அறிந்தவர் யாருமில்லை. மூன்று குணங்களோ, மஹத் முதலானவைகளோ, மனதின் செயல்பாடுகளோ, தேவர்களோ, மனிதர்களோ, ஆதியும் அந்தமும் இல்லாத உங்களை விமரிசிக்க துவங்கினாலும் போதுமான வார்த்தைகள் இல்லை, வாய் விட்டுச் சொல்ல சக்தி இல்லை, என்று அறிவுடைய பெரியோர்களே நிறுத்திக் கொள்கின்றனர். அதனால், அர்ஹத்தம- இந்த அளவு அனைத்துமாக விளங்கும் பெருமைக்கு உரியவன் நீங்களே- உங்களுக்கு நமஸ்காரம். துதிகள், பூஜா காரியங்கள், நினைவில் இருத்தி தியானங்கள், பாத சேவனம் எனும் விழுந்து வணங்குதல், கதைகளைக் கேட்டல் முடிந்தவரை சேவைகள், என்று ஷடங்க பூஜைகள், பக்தி செய்பவர்களுக்கும் பரம ஹம்ஸ கதியை கொடுங்கள். பக்தி இல்லாமல் மோக்ஷம் இல்லை.
நாரதர் சொன்னார்: இப்படி வர்ணித்து வணங்கிய ப்ரஹ்லாதனை, பிரியமுடன், தானே வருவித்துக் கொண்ட கோபம் உடையவரான நரசிங்க ரூப பகவான் பதில் சொன்னார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: ப்ரஹ்லாத, பத்ரம் தே! ப்ரஹ்லாதா, உனக்கு நன்மை உண்டாகட்டும். அசுரோத்தமன் நீ. வேண்டும் வரம் கேள் என்றார். ஆயுஷ்மன்! துர்லபமான என் தரிசனம் கிடைக்கப் பெற்றாய். என்னைக் கண்ணால் கண்டபின் துயரம் என்பதே இராது. சாதுக்கள் பல விதமாக சாதனைகள் செய்கிறார்கள். ஸ்ரேயஸ் – நன்மையை அடைந்து மற்றவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறார்கள். பகவானே இப்படி சொன்ன பின்னும் ப்ரஹ்லாதன் வேறு எதையும் வேண்டவில்லை. பகவானிடத்தில் ஆழ்ந்த பக்தியுடையவன். அசுரர்களில் சிறந்தவன்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ‘பகவத் ஸ்தவோ ‘என்ற ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 55
அத்யாயம்-10
நாரதர் சொன்னார்: பக்தி யோகமே அனைத்து விதமான யோகங்களுக்கும் அடிப்படைஎன்று நம்பிய சிறுவன், மேலும் ஹ்ருஷீகேசனைப் பார்த்து பேசினான். ‘எனக்கு ஆசை காட்டாதீர்கள். வரம் கிடைத்த தரியத்தில், காமமும், மோகமும் அதிகமாகும். எனக்கு மோக்ஷம் தான் வேண்டும். உங்களையே ஆஸ்ரயித்து இருக்கும் நான் வேண்டுவது அதுவே. உலகியல் சங்கமே எனக்கு பயத்தை தருகிறது. உங்கள் அடியார்கள் பற்றி தெரிந்து கொள்ளவே ஆசைப் படுகிறேன். அகில குரோ! கருணை நிறைந்த உங்கள் ஆசிகளையே வேண்டுகிறேன். பதிலுக்கு எதையும் எதிர்பார்த்து வேண்டுபவன் வணிகன். வியாபாரத்தில் பண்டமாற்று செய்யும் வணிகன் போல ஆவேன். பணிவிடை செய்பவன் பலனை ஆசீர்வதமேயானாலும், எதிர்பார்த்தால் அவன் அணுக்கத் தொண்டன் அல்ல. அவனிடம் தனக்கு ஏதோ செயல் நடக்க வேண்டும் என்று ஆசீர்வதிப்பவன் ஸ்வாமியும் அல்லன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உங்கள் பக்தன். அரசனும் சேவகனும் போல அல்ல நாம் இருவரும். நமக்குள் தேவைகள் என்று எதுவும் இல்லை. இந்த இருவருக்கும் இடையில் பொருள், தேவை என்பவைகள் உண்டு. நமக்குள் நான் பக்தன், நீங்கள் ஸ்வாமி. உங்களிடம் அடைக்கலமானான். எனக்கென்று எந்த ஆசையும் இல்லை. எந்த நிலையிலும் என் மனதில் காமாதிகள் வர விடாமல் காப்பதையே வரமாக கேட்கிறேன். இந்திரியங்கள்,மனம், ப்ராணன், ஆத்மா, தர்மம், த்ருதி, மதி, ஹ்ரீ: ஸ்ரீ, தேஜஸ், ஸ்ம்ருதி: சத்யம் இவை அனைத்தையும் தொடர்ந்து வரும் பிறவி சக்கரத்தில் அழிகிறது.
மனிதன் தன மனதிலிருந்து எப்பொழுது முழுமையாக காமத்திலிருந்து விடுபடுகிறானோ, அப்பொழுது தான் பகவானுக்கு சமமானவனாக ஆகிறான்.
ओं नमो भगवते तुभ्यं पुरुषाय महात्मने ।हरयेऽद्भुतसिंहाय ब्रह्मणे परमात्मने ॥
பகவான் சொன்னார்: நீ சொல்வது போல ஞானிகள் என்னிடம் எதையும் எதிர் பார்ப்பது இல்லை. ஆனாலும் இந்த மன்வந்தரம் தைத்ய குல அரசர்களுக்கானது. அதனால் அதன் சுகங்களை நன்மைகளை அனுபவி. என்னைப் பற்றி பாடுபவர்கள், பிரியமானவர்கள் இவர்களுடன் சேர்ந்து இரு. நல்ல மனிதனாக அனைத்து ஜீவன்களிடமும் பிரியமானவனாக இரு. அதியக்ஞம் என்ற யாகத்தைச் செய். விதிகளை அனுசரித்து அந்த யாகத்தை செய். போகங்களை அனுபவித்து உன் புண்யங்களையும், பாபங்களையும் தொலைத்து விட்டு காலக்ரமத்தில் பவித்ரமான தேவலோகம் பாடும் பந்தங்களில் இருந்து விடுபட்டவனாக என்னை வந்தடைவாய். இந்த சரித்திரத்தை, உன்னையும் என்னையும் நினைத்தே, கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவார்கள்.
ப்ரஹ்லாதன், மகேசனே! ஒரு வரம் கேட்கிறேன். என்னையும் உங்களையும் நிந்தித்த என் தந்தை தான் செய்த பாபங்களீல் இருந்து விடுபட வேண்டும். குற்றம் செய்தவர் தான், கோபத்தால் கடுமையாக சொன்ன வார்த்தைகள், உங்களை என் தம்பியைக் கொன்றவன் என்று ஏசினதையும், என்னிடம் வெறுப்பும், ஆத்திரமுமாக பேசியதையும் பொருட்படுத்தாமல், அவரை இந்த தவறுகளிலிருந்து விடுவித்து புனிதமானவராக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: இந்த குடும்பத்தில், உன் பிறப்பால் உன் தந்தை அவரது இருபத்து ஏழு தலை முறையினர் பாவனமாகி விட்டனர். சாதோ! நீயே உன் குலத்தை விளங்க வைத்து விட்டாய். எங்கெல்லாம் என் பக்தர்கள் அமைதியாக, சம நோக்கு உடையவர்களாக, நல்ல ஆசாரம் உடையவர்களாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களின் வாகனங்கள் குதிரை முதலியவை கூட பாவனமாகிவிடும். என்னிடமே மனதை வைத்தவர்கள் எந்த ஏற்றத் தாழ்விலும் கலங்க மாட்டார்கள். எந்த சிறு ஜீவனையும் கொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு அல்ப ஆசைகள் எதுவுமே இராது. என் பக்தர்கள் உலகத்தில் நிரம்பி இருக்கின்றனர். நீ அவர்களுக்கு உதாரணமாக இரு.
உடனடியாக உன் தந்தைக்கு அபர காரியங்களைச் செய். என் சரீர ஸ்பரிசம் பெற்றவன், அவன் நல்ல கதியை அடைவான் என்று நம்பிக்கையோடு செய். தயங்கவே வேண்டாம். உன் தந்தையின் பதவியை அடைவாய். ப்ரும்ம வாதிகளான அரசியல் ஆலோசகர்கள், மந்திரிகள் சொல்வதைக் கேட்டு நட. அரச காரியத்தை கவனமாக செய்வதையே என் நினைவோடு செய்.
நாரதர் சொன்னார்: ப்ரஹ்லாதன் அதன் படியே செய்தான். பகவான் கட்டளைப் படியே, அந்தணர்களால் அபிஷேகம் செய்யப் பட்டு சிம்மாசனத்தில் அமர்ந்தான்.
தனது பயங்கரமான அவதார ரூபத்தை விட்டு சௌம்யமாக ஆன பகவான் நரஹரியை அனைவரும் துதி செய்தனர்.
ப்ரும்மா: தேவ தேவ!, அகிலத்துக்கே தலைமை தாங்குபவனே. தானே பஞ்ச பூதங்களாகவும் இருப்பவன், ஆதி மனிதன், நல்ல வேளையாக உலகை துன்புறுத்திய அசுரனை அழித்து உலகை காத்தீர்கள். என்னிடம் வரம் பெற்றவன். என் ஸ்ருஷ்டியில் வந்த யாராலும் மரணம் கூடாது என்று வரம் வேண்டினான். தவம் செய்து பெற்ற பலம், அது அவனுக்கு கர்வத்தை தான் தந்தது. வேதங்களை தடுத்தான். நம் நல்ல காலம் அவன் மகனே, சாதுவாக, பாகவதனாகவே பிறந்த குழந்தை, அவன் கொல்லப்படாமல் . காப்பதற்காகவே எடுத்த இந்த அவதாரம். இதனால் நாங்கள் அனைவருமே பிழைத்தோம். தற்சமயம் உங்களைக் காணும் பேறு பெற்றோம். இந்த அவதார சரீரம், பகவானே, யார் நினைவில் வந்தாலும் தவறு செய்யாமல் திருந்தச் செய்யும். வெளியில் தெரியாத ஒரு தூண்டுதல் கிடைக்கும்.
நரசிங்கர் சொன்னார்: பத்ம சம்பவ! இது போன்ற வரங்களை யாருக்கும் கொடுக்காதே. அதுவும் இயல்பாக க்ரூரமான குணம் உடையவர்களுக்கு பாம்புக்கு அம்ருதமே கொடுத்தது போல ஆகும்.
இப்படி சொல்லிவிட்டு பகவான் அந்தர்தானமானார்.
ப்ரஹ்லாதன் அனைவரையும் வணங்கினான். அசுர குல குருவான சுக்ராசாரியார், அவனை தைத்யர்களுக்கும் தானவர்களுக்கும் அதிபதியாக நியமித்தார். தேவர்கள் பாராட்டி ஆசிர்வதித்தனர். ப்ரும்மா முதலானோர் முறையாக வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறாக திதி புத்திரர்களான விஷ்ணு பார்ஷதர்கள், அணுக்கத் தொண்டர்களாக இருந்த சமயம் பெற்ற சாபத்தால் ஸ்ரீ ஹரியிடமே விரோதம் கொண்டு அவராலேயே அழிக்கப் பட்டனர்.
அவர்களை அந்தண சாபம் தொடரும். அடுத்து கும்பகர்ண ராவணனாக பிறப்பர்.
ராமரின் அம்புகளால் யுத்த களத்தில் உயிரை விடுவர். யுதிஷ்டிரா! அதன் பின் சிசுபால தந்த வக்த்ரனாக வந்து ஸ்ரீ ஹரியிடம் விரோதம் கொண்டு உன் கண் முன்னே மடிந்தனர். அதைக் கண்ட பின் க்ருஷ்ண விரோதிகளான அரசர்கள் குளவிகள் மாறுவது போல, சிசுபாலனின் வதத்தைக் கண்டு தங்கள் துவேஷத்தை மாற்றிக் கொண்டனர்.
நீ கேட்டபடி எனக்குத் தெரிந்த இந்த சரித்திரங்களை விவரமாக சொல்லி விட்டேன். தர்மா! இது தான் மஹாத்மாவான ஸ்ரீ க்ருஷ்ணனின் அவதார சரித்திரம். ஆதி தைத்யர்களை உத்தாரணம் செய்யவே எடுத்த அவதாரம். ப்ரஹ்லாதனுடைய சரித்திரமும், மஹா பாகவதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சொல்கிறது. பக்தியும் வைராக்யமும் ஹரியின் வர்ணனையும் யுகாந்த காலத்தில் உலகை காக்கவே முனைந்து இருப்பதையும், காலத்தின் பிடியில் எந்த உயர்ந்த பதவியில் இருப்பவரும் ஒரு நாள் மறைவதையும் சொல்கிறது. விஷ்ணுவின் வீர்யத்தைச் சொல்லும் பொழுதே, அத்யாத்மிகம் என்பதை வலியுறுத்துகிறது. சிரத்தையுடன் பாடுங்கள். வினைப் பயன் விலகும்.
இது தான் ஆதி புருஷனின் ம்ருகேந்திர – வன விலங்குகளின் அரசன்- லீலை. இரு தைத்யர்களையும் வதம் செய்தும், அவன் மகன் நல்ல குணவான்களில் முக்யமாக ஆனதையும் கேட்டு பயம் விலகி லோகம் நிம்மதியடைந்ததையும், கேளுங்கள். பூலோகத்தில் பிறந்த நீங்கள் பாக்யசாலிகள். தர்மராஜா! உனக்கு மாமன் மகனாக வீட்டிற்குள்ளேயே வளைய வந்தவன். அவனே கைவல்யம் எனும் பரம பதத்தை தரும் பர ப்ரும்மா.
த்ரிபுரங்களை எரித்த பகவான் ஸ்ரீ ருத்ரன் அறிவார், இவருடைய மகிமைகளை.
தர்மபுத்திரர் வினவினார். எதற்காக மயன் என்ன செய்தான் என்று வதம் செய்யப் பட்டான்?
நாரதர் சொன்னார்: ஒரு சமயம் அசுரர்கள் தேவர்களுடன் விடாது போரிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை வெற்றி கொள்ள மயன் என்ற தேவ சில்பியை அணுகினர். அவரும் மூன்று புரங்களை, ஒன்று பொன்னால், இரண்டாவது வெள்ளியால், மூன்றாவது இரும்பால் என்று மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொடுத்தார். , உள்ளே நகரம்-புரம் என்ற வசிக்கும் இடமும் யாராலும் நுழைய முடியாதபடி, பாதுகாப்பாக இருந்தன. அசுரர்கள் நிம்மதியாக இருக்காமல், பழைய வைரத்தை நினைத்து ஊரோடு சஞ்சரித்து தேவர்களுக்கு இடையூறு செய்தனர். தேவர்கள் பகவானிடம் முறையிட்டனர். (புரம் என்பதே ஆயுதமாக) பகவானும் பயப்படாதே என்று அனுக்ரஹித்தார். தன் வில்லில் அம்பை பூட்டி புரங்களின் மேல் எய்தார். அக்னி வர்ணமான அம்புகள் ஸூர்ய மண்டலத்திலிருந்து விழுந்தன. அதன் எண்ணிக்கையில் புரங்களே மறைந்தன. அம்புகள் பட்டு விழுந்த அசுர்களை மயன் அம்ருதம் நிறைந்த கிணற்றில் தள்ளி காப்பாற்றி விட்டான். அதிலிருந்தது சித்தாம்ருத ரஸம் என்பதால் வஜ்ரம் போன்று மகா பலசாலிகளாக எழுந்து வந்தனர். மேகங்கள் பரவி இடியும் மின்னலுமாக தோன்றுவது போல கணக்கில்லாத அசுரர்கள் எழுந்தனர். வ்ருஷத்வஜன் இதை கண்டு திகைத்தார். அந்த சமயம் பகவான் தான் பசு ரூபம் எடுத்து கிணற்றினுள் புகுந்து சித்தாம்ருத ரஸம் முழுவதையும் குடித்து விட்டார். கன்றாக உடன் ப்ரும்மா சென்றார். பசுவையும் கன்றையும் அசுரர்கள் தடுக்கவில்லை. ஆனால் இது பகவானின் செயல் என்பதை மயன் அறிந்தான். அசுரர்களைப் பார்த்து, யாரானாலும், தேவனோ, அசுரனோ, மனித மற்ற பிறவிகளோ, பகவானின் சங்கல்பத்தை மீற முடியாது என்று சொன்னான். அதன் பின் பகவான் தன் சக்திகளையும் அளித்து சம்புவை- மஹேஸ்வரனை முன் நிறுத்தினார்.அவரும், தர்மம், ஞானம், விரக்தி, ருத்தி, தவம், வித்யா, க்ரியா இவைகளுடன், ரதம், சாரதி, த்வஜம், வாகர்கள் (தூக்கும் பணியாட்கள்) தனுஷ், அஸ்திரங்கள், சரங்கள் இவைகளுடன் தயாராக ரதத்தில் அமர்ந்து அபிஜித் முஹூர்த்தில், சரத்தை வில்லில் பூட்டி அந்த புரங்களின் மேல் எய்தார். குறி தவறாத அந்த சரங்கள், புரங்களை எரித்தன. மூன்று புரங்களும் சாம்பலாகின. உடனே தேவலோகத்தில் துந்துபிகள் முழங்கின. கூட்டம் கூட்டமாக தங்கள் விமானத்தில் தேவர்கள் ஜய ஜய என்றபடி ஆரவாரமாக வந்தனர். தேவர்களும், ரிஷிகளும் சித்தர்களும் பித்ரு தேவதைகளும் புஷ்பங்களை வர்ஷித்தனர். அப்சர கணங்கள் மகிழ்ச்சியுடன் பாடினர். புராரி என்று புகழ்ந்தனர். ப்ரும்மா முதலானோர் துதி செய்தனர். அவரும் தன் இருப்பிடம் சென்றார்.
இவ்வாறாக ஸ்ரீ ஹரி தன் மாயையால் மூவுலகையும் காக்கும் பொறுப்பை நிறைவேற்றுகிறார். எனவே ஜகத் குரு என்று ரிஷிகள் போற்றுகின்றனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ‘பகவத் ஸ்தவோ ‘என்ற பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 71
அத்யாயம்-11
யுதிஷ்டிர் மேலும் வினவினார். பகவன்! மனிதனுக்கு எது தர்மம் என்றும் அதை மீறக் கூடாது என்றும் விதிகள் சொல்லப் படுகிறது. ஆசாரம், வர்ணாஸ்ரம தர்மம் என்பவை முக்கியமானவை என்று அறிவேன்.பிரஜாபதியின் புதல்வர், தவம் யோகம் சமாதி என்ற சாதனைகளைச் செய்தவர் என்ற முறையில், சொல்லுங்கள். எல்லோரும் சாதுக்களாக நல்லவர்களாக இருப்பதில்லை. உங்களைப் போல ஒரு சிலர் இருக்கலாம். அந்தணர்கள், ஸ்ரீமன் நாராயணனை துதிப்பதே பரம தர்மம் என்பர்.
நாரதர் சொன்னார்: சனாதன தர்மம் ஸ்ரீ மன் நாரயணன் தானே சொல்லிக் கேட்டதைச் சொல்கிறேன். உலக நன்மைக்காக சில நியமங்கள் தர்மம் என்று அறிவோம். அவரையே வணங்கி ஆரம்பிக்கிறேன். அவர் தன் அம்ச அவதாரமாக தாக்ஷாயணியிடம் பிறந்தார். இன்னமும் உலக க்ஷேமத்திற்காக பதரிகாஸ்ரமத்தில் தவம் செய்து கொண்டு இருக்கிறார். பகவான் தான் தர்மத்தின் பிறப்பிடம். ஸ்ரீ ஹரி தான் வேத மயமானவன். என்று இவர்களை ஸ்மரித்தாலே, மனதுக்கு இதமாக இருக்கும். சத்யம், தயா, தவம், சுத்தம்-ஒழுக்கம்- அறிந்து கொள்ளும் ஆவல், சமம், தமம் , அஹிம்சா, ப்ரும்ம சர்யம், த்யாகம், ஸ்வாத்யாயம், ஆர்ஜவம்- நேர்மை.
சமமாக காணும் குணம் உள்ள மகான்களை மதித்து சேவை செய்தல், க்ராம்யமான உலகியல் விஷயங்களில் நாட்டமின்மை, (இவைகளால் மனிதன் பெறும் சாஸ்வத நன்மை எதுவுமில்லை என்பதால்) மௌனம், தன்னையே விமரிசனம் செய்து கொள்ளல், பகிர்ந்து உண்ணுதல், மற்ற ஜீவன் களிடம், சக மனிதர்களிடம் தயை, இது தவிர, பெரியவர்கள் எப்படி ப்ரச்னைகளை கையாண்டனர் என்பதை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளலாம். இவை பொதுவான தர்மம் எனும் முப்பது தர்மங்கள். அனைவருக்கும், பொதுவானது என்றாலும் அரசனுக்கு அவசியமானவை. ப்ரும்மா அந்தணர்களுக்கு விதித்த தர்மங்கள்: யாகம் செய்தல், அத்யயனம்- கற்றல். ஜன்ம கர்மாவிலிருந்து கடைசி வரை செய்யவேண்டிய கர்மாக்கள் செய்தல், செய்வித்தல். இரண்டும். க்ஷத்திரியர் தானம் செய்ய வேண்டும் வாங்கிக் கொள்ள கூடாது, அரசனுக்கு: ப்ரஜைகளைக் காப்பது. அந்தணனைத் தவிர மற்றவர்களிடம் வரி வசூலிக்க வேண்டும். வைஸ்யனுக்கு வியாபாரம், அந்தணனை அனுசரித்து நடக்க வேண்டும். ஸுத்ரனுக்கு, மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் உதவுவது. அந்தணன் தன் சுய தேவைக்காக மட்டுமே பொருள் தேட வேண்டும். யாசிக்காமல் தானாக மற்றவர் தரும் பொருள், கற்பித்து குரு தக்ஷிணை என்று பெறலாம், பொது இடங்களில் உள்ள உதிர்ந்த தானியங்களையும், பழம் முதலியவைகளையும் பெறலாம். ஆபத்து காலத்தில் அரசனின் பொறுப்பை அனைவரும் ஏற்க வேண்டும். சத்யம், பொய் சொல்லாமை, வியாபாரம், ஏவிய வேலைகளைச் செய்யும் சேவகன் எனும் வேலைகள், அரசனுக்கும் அந்தணனுக்கும் ஏற்றதல்ல. சர்வ வேத மயன் அந்தணன், சர்வ தேவ மயன் அரசன்.
சமம், தமம், தவம், சௌசம், சந்தோஷம், க்ஷாந்தி, ஆர்ஜவம் என்ற நேர்மை, ஞானம், தயை, அழியாத ஆத்ம சக்தி, சத்யம் இவை ப்ரும்ம லக்ஷணம். சௌர்யம், வீர்யம், த்ருதி- உறுதி, தேஜஸ், த்யாகம், ஆத்மஜயம், பொறுமை, ப்ரும்மண்யதா, ப்ரசாதம் , காப்பாற்றுதல், இவை க்ஷத்ர லக்ஷணம்.
தேவ, குரு,அச்யுதன் இவர்களிடத்தில் பக்தி , மற்ற மூன்று வர்கத்தினரையும் பரிபோஷணம், அவர்கள் தேவைகளை நிறைவேற்றுதல், கடவுள் நம்பிக்கை, உத்யமோ- ஏதோ ஒரு தொழில், உழைப்பு, நிபுணத்வம்-திறமை, இவை வைஸ்ய லக்ஷணம்.
ஸூத்ரன் பணிவாக இருப்பது, சௌசம், சேவை செய்தல், ஸ்வாமியிடம் நம்பிக்கை, யாகங்கள் மந்த்ரம் இன்றி செய்யலாம், திருட்டு குணம் இல்லாமை, உண்மையாக இருப்பது, பசுவையும் அந்தணர்களையும் ரக்ஷிப்பது என்பவை லக்ஷணங்கள்.
பெண்கள், கணவன், அவன் தேவைகளை அறிந்து செய்தல், அனுகூலமாக இருத்தல், அவன் பந்துக்களிடம் அன்பாக இருத்தல், விரதங்களை அனுஷ்டித்தல். தன்னையும் வீட்டையும், சுற்றுப் புரத்தையும் அலங்கரித்து வைத்து கொள்வதும், அன்புடனும் சமயோசிதமாகவும் பேசி, கணவனின் செயல்களில் உதவ வேண்டும். ஹரி என்ற பாவத்துடன் கணவனை மதித்து, தானும் மகிழ்ச்சியாக, சுற்றத்தாரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். பலவிதத்திலும் குடும்பத்தை கட்டிக் காப்பது தன் கடமையாக நினைத்து செய்ய வேண்டும்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சதாசா நிர்ணயோ என்ற பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 35.
அத்யாயம்-12
நாரதர் மேலும் சொன்னார்: ப்ரும்மசாரியாக குருகுலத்தில் படிப்பவன், குருவிடம் உள்ளார்ந்த அன்புடனும் மதிப்புடனும் அவருக்கு தாஸனாக இருந்து கல்வியைக் கற்க வேண்டும். அவருடனேயே வசித்து அடக்கம் உடையவனாக, குருவின் நன்மைக்கானதை செய்பவனாக இருக்க வேண்டும். காலையும் மாலையும் அவருடன் அக்னி உபாசனைகளைச் செய்து வருவதும், இரு சந்த்யா காலங்களிலும் அவர் சொல்லிக் கொடுத்த ஜபங்களைச் செய்வதும், வேத மந்திரங்களை சொல்லிச் சொல்லி மனதில் உருவேற்றிக் கொள்வதிலும், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கேட்கும் மாணவனாக, சிறு உதவிகளைச் செய்வதும், பாடம் ஆரம்பிக்கும் சமயமும், முடிவிலும் விழுந்து நமஸ்கரிப்பதும் அவனது கடமைகள். மேகலை, மரவுரி ஆடைகள், ஜடை, தண்டம், கமண்டலு, உபவீதம் இவைகளை தரித்துக் கொண்டு, விடியற்காலையில் தர்பையை கையில் வைத்துக் கொண்டு, காலையிலும் மாலையும் பிக்ஷைக்கு போக வேண்டும். அவர் அனுமதித்த பின் தான் உண்ண வேண்டும். உபவாசங்கள் இருக்க பழக வேண்டும். நல்ல சீலனாக, மிதமாக உண்டும், சிரத்தையுடன் கேட்டும் கல்வியை கற்க வேண்டும். அவசியம் இன்றி பெண்களுடன் பேசுவதையும், அவர்களுடன் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இல்லற தர்மத்தை ஏற்கும் வரை, அவர்களுடன் பாடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆசை இழுத்துச் செல்லும். கடமையிலிருந்து நழுவச் செய்யும். பெண்களை நெய் நிரம்பிய குடமாகச் சொல்வார்கள். எளிதில் பற்றிக் கொள்ளும். ஈஸ்வர ஸ்ருஷ்டி தான், அவர் படைத்த பெண்களே ஆனாலும் அளவோடு இருத்தல் நலம்.
இது இல்லறத்தில் உள்ளவர்களுக்கும், யதிகளுக்கும் சொல்லும் உபதேசமே. குரு குலத்தில் இருக்கும் வரை முடிந்தவரை கற்பதிலேயே கவனமாக இருந்து வேதங்களை அதன் அங்கங்களுடன், பொருள் அறிந்து முடிந்தவரை கற்றுத் தேற வேண்டும். அவரிடம் கற்று முடிந்த பின் அவரே அனுமதித்த பின்னர் வீடுகளுக்கு செல்லலாம் அல்லது அங்கேயே இருந்து மேலும் அறிவை பெருக்கும் செயல்களைச் செய்யலாம். அக்னி காரியங்கள், குரு, பஞ்ச பூதங்கள், ஸ்ரீ ஹரி, இவைகளுக்கான தினசரி பூஜைகளை செய்ய வேண்டும். இது ப்ரும்ம சாரியாக இருந்த பழக்கம், பின்னால் வான ப்ரஸ்தனாக, (இடையில் குடும்பஸ்தனாக இருந்து காலம் சென்ற பின்) விக்ஞானம் என்ற மேம்பட்டு ஞானத்தை பெற சாதனைகள் செய்யலாம். பரம் ப்ரும்மா என்ற பதவியை அடைவான்.
வான ப்ரஸ்த நியமங்கள்: உணவு கட்டுபாடுகள், நிறைய சொல்கிறார். ஒவ்வொரு நாளும் தானே தயாரித்து புது அன்னத்தை மட்டுமே ஏற்க வேண்டும். வசிப்பதற்கு மலை குகைகளோ, குடிசைகளோ போதுமானது. கமண்டலு, மான் தோல் ஆடை, தண்டம், வல்கலைகள், அக்னி இவை மட்டுமே அவனுக்கு தேவையாக இருக்கும். ஓராண்டு அல்லது பதினெட்டு மாதங்கள் ஓரிடத்தில் தங்காமல் பயணித்த படி இருக்கையில் உடல் நலம் குறைந்தாலோ, வியாதி வந்தாலோ அன்றி ஓரிடத்தில் தங்க கூடாது. அது ஓரு நிலையில் மட்டுமே மேற் கொண்டு படிக்கும் அல்லது கற்பிக்கும் செயல்களை ஏற்று குரு குலத்தில் தங்கலாம்.
படைப்புக்கு உதவிய பஞ்ச பூதங்களை அதே க்ரமத்தில் விடுவித்து, அக்னி அக்னியுடன் வாயு வாயுவுடன் என்ற முறையில் யோக முறையை பயின்று அத போல தேகத் தியாகமும் செய்யவேண்டும்.
( இது வரை ஸ்ரீமத் பாகவத த்தில், ஏழாவது ஸ்கந்தத்தில், சதாசார நிர்ணயம் என்ற பன்னிரெண்டாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-31
அத்யாயம்-13
மேலும் கடுமையான நியமங்களுடன் ஒரு கிராமத்தில் ஒரு இரவு மட்டுமே தங்குவதாக உறுதி பூண்டு சுற்றிக் கொண்டே யிருக்க வேண்டும். தனியாக, எல்லா உயிரினங்களிடமும் அன்புடன், நாராயண பரமாகவே பார்த்து எதையும் அதிகமாக வெறுக்கவும் வெறுக்காமல், புகழ்ந்தும் சொல்லாமல் தன் வழி செல்வான்.
அஜகரன் என்ற முனிவருடன் ப்ரஹ்லாதன் செய்த சம்பாஷணயைச் சொல்கிறார். தன் மந்திரிகளுடன் சென்று கொண்டிருந்த ப்ரஹ்லாதன், காவேரி ப்ரவஹிக்கும் சஹ்யாசலம் என்ற மலைச் சாரலில் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு முனிவரை, யார் என்று அறிய விரும்பி விசாரித்தான். இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவரில்லை.
அசுரனானாலும் பாகவதனான ப்ரஹ்லாதன் அந்த மனிதரை வணங்கி விசாரித்தான். பகவன்! யார் நீங்கள். பருத்த உடலுடன், போகமே ப்ரதானமாக இருந்தவர் போல காணப் படுகிறீர்கள். உழைப்பு மனிதனுக்கு செல்வத்தை அளிக்கிறது. செல்வம் அவனை போகத்தில் ஈடுபடச் செய்கிறது. போகங்கள் உடலை பருக்க வைக்கின்றன. வேறு விதத்தில் உடல் பருமனாவதில்லை. ஒரு உடலுழைப்பும் இன்றி தூங்கிக் கோண்டிருக்கிறீர்கள் போல தெரிகிறது. ப்ரும்மன்! இதில் என்ன பயன்? இந்த நிலையில் செல்வமும் இல்லை, போகமும் இல்லை. என்ன காரணத்திற்காக, ஏன் இப்படி தரையில் விழுந்து கிடக்கிறீர்கள். ப்ரும்மா, கல்பங்கள், நிபுணர்களின் அறிவு, சித்ரங்கள், ப்ரிய கதைகள், இப்படி உலகில் பல உள்ளன என்று அறிவீர்களா? கண்ணால் கண்டிருக்கிறீர்களா? செயல்கள், அதன் பலன்கள் என்பவையாவது அறிவீர்களா?
நாரதர் சொன்னார்: மகா முனியான அந்த மனிதன், தைத்யராஜனுக்கு பதில் சொன்னார்.
ப்ராம்மணர் சொன்னார்: அசுர ஸ்ரேஷ்டனே! அறிவேன். நீ உத்தமான அரசன், மதிக்கத் தகுந்தவன்,இங்கு உள்ள அரசர்களில் சிறந்தவன் என்பதை என்னுடைய அத்யாத்ம கண்களால் கண்டு அறிந்து கொண்டேன். எவனுக்கு பகவான் நாராயணன் ஹ்ருதயத்தில் இருக்கிறானோ, அவனுடைய பக்தியால், ஸூரியன் இருட்டை அழிப்பது போல அறியாமை விலகி நல்ல ஞானியாக ஆவான் என்பது நீயும் அறிந்ததே. ஆனாலும் சொல்கிறேன், கேள்.
அரசனே! பல கேள்விகளைக் கேட்டாய். அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை. கேட்டபடி சொல்கிறேன். என் தூய்மையை, என் தற்போதைய நிலையை நானே தான் விளக்கிச் சொல்ல வேண்டும்.
ஆசை. அது உலகை சதா சுற்றி சுற்றி ஓட வைக்கிறது. பவ வாஹிணி- ப்ரவாஹமாக ஒடும் நதி போல உலகியலை சென்று கொண்டே – செயல் பட வைத்து- அலைக்கழிக்கும் சக்தி. நானும் பலவிதமான செயல்களைச் செய்து வினைப் பயனாக பல பிறவிகளை அடைந்தவன். எதேச்சையாக இந்த உலகில், இந்த இடத்தில் பிறவி பெற்றேன். சுவர்கம் வரைச் சென்று, வினைப் பயன் தீர, மறு முறை மறுமுறை என்று விலங்குகள் என்று பல பிறவிகள்- நல் வினைப் பயனாக ஒரு தம்பதிகளின், ஆசை தீர மகனாக பிறந்தேன்.
இங்கும் ஒரு துக்கம் தீர்ந்தால் மற்றொன்று என்று கண்டபின் வெறுத்து போனேன். சுகம் என்பது வருமா என்ற சிந்தனையே மனதில் நிறைந்தது. யோசிக்க யோசிக்க என் ஸ்வரூபமே தான் சுக ஸ்வரூபம் என்று புரிந்து கொண்டேன். எல்லா விதமான எதிர் பார்ப்புகள், அதற்கான செயல்கள், ஆசைகள் இவைகள் மனிதனின் உடலுக்கே. அதே சமயம் உடல் இல்லையெனின் சுகமாவது துக்கமாவது எதுவும் எப்படி அனுபவிக்க முடியும். போகங்கள் இயல்பானவை, அதை அறிவது மனமே. ஸ்பர்சத்தால், மனதின் கல்பனையால் மனம் சுகமோ, துக்கமோ அடைகிறது. க்ஷண பங்குரான்- நீர் குமிழி போல வினாடியில் உடையக் கூடியது, என்று அறிவு சொன்னாலும் மனது கேட்பதில்லை. இது நிலைத்து நிற்காது என்று தெரிந்தும், உண்கிறேன், உறங்குகிறேன். வித்ருஷ்ணா- ஆசை என்ற உத்வேகம் இன்றி, கிடக்கிறேன் இதுவே என் உடல் பருக்க காரணம். அப்படியானால் இதையறிந்தவர்கள் ஏன் உங்களை பின்பற்றி கிடப்பதில்லை என்ற வினாவிற்கு பதில் அளிப்பது போல மேலும் சொன்னார்.
அவரவர் விருப்பங்கள், சுகம் என்று துக்கம் என்றும் அறியும் உணர்வுகள், வெவ்வேறாக இருப்பது தான் காரணம். தண்ணீர்- நாம் கான்பதும், அந்த ஜலத்தில் தோன்றிய புல் பூண்டுகளில் இருப்பதும் அதுவே என்பது போல ஆத்ம சுகம் என்பது உள்ளூற இருப்பதே. அதை அறிந்தவர்கள் மிக சிலரே. யதேச்சையாக தோன்றும் அந்த சிலர், அத்யாத்மிகர்கள், உள்ளுறை பொருளை அறிந்தவர்கள் ஆவர். இரட்டைகளான சுக துக்கங்கள் பாதிக்காமல் இருப்பர். தான், தன் செல்வம், தன் உலகம் என்று அதிக ஈடுபாட்டுடன் இருப்பவர்களுக்குத் தான் ப்ராண பயம். செல்வந்தர்கள் அதிக மனக் க்லேசத்துடன் வாடுகிறார்கள். பேராசை, பயம், அதனால் தொலைத்த தூக்கம், அனைவரிடமும் அவனம்பிக்கை. அரசனுக்கு திருடர்கள், சத்ரு, தன் ஜனங்களிடமே பயம். யாசிப்பவர்களிடம் கூட பயம். காலம் செல்லச் செல்ல தன் உறவினர்களிடம் இருந்தே தன் ப்ராணனை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் என்று இடர்கள். சாதாரணமாக மனிதர்கள், தேனீயைக் கண்டு கூட பயப்படுவர். மகா சர்ப்பம் என்றால் கேட்கவே வேண்டாம். இப்படி நான் தூங்குவதே இது போன்ற பயங்கள் எனக்கு இல்லாமையால் தான். ஆசையோ, தேவைகளோ இல்லாமையால் கிடைத்ததை உண்கிறேன், பல நாட்கள் அஜகர சர்ப்பம் போல கிடக்கிறேன். சில சமயம் சிரத்தையுடன் யாராவது ருசியான உணவு வகைகளை தருவதையும், சாரமில்லாத உணவைப் போலவே ஏற்றுக் கொள்கிறேன். இரவோ, பகலோ, பட்டாடையோ, மான் தோலோ, என் மனம் நிறைந்து வாழ்கிறேன்.
தரையில், புல் வெளியில், சில சமயம் அரண்மனையில் படுக்கையில், படுத்தாலும் பொருட்படுத்துவதில்லை. விகல்பம் என்ற மாற்றம் மனதிற்கு மட்டுமே என்று சொன்னேனே அது தான் தற்போதைய என் நிலைக்கு காரணம். உனக்கு தெரியாததா? பாகவதன் தானே நீ.
நாரதர் சொன்னார்: பரமார்த்தமான தர்மம், பாரமஹம்ஸ்யம் என்பர்- இதைக் கேட்டு அசுர ராஜன் ப்ரஹ்லாதன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவரை நமஸ்கரித்து விட்டு தன் வழி சென்றான்.
(இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஏழாவது ஸ்கந்தத்தில், பதின் மூன்றாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-43
அத்யாயம்-14
யுதிஷ்டிரர் கேட்டார்: என் போன்ற சாதாரண பிறவிகள், அதிக அறிவு இல்லாத இல்லறத்தார்கள், இது போன்ற ப்ரும்ம நிலையை எப்படி அடைவர்?
நாரதர் சொன்னார்: இல்லறத்தில் இருப்பவனுக்கு தன் குடும்பத்தைப் பேணுவதும், அதன் கடமைகளைச் செய்வதுமே போதுமானது. வாசுதேவார்ப்பணம் என்று சொல்லி மஹா முனிகள் கூட வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். பாகவத கதைகளை கேட்கவும், அம்ருத மயமான பாடல்களாக பாடியும் வரலாம். சிரத்தையுடன் பெரியவர்கள் செய்யும் ப்ரவசனகளைக் கேட்கலாம். உடன் இருப்பவர்கள் அதே குணம் உள்ளவர்களாக இருந்தால் நல்லது. குடும்பத்தில் தன் கடமைகளைச் செய்த பின் , மனைவி மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்து தன்னை மேம்படுத்திக் கொள்ள வகை செய்து கொள்ளலாம். தூங்கி எழுந்தவன் போல புது வழி இது.
தேவைக்கு செல்வம் சேமிப்பது அவசியம். தன் உடலுக்கும், வீட்டில் மற்றவர்களுக்கும் வேண்டிய அளவு பொருள் சேர்த்த பின் மேலும் மேலும் ஆசைப் பட வேண்டாம். பகவானைப் பற்றிய அறிவை, ஏதோ ஒரு கலையை வளர்த்துக் கொள்ளலாம். உறவுகள், பந்துக்கள், தனயர்கள், நண்பர்கள் இவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்த பின் நகர்ந்து விடுவது நல்லது. தேவ, பூலோக,அந்தரிக்ஷம் என்பது பகவானின் ஏற்பாடு. அது போலவே செல்வமும். அவை அனைத்தும் பூவுலக வாசிகளின் நன்மைக்கே.
பசி அடங்க உண்பதே உணவு. அதிகமானால் அதுவே உபத்ரவம். ஒரு விதத்தில் அதிகம் உண்பவன் திருடன் போல என்கிறார். தண்டிக்கப் பட வேண்டியவன்.
வளர்ப்பு மிருகங்கள், மற்றும் மான்,ஒட்டகம், கழுதை,குரங்கு பாம்புகள் வானத்தில் ப்றக்கும் பறவைகள் அனைத்தும் பகவானின் ஸ்ருஷ்டியே என்று உணர பழக வேண்டும்.
செல்வத்துக்காக குடும்ப உறுப்பினர்கள் யாரானாலும் அதிக ஆசைப் பட்டாலும் அதற்காக நெருக்கடி கொடுத்தாலும் பொருட் படுத்த வேண்டாம். தன் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். யாகம், பூஜைகள் செய்து நிவேதனமாக மீதியை சாப்பிடுவதே போதும். சேமித்த செல்வத்துக்கு தகுந்தபடி விருந்தினர்களை, தேவ, பித்ருக்களை எண்ணி செய்யும் செயல்களை செய்யவும். முடிந்த வரை அக்னி ஹோத்ரம், வைதானிகம் என்ற விதியில் செய்வதே போதும். பெருமளவில் செய்ய முடியாமைக்காக வருந்த வேண்டாம். அதை முடிந்தவர்கள் செய்யட்டும். பகவான் சர்வ யக்ஞபுக் எனப்படுகிறார். அக்னியில் ஹவிஸ் அளித்து, அந்தணர்களுடன் வேத கோஷங்களோடு செய்வது உயர்ந்தது. முடிந்தவரை அந்தணர்களுக்கு தேவையானதை கொடு.
பித்ருக்களுக்கு சிரார்தம் ப்ரோஷ்டபதம்( புரட்டாசி மாதம்) செய்ய வேண்டும் பந்து மித்திரர்களுடன் உணவளித்து செய்யலாம்.
விஷு காலத்தில் கிரஹண சமயங்களில், த்வாதசியும் ஸ்ராவணமும் வரும் நாளில், சுக்ல பக்ஷத்து த்ருதீயை, நவமி, கார்த்திகை, அஷ்டமி ஹேம்ந்த, சிசிர மாதங்களிலும், மாக வளர் பிறை சப்தமி, என்று
அனுஷமும் த்வாதசி திதியும் சேர்ந்த நாட்கள், ஸ்ராவண திருதீயை, பங்குனி உத்தரா , ஏகாதசி, இவை நன்மை தரும் நாட்கள். ஜாத கர்மா, போன்ற நற்காரியங்களை செய்ய ஏற்றவை. ஆயுளை தரும்.
ஸ்னானம் , ஜபம், ஹோம், விரதம், தேவ, அந்தணர்களுக்கு செய்யும் மரியாதைகள், இவை நீடித்து பலன் தருபவை. முற்பகலில் செய்வது நலம்.
தர்மாதி ஸ்ரேயஸ் எனப்படும் தேசங்கள் பற்றிச் சொல்கிறேன். பகவானுடைய சன்னிதி இருக்கும் இடங்கள், தவமும், கல்வியும் நிறைந்த இடங்கள், கங்கை போன்ற நதிகள் ப்ரவஹிக்கும் ப்ரதேசங்கள், குளங்களோ, ஏரிகளோ நிறைந்துள்ள இடங்கள், குரு க்ஷேத்ரம், கஜாஹ்வயம், ப்ரயாகை, புலஹாஸ்ரமம், நைமிஷம், பால்குணம், சேது, ப்ரபாஸம், குசஸ்தலீ, வாரணாசி, மது புரி, பம்பா, பிந்து சரஸ், நாராயணாஸ்ரம், நந்தா, சீதாராமாஸ்ரமம், குலாசல ப்ரதேசம் முழுவதும், மஹேந்திர, மலய மலைகள், இவை புண்ய தம- மிக சிறந்த புண்ய ஸ்தலங்கள் ஆகும். இந்த இடங்களில் வசிப்பது சிறந்தது.
தகுதியான பாத்ரம் என்பது கவிகள் சொல்வதில்லை. ஹரியின் சந்ததிகளே சராசரமும் என்பது ஒரு காரணம். எந்த மனிதன் அக்ர பூஜைக்கு ஏற்றவன் என்பது அவனுக்கும் மற்ற மனிதர்களுக்கும் இடையில் உள்ள சம்பந்தத்தை பொறுத்தே அமையும். தகுதியை அவரவர் தானே வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இவையெல்லாம் பழைய ரிஷிகள் சொல்லி அனுசரிக்கப் பட்டு வருபவை. தாரதம்யம் தோன்றுவது இயல்பே. மனிதர்கள் தங்களுக்குள் நடந்து கொள்வதை பொறுத்து மதிப்பை பெறுவார்கள். வித்யை, ஒழுக்கம் தவம் உள்ள அந்தணனை நல்ல பாத்ரம் என்பர். ஸ்ரீ க்ருஷ்ணனை வணங்கும் யாரானாலும் சத்பாத்ரமே.
(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஏழாவது ஸ்கந்தத்தில், சதாசார நிர்ணய என்ற பதிநான்காவது அத்யாயம்.)
அத்யாயம்-15
நாரதர் சொன்னார்: அந்தணர்கள், த்விஜா:- இரண்டு பிறவியுடையவர் , சிலர் கர்ம மர்கத்தை அனுஷ்டிப்பவர், மற்றவர்கள் தவம் செய்வர். மற்ரும் சிலர் ஸ்வாத்யாயம் எனும் தான் கற்ற கல்வியை மேம்படுத்திக் கொள்வர், ப்ரவசங்கள் செய்வர், ஒரு சிலர் ஞான மார்கத்தில் செல்வர்.
ஞானம் பெறுவதையே கொள்கையாக எண்ணி அதில் ஈடுபடுபவர்களுக்கு தருவது கவ்யம். அது தவிர அவர்கள் வேறு எதையும் எதிர் பார்க்க மாட்டார்கள். (ஹோமத்தில் இடுவது ஹவ்யம், இது கவ்யம்)
தெய்வ சன்னிதிகளில் , தகுதி வாய்ந்த நபர்களுக்கு கொடுக்கலாம்.
தேவ காரியங்களில் இருவர், பித்ரு கார்யங்களில் மூவர், என்று உணவளிக்க வேண்டும். செல்வந்தராக இருந்தாலும் சிரார்தத்தில் விஸ்தாரம் செய்யக் கூடாது. தேச காலங்களை அனுசரித்து சிரார்தங்கள் செய்வதும், அதற்கான திரவியம்-பொருள், பாத்ரங்கள் இவை தகுதியானவைகளாக இருந்தால் நன்றாக நடக்கும். இவை இல்லாத பக்ஷத்தில், தன் மக்களுடனேயே செய்தால் போதுமானது.
தேவ, ரிஷி,பித்ரு, பூதங்கள், தனக்கு, தன் உறவினர் பந்துக்களுக்கு, அன்னத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் அனைத்தும் பகவானுக்கே அர்ப்பணமாகும். சிரார்த்த காரியங்களில் மாமிசம் கூடாது. பசு ஹிம்சை செய்வதை விட தானியங்களை சமைத்து அளிப்பது அவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும். சத் தர்மம் என விரும்பி செய்பவர்களுக்கு தண்டத்தை தவிர்ப்பது – எவரையும் நோகும்படி அடிக்காமல் இருத்தல்- சிறந்த து. மனம், வாக்கு, காயம் இவைகளால் அனைத்து உயிரினங்களையும் பகவானின் ஸ்ருஷ்டியாக பார்ப்பது நலம் தரும்.
கர்ம காண்டத்தின் முக்யமான ஒன்று யாகங்கள் செய்வது. அதையறிந்த ஞானிகள், அந்த செயல்களில் திடமான அனுபவம் உள்ளவர்கள், இயல்பாக தன்னடக்கம் அடைவர். ஞான ஒளியில் ப்ரகாசிப்பர்.
த்ரவ்ய யக்ஞம்- எதையோ விரும்பி வேண்டிக் கொண்டு செய்யும் யாகங்கள், இவைகளிலும் ஹிம்சை இல்லாமல் அன்னமே அளித்து செய்வதால் பஞ்ச பூதங்கள் மகிழ்கின்றன.
நித்ய, நைமித்திக காரியங்களில் தானியங்கள், தாவரங்களில் கிடைக்கும் பொருட்களிலேயே திருப்தி அடைய வேண்டும்.
தர்ம பாதம் – தன்னுடைய தர்மத்திற்கு மாறானது விதர்மம் எனப் படும். மற்றவர்கள் தலையிட்டு மாற்றுவது பரதர்மம். அதர்மம் – பாகண்டம் எனப்படும். அதில் தம்பமும், வெற்று வார்த்தைகளுமே, ஏமாற்றும்.
தானே விரும்பி தன் ஆசிரம வாழ்க்கையை தேர்ந்தெடுத்த பின், அந்த (க்ருஹஸ்தாஸ்ரம ம், வானப்ரஸ்தமோ, சன்யாசமோ) அந்த தர்மத்தை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அவரவர் ஸ்வபாவத்துக்கு ஏற்றதாக வர்ணாஸ்ரமம் அமையும்.
யாத்திரைகள் போக செல்வமில்லாதவனுக்கு தனம் தருவது தர்மமாகாது. மஹா சர்ப்பத்துக்கு தருவது போல என்கிறார். எந்த எதிrபார்ப்பும் இன்றி தன்னிடம் உள்ளதில் திருப்தியாக இருப்பவன் எந்த சுகத்தை காண்கிறானோ, அது தனத்துக்காக பல இடங்களில் கை ஏந்தி பெற்று நாலா திசைகளிலும் அலைவது ஒரு பலனையும் தராது. திருப்தியுடையவன் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து கூட வாழ்வான். சுலபமாக கிடைப்பதை வைத்து தன் இல்லறத்தில் மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருப்பான்.
என்ன தான் தவம், தேஜஸ், வித்யா தவம், புகழ் எல்லாம் இருந்தாலும் மனதில் போதும் என்ற எண்ணமும், திருப்தியும் இல்லையெனில் அவை அனைத்தும் வீணே.
பசி தாகம், காம, க்ரோதங்கள் லோபம் இவைகளை அடக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுவான். ராஜன்! பண்டிதர்கள் பலர் இருப்பர். பல வித கல்விகளை கற்றவர்கள், வெற்றியடையாமல் போக இந்த போதும் என்ற மன அடக்கம் இல்லாமையாலே தான். காமத்தை சங்கல்பத்தால் ஜயிக்கலாம். க்ரோதத்தை காமத்தை அடக்கி ஜயிக்கலாம். பொருள் மேல் ஆசைகளை உழைத்து பொருள் ஈட்டி ஜயிக்கலாம். லோபத்தையும் பயத்தையும் அடக்க தத்வ விமரிசனம் செய்து ஜயிக்கலாம்.
கற்றதை நினைவில் இருத்தி மேலும் அதை மேம்படுத்திக் கொள்வது ஆன்வீக்ஷிகி எனப்படும். இதனால் சோகமும் மோகமும் அழியும். தம்பம் பகவானை உபாசனை செய்வதால் அடங்கும். யோகமும், மௌனமும் உடலை சீராக வைக்கவும், ஹிம்சையில் மனம் போகாமல் தடுக்கும். ரஜஸ் தமஸ் அறிவு வளர்ந்தால் மறையும். தன்னடக்கம் சத்வ குணத்தை தரும். இவையனைத்தும் குருவிடம் வணங்கி அன்புடன் இருந்தாலே பெறலாம். குரு என்பவர் அறிவை தருபவர். ஞானம் என்ற ஓளி வீசும் தீபமாக இருப்பவர். அவரிடம் மரியாதை இன்றி கல்வி மட்டும் கற்றவன் யானை குளித்து விட்டு வந்து மண்ணை அள்ளி மேலே போட்டுக் கொள்வது போல, பயனின்றி போகும். இவ்வாறு மேலும் பல தர்மங்களை விவரித்து விட்டு,
தேகம் என்பது ரதம், இந்திரியங்கள் குதிரைகள், மனம் அதன் தலைவன், செயல்கள் யாத்திரை, புத்தி தான் சாரதி, சத்வம் நெருங்கிய பந்து, என்பது ஈசனின் ஸ்ருஷ்டி.
அக்ஷம் என்பது பத்து. தர்ம அதர்மங்கள் சக்ரங்கள், அபிமானம் ரதத்தை உடையவனின் ஜீவன், வில் தான் அதன் ப்ரணவம், ஸரங்கள் பரமார்த்தமே லக்ஷ்யம். ராகமும் த்வேஷமும், லோபமும், சோக மோகமும் பயம், மதம், மான அவமானகளும் அஸுயை, மாயா ஹிம்ஸா மத்சரம், ரஜஸ், மறதி, பசி நித்ரை சத்ருக்கள், இவை அனைத்தும் இடர்களே. ரத எஜமானன் போல, தன் வசத்தில் வைத்துக் கொண்டு ஞானம் என்ற வாளும், அச்யுதன் சகாயமும் கொண்டவன் தன் ராஜ்யத்தில் திருப்தியாக இருக்க இந்த இடர்களை களைய வேண்டும்.
மேலும் தர்மத்தை அனுசரிப்பது பற்றி விவரங்கள் சொன்ன பின் தேவ ரிஷி விடை பெற்றார். அவருக்கு உரிய சத்காரங்கள் செய்து விடை கொடுத்து அனுப்பினார். அவர் சென்ற பின்னும் அவர் சொன்ன விஷயங்களை தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
இது தாக்ஷாயணீ என்பவர்களின் தனி வம்சத்தின் சரித்திரம். தேவா சுரம், மனுஷ்யர்கள் இருக்கும் சராசரங்களிலும், பரவி இருப்பவர்கள் இவர்களே.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஏழாவது ஸ்கந்தத்தில், யுதிஷ்டிர நாரத சம்வாதம் என்ற பதினைந்தாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள் -80
|| இத்துடன் ஏழாவது ஸ்கந்தம் நிறைவுறுகிறது ||
|| ஓம் தத் சத் ||